ciRAppurANam of umaRup pulavar
Canto 2 part 1, paTalams 1-8 (verses 1-698)
(in tamil script, unicode format)
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
இரண்டாவது காண்டம் - நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 1- 8 / பாடல்கள் (1-698 )
Acknowledgements:
Etext preparation: Mr. Vassan Pillai, New Mexico, USA
Proof-reading: Dr. Ram Ravindran, Indianapolis, Indiana, USA
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
or
© Project Madurai 1999 - 2003
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
உமறுப் புலவரின் சீறாப்புராணம்
இரண்டாவது காண்டம் (நுபுவ்வத்துக் காண்டம்)
படலங்கள் 1-8 / பாடல்கள் (1-698 )
உள்ளுறை
2.1 நபிப் பட்டம் பெற்ற படலம் (1- 55)
1 |
சோதியா யெவைக்கு முள்ளுறைப் பொருளாய்த் தோற்றமு மாற்றமுந் தோன்றா
வாதிதன் பருமான் கொண்டினி தோங்கி யமரிழிந் தமரருக் கரசன்
மேதினி புகுந்து முகம்மது தமக்கு விளங்கிய நபியெனும் பட்டங்
கோதறக் கொடுப்பத் தீன்பயிர் விளைத்த கூறெலாம் விரித்தெடுத் துரைப்பாம். 2.1.1 |
2
புள்ளிவண் டருட்ட முண்டிசை பயிலும்
பொழிறிகழ் மக்கமா புரத்திற்
றெள்ளிய குறைஷிக் குலத்தினி லுதித்த
செம்மலுக் குறைந்தபே ராண்டு
விள்ளருங் கணக்கா றாரிரண் டதின்மேல்
மேலவன் றிருவுளப் படியால்
வெள்ளிடை யதனிற் சிறிதொளி திரண்டு
விழித்திடும் விழிக்கெதிர் தோன்றும்.
2.1.2
3
தெரிந்திடு மொளியைக் தம்மிரு விழியாற்
றெரிதர நோக்குவர் காணா
திருந்திடும் பின்னுந் தோற்றிடு மிதனை
யெவரொடும் விடுத்தெடுத் துரையார்
பொருந்துளக் களிப்பு மச்சமும் பிறப்பப்
புந்தியிற் றேர்குவர் பொருவாக்
கருந்தலைக் கவைநா வரவுட றடிந்த
கவின்கர தலமுகம் மதுவே.
2.1.3
4
திசையனைத் தினுமந் தரத்தினு மிருந்த
திசையினு மிரவினும் பகலு
மிசையுறச் சிறிது தொனிகளே பிறக்கு
மெதிர்ந்துநோக் கிடிலுருத் தெரியா
தசையினும் பிரியா தடுத்துறைந் தவர்தஞ்
செவியினு மத்தொனி சாரா
வசையறுங் குறைஷிக் குலத்துறுங் குரிசின்
மனத்தினி லதிசயம் பெறுவார்.
2.1.4
5
இவ்வணஞ் சிறிது பகனிகழ்ந் ததற்பி
னெழில்பெறும் வரிசிலைக் குரிசின்
மைவண விழியா ரிடத்தினி லுறையா
மற்றொரு வரையுடன் கூட்டாச்
செவ்வணக் கருத்திற் றனியிருப் பதற்கே
சிந்திக்கு மதன்படி தேறி
யெவ்வரை யிடத்துங் காலினி லேகி
யெழில்பெறத் தனித்தனி யிருப்பார்.
2.1.5
6
உலகினிற் பிறந்து வருமெழு வகைக்கு
முயிரெனுஞ் சலதரக் கவிகை
நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து
நிரைகதிர் தவழ்கிறா மலையி
னலனுற வுலவி மனனுறும் படியே
நாலுநா ளிரண்டுநா ளிருந்து
சிலையென வளைந்த சிறுநுதற் கதீஜா
திருமனை யிடத்தினில் வருவார்.
2.1.6
7
வரிசைக்குங் கதிக்கு முதற்றிருத் தலமாய்
மதித்திட வருங்கிறா மலையி
லுருசிக்குங் கனிவாய் மடமயிற் கதீஜா
வுடன்வர முகம்மது மெழுந்து
தெரிசிக்கப் பொருந்து மமரர்தம் முருவுந்
தெரிந்திடா தவணிடை யிருந்து
பரிசுத்த மனைய குயிலொடுந் தாமும்
பக்றபொழு தாற்றியே வருவார்.
2.1.7
8
மக்கநன் னகருந் தெருத்தலை மதிளும்
வழியிடைக் கிடந்தகல் லனைத்தும்
புக்குநல் லிடத்திற் றெரிந்தவை யெவையும்
புகழொடு முகம்மது தமக்குத்
தக்கநற் பொருளா யுறுசலா முரைக்குந்
தனித்தொனி யிருசெவி தழைப்ப
மிக்கமெய்ப் புதுமை தனையுணர்ந் துணர்ந்து
மிகக்களீத் ததிசயித் திருப்பார்.
2.1.8
9
முருகவிழ் புயவள் ளலுக்குறும் வருட
முப்பதிற் றொன்பதின் மேலாய்
தெரிதருந் திங்க ளாறுஞ்சென் றதற்பின்
றினந்தொறும் புதுமைய தாக
மருமலர்ச் செழுந்தார்க் கனங்குழற் கதீஜா
வெனுமயின் மணமனை யிடத்தி
லிருவிழி துயில மண்ணிடைத் தோன்றா
தெழில்பெறக் கனவுகள் காண்பார்.
2.1.9
10
வெண்டிரைக் கடலி லமுதமும் பொருவா
வியனுறு மெல்லிதழ்க் கதீஜா
கொண்டுறு மயலு ளுயிரினு முயிராய்க்
குலவிய முகம்மது நயினார்
வண்டுறை மலர்ப்பஞ் சணைமிசை பொருந்தி
மறுவிலா தொளிர்மதி முகத்துக்
கண்டுயில் பொழுதிற் கனவுக ளனைத்துங்
கண்டது கண்டதாய்க் பலிக்கும்.
2.1.10
11
துய்யவ னருளா லாதமா மனுவாய்த்
தோன்றிய வவனியின் வருட
மையமி லாறா யிரத்தினி லொருநூற்
றிருபத்து மூன்றினி லழகா
வையக மதிக்கு முகம்மதின் வயது
நாற்பதில் றபீயுலவ் வலினி
லெய்திய வெட்டாந் தேதியிற் சனியி
னிரவினிற் கிறாமலை யிடத்தில்.
2.1.11
12
நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு
நீணிலாக் கதிர்கள்விட் டொழுக
வித்துரு மத்தாள் சிறந்தணி திகழ
வில்லுமிழ் கரங்கிடந் திலங்கப்
பத்திவிட் டெறிக்குஞ் செம்மணி யிருகட்
பார்வையிற் கருணைவீற் றிருக்கச்
சித்திர வடிவைச் சுருக்கிமா னுடர்போற்
ஜிபுறயீ லவ்விடத் தடைந்தார்.
2.1.12
13
வேறு
மானுட வடிவாய் வந்த வானவர்க் கரசன் செவ்வி
யானனக் குரிசி லென்னு மகுமதின் வதன நோக்கி
நானமுங் கியமெய்ச் சோதி நாயகா வரையின் கண்ணே
தீனுற விருக்கின் றீரோ வென்றுசே ணடைந்தா ரன்றே.
2.1.13
14
மற்றைநாட் பருதி ராவில் கிறாமலை யிடத்தில் வானோர்
கொற்றவ ருறைந்து வள்ளற் குவவுத்தோள் வனப்பு நோக்கி
யுற்றவென் னுயிரே நீரிங் குறைந்தினி ரோவென் றோதி
வெற்றிவெண் விசும்பு கீறி மேலுல கிடத்திற் சார்ந்தார்.
2.1.14
15
விண்ணகத் தரசர் தோன்றும் விதிமுறை யறியா வள்ளன்
மண்ணகத் திவரை நேரும் வனப்பினில் விசையி லந்தக்
கண்ணகன் வான நாட்டுங் காண்குற வரிதே யென்ன
வெண்ணமுற் றிதயத் தாராய்ந் திருப்பிடம் பெயர்ந்தி ராரால்.
2.1.15
16
வரிசைநேர் றபீவு லவ்வல் மாதமீ ரைந்து நாளிற்
றெரிதர விளங்குந் திங்க ளிரவினிற் சிறப்பு மிக்கோ
னருளினில் ஜிபுற யீல்வந் தருவரை யிடத்தின் வைகுங்
குரிசிறன் கமலச் செங்கண் குளிர்தர வெதிர்ந்து நின்றார்.
2.1.16
17
நானிலம் பரப்புஞ் சோதி நாயகக் கடவு டம்மை
வானகத் திருந்த சோதி வந்துசந் தித்த தேபோற்
கானமர் துண்டச் செங்கட் கலைநிலாத் தவழு மியாக்கை
யீனமில் ஜிபுற யீல்வந் திறையவன் சலாமுஞ் சொன்னார்.
2.1.17
18
மரகதப் பத்தி கோலி வச்சிரத் தாரை சாத்தி
யுரகமா மணிக ணாப்ப னொளிபெறக் குயிற்றி வெள்ளைத்
தரளமென் புருட ராகம் பலமணி தயங்கத் தாக்கிச்
சொரிகதிர் பரப்புஞ் சோதித் துகிலினைக் கரத்திற் கொண்டார்.
2.1.18
18
செகமதில் விண்ணி லொவ்வாச் செழுந்துகி லதனை யேந்தி
யகமகிழ்ந் தினிது போற்றி யமரருக் கரசர் வாய்த்த
முகமதி நோக்கி யாதி முறைமறைக் கலிமா வோதி
முகம்மதை விளித்துச் செவ்வி வலக்கரத் திடத்தில் வைத்தார்.
2.1.19
20
மரைமலர் வதனச் சோதி முகம்மதின் கரத்தில் வானோ
ரரசர்மிக் குவகை கூர்ந்தவ் வணிதுகி லிருத்தும் போதிற்
றிரைமுகில் வரையும் விண்ணுந் திகாந்தமு நடுவு மீக்கொ
ளிரைகட லேழும் பாரு மிலங்கொளி விரிந்த தன்றே.
2.1.20
21
மண்டலம் புரக்குஞ் செங்கோன் முகம்மதின் வதன நோக்கி
விண்டலம் பரவும் வேத நபியெனும் பட்ட நும்பாற்
கொண்டலே குதாவின் றீந்தா னெனுமொழி கூறிப் பின்னு
மண்டர்வாழ்த் தெடுப்பச் செவ்வி யாரணம் புகறி யென்றார்.
2.1.21
22
செப்பிய வசனங் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி
முப்படி விளங்கும் வண்ண முழுமணிக் குரிசி லேயா
னிப்பெரும் புவியிற் றீட்டு மெழுத்திலொன் றறியே னாதி
யொப்பரும் வேத மென்ப தோதினே னல்ல னென்றார்.
2.1.22
23
சிறைநிறஞ் சுருக்கித் தோன்றுஞ் ஜிபுறயீல் முதலோன் கூறு
முறைவழி முகம்ம தன்பான் முன்னிருந் திருகை யார
விறுகுறத் தழுவிப் பின்ன ரியம்புமென் றியம்பத் தோன்றன்
மறைமுதல் வசன நாவின் வழக்கின னல்ல னென்றார்.
2.1.23
24
எதிரிருந் தரசர் பின்னு மிடருறத் தழுவி நோக்கி
மதியினு மிலங்குஞ் சோதி முகம்மதே யோது மென்னப்
புதுமையி னரிய பேறே புவியிடத் தரிய வேதங்
கதிபெறக் கண்டுங் கேட்டுங் கற்றறிந் திலனியா னென்றார்.
2.1.24
25
கேட்டுவா னவர்கோ மானுங் கிளரொளி வனப்பு வாய்ந்த
தோட்டுணை நெருங்க வுள்ளந் துனிவர விடலஞ் சோரப்
பூட்டிய கரங்கள் சேப்பப் புல்லிநந் நபியை நோக்கி
மீட்டுமெய்ம் மறைநூன் மாற்றம் விரித்தெடுத் தியம்பு மென்றார்.
2.1.25
26
நெருக்கிவிட் டதற்பின் வேத நெறிநபி யுள்ளத துள்ளே
திருக்கிளர் புவியில் விண்ணோர் தௌிதரு மறிவு முன்னூ
லிருக்கினி லறிவுந் தோன்றி யிடனறப் பெருகி நல்லோ
ருருக்கொளு மரசை நோக்கி யோதவெண் டுவதே தென்றார்.
2.1.26
27
மிக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள் கோமா
னிக்றவு வெனும்சூ றத்தி லிருந்துநா லாயத் தின்ப
மெய்க்குற மாலம் யஃல மெனுமட்டும் விளம்பு வீரென்
றொக்கலி லுயிரின் மிக்கா யுறுநபிக் குணர்த்தி னாரால்.
2.1.27
28
எழுத்தினிற் றவறாச் சொல்லி னியன்முறை சிதகா வின்பம்
பழுத்தபண் ணொலியாற் றீய்ந்த பயிருயிர் பெருவ தாகச்
செழித்தமெய் ஜிபுற யீல்தஞ் செவியகங் குளிரக் கல்வி
யழுத்திய பொருளுட் டோன்ற அகுமது மோதி னாரால்.
2.1.28
29
உறைந்தமெய்ம் மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டுரைப்பச் செவ்வி
யறந்தழைத் தனநன் மார்க்கத் தரும்புவி தழைத்த வெற்றித்
திறந்தழைத் தனவிண் ணோர்கள் செயறழைத் தனதி காந்தப்
புறந்தழைத் தனநந் தீனின் புகழ்தழைத் தோங்க வன்றே.
2.1.29
30
பறவைக ளினங்கள் போற்ற விலங்கினம் பலவும் போற்ற
வுறைதருந் தருக்கள் போற்ற வூர்வன வெவையும் போற்ற
நிறைதரு மலகை போற்ற நிரைதிரைப் பரவை போற்ற
மறைவிலா தமரர் போற்ற முகம்மது மோதி னாரால்.
2.1.30
31
உயிரினுக் குயிராய் வந்த முகம்மது முரைப்பக் கேட்டுச்
செயிரறு ஜிபுற யீல்தம் மெய்மயிர் சிலிர்ப்ப வோங்கி
முயலகன் மதியம் போன்ற முகம்மதைப் போற்றி வேக
வெயிலவன் கதிரிற் றூண்டி மேலுல கிடத்திற் புக்கார்.
2.1.31
32
அரியவன் றூத ரான அகுமது கலக்க முற்று
மருமலர்க் சோலை சூழ்ந்த மால்வரை யிடத்தை நீங்கி
யெரிபகற் கதிர்க்கா றோன்றா விரவினிற் றனித்து வல்லே
விரிகதி ருமிழும் பைம்பூண் மின்னகத் திடத்திற் சார்ந்தார்.
2.1.32
33
வேறு
நடுக்க முற்றுமெய்ச் சுரத்தொடுங் குளிர்தர நலிந்து
மிடுக்க கன்றிடப் பயத்தொடு மரிவையை விளித்துத்
திடுக்க முற்றது துகில்கொடு பொதிமனந் தௌியா
திடுக்க ணியாதென வறிகில னென்றன ரிறசூல்.
2.1.33
34
தலைவர் கூறிய மொழிசெவி புகவுட றயங்கி
நிலைகு லைந்தெழுந் தயர்வொடு நெட்டுயிர்ப் பெறிந்து
பலம லர்த்தொடை செறிந்தபஞ் சணைமிசைப் படுத்திச்
சலவை கொண்டுறப் போர்த்தரு கிருந்தனர் தையல்.
2.1.34
35
நொந்து மெய்யகம் பதறிடக் கணவரை நோக்கி
யெந்த னாருயி ரேயிக லடலரி யேறே
சிந்தை சிந்திமெய் திடுக்கொடு மதிமுகந் தேம்ப
வந்த வாறெவை யுரைக்கவென் றுரைத்தனர் மடமான்.
2.1.35
36
மலையி னுச்சியி னிருந்தது மொருவர்வந் தடுத்து
நிலைபெ றுந்துகில் கரத்தளித் துரைத்தது நெருங்க
வுலைவு றத்தனி யணைத்தது முரைத்துளப் பயத்தா
லலம லர்ந்தன னென்றன ரரசருக் கரசர்.
2.1.36
37
துணைவர் கூறிய மாற்றமு மறைகள்சொற் றதுவு
மிணைப டுத்திநேர்ந் தின்பமென் றுளத்தினி லிருத்திப்
பிணையை நேர்விழி கனிமொழி சிறுபிறை நுதலா
ரணையுந் தம்வயின் றுனிபல வகற்றின ரன்றே.
2.1.37
38
தாங்கு மெய்ப்பொரு ளறிவருள் குணந்தய விரக்க
நீங்கி டாதறம் பெருகிட வளர்க்குநன் னெறியீ
ரோங்கு மானிலத் திடத்துறை பவர்களா லுமக்குத்
தீங்கு றாதென வுரைத்தனர் மடந்தையர் திலதம்.
2.1.38
39
சிந்து தேன்மொழிச் செழுங்குயில் தூதெனுந் திருப்பேர்
வந்த தாமெனத் தெருளுற முகம்மது நயினா
ருந்து வெங்குபிர் களைவதித் தரமென வுயர்வா
னிந்து நேரிரு ளொடுக்கிவிண் ணெழுந்தன னிரவி.
2.1.39
40
நிறக்க ருங்கழு நீர்குவி தரநிறை வனசந்
திறக்க மெல்லிதழ் வெய்யவ னெழுந்தபின் றிருவு
முறக்கத் தென்னுமவ் வேந்தனைக் கொணர்கென வொருவ
னறக்க டும்விசை கொண்டெழுந் தேகின னன்றே.
2.1.40
41
மடங்க லேறெனு முகம்மதும் வரிபரந் திருண்ட
விடங்கொள் வேலினை நிகர்த்துமை பொருவிழி மயிலு
முடன்க லந்தினி தழைத்தனர் வருகவென் றுணர்வு
துடங்கு மும்மறை தௌிந்தவற் குரைத்தனன் றூதன்.
2.1.41
42
பழுதி லாக்குலப் பாவைதம் பாலினிற் பரிவா
யெழுக வென்றன ரென்றசொற் சிரமிசை யேற்றி
வழுவி லாமறை வுறக்கத்தென் றோதிய வள்ள
றழுவு மெய்க்கதிர் முகம்மது மனைவயிற் சார்ந்தான்.
2.1.42
43
கற்ற வேதியன் வருதலுங் கிளிமொழிக் கதீஜா
பொற்றொ டிக்கரஞ் சாய்த்திவ ணுறைகெனப் புகன்று
மற்ற டப்புய முகம்மது வரையிடைப் புதுமை
யுற்ற செய்தியுண் டென்றன ரறிகவென் றுரைத்தார்.
2.1.43
44
மதியின் மிக்கநன் மறையவன் முகம்மதை நோக்கித்
துதிசெய் தும்முழை வந்தவா றனைத்தையுந் தொகுத்து
முதிர்த ரும்புக ழோயுரை கென்றலு முறையா
விதிய வன்றிருத் தூதர்நன் றெனவிளம் புவரால்.
2.1.44
45
வரையி னிற்றனி யிரவினி லிருக்கையின் மதியி
னுரையின் மிக்கவ ரொருவர்வந் தென்பெய ருரைத்துப்
பரிவி னாலிவ ணுறைந்தினி ரோவெனப் பகர்ந்து
விரைவி னின்மறு நாளுமவ் வுரைவிளம் பினரால்.
2.1.45
46
இருதி னத்தினு முரைத்தவர் மறுதினத் தெய்தித்
தெரிம ணித்துகி லெனதுசெங் கரத்தினிற் சேர்த்தி
யரிய நாயக னபியெனும் பெயருமக் களித்தா
னுரிமை யீரினி யோதுமென் றுரைத்தன ருவந்தே.
2.1.46
47
ஓது மென்றசொற் கேட்டலு மோதின னலனென்
றோத முன்னிருந் திருகையி னிறுக்கிமுன் னுரைபோ
லோது மென்றலும் பின்னரு மோதின னலலென்
றோத மற்றுமென் றனைமிக விறுக்கின ருரத்தின்.
2.1.47
48
மறுத்து மோதுமென் றுரைத்திட மறுத்தனன் மறுத்து
மிறுக்கி யோதுமென் றுரைத்தன ரெதிரிருந் தௌியேன்
றிறக்க வோதுவ தெவையென வுரைத்தனன் றீட்டா
தறத்தி னுட்படுஞ் சொல்லினைக் குறித்தெடுத் தறைந்தார்.
2.1.48
49
அந்த நல்லுரை கேட்டன னவருரைப் படியே
பிந்தி டாதெடுத் தோதினன் செழும்பொருள் பிறக்க
வெந்தை யீரெனப் போற்றிவிண் ணடைந்தன ரெழிலோய்
வந்த வாறிவை யெனவெடுத் துரைத்தனர் வள்ளல்.
2.1.49
50
புவியி னிற்பெரும் புதுமைய தாகிய பொருளாய்
நபியு ரைத்தசொல் லனைத்தையு மனத்தினி னயந்து
குவித ருங்கதிர்ச் செழுமணிக் கொடியிடை கதீஜா
செவிகு ளிர்ந்திட மனங்களித் திடப்பொரு டெரிவான்.
2.1.50
51
மலையல் வள்ளனும் மிடத்தினில் வரைமிசை யடைந்த
தலைவர் நாயகன் றூதரில் ஜிபுறயீல் சரதம்
பலக திர்த்துகில் கரத்தளித் ததுநபிப் பட்டம்
விலக வோதுமென் றோதிய துமக்குறும் வேதம்.
2.1.51
52
உடலு லைந்திட விறுக்கிய துமதிடத் தினிமேல்
வடுவின் மும்முறை யிடுக்கண்வந் துற்றது மாறும்
படியி டத்தினும் மினத்தவர் பெரும்பகை விளைத்து
மிடரு றும்படி யூரைவிட் டெழத்துரத் திடுவார்.
2.1.52
53
என்ற விம்மொழி மறையவ னுரைத்தலு மிசைத்தேன்
றுன்று மென்மலர்ப் புயநபி மனத்தினிற் றுணுக்குற்
றொன்று மென்னினத் தவர்பகை யெனக்குவந் துறுமோ
பொன்று மோவென வுரைத்தலு முதியவன் புகல்வான்.
2.1.53
54
முன்னர் மாமறை நபியெனும் பெயர்முதி யவருக்
கின்னல் வந்துறா திலதுநும் மிடத்திட ரணுகா
நன்ன லம்பெறு நபிகணா யகமுநீ ரலது
மன்னு மானில நபியினி யிலையென வகுத்தான்.
2.1.54
55
மாத வத்துறும் பொருளெனு முகம்மது நபிதம்
பாத பங்கயத் திணைமிசை சிரங்கொடு பணிந்து
கோதி லாக்கதீ ஜாதமை யிருகரங் குவித்துத்
தீதி லாதெழுந் தேகினன் பலகலை தௌிந்தோன்.
2.1.55
நபிப் பட்டம் பெற்ற படலம் முற்றிற்று.
படலம் 1க்குத் திருவிருத்தம்...55
2.1 கடவுள் வாழ்த்துப் படலம் முற்றிற்று.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.2 தொழுகை வந்த வரலாற்றுப் படலம் (56 - 99)
56 |
உடையவ னொருவன்ற னுன்மைத் தன்மையை
நடைவர விளக்கிநல் வழியி லியாரையு
மடைதர வழைத்திடற் கனுப்புந் தூதரென்
றிடைவரு மமரர்கோ னீய்ந்த பட்டமே. 2.2.1 |
57
ஒருத்தனா யகனவற் குரிய தூதெனு
மருத்தமே யுரைகலி மாவந் நிண்ணயப்
பொருத்தமீ மானடை புனைத லாமமல்
திருத்தமே விவையிசு லாமிற் சேர்தலே.
2.2.2
58
இப்பொருள் பொதிந்ததோ ரிறைமை தாங்கிய
மைப்புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத்
தொப்புர வொழுகுவார்க் குரிமை யார்க்கெலாஞ்
செப்பினர் வௌிப்படாச் சிறப்பிற் றாகவே.
2.2.3
59
ஒருவனே நாயன்மற் றொழிந்த தேவத
மிருமையும் பேறிலா திழிவு கொண்டதென்
றருமொழி விளக்கலா லாய்ந்து நந்நபி
திருமொழி யுண்மையிற் சிந்தை செய்குற்றார்.
2.2.4
60
வல்லிய மெனுமுகம் மதுதம் மாமணம்
புல்லிய புயவரைப் படர்ந்த பொற்கொடி
முல்லையங் குழற்கதீ ஜாமின் னேமுத
லில்லறத் தொடுமிசு லாமி லாயினார்.
2.2.5
61
மனுமுறை நெறிவழு வாஅபூ பக்க
ரெனுமுகில் கண்டுயில் காலை யின்புறத்
தினகரன் மதிமடி யிருப்பச் செவ்விய
கனவுகண் டெழுந்தகங் களிப்புற் றாரரோ.
2.2.6
62
இன்னதன் மையின்கன வியாது கொல்லென
மன்னிய மனத்தினன் மதியிற் றேகுவர்
பன்னுவர் புதுமையிற் பலனுண் டாமென
வுன்னுவர் தௌிந்தொரு வருக்கும் விண்டிலார்.
2.2.7
63
பொன்னக ரத்தினும் புவியுங் காணுறா
நன்னல முண்டுநம் மிடத்தி லென்னவே
யின்னலைப் பிரித்தெறிந் தெழுந்து பொற்புற
மன்னவர் நபியுறை மனையி லாயினார்.
2.2.8
64
ஆரணக் கடவுளு மழகின் கன்னியும்
பூரண மனத்துட னிருத்திப் போற்றியே
தாரணி யிடத்தினிற் றனிய னாலுறுங்
காரண மனைத்தையுங் கழறி னாரரே.
2.2.9
65
அம்மொழி கேட்டட லரியபூ பக்கர்
தம்மனக் கனவையுஞ் சார்ந்த செய்தியுஞ்
செம்மையி னுணர்ந்துளத் திருத்திச் சிந்தையின்
விம்மிதத் தொடும்புயக் களிப்பு வீங்கினார்.
2.2.10
66
சுரத்தினிற் பெருநதி யழைத்துத் தோன்றிய
சரத்தினிற் கட்செவி தடிந்து பாதகன்
கரத்தினைப் பொருத்திய காவ லாளநும்
வரத்தினை யெவரினும் வகுக்கற் பாலதோ.
2.2.11
67
என்றுரைத் தருளிய வெழிலபூ பக்கர்
தன்றிரு மதிமுக நோக்கித் தாழ்விலா
வென்றிகொண் டுறுங்கலி மாவை விள்ளுத
னன்றுமக் கெனநபி நவிற்றி னாரரோ.
2.2.12
68
அருமறை நாயக நபிக ளானவர்
தெரிதரும் புதுமையின் வழியிற் சேர்த்துவர்
பெரியவன் றூதென வெனக்கும் பெட்புற
விரிதரும் புதுமையொன் றுதவ வேண்டுமே.
2.2.13
69
எனவுரைத் தவர்மனங் களிப்புற் றின்புறப்
புனைமலர்ப் பஞ்சணை பொருத்துங் காலையிற்
கனவுகண் டினிரது புதுமை காணென
வனமலர்த் தொடைப்புய முகம்ம தோதினார்.
2.2.14
70
சொல்லிய நன்மொழி கேட்டுத் துன்புறு
மல்லலும் போக்கறுத் தடலபூ பக்கர்
செல்லுறழ் நபிதிரு நாமஞ் சீர்பெற
நல்லிய லொடுமிசு லாமி னண்ணினார்.
2.2.15
71
அந்தமி னாயகன் றூதர்க் கன்புறுஞ்
சிந்தையர் புகழபுத் தாலிப் சேய்களிற்
சுந்தரப் புலியலி யென்னுந் தோன்றலும்
வந்தனை செய்துதீன் வழியி லாயினார்.
2.2.16
72
அடிமையி லோங்கிய வறிவின் மிக்கவர்
வடிவுறும் ஆரிதா மதலை யாகிய
மிடலவர் சைதெனும் வீர கேசரி
யிடரறுங் கதியிசு லாமி லாயினார்.
2.2.17
73
இயன்மறை முறையொடு மிவர்க ளிங்ஙன
மயலவ ரறிவுறா தடங்கி நன்னெறிச்
செயலென நாட்குநாட் டேர்ந்து தம்மன
மயலறத் தீனெனும் வழியிற் றேறினார்.
2.2.18
74
அறிவினிற் றௌிந்தபூ பக்க ரன்பெனு
முறவினிற் கிளைகளி லுற்ற பேர்களுக்
கிறையவ னபியிவ ரென்ன வேதநூற்
றுறையொடும் ரகசியச் சொல்லிற் சொல்லினார்.
2.2.19
75
செவ்விய ரிவர்மொழி சிதைவி லாதென
வவ்வவர் கருத்தினு ளாய்ந்தவ் வாற்றிடைக்
கவ்வையங் கடனதி கடப்ப வன்றொரு
நவ்விபி னெழுநபி பதத்தை நண்ணினார்.
2.2.20
76
அலகில்வண் புகழபூ பக்கர் சொல்லினைப்
பெலனுறக் குறித்தவ ணடைந்த பேர்க்கெலா
மலைவற வறத்தொடுஞ் சுவன வாழ்வெனு
நிலைபெற நல்வழி நிகழ்த்தி னாரரோ.
2.2.21
77
பணவர வடர்ந்தவர் பகரத் கேட்டலு
மணமனத் தொடுங்கதி வாழ்வுக் கீதொரு
துணையென நற்கலி மாவைச் சொல்லிநின்
றிணையிலான் றூதடி யிறைஞ்சி வாழ்த்தினார்.
2.2.22
78
கரும்பெனு நபிகலி மாவைக் காமுற
விரும்பிய பேர்களிற் றலைமை மிக்கவ
ரரும்புவிக் கரசபு துர்ரகு மானுடன்
றரும்புகழ் சுபைறுதல் காவுஞ் சகுதுவும்.
2.2.23
79
அருமறைப் பொருட்குரை யாணி யாகிய
வரிசைநன் னெறியுது மானு மாசிலாத்
திருநபி பெயர்க்கலி மாவைச் செப்பிய
பரிசனத் தொடுந்தனி பழகு நாளினில்.
2.2.24
80
அண்டருக் கரசிழிந் தடுத்தென் முன்னுரை
விண்டனர் போயினர் மறுத்து வெற்பிடைக்
கண்டில னெனமனங் கலங்கிக் கார்க்கடன்
மண்டலம் புகழ்நபி வருத்த முற்றனர்.
2.2.25
81
குருநபிப் பட்டமே கொண்ட மேலவர்
வருவது நிகழ்வதும் வழுத்து வாரெனு
மிருநில மாந்தருக் கென்சொல் வோமெனப்
பருவர லடிக்கடி படர்வ தாயினார்.
2.2.26
82
மருப்புகுங் கருங்குழன் மடந்தை தம்மொடு
மிருப்பர்பின் றனித்தெழுந் திரவி னேகியப்
பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை
விருப்பொடு நோக்குவர் மீள்வ ரெண்ணுவார்.
2.2.27
83
வாணுதற் குரைதர மறுப்பர் தம்முளம்
பாணியிற் சசியெனப் பதைப்பர் நல்லுரை
பேணினர் தம்முகம் பெரிது நோக்குற
நாணுவ ருயிர்ப்பர்மெய் நலிதல் கொண்டனர்.
2.2.28
84
என்னினி யுரைப்பதென் றெண்ணி யின்புறுந்
தன்னுயிர்த் துணைவியைத் தணந்து நெஞ்சகந்
துன்னிய துயரொடு மெழுந்து சூன்முகின்
மன்னிய தடவரை முகட்டின் வைகினார்.
2.2.29
85
தனியிவன் றூதெனச் சார்ந்து பூவிடை
நனிபெறும் புதுமைக ணடத்த லில்லெனிற்
பனிவரை நின்றுவீழ்ந் திடுதல் பண்பலா
லினியிருப் பதுபழு தென்னுங் காலையில்.
2.2.30
86
வாடிய பயிர்க்குறு மழையும் போற்றினந்
தேடிய பொருட்கரஞ் சேரு மாறென
வீடில்வா னவர்க்கிறை விரைவி னேகியக்
கோடுறை நபிவயின் குறுகி னாரரோ.
2.2.31
87
திண்ணிய பெருஞ்சிறை ஜிபுற யீல்வரை
நண்ணிய முகம்மதை யடுத்து நன்குறா
தெண்ணமென் னுமக்கென வியம்பி யாவர்க்கு
முண்மைநீர் நபியென்ப துரைத்துப் போயினார்.
2.2.32
88
தன்னுடற் குயிரெனுந் தகைமைத் தாகிய
பொன்னகர்க் கிறைசொலும் புனித வாசகங்
கன்னலஞ் சுவையினுங் கனிந்த பாகென
நன்னபி செவிப்புக நடுக்க நீங்கினார்.
2.2.33
89
சகமதில் தீன்பயிர் தழைப்பத் தூநெறி
முகம்மதின் றிருப்பெயர் வளர மாசிலாப்
புகழொடுஞ் ஜிபுறயீல் போற்றி யிம்மொழி
யிகலறப் பலதர மியம்பிப் போயினார்.
