![](pmdr0.gif)
அடிமனம்
(மனத்தைப் பற்றிய கட்டுரைகள்)
ம. ப. பெரியசாமித்தூரன்
aTi manam (essays)
by tUran (ma.pa. periyacAmit tUran)
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
https://www.projectmadurai.org/
அடிமனம்
(மனத்தைப் பற்றிய கட்டுரைகள்)
ம. ப. பெரியசாமித்தூரன்
Source:
அடிமனம்
(மனத்தைப் பற்றிய கட்டுரைகள்)
ம. ப. பெரியசாமித்தூரன்
அமுதம்—135, உரிமை பதிவு
முதற் பதிப்பு: ஏப்ரல் - 1957
விலை ரூ. 1 . 25
நேஷனல் ஆர்ட் பிரஸ், தேனாம்பேட்டை, சென்னை-18.
-------------
முன்னுரை
மனத்தைப் பற்றி விளக்குவதற்கு நான் கடைப் பிடித்திருக்கிற வழியைப்பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மனம் மிக சூட்சுமமானது. அதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதனால் அதைக் குறித்து மனவியல் என்கிற புதிய சாஸ்திரம் கூறுகின்ற கருத்துக்களை எடுத்து விளக்குவதிலே நான் ஒரு உத்தியைப் பின்பற்றி இருக்கிறேன்.
அமைதியாக இருக்கும் கிணற்றிலே அல்லது குளத்திலே ஒரு சிறு கல்லைப் போட்டால் அந்தக் கல் விழுந்த இடத்தைச் சுற்றி வட்டமாக அலை உண்டாகிறதல்லவா? எல்லோரும் இதைக் கவனித்திருக்கலாம். இந்த அலை வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே போகும்.
இந்த வட்டத்தைப் போலவே மனத்தைப் பற்றிய அறிவும் சிறிது சிறிதாக விரியும் முறையிலே நான் எழுத முயன்றிருக்கிறேன். கூறியவற்றையே சில சமயங்களில் திருப்பி நினைவுக்குக் கொண்டு வரும் வகையிலே அவற்றை நன்கு பதிய வைக்கவும் ஆசைப் பட்டிருக்கிறேன்.
முன்பு நான் எழுதியுள்ள மனவியல் நூல்களிலெல்லாம் இந்த உத்தியைக் காணலாம். அது ஓரளவிற்கு எனது நோக்கத்திற்கு வெற்றி யளித்திருக்கிறதென்று கண்டேன். ஆகவே அதை இந்நூலிலும் பின்பற்றியிருக்கிறேன். இதை மட்டும் கூறிக்கொண்டு, மேலும் தடை செய்யாமல், உங்களை நூலைப் படிக்குமாறு விட்டு விடுகிறேன்.
25—4—1957 பெ. தூரன்.
--------------
பொருளடக்கம்
2. மன வசியம்
3. புதிய கொள்கைக்கு விதை
4. ஆழ்ந்த பகுதி
5. பிராய்டின் ஆராய்ச்சி
6. லிபிடோ
7. அடிமனம் வகுத்த வாய்க்கால்
8. அதீத அகம்
9. அடிமன விந்தைகள்
10. இயல்பூக்கம்
11. கவலை
12. கனவு
13. அரக்கனின் ஆதிக்கம்
-----------
அடிமனம் (கட்டுரைகள்)
1. மனக்கோளாறு
சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையிலே ஒரு திடுக்கிடும்படியான செய்தி வெளியாயிற்று, உலகத்திலே பயித்தியம் அதிகமாகிக் கொண்டு வருகிறதாம். சாதாரண மனிதன் ஒருவன் இப்படிக் கூறியிருந்தால் அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவனையே ஒரு பயித்தியம் என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடலாம். ஆனால் இந்தச் செய்தியைக் கூறியவன் அப்படிப் பட்ட சாதாரண ஆள் அல்ல. உன்மையில் அதைத் தனி மனிதன் யாரும் கூறவில்லை. மனித உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டிலே ஏற்பட்டுள்ள சிறந்த கழகம் அப்படிப்பட்ட கருத்தை அண்மையிலே தனது அறிக்கையிலே கூறியிருக்கிறது. அதைத்தான் பத்திரிகைக்காரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்தக் கழகத்தின் அறிக்கை கூறுவதாவது: “அமெரிக்கர்களிலே இருநூறு பேருக்கு ஒருவரும், பிரெஞ்சுக்காரர்களிலே முன்னூறு பேருக்கு ஒருவரும், எகிப்தியர்களிலே ஆயிரத்திற்கு ஒருவரும் மனக்கோளாறு உடையவர்களாக இருக்கிறார்கள்”
இவ்வாறு மனக்கோளாறு உண்டாவதற்கான காரணங்களிலே பட்டண வாழ்க்கையின் இரைச்சலையும் பரபரப்பையும் முக்கியமாகச் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கருதுகிறது.
நல்ல வேளை. கிராமங்களே நிறைந்த நமது நாட்டிலே மனக்கோளாறு உடையவர்கள் இத்தனை பேர் இருக்க மாட்டார்கள் என்று நாம் திருப்தியடையலாம். ஆனால் அப்படித் திருப்தியடைந்து இதைப்பற்றிச் சிந்திக்காமல் இருப்பது சரியல்ல வென்று எனக்குத் தோன்றுகிறது.
மனக்கோளாறு என்றால் முழுப் பயித்தியம் என்று நாம் கருதக்கூடாது. சாதாரணமாக மனிதனுடைய மனம் இருக்கவேண்டிய நிலையிலிருந்து மாறிப் பிறழ்வாக இருப்பதையெல்லாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். சற்றுக் கோணலாக வேலை செய்யும் மனநிலையிலிருந்து முற்றிலும் பிறழ்வடைந்து முழுப்பயித்தியமாக இருக்கும் நிலைவரையில் எல்லா நிலைகளும் மனக்கோளாறு என்பதில் அடங்கும்.
நமது நாட்டிலும் இன்று பட்டணங்களும், பட்டணங்களின் மக்கள் தொகையும் பெருகிக் கொண்டுதானிருக்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு பார்த்தால் நம் நாட்டுப் பட்டணங்களெல்லாம் மிகப் பெரியவையாகி விட்டன; பட்டணங்களிலே குடியிருக்க வீடு கிடைப்பது அரிதாகிவிட்டது. மேலும் சுதந்திர இந்தியாவில் கைத்தொழில்கள் பெருகப் பெருகப் பட்டணங்களும் பெருகத் தொடங்குகின்றன. இன்று நாமும் பட்டண வாழ்க்கையின் அநுகூலங்களோடு அதனால் ஏற்படும் தீமைகளையும் அநுபவித்து வருகிறோம். நமது வாழ்க்கையிலும் அமைதி குறைந்து வருகிறது. பரபரப்பும், இரைச்சலும், அர்த்தமற்ற வேகமும் எல்லா நாட்டிற்கும் பொதுவான அம்சங்களாக மாறி வருகின்றன. அதனால் எங்கும் இன்று மனக்கோளாறுகள் அதிகரித்து வரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மனத்திற்கும், மூளைக்கும், நரம்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் அதிர்ச்சியைத் தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இக்கால நாகரிக வாழ்க்கையில் நிகழ்கின்றன. வாழ்க்கையில் அமைதி குறைந்து வருகின்றது. உடல் உழைப்பைக் குறைப்பதற்கான யந்திரங்களும், தூரத்தை வெல்லக்கூடிய போக்குவரத்துச் சாதனங்களும் மனிதனுக்கு அதிகம் ஓய்வைக் கொடுத்து அமைதியைப் பெருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நடைமுறையிலே அப்படியொன்றும் நிகழவில்லை. நவீன யந்திரங்களையும் சாதனங்களையும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களே மிகுந்த பரபரப்புடையவர்களாயும் அமைதி குறைந்தவர்களாயும் இருக்கிறார்கள்.
பரபரப்பு மிகுந்த நவீன வாழ்க்கையோடு குடி முதலிய பழக்கங்களும் மன அதிர்ச்சியை விளைவிக்கிறது. காப்பி முதலிய பானங்களும் நாம்புகளுக்குக் கிளர்ச்சியைக் கொடுக்கின்றன; ஆனால் மதுபானம் செய்கின்ற தீமையே மிகுதி. தீராத கவலை, சோர்வு, மனப் போராட்டம் முதலியவைகளும் மனக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
மனம் மிக நுட்பமானது. அதிலே எப்படி எப்படியோ காரியங்கள் நிகழ்கின்றன; சிக்கல்களும், குமுறல்களும் ஏற்படுகின்றன. அதை ஆழ்ந்து கவனிக்கக் கவனிக்க அதிசயமான பல உண்மைகள் வெளியாகின்றன.
இரண்டாம் உலக யுத்த சமயத்திலே ஏற்பட்ட ஒரு சம்பவம் எனக்கு இந்த சமயத்திலே நினைவிற்கு வருகிறது. நான் அப்பொழுது கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற சிறந்த குருகுலத்திலே சேவை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை மூன்று மணியிருக்கும். ஓர் இளைஞர் இடுப்பிலே ஒரு கெளபீனத்தோடு மட்டும் வேகமாக ஓடிவந்து வித்யாலயக் கோயிலுக்குள்ளே புகுந்து கொண்டார். அவரை வெளியே வரச் செய்வது பெரும்பாடாகப் போய் விட்டது. “ஹிட்லர் எலக்டிரானிக் அலைகளைப் பிரயோகம் செய்து விட்டான். உலகமே அழியப் போகிறது. அதைத் தடுக்க வேண்டுமானால் இராமகிருஷ்ணரால்தான் முடியும்” என்று அவர் பயந்த குரலில் கத்தத் தொடங்கிவிட்டார்.
அந்த இளைஞரை எனக்கு முன்பே தெரியும். நாட்டுப் பணியிலே நல்ல ஆர்வமுடையவர் அவர். வயது சுமார் இருபத்தைங்து இருக்கும். எப்படியோ அவர் உள்ளம் திடீரென்று பேதலித்து விட்டது. சொக்காயையும் இடுப்பு வேட்டியையும் களைந்தெறிந்து விட்டுக் கையிலிருந்த கதர்ப்பையைக் கிழித்துக் கௌபீனமாகக் கட்டிக்கொண்டு காடு காடாகச் சுமார் ஐந்து ஆறுமைல் ஓடிவந்திருக்கிறார். அன்புருவமாக விளங்கும் இராமகிருஷ்ணரிடத்திலே மட்டும் எப்படியோ நம்பிக்கை அந்தப் பேதலித்த நிலையிலும் இருந்திருக்கிறது. யுத்தத்தைப் பற்றிய செய்திகளும் ஜெர்மானியர் புதிது புதிதாகப் பயன்படுத்திய அழிவுப் படைகளும், அவர்கள் தொடக்கத்தில் அடைந்துவந்த வெற்றிகளும் சேர்ந்து பத்திரிகைகளின் வாயிலாக அவர் உள்ளத்திலே புகுந்து அதை நிலை தடுமாறச் செய்து விட்டன.
முன்பெல்லாம் பயித்தியத்தைப் பற்றிப் பல வேறு கருத்துக்கள் உலகத்திலே நிலவி வந்தன. பயித்தியத்திற்குச் சிகிச்சைகளும் பலவகையாக இருந்தன. பல சமயங்களிலே மனக்கோளாறுடையவர்கள் கொடுமையாக நடத்தப்பட்டார்கள். அடித்தல், விலங்கிடல், தனியறையிலே அடைத்து வைத்தல் போன்ற பல முறைகள் கையாளப்பட்டன.
ஆனால் பயித்தியத்தைக் குணப்படுத்துவது பற்றிய சிகிச்சை முறைகள் இன்று மாறிவருகின்றன. அதற்கு முக்கிய காரணம் மனத்தைப்பற்றிய பல உண்மைகள் இன்று புதிதாகத் தெரிந்திருப்பதே யாகும். மனத்தின் நுட்பமான தன்மையை அறிய அறியச் சிகிச்சை முறைகளும் மாறிவருகின்றன.
மனம் எவ்வளவு நுட்பமானது என்பதற்கும், அதிலே கோளாறுகள் எப்படி யெல்லாம் விந்தையான முறையில் உண்டாகின்றன என்பதற்கும் இன்னுமோர் உதாரணம் தருகிறேன்.
காட்டு வாத்து என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதைத் தாரா என்றும் கருடன் தாரா என்றும் சில பிரதேசங்களிலே கூறுவார்கள். சாதாரண வாத்துக்குப் பறக்கும் சக்கி மிக மிகக் குறைவு. ஆனால் காட்டு வாத்து வெகுவேகமாகப் பறக்கக் கூடியது. அவை கூட்டங் கூட்டமாக வாழும். பெரிய பெரிய நீர்நிலைகளைத் தேடி வானத்தில் எழுந்து பறந்து செல்லும்.
இந்தக் காட்டு வாத்துக்களை வேட்டையாடுவதிலே ஒருவனுக்கு அலாதியாக ஓர் ஆர்வமிருந்தது. அவனுடைய ஆர்வத்தை ஒரு வெறி என்று கூடச் சொல்லிவிடலாம். துப்பாக்கியாலே சுட்டு ஒரு காட்டு வாத்தை விழ்த்திவிட்டால் அவன் அதை ஒரு பெரிய சாதனை என்று பெருமைப்படுவான். அந்தப் பறவைகளை சுட்டு வீழ்த்த வீழ்த்த அவனுடைய களிப்பு எல்லை கடந்துவிடும். காட்டு வாத்தைச் சுடுவதிலே உனக்கேன் இத்தனை பயித்தியம்? என்று கேட்டால், அதன் மார்புப் பகுதி உண்ணுவதற்கு மிக நன்றாக இருக்கிறது; எனக்கு அதிலே நிரம்பப் பிரியம் என்று உடனே பதில் கூறுவான்.
மேற் போக்காகப் பார்க்கிறபோது அவன் கூறும் பதில் திருப்தியளிக்கக் கூடியதாகத் தோன்றலாம். ஆனால் அவன் காட்டு வாத்துக்களைச் சுடுவதில் காட்டும் வரம்பு கடந்த வெறியைக் கவனித்த போது சிலருக்கு அதிலே சந்தேகமுண்டாயிற்று. அவன் மன நிலைமையை ஆராய்ந்து பார்க்க விரும்பினார்கள். மனப்பகுப்பியல் முறையால் அவனுடைய மனத்தைப் பரிசோதித்த போது ஓர் உண்மை வெளியாயிற்று. சிறு குழந்தையாக இருந்த போது தாயின் மார்பகத்திலே பாலருந்தி அவன் பெற்ற இன்பத்தை அந்தக் காட்டு வாத்தின் மார்புப் பகுதி ஓரளவு கொடுப்பதாக இருந்தது. அவனுடைய தாய் அசைந்தசைந்து நடப்பது அவனுக்கு எப்படியோ வாத்தின் நினைப்பை அவனுக்குச் சிறுவயதிலேயே உண்டாக்கியிருக்கிறது. அன்ன நடை என்று கவிகள் பெண்களின் நடையை அழகாக வருணிக்கிறார்கள். அவனுக்கு அவனுடைய தாயின் நடை வாத்து நடையாகத் தோன்றியிருக்கிறது. ஆகவே குழந்தைப் பருவத்திலே தாயிடம் பாலருந்திப் பெற்ற திருப்தியையும் இன்பத்தையும் அவை கிடைக்காதபோது அவற்றிற்காக ஏங்கிய அவன் உள்ளம் காட்டு வாத்தைச் சுட்டுத் தின்பதிலே பெற்றிருக்கிறது. குழந்தைப் பருவத்திலே தாய்ப் பால் அருந்துவதில் தடை யேற்பட்ட காலத்திலே உண்டான ஏக்கம் மனத்திலே எங்கேயோ அத்தனை ஆண்டுகளாக மறைந்து கிடந்திருக்கிறது. அது பின்னால் காட்டு வாத்தை வேட்டையாடித் தின்னும் ஒரு பெரு விருப்பமாக மாறி வெளிப்பட்டிருக்கிறது.
மனப்பகுப்பு ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மை வெளியான பிறகு அவனுக்குக் காட்டு வாத்து வேட்டையிலே யிருந்த வெறி முற்றிலும் மறைந்து விட்டது. மனப் பகுப்பு ஆராய்ச்சி எப்படி நடக்கிறதென்பதைப் பிறகு பார்ப்போம்.
மனத்திலே எப்படியெல்லாம் ஏக்கங்களும் ஏமாற்றங்களும், துன்பங்களும், தோல்விகளும், அதிர்ச்சிகளும், ஆசைகளும் அழுந்திக்கிடக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். திருப்தி பெறாமல் அழுந்திக் கிடக்கும் இவ்வகையான உணர்ச்சிகளினாலே மனத்திலே பலவிதமான சிக்கல்களும், கோணல்களும் உண்டாகின்றன. அவற்றை நாம் உணர்ந்து கொண்டால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும். நம் வீட்டிலே குழந்தைகளை நன்கு வளர்க்கவும் இயலும். மற்றவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியும்.
----------
2. மனவசியம்
மனம் என்பது சூட்சுமமானது. அதிலே பலவேறு நிலைகள் இருக்கின்றன. பலமாடிகள் கொண்ட ஒரு மாளிகையை மனத்திற்கு உபமானமாகக் கூடச் சொல்லலாம். ஏனென்றால் மனத்திலே அத்தனை நிலைகள் உண்டு. ஆனால் மாடி வீட்டைப் போலத் தனித்தனியான பிரிவினை மனத்திலே கிடையாது. மனம் என்பது ஒன்றேதான். அது சாதாரணமாக வெளிப்படையாகத் தொழிற்படும் நிலையை வெளிமனம் அல்லது நனவு மனம் என்றும், அதையொட்டினாற் போலவே இருந்து தொழிற்படும் பகுதியை நனவடிமனம் அல்லது இடைமனம் என்றும், மறைந்து நிற்கும் பகுதியை அடிமனம் அல்லது மறைமனம் அல்லது நனவிலிமனம் என்றும் கூறுகிறோம். பொதுவாக மனம் என்று கூறும்போது நனவு மனத்தையே குறிப்பிடுகிறோம். இவற்றைப்பற்றி யெல்லாம் மனமெனும் மாயக் குரங்கு என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். மனத்தைப் பற்றிய வேறு பல உண்மைகளையும் அதில் விளக்கியிருக்கிறேன். ஆதலால் அவற்றையே இங்கு மீண்டும் எழுத விரும்பவில்லை.
ஆனால் மனத்தைப் பற்றி ஓரளவு முதலில் தெரிந்து கொண்டால்தான், அம்மனத்தில் ஏற்படும் சிக்கல்களையும் தாழ்வுக் கோட்டங்களையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
மனத்தில் நனவிலி மனம் என்னும் ஆழ்ந்த பகுதி யொன்று இருப்பதாக நன்கு எடுத்துக் காட்டியவர் சிக்மாண்ட் பிராய்டு (Sigmund Freud) என்ற அறிஞராவார். அவருடைய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மனத்தைப் பற்றிய கருத்துக்களிலேயே ஒரு புரட்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறலாம். அவர் எவ்வாறு நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்தார் என்பதைப் பின்னால் கூறுகிறேன்.
பிராய்டு ஆஸ்திரியா நாட்டில் பிறந்தவர். மனப் பிரமை போன்ற உளநோய்களை ஆராய்வதிலே இவர் தம் நாட்டின் தலைநகரான வியன்னாவில் ஈடுபட்டிருந்தார். அவர் ஜோசப் பிராயர் (Joseph Breuer) என்பவரோடு சேர்ந்து உளநோய்களைக் குணப்படுத்தும் தொழிலை நடத்திவந்தார். பிராயர் இவருக்குச் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் துறையில் நுழைந்தவர்.
ஹிஸ்டிரியா என்னும் உளநோயைக் குணப்படுத்துவதற்கு பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார்.
நாம்பு மண்டலக் கோளாறுகளாலும், ஸ்திரமான மன நிலையற்றவர்களிடத்திலும் ஹிஸ்டிரியா உண்டாகிறது. நாம்புகளிலோ அல்லது உடலிலோ எவ்வித மாறுபாடும் ஏற்படுவதில்லை; இருந்தாலும் இந்த நோய் மட்டும் தோன்றுகிறது.
