Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

மாபாரதம்
பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்


 

மாபாரதம்

பேராசிரியர்

டாக்டர் ரா. சீனிவாசன் எம்.ஏ., எம்.லிட்., பிஎச். டி

அணியகம்

முதற்பதிப்பு-1992

இரண்டாம் பதிப்பு-1993

ஆசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன் வெளியீடு

வெளியீடு

அணியகம்

5, செல்லம்மாள் தெரு,

செனாய் நகர், சென்னை- 30.

விலை ரூபாய் 30-00

* * *

* * *

ஆசிரியரின் பிறநூல்கள்

கம்ப ராமாயணம் 30.00

சீவக சிந்தாமணி 25-00

திருவிளையாடற்புராணம் 20-00

கண்ணனின் திருக்கதை 15-00

நளன் தமயந்தி 15-00

திவ்விய் பிரபந்த சாரம் 20-00

திருப்பாவை விளக்கவுரை 20-00

நவீன தெனாலிராமன் 10-00

குப்பைமேடு 25-00

படித்தவள் 25-00

Aniyakam Printers 1611, Kandhan Street, Madras-30.

கதைக் கரு

ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்

புனல்சோர அளகம்சோர

வேறான துகில்தகைந்த கைசோர

மெய்சோர வேறோர் சொல்லும்

கூறாமல் கோவிந்தா கோவிந்தா

என்று அரற்றிக் குளிர்ந்து நாவில்

ஊறாத அமிழ்து ஊற உடல்புளகித்து

உள்ளமெலாம் உருகினாளே.

உள்ளடக்கம்

 

1. குலகுரு மரபினர்

2. திரெளபதியின் திருமணம்

3. சூது போர்

4. காடுறை வாழ்க்கை

5. மறைந்து வாழ்தல்

6. தூது உரைகள்

7. விடுமனின் வீழ்ச்சி

8. துரோணனின் தலைமை

9. கன்னனின் முடிவு

10. அவல முடிவுகள்


முன்னுரை

வடமொழியில் எழுதிய இராம காதையையும் மாபாரதத்தையும் தமிழ்ப்படுத்திய கம்பரும் வில்லிபுத்துராரும் அவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றைத் தம் கவிதை யாற்றலால் சுவைபடத் தந்துள்ளனர். அதனால் இப் படைப்புகள் மூல நூலில் உள்ள கதையும், தமிழ்க் கவிதையும் கலந்து மாபெரும் காப்பியங்களாகத் திகழ் கின்றன. இவையே இன்று மேடைகளிலும் அரங்குகளிலும் செவி நுகர் கணிகள் என்று பேசப்படுகின்றன.

வில்லி பாரதமும் பட்டி தொட்டிகளில் பாரதப் பிரசங்கங்களாகப் பேசப்பட்டது. இன்று உரை நூல்கள் வந்துவிடுவதால் இருந்த இடத்தில் இருந்து இந்நூல்களின் அருமை பெருமைகளை உணர வாய்ப்பு ஏற்பட்டு விட்டதால் பாரதப் பிரசங்கங்கள் குறைந்து விட்டன.

வில்லி பாரதம் இக் கதையினை ‘மாபாரதம்’ என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.

வில்லியும் வியாச பாரதத்தைக் கற்றவர்தான். அவருக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடி எதுவோ அதுவே அவருக்கும் மூலநூலாக அமைந்து இருக்க வேண்டும். அதைப் பின் பற்றிக் கதையைச் சொல்கிறார். மூல நூல் மொழி பெயர்ப்புகள் என வந்துள்ள உரைநடை நூல்களில் வில்லி பாரதத்தில் கூறப்படுவதுபோல் கதை ஒட்டம் சரியாக அமையவில்லை. புதை பொருள் ஆராய்வது போல அதை வெளியிட்டிருக்கிறார்கள். வில்லிபாரதம் தெளிவாக ஆற்றொழுக்காகக் கதையை இயக்குகிறது. அதனையே பின்பற்றி இங்கு எழுதப்பட்டதால் கதை தெளிவாகக் கூறமுடிந்தது.

வில்லிபுத்துரார் கன்னன் முடிவும், துரியன் முடிவும் கூறிக் கதையை முடித்துவிடுகிறார். மூல நூல் மற்றும் எட்டுப்பருவங்களில் அவர்கள் பரலோக யாத்திரை மற்றும் ஒவ்வொருவர் மரணம் பற்றியும் கூறுகிறது. இது புராணிகர்களின் போக்கு; அதைத் தவிர்த்துக் காவிய அமைப்புக்கு ஏற்றவகையில் துரியனின் முடிவோடு வில்லி புத்துாரார் கதையை முடித்திருப்பது தனித்தன்மையாகும்; அதே முறையில் இங்கும் கதை முடிக்கப்படுகிறது.

கதையின் கரு பாஞ்சாலியின் சபதம்; எனினும் அது உணர்த்தும் நீதி போர் என்பது அழிவை உண்டாக்கும்; அது தவிர்க்க வேண்டியது மானுட நெறி என்றும் காட்டுகிறது.

கீதை உபநிடதத்தின் சாரம்; அது இடம் பெற்றிருப் பது பாரதத்துக்குப் பெருமை சேர்க்கிறது.

இராமயணம் லட்சிய மாந்தர்களைப் படைத்துத் தருகிறது; பாத்திரப் படைப்புகள் மகத்தானவை. பாரதம் கதை நிகழ்ச்சிகளால் சிறப்பு உடையது. பாத்திரப்படைப்புக்கு முதலிடம் தரவில்லை; கருத்துரைகள் மிகுதியும் தருகிறது; கதை நிகழ்ச்சிகள் இன்றைய நடைமுறைக்கு வழிகாட்டுவன ஆகும். (1) சூது தீது; (2) தாயவழக்குகள் அழிவைத்தரும்; (3) பெண்ணடிமை கூடாது; (4) தவறுகள் வாழ்க்கைக்குத் தடை இல்லை என்பது போன்ற கருத்துகள் உள்ளன. கதையின் கருவே பாஞ்சாலி சபதம்தான்; எனினும் அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதை பாரதம் காட்டுகிறது. தருமம் நம் பக்கம் இருந்தால் மட்டும் வெற்றி காண முடியாது, செயலாற்றும் திறனும், திட்டமிடும் அறிவும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. நல்லவனாகவும் வல்லவனாகவும் மட்டும் இருந்தால்போதாது; அறிவு உடையவனாகவும் இருக்க வேண்டும் என்ற மூன்றாவது தத்துவத்தை உணர்த்துகிறது. அதனால் இது மிகவும் பயனுடைய நூலாகும்.

இதனை உரைநடையாக எழுதும் போது ஓர் அரிய சாதனையைச் செய்யவேண்டும் என்று முயன்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றும் போது கிடைத்த அறிவும் அனுபவமும் பெரிதும் பயன் பட்டன. 1981ல் ஒய்வு பெற்றேன். அண்மையில் இரண்டு ஆண்டுகளாக இவற்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். ஏட்டில் படித்தவர்கள் இவை பயன் உடையவை என்று எடுத்துக் காட்டினர்.

தமிழ் மாணவனாகத் தொடங்கி ஆசிரியப் பணியும் ஏற்று யான் ஆய்வு நூல்களையும் படைப்பு நூல்களையும் ஒரு சில வெளியிட்டிருக்கிறேன். எழுத்தில் தமிழ் இயல் அமைக்க முடிந்தது. இதை விமரிசனம் செய்யும் உரிமை எனக்கு இல்லை; வாசகர்க்கே உண்டு. புதுக்கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் நா. பாண்டுரங்கம் அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன் என்னை ஊக்குவித்தார். ‘உம்முடைய நடை எளிமையும் எழிலும் கொண்டது; அதைப் பயன்படுத்தித் தொடர்ந்து எழுத வேண்டும்’ என்றார். அவ் ஊக்கம் என்னைக் கெளரவித்தது; ஆக்க பூர்வமான பணி செய்துள்ள மன நிறைவோடு இந்நூலை வெளியிடுகின்றேன்.

ரா. சீனிவாசன்

இறைவணக்கம்

ஞானம் ஆகிய பரம்பர அமிழ்தமாய்த் தவிரறு மயக்காகி

வானமாய் உடன் வாயுவாய்த் தேயுவாய் வனமுமாய் மண்ணாகித்

தான மாமறை முறைமையிற் பற்பல சராசரங்களும் ஆகி

ஏனமாய் இவை அனைத்தையும் மருப்பினால் ஏந்தினான் எனையாண்டோன்.

-வில்லிபுத்துரார்

ஞானமாகிய பரம் பொருள்; அவன் அமுதம் அனை யவன்; மயக்கும் பொருளுமானவன், வானம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதமாக விளங்குபவன்; வேதம் நுவலும் சராசரப் பொருள்கள் அனைத்துமாக விளங்குபவன்; கூர்ம அவதாரத்தில் பன்றியாகத் தோன்றித் தன் மருப்பினால் உலகை ஏந்திக் காத்தவன்; அத்திருமால் என்னை அடிமை கொண்டு ஆளும் தெய்வம் ஆவான்.

மா பாரதம்

1. குரு குல மரபினர்

மன்னர்கள் மற்றவர்களைப் போல் உதிரிப் பூக்கள் அல்லர். அவர்கள் வரலாறு படைத்தவர்கள், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி எனத் தமிழ் மறவர் பற்றிப் பேசுவது உண்டு. அது போல மா மன்னர்கள் சூரிய வம்சம் என்றும், சந்திர வம்சம் என்றும் கூறப்படுகின்றனர்.

சந்திரனே இக்குலத்தில் தோன்றிய முதல் அரசன் என்று கதை தொடங்குகிறது. அவனுக்குப் பின்னர்ப் பெயரும் புகழும் படைத்த பெரு நில மன்னர்கள் வரலாறு சில அறியக் கிடைக்கின்றன.

இவர்கள் குலம் குருகுலம் என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவன் கல்வி கேள்விகளில் வல்லவனாக இருந்தான். மனுவைப் போல நீதி நூல்களை வகுத்துக் கொடுத்தவன். ஆசான் என்று அவனைப் பற்றிப்பேசினர். அவன் மரபில் வந்தவர்கள்தாம் பாரதக் கதைக்குரிய பாண்டவர்களும் கவுரவர்களும் ஆவர். பாண்டுவின் மைந்தன் பாண்டவர்கள் எனப்பட்டனர். திருதராட்டிர னுக்குக் கவுரவன் என்ற பெயரும் இருந்தது. அதனால் அவன் மைந்தர்கள் கவுரவர் எனப்பட்டனர்.

புரூரவசு என்பவன் மிகப் பழமையானவன்; அரம்பை ஒருத்தியைக் காதல் கொண்டு அவளை மணந்து ஒரு மகனைப் பெற்றான். இவன் அழகில் மன்மதனையும் தோற்றத்தில் முருகனையும் ஒத்து இருந்தான். உருப்பசி என்ற நடனப்பெண் சோலை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தாள். அங்குத் திரிந்து கொண்டிருந்த அசுரர்கள் சிலர் அவளைத் தேரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர். அவள் அபயக்குரல் கேட்டு இம்மன்னன் புரூரவசு அவர்களைப் பின் தொடர்ந்து போரிட்டு அவளை மீட்டு வந்தான் இவன் வீர சாகசம் கண்டு அவனை மணக்க இசைந்தாள். அவர்கள் இல்வாழ்க்கையில் மகன் ஒருவன் பிறந்தான்; ஆயு என்பது அவன் பெயர்.

அவன் மகன் நகுடன்; வேள்வி நூறு செய்து இந்திரப் பதவியை அடைந்தான், சுந்தரியாகிய இந்திராணியை அவன் அடைய விரும்பினான். அவள் அவனை ஏற்க விரும்பவில்லை தடுக்கவும் இயலவில்லை. வேறு வழியில்லாமல் பல்லக்கு ஒன்று அனுப்பி வைத்தாள்; ரிஷிகள் எழுவர் அவனைச் சுமந்து சென்றனர், அதன் மேலே எறியதும் சர்ப்ப சர்ப்ப என்றான். மிக விரைவில் செல்க என்பது அச்சொல்லின் பொருள் ஆகும். சர்ப்பம் ஆகுக என்று அதைத் திருத்தி அவர்களுள் அகத்திய முனிவர் சபித்தார். பதவி இழந்து பரிதாபத்துக்கு உரியவன் ஆனான். அவன் மகன் யயாதி என்பவன் அவனுக்குப்பின் அரசனானான்.

யயாதி என்பவன் காதல் வியாதியால் தவறு செய்தான். இவன் விற்கலையில் விறலோன் ஆக இருந்தான். வெற்றித் திருமகள் அவன் தோள்களில் வந்து குடிகொண்டாள் புகழும் பெருமையும் பெற்ற இவன் சுக்கிரனின் மகள். தேவானையைத் திருமணம் செய்து கொண்டான். இரு புதல்வர்களைப் பெற்றான். அவர்கள் இருவரும் தறு தலைகளாக மாறினர். களர் நிலத்தில் பூத்த காளான்கள் ஆயினர்.

தேவையானைக்கு உற்ற தோழி ஒருத்தி இருந்தாள். விடபன்மன் என்னும் அசுரனின் மகள் அவள்; சன்மிட்டை என்பது அவள் பெயர். அவள் அடிக்கடி அங்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்: மணமாகாதவள், இவனோடு மகிழ விரும்பினாள். இது கள்ளக்காதலாகக் கனிந்தது; உள்ளம் கலந்து அவர்கள் உறவு கொண்டனர், பூரு என்னும் புண்ணியப் புதல்வன் ஒருவன் பிறந்தான். அச்சில் வார்த்த பொம்மைகள் என அடுத்து அடுத்து இருவரைப் பயந்தாள். அம்மூவருக்கும் மூல அச்சு யயாதி தான் என்பதை உருவ ஒப்புமை கொண்டு கட்டியமனைவி கண்டுகொண்டாள்.

அவள் தன் தந்தையிடம் அவன் செய்த தவறுகுறித்து அவதூறு கூறினாள். வாலிபக் கிறுக்கால் அவன் விளையாடியதை அறிந்து அவனை முதியவன் ஆகுக என்று சபித்துக் கோபித்தான். ஆசைகள் அறுமுன் நாற்பதைக் கடந்து நூற்றினை அவன் எட்டிப்பிடித்தான். உடல் நூறு வயது ஆகியது; உள்ளம் துள்ளி விளையாடியது. ஒருத்திக்கு இரண்டு மனைவியர் இருந்தும் மூப்பு அவனை யாப்பிட்டது; எண்ணிப்பார்த்தான், வயதில் சிறிய வாலிப மைந்தர்களைப் பார்த்து இளமையை இரவல் கேட்டான். மூத்தவன் மட்டும் பாசத்தின் பிணைப்பால் இளமையைப் பரிமாறிக் கொண்டான். யயாதி சிற்றின்ப வாழ்க்கையில் எஞ்சி நின்ற அரைகுறை இன்பத்தை அழகியர் கொண்டு அனுபவித்தான். அவனுக்கு அதில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தான்; முதுமையைத் தான் திருப்பிப் பெற்றுக்கொண்டு தவ வாழ்க்கையில் தலைவைத்தான்.

மகன் பூரு என்பவனுக்கு மணிமுடி சூட்டி அவனைப் பார் ஆள வைத்தான். அவன் தியாகத்தைப் பாராட்டி அவனை வாழ்த்தி யயாதி காலன் அழைக்கத் தன் கணக்கை முடித்துக் கொண்டான்.

யயாதிக்குப் பின் தோன்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் குரு, பரதன், அத்தி என்பவர் ஆவர். குரு என்பவன் கற்றவன். நூல்பல செய்தவன்; ஆசான் என்று முன் கூறப்பட்டது. பரதன் என்பவன் துஷியந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் நாட்டியக்கலை நன்கனம் வகுத்துப் பரதம் என்னும் நூலைச் செய்தவன். இவன் பெயரால்தான் இந்த நாடு பரத கண்டம் எனப் பெயர் பெறுவது ஆயிற்று; அத்தி என்பவன் நிர்மாணித்ததால் அவர்கள் தலைநகர் அத்தினாபுரி எனப் பெயர் பெறுவது ஆயிற்று:

சந்தனுவின் தோற்றம்

புகழ்மிகு குருகுலத்தில் பிற்காலத்தில் தோன்றியவன் சந்தனு அரசன், இவனுக்குப் பின்னால்தான் பாரதமன்னரின் சரித்திரம் ஒழுங்காகக் கிடைக்கிறது. இவன் திருதராட்டிரன், பாண்டு இவர்களின் பிதாமகன் ஆவான்.

சந்தனு மன்மதன் என விளங்கிய நாட்களில் வன வேட்டையாடக் கங்கைக் கரையை அடைந்தான். அங்கே ஒரு மங்கை நல்லாளைக் கண்டு நயப்புக் காட்டினான் அவன் அவளைக் கண்டதும் ஒர் கவிஞன் ஆனான்; அவள் வனப்பைக் கண்டு அவ்வணிதை வான்மகளோ என ஐயம் கொண்டான். கண்கள் இமைத்தன; கால்கள் காசினியில் தோய்ந்தன; அதனால் இவள் மண்மகளே என முடிவு செய்தான். கண்கள் காதற் குறிப்பைக் காட்டின. ஒருவரை ஒருவர் காதலித்தனர், அவள் ஒரு விதி வகுத்தாள். அதை எந்தநாளும் காக்க வேண்டும் என உறுதி கேட்டாள் அதற்கு அவன் சம்மதித்தான். தான் எது செய்தாலும் தடுக்கக்கூடாது. தடுத்தால் விடுதலை பெற்று விலகுவதாக அச்சுறுத்தினாள். விடுதல் அறியா விருப்பினனாகி அவளிடம் வேண்டிய இன்பம் பெற்றான்.

இல்லற வாழ்வு அரும்பி மலர்ந்து ஏழு தளிர்களை ஈன்றது. பிறந்தபோதே அக்குழந்தைகளைத் துளிர்விடாமல் கிள்ளிக் களைந்து விட்டாள். அவற்றிற்கு ஜனன மரணக் கணக்கு ஒரே நாளில் எழுதப்பட்டது. கங்கை நீரில் தூக்கி எறிந்துவிட்டாள். அவன் வாய் திறவா மவுனியாக இருந்துவிட்டான். தடுத்தால் அவளை இழக்க வேண்டும் என்பதால் தாயுரிமைக்கு மதிப்புத் தந்தான். தாய்வடிவில் அவள் பேயாகச் செயல்பட்டாள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவன் பொறுமைக்கும் ஒர் எல்லை ஏற்பட்டது. எட்டாவது குழந்தை பிறந்தது. மூக்கும் முழியுமாக இருந்த அந்தக் குழந்தை அவனை நோக்கி ‘வாழப்பிறந்தவன்’ என்று சொல்வது போல இருந்தது. நீரில் அவனை ஆழ்த்தி மூழ்கடிக்க விரும்பவில்லை.

‘மங்கலம் என்ப மனைமாட்சி’ என்று அரை குறையாகப் படித்தவன்; அவன் ‘அதன் நன்கலம் நன்மக்கட் பேறு’ என்று அடுத்த அடியையும் முழுமையாகக் கற்றான். அவன் மனம் பண்பட்டது. மனைவியின் முயக்கத்தைவிட மழலை மொழியின் மயக்கமே சிறந்தது எனக்கண்டான்.

‘போடாதே போடாதே என் மகனை. பொல்லாத செயல்கள் இனி நீ செய்ய வேண்டாம்’ என்று கூறித் தடுத்தான். அவள் அவன் புதிய பாசத்தைக் கண்டு வெறுக்கவில்லை. முன்னினும் அவனிடம் நேசம் காட்டி னாள்.

“உன்னால் இவனை வளர்க்க முடியாது. இவனை வளர்த்து வாலிபன் ஆக்கிக் கலைகளும் கல்வியும் கற்பித்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன்” என்றாள்.

கலங்கரை விளக்குபோல் கரையில் நின்று அவர்கள் செல்வதைக் கண்டு மனம் கலங்கினான். அவர்கள் மறை யும்வரை பார்த்துக்கொண்டே நின்றான். அவள் குழந்தை யோடு கங்கையாற்றில் மறைந்தாள்.

அவனுக்கு நடந்தவை ஒன்றும் விளங்கவில்லை. அவள் தன்னிடம் விடைபெறு முன்னர்ச் சில வினாக்களை எழுப்பி அவளிடம் விடைபெற்றான். கங்கை இச்செய்திகளைச் சொன்னாள்.

கங்கைக்கு ஏற்பட்ட சாபம்

நான்முகன் அவையில் வான் நதியாகிய கங்கை வண்ணச் சேலை உடுத்திக் கண்ணைக் கவரும் அழகோடு நடந்து சென்றாள். விண்ணைப் பிளக்கும் இடிக்கும் மழைக்கும் கடலுக்கும் கடவுளாகிய வருணன் அவள் அழகில் மயங்கி நின்றான். காற்று வேந்தன் ஆகிய வாயு அவள் சேலையைச் சற்று விலகச் செய்தான். தங்க நிறமுள்ள அவள் அங்க அழகில் வருணன் தன் மனதைப் பறி கொடுத்தான். அவனுக்கு மனத்தில் சலனம் ஏற்பட்டது. “காற்றே நீ ஒரு கவிதை தாராயோ” என்று ஏக்கம் கொண்டான். நான்முகன் எத்திசையிலும் எது நடக்கிறது என்பதை எளிதில் அறிந்து கொண்டான்.

“தெய்வ நிலை அடைந்தும் உம் மனம் பக்குவப்பட வில்லை, ஆசைகள் அலை மோதுகின்றன. அதனால் நீர் பிறவி எடுத்து உறவுகளை வளர்ப்பீர்” என்று சாபம் இட்டான்.

இருவரும் பதவி இழந்து பரிதாப நிலை அடைந்தனர், கங்கை மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு அமரரின் நாட்டை வீட்டு பூலோக யாத்திரைக்குப் பயணம் ஆனாள்.

வழியில் வசுக்கள் எண்மர் சந்தித்தனர்; கள்ளத்தனமாக விழிகளை மோதவிட்டுக் காதல் செய்வதும் களவேயாகும்; பிறர் பொருளைக் கவர்வதும் களவேயாகும். அத்தகைய பள்ளத்தில் விழுந்த வசுக்கள் எண்மரும் சாபத்தால் பிடிபட்டு பூமிக்குத் தள்ளப்பட்டனர்.

பிரபாசன் என்ற வசு ஒருவன் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வசிட்டர் வீட்டில் இருந்த காமதேனுவைத் தன் நண்பர் எழுவருடன் சென்று களவாடினான். ஞானப் பார்வையில் இச் செய்கையை அறிந்த வசிட்டர் எண்மரையும் மானிடர் ஆகுக எனச் சபித்தார். அவர்களுள் பிரபாசன் மட்டும் நெடிய காலம் மண்ணுலகில் உழன்றுபெண் வாடையின்றி வறண்ட வாழ்வு வாழ வேண்டும் என்று கூடுதலாகச் சபிக்கப்பட்டான். மற்றும் எழுவரும் கங்கையிடம் தம்மைப் பிறந்தவுடன் அழித்து விடுமாறு வேண்டினர். வசுக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் எண்மரும் பிறக்கும் புண்ணிய பூமியாகத் தன்னை அவர்களுக்குத் தந்தாள்.

இந்த வரலாற்றை எடுத்துச் சொல்லி மர்ம நாவலில் வரும் சிக்கல்களை விளக்குவது போலத் தம் செயல்களுக்– குக்காரணம் கூறினாள். அழைத்துச் சென்ற மகனைவேத சாத்திரங்களும் வாட்பயிற்சியும் கற்பிக்க முறையே வசிட்டரையும் பரசுராமனையும் அணுகினாள். கல்வியும் ஒழுக்கமும் மிக்க சான்றோர்களால் அவன் வளர்க்கப்பட்டான். ‘தேவ விரதன்’ என்று பெயரிடப்பட்டுப் பெரியோன் ஆக்கப்பட்டான்.

கங்கைக்கரையில் தன் மைந்தனைக் கொண்டு வந்து விட்டுச் சங்கை இல்லாமல் தன் மகனை அவன் கண்டு கொள்ளச் செய்து இருவரையும் இணைத்து விட்டுச் சந்தனுவிடம் விடை பெற்றாள். மகனைப் பெற்ற மகிழ்ச்சியில் மனைவியைப் பிரிந்த துயரத்தை மறந்தான். மகனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சி தந்து அவனால் உலகம் நன்மையுறச் செய்து விட்டுப் பின் விண்ணுலகம் வந்து சேரும்படி சொல்லிப் போயினாள். கூடியவர் பிரிந்து சென்றனர்.

நினைவு அலைகள்

கங்கையின் மகனை இளவரசனாக்கி வைத்துப் பித்தம் பிடித்தவன் போல் சித்தம் கங்கையின் பால் செலுத்திக் கங்கைக்கரையின் சோலைகளிலும் காடுகளிலும் வேட்டை மேல் வேட்கையனாய்த் திரிந்து வந்தான்; ஒழிந்த நேரத்தில் கழிந்த நாட்களை எண்ணி மனம் அழுங்கியவனாய்க் கிடந்தான். அவள் உருவெளித் தோற்றத்தில் வாழ்ந்து கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவள் தெய்வப் பெண் என அறிந்தும் அவனால் மறக்க இயலவில்லை. பழைய வாசனை அவனைப் பிடித்துத் தின்றது. விரகதாபம் அவனை நரக வேதனையில் சுழற்றியது.

அங்கே பளிங்குக்கற்கள் இருந்திருந்தால் பாவைக்கு ஒரு கங்கை மண்டபம் எழுப்பி இருப்பான். அக்கல்லின் நிழலில் அவள் முகத்தின் முறுவலைப் பார்த்திருப்பான். கவிஞனாக இருந்திருந்தால் அவள் பேரில் ஒரு காதற் கோவை தொடுத்து இருப்பான். கல்லைச் செதுக்கும் சிற்பியாக இருந்திருந்தால் அங்கே எழில் மிக்க பொற் சிலையை வடித்திருப்பான். ஒவியனாக இருந்திருந்தால் தாடி வளர்த்துக் கொண்டு குழிவிழுந்த கண்களோடு சித்திரம் வரைந்து சீரழிந்து இருப்பான்.

சோலைக் குயில்கள் எல்லாம் அவள் குரலைக் கூவிப் பாடிக் கொண்டிருந்தன. தோகை மயில்கள் எல்லாம் அவள் கோல அழகை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. முல்லைக் கொடிகள் எல்லாம் அவள் வெள்ளைப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. கொடிகள் எல்லாம் அவள் தன்னைத் தழுவ விழைந்த விழைவுகளை நினைப்பூட்டிக் கொண்டிருந்தன.

பரிமளகந்தியைச் சந்தித்தல்

அந்த நிலையில் நீலவானத்து நிலவு ஒளியில் யமுனை நதிக்கரையில் யவ்வனம் மிக்க பேரழகியைக் கண்டான். படகு ஓட்டிக் கொண்டு வந்து துடுப்பை எடுத்துச்செலுத் விட்டுக் கரை நோக்கி நடந்தாள்; அவள் மீன்கண் அவள் மீனவப் பெண் என்ற நினைப்பை எழுப்பியது; அருகில் வந்த அவளை மனம் உருகி “என்னைக் கரை சேர்க்கமாட்டாயா?” என்று வினவுவது போலப் பார்த்தான்.

இருவருக்கும் வயது இடைவெளி தடை செய்தது.

வயது மிக்க ஒருவன் இளநங்கையை விரும்பினான். சாதியில் அவன் அரசன்; இவள் மீனவள். அரசன் என்ப– தால் இந்தத்தடைகளை மீற முடியும் என்று நினைத்தான். நாணம் மிக்க அவள் நயமாகத் தந்தையிடம் தன் வாழ்வை முடிவு செய்ய ஒப்புவித்தாள்.

அரசன் தேர் ஒட்டியை அனுப்பித் திருமணப் பேச்சை எடுத்தான். “அந்தப்புரத்துச் சிறைக்கைதி அல்ல என் மகள்; அவள் ஆட்சியில் உரிமை பெற வேண்டும். அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தர்கள் சிம்மாசனம் ஏற வேண்டும்” என்றான்; அதற்குத்தடை மூத்தவன் இருப்பதைச் சுட்டிக்காட்டினர். பேச்சு முறிந்தது; மறுபடியும் அதைப் பற்றி மூச்சு விட முடியாமல் போய் விட்டது.

“அவள் பெயர் என்ன?”

“பரிமள கந்தி”

“குப்பை மேட்டுக்கு மேனகை நகர் என்றா பெயர்"?

“நத்தை வயிற்றில் முத்து பிறக்கும்”

“குலத் தொழில்"?

“படகு ஒட்டுதல்?”

“இப்பெயர் வரக் காரணம்?”

“முல்லை மணம் வீசும் மேனியாள் அவள்; அதனால் அவளுக்குப் பரிமளகந்தி என்று பெயர்; யோசனகத்தி என்றும் அழைப்பர்”

“பழமொழியை மாற்ற வேண்டியதுதான்”

“என்ன என்று?”

“நத்தை வயிற்றில் முத்து மணக்கும் என்று மாற்ற வேண்டும்”.

விசாரணையில் வெளி வந்த செய்திகள் இவை.

வெளியே சொன்னால் வெட்கம்; அடக்கி வைத்தால் துக்கம்; அவள் நினைவு வந்தால் ஒரே மயக்கம். பாவம் என்ன செய்வான் சந்தனு நாளும் மெலிந்து நலிந்து வரும் தந்தையின் போக்கைக் கண்டு அவரைக் காக்கக் கருதினான். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தைக்குப் பெண் பார்த்தல் என்னும் செயல்” என்பதற்கு இலக்கணம் ஆகும் வகையில் யமுனைக் கரைக்குச் சென்றான்; படகோட்டியைப் பார்த்தான்; பேசினான்.

“தந்தை போனான்; தனயன் வந்தான்” என்று தனக்குள் பேசிக் கொண்டான் படகோட்டி.

“என் அன்னையைக் காண வந்தேன்” என்றான்.

பரிமள கந்தி அவனுக்குச் சிற்றன்னை ஆனாள்.

“என் தம்பியருக்குத்தான் ஆட்சி உரிமை” என்றான்

‘நீ மணக்கும் மனைவி சும்மா இருப்பானா?”

“அந்தக்கவலை உமக்கு வேண்டாம்; இனி எந்தப் பெண்ணும் எனக்குச் சகோதரியே” என்றான்.

“உன் மனைவி?”

“அப்படி ஒருத்தி வரமாட்டாள்;

நிரந்தர பிரம்மச்சரியாவேன்; இது உறுதி” என்றான்.

“துணிந்துதான் சொல்கிறாயா?”

“தீர யோசித்துத்தான் சொல்கிறேன்”.

இந்த அரிய விரதம் எடுத்தமைகண்டு விண்ணவர் வியந்தனர்; மண்ணவர் அயர்ந்தனர்; ‘யீடுமன்’ என்று இவனைப்பாராட்டி அரிய சாதனைக்கு உரியவன் என்ற பொருளில் இப்பெயரை வைத்தனர். புலன் அடக்கம் ஒரு விரதமே தவிர அதுவே முடிவு அன்று ஒழுக்கத்திற்கு ஒரு துணையே அன்றி அதுவே ஒழுக்கம் ஆகாது. இன்ப சுகம் அனைத்தையும் இழக்கத் துணிந்தான். எனினும் இஃது ஓர் அரிய சூள் உரையே. யாரும் இவ்வகையில் உறுதி படைத்தவர் ஆகார்.

தேவ விர தன் இத்தகைய பயங்கரமான விரதம் மேற் கொண்டது சந்தனுவை வியப்பில் ஆழ்த்தியது; அதிர்ச்சியையும் தந்தது. பட்டத்துக்கு உரிய பாராளும் வேந்தன் மகன் தந்தைக்காகத் தன் வாழ்க்கை இன்பத்தையே துறந்த தூய்மையும் தியாகமும் அவனை மேலோன் ஆக்கின.

யயாதிமகன் இளமையை ஈந்து தந்தைக்கு வாழ்வு தந்தான். “இளமையோடிருந்து இன்பத்தைத்துறந்தாயே யயாதி மகன் உனக்கு நிகர் ஆக மாட்டான்” என்றான் அவன் தந்தை சந்தனு.

“காலனும் உன்னைக் கண்டு சாலவும் அஞ்சுவான்; நீடித்த ஆயுள் பெறுவாய், அவனும் உன் அனுமதி பெற்றே உனக்கு ஆயுள் முடிப்பான்” என்று அவனை வாழ்த்திப் பாராட்டினான்.

சந்தனுவின் சந்ததியர்

பரிமள கந்தியைச் சந்தனு பாணிக்கிரகணம் செய்து கொண்டான்; கங்கையிலும் இவள் இளையவள் அதனால் இவள் இன்பம் இருமடங்கு ஆகியது. மீனவர் குலத்தினள் ஆயினும் அரசிக்கு வேண்டிய அறிவும் ஆசாரமும் அவளிடம் மிகுந்து இருந்தன. சத்தியவதி என்னும் புதுப்பெயர் அவளுக்குப் பெருமை சேர்த்தது.

சந்ததிவேண்டியே சந்தனு அவளை மணந்தான்; சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரண்டு மைந்தர்களை அவள் பெற்றெடுத்தாள். வீடுமனின் பார்வையில் அவர்கள் கலைகளைப் பயின்ற காளையர் ஆயினர்.

சந்தனு ஆயுள் முடிந்தது; இயற்கை அவனுக்கு விடுதலை அளித்தது. சாபம் தீர்ந்து பிறவி முடிந்து விண்ணவன் ஆயினான்; அவன் சந்ததி ஆட்சிக்கு உரிமை பெற்றது.

சித்திராங்கதன் கந்தருவனைப்போல அழகு மிக்கவன்; அதனால் யவ்வன அழகியர் அவனைக் காதலித்தனர். கந்தருவன் ஒருவனுக்கும் இப்பெயர் இருந்தது; அவனுக்குப் போட்டியாக இவன் காரிகையரைக் கவர்ந்தான். இவனை ஒழித்தால்தான் தனக்கு நன்மை என்று அக்கந்தருவன் இவனைத் தனி வழியில் இரவு நேரத்தில் தீர்த்துவிட்டான். வீடுமனுக்கு இவனை யார் கொன்றது என்பது தெரியாது: “வாலிபக் கோளாறு; எங்கேயோ மோதிக் கொண்டான்” என்பது மட்டும் தெரிந்தது.

அவன் தம்பி விசித்திர வீரியன்; குடிக்கு ஒரே மகன்; அவனை மணி முடி சூட்டிப் பார் ஆளும் பார்த்திபன் ஆக்கினான். சத்தியவதி அவனுக்கு மணம் முடித்து மகிழ்வு காண விரும்பினாள். வீடுமன் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

காசி நகரத்து அரசனின் கன்னியர் மூவர்க்கு மண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சுயம்வரம் என்று பேசி அரசர்க்குச் செய்தி செப்பினர். மலரை மொய்க்கும் வண்டு என மன்னன் சிறுவர்கள் வந்து கூடினர். அம் மூவரின் பெயர்களும் அகரத்தில் தொடங்கின. அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்பவை அவர்களின் பெயர்கள்.

வழக்கப்படி மாலை ஏந்திய மங்கையர் மூவரும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டனர். பாங்கியரும் செவிலியரும் பக்கத்தில் இருந்து பார்த்திபரை அறிமுகம் செய்தனர்.

வீடுமனைக்கண்டதும் அவர்கள் சற்று ஒதுங்கினர். முற்றிய முருங்கை கறிக்கு உதவாது என்று அம்முதிர்க் காளையை வெறுத்தனர். அவன் அதனை மான இழப்பாகக் கருதினான். ஒருத்திக்கு மூவரைத் தம்பிக்குக் கட்டி வைப்பது என்ற முடிவோடு அம் மூவரையும் தன் தேரில் ஏறச்சொல்லி அத்தினாபுரி நோக்கிச் சென்றான். ஒருத்தியோடு போகாமல் மூவரோடு போனது மற்றைய மன்னர் மைந்தர்களுக்கு எரிச்சல் ஊட்டியது.

வீடுமனை மடக்கிப் போர் தொடுத்தனர். அவர்கள் குறைக்காற்று முன் இலவம் பஞ்சு ஆயினர். சாலுவ மன்னன் ஆகிய பிரமதத்தன் என்பவன் மட்டும் தொடர்ந்து போர் இட்டான். விற்போரில் முற்றிய கலைஞனான வீடுமன் அவனை முறியடித்து முதுகு காட்டச்செய்தான், சாலுவனின் பேரழகும் வீரமும் அம்பிகையைக் கவர்ந்தன. அவள் அவனை மணம் செய்து கொள்ள விரும்பினாள்.

அவள் நெஞ்சில் மற்றொருவன் குடி கொண்டிருந் ததை அறிந்த வீடுமன் அவளைச் சிறைபடுத்த விரும்ப வில்லை. பெண்ணைத் தொடாதவன் ஆயினும் அவள் உரிமையை மதித்தான். அவளுக்கு விடுதலை தந்தான்.

கூண்டில் சிறைப்பட்ட புறா விண்ணில் பறந்தது. சிபிச் சக்கரவர்த்தி அடைக்கலம் தர மறுத்துவிட்டான்; “வீடுமனிடம் சிறைப்பட்ட நீ அவனையே மண்க்க வேண்டும்” என்று சாலுவன் வீர மரபு பற்றிப் பேசினான்; மறுபடியும் அத்தினாபுரம் நாடி வந்தாள். தன்னை வீடுமனை மணந்து கொள்ளும்படி வினயமாக வேண்டினாள். அவன் தன் விரதத்தைப் பொய்ப்பிக்க முடியாதே என்று அவளிடம் வாதாடிப் பார்த்தான். அவன் மறுக்க அவனை எப்படியும் மணப்பது என்று அவள் மன உறுதி கொண்டாள்.

வில்வித்தை பயில்வித்த ஆசான் பரசுராமனிடம் சென்று அவள் முறையிட்டாள். குறை கேட்ட அவன் தன் மாணவன் ஆயிற்றே என்று அவனிடம் வந்து மன்றாடினான். ‘பெண்ணைத் தொடாத வாழ்வு நன்மை பெறாது’ என்று எடுத்துக்காட்டினான். சொற்கள் மாறின; அவை தோல்வி பெற்றன; அச்சுறுத்திப் பார்த்தான்; அது விற் போரில் சென்றது; இருவரும் வில் வித்தையில் நிகரானவர்தாம்; எனினும் வீடுமன் இளையவன்; கிழப்புலி இளஞ் சிங்கத்தின் முன் சீற்றம் அடங்கியது. மாற்றம் வேறு ஒன்றும் கூற இயலாது அவன் தன் தவத்தில் ஆழ்ந்தான்.

மனிதர் யாரும் உதவவில்லை. தெய்வங்களை வழி பட்டாள். வீடுமனைக் கொல்லும் ஆற்றல் தனக்கு வேண்டும் என்று சிவனை வழிபட்டாள். “அடுத்த பிறவியில் நீ இவனை வெல்வாய்” எனறு வரம் அருளப்பட்டது; சிகண்டி என அவள் பெயர் பெற்றாள். வீடு மனைக் கொல்ல அவள் வஞ்சினம் கொண்டாள்.

பிறப்பால் பெண் ஆயினும் செய்கையால் ஆணாக நடந்து தக்க காலம் வரும் வரை அவனைக் கொல்வதற்காகக் காத்து இருந்தாள். போர்க்களத்தில் அருச்சுனனின் தேரில் முன் அமர்ந்து வீடுமனைத் தாக்கினாள்.

2. பாண்டவர் துரியோதனாதியர் பிறப்பு

ஒரே மகன் விசித்திர வீரியனும் அற்ப ஆயுளில் தன் கதையை முடித்துக் கொண்டான். சந்தனுவின் இளைய மனைவி பரிமளகந்தியும் ஒரு விதவை; அவளோடு வீட்டில் மூன்று விதவைகள் அறுத்துவிட்டு அமங்கலமான வாழ்வு நடத்தினர்.

விதவைத்தனம் என்பது பருவ மாறுதல் அல்ல; அது கணவனை இழந்த அவலநிலை; விதவைகளும் மறுமணத்– திற்கு உரியர் என்ற கருத்து இப்பொழுது உருவாகி வருகிறது, இளம் விதவைகள் தாய்மை அடையாவிட்டால் வமிச விருத்தி இல்லாமல் போய்விடும். ஆட்சிக்கு ஒரு ஆண்மகன் இல்லை என்று ஆகிவிடும்; அந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

சத்தியவதி ஒரு அசாதாரண அறிவாளி; வீடுமனைக் கொண்டு ஏன் ஒரு மகனைத் தன் மருகியர் பெற்றுத்தரக் கூடாது என்று தீவிரமாகச் சிந்தித்தாள்; வீடுமனை அழைத்துப் பேசினாள்.

“அவசரப்பட்டு நீ சூள் உரைத்தாய்; அதனால் மணத்தை மறுத்தாய்”.

“அவசியத்துக்காகத் தானே எடுத்தேன்”.

“இப்பொழுது குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதே”.

“அதற்காக இந்த வயதில் நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா?”

“காலம் கடக்கவில்லை”

“ஆசைகளை அடிவேருடன் களைந்து வாழ்ந்து வரு கிறேன். கொள்கை என் உயிர்; அது என் மூச்சு” என்றான்.

“நீ எனக்கு மூத்தமகன்”

“மறுக்கவில்லை”

“நீ ஒருத்தியோடு உறவு கொள்; மகனை அளித்து எங்களை மகிழவை”

“இயலாது; அவர்கள் என் சகோதரிகள்; இந்த மன நிலையை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது”.

“இப்பொழுது என்ன செய்யலாம்?"

“தவ முனிவர் தயவை நாடலாம். அவர்கள் கடமையை முடித்துக் கண்ணியத்தோடு போய்விடுவார்கள்” என்றான் வீடுமன்.

“இதற்கு முன் எப்பொழுதாவது இவ்வாறு நடந்துள்ளதா?”

“இராமர் காலத்தில் பரசுராமன் அரச குலத்தினரை வேர் அறுத்தான்; ஆண்கள் குறைந்ததால் சந்ததிக்குப் பஞ்சம் ஏற்பட்டது; அப்பொழுது தவ முனிவர்கள் தாம் இந்தத் தரித்திரத்தைப் போக்கினார்கள்”.

“வியாசன் உனக்குத் தெரியுமா?’ என்று அவள் கேட்டாள்.

“பராசர முனிவரின் மகன்”

“அவன் தாய் யார் தெரியுமா?”

“தாயின் பெயர் சொல்வதில்லையே”

“பரிமளகந்தி; நான் தான் அவனுக்குத் தாய்” என்றாள்.

“அதிர்ச்சியாய் இருக்கிறது’ என்றான் அவன்.

“படகு ஒட்டி வந்தேன், படகு அவனுக்குத் தெரிய வில்லை; என் அழகுதான் தெரிந்தது. அப்பொழுது என் பெயர் மச்ச கந்தி, பராசர முனிவன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று என்னிடம் கூறி என்னை உதவுமாறு வேண்டினான். அவன் நாட்டம் என் மீது சென்றது. என்னோடு கூட்டம் வேண்டினான்; அவனைக் கழிக்க இயலவில்லை”.

“மீனவர் மகளையா விரும்பினான்?”

“முனிவர்கள் பேதங்கள் பார்ப்பதில்லை; அதுமட்டும் அல்ல; கன்னிப் பெண்களைத் தொடும்போது யாரையும் சாதிகள் தடுப்பது இல்லை.”

“மீன் நாற்றம்?”

“அதை மாற்றி எனக்கு மலர்நாற்றம் தந்தான்.”

“மச்ச கந்தியாக இருந்த நான் பரிமளகந்தியானேன், பரவிய கமழ் மணம் பெற்றேன். ஆதலின் யோசன கந்தி எனவும் அழைக்கப்பட்டேன்.”

“வியாசன் உன் மகனா? வியக்கும் செய்தியாக உள்ளது.”

“மூத்தவன் அவன் உனச்கு அவனை அழைத்தால் வருவான்.”

“அவனையே அழைத்து இந்தப் பணியை முடிக்கலாமே”

“உண்மைதான்; இரண்டு வகையில் பொருந்தும். சாத்திரப்படி அவன் தவமுனி, கோத்திரப்படி என் மூத்த மகன். குரு குலத்துக்குத் தக்க வாரிசு கிடைக்கும்” என் றாள் சத்தியவதி.

“அதுவே தக்கது” என்று கூறி வீடுமன், தன் மனக் கருத்தை அறிவித்தான்.

வியாசனுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தன் மருகியரை அழைத்து அருகில் உட்காரவைத்துப் படைப்பு இலக்கியம் பற்றிப் பாடம் சொல்லி அவர்களை மனங் கொள்ளச் செய்தாள்.

பாரம்பரியக் கற்பில் கட்டுண்ட மரபினை உடைய அவர்கள் இதை ஏற்க ஒருப்படவில்லை; எனினும் அரசியல் காரணம் இதில் அடங்கி இருப்பதால் அவர்களால் அதற்குத் தடை செய்யமுடியவில்லை. தன் உடலைத் தர இசைந்தார்கள்; உள்ளம் அதற்கு இசையவில்லை.

கட்டில்கால்களுக்குச் சுமை ஏறியது; வியாசன் அதில் அமர்ந்து கட்டுரை எழுதினான்; எனினும் தொட்டில் குழந்தைக்கு ஒரு பழுது ஏற்பட்டது. அவள் அம் முனிவர் கூடியபோது வெட்கத்தால் கண்களை முடிக்கொண்டாள். அதனால் பார்வை அற்றவனே பிறப்பான் என்று வியாசன் சொல்லிச் சென்றான். அம்பிகை நிலை இது ஆயிற்று.

அம்பாலிகை அடுத்த தேர்வு. அவளும் இதில் சோர்வு காட்டினாள், வெட்கத்தால் உடல் வியர்த்து வெளுத்து விட்டாள்.

அதனால் வெள்ளை நிறத்துச் சோகையன் அவளுக்குப் பிறப்பான் என்று சொல்லிப்போனான்.

இருமுறையும் தவறுகள் நிகழ்ந்துவிட்டன. நாட்டம் இல்லாத கூட்டங்கள் முழு வெற்றியைத்தரவில்லை.

அம்பிகைக்குத் திருதராட்டிரன் பிறந்தான்; அம் பாலிகைக்குப் பாண்டு பிறந்தான். ஒருவன் பார்வை அற்றவன்; மற்றொருவன் சிவப்பு அணுக்கள் குறைந்து வெளுத்துக் காணப்பட்டான்.

மறுபடியும் வியாசன் அழைக்கப்பட்டான். இம்முறை அம்பாலிகை மறுப்புச் சொல்லவில்லை. பணிப்பெண் ஒருத்தியைத் துணையாக அழைத்துச் சென்றாள். வேண்டுமென்றே பயண வண்டியைத் தவறவிட்டாள். அம்பாலிகை மனம் மாறினாள். கட்டிலில் பணிப்பெண்ணைக் கிடத்திவிட்டுத் தாயாவதிலிருந்து தான் தப்பித்துக் கொண்டாள். பணிப்பெண் தாசிப்பெண்; அவள் கூசி ஒதுங்கவில்லை; இதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை; தொழில் அறிந்தவள். வியாசனுக்கு விருந்து படைத்தாள்; காமநூலின் எழுத்துக்களை எண்ணிப் படித்துக் களிப்பு என்பதன் கரையை வியாசன் கண்டான். மனமுவந்து அறிஞன் ஒருவனை அன்று அவள் அனுமதித்தாள்.

அறிவுடைய மகன் பிறப்பான் என்று வியாசன் சொல்லிப் போனான்.

அறிவும் ஒழுக்கமும் மிக்க விதுரன் அவளுக்கு நன் மகனாகப் பிறந்தான்; எனினும் மற்றவர்களைப் போல அந்தஸ்து அவனுக்குக் கிடைக்கவில்லை; தாசி மகன் என்ற ஏசுதலுக்கு அடிக்கடி இரையாக வேண்டி இருந்தது.

மூவர் குரு குலத்து வாரிசுகள் பிறந்ததால் வீடுமனும் பெரு மகிழ்வு பெற்றான். மூவரையும் சரி சமமான நிலையில் மதித்து வளர்த்து அதில் மகிழ்வு கண்டான்.

அம்பிகையின் மகன் திருதராட்டிரன் மூத்தவன்; ஆகையால் மணி அவனை முடி சூட்டிப் பாராளும் மன்னன் ஆக்கினான். அடுத்து அம்பாலிகை மகன் பாண்டுவைச் சேனாதிபதியாக்கினான்; விதுரனை அமைச்சனாக இருக்கச் செய்தான்.

திருதராட்டிரன் திருமணம்

காந்தார நாட்டுக் கன்னியை மணம் பேச வீடுமன் தக்கவரை அனுப்பி வைத்தான். மதிகுலத்தில் தோன்றிய மன்னன் மகனை விழியில்லாதவன் என்று சிலர் ஏசிப் பேசினர். காந்தாரி அதற்காகக் கூசி மறுப்புச் சொல்ல வில்லை; விதி அளித்தது என்று உள்ளம் மகிழ்ந்தாள்; அருந்ததி போன்ற கற்புடைய அவள் அக்குறையைப் போக்கத் தக்க மருந்தாகத் தன் பார்வையை மறைத்துக் கொண்டாள்.

இமைத்த கண்கள் கொண்டு இனி நோக்குவது இல்லை என்று துணிப்பட்டை ஒன்று நெற்றியில் கட்டி மறைத்துக் கொண்டாள். செவிப்புலன் மட்டும் இருவருக்கும் பொதுவாக இயங்கியது. காணுதல் தவிர மற்றைய புலன்கள் உறவாடின. அவன் கண்ட இருள் அதனைத் தானும் பங்கிட்டுக் கொண்டாள்.

பாண்டுவின் மணம்

சூரன் என்ற பெயருடைய யதுகுல அரசனின் மகள் குந்தி ஆவாள். பிரதை என்பது அவள் பெற்றோர் வைத்த பெயராகும். சூரனின் அத்தை மகனான குந்திபோசன் என்பவனுக்கு மகவு இல்லை. அதனால் இவளை அவன் வளர்த்துக்கொள்ள அனுமதித்தான். குந்தி என்ற பெயரைப் பெற்றாள். அவளைப் பாண்டுவிற்கு மணம்பேசி அவனுக்கு மனைவியாக்கினர். அவள் கன்னிப் பருவத்தில் துர்வாச முனிவனை உபசரித்து அவனால் பாராட்டப் பெற்று மந்திரங்கள் உபதேசிக்கப்பெற்றாள்; அதைச் சொல்லி யாரை அழைத்தாலும் அவன் அவளைக் கூடி மகவு நல்குவான் என்று சொல்லிவிட்டுப் போனான். மந்திரம் கற்ற அவள் அவசரப்பட்டாள்; முனிவன் மறைவதற்கு முன் அந்த மந்திரத்தைக் கன்னிமாடத்தில் சொல்லக் கதிரவன் அவள் நினைத்தபடி வந்து சேர்ந்தான். அவளுக்கு அது அதிர்ச்சியைத்தந்தது. கனல் போல் எரித்து அழித்துவிடுவான் என்று அஞ்சி அவனுக்கு அவள் தன் கன்னிமையைத் தந்தாள். கன்னனைப் பரிசாகப் பெற்றாள்.

கர்ணன் என்பது வடமொழிப்பெயர். அதனைத் தமிழில் கன்னன் என்றே வில்லிபுத்துாரார் வழங்குவர்; அந்தப்பழியை மறைக்க அவனைப் பெட்டி ஒன்றில் வைத்துக் கங்கையில் விட்டு “எங்குச்சென்றாலும் வாழ்க” என்று வாழ்த்தி அனுப்பினாள்; மணமாவதற்கு முன் மகனைப் பெற்ற அவள் அதை மறைத்து வைத்துவிட்டுப் பாண்டுவிற்குக் கழுத்தை நீட்டினாள்.

குந்திக்குச் சுயம்வரம் வைத்தே மணமகனை உறுதி செய்தனர். குமுதம் சந்திரனைக்கண்டு மலரும்; அதுபோலக் குந்தி பாண்டுவையே தேர்ந்து எடுத்து மலர்மாலை சூட்டினாள். தவறுகள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாகவில்லை என்பதை அவள் வாழ்க்கை காட்டியது.

மற்றும் மத்திர நாட்டு அரசன் அவனும் தன் மகள் மாத்திரியைப் பாண்டுவிற்கு அடுத்து மணம் செய்து கொடுத்தான்; புதுமணத் தம்பதியராக மாத்திரியோடு பாண்டு சோலைகுச் சென்று களித்து விளையாட விரும்பினான்.

அங்கு வேட்டையாடி வன விலங்குகளை மாய்த்து மகிழ்ந்தான்.

அங்கு ஒரு கலை மானும் அதன் பிணையும் மகிழ்ந்து இணைந்து இருந்தன; அவன் அம்பு பட்டுக் கலைமான் துடித்து அவன் முன் விழுந்தது, அது ஒரு முனிவன் வடிவம் கொண்டது. அவன் பாண்டுவின் கண்முன் இறந்தான் பெண் மானும் மானுட வடிவம் பெற்றுப் பின் உயிர் நீத்தது. அம்முனிவன் பெயர் கிந்தமன் என்பதாகும்.

“என்போல் இன்பத்திடை நீயும் இறப்பாயாக” என்று அம்முனிவன் சாபமிட்டான். அதனால் பாண்டு சிற்றின்ப வாழ்வைத் துறந்து தன் துணைவியருடன் தவம் செய்யக் கருதிக் காட்டுவாசத்தை ஏற்றுக் கொண்டான்.

மக்கட் செல்வம்

வியாசனை வணங்கி ஆசி பெற்றுத் திருதராட்டிரன் மனைவி காந்தாரி நூறு மகவுகள் பெறக்கூடிய கருப்பம் அடைந்தாள். இச் செய்தியைப் பாண்டு கேள்விப்பட்டான். தனக்கு மகவு இல்லையே என்ற ஏக்கம் அவனை வாட்டியது சாபத்தால் அவன் தன் மனைவியோடு கூட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது; என்ன செய்வான்? பாவம்! சுவர் இருந்தும் சித்திரம் வரைய முடியவில்லை.

மிகவும் முற்போக்குச் சிந்தனையுடையவனாய்த் தன் மனைவியிடம் துணிந்து ‘வேறு ஒருவர் துணை கொண்டு தாய்மை அடைக’ எனக் கூறினான். பழமை அவனை விலங்கிடவில்லை. தேவை அவனுக்குப் புதிய சிந்தனையைத் தோற்றுவித்தது. மழலை பேசும் குழந்தை பெறாத வாழ்வு ஒரு வாழ்வாகாது; அதனைப் பேரிழப்பாகக் கருதினான்.

மற்றும் குழந்தைப் பேற்றின் அவசியத்தைத் தொடர்ந்து கூறினான்; உண்மை பேசுதல், தானம் செய்தல், வேள்வி இயற்றல் இவற்றை நாளும் செய்தாலும் குழந்தை முகம் பார்த்து அடையும் இன்பத்துக்கு இவை நிகர் ஆகா.

தென்புலத்தார், தெய்வம், சுற்றத்தார். விருந்து இவர்களை ஒம்பும் இல்லற வாழ்வுக்கு மகப்பேறு அடிப் படையாகும். குழந்தைதான் அன்பின் வளர்ச்சிக்கு ஆரம்பப்பள்ளியாகும்.

குறு குறு நடந்தும்,சிறுகை நீட்டியும், இட்டும் தொட் டும் கல்வியும் துழந்தும், உண்ணும் சோற்றை மெய்பட விதிர்த்தும், சிறு நகைசெய்து விளையாடும் சிறுவர் இல்லாத வாழ்வு பெருமை பெறுவதில்லை என்றான்.

“யான் செய்த தீவினையால் அந்த பாக்கியத்தை இழந்து விட்டேன். நீ மனம் வைத்தால் அந்தக் குறை எனக்குத் தீரும்” என்றான்.

“துறக்க பூமிக்கச் சென்ற பிறகு இங்கு இருந்து எனக்குப் பிதிர்க்கடன் செய்ய மகன் ஒருவனைப் பெற்றுத்தர வேண்டுகிறேன். இல்வாழ்பவர்க்குத் தாய்மையால் பெண்கள் இன்பம் சேர்த்துத் தரமுடியும்” என்று அவனுக்குத் தோன்றிய அறநெறிகளைச் சொல்லிப் பிறன் ஒருவனைக் கொண்டு மகவு பெறுக என்றான்.

கணவன் மொழிகேட்ட பொற்பாவை போன்ற குந்தி அனுமதி அளித்தாலும் அதை ஏற்க அவள் மதி இடம் தர வில்லை; மறுத்தாள். உயிர் இறுவது போன்று வெட்கம் அடைந்தாள்: சொல்லத்தகாத சொற்களைக் கூறுவது தகாது. பழிக்கு ஆளாக வேண்டிவரும். அது மட்டும் அல்ல; கடலைச்சேர வேண்டிய நதி குட்டையில் பாய்வது தகுமா? இல்வாழ்பவள் பிறர் மேல் மனம் செல்வது எவ்வாறு ஏற்க முடியும்” என்று கூறி அவனோடுவாதிட்டாள்; மீண்டும் பழைய தவறைச் செய்ய அவள் விரும்பவில்லை.

“இதில் எந்தத் தவறும் இல்லை” என்றான்.

வியாசன் மூலம் திருதராட்டிரனும் விதுரனும் தானும் பிறந்ததை முன் உதாரணமாகக் காட்டினான். “இப்படி எத்தனையோ வரலாறுகள் உள்ளன. ஆபத்துக்குப்பாவம் இல்லை என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? நான் உரிமை தரும்போது அதனை எடுத்துக்கொள்வதில் சிறுமை இல்லை” என்றான். அவன் மன உறுதியை மதித்தாள்.

“தாய்மை அடைவது பெண்ணின் உரிமை; அதற்குத் தான் தடையாக இருப்பது பொருந்தாது” என்றான். இது ஒரு புதுமைக் கருத்தாக இருந்தது.

வாழ்க்கை என்பது நிகழ் காலத்தை நம்பி மட்டும் அமைவது அன்று; நமக்குப்பின்னால் நிலைத்து நிற்கும் செயல்களைச் செய்வதுதான் அறிவுடைமை. நம்பெயரைச் சொல்வதற்கு நன்மக்கள் வேண்டாமா? கற்பு என்பது கணவன் மனைவி உறவு பற்றியது, பிள்ளைப் பேறு என்பது படைப்புத் திட்டத்தின் ஆணை” என்றான். கற்பியல் வேறு; பிறப்பியல் வேறு என்று அத்தியாயங் களைப் பிரித்துக் காட்டினான்.

“பாண்டு என்பவன் இருந்தான்; அவனுக்கு ஒருத்திக்கு இருவர் மனைவியர் இருந்தனர். இருந்தும் என்ன பயன்! பெயர் சொல்வதற்குக் கூடப் பிள்ளைகள் இல்லையே! சிந்தித்துப்பார்”.

“வாழ்க்கை என்பது நீர் ஒட்டம் போன்றது; நம் மோடு முடிவது அன்று; அதைத்தடைப்படுத்த நாம் யார்?”

“மேலும் நாம் சாதாரண குடி மக்கள் அல்ல; ஆட்சி செய்யும் மன்னர் குலத்தில் வந்தவர்கள், சந்ததி என்பது அடிப்படைத் தேவை”.

“இந்த அத்தினாபுரிக்கு ஆட்சி செய்ய நமக்கு உரிமை உண்டு; எனக்குப்பின் அதை ஏற்று நடத்த வாரிசுகள் வேண்டாமா? ஒழுக்க வரையறை தனி மனிதனின் கட்டுப் பாட்டுக்கு உதவுவது: சமூக நலனுக்காக அதைச் சிறிது மாற்றிக் கொள்ளும் உரிமையும் அறிவும் தேவைப் படுகின்றன. பின் அதுவும் நியாயம்தான் என்று உலகம் பேசும். பயனைப் பொறுத்துத்தான் நன்மை தீமைகள் முடிவு செய்யப்படும்” என்று தொடர்ந்து அறிவுரை கூறினான்.

அதற்குப்பிறகு அவள் இசைவுதந்தாள்; தான் துர்வாச முனிவனிடம் மந்திரம் பெற்றுள்ள வரலாற்றை விளம்பினாள். கன்னனின் பிறப்பை மட்டும் சொல்லவில்லை. அதனால் அவன் மனம் வருந்தும் என்பதால் அச் செய்தியை மறைத்து விட்டாள். அறிவுள்ளவள்; அதனால் தேவையானது மட்டும் செப்பினாள்.

அவள் மந்திரம் பெற்றுள்ள இச்செய்தி கேட்டு அவன் மகிழ்ச்சி பன் மடங்கு ஆகியது. அவனிடம் அனுமதி பெற்று அவள் தருமத்தின் தலைவனாகிய யமனை நினைத்து மந்திரம் சொன்னாள். அறக்கடவுள் ஆகிய எமதருமன் அவளுக்கு அருள் செய்தான்; அதனால் தருமன் பிறந்தான்; இவனே மூத்த மகன் எனக் கருதப் பட்டான். இச்செய்தி எங்கும் பரவியது; குந்தி தனக்கு முந்தி மகனைப் பெற்றுவிட்டாள் என்ற செய்தி காந்தாரிக்குப் பொறாமையைத் தாண்டியது; நூறு மகவு பிறக்க இருந்த கரு தன்னுடையது; இரண்டாண்டுகள் ஆகியும் உருப்பட்டு வெளிவர வில்லையே என்ற வேதனையால் அம்மிக்குழவி கொண்டு வயிற்றில் மோதிக் கொண்டாள். அவசரப்பட்டுச் செயல்பட்டது தவறாக முடிந்தது. கரு நிலை பெயர்ந்தது.

பையோடு கழன்று விழுந்த கரு பார்மிசை குருதி பெருக விழுந்தது; இதை அறிந்த வியாசன் ஓடோடி வந்தான். குழம்பிக் கலைந்த கருச்சிதைவை உருப்படுத்தித் தாழிகள் நூறு கொண்டு வந்து அவற்றில் தனித்தனியே நிரப்பி எஞ்சியவற்றை மற்றும் ஒரு பானையில் இட்டான். அத்தனித்தாழி பெண்மகள் பிறக்க என்று வைத்தான்.

“தாழியில் இட்ட தசைகள் உருப்பெறும் வரை அவற்றைக் கைபடாது காக்க வேண்டும்’ என்ற காந்தாரி யிடம் சொல்லிவிட்டுச் சென்றான். முட்டையில் இருந்து வெளிப்படும் பாம்பு போல அவை வெளிவரும் வரை காந்தாரி காவல் காத்தாள்.

தருமன் பிறந்த சில ஆண்டுகளில் மற்றொரு மகவு பெறப் பாண்டு விரும்பினான்; குந்தி காற்றின் வேந்தனாகிய வாயுபகவானை மனத்தில் நினைத்து மந்திரம் கூறினாள்; அவன் வருகையால் மற்றொரு மகன் பிறந்தான்; அவனுக்கு வீமன் என்ற பெயர் இட்டனர், பீமன் என்பது வடசொல் ஆகும்.

வீமன் பிறப்பதற்கு முந்திய நாளில் தாழியில் இருந்து துரியோதனன் வெளிப்பட்டான்; தருமன் மூத்தவன் ஆகின்றான்; ஒருநாள் வேறுபட்டால் துரியன் வீமனுக்குப் பின்னவன் ஆகியிருப்பான்.

துரியனுக்குப்பிறகு ஒவ்வொரு நாளும் தம்பியர்கள் தொடர்ந்து பிறந்தனர். அவர்களுக்குப்பின் தனித்தாழியில் ஒரு பெண் மகவு பிறந்தாள். பெயர் துச்சனை என்பது அதற்குப் பிறகு தொடர்ந்து இந்திரனை வேண்ட இந்திரன் வருகையால் அருச்சுனன் பிறந்தான். பங்குனி மாதத்தில் பூரண நிலவு நாளில் அவன் பிறந்ததால் அவனுக்குப் பங்குனன் என்ற பெயர் உண்டாயிற்று. பார்த்திபன், விசயன், பார்த்தன், காண்டீபன் முதலியன அவனுக்கு வழங்கிய வேறு பெயர்களாகும்.

பாண்டுவின் மரணம்

பாண்டு மனம் மகிழ்ந்தான். அதன் பின்னர் அம்மந்திரத்தை மாத்திரிக்குச் சொல்ல அவள் இரட்டைப் பிள்ளைகளை ஒரேகருவில் பெற்றாள். சூரியனின் மைந்தர்களான அஸ்வினி தேவர்கள்; அவர்களும் இரட்டையர்கள். அவர்களை நினைத்ததால் அவர்கள் வருகையால் நகுலன் சகாதேவன் ஆகிய இரட்டையர்கள் பிறத்தனர்:

பிறந்த மக்கள் ஐவரையும் சிறந்த முறையில் பாண்டு வளர்த்துப் பெருமகிழ்வு கண்டான்; உரிய பருவங்களில் அவ்வப்பொழுது செய்யப்படும் சடங்குகளால் அவர்கள் பெருமை பெற்றனர். கல்வி கேள்வி கற்று அறிவு பெற்ற னர்:விலங்குகளை வேட்டையாடும் திறமையையும் பெற்று உயர்ந்தனர். உள்ளம் நிறைந்த வாழ்வில் அவன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை மறந்தான்.

வசந்த காலம் வந்தது. தென்றல் சுகத்தைத்தந்தது. வண்டுகள் மலர்கள் நாடித் தேன் உண்டன. வேனிற் பருவத்து விளைவு, மன்மதன் அம்புகள் இடும் வளைவு. அதனால் குவளை போன்ற அழகுடைய மாத்திரியின் நினைவு; இவை பாண்டுவை வாட்டின. அவள் வனப்பு அவனுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கியது. தனக்கு விதிக்கப்பட்டிருந்த சாபத்தையும் மறந்து விட்டான். விரக தாபம் போக்க அவள் சேர்க்கையில் தன்னை மறந்தான். இன்பம் ஈர்த்தது, தன் வாழ்வைத் துறந்தான், இறப்பு அவனை ஏற்றுக் கொண்டது. அவன் அசதியாக மெய் மறந்து அயர்ந்து உறங்குகிறான் என்று மாத்திரி நினைத்தாள். அவன் வசதியாக வான் உலகு அடைந்து சேர்ந்தான் என்பதை அறிந்திலள்.

மாத்திரி கணவன் இறந்தது கண்டு வாய்விட்டு அரற்றினாள். அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பி– னாள். இரண்டு உடல்கள் ஒரே எரியில் தகனம் செய்யப் பட்டன. ஈமக்கடன் இருவருக்கும் தன் மக்களைக் கொண்டு செய்து முடித்துவிட்டுக் குந்தி அக்கானகத்தை விட்டு அத் தினாபுரி அடைந்தாள். அத்தினாபுரியை அவர்கள் அடைந்தபோது அறச்செல்வனுக்கு வயது பதினாறு; வீமனுக்குப் பதினைந்து, அருச்சுனனுக்குப் பதினான்கு, நகுல சகாதேவர் இருவருக்கும் வயது பதினொன்று என்று மூல நூல் கூறுகிறது.

அத்தியை அடைந்த ஐலரும் அன்னை குந்தியும் அங்கே ஆறுதல் பெற்றனர். தம்பியின் மைந்தரைத் திருதராட்டிரன் தழுவிக் கொண்டு தடவிக் கொடுத்து அவர்களிடம் அன்பு காட்டினான். துக்கம் விசாரிக்கத் தூரத்தில் இருந்து உறவினர்கள் வந்தார்கள். கரிய மேக வண்ணன் ஆகிய கண்ணனும் வந்து துக்கம் விசாரித்தான். குந்திக்கு ஆறுதல் கூறினர். கிருஷ்ணன் என்ற சொல்லே கண்ணன் என மருவி வழங்கியது.

