நெருஞ்சிப்பழம்
புலவர் குழந்தை
1. நெருஞ்சிப்பழம்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. பதிப்புரை
4. மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
5. நெருஞ்சிப் பழம் (1954)
6. முகவுரை
7. வாழ்த்துரை
8. நெருஞ்சிப் பழம்
2. மழைப் பேறு நேரிசைக் கலிவெண்பா
3. தலைவி சிறப்பு
4. நெருஞ்சிப் பழத்தின் சிறப்பு
5. தலைவி தூதுவிடல்
6. தலைவன் சிறப்பு
7. எதிர்ப்பாடு
நெருஞ்சிப்பழம்
புலவர் குழந்தை
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : நெருஞ்சிப் பழம் (1954)
தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 1
ஆசிரியர் : புலவர் குழந்தை
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2008
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 16+ 224 = 240
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 150/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030
மின்னஞ்சல் : [email protected]
இணையதளம் : www.tamilmann.in
பதிப்புரை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். திராவிட இயக்கச் சான்றோர்கள் வரிசையில் முன்னவர். 1906இல் தோன்றி 1973இல் மறைந்தார். 68 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களால் பாராட்டப்பட்டவர்.
தமிழர்கள் ஆரிய சூழ்ச்சியால் பட்ட அவலங்களை எண்ணியெண்ணி நெஞ்சம் குமுறியவர். தம் நெஞ்சத்து உணர்வுகளை எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு பதிவுகளாக எழுதி வைத்துச் சென்றவர். தமிழ் இன எழுச்சி வரலாற்றில் அளப்பரும் தொண்டாற்றியவர். இவர் எழுதிய நூல்கள் 29. இந்நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து, பொருள் வழிப் பிரித்து, கால வரிசைப்படுத்தி 1 முதல் 15 படைப்புகளாக ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். பல்வேறு அணிகலன்கள் அடங்கிய முத்து மாலையாகத் தந்துள்ளோம். இவர் நூல்கள் அனைத்தும் தமிழ்மொழி இன நாட்டின் மேன்மைக்கும், வாழ்வுக்கும், வளத்துக்கும் வித்திடுபவை.
குறிப்பாக இராவண காவியம் படைப்பு திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல். ஆரிய எதிர்ப்பு உணர்வைக் கட்டியமைத்த இன எழுச்சிக் காவியம். தமிழ் மண்ணில் தன்மானக் கொள்கைகள் நிலைத்து நிற்பதற்கு செயற்கரிய செயல்களைத் தமிழ் இளைஞர்கள் செய்வதற்கு முன் வரவேண்டும் எனும் இன உணர்வோடு எழுதிய படைப்புகள் அனைத்தையும் ஒரே வீச்சில் வெளியிடுகின்றோம். இப்படைப்புகள் வெளிவரப் பல்லாற்றானும் துணை நின்ற தமிழ்ப்பெருமக்களுக்கும், இந்நூல்களுக்கு அறிமுகவுரை தந்துதவிய பெரும்புலவர் இரா. வடிவேலன் அவர்களுக்கும், எம் பதிப்பக ஊழியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன் கொள்ளும் வகையில் பிழையற்ற பதிப்பக வெளிவருகின்றது. வாங்கிப் பயனடையுங்கள்.
(இராவண காவியம் நூலுக்கு மிகச்சிறந்த தெளிவுரை எழுதப்பட்டு வருவதால் இப்படைப்பு வரிசையில் சேர்க்க முடியவில்லை. விரைவில் வெளிவரும்.)
கோ. இளவழகன்
‘செந்தமிழ்க் குழந்தை’
பள்ளி சென்று படித்த காலம் 5 ஆண்டு எட்டு மாதம்தான்! ஆனால் திருக்குறளுக்கும், தொல்காப்பியத்துக்கும் உரை எழுதி, பேரிலக்கியம் ஒன்றைப் படைத்து, நாடகக் காப்பியம் உருவாக்கிப் பல இலக்கண நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியவர் பெரும்புலவர் அ.மு. குழந்தை. ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த ஓல வலசில் 1.7.1906 அன்று முத்துசாமிக் கவுண்டர், சின்னம்மையார் தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் குழந்தைசாமி; பின்பு தன்னைக் ‘குழந்தை’ என்றே குறிப்பிட்டுக் கொண்டார்.
ஈரோடு லண்டன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் “எலிமெண்டரி கிரேடு”, “லோயர் கிரேடு”, ஹையர் கிரேடு” ஆசிரியர் பயிற்சி பெற்ற அவர் திருவையாறு சென்று தேர்வு எழுதி 1934இல் ‘வித்துவான்’ பட்டம் பெற்றார். மொத்தம் 39 ஆண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்தார். பவானி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் மட்டும் தொடர்ந்து 21 ஆண்டுகள் பணி புரிந்தார்.
தொடக்க காலத்தில் கன்னியம்மன் சிந்து, வீரக்குமாரசாமி காவடிச்சிந்து, ரதோற்சவச் சிந்து போன்ற பக்திப் பாடல்களைப் பாடினாலும் 1925க்குப் பின் பெரியாரின் பெருந் தொண்டராகவே விளங்கினார்.
‘தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக விளங்கும் நூல் திருக்குறள்; அது மனித வாழ்வின் சட்ட நூல்’ என்ற கொள்கையுடைய குழந்தை 1943, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள் மாநாடுகளில் பெரும் பங்காற்றினார். தான் எழுதிய பள்ளிப்பாட நூல்களுக்கு ‘வள்ளுவர் வாசகம்’ வள்ளுவர் இலக்கணம்’ என்று பெயரிட்டார். வள்ளுவர் பதிப்பகம் வைத்துப் பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் பெரியார் நூல்கள் நான்கு.
பள்ளிக்கு வெளியே வந்தவுடன் கருப்புச்சட்டை அணிந்து கடவுள் மறுப்பாளராக விளங்கினாலும் பள்ளிப் பாடங்களில் உள்ள பக்திப் பாடல்களை மிகவும் சுவைபட நடத்துவார். தான் இயற்றிய ‘யாப்பதிகாரம்’ ‘தொடையதிகாரம்’ போன்ற நூல்களில் திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல்கள் பலவற்றை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
அரசியல் அரங்கம், நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, உலகப் பெரியோன் கென்னடி, திருநணாச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல்கள் போன்றவை கவிதை நூல்கள், ‘காமஞ்சரி’ பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மனோண்மனியத்திற்குப் பின் வந்த மிகச் சிறப்பான நாடகக் காப்பியம் ஆகும்.
தொல்காப்பியர் காலத் தமிழர், திருக்குறளும் பரிமேலழ கரும், பூவா முல்லை, கொங்கு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தமிழ் வாழ்க, தீரன் சின்னமலை, கொங்குக் குலமணிகள், கொங்கு நாடும் தமிழும், அருந்தமிழ் அமுது, சங்கத் தமிழ்ச் செல்வம், அண்ணல் காந்தி ஆகியவை உரைநடை நூல்கள்.
‘தமிழ் வாழ்க’ நாடகமாக நடிக்கப்பட்டது. தீரன் சின்னமலை பற்றி முதன்முதலில் நூல் எழுதி அவர் வரலாற்றை வெளிக் கொணர்ந்தவர் புலவர் குழந்தை.
தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய எளிய உரை எழுதினார். திருக்குறளுக்குப் புத்துரை எழுதியதுடன் தமிழில் வெளிவந்த அனைத்து நீதி நூல்களையும் தொகுத்து உரையுடன் “நீதிக் களஞ்சியம்” என்ற பெயரில் பெரு நூலாக வெளியிட்டார்.
தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் கவிஞராக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’ என்ற யாப்பு நூல்களை எழுதினார். கும்மி, சிந்து ஆகியவற்றிற்கும் யாப்பிலக்கணம் வகுத்துள்ளார். இலக்கணம் கற்க நன்னூல் போல ஒரு நூல் இயற்றி ‘இன்னூல்’ என்று பெயரிட்டார். ‘வேளாளர்’ ‘தமிழோசை’ போன்ற இதழ்களையும் நடத்தினார்.
வகுப்பில் பாடம் நடத்தும்போது பாடல்களை அதற்குரிய ஓசை நயத்துடன் ஒலிப்பார். உரைநடைபோலத் தமிழாசிரியர்கள் பாடல்களைப் படிக்கக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். தமிழைப் பிழையாகப் பேசினாலோ, எழுதினாலோ கண்டிப்பார்.
ஈரோட்டில் வாழ்ந்த மேனாட்டுத் தமிழறிஞர் ‘பாப்லி’லியுடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பற்றிப் ‘பாப்புலி வெண்பா’ என்ற நூலே எழுதியுள்ளார்.