மன வசியம் என்பது யாராவது ஒருவரைத் தூக்கத்தைப் போன்ற ஒரு நிலையில் இருக்கும்படி செய்வதாகும். அந்தத் தூக்கத்திற்கு மனவசிய உறக்கம் என்று பெயர். மனவசியத்தைக் கையாளுகின்றவர் யாரை உறங்கும்படி செய்ய நினைக்கிறாரோ அவரிடம் மெதுவாகப் பேசித் தமது கருத்துப்படி நடக்கச் செய்துவிடுவார். எல்லோரையும் இவ்வாறு மனவசிய உறக்கத்தில் ஆழ்த்த முடியாது. அப்படிப்பட்ட உறக்கம் கொண்டவர்களிலும் சிலர் ஆழ்ந்த உறக்கம் கொள்ளமாட்டார்கள்; மனவசிய உறக்க நிலையில் அவர் செய்வதெல்லாம் விழித்த பிறகு நினைவிலிருக்கும். சிலர் ஆழ்ந்த மனவசிய உறக்கம் கொண்டுவிடுவார்கள்; அவர்கள் அந்த நிலையில் செய்யும் காரியங்கள் அவர்களுக்குத் தெரியா.
சாதாரண உறக்கத்திற்கும் மனவசிய உறக்கத்திற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. மனவசிய உறக்கத்திலிருப்பவர் பேசுவார், நடப்பார், எழுதுவார்; விழிப்பு நிலையிலிருப்பவரைப் போலப் பல காரியங்களைச் செய்வார். சாதாரணத் தூக்கத்திலிருப்பவர் அவ்வாறு செய்ய முடியாது.
மனவசிய உறக்கத்திலிருப்பவர் அவ்வாறு அவரை உறங்கச்செய்தவர் சொல்லியபடியெல்லாம் செய்வார். அவருடைய மனச்சாட்சிக்கு விரோதமான காரியத்தைச்சொன்னால் மட்டும் செய்யமாட்டார் என்று சிலர் கூறுவார்கள்.
ஒருவன் மனவசிய உறக்க நிலையிலிருக்கும்போது மனவசியம் செய்பவனின் ஆணைப்படி நடப்பதோடல்லாமல், “விழித்த பிறகு நீ இவ்வாறு செய்யவேண்டும்” என்று சொன்னால் விழித்த பிறகும் அவ்வாறு செய்வான் ‘'நீ விழித்த பிறகு பத்து நிமிஷத்திற்கப்புறம் உனது செருப்பைக் கழற்றி வெளியே எறியவேண்டும்" என்று சொல்லியிருந்தால் விழித்த பத்து நிமிஷத்தில் அவன் அப்படிச் செய்வானாம். நாயைக் கண்டால் பயப்படுகிற ஒருவனை மனவசிய உறக்கத்திலிருக்கும்போது, “இனிமேல் நீ நாயைக் கண்டால் பயப்படமாட்டாய்” என்று கூறினால் விழித்த பிறகு அவன் பயப்படமாட்டானாம்.
ஆனால் இந்த நிலைமை நிரந்தரமாக நீடிக்காது. சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோதான் சாதாரணமாக நீடிக்கும். சில சமயங்களில் வருஷக்கணக்காகக்கூட இருப்பதுண்டு.
மனவசிய உறக்க நிலையில் அடிக்கடி இருப்பது ஒருவனுக்கு நல்லதல்ல என்று கருதுகிறார்கள். இந்த மனவசிய முறையைக் கையாண்டு பிராயர் ஹிஸ்டிரியா நோயைப் போக்க முயன்றார்.
இந்நோய் கண்டபோது கைகால்கள் வராமற் போதல், பேச முடியாமற் போதல், உணர்ச்சியற்றுப் போதல், கண் குருடாதல், வாந்தியெடுத்தல், மூர்ச்சை போட்டு விழுதல், வலிப்புண்டாதல் முதலான தொந்தரவுகள் உண்டாகும். உடம்பைப் பரீட்சை செய்து பார்த்தால் அதில் ஒருவிதமான தவறோ குறைபாடோ இருக்காது. இருந்தாலும் நோய்மட்டும் தோன்றுகிறது.
வைத்தியர்கள் இந்நோயைப் பலவித மருந்துகளின் மூலம் குணப்படுத்த முயன்றார்கள். ஹிஸ்டிரியா உண்டாகும்போது தளர்ச்சியேற்பட்டால் உற்சாகமும் சுறுசுறுப்பும் கொடுக்கும் மருந்துகளை வைத்தியர்கள் கொடுத்துப் பார்த்தார்கள். மனக்குமுறலும் கிளர்ச்சியும் அதிகமாக இருந்தால் அவற்றை அடக்க அமைதி கொடுக்கும் மருந்தைக் கொடுத்தார்கள். இவற்றுலெல்லாம் நோய் குணப்படுவதில்லை என்று அநுபவத்திலே தெரிந்தது.
பேய் பிடித்துக் கொண்டது என்று கூறுவதும் ஒரு வகை ஹிஸ்டிரியா என்று இப்பொழுது கண்டிருக்கிறார்கள். இந்த விதமான நோயைப் போக்குவதற்குக் கிராமங்களிலே பலவித முறைகளைக் கையாளுவார்கள். பேயோட்டுவதில் கெட்டிக்காரரென்று சிலர் இருப்பார்கள். அவர்கள் மந்திர சக்தியால் பேயை ஓட்டுவதாகக் கிராமமக்கள் கூறுவார்கள். குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்றாலும் பேய் விலகிவிடும் என்று மக்கள் நோயாளிகளை அங்கு கூட்டிச் செல்லுவார்கள். கோயில்களிலே பெண்கள் பேயாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
உள்ளத்திலே அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மேலே கூறிய முறைகள் எவ்வாறு போக்க உதவுகின்றன என்பதை யாரும் இதுவரை விரிவாக ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் இவைதான் கிராமங்களிலே பழக்கத்திலிருக்கின்றன.
இங்கு ஒரு விஷயத்தை மட்டும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஹிஸ்டிரியா என்ற நோய் உள்ளத்தில் அழுந்திக் கிடக்கும் நிறைவேறாத இச்சைகளாலும், தகாத எண்ணங்களாலும் ஏற்படும் கோளாறே ஆகும். ஆனால் அது தொடங்குவதற்கு உடனடியாக உள்ள காரணமாக இருப்பது ஏதாவது ஒரு அதிர்ச்சியாக இருக்கலாம். திடீரென்று உண்டான பயம், காதலில் ஏமாற்றம், நட்பினர் மரணம், பெருநஷ்டம் முதலானவை காரணமாகலாம்.
ஹிஸ்டிரியாவைக் குணப்படுத்துவதற்கு ஜோசப் பிராயர் மனவசிய முறையைக் கையாண்டார் என்று முன்பே கூறினேன். அவர் பிராய்டுக்குத் தம்மிடம் வந்த ஒரு ஹிஸ்டிரியா நோயாளியைப் பற்றிச் சுவையான ஒரு செய்தி கூறினார்.
அந்த நோயாளி ஒரு இளம் பெண்மணி. அவளுடைய ஒரு கை சுவாதீனமில்லாமல் போய்விட்டது; கண் தெரியவில்லை; உணவை விழுங்கவும் முடியவில்லை. இவ்வாறு பல தொந்தரவுகளால் அவள் கஷ்டப்பட்டாள். ஆனால் அவள் உடம்பில் ஒரு குறையும் இருக்கவில்லை! அவள் மனவசிய நிலையில் இருக்கும்போது ஒரு சமயம் திடீரென்று, “எப்படி இந்த நோய் முதலில் தொடங்கியது என்று கூறினால் அது இந்த நோயைக் குணப்படுத்த உதவியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று கூறினாள். பிராயருக்கு அவள் கூறியது ஆச்சரியமாக இருந்தது; அதனால் அப்படியே கூறும்படி சொன்னார். அவள் தனக்கு ஒரு சமயம் வந்த பக்கவாத நோயைப்பற்றி மனவசிய நிலையிலிருந்து கொண்டே கூற ஆரம்பித்தாள். அதில் தொடங்கிப் பிறகு தனது அந்தரங்கமான வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் பேசலானாள் பல விஷயங்கள் தொடர்பில்லாமல் வெளியாயின; அவளுடைய ஹிஸ்டிரியா நோய்க்குச் சம்பந்தமான செய்திகளைக் கூறும் போது மிகுந்த உணர்ச்சியோடு பேசினாள். இவற்றையெல்லாம் பிராயர் அநுதாபத்தோடும் பொறுமையோடும் கேட்டுக் கொண்டிருந்தாராம். இப்படி விஷயங்களையெல்லாம் கூறியதனால் அந்த நோயாளிக்கு அதன் பிறகு நோய் குணப்பட்டதுபோல இருந்ததாம். அதனால் அதே மாதிரி பலமுறை பரீட்சை செய்து பார்த்தார் பிராயர். மனவசிய நிலையில் அவளை இருக்கும்படி செய்து அவளுக்கிருக்கும் படியான பலவிதக் கோளாறுகளைப்பற்றி வெவ்வேறு விதமாகக் கேள்விகள் கேட்டார். அவளும் அந்த மனவசிய நிலையில் தன் மனத்தில் தோன்றியவற்றையெல்லாம் கூறிக் கொண்டே வந்தாள். இப்படிக் கூறிவந்ததால் அவளுடைய மனக்கோளாறுகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின. முன்னால் அவளுக்கு எத்தனையோ வகையான சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. மருந்து கொடுத்தல், மின்சார அதிர்ச்சிச் சிகிச்சை என்றிப்படிப் பல முறைகளைப் பல வைத்தியர்கள் கையாண்டிருக்கிறார்கள். அவற்றிலெல்லாம் குணப்படாத இந்த நோய் இந்த முறையில் குணமாகி வருவதைக் கண்டு பிராயருக்கே ஆச்சரியமாக இருந்தது.
----------
3. புதிய கொள்கைக்கு விதை
பிராய்டு இதைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவருடைய மனமும் இதில் ஈடுபட்டது. இந்த முறையைக் கையாண்டு பார்க்க அவருக்கும் ஆசையுண்டாயிற்று. பிராயரும் பிராய்டுமாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது இந்த மாதிரியான நோயாளிகளை மனவசிய நிலையிலிருக்கச் செய்து அந்த நோய் தொடங்குவதற்கு முதற் காரணமாக இருந்த சம்பவத்தை ஞாபகத்திற்குக் கொண்டுவர முயலுமாறு செய்தனர். அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்துவிட்டால் அதுவே அந்த நோய் நீங்குவதற்குக் காரணமாக இருப்பதை அவர்கள் கண்டார்கள்.
இந்த சமயத்தில் ஜீன் மார்ட்டின் ஷார்க்கோ (charcot) என்பவர் பாரிஸில் புகழ்பெற்ற வைத்தியராக இருந்தார். மனவசிய முறையைக் கொண்டு மனநோய்களைக் குணப்படுத்த முதன் முதலாக முயன்ற வைத்தியர்களில் இவரும் ஒருவர். இவரிடத்தில் மனவசிய முறையை மேலும் விரிவாகக் கற்றுக் கொள்ளுவதற்காக பிராய்டு 1855-ல் பாரிஸுக்குச் சென்றார்.
பாரிஸிலிருந்து வியன்னாவுக்குத் திரும்பிய பிறகு பிராய்டு மனவசிய முறையைக் கையாண்டு அது அவ்வளவு திருப்தியான பலனையளிப்பதில்லை என்று கண்டார். அந்தக் காலத்தில் மனவசியத்தை சிகிச்சை முறையிற் கையாண்டவர்கள் மனவசியத் தூக்கத்திலிருக்கிற நோயாளிகளைப் பார்த்துச் சில கட்டளைகளையிடுவார்கள். ஒருவனுக்குக் கைவராமலிருந்தால் அவனை மனவசியத் தூக்கத்தில் இருக்கச் செய்து அவனுடைய கையை நீட்டவும் அசைக்கவும் உத்திரவிடுவார்கள். நோயாளி அவ்வாறே செய்வான். மனவசிய உறக்கம் கலைந்த பிறகும் அதைத் தொடர்ந்து செய்வான். ஆனால் இந்த சக்தி நீடித்திருப்பதில்லை. மறுபடியும் பழைய நிலைமை சில நாட்களிலோ சில மாதங்களிலோ ஏற்படத் தொடங்கியது; அல்லது அதே கோளாறு ஏற்படாவிட்டாலும் புதிதாக வேறு ஏதாவது ஒரு கோளாறு தோன்றத் தொடங்கியது. மேலும் எல்லோரையும் மனவசியத் தூக்கத்தில் இருக்கும்படி செய்யவும் முடியவில்லை.
பிராய்டுக்கு பிராயர் ஒரு சமயம் கூறிய சம்பவமே உள்ளத்தில் நன்றாகப் பதிந்திருந்தது. தற்செயலாகக் கண்டுபிடித்த அந்த முறையிலே அவருக்குப் பற்றுதல் ஏற்பட்டது.
மனவசியத் தூக்கத்திலே இருக்கும்போது நோயாளியை அவனுடைய மனத்தில் தோன்றும் எண்ணங்களை யெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி கூறி அதன் வழியாக அந்த மனநோய் ஏற்பட்ட காரணத்தைக் கண்டுபிடிக்க அவர் முயன்றார். அவ்வாறு நோய்க்குக் காரணமான சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்ததும் நோய் குணமாவதை அவர் மேலும் பல சோதனைகளின் மூலம் கண்டறிந்தார்.
சாதாரணமாக ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தை மற்றவர்களிடம் எடுத்துக் கூறுவதினாலேயே அந்த துக்கம் சற்றுத் தணிகிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். யாராவது ஒருவர் வீட்டில் ஏற்பட்ட மரணத்திற்காக துக்கம் விசாரிக்கச் செல்லுவதிலும் இந்த உண்மை அடிப்படையாக இருக்கிறது. பலபேர் சென்று துக்கம் விசாரிப்பதால் துக்கப்படுபவர்களின் மனத்திலுள்ள பாரம் குறைகிறது.
கோபம் வந்தவன் மற்றவர்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்படித் திட்டுவதால் அவன் கோபம் தணிகிறது.
இவ்வாறேதான் மனத்தில் அழுந்திக்கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அநுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கல்களினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கி விடுகின்றன.
இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு மனத்திலுள்ள எண்ணங்களைத் தாராளமாக வெளியில் சொல்லி அதன் மூலம் ஆறுதல் பெறும் முறையை பிராய்டு மேலும் சோதனை செய்ய விரும்பினார்.
பிராய்டும் பிராயரும் சில காலம் சேர்ந்து தொழில் செய்தார்கள். அவர்களுடைய புதிய முறை நல்ல வெற்றியளித்தது. இந்த முறைக்கு அவர்கள் தூய்மையுறும் முறை (Catharsis) என்று பெயரிட்டனர். நோயாளி தன் மனத்திற்கு வரும் எண்ணங்களை யெல்லாம் வெளியிலே கூறி ஆறுதல் பெறுவதால் மனத்தின் பாரம் நீங்கித் தூய்மையுறுகிறான்; அவனுடைய மனச் சிக்கல்கள் நீங்குகின்றன.
இந்த முறையின் தோற்றத்திற்கு பிராயர் முதற் காரணமாக இருந்தாலும் அவர் இதைத் தொடர்ந்து கைக் கொள்ளவில்லை; மேற் கொண்டு ஆராய்ச்சி செய்யவும் இல்லை. ஆனால் பிராய்டு தொடர்ந்து இதை ஆராய்ந்தார். அதன் பயனாகப் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்து மனத்தைப் பற்றிய அறிவிலேயே ஒரு புரட்சியை உண்டாக்கி விட்டார்.
நோயாளி தன் மனத்திலே புதைந்து கிடக்கும் பழைய அதிர்ச்சிகளையும், அநுபவங்களையும் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு மனவசியத் தூக்கமும் அவசியமில்லை என்பதையும், அதை வேறு வகையிலே செய்யலாம் என்பதையும் பிராய்டு தம் அநுபவத்தின் மூலமாகக் கண்டார்.
மங்கலான வெளிச்சம் உள்ள ஒரு அறையிலே நோயாளியைத் தனியாகப் படுக்க வைக்க வேண்டும். யாதொரு விதமான இரைச்சலுமில்லாமல் அமைதியாக இருக்கும்படி செய்ய வேண்டும். நோயாளியைத் தன் கை கால்களைத் தளர்த்திவிட்டு நல்ல ஓய்வு நிலையில் இருக்கச் செய்யவும் வேண்டும், அந்தச் சமயத்தில் ஏதாவது ஒரு கேள்வி அல்லது குறிப்பின் மூலம் நோயாளியின் மனத்தில் எழுகின்ற எண்ணங்களை யெல்லாம் கொஞ்சம் கூட ஒளிக்காமல் அவை தோன்றியவுடனே சொல்லிக் கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும். இப்படித் தாராளமாக எண்ணங்களைச் சொல்லும் போது பழைய அநுபவங்கள், ஆசைகள் எல்லாம் தாமாகவே வெளியாகின்றன. அவற்றின் மூலம், ஒருவனுடைய குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகள், துன்ப அநுபவங்கள் எல்லாமும் வெளியாயின. நோயாளி அவற்றைக் கூறும்போது அவற்றை மறுபடியும் அநுபவிப்பது போல் உணர்ந்து வெளியிட்டான். இவ்வாறு செய்வதன் மூலம் மனத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி மனக் கோளாறும் மறைந்தது.
இதிலிருந்து பிராய்டுக்கு ஒரு முக்கியமான உண்மை வெளிப்பட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகளும், முக்கியமான அநுபவங்களும், அடக்கி வைக்கப்பட்ட இச்சைகளும், எண்ணங்களும் முற்றிலும் மறைந்து போய்விடுவதில்லை. அவை மனத்திற்குள் எங்கேயோ அழுந்திக்கிடக்கின்றன. மனத்தின் அந்தப் பகுதி சுலபமாக வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. இம்மாதிரியாக மனத்தில் ஒரு பகுதி இருக்க வேண்டும் என்று பிராய்டு கண்டார்; இந்தப் பகுதிக்கு அடிமனம் அல்லது நனவிலிமனம் என்று பெயர் கொடுத்தார். மனத்தின் ஆழ்ந்த பகுதி என்றும், நனவுக்கு எளிதில் வராத இச்சைகள் முதலியவை அழுந்திக் கிடக்கும் பகுதியென்றும் இதை விளக்கலாம்.
நனவிலி மனத்தில் அழுந்திக் கிடக்கும் இச்சைகள் முதலியவைகள் பெரும்பாலும் காமம், சினம், கோபம்., அச்சம் முதலான வலிமை மிகுந்த உள்ளக் கிளர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவைகளெல்லாம் ஏதாவதொரு காரணத்தால் முதலில் அடக்கப் பட்டிருக்கலாம். சமூகம் ஏற்றுக் கொள்ளாத இச்சைகள் அடக்கப்பட்டிருக்கலாம். வேறு எத்தனையோ காரணங்களாலும் இவை அடக்கப்படுகின்றன.
இவ்வாறு அடக்கப் படுவதால் உள்ளத்திலே கோளாறுகள் ஏற்படுகின்றன; கவலை தோன்றுகிறது. இவற்றின் வேகம் மிகுந்து விட்டால் மனநோயும் உண்டாகிறது
மனநோயுடையவர்களை அவர்கள் நனவிலி மனத்தில் அழுந்திக்கிடக்கும் இச்சைகள், அநுபவங்கள் முதலியவற்றை நனவுக்குக் கொண்டுவருமாறு செய்து அவற்றை மீண்டும் மனத்திலேயே அநுபவிக்கும்படி செய்து விட்டால் மனநோய் நீங்குகிறது. மனம் தாய்மையுறுகிறது.
இவ்வாறு மனத்திற்குக் கொண்டுவதற்கு பிராய்டு கண்டுபிடித்த முறையை மேலே கண்டோம். அதற்கு அவர் “தடையிலாத் தொடர் முறை” என்று பெயர் கொடுத்தார்.
ஒரு பெரிய அதிர்ச்சியானது ஹிஸ்டிரியா முதலிய மனநோயை உண்டாக்குகிறதென்று முன்னரே கண்டோமல்லவா? முன்பெல்லாம் ஹிஸ்டிரியா பெண்களுக்குத்தான் உண்டாகும் நோயென்று நினைத்தார்கள். ஆனால் அது ஆண்களுக்கும் வருவதுண்டு என்பதை முதல் உலகயுத்தத்தின் போது தெளிவாகக் கண்டார்கள்.
