
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 5 (விமலையார் இலம்பகம் 1889 - 1994),
(சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101) &
(மண்மகள் இலம்பகம் 2102 - 2326)
cIvaka cintAmani - part 5 (verses 1889 -2326)
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும் பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 5 (விமலையார் இலம்பகம் 1889 - 1994),
(சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101) &
(மண்மகள் இலம்பகம் 2102 - 2326)
-
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1961
உள்ளடக்கம்
-
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
மூலமும் புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
8. விமலையார் இலம்பகம் (1889 - 1994)
கதைச் சுருக்கம்: விசயையைக்காண, வேணவாக்கொண்டு தோழரொடு தண்ட காரணிய நோக்கிய விரைந்த சீவகன் தன் வரவினை எதிர்பார்த்திருந்த விசயையின் தவப்பள்ளியை எய்தி அவளைக் கண்டு அடியில் வீழ்ந்து வணங்கி அளவிலா மகிழ்ச்சி எய்தினன். விசயையும் தன் அருமை மகனை அரிதிற் கண்டு அன்புகூர்ந்து இன்பமுற்றனள். பின்னர் விசயை கட்டியங்காரனை வெல்லுதற்குக் கோவிந்தனைத் துணைக்கொள்க என்று சீவகனுக்குணர்த்தினள். பின்னர்ச் சீவகன் விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தன் நகரத்திற்குப் போக்கினன். பின்பு தோழன்மாரோடு ஏமாங்கதம் புகுந்து இராசமாபுரத்துப் புறச்சோலையிற் சென்று தங்கினன். மறுநாட் காலையில் தோழரை அச் சோலையிலேயே இருக்கப் பணித்துத் தான் அழகிய வேற்றுருவங் கொண்டவனாய் அந்நகர மறுகிற் றமியனாய்ச் சென்றனன்.
அங்ஙனம் செல்லும்பொழுது அந் நகரத்துள்ளவனாகிய சாகரதத்தன் என்னும் வணிகனுடைய மகள் விமலை என்பாள் பந்தாடியவள் அச் சீவகனைக் கண்டு அவன் பேரழகிலே நெஞ்சம் போக்கி மயங்கினள். சீவகனும் அந்நேரிழையை நோக்கி அன்பு கூர்ந்து அவ்விடத்தினின்றும் அகலமாட்டாதவனாய்ச் சாகரதத்தன் கடையின்கண் வந்திருந்தனன்.
சீவகன் வந்து புகுந்தவுடனே அச் சாகரதத்தன் கடையிலே விலையாகாமற் றங்கிக்கிடந்த சரக்கெல்லாம் விலையாகி விட்டன. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, முகமன் மொழிந்து, ஐய! கணியொருவன் நின் மகள் விமலை என்பாளுக்குரிய கணவன் நின் கடைக்கு வலிய வருவான். அவன் வந்தமைக்கு அறிகுறி அப்பொழுது நின் கடைச் சரக்கெல்லாம் ஊதியமுண்டாக விரைவின் விற்றுப்போம் கண்டாய்! என்று எனக்குக் கூறியிருந்தான். அங்ஙனமே நீ என் கடையேறியவுடன் அப் பழஞ்சரக்கெல்லாம் விலைப்பட்டன. ஆதலால் நீயே விமலை கணவன் ஆதல் கூடும் என்று கருதுகின்றேன், என்று கூறி அவனை ஆர்வத்துடன் அழைத்தேகி விமலையை அவனுக்கு மணம் செய்வித்தனன். சீவகன் அவளுடன் இரண்டு நாள் கூடி இன்புற்றிருந்து மறுநாள் சென்று மனக்கினிய தோழரைக் கண்டனன்.
------------
-
1889. முருகுகொப் புளிக்குங் கண்ணி
முறிமிடை படலை மாலைக்
குருதிகொப் புளிக்கும் வேலான்
கூந்தன்மா விவர்ந்து செல்ல
வுருவவெஞ் சிலையி னாற்குத்
தம்பியிஃ துரைக்கு மொண்பொற்
பருகுபைங் கழலி னாருட்
பதுமுகன் கேட்க வென்றே.
விளக்கம் : அது மேற் கூறுகின்றார். சிலையினாற்கு உருபு மயக்கம் என்பர் நச்சினார்க்கினியர். முறி - தளிர். கண்ணி - தலையிற் சூடுமாலை. படலைமாலை - தழை விரவிய மாலை. வேலான் : சீவகன். தம்பி : நந்தட்டன். கழலினாருள் - தோழருள். பதுமுகன் : விளி. ( 1)
----------
-
1890. விழுமணி மாசு மூழ்கிக்
கிடந்ததிவ் வுலகம் விற்பக்
கழுவினீர் பொதிந்து சிக்கக்
கதிரொளி மறையக் காப்பிற்
றழுவினீ ருலக மெல்லாந்
தாமரை யுறையுஞ் செய்யாள்
வழுவினார் தம்மைப் புல்லாள்ட்
வாழ்கநுங் கண்ணி மாதோ.
விளக்கம் : மாது ஒ : அசைகள், நும் கண்ணி வாழ்க! என்பதனைக் கழுவினீர் என்பதன்பின் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். சீவகன் தன் பிற்ப்புண்மையைப் பண்டே உணர்ந்திருந்தானாயினும் அவனும் இதுகாறும் மறைவாகவே அதனைப் போற்றி வந்தானாகலின், இப்போது நந்தட்டன் அனைவரும் உணர்ந்தமை கருதி விழுமணி மாசு மூழ்கிக்கிடந்தது இவ்வுலகம் விற்பக் கழுவினீர் என அவன்பிறப்பு வெளிப்பாட்டைத் தோழர் மேலதாக்கியே உரைக்கின்றான். சிக்க - அகப்பட. செய்யாள் - திருமகள். (2)
-----------
-
1891. தொழுததங் கையி னுள்ளுந்
துறுமுடி யகத்துஞ் சோர
வழுதகண் ணீரி னுள்ளு
மணிகலத் தகத்து மாய்ந்து
பழுதுகண் ணரிந்து கொல்லும்
படையுட னெடுங்கும் பற்றா
தொழிகயார் கண்ணுந் தேற்றந்
தெளிகுற்றார் விளிகுற் றாரே.
விளக்கம் : அரசர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்துப் பகைவர் நட்புடையார்போல் அழுக்கண்ணீரும் கொலைசூழ்தலின் கண்ணீரிலும் படையொடுங்கிற்றாம். ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து (குறள்-828) என்றார் தேவரும். ( 3)
------------
-
1892. தோய்தகை மகளிர்த் தோயின்
மெய்யணி நீக்கித் தூய்நீ
ராய்முது மகளிர் தம்மா
லரிறபத் திமிரி யாட்டி
வேய்நிறத் தோளி னார்க்கு
வெண்டுகின் மாலை சாந்தந்
தானல கலங்கள் சேர்த்தித்
தடமுலை தோய்க வென்றான்.
விளக்கம் : தோய்தகை - கூடுதற்குரிய தகுதி, எனவே ஏனைய மகளிரை எவ்வாற்றானும் கூடுதல் கூடாது என்றானுமாயிற்று. அம் முதுமகளிரும் ஆராய்ந்து தெளியப்பட்டவராதல் வேண்டும் என்பான் ஆய்முது மகளிர் தம்மால் என்றான். திமிர்தல் - பூசுதல், வேய்நிறத் தேளினார்க்கு என்றது அவர்க்கு என்றவாறு. நஞ்சு முதலியன ஊட்டப் பெறாமையுணர்தற்கு வெண்டுகில் கூறினான். வஞ்ச அணிகலன் அல்லாமையுணர்தற்கு நலகலன் கூறினான். இச் செயலை எல்லாம் சாணக்கியர் பொருள் நூலில் விரிவாகக் காணலாம். (4)
--------
-
1893. வண்ணப்பூ மாலை சாந்தம்
வாலணி கலன்க ளாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை
கண்டலாற் கொள்ள வேண்டா
வண்ணலம் புள்ளோ டல்லா
வாயிரம் பேடைச் சேவ
லுண்ணுநீ ரமிழ்தங் காக்க
யூகமோ டாய்க வென்றான்.
விளக்கம் : அன்னத்தின் கண்ணிலும் சக்கரவாகத்தின் முகத்திலும் என முறையே கொள்க. அன்னத்தின்கண் குருதி காலும்; சக்கரவாகம் முகம் கடுக்கும்; கருங்குரங்கு உண்ணாது. (5)
------------
-
1894. அஞ்சனக் கோலி னாற்றா
நாகமோ ரருவிக் குன்றிற்
குஞ்சாம் புலம்பி வீழக்
கூர்நுதி யெயிற்றிற் கொல்லும்
பஞ்சியின் மெல்லி தேனும்
பகைசிறி தென்ன வேண்டா
வஞ்சித்தற் காத்தல் வேண்டு
மரும்பொரு ளாக வென்றான்.
பொருள் : அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் - அஞ்சனக் கோலால் அடித்தற்குப் பற்றாத நாகப்பாம்பு; அருவிக் குன்றின் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றின் கொல்லும் - அருவியை யுடைய குன்றைப் போன்ற மதயானை புலம்பி வீழும் படி எயிற்றாற் கடித்துக் கொல்லும்; பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா - பஞ்சியினும் மெல்லியதா யினும் பகையைச் சிறிது என்று கருதவேண்டா; அரும் பொருளாக அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்றான் - அதனை அரும்பொருளாக நினைத்து அஞ்சித் தன்னைக் காக்க வேண்டும் என்றான்.
விளக்கம் : பகைவரின் சிறுமைக்கு அஞ்சனக் கோலினாற்றா நாகம் உவமை. அஞ்சனக்கோல் கண்ணுக்கு மைதீட்டுஞ் சிறுகோல். அருவிக் குன்றின்பால் வாழும் குஞ்சரம் எனல் நன்று. சிறு பகையையும் பெரும் பகைபோல மதித்து அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்பதாம். (6)
------------
-
1895. பொருந்தலாற் பல்லி போன்றும்
போற்றலாற் றாய ரொத்து
மருந்தவர் போன்று காத்து
மடங்கலா லாமை போன்றுந்
திருந்துவேற் றெவ்வர் போலத்
தீதற வெறிந்து மின்ப
மருந்தினான் மனைவி யொத்து
மதலையைக் காமி னென்றான்.
விளக்கம் : மதலை - ஆதரவு; தூண். வானம் ஊன்றிய மதலை போல (பெரும்பாண். 346) என்றார் பிறரும். தாம் அடங்கியே இவனை அடக்கல் வேண்டுமெனக் கூறுகின்றவன் இங்ஙனங் கூறினானென்க. பதுமுகனிடங் கூறினானெனினும் பலரும் கேட்டலின்,. காமின் என்றான். தான் வாழும் மரமுதலியவற்றில் நன்கு பொருந்தியிருத்தல் பல்லிக் கியல்பு. அச்சுடைச் சாகாட்டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல என்றார் புறத்தினும் (256). ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் என்றார் வள்ளுவர். பகைவர் போன்று கண்ணற இடித்துரைத்தும் என்றவாறு, மருந்து - அடிசில். மதலை - பற்றானவன். (7)
------------
-
1896. பூந்துகின் மாலை சாந்தம் புனைகலம் பஞ்ச வாச
மாய்ந்தளந் தியற்றப் பட்ட படிசினீ ரின்ன வெல்லா
மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்
கேந்துபூண் மார்ப னேவ வின்னண மியற்றி னானே.
பொருள் : பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம் - பூந்துகிலும் மாலையும் சாந்தமும் பூணும் முகவாசம் ஐந்தும்; ஆய்ந்து அளந்து இயற்றபப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம் - ஆராய்ந்து பார்த்துச் செய்யப்பட்ட உணவும் நீரும் இத் தன்மையானவற்றை யெல்லாம்; மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று - மக்களிலே சிங்கம் போன்ற ஆற்றலையுடைய பதுமுகன் காப்பானாக என்று; ஏந்து பூண் மார்பன் ஏவ - விளங்கும் பூணணிந்த மார்பனாகிய சீவகன் பணிக்க; இன்னணம் இயற்றினான் - அவனும் இப்படிக் காத்தலை நடத்தினான்.
விளக்கம் : பஞ்சவாசம் : தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம், கப்பூரம் சாதியோடைந்து மடங்கலாற்றல் - சிங்கத்தை ஒத்த வலிமை. உடையும் அடிசிலுடம் உருமண்ணு வாவிற்குக்கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி அகன்மடி யவன்றான் அமர்ந்து கொடுப்ப என்றார் கதையினும் (3 - 9 : 128 - 30.) (8)
------------
-
வேறு
1897. சிறுகண்யா னையினினஞ் சோந்துசே வகங்கொளத்
துறுகலென் றுணர்கலாத் துள்ளிமந் திம்மக
நறியசந் தின்றுணி நாறவெந் தனகள்கொண்
டெறியவெள் கிம்மயிர்க் கவரிமா விரியுமே.
விளக்கம் : துள்ளும் என்பது பாடமாயின், துள்ளும் மகவு என்க. சேவகம் : ஆகுபெயர். துறுகல் - குண்டுக்கல். மந்திமக துறுகல் என்றுணர்கலா துள்ளி என மாறுக. மக - குட்டி. சந்தின் துணி - சந்தனக்குறடு. வெந்தனகள் என்புழிக் கள் விகுதிமேல் விகுதி. மந்திம்மக, வெள்கிம் மயிர் என்பவற்றுள் மகரவொற்று வண்ணநோக்கி விரிந்தது. (9)
------------
-
1898. புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி
யகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன
கவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே.
பொருள் : வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல். மரபு - 68) என்றார். எலி அகழும் சாதிலிங்கம் தாழ்வரையில் சொரிந்து கிடப்பனவாக அத் தோற்றம் யானை நுதலிற் கச்சுப்போலத் தோன்றிற்று என்பதாம். பூசை - பூனை. இங்குலிகம் - சாதிலிங்கம். அஞ்சனவரை - கரிய தாழ் வரை. கவழம் - கவளம். (10)
------------
-
1899. அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலி
னொண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்
விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்
கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே.
விளக்கம் : அண்ணலங்குன்று - பெரிய அழகிய மலை. வருடை - மலையாடு, உளுவுண்டென - உளுத்தது என்னும்படி. கற்பகம் - வானுலகத்துள்ளவொரு மரம். (11)
------------
-
1900. மானிடம் பழுத்தன கிலுத்தமற் றவற்றியற்
பான்முரட் பயம்பிடைப் பனைமடிந் தனையன
கானிடைப் பாந்தள்கண் படுப்பன துயிலெழ
வூனுடைப் பொன்முழை யாளிநின் றுலம்புமே.
விளக்கம் : முரண் மாறுபாடு. முரட் பரம்பு எனவும் பாடம். மானிடம் பழுக்கும் கிலுத்தம் நீள் வனம் (கூர்ம - சம்பு - 32). கிலுத்தம் - ஒருவகை மரம். (12)
------------
-
1901. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயி
னீரதீம் பூமரம் நிரந்ததக் கோலமு
மேரில வங்கமும் மின்கருப் பூரமும்
மோருநா விகலந் தோசனை கமழுமே.
விளக்கம் : திமிசு, தீம்பூ : மரவகைகள். ஓரும் : அசை. (13)
------------
-
1902. மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாக்குழாஞ்
சந்தன மேய்வன தவழ்மதக் களிற்றின
மந்தழைக் காடெலாந் திளைப்பவா மானினஞ்
சிந்தவால் வெடிப்பன சிங்கமெங் கும்முள.
விளக்கம் : இனி, இவை நான்கும் எங்கும் உள எனினும் ஆம். மகண்மா - ஒருவகை விலங்கு. தவழ்மதம் : வினைத்தொகை. அந்தழை - அழகிய தழை. ஆமானினம் - காட்டுப் பசுவின் கூட்டம். எங்கும்முள, மகரம் வண்ணநோக்கி விரிந்தது. (14)
------------
-
1903. வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்துராய்ப்
பொருப்பெலாம் பொன்கிடந் தொழுகிமேற் றிருவில்வீழ்ந்
தொருக்குலாய் நிலமிசை மிளிர்வதொத் தொளிர்மணி
திருக்கிள ரொளிகுலாய் வானகஞ் செகுக்குமே.
விளக்கம் : செய்தென் எச்சங்களைக் காரணம் ஆக்குக. பொருப்பெலாம் செகுக்கும். ஒருங்கு குலாய் : ஒருக்குலாய் : விகாரம். (15)
------------
-
1904. வீழ்பனிப் பாறைக ணெறியெலாம் வெவ்வெயிற்
போழ்தலின் வெண்ணெய்போற் பொழிந்துமட் டொழுகுவ
தாழ்முகில் சூழ்பொழிற் சந்தனக் காற்றசைந்
தாழ்துயர் செய்யுமவ் வருவரைச் சாரலே.
விளக்கம் : வீழ்பனிப்பாறை : வினைத்தொகை. மட்டு - தேன். தாழ் முகில் : வினைத்தொகை. சூழ்பொழில் : வினைத்தொகை. நெறிகள் பொழியப்பட்டு அசையப்பட்டுத் துயர் செய்யும் என்க. (16)
------------
-
1905. கூகையுங் கோட்டமுங் குங்கும மும்பரந்
தேகலா காநிலத் தல்கிவிட் டெழுந்துபோய்த்
தோகையு மன்னமுந் தொக்குட னார்ப்பதோர்
நாகநன் காவினு ணயந்துவிட் டார்களே.
விளக்கம் : கூகை - ஒருகொடி. கோட்டம் குங்குமம் என்பன மரங்கள். பரத்தலால் ஏகலாகா எனலே அமையும். அழகால் போதற்கரிய என்பர் நச்சினார்க்கினியர். அல்கி - தங்கி. விட்டார்கள் - தங்கினார்கள். (17)
------------
-
வேறு
1906. பூத்தகி றவழும் போர்வை
பூசுசாந் தாற்றி பொன்னூற்
கோத்துநீர் பிலிற்றுங் காந்தங்
குங்கும வைரப் பொற்கோய்
சாத்துறி பவழக் கன்னல்
சந்தன வால வட்ட
நீத்தவ ரிடத்து நாற்றி
நிழன்மணி யுலகஞ் செய்தார்.
விளக்கம் : அகில் : ஆகுபெயர். பூத்தல் - பொலிவுறுதல். சாந்தாற்றி -சிற்றாலவட்டம். நீர் பிலிற்றும் - நீரைக் காலும். காந்தம் - சந்திரகாந்தம். கோய் - சிமிழ். சாத்துறி - பரணிக்கூடு. கன்னல் - கரகம். நீத்தவர் - தாபதர். (18)
------------
-
1907. நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றுங்
கைத்தலந் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலர்ந்த காண்க
வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்பார்
பித்தல ராயிற் பேய்க ளென்றவாற் பேச லாமோ.
விளக்கம் : மகளிர் நோக்குதலானும் தீண்டுதலானும் சில மரங்கள் கனிதலும் மலர்தலும் உடையவாம் என்பதொரு வழக்கு. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். என்பதுபற்றிப் பேய்கள் என்று அலாற் பேசலாமோ என்றார். மரம் உயிரில்லை என்பார் அலகையா வைக்கப்படுவர் என்றவாறு. (19)
------------
-
1908. பொறிமயி லிழியும் பொற்றார்
முருகனிற் பொலிந்து மாவி
னெறிமையி னிழிந்து மைந்தன்
மணிக்கைமத் திகையை நீக்கி
வெறுமையி னவரைப் போக்கி
வெள்ளிடைப் படாத நீரா
லறிமயி லகவுங் கோயி
லடிகளைச் செவ்வி யென்றான்.
விளக்கம் : அன்பு செலுத்தலின் அவனோடே கூடச் செல்கின்றவன் செவ்வி அறிந்தே சேறல் முறையாகலானும், பதுமுகன் தன்னை அறிவிக்க விசயை அறிய வேண்டுதலானும் செவ்வியறி என்றான். (20)
------------
-
1909. எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடு மின்னே
பல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பி யென்று
சொல்லின டேவி நிற்பப் பதுமுகன் றொழுது சோந்து
நல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்.
விளக்கம் : எல் - பகல். நம்பி : நம் என்பது முதனிலையாக நமக்கு இன்னான் என்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிச்சொல். எல்லிருள் - விடியற்காலத்திருள். விடியற்காலத்திருளிலே கண்ட கனா அண்மையிலேயே பலிக்கும் என்பது கனா நூற்றுணிபு. இதனைப் படைத்த முற்சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்த பிற் சாம மிகுதிங்கள் எட்டிற் கிடைக்குமென்னும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால் என்னும் கனா நூலானும் உணர்க; (சிலப். 15 : 95-106. அடியார்க். மேற்.) (21)
------------
-
1910. எங்கணா னைய னென்றாட்
கடியன்யா னடிக ளென்னாப்
பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும்
புனைமணிக் கடக மார்ந்த
தங்கொளித் தடக்கை கூப்பித்
தொழுதடி தழுவி வீழ்ந்தா
னங்கிரண் டற்பு முன்னீ
ரலைகடல் கலந்த தொத்தார்.
விளக்கம் : முன்நீர் - முற்பட்ட நீர்மை : உதிரம் உறவறியும் என்னும் பழமொழியை நோக்குக. இது கருதியே, முன் (சீவக. 1908) வெள்ளிடைப் படாத என்றார். அடிகள் அன்பும் சீவகன் அன்பும் சொல்லொணா அளவிற்று. அம்முறையால் அவ்விரண்டனையும் இரண்டு கடலென்று உருவகித்தார். (22)
------------
-
1911. திருவடி தொழுது வீழ்ந்த
சிறுவனைக் கண்ட போழ்தே
வருபனி சுமந்து வாட்கண்
வ னமுலை பொழிந்த தீம்பான்
முருகுடை மார்பிற் பாய்ந்து
முழுமெயு நனைப்ப மாதர்
வருகவென் களிறென் றேத்தி
வாங்குபு தழுவிக் கொண்டாள்.
விளக்கம் : முருகுடை மார்பிற் பாய்ந்து - அவனுடைய மார்பிற் காட்டிலும் தன் மார்பு பாய்ந்து என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இதற்கு, வாட்கண் சுமந்த வருபனி வனமுலை பொழிந்த தீம்பால் முழுமெயும் நனைப்ப எனக் கூட்டி, அவன் எழும்போது இவை அவன் மெய்ம் முழுதும் நனைப்ப என்று பிரிப்பர்; ஈண்டுக் கூறிய பொருளையுங் கொள்வர். (23)
------------
-
1912. காளையாம் பருவ மோராள் காதன்மீக் கூர்த லாலே
வாளையா நெடிய கண்ணான் மகனைமார் பொடுங்கப் புல்லித்
தாளையா முன்பு செய்த தவத்தது விளைவி லாதேன்
றோளையாத் தீர்ந்த தென்றா டொழுதகு தெய்வ மன்னாள்.
விளக்கம் : வாளை ஆம் நெடிய கண்ணாள் : சச்சந்தனைக் கோறலின் விசயைக்குப் பெயராயிற்றென்பர் நச்சினார்க்கினியர். இவ்வகைப் பொருள் நோக்கம் ஒன்றும் இன்றிப் பெயராக நின்ற தென்றே கொள்க. (24)
------------
-
1913. வாட்டிறற் குருசி றன்னை வாளம ரகத்து ணீத்துக்
காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்
சேட்டிளம் பருதி மார்பிற் சீவக சாமி யீரே
யூட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ வென்றாள்.
விளக்கம் : சீவக சாமியீரே என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் முடிபு : பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே (தொல் - விளிமரபு, 23) என்ற சூத்திரத்தில், சீவக சாமியென்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தன்னினம் முடித்தல் என்பதனாற் சீவக சாமியார் என ஆரீறாய்ச் சீவக சாமியீரே என ஈரொடு ஏகாரம் பெறுதல கொள்க எனக் கூறினார். (25)
------------
-
1914. கெடலருங் குரைய கொற்றங்
கெடப்பிறந் ததுவு மன்றி
நடலையு ளடிகள் வைக
நட்புடை யவர்க ணைய
விடைமகன் கொன்ற வின்னா
மரத்தினேன் றந்த துன்பக்
கடலகத் தழுந்த வேண்டா
களைகவிக் கவலை யென்றான்.
விளக்கம் : குரைய : அசை. கொற்றம் - தொழிலாகுபெயராய் அரசனை உணர்த்தியது. நட்புடையவர் : சச்சந்தனுடைய நண்பர்கள்; சீவகன் தோழருடைய தந்தையர். உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன்; உயிரை நீத்தேனும் அல்லேன் என்று கருதி, மரத்தினேன் என்றான். இடையன் எறிந்த மரம் (பழ. 314) என்றார் பிறரும். (26)
------------
-
1915. யானல னௌவை யாவாள்
சுநந்தையே யையற் கென்றுங்
கோனலன் றந்தை கந்துக்
கடனெனக் குணத்தின் மிக்க
பானிலத் துறையுந் தீந்தே
னனையவா யமிர்த மூற
மானலங் கொண்ட நோக்கி
மகன்மன மகிழ்ச் சொன்னாள்.
விளக்கம் : இருமுது குரவர்க்குந் துன்பஞ் செய்தே னென்றலின், உனக்கு இவரன்றோ இருமுது குரவர் என்றாள், ஐயன் : முன்னிலைப் படர்க்கை. (27)
------------
-
1916. எனக்குயிர்ச் சிறுவ னாவா
னந்தனே யைய னல்லை
வனப்புடைக் குமர னிங்கே
வருகென மருங்கு சோத்திப்
புனக்கொடி மாலையோடு
பூங்குழ றிருத்திப் போற்றா
ரினத்திடை யேற னானுக்
கின்னளி விருந்து செய்தாள்.
விளக்கம் : உயிர்ச்சிறுவன் - உயிர்போன்ற மகன். குமரன் : விளி. புனக்கொடி : அன்மொழித்தொகை; விசயை. போற்றார் - பகைவர். (28)
------------
-
1917. சிறகராற் பார்ப்புப் புல்லித் திருமயி லிருந்த தேபோ
லிறைவிதன் சிறுவர் தம்மை யிருகையி னாலும் புல்லி
முறைமுறை குமரர்க் கெல்லா மொழியமை முகமன் கூறி
யறுசுவை யமிர்த மூட்டி யறுபகல் கழிந்த பின்னாள்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். பார்ப்பு - குஞ்சு. சிறகர் - சிறகு. புல்லி - தழுவி. இறைவி : கோப்பெருந்தேவி; விசயை. இன்மொழி என்க. அமிர்தம் - உணவு. (29)
------------
-
வேறு
1918. மரவ நாக மணங்கமழ் சண்பகங்
குரவங் கோங்கங் குடம்புரை காய்வழை
விரவு பூம்பொழில் வேறிருந் தாய்பொரு
ளுருவ மாத ருரைக்குமி தென்பவே.
விளக்கம் : மரவம், நாகம், சண்பகம், குரவம், கோங்கம், வழை என்பன மரங்கள். புரை : உவமவுருபு. வழை - சுரபுன்னை. ஆய்பொருள் - ஆராய்ந்த பொருள். மாதர் பொருள் இது உரைக்கும் என இயைக்க. என்ப. ஏ : அசைகள். (30)
------------
-
1919. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட்
புலிய னார்மகட் கோடலும் பூமிமேல்
வலியின் மிக்கவர் தம்மகட் கோடலு
நிலைகொண் மன்னர் வழக்கென நோபவே.
விளக்கம் : நன்பொருள் என்புழி நன்மை பெருமைமேனின்றது, புலியனார் என்றது வலிமிக்க குறுநில மன்னரை. நூல்வல்லோர் நேர்ப என்க. எனவே வலியின் மிக்கவர் மகளை நீ கொண்டது நன்னென்றாள். (31)
------------
-
1920. நீதி யாலறத் தந்நிதி யீட்டுத
லாதி யாய வரும்பகை நாட்டுதன்
மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல்
பேது செய்து பிளந்திடல் பெட்டதே.
விளக்கம் : முள்ளினால் முட்களையுமாறு (பழ. 54) வினை செய்வாரைப் பிரித்தலாவது பகைமன்னரிடம் வினை செய்வாராய்ச் சிறந்திருப்பாரைப் பிளவுபடுத்தித் தம்முடன் கூட்டிக் கொள்ளுதல். (32)
------------
-
1921. ஒற்றர்தங்களை யொற்றரி னாய்தலுங்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ்
சுற்றஞ் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ
கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே.
------------
-
விளக்கம் : இச் செய்யுட் கருத்தோடு,
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் எனவும், (குறள். 588)
ஒற்றொற் றுணராமை யாள்க எனவும், (குறள். 589)
சூழ்வார் கண்ணாக ஒழுகல் எனவும், (குறள். 445)
------------
-
1922. வென்றி யாக்கலு மேதக வாக்கலுங்
குன்றி னார்களைக் குன்றென வாக்கலு
மன்றி யுங்கல்வி யோடழ காக்கலும்
பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே.
விளக்கம் : வென்றி - வெற்றி, ஆக்கல் - உண்டாக்குதல், மேதகவு. கேமம்பாடு. குன்றினார் - குறைந்தவர். பொன் : திருமகள். ஆகம் - மார்பு. (34)
------------
-
1923. பொன்னி னாகும் பொருபடை யப்படை
தன்னி னாகுந் தரணி தரணியிற்
பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே.
விளக்கம் : பொன் - ஈண்டுப் பொருள், பொருபடை : வினைத் தொகை, தரணி - நிலம், துன்னாதன இல்லை எனவே வீடும் கிடைக்கும் என்றாளாயிற்று. துன்னாதன் - எய்துதற்கரியன. (35)
------------
-
1924. நிலத்தி னீங்கி நிதியினுந் தேய்ந்துநங்
குலத்திற் குன்றிய கொள்கைய மல்லதூஉங்
கலைக்க ணாளரு மிங்கில்லை காளைநீ
வலித்த தென்னென வள்ளலுங் கூறுவான்.
விளக்கம் : நிலம் என்றது - நமக்குரிய நாடு என்பது பட நின்றது. கொள்கையம் : தன்மைப்பன்மை வினைமுற்று. அல்லதூஉம் : இன்னிசை யளபெடை. கலையைக் கண்ணாக உடையர்; அமைச்சர், காளை - விளி. வலித்தது - துணிந்தது. வள்ளல் : சீவகன். (36)
------------
-
வேறு
1925. எரியொடு நிகர்க்கு மாற்ற
லிடிக்குரற் சிங்க மாங்கோர்
நரியொடு பொருவ தென்றாற்
சூழ்ச்சிநற் றுணையொ டென்னாம்
பரிவொடு கவல வேண்டா
பாம்பவன் கலுழ னாகுஞ்
சொரிமதுச் சுரும்புண் கண்ணிச்
சூழ்கழ னந்த னென்றான்.
விளக்கம் : நான் அவனுடனே பொருவதனால் சூழ்ச்சியுந் துணையும் வேண்டாமையோடு, நானும் சென்று பொரவேண்டியதில்லை ; நந்தட்டன் ஒருவனே போதும்; மேலும் இவனைக் கண்டவுடனே கட்டியங்காரன் கெடுவான் - என்று கூறினானாகக் கொள்க. (37)
------------
-
1926. கெலுழனோ நந்த னென்னாக்
கிளரொளி வனப்பு னானைக்
கலுழத்தன் கையாற் றீண்டிக்
காதலிற் களித்து நோக்கி
வலிகெழு வயிரத் தூண்போற்
றிரண்டுநீண் டமைந்த திண்டோள்
கலிகெழு நிலத்தைக் காவா
தொழியுமோ காளைக் கென்றாள்.
விளக்கம் : காளை : சீவகன். கலி - கட்டியங்காரன். தந்தென வருவிக்க. கெலுழன் - கலுழன்; கருடன். கலுழ - மனமுருகும்படி. இத் திண்டோள் என்க. ஒழியுமோ என்புழி ஓகாரம் எதிர்மறை அதன் உடன்பாட்டுப் பொருளை வலியுறுத்தி நின்றது. காளைக்கு; முன்னிலைப் படர்க்கை. (38)
------------
-
1927. இடத்தொடு பொழுது நாடி
யெவ்வினைக் கண்ணு மஞ்சார்
மடப்பட லின்றிச் சூழ
மதிவல்லார்க் கரிய துண்டோ
கடத்திடைக் காக்கை யொன்றே
யாயிரங் கோடி கூகை
யிடத்திடை யழுங்கச் சென்றாங்
கின்னுயிர் செகுத்த தன்றே.
விளக்கம் : இடம் - தகுந்த இடம். பொழுது - தகுந்த பொழுது. ஞாலங் கருதினுங் கைகூடும், காலம் கருதி இடத்தாற் செயின் என்றார் வள்ளுவனாரும் (குறள். 484) ஆயிரங்கோடி காக்கை என்றது மிகுதிக்கோர் எண் காட்டியவாறு. எண்ணிறந்த காக்கை என்றவாறு.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள். 481)
என்றார் வள்ளுவனாரும். (39)
------------
-
1928. இழைபொறை யாற்ற கில்லா
திட்டிடை தளர நின்ற
குழைநிற முகத்தி னார்போற்
குறித்ததே துணிந்து செய்யார்
முழையுறை சிங்கம் பொங்கி
முழங்கிமேற் பாய்ந்து மைதோய்
வழையுறை வனத்து வன்க
ணரிவலைப் பட்ட தன்றே.
விளக்கம் : மடம் பாடல் என்பது, மடப்படல் என வந்தது விகாரம் காலாழ் களரின் நரியடும் (குறள். 50) என்றார் தேவர். (40)
------------
-
1929. ஊழிவாய்த் தீயொ டொப்பான்
பதுமுக னுரைக்கு மொன்னா
ராழிவாய்த் துஞ்ச மற்றெம்
மாற்றலா னெருங்கி வென்று
மாழைநீ ணிதியந் துஞ்சு
மாநிலக் கிழமை யெய்தும்
பாழியாற் பிறரை வேண்டேம்
பணிப்பதே பாணி யென்றான்.
விளக்கம் : எய்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று. பாழியேம் என்றும் பாடம். ஊழிவாய்த்தீ - ஊழிமுடி வினுலகத்தைஅழிக்கும் நெருப்பு. ஆழி - சக்கரப்படையுமாம். குருதிக் கடலிடத்தே என்றுமாம். துஞ்ச - இறந்துபட. மாழை - பொன். பாழி - வலிமை. (41)
------------
-
1930. பொருவருங் குரைய மைந்தர் பொம்மென வுரறி மற்றித்
திருவிருந் தகன்ற மார்பன் சேவடி சோந்த யாங்க
ளெரியிருந் தயரு நீர்மை யிருங்கதி ரேற்ற தெவ்வர்
வருபனி யிருளு மாக மதிக்க வெம் மடிக ளென்றார்.
விளக்கம் : குரைய : அசை. பொம்மென : குறிப்புமொழி. திருவிருந்த மார்பன் எனச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. மார்பன் : சீவகன். இருங்கதிர் - ஞாயிறு. தெவ்வர் - பகைவர். (42)
------------
-
வேறு
1931. கார்தோன்ற வேம லருமுல்லை கமலம் வெய்யோன்
றோதோன்ற வேம லருஞ்செம்மனின் மாமன் மற்றுன்
சீர்தோன்ற வேம லருஞ்சென்றவன் சொல்லி னோடே
பார்தோன்ற நின்ற பகையைச் செறற் பாலையென்றாள்.
விளக்கம் : கார் - கார்ப்பருவம். கமலம் - தாமரை. வெய்யோன் - ஞாயிறு. செம்மல் : அண்மைவிளி. மாமன் என்றது, கோவிந்தனை. நின்சீர் தோன்றிய அளவிலேயே நின் மாமன் (மனம்) மலரும் என்க. பார்தோன்ற - உலகம் விளங்கும்படி. பகை : கட்டியங்காரன். (43)
------------
-
1932. நன்றப் பொருளே வலித்தேன்மற் றடிக ணாளைச்
சென்றப் பதியு ளெமர்க்கேயேன துண்மை காட்டி
யன்றைப் பகலே யடியேன்வந் தடைவ னீமே
வென்றிக் களிற்று னுழைச்செல்வது வேண்டு மென்றான்.
விளக்கம் : கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் (தொல். குற்றியலுகரம். 78) என்றதனால், நும் என்னுஞ்சொல் நீயிரென முழுவதுந் திரியாது, மகரம் நிற்பத் திரிந்து நீம் என நின்றது; இனி, நீ மென்பது ஒருதிசைச் சொல்லுமாம்; ஏகாரம் : பிரிநிலை என்பர் நச்சினார்க்கினியர். நீம் என்பது திசைச்சொல் என்பதே பொருந்தும். மற்றும் அவர் இளையவண் மகிழ்வ கூறி (சீவக. 2101) என்னுஞ் செய்யுளானும் வீட்டகந்தோறும் (சீவக. 2610) என்னுஞ் செய்யுளானும், அன்றைப் பகலே வருவேன் என்றல் பொருந்தாமை யுணர்க என்றுகூறி, ஒருநாளிலிருந்து மற்றைநாளே போந்து அடியேன் அடைவேன் என்றும் பொருள் கூறுவர். (44)
------------
-
1933. வேற்றைவந் தன்ன நுதிவெம்பாற் கான முன்னி
நூற்றைவ ரோடு நடந்தாணுதி வல்வின் மைந்தன்
காற்றிற் பரிக்குங் கலிமான் மிசைக் காவ லோம்பி
யாற்றற் கமைந்த படையோடதர் முன்னி னானே.
விளக்கம் : நுதி - முன்பு என்றும் பொருள்படும். மதியேர் நுதலார் நுதிக் கோலஞ் செய்து (சிற். 360) என்றாற்போல. ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு. பகைவர்க்கஞ்சி அவன் படையைக் காவலிட்டபின்பு, விசயைதான் தனக்குக் காவலாகத் தன்னைப்போல நோன்பு கொண்ட மகளிராய்ப் பள்ளியிலுறைவார் நூற்றைவரோடு போனாள். தவஞ் செய்வார் தனியே போதல் மரபன்றென்று. இனி, வல்வின் மைந்தன் முன்பு படையோடே மான் மிசையிலே ஏறி அதரை முன்னினவன் தேவிக்குக் காவல் ஓம்ப, அவள் நோன்பு கொண்ட மகளிர் நூற்றைவரோடே நடந்தாள் என்றுமாம். இனி நடந்தான் என்று பாடம் ஓதி, முன்பு படையோடே அதர் முன்னினவன், மாமிசையிலுள்ளாரைத் தேவிக்குக் காவலாக ஓம்பித் தான் நூற்றைவரோடும் போனான் என்பாருமுளர். (45)
------------
-
1934. மன்றற் கிடனா மணிமால்வரை மார்பன் வான்க
ணின்றெத் திசையு மருவிப்புன னீத்த மோவாக்
குன்றுங் குளிர்நீர்த் தடஞ்சூழ்ந்தன கோல யாறுஞ்
சென்றப் பழனப் படப்பைப்புன னாடு சேர்ந்தான்.
விளக்கம் : மன்றல் - திருமணம். இடனாய் என்பது ஈறுகெட்டு நின்றது. வான்கண் நின்று என்புழிச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க. வான் : ஆகுபெயர். கண் - இடம், சூழ்ந்தன : முற்றெச்சம். படப்பை - தோட்டம். ( 46)
------------
-
வேறு
1935. காவின்மேற் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியு ளினமல ருயிர்த்த வாசமும்
பூவிரி கோதையர் புனைந்த சாந்தமு
மேவலாற் கெதிரெதிர் விருந்து செய்தவே.
விளக்கம் : தெகிழ்ந்த - நெகிழ்ந்த. சாந்தம் - சந்தனங் குங்குமம் முதலியன. ஏ - எய்தற்றொழில். ( 47)
------------
-
1936. கரும்பின்மேற் றொடுத்ததேன் கலிகொ டாமரைச்
சுரும்பின்வாய்த் துளித்தலிற் றுவைத்த வண்டொடு
திருந்தியாழ் முரல்வதோர் தெய்வப் பூம்பொழிற்
பொருந்தினான் புனைமணிப் பொன்செய் பூணினான்.
விளக்கம் : கலி - இசை. இனி தழைத்தலையுடைய தாமரையுமாம். சுரும்பு - வண்டு; யாழ்போல முரல்வது என்க. பூணினான் : சீவகன். ( 48)
------------
-
1937. பொறைவிலங் குயிர்த்தன பொன்செய் மாமணிச்
செறிகழ லிளைஞருஞ் செல்ல னீங்கினார்
நறைவிரி கோதையர் நாம வேலினாற்
கறுசுவை நால்வகை யமுத மாக்கினார்.
விளக்கம் : விலங்கு - குதிரை முதலியன. விலங்கு பொறையுயிர்த்தன என மாறுக. செல்லல் - துன்பம்; ஈண்டு வழி நடந்த வருத்தம். நாமம் - அச்சம். அறுசுவை - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பன. நால்வகை அமுதம் - உண்பன, தின்பன. பருகுவன, நக்குவன என்பன. ( 49)
------------
-
1938. கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும்
புட்டில்வாய்ச் செறித்தனர் புரவிக் கல்லவு
நெட்டிருங் கரும்பொடு செந்நென் மேய்ந்துநீர்
பட்டன வளநிழற் பரிவு தீர்ந்தவே.
விளக்கம் : கட்டி - கருப்புக்கட்டி. புழுக்குங் காணம் - வேகவைக்கும் கொள். புட்டில் - குதிரைக்கு உணவிட்டுக் கட்டும் மொக்கணி. அல்லவும் - ஏனைய எருது முதலியன. ( 50)
------------
-
1939. குழிமதுக் குவளையங் கண்ணி வார்குழற்
பிழிமதுக் கோதையார் பேண வின்னமு
தழிமதக் களிறனா னயின்ற பின்னரே
கழிமலர் விழித்தகண் கமலம் பட்டவே.
விளக்கம் : இன்னமுது - உணவு. களிறனான் : சீவகன். அயின்ற பின்னர் கழிமலர் விழித்த கண் கமலம் பட்டவே, என்றது, அமண் சமயத்தினர் இரவின்கண் உண்ணாமையை விளக்கி நின்றது. கழிமலர் கண்விழித்த, கமலம் கண் பட்ட என ஒட்டுக. இவை ஞாயிறு பட்டது என்னும் குறிப்புடையன. (51)
------------
-
1940. எரிமணி யிமைத்தன வெழுந்த தீம்புகை
புரிநரம் பிரங்கின புகன்ற தீங்குழ
றிருமணி முழவமுஞ் செம்பொற் பாண்டிலு
மருமணி யின்குர லரவஞ் செய்தவே.