அவர் படைப்பில் தலையாயது ‘இராவண காவியம்’ ஆகும். பெயரே அதன் பொருளை விளக்கும். 5 காண்டங்கள், 57 படலங்கள், 3100 பாடல்கள்.
இந்நூல் 1946-ல் வெளிவந்தது. பின் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி 1971-ல் இரண்டாம் பதிப்பும் 1994-ல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்தது. அண்மையில் நான்காம் பதிப்பை சாரதா பதிப்பகம் (சென்னை - 14) வெளியிட்டுள்ளது.
மிகச்சிறந்த நயமுடைய இராவண காவியத்தைக் கம்பனில் முழு ஈடுபாடு கொண்ட அறிஞர்களும் பாராட்டியுள்ளனர். ‘கம்பன் கவிதையில் கட்டுண்டு கிடந்தேன். இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது’ என்று ரா.பி.சேதுப் பிள்ளை கூறினார். கம்பர் அன்பர் ஐயன்பெருமாள் கோனார் ‘இனியொரு கம்பன் வருவானோ? இப்படியும் கவிதை தருவானோ? ஆம், கம்பனே வந்தான்; கவிதையும் தந்தான்’ என்று புலவர் குழந்தையைப் பாராட்டுவார்.
அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசாமி போன்றோரின் துணையுடன் அரிய செய்திகள் சேகரித்துத் ‘திராவிட காவியம்’ பாட முயன்றபோது 24.9.1972 அன்று புலவர் குழந்தை மறைந்தார். பாரதிதாசன் ‘செந்தமிழ்க் குழந்தை’ என்று பாராட்டியது போலத் தமிழாக வாழ்ந்த அவருடைய நூற்றாண்டு நிறைவு நாள் 1.7.2006 ஆகும்.
புலவர், முனைவர்
ஈரோடை இரா. வடிவேலன்
32, தியாகி குமரன் தெரு,
ஈரோடை - 638 004.
மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.
புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.
பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.
அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.
4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.
அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.
அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்
- (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.
“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.
நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப் படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.
புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள்.
சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை:
1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.
1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!
எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.
வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.
இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!
கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.
“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”
நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.
கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள் கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.
“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”
என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.
கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.
தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இராவண காவிய மாநாடு
இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.
இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.
தீர்மானங்கள்
28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.
மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.
இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)
அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.
மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
கலைஞரின் சாதனை!
இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.
வாழ்க அப்பெருமகனார்!
நெருஞ்சிப் பழம் (1954)
முகவுரை
பழந்தமிழ் மக்கள், தம் வாழ்க்கை முறையை அகம், புறம் இருகூறாகப் பகுத்து, அவ்வாழ்க்கை முறையாகிய உலக வழக்கினைப் புனைந்துரை வகையால் இலக்கிய இலக்கணம் செய்து, அப்புலனெறி வழக்கினைக் கடைப்பிடித்து இனிது வாழ்ந்து வந்தனர்.
அகப்பொருள் - களவு, கற்பு என இருவகைப்படும். களவாவது - பருவமுற்ற ஓர் ஆணும் பெண்ணும் தாமே எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் காதல் கொள்வது. கற்பாவது - காதல் முதிர்ந்து மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவது. இல் வாழ்க்கையாகிய கற்பிற்குக் காரணமான களவே கற்பினும் சிறப்புடையதாகும்.
அக்களவு - இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என நால்வகைப்படும். தோழியிற் கூட்டம் - மதியுடம்பாடு, குறியிடம், வரைவு கடாதல், அறத்தொடு நிலை என நால் வகைப்படும். கள வொழுக்கம் இவ்வாறு பலபடப் புனைந்துரைக்கப்படும். இவற்றின் விரிவை, அகப்பொருள் பற்றிய பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களிற் காண்க.
அக்களவொழுக்கத்தை - புனைந்துரை யின்றி, உலகியல் முறையில், பழந்தமிழர் வாழ்க்கை முறையில் வழுவாது, தற்கால வாழ்க்கை முறைக்கேற்ப விளக்குவதே ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் இச்சின்னூல்.
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
என, வள்ளுவர் கூறிய உவமையை, நெருஞ்சிப் பழங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது கருத்தாக இந்நூல் புனைந்துரைக்கப் பட்டுள்ளது.
அன்புயர் தமிழ்த் தாத்தா கவிமணி அவர்கட்கு இந்நூல் அன்புத் தொடையல் ஆவதோடு, அப்பெரியார் வாய்மொழிப் படியே தமிழ் மக்கள் ‘யார்க்கும் இனிய விருந்தாகி’ இன்பம் பயப்பதாக.
பவானி
25 - 8 - 54
அன்புள்ள
குழந்தை
வாழ்த்துரை
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை
அவர்கள்
‘கனியும் அன்பால் அரியபல
கவிதந் துள்ளம் கவர்ந்திடுவோன்
புனித தமிழன்’ என்றறிஞர்
போற்றும் புலவர் குழந்தை தரும்
இனிய “நெருஞ்சிப் பழம்” உலகில்
யார்க்கும் இனிய விருந்தாகி
நனியெம் இறைவன் அருளாலெந்
நாளும் வாழ்க வாழ்கவே!
நெருஞ்சிப் பழம்
மழைப் பேறு நேரிசைக் கலிவெண்பா
வானோக்கி வாழும் வகையொழிய மாநிலத்தைத்
தானோக்கி வாழுந் தகுதியுற - மேனோக்கிப்
பைம்புற் றலைகாட்டப் பட்டிமறிக் குட்டியெலாம்
தெம்புற் றெழுந்து செவியாட்டத் - தம்புற்றை
விட்டகன்று தாய்மை விளக்குவபோற் சிற்றெறும்பு
முட்டைகொண்டு மேலே முனைந்தேறக் - கட்டெறும்பு
6
கூர்த்துப் பகழியன்ன கூர்வாயான் மற்றெறும்பு
பார்த்துப் புழுங்கப் பரித்தேறச் - சீர்த்தமிழ்வாய்
அம்புவிழி யாய்தொடிநல் லார்மென்று துப்பியநற்
றம்பலம்போற் செந்நீர்த் தடம்போலச் - செம்பவள,
மாலை யறுந்து மணிசிதறி யூர்வதுபோற்
சாலை யருகினின்மூ தாவூரக் - காலையிலே
12
ஏரிழுக்க வேண்டுமென வெண்ணியிரங் கிப்பகடு
நீரிழுக்க லில்லையென நெஞ்சுவக்கக் - காரொழுக்கங்
கண்டு சொறித்தவளை கத்தவிளஞ் சேறெடுத்து
நண்டு வளையடைக்க நத்தைபிள்ளை - பெண்டுடனே
ஓடிக் குடவளையி னுட்புகுதக் கோலமயில்
ஆடிக் குயிலுக் கசைப்பூட்டப் - பாடினிபோல்
18
பச்சைக் கிளியழைக்கப் பைங்கட் சிறுபூவை
மெச்சிக் கிளையின் மிசையேற - நச்சி
ஒருநா ளுலகி லுயிர்வாழ்தல் போதும்
இருநா ளிருக்கினிட ரெய்தும் - வருநாளில்
என்றறி விப்பதுபோல் ஈசல் வெளிக்கிளம்ப
நன்றறி தென்றமிழ்நன் னாடதனை - அன்று
24
குடியி னொருகுடியாய்க் கொண்டாண்ட மூவர்
குடையி னினைவுக் குறியாய் - விடிபொழுதில்
மாட்டுப்பா லுண்டுநில மாதுவெள்ளிக் கிண்ணமதை
மாட்டுப்பால் மேற்கவிழ்த்து வைத்தாற்போல் - நாட்டுப்பாற்
கொட்டுவெயி லாலெழுந்த கொப்புளம்போ லேகாளான்
பொட்டெனவே யெங்கும் புடைக்கநிறம் - முட்டவொரு
30
பான்றுபட்டுப் பல்வகைய பட்டுடுத்திப் பாவையரைப்
போன்றுபட்டுப் பூச்சி புறப்படவே - தோன்றுமட்டும்
பாடியொரு கோடியல பார்ப்பிடமெ லாம்வானம்
பாடியொரு கோடி பறந்திடவே - ஆடரவின்
ஆயிரங் காலுடைய அட்டைபுகை வண்டிசெலப்
போயிரங் காநாகம் புற்றடைய - ஞாயிறுதன்
36
வெப்பந் தணிய விருந்து மழைக்கீந்து
கைப்பந் தெனமேற் கடலொழிக்கத் - தைப்பொங்கல்
போல வுலகருளம் புத்துணர்ச்சி யானிரம்பக்
காலை யெழுந்த தூஉங் கட்டாயங் - கோலநெடுஞ்
சிற்றி லிழைத்துத் தெருவில்விளை யாடுமெனக்
கொற்றச் சிறுமியருட் கொண்டுவப்பச் - சிற்றில்
42
சிதைத்தாட வாய்த்ததெனச் செல்வச் சிறுவர்
குதித்தோடி யாடிமகிழ் கொள்ள - மதித்தோடிப்
பண்ணடுத்த செந்தமிழ்வாய்ப் பாவையர்க ளேந்துதொடிக்
கண்ணடுத்த தாமரைச்செங் கையினிற்செம் மண்ணெடுத்து
மெய்முழுதும் பூசி விதைக்குடத்துக் கக்குடத்துக்
கய்முழுதுஞ் சுண்ணக் கரைகட்டிச் - செய்முழுதும்
48
வண்டமிழ் வாணர் மனம்போல் விளைகவெனத்
தண்டமிழ் மானவிதை தாமிடவே - கொண்டுவகை
ஏரோர் கலப்பை யெடுத்துத் திருத்திவைக்கப்
பாரோர் வயிற்றுப் பசியகல - நேராக
ஈழமலை யாளத் தெதிர்மின் னதுமின்னி
வேழமலை போலமுகில் மேக்கெழுந்து - ஊழுறவே
54
குன்றக் குறமகளின் கோலநெடுந் தோளிலகும்
மன்றற் றெரியலென வாளருவி - சென்றுபுகச்
சிற்றாறு பேராறாய்ச் செல்லத் தமிழ்முழுதுங்
கற்றார் மனம்போலக் காலிறங்கி - வற்றாத
ஏரிகுள மெல்லாமிங் கெப்போது வந்ததுகொல்
வாரிவள மென்னும் வகைநிரம்பப் - போரணிந்த
60
மூவரசர் தானை முடுகிப் பகைப்புலத்தே
நாவரசர் பாட நடப்பதுபோற் - பாவரசுப்
பள்ளம் படுகையெலாம் பைந்தமிழர் கைவளம்போல்
வெள்ளம் பெருகி விளையாட - வள்ளுவர்வாய்
ஈன்ற குறள்வளம்போ லெங்கும் பெருமகிழ்வு
தோன்ற மழைபொழிந்த து.