பயங்கரமான சப்தத்துடன் ஒரு வெடிகுண்டு எதிரிலேயே வெடிக்கும். அது போர்வீரர்களின் மனத்தில் பெரிய பீதியை விளைவிக்குமல்லவா? உள்ளக் கிளர்ச்சி மிகுந்த வீரர்களை இது பாதிக்கிறது. வெடிகுண்டு நேரடியாக ஒகு தீமையும் செய்யாவிட்டாலும் சிலருக்குத் திடீரென்று கண் தெரியாது போய்விடும்; அல்லது காது கேளாது போய்விடும். இது அந்தக் குண்டு வெடித்ததால் மனத்தில் உண்டான அதிர்ச்சியின் காரணத்தாலே யாகும்.
குண்டு வெடித்த அந்தப் பயங்கர அநுபவத்தை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும்படி செய்துவிட்டால் இந்த நோய் நீங்கிவிடுகிறது. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டு விட்டது என்ற செய்தியே சிலருக்கு இந்த வெடிகுண்டு அதிர்ச்சி நோயைக் குணப்படுத்தி யிருக்கிறது.
ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதற்கு மனவசிய முறையில் தொடங்கிய சிக்மண்டு பிராய்டு முடிவில் மனப் பகுப்பியல் என்ற மனத்தைப்பற்றிய புதியதோர் உண்மையைக் கூறும் சாஸ்திரத்திற்கு அடிகோலலானார். நூற்றுக்கணக்கான நோயாளிகளைச் சோதனை செய்து பொறுமையோடு அவர் செய்த ஆராய்ச்சிகளே அவருக்கு உதவியாக நின்றன.
அவர் தமது கருத்துக்களை முதலில் வெளியிட்ட போது எத்தனையோ எதிர்ப்புகள் தோன்றின; எத்தனையோ பேர் அவரைப் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அவர் தோற்றுவித்த மனப் பகுப்பியல் பொதுப் படையாக எங்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது; மனத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு வழி காட்டியவர்களில் சிக்மண்ட் பிராய்டுக்கு ஒரு சிறந்த ஸ்தானமும் கிடைத்திருக்கிறது.
பிராய்டு கூறிய விஷயங்கள் எல்லாம் அப்படியே உண்மையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மெய் தான். மனத்தைப்பற்றிப் புதிதாக ஒரு கருத்தை வெளியிடும்போது முதலில் கூறிய எல்லா விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று யாரும் எதிர் பார்க்கமுடியாது. அதன் அடிப்படை மட்டும் உண்மையாக இருக்கிறதா என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். பிராய்டே பிற்காலத்தில் தமது கருத்தின் அம்சங்கள் சிலவற்றை மாற்றி யமைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் மனத்தைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு உதவி செய்த பெருமை எவ்வகையிலும் குறைந்து போகாது. உளவியல் என்பதே தத்துவ சாஸ்திரத்திலிருந்து பிரிந்து தனியாக ஒரு சாஸ்திரமாக வளர்ந்து பல ஆண்டுகள் ஆகவில்லை. அது குழந்தைப் பருவத்திலிருக்கும் ஒரு சாஸ்திரம் அதிலே ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மனத்தின் மறைவிடங்களைப் பற்றி எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்படி செய்தவர் சிக்மண்ட் பிராய்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
மனப் பகுப்பியலின் தந்தை பிராய்டு தமது நான்காம் வயதிலிருந்து ஆஸ்திரியாவின் தலைநகராகிய வியன்னாவில் வளர்ந்து வந்தார். அவர் பிறந்தது மொரேவியாவில் உள்ள பிரீபர்க் (Freiberg) என்ற ஊரிலாகும். மொரேவியா இப்பொழுது செக்கோஸ்லோவாக்கியாவில் ஒரு பாகமாக இருக்கிறது. பிராய்டு ஒரு யூதருக்கு அவருடைய இரண்டாம் மனைவியின் பிள்ளையாகப் பிறந்தார். பிராய்டு வியன்னா பல்கலைக் கழகத்தில் வைத்தியத் துறையில் கல்வி பயின்று பட்டம் பெற்றுப் பிறகு மனித உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவருடைய ஆாாய்ச்சியிலே அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தது. கண்ணில் ரண சிகிச்சை செய்ய வேண்டி நேர்ந்தால் அதில் வலி தெரியாமல் இருப்பதற்காக கொக்கேன் என்னும் மருந்தைப் பயன் படுத்த முடியும் என்பதை இவர் தமது ஆராய்ச்சியின் மூலம் அநேகமாகக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதைப் பூர்த்திசெய்து பிறருக்கும் எடுத்துக் காட்டி நிரூபிப்பதற்கு முன்பாக இவர் அந்த ஆராய்ச்சியை விட்டுப் போகும்படி நேரிட்டது இவருடைய காதலி பல ஆண்டுகளாக வேறொரு பட்டணத்திலே காத்திருந்தாள். அவளால் மேலும் காத்திருக்க முடியவில்லை போலும். அவள் அவசரமாக வரும்படி அழைத்ததை மறுக்க முடியாமல் இவர் தமது ஆராய்ச்சியை முடியும் தருணத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டார். அந்த ஆராய்ச்சியை இவருடைய நண்பரான கோல்லர் (Koller) முடித்து இவருக்கு உரித்தான புகழை அவர் சம்பாதித்துக் கொண்டார்.
பிராய்டு தமது காதலியை மணந்துகொண்ட பிறகு தமது பழைய ஆராய்ச்சிகளில் சிலகாலம் ஈடுபட்டிருந்தார். ஆனால் பொருளாதார நிலைமை அவ்வாறு ஆராய்ச்சி செய்வதற்கு இடங் கொடுக்காததால் இவர் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் தொழிலை நடத்தலானார்.
நரம்பு மண்டல நோய்களைத் தீர்ப்பதற்கு மேலும் சிறந்த தகுதிபெற வேண்டுமென்று பிராய்டுக்கு விருப்பம் உண்டாயிற்று. அதனால் இவர் 1885-ல் பாரிஸுக்குச் சென்றார். அந்த சமயத்தில் பாரிஸில் ஷார்க்கோ என்பவர் ஹிஸ்டிரியா நோயைக் குணமாக்குவதில் பெருங்கீர்த்தி பெற்றிருந்தாரென்று முன்பே கூறினேன். அவரோடு பிராய்டு ஓராண்டு வேலைசெய்தார். ஷார்க்கோ மனவசிய முறையைக் கையாண்டு ஹிஸ்டிரியா நோயாளிகளைக் குணமாக்குவதைக் கண்டு அம்முறையைப் பாராட்டினார்.
1886-ல் பிராய்டு வியன்னாவுக்குத் திரும்பிவந்து ஜோசப் பிராயருடன் சேர்ந்து தொழில் நடத்தலானார். பிராயரும் ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் வாய்ந்தவர். அவர் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு முறை தான் பிற்காலத்தில் பிராய்டுக்குத் தமது மனப் பகுப்பியல் கொள்கையை நிறுவுவதில் உதவியாக இருந்தது. மனவசிய நிலையில் இருக்கும்போது ஹிஸ்டிரியா நோயாளியான ஒரு பெண்மணி தனது பழைய அநுபவங்களைக் கூறியதும் அவ்வாறு கூறியதால் அவளுடைய நோய் குணமாகி வந்ததையும் பிராயர் கவனித்த விஷயத்தைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டோம். இது பிராய்டுக்குப் பெருந்துணையாக இருந்தது. பிராயர் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்யவில்லை.
ஆனால் பிராய்டு அம்முறையைக் கையாண்டதோடு அம்முறையைக் கையாளுவதற்கு மனவசியமும் அவசியமில்லை என்று கண்டாரென்பதையும் முன்பே அறிந்திருக்கிறோம்.
மனவசிய நிலையில் நோயாளியை வைப்பதற்குப் பதிலாக மனத்திலே தோன்றும் எண்ணங்களை யெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி செய்யும் ‘தடையிலாத் தொடர்முறை’ என்பது பிராய்டு வகுத்தது. அதுவே அடிமனத்தில் மறைந்து கிடக்கும் இச்சைகளையும் அநுபவங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு நல்ல சாதகமாக அமையலாயிற்று. பிராய்டு இந்த முறையைத் தமது அநுபவத்தின் பயனாக மிகச் சிறப்பாகத் திட்டப்படுத்தினார். இத்துடன் கனவுப் பகுப்பு முதலான வேறு பரிசீலனைகளும் அடிமன இச்சைகளையும், அடிமனத்தில் அழுந்திக்கிடக்கும் அநுபவங்களையும் அறிவதற்கு உதவுகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார்.
----------
4. ஆழ்ந்த பகுதி
மனத்தை மூன்று முக்கியமான பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம் என்று முன்பே கண்டோம். சாதாரணமாகத் தொழிற்படுவது மனத்தின் மேல் பகுதியாக உள்ள நனவுமனம். அதைச் சேர்ந்தாற்போல அதன் அடிப்பாகமாக இருப்பது இடைமனம் அல்லது நனவடி மனம். அதற்கும் கீழே இருப்பது அடிமனம். இதைத்தான் நனவிலி மனம் என்று கூறுகிறோம். இப்பகுதியில் உள்ள அநுபவங்களும் இச்சைகளும் நனவுக்கு எளிதாக வருவதில்லை. இவ்வாறு ஆாாய்ச்சிக்காக மூன்று முக்கியப் பகுதிகளாக நாம் பிரித்துக் கொண்டாலும் இத்தகைய பிரிவினை எதுவும் மனத்தில் இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மனத்தை இவ்வாறு பிரித்து ஆராயலாம் என்கிற விஷயம் சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சிகளின் பயனாகவே தெளிவடைந்தது. அதற்கு முன்பெல்லாம் உளவியலறிஞர்கள் மனத்தை நனவுமனம் என்கிற ஒரே பகுதியாகவே கருதி ஆராய்ந்தார்கள். பிராய்டுக்கும் நனவிலி மனமாகிய அடிமனத்தைப் பற்றிய எண்ணம் நாளடைவில்தான் உறுதியடைந்தது. மனநோயால் துன்புறுகின்றவர்களைத் ‘தடையிலாத் தொடர்முறை’யால் ஆராய்கின்றபோது மறந்து போன இளமைப் பருவத்து அநுபவங்களும் அதிர்ச்சிகளும் வெளியாயின. குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட சில அநுபவங்கள் கொஞ்சம்கூட நினைவில் இல்லாமலிருந்தும் பிராய்டின் புதிய சோதனை முறையால் அவை வெளியாயின. உதாரணத்திற்கு இங்கு ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறேன்.
தடையிலாத் தொடர் முறையால் ஒரு இளைஞனைப் பரிசோதனை செய்தார்கள். வெளிப்புறத்திலிருந்து எவ்வித சத்தமோ வேறு தொந்தரவுகளோ இல்லாத அமைதியான ஓர் அறையில் அவர் ஒரு மஞ்சத்தில் படுத்திருக்கிறார். மங்கலான ஒளி அந்த அறையில் பரவியிருந்தது. ஒரே நிசப்தம். அவர் நிம்மதியாக, உடலுறுப்புக்களையெல்லாம் தளர்த்திவிட்ட நிலையில் படுத்திருக்கிறார். சோதனை செய்பவர் ஏதோ ஒன்றிரண்டு சொற்களைக் கூறினார். அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அந்த இளைஞருடைய மனத்தில் என்னென்ன எண்ணங்கள் உண்டாகின்றனவோ அவற்றையெல்லாம் உடனுக்குடனே வெளிப்படையாக எவ்வித யோசனையோ தடையோ இல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே ஏற்பாடு. பரிசோதனை செய்பவரிடம் நம்பிக்கையும், அவரோடு சேர்ந்து ஒத்துழைக்கவேண்டுமென்ற ஆவலும் அந்த இளைஞருக்குண்டு. ஆகையால் அவர் தமது மனத்திலே தோன்றியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். அவர் கூறியதிலிருந்து கீழ்க்கண்ட ஒரு சம்பவம் வெளியாயிற்று.
அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்பொழுது அவர் தமது தாய்க்குப் பக்கத்தில் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாராம். தாய் குழந்தையோடு கொஞ்சிக்கொண்டிருந்திருக்கிறாள். அவர்கள் இருந்தது ஒரு பட்டிக்காடு. பட்டிக்காட்டிலே ஒரு கூரை வீடு. அப்படி அவர்கள் படுத்திருக்கும் போது கூரையிலிருந்து ஒரு பாம்பு குழந்தை மேலே தொப்பென்று விழுந்தது. தாய் அதைக் கண்டு வீரிட்டுக் கதறிவிட்டாள். தாய் கதறுவதைப் பார்த்துப் பையனும் பயந்து நடுங்கிக் கதறியிருக்கிறான் நல்ல வேளை. பாம்பு யாரையும் கடிக்கவில்லை. அதுவும் பயத்தால் வேகமாக மறைவிடம் தேடி ஓடியிருக்க வேண்டும். இரண்டாம் வயதில் ஏற்பட்ட அந்த பயங்கர அதிர்ச்சி அந்த இளைஞரின் மனத்திலே அத்தனை காலமாக எங்கோ மறைந்து கிடந்து அப்பொழுது வெளியாயிற்று. அதற்கு முன்பு அதைப்பற்றிய நினைவே அவருக்குக் கிடையாது. இந்த அநுபவம் வெளியானதைக் கண்டு அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
தடையிலாத் தொடர் முறையால் இவ்வாறு அநுபவங்கள் வெளியாவதைக் காணக் காண பிராய்டுக்கு ஒரு யூகம் பிறந்தது. இந்த அநுபவங்கள் புதிதாக மனத்துக்குள் உண்டாகவில்லை. அவை மனத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வராமல் எங்கோ இருந்திருக்கின்றன. அப்படியானால் இவ்வாறு மறைந்து கிடக்கும் அநுபவங்களும் இச்சைகளும் இருக்கும்படியான ஒரு பகுதி மனத்தில் இருக்க வேண்டுமல்லவா? அந்தப் பகுதியைக் தான் பிராய்டு மறைமனம் அல்லது நனவிலி மனம் என்று பிரித்துக் கூறலானார். இந்தப் பிரிவினையே மன ஆராய்ச்சியில் மனப் பகுப்பியல் என்ற ஒரு புதிய கிளை உண்டாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
-----------
5. பிராய்டின் ஆராய்ச்சி
மனக்கோளாறுடையவர்களின் மறந்து போன பழைய அநுபவங்களை வெளிக்கொணர்வது ‘தடையிலாத் தொடர் முறையின்’ முக்கிய சிறப்பாகும். இந்த முறையை பிராய்டு உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தவர் ஜோசப் பிராயர். மனவசிய நிலையில் இருக்கும்போது ஒரு ஹிஸ்டிரியா நோயாளி தனது பழைய அநுபவங்களைக் கூறியதால் அந்த நோய் குணமாகி வந்ததை பிராயர்தான் முதலில் கவனித்து பிராய்டுக்குக் கூறினார். பிறகு இரு வருமாக இந்த முறையைக் கையாளத் தொடங்கினார்கள். இதில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் பிராயர் இம்முறையைத் தொடர்ந்து பின்பற்றவில்லை. இம்முறையால் நோயாளிக்கும் மருத்துவருக்குமிடையே சில சிக்கல்கள் ஏற்படுவதைக் கண்ட பிராயர் இதைக் கைவிட்டுவிட்டார். பிராய்டுதான் இதைத் தொடர்ந்து பின்பற்றியதோடு மனவசிய நிலை இல்லாமலேயே பழைய அநுபவங்களையும் அதிர்ச்சிகளையும் நனவிலி மனத்திலிருந்து வெளிக் கொண்டுவருவதற்கு முடியும் என்று கண்டார். அவர் வகுத்த முறைக்குத் ‘தடையிலாத் தொடர் முறை’ என்று பெயரென்பதும் நமக்கு முன்பே தெரியும்.
இவ்வாறு நனவிலி மனத்திற்குள் நுழைந்து ஆராயும் போது பிராய்டுக்கு சில அடிப்படையான உண்மைகள் புலனாயின. வாழ்க்கையிலே ஏற்படும் அநுபவங்களும், அதிர்ச்சிகளும் அழிந்து போவதில்லை என்று அவர் கண்டார். அவை மனத்திலே எங்கோ அழுந்திக்கிடக்கின்றன. முக்கியமாகக் குழந்தைப் பருவத்திலே ஏற்படுகின்றவை மறைவதே இல்லை. குழந்தை பிறக்கின்ற போது அதன் மனம் மலாாத நிலையில் இருக்கிறது. குழந்தையின் மனம் அதற்குக் கிடைக்கும்படியான அநுபவங்களைக் கொண்டு மலர்ச்சியடைய வேண்டும். ஆகவே அந்த இளமனத்திற்கு ஆரம்ப நிலையில் கிடைக்கும் அநுபவங்கள் மிக முக்கியமானவை. அந்த அநுபவங்களே அக் குழந்தையின் பிற்கால வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. குழந்தைக்குப் பாரம்பரியமாகப் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் தன்மைகளும் திறமைகளும்கூட வாழ்க்கையிலே பலிதமாவதற்கு இளமைச் சூழ்நிலையும் அநுபவங்களும் உதவி செய்ய வேண்டும், அதிலும் முக்கியமாக ஐந்து ஆண்டுகளுக்குட்பட்ட குழந்தைப் பருவத்து அநுபவங்கள் உதவ வேண்டும். இதைப்பற்றி குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்; குழந்தை உள்ளம் என்ற இரண்டு நூல்களிலே விரிவாக விளக்கியிருக்கிறேனாகையால் இங்கு மீண்டும் அதை விரிவு படுத்தாமல் குறிப்பாக மட்டும் கூறுகிறேன்.
மனக் கோளாறுடையவர்களை ஆராய ஆராய பிராய்டுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக உறுதிப்பட்டன. அவற்றைப்பற்றி அவர் மிக அழுத்தமாகப் பேசலானார். அவற்றில் ஒன்று குழந்தைப் பருவ அநுபவங்களைப்பற்றியது. இந்த அநுபவங்கள் அவருக்கு மிக முக்கியமானவையாகத் தோன்றின. அதனால் அவர் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அமைப்பு முழுவதும் அவனுடைய குழந்தைப் பருவமான முதல் ஐந்தாண்டுகளிலேயே அநேகமாக உருவாகிவிடுகின்றது என்று தெளிவாகக் கூறுகிறார். உளவியல் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற ஆட்லர் (Adler) கெஸல் (Gesell) முதலியோரும் இக்கருத்தையே வலியுறுத்தினார்கள். இன்று இக்கருத்துப் பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
பிராய்டு தமது ஆராய்ச்சியால் கண்டறிந்து கூறிய மற்றொரு விஷயந்தான் பெரிய விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் காரணமாக அமைந்தது. ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் பெற்றிருந்த ஷார்க்கோவிடம் சென்று பிராய்டு ஓராண்டு வேலை செய்தார் என்று முன்பே அறிந்திருக்கிறோம். ஷார்க்கோ ஒரு சமயம் கூறிய வார்த்தைகள் பிராய்டின் மனத்தில் ஆழ்ந்து பதிந்திருந்தன. மனக்கோளாறு, நரம்புக் கோளாறு நோய்களால் வருந்துகின்றவர்களை ஆராய்ந்த தமது அநுபவத்தைக் கொண்டு அவர் ஒரு விஷயம் சொன்னார். “இம்மாதிரி நோய்களிலெல்லாம் பால் சம்பந்தமான சிக்கலே மிக முக்கியமாக இருக்கிறது—அநேகமாக இதையேதான் நான் காண்கிறேன்” என்று அவர் வெளியிட்டார். இது பிராய்டின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. பிராயரும், சிரோபக் (Chrobak) என்பவரும் இதேமாதிரி கருத்துக்களை பிராய்டுக்குப் பேச்சு வாக்கில் கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து அவர்களில் யாரும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யவில்லை. அந்த வேலையை பிராய்டே செய்யலானார்.
நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும்போது அவர்கள் தங்கள் அந்தரங்கமான அநுபவங்களைக் கூறுவதை பிராய்டு கேட்டார். ‘தடையிலாத் தொடர்முறை’யும் இதற்கு உதவியாக இருந்தது. அவ்வாறு அந்தரங்க விஷயங்கள் வெளியாகும்போது நோய்க்குக் காரணமாகப் பெரும்பாலும் பாலுணர்ச்சியும் அதன் கோளாறுமாக இருப்பதை அவரே கண்டார். அவர் மேலும் மேலும் பல நோயாளிகளை ஆராய்ந்தபோது பாலுந்தலே வாழ்க்கையில் பிரதானமான ஆதிக்கம் செலுத்துகிறது என்கிற எண்ணம் உறுதிப்படலாயிற்று. அதனால் அவர் பாலுந்தலையே வாழ்க்கைக்கு வேகம் கொடுத்து அதைச் செலுத்தும் சக்தியென்று அழுத்தந் திருத்தமாகக் கூறலானார். பால் சம்பந்தமான வாழ்க்கையில் திருப்தி யடைந்திருக்கும் யாருக்கும் மனப்பிரமை போன்ற நரம்பு மண்டலக் கோளாறு வருவது சாத்தியமில்லை என்று அவர் கருதினார். பிராய்டுக்கு முன்னாலும் மனப்பிரமை நோய்களைத் தீர்க்க முயன்றவர்களிற் பலர் அந்நோய்களுக்கும்பாலுந்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகப் பட்டதுண்டு. ஆனால் பிராய்டைப் போலப் பாலுந்தலையே வாழ்க்கையின் வேகசக்தியாக யாரும் கருதவில்லை.
