சிவன்
ந.சி. கந்தையா
சிவன்
1. சிவன்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. சிவன்
சிவன்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : சிவன்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
சிவன்
முன்னுரை
இவ்வுலகின் ஆங்காங்கு வழங்கும் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய பழைய வரலாறுகளைக் கொண்டு மக்கட் குலம், ஆதியில் ஒரு நடு இடத்திற் பெருகியிருந்து பின்பு உலகின் பல இடங்களுக்குப் பிரிந்து சென்று பற்பல குலங்கள் போற் பெருகிற்று எனப் பழஞ் சரித்திரக் காரரும், மொழி ஆராய்ச்சியாளரும் கருதுகின்றனர். உலக மக்களின் சமயத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்த வெஸ்ரப் (Westropp) என்னும் ஆசிரியர் முற்கால மக்களின் சமயம் தனித்தனியே தோன்றி வளர்ச்சி யடைந்ததன்று; எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படை ஒன்றே எனக் கூறியுள்ளார். உலகில் தோன்றியிருந்த பழைய நாகரிகங்களுக்கெல்லாம் மிகப் பழைமை உடையது சிந்து வெளி நாகரிகமெனப் பழைமை ஆராய்ச்சியில் தலைசிறந்த அமெரிக்கப் பேராசிரியர்களாகிய பிராங் போர்ட் (Professor Frankfort), வில் துறண்ட் (Wil Durant) முதலியோர் கூறி யுள்ளனர். உலக நாகரிகத்துக்கு அடிப்படை யிலுள்ளது இந்திய நாகரிக மென்பதும், இந்திய நாகரிகமென்பது திராவிட நாகரிகமென்பதும் மேற்புல ஆராய்ச்சி அறிஞர்களால் நன்கு ஆராய்ந்து காட்டப்பட் டுள்ளன. உலக மொழிகள், உலக நாகரிகங்களுக்குள் தொடர்பு காணப்படுவது போலவே, தமிழருடைய சிவ வணக்கத்துக்கும் உலக சமயங்களுக்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. பழைய தமிழ் மக்களின் சிவ வணக்கத்தின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய உலக மதங்களாகும் என்பதைக் காட்டுவது கடினமாக இருக்கவில்லை. அவ்வாறிருந்தும் இத்துறையில் தமிழ் அறிஞர் ஊன்றி ஆராய்ச்சி செய்து, அக் கருத்தை உலகுக்கு வெளியிடாதிருப்பது பெருங்குறையாகும். சிவமதமே உலக மதம் என்பதை, நாம், பற்பல மேற்புல ஆராய்ச்சி அறிஞர் கண்ட முடிவுகளை ஏற்ற ஏற்ற இடங்களில் மேற்கோள்களாக எடுத்துக் காட்டியும், ஆங்காங்கு உலகின் பல பாகங்களில் காணப்படுகின்ற, இன்றும் நமது நாட்டில் வழிபடப் படுவனபோன்ற தாய்க்கடவுள், தந்தைக் கடவுளர்களின் வடிவங்களை படங்களமைத்துக் காட்டியும் தெள்ளிதின் விளக்கியுள்ளோம். “சைவ சமயமே சமயம் சமயா தீதப் பழம்பொருள்” என்னுந் தாயுமான அடிகளின் கூற்று இன்றைய ஆராய்ச்சியில் உண்மையாகவே திகழ்கின்றது.
ந.சி.கந்தையா.
சென்னை
15.2.1947
சிவன்
தோற்றுவாய்
மிக முற்காலத்தில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் பொதுவான கொள்கைகள் பல இருந்தன. அவைகளுள் சமயமும் ஒன்று. எல்லா மக்களும் ஒரேவகையாகக் கைக்கொண்ட சமயமே நாளடைவில் சிறிது சிறிதாக வேறுபட்டு இன்றைய பல சமயங்களாகக் காணப்படுகின்றது. எல்லா சமயங்களின் பழைமையை நோக்கி ஆராய்ந்து செல்லின் அவை எல்லாம் ஒரு தனி மதத்திற் சென்று முடிவடைதலைக் காணலாம்.
மக்கள் தோன்றி உருவாலும், அறிவாலும், நாகரிகத்தாலும் படிப் படியே வளர்ச்சியடைந்து வந்துள்ளார்கள்; ஆயினும், அறிவாலும், நாகரிகத்தாலும் மேல்நிலையுறாது பல வகை வாழ்க்கைப் படிகளில் வாழ்ந்து வரும் மக்கட் கூட்டத்தினரும் இடை இடையே காணப்படுகின் றனர். எல்லா மக்களிடையும் கடவுட் கொள்கை இருந்து வருதலைக் காண்கின்றோம். கடவுட் கொள்கை மக்கட் படைப்புக்கு இயல்பாக அமைந்துள்ள ஓர் அறிவுபோலும்! மக்கள் தோன்றிய காலத்தே அரும்பிய இக்கொள்கை காலச் செலவில் வளர்ச்சியடைந்து உயர்ந்த தத்துவக் கொள்கைகளோடு கூடிய சமயங்களாயிற்று.
காலத்துக்குக் காலம் மக்கள் கடவுளைப்பற்றிப் பல்வேறு வகையான கொள்கைகள் உடையவர்களாக இருந்தார்கள். ஆதியில் மக்கள் தென்புலத்தார் (இறந்தவர்) வணக்கமுடையவர்களாயிருந்தனர். திருவள்ளுவனாரும், “தென்புலத்தார் தெய்வம்” எனத் தென்புலத்தாரை முதற்கண் வைத்துக் கூறுதல் காண்க. தென்புலத்தார் வழிபாட்டுக்குப் பின் மக்கள் எல்லோரும் ஓர் அளவு நாகரிக உயர்வு எய்தியிருந்தனர். அக்காலத்தில் ஞாயிற்று வழிபாடு ஓங்கியிருந்தது.1 அயர்லாந்து முதல் சப்பான் தீவுகள் வரையில் இவ்வழிபாடு பரவியிருந்தமையை எச்.சி.வெல்ஸ் (H.G. Wells) என்பார் தமது வரலாற்றுக் காட்சி (Outline of History) என்னும் நூலில் படம் வரைந்து விளக்கியுள்ளார். புதிய கண்டத்திலும், ஞாயிற்று வழிபாட்டுக்குரிய பழைய ஆலயங்களும் செய்குன்றுகளும் காணப்படுகின்றன. இஞ்ஞாயிற்று வழிபாடு படிப்படி வளர்ச்சியடைவதாயிற்று. ஞாயிற்றுக்கு ஆதியில் வழங்கிய பெயர் சிவன். சிவன் வழிபாட்டின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய உலக சமயங்கள் என்பதை இச் சிறிய நூல் நன்கு எடுத்து விளக்குகின்றது. சிவன் வழிபாடு இந்திய மக்களுக்கு மாத்திரமன்று; உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது.
மனு ஞாயிற்றின் புதல்வன்
உலகில் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு நேர்ந்ததென்றும், அதற்குப் பிழைத்திருந்த ஒருவரிலிருந்து மக்கள் பெருகினார்கள் என்றும் இவ் வுலகின் ஆங்காங்கு வாழும் மக்கள் எல்லோரிடையும் ஓர் ஐதீகம் வழங்கு கின்றது.1 இதனால் உலக மக்கள் எல்லோரும் ஒரு கூட்டத்தினராக வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு உண்டா யிற்றென்றும், அவ் வெள்ளப் பெருக்குக்குப் பிழைத்திருந்த மக்கள் சிலரிடமிருந்து மீண்டும் இவ் வுலகில் மக்கள் பெருகினார்கள் என்றும் நாம் உய்த்துணர வேண்டியிருக்கின்றது. வெள்ளப்பெருக்குக்குப் பிழைத் திருந்த மனு ஞாயிற்றின் புதல்வனென்று சொல்லப்படுகின்றார். இதனால் பெரிய வெள்ளப்பெருக்கு உண்டான காலத்திலேயே ஞாயிற்று வணக்கம் மக்களிடையே நன்கு வேரூன்றி இருந்ததென அறிகின்றோம். இவ் வெள்ளப் பெருக்கு எப்பொழுது உண்டாயிற்று என்று அறிய முயலுதல் பயனற்றது. வெள்ளப் பெருக்கு உண்டான காலத்தில் மக்கள் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்கள் என்பது மனுவைப் பற்றிச் சொல்லப்படும் வரலாற்றினால் நன்கு அறிதும்.
வரலாற்று ஆரம்ப காலத்தில் உலக மக்களுக்கிடையே
காணப்பட்ட தொடர்பு
தொல்பொருள், புதைபொருள் ஆராய்ச்சிகளால் மேற்கு ஆசிய, இந்திய, கிழக்குத் தீவு, அமெரிக்க மக்களின் ஆறாயிரம் ஆண்டுகள் வரையிலுள்ள வரலாற்றுச் செய்திகள் சில தெரிய வருகின்றன. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் இவ்வுலகம் முழுமையிலும் ஒரே வகை நாகரிகம் நிலவிற்றென்பதற்குப் பல சான்றுகள் உள.1 கிழக்குத் தீவுகள், அரப்பா, மொகஞ்சொதரோ, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, அரேபியா முதலிய நாடுகளில் வழங்கிய எழுத்துக்கள் ஒரேவகையின.2 இதனை மேல்நாட்டு ஆசிரியர்கள் நன்கு ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள். எழுத் துக்கள் ஒரேவகையாய் இருந்தன என்று கொள்ளுமிடத்து, மொழிகளும் ஒரேவகையாக இருந்தன வென்றே கொள்ளுதல் வேண்டும். ஆஸ்தி ரேலிய மொழிச் சொற்களுக்கும், சுமேரிய மொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை காணப்படுகிறது.3 நியூசீலந்து மக்களின் மொழிச் சொற்கள் பல எகிப்திய சொற்களோடு ஒற்றுமை உடையனவாகக் காணப்படுகின்றன.4 டெயிலர் என்னும் பாதிரியார் தமிழுக்கும் மயோரிய (நியூசீலரது) மொழிக்குமுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் கால்டுவெல் தமிழுக்கும் துரானிய மொழிகளுக்குமுள்ள ஒற்றுமையை எடுத்து விளக்கியுள்ளார். பழைய அமெரிக்க மொழி ஒட்டுச் சொற் களுடையதாய் இருந்தது. பழைய அமெரிக்க மொழி திராவிட மொழி யோடு மிக ஒற்றுமையுடையதாய் இருக்கின்றது.5 கோரியா தேசமொழி இலக்கணம் திராவிடமொழி இலக்கணத்தோடு ஒற்றுமையுடையதா யிருக்கின்றது. இச் சான்றுகளால் வரலாற்றுக் காலத்துக்குச் சிறிது தொலையில் உலகம் முழுமையிலும் ஒரே மொழி வழங்கிற்றெனத் துணிதல் சாலும். மனுவின் வரலாற்றையும், பிற்காலப் பிற சான்றுகளை யும் கொண்டு உலகம் முழுமையிலும் ஞாயிற்று வழிபாடே இருந்த தெனத் துணிதல் அமையும்.
ஞாயிற்று வழிபாடே சிவன் வழிபாடு
எகிப்திய மக்கள் ஞாயிற்றை அமன், ஒசிறிஸ், ரா முதலிய பெயர் களால் வழிபட்டார்கள். சுமேரியர் ஆண், எல் முதலிய பெயராலும், பாபிலோனியர், பால் (Baal) பேல் (Bel) மார்டுக் முதலிய பெயர்களாலும், அசீரியர், அசுர் என்னும் பெயராலும், பினீசியர் பால் என்னும் பெயரா லும், சின்ன ஆசிய மக்கள் சூரியா, அதாத் என்னும் பெயர்களாலும் இந்திய மக்கள் ஆண், சிவன், எல் முதலிய பெயர்களாலும் ஞாயிற்றை வழிபட்டனர். உலக மக்களின் பழைய சமய வரலாறுகளை நன்கு ஆராய்ந்த ஆசிரியர்கள் எல்லோரும் உலக மக்கள் எல்லோரும் தொடக் கத்தில் ஞாயிற்றையே வெவ்வேறு பெயர்களால் வழிபட்டார்கள் எனக் கூறியிருக்கின்றனர்.1 மொழி மாறுபட்டது போல அவர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்களும் மாறுபடலாயின. மொழி வேறுபாடு முன்னரே எல்லா மக்களுக்கும் பொதுவாகிய சில கடவுட் பெயர்கள் மாத்திரம் வழங்கியிருத்தல் சாலும். அவை எல், சிவன், பகல், ஆண் என்பன. மேற்கு ஆசிய, அரேபிய, இலங்கை மக்கள் எல் தொடர்பான பெயர்களைக் கடவுளுக்கு இட்டு வழங்கினார்கள். பாபிலோன், இந்தியா, சுமேரியா முதலிய நாடுகளில் ஆண் என்பதே கடவுளின் சாலப் பழைய பெயராகக் காணப்படுகின்றது. ஆண் என்பது தொடக்கத்தில் ஞாயிற்றையும், பின் கடவுளையும், பின் உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமையையும் குறிக்க வழங்கிற்று. எல் என்பது தமிழில் காணப்படும் பழைய சொல். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம். சிவன் என்னும் பெயர் இவ்வுலகில் மிகப் பழைமையே வழங்கியதற்குரிய ஆதாரங்கள் பல காணப்படுகின்றன. மற்றப் பெயர்களை விடச் சிவனையே சாலச்சிறந்த பெயராக மக்கள் ஞாயிற்றுக்குத் தொடக்கத்தில் இட்டு வழங்கினார்கள் ஆகலாம்.
சிவன் என்னும் சொற்பிறப்பு
சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். ஞாயிற்றுக்குச் செங்கதிர் என்பதும் மற்றொரு பெயர். மொகஞ்சொதரோ முத்திரைகளின் ஆண் தலைமையான தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது. சிவனைக் குறிக்கும் பசுபதிக் கடவுளும் ஆண் கடவுளரே ஆவர். ஞாயிறு ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடும் ஒவ்வொரு வடிவுடையதாகக் கொள்ளப் பட்டு மக்களால் வழிபடப்பட்டது.1 இறைவனை அட்ட மூர்த்தி எனக் கொள்வது இப்பழைய வழக்குப்பற்றிப் போலும். பிலிப்பைன் தீவுகளில் சிலவற்றில் இன்றும் மக்கள் சிவனைச் சிவப்பன் என வழங்குவர்.2 இதனால் முற்கால மக்கள் ஆண் என்பதற்குச் சிவப்பு என்னும் அடைகொடுத்து வழங்கினார்கள் எனக் கருதலாம். ஆண், அன் ஆனபோது சிவப்பு ஆண், சிவப்பன் ஆகிப் பின் சிவப்பன் சிவன் என மருவிற்றெனக் கூறுதல் பிழை யாகாது. சிவன் என்னும் சொல்லின் உற்பத்தியைக் கூறவந்த ஆசிரியர்கள் எல்லோரும் சிவன் என்பதற்குச் சிவந்த கடவுள் என்னும் பொருளே கூறியுள்ளார்கள்.3
இற்றைஞான்றை வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றிப் பிறநாடுகளுக்குச் சென்றது எனக் கருதுகின்றார்கள். ஆகவே, ஆதியில் மக்கள் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழுக்குரியனவாயிருத்தல் பொருத்தமானதே.
முற்கால இடப்பெயர்கள்
பழைய காலத்தில் மக்களின் குடியிருப்பு பெரும்பாலும் கோயிலைச் சுற்றியிருந்தது. ஆகவே, ஒவ்வொரு பட்டினமும் அல்லது இடமும் கடவுள் தொடர்பான பெயர் பெற்றிருந்தது.1 இதனைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்ந்து நிறுவியுள்ளார்கள். இவ் வுலகில் ஒன்றில் ஒன்று தொலைவிலுள்ள இடங்களில் சிவன் தொடர்புடைய இடப்பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வுலகின் அகன்ற இடப்பரப்பில் சிவன் ஆலயங்கள் பல இருந்தனவென்று நாம் நன்கு அறிதல் கூடும்.
சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை
எகிப்திலே இலிபிய வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. இவ்விடம் அமன்யூ பிதர் என்னும் கடவுள் வழிபாட்டுக்குப் பேர் போனது என்று சொல்லப்படுகின்றது. அமன், ரா, ஒசிறிஸ் என்னும் பெயர்கள் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பன.2 இக் கடவுளுக்கு வாகனம் இடபம். யூபிதர் என்னும் பெயரும் சுயஸ்பிதர் என்பதினின்றும் பிறந்ததென்று சொல்லப்படுகின்றது . யூபிதர் என்னும் சொல் சிவா என்பது போன்ற ஒரு சொல்லினின்று பிறந்ததென இன்னோர் ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்.3 யூபிதர் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளைக் குறிப்பதே ஆகும். கிரேக்கரது சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. சிவன் பாலைநிலப் பசுந்தரையில் இன்றும் அமன் கடவுளின் கோயில்களின் வழிபாடுகள் காணப்படுகின்றன.4 இப்பாலை நிலப் பசுந்தரை சிவன் வழிபாடு காரணமாகச் சிவன் என்னும் பெயர் பெற்றிருந்ததென்றும், பின்பு சிவன் கடவுளின் பெயர் அமன்யூபிதர் என மாறியுள்ளதென்றும், நாம் நன்கு ஊகித்தறியலாம். இடப்பெயர் மாத்திரம் அன்று முதல் இன்று வரையும் சிறிதும் மாறுபடாமலே இருந்து வருகின்றது.
