Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

பொதுமணித்திரள்
ஒளவை துரைசாமி



பொதுமணித்திரள்


1. பொதுமணித்திரள்
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. புரட்சிக் கவிஞன் வாழ்க!
7. நாற்பது ஆண்டுகட்கு முன் நான் கண்ட மணிமொழியார்
8. அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு
9. வியப்பிறந்த மேன்மையர்
10. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்…
11. புலமைப் புரவலர்
12. அருள் திரு. விபுலானந்த அடிகள்
13. அருள்திரு. விபுலானந்த அடிகள் மறைந்தது குறித்துப் பாடியவை.
14. பாராட்டற்குரியது
15. கன்றும் உதவும் கனி
16. முன்னணியில் நிற்பவர்
17. தலைமையானவர்
18. நிலையான அறிஞர்
19. தமிழன்னையின் தனிப்பெருந் தொண்டர்
20. முத்தமிழ்க் காவலன் கவிதை
21. எழுத்தாளர் மன்றம்
22. வள்ளலார் கண்ட வள்ளன்மை
23. பாரத சமுதாய ஒருமை நலம்
24. விஞ்ஞானம்
25. எழில் உருவம்
26. பண்டிதமணியின் மாண்பு
27. சித்தாந்தப் பேராசிரியர்
28. கரந்தைக்கவியரசு மறைவு
29. வாணிக மந்திரம்
30. சுந்தரகாண்டம் முதற்பகுதி(மாதிரிப்பதிப்பு) மதிப்புரை
31. வாழ் நாள்
32.கருவிலே வாய்த்த திரு
33. ஞானியார் சுவாமிகள் பொன்விழாப் பாராட்டுரைகள்
34. இருபெரும் தமிழறிஞர்கள்
35. செய்தி மடலில் ஓர் இனிய காட்சி
36. உயிர்களின் நுண்ணறிவு
37. அருள் விருந்தளிக்கும் அழகரடிகள்


பொதுமணித்திரள்

 

ஒளவை துரைசாமி

 

 


நூற் குறிப்பு
  நூற்பெயர் : பொதுமணித்திரள் (கட்டுரைகள்)
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 23
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 280 = 304
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா.190/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

பொதுமணித்திரள்(கட்டுரைகள்)

புரட்சிக் கவிஞன் வாழ்க!


சுமார் அறுநூற்றைம்பது ஆண்டுகட்கு முன் நம் தமிழ் நாட்டுத் தில்லை நகரின் கண் ஒரு புரட்சிக்கவி தோன்றினார். அவருடைய புரட்சியுள்ளம் சைவ சமயத் துறைக்கண் சென்றது. அக்காலத்தே அது வேண்டியிருந்தது போலும். அவரைக் கொற்ற வன் குடி உமாபதி சிவனார் என்று கூறுவர். அவர் காலத்துக்கு முன்பும் பின்பும் சைவ உலகில் பௌராணிக சமயமும் வேறு பல சமயங்களும் புகுந்து உண்மையறிவுக்கு ஒவ்வாத பல கருத்துக் களை நாட்டிற் புகுத்திப் பெருங் கலக்கத்தை விளைவித்தன. அக் கலக்கத்திலின்றும் மக்களைத் தெளிவுறுத்தற்கு எளிய முறையில் அமைந்த தமிழ் நூல்கள் மிகச் சிலவே இருந்தன. அவையும் பழமைக்கண் வேட்கையும், புதுமைக்கண் வெறுப்புமுடைய மக்களால் புறக்கணிக்கப்பட்டன. பலரும், பழமையான நூல்கள் குற்றமில்லாதன; புது நூல்கள் பலவும் குற்றமுடையன என்றனர். மக்களும் தமக்குப் பகுத்தறிவென்ப தொன்றுண்டென வுணராது, பலர் புகழின் தாமும் புகழ்வதும், இகழ்வாராயின் இகழ்வதும் செய்து திரிந்தனர். இதனைக் கண்ட கொற்றவன் குடியார், மக்கள் அறிவு பெற்றிருந்தும் அதனைப் பயன்படுத்தாது அடிமையால் மடிகின்றன ரேயெனக் கண்டு,

“தொன்மைய வாமெனு மெவையும் நன்றாகா இன்று, தோன்றிய நூலெனு மெவையும் தீதாகா” என அறிவுறுத்தி, பகுத்தறிவில்லாத மக்களைத் “தவறுநலம் பொருளின்கண் சார் வாராய்ந்திடுதல் இன்மையினார்” என்றும், அவர்கள். ஒன்றைக் கண்டு பலரும் புகழ்ந்தால் தாமும் அதைப் புகழ்வர்; இகழ்ந்தால் தாமும் இகழ்வர் என்பார், “தவறுநலம் பொருளின் கண் சார்வா ராய்ந்தறிதல் இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர், ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர்” என்றும், இவர் அறிவால் வறியரா வர் என்பார், “தமக்கென ஒன்று இலரே” என்றும் கூறினார்.

இவருக்குப் பின் பல நூற்றாண்டு கழிந்தும் நம் நாட்டில் “தமக்கென ஒன்று இலர்” எனப்பட்ட மக்களே நிரம்புவாராயினர். சாதி சமயங்களின் பெயரால் மக்கட் குழுவில் உயர்வு தாழ்வுகளும் கருத்துப் பிளவுகளும் பல்கின; அதனால் தமிழரினம் சூறையிற் பட்ட பஞ்சுத் துய்போலப் பல்வேறு வகையில் சிதறித் தனித்துப் பிறர்க்கு அறிவு ஆண்மை பொருள் முதலிய துறையின் பிற்பட்டு அடிமையாய் போயிற்று. தமிழன் பிறருடைய அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் தனித்து நிற்கும் சிறப்பிலன் என்பார் போலத் தமிழ் மொழி, வடமொழி முதலிய மொழிகளின் நீங்கித் தனித்தோங்கும் சிறப்பில்லாதது என்றெல்லாம் பலரும் கூறத் தொடங்கினர். தமிழ்ச் சான்றோரும் தமக்கென வொன்றிலராய் அவர் வழி யொழுகுவதே நெறியெனக் கொண்டனர். அந்நெறி அண்மையில் தோன்றிய பாரதியாரையும் விட்டிலதென்பதை “ஆரியநாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக” என்று பாடுதலாலும் துணியலாம். இன்றும் தமிழ் நாட்டுச் சட்டசபை உறுப்பினர் தமக்குரிய தலைவரைத் தாமே தேர்ந்து கொள்ளும் தகுதியிலரென அவர்தம் மேலதிகாரக் குழுவினர் கருதுவதும், பல்வகையால் அலைப்பதும், தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழ் முதன் மொழியாக இல்லாமையும் போதிய சான்றுகளாகும்.

இந்நிலையில் மக்களது நல்லறிவையெழுப்பி அவர்களை ஒடுக்கி நிற்கும் தடைகளையுணருமாறு பண்ணும் ஒருவரைத் தமிழகம் எதிர்பார்ப்பதாயிற்று.

முன்னாளில் தமிழகத்தில் மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அறிவு நெறிகளை வழங்குந் தொழிலை மேற் கொண்டிருந்தவர் இனிய கவி வழங்கும் புலவர்களேயாவர். நாட்டில் ஏரி குளங் களைப் பெருக்கி, நீர் நிலைகள் மிகுவித்தோரும், போர்வரின் அஞ்சாது சென்று பொருது வென்றி மேம்படுவித்தோரும் புலவரே யென்பதைத் தமிழகத்தின் வரலாறு காண்போர் நன்கறிவர். இடைக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள், மக்கள் நலத்தைப் போற்றுவதிலும் தம்மை யாதரித்த வள்ளல்களின் புகழ் பாடுவதே செயலெனத் தொண்டாற்றியதனால் தம் தலைமை நிலையை இழந்தனர். இந்நாளில் அவர்கள் மீளத்தலையெடாவாறு பிற மொழியும் பிற தொடர்புகளும் மேம்படலாயின. ஆயினும் மக்கள் தம்மைத் தமிழரென்றும் தமது தொன்மை நலம் இதுவென்றும் மெல்லத் தெரிந்து கொண்டனர். தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப் பணியின் தவறு நலங்களைப் பகுத்தறியலானார்கள். அவர்களிடையே பாரதிதாசனார் போலும் தகவுடைய கவிகள் தோன்றலாயினர். அவருட் பாரதிதாசனார் தலைமையிடம் பெற்றுத் திகழ்கின்றார்.

இக்காலத்தே தோன்றும் கவிகள் உலகில் பிறந்து நிலவும் மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்குரிய நெறிகளைக் காண்பதும், அந்நெறிகட்குத் தடையாயிருப்பவற்றின் கொடுமைகளையுருப் படுத்தி மக்கட்கு உணர்த்துவதும் கடமையாகக் கொண்டுள்ளனர். இதுகாறும் மக்கள் வாழ்க்கைக்கு மேம்பட்ட தேவ வாழ்க்கை களும், மக்களியல்புக்கு அகப்படாத வாழ்க்கைகளுமே கவிகளால் பெரிதும் பாட்டுருவிற் காட்டப்பட்டு வந்தன. அவற்றின் அறிவு, மக்களை ஒருசிறிதும் முன்னேற்ற வில்லை. “வையத்து வாழ்வாங்கு வாழ்வதே வாழ்வு” எனத் திருவள்ளுவர் முதலிய சான்றோர்கள் அறிவுறுத்திய செய்தி மக்கட்கு நன்கு உணர்த்தப்படவில்லை. இக்குறைபாட்டால் தமிழரினம் தலைமையிழந்து இன்றைய தாழ்நிலை எய்திற்று. இந்நிலை இக்காலப் புலமையுள்ளத்தைப் பணி கொள்வதாயிற்று. ஆகவே இக்கவிகள் பலவும் இம்மை வாழ்வின் செம்மை நிலை குறித்தே அழகிய கருத்துக்களை வழங்குவதற்குரிய கருக்கொள்ளுவ வாயின.

உரிய காலம் நன்கு வாயாதிருந்த காலம், இராமலிங்க அடிகள் காலம். எனினும் அவருள்ளம் தமிழரினத்தைக் கெடுக்கும் தடைகளையும் தளைகளையும் தகர்த்தெறியப் பெரும்பாடுபட்டுள்ளது.

“குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது, நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார்” என்பது முதலிய கருத்துக்கள் அவரால் வெளிவரலாயின. அக் காலைத் தமிழரினத்துப் பிளவுகளையும் பிரிவுகளையும் தமக்குப் பயன்படுத்தி கொண்ட தன்னலக் கூட்டம் பெரும் போர் உடற்றிற்று. பின்னர்த் தோன்றிய பாரதியார் காலத்தில் உரிமைப்போர் நிலவுவதாயிற்று. அக்காலம் ஓரளவு பயன்படுவது கண்ட புலமை யுள்ளம் பாரதியாரைப் பணி கொண்டது. அவரது முயற்சி நாட்ட வரை அரசியலுரிமைப் பேற்றில் வேட்கை மிகுவித்துக் கற்றார் கல்லார், ஆடவர் - பெண்டிர் அனைவரையும் ஓரளவு ஒருசேரத் தொகுக்கத் தலைப்பட்டது. அவ்வாறு மக்கள் தொகுவதைக் கண்ட தன்னலக் கூட்டம் அத்தொகுதிக்குட் புகுந்து, தன் செல்வாக்கால் தலைமையேற்றுத் தமிழரினம் ஒருமையுறுவதற்குத் தடையாயுள்ள வற்றைப் போக்கும் முயற்சியை விடுத்துத் “தேசியம்” என்ற போலிப் போர்வை கொண்டு மூடி, ஒற்றுமை யெய்தாமைக்குரிய கொடுமைகளை யுள்ளுற வளர்த்து வருவதாயிற்று. இது புலமை வரலாறு.

கவிபாடும் புலமையுள்ளம் இக்கால வெள்ளத்தைக் கண்ட வண்ணம் இருந்தது. மேனாட்டுப் போக்கு வரவும் கலையறிவும் புலமையுள்ளத்துக்குத் துணிவும் ஆக்கமும் பயந்தன. கொக் கொக்கக் கூம்பியிருந்த தமிழ்க் கவி, வேற்றுமைக் கொடுமைகளாம் மீனினத்தைக் குத்தியண்டு தேக்கெறியும் செவ்வி இதுவெனத் தெளிந்து தன் செயலைச் செய்யத் தொடங்கிற்று. தாழ்ச் சமூக ஊழல்களையும் - தடைகளையும் - தளைகளையும் தமிழ்க் கவியுள்ளம் நன்கு கண்டு பாட்டுருவில் எடுத்துக் காட்டலுற்றது. இப் பாட்டுகள் பாரதிதாசனார் பாடும் பாட்டு; அவருள்ளம் பண்டைத் தமிழ் வாழ்வின் செம்மை யுணர்ந்து இன்றை வாழ்வின் இழிவு கண்டொறுக்கும் எழிலுள்ளம்.

இவர் காணும் தமிழரினத்தை ஒரு சிறிது காட்டி என்பணியை நிறைவு செய்வேன். தமிழ் மகன் ஒவ்வொருவனும் சஞ்சீவி பருவத்தின் சாரலில் தோன்றும் குப்பன்; தமிழ்மகள் அவனோடு போந்து அறிவு கொளுத்தும் வஞ்சி. சஞ்சீவி பருவதம் பல மூலிகைகள் கொண்டு நிற்கிறது. ஒரு மூலிகையைத் தின்ற குப்பனும் வஞ்சியும் புதுக் காட்சி பெறுகின்றனர்.

“வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின்
நெஞ்சம் வசமாக நேரிலவர் பேசுதல் போல்
செந்தமிழில் தங்கள் செவியிற் கேட்கப்”

பெறுகின்றார்கள். இங்கே இவர்களுண்ணும் மூலிகை கலை யறிவோடு கலந்தூறியெழும் பகுத்தறிவாய் நின்று உண்மை நிலையையுணர்த்துவது காண்மின்! இப்பகுத்தறிவாகிய மூலிகை யால் தமிழ் மக்களாகிய வஞ்சியும் குப்பனும், பிராஞ்சியரும் அமெரிக்கரும் இங்கிலாந்து தேசத்தாரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் மனக் கருத்தையறிந்து, தம் நிலையை யெண்ணத் தொடங்குகின்றனர்.
தமிழ் மக்களுள் பெண் மக்கள் தம் தமிழகத்தின் தாழ் நிலையை முன்னுறவுணர்ந்து தெளிந்து செயல் மேற்கொள்கின்றனர். இதனைப் பாரதிதாசனார் வஞ்சியின் வாய்மொழியாக வைத்து,

" பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள்
‘இந்த இலையால் இனி நன்மை கொள்க’ என்று
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து
வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி
சொல்லியெனைத் தூக்கிவந்து சூட்சுமத்தைக் காட்டிய கண்
ணாளர் தாம் வாழ்வடைக"

என்று வாழ்த்துகின்றார். சஞ்சீவி பருவதத்தில் ஏறமாட்டாத வஞ்சியைக் குப்பன் தூக்கிச் செல்வது, தமிழ் மகளிர் பகுத்தறி வெல்லையில் சொல்லமாட்டாது கிடப்பதும், கொண்டு செலுத்திய வழி, அவர்கள் முன்னதாகவே கொள்வன கொண்டு வேண்டுவன தெளிந்து செயற்படத் தொடங்குவதும் குறித்து நிற்பது காண்மின்!

பருவதத்தின் சாரலில் இருக்கும் குப்பன், நம் நாட்டில் பாகவதர் இராமாயண காலக்ஷேபம் செய்வதும், அனுமார் சஞ்சீவி பருவதத்தையெடுக்கச் சென்று திரும்பும் காட்சியை அப்பாகவதர் சொல்ல மக்கள் கேட்டு மதிமயங்குவதும் கேட்டும் கண்டும் அறிவு மருளுகின்றான். இதுதானே இந்நாளைய தமிழ் மக்களின் நிலை! சாதி சமூக சமயவேற்றுமைகளையும் பிறவற்றையும் மேடையிலும் திண்ணையிலும் விரியப் பேசுவதும், ஆங்காங்கே நிகழக் காண்ப தும் செய்வதும், மீளமனமருண்டு செயல் மடிந்து உளந்தேய்ந்து போகின்றார்களன்றோ! இவர்களை நோக்கி நம் பாரதிதாசனார், அறிவுறுத்தத் தொடங்கி, குப்பனாகிய தமிழ் மகற்கு வஞ்சியாகிய தமிழ் மகள் கூறுவதாக வைத்து,

“வானளவும் அங்கங்கள் வானரங்கள் ராமர்கள்
ஆனது செய்யும் அனுமார்கள் சாம்பவந்தர்
ஒன்றல்ல ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்;
விஸ்வரூபப் பெருமை மேலேறும் வன்மைகள்
உஸ்ஸென்ற சத்தங்கள் அஸ் என்ற சத்தங்கள்
எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்;
செவ்வைக் கிருபை செழுங்கருணை யஞ்சலிக்கை
முத்தி முழுச் சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்:
இத்தனையும் சேரட்டும்; என்ன பயனுண்டாம்?
உள்ளபகுத் தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
எள்ளை யசைக்க இயலாது; மானிடர்கள்
ஆக்குவதை யாகா தழிக்குமோ? போக்குவதைத்
தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்!
மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை
எக்களிக்க வேண்டும் இதயத்தில் ஈதன்றி
நல்லறிவை நாளும் உயர்த்தி யுயர்த்தியே
புல்லறிவைப் போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும்
மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?
எக்காரணத்தாலும் இன்மையிலே யுண்மையுண்டோ?
மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டுமுமை
நாடா திருப்பதற்கு நான் உங்களையின்று
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன் தற்செய லாய்
அஞ்சும் நிலைமையே ஆங்கே நிகழ்ந்ததுண்டாம்
உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட
பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள்
இங்கினி மேல்நில்லா எனநான் நினைக்கின்றேன்”

என்று கூறுகின்றார். இதனைக் கேட்கும் தமிழ் மக்கள் குப்பன் கூறுவது போல,

“இன்பஞ் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பது முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன
செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவதென்றோ உயர்வதென்றோ நானறியேன்.”

என்ற ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழரினத்தைப் பார்த்து உரைக்கும் நிலையில் இருந்து வருகின்றான். இது பாரதிதாசனார் காட்டும் தமிழுலகம்; உண்மையும் இதுவே. இவ்வாறு உண்மையை உள்ளவாறு காட்டுவதே புலமையும் கவி வன்மையுமாகும்.

அன்று இரண்டாயிர மாண்டுகட்கு முன்பு ஒரு புலவன், உலக வாழ்வில் காணப்படும் துன்பங்களைக் கண்டு “இன்னா தம்ம உலகம்” என்று கூறி, மேலும் இன்னாதாயினும் மனம் மழுங்காது, ஊக்கங் குன்றாது, அறிவு குறைவு படாது “இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே” என்று ஊக்கங் காட்டினான்; பின்னே வந்தவர், பின்னே கூறியதை மறந்து முன்னே கூறியதை மேற் கொண்டு, “இன்னா தம்ம உலகம்” என்பதை வற்புறுத்தினர்; தலைமை சான்ற தமிழரினம் அதனால் மடிமை சான்ற அடிமைக் கண் அழுந்திற்று; இன்று தோன்றிய புலவனாகிய பாரதிதாசன், “இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே” என்ற கருத்தை வற்புறுத்துவது இக்காலத்து வேண்டும் இன்பத் தமிழ்த் தொண்டா கும். இத்தகைய தொண்டால் தமிழரினத்தை மேம்படுவிக்கும் இன்றமிழ்ப் புலவன் பாரதிதாசன் இனிது வாழ்க.

நாற்பது ஆண்டுகட்கு முன் நான் கண்ட மணிமொழியார்


திரு. காஞ்சி மணிமொழியார்க்கு எழுபது ஆண்டு நிறை வுற்றமை அறிந்ததும் எனக்கு ஒரே வியப்புத் தோன்றியது. நாற்பது ஆண்டுகட்கு முன் நான் திருவத்திபுரத்தில் தமிழ்ப்பணி புரிந்த போது, காஞ்சியில் என் கண்முன் நின்று பணிவமைந்த இன்பவுரை வழங்கிய மணிமொழியாரின் கட்டாண்மைத் தோற்றம் என் மனக்கண்ணில் காட்சி தருகிறது. அதனால்தான், இந்த வியப்பு. திரு. காஞ்சி கலியாணசுந்தரத்தோடு கலந்து உரையாடும் போதெல்லாம் மணிமொழியாரின் உரைகளும் உண்மையுழைப்பும் ஊக்கமும் எங்கள் பேச்சின் பொருளாகும்.
மணிமொழியார் வணிகராகவும் தமிழாசிரியராகவும் கழகத் தொண்டராகவும் அரும்பணி புரிந்தவர். ஒருநாள் இரவு, அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சரானமைக்கு என் வாழ்த்தைக் கூறும்போது காஞ்சி மணிமொழியாரும் இதுவே கூறினார் என்றது, இப்போது நினைவில் தோன்றி மகிழ்விக்கிறது. கழகத்தின் வளர்ச்சியும் சிறப்பும், சுடச் சுடர்விடும் பொன்போல் இலங்குவன. அதன் தொடக்கம் கண்டு, வளர்ச்சி எண்ணிப், பயன்தருவது காணும் பேரின்பத்தில், என்னினும் மணிமொழியார் மிக்க வுரிமையுடையவர்.

தமிழார்வம் இளைஞர் உள்ளத்தில் தோன்றிப் பெருகுவதில் எனக்கிருந்த தமிழ்ப்பற்று, தமிழினத்தின் நல்வாழ்வு காணவுழைத்த கழகப் பணியில் நேர்முகமாகக் கலந்துகொள்ள விடவில்லையே யன்றிக் கழக வளர்ச்சியில் தமது வாழ்வையே உரிமை செய்தபெருமக்கள்பால் என் நன்மதிப்பும் நல்லன்பும் என்றும் குறைவ தில்லை.

என் மனம் விரும்பும் மாண்பும், மதிப்பளிக்கும் மேதகவும் உடைய நண்பர் திரு. காஞ்சி மணிமொழியார் பல்லாண்டு வாழ்தல் வேண்டும். அவரது பழுத்த அறிவும் பண்பின் நீங்காத ஆக்கவுரையும் இப்போதைய தமிழினத்துக்குப் பெறலரும் பேறுகள். வாழ்க காஞ்சி மணிமொழியார்; வளர்க அவரது அரும்பணி.

-   brகாஞ்சி மணிமொழியார் 71வதுஆண்டு
    பிறந்த நாள் மலர், 1970

அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு


மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. நெடுஞ்செழியனார்க்குப் பொன்விழா என்ற செய்தியை அறிந்ததும் என் முதுமையுள்ளம் பெருவியப்பில் ஆழ்ந்தது. அவரை நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைவகுப்பில் “கடாவுருவும் கண்ணஞ்சா” நெஞ்சமும், தெள்ளிய செந்தமிழ் வழங்கும் செந்நாவும், சிவந்து தோன்றும் செம்மல் மேனியும் பீடு நடையும் கொண்டவுருவமே என் மனக்கண்ணில் தோன்றுவது வழக்கம். தமிழ் நாட்டரசியல் மன்றத்தில் எதிர் கட்சித் தலைவராய்ப் பணிபுரிந்த நாளிலும், அவரைக் காணும்போது தோற்றத்திலோ வழங்கும் மாற்றத்திலோ மாணவர் நிலையிலிருந்த கடமை கட்டுப் பாடு பெருந்தகைமை என்ற மூவகைப் பண்பாடும் உருக்குலை யாமல் இருக்கக் கண்டு இறும்பூது எய்தினேன். இன்றும் இளமைக் கோலத்தோடு என்கண் முன் காட்சி தரும் இளஞ்செம்மலுக்கு ஐம்பது ஆண்டு நிரம்புகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இன்றைய நமது தமிழ்நாட்டரசுப் பேரவையில் இருந்து மாண்புமிகு தலைமைப் பணியும் அமைச்சுப் பணியும் மேற்கொண்டு,

“மருள்நெறிசேர் சுயநலமாம் மாயவிருள்
இரிந்தோட மதிக்க வொண்ணாக்
கருணையெனும் அளிக்கதிர்கள்
தமைவீசிப் புகழ்பரப்பும்”

இன்ப இளஞாயிறுகளான புலவர் கோவிந்தனார், நாவலர் நெடுஞ் செழியனார், மதியழகனார், மாதவனார் ஆகிய இவர்களை இதனை எழுதுங்கால் என் மனக்கண் தன்முன் கொணர்ந்து நிறுத்துகிறது. இவர்களுடைய கூர்த்த நோக்கமும் சீர்த்த முகமும் அன்று பார்த்த இளமை வளமே கொண்டு என் முன் தோன்றி இன்பம் செய்கின்றன.

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியவர்களை அன்று கோவை மாநாட்டில் “மணிப்பயல்” என்று மனமகிழ்ந்து பாராட்டிய என் “சிறுசெந்நா” இப்போதும் அதனையே கூறி மகிழச் செய்கிறது. அன்று என் உடன் இருந்து என் கருத்திற் பங்குகொண்டு உவகை மீதூர்ந்து “நீங்கள் பல மாணவரை அறியும் ஆசிரியர்” என்றார்க்கு, “இந்த மணிப் பயலால் நம் தமிழகம் சிறந்து ஒளிபெறும்; இவனைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்க்க வேண்டும்” என்று தமிழ்த்தாய் எனக்குள் உணர்த்த யான் அறிஞர் அண்ணாவின் துடையை நன்கு தட்டி வற்புறுத்தினேன். மணிப்பயலின் தமிழ் நாட்டரசு மாட்சியை (நெஞ்சு கலங்கிக் கண்ணீர் கண்களை, மறைக்கினும் துடைத்துக் கொண்டு சொல்லுகிறேன்) அறிஞர் அண்ணா இன்று இருந்து காண்டல் வேண்டும்; அவரது கருத்துரை யைக் கேட்கும் தவப்பேறுயான் இல்லாதவனாயினேன். ஏனெனில் தமிழக முதலமைச்சரான பின் நான் கண்டபோது “உங்கள் ‘மணிப் பயல்’ அமைச்சரில் ஒருவன்; உங்களுக்குத் திருப்திதானே” என்று விடை தந்தார்.

இங்ஙனம் உள்ளத்தில் ஊற்றெழுந்து வரும் நினைவுகள் பல; ஒரு சில கூறுவது இக்கட்டுரை.

நெடுஞ்செழியன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை மாணவராய்ப் பயின்றபோது, தமிழாராய்ச்சித் துறையிற் பணிபுரிந்த என்னைச் சிவப்பிரகாசம் என்ற மெய்கண்ட சாத்திரத்தை முதுகலை வகுப்பிற் குரைக்குமாறு தமிழ்த் துறைத் தலைவர் தாகூர் சட்டக் கலைப் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் பணித்தார்கள். அந்நிலையில் ஒருநாள் மன்னார்குடி அரங்கசாமி முதலியார் அறக் கட்டளையில் நடைபெறும் புலவர வைக்கு என்னை அழைக்க வேண்டி என் வீட்டிற்கு நெடுஞ் செழியன் வந்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது. மிடுக்கான தோற்றமும் கள்ளமில்லாத உள்ளப் பொலிவும், தெளிந்த நா நலமும் உடையவராய் பொன்போன்ற மேனியராய், “அறக் கட்டளையின் மாண்புகளை முன் மொழிந்து பின்னை அதன்சார்பில் அழைத்தது அவர் ஒரு சிறந்த நாவலராவர் என்பதை வற்புறுத்திற்று. பல்கலைக் கழகத்தின் நீங்கிய சில்லாண்டுகளில் அவர் இயற்பெயர் முன்னர் நாவலர் என்ற சிறப்புப் பெயர் சேர்ந்து கொண்டது; இன்று”நாவலர்" என மொழியின் தமிழ் நாடு முழுவதும் அச்சொல் இரா. நெடுஞ்செழியனைக் குறிப்பது தொடக்கப் பள்ளிச் சிறுவர் சிறுமி யரிடத்தும் நன்கு தெரிந்திருக்கிறது.

பின்பு, அவர் புது மணவாளராய்த் தமது துணைவி திருமதி விசாலாட்சியம்மை யாருடன் “சோழவந்தான் புகை வண்டி நிலையத்தில் நான் இருந்த பெட்டியில் வந்து அமர்ந்தார். அவரவர் நலங்களை அளவளாவி மகிழ்ந்திருக்கையில் எதிரில் இருந்தவர் பேச்சுக் கொடுத்தார். அவர் வேலூர் மாவட்டக் கூட்டுறவுத் தலைமையலுவலகத்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டு சமயச் சார்பாகச் சில கருத்துக்களை வினவத்தலைப்பட்டார். நெடுஞ் செழியனார் அவர்க்கு விடை கூறித் தாம் வேறு வினவத் தொடங் கியதும் அக்கூட்டுறவுத் தலைமையலுவலர்க்கு விடையிறுக்கும் திறம் குறையலுற்றது. அதனால் அவர்”அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நாத்திகம்தானே வளர்க்கிறது; வேறு என்ன செய்கிறது?" என வெகுண்டார். அப்போது நன்கு சிரித்த நெடுஞ்செழியனார், மிக்க பரிவுடன் உங்கட்கு நாத்திகம் ஆத்திகம் என்ற இரண்டும் நன்கு விளங்க வேண்டும்; என்று சொன்னதும் அவர் அயர்ந்து விட்டார். முடிவில் அவர் நாவலர் சொல்வதை அமைவுறக் கேட்பவராகி, “இன்றைய சமயம் மக்களின் அறியாமை மேல் நிற்கிறது. அறிவாராய்ச்சி தோன்றிப் பரவும் வரை உங்கள் ஆத்திகம் நிற்கும்; பின்னர்ப் பறந்துபோம்” என்றது அவரது நா நலத்தை நான் கண்டு மனம் மகிழ்ந்து வியக்கச் செய்தது.

சில ஆண்டுகட்குப்பின் நமது நாவலர் சென்னைச் சட்டமன்றத்து எதிர்க்கட்சித் தலைவராய் ஏற்றம் பெற்றார். அவருடைய வினாக் களும் விளக்கங்களும் மக்கள் மனதில் அவரிடத்தே நன் மதிப்புத் தோற்றுவித்தன. ஆளுங்கட்சி யுறுப்பினர்களின் பொருளாசையும் பதவிமயக்கமும், நினைப்பவர் நினைவில் தோன்றி நிற்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவராய்ப் பெருந்தகவும் கடமையுணர்வும் இனிது விளங்கத் தக்கவகையில் நெடுஞ்செழியனார் பல சமயங்களில் அரசவையில் உரை நிகழ்த்தினர். அறிஞர் உரையாடல்களில் அவருடைய உரைகள் ஆழ்ந்து சிந்திக்கப்படுவதுண்டு. அன்றைய ஆளுங்கட்சியின் கல்வியமைச்சர், “தமிழ் நாடு” பெயர் பற்றி எழுந்த வாதத்துக்கும் மொழிபற்றி நாட்டில் தோன்றிய கிளர்ச்சி பொருளாக வும் தெளிவில்லாத கருத்துக்களை வழங்குமாறு எதிர்கட்சித் தலைவர் மடக்கியது கண்ட தமிழறிஞர் ‘எதிர் க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சி படு பள்ளத்திற் புதையுமாறு குழிதோண்டி விட்டார்’ என வியந்து உரையாடினர். நேர்முகமாகச் சொல்லம்பு தொடுத்தலும், சுடுசொல் வழங்கலும் இன்றி, மெல்லிய இனிய அமைதி சான்ற சொற்களால் நாவலர் நிகழ்த்திய உரைகள் ஆளுங்கட்சியை அலைத்த திறம் அறிவுடையோர் கூட்டத்தில் அவர்பால் பெரு மதிப்பு உண்டுபண்ணியதை நாட்டவர் நன்கு அறிவர்.

சிலகாலங்களில் கட்சித் தொண்டர்களின் புல்லிய வேண்டு தல்கள் அவரது கட்சியின் தகைமைக்கு இழுக்குத் தருவன போல் தோன்றும்; உடனே அவற்றைக் கண்ணறக் கடிந்துரைத்துக் கட்சியின் பெருந் தன்மையை நிலைநாட்டியதைத் தொண்டர் போந்து தனிமுறையில் உரைப்பர். தம்முள் பேசுவர். அவற்றைக் கேட்குந்தோறும் அறிஞர் குழுவில் தக்கார் தலைமையின் நாவலரது தகவுடையின் சிறப்பு இனிது வெளிப்படும்.

நாவலரது கட்சி அடுத்து வந்த தேர்தலில் ஆளுங்கட்சி யாயிற்று; அறிஞர் அண்ணாவின் அருமந்த அமைச்சரவையில் நாவலர் நல்ல கல்வியமைச்சரானார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அவர் உரை நிகழ்த்திய போது அரசியல் எந்திரத்தை ஒரு குதிரைவண்டியாகவும் அமைச்சரவையை அதனை ஓட்டு வோனாகவும் உருவகம் செய்தது இன்றைய அரசியலமைப்பை மக்கள் நன்கு உணர்ந்து மகிழச் செய்ததுடன் அவருடைய நா நலம் கிளர்ந்து நின்று இன்பம் செய்தது.