பால் என்றாலும் பாலுந்தல் என்றாலும் என்ன என்று ஒரு சந்தேகம் தோன்றலாம். அவற்றைப் பற்றிச் சுருக்கமாக இங்கே தெரிந்து கொள்ளுவோம். மனிதனை ஆட்டி வைக்கிற சக்திகள் சில அவனுக்குள்ளேயே இயற்கையாக அமைந்து கிடக்கின்றன. இந்த சக்திகள் மனிதனுக்கு ஒரு தனிப்பட்ட வேகம் கொடுத்து அவனை உந்துகின்றன; அவனை உந்திச் செயலிலே புகும்படியாகச் செய்கின்றன. இப்படி உந்துவதால் அந்த சக்திகளையே உந்தல்கள் என்று கூறுவார்கள். இந்த உந்தல்களே வாழ்க்கையின் போக்கை அமைக்கின்றன. பசி என்பது ஓர் உந்தல். இது மனிதனுக்கு வேகம் கொடுத்து அவனைத் தொழில் புரியுமாறு செய்கின்றது. இது ஒரு வலிமை வாய்ந்த உந்தல். இதன் தூண்டுதலால் மனிதன் நல்ல காரியமும் செய்வான்; கெட்ட காரியமும் செய்வான். அவனுடைய மற்ற இயல்புகளுக்கு ஏற்றவாறு அவனுடைய நடத்தை அமையும். இனப்பெருக்கத்திற்குக் காரணமாக ஏற்படுகின்ற ஆண் பெண் கவர்ச்சியைப் பாலுந்தல் என்று பொதுவாகக் கூறலாம். பால் என்பது ஆண், பெண் என்ற பகுப்புக்குப் பொதுப் படையான பெயராக நிற்கின்றது. ஆனால் அதற்கு இங்கே விரிவான பொருள் உண்டு. அது ஆண் பெண் என்ற பிரிவினையை மட்டும் காட்டுவதில்லை. அவர்களுக்குள்ளே ஏற்படும் கவர்ச்சியையும், உடல் சம்பந்தமான இன்ப உணர்ச்சியையும், இனப் பெருக்க விருப்பத்தையும் அந்தச் சொல் குறிப்பாகக் காட்டுகிறது. காமம், காதல் என்றெல்லாம் பேசுகின்றோம். இணைவிழைச்சு என்று ஒரு சொல் பழைய நூல்களிலே வழங்குகின்றது. இவற்றின் பொருள்களை யெல்லாம் பால் என்ற சொல் தாங்கி நிற்கிறது. இந்த உந்தல்தான் மிக மிக வலிமை வாய்ந்தது. இதுவே வாழ்க்கை யமைப்புக்கு அடிப்படை என்பது பிராய்டின் எண்ணம்.
இந்தப் பாலுந்தலானது குழந்தைப் பருவத்திலேயே வேலை செய்கிறதென்று பிாாய்டு கூறினார். குமரப்பருவம் எய்துகின்ற காலத்தில்தான் திடீரென்று இந்தப் பாலுணர்ச்சி தோன்றுகிறதென்பது பொதுவாக அனைவரும் கொண்டிருக்கும் அபிப்பிராயம். அது குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறதென்று பிராய்டு கூறியதும் அவருடைய கொள்கைக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின.
பிராயர் பிரிந்து போனபிறகு பிராய்டு தனியாகத் தமது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார். இவ்வாறு பத்தாண்டுகளுக்கு மேல் அவர் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாக அவர் தமது கொள்கையை உறுதிப் படுத்த முயன்றார். 1905-ஆம் ஆண்டு வாக்கில் இவருடைய கொள்கைகளில் மற்ற உளவியல் அறிஞர்கள் விசேஷ கவனம் செலுத்தலானார்கள். அவற்றை எதிர்த்தவர்கள் கூட வெறும் பரிகாசம் செய்வதோடு நின்று விடாமல் தங்கள் ஆட்சேபங்களைத் தெளிவாக வறையறுத்துக் கூறமுயன்றார்கள். பிராய்டை ஆமோதித்துப் பின்பற்றியவர்களில் ஆட்லர், யுங் (Jung) ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் பிராய்டின் மாணவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் ஆட்லர் அதை ஒப்புக் கொள்வதில்லை. அவர் பிராய்டின் கருத்துக்களை ஆரம்பத்தில் ஆமோதித்துச் சுமார் பனிரண்டு ஆண்டுகள் அவரோடு உழைத்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை. பிராய்டு தமது தொழிலை நடத்திய வியன்னாவில் குறிப்பிடத்தக்க சிலர் அவரைப் பின்பற்றிச் சேர்ந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் தான் ஆட்லர்.
ஆனால் பிற்காலத்தில் ஆட்லர் பிராய்டுடன் கருத்து வேறுபாடு கொள்ளலானார். வாழ்க்கைப் போக்கில் பாலுணர்ச்சிக்குப் பிரதான இடம் அளிப்பதை அவரால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலுணர்ச்சியானது வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது என்பதை அவர் அநேகமாக ஏற்றுக் கொண்டாலும் அதுவே வாழ்க்கையின் போக்கை அமைக்கிறது என்பதை அவர் சரியென்று கருதவில்லை. வாழ்க்கையின் போக்குக்கு அடிப்படையான வேகம் கொடுத்து அதை அமைப்பது ‘உயர்வுந்தல்’ என்பதே என்று அவர் கருதினார்.
ஒவ்வொருவனும் தான் ஏதாவது ஒரு வகையில் உயர்வடைய வேண்டும் என்ற ஒரு வேகத்தைக் கொண்டிருக்கிறான். தாழ்மை உணர்ச்சிக்கு எதிராக இந்த வேகம் தோன்றுகிறது. இதற்கு ‘உயர்வுந்தல்’ என்று பெயர். இதுவே வாழ்க்கையின் போக்கை அமைப்பதில் தலைமை இடம் வகிக்கிறது என்று கூறி ஆட்லர் ஒரு புதிய பாதையை வகுத்துக் கொண்டார். அதனால் அவர் பிய்ராடுடன் ஒத்துழைப்பதிலிருந்து விலகிக் கொண்டார்.[1]
------
[1] ஆட்லரின் கொள்கைகளைத் தாழ்வு மனப்பான்மை என்ற நூலில் விரிவாக விளக்கியிருக்கிறேன். ஆதலால் அதுபற்றி இங்கு சுருக்கமாகவே கூறியுள்ளேன்.
ஆட்லருக்குப் பிறகு யுங்கும் பிராய்டை ஆமோதிப்பதிலிருந்து விலகலானார். ப்ளூயிலர் (Bleuler) என்பவரோடு சேர்ந்து யுங் சுவிட்ஸர்லாந்திலுள்ள ஜுரிக்கில் தொழில் செய்துவந்தார். அவர்கள் இருவரும் பிராய்டின் கருத்தை ஏற்று அதைப் பின்பற்றி மனநோய்களுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள். உளப்பகுப்பியல் முறையை முதலில் பின்பற்றிய மனநோய் மருத்துவர்களில் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். யுங் தம்மைப் பின்பற்றுவதைக் கண்டு பிராய்டும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தாரென்று சொல்லவேண்டும். அமெரிக்காவிலுள்ள கிளார்க் பல் கலைக்கழகத்தில் சொற்பொழிவு கடத்த 1909-ல் பிராய்டு, யுங் ஆகிய இருவருக்கும் சேர்ந்து அழைப்புக் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் நெருங்கி ஒத்துழைத்து வந்தாலும் நாளடைவில் யுங்கின் கருத்தும் மாறுபடலாயிற்று. பாலுணர்ச்சியே பிரதானம் என்று பிராய்டு வற்புறுத்துவதை நாளாக நாளாக யுங்காலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாலுணர்ச்சிதான் வாழ்க்கையின் போக்கை அமைக்கிறதென்றும், அதுவே வாழ்க்கையின் வேகமாக அல்லது உந்தலாக இருக்கிற தென்றும் பிராய்டு கூறுகிறாரல்லவா? இந்த உந்தலுக்கு அவர் லிபிடோ (Libido) என்று பெயர் கொடுத்தார்.
ஆகவே லிபிடோ என்பது பிராய்டின் கொள்கைப்படி பாலுணர்ச்சி உந்தலையே முக்கியமாகக் குறிக்கிறது. யுங் இந்த லிபிடோவுக்கு இன்னும் விரிவான பொருள் கொடுக்கலானார். லிபிடோ என்பது வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் ஒரு பொதுவான உந்தலென்றும் அது பாலுந்தலையும் தன்னுள் அடக்கியிருந்தாலும் பாலுந்தல் ஒன்று மட்டுமன்று என்றும் அவர் கூறினார்.
வேறொரு வகையிலும் யுங்கின் கருத்து பிராய்டின் கருத்திலிருந்து மாறுபடலாயிற்று. நனவிலி மனம் என்று மனத்தில் ஒரு பகுதி உண்டென்றும் அதிலே வாழ்க்கை அநுபவங்களும், அதிர்ச்சிகளும், அடக்கப்பட்ட இச்சைகளும் மறைந்து கிடக்கின்றன என்றும் பிராய்டு தமது ஆராய்ச்சிகளின் பயனாகக் கூறினாரல்லவா? இந்த நனவிலி மனமானது குழந்தையின் பிறப்பிலிருந்தே அமைகின்றது என்பது பிராய்டின் எண்ணம். மலர்ச்சியடையத் தொடங்கும் குழந்தை மனத்தில் பதியும் முதல் அநுபவங்களே முக்கியமானவை யென்றும், அதனால் குழந்தைப் பருவமே பிற்கால வாழ்க்கையின் போக்கை அமைக்கும் வலிமை வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளதையும் நாம் முன்பே அறிவோம். நனவிலி மனக் கொள்கையை யுங் ஏற்றுக் கொண்டாரென்றாலும் அவர் நனவிலி மனத்திற்கு இன்னும் விரிவான வியாக்கியானம் கொடுக்கத் தொடங்கினார். அந்த நனவிலி மனத்திலே பிராய்டு கூறுகிறவாறு குழந்தைப் பருவம் முதல் ஏற்படுகிற அநுபவங்கள் முதலியவை அமிழ்ந்து கிடப்பதோடு இன்னும் வேறொரு முக்கியமாக அமிசம் அதில் உண்டென்று யுங் சொன்னார். ஒருவனுடைய வாழ்க்கை யநுபவம் சிறியது: அதைவிட மிகப் பெரியவை அவனை உள்ளிட்டிருக்கும் மானிட இனத்தின் அநுபவங்கள், மானிட இனத்தின் அநுபவங்க ளெல்லாம் நனவிலி மனத்தில் மறைந்து கிடக்கின்றன என்று யுங் கூறலானார். இவ்வாறு கருத்து வேறுபடவே அவரும் 1913-லிருந்து பிராய்டை விட்டுப் பிரிந்தார்.
ஆட்லரும், யுங்கும் பிரிந்தது பிராய்டுக்கு வருத்தத்தை உண்டு பண்ணியிருக்கு மென்றாலும் அவர் தமது ஆராய்ச்சியின் பயனாகக் கண்ட முடிவை உறுதியோடு வெளியிடுவதிலிருந்து பின் வாங்கவில்லை. பாலுணர்ச்சியே வாழ்க்கையின் பிரதான உந்தல் என்ற எண்ணத்தை எவ்வகையிலும் தளர்த்திக் கொடுக்க அவர் இசையவில்லை.
------
6. லிபிடோ
பாலுணர்ச்சியை பிராய்டு லிபிடோ என்று குறிப்பிட்டாரென்று முன்பே அறிவோம். பாலுணர்ச்சி என்ற தொடரை ஆண் பெண் உடலுறவை நாடி ஏற்படுகின்ற தூண்டுதல் என்ற குறுகிய பொருளில் பிராய்டு வழங்கவில்லை. அதற்கு இன்னும் விரிவான பொருளை அவர் கொடுத்தார். அதை உணர்ந்து கொள்ளாமலேயே பலர் அவருடைய கொள்கையை எதிர்த்தனர். லிபிடோ என்பது வெறும் கல்வி உணர்ச்சியல்ல; அது ஒருவன் அல்லது ஒருத்தியின் அன்பு வாழ்க்கையைக் குறிக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். அன்பு வாழ்க்கை என்பதில் உடல் சம்பந்தமான இன்பமும் அடங்கி யிருந்தாலும் அது அந்த இன்பத்தோடு முடிந்து விடுவதல்ல.
இவ்வகையான பரந்த பொருளில்தான் பாலுணர்ச்சியைக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடமும் இப்பாலுணர்ச்சி யிருக்கின்றது என்கிற போதும் இப் பரந்த பொருளை மறந்து விடக்கூடாது.
ஒருத்தி தனது மணவாழ்க்கையிலே அதிகமான அன்பு காண முடியவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையால் அவளுடைய அன்பு வாழ்வு மலர்ச்சியடைந்தது. அவள் ஒருவிதமான கோளாறு மின்றி வாழ்க்கையை நடத்தி வந்தாள். ஆனால் அந்தக் குழந்தை நோய் கண்டு இறந்து விட்டது. அவளுடைய அன்பு வாழ்வு வறண்டுவிட்டது. விரைவிலே அவளிடத்தில் நரம்பு மண்டலக் கோளாறுகள் தோன்றலாயின.
மேலே கூறிய உதாரணத்திலே கலவி விருப்பம் என்கிற அம்சமே இல்லை. இருந்தாலும் அவளுடைய நோய்க்கு அடிப்படையான காரணம் பாலுணர்ச்சியென்று தான் பிராய்டு கூறுவார். இதிலிருந்து அவர் பாலுணர்ச்சிக்குக் கொடுத்த விரிவான பொருளை நாம் யூகித்துக் கொள்ளலாம்.
குழந்தையிடமும் பாலுணர்ச்சி யுண்டு என்பதையும் இவ்வாறே விரிவான முறையில் பொருள் கொள்ள வேண்டும். ஒரு வீட்டிலே கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ மனத்தாங்கல் ஏற்பட்டு விட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, சொல்லாமல் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விட்டாள். கணவனும் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்து வர உடனே முயற்சி செய்யவில்லை. அவனும் கொஞ்சம் பிகுவாகவே இருந்தான். வீட்டிலுள்ள வயதான குழந்தைகள் தாயின் பிரிவினால் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்க்கையில் பலவிதமான இன்பங்களைக் காணப் பழகியிருந்தார்கள். வீதி விளையாட்டு, நண்பர்கள் சேர்க்கை என்றிப்படிப் பல வழிகளில் அவர்கள் சமாளித்துக் கொண்டார்கள். ஆனால் நான்கு வயது நிரம்பாத குழந்தைதான் தாயின் பிரிவால் பாதிக்கப் படலாயிற்று. தாய் இயல்பாகவே குழந்தைகளிடம் மிகுந்த அன்புடையவள். அந்த அன்பை இழந்த கடைசிக் குழந்தையின் நடத்தை சிலநாட்களில் மாறத் தொடங்கியது. ஒழுங்காகக் குளிப்பதும், உண்பதும், மற்ற காரியங்களைச் செய்வதுமாக இருந்த அந்தக் குழந்தை பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியது. குளிக்கச் செய்வதும், உண்ணச் செய்வதும் பெரும் பிரச்சினையாக முடிந்தது. ஏன் அப்படிச் செய்கிறதென்று யாருக்குமே புரியவில்லை. உடம்புக்கு சரியில்லையோ என்றுகூடச் சந்தேகித்து மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தார்கள். உடம்பிலே எவ்விதத் தொந்தரவும் இருக்கவில்லை. கடைசியில் தாய் பிணக்குத் தீர்ந்து திரும்பிய பிறகே குழந்தையின் பிடிவாதம் மறையலாயிற்று.
குழந்தையிடம் பாலுந்தல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
பிராய்டு தமது மனப்பகுப்பியல் என்ற புதிய மனத்தத்துவப் பகுதியில் பாலுந்தலைப் பிரதானமாக வற்புறுத்திக் கூறுவதைப் பலர் ஆட்சேபித்தார்கள் என்பதை முன்பே கண்டோம். அவ்வாறு ஆட்சேபித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் அவரோடு பல காலம் ஒத்துழைத்த ஆட்லரும், யுங்குமாவர். வாழ்க்கைக்கு வேகம் கொடுக்கும் பிரதான சக்தி ‘உயர்வுந்தல்’ என்று ஆட்லர் கூறினார். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் உளவியலில் ‘தனி நபர் உளவியல்’ (Individual Psychology) என்ற ஒரு புதிய கிளையைத் தோற்றுவித்தார்.
லிபிடோ என்பது பாலுந்தல் மட்டுமல்ல; அது வாழ்க்கைக்கு வேகங் கொடுக்கும் வேறு சக்திகளையும் தன்னகத்தே கொண்டது என்று யுங் கூறலானார். மேலும் அவர் நனவிலி உளத்திலே ஒருவனுடைய அநுபவங்களும் இச்சைகளும் அழுந்திக் கிடப்பதோடு மனித இனத்தின் அநுபவங்களும் அழுந்திக் கிடக்கின்றன என்று வியாக்கியானம் செய்தார். இவற்றைப்பற்றி முன்பே குறிப்பிட்டேன். ஒருவன் காணும் கனவுகளை ஆராயும் போது அவனுடைய வாழ்க்கை அநுபவங்களையும் இச்சைகளையுமே அவற்றில் மறைந்துகிடக்கக் காணமுயல்வது சரியல்ல என்பது அவருடைய கருத்து. கனவுகள் மனித இனத்தின் வாழ்க்கை அநுபவங்களையும் மறைமுகமாகக் காண்பிக்கும் என்று அவர் சொன்னார். நாடோடிக் கதைகளும், புராணக் கட்டுக்கதைகளும் இந்த மனித இன நனவிலி உளத்தின் தோற்றமே என்பது அவர் கருத்து. இவ்வாறு அவர் பிராய்டுடன் மாறுபட்டு ‘பகு முறை உளவியல்’ (Analytic Psychology) என்ற மற்றொரு உளவியற் கிளையைத் தோற்றுவித்தார்.
இவ்வாறு பலர் பிராய்டுடன் மாறுபட்டாலும் இவர்களுக்குள் அடிப்படையான ஒரு விஷயத்தில் கருத்தொற்றுமை இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நனவிலி உளம் என்று மனத்தில் ஒரு பகுதி யுண்டென்பதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை. பிராய்டு கண்டு வெளியிட்ட இந்தக் கருத்து உளவியலில் இன்று முக்கியமான இடம் பெற்றுவிட்டது. பாலுந்தல் என்னும் சக்தியானது வாழ்க்கையின் போக்கை நிறுவுவதில் பெரியதோர் பங்கு கொள்ளுகின்றது என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள்; அதுவே தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்பதை மறுத்தாலும் அதை அறவே ஒதுக்கிவிட யாரும் முற்படவில்லை. இன்றும் இது உளவியலில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.
பிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளவியலில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு இன்று வெவ்வேறு துறைகளில் பெரிதும் பேசப்படுகிறது. இலக்கியம், கலைகள், சமூகம் முதலான துறைகளிலும் அது நுழைந்திருப்பதைக் காணலாம். நனவிலி மனக்கோளாறுகளை அடிப்படையாகக் கொண்டே புதியவகையான இலக்கியமும் கலையும் வளரத் தொடங்கியுள்ளன. குழந்தை வளர்ப்பு, மனநோய் மருத்துவம் முதலிய துறைகளில் இதன் முக்கியத்தை யாரும் இன்று மறுப்பதில்லை.