2.2.34
90
வேறு
முருகுண் டறுகாற் சஞ்சரிக
முரலும் புயத்தா ருசனயினா
ரருமைத் தவத்தால் வந்துதித்த
அபுல்கா சீமதன் செழுங்கரம்போற்
பெருகத் தருஞ்செல் லினக்குலங்கள்
பிறங்கும் பிறங்க லிடத்திருந்த
வரிசை நபியை நோக்கிப்பின்னும்
வந்தார் வானோர் கோமானே.
2.2.35
91
கலன்சூழ் கிரண மணிநாப்ப
ணிருந்த கதிர்மா மணிக்குறைஷிக்
குலஞ்சூழ் வரிசை நபிக்கமரர்
கோமான் சலாமுன் கூறியபி
னிலஞ்சூழ் பரவைப் புறப்புவியு
மிறைஞ்ச நெடியோன் றிருவருளாற்
சொலும்சூ றத்தில் முஸம்மிலெனுஞ்
சுருதி வசன மிறங்கினவே.
2.2.36
92
சிலம்பி லுறைந்த முகம்மதுவைத்
திருந்து மமரர் கோமான்கொண்
டுலம்பற் றுறுஞ்சின் னெறியினிழிந்
துடனின் றரிதோர் மருங்கணைந்து
நிலம்பிட் டுதிர மண்சிதற
நிலவா மணித்தாள் கொடுகீண்டப்
பிலம்பட் டுறைந்த நறுஞ்சலிலம்
பிறந்து குமிழி யெழுந்தனவே.
2.2.37
93
பெருகிப் பரந்த புனற்கரையிற்
பெரியோன் றூதை யருகிருத்தி
மருவு மலரு மெனவுலுவின்
வகையுந் தொகையும் வரவருத்திக்
குரிசி னபியைப் பின்னிறுத்திக்
குறித்த நிலைரண் டிறக்அத்துப்
பரிவிற் றொழுவித் திருந்துவிண்ணிற்
படர்ந்து சுவனத் தலத்துறைந்தார்.
2.2.38
94
மறையார் நபிக்கி ரகசியத்தின்
வணக்கம் படித்துக் கொடுத்துமணிச்
சிறையா ரமரர்க் கரசர்முகி
றீண்டா விசும்பி னடைந்ததற்பி
னறையார் கூந்தற் கதீஜாவை
நண்ணி யுலுவும் வணக்கமுமுன்
முறையா யுரைப்ப வுரைத்தபடி
முடித்தார் கனகக் கொடித்தாயே.
2.2.39
95
மாரி யருந்திப் பண்மிழற்றி
வரிவண் டுறங்கு மலர்க்கூந்த
னாரி சுருதி முறைவணங்கி
நளின மனங்கூர்ந் திருந்ததற்பின்
மூரித் திறலொண் சிலக்கையபூ
பக்கர் முதன்மற் றுள்ளோரு
மேருப் புயத்தார் பெருவரத்தார்
விரைத்தா மரைத்தாட் புகழ்ந்தடுத்தார்.
2.2.40
96
வந்த குறைஷிக் குலத்திலுறு
மடங்க லனைய முதியோர்தஞ்
சிந்தை குளிர வானவர்கோன்
றிருத்தி யுரைத்த வணக்கமுறை
யந்த மிலிதன் றூதரெடுத்
தறைய நெறிநேர் வழுவாமற்
பந்தி பெறநின் றுறுந்தொழுகை
படித்தார் பாவந் துடைத்தாரே.
2.2.41
97
வடுவைப் பகிர்ந்த கரியவிழி
மயிலும் வரிசை நயினாரு
மடல்வெம் புரவிக் குரிசிலபூ
பக்க ரலிசஃ துதுமானுந்
தடவெண் கவிகைச் சுபைறொடுதல்
ஹாவும் அப்துர் ரகுமானும்
புடைவிட் டகலாச் செழுந்தேனைப்
பொருத்துஞ் சிறைவண் டெனத்தொழுதார்.
2.2.42
98
சீற்ற மடங்கா வரிவேங்கை
திரியும் வனமுங் கொடுமடங்க
லேற்றை வெருவி விலங்கினங்க
ளிருக்கு மிடமும் வரையிடத்துந்
தூற்று மருவிச் சாரலினுந்
தோன்றா திருண்ட மனையிடத்தும்
வேற்றுச் சமயப் பயத்தொதுங்கி
விதித்த தொழுகை முடித்துவந்தார்.
2.2.43
99
வேதப் பொருளாய்ப் பொருளொளியாய்
விளங்கு முதலோன் றிருக்காட்சித்
தூதென் றுதித்த முகம்மதுவுஞ்
சுருதி நெறித்தீன் பெரியோருந்
தீதுற் றுலைக்குங் கொடுங்காபிர்
தெரியா வண்ண மூவாண்டு
பேதப் படாதி ரகசியத்தின்
பெரியோன் வணக்கம் பெருக்கினரே.
2.2.44
2.2 தொழுகை வந்த வரலாற்றுப் படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 2க்குத் திருவிருத்தம்...99.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.3 தீனிலை கண்ட படலம் (100-262)
100 |
சீதவொண் கவிகை நீழ றிருந்திய குரிசி லானோர்
தூதென நபியின் பட்டந் துலங்கிய நான்கா மாண்டில்
வேதம்நல் வணக்க மியார்க்கும் விரித்துற விளக்கு மென்ன
வாதிதன் பருமான் மேற்கொண் டமரர்கோ னுரைத்துப் போனார். 2.3.1 |
101
பொருப்பிடத் தொளித்தும் வாழாப் புறமனை யிடத்தும் புக்கி
யிருப்பது தகாதென் றாயத் திறங்கிய தென்னக் கேட்டு
மருப்பருங் கரடக் கைமா மதர்த்தன மதர்த்து வீரர்
தெருப்புகுந் தெவர்க்குந் தோன்றத் தீனிலை வணக்கஞ் செய்தார்.
2.3.2
102
நீருறை யிடத்துஞ் செவ்வி நிழறிக ழிடத்தும் வாய்ந்த
பேரொளி மாட வாயும் பெருகுமண் டபத்தின் சார்புங்
கூருநல் லறிவி னோடு மறபிகள் குலத்து வேந்த
ரீரமுற் றுருகி நெஞ்ச மிணங்குற வணங்கி நின்றார்.
2.3.3
103
ஆரணத் துலுவும் வாய்ந்த வறிவுமந் திரத்தின் வாயும்
பூரண நிலைநின் றங்கை பொருந்துற வளைக்கு மாறும்
பாரினி னெற்றி தீண்டப் படும்படி குழைவு மற்றுங்
காரண மிதுகொ லென்னக் காபிர்கண் டைய முற்றார்.
2.3.4
104
மார்க்கமோ நெறியோ வீதோர் வணக்கமோ மாறு பாடீ
தேற்குமோ நல்லோர் கேட்கி லிணங்குமோ வினத்தார் வேத
நூற்கிது பொருந்து மோவிந் நூதனச் செய்கை யாவு
நாற்குலத் தவர்க்கு மொவ்வா நகையென நகைத்துச் சொல்வார்.
2.3.5
105
மீறிய மதப்பி னாலோர் வேதமொன் றிறங்கிற் றென்று
மீறிலா னிறுதித் தூத னெனும்பெய ரெனக்குண் டென்றுந்
தேறிய வறிஞர் போலத் தௌிவுறா முகம்ம தென்போன்
கூறிய கூற்றைத் தேற்றா விளைத்திடுங் கோட்டி யென்பார்.
2.3.6
106
பொறுத்துளத் தடக்கிக் கண்டு போவது தகுவ தன்று
மறுத்துடைப் பனபோன் மார்க்க வழிகெட நின்ற பேரைக்
கறுத்தகட் டுரைக டம்மான் மதமனங் கலங்கக் கூறிச்
செறுத்திவர் தம்மைத் தண்டஞ் செய்விரா லொழியு மென்பார்.
2.3.7
107
உரனறு மனத்தி னூடு முலைவிலாச் சமய நீங்கார்
பரகதி யடைவர் வேறு படுத்திநல் லறத்தைத் தீய்த்தோர்
நரகமே யடைவ ரென்ற நன்மறை வசனந் தன்னால்
விரகர்கள் பகுத்துக் காட்டி விலக்கவுங் கலக்க நீங்கார்.
2.3.8
108
மனத்துறு வருமக் காபிர் வலிபகை சிறிது மெண்ணா
தினத்துடன் கூடிச் சஃதென் றிலங்குறு மலங்கன் மார்பர்
புனற்றடக் கரையி லுள்ளப் புகழொடும் பொருவி லானை
நினைத்துலுச் செய்து நீங்கா நெறிமுறை வணக்கஞ் செய்தார்.
2.3.9
109
வணக்கமுற் றிருந்த சஃது மன்னவன் றன்னை நோக்கி
யிணக்கியிவ் விடரைத் தீர்ப்போ மிவர்க்கென வுரைப்பர் பின்னும்
பிணக்கெனுஞ் சமய பேதப் பேய்பிடித் தவர்க்கு நீதிக்
கணக்கறி வுறுமோ வென்னக் காபிர்கள் கடுத்து நின்றார்.
2.3.10
110
சீற்றமுங் கடுப்பு மாறாச் சினத்தொடுங் காபிர் கூடி
மாற்றலர் போலச் சூழ்ந்து மன்னவர் சஃதை நோக்கித்
தேற்றுறு முதியோர் முன்செய் செயலினைக் செய்ய லன்றி
வேற்றழ லூழல் புக்க தொழிலினை விருப்ப முற்றீர்.
2.3.11
111
வருநெறி பிழைத்தீர் கஃபா வலஞ்செய்து குபலைப் போற்றுந்
திருநெறி விடுத்தீர் செய்யாத் தீவினை விளைத்தீர் வீணி
லொருநெறி தொடுத்தீர் நும்மோ டுற்றவர்க் கெல்லா நந்தங்
குருநெறி தவிர்த்தீர் கொள்ளாக் கொடும்பவம் விளைத்துங் கொண்டீர்.
2.3.12
112
அமரருக் கவலஞ் செய்தீ ரருமறை வசனந் தீய்த்தீர்
நுமர்களுக் கிடுக்கண் செய்தீர் நோற்றநோன் பதனை மாய்த்தீ
ரெமருடன் பகைத்தீ ரிவ்வூ ரிருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லாக்
கமரிடை வீழ்வ தல்லாற் கதியொன்றுங் காண மாட்டீர்.
2.3.13
113
என்றவ ருரைப்பக் கேட்ட விளவல்புன் முறுவ றோன்ற
நின்றுபுன் மொழிகள் வேறு நிகழ்த்திய பெயரை நோக்கித்
தொன்றுதொட் டுவந்து நீவிர் துதிசெயும் புத்து கானை
யின்றொழித் திடுமி னானொன் றியம்புதல் கேண்மி னென்றார்.
2.3.14
114
வானமும் புவியு மற்றும் வகுத்தவ னுண்மைத் தூத
ரானவர் முகம்ம தென்போ ரவர்மொழி மறாது நின்றோ
ரீனமில் சுவன நன்னா டெய்துவ ரெங்கட் குற்ற
தீனிலை பொய்மை யென்ற தேவரு நரகஞ் சேர்வார்.
2.3.15
115
தீநர கடைவ ரென்ற சொற்செவித் துளையின் மாறாக்
காயெரி நெய்யிட் டென்னக் கட்கனல் கதுவக் காபிர்
பாய்மதக் களிறு போலப் படுகொலை மனத்த ராகி
வாய்துடி துடிப்பப் பேசி வருமித்து நெருங்கி நின்றார்.
2.3.16
116
வரைதிரண் டணைய பொற்றோண் மன்னவர் சஃது கோபங்
கரைகடந் தென்னச் சோகத் தென்பினைக் கரத்தி லேந்தி
விரைவொடுஞ் செறுத்து நின்ற வீரரி லொருவன் றன்னைச்
சிரசுடைந் துதிரஞ் சிந்தச் சினத்துடன் புடைத்து நின்றார்.
2.3.17
117
சினத்துட னெதிர்த்த காபிர் திரளையுஞ் சஃது வேந்த
ரினத்தையும் வேற தாக்கி யிவர்க்குறு மொழிகள் சாற்றி
மனத்தினிற் கோப மாற்றி மனைவயின் புகுதச் செய்தார்
கனத்தநூன் முறையி னுட்பங் கண்டவல் லவர்க ளன்றே.
2.3.18
118
உதித்தமுன் முதன்மை யாக பீஸபீ லுதிரங் காட்டி
மதித்தவீ ரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார்
கொதித்தபுன் மனத்தி னோடுங் குறுகலர் மனையிற் சார்ந்தார்
பதித்தவே ரூன்றி தீனும் படர்கொழுந் தோங்கிற் றன்றே.
2.3.19
119
வேறு
தூத ராகிய முகம்மது மவர்க்குறுஞ் சுருதி
யோது நன்னெறி யுடையரு மினத்துட னுறைந்து
தீது றுங்கொடுங் காபிர்கள் செயலினைச் சிதைப்ப
வேத நன்மொழிப் பொருளொடுந் தீனிலை விரித்தார்.
2.3.20
120
கோத றுந்துகில் பொதிந்தரு மணிபல குயிற்றி
யோது நன்மொழி யொடுமிரு கரங்குவித் தொதுங்கிப்
பேத முள்ளற வணங்குமிப் பேயினா லுமக்குப்
பாத கம்பலித் திடுநிச மெனப்பழித் தனரே.
2.3.22
121
வம்பி ராதசொன் மறைதன துரையென வகுத்தெந்
தம்பி ரானையும் பழிப்பது தகுவதன் றெனவே
வெம்பி மாசினத் தொடும்பல விக்கினம் விளைப்ப
வம்பு ராசியொத் தூரவர் முகம்மதை யடர்ந்தார்.
2.3.22
122
அடர்ந்து வந்தவர்க் கெதிரபுத் தாலிப்சென் றடுத்துத்
தொடர்ந்து வந்ததிங் கென்னெனச் சூழ்ச்சியாற் றேற்றிக்
கடந்த சொல்லொடு மிதத்தொடும் பலவுரை காட்டித்
திடம்ப டைத்தவர் விக்கின மனைத்தையுஞ் சிதைத்தார்.
2.3.23
123
சமய பேதபுத் தனைத்தையுந் தகர்த்திடுந் தீனி
லமையு மென்பவர் சிலர்சில ரம்மொழிப் பகையாற்
கமைய றக்கடு கடுப்பவர் சிலர்சில ரிவர்க
டமைவி லக்குத றொழிலபுத் தாலிபு தமக்கே.
2.3.24
124
இவ்வ ணஞ்சில பகலிக லொடுநடந் ததற்பின்
பௌவ மார்த்தெனக் குறைஷிக டலைவர்கள் பலருஞ்
செவ்வி தாயொரு நெறிபடத் திரண்டுவந் தடைந்தார்
மைவ ணந்தரு கொடையபித் தாலிபு மனைக்கே.
2.3.25
125
இகன்ம னத்தவர் திரண்டபித் தாலிபை யெதிர்ந்து
சகத லத்திரு ளறவரும் பருதியொத் தனையோய்
விகட விக்கினம் விளையுமுன் விலகநும் மிடத்திற்
புகலு தற்கொரு கருமமுண் டெனப்புக லுவரால்.
2.3.26
126
ஹாஷி மாகுலக் கடனடு வெழுந்தக லிடத்தின்
மாசி லாமதி நின்றுணை யவர்தரு மதலை
யேசு வார்க்கிட மெனப்பிறந் திழிதர வினத்துப்
பாச நீக்கிநந் தேவத மனைத்தையும் பழித்தான்.
2.3.27
127
நடந்த முன்னெறி பழுதென நவிற்றியா லயத்து
ளடைந்த பேரனை வரும்வழி கேடரென் றறைந்து
கடந்த நூன்மறைப் பெரியவ ரிருசெவி கசப்பத்
தொடர்ந்து பேசுவ தொறுத்தில னடிக்கடி தொடுத்தான்.
2.3.28
128
தந்தை தாய்தமர்க் குறும்பொருட் சமயநிண் ணயத்தை
நிந்தை செய்தனன் றனக்குறும் வடுவென நினையான்
சிந்தை யுற்றதே துணிந்தனன் பிறர்மொழி தேறா
னிந்த வாறலால் வேறொரு கருமமு மிசையான்.
2.3.29
129
நின்னை நோக்கியு நின்குல முறைப்பெரி யவர்நேர்
தன்னை நோக்கியும் பொறுத்தனந் தணிந்தன மிவனை
யுன்னி நோக்கியே வணக்கிடு முமதுசொற் கடந்தாற்
பின்னை நோக்குமெந் திறமெனப் பேசின ரன்றே.
2.3.30
130
முறைமு றைப்படி காபிர்கள் கூறிய மொழிகேட்
டறம தித்தநெஞ் கடைந்தபித் தாலிபங் கவர்கட்
குறும னக்குறை தவிர்ந்திட நன்மொழி யுரைப்பப்
பொறைம னத்தொடு மனைவரு மனைவயிற் போனார்.
2.3.31
131
மாற்ற லர்க்கரி முகம்மது காபிர்கள் வணங்கிப்
போற்று புத்தையு மினத்தையும் பொருந்திலா திகழ்ந்து
தூற்று நிந்தனை யுரைமறுத் திலர்செழுஞ் சுருதி
தேற்றும் வானவர் கோனுரை நிலைபடுந் திறத்தால்.
2.3.32
132
உரைத்த வாசக மனத்திடை தரித்தில னுரவோர்
நிரைத்த டைந்தபித் தாலிபுக் குரைத்தது நெகிழ்ந்தான்
குரைத்த லென்னினி முகம்மது பெலத்தொடுங் குறும்பைக்
கரைத்தல் வேண்டுமென் றவரவர் தனித்தனி கடுத்தார்.
2.3.33
133
கோதில் கற்பகச் செழுங்கொடிக் கொழுங்கனிக் கதீஜா
மாது தன்மணம் புணர்ந்தவர் பொருடரு மதமே
சாதி ஹாஷிமென் குலத்தவர் பெலன்குறித் ததுவோ
வேதி வற்குறுங் குறும்பெனச் சிலரெடுத் திசைத்தார்.
2.3.34
134
தந்தி ரத்தினாற் சிலவரைத் தனதுரைக் கடக்கி
மந்தி ரத்துருச் சித்தியான் மார்க்கமொன் றெடுத்தான்
சிந்தை யிற்றௌி வுற்றுநோக் கிடுமறைச் செயலீ
ரிந்த வாறிவன் றொழிலெனச் சிலரெடுத் திசைத்தார்.
2.3.35
135
இழிவு செய்தொரு குலம்பிறந் தொருகுல மெடுத்து
வழிகெ டத்தனி நின்றவன் றனதுயிர் மாய்க்கப்
பழியும் பாவமு நினைத்திவை பழுதெனப் பலகான்
மொழிய வேண்டுவ தில்லெனச் சிலர்மொறு மொறுத்தார்.
2.3.36
136
நிறைத்த நந்நெறித் தேவத் நிலைதலை குலைய
வெறுத்த பேருயி ரகல்விசும் பினிற்குடி படுத்த
லொறுத்த லென்னபித் தாலிபுக் குரைத்தினி யொருகாற்
பொறுத்துச் செய்வது கருமமென் றனைவரும் புகன்றார்.
2.3.37
137
இசைத்து ரைத்தவை நன்கென வினத்தொடு பலரும்
விசைத்தெ ழுந்தபித் தாலிபு திருவயின் மேவித்
திசைத்த டங்களுந் திக்கினுந் திரிதரு கவனக்
குசைத்த டப்பரிக் குரிசின்முன் கூறுதல் குறித்தார்.
2.3.38
138
குரிசி னங்குல மகன்முகம் மதுசெயுங் குறும்பைப்
பரிவி னிற்பொறுத் திருந்துநும் மிருசெவிப் படுத்தித்
தெரிய வேண்டுவ திலையினிச் சேர்தரு மினத்திற்
குரிய ரியாமல வறிகவென் றுரைத்தயல் போனார்.
2.3.39
139
உற்ற தங்குலப் பெரியவ ரனைவரு முரைத்த
பெற்றி யும்மகன் குறிப்பையும் பிரித்தெடுத் தாய்ந்து
வெற்றி வாளபித் தாலிபு மனமிடை மிடைந்திட்
டுற்ற தங்கருத் தொடுமயற் குரைத்திடா துறைந்தார்.
2.3.40
140
பத்தி விட்டினம் வெறுப்பதும் பழுதுயிர்த் துணைவன்
புத்தி ரர்க்கிடர் வருவதும் பழுதெனப் புழுங்கி
யெய்த்த சிந்தையோ டியனபி தமையழைத் திருத்தி
வைத்து நன்னய மொழிசில வகுத்தெடுத் துரைத்தார்.
2.3.41
141
வருத்த முற்றபித் தாலிபங் குரைத்திடும் வசனந்
திருத்துந் தீனிலை முகம்மது செவியிடைப் புகுந்து
கருத்தி னிற்றௌிந் தெண்ணிய நல்வினைக் கருமம்
பொருத்து தற்கிட ரிதுகொலன் றகத்திடைப் பொறுத்தார்.
2.3.42
142
வந்து ரைத்ததம் மினத்தவர் மனவெறுப் பகல
நந்த மைச்சிறி திகழ்வரென் றகத்தினி னாட்டித்
தந்தை தந்திரு முகமலர் தனையெஹிர் நோக்கிச்
சிந்து முத்தவெண் ணகையித ழமுதவாய் திறந்தார்.
2.3.43
143
பருதி யைக்கொணர்ந் தணிவலக் கரத்திடைப் பதித்து
மரிதி னிற்சசி கொணர்ந்திடக் கரத்தினி லமைத்து
மொருமொ ழிப்பட வினத்தவ ரொருங்குற நெருங்கிப்
பொருத டக்கினு நும்மனம் பொருந்திலா திருந்தும்
2.3.44
144
ஈத லாற்சில விடரெனை யடுக்கினு மிறையோன்
றூத னியானெனச் சுருதியை விளக்குவ தலது
பேதி யாதென தகமென முகம்மது பிரியாத்
தாதை யோடுரைத் தனரிரு விழிமழை தயங்க.
2.3.45
145
அழுது ரைத்தநன் னெறிமுகம் மதுதமை யடுத்துச்
தழுவி யென்னுயிர் நீயல திலையெனச் சாற்றி
முழுது நின்கருத் துறும்படி முயல்வதே யன்றிப்
பழுதி லென்மனத் திதுகொனின் ணயமெனப் பகர்ந்தார்.
2.3.46
146
சிதைவி லாமொழி தனையபித் தாலிபு தௌிப்ப
மதலை யாகிய முகம்மது மனத்திடைக் களித்துப்
புதிய னாயக னாரணம் புடைபரந் தோங்க
விதுவி னொண்கலை வளர்த்தெனத் தீன்பயிர் விளைத்தார்.
2.3.47
147
வருந்தி லாதொரு சமயமென் றகுமது வடுவைத்
தருந்த வப்பிழைக் கொடுமுடி தனைமறுத் திலனென்
றிருந்த பேரினிற் றலைவர்க ளவரவர்க் கிசைத்துத்
திருந்தி லாமனக் காபிர்கள் கிளையொடுந் திரண்டார்.
2.3.48
148
மாத வத்தின னொலீதருண் மதலையைக் கொடுபோய்க்
கோதி லாதபித் தாலிபு திருக்கரங் கொடுத்துத்
தீதி ழைத்திடு முகம்மதை நமதிடஞ் சேர்த்துப்
பேத கத்தினைத் துடைப்பமென் றுரைத்தனர் பெரியோர்.
2.3.49
149
குறித்த வாசக நன்கெனத் திரளொடுங் கூடி
நறைத்த டப்புய வொலீதருண் மகனைமுன் னடத்தி
நிறைத்த மாமலர்ப் புயரபித் தாலிபு நிலவச்
செறித்த நீணிலை மணித்தலைக் கடையிடைச் சேர்ந்தார்.
2.3.50
150
வேறு
மாலை யிட்ட வரைப்புய மன்னபித்
தாலி பைக்கண் டனைவருங் கைமுகிழ்த்
தோலி டுங்கட லுட்படு நஞ்சினைப்
போலு மாற்றம் புகலப் பொருந்தினார்.
2.3.51
151
உத்த மத்தொலீ தென்பவன் செய்தவப்
புத்தி ரன்கலை யிற்பொரு வற்றவன்
சித்தி ரத்தினு மிக்குயர் செவ்வியன்
மத்த மாகரி யொத்த மனத்தினன்.
2.3.52
152
மறுவ றுங்குல மைந்தனிம் மைந்தனை
யறுதி நன்மனத் தோடு மளித்தன
மிறைவ நின்மக னாக்குக வில்லகத்
துறைக பின்னு மொருமொழி கேட்டியால்.
2.3.53
153
பெறத்த காத பெரும்பழி யாய்நம
தறத்தி னுக்கழி வாயவ தூறுமாய்
மறுத்தோர் மார்க்கம் வகுத்தமு கம்மதை
வெறுத்தி னத்தவர்க் கீந்திடல் வேண்டுமால்.
2.3.54
154
இந்த மாற்ற மிசைந்தினி ரேற்பகை
வந்தி டாது மறுத்தொரு தீங்கிலைச்
சிந்தை வேறுசெய் தீரெனி னீள்பகை
பிந்தி டாத பெரும்பழி சூழுமே.
2.3.55
155
எனவு ரைத்த வினத்தவர் தம்மொழி
மனதி னுட்புகுந் தங்கி வளர்த்துறு
சினமெ ழுப்பின சிந்தையுட் டீயைநன்
னினைவி னுட்பொதிந் தோர்மொழி நீட்டுவார்.
2.3.56
156
நலிவி லாது நடுவுரைத் தீரும
தொலிது மைந்தனு மாறத்தென் போன்றனை
மலியும் வெண்சுதை மாடத்துள் வைத்தியான்
மெலிவி லாது வளர்த்திடல் வேண்டுமால்.
2.3.57
157
எங்க டங்குலத் தின்னுயிர்த் தம்பிதன்
மங்கை யீன்ற மணியை முகம்மதை
யுங்கள் பாற்கொடு போயுமர் தம்மனப்
பங்கந் தீரப் படுத்தலும் வேண்டுமால்.
2.3.58
158
ஈது நந்நெறி யீது மனுநெறி
யீது நங்குலத் தாருக் கிணங்குவ
தீது வேதத் துரைப்படி யாவர்க்கு
மீத லாதுநன் னீதியு மில்லையே.
2.3.59
159
அறபெ னும்பதி யாரா சூழியோ
ரறவு நல்லறத் தாலறி வோங்கியோர்
பிறவு மிவ்வுரை யாவர்கள் பேசுவார்
பிறரு மில்லைநும் போற்பெரி யோர்களே.
2.3.60
160
உரைத்த லென்னுமர்க் குற்றசொல் லென்மனம்
பொருத்த மில்லெனப் புண்ணியர் கூறலுந்
திருத்தி லாதென்கொல் செய்குவ மியாமென
வருத்த முற்ற மனத்தொடும் போயினார்.
2.3.61
161
கனன்று சென்றற பிக்குலக் காபிர்க
ளனந்த ரக்குறை ஷிக்குலத் தாரொடு
வனைந்த பொற்கழன் மன்னவர் தம்மொடு
சினந்து தங்க ளினங்க டிரட்டினார்.
2.3.62
162
கேட்டு வந்தவ ருஞ்சிலர் கேட்டினை
மூட்ட வந்தவ ருஞ்சிலர் மூள்பகை
வீட்டு மென்று வெகுண்டவ ருஞ்சிலர்
கூட்ட மிட்டுக் குலத்தொடுங் கூடினார்.
2.3.63
163
வடித்த மெய்மறை நந்நபி வாக்கினிற்
படித்த சொல்லைப் பகர்ந்திடும் பேர்களைப்
பிடித்த டித்துப் பெலன்குறைத் தில்லமு
முடித்து டைத்திடை யூறு படுத்தினார்.
2.3.64
164
செறுநர் செய்திடுந் தீயவக் கோட்டிகண்
டறிவு றும்மபித் தாலிபு மங்கவர்க்
கிறுதி செய்குவ னியானென வீரமுற்
றுறைபெ ருங்குலஞ் சேர்ப்பதற் குன்னினார்.
2.3.65
165
பெருகி நின்ற தலைமுறைப் பேரராய்
வருமவ் வப்துல் முனாபுதம் மக்களி
னுரிய ஹாஷி மெனுங்கிளை யோரையும்
பொருவின் முத்தலி புக்கிளை யாரையும்.
2.3.66
166
தனத்த வப்துல் ஷமுசுக் கிளையையுஞ்
சினத்த வேல்நவு பலுக்கிளைச் சேனையுங்
கனத்த வெண்டிரை மாகடற் கொப்பென
மனைத்த லத்தில் வரவழைத் தாரரோ.
2.3.67
167
முன்றி லெங்கணு மொய்த்தசெவ் வேற்கர
வென்றி வீரரை நோக்கி விளித்தணி
மன்றன் மார்பின் முகம்மது வான்முனஞ்
சென்ற செய்தி யனைத்தையுஞ் செப்பினார்.
2.3.68
168
மாறி லாதெழின் மான்மதங் காவத
நாறு மேனி முகம்மதை நாடொறும்
வேறு பாடு விளைத்திடும் பேர்களைக்
கோற லென்குறிப் பென்னவுங் கூறினார்.
2.3.69
169
ஆட்டி றத்தபித் தாலி புரைத்தசொற்
கேட்டு முத்தலி புக்கிளை யோர்களுங்
கூட்டத் தாஷிம் குலப்பெரி யோர்களு
நாட்ட முற்றிது நன்றெனக் கூடினார்.
2.3.70
170
மற்றி ரண்டு கிளைமுதன் மன்னரிங்
குற்ற வார்த்தை யுசாவி யுறாதென
வெற்றி வேந்தக நீங்கி வெறுத்திடும்
பற்ற லாருறை பாலடைந் தாரரோ.
2.3.71
171
மறுவு றுத்து மனத்தின னாகிநல்
லறிவு நீங்கி யபூலகு பென்பவன்
பெறுமு றைத்தலை மைப்பெய ரானுமக்
குறுக லாருறை கூட்டத்தி லாயினான்.
2.3.72
172
பிரிவு செய்கிளை தன்னொடும் பின்னவ
னுரிய னாயின னென்று முளத்தினில்
வெருவி லாதுபுன் மூரல் விளைத்தட
லரியின் சீற்றமுற் றாரபித் தாலிபே.
2.3.73
173
பகைத்த காபிர்கள் கூடிப் பனைக்கைமா
வுகைத்த வீர னொலீதிடம் புக்கிநா
மிகைத்த ஹஜ்ஜின் முகம்மதின் வீரத்தைத்
தகைத்தல் வேண்டுவ துண்டெனச் சாற்றுவார்.
2.3.74
174
கணிதன் றுன்பக் கவியன் கபடித
வணிதன் வஞ்சனை யன்வரை வற்றபித்
தணித னென்றொரு பேரையுண் டாக்குத
றுணித னன்றென யாவருஞ் சொல்லினார்.
2.3.75
175
நீட்டு கைக்கரி யைநிக ரிற்புலி
காட்டு மாறென மாறிடுங் காபிர்கண்
மாட்டி ருந்து வழங்கிய மாற்றதைக்
கேட்டி ருந்த வொலீது கிளத்துவான்.
2.3.76
176
ஈதெ லாம்பெய ரன்றிவன் சொல்லினைக்
கோத டர்த்தகக் குறிப்பரி தாற்குலம்
பேத கப்படுத் தும்பெரு வஞ்சனைக்
சூத னென்றிடும் பேரெனச் சொல்லினான்.
2.3.77
177
இத்த லத்தினி லிவ்வரு டத்தினின்
மொய்த்த ஹஜ்ஜின்மு கம்மதை வஞ்சனைப்
பித்த னென்று பெரும்பெயர் நாட்டுதல்
பத்தி யென்றித மித்தனர் பொய்மையோர்.
2.3.78
178
மக்க மாநகர் வந்தவர் தம்மிடம்
புக்கி ருந்துமு கம்மதின் புத்திகேட்
டொக்க லோடுமிவ் வூரிழந் தொவ்வொரு
திக்கி னில்லடை வார்சிலர் காணென்பார்.
2.3.79
179
தாயைத் தந்தையைத் தன்னுயி ராகிய
சேயைப் பெண்டிரைச் சிந்தையில் வேறதாய்
பாயத் தோடும் பகைப்பிக்க வல்லதோர்
மாயக் காரன்மு கம்மதென் றோதுவார்.
2.3.80
180
ஆதி வேறுண் டொருவனென் பானவன்
றூத னியானெனச் சொல்லுவன் றெய்வங்கள்
பேத கம்படப் பேசுவன் பேதியா
வேத மொன்று விளந்தது காணென்பான்.
2.3.81
181
மடுத்த சிந்தை முகம்மதென் போன்றனை
யடுத்த வன்மொழிக் குள்ளகப் பட்டுநீ
ரெடுத்த நல்வழி கெட்டௌி மைக்குங்கீழ்ப்
படுத்த லாகப் படநினை யீரென்பார்.
2.3.82
182
வேறு
மலித ரும்புகழ் முகம்ம தைக்கொடிய
வஞ்ச னென்றுபெயர் பேசிய
வொலிது மக்களு மிழந்து கைப்பொரு
ளொழிந்து பேறுமுத வாமலே
நலித ருங்கொடிய நரக டந்திடுவ
னென்ன வாதிதிரு நன்மொழி
யலைவி லாதமரர் கோனி ழிந்தவனி
யிற்பு கன்றவணி லேகினார்.