தன் பதிக்கு வந்தவர்களை வீடுமன், விதுரன் மற்றும் உள்ள பெரியோர்கள் எல்லாம் வரவேற்று விருந்து செய்து அன்பு மொழி பேசிமகிழ்வித்தனர். நூற்றுவரும் ஐவரும் சேர்ந்து வாழ்வர், அதனால் அவர்கள் பகைவர்கள் அழிவர். அவர்களுக்கும் யாதொரு குறையும் நேராது. உதவிக்குப் பெரியவர்கள் நீங்கள் இருக்கிறீர்கள்,” என்று வந்தவர்கள் முகமன் கூறினர்; அவர்களை வீடுமன் வழி அனுப்பினான். ஒரே குளத்தில் மலரும் தாமரையும் ஆம்பலும் போலப் பாண்ட வரும் கவுரவரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். வேறுபாடு அறியாமல் வாழ்ந்தனர்.

துரியன் தந்த தொல்லைகள்

பாண்ட வரும் துரியோனாதியரும் மனவேறுபாடு அற்றுப்பழகி வந்தனர். எனினும் தருமனைப்பற்றி நகரத்தவர் புகழ்ந்து பேசுவதைத் துரியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்பாராத விதமாகத் தேரோட்டியின் வளர்ப்பு மகனான கன்னன் இவனுக்கு நெருங்கிய நண்பன் ஆனான். வலிமை மிக்க வீரன் ஒருவன் தனக்கு நண்பனாக வாய்த்ததால் அவன் தலை கனத்தது. சொந்த வலிவால் அவன் நிற்காமல் துணை வலியால் துள்ளினான். தொடர்ந்து வீமனுக்குத் தொல்லைகள் தந்தனர். ஒரு நாள் கங்கை நீரில் இவர்கள் அனைவரும் நீந்தி விளையாடிக் கரை ஏறினர். பிறகு வீடு வந்து சேர்ந்த வீமனைக் கயிறு கொண்டு கட்டி அவனைக் கங்கை நதியில் போட்டனர். இலக்குவன் இந்திரஜித்தின் நாகபாசத்தில் இருந்து விடுபட்டது போல அக்கயிறுகளை அறுத்து முறித்துக் கொண்டு வீமன் வீடு வந்து சேர்ந்தான்.

இவ்வாறே வீமனுக்குத் துரியன் தொடர்ந்து தொல்லைகள் தந்தான்; அவன் துங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது பாம்புகளை ஏவிக் கடிக்கவிட்டான். வீமன் அவற்றை மூட்டைப் பூச்சிகளை நசுக்குவது போலக் கை களால் பிசைந்து தூக்கி எறிந்தான்.

மற்றொரு நாள் நீரில் குதித்து விளையாடும் போது நீரில் ஈட்டிகளைப் புதைத்து வைத்தான், ஈட்டிகள் தோறும் வண்டுகள் வீற்றிருந்தன. கண்ணன் வண்டுகள் வடிவில் அவனைக் காத்தான். துரியனின் வஞ்சனையை அறிந்து வீமன் தன்னைக் காத்துக் கொண்டான்.

பின்னரும் ஒரு நாள் அவன் உண்ணும் சோற்றில் நஞ்சு கலந்து அவனைக் கொல்லச் சதி செய்தான். விடத்– திலே மயக்கமுற்ற வீமனை வடக்கயிறு கொண்டு கட்டிக் கங்கை வெள்ளத்தில் கொண்டு போய்ப் போட்டான். நீர் அடித்துச் சென்று வீமனைப் பாதளத்தில் கொண்டு சேர்த்தது. அங்கே பாம்பின் குட்டிகள் அவனை நெருங்கிக் கடித்தன. அவற்றின் நஞ்சு இவன் உணவில் உண்ட விஷத்தைப் போக்க மயக்கம் நீங்கிய அவன் கயிறுகளை அறுத்துக் கொண்டு உயிர்தப்பி விடுதலை பெற்றான்.

வந்திருப்பவன் வாயுவின் மைந்தன் என்பது அறிந்து ஆழ நீரில் அடங்கிக்கிடந்த வாசுகி என்னும் பாம்பு அவனை அழைப்பித்து விருந்து செய்து அமுதம் தந்து அவன் ஆயுளை நீடிக்கச் செய்தது, நஞ்சு நீங்க அமுதம் உண்டதால் அவன் மேனி ஒளி பெற்று விளங்கியது. வாசுகி அவனை அங்குத் தங்கி இருக்குமாறு வேண்டினான். எட்டு நாள் அங்கே இருந்து நல் விருந்து உண்டு மகிழ்ந்தான். ஒன்பதாம் நாள் பாம்புகள் அவனைச் சுமந்து கொண்டு வந்து கங்கை நீரில் அவன் விழுந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தன.

வீமனைப் பிரிந்த உடன்பிறந்தவர் நாற்புறமும் சென்று தேடினர். குந்தி மனம் குன்றி ஏங்கித்தவித்தாள். மற்றும் வீடுமன் விதுரன் இவர்கள் எல்லாம் மிகவும் வருந்தினர். இவன் எந்தவித ஊறும் இன்றி ஊர் வந்து சேர்ந்தான். தாயும், தம்பியரும், வீடுமனும், விதுரனும் உவகை கொண்டனர். துரியனின் நண்பர்களும், தம்பியரும் அவலம் கொண்டனர். விற்பயிற்சியும் அரங்கேற்றமும்; கிருபன் ஆசிரியன் ஆதல்.

கவுதம முனிவரின் பேரன் கிருபன் ஆவான். அவன் படைப் பயிற்சி தர ஆசிரியனாக வீடுமனால் அமர்த்தப் பட்டான். கவுதமனின் மகன் சரத்துவன் என்பவன் விற்கலையிலும் வேதநூல் கல்வியிலும் விவேகம் உடையவனாக இருந்தான். இவற்றோடு தவ வாழ்க்கை மேற் கொண்டு அவன் உயர் பதவிகள் அடைய விரும்பினான். அவன் தவத்தைக் கெடுக்க இந்திரன் அழகி ஒருத்தியை தேவர் உலகத்தினின்று அனுப்பி வைத்தான்.

சரத்துவன் என்னும் அம்முனிவன் அவள் அழகில் மயங்கித தவத்தைக் கெடுத்துக் கொண்டான். அவளோடு இன்ப வாழ்வு நடத்தி ஒரு மகனையும் மகளையும் பெற்றான். தான் செய்த தவறுக்காக வருந்தினான். அச்சரித்திரத்தை மறைத்து வைக்க அக்குழந்தைகள் இருவரையும் நாணற் காட்டில் தனது வில் அம்புகளோடு தவிக்க விட்டுச் சென்றான்.

ஆதரவு அற்ற அக்குழந்தைகளை அவ்வழியிற் சென்ற சந்தனு மகாராசன் தன் மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தான். கிருபையால் எடுத்து வளர்க்கப்பட்டவன் ஆதலின் அவனுக்குக் கிருபன் என்று பெயர் வழங்கியது. அவன் தங்கையின் பெயர் கிருபி ஆகியது.

கிருபனின் தந்தையாகிய சரத்துவன் என்பவன் பிற் காலத்தில் அத்தினாபுரி வந்து தன் மகனுக்குத் தக்க வயதில் வில் வித்தை கற்பித்து விட்டுச் சென்றான். அதனால் கிருபன் வில் பயிற்சியில் விற்பன்னனாக இருந்தான்.

சந்தனு மைந்தனாகிய வீடுமன் அவனை ஆசிரியனாக அமர்த்திப் படைக்கலப் பயிற்சி பெறுமாறு குருகுல மைந் தர்கள் ஆகிய பாண்டவரையும் துரியோதனாதியரையும் அனுப்பி வைத்தான். வில்லும் வேலும் வாளும் அவர்கள் கற்ற வித்தைகள் ஆயின. மிகவும் அக்கரையோடு அவன் ஆரம்பக் கல்வி கற்பித் தான். எனினும் அவனினும் மேம்பட்ட ஆசிரியன் ஆகிய துரோணனிடம் சிறப்புப் பயிற்சிபெற வீடுமன் அவர்களை அனுப்பி வைத்தான். இருளைப் போக்க உலகம் திங்களை எதிர்பார்க்கிறது. எனினும் ஒளியும் சக்தியும் பெறச் சூரியனை இவ்வுலகம் விரும்பாமல் இருப்பது இல்லை. அதுபோல வீடுமன் ஆற்றல் மிக்க துரோணனை ஆசிரியனாக அமாத்தினான். கிருபனோடு துரோணன் அவர்களுக்கு ஆசிரியர் ஆயினன்.

துரோணனின் வருகை

பரத்துவாச முனிவரின் மகன் துரோணன் ஆவான், அவன் தன் தந்தையிடம் வேத சாத்திரங்களை முறைப்படி பயின்றான்; பரசுராமனிடம் வில் வித்தைகளைக் கற்றான், பரசுராமனின் ஆசிரமத்தில் படைக்கலம் பயின்ற நாட்களில் பாஞ்சால நாட்டு மன்னன் மகன் துருபதன் என்பவன் ஒரு சாலை மாணாக்கனாக அங்கு அவனுடன் பயின்று வந்தான். இருவரும் நெருங்கிப் பழகினர்; சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

தான் ஆட்சிக்கு வருங்காலத்தில் பாதி அரசு தன் நண்பனாகிய துரோணனுக்குப் பகிர்ந்து அளிப்பதாக வாய் தவறிக் கூறி விட்டான். துரோணனும் அதனை உண்மை என்று நம்பி விட்டான், அதற்காகக் காத்து இருந்தான்.

மலையும் மடுவுமாக வாழ்க்கை பிரிந்து இயங்கியது; அவன் முடிசூடும் மன்னன் ஆனான்; இவன் சுவடி ஏந்தும் ஆசிரியன் ஆனான். துரோணன் தனத்தில் ஆசை இல்லாமல் வனத்தில் தவம் செய்து வந்தான்; கிடைத்ததைக் கொண்டு மன நிறைவோடு வாழ்ந்து வந்தான். கிருபனின் தங்கை கிருபி ஆகிய அவளை மணம் முடித்து ஒரு மகவுக்குத் தந்தை யானான்; வாழ்க்கை அன்பில் மலர்ந்தது; அது கனிய வளம் இல்லாமல் போய் விட்டது.

ஐந்தாவது வயது வரை வறுமையில் உழன்ற அச் சிறுவன் எந்தவிதசுகமும் கண்டதில்லை. மாவின் கஞ்சியே அவனுக்குக் கிடைத்தது; ஆவின் பாலைக் குடித்து அறிய மாட்டான். அதனால் அந்தக் கோவின்பால் அடைந்து பழைய நட்பைப்பற்றிப் பேசினான். அச்சிறுவன்தான் அசுவத்தாமன் என வளர்ந்தான்.

“யார் நீ?” என்றான் துருபதன்; அறியாதவன் போல.

“யான் உன் பள்ளி நண்பன்; பாதி அரசு தருக” என்று உரிமை கொண்டு கேட்டான் துரோணன்.

“மன்னன் யான்; முனிவன் நீ எனக்கும் உனக்கும் எப்படி நட்பு உண்டாக முடியும்?” என்று அரச அவையில் அவனை ஏசி அனுப்பினான்.

“நீ வார்த்தை தவறுகிறாய்! நீ தவறி முடிக்காததை நான் முடித்துக் காட்டுகிறேன்; தேரில் ஏறி ஊர்வலம் வரும் உன்னை ஊரில் சிரிக்கக் கட்டிக் கொணர்வேன். நீ அறிவித்த பாதிப்பாகம் என் வலிமையால் பெறுவேன்; இது உறுதி” என்று சொல்லி வந்தான்.

பழைய வரலாற்றை வீடுமனிடம் எடுத்துச் சொல்லி இந்தச் சூளினை முடித்துக் கொடுப்பதாக இருந்தால் அங்கு ஆசிரியர் பணி ஏற்பதாகக் கூறினான்.

துரோணனும், அவன் மனைவி கிருபியும் மகன் அசு வத்தாமனும் அங்கு இருக்க ஆதரவு தரப்பட்டனர். ஆசிரியர் என்ற மதிப்புத் தரப்பட்டது; சகல வசதிகளும் உடன் செய்து தரப்பட்டன.

“இதுவரை முனிவனாக இருந்தாய்; இனி முனைவனாகப் பதவி உமக்குத் தந்து விட்டோம். நீ அரசர்களைப் போலப் போர் செய்யும் தகுதியும் பெறுகிறாய். பேத மின்றி எங்களில் ஒருவனாய் இருக்கலாம்” என்று கூறி அதற்குரிய மரியாதையையும் வீடுமன் தந்தான். அவனுக்கு வெண் கொற்றக் குடையும், பண்பட்ட பட்டமும். விண்பட்ட கொடியும் தந்து மதிப்பு உயர்த்தினான்.

ஆசிரியப்பணி

அன்று முதல் உதிட்டிரனும் (தருமன்), துரியோதனனும் மற்றும் அவர்கள் தம்பிமார்களும் இவனிடம் படைக்கலப் பயிற்சிகள் பெற்று வந்தனர். விற்பயிற்சியில் அருச்சுனன் மேம்பட்டவனாகக் காணப்பட்டான். அதனால் துரோணன் அவனிடம் அதிக அக்கரை காட்டினான். துரியோதனர்க்கு அதனால் அருச்சுனனிடம் அழுக்காறு உண்டாயிற்று. ஆசிரியன் காட்டிய பாரபட்சம் அவர்களைப் பிரித்து வைத்தது.

இவ்வாறு இருக்கும் நாளில் ஏகலைவன் என்ற வேடுவன் துரோணனிடம் விற்கலை பயில விரும்பி வந்தான். “நேரில் உனக்குக் கற்றுத்தர இயலாது. என்னைக் குருவாக நினைத்து நீயே பயிற்சி பெற்றுக் கொள்” என்று கூறி அனுப்பினான். அவன் துரோணனைப் போன்ற ஒரு சிலை வடித்து வைத்துக் கொண்டு அதனை வழிபட்டு விற்பயிற்சி செய்தான். எனினும் அவன் அருச்சுனனை விடத் திறமை மிக்கவனாக மாறினான்.

ஏகலைவனின் ஆசிரிய மதிப்பு

இதனை அறிந்து விசயன் தன்னினும் மேலவன் ஒருவன் உளன்; அவன் ஏகலைவன் என்றான்.

விசயன் மேல் இருந்த தனிவாஞ்சையால் ஆசிரியன் ஒரு தவறு செய்யத் துணிந்தான்.

ஏகலைவன் இருந்த இடத்துக்கு அருச்சுனனோடு சென்று அவன் வில் திறமையைப் பாராட்டினான்.

“குருவுக்கு நீ தரும் காணிக்கை யாது?” என்று கேட்டான். “உயிர் வேண்டினும் தருகிறேன்” என்றான்.

“உன் கட்டை விரல் தர முடியுமா?” என்றான். ஆசான் சொல்லி முடிப்பதற்குள் எதிர் பேசாமல் அதை வெட்டி அவன் முன் வைத்தான்.

விசயனுக்கு நிகர் மற்றொரு விசயன் வளராதபடி அவன் கற்ற கலையைச் செயல்படாமல் செய்து விட்டான்.

சிறந்த மாணவன் என்பதற்கு ஏகலைவன் எடுத்துக் காட்டாக விளங்கினான். அவன் அதற்காகக் கவலைப் படவில்லை. ஆசிரிய பக்தி இருந்தாலேயே கல்வியில் உயர முடியும் என்பதை அவன் செயல்படுத்திக் காட்டினான். தவறு செய்யும் ஆசிரியர்களும் உளர் என்பதற்குத் துரோணன் ஒரு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டான்.

படைக்கலப்பயிற்சி

கிருபனிடம் அரை குறையாகக் கற்ற வித்தைகளைத் துரோணனிடம் பயின்று முழுமை அடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு புதிய செய்திகளை அறிந்தனர்.

ஒரு சமயம் கிணற்றில் ஆசிரியனின் மோதிரம் ஒன்று விழுந்து விட்டது. அதனை எடுத்துக் கொடுக்குமாறு மாணவர்களிடம் துரோணன் கூறினான். அருச்சுனனே அதனை எடுத்துக் கொடுத்தான்.

அடுத்து அங்கிருந்த ஆலமரத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்து விழ அம்பு விடும்படி விசயனிடம் உரைத்தான். அவனும் அவ்வாறு தன் வில் திறனால் அம்மரத்தின் இலைகளைக் கீழே விழச் செய்தான். அம்மரம் இலைகள் அற்றுக் கிளைகள் மட்டும் தாங்கி நின்றன.

ஒரு முறை துரோணனின் கால்களை ஒரு முதலை பற்றிக் கொண்டது. பக்கத்தில் இருந்த அவன் சீடர்கள் அனைவரும் பதற்றமடையாமலும், அந்த முதலையைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடாமலும் வெறும் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். அருச்சுனன் ஒருவன் மட்டும் வில்லோடு விரைந்து சென்று அம்பு விட்டு அவன் காலுக்கு ஊறு நேராதபடி அதனை வேறு படுத்தினான். ஆசிரியர் பால் கொண்ட அன்பும், விரைந்து செயல் படும் திறமும், மனத் திண்மையும் ஆசிரியனைப் பெரிதும் கவர்ந்தன. அவனுக்குத் தன்பால் இருந்த ‘பிரசிரஸ்’ என்னும் அத்திரத்தை தந்து அதைப்பயன்படுத்தும் மந்திரமும் சொல்லி அருளினான். இருவரும் உயிரும் உணர்வும் போல விரும்பிப் பழகினர். குரு தாம் காட்டிய அருளிலும், சீடன் ஆசிரியர்க்குச் செய்த வழிபாட்டிலும் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டனர்.

அரங்கேற்றம்

மதிகுலத்து மன்னனாகிய திருதராட்டிரனும், விரதவீரனாகிய வீடுமனும், அறக்கடவுளாக விளங்கிய விதுரனும் குருகுலமைந்தர்கள் கற்ற படைக்கலப் பயிற்சியைக் கண்டு மகிழ்வதற்காக அரங்கேற்றம் செய்துகாட்டத் துரோணன் விரும்பினான். முதற்கண் கொற்றவையாகிய துர்க்கைக்குப் பலிகொடுத்து விழாவினைத் தொடங்கினான்.

அரசர்களும், அறிஞர்களும், ஆசாரியர்களும், மக்களுள் மேம்பட்டவர்களும் அங்கு வந்து அவ்வரங்கில் குழுமினர். விண்ணகத்தின் தேவர்களும், சித்தர்களும், மற்றுமுள்ள தெய்வங்களும் கூடிநின்றது போல் இவர்கள் காட்சி அளித்தனர்.

போர்ப் பயிற்சிக்கு உரிய படைக் கருவிகளை அழகுற வைத்துக் காட்டினர். யானை, குதிரை, தேர் இவற்றைப் பலவகையாக நடத்திக் காட்டினர். முனிவர்களும் அரசர் களும் மாடத்தில் இருந்து இவற்றைக் கண்டு களித்தனர். இவை மனிதர் வேகம் அல்ல; வாயு வேகம் என்று கூறிப் பாராட்டினர்.

வலிமையும் திறனும் செயற்பாடும் சரி நிகராக உடைய துரியனும் வீமனும் கதாயுதம் தாங்கி எதிர் எதிர் நோக்கி மோத முற்பட்டனர். மராமரங்களை எடுத்துக் கொண்டு காட்டுவாழ் யானைகளைப் போல நெருங்கிச் சென்றனர்.

தண்டும் தண்டும் மோதிக் கொண்டு பேரோலி செய் தது; அது இடிபோல் ஒலித்தது. இடதுசாரி வலது சாரியாக நடந்து தம் திறமையைக் காட்டினர். சுற்றி வளைத்தும், நேர் சென்றும் தன் திறமையைப் புலப்படுத்தினர். வீர நடையில் தன் பெருமிதத்தைப் புலப்படுத்தினர்.

பின் மறத்தோடு செயிர்த்து வைராக்கியம் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள முனைந்தபோது துரோணனின் மகன் அசுவத்தாமன் இடை சென்று தடுத் தான்.

இந்திரனின் மகனான அருச்சுனன் ஆயுத புரோகிதன் ஆகிய துரோணனின் மலர்த்தாளில் முடி வைத்து வணங்கி, அவன் காட்டிய குறிப்பு உணர்ந்து தான் கற்ற வித்தைகளை அவையோர் கண்டு வியக்கும்படி காட்டினான். கைகளில் வில்லும் அம்பும் ஏந்தினான்; மார்பில் கவசம் அணிந்து கொண்டான்.

ஓர் அம்பினால் யானையின் வடிவு தோற்றுவிப்பான்; மற்றோர் அம்பினால் யாளியைப் படைத்து அவ் யானையை அழிப்பான். இவ்வாறே பாம்பு, கருடன், நீர், நெருப்பு, இருள். சூரியன் இவ்வாறு மாறி மாறி அழிக்கத் தெய்வ அத்திரங்களை ஏவினான். அம்புகளில் பல வினோதங்களைச் செய்து காட்டினான். அவையோர் வியப்பு அடைந்தனர்.

கன்னன் அங்க பூபதி ஆதல்

வானத்து நட்சத்திரங்களைப் போலக் கூட்டமாக இருந்த அரசர்களின் முன்னே சூரிய குமரனான கன்னன் சங்கநாதம் என்று சொல்லும்படி வீர முழக்கம் செய்து அரங்கு நோக்கி அடி வைத்தான்.

தன் குருவாகிய பரசுராமனை மனத்தில் தியானித்து வணங்கிப் பின் அம்புகளைத் தொடுத்து அருச்சுனன் என்ன என்ன வில்திறன்களைச் செய்துகாட்டினானோ அவை அனைத்தையும் அவையோர் வியக்கும் வண்ணம் செய்து காட்டினான்.

கணைகள் போய் இலக்கைச் சரியாகத் தாக்கின. அதைக்கண்டு அரசர்கள் இவனை ‘இணையற்ற வீரன்’ என்று பாராட்டினார்கள். விசயன் தன்னினும் ஆற்றல் உடையவன் ஒருவன் இருப்பதைக் கண்டு சற்று நாணத்தால் தலைகுனிந்தான். துரியன் தன் தம்பிமாரோடு மிக்க களிப்பு அடைந்தான்.

கன்னன் அதோடு அமையவில்லை. அர்ச்சுனனை வில்லேந்திக் களம் நோக்கி வரும்படி அழைத்தான். நேருக்கு நேர் நின்று போர் செய்ய விழைந்தான். அதுகண்டு துரியன் செருக்குக் கொண்டான். அன்பு மிகுதியில் உள்ளம் உருகினான்.

“போர் செய்தற்கு நீயோ எனக்கு நிகர்?” என அருச்சுனன் சினந்து கூறினான். உடனே கன்னன் “துரியனுக்கு எதிராக முனையும் போரில் உன் தலையைக் கொய்து அரங்க பூசை செய்வேன்” என்று ஆர்ப்பரித்தான்.

இடிபோல அருச்சுனனை எதிர்த்துக் கன்னன் முழக்கம் செய்ய அங்கிருந்த அனைவரும் திகைப்புற்றனர்; அறிவில் முதிர்ந்த ஆசான் ஆகிய கிருபன் இடை மறித்து அமுதத்துளி போன்று ஒரு வினாவை எழுப்பினான்.

“தேர் ஒட்டியின் மகன் பார் ஆளும் மைந்தனோடு சரி நிகர் சமானமாகப் போருக்கு நிற்றல் சாத்திரம் அனு மதிக்காது; சாதி பேதங்களை மதிக்காது நடந்துகொள்வது தகாது” என்று சாதியின் நீதி அறிந்தவன் கூறினான்.

அதனை மறுத்த துரியோதனன், “கற்றவர்க்கு, அழகு மிக்க கன்னியர்க்கு, வள்ளல்களுக்கு, வீரர் க்கு, வெற்றி மிக்க அரசர்களுக்கு, ஞானிகளுக்கு சாதிகள் இல்லை என் பதை அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்று அவன் கற்ற சாத்திரத்தை எடுத்துக் கழறினான்.

“தேரோட்டி மகன் என்று இகழ்ந்ததற்கு வருந்துகிறேன். இன்று முதல் பார் ஆளும் மன்னன் அவன்; அங்க தேசத்திற்கு அதிபதி ஆக்கி விட்டேன்” என்று முழக்கம் செய்தான். கன்னன் களிப்புக் கொண்டான்; நட்பு இறுகியது.

துரோணன் குரு தக்களை கேட்டல்

சீடர்கள் காட்டிய சீர்மைகளைக் கண்டு ஆசான் துரோணன் அகமகிழ்வு கொண்டான். அவர்கள் வில் திற னையும், மல் திறனையும் பாராட்டினான். அவர்கள் கல்வியில் முழுமை எய்தியதாக முடிவுரை கூறினான்.

“இளஞ்சிங்கங்களே! இப்பொழுது உங்களுக்கு ஒரு தேர்வு வைக்கிறேன். உங்கள் வீரத்தைக் காட்ட விளை நிலம் காட்டுகிறேன். என் இளமை நண்பன் முதுமைப் பகைவன் பாஞ்சால நாட்டுத் துருபதன், அவனைக்கட்டித் தேரில் வைத்துச் சிறைப்படுத்திக் கொணர்வீர்; இதுவே உம்மிடம் எதிர் பார்க்கும் காணிக்கை.” என்று வீரம் ததும்ப உரையாற்றினான். ஆசிரியன் கட்டளையை ஏற்றனர்.

துரியன்முதல் நூறு பேரும் பாண்டவர் ஐவரும் படைகளுடன் பாஞ்சாலம் நோக்கிப் புறப்பட்டனர். அவரர்களுக்கு இது கன்னிப் போராக அமைந்தது. சோமகர்க்கும் குருகுலக் கோமகர்க்கும். போர் விளைந்தது கண்டு துருபதன் வருந்தினான். விசயனைப் போர்க் களத்தில் சந்தித்தான்.

படை வலிவு மிக்க துருபதன் நெருங்கி வந்து போர் செய்தான். துடை நடுங்கித் துரியன் சொந்தநாடு நோக்கித் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டான். விசயன் தனி ஒருவன் அம்புகளைக் கொண்டு துருபதனை மடக்கிப் பிடித்தான். அவன் கைவாளுக்கு அஞ்சி அடி பணிந்து அடிமையாயினான்; அவன் தன் வில்லின் கயிறு கொண்டே அவனைத் தேரில் கட்டி ஏறும்படி செய்தான். அவனைத் தேரில் கட்டிக் கொணர்ந்து தேசிகன் முன் கொண்டு வந்து நிறுத்திப் பேச வைத்தான்.

துரோணன் அவனைப்பார்த்து நகைத்து அவன் வீரம் என்ன ஆயிற்று என்று கேட்டான்.

“தேரில் கட்டிக் கொணர்வேன் என்றேன்; கொண்டு வந்து ஆயிற்று பார் முழுதும் இப்பொழுது என்னது ஆயிற்று; எனக்குரிய பூமியில் பாதி யான் உனக்கு அளிக்கி றேன் பெற்றுக்கொள். உயிர் வேண்டுமானால் ஊருக்குத் திருடபிப்போ” என்றான்.

“யானும் நீயும் சமமா என்று கேட்டாய்; இன்று நீ ஒர் சிறைக் கைதி; எல்லாம் எனக்குச் சொந்தம்; நான் ஓர் அரசன். நீயும் உன் தாழ்வு நீங்கி என்னைப்போல அரசனாக இருக்கவே பாதி தருகிறேன். நண்பர்கள் சமமாகி விட்டோம். ஏற்றத் தாழ்வு நீங்கி விட்டது. நட்புக்கு உயர்வு தாழ்வு தடையாக இருந்தது. உன்னைப்பழைய நண்பன் என்பதால் நேசிக்கிறேன். செல்வம், பதவி இவை வரும்; போகும்; நட்பு நிலைத்தது; இதை உணர்க. பகை நீக்கி வாழக் கற்றுக் கொள்”.

“அருச்சுனன் சிறுவன்; ஆனால் மாவீரன்; இதனை அறிந்துகொள். மறுபடியும் துணிந்து போருக்குநிற்காதே” என்று சொல்லி அவனிடம் அன்பு காட்டிக் கண்ணியமாக நடத்தி அனுப்பி வைத்தான். பாம்புக்குப் பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும் என்பது பழமொழி அவன் திரும்பிச் சென்றான். பாம்பை அடித்துப் போட்டால் அது எப்படியும் பழி வாங்கி விடும் என்பார்கள்.

துருபதன் வேள்வி செய்தல்

நல் தவசிகள் ஆன உபயாசன், யாசன் என்னும் ஆசான் கள் கூறிய முறைப்படி பெருவேள்வி ஒன்று செய்தான். அவர்கள் ஒமப்பொருளில் ஒரு பகுதியை ஒரு பொன் தட்டில் வைத்துத் துருபதனின் மனைவிக்குத் தரும்படி கொடுத்தனர். அவள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதனை மீண்டும் வேள்வித்தீயில் சொரிந்தனர்; தலைமை ஆசான் ஆகிய உபயாசன் இமைப்பொழுதில் ஒரு மகனைத் தோற்றுவித்தான்.

பிறக்கும்போதே அவன் தேரோடு பிறந்தான். சிலையும் கையுமாகச் சிங்கக் குட்டி போல் தேர் மீது அமர்ந்தபடி தோன்றினான். மற்றும் உபயாசன் தான் பெய்த ஒமச்சருகால் வேள்வித் தீயினின்று ஒரு அழகிய பெண்ணைத் தோற்றுவித்தான். மின்னல் போன்ற இடையும், மூங்கில் போன்ற தோள்களும், முல்லை போன்ற முறுவலும் உடைய தங்க நிறமேனியளாக அவள் காட்சி அளித்தாள்.

முன் தோன்றிய மகனால் துரோணனுக்கு அழிவும், பின்தோன்றிய மகளால் அருச்சுனனுக்குவாழ்வும் ஏற்படும் என்று விண்ணில் தோன்றிய அசரீரி சொல்லியது

துருபதன் துரோணனைக் கொல்ல ஒரு மகனும், வில் திறன் மிக்க விசயனை மணக்க மகளும் வேண்டி இந்த யாகம் செய்தான். வேள்வித்தீயில் பிறந்த வெற்றிச் செல் விக்குத் திரெளபதி என்று பெயரிட்டான். துருபதனின் மகள் ஆதலின் அவள் திரெளபதி எனப்பட்டாள். அவள் தமையன் திட்டத்துய்மன் என அழைக்கப்பட்டான். பிறக்கும் போதே காளைப் பருவத்தில் ஒரு மகனும் கன்னிப்பருவத்தில் ஒரு மகளும் பிறந்தனர்.

திட்டத்துய்மன் வில்வித்தை கற்கத் துரோணன் பால் சென்றான். அவனால் தனக்கு மரணம் நிகழும் என்று அறிந்தும் பகைமை பாராட்டாமல் அவனை மாணவனாகத் துரோணன் ஏற்றுக் கொண்டான். இவ்வகையில் பெருமிதமாக நடந்து கொண்டான். தன்னை அணுகியவர்க்கு ஆதரவு தர வேண்டும் என்ற பரந்த உள்ளமும், வந்தவன் யாராக இருந்தாலும் பயிற்றுவித்தல் ஆசிரியர் தம் கடமை என்ற உணர்வும் போற்றத்தக்கனவாக அமைந்தன.

தருமன் இளவரசன் ஆதல்

இவ்வாறு இங்கே இவர்கள் இனிது வளருங்காலை அத்தினாபுரியில் நூற்றுவரும் ஐவரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். திருதராட்டிரனும் விதுரனும் ஒழுக்கத்தில் சிறந்த தருமனை இளவரசனாக நியமிக்க எண்ணினர். வீடுமனும் கல்வி கேள்விகளிலும் நீதியிலும் தருமன் உயர்ந்தோன் என்று அவன் தகுதியைப் பாராட்டிப் பேசினான். சந்தனுவின் மரபு சிறக்கத் தருமனுக்கு மணி முடி சூட்டி அவனை இளவரசன் ஆக்கினர்.

துரியோதனின் எதிர்ப்பு

தருமன் இளவரசன் ஆவதைத் துரியானால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதனால் அவனும் அவன் தம்பியரே உயர்வு அடைவர் என்றும், தானும் தன் தம்பியரும் தாழ்வு பெறுவர் என்றும் கூறினான்.

“பாண்டுவுக்கு உரிய இளவரசு அவன் மகனுக்குத் தரு வதுதானே முறை; மற்றும் அவனே நம் குலத்தில் பிறந்த மூத்தவன், அவனுக்கே தகுதி இருக்கிறது.” என்று தந்தை சொல்லிப்பார்த்தான். துரியன் ஏற்றுக் கொள்ளவதாக இல்லை.

“எனக்கு என் இனிய நண்பன் கன்னன் துணை இருக்கிறான்; மாமன் சகுனி உண்டு; என் தம்பியர் துணை இருக்கிறார்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். திறமை உண்டு என்பதால் பெருமை கொண்டு எங்களைக் குறைவாக மதிக்கிறார்கள், அவர்கள் எம்மோடு நேசம் கொண்டது இல்லை; அவர்களோடு பாசம் கொண்டு ஒன்று பட்டு உறவோடு வாழ எங்களால் இயலாது” என்று கூறினான்.

மகன் பால் கொண்ட பாசத்தால் அவன் மனம் திரிந்தது. வீடுமனையும் விதுரனையும் அழைத்து அவர்கள் ஒரு சேர வாழாவிட்டால் மோதிக்கொண்டு அழிவார்கள்; அவர்களை வெவ்வேறு இடத்தில் வைப்பதே சரி என்று கூறினான். அவர்கள் அதற்கு மறுப்புக் கூறாமல் அவரவர் விருப்புடன் நடந்து கொள்வதே மேல் என்று சொல்லி விட்டுப் போயினர்.

அரக்கு மாளிகை

துரியன்பால் பாசம் உடைய அமைச்சன் புரோசனன் அழைக்கப்பட்டான். அவனோடு துரியனும் திருதராட்டி ரனும் கலந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

வாரணாவதம் என்னும் நகருக்குத் தருமனை அனுப் புவது என்றும். புரோசனன் அவனுக்கு அமைச்சனாக இருந்து உடனிருந்து கெடுப்பது என்றும் திட்டம் தீட்டினர்.

வாரணாவதத்தில் சிவனுக்குத் திருவிழா எடுக்கிறார் என்றும்; அதில் பாண்டவர் பங்கு கொள்ள வேண்டும் என்றும் திருதராட்டிரன் சொல்லி அனுப்பினான். அங்கே ஆட்சி சீர் குலைந்துள்ளது என்றும், அதனை மாட்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் சொல்லித் தருமனை அனுப்பி வைத்தான்.

அவனும் தடை சொல்லாது தம்பியரோடும் தாய் குந்தி யோடும் வாரணாவதம் போய்ச்சேர்ந்தான். சிவனை வணங்கி வழிபட்டு அந்த அமைச்சன் காட்டிய மாளிகை யில் தங்கினர். அந்த அமைச்சன் அறிவுரைப்படி அங்கு தங்கி அந்நகருக்குக் காவலனாக இருந்து நன்முறையில் ஆட்சி செய்தான்.

அவர்கள் தங்கி இருந்த மாளிகை அரக்கினால் கட்டப் பட்டிருந்தது. முன்கூட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அவன் நயவஞ்சகமாக நல்லவன்போல் நடித்துத் தீயது செய்யக் காத்திருந்தான். உடன் வந்த சேனையை யும் அவன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான்.

“தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து” என்ற குறளுக்கு இலக்கியமாக நடந்து கொண்டான். அவன் நடத்தைகள் எல்லாம் போலித்தனம் கொண்டிருந்தன.

பாண்டவர்களும் உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் விழிப்பாக நடந்து கொண்டனர். உடுத்தும் ஆடையிலும், பூசும் சந்தனத்திலும், அணியும் அணிகலன்களிலும் கவனம் செலுத்தினர். அவன் மீது ஒரு கண்வைத்துக் கொண்டு விழிப்போடு வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு இருக்கும் நாளில் விதுரன் அனுப்பி வைத்த சிற்பி ஒருவன் வீமனைத் தனியே சந்தித்தான். அவன் துரியனின் திட்டத்தை எடுத்துச் சொல்லி அதை முன் கூட்டி அறிந்த விதுரன் தன்னை இங்கு அனுப்பியதாகவும், தக்க பாதுகாப்புத் தரும்படி சொன்னதாகவும் கூறினான். அம்மாளிகையில் தப்பிச் செல்லச் சுரங்கப் பாதை ஒன்று தான் அமைத்திருப்பதாகவும் அதில் தப்பிச் செல்ல அட்டைத் தூண் ஒன்று நிர்மாணித்துள்ளதாகவும் கூறினான்.

அரக்கு மாளிகை பற்றி எரியும்போது அத்தூணைப் பெயர்த்துத் தள்ளி அதன் கீழே உள்ள சுரங்க வழியாக வெளியேறி விடலாம் என்ற ரகசியத்தைச் சொல்லி வைத்தான். அதனை வீமன் மட்டும் கேட்டு வைத்தான்.

தன் சகோதரருக்கும் தாய்க்கும் கூடச் சொல்லவில்லை, புரோசனனை மட்டும் கருத்தோடு கவனிக்கச் சொல்லி வைத்தான்.

பாம்போடு பழகும் பாம்பாட்டி போல அந்த அமைச்சனை வெளியே தனியே விடாமல் தம்மோடு இருக்குமாறு செய்து கொண்டனர். அவர்கள் பார்வையிலேயே அவனை வைத்துக் கொண்டனர்; அவன் மீது அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் போலப் பழகினர்.

அங்ஙனம் பழகி வரும் நாளில் ஒரு நாள் இரவு நீண்ட நோம் நாட்டு அரசியலைப்பற்றி விவாதித்துப்பொழுதைக் கடத்தினர். நேரம் ஆகிவிட்டது; இங்கேயே தங்கலாம் என்று அவனிடம் சொல்லிப் படுக்கப் பாயும் தலையணையும் தந்தனர்.

நீள் துயிலில் அமைச்சன் கிடந்த போது வீமன் தனியே எழுந்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்து விட்டுத் தன் சகோதரரையும் தாயையும் அழைத்துக்கொண்டு தூணைப் பெயர்த்துத் தள்ளிச் சுரங்க வழியாக வெளியேறித் தப்பிச் சென்றான்.

எதிர்பாராத விதமாகப் பற்றிய நெருப்பில் அகப்பட்டு சாம்பல் ஆயினான்; தன் வினையே தன்னைச் சுடும் என்பதற்கு அவன் இலக்கு ஆயினான். பாண்டவர்க்குத் தேனில் விஷம் கலந்து இடுவதற்காக வேடுவர் ஐவரை அழைத்து வந்திருந்தான். அவர்களுள் முதிய தாயும் உடன் வந்திருந் தாள். தீயவை தீய பயத்தலால் அவை தீயினும் அஞ்சப்படும் என்பது உண்மையாயிற்று. தீமை செய்ய வந்தவர் களைத் தீயே தீய்த்து விட்டது. வேடுவர்கள் படு பிணம் ஆயினர். பாண்டவர் ஐவரும் தாயும் தப்பி வெளியேறினர்.

பாண்டவர்கள் ஐவரும் அநியாயமாகத் தீயிற்கு இரையாகிவிட்டனரே என்று அத்தினாபுரி அரசஇல்லத் தினரும் முனிவர்களும் நாட்டு மக்களும் பேசிக் கவலை தெரிவித்தனர். துரியனின் நண்பர்கள் முதலைக்கண்ணிர் வடித்துப் பாண்டவர்க்கு முத்தாய்ப்பு வைக்கப்பட்டதற்கு உள்ளுர மகிழ்வு கொண்டனர். வீமனின் செயல் வெற்றி பெற்றது; அவன் திறன் வெளிப்பட்டது. இடிம்பன் வதம்

அரக்கு மாளிகை விட்டு ஐவரும், அன்னை குந்தியும் தப்பியபின் அவர்கள் கண்டது ஒரு மலைச்சாரல்; அது ஒரு பெருங்காடு; அங்கேயே இடிம்பன் என்பவன் வாழ்ந்து வந்ததால் அதற்கு இடிம்பவனம் என்று பெயர் வழங்கியது. அவ்வனத்தில் வாழும் இடிம்பன் என்ற அரக்கனின் தங்கை இடிம்பி என்பவள் வீமனை வந்து சந்தித்தாள்.

செந்தீ போன்ற செம்பட்டை மயிர் உடைய அரக்கி யாகிய இடிம்பி அரச மகள் போல் தன்னை அழகுபடுத்திக் கொண்டு அடல் ஏறு போன்ற வீமன் முன் நின்றாள்.

“நள்ளிரவில் கள்வரைப்போல வந்தது ஏன்? மற்றும் துணையாக உள்ள நால்வர் யார்? அன்னைபோல் அருகில் உள்ள மூதாட்டி யார்?” என்று வினவினாள்.

“என்னை வினவ நீ யார்? அதை முன்னர்ச் சொல்க” என்றான்.

“இந்திரசித்து நிகர் இளங்காளையாகிய இடிம்பனின் தங்கை யான்! அவன் அனுப்ப யான் இங்கு வந்திருக்கிறேன்” என்றாள்.

“விருந்து வைக்கவா?”

“அருந்தி உண்ண”

“மருந்து நான் என்பது உனக்குத் தெரியாது”

“சாகா மருந்து என்பதால்தான் உன்னை நேசிக்கி றேன். புத்திசாலி என்று நினைக்கிறேன்; புரிந்து கொள் வாய் என்று யாசிக்கிறேன்”

“கண்டதும் காதலா”

“ஊறுகாயைக் கண்டால் நா ஊறுவதை யாரால் தடுக்க முடியும். மாரன் என்னைத் துளைக்கிறான்; அதனால்தான் உன்னை வளைக்கிறேன்”

“வெட்கம், நாணம், அச்சம் இவற்றை விட்டுப் பேசுவது ஏன்?” .

“அதுதான் காதலின் வெற்றி; விளக்க நேரம் இல்லை: புறப்படு என்னொடு; தப்பித்துச் சென்று விடலாம்; இல்லையேல் என் தமையன் இடிம்பனின் இடிபாடுக்கு நீ இரையாக வேண்டியதுதான்”

“இந்த அச்சுறுத்தல் என்னை ஒன்றும் அசைக்காது; முத லில் அவன் வரட்டும். அவனைப் பார்த்துப் பேசுகிறேன்”

“அதுவும் முறைதான்; என்றாலும் அவன் அனுமதி தேவை இல்லை; மணம் என் விருப்பம்!”

“இல்லை அவனைப் பிணமாக்குவதற்கு”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது சிவ பூசை யில் கரடி புகுந்ததைப் போல இடிம்பன் வந்து சேர்ந்தான்.

“யாரடா நீ? என் தங்கையிடம் உனக்கென்ன பேச்சு?"

“பெண் என்பதால் பேசுகிறேன்; வீரனாக இருந்தால் விளையாடி இருப்பேன்” என்றான்.

“காதலா அரக்கியோடு சல்லாபமா? உன்னை வானுலகம் அனுப்புகிறேன்! அங்கே அரமகள் உன்னை அர வணைப்பாள். அழகியர் அங்கே அநேகர் உளர்; உன்னைக் கட்டி அணைப்பர்!”

இருவரும் நெருங்கிப் போர் செய்தனர். இடிகள் இடிப்பது போல் பேரொலி எழுந்தது; தம்பியரும் தருமனும் ஒதுங்கி நின்றனர். குந்தி சற்றுத் தொலைவில் நின்றாள்; பாசத்துக்கும் காதலுக்கும் போராட்டம் நடந்தது. தமையனா காதலிக்கும் புதியவனா யாரை இழப்பது என்று தெரியாமல் இடிம்பி அலைமோதினாள்.

காதல் வென்றுவிட்டது; சாதல் இடிம்பனைத் தழுவியது.

தம்பியரும் தருமனும் “இவன் எதிரிகளைத் தாக்கும் வலிமையும் வீரமும் ஆற்றலும் உடையவன்” என்று அறிந்து மகிழ்வுகொண்டனர்; இடிம்பி அவலமும் உவகையும் ஆகிய இரண்டு உணர்வுகளில் அலைமோதினாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. இடிம்பியின் வாழ்க் கையும் புலர்ந்தது.

துணிந்து தன் காதற் குறிப்பை இடிம்பி வீமனிடம் வெளியிட்டாள். தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினாள்.

“அரக்கி நீ; மானுடன் நான்; சூர்ப்பனகை கதை கேட் டிருப்பாய்? அந்தக் கதிதான் உனக்கு நேரும்; விலகி விடு”

நீ என்னோடு விளையாடுகிறாய்; என் அண்– ணன் தருமனுக்கே இன்னும் மணம் ஆகவில்லை; எனக்கு எப்படி மணம் ஆகும்?”

“இங்கே இலக்குவன் இல்லை; இருந்தால் அவன் இலக்கு வேறாக இருக்கும்” என்று கூறி விரட்டினான்.

குந்தி நினைத்துப் பார்த்தாள்; அவள் காதல் உள்ளத்தை மதித்தாள். தமையனை இழந்து தனியாளாக இருப்பதையும் உணர்ந்தாள். தன் மற்றைய மக்களோடு பேசி ஒரு முடிவுக்கு வந்தாள்.

வீமனுக்கு ஏற்ற உடல்கட்டும் உரமும் உடையவள்; வந்தவளை உதறித்தள்ளுவது தரமும் அன்று” என்று முடி வுக்கு வந்தாள்.

அவனை மருகியாக ஏற்றுக் கொண்டாள். இடிம்பி மானுடக்காதலில் வெற்றி பெற்றாள். அரக்கியாக இருந் தால் என்ன? அவள் பெண்மை வெற்றி கொண்டது.

இவ்வாறு இடிம்பியின் புது உறவோடு அவ்வனத்தில் பாண்டவர்கள் இருந்தபோது வியாசன் அவர்களை வந்து சந்தித்தான்.

“மனித நடமாட்டம் இல்லாத இந்த மலைச்சாரலை நீங்கி முனிவர்கள் தங்கி வதியும் சாலி கோத்திரம் என்னும் வனத்தில் தங்குவீர்; பின் வேதியர் மிக்கு வாழும் வேத்திரகீயம் சேர்வீர்” என்று விளம்பி அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

சாலி கோத்திரம் என்னும் வனத்தில் சில காலம் தங்கினர். முருகனும் வள்ளியும்போல வீமனும் இடிம்பியும் ஒருவரை ஒருவர் விரும்பி இன்ப வாழ்வு பெற்றனர். சோலைகளிலும்,மலைச்சாரல்களிலும் திரிந்து விளையாடி இளமையின் இனிமையை நுகர்ந்தனர். அவளும் குந்தி யிடம் அன்பும் மதிப்பும் வைத்து மற்றவர்களுக்கு உதவி மாமி மெச்சும் மருமகளாக வாழ்ந்தாள். அவள் பணி அவர்களுக்கு மிகவும் பயன்பட்டது.

காதல் வினையில் ஒரு நன் மகனை இடிம்பி பெற்றெடுத்தாள். தாயின் நிறமும், தந்தையின் திறமும் கலந்த கலவையாக அவன் விளங்கினான். அவனும் வளர்ந்து மதிக்கத்தக்க வயதும் அறிவும் பெற்றவனாக விளங்கினான். திண்மையும் உரமும் பெற்றுத் தறு கண்மையோடு அச்சிறுவன் விளங்கினான். கடோற்சகன் என்னும் பெயர் அவனுக்கு அமைந்தது. அவன் தம் தந்தைமாரை நோக்கி “வேண்டும் போது நான் வந்து உங்களுக்கு உதவுவேன்” என்று கூறித் தன் தாயோடு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம் சொந்த ஊராகிய இடிம்ப வனத்தை அடைந்தான். வியாசன் கூறியபடி பாண்டவர்கள் அந்தணர் மிக்கு வாழும் வேந்திரகீயம் நோக்கிப் புறப்பட்டனர்.

ஏக சக்கர நகரம் என்ற ஊரின் அக்கிரகாரப்பகுதி வேத்திரகீயம் எனப்பட்டது. வேத சாத்திரம் கற்ற முனிவர்களைப் போலப் பாண்டவர்கள் தம் உருவத்தை மாற் றிக் கொண்டு கோத்திரம், சூத்திரம், குடிப்பெயர்கள் இவற்றைக் கொண்டு அவர்களோடு தங்கி உறவுகொண்டனர்.

அந்தணர் ஐவரும் அவர்கள் தாயரும் அந்த நகர் வந்தனர். கோத்திரம் பேசிப் பாத்திரத்தோடு வந்த வரைச் சாத்திரம் அறிந்த அந்தணர் என்று ஊரவர் கருதி ‘அதிதியர்’ வந்துள்ளனர் என முகமன் கூறி அவர்களை வரவேற்றனர். அவர்களுள் நல்லுள்ளம் படைத்த அந்தணன் ஒருவன் தன் மனையில் வந்து தங்கி இருக்கும்படி நருமனையும் அவன் தாயையும் தம்பியரையும் அழைத்து வரவேற்றான்.

இடம் அகன்ற மாளிகைபோல் இருந்த அவ்வீட்டில் இருந்து கொண்டு தினத்துக்கு ஒரு வீடு என முறை வைத்துக்கொண்டு உணவு அருந்தினர். எந்த விதக் குறைவும் இல்லாமல் மன நிறைவோடு அந்த ஊரில் அவர்கள் தங்கி இருந்தனர்.

பார்ப்பனியின் அழுகை

தாம் தங்கி இருந்த வீட்டில் அவ்வீட்டிற்கு உரிய தலைவி சோகமாகக் கண்ணிர் உகுத்துக் கொண்டிருந்தாள். குந்தியின் நெருங்கிய தோழியாகப் பழகியவள்; அழகி; விரதங்களை மேற் கொண்டு மங்கலகரமான வாழ்க்கையை உடையவள்; எந்தக் குறைவும் இல்லாத குடும்பம் அது; ஒரு மகன்; ஒரு மகள்; அன்புக்கினிய கணவன்; மாளாத செல்வ வாழ்க்கை இவ்வளவு இருந்தும் அவள் அழுதது குந்தியின் உள்னத்தை உருக்கியது; அவளிடம் பரிவு காட்டினாள்.

“தேம்பித் தேம்பி அழுகிறாயே. காரணம் என்ன? இயம்புக” என்று வினவினாள்.

“இந்த நகரை அடுத்துப் பேய் உறையும் பெருங்காடு இருக்கிறது. அங்கே ஒரு அரக்கன் இருக்கிறான்; பகன் என்பது அவன் பெயர். பகாசூரன் என்றும் கூறுவர். அவன் மிகவும் பொல்லாதவன். ஊருக்குள் புகுந்து, ஆடு மாடுகளையும், மனித உயிர்களையும் கொன்று தின்று வந்தான். தேவைக்குமேல் கொலை செய்து அழிவு செய்து வந்தான். ஊர்ப் பெரியவர்கள் கூடி அவனிடம் ஒர் ஒப்பந் தம் செய்து கொண்டனர்.

“உனக்கு ஒரு நாளைக்கு வேண்டிய உணவோ மிகவும் சிறியது; நீ கொன்று அழிப்பதுவோ அதனினும் பெரிது; அவை வீண் ஆகிவிடுகின்றன. நாங்களும் யாருக்கு எப்பொழுது என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டே இருக்கிறோம்; வீட்டுக்கு ஒரு ஆளும் மாடும் தினந்தோறும் முறை வைத்துக் கொண்டு நாங்களே அனுப்பி விடுகிறோம். நீ ஊருக்குள் வரவேண்டாம். நீ இருக்கும் இடம் தேடி உணவு உரிய நேரத்தில் வந்து விடும் என்று சொல்லி ஏற்பாடு செய்துள்ளனர்”.

“தப்பித் தவறி எதிர்த்தால் அந்தக்குடும்பமே நாசம் செய்து விடுவான். தின்பதும் குறைவு அல்ல; ஒரு வண்டி நிறையச் சோறும் கறியும் கொண்டு செல்ல வேண்டும்”.

“இன்று முறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது; யாரை அனுப்புவது என்று கலங்கிக் கொண்டு இருக்கிறோம்”

“மகளை அனுப்புவதாக இருந்தால் அவள் ஒருவனுக்கு மனைவியாகி விட்டாள். மகனை அனுப்புவதாக இருந்தால் குடிக்கு ஒரே மகன் அவனை இழந்து விட்டு எங்களால் வாழ முடியாது. என் கணவனை அனுப்புவதாக இருந்தால் அதற்கப்புறம் எங்களுக்குப் பாதுகாவல் இருக்காது. நானே போவது என்றால் இந்த வீட்டைக் கவனித்துக்கொள்ள வேறு ஆள் கிடையாது. இந்தச் சூழ் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறோம்” என்றாள்.

“இதற்காகவா கவலைப்படுகிறாய்? வீமனைப்போல என் மகன் ஒருவன் வாட்டசாட்டமாக இருக்கிறான். அனுமனைப்போல் ஆற்றல்படைத்தவன். அவனிடத்தில் இந்தச் சூரன் தவிடுபொடியாக வேண்டியதுதான், பிராமணகுலத்– தில் பிறந்துவிட்டான் என்று பார்க்கிறாயா? நம்மவர்களில் பலர் இப்பொழுது எல்லாம் சிப்பாய்களாக எத்தனையோ பேர் அத்தினாபுரியில் வேலை செய்கிறார்கள். இவன் வேதம் மட்டும் அல்ல; மல்யுத்தமும் கற்றிருக்கிறான்.இவனை வெறும் சாப்பாட்டு ராமன் என்று நினைக்கிறாயா? அதுதான் இல்லை; சொன்னால் போதும்; போய் அவனை உண்டு இல்லை என்று பார்த்து விட்டு வந்து விடுவான். ‘இடிம்பன்’ என்ற ஒரு அசுரன் இருந்தானே தெரியுமா? அவன் இவன் கைக்கு இடியாப்பம் ஆகிவிட்டான்; அவனுக்கு ஆசை, பாண்டவர் படையில் சேர்ந்து வீமனைப் போல் சண்டை போட வேண்டும் என்று; என்ன செய்வது வேத கீதத்தில் அவன் நாதம் அடங்கிக் கிடக்கிறது. ஏதம் வராமல் அவன் உங்களைக் காப்பான்”.

“நீ கவலைப்படாதே; அவனை அனுப்பி வைக்கிறேன்; நீ போய் சாப்பாடு தயார் செய்; வண்டிக்கு ஏற்பாடு செய்; அவன் வந்து விடுவான்” என்று கூறி ஆறுதல் தந்தாள்.

அந்த வீட்டு அம்மையாருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. நால்வரில் யாரை இழப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு விடுதலை கிடைத்தது. இவன் அவனைக் கொள்ளாவிட்டாலும் இன்றைய உணவுக்கு இவன் இரையாவான்; அந்தக் குடும்பத்தினர் தப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் மனச்சாட்சி உறுத்தியது.

“அதிதியாக வந்தவருக்கு அழிவு சேர்ப்பது தவறு அல்லவா! என்று கேட்டாள்.

“அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகும்; அவன் சாக மாட்டான், கெட்டி ஆயுள்; இந்த ஊரைப்பிடித்த சனியன் ஒழிந்து விடும்; உனக்குச் செய்யும் நன்மை மட்டும் அல்ல; தீயவன் ஒருவனைத் தீர்த்துக்கட்டுவது மனித தர்மம். தருமம் தழைத்து ஒங்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை, பெரியவன் இருக்கிறானே அவனும் அப் படித்தான்; தர்மம் பிசகமாட்டான்; அவன் தம்பி இன் னும் மிகவும் சுறுசுறுப்பு;மற்ற இரண்டு பேரும் பார்த்தால் பசுப்போல் சாதுவாக இருப்பார்கள். ஆனால் பயங்கர மானவர்கள்; அரச குடும்பத்தில் பிறக்க வேண்டியவர்கள்; அதிருஷ்டக்கட்டைகள்” என்று நயமாகப் பேசினாள்.

அழுகை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. எங்கிருந்துதான் சுறுசுறுப்பு வந்ததோ அந்தக் குடும்பத்தில்; அனைவரும் பகனுக்குச் சோறு சமைப்பதில் ஈடுபட்டார்கள். சோறா அது? முத்துக்குவியல் எனச்சோறு வடித்துக் கொட்டப்பட்டது. கயிலை மலையே இதன்முன் வெள்ளிக் குன்றாகக் காட்சி அளித்தது. மொண்டு சொரியும் குழம்பு வகைகளும், கடித்துத் தின்னத்தக்க கறிவகைகளும், பாலும், தயிரும், நெய்யும், பருப்பும் சமைத்து வைக்கப்பட்டன. அவற்றை வண்டியில் ஏற்று முன் பாண்டவர் ஐவரும் ஒரு கை பார்த்து விட்டனர்; வண்டியின் சுமையைக் குறைத்தனர்; வயிறார உண்டனர். பசி யாரத் தின்றனர். இவர்கள் உண்டு மீதியானவற்றை ஒரு வண்டியில் இட்டு நிரப்பினர். எருதுகள் இரண்டினை அவ் வண்டியில் பூட்டினர். குருதி கொட்டிய சோறு எனக்காட்சி தருவதற்குச் செந்நிற மலர்களைத் தூவினர். குருதி போன்ற கலவைச்சாந்து பூசினர்.

பகாசூரன் மரணம்

வண்டி வரும் போதே சூரனின் பசியை அது கிண்டியது, வீமன் சிங்கம் போல் சீறிய நிலையில் அவ்வண்டி முன் அமர்ந்து அதை ஒட்டி வந்தான். ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் வண்டி நிறுத்தப்பட்டது. காத்திருந் தவன் வண்டியில் இருந்த வகையான ஆளைக்கண்டு உவகை கொண்டான். நொய்ந்து கிடந்த அந்தண மைந்தர்களை உண்டவன் கொழு கொழுத்த நரனைக் கண்டதும் நாவில் நீர் ஊறக் காத்து இருந்தான்.

வேண்டுமென்றே அவன் பார்த்து வேகும்படி முதுகுப் புறம் பகன் காண அவ்வுணவினை அள்ளித் தின்றான். அவன் உள்ளம் கொதித்தது.

“ஏன் அடா உனக்கு என்ன திமிர்? கொண்டு வந்த சோற்றை நீயே சுவை பார்க்கிறாயே? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லிக் கொண்டு முதுகுப் புறம் வந்து இரண்டு குத்துகள் விட்டான். சோறு உள்ளே சென்றது. அப்பாடா நன்றி; இன்னும் இரண்டு குத்து விடு’ என்றான்.

“புலிக்கு இட்ட உணவைப் பூனை நீ உண்பதா?” என்று கூச்சவிட்டான்.

“உண்பது எங்கே போகப்போகிறது! அதுவும் உன் வயிற்றில் தானே பின் சேரப்போகிறது” என்று சொல்லிக் கொண்டு வீமன் பகனை நெருங்கினான்.

அருகில் வந்ததும் நெருக்கு நேர் வீமன் சந்தித்து, “பேசுவது போதும்; மோதுவது செய்வோம்” என்றான்.

“இழுத்துப்பிடித்து வேட்டியை இறுக்கக் கட்டிக் கொள். அழுத்திப் பிடித்து உன்னை உடம்பு பிடித்து விடுகிறேன்” என்றான் வீமன் தொடர்ந்து. இருவரும் மற்போர் தொடங்கினர். கைகளும் கைகளும் பிணைத்தனர். கால்களோடு கால்களைப் பின்னிக் கொண்டனர். தலையோடு தலை மோதிக் கொண்டனர். கொடிய சிங்க ஏறுபோல உறுமிய வண்ணம் அவர்கள் மற்போர் செய்தனர். பின் மரங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். கற்களை வீசிக் குருதிக் கறைபட மலைந்தனர். களிறுகள் செய்யும் போரினை அக்காளையரிடம் காணமுடிந்தது.

வீமன் விட்ட உதையால் பகனின் விலா எலும்பு சிதைந்தது; மார்பு குன்றியது; முதுகு முறிந்தது; இரு கன்னங்களும் குழிந்தன. நீட்டிக் கொண்டிருந்த பற்கள் தம்மைக் காட்டிக்கொள்ளாது மண்ணில் விழுந்தன. அவன் செயலிழந்து மரம் போல நின்று விட்டான்.

உணவு இல்லாது பசியால் வாடிய அந்த அரக்கன் மேலும் மேலும் தாக்கப் பெற்றுத் தளர்ந்து சாய்ந்தான். அவன் மார் பின் மீது யானையின் மத்தகம் நோக்கிப் பாயும் சிங்கத்தைப் போல ஏறி மண்டியிட்டு உட்கார்ந்து அவன் கழுத்தை நெரித்துத் திருகி அவன் உயிரைப் போக்கி அவனை அவ்வண்டியில் தூக்கி எறிந்து போட்டுக் கொண்டு அதனை ஊர் வெளிப்புற வாயிலில் கொண்டு சேர்த்தான்.

ஏக சக்கர வனம் என்ற அப்பெருங்காட்டில் தங்கி இருந்து ஊருக்கு ஊறு விளைவித்து வந்த அசுரனை வீமன் தாக்கிக் கொன்று அவர்கள் தொல்லைகளைத் தீர்த்தான். அவனும் நீரில் சென்று நீராடி உடற்களைப்பைப் போக்கிக் கொள்ளச் சென்றான். ஊரார் புகழத்தான் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தான். அவர்களை வணங்கி அடக்க ஒடுக்கமாகத தான் செய்த செயலைச் சுருக்கமாகக் கூறி அவர்கள் மகிழ்ச்சியைப் பெருக்குவித்தான். நன்றிக் கடனோடு அவனை நயந்து பார்த்துத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். வீட்டில் விளக்குகள் வைத்து ஒளி ஏற்றி விழாக் கொண்டாடினர். குந்தியையும் தருமனையும் வணங்கித் தம்பியரிடம் அளவளாவி அவன் மகிழ்ச்சி காட்டினான். தீயவரை ஒழித்து நல்லோரைக் காக்கும் தெய்வத் திருமால் போல இவன் செய்கை இருந்தது என ஊரார் பாராட்டினர். அவ்வூரில் வளைந்திருந்த முதுகுகள் நிமிர்ந்து நின்றன. எந்த அசுரனும் வந்து தம்மை அண்ட முடியாது என்று பெருமை அடைந்தனர். ஊர் விழாக் கோலம் பூண்டது.வீமன் மாவீரன் என்று புகழப்பட்டான். பகனை ஊரார் அடக்கம் செய்தனர். மாவீரன் கதையைப் பற்றிப் பேசுவதில் மகிழ்வு காட்டினர்.

2. திரெளபதியின் சுயம்வரம்

துரோணனுக்கும் துருபதனுக்கும் பகை திரெளபதியின் பிறப்புக்குக் காரணம் ஆயிற்று. அடிபட்ட வேங்கை பதுங்கிப்பாயும் முயற்சியே துருபதனது. எப்படியும் துரோணனை உயிர் பறிப்பது என்று உறுதிகொண்டான். துரோணனுக்குப் பக்க பலமாக இருந்தவன் விசயன். அவனை வளைத்துப் போட்டுக்கொண்டால் துரோணன் தணிந்துபோக வேண்டியதுதான். துருபதன் தன் மகன் திட்டத்துய்மனைக் கொண்டு எளிதில் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டான்.

பிறந்தவுடனே பெரிவளாகச் சிறந்தவள் திரெளபதி. வனப்பு அவளை நாடி வந்து தேடிப் பெற்றது; பிறப் போடு கூடி வந்த ஒன்றாக இருந்தது. பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்புக்கு இரையாகி விட்டார்கள் என்ற செய்தி பரவியது. எனினும் துருபதன் நம்ப

2. திரெளபதியின் சுயம்வரம்

துரோணனுக்கும் துருபதனுக்கும் பகை திரெளபதியின் பிறப்புக்குக் காரணம் ஆயிற்று. அடிபட்ட வேங்கை பதுங்கிப்பாயும் முயற்சியே துருபதனது. எப்படியும் துரோணனை உயிர் பறிப்பது என்று உறுதிகொண்டான். துரோணனுக்குப் பக்க பலமாக இருந்தவன் விசயன். அவனை வளைத்துப் போட்டுக்கொண்டால் துரோணன் தணிந்துபோக வேண்டியதுதான். துருபதன் தன் மகன் திட்டத்துய்மனைக் கொண்டு எளிதில் கொன்று விடலாம் என்று திட்டம் போட்டான்.

பிறந்தவுடனே பெரிவளாகச் சிறந்தவள் திரெளபதி. வனப்பு அவளை நாடி வந்து தேடிப் பெற்றது; பிறப் போடு கூடி வந்த ஒன்றாக இருந்தது. பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்புக்கு இரையாகி விட்டார்கள் என்ற செய்தி பரவியது. எனினும் துருபதன் நம்ப வில்லை. வானில் இருந்து எழுந்த குரல் அவனுக்கு அருச்சுனனைக் காட்டியது: நம்பிக்கை வளர்ந்தது; மற்றும் இடிம்பன், பகன் முதலியவர்கள் இறந்த செய்தி பரவியது; அவர்களை அழிக்கும் ஆற்றல் வீமனுக்கே உண்டு என்பது நாடறிந்த செய்தி, அதனால் அவன் துணிந்து சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து ஒலைகள் போக்கி அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

வில்லை வளைத்து வீரம் காட்டி மணக்கும் ஆசையில் வந்தவர் சிலர்; அந்த மண விழாவிற்கு வந்து ஆசீர்வதிக்க அழைக்கப்பட்டவர் சிலர். பரிசில் கிடைக்கும் என்று குழுமிய கலைஞர்கள் பலர். மூட்டை முடிச்சுகளோடு கல்யாணக் சாப்பாடு சாப்பிட முன் கூட்டி வந்தவர்கள் பலர்; மணவிழாவில் வேள்வி முன் சடங்குகள் இயற்ற வந்த அந்தணர்கள் சிலர். இப்படி அந்த ஊர் புதியவர் களைக் கொண்டு விழாக்கோலம் பூண்டது.

செய்தி அறிதல்

பாஞ்சால நாட்டில் பசுந்தோகை மயில் போன்ற திரெளபதியின் சுயம்வரத் செய்தி வேத்திரகீயமும் எட்டியது. புரோகிதம் செய்து பிழைப்பு நடத்தும் பிராமணர்கள் இச்செய்தியைப் பரப்பினர். ஊரில் உள்ள சுறுசுறுப்பானவர்கள் சிலர் மணவிழா கண்டு மகிழவும், மன்னன் தரும் கொடைப் பொருளைப் பெற்று வரவும் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டனர்.

குந்திக்கு வேத்திரகீயம் அலுத்துவிட்டது; இரந் துண்ணும் வாழ்க்கையை நடிப்புக்கு ஏற்றனர். அதனின்று விடுபட்டுப் புதுவாழ்வு தேட விரும்பினாள். அத்தினாபுரி அடைந்து உரிய பாகம் முற்றும் பெற்றுத் தம் மைந்தர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினாள். அதனால் அந்தப்பார்ப்பனச் சேரியில் பதுங்கிக் கிடப்பது பயன் இல்லை என்பதால் மைந்தர்களிடம் சொல்லிப் புறப்படச் செய்தாள்.

கால் கடுக்க நடந்து காரிருளில் அருச்சுனன் விளக் கேந்தி ஒளி காட்ட ஊர் கடந்து சென்றனர். அவர்கள் குடும்ப நலத்தில் அக்கரை கொண்டிருந்த வியாசன் வழியில் சந்தித்து அங்குச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டினான். திரெளபதி மாலை சூட்டும் அவ் விழாவில் இவர்கள் துணிந்து வெளிப்படுதல் தக்கது என்று சொல்லிவிட்டுச் சென்றான். முகவரி தேடியவர்களுக்கு முகதரிசனம் தர வாய்ப்பாகவும் கொண்டனர்.

