நூலகங்கள்
ந.சி. கந்தையா
1. நூலகங்கள்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. நூலகங்கள்
நூலகங்கள்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : நூலகங்கள்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
நூலகங்கள்
முன்னுரை
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.”
மக்களிடையே கல்வியைப் பரப்புவதற்கு நூலகங்களும், வாசக சாலைகளும் சிறந்தனவாகும். மிகமிக முற்காலம் முதல் மக்கள் கல்வியைப் பரப்புவதற்குப் பெரிதும் முயன்று வந்தார்கள். முற்காலத்தில் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் ஒரே காலத்தில் அச்சிடக் கூடிய அச்சுப் பொறிகள் அறியப் படாதிருந்தமையால் நூல்கள் கையினால் எழுதப்பட்டன. அக்காலத்தில் நூல்கள் மிக அரிதிற் கிடைப்பனவாயும் அதிக விலையுடையனவாயு மிருந்தன. ஆகவே, செல்வர்களே பெரிதும் நூல்களைக் கூலிகொடுத்துப் படி எடுத்தும் விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்தினர். பொது மக்களுக்குக் கல்வி விரிவுரைகள் (பிரசங்கங்கள்) மூலம் அறிவுறுத்தப் பட்டது. இதனாலேயே ‘கற்றலிற் கேட்டல் நன்று’ என்னும் முதுமொழி எழுந்தது. முன்னோர் கல்வியைப் பரப்புவதில் எவ்வளவு கருத்துக் கொண்டிருந்தார்கள் என்பது பலருக்குத் தெரியாது. நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் காணப்பட்ட பழைய நூலகங்களின் வரலாற்றைப் பயில்வதால் நாம் கல்வி வளர்ச்சிக்கு நூலகங்கள் எவ்வளவு இன்றியமையாதன என்பதைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கூடும்; இன்றும் பல நூலகங்களை யும் வாசககாலைகளையும் நிறுவ ஊக்கம் கொள்ளுதலும் கூடும். இந் நூலில் அடங்கிய கருத்துக்கள் பெரும்பாலும் ஆங்கில நூல்களிலும், ஆங்கிலத் தில் வெளிவரும் திங்கள் வெளியீடுகளிலு மிருந்து திரட்டப் பெற்றவை.
சென்னை,
30.9.1948
ந.சி. கந்தையா
நூலகங்கள்
தோற்றுவாய்
இற்றைக்கு ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன் மக்களிடையே நாகரிகம் வளர்ச்சியடைந்திருந்திருந்தது. எகிப்து மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் ஆறாயிரம் ஆண்டுகளின் முன் மக்கள் எழுத அறிந்திருந்தார்கள். இதனை அந் நாடுகளிற் கிடைத்த பழம் பொருள்களிற் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அறிகின்றோம். இந்திய மக்களும் ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுத் தெழுதும் முறையை அறிந்திருந்தார்கள். என்பதைச் சிந்து வெளிப்புதை பொருள் ஆராய்ச்சியிற் கிடைத்த பழம் பொருள்களிற் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அறிகின்றோம். எகிப்திலே ஆறாயிரம் ஆண்டு களின் முன் நூலகங்கள் இருந்தன. மேற்கு ஆசியாவில் ஐயாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட நூலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அத் துணைப் பழங்காலத்தில் நூல் நிலையங்கள் இருந்தமையைப் பழம் பொருள் ஆராய்ச்சி மூலம் அறியமுடியவில்லை. இந்திய, மேற்கு ஆசிய, எகிப்திய பழைய நாகரிகங்கள் பெரிதும் ஒரேவகையனவாயிருந்தமையா லும் அக் காலத்தில் இந் நாடுகளுக்கிடையே போக்குவரத்து இருந்து வந் தமையாலும் மிகப் பழைய நூல் நிலையங்கள் இந்திய நாட்டிலும் இருந்தன எனக் கொள்ளுதல் தவறுடையதாகத் தோன்றமாட்டாது. வரலாற்றுக் காலத் தில் இந்திய நாட்டில் காணப்பட்ட நூல்நிலையங்களைப் பற்றி ஆராயின், அக் காலத்திலே கல்விநிலை இந்தியாவில் எவ்வளவு ஓங்கியிருந்த தென் பதை நாம் உய்த்து அறிந்துகொள்ளலாம். அக் காலம் வழங்கிய நூல்களிற் பெரும்பாலான மறைந்து போனமைக்குக் காரணத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.
இந்திய மக்கள் எழுதப் பயன்படுத்திய பொருள்கள்.
அலக்சாந்தரின் படை எடுப்புக்காலத்தில் இந்திய மக்கள் பூர்ஜாமரப் பட்டையில் எழுதினார்கள் என்று கேட்டியஸ் என்னும் உரோமன் வரலாற்றாசிரியர் கி.பி.நாலாம் நூற்றாண்டிற் குறிப்பிட்டுள்ளார். அக் காலப் புத்தசமய நூல்களும் பிராமணமத நூல்களும் இதைக் குறித்துப் பல்லிடங் களிற் குறிப்பிட்டுள்ளன. மரப்பட்டைகள் இரண்டரை அடி நீளமும் ஒரு சாண் அகலமும் உடையனவாக நறுக்கப்பட்டு அழுத்தம் உண்டாகும் பொருட்டு எண்ணெய் தடவப்பட்டன. ஏடுகள் நடுவிலே துளை இடப்பட்டு ஒன்றின்மீது ஒன்றாக வைத்துக் கயிற்றில் கோக்கப்பட்டன. காசுமீரத்திலுள்ள பண்டிதர்களின் நூல் நிலையங்களிலும், ஒரிசாவிலும் பிறவிடங்களிலும் இவ்வகை நூல்கள் காணப்படுகின்றன.
துணி
அரசாங்க ஆவணங்களும், தனிப்பட்டவர்களின் ஆவணங்களும் நன்கு அடித்துத் தயாரிக்கப்பட்ட துணியில் எழுதப்பட்டன என்று ஆந்திர நாட்டுப் பட்டையங்கள் கூறுகின்றன. இன்னும் கணக்கெழுதும் புத்தகங் களைச் செய்கிறார்கள். துணியின் மீது புளியம் விதைப் பசையைத் தடவி அதன் மேல் கரி பூசப்பட்டது. எழுத்துக்கள் சுண்ணாம்புக் குச்சியினால் எழுதப்பட்டன. இவ்வகைக் கையெழுத்துப் படிகள் யெசெல்மீர் (Jesalmir) முதலிய இடங்களிற் காணப்படுகின்றன.
மரப்பலகைகள்
புத்தகுருமார், மாணாக்கர் பார்த்துப் பயிலும் படி தமது போதனை களை மரப்பலகையில் எழுதினார்கள் என்று விநாயகபிடகம் என்னும் நூல் கூறுகின்றது. நாகபான என்னும் சாக (Saka) அரசன் காலத்தில் கடன் சம்பந்த மான ஆவணங்கள் மரப் பலகைகளில் எழுதப்பட்டன என்று பட்டையங் களிற் காணப்படுகின்றன. வழக்கு முறைபாடுகள் மரப்பலகைகளில் சுண்ணாம்பினால் எழுதப்படுதல் வேண்டுமெனக் கார்த்தியாயனர் (கி.மு.400) கூறியுள்ளார். அரசக் கட்டளைகள் மசிபூசப்பட்ட மரப்பலகையில் எழுதப் பட்டனவென்று தண்டி என்னும் சமக்கிருதப் புலவர் கூறியுள்ளார். இவ்வகை மரப் பலகை ஒன்று அசாமில் கண்டுபிடிக்கப்பட்டது. வடமேற்கு எல்லைப் புறங்களில் வாழும் வறிய மக்கள் சமய சம்பந்தமான நூல்களை மரப் பலகையில் சுண்ணாம்பினால் எழுதுகின்றார்கள்.
ஓலைகள்
எழுதுவதற்குப் பனையோலை பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கையெழுத்துப் படிகளால் கி.பி. நாலாம் நூற்றாண்டில் ஓலை பயன்படுத்தப் பட்டதெனத் தெரிகின்றது. புத்தருக்குப் பின் முதன்முதற் கூடிய புத்தசபை நிகழ்ச்சிகள் பனை ஓலையில் எழுதப்பட்டன என்னும் கன்னபரம்பரைச் செய்தி ஹியன்திசியாங் என்னும் சீன யாத்திரிகன் காலத்தில் வழங்கிற்று. எழுதப் பயன்படுத்தும் ஓலைகள் முதலில் உலரவிடப்பட்டன; பின்பு அவித்துத் தண்ணீரில் ஊற விடப்பட்டன; பிறகு வெளியே எடுத்துக் காய விடப்பட்டபின் கல்லினால் அல்லது சங்கினால் அழுத்தஞ்செய்யப்பட்டன. பின்பு அவை தகுந்த அளவுக்கு நறுக்கப்பட்டன. பெரும்பாலும் ஓலைச் சட்டங்களில் நீளம் ஒரு அடிமுதல் மூன்று அடி வரையும் அகலம் ஒன்றே கால் அங்குலம் முதல் நாலு அங்குலம் வரையும் இருந்தன. இவ்வேடுகளின் மீது மசியினால் அல்லது எழுத்தாணியினால் எழுதப்பட்டது. எழுத்தாணி யினால் எழுதிய எழுத்துக்கள் கரிபூசிக் கருமையாக்கப்பட்டன. இவ்வகைச் சட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி நடுவில் துளையிட்டுக் கயிற்றி னால் கோக்கப்பட்டு மேலும் கீழும் மரச் சட்டங்கள் இடப்பட்டன.
தோலும் தந்தமும்
பழங்கால மக்கள் எழுதுவதற்குத் தோலைப் பயன்படுத்தினார்கள். மத்திய ஆசியாவில் தோலில் எழுதப்பட்ட புத்தகங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அசுத்தமுடையது என்னும் காரணத்தினால் தோல் அதிகம் பயன் படுத்தப்படவில்லை. தந்தம் மிக அரிதாக எழுதப் பயன்படுத்தப்பட்டது. தந்தச் சட்டங்களில் எழுதிய நூல் ஒன்று பர்மாவில் கிடைத்துள்ளது.