இவர் தம்மை நெடுஞ்செழியன் என்று பெயர் புனைந்து கொண்டதுபற்றி மதுரைத் தியாகராசர் கல்லூரி முதுகலை வகுப்பு மாணவர் என்னொடு கலந்து உரையாடினர். அப்போது, சொற் பொழிவு ஒன்றில் தம்மை எனக்கு மாணவர் என அவர் குறித்தது இளையர் உள்ளத்தில் வியப்பை உண்டுபண்ணிற்று. அவர் பல்கலைக் கழக மாணவராயிருந்தபோது, “பதிவுப்புத்தகங்கள் நாராயணசாமி என்றனவாயினும் நெடுஞ்செழியன் என்ற புனை பெயரே இயற் பெயர்போல யாவரும் அறிய விளங்கிற்று” என்றேன். பொருந்துமா என்பது பற்றிச் சொல்லாடல் பிறந்தது.

தொடக்கத்தில் நாவலர், பாண்டி நாட்டவர், அவர் உறவினர் சோழவந்தானில் உளர் என்பது தெளிவானது. அவ்விளைஞர்க்கு மகிழ்ச்சி மலர்ந்தது.

பின்னர் சங்க காலப் பாண்டியருள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் தமிழ் பயிலும் மாணவர் பலர்க்கும் தெரிந்தவன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், நம்பி நெடுஞ் செழியன் எனப் பலர் உளரெனினும் தலையாலங்கானத்து வென்ற நெடுஞ்செழியனே வீறு கொண்டவன். வெற்றிப் புகழேயன்றி உயர் நிலைப் புலவர் பெருமக்களின் பால் நலம் துய்த்துப் பரவும் பண்பு மேம்பட்டவன்; புலவராற் பாடப்படுவது நாட்டுக்கும் நாட்டின் நல்லரசுக்கும் ஆக்கமும் அரணுமாம் என்று கருதுபவன்.

இளங்கோவடிகள் புகழும் நெடுஞ்செழியன் கோன்முறை தவறிய மானம் பொறாது உயிர் கொடுத்த உரவோன்.

இவ்வேந்தரது கடமையுணர்வும் பெருந்தகை மானமும் நாவலர் நெடுஞ் செழியன்பாலும் நன்கு நிலை பெறுகின்றன. நெடுஞ்செழியன் என்ற பழங்கால நெடுந்தகைகளின் இனிய பெயரை நாவலர் தமக்குப் பெயராகக் கொண்டது சாலவும் பொருந்துவதே எனத் தெளிந்தனர்.

இங்ஙனம் நல்லமைச்சால், நல்லியல்பால், நண்ணாரும் வேட்ப விளங்கிய அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு பற்றி அறம் நின்று நிலவ விளங்கிவரும் நாவலர் நெடுஞ்செழியன் பல்லாண்டு பல்லாண்டு நல்வாழ்வு நிரம்பி இப்பொன் விழாப்போல மணி விழாக்களும் நூற்றாண்டு விழாக்களும் பொலிந்து வாழ்க எனத் தமிழ்க் கடவுளின் தாமரையடிகளைப் பரவி வாழ்த்துகிறேன்.

நாவலர் நெடுஞ்செழியன்

பொன்விழா மலர்

11-7-1970

வியப்பிறந்த மேன்மையர்


சிறந்த உள்ளமும், சீர்த்த பண்பும், உயர்ந்த ஒழுக்கமும், பணிந்த மொழியுமுடைய அவரது பண்பாடு நினைக்கும் நெஞ்சிற்கு நேரிய இன்பம் தருவது. நுண்மாண் புலமையும், தெளிவான எழுத்து வன்மையும் இனிமை சுரக்கும் சொல்வன்மையும், எல்லோரையும் மகிழ்விக்கும் நன்னீர்மையும் அவர்பால் இருந்து அழகு பெற்றன. அவருடைய கற்பனைப் புதினங்களும் கலைதெளி கட்டுரைகளும் தொண்டை நாட்டுச் சான்றோர்களின் புலமைக் காட்சியை என் நினைவிற் கொணர்ந்து இன்புறுத்துவது வழக்கம். மொழி நூல் துறையில் அவரது மதிநுட்பத்தை நூல் வாயிலாகப் படித்துணரும் மாணவர் அனைவரும் தெளிந்த அறிவும் நிறைந்த அமைதியுமுற்று மலர்ந்த முகத்தினராவதைக் கண்டு என்மனம் வியப்புறுவதுண்டு. வாழ்வில் உயர்ந்தோரை நாடின், அவர்கள் சிலர்க்கு ஆனவரும் சிலர்க்கு ஆகாதவருமாகப் பேசப்படுவதுண்டு. ஆனால் பேராசிரியர் மு. வரதராசனார் அவர்களை ஆகாதவரெனப் பேசுபவரை நான் கண்டதில்லை. புலமைத் துறையாயினும் ஆட்சித் துறையாயினும் எவ்விடத்தும் ஒப்ப உயர்ந்த அவரது ஒட்பம். “வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த” மேன்மை சான்றது என்பேனாயின் அது மிகையாகாது.

டாக்டர் மு.வ. நினைவுமலர்

நவம்பர் 1974

செந்தமிழ்ச் செல்வி

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்…


“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” எனத் தெய்வப் புலவர் உரைத்த திருமொழியை இப்போது உணர்ந்து இன்புறுகின்றேன்.

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சேயாற்றங்கரையில் நான் தமிழ்ப்பணி செய்த பொழுது கரிய இளஞ்சேய் வடிவில் என் எதிரில் வந்த கோவிந்தன், இன்று தமிழகச் சட்டப் பேரவையின் தலைவராக வீற்றிருந்து, சான்றோர் புகழ விளங்கும் சால்பு கண்டு எல்லையில்லாத இறும்பூது எய்துகின்றேன். சீர்த்த நோக்கமும், கூர்ந்த அறிவும் சிறுவன் கோவிந்தன்பால் அடங்கி இருந்தமையை அறிந்ததாலேயே, அவர் தந்தையும் பிறரும் தடுத்த காலையும் நான் தமிழ்க் கல்வியிலேயே புலவர் கோவிந்தன் ஊன்றிய உள்ளம் உடையனாமாறு ஊக்கிவந்தேன். அதனைப் புலவரின் தந்தையார் நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிய பொழுது எடுத்துரைத்து இன்பக் கண்ணீர் விடுத்ததை என்னால் மறக்க முடியவில்லை.

ஆன்றமைந்து அடங்கிய அறிஞர் பெருந்தகை அண்ணாவும், ஆண்மையோடு ஆவன அறிந்தாற்றும் செயற்பெருஞ் செம்மலாகிய கலைஞர் கருணாநிதியும் தமிழ்ப் புலவரையே சட்டப் பேரவைக்குத் தலைமை பூணுமாறு செய்வித்த தகைமையைப் புலவர் கோவிந் தனுடைய இம்மணிவிழாவில் நினைந்து மகிழ்கின்றேன்.

என்பால் தமிழ்பயின்ற நன் மாணாக்கர்களில் தலைமை தாங்கும் புலவர் கோவிந்தன். அன்று யான் எழுதிய ஐங்குறு நூற்று உரைப் பகுதியை முதன் முதலாகத் தமிழுலகு அறிய வெளியிட்ட பெருமையாளர்; இனி எனக்குப் பின்னர் யான் தொடர்ந்து செய்து வருகின்ற தமிழ் நூல் உரைப்பணியை முற்றுவிக்கும் கடப்பாட்டி னையும் இம்மணிவிழா முதல் அவர் மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய சான்றாண்மை அவர்பால் இருப்பதால் இப்பணியையும் அவர்பால் சேர்ப்பிக்கிறேன்.
புலவர் கோவிந்தனும் அவர் மனை மக்களும் நீடிய வாழ்வும், சூடிய புகழும், கூடிய செல்வமும் நிறைந்து மாநிலத்துப் பல்லாண்டு மருவிவாழ்க என அங்கயற் கண்ணியோடமர்ந்த ஆலவாய் அண்ணல் வண்ணத் திருவடிகளைப் பலகாலும் எண்ணி வாழ்த்துகிறேன்.

(இவ்வாழ்த்துரை, புலவர் அவர்களின் மணிவிழாவின் போது வழங்கியது.)

புலவர் கா. கோவிந்தன்

பவளவிழா மலர் 1990

புலமைப் புரவலர்


“என்ன துரைசாமிப் பிள்ளை சௌக்கியமா?” என்று சொல்லிக் கொண்டே ஒருநாள் மாலை ஆறு மணி அளவில், ஒரு பெரியவர் என் எதிரிலே வந்து உட்கார்ந்தார். மதுரைத் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மீனாட்சி பங்களாவின், கலைநலத்தால் கண் கவர்ந்து விளங்கும் முகப்பு; முகப்பின் எதிரில் இருள்படத் தழைத்து நிற்கும் ஆலமரத்தில், எத்தனையோ வகையான பறவைகள் இருந்து இன்னிசை வழங்கி, வந்த பெரியவருக்கு வரவேற்பு வழங்குவன போல இன்பம் செய்தன. மன்றல் கமழும் தென்றல் போந்து மெல்லென, சில்லென வீசி, மெய் குளிர, மனம் களிக்க உலவிக் கொண்டிருந்தது.

அகன்ற மார்பும் உயர்ந்த தோளும் அன்றலர்ந்த மலர் போன்ற முகமும் அருள் ஒழுகும் கண்ணும் அன்பு வழியும் அறிவுடை மொழியும் கொண்டு தோன்றிய செட்டிநாட்டு அரசர் டாக்டர் திரு. முத்தைய செட்டியார் அவர்களது எழில் வரவும், “சௌக்கியமா?” என்ற இன்னுரையும் மிக்க இன்பம் தந்து, என் அறிவை மயக்கிவிட்டன. “வணக்கம்” என்ற ஒரு சொல்லைத்தான் அப்பொழுது என் நாவால் மொழிய முடிந்தது. எங்கள் தலைவரின் திருவளர் தலைமகனான திரு. சுந்தரம் செட்டியார் அவர்கள், அரசர் பெருமான் அவர்களை நிழல்போல் தொடர்ந்து வந்து உரிய சிறப்புச் செய்து உயர்வு செய்தார்.

அப்பொழுது, எங்கள் திருமிக்க தலைவர் செம்புலச் செல்வர் கருமுத்து. தியாகராசர் அவர்களும் மனைமாண் தலைவி திரு. இராதா அம்மையார் அவர்களும் வெளியூர் சென்றிருந்தனர். பணிபுரியும் இளைஞர், ஒளி மிக்க குவளையில் தெளிந்த இனிய பருகுநீர் கொணர்ந்தனர். அதனைப் பெற்ற அரசர் பெருந்தகை அவர்கள், நீர் கொணர்ந்த பையனை நோக்கி, “புலவர்க்கு முன்பு கொடு; புலவர்கள் தாம் நமது நாட்டுக்குப் புகழ் தேடித் தருபவர்கள்” என்று சொல்லிச் சுந்தரம் செட்டியாரை நோக்கி, “நான் சொல்வது சரிதானே?” என்று கேட்டார்கள். உடனே, அவர்கள், “இவர் புலவர் மாத்திரமல்லர்; நமது குடும்பத்தவருள் ஒருவர்” என்று சொல்லவும், “அப்படித்தானே நமது புலவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள்” என்று விடை கூறி என்னை இவர்கள் அன்புடன் நோக்கியது, என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தியது. மல்லல் மலையனைய மாண்புடைய மன்னர் பெருமான் அவர்கள், புல்லிய என்பால் காட்டிய அன்பு, பன்னாள் கழிந்தும் என் நெஞ்சை விட்டு அகலாது இன்பம் செய்கின்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களின் பெருமனையில் நடந்த திருமண விழாவிற்கு நாங்கள் சென்றிருந் தோம். “தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர். தம்மை மதியார்” என்ற பொருளுரைக்கு ஒப்பச் செட்டிநாட்டு அரசர் அவர்கள் மிகவும் எளியராய், வருவோர் பலரையும் வரவேற்கும் பணியில் முன்னின்று, வரவேற்பு வழங்கியும், இனிய முகமன் உரைத்தும் திருமணத்தைச் சிறப்பித்தது கண்ட என் உள்ளம் அரசர் பெருமான் அவர்களுக்குப் பேராசிரியர் திரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள்பால் இருந்த நன்மதிப்பை உயர்த்திக் காட்டிற்று. மணவிழா நிறைவுற்றவுடன், தமிழாசிரியர் சிலர் பிறிதொரு வீட்டில் இருப்பது கண்டு, அரசர் அவர்கள் அங்கே வந்து ஒவ்வொருவரையும் தனித்தனியே அளவளாவி இன்புறுத்தினார்கள். அப்பொழுது இவர்கள் வழங்கிய அன்புரையும், செய்த சிறப்பும் பண்டைத் தமிழ் மன்னர்கள் புலவரைப் பேணிய நிகழ்ச்சிகளைத் திரைப்படக் காட்சிபோல் என் நெஞ்சக் கிழியில் நேர்பட நிறுத்தின.

மதுரைத் திருவள்ளுவர் கழகம், ஆண்டுதோறும் முதுமைப் புலமைச் சிறப்புடைய ஒருவரை வருவித்துப் பாராட்டுவது வழக்கம். அம் முறையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் பல்லாண்டு பணி புரிந்து புலமை பழுத்து விளங்கிய திரு. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் சிறப்புடைய பணியைச் செட்டிநாட்டு அரசர் திரு. முத்தைய செட்டியார் அவர்கள் பேரன்புடன் ஆற்றி, அவ் விழாவிற் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுடைய மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்தார்கள்.

அப்பொழுது அரசர் பெருந்தகை அவர்கள், தமிழ் ஆராய்ச்சி யின் பெருமையையும், அதனைச் செய்தற்கண் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொண்டுள்ள ஊக்கத்தையும். பண்டாரத்தார் அவர்களுடைய பண்பு நலன்களையும் அழகிய முறையில் மக்களெல்லாம் மனம் கொண்டு போற்றும்படியாக உரைத்தது மிக்க உருக்கமாக இருந்தது. தமிழகத்தில் தமிழ்த்துறையில் அரும்பணி புரிந்து பெரும்புகழ் விளைவிக்கும் அறிஞர்களை ஓரிடத்தே தொகுத்து, அவரது புலமை நலங்களை நாடு பெற வேண்டும் என்பது தமது பெரிய ஆர்வம் என்றும், அதற்கு ஏற்ற இடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்றும், அந்த இனிய கருத்தை உட்கொண்டே சிறப்புடைய புலவர் பலரும் அப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப் பெறுகின்றனர் என்றும் அரசர் அவர்கள் எடுத்துரைத்தது, புலவரைப் புரக்கும் புரவலர் செட்டிநாட்டு அரசர் என்ற சிறப்புரையை நன்கு வற்புறுத்தியது.

அரசர் பெருமான் அவர்களின் உள்ளம் அறிவரிய அகல முடையது; அளக்கலாகா ஆழமுடையது. மண் மக்கள் அனை வரையும் தம் மக்களெனப் போற்றிக் கல்வியால் யாவரும் சால்புடையராக வேண்டுமென்ற அன்பு நிறைந்தது, இவர்களின் அருமை மனம். ஒருகால், இவர்கள் மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேசும்போது, நமது நாடு தொழிலிலும் வாணிகத்திலும் விஞ்ஞான நெறியிலும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்ப உயர்ந்து விளங்க வேண்டுமாயின், ஆங்கில மொழியறிவு பெறுவதில் இளைஞர்கள் அயராது உழைத்தல் வேண்டும் என வற்புறுத்தினார்கள். தமிழ்த் துறையில் எம். ஏ. முதலிய பட்டம் பெறுபவர்கள் ஆங்கிலத்தைப் புறக்கணிக்கக் கூடாது. மொழி வெறி கொண்டு, உலக மொழியாய் இலங்கும் ஆங்கிலத்தைப் புறக் கணிக்கும் மனப்பான்மை, நாட்டின் எதிர்கால நன்மைக்கு இடையூறாகும் என இயம்பியது, அறிவுடைய எல்லா நன்மக்கட்கும் இன்பம் தந்தது. பிற துறைகளில் பயிலும் மாணவரினும், தமிழ் மாணவர் ஆங்கிலத்தில் நற்பெரும் புலமை பெறுவதன் இன்றி யமையாமையைச் செட்டிநாட்டு அரசர் அவர்கள், செப்பமாகவும் தெளிவாகவும் உரைத்துத் தமது தமிழன்பும் தமிழ்மொழியின் வளர்ச்சியில் தமக்குள்ள பேராதரவும் யாவர்க்கும் இனிது விளங்க எடுத்து மொழிந்து எல்லாருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்கள்.

செட்டிநாட்டு நகரத்தார் வாழும் சிறப்புடைய ஊர்களுள் ஒக்கூர் என்பது, சங்க இலக்கிய காலந் தொட்டே சான்றோர் உறையும் சால்புடையது. அவ் ஊரவரான திரு. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள், உலகம் தழீஇய ஒட்பமும், மலர்வதும் கூம்புவதும் இல்லாத அறிவும், வாணிகத் துறையின் நுட்பமும் ஒருங்குபெற்ற ஒள்ளியோராவர். அவர், செட்டிநாட்டு அரசர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்; அக் குடும்பத்தின் தொடர்பினால் தாம் உயர்வு பெற்றதாகத் திரு. சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் அடிக்கடி கூறுவார். அவர், தமது ஒக்கூரில் உயர்தொடக்கப் பள்ளி ஒன்றை நிறுவி, அதற்கு எனப் பெரும் பொருட் செலவில் வனப்பு மிக்க கட்டடங்களையும் அமைத்துத் தந்துள்ளார். கடல் பெரியதாயினும், சிறு கழியினும் புகுந்து மக்கட்கு நலம் செய்வது போல, மிகப் பெரிய பல்கலைக் கழகத்தை நிறுவி வானளாவ உயர்ந்த கட்டடங்களை அமைத்து ஆயிரக் கணக்கான மாணவர் இருந்து மாண்பு தரு கலையும் விஞ்ஞானமும் பயில உதவிய செட்டிநாட்டு அரசர் அவர்கள், ஒக்கூர் தொடக்கப் பள்ளியின் சிறப்புடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் கலந்துகொண்டு பெருமை செய்கின்றார். பெருமை சிறுமைக்குள் அடங்காது; சிறுமை பெருமைக்குள் அடங்கும் என்பது தகுந்த நூல் முடிபு. அதனால், பெரியது, என்றும் சிறியதைப் புறக்கணியாது தன்னொடு சேரத் தழுவிச் செல்கிறது என்பர்.

இவ்வுண்மைக்குச் சான்றாக விளங்குவது, செட்டிநாட்டு அரசர் குடியின் செப்பரும் பெருமை நலம். பெருங் கலைக் கல்லூரிகளைத் திறந்து வைத்துச் சிறப்பளிக்கும் செட்டிநாட்டு அரசர் அவர்களின் திருக்கைகள், எளிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தையும் திறந்துவைத்தருளும் திறம், நினைக்குந்தோறும் வியப்பைத் தருகிறது.

செட்டிநாட்டு அரசர் அவர்கள், மிக விரிந்த மனம் உடை யவர்கள். அதனால், இவர்களுடைய நிறுவனங்களில் பல்வேறு இனத்தவரும் பணிபுரிகின்றனர். இன வளர்ச்சி பற்றிய எண்ண முடையோர் சிலர், அரசர் பெருந்தகை அவர்களின் பரந்த மனப் பான்மையை ஒரு குறையாக எண்ணிச் சில பல ஆண்டுகட்கு முன் உரைத்தனர்; சமுதாயத்தின் வளர்ச்சி, அதன் உட்கூறுகளாகிய இன வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறது என்று அவர்கள் அதற்குக் காரணமும் காட்டினர். செல்வச் செழுங்குடியாகத் திகழ்ந்த நகரத்தார் பெருங் குடி, இன்று செல்வ வருவாய் சுருங்கி இருப்பதால், இத்தகைய இன வளர்ச்சி குறித்த ஆதரவு வேண்டுவது, நேர்மையும் முறைமையு மாகும் என்பதை உண்மையறிவுடைய எவரும் உடன்படுவர்.

இக் கருத்தை எவ் வண்ணமோ செட்டிநாட்டு அரசர் அவர்கள் அறிந்துகொண்டு, அன்பு நிறைந்த அறிவுரை ஒன்றை ஒக்கூர் உயர்தொடக்கப்பள்ளி விழாவில் தமது தலைமையுரையில் அழகாக உரைத்தார்கள். “நகரத்தார் இனத்து இளைஞர்கள் உயர்ந்த கல்வி பெற வேண்டும்; ஆடவரையொப்ப மகளிரும் உயர்கல்வி பெறுவதில் ஊக்கம் கொள்ளவேண்டும். வெளிநாட்டுப் போக்குவரவு சீர்குலைந்தமையின் நம் நாட்டிலேயே பணிபுரியும் பண்பாளராதல் வேண்டும். ஆனால் சிறு ஊதியம் நல்கும் சிறு பணிகளை நகரத்தார் இளைஞர்கள் விரும்பலாகாது. உயர்நிலைப் பணிகளை அடை வதிலும் புரிவதிலும் அவர்களுடைய கருத்து, ஒன்றுதல் வேண்டும்” என்றார்கள்.

இந் நாளில் நம் நாட்டில் செல்வமுடைமை, குறைவாகக் கருதப்படுகிறது. ஒரு கூட்டம், செல்வமுடைய செல்வர்களை வெறுத்த உள்ளமும் கறுத்த நோக்கமும் கொண்டு நோக்குகிறது. செல்வர்களின் செல்வத்தைத் தேய்த்துச் சீர்குலைத்துத் தரை மட்டமாக்குவது. சமுதாயப் பணி என்று ஒரு கூட்டம் கருதுகிறது. இக் கூட்டங்களின் நச்சுக் கருத்துக்கள், சிற்றூதியம் பெறும் பணி யினர் மனத்திற் படிந்து அவர்களுடைய நினைவு, செயல்களை மாசு படுத்துகின்றன.

இன்னோரன்ன கருத்துக்களை இனிது விளக்கி, நகரத்தார் உள்ளங்களை உயர்பணியில், உயர் நிலைத் துறையில் ஈடுபடுத்தி, நமது அரசர் பெருந்தகை அவர்கள் விளக்கவுரை தந்த நுண்மாண் நுழைபுலச் சான்றாண்மையைக் கேட்டிருந்த அனைவரும் வியந்து பாராட்டினர் எனின் வேறு கூறுவது எற்றுக்கு?

மணி விழாவில் அணி கொண்டு திகழும் திருமிக்க செட்டி நாட்டு அரசர் உயர்திரு. முத்தைய செட்டியார் அவர்கள், சென்னை மாநில அரசின் கல்வியமைச்சராகவும், அரசவை உறுப்பினராகவும், சென்னை நகரத் தந்தையாகவும், தொழில் நிறுவனங்கள் பலவற்றின் இயக்குநராகவும், பல்கலைக் கழகப் புரவலராகவும் பல கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாவார்கள். இவர்களது பெரு வாழ்வு, நம் நாட்டின் பெறலருஞ் செல்வமாகும். மணிவிழாக் கொள்ளும் இவர்கள், பொன் வயிரம் முதலிய பெயர் பெற்ற விழாக்களைக் கொண்டு விளக்கமுறுக என, அங்கயற்கண்ணியுடன் அமர்ந்த ஆலவாய் வள்ளல் கோலவார் கழலைக் கும்பிட்டு அமைகின்றேன்.

அருள் திரு. விபுலானந்த அடிகள்


(அகத்தியர் வளர்த்த தமிழ் என்று படிக்கின்றோம்; கண்ட
தில்லை. தமிழனுக்கு இசைஉண்டு என்று ஆராய்ந்து காட்டினவர் ஆபிரகாம் பண்டிதர். ‘யாழ்’ என்னும் தமிழரின் தொன்மை இசைக் கருவிபற்றி ஆராய்ந்து ஒரு நூலைத் திறம்பட அமைத்துத்தந்த, தமிழ்இசை தெளித்த நம் அடிகளார் அண்மையில் நம்மை விட்டுப் பிரிக்கப் பட்டார்கள். தமிழகம் தாங்கவொண்ணாப் பேரிழப்புக்
களில் அடிகளார் பிரிவும் ஒன்று. அவர்களின் வாழ்க்கை வரலாறு இக்கட்டுரை.)

நம் தமிழகத்தில் அருளறம் பூண்ட அறவோர் பலர் தோன்றித் தங்கள் அறவாழ்வில் கண்ட அறங்கள் பலவற்றை யெடுத்தோதி நம்மை அவ்வப்போது தெருட்டியுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலிய அறவோர் மிக்க பெரும் பழங்காலத்தே தோன்றித் தொல்காப்பியமும் திருக்குறளும் வழங்கி, நம் செந்த மிழைச் சிறப்புறுத்தினர். அவர்கட்குப் பின் சேரன் இளங்கோ தோன்றிச் சிலப்பதிகாரம் வழங்கி முத்தமிழின் மும்மை வடிவும் செம்மையுறக் காட்டினர்.

இப்பெருமக்கட்குப் பின் பலப்பல அறவோர் தோன்றினராயினும், அவர்கள் தத்தம் சமயத்துறைக்கு வேண்டும் அறவுரைகளை மட்டில் வழங்கி மறைந்தனர். இடைக்காலத்தே தமிழகம் தமிழரசும் தமிழ் வாழ்வும் இழந்து தலைதடுமாறிச் சாதுயர் உற்றதை வரலாறு கூறுகிறது. அத்தடுமாற்றத்தால் தமிழ்மொழியின் முக்கூற்றினுள் ஒன்றாகிய இயற்கூறு மட்டில் தூய்மை யிழந்தேனும் பல வடிவிற் றிரிந்தேனும் தன் முதன்மை யுரிமை யிழந்தேனும் இன்றுகாறும் பொன்றாது வழங்கி வரும் பேறு பெற்றது. ஏனை இசையும் கூத்தும் இருந்தவிடம் தெரியாத அளவு ஒளிமழுங்கின.

அறத்துக்குக் கேடு வருங்கால் அறக்கடவுள் தோன்றி அதனை நிலை நிறுத்துமென அறவோர் கூறுவதுண்டு. தமிழர் கட்குத் தமிழே அறம்; அத்தமிழறம் கெட்டுளது; ஆகவே தமிழறவோர் தோன்றித் தமிழை நிலைநிறுத்துவரெனத் தமிழகம் எதிர்நோக்கிற்று. தமிழன்னையின் தவம் அவமாகவில்லை. இற்றைக்கு ஐம்பத்தை யாண்டிற்கு முன், ஈழ நாட்டு யாழ்ப்பாணத்து மட்டக்களப்பிலுள்ள காரேறு என்னு மூரில் உள்ள தமிழ்க் குடும்பத்தின் தமிழ்த் தவப்பயனாய் நம் அடிகள் திரு. விபுலானந்த ரென்னும் தமிழ் அறவோர் தோன்றித் தமிழறத்தை நாட்டும் தகவு பெற்றார்.

கருவிலே தமிழறம் பேணும் திருவுடையராகிய அடிகள் பிள்ளைப் பெயர் மயில்வாகனனா ரென்பது. தமது பதினாறும் ஆண்டில் கேம்பிரிட்சு சீனியர் தேர்வுபெற்று, சில ஆண்டுகட்குப் பின் ஆசிரியர் பயிற்சிபெற்றுஇருபத்தெட்டாமாண்டு வரையில் ஆசிரியராக இருந்துகொண்டு, இலண்டன் பல்கலைக் கழக விஞ்ஞான மாணி (b.sc) த் தெர்வில் வெற்றிபெற்றார். இதற்கிடையே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தும் பண்டிதத் தேர்விலும் வெற்றி பெற்றுப் பண்டிதராகவும் விளக்க முற்றார்.

அடிகளார்க்கு முப்பதாண்டு நிறைவதற்குள் பெற்றோர் பெரும்பிறி துற்றமையின், 1922-ஆம் ஆண்டில் சென்னை இராம கிருட்டின சங்கத்தைச் சேர்ந்து அறவோராகி, பிரபோத சைதன்யர் என்ற திருப்பெயர் பூண்டு தொண்டாற்றி, இரண்டாண்டிற்குப் பின் சுவாமி விபுலானந்தாயினர்.

அடிகள் அருள் திரு விபுலானந்தராகி இலங்கையில் ஐந்தாண்டுகள் இராமகிருட்டின சங்கப் பள்ளிக்கூடங்களைப் பேணும் அறத்தொண்டாற்றினர். பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் இருந்து சீரிய தமிழ்ப்பணி புரிந்தார்கள். அக்காலையில் ஞானசம்பந்தப் பெருமானோடு உடனிருந்து இசைகொண்டு புரிந்த திருநீலகண்ட யாழ்ப்பாணனார் கைக்கொண்டிருந்த யாழியல்பைக் காணவேண்டுமென்ற திருவுள்ளம் அடிகளார்க்கு எழுந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்றும் நீங்கிய அடிகளார் இலங்கையிலும் இமயவரையடியிலும் இருந்து தொண்டாற்றிய போதும் யாழாராய்ச்சியினைச் செய்து கொண்டே வந்தனர். யாழ்நூன் முடிவுகள் உருவாக அடிகளார் இலங்கையில் புதுவதாகத் தோன்றிய பல்கலைக் கழகத்துத் தமிழ் பகுதித் தலைவர் நிலையினைப் பெற வேண்டிய வர்களானார்கள். இதற்குள் யாழ்நூலின் பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என்னும் பகுதிகளை எழுதி முடித்தார்கள்.

சென்ற 1943 ஆம் ஆண்டுமுதல் இறுதி நாள்காறும் அடிகளார் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத்தலைவராய் இருந்து வந்தார்களாயினும், விடுமுறைக் காலங்களில் அவரது ஓய்வு முழுதையும் யாழ்நூலே வாங்கிக் கொண்டது. அடிகளாரது அருள் மாண் புலமை நலத்தை அருகிருந்து துய்த்த பெருநலம், பெருஞ் செல்வர் ஒருவருக்கும் பெரும் புலவர் ஒருவருக்குமே நன்கு கிடைத்தது. பெருஞ்செல்வர் கோனூர் சமீன்தார் திரு. பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியா ரவர்கள்; பெரும்புலவர் அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பகுதி விரிவுரையாளர் திரு. வித்துவான். க. வெள்ளைவாரணனார் அவர்கள்.

அடிகளாரது திருத்தொண்டு பெரிதும் உயர்நிலை மாணவர் கட்குத் தமிழறிவு வழங்குவதில் அமைந்திருந்ததெனினும் இராமகிருட்டின சங்கத்தார் வெளியிடும் ஆங்கிலத் திங்கள் தாட்களான “வேதாந்த கேசரி”, “பிரபுத்தபாரதா” என்பன வற்றின் ஆசிரியப்பணியிலும் இயங்கிற்று. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக ஆங்கிலநாட்டு செகுபியர் நாடக மாண்பும் சிலப்பதிகார மாண்பும் ஒப்பவைத்து நோக்கிக் கண்ட ஆராய்ச்சி நலத்தை மதங்கசூளாமணி யென்னும் நூல்வடிவில் வெளிப்படுத்தினார்கள். 1935ல் சென்னைச் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் தலைவராக விளங்கினார்கள். தமிழன் னையின் வரவுருவாய் வந்த அடிகள், இசைத் தமிழ்க் கூறாகிய யாழியலை உருப்படுத்தித் தந்து அரங்கேற்றிய காலத்தே திருக் கொள்ளம் புரூர் அழகியநாச்சியார் மீது நான்மணிமாலை யென்னும் நூலொன்றையும் செய்தருளினர்.

துறவறத்தின் தூய்மை வடிவேயாகிய அடிகளார் தம் வாழ்வில் வந்தடைந்த செல்வத்தை அறவழியிலே செலவிட்டதேயன்றி, எஞ்சிய பொருளைக்கொண்டு மட்டக்களப்பில் “தம் அருட்குரவர் சிவானந்த சுவாமிகளின் திருப்பெயரால் நிறுவிய கலைக்கழகமே சிவானந்த வித்தியாலய மாகும்.”

இவ்வண்ணம் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் அருளறத்திற் காதல் சிறந்து, அதனையே வளர்ந்து, அதற்குத் துணையாகும் இசைத்தமிழ்க் கூற்றின் உயிர்க்கருவியாகிய யாழ் நூலைப் பயந்து, தமிழுலகின் தனிமாண்பினை நிலைநாட்டிய அடிகளார் 19-7-47 சனிக்கிழமை இரவு ஒன்றேகால் மணிக்கு இறைவன் திருவருள் ஞானவாழ்வில் ஞானவடிவில் தோய்ந் திருப்பாராயினர்.

வாழ்க அருளறம்; வாழ்க அறவோர்.

