Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

அகமே புறம்
வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழி பெயர்ப்பு

akamE puRam
of V.O. Chidambaram Pillai
(Tamil translation of 'Out from the Heart' of James Allen)
In tamil script, unicode/utf-8 format




    Acknowledgements:
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2013.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are
    http://www.projectmadurai.org/

அகமே புறம்
வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழிபெயர்ப்பு
ஜேம்ஸ் ஆலனின் "Out from the heart" என்ற நூலை
வ.உ.சி. "அகமே புறம்" என்று 1916-ல் மொழி பெயர்த்தார்.

    source:
    அகமே புறம்
    (ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு)
    வ.உ. சிதம்பரம் பிள்ளை

    பொருளடக்கம்
      முகப்புரை
      1. அகமும் புறமும்
      2. மனத்தின் தன்மையும் வன்மையும்
      3. பழக்கத்தை உண்டாக்கல்
      4. செய்தலும் அறிதலும்
      5. உயர்தர வாழ்வு
      6. உயர்தர வாழ்வு முதற் பாடம்
      7. உயர்தர வாழ்வு இரண்டாம் பாடம்
      8. உயர்தர வாழ்வு மூன்றாம் பாடம்
      9. மனோ நிலைமைகளும் அவற்றின் காரியங்களும்
      10. வேண்டுகோள்.
      ---------

    1. அகமும் புறமும்

    அகத்தையொத்தே புறம் (வாழ்வு) அமைகின்றது. அகம் இடைவிடாது புறமாகிக் கொண்டிருக்கின்றது. எதுவும் வெளிப்படாமல் இருப்பதில்லை. எது மறைப்பட்டிருக்கிறதோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே மறைபட்டிருக்கிறது. அது முதிர்ந்து கடைசியாக வெளிப்பட்டே விடுகிறது. வித்து, மரம், மலர், கனி இவை ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றிலிருந்து ஒன்றாகவும் எந்த முறையில் வெளிப்பட்டு நிலவுகின்றனவோ அந்த முறையிலேயே பிரபஞ்சமும் நிலவுகின்றது. மனிதனது அகத்தின் நிலைமையிலிருந்து அவனது புறத்தின் நிலைமைகள் வருகின்றன. அவனது நினைப்புகள் அவனுடைய செயல்களாக மலர்கின்றன. அவனது செயல்கள் அவனுடைய ஒழுக்கமும் புறநிலைமையுமாகிய கனிகளைக் கொடுகின்றன.

    மரம் எப்பொழுதும் பூமியின், அகத்திலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருத்தல் போல, வாழ்வும் எப்பொழுதும் மனிதனது அகத்திலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிலத்துள் புதைபட்டுள்ள வித்துக்கள் நாளடைவில் இலைகளாகவும், மலர்களாகவும் கனிகளாகவும் வெளிப்படுதல் போல, அகத்துள் விதைபட்டுள்ள நினைப்புகளும் நாளடைவில் சொற்களாவும், செயல்களாகவும், செய்து முடிக்கப்பட்ட காரியங்களாகவும் வெளிப்படுகின்றன.

    மறைபட்டுள்ள ஊற்றுவாய்களிலிருந்து எப்படி ஊற்று நீர் வெளிப்படுகின்றதோ, அப்படியே மனிதனது வாழ்வும் கரைப்பட்டுள்ள அவனது அகமூலங்களிலிருந்து வெளிப்படுகின்றது. நிகழ்காலத்தில் அவன் எந்நிலைமைகளில் இருக்கிறானோ அவையும், நிகழ்காலத்தில் அவன் எவற்றைச் செய்கிறானோ அவையும், அவன் அகத்திலிருந்தே வந்திருக்கின்றன. எதிர்காலத்தில் அவன் என்ன நிலைமைகளில் இருப்பானோ அவையும், எதிர்காலத்தில் அவன் எவற்றைச் செய்வானோ அவையும் அவனது அகத்தினின்றே உற்பத்தியாகும்.

    சுகமும் துக்கமும், மகிழ்வும் நோவும், திடமும் அச்சமும், விருப்பமும் வெறுப்பும், அறிவும் மடமையும் அகத்திலின்றி வேறு எங்கும் இல்லை. அவை யாவும் மனோ நிலைமைகளேயன்றி வேறல்ல.

    மனிதன் தனது அகத்தின் அரசன்; தனது மனத்தின் காவலன்; தனது வாழ்க்கையாகிய கோட்டையின் தனிக்காப்பாளன், அவன் அந்த முறையில் ஊக்கமேனும் தூக்கமேனும் கொண்டிருக்கக் கூடும். அவன் தனது அகத்தை மேலும்மேலும் எச்சரிக்கையுடன் வைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவன் தனது மனத்தை அதிகப் பிரயாசத்தோடு பாதுகாத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அவன் நியாயமற்ற நினைப்புகளை நினையாது தன்னைக் காத்துக் கொள்ளக் கூடும். இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம். அதற்கு மாறாக அவன் தனது ஒழுக்கத்தைச் சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும்; இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம் அதற்கு மாறாக அவன் தனது ஒழுக்கத்தைச் சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும்; இஃது அறிவு மயக்கத்திற்கும் துன்ப அடைவிற்கும் மார்க்கம்.

    ஒரு மனிதன் தனது வாழ்வு முழுவதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால், அப்பொழுதே அவனுக்குப் பேரின்ப வீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக் கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான். அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கொண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான்; அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும்; அவன், சிறிது முன்னாகவோ பின்னாகவோ, சகல தீமைகளையும் சகல வேலைகளையும் சகல துன்பங்களையும் போக்கிவிடுவான். ஏனெனில், தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவர்த்தியையும் சுகப் பிராப்தியையும் அடையாமல் இரான்.
    ------

    2. மனத்தின் தன்மையும் வன்மையும்

    மனம் வாழ்வை விதிக்கும் நியந்தா; நிலைகளைச் சிருஷ்டித்துத் திருத்தும் கர்த்தா; தனது சொந்தப் பலன்களை அநுபவிக்கும் போக்தா; பொய்யைச் சிருஷ்டிக்கும் திறனும் மெய்யைக் காணும் திறனும் மனத்திற்கு உண்டு. ஆன்றோரும், ''மனத்தானம் மாந்தர்க்குணர்ச்சி'' என்று கூறியுள்ளார்.

    மனத் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமையாகிய வஸ்திரத்தை நெய்து கொண்டிருக்கிறது; நினைப்பு நூல். நல்ல செயல்களும் தீய செயல்களும் பாவும் ஊடும். ஒழுக்கம் வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான் நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்திக் கொள்கிறது.

    மனிதன் மனத்தையுடைய உயிராகையால் மனத்தின் சகல சக்திகளையும் உடையவனாய் இருக்கிறான். தான் விரும்புவனவற்றையெல்லாம் அடைதற்குத் தக்க கருவிகளைக் கொண்டிருக்கிறான். அவன் தனது அனுபவத்தினால் கற்கிறான்; அவன் தனது அனுபவத்தை மிகுக்கவும் குறைக்கவும் கூடும். அவன் பிறரால் எந்த இடத்திலும் கட்டுப்பட்டிருக்கவில்லை; ஆனால் அவன் தானே தன்னைப் பல இடங்களில் கட்டுப்படுத்தியிருக்கிறான்; அவன் தானே தன்னைக் கட்டுப்படுத்தியிருப்பதால், அவன் நினைத்த மாத்திரத்தில் தானே தன்னை அக்கட்டிலிருந்து நீக்கிக் கொள்ளக் கூடும். அவன் தான் விரும்புகிறபடி தீயனோ அல்லது தூயனோ கீழோனோ அல்லது மேலோனோ, மடையனோ அல்லது அறிஞனோ ஆகக்கூடும். அவன் சில செயல்களைத் திரும்பத்திரும்பச் செய்து பழக்கங்களாக்கிக் கொள்ளலாம்; அவன் அவற்றிற்கு மறுதலையான செயல்களை மேன்மேலும் செய்து அப்பழக்கங்களை அழித்து விடலாம். அவன் மெய்ப்பொருள் முழுவதும் தனக்கு மறைபடும்வரை தன்னைச் சுற்றிப் பொய்களை அமைத்துக் கொள்ளக்கூடும்; அவன் மெய்ப்பொருளைப் பூரணமாகக் காணும் வரை தன்னைச் சுற்றியுள்ள பொய்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவிடக்கூடும். அவன் செய்யக்கூடியன அளவற்றன; அவன் பூரண சுதந்திரத்தையுடையவன். ஆன்றோரும்,

      ''நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை
      நிலைகலக்கிக் கீழிடு வானு-நிலையினு
      மேன்மை லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத்
      தலையாகச் செய்வானுந் தான்''

    என்று கூறியுள்ளார்.

    தனது சொந்த நிலைமைகளைச் சிருஷ்டித்துக் கொள்வதற்கும், தான் வாழ்வதற்குத் தக்க நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கும் ஏற்ற சக்தி மனத்தினிடத்தில் உண்டு. மனம் எந்த நிலைமையையும் மாற்றுதற்கும், எந்த நிலைமையையும் விட்டொழித்தற்கும் வல்லமையுடையது. ஆன்றோரும்,

      ''கெடுக்க வல்லதுங் கெட்டவர் தங்களை
      யெடுக்க வல்லது மிம்மனம்...''

    என்று கூறியுள்ளார்.

    அது பல நிலைமைகளை ஒன்றாக அனுபவித்து அவற்றின் ஞானத்தை அடையுங்காலையில், தனது நிலைமைகளை ஒன்றன்பின் ஒன்றாக மாற்றிக் கொண்டும் கைவிட்டுக் கொண்டும் இருக்கிறது.

    உள்நோக்கும் நினைப்புகள் ஒழுக்கத்தையும் வாழ்வையும் உண்டு பண்ணுகின்றன; நினைப்புகளை மனிதன் தனது விருப்பத்தாலும் முயற்சியாலும் திருத்திக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் கூடும். பழக்கமும் பலவீனமும் பாவமுமு‘கிய தளைகள் தன்னாலேயே யுண்டு பண்ணப்படுகின்றவை; அவை தன்னால் மாத்திரம் அழிக்கப்படக் கூடும்; அவை ஒருவனுடைய மனத்திலன்றி வேறெங்கும் இல்லை; அவை புறப்பொருள்களோடு சம்பந்தப்பட்டிருந்த போதிலும் அவை உண்மையில் அப்புறப்பொருள்களின் கண் இல்லை, புறம் அகத்தால் ஆக்கவும் திருத்தவும்படுகிறது. அகம் ஒருபோதும் புறத்தால் ஆக்கப்படுவதும் திருத்தப்படுவதும் இலலை. மனக்கவர்ச்சிக்கு ஏது புறப்பொருளில் இல்லை; ஆனால், அப்பொருளின்மீது மனம் கொண்டிருக்கிற ஆசையில் இருக்கிறது. துன்பமும் நோவும் புறப்பொருள்களிலும் வாழ்வின் சம்பவங்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அப்பொருள்களை அல்லது சம்பவங்களைப்பற்றிய மனத்தின் ஓர் ஒழுங்குபடாத நிலைமையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன; தூய்மையால் ஒழுங்கு செய்யப்பட்டு ஞானத்தால் பலப்படுத்தப்பட்ட மனம், பிரிக்ககூடாத வண்ணம் துன்பத்தோடு கட்டப்பட்டுள்ள சகல அவாக்களையும் காமங்களையும் ஒழித்துத் தெளிவையும் சாந்தியையும் அடைகிறது.