விளக்கம் : சீவகன் தங்கியிருந்த பொழிலிற் குதிரைகளும் இருந்தன ஆதலால் குதிரைகட்குக் கட்டிய மணி கொள்ளப்பட்டது. (52)
------------
-
1941. தெளித்தவின் முறுவலம் பவளஞ் செற்றவாய்க்
களிக்கயன் மழைக்கணார் காமங் காழ்கொளீஇ
விளித்தவின் னமிர்துறழ் கீதம் வேனலா
னளித்தபின் னமளியஞ் சேக்கை யெய்தினான்.
விளக்கம் : காமங்காழ் கொளீஇ அமளியஞ் சேக்கை எய்தினான் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். (53)
-----------
-
1942. தீங்கரும் பனுக்கிய திருந்து தோள்களும்
வீங்கெழிற் றோள்களு மிடைந்து வெம்முலை
பூங்குளிர் தாரொடு பொருது பொன்னுக
வீங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான்.
விளக்கம் : வியநெறியால் விடுத்தான் (சீவக. 1884) என்றலின், இவன் நுகர்தற்குரிய மகளிர் பலரும் வந்தாரென்று கொள்க. (54)
------------
-
1943. கனைகதிர்க் கடவுள் கண் விழித்த காலையே
நனைமலர்த் தாமரை நக்க வண்கையாற்
புனைகதிர் திருமுகங் கழுவிப் பூமழை
முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான்.
விளக்கம் : ஞாயிறு கண்விழித்த காலை என்றுங் கொள்க. நனை மலர் : முதற்கேற்ற அடை; பெய்து என வருவித்துப் பூமழை பெய்து எனக் கொள்க. முனைவனை வணங்கினான் எனக்கொண்டு இரண்டனுருபு மயக்கம் எனினும் ஆம். (55)
------------
-
1944. நாட்கடன் கழித்தபி னாம வேலினான்
வாட்கடி யெழினகர் வண்மை காணிய
தோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார்
வேட்பதோர் வடிவொடு விரைவி னெய்தினான்.
விளக்கம் : நாட்கடன்-விடியற்காலத்தே செய்தற்குரிய கடமைகள். வாட்படையினது காவலையும் அழகையும் உடைய நகருமாம். காணிய - காணுதற்கு, மணிவளை மாதரார், தொய்யின் மாதரார் எனத் தனித்தனி கூட்டுக. (56)
------------
-
1945. அலத்தகக் கொழுங்களி யிழுக்கி யஞ்சொலார்
புலத்தலிற் களைந்தபூ ணிடறிப் பொன்னிதழ்
நிலத்துகு மாலைகா றொடர்ந்து நீணகர்
செலக்குறை படாததோர் செல்வ மிக்கதே.
விளக்கம் : அலத்தகக் கொழுங்களி - இங்குலிகமாகிய கொழுவிய குழம்பு. பூண் - அணிகலம். நீணகர் : வினைத்தொகை; இராசமாபுரம். (57)
------------
-
வேறு
1946. கத்தி கைக்கழு நீர்கமழ் கோதையர்
பத்தி யிற்படு சாந்தணி வெம்முலை
சித்தி யிற்படர் சிந்தையி னாரையு
மித்தி சைப்படர் வித்தி நீரவே.
விளக்கம் : கத்திகை - மாலை தொடுக்கும் வகையில் ஒன்று; குருக்கத்தியும் ஆம். வஞ்சி - ஒருவகைக் கொடி. நுசுப்பினார் - இடையினையுடைய மகளிர். பஞ்சி - அலத்தகம். பாடகம் - ஒருகாலணி. இஞ்சி - மதில். (58)
------------
-
1947. வஞ்சி வாட்டிய வாண்மி னுசுப்பினார்
பஞ்சி யூட்டிய பாடகச் சீறடி
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாமலா
லிஞ்சி வட்ட மிடம்பிற் தில்லையே
------------
-
1948. மின்னி னீள்கடம் பின்னெடு வேள்கொலோ
மன்னு மைங்கணை வார்சிலை மைந்தனோ
வென்ன னோவறி யோமுரை யீரெனாப்
பொன்னங் கொம்பனை யார்புலம் பெய்தினார்.
விளக்கம் : நெடுவேள் - முருகன். மைந்தன் : காமன். என்னனோ - யாவனோ. புலம்பு - வருத்தம். (60 )
------------
-
1949. விண்ண கத்திளை யானன்ன மெய்ப்பொறி
பண்ண லைக்கழி மீன்கவர் புள்ளென
வண்ண வார்குழ லேழையர் வாணெடுங்
கண்ணெ லாங்கவர்ந் துண்டிடு கின்றவே.
விளக்கம் : இது தொழில் உவமம். இளையான் : முருகன். மெய்ப்பொறி : உடலின்கண் உத்தம விலக்கணங்கள். அண்ணலை : சீவகனை. ஏழையர் - மகளிர். உண்டிடுகின்ற: ஒருசொல். (61)
------------
-
வேறு
1950. புலாத்தலைத் திகழும் வைவேற்
பூங்கழற் காலி னானை
நிலாத்தலைத் திகழும் பைம்பூ
ணிழன்மணி வடத்தோ டேந்திக்
குலாய்த்தலைக் கிடந்து மின்னுங்
குவிமுலை பாய வெய்தாய்க்
கலாய்த்தொலைப் பருகு வார்போற்
கன்னியர் துவன்றி னாரே.
விளக்கம் : ஏந்திக் குவிந்த முலை எனக் கூடடுவர் நச்சினார்க்கினியர். புலா - புலானாற்றம் : ஆகுபெயர். வை - கூர்மை. காலினானை: சீவகனை. ஒலை - ஒல்லை; விரைந்து . துவன்றினார் - நெருங்கினார். (62)
------------
-
1951. வேனெடுங் கண்க ளம்பா
விற்படை சாற்றி யெங்குந்
தேனெடுங் கோதை நல்லார்
மைந்தனைத் தெருவி லெய்ய
மானெடு மழைக்க ணோக்கி
வானவர் மகளு மொப்பாள்
பானெடுந் தீஞ்சொ லாளோர்
பாவைபந் தாடு கின்றாள்.
விளக்கம் : அம்பா - அம்பாக. சாற்றி - அமைத்து. மைந்தனை : சீவகனை. மானெடுங்கண், மழைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. நோக்கி - நோக்கினையுடையாள். பாவை - ஈண்டு விமலை. (63)
------------
-
வேறு
1952. குழன்மலிந்த கோதைமாலை பொங்கவெங் கதிர்ம்முலை
நிழன்மலிந்த நோவடந்நி ழற்படப்ப டைத்தர
வெழின்மணிக்கு ழைவில்வீச வின்பொனோலை மின்செய
வழன்மணிக்க லாபமஞ்சி லம்பொடார்ப்ப வாடுமே.
------------
-
1953. அங்கையந்த லத்தகத்த வைந்துபந்த மர்ந்தவை
மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்த லின்றியே
செங்கயற்கண் புருவந்தம்மு ளுருவஞ்செய்யத் திரியுமே.
விளக்கம் : வண்டு போலப் பொங்கி மீதெழுந்து போய் உடனே வந்து என மாற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர். (65)
------------
-
1954. மாலையுட்க ரந்தபந்து வந்துகைத்த லத்தவா
மேலநாறி ருங்குழற்பு றத்தவாண்மு கத்தவா
நூலினோநு சுப்புநோவ வுச்சிமாலை யுள்ளவா
மேலெழுந்த மீநிலத்த விரலகைய வாகுமே.
விளக்கம் : கரந்த - மறைந்த. ஏலம் - மயிர்ச்சாந்து. இருங்குழல் - கரிய கூந்தல். நூலின்நேர் என்புழி நேர் உவமச்சொல். விரல - விரலிடத்துளளன, கைய - கையிடத்துள்ளன. (66)
------------
-
1955. கொண்டுநீங்கல் கோதைவேய்தல்
குங்குமம்ம ணிந்துரா
யெண்டிசையு மேணியேற்றி
லங்கநிற்றல் பத்தியின்
மணிடி லம்வ ரப்புடைத்தன்
மயிலிற்பொங்கி யின்னணம்
வண்டுந்தேனும் பாடமாதர்
பந்துமைந்துற் றாடுமே.
விளக்கம் : அடித்த பந்து வந்து வீழுதற்குமுன் கோதை வேய்தலும் குங்குமம் அணிதலும் செய்து என்பதாம். ஏணியேற்று - படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தல். தேனுகர்தற்குச் செவ்விபெறாமல் வண்டுந்தேனும் பாட என்க. பத்தியின் மண்டிலம் வரப்புடைத்தல் என்பது, ஒழுங்காக வட்டமாகத் தன்னைச்சுற்றி வரும்படி பந்துகளையடித்தல். மைந்து - வலிமை. மேற்கூறியவாறு வலிமையுடன் பந்ததாடினாள் என்க. (67)
------------
-
1956. பந்துமைந்துற் றாடுவாள்ப ணைம்முலையிற் குங்குமஞ்
சுந்தரப்பொ டிதெளித்த செம்பொற்சுண்ணம் வாணுதற்
றந்துசுட்டி யிட்டசாந்தம் வேரின்வார்ந்தி டைம்முலை
யிந்திரதி ருவினெக்கு ருகியென்ன வீழ்ந்தவே.
விளக்கம் : மைந்து - வலிமை. ஆடுவாள் : வினையாலணையும் பெயர். வேரின் - வியர்வையினான். இந்திரதிருவில் - வானவில். பன்னிறமுடைமையால் இஃதுவமமாயிற்று. (68)
------------
-
1957. நன்மணிச்சி லம்பினோடு
கிண்கிணிந்ந கந்நகும்
மின்மலர்ந்த முல்லைமாலை
நக்கிமிக்கி றந்தெழுந்து
பொன்மலர்ந்த கோதைபந்து
பொங்கியொன்று போந்துபாய்ந்து
மின்மலர்ந்த வேலினான்முன்
வீதிபுக்கு வீழ்ந்ததே.
விளக்கம் : நக - விளங்க. கிண்கிணி நகநகும் எனற்பாலது வண்ணம் நோக்கி நகரம் இரட்டித்துக் கிண்கிணிந் நகந்நகும் என நின்றது. மிக்கிறந்து தன் எல்லையைக் கடந்து சென்று. வேலினான்: சீவகன். (69)
------------
-
1958. வீழ்ந்தபந்தின் மேல்விரைந்து
மின்னினுண் ணுசுப்பினாள்
சூழ்ந்தகாசு தோன்றவந்து
கின்னெகிழ்ந்து பூங்குழ
றாழ்ந்துகோதை பொங்கிவீழ்ந்து
வெம்முலைக டைவரப்
போழ்ந்தகன்ற கண்ணிவந்து
பூங்கொடியி னோக்கினாள்.
விளக்கம் : நுசுப்பினாள் ஆகிய கண்ணி என்க. காசு : ஆகுபெயர். துகின்னெகிழ்ந்து - னகரம் வண்ணத்தான் விரிந்தது. பூங்கொடி போல என்க. (70)
------------
-
வேறு
1959. மந்தார மாலை மலர்வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன்
கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப்
பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள்
செந்தாம ரைமேற் றிருவின்னுரு வெய்தி நின்றாள்.
விளக்கம் : இமையாது பந்தெங்கே என்று நோந்கலின், திருமகளைப் போன்றிருந்த அவள் இமைத்தற் குறை நீங்கித் திருமகளின் உருவத்தையே பெற்றவள் ஆனாள் என்க. நச்சினார்க்கினியர், பந்திலே ஆர்வஞ் செய்து அவனைக் காண்டலின் என இச் செய்யுளிலேயே சீவகனைக் கண்டதாக அமைப்பர். அதனாற் போதிய பயனின்று. (71)
------------
-
1960. நீர்தங்கு திங்கண் மணிநீணிலந் தன்னு ளோங்கிச்
சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் டுவலை மாந்திக்
கார்தங்கி நின்ற கொடிகாளையைக் காண்ட லோடு
பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே.
விளக்கம் : திங்கள்மணி - சந்திரகாந்தக்கல். திருநீர் - அழகியநீர். துவலை - துளி. கார் - பசுமை. கொடி : விமலை. காளையை : சீவகனை. பீர் - பசலை. பெய்யா மலர் - பழம்பூ. (72)
------------
-
1961. பெண்பா லவர்கட் கணியாய்ப்பிரி யாத நாணுந்
திண்பா னிறையுந் திருமாமையுஞ் சோந்த சாயல்
கண்பாற் கவினும் வளையுங்கவர்ந்த திட்ட கள்வன்
மண்பா லிழிந்த மலரைங்கணை மைந்த னென்றாள்.
விளக்கம் : சாயல் : பண்பாகுபெயர். நாணமே பெண்மைக்குப் பேரழகு தருவதாகலின், பெண்பாலவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாண் என்றார். நிறை - நெஞ்சினை நிறுத்தும் தன்மை. செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான என்றார் தொல்காப்பியனாரும் (தொல். 1115) நாணும், நிறையும், மாமையும், சாயலும், கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். (73)
------------
-
1962. என்றா ணினைந்தா ளிதுபோலுமிவ் வேட்கை வண்ணஞ்
சென்றே படினுஞ் சிறந்தார்க்கு முரைக்க லாவ
தன்றா யரிதா யகத்தேசுட் டுருக்கும் வெந்தீ
யொன்றே யுலகத் துறுநோய்மருந் தில்ல தென்றாள்.
விளக்கம் : என்றாள் : வினையாலணையும் பெயர்; முற்றெச்சமாம். பண்டு கண்ட தின்மையால் இதுபோலும் இவ்வேட்கை வண்ணம் என்றாள். புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் இதுவோ அன்னை காமத்தியற்கை என வரும் மணிமேகலை கூற்றையும் நினைக (மணி. 5 : 89 - 90). சிறந்தார் என்பதற்கு நட்பிற் சிறந்தார் எனப் பொருள் கூறுவதே பொருத்தம்பகும். குரவரிடத்திற் காமத்தியற்கை கூறுவது முறையன்று ஆதலின். ( 74)
------------
-
1963. நிறையாது மில்லை நெருப்பிற்சுடுங் காம முண்டேற்
குறையா நிறையி னொருகுன்றியுங் காம மில்லை
பறையா யறையும் பசப்பென்று பகர்ந்து வாடி
யறைவாய்க் கடல்போ லகன்காம மலைப்ப நின்றாள்.
விளக்கம் : யாதும் - சிறிதும். காமமுண்டாயின் நிறையில்லை, நிறை உண்டாயின் காமமில்லை என்க. பறையா - பறையாக. பசப்புப் புறத்தார்க்கு உணர்த்தலின் பறை உவமமாயிற்று. அறை - முழக்கம். ( 75)
------------
-
1964. நெஞ்சங் கலங்கி நிறையாற்றுப் படுத்து நின்றா
ளஞ்செங் கழுநீ ரலாந்தம்மதி வாண்மு கத்தே
வஞ்சம் வழங்கா தவன்கண்களி னோக்க மாதோ
தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது காம வெந்தீ.
விளக்கம் : நின்றாள் : வினையாலணையும் பெயர்; வழங்காதவன் என்பதுமது. மாது, ஓ: இரண்டும் அசை. தஞ்சம் - எளிமை. (76)
------------
-
1965. பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய
வேவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந் தென்கொ லென்னா
மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்
கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே.
விளக்கம் : நச்சினார்க்கினியர் குழைந்து என்னுஞ் சொல்லை என்னா என்னுஞ் சொல்லின்பின் பெய்து, குழைந்து வேறு மருந்தின் மையின், இவளே மருந்தென்று அவளை மீண்டும் பார்த்து, ஆண்டுப் பெறற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகிய நோக்காலே உயிரைப் பெற்று ஆற்றாமையிலே நின்றான் என்பர். மற்றும், இதனால், முன்பு போலப் பொது நோக்குப் பெறின், இறந்துபடுதலுக்கு மருந்தன்றென்று கருதினானாம் என்பர். ( 77)
------------
-
1966. காமக் கடுநோய்க் கனல்சூழ்ந்துடம் பென்னு மற்றிவ்
வீமத்தி னோடு முடனேசுட வேக லாற்றான்
றூமத்தி னார்ந்த துகிலேந்திய வல்கு றாதை
பூமொய்த் திருந்த கடைமேற்புலம் புற்றி ருந்தான்.
விளக்கம் : ஈமம் - விறகு. ஈமத்தினோடு உயிரைச் சுட என்க. அல்குல் : விமலை. புலம்புற்று - வருந்தி. ( 78)
------------
-
வேறு
1967. நாவிநோய் செய்த நறுங்குழலா ணாணீலக்
காவிநோய் செய்த கருங்கயற்கட் பூங்கொடியென்
னாவிநோய் செய்த வணங்கென் றறியாதேன்
மேவிநோய் தீர வினாத்தருவா ரில்லையே.
விளக்கம் : கயற்கண் : பெயர். கொடியைத் தெய்வமென்றே கருதி நறுங்குழலாளாக உணராமற் பின்னும் மயங்கினேனை என உரைப்பர் நச்சினார்க்கினியர். ( 79)
------------
-
1968. தெண்ணீர்ப் பனிக்கயத்து மட்டவிழ்ந்த தேங்குவளைக்
கண்ணீர்மை காட்டிக் கடல்போ லகன்றவென்
னுண்ணீர்மை யெல்லா மொருநோக்கி னிற்கவர்ந்த
பெண்ணீர்மை மேனாட் பிறந்து மறியுமோ.
விளக்கம் : இன்று என்னை வருத்துதற்கே புதியதாய்த்தோன்றியது என்று கருதினான். கயம் - குளம். மட்டு-தேன். கண்ணீர்மை-கண்ணின் தன்மை. ஒரு நோக்கினின் அவள் மனத்தினாய காமக் குறிப்பினை வெளிப்படுக்கின்ற நோக்கு. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு, நோய்நோக்கொன்று அந்நோய் மருந்துஎன்றார் திருவள்ளுவனாரும் (குறள். 1091) ( 80)
------------
-
1969. கருங்குழலுஞ் செவ்வாயுங் கண்மலருங் காது
மரும்பொழுகு பூண்முலையு மாருயிர்க்கே கூற்றம்
விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும்
பெருந்திருவி யார்மகள் கொல் பேரியா தாங்கொல்லோ.
விளக்கம் : பெயர் கூற்றமோ? பெண்ணோ? என்று நினைத்தான். கருங்குழலுஞ் செவ்வாயும் என்புழிச் செய்யுளின்பம் உணர்க. இவற்றுள் ஒன்றே உயிர்க்குக் கூற்றம் ஆதல் அமையுமே உயிர்க்கு இத்தனை கூற்றமும் வேண்டுமோ என்பான் ஆருயிர்க்கே கூற்றம் என்றான். விருந்தினராய் வந்தார் - புதியராய் வந்தோர். ( 81)
------------
-
1970. வாருடுத்த வெம்முலைய
வண்டார்பூங் கோதையைப்
போகொடுத்தார் பெண்ணென்றார்
கூற்றமே யென்றிட்டாற்
றாருடுத்த நீண்மார்பர்
தம்முயிர்தாம் வேண்டுபவே
னீருடுத்த விந்நகரை
நீத்திட டொழியாரோ.
விளக்கம் : பெயரிட்ட தந்தையார் பெண் ணென்று பெயர் கொடுத்தமையாலேயே ஆடவர் இந்நகரை விட்டுப் போகாதிருக்கின்றனர் என்று கருதினான். தார் உடுத்த நீண்மார்பர் என்ற பெயர் தந்தையையே சுட்டிற் றென்பர் நச்சினார்க்கினியர். பிற ஆடவர்க்கே அவள் காமமூட்டிக் கூற்றமாவாள். பேர் கொடுத்தார் : ஒருவரைக் கூறும் பன்மை. ( 82)
------------
-
1971. பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடுந்
திங்கண் முகத்திலங்க்ச் செவ்வா யெயிறிலங்கக்
கொங்குண் குழறாழக் கோட்டெருத்தஞ் செய்தநோக்
கெங்கெங்கே நோக்கினு மங்கங்கே தோன்றுமே.
விளக்கம் : இஃது எதிர் பெய்து பரிதல் ; முன் பெற்ற அரு நோக்கினை வியந்தான். ( 83)
------------
-
1972. வாளார் மதிமுகத்த வாளோ வடுப்பிளவோ
தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள்வேலோ வம்போ கயலோ நெடுங்கண்ணோ
கோளார்ந்த கூற்றமோ கொல்வான் றொடங்கினவே.
விளக்கம் : அருணோக்கத்தினாற் கண், கயல், வடுப்பிளவு, கழுநீர், நீலம், தாமரை எனவுந் தக்கன; பொது நோக்கத்தினால், கூற்றம், வாள், வேல், அம்பு எனவுந் தக்கன - இவ்விரு பகுதியும் உடையன என்று கருதியதாக நச்சினார்க்கினியர் கூறுவர். ( 84)
------------
-
1973. என்றாங்கொன் மாதர் நலமெய்துவ தென்று சிந்தித்
தொன்றார்க் கடந்தான் புலம்புட்கொண் டிருத்த லோடு
மன்றே யமைந்த பசும்பொன்னட ராறு கோடி
குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்த னென்பான்.
விளக்கம் : குளிர் : திசைச்சொல். மாதர் நலம் எய்துவது என்றாங்கொல் என மாறுக. ஒன்றார் - பகைவர். கடந்தான் : சீவகன். அடர்ப்பசும்பொன் என மாறுக. அடர் - தகடு. குளிர், திசைச்சொல் என்பர் நச்சினார்க்கினியர். குளிர் என்பதற்கு இருக்கை என்பது பொருள் அவர் கருத்துப்படி. இனி, பைங்கதிர் மதியிற்றெள்ளி என்புழிப்போலச் சாகரம் என்னும் பெயர்க்கேற்ற அடையாய் நின்றது எனினுமாம். ( 85 )
------------
-
1974. திருமல்க வந்த திருவேயெனச் சோந்து நாய்கன்
செருமல்கு வேலாய்க் கிடமாலிது வென்று செப்ப
வரிமல்கி வண்டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்த
னெரிமல்கு செம்பொ னிலமாமனொ டேறி னானே.
விளக்கம் : திருவே என்று உவப்பின்கண்பால் மயங்க உவமித்தார். திரு இரண்டனுள் முன்னது, செல்வம்; பின்னது, திருமகன்; சீவகனுக்கு உவமை. இடமால் என்புழி ஆல் அசை. வண்டு மல்கி உண்டு வரி அறை மலர் என இயைக்க. வரி ஒருவகைப் பண். மாமன் : சாகரதத்தன். ( 86)
------------
-
1975. நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்க நாளு
மம்பொன் னகரு ளமைந்தேன்மற் றெனக்க மைந்தாள்
கம்பம் மிலாதாள் கமலைக்கு விமலை யென்பாள்
செம்பொன் வியக்கு நிறத்தாடிரு வன்ன நீராள்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். நம்பன் : விளி. இடை - செவ்வி. நகர் - இராசமாபுரம். அமைந்தாளாகிய விமலை. கம்பமிலாதாளாகிய விமலை எனத் தனித்தனி கூட்டுக. பொன்னோ என்று வியத்தற்குரிய நிறத்தான் என்க. ( 87)
------------
-
1976. பூம்பாவை வந்து பிறந்தாளப்
பிறந்த போழ்தே
யாம்பால வெல்லா மறிவாரன்
றெழுதி யிட்டார்
தும்பியாது மில்லாக் குளம்போன்றதென்
றோமில் பண்டங்
கூம்பாத செல்வக் கொடியேயிது
கேண்மோ வென்றான்.
விளக்கம் : கேண்மோ, மோ : முன்னிலையசை. கொடி - ஒழுங்கு ; கொடிக் கூரை (புறநா. 22) என்றார் பிறரும். பூம்பாவை: விமலை. பிறந்த அப்பொழுதே என மாறுக. தூம்பு - ஈண்டு நீர் கழியும் வழி. தோம் - குற்றம். ( 88)
------------
-
1977. மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும்
வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா
தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்ப
நங்கைக் கியன்ற நறும்பூவணைப் பள்ளி யென்றான்.
விளக்கம் : மற்று : அசை. மங்கைக்கு : விமலைக்கு. உரியான் - உரிய கணவன். வங்கம் நிதியம் - மரக்கலத்தாலீட்டப்பட்ட பொருள் என்க. மற்று அன்றி வீழா என்பது அவளுக்குரிய கணவன் வந்தாலன்றிப் பொருள் சேராது என்பதைக் காட்டியது. மார்பம் பூவணைப்பள்ளியாம் என்க. ( 89)
------------
-
1978. ஏழாண்டின் மேலு மிரண்டாண்டிரண் டெய்தி நின்றாள்
வீழா நிதியு முடன்வீழ்ந்தது வில்வ லாய்க்கே
யூழாயிற் றொல்கு நுசுப்பஃக வுருத்து வீங்கிச்
சூழாரம் வைத்த முலையாணலஞ் சூழ்க வென்றான்.
விளக்கம் : ஏழண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு - பதினோராண்டு ஒல்கு நுசுப்பு - துவளும் இடை. அஃக - குறைய. ஆரம் - முத்துமாலை. ( 90)
------------
-
வேறு
1979. ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென வேந்தலைத்
தேற்றி னான்றிரு மாநலஞ் செவ்வனே
தோற்ற மாதருந் தோன்றலைக் காண்டலு
மாற்றி னாடன தாவியுந் தாங்கினாள்.
விளக்கம் : திரு மா நலம் - திருமகளின் பேரழகு எனினும் ஆம். வீழ்ந்தது என : வீழ்ந்தென : தொகுத்தல் விகாரம். இரத்தற்கு ஏந்திய கையில் இடுவோர் கைத்தொடி வீழ்ந்தாற் போல என்பது கருத்து. ஏந்தலை : சீவகனை. தேற்றினான் என்றது சீவகனுக்குத் தெளிவுண்டாகுமாறு கணித நூலார் கூறியதும் அதன்படியே நிகழ்ந்ததும் கூறினான் என்றதாயிற்று. தோன்றலைக் காண்டலும் திருமாநலந் தோற்ற மாதரும் தந்தை கூறியது கேட்ட அளவின் ஆற்றினாள் ஆவியுந் தங்கினாள் என்க. ( 91)
------------
-
1980. அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற்
செம்பொற் குன்றனை யானையுஞ் சீர்பெறப்
பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ
விம்ப ரில்லாதோ ரின்ப மியற்றினார்.
விளக்கம் : மணத்தை இன்பம் என்றது கருவி ஆகுபெயர். கொம்பனையாள் : விமலை. குன்றனையான் : சீவகன். பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். இம்பர் - இவ்வுலகம். இன்பம் இயற்றினார் என்றது. திருமணம் இயற்றினர் என்றவாறு. ( 92 )
------------
-
1981. கட்டி லேறிய காமரு காளையும்
மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்
விட்டு நீங்குத லின்மையின் வீவிலா
ரொட்டி யீருடம் போருயி ராயினார்.
விளக்கம் : கட்டில் ஏறிய - பிணைப்பினையுடைய இல்வாழ்க்கையிலே, சென்ற என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்! கட்டிலேற்றுதல் ஒரு சடங்கு. மட்டு - தேன். கோதை : விமலை. உயிர் ஒன்றெனவே மனமுமொன்றென்பது போதரும். ( 93 )
------------
-
1982. நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில்
கலவங் கண்புதை யாது கனற்றலி
னுலக மூன்று முறுவிலைத் தென்பவே
புலவு வேற்கண்ணி னாண்முலைப் போகமே.
விளக்கம் : அவள் கொளுத்த அவன் கோடலிற் கனற்றுதல் அவள் மேலாயிற்று. ( 94 )
------------
-
1983. தேன வாங்கமழ் கண்ணியுந் தெவ்வர்த
மூன வாங்கதிர் வேலுறு காளையுங்
கான வாங்கடி நாறுமென் பள்ளிமேல்
வான வாம்வகை யால்வைகி னார்களே.
விளக்கம் : விண்ணுலகு இன்பம் நுகரும் இடமாகையால் அவரும் விரும்பும் வகையால் என்றார். இத்துணையும் மணம் புரிந்துகொண்ட அன்றைய நுகர்ச்சி கூறப்பட்டது. ( 95 )
------------
-
வேறு
1984. வெண்மதி நெற்றி தேய்த்து
விழுத்தழும் பிருப்ப நீண்ட
வண்ணனன் மாடத் தங்க
ணகிற்புகை யமளி யேறிப்
பண்ணமை மகர வீணை
நரம்புரீஇப் பாவை பாட
மண்ணமை முழவுத் தோளான்
மகிழ்ச்சியுண் மயங்கி னானே.
விளக்கம் : இதுமுதல் மற்றை நாளைப் புணர்ச்சி கூறுகின்றார். அதுவும் அமளி யேறி என்றதனால், நீங்யிருந்து நாட்கடன் கழித்து எய்தினா ரென்றுணர்க. இங்ஙனம் இரண்டுநாள் ஈண்டுச் சென்றமை தோன்ற, மேலே, நாளிரண்டு சென்ற (சீவக. 1995) என்றார். ( 96 )
------------
-
1985. இன்னரிச் சிலம்பொ டேங்கிக்
கிண்கிணி யிகலி யார்ப்பப்
பொன்னரி மாலை தாழப்
பூஞ்சிகை யவிழ்ந்து சோர
மின்னிருங் கலாபம் வீங்கி
மிளிர்ந்துகண் ணிரங்க வெம்பித்
துன்னருங் களிகொள் காமக்
கொழுங்கனி சுவைத்து விள்ளான்.
விளக்கம் : கனி - சாரம். தாழ்தலானும் சோர்தலானும் ஊற்றினைச் சிறிது நீங்கின கரணமாம். ( 97 )
------------
-
1986. தொழித்துவண் டிமிருங் கோதை
துணைமுலை முள்கப் பூம்பட்
டழித்துமட் டொழுகுந் தாரான்
மணிவள்ளத் தாய்ந்த தேற
லெழிற்பொலி மாதர்க் கேந்த
வினிதினி னுகர்ந்து காமக்
கொழித்திரை கடலுண் மூழ்கிக்
கோதைகண் டுயின்ற வன்றே.
விளக்கம் : தொழித்தல் - சிதறுதல். இமிரும் - முரலும். கோதை : விமலை. முள்குதல் - முயங்குதல். ( 98 )
------------
-
1987. பாசிலை சுருட்டி மைந்தன்
கொடுக்கிய பரந்து மின்னும்
தூசுலா மல்கு றீண்டத்
துயிற்கண்கள் விழித்த தோற்றம்
வாசவான் குவளை மெல்ல
வாய்விடா நின்ற தொக்கு
மேசுவ தொன்று மில்லா
விணைவட முலையி னாட்கே.
விளக்கம் : வெற்றிலை மடித்துக் கொடுத்தற் கென்றது இடக்கர். புணர்ச்சிக்கண் நாண் தோன்றலின், தூசு நெகிழ்ந்து மேற்கிடந்தமை தோன்ற உலாவும் என்றார். ( 99 )
------------
-
1988. கங்குற்பாற் புகுந்த கள்வ
னிவனெனக் கதுப்பிற் றாழ்ந்த
தொங்கலான் முன்கை யாத்துச்
சொல்லுநீ வந்த தென்ன
நங்கையான் பசித்து வந்தே
னெப்பொரு ணயப்ப தென்றாட்
கங்கலுழ் மேனி யாய்நின்
னணிநல வமிழ்த மென்றான்.
விளக்கம் : பசித்துண்பார்க்கு உணவுகள் பல என்பது தோன்ற, எப்பொருள் என்றாள். துயில் மயக்கமாதலின் தானறியாமற் புகுந்த கள்வன் என்று அசதியாடினாள். ( 100 )
------------
-
1989. செயிர்த்தவள் சிவந்து நோக்கிச்
சீறடி சென்னி சோத்தி
யயிர்ப்பதென் பணிசெய் வேனுக்
கருளிற்றுப் பொருள தென்ன
வுயிர்ப்பது மோம்பி யொன்று
முரையலை யாகி மற்றிப்
பயிர்ப்பில்பூம் பள்ளி வைகு
பகட்டெழின் மார்ப வென்றாள்.
விளக்கம் : முன்னர் நின்னலம் என்றதனால், பிறர் நலமின்றி நின்னலம் என்பது போதருதலின் அது செயிராயிற்று. நோக்கி - நோக்க. அது பொருள் என்றான், நீ இறந்துபடுக என்று நீ கூறினும் அதுவே எனக்குப் பொருள் என்பது தோன்ற. எனவே, ஊடலும் கூடலும் கூறினாரென்க. ( 101 )
------------
-
1990. உள்ளிழு துடைய வெம்பி
யுற்பல வுருவு கொண்ட
வெள்ளியிற் புனைந்த கோல
விளக்கொளி வெறுவி தாக
வள்ளிதழ்க் கோதை வல்லான்
வட்டிகை நுதியின் வாங்கிப்
பள்ளிமே லெழுதப் பட்ட
பாவைபோ லாயி னாளே.
விளக்கம் : வாங்குதல் ஈண்டு நீக்குதற்பொருளது. இனி, கட்டிலேறிய என்னுஞ் செய்யுள் முதலியவற்றை ஒருநாளைக் கூட்டமாக்கி உரைப்பாருமுளர். ( 102 )
------------
-
வேறு
1991. மங்கையர் பண்ணிய மருத யாழ்குழ
னங்கையைப் பிரியுமிந் நம்பி யின்றென
வங்கதற் கிரங்கின வாரும் பேதுறக்
கங்குல்போய் நாட்கடன் கழிந்த தென்பவே.
விளக்கம் : மருதம் - காலைப்பண். போய் - போக. பண்ணிய - இசைத்த. மருதயாழ் - மருதம் என்னும் காலைப் பண்ணை இசையாநின்ற யாழ் என்க குழல் - வேய்ங்குழல். நங்கை : விமலை; நம்பி : சீவகன் அதற்கு - அப்பிரிவிற்கு. ஆரும் - யாரும். பேது - துன்பம். போய் - போக. ( 103 )
------------
-
1992. ஏந்துபூங் கோதைக டிருத்தி யேர்படச்
சாந்துகொண் டிளமுலை யெழுதித் தையறன்
காந்தள முகிழ்விரல் கையி னாற்பிடித்
தாய்ந்தவட் கிதுசொலு மலங்கல் வேலினான்.
விளக்கம் : ஏர் - அழகு. ஏர்படத்திருத்தி என மாறுக. முலையிற்றொய்யிலெழுதி என்க. முகிழ் - அரும்பு. ஆய்ந்து - ஆராய்ந்து துணிந்து என்க. அவட்கு : விமலைக்கு. ( 104 )
------------
-
1993. பூவினுட் டாழ்குழற் பொன்செ யேந்தல்குன்
மாவினுட் டாழ்தளிர் மருட்டு மேனியாய்
காவினுட் டோழரைக் கண்டு போதர்வே
னேவினுட் டாழ்சிலை யெறிந்த கோலினே.
விளக்கம் : செய்பொன் - மேகலை. தாழ்சிலை எறிந்த கோலின் - இதனை அவள் அணித்தே சென்று விரைந்து வருவான் எனக் கூறியதாக நினைத்தற்கும், அவன் வலியிலாதான் எய்த அம்பு அவனிடத்தே திரும்பிவாராமை போலத் தான் வேறிடத்துச் செல்லுதற்கும் உவமையென எண்ணினர். ( 105 )
------------
-
1994. என்றவ னுரைத்தலு மெழுது கண்மலர்
நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின்
மன்றனா றரிவையைத் தெருட்டி மாமணிக்
குன்றனான் கொடியவள் குழைய வேகினான்.
விளக்கம் : அவன் : சீவகன். கண்மணியின் கட்பாவை என்க. மன்றல் - மணம். அரிவையை : விமலையை. குன்றனான் : சீவகன். (கொடிவள்) கொடிபோல்பவன் என்க. ( 106 )
விமலையார் இலம்பகம் முற்றிற்று.
---------------------
சீவக சிந்தாமணி: 9. சுரமஞ்சரியார் இலம்பகம்
சென்ற சீவகன் கண்டோ ரிரங்கத் தகுந்த முதுபார்ப்பனப் படிவம் கொண்டு, தண்டூன்றி நடை தளர்ந்து கூனிக் குறுவுயிர்ப் புடையனாய்ச் சுரமஞ்சரியின் மாளிகை வாயிலை எய்தினன். இவனது வருகை கண்ட வாயின் மகளிர் இரக்கமுடையராய்ச் சுரமஞ்சரியின்பாற் சென்றுணர்த்தினர். அதுகேட்ட சுரமஞ்சரியும் இரக்கமுடையளாய் அத்தகைய முதுபார்ப்பானைக் காண்டலால் நம் நோன்பிற்கு இழுக்கொன்றுமில்லை யாதலால் அவனை வரவேற்று விருந்தூட்டல் நன்று என எண்ணி விரைந்து வந்து அவ் வேதியனை வரவேற்றனள். முகமன் மொழிந்து, ஐய! நீயிர் இவண் வந்தது யாது கருதியோ? என்று வினவினள்! அவன், யான் திருநீர்க் குமரியாட ஈண்டு வந்தேன், என்றனன். அவள், அதனாற் பயன் என்ன? என்றனள். அவன் இம் மூப்பொழியும், என்றான். அதகேட்ட சுரமஞ்சரி நகைத்து இவர் பித்தர்போலும் என்று இரங்கி இவர் தம் பசி தீர்ப்பது அறமாம் என்று கருதி அம் முதுபார்ப்பானை அன்புடன் அழைத்தேகி அறுசுவை அடிசிலூட்டிப் போற்றி ஆண்டொர் பள்ளிமிசை அயர்வகலப் படுக்கச் செய்தனள்.
படுத்திருந்த பார்ப்பனன் பின்னர் ஓர் அமுத கீதம் பாடினன். அதுகேட்ட மகளிர் வியந்து மயங்கினர். தோழிமார் இவர் கீதம் சீவகசாமியின் இன்னிசையையே ஒத்துளது.என்றனர். அதுகேட்ட சுரமஞ்சரி சீவகன் என்ற பெயர்கேட்ட அளவிலே, தோழியரை நோக்கி, அன்புடையீர்! நாளையே காமன் கோட்டஞ் சென்று வழிபாடு செய்து யான் அக் காளையை விரைவில் எய்த முயல்வேன், என்றனள். அங்ஙனமே மறுநாள் சுரமஞ்சரி தோழியோடும் முதுபார்ப்பனனோடும் காமன் கோட்டத்தை அடைந்தனள். அந்தணனை அயலிலோர் அறையினுள் வைத்தனள்.
காமன் படிவத்தின் பின்புறத்தே புத்திசேனன் முன்னரே சென்று காத்திருந்தான். சுரமஞ்சரி தமியளாய்க் காமன் முன் சென்று, காமதேவா! நீ சீவகனை எனக்குத் தருவாயாயின் யான் நினக்கு மீன் கொடியும், மலரம்பும், கருப்புச் சிலையும் தேரும், ஊருந் தருகுவல்! என வேண்டி நின்றனள். அத் தெய்வப் படிமத்தின் பின்னிருந்த புத்திசேனன், நங்காய்! நீ அச் சீவகனைப் பெற்றாய். விரைந்து சென்று அவனைக் காணுதி! என்று விளம்பினன். அது தெய்வத்தின் தீங்குரலே என்று கருதினள் சுரமஞ்சரி. மீண்டுங் காமனை வணங்கி அந்தணனிருந்த அறைக்குட் சென்றாள். ஆண்டுச் சீவகன் தன்னுண்மை யுருவத்தொடு நின்றான். கண்ட மஞ்சரி துண்ணென மருண்டாள்; நாணினள். காளை அக்காரிகையைக் காதல் கூர்ந்து தழீஇயினான். நாளை மணப்பேன் என்று உறுதி கூறி விடுத்தனன்.
சுரமஞ்சரி விம்மித மெய்தித் தன்னில்லம் புக்கனள். இரு முதுகுரவரும் இந் நிகழ்ச்சியறிந்து மகிழ்ந்தனர்; தமர்க்கெலாம் உணர்த்தினர். சீவகனைத் தோழர்கள் காமதிலகனே என்று வியந்து பாராட்டினர். சுரமஞ்சரியின் தந்தை குபேரமித்திரன் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணம் செய்வித்தான். சீவகன் அற்றைநாளிரவு அவளோடு கூடி இன்புற்றிருந்தனன். மறுநாள் தன்னில்லத்திற் சென்று தந்தையுந் தாயுமாகிய கந்துக் கடனையும் சுநந்தையையும் கண்டு வணங்கி மகிழவித்தனன். காந்தருவதத்தையையும் குணமாலையையுங் கண்டு அளவளாவினன். கந்துக்கடனுக்கு மேல் நிகழ்த்தவேண்டியவற்றை உணர்த்தினன். பின்னர் அவன்பால் விடைபெற்றுக் கொண்டு தோழரோடு குதிரை வாணிகர் போன்று உருக்கொண்டு அவ்வேமாங்கதத்தினின்றும் புறப்பட்டனன்.
------------
-
1995. வாளி ரண்டு மாறு வைத்த
போன்ம ழைக்கண் மாதரார்
நாளி ரண்டு சென்ற வென்று
நைய மொய்கொள் காவினுட்
டோளி ரண்டு மன்ன தோழர்
தோன்ற லைப்பு ணாந்தபின்
றாளி ரண்டு மேத்தி நின்று
தைய னாமம் வேண்டினார்.
விளக்கம் : மாதரார் : கூடவந்த போக மாதர்கள். இனி, விமலையிடத்து ஒருநாளைக் கூட்டமே கொள்ளின், மாதரார் இருநாள் நைய, இவர்கள் தையல் யாரென வினவிப் பின்னும் சுரமஞ்சரி இடம் விடுத்ததாகக் கொள்க. எனவே விமலையிடம் ஒரு நாளும் சுரமஞ்சரியிடம் ஒருநாளும் கணக்காயின. ( 1 )
------------
-
1996. பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்
வீடு பெற்ற வரும் வீழும் வெம்மு லைவி மலையென்
றாடு வான ணிந்த சீர ரம்பை யன்ன வாணுத
லூடி னும்பு ணாந்த தொத்தி னியவளு ளாளரோ.