அருள்திரு. விபுலானந்த அடிகள் மறைந்தது குறித்துப் பாடியவை.


சாமிவிபு லானந்தர் தரணியைவிட் டகன்றார்
 தமிழ்மகளும் தகுபுலமைத் தனிமகனைத் துறந்தாள்
ஆமிதனுக் கென்செய்வ தெனநைந்து நொந்தார்
 அன்பர்களும் அருளுடைய அறவோரு மெல்லாம்
ஏமிழந்த தெம்தஞ்சைக் கரந்தைநகர்ச் சங்கம்
 எனநினைந்தேன் அலமந்த தென்றனது நெஞ்சம்
ராமசிதம் பரனார்தம் மாபெரிய வுள்ளம்
 இணைவதனை நினைந்தேன்கண் ணருவியினில் நனைந்தே
உயர்புலமை மிக்கதிரு வார்கந்த சாமி
 ஒழுக்கநெறி மிகுதிருவார் கணபதியா பிள்ளை
அயர்வில்பரி வொடுபணிசெய் அன்புநிறை புலமை
 அமைவெள்ளை வாரணந்தான் அருகுறநின் றருளும்
மயர்வில்நிழ லோவியத்தை மனமாரக் கண்டேன்
 மாண்புடைய சாமிவி புலானந்தர் தமையும்
துயர்மிகக்கண் கலுழநீர் துடைத்தினிது கண்டேன்
 தூய்மையறம் அருள் புலமைத் தோற்றமிது வென்றேன்
திருக்கொள்ளம் பூதூரில் திகழ்ந்தஅரங் கேற்றம்
 செந்தமிழ்ப்பே ராசிரியர் வந்திருந்த காட்சி
உருக்கொள்ளும் யாழ்நூலும் ஒண்கருவி பலவும்
 ஒங்குயர்ந்த செல்வர்களும் அரசாளுங் குழுவும்
கருக்கொள்ளும் எதிர்கால இசைத்தமிழின் மேன்மை
 காட்டக்கண் டேன்ஞான சம்பந்தர் கழற்கீழ்
மருக்கொள்ளும் இருக்கையினில் அடிகள்மகிழ்ந் திருந்த
 மருமம் அறி யேன்அன்றங் கின்றறிந்தேன் இங்கே.
கரிதுதிரு திகழ்மேனி வெளியமலர்க் கண்கள்
 கல்லாடை யுடைசொற்குக் கனிகள்நிக ராகா
பெரிதுதமிழ்ப் புலமைவட மொழியாங்கி லங்கள்
 பிறங்குவன நல்லுள்ளம் பேசுவன அறங்கள்
உரிதுபிறர் பெருநலமே யுள்ளுவது உறுவார்க்
 குதவுவது அடிகள்உயர் செயல்நினைவு மாண்பே
அரிதுபிற ரினிஇவர்போல் அருளறத்தார்க் காண்டல்
 ஆதலினால் அடிகள்விபு லானந்தர் அறவோர்.
கயிலாயக் காட்சியினைக் கட்டுரைத்தார் பல்லோர்
 கட்டுரைகள் நெட்டுரையாய்க் கருத்தினில் நின்றிலவே
குயிலாயம் பாடுபொழிற் கரந்தையினில் எங்கள்
 குரவர்அருள் திருவிபுலா னந்தர் அவைமேவிப்
பயிலரிய கயிலைமலை படர்ந்தநெறி காட்டித்
 பரவுதிரு நாவரசர் படர்ந்தநெறி காட்டித்
துயிலரிய கண்ணராய்க் கேட்டோர்தம் முள்ளே
 தோன்றுகாசியிற் களிக்கச் சொன்மாரி சொரிந்தார்.
முன்னாளைத் தமிழகத்து இசைத்தமிழர் கொண்ட
 முளரியாழ் முதலாய யாழியலைக் கண்ட
அந்நாளில் இடைக்கால மாக்கியபல் கொடுமை
 அத்தனையும் கணக்கறிவால் ஆய்ந்தறிந்த போதும்
இந்நாளில் பலரந்தக் கொடுமையே எண்ணல்
 இனிதறிந்த போதும்அருட் குரவனா ரெங்கள்
சொன்னாடும் அடிகள்விபு லானந்தர் சொல்லில்
 சுடுசொல்லோ துயர்சொல்லோ ஒன்றும்தோற் றிலதே.
எண்ணாள ரென்கோமற் றெழுத் தாள ரென்கோ
 இயலாய தமிழாளர் இசையாள ரென்கோ
கண்ணாளும் விஞ்ஞானக் கலையாள ரென்கோ
 கருத்தாளும் செஞ்சொல்லின் கவியாள ரென்கோ
எண்ணாளும் இவ்வண்ணம் எண்ணிமகிழ்ந் தோமை
 எண்ணி யெண்ணிப் புண்ணாக இனிச்செய்த தந்தோ
தண்ணாளர் அருள்விபுலா னந்தரெங்கள் இறையைத்
 தனிக்கொண்டு பிரிவித்த தறமில்லாக் கூற்றே.

வன்சொல்லால் கூற்றுவனை வையலாம் வம்மினோ
இன்சொல்லால் நம்மை இனிதளிர்த்த -தென்முனிக்கு
மேலாம் அருள்விபு லானந்த மாமுனிவிண்
பாலாகச் செய்த பழிக்கு.

பாராட்டற்குரியது


உலக வாழ்வில் இன்றைய நிலை பெரிதும் வியந்து யாவரும் விரும்பும் சிறப்புடையதாகும். மக்களினத்தின் விஞ்ஞான அறிவு மிகவும் வளர்ந்திருக்கிறது. லுகாம்தே தூனாய் என்பவர் கூறுவது போல இன்று காலத்தாலும், இடத்தாலும் பிரிந்து நிலவுலகின் மூலை முடுக்குகளில் வாழ்பவர் அனைவரும் மிக்க அண்மையில் நெருங்கியுள்ளனர். பல்லாயிர மைல்களுக்கு அப்பாலுள்ள நாடு களில் வாழ்பவர் வானவூர்திகளாலும் வானொலியாலும் தொலை பேசிகளாலும் ஓர் ஊரில் வாழ்பவர் போலவும், ஒரு வீட்டில் வாழ்பவர் போலவும் போக்குவரவு புரிந்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டும் வாழ்கின்றனர். புராண இதிகாசங்களிலும் கற்பனைக் கதைகளிலும் மக்கள் இவ்வாறு போக்கு வரவு புரிந்த தாகப் படித்திருக்கிறோம். பெரியோர் ஞானக்கண் கொண்டு நெடுந்தொலைவில் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டதாக அந்நூல்கள் கூறுகின்றன. அக்கற்பனைக் காட்சிகள் இன்று உண்மை நிகழ்ச்சியாய் நம்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம்.

பண்டை நாளில் வாழ்ந்தோர் மண்ணுலகத்துக்கும் தேவருலகத் துக்கும் போவதும், வருவதும் செய்து வந்தனர் என்று அந்தப் பழைய நூல்கள் நுவலுகின்றன. அவற்றைத் தான் இன்று நம்மால் காணமுடியவில்லை. ஆனால் இக்கால விஞ்ஞானிகள் வானத்தில் தோன்றும் கோள்களைக் கண்டு அங்கே போய்வர நினைக்கின்றனர். மண்ணுலகத்தில் மக்கள், விஞ்ஞானக் காட்சியால் கண்டகருவி களின் வாயிலாக அக்கோள்களின் தொடர்பு பெற முயன்று வருகின்றனர். இயற்கையின் அகத்தே நுழைந்து அதன் நுட்பங்கள் பலவற்றை அறிந்து கொள்ள முயன்று பெற்ற வெற்றியாலும் அறிவுக்காட்சியாலும் இம்முயற்சிகளில் காலப்போக்கில் வெற்றி பெறுவர் என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு காலத்தில் மக்கள் பலரும் நிலம் நீர் காற்று முதலிய எல்லாவற்றிற்கும் முதற்காரணம் அணு என்றே கூறிவந்தனர். வைசேடிகர் முதலிய சமயக் கணக்கர் எல்லாவற்றுக்கும் காரணம் அணு என்றுதான் இசைத்துள்ளனர். இன்று அணுவைத் துளைத்து உடைத்து அதற்கு முதற்காரணம் ஆற்றல் (சக்தி) என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது. சிவநெறிக்கண் நின்ற பண்டையோர், எல்லாவற்றுக்கும் முதற்காரணம் மாயை என்ற ஓர் ஆற்றல் கூறி, மாயைஎன்ற சொல்லையும் மாய் + தல், ஆ + தல் என்று பிரித்து இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் தல், என்னும் விகுதியை நீக்கி, மாயா எனக்கூட்டி உலகு ஒடுங்குதற்கும் மீளத் தோன்றுதற்கும் காரணமான - இன்னதென்று அறிய வராத - ஆற்றல் என்று இயம்பினர். இன்றைய அணு விஞ்ஞானிகளும் அணுவுக்குள் அடங்கி இன்ன தென்று அறிய வராமல் இருக்கும் ஆற்றல் (Unknown energy) தான் அதன் ஆக்கத்துக்குக் காரணம் என்று கண்டு உள்ளனர். இவ்வா ராய்ச்சிகளால் முன்பு கற்பனை நிலையிற்கண்ட காட்சிகளும் காட்சிக்கு அகப்படாதவை எனக் கைவிட்டவையும் கண்கூடாக வைத்து ஆராயப்படுவதை நாம் அறிகிறோம். இந்த அறிவால் இன்ன தன்மையதென்று எந்த அறிவியற் புலவராலும், உயிர் நூற்புலவராலும் காணப்படாமல் நமது உடலுக்குள் நிலவும் உயிரையும் அதற்கு உள்ளீடாகிய பரம்பொருளையும் நாம் காண்டல் கூடும் என்ற நம்பிக்கை மக்களினத்துக்கு இப்போது உண்டாகி இருக்கிறது.

உலகு உயிர்களின் இயல்பையும் இவற்றிற்கு அப்பாற்பட்ட முழுமுதற் பொருளையும் காணமுடியும் எனத் துணிவு கொள்ளும் மக்களினத்துக்கு வாய்த்த கருவியாக இருப்பது விஞ்ஞானக் கல்வி (Scientific Education) என்பதை அறிவுடையோர் மறுக்க முடியாது. இக்கல்வி வளமுற வளர்ந்திருப்பது மேனாடுகளிலும், அமெரிக்கா விலும் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அந்நாடுகளுள்ளும் உருசிய மொழி வழங்கும் உருசியாவும் ஆங்கில மொழி வழங்கும் அமெரிக்காவும் இத்துறையில் முன்னேறியுள்ளன. அதனால் “நாடு என்ப நாடா வளத்தன” என்ற திருக்குறளுக் கொப்பப் பொருள் வளத்தாற் செல்வமும், சிறப்பும் சிறக்கப் பெற்றுத் திகழ்கின்றன. ஏனை இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி முதலிய நாடுகளும் கிழக்காசியாவிலுள்ள சப்பான் நாடும் ஓரளவு முன்னேறிப் பொருள் வளம் பெற்றுப் பொலிகின்றன. நமது நாடும் இத்துறையில் முயன்று வருகின்றது. இம்முயற்சியில் நல்ல வெற்றி காண்பதற்கு அறிவியற் கல்வியும் கலைகளும் நாட்டவர் உள்ளத்தில் நன்கு பரவ வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

இந்த அறிவியற் கலையும், கல்வியும் நமது நாட்டு மொழி களில் பெறுதற்கு வாய்ப்பில்லை. இவற்றை அறிந்து கொள்ளுதற்கு இன்று ஆங்கில மொழிதான் சிறந்த வாயிலாக இருக்கிறது. ஆங்கில மொழி நமது நாட்டிற் பரவக் கால் கொண்டது ஒரு நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்புதான். அதனை முதற்கண் புகுத்தியபோது நமது நாட்டை ஆண்டவர் ஆங்கிலேயர். அவர்கள் தமது ஆட்சியைத் தமக்குத் தெரிந்த மொழியில் நடத்துதற்கு நம் நாட்டு மக்களில் கற்றவரைத் துணைக் கொள்ள வேண்டியவராயிருந்தனர். தாம் சொல்வதை அறிந்து எழுதவும், சொல்லவும் கூடிய ஆங்கில அறிவு நம்மவர்க்கு உண்டாகும் வகையில் கல்வி முறையை வகுத்தனர். அந்த வழியிலேயே நெடுங்காலம் கழிந்தமையின் அவர்களால் அறிவியல் அறிவு (Scientific Knowledge) பெற்று ஏனை நாட்டு உரிமை மக்களைப்போல அறிவியற் புலவராய் (Scientists) விளக்கம் பெறும் நல்லுதவி நம்மவர் பெறாராயினர். அவர்கள் தந்த ஆங்கில மொழியறிவு பெருகியபோது அரசியல் வாணிகம், நீதிமன்றம் ஆகிய துறைகள் யாவும் ஆங்கிலமொழியில் நடைபெறலாயின. கல்வியின் குறிக்கோளும் அரசியல் முதலிய மூன்று துறையிலும் வேலைபெற்று அதனால் எய்தும் ஊதியங்கொண்டு வயிறு வளர்ப்பது என்று மாறுவதாயிற்று. இதற்கேற்ற வகையில் அமைந்த கல்வியும் ஆங்கிலத்தில் நடைபெறத் தொடங்கியது. கற்போர் வேலை எதிர்பார்த்த துறைகளுள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தொழிலும் ஒன்றாயிற்று. இவ்வாற்றால் நம் நாட்டில் கற்பதற்கும் வேலை தேடி வயிறு வளர்ப்பதற்கும் உரியது ஆங்கிலமே என்ற எண்ணம் மேலிட்டது. நாட்டு மொழிகள் வாழ்க்கைக்குத் துணையாகா என வெறுத்துப் புறக்கணிக்கப்பட்டன.

ஆங்கிலேயருடைய ஆட்சி நிலைபெறுமுன் தமிழகத்தில் அரசு நிலையின்மையும் போர் அச்சமும் எங்கும் நிலவின. அதனால் மக்களிடையே அமைதியான வாழ்வு இல்லாதொழிந்தமையால் வறுமையும் பிணியும் கல்லாமையும் நாட்டிற் பெருகியிருந்தன. ஆங்கிலேயர் ஆட்சி நிலைகொண்டதும் போர் அச்சம் ஒழிந்தது. வாழ்வில் மக்கட்கு ஓரளவு அமைதி தோன்றிற்று. பொருளும் வாணிகமும், தொழில்களும் தொன்று தொட்டு வந்த முறையில் உயிர்ப்புப் பெற்றன. அதுகண்ட மக்கள் அரசினர் மனமகிழத்தக்க வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்த முற்பட்டனர். தமக்கென ஒன்று இன்றித் தமக்கு வேண்டுவனவற்றைச் சிந்திப்பதும் அரசினர் செயல் எனத் தேர்ந்து அவர்கட்கு முழுத்த அடிமையாயினர். அரசின் செல்வாக்குப் பெற்றோருடைய சொல்லும், செயலுமே அவர்கட்கு வழிகாட்டியாயின. இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தில் இல்லாத சாதி வேற்றுமைகள் புது முறையில் தோன்றி மக்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்தொழிந்தன. கல்வியும், செல்வமும் செல்வாக்குடையோரிடமே இருந்து வரலாயின.

நாளடைவில் ஆங்கிலேயர்களுக்குத் தம்மால் ஆளப்படும் மக்களிடையே காணப்படும் கல்லாமை, வறுமை, வேற்றுமைகள் தெரியவந்தன. இந்த மக்களை ஆங்கிலேயரினும் சிறந்த ஆங்கிலப் பான்மையுடையராக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஆங்கில மொழியறிவை முன்னையினும் சிறிது மிகுதியாகப் பரப்ப முயன்றனர். ஆங்கில மொழியிற் காணப்படும் அரசியல், வாணிகம், விஞ்ஞானம் முதலிய கலைகளை நம்மவர்க்கு வழங்கினர். மருத்துவம், பொறியியல் முதலிய கலைகளும் நாட்டு வரலாறு, பொருளாதாரம், மெய்யுணர்வு (Philosophy) முதலியனவும் வந்து புகுந்தன. இதனால் அவர்கள் ஆட்சியில் கல்விமுறையிற் குற்றம் குறைகள் இல்லை என்பது கருத்தன்று. அவற்றால் நமது முன்னேற்றம் தடைப்பட்டது உண்மை, ஆயினும், அவர்பால் பெற்ற நலங்களால் - அவருடைய மொழிப் பயிற்சியால் - இன்று நாமும் ஓரளவு கலைஞர்களாய் விளங்குகிறோம்.

இத்தனைக் கலைகளும் கலையுணர்ச்சிகளும் நிறைந்து இன்று உலகப் பொது மொழியாக ஆங்கில மொழி இடம் பெற்று விட்டது. ஆங்கிலேயரை வெறுப்பவரும் அவர்களுடைய ஆங்கில மொழியின் கலைவளம் கண்டு அதனைப் பெரிதுங் காதலித்துக் கற்கின்றனர். அதற்கு அச்சிறப்பு எங்ஙனம் உண்டாயிற்று?

ஆங்கிலேயருடைய நாடு மேலை நாட்டுக் கடற்கண் உள்ள சிறு தீவு என்பது யாவரும் அறிந்தது. மேலும் அது குளிர் மிகுந்து ஓராண்டில் பலதிங்கள் வெளியே செல்ல முடியாதவாறு பனி யுறைந்து கிடக்கும் இயல்பினதாகும். அக்காலத்தே அவர்கள் தங்கள் மனைகளில் அடைபட்டுக் குளிர் காய்ந்து கொண்டும் தனியே இருந்து சிந்தித்துக் கொண்டும் இருப்பர். இவ்வியல்பால் குளிர்காலத்துக்கெனப் பொருளீட்டுவது அவர்கட்கு இயற்கை வேட்கையாயிற்று. குளிர்காயும் நெருப்புக்கு விறகு தேடப் புகுந்த சிந்தனை அவர்களை நிலத்தைக் குடைந்து நிலக்கரி காணச் செய்தது. நிலக்கரிக்குப் பின் நீராவி கண்டனர்; புகை வண்டி விடுத்தனர். இடையிடையே இவற்றுக்கு வேண்டும் கருவிகளையும் படைத்தனர்.

உணவுக்கும், உடைக்கும் உரிய பொருள்மேற் சென்ற அவர்கள் விருப்பம், ஏனைப் பெருநாடுகளிற் பெறலாகும் பொருள் நலமெல்லாம் தாமும் பெறவேண்டுமென்ற வேட்கையாக மாறிற்று. அதனால் கடலிற் கலம் செலுத்தி வேறு நாடுகட்குச் சென்று பொருளீட்டும் செயலை மேற்கொண்டனர். வேறு நாடுகட்குச் சென்றபோது அந்த நாடுகளின் இயற்கையமைதிகளையும் கால நிலைமைகளையும் ஆங்கு வாழும் மக்களினத்தின் பண்பாடு களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இவ்வகையில் அவர்களுடைய உலக அறிவும் பொருளறிவும் பெருகவே போக்கு வரவுக்கும் பொருள் செய்தற்கும் வேண்டப் படும் பொருளும் கருவிகளும் மிகுதியும் உண்டாயின. அவற்றால் அவர்களுடைய மொழியிலுள்ள சொற்களும் பலவாய்வளர்ந்து பெருகத் தலைப்பட்டன. அவர்களைப் போலவே அவர்கள் வாழும் கடலின் கரையிலுள்ள நாட்டினரான ஐரோப்பியர் பலரும் பொருள் வேட்கையும் அதுவே வாயிலாக நாடுகாணும் நாட்டமும் கொண்டு கடலில் திரிவாராயினர். அவர்களாலும் பற்பல புதுப் பொருட்கள் காண்டலும் புதுக் கருவி படைத்தலும் உண்டாயின. நாளடைவில் அவைகள் அவர்களிடையே விரவத் தொடங்கின. இவ்வாறு தோன்றி வளர்ந்ததன் பயனே இன்று நாம் ஆங்கிலத்திற் காணும் கலைப் பெருக்கமாகும்.

வாழ்க்கை நலமும் அதற்கு இன்றியமையாத பொருள் வேட்கையும் கொண்டே வேறு நாடுகட்குச் சென்றாராயினும், தங்கள் நாட்டோடு ஒத்த இயற்கைச் சூழ்நிலையமைந்த நாடுகளில் குடியேறுவதிலும் அவர்கள் பின்வாங்கவில்லை. நல்ல காலத்தின் குறியாக ஆங்கிலர் நாட்டில் சமயக் கொடும்பூசல் ஒன்று சுமார் நானூறு ஆண்டுகட்கு முன் தோன்றிற்று. வலியார் பலர் எளியாரைத் துன்புறுத்தினர். அவர்கள் கடல் கடந்து அமெரிக்கா முதலிய நாடுகளிற் குடியேறினர். இவ்வாறே பலர் ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் ஆத்திரேலியாவிலும் அமெரிக்காவின் வட பகுதியிலும் குடியேறி ஆங்கிலம் வழங்கும் நாடுகளை அமைத்துக் கொண்டனர்.

இவ்வாறு நிலவுலகு முற்றும் பொருள் வேண்டியும் இடம் வேண்டியும் திரிந்த ஐரோப்பியர்பால் அரும் பண்பு ஒன்று அமைந்திருந்தது. தாம் தம் இயற்கையறிவாலும் வாழ்க்கை வாயிலாலும் கண்ட காட்சிகளை எழுதிவைப்பதும் ஒளிவு மறை வின்றிப் பிறர்க்குரைப்பதும் ஐரோப்பியரிடம் அந்நாளில் நன்கு அமைந்திருந்த செயல்களாகும். அவற்றோடு தாம் காணும் இயற்கை நலங்களையும் கண்டு பயிலும் மக்களுடைய பண்பாடுகளையும் செயல் வகைகளையும் குறித்துக்கொண்டு தம்மோரன்னோருக்கு வெளியிடுவது யாவர்பாலும் அமைந்திருந்தது

அவர்கள் நம் நாட்டிற் புகுந்து தங்கியபோது வடமொழியிற் காணப்படும் வேதங்களையும் மிருதிகளையும் உபநிடதங்களையும் பிறவற்றையும் கற்றோரைத் துணையாகக் கொண்டு தமது மொழியிற் பெயர்த்துக் கொண்டனர். கிரையர்சன் முதலியோர் மக்கள் பேசும் மொழிக்கூறுகளைக் கண்டு குறித்தனர். தர்ச்டன் முதலியோர் மக்களினத்தின் பல்வேறு பிரிவுகளையும், அவர்களுடைய வாழ்க்கை முறை, குணம், செயல் ஆகியவற்றையும் தொகுத்துரைத்தனர். ஊல்சு முதலியோர் கல்வெட்டுக்களை கண்டனர். மெக்கன்சி முதலியோர் பழங்கால வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்து வைத்தனர். செர்பாட்சிகி முதலியருசியர், பௌத்தம் முதலிய சமய தத்துவங்களை ஆராய்ந்து கண்டனர். இவை யாவும் ஆங்கில மொழியின் செல்வங்களாகத் திகழ்கின்றன. இவ்வாறே இந்த ஐரோப்பியர் எந்த எந்த நாடுகட்குச் சென்றார்களோ அந்த அந்த நாட்டின் இயற்கை நலங்களையும் மக்களினத்தின் பண்பாடு, மொழி முதலிய இயல்புகளையும் கண்டும் தேடியறிந்தும் எழுதி வைத்துள்ளனர்.

இம்மட்டோ? நிலவுலகைச் சூழ்ந்துள்ள கடல்களின் இயல் பையும் அவற்றுள் வாழும் உயிர்வகைகள், பறவைகள் முதலிய வற்றையும் நிலத்திடை நிற்கும் மலை, காடு, ஏரி குளங்களையும் ஆறுகளையும் ஆங்காங்கு வாழும் பறவை, விலங்கு முதலிய உயிரினங்களையும் கண்டு அவற்றின் இயல்புகளையும் வெளியிட் டுள்ளனர். இவ்வாறேதான் நிலம், நீர், நெருப்பு, காற்று முதலிய வற்றின் கூறுகளைக் கண்டாற்போல வானத்தையுங் கண்டு காற்று நிலவும் பகுதி, அதன்மேலுள்ள மென்காற்பகுதி, அதற்கு மேலே ஒன்றுமில்லாத வெற்றிடப் பகுதிகளையும் வானத்திற் காணப்படும் நாள் கோள் முதலியவற்றையும் ஆராய்ந்துள்ளனர். இன்னோரன்ன செயல்வகைகளால் இன்றைய ஆங்கில மொழி, ஒருவன் நிலவுலகின் அகக்கூறு புறக்கூறுகளையும் அவற்றின் நுட்பங்களையும் இருந்த இடத்திலிருந்து நேரிற் சென்று கண்டோன் போல இனிது அறிந்துகொள்ளுதற்கேற்ற அறிவுக்கலைக் கண்ணாடியாக உலகெலாம் பரவிய உயர்தனிச் செம்மொழியாக விளங்குகிறது.

இந்த ஆங்கில மொழி போலத்தான் நமது நாட்டிலும் வடமொழி தோற்றம் பெற்றது. ஐரோப்பியர் மொழிக்குப் பேச் சொலியோடு எழுதப்படும் எழுத்தும் இருந்தது. ஆனால் வடமொழியாளருடைய வடமொழிக்கு எழுதுதற்குரிய எழுத்து இலதாயிற்று. அவர்கள் தமிழகத்துக்கு வந்தபோது அவர்களது வடமொழி ‘எழுதாக்கிளவி’யாகவே இருந்தது. அவர்களும் இந்த நாட்டைப் பார்க்க வந்தவர் என்ற பொருள்படத் தம்மைப் “பார்ப்பனர்” என்றே கூறிக் கொண்டனர். அவர்கள் இன்றைக்கும் வடமொழியல்லாத ஏனைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவற்றைப் “பிரதேச பாசை” என்று கூறுவதே இதற்குச் சான்றாகும். தொடக்கத்தில் அவர்கள் ஆறுவகைத் தொழில்களே மேற்கொண்டிருந்தனர். அவை வேதம் ஓதல், ஓதுவித்தல், வேள்வி வேட்டல், வேட்பித்தல், ஓதல், ஓதுவித்தல் என்ற இரண்டிற்கும் வேண்டும் பொருளை உடையவரிடம் இரத்தல், ஓதுவித்தல் வேட்பித்தல் ஆகிய இரண்டிற்கும் உரிய பொருளை ஈதல் என்று கூறப்படுகின்றன.

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம்புரி அந்தணர்”

என்று பதிற்றுப்பத்தும், “அறுவகைப் பட்ட பார்ப்பன பக்கம்” எனத் தொல்காப்பியமும் கூறுவது காணலாம். எனவே, அவர்கட்கு உழவு வாணிகம் முதலிய தொழில்கள் இல்லை என்பது தானே பெறப்படும். படவே, அவர்கள் பண்டை நாளில் பொருள் மிகவும் உடையவரான அரசர் சார்பிலும் செல்வர் ஆதரவிலும் வாழ்ந்து வந்தனர். ஏனை உலகியல் தொழில்களைச் செய்து வாழும் மக்கள் தொடர்பு இல்லாமையால் நெடுங்காலம் வரையில் அவர்களது வடமொழி, அவர்கள் சூழலில் இருந்து வந்ததேயன்றி நாட்டு மக்கள் அறியும் எல்லைக்கு வரவில்லை. வேற்றவர்களான பல்லவர் ஆட்சி நிலைகண்ட போதுதான் அரசியற் செப்பேடுகளில் வேந்தர்
களின் குடிவரவு கூறும் பகுதியில் வடமொழி இடம் பெறுவதாயிற்று. அவர்கட்குப்பின் வந்த பாண்டியர் காலத்தில் அம்மரபு சின்னாளிருந்தது. பின்பு தோன்றிய சோழ பாண்டியர் காலத்தில் அவ்வழக்காறு வீழ்ந்து போயிற்று. இன்னும் பல்லவர் அவரை
அடுத்த பாண்டியர் சேப்பேடுகளில் குடிவரவு கூறும் பகுதி வட மொழியிலும் ஏனையாவுந் தமிழிலும் இருப்பதைக் காணலாம். அவ்வடமொழிப் பகுதியும் தேவநாகரி என்ற எழுத்தில் உள்ளது. அவ்வெழுத்தும் மராட்டர் மொழிக்குரிய எழுத்துக் களாகும். பிற்காலத்தே புத்தரும் ஆருகதரும் தமிழகம் போந்த போது தான் தமிழ் எழுத்துக்களைச் சிறிது திரித்துக் கிரந்த எழுத்துக்கள் அமைத்துக் கொள்ளப்பட்டன. என்றாலும் மேலை நாட்டு ஐரோப்பிய மக்களைப் போலவே தாம் சென்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே வழங்கிய வரலாறுகளையும் பொருள் இடம் முதலியவற்றின் இயல்புகளையும் கண்டும் கேட்டும் தங்கள் மொழியில் பெயர்த்துக் கொள்ளும் இயல்பு வட மொழியாளரி டத்தும் நன்கு அமைந்திருந்தது. அரசர், வணிகர், உழவர், பாணர், கூத்தர் முதலியோரிடத்து இருந்த அறநூல், பொருள் நூல், இசை நூல், கூத்து நூல், முதலிய பலவேறுகலை. நுட்பம் கூறும் நூல்களைப் பெற்றுத் தமது வடமொழியில் ஆக்கிக் கொண்டனர். அந்தணர்கட்கு அவை தொழில்கள் அல்லவாயினும் சிறந்த கலை நூற்களைத் தமது மொழியில் பெயர்த்துக் கொள்வது அவர்களுடைய நல்ல பண்பாகும். அவர்கள் எப்போதும் அரசர், குறுநிலத்தலைவர், வணிகர் முதலிய செல்வர் சார்பிலேயே இருந்து வந்ததால் இச்செயல்கள் அவர்கட்கு எளிதில் இயன்றன. இவ்வாறே செல்வர் அருள் வேண்டி நின்ற இயற்புலவர், ஓவியப் புலவர், கோயில் களின் அமைப்பும் முறையும் கூறும் ஆகமப் புலவர் முதலிய பலவகைப் புலவர்களின் கலைநூல்களும் மருத்துவ நூல்களும் பிறவும் வடமொழியில் மாறின.

அரசு நிலையில்லாமையால் நாட்டில் அடிக்கடி நிகழ்ந்த போர்களில் பார்ப்பனர் ஒழிய ஏனையாவரும் கலந்து கொள்ளும் கடமையுடையவர். அதனால் அவர்களுடைய கலைச் செல்வங்கள் பலவும் வடமொழியாளரிடம் இருப்பது நலம் என்றும் அந்நாளை யோர் கருதினர். அவ்வாறு கருதியிருந்ததில் தவறில்லை.

மேலை நாட்டு ஐரோப்பியரிடம் காணப்படாத ஒரு தீயபழக்கம் வடமொழியாளரிடம் இருந்தது. ஐரோப்பியர் தாம் கேட்கும் செய்தியும் கற்கும் பொருளும் யாவரிடம் கிடைத்திருக்கின்றனவோ அவரையும் அவர்களின் நூலையும் விடாமற் குறிப்பது அவர்கள் வழக்கம். அவர்களுடைய நூல்களைக் காண்போமாயின் “இது இன்னார் கூறியது; இதைக் கூறியவர் இன்ன நூலிற் கூறியுள்ளார்.” என்பதைத் தவறாமற் குறிப்பர். பின்பு எந்தப் பொருளேனும் புதிதாகக் காணப்படின் அப்பொருள் காணப்படும் இடத்தே அதற்கு எப்பெயர் வழங்குகிறதோ அதனைத் தங்கள் மொழியொலிக் கேற்பத் திரித்துக் கொள்வர்; ஊர்ப்பெயர், மக்கட்பெயர் ஆகிய வற்றையும் அவ்வாறே திரித்துக் கொள்வது அவர்கள் இயல்பு. வடமொழியாளரோ எனில் அப்பெயரை வடமொழியில் மொழி பெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்துகொள்வர். விரிஞ்சிபுரத்திலுள்ள இறைவனுக்குப் பழம்பெயர் வழித்துணை நாயனார் என்பது. விருத்தாசலத்துக்குப் பழமையான பெயர் முதுகுன்றம் என்பது. வழி என்பதை மார்க்க மென்றும் துணை என்பதைச் சகாயம் என்றும் மொழிபெயர்த்து மார்க்க சகாயர் என்றும்; முதுமை - விருத்தம்; குன்றம் - அசலம் -ஆகவே முதுகுன்றம் -விருத்தாசலம் என்றும்; வெண்காடன் என்பதைச் சுவேதாரணியன் என்றும் கூறினர். இவ்வாறே விரிஞ்சிபுரத்துக்கு அண்மையில் ஓடும் பாலாற்றை க்ஷீரநதி என்றும், அழகர் மலை யிலுள்ள சிலம்பாற்றை நூபுரகங்கையென்றும், அறம் வளர்த்தாள், பெரியநாயகி என்ற பெயர்களைத் தர்மசம்வர்த்தனி, பிரகந்நாயகி என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர். இவ்வாறே சைவத் திருமுறைகளிலும் நாலாயிரப் பிரபந்தங்களிலும் காணப்படும் பலபெயர்கள் வடமொழியில் பெயர்க்கப் பட்டுள்ளன. வழித்துணை நாயனாரை ஐவே கைடு (Highway guide) என்றோ முதுகுன்றை குட் ஓல்டு இல்லக் (Good old hillock) என்றோ ஆங்கிலேயரோ வேறு ஐரோப்பியரோ மாற்றியதோ, மாற்றுவதோ கிடையாது.