அமன் கடவுளுக்கு இடபம் வாகனமாதல், ஆலயங்களினுள் சிவலிங்கங்கள் வைத்து வணங்கப்படுதல்1 முதலிய காரணங்களால் அமன் சிவனே என்பது தேற்றமாகும்.
பாபிலோனில் சிவன் என்னும் பட்டினம்
பாபிலோன் நாட்டிலே, களிமண் ஏட்டில் எழுதப்பட்டுச் சூளை யிட்டுக் காப்பாற்றப்பட்ட பல பழைய பட்டயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அவைகளுள் பல, மக்கள் அடிமைகளையும், நிலங்களையும் விற்றதும் வாங்கியதும் தீட்டிய ஆவணங்களாகக் காணப்பட்டன. அவைகளில் இன்ன மாதத்தின், இன்ன இடத்தில், இன்ன நாளில் ஆவணம் எழுதப்பட்டதெனக் குறிக்கப்பட்டள்ளது. அவ்வாவணங்கள் சிலவற்றுள்2 சிவன் என்னும் இடப்பெயர் காணப்படுகின்றது. இதனால் பாபிலோனில் சிவன் வழிபாடும், சிவன் ஆலயமும் இருந்தனவென்று நாம் நன்கு அறிகின்றோம்.3
பாபிலோனரின் கடவுளுக்கு எல்சடை என்பதும் மற்றொரு பெயர். எல்சடை என்பது சிவபிரானைக் குறிக்க வழங்கும் சடையன் என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. அவர்கள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர் மார்டுக், யேகோவா, சிவா போன்ற ஒரு சொல்லி னின்று பிறந்தது.
வட அமெரிக்காவில் சிவன் ஆலயம்
வட அமெரிக்காவிலே கொலரடோ என்னும் ஓர் ஆறு உள்ளது. இந்த ஆறு நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஆழத்தில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. இதன் பக்கத்தே மேற்பாகம் தட்டையாகக் காணப்படும் குன்றின் உச்சி சிவன் ஆலயம் என நீண்டகாலம் அங்குள்ள மக்கள் ஞாபகத்திலிருந்து வந்தது. இவ்விடத்தை ஒருவரும் ஏறிக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. 1937 ஆம் ஆண்டு அமெரிக்கப் பழம் பொருள் ஆராய்ச்சியாளர் இவ்விடத்தைக் கண்டுபிடித்துத் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.4 இச்சிவன் ஆலயத்தின் காலம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று சிலரும், இதற்கு இன்னும் மிகப் பழைமையுடையது என்று வேறு சிலரும் தமது கருத்தைத் தெரிவித் துள்ளார்கள். இதனால் வட அமெரிக்காவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் சிவன் ஆலயமும், சிவன் வழிபாடும் இருந்தனவென்று நாம் துணிந்து கூறலாம். *இந்து அமெரிக்கா என்னும் நூல் எழுதிய சமன்லால் என்பவர் அமெரிக்காவின் பல பாகங்களில் இன்றும் சிவலிங்க வழிபா டிருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.
கிரேத்தா (CRETE) வில் சிவன் நகர்
கிரேத்தா என்னும் தீவு பழந்தமிழருடைய குடியேற்ற நாடாகக் கருதப்பட்டது. வரலாற்றுப் பிதா எனப்பட்ட ஹெரதோதசு (Heradotus) என்பார், கிரேத்தா மக்கள் தமிழர் (தமிழி) எனப்பட்டார்கள் என்றே கூறியுள்ளார். கிரேத்தா நாட்டுப் பழைய நாகரிகமும், சிந்து வெளித் தமிழரின் நாகரிகமும் ஒரே வகையின. கிரேத்தா மக்கள் மீனவர் எனப் பட்டார்கள். அவர்களின் எழுத்துக்கும், அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.1 நாகரிகத் தொடர்பும் இவ்வகையினதே. அங்குள்ள பழைய நகரம் ஒன்றுக்குச் சிவன் என்பது பெயர். அங்குச் சிந்துவெளியிற் கிடைத்தவை போன்ற பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் கிரேத்தாவில் சிவன் வழிபாடும் சிவன் ஆலயமும் இருந்தனவென்று நன்கு அறிலாம். கிரேத்தாவில் சிவலிங்க வழிபாடு சங்கு வாத்தியம் முதலியனவும் காணப்பட்டன.
சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் நகர்
சின்ன ஆசியாவிலே (ஆசியா மைனர்) சிவாஸ் என்னும் பழைய நகர் ஒன்று உண்டு. இது பழைய அழிபாடுகளுடைய அழிந்த நகரம் எனப்படுகின் றது. இதன் பழைய வரலாறு ஒன்றும் அறியப்படவில்லை. சின்ன ஆசியாவில் சிவலிங்க வழிபாடும், இடபத்தின் மீது வீற்றிருக்கும் சிவன் வழிபாடு, இடப வழிபாடு முதலியனவும் காணப்பட்டமையின் சிவாஸ் என்பது சிவன் ஆலயத்துக்குப் பேர்போன ஒரு பழைய நகரம் எனக் கூறுதல் தவறாகமாட்டாது.
வட இந்தியாவில் சிவபுரம்
ஆரிய வேதங்கள், “சிவாக்கள்” என்னும் ஒரு கூட்டத்தினரைப் பற்றிக் கூறுகின்றன.1 பாணினி, சிவபுரம் என்னும் இடப்பெயரைக் குறிப் பிட்டுள்ளார். இது வட இந்தியாவில் சிவாக்கள் வாழ்ந்த நகரமாகலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். ஆரியர்கள் தங்கள் சிவலிங்க வழி பாட்டை வெறுத்துத் தள்ளியமையின், வட நாட்டில் சிவனை வழிபடும் பிறிதொரு மக்கள் இருந்தார்கள் என்று நாம் நன்கு அறிதல் கூடும்.
இலங்கையில் சிவன் மலை
இலங்கையில் சிவன் மலை அல்லது சிவன் ஒளி மலை என்னும் ஒரு மலை உள்ளது. இம் மலை உச்சியில் ஞாயிறு உதயமாகும் காலத்தில் வானவில்லின் நிறமுடைய ஒளி தோன்றுகின்றது. இது புத்தர் காலத் துக்கு முன்தொட்டுச் சிவன் ஒளி மலை எனவே வழங்குவதாயிற்று.2 இம் மலை இலிங்க வடிவாயிருந்தமையின் அராபியர் இதனை ஆதம் மலை என்றார்கள். ஆதம் என்னும் ஆதிப்பிதாவைக் குறிக்க இலிங்க வடிவமே கையாளப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது.3
“சிவன்” மாதப் பெயர்
முற்காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்குச் சிறப் புடையதாயிருந்தது.4 மலையாளத்தில் இன்றும் இராசிப் பெயர்களே மாதங்களுக்கு இட்டு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் தங்கும் வீடு ஒவ்வொரு வடிவுடையதாகக் கொண்டு வழிபடப்பட்ட தென்று மொகஞ்சொதரோ பழம் பொருள் ஆராய்ச்சியினால் விளங்கு கின்றது. மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் எனத் தெரிகின்றது.5 பாபிலோனில் கிடைத்த களிமண் ஏடுகளில் சிவன் மாதம் குறிக்கப்பட்டுள்ளது. சிவன் மாதம் சிமானு எனவும் பட்டது. மொசே என்பவர் யேகோவா அருளிய பத்துக்கட்டளைகளைச் சிவன் மாதத்தின் ஆறாவது நாள் சினாய் மலைமீது நின்று மக்களுக்கு வெளி யிட்டார்1 என்று கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. மொசேயின் காலம் கி.மு.1500 வரையில் இத்துணைப் பழைய காலத்தி லேயே, சிவன், மாதத்தின் பெயராயிருந்ததெனக் கொள்ளின் அப்பெயர் மக்களிடையே அதனினும் பன்னெடுங்காலம் முன்தொட்டு வழக்கி லிருந்திருத்தல் வேண்டும். இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் மக்கள் மொசேக்கு மிக நீண்டகாலம் முன்தொட்டே சிவன் என்னும் ஒரு கடவுளை வழிபட்டார்கள் என்று நாம் நன்கு துணிதல் கூடும்.
சிவன் பின்லாந்து மக்களின் காத்தற் கடவுள்
பின்லாந்தில் வாழும் மக்கள் துரானிய வகுப்பைச் சேர்ந்தோர். இம் மக்களின் காத்தற் கடவுள் சிவன்.
விவிலிய மறையில் சிவன் கடவுள்
விவிலிய மறையின் பழைய ஏற்பாடு சிவன் (Chien) என்னும் கடவுளைப் பற்றிக் கூறுகின்றது.2 இக் கடவுளை நன்கு ஆராய்ந்த மேல் நாட்டு அறிஞர் சிவன் என்பது சிவனே என்றும், அது விவிலிய மறையில் சிறிது வேறுபாட்டுடன் திரித்து வழங்கப்பட்டுள்ளதென்றும் காட்டியுள் ளார்கள்.3 சிவன் வழிபாடு மேற்கு ஆசியா கிரீஸ் உரோம் முதலிய நாடு களில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்ததென்றும் பிற்காலத்து மக்கள் அதன் வரலாற்றை மறந்து போயினமையின், தங்கள் தேசத்துக்கும், இடங்களுக்கும் மனப்பான்மைக்கும் பொருத்தமான பழங்கதைகளைப் புனைந்து கட்டினார்கள் என்றும் ஆதர்லில்லி என்பார் கூறுகின்றார்.
அக்கேடிய மக்களின் விண்மீன் சிவன்
அக்கேடிய மக்களின் ஏழு முக்கிய விண்மீன்களில் மூன்றாவது, சிவன் எனப்பட்டது.1
சப்பானிய மக்களின் சிவோ
சப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்று சிவோ எனப் பட்டது.2 அது வேட்டை ஆடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள். சப்பானிய மக்கள் கோரியா நாட்டினின்றும் சென்று சப்பான் தீவுகளில் குடியேறியவர்களாவர். இவர்கள் சிவலிங்கங்களை முச்சந்தி நாற்சந்தி களில் நட்டு வழிபட்டார்கள். இவர்கள் முற்காலத்தில் இலக்கங்களைத் தமிழ் எழுத்துக்களால் எழுதினார்கள் என்று வடல் (Waddell) என்பார் குறிப்பிட்டுள்ளார். இவை போன்ற பல ஏதுக்களால் சப்பானியரின் சிவோ என்னும் பெயர் சிவன் என்பதன் திரிபு ஆகலாமென நாம் உய்த்துணரலாகும்.
“சன்” (SUN) சிவன் என்பதன் திரிபு
ஞாயிற்றைக் குறிக்க ஆங்கில மொழியில் வழங்கும் “சன்” என்னும் சொல் சிவன் என்பதன் திரிபு எனக்கருத இடமுண்டு.3 இச்சொல்லின் மூலம் அறியப்படவில்லை. கிழக்குத் திசையினின்றும் இச்சொல் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. பாலஸ்தீனியர் “சிவன்” என்பதைச் சியன் என வழங்கினார்கள் என்பது முன் விளக்கப்பட்டது. சிவனே ஆங்கில மொழியில் சன் ஆயிற்று எனக் கருதுதல் பிழையாக மாட்டாது.
‘சிவன்’ மக்கட் பெயர்
முற்கால மக்கள் சிவன் எனவும் தமக்குப் பெயரிட்டு வழங்கினர். இவ்வகைப் பெயர்கள் பழைய இலங்கை அரசரிடையே காணப்பட்டது. செய்றோரேயிஸ் என்னும் சுமேரிய அரசனின் மனைவியின் பெயர் சிவன்.1 சிவன் என்னும் பொருள் தரும் எல், பால் என்னும் பெயர்களை மேற்கு ஆசிய மக்கள் தமக்குச் சூட்டியிருந்தார்கள்.
சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்
ஆதியில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலை முகடு களில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளுக்கு உறைவிடம் என்று கருதப்பட்டன. மலை இல்லாத நாடுகளில் மக்கள் மலைபோன்ற முக்கோணமான செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவமான வடிவத்தை வைத்து வழி பட்டார்கள். எகிப்தியரின் கூர்நுதிச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே ஆகும். எல்லா இடங்களிலும் பெரிய செய்குன்றுகளை எழுப்புவது எளிதன்று; ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்பது பொருள்.2 முக்கோணவடிவான கற்களே பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றுத் தூண்க ளாகும்.3 சிவலிங்க வழிபாடு இந்திய நாட்டில் மாத்திரமன்று; இவ்வுலகம் முழுமையிலும் ஒரு காலத்தில் காணப்பட்டமையைப் பற்பலர் நன்கு ஆராய்ந்து காட்டி உள்ளார்கள். விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லப்படுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களே யாகும்.
கைலை, என்பது பாரத காலத்தில் சிவன் கோயில் கொண் டிருக்கும் மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத் தெரிகிறது. இது பாரதப் போர் நிகழ்ந்தபோது ஒரு நாள் இரவில் கண்ண னும் அருச்சுனனும் குருச்சேத்திரத்தினின்றும் கைலைக்குச்சென்று மீண் டார்கள் எனப்படுவதால் அறியலாம். இலங்கையில் மனுவின் பேழை தங்கியதாகக் கருதப்படும் மலை ஹமெல் எல் (தமெல் எல்) எனப்பட்ட தெனக் தெரிகிறது.4 இன்னும் எல் தொடர்பான பல இடப்பெயர்கள் இலங்கையில் காணப்படுகின்றன. இதனால் ஆதியில் திருக்கோண மலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருந்ததெனக் கருத இடமுண்டு. அது தென் கைலை எனப்படுகின்றது.
கைலாய மலை, திருக்கோண மலை முதலியன மற்ற மலைகளிலும் பார்க்கச் சிவலிங்க வடிவம் பெற்றிருத்தலினாலேயே அவை சிவனின் சிறந்த இருப்பிடங்கள் எனப்படுகின்றன.1 வடக்கேயுள்ள சிவன் மலை வடகைலை என்றும் தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை எனவும் படலாயின. ஆதியில் இவ்விடங்களின் பெயர் *எல்+ஐ+அம் = எல்ஐ அம் என்று இருந்ததாதல் கூடும். பின்பு இவ்விடங்களைப் பிரித்தறியும் பொருட்டு வடகை (வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்தி லுள்ள) என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டனவாகலாம். அப் பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வட கைலாயம் தென் கைலாயம் என்று வழங்கலாயின என்று யாம் கருதுகின்றோம்.
பல்பூர் என்னும் ஆசிரியர் இலிங்க வழிபாட்டைப் பற்றிக் கூறியிருப்பது வருமாறு:
“இலிங்க வணக்கம் இந்தியாவில் மாத்திரம் காணப்படுவது ஒன்று அன்று. முற்காலத்தில் அஃது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் எகிப்தி லும் காணப்பட்டது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கரின் இலிங்கக் கடவுள் இதுவே யாகும். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் பிரியாபஸ் என்னும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்திருந்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை உடைத்தெறிந்தானென்று கூறுகின்றது.” இலிங்கத்துக்கு முன்னால் பலி பீடத்தின் மீது சாம்பி ராணி எரிக்கப்பட்டது. மாதத்தின் பதினைந்தாவது நாளில் பலி செலுத் தப்பட்டது. இஃது இந்துக்கள் பரிசுத்த நாளாகக் கொள்ளும் அமா வாசைத் தினமாகும். இஸ்ரவேலர் வழிபட்ட இடபக்கன்று நந்தியாகும். எகிப்தியரின் ஒசிரிஸ் கடவுளின் வாகனமாகிய அப்பிஸ் என்னும் இடபமும் இந்நந்தியேயாகும்.
கொலோனல் டொட் என்பார் இலிங்க வழிபாட்டை அராபிய ரின் லாட் அல்லது அல்ஹாட் வழிபாட்டோடு ஒன்றுபடுத்திக் கூறியுள் ளார். இலிங்க வழிபாடு உரோமருடன் பிரான்சுக்குச் சென்றது. இன்றும் இலிங்கங்களின் வடிவங்களை அங்குள்ள கிறித்துவ ஆலயக் கட்டடங் களில் காணலாகும். அலக்சாந்திரியாவில் தாலமி நடத்திய விழாவில் 129 முழ உயரமுடைய இலிங்கம் வீதிவலம் கொண்டு செல்லப்பட்டது. இஸ்ரவேலரின் பால் கடவுள் சிவலிங்கமே என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. விவிலிய மறையில் சொல்லப்படும் சியன் (Amos v.) சிந்து நதிக்கரையில் உறையும் மக்கள் சிவா அல்லது சிவன் எனக்கூறும் கடவுளேயாவர். இந்தியாவுக்கு எந்தச்சாதி இலிங்க வழிபாட்டைக் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.”