விளக்கம் : ஊடல் கடிதின் தீர்தலிற் கூடல் போன்றது. வண்டிருப்பன்ன பல்காழ் அல்குல் (பொரு-39) என்றார் பிறரும். வீடு பெற்றவர் - இல்வாழ்வினின்று விடுதலை பெற்றவர் : துறவிகள். பெற்ற வரும் - என்பதிலுள்ள உம்மை உயர்வு சிறப்புப் பொருளது. ஆடுவான் : வான் விகுதிபெற்ற வினையெச்சம். ( 2 )
------------
-
1997. அம்பொ ரைந்து டைய்ய காம
னைய்ய னென்ன வந்தண
னம்பு நீர ரல்லர் நன்கு
ரங்கு நீர ராயினுந்
தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி
னெஞ்சு நோந்து தாழ்வர்தாம்
பொங்க ரவ்வ வல்கு லாரெ
னப்பு கன்று சொல்லினான்.
விளக்கம் : நம்பு - விருப்பம், நன்குரங்கு - பொல்லாங்குக்கு நன்றான குரங்கு. பெற்றோர் குரங்கு நீரருக்குத் தம்மைக் கொடுப்பினும் நெஞ்சு நேர்ந்து வழிபடுவர் என்றான். ( 3 )
------------
-
1998. அற்று மன்று கன்னி யம்ம டந்தை மார ணிநலம்
முற்றி னாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமுங்
குற்ற மற்று மாகு மென்று கோதை சூழ்ந்து கூறினார்க்
குற்ற டுத்த யாவு யிர்த்தொழிதல் யார்க்கு மொக்குமே.
விளக்கம் : இதுவும் பழிநாணுதல் கருதி வந்ததாகலின் நீர் வியத்தல் வேண்டா என்று புத்திசேனன் கூறினான். ( 4 )
------------
-
வேறு
1999. மதுக்குடம் விரிந்தன மாலை யாரொடும்
புதுக்கடி பொருந்துதி புக்க வூரெலாம்
விதிக்கிடை காணலாம் வீதி மாநகர்
மதிக்கிடை முகத்தியோர் மடந்தை யீண்டையாள்.
விளக்கம் : ஈண்டையாள் என்றான் நீ மணஞ் செய்து கொண்ட இந்நகரிலேயே என்றற்கு. நகர் - வீடு எனக் கொண்டு தெருக்களையும் வீடுகளையுமுடைய ஈண்டு என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர். ஈண்டு - இந்நகர். ( 5 )
------------
-
2000. ஆடவர் தனதிடத் தருகு போகினு
நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும்
வீடுவ லுயிரென வெகுளு மற்றவள்
சேடியர் வழிபடச் செல்லுஞ் செல்வியே.
விளக்கம் : மற்று : அசை. தனதிடம் - தான் வாழும் இல்லம். அருகு - பக்கம், அவர் பெயர் நாடி நயந்து கேட்பினும் என மாறுக. உயிர்வீடுவல் என மாறுக. வீடுவல் : தன்மையொருமை வினைமுற்று. இதற்கு நான் என்னும் எழுவாய் வருவிக்க. வெகுளும் - செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. இங்குப் பெண்பாற் படர்க்கையில் வந்தது. இதற்கு அவள் என்ற எழுவாயைக் கூட்டுக. போகினும் கேட்பினும் உயிர் வீடுவல் எனவே காணின் உயிர்விடுதல் கூறவேண்டாதாயிற்று. ( 6 )
------------
-
2001. காமனே செல்லினுங் கனன்று காண்கிலாள்
வேமெனக் குடம்பெனும் வேங்கொ டோளியை
யேமுறுத் தவணல நுகரி னெந்தையை
யாமெலா மநங்கமா திலக னென்றுமே.
விளக்கம் : அநங்கமா திலகன் : மா, தட்குமா காலே (புறநா-193) என்றாற் போல அசையாய் நின்றது. எனக்கு உடம்பு வேம் எனும் என மாறுக. வேம் - வேகும். ஏமுறுத்து - மயக்கி. எந்தையை என்றது சீவகனை : முன்னிலைப் படர்க்கை. ( 7 )
------------
-
வேறு
2002. தாசியர் முலைக டாக்கத்
தளையவிழ்ந் துடைந்த தண்டார்
வாசங்கொண் டிலங்கு முந்நூல்
வலம்படக் கிடந்த மார்ப
பேசிய பெயரி னாளைப்
பேதுறா தொழிவே னாகி
னாசுமன் பிலாத புன்பெண்
கூந்தல்யா னணைவ லென்றான்.
விளக்கம் : அவனைப் போலவே சீவகனும் நகையாடி வஞ்சினங் கூறினான். தாசியர் - பணிமகளிர். தாசியர் முலைகள் தாக்க உடைந்த தார் மார்ப என்றது அசதியாடியது. பெயரினாளை என்றது சுரமஞ்சரியை என்றவாறு. பேதுறுத்தாது எனற்பாலது பேதுறாது என நின்றது. ஆசும் - சிறிதும். புன்பெண் - கீழ்மகள். ( 8 )
------------
-
2003. வண்டுதேன் சிலைகொ ணாணா
மாந்தளிர் மலர்க ளம்பாக்
கொண்டவன் கோட்டந் தன்னுட்
கொடியினைக் கொணர்ந்து நீல
முண்டது காற்றி யாண்பே
ரூட்டுவ லுருவக் காமன்
கண்டபொற் படிவஞ் சார்ந்து
கரந்திரு நாளை யென்றான்.
விளக்கம் : காற்றி யென்றதற் கேற்ப ஊட்டுவேன் என்றான். சிலைகள் என்ற பாடம் இருப்பின் சேமவில்லைக் கூட்டுக. ( 9 )
------------
-
வேறு
2004. இழைக்கண் வெம்முலை யிட்டிடை யேந்தல்குன்
மழைக்கண் மாதரை மாலுறு நோய்செய்வான்
முழைக்கண் வாளரி யேறன மொய்ம்பினா
னுழைக்க ணாளர்க் குரைத்தெழுந் தானரோ.
விளக்கம் : இழை - அணிகலன். இட்டிடை - சிற்றிடை. மழைக்கண் - குளிர்ச்சியுடைய கண். மாதரை : சுரமஞ்சரியை. மால் - மயக்கம். அரியேறு - ஆண்சிங்கம். உழைக்கணாளர். நண்பர் அரோ : அசை. ( 10 )
------------
-
2005. சோருங் காரிகை யாள்சுர மஞ்சரி
யாரஞ் சூடிய வம்முலைப் பூந்தடந்
தாகு மார்பமுந் தண்ணெனத் தோய்வதற்
கோரு முள்ள முடன்றெழு கின்றதே.
விளக்கம் : இச் செய்யுள் சீவகன் கூற்றாக அமைந்தது. நூலாசிரியர் கூற்றாகக் கொள்ளினும் அமையும். கனகபதாகை ஆண்டுக் கூறலானும் ஈண்டுப் புத்திசேனன் கூறலானும் ஊழானும் வருந்தி அவன் வடிவை ஓரும் என்றார். காரிககை - அழகு; அழகொழுகும் சுரமஞ்சரி என்றவாறு. ஆரம் - முத்துமாலை. தார் - மாலை. தண்ணென - குளிரும்படி. ஓரும் - ஆராயா நிற்கும். ( 11 )
------------
-
வேறு
2006. கடைந்தபொற் செப்பெனக் கதிர்த்து வீங்கின
வடஞ்சுமந் தெழுந்தன மாக்கண் வெம்முலை
மடந்தைதன் முகத்தவென் மனத்தி னுள்ளன
குடங்கையி னெடியன குவளை யுண்கணே.
விளக்கம் : மனத்திலுள்ளன என்றது, நங்கைகண் போலும் வேலவனே (சீவக-896) என்று சொன்னதை உட்கொண்டு. ( 12 )
------------
-
2007. ஏத்தரு மல்லிகை மாலை யேந்திய
பூத்தலைக் கருங்குழற் புரியி னாற்புறம்
யாத்துவைத் தலைக்குமிவ் வகுளி லாணலங்
காய்த்தியென் மனத்தினைக் கலக்கு கின்றதே.
விளக்கம் : ஏத்தரும் என்பது, ஏத்துதல் தரும் என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். காய்த்தி - வெம்மைப்படுத்தி; காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை (பதிற் : 12 : 9). ( 13 )
------------
-
2008. சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச்
செல்விதன் றிருநலஞ் சேரும் வாயிறா
னல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச்
செல்லல்யான் றெளிதாக வுடைத்தென் றெண்ணினான்.
விளக்கம் : சில்அரி - சிலவாகிய பரல்கள், சிலம்பும் - ஒலிக்கின்ற. சிறுமை + அடி = சீறடி. யான் செல்வல் என மாறுக. தெளிதகவு - தெளியும் தன்மை. ( 14 )
------------
-
2009. அணங்கர வுரித்ததோ லனைய மேனியன்
வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன்
பிணங்குநூன் மார்பினன் பெரிதொர் பொத்தக
முணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான்.
விளக்கம் : அணங்கரவு : வினைத்தொகை மேனியன் - நிறமுடையன். நோன்சிலை - வலிய வில். யாக்கை - உடல். பொத்தகம் - நூல்; ஈண்டு, மூப்பிலக்கண நூல். ( 15 )
------------
-
2010. வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளிய
னுண்ணவி ரறுலைய னொசிந்த நோக்கினன்
கண்ணவிர் குடையினன் கைத்தண் டூன்றினன்
பெண்ணலங் காதலிற் பேயு மாயினான்.
விளக்கம் : பலிகொண்டு பெயரும் பாசம்போலத் திறைகொண்டு பெயர்தி (பதிற். 78) என்றாற்போல. பெற்றே போதலின் பேயின் தன்மையன் ஆயினன், என்றார். ( 16 )
------------
-
2011. யாப்புடை யாழ்மிட றென்னுந் தோட்டியாற்
றூப்புடை யவணலந் தொடக்கும் பாகனாய்
மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழை
காப்புடை வளநகர் காளை யெய்தினான்.
விளக்கம் : இவனை அறியாதபடி மறைத்தலின் முகபடாம் என்றார். யாப்பு - கட்டு. யாழ்மிடறு - யாழை ஒத்த மிடறு, தூப்புடை - தூய இடம்; என்றது தூய நெஞ்சம் என்றவாறு முற்றிழை : அன்மொழித் தொகை. இச்செய்யுளை யடுத்துச் சிலு பிரதிகளில் கீழ்வரும் செய்யுள் காணப்படுகின்றது. இதற்கு நச். உரை காணப்படவில்லை.
-
நற்றொடி மகளிரு நகர மைந்தரும்
எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே
பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன்
பற்றிய தண்டொடு பைய மெல்லவே.
------------
-
வேறு
2012. தண்டுவலி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக்
கண்டுகடை காவலர்கள் கழறமுக நோக்கிப்
பண்டையிளங் காலுவப்பன் பாலடிசி லிந்நாட்
கண்டுநயந் தார்தருவ காதலிப்ப னென்றான்.
விளக்கம் : இவன் கூறியதன் உட்கோள் : இளம்பருவத்திலே பாற்சோறு ஒன்றையே விரும்புவேன்; இப்பருவத்தில் யான் கண்டு விரும்பப்பட்ட மகளிர் தருவன யாவற்றையும் காதலிப்பேன் என்பதாம். ( 18 )
------------
-
2013. கையிற்றொழு தார்கழிய மூப்பிற்செவி கேளார்
மையலவர் போலமனம் பிறந்தவகை சொன்னார்
பையநடக் கென்றுபசிக் கிரங்கியவர் விடுத்தார்
தொய்யின் முலை யவர்கள் கடைத் தோன்றனனி புக்கான்
விளக்கம் : தொழுதார் : வினையாலணையும் பெயர். கழிய - மிகமையலவர் - பித்தர். மனத்திற் றோன்றியவகையே என்க. கடை - வாயில். தோன்றல் : சீவகன். ( 19 )
------------
-
2014. கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்ப
வோதமணி மாலையொடு பூண்பிறழ வோடி
யேதமிது போமினென வென்னுமுரை யீயா
னூதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான்.
விளக்கம் : தாழ்ந்து - தாழ : எச்சத்திரிபு. ஞிமிறு - வண்டு. ஓதமணிமாலை - முத்துமாலை. என்னும் - சிறிதும். ஊதவுகு தன்மையினொடு என்னு மிதனோடு ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை என வரும் கம்பநாடர் மொழி நினையற்பாலது; (மீட்சிப். 249) ( 20 )
------------
-
2015. கச்சுவிசித் தியாத்தகதிர் முலையர்மணி யயில்வா
ணச்சுநுனை யம்புசிலை நடுங்கவுட னேந்தி
யச்சமுறுத் தமதுபுளித் தாங்குத்தம தீஞ்சொல்
வெச்சென்றிடச் சொல்லிவிரி கோதையவர் சூழ்ந்தார்.
விளக்கம் : முலையர் என்றது, காவன்மகளிரை, அயில் - வேல். நஞ்சு தோய்த்த நுனையையுடைய அம்பென்க. சிலை - வில். இயல்பாக அமுதை ஒத்து இனிக்கும் தம்முடைய சொல்லை மாற்றி என்க. வெச்சென்றிட வெவ்விதாக. ( 21 )
------------
-
2016. பாவமிது நோவவுரை யன்மின் முதுபார்ப்பார்
சாவர்தொடி னேகடிது கண்டவகை வண்ண
மோவியர்தம் பாவையினொ டொப்பரிய நங்கை
யேவல்வகை கண்டறிது மென்றுசிலர் சொன்னார்.
விளக்கம் : முதுபார்ப்பார் நோவவுரையன்மின் என மாறுக. முதுபார்ப்பார் என்ற இத பாவம் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. நங்கை : சுரமஞ்சரி. அறிதும் தன்மைப்பன்மை வினைமுற்று. ( 22 )
------------
-
2017. கையவளை மையகுழ லையரிய வாட்க
ணையுமிடை வெய்யமுலை நங்கையொரு பார்ப்பா
னுய்வதில னூழின்முது மூப்பினொடும் வந்தான்
செய்வதுரை நொய்தினெனச் சேறுமெழு கென்றாள்.
விளக்கம் : ஊழி முதுமூப்பாயின் காலமாக்குக. கைய - கையிடத்தனவாகிய. மைய - கருமையுடைய, ஐ - வியப்பு. அரி - கோடு. நங்கை : சுரமஞ்சரி; விளி நொய்தின் - விரைவின். சேறும் : தன்மைப்பன்மை வினைமுற்று. ( 23 )
------------
-
2018. மாலைபல தாழ்ந்துமதுப் பிலிற்றிமணங் கமழுங்
கோலவகிற் றேய்வைகொழுஞ் சாந்தமுலை மெழுகிப்
பாலைமணி யாழ்மழலை பசும்பொனிலத் திழிவாள்
சோலைவரை மேலிழியுந் தோகைமயி லொத்தாள்.
விளக்கம் : காவிடத்திற் கன்னிமாட மாதலின், சோலைவரை என்றார். இழிவாள் : வினையாலணையும் பெயர்; சுரமஞ்சரி. வரை மாடத்திற்கும், தோகைமயில் - சுரமஞ்சரிக்கும் உவமை. ( 24 )
------------
-
2019. சீறடிய கிண்கிணிசி லம்பொடுசி லம்ப
வேறுபடு மேகலைகண் மெல்லெனமி ழற்றச்
சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட
நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள்.
விளக்கம் : துகிலுள்ளும் புறம்பும் கிடத்தலின், வேறுபடு மேகலை என்றார். மிழற்ற - ஒலிப்ப, திசைதொறும் எழுந்து பாட என்க. மலர்க்கொம்பர் - சுரமஞ்சரிக்குவமை. ( 25 )
------------
-
2020. வந்தவர வென்னையென வாட்கண்மட வாய்கேள்
சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட
வந்திலதி னாயபய னென்னைமொழி கென்றாண்
முந்திநலி கின்றமுது மூப்பொழிவு மென்றான்.
விளக்கம் : இவன் நின்னுடன் கூடவந்தேன் : கூடுதலின் முன் இம் முதிய மூப்புவேடம் நீங்கும் என்று கருதக் கூறினான். அவளோ, குமரியாட வந்தானென்றும், அந்நீரிலே ஆடினால் முதுமைநோய் நீங்கும் என்றும் கூறினானாகக் கருதினாள். திருநீர்க்குமரி - அழகிய நீரையுடைய குமரியாறு; அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னை என இரு பொருளும் காண்க. அந்தில் : அசை. ( 26 )
------------
-
2021. நறவிரிய நாறுகுழ லாள்பெரிது நக்குப்
பிறருமுள ரோபெறுநர் பேணிமொழி கென்னத்
துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநரி லென்றாற்
கறிதிர்பிற நீவிரென வையமிலை யென்றான்.
கொண்ட நோன்பைக் கெடுத்துக் கூடுந்துறை இம் மூப்பால் என்றறிந்து நின்னையணுகிக் கூடுவார் என்னையொழிய இலர்) என்று கூறியவற்கு; பிற நீவிர் அறிதிர் என - உலகத்தார் அறியாத வேறொரு துறையை நீவிர் அறிவீரோ என்று இகழ்ந்து கூற; ஐயம் இலை என்றான் - அதற்கு ஐயம் இல்லை என்றான். ( 27 )
------------
-
2022. செத்தமர மொய்த்தமழை யாற்பெயரு மென்பார்
பித்தரிவ குற்றபிணி தீர்த்துமென வெண்ணி
யத்தமென மிக்கசுட ரங்கதிர்சு ருக்கு
மொய்த்தமணி மாடமிசை யத்தகவ டைந்தாள்.
விளக்கம் : (குமரியாட) முந்தி நலிகின்ற முதுமூப்பு ஒழியும் என்று சீவகன் கூறியதற்கு, செத்தமரம் மொய்த்த மழையாற் பெயரும் என்றல், உவமை. தீர்த்தும் : தன்மைப்பன்மை. எனவே இவனைக் கொண்டு போந்தாளாம். ( 28 )
------------
-
2023. வடிவமிது மூப்பளிது வார்பவள வல்லிக்
கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணங்
கொடிதுபசி கூர்ந்துளது கோல்வளையி னீரே
யடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி னென்றாள்.
விளக்கம் : அளிது - அளிக்கத்தக்கது. வடிவம் என்றதற் கேற்பப் பசிகூர்ந்துளது என்றான். உண்ணுமிடத்திற்குச் செல்லுதலும் இவர்க்கியலாதென்பாள் இவணே கொணர்மின் என்றும், இன்னும் சிறிதுபொழுதும் இவர் பசிபொறுத்தல் அரிதென்பாள் கடிதாக்கி என்றும் கூறினாள். ( 29 )
------------
-
2024. நானமுரைத் தாங்குநறு நீரவனை யாட்டி
மேனிகிளர் வெண்டுகிலும் விழுப்பொனிய னூலும்
பானலங்கொ டீங்கிளவி பவித்திரமு நல்கத்
தானமர்ந்து தாங்கியமை தவிசின்மிசை யிருந்தான்.
விளக்கம் : நானம் - மணவெண்ணெய். ஆங்கு - அப்பொழுதே. மேனி - நிறம், விழுப்பொன் இயல் நூல் - சிறந்த பொன்னாலியற்றிய பூணூல். பாலின் சுவையைத் தன்பாற்கொண்ட இனிய மொழியையுடைய சுரமஞ்சரி என்க. பவித்திரம் - மோதிரம். ( 30 )
------------
-
2025. திங்கணலஞ் சூழ்ந்ததிரு மீன்களெனச் செம்பொற்
பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பி
யிங்குசுவை யின்னமுத மேந்தமிகு சான்றோ
னெங்குமிலை யின்னசுவை யென்றுடன யின்றான்.
விளக்கம் : திங்களும் அதனைச் சூழ்ந்த மீன்களும் உண்கலங்கட்குவமை. இங்கு - தங்கிய இடம். சான்றோன் : சீவகன், இன்ன சுவை - இத்தன்மைத்தாய சுவை. அயின்றான் - உண்டான். ( 31 )
------------
-
2026. தமிழ்தழிய சாயலவர் தங்குமலர்த் தூநீ
ருமிழ்கரக மேந்தவுர வோனமர்ந்து பூசி
யமிழ்தனைய பஞ்சமுக வாசமமைத் தாய்ந்த
கமழ்திரையுங் காட்டவவை கொண்டுகவு ளடுத்தான்.
விளக்கம் : தமிழ் - இனிமை. தழிய - தழுவிய. உரவோன் : சீவகன். பூசி - வாய்பூசி. பஞ்சமுகவாசம் - ஐந்துவகைப்பட்ட முகவாசம், திரை - வெற்றிலை. ( 32 )
------------
-
2027. வல்லதெனை யென்னமறை வல்லன்மட வாயா
னெல்லையெவ னென்னப்பொரு ளெய்திமுடி காறுஞ்
சொல்லுமினு நீவிர்கற்ற காலமெனத் தேன்சோர்
சில்லென்கிளிக் கிளவியது சிந்தையில னென்றான்.
விளக்கம் : என்றது : மேலும் வினாவும் விடையும் பெருகுதல் கருதி, அஃது எனக்குக் கருத்தன்றென்றான்; அவள் அதனை நினைத்திருந்திலேன் என்றானாகக் கருதினாள் எனை : என்னை என்னும் வினா, னகர மெய்கெட்டு நின்றது. தொகுத்தல் விகாரம். (33)
------------
-
2028. இன்னவர்க ளில்லைநிலத் தென்றுவியந் தேத்தி
யன்னமன மென்னடையி னாளமர்ந்து நோக்கப்
பின்னையிவள் போகுதிறம் பேசுமென வெண்ணித்
தன்னஞ்சிறி தேதுயின்று தாழவவ ணக்காள்.
விளக்கம் : இன்னவர்கள் - இத்தன்மையுடையோர். அன்ன - அன என நின்றது. அமர்ந்து - விரும்பி போகுதிறம் - போதற்குரிய சொற்கள். தன்னஞ்சிறிது : ஒருபொருட் பன்மொழி. ( 34 )
------------
-
2029. கோலமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைச்
சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக்
காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றே
னேலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை யென்றான்.
விளக்கம் : காலும் மிகநோம் - வாடைக்காற்றும் மிக வருத்தும்; வாடைக்காற்றைக் கூறியதனால் இத் திங்கள் கார்த்திகையாகும். கண்ணும் துயில்குற்றேன் இறந்துபடும் நிலையை அடைந்தேன் என்ற உட்பொருளுடன் கூறினான். கண்ணிமைப்பளவும் என்றது உயிருடன் இருத்தலை உணர்த்தல் போலக், கண் துயிலுதலும் இறந்துபாட்டை உணர்த்திற்று. சாமி : சீவகசாமி. துயில்குற்றேன் : துயின்றேன் என்னும் ஒரு சொல். ஏலம் - மயிர்ச்சாந்தம். கோதை : விளி. செய்கு : தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. (35)
------------
-
2030. மட்டுவிரி கோதைமது வார்குழலி னாடன்
பட்டுநிணர் கட்டில்பரி வின்றியுறை கென்றா
ளிட்டவணை மேலினிது மெல்லெனவ சைந்தான்
கட்டழல்செய் காமக்கட லைக்கடைய லுற்றான்.
விளக்கம் : நிணர்கட்டில் : வினைத்தொகை. இது நிண என்றே வரும் : ஈண்டு, அண, அணர் என்று வந்தாற்போன்று ரகரமெய் பெற்று வந்தது. நிணத்தல் - பின்னுதல். அசைந்தான் : வினயாலணையும் பெயர். ( 36 )
------------
-
2031. காலையொடு தாழ்ந்துகதிர் பட்டதுக லங்கி
மாலையொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றி
வேலனைய கண்ணியர்தம் வீழ்துணைவர் திண்டோள்
கோலமுலை யாலெழுதக் கூடியதை யன்றே.
விளக்கம் : கூடியதை : ஐ : அசை. காலை - பகல் என்னும் பொருட்டாய் நின்றது. கதிர் காலையொடு தாழ்ந்துபட்டது என மாறுக. கதிர் - ஞாயிறு. மகிழ் - மகிழ்ச்சி. அன்று. ஏ : அசைகள். ( 37 )
------------
-
2032. ஏந்துமலர்ச் சேக்கையகில் வளர்த்தவிடு புகையு
மாய்ந்தமலர்க் கோதையமிர் துயிர்க்குநறும் புகையுங்
கூந்தலகிற் புகையுந்துகிற் கொழுமெனறும் புகையும்
வாய்ந்தவரை மழையினுயர் மாடத்தெழுந் தனவே.
விளக்கம் : மலரேந்து சேக்கை என்க. சேக்கை - படுக்கை. அமிர்து - இனிமை. வரை - மலை. மழை - முகில். ( 38 )
------------
-
2033. ஆசிலடு பாலமிர்தஞ் சிறியவயின் றம்பூங்
காசில்படி மாலைகல நொய்யமதி கவற்குந்
தூசுநறுஞ் சாந்தினிய தோடிவைக டாங்கி
மாசின்மட வார்கண்மணி வீணைநரம் புளர்ந்தார்.
விளக்கம் : கூதிராதலின் பாலடிசில் கூறினார். உண்டிசுருங்குதல் பெண்டிர்க் கழகு ஆதலின், சிறிது அயின்று என்றார். புணர்ச்சித் தொழில் கருதி நொய்ய கலம் அணிந்தனர் என்பது கருத்து. ( 39 )
------------
-
2034. பூஞ்சதங்கை மாலைபுகழ்க் குஞ்சிப்பொரு வில்லார்
வீங்குதிர டோளுந்தட மார்பும்விரை மெழுகித்
தீங்கரும்பு மென்றனைய வின்பவளச் செவ்வாய்த்
தேங்கொளமிர் தார்ந்துசெழுந் தார்குழையச் சோந்தார்.
விளக்கம் : பூஞ்சதங்கை மாலை என்பதனை ஒருபுறமாலை என்பர் நச்சினார்க்கினியர். குஞ்சி - ஆடவர் தலைமயிர் - விரை - நறுமணச் சாந்து. கரும்பு மென்றனைய அமிர்து, வாய் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக. ( 40 )
------------
-
2035. பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான்
முன்னியதன் மன்றலது முந்துறமு டிப்பான்
மன்னுமொரு கீதமது ரம்படமு ரன்றாற்
கின்னமிர்த மாகவிளை யாருமது கேட்டார்.
விளக்கம் : நான்காம் உருபிற்கு இவர் கேட்டது கொடைப் பொருட்டாம். மேலான் : வினையாலணையும் பெயர்; சீவகன். முன்னிய - கருதிய மன்றல் - திருமணம், ஈண்டு யாழோர் மணம். மன்றலது என்புழி, அது பகுதிப்பொருளது. கீதம் - இசை. ( 41 )
------------
-
வேறு
2036. மன்ம தன்ம ணிக்கு ரன்ம
ருட்டு மென்று மால்கொள்வா
ரின்ன தின்றி யக்க ரின்னி
யக்க வந்த தென்றுதம்
பின்னு முன்னு நோக்கு வார்
பேது சால வெய்துவார்
கன்னி தன்ம னத்தி ழைத்த
காளை நாமம் வாழ்த்துவார்.
விளக்கம் : மணிக்குரல் - அழகிய குரல், மால் - மயக்கம். சால - மிகவும். கன்னி என்றது சுரமஞ்சரியை. காளை : சீவகன். ( 42 )
------------
-
2037. கொம்பி னொத்தொ துங்கி யுங்கு
ழங்கன் மாலை தாங்கியு
மம்பி னொத்த கண்ணி னார
டிக்க லம்ம ரற்றவுந்
நம்பி தந்த கீதமேந யந்து
காண வோடினார்
வெம்பு வேட்கை வேனி லானின்
வேற லானு மாயினான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர், காண என்பதற்குக் கேட்க என்று பொருளுரைத்துக், கேள்வியும் உணரப்படுதலின் காட்சியே ஆம் என்றார். நாடினார் என்றும் பாடம். ( 43 )
------------
-
2038. தாம மாலை வார்கு ழற்ற டங்க ணார்க்கி டங்கழி
காம னன்ன காளை தன்க ருத்தொ டொத்த தாகலான்
மாம லர்த்தெ ரியலான்ம ணிமிடற்றி டைக்கிடந்த
சாம கீத மற்று மொன்று சாமி நன்கு பாடினான்.
விளக்கம் : தெரியலானைச் சீவகன் எனின், பின்னர்ச் சாமி என்னும் பெயர் வேண்டாவாம். இடங்கழிகாமன் - வரம்பு கடந்து எழுதற்குக் காரணமான காமத்திற்குத் தெய்வமானவன் என்பது நன்று. தம்மிடத்தினின்று நீக்கப்படுவானாகிய காமன் என்பர் நச்சினார்க்கினியர். இடங்கழி காமமொ டடங்கா னாகி என்பர் மணிமேகலையினும் (18-119.) இடங்கழி மான் மாலை என வரும் புறப்பொருள் வெண்பாமாலை (130) அடிக்கு இராக வேகத்தை யுண்டாக்கும் மயக்கமுடைய மாலைக் காலம் என்று பொருள் கூறுவர் அதன் உரையாசிரியர். ( 44 )
------------
-
2039. கள்ள மூப்பி னந்த ணன்க னிந்தகீத வீதியே
வள்ளி வென்ற நுண்ணி டைம ழைம லர்த்த டங்கணார்
புள்ளு வம்ம திம்ம கன்புணர்த்த வோசை மேற்புகன்
றுள்ளம் வைத்த மாம யிற்கு ழாத்தி னோடி யெய்தினார்.
விளக்கம் : வள்ளி - வல்லி; கொடி. புள்ளுவ மதி மகன் - புள்ளின் ஓசையைத் தன்னிடத்தே உடைய மகன், புள்ளுவம் - வஞ்சகம். மதி - அறிவு, எனப்பொருள் கொண்டு வஞ்சக வறிவுடைய மனிதன் எனக் கொள்ளினும் பொருந்தும். கள்ள மூப்பு - வாய்மையல்லாதமூப்பு. அந்தணன் : சீவகன். புகன்று விரும்பி. ( 45 )
------------
-
வேறு
2040. இனிச்சிறி தெழுந்து வீங்கி
யிட்டிடை கோறு நாங்க
ளெனக்கொறு கொறுப்ப போலு
மிளமுலைப் பரவை யல்குற்
கனிப்பொறை மலிந்த காமர்
கற்பக மணிக்கொம் பொப்பாள்
பனிப்பிறைப் பூணி னான்றன்
பாண்வலைச் சென்று பட்டாள்.
விளக்கம் : கொறுகொறுத்தல் : சினத்தலை உணர்த்தும் குறிப்புச் சொல்லாகிய இரட்டைக் கிளவி. கோறும் : தன்மைப் பன்மை வினைமுற்று. கனிப்பொறை : பண்புத்தொகை. காமர் - அழகு. ஒப்பாள் : சுரமஞ்சரி. பூணினான் : சீவகன். பாண்வலை : பண்புத்தொகை. பாண் - பாட்டு. ( 46 )
------------
-
2041. அடிக்கல மரற்ற வல்குற்
கலைகலந் தொலிப்ப வந்து
முடிப்பதென் பெரிது மூத்தேன்
முற்றிழை யரிவை யென்ன
வடிக்கணா ணக்கு நாணித்
தோழியை மறைந்து மின்னுக்
கொடிக்குழாத் திடையோர் கோலக்
குளிர்மணிக் கொம்பி னின்றாள்.
விளக்கம் : அடிக்கலம் - சிலம்பு முதலியன, கலை-மேகலை பெரிது - மிகமிக, அரிவை : விளி. முடிப்பது : இடக்கர்; தோழியை ஏதுவாகக் கொண்டு மறைந்து என்க. மின்னுக்குழாம், தோழியர் குழாத்திற்கும் மணிக்கொம்பு, சுரமஞ்சரிக்கும் உவமைகள். ( 47 )
------------
-
2042. இளையவற் காணின் மன்னோ
வென்செய்வீர் நீவி ரென்ன
விளைமதுக் கண்ணி மைந்தர்
விளிகெனத் தோழி கூற
முலையெயிற் றிவளை யாரு
மொழிந்தன ரில்லை யென்றோ
வுளைவது பிறிது முண்டோ
வொண்டொடி மாதர்க் கென்றான்.
விளக்கம் : இளையவன் என்றது பெரிதுமூத்த என்னையன்றி இளையான் ஒருவனை என்பதுபட நின்றது. மன் : ஒழியிசை. ஓ : அசை. ( 48 )
------------
-
2043. வாய்ந்தவிம் மாதர் சுண்ணஞ்
சீவகன் பழித்த பின்றைக்
காய்ந்தன ளென்று கூறக்
காளைமற் றிவட்குத் தீயான்
மாய்ந்தனன் போலு மென்ன
மாதரா ரொருங்கு வாழ்த்தி
யாய்ந்தன மைய னுய்ந்தா
னறிந்தன மதனை யென்றார்.
விளக்கம் : இம் மாதர் வாய்ந்த சுண்ணம் என மாறுக. வாய்ந்த : விகாரம், பின்றை - பின்பு. காய்ந்தனள் - வெறுத்தனன். போலும் : ஒப்பில் போலி ஐயன் : சீவகன். ( 49 )
------------
-
2044. காலுற்ற காம வல்லிக்
கொடியெனக் கலங்கி நங்கை
மாலுற்று மயங்க யாங்கண்
மடக்கிளி தூது விட்டேஞ்
சேலுற்ற நெடுங்கட் செவ்வாய்த்
தத்தைதன் செல்வங் கண்டே
பாலுற்ற பவளச் செவ்வாய்த்
தத்தையாற் பரிவு தீர்ந்தேம்.
விளக்கம் : கால் - காற்று. காமவல்லி - ஒரு பூங்கொடி. நங்கை : சுரமஞ்சரி, தத்தை : காந்தருவதத்தை. பவளச் செவ்வாய்த்தத்தை என்றது கிளியை. ( 50 )
------------
-
2045. அன்பொட்டி யெமக்கோர் கீதம்
பாடுமி னடித்தி யாரு
முன்பட்ட தொழிந்து நுங்கண்
மூகவியர் முனிவு தீர்ந்தார்
பொன்றெட்டேம் யாமு நும்மைப்
போகொட்டோம் பாடல் கேளா
தென்பட்டு விடினு மென்றா
ரிலங்குபூங் கொம்பொ டொப்பார்.
விளக்கம் : மூத்த அந்தணன் ஆதலின் அடித்தியார் என்றார். அடித்தியார் : ஒருவரைக் கூறும் பன்மை. அன்பு ஓட்டி - அன்பாலே எம்மைப் பொருந்தி, அடித்தியார் என்றது சுரமஞ்சரியை, முகவியர் - முகம் புகுதலையுடையர். முகவியர் முனிவு தீர்ந்தார் என்பதற்கு முகத்திலுள்ள வியர்வையும் வெறுப்பும் நீங்கினர் எனலும் ஒன்று. பொன் : திருமகள் : ஈண்டுச் சுரமஞ்சரி. போக ஓட்டோம் - போகொட்டோம் என நிலைமொழி ஈறுகெட்டுப் புணர்ந்தது. என்பட்டு விடினும் - என்ன நேரினும். ( 51 )
------------
-
2046. பாடுதும் பாவை பொற்பே
பற்றிமற் றெமக்கு நல்கி
னாடமைத் தோளி னீரஃ
தொட்டுமேற் கேண்மி னென்ன
நாடியார் பேயைக் காண்பார்
நங்கைகா ளிதுவு மாமே
யாடுவ தொன்று மன்றிவ்
வாண்மக னுரைப்ப தென்றார்.
விளக்கம் : உலகில் இல்லாததற்கு உடம்படலாம். அஃது ஒருவனாற் காட்ட முடியாதாகலின். ஒருபொருளிருசொற் பிரிவில் வரையார் (தொல் எச்ச. 94) என்னுஞ் சூத்திரத்து, வரையார் என்றதனால், பொற்பே என்னும் ஏகாரவீற்றுப் பெயர் வேறும் ஒரு பொருள் தந்து நிற்றலின், பேய் என்று யகரவீறுமாய் நின்றது. இதற்கு யகர ஒற்று விகாரத்தால் தொக்கதாம். அருங்கழி காதம் அகலும் என்றூழென்றலந்து கண்ணீர் - வருங்கழி காதல் வனசங்கள் (சிற். 190) என்ற இடத்து, அலர்ந்து என்பது, அலந்து என்று விகாரப்பட்டு நின்றாற் போல. ( 52 )
------------
-
2047. பட்டுலாய்க் கிடந்த செம்பொன்
பவளமோ டிமைக்கு மல்கு
லொட்டினா ளதனை யோரோ
துலம்பொரு தோளி னானும்
பட்டவா ணுதலி னாய்க்குப்
பாடுவல் காமன் றந்த
தொட்டிமை யுடைய வீணைச்
செவிச்சுமை யமிர்த மென்றான்.
விளக்கம் : இனி, பொன்னாலே பேயைப் பண்ணிக் கொடுப்போம் என்று ஒட்டினாள் என்பாரும் உளர். காமனைக் கூறினான். இவள் வரம் வேண்டப் போதலைக் கருதி. ( 53 )
------------
-
2048. வயிரவில் லுமிலும் பைம்பூண்
வனமுலை மகளிர் தம்மு
ளுயிர்பெற வெழுதப் பட்ட
வோலியப் பாவை யொப்பாள்
செயிரில்வாண் முகத்தை நோக்கித்
தேன்பொதிந் தமுத மூறப்
பயிரிலா நரம்பிற் கீதம்
பாடிய தொடங்கி னானே.
விளக்கம் : நரம்பிற் பயிர் இல்லாத கீதம் - நரம்பிசையோடு கூடி அதனுள் மறைதலாலே உண்டாகும் அருவருப்பு இல்லாத இசை. பயிர் என்றது ஈண்டு அருவருப்பு என்னும் குற்றத்தின் மேனின்றது. அமுதம் - இனிமை. நரம்போடே பாடினான் என்பாருமுளர் என்று நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். ( 54 )
------------
-
வேறு
2049. தொடித்தோள் வளைநெகிழத் தொய்யின் முலைமேல்
வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங் காலும்
வார்புயலுங் காலும் வளைநெகிழு நந்திறத்த
தார்வமுறு நெஞ்ச மழூங்குவிக்கு மாலை.
விளக்கம் : இது முதல் மூன்று செய்யுளும் சீவகன் பாடிய இசைப் பாடல்கள் என்க. தோள் தொடிவளை என மாறுக. தொடி - வட்டம். தொய்யில் எழுதப்பட்ட முலை என்க. வடி - மாவடு, கேழ் - நிறம். மலர் நெடுங்கண் : வீனைத்தொகை. ( 55 )
------------
-
2050. ஐதேந் தகலல்கு லாவித் தழலுயிராக்
கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக்
கண்ணீர் கவுளலைப்பக் கையற்றி யாமினையப்
புண்ணீரும் வேலிற் புகுந்ததான் மாலை.
விளக்கம் : வீழும் என வருவிக்க. ஐது - மென்மையுடையது; என்றது ஈண்டுக் காஞ்சி என்னும் ஓரணிகலனை - அல்குல்; விளி, ஆவித்து - கொட்டாவி விட்டு, கையற்று - செயலற்று. இனைய - வருந்தும்படி. வேலின் - வேல்போன்று. ( 56 )
------------
-
2051. அவிழ்ந்தேந்து பூங்கோதை யாகத் தலர்ந்த
முகிழ்ந்தேந் திளமுலைமேற் பொன்பசலை பூப்பப்
பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்ப
வன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை.
விளக்கம் : தோன்றும் என வருவிக்க இத்தாழிசை மூன்றும் தனக்கு வேட்கை நிகழ்ந்ததாகக் கூறலாகாமையின் மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறிற்றாகக் கூறினான். இதனைத் தலைவன் ஆற்றானாய்க் கூறிற்றென்பாருமுளர். (57)
------------
-
வேறு
2052. பாடினான் றேவ கீதம்
பண்ணினுக் கரசன் பாடச்
சூடக மகளிர் சோர்ந்து
செருக்கிய மஞ்ஞை யொத்தா
ராடகச் செம்பொற் பாவை
யந்தணற் புகழ்ந்து செம்பொன்
மாடம்புக் கநங்கற் பேணி
வரங்கொள்வ னாளை யென்றாள்.
விளக்கம் : அரசன் கீதம் பாடினான் என மாறுக. சூடகம்-ஓரணி கலன். செருக்கிய- மயங்கிய. மஞ்ஞை-மயில் ஆடகச் செம்பொன்- நால்வகைப் பொன்னினொன்று பாவை; சுரமஞ்சரி. அந்தணன்; சீவகன் அநங்கன்- காமன்.கொள்வல். தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று (58)
------------
-
2053. மடலணி பெண்ணை யீன்ற
மணிமருள் குரும்பை மான
வுடலணி யாவி நைய
வுருத்தெழு முலையி னாளு
மடலணி தோழி மாரு
மார்வத்திற் கழும விப்பாற்
கடலணி திலகம் போலக்
கதிர்திரை முளைத்த தன்றே.
விளக்கம் : வடிவால் குரும்பையைப் போன்ற முலை, நிறத்தால் மணி மருள்முலை என இயைப்பர் நச்சினார்க்கினியர். மணிமருள் குரும்பைமான என்றே செய்யுள் உள்ளது மற்றும் பனங்குரும்பையின் நிறம், நீலமணி போன்றது; முலைக்கண்கள் மட்டுமே நீலமணியை மருட்டுவன. முலைக்கண்களையே கூறினாரெனின், விதந்து கூறுவார் என்க. ( 59 )
------------
-
2054. பொன்னியன் மணியுந் தாருங்
கண்ணியும் புனைந்து செம்பொன்
மின்னியற் பட்டஞ் சோத்தி
யானெய்பால் வெறுப்ப வூட்டி
மன்னியற் பாண்டில் பண்ணி
மடந்தைகோல் கொள்ள வைய
மின்னியற் பாவை யேற்பத்
தோழியோ டேறி னாளே.