பாஞ்சாலப் பயணம்

மறுநாள் பொழுது விடிவதற்குள் பாஞ்சாலம் சேர்வது என்று நடையை விரைவுபடுத்தினர். வழியில் ஒரு நீர்த் துறைவழியே செல்லும் போது அதில் விளையாடிக் கொண்டிருந்து சித்திர ரதத்தில் வந்த கந் தருவன் ஆவேசம் கொண்டு அருச்சுனனைத் தாக்கினான். அந்தணன் என்று நினைத்து அவனை அதட்டிப் பார்க்கலாம் என்று கை நீட்டினான்; அவன் செந்தழலினன் என்பதை அவன் தன் அம்பு கொண்டு தேரைக்கரியாக்கியதில் இருந்து தெரிந்து கொண்டான். வீரம் மிக்கவனைக் கண்டு அவன் சாரமுள்ளவன் என்பதால் அவனிடம் பேரம் பேசினான். நட்புரிமை பூண்டு அவனுக்கு வழிகாட்டியதோடு தௌமிய முனிவனை அறிமுகம் செய்து வைத்து அவனோடு பாஞ்சாலம் செல்லுமாறு பகர்ந்தான்.

பொழுது விடிந்தது; தென்றல் வீசிச் சுகத்தைத் தந்தது; பொய்கை ஒன்றில் பூத்திருந்த தாமரை மலரில் தேன் உண்ண வண்டுகள் சுற்றி வந்தன. வலிமை மிக்க வண்டு ஒன்று தன் சிறகால் அவற்றைத் துரத்தி விட்டு அம்மலரில் அமர்ந்து தேன் உண்ணும் காட்சியைக் கண்டனர் :

அந்நீர்த்துறை அருகே மாங்கனி ஒன்று விழ அதன் மீது அங்கிருந்த மீன்கள் எல்லாம் தத்தமக்கு உரிய இரை என்று தாவின. அதற்கு முன் வாளை மீன் பாய்ந்து அதனைக் கவ் விக் கொள்ள ஏனைய மீன்கள் ஏமாற்றம் அடைந்தன.

மரங்கள்தோறும் குயில்கள் இருந்து அவர்களை விளிப்ப போலக் கூவிக் குரல் எழுப்பின.

குயில்கள் தோகை விரித்து ஆடி அவர்களுக்கு மகிழ்ச்சியை அறிவித்தன. பூக்களில் சுரும்புகள் மொய்த்தன. நீர் நிலையில் பறவைகள் தங்கின. விலங்குகள் எல்லாம் துணைகளோடு மேவின. மரங்களைக் கொடிகள் தழுவின. வில்லைத் தாங்கிய இப்பாண்டவர்கள் வெற்றி உறுதி என்ற நினைவோடு இவற்றை நன்னிமித் தங்களாகக் கொண்டனர்.

நகரத்தின் மதில்களில் பூரண கும்பம் வைத்தனர். மங்கல முழவுகள் விம்மின; பல் இயங்கள் ஆர்த்தன; சங்குகள் முழங்கின; சேனைகளும் அவற்றிற்கு உரிய அரசத்தலைவர்களும் நகரில் நெருக்கமாகக் குழுமினர். வீதிகளில் கட்டியிருந்த கொடிகள் எல்லாம் வருபவரை வா என்று அழைப்பது போல அசைந்து அழகு செய்தன. ஆவண வீதிகளில் மாட மாளிகைகளின் வனப்பினைக் கண்ட வண்ணம் சிங்கம் பசுவின்தோல் போர்த்துக் கொண்டது போல இவர்கள் பார்ப்பன வடிவத்தில் பானை செய்யும் குயவன் ஒருவன் வீட்டில் சென்று அவன் விருந்தினராகத் தங்கினர். அன்னை குந்தியைக் குயவன் வீட்டில் தங்கச் சொல்லிவிட்டுத் தமக்குத் துணையாக வந்திருந்த தௌமிய முனிவனோடு அரங்கு நோக்கி ஐவரும் நடந்தனர்.

ஆதியில் சோதிடர் ஐவருக்கும் உரியவள் தான் என்று கூறிய சொற்களை நினைத்தவளாய் உவகை மிக்கவளாக திரெளபதி இருந்தாள். சோதிடம் பொய்க்காது என்றும், உரிய வீரர் தோன்றுவர் என்றும் தாதியர் தேற்றத் தன் மனத் தளர்ச்சி நீங்கியவளாய் இருந்தாள்.

தோழியர் சித்திரங்கள் பலவற்றைக் காட்டச் சீர் மிகு அரசர்கள் அவர்களுள் பேர்மிகு விசயன் கொடிமணித் தேரில் வரும் கோலத்தை மட்டும் பன்முறை பார்த்துப் பழகி வந்தாள்.

வேள்வியில் பிறந்த தான் கேள்விப்பட்ட அருச்சுனனே தனக்குக் கேள்வன் ஆவான் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாள். மன்றில் தனக்கு மாலை சூட்டி அவன் மணந்திலனேல் மறுபடியும் துன்றும் எரியில் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வது உறுதி என்று நினைத்தவளாய் அவன் வருகையை எதிர் நோக்கி இருந்தாள்.

அவைக்கு வந்த அணங்கு

பிறை போன்ற நெற்றியை உடைய திரௌபதியைத் தோழியர் பலரும் கூடிப் புனல் ஆட்டிப் புகையூட்டி மணக்கும் மாலையைச்சூட்டிக் காண்பவர் ஆண்மை தேய அழகு அமைய அலங்கரித்தனர். “குமரர் அனைவரும் வந்து விட்டனர். குமரிப் பெண்ணே வருக” என்று செவிலியர் அழைத்து அரங்கில் கொண்டு வந்து நிறுத்தினர். வீர மன்னர்கள் தம விழிகளால் அழலில் பிறந்த பேரழகியை ஆர்வத்தோடு நோக்கி மன்மதன் அம்பால் வெந்து உருகினர். நெருப்பில் பட்ட மெழுகு போல் உள்ளம் மெலிந்தனர். அழகுக்கு விலைதர வில் வித்தை தமக்கு இன்மைக்கு வருந்தினர்.

மேகங்களிடையே மறைந்து கிடக்கும் சூரியனைப் போல அரசர் கூட்டத்திடையே பாண்டவர்கள் மாறு வேடத்தில் இருந்ததை அவள் பார்வை அறிந்ததோ அறியவில்லையோ தெரியவில்லை. நிச்சயம் அவள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மனத்தில் காதல் மிக அதனால் மெலிந்து ‘எனக்கு எனக்கு, என்று. தமக்குள் சொல்லிக் கொண்டு காத்திருந்த காவலரை நோக்கிச் சினக் களிறு போன்ற திட்டத்துய்மன் நினைக்கவும் அரிய செயலைச் சொல்லி அறிமுகம் செய்தான்.

“வில் இது; அம்பு இது; குயவனது சக்கரம் போன்ற வேகத்துடன் திரிகின்ற சக்கரம் அது; அதன் ஆரைகளின் இடையே அம்பு எய்ய மேலே நிலை இல்லாமல் அசைந்து கொண்டே இருக்கும் இலக்கினைக் குறிபார்த்து வீழ்த்த வேண்டும். அவனுக்கே என் தங்கை மாலை இடுவாள்” என்றான்.

வைத்திருக்கும் தேர்வு அரிது; வினாவைக் கண்டு விடைத் தாளை மடித்து வைத்தவர் பலர்; அதில் வெற்றி பெறுவது இயலாது என்று தெரிந்தும் அணங்கின் மேல் வைத்த ஆசையால் நாணம் விட்டு அம்பு காண ஒரு சிலர் முன்வந்தனர்; மையிட்டு எழுதினர்; கைவிட்டுத் தாள் நழுவியது; அவள் கூரிய விழிகளைப் போன்ற அம்பினையும், அவள் புருவத்தைப் போன்ற வளைந்த வில்லினையும் காணுந்தோறும் அவர்கள் நெஞ்சு திடுக்கிட்டது. நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய உன் சகோதரன்; இவன் நம்பியவரைக் கைவிடாத நல்லோன் ஆவான்.”

“அதற்கு அடுத்து அமர்ந்திருப்பவன் கண்ணனின் தம்பி சாத்தகி; அடக்கம் உடையவன் ஆவான். அடுத்தவன் கண்ணனின் அத்தை மகன் சிசுபாலன். அவன் கண்ணனை இகழ்ந்து பேசுவதே தொழிலாகி விட்டது. சிக்கல் நிறைந்த வாழ்க்கை; சீராக வாழத்தெரியாதவன்.”

“கண்ணன் கம்சனைக் கொன்றான் என்பதற்காக சராசந்தன் அவனை வடமதுரையில் பதினெட்டு முறை தாக்கினான். அவன் கம்சனுக்குத் தன் மகளிர் இருவரை மணம் செய்து தந்தவன். அதனால் ஏற்பட்ட பகை இது. கண்ணன் தானே அவனைக் கொல்வது தேவை இல்லை என்பதால் வடமதுரையை விட்டுத் துவாரகைக்குப் போய் யாதவர்களுடன் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறான். இதனைக் கோழைத் தனம் என்று பல முறை சராசந்தன் சாடி வருகிறான்.”

பகதத்தன் என்பவன் நரகாசுரனின் மகனாவான். இந்திரனுக்கு இவன் உதவி செய்ததால் சுப்ரதீபம் என்ற யானையை இவனுக்கு இந்திரன் அளித்திருக்கிறான்; இந்த யானை மீது இவன் இவர்ந்து வந்தால் இவனை யாரும் வெல்ல முடியாது.”

“அடுத்தது சல்லியன்; மன்னர்களுள் சிங்கம் போன்றவன்; மாத்திரியின் சகோதரன் இவன்.”

“அடுத்தது நீலன்; அழகு மிக்கவன் இவன்.”

“அடுத்தது பாண்டியன்; தமிழ் அறிந்தவன்.”

“அடுத்தது சோழன்; காவிரி பாயும் திருநாடன், அவனுக்கு அடுத்து இருப்பவன் சேரன்; மலை நாட்டவன்."

எனினும் அவ்விலக்கை வீழ்த்திவிட்டால் திருமகள் போன்ற அழகுடைய அவளை அடையலாம் என்ற ஆசையால் செய்வது அறியாது திகைத்தனர். அம்பைத் தொடுப்பதா வம்பை விலைக்கு வாங்காமல் தணிந்து ஒதுங்கி விடுவதா என்ற இருவேறு மன நிலையில் அலைமோதினர்.

மன்னரை அறிமுகம் செய்தல்

செவிலித் தாயர் அமுது அனைய அவ்வழகிக்கு வந்திருந்த மன்னரைக் காட்டி இன்னார் இவர்கள் என அறிமுகம் செய்யும்வகையில் அவர்கள் பெருமை தோன்றப் பேசினர்.

“அதோ வாய் மூடி மவுனியாக இருக்கிறானே அவன் யார் தெரியுமா அவன்தான் துரியோதனன்; வில் இலக்கைக் காட்டிச் சுடர் விளக்கை அடைதல் சரியானது அன்று என்று கூறி மறுத்து இருக்கலாம். அப்படிச் சொன்னால் தான் வில்திறன் அற்றவன் என்று நினைப்பார்களே என்பதற்காக அவன் சொல்திறன் அற்றுக் கிடந்தான்.

அவன் சிரிக்கிறானே என்று நினைக்கிறாயா அவ்வளவும் நடிப்பு; அதுமட்டுமல்ல; தனக்கு நிகராக இப்பேருலகில் யாரும் இருக்க முடியாது என்று வீண் அகம்பாவம் கொண்டவன்” என்று கூறித் துரியனை அறிமுகம் செய்தனர்.

“துரியனுக்கு அருகில் இருக்கிறார்களே அவர்கள் தாம் அவன் தம்பியர் ஆவர். பாம்பின் தலைகள் பல இருப்பது போல இவனுக்கு உடன் பிறந்தவர் பலர் ஆவர். அவ்வளவு பேரும் நச்சுப் பல்லை உடையவர்கள்; கொடுமைக்குத் துணைபோகும் அச்சில் வார்த்த அடிமைகள் அவர்கள்” என்றனர்.

சகுனியைச் சுட்டிக்காட்டிச் “சூதுக்கும் சூழ்ச்சிக்கும் இவனுக்கு நிகர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அறிவாளி; சாணக்கியனின் மாணாக்கனாகத் தகுதி படைத்தவன்” என்றனர்.

அடுத்தது அசுவத்தாமனை அறிமுகம் செய்தனர்; “பேசாது அடங்கியிருக்கும் பேரறிவாளன் இவன்; போர் செய்யும் ஆற்றலினன். பிறப்பால் அந்தணன்; தொழில் சிறப்பால் வீரத் திருமகன். இவன் மேனி அழகில், படை வலியில், திண் தோள்வலியில் இவனுக்கு நிகர் யாரையும் கூறமுடியாது; இவன் துரோணனின் மகன் ஆவான்”.

அங்கதேசத்து அதிபதியாகிய கன்னனைப்பற்றிப் பேசும்போது அவன் உயர்வுகள் மிகுதியாகப் பேசப்பட்டன; உண்மை, வலிமை, உறவு, நெறி, தேசு, புகழ், வில் திறன், வண்மை இவை அத்துணையிலும் சிறப்பு மிக்கவன் இவன் என்று அறிமுகம் செய்தனர்.

அடுத்தது பலராமனை அறிமுகம் செய்தனர். நீலநிற ஆடையன் என்றும். கலப்பையைப் படையாக உடை யவன் என்றும், வசுதேவன் குமரன் இவன் என்றும் அறி முகம் செய்தனர்.

அடுத்தது கண்ணனை அறிமுகம் செய்தனர்.

“இந்தக்குரிசில் யது குலத்துத்திலகம். இவன் யது குலத்தில் பிறந்தவன்; இடையருடன் ஒருவனாய் வளர்ந்தவன். மாயம் வல்லவன் தன் மாமன் கம்சனின் உயிரை முடித்தவன்; இவன் சத்தியபாமையின் காதலன்; அவன் அவளோடு இந்திர உலகத்துச் சென்று கற்பகச் சோலையில் ஒய்வு எடுத்தவன்; மற்றும் சத்தியபாமைக்காகத் துவாரகையில் கற்பச் சோலையைக் கொண்டு வந்து நிறுவியவன் இன்னும் திராவிடம், சிங்களம். சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கெளடகம், குசலம் என்னும் பதினெண் தேசத்து அரசர்களையும் காட்டினர்.

இவர்கள் பட்டிமன்றத்துப் பார்வையாளர்கள் போல் அங்கே கட்டியிருந்த மண்டபத்தில் வீற்றிருந்தனர்.

“இவர்களுள் இலக்கினை வீழ்த்தி வெற்றி கொள்பவரையே நீ மாலை சூட்டி மணாளனாகத் தேர்ந்து எடுத்துக் கொள்வாய்” என்று செவிலியர் செப்பினர்.

அரசர்களின் அயர்ச்சி

முத்துப் போன்ற பற்களை உடைய திரெளபதியிடம் இவ்வாறு செவிலியர் சொல்லும்போது சித்திரம்போல் அசையாமல் தத்தம் ஆசனத்தில் இருந்தனர். ஆசனத்துக்கு அழகு கூட்டினர். துணிந்து அரசர்களில் சிலர் யானை போல்வார், யான், யான்’ என்று எழுந்தனர்.

யதுகுல வேந்தனாகிய வசுதேவன் பாண்டவர்கள் பார்ப்பன உருவில் வந்திருந்ததைப் பார்த்து விட்டு அதனைப் பலராமனிடம் சொன்னான். தம் குலத்து அரசரை வீண் முயற்சி செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினான். ஒரு சில அரசர்கள் வில்லை எடுக்க முடியாமல் அது பல்லை உடைக்கும் என்று வைத்து விட்டனர். இது மனுஷன் எடுப்பது அல்ல என்ற துவேஷத்தில் நீங்கினர். சல்லியன் வில்லை எடுத்தான்; நாண் ஏற்ற முடியாமல் வில்லோடு தானும் நாண் அற்றுக் கீழே விழுந்தான்; வீழ்ச்சியில் அவனுக்கு வில் துணை நின்றது.

பகதத்தன் நாண் பூட்ட முடியாமல் நாணித் தளர்ந்தான். சராசந்தன், நீலன், துரியோதனன் நாணினை அருகில் கொண்டு வந்து பூட்ட முடியாமல் சோர்ந்து முயற்சியைக் கைவிட்டனர். கன்னன் கயிலை மலையை எடுத்த இராவணன் போல வில்லை உயர்த்திப்பிடித்தான். நாண் மயிர் இழையில் பூட்ட முடியாமல் வில்லின் காம்பு தலைமுடியைத் தாக்கக் கீழே விழுந்தான்.

அரவநெடுங்கொடி உயர்த்திய துரியன் முதலாக உள்ள அரசர் அனைவரும் அந்த வில்லை வளைத்து நாண் ஏற்ற முடியாமல் வலிமை குன்றி, எழில் மாழ்கிச் செயலற்று, ஊக்கம் அழிந்து தத்தம் இருப்பிடம் சேர்ந்தபின் இந்தி ரன் மகனாகிய அருச்சுனன் மிதிலையில் வில்லை வளைத்த இராமனைப் போல இளங் கொடி இருந்த அவையை நோக்கி அணுகினான்.

அந்தணன் வடிவில் அருச்சுனன்

“மன்னர் மரபில் பிறந்து மண் ஆள்கின்ற இந்த மகிபர்க்கு அல்லாமல் மறை நூல் கற்ற அந்தணர்கள் இவ் வில்லை வளைத்து இலக்கினை வீழ்த்தினால் இளந் தோகை மாலை சூட்டுவாளா?” என்று கேட்டான்.

அதற்குத் திட்டத்துய்மன் எழுந்து, “அதனால் பெருமை கூடுமேயன்றிக் குறையாது” என்றான்.

சிவபெருமான் மேருமலையை எடுத்தது போல் அருச்சுனன் அவ்வில்லை எடுத்தான். நாண் ஏற்றினான்; அம்பு தொடுத்துச் சக்கரம் சுழலும் நிலையில் மேல் இருந்த இலக் கினைத் தாக்கி வீழ்த்தினான். வயவேந்தர் நாணம் அடைந்தனர். “தனு நூலுக்கு ஆசிரியன் இவனே யாவான்” என்று அவையோர் பாராட்டினர். குழுமியிருந்த அந்தணர்கள் ஆரவாரித்து மகிழ்ச்சி கொண்டாடினர். தேவர்கள் வாழ்த்தினர்.

தாம் தொடுவதற்கு இயலாத வில்லினை அவன் எடுத்து வளைத்து இலக்கினை வீழ்த்தினான் என்று அறிந்ததும் தரணிபர் தம்முகம் கருகி விட்டது; நீலமலை போல் நின்ற அந்தணனை அவன்தான் அருச்சுனன் என்று பாஞ்சாலர் கன்னி கண்டு கொண்டாள். தன் தாமரைச செங்கண்ணால் பாங்காகப் பரிந்து நோக்கித் தேன் பொதிந்த அழகிய செங்கழுநீர்ப்பூ மாலையை அருவி போல் அவன் தோள்களில் சேர்த்தாள். அதன்பின் பாஞ்சாலியை அழைத்துக் கொண்டு தம் துணைவர் இருபுறமும் வர அவையில் இருந்த மன்னர் களை மதிக்காமல் அருச்சுனன் வெளியேறினான்.

“எங்கிருந்தோ வந்த பார்ப்பனன் பாஞ்சாலன் பயந்த பாவையைத் தட்டிக் கொண்டு போகிறான்; அரசர்கள் என்று சொல்லிக் கொண்டு தலைகளில் மகுடம் தாங்கி நிலத்துக்குச் சுமையாக இருக்கிறீர்; மானம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் மாடுபோல் நிற்கிறீர். முதலில் அவனைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று துரியன் முழக் கம் செய்தான்.

முத்துப் போன்ற நகை. அழகி திரெளபதியை மூத்தவன் பின் நிறுத்திவிட்டு வீமனும் வில் விசயனும் அரசர் கூட்டத்தை எதிர்த்துப் போராடினர்; அந்தணர் கூட்டமும் தாம் கைகளில் வைத்திருந்த தடிகளைக் கொண்டே அரசர்களை ஓட ஓட விரட்டினர். இந்த அந்தணர்கள் துணிந்து தாக்குதலைக் கண்டு அருச்சுனன் சிரித்து விட்டு “நீங்கள் விலகுங்கள்” என்று சொல்லி அவர்களை அகற்றினான். “என் முன் எமன் வந்தாலும் அவனைத் தடுப்பேன்” என்று முழக்கம் செய்தான். அவனை அந்தணன் என்று நினைத்துக் கொண்டு சிவந்த விழிகளையுடைய கன்னன் அவமதித்து அவன் மீது அம்பு எய்ய அருச்சுனன் அதனை இரண்டாகப் பிளந்தான்; மற்றோர் அம்பு கன்னனின் மார்பைத் தாக்கியது; வீமன் சல்லியனைக் குத்தித் தூக்கி எறிந்தான். தோல்வி கண்ட சல்லியனும் கன்னனும் வென்றாலும் தோற்றாலும் அந்தணர்களோடு போர் செய்தல் வசையே என்று எண்ணிப் போர் தொடுக்காமல் அடங்கி விட்டனர்.

“இவர்கள் நூல் முனிவர் அல்லர்; வானத்தரசர் இந்திரன்.வாயு இவர்களின் குமரர்” என்பதைக் கண்ணன் குறிப்பால் அறிவுறுத்த மண்ணகத்து மன்னர் எல்லாம் பேசாமல் தாம் வந்த வழியே சொந்த நாடு நோக்கிச் சென்றனர்.

குந்தியைச் சந்தித்தல்

தட்டிப்பறித்துக் கொண்டு வந்த கனியை எவ்வாறு வெட்டிப் பங்கிட்டுக் கொள்வது என்று தெரியாமல் வீடு விரைந்தனர். வெளியே வீட்டு மருமகளை நிறுத்தி வைத்து விட்டு “இன்று பெற்றனம் ஒர் ஐயம்; என் செய்வது?” என்று செப்பினர்.

இரந்து பெற்ற உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தினால் இவ்வாறு கூறவே உள் இருந்த அன்னை அமுது என நினைத்து “நீர் சேர அருந்துவீர்” என்று சொல்லி வரவேற்றாள். வெளியே சென்று கள்ளவிழ் கூந்தலாளைக் கண்டாள். பிறகு தான் செய்த தவற்றை உணர்ந்தாள். கரும்பு என நின்ற காரிகையை விரும்பி எப்படிப் பகிர்வது என்று அதிர்ச்சி அடைந்தாள்.

“என்ன நினைத்து என்ன சொல்லி விட்டேன்; என்ன செய்தேன்” என்று சொன்ன சொல்லில் சோர்வு கண்டாள்.

அன்னையைத் தருமன் வணங்கி “நின் சொல் வேத வாக்கு ஆகும். நீ நினைத்துச் சொல்லியது அன்று; எங்கள் நெஞ்சிலும் இந்நினைவு உண்டு” என்று தருமன் ஒளிவு மறைவு இன்றிக் கூறினான். பார்த்தனைப் பயந்த பாவை யாகிய குந்தி “விதி வழி இது” என்று எண்ணி அமைதியுற்றாள். அன்று இரவு எல்லாம் முன்தினம் நடந்த சுயம்வரம் பற்றியும், விசயன் இலக்கு வீழ்த்தியது பற்றியும், அரசர் தம்மை எதிர்த்து ஓடியது பற்றியும் மைந்தர்கள் கூற உள்ளம் நெகிழ்ந்து அவற்றைக் குந்தி கேட்டு மகிழ்ந்தாள்.

துருபதன் அழைப்பு

பூவையைப் பெற்ற பூபதியாகிய துருபதன் அவ்வீரர் தம் பெருமிதத்தைப் பற்றியும், அவர்கள் பாண்டவர்கள் என்பது பற்றியும் ஒற்றரால் கேட்டு உணர்ந்து நெஞ்சத்தில் உவகை கொண்டான். மறுநாள் அவர்களைத் தம் மனைக்கு அழைத்து வந்தான். மற்றும் அவர்களைச் சிறப்புச் செய்யப் பல பொருள்களை அவர்கள் முன் வைத்தான், அவர்கள் போர்ப்படைக்கருவிகளை மட்டும் தேர்ந்து எடுத்துக் கொண்டனர். அதனால் அவர்கள் மறக் குடி வீரர் களாகிய பாண்டவர்கள் என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டான்.

கணையால் வென்று அவளைக் கைப்பிடித்த காதல னுக்கே அவளை மணம் முடிக்கக் கருதி அதைத் தெரிவித் தான். அதற்குத் தருமன் இடையிட்டு “ஐவரும் மணப் போம்” என்று கூறினான். அதனைக்கேட்ட துருபதன் திகைப்பும் தளர்வும் கொண்டான். “இது அடுக்குமா” என்று நடுக்கம் கொண்டான்.

வியாசன் தந்த விளக்கம்

வேத வியாசன் வந்து விளக்கம் கூறினான். “ஐவரை மணக்க வேண்டியது அவசியம்தான்; அதற்குக் காரணம் உள்ளது” என்றான்.

“இவள் சென்ற பிறவியில் நளாயினியாக இருந்தவள்; மவுத்கல்லிய முனிவனின் பத்தினி இவள். அவன் இவள் கற்பினைச் சோதிக்க வெறுக்கத் தக்க தொழு நோயாளியாகத் தன்னை மாற்றிக் கொண்டான்”.

“கச்சணிந்த அழகியாகிய அவள் கொண்டவன் உண்ட மிச்சிலையே உண்டு வந்தாள். அவன் அழுகிய விரல் ஒன்று அதில் விழுந்து கிடந்தது; அதனையும் பொருட் படுத்தாமல் அருவெறுப்புக் காட்டாமல் அவ் உணவை அமுதம் என உண்டாள்; இச்சித்த காதல் இன்பம் பெறாமல் இளைத்த மெய்யினள் ஆயினாள்”.

“அவள் கற்பின் சிறப்பை மதித்து அவள் விரும்பிய இன்பத்தை நல்க மன்மதன் போன்று அழகிய வடிவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அவள் ரதியானாள்.

“மின்னே! உனக்கு வேண்டும் வரம் கேள்” என்றான்’

“நின் நேயம் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்” என்றாள்.

இருவரும் இணைந்து ஈடற்ற இன்பம் அடைந்தனர்; இதயம் கலந்து இருவரும் உணர்வால் ஒன்று பட்டனர்; குன்று என வடிவம் எடுத்தால் அவள் நதியாக அவனைத் தழுவினாள்; அவன் மரமாக வடிவு எடுத்தால் அவள் கொடியாகத் தழுவினாள்; மேகமும் மின்னலும் என அவன் ஆகத்தைக் தழுவினாள்; இப்படிப் பல பிறவி– களில் தொடர்ந்து இன்பம் அனுபவித்தனர். அப் பிறப்புகளை அடுத்து ஒருபிறப்பில் அவள் இந்திரசேனை ஆனாள். அவனையே கணவனாக அடைந்தாள். அறுவை தந்த இல் லற வாழ்க்கையில் அலுத்துத் துறவறம் மேற்கொண்டான்.

அன்னோன் அவளைவிட்டு நீங்கவும் அவன் மேல் அவள் ஆசை மிகுந்ததே தவிரக் குறையவில்லை. அவள் அவனையே நினைத்து அருந்தவம் செய்தாள். சிவனிடம் முறையிட்டாள்.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவன் கேட்டான்,

“கணவன் வேண்டும்” என்ற ஆர்வத்தினால் அதை யே ஐந்து முறை கூறினாள் கணவனை வேண்டு மென் றாளே தவிர அம் முனிவனே தனக்குத் துணைவன் ஆக வேண்டும் என்று கேட்க மறந்தாள், அவ்வேண்டுகோளின் படி அவள் திரெளபதியாய்ப் பிறந்து இருக்கிறாள் என்று விளக்கினான்.

மற்றும் மீதி வரலாற்றையும் கூறத் தொடங்கினான் முன் நின்ற சிவன் அருள் செய்தபடி இந்திரசேனை கங்கையில் முழுகித் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தாள். கணவனை நினைந்து அழுது கொண்டிருந்த வளைக் கண்டு அவ்வழியாக வந்த இந்திரன், “ஏன் அழுகி றாய் பெண்ணே” என்று கேட்டான்.

அவனோடு தொடர்பு கொள்ள விரும்பி ஆசை பற்றி “வருக” என அவள் அழைத்தாள். அவனும் உருகி அவளை அடையும் ஆர்வத்தில் பக்கத்தில் இருந்த பரமசிவனை மதிக்காமல் அவள்பால் நெருங்கினான்; சிவன் “இவனுக்கு என்ன இவ்வளவு திமிர்” என்று அவன் மீது சீற்றம் கொண்டான். அதனால் இந்திரன் துஞ்சியனைப் போல் புலம்பிக் கீழே விழுந்தான்.

அவனை இழுத்துக் கொண்டு சென்று ஏற்கனவே இவனைப் போலச் செருக்குற்றுப் பதவி இழந்த நான்கு இந்திரர்கள் அங்கே பாதாள அறையில் அடைபட்டிருப்பதைக் காட்டினான். அவர்கள் ஐவருமாகச் சிவன் காலடிகளில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்; “நீவிர் ஐவீரும் மண்ணுலகில் பிறந்து இந்தப் பெண்ணுக்குக் கணவர் ஆவீராக” என்று கட்டளை இட அவர்கள் ஐவரும் பாண்டவராகப் பிறந்துள்ளனர்” என்று கூறினான் .

யமனுக்குப் பிறந்த தருமனும், வாயுவுக்குப் பிறந்த வீமனும், அசுவனி தேவர்களுக்குப் பிறந்த நகுல சகா தேவர்களும் பிலத்தில் அடைபட்டிருந்த இந்திரர் நால்வர் எனவும், இந்திரனுக்குப் பிறந்த அருச்சுனன் இந்த ஐந்தாவது இந்திரனின் பிறப்பு என்றும் கூறினான்.

இந்திரப்பதவி என்பது மாறி மாறி வரும் என்று கூறப்பட்டது. சிவனால் பதவி இறக்கப்பட்ட ஐந்து இந்திரர்களே மானுடப்பிறவி எடுத்து இந்திரசேனையை இங்கு மணக்கின்றனர் என்று வியாசன் கூறினான்.

இந்தக் கதைப்பின்புலம் பாண்டவர்கள் ஒரு சேர எடுத்த முடிவுக்கு அரண் செய்தது. “கட்டிக் கொள்கிறவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மனைவியாகப் போகும் காரிகையும் மறுப்புச் சொல்லவில்லை. அவளை வைத்து வழி நடத்தும் மாமியும் ஏற்கிறார். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும்இல்லை” என்று துருபதன் அம் மணத்துக்கு இசைவு தந்தான்.

மணவிழா

மணவிழா சிறப்பாக நடைபெற்றது. வேதம் கற்ற வேதியரும், முடிவேந்தரும் திரண்டுஇருக்க மணித்துரண்கள் நிறைந்த மண்டபத்துக்குப் பாண்டவர் வந்து சேர்ந்தனர். மண மேடையில் திரெளபதி வலப்பக்கமாகவும் தருமன் இடப்பக்கமாகவும் அமர்ந்தனர். தெளமியன் என்னும் வேதம் ஒதும் பார்ப்பான் புரோகிதனாக இருந்து மணம் நடத்தி வைத்தான். தீ வலம் செய்து, கைகளில் காப்புக் கட்டிக் கொண்டு பெருகிய ஓமத்திவும் இட்டான்; இவ்வாறே மற்றைய நால்வரும் மணமனையில் அடுத்து அடுத்து அமர்ந்து சடங்குகளுக்கு உள்ளாயினர்.

இல்லறம் இனிது நடைபெறத் துருபதன் நீர்வார்த்துக் கன்னிகா தானம் செய்தான்; மற்றும், தேரும், யானையும், சேனையும், நிலமும், தனமும் தமது என்று கூறி அவர்கள் உடைமையாக்கிக் கொடுத்தான். அவர்கள் அங்கு மருமகன்கள் என்ற உரிமையும் பெருமையும் பெற்றுச் சிறப்புடன் இருந்தனர்.

துரியனின் எதிர்ப்பு

பார்ப்பனர் யாரோ வந்து அந்தப் பாவையைக் கைப் பற்றினர் என்று பகை காட்டாமல் நாடு திரும்பிய துரியன் அவர்கள் பார்த்திபர் ஆகிய பாண்டவர் என்று அறிந்ததும் படை கொண்டு பாஞ்சால நாட்டின் மீது பாய்ந்தான்.

துருபதனின் படைகள் திறமை மிக்கவையாக இருந்தன; பாண்டவர்கள் தலைமையில் அவை செம்மை யாகப் போர் செய்தன. இறந்தவர் போக இருந்தவர் அனைவரையும் துருபதன் படை துரத்த அத்தினாபுரம் நோக்கிப் பின்வாங்கினர். கவுரவர்கள் ஆகிய பாம்பு அர்ச்சுனனின் நாண் ஒலியாகிய இடியையும் அப்பு ஆகிய பழையையும் கண்டு ஒட்டம் பிடித்தது. யானை முகத்தை உடைய தாரகாசுரன் முருகவேளுக்கு உடைந்து தோற்றது போல யானை போல வந்த கன்னன் நகுலனின் தாக்குதலுக்கு ஆற்றாது புறம் காட்டினான்; சகாதேவன் சகுனி தேரோடு திரும்பி ஒடும்படி தாக்கினான். தீ முன் வெண்ணெய் உருகுதல் போல வீமனைக் கண்டு துரியனும் துச்சாதனனும் மற்றும் உள்ள தம்பியரும் உறுதி குலைந்து ஒடினர். கன்னனும், துரியனும், துச்சாதனனும், சகுனியும் அரக்கு மாளிகையில் அழிக்க அனுப்பிய புரோசனின் கவனக்குறைவாலேயே பாண்டவர் பிழைத்து விட்டனர் என்று அவனை நினைத்து நொந்து கொண்டனர். பாண்டவர் வேள்வித் திருமகளை மணந்ததோடு வெற்றித் திருமகளையும் அடைந்த பெருமை பெற்றனர்; மாமன் துருபதனோடும் கண்ணனோடும் தங்கி அந்த மாநகரில் மாண்புடன் வைகினர்.

போர்மேற் சென்ற துரியோதனாதியர் போரில் பின் வாங்கியதை அறிந்து திருதராட்டிரன் புதுவகையில் சிந்தித்துத் தம்பியின் பாகத்தைத் தருமனுக்கு ஈவதற்கு அமைச்சரோடு கலந்து யோசித்தான்.

போர் செய்வதனால் எந்த நன்மையும் வரப்போவ தில்லை; அவர்களுக்கு உரிய ஆட்சியைத் தந்து விடுவதே அவர்களைத் துரியனுக்கு வேண்டியவர்கள் ஆக்கமுடியும். அதனால் தன் மகனுக்கு ஆக்கமே விளையும் என்பதால் இம்முடிவுக்கு வந்தான். வீடுமனும் விதுரனும் அதுவே தக்கது என்று உரைத்தனர். அதனால் அவர்களைத் துது அனுப்பி வரவழைத்து அத்தினாபுரியில் நிறுத்திக் கொண்டனர்.

இந்திரப் பிரத்த ஆட்சி

அத்தினாபுரியில் அய்யிரு பதின்மர் ஐவர் என்று பேத மில்லாமல் இரண்டறக்கலந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர்; அந்நிலையில் அமைச்சரையும் அரும் சுற்றத்தினரையும் அழைப்பித்துத் தருமனுக்கு ஆட்சி நல்கி முடி சூட்டினான் திருதராட்டிரன்.

அழுக்காறு துரியனை ஆட்டி வைத்தது. தருமனைக் காண்டவப் பிரத்தம் என்னும் வறண்ட நகருக்கு அனுப்புமாறு தந்தையைத் துண்டினான்.

இங்கிருந்தால் அவர்கள் இங்கிதமாக வாழ மாட்டார் கள் என்பதால் அவன்பாடிய சங்கீதத்துக்குத் தந்தை ஒத்து இசைத்தான்.பாழ்பட்ட நகரைப் பண்புடையதாக ஆக்கத் தருமனே தக்கவன் என்று சொல்லி அவனை அங்கு ஆட்சி செய்ய அனுப்பி வைத்தான்.

கண்ணன் காட்டைத் திருத்தி அங்கே வளநகர் உண்டாக்குமாறு இந்திரனிடம் சொல்ல அவன் வேத தச்சனாகிய விசுவகர்மனை அழைத்துக் கூறினான். இந்திரனின் ஆணையால் அச்சிற்பி அந்நகரை அமைத்து அழகு படுத்தினான். இந்திரன் புதுப்பித்ததால் அந்நகருக்கு இந்திரப்பிரத்தம் எனப் பெயர் உண்டாயிற்று.

இவர்கள் இங்கே இனிமையாக ஆட்சி செய்து வரும் நாளில் விண்ணவர் நாட்டு இசைஞானி நாரத முனிவன் இவர்களுக்கு நல் விருந்தாக வந்தான். தமக்கு ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றான் தருமன். தரும னுக்குப் போய்த் தருமம் சொல்வது மிகை; அதுமட்டுமல்ல நேரிடை இப்படிச் செய்யக் கூடாது என்றால் அதற்கு எதிர்ப்புத்தான் வரும்.

நாகரிகமாகச் சொல்லி அவர்களைத் திருத்தவேண்டும் என்று விரும்பினான். ஐவரை ஒருத்தி மணந்தாள் என்பது அவர்களைப் பொறுத்த வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது எனினும் அவர்கள் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட நாரதன் அவர்களுக்கு அவர்களைப் பாதிக்கக் கூடிய கதை ஒன்று கூறினான்.

எந்த ஒற்றுமையின் பேரில் ஐவரும் சேர்ந்து ஒருத்தியை மணந்தார்களோ அதே அடிப்படையில் அவர்கள் வேறு படக்கூடும் என்பதை அறிவித்தான்.

“சுந்தன் உபசுந்தன் என்பவர்கள் ஒரு தாய் வயிற்றுப் பிறந்த அசுர சகோதரர்கள். ஆற்றல் மிக்க இல் அசுரர் களைக்கண்டு அமரரும் அஞ்சினர். இந்திரன் அவர்களைப் பிரிக்க எண்ணினான். திலோத்தமை என்னும் நடன அழகியை அவர்கள் முன் அனுப்பி வைத்தான். வெறி கொண்டவர்களாகி நெறி தப்பினர். பெரியவன் வயதால் அவள் தனக்கு உரியவள் என்றான்; இளையவன் அவள் தன்னைத்தான் விரும்புவாள் என்றான்; சிறுபொறி பெருந் தீயாக மாறியது; அவளை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்; மாறி மாறித்தாக்கிக் கொண்டனர்; இருவரும் இறுதியில் இறந்து ஒழிந்தனர்.

ஒரு பெண்ணின் காரணமாக அசுரர்கள் இருவர் டோரிட்டுக் கொண்ட கதையைச் சொல்லி அவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினான்.

“உங்களுக்குள் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்வதுதான் உங்களுக்கு நல்லது.”

“ஆண்டுக்கு ஒருவராக அவளுக்கு உற்ற கணவராவீர்; தப்பித்தவறி இருவர் இன்னுரையாடும் போது இடைப் பிற வரலாக நுழைந்து விட்டால் அந்தப் பாபு விமோசனத்– திற்காகத் தீர்த்த யாத்திரை போக வேண்டும்” என்று கூறினான்.

கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருந்தது. சிக்கல்கள் இன்றி அவர்கள் வாழ முடிந்தது. அவளுக்கும் ஒரளவு விடுதலை கிடைத்தது போல ஆயிற்று.

சோதனை

நாரதன் காட்டிய வழிப்படி திரெளபதி முதல்வனுக்கு உறவினளாக இருந்தபோது அருச்சுனன் அவர்களின் தனிமையில் தலைகாட்ட நேர்ந்தது. எதிர்பாராதவிதமாக அவர்கள் இனித்துப் பேசித் தனித்து இருந்த நிலையில் தோட்டத்து வழியே உள் அறைக்குச் சென்றான்.

பார்ப்பனன் ஒருவன் பசு ஒன்றைக் கொள்ளையிடப் பறி கொடுத்துவிட்டுப் பார்த்திபன் ஆயிற்றே என்பதால் அருச்சுனனிடம் வந்துமுறையிட்டான்.முறைகேட்ட அவன் கள்வனைத் துரத்திப் பிடிக்க அம்பும் வில்லும் கொண்டு வர உட்சென்று நுழைந்தான் சீறடிச் சிலம்பின் ஒலி செவியில் பட்டது. பேரிடி கேட்டதுபோல் ஆயிற்று. அவ்வளவு தான்; அவன் தன் நியமம் கெட்டுவிட்டது என்று முடிவு செய்து கொண்டான்.

பாவம் ஏதோ செய்துவிட்டது போன்று ஒரு பரிபவம் அவன் மனத்தில் தோன்றியது. நாரத முனிவன் கூறிய படி அப்பாவம் தீரத் தீர்த்தயாத்திரை செய்ய முடிவு செய்து கொண்டான்.

அருச்சுனனின் தீர்த்த யாத்திரை

உலூபியை மணத்தல்

அருச்சுனன் தன் அண்ணன் மனைவியின் காலடிச் சிலம்புகளைக் கண்டதால் அவன் தீர்த்த யாத்திரையை மேற் கொண்டான். அந்தப் பயணத்தில் தெய்வச் சிந்த னையும் மனிதக் காதலும் மாறி மாறி அமைந்தன. முதற் கண் வட நாட்டு யாத்திரை அமைந்தது. விசயனின் விசயம் அழகியர் மூவரைக் கவர்ந்தது. ஆணழகன் என்ற புகழுக்கு உரியவன் ஆனான்.

கங்கை நீரில் நீராடித் தெய்வக் கோயிலை வழி படச் சென்றவன் நாகர் உலகத்துக் கன்னி அரை குறை ஆடையில் நீரில் முழுகி எழுந்த அழகின் நிழலைக் கண்டு தன் நெஞ்சைப் பறிகொடுத்தான். அவள் அவனைக் கங்கை நீர் வழியாகவே பாதளத்தில் இருந்த நாகர் உலகத்துக்கு அழைத்துச் சென்றாள். தலயாத்திரை பாதள யாத்திரையாக மாறியது.

விருந்துகள் பல நல்கி அருந்தச் செய்து இன்பத்தில் ஆழ்த்தினாள். இன்ப உலகம் என்ற ஓர் இடம் இருக்கிறது என்றால் அது நாகர் உலகம் எனக் கண்டான் வடி கட்டி எடுத்த அழகியரே அங்குக் குடி பெயர்ந்து தங்கினர். ஆணழகன் ஆகிய அருச்சுனன் அழகுக்காகவே ஒரு பெண்ணை விரும்பினான் என்றால் அவள் இந்த நாகர் உலகத்து உலூபி என்ற அழகிதான். இரவான் என்ற மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் பயணத்தில் இது முதற்கல்லாக இருந்தது. அங்கே அவன் எழுப்பிய காதல் மாளிகையில் கல்நாட்டு விழாவாக இம் மைந்தனை மகனாகப் பெற்று அங்கு விட்டு வைத்து வளரச் செய்தான்.

சித்திராங்கதையை மணத்தல்

அடுத்த பயணம் தென்தமிழ் நாடாக அமைந்தது; வேங்கடவன் குன்றத்தில் திருமாலை வழிபட்டுப் பின் தொண்டை நாட்டுக் காஞ்சி நுழைந்தான்; அங்கே அறம் வளர்த்த செல்வியாகிய காமாட்சி அம்மன் திருக்கோயிலை யும், வரதராசர் திருச்சந்நிதியையும் சென்று வழிபட்டுப் பின் சிவன் நெருப்பு வடிவத்தில் தங்கி இருந்த திருவருணை எனப்படும் திருவண்ணாமலையையும். சோழ நாட்டில் தில்லையம்பதியையும் வணங்கி விட்டுத் தென்றற் காற்று தமிழ் பாடும் மதுரையை அடைந்தான்.

பாண்டிய நாட்டை ஆண்டு வந்த சித்திரவாகனன் அந்தண வடிவத்தில் சென்ற அருச்சுனனை வரவேற்று உபசரித்தான்.

“நீர் எங்கு வந்தீர்?” என்று கேட்டான்.

“கன்னியைக் கண்ணுற்று ஆட வந்தனன்” என்றான்; கன்னியாகுமரி என்ற ஊர்ப் பெயரும் கன்னிப் பெண் என்ற பொருளும் அமையச் சிலேடை நயம் தோன்றப் பேசினான். குமரியாட வந்த குமரனாக விளங்கினான்.

அருச்சுனனும் மற்றைய அயல் நரட்டு அந்தணர்களும் தவசிகளும் சோலை ஒன்றில் தங்கப் பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தான். உணவும் உறையுளும் அங்கு அவனுக்கு ஏற்பாடு ஆயின.

அங்கே தோட்டத்தில் வெள்ளைப்பசு ஒன்று மேய்ந்து கொண்டிருத்தது. அதன் சொந்தக்காரர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான். அவள் சித்திர வாகனன் பெற்ற சித்திராங்கதை என்பதை அறிந்தான். அவளை நோட்டம் விடுவதற்கு அந்தத்தோட்டம் வழிச் சென்றான். அந்தணத் துறவுக் கோலத்தை நீக்கிவிட்டுக் காமனும் விழையும் கண்கவர் வடிவம் கொண்டு அழகனாக அவள் முன் நின்றான். கண்கள் பேசிக் காதலை வெளிப்படுத்தின.

வந்தவன் அருச்சுனன் என்பதை அரசன் அறிந்து அவளை அவனுக்கு மணம் செய்து தந்தான். தனக்கு மகள் ஒருத்தியே இருந்ததால் அவளுக்குப் பிறக்கும் மகனைத் தன்னிடம் விட்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டான். பண்பாட்டின் பிறப்பிடம் தமிழகம் ஆகையால் தமிழ் இனிக்கும் பாண்டிய நாட்டை அவன் விரும்பினான். வட நாட்டில் பிறந்த விசயன் தமிழ் மண்ணில் பெண்ணைத் தேர்ந்தெடுத்தது தமிழ் மண்ணுக்குப் பெருமையைச் சேர்த்தது.

சுபத்திரையின் மணம்

பப்புருவாகனன் என்ற பெயருடைய மைந்தனைப் பாண்டிய நாட்டில் விட்டுச் சென்று சித்திராங்கதையிடம் விடை பெற்றுக் கொண்டு சேது நோக்கிச் சென்றான். கன்னியாகுமரி முனைக்கடலில் குளித்துவிட்டு வடக்கே திரும்பினான். உறவுக்காக ஒருத்தியைத் தேடித் துவாரகை சென்றான். கண்ணனின் தங்கை சுபத்திரை தாவணி அணியும் முன் அறிந்து பழகியவன். அத்தை மகள் என்று அவளிடம் அவன் தனி அன்பு காட்டியவன். அவள் நினைவு வரவே அவன் பயணம் துவாரகை நோக்கித் திரும்பியது. அவள் தாவணிக் கனவுகளை நனவு படுத்த வாய்ப்பு நல்கினான்.

பண்பாடிப் பாட் டிசைக்க அவனுக்குத் துறவுக்கோலம் உதவியது; ஆலமர நிழலில் யோக நிலையில் அமர்ந்து மாபெரும் தவசி போல் நாடகம் நடத்தினான் ஊருக்குள் ஒரு உத்தம சந்நியாசி வந்திருக்கிறார் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. மன்னர்கள் எல்லாம் அவன் காலடியில் விழுந்து வணங்கித் திருநீறும் குங்குமமும் பெற்றுச் சென்றனர். கண்ணனின் மூத்தவனான பலராமனும் அவனை வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென் றான். கண்ணன் மட்டும் உண்மை அறிந்து சிரித்துப் பேசி அவன் நோக்கத்தைத் தெரிந்துகொண்டான் சுபத்திரை அங்கு வந்து போனாள். சுபத்திரையைச் செல்வக் கோமகனாகிய துரியனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று பலராமன் விரும்பினான். அதனால் இவர்கள் திருமணத்துக்கு அண்ணன் இசையான் என்பதால் கண்ணன் அவனுக்கு அறிவுறுத்தினான்.

“அடிகளே, உம்முடைய நாடகம் தொடரட்டும்; இங்கு எம்மவர் உம் மணத்துக்கு இசைவு தரமாட்டார்கள். அதனால் நீயே முயன்று அவளைக் காதலித்து மணம் செய்து கொண்டு உம் நகருக்கு அழைத்துச் செல்க” என்று அருச்சுனனுக்கு அறிவித்தான்.

சுபத்திரையை அழைப்பித்து “மழைக்காலம் வந்து விட்டது. முனிவர் நான்கு மாதம் இங்குத் தங்குவார். அவர் இடும் பணிகளைப் பரிவுடன் நீ புரிவாயாக” என்று பணித்திட்டான்.

அதனால் அவளோடு நெருங்கிப் பழக அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. நல்லிலக்கணம் பல உடைய அவன் மேனியின் தோற்றம் அவன் ஏற்றத்தைக் காட்டியது. வில் தழும்பு பெற்ற கைவிரல்களையும் பரந்த மார்பையும் வீங்கிய தோள்களையும் கண்டு இவன் ஒரு மாவீரனாக இருக்க வேண்டும் என்று மதித்தாள்.

ஒரு நாள் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி “எங்கெங்கே வண்புனல் ஆடுதற்குச் சென்றிருந்தீர்? எங்கெங்கே தங்கினர்? நீங்கள் உறையும் மாநகர் யாது” என்று வினவினாள்.

தவசியாகிய அருச்சுனனும் தான் தங்கி இருப்பது இந்திரப்பிரத்தம் என்று கூறினான். அவன் அவ்வாறு கூறியதும் அருச்சுனனை விடுத்து ஏனைய நால்வரின் நலம் குறித்து விசாரித்தாள்.

“மின்னல் போன்ற அழகியே! விசயனைப் பற்றிக் கேட்க மறந்தது ஏன்?” என்று கேட்டான்.

அதற்கு அவள் பதில் தரவில்லை; அவள் தோழி பதில் சொன்னாள்.

“மாமன் மகன் பேரைச் சொல்ல அவள் வெட்கப்படு கிறாள். அவனைத்தான் அவள் மணக்கப் போகிறாள்” என்றாள்.

“தீர்த்த நீர் ஆடுவதற்காகப் பார்த்திபன் ஊர்கள் சுற்றித் திரிகிறான் என்று கேள்விப்பட்டோம்; அவன் பேர் பற்றி ஏதேனும் கேள்விப்பட்டது உண்டா? அவன் எங்கே இருக்கிறான். சொல்ல முடியுமா?” என்று தொடர்ந்து அத்தோழிப் பெண் கேட்டாள்.

“ஊரைப் பார்க்கச் சென்றவன் இப்பொழுது உம் தோழியின் பேர்ைச் சொல்லிக் கொண்டு இங்குத் தங்கி இருக்கிறான்” என்றான்.

துறவி உரைத்த உரையைக் கேட்டு யதுகுலப்பெண் ஆகிய சுபத்திரை நெற்றி வியர்த்தாள். இதழ் துடித்தது; மேனி புள கித்தது; அரிவை அவள் அவனை அடையும் ஆவலைக் கொண்டாள்.

அவனால் அதற்கு மேல் அடங்கி இருக்க முடிய வில்லை. அவள் கைகளைத் தொட்டுப் பிடித்தான். பின் அவளைத் தனிமையில் கட்டி அணைத்தான், அத்தான் என்று அவளைச் சொல்ல வைத்தான். அவர்கள் உள்ளத்தால் ஒன்று பட்டனர். அதனைக் கள்ளத்தால் வெண்ணெய் உண்ட மாதவன் அறிந்தான்.

அருச்சுனனின் தெய்வத் தந்தையாகிய இந்திரனும், கண்ணனும் முன் நின்று இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். பலராமன் இருந்தால் தடை செய்வான் என்பதால் பலராமனையும் அவனுக்கு வேண்டியவர்களை யும் மகரத்தீபம் என்னும் இடத்திற்குச் சிவனுக்கு எடுக்கும் விழாவைக் காண்பதற்குக் கண்ணன் அழைத்துச் சென்று விட்டான். அவர்களை அங்கு விட்டு வைத்து இவன் மட்டும் வந்திருந்து முன் இருந்து முகூர்த்தத்தை முடித்து வைத்தான்.

வந்த பிறகு அருச்சுனன் சுபத்திரையை மணந்த கதை யைச் சொல்லி ஒன்றும் அறியாதவன் போல் நடித்தான். அதற்குள் அவர்களைத் தேரில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான், பலராமன் படையுடன் சென்று எதிர்த்துத் தடுத்தான். சுபத்திரை தேர் ஒட்ட யாதவப்படைகளைச் சொந்த ஊருக்குத் திரும்பப் போய் அடங்கி இருக்க அருச்சுனன் துரத்தி அடித்தான்.

தீர்த்த யாத்திரை முடிந்தது இவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாய் குந்திமுன் வெளிநாடு சென்று திரும்பி வந்ததற்கு அடையாளமாகப் பாத்திரம் ஒன்று கைப்பற்றி வந்து சேர்ந்தான். கோயில் தலங்கள் சென்று வழிமட்டதும், ஒய்வு கிடைக்த போது மடந்தையர் மூவரை மணந்ததையும் சொல்லி மகிழ வைத்தான்.

சுபத்திரை அவனுக்கு ஒர் வீர மகனைப் பெற்றுத் தந்தாள்; அவன்தான் அபிமன்யு என்பவன்.

காண்டவ தகனம்

வறியவர் குறை கேட்டு, வாரி வழங்கிய தருமனின் கொடைச்சிறப்பைப் பயன்படுத்திக் கொண்டு அக்கினி அக்கிரகார வடிவம் கொண்டு அவன் முன் வந்து நின்றான்.

“ஐயா! பார்வை இல்லை” என்று பிச்சைகேட்டுக் கொண்டு உள்ளே ஒரு பாமரனைப்போல நுழைந்தான்.

ஐயர் கேட்டால் இல்லை என்று சொல்லும் துணிவு மேல் அரசகுலத்துக்கு இருந்தது இல்லை.

தருமன் “பசிக்கு உணவு தருகிறோம்” என்றான். வந்தவன் பொறுப்பாக நடப்பான் என்று எதிர்பார்த்தான்; அவன் நெருப்பாய் நிமிர்ந்து நின்றான்.

கேட்டது ஒன்று; வேட்டது வேறாக இருந்தது “காட்டைப் பற்றி எரித்துச் சாம்பல் ஆக்க விரும்புகிறேன்” என்றான்.

“விரும்பியது உண்க” என்றான் அருச்சுனன்.

“மழை பொழிந்து இந்திரன் தீமை இழைப்பான்” என்றான்.

“சரகூடம் அமைப்போம்” என்றான்.

இந்திரன் கொட்டும்மழை கொண்டு அக்கினியை அடக்கப்பார்த்தான்; மொட்டின் வடிவம் உடைய அம்புகளைக் கொண்டு அருச்சுனன் வானத்தில் சரங்கள் அமைத்து மழையைத் தடுத்தான்; கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோவிந்தன் மழையைத் தடுத்தது போல் அரசர் கோவாகிய அருச்சுனன் அமரர் கோவாகிய இந்திரன் தொடுத்த மழையை அம்புகளால் தடுத்தான்.

அந்த வனத்தில் இருந்த மரச்செல்வம் எல்லாம் அழிந்தன: உயிர்கள் எல்லாம் சுருண்டு மடிந்தன. சிங்கம், யானை, புலி, கரடி, மான் இக்கூட்டம் எல்லாம் சாவில் ஒற்றுமை காட்டின. தக்ககன் என்னும் பாம்பு தப்பிப் பிழைத்து குருக்ஷேத்திரத்தை முன்னதாகப் போய் அடைந்தது. அதன் துணைவியாகிய பெண் நாகம் அசுவசேனன் என்னும் குட்டியைக்காக்க அதனை வாயில் விழுங்கிக் காப்பாற்றி வானை நோக்கித் தாவியது. குட்டி என்றும் பாராமல் அம்பு அதனை எட்டியது. வால் அறுப்புண்ட அசுவசேனன் தாயைச் சாவில் இழந்தபின் கன்னனிடம் புகலிடமாக அடைந்து நாகாத்திரமாகச் செயல்பட அவனிடம் வளர்ந்து வந்தது. மயன் என்னும் அசுரத்தச்சன் மட்டும் சரண் அடைந்து உயிர் தப்பினான்.

“கண்ணனும் அருச்சுனனும் தெய்வப்பிறவிகள்; அவர்களை எதிர்த்து தெய்வத் தலைவர்கள் போரிடுவது பயன் இல்லை” என்று அசரீரி கூறியது. மழை நின்றது; காண்டவ வனம் படுகாடு ஆகியது.

அக்கினி விசயனுக்குத் தேரும் படைக்கருவிகள் பலவும் தந்து பாராட்டினான்; அவற்றுள் காண்டீபம் என்னும் வில்லும், எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத் தூணிகள் இரண்டும் தரப்பட்டன. வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றும் தரப்பட்டது.

இராச சூய வேள்வி

காட்டை எரித்து விட்டு நகர் திரும்பிய பாண்டவர்கள் போரிட்ட விண்ண வருக்கு விடை தந்து அனுப்பினர். கரிய நிறச்செம்மல் ஆகிய கண்ணனும் பாண்டவர்களும் இந்திரப்பிரத்த நகரில் வந்து தங்கினர். தப்பிப் பிழைத்த சிற்பநூல் வல்ல அசுரத்தச்சன் ஆகிய மயன் உயிர் அளித்த உத்தமர்களுக்கு உன்னதமான மண்டபம் ஒன்று கட்டித் தருவதாக உறுதி தந்தான். அதற்காக விடபருவன் என்னும் அசுரன் கொள்ளையடித்துக் குவித்து வைத்த அரிய மணிகளைக் கொண்டு வந்து சேர்க்கும்படி கூறினான். அவை விந்து என்னும் பொய்கையில் குவிந்து கிடப்பதாகவும் கூறினான்.

கண்ணசைவில் விண்ணையே அசைத்துக் கொண்டு வரும் ஆற்றல் உடைய தம்பியர் இளைஞர் காவலன் கட்டளை கேட்டுச் சொல்லிய மணிகளை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தனர். மயன் தன் சிற்ப நூல் புலமையால் திறன்மிகு பணியாளர்களைக் கொண்டு மின்னல் என ஒளி விடும் முகில் தவழும் மண்டபம் அமைத்துக் கொடுத்தான். கட்டித் தங்கத்தால் கற்களை அடுக்கிக் கணக மணிகளால் விதானம் ஏற்றிப் பச்சை மரகதத்தால் தூண்கள் போக்கி விண்ணவர் உலகத்து சுதன்மை என்னும் மண்டபத்திலும் சிறந்தது என்னும்படி அமைத்துக் கொடுத்தான். நகரம் விழாக்கோலம் கொண்டது.

மண்டபம் அமைத்ததும் அதனை விருப்புற்றுக் காண விண்ணவர் வந்து குழுமினர்; மாமன்னர்கள் வரவேற்கப் பட்டனர்; வித்தியாதரர் வந்து வியந்தனர்; இந்திர உலகத்து அத்தாணி மண்டபம் போல் காட்சி அளித்த அதனைக் கண்டு இஃது ஒர் அரிய சாதனை எனப் பாராட்டினர்

கட்டி முடித்ததும் புதுமனை புகுவிழா நடத்தினர். அதற்கு வருகை தந்த நாரத முனிவன் அவர்கள் மனம் குளிர நற் செய்தி நவில வந்தான். தருமனின் தந்தை பாண்டு மாண்டு ஆண்டுகள் சில ஆகி விண்ணவருலகில் மண்ணுலகக் காட்சிகளைக் கேட்டு மகிழ்ந்தவனாய்த் தன் மகன் ஓர் இராசசூய யாகம் நடத்திப் பெரும் புகழ்படைக்க வேண்டும் என்ற ஆவல் தனக்கிருப்பதாக நாரத முனிவனிடம் கூறியதாகவும், அந்நற்செய்தி நவில அங்கு வந்ததாகவும் அவர்களிடம் நவின்றான். அருகிருந்த கன்னனும் பெருகி வரும் புகழுக்கு இராசசூய யாகம் தேவை என்பதை வற்புறுத்தினான்.

சராசந்தன் வதம்

எட்டுத் திக்கும் சென்று தன் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டிய பொறுப்பு அவர்களை வந்து சார்ந்தது. அதற்கு முன்னால் நீண்ட நாட்களாகவே ஒழித்துக்கட்ட விரும்பிய சராசந்தனை அழித்து முடிக்க உடற்பருத்த வீமனும் விற்பிடித்த விசயனும் கண்ணனுக்குத் துணை சென்றனர்.

சராசந்தனின் அரசவை மண்டபத்துக்கு இம் மூவரும் அந்தணர் வேடத்தில் அனுமதி கேட்காமலேயே நுழைந்தனர். அவர்களை உற்றுப்பார்த்தான். மார்பில் நூல் இருந்தும் அந்தணர்களுக்கு இருக்க வேண்டிய தொந்தியும் நைந்த தோள்களும் காணப்படவில்லை. தோள்களிலும் விரல்களிலும் தழும்புகள் இருந்தன. அவர்கள் விழுமிய வீரத்தை அலை விளம்பிக் கொண்டு இருந்தன. சரா சந்தன் அவர்கள் சரித்திரத்தை அறிய விரும்பினான்.

“அந்தணர் கோலத்தில் அவைக்களம் அணுகிய காளையரே! நீவிர் யார்” என்று கேட்டான். துவாரகை வேந்தனும் பாண்டுவின் மைந்தர்களும் “கண்ணன், வீமன், அருச்சுனன்” என்று பள்ளிப்பிள்ளைகள் போல் தம் பெயர்களை வரிசையாகக் கூறினர். வாயிலர் தடுப்பர் என்பதால் காவலை மீறி இவ்வேடத்தில் வந்ததாக அறிவித்தனர்

“கண்ணன் துவாரகையில் ஒளிந்தவன்; அருச்சுனன் இளையவன்; வீமன் அவர்களுள் தன்னோடு சமர் புரியத்தக்கவன் என்று கூறி அவனை மற்போருக்கு அழைத்தான். கற்போர் கூடிய அவையை நீங்கி நற்போர் செய்யக் கூடிய நடு இடத்தை நாடினர்.

தன் மகனை மாமன்னன் என்று மகுடம் சூட்டி விட்டுத் தான் இறப்புக்குத் துணிந்து பொறுப்பை அவனிடம் தந்து விட்டுப் புகழை விரும்பி அடுகளம் வந்து சேர்ந்தான். இரு பெரு யானைகள் மதம் கொண்டு அதம் செய்ய இயங்கியது போல இருவரும் தாக்கிக் கொண்ட னர். கட்டிப்புரண்டு மண்ணில் தள்ளி மார்பில் குத்தி அவர்கள் பெரும்சத்தம் செய்தனர். மாறிமாறி மண்ணைக் கவ்விக் கொண்டு விண்ணுக்குச் செல்லும் வழி கேட்டுப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டு இருந்தனர். வீமன் அவன் உடலை இருகூறாக ஆக்கி வேறு வேறாக இட்டான். உடற் கூறுகள் இரண்டும் பசையால் ஒட்டிக் கொண்டதுபோல அவை இரண்டும் மறுபடியும் ஓர் உடம்பாக இயங்கியது. மீண்டும் போர் தொடங்கியது. வீமன் அவனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். சாமள வண்ணனாகிய கண்ணன் புல் லொன்று எடுத்துப் பிளந்து மாறியிட்டுக் காட்டினான். பிளவுபட்ட சராசந்தனின் உடம்பு மறுமடியும் கூடவே இல்லை, அந்த மாமிசப் பிண்டத்தை அசைத்து உயிர் நீக்கிய நிலையில் வீமன் இசை கொண்டான்.

பிளந்தது மீண்டும் பிணைப்புண்டது கண்டு அனைவரும் வியப்பு அடைந்தனர். வீமனும், விசயனும் அதன் வரலாற்றைக் கண்ணனிடம் கேட்டு அறிந்தனர். அவன் அச்சராசந்தனின் பிறப்பு வரலாற்றின் சிறப்பினைக் கூறிப் பழைய ஏடுகளைப் புரட்டிக் காட்டினான்.

மகத நாட்டுப் பூபதியாக விளங்கியவன் பிருகத்ரதன் என்பவன் பிள்ளை வரம் வேண்டிப் பெரு முனிவன் கவுசிகனிடம் சென்று தன் கொள்ளை ஆசையைக் கூறினான். பிள்ளைக் கனி அமுதம் பெற அம்முனிவன் இனிய தீஞ் சுவைக் கனியாகிய மாம்பழம் ஒன்று தந்து தான் விரும்பும் மங்கைக்குக் கொடுக்குமாறு கூறினான். ஆசைக்கு உரிய நேசமும் பாசமும் உள்ள பத்தினியர் இருவருக்கும் பாதி பாதியாகப் பகிர்ந்து அளித்தான். அவர்கள் கரு உயிர்த்து உருவளித்த குழந்தையும் பப்பாதி வடிவம் பெற்றுப் பாரி னில் உதித்தது. இது அரை குறை பிறப்பு எனக் கருதி விடியுமுன் அதை ஊர்ச் சுவரைக் கடந்து அரசன் தூக்கி எறிந்தான். பிணம் தின்று நிணம் வளர்க்கும் நிசிசரியாகிய அரக்கி ஒருத்தி ஆசையுடன் எடுத்து அவற்றைப் பொருத்திப் பார்த்தாள். அவை ஒட்டிக் கொண்டன; உயிர்ப்புப் பெற்றுத் தன்னை வாழவிடு என்று வாதிடுவது போல வாய்விட்டு அரற்றியது.

அது மன்னன் மகன் என்பதால் அவ்வரக்கி அதனிடம் இரக்கமும் மதிப்பும் வைத்து அக்குழந்தையை அவ் அரசனிடம் சேர்ப்பித்து அதற்குச் சராசந்தன் என்று பெயரிடு மாறு சொல்லிச் சென்றது. சரை என்ற அரக்கி சந்து செய்வித்ததால் அக்குழந்தைக்குச் சராசந்தன் என்ற பெயர் அமைந்தது: அரக்கி தொட்ட பிள்ளையாதலின் அது இரக்கம் கெட்ட அரக்கனாக மாறித் துட்டன் என்று பெயர் எடுத்தது. அரச மகனாகியும் அசுர இயல்பு கொண்டு உலகை அவன் ஆட்டிப்படைத்தான். அவன் நிலத்துக்குச் சுமையாக விளங்கியமையால் அவனைக் குமைத்து ஒதுக்குவது தக்கது என்று துளப மாலையன் ஆகிய முகுந்தன் விவரித்து உரைத்தான்.

சிசுபாலன் வதம்

சராசந்தன் அழிந்தான். அதற்கு அடுத்து சிசுபாலன் அழிவு காத்துக் கிடந்தது; வாய்க் கொழுப்பால் அழிந்தவர்களில் இவன் வரலாறு முதல் இடம் பெறுகிறது.

இராசசூய யாக முயற்சிகள் தொடர்ந்து மேற் கொள்ளப் பட்டன. நாற்றிசையும் பாண்டவர்களும் அவர்கள் மக்களும் சென்று முரண்பாடு கொண்டவரின் படைகளை அழித்தும், அடிபணிந்தவர்களிடம் திறை பெற்றும் நவ மணிகளையும் நவநிதிகளையும் கொண்டு வந்து குவித்தனர். வீமன் கீழ்த்திசையும், சகாதேவன் தென்றல் வரும் தென்திசையும் சென்றனர்; பகைவர்களை வென்று பார் புகழத்தம் வெற்றிக் கொடிகளை நிலைநாட்டினர். சிங்களத் தீவுக்கு இடிம்பியின் மகன் கடோற்சகன் சென்று வீடணனின் வழித் தோன்றல்களைச் சந்தித்து வேண்டியதைப் பெற்று வந்து குவித்தான். சென்ற இடம் எல்லாம் வெற்றி தவிர வேறொன்றையும் கண்டிலர். தடுப்பார் இன்றி அடுபகை வென்று பீடும் பெருமையும் பெற்று ஈடு இணையற்றவராகத் திரும்பிவந்தனர்.