இத்தீச்செயலையே பல நூற்றாண்டுகளாகச் செய்துவந்த மையின் பிற்காலத்தே வாழ்வில் அமைதி தோன்றியதும் மக்கள் தங்கள் நூல்களை எழுதத் தொடங்கியபோது வடமொழியிலிருந்து பெறவேண்டிய நிலைமை தோன்றியது. அப்போது தமிழ்நாட்டுத் தமிழர் ஊர்க்குரிய வரலாற்றை வேறு எவரோ எந்த நாட்டிலோ கூறியதாக வரலாறுகள் வேறுபடலாயின. இசையும் கூத்தும் சமயக் கருத்தும் பிறவும் பழம்பெயர் மறைந்து போக வடமொழிப் பெயரால் வெளிவரலாயின. பின்வந்தோர் உண்மை உணர மாட்டாமல் எல்லாம் வடமொழியிலே உள்ளன; தமிழ் மொழியே வடமொழியிலிருந்து தோன்றியதுதான் என்று கூறலுற்றனர். வேள்வி செய்தோர்க்கும் செய்வித்தோர்க்கும் பண்டைநாளில் வேந்தரும் செல்வரும் காமக்காணி என்று சிறப்புப் பெயர் நல்குவது வழக்கம். இடைக்கால கல்வெட்டுக்கள் மிகப்பல இதனைக் கூறுகின்றன. இவ்வாறு சிறப்புப் பெயர் பெற்ற சான்றோர் ஒருவர் சங்க இலக்கியத்தில் வருகிறார். அவர் பெயரை ஏட்டில் எழுதினோர் காமக்கணி என்று எழுதிவிட்டனர். அதைக் கண்ட இக்கால அறிஞர் அது காமாட்சி என்பதன் மொழிபெயர்ப்பு என்று எழுதி யொழிந்தார். காஞ்சிபுரத்திலுள்ள காமக்கோட்டத்துக் காமாட்சிக்கு அப்பெயர் மிகவும் பிற்காலத்தே உண்டானது என்பது வரலாறு கூறும் உண்மை. இவ்வண்ணமே கோயில்களில் இறைவன் முன் சொல்லப்படும் அருச்சனைகள் பல திருமுறைகளிலும் பிரபந்தங் களிலும் காணப்படும் சிறப்புப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவே உள்ளன. இதனால் விளைந்த பயன் என்னையெனில் சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் இருந்து பள்ளி மாணவர் பாடநூல்களுக்கு உரை எழுதினோரும் பிறரும் பின்விளைவு கருதாமல் தமிழில் வழங்கும் மணி, நீர், முத்து, சேரி,மீன், பழம் முதலிய யாவும் வடமொழித் திரிபுகள் என்றே எழுதினார்கள். உலகில் அறவாழ்விற் சிறந்த சான்றோர்களைத் தமிழர் கடவுளர் என்பர். அப்பேயரைத் தெய்வ மாகவும் “ ரிசி ”களாகவும் மொழி பெயர்த்து அவர்கள் வரலாற்றுள் பலவற்றைத் தெய்வச் செயல்களாக உரைக்கலாயினர். சாதிசமுதாய வேற்றுமைகள் நிலைபெறு தற்கேற்பப் புராணங்கள் பல வடமொழி வாயிலாகத் தோன்றின. தமிழ் மொழியிற்காணப்படும் அறவுரைகளும் பொருளுரைகளும் யாவும் வடநூல்களிலிருந்தே தோன்றின என்ற கருத்து நாட்டவர் தெரியவும் மேனாட்டவரும் பிறரும் தமிழர்க் கெனத் தனித்த அறிவோ, பண்பாடோ, சமய ஒழுக்கமோ இல்லையென உணரவும் உரைத்தனர்; நூல்வடிவில் எழுதியும் வந்தனர். ஆங்கில அறிவும் அதன் வாயிலாக வடநூற்கருத்துக்களும் வரலாற்றுண்மை களும் தமிழ் மக்கட்குத் தெரியவந்தன. அதனால் தமிழகட்குவட மொழிபால் வெறுப்பு உண்டாயிற்று.இவ்வெறுப்பு வளர்தற்கேற்ப மேனாட்டவரும் தமிழரல்லாத பிறரும் இரு மொழியும் பயின்று பெற்ற அறிவால் வடமொழியில் உள்ள வரலாறு பலவும் புளுகுக் குப்பைகள் (“A farrago of legendary nonsense”W. Logan’s Malabar) என்று திட்ட வட்டமாகக் கூறுவாராயினர். இதற்கிடையே நல்ல காலமாக மொழிநூல் நெறி (PHILOLOGY)பொய்யான கருத்துக்களை மறுத்து விட்டது. உண்மை ஒளிவிட்டுத் திகழ்வதாயிற்று.

இப்போது இந்தியப் பேரரசு வடமொழிப் பல்கலைக் கழகங்களை நிறுவி வடமொழியை நாட்டிற் பரப்ப முயலுகின்றது. வடமொழியை யாவரும் எளிதிற் கற்பதற்கேற்ற வழிமுறைகளை ஆராய்தற்கென அறிஞர்குழு ஒன்றை அமைத்துள்ளனர். இப்போது பரவியுள்ள வடநூலறிவே வடநூற் கடலுட் புதைந்து மறைந்து கிடக்கும் தமிழ்ச் சொற்கள் கருத்துக்கள் பலவற்றை எடுத்துக்காட்டி வருகிறது. வடநூல் அறிவு நாட்டில் பலரும் அறியப் பரவுமாயின் மேலே கூறிய தமிழ் வரலாறுகளும் உண்மைகள் பலவும் மக்கட்குத் தெரிந்துவிடும். அவ்வந்நாட்டு மொழிகள் தத்தம் தனியியல்பை யுணர்ந்து தழைத்து வளரத் தலைப்படும். வடமொழியின் துணை யில்லையாயின் வளம்பெறா என உரைக்கப்படும் பொய்யடிமையி லிருந்து நீங்கி அவை உரிமையும் சிறப்பும் பெற்று உயர்வு பெறும். நீதி மன்றங்களில் நிலவும் சட்டங்களில் புகுத்தப்பட்டிருக்கும் வழக்குக் கொவ்வாத கருத்துக்கள் பலவற்றின் புன்மை நாட்டு மக்களுக்கு நன்கு விளங்கும். ஆதலால் நமது பேரரசு வடமொழி பரவுதற்குச் செய்யும் இந்த முயற்சி பெரிதும் தமிழர் பாராட்டற்குரியதாகும்.

வடமொழியை யாவரும் படிக்கச் செய்யும் வகையில் கல்வியாளர்கள் அதனை ஆங்கில மொழிக்குரிய இடத்திலோ நாட்டாட்சிக்குரிய இடத்திலோ வைப்பது, காலநிலைக்கும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் ஒத்ததாகாது. தமிழ் நாட்டுக்குரிய தமிழ், உலகியலுக்குரிய ஆங்கிலம் என்ற மொழிகளைப் போல, வடமொழி இன்றைய வாழ்க்கைக்குப் பயன்படும் தகுதியுடைய தன்று. அதனால் அதனை மூன்றாவது மொழியாக நிறுத்திப் பலரும் எளிதிற் பயின்று மொழிநலம் பெறச் செய்வது தான் நாட்டின் எதிர்கால அறிவுநலத்தை எண்ணும் நல்லறிஞர் கடனாகும்.

தமிழ்ப்பொழில்,

32ஆம் துணர், மார்ச்சு 1957.

கன்றும் உதவும் கனி


கன்றும் கனி உதவும் என்ற தொடர், கனியுதவும் வாழைக் கன்றைக் குறிப்பது யாவரும் அறிந்த தொன்று, ஒரு வாழை மரம் தான் நிற்குமளவும் நின்று கனியாகிய பயனை யுதவியதும் இறந்து விடும். அப்போது அதனடியில் வேறொரு கன்று தோன்றிவிடும். தன் தாய் கனியுதவி இறந்ததென எண்ணி மடியாது தானும் அது போலவே கனியுதவி மடியும் இதுபற்றியே “நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கனி” என்று சான்றோர் நன்னெறி கண்டனர். இதனால் தந்தையின் அரிய இனிய நன்செயல் ஒன்று மகனிடத்தும் தோன்றுமானால், “கன்றும் கனியுதவுமல்லவர?” என்ற தொடர் பிறிது மொழியும் அணியாக வழங்குவ துண்டாயிற்று. வேள் பாரியின் வள்ளன்மை அவன் மகளிரிடத்தும் இருந்தமையால், அவரது வரலாற்றை ஆராய்ந் தெழுதிய புலவர் திரு. க.உலகநாதபிள்ளை யவர்கள் அவ்வரலாற்று நூலுக்குக் “கன்றும் கனியுதவும்” என்று பெயரிட்டார், இங்ஙனம் கன்று கனியுதவும் செயல் வாழையினத்தில் இன்றும் நடைபெறுவது போல மக்கள் இனத்திலும் பொய்யாமலே இருந்து வருகின்றது. செல்வம் மிக்க தந்தை மேற்கொண்ட நற்செயலை மக்கள் மேற்கொண்டு செய்வதும், அவர்கட்குப் பின் அவர் தம் வழித் தோன்றல்கள் செய்வதுமாக வழி வழியாக நிலவுவதுண்டு, இதனைத் தமிழ் நாட்டுத் தனவணிகர் இனத்தில் இன்றும் காணலாம். இவ்வாறு வழி வழியாக வந்த செயற் பண்பால் இன்று தமிழகத்தில் சிவன் கோயில்கள் மிகப் பல சிறந்த திருப்பணி பெற்று அழகுற இருக்கின்றன. முன்பொருநாள் திருவேடகம் சென்றிருந்தபோது, அக்கோயில் திருப்பணி குறித்துப் பேசிய பெரியவர் ஒருவர், சட்டென “அரம்பையின் கீழ்க் கன்றும் கனியுதவும்” அல்லவா? என்று சொல்லக் கேட்டதும், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி யுண்டா யிற்று. வாழையினிடத்து வழி வழியாக வழங்கி வரும் நற்பண்பு செல்வ மக்களிடத்துச் சிறப்புற நிற்கக் காண்பதே இன்பம்; அதனை நன்மக்கள் எண்ணி மகிழ்ந்து எடுத்துரைக்கும் போது பேரின்பம்.

இத்தகைய செயலொன்று சென்ற வாரத்தில் நடைபெற்றது. மதுரை மீனாட்சி மில் முதல்வர் கரு.முத்து. தியாகராசன் செட்டி யார் தம்மை யடைபவர்க்கு வேண்டும் உதவி செய்யும் வள்ளன்மை யுடைய ரென்பது தமிழறிந்தோர் அனைவரும் நன்கறிந்த செய்தி. தமிழ்ப் புலமை நிறைந்தோர்க்குப் பெரும் பொருள் உதவி இனிது வாழச் செய்வது பிறர் அறியா வகையில் நடைபெறும் அவரது தனித்த வண்மைச் செயல். உயர்கலாசாலை களும், உயர்நிலைக் கல்லூரியும் நிறுவிக் கல்வியை நாட்டு மக்கட்கு வழங்குவது அவரது பொதுத் தொண்டு. “தமிழ்நாடு” என்னும் நாள் தான் வாயிலாக நல்ல தமிழில் உலக நிகழ்ச்சிகளை நாடோறும் வெளியிடுவது ஒரு சிறப்புத் தமிழறமாகும். இதற்காக ஒரு வகை ஊதியமும் இன்றி இதுகாறும் இரண்டு லட்சரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கிறது. தமிழ் வளர்ச்சி குறித்தும் தமிழ் மக்களின் உலகியல் அறிவு மிகுவது குறித்தும் உதவப்படும் இப்பெருவண்மை நாடோறும் நடந்த வண்ணம் இருக்கிறது. இவற்றைச் சீர்தூக்கிக் காணும் நல்லோர் கூட்டம், கரு.முத்து. திரு. அவர்களைத் “தமிழ் வள்ளல்” என்று கூறிப் பாராட்டி வருகிறது.

இன்றைய தமிழறிஞர் உலகம் ஒருவர்பால் விளங்கும் நற்பண்பு களை மறைத்தாலும் மறைக்குமேயன்றி இல்லாத நற்பண்புகள் உள்ளன எனப் பொய்யாக ஏற்றிப் புனைந்துரைப்பதில் ஈடுபடு வதில்லை. இல்லது புனையும் இயல்பு இக்காலத்தில் இல்லை யென்பது உண்மை. உள்ளதன் உண்மையை உள்ளபடி யெடுத் துரைத்து இன்புறும் இன்றைய அறிஞர் உலகம் கரு.முத்து. தி. அவர்களைத் “தமிழ் வள்ளல்” என்று பாராட்டுகிறது என்றால், வேறு கூறல் வேண்டா.

இத்தமிழ் வள்ளலுக்கு மக்கள் இருவர் உள்ளனர். இருவரும் தந்தையைப் போலவே தமிழார்வம் நிறைந்தவர். தமிழறிஞர்களை நன்கு மதித்துச் சிறப்பிக்கும் நலம் வாய்ந்தவர். அவர்களில் முன்னவர் சுந்தரம் என்றும், இளையவர் மாணிக்கவாசகம் என்றும் பெயர் பூண்டவர். இவ்விருவர் பெயர்களே இவர் தந்தையான நம் தமிழ் வள்ளலின் சிவநெறிப் பற்றினைச் சிறப்புறக் காட்டுகின்றன. இது நிற்க,

திரு. சுந்தரம் அவர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமையுடையவர்; ஆங்கில மொழி வழங்கும் அமரிக்கா ஐரோப்பா முதலிய நாடுகட்குச் சென்று அவ்வந் நாட்டு மக்கட் பண்பை நன்கு அறிந்தவர். எது செய்வதாயினும் அதனை நன்றாக ஆராய்ந்து குறித்த காலத்தில் முடிக்கும் குறிக்கோள் உடையவர். விரிந்த மனப் பண்பும் சிறந்த நோக்கமும் அவர்நெஞ்சில் நிலவுவதை அவரோடு சொல்லாடுந் தோறும் விளங்குவதை யாவரும் எளிதில் காணலாம்.

தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நற்றிணையை உரையுடன் வெளியிட வேண்டுமென மேற் கொண்டபோது என்னை அதற்குரிய பணியினைச் செய்யுமாறு திரு.வ.சுப்பையா பிள்ளையவர்கள் தெரிவித்தார்கள். தூத்துக்குடி வணிகர் திரு. E.K. சேதுராமலிங்கம் பிள்ளையவர்களுடன் திருச் செந்தூர் சென்று செந்திலாண்டவன் திருமுன் வைத்து அப்பணியைத் தொடங்கினேன். சின்னாட்களுக் கெல்லாம் நற்றிணை மூல ஏடு ஒன்று கிடைத்தது. அதனை அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளரான திரு.வெள்ளை வாரணம் அவருடன் ஆராய்ந்ததில் பல பாடவேறுபாடுகள் கிடைத்தன. முயன்றால் வேறு ஏடுகளும் பெறலாம் என்ற ஊக்கமும் உண்டாயிற்று. அதன் பின் மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரி மாணவர் ஒருவர் துணையால் போடி நாய்க்கனூர்க்கு அண்மையிலுள்ள டொம்மிச்சேரியில் நற்றிணை யேடு ஒன்று கிடைத்தது. அதனால் ஆசிரியர் பெயர் காணப்படாத நற்றிணைப் பாட்டுக் கட்கு ஆசிரியர் பெயரும், சில பாட்டுகளில் விடுபட்டிருந்த அடிகளும் சொற்களும் சொற்றொடர்களும் கிடைத்தன. இந்நிகழ்ச்சியை உடனே “தமிழ் நாட்”டில் வெளியிட்டேன். செட்டி நாட்டுப் பகுதியில் மிதிலைப் பட்டியில் டாக்டர் திரு. உ.வே.சா.ஐயரவர்கட்குப் பழைய ஏடுகள் சில கிடைத்த செய்தி கேள்வியுற்று, அப்பகுதியில் எங்கேனும் ஏடுகள் கிடைக்குமோ என நண்பர் சிலரைக் கேட்டிருந்தேன். அவர்களில் தெக்கூர் விசாலாட்சி காலாசாலைத் தமிழாசிரியர் திரு.வித்துவான், கதி. சுந்தரமும் ஒருவர்.

சென்ற வெள்ளிக்கிழமை (10-4-53) இரவு யான் “தமிழ் நாடு” அலுவலகத்தில் இருந்தேன். அப்போது திரு.தி.சுந்தரம் செட்டியார் அவர்கள் வந்து, “என்ன அவ்வை, நாளைக்கு ஊருக்குப் போகலாம் வருகிறீர்களா?” என்றார். எனக்கிருந்த வேலையைக் காட்டி வர இயலாமையைத் தயக்கத்தோடு யான் மொழிந்தேன். ‘என்றைக்கும் தான் வேலை இருக்கும்; வாருங்கள் தெக்கூர்க்குப் போய் வரலாம்” என்று மறுபடியும் கூறவே, யானும் மறுக்க மாட்டாமல் “வருகிறேன்” என்றேன். “நாளைக் காலை 6.45 மணிக்குத் தயாராய் இருங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். சிறிது நேரத்திற் கெல்லாம் அங்கே திரு. மாணிக்க வாசகம் செட்டியார் வந்து சேர்ந்தார். அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் “நாமும் ஓலை யேடுகளைத் தொகுக்க வேண்டும்; அதற்கான முயற்சிகளைச் செய்வோம்” என்று தாமாகவே விரும்பிக் கூறினார். அவர் பேச்சில் எப்போதும் போலவுள்ள கிளர்ச்சியும் வேலைத் திட்டமும் மிக்கிருந்தன என்றாலும், “ஏடுகளைத் தேடித் தொகுப்போம்” என்றது மட்டில் புதுமையாக இருந்தது. நாளை நடப்பதை யாவர் அறிவார்?

மறுநாட் காலையில் குறித்த நேரம் கடந்து விலையுயர்ந்த மோட்டார்கார் ஒன்று என் வீட்டுநோக்கி வந்தது. அது திரு.தி. சு. அவர்கள் வழக்கமாக வரும் கார் அன்று; அவர் தம்பி திரு. தி.மா. வரும் காராகும். அது கண்டதும் என் மனதில் தோன்றிய திகைப்பு திரு.தி.சு. அவர்கள் குரலால் நீங்கிற்று. பிறகு தி.சு. அவர்கள் தான் வரும் கார் வரஇயலாது போனதை யுரைத்து என் ஐயத்தை நீக்கினார்கள். பின்பு நாங்கள் இருவரும் காலை நேரத்தேயே தெக்கூர் சென்று சேர்ந்தோம்.

தெக்கூரில் திரு.கரு.முத்து. தி. அவர்களின் தமிழ்ப் பேரகம் ஒரு சிறந்த அமைப்புடன் விளங்குவது; கொடுங்கோடையை நெடு நல் வாடையாக மாற்றும் குளிர்ச்சி மாண்பும், மன மாசு நீக்கி அறிவுவொளி வீசும் தூய்மையும் தனிப் பண்பாகவுடையது. அங்கே நீராடி வழிபாடு முடித்துச் சிற்றுண்டி கொண்ட யான், சிறிது போதில் திரு. கதி. சுந்தரம் அவர்கள் வரக்கண்டேன். அவர் வலையப்பட்டிக்குச் செல்ல விருப்பதாகச் சொன்னார். திரு. தி.சு. அவர்கள் “நாமும் வலையப்பட்டிக்குப் போகலாமே” என்றார். எனக்கென்னவோ, தெக்கூர்ப் பேரகத்திலே தங்கிஎன்னோடு கொண்டு சென்ற குறை வேலையை முடிப்பதிலே கருத்து ஊன்றி யிருந்தது. அப்போது, கதி. சுந்தரம் என்னை நோக்கி, “வலையப் பட்டிக்கருகில் புதுப்பட்டி யென்றொர் ஊர் உண்டு; அங்கே ஒரு வீட்டில் ஏடுகள் பல இருக்கின்றன; போய்ப் பார்க்கலாம்” என்றார். பின்பு நாங்கள் அனைவரும் வலையப்பட்டிக்குச் சென்றோம். வலையப் பட்டியில் ஒரு வீட்டில் திரு.தி.சு அவர்கள் இருந்து கொண்டு, ‘நீங்கள் காரைக் கொண்டு புதுப்பட்டிக்குப் போய் வாருங்கள்’ என்றார்.

இப்பகுதியில்தான் முதலைப்பட்டி (மிதிலைப்பட்டி) உள்ளது என்றபோது எனக்கு இங்கே பழைய ஏடுகள் கிடைக்கலாம் என்ற எண்ணமுண்டாயிற்று. சிறிது போதில் நாங்கள் சென்ற கார் ஒரு வீட்டின் வாயிலில் நின்றது. அதைக் கண்டதும் எப்படியோ என் உள்ளத்தில் இங்கே சில நல்ல ஏடுகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உறுதியாயிற்று. யான் சென்ற காரைக் கண்டதுமே, அவ்வீட்டில் உள்ளவர்க்கு என்பால் நன்மதிப்பு உண்டாயிற்று. உள்ளே சென்ற கதி. சுந்தரம், வீட்டு ஆச்சிக்கு வந்த நோக்கத்தைத் தெரிவித்து விட்டு என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே இருந்தோர் பலரும் என்னை அன்போடு வரவேற்றார்கள். நான் இருந்ததும், வீட்டு ஆச்சியார், ஒரு பெட்டி நிறைய இருந்த ஓலை யேடுகளை என் முன் கொண்டுவந்து வைத்து “இவைகளைச் செல்லரிக்காதபடி காத்து வருகிறோம்” எனமிக உருக்கமாகச் சொன்னார்கள். ஏடுகளின் காட்சியும் ஆச்சியின் மொழியும் என் உள்ளத்தைச் சிறிது நேரம் அசைவின்றி நிறுத்தின.

பின்பு யான் ஏடுகளனத்தையும் ஒன்று விடாமல் பார்க்கத் தலைப்பட்டேன், சிறியவும் பெரியவுமாகிய பலவற்றையும் பார்த்து வருகையில், ஏடொன்றின் சிதறிய முதலேட்டில் “சாறுகழி வழி நாள் சோறு நசையுறாது, வேறு புலமுன்னிய விரகறி பொருள்” என்று தொடங்கும் அடிகளைக் கண்டதும் இது பொருநராற்றுப் படை யென வுணர்ந்தேன்; அதன் உள்ளே சில ஏடுகளைத் தள்ளிப் பார்க்கையில் முருகாற்றுப்படையும் அதன்கண் இருப்பது தெரிந்தது. பிறிதோரேட்டின் தொடக்கத்தில் “வான் பெயனனைந்த புறத்த நோன்பியர்தை யூணிருக்கையிற் றோன்று நாடன்” என்ற அடிகள் காணப்பட்டன. அதன் இறுதியில் “இது நல்லேட்டினார்” என்பதும் எழுதப்பட்டிருந்தது. உடனே இது நற்றிணை யென்பது தெரிந்தேன்; என் உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. இவற்றோடு என் நெஞ்சிலெழுந்த ஆசை நிற்கவில்லை. எல்லா ஏடுகளையும் பார்த்து விடுவதெனத் துணிந்தேன். விறலி விடு தூதன், மன்னராயன் மடல் முதலிய வேறு சில நூல்கள் கிடைத்தன. மணியும் 1 1/2 மணிக்கு மேலாயிற்று. பின்பு தனது மனைக்குச் சென்றிருந்த கதி. சுந்தரம் வந்தார். அவருடன் வீட்டாரது அன்பார்ந்த விடையும் ஏடுகளும் பெற்றுக் கொண்டு திரு.தி.சு. அவர்கள் இருந்த வீட்டுக்கு வந்தேன். அவர் முகம் பசியாலும், வெயிற் கடுமையாலும் வாடியிருந்தது. நண்பகற்போதில் நெடிது நேரம் கழிந்தது பற்றித் திரு.தி.சு. அவர்கள் வருத்தப்படுவரோ என்ற அச்சம் என் மனதில் தோன்றி, யான் கொண்ட மகிழ்ச்சியனைத்தையும் மாற்றியது. அதற்கு மாறாக ஏடுகள் கிடைத்தது பற்றி அவர் என்னிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டார்; “போகட்டும்; இன்று நாம் தமிழ்க்கு நல்ல தொண்டு செய்தோம்” என்றார். என் மன நிலையை யறிந்து அவர்கள் அன்போடு உரைத்த மொழிகள் எனக்கு ஊக்கத்தை யளித்தன. நாங்கள் வேறொரு வீட்டில் விருந்துண்டு, நெற்குப்பையில் களைப்பாறி மாலையில் தெக்கூர் வந்து சேர்ந்தோம், பின்னர், திரு. தி. சு. அவர்கள் தெக்கூர் கலாசாலையின் சார்பாக செய்ய வேண்டிய அலுவல்களைச் செய்தாராக, யான் என் வேலைகளையும் செய்து முடித்தேன். இரவு 7 மணிக்குத் தெக்கூரிலிருந்து புறப்பட்டு 9 மணிக்குள் மதுரை வந்து சேர்ந்தோம்.

இதற்கிடையில், அன்று மாலை ஏடுகளைக் கண்டு, “நாம் இன்று தமிழ்க்கு நல்ல தொண்டு செய்தோம்” என்ற அவருடைய சொற்கள் அடிக்கடி என் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அன்றிரவு உறங்குகையில் ஒரு பழைய நினைவு நெஞ்சில் தோன்றிற்று. தமிழ் வள்ளல் திரு. கரு. முத்து. தி. அவர்கள் “தமிழ் நாடு” வெளியீடு பற்றி நிகழ்ந்த பேச்சிடையே திங்கள் தோறும் பதினையாயிரம் ரூபாய் தமிழ் நாட்டுக்காகச் செலவாவது, ஒரு பயன் கருதியல்ல; தமிழுக்குச் செய்யும் தொண்டு என்று உரைத் தார்கள். அவர்கள் நெஞ்சில் நிலவும் தமிழ்த் தொண்டு என்று என்னும் கருத்து, அவர் வழித் தோன்றலின் உள்ளத்திலும் தோன்றி நின்று பயன்படுவதை என் மனக்கண் இனிது எடுத்துக் காட்டிற்று. “அரம்பையின் கீழ்க்கன்றும் உதவும் கனி” என்ற சான்றோரது நல்லரையின் சால்புதான் என்னே! வாழ்க தமிழ் வள்ளல்.
தமிழ்ப்பொழில்

முன்னணியில் நிற்பவர்


இன்றைய தமிழ் நன்மக்களுக்குத் திருவள்ளுவரது திருக்குறள் பெறலரும் அறிவு ஒழுக்கக் கருவூலமாவது தெரியத் தொடங்கி விட்டது. எங்கும் யாவரும் திருக்குறளைப் பற்றிப் பேசுகின்றனர். எவருடைய பேச்சிலும் திருக்குறள் கருத்து ஒளிர்கின்றது.

இந்நிலைமை எய்துவதற்கு முயன்று பயன்கண்டு மகிழ்ப வருள் நண்பர் கி.ஆ.பெ. விசுவநாதம் முன்னணியில் நிற்கின்றார். அவருடைய பேச்சிலும், எழுத்திலும், திருக்குறளின் சொல்லும் பொருளும் திகழ்வது யாவரும் அறிவர். இனிய மொழி நடையும் இடையிடையே நகை நலமும் கனிந்து, தெளிந்த ஆறுபோல் ஓடுவது அவரது சொற் பெருக்கு.

தலைமையானவர்


முன்னாளில் தமிழகத்தில் மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அறிவு நெறிகளை வழங்குந் தொழிலை மேற்கொண்டிருந்தவர் இனிய கவி வழங்கும் புலவர்களே யாவர். நாட்டில் ஏரி குளங் களைப் பெருக்கி, நீர் நிலைகள் மிகுவித்தோரும், போர்வரின் அஞ்சாது சென்று பொருது வென்றிமேம்படுவித்தோரும் புலவரே யென்பது தமிழகத்தின் வரலாறு. வரலாறு காண்போர் நன்கறிவர்.

இடைக் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மக்கள் நலத்தைப் பேணுவதிலும் தம்மை ஆதரித்த வள்ளல்களின் புகழ் பாடுவதே செயலெனத் தொண்டாற்றியதனால் தம் தலைமை நிலையை இழந்தனர்.

இந் நாளில் அவர்கள் மீளத் தலையெடாவாறு பிறமொழியும் பிற தொடர்புகளும் மேம்படலாயின. ஆயினும் மக்கள் தம்மைத் தமிழர் என்றும், தமது தொன்மை நலம் இதுவென்றும் மெல்லத் தெரிந்து கொண்டனர். தமிழ்ப் புலவர்களின் தமிழ்ப் பணியின் தவறு நலங்களைப் பகுத்தறியலானார்கள். அவர்களிடையே பாரதிதாசனார் போலும் தகவுடைய கவிகள் தோன்றலாயினர். அவருள் பாரதிதாசனார் தலைமையிடம் பெற்றுத் திகழ்கின்றார்.

பாவேந்தர் நிதிஅளிப்பு

மலர் 1946

.
#இரு துருவங்கள்

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும் தமிழ் இந்த இரு துருவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்தது. கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத் திரு நீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையில் திறந்து காட்டுகிறார்.

என் சொந்ததவூர் வடவார்க் காடுமாவட்டத்தைச் சேர்ந்த ஒளவையார் குப்பம். நான் செய்யாற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த நேரத்தில் பாவேந்தர் புதுவையில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். மயிலம் முருகன் பேரில் எனக்கும் ஈடுபாடு; அவருக்கும் ஈடுபாடு. அவர் மயிலம் முருகன் மீது ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடினார். நானும் முருகனைப்பற்றிப் பாடல் எழுதும் பண்புடையேன். மயிலம் கோவிலில் அவரும் நானும் சந்தித்து அளவளாவுவோம்.

நான் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நூலகராக இருந்து கொண்டு கரந்தைக் கவியரசு வெங்கடாசலம் பிள்ளையிடம் தமிழ்ப் பயின் றேன். அப்போது பாரதிதாசனார் தஞ்சாவூர் வரும்போதெல்லாம் தமிழ்ச் சங்கத்துக்கு வருவார். எங்கள் நட்பு வளர்ந்தது.

சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நான் செல்வதுண்டு; ஆனால் தீவிரமாகப் பங்கேற்பதில்லை. திருவாரூர்ச் சுயமரியாதை மாநாட்டில் சந்தித்தோம்; ஒன்றாகத் தங்கியிருந்தோம். நான் உரை எழுதிய ஐங்குறு நூறு - மருதத்திணை வெளிவந்தபோது பாரதி தாசனாரின் பாடல் முதல் தொகுதி வெளியாயிற்று.

ஞானியார் சுவாமிகள் தலைமையில் சைவ சமாஜக் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. நானும் மணி. கோடீசுவரனும் கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது பாரதிதாசனார் வீட்டில் தங்கியிருந்தோம். தமிழைப் பற்றியும் சைவத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசுவார்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி மனைவியோடு எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் மனைவிக்கும் என் மனைவிக்கும் நெருங்கிய நட்பு. தங்கள் சுகதுக்கங்களை நீண்டநேரம் பரிமாறிக் கொள்வர். சில சமயங் களில் மனைவியை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு இரண்டொரு நாள் வெளியூர் சென்று விட்டு மீண்டும் வந்து அழைத்துப் போவார்.

தஞ்சை, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற புலவர் குழுவில் நாங்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாகர்கோவில் புலவர் குழுவுக்குச் சென்றிருந்த போது என் மாணவன் நாஞ்சில் ஆரிது வீட்டில் தங்கியிருந்தோம். காலையில் கன்னியாகுமரி சென்று எழுகதிரின் அழகைக் கண்டு களித்துத் திரும்பினோம்.

நாங்கள் தனியாக இருக்கும்போது ‘நான் பாடும் பாட்டி லுள்ள குறை பற்றிச் சொல்லு பார்ப்போம். நீர் சொன்னால் சரியாக இருக்கும்’ என்று கேட்பார்.

‘நான் குறை சொல்லமாட்டேன்; குறையும் இல்லை’ என்று நான் சொல்லுவேன்.
‘புதுவையிலே ஆட்சிக்குவரும் தலைவர்களெல்லாம் நீங்கள் திட்டினால் பொறுத்துக் கொள்கிறார்களே! ஏன்?’ என்று நான் கேட்பேன்.