66
தலைவி சிறப்பு
மழைபொழிய வானம் வளம்பொழிய வெள்ளம்
முழைபொழிய வெங்கும் முடுகப் - பிழைபொழிய
ஞாலத் துயிர்வாட நற்றமிழ்க்கொன் றீயாதார்
போலத் திகழ்வானம் பொய்த்திட்ட - காலத்தும்
கற்றா வெனச்சுரந்து கன்னித் தமிழ்நாட்டை
உற்றா ரெனக்கனிவோ டுண்பிக்கும் - வற்றாத
72
பொன்னித் துறையருகே பூவையொடு பைங்கிளியும்
கன்னித் தமிழ்பேசுங் காட்டூரில் - தன்னொத்த
செஞ்சொற் கிளிமொழியார் சேர்ந்துநலம் பாராட்டும்
அஞ்சொற் கிளிமொழிநல் லாளொருத்தி - மஞ்சுமிழும்
மின்னற் கொடியோவம் மின்சாரப் பேரொளியோ
பொன்னிற் கடைந்தெடுத்த பொம்மையோ - தன்னாற்றல்
78
அத்தனையுங் காட்டி யழகென்னு மைகொண்டு
கைத்திறனில் வல்லான் கருத்துடனே - யெத்தனைநாள்
தேர்ந்து தெளிந்து செயலு மனமுமொன்ற
ஓர்ந்து புதுக்கியநல் லோவியமோ - தீர்ந்திடாத்
தங்கைப் பொருளைத் தகவுண்பார் போன்மகிழும்
மங்கைப் பருவ வளருருவஞ் - செங்கைக்
84
கெதிர்நிற்க மாட்டாம லேதோற்றுத் தானோ
வெதிர்புக்கு விட்டதுயர் வெற்பில் - விதிர்விதிர்த்து
நீரு ளொளித்ததுகாண் நீர்ப்பாசி, நீர்பொழிந்து
காரும் வெளுத்த, கவரிமான் - நேரிழையாள்
கூந்தல்போல் வேறொருத்தி கூந்தலுள தோவெனத்தன்
கூந்தலைவிட் டேதேடுங் கூந்தலாள் - ஏந்திழையாள்
90
வட்டமுகங் கண்டு மதிதேய்ந்த, வாணுதலாற்
கெட்டமதி வட்டமதைக் கிட்டினதால் - எட்டநின்று
பார்த்தெழிலை யப்புருவப் பண்பில்லே மென்றோவில்
போர்த்தொழிலை விட்டொழிந்தே போயிற்றோ - ஈர்த் தொழிலைக்
கய்கழுவி விட்டே கதிர்வேலுங் கூர்வாளும்
பொய்கெழுமி னார்போலப் போயினதும் - மொய்குவளை
96
சேற்றுட் பதுங்கியதும் செங்கயனீர் மூழ்கியதும்
ஆற்றற் படாதுவிழிக் கஞ்சியோ - ஆற்ற
உகிர்க்கு மிதழுக்கு மொப்பாகே மென்றோ
துகிர்க்கடலுட் புக்கதோ, தோன்ற - நகைக்கினவள்
முன்னிற்க மாட்டாமல் முத்தொளிவெண் பல்லுக்கு
வெந்நுற்று மாக்கடலுள் மேவிற்றோ - இன்னிசையோ
102
ரேழுங் கலந்தான வின்சொல்லுக் காற்றாமல்
யாழுங் குழலுமிசை யற்றனவோ - யாழொன்றோ
அந்தநாள் போனிறைய வான்பாலுஞ் செந்தேனும்
இந்தநாள் இல்லாமைக் கீதன்றோ - செந்தமிழ்ச்சொற்
போட்டியிட்டுத் தோற்றதனாற் பூவையும் பைங்கிளியும்
வீட்டைவிட்டுக் காட்டகத்தை மேவினவோ - தோட்டெழிற்கு
108
வள்ளை யிரங்கிநிற்கும் வள்ளுகிரைக் கண்டுகிளிப்
பிள்ளை குறுகும் பெயர்த்தகலும் - பள்ளவயல்
அன்ன நடைபழக மாரணங்கு நானிலத்தே
இன்று மவளழகை யென்சொல்ல - மன்னுமெழில்
ஏந்தி யெழிலுக் கெழிலா யிரும்புலவர்
மோந்து தருவன் மொழித்தொகையாள் - போந்த
114
அழகு சுமந்திளைத்த வாக்கையாள் காதல்
பழகு தமிழ்மொழிப்பொற் பாவை - ஒழுகுபுனல்
ஓட்டத் திடையி னொளிருங் கதிரொளிபோல்
நாட்டத் திடைக்காதல் நல்குவாள் - ஆட்டத்தின்
கண்ணிகழு முட்குறிபோற் கைவீசிக் கண்ணிமைத்து
வண்ணவுட லவ்வே வளைத்தசைத்துப் - பெண்ணுருவந்
120
தானோ புனமயிலோ தங்கச் சிலையோவென்
பூனோ டமைந்தவுயி ரோவியமோ - மானோவென்
றையுறவே கண்டோ ரணிதிகழைம் பாற்றலைமேற்
பையரவு மண்டலித்த பான்மைபோல் - தையலவள்
துப்புறமுன் றானையினாற் சும்மாடு வைத்ததன்மேல்
எப்புறமுஞ் சாயா திருக்கவொரு - கைப்பிடியா
126
ஆய மணைமே லழகு படவினிது
மேய வடுக்கு மிடாப்போலத் - தூயதமிழ்ச்
சொல்போற் சுவைமிகுந்த சோறுகொண்டு சிற்றிடைமேற்
கொல்வேற்கண் ணாளோர் குடம் வைத்து - வெல்போர்ப்
படையோடப் போதுகரும் பாம்பெனவே பின்னல்
முடியோடப் போதுசெல முந்த - அடியாதி
132
பாவை முடிகாறும் பார்த்துலகப் பாவையர்தம்
ஆவி யனைய வழகெல்லாம் - மேவியொரு
நல்லுருவ மாகி நனிபெருகி நாணத்தால்
சில்லுருவ மாகியுடன் செல்லுதல்போல் - மெல்லியலை
விட்டகலா தேநீழல் வீறுகொடு பின்செலவே
கட்டழகி கண்ணுங் கருத்துமாய்த் - தொட்ட
138
சிலையுமிழ்ந்த கூர்ங்கணை போற் செம்மாந்து வானத்
தலையுமிழ்ந்த வெள்ள மதனாற் - கலையுமிழ்ந்த
அம்மதிபோற் றோன்றா தழிந்த வழிநடந்தாள்
தம்மதிபோற் றோன்றுமிளக் தையலாள் - இம்மெனப்பெண்
மானின் விழிமருள வட்ட முகஞ்சுழிக்கத்
தேனின் மொழிகுழறச் செந்தளிர்போன்ம் - மேனி
144
சதைக்க மலரடியில் தைத்ததுவே யுள்ளம்
பதைக்க நெருஞ்சிப் பழம்.