    பிறரைக் கெட்டவர் என்றலும், கெடுத்திக்கு மூலம் புறநிலைமைகள் என்றெண்ணி அவற்றோடு போராடுதலும், உலகத்தின் துன்பத்தையும் அமைதியின்மையையும் அதிகப்படுத்துவதன்றிக் குறைப்பதில்லை. புறம் அகத்தின் நிழல்; அகத்தின் காரியம். அகம் சுத்தமாயிருக்கும் பொழுது புறத்திலுள்ள சகல காரியங்களும் சுத்தமாயிருக்கின்றன. ஆன்றோரும்,

      ''கற்றதங் கல்வியுங் கடவுட் பூசையு
      நற்றவ மியற்றலு நவையி றானமு
      மற்றுள வறங்களு மனத்தின் பாலழுக்
      கற்றவர்க் கேபய னளிக்கு மென்பரால்''

    என்று கூறியுள்ளார்.

    சகல வளர்ச்சியும் வாழ்வும் அகத்திலிருந்து புறத்திற்கு வருகின்றன; சகல தேய்வும் அழிவும் புறத்திலிருந்து அகத்திற்குச் செல்கின்றன. இது பிரபஞ்சத்தின் ஒரு பொதுவிதி. சகல விரிவுகளும் அகத்திலிருந்து நிகழ்கின்றன; சகல திருத்தங்களும் அகத்தில் செய்யப்பட வேண்டும். எவன் பிறரோடு போராடுதலை விட்டுத் தனது மனத்தைத் திருத்துவதிலும், பலப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், தனது சக்திகளைப் பிரயோக்கிறானோ அவன் தனது சக்தி களையெல்லாம் ஒருமுகப்படுத்தித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுகிறான். அவன் தனது மனத்தைச் சமநிலையில் நிற்கச் செய்தபொழுது தனது இரக்கத்தாலும் ஈகையாலும் பிறரையும் அந்த நல்ல நிலைமைக்குக் கொண்டு வருகிறான்; ஏனெனில், ஒருவன் பிறருடைய மனத்தை நடத்துவதும் ஆளுவதும் ஞானத்துக்கும் சாந்திக்கும் வழிகள் அல்ல; தனது சொந்த மனத்தின்மீது தனது நியாயமான அதிகாரத்தைச் செலுத்துவதும், உயர்தர ஒழுக்கங்களாகிய சன்மார்க்கங்களில் தன்னை நடத்துவதும் ஞானத்துக்கும் சாந்திக்கும் வழிகள்.

    ஒருவனுடைய வாழ்வு அவனது அகத்தினின்றும் அவனது மனத்தினின்றும் வருகிறது. அவன் அந்த மனத்தைத் தனது சொந்த நினைப்புகளையும் செயல்களையும் கலந்து உண்டு பண்ணியிருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் நினைப்புகளைத் தெரிந்தெடுத்துத் தனது மனத்தைத் திருத்தும் சக்தியை உடையவன். ஆகையால், அவன் தனது வாழ்வையும் திருத்திக் கொள்ளக்கூடும். ஆன்றோரும்,

      ''ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
      தாழாது உஞற்று பவர்''

    என்று கூறியுள்ளார்
    -------

    3. பழக்கத்தை உண்டாக்கல்


    நிலைத்த மனோ நிலைமை ஒவ்வொன்றும் மனிதனால் ஈட்டப்பட்ட பழக்கம்; அது திரும்பத் தொடர்ந்து நினைக்கப்பட்டதால் பழக்கமாகியிருக்கிறது. தளர்ச்சியும் உற்சாகமும், வெகுளியும் பொறுமையும், இவறன்மையும் ஈகையும், உண்மையில் மனத்தின் சகல தன்மைகளும், மனிதனால் தெரிந்து கொள்ளப்பட்ட நினைப்புகள்; அவை தாமாக நிகழும்வரை திரும்பத்திரும்ப நினைக்கப்பட்ட பழக்கங்களாகி-யிருக்கின்றன. அடிக்கடி நினைக்கப்பட்ட ஒரு நினைப்பு, கடைசியில் மனத்தின் ஒரு ஸ்திரமான பழக்கமாகின்றது. அத்தகைய பழக்கங்களிலிருந்து வாழ்க்கை வருகின்றது.

    தனது அநுபவங்களைத் திரும்பத் திரும்பக் கொள்ளுதலால் அறிவை அடையும் இயற்கையுள்ளது மனம். முதலில் கிரகிப்பதற்கும் சிந்திப்பதற்கும் அதிகப் பிரயாசமாகத் தோன்றும் ஒரு நினைப்பு அடிக்கடி மனத்திற் கொள்ளப்படுதலால் பழக்கமும் இயற்கையும் ஆகின்றது. ஒரு கைத்தொழிலைக் கற்கத்தொடங்குங் காலத்தில் தனது கருவிகளைச் சரியாகப் பிடிக்கவும் முடியாது, உபயோகிக்கவும் முடியாது ஆனால், அவன் திரும்பத் திரும்ப நீண்டகாலம் அப்பியாசம் செய்த பின்னர் அவற்றை மிகச் சுலபமாகவும் சாமார்த்தியமாகவும் உபயோகிக்கிறான். அதுபோல முதலில் அடைவதற்கு முடியாததாகத் தோன்றும் ஒரு மனோபாவம் விடாமுயற்சியாலும் அப்பியாசத்தாலும் கடைசியில் அடையப்பட்டு, முயற்சியின்றி இயற்கையாக நிகழ்கின்ற ஒரு நிலைமை ஆகின்றது.

    தனது பழக்கங்களையும் நிலைமைகளையும் ஆக்கற்கும் திருத்தற்கும் மனத்திற்கும் வலிமையுண்டு. இவ்வலிமை மனிதனது முத்திக்குக் காரணமாக இருப்பதுந் தவிர, தன்னை ஆளுதலால் அடையப்படும் பூரண சுதந்திரத்தையடையும் வழியையும் காட்டுகிறது. ஏனெனின், ஒரு மனிதன் தீயபழக்கங்களை உண்டு பண்ணிக்கொள்ளும் சக்தியை உடையவனாயிருப்பதுபோல, நல்ல பழக்கங்களை உண்டு பண்ணிக் கொள்ளும் சக்தியையும் உடைய வனாயிருக்கிறான். இப்பொழுது நான் சொல்லும் விஷயத்தைச் சிறிது விளக்கிக் கூறவேண்டும் அவசியம். இதனைப் படிப்பவரும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

    சரியான காரியத்தைச் செய்தலிலும் பிசகான காரியத்தைச் செய்தல் எளிதென்றும், புண்ணியத்தைத் செய்தலிலும் பாவத்தைச் செய்தல் எளிதென்றும், சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. அந்நிலைமை அநேகமாக எல்லோராலும் நித்தியத் தன்மை உடையதெனக் கொள்ளத்தக்கதாகி விட்டது. ஆசாரிய சிரேஷ்டரான புத்தரும், ''தீயவினையும் நமக்குத் துன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் எளிது. நல்ல வினைகளையும் நமக்கு இன்பத்தைத் தரும் வினைகளையும் செய்தல் அரிது'' என்று கூறியுள்ளார். இது மனித சமூகம் சம்பந்தப்பட்ட மட்டில் உண்மையானாலும், மனிதர்
    அபிவிருத்தியடையும் மார்க்கத்தில் கண்டுகழிக்கும் ஒரு அனுபவமேயன்றிப் பொருள்களின் ஸ்திரமான நிலைமையன்று. நித்தியத் தன்மையுடைத்தன்று. சரியான காரியத்தைச் செய்தலினும் பிசகான காரியத்தைச் செய்தல் மனிதர்களுக்குச் சுலபமாகத் தோற்றுவதற்குக் காரணம், அவர்களிடத்திலுள்ள மடமையும் அவர்கள் வாழ்வின் நோக்கத்தையும் பயனையும் அறியாமையுமே. ஒரு குழந்தை எழுதுதற்குக் கற்றுக் கொள்ளும் காலையில் எழுதுகோலைப் பிசகாகப் பிடித்தலும் அக்ஷரங்களைப் பிசகாக எழுதுதலும் அதற்கு மிகச் சுலபமாகவும், எழுது கோலைச் சரியாகப் பிடித்தலும் அக்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அதற்கு மிகப் பிரயாசமாகவும் தோற்றுகின்றன. விடா முயற்சியாலும் அப்பியாசத்தாலும் ஒழிக்கக்கூடிய எழுதற்றொழிலின் அறியாமை அதனிடத்திருத்தலான் கடைசியாக அவ்வஞ்ஞானம் நீங்கிய பின்னர் எழுதுகோலைச் சரியாகப் பிடித்தலும், அக்ஷரங்களைச் சரியாக எழுதுதலும் அக்குழந்தைக்கு இயற்கையும் சுலபமுமாகி விடுகின்றன. அக்காலத்தில் பிசகான காரியத்தைச் செய்தல் பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் அதற்குத் தோற்றுகிறது. இவ்வுண்மை சமமாகப் பொருந்தும், சரியான காரியத்தை நினைத்தற்கும் செய்தற்கும் அதிக அப்பியாசமும் விடாமுயற்சியும் வேண்டும்; சரியான காரியத்தை நினைத்தலும் செய்தலும் இறுதியில் இயற்கையும் சுலபமுமாகின்றன. அப்பொழுது பிசகான காரியத்தைச் செய்தல் பிரயாசமாகவும் முற்றிலும் அநாவசியமாகவும் தோற்றுகிறது.

    ஒரு சிற்பி அப்பியாசத்தினால் தனது தொழிலில் தேர்ச்சியடைதல்போல ஒரு மனிதன் அப்பியாசத்தினால் நல்வினையில் தேர்ச்சியடைதல் கூடும்; அது புதிய நினைப்புகளால் புதிய பழக்கங்களை உண்டு பண்ணுதலேயன்றி வேறன்று; எவனுக்குச் சரியான நினைப்புகளை நினைத்தலும் சரியான செயல்களைச் செய்தலும் பிரயாசமாகவும் தோன்றுகின்றனவோ, அவன் எல்லாவற்றிலும் உயர்ந்த ஒழுக்கத்தையும் ஒப்புயர்வற்ற தூண ஆன்ம ஞானத்தையும் அடைந்து விட்டான்.

    மனிதருக்குப் பாவங்களைச் செய்தல் சுலபமாகவும் இயற்கையாகவும் இருக்கிறது. அவர்கள் திரும்பத் திரும்ப நினைத்துத் தீய பழக்கங்களை உண்டு பண்ணியிருத்தலான் சமயம் வாய்த்தபொழுது திருடன் திருடாதிருத்தல் மிகப் பிரயாசம். ஏனெனில் அவன் நீண்ட காலம் பிறர் பொருளைக் கவரும் நினைப்புகளிலும் பேராசை நினைப்புகளிலும் வாழ்ந்திருக்கிறான். ஆனால் அத்தகைய பிரயாசம் நீண்டகாலம் நேர்மையும் நியாயமுமுள்ள நினைப்புகளில் வாழ்ந்து வந்த ஒரு யோக்கியனுக்கு உண்டாவதில்லை. ஏ¦னினில், அவன் திருட்டின் குற்றத்தையும் மடமையையும் பயனின்மையையும்
    அறிந்திருப்பதனால், திருட்டு நினைப்பு எள்ளளவும் அவன் மனத்துள் பிரவேசியாது. திருடுதல் மிகக் கொடிய பாவம்; பழக்கத்தை உண்டாக்குதலையும் பழக்கத்தின் வலிமையும் தெளிவாக விளக்குவற்காக இவ்வுதாரணத்தைக் கூறினேன். ஆனால் சகல பாவங்களும் புண்ணியங்களும் இவ்வாறே உண்டாகின்றன. கோபத்தையும் ஆத்திரத்தையும் கொள்ளுதல் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குச் சுலபமாகவும் சுபாவமாகவும் இருக்கிறது. அவர்கள் கோப நினைப்புகளையும், ஆத்திர நினைப்புகளையும் அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தலான், அவற்றை நினைக்குந்தோறும், அவற்றிற்கேற்ற சுபாவம் அதிக உறுதியாகவும் ஆழமாகவும் வேரூன்றுகிறது. நினைப்பைப் பிரயாசப்பட்டுக் கிரகித்து, ஆத்திரமும் வெகுளியும் வேரோடு நீங்கும்வரை அதனை இடைவிடாது நினைத்துக் கொண்டு வருதலால் அமைதியும் பொறுமையும் சுபாவங்களாய்விடும். இங்ஙனமே ஒவ்வொரு பிசகான நினைப்பையும் மனத்தை விட்டு வெளியேற்றி விடலாம். இப்படி ஒவ்வொரு பொய்ச் செயலையும் ஒழித்து விடலாம்; அப்படியே ஒவ்வொரு பாவத்தையும் வென்றுவிடலாம்.
    ------

    4. செய்தலும் அறிதலும்

    ஒரு மனிதன் தனது வாழ்வு முழுமையும் தனது மனத்திலிருந்து வருகிறதென்றும், அம்மனம் தனது பொறுமையான முயற்சியால் வேண்டுமளவு நிறுத்தப்படக்கூடிய பழக்கங்களின் சேர்க்கையென்றும், தனது மனத்தைத் தனது முயற்சியால் முற்றிலும் அடக்கி ஆளக்கூடுமென்றும் அறிந்தானானால், அக்கணமே அவன் பேரின்ப வீட்டின் கதவைத் திறக்கும் திறவுகோலை அடைந்தவனாகிறான்.