விளக்கம் : தார் கண்ணி என்பன மாலைவகைகள், வெறுப்ப - மிக. பாண்டில் பண்ணி - எருத்தினைப் பூட்டி. ஒரு மடந்தை கோல் கொள்ள என்றவாறு. ஆடவரை வெறுத்தவளாகலின் மடந்தை கோல் கொளல் வேண்டிற்று. ( 60 )
------------
-
2055. ஆடவ ரிரிய வேகி
யஞ்சொல்லார் சூழக் காமன்
மாடத்து ளிழிந்து மற்றவ்
வள்ளலை மறைய வைத்துச்
சூடமை மாலை சாந்தம்
விளக்கொடு தூப மேந்திச்
சேடியர் தொழுது நிற்பத்
திருமகள் பரவு மன்றே.
விளக்கம் : ஆடவர் அரசன் ஆணையால் விலக என்க. காமன் மாடம் - காமன் கோயில், (கோட்டம்). வள்ளல்; சீவகன், சேடியர் - பணிமகளிர். திருமகள் : உவமவாகுபெயர்; சுரமஞ்சரி. அன்று, ஏ : அசைகள். ( 61 )
------------
-
2056. பொன்னிலஞ் சென்னி புல்ல
விடமுழந் தாளை யூன்றி
மின்னவிர் மாலை மென்பூங்
குழல்வலத் தோளின் வீழக்
கன்னியங் கமுகின் கண்போற்
கலனணி யெருத்தங் கோட்டித்
தன்னிரு கையுங் கூப்பித்
தையலீ துரைக்கு மன்றே.
விளக்கம் : பொன்னிலம் - பொற்றகடுபடுத்த நிலம். மாலையும் குழலும் வலத்தோளின் வீழ என்க. கன்னியங்கமுகு - இளமையும் அழகுமுடைய கமுகு. கண்போல் எருத்தம், கலன் அணி எருத்தம் எனத் தனித்தனி கூட்டுக. ( 62 )
------------
-
2057. தாமரைச் செங்கட் செவ்வாய்த்
தமனியக் குழையி னாயோர்
காமமிங் குடையேன் காளை
சீவக னகலஞ் சோத்தின்
மாமணி மகர மம்பு
வண்சிலைக் கரும்பு மான்றேர்
பூமலி மார்ப வீவ
லூரொடும் பொலிய வென்றாள்.
விளக்கம் : காமமிக்குடையேன் என்றும் பாடம். தமனியக்குழை - பொற்குழை. காமம் : ஆகுபெயர். காளைசீவகன் - காளையாகிய சீவகன். அகலம் - மார்பு. மகரம் - ஒரு மீன். காமனுக்கு அது கொடியாகலின், மகரம் ஈவேன் என்றாள், ஈவல் : தன்மை ஒருமை. ( 63 )
------------
-
2058. மட்டவிழ் கோதை பெற்றாய்
மனமகிழ் காத லானை
யிட்டிடை நோவ நில்லா
தெழுகென வேந்த றோழன்
பட்டிமை யுரைத்த தோராள்
பரவிய தெய்வந் தான்வாய்
விட்டுரைத் திட்ட தென்றே
வேற்கணாள் பரவி மீண்டாள்.
விளக்கம் : கோதை : விளி. இட்டிடை - சிற்றிடை. தோழன் - ஈண்டுப் புத்திசேனன். பட்டிமை - வஞ்சனை. பரவப்பட்ட தெய்வம் என்க. வேற்கணாள் : சுரமஞ்சரி. ( 64 )
------------
-
2059. அடியிறை கொண்ட செம்பொ
னாடகச் சிலம்பி னாளக்
கடியறை மருங்கி னின்ற
மைந்தனைக் கண்டு நாணி
வடியுறு கடைக்க ணோக்க
நெஞ்சுதுட் கென்ன வார்பூங்
கொடியுற வொசிந்து நின்றாள்
குழைமுகத் திருவோ டொப்பாள்.
விளக்கம் : கடியறை - மணவறை. சீவகன் அக் கிழ வடிவத்தை விட்டுப் பழைய வடிவத்தோடு நின்றான் என்பது தோன்ற மைந்தனைக் கண்டு என்றார். கொடியுற என்புழி உற என்பது உவமஉருபு. ( 65 )
------------
-
2060. இலங்குபொன் னோலை மின்ன
வின்முகஞ் சிறிது கோட்டி
யலங்கலுங் குழலுந் தாழ
வருமணிக் குழையோர் காதிற்
கலந்தொளி கான்று நின்று
கதிர்விடு திருவில் வீச
நலங்கனிந் துருகி நின்றா
ணாமவேற் காமர் கண்ணாள்.
விளக்கம் : கோட்டி - சாய்த்து, ஒளிகான்று - ஒளிவீசி, நலம் - அன்பு. நாமவேல் - அச்சமுண்டாக்கும் வேல். வேற்கண், காமர்கண் எனத் தனித் தனி கூட்டுக. ( 66 )
------------
-
2061. எரிமணிக் கலாபத் திட்ட
விந்திர நீல மென்னு
மொருமணி யுந்தி நேரே
யொருகதி ருமிழ்வ தேபோ
லருமணிப் பூணி னாட
னவ்வயி றணிந்த கோலத்
திருமயி ரொழுக்கம் வந்தென்
றிண்ணிறை கவர்ந்த தன்றே.
விளக்கம் : மயிரொழுங் கொன்றே திண்ணிறை கவர்ந்ததாயின் ஒழிந்தன என் செய்யா என்று சீவகன் தன்னுளெண்ணினான். வயிற்றினை அழகு செய்யும் மயிரொழுங்கு மேகலையில் அழுத்திய இந்திர நீலம் என்ற மணி ஒளிவிடுவதுபோல இருந்தது என்பது கருத்து இது தற்குறிப்பேற்றவணி. ( 67 )
------------
-
2062. தேறினேன் றெய்வ மென்றே
தீண்டிலே னாயி னுய்யேன்
சீறடி பரவ வந்தே
னருளெனத் தொழுது சோந்து
நாறிருங் குழலி னாளை
நாகணை விடையிற் புல்லிக்
கோறொடுத் தநங்க னெய்யக்
குழைந்துதார் திவண்ட தன்றே.
விளக்கம் : நின்னடியைப் பரவ வந்தேன்; வந்த யான் நின்னைத் தெய்வம் என்றே கருதிப் பிறகு மானிடமென்றே தெளிந்தேன் என்று, கொண்டு கூட்டி விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 68 )
------------
-
2063. கலைபுறஞ் சூழ்ந்த வல்குற் கார்மயிற் சாய லாளு
மலைபுறங் கண்ட மார்பின் வாங்குவிற் றடக்கை யானு
மிலைபுறங் கண்ட கண்ணி யின்றமி ழியற்கை யின்ப
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார்.
விளக்கம் : இது, சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படுதலின், உலகியல் வழக்கான காந்தருவமாம். ( 69 )
------------
-
2064. குங்குமங் குயின்ற கொம்மைக்
குவிமுலை குளிர்ப்பத் தைவந்
தங்கலுழ் மேனி யல்குற்
காசுடன் றிருத்தி யம்பொற்
பொங்குபூஞ் சிலம்பிற் போர்த்த
பூந்துக ளவித்து மாதர்
கொங்கலர் கோதை சூட்டிக்
குழனலந் திருத்தி னானே.
விளக்கம் : அவ்விடம் மலர் பரப்பிக் கிடத்தலின் பூந்துகள் கூறினார். ( 70 )
------------
-
வேறு
2065. வானார்கமழ் மதுவுஞ் சாந்து மேந்தி
மதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந்
தேனார்பூங் கோதாய் நினக்குக் காமன்
சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தான்
றானாரப் பண்ணித் தடறு நீக்கித்
தண்குருதி தோய்த்துத் தகைமை சான்ற
வூனார்ந்த வோரிணை யம்புந் தந்தா
னென்னை யுளனாக வேண்டி னானே.
காமன் தன் கையில் வில்லையும் சேம வில்லையும் நேரே வளைத்துத் தந்தான்; தான்ஆரப் பண்ணித் தடறு நீக்கி - (அதுவுமன்றி) அவன் தான் தாழ்வறப் பண்ணி உறையை நீக்கி; தண் குருதி தோய்த்து - தண்ணிய குருதியைத் தோய்த்து; தகைமை சான்ற - அழகு நிறைந்த; ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் - ஊன் பொருந்திய ஒப்பற்ற இரண்டு அம்புகளையும் கொடுத்தான் ; என்னை உளன் ஆக வேண்டினானே! - (அவற்றிற் கிலக்காக) என்னை உயிருடன் இருக்க வேண்டியிருந்தானே!
விளக்கம் : இவ்வாறு காமன் செயலை இகழ்ந்து கூறினான். ஏகாரம் : தேற்றம். நோக்கிய மேனி வாடுதலின், ஊனார்ந்த என்றார். இச்செய்யுளோடு, அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப், படை வழங்குவதோர் பண்புண் டாகலின்; உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில், இருகரும் புருவ மாக வீக்க என வரும் (2-42-5) சிலப்பதிகாரப் பகுதியும், அதற்கு அடியார்க்கு நல்லார் உரைத்த சேம வில்லையும் கூட்டி என வரும் விளக்கமும் ஒப்புநோக்கற் பாலன. ( 71 )
------------
-
2066. கண்ணக்க கண்ணிக் கமழ்பூங் குழற்க
ரும்போ தீஞ்சொ லாள்கதிர் முலைகளின்
வண்ணக்கு வானு நிலனுமெல் லாம்விலை
யேமழை மின்னு நுசுப்பி னாளைப்
பெண்ணுக் கணியாக வேண்டி மேலைப்
பெரியோர் பெருமான் படைத்தா னென்று
புண்ணக்க வேலான் புகழ நாணிப்
பூநோக்கிப் பூக்கொசிந்த கொம்பொத் தாளே.
விளக்கம் : இது முன்னிலைப் படர்க்கை. கரும்பேர் - கரும்பை ஒத்த. வண்ணக்கு - வண்ணத்திற்கு. விலையே என்புழி ஏகாரம் வினா. மின்னு - மின்னல். பெரியோர் பெருமான் : பிரமன். பூநோக்கி : பெயர் ; சுரமஞ்சரி. ( 72 )
------------
-
வேறு
2067. இறங்கிய மாதர் தன்னை
யெரிமணிக் கடகக் கையாற்
குறங்கின்மேற் றழுவி வைத்துக்
கோதையங் குருதி வேலா
னறந்தலை நீங்கக் காக்கு
மரசன்யா னாக நாளைச்
சிறந்தநின் னலத்தைச் சேரே
னாய்விடிற் செல்க வென்றான்.
விளக்கம் : இறங்கிய - நாணிய. குறங்கு - துடை. வேலான் : சீவகன். அறந்தலை நீங்கக் காக்கு மரசன் என்றது ஈண்டுக் குறிப்பாற் கட்டியங்காரனை உணர்த்தி நின்றது. ( 73 )
------------
-
2068. வில்லிடு மணிசெ யாழி மெல்விரல் விதியிற் கூப்பி
நல்லடி பணிந்து நிற்ப நங்கைநீ நடுங்க வேண்டா
செல்கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற வொல்கி
யல்குற்கா சொலிப்ப வாயம் பாவைசென் றெய்தி னாளே.
விளக்கம் : வில் - ஒளி. ஆழி - மோதிரம். நங்கை : விளி, சிலம்பும் கிண்கிணியும் மிழற்ற என்க. காசு - மணி. ஆயம் - தோழியர் கூட்டம் பாவை : சுரமஞ்சரி. ( 74 )
------------
-
2069. பருமணிப் படங்கொ ணாகப் பையெனப் பரந்த வல்கு
லெரிமணிப் பூணி னானுக் கின்னல மொழிய வேகித்
திருமணிச் சிவிகை யேறிச் செம்பொனீண் மாடம் புக்காள்
விரிமணி விளங்கு மாலை வெம்முலை வேற்க ணாளே.
விளக்கம் : பருமணி - பரிய மணி பை - படம், அல்குலையும் மாலையையும் முலையையும் உடைய கண்ணாள் எனக் கூட்டுக. (75 )
------------
-
2070. திருவிற்றான் மாரி கற்பான்
றுவலைநாட் செய்வ தேபோ
லுருவிற்றாய்த் துளிக்குந் தேற
லோங்குதார் மார்பன் றோழர்
பொருவிற்றா நம்பி காம
திலகனென் றிருந்த போழ்திற்
செருவிற்றாழ் நுதலி னாள்கண்
மணத்திறஞ் செப்பு கின்றார்.
விளக்கம் : திருவில் - வானவில். கற்பான் : வினையெச்சம். துவலை - துளி. உருவிற்றாய் - வடிவுடையதாய். பொருவிற்றா நம்பி - பொரு விற்று ஆம் நம்பி எனக் கண்ணழித்துக் கொள்க. ( 76 )
------------
-
2071. கனைகடலமுதுந் தேனுங் கலந்துகொண் டெழுதப் பட்ட
புனைகொடி பூத்த தேபோற் பொறுக்கலா நுசுப்பிற் பாவை
நனைகுடைந் துண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும்
புனைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து விட்டார்.
விளக்கம் : திறம் - சுற்றம். எழுதப்பட்ட நனையையுடையதொரு கொடி; கொடி, அமுதையும் தேனையும் தன்னுள்ளே கலந்துகொண்டு இரண்டு முகையைப் பூத்த தன்மைபோலிருக்கின்ற முலைகளைப் பொறாத நுசுப்பினையுடைய பாவைபோலு மாதர், வண்டு குடைந்து உண்டு தன்வயிற்றை நிறைத்துப் பாடும் மாலையையுடைய மாதர் என்க என்பர் நச்சினார்க்கினியர். ( 77 )
------------
-
2072. ஐயற்கென் றுரைத்த மாற்றங்
கேட்டலு மலங்க னாய்கன்
வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல்
விழுங்கலோ டுமிழ்த றேற்றான்
செய்வதெ னோற்றி லாதே
னோற்றிலா டிறத்தி னென்று
மையல்கொண் டிருப்ப வப்பாற்
குமரிதன் மதியிற் சூழ்ந்தாள்.
விளக்கம் : வெப்பமுடைய தேனை வாயிற்கொண்டால், வெம்மையால் நஞ்சென்று விழுங்காமலும், இனிமையால் உமிழாதேயும் இருப்பதைப்போல, இவள் நோன்பினால் உடம்படாமலும், சீவகனாதலின் மறுக்காமலும் இருந்தான். ( 78 )
------------
-
2073. பொற்பமை தாமக் கந்து
பொருந்திய மின்னுப் போல
வெற்பக வெரியு மாலைப்
பவளத்தூண் பொருந்தி யின்னீர்க்
கற்பெனு மாலை வீசி
நாணெனுங் களிவண் டோப்பிச்
சொற்புக ரின்றித் தோழிக்
கறத்தினோ டரிவை நின்றாள்.
விளக்கம் : மாலையால் ஒட்டவே வண்டு மிகவும் நீங்காதாம், உயிரினுஞ் சிறந்தன்று நாணே; நாணினும் - செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (தொல். களவு. 22) என்றதனாற் சிறிது நாணை விட்டாள். அறத்தினொடு : இன் : அசை. தாமம் - ஒழுங்கு, மாலையும் ஆம். எல் - சூரியன். பக என்பது இங்கு தோற்றுஓட என்னும் பொருளைக் குறித்தது. இன் நீர் - இனிய தன்மை - நாணம் என்பதை வண்டாகவும், கற்பு என்பதைப் பூமாலையாகவும் உருவகித்தார். ( 79 )
------------
-
2074. வழிவளர் மயிலஞ் சாயற் பவளப்பூம் பாவை யன்ன
கழிவளர் கயற்க ணங்கை கற்பினை யறிந்து தோழி
யழிமது மாலை சோத்தி யடிபணிந் தார வாழ்த்திப்
பொழிமதுப் புயலைங் கூந்தற் செவிலியைப் பொருந்திச் சொன்னாள்.
விளக்கம் : ஐங்கூந்தலைச் செவிலிக்காக்கினும் பொருந்தும். வழி - நல்லவழி, வழி, ஆசாரம் என்பர் நச்சினார்க்கினியர். ஆசாரம் - நல்லொழுக்கம். கழி - உப்பங்கழி. கற்பினை - கற்புக்கடம் பூண்ட தன்மையை என்க. தோழி செவிலியைப் பொருந்தி அறத்தொடு நின்றாள் என்க. ( 80 )
------------
-
2075. நனைவளர் கோதை நற்றாய் நங்கைக்கீ துள்ள மென்று
சுனைவளர் குவளை யுண்கட் சுமதிக்குச் செவிலி செப்பக்
கனயிருட் கனவிற் கண்டேன் காமர்பூம் பொய்கை வற்ற
வனையதாங் கன்னி நீரின் றற்றதா நங்கைக் கென்றாள்.
விளக்கம் : நனை - அரும்பு, நற்றாய் : சுமதி, விளி, நங்கை என்றது சுரமஞ்சரியை. கனையிருள் - மிக்க இருள். கனவில் பொய்கை வற்றக் கண்டேன் என மாறுக. அக் கனவின்பயன் இஃதே போலும் என்றாள் என்பது கருத்து. ( 81 )
------------
-
2076. கெண்டையுஞ் சிலையுந் திங்க
ளிளமையுங் கிடந்து தேங்கொ
டொண்டையங் கனியு முத்துந்
தொழதக வணிந்து தூங்குங்
குண்டல முடைய திங்க
ளிதுவெனு முகத்தி தாதை
வண்புகழ்க் குபேர தத்தன்
கேட்டனன் மனைவி சொன்னாள்.
விளக்கம் : இங்குக் கூறிய முழுமதி இல்பொருளுவமை. கெண்டை கண்களுக்கும் சிலை புருவங்களுக்கும் பிறை நெற்றிக்கும் தொண்டைக்கனி உதடுகட்கும் முத்து பற்களுக்கும் உவமைகள். நற்றாய் தந்தைக்கு அறத்தொடு நின்றாள் என்க. ( 82 )
------------
-
2077. செருவிளைத் தனலும் வேலோய்
சிறுமுதுக் குறைவி தானே
பெருவளைப் பிட்டுக் காத்த
கற்பிது போலு மையன்
கரிவிளைத் தாய்ந்த சுண்ணம்
வாட்டின னென்று கண்டாய்
திருவிளை தேம்பெய் மாரி
பாற்கடற் பெய்த தென்றாள்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் இரண்டு செய்யுளையும் ஒன்றாக்கிக் குபேரதத்தன் கேட்டனன் என்பதை யிறுதியிற் சேர்ப்பர். வேலோய் என்றது குபேரதத்தனை. சிறுமுதுக்குறைவி - இளமையிலேயே பேரறிவு படைத்தவள். ஈண்டுச் சுரமஞ்சரி. வளைப்பு - காவல். கற்பு என்றது ஆடவரைக் காணேன் எனக் கொண்ட மனத்திட்பத்தை. கரி - சான்று. பாற்கடலில் தேன்மாரி பெய்ததுபோல என்பதொரு பழமொழி. ( 83 )
------------
-
2078. கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கெலா முணர்த்தி யார்க்கும்
வேட்பன வடிசி லாடை விழுக்கலன் மாலை சாந்தங்
கோட்குறை வின்றி யாக்கிக் குழுமியங் கறங்கி யார்ப்ப
நாட்கடி மாலை யாற்கு நங்கையை நல்கி னானே.
விளக்கம் : கேட்டலும் என்றும் பாடம். இதுவே நல்ல பாடம். கேட்பது - கேட்கற்பாலது நாய்கன்; குபேரதத்தன். யார்க்கும் கோள் குறைவின்றி ஆக்கி என்க. குழும் இயம் : வினைத்தொகை. நாள் - நன்னாளில். மாலையான் : சீவகன். ( 84 )
------------
-
2079. பரியகஞ் சிலம்பு பைம்பொற்
கிண்கிணி யார்ந்த பாதத்
தரிவைய ராடன் மிக்கா
ரருமணி வீணை வல்லா
ருரியநூற் றெண்மர் செம்பொ
னொன்றரைக் கோடி மூன்று
ரெரியழன் முன்னர் நோந்தே
னென்மகட் கென்று சொன்னான்.
விளக்கம் : பரியகம் - காற்சரி என்னுமோ ரணிகலம். ஆடன்மிக்காரும் வீணை வல்லாரும் ஆகிய அரிவையர்; பரியக முதலியவற்றையுடைய பாதத்தராகிய அரிவையர் எனத் தனித்தனி கூட்டுக. ( 85 )
------------
-
2080. மாசறு மணியு முத்தும் வயிரமு மொளிரு மேனி
யாசறு செம்பொ னார்ந்த வலங்கலங் குன்ற னானுந்
தூசுறு பரவை யல்குற் றூமணிக் கொம்ப னாளுங்
காசறக் கலந்த வின்பக் கடலகத் தழுந்தி னாரே.
விளக்கம் : இவ்வாசிரியர் காதலரைக் குன்றனானும் கொம்பனாளும் என்றே பற்பல இடங்களினும் கூறும் இயல்புடையராதலை உணர்க. காசு - குற்றம். ( 86 )
------------
-
2081. பொன்வரை பொருத யானைப்
புணர்மருப் பனைய வாகித்
தென்வரைச் சாந்து மூழ்கித்
திரள்வடஞ் சுமந்து வீங்கி
மின்வளர் மருங்குல் செற்ற
வெம்முலை மணிக்கண் சேப்பத்
தொன்னலம் பருகித் தோன்ற
றுறக்கம்புக் கவர்க ளொத்தான்.
விளக்கம் : பொன்வரை சீவகன் மார்புக்குவமை. தென்வரை - பொதியமலை, வெம்முலை - விரும்புதற்குக் காரணமான முலை. மணிக்கண் - நீலமணி போன்று கறுத்த கண். சேப்ப - சிவப்ப. தோன்றல் பருகித் துறக்கம் புக்கவரை ஒத்தான் என மாறுக. துறக்கத்திற் புகுந்தவர் அரம்பையர் போகத்தையே நுகர்ந்திருப்பதால் ஒத்தான் என்றார். ( 87 )
------------
-
2082. வரிக்கழற் குருசின் மார்பு
மடந்தைவெம் முலையுந் தம்முட்
செருச்செய்து திளைத்துப் போரிற்
சிலம்பொலி கலந்த பாணி
யரிப்பறை யனுங்க வார்க்கு
மேகலைக் குரலோ டீண்டிப்
புரிக்குழல் புலம்ப வைகிப்
பூவணை விடுக்க லானே.
விளக்கம் : திளைத்து - திளைக்க. ஈண்டி - ஈண்ட. திளைத்த போர் எனவும் பாடம். வரிக்கழல் - வரியையுடைய கழல். குருசில் : சீவகன். மடந்தை : சுரமஞ்சரி. திளைத்து - திளைப்ப. பாணி - தாளம். அரிப்பறை - அரித்தெழும் ஓசையையுடைய பறை என்க. அனுங்க - கெட. ( 88 )
------------
-
2083. மணியியல் வள்ளத் தேந்த
மதுமகிழ்ந் தனந்தர் கூர
வணிமலர்க் குவளைப் பைம்போ
தொருகையி னருளி யம்பொற்
பிணையனா ளருகு சேரிற்
பேதுறு நுசுப்பென் றெண்ணித்
துணையமை தோள்க டம்மாற்
றோன்றறான் புல்லி னானே.
விளக்கம் : அஞ்சொற் பிணையலும் நறிய சேர்த்தி என்பது பாடமாயின் புகழ்மாலை சூட்டி என்க. மது ஏந்த அதனை மகிழ்ந்தென்க. அனந்தர் - மயக்கம். பிணையனாள் - பெண்மான் போன்ற சுரமஞ்சரி. நுசுப்புப் பேதுஉறும் என மாறுக. ( 89 )
------------
-
2084. மல்லலங் கங்கை போலும் பலர்முயங் கார மார்பிற்
புல்லன்மின் போமின் வேண்டா வென்றவள் புலந்து நீங்க
முல்லையங் கோதை யொன்றும் பிழைப்பிலேன் முனிய னீயென்
றல்லலுற் றரத்த மார்ந்த சீறடி தொழுதிட் டானே.
விளக்கம் : அவன் மார்பு உற முயங்காமையின் பிறர் முயங்க வைத்தான் என்று கருதிப் பிணங்கினாள். மல்லலங் கங்கை போலும் பலர்முயங் காரமார்பிற் புல்லன்மின் போமின் என்னுமிதனோடு பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு என்னும் திருக்குறளை (1311) ஒப்பு நோக்குக. ஊடன் மிகுதி தோன்றப் புல்லன்மின் போமின் வேண்டா என்று வற்புறுத்தோதினள். ( 90 )
------------
-
2085. வட்டிகைப் பாவை நோக்கி
மகிழ்ந்திருந் திலிரோ வென்னாத்
தொட்டிமை யுருவந் தோன்றச்
சுவரையே பொருந்தி நின்றாய்
கட்டழ குடைய நங்கை
நீயெனக் கருதிக் கண்ணா
னொட்டியா னோக்கிற் றென்றா
னொருபிடி நுசுப்பி னாட்கே.
விளக்கம் : அவன்மார்புற முயங்காமையின் ஊடியவள் சுவரிலே பொருந்தி நின்றாளாக, அச் சுவரிலெழுதிய பாவை இவள் போலவே இருத்தலின் மயங்கிய அவன் இரண்டுருவினையும் ஒப்பிட்டுப்பார்த்தான். ஒப்பிட்டு நோக்கியபோது அவ்வோவியம் அழகுற இருப்பதாக எண்ணி நோக்கினானென்று மேலும் ஊடினாள். நச்சினார்க்கினியர் அவளுருவம் பளிங்குச் சுவரிலே பொறித்ததனை யிவளென்று கருதி வணங்கினானென்றும், அதுகண்டு புலந்தாளென்றுங் கூறுவர். வட்டிகைப் பாவை என்றும், சுவரையே பொருந்தி நின்றாய் என்றும் வருவதால் அவர் உரை பொருந்தாது. ( 91 )
------------
-
2086. நுண்டுகி னெகிழ்ந்த வல்குன்
மணிபரந் திமைப்ப நொந்து
கண்களை யிடுகக் கோட்டிக்
காமத்திற் செயிர்த்து நோக்கிக்
குண்டல மிலங்கக் கோதை
கூந்தலோ டவிழ்ந்து சோர
வொண்டொடி யூடி நின்றா
ளொளிமணிப் பூங்கொம் பொப்பாள்.
விளக்கம் : ஒப்பிட்டுப் பார்த்தேன் என்று காரணத்துடன் கூறியும் தன்னினும் அவ்வுருவம் அழகுற இருப்பதாக எண்ணியே நோக்கினான் என்று ஊடினாள். அது மேற்செய்யுளில் வரும். ( 92 )
------------
-
2087. கிழவனாய்ப் பாடி வந்தென்
கீழ்ச்சிறை யிருப்பக் கண்டே
னெழுதிய பாவை நோக்கி
யிமையவித் திருப்பக் கண்டே
னொழிகவிக் காம மோரூ
ரிரண்டஃக மாயிற் றென்றாங்
கழுதகண் ணீர்கண் மைந்த
னாவிபோழ்ந் திட்ட வன்றே.
விளக்கம் : நீர்கள் என்றதனை, என், பாராட்டைப்பாலோ சில (கலி. 85) என்றாற்போலக் கொள்க. நச்சினார்க்கினியர் முற்செய்யுட்களிற் பளிக்குச் சுவரும் நிழலும் அமைத்துக் கொண்டதற்குத் தக, ஈண்டு, எழுதிய என்பதற்கு ஒரு படத்திலே எழுத வேண்டி என்று கூறுவர். இவ்வாறே தம் விடாப்பிடியைக் காட்டுவது அவர் வழக்கம். ( 93 )
------------
-
2088. அலங்கறா தவிழ வஞ்செஞ்
சீறடி யணிந்த வம்பூஞ்
சிலம்பின்மேற் சென்னி சோத்திச்
சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்ப ரன்றே
பெரியவ ரென்று கூறி
யிலங்குவேற் கண்ணி யூட
லிளையவ னீக்கி னானே.
விளக்கம் : அலங்கல் தாது சிலம்பின்மேல் அவிழ என இயைப்பர் நச்சினார்க்கினியர். சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோராயிற் பொறுப்பது கடனே என வரும் வெற்றிவேற்கையும் காண்க. ( 94 )
------------
-
2089. யாழ்கொன்ற கிளவி யாட
னழிழ்துறழ் புலவி நீக்கிக்
காழின்றிக் கனிந்த காமக்
கொழுங்கனி நுகர்ந்து காதற்
றாழ்கின்ற தாம மார்பன்
றையலோ டாடி விள்ளா
னூழ்சென்ற மதியம் வெய்யோ
னொட்டியொன் றாய தொத்தான்.
விளக்கம் : கிளவியாள் : சுரமஞ்சரி. காமம் புணர்தலின் உடல் இனி தென்பது பற்றி அமிழ்துறழ் புலவி என்றார். காழின்றிக் கனிந்த காமக் கொழுங்கனி என்பதனோடு காமத்துக் காழில் கனி என்னும் வள்ளுவர் மொழியையும் நினைக. ஊழ்சென்ற மதியம் - முறையே நிரம்பிய முழுத் திங்கள். ( 95 )
------------
-
2090. பச்சிலைப் பட்டு முத்தும்
பவளமு மிமைக்கு மல்கு
னச்சிலை வேற்கண் மாதர்
நகைமுக முறுவன் மாந்தி
யிச்சையுங் குறிப்பு நோக்கி
யெய்வதே கரும மாகக்
கைச்சிலை கணையோ டேந்திக்
காமனிக் கடையைக் காப்பான்.
விளக்கம் : பச்சிலைப்பட்டு - பசிய இலைத்தொழிலையுடைய பட்டு. நச்சிலை - நஞ்சு தோய்த்த இலை. மாதர் : சுரமஞ்சரி. மாந்தி - மாந்த. இச்சை - வேட்கை. இக்கடையைக் காப்பான் காமனே என்றது பண்டு ஆடவர் அணுகாதபடி காக்கப்பட்ட இக்கடையை இப்பொழுது ஆடவன் பிரியாதபடி காமன் ஒருவனே காப்பவன் ஆயினான் என்பதுபட நின்றது. கடை - வாயில். காமனிக் கடையைக் காப்பான் என்பது காமன் போர்விளைத்துச் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் காதலை யுண்டாக்கிப் புணர்ச்சியை மேலும் மேலும் விரும்புமாறு செய்தான் என்ற கருத்தை யுள்ளடக்கி நின்றது. ( 96 )
------------
-
2091. கடிப்பிணை காது சோத்திச்
சிகழிகை காத நாறத்
தொடுத்தலர் மாலை சூட்டிக்
கிம்புரி முத்த மென்றோ
ளடுத்தணிந் தாகஞ் சாந்தி
னணிபெற வெழுதி யல்கு
லுடுத்தபொற் கலாபந் தைவந்
தொளிவளை திருத்தி னானே.
விளக்கம் : கடிப்பு இணை எனக் கண்ணழித்துக் கொள்க. கடிப்பு - ஒருவகைச் செவியணிகலன். சிகழிகை - முடி. முத்தம் - முத்தமாலை. பொற்கலாபம் - பொன்னாலியன்ற மேகலை. தைவந்து - தடவி. ( 97 )
------------
-
2092. இலங்குவெள் ளருவிக் குன்றத்
தெழுந்ததண் டகரச் செந்தீ
நலங்கிள ரகிலுந் தேனுங்
கட்டியு நன்கு கூட்டிப்
புலம்பற வளர்த்த வம்மென்
பூம்புகை யமளி யங்கண்
விலங்கர சனைய காளை
வெள்வளைக் கிதனைச் சொன்னான்.
விளக்கம் : தகரம் - தகர விறகு. கட்டி - நேர்கட்டி என்னுமொரு மணப்பொருள். புலம்பு - குற்றம். அமளி - படுக்கை. விலங்கரசு - சிங்கம். ( 98 )
------------
-
2093. கருமநீ கவல வேண்டா
கயற்கணாய் பிரிவல் சின்னா
ளருமைநின் கவினைத் தாங்க
லதுபொரு ளென்று கூறப்
பெருமநீ வேண்டிற் றல்லால்
வேண்டுவ பிறிதொன் றுண்டோ
வொருமைநின் மனத்திற் சென்றே
னுவப்பதே யுவப்ப தென்றாள்.
விளக்கம் : தாங்கல் : அல்லீற்று வியங்கோள். வேண்டுவ பிறிதொன்றுண்டோ : பன்மையொருமை மயக்கம். ( 99 )
------------
-
2094. நாணொடு மிடைந்த தேங்கொ
ணடுக்குறு கிளவி கேட்டே
பூண்வடுப் பொறிப்பப் புல்லிப்
புனைநலம் புலம்ப வைகேன்
றேன்மிடை கோதை யென்று
திருமக னெழுந்து போகி
வாண்மிடை தோழர் சூழத்
தன்மனை மகிழ்ந்து புக்கான்.
விளக்கம் : மிடைந்த - கலந்த. தேம் - இனிமை. வைகேன் : தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று. திருமகன் : சீவகன். ( 100 )
------------
-
2095. புரவியுங் களிறு நோக்கிப்
பொன்னெடுந் தேரு நோக்கி
யிரவினும் பகலு மோவா
தென்மகன் யாண்டை யானென்
றழுதகண் ணீரி னாலே
கைகழீஇ யவலிக் கின்ற
மெழுகெரி முகந்த தொக்குந்
தாய்மெலி வகற்றி னானே.
விளக்கம் : இருடிகூற்றைச் சிந்தித்திருத்தலின் கந்துகன் மெலிவையகற்றினானெனல் வேண்டாவாயிற்று என்னும் நச்சினார்க்கினியர் குறிப்பு நுணுக்கமிக்கது. ( 101 )
------------
-
2096. ஒற்றரு முணர்த லின்றி
யுரையவித் துறுப்பி னாலே
சுற்றத்தார்க் குரைப்ப வேண்டித்
தொக்குடன் றழுவிக் கொள்வா
ரெற்றுவா ரினைந்து சோர்வார்
நம்பியோ நம்பி யென்னா
வுற்றுடன் றழுத கண்ணீர்
காலலைத் தொழுகிற் றன்றே.
விளக்கம் : இஃது உவகைக்கலுழ்ச்சி. ஒற்றரும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. உறுப்பினாலே உரைத்தலாவது இங்கிதத்தான் உணர்த்துதல். ( 102 )
------------
-
2097. கந்துகண் கழறக் கல்லென்
கடற்றிரை யவிந்த வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க
மறைபுறப் படுமென் றெண்ணி
யெந்தைதா னிறந்த நாளின்
றெனநக ரியம்பி யாரு
மந்தமி லுவகை தன்னா
லகங்குளிர்ப் பெய்தி னாரே.
விளக்கம் : கடலில் அலையொலி யடங்கியதுபோல. இஃது இல்பொருள் உவமை, அலையொலியடங்குவது உலகில் இல்லை அதனை உவமை கூறியதால், ( 103 )
------------
-
2098. செங்கயன் மழைக்கட் செவ்வாய்த்
தத்தையு மகிழ்ந்து தீஞ்சொ
லெங்கையைச் சென்று காண்மி
னடிகளென் றிரந்து கூற
மங்கல வகையிற் சோந்து
மதுத்துளி யறாத மாலை
கொங்கலர் கண்ணி சோத்திக்
குங்கும மெழுதி னானே.
விளக்கம் : சுதஞ்சணன் பன்னிருமதியின் என்றதனைத் தத்தை உணர்தலால் தனக்குக் கூட்டமின்மை உணர்தலானும், அவள் வருத்த மிகுதியானும் இங்ஙனம் இரந்து கூறினாள். குணமாலை, கணவன் வருதலின், மங்கல அணிக்கு உடம்பட்டாள். எனினும் கூட்டத்திற்கு உடம்படாமற் கூறுவது அடுத்த செய்யுளில் விளங்கும். ( 104 )
------------
-
2099. தீவினை யுடைய வென்னைத்
தீண்டன்மி னடிகள் வேண்டா
பாவியே னென்று நொந்து
பரிந்தழு துருகி நையக்
காவியங் கண்ணி யொன்றுங்
கவலல்யா னுய்ந்த தெல்லா
நாவியே நாறு மேனி
நங்கைநின் றவத்தி னென்றான்.
விளக்கம் : இவளைத் தீண்டிச் சீவகன் கொலையுண்டானென்று உலகம் குணமாலையைக் கூறலின், தீவினையுடைய என்றாள். தான் விலக்கவும் இவன் தீண்டலின் பின்னும், வேண்டா என்றாள். இவனை அடைந்து வைத்தும் இங்ஙனம் நீக்கிக் கூற வேண்டலின், பாவியேன் என்றான். நந்த திண்தேர் - பண் (சீவக. 1088) என, ஆசிரியனைத் தப்பப் புகுந்ததனையும், பெண்ணிடர் விடுப்ப (சீவக. 1752) என வந்த தன்மையையும், தான் கட்டியங்காரன் தொழிற் பகுதியோரைக் கொல்வோம் என்று நினைத்ததனையும் கருதி, எல்லாம் என்றான். கவலல் : அல்விகுதி பெற்ற எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. ( 105 )
------------
-
2100. அன்னமென் னடையு நோக்குஞ்
சாயலு மணியு மேரு
மின்னினுண் ணுசுப்பும் வெய்ய
முலைகளு முகமுந் தோன்ற
வென்மனத் தெழுதப் பட்டா
யாயினு மரிவை கேளா
யுன்னையான் பிரிந்த நாளோ
ரூழியே போன்ற தென்றான்.
விளக்கம் : நின்னடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் நுசுப்பும் முலைகளும் முகமும் என்னெஞ்சத்தே நன்கு பதிந்துள்ளன ஆகலின் நின்னையான் ஒரு சிறிதும் மறந்திலேன், அப்படியிருந்தும் பிரிந்த ஒருநாள் ஊழிபோல என்னை வருத்தியது என்பதாம். இன்னும் என்னை வருத்தாதே என்பது குறிப்பெச்சம். ( 106 )
------------
-
2101. இளையவண் மகிழ்வ கூறி
யின்றுயி லமர்ந்து பின்னாள்
விளைபொரு ளாய வெல்லாந்
தாதைக்கே வேறு கூறிக்
கிளையவர் சூழ வாமான்
வாணிக னாகிக் கேடி
றளையவிழ் தாம மார்பன்
றன்னகர் நீங்கி னானே.
விளக்கம் : பின்னாள் என்று ஈண்டுக் கூறலின், அன்றைப் பகலே வந்தடைவன் (சீவக. 1932) என்றல் ஆகாதென்றுணர்க. மற்றும், நச்சினார்க்கினியர் கூற்றுப்போல, விமலை மணம் ஒருநாளினும். சுரமஞ்சரி மணம் ஒரு நாளினும் முடியாமல் நான்குநாள் வரையாயிருக்க வேண்டும் என்றும் உணர்தல்வேண்டும். சுரமஞ்சரியின் மனையில் மணத்திற்கு ஓரிரவு தங்கினதாக உணரப்படுதலானும், நச்சினார்க்கினியர் உரையின் வண்ணமே விமலையின் மனையிலே இருநாள் தங்கினதாக உணர்வதாலும் என்க. ( 107 )
சுரமஞ்சரியார் இலம்பகம் முற்றிற்று.
-------------------
சீவக சிந்தாமணி :10. மண்மகள் இலம்பகம் (2102 - 2326 )
வஞ்சகத்தால் தன்னை வெல்லக்கருதிய கட்டியங்காரனைக் கோவிந்தனும் வஞ்சகமாகவே கொல்லக் கருதினன். தன்மகள் இலக்கணைக்குச் சுயம்வரம் அமைத்தான். அச் சுயய்வரத்தின்கண் திரிபன்றிப் பொறியொன்று வைத்து. அதனை எய்து வீழ்த்தியவனே இலக்கணைக்குக் கணவனாவன் என்று முரசறைவித்தனன். பலநாட்டு மன்னர் மக்களும் இலக்கணையை எய்த விரும்பிவந்து குழுமினர். திரிபன்றியை வீழ்த்த முயன்று தோற்றனர். சீவகன் யானையின்மேலேறி அச் சுயம்வர மண்டபமெய்தினன். வெளிப்பட்ட சீவகனைக் கண்ட கட்டியங்காரன் புலிகண்ட மானென அஞ்சினான். சீவகன் அத் திரிபன்றியை அம்பேவி வீழ்த்தனன். கோவிந்தன் அவ்வவையோர்க்குச் சீவகன் வரலாற்றை வெளிப்பட விளம்பினன். அப்பொழுது அகல்விசும்பில் ஓர் இயக்கன் தோன்றி, சீவகனாகிய அரிமான் கட்டியங்காரனாகிய யானையைக் கொன்றொழிக்கும் என்று இயம்பினான். அதுகேட்ட கட்டியங்காரன் சீற்றமுற்றவனாய்ச் சீவகனை நோக்கிச், சிறியோய்! நின்னை யான் அஞ்சுவேனல்லேன்! என்னாற்றலை நீ யறியாய்! நின் தந்தை யறிவன்! என்று வெகுண்டான். பின்னர்ச் சீவகன் முதலியோர்க்கும் கட்டியங்காரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. கட்டியங்காரன் படைஞர் சீவகன் படைக்குத் தோற்றனர் மாண்டனர்: அஞ்சி இரியல் போயினர். சீவகன் கட்டியங்காரனையும் அவன் மக்களையும் அப்போர்க்களத்தே கொன்று நூழிலாட்டினன். இச் செய்தி கேட்டு விசயை மகிழ்ந்தனள்; உலகம் பாராட்டிப் புகழ்ந்தது.
------------
-
2102. குடம்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க்
குவிமுலைப் படர்மருப் பெருமை
நடந்தவா யெல்லா நறுமலர் மரையி
னாகிலைச் சொரிந்தவந் தீம்பா
றடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப்
பார்ப்பின மோம்புதண் மருத
மடங்கல்போற் றிறலார் மாமணி கறங்க
வளவயற் புள்ளெனக் கழிந்தார்.