நெருஞ்சிப் பழத்தின் சிறப்பு
நெருஞ்சிப் பழந்தைக்க நின்றிட்டாள் பாவம்!
கருஞ்சிப் பழம்போன்ற கன்னி - அருஞ்செப்பின்
உள்ளெனவே காட்டு முயர்நன் மணம்போலப்
பொள்ளெனவே வேர்வை புறங்காட்டத் - தெள்ளுதமிழ்ப்
150
பாவென்று சோலைப் பசுங்கிளியை வென்றகுரல்
ஆவென்று வெய்துறவா யங்காக்கக் - காவென்று
மெய்யி னிடையிங்கு மின்சாரப் பேருணர்ச்சி
பொய்யி னிடையியங்கும் போதேபோல் - ஒய்யெனவே
முத்து முலகுயிரை முத்தாம லேயியக்கு
வித்து மனத்தகத்தே வீற்றிருக்கும் - புத்துணர்வாம்
156
உள்ளத் தலைவனிட மோடோடிப் போயுரைக்க
எள்ளத் தனைபொழுது மில்லாமல் - உள்ளத்தைத்
தங்கு மொருபேச்சுத் தந்தி யகமாக்கொண்
டெங்கு மிசைத்தேற் றினிதாளும் - அங்கவனும்
அப்பொழுதே யவ்வே யவணிவணே யாமென்ன
இப்போழுதே போய்க்காத் திடுகென்று - துப்புரவாய்க்
162
கட்டுக் கரும்பனைய கைமலர்க்குக் கட்டளைய
திட்டுத் திரும்ப வெதிர்நோக்க - அட்டியிலை
எந்தங் கடப்பாடு மேயாகு மானாலும்
இந்த விடத்துதவற் கில்லையே - நொந்துபயன்
இல்லையெம் தையன்மீர்! என்செய்கோம் பல்லனைய
முல்லைமலர் மல்லிகையின் முன்மலர - அல்லிமலர்க்
168
காம்பரிந்து தாமரையின் கள்ளுமொரு பாரமெனத்
தாம்பரிந்து வண்டர் தமக்கீந்து- தேம்பரிந்து
கூட்டுறவு கொண்டலர்ந்த கோங்கொடுசெங் காந்தளிளந்
தோட்டுறவு கொள்ளச் சுரும்புதமிழ்ப் - பாட்டுறவு
மன்னப் பொலிவு மருவு மருக்கொழுந்தும்
புன்னைப் புதுமலரும் பொற்புறவே - இன்னுமுள
174
எல்லா மணமலரு மின்னிலைவே ரத்தனையுங்
கல்லா வறிவுடைய கைவல்லோன் - நல்லாடன்
ஒன்று முறுப்பெல்லா மொன்றுபட்டுச் சென்றுமணந்
துன்று குழலெழிற்கட் டுன்றினவோ - அன்றியுல
கைந்திணையு மொன்றா யரிவை சுரிகுழற்கண்
வந்திணைய நின்று மலர்ந்தனவோ - தந்துணைய
180
நீர்ப்பூ நிலப்பூ நெடுங்கோட்டுப்பூ பூகொடிப்பூ
மாப்பூ வெனுநால் வகையாய - நார்ப்பூவாம்
பொன்னேர் புதுமலரின் பூந்தொடையோ வல்லாது
தன்னே ரிலாததமிழ்த் தண்ணறுஞ்சீர்ச் - சொன்னாறும்
பாப்பா வினமலரின் பைந்தொடையோ வென்றுவியந்
தேப்பா விதன்பெயரென் னென்றிடவே - யாப்பாரத்
186
தம்முன் னவர்வழியே தாம்பயின்று தேறியகைக்
கம்முன் னவர்வழியே கட்டிய - நம்முன்னோர்
கண்டறியா மாலைக் கதம்பமணிந் தேகமழ
வண்டறியா நெய்தடவி வார்ந்தடர்ந்தே - உண்டறியா
ஐம்பா லெனும்பெயர்பெற் றாயிழைதன் பேரழகின்
செம்பால்யா னென்று செருக்குற்று - வம்பாலும்
192
ஊட்டு புகையாலு மூட்டமுற்று மெய்பொருமிச்
சூட்டு வகையாற் சுரிபட்டு - நாட்டுவமை
இல்லையெனச் செம்மாந் திருண்ட கருங்குழலும்
செல்லுமென நாட்டகத்தே தேடியதை - நில்லுமென
வைத்துச் சுமையடையை வைத்தாள் எடுத்தடுக்கிப்
பத்துக் கரைச்சோற்றுப் பானையின்மேல் - வைத்தவுடன்
198
சாயாம லவ்வடுக்கைத் தான்பிடித்து ளேன்றலைவ!
ஓயாம லென்ற னுயிர்த்தோழன் - நீயாமல்
மங்கையவள் மெல்லிடைமேல் வைத்தகழு நீர்க்குடந்தை
அங்ஙனமே தாங்கியுளா னாகையினால் - எங்களைநீர்
நம்பிப் பயனில்லை நான்சொல்வ துண்மையெமை
வெம்பிப் பயனிலையான் விட்டேனல் - கொம்பனையாள்
204
கூந்தல் மகிழ்கூரக் குப்புறமண் வாய்க்கொள்ள
வீழ்ந்து விடுஞ்சோறு வீணாக - ஓர்ந்திடுக
இவ்வளவு தான்சோ றிருந்ததிவள் கண்காண
அவ்வளவு நானேதா னள்ளியிட்டேன் - எவ்வளவும்
இல்லையினிச் சட்டியிலே ஏருழுவோர் பார்த்திருப்பர்
தொல்லையினித் தானிரவுஞ் சோறில்லை- நல்லையினி
210
ஆடிக்கை வீசி யசைந்தங்கு மிங்குமாய்
வேடிக்கை பார்த்துடைத்து விட்டாயே - வாடிக்கை
யாக வருந்தடத்தி லங்கேது முட்டுக்கல்
காக மெனநிமிர்ந்து கண்டாயோ - பாகுமொழி!
உன்கண்ணைப் போல வுகளுங் குறுமுயல்தான்
புன்கண்ணைச் செய்தோடிப் போயிற்றோ - வன்கண்ண
216
நாய்கண்டு குள்ள நரியோடிற் றோவறண்ட
காய்கண்டு செம்போத்துக் கத்திற்றோ - தாய்கண்டு
பிள்ளை யணிலெழுந்து பேசிற்றோ வாய்பவளக்
கிள்ளை யினியதமிழ் கேட்டதோ - பொள்ளெனமுன்
மாடோட்டிச் செல்வோனின் வாயினிசை கேட்டிருகண்
பாடோட்டி யேமாந்து பார்த்தனவோ - கேடோட்டி
222
நல்லனசெய் வாரென்று நாட்டுமக்கள் தேர்ந்தெடுக்க
அல்லனசெய் தேயலைக்கு மாள்வார்போல் - தொல்லுலகில்
என்று மிலாததினி யெப்போது மில்லாத
பொன்று முலகமெனும் பொல்லாத - நன்றறியாப்
பாழும் படியரிசி பஞ்சமிதிற் பாத்துண்டு
வாழும் படியரிசி வாங்கவுண்டோ - கூழுங்
228
குடியா திராத்தூக்கங் கொள்ளாது போழ்து
விடியா ததைமறந்து விட்டாய் - வடியாது
மண்ணுக் கிரையாக்கி வந்தனையே யெம்வயிற்றைப்
புண்ணுக் கிரையாக்கிப் போட்டென்று - கண்ணுக்குள்
ஊசிவிட்டு வாங்குதல்போ லும்மொடுவண் டேழிசையும்
பேசிவிட்டு நீங்குதல்போற் பேதுற்று - மூசிநட்டும்
234
மட்டுவார் பூங்குழலை வாய்வலிக்க வேதந்தை
திட்டுவார் நான்விடுதல் செய்யேனாற் - கிட்டுவார்
யாரேனு முண்டே லழைக்கும் படிசொல்க
சாரேனு மின்பத் தமிழ்வாய்க்கு - நீரேனும்
வேறுவழி செய்கவென மென்கரும்புக் கைவிரித்துக்
கூறுகிற போதக் கொடியிடையாள் - ஏறுறுகண்
240
நீர்மல்க வாம்பல் நெகிழமுத்துச் செம்பவளப்
போர்மல்க வுள்ளம் புகைமல்கக் - கார்மல்கு
மின்னற் கொடிபோன்ற மெல்லிடைமெய் தாங்காது
பின்னற் கொடிபோன்று பேதுறவே - அன்னதுமெய்ப்
பாடுற்று மேனி பசந்துமயிர்க் கூச்செறிய
மூடுற்ற வேர்வை முகமுற்றத் - தோடுற்ற
246
வள்ளை நெகிழ வளைநெகிழ மேனியெழிற்
கொள்ளை கொடுத்துக் குறுகுறுப்பப் - பொள்ளெனவே
உள்ள நெகிழ வுடனெகிழ வேநெகிழ்ந்த
கள்ளவிழு மைம்பாற் கருங்கூந்தல் - உள்ளவெலாம்
கண்களவு போகியவக் காலையவன் கைதீண்டப்
பெண்களவு போகியவப் பெட்பேபோல் - உண்களவு
252
பெய்வ தறியாவப் பேதை யுடைநெகிழச்
செய்வ தறியாத் திகைப்புற்றுப் - பெய்வளையும்
செந்தா மரைமலரைத் தேய்த்துத்தேய்த் துப்பார்த்தாள்
அந்தோ! வவள்மெல் லடியழகை - நந்தா
வதற்குள்ளே பார்த்தமைய லாமோ வடடா!