இந்திய நாகரிகமும் அதன் பழைமையும் என்னும் நூலில் முக்கேசி என்பார் இலிங்க வழிபாட்டின் வியாபகத்தைப்பற்றிக் கூறியிருப்பது பின் வருமாறு:
“இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்கத்தைக் தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ்வணக்கம் இந்தியாவுள் மாத்திரம் நிற்கவில்லை. இஃது உலகின் எல்லா நாடுகளிலும் ஒரு காற் பரவியிருந்ததென்பதை விளக்குவதற்கு வேண்டிய சான்றுகள் கிடைத் துள்ளன. சீனா, சப்பான், இந்துக் கடற்றீவுகள், பசிபிக் கடற்றீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு முற்றிலும் மறைந்து விடவில்லை. ஆபிரிக்க அமெரிக்க மக்களிடையும் இஃது ஒருகாற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சீரிய, சின்ன ஆசிய, பாபிலோனிய மக்களிடையும் இது காணப்பட்டதென்பதைக் கிறித்துவ மறைவாயிலாக அறிகின்றோம். சின்னாள்களின் முன் பாபிலோன் நாட்டில் சிவலிங்கங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோரஸ், இஸ்ரஸ், சராபிஸ் முதலிய பெயர்களால் இக் கடவுள் வணங்கப்பட்டது. சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ்வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதனை ஒழிப்பதற்குக் கிறித்துவ குருமார் மிக ஊக்கம் கொண்டிருந்தனர். கிரீசிலே விசா (Viza) என்னுமிடத்தில் சிவலிங்கம் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்தில் சிவலிங்கங்கள் கிறித்துவ ஆலயங்கள் பலவற்றுட் காணப்படுகின்றன. அவை `சீலநாகிக்’ (Sheila na-geg) என வழங்குகின்றன. இப்பெயர் ஒரு பொது சிவலிங்கம் என்பதன் திரிபு ஆகலாம். பழம்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்தி லும் ஸ்கொத்திலாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தனர். இவை கண்டு பிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டி வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இலிங்க வழிபாட்டை இங்கிலாந்திலே பரப்பியிருத்தல் கூடும். சர்மனியிலும் இவ் வணக்கம் தழைத்திருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இலிதுவேனிய மக்கள் (Lithuanians) 14 ஆம் நூற்றாண்டு வரையில் இவ்வணக்கத்தையே கைக்கொண்டிருந்து பின்பு கிறித்துவ மதத்தைத் தழுவினார்கள். திபெத்து, பூத்தான் (Bhutan) என்னுமிடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகின்றது. சிந்தோயிசம் (Shentoism) என்னும் யப்பானிய மதத்தில் சிவ இலிங்கம் முதன்மையானது.1 அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறப்பாக மெக்சிக்கோ, பேரு, கைதித்தீவு (Hyte)களில் சிவ இலிங்கம் வழிபடப்பட்டது. இஸ்பானியர் முதன் முதல் அமெரிக் காவிற்குச் சென்றபோது ஆலயங்களில் சிவலிங்கங்கள் வைத்து வழி பட்டதைக் கண்டார்கள்.1 ஆபிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயருடன் வைத்து வழிபடப்பட்டது.”
இலிங்க வணக்கம் ஆசியாவில் தோன்றி அயல் நாடுகளில் பரவிற்று எனச் சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பக்கஸ் (Bacchus) தயோனிசஸ் (Dionisus) வழிபாடுகள் தொடர்பில் சிவலிங் கங்கள் வழிபடப்பட்டன. கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிவலம் செய்யப்பட்டது. எகிப்தியரின் ஒசிரிஸ் என்னும் தெய்வம் பக்கஸ் என்ப தன் இன்னொரு வேறுபாடே. பக்கஸ் வழிபாடு இத்தாலியில் மிகவும் பரவியிருந்தது பக்கஸ் கெபன் (Hebin) அல்லது கம்பானியா (Campania) என்னும் பெயருடன் வழிபடப்பட்டார். கெபன் என்னும் கடவுள் கெபி (Hebe) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கசுக் கடவுளுக்கு இடபமும் புலியும் மிகப் பிரியமானவை. அவர் புலித்தோலை உடுத்துக் கையில் திரிசூலத்தையும் வைத்திருந்தார். இக்காரணத்தைக் கொண்டு கெபன் சிவன் என்றும் கெபி கௌரி என்றும் கூறலாம். பக்கஸ் கடவுளைப் பின் தொடர்ந்து இடபமும் புலியும் சென்றன. அவர் கையில் நீர் அருந்தும் மண்டை யும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக் கடவுள் கெமோஸ் (Chemos) மொலோச் (Moloch) மெரதொக் (Merodock) ஆதோனியிஸ் (Adonais) சிபாஃசியஸ் (Sabazius) பக்கஸ் அல்லது பகேஒஸ் (Bagaios) என்னும் பெயர் களுடன் வழிபடப்பட்டார். வெஸ்ட்ரொப் (Westropp) என்பார் ஆதோனிசஸ் அர்த்த நாரீசுவரர் என்று ஆராய்ந்து காட்டியுள்ளார். சின்னாட்களின் முன் எகிப்திலே துர்க்கம்மா என அடியில் எழுதிய துர்க்கையின் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சேஸ் என்னும் ஆராய்ச்சி அறிஞரின் கூற்று பின் வருவது; யூதரின் பெத்தெல் (Bethel) அல்லது “கடவுளின் வீடு” புனிதமான கல்லாக இருந்தது. அது கடவுளின் ஆவி உறையும் இடமாக மாத்திரம் கருதப்பட வில்லை. அது கடவுளாகவே கருதப்பட்டது. இக்கற்கள் செமித்திய மக்களுக்கும் அவர்களின் கிளையினருக்கும் புனிதமுடையன. மெக்காவிற் காணப்படும் காபா (Kaba) என்னும் கறுப்புக் கல் இவ்வுண்மைக்குக் காட்சியளிக்கும் சான்றாகும். அராபிய மக்கள் இக்கல்லின் மேல் அளவு கடந்த கடவுள் பக்தி கொண்டிருந்தார்கள்; ஆதலின் மகமது அதனை அழித்துவிட முடியவில்லை. ஆகவே அவர் அதனை விவிலிய மறையின் பழைய ஏற்பாட்டுக் கதைகளோடு தொடர்புபடுத்தி அதனைப் புனித முடையதாகக் கொண்டார்.
ஞாயிற்றுத் தூண்களையும் சந்திரத் தூண்களையும் பற்றி விவிலிய மறையில் பல்லிடங்களில் காண்கிறோம். ஓவியங்களிலும், நாணயங்களி லும், பாஃபியன் அஃப்ரோடைட் (Paphian aphrodite) ஆலயத்தின் ஆதி மூலத்தில் (கருவில்) காணப்பட்ட அடி நிமிர்ந்து தலைகுவிந்த கல்லின் வடிவம் காணப்படுகின்றது. துசிடஸ் (Tucitus) என்பவரும் அதனைப் பற்றிக் கூறியிருக்கின் றார். சாலமனுக்குப் பினீசிய வேலையாட்கள் கட்டிய ஆலயத்தின் முன் மண்டபத்தின் இருபுறங்களிலும் போஃஸ் (Boaz) யாகின் (Yakin) என்னும் இரு கற்கள் நிறுத்தப்பட்டிருந்தன. (I King, VII 21) இவை பினீசிய மக்களால் தையர் நகரில் மெல்கார்த் (Melkarth) என்னும் ஆலயத்தில் பொன்னாலும் மரகதத்தாலும் செய்து நிறுத்தப் பட்டிருந்தனவென்று ஹெரதோதசு கூறிய (Herodat - II - 44) அவைகளை ஒத்தன.1
பௌத்தமதத்தினரும் இலிங்க வழிபாட்டினரே
பௌத்த மதத்தின் அடிப்படை ஞாயிற்று வழிபாடே என்பது அவர்களின் மதக்குறியாகிய சுவத்திகத்தைக்கொண்டு நன்கு அறிய லாகும். சுவத்திகம், சிலுவை முதலியன ஞாயிற்றைக் குறிக்கும் அடை யாளங்களே என்று உலக மதவரலாறுகளை ஆராய்ந்தோர் நன்கு கூறி யிருக்கின்றனர்.1
பௌத்த ஆலங்களின் மீது வைக்கப்படும் தூபிகளும், அவர்கள் தகோபா (Dagoba)க்களும் இலிங்க வடிவினவே. இலங்கையிலுள்ள சிவன் ஒளிமலை இலிங்க வடிவமாக (முக்கோணமாக) இருந்தமையினாலேயே புத்த மதத்தினர் அதனைப் புனிதமுடையதாகக் கொண்டனர். அசோக மன்னர் எழுப்பிய சாஞ்சிப் பௌத்த ஆலயத்தில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன.1
சிவலிங்க வழிபாடு இவ்வுலகின் நாகரிக மக்கள், நாகரிக மற்ற மக்கள் எல்லோரிடையும் காணப்பட்டதென்பதை ஆராய்ச்சியாளர் நன்கு எடுத்து விரித்து விளக்கியுள்ளார்கள். அவர் தம் கூற்றுக்களை எல்லாம் எடுத்து இங்கு தரப்புகின் அவை ஒரு தனி நூலாக விரியு மாதலின் அவைகளை ஈண்டுக் காட்டிற்றிலேம். பெரும்பாலும் மனித இயலாரே (Anthropologist) சிவலிங்க வணக்கம், மக்கள் கூட்டத்தினர் எல்லோரிடையும் காணப்படுவதை நன்கு எடுத்துக் கூறுகின்றனர்.
சிவலிங்க வணக்கத்தின் வெவ்வேறு வகை வளர்ச்சி
ஆதியில் கற்றூண்களே கடவுளின் அருட்குறிகளாக நட்டு வழிபடப்பட்டன. பெரும்பாலும் அவை நிழல் மரங்களின் கீழ் நடப் பட்டன. நிழல் மரத்தின் அயலே கிணறு அல்லது கேணி இருந்தது. முற் கால மக்கள் அவைகளைச் சாதிபேதம் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு களின்றி வழிபட்டார்கள். மேற்கு ஆசியா, கிரீஸ், உரோம் முதலிய நாடு களில் மக்கள் சிவலிங்கங்கள் மீது எண்ணெயை ஊற்றி வழிபட்டனர்.2
சிவலிங்க வணக்கம் தலை எடுத்திருந்த காலத்தில் தாய்க் கடவுள் வணக்கமும் ஓங்கியிருந்தது. ஒரு காலத்தில் தாயே எல்லா அதிகாரமும் உடையவளாக இருந்தாள். அக்காலத்தில் மக்களிடையே தாய்க்கடவுள் வழிபாடு உண்டாயிற்று. பின்பு தந்தைக்கடவுள் வழிபாடு மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தது. அப்போது மக்கள் தாய்க்கடவுள் தந்தைக் கடவுளரைச் சம பெருமையுடையவர்களாகவே கருதி வழிபட்டார்கள். அஞ்ஞான்று அவர்கள் சிவலிங்கங்களைத் தந்தைக் கடவுளாகவும் மரத்தைத் தாய்க்கடவுளாகவும் கொண்டு வழிபடலாயினர். சோலைகள் தாய்க்கடவுளின் புனித இடங்களாகக் கருதப்பட்டன. சோலைகளின் நடுவே தாய்க்கடவுளின் அருட்குறியாகவே மரத்தூண் நடப்பட்டு வழிபடலாயிற்று. இவ்வாறு அருள்தறிகள் ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் குறிக்கலாயின.
இன்னொரு வகையில் தாய் தந்தைக் கடவுளரின் தொடக்கம்
மக்கள் மண்ணில் நின்றும் பயிர் பச்சைகள் தோன்றுவதையும், பெண் உயிர்களின் வயிற்றினின்று உயிர்கள் பிறப்பதையும் கண்டார்கள். அவர்கள் பயிர் பச்சைகளைத் தோற்றுவிக்கும் நிலத்தைத் தாய்க் கடவுளாகக் கொண்டு பலி செலுத்தி அதனை வழிபடுவாராயினர். பின்பு அவர்கள் வானத்தைத் தந்தைக்கடவுளாகக் கொண்டு அதனையும் வழிபட்டனர். வானக்கடவுள் ஞாயிற்றுக் கடவுளாக மாறிற்று.
ஞாயிறும் திங்களும் கணவனும் மனைவியும்
மேற்கு ஆசிய நாடுகளில், மக்கள், தந்தைக் கடவுளாகக் கருதப் பட்ட கற்றூண்களை ஞாயிறென்றும் தாய்க்கடவுளாகக் கருதப்பட்ட மரத்தூண்களைத் திங்கள் என்றும் கொண்டு திங்களை ஞாயிற்றின் மனைவியாக்கினர். ஆகவே, கற்றூண்களுக்குப் பக்கத்தில் மரத்தூண்கள் நடப்பட்டு வழிபடப்பட்டன. மேற்கு ஆசிய நாடுகளில் திங்கட்கடவுள் பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது.
பூமியையும் வானத்தையும் தாய்தந்தைக் கடவுளராய்க் கொண்ட மக்கள் கற்றூண்களையும் மரத்தூண்களையும் ஆண் பெண் வல்லமைகளாகக் கொண்டனர்
பூமியைத் தாய்க் கடவுளாகவும் வானத்தைத் தந்தைக் கடவுளாக வும் கொள்ளும் மதமும் இலிங்க வழிபாட்டை ஒப்ப உலகம் முழுமையி லும் பரவியிருந்தது. அவர்கள் ஞாயிற்றை அல்லது தந்தைக் கடவுளைக் குறிக்க வழங்கிய கற்றூண்களைக் கடவுளின் படைக்கும் வல்லமை (Generative power) எனக் கொண்டார்கள்; மரத்தறிகளைப் படைப்புக்களை ஈனும் வல்லமை எனக்கொண்டார்கள். அவர்கள் இலிங்கங்களை ஆண்குறி வடிவாக அமைத்து வழிபடலாயினர். ஆண்குறி மக்களால் மிகவும் புனிதமுடையதாகக் கருதப்பட்டது.1 பெண்குறிகளும் அவ்வாறே. பின்பு தாய்க் கடவுளைக் குறிக்க வழங்கிய மரத்தூண்கள் பெண்குறி வடிவமாக வழிபடப்பட்டன. ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் குறிக்க வழங்கிய ஆண் பெண் குறிகள் வடிவான உருவங்கள் மேற்கு ஆசியா, அமெரிக்கா, அரப்பா, மொகஞ்சொதரோ முதலிய இடங்களில் காணப்பட்டன. பின்பு இவ்வுலகப் படைப்புகள் எல்லாம் கடவுளின் ஆண் பெண் தன்மைகளால் உண்டாகின்றன என்பதை விளக்கும் பொருட்டும், கடவுள் ஆண் பெண் என்னும் இரண்டு தன்மைகளும் உடையவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், இருவகை வடிவங்கள் இணைத்துவைத்து வழிபடப்பட்டன.1 அவைகள் பலஸ்தின் மக்களால் எலோகிம் எனப்பட்டன. இதுவே சிவ இலிங்கங்கள் ஆவுடையார் வடிவிற் காணப்படுதற்குரிய காரணமாகும். பூமியைத் தாய்க் கடவுளாக வும் வானத்தைத் தந்தைக் கடவுளாகவும் கொள்ளும் வழக்கு இவ்வுலக முழுமையிலும் ஒருகால் பரவியிருந்தது. படைப்புக்குரிய தொழிலாகிய ஆண் பெண் சேர்க்கை புனிதமுடையதாகவும் அது கடவுளால் விரும்பப் படுவதாகவும் மக்கள் நம்பி வந்தார்கள்.2 மேற்கு ஆசிய நாடுகளில் மக்களால் இவ்வகை நேர்த்திக் கடன்கள் செய்யப்பட்டன. அக்காட்டு நாட்டில் எரெச் என்னும் பட்டினத்தில் ஆலயங்களில் வியபிசாரம் செய்வது சமயக்கடமைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வகை வழக்கங்களும் தேவதாசிகளின் தொடக்கத்துக்கு ஒரு காரணமாகும். வான் தெய்வம், நிலத்தெய்வங்களின் அவதாரம் அரசரும் அரசியரும் என மக்கள் கருதி அவர்களை உயிருடைய தெய்வங்களாகவும் வழிபடு வாராயினர். இது பற்றியே அரசர் தாம் இராச்சியமேற்று நடத்துவதற்குத் தமக்குக் கடவுள் உரிமை உண்டு எனக் கருதினர் (Devine right of Kings).3
இலிங்கதாரணம்
நமது நாட்டில் வீரசைவ மதத்தினர் இலிங்கங்களை அணிகின் றனர். இது வீரசைவ மக்கள் புதிதாகக் கையாண்ட வழக்கன்று; பண்டை நாட்களில் எகிப்து பாபிலோன் கிரீஸ் உரோமை முதலிய நாடுகளிலும் இலிங்கங்கள் தீவினையை ஓட்டும் அணிகலன்களாக அணியப்பட்டன. பெரும்பாலும் இலிங்கங்களைப் பெண்களே அணிந்தனர். இலிங்கங்களை அணிவதால் மலடு நீங்கும் என்றும் தீய ஆவிகள் அணுகா என்றும் மக்கள் நம்பி வந்தார்கள்.