உலோகத்தகடுகள்
உலோகத் தகடுகள் பழங்காலத்தில் எழுதுவதற்குப் பெரிதும் பயன் படுத்தப்பட்டன. வீட்டு நிகழ்ச்சிகளும் அரசினர் நன்கொடைகளும் உலோகத் தகடுகளில் எழுதப்பட்டன என்று சாதகக் கதைகள் கூறுகின்றன. இவ்வகை உலோகத் தகடு ஒன்று தக்க சீலத்திற் கண்டுபிடிக்கப்பட்டது. பட்டிப்புரோலு என்னும் இடத்தில் புத்தகோயில் அழிபாடு ஒன்றை அகழ்ந்த போது வெள்ளி இதழ்களில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. இலண்டன் நூதன பொருட் காட்சிச் சாலையில் வெள்ளி முலாம் பூசப்பட்டவும் வெள்ளித்தகடு மேல் இடப்பட்டவும் பனை ஓலை களில் எழுதப்பட்டவுமான நூல்கள் காணப்படுகின்றன. முற்காலத்தில் செப்புத் தகடுகள் எழுதப் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மவுரிய அரசர் காலத்தில் செப்புத் தகடுகளில் அரச கட்டளைகள் பொறிக்கப்பட்டன. புத்த சமயக் கொள்கையினராகிய புகழ் பெற்ற கனிஷ்க என்னும் சக்கரவர்த்தி சமயநூல்களைச் செப்பு ஏடுகளில் எழுதிவைக்கும்படி செய்தான் என ஹியன்திசியாங் கூறியுள்ளான். அரிய இலக்கிய நூல்களும் செப்பு ஏடுகளில் எழுதிவைக்கப்பட்டன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தாற்றப்பக்கா குடும்பத்தினர் இவ்வாறு பொறிப்பித்த இலக்கிய சம்பந்தமான நூல்கள் திருப்பதி ஆலயத்தில் உள்ளன. இவ்வாறு பர்மாவிலும் இலங்கையிலும் காப்பாற்றப்பட்ட நூல்கள் இலண்டன் நூதன பொருட்காட்சிச் சாலையில் உள்ளன. செப்புத் தகட்டு இதழ்கள் ஒரு பக்கத்தில் துளையிட்டுச் செம்பு வளையத்தில் கோக்கப்பட்டன. எழுத்துக்கள் பழுதடையாமல் இருக்கும்படி இதழ்களின் ஓரங்கள் உயரமாக்கப்பட்டிருந்தன.
கருங்கல்லும் செங்கல்லும்
கருங்கல், செங்கல் என்பவைகளும் எழுதப் பயன்படுத்தப்பட்டன. இந்திய நாட்டில் பலவகைக் கற்கள் எளிதில் கிடைக்கக் கூடியவை. இவை களில் அறக்கொடைகளும், நன்கொடைகளும் எழுதி வைக்கப்பட்டன. இவ்வகை எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்களை இந்தியா முழுமையிலும் நாம் காணலாம். அசோக சக்கரவர்த்தியும் முன்னோர் வழக்கைப் பின் பற்றியே தனது கட்டளைகளை மலைகளிலும் கற்றூண்களிலும் பொறித்தார். இலக்கிய சம்பந்தமான நூல்கள் சிலவும் கற்களிற் பொறிக்கப்பட்டன. இவ்வகை நூல்கள் சில அகப்பட்டுள்ளன. நாலாம் விக்கிரமன் என்னும் அரசனாலும் அவனுடைய அரண்மனைப் புலவர் சோமதேவராலும் செய்யப்பட்ட நாடகமொன்று இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது. அஜ்மீர் (Ajmere) என்னும் இடத்தில் சைன தலபுராணச் சுருக்கங்கள் சிலவும் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளன. அவை இராச புத்தானாவில் காணப்படுகின்றன. புத்தமதத் தொடர்பான சூத்திரங்கள் பொறிக்கப்பட்ட செங்கற்கள் பல வட மேற்கு எல்லைப் புறங்களிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலே முற்காலத்தில் காகிதம் மிக அருமையாகப் பயன் படுத்தப்பட்டது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் காகிதம் பயன்படுத்தப்பட்ட தென்பதற்கு ஆதாரமுண்டு. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காகிதக் கையெழுத்துப் படிகள் மாளவம் கூர்ச்சரம் முதலிய இடங்களிற் கிடைத்தன.
நூல்கள் எழுத மை பயன்படுத்தப்பட்டது
எழுதுவதற்கு மசி பயன்படுத்தப்பட்டது புராணங்களில் மசி பாத்திரா, மசி பாண்டா, மசி கூபா முதலிய சொற்கள் காணப்படுகின்றன. கி.பி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிர்ச்சஸ் (Nearchus) என்பார் இந்திய மக்கள் மரப் பட்டைகளிலும் துணியிலும் மசியால் எழுதுவதைப் பற்றிக் குறிப்பிட் டுள்ளார். இனி நூல் நிலையங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதைப் பற்றிப் படிப்போம்.
நூலகங்கள் அமைந்த வகை
வேத காலத்தில் நூலகங்கள் தேவைப்படவில்லை. அக் காலத்தில் கல்வி, சமயத் தொடர்பாகவும், குருக்கள் வகுப்பினருக்கு மாத்திரம் உரிய தாகவும் இருந்தது. தொழில் தொடர்பான கல்வி பரம்பரை முறையாக வந்தது. அக் காலத்தில் கல்விக்குரியவர்களா யிருந்த குருமார், ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடஞ்செய்தலாகிய முறையினால் கல்வியைப் பரப்பினார்கள். இதற்கிடையில் சாதிக்கட்டுப்பாடு வலுவடைந்தது. படிப்புப் பிராமணரின் தனியுரிமை பெறுவதாயிற்று. மற்ற வகுப்பினர் அவர் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கல்வியை மாத்திரம் பயின்றனர். இம்முறை நீண்டகாலம் நடைபெற்று வருவதாயிற்று. அப்பொழுது வேத கால இலக்கியங்கள் அதிகப்பட்டன; கலையும் விஞ்ஞானமும் வளர்ச்சி யடைந்தன. முற்காலத்திற்போல எல்லாவகை நூல்களையும் ஒருவனால் பயில்வது முடியாமல் இருந்தது. மற்றவர்களுக்குத் தனது கல்வியை அளிக்க மனமில்லாதிருந்த வித்துவான் இப்பொழுது இருவகைத் துன்பங் களுக்கு உள்ளானான். தன்கால நூல்களைப்படிப்பதற்கு அனுமதிக்கப்படா திருந்த வகுப்பினரும் பயிலும்படி எழுதி வைப்பது ஒன்று; மற்றது தலை முறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வந்தவைகளுள் ஒருவனால் மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாதவைகளை மறந்து போகும்படி விடுதல். அதிட்டவசமாக எழுதி வைக்கும் முறையே கையாளப் பட்டது. எழுதும் முறை நன்றாக அறியப்பட்டிருந்தது. அவர்கள் தமது கருத்துக்களை நூலாக எழுதினர். படித்தவர்களிடையே பெரிய மாற்றம் உண்டாயிற்று. நூல்களை எழுதி வைப்பது சமயக் கடமையாகக் கொள்ளப் பட்டது. இது காரணமாகவே இந்தியாவில் நூலகங்கள் தோன்றின. நூல்கள் அதிகமாயின. அவைகளைக் காப்பாற்றுவது முக்கியம் எனக் கருதப்பட்டது. புத்தகங்களைக் காப்பாற்றி வைப்பதற்குக் கோவில்கள் சிறந்த இடங்களாகக் கருதப்பட்டன. இவ்வாறு புத்தகங்கள் சேர்த்துவைக்கப்பட்ட இடங்கள் சரசுவதி பண்டாரங்கள் எனப்பட்டன. புத்தர் காலத்தில் நூலகங்கள் பொது வாக எங்கும் காணப்பட்டன.
கலைக்கழகங்கள்
சிறப்பாகச் சில இடங்களில் மிகப் பல நூல்கள் சேர்த்து வைக்கப்பட் டிருந்தன. அவை கோவில்கள், கல்வி கழகங்கள், மடங்கள், அரண்மனைகள் என்பன. பழைய காலத்தும் மத்திய காலத்தும் புலவர்கள் கல்விக் கழகங்களி லிருந்து ஆயிரக்கணக்கான மாணவருக்குக் கல்வி கற்பித்தார்கள். மக்க ளிடையே தோன்றியிருந்த கல்வி கற்கும் ஆர்வத்தினால் பல நூல்நிலையங் களை அமைக்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. புத்தசமயம் ஓங்கி யிருந்த காலத்தில் பல துறைகளில் கல்வி பயில வேண்டியிருந்தது. மகாயான சமயந் தோன்றியபோது மிகப் பல இலக்கியங்கள் தோன்றலாயின. ஒப்பிட்டுப் பயிலுதல் காரணமாகப் பிறமதக் கோட்பாடுகளும் கற்பிக்கப் பட்டன. நாலந்தா, விக்கிரமசீலம், ஒடதபுரி முதலிய இடங்களில் அரிய நூல்கள் அடங்கிய நூல் நிலையங்கள் இருந்தன. 12ஆம் 13ஆம் நூற்றாண்டு களில் முகம்மதிய வரலாற்று நூலாசிரியர்கள் எழுதிய குறிப்புக்களில் இந்நூல் நிலையங்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
புத்தருக்கு முற்பட்ட காலம் முதல் ஒவ்வொரு கோவிலையுடைய பகுதிகள் தோறும் கல்விக் கழகங்கள் இருந்தன. ஆண்டின் சில காலங்களில் புலவர்கள் அங்குக் கூடினார்கள் என வசிட்டர், கௌதமர், போதாயனர் முதலிய பழைய நீதி நூலாசிரியர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் கூடியது புதிய சட்டங்களைச் செய்தல், சட்டங்களை மீறுவதால் உண்டாகும் பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் என்பவைகளுக்காக வாகும். இக் கூட்டங்கள் சிறப்பாகச் சில பட்டினங்களிற் கூடின. இதற்குக் காரணம் அவ் விடங்களில் பெரிய நூல் நிலையங்கள் இருந்தமையே. கோவிற் பகுதிகளி லுள்ள நூலகங்களுக்கு அரசரும் செல்வரும் நன்கொடை அளித்தார்கள்.