இதற்குள்ளே யென்ன விவளுக் - கெதற்குமே
258
யின்னுஞ் சிறுபோ திருப்போ மெனவெண்ணிப்
பொன்னஞ் சிலையனையாள் பொன்னடியைத் - துன்னியதும்
விட்டுப் பிரியமன மில்லாம லன்னவையும்
மட்டுப் பெரியதமிழ் வண்டினங்கள் - சட்டெனவுட்
போத மலரனிச்சப் பூவுமனத் தூவியுநல்
மாத ரடிக்குநமை மானுமென - ஓதுதிரு
264
வள்ளுவர் வாய்மொழியை வாய்மையுட னாராய்ந்து
கொள்ளுவர் போலக் குணமுழுதும் - உள்ளபடி
கண்டறிவா மென்று கழறவொன்று மற்றவையுங்
கண்டறிவா மென்றுசொலிக் கால்கொள்ள - ஒண்டோடியும்
இப்படியே தானோ வெனவேங்கி யோயாமல்
அப்படியே போலவிருந் தாள்.
270
தலைவி தூதுவிடல்
முயற்சி
அப்படியே போலவிருந் தாளவ் விடத்தினிலே
செப்படியே நன்கூறுந் தேமொழியுந் - தப்படியே
செய்தும் பயனில்லை தேய்த்தும் பயனில்லை
வய்தும் பயனில்லை வாய்நோக - நெய்து
பழகு பவள்போலப் பாடகங்கால் நீவி
அழகு சுமந்திளைத்த வன்னே! - கழலணிந்து
276
கொள்ளெனயா னெவ்வளவோ கூறியுங்கேட் டில்லையெனப்
பொள்ளெனவாய் விட்டுப் புலம்பவே - தெள்ளுதமிழ்க்
கட்டி யெனப்பாடுங் காரிகையுங் காலினிசைப்
பெட்டி யினைப்பாடப் பேணினாள்- தொட்டிலிலே
தாலாட்ட வாய்தமிழைத் தான்கேட்டுப் பைங்குழவி
காலாட்ட மாட்டுங் கலைபயின்றாள் - நூலேட்டுப்
282
பாட்டின் பொருள்விளங்கப் பாங்கொடுமெய்ப் பாடுறவே
ஆட்டம் பயிலுமயி லாமெனமேல் - நாட்டினரும்
பண்டறியா தொன்றலவிப் பாருலகை யாட்டிவைக்கக்
கண்டறியா கண்டறியிக் காலையினுங் - கண்டறியா
தெண்மிதித்துப் புக்கயனின் றேக்கறுக்க மட்கலஞ்செய்
மண்மிதித்துப் பக்குவஞ்செய் வாள்போலப்- பண்மிதித்துப்
288
பாட்டிசைக்குஞ் செந்துவர்வாய்ப் பைங்கிளியும் பாய்பரிபோ
லாட்டிசைக்குஞ் சிற்றிளைஞ ராயினாள் - காட்டு
வெதிர்மிதிக்கு மென்கையினாள் வெய்துயிர்த்துக் கம்மங்
கதிர்மிதிக்கும் பாவையைவெந் கண்டாள் - அதிர்மிதிக்கும்
நல்லா ரெவருமிந்த நாட்டிலிலை யோவன்றி
எல்லாரும் வேற்றுநா டேகினரோ - பொல்லாத
294
காலமென்று நீங்காத கையா றிடையழுந்தி
மேலெழமாட் டாதோர் விளம்புவது - ஞாலமதில்
என்போல நீங்கா தினைக்குமிரும் பேரிடுக்கண்
தன்பா லகப்பட்டோர் சாற்றுவதாம்;- மின்போலத்
எறும்பு
தங்காம லோரிடத்துத் தாளாள ரெல்லோரும்
மங்காம லுங்களிடம் வந்தடுத்து - நுங்காதல்
300
தீராத மாணிகளாய்த் தெள்ளத் தெளியவகம்
ஆராத வார்வமுட னந்நின்று - வாராத
எல்லா மொருங்குவர வேசறக்கற் றுத்தெளிந்து
வல்லா ரெனப்பெரும்பேர் வாங்கினுஞ் - செல்லாத
செப்புக்கா சென்னச் சிறுமைப் படவுயர்ந்த
ஒப்புக்கா சில்லா துயர்புலவர் - மெய்ப்புக்கா
306
சென்னவரும் பாவகத்து மேற்ற சுறுசுறுப்புக்
குன்னவரும் பேருவமைக் குள்பொருளாய் - மன்னிவரும்
சிற்றெறும்பே! நுங்களுக்குச் சேரும் பெரியபுகழ்
மற்றெறும்பே போலாது மாநிலத்துப் - புற்றெறும்பே
யென்ன மதியா திருப்ப வரையொன்றோ
தன்னைமதி யாச்சோம்பர் தங்களையும் - இன்னினியே
312
எம்பெருமை யீதெனவு மேற்ற சுறுசுறுப்புந்
தெம்புமுற வுங்கடித்துச் செப்புதல்போல் - நம்புகிறேன்
என்கரும்புக் கைகூப்ப வேலா நிலையுடையேன்
புன்கரும்புக் கோநீவிர் போதுவீர் - மென்கரும்புக்
கோரா யிரத்ததிக முள்ளவென துள்ளன்பை
நீரா யிரத்ததிக நேரினுந் - தாராள
318
மாய்ந்தந்தேன் யாரேனு மங்குசெலி னன்புடனீர்
போய்த்தந்து பேரிடுக்கண் போக்குவீர்; - தோய்த்தந்தப்
பட்டுப் பூச்சி
பல்வகைய சாயமதிற் பார்த்துப்பார்த் தேயவகை
நல்வகைய தாயமைய நன்கமைத்துத் - தொல்வகைய
புத்தம் புதுமையுடன் பொற்புறவே நெய்தாலும்
ஒத்தம் பலமுவப்ப வுங்களுடை - தத்தம்
324
இயற்கை படவமைந்த வேபோல வெங்கள்
செயற்கை யுடையாமோ தேரின் - முயற்கையுடற்
பாய்ச்சியோ யாது பறந்து செலும்பட்டுப்
பூச்சிகாள்! நீர்போம் புதுவழியில் - நேர்ச்சியுடன்
தென்பட்டால் யாரேனுஞ் செம்மையுடன் றப்பாமல்
அன்பிட்டுப் பேருதவி யாக்குவீர் - நும்பட்டைப்
330
போன்றுடுத்து மாநிலத்தும் பொற்பின் றகைமைக்குச்
சான்றடுத்து நிற்குமெமைத் தானினையும் - ஈன்றெடுத்த
தாயன்றோ நீரெமக்குச் சார்ந்த வுடையமைப்பிற்
சேயன்றோ யாமுமக்குச் செப்புவதும் - வாயன்றோ