பொருளும் பொன்னும் மருளும் வகையில் வந்து குவிந்தன. வேள்வி நடத்தும் நாளைக் கோள் நூல்வல் லோர் குறித்துத் தந்தனர். இராசசூய யாக வேள்விக்கு நாணிவ மன்னர்களும் அழைக்கப்பட்டனர். நாரத முனி வனை அனுப்பி நாரணன் ஆகிய கண்ணபெருமானை அழைத்து வரச் செய்தனர். பராசன் மகனாகிய வியாச னும் வந்திருத்தான். அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு நிலை ஏற்பட்டது.

பாரதக்கதையே தவறுகளை மிகைப்படுத்தக்கூடாது என்ற உட்பொருளைக் கொண்டதாக விளங்குகிறது. தவறு செய்து விட்டால் அதற்கு மனம் வருந்தித் தன்னை அழித்துக் கொள்ளும் அவலநிலை மானிடர்களுக்கு ஏற்படுகிறது; அது தேவை இல்லை, மனிதன் குறையுடையவன்; தவறுகள் நிகழலாம். அதற்காக யாரும் தம்மை அழித்துக் கொள்ளத் தேவையில்லை என்பது பாரதம் தரும் பாடம்.

பாஞ்சாலி பாண்டவர் ஐவர்க்கும் பத்தினி என ஏற்கப்பட்டாள்; நாரதன் இடையில் ஒரு திருத்தம் கொண்டு வந்தான். எந்த ஒற்றுமையின் காரணமாக ஐவரும் உவந்து ஒருத்தியை மணந்தார்களோ அதன் விளைவால் ஐவருக்கும் ஒற்றுமை சிதைவதற்கும் வழி உண்டு என்பதை நாரதன் உணர்த்தி ஆண்டுக்கு ஒருவர் கணவராக முறை வைத்துக் கொள்வது தக்கது என்று அறிவித்தான். அதற்கு மேல் ஒரு படி வியாசன் அமைத்துத் தருகிறான்.

அவள் யாகபத்தினியாகிய பிறகு அவள் வாழ்க்கை தனிப்பட்டது ஆகிறது. மேடையில் தருமனும் திரெளபதியும் அமர்கின்றனர். அதனால் கணவன் மனைவி என்ற பெருமை அவர்களுக்கே உரிமை ஆகிறது. அவர்கள் தலைமை பெறுகிறார்கள்; மற்றவர்கள் அவர்களை மதித்து வாழும் மனநிலை பெற வேண்டும் என்று கூறி வியாசன் மாற்றுகிறான். தாயும் தந்தையுமாக அவர்கள் போற்றி மதிக்கத்தக்கவர்கள் என்று புதிய திருப்பத்தை உண்டு பண்ணுகிறான். தம்பியரும் அதனை அமைதியாக ஏற்றுக் கொள்கின்றனர். தவறுகள் வாழ்க்கைக்குத் தடையாகக் கூடாது என்பது பாரதம் கற்பிக்கும் பாடமாகும், குந்தி கதிரவனால் கன்னனைப் பெற்றாள். அதனால் அவள் மணவாழ்வுக்குத் தகுதி அற்றவள் என்று ஒதுக்கப்பட வில்லை.

வேள்விக்கு உரிய தலைமை தருமனைச் சார்ந்தது; திரெளபதி யாகபத்தினியாக மாறினாள்; அவள் நிலை உயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் வாழ்க்கை சம்பிரதாயம் மீறிய வாழ்க்கை ஆக இருந்தது; மறுபடிபும் மானிட சமுதாய சம்பிரதாயங்களின் கட்டுக்குள் அவர் கள் கொண்டு வரப்பட்டனர். இதற்கு வியாசன் வருகை ஒரு திருப்பு நிலை ஏற்படுத்தியது.

யாக வேள்வி நடத்தும் இப்பெருவிழாவில் முதல் மரியாதை பெறுவதற்கு உரியவர் யார் என்ற வினா எழுப்பப்பட்டது. விழாவினை முன்னின்று நடத்தப் பூசனைக்குரிய அலைத் தலைமைக்கு யார் தகுதி பெறுகின்றனர் என்ற வினா எழுப்பப்பட்டது. குடும்பத்தின் மூத்த மகனாகிய வீடுமன் எழுந்து தலைமைப் பதவிக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவன் கண்ணனே என்று முன் மொழிந்து கூறினான். அதற்கு எதிர்ப்பு என்பது எழவில்லை. அந்நிலையில் அவை யோரின் அடக்கத்தைக் கண்டு ஆவேசம் கொண்ட சேது என்னும் நாட்டுக்கு அதிபதி ஆகிய சிசுபாலன் சீற்றம் கொண்டான். கண்ணனுக்கு ஏற்றம் தர மறுத்தான்.

“மன்னவர் கூடியிருக்கும் இம் மாமண்டபத்தில் பால் மணம் மாறாத கோபாலன் எப்படித் தகுதி பெறுகிறான்” என்ற வினா எழுப்பினான். சாதி அரசியலை அடிப்படையில் வைத்து நீதி கேட்டான். இடையன்; ஒருவன் எப்படி முதல்வன் ஆக முடியும் என்று கேட்டான்; மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்து ‘கோனார்’ என்ற பெயரைப் பெறுவதாலேயே அவன் “கோன்” ஆக எப்படி ஆக முடியும்? கோபாலன் எப்படிப் பூபாலன் ஆகலாம்?” என்று கேட்டான். “கோபியரை அவன் குழல் ஊதி மயக்கலாம்; பாபியரைத் தான் பரமன் என்று கூறிப் பெருமைப்பட வணங்கச் செய்யலாம். கோவியல் படைத்த கோவேந்தரை அவன் நா இயல் மயக்க முடியாது. எத்தகுதி பற்றி இக் கிழட்டுத் தலைவன் அவன் பெயரை எடுத்து ஒதினான்” என்று கேட்டான்.

அறிவும் சால்பும் மிக்க கண்ணன் பொறுமைக்கு ஓர் வரம்பாக அன்று நடந்து கொண்டான்; நூலில் அச்சுப் பிழை பொறுக்கும் வாசகர்களைப் போல அவன் நச்சுச் சொற்களைப் பொறுத்துக் கொண்டான். நூறு பிழை செய்தாலும் நூலோர் பொறுமை காட்டுதல் அவர் இயல்பு என்பதற்கேற்ப அவன் பேசுவதைத் தடுக்கவில்லை; ஏசுவதிலும் ஒரு கலை இருக்கிறது என்பதை ரசிப்பவன் போல அவனைத் தடை செய்யவில்லை. திட்டுவதில் அவன் எட்டும் உயரம் காண விழைந்தான். நூல் அறுந்த காற்றாடி உயரப் பறந்தது.

கண்ணன் மீது அவன் தொடர்ந்து குற்றங்கள் சாற்றி னான்.

யானை கொழுத்தால் தானே தன் மீது புழுதியைத் தூற்றிக்கொள்ளும் என்பர். இவன் மற்றவர் மீது புழுதி வாரி இறைத்தான்.

அவன் கூறிய வசை மொழிகள்

“பிறந்தது எட்டாவது; அதனாலேயே அவன் பிற்பட்டவன் ஆகிறான். இவனுக்கு முன் பிறந்தவர்களை வாழ வைக்காமல் வெட்டுக்கு இரையாக்கிக் கட்டோடு சாக வழி செய்தான். இவன் பிறப்பே அவல வரலாறு கொண்டது.”

“இவன் பிறந்தது மாளிகை அல்ல; பசுவின் கொட்டிலாக இருந்தாலும் இவனைப் பரமன் என்று கூறலாம். அதுவும் இல்லை. கம்சனின் சிறைக்கட்டில் பிறந்தவன்; சிறையில் பிறந்தவன் குற்றவாளிதானே; தாயையும் தந்தையையும் கண் திறந்து கண்டதும் சிறையில்தானே"

“இவன் தந்தையும் தாயும் சிறைக் கைதிகள் என்பதை மறுக்க முடியுமா?”

“பிறப்பு என்பதிலும் சிறப்பு இல்லை; வளர்ப்பில்” என்ன உயர்வு கண்டான்?”

“ஏழை ஆய்ச்சியர் எட்டாத உயரத்தில் உறிகளில் வைத்த தயிர் பால் வெண்ணெயைத் திருடித் தின்றான். கொள்ளை அடிப்பதில் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஆயர் சிறுவர்களையும் கள்ளத்தனம் செய்யத் துணை தேடினான்.”

“பெண்கள் தெருவில் அச்சமின்றி நடக்க முடிந்ததா? பேதைச் சிறுமியர்கள் பின்னல்களைப் பின்னால் இருந்து இழுத்துச் சிறு குறும்புகள் செய்து அவர்கள் தன்னை விரும்புமாறு நடந்துகொண்டான். கூந்தலில் பூ வைக்க ஆசை உண்டா? அவன் கை வைத்து இழுப்பது எப்படி நியாயம் ஆகும்?”

“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்திருக்குமோ என்று அவன் வாய்ச்சொற் களுக்கு அவர்களை ஏங்கித் தவிக்குமாறு செய்தான். உரலில் கட்டி வைத்தால் அதன் உயரம் கெட அதை இழுத்துச் சென்று மரங்களிடை மோத வைத்து அம்மரங்களையே சாய்த்துவிட்டான். பாலைத் தர வந்த தாய் பூதகியைப் பாலைப் பருகாமல் காதகி என்று காட்ட அவளின் உயிரையே பருகி விட்டானே! இவன் கொடுமைக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.”

“குளித்துக் கரை ஏறக் காத்திருந்த கன்னியரின் சேலைகளை ஒளித்து வைத்து அவர்கள் நாணத்தின் கரையை ஏறும்படி செய்தவன்தானே! இது அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட கறையாகாதோ? அசுரர்களை அடையாளம் கண்டு கன்று என்றும் கருதாமல் விளாமரம் என்றும் கொள்ளாமல் மோத வைத்து அவர்களைச் சாடி வதைத் தானே! இது எப்படி நியாயம் ஆகும்? மாமனை மரியாதையாக நடத்த வேண்டிய அவன் அவன் மார்பில் ஏறி வீமனைப் போலக் குத்திக் கொன்றானே இஃது எப்படி அடுக்கும்? பாம்பைக் கண்டு நடுங்க வேண்டிய ஒருவன் அதில் ஏறி நர்த்தனம் செய்தானே இதை யாராவது செய்வார்களா? மழை வந்தால் குடை பிடிக்காமல் அதற் காக ஒரு மலையையே தூக்கிப் பிடிப்பது இயற்கையை அதிரவைப்பது ஆகாதோ? குழல்ஊதிப் பசுக்களை அழைக் கலாம். அதைக் கொண்டு கோபியரை எப்படி அவன் மயக்கலாம்?”

“நாட்டிலே கண்ணனின் புகழிலே மயங்கிய நாட்டியக் கலையே அவனைச் சுற்றி இயங்குகிறது அவனால் பாட்டியல் கலைக்கும் நாட்டியக் கலைக்கும் இழுக்கு உண்டாகிறது அல்லவா? கருப்பு நிறத்தில் பிறந்தும் கன்னியரை விருப்புக்கொள்ளுமாறு மயக்கினான் என்றால் அதனை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? உறவு முறையால் உருக்கு என்ற பெண்மணியை எனக்கு என்று நிச்சயித்த நிலையில் இவன் அவள் நெஞ்சை உருக்கி அவன் பின் அவளை இழுத்து மணம் செய்து கொண்டது எப் படிப் பொருந்தும்? அவனைத் தலைமைக்குத் தகுதியாக்கினால் பாண்டவர் சகாயனாக இறுதி வரை நின்று பாடு படுவான். அதனால் துரியன் நூறுபேர் வேறாகப் பிரிக்கப் படுவர் அறிவு சான்ற துரோன ன் கிருபன் முதலிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். உறவு சான்ற விடுமன், விதுரன் முதலியவர்களும் இருக்கிறார்கள். கண்ணிழந்து இவர்கள் வாழ்வுக்காக மண் மகிழ ஆளும் உத்தமன் திருதராட்டிரன் இருக்கிறான். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு இந்தச் சாமான்ய மக்கள் தலைவன் சாமள வண்ணனை எப்படி முதல் மரியாதைக்கு உரியவன் என்று பேச முடிந் தது என்று ஏசிக்கொண்டே சென்றான்.

பொறுமைக்கு உரிய பூமி சில சமயம் எரிமலையையும் கக்குகிறது. சலனமற்ற கடலில் புயல் வீகி அலைகளை எழுப்புகிறது. அதே போல்தான் கண்ணனும் பொறுத்துப் பார்த்தான். நூறு பிழை வரை காத்திருந்தான். நூற்று ஒன்று எட்டிப் பிடிக்கிறது. சென்சுயரி அடித்ததும் கர கோஷம் எழுவது இயற்கை; இங்கே நூறு எட்டியதும் அவன் சிரச்சேதம் ஏற்பட்டது. கண்ணனின் கையாழி சதிர் ஆடியது. கதிர் எனச் சென்று அவன் தலையைத் தனிப்படுத்தியது.

இராச சூய யாகம் இரண்டு கொடியவர்களின் உயிரை வாங்கியது: ஒன்று சராசந்தன்; மற்றொருவன் சிசுபாலன். கண்ணனின் காதல் விளையாட்டுக்களைக் கேட்ட உலகம் அவன் வீர விளையாட்டைக் காண முடிந்தது. அதற்குச் சிசுபாலன் வாய்ப்பளித்தான்.

தவறு செய்தவனை ஏன் உடனே தண்டிக்கக் கூடாது என்ற கேள்வி எழும்புவது இயற்கை தான்; உடனுக்குடன் தண்டிப்பதில் பொருளே இல்லாமல் போய் விடுகிறது; அதற்குத் தண்டனை என்ற பெயரே வழங்குவதில்லை. கொலை செய்தவன் தலை வாங்குவதாக இருந்தாலும் வழக்கு மன்றத்தில் விசாரித்துப் பின் தான் தண்டனை தரப்படுகிறது. அதே போலத்தான் கண்ணனும் தப்புகள் முழுவதும் செய்ய விட்டுப் பின் தண்டித்தான் என்று தெரி கிறது. முளையிலே களையாமல் முள் மரத்தை முற்றிய பிறகு களைந்தது ஏன்? என்ற அய்யத்துக்கு விடை கிடைத்தது. வியாசன் எழுந்தான்; அதன் காரணங்களை விளக்கினான்.

இந்தத் துயரங்களுக்கு எல்லாம் காரணம் சினத்தின்முழு வடிவம் ஆகிய துருவாசன் தான் என்று விளக்கப்பட்டது. அவன்வைகுந்தம் அடைந்தான். சேவகம் வேலை செய்யும் ஏவலை உடைய காவலாளிகள் தம்மைக்குட்டித் தெய்வங்கள் என்று மதித்துக் கொள்கின்றனர். உள்ளே செல்ல அனுமதி தேவை என்றனர் அறிவு மிகுதி படைத்த முனிவன் தன்னை அவமதித்ததாக எடுத்துக் கொண்டான்.

“நான் யார் என்பது தெரியுமா?” என்றான்.

“பாரத ரத்தினராக இருக்கலாம் மாரத வித்தகராக இருக்கலாம். யாராக இருந்தாலும் உங்கள் பெயரைச் சொன்னால் அனுமதி பெற்று வருவோம்” என்றனர்.

“இந்த ஒழுங்கு, நியதி, வரிசை, அனுமதி எல்லாம் கீழே இந்த மக்கள் பின்பற்றும் கட்டுகள். தேவர் உலகில் ஒழுங்கை எதிர்பார்க்கிறவர்கள் இங்கு இருக்கத் தகுதி இல்லை” என்றான் துருவாசன்.

காவலாளிகள், “அதனால் தேவரினும் மாந்தரே உயர்ந்தவர் என்று தெரிகிறது” என்றனர்.

“மக்களை மதிக்கிறீர் நீர்; பூமியிற் சென்று மானிடனாகப் பிறந்து மா இடர் அனுபவிப்பீராக” என்று துருவாசன் சாபமிட்டான்.

பிறப்பு என்றாலே அஞ்சிப் பரபரப்பு அடைந்தனர்.

நிலை கெட்ட பிழைப்புக்கு அஞ்சி அலைவுற்றனர்; திருமால் திருமகளிடம் சொல்லிவிட்டு வாசலுக்கு வெளியே வந்து இந்தக் குழப்பத்தைக் கவனித்தார்.

“துருவாசரா? இன்று நீங்கள் விழித்த முகம் சரி இல்லை” என்றார்.

“ இவர் முகத்தில்தான் விழித்தோம்” என்றார்கள் அத்துவாரபாலகர்கள். “வைகுந்த வாசலை விட்டு விட்டு ரேஷன் கடை அரிசி வாங்கும் நேஷனில் பிறக்கச் சொல்கிறார்” என்றார்கள். தம்மைப் பார்த்தபின் தான் தலைவரைப்பார்க்க முடியும்?” என்ற ஆணவம் அகன்றது என்றனர்.

“ஏழு பிறப்பு அவர்கள் எடுக்க வேண்டும்” என்றான் துருவாசன்.

“பிறப்பே கூடாது என்று பிரசாரம் செய்யும் பூவுலகில் எங்களை வரவேற்கமாட்டார்கள்” என்றனர். “பிறப்பைக் குறைக்க முடியுமா” என்று கேட்டனர்.

“ஏழு பிறப்புப் பிறந்து அப்பாவியாக வாழ்ந்து எப்பாவமும் செய்யாமல் இறுதியில் இறைவனடி சேர விரும்புகிறீரா? சுத்தியும் கத்தியுமாகச் செயல்பட்டுப் புரட்சிக்காரனாக மாறி மூன்று பிறவிகளில் உம் கதையை முடித்துக் கொள்ள விரும்புகிறீரா?” என்று கேட்டான் துருவாசன்.

“ஆளும் கட்சியில் இருந்து கைதூக்குவதைவிட எதிர்க் கட்சியில் இருந்து கை நீட்டுவதே மேல் என்று தம் முடிவைத் தெரிவித்தனர். இரணியன் இரணியாட்சகன்; இராவணன் கும்பகருணன் என இரட்டையராக இயங்கியவர் இப்பிறவியில் கம்சனும் சிசுபாலனுமாக இணைந்து இந்த உலகைத் துவம்சம் செய்யப் பிறந்தனர் என்றான். “இனி அவர்கள் தேர்தலில் நிற்கத் தேவையில்லை; காவலர்களாக மறுபடியும் வைகுந்தத்தின் படியில் ஏவல் செய்து கொண்டு நிற்பர்” என்றான் வியாசன்.

“பிறப்பு வரலாறு புரிகிறது! கண்ணன் ஏன் இப்பிறவியில் சிசுபாலனை அழிக்க வேண்டும்?” என்ற வினா எழுப்பப்பட்டது.

“சிசுபாலன் பிறக்கும் போது மூன்று கண்களும் நான்கு கைகளுமாகப் பிறந்தான். அவன் தாய்க்கு அது கவலையாகி விட்டது. தெய்வங்களுக்குத்தான் இந்த மிகைப்பட்ட அவயங்கள் அமைதல் உண்டு. மானுடம் ஆயிற்றே: அவன் எப்படி வாழ்வான் என்ற கவலை வாட்டியது. அவயக் குறைவு ஏற்படலாம்; மிகுதியைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஐங்கரன், நான்முகன், யானைமுகன், ஆறுமுகன் முக்கண்ணன் இவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர்; பாவம்! தெய்வங்கள் எவ்வாறு தொல்லைப் பட்டிருப்பார்கள்; புகழ்ச்சி என்று பேசுவது சுமையாக அமைந்துவிடுகின்றது.”

“சிசுபாலன் கண்ணனின் அத்தை மகன் என்பதால் அவனை ஆசையோடு மடி மீது வைத்துக் கொண்டான். அவன் விகார வடிவம் நீங்கி சுவீகாரம் கொள்ளத்தக்க அழகனாக மாறினான்.”

“அதற்கு முன் அசரீரி சொல்லி இருந்தது. எவன் அவனை எடுக்கிறானோ எவன் அணைப்பால் விகார வடிவம் மாறுகிறதோ அவன் கையால்தான் அவனுக்கு மரணமும் நேரும் என்று தெரிவித்திருந்தது.”

“கண்ணன்தான் அவனுக்கு இயமனாக மாறுவான் என்பது அறிந்து அவன் அன்னைக்கு மனநிறைவு ஏற்பட்டது. கெஞ்சி முறையிட்டு அவனைக் கொல்லாமல் இருக்கக் கேட்டுக் கொண்டாள்.”

“கண்ணா! அவனை நூறுபிழை செய்தாலும் மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.”

“கண்ணனும் நூறு பிழை செய்தால் பொறுத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறான். அதனால் தான் இந்தப் பொறுமை” என்று கூறப்பட்டது.

இருவருக்கும் மற்றொரு போட்டி ஏற்பட்டு இருந்தது என்று விளக்கப்பட்டது.

“விதர்ப்ப தேசத்து அரசன் பீஷ்மகன் என்பவன் தன் மகளைக் கண்ணனுக்குத் தர விரும்பினான்; அவளும் அவனையே மணப்பது என்று உறுதி கொண்டிருந்தாள்! அவன் தமையன் ருக்குமன் என்பவன் அவளைச் சிசுபால னுக்குக் கட்டி வைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தி ருந்தான். மண நாள் அன்று அவள் தப்பித்துக் கொள்ள விரும்பினாள். கண்ணனும் அவள் உள்ளம் தன்பால் என்பது அறிந்து தேர் கொண்டு அவளை ஏற்றிக் கொண்டு சென்று விட்டான். சிசுபாலன் ஏமாற்றம் அடைந்தான். அந்தப் பகையும் சிசுபாலனின் கோபத்துக் குக் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது.”

சிசுபாலன் வாழ்வு முடிந்தது. கண்ணன் முதல் மரி யாதை பெறுவதற்கும் தலைமை ஏற்பதற்கும் எந்தத்தடை யும் ஏற்படவில்லை.

கண்ணனுக்குச் சிறப்பு வழிபாடும் பூசனையும் நடந் தன. தருமனும் திரெளபதியும் அவன் கால் தொட்டு வணங்கினர். வேள்வித் தீயின் முன் சாத்திரம் கற்ற ஆசான் மந்திரம் சொல்லத் தூய ஆடைகள் உடுத்திக் கொண்டு வேய்ங்குழல் கண்ணனின் வாழ்த்தோடு வேள் வித் தவிசில் உமையொரு பாகனைப் போல இடம் மாறி அமர்ந்தனர். வலம் மடவாளும் இடம் மணாளனும் ஆக அததவிசில் இருந்தனர். இது ஒரு மணவிழாப்போல வாழ்த்தொலியோடு நடைபெற்றது

வந்த விருந்தினரை வரவேற்று உபசரித்துப் பாக்கும் வெற்றிலையும் தரும் பணி பற்குணனிடமும், வீமனிடமும் நம்பி ஒப்புவிக்கப்பட்டன. ஈகை என்பதற்கு வாகை சூடிய கன்னனிடம் ஈதல் பொறுப்பு ஒப்புவிக்கப்பட்டது. கொடுத்துச் சிவந்தகைகள் அவனுடையவை; இல்லைஎன்ற சொல்லுக்கு அவன் அகராதியில் இடம் இல்லை. அதே போலக் கணக்கு வழக்கு, பொருள் காப்பு ஆகிய பொருளாளர் பதவி செல்வக் கோமான் என்பதால் அரவு உயர்த்தோன் ஆகிய துரியனிடம் ஒப்புவிக்கப்பட்டது.

குரு குலத்துக்குப் பெருமை தேடித்தந்த தருமன் மா மன்னன் என்ற புகழுக்கு உரியவன் ஆனான். அரவக் கொடியோன் ஆகிய துரியனும் அவன் உறவினரும் தருமனிடம் விடை பெற்றுப் பின் அத்தினாபுரம் நோக்கிச் சென்றனர். திரெளபதியின் தந்தை துகுபதனும், விராட அரசனும் தத்தம் பதிகளுக்குப் போந்தனர்; சல்லியன் முதலிய பெருநில மன்னர்கள் தத்தம் பதிகளை அடைந்தனர்; தருமன் தன் தம்பியரின் துணையோடு நாட்டை நல்லபடி ஆண்டு நற்புகழ் பெற்றான்; கண்ணனும் அனைவரையும் வாழ்த்திவிட்டுத் துவாரகையை அடைந்தான்.

3. சூது போர்

செல்வமும் சிறப்யும் கொண்டு செங்கோல் செலுத்திய சீர்மையுடைய தருமனின் புகழைக் கண்டு புழுக்கங் கொண்டு துரியன் தன் நெருங்கிய சுற்றத்தினரை வையின்கண் கூட்டி அழுக்காறு படப் பேசினான். கார் துடைத்துக் கொண்டு காலம் கடத்திய சாமானியன் ஒருவன் கார் ஒட்டிக் கொண்டு குளு குளு அறையில் குதூகலமாக இருக்கிறான் என்றால் அவனோடு ஆறாம் வகுப்பில் படித்த ஆறுமுகத் தால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? நேற்று எப்படி இருந்தான். இன்று இப்படியாகிவிட்டான் என்று பேசும் அங்கலாய்ப்பு மொழிகளைக் கேட்பது வழக்கம்; அதற்குத் துரியன் விலக்காக அமையவில்லை; மகிழ்வதற்கு மாறாக இகழ்வதில் தலைப்பட்டான்.

தருமனின் தம்பிமார்கள் நால்வரும் தறுதலைகளாக மாறிவிடுவார்கள் என்று தவறுதலாகக் கணக்குப் போட் டவன் துரியன்; அவர்கள் நால்வரும் நல்ல நிலைக்கு வந்து விட்டதால் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்வீட்டுக் குடிசையில் வாழ்ந்துவந்த குப்பன் குபேரனாக ஆவதை உழைக்காது உப்பரிகையில் இருந்த சுப்பன் தாங்க முடியாமல் உளறிக்கொட்டினான்; தருமன் இப்படி உயர்வான் என்று எதிர்பார்க்கவில்லை. “என் கனவிட அவன் ஒரு சாண் வளர்ந்தாலும் நான் அவனுக்குத் தாழ்ந்துதானே போக வேண்டியுள்ளது? வீடு கட்டியவன் நம்மை ஏன் அழைக்க வேண்டும்? பளிங்குக் சல்லில் கால்வைத்து இடறியபோது அந்தப்பாவை ஏன் நகைக்க வேண்டும்? என் கையாலேயே அவன் ஈட்டிய பொருளை ஏட்டில் என்னைக் கொண்டு எழுதச் செய்தது ஏன்? தான் ஒரு சீமான் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான். அங்கர் கோமான் கன்னனைக் கொண்டு அணியையும், மணியையும் வாரிக் கொடுக்கச் சொன்னான்; அவன் எட்டு அடுக்கு மாடி கட்டினால் அதில் அவன் கட்டிப் புரள்வது தானே! திட்டமிட்டுச் சேர்த்து வைத்த பொருளைக் காக்கச் சொல்லி என் கண்களைப் பூக்கச் செய்தானே! நான் என்ன பொருள் காக்கும் பூதமா? அல்லது அவன் அடித்த கொள்ளைப் பணத்தின் பூஜ்யங்களைக் சண்டு நான் திகைப்பு அடைந்து போக வேண்டும் என்ற பிடிவாதமா? பெரியோர் சொத்தைப் பேணிக் காக்காமல் எட்டுத்திக்கும் திரிய வைத்து ஊர் சொத்து களை இவன் உலையில் போடுவது எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பாரத தேசத்தில் இவன் முரசுக் கொடிகள் அங்கங்குப் பறந்து இவன் விரசு புகழ் முழங்க வேண்டுமா? என் தந்தை திருதராட்டிரன் செய்யாத பெரு வேள்வி இவன் செய்தால் என் தந்தைக்கு இழுக்கு அல்லவா? முரசுக் கொடி உயர்த்தி முரசு கொட்டி முழங்கலாம். அரவுயர்த்தவன் ஆகிய நான் நச்சுப்பல்லுடை யவன் என்பதை அவன் அறிய வேண்டாமா? அவன் கொட்டம் அடங்க நாம் செய்யும் திட்டம் என்ன?” என்று அவையோரைப் பார்த்துக் கேட்டான்.

இச்சகம் பேசி அதனால் இகபர சுகம் அடைய முடியும் என்ற நம்பிக்கை உடைய இளையவன் துச்சாதனன் எரியும் கொள்ளியினை ஏறவிடுவது போல அதற்கு இசைய வகை மொழிகளைப் பேசினான். முளைக்கும் போதே முள் மரத்தைக் களைவது எளிது; அது முறுக்கேறி விட்டால் கோடரிதான் தேவைப்படும் என்றான். நீர் என்றும், நிலம் என்றும் வேறுபாடு அறிய முடியாதபடி பளிக்குத்தரை அமைத்து அண்ணன் திகைத்தபோது அச்சிங்காரி நகைத்தாளே அதை நினைத்தாலே நெஞ்சு குமுறுகிறது. அணங்காகிய அவளுக்கு அடுப்பு ஊதிக் கொண்டிருந்த அந்த மடையன் வீமன் அந்தச் சிறுக்கி யோடு சேர்ந்து ‘சுளுக்கு’ என்று இளித்தானே இந்தக் கிறுக்குகளுக்கெல்லாம் ஒரு சுறுக்குக் காணாமல் எப்படி இருக்க முடியும். வந்தவர்களை வா என்று அழைத்தார்களே தவிர அங்கு இருந்தவர்களைச் சாப்பிட்டீர்களா என்று வினவினார்களா? எத்தனையோ பேர் வந்தார்கள். வந்தவர்களை வரவில் வைத்தான்: சென்றவர்களைச் செலவில் வைத்தானே தவிர இருப்பில் எங்கே வைத்தான் வேள்விக்கு முதல் மரியாதை பெறக் கேள்விக்கு உரிய இடையன் தான் கிடைத்தான்; தாத்தா:வீடுமன் இல்லையா? கல்வி கற்றுத்தந்த ஆசான் துரோணன் இல்லையா? ஆரம்ப ஆசிரியன் கிருபன் இல்லையா? மன்னன் மரபில் வந்த மகிபதிகள் இல்லையா? வீரன் அசுவத்தாமன், கொடைவள்ளல் கன்னன், சிசுபாலன், அண்ணன் துரியன் இவர்கள் இல்லையா? கேள்வி கேட்ட அவனை வேள்வியிலே எரிக்கும் அவிசு என நசுக்கியது அடுக்குமா? ஒரு சிசுபாலன் செத்தான் என்றால் அது அரச பாலர்களுக்கே அவக்கேடு ஆகாதோ? அவர்கள் கட்டிய மண்டபத்தை இடித்துத்தள்ளினால் தவிர இதற்கு எல்லாம் ஒட்டிய முடிவு காண முடியாது” என்று கூறினான்.

தம்பிக்கு ‘சபாஷ்’ பட்டம் கொடுத்து அவனைத் தட்டிக்கொடுத்து அவர்களை வெல்வதுதான் அடிப்படை. அது போரில் என்று இருக்கத் தேவை இல்லை; அதில் அவர்களை அசைக்க முடியாது என்றால் வஞ்சகத்தால் அவர்களை நசுக்கிக் கேடு சூழ்தலே தக்கது” என்றான் துரியன்.

தான் ஒருவனே அவர்கள் அனைவரையும் போரில் அழித்திடச் செய்ய முடியும் என்று கூறி மோது போரே தக்கது என்றான் கன்னன். அரச அவையில் மற்றவர் சிரிக்கப் பேசும் நகையாளி இல்லாத குறையைத் தீர்த்து வைத்துக் கன்னன் கோமாளித்தனமாகப் பேசிய உரைகள் அவையினர்க்குச் சலிப்பை ஊட்டின. குடித்துவிட்டு நடுத் தெருவில் குரல் கொடுத்து வீர மொழி பேசும் குடிகாரர் களைப் போல அவன் உரைகள் அவர்களுக்கு இருந்தன.

எதிரியின் ஆற்றலை எடுத்துப் பேசி அதற்குத் தான் எவ்வகையில் நிகர் என்று தொடுத்துப் பேசுபவனே அறிவாளி. தான்படித்த பட்டமும், அடைந்த கட்டமும், தான் வைத்துள்ள திட்டமும் மட்டும் பேசிக் கொண்டு தற் பெருமை தோன்றப் பேசும் போலித்தன்மை அவனிடம் வெளிப்பட்டது. தன் வில்லின் முன் விசயன் மட்டுமே அல்லாது எதிரிகள் அனைவரும் நிற்க முடியாது என்று பெருமை பேசினான்.

போர் என்பது கூட்டுப் பொறுப்பு:மாற்றான் வலிமையையும் சீர் தூக்கிப் பேசுபவன்தான் அறிவாளி ஆவான். கன்னன் கழறிய உரைகளில் இக்குறைகளை எடுத்துக்காட்டிச் சகுனி அவனைச் சொல்லால்சுட்டு அடக்கி விட்டான். இதுவரை அவன் விசயன் முன் வெட்கித் தலைகுனிந்த நாளை விவரித்துப்பேசினான். “திரெளபதியை மாலையிட்ட நாளில் இவன் மதிமயங்கிக் கிடந்தானா? விசயன் வில்லைக் காட்டியபோது எல்லாம் இவன் கைகட்டிக் கொண்டிருந்த கதை தெரியாதா?” என்று கேட்டான்.

“இடும்பன், பகன், சராசந்தன் இவர்களை வென்ற வீமன் தருமனின் தம்பி என்பதை மறந்து விடமுடியுமா?”

“வீரம் சோறு பேடாது; விவேகம்தான் வெற்றி தரும்” என்றான்.

கடந்த காலத் தோல்வி கன்னனின் நெஞ்சை முடக்கி வைத்தது; சகுனியின் சாதுரியமே தலை எடுத்தது. “மயன் கட்டிய மண்டபம் காட்டி நம்மை அழைத்து வியன் பெரும் செல்வத்தை விளம்பரம் செய்தான். வேள்வி செய்வதாகச் சொல்லி நம்மைக் கேலிக்குரியவர்கள் ஆக்கினான். அதே காயை நாம் திருப்பிப் போட்டு இவர்களை நாம் வகையாக மாட்டி வைக்க முடியும்” என்றான்.

“மண்டபம் ஒன்று கட்டு; அதைச் சொல்லி அவர்களை இங்கு வரவழைத்துக்காட்டு; உண்பதற்கு முன் அயர்ந்துஇருப்பார்கள்; மாமன் நான் இருக்கிறேன்; ‘ஆடுக தாயம்’ என்பேன். ‘குடுக வெற்றி’ என்று நீ சொல்; அவன் அகமனத்தைத் தட்டி எழுப்பு: ஆடாவிட்டால் அது தோல்வி என்று செப்பு. அவன் புகழ் வெறிகொள்வான். நெறி தவறுவான். அதனால் மானம் பறி போகும். தாயம் அவன் தாய பாகத்தைக் கவ்வும், சூதில் விழுபவன் துண்டி லில் விழும் மீன் போன்றவன். ஆரம்பம் எனது; அதற்கு மேல் அவன் துயரக் கதைக்குத்தொடர் அத்தியாயம் நீங்கள் அமைத்துக் கொடுக்கலாம். ஈட்டிய புகழ் எல்லாம் இழந்து விட்டுக் கைகட்டி நிற்கும் அடிமையாக ஆக்க முடியும், அவனை வெல்லும்போது மற்றவர்கள் தாமாக விழுந்து விடுவார்கள். அங்கே சிரித்துப் பேசிய ஒய்யாரி அவளை இங்கே ஒப்பாரி வைத்து அழவைக்க முடியும். அதுமட்டு மல்ல; சிசுபாலனைக் கண்ணன் கொன்றான். அதனால் சினந்த சல்லியன் போர் தொடுப்பான், கண்ணன் மீது படை எடுத்துச் சென்றுள்ளான். சல்லியன் வல்லியன். நாள் பல ஆகும். கண்ணன் மடக்கிப்போடப் படுவான்; அதற்குள் இவர்களை அடக்கிக்கூண்டில் வைத்துவிடலாம்” என்றான். இதுதான் தக்க சூழ்நிலை” என்றான்.

விதுரன் பத்திரிகைத் தலையங்கம் போல நடுநிலை ஏட்டி ன் பணியைச் செய்தான். “நாடு கேட்டு உன் தந்தை ஒரு ஏடு அனுப்பினால் போதும்; அதற்கு மறுப்புச் சொல்லாமல் அவனே வந்து தருவான்; பொன்னும் பொருளும் கேட்டாலும் அவற்றைப் பூமேல் வைத்துக் கொடுப்பான். பகை கொண்டு அழிப்பதை விடு. நகை கொண்டு உறவு வளர்ப்பதைத் தொடு, உலகம் உங்களைப் போற்றும். சகுனி சொல்லை நீவிர் மாற்றும். அதுதான் நல்லது ஆற்றும்” என்று பேசினான்.

கட்சித் தலைவர் சொல்வதை எதிர்த்துப் பேசும் தொண்டன் நிலைமைதான் விதுரனுக்கு ஏற்பட்டது. ‘தாசிக்குப் பிறந்த ஒசிச்சாப்பாடு நீ; ஒரவஞ்சனையோடு பேசுகிறாய்” என்றான். “புது பணக்காரனைக் கண்டு நீ மதிமயங்கி விட்டாய்; அதனால் எங்கள் சதிக்கு எதிர் நீ பேசுகிறாய். எடுபிடிக்கு ஆளாகச் செயல்பட வேண்டிய நீ மாடுபிடி சண்டையில் பங்கு கொள்வது ஏன்? என்று துரியன் அதட்டிப் பேசினான்.

விதுரன் புறக்கணிக்கப்பட்டான். தருமன் இயற்றிய மண்டபத்திற்கு நிகராக இவன் ஒரு மண்டபம் அமைத்தான். தன் தந்தையிடம் செய்தி சொல்லிப் பாண்டவர்க்கு அழைப்பு அழைப்புமாறு கூறினான். கடிந்து தடுக்க வேண்டிய தந்தை அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து போர் செய்து உங்களால் வெல்ல இயலாது, வஞ்சினம் செய்து போர் செய்வதை விட வஞ்சனையால் வெல்வதே தக்கது; அதற்குச் சூது போர்தான் மிக்கது. திட்டம் கனியச் சகுனி தவிர வேறு யாரும் உதவ முன் மாட்டார்கள். வெற்றி அடைய அவன் சொல்வதைப் பின் பற்றுவதே ஏற்றது” என்று கூறினான்.

விதுரன் பாண்டவருக்கு வேண்டியவன். அதனால் அவனை அனுப்பினால் பாண்டவர்கள் எதிர் ஒன்றும் பேசமாட்டார்கள். திருதராட்டிரனை அணுகி அவனைக் கொண்டு விதுரனையே பாண்டவர் பால் அனுப்பி வைத்தான். விதுரனுக்குச் செல்ல விருப்பம் இல்லை; எனினும் தமையனின் கட்டளைக்கு எதிர் சொல்ல முடியவில்லை.

பாண்டவர்களிடம் சென்ற விதுரன் கொண்டு வந்த செய்தியைச் சொன்னான். மண்டபம் காண அழைப்பதாகக் கூறினான். அவர்கள் திட்டத்தையும் தெளிவுபடுத்தினான். சூது போர் செய்து தருமனின் நாட்டையும் பொருள்களையும் கவர அவர்கள் திட்டம் இட்டு இருப்பதைக் கூறினான். அதற்குத் தருமன்: “அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,

அழகும், வென்றியும், தத்தம்

குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,

குலமும், இன்பமும், தேசும்,

படியும் மாமறை ஒழுக்கமும், புகழும், முன்

பயின்ற கல்வியும் சேர

மடியுமால்; மதியுணர்ந்தவர் சூதின்மேல்

வைப்பாரோ மனம் வையார்”

என்று கூறினான். சூதாடுதல் தருமம் அன்று என்று கூறினான். “உம்முடைய கருத்து யாது?” எனத் தருமன் விதுரனைக் கேட்டான்.

“அறிவு கூறினேன்; ஆடாதே சூது என்றேன்; முறிவு ஏற்பட்டது; முடங்கி விட்டேன். செய்தி சொல்ல வந்தே னே அன்றிச் சூது ஆடுதல் செப்பம் உடையது என்று நான் கூறமாட்டேன். அழைப்புத் தந்தேன்; அதனை ஏற்பதும் ஏலாததும் உம் விருப்பம்” என்றான்.

வீமன் தக்க நீதிகள் சொல்லிச் சூது ஆடுதல் தகாது என்று ஏதுகள் கூறினான்.

“குழி வைத்து யானையைப் பிடிப்பர். அது குழி என்று தெரிந்ததும் அவ்வழியே அது எட்டிப்பார்க்காது. பழி என்று தெரிந்தும் விழிகளை மூடிக் கொண்டு நாம் அழியச் செல்வது கூடாது” என்று அருச்சுனன் கூறினான்.

“விதி கூட்டும் இறுதி இது என்றால் அதை மதி கொண்டு கழிப்பதுதான் சரியான கணக்காகும்” என்று அடுத்த தம்பியர் அறிவித்தனர்.

“மூத்தோர் சொல் வார்த்தை தட்டுவது கூடாது; இயலாது; பெரிய தந்தை அழைப்பு விடுத்து மறுப்புக் கூறுவது நம் பெருமைக்கும் பொருந்தாது.” என்று கூறிப் பயணக் கட்டுரைக்குத் தாளும் கோலும் எடுத்து வைத்தான். அனைவரும் அத்தினாபுரி சேர்ந்தனர்.

குருட்டுத் தந்தை திருட்டுத்தனம் மிக்கவனாக நடந்து கொண்டான். அன்புடையவனைப்போல அகம் குழையப் பேசித் தழுவிக்கொண்டு தருமன் கட்டிய மண்டபத்தையும் நடத்திய வேள்வியையும் காணும் பேறு தனக்கு இல்லாமல் போய்விட்டது என்று வருந்துவது போலப் பேசி நடித்தான். அன்னை காந்தாரியைப் பார்த்துவிட்டுப் போகச் சொன்னான்; தருமன் அவளையும் பார்த்து இனிய உரை பேசி மகிழ்வித்தான்.

மாமன் சகுனியும், தம்பிமாரும், அங்கர் தம் அரசனும், வீடுமனும், விதுரனும், அசுவத்தாமனும், துரோணனும் கூடியிருந்த அரசவையில் வீற்றிருந்த துரியன் மண்டபத் தின் அழகு காண மன்னர் ஐவர் தம்மை நீ கொண்டு இமைப்பில் வருக” என்று தேரோட்டியாகிய பிராதிகாமி யைப் பணித்திட்டான்.

சென்றவன் எட்டுத்திக்கும் வென்றவனாகிய தருமனை வணங்கினான். வாய்புதைத்து அடக்கம் காட்டித் தன் உரையைத் தொடங்கினான். “மண்டபத்தின் அழகுகாண மன்னன் துரியன் அழைக்கின்றான்; வருக” என்று கூறினான்.

வேள்விச் செல்வியாகிய திரெளபதியைக் காந்தாரியின் இல்லில் இருக்கச் சொல்லிவிட்டுத் தானும் தம்பியும் பேய் இருந்தது என்னும்படி அமர்ந்திருந்த துரியனை அணுகினான்; அசையாத கொலுப்பொம்மைகள் போல் வீற்றிருந்த பெரியவர்களை வணங்கிவிட்டு மண்டபத்தைக் கண்டு வியந்து அதனை மனமாரப் பாராட்டினான்.

“இந்த மண்டபத்துக்கு இணையாக விண்ணவர் நகரிலும் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறினான், தான் கட்டிய மண்டபத்தை விடவும் அழகிது என்று அடக்கத்தோடும் கூறினான். அவன்பின் வந்த தம்பியரும் முறைப்படி அவைப் பெரியோருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அவரவர்க்கு இட்டு இருந்த தவிசில் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.

உண்டார்களோ இல்லையோ அதற்குள் அவர்களை வம்புக்கு இழுத்து வலையில் மாட்டிவைக்க மாமனும் துரியனும் பேச்சுத் தொடங்கினார்கள். சோறு சமைக்க ஆகும் காலத்துக்குள் பொழுது தக்க வகையில் போக்கத் தடையுண்டோ என்று சகுனி தொடங்கினான். மாமன் மருமகன் என்ற உறவு கொண்டு தருமனோடு வேடிக்கைப் பேச்சில் வேதனையைத் தொடங்கி வைத்தான்.

“சும்மா இருக்கிறாயே இந்தத் தாயத்தை உருட்டிக் கொண்டு இருக்கலாமே” என்றான். அறப்பள்ளியிலே பாடம் படித்த தருமன் அறநெறிச் சாரத்தை அடியோடு ஒப்புவித்தான். “சூதும் வாதும் வேதனை செய்யும்” என்று சொல்லிப் பார்த்தான்.

“நீ ஒன்றும் காசுவைக்க வேண்டாம்; உருட்டத்தான் சொல்கிறேனே தவிரத் தெருட்டச் சொல்லவில்லை. நான் தோற்றால் காசு தருகிறேன். நீ தோற்றால் கைவிரித்தால் போதும்” என்று கிண்டி விட்டான் சகுனி.

“பாவம்! வேள்வி செய்தனர். அதனால் பொருள் விரயம் ஆகிவிட்டு இருக்கும். இல்லாதவர்! அதனால் வைத்து ஆடக் காசு இருக்காது” என்றான் துரியன்.

“தாயம் உருட்டத் தெரியாதவர்கள் வில் எடுத்து நாண் எங்கே பூட்டப் போகிறார்கள்? காய் வைக்கத் தெரியாதவர்கள் கரி பரி தேர் ஆள் இவர்களை எப்படி அணி வகுத்து அசைக்கப் போகிறார்கள் என்று வில் உண்டாக்கும் வடுவினைச் சொல் எடுத்துக் கன்னன் உண்டாக்கினான்; வீரம் மிக்க விசயன் வெகுண்டெழுந்தான்.

“வீட்டைக் கட்டி விட்டு வேடிக்கை காட்ட அழைத்தீர்; கேளிக்கை படப் பேசிச் சூது வழியாக எம்பொருளைக் கொள்ளை கொள்ளத் திட்டமிட்டீர். காய் வைத்து ஆடத் தெரியாது தான், உம் தலைவைத்துச் சாடத் தெரியும்; எடு வில்லை; விடு சொல்லை” என்று முழக்கம் செய்தான்.

வாதங்கள் பெருகி மோதல்கள் உண்டாவதைத் தவிர்க்தத் தருமன் எங்கள் பொருளைப் பறிக்கத்தானே இந்த ஆட்டம்; தேவையில்லை; கேள்; ஆடாமலே தருகிறேன்” என்றான்.

“வெற்றி தோல்வி என்பது இருவருக்கும் பொது. நீங்கள் வெல்ல மாட்டீர்கள் என்று நினைப்பது தவறு. தாயம் வைத்து ஆடு, காயை அகற்று. என் மாமனுக்காக எவ்வளவு வைக்க வேண்டுமானாலும் நான் வைக்கிறேன்; அத்தினாபுரியையே அடகு வைக்கச் சொல்கிறாயா நான் தயார். கேவலம் காசு செலவு ஆகும் எனறு அஞ்சிப் பின் வாங்குவது உன் பெருமைக்கு இழுக்கு” எனறான் துரியன். அதற்குமேல் அருச்சுனனைத் தருமன் பேசவிடவில்லை. அருச்சுனனை அடங்கி இருக்கும்படி கூறிவிட்டு ஆடும் பலகை முன் எதிர் எதிரே அமர்ந்தான்; அறம் மறந்தான்; அறிவு குறைந்தான்; தூண்டிலில் மீன் சிக்கிக் கொண்டது. அசையும் பொருள் அசையாப்பொருள் அனைத்தும் வைத்து ஆடினான்; இழக்கும்தோறும் குது அவனை மேலும் இழுத்தது. ஒரே ஆட்டத்தில் இழந்தவை அனைத்தையும் திரும்பப்பெறலாம் என்பதால் பந்தயத் தொகை அதிகரித்தது. ஈட்டி வைத்த செல்வம், நாட்டி வைத்த புகழ் அத்துணையையும் ஒரு சில உருட்டல்களில் இழந்து விட்டான்.

“வைப்பதற்கு ஒன்றும் இல்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்; எஞ்சியிருந்த தம்பியர் நால் வரையும் வைத்து இழந்தான். தன்னையும் வைத்து ஆடினான். அரைக்கணத்தில் ஐவரும் அடிமையாயினர்.

“இன்னும் உன் மனைவி” என்று இழுத்தான்.

வீடுமன் தடுத்தான்; விதுரன் கடுமையான சொற்களைத் தொடுத்தான்; விசயன் வில்லை எடுத்தான்; வீமன் கதையை மடுத்தான்; தம்பியர் விழிகள் கடுத்தனர்.

“பொறு” என்று அவர்களுக்குக் குறிப்புக் காட்டினான் தருமன்.

பெண்ணைப் பணயம் வைத்தான்; ஆட்டத்தில் அறிவுக்கண்ணை இழந்தான்.

கட்டிய மனைவியைச் சதுரப்பலகையின் கட்டுக்குக் கொண்டு வந்து நிறுத்தினான்.

ஆட்டம் முடிந்து; ஆர்ப்பாட்டம் எழுந்தது.

ஆரணங்கினைக் கொணர்க என்றான். தேரோட்டியை அனுப்பினான். அடிமைக்கு மேலாடை ஏன் என்று ஆரவாரம் செய்தான். எப்பொழுதும் உடுத்துக் களையாத உத்தரியத்தை எடுத்துக் கீழே போட வைத்தான். அவர்கள் வீரம் உடல் தழும்புகளில் அடங்கி மவுனம் சாதித்தது.

தேர் ஒட்டி பிராதிகாமி நேர் ஒட்டமாக ஓடினான். சிந்தித்துப் பார்த்தான்; அவன் சிந்தையில் சட்ட நுணுக் கங்கள் சதிர் ஆடின; திரும்பி வந்தான்.

“தருமன் தன்னைத் தோற்குமுன் பெண்ணை வைத்து விளையாடினானா? கண்ணை இழந்தபின் சித்திரம் வரைந்தானா?” என்று திரெளபதி வினா எழுப்பியதாக அவனே ஒரு கற்பனையை அவிழ்த்துவிட்டான்.

“அவளை அழைத்துவா! அரங்கில் அவள் கணவன் விடை சொல்வான்” என்று கடுத்துப்பேசிச் துச்சாதனன் முகத்தை வெகுண்டு நோக்கினான்.

“கற்கண்டு போலப் பேசும் அவள் சொற் கண்டு நீ திகைக்காதே; குவளை விழியாளைத் ‘திரு ருதி’ என்று இழுத்து வந்து இங்கே ‘இரு இரு’ என்று கொண்டு வந்து நிறுத்து” என்று கட்டளையிட்டான்.

“ஐவருக்கு ஒருத்தி; அவள் அஞ்சாத சிறுக்கி; அவளை அழைத்துவா; பேசலாம் இங்கே நிறுத்தி” என்றான்.

அதிருஷ்டம் துச்சனை அனைத்தது. நேரே திரெளபதி இருந்த காந்தாரியின் இல்லத்துக்குச் சென்றான்.

“வாடி இங்கே, வடிவுக்கு அரசி நீ; அங்கே உன் கணவர்கள் வாடி இருப்பதை நேரடிவந்து பார்” என்று கூறி அவள் கரங்களைத் தொட்டிழுக்க அருகில் சென்றான்.

“அத்தை; இந்தச் சொத்தை செய்யும் வித்தையைப் பார்! அவன் கைப்பிடித்து இழுக்கிறான்; நீ கண் கட்டிக் கொண்டு மறைகிறாய். அடைக்கலம் அளிக்க வேண்டிய நீ அவனுக்குப் படைக்கலமாகத் துணை செய்கிறாய்” என்று கதறினாள்.

“அத்தை மகள் நீ; அதனால் அவன் கற்றவித்தையைக் காட்டுகிறான். இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளலாமா? மூத்தவன் அழைக்கிறான்; உன்முத்துப் பல் ஒன்றும் உதிராது; உன்னைப்பார்க்க விரும்புகிறார்கள். நீ வியர்க்க அழுகிறாய் அரங்கில் சேர்த்து உன்னை ஆடவா அழைக்கிறான்? அவையில் உனக்கு ஆசனம் தருவான் என்றாள் பலபாதகரைப் பயந்த காந்தாரி. அவன் தொட்டு இழுக்க அஞ்சினான்; சட்ட விழ்ந்த மயிர் முடியைப் பற்றிக் கொண்டு அவளைத் தரதர என்று தரையோடு அவள் உடம்பு கறை பட இழுத்துச் சென்றான்; அவள் அழுது அரற்றினாள், கத்தினாள், கதறினாள்; அவள் சொற்கள் செவிடன் காதில் ஊதும் சங்கு ஒலி ஆயின.

“என் அண்ணன் கல்லில் தடுத்தபோது சொல்லிச் சிரித்தாயே! இங்கே வல்லில் தம்மை இழந்த உன் மகிபர்கள் முன் வந்து அவர்கள் அல்லல் கண்டு சிரி; அடிமையாகி விட்ட அவர்கள் மிடிமை பார்த்துச் சிரி; பீடு பெற்றுச் சீர் பெற்று உயர்ந்த வாழ்வு கேடு உற்றதே அதைப்பார்த்துச் சிரி; உங்கள் பிழைப்பு அம்பலத்துக்கு வந்துவிட்டதே அதைக்கண்டு சிரி, கட்டிய கணவர்கள் கை கட்டிக் கொண்டு சேவகம் செய்வதைப்பார்; விற்பிடித்த கையும், கதை எடுத்த தோளும், வாள் பிடித்த கரங்களும், கோல் பிடித்த முடியும் என் அண்ணனுக்கு வால் பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்” என்று சொல்லி இழுத்து வந்தான்.

அவை நடுவே பெண்ணின் அவலக்குரல் கேட்டது; பெண் என்றால் என்ன என்று அறியாத மரக்கட்டையே! நீ மவுனம் சாதிப்பது ஏன்? என்று வீடுமனைப் பார்த்துக் கேட்டாள். “கல்விக்கு ஆசான் என்று சொல்லிக் கொண்டு கலைமகளை வழிபடும் துரோணரே! என்னை விலை மகளினும் கீழாக நடத்துவதைக் கண்டு சிலையாக நிற்கிறீரே ஏன்?” என்று கேட்டாள். “வில்லிலே விவேகம் உடையவர் என்று பேசும் விதுரரே! உம்சதுரவிளையாட்டு ஏன் அதிர்ந்து போய்விட்டது” என்றாள். கண் இழந்து வாழ்வில் ஒளி இழந்து இருப்பதைத்தவிர வெளுப்பு ஏதும் காணாத வேந்தனே! உன் செவிகளும் பார்வை இழந்து விட்டனவோ?” என்ற திருதராட்டிரனைக் கதறிக் கேட்டாள்.

செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் மவுனம் சாதித் தது; அறிவும் சால்பும் ஆட்சிக்கு அடிமைப்பட்டு அடங்கி விட்டன. வாயடைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்து கிடந்தனர். மனித இயல் அவன் செய்வது அடாது என்று அறிவிக்கிறது; சட்ட வியல் அவன் பக்கம் சாய்ந்து நின்றது. அடிமைப்பட்ட அவளை அழைத்துவர அவனுக்கு உரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் வாய் அடங்கிக் கிடந்தனர்.

அழுது பயன் இல்லை என்று அறிந்து அவள் அறிவைத் தீட்டினாள். கண்ணகி போல அறம் கூறும் அவையத் தைப் பார்த்து அறைகூவிக் கேட்டாள்.

“தன்னை வைத்துத் தோற்றுவிட்ட பிறகு என்னை வைத்து விளையாட என் மன்னன் தருமனுக்கு உரிமை ஏது? சட்டம் எப்படி என்னைக் கட்டுப்படுத்தும்? இந்தச் சின்ன அறிவு கூட இல்லாமல் தீர்ப்பு வழங்கியதைக்கண்டு தீர்ந்தது கடமை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறீரே. உங்கள் வித்தகம் மெத்தனம் அடைந்தது ஏன்?” என்று கேட்டாள்.

மவுனம் குடி கொண்டது. மடமை துரியன்பால் வெளிப்பட்டது.

கிள்ளை மொழி பேசும் வள்ளைக் கொடியாளைத் துகில் உரித்துக் காட்டு; அப்பொழுது எழும் அழுகுரல் பாட்டு; அதை இந்த அவையோர்க்கு எடுத்துக்காட்டு; அதற்காக அவளை வாட்டு” என்றான் துரியன்.

அந்தத் தடிப்பையல் அந்தத் தையல் மீது கொண்ட மையல் காரணமாக அவளைத் தொட்டுத் துகில் உரிக்க அவள் சேலையைப்பற்றி இழுக்கச் சென்றான்.

இனி பொறுப்பது இல்லை தம்பீ! எரிதழல் கொண்டு வா; நெறிதவறிய தருமனைத் தீய்ப்போம்; வேள்வி மகளை வைத்து விளையாடிய அவனைக் கேள்வி கேட்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டான்” என்று வீமன் கடிந்து பேசினான். “தருமத்தின் கையைச் சுட்டுப் பொசுக்குவோம்” என்றான். “யாரைப்பார்த்து நீ இவ்வாறு பேசுகிறாய்” என்று வருந்தி விசயன் ரத்தக் கண்ணிர் வடித்தான். மற்றும் தம்பியர் இருவரும் உள்ளக் குமுறலால் குமைந்து எதையும் உளறாமல் மனம் அழிந்து நின்றனர்; தருமன் தக்க உரை தந்தான்.

“பூக்க வேண்டிய மலர்கள் பூத்துக் காயாதலும் உண்டு. உதிர்ந்து கருகிப் போதலும் உண்டு. காற்று அடிக்கும் வேகத்தில் கீற்றுகள் மட்டும் அசைவதில்லை. அடிமரமும் ஆட்டம் கொடுக்கும், வேரோடு மரம் வீழ்ந்து சாய்தலும் உண்டு; வெள்ளம் வந்தால் அது பள்ளத்தில் மட்டும் பாயும் என்று கூற முடியாது; கரைகளையும் உடைத்துக் கொண்டு பெருக்கெடுத்து ஒடுதலும் உண்டு; முன்னம் பொறுத்தீர் இன்னும் பொறுப்பதுதான் நம் கடமை” என்று காந்தி மூர்த்தி போல சாந்தமூர்த்தி தருமன் பேசினான்.

“கட்டுண்டோம் காலம் மாறும்” என்று ஆறுதல் அடைந்தனர் பாண்டவர் ஐவரும். விகர்ணன் என்னும் துரியனின் கடைசித்தம்பி துணிந்து எழுந்தான். இது பேடித்தனம்; அடிமையாகி விட்டால் அவர்களை அவமானப் படுத்த வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்– கிறது? சிறைக் கைதிகள் என்றால் அவர்களை அடைத்து வைக்கலாமே தவிர அடக்கி வைக்க முடியாது”.

“அடிமைகள் என்றுமே அடிமையாக இருப்பது இல்லை. புரட்சிக்கனல் எழுந்தால் உங்கள் புரட்டுகள் பொசுங்கி விடும். இந்த மருட்டுகளை விட்டு ஆண்மையோடு நடந்து கொள்ளுங்கள். பேடிகளைப்போல அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு மல்யுத்த வீரர்கள் என்று நீங்கள் வாய்கிழியச் சொன்னால் அது குதர்க்கம் ஆகுமே தவிர தருக்கம் ஆகாது. பெண்ணடிமை செய்த காலம் போச்சு; வாதில் பெண் ஆட்சி செய்யும் காலம் இது ஆச்சு; இந்திரன்தான் ஆட்சித் தலைவன் என்பது பழைய பேச்சு; இந்திராணியும் மாட்சிக்குரிய தலைவியாவது இன்றைய மூச்சு, கண்ணகியின் வீர முழக்கம் பசண்டியன் ஆட்சியைக் காற்றாடியாகப் பறக்கவிட்ட கதையைப் படிக்காதது உம் குறை”.

“பெண் தன்னைச்சூதில் இழந்தவளாக இருக்கலாம்; எளிதில் அவளை வென்று விடமுடியும் என்று பகற்கனவு காணாதீர்கள். அவள் யார் என்பதைப் பற்றி இங்குப் பேச வரவில்லை. அல்லல் உறுபவள் இவள். பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை இனி இந்த மண்ணுக்குத் தாங்கும் சக்தி இருக்காது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று மதி படைத்த எவரும் முழக்கம் செய்வார்கள்” என்று எடுத்து உரைத்தான்.

கன்னன் எழுந்தான்; விகர்னனைக் கடிந்தான். சின் னப்பயல் நீ; உன்னை யார் இங்கு வாய் திறக்கச் சொன் னது? அனுபவம் இல்லாத ஆத்தி சூடி நீ; கொன்றை வேந் தன் என்றால் அது கொத்தவரங்காய் என்று தான் நீ அறிவாய்; பெரியவர்கள் கூடி இருக்கும் இப்பெருமை மிக்க பேரவையில் பேசுவதற்கு உனக்கு யார் வாக்குரிமை தந்தார்கள்? இளைஞர்கள் நீங்கள் இட்டபணி செய்யலாமே

பால் மணம் மாறாத பாலகர்கள் நீங்கள். அரச அவையில் பங்குகொள்ள உங்கள் மீசை நரைக்கவில்லை; அண்ணனை எதிர்த்துப்பேசத் திண்மை உனக்கு எவ்வாறு வந்தது? தம்பி என்றால் படைக்கு அஞ்சாமல் இடும் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அண்ணன் பேசும் போது அடக்கம் தான் உனக்கு அணிகலன்; சட்டம் தெரியாமல் உன் இட்டம் போல் பேச உனக்கு உரிமை கொடுத்ததே தவறு.

“அவன் மாடுமனை வீடு என்று சொல்லித்தானே பந்த யப் பொருளாக வைத்தான்; வீட்டில் இருக்கும் மனைவி யும் வீட்டில் அடங்காதோ? ‘இல்’ எனப்பட்டது இல்லாளைக் குறிக்காதோ? அவன் உடைமைகளில் மனைவியும் ஒருத்தி ஆக மாட்டாளோ? சட்டம் படிக்காமல் சபையில் பேசுவது சரியாகாது” என்றான். “இது தவறு என்று பட்டால் பேசாமல் வெளியே நடந்து காட்டுவதுதான் அரச அவையின் நடைமுறை.”

துரியனின் ஆதிக்கம் அவையோர் விவேகத்தை அடக்கிவிட்டது.

சிலைகள் வைப்பதற்கு நிதிகள் திரட்டத் தேவை இல்லை. சிற்பிகளின் கைவண்ணம் அதுவும் தேவை இல்லை, துரியனின் அவையில் மாந்தர் எல்லாம் சிலைகளாக மாறி விட்டனர். அந்தக் கலைத் திட்பம் துரியனிடம் இருந்தது.

அவள் கூந்தல் சரிந்தது; சேலை நெகிழ்ந்தது. மானம் குலைந்தது; அவையில் ஒழுங்கு தலை கீழ் ஆகியது.

அவள் மனநிலையை வில்லியின் சொற்களில் தருவது சிறப்புடைத்து. செயல் இழந்து கண்ணனை மனத்தில் நினைந்து தன்னை மறந்து நின்றாள். “ஆறாகி இருதடங்கண் அஞ்சன வெம்

புனல் சோர அளகஞ் சோர

வேறான துகில் தகைந்த கைசோர

மெய்சோர வேறோர் சொல்லும்

கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று

அரற்றிக் குளிர்ந்து நாவில்

ஊறாத அமிழ்துஊற உடல் புளகித்து

உள்ளமெலாம் உருகி னாளே”

என்பர் கவிஞர் வில்லிபுத்துரார்.

துச்சாதனன் அவள் கட்டியிருந்த சேலைகளைக் கஜக் கணக்கில் பார்த்தான்; ஆறு அல்லது எட்டு என்று நினைத்தான்; நிஜக்கணக்கில் அது வேறாக முடிந்தது. இழுக்க இழுக்க நீதிமன்ற வழக்குகள் போல் நீண்டு கொண்டே வந்தது. அவர்கள் வாதங்கள் போல நிறங்களும் மாறிமாறி வந்தன; அவன் கைகள் சலித்தன; கால்கள் தளர்ந்தன; மெய் அயர்ந்தது; மனம் சோர்ந்தான். அவன் களைத்து ஒய்ந்துவிட்டான்.

இந்த அற்புதத்தைக்கண்டு அவையோர் அஞ்சினர். தீண்டாத தெய்வக் கற்பினாள் இவள் என்பதை உணர்ந்து அவள் அடிகளுக்கு மலர்கள் தாவினர். அஞ்சலி செய்து ஆராதனை நிகழ்த்தினர். தனிமனிதன் தவறு செய்யலாம்; மானுடம் தவறக்கூடாது; அப்படித் தவறி னால் தெய்வம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை அந்நிகழ்ச்சி காட்டியது. கண்ணன் மானம் காத்தான் என் பதை நிதானமாக யூகித்து அறிந்தனர். அவையே ஆட்டம் கொடுத்தது; வெளியே கனல் தெறிக்கக் காற்று வீசியது; புரட்சிப் புயல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஊமை யராய்ச் செவிடர்களாக வாழ்ந்தவர் எல்லாம் எழுந்து அங்கிருந்த மேசை நாற்காலிகளைக் கால் தலை மாற்றினர். அவையில் ஆவேசக் குரல் எழுந்தது. அரசனின் இறையாண்மை ஆட்டம் கொடுத்தது. திருதராட்டிரன் நடுங்கிவிட்டான். பூகம்பமே உண்டாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. போட்ட கணக்கெல்லாம் பூஜ்ஜியத்தில் முடிந்து விட்டதே என்று முதியோன் கவலைப்பட்டான்.

முதலில் தன் மக்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற தற்காப்பு உணர்வு ஏற்பட்டது. “அம்மா தாயே! உன் புருஷனை அழைத்துக் கொண்டு வீடு சேர்; நாடு பொருள் உரிமை எல்லாம் தந்து விட்டேன். உன் மைத்துனர்கள் விளையாட்டுத்தனமாகத் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடி விட்டார்கள். நமக்குள் நாம் அந்நியர் அல்ல; கண் மலரில் கைபட்டால் அதை வெட்டியா விட முடியும்? எங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் உனக்கு அதில் பங்கு உண்டு. வீட்டுக்கு வந்த மருமகளே! எங்களுக்குக் கருணை காட்டு” என்று அவள் அருள் வேண்டி நின்றான்.

பாண்டவர் அனைவரும் விடுதலை பெற்றனர். எனினும் சகுனி எதிர் வழக்கு ஒன்று எழுப்பினான். “வாலை முறுக்கி விட்டீர்! புலி சும்மா விடாது. உங்களை நீங்களே அழித்துக் கொள்ளும் ஆரம்பம் இது” என்றான்.

திரெளபதியும் அவர்கள் தரும் விடுதலையை விரும்ப வில்லை; அங்கேயே இருந்து செத்து மடிவதற்கு உறுதி பூண்டாள். மறுபடியும் சூதாடி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினாள்; தருமனை அவளே மறுபடியும் ஆடத் தூண்டினாள். இறுதிச்சுற்று வெற்றி தோல்வி என்ற இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சகுனிக்கு மனம் நடுக்கம் ஏற்பட்டது. தருமன் தான் செய்த புண்ணியம் அனைத்தும் பணயமாக வைத்தான்; தருமம் வென்று விட்டது. சகுனி பக்கம் காய் தலை சாய்க்கவில்லை; தருமம் கை கொடுத்துத் தூக்கியது. தருமமே தலை காக்கும் என்பதற்கு அவர்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது.