காதிகா(Ghatika) எனப் பெயர் பெற்ற கல்விக் கழகங்கள், கிறித்து வுக்குப் பின் சில நூற்றாண்டுகளில் கல்விக்கு மத்திய இடங்களாக விளங்கின. காதிகா என்னும் கல்விக் கழகங்களில் சமய சம்பந்தமான தர்க்கங்கள் நடைபெற்றன. கோவிலோடு சம்பந்தப்பட்டிருந்த கழகங்களில் பலவகைக் கருமங்கள் ஆராயப்பட்டன. காதிகா என்னும் கழகங்கள் கல்வி சம்பந்தமான கருமம் ஒன்றில் மாத்திரம் கருத்துச் செலுத்தின. கடம்ப அரச பரம்பரையை நாட்டிய மயூரசர்மன், தருக்கத்தில் தேர்ச்சி அடையும் பொருட்டுக் காதிகா என்னும் கல்விக் கழகங்கள் பலவற்றுக்குச் சென்றான். கிழக்குச் சாளுக்கிய பட்டையமொன்று ஆந்திர நாட்டில் அசானுபுரத்தி லிருந்த காதிகாவைப் பற்றிக் கூறுகின்றது. இரண்டாம் நரசிம்ம வாகன் என்னும் பல்லவ அரசன் காஞ்சியில் ஒரு கழகத்தை அமைத்தான். தருக்கத் தில் வெற்றியடைந்தவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கழகங் களுக்கு நன்கொடைகளும் மானியங்களும் அளிக்கப்பட்டன. காதிகா என்னும் கழகங்களில் நூல் நிலையங்கள் இருந்தன. இது நிசாம் இராச்சியத் தில் நாகை என்னும் இடத்தில் கிடைத்த பழம் பொருள்களால் நன்கு வலியுறுகின்றது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சாளுக்கிய அரசரின் பட்டயங்கள் ‘காகித சாலை’ யைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. பட்டையத்திற் குறிப்பிடப்பட்ட வாசகசாலை, ஆறு நூல் நிலைய மேற் பார்வையாளரால் (Librarians) நடத்தப்பட்டது. நூல் நிலையம் இருந்த கட்டடமும் கண்டு பிடித்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சங்கம்
காதிகா என்னும் கழகங்கள் பொதுக்கல்வியில் கருத்தைச் செலுத்தின. தென்னிந்திய சங்கம் இலக்கியங்கள் சம்பந்தமான கல்வியை வளர்த்தது. சங்கம் என்பது புலவர்களும் கற்றவர்களும் சேர்ந்த சபை. நல்ல இலக் கியங்கள் அச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மதுரையிலிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய அரசர் அதைப் பரிபாலித்தார்கள். சங்கம் அரசரின் ஆதர வில் இருந்தமையால் சங்கத்தில் மிகப் பெரிய நூல்நிலையம் நிறுவப்பட் டிருந்தது. முகம்மதியர் ஆட்சிக் காலத்தில் டில்லியிலும் ஆக்ராவிலும் கல்விக் கழகங்கள் பல இருந்தன. ஒவ்வொரு கழகத்திலும் நூல்நிலையமும் இருந்தது. ஆகவே, சங்கத்தில் பெரிய நூல் நிலையம் இருந்ததெனக் கூறுதல் தவறாகாது. இந்நூல் நிலையத்தில் தொகுத்து வைக்கப்பட்டிருந்த பாடல் களின் தொகுப்பே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பெயர்களுடன் வழங்கும் சங்க நூல்களாகும்.
புத்தமடங்கள்
முற்கால விகாரைகளும் சங்கிராமங்களும் கல்வி வளர்ச்சி சம்பந்த மான அதிக வேலைகளைச் செய்தன. புத்த தருமங்களைப் பின்பற்றிய வர்கள் பழைய பட்டினங்களில் மடங்கள் பலவற்றை அமைத்தார்கள். அவைகளில் புத்த குருமார் தங்யிருந்து புத்த சமயத்தைப் பரப்பி வந்தார்கள். மேற்கு இந்தியாவிலே வல்லபாய் நாட்டு அரசன் ஒருவன் கி.பி. 6ஆம் நூற் றாண்டில் துத்தாவிலிருந்த புத்த மடத்துக்கு நூல்கள் வாங்கும் பொருட்டு அளித்த நன்கொடையைப் பற்றிய சான்று ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறு விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்லாதனவும், புத்தகுருமாரால் பார்த்துப் படி எழுதப்பட்டனவுமாகிய கையெழுத்து நூல்களில் மிகப் பல புத்தமட நூல் நிலையங்களில் இருந்தனவாதல் வேண்டும்.
சைன மடங்கள்
புத்த மதத்தினரைப் போலவே சைன மதத்தினரும் சைனத்துறவிகள் தங்கியிருக்கும் உபசிராயா என்னும் மடங்களைக் கட்டினார்கள். புத்த சமயத்தினரின் விகாரை, சங்கிராமங்களைப் போலவே இம் மடங்கள் சமய வளர்ச்சியின் பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் இம் மடங் களுக்கு நன் கொடை அளித்தார்கள். புத்தகங்களைப் படி எழுதும் செலவின் பொருட்டும் பலர் நன்கொடை அளித்திருக்கிறார்கள். மடங்களில் வாழ்ந்த துறவிகள் படி எழுதிய நூல்களோடு கூலி கொடுத்துப் படி எழுதப்பட்ட கையெழுத்து நூல்களும் சேர்ந்து நூலகங்களின் நூல்கள் மிகப் பெருகின. இன்றும் மேற்கு இந்தியாவிலுள்ள உபசிராயாக்களில் நூற்றுக்கணக்கான கையெழுத்து நூல்கள் காணப்படுகின்றன. ஆமதாபாத்தில் மாத்திரம் உள்ள நூலகத்தில் “ஆவாயக சூத்திரம்” என்னும் சைன நூலின் கையெழுத்துப் படிகள் நானூறு காணப்படுகின்றன.
கோவில்கள்
விகாரை, உபசிராயாக்கள் போலவே இந்தியரின் கோவில்கள் இருந்தன. கோவில்கள் கல்விக்கு மத்திய இடங்களாக விளங்கின. அங்குப் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்டு நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன. குப்த அரசர் காலத்தில் கோவில்கள் மிகப் புகழ் ஒங்கி விளங்கின. முகம்மதி யர் வடநாட்டின் மீது படை எடுத்தபோது இந்திய கலைகள் தென்னிந்தியா விலும் தக்காணத்திலும் சென்று ஒதுங்கின. கோவில்கள் அக் கலைகளைக் காப்பாற்றி வைத்துப் பின்பு அவைகளை வேகமாகப் பரவச் செய்தன. கல்வி சம்பந்தமான செய்திகளை விளக்கும் நூற்றுக்கணக்கான பட்டையங்கள் கிடைத்துள்ளன. தென்னிந்திய கோவில் அமைப்பில் பல மண்டபங்கள் உண்டு. நடன மண்டபம், புராண மண்டபம், விரிவுரை (வியாக்கியான) மண்டபம் என்பன அவற்றுட் சில. விரிவுரை மண்டபத்தில் இலக்கணம் கற்பிக்கப்பட்டது. புராண மண்டபத்தில் புராணம் பயிலப்பட்டது. ஒவ்வொரு கோவில்களிலிருந்த ஆசிரியர் மாணவர்களைப் பற்றியும் அவர் களின் கடமைகளைப் பற்றியும் பட்டையங்கள் கூறுகின்றன. திருபுவனத்திற் கிடைத்த பட்டையமொன்று அங்குப் பல ஆசிரியர்களும் 360 மாணவர் களும் இருந்தார்கள் என்று கூறுகின்றது. எண்ணாயிரம், திருமுக்கூடல் முதலிய இடங்களிலும் இவ்வகையான அமைப்புகள் இருந்தன. திருமுக் கூடலில் ஒரு கலாசாலை, ஓர் உணவுச்சாலை, ஒரு மருந்துச்சாலை இருந் தனவென்று பட்டையங்களிற் காணப்படுகின்றது. ஆந்திர தேசத்திலே சிரீசைலம் , திராக்சராம, தந்தரம், திரிபுராந்தகம் முதலிய இடங்களிலும் இவ் வகை அமைப்புக்களிருந்தன. இக் கோவில்களில் பல்வகை நூல்களடங்கிய நூலகங்கள் இருந்தன. நூலகங்களுக்கு நூல்களை உதவுவது செல்வரின் கடமை என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு கோவிலிலும் நூல் நிலை யங்கள் இருந்தன என்று நாம் துணிதற்கு மேற்கூறியவை சான்றுகளாகும்.
மடங்கள்
கோவில்கள் பொது முறையான கல்வியைப் பரப்பின. சங்கரர், இராமனுசர், மத்வர் போன்றவர்கள் சார்பில் தோன்றிய மடங்களில் அந்தந்த மதத்தலைவர்களின் கொள்கை சம்பந்தமான கல்வி கற்பிக்கப்பட்டது. இவைகளோடு பாசவ,சைத்தனிய மதக் கொள்கைகளைப் பரப்பும் மடங்களும் எழுந்தன. சிரிங்கேரி, துவாரகை, பூரி, காசி, காத்தியவார், பாடாரி முதலிய இடங்களில் சங்கரர் மடங்களை அமைத்தார். மேல்கோடு, மன்னார்கோயில் அகோபிலம் முதலிய இடங்களில் இராமனுசர் மடங்கள் உள்ளன. மத்வர் உடுப்பியில் ஏழுமடங்களைத் தொடக்கினார். மாத்வரின் கொள்கையைப் பின்பற்றுவோர் பிற்காலங்களில் பல கிளை மடங்களைக் கட்டினர். பாசவ மதத்தினர் கர்நாடகத்தில் பல மடங்களைத் தோற்றுவித்தனர். 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளில் தாகல (Dahala) நாட்டினின்றும் கோலகி (Golagi) மடத்தினர் தெற்கே வந்து சோழ, கேரள அரசருடையவும் ஆந்திர நாட்டுக் காகத்தியருடையவும் ஆதரவைப் பெற்றுக் காளமுகம் என்னும் சிவமதத்தின் ஒரு வகைக் கொள்கையைப் பரப்பினர். இவர்கள் மந்தரம், புட்பகிரி, திரிபுராந்தகம், திருப்பரங்குன்றம், மதுரை, செய்யூர், தேவிகாபுரம் முதலிய இடங்களில் மடங்களை அமைத்தனர். இம் மடங்களில் வேதாந்தக் கொள்கை தொடர்பான கையெழுத்துச் சுவடிகள் காணப்படுகின்றன. பெல்லகம்வி(Balagamvi)யிலுள்ள கோடியா (Kadiyad) மடத்தில் வேதாந்தம், குமாரா, பாணினி, சாகதாயனர் முதலியோரின் இலக்கணங்கள், தரிசனங்கள், யோகம், புராணம், இதிகாசம்,தர்மசாத்திரம் முதலிய பாடங்கள் மாணவ ருக்குக் கற்பிக்கப்பட்டன. பள்ளிக் கூடங்கள் போன்று பயனளித்த மடங் களில் நூல் நிலையங்கள் இருந்தன என்பது உண்மையாகும். திருவாடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களிலும் பழைய நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன.