எம்முன்னோ ருந்த மியற்கையுடை யைக்கொண்டே
அம்முன்னோர் தம்முடைய யாக்கியதும் - நம்முன்னோர்
336
கொண்டவியற் கைசெயற்கைக் கூறுமுரண் பட்டாலும்
உண்டவினத் தாலுடைய வொற்றுமையைக் - கண்டுணர்வீ
ராயினமக் குள்ளவுற வாய்சே யெனத்தெரிவீர்
தாயுதவல் சேய்க்குமுறை தானன்றோ; ஞாயொருநாட்
காக்கை
கய்ம்முறுக்குச் சுட்டெனது கையிற் கொடுத்தகல
மெய்ம்முறுக்குப் பொய்படவவ் வேளையிலே - செய்ம்முறுக்குப்
342
பொய்யாக்கி நீபிடுங்கிப் போகவொன்றுஞ் செய்யாமல்
எய்யாக்கி யானிருக்க வில்லையா - மெய்யாக்கி
வைக்கவெனக் குச்சான்று வண்டிவண்டி யாகவுள
கைக்கவுனக் குச்சொலுவேன் காதலுடன் - தைக்கவுளங்
கேட்பாய் கருத்துடனுங் கேண்மையதை நிற்கீயா
நாட்போ யொழித்ததொரு நாளுண்டோ - வாட்போரில்
348
வல்லான் வரக்கரையாய் வட்டிலிற்சோ றிட்டினிய
நல்லான் றனிப்பாலில் நான்றருவேன்- வல்லேயென்
றன்பா யுனைப்பாடி யப்பெயர்பெற் றாடனது
பின்பா யவளன்றோ பெண்டிரலான் - முன்பேயும்
எவ்வா டவருன்றன் ஏற்றமதை யாற்றலுடன்
செவ்வே யெடுத்தினிது செப்பினவர் - எவ்வாறும்
354
என்ற னதுபே ரிடர்நீக்கி யேகாத்தல்
நின்ற னதுபேர் நினதாகும் - உன்றனது
பேரின் பொருட்கொன்றும் பீழையதுண் டாகாமற்
காரின் கறுத்தகருங் காக்கையே! - சீருடனே
நின்னினத்தைக் கூட்டியுணு நீர்மைப் பயிற்சியினால்
என்னினத்தைக் கூட்டவுனக் கேலுமால்- தன்னினத்துக்
360
கன்னி யொருத்தியென்றாற் கட்டாயந் தட்டார்கள்
பொன்னி யுனக்கும் புகழுண்டாம் - இன்னினியே
யாரா யினுமொருவர்க் கன்பா யுரைத்தழைத்து
வாரா யெனைவந்து வாழ்விப்பாய்;- தீராத
கிளி
துன்ப மெனைத்தேனுஞ் சொல்லளவி லேயகற்றி
யின்ப மிகவகத்தே யெய்துவிக்கும் - அன்புருவ
366
மாக்கு மினிக்கு மவிர்க்கு மகத்திருளைப்
போக்கு முளத்தைப் புதுப்பிக்கும் - யார்க்கும்
எளிய வினிய வியல்ப வகலா
வொளிய விணையி லுலகில் - தெளிவுடைய
அய்வகைய முக்கூற்ற வாறுடல வேழ்திணைய
மெய்வகைய மென்மையினு மென்மையதா - முய்வகையின்
372
மேய பொருளெல்லா மேம்பட்டுப் பிள்ளைபல
வாய விவள்கன்னி யாமென்னத் - தூய
வழிநில்லார் புல்லாத மாண்பும், பழமை
யொழிநில்லார் புல்லா வுலக - மொழிநல்லார்
எல்லார்க்கு மூத்த விளைய தமிழணங்கை
யல்லார்க்கி யாமுரைப்பே மல்லேமால் - சொல்லோர்க்குங்
378
கிள்ளையென வேனென்று கேட்கும் பசியகிளிப்
பிள்ளையென நாவலர்கள் பேசுவதும் - உள்ளபடி
மெய்யானால் யானுன்னை வேண்டு வதுகேட்பாய்
பொய்யானாற் கேளாது போவெழுந்து - செய்யாத
தொன்றல்ல, வென்பேச்சுக் குன்பேச் சினையுவமை
யின்றல்ல வென்று மியம்புவர் - அன்றியுநின்
384
செம்முகத்தைக் கண்டலவோ சேயிழையார் செம்பஞ்சால்
தம்முகத்தைக் கால்கைத் தளிருகிரை - அம்முகத்தைப்
போலாக்கிக் கொண்டார்கள் பொற்பெனவே யீதுநினை
மேலாக்கிக் கொண்ட மிகையன்றோ - நூலாக்கி
நின்னையதிற் றூதாக நேர்ந்து செயல்கொண்ட
அன்னவரில் யானொருத்தி யல்லனோ - அன்னதுதான்
390
இப்போது வேண்டுவது மென்மென் மொழிக்கிள்ளாய்!
எப்போதும் யான்மறவே னிந்நன்றி - தப்பாது
பாரா துடல்வருத்தம் பட்டெனவே நீயோடி
வாரா தவரேனும் வாவென்று - யாரா
வதொருவ ரையழைத்து வாராய் விரைவில்
இதொருவர் செய்யுதவிக் கீடோ - அதொருவர்
396
உன்சொல்லைக் கேட்டலோ வொன்றுந் தடைசொல்லார்
என்சொல்லைக் கேட்டால்நீ யேகுவாய் - தென்சொல்லைத்
தட்டுவா ரிங்கொருவர் தானுண்டோ நின்மழலை
மட்டுவா ருங்கடக்க மாட்டுவரோ - இட்டுவா
போப்போ வினிப்போது போக்காதே மற்றவரைக்
காப்போர் செயலைக் கடைபிடிப்பாய் - தீப்போற்
402
சுடுசொற் கலவாது தூய்மையொடு வாய்மைப்
படுசொற் கடையினிமை பாய்ந்தால் - தடுசொல்லைக்
காண முடியாது கட்டாயங் கேட்டிடுவர்
கோண முடியாது கோக்கிள்ளாய்! பேணியிதைச்
செய்யெவருங் கேளாரேற் றேன்போற் றமிழிசையைப்
பெய்யவர்தங் காதிற் பிழையின்றி- வெய்யவருங்
408
கட்டுப் படுவார் கடிதேசெல் வாய்சென்று
தட்டுப் படுவாரைத் தானழைத்துச் - சட்டெனவே
வாவென்று தேமொழியும் வண்டமிழின் பைங்கிளியைப்
போவென்று மேதூது போக்கினாள் - ஆவென்று
வாய்திறந்தாள் ’அக்கக்கா வா’வென்ற வக்கிளியும்
ஆய்திறந்தாள் உள்ளமுவந் தாள்.