தன்னை அவையில் “பலர் முன் கொண்டு வந்து நிறுத்து” என்று அவதூறு பேசிய துரியனின் தொடை வழியே குருதி கொட்ட அந்த இரத்தத்தைக் கொண்டு தான் விரித்த கூந்தலை முடிப்பதாகச் சபதம் எடுத்தாள். அதைத்தொடர்ந்து வீமன் தன் கதாயுதத்தால் அவன் கதையை முடிப்பதாக வஞ்சினம் செய்தான்; அருச்சுனன் கன்னனைத் தீர்த்துக் கட்டுவதாக அவனைப் பார்த்துக் கூவினான்; நகுலன் சகுனியின் மகன் உலூகனை உலுக்கிக் குலைப்பதாகக் கூறினான். சகாதேவன் குள்ள நரியாகச் செயல்பட்ட கள்ளச்சிந்தை உடைய சகுனி மீது பாய்ந்தான். ஆளுக்கு ஒருவரைக் குறிவைத்துப் பேசினர். வீமன் துரியனை முடிக்கும் வரை நீரைக் கையால் அள்ளிப் பருகிக் குடிப்பதில்லை என்றான். தண்டு கொண்டு தண்ணிரை மேல் எழுப்பி அத் துளிகளைப் பருகுவதாக அறிவித்தான்.

தருமத்தைப் பணயமாக வைத்து ஆடிய வெற்றி அவர்களுக்கு விடுதலை தந்தது; முழு உரிமை கிடைத்தது; அவர்களை இனி யாரும் கட்டிப்போட முடியாது; விட்டு விடுதலையாகி நின்றார்கள். அப்பொழுதே அவர்கள் போரில் எதிர்த்து நாட்டைப் பெறும் உரிமை இருந்தது. வீரர்களுக்கு உள்ள உரிமை பறிபோகவில்லை. அவர்கள் உடனே படைதிரட்டிப் பாரினை வவ்வியிருந்தால் துரியன் வேரோடு அழிந்து இருப்பான். அந்தச் சூழ்நிலையைத் தடுக்கத் திருதராட்டிரன் மற்றொரு சூழ்ச்சி செய்தான்.

இராமாயணக் கதையை எடுத்துக் காட்டி, “நீங்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டுக்குச் சென்று தவம் செய்யுங்கள்; ஒராண்டு மறைந்திருந்து வாழுங்கள்; அதற்குப்பிறகு நாட்டு உரிமை உங்களை வந்து சேரும், படை திரட்டத் தேவையில்லை” என்று கூறினான்.

உடனே பெரிய மனிதர்களான வீடுமன், துரோணன் முதலியவர்கள் பகை ஆறுவதற்குப் பன்னிரண்டும் மற்றும் ஒர் ஆண்டும் போதும். அதற்குள் மனம் மாறி ஒன்றுபட வாய்ப்பு உள்ளது என்பதால் அதுவும் தக்கதே என்றனர். பாண்டவர்க்கும் படை திரட்டக் காலமும் துணையும் தேவைப்பட்டன. ஆண்டுகள் அதிகம் ஆனாலும் இழந்த நாட்டை மீண்டும் பெற முடியும் என்பதால் அதனை ஏற்றுக் கொண்டான். தருமன் தாழ்விலும் அவன் மனம் சமநிலை பெற்றிருந்தது.

4. காடுறை வாழ்க்கை

காட்டுக்குச் சென்றவர்களுக்கு வடித்துக் கொட்டிய காய்கறிச் சோறா கிடைக்கப் போகிறது? காயும்கனிகளும் தின்று காலம் கடத்தி வாழ வேண்டி நேர்ந்தது; அரங்கில் ஆடுவதற்கு அன்ன நடையினர் அங்கு இல்லை; பாடுவதற்குப் பண்ணிசை வல்ல பாவையரும் அங்குவரப் போவது இல்லை; பராசக்தியின் பாடலாகிய ‘கா கா கா’ என்று கத்தும் குரல்கள் தாம் அங்குக் கேட்க முடியும். நீச்சல் குளங்கள் உண்டு நீந்தி விளையாட; பாய்ச்சல் மான்கள் உண்டு பாவை பாஞ்சாலி பிடித்துக்களியாட; வாழ்க்கை வசதிகள் என்பவை மறுக்கப்பட்டன. தேரும் இல்லை ஊர்ந்து செல்வதற்கு, யானையும் இல்லை ஏறி உலவுவதற்கு; பரியும் இல்லை பரந்து சுற்றுவதற்கு; நட ராஜர்களாகத்தான் எங்கும் சுற்றிவர வேண்டியிருந்தது. அடிமைத்தனம் பாண்டவர்க்கேயன்றி அவர்கள் அன்னை குந்தி தேவிக்கு அல்ல; காட்டு வழியில் மேட்டு நிலத்தில் அவர்களை அலைக்கழித்து அல்லல் உறச் செய்வதால் பயன் இல்லை; அதனால் குந்தியை நாட்டிலேயே விட்டு விடும்படி கண்ணன் அறிவுரை கூறினான். விழியில்லாக் காந்தாரியோடு வேறு வழி இல்லாது குத்தி தங்கி வாழுமாறு ஏற்பாடுகள் செய்தனர்.

பெற்ற பிள்ளைகளை உற்ற சுற்றத்தினிடையே சேர்ப்பது தக்கது என முடிவு செய்தனர். பாஞ்சாலியின் பிள்ளைகளைத் துருபதன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். பாட்டன் வீட்டுக்குப் பேரப் பிள்ளைகள் அனுப்பப் பட்டனர்.

அதற்குப் பிறகு அவர்கள் செய்ய வேண்டியது பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம்; ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம்; அதற்குப் பிறகுதான் சுகவாசம் என்று பேசப் பட்டது.

நாடு திரும்ப அடைவது எளிது அன்று ஆண்டவன் பார் மீண்டும் அவர்க்கு விட்டுக் கொடுப்பான் என்பது உறுதி இல்லை. போர் மூண்டால் அதற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினர்.

அருச்சுனன் தவ யாத்திரை

வியாசன் அங்குவந்து வரப்போகும் பாரதப்போருக்கு மாரதர்கள் ஆகிய பாண்டவர்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினான்.

அருச்சுனன் சிவனிடம் சென்று பாசுபத அத்திரம் பெற்று வரும்படி பணித்தான்; தவம் செய்தால் சிவன் அருள் செய்வான் என்று கூறினான்.

தவயாத்திரை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அனைவரிடமும் விடைபெற்றுச் சடைமுடி தரித்துத் தவக்கோலம் மேற்கொண்டு கயிலை நோக்கிச் சென்றான். மலையடிவாரத்தில் நிலையான இருப்பைத் தேடிக்கொண்டான்; உணவும் உறக்கமும் மறந்தான்; இலைச்சருகுகளைப் புசித்தான்; காற்று அவன் உயிரை இயக்கியது; வெய்யில், மழை என்ற பேதத்தை அவன் அறிந்ததில்லை. கோரமான தவம் செய்த நிலையைக் கண்டு பார்வதி மனம் இரங்கிப் பரமசிவனிடம் எடுத்து உரைத்தாள். மற்றும் பன்றி ஒன்று அவனைக் கொன்று தின்னச் செல்வதையும் சுட்டிக் காட்டினாள்.

அன்னை பார்வதி நீலகண்டனாகிய நிமலனிடம் இவன் தவத்தைப்பற்றி எடுத்துப் பேசினாள். புன்முறுவல் பூத்து அனைத்தும் அறிந்த ஈசன் அவனைக் காப்பது தம் கடமை என்று பேசிச் செயல்பட்டான்.

வேடுவனும் வேடுவச்சியுமாக இருவரும் உருமாறி மேடுபள்ளம் நிறைந்த அந்த மலைக்காடுகள் நோக்கிச் சென்றனர்.

அந்தப் பன்றி மூகன் என்ற பெயர் உடைய அசுரன் ஆவான். துரியனால் ஏவப்பட்டவன்; அருச்சுனனைத் தன் கொம்பால் முட்டி வயிற்றைக் கிழித்து அவன் ஏட்டை முடிக்கவிரும்பியது. அருச்சுனனும் கண் விழித்தான்; பன்றி வருவதைக் கண்டான்; சிவனும் தன் வில்லை எடுத் தான்; இருவர் அம்புகளும் ஒரே சமயத்தில் பாய்ந்தன. பன்றி அலறி விழுந்து உருண்டு உயிர் விட்டது.

“நீ யார்? அதை ஏன் கொலை செய்தாய்?” என்று விசயன் வினவினான்.

“வேடுவன் யான்; வேட்டை என் தொழில்” என்றான்;

“என்னை யான் இங்குக் காத்துக் கொள்ளும் விறல் என்னிடம் உள்ளது. நீ இங்கு வந்து எனக்கு வாய்த்தது அவமானம்” என்றான்.

“காத்தலும் என் தொழில்தான்” என்றான் சிவன். “அழித்தலும் காத்தலும் நீயே செய்வதாக இருந்தால் இறைவன் எதற்கு” என்று கேட்டான் சிறுவன், “பொறுப்பை இறைவனிடம் தள்ளிவிட்டு இம்மானுடர் கடமையாற்றுவதின்று தப்பித்துக் கொள்கின்றனர்” என்றான் இறைவன்.

சொற்போர் மற்போரிலும் விற்போரிலும் கொண்டு சென்றது. மல்யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு புரண்டனர். விட்டுகொடுக்காமல் துவண்டனர்.

பிட்டுக்கு மண் சுமந்த இறைவன் பாண்டியன் பிரம்படி பட்ட அவ்வடு பார் முழுதும் பட்டது. அதே போன்ற நிலையில் அருச்சுனன் வில் அம்பால் இறைவனுக்கு ஏற் பட்ட தழும்பு உயிர்கள் அனைத்துக்கும் பதிந்தது.

அதற்குமேல் நாடகத்தை நீடிக்க விரும்பவில்லை. பார்வதியோடு பரமசிவன் தெய்வக் கோலத்தில் காட்சி தத்து “வேண்டுவது யாது?” என்று கேட்டான்.

“பாசுபத அத்திரம்” என்றான்.

“பத்திரமாக வைத்திருக்கிறேன் யாருக்குப் கொடுப்பதில்லை. துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.” என்றான்.

“தருமம் காக்கவே அது பயன்படும்” என்று சொல்லி இறைவனிடம் அதைக் கேட்டுப் பெற்றான்.

“நம்பி! நீ தருமன் தம்பி: அதனால் உன்னை நம்பித் தரலாம்” என்று சொல்லி அதை இயக்கும் விதத்தையும் மந்திரத்தையும் சொல்லி அருளினான் சிவன்.

இந்திரன் அழைப்பு

அருச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த போது அவன் தவத்தில் இருக்கிறானா என்பதை அறிய இந்திரன் சோதனை வைத்தான். இந்திரபுரியில் இருத்த சுந்தர வதனவனிதையா சிலரை அவன் முன் ஆட வைத்தான். அவர்களை நாட வைக்க முயன்றான்; அவர்கள் தோற்று அவ் இடத்தை விட்டு அகன்றனர். அவன் மனத்திண்மை கண்டு இந்திரன் வியந்தான். அவன் உறுதி கொண்ட நெஞ்சத்தை பாரதி போல் வியந்து பாராட்டினான்

அத்திரம் பெற்றதும் அவன் தனித்திறம் பாராட்ட அவனுக்கு அழைப்பு விடுத்தான். தன் நகருக்கு அழைத்து அவனுக்கு இருபணிகளை இட்டான். நிவாத கவசர், கால கேயர் என்ற அசுரர்களைத் தான் வெல்ல முடியாமல் வேதனையோடு வாழ்ந்து வந்தான். வீர மகனைக் கண்டு அவர்களை அடக்கி அழிக்க அவனை வேண்டினான். தெய்வத் தந்தையின் பணியைத் தனயனான தனஞ்செயன் செய்து முடித்தான். அவர்களை வென்றதால் வெற்றி விழாக்கொண்டாட இந்திரன் ஏற்பாடுகள் செய்தான். நாட்டிய விழா ஒன்று வைத்து ஊர்வசியை ஆட வைத்தான். அவள் அங்க நெனிவுகளைக் கண்டு நாட்டியம் ரசித்தான். கலை அழகைப் பாராட்டி அவளை உயர்த்திப் பேசினான். அவள் அவன் வலை அழகில் விழுந்து மயங்கினாள்.

அன்று இந்திரனோடு இன் அமுது அருந்தி அவன் தனி அறையில் படுத்து உறங்கினான். கதவு தட்டும் சிறு ஓசை அவன் காதில் விழுந்தது.

“யார் அது?”

நடன சிங்காரி ஊர்வசி என்பதை அறிந்தான்.

“நீங்கள் என்னைப் பாராட்டியது என் நினைவு விட்டு அகலவில்லை” என்றாள்.

“உங்கள் கலையை விமரிசித்தேன்” என்றான்.

“நீங்கள் ஆணழகன்” என்றாள்.

“பெண்ணழகி பாராட்டினால் பயன் உண்டு” என் றான்.

“என் அழகு உன்னை மயக்கவில்லையா?” என்றாள்.

“உன் வயது என்னைத் தயங்க வைக்கிறது” என்றான்.

“தேவ உலகில் இளமை நிலைத்திருப்பது” என்றாள்.

“உறவுகள்” என்றான்.

“மாறுவது” என்றாள்.

“என் முன்னோர் ஒருவன் மனைவியாக இருந்தீர்; அதனால் உம்மைத் தாய்மையோடு பார்க்கிறேன்” என்றான்.

“உன் ஆண்மை என்ன ஆயிற்று?” என்றாள்.

“அடங்கி இருக்கிறது” என்றான்.

“இனி முடங்கிக் கிடக்க” என்று சாபம் இட்டாள். அவன் பேடி ஆனான். மறுநாள் இந்திரன் அவனை அழைத்து வர ஆள் அனுப்பினான்

தான் பேடியாகிவிட்ட கேட்டினை அறிந்தான்; வெட்கிக்கொண்டு வேதனையோடு அவன்முன் சென்றான்.

இந்திரன் அறிந்தான்; அகலிகையால் தான் பெண்மை எய்தியதை நினைத்துப் பார்த்தான், ஊர்வசியால் அருச் சுனன் பேடியானது அறிந்து வருந்தினான்.

நேரே அவனை அழைத்துக் கொண்டு ஊர்வசியின் இல்லத்துக்கு ஏகினான். மன்னவனே வந்து விட்டான் என்று அவள் எழுந்தாள்.

“சாபத்தை மாற்றுக” என்று கேட்டான்.

“இங்கே யாரும் கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது, கூட்ட முடியுமேயன்றிக் கழிக்க முடியாதே” என்றாள்.

‘விரும்பும்போது பேடி ஆகுக’ என்று கூட்டிக் கொள்ளச் சொன்னான். அவ்வாறே கூறினாள். பேடு நீங்கித் தன் பீடு மீண்டும் பெற்றான். அதுவும் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டான். தக்க தருணத்தில் பேடு உருவம் பெற்றுத் தான் மறைந்து வாழ உதவும் என்று மனம் கொண்டான்.

இந்திரபுரி அவனுக்கு அலுத்திவிட்டது. பிரச்சனைகளே இல்லாத வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. காட்டில் வாழ்ந்தாலும் அதன் சுகம் வேறு; இங்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்? குடிக்கிறார்கள்; கூத்தடிக்கிறார்கள்; அழகிகளை ஆட வைத்து உமர்கயாம் பாடல்களுக்கு அதனை ரசனை என்கிறார்கள். தம் ஊரில் குரங்காட்டி செய்யும் வித்தைகளுக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. பால் இயல் மோகத்தில் சிக்குண்டு புலன் இயல் இன்பமே பெரிது எனப் புலம்பிக் கொண்டிருக்கும் அவ்வாழ்வு அவனுக்குப் பிடிக்கவில்லை. பசித்துப் புசித்– தால் கிடைக்கும் சுவை மிக்க வாழ்க்கைக்கு ஈடு இல்லை என்பதை உணர்ந்தான். மேலும் கடமைகள் காத்துக் கிடந்தன. சென்றவன் என்ன ஆனான் என்று தன்னை அலைத்துக் கொன்று அழிக்கும் கவலையில் தன் தமையன் அவதியுறுவானே என்று கவலைப்பட்டான். அவன் வரு கையை உரோமசனன் என்னும் முனிவன்வழிச் செய்தி சொல்லி அனுப்பினான். அவன் வேகமாகச் செல்லும் திறன் படைத்தவன்.

அவன் முன் சென்று அருச்சுனன் வருகையை அறிவித்தான்.

வீமனின் பாத யாத்திரை

தீர்த்த யாத்திரை சென்ற அருச்சுனன் குமரி ஆடிவந்தவன் வழியில் குமரிகளையும் நாடி அவர்களை மணந்து ஆளுக்கு ஒரு பிள்ளை என ஆளாக்கிவிட்டுத் திரும்பி வந்தான். மீண்டும் புனித யாத்திரை ஒன்று மேற்கொண்டு கயிலைக்குச் சென்று பாசுபத அத்திரம் பெற்று வந்தான். அதேபோல வீமனும் திரெளபதி கேட்ட பூவினைக் கொண்டுவர வடநாடு நோக்கிப் பாதயாத்திரை செய்தான்; வடநாட்டில்தான் குபேரனின் அளகை நகர் இருந்தது. அதுவரை அவன் சென்று வந்தான்.

பொய்கைக் கரையில் தாமரைப் பூவின் பொலிவில் ஈடுபடுத்திக் கொண்டு தன்னை மறந்த நிலையில் திரெளபதி நின்று கொண்டிருந்தாள். விண்ணுலகினின்று சரிந்து தன் கண்ணெதிரே ஒரு பொன் தாமரைப்பூ அவள் கரத்தில் வந்து விழுந்தது. அதன் தரத்தைக் கண்டு வியந்தாள். பூ என்றாலே பூவையர்க்குப் பிடிக்கும்; அதனோடு அது பொற்பூ என்றதும் சொல்லவும் வேண்டுமா?

அந்தக் காட்டிலே அவள் பட்டுப் புடவையையா வாங்கித்தரச் சொல்ல முடியும். பட்டுப்போகும் பூவைத் தான் கேட்க முடியும். வீமன் எதிர்ப்பட்டான். அவள் ஏவலுக்குக் காவலாக நின்று ஆவலோடு எதிர்பார்த்து வீமன், என்ன வேண்டும்”? என்று கேட்டான்.

“சின்ன பூ” என்றாள்.

“பூ இவ்வளவுதானே அது எங்கிருந்தாலும் பறித்துக் கொண்டு வருவேன்” என்று உறுதியாகக் கூறினான்.

உரோமசன முனிவன் எதிரே வந்தான்.

“எங்கே போகிறாய்?” என்று கேட்டான்!

“பூக்கடைக்கு” என்றான்.

“அதற்கு இந்த வழியாகாதே” என்றான்.

“திரொபதி ஆசைப்பட்டாள்; இந்தத் தாமரைப் பூ எங்குக் கிடைக்கும்?” என்றான்.

“இந்திரன் உலகில் இருக்கிறது; அது தவறினால் குபேர பட்டணத்தில்தான் இருக்கிறது” என்றான்.

“இந்திரன் உலகத்துக்கு என் தம்பி போய் இருக்கிறான். அவனிடம் சொல்லி இருக்கலாம். இப்பொழுது செல்ல முடியாது. என்ன செய்யலாம்?”

“குபேரன் ஊருக்குப்போ, கிடைக்கும்” என்றான். போகும்வழி சொல்லி அனுப்பினான்.

ஒரே மூச்சில் கொண்டு வருவது என்று புறப்பட்டான்; மலை, ஆறு குன்று, மற்றும் பள்ளம், மேடு, முள் எல்லாம் கடந்து நடந்து சென்றான். அய்யப்பன் பக்தர்களைப் போன்ற பிடிவாதம்.

வழியில் ஒரு முதிய குரங்கைப் பார்த்தான்.

இவன் இராமாயணம் படித்து இருக்கிறான். நக ரத்தில் இருந்தபோது சாத்திரிகள் இராத்திரி வேளைகளில் நிகழ்த்தும் கதைகள் கேட்டு இருக்கிறான். அம் முதியவன் வாயு பகவானின் மகன் அனுமன் என்பதும் தெரியும்; தன் தந்தைதான் அவனுக்கும் தந்தை என்பதால் அவனைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

“அண்ணா” என்று அவனைக் கட்டிக் கொண்டான்.

அனுமனுக்கு ஆச்சிரியமாக இருந்தது. இப்படி ஒரு தடியன் தனக்குத் தம்பியாக எப்படி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டான்.

பிறகு தெரிந்து கொண்டான். அவன் தருமனின் தம்பி வீமன் என்று.

“நீ எப்படி இன்னும் உயிர் வாழ்கிறாய்?” என்று வீமன் கேட்டான். “தெரியாமல் நான் சீதையிடம் ரொம்பவும் நல்லவனாக நடந்து கொண்டேன். அவள் உயிரைக் காப்பாற்றினேன். அதனால் நீ சிரஞ்சீவியாக இரு” என்று வாழ்த்தி விட்டாள். நான் ‘வெட்டு வெட்டு’ என்று உலகத்துக்குச் சுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்” என்றான்.

“நீண்ட காலமாக வாழ்லது கூடவா தவறு?”

உனக்குத் தெரியாது. என்னைப்போலத்தான் நீயும்; கிழக் கட்டைகளைக் கேட்டுப் பார்; சாவு எவ்வளவு இனிமையானது என்று சொல்வார்கள்” என்றான்.

“சிலர் சுருசுருப்பாக இருக்கிறார்களே” என்றான்.

வாழ்க்கையில் உந்துதல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுருசுருப்பாக இருக்க முடியும்” என்றான்.

“அப்படியானால் எங்கள் போராட்டத்தில் நீ பங்கு கொள்ள முடியுமா?” என்றான்.

“நான் என்ன செய்ய வேண்டும்?”

“என் தம்பி செய்யும் பாரதப்போரில் தேர்க்கொடியில் நீ பறக்க வேண்டும்” என்றான். “அதுதானே! மறுபடியும் எனக்குப் போர்க்களம் காண ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது” என்று சொல்லி அதற்கு இசைந்தான்.

“குபேரன் இருக்கும் நாட்டுக்கு எப்படிப் போக வேண்டு?” என்று கேட்டான்.

அவன் காட்டிய வழியில் விரைவில் சென்று அந்தத் தாமரைக் குளத்தை அடைந்தான். பொன்னால் ஆகிய தாமரைப்பூ ஆதலால் காவல் அதிகம் இருத்தது. அக்காவலனை ஒரு தட்டு தட்டி அனுப்பினான். அவன் ஒடோடிச் சென்று குபேரனிடம் முறையிட்டான்.

“உன்னை எதற்காகக் காவல் வைத்தது? பெரியவர்கள் வந்தால் கண்டும் காணாமல் இருக்கவேண்டும்; அது தான் புத்திசாலித்தனம்” என்றான்.

“யாருடா அங்கே”! அவன் மகனை அழைத்தான்.

“வீமன் வந்திருக்காரு; அவரிடம் வம்பு தும்பு வச்சிக்காதே; கேட்டதைக் கொடுத்தனுப்பு” என்றான். தண்ட லுக்கு வருகிறவர்க்குத் தக்கபடி கொடுத்துப் பழகியவன். அது தொழில் பழக்கம். பூவோடு கொடியைப் பிடுங்கித் தந்தான்.

வீமன் பூ கொண்டு வந்து கொடுத்தான். அவள் அதைத் தன் கூந்தலில் செருகிக் கொண்டாள்.

அவள் முன்னிலும் அழகாக மின்னினாள். ‘பூவையர்' என்று பெண்களுக்கு இதனால் தான் பெயர் வந்ததோ தெரியவில்லை.

சடாசுரன் வதை

திரெளபதி வீட்டோடு இருக்கக்கூடாதா? அவள் தனியாக ஏன் போக வேண்டும்?

இந்தக் காலத்தைப் போலத்தான் அந்தக்காலமும் பெண்பிள்ளை தனியே போகக்கூடாது. போகமுடியாது. அவன் தனியாகச் சென்றாள். அவளுக்கு ஒர் அசுரன் நிழலானான். அவன் பெயர் சடாசுரன் என்பது.

“பெண்ணே நீ எங்கே போகிறாய்?”

“சொல்லித்தான் ஆகவேண்டுமோ?” என்று கேட்டாள்.

அவள் கையைப் பிடித்து இழுத்தான். அவள் வளையல் அரற்றியது; எனினும் அவன் விடுவதாக இல்லை

காற்று வாங்க நகுலனும் சகாதேவனும் அந்தப்பக்கம் சென்றனர். ஆறாவது ஆள் இவன் யார் என்ற வினா எழுந்தது. அதற்குப்பிறகு அவன் அசுரன் என்பது அறிந்து அவன்மீது பாய்ந்தனர். அவன் இவர்களை இரண்டு கைகளி லும்வைத்துச் சுழற்றினான். வீமன் தம்பியரைத் தேடி வந்த போது இந்த வம்பினைக் கண்டான். தும்பி என அவன் மீது பாய்ந்து சராசந்தன், பகன் சென்ற பாதைக்கு வழிக் கூட்டினான்.

“காலம்கெட்டு விட்டது, பெண்கள் தனிவழியே போக இயலாது. பாரதப் பண்பாடு இது” என்று கூறினான்.

இது போன்ற இடர்ப்பாடுகளை அவ்வப்போது அவர்கள் சந்தித்து வந்தனர்.

அதற்கப்புறம் அங்கங்கே இருந்து சில ஆசிரமங்களில் தங்கி இருந்து விட்டு அவர்கள் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இராமா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டு காலம் கடத்தினார்கள்; இப்படி ஒன்பது ஆண்டுகள் கழிந்து விட்டன.

துர்வாசமுனிவர் வருகை

மறுபடியும் அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. திரெளபதி எல்லோருக்கும் சோற்றை ஆக்கிப் போட்டுப் பானையைக் கவிழ்த்து விட்டுத் தெருவாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். எதிர்பாராமல் ஒரு விருந்து வந்தது. வந்தவர் துர்வாச முனிவர். தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் அனைவரும்தான் இருந்தார்கள். துர்வாச முனிவருடன் அதிதிகள் சிலர் உடன் வந்திருந்தனர். “யாம் போய் நதி நீராடி வருகிறோம். சாப்பாடு சமைத்து ஆகட்டும்” என்று சொன்னார்.

உப்பு இருந்தால் மிளகாய் இல்லை; மிளகாய் இருந்தால் புளி இல்லை; இது போன்ற குடித்தனம் அது.

சோறு என்றால் வடித்துக் கொட்டினால் மட்டும் போதுமா! வடை, பாயசம், காரம், புளிப்பு, இனிப்பு இப் படிப் பலகாரங்களோடு போட அந்தக் காட்டிலே எப்படி முடியும்?

ஒரே திகில் ஆகிவிட்டது. என்ன செய்யப்போகிறோம் என்று ஏக்கம் காட்டினர். ஆபத்பாந்தவன் அனாத– ரட்சகன் கண்ணனை நினைத்துக் கொண்டனர். கண்ணன் வந்தான், விஷயத்தைச் சொன்னார்கள்.

“பானையில் என்ன இருக்கிறது?” என்று கண்ணன் கேட்டான். “பருக்கை ஒன்றுதான் இருக்கிறது” என்றாள்,

இருக்கையில் இருந்து கண்ணன் அப்பருக்கையைத் தனது வாயில் போட்டான்; அவன் வயிறு நிரம்பியது. இந்த வையகம் எல்லாம் உண்டது போல் மகிழ்ச்சி கொண்டது.

உண்ணவந்த முனிவர் வயிறு நிரம்பியவராய் இவர்களை வாழ்த்தினார். “எம் வயிறு குளிர உண்டோம்” என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்து அதற்குப் பிறகு ஆர அமர அமர்ந்து பேசினார்.

துரியனின் அரண்மனைக்குத் துர்வாசர் போய் இருந்தார். அவருக்குச் சகல மரியாதையுடன் பிரமாதமாக உணவு படைத்து மகிழ வைத்தனர்.

அவன் படைத்த உணவு வியக்கத்தக்கதாக இருந்தது. அவர் துரியனைப் பாராட்டினார்.

“இதுபோல் நான் எங்கும் சாப்பிட்டதில்லை” என்றார் முனிவர்.

“எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான் துரியன்.

“என்ன வேண்டும்?”

“நாளைக்கு இதே நேரத்தில் பாண்டவர் தங்கியுள்ள வனத்துக்குச் சென்று போஜனம் உண்ண வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

துர்வாசர் போனால் அவர்களால் சோறு போட முடியாது. அவருக்குக் கோபம் வரும். அவர்களைச் சபித்துவிடுவார். அவர்கள் ஒழிந்து போவார்கள்” என்று அவன் திட்டம் போட்டான்.

அது கண்ணனிடம் பலிக்கவில்லை. துர்வாசரும் துரியன் சொல்லியதைக் கூறி அவன் தீய எண்ணத்தை விளக்கினார்.

அவன் சொன்னாலும் இவர் வந்திருக்கக்கூடாது. அவன் வரம் என்று கேட்டு விட்டதால் மறுக்க முடியாமல் போய்விட்டது.

அவர் மூக்கில் கரி பூசிக் கொண்டார். “உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

“கேட்பார் பேச்சுக்கேட்டு சுயநினைவு இழக்காமல் இருக்க வேண்டும்” என்றனர்.

அவருக்கு அறிவு வந்தது.

ஒட்டு மாம் பழம்

அங்கே செடியில் மாங்கனி திரெளபதியின் கன்னத்தைப் போலச் சிவந்துகாணப் பட்டது. “என்ன வேண்டும்” என்றான் அருச்சுனன்; “தின்ன அப்பழம் வேண்டும்” என்றாள். பறித்துக் கொடுத்தான்; பழம் கைக்குவந்தது. அதற்குப் பின்னர் தெரிந்தது; அது அங்குத் தவம் செய்யும் ஒரு முனிவருக்கு உரியது என்று.

“பழங்களைப் பறிக்காதீர்” என்று எழுதி அங்கு ஒட்டப்பட்டிருந்தது. பழத்தைப் பறித்துவிட்டோமே என்ன செய்வது என்று விசயன் பதறிப்போனான். தெரிந்தால் அவ்வளவுதான். அனைவரையும் பஞ்சாமிர்தம் ஆக்கி விடுவார் முனிவர்; என்ன செய்வது! மறுபடியும் கண் ணனின் வருகை தேவைப்பட்டது. “இந்தப்பழத்தை ஒட்டி வைக்க முடியுமா? என்று கேட்டான் தருமன்.

“முடியும்” என்றான் கண்ணன்.

“எப்படி?”

“அவரவர் தம் விருப்பத்தை ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படுத்த முடியுமானால் இதையும் ஒட்டி வைக்க முடியும்” என்றான் கண்ணன்.

தருமன் உலகில் அறம் வாழ வேண்டும் என்றான்; வீமன் நல்லவனாக இருக்க விரும்புவதாகக் கூறினான்; அருச்சுனன் மானம்தான் பெரிது; அதற்காகத் தான் உயிர் விடவும் தயார் என்றான்; நகுலன் கல்வியே போதும் என்றான்; சகாதேவன் புண்ணியம் செய்ய விரும்பினான்.

திரெளபதி சொன்னாள்; “எனக்குக் கணவர்கள் ஐந்துபேர்தான் கிடைத்தனர். தகுதியுடையவன் ஆறாவது ஒருவன் கிடைத்தால் அவனையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டேன்” என்றாள்.

இது ஒரு புதுக்கவிதையாகவும் இருந்தது. அதற்கு மேல் பேச்சு நீடிக்கவில்லை. பழம் மேலே சென்று ஒட்டிக் கொண்டது.

உள்ளத்தில் இருப்பதை யாரும் வெளிப்படச் சொல்ல மாட்டார்கள்; அதுதான் உண்மை என்ற ஒரு தத்துவத்தை உணர்த்த இந்தக்கதை இடம் பெற்றுள்ளது.

நச்சுப் பொய்கையில் அடைந்த கலிவு

அங்கு வனத்தில் ஒரு நச்சுப் பொய்கை இருந்தது. அதுஉயிர் வாங்கும் என்று பாண்டவர்களுக்குத்தெரியாது. அந்தணச் சிறுவன் ஒருவன் பூணுரலில் சக்கி முக்கிக் கல்லை அணிந்திருந்தான். மான் ஒன்று அக்கல்லைப் பூணுரலோடு இழுத்துக் கொண்டு ஒடிவிட்டது. அவன் “குய்யோ முறையோ என்று கத்தினான்; ஐயோ பாவம்” என்று இரக்கம் காட்டி அதைத்துரத்திப்பிடிக்கத் தருமன் நீங்கலாக நால்வரும் சென்றனர். அதைப்பிடித்து, அந்நூலைக் கொணர முயன்றனர். அதற்குள் அலுத்து விட்டனர்.

நீர் குடிக்கலாம் என்று அங்கு இருந்த பொய்கைக்குப் போயினர்; நீர் குடித்தனர்; அவ்வளவுதான்: நீட்டிவிட்டார்கள். இதற்குள் துரியன் இவர்களை அழிக்க ஒரு ஏற்பாடு செய்திருந்தான்; முனிவன் ஒருவனிடம் சொல்லி துஷ்ட தேவதைக்குப் பூஜை செய்யச் சொல்லி இருந்தான் அந்த முனிவன் ஒரு வேள்வி செய்து ஒரு கொடிய பூதத்தை உண்டாக்கி அதனை ஏ வினான்; அது அவர்களைக் கொல்லச் சென்றபோது வழியில் பிணங்கள் தடுக்கிக் கீழே விழுந்தது; அதற்குக் கோபம் வந்து விட்டது.

“பிணத்தைக் கொன்று தின்ன ஏவினான்” என்று தவறாக நினைத்து ஏவிய அவன் மீதே பாய்ந்தது. அம் முனிவனைக் கொன்று அவனையே விழுங்கி விட்டது. கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு அம்முனிவன் வாழ்க்கை உதாரணமாக அமைந்தது; இது இக்கதையின் முற்பகுதி.

அதற்குப் பிறகு தருமன் எமனுடன் வாதாடி இறந்தவர் உயிரைத் திரும்பப் பெற்றான். அது ஒர் சுவாரசியமான சம்பவமாகும். “இறந்தவர் நால்வரில் யாராவது ஒருவரை மட்டும் உயிரோடு பெறலாம். யாரை விரும்புகிறாய்” என்று அசரீரி வடிவில் இயமன் கேட்டான்.

“சகாதேவனை” என்றான் தருமன்.

“ஏன்? எதற்கு?” என்றது அசரீரி.

“குந்திக்கு மூவர் பிள்ளைகள்; மாத்திரிக்கு இருவர்; நகுலனுக்குச் சகோதரன் ஒருவன். எனக்குச் சகோதரர்கள் இருவர். இருவர் போனாலும் ஒருவன் இருப்பேன்; கவலை இல்லை; மாத்திரியின் புதல்வர்கள் இருவரில் ஒருவனாவது உயிர்வாழ வேண்டும்” என்று விளக்கம் தந்தான்.

“வீமனும் அருச்சுனனும் இல்லாமல நீர் எப்படி வெற்றி பெறுவீர்” என்று கேட்டது.

“தருமம்; தருமம் எனக்குத் துணை நிற்கும்” என்றான்.

மேலும் தருமனை நோக்கி உயிர் கவரும் அறக் காவலன் ஆகிய இயமன் அசரீரி வடிவில் சில வினாக்களைக் கேட்டான். அதற்குத் தருமன் தந்த விடைகள் அத்தெய்வத்தைக் கவர்ந்தது.

“சொல்லுக; நூல்களில் பெரியது எது?”

“சுருதி”

“இல்லறம் சிறப்பு அடைவதற்கு உதவுவது?”

“மனைக்குத் தக்க மனைவி"

“மணம் மிக்க மலர்?”

“சாதிப் பூவினால் கட்டப்பட்ட மாலை”

“முனிவர் குலம் தொழும் கடவுள் யார்?”

“முகுந்தன்”

“மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை எது?”

“நாணம்”

“இனியது எது?”

“மழலை மொழி”

“நிலைத்து இருப்பது?”

“நீடு புகழ்”

“கற்பது?”

“கசடறக் கற்றலாகிய கல்வி”

“அற்பமாவது எது?”

“பிறர் கையேந்தி நிற்றல்”

இவ்விடைகளைக் கேட்டு இயமன் தருமனைப் பாராட்டினான்.

நால்வரையும் எழுப்பித் தருமனோடு அனுப்பி வைத்தான்.

துரியனின் அவலம்

காட்டில் இருந்த பாண்டவர்க்கு ஊறு விளைவிக்க வேண்டும் என்று துரியன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பாடி வீடு அமைத்துப் படையுடன் தங்கி இருந்தான்.

அங்கே சித்திரசேனன் என்ற கந்தருவன் இவர்களைச் சந்தித்தான். துரியன் அவர்களைச் சாதாரண மானுடன் என்று தூக்கி எறிந்து பேசினான்.

கந்தருவனுக்கும் துரியோதனன் படையினருக்கும் போர் மூண்டது; துரியோதனாதியர் தோற்றுப் புறம் கண்டனர். கன்னன், துச்சாதனன், சகுனி அனைவரும் பின் நோக்கி ஓடினர். துரியன் மட்டும் ஓடாமல் நின்றான்.

கந்தருவர் அவனைத் தேரில் கட்டி இழுத்துச் சென்றனர்.

கன்னனோ மற்றவர்களோ அவனை மீட்க முன் வர வில்லை.

அவன் அபயக்குரல் கேட்டுத் தருமன் வீமனைச் சென்று தடுக்கச் சொன்னான். அவன் முதலில் தயங்கினான்.

“பகை வேறு; பண்பாடு வேறு; அபயம் என்று குரல் கொடுப்பவரைக் காப்பது மனித தர்மம்; அதை முதலில் செய்க” என்று தம்பியரை நோக்கிக் கூறினான்.

உடனே வீமனும் விசயனும் செயல்பட்டு அவனை மீட்டுக் கொண்டு வந்தனர். ஆபத்தில் உதவினவர்கள் என்ற நன்றியை அக்கயவன் மறந்துவிட்டான். பகைவ னுக்கும் அருள் செய்யும் பண்பு பாண்டவரிடம் வெளிப் பட்டது. அவன் தான் தப்பித்ததைவிட அவர்கள் காப் பாற்றியதால் அது தனக்கு ஏற்பட்ட அவமானம் எனக் கருதினான். அதுவே அவன் அவர் மாட்டுக் கொண்ட பகையை மேலும் தூண்டியது.

5. மறைந்து வாழ்தல்

பன்னிரண்டு வருஷம் காட்டில் எப்படி எப்படியோ வாழ்ந்து முடித்தனர்; கிடைத்ததை உண்டு மனநிறைவு கொண்டு ஒருவாறு வாழ்க்கை நடத்தினர். இன்னும் ஒரு வருஷம் துரியோதனாதியர் கண்களுக்குப்படாமல் வாழ வேண்டும் என்று விதித்திருந்தனர். மச்ச நாட்டில் விராடனின் ஊர் அச்சமின்றி வாழத் தகுந்த இடம் என்று முடிவு செய்தனர்.

விராடனின் ஊருக்குள் நுழைவதற்கு முன் புறங்காட்டில் ஒரு காளி கோயில்; அங்கு ஒரு வன்னிமரம். அதன் பொந்தில் பாண்டவர் தமக்கு உரிய படைக் கருவிகளைப் பத்திரப்படுத்தி வைத்தனர். பதுக்கி வைக்கும் தொழிலி லும் அவர்கள் கை தேர்ந்தவராக விளங்கினர்.

தருமன் கங்கன் என்ற பெயரோடு அந்நகரில் தங்கி னான். துறவுக் கோலத்தில் தெய்வீக மனிதராக நடந்து கொண்டான். அவனை அரசன் எதையும்கேட்டு நடக்கும் அறிவுடைய ஆன்றோனாக அமர்த்திக் கொண்டான். வீமன் சமையல் வேலை கற்றவனாக இருந்தான், உண்ணத் தெரிந்தவன்; அதைப் பண்ணவும் தெரிந்து வைத்திருந் தான். நளன் என்னும் அரசனும் அரசு துறந்த நாளில் மற்றோர் நாட்டில் சமையல் தொழில்தான் ஏற்றான். அது போல் இவன் சமையல்கட்டிலைக் குத்தகை எடுத்துக் கொண்டான்.

நகுலன் குதிரையைப் பராமரிப்பதில் வல்லவனாக இருந்தான். அந்த தேசத்து அரசனின் குதிரைகளைக் கண் காணிக்கும் தொழிலை ஏற்றுக் கொண்டான்; சகாதேவன் ஆநிரை மேய்க்கும் தொழிலை ஏற்றுக் கொண்டான் திரெளபதி அரசிக்கு அலங்கரிக்கும் பணிப்பெண்ணாகப் பணி ஏற்றாள். ‘வண்ணமகள்’ என்று அவள் தொழிலால் அவளை அழைத்தனர். அருச்சுனன் தான் விரும்பும்போது பேடி வடிவம் பெறச் சாபம் பெற்றிருந்தான். அதைப் பயன்படுத்தி அரச மகளுக்கு அழகுக் கலைகள் பயிற்றுவிக்கும் எடுபிடியாகப் பணி ஏற்றான். பிருகந்நளை என்பது அவன் பெயர்.

ஒருவரை ஒருவர் தெரிந்தவர்போல் காட்டிக்கொள் ளாமல் ஒதுங்கியே பழகினர். கூட்டு வாழ்க்கை சிதறிவிட் டது. எனினும் அரண்மனை வாசம் அவர்களுக்கு வசதிகளைத் தந்தது. அவர்கள் ஆற்றல் வெளிப்படும் வகையில் ஒரு சில சூழ்நிலைகள் உருவாயின.

மற்போர் செய்தல்

வெளிநாட்டு மல்லன் ஒருவன் மச்ச நாட்டுக்கு வந்து தன்னோடு அச்சமில்லாமல் போர் செய்ய வல்லவர் உண்டோ என்று வினா விடுத்தான்; வீமன் அங்கு முக மூடியாய் இருந்தபோது அவன் பெயர் பலாயினன் என்பது; அவன் மல்லனைச் சந்திக்க முடியும் என்று அரசியிடம் திரெளபதி சொல்லி வைத்தாள்.

அதனால் அடுப்பங்கரை ஆளாக இருந்த அவன் போர் மடுக்கும் மல்லனாக வெளியில் அவனைச் சந்தித்து அவனோடு மற்போர் செய்து மண்ணைக் கவ்வ வைத்தான்; அதனால் வீமன் புகழ் ஓங்கியது. அதனால் அவன் கருவமும் ஓங்கியது. அவனைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினர்.

கீசகன் வதை

வண்ணமகள் வடிவில் இருந்தபோது திரெளபதியின் பெயர் விர தசாரணி. கந்தருவன் ஒருவன் தன் காதலன் என்றும், அவ்வப்பொழுது வந்து சந்திப்பதுண்டு என்றும் அரசியிடம் சொல்லி வைத்தாள்.

அவள் கணவனோடு இருக்கும் கவின்மிக்க வாழ்க் கையை யாரும் காண முடிந்ததில்லை. என்ன இருந்தாலும் அந்தப்புரத்து எடுபிடி தானே.

அங்கு வந்த அரசியின் அருமைத்தம்பி கீசகன் அழகி ஒருத்தி சேவகியாக இருப்பது அவன் கருத்தைக்கவர்ந்தது. அவளை அவன் ஒரம் கட்டினான். அவனோடு அவள் சோரம் போவதற்கு இசைவாள் என்று எதிர்பார்த்தான்.

அதற்காகத் தன் உடன் பிறந்த தமக்கையைச் சாரமாக அமைத்தான். அவன் சார்பில் அவளைப் பேச வேண்டினான்.

தம்பியின் ஆசைக்கு அவளை இசையச் சொல்லிப் பேசிப் பார்த்தாள். “நீயே ஒப்புக்கொள். ரகசியமாக அவனோடு உறவு கொள்; யாரும் உன்னை ஒன்றும் சொல்ல முடியாது” என்று புத்தி சொன்னாள். “அவன் பொல்லாதவன்; பிடிவாதக்காரன், முரடன்; யாரும் இங்குத் தடுக்க முடியாது” என்றும் அச்சுறுத்தினாள். இதமாகப் பேசினாள்; பதப்படுத்த முடியவில்லை.

கட்டில் அறைக்கு அவன் அவளைக் கைப்பிடித்து இழுத்தான்; விட்டில் பூச்சி என அவன் அவளைச் சுற்றிச் சுழன்றான்; வெகுதூரம் ஒடிச் சென்றாள்; பேயைப்போல் அவளைப் பின் தொடர்ந்தான்; அவள் அரச அவைக்கு ஒடினாள்; அங்கே அவன் ஒரு துச்சாதனன் போல் அவள் துகிலைப் பற்றினான்; மற்றோர் துகில் உரியும் நாடகம் தொடர்ந்தது. அரச அவையில் இருந்தவர் நெட்டை மரங்களாக அவனைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.

அவள் சமையல் அறை நோக்கி ஓடினாள்; அங்கு வீமன் பச்சையாக இருந்த கட்டை ஒன்றை எடுத்து அவன் மண்டையைப் பிளக்க ஓங்கினான். தூர இருந்த தருமன் “பச்சைக் கட்டை எரியாது” என்றான். அவன் குறிப்பு அறிந்து அடங்கி விட்டான். அது தக்க சமயம் அன்று என்பது அவன் கூறிய குறிப்பாக இருந்தது.

அண்ணன் மீது கோபம்; அன்றும் தடுத்தான்; இன்றும் தடுக்கிறான் என்று வெறுத்தான்; நிதானமாகத் திரெளபதி சொன்னாள். அவசரப்பட்டால் கொட்டிக் கவிழ்த்த பாலாகி விடுவோம்; ஆத்திரம் அறிவு அழிக்கும்; பொறுத்தவர் பூமி ஆள்வார். வீணே வெளிப்பட்டு விடுவோம். துரியன் மறுபடியும் நம்மைக் காட்டுக்கு அனுப்பி விடுவான். அதனால் புத்திசாலித்தனமாக அவனை முடிக்க வேண்டும்” என்றாள்.

“அவனை மயக்கிக் காதல் உரைகள் பேசி அழைக்கிறேன். நள்ளிரவில் அவன் பாழ்மண்டபத்துக்கு வருவான்; நீ அவனை அங்குப் பார்த்துக் கொள்ளலாம்; மறு நாள் வண்ணமகளின் காதலன் கந்தருவன் வந்து அவனைத் தேர் ஏற்றிக் கொன்றுவிட்டான் என்ற செய்தி பரவும்; நாமும் இங்கு நிம்மதியாக எஞ்சிய நாட்களைக் கழிக்க முடியும்” என்று கூறினாள். இருவரும் தனியே சந்தித்து இத்திட்டத்தைத் தீட்டினர்.

மறுநாள் கீசகன் வந்தான். அவனிடத்தில் அஞ்சுகம் போன்ற திரெளபதி நெஞ்சங் குழையப் பேசினாள்.

“நாலுபேர் அறிந்தால் நம்மைப்பற்றி இகழ்ந்து பேசுவர்; பாழ்மண்டபத்துக்கு வந்துவிடு; அதனைப்பள்ளி யறை ஆக்கலாம். நள்ளிரவு, சாமம் சரியான நேரம்” என்றாள்.

ஆசைக்கடலில் ஆழ்ந்தவன் அவளால் நாசச் சொற்களில் மோசம் போய்விட்டான் ; காதல் என்பதே களவின் அடிப்படையில்தானே அமைவது, திருடித் தின்பதில் உள்ள இன்பம் தனி இன்பம்தான் என்று முடிவு செய்து கொண்டான். அவளை அடைவது திண்ணம் என முடிவு செய்து கொண்டான்.

பாழ் மண்டபத்துக்குக் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தான்; கைவளை ஒலிக்க முரட்டு உருவம் அந்த இருட்டு வேளையில் வந்து அவனைச்சந்தித்தது. குருட்டு ஆசை அவனை மருட்டி விட்டது. அதனைக் கட்டி அணைத்தான். வீமன் அவ்வுருவம் என்பது தெரியாது; இருவரும் கட்டிப்புரண்டனர்; காதல் செய்ய அல்ல; மோதல் செய்ய, கீசகன் கீச் மூச்” என்று பேச முடியாமல் மரணத்தைச் சந்தித்தான்.

பேய் அறைந்து விட்டது என்று பேசியவர் சிலர்; கந்தருவன் வந்து கொன்று விட்டான் என்று கதை அளந்தவர் பலர்; வீமன் கொன்றான் என்பது யாருக்கும் தெரியாது. அரசனும் அரசியும் மட்டும் வண்ண மகளின் திட்டம்தான் என்று ஐயம் கொண்டனர். திருடனைத் தேள் கொட்டினால் அவன் எப்படிக் கேள்வி கேட்க முடியும். அவர்கள் உள்ளுக்குள் வெந்து வேதனை உற்றனர்.

அத்தினாபுரியில் ஆராய்ச்சி

விராடன் ஊரில், பாண்டவர் வருவதற்கு முன் பஞ்சமும் வறுமையும் நிலவின; இவர்கள் வந்ததும் பயிர்கள் பசுமை உற்றன; வானம் மழை வழங்கியது. பாண்டவர் அடி எடுத்து வைத்ததால்தான் பலபடியாக இறைவன் படி அளக்கிறான் என்று துரியோதனாதியர் பலபடியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

கீசகன் மரணம் ஐயத்தை அதிகப்படுத்தியது. வீமன் தான் அவனைக் கொன்றிருக்க முடியும் என்று யூகித்தனர். அதனால் பாண்டவர்கள் விராட நகரில்தான் தங்கி இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

புற்றில் இருக்கும் அரவை வெளிப்படுத்துவது எப்படி? குகையில் உள்ள புலியைக் கூவி அழைப்பது யார்?

“தொழுவத்தில் உள்ள கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் அது கத்தும்; அதைக் காப்பாற்றப் பசு ஒடி வரும். இது தான்வழி” என்று முடிவு செய்தனர்; “விராடனுக்குத் தொல்லை கொடுத்தால் அவனுக்கு விசயனும் மற்றவர்களும் துணைக்கு வருவார்கள். இதுதான் தக்க வழி” என்று கன்னன் தன் கருத்தைக் கூறினான்.

சகுனியின் சதிகளுக்கு இவன் துணை போவான் என்று அறிந்து துரியன் மகிழ்ந்தான்.

திரிகர்த்த நாட்டின் தலைவன் துரியனுக்கு நண்பன்; அவனைத் தட்டிக் கொடுத்தான். “நீ வடக்குப்பக்கம் சென்று வளைத்துக் கொள்; தெற்குப்பக்கம் நாங்கள் சூழ்கிறோம்” என்றான்.

திரிகர்த்தன் படைகள் வடக்குப்பக்கம் சென்று விரா டன் நகரைச் சூழ்ந்தது. விராட மன்னனும், தருமனும், வீமனும் அவனை எதிர்க்கச் சென்றனர். உடன் நகுலனும் சகாதேவனும் துணைக்குச் சென்றனர். அருச்சுனன் பேடி என்பதால் அவன் ‘லேடி’களுடன் அரண்மனையில் தங்கி விட்டான்.

விராடன் தனியன் தானே அவன் என்னசெய்ய முடியும் என்ற திரிகர்த்தன் ஏமாந்து விட்டான். வீமன் உடல் வலியன்; நகுலன் குதிரைப்படைத்தலைவன். சகாதேவன் சகலமும் கற்றவன். இந்த மாவீரர்கள் களத்தில் இறங்கு வார்கள் என்று அவன் கருதவில்லை. ஈட்டிகள் பதித்து வைத்த நீர் நிலையில் நீந்தி விளையாடும் கதி தான் அவன் நிலையும். படைகள் புறமுதுகிட்டன. இந்த முறையில் துரியன் திட்டம் தோல்வியடைந்தது.

அடுத்தது தென் முனை; துரியன் தன் பெரும்படையுடன் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து சென்றான். கன்னனும் அவனுக்குத் துணை நின்றான். விராடனோடு ஊர் ஆண்கள் போர்க்களம் நோக்கிச் சென்று விட்டனர். பெண்கள் என்ன செய்ய முடியும்? அரசியிடம் வந்து முறையிட்டனர்.

அவள் ஒரே மகன் உத்தரன் செயலிழந்து சோர்ந்து நின்றான்; ஆடத்தெரியாதவள் கூடம் போதாது என்று சொல்வாளாம். அதுபோலத் ‘தேர் ஒட்டி இருந்தால் போர் தொடர முடியும்’ என்று பெருமை பேசினான். விரதசாரணியாக இருந்த திரெளபதி பேடியாக இருக்கும் அவன் தேர் ஒட்டுவதில் வல்லவன் என்றாள். போர்க்களம் கண்டவன் என்றும் பேசினாள். அவனை அழைத்துச் செல்லும்படி கூறினாள்.

அவனால் மறுக்க முடியவில்லை; தேரில் அருச்சுனன் அமர்ந்தான். உத்தரன் கடல் போன்ற சேனை கண்டு நடுங்கி விட்டான்; அவன் தேரில் இருந்து இறங்கி வீடு நோக்கி ஓடினான்; அவனைக் கட்டிப் பிடித்துத் தேரில் உட்கார வைத்தான். அருச்சுனன் தான் மறைத்து வைத்த சில படைக்கருவிகளை எடுத்து வந்து வில்லும் அம்புமாகத் தேர் ஏறி நின்றான். அவன் அம்புகளுக்கு ஆற்றாமல் துரியனின் படைகள் பின்வாங்கின. கன்னனும் அருச்சுனன் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை; தக்க படைகளோடு போர் தொடுக்கவும் செல்லவில்லை. ஆனாலும் துரியனோடு சேர்ந்து ஒற்றுமையாகப் பின் நோக்கி நடந்தான்.

பாண்டவர் அவசரப்பட்டு வெளிப்பட்டு விட்டனர் என்று வாதம் எழுப்பினான். வீடுமன் அதனை மறுத்து ஆண்டுகள் பதின்மூன்றும் கழிந்துவிட்டன என்று விளக்கினான்

குறித்த காலமும் முடிந்தது. பேடியாகச் சென்ற அருச்சுனன் தன் பழைய வடிவில் களத்திலிருந்து திரும்பினான். தன் நாட்டில் பாண்டவர்கள் தங்கி இருந்ததற்கு விராடன் பெருமை பெற்றான். அதே சமயத்தில் அவர்களை அடிமைப்படுத்திப் பணி செய்ய வைத்தது அதற்காக வெட்கப் பட்டான். பாண்டவர்கள் அதற்காக வருத்தப்படவில்லை. கீசகனின் கீழ்மைமட்டும் அருச்சுனனைச் சினந்து எழ செய்தது. தீமைகள் பல செய்தவர் எனினும் அவர்கள் செய்த ஒரு நன்மையை எண்ணிப் பார்த்து அடங்குவதுதான் அறிவுடைமை என்று தருமன் அறிவுரை கூறினான். வள்ளுவர் அறத்துப்பால் அவனை அதற்கு அப்பால் போக முடியாதபடி தடுத்துவிட்டது.

பகையை மறந்து நகையை விளைவித்தனர். உத்தரன் அவன் தன் தங்கையை அருச்சுனனின் மகன் அபிமன்யுவுக்கு மணம் முடித்துத் தந்தான். கண்ணன் வந்து கலியாணத்தில் கலந்துகொண்டான் அதற்குப்பிறகு அனைவரும் விராட நகரைச் சார்ந்த உபப்பிலாவியம், என்னும் புதிய ஊரில் வசிக்கத் தொடங்கினர்.

6. துனது உரைகள்

உலூகன் தூது

உபப்பிலாவியம் என்னும் நகரில் சீட்டு விளையாடச் சிறுவர்கள் கூடவில்லை. நாட்டு உரிமையை அடைய வழிவகை காணப் பாண்டவர்கள் கூடிப் பேசினர்.

அணுகுமுறை பற்றி அரச அவையில் விவாதம் தொடங்கினர். சூது ஆடி அவர்கள் நாட்டை இழந்தனர். மறுபடியும் அதே தவறு செய்துதான் ஆட்சியைப் பெற வேண்டும் என்று சூதுகள் நிறைந்த கண்ணன் தன் கருத்தைத் தெரிவித்தான்.

பலராமன் ஆட்சேபித்தான். அவன் சட்ட நுணுக்கம் அறிந்தவன். ஆதலின் சட்ட விளக்கத்தை எடுத்து உரைத்தான்.

“அடிப்பட ஆண்ட நாட்டைப் பிடிபடக் கேட்பது எடுபடாது” என்று உரைத்தான். பன்னிரண்டு வருஷம் ஒரு உடைமை ஒருவரிடம் இருந்தால் அது அவர்க்கு உரிமையாகும் என்று உரிமை பற்றிய சட்டத்தை எடுத்துப் பேசினான்.

சாத்தகி என்பவன் கண்ணனுக்கு இளையோன் ஆவான். “பலராமன் வெள்ளை நிறைத்தினன். அவன் உள்ளமும் ஏன் வெண்மை நிறைந்ததாக இருக்கிறது” என்று அவனைப் பாராட்டுவது போலப் பேசினான்.

அறிவு இருக்கிறதா என்று வெளிப்படையாகக் கேட்காமல் ஒண்மை அற்றவன் என்று அவனைச் சாடினான்.

இருவரையும் அமைதிப்படுத்திக் கண்ணன் வழிகள் இரண்டே உள்ளன என்று விளக்கிக் கூறினான். சூது உதவாது என்றால் மோதல் தான் உண்டு என்று ஒதினான். நாட்டைக் கேட்டால் அவன் திருப்பித்தர என்ன வழியை நாடுகிறான் என்று கேட்டுவரத் தக்க ஆள் அனுப்ப வேண்டும் என்றான்.

பஞ்சாங்கம் பார்த்துவரும் புரோகிதன் ஒருவன்; உலூகன் என்பது அவன் பெயர் ஆகும்.

அவன் அக்காலச் செஞ்சிலுவைச்சங்கம் சார்ந்தவன்; அவனுக்கு யாரும் ஊறு செய்யமாட்டார்கள். உறவுகள் துறந்த ஞானி என்பதால் உண்மையை எடுத்து உரைப்பான் என்று கண்ணன் கூறினான்.

உலூகன் தூது அனுப்பப்பட்டான்; முனிவன் ஆதலின் இனிதாக வரவேற்கப்பட்டான்.

“நாடு கொடுக்க நயமான உரை நல்குக” என்று துரியனைக் கேட்டான்.

“மேலும் விசயனும் வீமனும் வீரம் மிக்கவர்கள். அதனால் யோசித்துக் கூறுங்கள்” என்றான்.

“வீரம் மிக்கவன் விசயன்” என்ற சொல்லைக்கேட்கக் கன்னனின் பொறுமை இடம் கொடுக்கவில்லை.

“போரில் சந்திப்போம்” என்று துரியன் செய்தி சொல்லி அனுப்பக் கன்னன் காரணன் ஆயினான்.

ஆரம்ப ஆசிரியன் ஆன கிருபனும், அருச்சுனன் பால் நேசம் கொண்ட துரோணனும், அரசியல் காமராசராக விளங்கிய விடுமனும் வில்லைத் தாங்கிய விதுரனும் அமைதி தரும் ஆக்கத்தை அடித்துச் சொல்லினார்கள். கன்னனும் துரியனும் அவற்றைக் கேட்க மறுத்தனர். ‘நகம் மழுங்கிய கிழட்டுப்புலிகள்’ எனக் கன்னன் அவர்களை அவமதித்தான். வீடுமனும் கன்னனைக் கடிந்து பேசினான். அவன் இதுவரை அருச்சுனனிடம் அடைந்து வந்த தோல்விகளை எடுத்துக் கூறினான். பன்முறை தோற்றும் படிப்பினை பெறவில்லையே என்று பாடிச் சொன்னான். கேடு நினைப்பவர்க்கு நல்ல அறிவுரைகள் ஏற்கப் போவதில்லை என்றான்.

ஆத்திரத்திலும் பேராசையிலும் பகைமையிலும் சிக்கிய அவர்கள் ஆவேச உரை பகர்ந்தனர். போரில் சந் திக்கலாம் என்று பேசி அனுப்பினர்.

சல்லியனின் ஏமாற்றம்

நகுல சகாதேவர்களின் அன்னை மாத்திரிக்குச் சல்லியன் உடன் பிறந்த சகோதரன். அவன் மத்திர நாட்டு அரசன். உபப்பிலாவிய நகரத்தில் பாண்டவர்கள் போருக்கு அணி வகுக்கின்றனர் என்பது அறிந்து படை யுடன் அவர்கள் இடம் நோக்கிச் சென்றான். அதை அறிந்து உதவி செய்யவழியில் துரியன் தன் ஆட்களை அனுப்பி அவனுக்கு உணவு, இடம் முதலிய வசதிகள் தந்து மகிழ்வித்தான்; தனக்கு உபசாரங்கள் செய்தலுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். பாண்டவரே விருந்து தந்தனர் என்று அவர்கள் பால் அன்பு கொண்டான். துரியன் தான்தான் இந்த ஏற்பாடுகளைச் செய்தது என்றான்.

அவன் பெருமிதத்தைப் பாராட் டினான். பாண்ட வர்க்குத் தான் வேண்டியவன் என்று தெரிந்தும் தனக்கு உபசாரங்கள் செய்தது அவன் பெருந்தன்மை என நினைத்தான்.

பிறகு தெரிந்தது சோழியன் குடுமி சும்மா ஆட வில்லை என்பது, “வரப்போகும் போரில் நீ என் பக்கம் நின்று உதவ வேண்டும்” என்றான்.

அவன் தந்திரம் அறிந்தும் அதில் இருந்து தப்ப இயல வில்லை; மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட நாகம் ஆனான், பிறகு தருமனைச் சந்தித்தான். அவன் முந்திக் கொண்டான் என்பதை அறிவித்தான் “நீ எங்கள் சாவுக்குத் துணை போகக்கூடாது” என்று தருமன் கேட்டுக் கொண்டான்.

“வார்த்தை தவற முடியாது; உபகாரம் செய்தலுக்கு அபகாரம் செய்ய முடியாது” என்றான்.

“அருச்சுனனைக் கொல்ல நீ துணை இருக்கக்கூடாது” என்றான்.

“நான் கன்னனுக்குத் தேர் ஒட்டுவேன்; அப்பொழுது என் பேரொளியால் கன்னன் மங்கிப்போவான்; அவனை எளிதில் அருச்சுனன் வென்று விடலாம்” என்றான்.

துரியன் புத்திசாலியாகிவிட்டானே என்பதற்குத் தருமன் வருந்தினான். போரில் கூரிய அறிவும். திட்ட மிட்டுச் செயல்படும் திறனும், காலம் கருதி எதையும் சாதிக்கும் இயல்பும் வேண்டும் என்றும் நினைத்துத் தெளிவு பெற்றான்.

வாசுதேவனைப் படைத்துணைக்கு அழைத்தது

தொட்டிலையும் ஆட்டுவான்; பிள்ளையையும் கிள்ளு வான்” என்பதற்கு இலக்கியமாக விளங்கிய கண்ணனை நம்பி இருப்பதற்கு இயலவில்லை. நட்டாற்றில் இறங்கினால் அவன் யாரைக் கை தூக்கி விடுவான் யாரைக் கால் தடுக்கி வீழ்த்துவான் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது.

‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்று கேட்டு அறிந்தும் நச்சினை இச்சிக்கும் அரவக்கொடியோன்போர் செய்வது என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான். புயலுக்குப் பின் அமைதி ஏற்பட்டது. நாயும் பூனையும் சண்டை போட்டுக் கொண்டு இருந்தன, குலைத்தும், கத்தியும் அடங்கி விட்டனர். கன்னனையும் வீடுமனையும் அமைதிப்படுத்திவிட்டுத் துரோணனைக் கலந்து பேசிக் கண்ணனைப் படைத்துணைக்கு அழைப்பது என்று முடிவு செய்தான்.

துரியன் துவாரகை நோக்கித் தனியாளாய்ப் புறப்பட்டான். அங்கே கொடிச்சீலைகள் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. அவனை “வராதே நீ போ; வாசுதேவன் படைத் துணைக்கு ஆகமாட்டான்” என்று கை மறித்துக் கூறுவது போல இருந்தது.

“ஈண்டு நீ வரினும் எழில் உடை எழிலி வண்ணன் பாண்டவர் தங்கட்கு அல்லால் உமக்குப் படைத்துணை யாக மாட்டான்; மீண்டுபோக” என்று வியன் மதிற்குடுமி தோறும் கொடிச் சிலைகள் கைகளால் தடுப்பது போன்று இருந்தது.

வாரல் என்பனபோல் அக்கொடிச் சீலைகள் மறித்துக் கைகாட்டின.

வருவது அறிந்து பாண்டவர்க்கு உறுதிகள் செய்யக் கருதிய கண்ணன் துரியனைத் தடை செய்யாது உள்ளே விடுக என்று சொல்லிவிட்டு அநந்த சயனன் ஆகி அரிதுயி லில் பள்ளி கொண்டான். வந்தவன் நேரே அவனைத்தட்டி எழுப்பாமல் அவன் தலையணைக்கு இவன் ஓர் அணையானான்.

சற்று நேரத்தில் பற்றுமிகு அருச்சுனனும் உள்ளே வந்து கண்ணன் திருவடி தீண்டி அவன் திரு முன் அமர்ந் தான். விழித்து எழுந்தான். முன் இருந்த விசயனைக் கண்டு முறுவல் காட்டி, ‘நன்மை எய்துக’ என்று வாழ்த்துக் கூறினான்.

இருவரும் உதவி வேண்டிக் கண்ணன்பால் நேயம் காட்டினர்.

தருமனிடம் அவனுக்குத் துணையிருப்பதாகத் தான் சொல்லியதையும், முதற்கண் தன்கண் அருச்சுனனைப் பார்த்ததையும் எடுத்துச் சொல்லி தருமனுக்கே உதவத் தான் கடமைப்பட்டிருப்பதாகக் கண்ணன் கூறினான்.

பாண்டவர்களுக்குப் படைகளை உதவி அவர்கட்குத் துணை போகக்கூடாது என்று பாண்டவரின் பகைவன் வேண்டுதல் விடுத்தான்.

அருச்சுனன் கருத்தை அறிய, “நீ என்ன சொல்கிறாய்?” என்று கேள்வி விடுத்தான்.

“என் தேரை நீ செலுத்தினால் அதுவே போதும்” என்றான்.

துரியனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கண்ணன் படை எடுத்துப் போருக்கு வரமாட்டான் என்பதால்

“யாதவர் சேனையும் பலராமன் துணையும் வேண்டு மானால் நீ கொள்ளலாம் எனக்குத் தடையில்லை” என்று கூறி விடை தந்து அனுப்பினான்.

மாயம் வல்ல கண்ணன் அருச்சுனனுக்குக் கைகொடுத் துத் தெய்வம் ஆயினான்; அரவக்கொடியோனுக்குக் காலைவாரிக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் குதிரையாயினான்.

சஞ்சயன் தூது

குருட்டு அரசன் திருதராட்டிரன் மனத்தில் திருட்டு யோசனை உதயம் ஆயிற்று தன் மகனைக் காக்க அவ னுக்குத் தோன்றிய வழி இது. சஞ்சயன் என்னும் முனிவன் ஞான நெறியில் நின்று தத்துவ போதனைகள் சாற்றுவ தில் வல்லவன். அவனை அவர்களுக்கு அறிவுரை கூற அனுப்பி வைத்தான்.

“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றுபாடிக் கொண்டு பாண்டவர் பால் சென்றான்.

அவனுக்கு வரவேற்புக் கிடைத்தது.

“தவசிகளோடு பழகிய உங்களுக்குத் தவத்தின் பெருமையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்டில் வாழ்ந்து பழகிய நாட்கள் மறுபடியும் வரப்போவதில்லை, பழகிவிட்ட காட்டிலேயே தவம் செய்து எஞ்சிய நாட்களைக் கழிப்பது ஏமம் ஆகும். ‘வாழ்வே மாயம்’ மண், பொன், பெண் இந்த மூன்று ஆசைகளை விட்டவர்கள் பொன்னுலகம் புகுவார்கள்” என்று அவன் கற்ற வேதாந்த போத மூட்டையை அவிழ்த்து விட்டான்.