---------
7. அடிமனம் வகுத்த வாய்க்கால்
சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிகமாக அன்புகாட்டுவதில்லை. குழந்தைகளிடம் அன்பிருந்தாலும் சாதாரணமாக அதை வெளிக்குக் காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப் பட்டால் அப்பொழுது அவற்றினிடம் விசேஷமான அன்பும் கவனமும் செலுத்துவார்கள். நோய் வந்துவிட்டதே என்று பெரிதும் கவலைப் படுவார்கள். இதைக் கண்டு ஒரு சில குழந்தைகள் அந்த அன்பையும் கவனத்தையும் பெறுவதற்காகவே நோயாகப் படுத்து விடுவதுண்டு. குழந்தை தெரிந்தே அவ்வாறு செய்வதாகக் கருத வேண்டியதில்லை. எப்படியோ அந்த நிலைமை உண்டாகுமாறு இந்த மாய மனம் செய்து விடுகிறது.
சிலருக்கு எதிர்பாராத ஒரு துரதிஷ்டம் அல்லது துன்பம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு துறையில் தங்கள் மனத்தை முழுவதும் செலுத்தி அந்தத் துன்பத்தை மெதுவாக மறக்கிறார்கள். ஒருவர் சமூக சேவையிலே ஈடுபடலாம்; ஒருவர் கலைத் துறையிலே இறங்கலாம்; ஒருவர் ஒரு பெரிய தொழில் முறையிலே செல்லலாம். இவ்வாறு ஏதாவது ஒரு துறையில் சென்று தங்கள் துன்பத்தை மறக்கிறார்கள். மற்றும் சிலருக்கு இவ்வாறு ஒன்றும் செய்ய முடிகிறதில்லை. துன்பத்தை மறக்கவும் முடியாமல் அதை எதிர்த்துப் போராடி உண்மையை உணர்ந்து துணிவோடு நிற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள். இப்படிப் பட்டவர்களிடந்தான் மனக்கோளாறுகள் தோன்றுகின்றன.
வேறொரு வகையில் மனக் கோளாறுகள் தோன்றுவதையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மனத்திலே ஏதாவதொரு இச்சை தோன்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது இழிந்ததாக இருக்கலாம் அல்லது சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதே சமயத்தில் அந்த இச்சையை எதிர்த்து வேறொரு சக்தி மனத்தில் தோன்றுகிறது. இரண்டிற்கும் நனவு மனத்திலேயே போராட்டம் நடைபெறுகிறது. “அந்த இச்சைப்படி நடக்கக் கூடாது; அது இழிந்தது” என்கிற சக்தி வலுவடைந்து விடுகிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்த இச்சையின் வலுக் குறைந்து மறைந்து போகிறது. இவ்விதம்தான் சாதாரணமாக வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்தச் சமயத்திலே பிராய்டு மனத்தை எவ்வாறு பகுத்து நோக்குகிறார் என்பதைச் சற்று விரிவாக நாம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நனவு மனம், நனவடி மனம், நனவிலிமனம் என்று மனத்தைப் பிரிப்பது ஒருவகை. இன்னொருவகையான பிரிவினையை அடுத்த பக்கத்தில் காட்டியுள்ள படம் விளக்குகிறது.
குழந்தை பிறக்கின்றபோது அதற்கு இயல்பூக்கமாக அமைந்துள்ள சில உந்தல்களும் ஆசைகளுமே இருக்கின்றன. இவைகளெல்லாம் குழந்தைக்கு ஏதாவது ஒருவகையில் இன்பங் கொடுக்கக்கூடியனவாகவே அமைந்தவை. அதாவது குழந்தையின் மனம் பெரும்பாலும் இன்பம் தரும் செயல்களைத் தூண்டும் உந்தல்களைக் கொண்டதாகவே முதலில் அமைந்திருக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். இதற்கு இத் (Id) என்று பெயர். இது நனவிலி மனப்பாகமுமாகும். இதுதான் லிபிடோவின் நிலைக்களம். இங்குதான் இயல்பூக்கங்களும், இச்சைகளும் கூத்தடிக்கின்றன. இங்கே இன்பம் என்ற தத்துவமே ஆட்சி புரிகின்றது. இதற்கு நியாய அநியாயம் தெரியாது. இதற்குள்ளேதான் அடக்கப்பட்ட இச்சைகள் வந்து சேர்கின்றன. ஆனால் வாழ்க்கை என்பது வெறும் இன்பம் நாடும் செயல்களாகவே இருக்க முடியாது என்று விரைவில் குழந்தை தெரிந்து கொள்ளத் தொடங்குகிறது.
![](https:///www.projectmadurai.org/images/0679_atimanam01.jpg)
தாய் தந்தையரின் நடத்தையும், சூழ்நிலை அநுபவங்களும் இந்த உணர்வு பிறப்பதற்கு உதவியாக நிற்கின்றன. இவ்வாறு உணர்வு பிறக்கப் பிறக்கக் குழந்தை தனது இன்பத்தையே நாடுவதைச் சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து சமூக ஒழுங்குக்கு உட்படுவதற்குத் தயாராகிறது. அதன் காரணமாக இத் என்னும் மனப் பகுதியில் தனது இச்சைகளையே நாடும் பகுதி ஒன்றும், சமூக ஒழுங்குகளின் வலிமையால் தோன்றும் ஒரு பகுதியுமாக இரண்டு பிரிவுகள் தோன்றுகின்றன. இந்தப் புதிய பகுதியே அகம் (Ego) என்பது. ஆனால் இது இத் என்பதிலிருந்து முற்றிலும் தனிப் பட்டிருப்பதில்லை. இதன் அடிப்பகுதி இத்துடன் கலந்திருக்கிறது. இதன் ஒரு பகுதி நனவு நிலையோடும் மற்றப்பகுதி நனவிலி நிலையோடும் தொடர்புடையது என்றும் கூறலாம். இதிலிருந்துதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் செல்கின்றன. இச்சையானது தூய்மையடைந்து சமூகத்திற்கு ஏற்றதான உந்தலாக மாறுவதும் இங்கேதான். இவ்வாறு இழிந்த இச்சைகள் தூய்மையடைவதை உயர்மடை மாற்றம் என்று கூறுவார்கள். இயல்பான உந்தல்கள் அதாவது இயல்பூக்கங்கள் இத்திலிருந்து முக்கியமாக வேலை செய்வதுபோல புலக்காட்சி (Perception) அல்லது புலன் உணர்வு அகத்திலிருந்து முக்கியமான வேலை செய்கிறது. இது நன்னெறியைப் பின்பற்ற முயல்கிறது என்று கூறலாம். ஆனால் தூங்கிப் போவதும் உண்டு. அகம் மூன்று விதமான சக்திகளால் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. வெளியுலகம் அல்லது சமுதாயத்திற்கு அது கட்டுப் படவேண்டும். அதீத அகத்தின் (Super Ego) ஆணையையும் கவனிக்க வேண்டும்; அதே சமயத்தில் இத்திலிருந்து கூத்தாடும் லிபிடோவின் ஆதிக்கத்திற்கும் உட்பட வேண்டும்.
இத்திலிருந்து கிளம்பும் உந்தல்களையும் இச்சைகளையும் திருப்திப் படுத்த இந்த அகம் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கும்; தீமையேற்படாத முறையிலே இந்தத் திருப்தியுண்டாக்குவதற்கு அது முயலும். அப்படிச் செய்யாமல் வேறு சில சமயங்களிலே இத்தின் இச்சைகளை விட்டொழிக்கும் படியோ அல்லது அவற்றை மாற்றியமைத்துக் கொள்ளும்படியோ தூண்டும்; அல்லது அந்த இச்சைகளைத் திருப்தி செய்யும் காலத்தைத் தள்ளிப் போடவாவது முயலும்.
இத்துக்கும் அகத்திற்கும் இடையே போராட்டம் நிகழும். அகத்தால் அடக்கப்பட்ட இச்சை இத்தில் அமிழும்போதுதான் சிக்கலும் மனக் கோளாறும் ஏற்படக் காரணமாகின்றது.
அதீத அகம் என்பது அகத்தினின்று தோன்றியதாகும். இது பெரும்பாலும் நனவிலி நிலையிலிருந்து வேலை செய்கிறது. இதற்கு அகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுண்டு. இது அவ்வப்போது அகத்தினிடமுள்ள குறைகளைக் கண்டு இடித்துக் கூறுகிறது. அதீத அகத்தை மனச்சான்று என்று கூறலாம். இது சமூகம் வகுக்கின்ற ஒழுக்க முறையை ஏற்றுக் கொண்டு அகத்தை அதற் கேற்றவாறு நன்னெறியில் நிறுத்த முயல்கின்றது. அகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போதுதான் அடக்கப் பட்ட இச்சைகள் இத்துக்குச் சென்று பலவித மனக் கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
இங்கு நாம் அடக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் (Suppression) உள்ள வித்தியாசத்தை நன்கு மனத்திற் கொள்ள வேண்டும். அடக்கல் என்பது நனவிலி நிலையில் நடப்பது; அடக்கப்பட்ட இச்சை இத்துக்குச் சென்று கோளாறுகளை உண்டாக்கக் காரணமாக இருக்கும். ஆனால் ஒடுக்கல் என்பது நனவு நிலையில் நடப்பது. என்னென்னவோ ஆசைகள் நம்மை அடிக்கடி பீடிக்கத் தொடங்குகின்றன; அவற்றை நாம் ஒடுக்க வேண்டியிருக்கிறது. இது நியாயமானதும் இயல்பானதுமான செயலாகும். இப்படி ஒடுக்குவதால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவனுக்கு இது அவசியமுமாகும்; இதனால் அவன் நன்மையே அடைகிறான்; சமூகமும் அமைதியோடு இருக்கின்றது.
-------------
8. அதீத அகம்
மனத்திலே நனவிலி மனம் என்ற ஒரு பெரும்பகுதி இருக்கிறதென்று பிராய்டு தமது ஆராய்ச்சியின் மூலம் கூறினாரல்லவா? அதிலே இயல் பூக்கங்களும், நிறைவேறாத இச்சைகளும், அடக்கப்பட்ட உந்தல்களும் அழுந்திக்கிடக்கின்றன. இவையெல்லாம் மறைமுகமாகவாவது வெளியே வந்து திருப்தியடைய முயலும்போது தான் மனக் கோளாறுகள் ஏற்படுகின்றன என்று பிராய்டு முதலில் விளக்கியபோது பொதுவாக அனைவரும் அவரை ஆமோதித்தார்கள். ஆனால் அவர் அந்த அடிமன உந்தல்களின் அடிப்படையான வேகம் பாலியல்பிலிருந்துதான் தோன்றுகிறது என்று கூறத் தொடங்கியதும் அவருக்கு எதிர்ப்பு உண்டாயிற்று.
இந்த இடத்தில் நாம் ‘பால்’ என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை மீண்டும் சற்று விரிவாக ஆராய்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றிய ஒரு புதிய விளக்கத்தையும் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆண் பெண்ணின் உடல் சம்பந்தமான கலவி வேட்கையைக் காமம் என்ற சொல்லால் குறிப்பிடலாம். அந்தச் சொல்லை வழங்கும்போது அது உடலுறவையே முக்கியமாகக் குறிப்பதாக நாம் இன்று கருதுகிறோம். பிராய்டு கூறுவது இந்தக் காமமாகிய உடலுறவு மட்டுமல்ல. சில சமயங்களிலே பிராய்டு குறிப்பதை ‘அன்பு வாழ்வு’ என்று சொல்லுவதுண்டு. ஆனால் ‘அன்பு’ என்கிற சொல் பொதுப்படையானது. அதைக் கொண்டு பிராய்டின் கருத்தை விளக்க முயல்வதும் பல சமயங்களிலே குழப்பத்தை உண்டாக்கிவிடும். ஆகையால்தான் ‘பால்’ என்ற சொல்லைக் கையாள நேர்ந்திருக்கிறது. ஆங்கிலத்திலேயுள்ள செக்ஸ் (Sex) என்ற சொல்லுக்குச் சமமான சொல்லாகப் ‘பால்’ என்பதைக் கருதலாம். அவ்வாறு கொள்ளும்போது ‘பால் வாழ்க்கை’ (Sex life), ‘பாலுந்தல் (Sex drive) என்ற தொடர்கள் பிராய்டு கூறுவதை நன்கு விளக்குவனவாக ஏற்படும். எனவே பாலுந்தல் என்பது வெறும் காமம் மட்டும் அல்ல; ஆனால் அது காமத்தையும் அறவே விலக்குவதில்லை. அது அன்பின் அம்சங்களையும் கொண்ட ஒருவேகம் என்பதாக நாம் அறிய வேண்டும்.
நனவிலி மனம் என்பதை பிராய்டு பிற்காலத்தில் ‘இத்’ என்ற சொல்லால் குறிப்பிடலானார். இந்த இத்திலிருந்து கிளம்பும் வேகத்தை லிபிடோ என்று அவர் விளக்குவதையும் நாம் அறிவோம். லிபிடோவின் சக்தியாக அமைவது ‘பாலுந்தல்’ என்கிறார் பிராய்டு. இக்கருத்தையும் யுங் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையென்பதையும் நாம் முன்பே அறிவோம்.
இத்திலிருந்து அகம் பிறக்கின்றது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றி அதன்மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது. அகம் என்பது இத்துக்கும் அதீத அகத்துக்கும் இடையிலே அகப்பட்டுக்கொண்டு தடுமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம். இத்துக்குத் தனது திருப்திதான் பிரதானம். அதற்கு அறநெறியைப் பற்றி யெல்லாம் கவலையில்லை. அது மனிதனுக்குள்ளே யிருக்கும் மிருகம். அதீத அகம் என்பதை மனச்சான்று என்று முன்பே கூறினேன். எது ஒழுங்கானது, எது ஒழுங்கற்றது என்று அது தீர்மானிக்கிறது. மனிதனுடைய செயல்களை மட்டுமல்லாமல் அவனுடைய எண்ணங்கள், ஆசைகள், மனோபாவங்கள் முதலியவற்றையும் சரியா தவறா என்று சீர்தூக்கிப் பார்க்கிறது. அகத்திற்கு இரண்டு பக்கத்திலும் தாக்குதல் நேரும். “இத்தின் தூண்டுதலுக்கும், அதீத அகத்தின் குற்றச்சாட்டுக்கும் இடையிலே அகம் தன்னைக் காத்துக்கொள்ள முயல்கிறது” என்று பிராய்டு அகமும் இத்தும் என்னும் தமது நூலில் கூறுகிறார்.
அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுவதைப் பற்றி பிராய்டு கூறும் விளக்கந்தான் மிகுந்த பரபரப்பையும் ஆட்சேபங்களையும் உண்டாக்கியது. குழந்தையின் வாழ்வு தொடங்கும்போது குழந்தை தனது இன்பத்தையே நாடும் மனப்பாங்குடையதாக இருக்கிறது. ஆண் குழந்தை தாயிடம் மிகுந்த அன்பும், பெண் குழந்தை தந்தையிடம் மிகுந்த அன்பும் கொள்ளுகின்றன. இந்த அன்பு பாலியல்பு கொண்டது என்பது பிராய்டின் கருத்து. ஆண் குழந்தை தாயிடம் அன்பு செலுத்தும்போது அதற்குப் போட்டியாக இருக்கும் தந்தையிடம் பகைமை உணர்ச்சி கொள்ளுகிறது. தந்தையின் ஸ்தானத்தை அது கைப்பற்ற முயல்கிறது. தந்தையைப்போல நடக்கவும் விரும்புகிறது. இவையெல்லாம் கைகூடாமற் போவதால் தந்தையிடம் வெறுப்புக் கொண்டு அவனை ஒழித்துவிடவும் முயல்கிறதாம். இம்மாதிரியான மனக் கோளாறை பிராய்டு ஈடிப்பஸ் மனக்கோட்டம் (Oedipus Complex) என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.
ஈடிப்பஸ் என்பது ஒருவனுடைய பெயர். அவனைப் பற்றிய சுவையான கதை கிரேக்க நாட்டுப் புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. தீப்ஸ் என்பது பண்டைக் கால கிரீஸ் தேசத்தில் ஒரு நகரம். அதை ஒரு காலத்தில் லேயஸ் என்பவன் ஆண்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது. லேயஸூக்கும் அவன் மனைவி ஜொக்காஸ்ட்டா என்பவளுக்கும் புத்திரனாக ஈடிப்பஸ் பிறந்தான். ஈடிப்பஸ் தனது தந்தையைக் கொல்வதோடல்லாமல் தாயையே மணப்பான் என்று அவனைப் பற்றித் தெய்வ மொழியாக வாக்குக் கூறினார்கள். அதனால் லேயஸ் அந்தக் குழந்தையை ஓர் அடிமையிடம் கொடுத்து அதைக் கொன்று விடும்படி உத்தரவிட்டான். அந்த அடிமை குழந்தையைக் கொல்லாமல் மலைக்காட்டிலே எறிந்துவிட்டு வந்துவிட்டான். ஈடிப்பஸின் கால்களில் மட்டும் காயம் உண்டாக்கினானாம். ஈடிப்பஸை இடையர்கள் கண்டெடுத்துத் தங்கள் அரசனான பாலிப்பஸ் என்பவனிடம் கொடுத்தார்கள். ஊர், பெயர் தெரியாத அந்தக் குழந்தையை அவன் தன் குழந்தையைப் போலவே வளர்த்து வருகிறான். அதன் கால்களில் ஏற்பட்ட காயத்தால் பாதங்கள் வீங்கியிருந்தமையால் வீங்கிய பாதம் என்று பொருள்படக்கூடிய ஈடிப்பஸ் என்ற பெயரால் அக்குழந்தையை அழைக்கலானார்கள். அதுவே அதன் பெயராக அமைந்துவிட்டது. ஈடிப்பஸ் இளைஞனாக வளர்ந்து வந்த காலத்தில் முன்னால் கூறிய வாக்கையே தெய்வ மொழி அவனிடமும் கூறிற்று. அவன் பாலிப்பஸே தனது தந்தையென்று நினைத்து அவனைக் கொல்லாமலிருப்பதற்காக ஊரைவிட்டு வெளியேறினான். வழியிலே அவன் தனது உண்மைத் தந்தையாகிய லேயஸைச் சந்திக்கும்படி ஏற்பட்டது. இருவருக்கும் சண்டையும் மூண்டது. அதிலே ஈடிப்பஸ் தனது தந்தையென்று தெரிந்து கொள்ளாமலேயே அவனைக் கொன்றுவிட்டான். பிறகு ஈடிப்பஸ் தீப்ஸ் நாட்டுக்குச் சென்று அந்த நாட்டுக்கு ஏற்பட்டிருந்த தீமையைப் போக்கி மக்களை மகிழ்வித்தான். அவன் செய்த உதவிக்காக மக்கள் தங்கள் ராணியாகிய ஜொக்காஸ்ட்டாவையே அவனுக்கு மணம் செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு திடீரென்று தீப்ஸில் கொள்ளை நோய் பாவி மக்களை வாட்டி வதைத்தது. லேயஸைக் கொன்றவன் யாரென்று கண்டு பிடிக்கும் வரையில் அந்த நோய் மக்களை வாட்டும் என்று தெய்வ மொழி கூறிற்று. அந்தக் கொலைகாரனைக் கண்டு பிடிக்க ஈடிப்பஸ் தானே புறப்பட்டான். அப்படி அவன் முயற்சி செய்யும்போது ஒரு தீர்க்கதரிசியின் மூலம் அவனுக்கு உண்மை தெரிந்தது. ஈடிப்பஸ் தன் கண்களையே குத்திக் கொண்டான். கடைசியில் காட்டில் புகுந்து மறைந்துவிட்டான். ஜொக்காஸ்ட்டா தூக்குப் போட்டுக்கொண்டு உயிர் துறந்தாள்.
இவ்வாறு தந்தையைக் கொன்று தாயை மணந்த ஒருவன் பெயரைக் கொண்டு பிராய்டு குழந்தையின் மனக் கோட்டத்திற்கு ஈடிப்பஸ் மனக்கோட்டம் என்று பெயர் வைத்தார். இத்தகைய மனக்கோட்டம் ஏற்படக்கூடிய நிலைமை எல்லோருக்கும் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிறதென்று பிராய்டு சொல்லுகிறார்.