விளக்கம் : அன்னம் முதலியவற்றின் பார்ப்புக்கள் பாலுண்டல் நிலப்பண்பு. புரை : உவமவுருபு. செருத்தல் - மடி. கயவாய் - பெரிய வாய். நடந்தவாய் - நடந்த இடம். மரை - தாமரை; முதற்குறை. நாகிலை - இளமையுடைய இலை. பால் : எழுவாய் ஓம்பும் - பாதுகாக்கும் மடங்கல் - சிங்கம். மாமணி. குதிரைக்குக் கட்டிய மணி. கழிதல் புள்ளெழுதற்குக் காரணம் என்க. குருகு - கொக்கு. பார்ப்புஇனம் - பறவைக் குஞ்சுகளின் கூட்டம் மடங்கல் - சிங்கம். தீம்பால் பார்ப்பினம் ஓம்பும் தண்மருதம் எனக் கூட்டுக. ( 1 )
------------
-
2103. புரிவளை யலறிப் பூசலிட் டீன்ற
பொழிகதிர் நிலத்தில் முழக்கி
வரிவளை சூழும் வலம்புரி யினத்துட்
சலஞ்சல மேய்வன நோக்கி
யரிதுண ரன்னம் பெடையெனத் தழுவி
யன்மையி னலமர லெய்தித்
திரிதரு நோக்கந் தீதிலார் நோக்கி
நெய்தலுங் கைவலத் தொழிந்தார்.
விளக்கம் : தீது - ஈண்டு வேட்கை என்பர் நச்சினார்க்கினியர். புரிவளை - முறுக்குடைய சங்கு, நித்திலம் - முத்து, வலம்புரிச் சங்கு ஆயிரஞ் சூழச் செல்வது சலஞ்சலம் என்னும் சிறந்த சங்கு என்பது தோன்ற வலம்புரி இனத்துட் சலஞ்சலம் என்றார். பாலையும் நீரையும் பிரித்துணரவல்ல என்பார் அரிதுணர் அன்னம் என்றார். அன்மையின் - அல்லாமையால். அலமரல் - சுழற்சி. தீதிலார் - சீவகன் முதலியோர். ( 2 )
------------
-
2104. கோட்டிளங் கலையுங் கூடுமென் பிணையுங்
கொழுங்கதிர் மணிவிளக் கெறிப்பச்
சேட்டிளங் கொன்றைத் திருநிழற் றுஞ்சச்
செம்பொறி வண்டவற் றயலே
நாட்டிளம் படியார் நகைமுகம் பருகு
நல்லவர் போன்மலர் பருகு
மோட்டிள முல்லை மொய்ம்மலர்க் கான
முருகுவந் தெதிர்கொள நடந்தார்.
கொழுங்கதிர் மணிவிளக்கு எறிப்ப - கொழுவிய கதிரையுடைய மணிவிளக்கு ஒளிசெய; கோடு இளங்கலையும் கூடும் மென்பிணையும் துஞ்ச - கொம்பினையுடைய இளங்கலை மானும் அதனுடன் கூடிய மென்மையான பிணைமானும் துயில; அவற்று அயலே - அவற்றின் அருகில்; நாட்டு இளம்படியார் நகை முகம் பருகும் நல்லவர்போல் - நாட்டிலுள்ள இளமங்கையரின் நகைமுகத்தின் எழிலைப் பருகும் ஆடவரைப்போல; செம்பொறி வண்டு மலர் பருகும் மோட்டிள முல்லை மொய்ம்மலர்க்கானம் - செம்புள்ளிகளையுடைய வண்டுகள் மலர்களைப் பருகுவதற்குக் காரணமான மிகுதியான முல்லை மலர்களையுடைய கானத்தை; முருகுவந்து எதிர்கொள நடந்தார் - மணம் வந்து எதிர்கொள்ளக் கடந்தார்.
விளக்கம் : கலை - ஆண்மான். பிணை - பெண்மான். சேடு - பெருமை. திரு நிழல் - அழகிய நிழல். துஞ்சுதல் - துயிலுதல். இளம்படியார் - மகளிர். நல்லவர் என்றது, ஆடவரை. மோடு - மிகுதி; பெருமையுமாம். முருகு - மணம். இது முல்லை நிலத்தை வண்ணித்தது. ( 3 )
------------
-
2105. குழவிவெண் டிங்கட் கோட்டின்மேற் பாயக்
குளிர்புனல் சடைவிரித் தேற்கு
மழலவிர் சூலத் தண்ணலே போல
வருவிநீர் மருப்பினி னெறியக்
கழைவளர் குன்றிற் களிறுநின் றாடுங்
கடிநறுஞ் சந்தனச் சார
லிழைவளர் முலையார் சாயல்போற் றோகை
யிறைகொள்பூங் குறிஞ்சியு மிறந்தார்.
விளக்கம் : இஃது இல்பொருளுவமை. கங்கைத் தலைப்பாகிய இமவானிற் பதுமையென்னும் பொய்கையில், நீர் விழுகின்ற தாழ்வரையில் உருத்திரப் படிமம் இருத்தலின் சூலத்தண்ணல் என்றார். இது குறிஞ்சி நிலத்தை வண்ணித்தது. சூலத்தண்ணல் : சிவபெருமான். ( 4 )
------------
-
2106. ஊன்றலைப் பொடித்தாங் கனையசெஞ் சூட்டி
னெளிமயிர் வாரண மொருங்கே
கான்றபூங் கடம்பின் கவட்டிடை வளைவாய்ப்
பருந்தொடு கவர்குரல் பயிற்று
மான்றவெம் பாலை யழன்மிதித் தன்ன
வருஞ்சுரஞ் சுடர்மறை பொழுதி
னூன்றினார் பாய்மா வொளிமதிக் கதிர்போற்
சந்தன மொருங்குமெய் புதைத்தே.
விளக்கம் : ஆங்கென்றது முல்லையுங் குறிஞ்சியும் சேர்ந்த பாலையை. முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப், பாலையென்பதோர் படிவங்கொள்ளும் (சிலப் : 11 : 64-6) என்று வருவது காண்க. வாரணமும் பருந்தும் பாலை நிலத்தினது வெப்பமிகுதியால் நாள்வழியிளைப்பால், ஓரிடத்திருந்தும் ஒன்றையொன்று நலியமாட்டாமையின், ஓரிடத்திருந்து கவர்குரல் பயிற்றும் என்றார். வெம்மை மிகுதியின் அந்திக்காலத்தே போனார். நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் - படு திரை வையம் பாத்திய பண்பே (தொல். அகத். 2) என்று பாலைக்கு நிலம் இன்று என்றமையானும், நடுவு நிலத்திணையே நண்பகல் வேனிலொடு - முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே (தொல். அகத். 9) என்றமையானும். அக்காலம் அன்றி, இவர் செல்கின்ற காலம் முன்பனி தொடங்குகின்ற காலமாகவும் பாலை கூறியவாறு என்னை யெனின், காலம் பொதுவாய்த் தேயந்தோறும் வேறுபட்டிருக்கும்; சித்திரையும் வைகாசியும் குடகுமலைக்குக் கார்காலத்தை ஆக்கினாற்போல, மார்கழித் திங்களும் இவர் போகின்ற தேயத்திற்கு முதுவேனிலாய், வெம்மை விளைத்துப் பாலையாக்கிற்று. இனி இமயத்தைச் சூழ்ந்த இடம் தெய்வத்தின் ஆணையால் எக்காலமும் மாறாமல், ஓரிடம் ஒருகாலமாகவே இருக்குமாதலின். அவ்விடத்தே இவர் போகின்றார் என்றுமாம். இவ்வாறு காலத்தைப் பற்றி நச்சினார்க்கினியர் கூறுவர். முல்லையும் குறிஞ்சியும் வெம்மை விளைந்து பாலையாகலாம் என்று முன்னர்ச் சிலப்பதிகார மேற்கோள் காட்டியதாலும், இவர்கள் ஐவகை நிலத்தையுங் கடந்து சென்றனர் என்று கூறவே பாலையைக் கூறினார் ஆதலானும் காலத்தைப் பற்றியே கவலை ஈண்டு வேண்டற்பாற்றன்று. இராசமாபுரத்தே கூதிரானபோது ஓரிரண்டு நாடுகளே யிடையிட்ட விதேக நாட்டில் மார்கழியிற் கோடையாக இருக்குமென்பது பொருந்தாது. ( 5 ) இது பாலை நிலத்தை வண்ணித்தது.
------------
-
2107. நிலையிலா வுலகி னின்றவண் புகழை
வேட்டவ னிதியமே போன்று
மிலைகுலாம் பைம்பூ ணிளமுலைத் தூதி
னின்கனித் தொண்டையந் துவர்வாய்க்
கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றுங்
கடவுளர் வெகுளியே போன்று
முலைவிலார் நில்லா தொருபக லுள்ளே
யுருப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்.
விளக்கம் : கலைகளாவன : வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் - கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும் - கந்துகக்கருத்தும் மடைநூற் செய்தியும் - சுந்தரச் சுண்ணமும் தூ நீராடலும் - பாயற் பள்ளியும் பருவத்தொழுக்கமும் - காயக்கரணமும் கண்ணியது உணர்தலும் - கட்டுரை வகையும் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் கோலம் கோடலும் கோவையின் கோப்பும் - காலக் கணிதமும் கலைகளின் துணிவும் - நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த - ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் (2 : 101-31) என மணிமேகலையிற் கூறப்பட்டன காண்க. ( 6 )
------------
-
2108. புதுக்கலம் போலும் பூங்கனி யாலும்
பொன்னிணர்ப் பிண்டியும் பொருந்தி
மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்
மலர்சொரி வகுளமு மயங்கிக்
கதிர்த்ததண் பூணி கம்புடாழ் பீலிக்
கனைகுர னாரைவண் டான
மெதிர்த்ததண் புனல்சூ ழின்னதிக் கரைமே
லிளையவ ரயாவுயிர்த் தெழுந்தார்.
விளக்கம் : பூணி, கம்புள் என்பன இறந்த வழக்கென்பர் நச்சினார்க்கினியர். கலம் - ஈண்டுக் குயக்கலம்; இஃது ஆலம்பழத்திற்குவமை, ஆல் - ஆலமரம். சிலம்பி மகிழம்பூவிற்கு உவமை. வகுளம் - மகிழமரம். கம்புள் - சம்பங்கோழி. சிறு சின்னம் - ஒருவகை இசைக்கருவி. வண்டானம் - ஒருவகை நாரை; (கொய்யடி நாரை என்ப.) அயாவுயிர்த்தல் - இளைப்பாறுதல். ஆலும், பிண்டியும், வகுளமும் மயங்கி. பூணி, கம்புள், நாரை வண்டானம் எதிர்த்த தண்புனல்சூழ் இன்னதிக்கரைமேல் அயாவுயிர்த்து எழுந்தார் என வினை முடிபு செய்க. ( 7 )
------------
-
2109. அள்ளிலைப் பலவி னளிந்து வீழ் சுளையுங்
கனிந்துவீழ் வாழையின் பழனும்
புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூன்
ஞெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான்
பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப்
பன்மலர் வழிபடக் குறைக்கும்
வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தே
வேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார்.
விளக்கம் : அள் - செறிவு. பலவு - பலாமரம். பழன் - பழம். அலவன் - நண்டு. கமம் - நிறைவு. ஞெண்டு - நண்டு. பணித்து - மிதித்து, விதையம் - விதேகநாடு. வேந்தன் : கோவிந்தராசன்; விசையை உடன்பிறந்தோன். ( 8 )
------------
-
2110. வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற்
பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென்
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங்
கிறைவனுந் தமர்களைப் பணிப்ப
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து
நல்வரை யமிர்தமு மல்லாக்
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக்
கண்ணகன் புறவெதிர் கொண்டார்.
விளக்கம் : வீட்டிடம் : விடுதலையுடைய இடம் என்பர் நச்சினார்க்கினியர். வில்லக விரலிற் பொருந்தி (குறுந். 370) என்றார் பிறரும்.
-
நாட்டிலமிர்து : செந்நெல் சிறுபயறு செவ்விள நீர்செழுங்
கன்னல் கதலியோ டைந்து
கடலமிர்து : ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
நீர்ப்படும் உப்பினோ டைந்து
வரையமிர்து : தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம்
கர்ப்பூரம் சாதியோ டைந்து
காட்டிலமிர்து : அரக்கிறால் சந்தேன் அணிமயிற் பீலி
திருத்தகு நாவியோ டைந்து
------------
-
2111. பொருமத யானைப் புணர்மருப் பேய்ப்பப்
பொன்சுமந் தேந்திய முலையா
ரெரிமலர்ச் செவ்வாய் திறந்துதே னூற
வேத்துவார் பூக்கடூய்த் தொழுவார்
வருகுலைக் கமுகும் வாழையு நடுவார்
வரையுமி ழாவிபோன் மாடத்
தருநறும் புகையு மேந்துவா ரூர்தோ
றமரர்த முலகமொத் ததுவே.
விளக்கம் : ஆவி - நெட்டுயிர்ப்பு. இனி நகரின் செய்தி. பொருமதயானை, புணர்மருப்பு என்பன வினைத்தொகைகள், ஏய்ப்ப : உவமவுருபு. பொன் - அணிகலன் : ஆகுபெயர். தூய் - தூவி. வருகுலை:வினைத்தொகை. ( 10 )
------------
-
வேறு
2112. பாடி னருவிப் பயங்கெழு மாமலை
மாட நகரத்து வாயிலுங் கோயிலு
மாடம் பலமு மரங்கமுஞ் சாலையுஞ்
சேடனைக் காணிய சென்றுதொக் கதுவே.
விளக்கம் : உலகினைத் தாங்குபவன் ஆதலின் சேடன் என்றார் அம்பலம் - பலருங் கூடும் பொது இடம்; கூத்துக் காணும் இடம் என்றுமாம். அரங்கம் - நாடகம் முதலியன நிகழ்த்தும் மேடை ( 11 )
------------
-
2113. பல்கதி ராரமும் பூணும் பருமித்துக்
கொல்சின வெந்தொழிற் கோடேந் திளமுலை
நல்லெழின் மங்கையர் நன்னுதற் சூட்டிய
வெல்கதிர்ப் பட்டம் விளங்கிற் றொருபால்.
விளக்கம் : ஆரம் - முத்துவடம். பருமித்தல் அணிதல். கொல் சினக்கோடு, வெந்தொழிற்கோடு எனத் தனித்தனியே கூட்டுக. கோடு ஈண்டு யானைக் கொம்பு. மங்கையராகிய யானைகள் என வேண்டாதே உரைத்தார் நச்சினார்க்கினியர் ( 12 )
------------
-
2114. சுண்ணமுஞ் சூட்டுஞ் சொரிந்து வார்குழற்
கண்ணிம காரொடு காற்சிலம் பார்த்தெழ
வண்ணலைக் காணிய வார்த்திற் போதரும்
வண்ண மகளிர் வனப்பிற் றொருபால்.
விளக்கம் : தலையிற் சுண்ணம் அணிந்தார் மகார் ஆதலின். சுண்ணம் - நறுமணப்பொடி, சூட்டு - ஒரு நுதலணி. மகார் - மக்கள். அண்ணலை : சீவகனை. காணிய - காணுதற்கு. ( 13 )
------------
-
2115. எதிர்நலப் பூங்கொடி யெள்ளிய சாயற்
கதிர்நல மங்கையர் காறொடர்ந் தோட
முதிரா விளமுலை முத்தொடு பொங்க
வதிரரிக் கிண்கிணி யார்க்கு மொருபால்.
விளக்கம் : முத்தொடு பொங்கல் : முத்துவடம் புடைத்தற்குத் தாமும் புடைத்தல். ( 14 )
------------
-
2116. கருங்க ணிளமுலை கச்சற வீக்கி
மருங்கு றளர மழைமருண் மாட
நெருங்க விறைகொண்ட நேரிழை யார்தம்
பெருங்க ணலமரும் பெற்றித் தொருபால்.
விளக்கம் : அற வீக்கி - இறுகக்கட்டி, மருங்குல் - இடை, மழை - முகில். மருளுதற்குக் காரணமான மாடம் என்க. இறைகொண்ட - தங்கிய பெற்றித்து - தன்மையுடையது. ( 15 )
------------
-
2117. மின்னு குழையினர் கோதையர் மின்னுயர்
பொன்வரை மாடம் புதையப் பொறிமயி
றுன்னிய கோதைக் குழாமெனத் தொக்கவர்
மன்னிய கோல மலிந்த தொருபால்.
விளக்கம் : மின்னுகுழை : வினைத்தொகை. மின்னுயர் பொன் வரை : வினைத்தொகையடுக்கு. பொறிமயில் - புள்ளிமயில். தோகை - மயில் : ஆகுபெயர். ( 16 )
------------
-
2118. பாடன் மகளிரும் பல்கலை யேந்தல்கு
லாடன் மகளிரு மாவண வீதி தொ
றோட வுதிர்ந்த வணிகல முக்கவை
நீடிருள் போழு நிலைமைத் தொருபால்.
(விளக்கம்.) குடை முதலியவற்றின் இருளுமாம். ஆடன் மகளிர் - விறலியர். கலை - மேகலை. ஆவணவீதி - கடைத்தெரு. உக்கவை - சிந்தியவை. ( 17 )
------------
-
2119. கோதையுந் தாரும் பிணங்கக் கொடுங்குழைக்
காதன் மகளிரு மைந்தருங் காணிய
வீதியு மேலும் மிடைந்து மிடைமலர்த்
தாதடுத் தெங்குந் தவிசொத் ததுவே.
விளக்கம் : கோதை - ஈண்டு மகளிர் அணிந்த மாலையினையும் - தார், மைந்தர் அணிந்த மாலையினையும் குறித்தன. காணிய - காண. மேல் - மேல்வீடு. தாது - பூந்துகள், தவிசு - இருக்கை. ( 18 )
------------
-
2120. மானக் கவரி மணிவண் டகற்றவங்
கானை யெருத்தத் தமா குமரனிற்
சேனைக் கடலிடைச் செல்வனைக் கண்டுவந்
தேனை யவரு மெடுத்துரைக் கின்றார்.
விளக்கம் : மானக்கவரி - மயிர் நீப்பின் வாழாக் கவரிமானின் மயிர் : ஆகுபெயர். ஆனை - யானை. எருத்தம் - பிடரி. செல்வன் : சீவகன். ( 19 )
------------
-
2121. தேமல ரங்கட் டிருவே புகுதக
மாமலர்க் கோதை மணாளன் புகுதக
காமன் புகுதக காளை புகுதக
நாம வெழில்விஞ்சை நம்பி புகுதக.
விளக்கம் : திருவே! என்றது உவப்பினால் வந்த பால் வழுவமைதி. மாமலர்க்கோதை : தந்தை : இலக்கணையுமாம்; திருமகளுமாம். தத்தையை மணந்ததனால் விஞ்சை நம்பி ஆயினன். புகுதக : ஒரு கொல் விழுக்காடு ; புகுதுக : என்றவாறு - திரு, மணாளன், காமன்! காளை நம்பி ! என்பன விளிகள். ( 20 )
------------
-
2122. மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதக
வின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதக
வென்றோன் புகுதக வீரன் புகுதக
வென்றே நகர மெதிர்கொண் டதவே.
விளக்கம் : புகுதக : ஒருசொல் நீர்மைத்து. வரைகொன்ற வேலோன் : முருகன். இயக்கன் - தேவரின் ஒரு வகையினன். வென்றோன் : வினையாலணையும் பெயர். நகரம் : ஆகுபெயா ( 21 )
------------
-
2123. இடிநறுஞ் சுண்ணஞ் சிதறியெச் சாருங்
கடிகமழ் மாலையுங் கண்ணியுஞ் சிந்தித்
துடியடு நுண்ணிடைத் தொண்டையஞ் செவ்வாய்
வடியடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்.
விளக்கம் : இடி நறுஞ்சுண்ணம் : வினைத்தொகை. சார் - இடம். கடி : மணம். துடி - உடுக்கை. தொண்டை - கொவ்வைக்கனி. வடி - மாம்பிஞ்சு. வாழ்த்துபு - வாழ்த்தி. ( 22 )
------------
-
2124. சுரும்பிமிர் மாலை தொழுவனர் நீட்டி
யிரும்பிடி நின்னடை கற்ற வெமக்கு
விரும்பினை யாய்விடின் மெல்ல நடமோ
கருங்கணிற் காமனைக் காணமற் றென்பார்.
விளக்கம் : இது பிடிக்குமுன் நின்ற மகளிர் கூற்று. மோ : முன்னிலை அசை. தொழுவனர் தொழுதனர் : இறந்தகால வினைமுற்று. இரும்பிடி. விளி நடமோ நடப்பாயாக! மோ : முன்னிலையசை. கணின் கண்ணால். காமனை : சீவகனை. மற்று : அசை. என்பார் : முற்றெச்சம். ( 23 )
------------
-
2125. மடநடை பெண்மை வனப்பென்ப தோராய்
கடுநடை கற்றாய் கணவ னிழப்பாய்
பிடியலை பாவி யெனப்பூண் பிறழ்ந்து
புடைமுலை விம்மப் புலந்தனர் நிற்பார்.
விளக்கம் : இது பிடிக்குப் பின் நின்ற மகளிர் கூற்று. மடநடை - மென்னடை; பெண்மைக்கு வனப்பு என்க. பிடியல்லை - பிடியலை என நின்றது. பாவி : விளி. புடை - பக்கம். புலந்தனர் : முற்றெச்சம். ( 24 )
------------
-
2126. மயிர்வாய்ச் சிறுகட் பெருஞ்செவி மாத்தாட்
செயிர்தீர் திரள்கைச் சிறுபிடி கேள்வ
னயிரா வணத்தொடு சூளுறு மைய
னுயிர்கா வலற்கொண் டுதவநில் வென்பார்.
விளக்கம் : நில்லாவிடிற் சூளுறுவேம்; சூளுறாதபடிநில் என்றனர். சூளுறும் பன்மைத் தன்மை வினைமுற்று; சேறும் என்றாற் போன்று. ( 25 )
------------
-
2127. கருனைக் கவளந் தருதுங் கமழ்தா
ரருமை யழகிற் கரசனை நாளைத்
திருமலி வீதியெஞ் சேரிக் கொணர்மோ
வெரிமணி மாலை யிளம்பிடி யென்பார்.
விளக்கம் : மோ : முன்னிலை அசை. கவளம் - யானை உணவு. கருனை - பொரிக்கறி, தருதும் : தன்மைப்பன்மை. அழகிற்கரசன் என்றது சீவகனை. பிடி : விளி. ( 26 )
------------
-
2128. என்னோர் மருங்கினு மேத்தி யெரிமணிப்
பொன்னார் கலையினர் பொற்பூஞ் சிலம்பினர்
மின்னார் குழையினர் கோதையர் வீதியுண்
மன்ன குமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்.
விளக்கம் : ஏத்தல் : புகழ்தல், வாழ்த்துதல் : பல்லாண்டு முதலியன கூறல். மருங்கின் என்னோரும் என மாறுக. என்னோரும் : எல்லோரும் : கலை : மேகலை. மன்னகுமரன் : சீவகன். ( 27 )
------------
-
வேறு
2129. விளங்குபாற் கடலிற் பொங்கி
வெண்டிரை யெழுவ வேபோற்
றுளங்கொளி மாடத் துச்சித்
துகிற்கொடி நுடங்கும் வீதி
யுளங்கழித் துருவப் பைந்தார்
மன்னவன் கோயில் சேர்ந்தா
னிளங்கதிர்ப் பருதி பௌவத்
திறுவரை யிருந்த தொத்தான்.
விளக்கம் : ஒத்தான் : எழுவாய்; வெண்டிரை துகிற்கொடிக் குவமை. உளம் - நடுவிடம். கோயில் - அரண்மனை, பௌவம் : கடல். இறுவரை : தங்கும் மலை; ஈண்டுக் குணக்குன்று. ( 28 )
------------
-
2130. இழையொளி பரந்த கோயி
லினமலர்க் குவளைப் பொற்பூ
விழைதகு கமல வட்டத்
திடைவிராய்ப் பூத்த வேபோற்
குழையொளி முகமுங் கோலக்
கொழுங்கயற் கண்ணுந் தோன்ற
மழைமின்னுக் குழாத்தின் மாலை
மங்கையர் மயங்கி நின்றார்.
விளக்கம் : பொற்பூ : குழை. குவளை; கண். தாமரை : முகம் மழை : கூந்தல். இனமலர்க் கமலப் பொற்பூ விழைதரு குவளை எனவும் பாடம். ( 29)
------------
-
2131. எரிக்குழாஞ் சுடரும் வையே
லேந்தலைக் கண்டு கோயிற்
றிருக்குழா மனைய பட்டத்
தேவியர் மகிழ்ந்து செய்ய
வரிக்குழா நெடுங்க ணாரக்
கொப்புளித் துமிழ வம்பூ
விரைக்குழா மாலைத் தேனும்
வண்டுமுண் டொழுக நின்றார்.
விளக்கம் : இங்ஙனம் ஒரு மகனைப் பெற்றேமே என்று மகிழ்ந்தனர். பூவில் விரை பொழுகுதலாலே தேனும் வண்டும் முதற் கொப்புளித்துப் பின் ஆரவுண்டு உமிழும்படி திரளுதலையுடைத்தாகிய மாலை என்க.( 30 )
------------
-
2132. அலங்கறா தவிழ்ந்து சோர
வல்குற்பொற் றோரை மின்னச்
சிலம்பின்மேற் பஞ்சி யார்ந்த
சீறடி வலத்த தூன்றி
நலந்துறை போய நங்கை
தோழியைப் புல்லி நின்றா
ளிலங்கொளி மணித்தொத் தீன்ற
வேந்துபொற் கொடியோ டொப்பாள்.
விளக்கம் : இவள் இலக்கணை. அலங்கல் - மலர்மாலை. தாது - பூந்துகள். தோரை - வடம் பொற்றேரை, பொற்றாரை என்றும் பாடம், வலத்ததாகிய சீறடி என்க. நலம் - அழகு, துறைபோதல் - நிரம்புதல். கொடியோ டொப்பாளாகிய நங்கை நின்றாள் என்க. ( 31)
------------
-
2133. தாமரைப் போதிற் பூத்த
தண்ணறுங் குவளைப் பூப்போற்
காமரு முகத்திற் பூத்த
கருமழைத் தடங்கண் டம்மாற்
றேமலர் மார்பி னானை
நோக்கினாள் செல்வன் மற்றப்
பூமலர்க் கோதை நெஞ்ச
மூழ்கிப்புக் கொளித்திட் டானே.
விளக்கம் : அவனை அவள் கண்ணால் நோக்கி நெஞ்சில் அமைத்தாள் என்பதாம். அவனும் அவள் நெஞ்சிலே மறைந்து புக்கு அவ்விடத்தினின்றும் போந்து கட்புலனாகாமையாகயினான் என்று கூறி மூழ்க எனத் திரித்து, நெஞ்சிலே புக்கு மூழ்க ஒளித்தான் என்றும் கூறலாமென்பர் நச்சினார்க்கினியர். ( 32)
------------
-
வேறு
2134. விண்ணாறு செல்வார் மனம்பேதுறப் போந்து வீங்கிப்
பண்ணாறு சொல்லாண் முலைபாரித்த வென்று நோக்கக்
கண்ணாறு சென்ற களியைங்கணைக் காம னன்ன
புண்ணாறு வேலான் மனமூழ்கினள் பொன்ன னாளே.
விளக்கம் : இனி, வானவருலகிலிருந்து அமிர்த கலசம் போந்து இவள் முலையாகப் பாரித்தன என்றும், அம் முலைகளைக் கண்டு வானவர் வருந்தினாரென்றுங் கூறுதல் குற்றமெனக் கொண்டு நச்சினார்க்கினியர். தேவருலகிலே சாசாசரன் என்னும் தேவர்கோவாயிருந்த சீவகன், இவ்வுலகிற்குப் போகின்றானென்று மனம் வருந்தும்படி போந்து, இவ்வுலகிலே கண்ணுக்குப் புலனாதலைப் பொருந்தின காமனைப் போன்றான் என்று நூலாசிரியர் வியந்து கூறினதாகக் கூறுவர். அங்ஙனமாயின், விண்ணாறு சொல்லார் மனம் பேதுறப் போந்து கண்ணாறு சென்ற கனி ஐங்கணைக் காமன் அன்ன புண்ணாறு வேலான், பண்ணாறு சொல்லாள், முலை பாரித்த என்று நோக்கப் பொன்னனாள் மனம் மூழ்கினள் என இயைத்தல் வேண்டும் சீவகன் முற்பிறப்பில் பதினாறு கற்ப லோகங்களுள் ஒன்றான ஸஹஸ்ரார கற்பத்தில் இந்திரனாக இருந்தான் என்ற கதையை உட்கொண்டு இவர் கூறினாலும் நூலாசிரியர் கருத்து அதுவன்று என்பதற்குச் சொற்கிடக்கையே சான்றாம். மேலம், புனைந்துரைப்பதில் வானவர் வருந்தும்படி அமிர்த கலசம் இவ்வுலகிற் போந்து இவள் மார்பிலே தோன்றின என்பதனாற் குற்றம் என்னோ? ( 33)
------------
-
2135. மைதோய் வரையி னிழியும்புலி போல மைந்தன்
பெய்தாம மாலைப் பிடியின்னிழிந் தேகி மன்னர்
கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி தேய்த்தி லங்குஞ்
செய்பூங் கழலைக் தொழுதான்சென்னி சோத்தி னானே.
விளக்கம் : கழல் : அடியை உணர்த்தலின் தானி ஆகுபெயர். மை - முகில், வரை - மலை; யானையினின்றும் இறங்கும் சீவகனுக்கு மலையினின்றி றங்கும் புலி உவமை தொழுதான்; முற்றெச்சம். ( 34)
------------
-
2136. பொன்னாங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோன்
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்
தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்த
மின்னும் மணிப்பூண் விரைமார்ப நனைப்ப நின்றான்.
விளக்கம் : பொன்னங்குவடு - பொன்மலை. மன்னன் - ஈண்டுக் கோவிந்தன். மருமான் என்றது சீவகனை. உடன் பிறந்தாள் மகனாதலின் அங்ஙனம் கூறினர் . செங்கண் முத்தம் - கண்ணீர்த்துளி. விரை - மணம். ( 35 )
------------
-
2137. ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாந்
தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய்ம் மாரி
தேனார் மலாபுர்த் தொழுகச்சிலம் பிற்சி லம்புங்
கானார் மயிலின் கணம்போற்கலுழ் வுற்ற தன்றே.
விளக்கம் : உற்றது : ஒருமை பன்மை மயக்கம். தான் ஆதும் இன்றி மயங்கி என்பதை வேந்தனுக் காக்குவர் நச்சினார்க்கினியர். கானார் சிலம்பு எனவுங் கூட்டுவர். ( 36)
------------
-
வேறு
2138. பகைநரம் பிசையுங் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொற்கோயில்
வகைநலம் வாடி யெங்கு மழுகுரன் மயங்கி முந்நீ
ரகமடை திறந்த தேபோ லலறக்கோக் கிளைய நங்கை
மிகைநலத் தேவி தானே விலாவணை நீக்கி னாளே.
(விளக்கம்.) பகை நரம்பிசையுங் கேளாக் கோயில் என்றது எக்காலத்தும் பகையால் உண்டாகும் துன்பம் சிறிதும் நுகர்ந்தறியாத அரண்மனை என்றவாறு. என்றது முந்நீர் மடைதிறந்தாற் போன்றலறுதற்குக் குறிப்பேதுவாக நின்றது. விலாவணை - அழுகை. (37)
------------
-
2139. பல்கதிர் மணியும் பொன்னும் பவழமுங் குயிற்றிச் செய்த
செல்வப்பொற் கிடுகு சூழ்ந்த சித்திர கூட மெங்கு
மல்குபூந் தாமந் தாழ்ந்து மணிபுகை கமழ வேந்தன்
வெல்புகழ் பரவ மாதோ விதியுள யெய்தி னானே.
விளக்கம் : குயிற்றி - பதித்து. கிடுகு - கீற்று. தென்னையோலையாற் செய்யும் கிடுகுபோலப் பொன்னாற் செய்த கிடுகினால் வேயப்பட்ட சித்திரகூடம் என்பது கருத்து. தாழ்ந்து - தாழப்பட்டென்க. மணி - அழகிய. விதியுளி - முறைப்படி. ஏத்தாளிகள் புகழைப் பரவ என்பர் நச்சினார்க்கினியர். ( 38)
------------
-
2140. எரிமணி யடைப்பை செம்பொற்
படியக மிலங்கு பொன்வாள்
கருமணி முகடு வேய்ந்த
கஞ்சனை கவரி கொண்ட
வருமுலை மகளிர் வைத்து
வான்றவி சடுத்து நீங்கப்
பெருமக னெண்ணங் கொள்வா
னமைச்சரோ டேறி னானே.
விளக்கம் : காஞ்சனக் கவரி என்று பாடமாயின் பொற்காம்பிட்ட கவரி என்க. அடைப்பை - வெற்றிலைப்பை. படியகம் - படிக்கம்; காளாஞ்சி. கஞ்சனை - கலசப்பானை. கவரி - சாமரை. தவிசடுத்து வைத்து நீங்க என மாறுக. எண்ணங் கொள்ளல் - எண்ணித் துணிதல். ( 39)
------------
-
2141. உலந்தநா ளவர்க்குத் தோன்றா
தொளிக்குமீன் குளிக்குங் கற்பிற்
புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப்
புதவிநாட் பயந்த நம்பி
சிலம்புநீர்க் கடலந் தானைச்
சீதத்தற் கரசு நாட்டிக்
குலந்தரு கொற்ற வேலான்
கொடிநகர் காக்க வென்றான்.
விளக்கம் : புதவி; கோவிந்தன் மனைவி. சீதத்தன்; கோவிந்தன் மகன். குலந்தருதல் - மக்களைப் பெற்றுக் குலத்தை வளர்த்தல். தான் அக் கடன் கழித்துப் போர் செய்து படக் கருதுதலின், அதற்கு அமைச்சர் உடன்படார் என்று, அவரை வினவாமல் தானே அரசளித்தான் : வீறு சால் புதல்வற் பெற்றனை யிவணர்க் - கருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப (பதிற். 77) என்றாற் போல. ( 40)
------------
-
2142. மாற்றவ னொற்ற ரொற்றா
வகையினின் மறைய நம்பிக்
காற்றின் தோழர்க் கெல்லா
மணிகல மடிசி லாடை
வேற்றுமை யின்றி வேண்டுட்
டமைத்தன னருளி யிப்பா
லேற்றுரி முரச நாண
வெறிதிரை முழக்கிற் சொன்னான்.
விளக்கம் : வென்ற தன் பச்சை சீவாது போர்த்த - திண்பிணி முரசம் (புறநா. 288) என்றார் பிறரும். நீ கொன்ற சீவகன் தோழர்க்குக் கோவிந்தன் சிறப்புச் செய்தான் என்று ஒற்றர் கட்டியங்காரற்குக் கூறினால், மேல் உறவாகி அவனைக் கொலைசூழ்வது தவறும் என்று கருதி, மறையக் கொடுத்தான். சீவகன் வேறொரு வடிவமாக இருத்திலின், அவனை ஒற்றல் இயலாதென்பர். ( 41)
------------
-
2143. கட்டியங் கார னம்மைக்
காண்பதே கரும மாக
வொட்டித் தான் விடுத்த வோலை
யுளபொரு ளுரைமி னென்னத்
தொட்டுமேற் பொறியை நீக்கி
மன்னனைத் தொழுது தோன்ற
விட்டலர் நாகப் பைந்தார்
விரிசிகன் கூறு மன்றே.
விளக்கம் : கருமம் - குறிக்கோள் - ஒட்டி - துணிந்து, பொறி - இலச்சினை. நாகம் - ஒரு மரம்; ஈண்டு அதன் மலர்க்கு ஆகுபெயர்- விரசிகன் என்றும் பாடம். அன்று, ஏ : அசைகள். ( 42)
------------
-
2144. விதையத்தார் வேந்தன் காண்க
கட்டியங் கார னோலை
புதையவிப் பொழிலைப் போர்த்தோர்
பொய்ப்பழி பரந்த தென்மேற்
கதையெனக் கருதல் செய்யான்
மெய்யெனத் தானுங் கொண்டான்
சிதையவென் னெஞ்சம் போழ்ந்து
தெளிப்பினுந் தெளிநர் யாரே.
விளக்கம் : சச்சந்தன் அரச வுரிமையை எய்தக் கூடியவன் கோவிந்தனே ஆதலின், அவனை வரவழைத்து வஞ்சகமாகக் கொல்லக் கருதிக் கட்டியங்காரன் திருமுகம் விட்டான். உலகம் தன் கூற்றைத் தெளியா தெனினும்,. கோவிந்தன் அறிஞனாதலின் தெளிவான் என்று புகழ்ந்து தன் கருத்தை அறிவிப்பதாகக் கூறுகின்றான். ( 43)
------------
-
2145. படுமணிப் பைம்பொற் சூழிப் பகட்டின மிரியப் பாய்ந்து
கொடிநெடுந் தோக ணூறிக் கொய்யுளை மாக்கள் குத்தி
யிடுகொடி யணிந்த மார்ப ரிருவிசும் பேறச் சீறி
யடுகளிற் றசனி வேக மலமர வதனை நோனான்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். இதன் கண்ணும் அடுத்த செய்யுளினும், சச்சந்தன் சாவிற்குக் கட்டியங்காரன் பொய்க்காரணம் காட்டியபடி கூறப்படுகின்றது. அசனிவேகம் சச்சந்தனைக் கொன்றது; அப்பழி என் மேனின்றது என்பது கருத்து. ( 44)
------------
-
2146. நூற்றுவர் பாகர் தம்மைப்
பிளந்துயி ருண்ட தென்னு
மாற்றத்தைக் கேட்டுச் சென்று
மதக்களி றடக்கி மேற்கொண்
டாற்றலங் கந்து சோத்தி
யாப்புற வீக்கும் போழ்திற்
கூற்றென முழங்கி வீழ்த்துக்
கொல்லக்கோ லிளகிற் றன்றே.
விளக்கம் : கோல் இளகிற்று : மங்கல மரபு. பாகர் நூற்றுவர்தம்மை என மாறுக. சச்சந்தன் கேட்டென்க. கந்து - தறி. ( 45)
------------
-
2147. தனக்கியா னுயிரு மீவேன்
றான்வரப் பழியு நீங்கு
மெனக்கினி யிறைவன் றானே
யிருநிலக் கிழமை வேண்டி
நினைத்துத்தா னெடிதல் செல்லா
தென்சொலே தெளிந்து நொய்தாச்
சினக்களி யானை மன்னன்
வருகெனச் செப்பி னானே.
விளக்கம் : வருக என்னும் அளவும் ஓலையில் எழுதியிருந்த வாசகம். நெடித்தல் என்பது நெடிதல் என விகாரப்பட்டது. உயிரும் ஈவேன் என்று ஊழ் கூறுவித்தது. ( 46)
------------
-
2148. ஓலையுட் பொருளைக் கேட்டே
யொள்ளெயி றிலங்க நக்குக்
காலனை யளியன் றானே
கையினால் விளிக்கு மென்னா
நூல்வலீ ரிவனைக் கொல்லு
நுண்மதிச் சூழ்ச்சி யீதே
போல்வதொன் றில்லை யென்றான்
புனைமணிப் பொன்செய் பூணான்.
விளக்கம் : நட்பாய்ப் போதுதலை, மதியாற் சூழும் சூழ்ச்சி என்றனர். நகை - ஈண்டுச் சினம்பற்றி எழுந்தது. கட்டியங்காரன் பேதைமை பற்றியுமாம். கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் என்னுந் திருக்குறளையும் ஈண்டு நினைக. ( 47)
------------
-
2149. கள்ளத்தா னம்மைக் கொல்லக்
கருதினா னாமுந் தன்னைக்
கள்ளத்தா லுயிரை யுண்ணக்
கருதினே மிதனை யாரு
முள்ளத்தா லுமிழ வேண்டா
வுறுபடை வந்து கூட
வள்ளுவார் முரச மூதூ
ரறைகென வருளி னானே.
விளக்கம் : வள்ளுவார்; பெயர்த்திரிசொல் என்பர் நச்சினார்க்கினியர். உள்ளத்தாற்பகைமைக் கருத்தை உமிழ வேண்டா என்றதனால் நட்பென முரசறைந்து வெளியிட்டுக் கூறும்படி மொழிந்தானாயிற்று. ( 48 )
------------
-
2150. கட்டியங் கார னோடு
காவல னொருவ னானான்
விட்டுநீர் நெல்லும் பொன்னும்
வழங்குமின் விளைவ கூறி
னொட்டல னிறைவன் சொன்னீர்
நாநும வல்ல வென்னக்
கொட்டினான் றடங்கண் வள்வார்க்
குளிறிடி முரச மன்றே.
விளக்கம் : சொன்னீர் : அறிவுடையார் அறிவிலார்க்கு இதனைக் கூறுவீராக என்று நச்சினார்க்கினியர் கூறுவர். இங்ஙனம் அரசன் ஆணை என்று முரசறைவோன் அறைந்தான். முரசறைவோன் கூற்றெனிற் பகைமையைக் கூறினானாம். ( 49)
------------
-
2151. விண்டவ ருடலங் கீறிச்
சுளித்துநின் றழலும் வேழ
மொண்கொடி யுருவத் திண்டே
ரொளிமயிர்ப் புரவி பண்ணி
வண்கழ லணிந்து மள்ளர்
வாள்வலம் பிடித்து நாளைத்
தெண்டிரைப் பரப்பு நாணத்
திருநகர்த் தொகுக வென்றான்.
விளக்கம் : விண்டவர் - பகைவர். உடலம் - உடல். சுளித்து - மாறுபட்டு. பண்ணி - பண்ணுறுத்தி; ஒப்பனைசெய்து. ( 50)
------------
-
2152. ஏற்றுரி போர்த்த வள்வா
ரிடிமுர சறைந்த பின்னாட்
காற்றெறி கடலிற் சங்கு
முழவமு முரசு மார்ப்பக்
கூற்றுடன் றனைய தானை
கொழுநில நெளிய வீண்டிப்
பாற்கடற் பரப்பின் வெள்வாட்
சுடரொளி பரந்த வன்றே.