    ஒருவனது வாழ்க்கையின் கேடுகள் அவனது மனத்தின் கேடுகளே. அவற்றின் நிவர்த்தி அகத்திலிருந்து கிரமமாக வளர்ந்து வரவேண்டுமேயன்றிப் புறத்திலிருந்து திடீரென்று சம்பாதித்துக் கொள்ளத் தக்கதன்று; நாள்தோறும், நாழிகைதோறும், மாசற்ற நினைப்புகளை நினைத்தற்கும், குற்றத்துள்ளும் கலக்கத்துள்ளும் விழக்கூடிய சந்தர்ப்பங்களில் குற்றமும் கலக்கமுமற்ற நிலைமைகளைக் கொள்வதற்கும் மனத்தைப் பழக்க வேண்டும். கருங்ககல்லில் வேலை செய்கிற பொறுமையுள்ள சிற்பியைப் போன்று, சரியான வாழ்க்கையை அடையக்கோருகிற மனிதன் தனது மனமாகிய கருங்கல்லிலிருந்து தனது மிகமிக அருமையான கனவுகளின் இலட்சியத்தை அடையும்வரை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வேலை செய்து வர வேண்டும்.

    அத்தகைய மேலான காரியசித்திக்கு வேலை செய்வதில் மிகத் தாழ்ந்தனவும் மிகச் சுலபமாக ஏறக்கூடியனவுமான படிகளினின்று புறப்பட்டு, அவற்றிலும் சிறிது உயர்ந்தனவும் சிறிது பிரயாசையுடன் ஏறத்தக்கனவுமான படிகளின் மூலமாக, மிக உயர்ந்தனவும் மிகப் பிரயாசத்துடன் ஏறத் தக்கனவுமான நிலைகளுக்குச் செல்ல வேண்டும். கிரமமாக மேல் நோக்கும் இயல்பில் நிகழா நின்ற வளர்ச்சி, விரிவு, திரிபு, விருத்தி இவற்றின் நியதி ஒவ்வொருவகை வாழ்வினும் காரியசித்தியினும் உண்டு. எவ்விடத்தில் இந்நியதி கவனிக்கப்படவில்லையோ அவ்விடத்தில் முழுத் தவறுதலாக முடியும். கல்வியைக் கற்பதிலோ, ஒரு கைத்தொழிலைப் பயில்வதிலோ, அல்லது ஒரு வாணிகத்தை நடத்துவதிலோ இச்சட்டத்தை எல்லாரும் பூரணமாக அறிந்து அதற்கு முற்றிலும் கீழ்ப்படிகின்றனர். ஆனால் ஒழுக்கத்தை ஈட்டுவதிலும், மெய்ப்பொருளை அறிவதிலும், வாழ்க்கையின் ஞானத்தை அடைவதிலும், வாழ்க்கையை சரியாக நடத்துவதிலும், இந்தச் சட்டம் பொரும்பாலரால் அறியப்படவில்லை; கீழ்ப்படியப்படவுமில்லை. ஆதலால் ஒழுக்கம் மெய்ப்பொருள், பூரணவாழ்வு இவற்றை பெரும்பாலார் அப்பியாசியாமலும், அடையாமலும், அறியாமலும், இருக்கின்றனர்.

    உயர்தர வாழ்வு நூல்களை வாசிப்பதிலும், தெய்வத்தையும் மனத்தையும் பற்றி வழங்கும் உரைகளைப் பேசுவதிலும் அடங்கியிருக்கிறதென்றும், இந்த மார்க்கத்தால் ஆன்ம தத்துவங்களை அறியக்கூடுமென்றும் கருதுதல் சாதாரணமாகக் காணப்படும் ஒரு பிழை. நினைப்பிலும், சொல்லிலும், செயலிலும் மேம்பட்டு வாழ்தலே உயர்தர வாழ்வு. மனிதனது அகத்திலும், பிரபஞ்சத்திலும் அடங்கியிருக்கிற ஆன்ம தத்துவங்களின் ஞானத்தை நீடித்த சீர்திருத்தத்தாலும் ஒழுக்கத்தாலுமே அடையக் கூடும்.

    ஒரு பெரிய காரியத்தை அறியும் முன்னர் அதற்குச் சிறிய காரியத்தைப் புரணமாகக் கிரகித்து அறிய வேண்டும். எப்பொழுதும் அப்பியாசம் உண்மை ஞானத்திற்கு முற்பட்டது. உபாத்தியாயர் மாணவர்களுக்கு முதலில் கணிதங்களின் நுண்ணிய தத்துவங்களைக் கற்பிப்பதில்லை! அப்படிச் செய்வதால் கற்பித்தல் வீணாகுமென்றும், கற்றல் முடியாததென்றும் அவருக்குத் தெரியும். அவர் முதலில் ஒரு சுலபமான கணக்கை அவர்களுக்குப் போடுகிறார்; அதை அவர்களுக்கு விளக்கிக் காட்டி, அவர்களே அதைச் செய்யும்படி விட்டுவிடுகிறார். அவர்கள் திரும்பத்திரும்பத் தவறி மேலும் மேலும் முயன்று அதைச் சரியாகத் தீர்ந்த பின்னர் அதனினும் அதிகக் கடினமான ஒரு கணக்கை அவர்களுக்குப் போடுகிறார்; அவர்கள் அதைத் தீர்ந்த பின்னர், அதனினும் அதிகக் கடினமான கணக்குகளை ஒவ்வொன்றாகப் போடுகிறார். மாணவர்கள் அநேக வருஷ காலம் சிரத்தையோடு முயன்று, கணக்குப் புத்தகத்திலுள்ள சகல கணக்குகளையும் செய்து முடித்தற்கு முன்னர் கணிதங்களின் நுண்ணிய தத்துவங்களைக் கற்பிக்க அவர் எத்தனிப்பதில்லை.

    ஒரு கைத்தொழிலில், உதாரணமாக ஒரு சிற்பியின் வேலையில் சிறுவனுக்கு முதலில் சிற்பத் தத்துவங்களைக் கற்பிப்பதில்லை; ஆனால் அவன் கையில் ஒரு சுலபமான கருவியைக் கொடுத்து; அதைக் கொண்டு வேலை செய்யும் விதத்தை அவனுக்குச் சொல்கின்றனர்; பின்னர் முயற்சியாலும், அப்பியாசத்தாலும், அதைக் கொண்டு வேலை செய்யும்படி அவனை விட்டுவிடுகின்றனர். அவன் தனது கருவிகளைச் சரியாக உபயோகித்து வேலை செய்யத் தெரிந்து கொண்ட பின்னர், அவனுக்கு ஒன்றன்பின் ஒன்றாக அதிகக் கடினமான வேலைகளைக் கொடுகின்றனர்; அப்படியே அவன் அநேக வருஷங்கள் கடினமான வேலைகளையெல்லாம் செய்து சிற்ப வேலையின் தத்துவங்களைக் கிரகித்துக் கற்றுக்கொள்ளத் தகுதியுடையவனான பின்னர், அவற்றை அவனுக்குக் கற்பிக்கின்றனர்.

    சரியாக ஆளப்படும் ஒரு குடும்பத்தில் குழந்தை முதலில் கீழ்ப்படியவும், சகல சந்தர்ப்பங்களிலும் சரியாக நடந்து வரவும் கற்பிக்கப்படுகிறது. குழந்தை ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்றும், ஏன் சரியாக நடக்க வேண்டும் என்றும் அதற்குச் சொல்வதில்லை; ஆனால் அவற்றைச் செய்யும்படி அதற்குக் கண்டிதமான உத்தரவு கொடுக்கின்றனர். அது சரியான காரியத்தையும் நியாயமான காரியத்தையும் செய்து கொண்டு வருகிறதென்று கண்ட பின்னரே, ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்று அதற்குச் சொல்கின்றனர். எந்தப் பிதாவும் தனது குழந்தை தன்னிடத்தும் தன் சுற்றத்தாரிடத்தும் நடக்க வேண்டிய ஒழுங்கில் நடக்கும்வரை அதற்கு ஒழுக்கத் தத்துவங்களைப் போதிக்க எத்தனிப்பதில்லை.

    இங்ஙனம், சாதாரண லௌகிக காரியங்களிலும் அப்பியாசம், அநுபவ ஞானத்திற்கு முற்பட்டது. ஆன்ம காரியங்களில், உயர்தர வாழ்வைச் செலுத்துவதில், இச்சட்டத்திற்கு முற்றும் கீழ்ப்படிதல் வேண்டும். ஒழுக்கத்தை அனுஷ்டிப்பதாலேயே ஒழுக்கத்தை அறியக்கூடும். ஒழுக்கத்தை அனுஷ்டிப்பதில் சான்றோனான பின்னரே அப்பியசிப்பதிலும் அனுஷ்டிப்பதிலும் நிறைவடைதல் மெய்ஞ்ஞானத்தில் நிறைவடையச் செய்யும்.

    முதலில் மிகச் சுலபமான ஓர் ஒழுக்கத்தை அப்பியசித்து, அதன்பின் அதனினும் அதிகக் கடினமான ஒழுக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக அப்பியசித்து, எல்லா ஒழுக்கங்களையும் கைக்கொண்ட பின்னரே மெய்பொருளை அடையக்கூடும். ஒரு மாணவன் பாடசாலையில் தனது பாடங்களை, சகல தவறுகளும் கஷ்டங்களும் நீங்கும்வரை, மேன்மேலும் முயன்று பொறுமையோடும் பணிவோடும் படித்துக் கொண்டு வருதல்போல, மெய்ப்பொருளை அடைய முயலும் மாணவனும் தவறுகளால் தளராது, கஷ்டங்களால் பலமடைந்து, சரியான செயல்களைச் செய்துகொண்டும் வரவேண்டும். ஒழுக்கத்தகைக்கொண்ட பொழுது அவன் மனம் மெய்ஞ்ஞானத்தில் விரிகின்றது. அம்மெய்ஞ்ஞானமே அவன் க்ஷமமாக அமரத்தக்க நிலை.
    ------

    5. உயர்தர வாழ்வு

    ஒழுக்க மார்க்கமே ஞானத்திற்கு மார்க்கம் என்றும், சர்வ வியாபக மெய்ப்பொருளின் தத்துவங்களை அறியு முன்னர் கீழ்ப்பட்ட சாதனங்களை முற்றும் கைக்கொள்ள வேண்டும் என்றும் கண்டோம். மெய்பொருளை அடைய முயலும் மாணவன் தொடங்குவது எப்படி? தனது மனத்தை ஒழுங்குபடுத்துவதும் தனது அகத்தை வாழ்கையின்-சகல காரியங்களுக்கும் மூலமாகவும், ஊற்றாகவும் இருக்கிற அகத்தை-சுத்தப்படுத்தவும் கோருகிற ஒருவன் ஒழுக்கத்தின் பாடங்களைக் கற்று வாழ்க்கையின் கேடுகளையும் அஞ்ஞானத்தையும் ஒழித்து ஞான பலத்தினால் தன்னை வளர்ப்பது எப்படி? பிரதம பாடங்கள் எவை? பிரதம சாதனங்ள் எவை? அவற்றைக் கற்பது எப்படி? அவற்றை அப்பியசிப்பது எப்படி? அவற்றை ஆண்டு அறிவது எப்படி?