ஆனால் தந்தையை ஒழித்துவிடக் குழந்தையால் முடியுமா? அதற்குத் தாயும் இடம் கொடுப்பதில்லை; தந்தையும் இடம் கொடுப்பதில்லை. அதனால் குழந்தை தன்னுடைய வெறுப்பைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டியதாகிறது. இதன் விளைவாக “தந்தை போல் ஆக வேண்டும்” என்கிற லட்சியமும், “தந்தையை ஒழித்துவிட்டுத் தாயின் அன்பு முழுவதையும் தானே அடைய முயலக்கூடாது” என்கிற எண்ணமும் உடைய அதீத அகம் தோன்றுகிறது. நாளடைவில் இந்த அதீத அகம், “இதைச் செய், இதைச் செய்யாதே” என்று அகத்திற்கு ஆணையிடத் தொடங்கி விடுகிறது. அது தந்தையின் ஸ்தானத்தையே எடுத்துக் கொள்ளுவதாகக் கூறலாம். ஆசிரியனுடைய ஸ்தானத்தையும் கொள்ளுவதாகக் கூறலாம். இவ்வாறு அது அற வாழ்க்கைக்குத் தணிக்கை அதிகாரியான மனச்சான்றாகி விடுகிறது. அதீத அகம் தவறு என்று கண்டிக்கும்போது அகம் பயந்து போய்த் தனது இச்சைகளை அடக்கி விடுகிறது. அவ்வாறு அடக்குவதாலேயே பலவகையான மனக்கோளாறுகள் ஏற்படக் காரணமாகின்றது.
நனவிலி மனத்தைப்பற்றி பிராய்டு முதலில் கூறிய போது பலர் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் குழந்தையின் வாழ்க்கையிலும் பாலுந்தல்தான் பெரிய சக்தியாக இருக்கிறதென்றும், ஈடிப்பஸ் மனக்கோட்டம் உண்டாகிறதென்றும் பிராய்டு கூறத் தொடங்கியபோது அவருக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின. முன்பு அவரை ஆமோ தித்தவர்களிலும் பலர் அவரைவிட்டு விலகினார்கள்.
அப்படி விலகிய போதிலும் பிராய்டு தமது முயற்சியில் தளர்வடையவில்லை. தமது கருத்துக்களை விளக்கியும், தமது பரிசோதனைகளை விளக்கியும் புதிய புதிய நூல்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.
முதல் உலக யுத்தம் முடிந்தபிறகு பிராய்டுக்குமேலும் மேலும் பாராட்டுதல்கள் கிடைத்தன. உலகம் முழுதும் அவரை அறியலாயிற்று. உளப்பகுப்பியல் எல்லாத் துறைகளிலும் இடம்பெற்றது. கல்வி, இலக்கியம், ஓவியம், நாடகம் இவற்றிலெல்லாம் இதைப் புகுத்தினார்கள். புதிய கலை இயக்கமே இதன் அடிப்படையில் வளரத்தொடங்கியது.
பிராய்டு ஒரு பெரிய மேதை. அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் மனத்தைப்பற்றிய கருத்துக்களில் ஒரு புதிய சகாப்தத்தையே உண்டாக்கி விட்டன.
--------------
9. அடிமன விந்தைகள்
மனம் என்பதிலே வெளிமனம் (நனவு மனம்), இடை மனம், அடிமனம் (நனவிலி மனம்) என்ற முக்கியமான பகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம் என்று முதலில் பார்த்தோம். ஆராய்ச்சிக்காகவும், மனத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்காகவுந்தான் இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம் என்றும், உண்மையில் இப்படிப் பிரிவினை செய்த தனித் தனி பாகங்களே இல்லையென்றும் அப்பொழுதே தெளிவுபடுத்திக் கொண்டோம். மனமே ஒரு சூக்குமமான மாயம். ஆதலால் அதன் பகுதிகளும் மாயமானதே.
மனத்தை வேறொரு வகையாகப் பகுதிகள் செய்து ஆராயலாம் என்றும் கண்டோம். அந்தப் பிரிவினைப்படி இத், அகம், அதீத அகம், நனவுமனம் ஆகிய பகுதிகள் மனத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யலாம். இத் என்பதுதான் அடிமனம் என்று பொதுவாகக் கூறலாம். அதிலிருந்து அகம் தோன்றுகிறது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுகிறது.
இத் எப்பொழுதும் இன்பத்தையே நாடுகிறது; துன்பத்தைத் தவிர்க்க முயல்கிறது. அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட விரும்புவதில்லை; சுயநலம் மிகுந்தது; பகுத்தறிவற்றது. அது தனது இச்சைகள் வாழ்க்கையிலே நிறைவேறாமற் போனால் மனக் கோட்டை கட்டுவதாலும், கனவாலும் பிரமையாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திர சக்தி வாய்ந்தது.
இத் தைப்பற்றி நேர்முகமாக அறிந்து கொள்வது இயலாது. அது மறைந்து நிற்கிறது. அதைப்பற்றி மறை முகமாகவே நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம். மனக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையிலே அதை ஆராய முடிகிறது. ஒருவனுக்கு ஏற்படும் கனவுகளைப் பரிசீலனை செய்வதன் மூலமும் அதைப்பற்றி அறியலாம். ஒருவன் யோசனை செய்யாமல் உணர்ச்சி வசப்பட்டு உடனே ஒரு கெட்ட காரியம் செய்ய முயலுகிறானென்று வைத்துக் கொள்ளுவோம். அந்தச் சமயத்திலும் இத் வெளியாகிறது.
வாழ்க்கை முறை செம்மையாக அமைந்த மனிதனிடத்திலே அகம் சரியானபடி காரியம் செய்கிறது என்று கூறலாம்; அது இத்தை லகானிட்டுப் பிடித்து அதன்மேல் ஆதிக்கம் செலுத்தும்; அதீத அகத்தையும் தனது ஆதிக்கத்திற்குள்ளே வைத்துக் கொண்டிருக்கும். உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பிலும் அவனுக்கு ஏற்ற முறையிலேயே காரியங்கள் நடைபெறும். அகம் தனது கடமையைச் செவ்வனே செய்து வருகின்றபோது வாழ்க்கையில் அமைதி நிலவும். அப்பொழுது அது தனது அதிகாரத்தை இத்துக்கோ, அதீத அகத்திற்கோ, வெளியுலகத்திற்கோ பெரியதோரளவிற்கு விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால் அப்படி விட்டுக் கொடுக்க நேர்கின்ற காலத்தில்தான் தொல்லைகள் உண்டாகின்றன.
இத் என்பது இன்பநாட்டம் என்ற கொள்கையைப் பின் பற்றியே வேலை செய்கிறதல்லவா? ஆனால் அகம் அப்படிச் செய்வதில்லை. அது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் கொள்கையைப் பின்பற்றி நடக்கிறது. சமூகத்திற்கு உடன்பாடல்லாத காரியத்தில் அது இறங்க விரும்புவதில்லை.
அதீத அகத்தை மனச்சான்று என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். இது அகத்திலிருந்து தோன்றுகிறது என்று கண்டோமல்லவா? குழந்தை முதலில் பெற்றோர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இது நல்லது, இது தீயது என்று உணர்ந்து கொள்ளுகிறது. பெற்றோர்கள் சொல்லுகிறபடி நடப்பதுதான் நல்லது, நீதிநெறி என்றெல்லாம் குழந்தை நாளடைவில் உணர்ந்து அவர்கள் கூறுகிறபடி நடந்து அவர்களுடைய நன்மதிப்பைப் பெற முயல்கிறது.
பிறகு பெற்றோரின் உதவி இல்லாமலேயே குழந்தை தானாகவே நல்லது தீயதைப் பகுத்தறிந்து நடக்கத் தொடங்குகிறது. இந்த வகையிலேதான் மனச்சான்று என்கிற அதீத அகம் தோன்றுகிறது. குழந்தை நல்ல முறையில் நடந்து கொண்டால் பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார்கள்; குழந்தையிடம் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகிறார்கள்; குழந்தையை அணைத்துக் கொண்டு கொஞ்சுகிறார்கள்; குழந்தைக்கு இன்பங் கொடுக்கக் கூடிய காரியங்களும் செய்கிறார்கள். ஆனால் குழந்தை தவறான முறையிலே நடந்து கொண்டால் பெற்றோர்கள் கோபமடைகிறார்கள்; முகத்தைச் சுளிக்கிறார்கள்; தாங்கள் குழந்தையின் செய்கையை ஆமோதிக்கவில்லை என்பதை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்துகிறார்கள்; சில சமயங்களில் குழந்தைக்கு அடிகூடக் கிடைக்கிறது. இதேபோல அதீத அகமும் செய்கிறது. அது அகத்தின் நல்ல செயலுக்காகத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறது, தீய செயலுக்காகத் தண்டிக்கிறது. செயல்கூட வேண்டியதில்லை. நினைப்புக்கே வெகுமதியும் தண்டனையும் கிடைக்கும்.
ஒருவன் பிரம்மச்சாரியாகவே வாழத் தீர்மானிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் மனத்திலே எப்படியாவது சில சமயங்களிலே காம இச்சைகள் கிளம்பிவிடும். மனச் சான்று அந்த சமயங்களில் அவனைத் தண்டிக்கிறது. தனது இழிந்த எண்ணங்களுக்காக அவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுகிறான். பட்டினிக் கிடக்கிறான். அல்லது வேறு விதமாகத் தன்னையே தண்டித்துக் கொள்ளுகிறான். இவ்விதமாக செயல்களுக்கு மட்டுமல்லாமல் எண்ணங்களுக்காகவும் அதீத அகம் வெகுமதியோ தண்டனையோ கொடுக்கிறது.
அதீத அகம் ஒரு செயலை அல்லது எண்ணத்தை ஆமோதிக்கிறபோது அகம் பெருமையடைகிறது; உயர்ச்சியடைகிறது. ஆனால் அதீத அகம் தண்டனை கொடுக்கிறபோது அதாவது அகம் ஏதாவதொரு தீய செயல் அல்லது தீய எண்ணம் கொண்டு அதீத அகத்தால் கண்டிக்கப்படுகிறபோது குற்றம் புரிந்ததற்காக அகம் நாணமடைகிறது, தன்னைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்ளுகிறது.
இவ்வாறு அதீத அகத்தால் வன்மையான கண்டனம் ஏற்படுகின்ற காலத்தில்தான் தீய இச்சைகள் நனவிலி மனத்தில் புதைந்து மறைகின்றன. அவையே எப்படியாவது வெளிப்பட்டு வர முயல்கின்றன. இந்த இழிந்த இச்சைகளுக்கும் அதீத அகத்திற்கும் ஏற்படுகிற போராட்டம் வலிமை யெற்று ஓங்குகிறபோதுதான் மனத்திலே குழப்பம் ஏற்பட்டுப் பலவிதமான மனக்கோளாறுகள் தோன்றுகின்றன. அடக்கப்பட்ட இழிவுணர்ச்சிகள் முற்றிலும் மறைந்து போவதில்லை. அவை எப்படியாவது வெளியேறித் தமதிச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முயல்கின்றன. நேராக வெளிப்பட முடியாதபோது கனவு முதலான வழிகளிலே மறைமுகமாக வெளிப்படப் பார்க்கின்றன. அடக்கப்பட்ட தீயவுணர்ச்சிகளை அழிக்க முடியாது; ஆனால் அவற்றை அவை செல்லுகின்ற பாதையிலிருந்து மாற்றி உயர்ந்த பாதையில் செல்லும்படியாக மாற்றிவிடலாம். வயலிலே பாய்ந்து கொண்டிருக்கிற தண்ணீரை ஓரளவுக்குத்தான் கட்டித் தேக்கி நிறுத்தலாம். தண்ணீர் மேலும் மேலும் பெருகுகின்றபோது அதை என்றுமே தேக்கி நிறுத்த முடியாது. ஆனால் அது செல்லுகின்ற வாய்க்காலை அல்லது மடையை மாற்றி வேறு மடையில் போகும்படி செய்யலாம். அப்படிச் செய்யும் போது தண்ணீர் கரையை உடைக்காது; புதிய மடையிலே கரைகளின் வரம்புக்கு உட்பட்டுப் போய்க் கொண்டிருக்கும். இப்படி மடை மாற்றம் இல்லாத போதுதான் அது கரையை உடைத்துக்கொண்டு நாலா பக்கமும் சிதறியோடி நாசம் விளைவிக்கிறது. அடக்கப்பட்டு நனவிலி மனத்தில் புதைந்துள்ள தீய உணர்ச்சிகளின் விஷயமும் இதுபோலத் தான். அவற்றை நல்ல மடையிலே போகும்படி மாற்றிவிட வேண்டும். அப்படிச் செய்வதற்கு உயர்மடை மாற்றம் என்று (Sublimation) என்று பெயர்.
ஒருவனிடத்திலே போருணர்ச்சி மிகுந்திருக்கலாம். கொலை, வெறுப்பு என்ற தீய எண்ணங்கள் அவனிடத்திலே இருக்கலாம். மானிட ஜாதிக்குத் தீங்கு விளைவிக்கின்ற கொடிய கிருமிகளை அழிப்பதற்கு வேண்டிய போராட்டத்தைச் செய்ய அவன் தனது உணர்ச்சிகளை மாற்றி விடுவானானால் அவன் தனக்கும் உயர்வு தேடிக்கொள்வான்; உலகத்திற்கும் நன்மை செய்தவனாவான்.
அதீத அகத்தைப் பற்றிப் பேசவந்தவிடத்தில் மேலே குறித்த விஷயத்தைப்பற்றிக் குறிப்பாகச் சில விஷயங்களைச் சொன்னேன். தீய உணர்ச்சிகளைத் தடுப்பதற்கும் அகத்தைக் கண்டிப்பதற்கும் எவ்வாறு அதீத அகம் பயன்படுகிறதென்பதை அறிந்து கொள்வதே இங்கு முக்கிய நோக்கமாகும்.
இந்த அதீத அகம் பெற்றோரின் ஸ்தானத்தை வகிக்கத் தொடங்குகிறது என்றும் முன்பே பார்த்தோம். இது பெற்றோரின் செய்கைகளைக் கவனிப்பதால் குழந்தையிடம் நாளடைவில் வளர்வதில்லை; பெற்றோர்களின் ஆணைகளையும் கண்டனங்களையும் கொண்டே வளர்கின்றது. பெற்றோர் சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கலாம். அவர்களே தங்கள் அறிவுரைக்கு மாறாக நடக்கலாம். ஆனால் அவர்கள் போதிக்கிற வழியைப் பின்பற்றியே குழந்தையின் அதீத அகம் வளர்கிறது. அதாவது பெற்றோரின் அதீத அகந்தான் குழந்தையின் அதீத அகத்தை உருவாக்குகின்றது; அவர்களுடைய நடத்தையல்ல. அப்படி உருவாகின்ற குழந்தையின் அதீத அகத்தை மேலும் வலிவடையச் செய்யும் வேறு சாதனங்களும் இருக்கின்றன. குழந்தையின் மனச்சான்றை அமைப்பதில் ஆசிரியர் முக்கிய பங்கு கொள்ளுகிறார். சமய நெறிகளைப் போதிக்கும் சான்றோர்களும், நாட்டின் வழிகாட்டிகளாக அமையும் தலைவர்களும், சமூக அமைதியைப் பாதுகாக்க உதவும் போலீஸ் முதலிய அதிகாரிகளும் வெவ்வேறு அளவில் இந்த அதீத அகத்தின் அமைப்புக்கு உதவுகிறார்கள். பெற்றோரின் நடத்தையும் அதற்குச் சாதகமாக இருப்பது மிகுந்த சிறப்புடையதாகும்.
இப்படி அமைகின்ற அதீத அகமானது ஒருவனைச் சமூகத்திற்கு அடங்கி நடக்கும் குடிமகனாகச் செய்ய உதவுகிறது. அவனிடத்திலே இயல்பாக இருக்கும்படியான தீய உந்தல்கள் சிலவற்றை ஒடுக்கிச் சமூகத்திற்கு அவற்றால் தீங்கு நேரா வண்ணம் காக்கின்றது.
பாலுந்தல் மிக வலிமையானது. வெறுப்பு பகைமை உந்தல்களும் வலிமையுள்ளவையே. இவைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடினால் சமூகம் நிலைகுலைந்து போகுமல்லவா? இவற்றைக் கட்டுப்படுத்தவே அதீத அகம் வேலை செய்கிறது. அதீத அகம் இந்த வகையிலே ஒரு சமூகத்தின் சம்பிரதாயங்களையும், பழக்கங்களையும், பண்பாட்டையும் காக்கும் காவலாளியாகும்.
-------------
10. இயல்பூக்கம்
மனத்திலே இத் என்பதுதான் மிகப் பெரிய பகுதியாக இருக்கிறதென்று பார்த்தோம். அதனுடைய ஆழத்திலே போகப் போக ஒரே இருட்டாக இருக்கிறது. அதாவது அங்குள்ளவை ஒன்றும் நமக்குத் தெரிவதில்லை. ஒரே அந்தகாரத்தில் அவை அழுந்திக் கிடக்கின்றன. இந்த அந்தகாரத்தில்தான் அடக்கப்பட்ட இழிந்த இச்சைகளும் பெரிய அதிர்ச்சியனுபவங்களும் மறைந்துள்ளன என்று தெரிந்துகொண்டோம். அதீத அகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு அடக்கப்பட்ட இச்சைகள் இங்கே பதுங்கி நனவுக்குத் தெரியாமலிருக்கின்றன.
இவை மட்டுந்தான் இத்தில் இருப்பதாகத் தீர்மானம் செய்யக் கூடாது. அங்கே மனிதனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கின்ற சில உந்தல்களும் இருக்கின்றன. அவை அநுபவத்தால் கற்றுத் தெரிந்து கொண்டவை அல்ல. பிறவிலேயே அமைந்துள்ள வேகங்கள் அவை. அவற்றைப் பிறவிச் சக்திகள் என்று கூறலாம். அவை மனிதனை உந்திப் பலவகையான செயல்களிலே ஈடுபடச் செய்வதற்கு ஊக்கம் கொடுப்பதால் அவற்றை இயல் பூக்கங்கள் என்று சொல்லுகிறார்கள். கலவியூக்கம், உணவு தேடூக்கம் என்று இப்படிப் பல இயல் பூக்கங்கள் இருக்கின்றன. இவை விலங்குகளிடத்திலும் காணப்படுகின்றன. விலங்குகள் பொதுவாக இவற்றால் உந்தப்பட்டுச் செயல் புரிகின்றன. பறவை கூடுகட்டுகிறது. தூக்கணாங் குருவி அழகான கூடொன்றை நாரைக் கொண்டு பின்னி விடுகிறது. அந்த வித்தையை அதற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. இது இயல்பூக்கத்தால் உண்டான திறமை. ஆனால் மனிதன் விலங்குகளைப்போல முற்றிலும் இயல் பூக்கங்களின் உந்தல்களாலேயே செயல்புரிவதில்லை. அந்த இயல் பூக்கங்களால் ஏற்படும் சில இச்சைகள் இழிந்தவை என்று அவற்றை அடக்க முயலும் மனச் சான்றும் அவனிடத்திலே அமைகின்றது. அதீத அகம் அந்த வேலையை மேற்கொள்ளுகின்றது.
இயல்பூக்கங்களைப் பற்றிப் பல வகைப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இயல்பூக்கங்களின் எண்ணிக்கையை நிருணயம் செய்யவும் அவற்றால் தனித்தனி உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளை வகுக்கவும் மெக்டூகல் போன்ற மனவியலறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். மெக்டூகல் பதினான்கு இயல்பூக்கங்கள் முக்கியமானவை என்று வகுத்திருக்கிறார். பிராய்டு இயல்பூக்கங்களைப் பற்றி முடிவாக ஒரு கருத்திற்கு வந்தார். அவர் கருத்தின்படி இயல்பூக்கங்களை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். ஒருதொகுதி உயிர் நிலைபெற்றிருப்பதற்கு உதவுகின்றது. மற்றொரு தொகுதி உயிர் நீங்கிச் சாவு ஏற்படுவதற்கு உதவியாக நிற்கின்றது. சடப் பொருளாக இருந்த உலகத்திலே முதலில் எப்படியோ உயிர் தோன்றியிருக்கிறதல்லவா? அப்படித் தோன்றிய பிறகும் பழைய நிலைக்கே செல்லுவதில்தான் இந்த உயிர் வாழ்க்கை முடிகின்றது. அவ்வாறு முடிவதற்கு இந்தத் தொகுதி உதவி செய்கின்றதாம்.
உயிர் நிலைப்பதற்கு உதவி செய்யும் இயல்பூக்கங்களைப் பற்றி நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உணவு தேடூக்கம், கலவியூக்கம் முதலானவை உயிர் நிலைப்பதற்கு உதவுகின்றன அல்லவா? இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதுபோல மற்றத் தொகுதியைச் சேர்ந்த இயல்பூக்கங்களைப்பற்றித் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அகம், அதீத அகம் ஆகியவற்றின் செயல்களைப்பற்றி இன்னும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இத்திலிருந்து அகம் பிறக்கிறதென்றும், அகத்திலிருந்து அதீத அகம் பிறக்கிறதென்றும் கண்டோம். இத் தனது இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆசைப்படுகிறது; அதற்கு வேறு எண்ணம் கிடையாது. இன்ப நாட்டமே அதன் லட்சியம்.