விளக்கம் : ஏற்றுரி - காளையின் தோல். இடிமுரசம் : வினைத்தொகை : உவமைத்தொகையுமாம். காற்றால் எறியப்பட்ட கடல் போல என்க. தானை - படை. வெள்ளிய வாட்படை பிறழ்தல் பாற்கடல் போல் தோன்றிற்று என்க. ( 51)
------------
-
2153. புதையிரு ளிரியப் பொங்கிக்
குங்குமக் கதிர்க ளோக்கி
யுதையத்தி னெற்றி சோந்த
வொண்சுடர்ப் பருதி போலச்
சுதையொளி மாடத் துச்சி
வெண்குடை நீழற் றோன்றி
விதையத்தார் வென்றி வேந்தன்
விழுப்படை காணு மன்றே.
விளக்கம் : புதையிருள் : வினைத்தொகை. இரிய - கெட்டோட, குங்குமம் - செந்நிறம். உதையம் - உதயகிரி. சுதை - வெண்சாந்தம். வேந்தன் - கோவிந்தன். விழுப்படை - சிறந்த படை. ( 52)
------------
-
வேறு
2154. அரும்பனைத் தடக்கை யபரகாத் திரம்வாய்
வாலெயி றைந்தினுங் கொல்வ
கருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங்
கனற்றிய காலுகி ருடைய
பெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப்
பெருவரை கீண்டிடுந் திறல
திருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வ
தீயுமிழ் தறுகணிற் சிறந்த.
விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். ஏழும் திருந்தி என்க. ஏழுறுப்புக்களாவன : கால்கள் நான்கும், துதிக்கையும், வாலும், கோசமும், நச்சினார்க்கினியர், ஏழு முழமும் திருந்தி நிலம்தோயும் உறுப்புமூன்றும் (துதிக்கையும் வாலும் கோசமும்) நிலந்தோய்வன என்பர். ( 53)
------------
-
2155. கவிழ்மணிப் புடைய கண்ணிழ னாறிற்
கனன்றுதந் நிழலொடு மலைவ
வவிழ்புயன் மேக மனையமம் மதத்த
வறுபதிற் றறுபதா நாகம்
புகழ்பருந் தார்ப்பப் பூமதம் பொழிவா
னின்றன விராயிரங் கவுள்வண்
டிகழ்மதஞ் செறித்த விராயிரத் தைஞ்ஞா
றிளையவு மத்துணைக் களிறே.
விளக்கம் : ஆக யானை பதினாயிரத்தறுநூறு. கவிழ்மணி : வினைத்தொகை. நாறுதல் - தோன்றுதல். அவிழ்புயல் : வினைத்தொகை. நாகம் - யானை. புகழும் பருந்தும் ஆர்ப்ப என்க. பூமணக்கும் மதம் என்க. ( 54)
------------
-
2156. குந்தமே யயில்வாள் குனிசிலை மூன்றுங்
குறைவிலார் கூற்றொடும் பொருவா
ரந்தர மாறா யானைகொண் டேறப்
பறக்கெனிற் பறந்திடுந் திறலார்
முந்தமர் தம்முண் முழுமெயு மிரும்பு
மேய்ந்திட வெஞ்சமம் விளைத்தார்
கொந்தழ லஞ்சாக் குஞ்சர மிவர்ந்தார்
கோடியே விருத்தியா வுடையார்.
விளக்கம் : யானை வீரரின் இயல் கூறியவாறு. குந்தம் - ஒரு படைக்கலன், அயில் - கூர்மை, சிலை - வில். இம்மூன்று படைகளாற் செய்யும் போரின்கட் குறைவிலார் என்க. அந்தரம் - வானம், ஆறா - வழியாக, சமம் - போர், கொந்தழலும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. கோடி - ஒரு கோடிபொன். ( 55)
------------
-
2157. குங்கும நறுநீர் பந்திநின் றாடுங்
குதிரையா றாயிரத் திரட்டி
பொங்குவெண் மயிர்சூழ் பொற்படை பொலிந்த
வறுபதி னாயிரம் புரவி
வெங்கணை தவிர்ப்ப வெள்ளிவெண் படைய
வாய்விடி னிலவரை நில்லாப்
பைங்கதிர்க் கொட்டைக் கவரிசூழ்ந் தணிந்த
பகரினத் தொகையன பாய்மா.
விளக்கம் : ஆகக் குதிரை நூறாயிரத்து முப்பத்தீராயிரம். ஆறாயிரத்தை இரட்டித்து அறுபதினாயிரத்தையும் இரட்டித்து ஒருங்கு கூட்டினால் நூறாயிரத்து முப்பத்தீராயிரம் வருவது காண்க. குங்குமங் கலந்த நீராடும் புரவிகளை நம்பிரான் என்பர். பந்தி - குதிரை கட்டுமிடம். படை - மேற்படுப்பது; இது குதிரையின் மேலிடும் தவிசுக்கு ஆயிற்று. ( 56)
------------
-
2158. வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப் பூம்போன்
மிடைந்தொளிர் குந்தமும் வாளுந்
தோநிலை யரவின் றோற்றமே போலுஞ்
சிலைகளும் பிறகளுந் துறைபோ
யூனமொன் றில்லா ருயர்குடிப் பிறந்தா
ராயிர மடுகளங் கண்டார்
பானிலாப் பூணார் படைத்தொழிற் கலிமாப்
பண்ணுறுத் தேறினா ரவரே.
விளக்கம் : குதிரை வீரர்களின் இயல் கூறியவாறு. வேய் - மூங்கில். வேய்நிறக் கரும்பின் வெண்ணிறப்பூ என்புழி வேய் பூவிற்குவமமாகாமையின், அடுக்கிய தோற்றம் என்னும் குற்றமாகாமை உணர்க. தோம் - குற்றம், ஈண்டு வளைவு என்பதுபட நின்றது. உயர்குடி என்றது ஈண்டு உயர்ந்த மறக்குடி என்பதுபட நின்றது. ஆயிரம் அடுகளங் கண்டார் என்றது பயிற்சிமிகுதி குறித்து நின்றது. கலிமா - குதிரை.
( 57)
------------
-
வேறு
2159. தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசான்
மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த
பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்
குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய.
விளக்கம் : தறுகண் - அஞ்சாமை. தகை - அழகுமாம். மறுவு - குற்றம். வான்குளம்பு - வெள்ளிய குளம்பு. ஆலுவ - முழங்குவன நாவற்கனி - கருநிறத்திற்குவமை. தாமரை நிறமும் வெண்குளம்புமுடைய மாளவநாட்டுக் குதிரைகளும், பறைபோல முழங்குவனவும் நாவற்கனி போலும் நிறமுடையனவுமாகிய சிந்துநாட்டுக்குதிரைகளும் என்றவாறு. ( 58)
------------
-
2160. பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த
வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த
பாரிற் றோசெலிற் பழிபெரி துடைத்தென நாணிச்
சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்.
விளக்கம் : பாரசூரவம் - ஒரு நாடு. வீரம் ஆற்றுதலும் தேறல்நிறமும் உடைய பாரசூரவக் குதிரைகள் என்றவாறு. துரகம் - குதிரை. ( 59)
------------
-
2161. பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய
மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே
போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த
கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை.
விளக்கம் : மயிற் கழுத்துப்போலும் நிறமுடைய மராட்டநாட்டுக் குதிரைகளும் என்றவாறு. கிளிநிறமும் பவளக்குளம்பும் உடையன வாய்க் கலத்தில் வந்திழிந்த குதிரைகளும் என்றவாறு. மராட்டிரம் என்பது செய்யுள் நோக்கி மாரட்டம் என வேறுபட்டு நின்றது. மாரட்டம் + அத்து + அகத்தன எனப் பிரித்து மாரட்டத்தின் இடத்தன வெனக் கொள்க. அத்து, சாரியை. ( 60)
------------
-
2162. இன்ன பொங்குளைப் புரவிபண் ணுறுத்தன வியறோ
பொன்னும் வெள்ளியு மணியினும் பொலிந்து வெண் மதியத்
தன்னை யூர்கொண்ட தகையன தொகைசொலி னறுநூ
றென்னு மீறுடை யிருபதி னாயிர மிறையே.
விளக்கம் : மதி குறட்டிற்கும்; ஊர் கோள் சூட்டிற்கும் உவமம் இன்ன - இத்தன்மையுடையன. உளை - பிடரிமயிர். இறை : விளி. ( 61)
------------
-
2163. நொச்சி மாமலர் நிறத்தன நொடிவரு முந்நீ
ருச்சி மாக்கதிர் போற்சுடு மொளிதிக ழயில்வா
ளெச்சத் தல்லவு மெறிபடை பயின்றுதம் மொன்னார்
நிச்சங் கூற்றினுக் கிடுபவர் தேர்மிசை யவரே.
விளக்கம் : எச்சத்து நொடிவரும் என இயைப்பர் நச்சினார்க்கினியர். இந்த நான்கு பாட்டுக்களும் தேரையும் தேர்க்குதிரையையும் தேர் வீரரையும் பற்றிக் கூறின. ( 62)
------------
-
வேறு
2164. எயிற்றுப்படை யாண்மையினி னிடிக்கும்புலி யொப்பார்
பயிற்றியவில் வாள்பணிக்கும் வேலோடுடன் வல்லார்
துயிற்றியபல் கேள்வியினர் தூற்றிக்கொளப் பட்டா
ரயிற்றுப்படை யார்கண்மத யானைகத னறுப்பார்.
விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர். எயில் துப்பு அடை ஆண்மை - மதிலின் துப்பை அடையும் வீரம் எனினுமாம். எயிற்றப்படை - பல்லாகிய படைக்கலன். இடிக்கும் - முழங்கும். தூற்றுதல் - ஆராய்ந்து கொள்ளல். அயில் துப்பு அடை எனக் கண்ணழித்துக் கொள்க. ( 63)
------------
-
2165. காலனொடு சூழ்ந்தகடு நோய்களையு மொப்பா
ராலுங்கட றூர்த்தன்மலை யகழ்தலிவை வல்லார்
ஞாலமறி யாண்டொழிலர் நான்கிலக்க முள்ளார்
மேலுநும ராலுரிமை யுட்சிறப்புப் பெற்றார்.
விளக்கம் : இவர்கள் காலாட்படையினர். காலன் ஏவின இடத்தே சேர்ந்து அவன் கருதிய செயலை முடித்துக் கொடுத்தலின் நோய்கள் காலனுக்குப் படையாயின. ஆகவே அந்நோய்கள் இம்மறவர்க்கு உவமையாயின. ஆலுங்கடல் - முழங்குங் கடல். மலையகழ்க்குவனே கடல் தூர்க்குவனே (பட்டினப்பாலை) என்றார் பிறரும். ( 64)
------------
-
2166. சிங்கத்துரி போர்த்தசெழுங் கேடகமும் வாளும்
பொங்குமயில் வேலும்பொரு வில்லுமுடன் பரப்பி
மங்குலிடை மின்னுமதி யுஞ்சுடரும் போல
வெங்கட்டொழிற் கூற்றுமரண் சேரவிரிந் தன்றே.
விளக்கம் : கேடகத்திற்கு ஞாயிறும், வாளிற்கும் வேலிற்கும் மின்னும், வில்லிற்குப் பிறையும் உவமை. ( 65 )
------------
-
வேறு
2167. செம்பொ னீண்முடித் தேர்மன்னர் மன்னற்குப்
பைம்பொ னாழிதொட் டான்படை காட்டினா
னம்பொ னொண்கழ லானயி ராவணம்
வெம்ப வேறினன் வெல்கென வாழ்த்தினார்.
விளக்கம் : மன்னர் மன்னன் : கோவிந்தன் செம்பொன்னாழி என்றது ஏனாதிமோதிரத்தை. அயிராவணம் - கோவிந்தமன்னன் பட்டத்துயானை. வெம்ப - விரைந்து. ( 66)
------------
-
2168. சிறுவெண் சங்கு முரன்றன திண்முர
சறையு மாக்கடல் காரென வார்த்தன
நெறியி னல்கின புள்ளு நிமித்தமு
மிறைவன் கண்வல னாடிற் றியைந்தரோ.
விளக்கம் : இயைந்து ஆடிற்று -விடாமல் ஆடியது எனினும் ஆம். ( 67)
------------
-
2169. மல்லல் யானைக் கறங்கு மணியொலி
யல்ல தைங்கதி மான்கொழுந் தாரொலி
கல்லெ னார்ப்பொலி மிக்கொளிர் வாண்மினிற்
செல்லு மாக்கடல் போன்றது சேனையே.
விளக்கம் : ஐங்கதி : விக்கிதம் வற்கிதம் வெல்லும் உபகண்டம் - மத்திமம் சாரியோடு ஐந்து. ( 68)
------------
-
2170. மாலை மாமதி வெண்குடை மல்கிய
கோவக் குஞ்சி நிழற்குளிர் பிச்சமுஞ்
சோலை யாய்ச்சொரி மும்மதத் தானிலம்
பாலை போய்மரு தம்பயந் திட்டதே.
விளக்கம் : மாலைமாமதி - மாலைப்பொழுதிற் றோன்றும் முழுத் திங்கள். குஞ்சி - சிற்றணுக்கன் என்னும் விருது. பிச்சம் - பீலிக் குடை. குடைமுதலிய இவற்றால் சோலையாய் என்க. பாலை - பாலைத் தன்மை நிலம் பாலைபோய் மருதம் பயந்திட்டது என்க. ( 69)
------------
-
2171. மன்றன் மாமயி லார்த்தெழ மானினங்
கன்றி னோடு கலங்கின காற்பெய
வென்றி வேற்படை யஞ்சி வனத்தொடு
குன்றெ லாங்குடி போவன போன்றவே.
விளக்கம் : மன்றல் - மணம். பெடையை மணந்த மயில் என்க. கலங்கின : முற்றெச்சம். காற்பெய்தலாவது - ஓடுதல். ( 70)
------------
-
வேறு
2172. படுகண் முழவி னிமிழருவி வரையுங் காடும் பலபோகி
யிடுமண் முழவி னிசையோவாவேமாங் கதநாட் டெய்தியபி
னெடுவெண் ணிலவி னெற்றிதோய் நிழலார் செம்பொற் புரிசையே
கடிமண் காவல் கருதினான் கோயி லாகக் கருதினான்.
விளக்கம் : கோவிந்தன் ஏமாங்கதத்திலே இராசமாபுரநகரின் மதிற்புறத்திலே தங்கினான். ( 71)
------------
-
2173. போக மகளிர் வலக்கண்க
டுடித்த பொல்லாக் கனாக்கண்டா
ராக மன்னற் கொளிமழுங்கிற்
றஞ்சத் தக்க குரலினாற்
கூகை கோயிற் பகற்குழறக்
கொற்ற முரசம் பாடவிந்து
மாக நெய்த்தோர் சொரிந்தெங்கு
மண்ணும் விண்ணு மதிர்ந்தவே.
விளக்கம் : கோவிந்தன் மகிற் புறத்தே தங்கியபின் கட்டியங்காரனுக்குற்ற தீய நிமித்தங்கள் கூறப்பட்டன. நிலமதிர்தல், நிலநடுக்கம்; வானதிர்தல் : முகிலின்றி யிடித்தல். ( 72)
------------
-
2174. கூற்றம் வந்து புறத்திறுத்த
தறியான் கொழும்பொ னுலகாள்வான்
வீற்றிங் கிருந்தே னெனமகிழ்ந்து
வென்றி வேழ மிருநூறுங்
காற்றிற் பரிக்குந் தோநூறுங்
கடுங்கா லிவுளி யாயிரமும்
போற்றி விடுத்தான் புனைசெம்பொற்
படையே யணிந்து புனைபூணான்.
விளக்கம் : கோவிந்தனையுங் கொல்லக் கருதியதனால் இங்கு வீற்றிருந்தேன் என்று மகிழ்ந்தான். கூற்றம்: சீவகன், தன்நினைவுமுற்றியதென்று தன்னைப் போற்றினான். கொழும்பொன் உலகு ஆள்வாள் என்பதைக் கட்டியங்காரனுக்குப் பெயராக்கிப், பட்டுப் போய்ப் பொன்னுலகு ஆள்வதற்குரியான் என்றும் பொருள் கூறலாம். ( 73)
------------
-
2175. மன்ன னாங்கோர் மதவேழம்
வாரி மணாள னென்பதூஉ
மின்னங் கொடித்தோ விசயமும்
புரவி பவன வேகமும்
பொன்னிற புனைந்து தான்போக்க
நிகழ்வ தோரான் மகிழ்வெய்தி
முன்யான் விட்ட வினக்களிற்றி
னிரட்டி விடுத்தா னெனப்புகழ்ந்தான்.
விளக்கம் : நின் பெரும்படை என் சிறுபடைக்கு நிகர்க்கும் என்பது தோன்ற வரவிட்டான் என்று உணராமையின், நிகழ்வதோரான் என்றார். ( 74)
------------
-
2176. வீங்குநீர் விதையத் தார்கோன்
கட்டியங் காரன் றன்னோ
டாங்கவ னொருவ னாகி
யன்பெனு மயில்கொள் வாளால்
வாங்கிக்கொண் டுயிரை யுண்பான்
வஞ்சத்தாற் சூழ்ந்த வண்ண
மோங்குநீ ரோத வேலிக்
குணரயா முரைத்து மன்றே.
விளக்கம் : அன்பு : சீவகன்; உவமையாகு பெயர். வீங்கு நீர் : வினைத்தொகை. விதையத்தார்கோள் : கோவிந்தன். ஆங்கு - அவ்விடத்தே. ஒருவனாதல் - கூடுதல், அயில் - கூர்மை. உண்பான்; வினையெச்சம் ஓதவேலி - உலகம்: அன்மொழித்தொகை. உரைத்தும் : தன்மைப்பன்மை; இது புலவர் கூற்று. ( 75)
------------
-
2177. பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையன் மாலை
யொருமக ணோக்கி னாரை யுயிரோடும் போக டாத
திருமக ளவட்குப் பாலா னருந்திரி பன்றி யெய்த
வருமக னாகு மென்றாங் கணிமுர சறைவித் தானே.
விளக்கம் : பெருமகன் என்றது கோவிந்தனை. பாவை : இலக்கணை. பித்திகைப் பிணையல் - பிச்சி மலர்மாலை. போகொடாத என்றும் பாடம். திருமகள் : உவமவாகுபெயர். பாலான் - ஊழ்வகையாற் கணவன் ஆகுமவன். திரிபன்றி - பன்றி வடிவமுடையதொரு பொறி. திரிபன்றி எய்தவனுக்கு இலக்கணை மனைவியாவாள் என்றவாறு. ( 76)
------------
-
2178. ஆய்மதக் களிறு திண்டே ரணிமணிப் புரவி யம்பொற்
காய்கதிர்ச் சிவிகை செற்றிக் கலந்த வைநுரைக ளாகத்
தோய்மழை யுலக வெள்ளந்தொன்னகர்த் தொக்க தேபோ
லாய்முடி யரச வெள்ள மணிநக ரீண்டிற் றன்றே.
விளக்கம் : செற்றி - நெருக்கி. தோய்மழை : வினைத்தொகை; உலகத்தை அழிக்கும் ஊழிவெள்ளம் என்க. தொன்னகர் - ஈண்டு இராசமாபுரம். ( 77)
------------
-
2179. நல்லவள் வனப்பு வாங்க
நகைமணி மாலை மார்பர்
வில்லன்றே யுவனிப் பாரும்
வெங்கணை திருத்து வாரும்
சொல்லுமி னெமக்கு மாங்கோர்
சிலைதொட நாளென் பாரும்
பல்சரம் வழங்கு வாரும்
பரிவுகொள் பவரு மானார்.
விளக்கம் : வனப்பு வாங்க - அழகு இழுக்க என்றும் கூறலாம். நல்லவள் - ஈண்டிலக்கணை. வனப்பு - அழகு. நகை - ஒளி. உவனித்தல் குறிபார்த்து எய்தல். நாட்சொல்லுமின் என்று கணிகளைக் கேட்பாரும் என்பது கருத்து. ( 78)
------------
-
2180. பிறையெயிற் றெரிகட் பேழ்வாய்ப்
பெருமயிர்ப் பைம்பொற் பன்றி
யறையெனத் திரியு மாய்பொற்
பூமியி னிறைந்து மன்ன
ருறுகணை யொன்றும் வில்லு
முடன்பிடித் துருவ நேமிப்
பொறிதிரி வதனை நோக்கிப்
பூமுடி துளக்கி நின்றார்.
விளக்கம் : பிறை - திரிபன்றியின் எயிற்றிற்குவமை. எரிகண் : வினைத்தொகை. பேழ் - பெரிய. அறை - அறைதல். அடித்தல் - கொல்லுதல். அதன் அருமை நோக்கி முடிதுளக்கினர் என்க. அறை, பத்திராபனம் என்பர் நச்சினார்க்கினியர்; அஃதாவது, தனது ஆக்கத்தை விளம்புதல். ( 79)
------------
-
2181. ஏந்தெழி லாகஞ் சாந்தி னிடுகொடி யெழுதிக் காதிற்
காய்ந்தெரி செம்போற் றோடுங் கனமணிக் குழையு மின்ன
வேந்தருள் வினிதை வேந்தன் வெஞ்சிலை தளர வாங்கி
யாய்ந்தபொற் பன்றி நெற்றி யருந்துக ளார்ப்ப வெய்தான்.
விளக்கம் : வினிதை - ஒருநாடு. தளர - நன்கு வளைய. அருந்துகள் - நுண்டுகள். ( 80)
------------
-
2182. குடர்தொடர் குருதிக் கோட்டுக்
குஞ்சர நகரத் தார்கோன்
சுடர்நுதற் பட்ட மின்னச்
சுரும்பிமிர் கண்ணி சிந்த
வடர்கதிர்ப் பைம்பொற் பூணு
மாரமு மகலத் தொல்கப்
படர்சிலை குழைய வாங்கிப்
பன்றியைப் பதைப்ப வெய்தான்.
விளக்கம் : குஞ்சரம் என்ற பெயர்க்கு அடையாகக், குடர்தொடர் குருதிக்கோடு வந்தது; நகரத்திற்கு அன்று. ( 81)
------------
-
2183. வார்மதுத் துளிக்கு மாலை
மணிமுடித் தொடுத்து நாலக்
கார்மதங் கடந்த வண்கைக்
காம்பிலிக் காவன் மன்ன
னோமதக் கேழ லெய்வா
னேறலும் பொறியி னேறுண்
டார்மதக் களிற்று வேந்தர்க்
கருநகை யாக வீழ்ந்தான்.
விளக்கம் : வார்மது : வினைத்தொகை. நால - தூங்க. கொடையினால் காரின் மதங்கடந்த. காம்பிலி - ஒருநாடு. கேழல் - பன்றி. எய்வான் : வினையெச்சம். பொறி - இயந்திரம். ஒருநகை என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் என்று கருதவிடனுளது. (82)
------------
-
2184. முலைவட்டப் பூணு முத்து முள்கலிற் கிழிந்து பொல்லா
விலைவட்டத் தாம மார்பிற் கோசலத் திறைவ னெய்த
குலைவட்டக் கருதி யம்பு வானின்மேற் பூச லுய்ப்பான்
சிலைவட்ட நீங்கி விண்மேற் செவ்வனே யெழுந்த தன்றே.
விளக்கம் : குறிதப்பி வானிற் சென்றது என்க. மங்கையரைத் தழுவும்போது முத்தும் பூணும் தன் மார்பிலே முழுகுவதாற் கிழிந்த மலர்மாலையான். குலைவட்டம் - அம்பிற்குதை. உய்ப்பான். பான் : விகுதிபெற்ற வினையெச்சம். இஃது உய்ப்பதற்கு எனப் பொருள்படும். பூசல் போர். அன்று, ஏ : அசைகள். ( 83)
------------
-
2185. ஊடிய மடந்தை போல
வுறுசிலை வாங்க வாரா
தாடெழு வனைய திண்டோ
ளவந்திய னதனை நோனா
னாடெழுந் தார்ப்ப மற்றந்
நன்சிலை முறித்திட் டம்பை
வாடினன் பிடித்து நின்றான்
மண்மகன் போல நின்றான்.
விளக்கம் : வாடினன் : முற்றெச்சம். பிடித்து நின்றான் - நின்றான் : வினையாலணையும் பெயர். பின்னது வினைமுற்று. நோனான் : முற்றெச்சம். ( 84)
------------
-
2186. பில்கித்தே னொழுகுங் கோதைப்
பிறர்மனை யாள்கட் சென்ற
வுள்ளத்தை யுணர்வின் மிக்கா
னொழித்திடப் பெயர்ந்த தேபோன்
மல்லனீர் மகத ராசன்
றுரந்தகோன் மருள வோடிப்
புல்லியப் பொறியை மோந்து
புறக்கொடுத் திட்ட தன்றே.
இது படுமென்று மயங்கும்படி ஓடி அப் பொறியைப் பொருந்தித் தீண்டி; புறக் கொடுத்திட்டது - மீண்டு போயிற்று.
விளக்கம் : தேன்பில்கி யொழுகும் என மாறுக. உணர்வின் மிக்கான் - அறிவு மிக்கவன். மல்லல் - வளம். மகதம் - ஒருநாடு. கோல் - கண்டோர் மருள என்க. பொறி - திரிபன்றி. ( 85)
------------
-
2187. தென்வரை பொதியி லார
மகிலொடு தேய்த்த தேய்வை
மன்வரை யகலத் தப்பி
மணிவடந் திருவில் வீச
மின்னென் விட்ட கோலை
விழுங்கக்கண் டழுங்கி வேர்த்துக்
கன்மலிந் திலங்கு திண்டோட்
கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான்.
விளக்கம் : தென்வரையாகிய பொதியில் என்க. ஆரம் - சந்தனம். தேய்வை - குழம்பு. கலிங்கர்கோன் தான் விட்ட கோலை விழுங்கக் கண்டு அழுங்கி வேர்த்து மெலிந்து மீண்டான் என்க. கலிங்கம் - ஒரு நாடு. ( 86 )
------------
-
2188. கன்மழைப் பொற்குன்
றேந்திக் கணநிரை யன்றுகாத்து
மன்னுயி ரின்று காக்கும்
வாரண வாசி மன்னன்
மின்னிழை சுடர வாங்கி
விட்டகோ லுற்று றாதாய்
மன்னுயிர் நடுங்க நாணி
மண்புக்கு மறைந்த தன்றே.
விளக்கம் : இதுவாரணவாசி மன்னனை திருமாலொடு ஒப்பித்தது. உற்றுறாதாய் - பட்டும் படாததாய். உடையான் நாணத்தை உடைமை மேல் ஏற்றிக் கூறினர். ( 87)
------------
-
2189. எரிகதிர்ப் பைம்பொற் சுண்ண
மிலங்கமெய்ம் முழுது மப்பிப்
புரிகழ லணிந்த நோன்றாட்
போதன புரத்து வேந்த
னரிதினிற் றிகிரி யேறித்
திரிந்துகண் சுழன்று சோர்ந்து
விரிகதிர்க் கடவுள் போல
வெறுநிலத் தொலிப்ப வீழ்ந்தான்.
விளக்கம் : அப்பி - பூசி. புரிகழல் - கட்டிய கழல். நோன்றாள் - வலிய கால். திகிரி - ஆண்டுச் சுழலும் சக்கரம். திரிந்து - திரிதலான். கதிர்க்கடவுள் - ஞாயிறு. ( 88)
------------
-
2190. மலையச்செஞ் சாந்து முந்நீர்
வலம்புரி யீன்ற முத்து
மிலைவைத்த கோதை நல்லா
ரிளமுலைப் பொறியு மார்ந்து
சிலைவைத்த மார்பிற் றென்னன்
றிருமணிப் பன்றி நோக்கித்
தலைவைத்த தம்பு தானுந்
தரணிமேற் பாதம் வைத்தான்.
விளக்கம் : பாண்டி நாட்டிற் சிறந்த மலையச்சாந்தமும் முத்தும் கூறியவாறு காண்க. ( 89)
------------
-
2191. விற்றிறல் விசய னென்பான்
வெங்கணை செவிட்டி நோக்கி
யொற்றுபு திருத்திக் கைம்மே
லுருட்டுபு நேமி சோந்தாங்
குற்றதன் சிலையின் வாய்ப்பெய்
துடுவமை பகழி வாங்க
விற்றுவின் முறிந்து போயிற்
றிமைப்பினி னிலங்கித் திட்டான்.
விளக்கம் : வில்வித்தையில் ஆற்றல் மிக்க விசயன் என்க. செவிட்டி நோக்கி - ஒருக்கடித்துப் பார்த்து. ஒருக்கணித்து என்பர் இக்காலத்தார் உருட்டுபு-உருட்டி. நேமி - சக்கரப்பொறி. உடு - சிறகு. இலங்கித்தல் - குதித்தல். (லங்கநம் - குதித்துப் பாய்தல்.) (90)
------------
-
2192. குண்டல மிலங்க வாங்கிக்
குனிசிலை யுறையி னீக்கிக்
கொண்டவன் கொழும்பொற் றாரு
மாரமு மிளிர வேறிக்
கண்டுகோ னிறைய வாங்கிக்
காதுற மறித லோடும்
விண்டுநா ணற்ற தாங்கே
விசயனும் வீக்க மற்றான்.
விளக்கம் : விட்டு என்பது விண்டு என விகாரமுற்றது. சீவகனிடத்தே கற்றலின், எய்தற்குரியனாகிய இவற்கு ஊழ் தடையாயிற்று. ( 91)
------------
-
2193. உளைவனப் பிருந்த மான்றே
ரொளிமுடி மன்ன ரெல்லாம்
வலைவனப் பிருந்த தோளாள்
வருமுலைப் போகம் வேண்டி
விளைதவப் பெருமை யோரார்
விற்றிறன் மயங்கி யாருங்
களைகலார் பொறியை யாங்கோ
ராறுநாள் கழிந்த வன்றே.
விளக்கம் : உளைவனப்பு - பிடரிமயிரின் அழகு. வருமுலை : வினைத்தொகை. போகம் - நுகர்ச்சி. நன்மை விளைதற்குக் காரணமான தவத்தின் பெருமை என்க. மயங்கி - மயங்க. ( 92)
------------
-
வேறு
2194. பனைக்கை யானை மன்னர் பணியப் பைம்பொன் முடியிற்
கனைக்குஞ் சுரும்பார் மாலை கமழ மதுவுந் தேனு
நனைக்குங் கழலோன் சிறுவ னாம வெள்வேல் வலவ
னினைக்க லாகா வகையா னேரா ருயிர்மே லெழுந்தான்.
விளக்கம் : மதுவும் என்பதிலுள்ள உம்மையைச், சுரும்பும் என அதனுடன் சேர்க்க. மதுவுந் தேனும், என்னுந் தொடரில், தேனும் என்ற சொல்லை மாற்றிச், சுரும்பும் தேனும் என இயைக்க. ( 93)
------------
-
2195. காரின் முழங்குங் களிறுங்
கடலின் முழங்குந் தேரும்
போரின் முழங்கும் புரவிக்
கடலும் புகைவாட் கடலுஞ்
சீரின் முழங்கு முரசு
மலறுஞ் சிறுவெண் சங்கு
நீரின் முழங்க முழங்கு
நீல யானை யிவர்ந்தான்.
விளக்கம் : முன்னின்ற இரண்டு இன்னும் உவமப் பொருபோரின் : இன் : ஏது ; சீரின் - சீருடன். ( 94)
------------
-
2196. கல்லார் மணிப்பூண் மார்பிற்
காம னிவனே யென்ன
வில்லார் கடலந் தானை
வேந்தர் குழாத்துட் டோன்றப்
புல்லான் கண்ணி னோக்கிப்
புலிகாண் கலையிற் புலம்பி
யொல்லா னொல்லா னாகி
யுயிர்போ யிருந்தான் மாதோ.
விளக்கம் : கல் - மணி. மணிப்பூண் என்பது பெயர்மாத்திரை, புல்லான் - பகைவன். கலை - மான். ஒல்லான் இரண்டனுள் முன்னையது முறையிலே பொருந்தாதவன், ஏனையது நெஞ்சம் பொருந்தாதவன் என்க. உயிர்போனவன் போன்றிருந்தான் என்க. ( 95)
------------
-
2197. புலியாப் புறுத்திக் கொண்டேன்
போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரடோண் மதனன்
னவனைப் பிழைத்த பிழைப்பு
கலியு மென்னை நலியு
மென்னக் களிற்றி னுச்சி
யிலையார் கடகத் தடக்கை
புடைத்து மெய்சோர்ந் திருந்தான்.
விளக்கம் : யாப்புறுத்திக் கொண்டேன் என்றது, அநங்கமாலை. கூத்திற் சீவகன் தனியே வந்தமை கருதி. வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே (வில்லி. பா. சூது. 265). ( 96)
------------
-
2198. மைபூத் தலர்ந்த மழைக்கண்
மாழை மானோ நோக்கிற்
கொய்பூங் கோதை மடவார்
கொற்றங் கொள்கென் றேத்தப்
பெய்பூங் கழலான் வேழத்
திழிந்து பிறைபோற் குலாய
செய்பூண் சிலைநா ணெறிந்தான்
சேரார் நாளுக் கனவே.
விளக்கம் : குலாய சிலை, செய்யப்பட்ட சிலை, நாண்பூண்ட சிலை எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். பிள்ளைகளையும் கட்டியங்காரனையும் சேரக் கோறலின் சேரார் என்றார். ( 97)
------------
-
வேறு
2199. கனிபடு மொழியி னாடன்
காரிகை கவற்ற வந்து
குனிசிலை தோற்ற மன்னர்
கொங்குகொப் புளிக்கு நீலப்
பனிமலர்க் காடு போன்றார்
படர்சிலை தொடாத வேந்த
ரினிதினின் மலர்ந்த வேரார்
தாமரைக் காடு போன்றார்.
விளக்கம் : சீவகனைக் கண்ட மன்னர் நிலை கூறியவாறு. வில்லைத் தொட்ட மன்னர் வாடினர்; வில்லைத் தொடாத மன்னர் மகிழ்ந்தனர். ( 98)
------------
-
2200. போர்த்தகல் விசும்பில் வந்து
பொறித்திரி பன்றி மூன்று
நீர்த்தகப் புணர்ந்த போதி
னெடுந்தகை மூன்று மற்றுச்
சூர்த்துடன் வீழ நோக்கிச்
சுடுசரஞ் சிதற வல்லா
னோர்த்தொன்றே புணர்ப்ப நாடி
யொருபகல் காறு நின்றான்.
விளக்கம் : போருக்குத் தகுதலையுடைய பன்றி என்றது ஒன்று இடந்திரிய ஒன்று வலந்திரிகின்ற மாறுபாட்டினை. இவள் ஆழிமிசைக்குப் புற நிற்குங் காலத்து அவையும் ஒன்றாம். ஆதலின், ஒன்றே புணர்ப்ப என்றார். ( 99)
------------
-
2201. பொறியின்மே லேற றேற்றா
னாணினாற் போதல் செய்யா
னெறியின்வில் லூன்றி நிற்ப
நிழன்மணிப் பன்றி யற்று
மறியுமோ வென்று முன்னே
மணிமுடி சிதறி வீழ்ந்த
செறிகழன் மன்னர் நக்குத்
தீயத்தீ விளைத்துக் கொண்டார்.
விளக்கம் : நெறியின் என்றார் அத் தொழிலுக்குப் பொருந்த நின்றநிலை தோன்ற. ( 100)
------------
-
2202. சிரற்றலை மணிகள் வேய்ந்த
திருந்துபொற் றிகிரிச் செம்பொ
னுரற்றலை யுருவப் பன்றி
யிடம்வலந் திரிய நம்பன்
விரற்றலைப் புட்டில் வீக்கி
வெஞ்சிலை கணையோ டேந்திக்
குரற்றலை வண்டு பொங்கக்
குப்புற்று நேமி சேர்ந்தான்.
விளக்கம் : சிரல் - சிச்சிலிப் பறவை; மீன்கொத்திப் பறவை, சிச்சிலியின் தலைபோன்ற நிறத்தையுடைய மணிகள் என்க. புட்டில் - விரற்சரடு. குரல் மயிர், குப்புற்று - குதித்து. ( 101)
------------
-
2203. ஒள்ளழல் வைரப் பூணு
மொளிர்மணிக் குழையு மின்ன
வொள்ளழற் கொள்ளி வட்டம்
போற்குலாய்ச் சுழலப் பொன்ஞா
ணொள்ளழ னேமி நக்க
மண்டல மாக நின்றா
னொள்ளழற் பருதி மேலோர்
பருதிநின் றதனை யொத்தான்.
விளக்கம் : பருதி - வட்டம், பருதி போகிய புடை கிளைகட்டி (பதிற். 74) என்றார் பிறரும். ( 102)
------------
-
2204. அருந்தவக் கிழமை போல
விறாதவில் லறாத நாண்வாய்த்
திருந்தினார் சிந்தை போலுந்
திண்சரஞ் சுருக்கி மாறா
யிருந்தவன் பொறியும் பன்றி
யியற்றரும் பொறியு மற்றாங்
கொருங்குட னுதிர வெய்தா
னூழித்தீ யுருமோ டொப்பான்.
விளக்கம் : அதனை எய்த அன்றே கட்டியங்காரனும் படுதலின், உடன் என்றார். தவக்கிழமை வில்லுக்கும் நானுக்கும் உவமை, விசயனுக்கு அவை இற்றும் அற்றும் போனமை கருதி இங்கு அவ்வுவமை கூறினார். ( 103)
------------
-
2205. இலங்கெயிற் றேன மேவுண்
டிருநிலத் திடித்து வீழக்
கலங்குதெண் டிரையுங் காருங்
கடுவளி முழக்கு மொப்ப
உலம்புபு முரசங் கொட்டி
யொய்யெனச் சேனை யார்ப்பக்
குலம்பகர்ந் தறைந்து கோமான்
கோவிந்தன் கூறி னானே.
விளக்கம் : இனி, குலத்தைப் பகர்ந்து நின்னைக் கொல்வேன் என்று வஞ்சினம் சாற்றினான் என்றுமாம். ஏனம் - பன்றி, ஏ : பண்பு. இடித்து - ழங்கி. கார் முகில். ( 104)
------------
-
2206. வானிடை யொருவன் றோன்றி
மழையென முழங்கிச் சொல்லுந்
தேனுடை யலங்கல் வெள்வேற்
சீவக னென்னுஞ் சிங்கங்
கானுடை யலங்கன் மார்பிற்
கட்டியங்கார னென்னும்
வேன்மிடை சோலை வேழத்
தின்னுயிர் விழுங்கு மென்றான்.
விளக்கம் : ஒருவன் : இயக்கன். மழை - முகில். அலங்கல்-மாலை. கான் - மணம். வேலாகிய மிடைந்த சோலை என்க. வேழம் - யானை. ( 105)
------------
-
வேறு
2207. விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயென
வஞ்சுவ லோவறி யாயென தாற்றலை
வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னொடு
வஞ்சனை வஞ்ச மறுத்திடு கென்றான்.
------------
-
2208. சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃ
தாரழ லெங்ஙனங் கான்றிடு மங்ஙனம்
பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற்
காரிடி போன்மத னன்கனன் றிட்டான்.
விளக்கம் : சூரியன் - சூரியனுடைய ஒளிக்கு ஆகுபெயர். அவ்வொளி சீவகனுடைய புகழுக்கு உவமை என்க. பேரிசையான் என்றது சீவகனை. கார் - கார்காலம். ( 107)
------------
-
2209. காற்படை யுங்களி றுங்கலி மாவொடு
நூற்படு தேரு நொடிப்பினிற் பண்ணி
நாற்படை யுந்தொகுத் தான்மக்க ணச்சிலை
வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார்.
விளக்கம் : காற்படை - காலாட்படை, கலிமா - குதிரை. நூல் - கம்மநூல். மக்கள் - கட்டியங்காரன் மக்கள் என்க. நச்சிலை - நஞ்சு தோய்த்த இலை (அலகு.) ( 108)
------------
-
2210. விற்றிற லான்வெய்ய தானையும் வீங்குபு
செற்றெழுந் தான்படை யுஞ்சின மொய்ம்பொடு
மற்றவர் மண்டிய வாளமர் ஞாட்பினு
ளுற்றவர்க் குற்றதெ லாமுரைக் குற்றேன்.
விளக்கம் : உற்றது எல்லாம்: ஒருமை பன்மை மயக்கம் திறலான் : சீவகன். எழுந்தான் : வினையாலணையும் பெயர் ; கட்டியங்காரன். மொய்ம்பு - வலிமை. உரைத்தலருமை தோன்ற உரைக்குற்றேன் என்றார். ( 109)
------------
-
வேறு
2211. அத்தமா மணிவரை யனைய தோன்றல
மத்தகத் தருவியின் மணந்த வோடைய
முத்துடை மருப்பின முனைக்கண் போழ்வன
பத்தியிற் பண்ணின பரும யானையே.
விளக்கம் : தோன்றல - தோற்றத்தையுடைன. மத்தகம் - தலை. ஓடை - முகபடாம். மருப்பின - கொம்பினையுடையன. முனை- போர் முனை. ( 110)
------------
-
2212. கோல்பொரு கொடுஞ்சிலை குருதி வெம்படை
மேலவ ரடக்குபு வேழ மேறலின்
மாலிரு விசும்பிடை மணந்த வொண்கொடி
கால்பொரு கதலிகைக் கான மொத்தவே.
விளக்கம் : இவ்விரண்டு செய்யுட்களும் யானைப் படையைக் கூறின. கோல் - அம்பு. குருதிதோய்ந்த படை என்க. மேலவர் - யானையின் மேல் ஏறும் மறவர். மாலிரு : ஒருபொருட் பன்மொழி. கதலிகை - வாழை. ( 111)
------------
-
2213. குடையுடை நிழலின் கோல மார்ந்தன்
கிடுகுடைக் காப்பின கிளர்பொற் பீடிகை
யடிதொடைக் கமைந்தன வரவத் தோத்தொகை
வடிவுடைத் துகின்முடி வலவர் பண்ணினார்.