    ஆன்ம அபிவிருத்திக்குப் பொதுத் தடைகளாகவும் மிகச் சுலபமாக நீக்கப்படத் தக்கவையாகவும் இருக்கிற பிசகான மனோநிலைமைகளை ஒழிப்பதும், குடும்பத்தையும் சுற்றத்தையும் பற்றிய ஒழுக்கங்களைக் கைக்கொள்வதும் பிரதம சாதனங்கள். அவை பத்து, இந்நூலைப் படிப்பவர் அவற்றை எளிதில் உணரும் பொருட்டுப் பின்வரும் மூன்று பாடங்களாகப் பகுக்கின்றேன்:-

    தள்ளவேண்டிய தீயொழுக்கங்கள்

    சரீரத்தின் தீயொழுக்கங்கள்
    1.சோம்பல், 2. மீ தூண் - முதற்பாடம் சரீரத் திருத்தம்

    நாவின் தீயொழுக்கங்கள்
    1. புறங்கூறல், 2. பயனில் சொல்லல், 3, நிந்தித்தல் - இரண்டாம் பாடம்
    4. புன்மொழி பகரல், 5. குதர்க்கம் பேசல் - நாத்திருத்தம்

    கொள்ள வேண்டிய நல்லொழுக்கங்கள்
    1. நிஷ்காமிய கருமம்
    2. அசையாத நடுவுநிலைமை
    3. அளவற்ற பொறுமை-மூன்றாம் பாடம்-மனத் திருத்தம்.

    சரீரத்தின் தீயொழுக்கங்கள் இரண்டும், நாவின் தீயொழுக்கங்கள் ஐந்தும், முறையே சரீரத்திலும் நாவிலும் தோற்றுதலாலும், அவ்வாறு பெயரிட்டுப் பகுத்தல் வாசிப்பவருக்கு உதவியாக இருக்குமாதலாலும், சரீரத்தின் தீயொழுக்கங்கள் என்றும், நாவின் தீயொழுக்கங்கள் என்றும் சொல்லப்பட்டன; ஆனால், இத்தீயொழுக்கங்கள் மனத்திலிருந்தே உண்டாகின்றன என்றும், சரீரத்திலும் நாவிலும் வேலை செய்கிற அகத்தின் பிசகான நிலைமைகள் என்றும் தெளிவாக அறியப்பட வேண்டும்.

    அத்தகைய ஒழுங்கற்ற நிலைமைகள் வாழ்க்கையின் மெய்யான நோக்கத்தையும் பிரயோஜனத்தையும் மனம் சிறிதும் அறியவில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள். அவற்றின் நீக்கம் ஒழுக்கமும் உறுதியும் அறிவுமுள்ள ஒரு வாழ்க்கையின் தொடக்கத்தைக் காட்டும் அறிகுறி. ஆனால், அத்தீயொழுக்கங்களை ஒழிப்பதற்கு மார்க்கம் யாது? முதலில் அவற்றின் புறத்தோற்றங்களைத் தாழ்த்தாது தடுத்து நிறுத்தலும், பிசகான செயல்களைச் செய்யாது விடுதலுமே மார்க்கம்; இது எச்சரிக்கையாக இருத்தற்கும், சிந்தித்துப் பார்த்தற்கும் உரிய சக்தியை மனத்துக்குக் கொடுக்கும்; இச்சக்தியால் மனம் மேற்சொல்லிய தீயொழுக்கங்களின் உற்பத்திக்கு மூலங்களாக இருக்கிற இருண்ட பிசகான அக நிலைமைகளைக் கண்டு முற்றிலும் ஒழித்துவிடும்.
    ---------

    6. உயர்தர வாழ்வு ----- முதற்பாடம்

    மனத்தை ஒழுங்குபடுத்துவதில் முதல் சாதனம் சரீரத்தின் சோம்பலை ஒழித்தல். அதுதான் மிகச் சுலபமான சாதனம். இச்சாதனத்தைக் குறையற அனுஷ்டித்து முடிக்கும்வரை வேறு சாதனங்களிற் பிரவேசிக்கக்கூடாது. சோம்பலைப் பற்றி நிற்றல் மெய்ப்பொருளின் மார்க்கத்திற்கு ஒரு பெருந்தடை. சோம்பலாவது வேண்டிய அளவுக்கு அதிகமாக சௌகரியத்தையும் நித்திரையையும் சரீரத்திற்குக் கொடுத்தலும், விரைவில் செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாது தாமதித்தலும், பின் வாங்குதலும், அசட்டை செய்தலுமாம். சரீரத்தை அதிகாலையில் எழுப்புதலாலும், சரீரத்தின் சிரமபரிகாரத்திற்கு அவசியமான அளவு நித்திரையை அதற்குக் கொடுத்தலாலும், ஒவ்வொரு வேலையையும், கடமையையும், எவ்வளவு அற்பமாயிருந்தாலும், உடனுக்குடன் ஊக்கத்தோடும் சுறுசுறுப்போடும் செய்தலாலும், இச்சோம்பல் நிலைமையைக் களையவேண்டும். எக்காரணத்தாலும் படுத்துக் கண்டிருக்கும்போது உணவாவது பானமாவது உட்கொள்ளக்கூடாது. ஒருவன் நித்திரையிலிருந்து விழித்த பின்னர் கொட்டாவி விட்டுக் கொண்டும் சரீரத்தை நெளித்துக் கொண்டும் படுக்கையில் கிடத்தல் மனத்தின் தூய்மையையும், ஒழுக்கத்தின் உறுதியையும் சுறுசுறுப்பையும் கெடுக்கக்கூடிய பழக்கம். ஆன்றோரும்,

      ''நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
      கெடுநீரார் காமக் கலன்''

    என்று கூறியுள்ளார்.

    ஒருவன் படுத்துக் கொண்டிருக்கும்போது சிந்தனை செய்ய எத்தனிக்கக் கூடாது. அத்தகைய நிலைமைகளில் உறுதியும், தூய்மையும், உண்மையும் பொருந்திய நினைப்புகளை நினைக்க முடியாது. ஒருவன் உறங்குவதற்காகப் படுக்கைக்குச் செல்ல வேண்டுமேயன்றிச் சிந்திப்பதற்காகப் படுக்கைக்குச் செல்லுதல் கூடாது. அவன் சிந்திப்பதற்காகவும் வேலை செய்வதற்காகவும் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டுமேயன்றி உறங்குவதற்காகப் படுக்கையை விட்டு எழுந்திருத்தல் கூடாது.

    அடுத்த சாதனம் மீதூண் ஒழித்தல். மீதூண் கொள்பவன் யாவனெனின், உண்பதன் உண்மையான பிரயோஜனத்தையும் நோக்கத்தையும் அறியாது, மிருகம் போன்று உணவின் பொருட்டே உண்பவனும், தனது பசியைத் தணித்தற்கு வேண்டிய அளவுக்கு அதிகமாக உண்பவனும், தித்திப்பான பொருள்களிலும், கொழுத்த உணவுகளிலும் அவாவுடையவனுமே. உணவின் அளவைக் குறைத்தலானும், உண்ணும் தடவைகளைக் குறைத்தலானும் பல பொருட் சேர்க்கையில்லாத சாதாரண உணவைக் கொள்ளுதலானும் அத்தகைய அவாவை ஒழித்தல் கூடும். இன்னஇன்ன மணி நேரங்களில் சாப்பிடுவது என்று குறித்துக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திவிடவேண்டும். இராச் சாப்பாடு அநாவசியமானதாலும், அதிக உறக்கத்தையும் மயக்கத்தையும் உண்டு பண்ணுவதாலும் அதன் அளவைக் குறைக்க வேண்டும். இவ்வாறு ஒழுங்கு செய்துகொண்டு வருதல் நீண்டகாலமாக அடக்க முடியாததாகத் தோன்றிய பசியை அடக்கக்கூடிய ஆற்றலை விரைவில் உண்டுபண்ணும். மீதூண் விரும்பும் குற்றத்தை மனத்திலிருந்து நீக்கியவுடனே தூயதாக்கப்பட்ட மனோநிலைமைக்குத் தக்க உணவைத் தெரிந்து உட்கொள்ளக்கூடிய பழக்கமும் ஒழுங்கும் ஏற்படும்.

    அகத்தின் மாறுபாடே அவசியமானதென்று நன்றாக மனத்தில் கொள்ள வேண்டும். இப்பயனைத் தராத எவ்வகை உணவின் மாறுபாடும் யாதொரு பிரயோஜனமும் உடையதன்று. ஒருவன் உண்ணும் இன்பத்திற்காக மட்டும் உண்ணும் பொழுது அவன் மீதூண் உண்பவனாகிறான். மீதூண் விருப்பத்தையும் மற்றைய பொறிகளின் அவாக்களையும் அகத்தைவிட்டு நீக்கிவிடவேண்டும். ஆன்றோரும், ''அற்றா லளவறிந்துண்க'' எனவும், ''அடல் வேண்டு மைந்தன் புலத்தை'' எனவும் கூறியுள்ளார்.

    ஒருவன் சரீரத்தை நன்றாக அடக்கிச் சரியாக நடத்திய பொழுது, செய்ய வேண்டிய காரியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்து முடித்தபொழுது, கடமையையாவது வேலையையாவது தாழ்த்தாத பொழுது, அதிகாலையில் எழுந்திருத்தலை இன்பமாகக் கண்டபொழுது, மிதமான செலவையும் மதுவுண்ணாமையையும் போக வெறுப்பையும் ஸ்திரமாகக் கைக் கொண்ட பொழுது, தன்முன் இடப்பட்ட உணவு எவ்வளவு சாதாரணமாகவும் கொஞ்சமாகவும் இருந்தாலும் அதனோடு திருப்தியடைந்த பொழுது, உண்ணும் இன்பத்தின் அவாவை வேரோடு நீக்கியபொழுது உயர்தர வாழ்விற்குரிய முதல்இரண்டு சாதனங்களையும் செய்து முடித்துவிட்டான். அப்பொழுது மெய்பொருளின் முதற் பாடத்தைக் கற்றுவிட்டான். இவ்வாறாக அமைதியும் அடக்கமும் ஒழுக்கமும் அமைந்த ஒரு வாழ்க்கையின் அடிப்படை அகத்தின் கண் முடிக்கப்பட்டது.
    -------

    7. உயர்தர வாழ்வு --- இரண்டாடம் பாடம்

    அடுத்த பாடம் ஒழுக்க வாழ்க்கைப் பற்றிய பாடம்; இதில் வரிசையான ஐந்து சாதனங்கள் இருக்கின்றன. முதல் சாதனம் புறங்கூறலை ஒழித்தல். புறங்கூறலாவது பிறர்மீது குற்றம் கண்டாலும் பிறரைப் பற்றிக் கெட்ட சமாசாரங்களைப் பிரஸ்தாபித்தலும், கண்முன் இல்லாத சிநேகிதருடைய அல்லது பிறருடைய குற்றங்களை வெளிப்படுத்தலும் பெரிதாக்கலும், பிறர்மீது அநியாயமான குறைகளைக் கூறுதலுமாம். நினைப்பின்மை, குரூரம், வஞ்சகம், பொய்ம்மை இவை நான்கும் ஒவ்வொரு புறங்கூறற் செய்கையுள்ளும் பிரவேசிக்கின்றன. எவன் சரியான வாழ்வை அடைவதற்குக் கருதுகின்றானோ, அவன் புறங்கூறலாகிய குரூர வார்த்தைகள் தனது உதடுகளைக் கடந்து செல்வதற்கு முன் அவற்றை அடக்கத் தொடங்கிப் பின்னர் அவற்றை உற்பத்தி செய்த வஞ்சக நினைப்பைத் தடுத்து நீக்கிவிடுவான். அவன் ஒருவரையும் குறைகூறாது தன்னைக் காத்துக் கொள்வான்; அவன் நகையாடியும் முத்தமிட்டும் கூடிக்குலாவிய சிநேகிதனைப் பற்றி அவன் இல்லாத இடத்தில் குற்றம் கூறுதலையும் இழிவாகப் பேசுதலையும் நிறுத்திவிடுவான். அவன் பிறன் முன்பு சொல்லத் துணியாத அவனைப் பற்றிய வார்த்தையை அவன் பின்பு சொல்ல மாட்டான். இவ்விதமாகக் கடைசியில் பிறருடைய கௌரவத்தையும் ஒழுக்கத்தையும் பற்றி உயர்வாக நினைக்க ஆரம்பித்துப் புறங்கூறலுக்கு உற்பத்தி ஸ்தானங்களாக இருந்த தனது பிசகான மனோ நிலைமைகளை அழித்து விடுவான்.