“வீரம் குன்றி விவேகம் பேசி எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை; இந்த பூமிக்குப் பாரமாக இருக்கின்ற நூற்று வரையும் அவர்களைப் போற்றுப வரையும் காலன் ஊருக்கு அனுப்பி வைத்துக் கணக்கு முடிப்பதே எங்கள் அறம், கடமை; செயல்முறை” என்று தருமன் கூறினான். “நீ சொல்லும் தவ வேள்வியை விட்டுக் குருதி சிந்தும் கள வேள்வியே யாம் செய்யத் தகும் தவம் ஆகும். நரகத்தில் எங்களுக்கு நிறையக் கடமைகள் இருக்கின்றன. அதனைச் சீர்படுத்தி அதை வாழத் தகுந்த தாக ஆக்குவது சிறந்த பணியாகும். எம் பெரியதந்தை திருதராட்டிரனுக்கு எப்போதும் ஒரு கண்ணில் வெண் ணெய்; இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு; அவர் பின் புத்திக்காரர். அவர் பேச்சைக் கேட்டு எங்களுக்குத் தவம் போதிக்க வந்து இருக்கிறாய், அதைச் சோம்பேறிக்கு, உழைக்காதவர்களுக்கு, மடாதிபதிகளுக்கு, மதத்தை வியாபாரம் செய்யும் போலிகளுக்குப் போய் உரை. அவர் களுக்கு ஆறுதலாக இருக்கும். பாரதத் திருநாட்டில் மதத்தை அரசியல் ஆக்கும் பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் போய்ச் சொல்” என்றனன்

கண்ணன் அதையே மிகவும் அழகாகச் சொன்னான். “நீர் கவலைப்பட வேண்டாம் இவர்கள் பூமியை ஆள் வார்கள். அது அவர்களுக்குத் தகுதியாகும்; உம்மவர்கள் வான் ஆள வானவர் பதம் தருவார்கள். அவர்களை அமரர் உலகு ஆளச் செய்வார்கள்; போய் வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்றுபாடிக் கொண்டுவந்தவன் “போரே இனி மெய்யடா அது தடுப்பது இயலாதடா” என்று வேறு வகையாகப் பாடிக்கொண்டு துரியனிடம் போய்ச் சேர்ந் தான், தாளம் மாறிவிட்டது; அவன் பாட்டுப் புதிய ராகத்தில் அமைந்து விட்டது.

கிருட்டினன் தூது

அக்கால ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தலைவனா கிய துவரைக் கோமான் போரைத் தவிர்ப்பது தம்கடமை எனக் கொண்டான். துரியனிடம் நேரிடைப் பேச்சு நடத்துவது தக்கது என்று நினைத்தான். இது குறித்துத் தருமனின் கருத்தைச் சொல்லுமாறு கேட்டான்.

தருமன் தன் கருத்தைக் கூறத் தொடங்கினான்.

“போர் என்பது விரும்பத்தக்கது அன்று; எனினும் சர்வாதிகாரிகள் திணிக்கும் போது கைமுடங்கி நாம் எப்படி அடங்கி இருக்க முடியும்? நஞ்சு என்பதால் அஞ்சிச் சும்மா இருக்க முடியுமா? அதனை நீக்க நன்மருந்து தேட வேண்டும்” என்றான் தருமன்.

“போர் புரியும் வகையே அரவுயர்த்தோன் உரைத்தி ருக்கிறான். அதற்கேற்ப நம் செயல் அமைதல் வேண்டும். மூன்று வழிகள் இருக்கின்றன. இமயமலையில் குளிர்ந்த மலைச்சாரலில் குடிசை வேய்ந்து தவம் என்ற பேரால் கண்மூடிக் கொண்டு இருக்கலாம்; அன்றி முறைப் படி தாயபாகம் கேட்டு அவன் தடை எதுவும் இன்றி “அன்புச் சகோதரர்களே வம்பு தும்பு வேண்டாம் ஆட்சி தருகிறேன்” என்றால் நீங்கள் அரசு கட்டில் ஏறி அரம்பை போன்ற அழகியர் கவரி வீசக் காற்று வாங்கிக் கொண்டு அதிகாரம் செய்யலாம். அவன் அதற்கு இசையாவிட்டால் மண்ணுக்காகப் போர் செய்து புகழ்மாலை சூட்டிப் பின் உரிய பாகத்தை அடையலாம்: இவற்றுள் எது உங்களுக்கு விருப்பம்?” என்று கேட்டான் கண்ணன்.

“நாடா காடா அது தெரியாது அமைதிக்கு வழி வேண்டும்; இருவரும் சமாதானமாக வாழ வழி செய்ய வேண்டும். இதுதான் யான் விரும்புவது” என்று தருமன் கூறினான்.

“இதுவரை அமைதிபேசி அதைச்சாதித்தவர்கள் உலகில் இருந்ததாகத் தெரியவில்லை; அப்படிப் போரைத் தவிர்த்திருந்தால் சரித்திர பாடங்களுக்கே வேலை இருக்காது; அழிவு வரும் என்று தெரியும்; தெரிந்துதான் புத்தி சாலிகள் போரைத் துவக்குகிறார்கள். இதுதான் உலக வரலாறு” என்றான் கண்ணன்.

“சுற்றத்தையும் நற்றவ ஞானிகளாகிய குருக்களையும் கொன்று நாடாள்வதைவிடக் கனியும் கிழங்கும் தின்று காடு சென்று ஒதுங்கி வாழ்வதே தக்கதாகும்” என்றான் தருமன்.

“வீரத்தைச் சோர விட்டு விடுதலை பெறாவிட்டால் நீங்கள் கோழைகள் என்று இந்த உலகம் ஏசுமே; வஞ்சினங்கள் வாய்கிழியப் பேசிவிட்டு அஞ்சினம் என்று சொன்னால் அடுக்குமோ! உலகம் எடுக்குமோ என்ன செய்வது?” என்றான் கண்ணன்.

அதற்குமேல் தருமனால் வாது செய்ய முடியவில்லை. ஏழையாக ஆவதற்குத் துணிந்தவன் கோழை என்ற பெயரை எடுக்க விரும்பவில்லை. அதனால் கண்ணனைத் தூது சென்று விடை கேட்டு வரும்படி அனுப்பினான்.

“நாடு கேள்; மறுத்தால் கேளிர் என்று கருதத் தேவை யில்லை; போரில் அவர்களை வளைத்து நம் தாளில் விழ வைப்போம்” என்றான் தருமன்,

“நாட்டு ஆசையால் நாம் கேட்டுத் தாழ்ந்தோம் என்ற பெயர் நமக்கு வேண்டாம்; நிதானம் கருதி நின்று விட்டோம் என்ற நிலைமையும் வேண்டாம்; மானம் பெரிது; நாட்டில் பாதி; அது தவிர்த்தால் ஊர்கள் ஐந்து; அதுவும் மறுத்தால்போர் தொடுத்துத் தகர்ப்பது அல்லால் விடிவு வேறு வழியில்லை” என்றான். தொடர்ந்து வீமன் இடிபட உரையாடினான்.

“வேத்து அவையில் பாஞ்சாலி கண்ணனை ஏத்தி ஒலமிட்ட நாள் வெகுளாதீர் என்று பேசி எங்களை அடக்கி வைத்தான்; அந்தப்பழிச்சொல் தீர இன்னும் பகை முடிக்க வழி காணத் தயங்குகின்றான். அரவு உயர்த்தவன் கொடுமையைவிட அறம் உயர்த்தும் என் தமையனின் அருளுக்குத் தான் அஞ்சுகிறேன்”.

“காட்டுக்கு எம்மை அனுப்பிய அக்கண்ணிலான் செல்வமகனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். முடி சூட்டி முதல்வனாக என் தமையனை ஆக்கி வைக்கிறேன்” என்றான் தொடர்ந்து.

தன் தமையனின் செயல்படாத தன்மையைச் சாடி. வீடுமன் அங்கதச் சொற்களில் மேலும் அடுக்கினான்; “போர் முடித்தான்; பாஞ்சாலியின் கரிய கூந்தலை முடித்துக் கொடுத்தான். இளையவர் கூறிய வஞ்சினங்களைச் செயல் படுத்தினான். இவனைப்போல் இதுவரை யாரும் முடித்துத் தந்தது இல்லை” என்று இகழ்ச்சியாகக் கூறினான்.

“அண்மையில் வரும் சமரில் எதிர்த்துத் துரியனை இருகூறாய் ஆக்கி வென்று அரசாள்வதை விட்டு அறமும் உறவும் கொண்டாடிப் பணிந்து இருந்து புவி கேட்க விரும்புகிறான்; அடிமைத்தனம் அழகிது” என்றான்.

தருமன் வீமனைச் சமாதானப்படுத்திக் “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; மண்ணுக்காக மாந்தர் போரிடு வது கண்ணைவிற்றுச் சித்திரம் பெறுவது போலாகும்; நாம் வாழ வேண்டும்; பிறரையும் வாழ விடவேண்டும். அது தான் நல்லது” என்று தருமன் சாந்தப்படுத்தினான்.

“நம் கண்ணை நாமே குத்திக் கொள்ள முடியுமா? அவன் நெருங்கிய உறவினன்; அவனை வெறுப்பது அறிவுடைமையாகாது; வற்புறுத்திப் பெறுவது கீழ்த் தரமான செயல் ஆகும்” என்றான்.

வீமன் அதற்குமேல் வாதிட விரும்பவில்லை. தன் முடிந்த கருத்தைக் கூறினான். இதற்கு நம் தெய்வத்திரு மகன் கண்ணன் பாதம் சிவக்க அங்குச் செல்லவேண்டாம். என்னை அனுப்பிவையுங்கள். பாஞ்சாலி விரித்த கூந்தலை முடித்துத்தருகிறேன்; என் வஞ்சினத்தையும்படித்து உரைக் கிறேன்; அதற்கு வழி வகுத்து முடித்தும் வைக்கிறேன்” என்றான். “என் கையில் கதையிருக்கிறது அவனை வதைக்க, தம்பியின் கையில் வில் உண்டு அவன் மார்பில் அம்பு செலுத்த, நகுலன் சகாதேவன் தோள்வலி கண்டும் எதற்கு அஞ்ச வேண்டும்?” என்று மீண்டும் கேட்டான்.

“உதிட்டிரன் குடும்பத்தலைவன்; அவன் சொல்வதை உதாசீனம் செய்வது உகந்தது அன்று; முதலில் அடக்கம்; பின் தேவைப்படும்போது உன் செயல்காட்டு” என்று கூறி அவனைக் கண்ணன் அமைதிப்படுத்தி உட்காரவைத்தான்.

அருச்சுனன் அதைவிடக் கடுமையாகப் பாய்ந்தான்.

“மைக்குழலாள் மன்னர் தம் அவையில் அரற்றிய நாளிலும் அடக்கி வைத்தாய். இக்காலமும் எங்களை முடக்கி வைக்கிறாய்; எக்காலம் நாங்கள் எம் பகையை முடித்து வைப்பது” என்று கேட்டான். “மாசு படிந்த கூந்தலாள் ஆசைதீர அவர்களை அழிப்பதை விட்டு அறத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? பாம்புக்கு அமுதம் தந்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்” என்ற கருத்தை உரைத்தான்.

நகுலன் அதிகம் பேசவில்லை; நாலு வார்த்தை சொன்னாலும் அவை நறுக்கென்று இருந்தன.

“தூது, அறவுரை, பகைவர்பால் இரக்கம், இவை அறநெறிச்சாரம், போர்தான் முடிந்த வழி” என்று பரி செலுத்துவதில் தேர்ந்தவனாகிய நகுலன் தான் அறிந்தது கூறினான்.

சகாதேவன் அறிவு மிக்கவன்; அனைத்தும் அறிந்தவன். அடக்கம் அவனை அமரருள் சேர்த்து இருக்கிறது. மற்ற வர்களைவிட அவன் மாறுபட்டுப் பேசினான்.

கண்ணன் நடத்துவது நாடகம் என்பதை அவன் நன்கு அறிந்தவனாகக் காணப்பட்டான்.

“உன் மனக்கருத்து எதுவோ அதுவே என் மனக்கருத்தாகும்” என்று பட்டும் படாமலும் பேசி முடித்தான். பிழைக்க வழி தெரிந்தவனாகக் காணப்பட்டான். அவனைத் தனியே அழைத்து நீ விரும்பும் என் மனக் கருத்து யாது?” என்று கேட்டான். “நீ பாரதப்போரில் யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை; படு சாம்பல் ஆகப் போகிறது இந்த பாரதகளம்: பூபாரம் தீர்ப்பதற்கு நீ முடிவு செய்து விட்டாய். இதுதான் உன் மனக்கருத்து” என்றான்.

“பாராளக் கன்னன்; இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்

காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி

நேராகக் கைப்பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்

வாராமல் காக்கலாம் மாபாரதம்” என்றான்.

“கன்னனுக்கு முடி சூட்டி மன்னன் ஆக்கினால் பாரதப்போர் நின்றுவிடும்; அவன் பாண்ட வரில் மூத் தோன்; கவுரவரின் நண்பன்; அதனால் அந்தக் கதை முடிந்தது. திருப்பதிக்கு அனுப்பி வைத்துத் திருமதிக்கு மொட்டை அடித்துவிட்டால் கூந்தலைப் பற்றிப் பேச்சு எடுபடாது; துள்ளிக்குதிக்கும் அருச்சுனனை முதலில் கொன்று முடித்து விடவேண்டும். கன்னனா விசயனா என்று வீரவசனம் பேசியவர்கள் அவர்கள்; கன்னன் வாழ்ந்தான் என்றால் அருச்சுனன் வாழ இயலாது. அதனால் அவனைக் கொன்றுவிட வேண்டும்; வேறுவழி யில்லை. முடிச்சுபோட்டுச் சிக்கல்களை ஏற்படுத்தி வரும் உன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தினால் எல்லாம் அடங்கி விடும்” என்று தன் கருத்தை விளக்கினான்.

“முன்னம் கூறியவை அனைத்தும் நீ முடித்தாலும் என்னை நீ எப்படிக் கட்டுவாய்?” என்றான் கண்ணன்.

“அன்புக்கு ஆண்டவன் கட்டுப்பட்ட வன்; உன்னை என் தியானத்தில் கட்டுப்படுத்த முடியும்” என்றான். கண்ணனை நினைத்துத் தியானம் செய்தான், அவன் தனித்த அன்புக்குக் கட்டுப்பட்டான் கண்ணன்.

தன்னை விடுவிக்குமாறு வேண்டினான்.

“இப்பொழுது பேசிய இந்த எதிர் உரைகளை வெளியே சொல்லாமல் காக்க உறுதி அளிக்க வேண்டும்” என்றான் கண்ணன்.

“பாரதப்போரில் எங்கள் ஐவரைக் காக்க உறுதி அளிக்கவேண்டும்” என்று கேட்டு வற்புறுத்தினான் சகா தேவன்

“ஒப்புக் கொண்டேன். அன்புக் கட்டில் இருந்து விடுவிக்குமாறு கண்ணன் வேண்டினான்; மறுபடியும்அவர்கள் அனைவர் முன் வந்து தொடர்ந்து பேசினர்.

தருமன் கருதுவது போலவே அடங்கிப் போவதுதான் சிறப்பு என்று தானும் கருதுவதாகக் கண்ணன் கூறினான். சமாதானமே உகந்தது என்றான்.

பாஞ்சாலி ஒப்பாரிவைத்தாள்: கண்களில் நீர் கரை புரண்டு பேசியது; பாஞ்சாலி ‘கோ’ என்று கதறினாள். அவன் திருவடியில் விழுந்து அலறி அழுதாள்.

“கற்றைக் குழல்பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்த பார்வேந்தன் பற்றித் து கில் உரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்; கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா நீ அல்லாமல் அற்றைக்கும் என் மானம் யார் வேறு காத்தார்?” என்று அடுக்கி அவனை உயர்த்திப் பேசி அதற்கு மேல் தன் வாதத்தை எடுத்துப் பேசினாள்.

“மன்றினில் அழைத்து எனக்கு மாசு அளித்த மன்னவர் பால் சென்று தமக்கு ஐந்து ஊர் திறல் வீரர் பெற்றிருந் தால் அன்று விரித்த அருங்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பது?” என்று அழுதாள்.

கண்ணனின் தம்பியாகிய சாத்தகி அதைக் கண்டு நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசுவதுபோல் கருத் துகளை அள்ளி வீசினான்.

“தண்டு இருந்தது இவன் கரத்தில், தனு இருந்தது அவன் கரத்தில்; வண்டு இருந்த பூங்குழல் மேல் மாசிருந்தது என இருந்தாள்; கண்டு இருந்தீர் நீவிர் அனைவரும்; பண்டு இருந்த பகைவர்பால் ஊர் கேட்டு உண்டு இருந்து வாழ்வதற்கே பேசுகிறீர்; இது மானமுள்ள பேச்சாகப்படவில்லை” என்றான்.

கண்ணன் அதற்கு மேல் வாதங்களை நீட்டிக்க விரும்பவில்லை; அன்புத் தங்கையை அரவணைத்து ஆறுதல் கூறினான். கவலைப்படாதே உன் மகன் அபிமன்யு இருக்கிறான்; வீரமகன் அவன் வஞ்சினத்தை முடித்துக் கொடுப்பான்” என்று உறுதி கூறினான்.

தருமன் அவைக்கண் அத்துமீறல் சட்டம் காட்டி அமுது அனையவளை அடக்கி வைத்தான். பெண் அவையில் பேசுவது அனுமதிக்க முடியாது என்றான்.

“துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர், கன்று சினத்தோர், கல்லாதவர், மகளிர் என்றும் இவர் அரச ஆலோசனை மண்டபத்தில் எய்தப் பெறாதாரே” என்று கூறிப் பெண்கள் ஆலோசனை மண்டபத்தில் அனு மதிக்கத் தக்கவர்கள் அல்லர் என்று அறிவித்தான்.

இன்று அப்படிப் பேசி இருந்தால் பெண்கள் கொடி பிடித்துக் கூட்டம் கூட்டிக் கூக்குரல் இட்டு இருப்பார்கள். சமநீதி வழங்காத காலம் அது. அதனால் இவ்வாறு பேச முடிந்தது.

கண்ணன் தூது போவதற்கு இசைந்து படைகள் சில பின் தொடர அந்தினாபுரி அடைந்தான். கண்ணன் வருகிறான் என்பதை அறிந்து அரவு உயர்த்தோன் சாலைகளில் குழிகள் தோண்டி வைத்துப் போக்கு வரத்துக்கு இடையூறு செய்தான். தேர்கள் ஒழுங்காகச் சாலைகளில் போகாதபடி மாற்று வழிகளில் திருப்பி விட்டு நெரிசல் நிலையை உண்டு பண்ணினான்.

துரியன் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டான். தடுப்பார் தடுத்துத் தடை செய்ய முடியாமல் செயல்பட்டான். அந்தஸ்தை இடையில் வைத்து அரசன் மகனை அடி யெடுத்து வைக்காமல் செய்தான் சகுனி.

“மன்னன் மகன் நீ; மாடு மேய்க்கும் சின்ன குலத்தவன் அவன்; நீ சென்று வரவேற்பது இந்த பாரத மண்ணில் இல்லாத பழக்கம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற உத்தமமான பேதம் இருக்கும் வரை அதை நீ காப்பாற்றித்தான் தீரவேண்டும்” என்றான்.

மாமன் சொல்வதிலும் மதிப்பு உண்டு என்று அதிகார பூர்வமான அழைப்புத்தர மறுத்து விட்டான். அவையிலே சென்று அவன் வருகைக்காக முன் சென்று காத்திருந்தான். மன்னர்கள் கூடி இருந்தனர் கொலுப் பொம்மைகளாக.

இதற்கு இடையில் வில் விதுரன் இல் நோக்கி வரவேற்பு இல்லாமல் உள் நுழைந்தான் துவரைக் கோமான். எதிர்பார்க்கவில்லை; ஆனால் எதிர் கொள்ளத்தயங்க வில்லை. வந்தவன் கருமுகில்வண்ணன் நெடுமால் என்பதை உணர்ந்து விதுரன் பக்தியில் ஆழ்ந்தான். ‘என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்’ என்று நாத்தழும்ப நாரணனைப் பாடி வரவேற்றான்.

“முன்னமே துயின்று அருளிய பாற்கடலோ! ஆதி சேடன் ஆகிய படுக்கையோ! பச்சையாலிலையோ, நால் வகைச் சுருதியோ! நீ இங்கு வருவதற்கு என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்!” என்றான்.

கண்ணனுக்கும் அவனுடன் வந்திருந்த தானைப் பெருவீரர்களுக்கும் நல்விருந்து நல்கினான்.

உண்டு களைப்பு நீங்கியதும் சாய்வு நாற்காலி கண்டு அதில் ஒய்வு கொண்டிருந்தான்.

‘நீ இங்குத் தனித்து வந்தது ஏன்?’ கேட்டான் விதுரன்.

“ஐந்து பேர் அவரும் உன் மைந்தர்கள் தாம். அவர்கள் குந்தி இருக்கக் குடிசை கேட்டு வந்தேன்” என்றான்.

“அடியாத மாடு படியாது; அடித்துத்தான் காயைப் பழுக்க வைக்க முடியும்” என்றான் விதுரன்.

“தானாகக் கணிகிறதோ” என்று பார்க்க வந்தேன்.

மறுநாள் கண்ணன் கடமையை முடிக்கக் கண்ணில்லாதவன் மைந்தனாகிய துரியனின் அவைக்கு வந்தான் வீடுமன், துரோணன், கிருபன், மற்றும் உள்ள பெரிய மனிதர்கள் சிறுமை பாராட்டாது அவனை வரவேற்பதில் பெருமை காட்டினர். கூசி ஒடுங்கிய சகுனியும் கன்னனும் கூனிக் குறுகித் தலை கவிழ்ந்தனர். துரியன் ‘வருக’ என்று கூறவும் வாய்வராமல் தவித்தான். இடம் இருந்தது; இருக்கை பெற்றான்.

“வர்க்கபேதம் பாராமல் விதுரன் வீட்டுக்குச் சென்றது ஏன்?” என்று துரியன் கேட்டான்.

“பேதம் என்பது வேதம் கற்ற எவருக்கும் ஏற்பட வாய்ப்பு இல்லை; உன்வீடு என் வீடு; நான் கேட்க வந்தது நாடு; இங்கே உன் வீட்டில் சோற்றை உண்டு அதன்பின் உன்னைப் பார்த்துக் குரைக்காமல் இருக்க முடியுமா” தூதுவனாக வந்த யான் ஏதிலன் ஆகிய விதுரன் இல்லில் தங்கினேன்” என்றான்.

“சரி! வந்த செய்தி யாது?” என்று வினவினான்.

“சொல்லித் தெரிய வேண்டியது இல்லை மன்மதக் கலை; தெரிந்தும் சொல்லவேண்டி உள்ளது அரசியல் கலை”.

“குருகுலத்தில் பிறந்த மைந்தர்க்கு உரிய நாடு கொடு; அதை மறுத்தால் அலர்கள் வாழ ஐந்து ஊர் விடு; அதற்கு நீ சொல்லி வரும் கெடு யாது?” என்றான்.

“ஐந்து ஊர் மட்டும் அல்ல; ஐந்து ஒட்டை வீடுகளும் அவர்களுக்கு இல்லை. காட்டில் வாழ்ந்தவர்கள் அந்தக் காட்டுமிராண்டிகள் நாகரிக உலகில் வாழத் தகுதி இழந்து விட்டனர்” என்றான்.

“வழி இல்லை; ஒரு படி ஏற வேண்டியது தான்” சங் கீதம் ஆரோகணத்தை நோக்கிச் சென்றது.

“உருப்படியாக ஏதாவது சொல்ல முடியுமா? “ என்றான் கண்ணன்.

“படிப்படியாக நீங்களே இறங்கி வந்து விட்டீர்களே”

“ஒருபடி அவர்கள் உயர்ந்து நின்று உங்களை அடித்து நொறுக்கி அடிபணிய வைப்பார்கள்; அவர்கள் சொற்படி உங்களைக் கீழ்ப்படிய வைப்பார்கள்; உமக்குப் பாடம் கற்பிப்பார்கள்” என்றான்.

உருத்து எழுந்தான் துரியன்;தன் கருத்தை இழந்தான். “சந்திப்போம் படுகளத்தில்” என்று போருக்கு உறுதி தந்தான். “கைபோட்டுக் கொடு; அது தான் வீரத்துக்கு அழகு” என்றான் கண்ணன்.

“பால் கறக்கும் கையில் கோல் பிடிக்கும் கை படுவது மரபுக்கு இழுக்கு” என்றான் துரியன்.

“கோல்பிடிப்பதில் நம் இரு சாதிக்கும் வேறுபாடு இல்லை; அந்த வகையில் நாம் சமம் தான்” என்று சிரித்துப் பேசினான்.

“ஞால முற்றும் இனிப் பாண்டவர்க்குத் தான்” என்று சொல்லிவிட்டு, வணக்கம்; வந்தே மாதரம் பாடி முடித்தான்.

கண்ணன் கண்ணில் மறைந்ததும் ஒண்டிக் குடித்தனம் செய்து கொண்டிருந்த அரசியல் துறவியாகிய விதுரனை விளித்து, “என் பகைவனுக்கு நீ எப்படி இடம் அளித்தாய்?” என்று கடு கடுத்தான்.

“தாசிமகன் நீ; அதனால் காசு கிடைக்கும் இடத்துக்கு முந்தானை விரித்தாய்; என் முகத்தில் விழிக்காதே” என்றான்.

சிற்றப்பன் என்றும் பாராமல் சிறுமை பேசினான். பேசிய அந்த அற்பனை எதிர்த்து விதுரன் வஞ்சின மொழி கூறினான்.

“நல்லது செய்ய நினைத்தேன்; நீ அல்லது செய்து அழிகிறாய்”

“அழிவுக்கு வழிகோலும் உனக்கு யான் இனிவழிப் பாதையாக இருக்க மாட்டேன்” என்று தன் கை வில்லை முறித்துப் போட்டான். அவை நடுங்கியது: “வில் வீரன் விதுரன் விடுதலை பெற்றுவிட்டால் விசயனின் வில்லுக்கு யார் இனி எதிர் நிற்க முடியும்” என்று கதி கலங்கினர்.

“அவையில் முற்பட்டுப் பேசிப் பழக்கப்பட்டுக் கவைக்கு உதவாத பேச்சு தரும் கன்னன் “விபீஷணன் போய் விட்டதால் இராவணன் வீரம் குன்றியதில்லை; கும்ப– கருணன் நான் இருக்கிறேன். கடமை முடித்துக் கொடுக்க” என்று கனன்று பேசினான்.

மண் குதிரை அவனை நம்பிக் கண் கெட்டவன் மகன் துரியன் பெருமிதம் கொண்டான்; “செஞ்சோற்றுக் கடன் மறவாச் சிலைவீரன் கன்னன் இருக்கும் போது வெறுஞ் சோற்று வீணன் விதுரன் போனால் என்ன?” என்று கூறி அவையைக் கலைத்தான்.

விதுரன் வீட்டுக்கு வந்த கண்ணன் அவனோடு சதுர மாகப் பேசிச் சதிர் விளையாடினான். கருத்துள்ள மொழி களைக் கல்வி வல்ல விதுரன் வாயில் இருந்து வரவழைத்தான்.

“வில் உம்மை என்ன செய்தது? அதனோடு விளையாடினர் என்ற சொல் கேள்விப்பட்டேன்” என்று கூறி அவனைச் சீண்டினான்.

“ஆகுவது கருதாவிட்டால், அமைச்சர் சொல் கேளா விட்டால், அழிவது சிந்திக்காவிட்டால், விளைவதை உணராவிட்டால், நாவது காக்காவிட்டால் அவனுக்காக ஒருவன் சாவது பழுதாகும்” என்றான் விதுரன்.

தன்னைப் பிரித்துப் போர்க்களம் போகா வண்ணம் செய்துவிட்ட சூழ்ச்சியை விதுரனால் உணர முடியாமல் போய்விட்டது. கண்ணன் புகழ் மொழி அவனைக் கோழையாக்கி விட்டது. படித்தவர்கள் பேசுவார்கள்; செயல்படப் பின்வாங்குவார்கள் என்பதற்கு விதுரன் ஒர் எடுத்துக்காட்டாக அமைந்தான். தவறு என்றால் துரி யனைக் கண்டித்து இருக்கவேண்டும். தன்னை இகழ்ந்தான் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு நாட்டு நலனை மறந்தான். அதே அவைக்களத்தில் துரியனை எதிர்த்துத் தாக்கித் தான் அங்கேயே மாண்டிருந்தால் பாரதமே வேறு விதமாக மாறி இருக்கும். அறிவாளிகள் என்றுமே அரசி யலுக்குப் பயன்பட மாட்டார்கள். என்பதற்கு அவன் விதி விலக்கு ஆகவில்லை. கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவனுக்கு வழி கிடைத்தது. விதுரன் விலக்கப் பட்டான்.

குந்தியின் மனையில் கண்ணன்

வெளியுலக வேதனைகள் எதுவும் இன்றி வேந்தன் அரண்மனையில் புகலிடம் சென்ற பாண்டவரின் அன்னை குந்தியைக் கண்ணன் சென்று சந்தித்தான். கானுறை மைந்தர் தம்மைக் கண்ணுறக் கண்டது போல் அவள் மகிழ்ச்சி கொண்டாள்.

“வந்தது ஏன்?” என்று நேர் உரை கேட்டாள். நடந்தது கூறினான்; நடக்க இருப்பது பற்றிப் பேசினான்.

அமர் வந்தால் அவள் தமர் என்ன ஆவார் என்பதை எடுத்துச் சொன்னான். அவள் பெற்ற முதல் மகன் கன்னன்தான் என்பதைச் சுட்டிக் காட்டினான்.

“நாளை நடக்கப் போகும் போரில் கன்னனும் காளை அருச்சுனனும் போர் முனையில் மோதப் போகின்றனர். இருவரில் ஒருவர் சாவது உறுதி. அருச்சுனனோடு மற்ற நால்வரும் மாளுவது திண்ணம். இச்செய்தியைச் சொல்லி ஒருவனையா ஐவரையா யாரைப் பலியிட விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

அழுவதைத் தவிர அறிவுள்ள கருத்து எதுவும் சொல்ல இயலவில்லை. ஒருவன் கதிரவன் மகன்; மற்றவன் இந்திரனின் மகன். இருவரில் யாரை இழப்பது? அதனைத் தன்னால் முடிவு செய்யமுடியாமல் கலங்கி நின்றாள்.

“பாரதப்போரில் கன்னன் தன்னிடம் அடைக்கலம் வந்த அசுவசேனன் என்ற பாம்பை அத்திரமாக ஏவுவான்; அதனை மறுமுறை விடவேண்டாம் உன்று அறிவுரை கூறுக” என்று அவளிடம் சொல்லிவிட்டு விடைபெற்று விதுரனின் மனை திரும்பினான்.

“ஆரம்பத்திலேயே அவன் முகவரியைத் தந்திருந்தால் தம்பியரோடு சேர்த்து இருக்கலாமே” என்று வருந்தினாள். கன்னனை இழப்பது தவிர அவளுக்கு வேறுவழியில்லை. பால் திரிந்துவிட்டால் இனி அதுபயன்படாது; தாக்கி எறிய வேண்டியது தான். வயிரம் பாய்ந்த மரத்தை வாள் கொண்டு வெட்டுவது சிரமம்; உயிரையே துரியனுக்குத் தர இருக்கும் வயிரக் குன்றை அசைக்க முடியாது: அவன் பகைவருக்குத் துரணாகி விட்டான். துணுக்குச் சுமக்கத் தெரியுமே அன்றிச் சுமையை எறியத் தெரியாது. சுமை தாங்கியாகிய கன்னனைப் பல்லக்கு ஏறச் சொன் னால் அவன் பழைய பல்லவியையே பாடுவான். துரியன் தனக்குச் செய்த நன்மைகளைப் பாராட்டி ஒரு இதழே வாசித்துக் கொடுப்பான்.

“யாரும் அறியாத என்னைத் தேரும் பேரும் கொடுத்து அங்க நாட்டின் அதிபதி ஆக்கினான். துரியன் அவன் நட்புக்கு அரியன். போருக்குச் சிறியன்; அவனை விட்டு விலகுவது அறியேன்” என்று இலகுகனித வாய் பாட்டை ஒப்புவிப்பான். அதனால் உண்மையைச்சொல்லி உளறு வாயளாக ஆக அவள் விரும்பவில்லை. கண்ணன் சொற்படியே நடப்பதாகத் திண்மையாக உறுதி தந்தாள். அத்தை மடி மெத்தையடி என்று பாடிக் குழந்தையாக இருந்தபோது மகிழ்வித்த கண்ணன் தன் மெத்தைப்படி ஏறி அவள் சித்தத்தை மாற்றி ஒரு கலக்கு கலக்கிவிட்டான்.

அதற்குள்ளாகத் துரியனின் அவையில் கூடிப்பேசி துரிதமாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன.

கண்ணனைத் தீர்த்துக் கட்டுவது என்பது பற்றி வேர்த்துக் கொட்டிய துரியன் ஒரு கூட்டத்தைக் கூட்டினான். வீடுமனைத் தவிர மற்றைய பேடிகள் அங்குக்கூடிப் பேசிக் கண்ணனைக் குழி தோண்டிப் புதைப்பது என்று முடிவு செய்தனர். சகுனியும் துச்சாதனனும் இதில் பெரும் பங்கு ஏற்றனர்.

தனித்து வந்திருக்கும் கண்ணனை உண்டு இல்லை என்று பார்த்து ஒரு முடிவு செய்துவிட்டால் பின் தொடர்ந்து செயல்பட எந்த மண்டுவும் வரமாட்டான். அதனால் அவைக்கு அழைத்து அவனுக்கு வேட்டு வைத்தியம் தருவதே பாடம்; அதுவே படிப்பினை” என்றான் துரியன்.

“புலி வலையில் பட்டால் விடுவரோ வேட்டுவர் ஆனோர்; அழித்து அழிவு காணச் சேனைகளை ஏவுக” என்றான் குருட்டுத் தந்தை திருதராட்டிரன்.

இருட் டில் தோன்றிய ஒளி விளக்கு என்று கூறும்படி நாட்டுக்கு இப்படி நல்லவர்கள் உதிப்பதும் உண்டு என்பதைக் காட்டத் துரியனின் கடைசித் தம்பி விகர்ணன் இதைத் தடுத்துப் பேசினான். தூதுவனைக் கொல்வது தவறு என்பதைச் சுட்டிக் காட்டினான்.

“மூத்தவர், இளையோர், வேத முனிவர், பிணியின் மிக்கோர், தோத்திரம் மொழிவோர். மாதர், தூதுவர் இவர்க்கு ஊறு செய்யார்” என்று சாத்திரம் காட்டிப் பேசினான்.

“அரை வேக்காடு நீ; உன்னை யார் உள்ளே விட்டார்கள்” என்று சீறிய குரலில் அண்ணன் துரியன் அவனை அடக்கி வைத்தான்.

நச்சு அரவம் ஆகிய துச் சாதனன் அதனை ஆமோதித்துப் பேசினான்.

சிறியன சிந்தியாத கன்னன் அதற்கு இசையவில்லை. கண்ணனைத் தானே நேரில் சென்று வளைத் துப்பிடித்து அழிப்பது எனக் கூறிச் சிலம்பம் பேசினான்.

கூட இருந்து குழி தோண்டிப் பழகிய மாமன் சகுனி ‘கண்ணனை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் இல்லை’ என்றான். கூறியவை எல்லாம் புகழ் சேர்க்கும்; புண்ணியம் சேர்க்கும்; கண்ணியம் சேர்க்கும்; ஆனால் நண்ணியது அடைய முடியாது. அதற்குத் தேவை இல்லை. என்றும் சொல்லி அவன் சார்பில் புதிய சாதனை ஒன்று கூறினான்.

‘தரையில் குழி ஒன்றுதோண்டிக் குந்தியின் மருமகனை மேலே திரையிட்டுக் கீழே அறையிட்டு அதில் விழவைத்துப் பிடிப்பதே அறிவுடமை’ என்றான்.

“கொலைக்கு அஞ்சாத கொடுமையாளரைக் குழியில் வைத்துத் தடுக்கி விழும் கண்ணனை எதிர்த்துக் குத்திக் கொலை செய்து ஒழிக்க வேண்டும்” என்றான். குறுக்கு வழியில் சறுக்குமரம் ஏறிச் சரியும் பழக்கமுடைய துரியன் மாமன் பேச்சுக்கு மதிப்புத் தந்து “ஆமாம் அதுவே செய்க” என்று ஆட்களிடம் ஏவினான்.

மல்லர்களும், மடையர்களும், குத்துக்கோல் வீரரும், படியாத அடியாட்களும் மனை அடியில் பதுங்கி நின்று கண்ணனை அமுக்கிப்பிடிக்கக் காத்துக் கிடந்தனர். நில வறை ஒன்றை அமைத்து மூங்கில் பிணிப்பினால் மேலே முடித்தரையில் ஆதனம் அதன் மேல்வைத்து யாதவன் வருகைக்கு வஞ்சக்ர் அனைவரும் காத்து இருந்தனர்.

விடைபெற்றுச் செல்ல விடையன்ன நடையனாகிய கண்ணன் அரச அவையில் நுழைந்தான். தடையின்றி அவனை மட்டும் விடுத்து ஏனைய சேனைகளைத் தடுத்து நிறுத்தினர்.

வரவேற்பு இகழ் வாசித்தளித்து வந்தவனை உவந்து முகம் மலர உள் வரச் செய்து அகம் மலர ஆதனத்தில் அமர வைத்தனன். சதுரர்கள் சேர்ந்து சமைத்த நில வறை போல அறைகளும் படை வகைகளும் உள்ளே பதுக்கி வைத்திருந்தான். எதிர்பார்க்கவில்லை அதிர் வேட்டுக் கிளம்பும் என்று. வீரர்களும் சூரர்களும் கண்ணனின் விசுவரூபம் கண்டு குலை நடுங்கினர். அலை அலையாக மோதி அழிவு பெற்றனர். ஆலகால நஞ்சைக்கண்டு நடுங்கிய அமரரின் நிலையை அந்தகன் மைந்தரும் வந்திருந்த பேரறிஞரும், கண்ணனும் துரியனும் அடைந்தனர்.

“கண்ண! பொறுத்தருள்; மணிவண்ண பொறுத்தருள்: திண்மை இல்லாத தீயவர் செய்த பெரும் பிழை பொறுத்தருள்” என்று கூறிக் கண்ணனின் மலர் அடிகளில் விழுந்து வணங்கி வேண்டினர்.

கங்கை மகனாகிய வீடுமனும், கதிரவன் மகனாகிய கன்னனும், அம்பிகை மகனாகிய திருதராட்டிரனும், அவன் மனைவி காந்தாரி பெற்ற நூற்றுவரும் மற்றும் இருந்த மன்னர்கள் அனைவரும் எழுந்து நின்று கண்ணனிடம் தங்கள் பிழையைப் பொறுத்தருள்க என்று கூறி வேண்டினர்

“நினைத்தால் எதையும் முடித்து விடும் ஆற்றல் எனக்கு உண்டு; மற்றும் படை எடுக்காதே என்று தொடை நடுங்கியாகிய துரியன் என்னை முன்னே வந்து வேண்டிக் கொண்டான், பஞ்சவர்கள் கூறிய வஞ்சின மொழிகள் வேறு உள்ளன; அவை உங்களை அழிக்கக் காத்து இருக்கின்றன. என் கரத்தில் இரத்தக் கறைபடிய நான் இங்கே குறைபட வேண்டியதில்லை எனக் கூறிச் சீற்றம் கொள் சிங்கமென முழங்கித் தன் பேருருவை அடக்கிக் கொண்டு தீராத விளையாட்டுப் பிள்ளையாகச் சிரித்து அந்த இடத்தை விட்டு நீங்கினான் ஆயர் குலக் கோமகன்.

அவன் ஏவிய முதல் அம்பு விதுரனை விலக்கியது. அடுத்துக் கன்னனிடம் பாய்ந்தான். தனியே அழைத்து அவன் பிறப்பு வரலாற்றை அவன் செவியில் ஒதினான். அவன் நம்பத் தயாராக இல்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. விதைகள் தூவப்பட்டன; மழை நீர் படும் போது தானாகப் பசும் பயிர் வளரும். பயனும் தரும் என்று கண்ணன் அவனை விட்டு நீங்கினான்.

அடுத்த சந்திப்பு அசுவத்தாமனோடு; எங்கேயோபோய்க் கொண்டிருந்தவனை “ஏன் அடாபணப்பையைக் கீழே போட்டுவிட்டாயே” என்றால் திரும்பிப் பார்க்காமல் இருக்கமாட்டார்கள்; அதுபோலக் கண்ணன் கைதட்டி அழைத்தான்; மார் தட்டிப் போர் செய்யும் அவ்வீரன் யார் அழைத்தது என்று அறிந்து அருகே சென்றான்.

“இதோ பாரு நீயே சாட்சி, போருக்கு வரத் துரியன் வீரம் பேசி இருக்கிறான்; நாளை இல்லை என்று சொல் வான் நீயே காட்சி” என்றான். அவன் உச்சி குளிர்ந்து விட்டது அவனைப் பெரிய மனிதனாக மதித்துப் பேசிய தால.

கையில் இருந்த மோதிரத்தை வேண்டுமென்றே கண் ணன் தவறவிட்டான். ஐயோ பாவம் என்று அதை எடுத்துக் கொடுத்தான். “ஊர்க்கோள் சூரியனைச் சுற்றுகிறது” என்றான். வானத்தை அண்ணாந்து பார்க்க வைத்தான்.

பின்னர் சிரித்துப் பேசி “நீ போய் வா” என்றான். இதைத் தூர இருந்த துரியன் தீர விசாரிக்காமல் அவசர முடிவுக்கு வந்தான்.

பாண்டவர்க்குத் தான் துணை என்று அவன் சத்தியம் செய்ததாகக் கற்பித்துக் கொண்டான். “வலியச்சென்று மண்ணையும் விண்ணையும் சாட்சி வைத்து மோதிரம் தொட்டுச் சூள் உரைத்தான். அதனால் அவன் நம்பத் தகுந்தவன் அல்லன்” என்று கருதிவிட்டான்.

அரச அவையில் அவனைக் கண்டித்துப் பேசினான். துரியனின் நம்பிக்கையை இளம் வீரன் அசுவத்தாமன் இழந்துவிட்டான். படைத்தலைமை அவனுக்கு இல்லை என்று பறை சாற்றிப் பலர் அறிய அவனை ஒதுக்கினான்.

பிரித்து வைக்கும்திறன் கண்ணனுக்குக் கைவந்த கலை யாக இருந்தது. விதுரனைப் பிரித்தான்; சதுரங்கம் ஆடி– னான். சாதனை செய்தான்; கன்னனைப் பிரிக்க விதைகள் துரவினான்.

அசுவத்தாமன் அவன் வீசிய வலையில் சிக்கித் திக்கு முக்காடினான்; அதற்குப் பிறகு தொடர்ந்து கன்னனை முடிக்க இந்திரனை அழைத்தான்.

விதுரன் மனையில் இருந்து கொண்டு அழைப்பு விடுத்து அவனை வரவழைத்தான்.

“பெற்றால் மட்டும் பிள்ளையா? அவனைக் காப்பது உன் கடமை இல்லையா” என்று புதிர் ஒன்று போட்டான்.

எதிர் ஒன்றும் பேசாது விதிர்ப்பு அடைந்து விளக்கம் கேட்டு வினயமுடன் நின்றான்.

“கன்னன் கதிரோன் மைந்தன்; அவன் அதிரத் தாக்கி னால் விசயன் வெற்றியை இழப்பான்; அதோடு அவன் வாழ்வும் அத்தமனம் ஆகும்” என்றான்.

“ஐயா! என் மகன் உயிர் தப்ப வழி உண்டா? இருந் தால் இயம்புக” என்றான்.

“கன்னன் மார்பில் கவசமும், காதில் குண்டலமும் அணிந்திருக்கும் வரை அவனை அவனியில் யாரும் அழிக்க இயலாது” என்றான்.

“யானும் என் மகனுக்கு அந்தக் கவசம் குண்டலம் மண் தலத்தில் விற்பனைக்கு எங்கிருந்தாலும் வாங்கித் தருகிறேன். கவசம் இருக்கும் இடம் அவசியம் உரை” என்று கேட்டான்.

“கடையில் வைக்கும் அங்காடிப் பொருள் அல்ல அவை; அங்கதேசத்து அதிபதி அவன்; அவன் பிறக்கும் போதே உடன் தோன்றியவை. அவை இரவி தன் மகனுக்கு விரும்பி அளித்தவை. அவற்றை இரந்து நீ பெற்றால் இருள் அவனை வந்து சூழும். அவன் ஒளி நீங்கும். அவனை எளிதில் உன் மகன் வெல்வான்” என்றான்.

“அந்தண வடிவத்தில் சென்று கேட்டால் எதுவும் கூறி மறுக்கான்; கேட்ட அதற்காக உன்னை வெறுக்கான்” என்றான்.

முதிய வடிவம் கொண்டு உதய குமரனிடம் பிச்சை கேட்கச் சென்றான்.

கொடுத்துச் சிவந்தவை அவன் கைகள்;அடுத்து இவன் கேட்ட போது தடுத்துப் பேச அவன் நா எழவில்லை.

“கேள் நீ; எனக்குக் கேள் நீ” என்றான். “கவசமும் குண்டலமும் போட்டுப் பார்க்க விரும்பினேன். ஒளி மிக்க அணிகள் மணிகள் அவற்றைக் கேட்டுப் பெற வந்தேன்” என்றான்.

“இல்லை என்ற சொல்லை எப்படி எழுதுவது என்பது மட்டும் நான் கற்கவில்லை” என்றான்.

“தருகிறேன்” என்று நீர்த்தாரை வார்த்துக் கொடுத் தான். வானத்து அசரீரி குரல் எழுப்பித் தடுத்துப் பார்த்தது. “வந்தவன் அந்தரத்து அரசன் இந்திரன்” என்றும், “அடுத்துக் கெடுக்க அணுகியுள்ளான்” என்றும் குரல் எழுப்பியது.

“கார்த்திகைக்குப் பின்னால் மழையும் இல்லை; கன் னனுக்குப் பின்னால் கொடையும் இல்லை” என்று வான் புகழ் பெற்றுவிட் டான்.

இந்திரன் அவனைப் பாராட்டி ஈட்டி ஒன்று பரிசாகத் தந்தான். அதைத் தன் மகன் மார்பில் எய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். கடோற்சகனே அதற்கு இலக்கு என்று சொல்லிக் கொடுத்தான். பதவியில் இருப்பவர் பாரபட்சமாக நடந்து கொள்வதால்தான் நீதியும் நேர்மையும் குறைகின்றன என்பதற்கு இந்திரன் எடுத்துக் காட்டாக விளங்கினான்.

வெட்கம் கெட்டு அந்தப் பரிசை வாங்கிய கன்னனும் தன் நிலையில் தாழ்ந்து விட்டான். கொடுக்கத் தெரிந் தவன் கேட்டுப் பெறுவதிலும் தன் பெருமையைக் காட்டி இருக்க வேண்டும். அவ்வகையில் அவன் மிகவும் தாழ்ந்து விட்டான். தெய்வம் என்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துவந்த காலமாக அது இருந் தது. இந்தத் தேசத்தின் சாபக்கேடே இதுதான் என்பதை அவன் செயல் காட்டியது. பதவியைத் தவறாகப் பயன் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாம் முதல் எதிரிகள் இந்த தேசத்துக்கு என்பதை இந்திரன் செயல் எடுத்துக் காட்டியது.

கன்னனும் குந்தியும்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று இராம காதை காதற் சந்திப்பைப் பற்றிக் கூறும்; தாய் சேய் சந்திப்பை அப்படிக்கூற இயலாது. பாலூட்டி வளர்க்க வேண்டிய மகனை அப்பால் விட்ட அன்னை அவனை மார்பிறுகப் புல்லி அந்த வயதில் பாலைக் குடிக்கச் சொல்லி அவன் தலையில் தட்டத் தவித்து நின்றாள். அவன் அவளைப் பெற்ற தாய் என்று உறுதி செய்ய முடியாமல் பாசம் காட்ட முடியாமல் திகைத்தான். எனினும் பாண்டவரின் தாய் என்பதால் அவளுக்கு உரிய மரியாதை தந்து வரவேற்றான். கன்னன் ஏற்கனவே துரியனை அவைக்களத்திலேயே சந்தித்து அவன் பிறப்பு வரலாற்றை எடுத்துரைத்தும் அவன் அதை நம்பத் தயாராக இல்லை. கண்ணனின் சூழ்ச்சிகளில் இது ஒன்றாகும் என்று நினைத் தவனாய் அவளைத் தாய் என்று ஏற்கத் தயக்கம் காட்டினான்.

“பெற்றவள் நான்தான்” என்று கற்று அறிந்தவனாகிய கன்னனிடம் எடுத்து உரைத்தாள்.

பசையற்று ஆற்றில் விட்டவள் என்று அவன் அடி மனம் அவனிடம் அடித்துப்பேசியது.

கண்ணனின் சூழ்ச்சியாக இருக்கும் என்று யோசித்தான்.

பெற்றவள் என்னை ஆற்றில் விட்டாள். அதோடு அவள் கட்டியிருந்த சேலையையும் அடையாளத்துக்கு வைத்தாள். அதைக் கட்டும் பொய்யர்கள் மெய் வெந்து சாவர். இதுவரை இறந்தவர்கள் பலபேர்” என்றான்.

“நீயும் சாகத் துணிந்துவிட்டாய் தடுக்க முடியாது. வைத்திருக்கிறேன்” என்று கூறி அந்தப் பட்டுத் துகிலைக் கட்டிக்கொள்ள முன் வைத்தான்.

அதைக் கட்டிய அம்முதியவள் ஆண்டுகள் பல பின்னோக்கி நடந்தாள். இளமைக் கோலத்தில் அவன் முன் நின்றாள்; பாசம் இருவரையும் பிணித்தது.

பேய் என்றாலும் தாய் என்று வந்தால் அவள் தெய்வம் ஆகிவிடுகிறாள் என்பதை உணர முடிந்தது.

அவன் அவளைப் பார்த்த பார்வையில் கேள்விகள் பல அடங்கி இருந்தன.

“எப்படியம்மா மனம் வந்தது பெட்டியில் வைத்து ஆற்றில்போட, தேர் ஒட்டி என்னை எடுத்து வளர்க்கா விட்டால் ஏர் ஒட்டிக்கொண்டு உழுது கொண்டு இருப்பேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்க்கப்பட்டுக் கிடப்பேன். தார் வேந்தன் துரியன் என்னை அங்கத நாட்டின் அதிபதியாக்கினான். தம்பியரைவிட என்னிடம் அதிக தயவு காட்டினான். எனக்கு மணிமுடி சூட்டி மகுடம் தந்து அகிலம் மதிக்க வைத்தான். நட்புக்கு அவன் சிறந்த எடுத்துக் காட்டு. அவன் மனைவியுடன் யான் தனித்துக் காய் வைத்துச் சூது ஆடினேன். சூதுவாது தெரியாத அந்த மாது அவன் வந்த போது வெடுக்கென்று எழுந்தாள். அரைகுறை ஆட்டத்தில் நிலைகுலைந்து எழுகிறாள் என்று எண்ணி அவளை ஆடச் சொல்லி ஆடையைப் பிடித்து இழுத்தேன். ஆடையில் இருந்த மணிகள் நிலத்தில்விழுந்து சிதறின; சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோக்கவோ என்று கேட்டான் துரியன். அவன் மனைவி பதறிப்போன நிலையில் இந்த வினாவை உதிர்த்தான். அவன் அந்தரங்க சுத்தி அவதூறாக என்னைக் கருதவில்லை. செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கின்ற என்னை என் தம்பியருடன் மீட்டுச் சேர்க்கலாம் என்று இப்பொழுது வந்திருக்கிறாய். அது எப்படி முடியும்? ஆளப் பிறந்தவர்கள் அவர்கள் என்றால் மாளப் பிறந்தவன் யான் ஆவேன்” என்றான்.

“தம்பியருக்குத் தலைமை தாங்கு, தரணிக்கு ஆவாய் நீ வேந்து” என்றாள்.

“வம்பு நீ சொல்வது; அவர்கள் தரும் ஆட்சியை என் நண்பனுக்குத் தந்து அவன் அடியில் வைத்து விழுந்து காணிக்கை யாக்குவேன். அதுதான் நடக்கும்” என்றான்.

“ஆகுவது ஆகுங்காலத்து ஆகும்; போகுவது யார் தடுத்தாலும் போகும்; காலம் கடந்துவிட்டது, ஞாலம் எப்படி இயங்கும் என்று கூற முடியாது. வேறு எதுவாயினும் கேள்” என்றான்.

தேள் கொட்டியதுபோல் இருந்தது; வாள் கொண்டு போழ்ந்த நெஞ்சத்தில் குருதி சிந்தத் தான் சொல்ல வந்த செய்தியைச் செப்பினாள். அதற்கு அவன் சொன்ன விடை இது.

“கருத்த மேகங்கள் வானைச் சூழ்ந்துவிட்டன; இனி வையகத்தில் இருள் சூழ இருக்கிறது; இடியும் மின்னலும் சேர்ந்து ஒலிக்கவும் ஒளிதரவும் போகின்றன. தீமை அழியும், நன்மை தழைக்கும்; போரைத் தடுக்க முடியாது; அறுவடைக்குக் காத்திருக்க வேண்டியது தான்” என்று கூறினான்.

“போருக்கு என்றே பிறந்த உங்களைப் பாருக்குப் பயன்படப் பெற்றேன். உயிர் உமக்குத் துச்சமாக இருக்கிறது. அதை உகுப்பது எப்போது என்று காத்துக் கிடக் கிடக்கின்றீர். வாழப் பிறந்தவர்கள் என்று உங்களை தெய்வங்கள் படைக்கவில்லை. உலகில் அறம் தழைக்க உங்களை இழக்கத்தான் போகிறீர்கள். ஒன்று கேட்க விரும்புகிறது இந்தத் தாய் மனம்; அதனை வரம் என்று கொண்டாலும் சரி அல்லது உளறல் என்று தவிர்த்தாலும் சரி";

“அசுவசேனன் என்னும் அரவு அருச்சுனனின் ஆவியை வாங்க உன்னிடம் தாவி வந்துள்ளது. ஒரு முறை ஏவிய அது தவறினால் மறுபடியும் ஏவுதல் வேண்டாம்; தவிர்க்கவும். அடுத்த தம்பியர் நால்வரையும் உயிர் தொடுவது இல்லை என்று எனக்கு உறுதி தருக” என்றாள்.

“இதில் தருவதற்கு எதுவும் இல்லை; வீரன் சாவை ஒரு முறைதான் சந்திப்பான். அதே போல் ஓர் அம்பை ஒரு முறைதான் தொடுப்பான். எளியவரைக் கொல்வதில் எனக்குப் பெருமை இல்லை. அருச்சுனன் என்னைக்கொன் றான் என்றால் அவனுக்குப் பெருமை; அவனால் எனக்கும் பெருமை. அதுபோல அவனை நான் கொன்றால் இருவருக்கும் பெருமை சேரும்; கதிரவன் மைந்தன் ஒளி குன்றும் செயல்களைச் செய்யான்” என்று உறுதிதந்தான்.

குந்தி புறப்பட இருந்தாள்; அவளை நிறுத்தி வந்து அழுத்தம் திருத்தமாக இரண்டு வரங்களைக் கன்னன் கேட்டான். பாண்டவர்க்கு எதையும் உரைக்கக் கூடாது. தான் இறந்தபின் தன்னை மடியில் கிடத்தி அழுது தான் யார் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றான்.

பாரதப் போர் அதற்குள் அணிவகுத்துப் படைகள் நிற்கத் தொடங்கின. மாதங்கள் வந்து குவிந்தன.

உறுதி கொண்ட நெஞ்சினர் புதிய பாரதம் அமைக்கக் களம் நோக்கிச் சென்றனர். வீரசுதந்திரம் வேண்டி நின்றவர் போல் தீரமாகப் போர் செய்யப் புறப்பட்டனர். குலகுரு மரபினர் இருவரும் சந்தித்த களம் குருக்ஷேத்திரம் எனப்பட்டது.

7. வீடுமனின் வீழ்ச்சி

முகுந்தன் வாசகம் கேட்டு முரசு உயர்த்தவனாகிய தருமன் அரசர்களுக்கு எல்லாம் ஒலை போக்கிப் படை களுடன் வருக என்று செய்தி அனுப்பினான். எட்டுத் திக்கில் உள்ள மன்னர்கள் பட்டுத் துகில் எல்லாம் பதாகைகளாக உயர்த்திப் பாண்டவர் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.

பாஞ்சால மன்னனான துருபதனும், அவன் மைந்தர்கள் திட்டத் துய்மனும், சிகண்டி என்பாளும், துருபதனின் பேரனான திட்டகேதுவும், உத்தமோசா என்னும் துருபதனின் உறவினனும், மற்றோர் உறவினன் உதாமன் என்பவனும் யானை, தேர், பரி, ஆள் என்ற நால்வகைப்படை யுடன் வந்து சேர்ந்தனர். இவர்கள் எல்லாம் பாஞ்சாலியின் உறவினர்கள்.

மறைந்திருந்த நாடாகிய மச்ச நாட்டில் இருந்த விராட பூபதியும், சதானிக நிருபனும், சுவேதனன் ஆதிவ ராககேது, உத்தரகுமரன் ஆகியவரும் வந்து சேர்ந்தனர். தென்னாட்டில் இருந்து சேரர், சோழர், பாண்டியர் மூவரும், கேகய நாட்டு அரசர்களும், குந்திபோச நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்தனர்.

அவ்வாறே எதிரிகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

வீடுமன், கிருபன், கன்னன், துரோணன் சயத்ரதன் பகதத்தன், சல்லியன் முதலிய மாவீரர்களும், பதினோரு அக்குரோணி எண்ணிக்கை அளவு படை வீரர்களும் வந்து சேர்ந்தனர். துவாரகையில் இருந்து யாதவ சேனையும் வந்தது; பரசுராமனிடம் வில்வித்தை பயின்ற வீடுமனைப் படைத்தலைவனாக ஆக்கினான் துரியன்.

முகூர்த்தம் கேட்டு நிச்சயித்தல்

படைகள் எல்லாம் குழுமிவிட்டன. நாள் பார்த்துப் போரை நடத்த வேண்டியது தான் எஞ்சி இருப்பது. நாள் குறித்துச் சொல்லத்தக்க அறிஞனும், களப்பலி கொடுத்து கருமத்தைத் தொடங்க முன்வரத் தக்க வீரனும் யார் என்று துரியன் விசாரித்தான். படைத் தலைவனான வீடுமன் சகல கலைகளிலும் வல்ல சகாதேவனே முகூர்த்தம் குறித்துக் கொடுக்கத் தகுதி உடையவன் என்றும், மகாவீர னான இராவானே களப்பலிக்கு உரிய காளை எனவும் குறிப்பிட்டான்.

துரியன் சகாதேவனிடம் சென்று நாள் கேட்டான். பகைவேறு; தொழில்வேறு என்று வேறுபடுத்திக் காணக் கூடிய மனப்பக்குவம் உடைய சகாதேவன் நாள் குறித்துக் கொடுத்தான். பகைவனுக்கு அருள்செய்யும் பரந்த உள்ளம் பாண்டவரிடம் இருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைகிறது.

தநுர் மாதம் அமாவாசை இரவே களப்பலியூட்டினால் அவர்களுக்கு வெற்றி என்று தெளிவாகச் சொன்னான்.

அருச்சுனனின் மகன் இராவான்; உலூபிக்குப் பிறந் தவன்; அழகிற் சிறந்தவன் அவனை அணுகி “நீ களப் பலிக்கு உதவ வேண்டும்” என்று துரியன் கேட்டான்.

தன்னை அவனுக்கு ஈவதால் போரில் பாண்டவர் தோல்வியுறுவது உறுதி எனத் தெரிந்தும் தன்னைப் பற்றி– யும் தன் பக்கத்தவர் பற்றியும் கவலைப்படாமல் தன்னை யே ஈய முன் வந்தான். ஈகையில் கன்னனுக்கு முன்ன வனாக நடந்துகொண்டான்.

சிறிய தந்தையாகிய துரியன் கேட்டு மறுப்புச் சொல்ல மனம் இல்லை.

“ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என் உயிர்மாள” என்றான்.

தீந் தேன்போன்ற சொற்களைக் கேட்டுத் தீயவனான துரியன் மனம் குளிர்ந்தான் .

“தந்தேன் உயிர்” என்ற போதினில் தேன் வந்து பாய்ந்தது அவன் காதினில் ‘தொம்தோம்’ எனப் பாடி வெற்றிக் களிப்பில் அவன் ஆழ்ந்தான்.

களப்பலிக்கு இரவான் இசைதல்

எதிரிகள் முந்திக் கொண்டனர். அவர்கள் திட்டத்தை முறியடிக்கும் பொறுப்பைக் குன்றம் எடுத்துக் கன்று களைக் காத்த கண்ணன் ஏற்று அமாவாசையை ஒருநாள் முந்தியே துவக்கிவைத்தான். அர்ச்சகர்களை அழைத்து வைத்தான். அவர்கள் வந்து குழுமிவிட்டனர். இதென்ன அநியாயம் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு ஆகாயத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் குளக்கரைக்கு வந்து விட்டனர்.

சூரியனும் சந்திரனும் இருவரும் அங்குச்சேர்ந்ததால் அதுவே அமாவாசை தினம் என்று அறிவித்தான் அச்சுதன் ஆகிய கண்ணன்.

அடுத்தது களப்பளிக்குத் தன்னைத் தரக் கண்ணன் முன் வந்தான். போரும் வேண்டாம், ஊரும் வேண்டாம்” என்று கூச்சல் போட்டு “கோவிந்தா! எங்களை மன்னிக்கவும்” என்றனர் பாண்டவர்கள்.

“என்னை விட்டால் இராவான் தான் தகுதி என்று கண்ணன் கூற ஏற்கனவே இசைந்துவிட்டதால் அவன் தன்னைத் தர முன்னுக்கு வந்தான்.

அவனுக்கு ஒர் ஆசை சாவதற்கு முன்னால் போரின் வீரச் செயல்களைக் காண வேண்டும் என்று; களப்பலியில் தான் அறுப்புண்டாலும் போரைக் காணவேண்டும் என்ற விருப்பு அவனை விடவில்லை.

முதல் நாட் போருக்கு முன் இரவு குறிப்பிட்டபடி அவன் களப்பலிக்கு முன் நின்றான். அவன் தன் அங்கங் கள் சிலவற்றை அறுத்துக் காளி முன் இட்டு வருந்தாது முகம் மலர்ந்து நின்றான்; சாகவில்லை; களப்போரைக் கண்டு மகிழ் கொண்டு வாழ்ந்தான்.

எட்டாம் நாள் போர் வரை உயிரோடு இருந்தான். அம்புசன் என்ற அரக்கனோடு போர் செய்து மரணத்தைச் சந்தித்தான்.

அணி வகுத்து நிற்றல்

அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் ஆகியவரோடு அணிவகுத்துப் போர்க்களம் செல்க என மணிவண்ணனாகிய கண்ணன் படைத்தலைவனாகிய விராடன் மகன் சுவேதனிடம் கூறினான். அதிரதர் என்போர் தானும், வீமனும், விசயனும், அபிமன்யும் ஆவார் எனக் கண்ணன் விளக்கினான்.

மகாரதர் என்போர் தருமன், சிகண்டி, சாத்தகி, திட்டத்துய்மன் ஆவர்.

சமரதர் துருபதன், உதாமன், உத்தமபானு ஆகிய இவர் ஆவர்.

அர்த்தரதர் நகுலன், சகாதேவன், கடோற்சன் ஆகிய இவர் ஆவர்.

இந்த அடிப்படையில் படைகள் அணிவகுத்து நின்றன. ஐம்புலன்களைப் போலச் செயல்பட்டுப் பாண்டவர் ஐவரும் கண்ணனும் அணிபடைகண்டு மகிழ்வு கொண்ட னர். மருங்கு நின்ற மகிபாலன் ஆகிய பலராமன் போர் முடியும் வரை தீர்த்த யாத்திரை செய்து வருவதாகக் கூறி இந்த இரத்தக் களிரியைப் பார்க்க மனமில்லாமல் புண்ணிய ஷேத்திரத்தின் மேல் பழிபோட்டுவிட்டுப் புறப் பட்டுச் சென்றான்,

பலராமன் துரியனின் கட்சி, கண்ணன் கட்சி எதிர்க் கட்சி, அவனுக்கு வேறு வழியில்லை. தம்பியை எதிர்த்துப் போராட முடியாது. விதுரனும் பலராமன் வழியைப் பின்பற்றினான். இரண்டு பேரும் தமையனின் மைந்தர்கள். மற்றும் ஏற்கனவே வில்லை உடைத்துப் போட்டு விலகி நின்றவன். அதனால் அவன் செயல் அவனைப் பொறுத்தவரை நியாயமே ஆகும்.

மற்றவர்கள் போரில் நேரிடை பங்கு கொண்டு எதி ரெதிர் நின்று அடித்து நொறுக்கிச் சாகத் துணிந்து நின்றனர். நம்பிக்கையின் சிகரத்தில் நின்று வீரம் சிறக்க வீறு கொண்டு நின்றனர்.

வீமனை நோக்கித் துரியன் விரைகின்றான். எதிரே இருக்கும் பாண்டவர்களை அழிக்க நாள் எத்தனை ஆகும் என்று கேட்டான்.

வீடுமன் கூறியது வியப்பை அளிக்கிறது. எதிரியை மதித்துப் பேசும் ஆண்மை அவனிடம் வெளிப்படுகிறது.

தான் ஒரு பகலில் சர்திக்கும் சாதனையை மற்றவர் கள் செய்து முடிக்க நாட்கள் அதிகம் ஆகும் என்றான்; துரோணனுக்கு மூன்று நாள்; ஐந்து நாள் கன்னனுக்கு: ஒரு நாழிகையில் அசுவத்தாமன் செய்து முடிப்பான்: ஆனால் அதனை அருச்சுனன் ஒரு க்ஷணத்தில் முடித்து விடுவான் என்று கூறினான். அருச்சுனனின் வில்லாற்றலை வியந்து பாராட்டினான்.

அக்கினி தந்த தேரின் மீது அனுமக் கொடியை அருச் சுனன் பறக்கவிட்டான். துரியனின் படை அணியைக் கண்ட அருச்சுனன் இவ்வளவு பேரை அழித்தபிறகு தான் சாதிக்கப்போவது என்ன என்று சிந்திக்கத் தொடங்கினான். வீடுமன் துரோணன் மற்றும் உள்ள உறவினர் தாம் எதிரே நின்றனர். அவன் வில்லை எடுக்க அவன் விரல்கள் வினாக்களை எழுப்பின. வேண்டாம் இந்தப் போர்; நாடும் வேண்டாம்; ஆட்சியும் தேவை இல்லை என்று வெறுத்துப் பேசினான். பொறுத்துச் சிந்திக்கத் துளப மாலை அணிந்த கண்ணன் அவனுக்கு உளம் கொள்ளத்தக்க அறிவுரை கூறினான்.

கண்ணன் வழங்கிய கீதை

களத்தில் நின்ற காண்டீபன் இளைஞரையும் தம்மிலும் வயதில் மிக்க முதியவரையும் கண்டு பாசத்தாலும் நேசத்தாலும் பிணிப்புண்டு வில்லெடுத்து அம்புதொடுக்கத் தயங்கினான். அவன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து செய லிழந்து நின்றது. அவன் தெளிவு பெற அரிய உரைகள் தந்து அவன் மன இருளை மாயவன் மாற்றினான்: அதையே தெய்வ நன்மொழி (பகவத் கீதை) என்பர்.

