Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 22 (2645 - 2669)
பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 22(verses 2645 -2669 )
pUvALUrp patiRRuppattantAti
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the work.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
V.S. Kannan.abd S. Govindarajan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 22
பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (*)

* இந்நூல் பூர்த்தியாகக் கிடைக்கவில்லை
------
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
சமயாசாரியர் துதி
விருத்தம்



2645 - நிறைவளருந் தவஞானப் புகலிவருஞ் சிவஞான நிமலக் கன்றைத்,
துறைவளருங் கருங்கடற்கல் லொடுமிதந்த தமிழ்க்கடலைத் தூய சைவ,
முறைவளரும் புக்கொளியூர் முதலைவாய்ப் பிள்ளைதரு முதலைத் தெய்வ,
மறைவளரும் பரிமிசையெம் மிறைவரச்செயிறையையன்பின் வணங்கு வாமால். - 1

நூல்




2646 - திருவார்பொற் பூவாளூர்ப் பங்குனிமா நதிக்கரையின்றெனாறு வைப்பிற்,
றருவார்கூ விளவனத்துக் குங்குமசுந் தரியொருபாற் றயங்க வைகுங்,
குருவாருஞ் சடைமோலித் திருமூல நாதர்பதங் குறித்து வாழ்த்திற,
கருவார்வெம் பவக்கடனீந் திடலாகுமிவ்வுரைமெய் காண்பாய் நெஞ்சே - 1



2647 - நெஞ்சமே பொறிவழிச்சென் றலையாதோர் கணப்போது நின்றுகேட்டி,
வஞ்சமே யழுக்காறே வரும்பொய்யே முதலனைத்து மறத்தி மேதி,
கஞ்சமேய்ந் தடர்சூத நிழலுறங்கும் பூவாளூர்க் கடவுள் பாதந்,
தஞ்சமே யெனச்சென்று பற்றுதிபற றறுத்தியிது தக்க தாமே. - 2



2648 - ஆமாறு மனங்கசிந்து நீறணிந்து கண்மணிபூண் டஞ்சுமெண்ணிக்,
காமாரி தனைச்சிறந்த கெளமாரி நாயகனைக் காம ரூர்வாழ்,
தேமாரி பொழிகொன்றைச் சடைமோலிப் பெருமானைச் சென்று
தாழார், மாமாயக் கடலுழல்வர் போமாறென் னெனவென்னுண் மதிக்கு மாலோ. - 3



2649 - ஆலும்விட மமுதாக்குங் காமர்பதித் திருமூல வமலனார்க்குச்,
சாலுமணிக் குழையொருபாற் றோடொருபான முத்தொரு பாற சாப்ப மோர்பா,
லேலுநற்குங் கும்மொருபா னிறொருபாற பட்டொருபா லியைதோ லோர்பா,
லோலிடுபொற் சிலம்பொருபாற் கழலொருபாற் பன்னாளு மொளிரு மன்றே. - 4



2650 - அன்றினார் புரமெரித்த வம்மானே செம்மேனி யமலத்தேவே,
மன்றுளா டொருமணியே மாவாளும் பூவாளூர் வயங்குஞ்சோதி,
வன்றிமா மலத்தழுந்து, மாறேபோன மடவார்த மயற்சேற் றாழ்ந்தேற்,
கொன்றுமா வினைமதற்காய் நின்னுதற்கட் கிலக்காக வுறு நா ளென்றே. - 5



2651 - என்றுநெடு மாலயனுக் கரியபிரா னென்றுமன்பி லிருணெஞ் சத்தார்க்,
கென்றும்வெளிப் படானென்று மனவாக்கிற் கெட்டாதா னென்று மோலிட்,
டென்றுமறை விரித்துரைப்பக் கேட்டிருந்தும் பேதைமையோ யாதோ வென்னெஞ்,
சென்றுமொரு பூவாளூர்ப் பெருமானைப் பேசவிருப் பெய்து மன்றே. - 6



2652 - அன்றுவட வானிழற்கீ ழமர்ந்தறவோர்க் கறமுதனான் கருளு மண்ணல்,
கொன்றைநெடுஞ் சடைமோலித் தேவாநற் பூவாளூர்க் கோவா முத்தே,
கன்றுகொடு விளவெறிந்தோன் காணருஞ்செஞ் சிலம்பணிபூங் கமலத் தாளென்,
புன்றலையி லுறப்பதித்துப் புரிந்தடிமை கொள்ளுவதெப் போது தானே. - 7