இலிங்கம் என்னும் சொல்
இலிங்கம் என்னும் சொல் வடசொல் எனச் சிலர் கருதுகின்றனர். இது முற்றும் தவறான நினைவு. இலிங்கம் என்னும் சொல் இலங்கு என்னும் அடியாகப் பிறந்தது. எல் என்னும் சொல்லே இல்1 அல் முதலிய சொற்களாக மாறியுள்ளது. மால் என்பதிலுள்ள அல் எல்லேயாகும். எல் என்னும் சொல் இல் இலோஸ், இலியம் முதலிய சொற்களாக மாறி மேற்கு ஆசிய நாடுகளில் வழங்குவதாயிற்று. கடவுளை எலியன் என்பதும் மேற்கு ஆசிய மக்கள் வழக்கு.1
இலிங்கம் என்பது இலங்குவது என்னும் பொருள் தரும் தூய தனித் தமிழ்ச்சொல்.2 இச்சொல்லை வடமொழிச் சொல்லெனக் கருதிப் பலர் ‘லிங்கம்’ என எழுதுவர். தமிழ்ச் சொற்கள் லகரமுதலாக வராவாக லான் இகரம் மொழிக்கு முன் வருதல் வேண்டும். இன்று தமிழில் வழக் கொழிந்து தமிழின் சிதைவுகளாகிய கன்னடம் தெலுங்கு துளு மலை யாளம் முதலிய மொழிகளில் வழங்கும் பல தமிழ்ச் சொற்களுள. அதனை ஒப்பத் தமிழ் வழக்கிலில்லாதனவும், தமிழின் சிதைவுகளுமாகிய பல சொற்கள் வடமொழிக்கண் உள்ளன என்பது மொழி ஆராய்ச்சியாளர் துணிவு.
-dசிவன் மக்கள் வடிவினராதல்
ஆதியில் தோன்றிய தாய் தந்தையர் வழிபாடுகளில் தாய்க்கடவுள் பெண்மகள் வடிவாகவும் தந்தைக் கடவுள் ஆண்மகன் வடிவாகவும் கொள்ளப்பட்டார்கள். ஞாயிற்று வணக்கம் ஓங்கிய காலத்தில் அம்மை அப்பர்க் கடவுளர் கற்றூண் மரத்தூண் வடிவுகள் வாயிலாக வழிபடப் பட்டனர்.3 “பின்பு அரசன் ஞாயிற்றின் புதல்வனென்றும் இறந்தபின் அவன் ஞாயிற்றுக் கடவுளாக மாறுகிறான் என்றும் கொண்டு அரசனை அவர்கள் ஞாயிற்றுக் கடவுளாக வழிபட்ட காலத்தில் மக்கள் சிவனை அரச வடிவினராகக் கொண்டு வழிபடலாயினர். மக்கள் அரசனைக் கடவுளாகக் கொண்ட காலத்தில் அரசி தாய்க்கடவுளாகக் கருதப்பட்டு வழிபடப்பட்டாள். ஆகவே, தாய்க்கடவுள் அரசியின் வடிவைப் பெற்றாள்.
அரசன் அரசி வடிவான அப்பர் அம்மை வழிபாடு இந்திய நாட்டிலேயே முதற்றோன்றிற்று
“அரப்பா மொகஞ்சதரோ முதலிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்ட பழம் பொருள்கள் ஆரியர் இந்திய நாட்டுக்கு வருமுன் அங்கு சைவசமயம் இருந்ததென்பதை ஐயம் அற விளக்குகின்றன. அவ்விடங் களில் காணப்பட்ட பட்டயங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை ஹெரஸ் பாதிரியார் படித்துள்ளார். அதனால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சிவமதம் இந்திய நாட்டில் இருந்ததென்பது நன்கு வலியுறு கின்றது. அவ்விடங்களில் வழிபடப்பட்ட இலிங்கங்கள், கடவுளுக்கு உடையனவாகப் பட்டயங்களில் கூறப்படும் மூன்று கண்கள், முத்தலை வேல், பாம்பு, கைக்கோடரி முதலியன ஆரியர் வருகைக்கு முன்னரே நமது நாட்டில் சிவமதம் நன்கு வேரூன்றி இருந்ததென்பதை விளக்குவன.”1
மொகஞ்சதரோ நாகரிகம் இற்றைக்கு 6000 ஆண்டுகள் வரையில் உள்ளது. மேற்குறிக்கப்பட்ட வடிவுகள் சிலவற்றோடு சிவன் மேற்கு ஆசிய நாடுகளில் வழிபடப்பட்டார். இக்கடவுளின் வாகனம் எல்லா நாடுகளிலும் இடபமாகவே காணப்படுகின்றது. கிரேத்தா (Crete) மேற்கு ஆசிய நாடுகளில் இடபங்களுக்கு இமில் இல்லை. இந்திய இடபங் களுக்கே இமில் உண்டு. மேற்கு ஆசிய நாடுகள், சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் இடபங்கள் வழிபடப்பட்டன. அவ்விடபங்களுள் சில இமிலுடையனவாகக் காணப்படுகின்றன. இதனால் இடபவாகன முடைய சிவக் கடவுள் வழிபாடு இந்திய நாட்டினின்றும் மேற்குத் தேசங் களுக்குச் சென்றதென ஐயமறப் புலப்படுகின்றது. சிறந்த வரலாற்று ஆசிரியர்களும் இதே ஒத்துடையர்.2
இடப ஊர்தி
ஆரியர் வருகைக்குப் பின்னரே இந்திய மக்கள் குதிரையைப்பற்றி அறிந்தார்கள். ஆரியர், தாசுக்கள் எனப்பட்ட தமிழரை வென்றதற்கு ஒரு காரணம் அவர்களிடத்தில் குதிரை இருந் தமையேயாகும். இந்திய மக்கள் குதிரையைப் பற்றி அறியாதிருந்த காலத்தில் அவர்கள் மாடு களையே ஊர்திகளாகப் பயன்படுத்தினர். இன்றும் மாடுகளைப் பொதி சுமப்பதற்கு மக்கள் பயன்படுத்துவதை நாம் காணலாம். ஆலயங் களில் கடவுள் வீதிவலம் வரும்போது பேரிகை கொட்டுவோன் இடபத்தின் மீது இருந்து பேரிகை கொட்டுவதைக் காண்கின்றோம். இதனால் ஒரு காலத்தில் இடபங்கள் மக்களுக்கு ஊர்தியாகப் பயன் பட்டனவெனத் தெரிகின்றது.
“இடபம் இந்திரனையும் சிவனையும் குறிப்பதாக வழங்கிற்று. செமித்திய சாதிகளுள் இடப வடிவான கடவுள் தலைமையுடையது. இடபத்தோடு தொடர்புபடுத்தப்படாத செமித்திய கடவுள் இல்லை யென்று கூறலாம். திங்கள் கடவுள் கொம்புகளைத் தரித்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. வலியைக் குறிக்கும் “அபிர்” என்னும் சொல் இடபத்தை உணர்த்தி நிற்கின்றது. எபிரேய மொழியிலுள்ள விவிலிய மறை வாக்கியங்களில் “வலிமையுடையது” என்று வரும் பகுதிகளை இடபம் என்று மாற்றிப் படிக்க வேண்டும். யேகோவாக் கடவுள் முற் காலத்தில் இடபக் கடவுளாக வழிபடப்பட்டார்; அவர் இசிரவேலரின் இடபக் கடவுளாவார். கடவுளை இடபவடிவில் வழிபடுவது எகிப்திய மதத்தினரின் ஒரு பகுதியாரின் கொள்கை. கிரேக்கரின் தயோனிசஸ் என்னும் கடவுள் இடபக் கடவுளாகவே இருந்தார். புலுத்தாக் என்னும் வரலாற்றாசிரியர் தயோனிசஸ், இடபக் கடவுள் எனவே கூறியுள்ளார் எனக் கிரேக்கர் பலர் கூறியுள்ளார்கள்.”1
இடபம் ஞாயிற்றின் குறியாக எல்லாப் பழைய மக்களாலும் கொள்ளப்பட்டது. கிரேக்கர் இடபத்தை ‘எபாபஸ்’ என்னும் பெயரால் வழிபட்டனர். இவ்வடிவம் அவர்களின் பழைய நாணயங்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்றது. பக்கஸ் கடவுள் சிலவேளைகளில் இடபமாக அல்லது மனிதனுக்கும் இடபத்துக்கும் இடையிலுள்ள சிலுவைவடிவாக வழிபடப்பட்டார். இஸ்ரவேலரும், கிரேக்கரும், உரோமரும் ஐயமின்றி இடபத்தை வணங்கினார்கள். புலுத்தா என்பவர் கிரேக்கில் பக்கஸ் கடவுள் இடபத்தின் தலைவடிவாக வழிபடப்பட்டார் எனக் கூறியிருக்கின்றனர்; அமொனியரின் மொலொச் என்னும் கடவுளின் வடிவம் இதுவே அசீரியரின் இடப வணக்கம் எகிப்தி னின்றும் சென்றது எனக் கருதப்படுகின்றது (இலிங்க வணக்கம்).1
“யூதமக்கள் இடபத்தை வணங்கி னார்கள். அரன் (Aaron) என்பவர் இவ் வணக்கத் திற்கு ஆதரவளித்தார். தெரபோ அம் (Teroboam) என்பவர் இரண்டு இடபக்கன்றுகளைச் செய்து ஒன்றைப் பெத்தெலிலும் மற்றதை “தாய்” “Dai” என்னும் இடத்திலும் வைத்தார். இஸ்ரவேலரை எகிப்தினின்றும் தப்ப வைத்த கடவுளாக இடபம் கருதப்பட்டது.”2
“முற்காலத்தில் இங்கிலாந்தில் ஒருவகை வழக்கமிருந்தது. அப்பொழுது கைபிர்டன் (Hybyrdan) மைதானம் என்னும் இடத்தில் ஓர் இடபம் விடப்பட் டிருந்தது. அது வண்டியிலோ ஏரிலோ பூட்டப்படுவதில்லை. மணமான ஒரு பெண் பிள்ளைச் செல்வத்தை விரும்பினால் அவ் விடபமும் பெண்ணும் முன்னே செல்லக் குருமார் பாடிக்கொண்டு முக்கியமான வீதிகளைச் சுற்றி ஆலயவாயிலை அடைவார்கள். பின்பு இடபத்தை அதன் விருப்பம்போல் எங்காவது செல்லும்படி விட்டுவிடுவார்கள். பின்பு பரிசுத்த எட்மொண் (St.Edmond)டில் நாட்டப்பட்டுள்ள கல்லை அப்பெண் முத்தமிடுவாள்.”3
“இடபம் மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த எல்லா நாடுகளிலும் வழிபடப்பட்டது. இந்த இடபத்தின் மீது ஆணையிட இவ்வுலக மக்கள் எல்லோருமே அஞ்சினார்கள் என லிதுவியன் என்பவர் கூறி யிருக்கின்றார்.”1
கிதைதி நாட்டிலே எயுக் என்னுமிடத் தில் இடபத்துக்குத் தனி ஆலயமும் அதன் வழிபாட்டுக்குத் தனிக் குருமாரும் இருந் தார்கள். எங்கெங்கு ஞாயிறு வழிபடப்பட்ட தோ அங்கெல்லாம் இடபம் புனிதமுடைய தாகக் கொள்ளப்பட்டது.
பாம்பு
சிவன் பாம்பை அணிபவராகக் காணப் படுகின்றார். மொகஞ்சதரோவிலும் பசுபதி எனச் சொல்லப் படும் சிவன் கடவுள் பாம்போடு தொடர்புடையவராகக் காணப்படுகின்றார். இடப வணக்கத்தை ஒப்பப் பாம்பு வணக்கமும் இவ்வுலகம் முழுமையி லும் வியாபகம் அடைந்திருந்தது. பாம்பு வணக்கத்தின் தொடக்கத்துக்குக் காரணம் எவராலும் நன்கு கூற முடியாமல் இருக்கின் றது. ஞாயிற்று வணக்கமும், சிவ இலிங்க வணக்கமும் உள்ள எல்லா நாடுகளி லும் பாம்பு வணக்கமும் காணப்படுகின்றது. பாம்புகள் சிவ இலிங்கங்களோடு தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. பாம்பு வணக்கம் இவ்வுலகின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்பட்டன. அவைகளைப் பற்றி ஆராய்ந்து பல தனி நூல்கள் வெளி வந்துள்ளன. இவ் வணக்கம் ஒரு மத்திய இடத்தினின்றும் சென்று உலகின் எல்லாப் பாகங்களிலும் பரவிற்று எனக் கருதப்படுகின்றது. தேயிலை, காப்பிப் பானவகைகளும் புகையிலைச் சுருட்டைப் பயன் படுத்துதலும் சில காலத்தில் இவ்வுலக முழுமையிலும் பரவியுள்ளன வாயின், இவ் வழிபாடு ஓரிடத்தினின்றும் உலகின் எல்லாப் பாகங்களுக் கும் சென்றதெனக் கூறுதல் ஒவ்வாத கூற்றாக மாட்டாது.
“இவ்வழிபாடு எகிப்து, பலஸ்தின், தையர், பாபிலோன், கிரீஸ், உரோம் முதலிய நாடுகளிலும், ஐரோப்பாவில் கெல்தியர், இஸ்காந்து நேவியர்களிடையேயும் காணப்பட்டது; பாரசீகம், அராபியா, இந்தியா, சீனா, திபெத்து, மெக்சிக்கோ, பெரு, அபிசீனியா, யாவா, இலங்கை, பியூசித்தீவு, ஒசேனியாவின் பல பாகங்கள் என்னும் நாடுகளிலும் இவ்வழிபாடு ஓங்கியிருந்தது. சில இடங்களில் உயிருள்ள பாம்பும் வேறு சில இடங்களில் பல பாம்புகளும் கடவுளராக வழிபடப்பட்டன. கிரேக்கரின் முதல் அரசன் பாம்பு மரபிலுள்ளவனென்று கருதப் பட்டான். அபிசீனியர் தம் அரச பரம்பரையின் முதல்வனைப் பாம்பு எனக் குறிப்பிட்டுள்ளார்கள். பெருவில் பாம்பு வணக்கம் ஞாயிற்று வணக்கத்தோடு இணைந்து இருந்தது.”1
சூலம்
சிவனுடைய கைகளில் இருப்பது சூலம், மழு (கைக் கோடரி) என்னும் இரு ஆயுதங்கள், மேற்கு ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளி லும் கடவுளின் ஆயுதங்கள் சூலம், மழு என்பனவாகவே இருந்தன. மேற்கு ஆசிய மக்கள் சூலத்தை இடியேறு எனக் கொண்டனர்.
“எல்லாச் சாதியினரும் இடியேற்றை ஓர் ஆயுதம் எனக் கொண்டனர். சால்தீய மக்கள் அதனை முத்தலைவேல் அல்லது கைக்கோடரி எனக் கொண்டனர். அசீரிய, சால்திய கடவுளர் மூன்று கவர் உள்ளதும் நெளிவுடையதுமாகிய இடியேறு என்னும் சூலத்தைக் கையில் பிடித் திருந்தனர். பழைய சால்திய சிற்பங்கள் சூலத்தின் கைப்பிடியினின்றும் மழைத்துளி மானின் வாயுள் விழுவதாகக் காட்டுகின்றன. மொகஞ்ச தரோ, அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளில் வழிபாட்டுக் குரிய சூலங்கள் காணப்படுகின்றன. மேற்கு ஆசியா கிரேத்தா முதலிய நாடுகளில் கைக்கோடரிகள் நட்டு வழிபடப்பட்டன. இது, வேலை நட்டு முருகக்கடவுளை வழிபடுவதை ஒத்ததாகும். மொகஞ்சதரோவிலும் கோடரிகள் நட்டு வழிபடப்பட்டன.1
முற்காலக் கடவுளர் வடிவங்களுக்கு இரண்டு கைகளே இருந்தன
இந்திய நாடல்லாத மற்றைய நாடு களின் கடவுளர்கள் இரண்டு கைகள் உடையவர்களாகவே கொள்ளப்பட்டனர். அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங் களில் கடவுளரின் வடிவங்கள் பொறிக்கப் பட்ட பல முத்திரைகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவைகளில் காணப்படும் அவ் வடிவங்களில் இரண்டு கைகளே உள்ளன. சிவனைக் குறிப்பது என்று சொல்லப்படும் பசுபதியின் வடிவமும் இரண்டு கைகள் உடையதாகவே காணப் படுகின்றது. புத்தர் காலச் சிற்பங்களிலும் கடவுளருக்கு இரு கைகளே காணப்படுகின்றன. கி.பி. 50 வரையில் வட நாட்டில் அடிக்கப்பட்ட பொற்காசில் காணப்படும் சிவன் வடிவத்துக்கு இரண்டு கைகளே உள்ளன. இயற்கைக்கு மாறான கதைகளைப் புனைந்து மக்களுக்குச் சொல்லும் இயல்பு வாய்ந்த புராணிகர் காலங்களில் இயற்கைக்கு மாறாகக் கடவுளருக்கு நான்கு கைகள் கற்பித்துச் சிற்பங்கள் அமைக்கும் வழக்கும் உண்டாயிருக்கலாம். பிற்காலங் களில் நான்கு கைகளளவில் நில்லாது பத்து இருபது கைகள் அமைத்துச் செய்யப்பட்ட பல கடவுட் சிற் பங்கள் கம்போதியாவில் காணப்படுகின்றன. மாக்டானல் என்னும் ஆசிரியர் இவ்வுண்மையை நன்கு ஆராய்ந்து கூறியிருப்பதாவது: “முதலாம் நூற் றாண்டின் முடிவில் இந்துக் கடவுளரைச் சிற்பங் களில் அமைக்கும் முறையில் புதியமாறுதல் ஒன்று உண்டாயிற்று. அதற்கு முன் பௌத்த சிற்பங்களில் கடவுளர் இரண்டு கைகள் உடைய வர்களாகவே காணப்படுகின்றனர். கி.பி. 50 வரையில் இரண்டாம் கட்பிசிஸ் என்பவன் அடித்த பொன் நாணயத்தில் காணப்படும் சிவன் வடிவம் இரண்டு கைகள் உடையதாகவே காணப்படுகின்றது.”1
முற்காலக் கடவுளருக்குக் கொம்புகள்
மேற்கு ஆசியா இங்கிலாந்து பிரான்சு எகிப்து இந்தியா முதலிய நாடுகளில் முற்காலக் கடவுளரின் தலைகளில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. அரசரும் பெருமக்களும் இரண்டு கொம்புகளை அணிந்திருந்தார்கள். கொம்புகள் கடவுள் தன்மையையும் அதிகாரத்தை யும் குறிப்பனவாகும். மொகஞ்சதரோவிலும் அரப்பாவிலும் கண்டு பிடிக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள பசுபதிக் கடவுளின் தலையில் இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன.