அரண்மனைகள்
முற்கால இந்திய அரசர் கல்வியை ஆதரித்து வந்தார்கள். அது அவர்களின் கடமைகளுள் ஒன்றாக விருந்தது. கனிஷ்க, ஹர்ஷ முதலிய புத்த மதப்பற்றுடைய அரசர்களும் கல்வியை ஆதரித்தார்கள். குப்த அரசர் காலத்தில் கல்வி, சமய விழிப்புகள் உண்டாயின. அப்பொழுது புலவர் களுக்கு அதிக ஆதரவு உண்டாகியிருந்தது. குப்தர் காலப்பட்டையங்கள் பெரும்பாலும் அரசர்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அரசனுடைய பெருமை அவன் செல்வத்தின் அளவுக்கு இருக்கவில்லை; அவன் அரண்மனையை அலங்கரித்த புலவர்களின் எண் அளவுக்கு இருந்தது. மத்திய கால இந்திய வரலாறு புலவர்களின் ஆதரவைப் பற்றிய வரலாறாகவே இருக்கின்றது. வடநாட்டில் முகம்மதியர் படை எடுப்பு இருந்தபோது இந்திய கலைகள் தக்காணம், காசுமீரம், நேபாளம் முதலிய நாடுகளில் தஞ்சம் புகுந்தன. அரசர் பலர் புலவர்களாக விளங்கினார்கள். கல்வியிற் சிறந்த பலர் அரசர் அரண்மனையில் இருந்தார்கள். கி.பி. 1000 முதல் 1500 வரையில் தக்காணம் கல்விக்குப் பொற்காலமாக விளங்கிற்று. போசன் அரண்மனையிலும் சாளுக்கிய அரசர் அரண்மனையிலும் காணப் பட்ட நூலகங்களைக் கொண்டு அரசர் அரண்மனைகளில் நூலகங்கள் இருந் தனவென்று துணியலாம். அரண்மனையிலுள்ள கல்வி மண்டபத்தில் புல வர்கள் பல கருத்துக்களை வாதித்தனர்; வெற்றியாளருக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. விசயநகர அரண்மனைப் புலவராகிய சிரிநாத என்பவர் பொன்முழுக் காட்டப்பட்டார். கல்வி மண்டபங்களில் வாதங்கள் புரிவதற்கு நூலகங்கள் இன்றியமையாதன. பழைய நூலகங்களைப் பற்றிக் குறிப்பிடும் பட்டையங்கள் சிலவே கிடைத்துள்ளன. முகம்மதிய படை எழுச்சிக் காலங்களில் நேர்ந்த அழிவு வேலைகளால் அவை மறைந்தனவாகலாம். மொகலாய சக்ரவர்த்தி ஒருவன் தான் தினமும் குளிக்கும் வெந்நீரை ஏடு களை எரித்துச் சுடச் செய்தல் வேண்டுமெனக் கட்டளையிட்டான். பாஸ்கர சம்கிதை என்னும் நூல் நூலகங்களில் நூல்கள் எவ்வாறு வைக்கப்பட்ருத்தல் வேண்டுமெனக் கூறுகின்றது. நூலகம் அழகாக அமைக்கப்பட்ட கட்டிடத் தில் இருத்தல் வேண்டும். துணியால் சுற்றிக் கயிற்றினால் கட்டப்பட்டபின் நூல்கள் இரும்புத் தட்டுகள் மீது நீளப் பக்கமாக ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட நூலகங்கள் மேற் பார்வைக்காரனின் கவனிப்பில் இருந்தன. நூல்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவது மாத்திரமல்லாமல் படிப்பவர்களுக்கு வேண்டிய உதவி அளிப்பதும் அவன் கடமையாக விருந்தது. நூலகத்தை மேற்பார்ப்பவன் பலவகை நூற்கல்வியிலும் தேறியவனாக விருந்தான்.
இந்து நூலகங்கள்
புத்தர் காலத்துக்கு முன் பல நூலகங்களும் கலாசாலைகளும் இருந்தன.
தக்கசீலம்: புத்தர் காலத்துக்கு முன் இந்தியாவில் விளங்கிய பெரிய கலாசாலைகளுள் ஒன்று தக்கசீலத்தில் இருந்தது. கௌதமபுத்தர் முதலியோர் இக் கலாசாலையிலேயே கல்வி பயின்றனர். அர்த்த சாத்திரம் செய்த கௌடலியரும் இக் கலாசாலையிலேயே பயின்றார். ஜப்பான், கொரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலிருந்து வந்த மாணவரும் இக்கலா சாலையிற் கல்வி பயின்றனர். நூல்களைப் படியெழுதும் பொருட்டுப் பெரிதும் பிற நாட்டார் இங்குத் தங்கியிருந்தார்கள். தக்கசீலத்தில் நூலகமும் கலாசாலையும் கி.மு.600 முதல் கி.பி. 40 வரையில் இருந்தன.
காசி: தக்க சீலத்துக்கு அடுத்தபடியிலுள்ளது காசி. இது புனித இட மாகக் கொள்ளப் பட்டமையால், இங்குப் பல வித்துவான்களும் மாணவரும் தங்கியிருந்தனர். இன்றும் காசியில் கல்விபயிலும் மாணவர் உயர்வுடையவர் களாகக் கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு பண்டிதரிடத்தும் பலநூல்கள் இருந்தன. மாணவர் அவைகளைப் படி எழுதிப் பயன்படுத்தினர். இவ்வாறு காசியிலிருந்து படி எடுத்துக்கொண்டு வரப்பட்ட கையெழுத்து நூல்கள் பல ஆந்திர நாட்டில் உள்ளன. குறிக்கப்பட்ட ஒரு கலையில் தேர்ச்சி பெறுவ தற்கு ஒரு மாணவனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன.
காசுமீரம்: காசியைப் போலவே காசுமீரமும் கல்விக்கு இருப்பிடமா யிருந்தது. காசுமீரத்தில் சாரதாபீடம் என்னும் பேர் போன கல்விக்கழகம் ஒன்று இருந்தது. இது தமிழ்ச் சங்கத்தைப் போல நூல்களின் தகுதிகளை நோக்கி அவைகளுக்குத் தமது ஏற்றுக்கொள்ளுதலை அளித்தது. காசுமீரத் தில் இன்றும் சிறந்த கையெழுத்து நூல்கள் உள்ளன. பழைய சாரதாபீடம் பெரிய நூலகமாக விளங்கிற்று.
நாட்டிலிருந்த நூலகங்கள்: கல்விச்சாலைகள், தனிப்பட்டவர்களின் வீடுகளல்லாத பட்டினங்கள் கோவில்களிலும் நூல்கள் சேர்த்து வைக்கப் பட்டன. பீசப்பூர் அவ்வகை இடங்களில் ஒன்று. முகம்மதியர் காலத்தின் முன் அது வித்தியாபுரம் என்னும் பெயர் பெற்றுக் கல்வியை வளர்த்து வந்தது. மேற்குச் சாளுக்கிய அரசனாகிய கலியான் இங்கு அழகிய கட்டட மொன்றை அமைத்தான். நூல்கள் சேர்த்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட கட்டடத்தின் அழிபாடு இன்றும் காணப்படுகின்றது. இவ்வகை அழிபாடு காணப்படும் இன்னொரு இடம் நாகர் கோட்ஸ். பிரோப் தக்லாக் என்னும் சுல்தான் இவ்விடத்தைச் சூறையாடினான். சிவலாமுகியில் மிகப் பல இந்து நூல்கள் இருக்கின்றன வென்று கேள்வியுற்ற சுல்தான் அங்குச் சென்று சிறந்த நூல்களைத் தெரிந்துதெடுத்து அவைகளைப் பாரசீக மொழிப் படுத்துவித்தான்.
அரசரின் அரண்மனைகள்: அரசர்களின் அரண்மனைகள் கல்வியையும் நூல் நிலையங்களையும் வளர்க்கும் இடங்களாக விருந்தன. கற்றாரை ஆதரிப்பது இந்து அரசரின் கடமையாகவிருந்தது. பழங்காலப் புலவர்கள் வரலாறுகளால் எவ்வாறு புலவர்கள் அரண்மனைகளை அலங் கரித்தார்கள் என்றும், வாதங்களில் வெற்றி பெற்றார் எவ்வாறு சன்மானிக்கப் பட்டார்கள் என்றும் அறிகின்றோம். பல நூல்கள் அரசரின் ஆதரவு பெற்று எழுதப்பட்டன. அரசரிற் பலர் புலவர்களாக விளங்கினர். அவர்கள் தமது காலத்தும், தமக்கு முன்னும் தோன்றிய இலக்கியங்களைத் திரட்டி வைத் திருந்தார்கள். பழைய நூலகங்களைப் பற்றிச் சில சான்றுகளே உள்ளன. இராச்சியங்களோடு நூலகங்களையும் முகம்மதியர் அழித்தமையே இதற்குக் காரணம். மத்திய கால நூல் நிலையங்களுட் சிறந்தது போச ராசனுடையது.