2.3.83
183
மாசி லாவரிசை முகம்ம தின்பெயரை
மாற்றி வஞ்சகனெ னும்பெயர்
பேசி யூரவரி ரண்டு பட்டவுரை
பெருகி யெங்கணும் றிந்துபொன்
னூச லாடுதெரு வீதி மாமதின
முற்ற மன்னரு மறிந்துமா
பூச லாகுவ தினத்தி னுக்கிது
பொருந்து மோவென வருந்தினார்.
2.3.84
184
மதின மாநக ரவர்க்கு மக்கநக
ருற்ற மன்னவர் தமக்குமோ
ருதர பேதமஃ தன்றி யாவியுட
லொத்திருப் பவர்க ளாகையால்
விதியி னுட்பமறை கற்ற வன்புகழின்
மிக்க னானஅபு கைசவன்
பதிவு பாசுரமொ டுறைய நீதிமுறை
பழுதி லாதபடி யெழுதினான்.
2.3.85
185
ஓலை யுத்தரமு கம்ம தைக்கொடு
முரைத்த நிந்தைபழு தென்னவுஞ்
சீல மற்றபகை யொருவருக் கொருவர்
செய்து கோடல்பழு தென்னவு
மேலு நல்வழி திருத்தி னோர்கள்பத
மீது சார்தனல னென்னவுஞ்
சால மிக்ககவி தைத்தி றத்தொடு
தணப்பி லாதுற வனுப்பினான்.
2.3.86
186
வந்த வாசக முணர்ந்து காபிர்கண்
முகம்ம தைப்பழுது பேசிய
நிந்த னைச்சின மொறுக்கி லார்தின
நிகழ்த்து நல்வழி மனக்கொளார்
தந்தி ரத்திலுயர் மன்னர் சொன்னமொழி
தன்னையுந் நினைவி லெண்ணிலார்
செந்த ழற்குழிக ளேழு மானமுறை
தேடி நன்னெறியை மூடினார்.
2.3.87
187
இன்ன வாறுமுர ணான காபிரிட
ராயி ருப்பவு முகம்மது
முன்னு நன்னெறி நிறுத்து வேனெனு
முளத்தி னோடுதடு மாறிலா
தன்ன மன்னமட வார்க்கு மாடவர்
தமக்கு மற்றவர் தமக்குமே
லின்ன லற்றவிசு லாத்தி னேர்வழி
யிளைக்கி லாதுற விளக்கினார்.
2.3.88
188
சிந்து ரத்திர ளடர்த்து நின்றதொரு
சிங்க வேறெனு முகம்மது
தந்தி ரத்தையு மவன்ற னேர்வழி
தனக்கி சைந்தவர்க டம்மையு
மந்த ரத்தின்வழி யாவிடற் கினியோ
ரைய மில்லையென வங்கவர்
புந்தி யிற்கருதி வேறு வேறுகொலை
பூணு நாளில்வர வோதுவாம்.
2.3.89
189
மதுவ ழிந்தொழுகு மரவ மாலைபுனை
வரைநி கர்த்தபுய அப்துலா
புதல்வ ராகியமு கம்மதுந் தனியோர்
போது நீடுககு பாவடுத்
ததிவி தப்புதுமை மறைமொ ழிக்குமுத
லாதி யைத்தலை வணங்கியே
புதிய வேதமொழி கொடுபு கழ்ந்துநிலை
பொருந்தி யங்ஙன மிருந்தனர்.
2.3.90
190
கண்ட காபிர்களி லொருவ னோர்துகில்
கரத்தி லொப்பறமு றுக்கியே
யண்டர் நாயகமு கம்ம தின்றம
தருங்க ழுத்துற விறுக்கினான்
விண்டி லாரெதிர் விழுத்திலா ரதனை
மெய்மை யோரும்பு பக்கர்தா
மிண்டு வல்வினை யிதென்று கண்டற
விரைந்து பாலினி லடைந்தனர்.
2.3.91
191
மிடற்றி லுற்றதுகி றனைநெ கிழ்த்துமிகு
வினைகொ லைக்கபடர் தங்களை
யடுத்த டாதசில மொழியின் வேகமோ
டடர்த்து விட்டெழின் முகம்மதி
னிடத்தி ருந்துதொழு தெழுந்த பின்புட
னெழுந்தி ருந்துதம தாவித
முடற்பு குந்தபடி மனைபு குந்தபி
னுயர்ந்த தம்மனை யடைந்தனர்.
2.3.92
192
அன்றொ ழிந்துசில நாள கன்றபின
னாதி தூதெனு முகம்மது
மன்ற றுன்றுமது மாலை நாற்றியொளிர்
மணிதி கழ்ந்தககு பாவிடஞ்
சென்ற டுத்தரு கிருந்து மூதுரை
தௌித்த மாமறை விழ்கிக்கொடெ
யொன்று பட்டமன மங்ங னஞ்சிறி
துணங்கி லாதுற வணங்கினார்.
2.3.93
193
தக்க நன்னெறி பிழைத்த பாவியபு
ஜகல்சைபா வொலிது தன்னுட
னுக்கு பாவுமுத் பாவு மூடனுமை
யவு மீனனுமா றாவுமா
யொக்க லோடவ ணடைந்து நந்நபி
யொழுங்குறுந் தொழுகை நோக்கியோர்
விக்கி னத்தினை நினைத்தொ ருத்தனை
விளித்து ளூரிடை விடுத்தனர்.
2.3.94
194
ஊரி னிற்புகுந்தோ ரொட்ட கத்தெலும்
புடற்குடர்க் குருதி யூனுலம்
வாரி வந்தவன் முகம்ம தின்றனி
மணிப்பு றத்திடைப் படுத்தலும்
வேரி யங்கமு தலைம்பு லன்களும்
வெறுத்தொ டுக்கிய சுஜூதினிற்
பாரி டைப்படிதல் கண்டு தீனிலை
பகைத்த பாவிக ணகைத்தனர்.
2.3.95
195
பிடரியின் மீதுசுமை யும்சு ஜூதியல்
பிரிந்தி டாதவ ணுறைந்தது
மடைய லார்கணகை யோடு நின்றது
மகம்வெ தும்பவொரு காளைகண்
டிடைய றாதவசை கொண்ட பாவிக
ளிழைத்த பாதகமி தென்னவே
யுடைய நாயனபி புதல்வி தம்மிட
மொதுங்கி நின்றிவை யுரைத்தனன்.
2.3.96
196
மாத ருக்கரசி பாத்தி மாவெனு
மடந்தை கேட்டுள மயக்குற
வீதி வாயிடை புகுந்து மின்னென
நடந்து மாமறை விளக்கிடுந்
தாதை வெந்நிட மிருந்த தைச்சிதறிச்
சரிவளைக் கைகொடு தனிதுடைத்
தேத முற்றமொழி காபி ரைச்சிறி
தெடுத்து ரைத்துமனை மேவினார்.
2.3.97
197
ஏக னைத்தொழு தெழுந்தி ருந்துபி
னிடும்புசெய் தவரை நோக்கியே
மோக முற்றதனி றப்பனா வுனது
முனிவினா லிவர்க டங்களை
வேக முற்றகொடு நரகிடைப் புகுத
விடுதல் வேண்டுமென விரைவினான்
மாக நோக்கியிரு கரமெ டுத்துபது
வாவு ரைத்துநபி போயினார்.
2.3.98
198
வேறு
வீணுரை பகர்ந்து மிடும்புக டொடுத்தும்
வெவ்வினைக் கொடுங்கொலை நினைத்துங்
காணிலாப் புதுமை விளைத்தநா யகத்தை
காபிர்கள் வெறுத்திடுங் காலந்
தூணினைத் துரும்பா நினைத்தென ஹாஷின்
றோன்றலில் அக்கமென் றொருவன்
பூணிலாப் பவநோய் பூண்பது தனக்கே
பெருவிலா தொருதொழி லெடுத்தான்.
2.3.99
199
இருவிழி கறுப்பு மொருபுறத் தொதுங்க
விதழ்க்கடை வாயிடைப் பிதுங்கத்
திருகுற முகத்தைச் சுரிப்பொடு வளைத்துத்
திகழ்தரு நாசியைச் சிலிர்த்துப்
பெருகிய கழுத்தி னரம்புகள் விறைப்பப்
பிளந்துவாய் நாநுனி புரட்டி
வரிவர வலித்து முகம்மதை நோக்கி
மனத்துறா திகழ்ச்சிசெய் தனனால்.
2.3.100
200
கதிர்விரிந் தொழுகு மெய்யெழி னபியைக்
காண்டொறுங் காண்டொறும் வலித்திட்
டெதிரெதிர் வருவன் விலக்குதற் கமையா
னிங்ஙனஞ் சிலபக றிரிந்தான்
புதியவன் றூத ரிவன்றனை நோக்கிப்
பொருவிலாச் செவ்விதழ் திறந்து
பதிபெற வலித்திட் டிதனிலெண் மடங்காய்ப்
பழிப்பொடுந் திரிகுவை யென்றார்.
2.3.101
201
பலித்தது நபிதந் திருமொழி யவன்பாற்
பதிமடங் காயின விதழ்வாய்
வலித்தலுங் கண்கள் சிமிட்டலு முலகில்
வழங்கிலா வலிப்பெலாம் வலித்துச்
சிலிர்த்தது முகங்கண் டடுத்தவர் மனங்க
டிகைத்ததும் பெருங்குல மனைத்துஞ்
சலித்ததுந் தவிரா விடும்பினால் வருநோய்
படர்ந்தது வைகலுந் தழைத்தே.
2.3.102
202
பெறுமவ ரிடத்து மனைவிதன் னிடத்தும்
வலிப்பது தவிர்ந்திலன் பெரியோர்
மறுகெதிர்ப் படினு முகத்தெதிர் நோக்கி
வலித்திட லொழித்திடான் புதியோர்
சிறுவர்கள் காணி லெவ்விட மனைத்துஞ்
சிதறியே வெருவிடத் திரிவன்
குறைவிலா நபியைப் பழித்தநிந் தனையாற்
குவலயம் பழித்திடத் திரிந்தான்.
2.3.103
203
குருநெறி யவரைக் காண்டொறும் வலிப்பன்
கோயிலிற் றேவத மிடத்திற்
சிரசினை வளைத்து முகஞ்சுரித் திருகண்
சிமிட்டுவ தடிக்கடி மறவான்
வருநெறி பிழைத்த பாவிகள் குலமும்
வணங்கிய புத்துக ளனைத்துந்
தருநபி பழித்துக் காட்டுதற் கிவனோர்
சாட்சியிற் றலைமைய னானான்.
2.3.104
204
மருந்தினான் மணியான் மந்திரத் தொழிலான்
மாறிலா மாயநோ யதனாற்
றிருந்திய மதிகெட் டங்கமும் வேறாய்த்
திரிந்தவ னாட்குனாட் டேய்ந்தான்
பருந்தெழுங் கதிர்வேன் முகம்மதை யிகழ்ந்தோன்
படும்வர லாற்றையு மறிந்து
மிருந்தகா பிர்களி லொருவனுண் மதத்தா
லிடதுசெங் கரங்கொடு பொசித்தான்.
2.3.105
205
போனக மருந்தாக் கரத்தினா லமுது
பொசித்தவன் றனையெதிர் விளித்து
வானநா யகநன் னெறிமுகம் மதுவும்
வலக்கரங் கொடுபுசித் திடுமென்
றீனமற் றுரைப்ப விடருறு மொழியா
யிடக்கரம் வழங்குவ தலது
தேனவிழ் தொடையாய் வலக்கரம் வழங்கா
தெனவவர் திருமொழி மறுத்தான்.
2.3.106
206
வலிபெற வழங்கும் வலக்கரம் வழங்கா
தெனமறுப் படிறுரைத் தவனைக்
கலியென நினைத்துக் கவரிதழ் திறந்தெக்
காலமு முனதுரைப் படியே
நிலைபெற நிலத்தி லிருப்பது நிசமென்
றுரைத்தனர் நெடுமுடி யாதந்
தலைமுறைப் பெயரின் முதன்மணி விளக்காய்த்
தருகதிர் நபிமுகம் மதுவே.
2.3.107
207
அடங்கலர்க் கரியா யுதித்தநந் நயினா
ரறைந்தசொன் மறுத்தவன் வலக்கை
முடங்கில சிறிது நீண்டில வுணர்வு
முழுதினு மிலதுகெட் டொடுங்கி
வடங்கொள்வெம் முலையார் நகைத்தரு வருப்ப
வருந்தினும் வாய்க்குத வாம
லிடங்கொளம் புவியு ணோக்குநர்க் கிழிவா
யிணங்கிலா தொழிந்திருந் ததுவே.
2.3.108
208
மண்ணினிற் செழுந்தீன் பயிர்நலந் தழைக்க
வளர்த்தமா மறைநபி நயினார்
கண்ணுடைக் கரும்பின் சுவையினு மினிய
கட்டுரை நெறிக்கலி மாவை
யுண்ணிறை யமிர்த மெனவறி யாம
லொடுங்கிலா தெதிரிடர் பகர்ந்திட்
டெண்ணிறந் தனையர் சிலபக லிவர்போ
லிடும்பைநோய் சுமந்திருந் தனரே.
2.3.109
209
மறைபடாப் புகழை யுலகினில் வளர்த்து
வருமொரு துரைபுயல் காசீங்
குறைபடா மனமும் வாக்குமொன் றாகப்
புகழ்ந்திடுங் குரிசினந் நபிக்கு
நிறைபட வடுத்த கிளையனைத் தையுந்தீ
னிலைபெற நிறுத்திடு மென்ன
விறையவ னாயத் திறங்கிய தெனவங்
கிருந்திறங் கினர்ஜிபு ரீலே.
2.3.110
210
திருமறை மொழியொன் றுரைத்துவிண் ணவர்கோன்
சேணிடை யுறைந்தபின் மாறா
விரைகிடந் தருந்தேன் றுளித்தகுங் குமத்தார்
விளங்கிய புயவரை துலங்க
வருமுதன் மதமா கரியெனத் திருந்து
மனத்திடைக் களிப்பொடு மகிழ்ந்து
தருமுகிற் கவிகை யிலங்கிடச் சிறந்த
சபாமலை யிடத்தினிற் சார்ந்தார்.
2.3.111
211
உடுப்புறம் பொதிந்த மதிதவழ் மலையி
னுச்சியி னடுமிசை யுறைந்து
கடுப்பறக் கொடுஞ்சொற் பிறந்திடா தமிர்தங்
கனிந்தவா யிதழ்திறந் தெவர்க்கு
மெடுப்பரும் புதுமை யுண்டென வினத்தோ
ரியாரையு மினிதுற நோக்கிக்
கொடுப்பதற் கெழுமா முகிலினம் பொருவாக்
குருநெறி முகம்மது விளித்தார்.
2.3.112
212
கல்லகத் துறைந்து முகம்மது விளித்த
கட்டுரை கேட்டலு மினத்தோர்
பல்லருஞ் செறிந்து திரளொடு மெழுந்து
பார்த்தறி குவமென நடந்து
செல்லிடம் பிரியாக் கருமுகிற் கவிகை
நீழலிற் சேட்டிளங் கதிர்விட்
டெல்லவ னெழுந்த தெனநபி யிருந்த
விடத்தினி லுறைந்தன ரன்றே.
2.3.113
213
காரண முளதென் றுரைத்தெமை விளித்த
கருத்தறி கிலமெனக் கடிதி
னூரவ ருரைப்ப வானவ ருரைத்த
வுரையினை யுளத்தினி லிருத்தித்
தாரணிப் புறத்திற் றெறும்படை திரண்டு
வந்தது தமர்க்கிட ரெனயா
னீரமுற் றுரைப்ப வெவர்க்குமுண் மையதா
யிருப்பதோ வெனநபி யிசைத்தார்.
2.3.114
214
உரைத்தசொல் லெவர்க்கு முறுதிநிண் ணயமென்
றனைவரு முரைத்திட மகிழ்ந்து
நிரைத்தகுங் குமத்தார்ப் புயநபி யினியா
னிகழ்த்திய மார்க்கநன் னெறியைத்
தரைத்தலத் தீமான் கொள்ளுதற் கிசையாத்
தரம்படைத் தவரனை வரையுங்
கரைத்திட நனிய தாபெனுங் கொடிய
கடும்பிணி பிடித்திடு மென்றார்.
2.3.115
215
கூறிய மொழிகேட் டபூலகு பெனுமக்
கொடிய னிருவிழி சிவந்து
மாறுபட் டிதற்கோ குலத்தொடுங் கெடுவாய்
வாவழைத் தனையெனச் சீறித்
தேறிலா துறுக்கி யிருகரம் புதைப்பச்
செறிதரு பூழ்தியை வாரி
யீறிலான் றூதை முகம்மதைச் சிறிது
மெண்ணிலா தெதிர்ந்துநின் றெறிந்தான்.
2.3.116
216
அடர்ந்தெதிர்த் துரைத்த கொடியவ னபூல
கபுபுவி யிடத்துமா கிறத்து
மிடைந்திடும் பெருங்கே டுடையவ னிவனே
யென்னுமப் பொருளுரை பிறப்பத்
துடங்குதப் பத்ய தாவெனத் தோன்றுஞ்
சூறத்தொன் றிறங்கிய துலகிற்
கிடந்தமும் மறையுந் தெரிதரப் புகழ்ந்த
கிளரொளி முகம்மது நபிக்கே.
2.3.117
217
சூறத்தின் பொருளை முகம்மது முரைப்பத்
துணுக்குறா துனதுரை யுலகிற்
றேறத்துன் புறுங்கே டெனக்குவந் தடைந்தாற்
றேடிய திரவிய மனைத்து
மீறத்தந் திரருக் களித்திட ரதனை
விரைவினிற் போக்குவ னென்னப்
பேறத்த மிலசொ லுரைத்தன னெவர்க்கும்
பெருங்கொலைப் பிழைவிளைத் திடுவான்.
2.3.118
218
இறையவன் றூதர்க் கிசைத்தசொற் கெதிரா
யிசைத்திடு மபூலகு பென்போ
னிறைதரும் பொருளு மிழந்துத வாம
னெட்டுடற் பெருந்தலை யரவ
முறைதரு நரகம் புகுவனென் றாயத்
திறங்கிய துலகெலாம் விளங்க
மறைமொழி பயிற்றுஞ் செவ்விதழ் மணிவாய்
முகம்மது மனமகிழ் பெறவே.
2.3.119
219
அவனியிற் கேடு முடிவினி னரகு
மடைகுவ னபூலகு பெனவே
செவியுற வாயத் திறங்கிற்றென் றுரைத்த
வுரைக்குஞ்சேர் தருமின மனைத்துங்
கவினற அதாபென் றொருபிணி பிடிக்கு
மென்றகட் டுரைக்குமே கன்றித்
தவிர்கிலா வயிர மனத்தராய்க் காபிர்
தனித்தனி கொலைத்தொழி னினைத்தார்.
2.3.120
220
வேறு
தேந்தரு மினியசொற் செவ்வி நந்நபி
யாய்ந்தசொ லுணர்ந்திசு லாத்தி லாகிய
மாந்தரைப் பிடித்தக மறுக்க முற்றற
வீய்ந்திட விடர்பல விளைத்திட் டார்களே.
2.3.121
221
வீசுவர் சிலர்தமை விடுத்து நன்மொழி
பேசுவர் சிலர்தமைப் பிடித்துப் புன்மொழி
யேசுவர் சிலர்தமை யிரண்டு பட்டுறும்
பூசலுக் கடிப்படை புணர்த்து வார்சிலர்.
2.3.122
222
மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தி
லாயின னிவனென வடுத்தம் மாறையுங்
கூயவன் றந்தையா சிறையுங் கோதிலாத்
தாய்சுமை யாவையுந் தமக்கை தன்னையும்.
2.3.123
223
பிடித்தனர் சினத்தொடிந் நான்கு பேரையு
மடித்தன ரிருகர மழுந்த வங்கமுந்
துடித்திடக் கயிற்றினிற் சுருக்கிப் பாதலம்
வெடித்திடச் சுடும்பரல் வெயிலி லாக்கினார்.
2.3.124
224
ஏங்குவ ரிரங்குவ ரிருக ணீர்விழத்
தேங்குவ ரடிக்கடி தீனை மாறியு
நீங்குவ தில்லென நினைந்திட் டுள்ளகம்
வீங்கிட நெட்டுயிர்ப் பெறிந்து வீழ்குவார்.
2.3.125
225
தங்கிய கதிரவன் றழலின் மெய்யொளி
மங்கியுள் ளீரலும் வறந்து தீய்ந்திடப்
பங்கிகள் பூழ்தியிற் பதிய மூட்டிய
வங்கியிற் கிரிமியொத் தறிவு போக்கினார்.
2.3.126
226
வேனலிற் கிடந்துடல் வெதும்பிச் செவ்வரி
பானலத் தருவிநீர் பரப்பி யுள்ளுடைந்
தூனென வியர்ப்பெறிந் துதிர நந்நபி
தீனிலை மறுத்திலர் செவ்வி யோர்களே.
2.3.127
227
உறுக்கினார் செழுங்கர முரத்தோ டொன்றவே
யிறுக்கினா ரடிக்கடி யெடுத்த தீவினை
முறுக்கினா ரல்லது மூட்டுந் தண்டனைக்
குறுக்கினா ரிலைக்கொலைக் கொடுமை யாளரே.
2.3.128
228
நன்னிலை கெடுமவர் நடத்தும் வல்வினை
யின்னல்கண் டெழினபி யிடருற் றொரொடு
மன்னிய துயரினைப் பொறுத்த மாட்சியாற்
பொன்னுல குமக்கென வுரைத்துப் போயினார்.
2.3.129
229
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை
யெண்ணுற நோக்குவ ளிதயம் வாடுமப்
பெண்ணினை நோக்குவள் பெய்யுஞ் செந்தழல்
விண்ணினை நோக்குவள் வீடு நோக்குவாள்.
2.3.130
230
யாசிறு மனைவிநல் லறிவுக் கில்லிட
மாசற தீன்பயிர் வளர்க்கும் வேலியார்
பாசமற் றவரிடர் பார்த்தி லேனெனக்
காசறு பொன்னகர் காணப் போயினார்.
2.3.131
231
தெரிமறை முகம்மதின் தீனுக் காகவே
யிருநிலத் திடைமுத லிறந்து தேன்சொரி
மருமலர் சுவர்க்கமா ராயம் பெற்றவர்
தருஅம்மா றுடையதா யெவர்க்குந் தாயரே.
2.3.132
232
அன்னமென் னடைச்சுமை யாவென் றோதிய
மின்னம ருலகிடை மேய பின்னெடு
வன்னியின் குழிக்குடல் வளர்க்கும் பாதக
ருன்னிய கொடுஞ்சின மொழிந்தி லாரரோ.
2.3.133
233
துன்னல ரிழைத்திடுந் துன்பத் தாலடன்
மன்னவன் யாசிறு மகளும் வாடிநின்
றின்னலி லிடைந்திடைந் திறந்து சோதிவாய்ப்
பொன்னுல கினிற்குடி புகுதப் போயினார்.
2.3.134
234
தந்தையு முடன்பிறந் தவளுந் தயரு
மிந்தவல் வினையினா லிறந்திட் டாரென
மந்தரப் புயரம்மா றென்னு மன்னவர்
சிந்தையிற் சூழ்ச்சியொன் றுன்னித் தேறினார்.
2.3.135
235
வாயினி லொன்றுந்தம் மனத்தி லொன்றுமத்
தீயினுங் கொடியவ ரிடத்திற் செப்பியே
மேயதுன் பனைத்தையும் விலக்கி வில்லிடுஞ்
சாயக மெனநபி யிடத்திற் சார்ந்தனர்.
2.3.136
236
மாதவ ரிடம்புகுந் தமரர் வாழ்த்திய
பாதபங் கயமல ரிறைஞ்சிப் பற்றொடுங்
கோதறு தீனிலை நிறுத்துங் கொற்றவர்
சீதவொண் கட்கடை யருவி சிந்தினார்.
2.3.137
237
அழுதவர் திருமுக நோக்கி யங்கையாற்
செழுமலர்க் கண்ணினீர் துடைத்துத் தீயவர்க்
குழுவினைக் கடந்திவ ணடைந்த கொள்கையை
மொழியென வுரைத்தனர் முதல்வன் றூதரே.
2.3.138
238
பெற்றவ ரிருவரும் பிறப்புந் துஞ்சின
ருற்றவ ரிலையென வுன்னி யுண்மையை
முற்றுறக் கருத்தினின் முடித்துக் காபிர்கள்
சொற்றவைக் கேற்பவை சொல்லி னேனென்றார்.
2.3.139
239
ஆக்கமற் றவரிட ரடுக்கி லின்னமும்
வாக்கினி லொருமொழி வழங்கி யுண்மையைப்
போக்கறச் சிந்தையுட் பொருத்தித் தீவினை
நீக்குதல் கடனென நிகழ்த்தி னாரரோ.
2.3.140
240
இவ்வண நிகழ்ந்திவ ணிருக்கு நாளையி
னொவ்விய மனத்திபு னுகல பென்பவன்
வெவ்விய னடிமைபி லாலை நோக்கிமா
செவ்விய னிவனென நகைத்துச் சீறினான்.
2.3.141
241
அடிமைய னறிவில னறியுந் தன்னுரைக்
படிநட வாமுரண் படித்த வஞ்சன்பொய்
பிடிபடு முகம்மதின் பேச்சுக் குட்படுங்
கொடியவ னிவனெனக் கனன்று கூறினான்.
2.3.142
242
மாயவஞ் சனைத்தொழின் முகம்ம தின்வயின்
போயிசு லாத்தினிற் புகுந்த தென்னெனக்
காயெரி நிலத்திடைப் படுத்திக் கல்லெடுத்
தேயவ னுரத்தினி லிருத்தி னானரோ.
2.3.143
243
படருல முரத்தினிந் பதியப் பார்க்கரன்
சுடுகதிர் நிலத்திடைச் சோர்ந்து மூச்செறிந்
துடலுலைந் துள்ளுயி ரொடுங்குங் காலையி
லிடர்தவிர்த் திருவிழி யெரிய நோக்குவான்.
2.3.144
244
மற்றுமத் தரையிடைக் கிடத்தி மார்பக
மிற்றிடப் பெருஞ்சிலை யுரத்தி லேற்றுவன்
சற்றொரு நொடிவரை தவிர்ந்தி ரான்மனப்
பற்றறு மிரக்கமி லாத பாவியான்.
2.3.145
245
நெஞ்சினிற் பெருஞ்சிலை சுமந்து நீங்கிலா
வெஞ்சுரத் திடைமிடை மிடைந்தும் வேதநூல்
விஞ்சையின் முகம்மது விளக்கு முண்மையை
யஞ்சலித் தவனலா லறிவு நீங்கிலான்.
2.3.146
246
இபுனுகல் பவனிட ரென்னுந் தீயினி
னவநித மெனப்பிலால் நடுங்க விண்ணுமிவ்
வவனியும் புகழ்நபி தோழ ராகிய
கவனவாம் பரியபூ பக்கர் கண்டனர்.
2.3.147
247
பொறுக்கரும் வேதனை பொறுத்து நிண்ணய
மறுக்கில னிவனென மதித்துக் கூறிய
வெறுக்கைகொண் டடிமைபி லாலை மீட்டினம்
பெறற்கரு முரிமையா னென்னப் பேசினார்.
2.3.148
248
மன்னிய புகழபூ பக்கர் மாசிலா
நன்னிலை யவன்றனை யுரிமை நாட்டிய
பின்னரும் பகைப்பிணி பிணிப்பு நீக்கியே
தன்னரு ளொடும்பெருந் தீனைத் தாங்கினார்.
2.3.149
240
வேறு
திருநெறி தீனுள் ளோரைத் தீனெறி மாறி னோர்கண்
மருளுடை மனத்த ராகி முரண்மறா திருக்கு நாளில்
விரிகதி ரிலங்கிச் சேரார் மெய்நிணம் பருகும் வெள்வேற்
கரதல ஹம்சா வென்னுங் காளைகா னிடத்திற் புக்கார்.
2.3.150
250
மெல்லிலைக் கானத் தேகி விலங்கினம் வேலிற் றாக்கிப்
பல்லருங் குழுமி யார்ப்பப் பரிவொடும் வேட்டை யாடி
யொல்லையி லடவி நீந்தி யுள்ளகம் பூரித் தோங்கச்
செல்லுறை புரிசை வேலித் திருநகர் சாருங் காலை.
2.3.151
251
செல்லுறழ் கரச்சுத் ஆனென் றோதிய செவ்வித் தோன்ற
லில்லுறைத் தொழும்பி லுள்ளா ளிளங்கொடி யொருத்தி வெற்றி
வில்லணி தடக்கை யேந்தி வரும்விறல் ஹம்சா வென்னும்
வல்லிய மெதிரிற் புக்கு வாய்திறந் துரைக்க லுற்றாள்.
2.3.152
252
ஒன்னலர்ச் செகுக்கும் வேலோ யுமதுயிர்த் துணைவ ரீன்ற
மன்னர்மன் னவரைச் செல்வ முகம்மதை வதன நோக்கி
யின்னலுற் றகமுங் கொள்ளா விழுக்கொடும் வழுக்கொண் மாற்ற
முன்னியுற் றுரைக்க வொண்ணா தபூஜகி லுரைத்த தன்றே.
2.3.153
253
கைப்புரை சினக்கக் கூறுங் கருதலன் முகத்தை நோக்கி
மைப்படுங் கவிகை வள்ளன் மறுத்தொன்று மொழிகி லாம
லெய்ப்புறு மனத்த ராகி யினமில்லாத் தமியர் போலச்
செய்ப்படும் வனச மொவ்வாச் செம்முகம் வௌிறிற் றென்றாள்.
2.3.154
254
பழுதுறுங் கொடிய மாற்ற மபுஜகல் பகர்ந்த வெல்லாம்
பொழிகதிர்ப் பொருப்புத் திண்டோட் புரவலர் பொறுத்தா ரென்ன
வழுவறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேக மீறிக்
குழுவொடுந் திரண்டு வைகுங் கொடியவ னிடத்திற் சார்ந்தார்.
2.3.155
255
படிறபூ ஜகிலென் றோதும் பாதகன் வதன நோக்கி
யடல்முகம் முதுவைச் சொல்லா தவமொழி பகர்ந்த தெந்த
மிடலெனச் சினந்து சீறி வீரவேற் றடக்கை வில்லா
லுடைபடச் சிரத்திற் றாக்கி யுறுக்கொடுங் கறுத்துச் சொல்வார்.
2.3.156
256
துனிமனத் துறைய முன்னோன் றோன்றலை யுறைத்தா யென்னி
லினியெவை யுரைப்ப னியானு மியனபி மொழிந்த மார்க்கந்
தனினடு நிலைமை யானேன் சாதியிற் றலைவர் கூடி
நனிபகை வரினுங் காண்பேன் காணுநீ நவிற லென்றார்.
2.3.157
257
அணிதிகழ் ஹம்சா வஞ்ச மடரபூ ஜகிலை நோக்கித்
தணிவிலா வெகுளி மாற்றஞ் சாற்றலு மவனைச் சூழ்ந்து
பணிபனீ மகுசூ மென்னுந் திரளவர் பலருங் கோபத்
துணிவுட னமருக் கேற்ற சுடர்ப்படைக் கலன்க ளேற்றார்.
2.3.158
258
இனத்தவர் நெருங்கிச் செவ்வா யிதழ்மடித் திருகண் சேப்பச்
சினத்ததும் ஹம்சா வென்னுஞ் சிங்கவே றியல்பு நோக்கி
மனத்தினி லடக்கிச் செவ்வி மதியொடுந் தமருக் கேற்பக்
கனத்துரை யெடுத்துக் காட்டி யபூஜகில் கழற லுற்றான்.
2.3.159
259
அங்கவன் றனையன் மைந்த னகுமதை வாய்க்கொள் ளாத
பங்கமுற் றுறுஞ்சொற் கேற்பத் தண்டனை படுத்தல் செய்தா
னங்குலத் தவர்க்குக் கோப நடத்துதல் பழுதென் றோதி
வெங்கொலை மனத்து ளாக்கி விளைபகை தவிர்த்து நின்றான்.
2.3.160
260
அடலரி ஹம்சா கோபித் தபுஜகி லவையை நீங்கிக்
கடிமலர் மரவத் திண்டோட் கனவரை கதித்து வீங்க
வுடைதிரை யமுத மொவ்வா தோதிய கலிமா வேந்த
ரிடைவிடா திருப்பத் தோன்று மெழின்முகம் மதுவைச் சார்ந்தார்.
2.3.161
261
வள்ளலென் றுதவுஞ் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின்
விள்ளரு மறையின் றீஞ்சொல் விடுத்தெடுத் துரைப்பத் தேறி
யுள்ளமு முடலும் பூரித் துருசிக்கு மமுதின் மிக்காய்த்
தெள்ளிய கலிமா வோதி தீனிலைக் குரிய ரானார்.
2.3.162
262
அறிவுறும் ஹம்சா தீனி லாயின ரென்னு மாற்ற
மறுவுறை குபிரர் கேட்டு ம்னத்தினிற் றுன்ப முற்றா
ரிறையவன் றூதர் செவ்வி யியனபி கலிமா வோதுந்
திறல்கெழும் வேந்த ரியாருஞ் சிந்தையிற் செல்வம் பெற்றார்.