“கொம்புள்ள கடவுளர் பாபிலோன், அசீரியா என்னும் இடங் களில் பெரிதும் காணப்பட்டனர். பெரிய தந்தைக் கடவுளும், பெரிய தாய்க் கடவுளும் கொம்புகளை அணிந்திருந்தனர். இதனாலேயே விவிலிய வேதத்தில் கடவுள் தன்மையுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஏழு கொம்புகளுண்டு என்று சொல்லப்பட்டது. கொம்புகள் கடவுள் தன்மையின் அடையாளமாகும் … அரசனும் அரசியும் தந்தைக் கடவுளாக வும் தாய்க் கடவுளாகவும் வெளியே வந்தபோது முடிமீது கொம்புகளை அணிந்திருந்தார்கள். அரசனும் அரசியும், தந்தைக்கடவுள் தாய்க்கடவு ளரின் பிறப்பினராகக் கருதப்பட்டனர்.” இந்தியாவிலே வெண்கலக் கால முத்திரை ஒன்றில் கொம்புகள் அணிந்த மனித வடிவம் பொறிக்கப்பட் டுள்ளது. அவ்வடிவம் சிவன் எனப்பட்ட பசுபதி எனப்படுகின்றது. அது மூன்று முகமுடையதென்று சொல்லப்படுகின்றது. மறைவாயுள்ள புறத்தில் இன்னொரு முகம் இருப்பதாகத் தெரிகின்றது. கடவுள் எல்லாத் திசைகளையும் பார்ப்பவர் என்னும் கருத்தை அமைத்து அவ்வடிவம் செதுக்கப்பட்டிருக்கின்றது. ஐரோப்பாவில் ‘யானுஸ்’ (Janus) என்னும் பெயருடன் நாலுமுகங்கள் உடையகடவுள் காணப்படுகின்றது. நாலு முகங்கள் உடைய வடிவங்கள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் தனித்தனி உண்டாயினவோ என்பது ஐயத்துக்கு இடமானது. ஐரோப்பா வில் காணப்படுவது மொகஞ்சதரோ வடிவத்துக்குப் பின்னுள்ள தாகலாம்.1
சிவப்பு உடை
ஞாயிற்று வணக்கமுள்ள நாடுகளில் சிவப்பு ஆடை மிகவும் உயர்ந்த உடையாகக் கருதப்பட்டது. சிவப்பு நிறம் ஒருவகைக் கடவுள் வாழ் உயிர்களினின்றும் எடுக்கப்பட்டது. ஞாயிறு சிவந்த நிறமுடைய தாதலின் ஞாயிற்றுக் கடவுளை வழிபடும் குருமார் ஆதியில் செக்கர் வானம் போன்ற நிறமுடைய ஆடைகளை உடுத்தினர். முற்காலத்தில் அரசனே சிவன் ஆலயக் குருவாயிருந்தானாகலின் அரசரும், அவனுக்கு அடுத்தபடியில் ஆலயக் குருக்களாக வந்த பெருமக்களும் செவ்வுடையை அணிந்தனர். இவ்வகை ஆடைகள் மிக விலையுயர்ந்தனவாயிருந்தன. அரசரும் பெருமக்களுமல்லாத பிறர் இவ் வாடையை அணிய அனுமதிக்கப் பெற்றிலர். எகிப்து பாபிலோன் முதலிய நாடுகளில் கடவுள் விக்கிரங்களுக்குச் சிவப்பு ஆடைகளே உடுக்கப்பட்டன.1 கிரேக்க நாட்டில் குருமார், பெருமக்கள் அல்லாத பிறர் சிவப்பு ஆடைகளை அணிந்ததனால் கடுந்தண்டனை அடைந்தனர். சில வேளைகளில் கொலைத் தண்டனையும் அடைந்தனர். சிவப்புச்சாயம் பெரும்பாலும் மத்தியதரைக் கடலை அடுத்த நாடுகளில் கிடைத்தது. பினீசியர் அச்சாயம் ஊட்டிய துணிகளைப் பிறநாடுகளுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். அவர்கள் இந்திய நாட்டுக்குக் கொண்டு வந்து விற்ற அவ்வகை ஆடைகள் பச்சை வடம் எனப் பெயர் பெற்றன. உயர்ந்த மக்கள் அணிதற்கு உரிய இவ் வாடைகள் துறவிகளாலும் பிற கடவுள் அடியாராலும் அணியப்பட்டன. முற்காலத்தில் அணியப்பட்ட சிவப்பு நிற உடைகள் மிக விலை உயர்ந்தனவாயிருந்தமையின் காவிதோய்த்த உடைகள் பிற் காலத்தில் அணியப்படலாயின. இன்று உரோமன் கத்தோலிக்க nபாப் பாண்டவர் “ஸ்கார்லெட்” (Scarlet) என்னும் சிவப்பு ஆடையையே அணிவர். இம் முறையைப் பின்பற்றியே பௌத்த சமயத்தினரும் மஞ்சள் ஆடை உடுப்பது.
“தையர் நாட்டுச் சிவப்பு ஆடைகள் உல்லாச வாழ்க்கைப் பொருள்களாக இருந்தன. அவை தரங்களுக்கும் காலங்களுக்குமேற்பப் பலவாறு விற்கப்பட்டன. அவை பெரும்பாலும் விலையேறப்பெற்றன வாயும் பொன்னின் நிறைக்குச் சமமான விலையுடையனவாயும் இருந்தன! அவை ஆலயங்களில் தூக்கவும், குருமார் அரசர்கள் உடுக்க வும் பயன்படுத்தப்பட்டன. மொசே என்பவர் தாம் செய்த கடவுளின் கூட்டுக்கும் (விமானம்) குருமாரின் உடைக்கும் இவ்வாடைகளையே பயன்படுத்தினார். பாபிலோனியர் தம் ஆலய விக்கிரங்களுக்கு இவ் வாடைகளையே உடுத்தினர். தேர் தூலியன் என்பார் எகிப்திய பாபி லோனிய அரசர் இதனைப் பயன்படுத்தியதைக் குறித்துக் கூறி யுள்ளார். கிரேக்கரும் உரோமரும் இதனை நீதிபதிகள், இராணுவ அதிகாரிகள், குருமார் என்பவர்களின் உடையாக மாத்திரம் கொண்டனர். பொது சனங்கள் இதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை அணியும் பொதுசனங்களுக்கு மரணதண் டனை போன்ற கடும் தண்டனைகள் விதிக் கும் சட்டங்கள் செய்யப்பட்டிருந்தன.”
சங்கு
ஞாயிற்று வழிபாடு காணப்பட்ட எல்லா நாடுகளிலும் சங்கு புனிதமுடைய தாகக் கருதப்பட்டது. அஃது ஆலயங்களில் சிறந்த வாத்தியமாகவும் பயன்படுத்தப் பட்டது. யூத மக்கள் சங்கு வாத்தியத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றது. சின்ன ஆசியா, மேற்கு ஆசியா, எகிப்து, மத்திய தரை நாடுகள், இந்தியா, சீனா, யப்பான் கிழக்குத் தீவுகள் அமெரிக்கா முதலிய நாடுகளில் எல்லாம் இது பரிசுத்த முடையதாகக் கொள்ளப்பட்டு வந்தமையை ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார் கள். சங்கு வாத்தியமும் சங்கும் சிவ பெருமானுக்கு உகந்தன வாக இன்றும் கொள்ளப்பட்டு வருகின்றன. திருமால் கையில் கொண்டிருப்பது சங்கு. சங்கை மக்கள் புனிதமுடையதாகக் கருதினமையினால் போலும் அதனை அறுத்துச் செய்த வளைகளைப் பெண்கள் அணிந்தனர். அவை தீமையை ஓட்டும் வல்லமையுடையன என்று கருதப்பட்டமையின் சங்கு வளைகள் காப்பு என்னும் பெயர் பெற்றன. மக்கள் ஒரு காலத்தில் “சோகி” அல்லது கவடி எனப்படும் கடல் பிராணி யின் ஓட்டைத் தாய்க்கடவு ளின் அடையாளமாக வைத்து வழிபட்டனர். சங்கு புனித முடையதாகக் கொள்ளப்பட்டமையின் அதனிடத்துப் பிறக்கும் முத்து மிகப் புனிதமுடையதாகவும் சீவசத்து அளிப்பதாகவும் கொள்ளப்பட்டு மக்களால் அணியப்பட்டன. முத்துக்கள் முற்கால ஆலயக் குருமாரா யிருந்த அரசர் அரசியராலும், பெருமக்களாலும் அணியப்பட்டன. முத்துக்கள் விலையுயர்ந்தனவாகவும், எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியனவல்லாமல் இருந்தபடியினாலும் அவைகளுக்குப் பதில் சீவசத்து அளிப்பவனாகிய உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப் பட்டன. உருத்திராக்கம் அணிதல் கடவுள் தொழும்பர் என்பதைக் குறிப்பதாக இன்று கருதப்பட்டு வருகின்றது. இவ்வாறு சமயத் தொடர் பாக எல்லா மக்களுக்கும் பொதுவில் உள்ள பல கொள்கைகளை நாம் அறிய முடிகின்றது.
“சங்கு ஓடு மிகவும் விலை ஏறப்பெற்றது. விவிலிய மறை (Psalm XXVI, 3) அமாவாசைக் காலத்தும் பரிசுத்த விருந்து நாளிலும் சங்கு வாத்தியம் ஒலிக்கப்பட்டது எனக் கூறுகின்றது. இந்துக்கள் தம் விழாக்களைச் சங்கு ஊதி அறிவிக்கின்றார்கள்”.1
“சிவப்புச் சாயத்தைக் கண்டு பிடித்தவர்களே முதலில் சங்கு வாத்தியங்களைப் பயன்படுத்தினார்கள்”.
சங்கு வாத்தியம் கிறித்துவ, யூத, பிராமண, பௌத்த, சிந்தோ மதத்தினராலும், மத்தியதரை இந்திய, மத்திய ஆசிய, இந்தோனேசிய, யப்பான், ஆசேனிய அமெரிக்க நாடுகளின் மக்களாலும் ஆலயங்களில் ஒலிக்கப்பட்டன.”1
சீரிய நாட்டில் சிவன் கடவுள்
சீரியா என்பது மேற்கு ஆசியாவிலே மத்திய தரைக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக உள்ள நாடு. அங்கிருந்து வந்து மலையாளத்தில் குடியேறிய கிறித்தவர்களே ‘சீரிய கிறித்தவர்கள் எனப்படுகின் றனர். சீரிய நாட்டில் ஒரு காலத்தில் சிவன் கடவுளும் காளியுமே முழுமுதற் கடவுளர் களாக வழிபடப்பட்டனர். இந்திய நாட்டில் சிவன் கடவுள் எவ்வடிவுடன் வழிபடப்பட்டதோ, அவ் வடிவுடனேயே சீரிய மக்களின் தந்தைக் கடவுளும் வழிபடப்பட்டது. சீரிய நாட்டிலே வெண்கலத் தட்டு ஒன்றின் மீது பொறிக்கப்பட்ட தந்தைக் கடவுளின் வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
சீரிய மக்கள் தாம் முழுமுதலாகக் கொண்டு வழிபட்ட தந்தைக் கடவுளுக்கு அதாத்து (ஆதி?) என்னும் பெயர் இட்டு வழங்கினார்கள். அக்கடவுள் தாடியுடையதாகவும் அடி அகன்று நுனி ஒடுங்கிக் கூராக முடியும் முடியை உடையதாகவும், வலக்கையில் இரண்டு அலகுடைய மழுவை உடையதாகவும் இடக்கையில் கீழ் மூன்றும் மேல் மூன்றுமாக (மும்மூன்று) கவர்களையுடைய இடியேற்றை வைத்திருப்பதாகவும் காணப்படுகின்றது. அக்கடவுளைத் தாங்கி நிற்கும் இடப ஊர்தியின் நெற்றியில் பூமாலை காணப்படுகின்றது.1 இக்கடவுள் கையில் பிடித்திருப் பதை நேர் ஒத்த இரட்டைச் சூலம், வேலூர்க் கோட்டைக்குள் இருக்கும் சிவன் ஆலயத்தின் வாயிலிலே சிவன் வடிவாகக் கருங்கல்லில் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ள காவல்கடவுளின் கையில் இருப்பதைப் பார்க்கலாம்.
கிதைதி நாட்டில் சிவன் கடவுள்
சீரிய நாட்டுக்கு வடக்கே உள்ள நாடு சின்ன ஆசியா எனப்படும். அங்கு கிதைதி என்னும் பழைய நாடு ஒன்று உள்ளது. கிதைதி மொழி தமிழ்மொழிக்கு மிக இனமுடையதென்றும் அந்நாட்டின் பழைய மொழிக்குரிய எழுத்துக்கள் மொகஞ்சதரோ எழுத்துக்களை ஒத்துள்ளன என்றும், ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். கிதைதி நாட்டிலே பழைய அழிபாடுகளின் சுவர் ஒன்றில் வரையப்பட்டிருந்த பல ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வடிவங்களுள் ஒன்று சீரிய மக்கள் வழிபட்ட அதாத்து என்னும் தந்தைக் கடவுள் போன்றது. இன்னோர் ஓவியத்தில் காணப்படும் வடிவம் இடபத்தின் மீது நிற்கின்றது. இடபத் தின் கொம்புகளில் பூமாலை சூட்டப்பட்டிருக்கின்றது. அது முக்கோண வடிவான வில்லைத் தோளில் வைத்திருக்கின்றது; நீட்டிய கையில் இடியேறு போன்ற கவருள்ள பொருளை வைத்திருக்கின்றது.2
சிங்க ஊர்தியில் வீற்றிருக்கும் தாய்க் கடவுளும் இடப ஊர்தியில் எழுந்தருளியிருக்கும் தந்தைக் கடவுளும் பொறிக்கப்பட்ட பழைய நாணயமொன்றும் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது.3
இத் தந்தைக் கடவுள் இடபத்தின் மீது வீற்றிருக்கின்றார். கூரிய முடி அணிந்து இருக்கும் தாய்க்கடவுள் அவருக்குப் பக்கத்தே தண்டும் கேடகமுந்தாங்கிச் சிங்காசனத்தின் மீது இருக்கின்றார். தாய் தந்தைக் கடவுளர் கணவன் மனைவியர்களாவர். இடபத்திலிருக் கும் கடவுளுக்கு இடக்கைப் புறத்தே தாய்க் கடவுள் அல்லது தாய்க் கடவுளுக்கு வலக்கைப் புறத்தே தந்தைக் கடவுளாகக் கிதைதிநாட்டுக் கடவுளர் வைக்கப்பட்டுள்ளார்கள். கிதைதிக் கடவுளர்கள் சிவன் என்னும் கடவுளை மிக ஒத்திருத்தல் நம் கருத்தை மிகக் கவரத்தக்கதாய் இருக்கின்றது. சீரிய மக்கள் இக்கடவுளுக்கு அதாத்து (Adad) என்னும் பெயர் கொடுத்துத் தாம் வழிபடும் கடவுளர் எல்லோருக்கும் தலைவராகக் கொண்டனர். அவர்கள் இக்கடவுளைத் “தனி முதல்” அல்லது “முழு முதல்” என்று வணங்கினர். இக்கடவுள் எல்லா வல்லமையும் உடையவ ராகக் கருதப்பட்டார். இக் கடவு ளின் பாரி அதர்கேட்ஸ் (adar-gates) எனப்பட்டார். இவ்விரு வருமே எல்லாக் கடவுளர்க்கும் தலைவர்களாவர். பாபிலோனி யரும் செமித்தியரும் இத்தாய்க் கடவுளை இஸ்தர் (ஈசுவரி) என்றும் பினீசியர் அஸ்தொ றாதி (astorate) என்றும் பழைய யூதர் அஸ்தறொத்து (astoreth) என்றும் வழங்கினர்.
கிதைதியிலே சான்கோவர் என்னும் கிராமத்தில் கிட்டிய காலம் வரையில் சுற்று மதில் உடையதும் பரிசுத்த மீன் உறைவதுமாகிய குளம் ஒன்று இருந்தது. இது தொலுக் பாபா என்னும் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு யூபிதர் தொலிசினஸ் என்னும் கடவுளின் ஆலய மொன்று உள்ளது. இவ்வாலயத்திலுள்ள கடவுளே அங்குள்ள மற்றைய கடவுளர் களுக்கு எல்லாம் தலைமை உடையவ ரெனத் தெரிகின்றது. இக்கடவுள் ஒரு கையில் இடியேற்றையும் மற்றக் கையில் இருமுனைகளுள்ள கண்ட கோடரியை (மழுவை)யும் தாங்கி நிற்கின்றார். அவரின் மனைவி சிங்க ஊர்தியுடைய எராசான்ரா என்பவராவர்.