இன்று இந்திய அரசர்களின் அரண்மனைகளில் நூலகங்கள் காணப் படுகின்றன. இவை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவன. பிக்கநேர், ஜம்மு, மைசூர், தஞ்சாவூர், செயப்பூர் நேபாளம் முதலிய இடங் களிற் காணப்படும் நூல்நிலையங்களே இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். ஜோட்பூர்(Joput) அரண்மனை நூலகத்தில் 1800 கையெழுத்து நூல்களும் பல அச்சிட்ட நூல்களும் உள்ளன. பிக்கநேரில் 2000 கையெழுத்து நூல்கள் உள்ளன. நேபாளத்தில் 5000-க்கு மேற்பட்ட கையெழுத்து நூல்கள் உண்டு. தஞ்சாவூர் நூல் நிலையம் காசுமீர நூல் நிலையத்துக்கு ஒப்பானது. தஞ்சாவூர் நூல் நிலையம் 16ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசரால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வரசர் நூறு ஆண்டுகளாகப் பல நூல்களைச் சேர்த்தார். தஞ்சாவூரை வெற்றி கொண்ட அரசரும் பல புதிய நூல்களைச் சேர்த்து வைத்தனர். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரட்டி இங்கே வைக்கப்பட்ட கையெழுத்துப் படிகளின் எண்ணிக்கை 18000. இந் நூலகத்தின் மதிப்பு ஏழரை இலட்சம் என மதிக்கப்பட்டுள்ளது. நிசாம் இராச்சியத்திலும் பிறவிடங்களிலும் தலைமுறை தலைமுறையாக வரும் தனிப்பட்டவர்களின் நூல் நிலையங்கள் காணப்படுகின்றன.
புத்தமத நூலகங்கள்
புத்தமதம் ஓங்கியிருந்தபோது கல்வி சம்பந்தமான நிலையங்கள் மிக ஆதரவு பெற்றிருந்தன. புத்த சமயக் கொள்கைகள் பிறநாடுகளிற் பரவினமையால் புத்த சமயத்தைத் தழுவிய ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய நாட்டுக்கு யாத்திரை செய்தார்கள். கற்றவர்கள் மிகக் கௌரவிக்கப் பட்டமையால் உயர்தரக் கல்விக்கு அதிக மதிப்பிருந்தது. இதனால் பல விடங்களில் கலாசாலைகளும் நூல் அகங்களும் தோன்றின. யாத்திரிகர் அக்காலக் கல்வி முறையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். புத்த துறவிகள் சமயச் சட்டங்களையும் நீதிச்சட்டங்களையும் பலகைகளில் எழுதினார்கள். செல்வர்களின் குடும்பச் செய்திகள் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன. நூலகங்களும் கல்விச்சாலைகளும் உள்ள இடங்களிலேயே புத்தமதம் பரவியிருந்தது. நாலந்தாவில் கல்வி அரசரின் ஆதரவு பெற்றிருந்து, பிற்கால குப்தர் அங்கு மடங்கள் அமைத்து அவைகளுக்கு மானியம் வழங்கினார்கள். ஹியன்திசியாங் என்னும் சீன யாத்திரிகன் காலத்தில் அரசன் நாலந்தாக் கலாசாலைக்கு நூறு கிராமங்களின் வருவாயை மானியமளித்தான். இற்சிங் (Itsingh) என்னும் சீனயாத்திரிகன் நாலந்தாவிலிருந்து பல சமக்கிருத நூல் களைச் சேகரித்தான்; ஹியன்திசாங் 650 கையெழுத்துப் படிகளைக் கொண்டு சென்றான். அழிபாடுகளை வெட்டிச் சோதித்த போது கிடைத்த செப்புப் பட்டையமொன்றில் தேவபாலா என்னும் வங்காள அரசன் புத்த சமயம் சம்பந்தமான நூல்களைப் படி எழுதுவதற்கு அளித்த மானியத்தின் விபரம் காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் நாலந்தா மடத்தில் இருந்தார்கள்.
விக்கிரம சீலம்: நாலந்தாக் கலாசாலையில் அன்னிய நாட்டினர் வந்து தங்கிக் கல்வி பயின்றார்கள். விக்கிரம சீலம் அரசரால் அமைக்கப்பட்டது. அங்கு அரசரின் உயர்ந்த கருமக்காரர் புலவருக்குப் பட்டம் வழங்கினார்கள். திபெத்திய வரலாறுகள் இக் கல்விச்சாலையைப் பற்றிய பல செய்திகளை விளக்குகின்றன. இங்குள்ள கல்விச் சாலைக்குத் தருமபாலர் என்னும் அரசன் கி.பி.9ஆம் நூற்றாண்டில் தளமிட்டான். இக் கலாசாலை நானூறு ஆண்டுகள் நடைபெற்றது. இது ஆறுபேர் அடங்கிய சபையால் நடத்தப் பட்டது. இச் சபைக்குத் தலைவர் சமய குருவாகவிருந்தார். அங்கு ஆறுகலா சாலைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் 108 ஆசிரியர்கள் இருந்தார்கள். அக் கட்டடம் மதிலாற் சூழப்பட்டு 8000 மக்கள் தங்கக் கூடிய விசாலமுடையதா யிருந்தது. இக் கலாசாலைகளுக்கு அயலே நூல்நிலையமொன்றிருந்தது.
நமது நாட்டிலே கையெழுத்துப் படிகள் சேகரித்து நூல் நிலையங் களில் வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையங்கள் பாரதி பண்டாரம் அல்லது சரசுவதி பண்டாரம் எனப்பட்டன. அவை கோவில்களோடும் அரண்மனை களோடும் இணைக்கப்பட்டிருந்தன. பானா (கிபி.620) தமக்குச் சொந்தமாக ஒரு நூலகத்தை அமைத்திருந்தார். ஹியன்திசியாங் ஏராளமான நூல்களை 20 குதிரைகளில் ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் கிபி. 640இல் வல்லாபி புரத்தை அடைந்தபோது அங்குப் பெரிய நூல் நிலையமிருந்தது. அந் நிலையத்தின் புகழ் சீனாவில் எட்டியிருந்தது. சித்திரமதி, தினமதி என்னும் இரண்டு புத்த துறவிகள் சீனாவுக்கு அழைக்கப்பட்டார்கள். சிரமணபுண் ணியோ பாயா என்பவர் 1500 நூல்களை இந்தியாவிலிருந்து சீனாவுக்கு எடுத்துச் சென்றார். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் விளங்கிய போசனின் அரண்மனையில் பெரிய நூல் நிலையமிருந்தது. சயசிம்ஹதேவ சித்தராச என்னும் சாளுக்கிய சக்கரவர்த்தி மாளவத்தை கி.பி. 1140இல் வென்றபோது அன்கில்வாட் பட்டினத்துக்கு (Anhilvad patan) அதனை எடுத்துச் சென்றான். குசராத்திய சாளுக்கியர் காலத்தில் பல நூல் நிலையங்கள் இருந்தன. எமசந்திராச்சாரியாரும் அவர் மாணவரும் பல நூல்களைச் சேகரித்துப் படி எடுத்துச் சைன கோவிற் பண்டாரங்களில் வைத்தார்கள்.
கி.பி. 1200இல் புத்தகம் படி எடுப்பது கலையாக வளர்ச்சியடைந்தது. முகம்மதிய படை எடுப்பாளரின் அழிவு வேலைக்குப் பிற்பாடும் கம்பேயி லுள்ள சைன நூல் நிலையத்தில் 30,000 கையெழுத்து நூல்களும் தஞ்சாவூர் நூல் நிலையத்தில் 12000 நூல்களும் இருக்கப் பூலர் (Buhler) கண்டார். 1186-க்கும் 1400-க்கு மிடையில் இந்தியாவில் பெரிய அழிவு வேலை நடை பெற்றது. அக் காலத்தில் நூற்றுக்கணக்கான நூல் நிலையங்கள் அழிந்து போயின. அவைகளிலிருந்து மறைந்துபோன நூல்கள் இலட்சக் கணக்கில் ஆகலாம். சீனர் அச்சிடும் வகையை கி.மு.202இல் கண்டுபிடித்தார்கள். ஐரோப்பாவின் யோவன் கூதன்பர்க் (Johan Gotenberg) என்பவன் அச்சுப் பொறியைக் கண்டுபிடித்தான். சுருள் வகையில் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் கி.பி. 868இல் வெளியாயிற்று. இது கூதன்பர்க் பைபிளை அச்சிடு வதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி.
இந்தியாவுக்கு அச்சியந்திரம் 1566ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போர்த்துக்கேயரால் முதன் முதல் கொண்டுவரப்பட்டது. அது இராக்கோல் (Rockol) என்னுமிடத்திலுள்ள சேயின்போல் கலா சாலையில் அமைக்கப் பட்டது. சிவாசி மகாராசா ஓர் அச்சுப் பொறியை அமைத்தார். அதில் வேலை செய்விக்க முடியாமல் இருந்தமையால் அவர் அதை 1674இல் விற்றார்.
1712இல் டானிய பாதிரிமார் ஐரோப்பவிலிருந்து ஒரு அச்சுப் பொறியைக் கொண்டு வந்து தரங்கம்பாடியில் நாட்டினார்கள். அவர்கள் போர்த்துக் கேய மொழியில் பல நூல்களை வெளியிட்டார்கள். அவர்கள் கிறித்துவ மத சம்பந்தமான தமிழ்ப் புத்தகம் ஒன்றைத் தமிழில் வெளியிட் டார்கள். இந்திய மொழியில் அச்சிடப்பட்ட முதற்புத்தகம் இதுவே. இவ்வச்சு நிலையம் 1715இல் பைபிளின் புதிய ஏற்பாட்டை வெளியிட்டது.
இக்கால நூலகங்கள்
நூலகங்கள் கல்விகற்ற வித்துவான்கள் பயன்படுத்துவதற்கு மாத்திரம் உரியதென ஒரு காலத்தில் கருதப்பட்டது. இப்பொழுது அவை படித்தவர்க் கும் படிக்க விரும்புகின்றவர்க்கும் உரிய இடமாகக் கொள்ளப்படுகின்றது.