2.3.163
தீனிலை கண்ட படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 3க்குத் திருவிருத்தம்...262
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.4 உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் (263- 357)
263 |
சமர கேசரி யப்துல்லா தருதிரு மதலைக்
கமரர் கோனிழிந் தருநபி யெனும்பெய ரளித்துத்
திமிர வெங்குபிர் கடிந்துதீ னிலைநெறி நிறுத்திக்
கமைத ரும்படி யாண்டுநான் கெனக்கடந் ததற்பின். 2.4.1 |
264
வருட நான்குசென் றைந்தினின் முகம்மது வொருநா
ளிரவி னிற்றனித் திருந்திரு கரமெடுத் தேந்திப்
பொருவி லாமுத லிறைவனை யீறிலாப் பொருளை
யுருகு மெய்ம்மன வாக்கொடும் புகழெடுத் துரைத்தார்.
2.4.2
265
உலகி னிற்கரு தலர்க்கட லரியும றினைக்கொண்
டலத பூஜகி லினைக்கொடு தீனிலை யதனைப்
பெலனு றும்படி யெனக்கருள் பிறிதிலை யெனவே
நலனொ டுந்துதுஆச் செய்தனர் முகம்மது நபியே.
2.4.3
266
இந்த மன்னர்க ளிருவரி லொருவரென் வசமாய்த்
தந்து தீனிலை நிறுத்துவை யெனத்தனி முதலைப்
புந்தி கூர்தர வுரைத்தனர் கேட்டனர் புகழ்ந்தார்
சிந்து வெங்கதி ரெழுந்தது விழுந்தது திமிரம்.
2.4.4
267
அற்றை யிற்பகற் போதினி லபூஜகி லவையுள்
வெற்றி வேந்தர்கள் பலருட னுமறையும் விளித்துக்
கற்ற வாள்வலி யவர்க்குறு கருமமென் மனத்தி
லுற்ற தொன்றுள தியாவருங் கேண்மினென் றுரைத்தான்.
2.4.5
268
திக்கு நான்கினுந் திசையினுந் தேயங்க டனினு
மக்க மேயிக லறுந்தலம் வலிமையு மஃதே
மிக்க வீரத்தி னம்மினத் தவரதின் மேலோ
ரொக்கு மியாந்தொடுத் ததின்முடி யாததொன் றிலையே.
2.4.6
269
பதிக்கு நம்மினத் தவர்க்குநல் வழிக்குமுட் பகையா
யுதிக்கும் பாதகர் போனபி முகம்மதென் றுதித்தான்
சதிக்கும் வஞ்சனைத் தறுகண னிவன்றனைப் பொருளாய்
மதிக்க வேண்டுவ திலையினி வதைத்திட வேண்டும்.
2.4.7
270
உதிரஞ் சிந்திட முகம்மதி னுயிர்செகுத் தவர்க்கென்
பதியி னுற்றதெப் பொருளுள தப்பொருள் பலவு
நிதியு மீய்குவ னெனக்கர செனநிகழ்த் திடுவ
னெதிரும் வீரர்க ளுளரெவ ரெனவெடுத் திசைத்தான்.
2.4.8
271
மானம் போக்கிய கொடுங்கொலை விளைத்திடு மனத்தா
னீன னிவ்வுரை பகர்தலு மவையகத் திருந்தோ
ரான திவ்வுரை தீங்கிவை யெனவுரை யாடா
தூன ருந்திய வேனுழை பவரையொத் திருந்தார்.
2.4.9
272
வெற்றி வீரத்தின் மிக்கவ ரெவரென விரித்துச்
சொற்ற திற்கடு வெகுளியுற் றிருவிழி சுழல
வுற்று நோக்கிவெற் பதிர்த்திடு முறுவலிப் புயங்க
ளிற்ற தோவென வவைவெரு விடவும றிசைத்தார்.
2.4.10
273
புதிய வேதமொன் றுளதெனும் படிறுரை புகன்றிப்
பதியி லுள்ளவர்க் கருங்களை யெனப்பகை விளைத்த
மதுகை மன்னவன் முகம்மதி னுடல்வதைத் திடும்வா
ளிதுகொல் காணுதி நீவிரென் றடலும றெழுந்தார்.
2.4.11
274
குறுக லாருயி ருதிரங்கொப் பளித்தகுற் றுடைவா
ளிறுக வீக்கிமற் றொருபடைக் கலம்வல னேந்தித்
தறுகி லாமன வலியொடு புயவரைத் தடத்தி
னறைகொள் குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தார்.
2.4.12
275
உமறெ ழுந்திடும் வெகுளியி னுடையவ னருளா
லமரர் தங்களி லொருவரா னேறுரு வாகிக்
கமல மென்பத முகம்மதி னரும்பகை களைய
விமைநொ டிக்குளந் தரமிருந் தவனியி னிழிந்தார்.
2.4.13
276
காற்றி ரட்சியுங் கவையடிக் குளம்பின்கட் டுரமு
மேற்றி ருக்கற வளைந்தெழு மருப்பினில் வியப்புங்
கூற்று றாதுருள் கழுத்தடித் தோனௌிக் குழைவு
நாற்றி மேற்றுளை நாசியிற் றவழ்தரு நாவும்.
2.4.14
277
அசைத்த வாலெடுத் திருபுடை புடைத்துமண் ணதிர
விசைத்த கால்களி லுலவித்தண் பசியபுன் மேய்ந்து
பசித்த வள்ளுகிர் நிகரும றேகிய பாதைக்
கிசைத்த டுத்தது வானகத் துருமெனு மிடபம்.
2.4.15
278
உலங்கொ டிண்டிறற் புயனும றெனமொரு சீயங்
கலன்கள் வில்லிட வியர்ப்பொடும் விழிக்கனல் கதுவத்
துலங்கு செவ்விதழ் வெள்ளெயி றதுங்கிடச் சுடர்வா
ளிலடங்கி டத்தனி வருவது நோக்கிய திடபம்.
2.4.16
279
கவ்வை யங்கடற் புவியின் முகம்மதைக் கசப்பத்
தெவ்வ ரில்லென மனத்திடைக் களிப்பொடுஞ் சிரித்துக்
குவ்வ திர்ந்திட வுமறுகத் தாபெனக் கூவி
யெவ்வு ழித்தனி செல்குற்றீர் நீவிரென் றிசைத்த.
2.4.17
280
உரைத்த செற்சொவி புகவுழை யெவரென நோக்கித்
தரைத்த லத்திவ ணொருவரு மிலரெனச் சார
விரைத்த லோடுமவ் வுரைபகர்ந் துமறென விசைப்பத்
திருத்தி நாற்றிசை யெங்கணு நோக்கினர் செம்மல்.
2.4.18
281
கூறு மாந்தர்க ளிலையெனப் பினும்வழி குறுக
வேறு கூவிய தெவரென மறுத்துமுள் ளிடைத்து
வேறு மாக்களைக் காண்கிலர் விடையினை நோக்கித்
தேறு மிவ்வுரை பகர்ந்ததிங் கெவரெனத் திகைத்தார்.
2.4.19
282
பருந்தெ ழுங்கதிர் வேலும றெழின்முகம் பார்த்து
வருந்தி லாதுமைக் கூவிய தியானென மதித்துப்
பொருந்து மில்லிடந் தவிர்ந்தெவண் புகுவது புகழோய்
விரிந்த வாய்திறந் தறையுமென் றுரைத்தது விடையே.
2.4.20
283
ஞான மாமறை முன்னவர் மொழிநட வாம
லீன மின்றிய தேவத மனைத்தையு மிகழ்ந்து
மானி லத்தினிற் புதிதொரு மார்க்கமுண் டாக்கி
தீனெ னும்பெயர் நிறுத்தித்தன் னுரைப்படித் திருத்தி.
2.4.21
284
இனமெ லாம்வெறுத் திடப்பகை யெனத்தலை யெடுத்துத்
துனிவி ளைத்திடு முகம்மதி னுடறுணி துணித்துச்
சினம கற்றுதற் கெழுந்தன னெனத்தௌிந் தெதிராய்
வினவு மேறுடன் மொழிந்தன ருமறெனும் வீரர்.
2.4.22
285
ஆதி தூதரை வெறுத்துல கடங்கலுந் திரண்டு
வேத னைத்தொழில் விளைக்கினு மவர்வயின் விளையா
தேத முற்றதும் மனமலி யிடரினைத் தவிர்ந்து
போதல் வேண்டுமா னுமக்கென மறுத்துரை புகலும்.
2.4.23
286
பரிக ரித்திரட் படையொடு நிலத்தினிற் பரப்பி
யரச ராயிர ரிகலினின் மனவலிக் கணுவே
திரம தாயினு முகம்மதி னிடத்தினிற் சேர
லுரம தன்றுநி னுரனது முரனல வுரவோய்.
2.4.24
287
படைக்க லத்திலொன் றெடுத்தறி யாப்பகுத் தறியா
விடைக்குண் மெல்லிய னிளமையன் றனியவன் வினையேன்
புடைக்குள் வீரத்தை விளைத்தியேன் முகம்மதின் புகழை
யுடைக்கு நின்வலி யென்பதை யறிவனென் றுரைத்த.
2.4.25
288
நந்தி யிவ்வுரை பகர்ந்திட நரபதி யுமறு
கந்த டர்த்தெறி களிறென விருவழிக் கனல்கள்
சிந்தி டக்கரும் பிருகுடி நுதல்செலச் சினந்து
மந்தி ரக்கதிர் வளெடுத் தசைத்தெதிர் வந்தார்.
2.4.26
289
எதிர்த்து நின்றற வீசினர் வீசலு மிடபங்
குதித்துத் தம்வலப் பாரிச மாகின குறுகி
மதித்து வீசலு மிடப்புற மானது மறுத்தும்
பதித்து வீசலும் பிற்புற மானது பறந்தே.
2.4.27
290
நான்கு திக்கினுங் குதித்துமுன் னணித்துற நடக்குந்
தேன்கு தித்தசெந் தொடைப்புய ருரத்தொடுஞ் சினந்து
வான்கு தித்தமின் னெனக்கர வாளொளி வயங்கத்
தான்கு தித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி.
2.4.28
291
எட்டி யொட்டுவர் வெட்டுவர் வெட்டலு மிடபங்
கிட்டி டாதக லாதுடல் கிழிபட வெதிர்ந்து
முட்டித் தாக்குற வருவபோ லடிக்கடி முடுகுந்
தொட்டி டாதொழி யாதருஞ் சூறையிற் சுழலும்.
2.4.29
292
அடுத்து முன்னெதிர்ந் திருவளை மருப்பினை யசைக்கும்
வெடித்த வாலிரு புறத்தினு மடிக்கடி விசைக்கும்
படித்த லத்துகள் விசும்புறக் குளம்பினிற் பறிக்கு
மிடித்த வானுறு மேறென வதிர்ந்திடு மிடபம்.
2.4.30
293
கண்ணி னுக்கெதிர் தோன்றிடுங் காணெணா தகலும்
விண்ணி னிற்பறந் திடுந்திசை விசும்பெலாந் திரியு
மெண்ணு முன்னுமுன் வந்திடுங் கான்மடித் தெதிரே
மண்ணி னிற்படுத் திடுங்குனிந் தெழுந்துவா னிமிர்க்கும்.
2.4.31
294
இடப மிவ்வணந் திரிதர விருவிழி சிவந்து
தொடரு வார்சுடர் வாட்கொடு தாக்குவர் துரத்தி
யடரு வார்மறிப் பார்திகைப் பாரடுத் தடுத்துக்
கடுவி சைகொளுங் காறளர்ந் திதழினைக் கறிப்பார்.
2.4.32
295
கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பி
னெருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவ ரெதிராத்
தரத்தை நோக்குவ ரவையினி லபூஜகி லுடனே
யுரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவ ருளத்தை.
2.4.33
296
இன்றி ருந்தெழுந் திகலட லரிமுகம் மதுவை
வென்றி கொண்டன மிலையல திவணெறி மேவுங்
கன்றி னைக்கடிந் தோமிலை யெனமனங் கசங்கி
நன்று நன்றுநம் வீரமென் றகத்திடை நகுவார்.
2.4.34
297
முனிந்து புன்னகை கொண்டவா ளுமறைமுன் னடுத்துக்
குனிந்து பாதல மோந்துடல் குழைத்தறத் தூங்கிக்
கனிந்த வாயசைப் போட்டிரு காதினை யசைத்து
வனைந்த போலக லாதுநின் றதுமழ விடையே.
2.4.35
298
ஏறு முன்னணித் திட்டதென் றெழிற்கர வாளான்
மாறி வீசினர் முடுக்கின ரடிக்கடி வளைத்துக்
கோறல் செய்குவ னியானெனக் குவலயங் குலுங்கச்
சீறி முன்னினு மும்மடங் கெனும்படி திரிந்தார்.
2.4.36
299
தொலைந்த திவ்வணம் வெய்யவன் றோன்றுமுன் றொடுத்திட்
டலைந்து லைந்திடைந் தறத்தவித் தசறுமட் டாகக்
கலைந்த தன்றியே றகப்பட விலையெனக் கலங்கி
மலைந்தி டாமன மறுகுற வுமறுள மலைந்தார்.
2.4.37
300
மட்டு வார்பொழி னெறியிடை மழவிடை யெதிர்ந்து
வெட்டு மென்றுரை பகர்ந்ததும் வெகுளியி னடந்து
பட்ட செய்தியும் புதுமையு மூரவர் பலர்க்கும்
விட்டு ரைத்திட வேண்டுமென் றெழுந்தனர் விரைவின்.
2.4.38
301
குறித்து வந்தவை விடுத்தெழு முமறினைக் கூவித்
தெறித்த துண்டுளி முகிற்குடை முகம்மதைச் செகுப்ப
வெறித்த வெஞ்சின வீரத்தின் விழைவுக ளனைத்து
மறைத்தி வோரெனப் புகன்றுபோ யதுமழ விடையே.
2.4.39
301
கொண்ட வேகமும் வீரமும் புறந்தலை குனியக்
கண்ட காரணத் தொடுமிளைப் பருநெறி காட்ட
விண்டு திர்த்தமெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து
மண்டு பேரவை யபூஜகி லிடத்தில்வந் தனரே.
2.4.40
303
முகம லர்ச்சிகெட் டறத்தவித் துடல்வெயர் முழுகப்
பகும னத்தும றடைந்தவை யனைவரும் பார்த்து
முகம்ம தின்வயி னடைந்தது நடந்ததும் வகுத்துப்
புகர றும்புக ழோயுரை யெனப்புகன் றனரே.
2.4.410
304
வேறு
அறபிகள் குழுவி னாப்ப ணமரபூ ஜகிலை நோக்கிப்
பொறைமதக் கரிகோ டேற்ற புரவல ருயிரை மாந்திக்
கறைகெழுங் குருதி வைவேற் காவல ருமறு கத்தாப்
மறைபடா நெறியிற் கண்ட புதுமையை வகுக்க லுற்றார்.
2.4.42
305
மண்ணினிற் றிசையிற் சூழ்ந்த மறிதிரைக் கடற்குள் வானோர்
விண்ணினிற் பெரியோ ராய்ந்த மெய்ம்மறை தனக்குட் டேர்ந்த
திண்ணிய ருரைக்குட் கேட்ட திலைமனந் தௌிய வென்றன்
கண்ணினிற் கண்ட தியாருங் காணொணாப் புதுமை யென்றார்.
2.4.43
306
சரத்திடை விடையொன் றங்ஙன் றனித்துநின் றதிர்ந்தென் பேரை
யுரைத்தது விளிப்பக் கேட்டே னுணர்ந்தியா ரென்ன நேர்ந்தேன்
விரைத்தலி னெங்கே கின்றீ ரெனவிறன் முகம்ம துற்ற
துரைத்தனக் குறும்பு தீர்ப்பத் துணிந்தனென் றுரைத்தன் மாதோ.
2.4.44
307
இன்றெனை யடர்த்தோர் செவ்வி யியன்முகம் மதுவை வென்றோ
ரென்றதற் கெதிர்ந்து கைவா ளெறிந்தன னுரத்திற் றாக்கி
நின்றனன் மறிந்தே னெந்த நிலத்தினுந் தொடர்ந்து காலிற்
சென்றனன் றவித்தே னென்னாற் செய்ததொன் றில்லை யன்றே.
2.4.45
308
காற்றெனப் பறக்கு மூழிக் கனலெனச் சீறுங் கொல்லுங்
கூற்றென வெதிருஞ் செல்லிற் குலவரை யனைத்துஞ் சுற்றுந்
தோற்றிடா விசும்பிற் றாவுஞ் சுழலுமட் டிகிரி யென்னச்
சீற்றமுற் றடுத்துப் பின்னு முன்னுமே திரியு மன்றே.
2.4.46
309
அலகையின் குலமோ வானி னமரரி லொருவன் றானோ
வுலகுறுஞ் ஜின்னோ தெய்வ முருவெடுத் ததுவோ செவ்விச்
சிலைநுதல் கதீஜா கேள்வன் செய்தொழில் வஞ்சத் தானோ
நிலமிசை விடையாய்த் தோன்றி நின்றவம் மாயந் தானே.
2.4.47
310
மாற்றுரை வேதம் பேசு முகம்மதைத் தேடிச் செல்லு
மாற்றலிவ் விடையைக் கண்டே னசறுமட் டாகக் கண்ணிற்
றோற்றிடாத் துன்ப முற்ற புதுமையைத் தொகுத்து வல்லே
சாற்றுதற் கமைந்தேன் வீரந் தனைமறுத் திலனியா னென்றார்.
2.4.48
311
கொடுவரி யனைய கத்தாப் குமரரீ துரைப்பக் கேட்டு
விடமெனக் கறுத்துச் சிந்தை விறலபூ ஜகுலுஞ் சுற்றி
யுடனிருந் தவருந் தம்மி லொண்புயங் குலுங்க நக்கி
யடலுறு முமறு கத்தா பணிமுக நோக்கிச் சொல்வார்.
2.4.49
312
ஈதொரு புதுமை யாக வெண்ணிநீ ருரைத்தீர் வேத
மாதவன் முகம்ம தென்போன் வளர்த்தவஞ் சனைக்கு ணூறு
பேதமொன் றதற்குக் காணா திதனைநீர் பிதற்றிப் பேச
றீதுறு மிவைபோ லியாங்கள் கண்டதுந் தெரிக்கோ ணாதே.
2.4.50
313
இன்னமு மிவைபோ னூறா யிரம்விதங் கண்ணுற் றாலு
மன்னவன் விளைக்கும் வஞ்ச மதனைதீ ரமைத்தல் வேண்டும்
பன்னுத லெவருங் கேட்பிற் பழுதுறுந் பருதி வேலோய்
முன்னுமுன் கருத்தி லுன்னும் படிமுடித் திடுமி னென்றார்.
2.4.51
314
பொய்யினைப் புகலேன் கண்ட புதுமையைப் புகன்றேன் றோன்று
மெய்யினைப் பொய்யென் றோத வியாவர்க்கும் விதிய தன்றே
யையுற லுரைக்க லாகா ததிசய மறைக்க லாகா
வையகத் தியற்கை யீதென் றுமறிவை வழங்கிப் போனார்.
2.4.52
315
அற்றைநாட் கழிந்த பிற்றை யடலும றெழுந்து செவ்வேற்
கொற்றவ ரப்துல் லாதங் குமரரைக் கோறல் வேண்டி
முற்றிய மனத்தி னோடு முரண்மதக் கரியை நேராய்
வெற்றிவெண் கதிர்வாட் டாங்கி நடந்தனர் விளைவ தோரார்.
2.4.53
316
நடுவுறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார்
படிறுரை பகராச் செவ்வி யற்பிகள் பல்லர் கூடி
யுடனொரு வழக்கைத் தேற்றித் தேறிலா தொளிரும் செம்பொற்
கொடுமுடி விசும்பு தூண்டுங் கோயிலின் வாயிற் புக்கார்.
2.4.54
317
ஆலயம் புகுந்து செந்தே னலங்கறோய் சுவாகு பூம்பொற்
காலிணை யிறைஞ்சி யேத்தித் கைமுகிழ்த் திருந்து நோக்கி
மேலவ வெங்கட் குற்ற வழக்கினை விளங்கக் கேட்டுச்
சாலவுந் தீர்த லாகச் சாற்றுதல் வேண்டு மென்றார்.
2.4.55
318
தோட்டலர் நாற்றும் வாயிற் சுவாகெனும் புத்துத் தன்னை
வாட்டிறத் தறபி வீரர் மகிழ்ந்தெவர் வழக்கி னுட்பப்
பூட்டறுத் துரைக்க வேண்டு மெனப்புகழ்ந் திருக்குங் காலை
தீட்டிய கதிர்வேற் செங்கைத் திறலும் றவணின் வந்தார்.
2.4.56
319
வகையறா வழக்குத் தீர்த்துத் தருகென மன்னர் சூழ்ந்த
தொகையினி லுமறென் றோதுந் தோன்றலு மிருப்பக் கண்டு
திகைதெரி விளக்க மாகச் சுவாகெனுந் தெய்வம் வாய்விண்
டகமகிழ்ந் தவையோர் கேட்ப நன்மொழி யாய்ந்து சொல்லும்.
2.4.57
320
மதிகதி ரவனி காயம் வானமற் றெவையும் போற்றும்
புதியவ னுண்மைத் தூதர் நபிகளிற் புகழின் மிக்கோர்
பதியிரண் டினுக்கு மேலோர் படைப்புள வெவைக்கு முன்னோர்
கதிதருங் காட்சி பெற்றோர் ஹபீபெனு முகம்ம தென்போர்.
2.4.58
321
அன்னவர் முன்ன ரேகி யவர்நிலை கொண்ட தீனின்
சொன்னயக் கலிமா வோதித் துணைமல ரடியைப் போற்றிப்
பன்னுமா மறையின் றீஞ்சொற் படிவழு வாது நேர்ந்து
பொன்னுமா மணியும் போலப் பொருந்துத லெவர்க்கும் வேண்டும்.
2.4.59
322
தேவநன் மொழியென் றென்சொற் சிந்தையிற் சிந்தித் தோர்கள்
காவல ரெவர்க்கு மேலாய்க் காசினிக் கரச ராகிப்
பூவலர் சுவன நாட்டைப் பொதுவறப் புரப்போ ராகி
மேவுதீ வினைக டீர்த்து வேதநல் லறிவ ராவார்.
2.4.60
323
வருந்திடா தகலு நுந்த மனத்துறை வழக்கின் சொல்லைத்
திருந்திட வுரையு நீதிச் செவ்வியன் முகம்ம தின்சொற்
பொருந்திட நடவு மென்முன் புகல்வது புந்தி கேடென்
றிருந்தவப் பெயருக் கெல்லா மினையன வியம்பிற் றன்றே.
2.4.61
324
புத்துநன் குரைத்த மாற்றம் புதுமையென் றெவரும் போந்தார்
மத்தகக் கரடக் கைமா மடுத்தெறிந் துதிரெஞ் சிந்துஞ்
சித்திர வடிவாட் செங்கை யுமறெனுஞ் செம்ம லேற்றி
னுத்தரந் தனையு மிந்த வுறுதியு நினைத்துத் தேர்ந்தார்.
2.4.62
325
நென்னலேற் றுரையுந் தெய்வ நிகழ்த்திய மொழியும் பார்த்து
முன்னுறு காட்சி யேதோ முடிவதொன் றுளதென் றெண்ணித்
தன்னகத் திருத்திச் செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு
மன்னுசோ தரியென் றோதும் பாத்திமா மனையிற் சென்றார்.
2.4.63
326
திருமயில் பாத்தி மாவுஞ் செவ்வியல் ஸஹீதுந் தேன்சோர்
மருமலி படலைத் திண்டோன் முகம்மதின் கலிமா வோதிக்
குருநெறி ஹப்பா பென்னுங் குரிசின்முன் னிருந்து செல்வம்
பெருகிய மறைநேர் கேட்டுப் பிரியமுற் றிருக்குங் காலை.
2.4.64
327
எறுழ்வலித் தடக்கை வெற்றி யெழிலும றிவணி னம்பாற்
குறுகின ரென்னச் செல்வக் குலக்கொடி பாத்தி மாவும்
பெறுகதி ஸஹீதுந் தம்மிற் பேதுற்று நெறிஹப் பாபை
மறைபட விருத்திச் செவ்வி மனைத்திரு முன்றி னின்றார்.
2.4.65
328
மென்னபிக் கீமான் கொண்டோ ரிவரெனும் வெறுப்பி னாலும்
பன்னுமா மறைச்சொ லில்லுட் பகர்ந்ததோ ரையத்தாலு
மன்னிய சீல நீக்கி மைத்துனர் ஸஹீதைக் கோபித்
தின்னுயிர் தடிவே னென்ன விருவிழி கனல நின்றார்.
2.4.66
329
கணவனைச் சினந்தா ரென்னக் காரிகை பாத்தி மாகண்
டிணைவிழி முத்தஞ் சிந்த வின்னுயிர்ப் பிறப்பை நோக்கி
மணவலித் தடக்கை வேந்தே மருவலர் போலச் சீற
லணவது நுமக்கொன் றோதி யடர்த்ததை விலக்கா நின்றார்.
2.4.67
330
மடித்தவா ளெயிறு கவ்வி நின்றமன் மடந்தை தன்னை
வெடித்திட வுறுக்கிக் கூறி விழிக்கனல் சிதறச் சீறி
யெடுத்ததோர் கரத்திற் றண்டா லிளம்பிறை நுதற்கு மேல்பா
லடித்தன ருதிர மாரி யாறுபட் டொழுகிற் றன்றே.
2.4.68
331
சிரசுடைந் துதிரஞ் சிந்தித் தேங்கிய மயிலை நோக்கி
விரிகதிர் மணிப்பைம் பூணார் வெகுளியுள் ளடங்க வேங்கி
யரிவைநும் மனைக்கு ணீவி ரடிக்கடி யோதி யோதிப்
பரவிய மாற்ற மென்னே தௌிதரப் பகர்மி னென்றார்.
2.4.69
332
படித்தசொ லியாது வேறு பகர்ந்தவ ரெவர்கொ லென்ன
வடித்தடங் கதிர்வேன் மைக்கண் மடமயின் மறைத்துக் கூறக்
கடித்தடக் கரத்து வேழக் காவலர்க் கசனி யொப்பார்
பிடித்தசொற் றனைம றாது விருப்புற்றுப் பின்னுங் கேட்டார்.
2.4.70
333
உடன்பிறந் திகலா நின்ற வுமறெனு முயிரை நோக்கி
மடந்தையர் திலத மன்ன பாத்திமா மணிவாய் விண்டு
திடந்தவ ழுண்மை வேதந் தௌிந்தசொல் லதனைத் தீனைக்
கடந்தவர் புனித மில்லார் கரத்தளித் திடறீ தென்றார்.
2.4.71
334
முன்னவள் கனிவாய் விண்டு மொழிந்தசொன் மனத்துட் கொண்டு
மன்னவ னபுல்கா சீந்தன் மனத்தௌி வதனின் மிக்காய்ப்
பன்னருஞ் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணித்
தென்னுறு கதிர்வேற் சிங்கஞ் சீதநீ ராடி னாரால்.
2.4.72
335
புனைந்தமென் றுகிலை நீத்து வேறொரு புதிய தூசும்
வனைந்தகம் புனித மாக்கி வாவியங் கரையை நீக்கிச்
சினந்தங்கு கதிர்வேற் கண்ணா டிருமனை புகுந்து நீவிற்
நினந்தவை முடித்தே னியானு நிகழ்த்திய தருள்க வென்றார்.
2.4.73
336
சுந்தரப் புதுநீ ராடித் தூசணிந் திகலி லாது
வந்தபின் னோனை நோக்கி முகம்மதே யுண்மைத் தூதென்
றந்தமி லாதி சொற்ற ஆயத்தும் பொருளுந் தீஞ்சொற்
சிந்துபத் திரத்தை யீந்தார் சிற்றிடைப் பெரிய கண்ணார்.
2.4.74
337
பத்திரங் கரத்தில் வாங்கிப் பார்த்திவ ருமறு கத்தாப்
சித்திர வரியி லொன்றைத் தௌிவுறத் தேர்ந்து வாசித்
தித்தகைக் குரிய ரியாவ ரெவர்மொழி யிதுகொ லென்னப்
புத்தியுட் களித்துத் தேறிப் பொருவிலா வுவகை பூத்தார்.
2.4.75
338
மறைமொழிப் பொருளைத் தேர்ந்து மானுடர் மொழியீ தன்றென்
றிறையவன் மொழியே யென்ன விதயத்தி லிருத்தி வேத
நிறைநிலை மனத்த ராகி நினைத்தவஞ் சகத்தைப் போக்கிக்
குறைபடுங் குபிரைச் சூழ்ந்த குலத்தொடும் வெறுத்து நின்றார்.
2.4.76
339
வழிபிழைத் திருளின் முட்சார் வனத்திடைக் கிடந்துள் ளாவி
கழிபட விடைந்தெற் றோன்றுங் காலைநன் னெறிபெற் றோர்போ
லழிதருங் குபிரை நீக்கி யகுமது தீனை நோக்கிப்
பொழிகதிர் வதனச் செவ்விப் புரவல ருமறு நின்றார்.
2.4.77
340
ஓதுநன் னெறிக்கு நேர்பட் டிசைந்தன ருமறென் றெண்ணிக்
காதர மகற்றி யில்லுட் கரந்தது தவிர்த்து ஹப்பாப்
தாதவி ழலங்கற் கோதைத் தையலும் ஸஹீது முற்ற
வேதிகை யிடத்திற் புக்கு விளைவது காண்ப நின்றார்.
2.4.78
341
மருங்கினி னின்ற ஹப்பாப் மன்னவ ருமறை நோக்கித்
தருங்கர தலத்தோய் நும்பாற் சகத்தினும் விண்ணு மொவ்வா
வருங்கன வெற்றி நன்மா ராயமொன் றடைவ தாக
நெருங்கிய பொருளா யின்றோர் சோபன நிகழ்வ னென்றார்.
2.4.79
342
இணையட றவிர்வெள் வேலோ யின்றிர வுமைதீ னுக்கோர்
துணையென வருள்செய் வாயென் றாதியைத் துதித்துச் செவ்வி
மணவலி புயத்தார் வள்ளன் முகம்மதாண் டிரந்து கேட்ப
வுணர்வுறக் கேட்டே மென்றா ரோங்குநன் னெறியை நீங்கார்.
2.4.80
343
எடுத்திவை யுரைத்த ஹப்பாப் தமைவிளித் திரப்போர்க் கென்றுங்
கொடுத்ததிற் செவந்த செங்கைக் கோளரி யுமறு கத்தாப்
கடுத்தவழ்ந் திருண்டு சேந்த கயல்விழி கதீஜா கேள்வ
ரடுத்துறைந் தவணெங் கென்ன வணியிதழ் வாய்விண் டாரால்.
2.4.81
344
வேறு
முதிருங் கருஞ்சூற் சலதரத்தை
முடியிற் றாங்கிச் செழுந்தேனை
விதிருஞ் சினைத்தண் டலையுடுத்து
விளங்குங் குவவு சபாவரைக்குச்
சதுரி னணித்தா யொருமனையுண்
டதனிற் றரித்தா ரகுமதுவு
முதிருங் கலிமா நிலைதவறா
முதியோர் சிலரு முரணறவே.
2.4.82
345
மறைமா மொழிநா வொழியாது
வளர்க்கு முதியோரினி துரைப்பக்
கறையா ரிலைவேற் கரத்தேந்திக்
கடிதின் விருப்பி னுடனெழுந்து
குறையா மதிய மெனதீனை
வளர்க்குங் குரிசின் முகம்மதுவு
முறைவார் பொழில்சூழ் வரையினிடத்
துற்றா ருமறு கத்தாபே.
2.4.83
346
மலையி னிடத்தி னுயர்ந்திருந்த
மனையை நோக்கி யெம்மருங்கும்
குவவ நோக்கி மாந்தருறை
குறிப்புற் றறியத் தோன்றாமல்
விலகுங் கதிர்மெய்க் குரிசினபி
யுறைவ திவணே யெனவிரைவி
னிலைகொள் கபாடந் தனைத்தீண்டி
நின்றா ரறிவு குன்றாரே.
2.4.84
347
இணைத்தாள் செறித்த மணிக்கதவந்
தீண்டி யிவணி லடைந்தோர்தீ
னணித்தார் புறத்தா ரெனநோக்கி
யுமறென் றறிந்தங் கனைவோரும்
பணித்தாழ் குழியிற் களிற்றினம்போற்
பதறிப் பயந்துள் ளங்கலங்கித்
தணித்தா ரிலைமெய் நடுக்கமுரை
தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரோ.
2.4.85
348
வெருவி யுரையா திருந்தவரை
விழித்துக் கரத்தா லடர்களிற்றைப்
பொருவும் ஹம்சா மனம்வெகுண்டு
புகழ்தற் கரிய திருக்கலிமா
மருவி வருவா ரெனிலுமறு
மதிக்கு மதிக்கும் படியாகப்
பெருகு நலனுஞ் சுவனபதிப்
பேறும் பெறுவ ரெனவுரைத்தார்.
2.4.86
349
இகலுந் தீங்கு மனத்திருத்தி
யெழுந்தா ரெனிலங் கவர்கரத்திற்
றிகழுங் கதிர்வாட் டனைப்பறித்துச்
சென்னி களைவ தறுதியிதற்
ககலு மனத்தால் வெருவிடலிவ்
வவையீர் மணித்தாள் யெறிகதவந்
தகவல் விடுமி னெனமறுத்து
முரைத்தார் தடத்தார்ப் புயத்தாரே.