2653 - போதாருந் தடஞ்சோலை மயிலாலக் குயில்கூவும் பூவாளூர்வாழ்,
காதார்வண் குழையு‍டையாய் கட்டங்கா காபாலீ காலகாலா,
வோதாயோ நின்னுண்மை பொன்செய்கொழுக் கொடுவரகுக் குழாநின் றேனின்,
பாதார விந்தமலர் பற்றிவிடா விருவினையும் பாற்று மாறே. - 8



2654 - பாறாடும் வெஞ்சூலப் படையானை யெவ்வுலகும் படைத்திட் டானை,
யேறாடுங் கொடியானைப் பெருமானைச் சிறுமானை யேந்தினானைச்,
சேறாடுந் தண்கழனிப் பூவாளூ ருடையானைச் சிறப்பிற் பாடார்,
மாறாடும் பசுக்கடமைப் பாடுவார் பல்லோர்தம் மயக்கி னாலே. - 9



2655 - மயலாருந் திரைக்கடலுட் பட்டலையு மாறேபோல் வாரார் கொங்கைக்,
கயலாருங் கண்ணியர்மாற் கடலிடைப்பட்டிடாதுகடைக் கணித்தல்வேண்டும்,
வயலாருஞ் செங்கமலத் தேனோடி மடையுடைக்கும் வண்பூவாளூர்ப்,
பயலாரு மாதுடையாய் வண்சங்கக் காதுடையாய் பாவியேற்கே - 10



2656 - வேறு பாவிய கரும மின்றியே பசுவும் பதியும்பா சமுமென வுரைக்கு,
நாவினான் மதமே கொண்டுழலாம னாயினேற் கென்றருள் புரிவாய்,
காவியங் கண்ணி கூறுடைக் கனியே காமர்பூம் பதியுறை முதலே,
தீவிழிப் பகுவாய்க் கூற்றுயிர் குடித்த சேவடிச் சிவபரஞ் சுடரே. - 11



2657 - சிவபரஞ் சுடரே யுள்ளகந் தெவிட்டாத் தெள்ளமு தேசுவைக் கனியே,
யவனவ ளதுவென் றுரைத்திடும் புவன மாகியு மதற்குவே றானாய்,
நவவடி வுடையாய் காமாபூம் பதியாய் நாயினுங் கடைப் படுவேற்குத்,
தவலரு மூல மலச்செருக் கொழிந்து சத்தினி பாத மென் றுறுமே. - 12



2658 - உறுவர்க டுதிக்குங் கூவிள வனத்தா யுணர்வுடை யோர்க் கெளிதானாய்,
சிறுபுழுப் பொதிந்த புன்புலா லுடைய தேகமே நானெனக் கருதி,
வருமிரு வகைச்சார் புடங்குறக் கொண்டு வருமவத் தைகடொறுஞ் சென்று,
பெறுவதொன்றின்றி யுலையுநா யேனின் பிறங்கருள் பெறுவதெந் நாளே. - 13



2659 - நாளெலா மோடிக் கற்பசுக் கறந்து நல்லவர் நகைக்குமா திரிந்தேன்,
மீளவு முழல்வேன் வல்வினை ஞான மெல்வினை ஞானமுமில்லேன்,
பாளைவாய்க் கமுகின் பசுங்கழுத் தொடியப் பருவரால் குதிகொளுங் கழனி,
வாளுலாம் பொழில்சூழ் காமர்பூம் பதிவாழ் மாணிக்க மேயெனக் கருளே. - 14



2660 - அருளெனப் படுவ தெவைக்குமே லென்ன வறிகிலே னருளலர் வெவையும்,
பொருளென மதித்தேன் புலையரும் விரும்பாப் புன்புலாற் சுமைவெறுப் பில்லேன்,
கருள்படு மனத்துக் கடையனேற் குனது கருணைவந் துவுவ தென்றோ,
மருளற முனிவர்க் கருளிய காமர் வளம்பதி விளங்குமொண் பொருளே. - 15