இலண்டன் மாநகரிலுள்ள நூலகம் ஏனை நூலகங்களை விடச் சிறப்பு வாய்ந்தது. அங்கு 20,00,000 அச்சிட்ட நூல்களும் 56,000 கையெழுத்து நூல்களும் உள்ளன. மற்றைய நூலகங்களிற் காணப்படுவன போன்ற சிறிய நூல்கள் இக் கணக்கில் அடங்குவனவல்ல. அவைகளையும் சேர்ப்பின் நூல்களின் எண் 50,00,000 வரையிலாகும். இங்கிலாந்தில் அச்சிடப்படும் நூல்களில் 3,400 படிகள் ஆண்டுதோறும் சேர்க்கப்பட்டு வருகின்றன.
கையெழுத்துப் படிகள் கிறித்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டு முதல் இன்று வரையும் உள்ளவை. இவைகளுள் பைபிரஸ் தாளில் எழுதப்பட்ட கிரேக்க நூல்கள் சிறப்புடையன. இலண்டன் பொருட்காட்சிச் சாலையிலுள்ள நூலகத்தில் சென்று நூல்களைப் படிப்பதற்கு ஒருவன் 21 வயதுக்கு மேற்பட்டவனாயிருத்தல் வேண்டும்; அவனிடத்தில் அனுமதிச் சீட்டும் இருத்தல் வேண்டும்.
கல்கத்தாவிலுள்ள சமக்கிருத கலாசாலையில் 1652 சமக்கிருதக் கையெழுத்து நூல்களும் 2769 சமக்கிருத அச்சு நூல்களும் உள்ளன. அங்கு சைன மதக் கொள்கைகள் தொடர்பான கையெழுத்து நூல்களும் உள்ளன. 1781இல் தொடங்கப்பட்ட அராபிய நூல் நிலையத்தில் 731 அச்சிட்ட நூல்களும், 143 (மூலம்) கையெழுத்து நூல்களும் 151 படி எழுதிய நூல்களும் உள்ளன.
திப்புச் சுல்தானின் நூலகத்தில் 2000 கையெழுத்து நூல்கள் இருந்தன.
அமெரிக்காவில் பல நூல் நிலையங்கள் உண்டு. 1000 பெரிய நூல் களுக்கு மேலுள்ள நூல்நிலையங்கள் 5,383 வரையில் 1900இல் அமெரிக்கா விலிருந்தன. 1910இல் 10000 வரையிலிருந்தன.
காங்கிரஸ் நூல் நிலையம் 1800இல் வாஷிங்டனில் ஆரம்பிக்கப்பட் டது. இதை 1814இல் ஆங்கில போர்வீரர் தீ மூட்டி எரித்தார்கள். பின்பு 1851இல் புதிய நூலக மொன்று தொடக்கப்பட்டது. அங்கு 20000 நூல்கள் இருந்தன. அவை தீக்கு இரையாயின. அதன் பின் தொகுக்கப்பட்டவை 26,00,000 நூல்கள்.
இன்றுள்ள நூல் நிலையக் கட்டடம் 1897இல் அமைக்கப்பட்டது. அதன் பரப்பு மூன்றரை ஏக்கர். அதில் நாற்பதி லட்சம் நூல்களை வைக்க லாம். அதின் விலை நிலம் உட்பட 70,00,000 டாலர். இதுவே உலகம் முழுமையிலும் உள்ள நூலகக் கட்டடங்களிற் பெரியது.
கன்னிமரா நூலகம்
கன்னிமரா நூலகம் சென்னையில் எழும்பூரில் நூதன பொருட்காட்சிச் சாலைக் கட்டிடத்திலுள்ளது. இங்கு உத்தேசமாக ஒரு இலட்சம் நூல்கள் வரையில் உள்ளன. இங்கு பலதுறை நூல்கள் உண்டு. ஆகவே மாணவரும், ஆசிரியரும், ஆராய்ச்சியாளரும் இந் நூலகத்தைப் பயன்படுத்துவர். இந் நூலகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றது. நானூறு முதல் ஐந்நூறு பேர் தினம் இந் நூலகத்துக்குச் செல்கின்றனர். இங்கு நூல்களே யன்றிப் பல நாள். திங்கள், வார வெளியீடுகளும் வரவழைக்கப்படுகின்றன. பழைய படிகள் புத்தக வடிவில் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. இந் நூலகத் துக்கு அங்கத்தவராவதற்கு இருபது ரூபா கட்டணம் செலுத்த வேண்டும். அங்கத்தினின்று விலக விரும்பினால் அப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அங்கத்தவர்கள் நூல்களை இரவல் பெற்றுச் செல்லலாம். திருவல்லிக்கேணியில் பல்கலை கழக நூல் நிலையமொன்றுள்ளது. இங்கும் கன்னிமரா நூல் நிலையத்திலுள்ள நூல்கள் அளவு உண்டு. இது பொதுமக்க ளுக்குத் திறந்துவிடப்படவில்லை. பட்டதாரிகள் கலாசாலை மாணவர்களே இந் நூலகத்திற் பயன்கொள்வர். இன்னோர் நூலகம் அடையார் தியாச பிஸிட் சங்கத்தினர் கட்டடத்திலுள்ளது. இங்கும் அரிய பல நூல்கள் உள்ளன.
அயல் நாட்டுப் பழைய நூலகங்கள்
எகிப்து
எகிப்திலே எடிவ் என்னும் இடத்தில் நூலகம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அந் நிலையத்தின் அறைகள் ஒன்றில் நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களின் பெயர்கள் நிரையாக எழுதப்பட்ட பைபிரஸ் சுருள் ஒன்று காணப்பட்டது. இந் நூலகம் கி.மு.4000 வரையில் அமைக்கப்பட்டது. எகிப்திலே வரலாறு எழுதி வைக்கும் வழக்குப் பழமையுடையது. பரோவா என்னும் எகிப்திய அரச பரம்பரைக்கு முற்பட்ட அரசரின் வரலாறுகள் தொடர்பாக எழுதிக் காப்பாற்றப்படலாயின. அரசரின் வரலாறுகளை எழுதும் புலவன் படை எடுப்புக் காலங்களில் அரசரோடு போர்க்களஞ் சென்று வெற்றிகளின் தன்மைகளை எழுதினான். கி.மு.2500 வரையில் வரலாறு எழுவது சிறந்த கலையாகக் கருதப்பட்டது. கி.மு. 2500 முதல் எகிப்திய புலவர்கள் தங்கள் அரசரை வரிசைப்படுத்தி எழுதி அவர்களிருந்த காலத்தையும் குறிப்பிட்டார்கள். நிகழ்ச்சிகள் இன்ன அரசன் காலத்தில் இன்ன ஆண்டு எனக்குறிப்பிடப்பட்டன.
சுமேரியா
எகிப்திய நூலகத்துக்கு அடுத்த படியில் முதலாம் சார்கன் அக் காட்டில் நிறுவியிருந்த நூலகம் பழமையுடையது. கி.மு.2700இல் சுமேரியாவில் பெரிய நூல் நிலையங்கள் தோன்றியிருந்தன. தெல்லோ என்னும் நகரில் ஒன்றின்மேல் ஒன்றாக ஒழுங்குபடுத்தி அடுக்கப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் காணப்பட்டன. கி.மு.2000 வரையில் சுமேரிய வரலாற்றாசிரியர்கள் கழிந்தகால வரலாறுகளை எழுதி வைத்தார்கள். இவ் வரலாற்றில் பாபிலோனிய அரச பரம்பரையை விளக்கும் பகுதிகள் வந்துள்ளன.
பாபிலோனியா
பாபிலோனியாவில் தெல்லோ, இலாகாஷ், நிப்பூர் முதலிய இடங் களில் நூல் நிலையங்கள் இருந்தன. நூல்கள் சாடிகளில் ஒழுங்காக இட்டுத் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அந் நூலகங்கள் அழிந்து போயின. போர்சிப்பா என்னும் இடத்திலிருந்த நூல் நிலையம் மிகப் பெரியது.
அசீரியா
அசுர்பானிப்பால் (கி.மு.673) என்னும் அசீரிய அரசன் பெரியநூல் நிலையமொன்றை நிறுவினான். அந் நிலையத்திலிருந்த நூல்கள் போர்சிப்பா, கூதா, அக்காட், ஊர், எரெக், இலார்சா, நிப்பூர் முதலிய இடங்களி லிருந்த நூல்களைப் பார்த்துப் படி எடுக்கப்பட்டவை. அசுர்பானிப்பாலின் அரண்மனையிற் காணப்பட்ட 30,000 களிமண் ஏடுகள் பாபிலோனிய மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிவதற்கு ஆதாரமாயுள்ளன. தென் சிரியாவில் களிமண் ஏடுகள் அடங்கிய நூல்நிலையமொன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காலம் கி.மு.1300 வரையில்.
அலக்சாந்திரியா நூல்நிலையம்
எகிப்துவிலிருந்து பைபிரஸ் தாள்கள் கிடைப்பதன் முன் கிரீசில் புத்தகங்கள் மிகக் குறைவாயிருந்தன. கி.மு.7ஆம் நூற்றாண்டு முதல் பைபிரஸ் தாள்கள் கிரீசுக்கு அனுப்பப்பட்டன. அதற்கு முன் நூல்கள் தோல் களில் அல்லது மரச் சட்டங்களில் எழுதப்பட்டன. அக் காலத்தில் பைபிரஸ் என்னும் நாணல் நைல் ஆற்றங்கரையை அடுத்த சதுப்பு நிலங்களில் மண்டி வளர்ந்தது. கிறித்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளின் முன் நாணல் தண்டுகளைப் பிளந்து நீளமாகச் சேர்த்து ஒட்டித் தாள் செய்யப்பட்டது. அத் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டன. கிரேக்கர் பைபிரஸ் தாள்களைப் பற்றி அறிவதற்கு நீண்ட காலத்துக்கு முன் தொட்டு எகிப்தில் அவை பயன் படுத்தப்பட்டன.