2.4.87
350
அறந்தாங் ககத்தார் ஹம்சாசொல்
லறிவு ளிருத்தி மணிக்கதவந்
திறந்தார் திறந்த மனைநோக்கிச்
செம்மை குடிகொண் டெழுந்தடல்வெம்
மறந்தாங் கியபொற் புயத்துமறு
வந்தார் வரலுஞ் செழுஞ்சோதி
பிறந்தா ரெழினந் நபிக்குரிசில்
பிந்தா திருந்தா ரெழுந்தாரே.
2.4.88
351
நரந்தங் குலவி மரவமலர்
நறுந்தேன் குளிக்கும் புயவரையோ
டுரந்தங் கிடவா ளரியுமறைத்
தழுவி யொளிருங் கரந்தீண்டி
யிருந்திங் கிவணில் வரும்வரவா
றியம்பு மெனக்கென் றெழிலிமுற்றுங்
கரந்தங் கியநல் லருள்பெருகும்
ஹபீபு முகம்ம துரைத்தனரால்.
2.4.89
352
வரிசை நபியே முகம்மதுவே
வானோர்க் கரசே புவிக்கரசே
யுரிய தனியோன் முதற்றூதே
யுமது கலிமா வுரைப்படியே
யரிய மறைதேர்ந் தீமான்கொண்
டறத்தா றொழுகும் படிகருத்திற்
கருதி யிவணி லடைந்தேனென்
றுரைத்தா ருமறு கத்தாபே.
2.4.90
353
கூறுங் கலிமா வுரைத்ததீமான்
கொள்ளும் படிக்கிங் கடைந்தனெனத்
தேறு மொழிகேட் டகுமதுதஞ்
செவ்விக் கமல முகமலர்ந்து
பேறு மிதுவே கிடைத்ததெனப்
பெரியோ னாதி தனைப்புகழ்ந்து
மீறுங் களிப்பா நந்தமன
விழைவாற் றக்கு பீறுரைத்தார்.
2.4.91
354
வல்லோ னபியுங் கலிமாவை
வகுத்துக் காட்டி முன்னுரைப்பச்
செல்லேர் கரத்தா ருமறுகத்தாப்
செப்பி யிசுலா நெறிதேக்கி
யல்லார் குபிரைக் கடிதகற்றி
யழியாத் தொழுகை முறிபடித்து
நல்லோர் பரவும் படிவணங்கி
நறுந்தீ னடுக்கந் தனைத்தவிர்த்தார்.
2.4.92
355
விரியுங் கதிர்மெய்ச் சிறைத்தடங்கண்
விண்ணோர்க் கரசர் பொருப்பினிருந்
தருவி யெனச்செய் திடுங்கலிமா
வடங்கா நதியின் பெருக்காக்கிச்
சுருதி மொழித்தீன் பயிர்தழைப்பச்
சுற்றுங் குபிர்வெங் களைதீய்க்குங்
குருவி னெறியான் மனங்களிப்புக்
கொண்டா ரீமான் கொண்டாரோ.
2.4.93
356
விதியின் முறையென் றகுமதுதாம்
விளக்கு முரைகேட் டுமறுகத்தாப்
மதிமெய் மயங்கி வஞ்சனையின்
மாயத் துறைந்தா ரெனவூரும்
பதியும் பெருக்க வுரைநடத்திப்
பற்றா ரிவரென் றபூஜகல்தன்
புதிய மொழியைத் தொல்கிளைக்குப்
புகழ்ந்தா னபியை யிகழ்ந்தானே.
2.4.94
357
சரியுந் திரைமுத் தெறிந்திரைக்குஞ்
சலதிக் குபிரி னிடையினடு
விரியு மமுத மெனுங்கலிமா
மேலோ ரொருமுப் பஃதுடன்மூன்
றறிய மகடூ வறுவரும்
றரச ரொருவ ரவனியினிற்
றெரியு மிலக்க மிந்நான்கு
பதின்ம ருடனுஞ் சிறந்திருந்தார்.
2.4.95
உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 4க்குத் திருவிருத்தம்...357
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.5 உடும்பு பேசிய படலம் (358-397)
358 |
வடிவுறு முமறெனும் வள்ள னந்நபி
யுடனுயர் தீனிலைக் குரிய ராயபின்
றிடமுடைத் தவர்களாய்ச் சிந்தை யிற்பெறு
மடமக றரப்பெரு மகிழ்ச்சி யெய்தினார். 2.5.1 |
359
செயிரறுந் தீனிலைக் குரிய செவ்விய
பயிரென வருங்கலி மாவைப் பண்பொடு
நயனுறப் பெருக்கிய நண்ப ரியாவரு
முயிரென முகம்மதை யுவந்து காமுற்றார்.
2.5.2
360
உடலுயி ரெனவுவந் துறையு நாளினி
லடலபூ பக்கரு மலியுந் தெவ்வரைக்
கடவிய வேற்கர வுமறுங் கள்ளவிழ்
மடறிகழ் மாலிகை யறபி மன்னரும்.
2.5.3
361
தோமகன் முகம்மது நபியுஞ் சூழ்வர
மாமதி ணகர்ப்புறத் தெய்தி மற்றொரு
தேமலர்ப் பொழிலிடை தெரிய வைகினார்
காமரு மதியமுங் கணமு மென்னவே.
2.5.4
362
செல்லிடுங் குடைநபி செவ்வி காண்டலுங்
கல்லொடு மரமும்புற் கானும் வாவியு
மெல்லிய சிறைப்புளும் விலங்கி னங்களு
மொல்லையூர் வனவனத் துகளுஞ் சாதியும்.
2.5.5
363
தோற்றிய தெவ்வையுந் துலங்கக் கேட்பதாய்
மாற்றருஞ் சுருதியின் வசனந் தன்னொடும்
போற்றரும் புகழ்ச்சியாற் புகழ்ந்து பொங்கிய
வூற்றமுற் றுயர்சலா முறைத்து நின்றனவே.
2.5.6
364
கானகத் துற்றகா ரணங்கே ளியாவையுந்
தீனவர் செவியுறத் தேக்கிச் சீர்பெற
வானவர் புகழ்தர மக்க மாநபி
யீனமின் மனையகத் தேகி னாரரோ.
2.5.7
365
அற்றையிற் போழ்தவை யகன்று பின்னைநாள்
வெற்றிவெங் கதிரயில் வீர ரியாவருஞ்
சுற்றிட மெய்யெழி றுலங்க மானபி
மற்றொரு தலத்திடை வைகி னாரரோ
2.5.8
366
நல்லறி வுடையவர் சூழ நந்நபி
யில்லிருந் தெழுந்திவ ணிருப்ப மற்றொரு
வில்லினன் வலையினன் வேடன் கையினிற்
கல்லிய தடியொடுங் கானி லேகினான்.
2.5.9
367
கானகஞ் சுற்றியுங் கல்லைத் தள்ளியு
மானினந் தடைபட வலைகள் வீக்கியுந்
தான்மலை முழைஞ்சினுந் தடவி நோக்கியு
மூன்புசித் திடுவதற் கொன்றுங் காண்கிலான்.
2.5.10
368
அடவியிற் புகுந்தரும் பதுக்கை சுற்றியோர்
புடையினின் முசலிகை புகுதக் கண்டனன்
றடைபட வலைவயின் சாய்த்து மேற்சிலை
யுடைபடத் தாக்கித்தன் னுரத்திற் பற்றினான்.
2.5.11
369
வள்ளுகி ருடும்பினை வலைக்குண் மாட்டிவை
முள்ளுறை கானமு முரம்பு நீக்கித்த
னுள்ளக மகிழ்வொடு முழையர் சூழ்தர
நள்ளுறை முகம்மது நபியை நோக்கினான்.
2.5.12
370
மன்னிய வறிஞிரி னாப்பண் வைகிய
தென்னிவர்க் குறுஞ்செய லியாது கொல்லென
முன்னிய வேட்டுவன் மொழிய வாதித
னன்னிலைத் தூதிவர் நபியென் றோதினார்.
2.5.13
371
மைமுகிற் கவிகைநன் னபிமுன் வந்துநின்
றெம்மறைக் குரியவர் நீவி ரெந்நெறி
செம்மையி னடத்துத றௌியச் செப்புமென்
றிம்மொழி யறபிவேட் டுவனி சைத்தனன்.
2.5.14
372
கூறிய வறபியைக் குறித்துக் காசினிக்
கீறினில் வருநபி யான லாதிலை
யூறிய பொருட்புறுக் கானென் றோதிய
தேறுநன் மறையெனக் குற்ற செவ்வியோய்.
2.5.15
373
என்னுரை நின்றிசு லாத்தி லாயினோர்
மின்னொளிர் மாளிகைச் சுவன மேவுவர்
பன்னியிம் மொழிபழு தென்னும் பாவியோர்
வன்னியின் குழியிடைக் கிடந்து மாழ்குவார்.
2.5.16
374
ஈதுநன் றெனமன மிசைந்தென் னாவினி
லோதிய நன்கலி மாவை யோதிநின்
பாதகந் துடைத்துநற் பதவி யெய்தென
வாதிதன் றூதுவ ரறைந்திட் டாரரோ.
2.5.17
375
தெரிதர நன்மொழி தௌித்த நந்நபி
மரைமலர் செவ்விய வதன நோக்கிநும்
முரைமறுத் திலனெனச் குண்மை யாகவித்
தரையினி னபியெனச் சாட்சி வேண்டுமால்.
2.5.18
376
கானிடை யறபியிவ் வுரையைக் காட்டலுந்
தேனகு மலர்ப்புயச் செவ்வி நந்நபி
வானிடை மண்ணிடைப் படைப்பின் மற்றதி
லீனமில் கரியுனக் கியைவ தேதென்றார்.
2.5.19
377
கடும்பரற் கான்கவிழ் வலையி னுட்படு
முடும்பென திடத்திலொன் றுளது முள்ளெயி
றிடும்பகு வாய்திறந் தினிதி னாகநும்
மொடும்பகர்ந் திடின்மறுத் துரைப்ப தில்லையே.
2.5.20
378
என்றுரை பகர்ந்தவ னிதயங் கூர்தர
நன்றென முறுவல்கொண் டினிய நந்நபி
குன்றினிற் றிரிதரு முடும்பைக் கூடிய
மன்றினில் விடுகவென் றுரைவ ழங்கினார்.
2.5.21
379
கானிடை திரிந்தறத் தவித்துக் காறளர்ந்
தேனினி விடிலுடும் பௌிதி னெய்திடா
தானதான் மடிமிசை யாக்கி னேனறுந்
தேனவி ழலங்கலோ யென்னச் செப்பினான்.
2.5.22
380
எடுத்துன துடும்பையென் னிடத்தின் முன்னிதாய்
விடுத்திடி லகன்றிடா தெனவி ளம்பலு
மடுத்தமென் மடிபுகு முடும்பை வாங்கியங்
கடுத்தனன் விடுத்தன னறபி வேடனே.
2.5.23
381
நெடுந்தலை யெடுத்துவா னிமிர்த்து முள்ளெனப்
படுந்தரத் துகிர்நிலம் பதிப்ப வூன்றியெள்
ளிடுந்தரை யகன்றிடா திறைவன் றூதெனத்
திடந்தர மனத்தினிற் றௌிந்து நோக்கிற்றே.
2.5.24
382
ஆரமு தனையசொல் லரிய வாய்திறந்
தோர்மொழி நந்நபி யுடும்பைக் கூவலுஞ்
சீர்பெற விருவிழி திறந்து நோக்கிநின்
றீர்தரு நாவெடுத் தியம்பிற் றன்றரோ.
2.5.25
383
இகம்பர மெனவரு மிருமைக் குண்மையா
யுகம்பல வதிக்குமுன் னுதித்துப் பின்னுதித்
தகம்பயி லாரணாத் துறைந்து செப்புமுச்
சகம்புகழ்ந் திடவருந் தக்க நீதியோய்.
2.5.26
384
அண்டர்கள் பரவுநும் மடியை நாடொறுந்
தெண்டனிட் டிருவிழி சிரசின் மீதுறக்
கொண்டசிற் றடிமையே னுய்யக் கொண்டுவாய்
விண்டெனை விளித்தவை விளம்பு கென்னவே.
2.5.27
385
தேறிய மொழியிவை செவியிற் சார்தலு
மாறிலா தியாரைநீ வணங்கு கின்றனை
வேறற வுரையென விளங்கு நந்நபி
கூறலு முசலிகை மறுத்துங் கூறுமால்.
2.5.28
386
மருமலி வள்ளலியான் வணங்கு நாயக
னொருவனன் னோனெழி லுயர்சிங் காசனம்
பொருவரும் வானில்ரா சாங்கம் பூமியிற்
றெரிதருங் கிருபையோ செம்பொ னாட்டினில்.
2.5.29
387
தீதிக லற்றவன் சினந்து செய்யுமவ்
வேதனை நரகமென் றெரியும் வீட்டினிற்
பேதமி லன்னதோர் பெரிய வன்றனை
யோதியான் வணங்குவ துண்மை யென்றதே.
2.5.30
388
அறத்தொடு முரைத்தனை யென்னை யாரெனக்
குறித்தனை யெனநபி கூறக் கேட்டலுஞ்
சிறுத்தமுள் ளெயிற்றவெண் ணிறத்த செம்முனை
யிறுத்துநூ லிரட்டைநா வெடுத்தி யம்புமால்.
2.5.31
389
பரவைவிண் ணிலமலை பருதி மற்றவு
முரியநும் மொளிவினி லுள்ள வுண்மையிற்
றெரிதர முதலவன் செவ்வித் தூதரா
யிருநில நபிகளி னிலங்கு மேன்மையாய்.
2.5.32
390
ஈறினில் வருநபி யிவணும் வாக்கினிற்
கூறிய மார்க்கமே மார்க்கங் கோதறத்
தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீதென
வேறுரைத் தவரவர் நரகின் வீழ்வரால்.
2.5.33
391
இனிதினும் பெயர்க்கலி மாவை யென்னொடும்
வனமுறை யஃறிணை வாழ்த்து கின்றது
நனிபுக ழுண்மைநன் னபியு நீரலாற்
பினையிவ ணிலையென வுடும்பு பேசிற்றே.
2.5.34
392
உடும்பிவை யுரைத்தலு முவந்து தன்மனத்
திடும்பினைத் தவிர்த்துநின் றறபி யென்பவன்
குடும்பமு மௌியெனுங் குபிரி னாற்றினம்
படும்பவந் தவிர்கெனப் பாதம் பற்றினான்.
2.5.35
393
வண்ணவொன் புயநபி பாதம் வைத்தகை
கண்ணினிற் பதித்தகங் கனிய முத்தமிட்
டெண்ணில் வுவகையுற் றெவரும் போற்றிட
வுண்ணெகிழ்ந் தருங்கலி மாவை யோதினான்.
2.5.36
394
புதியவ னபிகலி மாவின் பொற்புற
வொதுவுடன் வருமுறை யொழுகி மாமறை
விதிமுறைத் தொழுகையு மேவி மேதையின்
முதியவ னிவனென முசுலி மாயினான்.
2.5.37
395
உனைப்பிடித் தடர்ந்தன னுனது செய்கையா
லெனைப்பிடித் தடர்பவ மின்று போக்கினேன்
மனைத்தட வளைசெலென் றுடும்பை வாழ்த்தினான்
பனைத்தடக் கரக்களி றனைய பண்பினான்.
2.5.38
396
உறைதருங் குழுவின ருவப்ப நோக்கித்தன்
னறபிதன் முகமல ரதனை நோக்கிமெய்
மறைநபி பங்கய வதன நோக்கிப்பின்
னிறைதரு மகிழ்ச்சிபெற் றுடும்பு நின்றதே.
2.5.39
397
மருப்புய நபிதிரு மதுர வாய்திறந்
திருப்பிடத் தேகென வுடும்புக் கின்புற
வுரைப்பது கேட்டுளங் கனிந்து கானிடை
விருப்பொடும் போயது விலங்கின் சாதியே.
2.5.40
உடும்பு பேசிய படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 5க்குத் திருவிருத்தம்...397.
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.6 உத்துபா வந்த படலம் (398 - 418)
398 |
அடவியினி லுடும்பகல அறபிவே டனுமறிவுள் ளகத்திற் றேக்கிப்
புடையகலா நிழல்போலுந் தோழருட னகுமதையும் புகழ்ந்து போற்ற
மடலவிழ்பைங் குவளைசெறி மடுச்சூழு நீள்புரிசை மக்க மீதி
லுடுவினமு நடுவுறையு நிறைமதியு நிகர்த்திடவந் துறைந்தா ரன்றே. 2.6.1 |
399
திரைக்கடலி னடுவெழுந்த மதிக்கதிர்போன்
முகம்மதுதஞ் செழுந்தீன் செவ்வி
நிறைத்தெழுந்த பயிர்போலத் தழைத்தோங்க
நிலைநிறுத்தி நிகழுங் கால
முரைக்கடங்கா வெகுளிபொங்கு மனத்தினராய்க்
குபிர்த்தலைவ ரொருங்கு கூடி
வரைத்தடத்தைக் கொலுகினங்க ளரிப்பதெனச்
சிலவசனம் வளர்க்கின் றாரால்.
2.6.2
400
தண்டரளக் கதிர்வடிவின் முகம்மதினைக்
குறைபடுத்தி யவர்தம் வாக்கின்
விண்டுரைக்கு மறைமொழியை யௌியமொழி
யெனவாக்கி வினவி யீமான்
கொண்டவர்க டமையுமவர் மனையும்புறம்
படுத்திநமர் குலத்துக் காகாத்
தண்டனைகள் படுத்திடவும் பலபலதந்
திரவசனஞ் சாற்றி னாரால்.
2.6.3
401
பிறவியா திவனுரையா தெனவிரித்துப்
பகுத்தறியாப் பேத மாக
அறபியா கியகுபிரர் பலர்கூறு
மொழிவழிகேட் டவரை நோக்கி
யிறபியா தரும்புதல்வ னிரங்காத
கெடுமனத்த னென்று நீங்கா
வுறவியா னென்பவரைப் பகையாக்கும்
விடனாக்கி னுரைக்கின் றானால்.
2.6.4
402
முகிற்கவிகை முகம்மதிடஞ் சென்றுசிறி
துத்தரத்தை மொழிந்தி யோனோர்
பகற்பொழுதி னவனுரையா லவனெடுத்த
நெறியனைத்தும் பழுதி லாக்கி
நிகர்க்கரிய குபலலது முதற்பிறிதொன்
றில்லையென நிறுத்தி மேலும்
விகற்பமிலை யெனப்படுத்தி வருவனென
மொழிந்தெழுந்தான் வீரர்க் கன்றே.
2.6.5
403
ஒருகாலுந் தறுகாது குணக்கெழுந்து
குடக்கோடற் குறும்வெய் யோனை
யிருகாலும் வழங்காதான் முன்னோடி
மறிப்பனெனு மியற்கை போலக்
குருகாலு மலர்வாவி புடைசூழு
மக்கநகர்க் குரிசி றன்பாற்
பொருகாலக் கதிரிலைவேல் வலனிலங்க
விரைவினொடும் புறப்பட் டானே.
2.6.6
404
உத்துபா வரபினைக்கண் டுருட்டுவார்
திரைக்கரத்தி னோடிச் சோர்ந்து
கத்துவால் வளைத்தாளங் கதிர்த்துவார்ந்
தொழுகுமணிக் கடலி னாப்பண்
வைத்துவாழ்ந் தெழுங்கதிர்போற் கதிர்கான்ற
முகம்மதுள மகிழ்ந்து நோக்கித்
தத்துவாம் பரிவயவ ருடனணித்தங்
குறைகவெனச் சாற்றி னாரால்.
2.6.7
405
இகல்பொருந்து முளத்தோடு மிறபியா
தரும்விடலை யிருந்து சோதி
முகம்மதினை முகநோக்கிச் சூழ்ந்திருந்த
பெரியோரை மதித்துப் போற்றிப்
பகருமொழி சிறிதுளதென் னிடத்திலம்
மொழியனைத்தும் பரிவிற் கேட்டுப்
புகரறநும் மனத்தாய்ந்து தௌியுமென
மறுத்துமுரை புகல்கின் றானால்.
2.6.8
406
பெருந்தவத்தால் வரும்புகழோய் தனியிறைவ
னொருவனெனப் பெருக்கும் பேச்சு
மிருந்தமறை யனைத்தையும்விட் டெனதுமொழி
மறைமொழியென் றிசைக்கும் வாக்குந்
திருந்துநெறி புதுநெறியொன் றுளதெனமுன்
நெறிவழுவாய்ச் செப்பு மாறும்
வருந்தமர்க்குந் திசையோர்க்கு மறையோர்க்கு
மனம்பொருந்த மன்று தானே.
2.6.9
407
ஒருவனென வுரைத்தீரிந் நிறத்தவனி
ணுளனெனக்கண் ணுறச்செய் தீரிற்
றிருவணக்க மெனத்தொடுத்தீர் முகங்கைகா
றனைத்தோய்த்தோர் திசையை நோக்கித்
தரையினுத றைவரலா யடிக்கடித்தாழ்ந்
தெழுந்திருகை தன்னை யேந்தி
வருவதலா லொருகுறிப்பு மிலையெவர்க
ளிவ்வணக்கம் வணங்கி னோரே.
2.6.10
408
முதல்வன்றன் றிருத்தூத ரெனப்பேரிட்
டரியமறை மொழியென் றேத்திப்
புதியமொழி யுரைத்தீமான் கொள்வித்தீ
ரிசுலாத்திற் புக்க பேரி
லிதமுறநம் மிறைவனிவ னெனக்கண்டோ
மெனவுரைத்தோ ரில்லை மேலும்
பதவியுள வெனிலதுவு மெவரறிவர்
சரதமெனப் பரிதி வேலோய்.
2.6.11
409
மந்திரமொன் றுருவேற்றிக் கண்கட்டா
யுடும்பினொடும் வசனித் தோமென்
றந்தரத்தைக் காரணமாய் விளைவித்தீர்
விச்சையலா லருளோ நாளும்
புந்தியினிற் சிறியோர்க ளறியாது
மயக்குறுவர் பொருவி லாத
தந்திரமும் மறையோர்க ளிதனையொரு
பொருளாகச் சார்ந்தி டாரே.
2.6.12
410
குலத்தினுக்கு மரசருக்கு முதியோர்க்கு
மறையோர்க்குங் கோதி லாதித்
தலத்தினுறை குபலெனுமத் தம்பிரான்
றனக்குமெந்தச் சமயத் தோர்க்கு
நலத்தகைமைத் தலக்கேடும் பிறர்சூடும்
பெரும்பகையு நடவா முன்ன
மிலத்தொடொழு கினத்தொடுறைந் திவைதவிர்வெண்
ணிணம்பருதி யிலங்கும் வேலோய்.
2.6.13
411
தந்தைதாய் தமர்வணக்க முறையொழுகிப்
பழையமறை தழுவி னீரேல்
வந்தமா வினைநீங்கு மினத்தோர்க
ளெவருமன மகிழ்ச்சி யாகிக்
கந்தடர்வெங் கரியிரதம் பரிநெருங்கப்
படைசூழக் கவிகை யோங்க
விந்தமா நிலத்தரசா மிறைஞ்சுவது
சரதமென வியம்பி னானால்.
2.6.14
412
அச்சமணு விலதகத்தி னுத்துபா
வுரைத்தமொழி யனைத்துங் கேட்டு
முச்சகமும் புகழ்முகம்ம துறசூல்தம்
மிதழினிற்புன் முறுவ றோன்றி
விச்சையெனத் தௌிந்துபல பலசூழ்ச்சி
விரித்தறத்தை விளங்கி யென்னோ
டிச்சைபெற வுரைத்தனைநன் கியானுரைத்தல்
கேட்டியென விசைக்கின் றாரால்.
2.6.15
413
எனக்கிறையோ னுரைத்தமறை மொழிவசனந்
திறத்ததல வென்னக் கூறல்
மனக்குறையோ வலதுனது மதித்திறனோ
வறிகிலன்மும் மறையுந் தேர்ந்தோய்
கனக்கமொழி யென்றெடுத்துக் காட்டுகநீ
யெனதுமொழிக் கவினைப் பின்ன
ருனக்குரைப்பக் கேட்டுமொழித் திறனறியென்
றெடுத்துரைத்தா ரொளிரும் பூணார்.
2.6.16
414
தரளவொளி தனிலுருவா யுதித்தமுகம்
மதுவிதனைச் சாற்றக் கேட்டுப்
பெருகுமுதன் மறைவசன மெவ்வுலகு
மறிவதியான் பேசி லென்னே
யிருமையினுங் கதிதருநும் புதுமொழியை
யெனதுசெவிக் கியைவ தாக
வுரையுமென வெடுத்துரைத்தா னிறபியா
தரும்புதல்வ னுத்து பாவே.
2.6.17
415
ஆதிதனை யுளத்திருத்தி பிசுமிலெனு
முரைதிருத்தி யமுத மூறும்
வேதமெனும் புறுக்கானி லொருசூறத்
தெடுத்தோதி விரிவ தாகப்
போதமுறு முபனிடதப் பொருளனைத்துந்
தொகுத்துரைத்தார் பொருவி லாத
சீதரவொண் கவிகைநிழ றனிலுலகம்
புரந்தளிக்குஞ் செவ்வி யோரே.
2.6.18
416
இரவியெனுங் கலிமாவிற் குபிர்த்திமிர
மடர்த்தெரியு மிறசூ லுல்லா
தெரிமறையி னுரைகேட்டுப் பொருடேர்ந்து
பகுப்பவதி சயித்து நோக்கி
யுருகிமதி மயங்கியெதி ருரையாம
லூமனென வொடுங்கி வான்றோய்
பெருவரையின் மடங்கலெதிர் வரையாடு
நிகர்வதெனப் பேதுற் றானே.
2.6.19
417
அலங்குளைவா லரியேறு முகம்மதுநா
விற்பிறந்த தன்றித் தீஞ்சொ
லிலங்கமர ரிறைமொழிகேட் டிவர்க்குரைத்த
தறுதியென விதயத் தோர்ந்து
கலங்குமனந் தௌிந்துநபி கமலமலர்
முகநோக்கக் கண்க ணாணி
விலங்கினமொத் தெவரோடு மொழியாது
தனியெழுந்து விரைவிற் போனான்.
2.6.20
418
கலைமறைதேர் முகம்மதுட னுரையாம
லெழுந்துதலை கவிழ்ந்து நாணி
நிலமையட லறிவகன்ற நெஞ்சினொடும்
புலம்பிநெடு மூச்சிற் சோர்ந்து
சிலைவயவர்க் கெதிருரைப்ப தென்னெனச்சஞ்
சலத்தினடுத் தியங்கி வாடிக்
குலைகுலைந்து குலத்தவரு மபூஜகிலு
மிருந்தபெருங் குழுவைச் சார்ந்தான்.
2.6.21
உத்துபா வந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 6க்குத் திருவிருத்தம்...418
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.7 ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் (419 - 510)
419 |
உள்ளறிவு குடிபோக்கி யிருந்தவன்றன்
முகநோக்கி யுரவ நீயவ்
வள்ளலிடஞ் சென்றதுவு மிருந்ததுவும்
நிகழ்ந்ததுவும் வகுத்துக் கூறென்
றள்ளிலைவே லவர்கேட்ப முகம்மதுசொற்
கெதிராக வமர ராலும்
விள்ளரிதிந் நிலத்திலெவ ரெதிருரைப்ப
ரெனுமொழியை விளம்பி னானே. 2.7.1 |
420
அரியலம்பும் புயவிடலை மனமயக்குற்
றுரைத்தவைகேட் டறிவின் மாந்தர்
பெருகுமஃ றிணைச்சாதி யுளமனைத்தும்
பேதுறுத்திப் பெட்பி னோடு
முறைதரச்செய் துவரிவரை நிலைமாறச்
செய்பவனில் வுத்து பாதன்
றிருமனத்தைப் பேதுறுத்த லவற்கரிதோ
வெனநகைத்துச் செப்பி னாரால்.
2.7.2
421
கனைத்தமுரட் கரிநிகர்த்த வுத்துபா
கலங்கியகட் டுரையு நேர்ந்தங்
கினத்தவர்க ளுரைத்ததுவுஞ் சரதமெனச்
சிரந்தூக்கி யெண்ணித் தேர்ந்து
மனத்தடக்கி தீனெனுமோர் பெரும்பயத்தைப்
புறத்தாக்கி வரிவி லேந்து
முனைத்தடக்கை யபூஜகில்தன் குலத்தோரை
யெதிர்நோக்கி மொழிவ தானான்.
2.7.3
422
எத்திறத்து மெப்புதுமை விளைத்திடினு
மம்மாயத் திடைப்ப டாத
புத்தியினும் வாள்வலியின் றிடத்தானும்
வஞ்சனையைப் பொதிந்து தோன்றுஞ்
சத்துருவா முகம்மதுத னுயிர்விசும்பு
குடிபுகுதக் தக்க தாக்கும்
பத்தியின னினைத்தபடி முடித்திடுவன்
பார்மினெனப் பகர்ந்து மாதோ.
2.7.4
423
தேறாத மதியாலு முற்றாத
வலியாலும் செவ்வி யோர்க்கு
மாறாத பெரும்பகையாய் முகம்மதென
வுதித்தோன்றன் மாயந் தானோர்
பேறாக நினைத்துமறு கத்தாபைப்
போலமனம் பேது றேனியான்
வீறாரும் வேல்வேந்தீ ரிவைசரத
மெனமறுத்தும் விளம்பி னானே.
2.7.5
424
மதியார்தஞ் செவிக்கியைய வாக்கினா
லிவையுரைத்து மனத்தி னூடு
கொதியார்வெவ் விடவரவின் வாய்த்தேரை
யெனவறிவு குலைந்து மேனாள்
விதியாதென் றறியாத கொடும்பாவி
யவைநீங்கி விண்ணி னூடும்
பதியாகப் படுத்தகொடி மணிமாட
மனைபுகுந்தான் பண்பி லானே.
2.7.6
425
அற்றையினி லிரவகற்றி யறிவினா
லுயர்ந்தோரை யாவி போலு
முற்றவரை மதிக்கேற்ப வுரைகொடுக்குந்
திறத்தவரை யுறவி னோரை
வெற்றியொடு மினிதழைத்தங் கோர்மாடத்
திடத்திருத்தி வியந்து நோக்கிக்
குற்றமற அபூஜகில்த னுளத்தினுறும்
வரலாறு கூற லுற்றான்.
2.7.7
426
பிறந்தகுலந் தனைவழுக்கி நமர்க்குமொரு
பெரும்பகையாய்ப் பேதி யாத
மறந்தவழு மனத்தினனா யிருந்தமுகம்
மதுவையுயிர் மாய்த்தல் வேண்டு
நிறந்தவழுங் கதிர்வேலீ ரில்லெனில்தீ
னிலைபெருகி நிலத்தின் மீது
புறந்தயங்கப் படர்ந்துநமர் குலஞ்சமயந்
தேய்த்தமிழ்த்திப் போடுந் தானே.
2.7.8
427
பகையினைநல் லுடல்வருத்து நோயதனைக்
கொடுநெருப்பைப் பாரின் மீதிற்
றொகுவிடத்தைத் தோற்றரவிற் பரிகரித்த
லியாவருக்குஞ் சூழ்ச்சித் தாகு
மிகுமெனிலிந் நிலமாக்கண் மதியாலும்
வலியாலும் வெல்வ தாகா
நிகரரும்வெஞ் சமர்தொலைத்து நிறங்குருதி
பிறங்கியொளிர் நிணங்கொள் வேலீர்.
2.7.9
428
வேறு
குடிமை யின்னமர் குலத்தையு மனத்தினிற் குறித்து
மடிமை யாயிருந் தேமெனின் முகம்மது தனக்கே
யடிமை யாயவன் றண்டனைக் கடல்வலி யிழந்து
மிடிமை யாகுதல் சரதமின் னவிர்கதிர் வேலீர்.
2.7.10
429
உறைந்த வர்க்கிடர் வருமுன மொருமனத் துணிவாய்
மறந்த ரித்திடுஞ் திரளினைத் தொடுமுகம் மதுவை
யிறந்தி டும்படிக் கியற்றுவ மெனிமனர்க் கௌிதி
னறந்த ரும்பர கதியுடன் புகழுமுண் டாமால்.
2.7.11
430
இந்த வல்வினை தவிர்த்திடற் கெனதுளம் பொருந்தச்
சிந்தி டாதுறு மொழிபல ருளத்தினுந் தேர்ந்து
மந்தி ரத்தொடு வழுவறு முரைவழங் கிடுமென்
றந்த மன்னவர் தமக்குரைத் தபூஜகில் கேட்டான்.
2.7.12
431
மாறு கொண்டகு மதுநடத் திடும்வர லாற்றை
வேறு கொண்டபூ ஜகில்விளம் பியமொழி யனைத்துங்
கூறு கொண்டவர் சிந்தையிற் பலபல குறித்து
வீறு கொண்டொரு மொழிப்பட வெதிர்விளம் புவரால்.
2.7.13
432
உரைத்த வாசக நன்குன துறுமொழிக் கெதிராய்த்
திருத்தி வேறுரை பகரவல் லவரெவர் திறலோய்
விரித்து மேலுரை பகரவு நமர்குலம் விளங்கப்
பொருத்த வும்நினை யலதுவே றிலைசெழும் புவிக்கே.
2.7.14
433
சிதைவி லாமனத் திறல்வலிச் செயலினுக் கேற்ற
மதிவ லோமியா மலமின நும்மதிக் கியையப்
புதிய சூழ்ச்சியொன் றுரைத்தியே லெங்கள்புந் தியிற்கும்
விதிய தாமவை நடத்துக வெனவுரை விரித்தார்.