இந்த இத் வெளியுலகத்தோடு மோதும்போது சில ஒழுங்குமுறைகளை அனுசரிக்க வேண்டிய அவசியத்தை அநுபவத்தால் அறிந்து கொள்ளுகிறது. அப்படி அறியும் பாகமே அகமாக உருவெடுக்கின்றது. ஆதலால் அகம் இன்ப நாட்டக் கொள்கையிலிருந்து வேறுபட்டு ஒழுங்கு முறை நாட்டக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக அமைகின்றது. சூழ்நிலையும் சமுதாயமும் உருவாகியிருக்கின்ற உண்மை நிலையையுணர்ந்து அவற்றிற் கேற்றவாறு நடத்தையை அமைக்கவே அகம் விரும்புகின்றது. ஆதலால் இத் தனது விருப்பம் போல் காரியம் செய்ய அகம் விடுவதில்லை. இருந்தாலும் அது இத்துக்கு விரோதமானதல்ல. சமுதாயத்திற்கு உகந்த வழியில் இத்தின் இச்சைகளை நிறைவேற்ற அது முயல்கிறது. இத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காவல் சக்தியெல்லாம் இந்த அகத்திலேயே இருக்கின்றது. கலவியூக்கத்தால் உந்தப்பட்டு இத் பொங்கி யெழுகின்றது என்று வைத்துக் கொள்ளுவோம் அந்த நிலையிலே இத் தன் விருப்பம்போல விலங்கு முறையிலே நடக்குமானால் சமூகத்தில் அமைதி குலைந்து குழப்பமே மிஞ்சும். அந்தச் சமயத்திலே அகம் இத்தைக் கொஞ்சம் பொறுக்கும்படி கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தின் கலவியூக்கத்தைச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வழியில் நிறைவேற்ற முயல்கிறது. கலியாணம் போன்ற சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஒழுங்குக்கு உட்பட்டு இத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகிறது. இந்த அகம் பெரும்பாலும் சூழ்நிலையோடு மோதுவதால் ஏற்படுவதாயினும் இதன் அமைப்புக்குப் பாரம்பரியமும் துணை செய்கின்றது.
சில சமயங்களிலே இத் இந்த அகத்தின் கட்டுக்கு மீறித் தொழில் செய்துவிடும். அப்போதுதான் உணர்ச்சி வேகத்தால் காரியம் நடந்ததாக நாம் கூறுகிறோம். உணர்ச்சி வேகத்தால் கொலை செய்பவர்களும் உண்டு.
அதீத அகம் லட்சியத்திலே நாட்டமுடையது. அகம் வரம்பு மீறி இத்தின் இச்சையை நிறைவேற்ற முயலும் போது அதைக் கண்டிக்கிறது. இத் தனது உணர்ச்சி வேகத்தால் இழிந்த தொழில் செய்வதையும், அகம் அந்த இழிதொழிலை வேறு வழிகளில் நிறைவேறும்படி செய்ய முயலுவதையும் அதீத அகம் கண்டிக்கும்.
ஆகவே இத்துக்கு அகம் உடந்தையான தென்றும், அதீத அகம் அகத்தையும் அதன் வாயிலாக இத்தையும் அதன் இழி செயல்களுக்காகத் தண்டிக்கிறதென்றும் தெரிந்து கொள்ளலாம் சில சமயங்களில் அதீத அகம் மிக வன்மையாகக் கண்டிப்பதால் அகம் மிகவும் நைந்துருகும். அந்த நிலையிலே ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ள முனைவதோடு தற்கொலை செய்து கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தில் எண்ணுகிறான். இதிலிருந்து அதீத அகம் எப்பொழுதுமே இத்துக்கு உடந்தையாக இருக்காது என்று தோன்றலாம். ஆனால் இத் மிகவும் தந்திரம் வாய்ந்தது. அப்படி லேசாக அதீத அகத்தை விட்டு விடுவதில்லை. அதீத அகத்தின் நீதி நெறி ஆர்வத்தையே சில சமயங்களில் தனது இயல் பூக்கங்களைத் திருப்தி செய்து கொள்ளப் பயன் படுத்திக்கொள்ளுகிறது.
அது எப்படி முடியும் என்ற சந்தேகம் உடனே தோன்றலாம். அதை நிவர்த்தி செய்ய ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவன் நீதிமார்க்கத்தில் செல்லுவதிலே மிகுந்த ஆர்வமுடையவன் என்று வைத்துக் கொள்வோம். அவன் தவறு செய்கின்றவர்களிடம் கோபங்கொள்ளுகிறான், தனக்கு அதிகாரமிருந்தால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் அந்தத் தவறான வழிகளையே ஒழித்துக் கட்ட முயல்கிறான். தவறு செய்தவர்களெல்லாம் அவன் கையில் படாதபாடு படுகிறார்கள். அவர்களை அவன் அடிக்கிறான்; சிறைப் படுத்துகிறான்; ஹிம்சை செய்கிறான். அவன் உயர்ந்த லட்சியத்தை நினைத்து இவ்வாறு கொடுமைப் படுத்துகிறானென்றாலும் அவனிடத்திலே இத்தின் விலங்குணர்ச்சிகளின் ஆதிக்கத்தைக் காண்கிறோமல்லவா? நீதிநெறியின் பெயரால் அவனுடைய விலங்குணர்ச்சிகள் தலை விரித்தாடுகின்றன. இதற்கு அவனுடைய அதீத அகமும் உடந்தையாக நின்றிருக்கிறது! இத்தின் சூழ்ச்சியிலே அதீத அகம் மயங்கிப் போய் விட்டது. இப்படி இந்த மாய இத் அதீத அகத்தையும் வஞ்சித்துக் கெடுத்துத் தனதுவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது.
அதனால்தான் நம் நாட்டு மகான்களெல்லாம் எல்லா நிலைகளிலும் உணர்ச்சி வேகத்தை அடக்கி ஆள்வதையே உயர்ந்த சாதனை என்று கூறியிருக்கிறார்கள். உயர்ந்த லட்சியத்திற்காகவும் உணர்ச்சி வசப்பட்டுக் காரியம் செய்வதை அவர்கள் மிக மேலானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த நிலைமையிலும் உள்ளத்திலே சமநிலை கொண்டிருக்க வேண்டும். மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றும்போது, “வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க” என்று பாடுகிறார். இயல்பூக்கங்களின் உந்தல்களான வேகத்தையே அவர் குறிப்பிடுகிறார். ஒருவனை அறநெறியின் பெயரால் தண்டிக்கவேண்டியேற்பட்டாலும் அந்த சமயத்திலும் மனத்திலே சமநிலை இருக்கவேண்டும். அறவழியை விட்டுவிலகியவர்களை சம்ஹாரம் செய்யும் இறைவனின் இதழ்களிலே புன்முறுவல் தவழ்வது போல நம்நாட்டுச் சிற்பிகள் சிற்பம் வடித்திருப்பது இந்த உன்னத நிலையைக் காட்டுவதற்கேயாகும். உள்ளத்திலே சமநிலையடைவதே மிகப் பெரிய சாதனையாகும்.
உடலைக்கொண்டு ஒருவன் உழைத்து வேலை செய்கிறானென்றால் அவனுடைய உழைப்புக்கும் ஒரு எல்லையுண்டு; அதற்கு மேலே அவனால் ஓய்வு பெறாமல் உழைக்க முடியாது அவனுடைய உடல் சக்தி முழுவதும் செலவழிந்து போகிறது; அதற்குமேலே அவன் வேலை செய்ய வேண்டுமானால் புதிய சக்தி பெறுவதற்கு ஓய்வும் உணவும் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவனால் உடலைக் கொண்டு மேலும் உழைக்க முடிகிறதில்லை. இதிலிருந்து உடலின் ஆற்றல் ஓர் அளவுக்குட்பட்டது என்று தெரிகிறது. அதுபோலவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மனத்திற்கு உள்ள ஆற்றலும் ஓர் அளவுக்கு உட்பட்டதே. அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சேர்ந்திருக்கின்றது. ஒரு பகுதியிலே அது அதிகப்படுகிறபோது வேறு இரண்டு பகுதிகளிலே அது இயல்பாகவே குறைகின்றது. தூங்கும் நிலையிலே அகத்தின் ஆற்றல் குறைகிறது. அதிலுள்ள காவல் சக்தியும் எச்சரிக்கை குறைந்து நிற்கிறது. ஆதலால் அந்த சமயத்திலே கனவின் மூலம் இத் தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளுகிறது.
இத்தின் ஆற்றல் மிகுதியாகவுள்ளவன் உணர்ச்சி வேகத்தால் தூண்டப்பட்டுக் காரியம் செய்வான். அகத்தின் ஆற்றல் மிக்கவன் சமூகம் உள்ள நிலையை அனுசரித்து அதற்கேற்பக் காரியம் செய்வான். அதீத அகத்தின் ஆற்றல் மிக்கவன் லட்சியவாதியாக இருப்பான்.
அதீத அகம் இத்துக்கு உடந்தையாக இருப்பதும் உண்டு என்று பார்த்தோமல்லவா? ஒருவன் தனது செயலுக்காகச் சில சமயங்களில் வருந்துகிறான்; அவமானமடைகிறான். ஏதாவது ஒரு வேளையில் இந்த அவமான உணர்ச்சி எல்லை கடந்து போகும். அப்போது அவன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகிறான். இந்த நிலையிலே அதீத அகம் இத்துக்கு உடந்தையாக நின்று இத்தில் உள்ள சாவு இயல்பூக்கங்களான தொகுதிக்கு உதவியாக வேலை செய்கின்றது.
ஆரம்ப காலத்திலே பிராய்டு நனவிலி மனம் என்ற பகுதியைப் பற்றிப் பேசலானார். மனத்திலே அவ்வாறு ஒரு பகுதி இருப்பதாகவும் அது மிக வலிமை பொருந்தியதென்றும் அவர் தமது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டார். பிறகு நனவிலி மனம் என்று கூறுவதையும் விடுத்து இத், அகம், அதீத அகம் என்ற பிரிவுகளையே வற்புறுத்தலானார்.
இவ்வாறு கூறும்போது இத்தும் நனவிலி மனமும் ஒன்று என்றோ அல்லது அகமும் நனவுமனமும் ஒன்று என்றே கருதுவது முற்றிலும் சரியல்ல என்பது விளங்கும். இங்கே உள்ள படமும் அதைத் தெளிவாக்குவதைக் கவனிக்கலாம்.
![](https://www.projectmadurai.org/images/0679_atimanam02.jpg)
வெளியுலகம் இத் என்பதுடன் மோதுகின்றது. அதன் பயனாக அகம் பிறக்கிறது. அகத்திலிருந்து அதீத அகம் பிறக்கிறது. நனவு மனத்தின் எல்லையைக் கடந்தே அகம் செல்லுகிறது. அங்கே நனவடி மனம் அகத்திற்கும் இத்துக்கும் இடையே எங்கோ இருக்கிறது. அகமானது நனவு மனத்தின் எல்லையையும் தாண்டியிருப்பது போலவே இத் நனவிலி மனத்தின் எல்லையையும் தாண்டியிருக்கிறது. அதீத அகம் நனவு எல்லையிலும் இருக்கிறது; அதைத் தாண்டி நனவிலிப் பகுதியிலும் அது இருக்கின்றது.
-------------
11. கவலை
“கவலை துறந்திங்கு வாழ்வதே வீடென்று காட்டும் மறைகளெல்லாம்” என்று பாரதியார் பாடுகிறார். உலக வாழ்க்கையிலே எத்தனையோ விதமான கவலைகள் மனிதனை வாட்டுகின்றன. அவை யெல்லாம் தாக்காதவாறு வாழக் கற்றுக் கொண்டவன் உண்மையான இன்பத்தைப் பெறுவான் என்பதில் ஐயமில்லை.
கவலையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதற்கு அடிப்படையாக இருப்பது பயம் என்று காணலாம்.
பயத்திற்கு அடிப்படை என்னவென்று ஆராய்வது சுவையான காரியம். பிறந்த குழந்தைக்கு மேலேயிருந்து கீழே திடீரென விழுவது போன்ற நிகழ்ச்சியிலே பயமுண்டாம். அந்த பயம் பிறவியிலேயே வந்திருக்கிறது என்று கூறுவார்கள். மரக் கிளைகளிலே இரவு நேரத்தைக் கழித்த ஆதி மனிதர்கள் தூக்க நிலையிலே தவறிக் கீழே விழுந்திருக்கலாம். இப்படிப் பல தடவைகளிலே பல பேர் விழுந்து விழுந்து துன்பப்பட்டதால் ஏற்பட்ட பயம் அப்படியே தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறதாம். அதனால் தான் உயரத்திலிருந்து கீழே விழுவது போல் வேகமாக வருவதிலே குழந்தை பயமடைகிறது. இதே போலக் குழந்தை பெரிய சப்தத்தைக் கேட்டும் பயமடைகிறது. இடி முழக்கம் கேட்ட குழந்தை வீரிட்டு அழுகிறது. இந்த பயமும் ஆதி காலத்திலிருந்து வருகின்றதாம். இவை தவிர வேறு வகையான பயங்களெல்லாம். பின்னால் ஏற்படுகின்றன வென்றும், நல்ல முறையிலே குழந்தையை வளர்த்தால் கூடிய வரை பயங்களைக் குறைத்து விடலாம் என்றும் கூறுவார்கள்.
இருட்டைக் கண்டாலும் குழந்தைக்கு இயல்பாகவே பயம் உண்டென்றும், இந்த பயமும் பரம்பரையாக வந்தது என்றும் சிலர் கூறுவார்கள். ஆதி மனிதர் பகலை விட இரவு நேரங்களிலேதான் அதிகமான துன்பங்களை அடைந்திருக்க வேண்டும்.
இருட்டைப் பற்றிய பயம் குழந்தைக்கு இயல்பாகவே கிடையாதென்று வாதிப்பவர்கள் உண்டு. குழந்தையை இருட்டறையிலேயே தூங்க வைத்துப் பழக்கப்படுத்துவதால் இந்த இருட்டுப் பயத்தை இல்லாமலேயே செய்து விடலாம் என்பார்கள்.
பிறந்த குழந்தைக்கு எவ்விதமான பயமும் கிடையாதென்றும் பயங்களெல்லாம் பின்னால் ஏற்படுகின்றவையே என்றும் கூறுபவர்கள் உண்டு.
மேலே குறிப்பிட்ட பயங்களெல்லாம் வெளியுலகத்தால் ஏற்படக் கூடியவைகள். இவை போன்ற பயங்களல்லாமல் வேறு விதமான பயங்களும் உண்டு.
இத் என்ற மனப் பகுதியிலே பல வகையான தீய உந்தல்களும் இச்சைகளும் இருக்கின்றன. வல்லவா? அவற்றின் தூண்டலால் ஏதாவது தவறு செய்து விடுவோமோ என்கிற பயம் உண்டாகிறது. அதீத அகம் உயர்ந்த நெறி முறையை வகுக்கின்றது. அந்த நெறி முறைக்கு மாறாக நடந்து விட்டபோது அதனால் அவமானமும் பயமும் தோன்றுகின்றன.
பொதுவாகப் பார்த்தால் மனத்திற்குள்ளே உண்டாகின்ற மேலே கூறிய இரண்டு வகையான பயங்களையும் தோன்றாமல் தடுக்க வழியுண்டு என்று தெரியவரும். எண்ணத்திலும் செயலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறவன் பயப்பட வேண்டியதில்லை. பொய் தீர்ந்தால் பயம் தீரும் என்று பாரதியார் எழுதியிருக்கிறார். நேர்மையுள்ளவன் பொய்யுரைக்க வேண்டியதில்லை. மனத்திற்குள்ளே ஏற்படுகின்ற பயங்களைப் போக்க வல்லவனுக்கு வெளியுலக பயம் பெரிதல்ல. அதையும் அவன் தன் விவேகத்தால் ஒழித்து விடமுடியும்.
இவ்வாறு பயம் தீர்ந்தவன் கவலையின்றி வாழலாம். ஆகவே அவன் மேலான இன்பம் அடைகின்றான் இதைக் கருத்திற்கொண்டுதான் வாழ்க்கை நெறியைப் பற்றிக் கூறுகின்றபோது இராமலிங்க வள்ளலார் பயம் பூச்சியமாகப் பெறவேண்டும் என்று குறிப்பாகக் காட்டியிருக்கிறார்.
மேலே விவரித்த மூன்றுவகைப் பயங்களாலும் மனிதனுக்குக் கவலை பிறக்கிறது; மனப் போராட்டங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து அவனுடைய மனிதப் பண்பாகிய ஆளுமையை (Personality) பாதிக்கின்றன.
ஆளுமை என்ற சொல் விரிவான பொருளுடையது. அது ஆளின் தன்மைகளில் ஒன்றுவிடாமல் முழுவதையும் குறிக்கின்றது. அவனுடைய மனத்தின் தன்மைகளை மட்டுமல்ல; தோற்றம், பேச்சு, நடத்தை, பண்பு எல்லா வற்றாலும் ஒருவனுக்கு ஏற்படுகின்ற முழுத்தன்மையை அது காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஆளுமையை உருவாக்குவதில் பாரம்பரியமும், சூழ்நிலையும், வாழ்க்கை அநுபவங்களும், கல்வியும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றன. கவலை, மனப் போராட்டம் முதலியவைகளுக்கும் அதில் பெரும் பங்குண்டு.
ஆகவே ஆளுமை என்பது நிலையாக ஒரே மாதிரி இருக்குமென்று கூற முடியாது. அது மாறி அமைந்து கொண்டே இருக்கிறது. முக்கியமாக ஒருவனுடைய வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் ஆளுமையை ஒருவாறு நிரந்தரமாக அமைப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கின்றன. குழந்தைப் பருவத்திலும், குமரப் பருவத்திலும் அதன் வளர்ச்சி அதிகம். பிறகு முதிர்ந்த பருவத்தில் ஓரளவிற்கு மாறுதலின்றி நிலைபெற்றுவிடுகிறது.
இந்த ஆளுமையைப் பிரதானமாகக் கருதி பிராய்டு தமது உளப்பகுப்பியல் கொள்கையை வகுக்கிறார். ஆளுமை எவ்வாறு அமைகின்றதோ அதற்கேற்றவாறு தான் ஒருவனுடைய வாழ்க்கையின் சிறப்பும், தாழ்வும், வெற்றியும், தோல்வியும் ஏற்படுகின்றன.
ஒருவனுடைய இத் என்ற மனப் பகுதியின் வேகங்கள் சமூகச் சூழ்நிலையின் சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்கள், கட்டுபாடுகள் முதலியவற்றோடு மோதுகின்றன. மோதி அவற்றால் பலவகையாக மாறியமைகின்றன. இதன் விளைவாகவே ஆளுமை அமைகிறது என்றும் இத்தின் வேகங்களில் பால் உந்தலே அடிப்படையானதும் பிரதானமானதும் என்றும் பிராய்டு கருதுகிறார்.
ஆனால் அவரோடு தொடக்கத்தில் ஒத்துழைத்துப் பிறகு கருத்து மாறுபட்ட ஆட்லரும் யுங்கும் இந்த ஆளுமையின் அமைப்பைப் பற்றி வேறு வேறு, விதமான எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.
மனிதன் பிறந்து குழந்தையாக இருக்கும் பருவத்தில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய சக்தியில்லாதவனாக இருக்கிறான். சூழ்நிலையிலிருப்போரைச் சார்ந்து நின்று அவர்களுடைய உதவியை எதிர்பார்ப்பவனாகவே அவன் தனது வாழ்க்கையைத் தொடங்குகிறான். அதன் காரணமாக அவன் மனத்திலே தான் மற்றவர்களை விடத் தாழ்ந்தவன் என்கிற தாழ்வுணர்ச்சி தோன்றுகிறது. இதைப் போக்க அவன் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களைவிடத் தான் உயர்ந்தவன் என்று காட்ட வேண்டுமென்ற உயர்வுந்தல் பிறக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டே அவன் வாழ்க்கை அமைகிறது; அதுவே அவனுடைய ஆளுமையை உருவாக்குகிறது என்று ஆட்லர் கூறுகிறார்.