விளக்கம் : குடை - மேலே நாட்டியகுடை. கிடுகு - ஒருபடைக்கலன் நடுப்புக்கருவி அடிக்கும் தொடைக்கும் என்க. தொடை - தொடுத்தல். அரவம் - ஆரவாரம். ( 112)
------------
-
2214. கொய்யுளைப் புரவிகள் கொளீஇய திண்ணுகம்
பெய்கயி றமைவரப் பிணித்து முள்ளுறீஇச்
செய்கயி றாய்ந்தன சிலையு மல்லவுங்
கையமைத் திளைஞருங் கருவி வீசினார்.
விளக்கம் : முற்செய்யுளில் வலவர் தேர் பண்ணினர் என்றார். அதனை இச்செய்யுளில் விளக்கி, வீரர் படையமைத்துக் கவசம் அணிந்ததையும் கூறினர். ( 113)
------------
-
2215. பறந்திய றருக்கின பரவை ஞாட்பினுட்
கறங்கெனத் திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி யறிகெனப் பெரிய நூலவர்
குறங்கெழுத் துடையன குதிரை யென்பவே.
விளக்கம் : என்ப : அசை. தருக்கின - செருக்குடையன. ஞாட்பு - போர்க்களம். கறங்கு - காற்றாடி. கவரி - சாமரை. பிறந்துழி - பிறந்த இடம். நூல் - குதிரை நூல். ( 114)
------------
-
2216. கொன்னுனைக் குந்தமுஞ் சிலையுங் கூர்நுதி
மின்னிலை வாளொடு மிலேச்ச ரேறலிற்
பொன்னரிப் புட்டிலுந் தாரும் பொங்குபு
முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே.
விளக்கம் : இரண்டு செய்யுட்களும் குதிரைப் படையைக் கூறின. கொன்னுனை : வினைத்தொகை. நுதி - நுனை. மின்னிலை - மின்னலின் தன்மை. மிலேச்சர் சோனகர். அரி - பரல். புட்டில் - கெச்சை ; கெச்சையுமாம். பொங்குபு பொங்கி. ( 115)
------------
-
2217. மாலையுங் கண்ணியு மணந்த சென்னிய
ராலுபு செறிகழ லார்க்குங் காலினர்
பாலிகை யிடையறப் பிடித்த பாணியர்
சாலிகை யுடம்பினர் தறுக ணாளரே.
விளக்கம் : மாலை, கண்ணி என்பன மாலைவகை. ஆலுபு - ஆலி; முழங்கி என்க. பாலிகை - வாட்பிடி. பாணியர் - கையினர். சாலிகை - கவசம். தறுகணாளர் சென்னியரும் காலினரும் பாணியரும் உடம்பினருமாக இருந்தனர் என்றவாறு. ( 116)
------------
-
2218. போர்மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்
வார்மயிர்க் கிடுகொடு வள்ளித் தண்டையு
நோமரப் பலகையு நிரைத்த தானையோர்
போர்முகப் புலிக்கடல் புகுந்த தொத்ததே.
விளக்கம் : பரந்தது எனவும் பாடம். இவ்விரண்டு செய்யுட்களும் காலாட் படையைக் கூறின. போர்மயிர் ; வினைத்தொகை. கேடகம், தோற்பரம், கிடுகு; தண்டை, பலகை என்பன ஒருபொருள் குறித்த பன்மொழி. ( 117)
------------
-
வேறு
2219. பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும்
போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக் கச்ச மாகு
மோமணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி
கார்மலி கடலங் காலாள் கற்பகத் தாரி னாற்கே.
விளக்கம் : கச்சம், தேவகோடி என்பன எண்ணுப் பெயர்கள். பூமிமுழுதினையும் நனைத்தற்குப் போதிய மதத்தையுடையன என்பது கருத்து. பேயும் பருந்தம் ஊனுண்டன் கருதிப் பரவ என்க. ஏர் - அழகு; எழுச்சியுமாம். இலக்கம் - நூறாயிரம். தேவகோடி - ஓர் எண்ணுப்பெயர். ( 118)
------------
-
2220. நிழன்மணிப் புரவித் திண்டேர்
நிழறுழாய்க் குனிந்து குத்து
மழறிகழ் கதத்த யானை
யைந்தரைக் கச்ச மாகு
மெழின்மணிப் புரவி யேழா
மிலக்கமேழ் தேவ கோடி
கழன்மலிந் திலங்குங் காலாள்
கட்டியங் காரற் கன்றே.
------------
-
வேறு
2221. குலங்கெழு மகளிர்தங் கோல நீப்பவு
மலங்குளைப் புரவியுங் களிறு மாளவு
நிலமக ணெஞ்சுகை யெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்த தெஃகமே.
விளக்கம் : தன் கணவராகிய மன்னர் படுதலின் நிலமகள் வருந்தினள். நிலமகள் அழுத காஞ்சியும் (புறநா. 365) என்றார் புறத்தினும். புலமகன் என்றார் ஆசிரியன் சொற்படி ஓராண்டுஞ் சென்றே சீறலின். குலமகளிர் கோலநீப்பவும் என்றது மறவர்கள் மாளவும் என்னும் குறிப்பிற்று. ( 120)
------------
-
2222. குணில்பொரக் குளிறின முரசம் வெள்வளை
பணைபரந் தார்த்தன பம்பை வெம்பின
விணையில வெழுந்ததாழ் பீலி யெங்கணு
முணையினாற் கடலக முழக்க மொத்தவே.
விளக்கம் : பணை : முரசில் ஒருவகை. பம்பை : வாச்சியத்தில் ஒன்று. முணை மிகுதி; பெருக்கம். ( 121)
------------
-
2223. முடிமன ரெழுதரு பருதி மொய்களி
றுடைதிரை மாக்கல மொளிறு வாட்படை
யடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன
கடலிரண் டெதிர்ந்ததோர் கால மொத்ததே.
விளக்கம் : மனர் - மன்னர். பருதி - ஞாயிறு. கலம் - கப்பல், சுறா - ஒருவகை மீன். ஒரு காலமுண்டாயின் அதனை ஒத்தது இக்காலம் என்க. மூன்றாம் அடியில் வந்த ஆக என்பதைப் பருதி, கலம் மா என்பவற்றோடுங் கூட்டுக. ( 122)
------------
-
2224. அருங்கணை யடக்கிய வாவ நாழிகை
பெரும்புறத் தலமரப் பிணிந்த கச்சினர்
கருங்கழ லாடவர் கருவில் வாய்க்கொளீஇச்
சொரிந்தனர் கணைமழை விசும்பு தூர்ந்ததே.
விளக்கம் : கச்சு : இடைக் கச்சுமாம். அருங்கணை - தடுத்தலரியகணை என்க. ஆவநாழிகை - அம்பறாத்தூணி. கருங்கழல் கருவில் என்பவற்றுள் கருமை - கொடுமைப்பண்பு குறித்தது. ( 123)
------------
-
2225. நிணம் பிறங் ககலமுந் தோளு நெற்றியு
மணங்கருஞ் சரங்களி னழுத்தி யையென
மணங்கமழ் வருபுனன் மறலு மாந்தரிற்
பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே.
விளக்கம் : பிறங்குதல் - விளங்குதல். அணங்கு - வருத்துதல். சரம் - அம்பு. அழுத்த அவ்வழிப் பெருகிய குருதியினின்று என விரிந்தோதுக. புதுப்புனல் சிவந்திருத்தலின் குருதிப் பெருக்கிற் குவமையாகக் கொள்ளப்பட்டது. ( 124)
------------
-
2226. கழித்தனர் கனலவாள் புகைந்து கண்கடீ
விழித்தன தீந்தன விமைகள் கூற்றெனத்
தெழித்தனர் திறந்தன ரகல மின்னுயி
ரழித்தன ரயிலவ ரரவ மிக்கதே.
விளக்கம் : கூற்று - கூற்றுவன். தெழித்தனர் அதனால் கண் தீ விழித்தன. அதனால் இமைகள் தீந்தன என்க. அயிலவர் - வேல்மறவர். ( 125)
------------
-
2227. பொருங்களத் தாடவர் பொருவில் பைந்தலை
யரும்பெறற் கண்ணியோ டற்று வீழ்வன
கருங்கனிப் பெண்ணையங் கானங் கால்பொர
விருங்கனி சொரிவன போன்ற வென்பவே.
விளக்கம் : அரும் பெறற் கண்ணி என்றது ஈண்டுத் தும்பை மாலையை. பெண்ணை - பனை, தலையிறுபு தாரொடு புரள..... நீள் இரும் பனைமிசைப் பல பதினாயிரங் குலைதரை யுருள்வபோல் (2 : 1-2) என்றார் பரிபாடலினும். ( 126)
------------
-
2228. பணைமுனிந் தாலுவ பைம்பொற் றாரின
கணைவிசை தவிர்ப்பன கவரி நெற்றிய
துணையமை யிளமைய தோற்ற மிக்கன
விணைமயிர்ப் புரவியோ டிவுளி யேற்றவே.
விளக்கம் : பணை - குதிரைப்பந்தி. ஆலுவ - முழங்குவன. எய்த கணைக்குமுன் சென்ற அதன் வேகத்தைத் தவிர்ப்பன. ( 127)
------------
-
2229. கூருளி முகம்பொரக் குழிசி மாண்டன
வாரொளி யமைந்தன வாய்பொற் சூட்டின
காரொளி மின்னுமிழ் தகைய காலியற்
றேரொடு தேர்தமுட் சிறந்து சேர்ந்தவே.
விளக்கம் : கூருளி - உளியில் ஒருவகை. பொருதல் - ஈண்டுச் செதுக்குதல். குழிசி - குறடு; குடம். மாண்டன - மாட்சிமையுடையன. கால் - உருளை. தமுள் - தம்முள். சேர்ந்த - போர் செய்தற்கு நெருங்கின. ( 128)
------------
-
2230. அஞ்சன மெழுதின கவள மார்ந்தன
குஞ்சரங் கூற்றொரு கொம்மை கொட்வே
வஞ்சன வரைசிற குடைய போல்வன
மஞ்சிவர் குன்றென மலைந்த வேழமே.
விளக்கம் : மஞ்சு : கொடிக்குவமை. அஞ்சனம் - மை. ஆர்ந்தன - உண்டவை. குஞ்சரம் - யானை கொம்மை கொட்டுதல் - தட்டியழைத்தல். ஒருகாலத்தே மலைகளுக்குச் சிறகிருந்தன என்பது புராணம். மஞ்சு - முகில். மலைந்தன - போரிட்டன. ( 129)
------------
-
2231. மாக்கடற் பெருங்கலங் காலின் மாறுபட்
டாக்கிய கயிறரிந் தோடி யெங்கணும்
போக்கறப் பொருவன போன்று தீப்படத்
தாக்கின வரசுவாத் தம்மு ளென்பவே.
விளக்கம் : மாக்கடல் - பெரிய கடல். பெருங்கலம் - பெரிய மரக்கலம்; கால் - காற்று. கயிறரிய என்க. அரசுவா - அரசர் ஏறிய யானை. ( 130)
------------
-
2232. விடுசரம் விசும்பிடை மிடைந்து வெய்யவன்
படுகதிர் மறைந்திருள் பரந்த தாயிடை
யடுகதி ரயிலொளி யரசர் மாமுடி
விடுகதிர் மணியொளி வெயிலிற் காய்ந்தவே.
விளக்கம் : விடுசரம் : வினைத்தொகை. சரம் - அம்பு. வெய்யவன் - ஞாயிறு. ஆயிடை - அப்பொழுது. அடுகதிர் அயில் : வினைத்தொகை. அயில் - வேல். விடுகதிர் : வினைத்தொகை. வெயிலின் - வெயில்போல. ( 131)
------------
-
2233. பூண்குலாம் வனமுலைப் பூமி தேவிதான்
காண்கலேன் கடியன கண்ணி னாலெனாச்
சேண்குலாங் கம்பலஞ் செய்ய தொன்றினான்
மாண்குலாங் குணத்தினான் மறைத்திட் டாளரோ.
விளக்கம் : குணத்தினாள் என்றும் பாடம். பூமிதேவி - நிலமகள், தான் : அசை. காண்கலேன் : தன்மையொருமை எதிர்மறை வினைமுற்று. கண்ணினால் கடியன காண்கலேன் என மாறுக. கடியன - கொலைமுதலிய கொடுந்தொழில். ஒரு செய்ய கம்பலத்தால், என்றவாறு. செய்யகம்பலம் குருதிக்குவமை. மாண்குலாம் குணம் காணமாட்டாமைக்கு ஏதுவென்க. ( 132)
------------
-
வேறு
2234. கலைக்கோட்ட வகலல்குற் கணங்குழையார் கதிர்மணிப்பூண்
முலைக்கோட்டா லுழப்பட்ட மொய்ம்மலர்த்தா ரகன்மார்பர்
மலைக்கோட்ட வெழில்வேழந் தவநூறி மதயானைக்
கொலைக்கோட்டா லுழப்பட்டுக் குருதியுட் குளித்தனரே.
விளக்கம் : கோடு - பக்கம். கலையை உடைய அல்குல். கலை - மேகலை. கணம் - திரட்சி. முலையாகிய கோடு மார்பர் - மறவர். தவ - அழிய. தவ - மிகுதிப்பொருள் குறித்த உரிச்சொல்லுமாம். ( 133)
------------
-
2235. மணமாலை மடந்தையர்த
மெல்விரலாற் றொடுத்தணிந்த
விணர்மாலை யிருங்குஞ்சி
யீர்ங்குருதிப் புனலலைப்ப
நிணமாலைக் குடர்சூடி
நெருப்பிமையா நெய்த்தோரிற்
பிணமாலைப் பேய்மகட்குப்
பெருவிருந் தயர்ந்தனரே.
விளக்கம் : ஈர்க்குங் குருதி என்பது, ஈர்ங்குருதி என ஆயிற்று. மணமாலை என்புழி - மாலை, இயல்பு என்னும் பொருட்டு, இருங்குஞ்சி - கரியமயிர். நிணமாலை என்புழி - மாலை ஒழுங்கு என்னும் பொருட்டு. இமையா - இமைத்து. பிணமாலை - பிணம் தின்னும் இயல்புடைய. மாலை என்பது இயல்பு என்ற பொருளில் வந்தது. மண மாலை என்பதில் உள்ள மாலை மணத்திற்குரிய பூமாலையைப் புனைந்த மங்கையர் எனவும் பொருள் கொள்ளலாம். ( 134)
------------
-
2236. தோலாப்போர் மறமன்னர்
தொடித்தோள்க ளெடுத்தோச்சி
மேலாண்மே னெருப்புமிழ்ந்து
மின்னிலங்கு மயில்வாளாற்
காலாசோ டறவெறிந்த
கனைகழற்கா லலைகடலு
ணீலநீர்ச் சுறாவினம்போ
னெய்த்தோருட் பிறழ்ந்தனவே.
விளக்கம் : கவசம் அணிந்த காலுக்கு நீலச்சுறா உவமை காலாசோ டற்ற கழற்கால் இருங்கடலுள் - நீலச்சுறாப
பிறழ்வ போன்ற புனனாடன் - நேராரை அட்ட களத்து. (களவழி. 9) குன்றத் திறுத்த குரீஇனம் போல - அம்புசென்று இறுத்த அரும்புண் யானை. (புறநா. 19 : 89) யானைமேல் யானை நெறிதர ஆனாது கண்ணேர் கடுங்கணை மெய்ம்மறைப்ப எவ்வாயும்
எண்ணருங் குன்றிற் குரீயினம் போன்றவே. (களவழி. 8) . தோலா - தோலாத. மேலாள் - யானை மீதிருக்கும் மறவர். அயில் வாள் - கூரிய வாள். ஆசு - கவசம். கால் சுறாவினம்போல் நெய்த்தோருள் பிறழ்ந்தன என்க. நெய்த்தோர் - குருதி. ( 135)
------------
-
2237. கருவியூ டுளங்கழிந்து கணைமொய்ப்பக் கதஞ்சிறந்து
குருவிசோ வரைபோன்ற குஞ்சரங் கொடியணிந்த
வுருவத்தே ரிறமுருக்கி யுருணேமி சுமந்தெழுந்து
பருதிசேர் வரைபோலப் பகட்டினம் பரந்தனவே.
விளக்கம் : கருவி : யானைக்கு அணியும் ஒரு கருவி. இற முருக்கி - பொடியாகக் கெடுத்து. ( 136)
------------
-
2238. மாலைவாய் நெடுங்குடைமேன்
மதயானைக் கைதுணிந்து
கோலநீள் கொழுங்குருதி
கொளவீழ்ந்து கிடந்தன
மேலைநீள் விசும்புறையும்
வெண்மதியம் விசும்பிழுக்கி
நீலமா சுணத்தோடு
நிலத்திழிந்த தொத்தனவே.
விளக்கம் : இச் செய்யுளுடன்,
-
இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை ஒளிறுவாள்
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை
கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம் பொக்குமே
------------
-
2239. அஞ்சன நிறநீக்கி யரத்தம்போர்த் தமருழக்கி
யிங்குலிக விறுவரைபோன் றினக்களி றிடைமிடைந்த
குஞ்சரங்கள் பாய்ந்திடலிற் குமிழிவிட் டுமிழ்குருதி
யிங்குலிக வருவிபோன் றெவ்வாயுந் தோன்றினவே.
விளக்கம் : அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே (களவழி.7) ( 138)
------------
-
2240. குஞ்சரந் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச்
செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த
பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை
யஞ்சிப்போந் தினநரியோ டோரிநின் றலறுமே.
விளக்கம் : நீங்கி - நீங்க. பஞ்சி - ஆடை : ஆகுபெயர். தலை - தலையணை : ஆகுபெயர் செஞ்சோற்றுக்கடன் ; தாம் அது காறும் இனிதின் உண்டிருந்த செவ்விய சோற்றுக்கடன். அஃதாவது தம்மைப்புரந்த மன்னர்க்கு உற்றுழித் தம்முயிரைக் கொடுத்தல். சோறுவாய்த் தொழிந்தோர் (72) என்றார் முல்லைப் பாட்டினும். ( 139)
------------
-
2241. காதலார்க் கமிர்தீந்த கடற் பவழக் கடிகைவா
யேதிலாப் புள்ளுண்ணக் கொடேமென்று வாய்மடித்துக்
காதணிந்த பொற்றோடுங் குண்டலமு நகநகா
வீததைந்த வரைமார்பர் விஞ்சையர்போற் கிடந்தனரே.
விளக்கம் : ஏது - காரணம். உயிர்போகாதாரைப்போற் கிடத்தலின், விஞ்சையர்போல் என்றார். ( 140)
------------
-
2242. குடர்வாங்கு குறுநரிகள்
கொழுநிணப் புலாற்சேற்றுட்
டொடர்வாங்கு கதநாய்போற்
றோன்றின தொடித்திண்டோள்
படர்தீரக் கொண்டெழுந்த
பறவைகள் படநாக
முடனேகொண் டெழுகின்ற
வுவணப்பு ளொத்தனவே.
விளக்கம் : குடர்கொண்டு வாங்கும் குறுநரி கந்தில
தொடரொடு கோணாய் புரையும். (களவழி. 34)
எவ்வாயும் ஓடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகம் கவ்வி விசும்பிவரும்
செவ்வாய் உவணத்தில் தோன்றும். (களவழி. 26)
------------
-
2243. வரையோடு முருமிடிப்ப
வளையெயிற்றுக் கொழுங்குருதி
நிரையுளை யரிநன்மா
நிலமிசைப் புரள்வனபோற்
புரையறுபொன் மணியோடைப்
பொடிப்பொங்கப் பொருதழிந்
தரைசோடு மரசுவா
வடுகளத்து ளாழ்ந்தனவே.
விளக்கம் : குருதி படிந்தனவாதலின் மணிகள் பொடித்துப் பொங்கல் உவமையாக வேண்டும். அரசு என்பது அரைசு எனப் போலியாய் நின்றது எதுகை நோக்கி. அரசு + உவா = அரசுவாஎனக் குற்றியலுகரம் கெட்டுப்புணர்ந்தது. அரசர்கட்குத் தகுதியான இலக்கணம் பொருந்தியிருப்பது அரசுவா எனப்படும். ( 142 )
------------
-
2244. தடம்பெருங் குவளைக்கட் டாழ்குழலார் சாந்தணிந்து
வடந்திளைப்பப் புல்லிய வரைமார்பம் வாள்புல்ல
நடந்தொழுகு குருதியு ணகாக்கிடந்த வெரிமணிப்பூ
ணிடம்படு செவ்வானத் திளம்பிறைபோற் றோன்றினவே.
விளக்கம் : இது வரை இரண்டு படைக்கும் பொது. தடங்கண் பெருங்குவளைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. தாழ் குழல். வினைத்தொகை. நகாக்கிடந்த - நக்குகிடந்த. செவ்வானம் குருதிக்குவமை ; பூணுக்குப் பிறையுவமை. ( 143)
------------
-
வேறு
2245. காளமா கிருளைப் போழ்ந்து
கதிர்சொரி கடவுட் டிங்கள்
கோளரா விழுங்க முந்நீர்க்
கொழுந்திரைக் குளித்த தேபோ
னீளம ருழக்கி யானை
நெற்றிமேற் றத்தி வெய்ய
வாளின்வாய் மதனன் பட்டான்
விசயன்போர் விசயம் பெற்றான்.
விளக்கம் : காளம் - கருநிறம். ஆகிருள் : வினைத்தொகை. கடவுளாகிய திங்கள் என்க. கோளரா: பண்புத்தொகை. முந்நீர் - கடல். ( 144)
------------
-
2246. மன்மத னென்னுங் காளை
மணியொலிப் புரவித் தேர்மேல்
வின்மழை சொரிந்து கூற்றிற்
றெழித்தனன் றலைப்பெய் தார்ப்பக்
கொன்மலி மார்பன் பொற்றேர்
கொடுஞ்சிலை யறுப்பச் சீறிய
பொன்வரைப் புலியிற் பாய்ந்து
பூமிமேற் றோன்றி னானே.
விளக்கம் : மன்மதன் - இவன் மதனன்தம்பி. மழை - அப்புமாரி. தெழித்தனன் - முழங்கி : முற்றெச்சம். கொன் - அச்சம். மார்பன் - ஈண்டு விசயன். தேரையும் சிலையையும் என விரிக்க. ( 145)
------------
-
2247. நெற்றிமேற் கோல்கண் மூன்று
நெருப்புமிழ்ந் தழுந்த வெய்யச்
சுற்றுபு மாலை போலத்
தோன்றறன் னுதலிற் சூடிப்
பொற்றதோர் பவழந் தன்மேற்
புனைமணி யழுத்தி யாங்குச்
செற்றெயி றழுந்தச் செவ்வாய்
கௌவிவா ளுரீஇ னானே.
விளக்கம் : கோல் - அம்பு சுற்றுபு-சுற்றி. விசயன் எய்ய என்க. அத்தோன்றல் - அந்த மன்மதன். பொற்றது - பொலிவு பெற்றது. பவழம் வாய்க்கும்,. மணிஎயிற்றிற்கும் உவமை உரீ இனான் - உருவினான். ( 146)
------------
-
2248. தோளினா லெஃக மேந்தித்
தும்பிமே லிவரக் கையா
னீளமாப் புடைப்பப் பொங்கி
நிலத்தவன் கவிழ்ந்து வீழக்
கீளிரண் டாகக் குத்தி
யெடுத்திடக் கிளர்பொன் மார்பன்
வாளினாற் றிருகி வீசி
மருப்பின்மேற் றுஞ்சி னானே.
விளக்கம் : 144 முதல் இதுவரை விசயனுடன் மதனனும் மன்மதனும் பொருது பட்டமை கூறினர். எஃகம் - வாள். தும்பி - யானை. அவன் கவிழ்ந்து நிலத்து வீழ என மாறுக. இரண்டு கீள் ஆக என் மாறுக. கீள் - கீற்று; கூறு. ( 147)
------------
-
2249. நனைகலந் திழியும் பைந்தார்
நான்மறை யாளன் பைம்பொற்
புனைகலக் குப்பை யொப்பான்
புத்திமா சேனன் பொங்கி
வனைகலத் திகிரித் தோமேன்
மன்னரைக் குடுமி கொண்டான்
கனையெரி யழலம் பெய்த
கண்ணுதன் மூர்த்தி யொத்தான்.
விளக்கம் : நனை என்பது தேனுமாம். புத்திமா சேனன் : மா : அசை. நனை-அரும்பு; தேனுமாம். கலந்து-கலக்கப்பட்டென்க. நான்மறை யாளன் என்றது புத்திசேனனை. குப்பை-தொகுதி. திகிரிபோல வட்ட மாக வரும் தேர் என்க. குடுமி கொள்ளல் - வெற்றிகொள்ளுதல். கண்ணுதன் மூர்த்தி - சிவபெருமான். ( 148)
------------
-
2250. செண்பகப் பூங்குன் றொப்பான்
றேவமா தத்தன் வெய்தா
விண்புக வுயிரைப் பெய்வான்
வீழ்தரு கடாத்த வேழ
மண்பக விடிக்குஞ் சிங்க
மெனக்கடாய் மகதர் கோமான்
றெண்கடற் றானை யோட
நாணிவேல் செறித்திட் டானே.
விளக்கம் : செண்பகப்பூ - பொன்னணிகலனுக்குவமை. உயிரை விண்புகப் பெய்வான் என்க. உயிர் - பகைவர் உயிர். இடிக்கும் - முழங்கும். கடாய் - கடாவி; செலுத்தி. வேல்செறித்திட்டான் என்பது மீண்டான் என்பது பட நின்றது. ( 149)
------------
-
2251. சின்னப்பூ வணிந்த குஞ்சிச்
சீதத்தன் சினவு பொன்வாண்
மன்னருட் கலிங்கர் கோமான்
மத்தகத் திறுப்ப மன்னன்
பொன்னவிர் குழையும் பூணு
மாரமுஞ் சுடர வீழ்வான்
மின்னவிர் பருதி முந்நீர்க்
கோளொடும் வீழ்வ தொத்தான்.
விளக்கம் : கோளிற்குக் குழை முதலியன உவமை. ( 150)
------------
-
2252. கொடுஞ்சிலை யுழவன மான்றேர்க்
கோவிந்த னென்னுஞ் சிங்க
மடங்கருஞ் சீற்றத் துப்பின்
மாரட்ட னென்னும் பொற்குன்
றிடத்துபொற் றூளி பொங்கக்
களிற்றொடு மிறங்கி வீழ
வடர்ந்தெரி பொன்செ யம்பி
னழன்றிடித் திட்ட தன்றே.
விளக்கம் : சிங்கமும் மலையும் என்றற் கேற்ப, இடித்திட்டது என்றார். ( 151)
------------
-
2253. கோங்குபூத் துதிர்ந்த குன்றிற்
பொன்னணி புளகம் வேய்ந்த
பாங்கமை பரும யானைப்
பல்லவ தேச மன்னன்
றேங்கமழ் தெரியற் றீம்பூந்
தாரவ னூர்ந்த வேழங்
காம்பிலிக் கிறைவ னூர்ந்த
களிற்றொடு மலைந்த தன்றே.
விளக்கம் : கோங்கு - கோங்கமரம். புளகத்திற்குக் கோங்குமலர் உவமை. புளகம் - கண்ணாடி. பூந்தாரவன் என்றது, உலோகபாலனை காம்பிலி - ஒருநாடு. ( 152)
------------
-
2254. கொந்தழல் பிறப்பத் தாக்கிக்
கோடுகண் மிடைந்த தீயால்
வெந்தன விலையி லாத
சாமரை வீர மன்ன
னந்தரம் புதைய வில்வா
யருஞ்சரம் பெய்த மாரி
குந்தத்தால் விலக்கி வெய்ய
கூற்றென முழங்கி னானே.
விளக்கம் : தாக்கி - தாக்க : எச்சத் திரிபு. மன்னன் : உலோகபாலன். அந்தரம் - வானவெளி. வில்வாயினின்றும் பெய்த சரமாரி என்க. குந்தம் - ஒரு படைக்கலன். ( 153)
------------
-
2255. மற்றவ னுலோக பாலன்
வயங்குபொற் பட்ட மார்ந்த
நெற்றிமே லெய்த கோலைப்
பறித்திட வுமிழ்ந்த நெய்த்தோ
ருற்றவன் களிற்றிற் பாயத்
தோன்றுவா னுதயத் துச்சி
யொற்றைமாக் கதிரை நீட்டி
யொண்சுட ரிகுந்த தொத்தான்.
விளக்கம் : உலோக பாலனுக்குக் கூறியதைக் காம்பிலி மன்னனுக்கு ஏற்றுவாரும் உளர். மற்று : அசை. அவன் : காம்பிலிமன்னன் - நெய்த்தோர் பாயத்தோன்றுபவன் சுடரை ஒத்தான். நெய்த்தோர் கதிர்க்கும், யானை உதயகிரிக்கும் ஞாயிறு மன்னனுக்கும் உவமை. ( 154)
------------
-
2256. கொடுமரங் குழைய வாங்கிக்
கொற்றவ னெய்த கோல்க
ணெடுமொழி மகளிர் கோல
நிழன்மணி முலைக ணோபட்
டுடனுழ வுவந்த மார்ப
மூழ்கலிற் சிங்கம் போலக்
கடன்மருள் சேனை சிந்தக்
காம்பிலி மன்னன் வீழ்ந்தான்.
விளக்கம் : உலோகபாலனாற் காம்பிலி மன்னன் இறந்தான். கொடுமரம் - வில். வாங்கி - வளைத்து. கொற்றவன் ; உலோகபாலன். நெடுமொழிமகளிர் - தங்கற்பின் மிகுதியால் வஞ்சினம் கூறுதற்குரிய மகளிர். மருள் : உவமஉருபு. மன்னர் சிங்கம் போல வீழ்ந்தான் என்க. ( 155)
------------
-
2257. பொன்னிறக் கோங்கம் பொற்பூங்
குன்றெனப் பொலிந்த மேனி
நன்னிற மாலின் மேலா
நலங்கொடார் நபுல னென்பான்
மின்னிற வெஃக மேந்தி
வீங்குநீர் மகதை யார்கோன்
கொன்னிறக் களிற்றி னெற்றிக்
கூந்தன்மாப் பாய்வித் தானே.
விளக்கம் : நபுலன் : சீவகன் தம்பி. பொன்னிறப் பூங்கோங்கம், பொற்குன்றம் என இயைக்க. நலங்கொள்தார் - ஈண்டுத் தும்பைத்தார் என்க. எஃகம் - வாள். மகதை - மகதநாடு, கூந்தன்மா - குதிரை. அக் கூந்தன்மாவை என்க. ( 156)
------------
-
2258. ஏந்தறன் கண்கள் வெய்ய
விமைத்திட வெறித லோம்பி
நாந்தக வுழவ னாணி
நக்குநீ யஞ்சல் கண்டாய்
காய்ந்திலே னென்று வல்லே
கலினமாக் குன்றிற் பொங்கிப்
பாய்ந்ததோர் புலியின் மற்றோர்
பகட்டின்மேற் பாய்வித் தானே.
விளக்கம் : வெய்ய இமைத்திட என்னுந் தொடரிலுள்ள வெய்ய என்பதை, மற்றோர் வெய்ய பகட்டின்மேல் என இயைப்பர் நச்சினார்க்கினியர். நாந்தகம் - வாள். பகடு - யானை. விழித்தகண் வேல்கொண்டெறிய வழிந்திமைப்பின், ஓட்டன்றோ வன்கணவர்க்கு என்னும் திருக்குறள் இயைபு காண்க. ( 157)
------------
-
2259. கைப்படை யொன்று மின்றிக்
கைகொட்டிக் குமர னார்ப்ப
மெய்ப்படை வீழ்ந்த நாணி
வேழமு மெறிதல் செல்லான்
மைப்பட நெடுங்கண் மாலை
மகளிர்தம் வனப்பிற சூழ்ந்து
கைப்படு பொருளி லாதான்
காமம்போற் காளை மீண்டான்.
விளக்கம் : கைப்படு பொருளிலாதான் காமம் என்பதற்கு, கைப்படு பொருளில்லாதவனிடம் மகளிர் கொண்ட காமம் என்றும் பொருள் கூறலாம். வறியவன் பரத்தையர் மேற்கொண்ட காமம் என்பது தகுதியுடைய பொருள். மற்போர் - எருமைமறம். ( 158)
------------
-
வேறு
2260. மண்காவலை மகிழாதிவ ணுடனேபுக ழொழிய
விண்காவலை மகிழ்வீர்நனி யுளிரோவென விபுலன்
வண்காரிருண் மின்னேயுமிழ் நெய்வாயதொ ரயில்வாள்
கண்காவல கழுகோம்புவ துயராநனி வினவும்.
விளக்கம் : நபுலன் சென்று மீளுதலின். இவன் வினவிச் சென்றான். இவண் - இவ்வுலகத்தின்கண். நும்புகழ் நிற்ப, அஃதொழியச் சென்று விண்காவலை மகிழ்வீர் என்றவாறு. காவல் - குத்துவ. உயரா - உயர்த்து. பகைவரைக் கொன்று அவருடலைக் கழுகுண்ண ஈந்து அதனை ஓம்பும் வாள் என்றவாறு. ( 159)
------------
-
2261. வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியா
னேறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான்
மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியா
னாறன்மையின் முதியாரையு மெறியானயி லுழவன்.
விளக்கம் : வீறு - வெற்றி. வேழம் பிறப்பாற் றனக்கு ஒப்பின்மையால் அதனை எறிவது வெற்றி எனப்படாது என்பது கருத்து. ஏறுண்டவர் - பிறரால் எறியப்பட்ட மறவர். மிச்சில் - எஞ்சியது. மாறு - நிகர். ஆறு - அறநெறி. உழவன் : எழுவாய் ( 160)
------------
-
2262. ஒன்றாயினும் பலவாயினு
மோரோச்சினு ளெறிய
வென்றாயின மதவேழமு
முளவோவென வினவிப்
பொன்றாழ்வரைப் புலிப்போத்தெனப்
புனை தார்மிஞி றார்ப்பச்
சென்றானிகல் களிறாயிர
மிரியச்சின வேலோன்.
விளக்கம் : முன்னர், அயில் வாள் உயரா (2260) என்று கூறிப் பின்னர். அயிலுழவன் (2261) வேலோன் (2262) என்றது, யானையிலிருந்து பொருமிடத்து வேல் வேண்டும் என்று கருதி. ( 161)
------------
-
2263. புடைதாழ்குழை பொருவில்லுயர்
பொன்னோலையொ டெரிய
வுடைநாணொடு கடிவட்டினொ
டொளிர்வாளினொ டொருவ
னடையாநிக ரெறிநீயென
வதுவோவென நக்கான்
கிடையாயின னிவனேயெனக்
கிளராணழ குடையான்.
விளக்கம் : முற்படமார்பு கொடுத்தான் என்னும் புகழை நீ எய்தக் கருதியோ இங்ஙனம் உரைத்தாய். அவ்வாறு புகழையடைய ஒவ்வேன் என்பான், அதுவோ? என நக்கான். ( 162)
------------
-
2264. இன்னீரின திரைமேலிரண்
டிளவெஞ்சுட ரிகலி
மின்னோடவை சுழன்றாயிடை
விளையாடுகின் றனபோற்
பொன்னாணினர் பொருவில்லியர்
புனைகேடகந் திரியாக்
கொன்வாளினர் கொழுந்தாரினர்
கொடிமார்பினர் திரிந்தார்.
விளக்கம் : மின் : வாளுக்குவமை. காட்சிக்கினிய நீரையுடைய கடல் என்க. இரண்டிளவெஞ்சுடர் : இல்பொருளுவமை. மின் - படைக்கலனுக்குவமை. கொள் - அச்சம். கொடி - எழுதிய கொடி. ( 163)
------------
-
2265. விருந்தாயினை யெறிநீயென
விரைமார்பகங் கொடுத்தாற்
கரும்பூணற வெறிந்தாங்கவ
னினதூழினி யெனவே
யெரிந்தாரயி லிடைபோழ்ந்தமை
யுணராதவ னின்றான்
சொரிந்தார்மல ரரமங்கையர்
தொழுதார்விசும் படைந்தான்.
விளக்கம் : விண்ணுலகை விரும்பிய விபுலன் ஈண்டு நிற்க, நல் வினையால் அவன் விண்ணுலகிலே நின்றான் என்று தேவர் கூறினார். அவன் ஆங்கு நின்றான் என்க. நிலைபெற்றிருந்த நிலையை அவன் அங்கே நின்றானென்றல் உலகவழக்கு. (செய்யுள் வழக்கினுங்கூட) கன்னின்றான் எந்தை எனவரும். இனி அடைந்தார் என்ற பாடத்திற்கு இருவரும் அடைந்தார் என்பார்க்கு, அவனின்றான் என்பதனை யானை மேனின்றான் என்றல் மரபன்மையின், காலாளாய் இருவரும் நின்றார் எனல் வேண்டும் : அது முற்கூறிய உவமங்கட்குப் பொருந்தாதாம். அயிலை வாளாக்குதல் பொருத்தமின்று. இத்துணையும் விபுலன் பொருதபடி கூறினார். இஃது ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கம். ( 164)
------------
-
வேறு
2266. நித்திலக் குப்பை போல
நிழலுமிழ்ந் திலங்கு மேனிப்
பத்திப்பூ ணணிந்த மார்பிற்
பதுமுகன் பைம்பொற் சூழி
மொய்த்தெறி யோடை நெற்றி
மும்மதக் களிற்றின் மேலான்
கைத்தலத் தெஃக மேந்திக்
காமுகற் கண்டு காய்ந்தான்.
விளக்கம் : நித்திலக்குப்பை - முத்துக்குவியல். சூழி - முகபடாம். எஃகம் - வேல். காமுகன் - கட்டியங்காரன். படைஞருள் ஒருவன். ( 165)
------------
-
2267. மாற்றவன் சேனை தாக்கித்
தளர்ந்தபின் வன்கண் மள்ள
ராற்றலொ டாண்மை தோன்ற
வாருயிர் வழங்கி வீழ்ந்தார்
காற்றினாற் புடைக்கப் பட்டுக்
கடலுடைந் தோடக் காம
ரேற்றிளஞ் சுறாக்க ளெங்குங்
கிடந்தவை போல வொத்தார்.
விளக்கம் : காற்றுக் காமுகன் படைக்கும். கடல் பதுமுகன் படைக்கும் உவமை. போல, ஒத்தார் என்ற இரண்டும் உவம உருபாதலின் போல என்பதனை, ஏறாகிய சுறாக்கள் போல வலியும் ஆண்மையும் தோன்ற நின்றுபொருது பட்டுக் கிடந்தவர்கள், பெருங்காற்றாற் கடலுடைந்து போக அச்சுறாக்கள் நிலமெங்கும் கிடந்தவற்றை ஒத்தார்கள் என முன்னே கூட்டி இருமுறை உவமையாக்குவர் நச்சினார்க்கினியர். ( 166)
------------
-
2268. தூசுலாம் பரவை யல்குற்
றுணைமுலை மகளி ராடு
மூசல்போற் சேனை யோடப்
பதுமுகன் களிற்றை யுந்தி
மாசில்சீர் மழையி னெற்றி
மாமதி நுழைவ தேபோற்
காய்சினக் களிற்றி னெற்றி
யாழிகொண் டழுத்தி னானே.
விளக்கம் : கெட்ட படை மீண்டும் வந்து பொருது கெடுதலின் ஊசலோடு உவமித்தார். ( 167)
------------
-
2269. பெருவலி யதனை நோனான்
பிண்டிபா லத்தை யேந்தி
யருவரை நெற்றிப் பாய்ந்த
வாய்மயிற் றோகை போலச்
சொரிமதக் களிற்றின் கும்பத்
தழுத்தலிற் றோன்றல் சீறிக்
கருவலித் தடக்கை வாளிற்
காளையை வெளவி னானே.
விளக்கம் : பிண்டிபாலம் : தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதொரு படை. ஆகையால் மயிலோடுவமித்தார். காமுகன் தன் யானைமீது பாய்தலின் வாளாலே வெட்டினான். இன்றேல், யானைமீதிருந்து பொருமிருவர் வாளாற் பொர இயலாது. ( 168)
------------
-
2270. தீமுகத் துமிழும் வேற்கட்
சில்லரிச் சிலம்பி னார்தங்
காமுகன் களத்து வீழக்
கைவிர னுதியிற் சுட்டிப்
பூமுக மாலை மார்பன்
பொன்னணி கவச மின்னக்
கோமுகன் கொலைவல் யானை
கூற்றெனக் கடாயி னானே.
விளக்கம் : காமுகன் என்னும் பெயர்க்கேற்பச் சிலம்பினார்தங் காமுகன் என அடைபுணர்த்தார் பூமுகன் என்றது, போர்கிட்டிய தென்று மகிழ்ந்த அவன் செவ்வியை உணர்த்தி நின்றது. ( 169)
------------
-
2271. சாரிகை திரியும் யானை
யுழக்கலிற் றரணி தன்மே
லார்கலிக் குருதி வெள்ள
மருந்துகள் கழுமி யெங்கும்
வீரியக் காற்றிற் பொங்கி
விசும்புபோர்த் தெழுதப் பட்ட
போர்நிலைக் களத்தை யொப்பக்
குருதிவான் போர்த்த தன்றே.
விளக்கம் : எழுதப்பட்ட போர்நிலைக் களத்தை ஒப்பர் சாரிகை திரியும் யானை என இயைத்து, யானைகள் என எல்லா யானைகட்கும் ஆக்குவர் நச்சினார்க்கினியர். ( 170)
------------
-
2272. சென்றது தடக்கை தூணி
சேந்தகண் புருவங் கோலி
நின்றவிற் குனிந்த தம்பு
நிமிர்ந்தன நீங்கிற் றாவி
வென்றிகொள் சரங்கண் மூழ்கி
மெய்ம்மறைத் திட்டு மின்றோய்
குன்றின்மேற் பவழம் போலக்
கோமுகன் றோன்றி னானே.