2661 - பொருந்துசன் மார்க்க நெடுஞ்சக மார்க்கம் புத்திர மார்க்கமு மில்லேன்,
றிருந்திய தாத மார்க்கமு மில்லேன் றீவினை மார்க்கமே யுடையேன்,
கருந்தலைப் பூவை மூவர்பாட் டெடுப்பக் காமருகிள்ளைகேட் டுவக்கும்,
பெருந்தடம் பொழில்சூழ் காமர்பூம் பதிவாழ்பிஞ்ஞகா பேரருள் புரியே. - 16



2662 - வேறு ஏலக் குழலியோர் பாகம் போற்றி யெனக்கு வெளிப்படும்பாதம் போற்றி,
மாலைப் பிறைமுடி வேணி போற்றி மான்மழுவைத்த கரங்கள் போற்றி,
காலைக் கதிர்த்திரு மேனி போற்றி காமனைக் காய்ந்தகண் போற்றி யென்றே,
யோலிட்டருமறை தேடும்பூவாளூரரை யான்சொல்லி யுய்வ தென்றே. - 17



2663 - இன்றமிழ் ஞானசம் பந்தர் பாலு மெய்திய நாவுக் கரசர் பாலுந்,
தென்றமிழ் நாவலூர்ச் செல்வர் பாலுஞ் சிற்றன்பு சிந்தையிற் செய்து மில்லேன்,
குன்றம்வில் லாக்கொண்ட புண்ணியனே கோதறு காமர் பதிக்கண் வாழ்‍வே,
மன்றுணின் றாடிய வல்ல‍ சோதி மாறிலன் புள்ளத் துறுதல் ‍ செய்யே. - 18



2664 - வேறு உணர்வினுக் குணர்வாம் பூவா ளூரமர் தம்பிரானார்
மணமலி முடியினீரு மரகத புல்லுங் கொள்வான்
குணமலி கரத்து நவ்வி குறித்தெட்டி யெட்டி வீழும்
பணவரப் பள்ளி யான் சேய் பட்டபா டறிந்திலாதே. - 19



2665 - என்னென வுரைக்கேனையா வேழையேன் புன்சொ னிற்கு
நன்னய முறையோ நல்லோர் நாடுவா சகமோ வன்பு
துன்னிய வேடர் கோமான் சொற்றிடு முகம னோமற்
றுன்னிடின் வில்வக் கானத் துறைதிரு மூலத்தேவே. - 20



2666 - தேவர்கள் சிகைபூ ணூல்போற் செய்யமார் பிலங்குந் தோற்றந்
தாவில்செஞ் சடைக்கா டுற்ற தறுகண்வா ளரவு கக்கப்
பாவுகார் விடமோர் பாங்கர்ப் பாய்ந்‍தொளி வீரல் போலு
மோவில்பல் லறஞ்சூழ் பூவா ளூரமர் கடவு ளார்க்கே. - 21



2667 - வேறு காலைக் கதிராய்ச் சில்லுயிர்க்குக் களைவெண் மதியாய்ச் சில்லுயிர்க்கு,
மாலை யிருளாய்ச் சில்லுயிர்க்கு வைகும் பொருணீயென்றறியேன்,
சோலைக் குயில்கூ வொலியெடுக்குந் தொலையா வளமைப் பூவாளூர்,
வேலைக் கருநஞ் சுறைகண்டா விமலா னந்த மெய்ப் பொருளே. - 22



2668 - காட்டிற் பயிலும் பசுங்கிளியைக் கருதி வளர்த்தோர் பூசையிடங்,
கூட்டிக் கொடுப்பார் களுமுண்டோ கோவே யாவா கேவலத்தி,
னீட்டித் திருந்த வெனைச்சகள நிலையிற் படுத்து வளர்த்தெமன்பாற்,
காட்டிக் கொடேலுன் னடைக்கலம்யான் காமர் பதிவாழ் கண்ணுதலே. - 23



2669 - மயங்கிப் பிறவிக் கடல்வீழ்ந்து வலிய வினையாந் திரையலைப்ப,
வுயங்கிக் காமச் சுழலகப்பட் டுய்யும் வகைசற் றறியாதே,
தியங்கிக் கிடங்கு நாயேற்குன் செம்பொற் பாதப் புணைதாராய்,
வயங்கிப்புரிசை யடுத்தோங்கி வளர்கல யாண புரத்தரசே. - 24
* இந்நூல் பூர்த்தியாகக் கிடைக்கவில்லை

This file was last updated on 19 May 2007.
Feel free to send corrections and comments to the .