    அடுத்த சாதனம் பயனற்ற பேச்சை ஒழித்தல், பிறருடைய அந்தரங்கமான காரியங்களைப் பேசுதலும், நேரத்தைப் போக்குதற்காக மட்டும் பேசுதலும், காரியமும் சம்பந்தமுமில்லாத சம்பாஷணையிற் பிரவேசித்தலும் பயனற்ற பேச்சாம். அத்தகைய அடக்கப்படாத பேச்சு ஓர் ஒழுங்கீன மனத்திலிருந்து வெளிப்படுகின்றது. ஒழுக்கமுள்ள மனிதன் தனது நாவை அடக்கி, அதனால், தனது மனத்தைச் சரியாக அடக்கும் வழியைக் கற்றுக் கொள்வான். அவன் தனது நாவைச் சோம்பலோடும் மடமையோடும் ஓடவிடமாட்டான். ஆனால், திருத்தமாகவும் தெளிவாகவும் பேசுவான்; ஒரு காரியத்தைக் கருதிப் பேசுவான்; அல்லது மௌனமாக இருப்பான். ஆன்றோரும்,

      ''சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
      சொல்லிற் பயனிலாச் சொல்''

    என்று கூறியுள்ளார்.

    தள்ளப்பட வேண்டிய அடுத்த தீயொழுக்கம் நிந்தனையும் அன்பற்ற பேச்சுமாம்; பிறரை நிந்திக்கிற அல்லது பிறர்மேல் குற்றம் சார்த்துகிற மனிதன் சரிரன மார்க்கத்தை விட்டுத் தவறி வெகு தூரம் போய்விட்டான். பிறரிடத்து கடுமையான சொற்களைப் பேசுதலும், பிறரைக் கடுமையான பெயர்களால் அழைத்தலும் குற்றத்துள் ஆழ்ந்து அமிழ்ந்து போவதற்குக் காரணமாம். பிறரை நிந்திக்கவும் குற்றம் கூறவும் ஒருவனுக்கு மனம் எழும்பொழுது, அவன் தனது நாவை அடக்கித் தன்னிடத்துள்ள குற்றங்களைப் பார்க்கக் கடவன். ஆன்றோரும்,

      ''ஏதிலாள் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
      றீதுண்டா மன்னும் உயிர்க்கு''

    என்று கூறியுள்ளார். ஒழுக்க மனிதன் பிறரை நிந்தித்தலையும் பிறரோடு சச்சரவு செய்தலையும் நிறுத்திவிடுகிறான். அவன் பயனும் நன்மையும் ஆவசியகமும் உண்மையும் பொருந்திய வார்த்கைளை மாத்திரம் பேசுகிறான். அடுத்த சாதனம் இழி சொற்களையும் மரியாதையற்ற சொற்களையும் ஒழித்தல். அற்பமான வர்த்தைகளையும் பிறரை வருத்தக்கூடிய வார்த்தைகளையும் பேசுதல், தகுதியற்ற விகடங்களைப் பேசுதல், வெறும் சிரிப்பை உண்டு பண்ணும் நிமித்தம் தூஷணமான கதைகளைச் சொல்லுதல், கோபம் மூட்டக்கூடிய அளவில் நெருங்கிப் பழக்கம் பாராட்டுதல், பிறரிடத்தில் அல்லது பிறரைப் பற்றி-முக்கியமாக, மூத்தோர், உபாத்தியாயர், குடும்பத் தலைவர், மேல் உத்தியோகஸ்தர் இவர்களிடத்தில் அல்லது இவர்களைப் பற்றிப் பேசும்பொழுது அலக்ஷ¢யமாகவும் மரியாதைக் குறைவாகவும் பேசுதல், இவற்றையெல்லாம் ஒழுக்கத்தையும் மெய்ப்பொருளையும் நாடுகிற மனிதர் விட்டுவிட வேண்டும். ஒரு நிமிழத்தில் கழிந்து போகக்கூடிய சிரிப்பின் நிமித்தம் கண்முன் இல்லாத நண்பரும் தோழரும் மரியாதையின்மையாகிய கழுவில் இடப்படுகின்றனர்; வாழ்வின் பரிசுத்தங்களெல்லாம் பரிகாசமாகிய அக்கினிக்குத் தத்தஞ் செய்யப்படுகின்றன. யாவரிடத்திலும் மரியாதையையும் பணிவைக் காட்ட வேண்டிய இடத்தில் பணிவையும் கைவிட்டபொழுது ஒழுக்கம் கைவிடப்பட்டது. அடக்கம், பெருந்தன்மை, மதிப்பு இவற்றைப் பேச்சைவிட்டும் நடக்கையை விட்டும் பிரித்த பொழுது மெய்பொருள் இழக்கப்பட்டது. ஆம். அதன் வெளிவாயிலும் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டது. அடங்காமை சிறுவரிடத்துக் காணப்படின் அது தாழ்வையுண்டு பண்ணுகிறது. அது நரைத்த மனிதரிடத்தும் பிரசங்கிகளுடத்தும் காணப்படும்பொழுது பரிதாபப்படத்தக்க ஒரு காட்சியாகிறது; இதனை அனுசரித்தலும் பின்பற்றலும் குருடரைக் குருடர் பின்பற்றுவது போலாம். அப்பொழுது மூத்தோர்களும் பிரசங்கிகளும் ஜனங்களும் தமது வழியை விட்டுத் தவறிவிட்டார்கள்.

    ஒழுக்க மனிதன் பெருந்தன்மையும் மரியாதையுமுள்ள சொற்களைப் பேசுவான். அவன் இறந்து போனவர்களை எப்படி உயர்வாக மதித்து உருக்கமாகப் பேசுவானோ, அப்படியே தன்முன் இல்லாதவர்களையும் உயர்வாக மதித்து உருக்கமாகப் பேசுவான்; அவன் நினைப்பின்மையை ஒழித்து விடுவான்; மற்றவரை அற்பமாகவும் வருத்தும் படிக்கும் பேசுவதற்கு எழும் தனது மதிப்பைக் கெடுக்காமல் தன்னைக் காத்துக் கொள்வான்; அவனுடைய சிரிப்பு நன்மையுள்ளதாகவும் குற்றமற்றதாகவும் இருக்கும்: அவனுடைய வாக்கு இனிமையும் பணியும் பொருந்தியிருக்கும். அவன் தன்னை மெய்ப்பொருளின் மனிதனுக்குரிய கௌரவத்தோடு நடத்திக் கொள்ளும் பொழுது, அவனுடைய ஆன்மா இனிமையாலும் கருணையாலும் நிறைவுறும். ஆன்றோரும்,

      ''சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
      இம்மையும் இன்பம் தரும்''

    என்று கூறியுள்ளார்.

    இரண்டாம் பாடத்தின் கடைசிச் சாதனம் பிறரை மடக்கும், அல்லது பிறர் பேச்சிற் குற்றம் காணும் நோக்கமாகப் பேசுதலை ஒழித்தல். நாவின் இக்குற்றம் அற்பப் பிசகுகளையும் குற்றம் போலத் தோற்றுபவைகளையும் பெரிதாக்குதலினும் விவகரித்தலினும், மடத்தனமாகச் சொற்களைப் புரட்டுதலினும், பிறர் பேச்சின் முடிந்த கருத்தைக் கொள்ளாது ஒவ்வொரு சொல்லையும் மயிரைப் பிளத்தல் போலப் பிரித்துப் பொருள் படுத்துதலினும், ஆதாரமற்ற நினைப்புகளையும் நம்பிக்கைளையும் அபிப்பிராயங்களையும் ஆதாரமாக் கொண்டு வீண்தர்க்கம் செய்தலினும் அடங்கியிருக்கிறது. வாழ்நாள் சுருக்கமானது; உண்மையானது. பாவத்தையும் நோவையும், துன்பத்தையும் தர்க்கத்தினாலும் குதர்க்கத்தினாலும் நீக்கமுடியாது. எவன் பிறரை மறுப்பதற்காகவும் எதிர்ப்பதற்காகவும் அவரது வார்த்தைகளில் நழுவுவனவற்றைக் கவனத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறானோ அவன் தூய்மையாகிய உயர்ந்த மார்க்கத்தையும் துற (அகத்துற)வாகிய மெய் வாழ்க்கையையும் காண மாட்டான். எவன் தனது சொற்களை இனிமையாக்கவும் சுத்தமாக்கவும் கருதி அவற்றை அடக்குவதற்கு எப்பொழுதும் கவனமாக இருக்கிறானோ அவன் உயர்ந்த மார்க்கத்தையும் மெய் வாழ்க்கையையும் காண்பான். அவன் தனது சக்திகளை ஒருமுகப்படுத்தி, மனத்தின் கட்டடத்தைப் பலப்படுத்தி, மெய்ப்பொருளை அதனுள் வைத்துப் போற்றுவான்.

    நாவை நன்றாக அடக்கிப் புத்திசாலித்தனமாகக் கீழ்ப்படுத்தியபொழுது, சுயநலங் கருதிய மனவெழுச்சிகளையும் தகுதியற்ற நினைப்புகளையும் நாவிற்கு ஓடவிடாமல் நிறுத்திய பொழுது, வாக்கு தீங்கற்றதாகவும் தூய்மையுள்ளதாகவும் இனிமை வாய்ந்ததாகவும், அருளுடையதாகவும் காரியார்த்தமுள்ளதாகவும் அமைந்த பொழுது, மனத்திலுள்ளதையும் உண்மையையும் தவிர வேறு ஒரு வார்த்தையையும் பேசாதபொழுது ஒழுக்க வாக்கின் மெய்ப்பொருளின் இரண்டாவது பெரிய பாடம் கற்று முடிக்கப்பட்டது.