விளக்கம் : தடக்கை தூணிசென்றது என மாறுக. தூணி-அம்பறாத் தூணி. கண்சேந்த என்க. சேந்த : பலவறிசொல். நின்ற-நின்றன. நீங்கிற்று : சாதியொருமை. மறைத்திட்டு; ஒருசொல். மலையானைக்கும் பவழம் கோமுகனுக்கும் உவமை. ( 171)
------------
-
2273. பனிவரை முளைத்த கோலப்
பருப்புடைப் பவழம் போலக்
குனிமருப் புதிரந் தோய்ந்த
குஞ்சரங் கொள்ள வுந்திக்
கனிபடு கிளவி யார்தங்
கதிர்முலை பொருது சேந்த
துனிவரை மார்பன் சீறிச்
சுடுசரஞ் சிதறி னானே.
விளக்கம் : பவழம் : உதிரத்தோய்ந்த மருப்பிற்குவமை. பருப்பு - பருமை. கொள்ள - போர்த்தொழிலை மேற்கொள்ளும்படி என்க. கனி - கற்பகக்கனி என்க. வரை துனி மார்பன் என்க. சரம் - அம்பு. ( 172)
------------
-
2274. பன்னலம் பஞ்சிக் குன்றம்
படரெரி முகந்த தொப்பத்
தன்னிரு கையி னாலுந்
தடக்கைமால் யானை யாலு
மின்னுயிர் பருகிச் சேனை
யெடுத்துக்கொண் டிரிய வோட்டிக்
கொன்முரண் டோன்ற வெம்பிக்
கொலைக்களிற் றுழவ னார்த்தான்.
விளக்கம் : இதனைப் பதுமுகன்மேல் ஏற்றுவாரும் உளர் என்பர் நச்சினார்க்கினியர். பன்னல் : ஒரு தொழில். இதனை எஃகுதல் என்பர் நச்சினார்க்கினியர். சுகிர்தல் என்றும் கூறுப. பஞ்சி-பஞ்சு. படர்எரி : வினைத்தொகை. மால் - பெரிய. விசை யெடுத்துக் கொண்டென்க. கொன் - பெருமை. முரண்-வலிமை, உழவன் : கோமுகன். ( 173)
------------
-
2275. தருக்கொடு குமர னார்ப்பத்
தன்சிலை வளைய வாங்கி
யொருக்கவன் கையும் வாயு
முளங்கிழித் துடுவந் தோன்றச்
சுருக்குக்கொண் டிட்ட வண்ணந்
தோன்றலெய் திடுத லோடு
மருப்பிறக் களிறு குத்தி
வயிரந்தான் கழிந்த தன்றே.
விளக்கம் : வயிரத்தால் இழைத்த கோளகை ஆகுபெயர். தருக்கு - செருக்கு. குமரன் : கோமுகன். எதுகை நோக்கி ஒருங்கு, ஒருக்கென வலித்து நின்றது. உடுவம் - ஈர்க்கு. தோன்றல் : பதுமுகன். தான் : அசை. ( 174 )
------------
-
2276. நித்தில மணிவண் டென்னு நெடுமதக் களிறு பாய
முத்துடை மருப்பு வல்லே யுடைந்துமுத் தொழுகு குன்றின்
மத்தக யானை வீழ்ந்து வயிரங்கொண் டொழிந்த தாங்குப்
பத்திரக் கடிப்பு மின்னப் பகடு போர்த்தான்.
விளக்கம் : இத்துணையும் பதுமுகன் போர் கூறப்பட்டது. நித்திலமணிவண் டென்பது பதுமுகன் யானையினுடைய பெயர். வல்லே - விரைவின். வயிரம் - செற்றம். பத்திரம் - நலம். கடிப்பு - குதம்பை. ( 175 )
------------
-
2277. பத்திரக் கடிப்பு மின்னப்
பங்கியை வம்பிற் கட்டிக்
கொத்தலர்த் தும்பை சூடிக்
கோவிந்தன் வாழ்க வென்னாக்
கைத்தலத் தெஃக மேந்திக்
காளைபோய் வேறு நின்றான்
மத்தக யானை மன்னர்
வயிறெரி தவழ்ந்த தன்றே.
விளக்கம் : பங்கி - தலைமயிர். வம்பு-கச்சு. தும்பை - போர்புரியுங்காற் சூடும் மாலை. கோவிந்தன் தலைவனாகலின், வாழ்த்தினான், காளை: சிங்கநாதன். வயிறு எரிதவழ்ந்தது என்றது பெரிதும் அஞ்சினார் என்றவாறு. ( 176)
------------
-
2278. மேகலைப் பரவை யல்குல்
வெள்வளை மகளிர் செஞ்சாந்
தாகத்தைக் கவர்ந்து கொண்ட
வணிமுலைத் தடத்து வைகிப்
பாகத்தைப் படாத நெஞ்சிற்
பல்லவ தேய மன்னன்
சேவகன் சிங்க நாதன்
செருக்களங் குறுகி னானே.
விளக்கம் : முற்செய்யுளிற் கூறிய எஃகம் ஏந்திய காளையும், இச்செய்யுளிற் கூறிய சிங்கநாதனும் ஒருவனே, தனியே வந்து நின்றவன் எதிர்ப்பாரின்மையின், தானே செருக்களத்தை அடைந்தான். வைகி : எச்சத்திரிபு. குருகுலத்தை விளக்கலானும், சீவகற்கும் உலோகபாலற்கும் இறைவனாதலானும் கோவிந்தனை வாழ்த்தினான். பாகம் : பங்கம் எனினும் ஆம். ( 177)
------------
-
2279. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்துப் பொன்செய்
கனைகதிர் வாளை யேந்திக் கால்கழ லணிந்து நம்மை
யினையன பட்ட ஞான்றா லிறைவர்க ணினைப்ப தென்றே
முனையழன் முளிபுற் கான மேய்ந்தென நீந்தி னானே.
விளக்கம் : இறந்துபடுதலைக் குறித்தலின் வாளை வாங்கினான். மருப்புத்தாடி - யானைக்கொம்பாற் செய்த கைப்பிடி. இதனை - ஆசு, என்பர் நச்சினார்க்கினியர். காலிற் கழலணிந்து என்க. இறைவர் - மன்னர். முளிபுல் - உலர்ந்த புல். பரவை - பரப்பு. ஆரம் - முத்துவடம். அருவிலை - கொடுத்தற்கரிய பெருவிலை. விழிப்ப - விளங்க. ( 178)
-----------
-
2280. தாரணி பரவை மார்பிற் குங்கும மெழுதித் தாழ்ந்த
வாரமும் பூணு மின்ன வருவிலைப் பட்டி னங்க
ளோபடக் கிடந்த பொன்ஞா ணிருள்கெட விழிப்ப வெய்ய
பூரண சேனன் வண்கைப் பொருசிலை யேந்தி னானே.
விளக்கம் : பூரணசேனன் - ஒரு போர்மறவன். இவன் கட்டியங்காரன் படையிலுள்ளவன். ( 179)
-----------
-
2281. ஊனமர் குறடு போல விரும்புண்டு மிகுத்த மார்பிற்
றேனமர் மாலை தாழச் சிலைகுலாய்க் குனிந்த தாங்கண்
மானமர் நோக்கி னாரு மைந்தருங் குழீஇய போருட்
கானமர் காம னெய்த கணையெனச் சிதறி னானே.
விளக்கம் : காமன் ஒருவனாக நின்று பலரையும் எய்தலின் உவமம். ( 180)
-----------
-
2282. வண்டலை மாலை தாழ மதுவுண்டு களித்து வண்கைப்
புண்டலை வேலை யேந்திப் போர்க்களங் குறுகி வாழ்த்திக்
கண்படு காறு மெந்தை கட்டியங் கார னென்றே
யுண்டொலை யார்க வேலென் றுறுவலி தாக்கி னானே.
விளக்கம் : களித்த என்பது பாடமாயின் அகரத்தைச் சுட்டாக்கிக்கொண்டு அவ்வுறுவலி என்க என்பர் நச்சினார்க்கினியர். பெயரெச்சமாக்குதலே அமைவுடைத்து. ஒல்லை, விரைவு; இஃது ஒலை என இடை குறைந்து நின்றது. ( 181)
-----------
-
2283. கூற்றென வேழம் வீழாக் கொடிநெடுந் தோக ணூறா
வேற்றவர் தம்மைச் சீறா வேந்திர நூழில் செய்யா
வாற்றலங் குமரன் செல்வா னலைகடற் றிரையி னெற்றி
யேற்றுமீ னிரியப் பாய்ந்த வெறிசுறா வேறு போன்றான்.
விளக்கம் : வீழா, நூறா, சீறா, செய்யா, என்பன செய்யா என்னும் வாய்பாட்டெச்சங்கள். வீழ்த்தி, நூறி, சீறி, செய்து என்க. ஏந்திரம் - இயந்திரம், நூழில் - கொன்று குவித்தல். ( 182)
-----------
-
2284. மாலைக்க ணாம்பல் போல மகளிர்தங் குழாத்திற் பட்டார்
கோலவாட் போருட் பட்டாற் குறுமுயற் கூடு கண்டு
சாலத்தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீர ராயின்
ஞாலத்தா ராண்மை யென்னா மெனநகா வருகின் றானே.
விளக்கம் : மகளிர் குழாத்தின் புகும்பொழுது மாலைக்காலத்து ஆம்பல்போல் மகிழுமியல்புடைய மறவர் போர்க்களத்தே அம்மாலைப் பொழுதில் பனிக்கும் தாமரைப்போலத் துன்புறின் ஆண்மைத் தன்மை என்னாம் என்றவாறு. இது தன்னைக் கண்டஞ்சிய மறவர்க்குக் கூறிய தென்க. ( 183)
-----------
-
2285. முடிச்சடை முனிவ னன்று வேள்வியிற் கொண்ட வேற்கண்
மடத்தகை மகளிர் கோல வருமுலை யுழக்கச் சேந்து
கொடிப்பல வணிந்த மார்பிற் கோவிந்தன் வாழ்க வென்று
நடத்துவா னவனை நோக்கி நகாச்சிலை பாரித் தானே.
விளக்கம் : இறைவன் தன்னைப் போலப் படைத்தலின் வீரபத்திரதேவனை, முனிவன் என்றார் அன்று தக்கன் வேள்வியைத் தவிர்ப்பான் வேண்டி இறைவன் தானாகப் படைத்துக் கொண்ட முனிவனைப் போலுங் கேவிந்தன்; வேற்கண் மகளிர் முலையுழக்குதலின் சிவக்கப் பட்டுக் கொடியணிதற்குக் காரணமான மார்பினையுடைய கோவிந்தன், என்றுரைப்பார் நச்சினார்க்கினியர். ( 184)
-----------
-
2286. போர்த்தநெய்த் தோர னாகிப் புலாற்பருந் தார்ப்பச் செல்வான்
சீர்த்தகை யவனைக் கண்டென் சினவுவே லின்னு மார்ந்தின்
றூர்த்துயி ருன்னை யுண்ணக் குறைவயி றாரு மென்றாங்
கார்த்தவாய் நிறைய வெய்தா னம்புபெய் தூணி யொத்தான்.
விளக்கம் : நெய்த்தோரன் - குருதியையுடையவன். புலாலுக்காகப் பருந்து ஆர்ப்ப என்க. செல்வான்; வினையாலணையும் பெயர். சிங்கநாதன் என்க. சீர்த்தகையவன் என்றது சிங்கநாதனை. ஆர்ந்தின்று - நிறைந்ததில்லை. ஊர்த்து - ஊற்றி. ( 185)
-----------
-
2287. மொய்ப்படு சரங்கண் மூழ்க முனையெயிற் றாளி போல
வப்பணைக் கிடந்த மைந்த னருமணித் திருவில் வீசுஞ்
செப்பிள முலையி னார்கண் சென்றுலாய்ப் பிறழச் சிந்திக்
கைப்பட வெடுத்திட் டாடும் பொலங்கழற் காயு மொத்தான்.
விளக்கம் : பொலஞ் செப்பு என்பர் நச்சினார்க்கினியர். பொற்பே பொலிவு (தொல் - உரி - 37) என்றும், பொன்னென். கிளவி ஈறுகெட (தொல் - புள்ளிமயங் - 69) என்றுஞ் சூத்திரஞ் செய்தமையின் பொலம் என்பது பொலிவு என்று பொருள்தராது என்று விளக்கங் கூறுவர். பொருந்துமேற் கொள்க. பூரணசேனன் - பொருதுபட்டான். ( 186)
-----------
-
2288. புனைகதிர்ப் பொன்செய் நாணிற்
குஞ்சியைக் கட்டி நெய்த்தோர்
நனைகதி ரெஃக மேந்தி
நந்தன்வாழ் கென்ன நின்ற
வினையொளிர் காளை வேலைக்
கடக்கலார் வேந்தர் நின்றார்
கனைகடல் வேலை யெல்லை
கடக்கலா வண்ண நின்றார்.
விளக்கம் : இவன், நந்தட்டன் பணியாள். வினையொளிர்காளை - போர்த் தொழிலிடத்தே வெற்றியெய்திப் புகழ்படைத்த காளை. இவன் நந்தட்டனுடைய மறவன். வேலைக் கடவாது நின்ற மன்னர்க்குக் கரைகடவா தடங்கிய கடலுவமை. ( 187)
-----------
-
2289. நின்றவப் படையு ளானே யொருமக னீலக் குஞ்சி
மன்றல மாலை நெற்றி மழகளி றன்றி வீழான்
வென்றியங் கொளிறும் வெள்வேன் மின்னென வெகுண்டு விட்டான்
சென்றவேல் விருந்து செங்கண் மறவனக் கெதிர்கொண் டானே.
விளக்கம் : மன்றல; குறிப்பு வினைமுற்று. இது பெயரெச்சப் பொருள் தந்தது. அப்படை என்றது கட்டியங்காரன் படையை. படையுளான் ஒரு மகன், நீலக்குஞ்சி யொருமகன் எனக்கூட்டுக. மழகளிறு - இளங்களிறு, வீழான்-வீழ்த்தாதவன். செங்கண் மறவன் என்றது நந்தட்டன் மறவனை. ( 188)
-----------
-
2290. மான்வயி றார்ந்து நோக்கும்
வெருவுறு மருளி னோக்கிற்
றேன்வயி றார்ந்த கோதைத்
தீஞ்சொலார் கண்கள் போலு
மூன்வயி றார்ந்த வெள்வே
லொய்யெனப் பறித்து நக்கான்
கான்வயி றார்ந்து தேக்கிக்
களிவண்டு கனைக்குந் தாரான்.
விளக்கம் : வேல் பெற்றேம் என்று நகைத்தான் கண்கள் போலும் வேல், ஊன் வயிறு ஆர்ந்த வேல் என இயைக்க. மருளின், இன் : அசை. ( 189)
-----------
-
2291. விட்டழல் சிந்தி வெள்வேல் விசும்பின்வீழ் மின்னி னொய்தாக்
கட்டழ னெடுங்கண் யாது மிமைத்திலன் மகளி ரோச்சு
மட்டவிழ் மாலை போல மகிழ்ந்துபூண் மார்பத் தேற்றுக்
கட்டழ லெஃகஞ் செல்லக் கானெறி யாயி னானே.
விளக்கம் : சாளரம் ஆகிநின்றவன் கட்டியங்காரன் சேவகன். காற்றுப் போம் வழி சாளரம்; மான்கண் காலதர் மாளிகை யிடங்களும் (சிலப். 5 - 8) என்றார் பிறரும். நந்தட்டன் சேவகன் விட்ட வேலை மகிழ்வுடன் ஏற்றுப் பட்டவன் கட்டியங்காரன் வீரன். ( 190)
-----------
-
2292. கவிமதங் கடந்து காமர்
வனப்புவீற் றிருந்த கண்ணார்
குவிமுலை நெற்றித் தீந்தேன்
கொப்புளித் திட்ட பைந்தார்ச்
செவிமதக் கடலங் கேள்விச்
சீவகன் கழல்கள் வாழ்த்திச்
சவிமதுத் தாம மார்பிற்
சலநிதி தாக்கி னானே.
விளக்கம் : கவிமதம் - புலவர் புனைந்துரை. புலவரானும் புனைந்துரைத்தற் கியலாத கண் என்றவாறு. வனப்பு - அழகு. செவிமதக் கேள்வி; கடன் அம்கேள்வி எனக் கூட்டுக. சவி - செவ்வி. சலநிதி : சீவகன் தோழருள் ஒருவன். ( 191)
-----------
-
2293. குஞ்சரங் குனிய நூறித் தடாயின குருதி வாடன்
னெஞ்சக நுழைந்த வேலைப்பறித்துவான் புண்ணு ணீட்டி
வெஞ்சம நோக்கி நின்று மிறைக்கொளி திருத்து வாற்கண்
டஞ்சிமற் றரசர் யானைக் குழாத்தொடு மிரிந்திட் டாரே.
விளக்கம் : நுழைந்த வேல் - நுழைந்தும் உருவாத வேல். வேலைப் பறித்துக் கொண்டு, அவ் வேல் நுழைந்த சந்திலே வாளைச் செலுத்தி, வாளின் வளைவைப் போக்கினான். இப்போரே யாம் பொரத்தகும் பெரிய போரென்று கருதினான். ( 192)
-----------
-
2294. தோட்டுவண் டொலியன் மாலைத்
துடியிடை மகளி ராய்ந்த
மோட்டுவெண் முத்த மின்னு
முகிழ்முலை யுழுது சாந்தம்
கோட்டுமண் கொண்ட மார்பங்
கோதைவாள் குளித்து மூழ்கிக்
கோட்டுமண் கொள்ள நின்றான்
குருசின்மண் கொள்ள நின்றான்.
விளக்கம் : போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த சலநிதி தன்னினைவின்றி வாளைப் பலகாலும் நுழைத்து ஊன் கொள்ள நின்றான். வெஞ்சமம் நோக்கி நின்று என்பதனை இச் செய்யுளிற் கொணர்ந்து, அரசர் அஞ்சியோடுதலின் இனி நமக்குப் போரில்லையென்ற சலநிதி நினைத்தா னென்று கூறுவர் நச்சினார்க்கினியர். வாள் உருவாதிருத்தலின், தசையைக் குத்தி யெடுத்துக் குருதியிலே குளித்து நின்ற தென்க. ( 193)
-----------
-
2295. எரிமணிக் குப்பை போல விருளற விளங்கு மேனித்
திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி
யருமணி யரச ராவி யழலம்பிற் கொள்ளை சாற்றி
விரிமணி விளங்கு மான்றோ விண்டொழ வேறி னானே.
விளக்கம் : செம்பொன் : பொன்னாலான அணிகட்கு ஆகுபெயர். விண்ணவர் - ஈண்டு விஞ்சையர். விண் : இடவாகு பெயர். (194)
-----------
-
2296. கருவளி முழக்குங் காருங்
கனைகட லொலியுங் கூடி
யருவலிச் சிங்க வார்ப்பு
மாங்குடன் கூடிற் றென்னச்
செருவிளை கழனி மள்ள
ரார்ப்போடு சிவணிச் செம்பொற்
புரிவளை முரச மார்ப்பப்
போர்த்தொழி றொடங்கி னானே.
விளக்கம் : கருவளி - பெருங்காற்று. கார் - முகில். கனைகடல் : வினைத்தொகை. செருவிளைகழனி என்றது போர்க்களத்தை. சிவணி - பொருந்தி. ( 195)
-----------
-
2297. அரசர்த முடியும் பூணு
மாரமும் வரன்றி யார்க்கு
முரசமுங் குடையுந் தாரும்
பிச்சமுஞ் சுமந்து மாவும்
விரைபரித் தேரு மீர்த்து
வேழங்கொண் டொழுகி வெள்ளக்
குரைபுனற் குருதி செல்லக்
குமரன்விற் குனிந்த தன்றே.
விளக்கம் : இது பொருகின்ற முறைமை கூறிற்று. குருதி வரன்றிச் சுமந்து ஈர்த்து ஒழுகிக் செல்லும்படி, குமரன் வில் வளைந்தது என்க. ( 196)
-----------
-
2298. கேழ்கிள ரெரிகட் பேழ்வாய்க் கிளர்பெரும் பாம்பி னோடுஞ்
சூழ்கதிர்க் குழவித் திங்க டுறுவரை வீழ்வ தேபோற்
றாழிருந் தடக்கை யோடுந் தடமருப் பிரண்டு மற்று
வீழ்தரப் பரந்த வப்பு நிழலிற்போர் மயங்கி னாரே.
விளக்கம் : கேழ் - நிறம். எரிகண்: வினைத்தொகை. பேழ் - பெரிய. குழவித் திங்கள் - பிறை, துறுவரை - பெரிய மலை, தடமருப்பு - பெரிய கொம்பு, அப்பு நிழல் - வானின்கட் பரவிய அம்புகளாலுண்டான நீழல். மயங்கினார் - கலங்கினர். ( 197)
-----------
-
2299. ஆடவ ராண்மை தோற்று
மணிகிளர் பவழத் திண்கை
நீடெரி நிலைக்கண் ணாடிப்
போர்க்களத் துடைந்த மைந்தர்
காடெரி கவரக் கலலென்
கவரிமா விரிந்த வண்ண
மோடக்கண் டுருவப் பைந்தா
ரரிச்சந்த னுரைக்கின் றானே.
விளக்கம் : அரிச்சந்தன் : கட்டியங்காரன் அமைச்சன், கண்ணாடியில் அழகும் அழகின்மையுந் தோன்றுமாறு போலப் போர்களத்திலும் ஆண்மையும் ஆண்மையின்மையுந் தோன்றுதலின், அதனை உவமித்தார், மிக்க வீரரன்மையின், கவரிமா உவமையாயிற்று. ( 198)
-----------
-
2300. மஞ்சிவர் மின்ன னார்தம் வாலரிச் சிலம்பு சூழ்ந்து
பஞ்சிகொண் டெழுதப் பட்ட சீறடிப் பாய்த லுண்ட
குஞ்சியங் குமரர் தங்கண் மறம்பிறர் கவர்ந்து கொள்ள
வஞ்சியிட் டோடிப் போகி னாண்மையார் கண்ண தம்மா.
விளக்கம் : நீர் மகளிரிடத்தன்றிப் போரிலும் ஆடவராகவேண்டும் என்றான். குமரர்: முன்னிலைப் படர்க்கை, கேட்பிக்கும் இடத்தே வருகின்ற அம்ம என்னும் அசைச்சொல், உரைப்பொருட்கிளவி நீட்டமும் வரையார் (தொல். உயிர் மயங். 10) என்றதனால், அம்மா என நீண்டு, அது, விளியொடு கொள்ப (தொல்-விளிமரபு. 34) என்றதனால் அம்மா மைந்தீர் என நின்றது; முற்கூரிய மைந்தரை விளித்தானாம், அம்ம வாழி கேளிர் (அகநா. 130) என்றாற் போல ஈண்டும் பன்மை யுணர்த்திற்று. ( 199)
-----------
-
2301. உழையின முச்சிக் கோடு கலங்குத லுற்ற போதே
விழைவற விதிர்த்து வீசி விட்டெறிந் திடுவ தொப்பக்
கழலவ ருள்ள மஞ்சிக் கலங்குமே லதனை வல்லே
மழைமினி னீக்கி யிட்டு வன்கண்ண ராப வன்றே.
விளக்கம் : அது நுமக்கும் வேண்டும் என்றான் உழையினம், கழலவர் : எழுவாய்கள். உழையினம் - மான்கூட்டம். கோடு - உச்சிக்கோடு கலங்குதல் உற்றபோதே என்றற்கு, உச்சியிலுள்ள கொம்பு அசைதலுற்ற பொழுதே எனினும் அமையும். விழைவு - பற்று. வீசிவிட்டெறிதல் : ஒருசொல். கழலவர் - மறவர் ஆப - ஆகுவர். அன்று, ஏ : அசைகள் ( 200)
-----------
-
2302. தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தாற்
கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர்
பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மே
னிற்பர்தம் வீரந் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான்.
விளக்கம் : புறந்தருதல் - உண்டி உறையுள் உடைமுதலியன வீந்து பாதுகாத்தல், தலைமகன் - அரசன், புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு, இரந்துகோள் தக்க துடைத்து என்றார் வள்ளுவர், அச் சாக்காட்டால் எய்தும் பயன் இச்செய்யுளில் அழகுறக் கூறப்பட்டுள்ளது.
( 201)
-----------
-
2303. பச்சிரும் பெஃகிட் டாங்குப் படையைக்கூர்ப் பிடுத லோடுங்
கச்சையுங் கழலும் வீக்கிக் காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்
டச்சுற முழங்கி யாரா வண்ணலங் குமரன் கையு
ணச்செயிற் றம்பு தின்ன நாளிரை யாக லுற்றார்.
விளக்கம் : பொற் சின்னத்தை வாயிலிட்டும் போரிடல் மரபு. அண்ணல் அம் குமரன் : அம் : அசை. பச்சிரும்பு - உருகிய இரும்பு. கூர்ப்பிடுதல் - தூண்டுதல். காஞ்சனத் தளிவம் - பொன்னாலாகிய சின்னம். அச்சுற -அச்சம் உண்டாகும்படி. ஆரா - ஆர்த்து, குமரன் : சீவகன், நாளிரை - நாட்காலத்துத் தின்னுமிரையுமாம். எயிறு - பல் . இது : இங்கு அம்பின் முனையை யுணர்த்தியது. (202)
-----------
-
2304. வடதிசை யெழுந்த மேகம் வலனுராய் மின்னுச் சூடிக்
குடதிசைச் சோந்து மாரி குளிறுபு சொரிவ தேபோற்
படர்கதிர்ப் பைம்பொற் றிண்டோ பாங்குற விமைப்பி னூர்ந்தா
னடர்சிலை யப்பு மாரி தாரைநின் றிட்ட தன்றே.
விளக்கம் : உராய் - உலவி. முகில் வலமேறிச் சென்றால் மழைமிகும் . மின்னு - மின்னல். குடதிசை - மேற்றிசை. குளிறுபு - முழங்கி, பாங்கு - அழகு. ( 203)
-----------
-
2305. அற்றுவீழ் தலைகள் யானை யுடலின்மே லழுந்தி நின்ற
பொற்றதிண் சரத்திற் கோத்த பொருசரந் தாள்க ளாகத்
தெற்றிமேற் பூத்த செந்தா மரைமலர் போன்ற செங்கண்
மற்றத்தா துரிஞ்சி யுண்ணும் வண்டின் மொத்த வன்றே.
விளக்கம் : வில் வன்மையாற் கணையிற் கோக்க எய்தான். மற்று, அன்று, ஏ : அசைகள். ( 204)
-----------
-
வேறு
2306. திங்க ளோடுடன் குன்றெலாந் துளங்கி மாநிலஞ் சோவபோற்
சங்க மத்தகத் தலமரத் தரணி மேற்களி றழியவும்
பொங்கு மாநிரை புரளவும் பொலங்கொ டோபல முறியவுஞ்
சிங்கம் போற்றொழித் தார்த்தவன் சிறுவர் தோமிசைத் தோன்றினார்.
விளக்கம் : துளங்கு - அசைந்து. அலமர - அசைய. யானைகட்குக் குன்றுகள் உவமை. சங்கிற்குத் திங்கள் உவமை. மாநிரை குதிரையணி. தொழித்தல் - சினத்தல், அவன் என்றது கட்டியங்காரனை. ( 205)
-----------
-
2307. சந்த னஞ்சொரி தண்கதிர்த் திங்க ளந்தொகை தாம்பல
குங்கு மக்கதிர்க் குழவியஞ் செல்வ னோடுடன் பொருவபோன்
மங்குன் மின்னென வள்ளறேர் மைந்தர் தேரொடு மயங்கலின்
வெங்கண் வில்லுமிழ் வெஞ்சர மிடைந்து வெங்கதிர் மறைந்ததே.
விளக்கம் : தண்கதிர்த் திங்கள் தொகை கட்டியங்காரன் மக்களுக்கு உவமை. கதிர்க்குழவியஞ் செல்வன் - (ஞாயிறு) சீவகனுக்குவமை. வள்ளல் : சீவகன். வெங்கதிர் - ஞாயிறு. ( 206)
-----------
-
2308. குருதி வாளொளி யரவினாற்
கொள்ளப் பட்டவெண் டிங்கள்போற்
றிருவ நீர்த்திகழ் வலம்புரி
வாய்வைத் தாங்கவன் றெழித்தலும்
பொருவில் கீழ்வளி முழக்கினாற்
பூமி மேற்சன நடுங்கிற்றே
யரவ வெஞ்சிலை வளைந்ததே
யண்ணல் கண்ணழ லுமிழ்ந்ததே.
விளக்கம் : திருவ: அ: அசை. திருத்திகழ்ந்த அக்கடலும் ஆம். குருதிவாளொளியரவு என்றது கேதுவினை. சீவகன் கைக்குச் செம்பாம்பும் சங்கத்திற்குத் திங்களும் உவமை. அவன்:சீவகன். சனம் - மக்கட்டிரள். அரவம் போன்ற வெஞ்சிலை என்க. அண்ணல் : சீவகன். ( 207)
-----------
-
2309. கங்கை மாக்கடற் பாய்வதே
போன்று காளைதன் கார்முக
மைந்த ரார்த்தவர் வாயெலா
நிறைய வெஞ்சரங் கான்றபி
னெஞ்சம போழ்ந்தழ லம்புண
நீங்கி னாருயிர் நீண்முழைச்
சிங்க வேறுகள் கிடந்தபோற்
சிறுவர் தோமிசைத் இஞ்சினார்.
விளக்கம் : நீங்கினார் : வினையெச்ச முற்று. இதுவரை கட்டியங்காரற்குத் துணைவந்த அரசருடனும், அவன் படைத்தலைவருடனும் அவன் புதல்வர் அணி வகுத்து வந்தவருடனும் சீவகன் பொருதவடி கூறினார். ( 208)
-----------
-
2310. நிவந்த வெண்குடை வீழவும் வேந்தர் நீள்விசும் பேறவு
முவந்து பேய்க்கண மாடவு மோரி கொள்ளைகொண் டுண்ணவுங்
கவந்த மெங்கணு மாடவுங் களிறு மாவொடு கவிழவுஞ்
சிவந்த சீவக சாமிகண் புருவ மும்முரி முரிந்தவே.
விளக்கம் : இது முதலாகப் பதுமயூகம் வகுத்து நின்ற கட்டியங்காரனுடன் சீவகன் பொருதமை கூறுகின்றார். எச்சங்கள் எதிர் காலம் நோக்கின; குறையாகிய தலையை உடையதனைக் குறைத்தலை என்றது ஆகுபெயர். அவன் படை வகுப்பைக் கண்டு சீவகற்குக் கோபம் நிகழ்ந்தமை கூறினார். முரிமுரிந்த என்பதனை, அணியலும் அணிந்தன்று (புறநா. - கடவுள் வாழ்த்து) என்றாற் போலக் கொள்க. ( 209)
-----------
-
2311. பொய்கை போர்க்களம் புறவிதழ்
புலவு வாட்படை புல்லித
ழைய கொல்களி றகவித
ழரச ரல்லிதன் மக்களா
மையில் கொட்டையம் மன்னனா
மலர்ந்த தாமரை வரிசையாற்
பைய வுண்டபின் கொட்டைமேற்
பவித்திரத் தும்பி பறந்ததே.
விளக்கம் : குலனும் குணனும் முதலியன தூயன் என்பது தோன்றப், பவித்திரத் தும்பி என்றார். ( 210)
-----------
-
வேறு
2312. கலைமுத்தங் கொள்ளு மல்குற் கார்மழை மின்ன னார்த
முலைமுத்தங் கொள்ளச் சாந்த மழிந்துதார் முருகு விம்மு
மலைமுத்தங் கொள்ளு மார்பின் மன்னனுங் கண்டு காய்ந்தான்
சிலைமுத்தங் கொள்ளுந் திண்டோட் செம்மலுந் தீயிற் சேந்தான்.
விளக்கம் : கலை - மேகலையணி. தார் - மாலை. முருகு - மணம். மலைமுத்தங்கொள்ளும் மார்பின் என்புழி முத்தங்கோடல் - பொருந்துதல் என்பதுபட நின்றது. மன்னன் : கட்டியங்காரன். செம்மல் : சீவகன். (211)
-----------
-
2313. தன்மதந் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
பின்மதஞ் செறித்திட்டு டஞ்சிப் பிடிமறந் திரிந்து போகும்
வென்மதக் களிற்று வெய்ய வசனிவே கத்தின் மேலான்
மின்னுமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பி னானே.
விளக்கம் : இதனால் அசனிவேகத்தின் வலிமை கூறினார். ( 212)
-----------
-
2314. நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுத மாகு
மில்லையே லமுது நஞ்சா மின்னதால் வினையி னாக்கங்
கொல்வல்யா னிவனை யென்று மிவன்கொல்லு மென்னை யென்று
மல்லன நினைத்தல் செல்லா ரறிவினாற் பெரிய நீரார்.
விளக்கம் : எனவே, இது நின் செயலென்று கருதவேண்டா என்றான். தன் சிறையை அவன் நீங்கின தன்மையையும் தனக்கு அரணாக இட்ட வியூகம் கேட்ட தன்மையையும் எண்ணி இங்ஙனம் கூறினான். (213)
-----------
-
2315. அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மா
மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ
நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட்டிடுத லுண்டே
பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே.
விளக்கம் : தன் மக்கள் சீவனிடம் அகப்பட்டதும், சீவகன் ஆக்கமுடைய னாதலின் தன் கையிலகப்படாததும், தன் மக்களாற் கொல்லப் படாததும் கருதி இங்ஙனங் கூறினான். ஞாயிறும் திங்களும் தம் தன்மை திரியாமையின் நல்வினை தீவினைகளும் தம் பயனைப் பயந்தேவிடும் என்றான். பகைக் கதிர் என்றது திங்களுக்குப் பகையென்று கருதி. ( 214)
-----------
-
2316. புரிமுத்த மாலைப் பொற்கோல்
விளக்கினுட் பெய்த நெய்யுந்
திரியுஞ்சென் றற்ற போழ்தே
திருச்சுடர் தேம்பி னல்லா
லெரிமொய்த்துப் பெருக லுண்டோ
விருவினை சென்று தேய்ந்தாற்
பரிவுற்றுக் கெடாமற் செல்வம்
பற்றியா ரதனை வைப்பார்.
விளக்கம் : முன்னே, மொய்யமர் பலவும் வென்றான் (சீவக. 205) தன் புதல்வர் தன்னைச் சூழப்பட்டுக் கிடக்கின்றமை கண்டும் செற்றம் மிகுந்து மேற்செல்லாது இங்ஙனம் கூறினான் தான் அரச மரபு அன்மையின். ( 215)
-----------
-
2317. நல்லொளிப் பவளச் செவ்வாய் நன்மணி யெயிறு கோலி
வில்லிட நக்கு வீர னஞ்சினா யென்ன வேந்தன்
வெல்வது விதியி னாகும் வேல்வரி னிமைப்பே னாயிற்
சொல்லிநீ நகவும் பெற்றாய் தோன்றன்மற் றென்னை யென்றான்.
விளக்கம் : கட்டியங்காரன் ஊழ்வலியை எண்ணிக் குறைந்தே நின்றால், கொல்வது அரிது என்று கருதிச் செற்றமுண்டாக்கக் கருதி அஞ்சினாய் என்றான். பெற்றாய் : கால வழுவமைதி. ( 216)
-----------
-
2318. பஞ்சிமெல் லடியி னார்தம்
பாடகந் திருத்திச் சேந்து
நெஞ்சுநொந் தழுத கண்ணீர்
துடைத்தலி னிறைந்த கோல
வஞ்சனக் கலுழி யஞ்சே
றாடிய கடக வண்கை
வெஞ்சிலை கொண்டு வெய்ய
வுருமென முழங்கிச் சொன்னான்.
விளக்கம் : மகளிரின் காலணியைத் திருத்திச் சிவந்த கை - அம் மகளிரின் கண்ணீரை மாற்றும்போது கண்ணிலுள்ள மை கண்ணீருடன் கலந்து சேறானதைத் துடைத்த கை - எனக் கூட்டுக. கட்டியங்காரன் கூறுகிறான். ( 217)
-----------
-
வேறு
2319. இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சிற்
புல்லாள னாக மறந்தோற்பி னெனப்பு கைந்து
வில்வா ளழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக்
கொல்யானை யுந்திக் கடைமேலுமொர் கோறொ டுத்தான்.
விளக்கம் : சச்சந்தனைக் கொன்று குடை கவித்தலின், குடையிட்டு நிற்பதன் மேலும் எனவே, அவனைக் கொன்றமை கூறிற்றாம். இனி, மேலும் வழங்கினானே என்று பாடம் ஓதிச் சீவகன் எய்தமை பொறாது கட்டியங்காரன் அம்பு தொடுத்தான் என்பாரும் உளர். ( 218)
-----------
-
2320. தொடுத்தாங்க வம்பு தொடைவாங்கி விடாத முன்ன
மடுத்தாங்க வம்புஞ் சிலையும்மத னாணு மற்றுக்
கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை யம்பி னெய்தான்
வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப் பூணி னானே.
விளக்கம் : வடித்த தாரை என்பது, வடித்தாரை என விகாரப் பட்டது என்பர் நச்சினார்க்கினியர். கடுத்து - கடுகி எனலுமாம். ( 219)
-----------
-
2321. அம்புஞ் சிலையு மறுத்தானென் றழன்று பொன்வாள்
வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன் தேரின் மேலே
பைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு கென்று பாய்வான்
செம்பொன் னுலகி னிழிகின்றவொர் தேவ னொத்தான்.
விளக்கம் : யானையினின்றும் கீழே பாய்கின்றவன், நல்வினைகெட்டு, வானினின்றும் தள்ளப்படுகின்றவன் போன்றான். ( 220)
-----------
-
2322. மொய்வார் குழலார் முலைப்போர்க்கள மாய மார்பிற்
செய்யோன் செழும்பொற் சரஞ்சென்றன சென்ற தாவி
வெய்தா விழியா வெகுவத்துவர் வாய்ம டியா
மையார் விசும்பின் மதிவீழ்வது போல வீழ்ந்தான்.
விளக்கம் : சச்சந்தனை, வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான் (சீவக. 289) என்று ஞாயிற்றினோடு உவமை கூறிப் போந்து, அவன் புதல்வன் அவனேயாமாதலின், ஈண்டும் சீவகனைச் செய்யோன் என்று ஞாயிறாக்கி, அஞ்ஞாயிற்றின் முன்னே மதி நில்லாது கெடும் என்பது தோன்ற, மதி வீழ்வதுபோல வீழ்ந்தான் என்றார். மேகத்தை யானைக்குவமை, கூறினார். இதனால், சச்சந்தன் பட்ட அன்றுதொட்டு இன்றளவும் கட்டியங்காரன் கொடுங்கோலிருள் பரப்ப அரசாண்ட தன்மையும், அதுதான் இராக் காலத்தே இருள் பரந்து நிற்ப மதியாண்ட தன்மைத்தென்றும் கூறினாராயிற்று. ( 221)
-----------
-
வேறு
2323. கட்டியங் கார னென்னுங்
கலியர சழிந்த தாங்குப்
பட்டவிப் பகைமை நீங்கிப்
படைத்தொழி லொழிக வென்னாக்
கொட்டினர் முரச மள்ள
ரார்த்தனர் குருதிக் கண்ணீர்
விட்டமு தவன்க ணார்வ
மண்மக ணீக்கி னாளே.
விளக்கம் : கலியாகிய அரசு என்க. அரசு-அரசன்: கட்டியங்காரன். என்னா - என்று. முரசங்கொட்டியனர் என்க. சிறிது காலம் தான் அவனுக்குத் தேவியாயிருந்தமையால் நிலமகள் அழுதனள். நிலமகள் அழத காஞ்சியுமுண்டே என்றார் பிறரும். ( 222)
-----------
-
2324. ஒல்லைநீ ருலக மஞ்ச
வொளியுமிழ் பருதி தன்னைக்
கல்லெனக் கடலி னெற்றிக்
கவுட்படுத் திட்டு நாகம்
பல்பகல் கழிந்த பின்றைப்
பன்மணி நாகந் தன்னை
வல்லைவாய் போழ்ந்து போந்தொர்
மழகதிர் நின்ற தொத்தான்.
விளக்கம் : தன் புதல்வர்களுடன் பட்டான் என்பது தோன்றப் பல்மணி நாகம் என்றார். மந்திரி மாநாகம் உடன் விழுங்கிற்று (சீவக. 290) என்ற முன்னர்க் கூறியதனால், தந்தை புதல்வனாகப் பிறப்பான் என்னும் விதிபற்றி இவ்வாறு கூறினார். ( 223)
------
-
2325. கோட்டுமீன் குழாத்தின் மள்ள
ரீண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டுமீன் சூழாத்தி னெங்குந்
தீவிகை மொய்த்த முத்த
மாட்டுநீர்க் கடலி னார்த்த
தணிநகர் வென்றி மாலை
கேட்டுநீர் நிறைந்து கேடில்
விசயைகண் குளிர்ந்த வன்றே.
விளக்கம் : கனவு புணையாக இறந்துபடாது இருத்தலின், கேடு இல் விசயை என்றார். அவன் புதல்வரைக் கொன்று அவனைக் கொல்வதால் ஒழுங்கு என்றார். ( 224)
-----------
-
2326. அணிமுடி யரசர் மாலை
யழனுதி வாள்க ளென்னு
மணிபுனை குடத்தி னெய்த்தோர்
மண்ணுநீர் மருள வாட்டிப்
பணைமுலைப் பைம்பொன் மாலைப்
பாசிழைப் பூமி தேவி
யிணைமுலை யேக மாக
நுகரிய வெய்தி னானே.
விளக்கம் : முடியினையும் மாலையினையும் குருதி தோய்ந்த வாள்களையும் உடைய நெருப்பினது கொழுந்தென்னும் அரசர் சீவகனை மணிபுனை குடத்தின் மண்ணும் நீராலே ஆட்ட என்று பொருளுரைத்து இது வீராபிடேகம் என்பர் நச்சினார்க்கினியர். மற்றும், அரசரைக் கொண்டு வாள்களென்னும் குடத்தின் நெய்த்தோராகிய மண்ணும் நீராலே மண்மகளை யாட்டுவித்து அவளை எய்தினான் என்பாரும் உளர் என்றும் உரைப்பர். இப்பொருட்கு, ஆட்டி என்பதை, ஆட்ட எனத்திரிப்பர். (225)
மண்மகள் இலம்பகம் முற்றும்.
-----------------
This file was last updated on 15 July 2019.
Feel free to send the corrections to the .