‘எல்லாத் தலைவனும் 1932லிருந்தே எனக்குப் பழக்கம்’ என்று அவர் சொல்லுவார்.

நாங்கள் அரசியல் வாதிகளாயிருந்தால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புண்டு; நாங்கள் இலக்கிய வாதிகள். எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்போம். சந்திக்கும்போது ஒருவரை யொருவர் கேலிசெய்து சிரித்துப்பேசி மகிழ்வது எங்கள் வாடிக்கை. நாங்கள் கூடியிருப்பதையும் பேசிமகிழ்வதையும் எல்லாரும் வியப்போடு பார்ப்பார்கள்.

குயில் கூவிக் கொண்டிருக்கும்

முருகு சுந்தரம்

நிலையான அறிஞர்


நண்பர். திரு.சி.என். அண்ணாதுரை அவர்கட்கு ஆண்டு ஐம்பது ஆகிறது என்ற செய்தி அறிய எனக்கு வியப்பு உண்டாயிற்று. அவரை நினைக்கிறபோது அவருடைய உருவம். இளமை நலமும் அறிவொளியும் கொண்டு என் மனக் கண்ணில் தோன்றுவது இயல்பு. பகட்டான உடையும் பரபரப்புக் கலந்த நடையும் எந்தக் காலத்தும் அவரிடம் தோன்றியதில்லை. குளிர்ந்த பார்வையும், கனிந்த சொல்லும், பணிந்த ஒழுகலாறும் சிறந்த மனப்பண்பும், நிறைந்த அன்பும் என் மனத்திரையில் தோன்றும் அன்பர் அண்ணா துரையின் கூறுகளாகக் காண்பேன்.

திரு. அண்ணாதுரை யவர்களை யான் முப்பத் தொன்பது ஆண்டுகட்கு முன்பே அறிவேன். அவருடைய பேச்சும் எழுத்தும் அந்த நாளிலேயே அறிவு மணம் கமழ்ந்து. கேட்போர் படிப்போர் உள்ளத்தை ஈர்த்துப் பிணிக்கும் இயல்பு பெற்று விளங்கின.

இதழாசிரியராய் தமிழ் மக்களை இருளின் நீங்கி நல்ல அறிவொளி பெறுமாறு இயக்கந் தொடங்கிய காலத்தில். இளங்கதிர் ஞாயிறு ஒன்று தமிழ் வானத்தில் எழுகிறது என எண்ணி இறும்பூது கொண்ட நண்பர்களில் யானும் ஒருவன்.

எதிர்காலத் தமிழகத்துக்குரிய இளைஞர் உள்ளங்களை அரசியல் பொருளியல், சமுதாய இயல்களில் ஈடுபடுத்திப் பணி செய்யத் தூண்டும் அண்ணாவின் திறமையும் பண்பும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது.

நண்பர் திரு. அண்ணாதுரை அவர்களால் தமிழ்ப் படிப்பும் தமிழ்ச் சொல்வன்மையும் எழுத்து நடையும் புது மலர்ச்சி பெற்றன. செந்தமிழின் செம்மை சிறப்புறத் தோன்றிற்று. அவருடைய அறிவு செறிந்த ஆதரவால் செந்தமிழில் செம்பாகமான செய்யுள் பிறந்தது. தீவிய இனிய செய்யுள் நூல்கள் எழுந்தன; செய்தித்தாள்கள் சீரிய நடைகொண்டன; அரசியல் வாழ்வில் புதிய நோக்கம் துலங்கிற்று. பொருளியல் அறிவு தமிழ் நாட்டைக் கூர்ந்து நோக்கத் தலைப் பட்டது; சமுதாயத்தை மூடிக்கிடந்த மூடக் கருத்துக்கள் பல உடைபட்டுப் பறந்து போயின. எதிர் காலத் தமிழ் வாழ்வின் பொறுப்பை ஏற்று நடத்தற்கேற்ற மனத்திட்பமும் அறிவு ஒட்பமும் வினை செயல்திறமும் இளைஞரிடையே வளம் பெற்றுள்ளன.

இத்துணை நலங்கட் கெல்லாம் தலைமை இளைஞராய். நிலைகுலையா அறிஞராய். நன்னெறி காட்டும் முது தோன்றலாய் விளங்கும் நண்பர் அண்ணாதுரை எண்பதாம் ஆண்டு நிறைவும் நூற்றாண்டு நிறைவும் பெற்றுப்பிறங்க அருளுக என்று:-

“ஞாலம் நின்புகழே மிகவேண்டும்-தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

என மன மொழிகளால் பரவுகின்றேன்.
வாழ்க அண்ணாதுரை!
வளர்க தமிழ் உணர்வு!

முரசொலி பொன் விழா மலர் - 1959

அண்ணா 50 ஆண்டு நிறைவு விழா

தமிழன்னையின் தனிப்பெருந் தொண்டர்


46 ஆண்டுகட்கு முன் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணியாளனாக இருந்தபோது என் நண்பர் சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்ற உயர்திரு திருவரங்கம் பிள்ளை அவர்களின் தொடர்பு பெற்றுச் சில திங்களில் நண்பனாயினேன். அவர்கள் என்னைச் செப்பறைத் திருமடத்துக்கு அழைத்துச் சென்று அதன் அதிபர் சிவத்திரு அழகிய கூத்த தேசிகர் அவர்கள் பால் தகுவன சொல்லி ஞானாமிர்த ஏடு பெற உதவினர். அன்று முதல் கழகத்தின் தொடர்பு பெருகிற்று.

அந்நாளில் அவருடைய அருமைத் தம்பியும் உழைப்பின் உருவும் தமிழ் அன்னைக் கென்று சமைந்த தனிப் பெருந் தொண்டரும், அவர்க்குப் பின் கழகத்தின் வளர்ச்சியில் பெருங்கருத்தருமாய் விளங்குபவர் தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள். கழகம் வளரத் தாம் வளர்ந்து, தாம் உயரக் கழகம் வளர்த்துத் தனி மாண்பு பெற்றவர். உயிர் வேறு உணர்வு வேறெனப் பிரித்தறிய இயலாதவாறு போலத் திரு. வ.சு. வேறு கழகம் வேறு என பிரித்துக் காணவியலாதவாறு பிரிப்பறப் பின்னிப் பிணைந்து நிற்கும் பெருமகனாவர்.

வ. சுப்பைய்யா பிள்ளை

பவள விழா மலர்

முத்தமிழ்க் காவலன் கவிதை


வாழியரோ முத்தமிழ்க் காவலன்நம் மாவளவன்
ஆழி யனையன் பேராண்மைக் - கேழில்
விசும்பின் உதவுதிரு மேன்மைக் கி. ஆ.பெ.
விசுவநா தன்சீர் மிகுந்து!

எழுத்தாளர் மன்றம்


செய்தித்தாள்களிலும் திங்கள் வெளியீடுகளிலும் பிறவற்றிலும் சிறுகதை கட்டுரைகளை எழுதும் அறிஞர் பலர் இந் நாளில் தோன்றி யுள்ளனர். அவர்களில் சிலர்க்கு அவரது எழுத்துப் பணியை ஊக்குதற் பொருட்டுச் சில செய்தித் தாள்களும் திங்கள் தாள்களும் ஓரளவு கையுறையும் தருகின்றன. இதனால் எழுத்தாளர் தொகை வளர்ந்து வருகிறது. இது மிகவும் வரவேற்கத் தக்க நற்செயலாகும்.

எழுத்தாளர் என்ற பெயர், எழுத்தை ஆள்பவர் என்ற பொருளைத்
தரும் மிகப் பழைய தொரு தமிழ்ச் சொல்லாகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி இடைக்காலத்தும் நிலவியிருந்த இச்சொல் மறைந்து போயிற்று. சேந்தம்பூதனார் என்ற சங்கச் சான்றோர் ஒருவர் குறுந்தொகையிற் காணப்படும் சான்றோர் நிரலில் உள்ளார். அவர் அந்நாளில் மதுரையில் வாழ்ந்த எழுத்தாள ராவர். அதுபற்றி அவரை மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் என்றனர். சங்க காலத்துக்குப்பின் வந்த பல்லவ பாண்டிய சோழர் காலத்தும் எழுத்தாளன் எழும் போதழகியான், எழுத்தாளன் செம்பிய தரையன் எனப் பலர் இருந்தமை கல்வெட்டுக்களால் தெரிகிறது.

இந்த எழுத்தாளர் பெரும்பாலும் ஏடு எழுதுவோரும் நீதிமன்றங்
களின் துணிபுகளை எழுதுவோரும், மக்களிடையே தோன்றும் அறவழக்குக் (Civil Cases) குரிய விண்ணப்பம், உடன்படிக்கை, நிலவிற்பனை முதலியவற்றை வக்கணை குன்றாமல் எழுதுவோரும் மறவழக்குக் (Criminal Cases) கட்குரிய செயல் முடிவுகளை எழுதுவோருமாக இருந்துள்ளனர். பிற்காலத்தே, இவ்வெழுத்தாளர் பெயர், வடமொழி வியாகரணிகட் கொப்ப எழுத்திலக்கணம் அறிந்த மக்கட்குச் சிறப்புப் பெயராகவும் நிலவ முயன்றது. “எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும், எழுத்தறிவார் காணின் இலையாம்” என்பதனால், எழுத்து இலக்கணத்தையும் அதனை ஆளுதல் இலக்கணம் கற்று விளங்குதலையும் குறிப்பது காணலாம்.

சென்ற இருநூறு ஆண்டுகளில் இச்சொல் மறைந்து போயிற்று. ஆங்கிலமே அரசியல் மொழியாக இருந்தபடியால், அதனைப் பிழையற எழுதுவதும் பேசுவதுமே கல்வி நிலையங்களில் குறிக் கொண்டுபேணப்பட்டன. ஏனைத் தமிழ் மொழியைப் பிழைபட எழுதினாலும் பேசினாலும் குற்றமாகக் கருதாத புறக் கணிப்பு நிலை உண்டாயிற்று. இதற்கிடையே, வடமொழியின் துணை யின்றியே, தனித்து நிற்கவும் சிறப்பு எய்தவும் மேன்மேலும் வளர்ச்சி பெருகவும் தமிழ்மொழி பழமையும் வளமையும் உடையதாக இருப்பது கண்ட வடமொழியடிமைகள், அதன் தனிச் சிறப்பைச் சிதைத்து ஏனை ஆந்திரம், கன்னடம், மலையாளம்போல வடமொழியின் துணையின்றி ஒருநாளும் வாழ மாட்டாத சவலை மொழியாக்கப் பலவகையாக முயன்றும் வெற்றி காணாமையால் இந்தப் புறக்கணிப்பு நிலையைப் பயன்கொள்ள எண்ணினர். ஏனை ஆந்திரர் மலையாளர் முதலியோர் துணைகொண்டு வடமொழியை அதற்குரிய ஒலி குன்றாமல் தமிழில் நுழைத்துப் பார்த்தனர். “வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ (நீக்கி) எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்ற தொல்காப்பியத்தைச் செல்லாக் காசாக்கக் கருதினர். கலைச்சொற்களை ஆக்கும் முயற்சியில் நுழைந்து அவற்றை வடமொழியில் ஆக்கித் தமிழில் பரப்ப முயன்றனர். எப்படியோ காலப்போக்கில் தமிழர் விழித்துக்கொள்வாராயினர். தமிழின் தனிமையும் தலைமையும் இனிமையும் கெடாத வகையில் வேற்று மொழிக் கருத்துக்களையும் சொற்களையும் தமிழர் தமது தமிழ்மொழியில் சேர்த்து வளர்க்க முன்வந்தனர். தமிழின் இயல்பான ஒசைக்கேற்ற வகையில் வடமொழி முதலிய பிறமொழிக் கருத்துக் களையும் சொற்களையும் வரவேற்றுத் தமிழை வளர்க்கும் முறையை நன்கு தெரிந்தவராதலால், அம்முறையில் தமிழ்ச் சொற்களை ஆக்கவும் தொடங்கி விட்டனர். பிறதாயரின் வண்ணமும் யாவரை யும் சிதைந்து மாறவேண்டுமென முயலும் கீழ் மக்கள் அல்லர் மான முடைய தமிழர் என்பதையும் நன்றாக உணர்ந்து வடவெழுத்துக் களை மறுத்து ஒதுக்கத் தொடங்கினர். வட மொழியின் வேண்டா நுழைவுக்குக் கருவியாகத் நாளிதழ்களும் திங்கள் வெளியீடுகளும் செய்த சூழ்ச்சி தெரிந்ததும், தூய தமிழில் அவற்றைத் தமிழர் வெளியிடுவாராயினர். அரசியல் மேடைகளிலும், பொது மேடை களிலும், இசையரங்குகளிலும், திரைப்படங்களிலும் நல்ல தமிழ் தோன்றி இனிமை செய்வதாயிற்று. அரசியலையும் இனிய தமிழில் நடத்தும் மேன்மை தமிழர்க்குத் தோன்றிவிட்டது. நாடோடிகள் போலத் தமக்கென ஒரு மொழிப்பற்று இல்லாமையால் வடமொழிக்கு அடிமையான ஒரு கூட்டம், தமிழர் பெருங்கூட்டத்தின் முன் தான் ஒருசிற்றினம் என உணராது தனது நிலையற்ற செல்வாக்கைக் கொண்டு தனது தீச்செயலைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

இந்நிலையில் திங்கள் வெளியீடுகளும் கிழமை வெளியீடு களும், சிறுகதைகளையும் கட்டுரைகளையும் வெளியிடத் தலைப் பட்டன. அவையாவும் ஆங்கில நெறியைப் பின்பற்றித் தோன்றியன வாகும். அவற்றை எழுதும் அறிஞர்களை ‘ரைட்டர்கள்’ என்பது ஆங்கில நெறி. அச்சொல்லை வேரோடுமொழிபெயர்த்தனர். அது நாம் முன்னே கண்ட எழுத்தாளர் என்ற சொல்லாயினமையின், சிறுகதை முதலியன எழுதுவோரை எழுத்தாளர் எனக் குறித்து வழங்கத் தொடங்கினர். நாளடைவில் சிறுகதைகளும் கட்டுரை களும், செல்வாக்கும் முன்னே கூறியபடி பொருள் வருவாயும் நலகின. அதனால் எழுத்தாளர் பலர் தோன்றுவது இயல்பாயிற்று. ஆயினும் அவ்வெழுத்தாளர் கூட்டத்தில் எழுத்து அறிந்தோரும், அறியாதோரும், பிறமொழி அடிவருடிகளும் வேற்றுமையின்றிக் கலந்து இடம் பெற்றனர். அதனால் அவர் வரைவனவற்றுள் தமிழுக்குக்கேடு செய்யும் எழுத்துக்களும் சொற்களும் கலந்து தோன்றுவனவாயின. அவற்றைக் கண்டதும், விழிப்புற்ற தமிழ் மக்கள் “பழம்பகை நட்பாகாது” என்ற உண்மையை உணர்ந்தனர். உள்ளம் மலர்ந்தனர்.

இம்மலர்ச்சியின் பயனாகத் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் மன்றங்கள் ஆங்காங்கே தோன்றி, மொழிப் பகையைப் போக்கித் தமிழ் மக்களின் பொது அறிவையும் சமுதாய வளர்ச்சியையும் எண்ணி இனிய பணியாற்றி வருகின்றன. இவற்றுள் கலந்து தொண்டாற்றுவதில் கற்ற இளைஞர்கள் பெரிதும் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் முயற்சியும் தொண்டும் உறுதியான பயனை விளைத்து வருகின்றன.

ஆங்கில எழுத்தாளருள் உயரிய சிந்தனையாளர் (Thinkers) கலந்து பணி புரிகின்றனர். சிறுகதையாளரும் அரிய கட்டுரை யாளரும் பாவாணரும் சேர்ந்த எழுத்தாளர் மன்றங்கள், அரசியல், பொருளியல், சமுதாய இயல் முதலிய இயல் வளம் பற்றிய சிந்தனை யாளர்களின் சீரிய பணியால் சிறப்புறுதல் வேண்டும். இசையறிஞரும் நாடக நன்மக்களும் எழுத்தாளர் மன்றத்தின் இனிய உறுப்பினராவர். எல்லாரும் இன்புற்று இருக்கும் நல்வாழ்வு நாட்டில் அமைவதே இம்மன்றங்களின் குறிக்கோள். உளத்தூய்மை யும் வினையாண்மையும் மொழிவன்மையும் இந்த எழுத்தாளர்க்கு இன்றியமையாத இலக்கணமாகும். வழுப்பட்ட கொச்சை வழக்கும் வேற்று மொழி கலந்த சவலை நடையும் இழிந்த கீழ்மைக் கருத்தும் எழு ஞாயிறு போல ஒளி விட்டுத் தோன்றும் இந்த எழுத்தாளர் எழுத்தின் கண் இடம் பெறாவாறு நோக்குவது இன்றைய சிறப்புப் பணியாகும்.

இவ்வகையில், மதுரை எழுத்தாளரின் இந்த மன்றம், இன்பம் நிறைந்த தமிழ் எழுத்தால், தமிழினம், பொருளும் அறமும் அறிவும் ஆண்மையும் சிறந்து ஒங்க முயலும் தன்தளரா முயற்சியில் வீறும் வெற்றியும் பெறுவதாக.

வள்ளலார் கண்ட வள்ளன்மை


பொருள்களை நோக்கும் சான்றோர் இரு திறத்தார். ஒருவர் பொருள் நோக்கினர்; மற்றவர் அருள் நோக்கினர். பொருள் நோக்கினர் நாம் வாழும் உலகினை நோக்குமிடத்து முதலில் கீழுள்ள நிலத்தையும் மேலுள்ள வானத்தையும் நோக்குவர். சேரமன்னனைப் பாடப்புகுந்த முடிநாகனார் பொருள் நோக்கினர். அவர் மன்னனை வாழ்த்தக் கருதி,

“மண்திணிந்த நிலனும்
நிலன்ஏந்திய விசும்பும்”

என்று தொடங்குகின்றார். முதலில் கீழே மண்படிந்த நிலமும் மேலே வானமும் பின்னர் இரண்டின் இடைப்பட்ட பூதங்களும் அவரால் காணப்படுகின்றன.

மணிவாசகப் பெருமான் அருள் நோக்கினர். அவர் இறை வனை வாழ்த்தக் கருதி,
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி”

என முதலில் மேலுள்ள வானத்தையும் கீழுள்ள மண்நிறைந்த நிலத்தையும் நோக்கிப் பின்பு இடையிலுள்ள பூதங்களையும் பார்க்கின்றார். பொருள் நெறிக்கு நிலமும் நீரும் நெருப்பும் முறையே வேண்டப்படும். அருள் நெறிக்கு வானமும் காற்றும் முறையே நினைக்கப்படும்.

மேலே வானமும் பின் காற்றும் நெருப்பும் நீருமாக அமைந் திருக்கும் பூதங்களையும் அவற்றால் சூழப்பட்ட நிலத்தையும் கண்ட அருளாளர் அந்நிலத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுவுயிர் முதல் உடம்பொடு கூடிவாழும் மக்கள் ஈறாக அனைத்துயிரையும் காண்கின்றார்.

இங்கே காணப்பட்ட உயிரில் பொருளான வான் முதலிய பூதகாரியங்கள் - பௌதிகங்கள் தாமே உருவாகாமல் இறைவன் திருவருளால் ஆகி இருப்பதை யுணர்ந்து வானாகி மண்ணாகி என்று உரைக்கிறார். உயிர்ப்பொருள்களும் திருவருளால் உடம்பும் உயிருமாய் இயைந்திருப்பதை எண்ணுகிறார். இவை ஒருகாலத்தில் இலவாதலும் கண்டு, உண்மையும் இன்மையும் ஆவது இப்பொருட் குத் திருவருளால் அமையும் இயல்பு என்பதும் நன்கு தெரிகிறது. திருவருட் கண் கொண்டு நோக்கும்போது பூத பௌதிகங்களுக்கும் அவற்றின் இடையில் கிடந்துவாழும் உயிர்களுக்கும் முழுமுதல் பரமசிவன் என்று உணருமாறு “கோனாகி” என்று மணிவாசகர் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

முழுமுதல் என்னாமல் அரசன் என்று கூறுவது நாட்டுமக்களை வாழவைக்கும் மன்னன் போல இறைவன், மக்களும் மற்ற உயிர்களும் உலகில் பல்வகைச் செயல்களைச் செய்து வாழச் செய்கின்றான் என்பதற்காக வாகும். அவற்றைச் செய்யும்போது நான் செய்கிறேன், நான் பேசுகிறேன், நான் நினைக்கிறேன், என்று மக்கள் ஒவ்வொரு வரும் நினைந்தும், பேசியும், செய்தும், வாழ்கிறார்கள். இப்படி நினைந்தும், பேசியும், செயல் செய்தும், பொருள் ஈட்டுகின்றார்கள். இது எனது கருத்து, இது எனது சொல், இது எனது பொருள் என்று பொருளிடத்து உரிமையும் பற்றும் கொள்கிறார்கள். இவைபோலும் செயல்களைச் செய்வதற்கும் அவற்றால் பொருள்பெற்று வாழ் வதற்கும் துணைபுரிகின்றன. நான், எனது, என்ற இருவகை உணர்ச்சிகளும் இல்லையானால் உலக வாழ்வு இன்பம் தராது; உலகில் வாழ்வு நன்கு அமையாவிடில்; வாழ்வுதரும் இன்பம் பெருகாவிடில்; மேலுலகப் பேரின்பம் எய்தாது. அதற்காகத்தான் இறைவன் “அவரவரைக் சுத்தாட்டுவானாகி நின்றான்” என்று மணிவாசகர் உரைத்தருளினார்.

நான், எனது, என்ற உணர்வுடன் வாழ்வில் செய்வன; செய்து வாழுங்கால், அவ்வாழ்வுதரும் இன்பம் சிறியதாய்ச் சிறிது பொழுதில் கழிந்து போவதாயினும், மக்கள் அதன் சுவையில் மயங்கி அதனைத் தாங்கும் பொருளில் பற்றுக்கொண்டு; சிவஞானமும் பேரின்பமும் தரும் பரம் பொருளின்பால் பற்றுக்கொள்ளாமல் ஒழிகின்றார்கள். உலகியல் இன்பம்தரும் பொருள்மேல் உண்டான பற்றை விட்டா லன்றி பொய்ப்பொருள் அறிவும் மெய்யின்பமும் பெறலாகாது. இனிமைச் சுவை தரும் இன்பத்தால் இனிப்புப் பொருள்மேல் பற்று விட்டாலன்றி சர்க்கரை நோய் நீங்கா தல்லவா? அதனால்தான் திருவள்ளுவர்,

“பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு”

என்றார். அதாவது பொருள்மேல் உண்டாகும் பற்றினைப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாய் இருப்பவரை நோய்கள் பற்றிக்கொண்டு விடாமல் இருந்து துன்பம் செய்யும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
இதனால் பற்றை விடுவதுதான் நல்லது என்று தெரிகிறது. ஆனால் அதை விடுவது எப்படி? அதுதானே அருமை என்று கேட்கலாம். அக் கேள்விக்கு விடைகூறுவது போலத் திருவள்ளுவர்,

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”

என்று கூறுகின்றார்.

இதனைச் சிந்திக்கின்றார் நம் வடலூர் அருள் வள்ளல். நம்மிடத்தில் பேரருள் உடையவராகையால் அவருடைய பேருள்ளம் இதனைச் சிந்திக்கின்றது. எங்ஙனம் பற்றை விடுவது? என்று சிந்தனை எழுகின்றது. தேனினும் இனிய சொற்களால் தெரிவிக் கின்றார். சுகம் பெறுதற்கு “எவ்வாறு இருந்தால் இயலும் எனின், அம்ம! இவ்வாறு இருந்தால் இயலாது” என்று கண்ட அவரது சிந்தனையில் இத்திருக்குறள் தோன்றி ஒளி செய்கிறது.

“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல்வேண்டும்-அது
பற்றற்றால் அன்றி பலியாதால் - பற்றற்றல்
வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்கம்
வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையுற்
ஈனம் அந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற
ஞானம் வந்தாலன்றி நலியாதால் - ஞானமது
போகமுற்றும் பொய்யெனவே போதும் அநித்தியவி
வேகமுற்றா லன்றி விளங்காதால் - ஆக அஃது
உண்ணவந்தாற் போலும் இவன் உற்றுவிசாரித்திடுமோர்
எண்ணம் வந்தாலன்றி இசையாதால்-எண்ணமது
பங்கம் அடைந்தார் அளவையைப் பாராது சாதுக்கள்
சங்கம் அடைந்தாலன்றிச் சாராது”

என்று திருவருட் செல்வத்தை வாரி வழங்குகின்றார் நமது வடலூர் வள்ளல்.

அவரது அருளுரையைப் பாருங்கள்; பற்றற்றான் பற்றினைப் பற்றுக என்று திருக்குறள் கூறுகிறது. இறைவன் பற்றற்றவனாதலால், அவனைப் பற்ற வேண்டின் நாமும் பற்றற்றவராக வேண்டும்; பற்றுடையவரானால் அவனை அடைய முடியாது என்று இத்திருக் குறளால் கண்டு நமது வள்ளலார்.

“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல்
வேண்டும், அது
பற்றற்றா லன்றிப் பலியாது”

என்று விளக்குகின்றார்.

யான், எனது, என்ற பற்று இருந்தாலொழிய நாம் உலகில் வாழ முடியாது; நான் என்ற பற்றில்லையானால் செயல்பட்டு நல்லறிவு பெற முடியாது; எனது என்ற பற்று இல்லையானால் வறுமைக்கு இரையாகி வருந்தவேண்டிவரும். ஆகவே, இப்பற்றறுதல் என்பதை வள்ளலார் நமக்காக நன்கு எண்ணி “பற்றற்றால் வேதனையால்” என்றும், பற்றுக்குரிய விளைநிலமாகிய பொருள் உலகம் வரம்பு கடந்து விரிந்துபோவது என்று கண்டு “ஈண்டுவிரியும் சகப்பழக்கம்” என்றும் கூறியருளுகின்றார்.

இவ்வாறு பற்றின் வன்மையைக் கூறிய வள்ளலார். அதனை விடக்கூடாது என்று சொல்லவில்லை. விட்டே தீர்தல்வேண்டும் என்கிறார்.

“ஈங்குவிரியும் சகப்பழக்க
வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால்”

என்று கூறுகிறார். அதாவது மேன்மேல் விரிந்து பெருகிடும் உலகியல் பழக்கம் நீங்கினாலன்றிப் பற்றறும் தன்மை உண்டாகாது என்று உரைக்கின்றார்.

அங்ஙனமானால் உலகியலான சகப் பழக்கத்தை எவ்வாறு விட்டொழிவது என்று வள்ளலார் வளமாகச் சிந்திக்கின்றார்.

உலகமும் உலகப்பொருளும் அவை தரும் இன்பமும் அதனை நுகரும் நமது உடம்பும் மனமும் யாவும் அனாதி நித்தப் பொருளான மாயையிலிருந்து உண்டாயின. அதனால் மாயா காரியங்களில் உண்டாகும் பழக்கம் பற்றை விளைவிக்கிறது. அந்த மாயையைக் கலக்கி உலகமாகவும் பொருள்களாகவும் தோன்றச் செய்வது திரு வருள்; அந்த அருளை நோக்க இவ்வுலகம் கீழானதென்று அறிந்து இத்திருவருளை நாடவேண்டும் என்று வள்ளலார் உரைக்கின்றார். அதாவது திருவருள் ஞானத்தால் சகப்பழக்க வாதனை நீங்கும்; வாதனை நீங்கின் பற்றறும்; பற்றற்றால் இறைவனை அடையலாம்.

“ஈனம் அந்தோ இவ்வுலகம் என்று
அருளை நாடுகின்ற
ஞானம் வந்தான்றி நலியாதால்”

அப்படியானால் திருவருள் ஞானத்தைப் பெறுவது எப்படி என்று கேள்வி தோன்றும். அதற்கு அநித்திய நித்திய விவேகம் வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். பின்பு அவ்விவேகத்தால் ஒவ்வொன்றையும் விசாரிக்கும் எண்ணம் வேண்டும்; அவ்வெண்ணமும் நல்லார் இணக்கத்தால், சாதுசங்கத்தால், சிவனடியே சிந்திக்கும் நன்மக்கள் கூட்டுறவால் கைகூடும் என்று அருளுகின்றார். வடலூர் வள்ளலாரின் இவ்வள்ளன்மை சிவஞான நூலறிஞர்க்குப் பெரும்பேறாகும்.

பாரத சமுதாய ஒருமை நலம்


பாரத சமுதாயத்தின் பண்பு பலவற்றையும் காண்பதற்கு, அதனிடையே நிலவும் இலக்கியங்கள் பெருந்துணையாகும். அவற்றுள் வேதங்களை அடுத்துத் தோன்றிய புராணங்களும் இதிகாசங்களும் பழமை வாய்ந்தவை.

இதிகாசம் என்ற சொல், அதர்வ வேதத்திலும், பிராமணங் களிலும், உபநிடதங்களிலும் காணப்படுகிறது. இதிகாசம் என்ற அச்சொல்லுக்கு வரலாறு என்று பொருள். பாரதம் ஒன்றுதான் முன்னாளில் இதிகாசம் என்று குறிக்கப் பட்டது. இராமாயணத்தைப் பலரும் ஆதிகாவியம் என்றே வழங்கினர். பிற்காலத்தில்தான் பாரதமும், இராமாயணமும் இதிகாசம் என வழங்கலாயின.

இராமனது வரலாறு கூறும் இராமாயணம் முதலில் வான்மீகி யாரால் எழுதப் பெற்றது. அதனை அவர் முதலில் இராமனுடைய மக்களுக்குச் சொன்னார், என்று வான்மீகியின் வரலாறு கூறுகிறது.

கோசல நாட்டுவேந்தனான தசரதன் மகன் இராமன் சீதையை மணந்து, காடு சென்று வாழ்கையில், இலங்கை வேந்தனான இராவணன் சீதையைச் கவர்ந்துசென்றான். தன் தம்பி இலக்கு வனுடன் சீதையைத் தேடிச் சென்ற இராமன், சுக்கிரீவன், அனுமன் என்போருடைய உதவியால், சீதை இருக்குமிடம் அறிந்து, இலங்கையில் இராவணனோடு போர் செய்து அவனைக் கொன்று மீளத் தன் மனைவியுடன் அயோத்தி அடைந்து, முடிசூடி அரசு புரிந்த வரலாறுதான் இராமாயணம். சீதையைச் சிறப்பிக்கும் வகையில் இராமாயணத்தைச் “சீதாசரிதம்” எனவும், இராவணன் வீழ்ச்சி கூறுவது பற்றிப் “புலத்திய வதம்” எனவும் கூறுவர்.

இராமாயண ஆராய்ச்சியாளர், அதனை வரலாற்றுக் கண் கொண்டு நோக்கி, ஆரிய வர்த்தத்தில் வாழ்ந்த ஆரியர்கள் தென்னாட்டவரை வென்றதைக் குறிக்கிறது இராமாயணம் என்பர். சமய வரலாறாகக் கருதிய வேபர் (Weber) என்பவர், வேத வழக்காகிய வைதிக சமயம் தென்னாட்டிலும், இலங்கையிலும் பரவிய செய்தியே இவ்வாறு இராமாயணமாகக் காப்பியக் காட்சியளிக்கிறது, என்று உரைக்கின்றார்.
நம் நாட்டு அறிஞர், இராமனைத் திருமாலின் அவதார மெனக் கருதுவர். இராமன் திருமாலின் தோற்றம் என்ற கருத்தை முதற்கண் வெளியிட்டவர் வான்மீகி. அது பின்பு பாரத நாடு முழுதும் பரவி, ஆங்காங்க வாழ்ந்த சான்றோர் உள்ளத்தில் வேரூன்றியது. தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இருபெருங் காப்பியங்களும் இராமனைத் திருமாலின் அவதார மாகவே குறிக்கின்றன. இராமன் “வேத முதல்வற் பயந்தோன் என்பது நீயறிந்திலையோ, நெடுமொழியன்றோ” என்று இளங்கோ அடிகள் எடுத்துரைக்கின்றார். இது பற்றியே, இராமா யணத்தை விரிவாகத் தமிழில் செய்த கம்பர், தமது நூலை “இராமா வதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை” என்று குறித்ததோடு, இராமன் பரம்பொருளே என்ற கருத்தை,

“வானின் றிழிந்து வரம்பிகந்த
மாபூ தத்தின் வைப்பெங்கும்
ஊனும் உயிரும் உணர்வும்போல்
உள்ளும் புறத்தும் உளன்என்ப
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழைப்பக் கோல்துறந்து
கானும் கடலும் கடந்து இமையோர்
இடுக்கண் காத்த கழல்வேந்தை”

என்று தெரிவிக்கின்றார்.