கி.மு.ஏழாம் நூற்றாண்டில் பைபிரஸ் தாள்கள் சுருள் வடிவில் கிரிசுக்கு அனுப்பப்பட்டன. இது அவர்கள் முன் எழுதப் பயன்படுத்திய பொருள்களைவிட வாய்ப்புடையதாயிருந்தமையால் புத்தகங்கள் அதிகப்பட்டன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஹோமரின் நூல்களும் அவர் காலத்திற்குப் பிற்பட்ட நூல்களும் பைபிரஸ் தாள்களில் எழுதப்பட் டிருந்தன. அவை சந்தைகளில் விற்கப்பட்டன. கி.மு.407இல் எழுதாத ஒரு பைபிரஸ் சுருளின் விலை மூன்று ஷிலிங் வரையிலிருந்தது. அப்பொழுது மக்கள் நூல் நிலையங்களை வைத்துக்கொள்ள விரும்பினார்கள். யூரிபிடிஸ் (Euripides) என்பவன் மிகப் பல பைபிரஸ் சுருள் வடிவான நூல்களை வைத்திருந்தான். பிளாட்டோ (lato) நாலாம் நூற்றாண்டில் தத்துவ சாத்திரக் கலாசாலையை நிறுவியபோது அங்கு ஒரு நூல்நிலையத்தையும் அமர்த்தினார். இதனிலும் பெரிய நூல் நிலையம் அரிஸ்டோட்டிலின் பள்ளிக் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
அலக்சாந்தரின் மரணத்தின் பின் (கி.மு.323) அவருடைய தளபதிகளி லொருவனான தாலமி எகிப்துக்கு அரசனானான். இத் தாலமிக்குப் பின் வந்த அரசரும் தாலமி என்னும் பெயரால் அறியப்பட்டனர். பைபிரஸ் தாள்களைச் செய்யும் தொழிற்சாலைகள் அரசாங்கத்திடம் இருந்தன. ஆகவே, கிரேக்கர் எகிப்திய அரசாங்கத்திலிருந்து தமக்கு வேண்டிய பைபிரஸ் தாள்களைப் பெற வேண்டியிருந்தது. அக்காலத்தில் தாலமியே மிகச் செல்வமுடையவனாயிருந்தான். அவன் மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளிற் கிடைக்கக் கூடிய நூல்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கினான். பைபிரஸ் தாள்கள் அதிகம் இருந்தமையால் அவன் பழைய புத்தகங்களைப் படி எடுத்தான்; புதிய புத்தகங்களை மக்களிடையே பரவச் செய்தான். அலக்சாந்திரியாவில் பெரிய நூலகமொன்று நிறுவுதல் வேண்டுமென்னும் விருப்பம் அவனுக்கு உண்டாயிற்று. எண்ணியாவாறே அவன் அங்கு மிகப்பெரிய நூலகமொன்றை நிறுவினான். கிரேக்க அரசர்கள் இந் நூலகத்துக்குப் போட்டியாகத் தாமும் ஒன்றை அமைக்க முயன்றனர். அவர்கள் எகிப்தியரின் தாள் செய்யும் தனியுரிமையைச் சிதைக்க விரும்பி ஒருவகை மெல்லிய தோலைத் தாளாகப் பயன்படுத்தினர். ஆயினும் கிரேக்க உரோமன் உலகத்தில் கிறித்துவ காலம் வரையில் பைபிரஸ் புத்தகங்கள் எழுதப் பயன்படுத்தப்பட்டது. அலக்சாந்திரியாவில் தொடங்கப்பட்ட நூல் நிலையம் மியூசியம் என்னும் கோயிலோடு இணைக்கப்பட்டிருந்தது. மியூசியம் என்னும் சொல் கிரேக்கில் மோசெ அன் (moursaion) எனப்பட்டது. இதற்குப் பாடற் பெண் கடவுளின் கோயிலேன்று பொருள். கிரேக்கரால் நடத்தப்பட்ட எல்லாச் சங்கங்களின் மத்தியிலும் ஒரு தெய்வம் அல்லது பல தெய்வங்கள் இருந்தன. பிதகோரிய விடுதிகளில் அக் கூட்டத்துக்குரிய தெய்வங்களிருந்தன. அதென்சிலிருந்த அரிஸ்டோட்டிலின் பள்ளிக் கூடத்தில் தெய்வங்களுக்குக் கோயிலிருந்தது. தாலமி கிரேக்கக் கல்வி, விஞ்ஞானம் சம்பந்தமான கல்விக் கழகத்தை அமைத்தபோது அவன் அதனைக் கோயிலோடு தொடர்புபடுத்துவது இயல்பேயாகும். அவனுடைய அரண்மனையில் இருந்தவர்களுள் அதிகாரமுடைய ஒருவன் கிரேக்கி னின்றும் தப்பி ஓடிச்சென்றவனும் அரிஸ்டோட்டிலின் மாணவனுமாகிய டெமெற்றியஸ் என்பவன்.
தாலமியால் தொடக்கப்பட்ட வேலை அவனது மகன் தாலமி பிலாடெல்பஸ்(Ptolemy Philadephus கி.மு.285-247) காலத்தில் முற்றுப் பெற்றது. இவனுக்கு விலங்குநூல், இலக்கியம் என்பவைகளில் மிக்க விருப்பம் இருந்தது. நூலகத்தை மேற் பார்ப்பவன் குருமாருள் தலைவனாயிருந்தான். கிரேக்க நாட்டிலுள்ள தத்துவ சாத்திரிகள் எல்லோரும் இக் கல்விக் கழகத்தின் உறுப்பினராயினர். பிலாடல்பஸ் மரணமானபோது நூலகத்தில் 4,00,000 கலந்த சுருள்களும், 90,000 கலப்பில்லாத சுருள்களுமிருந்தன. ‘கலந்த’ என்பவைகளில் ஒன்றுக்கு அதிகமான நூல்கள் வரையப்பட்டிருந் தன. கி.மு.50இல், நூலகத்திலிருந்த நூல்களின் எண் 7,00,000. அலக்சாந்திரியா வில் இன்னொரு சிறிய நூலகமுமிருந்தது. அதில் 42,800 சுருள்கள் இருந்தன.
அலக்சாந்திரியாவிலிருந்த நூல்களுக்கு என்ன விளைந்தது என்று தெரியவில்லை. கி.மு.47இல் சீசர் எகிப்திய கப்பல்களுக்குத் தீ வைத்தபோது அந் நூலகம் எரிந்து போயிற்று என்று நம்பப்படுகின்றது. சிறிய நூலகம் கிறித்துவ மதத்தினரால் கி.பி.391இல் அழிக்கப்பட்டது. கி.பி.642இல் அமரு என்னும் முகம்மதிய தளபதி அலக்சாந்திரியா நூல்நிலையத்துக்குத் தீயிட்டான்.
உரோம்
உரோமில் முதல் நூலகம் கி.மு.168இல் நிறுவப்பட்டது. அது மசெ டோனியா அரசருடைய நூல் நிலையத்திலிருந்து வெற்றிப் பொருளாகக் கொண்டு வரப்பட்ட நூல்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆகஸ்தஸ் என்பார் பலனதன் அட்டோவியன் என்னும் பெயருடைய இரண்டு நூல் நிலையங்களை அமைத்தார். கான்ஸ்தாந்டைன் பைசாந்தியத்தில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தார்.
உரோமில் தனிப்பட்டவர்கள் தமது மாளிகைகளில் நூல் நிலை யங்கள் வைத்திருந்தனர். சிலரிடத்தில் ஆயிரக் கணக்கான நூல்கள் இருந்தன. இளையபிளினி என்பார் எழுதிய நூல்களில் இரு நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. அவைகளுள் ஒன்றேனும் இன்று காணப்படவில்லை.
சீனா
சீனாவில் அரசாங்க நூல் நிலையங்களும் பிற நூல் நிலையங்களு மிருந்தன. சீனச் சக்கரவர்த்தி ஒருவன் வரலாற்றாசிரியர்கள் எழுதிய நூல் களை எல்லாம் தீயிலிட்டுக் கொளுத்தும்படி கட்டளையிட்டான். சாத்திர சம்பந்தமான சில நூல்கள் எரிக்காமல் தடுக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட நூல்கள் அரசாங்க நூலகத்தில் வைக்கப்பட்டன. அரசினர் அனுமதி பெற்று மாணவர் அவற்றைப் படிக்கக்கூடியதாகவிருந்தது. அக்கால நூல்கள் மூங்கிற் சட்டங்களில் எழுதப்பட்டவை. ஆகவே, அவை மிகவும் பாரமுடை யன. புத்தகங்களை எரிக்காது காப்பாற்றத் துணிந்தவர்கள் பல தொல்லை களுக்குள்ளானார்கள். பல நூல்கள் கைப்பற்றப்பட்டன. 400 பேர் மரண தண்டனை அடைந்தனர். கன்பியூசியஸ் எழுதிய நூல்களைச் சிலர் மனப் பாடஞ் செய்திருந்தார்கள். மற்றவர்கள் கேட்டு மனப்பாடஞ்செய்யும்படி அவர்கள் அவைகளைச் சொன்னார்கள். அவ்வரசன் இறந்தபின் நூல்கள் மறுபடியும் பரவலாயின; ஆனால், அவைகளில் பல தவறுகள் நுழைந்தன.
சீனரின் அரசாங்க நூல் நிலையத்தில் 3,123 இலக்கியங்கள், 2,705 தத்துவ சாத்திரங்கள், 1,318 பாடல் நூல்கள், 2,668 கணித நூல்கள், 869 மருந்து நூல்கள் 790 போர் நூல்கள் இருந்தன. 18ஆம் நூற்றாண்டில் புலவர் பாடல் களைத் தொகுக்கும்படி மஞ்சு அரசன் கட்டளையிட்டான். 2,300 புலவர்கள் பாடிய 48,900 பாடல்கள் அடங்கிய முப்பது நூல்கள் தொகுக்கப்பட்டன. அப்பொழுது நூலகத்தில் 54,000 நூல்கள் இருந்தன.