தாடியுடைய கடவுள் நீட்டிய இடதுகரத்தில் சூலத்தைப் பிடித்துக் கொண்டு நிறையாகச் செல்லும் ஆடவருக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். அவர் ஒருபோது தந்தைக் கடவுளாயிருக்காலம். கிதைதி மக்களின் வான் தெய்வத்தின் அடையாளங்கள் இடபமும் சூலமும் ஆகும். இக்கடவுளின் இரு கற்சிலைகள் வட சீரியாவிலுள்ள சென் யெறிலி என்னும் இடத்திலும் பாபிலோனிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டு சிலைகளிலும் இக்கடவுள் கிதைதி உடைதரித்து, குறுகிய வட்டுடை உடுத்து, முன் வளைந்த செருப்புத்தொட்டு, பிறை வடிவான உடைவாளைப் பக்கத்தே தூங்கும்படி அரையிற் கட்டிய வடிவுடன் காணப்படுகின்றார். தூக்கிய அவருடைய கைகளில் வலக்கை கண்ட கோடரியைப் பிடித்து இருக்கின்றது. இடக்கை சூலத்தைப் பிடித் துள்ளது. பாபிலோனிற் கண்டுபிடிக்கப்பட்ட சிலையில் கடவுள் முடிமீது இரண்டு கொம்புகள் காணப்படுகின்றன. இவை ஒரு போது இடபத் துடையவாகலாம். யூபிராதஸ் பக்கங்களில் உள்ள மலாதியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிலையில் இடபத்தின் மீது நின்று கையில் சூலத்தைப் பிடித்து இருக்கும் ஒரு கடவுள் காணப் படுகின்றது. கையில் வளைந்த தடி பிடித்தவரும், நீண்ட அங்கி அணிந்த வருமாகிய பூசாரி, ஒரு கையினால் கடவுளை நோக்கி நின்று பலி செலுத்துகின்றார்.
கிதைதியிற் காணப்பட்ட இன்னொரு சிற்பத்தில் முக்கோண வடிவான வில்லைப் பிடித்து இடபத்தின் மீது நிற்கும் கடவுள் ஒன்று காணப்படுகின்றது. இக் கடவுளைப் பற்றிக் கிற்றுசில் என்னும் கிதைதி அரசனுக் கும் இராம்சே என்னும் எகிப்திய அரசனுக்கும் இடையில் கி.மு. 1290இல் எழுதப்பட்ட சமாதான உடன்படிக்கை ஒன்றால் தெரிய வருகின்றது. இச் சமாதான உடன்படிக்கைப் படிகள் கிதைதி மொழியிலும் எகிப்திய மொழியிலும் எழுதப்பட்ட பட்டையங் களுள் காணப்படுகின்றன. கிதைதிப் பட்டையம் களி மண்ணில் எழுதிச் சூளையில் இடப்பட்டுள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை வாசகங்கள் எகிப்திலே தீப்ஸ் நகரிலுள்ள ஆலயச் சுவர்களில் எகிப்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவைகள் வாசிக்கப்பட்டுள்ளன. அப்பட்டையத்தினால் ஞாயிற்றுக் கடவுளே அவர்களின் முதன்மைத் தெய்வம் எனத் தெரிகின்றது. கிதைதி சாசனம் எழுதப்பட்ட களிமண் தட்டில் கிதைதி முத்திரை ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் அரசன் இடிக்கடவுளால் தழுவப்பட்டிருக்கிறான். அரசி, அரன்னா என்னும் தாய்க் கடவுளால் தழுவப்பட்டிருக்கிறாள். கிதைதி மக்களின் இவ்வான் கடவுள் கொம்மாசீனிலுள்ள டொலிச்சி என்னுமிடத்தில் நீண்ட காலம் வணங்கப்பட்டவராதல் வேண்டும். ரோமச் சிற்பங்களில் இக்கடவுள் யூபிதர்தொலிசின்ஸ் என்னும் பெயருடன் உயர்ந்த கூரிய முடியணிந்து இடபத்தின் மீது நின்று ஒரு கையில் சூலமும் ஒரு கையில் மழுவும் தாங்கியுள்ளார். இவ்வடிவில் இக்கடவுள் வழிபாடு சீரியா நாட்டில் இருந்து போர் வீரர்களாலும் அடிமைகளாலும் உரோமச் சக்கராதி பத்தியத்துக்குக் கொண்டு சென்று பரப்பப்பட்டது. பெரும்பாலும் எல்லைப் புறங்களிலும் போர்வீரரின் கூடாரங்களிலும் இவ்வழிபாடு ஓங்கி இருந்தது.
மக்கள் இவ்வடிவத்துடன் கடவுளை வழிபடும் முறை அரப்பா, மொகஞ்சதரோ காலத்தில் மிகப்பழைமை அடைந்திருந்ததெனத் தெரிகின்றது. சேர்யோன், மார்சல், என்பார் அரப்பா, மொகஞ்சதரோ என்னும் இடங்களில் நடத்திய ஆராய்ச்சியில் மக்களும் பலவகை விலங்குகளும் சூழ்ந்திருக்க மத்தியில் யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையுடைய சிவன் பொறித்த முத்திரை ஒன்று காணப்பட்டது. மக்கே என்பவர் நடத்திய ஆராய்ச்சியில் மேலும் இவ்வகை முத்திரைகள் கிடைத்தன. அரப்பாவில் பின்பு நடத்திய ஆராய்ச்சியில் இன்னும் இவ்வகை முத்திரைகள் கிடைத்தன. அரப்பாவில் கிடைத்த இவ்வகை முத்திரைகளே மொகஞ்சதரோ முத்திரைகளைவிடக் காலத்தால் முற்பட்டன என்று கருதப்படுகின்றன. இம் முத்திரைகளில் காணப்படும் வடிவங்கள் மக்கள் இறைவனைப் பசுபதி எனக்கொண்டு வழிபட்ட தன்மையை விளக்குகின்றனவென்று எல்லா ஆராய்ச்சியாளரும் ஒரே வகையாகக் கூறியுள்ளனர். சில முத்திரைகளில் சிவன் மூன்று முக முடையவராகவும் வெட்டப்பட்டுள்ளார். முற்காலத்தில் இடியேற் றுடன் இடபத்தையும் இக் கடவுளின் அடையாளமாகக் கொண்டனர். மிருகத்தின் மூர்க்க குணத்திற்கு மாத்திரமன்று, ஆனால் அதன் குரல் இடியேற்றின் குரலை ஒத்திருத்தல் நோக்கியேயாகலாம் என யாம் ஊகித்தல் கூடும். ஆதிகால மனிதன் வானத்தேயுள்ள இடபத்தின் குரலே இடியேறு எனக் கருதியிருக்கலாம்.
பெண்களுக்குத் தலைமை தாங்கிச் செல்கின்ற பெண் தெய்வம் பொகாஸ் கூவி (Bogharskui) என்னுமிடத்தில் வான் கடவுளுக்குப் பக்கத்தே இருக்கின்றது. இஃது ஆசிய மக்களின் தாய்க் கடவுளாகலாம். இக்கடவுள் அணிந்து இருக்கும் கூரிய முடியும், அவள் ஏறிச் செல்லும் சிங்கம் அல்லது புலியும், சிங்கங்களால் இழுக்கப்படும் தேருடைய சிலிபி என்னும் தெய்வத்தை நமக்கு நினைவு ஊட்டுகின்றன. சீரிய மக்களின் அதகிராதி என்னும் பெண் தெய்வம் உயர்ந்த முடியணிந்து சிங்கத்தின் மீது இருப்பதாக பாபிலோனில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இவ்வுரு வத்தைக் கிரேக்கர் ரியா (Rea) என வழங்கினர். அவருடைய முழங்கால் களில் இரண்டு சிங்கங்கள் நிற்பதாக அவர்கள் அவர் வடிவைச் சித்திரித்துள்ளார்கள்.
சின்ன ஆசியாவில் உள்ள தார்சஸ் (Tarsas) என்னும் இடபத்தில் பால்கடவுளுடன் ஆதி என்னும் தாய்க் கடவுளும் வணங்கப்பட்டது. அவர்களின் வடிவங்கள் நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின் மீது இருக்கிறாள். தந்தைக் கடவுளைக் கிரேக்கர் சியஸ் (Zeus) கடவுளாகக் கருதினார்கள். உலூசியன் (Lucian) என்பார் இக்கடவுளின் தோற்றம் சியஸ் (Zeus) வடிவை ஒத்துள்ளதெனக் கூறியுள்ளார். ஆனால் சியஸ் கடவுளைப்போலல்லாமல் பால்கடவுள் இடபத்தின் மீது இருந்தார். இவ்வகையான இடிக்கடவுள் பாபிலோனிய ராலும் அசீரியராலும் மிகப் பழைமைதொட்டு வழிபடப்பட்டார். அவருக்கும் அடாட் என்னும் பெயர் உண்டு. அசீரிய சிற்பமொன்றில் முடியில் இரண்டு கொம்புகளை அணிந்து கையில் சூலமும், கண்ட கோடரியும் தாங்கியவ ராக இவர் காணப்படுகின்றார்.
“அரப்பா புதை பொருள் ஆராய்ச்சி” என்னும் நூலில் வற்ஸ என்பார் கூறுவது : “அவர் (சிவன்) அட்ட ணைக் காலிட்டு ஒரு பீடத்தின் மீது இருக்கின்றார். காற்பெரு விரல்கள் கீழ்ப் பக்கம் வளைந்து நிற்கின்றன; கைகள் விரிந்து இருக்கின்றன; அவை முழங்காலில் தங்கி இருக்கின்றன. மணிக்கட்டு முதல் தோள் வரையும் வளையங்கள் அணியப்பட்டுள்ளன. சூலமும் இடபமுமுடைய சிவனின் முற்கால வடிவமே மொகஞ்ச தரோவில் காணப்பட்டதாகும்.1
மொகஞ்சதரோவில் பின்னும் செய்யப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சி என்னும் நூலில் மக்கே என்பவர் கூறியுள்ளது; 22வது இலக்க முத்திரையில் அட்டணைக் காலிட்டுப் பீடம் ஒன்றின் மீது இருக்கும் ஒரு வடிவம் காணப்படுகின்றது. பீடங்களின் கால்கள் இடபத்தின் கால்கள் போல் இருக்கின்றன. கைகளுக்கும் கால்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடித்தல் பொருட்டு முத்திரை வெட்டுவோன் கைகளை முழங்கால் களில் தங்குமாறு வெட்டியிருத்தல் கூடும். கைகளில் பல வளையங்கள் காணப்படுகின்றன. தலையில் இலைகளுடைய மரக்கிளை காணப்படு கின்றது. அக்கிளை ஆல் இனத்தைச் சேர்ந்ததாகத் தெரிகின்றது. கொம்பு களாயின் அவை மரக்கிளையின் அடியில் கட்டப்பட்டுள்ளனவாகும். அவ்வடிவத்துக்குப் பக்கத்துக்கு இரண்டும், முன் ஒன்றுமாக மூன்று முகங்கள் உள்ளன.
235ஆவது முத்திரையில் இதே வகையான வடிவம் காணப்படு கின்றது. இதில் பீடமில்லை. வடிவம் நிலத்தின்மீது இருக்கின்றது. தலை அணி இரண்டு கொம்புகளாகவும் கொம்புகளின் இடையே பூங்கொத் தாகவும் காணப்படுகின்றது. தலைமயிர் பின்னால் தொங்குகின்றது. இதற்கு ஒரு முகம்மாத்திரம் இருக்கிறது.
420ஆம் இலக்க முத்திரை பெருப்பித்துக் [Pl. C.(F)] காட்டப் பட்டுள்ளது. இது பெரிதும் பழுதின்றியிருக்கின்றது. சேர் யோன் மார்சல் என்பார் இதனைச் சிவன் என்று குறிப்பிட்டு உள்ளார். இம் மூன்று முத்திரைகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கௌபீன மொன்றைத் தவிர இவ்வடிவங்கள் வேறு ஆடையின்றியே காணப்படு கின்றன. கௌபீனம் இக்காலம் அணியப்படும் இலங்கோடு போன்றது. 222 ஆவது முத்திரையில் இந்த வடிவத்துக்கு ஒரு முகம்தான் உண்டு. 235, 420 முத்திரைகளில் உள்ள வடிவங்களுக்கு மூன்று முகங்கள் உண்டு. 222, 420இல் உள்ள உருவங்கள் பதிந்த பீடத்தின் மீது இருக்கின்றன. ஒரு பீடத்தின் கால்கள் இடபத்தின் பாதங்கள் போன்றன. இவ்வுருவங்கள் எல்லாம் பல வளையங்களை மணிக்கட்டு முதல் தோள்வரையும் அணிந் துள்ளன. 420இல் காட்டப்பட்ட வடிவம் முக்கோண வடிவான அணி அல்லது மணிகள் கோத்த பல வடங்களை அணிந்து இருக்கின்றது. தலை மயிர் எப்படி முடிந்து இருக்கின்றது என்று அறிவது கடினமாக இருக் கிறது, 235 ஆவதில் காட்டப்பட்டுள்ள உருவத்தின் மயிர் கயிறுபோல் பின்னே தொங்குகின்றது.1
420 ஆவது முத்திரையில் மனித வடிவத்தைச் சூழ்ந்து ஆறு விலங்குகளின் வடிவங்கள் காணப்படுகின்றன. இடப்பக்கத்தில் யானை யும் புலியும் நிற்கின்றன. அவைகளுக்கு இடையில் மனிதன் ஒருவன் நிற்கின்றான். வலப்புறத்தில் காண்டாமிருகமும் எருமையும் நிற்கின்றன. கடவுள் வீற்றிருக்கும் பீடத்தின் கீழ் இரண்டு மான்கள் அல்லது மலை யாடுகள் நிற்கின்றன. சேர்யோன் மார்சல் என்பார் இவ்வடிவம் சிவனின் பசுபதி என்னும் தன்மையை விளக்குவதெனக் கூறியுள்ளார். சேர்யோன் மார்சல் கூறியுள்ளது வருமாறு; நிலக்கடவுள் தாய்க் கடவுளர்களின் பக்கத்தில் மொகஞ்சதரோவில் நிர்வாணமான ஒரு வடிவம் காணப்படு கின்றது. அதனைப் பார்த்தவுடன் அது வரலாற்றுக் காலத்தைய சிவனுக்கு முற்பட்ட வடிவம் எனத் தெரிகின்றது. மூன்று முகமுடைய அவ் வடிவம் பதிந்த ஒரு பீடத்தின் மீது யோகத்தில் அமர்ந்திருக்கும் பாவனையில் இருக்கின்றது. சிவமதத்தை ஒப்ப யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே ஆரம்பமாகி இருந்தது. இந்து ஐரோப்பியர் காலத்திலே இதிகாச காலம் வரையில் யோகத்தைப்பற்றி ஏன் அதிகம் கூறப்பட வில்லை என்பதையும் இது விளக்குகின்றது. மக்கே என்பாரால் இம் முத்திரை கண்டுபிடிக்கப்படு முன்பே இராம பிரசாத்து சந்திரா XCVIII முத்திரையிலுள்ள வடிவின் தலையை நோக்கி அதன் கண்கள் மூக்கு நுனியை நோக்குகின்றன என்றும், அது யோகத்தின் அடையாளம் என்றும் முடிவுசெய்து உள்ளார். அக்கடவுள் யோகிகளால் தேடி அறியப் படுபவர் மாத்திரம் அல்லாமல் பசுபதியாகவும் விளங்கினார். இஃது அக்கடவுளைச் சூழ்ந்து காணப்படும் புலி, காண்டாமிருகம், யானை, எருமை முதலியவைகளைக் கொண்டு இனிதறிகின்றோம்.1
ஆரியர் சிவ வணக்கத்தைத் தமிழரிடமிருந்து பெற்றார்கள்
சிவ வழிபாடு ஆரிய மக்களுக்கு உரியதன்று. அதனை அவர்கள் திராவிட மக்களிடமிருந்து பெற்றார்கள். ஆரியமக்களின் வேதங்களில் கடவுளின் பெயர் சிவன் எனக் காணப்படவில்லை.2 பாரசீகம் கிரீசு முதலிய மற்றைய ஆரியர் நாடுகளில் சிவ வணக்கம் காணப்படாமையால் அஃது இந்து ஆரியர் அறியாதிருந்து பின்பு ஆதி மக்களிடம் இருந்து அறிந்து கொள்ளப்பட்டதென நன்கு துணிதல் சாலும். இதனைச் சார்லஸ் எலியட் என்னும் ஆசிரியர் திறம்பட ஆராய்ந்து விளக்கி யுள்ளார்.3 திராவிட இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு:
ஆரியரின் உருத்திரன் திராவிட மக்களின் கடவுளாவர். உருத்திரன் என்பதற்குச் “சிவந்தவன்” என்பது பொருள். இது சிவன் என்பதன் மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. வீலர் (Wheeler) என்பார், சிவன் துரானிய மக்களின் கடவுள் எனக் கூறியுள்ளார். ரெகோசின் என்பார் தமது “மர வணக்கமும், பாம்பு வணக்கமும்” என்னும் நூலில் சிவ வணக்கம் இந்திய நாட்டுக்கே உரியதென்றும் அது வடநாட்டினும் பார்க்கத் தென்னாட்டுக்கே உரிமையுடையது என்றும் கூறியுள்ளார். டாக்டர் ஸ்டீபன்சன் (Dr.Stephenson) சிவன் தமிழரின் கடவுள் எனப் புகன்றார். இருக்கு வேதம் இலிங்க வணக்கத்தை இழித்துக் கூறுவதால் வேதகாலத்துக்கு முன் சிவ வணக்கம் திராவிடரிடையே வளர்ச்சியடைந் திருந்ததென கில்பேர்ட் சிலாட்டர் (Dr.Gilbert Slater) என்பார் கூறியிருக் கின்றார். இருக்கு வேதத்தில் உருத்திரன், சிவன் என்னும் பெயரால் அறியப்படவில்லை என்றும் உருத்திரன் உறைபனி மூடிய மலைகளி னின்று இடி முழக்கங்களோடு வரும் இடிக் கடவுளைக் குறித்ததென்றும் வேத ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். டாக்டர் ஸ்டீபன்சன் (Dr. Step-henson) என்பாரே பழைய வேதப் பாடல்களில் சிவன் என்னும் பெயர் காணப் படவில்லை என முதல் முதல் எடுத்துக் காட்டியவராவர். உருத் திரனை அக்கினி எனக் காட்டலாம். அக்கினியையும் உருத்திரனையும் சிவன் எனக் காட்டுதல் முடியாது. தக்கன் சிவனை யாகத்துக்கு அழைக்க வில்லை என்றும் ஆனால் பதினொரு உருத்திரரும் யாகத்தில் வந்திருந் தார்கள் என்றும் சொல்லப்படுகின்றன.