2.7.15
434
உற்ற செய்திக ளனைத்தையு மோர்ந்துணர்ந் துரவோர்
வெற்றி வாண்முக நோக்கிவெவ் வினைமுகம் மதுவைப்
பற்ற றாக்கொலை படுத்திட னமரொடு பரிவின்
முற்று மிந்நகர்ப் படைகொடு முடித்திட லரிதே.
2.7.16
435
வஞ்ச னைத்தொழி லினின்முகம் மதினொடும் வாதா
விஞ்சை கற்றவ ராயிர ரெதிரினும் விளையா
தஞ்ச லாதுரு வேற்றிடி லேறுரு வனைத்து
நஞ்ச மாம்நம துயிரினைக் செகுத்திட நடக்கும்.
2.7.17
436
வன்ம திட்புறத் தாலயத் துறைந்ததே வதத்தை
யென்ம னக்குறை தவிர்த்திடர் தவிர்த்தியென் றிசைக்கி
னன்மை யாயுரைத் திடுவதோ நமர்குலப் பவத்தாற்
றின்மை யாயுரைத் திடுவதோ வெனத்தெரி கிலமால்.
2.7.18
437
ஆய்ந்து ணர்ந்துளத் தெண்ணிய காரிய மனைத்துந்
தேய்ந்த தல்லது தேறிய தெருட்சிய தன்றே
வாய்ந்த புந்தியொன் றுளதினந் தௌிந்திடு மதிப்பாய்க்
காய்ந்த செங்கதிர் வேல்வல னேந்திய கரத்தீர்.
2.7.19
438
உரனி னம்பெருங் குலத்தினி லரசரி னுயர்ந்தோன்
மரைம லர்த்தடஞ் சூழ்திமஷ் கதிபதி மாலிக்
கருள்ஹ பீபெனு மரசனுக் கறிந்திட வுரைத்து
விரைவி னம்பெரும் பகையினைத் துடைத்திடல் வேண்டும்.
2.7.20
439
ஈத லாற்பிறி திலையென அபூஜகி லிசைப்ப
வாத ரத்துடன் கேட்டவ ரனைவரு மகத்திற்
கோத றத்தௌிந் திம்மொழி நன்கெனக் குறித்து
மாதி ரப்புயம் வீங்கிட மகிழ்ந்துசம் மதித்தார்.
2.7.21
440
மாந்த ரியாவரு மொருப்பட வெழுந்தொரு மருங்கிற்
போந்தி ருந்துநல் லறிவினிற் கேள்வியிற் புகழிற்
சார்ந்த வுத்தரப் பிரத்தியுத் தரத்திவன் றனைப்போ
லாய்ந்த பேரிலை யெனவொரு வனைக்குறித் தழைத்தார்.
2.7.22
441
பத்தி ரம்மிவன் வரைந்திடிற் காரியம் பலிக்கும்
புத்தி யிற்றிறத் தவனிவ னெனப்பல புகழ்ந்து
முத்தி ரைப்பட முறையொடுந் தேர்ந்தியா மொழிந்த
வுத்த ரந்தனை வரைகென யாவரு முரைத்தார்.
2.7.23
442
காசி லாதுரை வரைபவன் கேட்டுளங் களித்து
மாசி லாப்பெருந் தலைவரைத் தாழ்ந்துற வாழ்த்திச்
சூசி யுங்கடு தாசியு மெடுத்துமை தோய்த்துப்
பாசு ரந்தனை யுரைமின்க ளெனுமுரை பகர்ந்தான்.
2.7.24
443
எழுது கின்றன னென்றது மவனிருந் ததுவும்
பழுதி லாதிற்றை முகுர்த்தமு நிமித்தமும் பார்க்கின்
முழுதும் வெற்றியே யலதிட ரிலையென முதலோர்
தொழுது புத்தினைப் புகழ்ந்துவக் கணைதொகுத் துரைப்பார்.
2.7.25
444
ஆதி நூலுரை தெரிதரு ஹபீபர சறிக
வோது நன்னெறி மக்கமா நகரினி லுறைந்த
சாதி யோர்களுந் தலைவரு மபூஜகில் தானுங்
கோதி லாதவிண் ணப்பமென் றிருகரங் குவித்தே.
2.7.26
445
குபலு றைந்தநற் றலத்தினில் ஹாஷிமா குலத்தி
லபுதுல் லாவயி னவதரித் தாமினா மகவாய்த்
தவமி லாமுகம் மதுவெனும் பெயரினைத் தரித்துப்
புவியி கழ்ந்திடப் பிறந்திருந் தன்னொடு புதியோன்.
2.7.27
446
சலதி யூடுறை கொடுவிட மெனத்தலை யெடுத்திட்
டுலைவொ டன்னையுந் தந்தையு மிழந்தொரு தனியா
யலகி லாதவஞ் சனைவிதத் தொழில்படித் ததனால்
விலகு தற்கரி தாகிய மாயங்கள் விளைத்தான்.
2.7.28
447
அந்த நாட்குவை லிதுமக ளரசெனு மயிலைப்
பிந்தி டாமண முடித்தன னவர்பெரும் பொருளாற்
சிந்தை யிற்கரு விதத்தொடு மதத்தொடுஞ் சிலநா
ளெந்த மன்னவர் தம்மையு மாசரித் திணங்கான்.
2.7.29
448
ஆண்டு நாற்பது சென்றபி னவனியி லெவருந்
தூண்டி டாப்பெருங் கோட்டிக டொடுத்தவன் றுணிவாய்க்
காண்ட காவிறை யொருவனுண் டெனுமொழி கணித்து
மீண்டு மன்னவன் றூதனியா னெனுமுரை விரித்தான்.
2.7.30
449
தூத னியானெனக் காதிதன் றூய்மொழி புறுக்கான்
வேத மொன்றிறங் கிற்றெனப் பலரொடும் விரித்தான்
பூத லத்திலெவ் விடத்தினுஞ் சிரந்தரை புரள
வீத லானெறி யிலையென விழுந்தெழுந் திடுவான்.
2.7.31
450
எனக்கு றுங்கலி மாவுரை தனக்கியை யாதான்
றனக்கே ரிந்திடு நரகமென் றிசைத்தவன் றனக்குக்
கனக்க மேம்படு மவர்கடாங் கனகநன் னாட்டின்
மனைக்குள் வாழ்குவர் சரதமென் றுரைவழங் குவனால்.
2.7.32
451
தேறி லாதகட் டுரையினிற் புதுநெறி திருத்தி
மாறு பட்டவ ரெவரையுந் தன்வசப் படுத்தி
வீறு கொண்டநம் வேத மனைத்தையும் விழலா
யேறு மாறுகொண் டிரும்புகல் லெனவிகழ்ந் திடுவான்.
2.7.33
452
ஆல யங்களைக் காண்டொறுங் கண்புதைத் தகல்வன்
மேலை யோர்செயும் வணக்கங்க ளனைத்தையும் வெறுப்பன்
பாலை நேர்மறைக் குருக்களைத் தினம்பழித் திடுவன்
சால வும்மனப் பெருமையிற் கிளையொடுஞ் சாரான்.
2.7.34
453
அகில மீதுறை யரசர்க ளெவரையு மடிக்கீழ்ப்
புகவி டுத்துவ னென்பது சரதமாய்ப் புகலவன்
பகும னத்தறி வினிற்றௌி வினிற்பல நெறியி
லிகலி யென்னுட னெதிர்ப்பவ ரிலையென விசைப்பன்.
2.7.35
454
வாதி யாயித லாற்சில வாய்க்கொளா வசனங்
காதி னாற்கொளப் படுவதன் றிழிந்தகட் டுரையை
யோதி யோலையிற் தீட்டவு முடிவதன் றுடையோன்
றூத னியானென வுரைத்தவ னுரைத்திடுந் துணிவே.
2.7.36
455
மறந்த வழ்ந்திடு முகம்மது விரித்தசொன் மனுவாய்ப்
பிறந்த வர்க்கிடர் வடுவலாற் பெறுபய னிலையா
லறந்த ழைத்திடுந் தலத்துறை யறபிக ளெவரு
மிறந்தி டாவயி ராய்த்தலை கவிழ்ந்திவ ணிருந்தோம்.
2.7.37
456
இந்த வாசக மறிந்திவ ணிடத்தெழுந் தருளி
வந்து பார்த்திடின் முகம்மது மாயவஞ் சனையும்
விந்தை யேற்றுரு மந்திரச் சூழ்ச்சியும் வீறுஞ்
சிந்தி நங்கிளை யவர்மனத் துன்பமுஞ் சிதையும்.
2.7.38
457
இனைய பாசுர மனைத்தையும் விரித்தெடுத் திசைத்து
வனையும் வார்கழ லறபிக ளனைவரும் வகுத்தார்
தினையி னவ்வள வென்னினுஞ் சிதைவிலா வண்ண
நினைவி னேர்வழி தொடுத்தெழு தினன்வரி நிரைத்தே.
2.7.39
458
எழுது பத்திரந் தனைமடித் திலங்குபட் டதனான்
முழுதி னும்பொதிந் திருவயின் முத்திரை பதித்துக்
குழுவி லாய்ந்தொரு விரைவினன் கரத்தினிற் கொடுப்பத்
தொழுது வாங்கினான் காலினுங் காலினிற் றொடர்வான்.
2.7.40
459
எடுத்த முத்திரைப் பத்திரஞ் சிரமிசை யேற்றிக்
கொடுத்த மன்னரைப் பணிந்துகொண் டறபிகள் குழுவை
விடுத்து வீதிநன் னிமித்தமெய் திடவிரை வுடனே
தடத்து கிற்கொடி நுடங்கிய மதிட்புறஞ் சார்ந்தான்.
2.7.41
460
கரட முகம்மதக் கரிநிகர் துறையபுல் காசீ
மிரவ லர்க்களித் தவனிரு நிதிபெரு கினபோன்
மரும லர்த்தட வாவியுங் கழனியும் வழிதேன்
முருகொ டுங்கனி தரும்பொழி லனைத்துமுன் னினனால்.
2.7.42
461
குன்றுங் கானமு மடவியு நதிகளுங் குறுகிக்
கன்று மென்மயிர்க் கவரியுந் திரிவனங் கடந்து
வென்றி வெய்யவன் கதிரினு மனத்தினும் விரைவா
யென்றும் பூமகள் பொருந்திய திமஷ்கினை யெதிர்ந்தான்.
2.7.43
462
மின்னெ னக்கதிர் தருமணி குயிற்றிவெண் கதையாற்
றென்னு லாவிய மேனிலை மாடமுஞ் செறிந்த
பொன்னி னன்கதிர் குலவிய கொடிகளும் பொருவாக்
கன்னி மாமதிட் புரிசையுந் திமஷ்கையுங் கண்டான்.
2.7.44
463
திரையெ டுத்தெறிந் திரைதரு கடலினுஞ் செழித்து
விரைக மழ்ந்தமென் குவளையும் வனசமு மேவிக்
கரைத தும்பிய சீகரத் தகழினைக் கடந்து
புரிசை வாயிலுங் கடந்தரும் பெரும்பதி புகுந்தான்.
2.7.45
464
நிரைகொ ணித்திலத் தாவண வீதியு நிமிர்ந்த
வரையெ னத்திகழ் மண்டப மறுகையுங் கடந்து
பரக திப்பரி கரியொடு படைக்கலம் பரப்பி
யரசு தங்கிய கோயிலின் வாயிலி னானான்.
2.7.46
465
மெய்யின் வேண்டுகிற் கஞ்சுகி யணிந்தடல் விளைந்த
கையின் வேத்திர மேந்திய வாயில்கா வலரை
யையு றாதடுத் தவரொடும் வரவெடுத் தறைந்தான்
றுய்ய நன்னினை வகற்றிய அபூஜகில் தூதன்.
2.7.47
466
வந்த தூதுவ னுரைத்தலும் வாயிற்கா வலவர்
பிந்திடாதெழுந் தெண்ணரும் படைக்கலம் பிறங்கத்
தந்தி ராதிபர் மந்திரத் தலைவர்சொற் றண்வாச்
சிந்தை யன்ஹபீ பெனுமட லரசன்முன் சென்றார்.
2.7.48
467
போற்றி நின்றுகும் பிட்டணி யொதுக்கிவாய் புதைத்துத்
தூற்று தேம்பொழின் மக்கமா நகரவர் தூதன்
மாற்ற ருங்கதிர் வாயிலில் வந்தன னெனுஞ்சொற்
சாற்றி னார்செழும் பொன்மழைக் கரதலன் றனக்கே.
2.7.49
468
கரைகொ ளாப்பெருஞ் சேனையங் கடனடுக் கடிதின்
வரவி டுத்துக வென்றலும் வாயில்கா வலவர்
விரைவி னேகியத் தூதனை விளித்துமின் னணிபூ
ணரசர் நாயகன் றிருமுன மழைத்துவந் தனரால்.
2.7.50
469
எதிர்ந்த தூதுவன் றரையினிற் றெண்டனிட் டெழுந்து
முதிர்ந்த பேரவை யரசனை முறைமுறை பணிந்து
பதிந்த முத்திரை புணர்த்திய விண்ணபத் திரத்தைப்
பொதிந்த மென்றுகி லொடுந்திறற் புரவலற் கீய்ந்தான்.
2.7.51
470
ஈய்ந்த முத்திரைப் பத்திர மதனையோ ரிளவல்
வாய்ந்த செங்கரத் தேந்திமுத் திரைத்துகில் வாங்கி
யாய்ந்த பாசுர மனைத்தையுந் தெரிதர வணியாய்ச்
சாய்ந்தி டாதபொன் மணிமுடி யவர்க்குரைத் தனனே.
2.7.52
471
வனைந்த பாசுர மனைத்தையும் வரன்முறை கேட்டுச்
சினந்த யங்குவே லவன்மன முறச்சிரந் தூக்கி
யினந்த னிற்பெரி யவர்மறை யவர்க்கெடுத் தியம்பிப்
புனைந்த பொன்முடி மண்டப மாளிகை புகுந்தான்.
2.7.53
472
தனித்தி ருந்தொரு மண்டபத் தரசர்க டமையு
நினைத்த சூழ்ச்சியை யுரைதரு நிருபர்க டமையு
மனத்தி னின்புற வழைத்தரு கிருத்திமும் மறையின்
றொனித்த செய்தியு நிகழ்ந்ததுந் தொகுத்தெடுத் துரைத்தான்.
2.7.54
473
அரசன் சொற்றவை கேட்டவ ரனைவருந் தௌிந்து
புரிசை சூழ்தரு மக்கமா நகரியிற் புதுமை
விரைவிற் காண்குவ துண்டெனச் சூழ்ச்சியின் விரித்தார்
மரைம லர்த்தடஞ் சூழ்தரு திமஷ்குமன் னனுக்கே.
2.7.55
474
கேட்டு மன்னவ னன்கெனக் கிளரொளி வடிவாட்
பூட்டுந் திண்கர வீரரு மடற்புர விகளுங்
கோட்டு வாரணத் தொகுதியு மரசர்கள் குழுவு
மீட்டு மிற்றையி லெழும்புற விடுதியி லென்றான்.
2.7.56
475
வேறு
நிருபர்கோ னெழுக வென்ன நிகழ்த்தமந் திரத்தின் மிக்கார்
புரவியுந் தறுக ணால்வாய்ப் புகர்முகக் களிறுந் தேரு
மரசரும் வருக வென்ன வணிமணிக் கனக மாடத்
தெருவினு நகர முற்றுஞ் செழுமுர சறைவித் திட்டார்.
2.7.57
476
முரசதி ரோதை கேட்டு முரண்மற முதிர்ந்து வெற்றி
மருமலி வாகை தாங்கு மன்னவர் திரளிற் கூண்டு
திருநகர்ப் புறத்துங் கோயிற் றெருவினுஞ் செறிந்து தூளி
பருதியும் விசும்புந் தூர்ப்பப் படைக்கலம் பரப்பி வந்தார்.
2.7.58
477
சேனையிற் றிரளிற் செம்பொற் செழுங்கொடி நுடங்க வெற்றி
வானதி ரசனி யொப்ப மதகரி முரச மார்ப்பக்
கானமர் கூந்தற் செவ்வாய்க் கடுவடர் கொடிய வாட்கட்
டேனிதழ் மடவார் சூழச் சீயமொத் தெழுந்தா னன்றே.
2.7.59
478
திக்கடங் காத வெற்றித் திறற்படை ஹபீபு வேந்த
னொக்கலின் புறப்ப தாதி யுவர்க்கடல் கடுப்பப் பொங்கித்
திக்கிரு நான்குந் தூது செலத்துக ளமரர் போற்று
மக்கமா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ.
2.7.60
479
வண்டுக ளுண்டு பாட மணிச்சிறை மயில்க ளாடக்
கொண்டல்கண் டூங்குஞ் செந்தேன் கொழுங்கனி குழைபைங் காவு
முண்டகத் தடமுஞ் செவ்வி முருகவிழ் கழனிக் காடுந்
தெண்டிரை பரந்த தென்னத் திரட்படை படர்ந்த தன்றே.
2.7.61
480
வரிவளைக் குலத்தின் குப்பை வாசியின் குரத்திற் றாக்கி
விரிகதிர்த் தரளஞ் சிந்தும் விளைநிலங் கடந்து செந்தே
னருவிகள் வரையிற் செம்போ னணிவடம் புரள்வ போல
நிரைநிரை செறிந்து தோன்று நெடுமுடிக் குறிஞ்சி சார்ந்தார்.
2.7.62
481
கண்விரித் தனைய தூவிக் கலாபமா மயிலுங் கீதப்
பண்விரித் தென்னப் பேசுந் தத்தையும் பறவை யாவும்
விண்படர்ந் திரியச் செந்தேன் விளைதருப் படிந்து தோன்றா
மண்பட நெரியத் தாவும் விலங்கின மலைய வந்தார்.
2.7.63
482
வரிப்புலிக் குழுவு மாறா மதகரித் திரளுஞ் செங்கட்
டிருக்கறத் திசைக ணோக்குஞ் சீயமும் வெருவி யோடிப்
பொருப்புறைந் தொதுங்கித் தென்றாற் புரவலன் சேனை வீரர்
விருப்புறும் வீரத் தன்மை யாவரே விரிக்கற் பாலார்.
2.7.64
483
நெடுவரைக் குறிஞ்சி நீந்தி நிரைதொறு புகுதச் சேர்த்தி
யிடுகுறு நுனைமுள் வேலி யிடையர்தம் பாடி யேங்கப்
படர்கொடி நுடங்கு முல்லைப் பரப்பையு நீந்தி யீந்தி
னடவிகள் புடையிற் றோன்று மறபுநாட் டகத்திற் புக்கார்.
2.7.65
484
மதிதவழ் குடுமி மாட மக்கமா நகர மென்னும்
பதியினுக் கடுப்ப மற்றோர் பாடியி னிழிந்து பாயுஞ்
சதிகதிப் பரியு நீண்ட தடக்கைமா கரியும் பொங்கக்
கதிரயின் மன்ன ரீண்ட ஹபீபர சிருந்தா னிப்பால்.
2.7.66
485
மைக்கருங் கவிகை வள்ளன் முகம்மதுக் குதவி யாகத்
தக்கவ னருளாற் செம்பொற் றலத்தினும் பாரிற் றோன்றுந்
திக்கினுங் கதிர்கு லாவுஞ் செழுஞ்சிறைத் தடங்கட் செவ்வி
மிக்குயர் வடிவ தாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார்.
2.7.67
486
ஆயிரஞ் சிறையு மொவ்வா வாயிரஞ் சிரசு மாயீ
ராயிரம் விழியுந் தோன்ற வாயிர முகமு மாகி
யாயிர நாவி னாலு மகுமதே யென்னக் கூவி
யாயிரம் பெயரி னான்றன் சலாமென வருளிச் செய்தார்.
2.7.68
487
விரைவினிற் சலமென் றோது மொழிவழி விசும்பை நோக்கிக்
கரையிலா வடிவு தோன்றுங் காரணங் கண்டி யாரோ
தெரிகில மென்ன வுள்ளந் தெருமந்து வருத்த முற்றார்.
மரையிதழ் வனப்பு மொவ்வா மலர்ப்பத முகம்ம தன்றே.
2.7.69
488
குரிசிறன் னுளத்தி னச்சஞ் ஜிபுறயீல் குறித்துப் பின்னும்
வரிசையின் விழித்துச் சோதி முகம்மதே வருந்தன் மேலோன்
பரிவுட னும்பால் வெற்றிப் பதவிக ளளித்த தியாவுந்
தெரிதரக் கேண்மி னென்னச் செய்யவாய் திறந்து சொல்வார்.
2.7.70
489
வானுல கினினீ ராடை மண்ணுல கினில்வெண் டிங்கள்
பானுவி னரிதா யுள்ள படைப்பினி லெவைக்கு மேலா
மீனமின் முகம்ம தைப்போ லிலையென வரிசை மேலுந்
தானவன் பெருமை மேலு மாணையிற் சாற்றி னானால்.
2.7.71
490
செந்நெலங் கழனி சூழுந் திமஷ்கினின் ஹபீபு வேந்தன்
பொன்னணிப் புரோசை நால்வாய்க் களிறொடும் புரவி யோடு
மிந்நகர்ப் புறத்திற் சார்ந்தங் கிருந்தன னதனால் தீனின்
மன்னவ துன்ப மென்ப வருவதொன் றில்லை யன்றே.
2.7.72
491
கடற்படு நிலத்தி லில்லாக் காரணங் களைஹ பீபு
தொடுத்துரைத் திடுவன் கேட்டு மகிழ்ச்சியிற் றுவாச்செய் வீரா
லடுத்திருந் தவர்க்குந் தூரத் தவர்க்குங்கண் டறிய வல்லே
படைப்புள தெவைக்குந் தோன்றப் பலித்திடுங் கடிதின் மாதோ.
2.7.73
492
உடற்றசை திரண்ட தல்லா லுறுப்பொன்று மிலதாய்ப் பின்னோர்
மடக்கொடி தனைக்கொ ணந்தான் வடிவுசெய் திடுமி னென்னத்
துடக்குறக் கேட்பன் கேட்கு முரைப்படி துஆச்செய் வீராற்
கடற்படு புவிக்குட் காணாக் காரணந் தோன்று மாதோ.
2.7.74
493
வாட்படைத் திமஷ்கு வேந்தன் மறையுணர் தௌிவா லெண்ணிக்
கேட்பதெவ் வழிக்கு நுந்தங் கிளரொளித் திருவாய் விண்டு
கோட்பட வுரையு மென்ன ஜிபுறயீல் கூறி னார்தேந்
தோட்படு மரவ மாலை துலங்கிய குரிசிற் கன்றே.
2.7.75
494
அமரர்கோ னினைய மாற்ற மாதிதன் பருமான் மேற்கொண்
டிமைநொடிப் பொழுதிற் றோன்றி யியம்பிய திணங்கா ரான
திமிரவெம் பகைக்குத் தோன்றுந் தினகர னாகப் பூத்த
கமலவொண் வதனச் செவ்வி முகம்மது களிப்புக் கொண்டார்
2.7.76
495
என்னுயிர்த் துணைவ ரான ஜிபுறயீ லிருகண் ணார
முன்னுறு கோலம் போல முகத்தெதிர் நிற்பப் பேதந்
தன்னைமாற் றுகவென் றாதி தன்னுட னிரந்து நின்றார்
மன்னிய ஜிபுற யீலு மறுத்துமுன் வடிவம் போன்றார்.
2.7.77
496
அவிரொளி ஜபுற யீல்முன் வடிவெடுத் தடுத்துப் பேசிப்
புவியினின் றகல்வான் புக்கார் பொருந்தல ருயிரை மாந்திக்
கவினுறு நெடுவே லேந்துங் கரதல முகம்ம தென்னு
நபியினி திருந்தா ரிப்பா னடந்தவா றெடுத்துச் சொல்வாம்.
2.7.78
497
மறுகிவெள் ளெகினஞ் சிந்த வரிவராற் றாவும் வாவி
செறிதிமஷ் கிறைவன் செல்வத் திருநக ரடுத்த சீறூர்ப்
புறனிடத் துறைந்தா னென்னப் பொருவருந் தடக்கை வெள்வே
லறபிகட் குறைத்தார் தூத ரபூஜகி லறிய வன்றே.
2.7.79
498
கவனவாம் பரியு நால்வாய்க் கரியுடன் ஹபீபு வேந்த
னிவணில்வந் தடைந்தா னென்ன அபூஜகி லிணைத்தோள் வீங்கி
யவிர்கதிர்க் கலன்க டாங்கி யகுமதை வெல்வேன் மேலும்
புவனியி லெதிரியா ரென்னப் புதுமதிக் களிப்புப் பூத்தான்.
2.7.80
499
நிகரரும் பதிக்குட் செவ்வி நெடுந்தெரு வனைத்துந் தூதைப்
புகவிடுத் தறிவிற் றேர்ந்த புரவலர் தம்மைக் கூவி
முகிலுறை கனக மாட முன்றிலி னிருத்திச் சேர்ந்த
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை யெடுத்துச் சொன்னான்.
2.7.81
500
நெறிகுலஞ் சமயஞ் சாயா நிறுத்திட வந்த வேந்தைத்
திறைகொடு பணிந்து வேறோர் திருமனை யிடத்திற் சேர்த்தி
மறுவறும் படிகுற் றேவல் வகுத்தவை நடத்தப் போதல்
பொறியென வெவர்க்குஞ் சொன்னான் பொறியறிந் துரைக்க லானே.
2.7.82
501
மனமதிக் குறியன் கூறும் வசனங்கேட் டறபி மன்ன
ரனைவரு மிதுநன் கென்ன வகத்தினிற் கொண்டு வேறோர்
புனைகதிர் விடுதி மாடம் புதியதொன் றியற்றிச் செம்பொற்
கனைகழ லரசைக் சேர்த்திக் கவல்வது கரும மென்றார்.
2.7.83
502
மரவினை யவர்க்குஞ் சிற்ப மறுவறு தொழிலி னோர்க்குந்
திரகம தளித்துச் செவ்விச் செழுமடிக் கனக மாட
நிரைநிரை யியற்றிச் சுற்று நெடுமதி றிருத்தி வாயில்
விரிகதிர்க் கபாடஞ் சேர்த்தி வீதிகள் பலவுஞ் செய்தார்.
2.7.84
503
பந்தரிட் டலர்க ணாற்றிப் பருமணிக் கலன்க டூக்கிச்
சந்தனம் பனிநீர் சிந்தித் தரைமெழுக் கெறிந்து சோதி
யந்தரத் துடுவின் கூட்ட மனைத்தும்வந் தடைந்த தென்னச்
சிந்துவெண் டரள ராசி செறித்தலங் காரஞ் செய்தார்.
2.7.85
504
கண்படைத் தவர்க ளியாருங் கண்டதி சயிப்பக் காந்தி
விண்படர் மாட வாயின் வௌியினிற் படங்கு கோட்டிப்
பண்பட ரிசையின் வாய்ந்த பழக்குலைக் கதலி நாட்டி
மண்பட ருலகி னில்லா வளம்பல செய்வித் தாரால்.
2.7.86
505
மேதினித் துறக்க மென்ன விடுதிக ளியற்றி யோதும்
வேதியர் குழுவும் வெள்வேல் வீரர்க டலைவ ரோடு
மேதமில் திமஷ்கில் வாழு மிறைவனை யெதிரிற் காணக்
காதலித் தினத்தி னோடு மபூஜகில் கடிதிற் போனான்.
2.7.87
506
மாலமர் நகர மாக்க ளபூஜகில் மரபி னோடு
நால்வகைப் பதாதி சூழ நனிபல திறைக ளீய்ந்து
நீலவா ருதியே யன்ன நெடும்படைக் கடலி னாப்பண்
காலைவெங் கதிரிற் றோன்றும் ஹபீபெனு மரசைக் கண்டார்.
2.7.88
507
கண்டுகண் குளிர நோக்கிக் கரஞ்சிரங் குவித்துக் கான
வண்டம ரலங்கற் றிண்டோண் மன்னவர் மருங்கு நிற்பத்
தெண்டிரைப் புவனங் காக்குந் திறல்வலி யரசர் கோமான்
விண்டநல் லுரையி னோடு மிருகமென விரைவிற் சொன்னான்.
2.7.89
508
போதலர் கழனி சூழ்ந்த திமஷ்கினைப் புரந்த வேந்துங்
கோதறு மக்க மென்னுங் கொழும்பதித் தலைவ மாரு
மாதரத் துடனு மொன்றா யளவளா மகிழ்ச்சி பொங்கிப்
பேதமின் மனத்த ராகிப் பிரியமுற் றெழுந்தா ரன்றே.
2.7.90
509
குரகதத் திரளி னோடுங் கொலைமதக் கரியி னோடும்
விரிகதி ரெஃகங் கூர்வாள் வில்லுடைத் தலைவ ரோடு
மருமலர்ச் சோலை சூழு மக்கமா நகரஞ் சேர்ந்து
புரவலர்க் கரியே றன்னான் புதியமண் டபத்திற் புக்கான்.
2.7.91
510
செய்யவா யொளிவெண் மூரற் சிறுநுதற் பெரிய கண்ணாற்
கையின்வெண் ணிலவின் காந்திக் கவரிகா லசைப்ப நீண்ட
வையக முழுதுங் காக்கு மணிக்குடை நிழற்ற வெற்றி
வெய்யவ னிருந்த தென்ன் விருந்தனன திமஷ்கு வேந்தன்.
2.7.92
ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 7க்குத் திருவிருத்தம்...510
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
2.8 மதியை அழைப்பித்த படலம் (511-698)
511 |
தவிசினி லிருந்து வெற்றித் தடமுடி யரசர் கோமா
னபுஜகில் தன்னைக் கூவி யணிநகர்க் கழைத்த மாற்றங்
கவரற மனத்தி னுற்ற கருமங்க ளனைத்து நாளுங்
குபலினை மனத்திற் கொண்டோய் கூறெனக் கூறி னானால். 2.8.1 |
512
ஒலிதுத்து பாவு மாறா வுக்குபா வுமையா சைபா
மலிதருங் கொடுமை பூண்ட மனத்தபூ ஜகிலு மொன்றாய்
நலிதலி லெழுந்து போற்றி நமர்க்கல ருற்ற யாவு
மலர்தலை யுலகம் போற்று மரசுகேட் டருள்க வென்றார்.
2.8.2
513
முகம்மதென் றொருத்தன் றோன்றி வணக்கமு நெறியு மிந்த
வகலிடந் தோன்றத் தோன்று மாலய முழுது முன்னோர்
புகலுநன் மறையுஞ் சூழ்ந்த பொருவருங் குலமு மற்று
மிகலொடுங் கெடுத்து நின்றா னிவையிவண் விளைந்த தையா.
2.8.3
514
அகலிடம் விளக்குஞ் செங்கோ லணிமணித் தீப மேநேர்
புகலுமும் மறையுந் தேர்ந்த புந்தியிற் கடலே நாளு
மிகலுடை யரசர்க் கெல்லா மெதிரிடி யேறே வானுஞ்
சகமுமெண் டிசையுந் திக்கும் வெண்புகழ் தடவும் வேந்தே.
2.8.4
515
மறுவற வுலகி னில்லா வயதொரு நூற்றின் மேலு
மறுபது மிருந்தோய் நுந்த மறிவினா லறியா தில்லைச்
சிறியவ ருரைத்த தல்லாற் செவியினுந் தெரிவ தாகுங்
கறையற விற்றைப் போதிற் கண்ணினுங் காண்பி ரென்றார்.
2.8.5
516
ஓலையுத் தரமு மியாங்க ளுரைத்தது முகம்ம தென்போன்
பாலினின் முரணி னூறு பங்கினி லொன்றுங் காணா
தோலிடுங் கடன்மாச் சேனை யுரவவென் றுரைப்ப மூன்று
காலமுந் தெரிந்து நோக்குங் காவலன் செவியிற் கொண்டான்.
2.8.6
517
உரைத்தவிவ் வசன மெல்லா முள்ளுறப் பொருத்தி நாளை
வரைத்தடப் புயத்து வீர முகம்மதை விளித்து மார்க்கம்
பொருத்தறப் புகன்ற செய்தி யறிகுவ மிற்றைப் போதிற்
றிருத்தகு மனையின் கண்ணே யாவருஞ் செல்க வென்றான்.
2.8.7
518
அரசுரை கேட்டு வீர ரவரவர் மனையிற் சார்ந்தார்
கரைதிரை புரட்டு மேலைக் கடலிடைக் கனலி சார்ந்தா
னிரவினைப் பகலைச் செய்யு மெழின்மணித் தவிசின் மீதிற்
குரவர்கண் விழிப்ப வோசைக் குணகடல் வெளுத்த தன்றே.
2.8.8
519
விடிந்தபி னவனிப் பொன்னா டெனும்விறற் பதியின் வீர
ரிடந்தரு திமஷ்கின் வேந்தைக் காண்பதற் கெழுந்தார் வெற்றிப்
படர்ந்தரு கொடியிற் றூண்டும் பகைப்பெருங் கடலைக் கையாற்
கடந்தவே லபித்தா லீபு கலன்பல வணிவ தானார்.
2.8.9
520
வையகம் புரந்து தீனை வளர்த்திடு மிபுறா கீந்தங்
கையொலி யலைச்செங் கையா லரையினிற் கவினச் சேர்த்தித்
துய்யவன் றூதர் முன்னந் தோன்றிய ஆத மென்போர்
மெய்யணி குப்பா யத்தை வியன்பெற மெய்யிற் சேர்த்தான்.