“மனம் என்பது மாயையின் படைப்பு, அது முக்குண வசத்தால் மாறக்கூடியது; வெறுப்பு விருப்பு, பந்தபாசம் இந்தத் தளைகளில் அகப்பட்டுக் கட்டுப்பட்டு விளங்குவது; மனம் அடங்கினால்தான் மெய்யறிவு உண்டாகும். உற்றார், உறவினர், செற்றார், நண்பர் என்ற பேதம் மறைந்து செயல்படமுடியும்” என்று கண்ணன் திருவாய் மலர்ந்தருளினான்.

“கடமையைச் செய்; பலனைக்கருதாதே; எதையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டுச்செயல்பட்டால் கர்த்தாவுக்கு எந்தப் பாதிப்பும் நேராது. இவன் ஒரு கருவியே தவிரக் காரணன் அல்லன். இதனையே நிஷ்காமிய கர்மம் என்று உரைப்பர்” என்றான்.

பின் கண்ணன் பேருருவில் நின்று இந்தப் பிரபஞ்சத் தையே அதில் காட்டினான். “யாதும், யாவையும் எல்லாம் யானே” என்று அறிவித்தான்.

விசுவருப தரிசனம் கண்ட விசயன் அண்ட சராசரங் களின் அடிப்படையையும் இயக்கத்தையும் அறிந்தவனாய் ஞானத் தெளிவு பெற்றுக் களத்தில் தான் ஒரு கடமை வீரன் என்ற உணர்வோடு நிமிர்ந்து நின்றான். படுகளத்– தில் ஒப்பாரி வைக்க முடியாது என்ற பாயிர உரையை அறிந்தான். பரணி பாட வேண்டிய இடத்தில் பாமாலை பாடிக் கொண்டிருக்கக்கூடாது என்பதை உணர்ந்தான்.

விடுமனையும் துரோணனனையும் சந்தித்தல்

நிதரிசன உலகத்துக்கு வந்தவர்களாய் அடுத்துச் செய்ய வேண்டிய கடும் போர் குறித்துச் சிந்தித்தனர். குருகுலத்தில் சிங்க ஏறு ஆகிய வீடுமனையும் அறிவு தந்த ஆசான் துரோணனையும் சந்தித்துப் பேசினர். “வீரமும் ஆற்றலும் மிக்க உங்களை வெல்வோம் என்ற உறுதி எங் களுககு இல்லை; நீங்கள் களத்தில் இறங்கியதும் எங்கள் உளத்தில் வெல்வோம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை” என்று பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து பேசினர்.

முதலில் வீடுமன் தான் முடிய வழி உள்ளது என்று கூறினான். போர் தொடங்கிய பத்தாம் நாளில் சிகண்டி அருச்சுனனோடு இருந்து அம்புகள் எய்வாள்; அம்பை என்பவள் துருபதன் மகளாகப் பிறந்திருக்கிறாள்; பிறப்பால் பெண்ணாயினும் சிறப்பால் ஆண் ஆயினள்; தன் பெண்மையை அழித்துக்கொண்டு ஆண்மையை வளர்த்துக்கொண்டு வீரனுக்கு உரிய திறனும் திடமான உரனும் பெற்றுச் சிகண்டி என்ற பெயரில் போர் வீரனாக இயங்குவாள். அந்தச் சிகண்டி களத்தில் இறங்கினால் அம்பு கொண்டு அவளைத்தாக்குவது என் ஆண்மைக்கு இழுக்கு” என்றான்.

“பெண் என்றாலே ஒதுங்கி வாழ்ந்தவன் யான்; அவளை எதிர்த்து அம்பு எய்வது என் விரதத்துக்கு இழுக்கு. என் கைப்பட்ட அம்பும் அவள் மெய்பட்டுப் பழுது படக் கூடாது. மற்றொன்று பெண் என்று தெரிந்தும் எந்த வீரனும் அவள் மீது அம்பு ஏவமாட்டான். அவளோடு நின்று ஒதுங்கி அருச்சுனன் அம்பு இட்டால் அதனை மலர் எனவே கொண்டு மார்பைக் காட்டுவேன். எதிர்த்து அவனைத்தாக்க மாட்டேன். அம்புகள் என்னை அலங்கரிக்கும். அதுவே எனக்கு மலர்ப் படுக்கையுமாகும். அதன் முடிவே எனக்கு வீரமணம்” என்று தன் குறைபாட்டை எடுத்து உரைத்தான். உயிர்மேல் ஆசை இல்லாமல் உள்ளதைச் சொல்லும் உயர்வு அவனிடம் அமைந்திருந்தது;பத்துநாள் வீடுமனோடு போர் செய்ய வேண்டிய பொறுப்பினை உணர்ந்தனர்.

துரோணனும் தன் குறையை உரைக்கத் தொடங்னான். “மகன் இல்லாமல் யான் வாழ முடியாது” என்ற பாசத்தின் பாங்கினை எடுத்துக் கூறினான். படுகளத்தில் அசுவத்தாமனை அடுபோரில் கொன்று அந்தச் செய்தியை மன்னர் பலர் அறியப் பறை சாற்றினால் அடுத்து அம்பும் வில்லும் கவசமும் வீரமும் என்னை விட்டு அகலும்; நிராயுதபாணியாக நின்று நிமலனை நினைத்து வாழும் மனநிலை பெறுவேன்; அந்த நிலையில் மீனைக் கொத்தக் காத்திருக்கும் கொக்குப் போல வாடிக் காத்திருக்கும் திட்டத்துய்மன் என் தலையை அழித்துப் பந்தாடுவான். அதுவரை என் போர் நீடிக்கும்” என்றான். அவன் போர் ஐந்து நாள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிந்தது.

கண்ணன் பாண்டவர்க்குத் துணை இருக்கும் வரை அவர்களை வெல்வது யாராலும் இயலாத ஒன்று என்றும் உரைத்தனர். பாண்டவர்கள் முதுகுரவர் இருவரையும் வணங்கி ஆசி பெற்று நீங்கினர்.

பாண்டவர்களை எதிர்த்துப் போரிட மூன்று மா வீரர்கள் இருந்தனர். வீடுமன், துரோணன், கன்னன் ஆகிய இம்மூவரிடம் தொடுத்த போர்கள் வரலாறு படைத்தவை. மற்றும் அவர்களுக்குத் துணையாக சயத்ரதன், சல்லியன் மாயைகள் வல்ல சில அசுரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்; அவ்வாறே பாண்டவர் பக்கம் அருச்சுனனும் அவன் மகன் அபிமன் யுவும் செய்த போர்கள் கதைச்சிறப்பு கொண்டவை; போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.

தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகள் நடந்தன; இராம இராவணயுத்தம் பதினெட்டு மாதங்கள் நடந்தன; பாரதப்போர் பதினெட்டு நாட்களைக் கண்டது.

மகளை மணம் முடித்துத் தந்த துருபதன், அவன் மகன் திட்டத்துய்மன், புகலிடம் தந்த விராடன், அவன் மைந்தர்கள், கண்ணனின் தம்பி சாத்தகி, சோழ பாண்டியர்கள் பாண்டவர் பக்கம் நின்று போர் செய்தனர்.

கண்ணன் படை எடுக்காவிட்டாலும் போரை முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது ஆகும். அவனே பாண்டவர் வெற்றிக்குத் துணையாக நின்றனன். தக்க சமயத்தில் சூழ்ச்சியும் செயல் திறனும் காட் டிப் பகைவ ரைத் தோல்வியுறச்செய்தான். துவாரகையில் இருந்த யது குல வேந்தரும் யாதவர்களும் துரியனுக்குத் துணையாக நின்றனர்.

விதுரனும், பலராமனும் ஏற்கனவே கூறியபடி இப் போர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாமல் தீர்த்தயாத்திரை சென்று விட்டனர். அசுவத்தாமனின் படைத்தலைமை யைத் தொடக்கத்திலேயே துரியன் இழந்து விட்டான்; கன்னன் வீடுமனோடு முரண்பாடு கொண்டு ஒதுங்கி நின்றான். அவன் தலைமையில் தான் தலை காட்ட முடியாது என்று தலை மறைவாகி விட்டான். இவ் விரண்டு விலக்குகளும் துரியனுக்கு எதிர்ப்பாடுகளாக அமைந்தன. சல்லியன் கன்னனுக்கு எதிராகத் திரும்பிப் படுகளத்தில் அவனைத் தவிக்க விட்டான். கன்னனின் வர பலமும் உரபலமும் ஈகை என்ற பெயரால் அவ் வப்பொழுது குறைந்தன. மற்றும் அவன் பெற்ற சாபங்களும் அவன் தோல்விக்குத் துணை ஆயின.

அசுரர்கள் துரியனுக்குத் துணை நின்றனர். அவர் ளுள் குறிப்பிடத் தக்கலர்கள் பகதத்தன், அலம்புசன். பூரிசிரசு.

வீமனும் துரியனும் தொடர்ந்து போர் செய்தனர்; வீமன் விசயனுக்குத் துணையாக அமர்க்களத்தை ரணகள மாக மாற்றினான். அவன் மோதாத வீரர்கள் இல்லை என்று கூறலாம். துரியனின் தம்பியரைத் தொடர்ந்து கொன்று அழித்தான்; அவன் மகன் கடோற்சகன் மாயை கள் வல்லவன்; அவன் அவ்வப் பொழுது இடையிட்டுப் பகைவர் படைகளை நடுங்கச் செய்தான்.

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்

விராடன் மைந்தர்கள் மறைவு

முதல் நாட் போரில் வீடுமன் துரியன் படைகளுக்குத் தலைமை ஏற்றான். இரு சாராரும் நாளைக்கு ஒரு வியூகம் அமைத்துப் படைகளை அணி வகுத்தனர். போர் தொடர்கிறது. இவைபோரின் மைய நிகழ்ச்சிகளாகும்.

இம்முதல் நாட் போரில் நடந்த கள நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது உத்தரன் சல்லியனோடு தொடுத்த போராகும். விராட அரசனின் இளைய மகன் உத்தரன் என்பவன் ஆவான். வயதில் இளையவனாயினும் அவன் ஆற்றிய போர் கடுமையானது ஆகும் சல்லியனின் தேரும் குதிரையும் தனிவேறு ஆயின. தரையில் தள்ளப்பட்ட சல்லியன் தன் கைவேலினை அவன் மார்பில் பாய்ச்சி அவன் உயிரைப் போக்கினான். இளங்குருத்து நாசம் ஆகியது. தொடக்கம் துரியனுக்கு உற்சாகத்தைத் தந்தது.

உத்தரனின் தமையன் சுவேதன் விட்ட அத்திரங்கள் பகைவர்களை நடுங்கச் செய்தன; எதிரிகளின் வில்களின் நாண்கள் நாணமுற்றுச் சாய்ந்துவிட்டன. கயிறுகள் அறுப்புண்டு வளைந்த வில்களை நிமிரச் செய்தன. அவன் வில்லாற்றலுக்கு வீடுமனும் முன் நிற்க இயலவில்லை. சோர்வு வீடுமனைச் சோதனை செய்தது. அதனால் சூழ்ச்சி அவன் மூளையில் உதயமாகியது.

வில்லினால் அவனை வெல்ல முடியாது என்பதை அறிந்து சொல்லினால் ஒரு சூழ்ச்சி செய்தான்.

அவன் இளைஞன், மானத்தைத் தூண்டி விட்டால் நிதானம் இழப்பது உண்டு என்று அறிந்து செயல்பட்டான்.

“விற்போர் கற்ற நீ வாட்போர் கல்லாதது ஏன்” என்று அவன் தருக்கைக் கிள்ளி விட்டான். செருக்குற்று அவன் வில்லை வைத்து விட்டு வாளை எடுத்துக்கொண்டான். தான் வாளிலும் வல்லன் என்று தன் திறனைக் காட்டத் தொடங்கினான்.

அவன் வில் சிவன் தந்த பழைய வில்; அழிக்க முடியாதது. அதைத் துறந்து வாளோடு சென்றவன் ஆளோடு மறைந்தான். எட்டி இருந்தே அம்பு கொண்டு அவனை அலற வைத்தான். வீடுமன் நெறிதவறிய இடம் இதுவாக அமைந்தது. போர் என்றால் கத்தியைத் தீட்டுவதோடு புத்தியைத் தீட்ட வேண்டி இருந்தது. வீடுமன் வயதில் மூத்தவன்; சிந்தனை மிக்கவன்; வந்தவனை வலிவிழக்கச் செய்வது எப்படி என்று அறிந்தவன். அதனால் விராட னின் மூத்தமகன் தம்பி சென்ற வழி தன் வழி எனத் தன் பயணத்தைத் தொடரும்படி செய்தான்.

ஒரே நாளில் விராடன் தன் இரண்டு மைந்தர்களை இழந்தான்; புத்திர சோகம் அவன் போர் வேகத்தைத் தடை செய்தது. கண்களில் நீர் மிதக்கக் கதறி அழுதான். கண்ணனும் பாண்டவரும் பரிவு காட்டி அவன் மைந்தர் கள் பிரிவுக்காக வருத்தம் தெரிவித்தனர். முதல் நாட் போரில் பெற்ற இழப்பு அவர்கள் எழுச்சியைத் தூண்டியது. பழிவாங்கும் உணர்வு அவர்களைப் பதற வைத்தது. அடுத்த நாட் போரில் அதன் ஆவேசம் அவர்கள் செயலில் காணப்பட்டது.

விதியை மீறல்

கண்ணன் பார்த்திபனுக்குத் தேர் ஒட்டியாகத்தான் களத்தில் இறங்கினான். மூன்றாம் நாட்போரில் களத்தில் ஒரு திருப்பு நிலை ஏற்பட்டது; வீடுமன் தடுப்பார் அற்று வேகமாக முன்னேறிக் கண்ணனையும் விசயனையும் அபி மன்யுவையும் வளைத்துக் கொண்டான். மற்றவர்கள் அவரவர் நிலைக்களத்தில் எதிரிகளோடு போர் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர்.

மூவர் களத்தில் இருக்க முதியவன் ஒருவன் முன்னேறு வது என்றால் எப்படித் தாங்கிக் கொள்வது? வீரம் பேசும் விசயன் சோர்வு அடைந்தது ஏன்? உறவினன் என்பதால் அவன் துறவினன் ஆகிவிட்டானா? வில்லெடுத்து விளை யாட வேண்டிய அவன் முதியவனின் வீரம் கண்டு இளைத் தது ஏன்? வீடுமன் கண்ணன் யார் என்றும் பாராது அம்பு வீசி அவனைக் கிளரச் செய்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விசயனைச் சாடட்டும்; அபிமன் யுவை அழிக்கட்டும். அவர்கள் வில்எடுத்த வீரர்கள்; அதற் காகவே துணிந்து நின்றவர்கள்.

தேர் ஒட்ட வந்தவனைத் தொட்டு விளையாடுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி’ என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது. படை எடேன்” என்று சொல்லிய சொல் அவனை எளியனாகக் கருதிவிட்டது என்று எண்ணினான்.

சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சொரணை இழக்க அவன் விரும்பவில்லை; சக்கரம் ஏந்திய கையனாய்த் தேர் விட்டுக் கீழே இறங்கினான். அச்சுதன் அக்கரம் சொல்லி வீடுமன் கை தொழுது தெய்வத்தைத்தான் சீண்டி விட்ட சிறுமையை உணர்ந்தான். மானிடர் செய்யும் இப்போரில் மாலே! நீ இறங்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டான்.

“உன் சக்கரத்தால் என் தலைச் சிரம் அற்று விழுமானால் உண்மையில் நான் பேறு பெற்றவன் ஆவேன்; பிறப்பு ஒழித்துத் துறக்கம் அளிக்க வந்த தூயவனே! நான் உயர் பேறு பெறுவதற்கு உன் கரம் கறைபடுவதை நான் விரும்பவில்லை. கண்ணா, நீ பொறுத்தருள்க” என்று கேட்டுக்கொண்டான்.

பேடி கையில் இருந்த கைவாள் போல அழகு செய்து கொண்டிருந்தது காண்டீபம். அதைத்தாங்கி வந்த விசயன் கண்ணன் கமலத்திருவடிகளில் விழுந்து வணங்கினான்; வெற்றிபெறுவதில் அடையும்மகிழ்ச்சிபெரிது அல்ல; விரதம் தவறக் காரணமாக இருந்த பழிமொழியைத்தாங்கும் சக்தி எனக்கு இல்லை. படை தொடேன் என்று துரியனுக்குச் சொல்லியதைத் துறந்து களத்தில் இறங்கியது பழிக்கு இடம் தரும்; அருச்சுனன் கடமை தவறி விட்டான் என்ற இழி சொல் என்னைச் சாரும். உயிர் எனக்கு வெல்லம் அல்ல; செயிர்த்து எழுந்து பகைவர்களைப் புறம் காட்டச் செய்கிறேன்” என்று உறுதி தந்து கண்ணனை அமைதி பெறச் செய்தான். மூன்றாம் நாட்போரில் இது ஒரு எதிர் பாராத நிகழ்ச்சியாக அமைந்தது. கண்ணன் பாண்டவர்க்காக எதையும் செய்யக் காத்திருந்தான் என்பதற்கு இது ஒரு சான்றாக நின்றது. வார்த்தைகளை விடச் செயல் திறன்தான் மேற் கொள்ளத் தக்கது என்ற புதிய சிந்தனை யைத் தோற்றுவித்தான். வீரம் பேசித் தோல்வியைச் சந்திப்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை; நன்மை நாடிச் சில தவறுகளும் செய்யலாம் என்பது அவன் போக்காக இருந்தது.

மற்றும் சக்கரத்தைக் கண்ணன் கைக்கரத்தில் எடுத்தானே தவிர மெய்ச்சிரத்தில் ஏவினான் அல்லன். இது அவன் சூத்திரதாரி என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கியது. துவண்டு கிடந்த விசயனைத் தூண்டவும் எல்லை மீறிய எதிரியை ஒடுக்கவும் மேற்கொண்ட செயல்களாகவும் கொள்ளலாம். தான் யார் என்பது தெரிந்தும் சிண்டிப் பார்க்க நினைத்த வீடுமனை நெறிப்படுத்தவும் போர்க்களத்தைக் குறட்டைவிட்டு உறங்கும் மடமாக நினைத்த மடமையைப் போக்கவும் கண்ணன் செயல்பட்டான் என்பது பொருந்தும்.

அசுரர் இருவர் மரணம்

மானிடர் வரபலங்களும் மாயைகளும் இன்றிச் செய்யும் போரில் அசுரர்களும் கலந்து கொண்டது விரும்பத் தகாத ஒன்று ஆகும். அவர்கள் மாயைகளில் வல்லவர்கள். அவர்கள் சூழ்ச்சிகள் மானிடரால் வெல்ல இயல்வது ஒன்று அன்று. அத்தகையை அசுரர்களில் ஒருவன் பகதத்தன் என்பவன் ஆவான். இவன் நரகாசுரன் மகன் ஆவான். இவன் தேவாசுரயுத்தத்தில் தேவர்களுக்குத் துணையாக நின்று தம் இனத்தவரையே மிதிபடச் செய்தவன். இவன் மண்ணரசனாக விளங்கினான். இவன் கவுரவர்களுக்கு உதவுவதாக வாக்கு அளித்து இருந்தான். நான் காம் நாட்போரில் இவன் களம் புகுந்து பாண்டவர் படைகளை எதிர்த்தான். இவனிடம் சுப்ரதீபம் என்ற யானை ஒன்று இருந்தது. வீமனும் விசயனும் அபிமன்யுவும் வேறு ஓர் பக்கம் போர் செய்து கொண்டிருந்தனர். அதனால் அந்த யானையை எதிர்ப்பவர் யாரும் இல்லை என்ற நிலைமை உருவாகி இருந்தது.

துரியனும் வீமனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப்போர் செய்து கொண்டிருந்தபோது இவன் இடையில் புகுந்தான். சுப்ரதீபம் என்ற யானையைக் கண்டு பாண்டவர் தம் யானைகள் பின் வாங்கின. மாயைகள் வல்ல அவனை எதிர்க்கக் கடோற்சகன் ஒருவனால்தான் முடிந்தது. இவனும் அரக்கி இடிம்பியின் மகன் ஆதலால் மாயைகள் பல கற்று இருந்தான். அவனை எதிர்க்க யானைப் படை ஒன்றை மாயையால் தோற்று வித்தான். அவை உண்மைப் படை என்று மோதி தத்தனின் யானை முட்டிச் சோர்வு அடைந்தது, பேய்த்தேரை உண்மைத்தேர் எனக் கண்டு அதனைத் தொடரும் கதை ஆயிற்று. கானல் நீரைப் பருகும் நீர் என்று கருதும் பயணிகளின் கதி ஆயிற்று. பகதத்தன் சோர்வு அடைந்தான்; இனி நின்று போரிடுதல் வெற்றி தராது என்று பின்வாங்கிக் கொண்டு உயிர் தப்பினான்.

பகதத்தன் பதினோராம் நாட்போரில் மீண்டும் தலை காட்டினான். சகாதேவனும் சகுனியும், துரியோதனனும் வீமனும், சல்லியனும் தருமனும், கன்னனும் விராடனும் போர் செய்து கொண்டிருந்தனர். அவ்வாறே துருபதனும் பகதத்தனும் கடும் போர் செய்தனர். அவர்கள் ஒரு நாள் முழுவதும் மற்போரும், விற்போரும், யானைப் போரும் செய்து வெற்றி தோல்வி இன்றி முடிவு காணாமல் அகன்றனர். அடுத்த நாட்போரில் விசயனின் அம்பால் அவன் மரணம் அடைந்தான்.

இராவானும் அம்புசனும்

வேத்திரகீயம் என்னும் நகரில் வீமனால் கொல்லப் பட்டு அழிந்த பகாசுரனது தம்பியான அம்புசன் என்பவன் எட்டாம்நாள் போரில் வீமன் மேல் சினந்து போர் செய்யக் களம் வந்தான். அவனோடு வீமன் மும்முரமாகப் போர் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது விசயனின் மகனாகிய இராவான் அவனுக்குத் துணையாகக் களத்தில் புகுந்து அம்புசனுக்குத் துணையாக வந்தவர்களை எல்லாம் துரத்தி அடித்தான். இவன் மாயப்போர் செய்யும் திறனைக்கண்டு அம்புசன் கருட வடிவம் கொண்டு அரவின் வடிவத்தில் இருந்த இராவானைச் சூழ்ந்து கொண்டான்; கருடன் முன் அரவு நிற்க முடியவில்லை. நாககன்னி உலூபியின் மகனாகிய இராவான் மரணத் தைச் சந்தித்தான். இவனே களப்பலிக்குத் தொடக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.

அடுத்த நாட் போரில் வீமனும் அம்புசனும் வாட் போரும் மற்போரும் செய்தனர். வீமன் அவன் வலத் தோளை வாள் கொண்டு வெட்டினான்; அதனை அடுத்து இருவரும் மற்போர் செய்தனர். விற்போரிலும் வீமன் விஞ்சியவனாக இருந்தான். இறுதியில் வேல் ஒன்றை ஏவி அவன் மார்பில் பாய்ச்சினான். இவன் மகத்தான வெற்றியை அடைந்தான். விமனின் போர்த் திறன் இதில் முழுமையும் வெளிப்பட்டது.

விடுமன் சாய்தல்

வீடுமனே முதல் நாட் போரில் தலைமை ஏற்றான். வயதில் முதிய அவன் விதுரனைப் போலவோ பல ராம னைப் போலவே ஒதுங்கி இருக்கலாம்; உறவு என்று எடுத்துக் கொண்டால் துரியனும் அவன் தம்பியரும் எவ்வளவு நெருக்கமானவர்களோ அவ்வளவு நெருக்க மான வர்கள் பாண்டவர்கள். பிதாமகன் என்று இருவரும் அவனை மதித்தனர்.

சகுனியைப் போலச் சூழ்ச்சியோ கன்னனைப்போல வீண் ஆரவாரமோ கொண்டவன் அல்லன். அவன் குலத்து மானம் மிக்கு உடையவன். தன் வாழ்க்கையை மற்றவர் களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவன். திருதராட்டிரன் கண்ணில்லாதவன். அதனால் அவன்மீது பாசமும் பரிவும் காட்டுவது இயல்பு. மற்றும் துரியன் மாமன்னன்; அவன் இட்டதுதான் சட்டம். அவனைப் பகைத்துக் கொண்டால் தான் அங்கு வாழ முடியாது. உறவு என்பதை விட அவன் ஒரு வீரன்; வீரன் பொதுநிலை வகிக்கக் கூடாது என்ற கொள்கை உடையவன்.

கண்ணன் தெய்வப் பிறவி எனினும் அதற்காகப் போ ராட்டத்திலிருந்து விலகவில்லை. தருமம் பாண்டவர் பக்கம் இருப்பதால் தெய்வமும் அவர்கள் பக்கம் நின்று பணி செய்தது. தருமம் வெல்ல வேண்டும் என்ற கொள்கை கண்ணனின் பங்கேற்பில் அமைந்து கிடந்தது.

வீடுமன் அதருமத்துக்கு ஏன் உதவ வேண்டும்? துரியன் செய்வது தவறு என்று அறிந்தும் அவன் பக்கம் நின்று இறுதிவரை ஏன் போராடவேண்டும்? அதுவும் அவன் பரந்த மனப்பான்மையையே காட்டுகிறது. பாண்டவருக்குக் கண்ணன் உதவியாக இருக்கிறான்; அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய மாபெரும் துணை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

துரியனுக்குத் தக்க துணை இல்லை; தவறு செய்து அழிவுப்பாதையில் சென்று கொண்டே இருக்கிறான். குருடனுக்கு வழி காட்டுவது மானுட தருமம்; அதனால் தான் அறியாமையும் தீமையும் நிறைந்த துரியன் பக்கம் நின்று வீடுமன் செயலாற்றுகிறான்.

அரசியல் கட்சி என்று வந்து விட்டால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை. மன்னன் என்று ஒருவன் அமைந்து விட்ட பிறகு அவனுக்கு அறிவு சொல்லலாம்; ஆனால் எதிர்க்கக்கூடாது என்ற கொள்கை உடையவன். அறத்துக்கு மதிப்புத் தந்திருந்தால் அவன் ஒரு வீடணன் ஆகி விட்டு இருப்பான். கடமைக்கு மதிப்புத் தந்ததால் அவன் ஒரு கும்பகருணனாகச் செயல்பட்டான்.

வீடுமன் துரியனே வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி கொள்ளவில்லை; தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையும் கடமையையும் செம்மையாக ஆற்றுவதே தன் செயற்பாடு என்று கொண்டான். அபிமன்யு, அருச்சுனன், வீமன் இவர்கள் தன் மீது அம்பு விடும்போதும் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் வில்லாற்றலையும் போர்த்திறமையையும் கண்டு வியந்து வந்தான்.

சாவுக்கு அவன் அஞ்சியது இல்லை. காலனும் அவனைக் கேட்டுக்கொண்டு தான் அவன் கணக்கை முடிக்க முடியும். இந்தக்கிழவனை விலகச் சொன்னால் விலகுவதாக இல்லை. என்ன செய்வது! பத்து நாட்கள் அவனுட ன் வீமனும், அபிமன்யுவும் அருச்சுனனும் தொடர்ந்து போர் செய்தார்கள்.

பத்தாம் நாள் அவனுக்கு விடுதலை தரக் கண்ணன் முடிவு செய்துவிட்டான். சிகண்டி களத்தில் புகுந்து அவனை முடிக்கக் காத்து இருந்தாள். அருச்சுனன் விட்ட அம்புகள் இந்த முதியவனைத் தளர்ச்சியுறச் செய்தன. எனினும் தக்க தருணத்தில் சல்லியன் வந்து அருச்சுனன் மீது அம்புகள் சொரிந்தான். அருச்சுனக்குத் துணையாகச் சிகண்டி போரில் ஈடுபட்டாள்; அவள் தனித்தேரில் இருந்து வீடுமனை எதிர்த்தாள். அப்பொழுது துச்சாதனன் இடையில் புகுந்து அவள் தேரையும் கை வில்லையும் முறித்து வீழ்த்தினான். சிகண்டி தேரும் இன்றிப்படையும் இன்றி உயிருக்கு அஞ்சி ஒதுங்கிக் காலில் நடந்து சென்றாள். வீடுமன் விட்ட அம்பு ஒன்று இரண்டு கண்ணன் மேனியில் பட்டு நீல நிறம் சிவப்பு ஏறிற்று.

இதற்குமேல் வீடுமனை விட்டுவைக்க அருச்சுனன் விரும்பவில்லை; சிகண்டியை அழைத்து அவளை அருச்சுனன் தன்தேரின் முன்பகுதியில் உட்காரவைத்துக் கொண்டான். “அஞ்சாதே அம்புகளை வீடுமன் மீது செலுத்து” என்று கூறி உற்சாகப்படுத்தினான். இருவர் அம்புகளும் ஒரு சேரச் சேர்ந்து வீடுமன் மார்பில் தைத்தன. அவற்றை எடுத்துப்பார்த்தான். சிகண்டியின் அம்பு இது, அர்ச்சுன னின் அம்பு இது என்று வேறு பிரித்தான். சிகண்டியின் அம்பு தன்னை ஒன்றும் செய்யாது என்று கூறி அதைப் பொருட்படுத்தவில்லை, அருச்சுனன் அம்பை மட்டும் எடுத்துவைத்து இனி மரணம் உறுதி என்று றுடிவு செய்து கொண்டான்.

தான் எதிர்த்து அம்பு விட்டால் அம்பையின் மாற்று வடிவமான சிகண்டி மீது படும் என்பதால் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தாமல் அருச்சுனன் அம்புகளுக்கு இலக்கு ஆகி நின்றான்.

“எனது இறுதி நாள் அணுகி விட்டது. உங்களால் எதுவும் செய்ய இயலாது. உங்கள் தமையனை அடைந்து அடுத்துப் போர் செய்வதற்கு ஆவன செய்யுங்கள்” என்று துரியனின் தம்பியரிடம் சொல்லி விட்டுத் தேரில் இருந்து சாய்ந்தான்.

நாரணன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு கண்ணனின் திருவடிவை நெஞ்சில் நிறுத்திக்கொண்டான். மார்பைப் பிளந்து முதுகு வழியே வெளிப்பட்ட அம்புகள் ஒரு சில பதிந்து கிடந்தன. அவ் அம்புகளைப் படுக்கையாகக் கொண்டு மல்லாக்காக விழுந்து கிடந்தான். மா வீரனான வீடுமன் சரப்படுக்கையில் சாய்ந்து கிடப்பதைக் கண்டு தேவர்கள் பொன் மயமான கற்பக மலர்களைச் சொரிந்தனர்.

தேகம் எங்கும் தங்கிய அம்புகளின் மீது உடலை வைத்து யோக சாதனையால் உயிரை ஒடாவண்ணம் நிலை நிறுத்தி உத்தராயணம் வரும்வரை உயிரோடு இருக்க முடிவு செய்தான். ஆடி முதல் மார்கழி வரை உள்ள மாதங்கள் தட்சிணாயனம், தைமுதல் ஆனி வரை உத்தராயனம். தட்சிணாயனத்தில் உயிர்விட்டால் உயர் கதி அடையார் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே தை மாதம் பிறக்கும்வரை உயிரைவிடாமல் காத்துஇருந்தான். இவன் தந்தையாகிய சந்தனு சாகும்போது இவனுக்கு இந்த வரத்தைத் தந்து சென்றான். காலனும் இவனைக் கேட்டுக் கொண்டுதான் கணக்கை முடிக்க வேண்டும். அத்தகைய நெஞ்சு உரமும் நீண்ட ஆயுளும் நிலைப்பதாக என்று கூறிச் சென்றான். வீடுமன் போர் முடியும்வரை சாகவே இல்லை; அந்நிகழ்ச்சிகளைக் கேட்டு அவற்றோடு ஒன்றிய நிலையில் தன் வாழ்வை முடித்துக் கொண்டான்.

துரியனைப்பார்த்துத் தனக்குப்பின் படைத்தலைமை கன்னனுக்குத் தந்து போர் தொடர்க என்று கூறினான்; வீடுமன் விழுந்து சாய்ந்த செய்தியைச் சஞ்சய முனிவன் திருதராட்டிரனுக்கு உரைத் தான். அதுகேட்டு அவன் “இதுவரை எனக்கு விழி போகவில்லை; இப்பொழுது தான் பார்வை இழந்தேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

8. துரோணனின் தலைமை

மறுநாள் போருக்கு யார் தலைமை வகிப்பது என்று துரியன் சிந்தித்துக் கொண்டிருந்தான். கன்னன் தான் படைத்தலைமை ஏற்பதாகக் கூறினான்; வீடுமன் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.

“நீ வெம் சமரில் படைத்தலைவன் ஆகி விட்டால் எனக்கு உற்ற துணையாக அரசர் நிலையில் இருப்பது யார்?” என்று கூறி விட்டு வேதம் கற்ற துரோணனைப் படைத் தலைவன் ஆக்கினான்.

மறுநாள் இரு திறத்துப் படைகளும் வழக்கம் போல் களத்தைச் சேர்ந்தன; தருமன் களத்தில் போரின் நிலையை விளக்கக் கண்ணனிடம் கேட்டான். கண்ணன் ‘இனி வெற்றி உறுதி’ என்று கூறினான். “கங்கை மைந்தன் சென்று விட்டனன். கதிரவன் மைந்தனாகிய கன்னன் வெற்றி அடையப் போவதில்லை. ‘தக்க சமயத்தில் உன் வில் வித்தை பயன்படாமல் போகக்கடவது” என்று கன்ன னுக்குப் பரசுராமன் சாபம் இட்டிருக்கிறான். போரில் தேர் பூமியில் அழுந்தக்கடவது” என்று ஒரு முனிவன் சாப மிட்டிருக்கிறான். கவசகுண்டலங்களை இந்திரனுக்குத் தானமாகத் தந்து விட்டான். நாகக் கணையை இரண் டாம் முறை ஏவுவதில்லை என்றும், அருச்சுனனைத் தவிர ஏனைய நால்வரைக் கொல்வதில்லை என்றும் குந்தி யிடம் உறுதி தந்திருக்கிறான். அதனால் அவன் போரில் மடிவது உறுதி” என்று கூறினான் கண்ணன். மேலும் அசுவத்தாமன் துரியனிடமிருந்து பிரிக்கப்பட்டான்; அதனால் அவன் படைத்தலைமை ஏற்கப் போவதில்லை. போரில் முழுவதும் ஈடுபடப் போவதில்லை. அதனால் பாண்டவர் தமக்கே வெற்றி உறுதி என்று நம்பிக்கை ஊட்டினான்.

வீடுமன் இல்லாத துரியோதனனின் சேனை சந்திரன் இல்லாத வானத்தையும், நறுமணம் இல்லாத மலரையும், நதி நீர் இல்லாத நாட்டையும், நரம்பு இல்லாத யாழை யும், தூய சிந்தனைகள் தோன்றாத மனத்தையும், வேத விதியோடு பொருந்தாத யாகத்தையும் போன்று வெறுமை உற்றது.

வழக்கம் போல் போர் தொடங்கியது. சகாதேவனும் சகுனியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி இன்றிப் போர் நிகழ்ந்தது. இவ்வாறே துரியனும் வீமனும், சல்லியனும் நகுலனும், கன்னனும் விராடனும், துருபதனும் பகதத்தனும், சிகண்டியும் கலிங்க நாட்டு அரசன் சோமதத்தனும் ஒருவரை ஒருவா தாக்கிக் கொண்டனர். வெற்றி தோல்வி இன்றிப் போர் நிகழ்ந்தது.

இப்போர்களில் பார்த்தனின் மகனாகிய அபிமன்யுவும் துரியன் மகனாகிய இலக்கண குமரனும் போர் நிகழ்த் தியது சிறப்பு நிகழ்ச்சியாகும். அபிமன்யு அவன் தேரையும் குதிரைகளையும் பாகனையும் அழித்துவிட்டு அவனை உயிரோடு பற்றிக் கொண்டு தன் தேரில் அமர வைத்து இழுத்துச் சென்றான்; அவன் சிறைக் கைதியாயினான். சிந்துபதியாகிய சயத்திரதன் என்பவன் துரியன் தங்கை துச்சளையின் கணவன். தன் மைத்துனன் சிறைப்படுவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனைப் பின்தொடர்ந்து அவனைத் தடுத்துப் போர் தொடுத்தான்

சயத்திரதன் அபிமனைத் தடுத்து நிறத்தினான். எனினும் எதிர்கக ஆற்றல் அற்றவனாய்த் தோள் வலி இழந்தான். அவனுக்குத் துணையாகக் கன்னனும் மற்றவர்களும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அபிமனின் அம்புக்கு ஆற்றாமல் அவர்களும் சிதறி ஓடினர். அவர் களுக்குத் துணையாக வந்த மத்திர நாட்டு அரசனாகிய சல்லியன் மீது கணைகளைச் செலுத்தி அவனைத் தேரினின்று இறங்கவும் செய்தான்; சல்லியன் கதை கொண்டு அபிமனைத் தாக்கக் கையோங்கினான். அப்பொழுது வீமன் இடையிட்டு அவனை நன்கு மொத்தினான். சல்லியன் கீழே விழுந்தான். நீ அவனைத் தாக்கினால் என் ஆண்மை என்ன ஆவது என்று தன் பெரிய தந்தையிடம் அபிமன்யு கடிந்து கொண்டான். அபிமன் வீமனோடு உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இலக்கணன் விரைவாகத் தேரில் இருந்து இறங்கி ஒடித் தனது தேரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் யாதவ குலத்தலைவனாகிய கிருதவர்மன் தரையில் விழுந்த சல்லியனைத் தனது பெரிய தேரில் ஏற்றிக் கொண்டு இலக்கணனையும் உடன் வரச்சொல்லி அவனைத் தப்புவித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அத்தமனம் வந்தது; வழக்கம் போல் போர் நின்றது. பாசறையில் துரியன் உறங்காது இலக்கணனை அபிமன் சிறைப்பிடித்த நிகழ்ச்சியைக் குறித்து உரையாடினான்.

துரோணரிடம் தன் மகன் இலக்கணனைச் சிறைப் பிடித்தவர்கட்குச் சரியான படிப்பினை புகட்டவேண்டும் எனப் புகன்றான். போர் நிகழ்ச்சிகளில் ஒரு திருப்பு நிலை அமைக்க வேண்டும் என்றான்.

தருமனைச் சிறைப்பிடித்துத் தன்னிடம் சேர்த்து விட்டால் தம்பியர்கள் சரண் அடைவார்கள் என்று கூறினான்."வலிமை மிக்க வாயுவின் மகன் பின்னே நிற்க இந்திரன் மகன் விசயன் வில்லோடு நிற்க இந்த இப்பிறவி யில் தருமனைப் பிடிக்க முடியும் என்பது என்னால் இயலாது” என்று துரோணன் தன் இயலாமையைத் தெரிவித்தான்.

“கண்ணன் தேர் செலுத்த விசயன் தருமனைக் காக்க அந்தநிலையில் உறுதியாக அவனைக் கைப்படுத்த இயலாது; கண்ணனையும் விசயனையும் சற்றுத் தருமனை விட்டு அகலச் செய்தால் அந்த இடைவேளையில் தருமனைக் கைப்படுத்த முயலலாம்” என்றான்.

அவர்கள் இருவரையும் யார் தனியே இழுத்துச் செல்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. திரிகர்த்த அரசன் முதலாக சம்சப்தகரைச் சார்ந்த சில மன்னர்கள் தாம் விசயனைப் போருக்கு அழைத்து அறை கூவி அவனைத் தம்மோடு போர் லெய்யுமாறு செய்து பிரித்து வைப்பதாகச் சூள் உரைத்தனர்.

துரியனுக்குப் புதிய போர்த் திட்டம் கிடைத்தது. அதனைச் செய்து முடிப்பதே அடுத்த கட்டப் போர் என்பது முடிவு ஆயிற்று

பன்னிரண்டாம் நாட் போர்

தருமன் முன்னாள் இரவில் துரியோதனின் பாசறை யில் அவர்கள் பேசிக் கொண்டதை ஒற்றரால் அறிந்து அதைக் கண்ணனுக்கும் விசயனுக்கும் சொல்லிப் போரில் புகத் தும்பைமாலை சூடிக் கொண்டான். பாண்டவர்களின் சேனைத் தலைவனான திட்டத்துய்மன் படைகளை வியூகமாக அமைத்தான். பின்புறத்தில் வீமனையும், அணி வகுப்பில் முக்கியமான இடங்களில் மணி முடி தரிதத மன்னர்களையும், இரு புறத்திலும் நகுலனையும் சகா தேவனையும், முன்புறம் அபிமன்யுவையும் அருச்சுனனையும் நிறுத்த நடு இடத்தில் தருமன் இருந்தான்.

கவுரவர் சார்பில் முன்னிரவு பேசியபடி திரிகர்த்த குலத்தலைவனும் சம்சப்தக சிர்லரும், துரோணன் முதலிய எனையவரும் கூடி வந்து கருட வியூகமாகப் படைகளை அணி வகுத்தனர்.

திரிகர்த்த குலத்தலைவனும், நாரண கோபாலர் என்னும் நர அதிபர்களும் முன் நின்ற விசயனைப் போருக்கு அறை கூவி அழைத்தனர். விசயனின் வீரத் தைத் தரக் குறைவாகப் பேசினால் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவனை இழித்துப் பேசிப் போருக்கு அழைத்து வீரம் பேசினர்.

ஆரவாரம் செய்து அழைக்கும் அவர் குரல் கேட்டு “நீர் சற்றுத் தருமனைக் காத்திடுங்கள்” என்று வீமனி– டமும் மற்றவர்களிடமும் சொல்லிவிட்டுத் தருமனிடம் சொல்லி அனுமதி பெற்று அவர்களை நோக்கிப் பார்த்தனாகிய விசயன் கண்ணனோடு களம் நோக்கிக் சென்றான்.

அதற்குப் பிறகு சயத்திரதன் முதலாகிய வேந்தர்கள் சூழ்ந்து வரவும், முரசங்கள் இடி போல முழங்கி ஒலி எழுப்பவும், யானை, குதிரைப்படைகள் சூழ்ந்து வரவும் துரோணன் தேர் ஏறிக் களத்தில் வந்து சேர்ந்தான். இருதிறத்துச் சேனைகளும் வெற்றி தோல்வி இன்றித் தாக்கிக் கொண்டனர். திட்டத்துய்மன் அம்புகளை மழை போல் பொழிந்தான். துரோணன் திட்டத்துய்மன் கை வில்லை அறுத்து எறிந்தான். துரோணனும் தருமனும் நெருங்கிப் போர் செய்தனர். தருமனோ துரோணனை மிகவும் கடுமையாகத் தாக்கினான். துரோணன் தணர்ந்து விட்டான்.

இதை அறிந்து துரியோதனன் களம் புகுந்தான். தோற்றுப் பின் வாங்கிய வீரர்களை ஊக்குவித்து முன் னேறுமாறு பணித்தான்; அபிமன்யு தனி ஒருவனாக நின்று அவர்கள் தலைகளைப் பந்தாடினான். களம் செம்மண் ஆகிச் சிவந்தது; துரோணன் தருமனின் வில்லுக் குத் தோற்றுக் களத்தினின்று நீங்கினான். அந்நிலையில் துரியனுக்குத் துணையாகப் பகத்தத்தன் களம் புகுந்தான். கண்ணனின் துணைகொண்டு விசயன் தான் போரிட்ட களத்தினின்று வந்து கண்ணன் தந்த அம்பால் அவன் உயிரைப் போக்கி அவன் ஏறி வந்த சுப்ரதீபம் என்ற யானையையும் ஒழித்தான்.

அதனைத் தொடர்ந்து நடந்த போரில் தருமனுக்குச் சகுனி தோற்றுப் பின் வாங்கினான்; சூது போரில் வென்ற– வன் மோது போரில் வெல்ல முடியாமல் போய் விட்டது. அதனைத் தொடர்ந்து வீமனோடு துரியன் தம்பியர்மோதி ஒரு சிலர் படுகாயம் அடைந்தனர். சகுனியின் பிள்ளைகள் சிலர் மாண்டனர்.

பாசறை சென்று துரியன் துரோணனை மிகவுப் கடிந்துகொண்டான். அவனைத் தொடர்ந்து கன்னனும் சாடினான்.

வேதம் ஒதும் அந்தணன் என்பதை அவன் செயலில் காட்டி விட்டான். தருமனைக் கைப்பிடித்துத் தருவதாகக் கூறிய சொல்லைக் காற்றில் பறக்க விட்டான்” என்று கன்னன் இகழ்ந்து கூறினான்.

துரோணன் மானம் மிக்கவனாய்க் கடுஞ் சொற்கள் கூறினான்.

“கன்னன் மட்டுமல்ல, தருமன் முன் நிற்கக்கூடியவீரர் யார் இருக்கிறார்கள் சொல்லமுடியுமா? இதுவரை வன் மைக்கு வீமன்; வின்மைக்கு விசயன் என்று உலகம் பாராட்டி வந்தது. தருமனுக்கு நிகர் யாரும் இல்லை என்பது நேற்று நடந்த போரில் கண்டு கொண்டேன். அவனை நேருக்கு நேர் நின்று பொருது வெல்லும் வீரர் இருந்தால் அவனை மாவீரன் என்று சொல்லிப் பாராட்டு வேன்; அத்தகைய வீரன் இருந்தால் அடுத்த நாள் நடக்க இருக்கும் போரில் முன் வரலாம்” என்று சொல்லி விடை பெற்றான், அனனவரும் அன்று உறக்கத்தில் அமைதி தேடினர்.

அபிமன்யுவின் அழிவு

பதின்மூன்றாம் காட்போர்

கன்னன் கழறிய கடுமொழியால் சுடுஞ்சினம்கொண்டவனாய் முன் நாட்போரை விட முனைப்பாகப் போர் செய்யத் தம் படைகளைத் துரோணன் கடாவினான். இலக்கண குமரனும், துரியனின் தம்பியரும், கலிங்கனும், சிந்து நாட்டு அரசன் சயத்ரதனும் ஒன்று கூடி முன்னேறினர். சக்கர வியூகம் அமைத்துச் சதுரங்க சேனைகளைச் செயல்படுத்தினர்.

துருபதன் மகனாகிய திட்டத்துய்மன் பாண்டவர் படையை மகர வியூகமாக அமைத்தான். துரியனின் திட்டப்படி திரிகர்த்தனும், சம்சப்தகர் மன்னர் சிலரும் விசயனைப் பழையபடி போருக்கு அழைக்க அதைப் புறக் கணிக்க முடியவில்லை. தக்க படை வீரர்களோடு அவர்கள் இருந்த தென்திசை நோக்கிப் படையைச் செலுத்தினான். விசயன் அவர்களோடு கடும்போர் செய்து குருதி யால் மண்ணைச் சிவப்பாக்கினான்.

விசயன் திசை திருப்பப்பட்டுத் தருமனை விட்டு விலக் கப்பட்டான். அதைப் பயன்படுத்திக் கொண்டு துரோணன் தருமனைச் சிறைப்பிடிக்கத் திட்டத்துய்மனோடு போர் செய்தான்; அதில் துரோணனே வெற்றி பெற்றான். பின்னிட்ட திட்டத்துய்மனைத் தருமன் அணைத்துக் கொண்டு “நீயே துரோணனுடன் போர் செய்ய முடியாமல் பின்னடைந்தாய் என்றால் யார்தான் அவரோடு போர் செய்யப் போகிறார்கள்?” என்று கூறிச் செயல் இழந்தான்.

அங்கு ஒரு பக்கம் நின்று கொண்டிருந்த விசயனின் மகன் அபிமன்யுவை அழைப்பித்து “நீ தான் இச்சக்கர வியூகத்தை முறியடிக்க வேண்டும்” என்று கூறினான்.

மூத்த தந்தை யாத்த ஏவலைத் தாங்கித் தேரின் மேல் கதிரவனைப் போல் ஏறினான். துருபதன் மகனாகிய திட்டத்துய்மனும் மன்னர்கள் பலரும் இருபுறமும் துணையாக வரச் சக்கர வியூகமாக நின்ற எதிரிகளை அதன் ஆரைகளாகச் சிதைத்தான் தன் மாமன் ஆகிய அச்சு தன் பெயரைச் சொல்லி ஆயிரக்கணக்கான அம்புகளை அபிமன்யு ஏவினான். மழையைத் தடுக்க மலையைக் குடை யாகப் பிடித்த மாயவன் என அவ்வம்புகளைத் துரோ ணன் தடுத்து மடக்கினான். எனினும் அவன் வலி அழிந்தது; வில்லாசிரியன் என்ற புகழ் அழிந்தது; வில் அழிந்தது; தேர் அழிந்தது. முடிவில் அவன் தோல்வியையும் அடைந்தான்.

உலகம் மதிக்கும் வீரனாகிய கன்னன் களத்தில் புகுந்தான். அவனும் அபிமன்யுவின் தாக்குதலுக்குத் தளர்ச்சி அடைந்து தன் தேரில் ஏறி வந்தவழி பார்த்துக் கொண்டு சென்றான். சீறும் சிங்கத்திடம் தான் மாறி நின்றால் வேறுபட வேண்டும் என்பதை உணர்ந்தான். கிருபனும் கிருதவர்மனும் இரட்டையராக நின்று அம்புகளைச் சொரிந்தனர். அபிமன்யு தன் ஒரே அம்பால் அவர்கள் ஏந்திய இரண்டு வில்களையும் நான்காக ஆக்கி அனுப்பினான், சகுனியும் அவன் மகனும் சகுனம் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று வேதனைப் பட்டார்கள். மகனைக் களத்தில் பறிகொடுத்து விட்டுச் சகுனி பரிதாபமாகச் சென்றான்.

வீகர்ணனும் துன்முகன் முதலிய தம்பியரும் மான் வேட்டை என அபிமன்யுவை நெருக்கினர். அபிமன்யு அவர்களை நோக்கி “எனக்கு நிகர் நீங்கள் ஆக மாட்டீர்; அருமையான உயிர் அதனை என்னால் இழக்கவேண்டாம்; உயிர் தப்பி ஓடி விடுங்கள்” என்று சொன்ன அளவில் அவர்கள் அந்தத் திசை பாராமல் திரும்பி ஒடித் தப்பினர்.

விசயனின் மகன் தனித்துச் சென்று பகைவர் புறமுதுகிடப் போரில் இறங்குவதைக் கண்டு வீமன் துடிதுடித்துப் போனான். பால் மணம் மாறாத பாலகனைப் படுகளத்துக்கு அனுப்பி வைத்துப் பாராமுகமாக இருக்க விரும்ப வில்லை; அவனுக்குத் துணையாகச் சென்று பகைவரைப் பதம் பார்க்கத் தருமனிடம் இதமாக அனுமதி கேட்டான். அவனால் மறுக்க முடியவில்லை. அபிமன்வியூகத்தை முறிக் கக் கற்றவன். வழி அறிந்து திரும்பக் கற்றிலன். ஆதலின் வீமன் செல்ல வேண்டியது அவசியம் எனப்பட்டது.

மண்டலாதிபர்களையும் மாமன்னர்களையும் துணை யாகக் கொண்டு பகைவரை எதிர்க்கச் சென்றான். சக்கர வியூகம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல் ஆகியது. வானத்தில் வட்டமிடும் கருடன் முன் அரவுகளின் கூட்டம் போல அவர்கள் ஒட்டம் பிடித்தனர். கலிங்கர், சோனகர், மகதர், கன்னடர், கங்கர், கொங்கணர், கவுசலா, தெலுங்கர், ஆரியர், குலிங்கர், பப்பரர், சீனர், சாவகர், சிங்களர், குலிங்கர், மாளவர் முதலிய சிற்றரசர் பலரும் வெற்று வேட்டு ஆயினர். வீமன் முன்னும் அபிமன் முன்னும் துரியன் படைகள் நிற்க முடியாமல் வெட்கம் அடைந்து வேதனையோடு ஒடி ஒளிந்தன

துரியன் வாழ்க்கையையே வெறுத்து விட்டான்; சயத் ரதனைப் பார்த்து இகழ்ச்சிக் குறிப்பாக அவன் போராற் றலை இகழ்ந்து கூறினான். “மன்மதனைப் போன்ற தோள்கள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? வீட்டு மாப்பிள்ளையாக இருக்கலாம். வீர மாமகனாக இருக்க முடியாது; படை இயக்குவது எப்படி என்று அறிந்து இருக்க வேண்டும். கத்தியைத் தீட்டினால் மட்டும் போதாது; புத்தியைத் தீட்ட வேண்டும். அப்பொழுது தான் எதிரியை அழிக்கும் சக்தியைப் பெறமுடியும்” என்றான்.

மைத்துனன் பேசுவது நகைச்சுவையா என்பது தெரியாமல் திகைத்தான். “வீடுமனும் அபிமனும் சேர்ந்து விட்டார்கள். இரண்டு கை தட்டினால் ஓசை கிளம்பும்; அவர்களைப் பிரித்து வைக்க வேண்டும். அபிமன்யுவுக்கு வீமன் துணையாக வரக் கூடாது; உபாயம் சிந்தித்துப் பார்” என்றான்.

“வயதில் இளைஞராக இருந்தால் வாலிப மங்கையை அனுப்பி வைத்தால் எச்சில் இலைக்குப் போராடும் நாய்களாக மாற்றலாம். தந்தையும் மகனுமாக இருக்கிறார்களே எப்படிப் பிரிக்க முடியும்” என்று கேட்டான்.

சயத்ரதன் இதற்குமுன் சிவனிடம் சென்று தவம் செய்து பாண்டவரை வெல்ல வரம் தர வேண்டும் என்று வேண்டியிருக்கிறான். “கண்ணன் இருக்கும்வரை அவர்களை வெல்லமுடியாது” என்றும், “வேண்டுமானால் விசயன் ஒழிந்து ஏனைய நால்வரை ஒருநாள் பிரித்து வைக்க இயலும்” என்றும் கூறித் தலைமாலையைத் தந்து அருளினார். கதாயுத ஒன்றும் தந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அருளினார். இச்செய்தி துரியனுக்குத் தெரியும். அதைச் சொல்லிக் கொன்றை மாலை கொண்டு வீமனையும் அபிமன்யுவையும் ஒரு நாள் பிரித்து வைத்தால் போதும் என்று வழிகாட்டித் தந்தான்.

சயத்ரதனும் அதற்கு இசைந்து களத்தில் நுழைந்தான்.

வீமன் கணையால் பகைவர் சிதைந்தனர். அவன் அபிமன்யு இருக்குமிடம் வரும்போது சிவன் அணியும் கொன்றை மாலையைச் சயத்ரதன் இட்டு வைத்தான் அபிமன்யுவைச் சுற்றிலும் வட்டமிட்டது போலத் திட்டமிட்டு இக்கொன்றை மாலையைப் பரப்பி வைத்தான்.

“இன்று அமரில் யார் உயிர் விடுவதாயினும் ஈசன் அணியும் கொன்றை மாலையைக் கடவேன்” என்று உறுதியோடு நின்றான் விமன்.

“சிந்துபதியாகிய சயத்ரதன் தேன் மாலையை இட்டுச் சிறுவன் உயிரை மாய்ப்பதா! வீரம் பழுதாக்கி விட்டானே! இந்தக் கீழ்மைக்கு எல்லாம் காரணம் துரியனாகத்தான் இருக்க வேண்டும்” என வீமன் மனம் நொந்து பேசினான்.

“அபிமன் ஆற்றல் உடையவன்; கூற்றுவனும் அஞ்சும் பேராண்மை உடையவன். அவனை இவர்களால் வெல்ல முடியாது” என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

அபிமன்யு படைக்கடலின் மத்தியில் வடவைக் கனல் போல் நின்றான்; பிறர் அஞ்சி அணுகாமல் விலகினர். யாளி என நின்ற மீளியாகிய அவனை வாளிகள் பல போட்டு வருத்தினர்; கூளிகள் நடம் செய்தன.

அஞ்சி ஒடிய கன்னன் மீண்டும் துணிந்து அபிமன்யுவை வந்து எதிர்த்தான். அங்கர்பதியாகிய கன்னனின் தேரில் இருந்த குதிரைகள் நான்கும் செத்து ஒழிந்தன. அவன் வில்லையும் கொடியையும் அழித்து அங்கு நிற்க ஒட்டாமல் அடித்து ஒழித்தான். இரவியின்மகனான கன்னன் ஏகுதலும் அரவக் கொடியவரின் தம்பியர்கள் வந்து சூழ்ந்தனர். அவர்களும் முகவரி இல்லாமல் முகம் மறைந்து ஒடி ஒளித்தனர். இவ்வாறே அசுவத்தாமனும் நிற்க முடியாமல் அவதியுற்றான். துரோணனும் தோல்வியைச் சந்தித்தான்.

துரியனின் தம்பியான துன்முகனும் சல்லியனும் அவன் மகன் உருமித்திரனும் சூழ்ந்தனர். துன்முகன் தன் முடியை இழந்தான்; சல்லியன் மைந்தன் வானுலகு அடைந்தான்; தந்தை சல்லியன் புறமுதுகிட்டான். மாவீரர் பலர் உடைந்து ஓடினர்.

வியூகத்தின் நடுவில் அபிமன்யு தனித்து நின்றான். துரியனின் மகன் இலக்கணன் இயமனை எதிர்க்கக் களத்தில் இறங்கினான். இருவரும் சொற்போரும் விற்போரும் இயற்றி இறுதியில் இலக்கணன் துறக்கம் புக்கான்.

துரியன் கண்ணிர் விட்டுக் கலங்கி அழுதான். அபிமன்யுவைப் பழிக்குப் பழியாக அழிக்காவிட்டால் தன் வாழ்வை முடித்துக் கொல்வதாக முடிவுரை கூறினான். துரோணனும் அசுவத்தாமனும் தத்தம் வீரர்களோடு அபிமன்யுவைப் புலிகள் சூழ்வது போல வந்து சுற்றிக் கொண்டனர். துரியன் கன்னனைப் பார்த்து இப்போர் எளியது அன்று விசயன் வந்து இவனோடு சேர்ந்து விட் டால் நிலைமை என்ன ஆகும்” என்று கூறிச் செயலுக்குத் துரண்டினான். எனினும் அபிமன்யுமுன் நிற்காமல் தேரும் வில்லும் முறிய மனக் கலக்கத்துடன் கன்னன் பின்னிட்டான். துச்சாதனன் தன் தேரில் மீண்டும் ஏறி அபிமனைத் தாக்கினான். அவனுடைய தேரையும் வில்லையும் முறித்து விட்டான். வாளும் கேடயமுமாகப் பாய்ந்து எதிரிகளைத் தாக்கினான்.

அபிமனது தேர், குதிரை, வில் இவை அனைத்தும் போய்விட்டன போர்த்தொழிலும் போய்விட்டது; அனைத்தும் அழிந்து விட்டன. இனி எளிதில் அவனை வீழ்த்தி விடலாம் என்று முழங்கிக் கொண்டு எல்லோரும் ஒன்றுபட்டு அவனைத் தாக்கச் சென்றனர். படை அற்றவனைக்கொல்லுதல் பழி என்றும் பாராது துச்சாதனன் மகன் துச்சனி என்பவன் நச்சு அரவம் போன்று அவனை அணுகினான். அவன் தொடுத்த கணையை வாளால் துணித்து அவனது முடியையும் வீழ்த்தினான். துரோணன் அம்பு கொண்டு அவனைப் பலமுறை தாக்கினான். அபிமன் வாளைக் கொண்டே அவன் தேர்களையும் வில் களையும் முறித்து வீழ்த்தினான். மீண்டும் தேரில் வந்து துரோணன் அவன் வலது தோளை அம்பு கொண்டு துணித்து வீழ்த்தினான். தேர்ச்சக்கரம் ஒன்றைக் கழற்றிப் பகைவரை அழிக்கும் சக்கராயுதமாக மாற்றிப் பகைவரை அழித்தான். ஒரு கையைக் கொண்டே மறுகையோடு போர் செய்யும் இவன் ஆற்றலைக்கண்டு வியந்து பொழுது சாய்வதற்கு முன் இவனைச் சாய்ப்பது அரிது என்று கருதித் துரியன் சயத்ரதனை வருமாறு அழைத்தான்.

சயத்ரதன் சிவன் அளித்த கதையைக் கொண்டு இவன் கதையை முடிக்க வந்து சேர்ந்தான். அபிமனும் சக்க ரத்தை எறிந்து விட்டுக் கீழே விழுந்து கிடந்த மற்றோர் கதாயுதம் கொண்டு சயத்ர தனைத் தாக்கினான். அபிமன் மிகவும் தளர்ந்து விட்டான். அபிமன் சயத்ரதன் உயிர் நிலை அறிந்து கதை கொண்டு தாக்க அவன் உடல் நெரி நெரிந்தது. அவன் சிவ மந்திரம் சொல்லித் தன் கைக் கதையால் அபிமன் தலையைத் தாக்கத் தலை, அறுபட்டுச் சரிந்து விழ இரத்தம் பீறிட்டு அவன் சரிதத்தைச் சிவப்பு மையால் எழுதி முடித்தது.

துரியன் தன் மகன் இலக்கணன் மடிந்ததற்குக்கூட வருத்தப்படவில்லை. வீர அபிமன்யு கோர நிலையில் அடித்துக் கொல்லப்பட்டு மரணம் அடைந்தது அவனுக்கு மனநிறைவைத் தந்தது.

காட்டுத் தீப்போல அபிமன்யு பட்ட செய்திபரவியது. விசயனின் மகன் அபிமன் சாக முடியும் என்பதை யாருமே நம்பவில்லை. இதன் பின் விளைவுகள் என்ன ஆகுமோ என்று அனைவரும் அஞ்சினர்.

தருமனும் வீமனும் செய்தி கேட்டு உய்தி இல்லை என்று வருந்திப் புலம்பினர்.

கண்ணன் விசயனுக்கு எப்படிச் செய்தி செப்புவது என்று திகைத்தான். அதனை அதிர்ச்சி தோன்றாதபடி அறிவிப்பது எப்படி என்று யோசித்தான்.

இந்திரனை வரவழைத்து ஒரு நாடகம் நடத்தும்படி கேட்டுக் கொண்டான். இந்திரன் அந்தண வடிவு எடுத்தான். கண்ணனும் விசயனும் வரும் வழியில் சிதை ஒன்று அடுக்கிக் கொளுத்தி வைத்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தான். அதை மூன்று முறை வலம் வந்து அதில் தீக்குளிக்கக் காத்திருந்தான். அதற்குத் தக்க விளம்பரம் தந்து அவனைப் பலர் சூழும்படி செய்துகொண்டான்.

விசயன் அவன் விசனத்தைப் பற்றி விசாரித்தான். “எனக்கு ஒரே மகன்; அவன் இல்லாமல் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? அவனை எரிக்கும் அதே நெருப்பு என்னையும் எரிக்கட்டும்” என்று விம்மி விம்மி அழுது அலுத்துக்கூறினான்.

விசயன் தடுத்தான்; வினாக்கள் பல தொடுத்தான்,

“அவன் விதி; அது அவன் கதி; நாம் உயிர் வாழ்வது தான் மதி. அவன் கடமையை முடித்து அவன் இறந்து விட்டான். உனக்கு என்று வகுத்த கடமைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை யார் முடிப்பார்கள்? நீ இருந்து உன் மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டாமா? குடும்பத் தலைவன் நீ; நீயே இந்த இடும்பைக்கு உள்ளானால் மற்றவர்கள் நிலைமை என்ன ஆகும்?” என்று கேட்டான்.

“நீர் எளிதில் சொல்லி விடுகிறீர். உங்களுக்கு இது போல் துன்பம் வந்தால் உங்களால் தாங்க முடியுமா? சொல்லுதல் யார்க்கும் எளிது; செயல் செய்வதுதான் கடினம். நீங்கள் உங்கள் மகனை இழக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. விதி அப்படிக் கூட்டினால் உங்கள் மதி எப்படிச் செயல்படும்? உம்மால் அதைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“நிச்சயம் முடியும்” என்றான்.

“சத்தியம் செய்து தர முடியுமா?” என்று கேட்டான்.

“க்ஷத்திரியன் சொல் தவறான்” என்று கூறி அவனை நெருப்பில் விழாமல் தடுத்து அனுப்பினான்.

“நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பேசும் பெருமைதானே இவ்வுலக வாழ்க்கையின் இயல்பு. இறப்பு இயற்கையின் நியதி. இதை அறியாமல் இந்த மானுடர் இரங்கற்பா பாடுகிறார்களே!” என்று விசயன் தத்துவம் பேசினான்.

பாசறை வந்ததும் பேச்சுரை இன்றி மவுனம் நிலவியது. அழுகை மட்டும் விட்டு விட்டுக் கேட்டது.

“அழுகையின் காரணம் என்ன?” என்று கேட்டான் விசயன். கண்ணன் வாய் திறந்து பேசவில்லை. அவன் கண்களினின்று விழுந்த முத்துப் போன்ற நீர்த்துளிகள் சத்தமிட்டுப் பேசின.

கண்ணன் காலடியில் விழுந்து “என் கண்ணும் தோளும் மார்பும் இடப்பக்கம் துடிக்கின்றன. உன் பார்வையும் அவலம் பேசுகிறது. இன்றைய போரில் இறந்தது என் துணைவரோ புதல்வரோ கூறுக” என்றான்.

“வீரமரணம் எய்தியது என்மருமகன் அபிமன்” என்று கூறி அவனை இறுக அணைத்துக் கொண்டு நடந்ததை விவரமாகச் சொன்னான்.

அவன் அயர்ந்து சோர்ந்து பொலிவிழந்து துடித்து விம்மி விம்மி அழுதான்.

இது அபிமனுக்குச் செய்யும் வீர அஞ்சலியாகியது.

“சிதையிட்டு அதில் எனக்கும் இடம் விட்டுத் தகனம் செய்க” என்றான். அந்தண வடிவில் இந்திரன் மறுபடி யும் வந்து சந்திரகுலத்து அரசனாகிய விசயனைப் பார்த்து வினவினான்.

“மகன் இறந்தற்காகத் தந்தை மரணம் அடையலாமா?”

ஞான ஒளி பெறத் தீபம் ஏற்றி வைத்தான்.

தான் அவனுக்குச் சத்தியம் செய்து தந்தது நினைவுக்கு வந்தது.

அதற்கு மேல் அவனால் வாதம் செய்து கொண்டிருக்க முடியவில்லை. சோகம் அடங்கியது; ஆனால் பழி தீர்க்க வேண்டும் என்ற வேகம் தொடங்கியது.

வீரமணம் என்றால் அதற்கு வருந்தத் தேவையில்லை; அஞ்சலி செய்து விட்டு அமரனாகி விட்டான் என்று அமைதி கண்டிருக்கலாம். இது கோர மரணம்; வீமனைப் பிரித்துவிட்டுச் சிறுவன் ஒருவனை வளைத்துப் போட்டு ஆளுக்கு ஒரு அடி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதற்குத் துணையாக நின்றவன் சயத்திரதன்.

விசயனுக்கு அறிவு கூறி ஆக்க வழியில் திருப்ப வியாச முனிவன் வந்தான். அருச்சுனனுக்கு ஞான உபதேசம் செய்து பாச பந்தத்தால் மனம் தெளிவு இழப்பது தவறு என்பதை எடுத்துக் காட்டினான். சாவு என்பதற்குச் சொந்தக்காரர்கள் இன்னார் தான் என்று வரையறுத்துக் கூற முடியாது. அதற்குக் காரணம் என்ன? யார் இதற்குப் பொறுப்பு? அவர்களைக் களைவது எப்படி என்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்று அறிவுரை கூறி விடைபெற்றுச் சென்றான்.

ஞானபண்டிதனாகிய வியாசன் சென்ற பின்பு அவனுக்குரிய இயல்பான மான உணர்வு நிதானத்தை இழந்தது. மறுநாள் பொழுது சாய்வதற்குள் சயத்திரதனைக் கொன்று முடிப்பதாகவும், தவறினால் தன் உயிரை முடித்துக் கொள்வதாகவும் வீர சபதம் செய்தான்.