414
தலைவன் சிறப்பு
உள்ள முவந்தாள் ஒருவனை யன்றொருநாட்
கள்ள முவந்த கருங்கண்ணாள் - பள்ள
வயல்பாயு நீர்போல மானன்னாள் மைக்கட்
கயல்பாயு முள்ளபுட் காணுஞ்- செயல்பாயுஞ்
செந்தா மரையிரண்டுஞ் செம்மாக்குஞ் சென்றுதவா
நந்தா மரையிரண்டு நாணியழுந் - தந்தாயைக்
420
கண்டுவக்குஞ் சேய்போலக் காரிகையு மந்நிரையைக்
கண்டுவக்கு மூக்குங் கருத்துப்பும் - வண்டுவக்குங்
கூந்தலினா ளிவ்வாறு கொள்ளுங் குறிப்புடைய
ஏந்தலினா லாவதனுக் கேகுவாம் - தீந்துவர்வாய்க்
கிள்ளையின மாவலுடன் கேட்குந் தமிழ்வாயாள்
அள்ளியிசை யோரேழு மாராய்வாள் - உள்ளுவந்து
426
காட்டூரி லேபாடுங் கன்னித் தமிழ்கேட்கும்
மேட்டூரி லேவாழு மேவலான் - காட்டாரு
மில்லா துயர்ந்த விளமை நலனுடையான்
செல்லா துயர்ந்த திறலுடையான் - மல்லாருங்
கட்டுடம்பு நோயெதுவுங் காணா நலமிகுதி
பட்டுடம்பு மேவியநற் பாக்கியத்தான் - சுட்டுடைய
432
நல்ல வுயரம் நயத்தக்க நற்பருமன்
எல்ல வருமுவக்கு மின்னுருவன் - வல்லவரி
வண்டார் விரும்புமண மாண்புடைய மேனியினான்
கண்டார் விரும்புமெழிற் கட்டழகன் - தண்டாத
அன்பு பொருந்தி யருள்விரவி யாராத
தென்பு கலந்து தெருள்மருவி - யின்பளவிப்
438
பொற்புறவே நோக்கும் புலிப்பார்வை, காண்போரன்
பொற்புறவே யூக்கு மிதழ்ப்பொலிவு- தற்பெறவே
மூக்குக்குக் காப்பாய் முளைத்து முறுக்கியெழும்
போக்குக்குக் காப்பாய்ப் பொலிமீசை - நோக்குக்குத்
தாங்கரிய தாய்க்குணக்கிற் றண்ணென் றினிதெழூஉ
மீர்ங்கதிர் போன்றவரி யேறுமுகம் - பூங்குறிஞ்சி
444
வண்டரினங் கண்டு மயங்க மதிசூடுங்
கொண்டலெனத் தோன்றுங் குறுங்குஞ்சி - தண்டமிழில்
தானாய்ந்து நல்லதம்பிச் சர்க்கரை யாக்குவித்த
கானார்ந்த காங்கயங் காளையன்னான் - மீனார்ந்த
விண்ணென் றுயர்ந்து விரிந்து செறிந்தாழ்ந்து
தண்ணென் றுயர்ந்த தமிழ்வாயான் - கண்ணென்று
450
பெற்றுத் தெளிந்த பெரும்புலவர் பானன்கு
கற்றுத் தெளிந்த கலைவல்லான் - முற்றறிந்த
பல்காப் பியத்தின் பயனடைந்தான் பாரித்த
தொல்காப் பியத்தின் றுறைபடிந்தான் - நல்காப்ப
உள்ளுவ தெல்லா மொருங்கு தலைப்பெய்த
வள்ளுவர்முப் பாலை வகையுண்டான் - தெள்ளுகலைத்
456
திட்டமது முற்றுவந்த தேர்ந்துதெளி கல்லூரிப்
பட்டமது பெற்றுயர்ந்த பார்வல்லான் - வெட்டவெளி
போன்ற செயலுடையான் பொய்யாத சொல்லுடையான்
ஆன்ற நலஞ்சே ரகமுடையான் - சான்றவர்கள்
மெச்சுந் தகவுடையான் வேண்டுவர்வேண் டாரின்றி
நச்சுந் தகவதினு நன்குடையான் - எச்சரிக்கை
462
யின்றியொரு செய்தியினு மீடுபடான் ஏலார்க்கும்
நன்றிபய வாதசெய நாணுடையான் - பொன்றினுமே
புன்மதிப்புக் காகவுயிர் போலச் சிறந்துயர்ந்த
தன்மதிப்புக் கேலாத தான்செய்யான் -தன்மதிப்பை
விற்போர்க்குக் கெட்டித்த வேம்பன்னான் நன்மதிப்பைக்
கற்போர்க்குக் கட்டிக் கரும்பன்னான் - முற்போக்
468
குடையான் பகுத்தறிவுக் கொவ்வாத செய்தல்
கிடையான் பெரியார்சொற் கேட்பான் - நடையேதுங்
குன்றான் குறளையர்சொற் கொள்ளான் மனஞ்சிறிதுங்
கன்றான் வராதவந்து கையுறினும் - நன்றாகு
மாக்கம் பெரிதெனினு மான்றோர் பழிக்குவன
நோக்கம் படவகத்து நோக்ககில்லான் - மீக்கொள்ளுங்
474
கல்விச் செருக்கில்லான் கைநிறைய வுண்டெனினுஞ்
செல்வச் செருக்குச் சிறிதுமிலான் - பல்வகைய
தேட்டாளர் நாணுஞ் சிறந்த முயலுடையான்
ஈட்டாத பல்வே றியல்புடையான் - பாட்டாளர்
உள்ளங் குடிகொண்ட வோயா வுழைப்புடையான்
கள்ளங் கரவற்ற கண்ணியவான் - எள்ளுவன
480
செய்யான் கனவிலுமே தீண்டான் பிறர்பொருளை
வய்யா னொருவரையும் வாய்திறந்து - மெய்யார்சொற்
றட்டா னறிவிலரைத் தாழான் கடிந்தெவருங்
கெட்டா னெனும்பழிச்சொற் கேளாஅன்- கிட்டாத
எண்ணா னெளியவரை யெள்ளா னிழிதகவு
நண்ணான் பயனிலதை நாடாஅன்- கண்ணாரக்
486
கண்டதையில் லென்னாத காட்சியுளான் றன்னறிவுட்
கொண்டதையா ராய்ந்துசெயுங் கொள்கையுளான் - தண்டமிழர்
முன்னு மரிய முயற்சியெலா மொன்றாக
உன்னு மரிய வுயர்வுடையான் - மன்னுதிரு
வள்ளுவர் வாய்மொழிக்கு வாய்த்தவெடுத்துக் காட்டாக்
கொள்ளுமுயர் பண்பெல்லாங் கூடியவன் - கள்ளவியல்
492
பைந்துடையான் காத லமைந்திலக வாண்டிருபத்
தைந்துடையா னின்ப மலர்தரவ - மைந்துடையான்
ஒத்த பருவ முருவமுத லொப்புடைமை
பத்து மொருங்கமையாண் பாலுடையான் - பத்துடையாள்
காதற் கருங்குவளை கண்டு மலரவிருள்
போதப் புகுந்த புதுமதிபோல் - மேதக்கான்
498
நோயிடைய வேயுதவி நோக்கியெதிர் நின்றாளை
ஆயிடைகண் டுள்ளமுவந் தான்.
எதிர்ப்பாடு
ஆயிடைகண் டுள்ளமுவந் தானங் கணுகணுக
நோயடைய நின்றாளு நோக்கநிலந் - தாயடைய
இன்புற்ற சேயை யினியுவமை சொல்லுதலோ
அன்புற்ற காதல்வழக் கன்மையால் - முன்புற்ற
504
கார்கண்ட மஞ்ஞையெனக் கால்கண்ட வேலையென
நீர்கண்ட பைங்கூழ் நிலமென்னத் - தார்கண்ட
கூந்தலென வந்நின்ற கோற்றொடியுந் தன்னோயை
ஏந்தலறி யக்குறிப்பா லேயுணர்த்தப் - போந்தவனும்
மற்றவள்நோய் போக்கி மலர்ந்த முகநோக்கிப்
பெற்றவள்பா லின்னினைய பேசுவான் - பொற்றொடீஇ!
510
நானிலத்தை வாழ்விக்க நன்னோக் குடனுகந்து
மேனிலத்தி லேபோந்த மெய்யறிவர் - வானிலத்து
மின்னலையை மண்ணகத்து மேய வரும்பொருளைப்
பொன்னுலையி லேயுருக்கிப் பொற்புடனே - பன்னரிய
வானேயும் பல்பொருளை வட்டித் திடநமக்குத்
தானாயு மாராய்ச்சிச் சாலையென - மானேயுன்
516
செம்பொன் னடித்தளிரைத் தேர்ந்தெடுத்த வோவிவையும்
அம்பொன் னடிக்கெதிர்மை யாவதனைத் - தெம்புடனே
ஆய்ந்தாய்ந்து கண்டறிய வாகாமை யாலுடல
மோய்ந்தோய்ந்து மேன்மேலு மூக்கினவோ - சேந்தோய்ந்து
போயசெந் தாமரையின் பொற்பினைக்கா ணக்காண
ஆயதோ காத லவைக்கதிகஞ் - சேயிழையுன்
522
தீராத மென்மலரின் செம்மைத் திறங்கண்டால்
ஆராத காதலுறா ராருலகிற் - பேராத
அன்பா லவைதம் அழகிய கூர்முகத்தால்
இன்பாய்ப் பலமுத்த மிட்டனவோ - தென்போடு
நன்முறையி லேயமைநின் னல்லடியின் மென்மையினைப்
பன்முறைதொட் டுத்தொட்டுப் பார்த்தனவோ - பின்முறையும்
528
முற்றுந் தெரியாமல் மொய்ம்புட னேமுனைந்து
மற்றுந் தெரிதரக்கை வைத்தனவோ - முற்றிழையுன்
தண்டமிழின் கூத்தைச் சரியாக வுள்ளபடி
கண்டுகொள நின்காலைக் கட்டினவோ- ஒண்டொடியுன்
நல்ல நடிப்பின் நலப்பட்டு நல்லடியைப்
புல்லி விடாதுநின்று போற்றினவோ - மெல்லியல்யான்
534
நின்னை யெதிர்ப்படவே நீபோகா தேயிருக்க
உன்னை நிறுத்திவைத்த வோகாணும்- முன்னையவர்
காணாத வாயிலிது காணுங் களவியலில்
வீணோதி னால்மறுத்தல் மேவுமன்றோ - நாணாது
காவியங் கண்ணிநீ கைவல்லோன் தீட்டியநல்
லோவியம் போலயா னுன்னுடம்பை - நீவுமட்டும்
540
இம்மன்றே தேனு மிடையூறு செய்யாமற்
கம்மென்றி ருந்ததன்மெய்க் காரணமென்- உம்மென்று
மெய்தொட்ட போதன்று வேல்விழியுன் மெல்லியசெங்
கய்தொட்ட அவ்வடுவைக் காண்டியால் - நெய்தொட்ட
அய்ம்பாலை நீவியதற் காகச் சினந்தன்று
கொம்பேறி நாகமெனக் கொத்தினையே - வம்பாருங்
546
கூந்தலை மோந்ததனாற் கொம்பனையா யன்றுனது
மாந்தளிர் சோர்ந்தயர்ந்து வாடினதே - ஏந்திழையான்
மண்குத்திப் பூம்பள்ளி வண்ணமுறப் பண்ணுகையில்
கண்குத்திப் பாம்பென்னக் கண்டனையே - பண்குத்தி!