    இப்பொழுது சிலர் ''சரீரத்தை ஒழுங்கு செய்வதும் நாவை அடக்குவதும் எதற்காக? இத்தகைய கடும்பரியாசமும், விடாமுயற்சியும், எச்சரிக்கையும் இல்லாமல் உயர் தர வாழ்வை அடைந்து அறியலாகாதோ'' என்று வினவுவார் ஆகாது. ஜடவுலகத்திற் போல சித்துலகத்திலும் எதையும் பிரயாசமின்றிச் செய்ய முடியாது கீழுள்ளதை நிறைவேற்றும்வரை மேலுள்ளதை அறிய முடியாது; ஒரு மனிதன் உளியை எப்படிச் செலுத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ளும் முன்னர் ஒரு நாற்காலியைச் செய்யமுடியாமா? தனது சரீரத்துக்குத்தான் அடிமையாக இருப்பதை ஒழிக்கு முன்னர் மெய்ப்பொருளை அடைதற்குத் தக்கவாறு தனது மனத்தைத் திருத்த முடியுமா? அக்ஷரங்களையும் சுலபமான சொற்களையும் கற்றுப் பிரயோகிப்பதற்கு முன்னர் பாஷையின் அரிய நுட்பங்கள் அறியவும் பிரயோகிக்கவும் முடியாதது போல, நல்ல நடக்கையின் அரிச்சுவடியைப் பூர்த்தியாக அறியும் முன்னர் மனத்தின் ஆழ்ந்த நுட்பங்களை அறியவும் மனத்தைச் சித்தப்படுத்தவும் முடியாது. பிரயாசத்தைப் பற்றிக் கேட்பின் ஒரு வாலிபன் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொள்வதற்காக உற்சாகத்தோடும் பொறுமையோடும் ஏழெட்டு வருஷங்கள் மாணாக்கனாக இருப்பதில்லையா? அவன் தனது ஆசிரியனுக்குக் கீழ்ப்படிந்து, தனது தொழிலில் இடைவிடாது பழகித் திறமை அடைந்து தானே ஓர் ஆசிரியனாகக் கூடிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்ட தனது ஆசிரியன் கற்பித்தவற்றில் ஒவ்வொன்றையும் கவனத்தோடும் உண்மையோடும் நாள்தோறும் செய்து வர வில்லையா?

    சங்கீதத்தில், சித்திர வேலையில், பாஷையில் ஒரு கைத்தொழிலில், ஒரு வியாபாரத்தில் அல்லது உத்தியோகத்தில் மேன்மையடைய வேண்டுமென்று உண்மையாகக் கருதுகிற மனிதரில் எவன் தான் குறித்த தொழிலில் நிறைவை அடைதற்கு தனது வாழ்நாள் முழுமையும் செலவு செய்ய விருப்பமில்லாதவன்? அங்ஙனமிருக்க, எல்லாவற்றிலும் உயர்ந்த மெய்ப்பொருளின் காரியத்தில் பிரயாசத்தைப் பெரிதாக நினைக்கலாமா? எவன் ''நீ காட்டுகிற மார்க்கம் செல்லுதற்கு மிகக் கஷ்டமானது; நான் மெய்ப்பொருளைப் பிரயாசமின்றி, மோக்ஷத்தை முயற்சியின்றி அடைய வேண்டும்'' என்று சொல்கிறானோ, அவன் சுயநயத்தினால் வருங் கவலைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நீங்குதற்குரிய மார்க்கத்தைக் காணமாட்டான். அவன் அமைதியும் உறுதியுமுள்ள மனத்தையும், விவேகத்தோடு அமைக்கப்பட்ட வாழ்க்கையையும் அடையமாட்டான். அவன் விருப்பம் சுகத்திற்கும் போகத்திற்குமே செல்லுகிறது. மெய்ப்பொருள்பாற் செல்வதேயில்லை. எவன் தனது அகத்தின் அடியில் மெய்ப்பொருளை வைத்துப் போற்றி அதனை அறிதற்குக் கோருகிறானோ அவன் எந்த வேலையையும் மிகப் பெரியதென்று கருதமாட்டான். ஆனால் அவன் அதனை உற்சாகத்தோடு செய்து பொறுமையோடு பின்பற்றுவான்; அவன் இடைவிடாத அப்பியாசத்தினால் மெய்பொருளின் ஞானத்தை அடைந்து விடுவான்.

    பிசகான புறநிலைமைகள் யாவும் அகத்தின் பிசகான நிலைமைகளின் தோற்றங்களேயென்று ஒருவன் அறிந்த பொழுது சரீரத்தையும் நாவையும் பிரதமத்தில் ஒழுங்கு செய்யவேண்டுவதன் ஆவசியகத்தைத் தெளிவாகக் காண்பான். ஒரு சோம்பலுள்ள சரீரம் ஒரு சோம்பலுள்ள மனத்தைக் காட்டுகிறது: ஓர் ஒழுங்கற்ற நா ஓர் ஒழுங்ககற்ற மனத்தைக் காட்டுகிறது; புறநிலைமையை நிவர்த்திப்பதற்காகச் செய்யும் சாதனம் உண்மையில் அகநிலைமையைச் சீர்படுத்துவதற்காகச் செய்யப்படும் சாதனமே. அன்றியுஙட அப்புற நிலைமைகளை ஒழித்தல் மெய்ப்பொருளை அடைவதற்குரிய சாதனத்தின் ஒரு சிறிய பாகமே. தீமையை விடுதல் நன்மையைப் புரியும்படி செய்யும். தீமையும் நன்மையும் பிரிக்கமுடியாத சம்பந்தம் உடையன. ஒரு மனிதன் சோம்பலையும் மீதூணையும் ஒழிக்கிற பொழுது அவன் போக விரக்தி, மதுவிலக்கு, காலந்தவறாமை, தன் மறுப்பு ஆகிய ஒழுக்கங்களை வளர்த்து கொண்டும், உயர்ந்த வேலைகளைச் செய்து முடிப்பதற்கு இன்றியமையாத பலத்தையும், ஊக்கத்தையும் உறுதியையும் அடைந்து கொண்டும் இருக்கிறான். ஒருவன் வாக்கின் குற்றங்களை ஒழிக்கிற பொழுது அவன் உண்மை, வஞ்சகமின்மை, பணிவு, அன்பு, தன்னடக்கம் என்றும் ஒழுக்கங்களை வளர்த்துக் கொண்டும், மனத்திட்பத்தையும், வினைத் திட்பத்தையும் அடைந்து கொண்டும் இருக்கிறான். அவற்றை அடையாமல் மனத்தின் அரிய நுட்பங்களை ஒழுங்கு செய்ய முடியாது. ஒழுக்கத்தின் உயர்ந்த நிலைகளையும் ஞானத்தின் உயர்ந்த நிலைகளையும் அடைய முடியாது. அன்றியும் அவன் சரியாகச் செய்யக் கற்கும்போது அவனுடைய அறிவு விரிகின்றது. அவனுடைய அகபார்வை கூர்மையாகின்றது. தனது பாடத்தைச் சரியாகப் படித்து முடித்த பொழுது குழந்தையின் அகம் சந்தோஷம் அடைவது போல ஒழுக்க மனிதன் ஒவ்வொரு ஒழுக்கத்தையும் கைக்கொண்ட பொழுது-காமத்தையும் போகத்தையும் பின்பற்றுகிறவன். ஒருபோதும் காணமுடியாத பேரின்பத்தை அனுபவிக்கிறான்.

    ------

    8. உயர்தர வாழ்வு --- மூன்றாம் பாடம்

    இப்பொழுது நாம் உயர்தர வாழ்வின் மூன்றாம் பாடத்திற்கு வருகிறோம். அது நிஷ்காமிய கருமம், அசையாத நடுவுநிலைமை, அளவற்ற பொறுமை. இம்மூன்று பெரிய மூலாதார ஒழுக்கங்களையும் ஒருவன் தனது வாழ்க்கையில் நாள்தோறும் அப்பியசித்தலும் ஆளுதலுமாம். ஒழுக்கத்தையும் மெய்ப்பொருளையும் அடைதற்கு முயற்சிக்கிறவன், முதல் இரண்டு பாடங்களிலும் சொல்லப்பட்ட மிகச் சுலபமாக நீக்கக் கூடிய ஒழுங்கீன நிலைமைகளை ஒழித்து மனத்தைப் பதப்படுத்தியிருப்பதால், இப்பொழுது அதிகக் கடினமான பெரிய வேலைகளில் அடக்கிப் பரிசுத்தப்படுத்துவதற்கும் சித்தமாயிருக்கிறான். நினைப்புகளை அடக்கிப் பரிசுத்தப்படுத்தாமல் கடமையைச் செய்ய முடியாது. மெய்ப் பொருளை உணர முடியாது. மனிதரிற் பெரும்பாலார் கடமையைத் தொந்தரையுள்ள ஒரு வேலையாகவும் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய அல்லது செய்ததாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமுள்ள ஒன்றாகவும் கருதுகின்றனர். கடமையை இவ்வாறு கருதுதல் மனத்தின் ஒரு சுயநல நிலைமையிலிருந்தும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பிசகான அபிப்பிராயத்திலிருந்தும் வருகின்றது. சகல கடமைகளும் தெய்வீகமென்றும், அவற்றை உண்மையாகவும் நிஷ்காமியாகவும் செய்து முடித்தல் ஒழுக்கத்தின் முக்கிய விதிகளில் ஒன்றென்றும் கருதவேண்டும்; சகல சுயநய நினைப்புகளையும் கடமையைச் செய்வதிலிருந்து வேறுபடுத்திவிட வேண்டும். அவற்றை வேறுபடுத்திய பொழுது கடமை துன்பமாகத் தோற்றுவது ஒழிந்து, இன்பமாகத் தோற்றுகிறது. எவன் சரீர சுகத்தை அல்லது சொந்த லாபத்தை அலாவுகிறானோ அவனுக்கு மாத்திரம் கடமை தொந்தரையாகத் தோற்றுகிறது. தனது கடமையின் தொந்தரையால் புழுங்குகிற மனிதன் தனக்குள் பார்க்கக்கடவன். அவன் தனது தொந்தரை தனது கடமையிலிருந்து வருகிறதில்லை என்பதையும் அக்கடமையைச் செய்யாது தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற தனது சுயநலத்திலிருந்து வருகிறது என்பதையும் காண்பான். எவன் தனது கடமையை, அது பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும், பொது நன்மைக்குரியதானாலும் தன் நன்மைக்குரியதானாலும், அசட்டை செய்கிறோனோ அவன் ஒழுக்கத்தை அசட்டை செய்கிறான். எவன் தனது அகத்தில் கடமையோடு போராடுகிறானோ அவன் ஒழுக்கத்தோடு போராடுகிறான்; கடமை ஒரு பிரியப்பொருளான பொழுது, ஒவ்வொரு கடமையையும் சரியாகவும் உண்மையாகவும் மனக்கலக்கமில்லாமலும் செய்தபொழுது, சுயநலத்தின் ஆணிவேர் அகத்தினின்று பெரும்பாலும் களையப்பட்டது. மெய்ப்பொருளின் உயர்ந்த நிலைகளை நோக்கி ஒரு பெரிய படி ஏறப்பட்டது; ஒழுக்க மனிதன் தனது கடமையைப் பூர்த்தியாகச் செய்வதில் தனது மனத்தை ஒருமுகப்படுத்துகிறான்; அவன் மற்றொருவனுடைய கடமையில் பிரவேசிப்பதில்லை.