இந்திய வரலாற்று ஆசிரியருள் ஒரு சாரார் சிவவழிபாடு ஆரிய மக்களால் அறியப்பட்டு இருந்தது என்றும் அது மொகஞ்சதரோ மக்களுக்கு அல்லது தமிழருக்கு உரியதன்றென்றும் வழக்கிடுவாராயினர். ஆரியரே தமிழரின் சமயத் தொடர்புகளுக்கு அதிகாரிகள் என்றும், அவர்கள் வேதங்களில் எல்லாப்பொருள்களும் கூறப்பட்டுள்ளன என்றும் சொல்லும் மூடநம்பிக்கை நீண்டகாலம் நிலவுவதாயிற்று. இக்கருத்தினாலேயே பிராமண மதத்தைக் கைக்கொண்ட தமிழர் வடநாட்டுக் கோத்திரப் பெயர்களை இட்டு வழங்குவதும், வட மொழியைத் தமது மொழி எனக்கொண்டு அச்சொற்றொடர்களைச் சமயக் கிரியைகளில் பயன்படுத்துவதும், தாம் பூதேவர் என இறுமாப்புக் கொள்வதுமாகும். சிவ வழிபாடு தமிழருடைய தென்று உறுதிப்பட்டால் மேற்கூறிய மூடக் கொள்கைகளுக்கு ஆபத்து நேரக்கூடும். அது கருதியே ஒரு கூட்டத்தினர் தமது ஆக்கத்துக்கு மாறுபட்டனவாகத் தோன்றும் வரலாற்று உண்மைகளை எதிர்த்து வருகின்றனர்.
இந்திய நாகரிகம்1 என்னும் வெளியீட்டில் அமலானந்த கோஷ் என்பார் கூறியிருப்பது பின் வருமாறு:
யோகத்தைப்பற்றிய சாதனையும் கொள்கையும் முற்காலப் பிற் கால வேத மதத்துக்கு முற்றும் அன்னியமானவை. இப்பொழுது சண்டா என்பவர் யோகத்தைப்பற்றிப் பழைய சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் அறிந்து இருந்தார்கள் என மொகஞ்சதரோப் பழம் பொருட் சிற்பங்களைக் கொண்டு நன்கு விளக்கி உள்ளார்கள். சிந்துவெளி மக்கள் தங்கள் கடவு ளுக்கு ஒரு யோகிக்குரிய எல்லாப் பண்புகளையும் கொடுத்து இருந்தார்கள். படைத்தல் தொழில் செய்வதற்குக் கடவுள் தவம் செய்ய வேண்டும் என அவர்கள் நம்பினார்கள்; தமது போக்கின்படி மனிதர் கடவுளையும் நினைப்பா ரானார். மனிதனை உயர்நிலைப்படுத்தக் கூடிய செயல்களைக் கடவுள ரும் செய்ய வேண்டுமென்பது அவர்களுடைய கருத்து. இந் நம்பிக் கையைக் கொண்டு போலும் சிந்துவெளி மக்கள் கடவுளை யோகத் திருக்கும் வடிவில் வழிபடுவாராயினர்.
சாங்கிய மதத்துக்கும் யோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சாங்கியம் வேதமதத்துக்குப் புறம்பானது. யோகத்தைப்பற்றிய கொள்கை கள் வேத காலத்துக்கு முற்பட்டன.
சிவ வணக்கம், ஆரியத் தொடர்பில்லாததா? என்று நீண்ட காலம் சந்தேகிக்கப்பட்டது. ஆரியர் சம்பந்தமான எல்லாம் உயர்வுடையன என்றும் இவ் வுயர்ந்த வழிபாட்டு முறை ஆரிய மதத் தொடர்பு உடையது என்றும் தவறாகக் கருதப்படலாயின. இவ்வணக்கத்தில் ஆரியச் சார்பு உள்ளதென்று காட்டுவதற்கு எவ்வகை ஆதாரமும் கிடைக்கவில்லை.
மொகஞ்சதரோவில் இலிங்க வழிபாடு இருந்ததென்பதற்கு நல்ல சான்றுகள் உண்டு. இருக்கு வேதத்தில் இரு இடங்களில் ஆரியரின் பகைவரைக் குறிக்கச் சிசினதேவர்கள் என்னும் பிரயோகம் காணப்படு கின்றது. இதனால் ஆரியருக்குச் சிவவணக்கம் உடையதன்று என நன்கு விளங்கும்.
சம்புத்தீவு நாவற்றீவு அன்று, சிவன் தீவு
இந்திய நாட்டோடு தொடர்புற்றுத் தெற்கே விரிந்து அகன்று மேருவை மையத்தில் உடையதாயிருந்த பெரிய நிலப்பரப்புக்குச் சம்புத்தீவு என்னும் பெயர் இருந்ததெனப்படுகின்றது. அதற்குக் காரணம் மேருவைச் சார்ந்து பெரிய நாவல் மரம் நின்றமை எனப்படுகின்றது. இக் காரணம் சிறந்ததாகக் காணவில்லை எனத் திராவிட ஆராய்ச்சி (Darvidic Studies) என்னும் நூலுக்குக் குறிப்பு வரைந்த கொலின்ஸ் (M.Collins) என்பார் கூறியிருப்பது பின் வருமாறு :
சம்பு என்னும் சொல் வேதத்தில் ஆளப்பட்டுள்ளது. அது மங்களம், செல்வம் முதலிய பொருள்களைத் தரும் ‘சம்’ என்னும் அடியாகப் பிறந்தது. ‘பு’ என்பது உண்டாவது என்னும் பொருளைத் தருவது. பிற்காலத்தில் சம்பு சிவனைக் குறிக்கின்றது. செம் (சிவப்பு) என்பது போன்ற ஒரு திராவிடச் சொல்லை நினைவில் வைத்துக் கொண்டே அப்பொருளில் அச்சொல் பயன் படுத்தப்படுவதாயிற்று. சிவப்பு எப்பொழுதும் சிவன் கடவுளோடு தொடர்பு உடையது. மிக முற்காலத்தில் வட இந்தியாவிலும் தென் இந்திய மக்களை ஒத்தோர் வாழ்ந்தார்கள் என்று எனது கருத்திற்படுகின்றது. செம்பு (சிவப்பு) என்னும் தமிழ்ச்சொல்லே சம்பு என உச்சரிக்கப்பட்டது. செம்பு என்னும் திராவிடச் சொல்லின் சமக்கிருத உச்சரிப்பாகிய சம்பு என்பதே சிவப்பு அல்லது சிவப்பன் என்னும் பொருளில் சிவனைக் குறிக்கும் பெயராக வழங்கப்பட்டது. ஆரியர் குடியேறி இருந்த இடத்துக்குத் தெற்கிலேயே சிவ வணக்கம் பரவியிருந்ததாதல் வேண்டும். ஆரியர் தாம் அறியாதிருந்த தெற்கில் உள்ள நாடுகளைச் “சிவன் நாடுகள் என்னும் பொருளில் சம்புத் தீவு என வழங்கினராதல் வேண்டும்”.
சிவனும் தமிழும்
தமிழ், சிவன் என்னும் இரு சொற்களும் ஒரே பொருளுடையன. சிவன் என்னும் சொல் ஆதியில் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிற்று என்பது முன்னோரிடத்தில் காட்டப்பட்டது. ‘தமிழ்’ ஞாயிற்றையே குறித்த சொல்லின் திரிபாதல் வேண்டும். தமிழ் தாமம் என்னும் சொல்லினின்று தோன்றியது என மாகறல் கார்த்திகேய முதலியார் தமது மொழி நூலின் ஓரிடத்தே குறிப்பிட்டுள்ளார். தாமம் என்பதற்கு ஞாயிறு, ஒளி என்னும் பொருள்கள் உள்ளன. மேற்கு ஆசிய நாடுகளில் தாமுஸ் என்னும் ஞாயிற்றுக் கடவுள் எல்லாக் கடவுளரிலும் பெரிய கடவுளாகக் கொண்டு வழிபடப்பட்டார். தமிழ்மொழியின் வரலாறு எழுதிய வித்துவான் ரா. இராகவையங்கார் அவர்கள் தமிழ் என்பதற்கு தாமுஸ் என்னும் பெயர்த் தொடர்பு இருக்கலாமோ என ஐயுற்றார். தாமுஸ், தாமம், எல் என்னும் பெயர்கள் ஆதி மக்களால் ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய பெயர்களுள் சில. எல் என்பது பிற்காலத்தே பொதுவில் கடவுளைக் குறிக்க வழங் கிற்று. ஆகவே, மக்கள் ஞாயிற்றுக் கடவுள் என்னும் பொருளில் தாமம் என்பதோடு எல்லையும் சேர்த்து வழங்கினார்கள் ஆகலாம். அது தாமம் எல்லென மருவித் தமெலாகிப் பின் தமிழ் ஆயிற்று என்று நாம் உய்த்து அறியலாம். இவ் வுண்மை மறக்கப்பட்ட காலத்திலேயே மக்களிடையே தமிழ் ஞாயிற்றினின்றும் பிறந்தது; அதன் இலக்கணத்தைச் சிவபெரு மானும், முருகக்கடவுளும், முனிவர்களுக்கு அருளிச் செய்தனர், என்பன போன்ற பழங்கதைகள் தோன்றின. நாட்டுக்குப் பெயர் மக்கள் வழிபடும் கடவுள் பெயர்த் தொடர்பாகத் தோன்றுதலும்; பின்பு நாட்டின் பெயரால் மக்களும் மொழியும் அறியப்படுதலும் இயல்பு. இது பற்றியே சிவன், தமிழோடும், தமிழரின் மதமாகிய சைவத்தோடும் நெருங்கிய தொடர்பு உடையன் என்று சொல்லப்படுகின்றனன்.
“தமிழ்சிவ மினிமை யெனுந் தனிப்பொருளாம்
அமிழ்தெனும் அநாதி யியற்கையாய்ப் பன்னிரு
கலையினை யுடைய கதிரவ னென்னத்
தலைமையா யமைந்த தனியியற் பிதாமொழி”. பேரிசைச் சூத்திரம்.
குறிப்பு: நீண்ட காலம் ஆரியம் தமிழ் என்னும் இரு கட்சிகளுக்கிடையில் போராட்டங்கள் நடந்து வந்தன. அக்காலத்தில் பெரும்பாலும் தமிழ்க் கொள்கையுடைய நூல்கள் ஆரியக் கட்சியினரால் அழிக்கப்பட்டு பழைய நூல்களின் பெயர்களால் புதிய நூல்கள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட நூல்களில் பழைய கருத்துக்கள் சிலவும் உண்டு. பேரிசைத் சூத்திரம் என்னும் நூலும் பிற்காலத்தவர் எவராலோ பழைய பெயரைக் கொடுத்து எழுதப்பட்ட நூலாகும்.
சாவகம் மலாயா கம்போதியா பசிபிக் தீவுகளில் சிவன்
சாவகம் மலாயா கம்போதியா கிழக்குத் தீவுகள் முதலிய இடங்களிலெல்லாம் சிவமதமே தழைத்தோங்கி இருந்தது. கிறித்துநாதர் பிறப்பதற்குச் சிறிதுகாலத்துக்கு முன்தொட்டுத் தமிழ் மக்கள் மேற் குறித்த நாடுகளில் சென்று குடியேறியுள்ளார்கள். அவர்கள் அவ்விடங் களில் மறுபடியும் தமது சிவ மதத்தை நாட்டினார்கள். சமீப காலத்தில் போர்னியோவிலுள்ள ஒரு மலைக்குகையில் சிவன், யானைமுகக் கடவுள் முதலிய தமிழ்நாட்டில் வழிபடப்படும் கடவுளரின் சிலைகள் பல கண்டு எடுக்கப்பட்டன. அவைகளின் படங்கள் “இலண்டன் இலஸ்ரேட்டட் நியூஸ்” என்னும் மாத வெளியீட்டில் வெளி வந்துள்ளன. அவ்வுருவப் படங்கள் சிலவற்றை யாம் இலங்கையில் நடத்தப்படும் வீரகேசரிப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளோம். சாவகத் தீவுக்கு அயலே உள்ள பாலித் தீவில் இன்றும் சைவமதமும் சைவசித்தாந்தக் கொள்கைகளும் நிலைபெற்றிருக்கின்றன.1
“சாவகத்தீவிற் காணப்படும் அழிபாடுகளுட் பல கோயில்கள் சிவனுக்குரியன. சாவக மக்களின் அமர மாலை என்னும் நூல் பழைமை உடையது. அஃது அம்மக்கள் வழிபட்ட தெய்வங்களைப்பற்றிக் கூறு கின்றது. அந்நூலினால் அம்மக்கள் சிவனையே தலைமையாகக் கொண்டு வழிபட்டார்கள் எனத் தெரிகின்றது. குரு, ஈசுவரன் என்னும் பெயர்கள் சிவனுக்குப் பெயர்களாக வழங்கின. சுமத்திராவில் லாரா யோங்ராங் (Lara Yon-grang) என்னும் இடத்தில் பல அழிபாடுகள் இருக்கின்றன. அவைகளின் நடுவில் பெரிய சிவன் கோயிலும், இரு மருங்கிலும் பிரமன், திருமால் ஆலயங் களும் எதிரே நந்தியின் ஆலயமும் உள்ளன. வலப்பாதி சிவனும் இடப்பாதி அம்மனுமுள்ள அர்த்தநாரீச்சுரத் திரு வடிவமும் அங்குக் காணப்படுகின்றது. விநாயக விக்கிரகங்கள் மிகப் பல அங் குள்ளன. இவை தென்னிந்தியக் கோயில் களில் காணப்படும் உருவங்களை மிக ஒத்தன.
போர்க்கடவுளாகியகார்த்திகேயக் கடவுளின் திருவுருவங்களும் சாவகத்திற் காணப்படுகின்றன. மனித வடிவம் மயில் மீது ஏறிச் செல்வது போன்ற வடிவங் களே உள்ளன. ஆறு தலையும் பன்னிரு கைகளுமுள்ள வடிவங்கள் சிலவும் காணப் படுகின்றன. இலிங்கமும் சிவன் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
சங்கு சக்கரம் தாமரை கேடகம் என்பவைகளைப் பிடித்து நிற்கும் நான்கு கைகளுடைய திருமாலின் திருவடிவங் களும் கிடைத்துள்ளன. பாம்பின் மீது பள்ளி கொள்ளும் திருவுருவங்களும் காணப்படுகின்றன. இலக்குமியும் சத்தியபாமையும் இருபக்கங்களிலும் நிற்கும் திருவுருவம் பாலித் தீவிற்கண்டு பிடிக்கப்பட்டது. பூமாலை சாமரை காகம் என்பவைகளைக் கைகளில் வைத்திருக்கும் நான்கு முகங்களுடைய பிரமாவின் சிலையும் சாவகத்தில் காணப்பட்டது. சேரம் (Seram) என்னும் பகுதியில் அமராய என்னுமிடத்தில் நடராச மூர்த்திகளின் திருவுருவங்களோடு பொன்னாற் செய்யப்பட்ட சிவன் உருவம் ஒன்றும் கிடைத்தது.
“செலிபிசியில் (Celebes) சிவ வணக்கத்துக்குரிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் பழங்கதைகளில் சிவன் பாரத குரு எனப்படுகின்றார். கிறாபர்ட் (Crawford) என்பார் நியூகினியில் காணப்படும் சமயக் கிரியைகள் சிவ வழிபாட்டின் தேய்வுகள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்குப் போர்னியோவில் நந்தி, கணேசர், இலிங்கம் முதலிய உருவங்கள் காணப்பட்டன. இவைகளுள் ஒரு பொன் இலிங்கமும் காணப்பட்டது இங்குக் குறிப்பிடத்தக்கது.”