இராமனுடைய குணநலன்கள், “தந்தை சொல்மிக்க மந்திர மில்லை, தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” என்ற பாரதப் பண்பாட்டை விளக்குகின்றன. போர்க்களத்தில் இராவணன், படையிழந்து வெறுங்கையனாய் நின்றபோது, அவன்மேல் இரக்கங் கொண்டு “அறத்தினாலன்றி அருஞ்சமம் அமரர்க்கும் கடத்தல் மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி” என இராமன், அறம் கூறுவதும், “இன்று போய்ப் பொரற்கு நாளைவா,” என அருளுவதும், பாரத நாட்டு மறப்பண்பைக் காட்டுகின்றன. உடன் பிறந்தாரோடு உண்மையன்பால் பிணிப்புண்டு உள்ளமொத்து ஒழுகும் தம்பியர் மாண்பு, இலக்குவன், பரதன் என்ற இருவரிடத்தும் விளங்குகிறது. அறத்திற்கு மாறுபடுவாராயின், உடன் பிறந்தாரையும் வெறுத்து நீங்கும் நல்லியல்பு சுக்கீரிவனிடத்தும், விபீடணனிடத்தும் விளங்கித் தோன்றுகிறது. கணவனையல்லாது மகளிர்க்கு உயிர்த்துணை வேறில்லை என்றொழுகும் பாரத சமுதாயத்தின் கற்பு நெறிக்குச் சீதையின் குணநலங்கள் சான்று பகர்கின்றன.

சுக்கிரீவன் பொருட்டு இராமன் மறைந்து நின்ற வாலியைக் கொன்றதும், பிறிதொருகால் சீதையின் கற்பில் இராமன் ஐயுற்றதும், “அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” என்ற உண்மையை நிறுவுகின்றன.

கங்கை பாயும் வடபுலத்து நிகழ்ச்சியாயினும், இராமாயணம் இரண்டாயிரமாண்டுகட்கு முன்பே, அதாவது சங்க காலத்தேயே தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இலங்கை செல்ல வேண்டி இராமன் தனுக்கோடியில் தங்கியிருந்த நிகழ்ச்சியை அகநானூறும், இராவணனால் கவரப்பட்டுச் செல்லுங்கால் சீதை கழற்றி எறிந்த அணிகலன்களைக் கிட்கிந்தையில் குரங்குகள் எடுத்தணிந்து மகிழ்ந்த செய்தியைப் புறநானூறும் குறிக்கின்றன. இராமன் அயோத்தியின் நீங்கிக் காடு சென்றபோது அயோத்தி நகர் பொலிவு இழந்ததைச் சிலப்பதிகாரமும், குரங்குகள் இலங்கை செல்லுதற்கு கடலில் அணைகட்டிய செய்தியை மணிமேகலையும் காட்டுகின்றன. இவ்வாறே சீவக சிந்தாமணி, பெருங்கதை என்ற பெருநூல்களும் ஞானசம்பந்தர் முதலியோருடைய தேவாரத் திருமறைகளும் இராமாயணக் குறிப்புக்களை நிரம்பக் கொண்டுள்ளன. நம்மாழ்வார் முதலியோர், “கற்பார் இராமபிரானையல்லாமல் மற்றும் கற்பரோ,” என்கின்றனர். இதனால் இராமாயணத்தில் தமிழ் மக்கட்கு இருந்த ஆர்வ மிகுதியை நன்கு காணலாம்.

இராமாயணத்தை அடுத்து நிற்கும் பாரதத்தை இதிகாசம் என்றும், ஐந்தாம் வேதம் என்றும் கூறுவர். வில்லி புத்தூரரும், “மறை நாலொடு ஐந்து என்று நிலை நிற்கவே, வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதம் சொன்னார் என்று கூறுகின்றார்.

பரத கண்டத்து மன்னர்களான கௌரவரும், பாண்டவரும் நாடு பொருளாகப் போர் செய்த காலத்தில் இமயம் முதல் தென்குமரி வரை ஆண்ட அரசர் அனைவரும் இரு திறத்தாராகப் பிரிந்து, ஒரு பிரிவினர் கௌரவர் பக்கமும், மற்றொரு பிரிவினர் பாண்டவர் பக்கமும் பொருதனர். அப்போரைக் கூறுவதால் இது, பாரதம் எனப் பெயர் கொண்டது. பாரதம் என்ற சொல்லும் பாணினி இலக்கணப்படி இப்பொருளே தருகிறது. துரியோதனனைத் தலைவனாகக் கொண்ட கௌரவரை “நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மர்” என்றும், பாண்டவரை, “அலங்குளைப் புரவி ஐவர்” என்றும் புறநானூறு கூறுகிறது.

இப்பாரதத்தை முதலில் நூல் வடிவில் வடமொழியில் எழுதியவர் வியாசர். இது உசனகவி என்ற யோக வியாசரால் பாரத சூத்திரமாய்த் தோன்றி, பார்க்கவ வியாசரால் பாரதமாயிற்று. அவர்க்குப் பின் சுமந்து,சைமினி முதலியோர் வழிவந்து முடிவில், வைசம்பாயனரால் பாண்டவ கௌரவர் வரலாற்றோடு ஆயிரக் கணக்கான கதைகளும், ஒழுக்க நெறிகளும், தத்துவக் கருத்துக்களும் அரச நீதிகளும் சேர்ந்து, மாபாரதம் ஆகிவிட்டது.

மாபாரதம் பதினெட்டுப் பருவங்களை யுடையது. முதலாவதான ஆதிபருவம், பாண்டவ கௌரவர்களின் குலமுறை வரலாறும், அவர்களின் பிறப்பு வளர்ப்பும் பிறவும் கூறுகிறது. அப்பருவத்தில் திரோபதையின் சுயம்வரக் காட்சியும் விராட பருவத்திலும், துரோண பருவத்திலும் உள்ள துர்க்கை வழிபாடும், சபாபருவத்தில் துரோபதையின் துகில் களைந்த செய்தியும், ஆரணிய பருவத்தில் துருவாசர் வரவும், ஊர்வசி அருச்சுனனை மயக்கியதும், பிறவும் இடைச் செருகல் எனப் படினும் இலக்கிய வளம் சிறந்துள்ளன.

பொதுவாக நோக்கின், இப்பாரதத்தில் நாம் காண நிற்கும் பீஷ்மர், துரோணர்,கண்ணன், விதுரன் முதலிய பெரியோர்களின் குணநலங்கள் பாரத சமுதாயத்தின் பெருமையைச் சிறப்பிக்கின்றன.

பீஷ்மர், தம் தந்தை பொருட்டு உலகியல் இன்பத்தைத் துறந்த உரவோர், படைப் பயிற்சி நல்குவதில் தமக்கு ஒப்புயர்வு இல்லாதவர் துரோணர்; ஆனால் தம்முடைய மாணவர்களான கௌரவப் பாண்டவரின் வேறாகப் பிறர் படைப் பயிற்சியால் மிக்கு விளங்குவது காண மனம் பொறாத குறையொன்று அவரிடம் காணப்படுகிறது. கண்ணபிரான் திருமாலின் அவதாரமாகக் கருதப்படுகிறான். தான் ஒரு பேரரசனாக இருந்தும், அருச்னனுக்குத் தேரோட்டியான எளிமையால் பெருமை எய்துகிறான். உற்றார், உறவினர், நண்பர், ஆசிரியர் என்ற தொடர்பு உணர்ச்சியால் போர்க்களத்தில் மனத் தடுமாற்றம் எய்திய அருச்சுனனுக்குக் கீதையை அறிவுறுத்தி அவனைக் கடமை வீரனாக்கிய பெருமை, கண்ணபிரானுக்கே உரியது. அதனை வியந்தே,வில்லி புத்தூரர்.

“பன்னு பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமும் இடையிடை வழங்கும்,
என்னும் ஆசையால் யானும்ஈது இயம்புதற் கிசைந்தேன்”

என்று பாடுகின்றார். விதுரனை, “ஞான கஞ்சுக விதுரன்” எனப் பாராட்டுவர். கர்ணன் தன் செல்வத்தை எல்லார்க்கும் “கொடுத்தல் அல்லது தனக்கென ஒன்றும் எடுத்தல் இல்லாதவன்.” அதனால், அவனை “வண்மையினால் உயிர் அங்கர் குலாதிபன்” என்றும், “அல்லாதவர்க்கும் இரவிமகன் அரியதானம் அளிக்கின்றான்” என்றும் சான்றோர் புகழ்கின்றனர்.

கர்ணன் துரியோதனனிடத்தில் பேரன்புடையவன்; அவன் தனக்குச் செய்த நன்றியை நினைத்து “ஆரென்றறியத் தகாத என்னை அரசு மாக்கி முடிசூட்டிச் சீரும், திறமும், எனது பெருந் திருவும் எனக்கே தெரிந்தளித்தான்” என்றும், பிறவும் கர்ணன் கூறுவது கற்போர் நெஞ்சையுருக்குவதாகும்.

துரோபதையின் துகிலைக் களையுமாறு துரியோதனன் கட்டளையிட்டபோது, வீமன் முதலியோர் சினம் மிகுந்து, உடல் துடிப்பது கண்டும், யுதிட்டிரன் அவர்களைக் கையமர்த்தி “ஆய பொருள்கள் அம்முறையே போம், போது அனைத்தும் போம், முன்னம் பொறுத்தீர் இன்னும் பொறும்” என்கிறான்; பாரதப் போர் உண்டாகாதவாறு, தவிர்ப்பது கருதி கண்ணபிரானிடம், “கயிரவமும், தாமரையும் கமழ் பழனக் குரு நாட்டில் கறந்து வாழ, உயிரனையாய் சந்து பட உரைத்தருள்;” என வேண்டுகிறான்; துரியோதனன், நாடு ஒன்றும் நல்கானாகில் ஐந்து ஊர் வேண்டு; அவை இல்லெனில் ஐந்து இல்லம் வேண்டு, அவை மறுத்தால் அடு போர் வேண்டு,” என்று உரைக்கின்றான். அது கேட்டு மனம் வருந்திய வீமன் முதலிய தம்பியரை நோக்கி, “ஒரு குலத்தில் பிறந்தவர்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல் உறுதியுண்டோ, இருவருக்கும் வசையன்றோ, இருநிலம் காரணமாக எதிர்ப்பது” என்பது தருமனுடைய உள்ளத்தின் மாண்பை யுயர்த்துகிறது.

பாண்டவர் மனைவியாகிய துரோபதையின் மாண்பு பெருமை வாய்ந்தது. பெருவேந்தர் கூடிய பேரவையில் துச்சாதனன் தன்னைத் தீண்டித் துகில் களைய முற்பட்டபோது உடல் சோர்ந்து, உளம் சோர்ந்து நிற்பினும், அறிவு சோர்வு படாமல் உண்மை நிலையை ஓர்ந்து, “வேறு ஓர் சொல்லும், கூறாமல் கோவிந்தா, கோவிந்தா!” என்று அரற்றியது, “தீய வழுக்கியும் வாயாற் சொல்லாத” அவளது நல்லொழுக்க விழுப்பத்தை நிலைநாட்டுகிறது. பழம் பொருந்து சருக்கத்தில் தன் உள்ளக் கருத்தைச் சிறிதும் ஒளிக்காமல் “இன்னும் வேறொருவன் என்பெரும் கொழுநன் ஆவதற்குருகும் இறைவனே எனது பேரிதயம்” என்பது துரோபதையின் வாய்மை நலத்தை வற்புறுத்துகின்றது.

பாரதத்தை ஐந்து தொகுதிகளாக 2000 பக்கங்களில் ஆராய்ச்சி புரிந்த N.V. தாடணி என்ற பேரறிஞர், பாண்டவ கௌரவர் சூதாடியது நியாய சமயமும், வைசேடிக சமயமும் போராடு வதாகவும், வேதாந்தமும், வைசேடிகமும் பொருவதாகவும் கொள்கின்றார். பாண்டவர்களை வைசேடிக தந்துவங்களாகக் கொண்டு தருமனைப் புத்தியாகவும், வீமனை மணமாகவும், அருச்சுனனைப் பிராணவாயுவாகவும் நகுல சகாதேவர்களை இந்திரியங்களாகவும், குந்திதேவியை நிலமாகவும், கண்ணனைப் புருட தத்துவமாகவும், துரோபதையைக் கருமத்தியாகவும் பேராசிரியர் தாடணி பொருள் செய்கிறார்.

பாரதத்தின் பெருமைக்குப் பேரிலக்காக நிற்பது பகவத் கீதை. அது பாரதத்தின் ஒரு பகுதியா, தனி நூலா என்ற ஆராய்ச்சி இன்றுவரை முடிவாகவில்லை. வரலாற்றறிஞர். வைசம்பாயனரால் தொகுக்கப்பட்ட மாபாரதத்திலிருந்து, சுத்த தரும மண்டலத்தாரால் முதன் முதலிற் பகவத் கீதை தனி நூலாக வெளியிடப்பட்டது என்பர். அதனைச் சங்கரர், இராமானுசர் முதலிய சான்றோர் பலரும் பாராட்டி விரிவுரை கண்டிருக்கின்றனர்.

இப்பாரதம் சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் நாட்டில் நன்கு போற்றப்பட்டிருக்கிறது, இடைக்காலத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் முதலியோர் ஆட்சியில் ஆங்காங்கே இராமாயண விருத்தி, பாரத விருத்தி என்ற பெயரால் நிவந்தங்கள் விட்டிருப்பதைக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறிக்கின்றன.

பாரத இராமாயணமான இதிகாசங்கள் நமது நாட்டில் சிற்பம், ஓவியம், நாடகம், சிற்றியலக்கியங்கள் முதலிய கலைத் துறையின் பெரு வளர்ச்சிக்கு அடிப்படையாய் வளம் செய்திருக் கின்றன. இவற்றில் காணப்படும் அகலிகை வரலாற்றைத் திருப்பரங் குன்றத்து ஓவியங்களிலமைத்துச் சங்ககால மக்கள் இன்புற்றனர் என்று பரிபாடல் கூறுகிறது. இதிகாசம் உரைத்த கதைகள் பல மாமல்லபுரக் கற்கோயிலில் காட்சி தருகின்றன. இராமன், அனுமார், பாண்டவர், கண்ணன் முதலியோர்களை வரம் தரும் தெய்வமாக்கிக் கோயில் கட்டி, விழாக்கள் எடுத்து நம் நாட்டவர் மகிழ்கின்றார்கள். பாரத இராமாயண வீரர்களின் பெயரைத் தாம்பெற்ற மக்கட்கு இட்டு இன்புறுவது, பாரத நாடு முழுதும் பொது இயல்பாக இருக்கிறது.

பகவத்கீதை உரைக்கும் கடமையுணர்வும் சமயவுண்மைக் கருத்தும் இந்நாளில் விளங்கிய பாலகங்காதர திலகர், அண்ணல் காந்தி அடிகள் முதலியோர்களின் உள்ளங்களைக் கவர்ந்து அவர்கள் வாழ்வை உயர்த்தியிருக்கின்றன. திரோபதை, அரசவையில் நின்றுரைத்த வஞ்சினங்கள் பாரத நாட்டுப் பெண்மையின் பெருமையை விளக்கியது கண்டு விம்மிதம் எய்திய அமரகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் என்ற இனியதொரு நூலை எழுதி இன்புற்றார்.

பாரதநாடு மட்டுமன்றிக் கிழக்காசிய நாடுகளான பர்மா, கம்போடியா, இந்தோனேசியா முதலிய நாடுகளிலும் இந்த இதிகாசங்கள் பரவி, அவரவர் இலக்கியங்களில் இடம் பெற்றிருக் கின்றன. புத்தார், சயினர் இடையிலும் இவை போற்றப் பட்டுள்ளன. இவ்வகையில் பாரத சமுதாயத்தின் ஒருமைப் பாட்டு வளர்ச்சிக்கு இந்த இதிகாசங்கள் செய்திருக்கும் தொண்டு அளப்பரியது. இவை மாநிலத்துப் பல்லாண்டு மருவி வாழ்க என வாழ்த்தி அமைகின்றேன்.

செந்தமிழ்ச் செல்வி

விஞ்ஞானம்


அணிமையில் அமெரிக்க நாட்டு ஆற்றல்மிக்க ஆடவர் மூவர் மதிமண்டலத்துக்குச் சென்று அதன்மேல் இறங்கிய போது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துத் தலைமை இயக்குநர் தாமரைச் செல்வர் திரு.வ. சுப்பையா பிள்ளையவர்கள் ஒரு கடிதம் விடுத்தார்கள். அதன் உள்ளுறை. “மதிமண்டலம் சென்றடைந்த விண்வெளிவீரர், மக்களினம் இன்றுவரையும் செய்யாத அருஞ்செயலைச் செய்து வெற்றிகண்டுள்ளனர். அவர்கள் செம்மையாக நமது நிலவுகிற்குத் திரும்பி வந்து சேரவேண்டும்; அதற்காக அன்பர்கள், எல்லாம் வல்ல ஆண்டவன் திருவருள்துணை புரிக என வழிபடவேண்டும்” என்பது. அதனை என் நண்பர் ஒருவர்க்குக் காட்டினேன். வியப்பு மிகுந்த அவர் “இது செய்யத்தக்க சிறப்புடைய - இன்றியமையாத செயல்” என்று தமது இசைவைத் தெரிவித்தார். பின்பு, செய்தித்தாள், ஆந்திர நாட்டுப் பத்திரசாலத்தில் விண்வெளி வீரர்களின் வீறு நினைந்து இறைவனை வழிபட்ட செய்தியைக் கொணர்ந்தது.

இது கண்டதும், அந்த நண்பர் விரைந்து ஓடிவந்து, திரு. வ. சு. பிள்ளையவர்களின் எண்ணத்தின் உயர்வையும் விஞ்ஞான அறிவில் அவர்க்கிருக்கும் ஆர்வத்தையும் வியந்து புகழ்ந்தார். அந்நிலையில் அவர் கண்ணீர் துளிக்க, வாயிதழ் துடிக்க, தழு தழுத்த குரலுடன், “தமிழகமே! உனக்கு இருள்நீங்க வில்லையே; செயற்கரிய செயல் இது என்று தெரியவோ, அதுபற்றி இறைவனிடம் உன் சிந்தையைச் செலுத்தவோ, அறிவோ, விழைவோ, செயலோ புரிய உன்னால் முடியவில்லையே; மடமை யிருளிலிருந்து நீங்கி, வாழ்வுக்கு ஒளியும் வளமும் தந்துகொண்டிருக்கும் விஞ்ஞான ஒளிக்கதிர் உனது இருண்ட உள்ளத்தில் நுழைவது எக்காலம்?” என ஏங்கினார். ஈழநாட்டுமக்களின் எழுச்சியையும் ஆர்வத்தையும் எடுத்துரைத்துப் பாராட்டினார். உடனிருந்த நண்பர், “தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும், அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கட்புத்தேள் திரிதரும்” என்று திங்களைப் புத்தேளாகவும், அதனை உவமமாக வைத்து “மாரிவானத்து மீன் நாப்பண் விரிகதிர்வெண்டிங்களின் விளங்கித் தோன்றுக… அவன் கலங்கா நல்லிசை” என வாழ்த்துக்குரிய தாகவும் போற்றினான் பழந்தமிழன். கோயிலில் நவக்கிரங்களில் ஒன்றாய், வழிபடப்படும் திங்கட்புத்தேள்-சந்திரபகவான்-மனிதன் காலடிக் கீழ் மண்ணுருண்டையாய் விட்ட தென வருந்தி, வாய்திற வாமல் இருக்கிறான் இந்நாளைய தமிழன். அன்று விண்வெளியை “வளிஇடை வழங்கா வழக்கரும் நீத்தம்” (புறம்) என்றுரைத்த தமிழன், இன்று ஏன் வாய் மூடி, அந்த “நீத்தம்” கடந்து நிற்கும் அருஞ்செயலின் அருமை நினைந்து பாராட்டும் எழுச்சியின்றி இருக்கின்றான்? என்றொரு வினாவை எழுப்பினார்! விஞ்ஞான அறிவின் மெய்ம்மை காணாத சிறுமை என்று விடை வந்தது.

விஞ்ஞானம் என்பது யாது? நாம் வாழும் நிலவுருண்டையின் அகத்தும் புறத்தும் சூழ்ந்து காணப்படும் விண்ணையும் அதன்கண் காணப்படும் நாளும் கோளுமாகிய அண்டங்களையும் நோக்கி அவற்றின் மெய்ம்மையும் கண்டு ஆய்ந்து பெறும் அறிவும் புல்பூடு முதல் மக்கள் ஈறாகவுள்ள உயிர்ப்பொருள்களின் அகக்கூறு புறக்கூறு களையும், நிலம் நீர் தீ வளி வானம் என்பவற்றின் உண்மை மெய்ம்மைகளையும் கண்டாய்ந்து பெறும் அறிவும் விஞ்ஞானமாகும். பொருள்களைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் பெறும் அறிவு இயற்கையறிவு. இதனை ஞானசம்பந்தர்” இயல்ஞானம்” என்றும், பொருள்களின் பண்பையும் செயலையும் கண்டு ஆய்ந்து இவை ஏன் இங்ஙனம் ஆயின, ஆகின்றன எனக் காரணகாரிய நெறியில் அறிவது வயஞானம் என்றும் கூறுகின்றார். பொருள்களின் அமைப்பையும் அவற்றின் ஆக்கக் கூறுகளையும் நோக்கி, அவை எப்படி அமைந்துள்ளன? எம்முறையில் ஆகியுள்ளன? என அறிவது விஞ்ஞானம். நம்மவர் வயஞானத்தை விஞ்ஞானமாகக் கொண்டு உலகவுண்மை யறியும் விஞ்ஞானத்தைக் கைவிட்டதுதான், இன்றும், மதிமண்டலத்திற் கால்வைக்கும் அளவிற்கு அது வளர்ந்தது கண்டும் நயந்து வியந்து மகிழும் நலம் நம்மிடையே விளங்கித் தோன்றாமைக்குக் காரணமாயிற்று.

வயஞானம், விஞ்ஞானம் என்ற இரண்டும்,பொதுவான-இயற்கையான-இயல்ஞானத்தினை அடிப்படையாகக் கொண்டு வளர்பவை. இளஞ்சிறுவர்களின் உள்ளத்தே இந்த இயல் ஞானம் தன்னியல்பில் ஆர்வ வடிவில்-விழைவு வடிவில்-இயங்குகிறது. அவர்கள் எப்பொருளைக் காணினும் விழைவுணர்வால் உந்தப்பட்டு, ஆர்வத்தோடு கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறிய முற்படு கின்றனர். இந்த அறிவை எத்துணையளவு ஊக்கி வளர்க்கின்றோமோ, அத்துணையளவு வயஞானமும் விஞ்ஞானமும் நாட்டில் பெருகும். விஞ்ஞானம் இம்மையுலகில் பொருளின்ப வாழ்வு பெறவும் வயஞானம் அம்மை வாழ்வில் அருளின்ப வாழ்வு பெறவும் நன்கு அமைந்தவை. “சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு இந்தப் பூமி” என்று மணிவாசகப் பெருமான் உரைப்பதை வெறிதே சொல்லுவதைவிட, அவர் கூறியது போலச் “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து” சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் இவ்வுண்மைகள் விளக்கமுறும்.

இந்த விஞ்ஞானம், மக்களின் உள்ளத்தில் இளமையில், “இந்த வானம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது? மேலே எறிந்த கல் ஏன் நிலத்தில் விழுகிறது?” என்பன போன்ற கேள்வி வடிவில் இயல் ஞானத்தில் முளைக்கிறது. இது விலக்கமுடியாதது; விலக்கக் கூடாததுமாகும். நமக்கு இரண்டும் தெரியாமல் போனது குற்றம். “சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிவான் கண்ணதே உலகு” என்று திருவள்ளுவப்பெருமான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அறிவுறுத்தினார். ஆயிரம் ஆண்டுகட்குமுன், “வல்லான் ஒருவன் கைம் முயன்று எறியினும், மாட்டா ஒருவன் வாளா எறியினும், நிலத்தின் வழாஅக் கல்” என்று பட்டினத்தடிகள், வானத்தில் எறிந்த கற்கள் நிலத்தில் வீழ்வது தப்பாமையைக் கண்டு உரைத்தார். உரைத்தும் என்? ஆண்டுகள் உருண்டனவேயன்றி அக்கருத்துக்கள் அறிவில் தோயவில்லை; சிந்தையில் - ஞானக் கண்ணினில்-சிறந்து படியவில்லை.

காணப்பட்ட உலகைக் கொண்டே காணப்படாத கடவுள் உண்மை கண்டவர் பண்டைப் பெருமக்கள்; கடவுளைக் காட்டிய உலகைப் பின்னோர் நன்றி மறந்து அதனைக் காண விழையாவாறு மக்கள் கருத்தை மாற்றினர். கடவுளை உலகு கருவியாகக் கண்ட போது, அது, தன்பால் உள்ள நுட்பங்களையும் அவை தம்மில் முறைபிறழாது ஒழுகும் ஒழுகலாற்றையும் நன்கு காட்டிற்று. “அவன் அவள் அது எனும் அவை”, கடவுள் ஒன்றாய் உடனாய் இருக்கும் இடமாய், உணர்வார் உணர்வுக்கு உண்மைகளை ஒளிவு மறைவு இன்றி உணர்த்தும் ஒட்பம் உடையது என்றும் உணரச்செய்தது. “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்; ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தனம்” என்று சங்க காலத் தமிழர் கண்டனர்; அந்நாளில் உறவு கொண்டிருந்த கிரேக்கரும் அறிந்திருந்தனர். ஆயிரம் ஆண்டுக்குப் பின்னர், உலகின் உண்மைத் தன்மை கண்ட மணிவாசகர் நம்மை “மண்ணகத்தே வந்து வாழச் செய்தான்” என இறைவனைப் பரவிக் கூறினார். ஞானாமிர்த ஆசிரியர், இறைவன், உயிர்களாகிய நாம் விஞ்ஞானமும் வயஞானமும் (Science and Philosophy) பெறுதற்கே இவ்வுலகைச் செய்தான் என்ற கருத்தும் விளங்கக் “கொன்னே செய்யான் தன் நேர் இல்லான்” என்றார். பன்னூ றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றிய ஆல்பர்ட்டு ஐன்ஸ்டன் என்ற விஞ்ஞானச் செல்வர், “கடவுள் நுணுக்கரிய நுண்ணுணர்வாய் இருக்கலாம்; ஆனால் அவர் நமக்குப் பகையாய்க் கேடு செய்பவரல்லர்” (“God may be subtle but he is not malicious”) என்று கூறினார்.

அந்நாளில் மற்றொரு கருத்தும் மக்கள் உள்ளத்தில் மாண்புடன் விளங்கி யிருந்தது. இயற்கையுலகம், தன்பால் உள்ள பொருள்களின் அகத்தும் புறத்தும் ஊடுருவியிருக்கும் இயல் முறை நுட்பங்களை (Laws of Nature) நுணுகிக் காணமுயல்வார்க்குக் காட்டும் தன்மையுடையது என்று எண்ணி இனிது நம்பினர். “காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே” “நானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” என்று திருநாவுக்கரசர் கூறுவது இக்கொள்கையை வற்புறுத்துகிறது. மேலும், இது மக்களி னத்தின் மனத்தை விட்டு என்றும் நீங்கின தாகவும் தெரியவில்லை. உலக முழுதும் இந்த நன்னம்பிக்கை இருந்திருக்கிறது. இதனால்தான் ஓரிடத்தில் இன்றேனும் பிறவிடங்களில் விஞ்ஞானம் வளர்ந்து வந்துள்ளது.

மொழிக்கு இலக்கணம் கண்டு உரைக்கும் மூத்த அறிஞர் போல விஞ்ஞானிகளும் சில உத்திகளை மேற்கொண்டுள்ளனர். இலக்கணங்கள் கூறும் உத்திகள் போலப் பலவாகாமல், மூன்று உத்திகளே விஞ்ஞானப் பேற்றுக்கு வேண்டப்படுகின்றன. முதலாவது தொகுத்தல், இஃது இலக்கண நூல்களிலும் உள்ளது; அங்கே தொகுத்துக் கூறல் எனப்படுகிறது. விஞ்ஞானம் செயல்மேல் இருப்பதாகலின், இதனைத் தொகுத்தல் எனச் சொல்லி விடுகிறது. விரிந்து பரந்து கிடக்கும் உலகியற் பொருள்களை நேரிற் கண்டு தொகுப்பது முதலாவது செயலாகும். இரண்டாவது வகுத்தல்; கண்டகாட்சிப் பொருள்களை இனம் இனமாக வகுப்பது; இலக்கணவுத்திகளில் இது வகுத்து மெய்ந் நிறுத்தல் எனப்படுகிறது. இவ்வாறு வகுப்பதால் பொருள்களின் பண்பும் தொழிலும் மாற்றமடையா. சீட்டாட்டத்தில் இனமான சீட்டுகளை மதிப்புக் கேற்ப வகுத்துக் கையில் தாங்குவதுபோல, இவ்வகுத்தல் ஆராய்ச்சிக்கு அமைந்திருக்கிறது என விஞ்ஞானிகள் கொள்கின்றனர். மூன்றாவது மெய்ம்மை துணிதல். வகுத்துக் கொள்ளப்பட்ட பொருள்களிடையே அமைந்து கிடக்கும் பொதுப்பண்பைத் துணிந்து கொள்வதாகும். பொருள் வகை அனைத்தினும் ஒன்றிய மெய்ம்மையாதலால் இதனை இறுதியாகக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

அறிவாராய்ச்சி செய்யும் அறிஞர் எல்லார்க்கும் இந்த நெறி ஒப்பமுடிந்ததாயினும், பழங்கால அறிஞர் பலர், ஒரு சில உண்மைகளைப் பலரும் அறிந்தவை என மேற்கொண்டு அவை ஆராய வேண்டாதவை (Axioms) எனக் கொண்டொழிந்தனர். அது பின்பு வரையறுத்த விதியாகவே, காணும் காட்சிப் பொருள்களின் அறிவை அவற்றுள் அடக்கிக் காண்பது என்ற செயலில் வந்து முடிந்தது. சில சட்ட விதி வரம்புகளை வைத்துக் கொண்டு, வழக்குகளை அவற்றுள் அடக்குதற்காக வாதம் புரிய வேண்டிய சூழ்நிலையை உண்டுபண்ணிற்று. இதனை வழக்குரைத்து முடிவு செய்யும் நீதிமன்றங்களிலும், இலக்கண இலக்கிய சமய நூலுரை களிலும் மிகவும் விளங்குவது காணலாம். இம்முறை காண்பதற்கு இன்பமாகவே தோன்றும்; அறிவியல் விளையாட்டாகவே இது கருத நிற்கிறது. இத்துறையில் பண்டை நாளில் நம்நாட்டு அறிஞர்கள் பேரூக்கங்கொண்டு பிறங்கினர். பழைய உரைகாரர்களான சேனா வரையரும் பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் சிவஞான முனிவரும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாவர். பிற்காலத்தில் சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர், மறைமலை யடிகள், அரசஞ் சண்முகனார், நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலியோர் முன்னின்று மேன்மை எய்தினர்.

இந்த முறையில் ஆராய்ச்சிக் கல்வியில் சில குறைபாடுகள் தோன்றலாயின. அவர்கள் சூழலில் நிலவிய விதிவரம்புகளை அறிவதும் அவற்றிற்குரிய கொள்கைகளையும் நூற்பொருள்களையும் கற்பதுமே மெய்யான ஞானப் பேறாகிவிட்டது. பண்டையோர் இதற்கே ஏற்றமளித்தனர். “எப்பால் நூலோர்க்கும் துணிவு” என்றும் “நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்றும், “மதிநுட்பம் நூலோடுடையார்” என்றும் திருவள்ளுவர் கூறுதலால் அறியலாம்.

இந்நூற்பொருள்களும் கொள்கைகளும் நுண்ணிய ஆராய்ச்சியின் விளைவாக இருக்கலாம்; அவற்றை வழங்கியோரும் நுண்மாண் நுழைபுலச் செல்வர்களாக விளங்கலாம். ஆயினும், அவர்களது நூலறிவு பின்தொடரும் மக்களது அறிவுப் பேற்றுக்கு ஓர் எல்லையை வரையறுத்துவிட்டது. சிந்தையை நிலைக்களனாகக் கொண்டு அருவாய் நுண்ணிதாய் விரிந்து செல்லும் அறிவினிடையே உலகியற் பொருளறிவைப் புகுத்துவது கூடாது; அது நிறைவுடைய ஞானக் காட்சியில் குறைவுடைய அறிவைப் புகுத்தி மாசுபடுத்துவதாகும் என்று அவர்கள் கருதினர்.