அதன்பின் கண்ணனை அழைத்துக் கொண்டு கயிலை சென்று சிவனை வேண்டி மற்றோர் வில்லையும் அம்பையும் பெற்று வந்தான்.

விசயன் செய்த வஞ்சினமும் அவன் கயிலை சென்ற நோக்கமும் அறிந்து தருமன் யுத்த தருமத்தைப் பற்றிச் சிந்தித்தான்.

பகைவர்களுக்கு விசயனின் சூளுரையை உரைத்தபின் அமர் தொடங்குவது அறம் என்று நினைத்தான். சயத்தி ரதன் விசயனின் இலக்கு என்பதையும், மாலைப்பொழுது முடிவதற்குள் அவன் மரணம் காத்திருக்கிறது என்பதை யும் முன் கூட்டிச் சொல்லிவிட வேண்டும் என்றும் துடித்தான். முன்கூட்டி உரைப்பது அரசியல் அறம் என்றுமுடிவு செய்தவன் கடோற்சகனை அனுப்பிச் செய்தி சொல்லுமாறு பணித்தான்.

கடோற்சகன் துரியனின் பாசறைக்குச் சென்று சயத்திரனுக்குப் பாசக்கயிறு காத்திருக்கும் செய்தியைச் சொல்லினான். அன்று இரவு உறக்கம் கலைந்தது. அடுத்த நாள் செய்வது குறித்து ஆலோசனை செய்தனர். துரோணன், கன்னன், அசுவத்தாமன் முதலியவரைத் துரியன் அழைத்து எப்படித் தடுப்பது என்று அவர்கள் அறிவுரை கேட்டான்.

“நாளை ஒரு நாள் நாம் சயத்திரதனைக் காப்பாற்றி விட்டால் நாம் வீரன் ஒருவனைக் காத்தவர் ஆவோம். தங்கை துச்சளையின் பூவும் பொட்டும் கலைக்காமல் காப் பாற்றப்படும். அதுமட்டுமல்ல; சுபத்திரை அமங்கலியாவது உறுதி. பொழுது சாய்வதற்குள் சயத்திரதனைக் கொல்லாவிட்டால் விசயன் உயிர் விடுவது உறுதி. அது மற்றைய பாண்டவர் சாவுக்குக் காரணம் ஆகும். அவர்களும் உயிர் மாய்த்துக் கொள்வர். பாரதப்போர் பதினான்காம் நாளிலேயே முடிந்துவிடும். வெற்றி நமதே” என்று முழக்கம் செய்தான்.

துரோணன் கைதட்டிப் பாராட்டுத் தெரிவிக்க வில்லை. “என்னால் முடிந்தவரை காப்பேன்; அதற்குத் தக்கபடி படைகளை வைப்பேன்; விதியின் செயல் அதனை முன்கூட்டி உரைக்க முடியாது. இறுதிவரை போராடுவோம்” என்றான்.

கன்னன், துரியனின் தம்பி துன்மருடணன், அசுவத் தாமன் ஆகிய மூவரும் உறுதியாகச் சயத்திரதனைக் காப்ப தாக உறுதி கூறினர். அதற்குப் பின் கடல் அலைகள் ஒய்வு கொண்டன; உறக்கம் அவர்களை அடக்கி வைத்தது.

சயத்திரதன் வதம் (பதினான்காம் நாட்போர்)

தருமன் காலைக்கடன் முடித்து விசயனது வீர சபதத்தை நிறைவேற்றும் பொருட்டுப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டான். கண்ணன் தேர் நடத்த வீமனும் நகுல சகாதேவர்களும் மற்றுமுள்ள அரசர்களும் இருபுறமும் நெருங்கிவர விசயன் முன்னோக்கிச் சென்றான். துருபதன் மகன் திட்டத்துய்மன் தலைமையில் நால்வகைப் படைகளும் அணிவகுத்து மற்றோர் முகமாக முன்னேறினர்.

அவ்வாறே இருபது யோசனை வித்தாரமுள்ள இடத்தில் சயத்திரதனை மத்தியில் நிற்கச் செய்து சுற்றியும் படைகளைத் துரோணன் நிறுத்தினான். சயத்திரதனைக் காப்பதாக வீரம் பேசிய துன்மருடணனைத் தூசிப் படை– யின் முன் நிறுத்திக் கன்னன் சகுனி இருவரையும் காப்பு அணியாகப் பின் நிறுத்தி ஐந்து ஐந்தாக ஐவகை வியூகம் ஆகியசேனையின் சிரத்தில் துரியனை நிறுத்திச் சகட துண் டத்தின் முன்பு துரோணன் நின்றான். அந்தணன் ஆகிய துரோணன் அணிவகுத்த திறமையைக் கண்டு சயத்தி ரதனை விசயன் ஒரு பகலில் அழிக்க முடியாது என்று தேவர்கள் பேசிக் கொண்டனர்.

கைத்தலத்துள்ள பொருளை இறுகப் பிடித்துக் காத்தல் போல சயத்திரனைக் காத்து நிற்றலைப் பார்த்து விசயன், உத்தமோசா, உதாமன் முதலியோர் இருபுறமும் வரக் கண்ணன் முன்னே செல்ல அவன் சுட்டிக்காட்டிய பகைவரைத் தாக்கினான். விசயனின் வில் ஒலிக்கே கலங்கி நீர் ப் பெருக்கின் முன் உடையும் கழனிகளின் கரைகளைப் போல எதிரிகளின் சேனைகள் உடைந்து சிதற விசயனின் சேனைகள் துரோணளிைடம் போய்ச் சேர்ந்தன.

துரோணனும் விசயனும் அம்புகள் விட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அம்புகள் மோதிக் கொண்டு யார் மீதும் படாமல் வழியிலேயே துணிபட்டன.

“ஐயனே! நான் உன் திருவடி போற்றும் மாணவச் சிறுவன்; எனது வஞ்சினம் தவறாமல் நிறைவேற அருள் செய்க” என்று அடக்கத்தோடு கூறித் துரோணனின் வேகத்தைக் குறைத்தான்.

அவனும் தடை செய்யாமல் முன்னேற வழிவிட்டான். அடுத்தது கன்னன் மலைபோல் நின்று குறுக்கிட்டான். இருவரும் சளைக்காமல் போரிட்டுக் கொண்டனர். இவ னோடு போர் செய்வதில் நேரம் கழிவதைக் கண்டு விசயன் அம்புகளை ஆவேசமாகப் பொழிந்தான். கன்னன் களைத்துவிட்டான். இதை அறிந்து வருணனின் மகனாகிய சுதாயு என்பவன் களத்தில் இறங்கி விசயனைச் சந்தித்தான். அவன் சாகாவரம் பெற்றிருந்தான். விசயன் விடும் அம்புகள் அவனை ஊறு செய்யவில்லை. சுதாயு வீசிய கதாயுதத்தைக் கண்ணன் நன் மார்பில் ஏற்றுக் கொண்டான். விளைவு சுதாயுவே மரணமடைந்தான். சாகாவரம் பெற்றிருந்தவன் நிராயுத பாணியாக இருக்கிறவர் மீது ஆயுதம் தொடுத்தால் அது ஏவியவர்களையே தாக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அதனால் அவன் மடிந்து விழ வேண்டியது ஆயிற்று.

அவன் மகன் சதாயுவும் அருச்சுனனை எதிர்த்துக் களைத்துவிட்டான். அந்நிலையில் துரியோதனன், விசயன் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தன் தங்கையின் கணவ னான சயத்திரதன் உயிர் துறப்பது உறுதி என்றும், தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது என்றும் கூறித் தன்னைப் போர்க்களம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றான். துரோணன் தன் கைவசம் இருந்த கவசம் ஒன்றைத் தந்து அதை அணிந்து கொண்டு செல்லும்படி கூறினான்.

அதை அணிந்துகொண்டால் விசயனின் அம்பு துளைக்காது என்று அறிவித்தான். அவ்வாறே அக்கவ சத்தை அணிந்துகொண்டு துரியன் அருச்சுனனைத் தாக்கச் சென்றான், அருச்சுனன் விட்ட அம்புகள் அவனைத் தொடவே இல்லை. எதிரிகள் எளிதாக அருச் சுனனைச் சூழ்ந்து கொண்டனர். விசயன் களைத்துப் போய்ப் போர் செய்தலைத் தவிர்த்து நின்றான்.

கண்ணன் உடனே தன் சங்கு எடுத்து வாயில்வைத்துப் பேரொலி செய்யச் சிற்றெலிகள் போல் நடுநடுங்கிப் படைகள் சிதறி ஓடின.

இச்சங்கு ஒலி கேட்டுத் தருமன் விசயனுக்கு அழிவு நேர்ந்து விட்டதோ என்று அஞ்சிக் கலக்கம் அடைந்தான். அதனால் தனக்குக் காவலாக இருந்த சாத்தகியையும் வீமனையும் தொடர்ந்துபோர்க்களம் அனுப்பி வைத்தான். சாத்தகியும் வீமனும் களத்தில் புகுந்து கவுரவர் தலைவர்கள் பலரைக் கொன்று குவித்தனர். வீமன் துரியனின் தம்பியர் பலரைக் கொன்று குவித்தான்.

விசயன் சயத்திரதனைத்தேடி முன்னேறினான். சூரியன் அத்தமிக்கும் நேரம் அணுகிவிட்டதால் அருச்சுனன் அவனைக் கொல்வது உறுதி என்று கருதி “நெருங்கி நில்லுங்கள்” என்று கூறிக் கொண்டு அவனை நிலவறை யில் பதுக்கிவைத்தனர்; சயத்திரதனை எங்கும் காணாமை யால் கொல்வது அரிது என்று கண்ணனும் அருச்சுனனும் திகைத்தனர்.

கண்ணன் ஒரு சூழ்ச்சி செய்தான். தன் கையில் உள்ள சக்கரத்தை ஏவிச் சூரியனை மறைக்கும்படி செய்தான். சக்கரம் கதிரவனை மறைக்கப் போர்க்களம் போல வானம் செங்களமாக மாறியது. அந்திவானம் சிவப்புற்றதைக் கண்டு கதிரவன் சாய்ந்து விட்டான் என்று தவறாக நினைத்துச் சயத்திரதன் தைரியமாக வெளிப்பட்டான். வெளிப்பட்டதோடு அச்சம் நீங்கியவனாய் அமைதி காட்டினான்.

இனி அருச்சுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலக்காட்சியைக் கவலை இல்லாமல் காணலாம் என்று மனப்பால் குடித்தான். சயத்திரதனைத் தைரியமாகத் துரியனே முன் நிறுத்திக்காட்டி அருச்சுனனை அவமானப் படுத்தினான்; சயத்திரதனை யார் தரையில் தலைஉருளச் செய்கிறார்களோ அவர்கள்தலை நூறுசுக்கலாக வெடிக்கக் கடவது என்று அவன் தந்தையாகிய விருத்தகத்திரன் ஒரு வரம் வேண்டிப் பெற்றிருந்தான். அதனால் கண்ணன் அவன் சிரத்தைக் கொய்வதோடு அல்லாமல் அதனை அவன் தந்தையின் கையில் போய் விழச்செய்யுமாறு அவன் அருச்சுனனுக்குச் சொல்லி வைத்தான். அவ்வாறே அவன் தலையைச் சிவன் தந்த வில்லால் வெட் டி சமந்த பஞ்சகம் என்ற மடுவில் மாலை வழிபாடு செய்து கொண்டு தருப் பணம் விட்டுக் கொண்டிருந்த அவன் தந்தையின் கரத்தில் விழுமாறு செய்தான். தலை அவன் கைப்பட்டதும் அது உருண்டு தரையில் விழுந்தது. தந்தையின் தலை வெடித்து அவனும் மரண வாயிலை அடைந்தான்.

அத்தமனம் வந்த பிறகு அருச்சுனன் சயத்திரதனைக் கொன்றான் என்று தவறாக முடிவு செய்து அவன் சபத மொழி பிழைத்தான் என்று ஆரவாரம் செய்தனர். கதிரவனை மறைத்து வைத்த கண்ணனின் சக்கரம் அவன் கைக்கு வந்து சேர்ந்தது. சூரியன் வெளிப்பட்டுக் கதிர் களை வாரி இறைத்து வையகத்துக்குப் பொழுது சாய வில்லை என்பதைக் காட்டியது. தாங்கள் ஏமாற்றப்பட் டதை அறிந்து துரியன் வெட்கமும் வேதனையும் பட்டு மீண்டும் அவர்களை எதிர்த்துப் போர் செய்தான்.

இப்போரில் கடோற்சகன் பெரும் பங்கு ஏற்றான். இவன் மாயப்போர்கள் தொடர்ந்து பல செய்தான். அவன் தாக்குதலைத் தாங்கமுடியாமல் இந்திரனிடமிருந்து பெற்ற வேலினைக் கன்னன் எய்து வீழ்த்துமாறு துரியன் வேண்டினான்.

அருச்சுனனைக் கொல்ல வைத்திருந்த வேலைக் கடோற்சகன் மீது பாய்ச்சி அதனை வீண்படுத்தினான்.

பூரிசிரவசுவின் வதம்

இதற்கிடையில் சாத்தகி களத்தில் புகுந்த போது அவன் பூரிசிரவசு என்பவனைக் கொன்று குவித்தது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

பூரிசிரவசு என்பவன் சாத்தகியின் ஜன்ம விரோதி; மேலும் அவன் யதுகுலத்தலைவனும் ஆவான். கண்ணன் அனுப்பி வைத்த படைத்தலைவர்களில் ஒருவன் இவன் ஆவான். சாத்தகி வயதில் இளையவன்; இவன் மூத்தவன். அவன் இந்த யுத்த களத்தில் தன்குடும்பப் பகையை முடித்துக் கொள்ள இப்போர்ச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டான்.

இருவரும் மற்போரும் விற்போரும் செய்தனர். சாத்தகி போர் செய்ய முடியாமல் சற்றுக் களைத்து விட்டான். அவனைக் கீழே தூக்கிப் போட்டுச் சாத்தத் தொடங்கி னான். கண்ணன் விசயனுக்கு அதைக் காட்டி அவன் மீது அம்புபோட்டுச் சாத்தகியைக் காக்கச் சொன்னான். விசயன் நோக்கமெல்லாம் சயத்திரதனைக் கொல்வதிலேயே இருந்தது; இரண்டு பக்கமும் அவன் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க வேண்டி இருந்தது. மேலும் சாத்தகியும் பூரிசிரவசுவும் போரிடுகையில் இடையில் மூன்றாவது ஆள் புகுவது அறம் ஆகாது என்று அருச்சுனன் கூறினான்.

நிராயுதனாக இருக்கும் சாத்தகியை வாள்கொண்டு வெட்டுவது உடனே தடுக்கப்பட வேண்டும் என்று கண்ணன் ஆணையிட்டான். அதற்கு மேல் அவன் தர்மத்தைப் பற்றிப் பேசிக் காலதாமதம் செய்ய விரும்பவில்லை. கண்ணன் கட்டளையைக் கேட்டு அம்பு தொடுத்து அவன் கையைத் துணித்தான்; வாளோடு அவன் வலக்கை கீழே விழுந்தது.

“உனக்கு உதவி செய்ய வந்த இளையவனை நீ உதாசீனம் செய்யகூடாது. அது தர்மம் ஆகாது” என்று தெளிவுபடுத்தினான். அதற்குள் களைப்பு நீங்கி எழுந்த சாத்தகி எதிரியின் தலையை அறுத்துத் தன் பகையை முடித்துக் கொண்டான். உதவிக்கு வந்தவர்கள் அவரவர் களுக்குரிய சொந்தப் பகையை முடித்துக்கொள்ள இப் போர்க்களம் பயன்பட்டது.

துரோணனின் முடிவு (பதினைந்தாம் நாட் போர்)

இறபுறத்திலும் போர்க்களம் நோக்கி விரைந்தனர். ஆற்றல் மிக்க துரோணனை அழிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. தேவ ரிஷிகளும் நிலத்திற்கு வந்து துரோணனுக்கு அறிவுரை கூறினர். அந்தணர் குலத்தில் பிறந்த அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடாமல் க்ஷத்திரிய தர்மத்தில் ஈடுபட்டுத் தேவை இல்லாமல் களத்தில் இறங்கியதைக் கண்டித்தனர். அவர்கள் உபதேசம் கேட்ட ஆசான் ஆகிய துரோணன் போரில் வெறுப்புற்றுத் தேரும், யானையும் ஊராமல் கால் நடை நடந்து களம் நோக்கிச் சென்றான்.

அவனைத் தொலைத்தால் அல்லது பாண்டவர்க்கு யாதொரு நலமும் வராது என்று அறிந்து துணிந்து கண்ணன் அதற்குத் தக்க வழியைச் சிந்தித்தான். வீமன் மாளவத்து அரசனாகிய இந்திர வர்மன் என்பவனின் யானையாகிய அசுவத்தாமனைக் கொன்று முடித்தான். அந்தச் செய்தியை வைத்துக் கொண்டு ‘அசுவத்தாமன் இறந்தான்’ என்று பலரும் கேட்க உரக்கச் சொல்லுமாறு தருமனை வேண்டினான்.

தருமன் தொடர்ந்து அதைக் கூற விரும்பவில்லை; நன்மைக்காகச் சில பொய்கள் கூறுவதும் அறமே யாகும் என்று கண்ணன் உணர்த்தினான்.

“பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்ற குறட் கருத்துப்படி பொய்யும் சொல்லலாம் என்று தருமனிடம் எடுத்துக் காட்டப்பட்டது. நீல கண்டன் விரும்பி ஆலகால விஷத்தை ஏற்று மற்ற உயிர்களைக் காப்பாற்றிய கதை பேசப்பட்டது. இராமன் மறைந்திருந்து வாலியின் உயிரை வாங்கினான். இந்தக்கதையும் அறிவிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் விட மற்றவர்கள் அந்தப் பொய்யைச் சொல்லி அதனால் வரும் பாவத்தை அவர்கள் அடையாமல் தடுக்கத் தானே முன் தருமன் வந்தான். அசுவத்தாமன் என்ற யானை இறந்து விட்டது” என்று உரக்கப் பலரும் கேட்க உரைத்தான். யானை என்ற சொல்லைத் தாழ்வாகச் சொல்லி அது துரோணனின் செவியில் படாதவாறு தப்பித்துக் கொண்டான். தாய் பிழைக்க வேண்டுமானால் சிசுவைக் கொல்லும் நிலை மருத்துவர்க்கு நேர்கிறது. அதே போலத்தான் துணிந்து தருமன் “அசுவத்தாமன் என்ற யானை இறந்து விட்டது” என்று கூறினான். அசுவத்தாமன் என்ற பெயரை மட்டும் எடுத்துச் சொன்னான். யானை என்ற சொல்லைப் படுத்துச் சொன்னான்; யானை என்ற சொல் செவியில் படாதபடி கண்ணனின் சங்கொலி வேறு துணை செய்தது.

அசுவத்தாமன் இறந்தான் என்ற சொல் தொடரைக் கேட்டதும் துரோணன் செயலற்று விட்டான். மகன் இறந்தான் என்ற சோகத்தால் அவன் புலம்பி அழவில்லை. பற்றற்ற ஒரு மனநிலை ஏற்பட்டது. போரில் அவனுக்கு இருந்த பிடிப்பு அவனை விட்டு நீங்கியது. அந்தச் சமயம் பார்த்துத் திட்டத்துய்மன் அம்பு ஒன்று விட்டு அவன் தலையைக் கொய்து வேறுபடுத்தினான். துரோணன் மறைந்தான்; அவன் தலையும் சாய்ந்தது; தலைமையும் ஒய்ந்தது.

தந்தையை இழந்த அசுவத்தாமன் ஆறாத்துயரால் அவலமுற்றான். திட்டமிட்டுச் செய்த இந்தக் கொலைச் செயலைக் கண்டு மனம் அழிந்தான். ‘இது கொடுமை’ என்று முடிவு செய்தான். திட்டத்துய்மன் துரோணனைக் கொன்றது வஞ்சகம் என்றும், குருத்துரோகம் என்றும் அசுவத்தாமன் விளம்பினான்.

பாண்டவர் ஐவரையும் அவர்தம் மக்களுடன் அழிப் பேன் என்றும், திட்டத்துய்மனை ஒழிப்பேன் என்றும் சூளுரைத்தான். அவன் தன் கைவசமிருந்த அத்திரத்தை ஏவினான்.

கண்ணன் அனைவரையும் நிராயுதராக நிற்கும்படி அறிவித்தான்.

தெய்வ அத்திரம் ஆகையால் அது ஆயுதம் ஏந்தாதவர்களைத் தொடாமல் திரும்பிச் சென்றது. வீமன் மட்டும் கதாயுதமும் கவசமும் அணிந்திருந்தான். அந்தத் தெய்வ அம்பு வீமனைத் துரத்தியது. கண்ணன் அவன் உடம்பிலிருந்த கவசத்தையும், ஏந்தியிருந்த கதையையும் நீக்கு விக்குமாறு அறிவித்தான். வீமனும் அவ்வாறே செய்து தாக்குதலிலிருந்து தப்பினான்.

அதற்குள் வியாச முனிவன் வந்து அசுவத்தாமனுக்கு ஞான நல்லுரை நல்கினான்; வேள்வித் தீயில் பிறந்த திட்– டத்துய்மன் பிறக்கும்போதே துரோணனைச் கொல்லும் வரம் பெற்றது தெய்வ அருள் என்றும், மனிதத்தன்மை யால் யாரும் அவன் தந்தையைக் கொல்லவில்லை என்றும் ஆறுதல் கூறினான். அவனும் சினம் ஆறி அடங்கினான் .

9. கன்னனின் முடிவு

வீமன், நகுலன், தருமன், சகாதேவன் இவர்களைக் கன்னன் தனித்தனியே சந்தித்துப் போர்செய்த நிகழ்ச்சிகள் சாதாரணமானவை. தன் அன்னை குந்தியிடம் தான் நால் வரையும் கொல்வதில்லை என்று வாக்குறுதி தந்து விட்டதால் அப்போர்கள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே நிகழ்த்தப் பெற்றன.

கன்னன் அருச்சுனனைக் கொல்வதாக வீர மொழி பேசி இருக்கிறான். அவ்வாறே அருச்சுனனும் சுடுமொழி கூறி இருக்கிறான். எனவே கன்னன் இறுதி நாள் அருச்சுனனோடு செய்த பதினேழாம் நாட்போரே சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம்.

போர் தொடங்கியது. தருமன் கண்ணனைப் பார்த்து “இன்றைய வெஞ்சமரில் கன்னன் வான்உலகு எய்து வானோ இயம்புதி” என்று கேட்டான்.

“இத்தினம் கன்னன் விசயனின் அம்பினால் இறப் பான்; அடுத்தநாள் துரியன் வீமனால் உயிர் துறப்பான்; அத்தினாபுரியும் பாரத பூமியும் உன் ஆட்சிக்கு வரும்” என்று கண்ணன் உரைத்தான்.

செங்கண்மால் ஆன கண்ணன் உரைத்த இன் சொல் கேட்டுத் தெளிவு அடைந்த தருமன் இதுவரை கண்ணன் தங்களுக்குச் செய்தருளிய உதவிகளைப் பாராட்டிப் பேசினான்.

“கங்கை நதியில் கழு முனையில் வண்டாக அமர்ந்து வீமனைக் காத்தாய்”

“அரசர் அவையில் நாங்கள் செயலற்று மனம் குழம்பிக் கிடந்த நிலையில் பாஞ்சாலிக்குத் துகில் அளித்து மானம் காத்தாய்”

“கானக வாழ்க்கையில் துர்வாச முனிவர் வந்த போது அவர் சினத்தினின்று எங்களைக் காப்பாற்றினாய்”

“பாண்டவர்களுக்காகத் துரியன் பால் தூது நடந்து கால்கள் சிவந்தாய்”

“விதுரன் வெஞ்சிலை முறிக்கச் செய்தாய்”

“அசுவத்தாமனைத் துரியனிடமிருந்து பிரித்து வைத்தாய்”

“கன்னனின் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்டு வர இந்திரனை அனுப்பிப் பெற்றாய்”

“விசயனின் மகன் இராவானைக் களப்பலிக்குச் சம்மதிக்கச் செய்தாய்”

“அமாவாசையை எங்களுக்காக ஒரு நாள் முன் வரச்செய்து எங்களுக்குச் சாதமாக்கித் தந்தாய்”

“விசயனுக்குத் தேர் ஊர இசைந்தாய்"

“களத்தில் மனம் பேதலித்த விசயனுக்குக் கீதையை உபதேசித்தாய்”

“களத்தில் படை எடேன் என்று சொல்லிய நீ மூன்றாவது நாள் சக்கரத்தை எடுத்தாய்”

“வீடுமன் இறக்கும்படி சிகண்டியைத் தக்கபடி பயன் படுத்தினாய்”

“பகதத்தன் என்பவன் வீசிய வேலை விசயன் மார்பில் படாமல் நீ உன் திரு மார்பில் ஏற்று அவனைக் காத்தாய்”

“அபிமன் இறந்த போது இந்திரனைச் கொண்டு நாடகம் நடத்தி அருச்சுனனைத் தீயில் விழாமல் காத்தாய். அன்று இரவே அவனுடன் கயிலை சென்று சிவனிடம் அம்பு கேட்டு வாங்கித் தந்தாய்”

வருணனின் மகன் சதாயு வீசிய கணையை உன் மார்பில் ஏற்று அவனை மரணமடையச் செய்தாய்”

“சங்க நாதம் செய்து பகைவர்களை மருளச் செய்தாய்”

“கண்ணா, நீ உன் சக்கரத்தால் சூரியனை மறைத்து விசயனின் சபதத்தை நிறைவேற்றச் செய்தாய்”

“அசுவத்தாமன் ஏவிய நாரண அத்திரத்தால் நிகழ இருந்த அழிவு அறிந்து பாண்டவரைப் படைக் கருவி களைக் கீழே போடும்படி செய்தாய்.” இவற்றையெல்லாம் கூறினான்.

“உன்னுடைய திருவிளையாடல் இந்த உலக அரசர் அறியமாட்டார்” என்று கூறி அவன் திருவடி மலர்களில் விழுந்து வணங்கினான்.

கண்ணனும் அறச் செல்வனாகிய தருமனை அன்புடன் தழுவிக் கொண்டு “இந்த அமரில் நீங்கள் ஐந்து பேரும் உயிர் இழக்கமாட்டீர்கள்; அஞ்சவேண்டாம்; நான் இருந்து காப்பேன்; தவறேன்” என்று அபயம் அளித்தான். திட்டத் துய்மனைப் பார்த்து “அணி வகுக்க” என்றான். அவ்வாறே திட்டத் துய்மன் படைகளை அணிவருத்தான். அவ்வாறே கன்னனும் அன்று நடக்கப் போகும்போர் குறித்துத் துரியனிடம் கூறினான்

“விசயனுக்குத் தேர்ப்பாகனாகக் கண்ணன் உள்ளான்; அதனால் அவன் உயிர் தப்பி வருகிறான்; கண்ணனுக்கு நிகராகத் தேவர் உலகிலும் யாரையும் கூற முடியாது; சல்லியனே அவனுக்கு ஒப்பு ஆவான்” என்றான் கன்னன். அவனைத் தனக்குத் தேர்ப்பாகன் ஆக்கினால் வெற்றி உறுதி என்றான்.

“ஊர் பேர் தெரியாத என்னைப் பேரரசன் ஆக்கினாய், தேரோட்டி மகனாகிய என்னைப் பார் ஆளும் மகிபன் ஆக்கினாய்; யான் என் உயிரை யாருக்குத் தரப் போகிறேன். செஞ்சோற்றுக் கடன் கழித்து உன் செங் கோலை உனக்கே நிறுத்துவேன்” என்றான்.

துரியனின் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் தேர் ஒட்டச் சம்மதித்தான். எனினும் “நீ விசயனை வெல்வாய் என்பதில் உறுதி இல்லை” என்று தன் மனத்தில் பட்டதை உரைத்தான், கன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ வீரர் முன் என்னை இகழ்ந்து பேசாதே; உன்னைத் தேர் ஓட்ட அழைத்தேனே தவிரப் போர் ஓட்டத்தைப் பற்றிப் பேச நான் அழைக்கவில்லை” என்றான்.

உடனே அவன் தேரை விட்டுக் கீழே இறங்கிவிட்டான்.

“எலியின் இரைச்சல் எல்லாம் பூனையைக் கண்டு அடங்கிவிடும்” என்று கூறினான் சல்லியன். ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போருக்கு நின்றனர். துரியன் இடை மறித்துச்சமாதானம் செய்தான். சல்லியன் தேர் ஏறினான்.

வீமனும், நகுலனும், தருமனும் கன்னனை எதிர்த்து அவன் வில்லுக்கு ஆற்றாமல் பின் வாங்கினர். இறுதியில் விசயனும் கன்னனும் நேருக்கு நேர் நின்று எதிர்த்தனர்.

கன்னனும் விசயனும் மாறி மாறிச் சரகூடங்கள் அமைத்தனர். சரகூடத்தில் அகப்பட்ட கன்னன் வலையில் அகப்பட்ட மான் ஆனான். அவனுக்கு எதிரே நின்ற தனஞ்சயனும் தளர்ந்து செயவிழந்து நின்றான்.

கன்னன் விசயனின் கண்களுக்குத் தருமனைப் போலத் தோன்றியதால் தளர்ச்சி அடைந்தான். இதைத் தெரிந்து கொள்ளாமல் தருமன் “பகல் முடிந்தும் பகையை முடிக்க வில்லை. உன் கைவில் இனிமேல் என்ன செய்யப் போகிறது?” என்று அவன் வில்லைக் கடிந்து உரைத்தான்.

“என் அம்பினைக் குறை கூறுபவர் உயிர் முடிக்காமல் விடேன்” என்று வில்லை வளைத்து நாண் பூட்டி விட்டான் விசயன். உடனே கண்ணன் ஒடோடி வந்து தடுத்து “அமைக என்று கூறி அவனைத் தழுவிக்கொண்டு பெரியோர்களை நீ என்று சொன்னாலும் அது கொல்லு தலைக் காட்டிலும் கடுமையான தண்டனை யாகும். நீயும் தரக்குறைவான சொற்களைக் கொண்டு அவனைத் தாக்கலாம்” என்றான்.

அவ்வாறே நாவால் சொல்லத்தகாத சொற்களைக் கொண்டு தரக்குறைவாகச் சில சொற்கள் பேசினான். தருமனும் வாழ்க்கையை வெறுத்துத் துறவுக்கோலம் பூண்டான். கண்ணனும் விசயனும் மன்னிப்புக் கேட்டு அவனைச் சமாதானப்படுத்தினர்.

அதற்குப் பிறகு கன்னனுக்கும் அருச்சுனனுக்கும் கடும் போர் நடந்தது. நாகக் கணையை அருச்சுனனின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்துக் கன்னன் ஏவினான். கண்ணன் தன் கால் விரலால் தேரினைக் கீழே அழுத்தி அவன் விட்ட அம்பு தலை முடியை இடறுமாறு செய்தான். அந்த நாகம் மறுபடியும் தன்னை ஏவும்படி கன்னனை மன்றாடியது. மறுமுறை விடமுடியாது என்றும், வீரனுக்கு அது அழகல்ல என்றும் கூறி மறுத்து விட்டான். அந்த நாகம் வாழ்க்கையை வெறுத்துச் சுருண்டு உயிர் நீத்தது.

சல்லியனும் இதே கருத்தைக் கூறினான். மார்பைக் குறிவைத்து அம்பு ஏவியிருக்க வேண்டும் என்றும், மறு முறை அரவக் கணையை ஏவுவது தான் அவன் செய்யக் கூடியது என்றும் அறிவுறுத்தினான். கருத்து வேறுபாடு அவர்களைப் பிரித்தது. சல்லியன் தேரை விட்டு இறங்கி விட்டான்.

கன்னன் அந்தத் தேரைத் துக்கி நிறுத்த அரும்பாடு பட்டான். அத்தேரின் இடப் பக்கச் சக்கரம் ஒரு பக்கம் சரிந்துவிட்டது; அந்த நிலையில் அவன் தனியனாக விடப் பட்டான்.

அவன் உயிரைக் காத்து வந்தது அவன் இதுவரை செய்துவந்த புண்ணியம் ஆகும், அதனை விலக்கினால் தான் அவன் உயிரை நீக்கமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

கண்ணன் அருச்சுனனைச் சற்றுப் போரை நிறுத்தச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கி முதிய அந்தணனாகக் கன்னன் முன் சென்றான்.

“மேருமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறேன்; இல்லாதவர்க்கு நீ வழங்குகின்றாய் என்று கேள்விப்பட் டேன்” என்றான்.

“நன்று” என நகைத்து “தரத்தகு பொருள் நீ நவில்க” என்றான்.

“உன் புண்ணியம் அனைத்தும் தருக” என்று கேட்டான்.

“குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கின்ற என்னிடம் இந்தப் புண்ணியம் தான் எஞ்சி இருக்கிறது; அதையாவது கொடுத்துதவும் நிலையில் இருக்கிறேன் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான்.

“நீர் வார்த்துத் தருக” என்றான். கண்ணிரைத் தவிர வேறு நீர் காண முடியாத அந்தச் சூழ்நிலையில் அவன் தன் புண்ணிரைத்தான் காணமுடிந்தது; இதயத்தில் அம்பு தைத்து இருந்தது. அதைப் பிடித்து இழுக்கக் குருதி கொப் புளித்ததும் அதனைக் கொண்டு தான் ஈட்டிவைத்த புண் னியம் அனைத்தும் தாரை வார்த்துத் தானமாக ஈந்தான்;

“வேண்டிய வரம் கேள் தருகிறேன்” என்றான் கண்ணன்.

“பிறப்பு என்பது ஒன்று உண்டாயின் இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாத இதயம் நீ அளித்தருள்க” என்றான்.

மனம் இருந்தால் மட்டும் போதுமா? கொடுக்கத் தனமும் இருக்க வேண்டாமா?

“எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும், அதற்கு வேண்டிய பொருட் செல்வமும் அடைந்து இறுதியில் முத் தியும் பெறுவாய்” என்று வரம் ஈந்தான் கண்ணன். திருமால் தன் திவ்விய உருவை அவனுக்குக் காட்சி தந்தான். அவன் தான் கண்ட தெய்வக் காட்சியை வியந்து போற்றினான்.

“நீல மலையும், கார் மேகமும், கடல் நீரும், காயா மலரும் நிகர்க்கும் திருமேனியும், கதை, வாள், சங்கு, நேமி, கோதண்டம் இவை தாங்கிய திருக்கரங்களும் துளசி மாலை அணிந்த மார்பும், திரண்ட தோள்களும், நீல மணிபோன்ற கழுத்தும், சிவந்த இதழும், தாமரை போல் மலர்ந்த முகமும், கதிர்முடியும் இம்மையில் காணப் பெற்றேன்” என்று கூறி அதே நினைவில் தன் உயிரை விட்டான்; கண்ணனின் திரு உருவம் அவன் நினைவுகளில் நிறைந்தது.

கன்னன் அம்புகளை எய்ய முற்பட்டான்; தான் கற்ற வித்தைகள் கை கொடுக்காமல் அவனைக் கைவிட்டன. பரசுராமன் தந்த சாபத்தால் இந்த மறதி ஏற்பட்டுக் களத்தில் போர் செய்வதில் உளம் இன்றி அயர்ந்து நின்று விட்டான்.

“சூரியன் அத்தமனம் ஆகும் முன்பு கன்னனைக் கொல்வாய்” எனக் கண்ணன்கூற அருச்சுனன் அஞ்சரீகம்” என்ற கணையைக் கன்னனின் மார் பில் வீச அது கவிஞர்களின் கூரிய சொல் போலப் பாய்ந்து அவன் உயிரைப் போக்கியது.

அந்திபடிவதற்கு முன் அவன் ஆவி நீங்குதல் உறுதி என்று அசரீரி சொல்லக் குந்தி செயலிழந்து கண்ணிர் சோரக் குழல் சரியக் களத்தை அடைந்தாள். கோ என்று கதறி இரு கைகளையும் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அவன் உடம்பின் மேல் விழுந்து அழுதாள்.

பிறந்த போது உன்னைப் பேணி வளர்க்கும் பேற் றினை இழந்தேன்; பேழை ஒன்றில் உன்னை வைத்து ஆற்றில் விட்டு உன்னை அநாதையாக்கினேன்; ஐவரும் நூற்றுவரும் அடிபணிய நீ அரசாளும் பெற்றியை யான் காணவில்லை” என்று சொல்லிச் சொல்லிக் குந்தி அழுதாள்.

“என் உயிர்க்கு உயிராகிய தோழனாகிய உன்னை இழந்தேன். இனி யாரைக் கொண்டு அரசாள இருக்கின்றேன்” என்று துரியன் கூறி அழுதான். உடன் பிறந்த தம்பியரும் அழுது வருந்தினர்.

கன்னனின் பிறப்பை மறைபொருளாகக் காத்து வைத்த அன்னையின் கொடுரச் செயலைப் பாண்டவர் கண்டித்துப் பேசினர்; “பெண்கள் ரகசியத்தை வைத்து இருக்கக் கூடாது; அவர்கள் வெளியே சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிட வேண்டும்” என்று கடுமொழி கூறினான் தருமன்; அது முதல் பெண்கள் ரகசியத்தைக் காப்பாற்றுவதில்லை; அவர்களால் காப்பாற்ற முடியாது என்ற சொல் வழக்கும் ஏற்பட்டுவிட்டது.

10. அவல முடிவுகள்

பாரத யுத்தத்துககே மூல காரணம் துரியன் இராமாயணத்தில் இராவணனின் வீழ்ச்சியோடு போர் முடிவு பெறுகிறது. பாரதத்தில் துரியனின் முடிவோடு கதையும் முடிகிறது. சர்வாதிகாரிகள் தம்மைச் சார்ந்தவர் அனைவரையும் அழித்துவிட்ட பின் தாமும் அழிவை அடைகின்றனர்.

பெற்ற பிள்ளைகளையும், உற்ற தம்பியரையும் கற்ற ஆசிரியர்களையும் இழந்த பின்தான் அவர்கள் சாவினைச் சந்திக்கின்றனர். வீமனை எதிர்த்துத் துச்சாதனன் இறக் கிறான். துச்சாதனனும் பதினேழாம் நாட் போரிலேயே மரணத்தைச் சந்திக்கிறான். ஆரம்ப முதல் அவன் தம்பியர் தொடர்ந்து வீமனோடு போரிட்டு மரணம் அடைகின்றனர்.

பதினெட்டாம் நாட் போர்

இதுவே கடைசி நாட்போர். கன்னனை இழந்ததும் துரியன் கை இழந்தவனாகக் காணப்பட்டான். உயிருக்கு இனிய நண்பனையும், வாழ்க்கைக்கு இனிய தம்பியரையும் இழந்த பின்பும் அவன் கொண்ட உறுதியிலிருந்து பின் வாங்கவில்லை. எஞ்சியிருந்த மாவீரன் மாத்திரி நாட்டு அரசன் சல்லியன் ஆவான். அவனைப் படைத் தலைமை ஏற்கச் செய்தான்.

பதினெட்டாம் நாள் இறுதிப்போர் அன்று தருமன் பாண்டவர் பக்கத்தில் தலைமை ஏற்றான். இதுவரை அமைதியாக ஆறி அடங்கி இருந்த அறத்தின் மைந்தன் தருமன் சீறிப் புயல் எனப் பாய்ந்தான். அவன் தன் கையிலிருந்த ஆற்றல் மிக்க அம்பினால் சல்லியனைக் கொன்று முடித்தான். வீமன் தன்னை எதிர்த்த துரியனின் தம்பியருள் மீதி இருந்தவர் எல்லாரையும் எதிர்த்து அவர் களுக்கு ஒரு முடிவு கட்டினான். சகாதேவன் சகுனியைக் கொன்றான். துரியனுக்குத் துணையாகப் போரிட்டவர்களில் மாண்டவர் பலர்; உயிர் தப்பி ஓடியவர் பலர்.

இராவணனின் இறுதிப் போரில் அவன் தன்னந்தனிய னாக விடப்பட்டதைப்போல இவனும் நிலை கெட்டான். செத்தவரைப் பிழைப்பிக்கும் மந்திரம் ஒன்று ஒரு முனிவனிடம் இருந்து அவன் அறிந்திருந்தான். அதைக் கொண்டு இறந்தவரை எல்லாம் எழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தான்.

அதனால் அவன் அதற்காகத் தடாகம் ஒன்றைத் தேடிச் சென்று அதில் முழுகி மூச்சடக்கிக் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி யோக நிலையில் இருந்து அம்மந்திரத்தைச் சொல்ல முற்பட்டான் அவன் முழுகி இருக்கும் நீர் நிலை பற்றித் தெரியாமல் பல இடத்திலும் தேடினர். சஞ்சய முனிவர் அவன் மூழ்கி மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும் தடாகம் உள்ள இடத்தைக் கூற அசுவத்தாமன் அங்குச் சென்று கூப்பிட்டுப் பார்த்தான். துரியன் செவி சாய்க்கவில்லை. பாண்டவர் ஐவரும் கண்ணனும் அத்தடாகத்தின் கரையிலிருந்து விளித்துப் பார்த்தனர்.

முடிவில் வீமன் வீர மொழிகள் பேசி அவன் மானத்தைத் துண்டினான்.

“உற்றார் உறவினரை வானுலகம் அனுப்பி வைத்து விட்டுக் கோழையைப் போல் இங்கு ஒளிந்து கொண்டிருக்கிறாயே, உனக்கு வெட்கமில்லையா? உனக்கு மானம் இல்லையா? நீ ஒரு வீரனாக இருந்தால் வெளியே வா” என்று உரக்கக் கூவினான்.

மற்றவர்களை உயிர்ப்பிக்கவேண்டும் என்ற சிந்தனை யிலிருந்து விடுபட்டுத் தன் அஞ்சாமையைக் காட்டக் கரை ஏறினான்.

“வீரத்தைப் பற்றிப் பேசும் வீணர்களே! படைவீரர்களைத் துணை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஐந்து பேறாக வந்துநிற்கிறீர்களே! தனி ஒருவனைத் தாக்க ஐவர் சூழ்ந்து நிற்கிறீர்களே! இதுவா வீரம்! இது கொலையாளிகள் காட்டுக் கூச்சல்” என்றான்.

கண்ணன் அவனை அமைதிப்படுத்திப் பின் வருமாறு கூறினான்;

“நீ சொல்வதும் உண்மைதான்; ஒண்டிக்கு ஒண்டி நின்று போர் செய்; நீ தனி ஒருவனாக நின்று வீமனைத் தோல்வியுறச் செய்; அந்த வெற்றிக்கு ஐவரும் அடிபணிவர். அது மட்டுமல்ல, ஆட்சி முழுவதும் உனக்கே உரிய தாகிவிடும். மிக எளிய வழி இது. சூது போரில் வெற்றி பெற்ற நீ மோது போரிலும் வெற்றி பெறுவது கடினம் அல்ல. நீ ஒரு மகா வீரனாயிற்றே” என்று தூக்கிவைத்துப் பேசினான்.

குளத்தில் நின்று இருந்த அவன் களத்தில் சந்திக்குமாறு கேட்டான். யமுனை நதியைக் கடந்து சமந்த பஞ்சகம் என்ற இடத்தை அடைந்தனர். அதற்குள் தீர்த்த யாத்திரை சென்றிருந்த மூத்தவனான பலராமனும் வில் விதுரனும் வந்து சேர்ந்தனர். அவர்களும் அக்களத்துக்கு மற்றவர்களோடு சென்றனர்.

மற்போர் தொடங்கியது; கதாயுதம் கொண்டு போர் செய்யலாம் என்று பேசி முடிவு செய்தனர். இருவரும் சம வலிவும் ஆற்றலும் உடைமையால் வெற்றி தோல்வி கண் டிலர். துரியன் வீமனை நோக்கி “உன் உயிர் நாடி எங்கே உள்ளது?” என்று கேட்டான். அவன் ஒளிவுமறைவு இன்றி “நெற்றி” என்றான்; இவன் நெற்றி அடி” ஒன்று கொடுத்தான்; வீமன் துவண்டு கீழே விழுந்தான். மறுபடியும் மூர்ச்சை தெளிந்து கதை கொண்டு தாக்கினான். துரிய னின் உயிர் நாடி எங்கே உள்ளது என்று அவனைக் கேட்டான். நெற்றியே என்று வெற்றுரை பேசினான்.

பொய் சொல்லி ஏமாற்றினான். வீமன் அவன் நெற்றியை நோக்கிக் கதை கொண்டு தாக்கினான். குருதி வெளிப்பட்டது; ஆனால் உயிர் அவனை விட்டு வெளிப் படவில்லை. அவன் சொன்னது முழுப் பொய் என்பதை அறிந்தான்.

மறுபடியும் போர் தொடங்கியது. அருச்சுனன் கண்ணனை நெருங்கித் “துரியனின் உயிர் நாடி உள்ள இடம் யாது?” என்று கேட்டான்.

“ஆயிரம் நாள் அடித்துப் புரண்டாலும் அவர்களுள் யாரும் ஒருவரை ஒருவர் வெல்ல முடியாது; நேர் முறை யில் போர் செய்தால் என்றுமே வெல்ல முடியாது; குறுக்கு வழியில் சென்றால் தான் சுருக்கமாக முடிக்கலாம்” என்றான்.

“நறுக்கு என்று உரை தருக” என்றான். அவன் ‘தொடையை அடித்து நொறுக்கினால் விடை கிடைக்கும்’ என்று கூறினான்.

விசயன் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலை விலாது உஞற்றுபவர்” என்ற குறட் கருத்தைத் தமையனுக்கு அறிவித்தான். “விதியை மதியால் வெல்லலாம்” என்று சொல்லி ஊக்கமளிப்பது போலத் தொடையைத் தட்டிக் காண்பித்தான். தம்பி தட்டிக்காட்டிய குறிப்பைக் கொண்டு தன் கதையைக் கொண்டு துரியனின் தொடைச் சதையை அடித்து அவன் வாழ்க்கைக் கதையை முடித் தான். அவன் துடித்து விழுந்து அலறினான். அந்த நிலை யிலும் முகுந்தனாகிய கண்ணனை நோக்கிக் கடிந்து பேசினான்: வீரம் இழந்து சூழ்ச்சியால் தன்னைத் தாக்கி யதாகக் குறை கூறினான்.

தனித்துப்போர் செய்ய வேண்டிய அவன் தம்பியின் சைகையைக் குறிப்பால் உணர்ந்து செயல்பட்டது விதியை மீறியதாகும் என்றான். அடித்து நொறுக்கப் பட்ட அவன் பேசிய கிறுக்கு மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்க வீமன் விரும்பவில்லை. செருக்களத்தில் உருக்குலைந்திருந்த அவன் மணிமுடியைக் காலால் இடறி மிதித்து அப்புறப்படுத்தினான். மன்னவனின் மாமுடி சிதறியது; முடியாட்சியை எதிர்த்துச் செய்த முதல் புரட்சியாக அது அமைந்தது. பலராமனின் செல்லப்பிள்ளை துரியன் ஆதலால் அவன் நெஞ்சு கசிந்து உதிரம் பெருக்கியது. பலராமன் கதாயுதப் போரை இருவருக்கும் கற்றுக் கொடுத்தவன்; விதிகளை மீறித் துரியனைத் தாக்கியது தவறு என்று தான் கலப்பை ஏந்திக் கலகம் விளைவிக்க எண்ணினான். துளப மாலை அணிந்த கண்ணன் தடுத்து நிறுத்தித் துரியன் இதுவரை செய்த அடாத செயல்களை அடுக்கிக் கூறினான்.

பாஞ்சாலியை அவமானப் படுத்தியது மாபெரும் குற்றம்; மன்னிக்க முடியாத ஒன்று; அரச அவையில் பொருளியல் பேசவேண்டிய அவன் சேலை உரியியல் பற்றி பேசியது எப்படிப் பொருந்தும்? இங்கே வட்டமிட்டு அமர அவர்கள் செய்யும் போர் கேளிக்கைப்போர் அன்று, வீமன் உரைத்த வஞ்சினம் உள்ளது; பகைமை பற்றி நிகழ்ந்த போரேயன்றி இது விதிகளைப் பேசி விளையாடும் வினை அன்று. அது மட்டுமன்று மைத்திரேய முனிவர் என்பவர் இவனுக்கு இட்ட சாபமும் உள்ளது.கானக வாழ்க்கையில் துரியனைச் சந்தித்துப் பாண்டவர்க்கு உரிய நாட்டையும் உரிமையையும் தரும்படி அவர் அறிவுரை கூறினார். அவன் தன் தொடைகளைத் தட்டிக்காட்டி வீரம் பேசினான். அப்பொழுது அம்முனிவர். இத் தொடைகளே உன் உயிருக்கு விடை தரும்; வீமன் தன் கதையால் உன் தொடைகள் முறிய நீ சாவாய்” என்று சாபம் தந்திருக்கிறார். விதியை மீறியதும் விதியின் செயலாகும்” என்று விளக்கிக் கூறினான். பலராமனும் இவற்றை எல்லாம் கேட்டுவிட்டுத் “தீமைகள் ஒன்று இரண்டு என்று இருந்தால் தட்டிக்கேட்க முடியும்; வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது உண்மையாயிற்று. முதல் கோணல் முற்றும் கோணலாயிற்று” என்ற சமாதானம் அடைந்தான். தன் முன்னேயே உயிர் நிலை பற்றி அவன் பேசிய பொய்யுரை நினைவுக்கு வந்தது. அது அவன்மேல் கொண்டிருந்த பரிவினை நீக்கியது.

அவன் குற்றுயிரும் குலையுயிருமாகக் குருதியில் கிடந்தான். காகங்களும் பருந்தும் வேகமாகப் பறந்து வந்து அங்கு வட்டமிட்டன. அவை வலம் வந்து சுற்றிச் சுழன்றன பத்திரிகைச் செய்தியாளர்களைப் போல.

போரில் வெற்றி பெற்றவர்கள் பாசறையில் இரவுப் பொழுது தங்கக்கூடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் உயிருக்கு அழிவு நேரக்கூடும் என்பதால் கண்ணன் அவர்களை அன்று ஒர் இரவு பாசறையில் படுக்கவிடாமல் தன்னோடு அழைத்துக்கொண்டு அடுத்து இருந்த கானகத்தில் அவர்களை மறைத்து வைத்தான்.

அசுவத்தாமனின் அராஜகம்

அந்தணன் அசுவத்தாமன் தன் குல ஒழுக்கத்தை மறந் தான். உயிர்களிடத்து அன்பு காட்டும் செந்தண்மையைத் துறந்தான். க்ஷத்திரியனுக்கு உரிய வீரத் தன்மையையும் இழந்தான். சராசரி மனிதனினும் கீழ் நிலைக்குச் சென்று விட்டான்.

துரியனிடம் கொண்டிருந்த பற்றும் பாசமும் நன்றி யுணர்வும் அவனை நாயினும் இழிந்த செயலைச் செய்யத் தூண்டியது. நீரில் முழுகிக் கிடந்தவனை எழுப்பிக் குருதியில் முழுகவைத்த கொடுமை அவனுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணியது. பழிக்குப் பழிவாங்கும் பகை உணர்வு உச்ச கட்டத்தை எட்டியது; அழிவுப் பாதையில் அவனைக் கொண்டு நிறுத்தியது.

அழுவதற்கும் ஆள் இல்லாமல் அலங்கோலமாகத் கிடந்த அரவக் கொடியோனை அடைந்து அங்கலாய்த்தான்.

“கண்ணன் செய்த சூழ்ச்சியால் மன்னர் சபையில் என்னைத் தவறாக உணர்ந்து பதவி கொடுக்க மறுத்தாய். படைத் தலைமை என்னிடம் ஒரு நாள் தந்திருந்தால் பார் முழுவதும் உனக்கு அடைக்கலம் ஆகியிருக்கும். வெற்றி யைக் கொண்டு வந்து உன் காலடியில் வைத்துப் பூஜித்து இருப்பேன். இன்று அந்தப் பஞ்சைகள் ஐவரையும் அவர்கள் தலைகளை எண்ணி வந்து உன் முன் காணிக்கையாக்குவேன். விடை கொடு” என்றான்.

சாகும் போதும் சங்கரனை நினையாத அத்தீயவன் சங்காரத்தை நினைத்து மகிழ்ந்தான் அழுங்கல் சகதியில் நெளியும் புழுப்போல அவன் தீய செயல்களில் உழன்றான் சாவதற்கு முன் இவ்வெற்றிச் செய்தியைக் கொண்டு வந்து சேர்க்கும்படி அன்புக் கட்டளையிட்டான்.

அசுவத்தாமன் தனக்குத் துணையாகத் தன் மாமன் கிருபனையும், யதுகுல அரசனாகிய கிருதவர் மனையும் அழைத்தான் அவ்விருவரும் முதலில் சிறிது தயக்கம் காட்டினர். பின் முக்கூட்டுச் சதியில் தம்மைக் காட்டிக் கொண்டனர்.

இரவுப் பொழுதில் கோட்டான் வலிமை பெறுகிறது. பகலில் கூகையைக் காக்கை வெல்கிறது. இரவுப்பொழுது கூகை ஒன்றே ஆயிரம் காக்கையைத் துரத்தி அடிக்கும் ஆற்றல் பெறுகிறது. எல்லாம் கால வித்தியாசம்தான். காலமும் இடமும் கருதிச் செயல்பட்டால் ஞாலமும் கைக்கு வரும் என்ற கருத்தில் நம்பிக்கை வைத்தான்.

பாண்டவர் உறங்கும் வேளை, கரங்களில் படை தொடாத நிலை. இரவுப் பொழுதில் தான் ஒருவனே தனியாகச் சென்று அவர்களைக் கொன்றுவிட முடியும் என்று திட்டமிட்டான்.

மூவரும் பாண்டவர் தங்கும் பாசறையில் நுழைய முந்தினர்; கண்ணன் ஆணையால் அங்குக் காவல் தெய்வமாக இருந்த சதுக்க பூதம் ஒன்று அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது. உள்ளே செல்வதற்கு அறம் குறுக்– கிட்டது. அதனை விலக்க முயன்றான்; சிவனை அடைந்து தவம் செய்து வில் ஒன்று வரமாகப் பெற்றான். கிருபனையும் கிருதவர்மனையும் வெளியே காவல் வைத் தான். வேகமாக உள்ளே சென்றான், சிவன் தந்த வேல் கையில் இருந்ததால் பூதம் அடங்கியது. சாத்தகியும் மற்றும் சிலர் அவனை எதிர்த்துப் போராடினர். வெறி கொண்ட அவனை யாராலும் நெறிப்படுத்த முடிய வில்லை. போரில் முறியடிக்க இயலவில்லை. திட்டத் துய்மனை அவன் தீர்த்துக் கட்டினான்.

உறங்கிக்கிடந்த பஞ்ச பாண்டவரின் வாரிசுகளான இளம் பஞ்ச பாண்டவரை உருவ ஒற்றுமையால் பாண் டவர் எனவே நினைத்து அவர்கள் தலையை வெட்டி அவர்களை மாண்டவர் ஆக்கினான்.

தலைகள் ஐந்து கிடைத்ததும் தலைகால் தெரியாமல் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து துரியன் முன் வைத்தான்; மங்கிய ஒளியில் அவற்றின் முழு வடிவத்தைக் காண வில்லை. முதிர்ந்த முகங்களை அவனால் வேறுபடுத்தி அறியமுடியவில்லை. மீசை முளைக்காத பச்சைப் பால கர்களைத் தன் இச்சைப்படி கொச்சைப்படுத்தி விட்டான்.

துரியன் கண்டான்; கதறினான்; “வமிச வாரிசுகளைப் பறித்துவிட்டாயே” என்று கண்டித்தான். “என்னுடைய மக்களையும் இழந்தேன்; “என் சகோதரர்களின் பிள்ளை களையுமா இழக்க வேண்டும்!” என்றான். தலைகளுக்குப் பதிலாக அவற்றின் நகல்களே இருந்தன. “நிகழ்காலத்தை அழிக்கலாம்; எதிர்காலத்தை அழிக்கக் கூடாது” என்றான்.

“என்ன காரியம் செய்தாய்? இளம் குருத்துகளைப் பறித்துவிட்டாயே! குருகுலத்துக்கு உரு இல்லாமல் செய்து விட்டாயே! போர் என்பது பயங்கரமானது என்பதை இப்பொழுதான் உணர்கிறேன். வீரர்கள் மட்டும் களத்தில் மாய்வது இல்லை. பெண்கள் விதவைகள் ஆகின்றனர்; குழந்தைகள் சாகின்றனர். போரைத் துண்டுகிறவர்கள் எவ்வளவு பெரியவர்களாயினும் சரி, அவர்கள் கூறும் கொள்கை எத்தகைய தாயினும் சரி, அவர்கள் மனித குலத்தில் எதிரிகள். இது சரித்திரம் கற்றுத் தரும் பாடம்”.

“விலங்குகள் கூடத் தேவை இல்லாமல் கொல்வது இல்லை; யுத்த வெறியர்கள் இதில் சிக்கிவிட்டால் தப்ப முடிவதில்லை; அழுகைக்கே அவர்களுக்கு நேரம் இல்லாமல் தொடர்ந்து உலகை அழித்து விடுகிறார்கள்”.

“அந்தணன் நீ; உன் தர்மத்தைக் கைவிட்டாய்; அடு போர் உனக்குத் தகாது; பயிர்களிடை தோன்றும் களை களைப் பறிக்கலாமே தவிரப் பயிர்களையே அழிக்கக் கூடாது; வேதம்படி; வேதபாடசாலை நடத்து; பஞ்சாங்கம் பார். கோயில் பூசை செய்; தவம் செய்; பாவத்தைப் போக்கிக்கொள்; சாதிபேதம் காட்டக்கூடாது என்ப தற்காக உன்னையும் உன் தந்தையையும் போர்க் குலத் துக்கு உயர்த்தினேன். ஆனால் நீவிர் அரச குலத்தையே ஆணிவேரோடு களைந்து விட்டீர்; என் கண் முன் நிற்காதே; எங்காவது போய்த் தொலை” என்று கடிந்து கொண்டான். அறத்தின் வேலியாக இருக்க வேண்டிய சான்றோர்களே தவறு செய்தால் பின் யார் தான் தவறு செய்ய மாட்டார்கள்?

“இளைஞர்கள் நீங்கள் உங்களை தம்பித்தான் சமுதாயமே வாழ்கிறது; அவசரப்படுகிறீர்கள், அநீதி நடந்தால் அதை எதிர்க்கிறீர்கள் நியாயம், தான்; அதற்காகச் சட்டத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது"

“பதவியில் இருக்கிறவர்கள் நாங்கள் தவறு செய்கிறோம். பயங்கரவாதம் அதற்கு மருந்து அல்ல; நீங்களும் நாங்கள் செய்த தவறுகளையே செய்கிறீர்கள். பாரத நாடு உங்களைப் போன்ற பயங்கரவாதிகள் கையில் போகக் கூடாது” என்று கூறினான்.

தன் தந்தை தாய் இவர்களின் நினைவுகள் வந்து நின்றன. தன் மனம்போன போக்கெல்லாம் வாழவிட்டுத் தடுக்காத அந்த மூடரைப்பற்றி எண்ணி வருந்தினான். “கண்கள் இழக்கலாம்; ஆனால் நல்ல அறிவை இழந்திருக்கக் கூடாது” என்று கூறி வருந்தினான்.

“அநீதிகள் எங்களோடு அழியட்டும்” என்று கூறி அவன் கடைசி மூச்சு விட்டான்.

பாண்டவர்களை அந்நியமாகக் கருதாமல் அவர்களைத் தம் சொந்த மக்களாக நினைத்து வாழும்படி தன் பெற்றோர்களை அனுப்பினான். அதுவே அவன் விடுத்த கடைசி செய்தியாக இருந்தது.

மைந்தர்களை இழந்த பாண்டவர் திக்கற்றவராகத் திகைத்து வருந்தினார்கள். அக்கணமே சென்று அசுவத் தாமனை அழித்து ஒழிப்பதாகச் சீறிச் சினந்தார்கள். அச்சுதன் ஆகிய அமலன் அவர்களைத் தடுத்தான்.

“அசுவத்தாமன் தவறு உணர்ந்து திருந்தி விட்டான் . சிவனை நினைத்துக் கொண்டு தவவழிக்குச் சென்று விட்டான். தவறு அவனுடையது. அன்று; விளைந்த போரின் விளைவு; அதருமங்களின் பூதாகாரம்”

நாம் எப்படியும் போரில் வெல்வோம் என்று ஆண வத்தோடு செயல்பட்டோம். சூழ்ச்சிகள் செய்தோம். வீழ்ச்சிகள் அடைந்தோம்; எந்தஒரு செயலுக்கும் எதிர்ஒலி உண்டாகித் தான் தீரும்” என்று கூறி அவர்களை எஞ்சி யிருக்கும் திருதராட்டிரனிடம் அழைத்துச் சென்றான்.

வீமனைப் போன்ற தூண் ஒன்று துரியன் செய்து வைத்திருந்தான். அந்தத் துணை அவ்விழியில்லாதவன் முன் கண்ணன் நிறுத்தினான்.

‘வீமனைக் காணவேண்டும்’ என்றான்.

அந்தத் துணை அவன் முன்னால் நகர்த்தினான்; இரும்புத் தூண் என்றாலும் திருதராட்டிரன் தழுவலில் அது துரும்பாக உலுத்துவிட்டது. பொடிபட்டது; அதிலே இருந்து விடுபட்ட திருதராட்டிரன் தன் செய்கைக்கு வெட்கப்பட்டான். தீமையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது. பாசம் அவனை நாசவழிக்குக் கொண்டு சென்றது.

ஆவேசத்தில் தவறு செய்ய நினைத்ததற்கு வருந்தினான். காந்தாரியையும் திருதராட்டிரனையும் தருமன் வணங்கினான்.

“அரசினை ஏற்று மக்களின் துன்பச்சுமையைக் குறைக்க வேண்டும். அது உன் கடமை” என்று கூறித் தருமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுக் கண்ணன் தன் தம்பி சாத்தகியையும் தமையன் பலராமனையும் அழைத்துக் கொண்டு துவாரகை போக முற்பட்டான்.

மக்கள் ஐவரை இழந்த பாஞ்சாலி அசுவத்தாமனைத் தக்கபடி பழி வாங்கச் சூள் உரைத்தாள். மிக்க வலிவு உடைய வீமன் அவனைத் தாக்க விரைந்தான். அவனுக்குப் பக்கத் துணையாக அருச்சுனனும் கண்ணனும் பின் தொடர்ந்தனர்.

அசுவத்தாமன் வியாசரின் பின்னர் சென்றுமறைந்து இருந்தான்; மூவரைக் கண்டு அச்சம் கொண்டு அவசரப்பட்டுத் தருப்பைப் புல் ஒன்றைக் கிள்ளி அதனை பிரம்ம அத்திரமாக மாற்றி அவர்களை நோக்கி ஏவினான். கண்ணன் கட்டளையை ஏற்று அருச்சுனன் அவ்வம் பினைத் தன் அத்திரம் கொண்டு தாக்கினான். அதுவும் பிரம்ம அத்திரமாக இருந்தது. இரண்டும் மோதிக்கொண்டால் உலகம் அழியும் என்பதால் நாரதனும் வியாசனும் அவற்றைத் தவிர்க்குமாறு வேண்டினர். திரும்பப் பெறும் ஞானம் அசுவத்தாமன் கற்றிலன். ஆகையால் அவன் செயலற்றவன் ஆகிவிட்டான், அருச்சுனன் மட்டும் திரும்பப் பெற்றுக் கொண்டான். அசுவத்தாமன் விட்ட அம்பு பாண்டவரின் வமிச வாரிசுகளைக் கருவோடு அழித்தது. அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் உதயமாகிக் கொண்டிருந்த கருவை மட்டும் கண்ணன் காப்பாற்றி விட்டான். அவனே பரீட்சித்து மன்னன் என்ற பெயரில் வாரிசாக வரமுடிந்தது.

அவன் தான் செய்த தவறுக்கு ஈடாகத் தன் சிரசில் இருந்த மணியை அறுத்து எறிந்தான். கன்னனுக்குக் கவச குண்டலங்களைப்போல அது அவனுக்குத் தற்காப்பு அளித்தது. அதை இழந்தபின் மணி இழந்த நாகம் ஆனான். அம் மணியைத் திரெளபதியின் கையில் சேர்த்தனர். அவள் ஒருவாறு சினம் அடங்கினாள். அசுவத்தாமன் சமுதா யத்தில் அனைவராலும் ஒதுக்கப்பட்டுப் பித்தம் பிடித் தவன்போல் அலைந்து அழிந்தான். கல்லெறிப்பட்டுக் கல்லறையை அடைந்தான்.

தருமன் தம்பியரின் துணையோடு பதினைந்து ஆண்டுகள் ஆட்சியை மேற்கொண்டான். அவன் பரா மரிப்பில் திருதராட்டிரனும் காந்தாரியும் ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். திருதராட்டிரன் தன் வாழ்வில் வெறுப்புற்றுக் காட்டுக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்பினான். அவனுக்குத் துணையாகக் காந்தாரியும் சென்றாள். கண் பார்வை மறுத்துவிட்ட இருவருக்கும் துணையாகக் குந்தியும் உடன் சென்றாள். சஞ்சய முனிவரும் அவர்களோடு சென்றிருந்தார். அங்கே சிலகாலம் தங்கி இருந்தார்கள்.

காட்டில் ஒரு நெருப்புப் பற்றிக் கொண்டு இவர்களைச் சூழ்ந்து கொண்டது. அதிலிருந்து தப்பித்து வாழ திருதராட்டிரன் விரும்பவில்லை. மூவரும் தீயினுக்கு இரை யாயினர்; சஞ்சயன் மட்டும் சாக விரும்பவில்லை, அவர்கள் இறுதி வாழ்வுவரை துணையாக இருந்து பின் இமயமலைச் சாரல் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.

துவாரகையில் கண்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். யாதவ குலத்துப் படைத் தலைவர் களுக்குள் கட்சிகள் ஏற்பட்டன. துரியனைச் சார்ந்தவரும் பாண்டவரைச் சார்ந்தவரும் என இரு கட்சியினர் கிளைத் தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிவைத் தேடிக் கொண்டனர்.

பலராமன் இவற்றையெல்லாம் கண்டு மனம் நொந்து யோக நிலையில் மனத்தைச் செலுத்திப் பின் உயிர் விட்டான், கண்ணன் நெருங்கியவரை எல்லாம் இழந்து பின் கால் போன போக்கில் நடந்து கடற்கரையை அடைந் தான். தானும் உயிர் வாழ்தல் தேவையில்லை என்று முடிவுக்கு வந்தவனாய்த் தரையில் படுத்தான்; உறக்கம் அவனை அனைத்துக் கொண்டது. அவ்வழியே வந்த வேடுவன் ஒருவன் அவன் கால்களை மான் குளம்புகள் என நினைத்து அம்புவிட்டு அவன் உயிரை மாய்த்தான். சாவு என்பது மேலோன் கீழோன் என்ற பேதம் காட்டாமல் சம நீதியோடு இயங்கியது.

துவாரகையில் யாதவர்கள் தம்மைத் தாம் தாக்கிக் கொண்டு அழிந்த செய்தியும், கண்ணன் மறைந்த செய்தியம் அறிந்து பாண்டவர்களும் திரெளபதியும் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் தவவாழ்க்கையில் நாட்டம் செலுத்தினர். தம் பேரப்பிள்ளையாகிய பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு இமயமலை நோக்கிச் சென்றனர்.

வழிப்பயணத்தில் ஒருவர் பின் ஒருவராக உயிர் நீத்து உலக வாழ்க்கையினின்று விடுதலை பெற்றனர் இறுதியில் தருமனும் துறக்க உலகம் சேர்ந்தான்.