    மூன்றாம் பாடத்தின் இரண்டாம் சாதனம் அசையாத நடுநிலைமை அப்பியசித்தல. இவ்வொழுக்கம் மனத்தில் உறுதியாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்; அதனால் அது மனிதனது வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் பிரவேசிக்க வேண்டும், சகல அயோக்கியதையையும், வஞ்சகத்தையும், பொய்மையையும் ஏமாற்றத்தையும் அடியோடு விட்டுவிட வ§ண்டும். வஞ்சகமும் கபடமும் அணுவளவும் இல்லாமல் அகத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். நடுவுநிலைமையாகிய மார்க்கத்தைவிட்டு ஓர் அங்குலம் விலகுதல் ஒழுக்கத்தை விட்டு ஒரு காவதம் விலகுவதாம். எதையும் கூட்டியாவது குறைத்தாவது பேசுதல் கூடாது? உள்ளத்தை உள்ளபடியே பேசுதல் வேண்டும். வீண் பெருமையைக் கருதியாவது சொந்தலாபத்தைக் கருதியாவது, பிறரை எள்ளளவேணும் வஞ்சிக்க முயலுதல் வேரோடு நீக்கப்பட வேண்டிய மயக்க நிலைமை. ஒழுக்க மனிதன் மனம், வாக்கு, காயங்களில் முழு நடுவுநிலைமையை அப்பியசிப்பதுடன் நிகழ்த்த உண்மையில் எள்ளளவும் கூட்டாமலும் குறைக்காமலும் பேசுதல் வேண்டும். அவன் இவ்வாறு தனது மனத்தை நடுவுநிலைமைக்குக் கொண்டு வரும் மார்க்கத்தில் அவன் தனக்கு முன்னர் நியாயத்தைக் கவனித்துக் கொண்டும், எல்லாவற்றறையும் பட்சபாத மில்லாமலும் விருப்பு வெறுப்பில்லாமலும் பார்த்துக் கொண்டும் மற்றை மனிதரோடும் பொருள்களோடும் நியாயமாகவும் பட்சபாதமில்லாமலும் நடந்து கொண்டும் வருவான். நடுவுநிலைமையாகிய ஒழுக்கத்தை அப்பியசித்துப் பூர்த்தியாகக் கொண்டபொழுது, பொய்யைச் சொல்லவும் வஞ்சகத்தைச் செய்யவும் எழுகிற அவா முழுவதும் நீங்கிவிட்டது. ஒழுக்கம் உறுதிப்பட்டு விட்டது. அறிவு விசாலம் அடைந்து விட்டது. வாழ்க்கை ஒரு புதிய நோக்கத்தோடும் ஒரு புதிய சக்தியோடும் நிகழ்கின்றது. இவ்வாறு இரண்டாம் சாதனம் செய்து முடிக்கப்பட்டது.

    மூன்றாம் சாதனம் அளவற்ற பொறுமையை அப்பியசித்தல் இது வீண் பெருமை, தன்னயம், அகங்காரம் முதலியவற்றிலிருந்து உற்பத்தியாகா நின்ற 'பிறர் தனக்குத் தீங்கு செய்தனர்' என்ற உணர்ச்சியை ஒழித்தலும், யாதொரு பயனையும் கருதாமல் எல்லாருக்கும் உதவி புரிதலும், எல்லாரிடத்தும் அன்பு பாராட்டலுமாம், பகைமை பாராட்டலும், பிறர் செய்த தீங்கைத் திரும்பச் செய்தலும் பிறர் செய்த தீங்குக்கு எதிர் தீங்கு செய்தலும் மிக இழிந்த செயல்களாம். அவை கவனிக்கவாவது மனத்தில் வைக்கவாவது தகுதியில்லாத அவ்வளவு தாழ்ந்த தீயொழுக்கங்களாம். இத்தகைய நிலைமைகளை அகத்துள் வளர்க்கிற எவனும் குற்றத்தினின்றும் துன்பத்தினின்றும் நீங்கித் தனது வாழ்வைச் சரியாக நடத்த முடியாது. அவற்றைக் களைதலும் அவற்றால் கலங்காதிருத்தலுமே வாழ்க்கையின் மெய்ந்நெறியைக் காணச் செய்யும்; பொறுமையையும் கருணையையும் வளர்ப்பதால் மாத்திரம் ஒழுங்காக அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையின் அழகையும் வலிமையையும் நெருங்கவும் காணவும் முடியும். உறுதியான, ஒழுக்கத்தையுடைய மனிதனது அகத்தில் பிறர் தனக்குத் தீங்கு செய்தனர் என்ற உணர்ச்சி ஒரு போதும் உண்டாகாது; அவன் தனக்குப் பிறர் செய்த தீங்கைத் திரும்பச் செய்தலை ஒழித்து விட்டான். அவனுக்குப் பகைவரே இல்லை; மனிதர் அவனுக்கு பகைவராகச் சேர்வாயின் அவன் அவரது மடைமையை அறிந்து அதனைப் பொருட்படுத்தாது அவரை அன்புடன் நடத்துவான். ஒருவன் இவ்வித அக நிலைமையை அடைந்த பொழுது தனது சுயநயநாட்டங்களை ஒழுங்குபடுத்துதலின் மூன்றாம் சாதனத்தைச் செய்து முடித்துவிட்டான்; அப்பொழுது ஒழுக்கம் ஞானம் இவற்றின் மூன்றாம் பாடத்தைக் கற்றுத் தேர்ச்சியடைந்துவிட்டான்.

    சரியாகச் செய்தல் சரியாக அறிதல் இவற்றின் மூன்று பாடங்களிலுமுள்ள பத்துப் பிரதம சாதனங்களையும் ஒருவாறு சொல்லி முடித்தேன்; இதனைப் படிப்போர் இனி அவற்றைக் கற்று, தமது வாழ்க்கையில் நாள்தோறும் அப்பியசித்து வருவாராக. மிக மேலான இன்பத்தையும் ஞானத்தையும் அடையும் முன்னர் இப்பொழுது சொல்லியவற்றினும் மிக மேலான சரீர ஒழுக்கத்தையும், மன ஒழுக்கத்தையும் அனுஷ்டித்துக் கைக்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றையெல்லாம் இச்சிறு நூலில் சொல்வதாக யான் நினைக்கவில்லை; உயர்தர வாழ்வின் மார்க்கத்திலுள்ள மிகசுலபமான பிரதம சாதனங்களை மாத்திரம் சொல்லியிருக்கிறேன்; இநநூலைப் படிப்போர் இவற்றைப் பூர்த்தியாகக் கைக்கொள்வதற்கு முன்னர். தமது எதிர்கால அபிவிருத்திக்குரிய வழிகளைத் தெரிந்து கொள்ளத் தக்கவிதத்தில் பரிசுத்தமடைந்தும், பலமடைந்தும் அறிவடைந்தும் இருப்பர். இந்நூலை வாசிக்கிறவர்களில் இம்மூன்று
    பாடங்களையும் கற்று முடித்தோர் தமக்கு மிகக் தூரத்திலும் உயரத்திலும் உள்ள மெய்பொருள்களின் உயர்ந்த நிலைகளையும் அவற்றிற் கொண்டு போய்ச் சேர்க்கும் ஒடுங்கிய செங்குத்தான வழியையும் கண்டு மேற்செல்லுவதா அல்லது நின்றுவிடுவதா என்று தீர்மானித்திருப்பர்.

    யான் சொல்லியிருக்கிற நேரான மார்க்கம் எல்லாராலும், தமக்கும் உலகத்துக்கும், அதிக லாபத்துடன் தொடரத்தக்கது. மெய்ப்பொருளை அடைதற்குக் கோராத வரும் தம்மை இம்மார்க்கத்தில் சான்றோராக்கிக் கொள்வதால், அதிக விவேக பலத்தையும், ஒழுக்க பலத்தையும், நுண்ணிய யுக்தியையும், ஆழ்ந்த மனோசாந்தியையும் அடையக்கூடும். இவ்வகத்தின் மாறுபாடு அவரது லௌகிக அபிவிருத்தியை ஒருபோதும் பாதியாது. அது அதிக உண்மையானதாகவும், பரிசுத்தமானதாகவும், நிலை நிற்கத் தக்கதாகவும் அமையும். ஏனெனின், எவர் அற்பத் தன்மையையும் நாள்தோறும் செய்யக்கூடிய குற்றங்களையும் களைந்து விட்டனரோ, எவர் தமது சரீரத்தையும் மனத்தையும் ஆள்வதற்குப் பலத்தையுடைவரா-யிருக்கின்றனரோ, எவர் அசையாத நடுவுநிலைமையும் அருமையான ஒழுக்கமுமாகிய மார்க்கத்தில் மனவுறுதியோடு செல்கின்றனரோ, அவரோ வெற்றி பெறுவதற்கும், காரியசித்தி அடைவதற்கும் தகுதியுள்ளவர்.

    -------

    9. மனோ நிலைமைகளும் அவற்றின் காரியங்களும்

    சரியான வாழ்க்கையின் பெரிய சாதனங்களின் விவரங்களிலும், பெரிய பாடங்களின் விவரங்களிலும் பிரவேசியாது வாழ்க்கை முழுவதற்கும் மூலமாகியிருக்கிற மனோ நிலைமைகளைப் பற்றிச் சில குறிப்புகளும் வார்த்தைகளும் இங்குக் கூறுகிறேன். அவை பிரயாசமெடுத்து வருகின்றோரை ஏற்பதற்காக அன்பும், அறிவும், சாந்தியும் தங்கியிருக்கிற நிலைகளாகிய அகத்தினுடைய ஆழ்ந்த அரங்குகளுக்குள் பிரவேசிப்பதற்குச் சித்தமாகவும் பிரியமாகவும் இருக்கிற மனிதருக்கு உதவியாகும்.
    ஒவ்வொரு பாவமும் மடமையே. இது இருண்டதும் முதிர்ச்சியடையாததுமான ஒரு நிலைமை. அறிவில்லாத மாணவன் கல்விக் கலாசாலையில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் இருக்கின்றனர், குற்றத்தை நினைக்கின்றவரும் குற்றத்தைச் செய்கின்றவரும் வாழ்க்கைக் கலாசாலையில் அவர் சரியாக நினைக்கவும் செய்யவும். அஃதாவது மெய்ச்சட்டப்படி நினைக்கவும் செய்யவும். இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வி கற்கும் மாணவன் தனது பாடங்களைச் சரியாகப் படியாத காலமெல்லாம் துக்கத்தில் அமிழ்ந்திருப்பது போல, வாழ்வின் மாணவன் பாவங்களை வெல்லாத காலமெல்லாம் துக்கத்திலிருந்து தப்ப முடியாது.

    வாழ்க்கை தொடர்ச்சியான பல பாடங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றைக் கற்பதில் சிலர் ஊக்கமுடையவராயிருக்கின்றனர்; அதனால் அவர் விரைவில் தூயராகவும், அறிஞராகவும், சுகிகளாகவும் வளர்கின்றனர். மற்றையோர் அவற்றைக் கற்பதில் மந்தமுடையவராயிருப்பரோடு அவற்றை கற்க முயலாமலும் இருக்கின்றனர். அதனால் அவர் தீயராகவும், மடையவராகவும் துக்கிகளாகவும் முதிர்கின்றனர்.