இரண்டாவதாக, இக்கருத்து, ஏறிய ஏணியை மேலே சென்றபின் உதைத்துத் தள்ளும் சிறு செயலாகும் குற்றத்துக்கு உள்ளாக்கிற்று. அவர்களின் ஞானத்துக்கு வாயிலாக இருந்த உலகியலை வெறுத்து இகழ்ந்துரைப்பாராயினர்; உலகியலறிவு நிலையாமையும் பொய்ம் மையும் உடையது என ஒதுக்கினர். இறைவன், காணப்படும் உலகின்கண் ஒன்றாயும் உடனாயும் கலந்து உயிர்களாகிய நம்மை வாழச்செய்து உய்தி பெறுவிக்கின்றான் என்பதையும் மறந்தனர். இதுபோன்ற கருத்தே கிரேக்க அறிஞரிடையேயும் இருந்தது. புதியன காண்டல், (Inventions) அவற்றைச் செய்முறையில் வைத்து ஆராய்தல், (Experiments) இயற்கையில் உள்ள பொருட்பண்புகளை நோக்குதல் (Study of Nature) ஆகியவற்றைச் செய்வதில் அவர்கட்கு விழைவும் ஆர்வமும் இல்லாதொழிந்தன. மருத்துவக்கலையில், நம்நாட்டில் எத்துணையோ ஆற்றல் மிக்க மருந்துகளைக் கண்ட சித்தர்கள் தாம் மேற்கொண்ட செயம்முறைக் கூறுகளை வெளிபடுத் தாமல் மறைந்தனர்; பன்னூறடி உயரமுள்ள மாடமாளிகை, கோயில் விமானங்கள், ஆற்றணைகள் கட்டிய கட்டிடப் புலவர்கள், அவற்றிற்கு அடிப்படையான கருத்துக்களையும் அவற்றைக் கண்டறிந்த முறையையும் பிறரறிய எழுதிவைத்திலர். நாட்டில் வாழ்ந்த கல்வியாளரும் அவற்றை எழுதாமையைக் குற்றமெனக் கூறவில்லை. அதனால் அவற்றை ஆதரிக்கும் உள்ளம் மக்களிடையே தோன்றவில்லை. இதே நிலைதான் முன்னாளைய கிரேக்கரிடமும் பொருந்தியிருந்தது. விஞ்ஞானத் துறைக்குரிய அடிப்படைக் கருத்துக்களைக் கண்டாய்ந்து உரைத்தவர் சைரப்கூசு என்னும் ஊரவரான ஆர்க்கிமிடீசு என்ற அறிஞர். தாம் கண்ட உண்மையை அறிதற்கு மேற்கொண்ட செய்ம்முறையை எழுத மறுத்துவிட்டார்.

மற்றொரு குறையும் அவர்கள் பால் இருந்தது. “முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்” என்பது அவர்களுடைய கொள்கைகளில் ஒன்று. முன்னோர் வகுத்துரைத்த கொள்கைகளும் கருத்துக்களும் சிறந்த நிலைபெற்ற உண்மைகள். அவை ஒரு காலத்தும் பொய்படா. எல்லா அறிவும் அவற்றால் பெறப்படும் என்றே நம்பினர். இக்கருத்தே தோன்றச் “சிதைவில என்ப முதல்வன் கண்ணே” என்று தொல்காப்பியர் கூறுவர். மேலும் அவர் “என்ப” என்பதனால், அவர்க்கு முன்னால் காலத்தேயே இக்கொள்கை தோன்றி நிலவிற்றென அறிகின்றோம். இதுவே கிரேக்க நாட்டு அறிஞரிடையே இருந்தது. அவர்கள், காணப்படும் உலகப் பரப்பில் நிலவுலகு ஒன்றுமே இயக்கமும் சுழற்சியுமின்றி விரிந்து பரந்து கிடப்பது. ஏனை நாளும் கோளும் நிலவுலகை மையமாகக் கொண்டு சுற்றிவந்தன; வருகின்றன என்பது அவர்கள் கொண்டிருந்த கொள்கைகளில் ஒன்று. மற்றொன்று இந்த அண்டத்துக்கு மேலேயுள்ள வானுலகு என்றும் ஒருதன்மைத்தாய், குறையும் குற்றமும் இல்லதாய் முழுமை பெற்றது; மண்ணுலகு குற்றமும் குணமும் கலந்து முழு நிறைவின்றிக் குறைபாடுற்றுக் கிடப்பது எனவும், இவை எவராலும் மாற்ற முடியாத. என்றும் மாறாத உண்மைகள் எனவும் எண்ணி மேற்கொண்டிருந்தனர்.

மேலைநாட்டு வரலாற்றில் புத்துணர்ச்சியும் புரட்சியும் தோன்றியபோது மக்களிடையே மேற்கண்ட கொள்கைகட்கு நேர்மாறான உணர்ச்சிகள் தோன்றி மலரத் தலைப்பட்டன. பொய்யா மெய்ம்மைகள் என மேற்கூறிப் போந்தவை, உண்மையுலகின் பண்பையும் செயலையும் உள்ளவாறு முற்றவும் காணாது குறைபடக் கண்டவை; யாவும் பல்பொருட் காட்சியால் ஆயந்து காணத்தக்கவை; ஒரு கருத்துப் பல்லாயிரம் பேர் பல்காலமாகக் கண்டு ஆய்ந்து கொண்டதென்னினும், ஒருவரது உண்மையாராய்ச்சியில், அது மாறாய், உண்மைக்கு ஒவ்வாததாய்த் தோன்றுமாயின், அதனை மாற்றியமைப்பதே முறை என்ற கொள்கை உருவாயிற்று, இதனால் பலபேர் அரிதின் முயன்று கண்ட தென்றாலும், ஒரு கொள்கை முடிந்த முடிவு என்று கொள்ளப்படுவது ஒழிந்தது; பிறிதொருகால் நிகழும் ஆராய்ச்சியால் முறிந்து பொய்படலாம் என்ற உணர்வு தலையெடுத்தது.

இந்நாளைய விஞ்ஞானச் சூழலில் ஒருவர் பன்முறை சிந்தித்தும் செய்முறைகளால் (Experiments) ஆராய்ந்தும் தெளிந்து ஒரு கொள்கையை நிறுவி வெற்றி கண்டாலும், அதனைப் பிறரொருவர் தனித்தோ, பிற துணைவருடன் கூடியோ மனங்கலந்து ஆராய்ந்து அஃது உண்மையே எனக் காட்டினாலன்றி ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. “அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” என்று திருவள்ளுவரும் கூறினர். இது நமக்கு இன்று இயல்பாய்விட்டது; முற்காலத்திலும் இடைக் காலத்திலும் வாழ்ந்து விளங்கிய ஞானிகட்கு முறையாகத் தோன்றவில்லை. தாம் கண்டு தெளிந்த உண்மைகளைப் பிறர்க்குக் காட்டாமல் மறைத்தே ஒழுகினர். கிரேக்க ஞானிகள் இதற்கு விலக்கல்லர். பைதாகரசு (Pythogoras) முதலியோர் இவ்வாறு மறைத்தொழுகிய மாந்தராவர். இடைக் காலத்தில் வாழ்ந்த இதர விஞ்ஞானிகளிற் பலர் (Alchemist) வேண்டுமென்றே தாங்கள் கண்ட உண்மைகளைத் தமது சிறு சூழலுக்குள்ளே ஒளித்து வைத்திருந்தனர். கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கணக்கியற் புலவர் நிக்கலோ தார்த்தா கிலியா (Nicclo Tartaglia) என்பார் மூவுறழ்ச் சமனம் (Cubical equation) என்ற கணக்குத் தான்கண்ட வழிமுறையைப் பிறர்க்குக் காட்டாமலே வைத்திருந்தார்; பின்பு செர்மினோ கார்டனோ என்பவர் அதனை அறிந்து தாம் கண்டது போல வெளியிட்டார். அது கண்டு மனம் வெதும்பிய தார்த்தாகிலியா தெளிவெய்திய போது, “இது காணப் பட்டவுடன் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். இது போன்றவை அவ்வப்போது பிறர் அறிய வெளியாதல் நன்று” என்று கூறினார்.

புதிதாகக் காணப்படும் விஞ்ஞானவுண்மையோ, கருத்தோ, கொள்கையோ நன்கு தெளிவாகி வெளிவந்த போதிலும், குறைந்த அளவில் ஒருவராயினும் பன்முறையும் கண்டு ஆய்ந்து அதன் மெய்ம்மைத்தன்மையை நிறுவ வேண்டும் என்பது விஞ்ஞானத்தின் வியத்தகு நிலைமையாகும். விஞ்ஞானம் ஒருவரது உடைமையன்று; விஞ்ஞானிகளின் கூட்டியக்கம்.

கி.பி. 1645 இல் இலண்டன் ராயல் சொசைட்டி என்ற கழகம் தோன்றி கி.பி.1660 இல் இரண்டாம் சார்லஸ் மன்னரின் ஆதரவு பெற்றது. இக்கழகம் அவ்வப்போது கூடும்போது தாம்தாம் செய்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விளக்கி அரங்கேற்றுவர்; அவற்றை லத்தீன் முதலிய வேற்றுமொழிகளிலின்றி ஆங்கிலத்திலேயே எழுதுவர். ஆங்கிலத்திலே எழுத வேண்டும் என்றது லத்தின் மொழி
மேல் வெறுப்பன்று; நாட்டவர் பலரும் அறிந்து கொள்ள வேண்டு
மென்பது கருத்து. நம் நாட்டில் இவ்வாறு ஓர் ஆராய்ச்சிக் கழகம் கூறுமாயின் இது மொழிவெறியென்ற மூடமதி யினர் சிலர் தலை
விரித்து ஆடுவர்; அலறுவர்; செய்தித்தாள்களில் தலையங்கத்தில் ஒப்பாரி வைப்பர். அது கண்டு சிலர் அஞ்சி நீங்குவர்.

இந்த மாறுதல் ஐசக் நியூட்டன், இக்கழக்கத்தின் உறுப்பின ரானபோது ஏற்பட்டது. கலிலேயோ, டேனிஷ்நாட்டு விஞ்ஞானியான டைக்கோ பிராகி, செருமனி வான விஞ்ஞானி ஜானசு கெப்ளர் ஆகியோர் கண்ட நெறியைப் பின்பற்றி நியூட்டன் செய்ம்முறைக் காட்சியால் (Experimentation) இயக்க விதி மூன்றும் புவியீர்ப்பும் கண்டார். கொள்கைகளையும் விதிவகைகளையும் முன்வைத்துப் பின்னர் அவற்றின் உண்மை காணும் நெறியைக் கைக்கொண்டி ருக்குமாயின், ஏனை இலக்கியம், இலக்கணம், வரலாறு முதலியன போல, விஞ்ஞானமும் பொதுக் கல்வியாய் மக்களின் பண்பாடு உணர்த்தும் கலைத் துறையாய் மாறியிருக்கும். செய்ம்முறைக் காட்சியை - அஃதாவது பொருள்களை வகைப்படுத்திக் காண்பதும், ஒவ்வொன்றின் பண்பறிவதும், ‘வகுத்து மெய்ந்நிறுத்’தலும் ஆகிய நெறியை மேற்கொண்டதனால், விஞ்ஞானக் காட்சியும் உணர்வும், மிக்க பேர் உழைப்பாய் இருக்கின்றன; பொருட்செலவுக்கு உள்ளாயிருக்கின்றன. விஞ்ஞானத்தின் விளைப்பயனை நோக்க இஃது ஒரு குற்றமாகாது.

நாட்கள் செல்லச் செல்ல விஞ்ஞானத்தின் எல்லை மிக்க விரிவடைந்தது. ஆழ்ந்தகன்ற அறிவு பெறுவதற்கு விஞ்ஞானிகள் தத்தமக்கேற்ப ஒரு கூற்றையே வரைந்து கொண்டனர்; இதனால் தனித்துறைச் சிறப்பாராய்ச்சி (Specialisation) விஞ்ஞானச் சூழலுட் புகுவது இன்றியமையாதாயிற்று. வழிவழியாக வந்த விஞ்ஞானி களால் ஒவ்வொன்றும் புலமை வளம் பெருகி விரிந்து செல்கிறது.

விஞ்ஞானத்தின் பொதுவியல்பில் கருத்தைச் செலுத்திய ஐசக் ஆசிமோவ் என்ற விஞ்ஞானப் பேரறிஞர், விஞ்ஞானிகள் எழுதும் நூல்களின் மொழி நடைபற்றி நல்ல கருத்துக்களை வழங்குகின்றார். விஞ்ஞானம் காட்டும் பொருள்களும் நல்கும் கருத்துக்களும் புதிய சொற்களும் புதுமை நுட்பங்களும் நிறைந்திருப்பதால், அவர்களின் மொழி நடையைக் கண்டோர் எளிதில் விளங்காமை கண்டு வெருண்டனர்; மக்களில் வேறு பட்டவராகவே கருதலுற்றனர். அவர்களது புலமை நலம் கண்டு வியந்து பாராட்டுவது ஒருபுறம் இருக்க நெஞ்சில்அச்சம் மிகுந்தனர்; இளைஞருட் சிலர் அஞ்சி யோடினர்.

அஃது ஒரு காலம். விஞ்ஞானிகள் இந்த நிலையைக் கண்டு கருத்து மாறலுற்றனர். தமது ஆராய்ச்சியறிவும் அதனால் விளையும் பயனும் எதிர்காலப் பெருமக்களான இளைஞர் உலகை நோக்கி யிருப்பதை உணர்ந்தனர். தம்முடைய புதுமைக் காட்சிகளும் கருத்துக்களும் பொதிந்த எழுத்து நடை, எளிய மொழியில் மக்கள் படித்துணரும் வகையில் அமையவேண்டும் என எண்ணுவாராயினர் சிலர் இதனைக் கருத்திற்கொண்டு எழுதலுற்றனர்.

பலர், தாங்கள் எழுதுவனவற்றை அறிந்துகொள்ள விரும்புவோர் விஞ்ஞானப் பயிற்சியும் உணர்வும் உடையராக வேண்டும்; அத்தகுதியில்லையாயின் பயனில்லை என்று உரைப் பாராயினர். “நாங்கள் உங்கள் நிலைக்கு இறங்குவதை விட நீங்கள் உயர்வது நல்லது” என அறங்கூறவும் சிலர் முற்பட்டனர்.

இந்நிலையில் மக்களிடையே விஞ்ஞானத்தை அறிதற்கு இளைஞர் உள்ளத்தில் விழைவும் ஆர்வமும் பெருகின. கல்வியாளர் கூட்டங்களில் இதனை ஒட்டியும் வெட்டியும் பேசுவோர் மிகுந்தனர். துள்ளி வீழ்ந்து சுழன்று கலங்கும் நீர் பின்னர்த் தெளிவது போல விஞ்ஞானக் கல்வியாளர் குழுவில் தெளிவு பிறந்தது. விஞ்ஞானக் கருத்துக்களை அறிந்துமகிழ விரும்புவோன் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்பது சீரிதன்று; சேக்சுபியரின் நாடகங்களைப் படித்தறிந்து இன்புறக் கருதுபவன் நாடகம் ஆடுபவனாக இருக்க வேண்டும் என்பது இல்லை; சிறந்த இசையைக் கேட்டு இன்புறுவோன் இசைப் புலமையுடையனாதல் வேண்டும் என்பது இல்லை; நன்கு சமைத்த உண்பொருளை உண்டு களிப்பவன் ஒரு சமையற்காரனாக இருத்தல் நல்லது என்பார் இல்லை. அஃது “சாதல் துன்பத்தைச் செத்துக் காண வேண்டும் என்பது போலாகும்” என்று கருத்தரங்கு ஒன்றில் பேசிய செருமானிய விஞ்ஞானி யொருவர் கூறினார். இவ்வகையில் நடந்த சொற்போர்களால் விஞ்ஞானத்துறையிற் புகுந்து செய்ம்முறைக் காட்சியில் திளைக்கும் மனப்பான்மை யில்லாதாராயினும் ஒருவர் விஞ்ஞான நூல்களைப் படித்து இன்புறலாம்; அதற்கு அவர்க்கு உரிமையுண்டு; மறுப்பது அறமாகாது என்ற துணிவு பிறந்தது.

“விஞ்ஞானத்தினால் விளைந்துள்ள நலங்கள் பலவற்றையும் பயன் கொண்டுவாழும் மக்களிடையே விஞ்ஞான உணர்வு நன்கு பரவவேண்டும்; அதன் அடிப்படையறிவு எல்லார்க்கும் எளிதாக எய்த வேண்டும். விஞ்ஞானக் கருவிகளை இன்று எல்லா மக்களும் வேற்றுமையின்றிக் கையாளுகின்றார்கள். அவர்களை அறியாமை இருளில் அழுத்துவது கொடுமையாகும்,” என்கிறார் ஐசக் ஆசிமோவ்.

வாழ்க விஞ்ஞானம்; வளர்க விஞ்ஞானிகள்.

செந்தமிழ்ச் செல்வி

எழில் உருவம்


திரு. வி.க. அவர்களின் மறைவு தமிழ்ப் புலமைப் செல்வர் ஒருவரது மறைவாகும். கால நிலையும் மக்கள் மனநிலையும் வாழ்க்கை நிலையும் நன்கறிந்து அவற்றிற்கேற்ப உயரிய கருத்து வழங்கும் அவரது பேச்சும் எழுத்தும் நாட்டில் பெரும்பணி செய்துள்ளன.

தமிழ் இலக்கிய உலகில் நம் திரு. வி.க.சிறு சிறு வாக்கியங் களால் திருந்திய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக எழுதும் புதுமுறை எழுத்து நடை கண்டவர். எழுத்து நடையில் திரு.வி.க. நடையென்ற ஒரு சிறப்பு நடையும் நிலவுகிறது. ‘மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்’ ‘பெண்ணின் பெருமை,’ ‘முருகன் அல்லது அழகு’ முதலிய நூல்கள் பயிலுந்தோறும் இன்பவொளி வீசி நிற்கின்றன.

அரசியல் உலகில் காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாட்டுக் காங்கிரசு மாநாடுகளிலும் பொதுமேடைகளிலும் திருந்திய செந்தமிழில் அரசியல் உரிமைக் கருத்துக்களைப் பல்லாயிரம் மக்கள் கூடிப் பரிந்துகேட்குமாறு பேசுவார். திரு.வி.க.பேசவருகிறார் என்றால் ஆண்களும் பெண்களுமாக மக்கள் திரண்டு விடுவர்.

சமயவுலகில் திரு.வி.க. ஒரு தனித்துறவியாக விளங்கினார். அவர் சமயக்கண்முன் குறுகிய நோக்கங்களும் பொருளற்ற கட்டுப் பாடுகளும் எதிர்நிற்பதில்லை. சைவசமயத் திருமுறைகளில் பேரிடம் பெறும் திருத்தொண்டர் புராணத்துக்கு அவர் பொறித்துள்ள முன்னுரையும் கருத்துரையும் அவரது விரிந்த உரையறிவை எடுத்துக்காட்டுவனவாகும்.

சமுதாய உலகில் தொழிலாளர் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம், சமதரும இயக்கம் ஆகியவை திரு. வி.கவின் பேராதரவு பெற்றவையாகும். புத்தர், காந்தி, இராமலிங்கர், தாயுமானவர் முதலிய பெருமக்கள் வழங்கும் உயரிய கருத்துக்களுக்கும் புதுமுறையில் விளக்கந்தந்து இன்றைய வாழ்வுக்கு ஆக்கமாகும் வகையில் திரு.வி.க.எழுதியுள்ளவை என்றும் யாவரும் கற்றுப் பயன்படும் நிலையில் உள்ளன.

எளிமையில் அருமையும் பணிவில் பெருமையும், வறுமையில் செம்மையும் திரு.வி.கவின் உருவில் திகழ்ந்து நின்றன. வெள்ளிய கதராடையுடுத்து நெற்றியிற் சந்தன மிலங்க மெல்ல நடந்துவரும் அவருடைய மேதக்க திருவுடல் மறைந்தது. மென்னகை தவழும் முறுவல் மறைந்தது. மெல்லிய தமிழ் ஒழுகும் பேச்சிடையே இடதுகையெழுந்து எண்ணத்தைக் காட்டும் திரு.வி.க.வின் எழில் உருவம் மறைந்தது. எல்லாம் மறையினும் அவருடைய எழுத்தும் பேச்சும் எம்முடைய நெஞ்சைவிட்டு மறையா. அவர்க்கென அவர் நினைவுக்கென, இன்றைய தமிழறிஞர்கள் மண்டபம் நிறுவ முயல்கின்றனர். அம்முயற்சி இனிது நிறை வெய்துக.

செந்தமிழ்ச் செல்வி

பண்டிதமணியின் மாண்பு


முதுபெரும்புலவர் மகாமகோபாத்தியாய பண்டிதமணி
மு. கதிரேசன் செட்டியார் அவர்கள் இந்த நூற்றாண்டில் சிறந்து விளங்கிய புலவர் பெருமக்களுள் தலைமையிடம் பெற்றுத் திகழ்ந்தவர். தமது தனியுழைப்பு ஒன்றாலே உயர்ந்த பெரியவர். செட்டி நாட்டிலுள்ள மகிபாலன்பட்டியில் தன வணிகர்குடியிற் பிறந்து தமிழிலும் வடமொழியிலும் நல்ல புலமைபெற்று உயர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராய் இருந்து தமிழ்ப்பணிபுரிந்து ஓய்வு பெற்றுத் திருவாசகத்துக்கு உரையெழுதும் பணியை மேற்கொண்டு அது முடியுமுன்பே மறைந்து இறைவன் திருவடிப் பெருவாழ்வு பெற்றார்.

மகிபாலன்பட்டிக்கு அப் பெயர் இடைக்காலச் சோழ மன்னர் காலத்தில் உண்டாயிற்று; அதற்கு முன்பெல்லாம் அவ்வூர் ‘பூங்குன்றநாட்டுப் பூங்குன்றம்’ என்று வழங்கிவந்தது. சங்ககாலச் சான்றோர்களுள் கணியன் பூங்குன்றன் என்னும் சான்றோர் இவ்வூரினர்; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்கும் பாட்டு அப் பூங்குன்றனாருடையது. பரந்த புலமையும் சால்புமுடைய அத் தக்கோர் நிலவிய ஊரே நம் பண்டிதமணிக்கும் பிறந்த வூராய்த் தமிழ்ப்பெரும்புலமை யெய்துதற்கு ஏற்ற இடமாய் அமைந்தது; இஃது அவர்கள் கருவிலே வாய்ந்த தமிழ்த்திருவாகும்.

சான்றோர் பாராட்டும் தகவுடைப்புலமை எய்தியதும் பண்டிதமணியவர்கள் தாம் பயின்ற வடமொழிக்கண் சிறந்து நிலவிய நூல்களுள் சுக்கிரநீதியைத் தமிழில் மொழிபெயர்த்தார்கள். அதன்பின்சுலோசனா, மிருச்சகடிகம், உதயணகாவியம் ஆகியவற்றை இனிய தமிழில் மொழிபெயர்த்தார்கள். பண்டிதமணியவர்கட்கு முன்னோரும் பின்னோருமாகப் பலர் தோன்றி வடமொழிநூல்கள் மொழிபெயர்த்தோர் உண்டு. அவர் பலரும் தமிழில் நிரம்பிய புலமையில்லாக் குறையால் கற்பவர் விரும்பத்தக்க நிலையில் அம்மொழிபெயர்ப்புக்களைச் செய்யும் திறம் குன்றினர். பண்டித மணியின் மொழிபெயர்ப்புக்கள் முதனூலினும் சிறந்த சொன்னலமும் பொருள்வனப்பும்கொண்டு சிறப்புற்றன. சுக்கிரநீதி, மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்) என்ற இரண்டன்மொழிபெயர்ப்புக்கள் அச்சாகி வெளிவந்துள்ளன.

இந்நிலையில் மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆண்டுதோறும் விழாக்கள் நடத்துவதுடன், பல மாணவர் களை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நிறுவி நடத்திய தேர்வுகளுக்கு அனுப்பும் முறையில் கல்லூரிநிறுவி இடையறவின்றி நடைபெறச் செய்தது பண்டிதமணியின் கல்விப்பணியாகும். சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய தமிழ்ச்சான்றோர் பலரும் கலந்து இன்புறுவது வழக்கம். இப் புலவர்பெருமக்கள் பண்டிதமணியவர்களின் புலமை நலத்தை வியந்து தம்மிற்கலந்து நல்கிய சிறப்புத்தான் “பண்டிதமணி”யென்னும் பட்டம்.

பண்டிதமணி யவர்களின் பெரும் புலமைநலத்தை நேரிற் கண்டு வியந்து பாராட்டி இன்புற்ற தஞ்சைக் கரந்தைத்தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரன்பிள்ளை அவர்கள் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் பண்டிதமணியவர்களின் புலமைச் சிறப்புணர்ந்து பல்கலைக்கழகத்திற் பேராசிரியராகக் கொண்டு பெருமை யெய்தினர். அக்காலத்தே அவரது புலமை விளக்கத்தை யறிந்து இந்திய அரசியலார் அவர்க்கு மகாமகோபாத் தியாயர் என்ற சிறப்புப் பெயர் தந்தனர்.

பண்டிதமணி யவர்கள் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” முற்றும் சுற்றி ஆங்காங்குள்ள தமிழறிஞர் கூட்டத்தில் இனிய சொற்பொழிவாற்றி இன்பம் செய்தவராவர். அவருடைய சொற்பொழிவு எளியநடையில் அரிய கருத்துக்களை இலேசாக உரைக்கும் இயல்பினதாகும். எல்லோரும் நன்கு தெரிந்த பாட்டேயாயினும், அது பண்டித மணியவர்களின் சொற்பொழிவில் அகப்படின், அவர் அனைவரும் அதுகாறும் கேட்டிராத நயங்கள் பல உட்கொண்டிருப்பது வெளிப்பட்டுக் கேட்டார் உள்ளத்தைப் பிணித்து இன்பம் செய்யும், பெரிய புராணம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என்ற தொடர்நிலைச் செய்யுட்கள் வரலாறு கலந்தவையாகலின், இயல்பாகவே இனிமையுறச் சொல்லாடும் பண்டிதமணிபால் இவை பெரிய அறிவின்பநிலையமாய்க் காட்சி யளிப்பது ஒரு புறம் இருக்க, இறையன்பில் பேரீடுபாடுகொண்ட திருவாசகப் பாட்டுக்கள் வந்துவிடின், பண்டிதமணியவர்களின் சொன்னலம் காலமும் கருத்தும் கடந்து இறையின்ப வெள்ளத்தில் ஆழ்த்தி மகிழ்விக்கும் இயல்பிற்றாகும்.

பண்டிதமணியவர்கள் ஒரு கூட்டத்தில் தலைமை தாங்குகின்றார்கள் என்றால், சொற்பொழிவாளர் பலரும் மிக்க விழிப்புடன் தமது பணியை ஆற்ற முற்படுவர். சொற்பொழிவில் பொறுக்குமளவினும் மிக்க அளவில் குற்றம் நிகழின்,அவற்றைக் கண்ணோட்டமின்றி எடுத்துக் காட்டுவதில் பண்டிதமணியவர்கள் பின்வாங்கு வதில்லை. ஒருகால் அதுபற்றி அவரோடு சொல்லாட நேர்ந்தபோது அவர்கள் சொன்ன கருத்து மிக்க வியப்பை அளித்தது. அவர் சொன்னது: “ஒருவன் ஒரு பொருள்பற்றிச் சொற்பொழிவு செய்யவருகின்றான் என்றால், அவனுக்காகப் பலரும் தமது காலத்தை ஒதுக்கிக்கொண்டுவருவர். அக்காலம் அவர்களது வாழ்நாளின் ஒருகூறு; அது கழிந்தால் மீளப்பெறலாகாதது. அதன் அருமையை எண்ணாது, குற்றம் நிறைந்த கருத்துக்களை ஒருவன் சிறிதும் சிந்தனையின்றிச் சொல்லி வீணாக்குவானாயின், அஃது அவனுக்கும் கேட்போர்க்கும் நன்மை விளைவிக்காது; அவனை அது செய்யுமாறு நாம் விட்டுவிட்டால் மேன்மேலும் காலக்கேடு செய்யும் குற்றம் பெருகும் என்பதுபற்றியே யான் இவ்வாறு கண்டிக்கும் கடமையை மேற்கொண்டேன்” என்று கூறினார்.

சென்னையில் நடந்த தமிழ்க்கூட்டம் ஒன்றில் அரசியலில் அமைச்சராம் செல்வாக்குப் பெற்ற ஒருவர் தமிழாசிரியர்களைக் குறைகூறுவதில் ஓர் இன்பம் கண்டு, தமிழ்ப்புலவர்களுக்கு, க,கா என்ற இரண்டுக்குமேல் ஒன்றும் தெரியாது; க என்பது கடவுள்; கா என்பது காதல் என்றார். எல்லோரும் கை கொட்டி அமைச்சரின் அறிவுரையைப் பாராட்டினர். அதன் பின் அங்கே சொற்பொழி வாற்றிய பண்டிதமணியவர்கள், “தமிழாசிரியர்களுக்கு க,கா என்ற இரண்டிற்குமேல் ஒன்றும் தெரியாது என அமைச்சர் கூறுவது உண்மை; அதற்குமேல் இவர் அறிந்தது என்ன? இவ்வுலகில் கடவுளுக்கும் காதலுக்கும் மேலாக எப்பொருள் இருக்கிறது? இந்த வகையில் தமிழ்ப் புலவர்கள் மாத்திரமல்ல, இங்கிலீஷ் புலவர்களும் அரசியல் நிபுணர்களும் எல்லாரும் ஒன்றுதான். இந்த அறியாதவர் கூட்டத்தில் அமைச்சர் விலக்கல்ல” என்று கூறினார்கள்.. எல்லோரும் பண்டிதமணியவர்களின் நுண்மாண் புலமையைப் பாராட்டிப் பரவினர்.

திருவாசகத்துக்கு உரைகாண்பது என்பது நெடுங்காலமாகத் தமிழறிஞர்கள் உலகில் பேரச்சத்தை விளைத்துக் கொண்டிருந்தது. பின்னர் அறிஞர் சிலர் தோன்றி உரையெழுதி வெளியிட முற்பட்டனர். அவ்வுரைகளுள் மறைமலையடிகள் முதல் நான்குபகுதிகட்கு எழுதியவுரை கற்றோரிடையே செல்வாக்குப் பெறுவதாயிற்று. ஏனைப் பகுதிகட்கு அவர் உரைவாராதாகவே, திரு.கா.சு. பிள்ளைய வர்கள் திருவாசக முழுதிற்கும் உரைகண்டு வெளியிட்டார். அவ்வுரைக்குத் துணையாக அறிஞர் சிலர் உரைவகுத்து அளித்தனர். இந்நிலையில் பண்டிதமணியின் திருவாசகச் சொற்பொழிவுகளின் நயங்கண்டு வியந்த அறிஞர் அவரையே திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வேண்டினர். மறைமலையடிகள் எழுதிய பகுதி கட்கு மேலுள்ள திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை என்ற மூன்றுக்கும் பண்டிதமணியவர்கள் கதிர்மணிவிளக்கம் என்ற பெயரால் உரைகண்டு வெளியிட்டனர். அடுத்துள்ள திருவம்மானையில் முதல் மூன்று செய்யுட்களுக்கு ஒருவகையாக உரையெழுதி முடித்தற்குள் அவர்கள் இம்மண்ணுலக வாழ்வைத் துறந்து சென்றார்கள். திருவாசக முழுதுக்கும் உரை நிரம்புதற்குள் பண்டிதமணி மறைந்தது சைவத் தமிழுலகின் தவக்குறையென்று சொல்லவேண்டும்.

தமிழ், நம் தமிழ்நாட்டில் அரசியல் மொழியாதல் வேண்டும்; அரசியல் அவைகளிலும் நீதிமன்றங்களிலும் தமிழ்மொழியே இடம்பெறல் வேண்டும். உயர்கலைகள் பலவும் தமிழிலே கற்பிக்கவும் எழுதவும்பட வேண்டும் என்பனபோன்ற கருத்துக்களை நம் பண்டிதமணியவர்கள் அடிக்கடி கூறிவந்தனர். அவரது பெரும் பிரிவால் தமிழ்நாடு சால்புடைய தமிழ்ச்சான்றோரை இழந்தது; தமிழ்மக்கள் சிறந்த பேராசிரியரை இழந்தனர்; தமிழ்மொழி பிறமொழிநலங்களைத் தமிழாக்கி அணிசெய்யும் தமிழ்ப்பெரும் புலவரை இழந்தது; தமிழ்ச்சமயமாகிய சைவம், எட்டாம் திருமுறை யாகிய திருவாசகத்துக்குப் பெருமைசான்ற உரைகூறும் பெருமகனை இழந்தது. இன்னாதம்ம உலகம்!