பாக்டாட்
பள்ளிவாசல்கள் முசிலிம் மக்களின் கலைக் கழகங்களாகவிருந்தன. அங்கு நடக்கும் விரிவுரைகளைக் கேட்க எல்லா இடங்களிலிருந்தும் மாணாக்கர் வந்து கூடினர். சமயம், தத்துவம், ஞானம், மருந்து, கணிதம் போன்ற பொருள்கள் பற்றிய விரிவுரைகள் நடத்தப்பட்டன. அராபி மொழி வழங்கும் நாடுகளில் ஆங்காங்கிருந்த பேர்போன ஆரிசியர்கள் தாமே முன் வந்து விரிவுரைகளை நிகழ்த்தினார்கள். திறமையுடைய ஆசிரியர்களுக்கு விரிவுரையைக் கேட்கும் மக்கள் சிறிய ஊதியமளித்தார்கள். அராபி மொழியிலிருந்து இலத்தினில் மொழிபெயர்க்கப்பட்ட கணிதம் விஞ்ஞானம், வான சாத்திரம், மருந்து, கிரேக்க தத்துவ சாத்திரம் முதலியவைகளையே மத்திய கால ஐரோப்பா அறிந்திருந்தது. அரபு மொழியிலிருந்து இவ்வகை யில் வந்த நூல்கள் பதினாறாம் நூற்றாண்டளவில் பள்ளிக் கூடங்களில் பயிலப்பட்டன. சாத்திர சம்பந்தமான கிரேக்க நூல்கள் பெரும்பாலும் அரபுமொழியில் திருப்பப்பட்டிருந்தன. பாக்டாட்டில் பல நூல் நிலையங்கள் இருந்தன. மனும் (Manum) என்னும் கலிபா பாக்டாட்டில் அமைத்த விஞ்ஞான மண்டபத்தில் பெரிய நூலகமும் வான ஆராய்ச்சி செய்யும் உயர்ந்த கட்டடமும் (observatory) இருந்தன.
முற்கால நூல் நிலையங்களின் இலக்கு
முற்காலத்தில் நூல்கள் அரிதிற் கிடைப்பனவாயிருந்தமையால் அவை இறந்து படாது நிலை பெறுதற் பொருட்டு ஓரிடத்திற் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. அந் நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டிருந்த நிலையங்கள் இக்கால வாசகசாலைகள் போன்று பயன்அளித்தன என்று கூறுதல் இயலாது. நிலையங்களில் பெரும்பாலும் பழைய நூல்களே இருந்தன. அவைகளிலிருந்து நூல்கள் இரவல் கொடுக்கப்படவில்லை. இக்கால நூல் நிலையங்களின் நோக்கம் முற்றிலும் வேறாகவுள்ளது. பொதுமக்கள் நூல்களைப் பயின்று அறிவு வளர்ச்சியுற வேண்டுமென்பதே இக்கால நூல்களின் நோக்கமாகும்.
நமது நாட்டின் கல்வி நிலை
நமது இந்திய நாட்டில் நாற்பது கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர் களில் நூற்றுக்குப் பதின்மூன்று பேரே கல்வியறிவுடையவர்களாயிருக் கின்றனர். ஏனைய 87 பேரும் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாயிருக்கின் றனர். மேற்குத் தேசங்களில் நூற்றுக்கு மூன்று பேரே கல்வியறிவில்லாதவர் களாயிருக்கின்றனர். படித்தவர்களுக்கும் படியாதவர்களுக்குமுள்ள வேறுபாடு மனிதருக்கும் விலங்குகளுக்குமுள்ள வேறுபாடு போல்வது எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்”
கல்வி யறிவில்லாமையினாலேயே மக்கள் நமது நாட்டில் மாக்க ளாகவும் பிற நாடுகளில் கல்வியறிவுள்ளமையால் மக்களாகவும் வாழ் கின்றனர்.
கல்வியைப் பரவச் செய்வதற்கேற்ற வழிவகைகள்
1
நகரங்களிலும் கிராமங்களிலும் அங்கங்கேயுள்ள மக்களின் தகுதிக்கும் அளவிற்கும் ஏற்றவாறு பலதிறப்பட்ட நூல்களைத் தொகுத்து வைத்து வேண்டியோர்க்கு வேண்டுஞ் சமயத்து எளிதினுதவி யறிவைப் பரவச் செய்வதே நூல் நிலையப் பிரசாரத்தின் முக்கிய நோக்கம். அறிவு பெருகி வளர்தற்கு நூல்களைக் காட்டிலும் சிறந்த கருவி இல்லை என்றே கூறலாம். ஆசிரியர்கள் பாற் கற்பது ஒரு சிறிதளவாகவே எப்போதும் இருத்தல் கூடும்… கல்வியெனப்படுவது கற்கும் மாணவன் நூல்களைத் தானே சிந்தித்து ஆராய்ந்து துணிவதன் பயனாகவே அமையுமென்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்ததாம். ஆகவே,பிறருதவி வேண்டாது ஓதியுணர் வதற்குரிய நூல்கள் மக்களிடையே பரவப் பரவ, கல்வியும் பரவி அஞ் ஞானமும் அகன்றொழியு மென்பது கூறவேண்டா”.
பொதுமக்களனைவரது உள்ளத்தையும் கவருமாறு நகரம், ஊர், சிற்றூர் முதலிய பலவிடங்களிலும் நூல் நிலையங்கள் பல அமைக்கப்பெறுதல் வேண்டும். மக்களின் விருப்பத்தையும் சௌகரியத்தையும் தகுதியையும் நோக்கி அவர்களுக்கு ஏற்ற புத்தகங்களைக் கொடுக்கவேண்டும். அவர் களுக்கு நூல்களில் கவர்ச்சி உண்டாதற் பொருட்டு அவற்றின் நயங்களை விவரணப் பத்திரிகைகள் மூலம் வெளியிடுதல் வேண்டும். பரந்துபட்ட அறிவின் பல்வேறு பகுதிகளைப் பற்றிப் புதுப்புது நூல்கள் வெளிவர வெளிவர அவற்றையெல்லாம் பொதுமக்களிடையே பரக்க விதைத்தல் வேண்டும். கல்வியறிவு இன்றியமையாததாகுமென்பதை வற்புறுத்திக் கூறி, அதனையடைதற்குச் சாதனமாகுங் கருவி நூல்களைக் குறித்து உபந் நியாசங்கள் செய்து வரல் வேண்டும். சுருங்கக்கூறின் அரசியலின் நெறிப் பட்ட ஒரு நாட்டிற் பலதிறத்தானும் உத்தம வாழ்வு வாழ்தற்கு வேண்டும். கல்வியறி வனைத்தையும் நூல்கள் மூலம் உதவி வர எல்லா வகையானும் முயற்சி செய்வதே நூல் நிலையங்கள் மேற்கொள்ளுதற்குரிய தனிப்பெருங் கடமையா யுள்ளது.
இந்நூல் நிலையங்கள் பலதிறத்தனவாயிருத்தலே தக்கதென்பது வெளிப்படை. குழந்தை முதல் முதியோர் வரையிலுமுள்ள அனைவர்க்கும் கல்வியூட்டுதற்கென நூல் நிலையங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தப் பெறுதல் மிக அவசியம். இவைகளேயன்றிக் கல்வித் துறைகள் பலவற்றிற்குத் தனித்தனியேயுரிய நூல் நிலையங்களும் மிகப் பலவாக நிறுவப்பெறுதல் இன்றியமையாதது. மேலும், பற்பல கல்வித் துறைகளிலும் ஆராய்ச்சிக் கெனத் தனித் தனியாயமைந்த நூல் நிலையங்கள் பல தாபிக்கப் பெறுதலும் தக்கதேயாகும். பிற்கூறிய இரண்டு வகை நூல் நிலையங்களும் சர்வகலா சங்கங்களாலும் கலாசாலைகளாலும் நிறுவப் பெறுதற்குரியனவென்பது கூறாமலே அமையும்.
மேலே விவரித்தன போன்ற நூல் நிலையங்கள் நாடெங்கணும் நிரம்புதல் வேண்டும். நமது நாட்டிலே நீடித்துக் குடிகொண்டிருக்கும் அறியாமையைக் கால்தரிக்க வொட்டாது வெட்டுதல் வேண்டும். அறிவுச் சுடரின் பேரொளி நமது நாடெங்கும் பரந்து வீசுதல் வேண்டும். அறிவின் மூலமாய் ஒற்றுமை மிகுதல் வேண்டும். அறிவு சிறந்து ஒற்றுமை மிக்கு நம்ம வர்கள் நல்லின்ப நெறியில் நிற்றல் வேண்டும். இத்தகைய நோக்கங் கொண்டே நூல் நிலையப் பிரசாரம் நிகழ்ந்து வருகின்றது.”
ஒரு குறை
நமது மொழியில் சில இலக்கண இலக்கியங்களும் சமய நூல்களுமே யுள்ளன. இந் நூல்கள் இலக்கிய முறையில் மிக மிகச் சிறப்புடையன வென்பது உண்மையே. இக் கருத்தினைப் பாரதியாரும்,
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கஞ் செழிக்கச் செய்வீர்
என்னும் பாட்டினால் நன்கு உணர்த்தியுள்ளார்.
மேல்நாட்டு மொழிகளில் பற்பல அறிவுத்துறைகளில் செவ்விய நூல்கள் வெளி வந்துள்ளன. இவ்வாறு பிற மொழிகளில் வெளிவரும் அரிய நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன. அதனால் ஆங்கில மொழி அறிவு நூல்களின் களஞ்சியமாக விளங்குகின் றது. மக்கள் அறிவுத் துறையில் பயிலவேண்டிய நூல்கள் ஆங்கில மொழியில் இருப்பதால் ஆங்கிலம் பயிலும் கட்டாயம் உண்டாகின்றது. ஆங்கில நன் மக்கள் தம் மொழியில் எவ்வாறு அறிவு நூல்களைப் பெருக்கிக் கொண் டார்களோ அவ்வாறே நாமும் பிறமொழிகளிலுள்ள அறிவு நூற்பொருள் களைத் தமிழில் எழுதி வைத்தல் வேண்டும்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்1
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும். பாரதியார்
தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச்சாலை
சர்வகலா சாலையைப் போல் எங்கும் வேண்டும்
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்
அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூல்கள்
அழகியவாம் உரைநடையில் அமைந்த நூல்கள்
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலைசேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.
- பாரதிதாசன்