    ஒவ்வொரு வகைத் துக்கமும் பிசகான ஒரு மனோ நிலைமையிலிருந்து வருகின்றது. ஒவ்வொரு வகை சுகமும் சரியான ஒரு மனோ நிலைமையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. மன நேர்மையே சுகம். மனக்கோணலே துக்கம். ஒரு மனிதன் பிசகான மனோ நிலைமைகளில் வசிக்கிற பொழுது பிசசாக வாழ்ந்து கொண்டும், துன்பத்தை எப்பொழுதும் அநுபவித்துக் கொண்டும் இருப்பான். துன்பம் மடைமையில் வேரூன்றியிருக்கின்றது. இன்பம் அறிவில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. தனது மடமையையும் குற்றத்தையும் மயக்கத்தையும் ஒழிப்பதினாலேயே மனிதன் வீட்டை அடைவான். எவ்விடத்தில் பிசகான மனோ நிலைமைகள் இருக்கின்றனவோ, அவ்விடத்தில் பந்தமும் அமைதியின்மையும் இருக்கின்றன;
    எவ்விடத்தில் சரியான மனோ நிலைமைகள் இருக்கின்றனவோ, அவ்விடத்தில் மோக்ஷமும் அமைதியும் இருக்கின்றன. சில பிசகான மனோ நிலைமைகளையும் அவை வாழ்க்கையில் உண்டுபண்ணும் தீய காரியங்களையும் இங்கு சொல்லுகிறேன்:

      பிசகான மனோ நிலைமைகள் அவற்றின் காரியங்கள்
      வெறுப்பு, காமம் நோ, இம்சை, கேடு, துன்பம், புத்தி மயக்கம், கயமை, பழி, வறுமை.
      வெஃகல் அச்சம் அமைதியின்மை, துக்கம், கஷ்டம்.
      அகங்காரம் ஆசாபங்சம், மனவருத்தம், சுயபுத்தியின்மை
      வீண் பெருமை வியஸனம், ஆன்ம அழிவு
      குற்றஞ்சார்த்தல் குற்றஞ் சார்த்தப்படுதல், வெறுக்கப்படுதல்
      கெட்ட எண்ணம் தோல்விகள், தொந்தரைகள்,
      மீதூண் சங்கடம், புத்தியின்மை, முரட்டுத்தனம், வியாதி, அசட்டை
      கோபம் வலிமையையும் செல்வாக்கையும் இழத்தல்
      தனக்கடிமை உறுதியின்மை, தனிமை.
    ----------------------

    மேற் சொல்லிய மனோ நிலைமைகள் இன்மைப் பொருள்கள்; அவை இருளினுடையவும் இழிவினுடையவும் நிலைமைகள்; மெய்யான சக்தியின் நிலைமைகளல்ல. தீமை ஒரு சக்தியன்று; அது நன்மையை அறியாதிருத்தலும் பிசகாக உபயோகித்தலுமே. அன்பின், பாடத்தைச் சரியாகக் கல்லாதவனே வெறுப்பவன், அதனால் அவன் துன்பத்தை அநுபவிக்கிறான். அவன் அதைச் சரியாகக் கற்றுக் கொண்ட பொழுது வெறுப்பு ஒழிந்துவிடும். அவன் வெறுப்பில் இருண்ட தன்மையையும் வலியின்மையையும் காண்பான். ஒவ்வொரு பிசகான நிலைமையும் இத்தன்மையதே.

    சில சரியான மனோ நிலைமைகளையும் அவை வாழ்க்கையில் உண்டுபண்ணும் நல்ல காரியங்களையும் இங்கு சொல்லுகிறேன்:

      சரியான மனோ நிலைமைகள் அவற்றின் காரியங்கள்
      அன்பு இனிமையான நிலைமைகள், இன்பம், பேரின்பம்,
      தூய்மை புத்தித் தெளிவு, ஆனந்தம், அசையாத நம்பிக்கை
      சுயநலமின்மை தைரியம், திருப்தி, சந்தோஷம், ஆக்கம்
      அடக்கம் அமைதி, மௌனம், மெஞ்ஞானம்.
      சாந்தம் சமாதானம், சகல சந்தர்ப்பங்களிலும் திருப்தியுடைமை.
      இரக்கம் காக்கப்படுதல், நேசிக்கப்படுதல், மதிக்கப்படுதல்
      நல்லெண்ணம் சந்தோஷம், வெற்றி
      தன்னையடக்கல் மனோசாந்தி, சரியான யுக்தி, நாகரிகம், ஆரோக்கியம், கவுரவம்
      பொறுமை மனோவலிமை, அதிகச் செல்வாக்கு அறிவு, ஞானம், அகப்பார்வை
      தன்னை வெல்லல் நிலையான சமாதானம்
    ----------------

    மேற்சொல்லிய சரியான மனோ நிலைமைகள், மெய்யான சக்தி, ஒளி, இன்பம், அறிவு, இவற்றின் நிலைமைகள், நல்ல மனிதன் அறிகிறான். அவன் தனது பாடங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டான். அதனால் அவன் தனது வாழ்க்கையை உண்டு பண்ணும் பல ஒழுக்கங்களையும் காண்கிறான். அவன் அறிவடைந்திருக்கிறான். அதனால் அவன் நன்மையையும் தீமையையும் அறிகிறான் அவன் தெய்வத்திற்கு ஒத்த காரியங்களை மாத்திரம் செய்துகொண்டு மேலான ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

    பிசகான மனோ நிலைமைகளைக் கொண்டிருக்கிற மனிதன் சரியாக அறியமாட்டான். அவன் நன்மை தீமைகளையும், தன்னையும் தனது வாழ்வையும் உண்டு பண்ணும் அக மூலங்களையும் அறியவில்லை. அவன் துக்கத்தை அநுபவிக்கிறான். தனது துக்கத்திற்கு மற்றவர்களே முற்றிலும் காரணம் என்று நம்புகிறான். அவன் வாழ்க்கையின் இலக்ஷயத்தைக் காணாமலும், காரியங்களின் நிகழ்ச்சியில் நியாயத்தையும் ஒழுங்கையும் காணாமலும், குருட்டுத்தனமாக வேலை செய்து கொண்டும், இருளில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான்.

    எவன் உயர்தர வாழ்வைப் பூரணமாக அடையக் கோருகிறனோ, எவன் காரியங்களின் உண்மையான ஒழுங்கையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் தெளிவாகக் காண்பதற்கு விரும்புகிறானோ, அவன் சகல பிசகான அகநிலமைகளையும் விட்டு, நன்மையைச் செய்வதில் இடைவிடாது முயல்க. அவனுக்குத் துன்பமாவது, சந்தேகமாவது துக்கமாவது நேர்ந்தால், அவன் அதன் காரணத்தைக் காணும்வரை தனது அகத்துள் தேடுக. அவன் அதனைக் கண்ட மாத்திரத்தில் வேரொடு நீக்கிவிடுக. அவன் தனது அகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அதிக நன்மையும் கொஞ்சம் தீமையும் புறப்படும்படி தனது அகத்தை காத்துச் சித்தப்படுத்துக. அப்படிச் செய்வதால் அவன் நாளுக்கு நாள் அதிக பலத்தையும் மேன்மையையும் ஞானத்தையும் அடைவான். மெய்யொளி அவன் அகத்துள் மேன்மேலும் அதிகப் பிரகாசமாக வளர்ந்து, சகல இருளையும் நீக்கி, அவனது மார்க்கத்தை விளக்கிக் காட்டும்.

    ------

    10. வேண்டுகோள்

    மெய்பொருளின் மாணவர்களே, ஒழுக்கத்தை நேசிக்கிறவர்களே, ஞானத்தை நாடுகிறவர்களே, சுயநல வாழ்வின் வெறுமையை அறிந்து துக்கமுறுகின்றவர்களே, பேரழகும் பேரின்பமும் பொருந்திய வாழ்க்கை கோருகின்றவர்களே, நீங்கள் இப்பொழுதே ஆயத்தமாகி, ஒழுக்க வழியாக நடந்த நல்ல வாழ்வை அடையுங்கள்.

    உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிரா நின்ற தப்பு நம்பிக்கையைத் தூர விட்டுவிடுங்கள்; உங்களை நோக்குங்கள். ஒழுக்க நெறி எப்படியிருக்கிறதோ அப்படியே அதனைப் பாருங்கள். மெய்ப்பொருளை அடைவதற்குச் சோம்பலான வழி ஒன்றும் இல்லை; மலையின் உச்சின்மேல் ஏறி நிற்க விரும்புகின்றவன் பிரயாசப்பட்டு ஏற வேண்டும்; பலத்தைச் சேகரிப்பதற்கு மட்டும் இடையில் தங்க வேண்டும். மேக மற்ற மலையுச்சியினும் மலைமேல் ஏறுதல் குறைந்த பெருமையுள்ளதாகத் தோன்றினும் அது (ஏறுதல்) பெருமை வாய்ந்ததே. ஒழுக்கம் தன் மாத்திரையிலே அழகு வாய்ந்தது; ஒழுக்கத்தின் அந்தம் இனிமை நிறைந்தது. ஆன்றோரும்,

      ''ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
      உயிரினும் ஓம்பப் படும்''

    என்று கூறியுள்ளார்.

    அதிகாலையில் எழுந்து தியானம் செய்யுங்கள். ஜபிக்கப்பட்ட உடம்போடும், பலவீனத்தையும், பாவத்தையும் ஒழிக்கதக்க உறுதியான மனத்தோடும் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். தீய கவர்ச்சியை முன்னதாக சன்னத்தமாகாத மனத்தால் வெல்ல முடியாது. அமைதியான நேரத்தில் மனத்திற்கு ஆயுதம் தரித்து அதனை யுத்தத்திற்கும் சன்னத்தமாக்க வேண்டும். காண்பதற்கும், அறிதற்கும், தெளிதற்கும் அதனைப் பழக்க வேண்டும். சரியான அறிவு முதிர்ந்த பொழுது பாவமும் தீயகவர்ச்சியும் மறைந்து போகின்றன. ஆன்றோரும், ''அறிவற்றங் காக்கும் கருவி'' என்று கூறியுள்ளார்.

    சரியான அறிவு தளராத நன்னடக்கையால் உண்டாகின்றது. மெய்ப்பொருளை ஒழுக்கத்தாலன்றி வேறொன்றால் அடையமுடியாது. முயற்சியும் அப்பியாசமும் பொறுமையை வளர்க்கும்; பொறுமை நன்னடையை நிலைநிறுத்தும். ஒழுக்கத்தைக் கொள்ளுதல் பொறுமையற்ற மனிதனுக்கும் சுயநல மனிதனுக்கும் கஷ்டம்; அதனால் அவன் அதனைக் கைவிட்டு ஒழுங்கீனமாகவும் குழப்பமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

    ஒழுக்கம், மெய்ப்பொருளை நேசிக்கிறவனுக்குக் கஷ்டமாயிருப்பதில்லை; அவன் காத்திருந்து, வேலை செய்து வெற்றியடையும் அளவற்ற பெருமையைக் காண்பான். தனது மலர்கள் நாளுக்கு நாள் திரட்சியடைந்து வருவதைக் காணும் தோட்டக்காரனது உவகையைப் போலத் தூய்மை, ஞானம், இரக்கம், அன்பு என்னும் தெய்வீக மலர்கள் தனது அகத்தோட்டத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைக் காணும் ஒழுக்க மனிதனது உவகையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும். ஒழுங்கீனமாக வாழ்கின்றவன் துன்பத்திலிருந்தும் துக்கத்திலிருந்து தப்ப முடியாது. ஒழுங்கு செய்யப்படாத மனம் காமக்குரோதத்தின் பயங்கரமான யுத்தத்தில் பலமிழந்து துணையற்று வீழ்கின்றது. ஆன்றோரும், ''இழுக்கத்தி னெய்துவ ரேய்தாப் பழி'' என்று கூறியுள்ளார்.

    மெய்பொருளை நேசிக்கிறவர்களே, உங்கள் மனத்தை ஒழுங்கு செய்யுங்கள். எச்சரிக்கையோடும், உறுதியோடும் இருங்கள். உங்கள் முக்தி உங்கள் அருகில் இருக்கிறது. உங்கள் ஆயத்தமும் முயற்சியுமே வேண்டுவன. நீங்கள் பத்துத் தடவை தவறினும அதைரியப்படாதீர்கள். நீங்கள் நூறு தடவை தவறினும் ஊக்கத்துடன் எழுந்து உங்கள் வழியைத் தொடருங்கள்! நீங்கள் ஆயிரம் தடவை தவறினும் தளர்ச்சி அடையாதீர்கள். சரியான மார்க்கத்தில் பிரவேசித்த பின்னர், அந்த மார்க்கத்தில் நின்று சிறிது தவறினும் வெற்றியடைதல் நிச்சயம்.

    முதலில் யுத்தம்; முடிவில் வெற்றி. முதலில் வேலை. முடிவில் ஓய்வு. முதலில் எளிமை; முடிவில் வலிமை, தொடக்கத்தில் தாழ்ந்த வாழ்வு, யுத்தத்தின் சந்தடி; யுத்தத்தின் குழப்பம்; இறுதியில் உயர்ந்த வாழ்வு, மௌனம் சாந்தி.
    ------------------------


This file was last updated on 2 December 2013.
Feel free to Webmaster.