என்முறுவல் பார்த்தோ ரிளங்கொம்பர் நின்போலப்
புன்முறுவல் பூத்துப் பொலிந்ததன்றோ - தென்மொழியுன்
552
தத்தரிக்கண் காணவெதிர் தான்வரயா னின்னுதலும்
முத்தெடுத்து மாணவன்று மூடினதே - பத்தடுத்த
ஆன்றோரைப் போல வடக்கமுடன் வாய்முத்தந்
தோன்றாமற் செம்பவளந் தோன்றினதே - சான்றேயுங்
கட்டழகி யுன்னுள்ளத்தைக் காட்டிலைநீ யுன்னுடம்பு
வெட்ட வெளியாக்கி விட்டதன்றோ! - கிட்டவந்துன்
558
தொய்யி லெழுதியமென் றோள்தொடவுன் மென்குழலும்
ஒய்யென வேயவீழ்ந்தன் றொல்கினதே - பையெனவுன்
தாதுபட்ட மேனி தடவவுன்றன் பொற்றோடு
காதைவிட்டே யோடினதே காதவழி - மாதரசென்
கண்ணில் விழுந்தவுன்மேற் கைபடவுன் கைவளைகள்
மண்ணில் விழுந்துடைந்து மாண்டனவே - பண்ணரிய
564
பாவையுந்தன் பொற்றுகிலைப் பாங்கா யுடுத்துடுத்துப்
பூவையந்தன் கையோய்ந்து போயினவே - காவியங்கண்!
நின்னுடைய மேனிதொட நேர்ந்தெழுந்துன் பட்டாடை
உன்னிடையை விட்டெங்கோ வோடினிதே - என்னுடைய
பூவாடைக் காரியுடை போலவிடை யைப்பகைக்கப்
பாவாடைக் காரிடுக்கண் பண்ணினவர் - நாவாடச்
570
சொற்போர் புரிந்தெவர்க்குந் தோலாத வென்னோடு
மற்போர் புரிந்துவென்ற மாமறத்தி - பிற்பாடுன்
கைபட்ட பாட்டைக் கழறிலுன்றன் காமருபூ
மெய்பட்ட பாட்டைவிட மேலாமே - எய்பட்ட
தோகை மயில்போலச் சோருநினைத் தெம்புடைமை
யாக வுதவுதலிங் கார்கடமை? - பாகுமொழி!
576
கையின் கடமையன்றோ காரிகைநிற் காணுதற்குக்
கையின் கடமை கழிந்திடுமோ? - பையவன்று
நாற்று நடுகையிலே நான்வீச வேதவறி
நாற்று நடுகையிலே நாண்மலர்போல் - நாற்று
முடிபடவே தான்வெறுத்த மொய்குழலே! யின்றுன்
அடிபடவே யான்பொறுத்தே னன்றோ? - நொடிபடவான்
582
கன்றின் தலைக்கயிற்றைக் காணாம லேமிதிப்பக்
கன்றின் குரலன்று காட்டினையே - அன்றொருநாட்
கீரை பறிக்கையிலே கிட்டிவர வேயண்ணன்
மாரை யழைத்தேங்க வைத்தனையே - கூரையின்மேற்
காக்கா வெனக்காக்கை கண்டதுமே பைங்கிள்ளை
வாக்கா வெனவெளியே வந்தென்னை - நோக்கா
588
விருந்தானே னென்பதனை வேம்பன்றோ யன்று
மருந்தானேன் போலின்று மன்ற - திருந்தாத
செங்கோல் மறமன்னர் செல்வம்போற் பெண்ணொருத்தி
வெங்கோலங் கொள்ளுவது வீணன்றோ? - பைங்கூழ்க்
களைகளைய வென்றலையைக் காண்டலுமே முன்கை
வளைகளைய மன்றறிய வைத்தாய் - இளைகளைய
594
அவ்வண்ணந் தண்ணிலவி லாடையிலே நீசெய்த
இவ்வண்ணந் தன்னைமற வேனென்றுஞ் - செவ்வண்ணக்
குன்று குளிரக் கொழுங்கொண்டல் பெய்வதுபோல்
ஒன்றுபெய் துள்ள முவப்பித்தாய் - அன்று
பருத்தி பறிக்கையிலே பார்த்துப்பார்த் தென்னை
வருத்தி யுடல்நலிய வைத்தாய் - ஒருத்தி
600
பறிக்கையிலே வாவென்று பார்வையிலே குட்டி
மறிக்கையிலே சொன்ன மயிலே - முறிக்கையிலே
தீண்டி யெதனாலுந் தீராத நோய்தீர
வேண்டி மருந்தளித்த மெல்லியலே! - ஆண்டொருநாள்
தாய்துஞ்ச வில்லையெனச் சாற்றியே மாற்றினைபின்
நாய்துஞ்ச வில்லையென நாப்பிழைத்தாய் - வாய்துஞ்சப்
606
பொய்ப்புள் ளொலிகேட்டுப் பொம்மெனவந் தேமாந்து
கைப்புள்ள திட்டுக் கலுழ்ந்தகன்றாய் - மெய்ப்புள்ள
அற்றம் பிழைத்துன்னை யல்லாக்கச் செய்தவென்றன்
குற்றம் பொறுத்தகுணக் குன்றன்னாய்! - மற்றொருகால்
நந்தமிழர் முன்வாழ்ந்த நாகரிக நல்வாழ்வை
எந்தமிழர் காண வெடுத்துரைக்கப் - பைந்தொடிநம்
612
தண்டமிழ்நாட் டூர்தோறுந் தான்சென்ற காலத்தே
வண்டமிழைத் தான்பிரிந்த வாறேபோல் - ஒண்டொடிநீ
எத்தியா யில்லாம லென்பிரி வாற்றாது
பித்தியா யுள்ளமது பேதுறவே - கத்தியாய்
நோய்பிடித்த காரணத்தை நோக்கி யறியாது
பேய்பிடித்த தென்றுமனம் பேதுற்று - ஞாய்பிடித்த
618
அன்பாலுன் னோயகல அவ்வுடுக்கைக் காரரைக்கொண்
டுன்பா லிருந்தபே யோட்டுவிக்கத் - தென்பாலின்
வன்மையறி யாத வடவர் முடித்தலையில்
இன்மையுற வன்னா ரிகழ்வெண்ணம் - நன்மையுறக்
கட்டுவன்போற் பத்தினியின் கல்லேற்றிக் கொண்டுவந்த
குட்டுவன்போற் பைந்தொடியுன் கூந்தலின்மேற் - பட்டுவரிக்
624
கல்லேற்றி யச்சுறுத்திக் காட்டியும்போ காதப்பேய்
சொல்லேற்றி யான்வரவே தொண்டொருநாள்- வில்லேற்றி
வந்திளஞ் சேட்சென்னி வாள்வலிக்காற் றாவடவர்
தந்திர ளோடினபோற் றானோடச் - செந்துவர்
வாய்ச்சி! யறிந்து மகிழ்ந்தேனுன் உள்ளன்பை
ஆய்ச்சி யறியுமோ வப்பொருளை? - பேய்ச்சி!
630
உளவியலின் றன்மையெலா மொப்ப வமைந்த
களவியலின் தன்மையெலாங் கண்டார் - களவமையப்
பூவும் புனலும் பொருகளிறுஞ் செந்நாயும்
ஆவுந் தருபுணர்ச்சி யாமென்பர் - கோவையிதழ்ப்
பாவாய்! நெருஞ்சிப் பழந்தரு மிப்புணர்ச்சி
பூவாய்! நமது புதுப்புணர்ச்சி - மேவாக
636
அன்னைக் கிதனை யறத்தொடு நிற்பாய்காண்
என்னப் பனிமொழியு மிம்மென்ன - என்னுயிரே!
இவ்வா றெதிர்பாரா தேநிகழ்வ தையேதான்
ஒவ்வாத வூழென்ற தொண்குறளில் - அவ்வாறே
இன்றெதிர்ப் பட்டோ மெனநடந்தாள்; எந்தமிழர்
அன்றெதிர்ப் பட்டதிது வாம்.
642