2.8.10
521
கருவிமென் மிடற்றிற் றீண்டாக் காரண ரிசுமா யீல்தஞ்
சருவந்து சிரசிற் சேர்த்தித் தாரணி தனிற்பொன் னாட்டு
மருமலர்ப் புயத்திற் றாங்கி வளர்நபி சீது மெய்யிற்
றருகதி ருத்த ரீயந் தனையெடுத் தணிந்தா ரன்றே.
2.8.11
522
சூலினைத் தரித்த கொண்டற் சுகைபுநன் னபிதஞ் செம்பொற்
காலிணைக் கபுசை வீரக் கழலடி பொருந்தச் சேர்த்திக்
சாலவுங் குலத்து முன்னோர் தரித்திடுங் கலன்க டாங்கி
வேலினைக் கரத்தி லேந்தி வீரவாண் மருங்கு சேர்த்தார்.
2.8.12
523
தனக்குறுங் குலத்தி லாய்ந்த தலைவரின் முதியார் பாரிற்
சினக்கதிர் வேற்கை கொண்ட செல்வர்நாற் பதின்மர் தம்மைக்
கனக்குற மருங்கு கூட்டிக் காவல ரபித்தா லீபு
வனக்கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட் டாரால்.
2.8.13
524
வேறு
மாதிர மெனக்கனக மண்டப நெருங்கும்
வீதியிடை புக்குவிறன் மன்னர்புடை சூழக்
கோதறு மறக்கொடு வரிக்குழுவி னாப்ப
ணேதமற வந்தவரி யேறென நடந்தார்.
2.8.14
525
நித்தில நிரைத்துமலர் நீடொடைய னாற்றிப்
புத்தரி சொழுக்குமுயர் பந்தரிடை புக்குச்
சித்திர விறற்குரிசில் செவ்வியழி யாத
மத்தகரி யைத்திமஷ்கு மன்னையெதிற் கண்டார்.
2.8.15
526
கங்கமுல வுங்கதி ரயிற்கடவு டன்னை
மங்குலக லொண்கதிர் மணிக்கடக மின்ன
வங்கையிணை தொட்டினி தழைத்தரு கிருத்தி
யிங்கித மொடுந்திமஷ்கி னுக்கிறை யிருந்தான்.
2.8.16
527
மூரியட லேறபுதுல் முத்தலிபு மைந்தர்
மாரிபொரு வாதகர மன்னவனை நோக்கித்
தேருமதி யாற்பல தெரிந்தபுக ழோடு
மாரமுத மானசில நன்மொழி யறைந்தார்.
2.8.17
528
ஓதுநெறி நீதியபித் தாலிபுரை கேட்டுச்
சீதமதி போலுமொளிர் செம்முக மிலங்க
வாதரவி னோடுமகிழ் வின்சிர மசைத்துச்
சோதிமதிள் சூழ்திமஷ்கி னுக்கிறைசொல் வானால்.
2.8.18
529
இந்நகரி யிற்றலைவ ரியாவரினு மிக்கோய்
மன்னுகிளை யிற்பகை வரத்தவிர்தல் செய்யா
தன்னவர் துணிந்தவை துணிந்தனை யறத்தோ
ருன்னவு மிழுக்கென வுளத்திலிவை கொள்ளார்.
2.8.19
530
சீலமறி யாதசிறி யோர்கள்பிழை செய்யின்
மேலவர்கள் கண்டவை விலக்கல்கட னல்லாற்
கோலிய பெரும்பகை குலத்தினில் விளைத்த
மாலுற வளர்த்தன்மட மைத்தகைமை யாமால்.
2.8.20
531
ஆதியொரு வன்றனிய ணுண்டெனவ வன்றன்
றூதனபி யானளவில் சோதியுரை யான
வேதமென தின்சொலென விஞ்சையின் விளைத்த
பேதமொழி வஞ்சமொடு பேசு வது மன்றே.
2.8.21
532
மாறுபக ரற்கரிய மக்கநக ரத்திற்
றேறுமறை மன்னவர் செழுங்குறைஷி மன்னர்
கூறுவதி லொன்றுபடி றின்றுகுல முற்றும்
வேறுபடல் வேதவிதி யன்றுபுகழ் மிக்கோய்.
2.8.22
533
காரண நினைத்தவர் கருத்துற முடித்திப்
பாரிலிறை தூதுவ ரெனப்பகர்தல் வேண்டும்
வேருமொரு தூருமிலை யென்பதொரு விஞ்சை
யார்வமொடு கொண்டுநபி யென்பதியல் பன்றே.
2.8.23
534
நன்றிவை யறிந்திடுவ துண்டுநபி தம்மை
யின்றவை யிடத்தினி லழைத்திடுக வென்ன
வென்றிவிறல் சேருமபித் தாலிபை விளித்து
மன்றல்கம ழுந்திமஷ்கு மன்னவ னுரைத்தான்.
2.8.24
535
மந்தர மதிற்றிமஷ்கு மன்னவ னுரைப்பச்
சிந்தைகளி கொண்டபுதுல் முத்தலிபு செல்வ
ரிந்தமொழி நன்கென வெடுத்துற வியத்திச்
சந்தென வொருத்தனை யழைத்தனர் தனித்தே.
2.8.25
536
மங்குறவ ழுங்கவிகை வள்ளலை விரிந்த
பங்கயப தக்குரிசி லைப்பரிவி னோடு
மிங்கினித ழைத்தவரு கென்றனர் விரைந்தே
பொங்கிய புயங்கள்புள கங்கொள வெழுந்தான்.
2.8.26
537
ஊதையை நிகர்த்தகதி யொண்புரவி மேற்கொண்
டேதமறு மாநகர வீதியிடை புக்கி
யாதமுத லானநபி நாயகம னாதி
தூதுவரை வந்தநர தூதனெதிர் கண்டான்.
2.8.27
538
கண்டுகடி திற்பரி யிழிந்திருகை யார
முண்டக மலர்ப்பத மிருத்திமுடி மீது
கொண்டுற வணங்கிநய னங்கள்களி கூர
வண்டென மலர்க்கர வனப்பினை நுகர்ந்தான்.
2.8.28
539
மாதவமு கம்மதின் வனப்பினை நுகர்ந்த
தூதனொரு வில்லினிடு தூரமதி னின்று
காதலொடு மெய்யிணி கலன்கலை யொதுக்கிச்
சூதற விரிந்தமணி வாய்புதைத்துச் சொல்வான்.
2.8.29
540
பவக்கட னடுப்படு மனுப்பகுதி யெல்லா
முவப்பொடு கரைப்படு மரக்கலம் தொத்தே
நவப்பட வுதித்தநபி நாயக விளக்கே
துவர்க்கமுடி விற்கொரு சுடர்க்கதிரின் மிக்கோய்.
2.8.30
541
தேனமர் பொழிற்றிமஷ்கு மன்னொடு செறிந்திம்
மானகரின் வீரரு மதிக்குடை கவித்த
கோனபுதுல் முத்தலிபு புத்திரரு முற்றே
யீனமற நும்மைவர வென்றனர்க ளென்றான்.
2.8.31
542
வருகவென நன்மொழி வகுத்தனர்க ளென்ன
வருகினிது றைந்தவ னறைந்தது தௌிந்தே
தருமநெறி நந்நபி தருக்கொடு மகிழ்ந்தே
மருமலர் பொதிந்தமணி மாளிகை புகுந்தார்.
2.8.32
543
மாசகல வந்தகுல மாதினை விளித்துப்
பாசனபில் ஹக்கமொடு பற்பல ருடன்று
பூசலை நினைத்தெழுதி விட்டதும் புரிந்தே
யாசில்திமஷ் கிக்கிறை யடைந்ததுவு மன்றே.
2.8.33
54
துன்றுமடல் வெம்புரவி சேனைபுடை சூழ
வன்றிறல மச்சரொடி ருந்துமதி வல்லோன்
வென்றிகொ ளயிற்படை யொருத்தனை விடுத்தே
யொன்றிய மறத்தொடு மழைத்தது முரைத்தார்.
2.8.34
545
வேறு
மறத்திகன் மனத்தவர் திரண்டு மாநகர்ப்
புறத்திருந் தழைத்தன ரென்னும் புன்மொழி
நறைத்தடப் புயநபி நவிலக் கேட்டலு
நிறைத்தகற் புடைமையா ரறிவு நீங்கினார்.
2.8.35
546
காரதி ரிடிக்கெதிர் கலங்கித் தன்னுடல்
சோர்தரு மயிலெனச் சோர்ந்து கண்ணினீர்
வார்தரு கலன்கலை நனைப்ப வார்குழல்
பார்தர விரிப்பமெய் பதைத்து வாடினார்.
2.8.36
547
மறைத்திடா மதியென வளருந் தீனிலை
நிறைத்தநற் பதவியை நிலத்தி லெங்களுக்
குறத்தரு மிறைவவுன் றூத ருன்றிருப்
புறத்தினி லடைக்கல மென்னப் போற்றினார்
2.8.37
548
நவ்விபின் பெரும்புன னடந்த நந்நபி
மௌவலங் குழற்கதி ஜாதம் வாட்டங்கண்
டவ்வயி னினிதுற வடுத்து நன்மறைச்
செவ்விய தெருட்சியிற் றௌியச் செப்புவார்.
2.8.38
549
குவைலிதுக் கரும்பெருங் குலத்திற் றீபமே
புவியில்விண் ணவர்தினம் போற்றும் பூவையே
கவினுமென் னுயிரன்னீர் கவலல் காவலோ
னவனரு ணம்மிடத் தகல்வ தில்லையால்.
2.8.39
550
மன்பெரும் புவியினில் வாழு மாந்தரிற்
றுன்புறா தவரிலைத் துன்பைத் துன்புறா
தின்பமே கொள்பவ ரிலங்கும் பொற்பதிக்
கன்பரா யிருப்பரென் றறிவு சொற்றதே.
2.8.40
551
இனப்படைக் கடனடு விருந்து ளோமியாந்
தனிப்பவ னருண்மரக் கலத்தின் சார்பினாற்
பனிப்படா மகிழ்கரைப் படுத லல்லது
துனிப்பட லறிவெனுஞ் சூழ்ச்சித் தன்றரோ.
2.8.41
552
கொதிப்படர் குபிரெனுங் குறுக லார்திர
ளதிர்ப்படர் தீன்படைக் கலத்தி னாக்கம்போ
லெதிர்ப்படுந் துன்பெனு மிருளை யுண்மகிழ்
மதிப்பெனுங் கதிரினான் மாய்த்தல் வேண்டுமால்.
2.8.42
553
தன்மமே பொருளெனத் தவத்தின் மேற்செலு
நன்மனத் தவர்க்கொரு நாளுந் தீங்கெனும்
புன்மைவந் தடைந்திடா தென்னப் பூவினின்
முன்மறை தௌிந்தவர் மொழிந்த வாய்மையே.
2.8.43
554
இன்னன பலமொழி யியம்பிக் கற்பெனு
நன்னிலைக் கொடிமன நடுக்கந் தீர்த்தொரு
மின்னகத் திருந்தெழு மேக நீழலிற்
பொன்னணி முன்றிலின் புறத்தி லாயினார்.
2.8.44
555
உள்ளகக் களிப்பொடு முவந்து நந்நபி
விள்ளரும் விசும்பினி னோக்க வெள்ளிடைத்
தெள்ளிய பெருஞ்சிறை ஜிபுற யீல்தமைக்
கள்ளவிழ் தாமரைக் கண்ணுற் றாரரோ.
2.8.45
556
முரணுறும் வானர்கோ னொடுமூ வாயிர
வரமுறு மலக்குகள் வந்து தோன்றினர்
சிரமொரு கிரியெனத் திகழச் செவ்விய
கரதலம் புயவரை ககனந் துன்னவே.
2.8.46
557
பெரும்படைப் பெனுமவர் பிடித்த வல்லய
மரும்பெரும் பொருளவன் முனிவி லாயது
தருமபெருங் கதிரவன் றனினும் வெய்யதா
யிரும்பெரும் புவிக்கட லேழு முண்ணுமால்.
2.8.47
558
அறத்தனிப் படைப்பவர் கரத்தி லாயவை
மறத்தினைத் திரட்டியோர் வடிவு கொண்டென
வுறைத்தெழுங் கொழுந்தழு லோங்கி யொவ்வொரு
புறத்தினி லெழுபது தலைக்கும் பொங்குமால்.
2.8.48
559
வருமெழு வான்படு வானென் றோங்கிய
விருதிசைக் கிருதலை யிடமுந் தீண்டுந்தீப்
பொருகதி ரயிற்கெதிர் பொருவ வாயிரம்
பருதியுஞ் செழுங்கதிர் பரப்ப வெட்குமால்.
2.8.49
560
அப்பெருந் திறலயி லங்கை யேந்திநன்
மைப்படி திரளென வந்த வானவர்
செப்பருஞ் சலாமெனச் செய்ய வாய்திறந்
தொப்பரும் புகழ்நபிக் கோதி னாரரோ.
2.8.50
561
முருகலர் தொடைப்புய முகம்ம தேயெமக்
கருளினன் பெரும்பொரு ளாதி நாயக
னிருளற நும்விரும் பேவல் செய்திடத்
திரளொடும் வந்தனஞ் செகத லத்தினே.
2.8.51
562
கொலைமனக் கொடியவர் கூட்டத் தான்மன
மலையனீ ரேவிடின் மாந்தர் சேனைக
ளலைகட லாயினு மணுவன் றாதித
னிலைபெறுந் தீனெறி நிறுத்தல் வேண்டுமால்.
2.8.52
563
இருங்கலைக் குரிசிலெம் மேவல் காண்பிராற்
கருங்கட லேழையுங் கலக்கி நீறதாய்ப்
பெருங்கிரி யனைத்தையும் பிதிர்த்திட் டோர்நொடி
யருங்கதிர்ப் பொழுதினி லடைகு வோமென்றார்.
2.8.53
564
விண்ணவ ருரைத்தவை கேட்டு மெய்சிலிர்த்
துண்ணிறை மகிழ்வொடு முணர்ந்து தேர்ந்தியன்
மண்ணகத் தென்னொடும் வந்து சென்மினென்
றண்ணலும் பொறுமையி னவர்கட் கோதினார்.
2.8.54
565
அமரருக் கினிதுரை யருளிச் செய்தபின்
றமர்வரத் திறலபூ பக்கர் தம்மொடு
முமறுது மானலி யும்வந் துற்றன
ரிமையினி லடலரி யேறு போலவே.
2.8.55
566
காரண மெனும்பல கலன்க டாங்கிமே
லாரண வெற்றிவெள் ளலங்கல் சூடியோர்
வீரவே லெனுங்கதிர் பிசுமி லேந்தினற்
பூரண மதியெனப் புறப்பட்ட டாரரோ.
2.8.56
567
தீனெனுங் கொடிமுத னிறுத்திச் செவ்வியீ
மானெனு மதகரி மருங்கு சூழ்வரப்
பானல னெனுங்கலி மாப்ப ரந்திடத்
தானவ னருளெனுந் தானை முன்செல.
2.8.57
568
மூதுரை யென்னுந் தீன்தீன் முகம்மதென்
றோதிய பெருமுர சொலிப்ப நால்வரு
மாதித னமரரு மணிய தாய்வர
வீதியி னடந்தனர் வேத வீரத்தார்.
2.8.58
569
அடனபி வருவது கேட்ட பூஜகி
லுடலுயிர் மனமறி வொடுங்கி யெவ்வண
முடிவதோ வெனத்திமஷ் கிறைமுன் னேகியோர்
வடிவுறுங் கவிதையின் வாழ்த்திச் சொல்லுவான்.
2.8.59
570
மறைதெரி யறிவன்மா லிக்கு செய்தவ
முறைதர வுருவெடுத் துதித்த தீபமே
குறைபடாப் பெருங்குலக் காக்குங் கொற்றவ
நிறைபட வுலகினைப் புரக்கு நேமியோய்.
2.8.60
571
மருப்பொதி முகம்மது வாக்கி னாற்றின
முரைப்பது படிறலா லுண்மை யில்லையா
னிரைத்தடர் வஞ்சனை நிறுத்தி யாரையு
மொருப்பட மாயத்து ளொடுக்கி னானரோ.
2.8.61
572
வஞ்சனை யாகிய வலயி னுட்படு
நெஞ்சரல் லானெறி நிலைநின் றாரிலை
வெஞ்சமர்க் கவனொடும் வீரம் போக்கிநின்
றஞ்சின ரலதெதிர்ந் தவரு மில்லையால்.
2.8.62
573
வருந்திட முகம்மதின் மாய வெள்ளமே
பரந்ததி லமிழ்ந்துமுன் பரிவிற் றாங்குதற்
கருந்தவ மரக்கல மாக வந்திவ
ணிருந்தனை மார்க்கமு மிறத்த லில்லையால்.
2.8.63
574
நிரைதிரைக் கடற்படை நிரப்பி நாமிது
வரையினு மிவணிடை வருவ தில்லையா
லிருநில மாந்தர்க ளியாருஞ் சூறையிற்
சொரிதரு பூளையொத் திடுவர் சொல்லினே.
2.8.64
575
நனிபல புதுமையி நபிகள் வேடமா
யினமொடு வருகுவ னியாவ ராயினு
மனமலைத் திடமொழி வளர்ப்பன் மெய்யெனக்
கனவினு மனத்தினிற் கருதல் காவலோய்.
2.8.65
576
அடுத்துறைந் தபூஜகி லளவி லாதசொல்
லெடுத்திசைத் திடதிமஷ் கிறைவன் கேட்டுளங்
கடுத்திலன் களித்திலன் கவிதை யாற்சில
தொடுத்துரை யெடுத்தவை யெவர்க்குஞ் சொல்லுவான்.
2.8.66
577
தன்றுணைத் தவத்தினர் தீயற் தன்மையிற்
குன்றிலர் நாடொறுங் குளத்தைப் பல்லுறத்
தின்றிடி லிரதமே செனிக்கு மியாவரு
மென்றிடி லினியவை வேம்புக் கில்லையால்.
2.8.67
578
பொய்மையோர் நொடிவரைப் பொழுதிற் றீீர்ந்திடு
மொய்மைசூழ் கடலினும் விளங்கித் தோன்றுமாற்
கைமதக் கரியினைக் கருப்பை மாய்த்திடா
துய்மதிப் பெரியவ ருளத்தில் காண்பரால்.
2.8.68
579
வஞ்சனைக் கீழ்மையோர் மாயக் காரண
மெஞ்சலி லுளதில தென்னத் தோன்றிடு
மஞ்சலி லிறைவன்றூ தவர்கள் காரணம்
விஞ்சையன் றுலகெலாம் விளங்கி நிற்குமால்.
2.8.69
580
தூயவன் மறைவழித் தூதர் செய்கையு
மாயமந் திரத்தவர் வழக்கின் வண்ணமு
நேயமு மும்மறை நிகழ்த்துங் கேள்வியி
னாயுநல் லறிவினு மறிவ தாகுமால்.
2.8.70
581
வரியளி மலர்த்தடத் திமஷ்கு மன்னவன்
குருநெறி முகம்மது கொண்ட பெற்றியை
யெறிகதிர் படுமுன மிற்றைப் போதினிற்
றெரிவதுண் டெனப்பல கவியிற் செப்பினான்.
2.8.71
582
செவியினு முளத்தினுங் காயத் தீயசொ
லபுஜகி லுரைத்ததுந் திமஷ்கி னாதிபன்
கவியினிற் சொற்றதுங் கேட்டுக் கல்வியின்
மவுலுவர் குரிசின்முத் தலிபு மைந்தரே.
2.8.72
583
அறிவினிற் குணத்தினி லெவர்க்கு மன்பினிற்
பொறுமையி னன்னெறிப் புகலிற் செய்கையிற்
றிறன்முகம் மதினொடு முவமை செப்புதற்
குறுபவ ரெவருமிவ் வுலகி லில்லையால்.
2.8.73
584
மைதருங் கவிகையின் வள்ளல் வாக்கினிற்
பொய்யெனப் பிறந்தசொற் புகல்வ தில்லையாற்
கைதவச் சூனியங் கற்று மந்திரஞ்
செய்பவ ரிடத்தினுஞ் சேர்ந்த தில்லையால்.
2.8.74
585
பெற்றனன் வளர்த்தனன் பிறந்த நாட்டொடுத்
திற்றைநாள் வரையினு மெவரொ டாயினும்
வெற்றிகொண் டிணங்குதல் விருப்ப மல்லது
குற்றமென் றொருமொழி குறித்த தில்லையால்.
2.8.75
586
பிறபல மொழியினைப் பிதற்ற லென்கொலோர்
சிறுநொடிப் பொழுதிவண் சேர்வர் கண்களாற்
றிறனுறக் கண்டவர் செப்புஞ் செய்தியு
மறிகவென் றெடுத்தபித் தாலி போதினார்.
2.8.76
587
இவ்வணம் பலமொழி நிகழு மெல்வையின்
மைவணக் கவிகையர் மெய்யின் மான்மத
மவ்வவைக் குற்றதூ தாக முன்னமே
செவ்விநன் னெறித்திமஷ் கிறைமுன் சென்றதே.
2.8.77
588
திசைகதிர் தரநபி நடந்து தீனென
வசையறும் புகழபுல் காசி மன்னனுக்
கிசைதரா மருவல ரிதயம் போலநின்
றசைதருங் கொடிமதிள் வாயி லாயினார்.
2.8.78
589
மெய்யொளி பரப்பிட விரிந்த வாயிலின்
மையலங் கடகரித் திரளும் வாசியும்
பெய்கழற் சேனையு நீக்கிப் பெட்புறத்
துய்யவன் றிருமறைத் தூதர் தோன்றினார்.
2.8.79
590
மான்மதங் கமழ்ந்திரு மருங்கு மெய்யெழில்
பான்மதிக் கதிரொளி பரப்ப வந்தநந்
நாமறைக் குரிசிலைக் கண்டு நண்பொடுந்
தேனவிழ் தொடையலா னெதிரிற் சென்றனன்.
2.8.80
591
அணிதிமஷ் கிறையெழுந் தெதிரி னன்பொடு
மணியொளி முகம்மதை மருங்கி ருத்திநற்
பணிவிடை யொடும்பல பகர்ந்த டிக்கடித்
தணிவிலா மகிழ்மொழி சார நோக்கினான்.
2.8.81
592
மருங்கினி லிருத்திமா லிக்கு தன்மக
னிருங்குழு நாப்பணி னிருப்பக் காபிர்க
ளொருங்குற நோக்கியுள் ளுடைந்து மாமுகம்
பெருங்குகை வங்கமொத் தழுங்கிப் பேசுவார்.
2.8.82
593
கன்னலங் கழனிசூழ் திமஷ்குக் காவல
னின்னண மெழுந்தெதி ரிறைஞ்சிப் போந்தனன்
முன்னமியா னினைத்தவை முடிவ தென்கொலென்
றன்னவர் சஞ்சலித் தவல முற்றனர்.
2.8.83
594
திருந்திலாக் காபிர்கள் சிந்தை நொந்தவ
ணிருந்ததும் ஹபீபுட னபியி ருந்த தும்
பொருந்துறக் கண்டுபொற் புரிசை சூழ்தர
வருந்திமஷ் கவர்சில வசனங் கூறுவார்.
2.8.84
595
நிலந்தனிற் சுவடில நிழலுந் தோன்றில
கலந்துமெய் யொளியொடு நறைக மழ்ந்தன
சலந்தரு கவிகையொன் றெழுந்து சார்ந்தன
குலந்தரு மனுவல ரென்னக் கூறுவார்.
2.8.85
596
வேறு
அருளி னோக்கமு மமுதுகு வசனமு மழகா
யிருளி லாதமெய் யவயவத் தாசிலக் கணமுந்
தெருளுங் கல்வியும் பொறுமையு நிறைந்தவிச் சேயை
மருவி லாதள விடற்கரி தெனச்சிலர் மதிப்பார்.
2.8.86
597
இறைவன் றூதுவ ரென்றது மிறைதிரு வசன
மறையி றங்கிய தென்றது மார்க்கமென் றதுவு
நிறையும் வாக்கினிற் றெரிவது நிகரிலிந் நகரா
ரறையும் வாசகம் படிறெனச் சிலரெடுத் தறைவார்.
2.8.87
598
மதியி லாமனத் தபுஜகில் வரைந்தபத் திரத்துக்
கிதய நேர்ந்திவண் வந்தன மிவன்மொழி கேட்கி
லதிக பொன்னுல கிழந்துபாழ் நரகடை வதலாற்
பதியி னல்லறி விலைநமக் கெனச்சிலர் பகர்வார்.
2.8.88
599
பத்தி ரத்தினாற் கடிதினிப் பதியடைந் திவர்த
முத்த ரத்தினுக் கொழுகியுற் பவிபவந் துடைத்து
முத்தி யெய்துதற் கெழுதிய முதல்விதி யியற்றுஞ்
சித்தி ரத்திற னிஃதெனச் சிலரெடுத் திசைப்பார்.
2.8.89
600
கண்ப டைத்தவ ரிவரெழிற் காண்பவர் முகத்திற்
புண்ப டைத்தவ ரிவர்தமைக் காண்கிலார் புதியோன்
பண்ப டைத்தசொன் மறைநபி பதம்பணி யாதார்
மண்ப டைத்ததிற் படைப்பல ரெனச்சிலர் வகுப்பார்.
2.8.90
601
அண்டர் நாயக முகம்மதின் காரண மனைத்துங்
கண்டு நல்வழி யொழுகிப்பொன் னுலகுகை விலையாய்க்
கொண்டு போவதங் கடைந்தன மெனச்சிலர் குழுமி
விண்டு மெய்புள கெழக்களிப் பொடும்விரித் துரைப்பார்.
2.8.91
602
உறுதி யாநம தரசபு ஜகிலுரை கேட்டு
மறுகும் வெம்பகை விளைத்திடி லனைவரு மதியா
தறுதி யீதென வரசுட னபுஜகில் தனையுந்
தெறுத லேதுணி வெனச்சிலர் தௌிந்துசெப் புவரால்.
2.8.92
603
முகம்மது தமக்கிடர் செயத்தி மஷ்குமன் னவனுஞ்
செகத லத்துறை மன்னவ ரடங்கலுஞ் சினந்தே
யிகல்பொ ரத்துணிந் தெதிரினு மிருங்கதிர்ப் பனியா
யகல்வ தல்லது முடிவதில் லெனச்சில ரறைவார்.
2.8.93
604
ஈத லாற்சில வுரைபிறர் தரத்திமஷ் கிறைவன்
காத லான்முகம் மதுதிருக் கவின்முக நோக்கி
மூது ரைத்தௌி வினுமறை யினுமுதிர் மொழியாய்ப்
போத ரத்தொடும் புகழொடு மிதத்தொடும் புகல்வான்.
2.8.94
605
வரிசை ஹாஷிமென் குலத்தினி லுதித்தமா மணியே
தரும லர்ப்புய அப்துல்லா தருதிரு மகவே
யிருநி லத்தவர்க் கிசைந்திட வெனதுளத் திருந்த
வுரையி னிற்சில கேட்டியென் றினிதெடுத் துரைப்பான்.
2.8.95
606
தந்தை தாய்தமர் தம்வழி யொழுகிலா ததுவு
மெந்த னாயக னொருவனுண் டென்றது மெழிலா
யந்த நாளையின் வருங்குப லினைப்பழித் ததுவும்
வந்த தென்றனக் கருமறை யெனவகுத் ததுவும்.
2.8.96
607
நபியு நானலா லினியிலை யெனநவின் றதுவும்
புவியு ளோர்க்கெலா மொருகலி மாவெனப் புகன்று
செவிசு டச்சுட வுரைத்ததுங் குலத்தொடு தினமுந்
தவிர்கி லாப்பகை கொண்டதுந் தகுவதன் றுமக்கே.
2.8.97
608
இன்ன வாசகங் கூறநம் மிறையவன் றூதாய்
மன்னு நன்னபி மார்க்குறுந் தொழின்முதன் மறையோர்
சொன்ன சொற்படிப் பெரியர்க்குஞ் சிறியர்க்குந் தோன்ற
முன்னி லைப்படி மிகுதிகா ரணங்களை முடிப்பார்.
2.8.98
609
பிறந்த பல்லுயி ரனைத்துமுற் பிரளய மதனி
லிறந்தி டாவகை நூகுநன் னபியினி தளித்தார்
நிறந்த ழீ இயிபு றாஹிநன் னபிபெரு நெருப்பைச்
சிறந்த மென்மலர் வாவியிற் குளிர்தரச் செய்தார்
2.8.99
610
முரணி டும்பிரு வூன்முன மறைநபி மூசா
கரத லத்துறை கோறனைக் பெருமலை கடுப்ப
வரவ மாக்கின ரரியதா வூதுவல் லிரும்பை
யுருகு மென்மெழு காக்கினர் செறுநர்நெஞ் சுருக.
2.8.100
611
நிறைந்த நீணதி யிடங்கரின் வாயிடை நெடுநா
ளிறந்த வர்க்குயிர் கொடுத்தனர் மறைநபி யீசா
வறைந்த வெண்டிரைக் கடற்படு தலத்திவை யறியா
துறைந்த பேரெவ ராமினா வயிற்றினி லுதித்தோய்.
2.8.101
612
பண்டு மேலவர் காரணப் படிக்கவர் கலிமா
கொண்டி ருந்தவர் சிலரினங் குவலயத் துரவோர்
கண்டு தேறிடும் படிதருங் காரண ருளரேற்
றொண்டு செய்திடா ரெவரெனத் திமஷ்கிறை சொன்னான்.
2.8.102
613
வேத நந்நபி கேட்டெதி ரரசனை விளித்திப்
போது ரைத்தனை நடுநிலை நின்னுளம் பொறுத்த
தேது காரண காரியங் குறித்தெடுத் தெனக்குக்
கோதி லாதுரை யெனவுரைத் தனர்நபிக் குரிசில்.
2.8.103
614
குரிசி லாகிய முகம்மதி னுரைசெவி குளிர
வருளி னோக்கொடு மனக்களிப் பொடுஞ்சிர மசைத்துத்
தெருளி னாடொறுந் தெரிந்துதன் சிந்தையாற் றிரட்டும்
பொருள தாகிய நன்மொழி திமஷ்கிறை புகல்வான்.
2.8.104
615
மதியி னுஞ்செழுங் கதிர்தரு முகமுகம் மதுவே
கதிரின் வெய்யவன் மேற்கடற் புகக்ககன் முழுது
முதிரும் வல்லிருள் பரந்திட வேண்டும்பின் முரம்பாற்
பொதிய பூக்குபை சென்கிரிக் குடுமியிற் புகுந்தே.
2.8.105
616
நின்று நீரம வாசையிற் கலைநிறை மதியம்
வென்றி வெண்டிரைக் கடன்முகட் டெழச்செயல் வேண்டுங்
குன்றி டாதெழுந் தந்தரங் குலவிப்பின் னிறங்கித்
தொன்று தோன்றுகஃ பாமிசை தோன்றவும் வேண்டும்.
2.8.106
617
இருந்த பூரண மதியநன் னிடத்திடை யிறங்கி
வருந்தி டாதுகஃ பாவினை யெழுதரம் வலமாய்த்
திருந்த வந்துபின் னுட்புகுந் திறைவனைச் சிரஞ்சாய்த்
தருந்த லத்தொடு மிதயமன் புறத்தொழ வேண்டும்.
2.8.107
618
வணங்கி யங்கிருந் தெழுந்துபொன் வாயிலைக் கடந்து
கணங்கொண் மாந்தரி னடுநடந் தழகொடு கடிதி
னிணங்கொண் மால்வரை யேறிநின் றும்முட னியல்பாய்ப்
பிணங்கி லாதநன் மொழிபல பேசவும் வேண்டும்.
2.8.108
619
ஆதி நாயக னொருவனுண் டெனவுமங் கவன்றன்
றூதர் நீர்நபி யென்பது மறபெனுஞ் சொலினாற்
பாத லத்தினி லிவாயருஞ் செவியுறப் பகர்ந்தப்
போதி னுந்திருச் சட்டையுட் புகுதவும் வேண்டும்.
2.8.109
620
அங்கி ருந்திரு பிளவதா யணிசெழும் வலது
செங்க ரத்துறை சட்டயிற் புறப்படத் திறத்தோர்
பங்கிடக்கரச் சட்டையிற் புறப்படப் பரிவா
யிங்கி தத்தொடுங் குறையற வெதிரவும் வேண்டும்.
2.8.110
621
ஒருப குப்பெழு வானினிற் புகுந்தொரு பகுப்பு
விரிதி ரைப்படு வான்புகுந் தந்தரம் விளங்கப்
பொருவி லாதிரு பங்குமோர் மதியெனப் பொருந்திப்
பருதி வானகத் திடைக்கதிர் பரப்பவும் வேண்டும்.
2.8.111
622
பரப்பும் வெண்மதி பின்னுமிப் பாரெலா மறிய
வுரப்பி நாயக னொருவனென் றவன்மறைக் குரித்தாய்
வரப்ப டுந்திறன் முகம்மதென் றருமொழி வகுத்து
விரிப்பர் தீனிலை யென்பதும் விளக்கவும் வேண்டும்.
2.8.112
623
ஈதெ லாமுடித் திடுவிரே னும்முரைக் கிணங்கிக்
காத லாலிணை யடிமிசைச் சிரமுகங் கவிழ்த்தி
யாத ரத்திலென் றிரளொடுந் தீனிலைக் காகிப்
போது வேனென வுரைத்தனன் திமஷ்கினைப் புரப்போன்.