“மலாய்க்குடா நாட்டிலே கோபுராசுவம் (Hopuralsuom) என்னும் இடத்தில் காணப்பட்ட கணேச விக்கிரகத்தில் தென்னிந்திய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு அகத்தியர், நடராசர் திரு உருவங்கள் காணப்பட்டன.”
கம்போதியாவிலே காணப்படும் நடராசர் திருவுருவங்களும் பிற சான்று களும் அங்குக் குடியேறினோர் தென் னிந்திய மக்களே என்பதை விளக்குகின் றன. கம்போதிய அரசருள் பாலவர்மன் என்பவன் சிறந்த சிவபத்தன். இவன் கி.பி.616 இல் கம்பீரவாணர் என்னும் சிவலிங் கத்தை நாட்டி வழிபட்டான். கம்போதியர் கடவுளருள் சிவனே தலைமை பெற்றிருந் தார்; பிராசர், சினெங், கருபி முதலிய இடங்களில் சிவன் உமையோடு இடபத் தில் வீற்றிருக்கும் திருவுருவங்கள் காணப் படுகின்றன. இடபத்தின் மீது இருக்கும் வடிவத்தினும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபடப்பட்டது. அரசரும் பொதுமக்களும் இலிங்கங்களை நாட்டியதைக் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் பல கம்போதியாவில் கிடைத்துள்ளன.
“சீயத்திலே பாங்கொக் நகருக்கு அருகேயுள்ள குளம் ஒன்றின் பக்கத்தே காலன் இடபம் இலிங்கம் என்னும் சிலைகள் உள்ளன. அவைகளின் எதிரே பொதுமக்கள் சத்தியஞ் செய்தார்கள். பாச்சிம என்னும் புத்த ஆலயத்தின் வெளியே சிவ இலிங்கம் ஒன்று உளது. பெண்கள் இதனை வலம் வந்து துதித்துப் பிள்ளைவரம் வேண்டுகின்றார்கள். இவ்வாலயம் முன்பு சிவன் கோயிலாயிருந்ததென்பதில் ஐயம் சிறிதும் இல்லை. மலாயர், யாவகர், மகம்மதியர் முதலிய எல்லாச் சமயத்தினரும் சிவனுக்குச் செய்வது போலப் பூவும் பழமும் பொங்கலும் வைத்து இவ்வாலயத்தில் வழிபடு கின்றனர். கொச்சின் சீன அரசன் ஒருவன் விசய ஈஸ்வரர் ஆலயம் கட்டி அங்குச் சிவஇலிங்கப் பிரதிட்டை செய்த வரலாறு கல்வெட்டில் காணப்படுகின்றது.”
கம்போதியாவிலே சிவன்கோயில் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காணும் விபரம் பின்வருமாறு :
“யோகவர்மன் ஆச்சிரமத்துக்குக் கொடுத்துள்ள முத்து, பொன், வெள்ளிக்காசு, குதிரை, எருமை, யானை, ஆடவர், மகளிர் பூமாலை முதலியவற்றை அரசர் கவர்ந்து கொள்ளுதல் ஆகாது. பிராமணர், அரசன், அரசனின் பிள்ளைகள் மாத்திரம் ஆபரணங்களைக் கழற்றாது கோவிலின் உள்ளே செல்லலாம். பெருமக்களின் பரிவாரங்களாகச் செல்லும் பொது மக்களும் ஆடம்பர உடையுடன் உள்ளே செல்லலாம். அவர்கள் நந்தியாவர்த்த மாலை அல்லாத மாலைகளை அணிந்துகொண்டு உள்ளே செல்லுதல் ஆகாது. ஆலயத்துள் எவரேனும் வெற்றிலை போட்டுக் கொள்ளவோ உணவு அருந்தவோ கூடாது. பொதுமக்கள் ஆலயத்தின் உள்ளே செல்லுதல் ஆகாது; உள்ளே சண்டை அல்லது பரிகாசம் முதலியனவும் செய்தல் கூடாது. சிவனையும் திருமாலையும் வணங்கும் பிராமணரும் நல்ல பழக்க வழக்கமுடையவர் களும் மாத்திரம் உள்ளே தங்கி நின்று மெதுவாகத் துதிபாடிக் கடவுளைத் தியானிக்கலாம்; அரசனையன்றி வேறெவராவது ஆலயத் துக்கு முன்னாற் செல்ல நேர்ந்தால் தேரினின்றும் கீழே இறங்கிக் குடைபிடியாது, நடந்து செல்லுதல் வேண்டும். பிற நாட்டவர்களுக்கு இவ்விதி விலக்கப்பட் டுள்ளது. பிராமணர், அரசர், மந்திரிமார், அரசனின் பிள்ளைகள், திருமாலை வழிபடும் குருக்கள், பொதுமக்களில் சிறந்தோர் முதலிய வர்கள் விருந்தாக வந்தால் ஆலயத்தின் தலை மைக் குரு இவர்களை வரவேற்றுச் சொல்லப் பட்டுள்ள முறைப்படி உணவு, நீர், வெற்றிலை முதலியன கொடுத்தும் அவர்களுக்கு வேண் டியன புரிந்தும் உபசரித்தல் வேண்டும். இதில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளைக் கடக் கின்றவர் எவரும் ஞாயிறும் திங்களும் உள்ள அளவு காலம் நரகத்தில் உறைவார்கள்; இக்கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அவைகளை உறுதிப் படுத்துகின்றவர்கள் இத்தருமத்தை உண்டாக்கியவர்கள் பெறும் பயனில் பாதியைப் பெறுவர்”.
இராவணன் காலத்துக்கு முன்தொட்டு இலங்கைத் தீவில் பல சிவன் ஆலயங்கள் இருந்தனவென்பது ஐதீகம். அசுரரும், இராக்கதரும் சிவனையே வழிபட்டார்கள். திருக்கோணமலையில் இராவணனைப் பற்றிச் சொல்லப்படும் ஐதீகங்களுக்கு அடையாளங்கள் காணப்படு கின்றன. அங்கு இராவணன் வெட்டு என்னும் மலையில் வெட்டப்பட்ட பகுதி காணப்படுகின்றது. சிலாபப் பகுதியில் உள்ள முன் ஈசுவரம் இராவணன் காலத்தது எனப்படுகின்றது. கலிங்க இராசகுமாரனாகிய விசயன் இலங்கைக்கு அரசனான போது (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) அவன் அங்குச் சிவன் ஆலயங்களை எடுத்தான்.
சில குறிப்புக்கள்
ஆரியரின் உருத்திரன் என்னும் கடவுள் பிற்காலத்தில் சிவனின் வடிவை அடைந்துள்ளது. இலக்கிய காலத்தில் சிவனைப்பற்றிச் சொல்லப்படுகின்றவை வேதங்களால் அறியப்படாமல் இருந்தன. ஆரியரின் புயல் கடவுளாகிய உருத்திரனுக்குச் சிவனுக்குச் சொல்லப் படும் தன்மைகள் ஒன்றும் கூறப்படவில்லை. பிற்காலங்களில் கூறப்பட்ட வடிவை ஒத்த சிவனின் வணக்கம் கி.மு.2500 வரையில் இருந்தது. செலன்லோயிட் என்பவர் மொகஞ்சதரோ நாகரிகம் அக்காலத்த தென்று உறுதிப்படுத்தியுள்ளார். தெல் அஸ்மார் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொகஞ்சதரோ முத்திரையில் இந்திய யானை, இந்தியக் காண்டாமிருகம், முதலை முதலியன காணப்படுகின்றன.1
“மர வணக்கம், பாம்பு வணக்கம், ஆலமர வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம் முதலியவைகளின் தொடக்கத்தை நாம் கி.மு. 4000 வரையில் காணலாம்.”2
“ஆரியர் கொண்ட உலகத்தைப்பற்றிய கருத்துக்கள் திராவிட ருடையன போல் இருக்கின்றன. திராவிடரின் கடவுளர் ஆரியரின் தெய் வங்களுடன் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பெயர்களும் ஆரியரின் கடவுளர்களுக்கு இடப்பட்டன. இவ்வகை இணைப்பினால் புதிய மதம் உண்டாயிற்று.”3
“திராவிட மக்களின் மலையிலுறையும் சிவந்த கடவுள் என்னும் பொருள் தரும் சிவன் என்னும் பெயர் உருத்திரன் என்று ஆரியத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உருத்திரனாகக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஆரியரால் கொள்ளப்பட்ட திராவிடரின் கடவுள், புராண காலத்தில் உருத்திர சிவன் எனப்பட்டது. ஆரியரின் விஷ்ணு என்னும் கடவுள் தமிழரின் வானக் கடவுளைக் குறிக்கும் விண் என்பதன் மொழிபெயர்ப் பாகும்.”4
“நெருங்கிய திராவிடக் கூட்டத்தினரிடையே சிறிய ஆரியக் கூட்டத்தினரின் கலப்பினால் அதிக மாறுதல்கள் உண்டாயிருக்க மாட்டா. திராவிட அதிகாரிகள், வீரர்கள், கடவுளர் முதலியவர்களை யும், வரலாறுகளையும் ஆரியர் எடுத்துத் தம்முடையனவாக ஆண்டிருக் கின்றனர். இவ்வாறே உலகின் பலபாகங்களிலும் நிகழ்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக பாபிலோனிய அக்கேடிய அசீரிய நாடுகளின் வரலாறுகளை நோக்குங்கள். சிறு தொகையினராகிய ஆரியருக்குக் கங்கைக் கரையை அடைவதற்குப் பலநூறு ஆண்டுகள் ஆயின. அவர்கள் விந்தியமலையைக் கடப்பதற்குப் பல ஆண்டுகளாயின.”1
“சிவ என்ற சொல் தமிழ்ச்சொல்” என்று டாக்டர் கிரையர்சன் (Dr.Grierson) தமது பெருநூலுட் கூறியுள்ளார். அது வடமொழியிற் புகுந்து சைவம் என்பதற்கு அடிப்படையாயிற்று. அது செம்மை என்ற பண்புச் சொல்லடியாகப் பிறந்தது. செம்மை என்பது செந்நிறத்தையும், நேர்மை, நன்மை, மங்க ளம் என்ற பண்புகளை யும் குறிக்கும் சிவப்பு என்னும் சொல் செம்மை யடியாகப் பிறந்ததென் பது தெளிவு. அதுபோல நேர்மை, நன்மை, மங்கலம் என்பவற்றைக் குறிக்கும் சிவம் என்ற சொல்லும் செம்மை யடியாகப் பிறந்ததே. சிந்தாமணியுள் `சிவம்புரிநெறி’ என்ற சொற்றொடர் அப்பொருளிலே வந்துள்ளமை காண்க. பேரின்ப வீடு என்னும் பொருளில் சிவகதி என்ற சொற்றொடர் சிந்தாமணியாசிரியரால் வழங்கப்பட்டுள்ளது.” - கா.சுப்பிரமணிய பிள்ளை M.A., M.L.
மெச்சிக்கோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் கோவில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.2
ஹெரஸ் பாதிரியார் சிவன் வழிபாட்டைப் பற்றிக் கூறியிருப்பது
டாக்டர் இலக்ஸ்மன் சரப் (Dr.Laxman Sarap) என்பார் அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதென்றும், அவ்விடங்களில் காணப்பட்ட நாகரிகம் ஆரியருடையது என்றும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவ்வாராய்ச்சியை அறிஞர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாராய்ச்சி, இந்திய நாகரிகம் ஆரியருடையது அல்லாததாக இருக்க முடியாது என்னும் கருத்துடைய பழம் போக் காளர் சார்பில் வெளிவந்தது. அக் கட்டுரையில் கூறப்படுவன திராவிடர் நாகரிகத்தையும், சிவன் திராவிடரின் கடவுள் என்பதையும் நிலை நிறுத்தப் போதுமானவை என ஹெரஸ் பாதிரி யார் ஆராய்ந்து கூறியுள்ளவை மிகவும் பாராட்டத் தகுந்தன. அவர் கூறுவது:
“மொகஞ்சதரோச் சமயம் இருக்கு வேத காலத்துக்குப் பார்க்கப் பிராமண காலத்துக்கு அண்மையிலுள்ள தென சரப் என்பார் கூறுகின்றார். அதனை நாட்டுவதற்கு அவர் சிவனைப் பற்றி எடுத்துக்கொண்டார். சிவனைப் பற்றிய அடையாளங்கள் மொகஞ்ச தரோவில் காணப்படுகின்றன. அவர், சிவன் இருக்கு வேத காலத்தில் சிறு தெய்வமாக இருந்தாரெனக் காட்டி விட்டு, சிவன், புராணகாலம் வரையில் எப்படிப் பெரிய தெய்வமாக வளர்ச்சி யடைந்தார் எனக் காட்டுகின்றார். இருக்கு வேத காலத்தில் சிவ வழிபாடு இருந்ததென்று எந்த ஆராய்ச்சியாள ராலும் இன்று வரையும் காட்டமுடிய வில்லை. சிவன், ஒரு சிறு தெய்வமாகத் தானும் இருக்கு வேதத்தில் காணப்பட வில்லை. சிவன் என்னும் சொல் உருத்திர னுக்கு அடையாக இருக்கு வேதத்தின் ஓரிடத்தில் மாத்திரம் வந்துள்ளது. இஃது உருத்திரனும் சிவனும் ஒன்று என்பதற்குச் சான்று ஆகாது. உருத்திரன் மங்கலத்தினாலும் அருளினாலும் சிவன் என்றே பொருள் படுகின்றான். இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் திராவிடரின் ஆண் எனப்பட்ட சிவனே குறிக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் சிவன் மூர்க்க முடையவராகவும் சிலவேளை சாந்தமுடையவராகவும் கூறப்பட்டுள் ளார். சிவனுக்குரிய முத்தொழிலும் மகேச மூர்த்திக்கு உரியதாகச் சொல்லப்படுகின்றது. இருக்கு வேத காலத்தில் இதற்கு இணைகாண முடியவில்லை.”
மொகஞ்சதரோவில் காணப்பட்ட சின்னங்கள் பிராமண காலத் தில் காணப்பட்டவை என்று தோன்றவில்லை. பிராமண காலத்தில் ஆரியர் சார்பான சிவமதம் வளர்ச்சி அடைந்திருந்தது. அங்குக் காணப் பட்டவை ஆரியருக்கு முன் அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியரல்லாதவர் என்பதைக் காட்டுவன. அங்குக் காணப்பட்டவை எவையேனும் ஆரிய ருக்கு உரியவை அல்ல. அங்குக் காணப்பட்ட சிவ அடையாளங்கள் பிராமண காலத்தனவாயின் அங்குக் காணப்படாத விட்டுணுவின் சங்கு சக்கரம் இந்திரனின் தண்டு என்பவைகளுக்கு விளக்கம் கூறுவதெப்படி?
வேதகால இருடிகள் இலிங்க வணக்கத்தைக் கண்டித்திருக்கின் றனர். இதனால் இருக்கு வேத காலத்தில் இலிங்க வணக்கம் ஆரம்பத்தில் இருந்ததென்று கூறமுடியாது. வேதகால இருடிகள் இலிங்கத்தைக் கண்டித்தார்கள். ஆனால் அவர் களைச் சூழ்ந்து இலிங்க வணக்கம் இருந்தது. இல்லாவிடில் அவ்வாறு கண்டிக்க வேண்டியதில்லை. ஆகவே இலிங்க வணக்கம் வளர்ச்சி அடைந் திருந்தது என்று காண நாம் பிராமண காலத்துக்குப் போக வேண்டிய தில்லை. அஃது ஆரியரைச் சூழ்ந்து வாழ்ந்த திராவிட மக்களிடையே நன்கு பரவியிருந்தது. மொகஞ் சதரோ மக்களின் வணக்கத்தைக் கண்டித்தவர்கள் அங்கு வாழ்ந்த மக்களாயிருக்க முடியாது. ஆகவே மொகஞ்சதரோ மக்கள் ஆரியராக இருக்க முடியாது. அசுவமேதயாகங் கள் இலிங்க சம்பந்த மானவை என்று கூறமுடியாது. அவை இடக் கரானவை.
மேல்நாட்டுச் சிறந்த ஆராய்ச்சி யாளரும் கீழ்நாட்டு ஆசிரியரும் சிவ வணக்கம் தமிழருடையதே என்றும், அது பிற்காலத்தில் ஆரிய மக்களால் தழுவப்பட்டதென்றும் ஐயமறக் கூறியுள்ளார்கள். அவைகளைத் தனித்தனி எடுத்து இங்குக் காட்டப் புகின், அவை ஒரு தனி நூலாக விரியுமென அஞ்சி விடுத்தாம்.
“எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மாணிக்க வாசக அடிகள் போன்ற பெரியார் கூறிய கருத்துக்கள் பெரிதும் வாய்மையுடை யன வென்பது இன்றைய ஆராய்ச்சிகளால் தெளிவுபடுத்தியமையைப் பார்த்துப் பலர் வியப்படையலாம். வழிபாடு ஆசியா, ஐரோப்பா, ஆப் பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் பண்டு எவ்வாறு காணப்பட்ட தென்றும், காலப்போக்கில் +எவ்வாறு உறழ்ந்தும் பிறழ்ந்தும் மாறுபட் டுள்ளன என்றும் பற்பல சான்றுகள் கொண்டு இந்நூலகத்து இயன்ற அளவு நிறுவியுள்ளோம்.
“குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”.