நனவிலி மனத்தின் அம்சமாக ஒருவனுடைய மூதாதையர்களின் இச்சைகளும் உணர்ச்சிகளும் இருக்கின்றன வென்றும், மனித இனத்தின் நனவிலி உணர்ச்சிகளும் ஒருவனுடைய நனவிலி மனத்தில் புதைந்திருக்கின்றன வென்றும் யுங் கருதுகிறார். நனவிலி மனத்தின் அடிப்படைச் சக்தி ஆன்மா சம்பந்தப்பட்டதாக இருக்கிறதென்பது இவருடைய ஆராய்ச்சியின் முடிவு. இந்த சக்தி சமூகத்திலே எவ்வாறு பயனடைகின்றதோ அதற்கேற்றவாறு ஒருவனுடைய ஆளுமை அமைகின்றதென்று யுங் கூறுகிறார்.
-----------
12. கனவு
கனவு என்பது ஒரு சுவையான அநுபவம். உறங்கும் நிலையிலே கனவு தோன்றுகிறது. கனவு காணாதவர்களேயாரும் இல்லை என்று கூறலாம். கனவு ஏன் உண்டாகிறது; அதன் பொருள் என்ன; அதனால் மனிதனுக்கு நன்மையுண்டா என்றெல்லாம் ஆராய்வது மேலும் சுவையான காரியமாகும்.
ஹிஸ்டிரியா முதலான மனக் கோளாறுகளை ஆராய்ந்து அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் தொழிலிலே பிராய்டு ஈடுபட்டிருந்தார். இந்த சிகிச்சை முறையின் ஆரம்ப நிலையிலே மனவசியம் முக்கியமான சாதனமாக இருந்தது. மனவசிய முறை முற்றிலும் திருப்தியாக இல்லையென்று அநுபவத்தில் கண்ட பிராய்டு தடையில் தொடர்முறை, கனவுப் பகுப்பு முறை முதலியவற்றை வகுத்தாரென்றும், அவற்றைப் பயன்படுத்துங் காலத்தில்தான் அவர் மனத்திலே நனவிலிமனம் என்ற பகுதியிருப்பதைக் கண்டறிந்தாரென்றும் முன்பே அறிந்து கொண்டிருக்கிறோம்.
மனிதன் காண்கின்ற கனவுகளை ஆராய்வதே ஒரு பெரிய கலையாக ஏற்பட்டுவிட்டது. அதன் பாஷையே தனி. ஏனென்றால் கனவிலே தோன்றுகிற நிகழ்ச்சிகள் சமீபத்திலே வாழ்க்கையில் ஏற்பட்ட அநுபவங்களைக் கொண்டிருந்தாலும் அவை குறிக்கின்ற விஷயங்கள் வேறாக இருக்கும். வாழ்க்கை அநுபவங்கள் வெறும் மேற்போர்வைதான்; அற்றின் மூலம் நனவிலி மனத்திலிலுள்ள இச்சைகள், போராட்டங்கள் ஆகியவை மாறுவேஷந்தரித்து வெளியாகின்றன. அவற்றின் வேஷத்திற்குப் பொருள் கண்டுபிடிப்பதே ஒரு நுட்பமான வேலை. அடக்கப்பட்ட இச்சைகள், நிறைவேறாத ஆசைகள் எல்லாம் மனச்சான்றுக்குத் தப்பித்துக் கொண்டு வெளியே கனவில் தோன்றுவதற்கு இப்படி மாறுவேஷம் போடுகின்றனவாம். மேலும் கனவிலே தோன்றுகிற பொருள்களைச் சின்னங்களாகப் பலசமயங்களில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று பிராய்டு கூறுகிறார். இந்தச் சின்னங்கள் மூலமாகவும் இச்சைகள் மனச்சான்றுக்குத் தப்பி வெளிவருகின்றனவாம்.
உதாரணமாகக் கனவிலே தோன்றுகிற பாம்பு ஆணின் இனப் பெருக்கு உறுப்பைக் குறிக்கின்றதாம். கனவிலே தோன்றுகிற அரசி அல்லது ஆசிரியை அல்லது வேலைக்காரி ஒருவனுடைய தாயைக் குறிக்கலாம். ஒருவனுடைய சொந்த சகோதரி ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் நர்ஸாகக் கனவிலே காணப்படலாம். நர்ஸை சாதாரணமாக சகோதரி என்று அழைப்பது வழக்க மல்லவா?
இவ்வாறு கனவிலே மாறுவேஷங்களும் சின்னங்களும் தோன்றுகின்றன. இவை யெல்லாம் உலகத்திலுள்ள எல்லா நாட்டினருக்கும் பொதுவாக இருக்கு மென்று கருதலாகாது. ஒரு சில பொதுவாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை அந்தந்த நாட்டின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சமூக சம்பிரதாயங்கள், சமயக் கோட்பாடுகள் முதலானவற்றைப் பொருத்து அமையும்.
பாம்பு என்கிற சின்னத்தால் நம் நாட்டிலே குண்டலினி சக்தியைக் குறிப்பிடுகிறோம். பாம்பாட்டிச் சித்தர் பாடலிலே வரும் பாம்பு இந்தக் குண்டலினி சக்திதான். ஆதலால் இந்தக் கருத்திலே ஊறியிருக்கின்ற ஒருவனுடைய கனவில் வரும் பாம்பு மனிதனுக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆன்மிக சக்தியைக் குறிப்பதாக இருக்கலாம். ஆகவே கனவுச் சின்னங்களுக்கு ஒருவனுடைய பண்புக்கு ஏற்றவாறு பொருள் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது.
இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்த்தோமானால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சில கனவுக் குறியீடுகள், சின்னங்கள் வேறுபட்டிருக்கும். அது அவனுடைய தனிப்பட்டசூழ்நிலை அநுபவங்கள், பண்பாடு முதலியவற்றைப் பொருத்திருக்கும். இதையும் கவனத்தில் வைத்துக் கொண்டு கனவின் பொருளை ஆராய முற்பட வேண்டும்.
ஆயிரக்கணக்கான கனவுகளை ஆராய்ந்து அவற்றைப் பற்றிப் பல கருத்துக்களை பிராய்டு வெளியிட்டிருக்கின்றார். கனவுகளின் விளக்கம் என்று அவர் ஒரு பெரிய நூல் எழுதியிருக்கிறார். அவருடைய கருத்துப்படி ஒவ்வொரு கனவையும் பகுத்துப் பார்த்து விளக்க முடியும். “ஒவ்வொரு கனவுக்கும் குறிப்பான பொருள் இருக்கின்றது என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். கனவை விஞ்ஞான முறையில் விளக்குவதும் சாத்தியமானதே” என்று பிராய்டு எழுதுகிறார்.
ஒவ்வொரு கனவுக்கும் ஒரு விளக்கம் கண்டுபிடிக்கலாமென்றும், கனவில் தோன்றுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் விளக்கம் இருந்தே தீர வேண்டும் என்றும் பிராய்டு வற்புறுத்துவதைச் சில உளவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளுவதில்லை. இருந்தாலும் பொதுப்படையாகப் பார்க்கும்போது பிராய்டின் சித்தாந்தம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கனவைப் பகுத்துப் பார்த்து அதற்கு விளக்கம் கூறுவது மிக நுட்பமான காரியம். விஞ்ஞானப் பரி சோதனைக் கூடத்திலே பெளதிகம் ரசாயனம் முதலிய துறைகளிலே ஆராய்ச்சி செய்வது போலத் திட்டமான முறைகளிலே கனவை ஆராய்வதென்பது சாத்தியமில்லை. இன்ன கனவுக்கு இன்ன பொருள் என்றும் முன்கூட்டியே சூத்திரங்கள் உண்டாக்கி விட முடியாது. “ஒரே கனவு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பொருள் கொண்டிருக்கும்; ஒரே மாதிரியான கனவை வேறு வேறு மனிதர்கள் கண்டால் அப்பொழுதும் அம் மனிதர்களின் மனப்பாங்குக்கு ஏற்ப அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும்” என்று பிராய்டு கூறியிருக்கிறார்.
ஆதலால் கனவைப் பகுத்து அதன் காரணத்தையும் அது குறிக்கும் பொருளையும் அறிவதற்கு நுட்பமான திறமையும் அநுபவமும் வேண்டும். மேலும் கனவைப் பகுத்து ஆராய்வதோடு ஒருவனுடைய நடத்தையையும் கவனிக்க வேண்டும். தடையில் தொடர் முறையாலும் அவன் மனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வகையான சோதனையும் மற்றவற்றிற்கு உதவியாக நின்று அவன் மனத்தில் மறைந்துள்ள உந்தலை அல்லது இச்சையை அறிவதற்குக் காரணமாகின்றது.
கனவை எவ்வாறு பகுத்து ஆராய வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிராய்டு தான் கண்ட ஒரு கனவையே எடுத்துக் கொண்டு அதை எவ்வாறு பிரித்துப் பார்க்க வேண்டும் என்று காட்டுகிறார்.
“இவ்வாறு விளக்கம் கண்டு பிடித்து ஆராயும்போது ஒவ்வொரு கனவும் ஏதாவதொரு ஆசையை நிறைவேற்றுவதற்காகவே ஏற்படுகிறது” என்று அவர் முடிவுகட்டுகிறார்.
பிராய்டின் கொள்கைகளிலே இதுவும் முக்கியமானது. இதை விளக்குவதற்கு அவர் சுலபமாகத் தாம் செய்து காட்டக் கூடிய ஒரு கனவைப் பற்றிக் கூறுகிறார். ஆசை நிறைவேற்றத்திற்காகத் தான் கனவு ஏற்படுகின்றது என்பதற்கு அவர் தாமாகவே உண்டாக்கிக் கொள்ளக் கூடிய அந்தக் கனவு எளியதாக இருந்தாலும் சிறந்த உதாரணமென்கிறார்.
உப்பு நிறையப் போட்டிருக்கும் உணவை இரவு நேரத்திலே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டால் பாதித் தூக்கத்திலே அவருக்கு விழிப்புண்டாகுமாம். உப்பு அதிகமாக உணவிலிருந்ததால் தாக மெடுக்கிறது. அதனால் ஒரு கனவு ஏற்படுமாம். அதிலே அவர் ஏதாவது ஒரு வகையில் தாக விடாய் செய்து கொள்ளுவது போன்ற சம்பவம் தோன்றுமாம். பிறகு விழிப்புண்டாகுமாம்.
குழந்தைகளின் கனவு சிக்கல் அதிகமில்லாதது. ஆதலால் ஆசை நிறைவேற்றம் என்ற தத்துவத்தை அதிலே மிகத் தெளிவாகக் காணலாம் என்று பிராய்டு கூறுகிறார்.
வயதாக ஆகப் பலவிதமான அநுபவங்களும் இச்சைகளும் ஏற்படுகின்றன. ஆதலால் அப்பொழுது உண்டாகின்ற கனவை ஆராய்வதற்குத் திறமையும் அநுபவமும் அதிகமாக வேண்டும்.
கனவு ஒரு வகையிலே உறக்கத்தைப் பாதுகாக்கின்றது. “நனவு நிலையிலே கைகூடாத பல ஆசைகள் கனவிலே கைகூடி விடுகின்றன; அதனால் மனத்திற்கு ஆறுதல் கிடைக்கிறது. அதனால் ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் உண்டாகின்றன; ஆதலால் அந்த வகையிலே கனவு உறக்கத்திற்கு உதவியாக நிற்கின்றது” என்று பிராய்டு சொல்லுகிறார்.
நனவிலி மனத்திலே பல தகாத இச்சைகள் அடக்கப்பட்டுக் கிடக்கின்றன என்பதைப் பற்றி முன்பே அறிந்து கொண்டோம். அந்த இச்சைகள் விழிப்பு நிலையிலே மேலே வந்தால் பெரும்பாலும் மனச்சான்றால் தடுக்கப்பட்டு விடும். வெற்றி பெறாத காரணத்தால் அந்த இச்சைகள் வேறு வழிகளிலே வெளிப்பட்டுத் திருப்தி பெற முயல்கின்றன. அதற்கு உறக்கம் ஒரு நல்ல சாதகமாக அமைகின்றது.
உறக்க நிலையிலும் மனம் வேலை செய்து கொண்டு தானிருக்கிறது. மனச்சான்றும் காவல் சக்திகளும் அப்பொழுதும் வேலை செய்தாலும் அவற்றின் வலிமை சற்று தளர்ந்து போகிறது. உறக்க நிலையிலே அவற்றின் கூர்மை கொஞ்சம் மழுங்கிப் போகிற தென்று சொல்லலாம். ஆதலால் அந்தச் சமயம் பார்த்து அந்த இழிந்த உந்தல்கள் வெளியே வந்து கனவாகத் தோன்றுகின்றன. அப்படித் தோன்றுகிறபோதும் வெளிப்படையாக நின்றால் அதீத அகம் தடைசெய்து விடுமென்று மறைமுகமாக மாறுவேஷம் போட்டுக் கொண்டு தோன்றுகின்றன. கனவிலே வருகின்ற குறியீடுகளுக்கும், விபரீத நிகழ்ச்சிகளுக்கும் இதுவே காரணம்.
---------
13. அரக்கனின் ஆதிக்கம்
மனிதனுடைய அடிமனம் (நனவிலி மனம்) எது என்பது பற்றியும் அதிலே அழுந்திக் கிடக்கிற உந்தல்கள், இச்சைகள் பற்றியும் பொதுவாகத் தெரிந்து கொண்டோம். அடிமனம் எப்படியெல்லாம் தனது வல்லமையை வெளிப்படுத்துகின்றது என்றும் கண்டோம்.
இந்த அடிமனத்தின் வேலையால் மனிதனுடைய நடத்தை பாதிக்கப்படுகிறது. அதனால் அவன் எல்லாச் சமயங்களிலும் ஏற்ற முறையிலே காரியம் செய்வதில்லை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவகையிலும் அவன் நடக்கிறான்.
இவ்வாறு பலர் பலவிதங்களிலே நடப்பதன் விளைவாகவே சமூகம் அமைகின்றது. பிறகு அந்தச் சமூகம் வருங்கால மக்களைப் பாதிக்கின்றது. குழந்தைகள் சமூகச் சூழ்நிலையால் பாதிக்கப் படுகிறார்கள். இந்த மாதிரியாக சமூகமும் மனிதனும் மாறிமாறிப் பாதிப்பதால் முன்னேற்றம் தடைப்படுகிறது. யாராவது ஒரு சில மக்களே இந்தத் தடைகளையெல்லாம் மீறி நின்று உயர்வடைகிறார்கள். அப்படி விடுதலை பெற்று நிற்பவர்களை உலகம் போற்றுகின்றது; மகான்கள் என்று கொண்டாடுகின்றது.
பெரும்பாலான மக்கள் கட்டுண்டே கிடப்பதால் சமூகத்திலே விரைவான முன்னேற்றம் ஏற்படுவதில்லை என்று பிராய்டு கருதுகிறார். சமூகம் ஒரே நிலையில் சுழன்று கொண்டுதானிருக்கும்; அதை மீறி நின்று ஒரு சிலரே மேன்மையடைய முடியும்; அவர்கள் ஏற்படுத்துகின்ற இயக்கங்கள், எண்ணப் புரட்சிகள் ஓரளவு சமூகத்தை விழிப்படையச் செய்யும்; ஆனால் அது பெரியதோர் அளவிற்கு முன்னேற்றத்தை உண்டாக்குவதில்லை; அப்படி உண்டாக்க முடியுமானால் புத்தர், இயேசு போன்ற மகான்களாலும், அவர்களைப் போலவே உண்மை ஞானம் பெற்ற மற்ற மகான்களாலும் நமக்குக் கிடைத்துள்ள உதாரணங்களும் உபதேசங்களுமே போதாவா என்று கேட்பவர்களுண்டு. இவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திலே நம்பிக்கை குறைந்தவர்கள்.
இந்த நிலையிலிருந்து சமூகம் விடுபட வேண்டுமானால் குழந்தைகளை வளர்க்கும் முறையிலும், அவர்களுக்குக் கல்வியளிக்கும் முறையிலும் மனவியல் தத்துவங்களை நன்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிராய்டு கருதுகிறார். அதற்கு முதற்படியாகப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மனவியலைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை காம் இங்கு கவனிக்க வேண்டும். அடிமனத்தில் இழிந்த இச்சைகளும், உங்தல்களும், இயல் பூக்கங்களும் பதுங்கியிருக்கின்றன என்றும், அவை எவ்வாறு வெவ்வேறு வழிகளில் வெளியாகித் திருப்தி பெற முயல்கின்றன என்றும் கண்டோம்.
மனத்திற்குள்ள ஆற்றல் ஒரு குறிப்பிட்ட அளவுடையது தானென்றும், அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளிலே ஒரு சந்தர்ப்பத்தில் பல வேறு அளவுகளில் இருக்கின்றது என்றும் முன்பே குறிப்பிட்டேன். இத்தின் ஆற்றல் அதிகப்படுகின்றபோது மற்ற இரண்டின் ஆற்றல் அந்த அளவுக்குக் குறைந்து போகும். அதீத அகம் முன்பே எச்சரிக்கையாக இருந்து இத்தின் போக்கைத் தடைசெய்யாவிடில் இத்தின் ஆற்றல் மிகுந்து விடுகிறது.
காம இச்சைகளைக் கட்டுப்படுத்தி உள்ளத்தை ஆன்ம ஞானத் தேட்டத்திலே சதா ஈடுபடச் செய்ய விரும்பியவர்கள் பழங்காலத்திலே மனித சஞ்சாரமற்ற காடுகளுக்குச் சென்றதில் நிறைந்த பொருள் இருக்கிறது. இத்தின் இழிந்த உந்தல்கள் மேலோங்குவதற்குத் தூண்டுதல்களாக இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதையே அவர்கள் முக்கியமாகக் கருதினார்கள். உணவுக் கட்டுப்பாடு செய்ததும், சாத்துவிக உணவுமுறையை அனுஷ்டித்ததும் இந்த நோக்கத்தைக் கொண்டேதான்.
இதிலிருந்து சமூகத்தில் வாழும் நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளக் கூடும். இழிந்த உணர்ச்சிகளுக்கு ஆதரவாக அவற்றை மேலெழுப்பும் காட்சிகளைக் காண்பதோ நூல்களைப் படிப்பதோ இத்தின் ஆற்றலுக்கு வலிமை தேடுவதாக முடிகிறது. அது நமது சமூகத்திற்குப் பாதகம் செய்வதாக அமையுமென்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம்.
புதிய பாரத சமுதாயத்தை நமது பண்பாட்டின் அடிப்படையிலே உருவாக்க முனைந்திருக்கும் நாம் இன்று இந்த விஷயத்தைப் பற்றித் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். வாழ்க்கை முறையிலே சில லட்சியங்களை அடிப்படையாக நமது நாடு கொண்டிருக்கிறது. அந்த லட்சியங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்களையே இந்த நாடு போற்றுகிறது. அந்த லட்சியங்களையே அஸ்திவாரமாகக் கொண்டு சமூகத்தை அமைக்கவும் விரும்புகிறது.
அப்படியிருக்கும் போது அதற்கு விரோதமான இச்சைகள் வளர்வதற்குக் தூண்டுகோலாக இருக்கும் எதையும் நாம் அநுமதிக்க முடியுமா?
சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் சிலவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு உதவுவது போலத் தனிப் பட்டவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிமன உந்தல்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்கும் பிராய்டின் கொள்கைகள் உதவுகின்றன. அவர் கூறுவதில் சில கருத்துக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படாமலிருக்கலாம்; தவறு என்று கூட எதிர் காலத்தில் நிரூபிக்கப்படலாம். ஆனால் அவர் ஆராய்ந்து கண்ட அடிப்படைக் கருத்துக்களிலே சந்தேகமில்லை. அவை மனத்தின் தன்மைகளை அறிந்து கொள்வதிலே ஒரு பெரிய முன்னேற்றத்தை உண்டாக்கி விட்டன.
அவற்றைத் தெரிந்து கொண்டால் ஒவ்வொருவனும் தனது வாழ்க்கையைத் திருத்திக் கொள்ளுவதற்கு அநுகூலமுண்டாகும். மனம் என்பது குரங்குக்குச் சமானம் என்று பெரியவர்கள் ஏன் கூறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு விளங்கும்.
மனத்தின் தன்மைகளை அறிந்து அம்மனத்தை விவேகத்தால் நல்வழியில் செல்லுமாறு செய்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றியாகும்.
---------
This file was last updated on 8 Nov. 2019.
Feel free to send the corrections to the Webmaster.