2.8.113
624
உள்ள மீதினி லிதுகொலோ வின்னுமற் றுளவோ
விள்ளு வாயென நபிதிமஷ் கிறைவனை விளித்துக்
கிள்ளை யின்றிர ளரசருஞ் சேனையுங் கேட்பக்
கள்ள நெஞ்சபூ ஜகில்மனங் கருகக்கட் டுரைத்தார்.
2.8.114
625
புகலுஞ் சொற்செவி புகத்திமஷ் கினிற்புர வலனு
மகம கிழ்ச்சிகொண் டிவையலால் வேறென்னென் றறைய
விகன்ம னத்தவர் முகமரைக் கிருஞ்சசி யெனலாய்
மகித லம்புகழ் நபியெழுந் தனர்திரு மனைக்கே.
2.8.115
626
கரிந்த சிந்தைய னபூஜகில் கடிதினி லெழுந்து
புரிந்த பொன்மலர்ப் புயத்திமஷ் கிறைவனைப் போற்றி
வருந்தி லாதுசம் மதித்தனன் முகம்மது மினிமேற்
றெரிந்த தங்கவன் படிறென வுரைத்தயல் சேர்ந்தான்.
2.8.116
627
வாய்ந்த பேரவை விடுத்தின மாந்தரை விளித்துச்
சாய்ந்த புந்தியன் முகம்மதின் சரிதையும் வலியு
மாய்ந்த வேதமு மார்க்கமும் வணக்கமு மறிவுந்
தேய்ந்த தின்றென அபூஜகில் குலுங்கிடச் சிரித்தான்.
2.8.117
628
மருவ லாருரை செவிக்கிடா தெழின்முகம் மதுமப்
பொருவி லாவணங் கடந்துதந் திருமனை புகுந்து
பெருகுங் கேள்வியின் குவைலிது தவத்தினிற் பிறந்த
விரிம லர்க்குழற் றெரிவையை யருகினில் விளித்தார்.
2.8.118
629
அடர்ந்த வேல்விழி மடந்தையை யருகுற விருத்தித்
திடந்த ருங்கதிர் வேறகர தலத்திமஷ் கிறைமு
னடந்த வுத்தர மனைத்தயும் வரன்முறை நவின்றார்
மடந்த ராதநன் மறைமன வலிமுகம் மதுவே.
2.8.119
630
அடிகள் கூறிய மொழிவழி கேட்டகந் துணுக்கிக்
கடிகொண் மென்மலர்ப் பல்லவச் செழுங்கர மேந்தி
நெடிய வாவென துயிரவர் மனத்தினி னினைத்த
படிமு டித்தரு ளென்றிறை யொடுபகர்ந் திரந்தார்.
2.8.120
631
அன்று நந்நபி தனித்தொரு வயினுறைந் தறிவா
னின்றி ரண்டிறக் அத்துநன் னெடியனை வணங்கி
வென்றி தாவென விருந்தனர் விரைவின்வந் தடைந்தார்
தென்றி றற்றம துயிரென வருஞ்ஜிபு ரீலே.
2.8.121
632
எனக்கு றுந்துணை யேயுயி ரேமுத லிறையென்
றனக்கு மக்குச லாமெடுத் துரையெனச் சாற்றிச்
சினக்குங் காபிர்க ளொடுந்திமஷ் கிறைவன்செப் பினதும்
நினைக்கு முன்வரு மென்றன னெனநிகழ்த் தினரால்.
2.8.122
633
மன்றன் மெய்முகம் மதினுரை மறுத்திடா தேவ
லென்றுஞ் செய்தவர்க் கமைத்தனன் மதியையென் றிறையோன்
வென்றி யாய்ப்பினு முரைத்தன னெனுமுரை விரித்தார்
குன்றி லாப்பெருஞ் சிறைசெறி வானவர் கோமான்.
2.8.123
634
விண்ண வர்க்கிறை யிவையலாற் பலபல விரித்து
மண்ண கத்திருந் தரும்விசும் படைந்தபின் மகிழ்வா
யண்ண லாகிய முகம்மது மகத்தினிற் களிப்புற்
றெண்ண மின்றியங் கிருந்தனர் திருந்தல ரிடியின்.
2.8.124
635
மருவ லர்க்கரி நிகரபித் தாலிபு மன்னர்
திரும னைப்புகுந் திருந்துதம் முளத்தினிற் செனித்த
பருவ ரற்பெரு நோயினாற் றனித்துடல் பதைத்துத்
தெரியுந் தேற்றமு நலக்கமும் வரச்சில புகல்வார்.
2.8.125
636
கான கச்சுரத் திடைநதி யழைத்தனர் கடிதி
னூன ருந்திய புலிபணி தரவெதி ருரைத்தார்
பானு வின்கதிர் மணிமுடி யரவொடும் பகர்ந்தா
ரீனர் வன்கொலைக் கறுங்கரம் பொருந்தியங் கிருந்தார்.
2.8.126
637
நிலவ ழைத்திடத் திமஷ்கிறை நிகழ்த்தின னவன்மு
னலைவி லாதெதிர்ந் தறுதிசொற் றனருல கறிய
விலகு காரண மெவ்வெண முடியுமோ வெனத்தம்
மலைவி னாலுடன் மதியற மயங்கிடுங் காலை.
2.8.127
638
இருந்த வில்லகத் தொருமதி ளிடியென முழங்கி
விரிந்த செங்கதிர் வேலபித் தாலிபை விளித்துத்
திருந்தும் பொன்னகர் வானவர் மொழியெனத் தௌியப்
பொருந்த நன்குறத் தெரிதர வினியன புகலும்.
2.8.128
639
மெலிவு மெண்ணமுங் கவலையும் விரைந்தெடுத் தெறிமின்
வலிய வன்னரு ணின்மக விடத்தினின் மலிவாய்த்
தொலைவி லாப்பெருங் காரணம் விளைப்பதாற் சுடர்வெண்
ணிலவு மிற்றையில் வரூஉமது மறுவற நிறைந்தே.
2.8.129
640
மருவ லார்பெருங் கிளையொடுங் குழுவொடும் வதனங்
கருகி யங்கவர் வலியிழந் திடுதல்கண் டறிமி
னரிய தீனெனுஞ் செழுங்கதிர்க் குபிரிரு ளறுத்துப்
பெருகு மென்பதுங் கேட்டன ரறிவினிற் பெரியோர்.
2.8.130
641
நிகதி பெற்றிலா வதிசய மிஃதென நினைத்து
முகம்ம தின்றிரு மனைபுகுத் தவர்வயி னுறைந்து
பகர ருஞ்சுதை மதிண்முறை பகர்ந்ததைப் பகர்ந்தார்
செகத லத்தினும் விண்ணினும் பெரும்புகழ் சிறந்தோர்.
2.8.131
642
தந்தை கூறிட வானந்த முளத்தடந் ததும்பி
யெந்தை யீரெனப் போற்றிவிண் ணவர்க்கிறை யிசைத்த
மந்தி ரத்தையும் வரன்முறை வகுத்தெடுத் துரைத்தார்
கந்த மென்மலர்ப் புயவபித் தாலிபுங் களித்தார்.
2.8.132
643
அவிரு மெய்யொளி முகம்மதே யும்மிடத் தவனாற்
புவியின் மிக்குயர் செல்வமும் பெரும்புது மைகளுந்
தவிர்கி லாதுவந் தடைவதுண் டெனப்பல சாற்றித்
திவளு மாலைக டுயல்வர மனைவயிற் சேர்ந்தார்.
2.8.133
644
அற்றை நாளகன் றரும்பெரும் புகழ்முகம் மதுவு
மற்றை நாளுயிர்த் தோழர்க டமைவர வழைத்துக்
குற்ற மற்றதம் பெருங்குலத் தவரையுங் கூட்டி
யொற்றர் முன்புகப் பின்னெழுந் தனர்குழு வுடனே.
2.8.134
645
கொடிய பாதகம் வஞ்சனை குபிர்கொலை யனைத்து
மடிய நல்லறங் குருவொடும் வருவன போன்றுங்
கடிகொண் மான்மதங் கமழ்தரத் தெருத்தலை கடந்து
முடியின் மைதவழ் ககுபத்துல் லாவைமுன் னினரால்.
2.8.135
646
உயிரு றுந்துணைத் தோழமை நால்வர்க ளுடனே
வயிர வொண்கதிர்க் ககுபத்துல் லாவலஞ் சூழ்ந்து
செயிர றத்தொழு திருந்தினத் தவருடன் சிறப்ப
வியல்பெ றுந்தனி மறைமுகம் மதுநபி யெழுந்தார்.
2.8.136
647
வடிவு றுஞ்சல தரக்குடை நிழற்றிட வானோர்
நெடுவ சும்பிடை யிடனறத் திசைதிசை நெருங்க
வுடலு றும்படைப் பெவையுநல் வாழ்த்தெடுத் தொலிப்பப்
புடைப ரந்தினம் வரநபி பொருப்பினி லானார்.
2.8.137
648
சிறுவ ருந்துணை முலையணை பிரிந்திடாச் சேயு
மறுகு மைக்கய லஞ்சன விழிமடந் தையருந்
தெறுக திர்ப்படைப் பன்னகர் மாக்களுஞ் சிலையக்
குறுகி நின்றனர் நால்வகைக் குலந்தலை மயங்க.
2.8.138
649
கனைகு ரற்சிறு கட்பெருஞ் செவிமத கரியும்
புனைம யிர்க்கடு விசைவளை முகப்புர விகளு
மினம ணிக்கடற் சேனையும் புறப்பட வெழுந்தான்
வனச மென்மலர்த் தடந்திகழ் திமஷ்குமன் னவனே.
2.8.139
650
திவட டங்கடற் சலஞ்சல முரறரத் திசைவிண்
டவழ்த ருங்குடைத் திரள்களுங் கவரியுந் தயங்கத்
துவட ருங்கொடி மலிதரப் பல்லியந் தொனிப்பக்
குவட டங்கலுஞ் செருகின நிறைந்தன குழுமி.
2.8.140
651
முருக லர்த்தருப் பொருப்பிடந் தொடுத்தணி முதிர்ந்த
தெருவும் வீதியுங் கானமும் பார்த்திடுந் திசையு
மிருதி லத்திடை யெள்ளிட விடமரி தெனலாய்ப்
பெருகி நின்றது நிறைதரு மனுப்பிர ளயமே.
2.8.141
652
கலையி ழந்தன மானின மடிசுரை கவிழ்பான்
முலையி ழந்தன கன்றுகள் விலங்கின முழுது
நிலையி ழுந்தன பறவைக ணெடும்விசும் பெழுந்த
மலைய மிழ்ந்திய திரைதரு வெனுமனுக் கடலுள்.
2.8.142
653
எறிந்த வெண்டிரைக் கடன்முகட் டெழுந்துவிண் ணேகிச்
செறிந்த பார்மனுக் கடலினைக் கண்களாற் றெரிசித்
துறைந்த திண்கதி ராயிரங் கரங்களு மொடுக்கிக்
குறைந்த காந்திகொண் டிரவிமேற் கடலிடைக் குதித்தான்.
2.8.143
654
அடரும் வான்றிரிந் துடலிளைப் பாற்றுதற் கணிமேற்
கடல ணைத்திரைத் துகிலினிற் கதிர்க்கர மூன்றி
யுடல்கு ழைத்திடச் செக்கரின் படத்தினுள் ளுறைந்து
படரும் பேரொளி மறைந்திடப் படுத்தனன் பருதி.
2.8.144
655
மதியி னைப்பகிர் தரநபி மலைமிசை வானோர்
துதிசெ யத்தனி நின்றனர் கதிரையுந் தொடர்ந்து
பதியி னிற்றரு கென்றிடிற் பகர்வதென் னெனத்த
னிதய மச்சமுற் றடைந்தபோ லடைந்தன னிரவி.
2.8.145
656
அந்த ரத்தமா வாசையி னபிமதி யழைப்ப
வந்தி ருந்தனர் வானவ ரெவருமெண் ணிலத்தி
லிந்த வானகத் திருப்பது பழுதென விரவி
சிந்து வெண்டிரைக் குடகட லிடத்தினிற் சேர்ந்தான்.
2.8.146
657
மாதி ரப்புய நபிமனங் களிப்புற மதியைக்
கோதி லாதிவண் கொடுவரு வேனெனக் குறித்து
வீதி வானக வழியினைத் தொடர்ந்துமேற் கடலுட்
டூது போனவ ரொத்தனன் சொரிகதிர்ச் சுடரோன்.
2.8.147
658
வெய்ய வன்கடற் புகுந்தபின் செக்கர்மே லெழுந்த
துய்யு மென்மறை முகம்மதின் மொழியிலொன் றதனைப்
பொய்யென் பார்கிளை யொடுமுடல் பொரிதரப் புழுங்கி
யைய மற்றெழு நரகிடை நெருப்பென லாமால்.
2.8.148
659
வேறு
விரிதரும் பகுதிக் கதிர்களைத் தேக்கி
மேற்கடல் கொப்பளித் தனபோற்
றெரிதரச் சேந்து செக்கர்விண் ணிலங்கச்
செழுமறை புகழ்முகம் மதுபூச்
சொரிமது விதிர்க்கும் பொரியரைத் தருக்கள்
சுற்றிய வரைமிசை யேறி
மரைமலர் பொருவா விருகர மேந்தி
வல்லவன் றனையிரந் துரைப்பார்.
2.8.149
660
ஆதிநா யகனே யழிவிலா தவனே
யளவறுத் திடற்கரும் பொருளே
சோதியே யெவையி னுவமையில் லவனே
தொடரின்ப துன்பமற் றவனே
நீதியே குபிரர் தௌிதரும் படியா
னினைத்தவை முடித்திடென் றுருகிக்
கோதற மனமும் வாக்குமொன் றாகிக்
குதாதனை யடிக்கடிப் புகழ்ந்தார்.
2.8.150
661
இரந்துநின் றதற்கா யாதிவல் லவனு
மிருட்டறை மலக்கினைக் கூவிப்
பரந்திட விருளிற் சிறிதெடுத் தூசித்
துளையினுட் படவிடு கென்னத்
திருந்திட வுரைப்ப அம்மலக் கெழுந்து
செறியிருட் பிழம்பினிற் சிறிது
பொருந்திட விடுத்தார் ககனமும் புவியும்
பொதுவற விழுங்கிய தன்றே.
2.8.151
662
மனுநெறி பிழைத்த அபுஜகில் கொதித்த
மனத்தினு மிருண்டமைக் கடலொன்
றினமணி கொழிக்கும் பரவையுங் கிரியு
மெடுத்தகட் டிடைமடுத் தெரியுந்
தினகர னுலவும் விண்ணினைத் தடவித்
திசைதிசை யிடனறச் செருகித்
தனிநிலை பெருகும் பிரளய மெனலாய்ச்
சகத்தினிற் பரந்தவல் லிருளே.
2.8.152
663
கரைபுர ளிருளா லக்கினிக் கொழுந்துங்
கரிந்துகண் ணினிலொளி மறுகி
விரிகதிர் மணியின் குலங்களு மிருண்டு
விசும்பிடைக் கணங்களு மறைந்து
சொரிமத கரியும் பரியொடி ரதமுந்
துவண்டணி மறுகிலந் தோன்றா
தொருவருக் கொருவர் வதனமுந் தெரியா
துலகமெங் கணுமயங் கியதே.
2.8.153
664
முடிவுறுங் காலத் தியற்கையோ வலது
முகம்மதைக் குறைபட நினைத்த
கொடியவர் பொருட்டால் விளைத்திடும் பவமோ
குவலயத் துதித்திடு மாந்த
ரிடருற வெவர்க்குங் கண்ணொளி மழுங்கி
யிருந்ததோ மதிமயங் கியதோ
படர்விட முலகிற் பரந்ததோ வெவையென்
றுரைப்பரி தெனப்பதை பதைத்தார்.
2.8.154
665
கனமுகிற் கவிகை முகம்மது விளைத்த
காரண முளதிதன் றென்பார்
தினகர னிறந்து பேரிரு ளரசு
செலுத்திடுங் காலமீ தென்பார்
மனமகிழ் தரவந் தடைந்தவ ரெவரு
மனையிடம் புகலரி தென்பா
சினமொரு கடிகைப் பொழுதினிற் றெரியா
திறந்திடுங் காலமீ தென்பார்.
2.8.155
666
அன்பினர்க் கிரங்காத் தறுகணன் கொடிய
னபூஜகி லொழியுநா ளளவுந்
துன்பமு மொழியா தினம்பெருங் கேடு
சூழ்தர விளைந்திடு மென்பா
ரின்புறு நபிசொற் கிணங்கிலா ரிருக்கு
நகரினு மிருக்கொணா தென்பார்
வன்பெரு மிருடீர்ந் துய்விரே னடக்கு
மாற்றமு மிஃதென மதிப்பார்.
2.8.156
667
மல்விதம் பயின்று திரடரும் புயத்தார்
முகம்மதைக் தினந்தொறும் பகைத்துச்
செல்வுழி மறுத்த அபுஜகி லழைத்த
திமஷ்கினுக் கிறைவனைச் சினந்து
கொல்விதச் சூழ்ச்சி யிதுகொலென் றுரைப்பார்
குதாதிரு வருளினால் வானில்
வெல்விதப் புதுமைக் காரண மலது
வேறுதுன் பிலையென விரிப்பார்.
2.8.157
668
உயிரினும் பிரியாத் துணைவரைக் காணா
துலைந்திடு மடந்தையர் சிலரே
செயிரறு மகவைத் தவறவிட் டலைந்து
திரிந்திடு மடந்தையர் சிலரே
குயில்புரை யமுதக் கிளிமொழி மடவார்
குழுப்பிரிந் தழுங்குவர் சிலரே
மயலுறழ்ந் தணியும் பணியிழந் திரங்கி
மறுகுறு மடந்தையர் சிலரே.
2.8.158
669
தெரிதரா விருளா லரசருந் தேர்ச்சித்
துணைவரும் வரிசைமன் னவரும்
பரியினின் றிழிந்த வீரரு மற்றப்
படைக்கலத் தவர்களு நகரிற்
பெருகிய மாந்த ரனைவரு நிறைந்த
பெண்ணினத் துடன்றலை மயங்கி
விரிதருந் தலைமத் தெறிதருந் தயிரின்
மிக்குடைந் தறமிடைந் தனரே.
2.8.159
670
புதுநற வருந்தி வரிச்சுரும் பிரைக்கும்
பொழிலுடைப் பொருப்பிடைத் திரண்ட
முதுமரத் துறைந்த பறவைக ளனைத்து
முயங்கிய பெடையினைக் காணா
ததிர் தரும் வாய்விட் டந்தர முழுது
மரற்றுவ தகுமது நொடிக்குண்
மதியழைத் திடுவ ரையுற லெனுஞ்சொன்
மானிடர்க் குரைப்பன போலும்.
2.8.160
671
விலங்கினங் கலையப் பறவைகண் மறுக
மேதினிப் படைப்புள வெவையுங்
கலங்கிடக் கலங்கித் திமஷ்கினுக் கரசன்
கண்கொளாப் புதுமையாய்ச் சிறந்த
நிலங்கொள நிறைந்த மறைமுகம் மதுவை
நெஞ்சுறப் புகழ்ந்துமுன் னிலையாய்ப்
பலன்கொளும் பதமும் படைத்தன மென்னப்
பண்பொடு களித்தெழுந் திருந்தான்.
2.8.161
672
மீனக டுரிஞ்சுங் குவட்டிடை வடிவாய்
விளங்கிய முகம்மதை விளித்து
வானமட் டிருண்ட கொடியவல் லிருளை
மறைபட நொடியினின் மாற்றிப்
பாலனங் கொழிக்கு நிறைந்தவெண் மதியைப்
பரவையின் முகட்டெழப் படுத்தி
யீனமற் றிவணில் வரவழைத் திடுக
வென்றனன் திமஷ்கினுக் கிறைவன்.
2.8.162
673
திரைத்தடத் தலர்த்தேன் சேலினஞ் சிதறுந்
திமஷ்கினுக் கிறையவன் றெரிய
வுரைத்தசொ லுளத்தூ டிருத்திநந் நபியு
முடையவ னிடத்தினி நோக்கி
நிரைத்தவல் லிருளைச் சடுதியி லகற்றி
நீணிலாக் கதிர்கள்கொப் பளிப்பத்
தரைத்தலம் புகல முழுமதி யழைத்துச்
தருகவென் றினிதுரைத் தனரே.
2.8.163
674
இறையவன் றனைநன் னயமனத் திருத்தி
யிரந்துநின் றிடும்பொருட் டதனா
லறைதருந் திரைமுத் திறைத்தபைஞ் சலதி
யகட்டிடை யிருந்துவெண் கலைக
ணிறைபடப் பரப்பி விசும்புறத் தடவி
நெடும்புவி யடங்கலு நயினார்
மறைபடாப் புகழின் கொழுந்தினிற் பூத்த
மலரென வெழுந்தது மதியம்.
2.8.164
675
திணிசுடர்ச் சுவனத் தரம்பைய ரமரர்
தினந்தொறும் பரவிய நயினா
ரணிபெறத் திமஷ்குக் கிறைமனங் களிப்ப
வவனியில் தீன்பயிர் படரப்
பணிநெடும் படத்திற் கிடந்தபா ருடுத்த
பரவைவேந் தனுக்குவெண் டரள
மணியினி லமைத்த செழுமுடி நிகர்ப்ப
வந்தது நிறைந்தவெண் மதியம்.
2.8.165
676
இடனறக் கலைகள் பெருகிய மதிய
மெங்கணுங் கதிர்கள்விட் டெறிந்து
கடுகவிட மனைய விருட்குல மறுத்துக்
ககன்முகட் டொளிசுதை தீற்றி
மடலவிழ் குவளை மதுமலர் மலர்த்தி
முகம்மதைத் தௌிதர நோக்கி
மிடலுடைக் குபிர ரகமுகங் கருக்கி
விண்ணகத் தினிதெழுந் ததுவே.
2.8.166
677
விண்ணகத் தமுதங் கான்றவெண் மதிய
மீனடு மதியினிற் றிகழ்ந்து
மண்ணக நோக்கி மெலமெலத் தாழ்ந்து
மக்கமா நகரியிற் ககுபா
நண்ணிவிண் முகட்டி னடுநிலை நோக்கி
நலங்கெழுங் கலைநிலா வொழுகப்
பண்ணுதற் கியைந்த வெள்ளிவெண் குடம்போற்
பரிவுற வினிதுவந் துறைந்த.
2.8.167
678
படியினிற் சுவனப் பதிநிகர்த் தனைய
பழமறைப் பள்ளியிற் சிறந்த
கொடுமுடி யெனலா யுறைந்தவெண் மதியங்
குவலயத் திடத்தினிற் றாழ்ந்து
வடிவுறுங் ககுபா வாயிலி னெதிர்ந்து
மகிழ்வொடு மெழுதரம் வலம்வந்
துடல்குழைத் தரிதி னுள்ளுறப் புகுந்தங்
குறைந்தது திசைதிசை யொளிர.
2.8.168
679
நறைகுடிப் புகுந்த ககுபத்துல் லாவி
னடுவிருந் தொளிருமா மதிய
மிறைவனைப் பரிவி னொடுமனப் பயத்தா
லிருந்தரை யிடத்தினிற் றொழுது
முறைமுறை பணிந்து பலதரம் புகழ்ந்து
முகம்மது நபியையும் வாழ்த்தி
நிறைமதிக் கதிர்த்தாள் வாயிலைக் கடந்து
நின்றது நிலம்பிறங் கிடவே.
2.8.169
680
முதிர்கதி ரெறித்த ககுபத்துல் லாவின்
முன்றிலிற் சிறந்தவெண் மதிய
மதுவிரி பொழில்சூழ் வரையிடை நோக்கி
வந்துமா மறைமுகம் மதுவை
யெதிர்தரப் பணிந்து சலாமெடுத் தோதி
யிணைமரை மலர்ப்பதம் போற்றி
விதியவன் றூதர் பேரினிற் கலிமா
விரைந்தெடுத் துரைத்துநின் றதுவே.
2.8.170
681
திருந்திநற் கலிமா வோதிமுன் னெதிர்ந்த
சிறப்பினை நோக்கிநன் னெறியாய்
வருந்திடா தெனது வரவினை யெவர்க்கு
மவுலென முகம்மது மவுலப்
பொருந்திய மனத்திற் களிப்பொடும் வாக்கிற்
புகழொடும் பொழிநிலா மதிய
மிருந்தவ ரெவர்க்குந் தெரிதர வறபி
மிசையினிற் றௌிதர வியம்பும்.
2.8.171
682
நெடியவன் படைப்பெப் பொருட்குமுன் னொளியாய்
நின்றுபி னப்துல்லா வயிற்றில்
வடிவுறு மரசா யுதித்தநன் னபியே
முகம்மதே தனியவன் றூதே
படியினுங் கலிமாப் பகர்ந்தவர் சுவனப்
பதியிடை குவர்பக ராதார்
கெடுநர கடைவர் சரதமென் றெவர்க்குங்
கிளத்திநின் றதுசெழு மதியம்.
2.8.172
683
பாரினி லெவர்க்குந் தோன்றிட மதியம்
பழமறை முகம்மதின் மெய்யிற்
போர்வையிற் புகுந்தங் குரனடு விருந்து
பொருவற விருபகுப் பாகிச்
சீர்பெற வலது கரத்திடை யொருபாற்
செழுமிடக் கரத்தினி லொருபா
லேர்பெற வெழுந்து முகம்மதுக் கெதிரா
யிருபிறை யிலங்கநின் றனவே.
2.8.173
684
முன்னெதிர்ந் திலங்கு மொருபகுப் பெழுவான்
முரிதிரைக் கடன்முகட் டேகிப்
பின்னொரு பகுப்புக் குடகடற் புகுந்து
பெருவிசும் பிடையினிற் பிறங்கித்
தன்னிரு பகுப்பு மந்தரத் துலவித்
தவணிலாக் கதிரொடுந் தாழ்ந்து
மன்னிய ககுபாக் குடுமிமேற் சிறந்து
மறுவறப் பொருந்திய தன்றே.
2.8.174
685
உலகெலாம் விளங்கச் செழுங்கதிர் பரப்பி
யொளிர்தர வயங்குமா மதிய
நிலமிசை யுதித்த முகம்மதே யெவர்க்கு
நெடியவன் றூதரென் றிசைத்துக்
குலவுமெப் படைப்பு மிவர்தமக் கீமான்
கொண்டது சரதமென் றறைந்து
மலிதர நபிக்குச் சலாமெடுத் தேத்தி
வளர்ந்தது வானகத் திடத்தில்.
2.8.175
686
வானகத் துலவி யமுதவெண் கதிர்க்கான்
மாநிலப் பரப்பெலாம் பரப்பி
மீனொடுஞ் செறிந்து தன்னர சியற்றி
விரைவொடு மேற்றிசை படர்ந்து
தேனின மிருந்து புதுநற வருந்திச்
செழித்திடும் பெருந்தடத் திருந்த
பானலங் குவியக் குடகடற் றிரைக்குட்
பாய்ந்தது புதுமுழு மதியம்.
2.8.176
687
மதிவர வழைத்துக் காரணம் விளைத்த
முகம்மதின் பொருட்டினாற் சுவனக்
கதிபத மடைந்தே மெனச்சிர மசைத்து
ஹபீபுதன் னகத்தினிற் களித்து
முதிர்கலை நூலோர் தமக்கெடுத் திசைத்து
முன்மறை விளக்கமும் விளக்கி
யெதிரிவர்க் கிலையென் றதிசயம் பிறப்ப
வெவரொடுந் தனித்தினி யிசைத்தான்.
2.8.177
688
மாதவன் திமஷ்குக் கிறையுரைத் ததுவு
முகம்மது விளைத்தகா ரணமும்
பூதலத் தினிற்கண் டறிகொணாப் பெரிய
புதுமையிற் புதுமைகொ லென்னச்
சீதவொண் கமல முகமலர் மலர்ந்து
தேர்ச்சியிற் றுணைவர்மன் னவரும்
பேதுற லகற்றிச் சிந்தையிற் றேறிப்
பெரியவன் றூதினைப் புகழ்ந்தார்.
2.8.178
689
மருவலர்க் கரியே றெனுந்திமஷ் கிறைவன்
மனக்களிப் புடனெழுந் திருந்து
குருமுகம் மதுதம் மிணையடி மலரைக்
கொழுமலர்க் கரத்தினாற் றடவி
யிருவிழி குளிர வைத்துமுத் தமிட்டீ
மானினை யுளத்தினி லிருத்தித்
திருமுக மலர்ந்து மணியெயி றிலங்கச்
செவ்விதழ் திறந்துசெப் புவனால்.
2.8.179
690
ஆதிதன் றூதே பேரின்ப விளக்கே
யமருல கினுக்கும்நல் லரசே
மாதலத் தெவர்க்கும் பவக்கடல் கடப்ப
வருமொரு திருமரக் கலமே
தீதற வெனது கருத்துறு மறிவே
தீனிலை நிறுத்துநா யகமே
பூதரத் துறைந்த முழுமணிச் சுடரே
புண்ணியந் திரண்டமெய்ப் பொருளே.
2.8.180
691
உமதுரை திருத்து மவர்கள்பொற் பதியோ
ருமதுரை படிறென வுரைத்தோர்
தமரொடு நரகிற் புகுவர்நும் மரிய
தண்ணளி யெவரறி குவரிந்
நிமிர்தருங் குடுமிக் கிரியின் றிறங்கி
நிரைமணி ,மாளிகை புகுமென்
றமரரும் புகலு முகம்மதுக் குரைத்தா
னணிமதிட் டிமஷ்கினுக் கதிபன்.
2.8.181
692
குருத்துவெண் ணிலவு கொப்பளித் தெரியுங்
கொடிமதிள் திமஷ்கினுக் கிறைவ
னுரைத்தசொற் றவறா தழகொளிர் நயினா
ருலகெலாஞ் செழும்புகழ் விளங்கத்
திருத்திய வகுதைப் பதியபுயல் காசீஞ்
சிந்தையிற் பலன்பெறத் தினமு
மிருத்திய மரைத்தா டருங்கதிர் குலவ
விறும்பினின் றிருநிலத் திழிந்தார்.
2.8.182
693
மண்டலத் தரிய புதுமதி விளங்கி
வானெழுந் தகத்தடைந் தனபோல்
விண்டுநின் றிறங்கி முகம்மது நபியும்
விரிகதிர் மாளிகை புகுந்தார்
திண்டிறற் பரியுஞ் சேனையு மிடையுந்
திமஷ்கிறை யவனிடஞ் சேர்ந்தா
னெண்டிசை யவரு நகரவ ருடனு
மின்புறக் கலந்தயல் போனார்.
2.8.183
694
மக்கமா நகரக் குறைஷிகள் பலரு
மதியிலி யபூஜகி லுடனிவ்
வொக்கலுந் துன்புற் றெழின்முகம் வௌிறி
யுள்ளுணர் நினைவறக் கருகித்
தக்கவ ரொருவர்க் குரைகொடுப் பதற்குத்
தங்களிற் றனிதடு மாறிப்
புக்கிடம் புகுதற் கருநெறி யறியாப்
புல்லறி வினிற்சில புகல்வார்.
2.8.184
695
வருடமீ ரைம்பா னறுபதின் மேலு
மிருந்துமா மறைகளைத் தௌிந்த
புருடரா திபனிம் முகம்மதிங் கியற்றும்
புன்மைவஞ் சனையிடத் தடைந்து
திருடர்போல் விழித்தா னென்னிலிந் நிலத்திற்
றௌிமறை தௌிந்தசிந் தையினு
மிருடரா திருந்த லரிதெனச் சினந்த
விடரொடும் படிறெடுத் திசைப்பார்.
2.8.185
696
விறற்பெரும் படைகொண் டபூஜகில் விளைக்கும்
வினைகளு மிகுந்ததந் திரமு
மறற்பல கொழிப்ப நதிசுரத் தழைத்த
அகுமதி னிடத்தினி லணுகாப்
புறப்பல நகரிற் சமயமுஞ் சிதையப்
புதுமறை யெனும்புறுக் கானி
லுறப்படுத் துலக மடங்கலு மிவன்ற
னுள்ளடி படுக்குமென் றுரைப்பார்.
2.8.186
697
தெரிமறை மாலிக் கருளர சறியாச்
சிந்தைய னெனவுமா மதியை
வரவழைத் தரிய காட்சியை முடித்த
முகம்மதை வஞ்சக னெனவும்
பெருகிய குபிரர் தனித்தனி யுரைப்பப்
பெருஞ்சிறை திரண்டமுள் வளைவாய்க்
குருதிகொப் பளித்த வேதினச் சூட்டுக்
குக்குடந் திசைதொறுங் கூய.
2.8.187
698
இனவளை முரலுந் தடத்தன மிரைப்ப
விசைக்குரற் கோகில மியம்ப
மனநிலை யுணராக் குபிரர்தம் முளத்தில்
வல்லிருட் குலம்புகுந் தொளிப்ப
நனிபொருண் மறைதீ னவர்மனத் தௌிவி
னடுநிலந் தௌிதரத் குணக்கிற்
றினகரன் கதிர்கள் வௌிறிடப் பரப்பித்
தெண்டிரைக் கடன்முளைத் தெழுந்தான்.
2.8.188
மதியை அழைப்பித்த படலம் முற்றிற்று.
ஆகப் படலம் 8க்குத் திருவிருத்தம்...698
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
This file was last revised on 13 May 2003