செந்தமிழ்ச் செல்வி

சித்தாந்தப் பேராசிரியர்


தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர், ந. சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தி இன்று பரவுகின்றது. சின்னாட்குமுன் திரு.வி.க. மறைந்தார்; அவர்க்குப்பின் மகாமகோ பாத்தியாய பண்டிதமணி மறைந்தார் என்ற செய்தி இடிபோல் வந்தது. அது வந்த ஒரு கிழமைக்குள் தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர், ந.சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இடிமேல் இடி வீழ்ந்தாற் போல் வருகின்றது. பழுத்த சமய வாழ்வும் முழுத்த கேள்வியும் உடைய பெரியவர்கள் ஒருவர்பின் ஒருவராக மறைகின்றனரே! இஃது என்னையோ?
தமிழ்க்கு வரம்பாகிய தக்கோரும் சைவவரம்பாகிய மிக்கோரும் இவ்வாறு மறையின் தமிழும் சைவமும் வாழ்க என வாழ்த்துவது என்னாவது? உள்ளம் வேதனை தானே எய்துகின்றது? தமிழ்மடந் தைக்குச் சென்னை திருமுடியும், செட்டி நாடு திருமார்பும், தென்பாண்டிநாடு திருவடியும் போல்வன. இம் மூன்றிடத்தும் முறையே முடிமணியும் மார்பணியும் சிலம்பணியும்போலத் திரு.வி.க.வும் பண்டிதமணியும் சித்தாந்தப் பேராசிரியரும் தமிழ் அன்னைக்கு இதுகாறும் தமிழ்ப் பணியும் சமயப்பணியும் சால்புடன் புரிந்து தமிழ்க்கு அணி செய்துவந்தனர். அவர்களது மறைவு, தமிழன்னை முடிமணியும் மார்பணியும் சிலம்பணியும் கெடுத்து வருந்தும் கீழ்நிலையைக் காட்டி நினைக்கும் உள்ளத்தை நீராய் உருக்குகின்றது.

கையறு நிலை
1.  பெரிய நெறி சித்தாந்தப் பேராசிரியர்மன்
    அரியசிவ குருநாத அண்ணல்மன் ஐயன்மன்
    உரியபொருள் பலவுணர்ந்த ஒருவன்மன் ஒழுக்கத்தால்
    விரியவரு நலமெல்லாம் மிகவுடைய மேலோன்மன்.

2.  சிலசொல்லிப் பலவுணர்த்தும் செம்மையோன் சிவம்பெருகும்
    தலம்பலவும் கண்டயர்ந்த தகவுடையோன் தமிழ்ப்புலமை
    நலவுரைகள் பலநிகழ்த்தி நயங்காட்டும் நல்லோன்மன்
    அலகில்சிவ குருநாத அண்ணல் மறைந்தான்மன்னோ.

3.  திருஞான சம்பந்தர் திருவடியே தினம்பரவி
    வருவோன்காண் மெய்கண்டவள்ளல்தாள் மறவான்காண்
    பெருமுனிவன் சிவஞான யோகிநலம் பேசுவதே
    உருவாழ்வென் றோதுசிவ குருநாத உரவோனே.

4.  சித்தியுரை தெளிப்பார்யார்? திருவந்தி விரிப்பார்யார்?
    அத்துவிதப் பொருளதனை அகலவுரைத் திடுவார்யார்?
    அத்துவா ஆறனையும் அணிதிகழ அறைவார்யார்?
    மெத்துசிவ குருநாத மேதக்கோய் மறைந்தாயே!

5.  திருமந் திரநகரில் செந்தூரில் சிவநெறியில்
    வருமந் திரமுரைக்க வழித்துணையாய் வந்தாயால்;
    அருமந்த சிவஞானம் அறியுநெறி எனக்குரைத்த
    பெருந்தந் தையேநீயும் பிரிந்தாயே மறைந்தாயே.

6.  பலகூறிப் புலம்புவதென்; பரவுசிவ குருநாதன்
    நிலவுலகு நீத்ததனை நினைந்தினிநெஞ்சே, அவன்தாள்
    இலகுபிறை அணிந்தருளும் இறைவனருட் பேரின்பம்
    நிலவுவாழ் வதில்நிற்கும் நீர்மையினை நினைகுவையே.

செந்தமிழ்ச் செல்வி

கரந்தைக்கவியரசு மறைவு


கரந்தைக்கவியரசு திரு.R. வேங்கடாசலம்பிள்ளை அவர்கள் மறைந்தசெய்தி தமிழகத்துக்கு இவ்வாண்டில் உண்டான இழப்புகளில் ஒன்று. இனிய தமிழ்க்கவி செய்ய வல்ல இனிய புலவரைத் தமிழன்னை இழந்து வருந்துகிறாள். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, பெருமை, பணி முதலிய கூறுகள் எல்லாவற்றிலும் நேரடியாகத் தொடர்பு கொண்ட ஒருவரை, சங்கத்தின் தந்தையாய்த் தாயாய்ப் பணி புரிந்த தக்கோரைக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் இழந்துவிட்டது. யாங்கள் எங்கள் ஆசிரியரை இழந்தோம்.

கண்டர் கோட்டை எனப்படும் கந்தருவக் கோட்டைக்கு அண்மையில் உள்ள மோகனூர் கவியரசர் தோன்றிய நல்ல ஊர். தமிழ்ப்புலமை நலம் சிறந்த பழங்குடி அவரது உயர்ந்த குடி. தமிழ்க் கல்வி சிறந்ததும் தஞ்சைக்குப் போந்து தமிழாசிரியராக இருந்து அரும்பணியால் அயராத தமிழ்த் தொண்டால் கவியரசாக மேன்மை யுற்றவர் ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளையாவார்கள். அவரது தமிழ்வாழ்வு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து விளங்குவது. சங்கத்தின் வாழ்வும் அவரது வாழ்வும் ஒன்றுபட்டவையாகும்.

தஞ்சைத் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம்பிள்ளை அவர்கள் தலைமை தாங்க, கவியரசர் R.வேங்கடாசலம்பிள்ளையவர்கள் அமைச்சராய்ச் செயலாற்றக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் சிறந்த. தமிழ்ப்பணி புரிந்து நாடெங்கும் நல்ல புகழ்பெற்று மேம்பட்டது. அதன் வெள்ளிவிழா விளக்கத்தால் வீறு பெற்றது; அதன்பின்னர்ச் சங்கத்திற்குப் பொருள் சிறிது சேர்ந்தது; கடமைகள் பெருகின. தமிழவேள் மறைந்தார்; பொருள் வளம் சுருங்கிற்று; செயலொளி குறைந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்றபடி பொருளளவு சிறுமையுற்றுப் பெரும்பணி ஆற்றி வருகிறது.

இதற்கிடையே, கவியரசர் தமது தமிழ்ச்சங்க அமைச்சுக் கடைமையைத் தக்க இளைஞர்பால் இருத்தித் திருவையாற்று அரசினர்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பதவியேற்றுத் திருவையாறு சென்று சேர்ந்தார். பல ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த தன் விளைவாக மிகப்பல சிறந்த தமிழ்ப் புலவர்கள் நாட்டில் தோன்றுவாராயினர். பின்னர் அவர்கள் கரந்தைக்கே வந்து கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் புலவர் கல்லூரியிற் பேராசிரியராய் இருந்து முதுமையும் தளர்ச்சியும் எய்தித் தமிழ்த்தாயின் தண்ணிய திருவடி நீழலை யடைந்தார்கள்.

கவியரசர் க.த.சங்க அமைச்சராய் இருந்தபோது தமிழ்ப் பொழில் என்னும் திங்கள்வெளியீடு தோன்றிற்று. அதன் இரண்டா மாண்டில் எனக்குத் தமிழ்ச்சங்கத் தொடர்ப்பு உண்டாயிற்று. சங்கக் கல்விநிலையத்தில் ஆசிரியர்பணியும் நூல் நிலையப்பணியும் புரியும்பேறு எனக்குக் கிடைத்தது. அக்காலைக் கவியரசர் எனக்குத் தமிழ் கற்பிக்கும் பேருதவியைச் செய்யலுற்றார்கள். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் தெய்வச் சிலையார் எழுதிய உரையை வெளியிடும் பணி வந்தது. ஏடு படித்தலும், பெயர்த் தெழுதலும் என் பணியாயின. இடையிடையே எழும் ஐயங்களை அகற்றுமுகத்தால் ஒரே காலத்தில் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியகளின் உரைநலங்களை எனக்குக் கற்பித்து இன்புறுத்துவது கவியரசரின் கல்விப்பணியாய் இயங்கிற்று. உரை நலங்களைப் படித்து முடித்தேன். நூலும் வெளியாயிற்று. யானும் வடஆற்காடு மாவட்டத்தில் தமிழ்ப்பணி புரியும் செயல்மேற் கொண்டு சென்றேன்.

எனக்கு இலக்கணம் கற்பிக்கும் பணி தெய்வச்சிலையார் உரை வெளியீடாய் நிலவினமையின் அக்காலை சங்கத்தில் நெருங்கிய தொடர்புற்றிருந்த பேராசிரியர்களான பண்டித நாவலர், ந.மு. வேங்கடசாமிநாட்டார், பண்டிதமணி. மு. கதிரேசன் செட்டியார், எல்.உலகநாதபிள்ளை முதலியோர்களின் தொடர்பு எனக்கு எய்துவதாயிற்று.

அவரது தொடர்பு அன்பு செய்வதோடு நில்லாது தமிழறிவு நல்கும் ஆசிரியர்களாக இருந்து எனக்கு ஐயமகற்றி அவரது நன்றி மறவா மாணவனாய் நிலவுமாறு செய்தது. அவர்கள்பால் என்னைப் பற்றி அன்புரை வழங்கி ஆதரவுசெய்த கவியரசரின் கல்விநலத்தை இன்று நினைப்பினும் என் நெஞ்சு கரைந்துருகுகிறது.

ஒருகால் திருக்காட்டுப்பள்ளிக்கு டாக்டர் உ.வே.சாமிநாதையர் வந்திருந்தபோது ஒருவர் தேட்கடியில் வருந்தி மருந்துண்டு தேறினார். அப்போது நாட்டார், கவியரசர், தண்டாயுதபாணிக் காடவராயர், தமிழ்வேள் அனைவரும் சூழ இருக்க, “கடித்த இடம்தான் கடுக்கிறது,” என்று காடவராயர் சொன்னார். கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே என்று நாட்டார் அவர்கள் கூற எல்லோரும் நகைத்தனர். அது எப்படி யெனத் தமிழவேள் ஐயரவர்களைக் கேட்க, அவர்கள் என்னை விடை கூறப் பணித்தார்கள். யான் கடியென்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினையாயிற்று: “கடுத்தது காட்டும் முகம், என்றாற்போல” என்றேன். அப்போது ஐயரவர்கள் எனக்கு இலக்கணம் கற்பித்த கவியரசரைப் பாராட்டியது இப்போது என் நினைவுக்கு வருகிறது. அவரது பிரிவு என் அறிவைப் பேதுறுவிக் கின்றது. தெய்வச்சிலையார் உரை எழுதிய ஏட்டைத் திரு. ஐயரவர் கள்பால் பெற்றுவந்தபோது அவர்கள் கவியரசர் புலமையைப் பாராட்டி, தாம் சீவகசிந்தா மணியைப் பதிப்பித்து வெளியிட்ட போது, “பெயர் விழையான்” என்னும்புனைபெயரில் சில திருத்தங் களை மிக்க நுட்பமாக ஆய்ந்துரைத்தாரெனவும் பின்பே அவர்கள் கவியரசரைத் தெரிந்துகொண்டாரெனவும் கூறியது என் நினைவில் எழுகின்றது.

தமிழவேள் மகன் பஞ்சாபகேசன் மறைந்தபோது கவியரசர், தமிழவேள் மனநிலையையும் தமிழன்பையும் வியந்து, “மன்மக்கள் எல்லாம் தன் மக்களெனக் கொள்வானை, என்னையினிச் செய்வது இடர்,” என்று பாடியதுகேட்டுப் பண்டிதமணியவர்களும், நாட்டார் அவர்களும் பாராட்டி யுரைத்ததும், தமிழவேள் அவர்களின் கலங்கிய வுள்ளம் தெளிந்ததும் இன்று நிகழ்வனபோல் நெஞ்சில் தோன்றுகின்றன. இதைநினைவில் கொண்டிருந்து பண்டிதமணி யவர்கள் திரு. வேங்கடாசலம் பிள்ளையவர்கட்குக் கவியரசர் என்ற பட்டம் தந்தபோது பாராட்டி யதும் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் முறுவலித்து மகிழ்ந்ததும் இன்று நினைக்கினும் இன்பம் தருகின்றன.

என் இனிய ஆசிரியர் அவர்களின் நலங்கள் பல நினைவுக்கு வருகின்றன. எதனை நினைப்பேன்! எதனை எழுதுவேன்! இவ்வாண்டு என் மனதுக்கு அமைதி நிலவாதவகையில் பல இழப்புக்களை நல்கிவிட்டது. பொதுநோக்கால் புகழ்பெருகிய திரு. வி.க.மறைந்தார்; அன்பால் நட்பால் அறிவுபெருகிய பண்டித மணி மறைந்தார்; ஆர்வத்தால் அருளால் சித்தாந்த நுண்பொருள் காட்டிய தூத்துக்குடி சித்தாந்தப் பேராசிரியர் சிவகுருநாத பிள்ளை மறைந்தார்; இறுதியாகப் பழந்தமிழ்ச் செல்வம் எனக்கு நல்கிய கவியரசர் மறைந்தார். இக் கொடுங்காலம் இப் பெருமக்களை மறைக்கலாம். வேறே என்ன செய்ய முடியும்? அவர் தம் புகழ் பொன்றாது நிற்பது. வாழ்க அவர் புகழ், வளர்க தமிழ்.

செந்தமிழ்ச் செல்வி

வாணிக மந்திரம்


வாணிகம் என்பது நமது நாட்டில் பொதுவாக யாவரும் செய்யக் கூடிய தொழில் என்று பலரும்கருதுகின்றனர். உடம்பை வருத்திச் செய்யக் கூடிய உழவு முதலிய தொழில்கள் இழிந்தவை என்றும், அரசியலில் அரைப்பணச் சம்பளத்துக்காயினும் வேலை பார்ப்பதுதான் உயர்ந்தது என்றும், வாணிகம் செய்வது நடுத்தரமானது என்றும் இடைக்காலத்தில் மக்கள் மனதில் ஒரு கருத்துத் தோன்றி நிலவுவ தாயிற்று. இதன் விளைவாகக் கற்றவர் அரசியல் வேலையாட் களாகவும், பணிபுரிபவர்களாகவும் அலுவலாளர் களாகவும் புகுந்து வாழ்க்கை நடத்துவாராயினர். கல்லாதவர் பலரும் உழவு முதலிய தொழில்களை மேற்கொண்டனர். சிறிது கற்று இடைநிலையில் நின்றவர் வாணிகம் செய்து வாழலாம் என்று கருதும் அளவுக்கு வாணிகம் பொதுவுடைமை நிலையில் நடக்கத் தலைப்பட்டது.

சிறந்த கல்வியறிவும் வலிய உடலுழைப்பும் இல்லாதவர் பலரும் வாணிகத்தில் நுழைந்தமையால் வாணிகத் தொழில் ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கருதப்படுவதாயிற்று. சில இடங்களில் கயவர்களும் வஞ்சகர்களும் இதி பண்புடையவர்களும் சூதுபுரியும் தொழிலாகவும் பயன்பட்டது. ஒரு சிலர்க்குப் பொழுது போக்காகவும் பயன்பட்டது. இத்தகைய நிலையில் வாணிகத்தில் வளர்ச்சியும் வளமையும் உண்டாதற்கு வழி இல்லாமையால் நட்டம் வருவதும், நிலைதவறிவீழ்வதும், ஒரு சிறிது எழுதுவதும் இயற்கை யென்று நட்டம் வருவதும், நிலைதவறிவீழ்வதும், எழுவதும் இயற்கை யென்று மக்கள் கருதுகின்றார்கள். “முப்பதாண்டு வாணிகம் செய்து வாழ்ந்தவரும் இல்லை, கெட்டவரும் இல்லை” என்றொரு பழமொழியும் உலகில் நிலவுகின்றது. மேனாட்டு வணிகர்கள் தங்கள் வாணிகத்திற்கு வெள்ளிவிழா (50 ஆம் ஆண்டுவிழா) பொன்விழா (20ஆம் ஆண்டுவிழா) மணிவிழா (80ஆம் ஆண்டுவிழா) நூற்றாண்டு விழா என விழாக் கொண்டாடுகிறார்களே; அதுபோல் நம்மவர் ஏன் செய்யமுடிவதில்லை? அவர்கட்கு மாத்திரம் நிலையாக நின்று இப்படி விழாக்கள் நடத்த இயலுகின்றது ஏன்? என்று நினைப்பது இல்லை. செய்யும் வாணிகத்தில் உயர்ச்சி யுண்டானால் “நல்ல காலம்” என்றும், “ திசை நல்ல யோகம்” என்றும், வீழ்ச்சியுண்டானால் “திசை கெட்டுப் போயிற்று”, எனவும் “கிரகம் சரியா யில்லை” என்றும் சொல்லிப் பழி பாவங்களைக் காலத்தின் மேலும் கிரகங்களின் மேலும் தள்ளிவிட்டுத் தாம் குற்றமற்றவர்களாகக் கருதிக்கொள்வது நம்மவர் இயல்பாக இருக்கிறது. விதி யென்றும், வினையென்றும், கருமம் என்றும் சொல்லிக் கொள்வது பெருவழக்கு. விதி வினைகளின் மேல் பழிபோட்டுக் கெடுகின்றவருக்குநமது பெரியோர்கள் நல்ல அறிவுரையும் சொல்லியுள்ளார்கள்; செய்யும் தொழிலில் விதி வினைகள் குறுக்கிட்டாலும் நாம் நமது உழைப்பாலும், அறிவு வன்மையாலும் வென்று விடலாம் என்று நம் முன்னோர் நன்றாக அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அப்படியிருந்தும் மிகப்பலர் தெளிவில்லாமல் “ஐயோ; வினையே” என்று அழுவதும், அதற்காக நவக்கிரகங்களுக்கு வழிபாடு செய்வதும் மேற்கொண்டு அவதிப்படு கின்றார்கள். அவர்களுக்குத் திருஞானசம்பந்தர் முதலியோர் அறிவுறுத்யத்உரை செவியில் ஏறுவதில்லை; தெளிவில்லாத சோதிடரும் திறமையில்லாத கோயில் பூசாரியும் சொல்லுவது தான் நல்ல அறிவுரையாக விளங்குகிறது. வணிகர் சமுதாததில் இந்த இழிவானநிலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று? என்பன போன்ற ஐயங்கள் இப்பொழுது எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்தால் அது பெரிய புதிர் பாரதமாய் விரியும்.

வாணிகத்தின் கீழ்நிலைக்குக் காரணமாக ஒன்றைமாத்திரம் இப்போது தெளிவாகக் கூறலாம். வாணிகம் என்பது மக்கட் சமுதாயத் துக்குச் செய்யும் சிறந்த தொண்டு என்பது மேனாட்டவர் கொள்கை நம் நாட்டவர் அதனை ஒரு சூதாட்டமென்று கருதுகின்றார்கள். பெருத்த நிலையில் வாணிகம் செய்து ஒருவர் கெட்டு விடுவாரானால் ‘சூதாட்டத்திலும் எப்படி வெற்றிதோல்விகள் நிலையில்லையோ அப்படியே வாணிபத்திலும் இலாப நட்டங்கள் நிலையில்லை’ என்று சொல்வது வழக்கமாக இருப்பது யாவரும் தெரிந்த செய்தி. வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எக்காலத்தில் சொன்னானோ தெரியவில்லை. அந்தப் படுபாவியின் சொல்லால் நமது நாடு வாணிகவுலகில் மதிப்பிழந்து போயிற்று. வணிகரிடையே பொய்யும் வஞ்சனையும் மோசமும் இயற்கைப் பண்பாக அமைந்து விட்டன. தூயநிலையில் பொருளை விற்பதும் கிடைக்கச் செய்வதும் பாவம் என்று இந்நாளைய வணிகர். உலகம் மறைவாகத் தனக்குள் நினைக்கிறது. சொல்லுகிறது.

நமது நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒருமுறை நமதுநாட்டு வாணிகத்தைப்பற்றிப் பேச்சுவந்தபோது வணிகத்துறை அமைச்சரா யிருந்த அறிஞர் எழுந்து நின்று நம்நாட்டு வணிகரிடம் உள்ளதென ஒரு பெருங்குறையை எடுத்துக்கூறினார். நம் நாட்டு வணிகர் தாம் விற்கும் பண்டங்களில் மோசமும் வஞ்சனையும் செய்கிறார்கள்; அதனால் வெளிநாட்ட வர்க்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று வருந்திக் கூறினார். வெளிநாட்டு மக்கள் இகழ்ந்து வெறுத்துத் தள்ளக்கூடிய அளவு பண்டங்களில் மோசம் செய்யப்படுகிற தென்றால், உள்நாட்டு வாணிகத்தில் நடக்கும் வஞ்சனைக்கு அளவு சொல்ல முடியுமா? வஞ்சமும், மோசமுத் தானே வணிகர் வாயிலும் கையிலும் நிலவுகின்றன.

மக்களுக்குத் தேவையான பொருள்களுள் அரிசி, பருப்பு, புளி, மிளகு, மிளகாய்ப்பொடி முதலியன மிகவும் சிறந்தவை. நமது நாட்டுக் கடைத்தெருவில் விற்கப்படும் அரிசி முதலியவைகளை ஆராய்ந்தால் கல்லும் மணலும் கலவாத அரிசியும், பருப்பும் கிடையாது. புளியில் களிமண்ணையும், மிளகில் வேறு விதை களையும் மிளகாய்ப் பொடியில் செங்கற் பொடியையும் கலந்துவிடு கிறார்கள். நல்லெண்ணெயில் வேறு எண்ணெய்களைக் கலப்பதும், சீனியில் மணலைக் கலப்பதும், பாலில் நீரையும் வெண்ணெயில் மெழுகையும் கலப்பதும் இயல்பாகவுள்ளன. துணிக்கடையில் நடக்கும் மோசங்களுக்கு எல்லையில்லை. எட்டு முழம் துணி வாங்கினால் அது மீள அளக்கும்போது ஏழரை முழத்துக்கு மிகுவ தில்லை; எழு முழச்சீலை யென்பான்! அளந்தால் அது ஆறரை கசமே யிருக்கும்; ஆறு முழம் வேட்டி யென்பதை அளந்தால் அது ஐந்தரை முழந்தான் இருக்கும். இவற்றை நாடோறும் காண்பதால் மக்கள் மனதில் வாணிகம்என்பது சூதும் வஞ்சனையும் கலந்ததொழில் என்ற கருத்து வேரூன்றிவிட்டது. மக்களில்பெரும்பாலோர் போதிய கல்வியறி வில்லாதவர்களாதலால் வாணிகத்திற்கு இந்த இழிநிலை இயல்பாய்ப் போய்விட்டது; இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களும் இவர்களில் வேறானவரல்லர். ஆதலால், அவர்கள் நடத்தும் அரசியலும் இதைத் தீங்கு என்று நினைக்கவோ, இத்தீங்கை ஒழித்துக்கட்டுவதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வர வில்லை. உள்நாட்டில் இப்படிச்செய்து பழகிய மோசம் வெளிநாடு களுக்கு ஏற்றுமதிசெய்யும் பொருள்களில் பெருமிதமாகப் புகுந்து வெளிநாட்டவர் இகழ்ந்து வெறுத்துத் தள்ளுதற்குரிய அவக்கேட்டை விளைவித்திருக்கிறது. பொருள் துறையில் படிப்படியாக முன்னேற முயன்றுகொண்டிருக்கும் நமது நாட்டுக்கு இந்தஇழிசெயல் பெருத்ததீங்கை உண்டுபண்ணி வருவதை நமது நாட்டு வணிகர்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை; சமுதாயத்துக்கு இதனால் எவ்வளவுபெரிய துரோகம் செய்யப்படுகிறது என்பதும் அவர்கள் அறிவுக்கு எட்டியதாகத் தோன்றவில்லை. இன்றும் இந்த வஞ்சனையும் மோசமும் துரோகமும் நமது நாட்டு வணிகம் சூழலில் வளமாக நிலைபெற்றிருப்பதே இதற்குத் தக்க சான்று பகருகின்றது.

இந்தநிலை நமதுநாட்டு வாணிகத்துறையில் நிலவுவதால் ஒருவர் பல ஆயிரக்கணக்கில் வைத்து வாணிகம் செய்தாலும் அவர் சொல்லும் விலையில், சொல்லும் சொல்லில், ஏழைமக்களும் நம்பிக்கை வைப்பதில்லை. ஒரு பொருளின் விலை அவர் ஒரு ரூபா என்பாரானால், வாங்குபவர் அதைச் சிறிதும் நம்பாமல் முக்கால்ரூபா அல்லவா? என்று கேட்பார். பின்பு சிறிதுபோது சொல்லாடல் நிகழும்; முடிவில் அவர் அந்தப் பொருளை முக்கால் ரூபாய்க்கோ என்பது பைசாவுக்கோ வாங்கிக்கொண்டு போவார்; பல்லாயிரம் ரூபாய் முதல்வைத்து வாணிகம் செய்யும் முதலாளியின் சொல் மதிப்பிழந்து பொய்பட்டே போகும். தனது சொல்பொய்படுவதையோ அதனால் தனது நாணயம் பொதுமக்கள் முன்பு கெட்டு நிற்பதையோ அவர் நினைப்பதும் இல்லை; உணருவதும் இல்லை. வேறு சிலர் தமது சொல்லுக்கு மதிப்போ நாணயமோ பொது மக்கள் வையாமை கண்டு “ஒரே விலை” என்று வாணிகம் செய்யத் தலைப்பட்டடனர்; ஆயினும் ஒரே விலைக் கேற்ற உயர்ந்த பொருளை அளவு குறையாமல் விற்பதைநெகிழ விட்டனர்; ஒரேவிலை என்பாரிடத்தும் பொது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்கள் சமுதாயத்தில் நம்பிக்கையும் நாணயமும் உண்டு பண்ணாத வாணிகமோ தொழிலோ எதுவும் பலநாள் நீடிக்க இயலாதாகையால்,நிறுவிய ஒரு சில ஆண்டுகளில் மிகப்பல வணிகர் வீழ்ச்சியுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்; போகின்றனர்.

நமதுநாட்டு வணிகர் சொல்லும் சொற்களில் நம்பிக்கை இல்லாது போனபடியாலும், அவர்கள் விற்கும் பொருள்களில் வஞ்சனையும் மோசமும் கலந்துள்ளமையாலும், வாங்கும் பொது மக்கள் எந்தக் கடைக்குச் சென்றாலும், கடைக்காரர் சொல்லும் விலையைக் குறைத்துக் கேட்கும் (பேரம் பேசும்) வழக்கமும், அவர்தரும் பொருளின் தன்மையிலும் அளவிலும் ஐயப்படும் வழக்கமும் இயல்பாய் உள்ளன. இதனால் நமது நாட்டின் பெயரும் மதிப்பும் கெடுவதுகண்டே நமது அரசியலார் வெளிநாடு செல்லும் நமது நாட்டவர்க்குச் சில அறிவுரைகளை அச்சடித்துத் தருகின்றார்கள். அவற்றில் ஒன்று: “நீங்கள் வேறு நாடுகளில் கடைக்குச் சென்றால், வாங்கவிரும்பும் பொருளுக்கு என்ன விலை சொல்லப்படுகிறதோ, அதை அப்படியே கொடுத்துவிடவேண்டும்; பேரம் பேசக்கூடாது” என்பது. சென்ற சில ஆண்டுகட்குமுன் நமது தென்னாட்டிலிருந்து அமெரிக்கநாட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், ஒருகடையில் ஒரு பொருளின் விலையைக் கடைக்காரர் சொன்ன விலைக்குக் குறைவாகக் கேட்டாரென்பதற்காக அக்கடைமுதல்வர் அவர்மேல் “மானநட்ட வழக்குத்தொடுத்த” செய்தி நாடறிந்த தொன்று. அதனால் நமது நாட்டு வாணிகத்தின் மானம் “கப்பலேறி விட்டது.” இப்படியே மிளகுப் பொதியில் வேறு பொருள் கலந்தும், புளியில் மண்ணைக் கலந்தும் நமதுநாட்டு வாணிகம் நமது நாட்டின் புகழுக்கும் பெருமைக்கும் பொல்லாத பழியும் வசையும் கொண்டு வந்ததைச் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்பது ஒரு மாகாணம்; அங்கே சிகாகோ என்றெரு பெரிய நகரம் உளது. அந்நகரத்தில் ஒரு வாணிக நிலையம் சிறப்புடன் தொடங்கி வாணிகம் புரிந்துவந்தது. பலசெல்வர்கள் அதற்குப் பங்காளிகளாக இருந்தனர். சில ஆண்டு கட்குப் பின் அதன் வாணிகத்தில் ஏதோ ஒரு குறையுண்டாக, அவ்வாணிக நிலையம் பெரு நட்டத்துக்கு உள்ளாகி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. பங்காளிகளுக்கு மனவேதனை மிகுந்தது. “முதலிலார்க்கு ஊதியம் இல்லை” என்றாற்போல முதலுக்கே கேடு தோன்றத் தலைப்பட்டது. அப்போது அதன் பங்காளிகளில் ஒருவரான ஹர்பார்ட் டெயிலர் (Herbart Teylor) என்பவர் தலைமையில் அதனை ஒப்படைத்தனர். அப்போது அவர் வேறோரிடத்தில் மிக்க வருவாயுள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தார், ஆயினும் அவர் அதனைத்துறந்து விட்டு இந்த வணிக நிலையத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டார்.

டெயிலர் (H.Teylor) முதல்வராய் சிறிது காலம் அதன் நடை முறைகளை நன்கு ஆராய்ந்தார். தொழிலாளிகளின் சொற்களையும் செயல்களையும் ஊன்றி நோக்கினார். விற்கப்படும் பொருள்களின் நலம் தீங்குகளை நன்றாகப் பார்வையிட்டார். வாணிகத்தின் மதிப்புக்கும் நாணயத்துக்கும் மாசுஉண்டாக்கிய காரணங்களைக் கண்டார்; அவற்றைப் போக்கும் துறையில் அவர் கருத்து ஆழ்ந்து நின்றது. முடிவில் அவர் மாசு துடைத்து மதிப்பை உயர்த்திப் பொதுமக்கள் மனத்தில் நம்பிக்கை உண்டுபண்ணுதற்கென்று மறக்கலாகா மத்திரங்கள் நான்கு கண்டு பிடித்தார். அவற்றைப் பின்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் “உபதேசித்து” மறவாமல் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். தொழிலாளரின் மனதில் வேரூன்றிய “மந்திரம்”, விரைவில் செயல்பட்டது. சிறிது காலத்திற்குள் அவரது வாணிக நிலையத்தின் புகழ் காட்டுத் தீப்போல் எங்கும் பரவிற்று; வாணிகம் பெருகிற்று; ஊதியம் மிகுந்தது; விழும் நிலையிலிருந்த நிலையம் 20000 டாலர் வருவாயுள்ள பெரு வாணிகமாய் இன்று பிறங்கியுளது. மக்கள் அனைவருக்கும் அதன்பால் மிக்க நம்பிக்கையும் நன்மதிப்பும் உண்டாகவே, இப்போது யாவரும் பாராட்டும் பெருமை பெற்று விளங்குகிறது.

அப்படியானால் அந்த “மந்திரம்” யாது என அறிய வேண்டு மன்றோ? அதனை அவர் ரோட்டரி யென்னும் சுழல்கழகத்தின் வாயிலாக உலக மக்கள் அறிந்து பயன்படுமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

1.  யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ கடைக்கோ வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், அப்பொருள் இருக்கு மானால், அதை ஆராய்ந்து, “இது உண்மையான பொருள்தானா?” என்று முதலில் பார்க்கவேண்டும். இது தான் முதல் மந்திரம், போலியாகவோ மோசமானதாகவோ அந்தப் பொருள் இருக்கக் கூடாது, உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்கவேண்டும்.

2.  ஒரு பொருளின் விலையைச் சொல்லி வாங்கும்போது நாம் வாங்கும் விலை நேர்மையானதா? என்று காணவேண்டும். இஃது இரண்டாவது மந்திரம். நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும் மக்கள் மனதில் அருவருப்பை உண்டாக்கும்; அதனால் வாணிகம் தடைப்பட்டுச் சீரழியும்.

3.  நாம் இப்படிச் சொல்லுவதாலும் செய்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா? என்று ஆய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம். நம்பிக்கையால் வாணிகம் பெருகும்; நட்பினால் அது செழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றிச் சிறக்கும்.

4.  நமது இந்தச் செய்கையால் எல்லோர்க்கும் நன்மை விளையுமா? என்று நோக்குவது நான்காவது மந்திரம். பிறர்க்கு நன்மை செய்வது குறித்தே வாணிகத் தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருள்களை அவரவரும் தாமே தேடிக்கொள்வது எளிதில் நடக்கக்கூடியதன்று. ஒருவர் உண்டு பண்ண, உண்டு பண்ணிய பொருள்களை ஒருவர் ஓரிடத்தே கொண்டு சேர்த்துத் தொகுக்க, ஒருவர் அவற்றைப் பலருக்கும் வகுக்க, ஒருவர் எடுத்து விற்க, இப்படிப் பலரும் பலவகையில் உழைக்க வேண்டும். நமது செயலால் வாங்குபவரும் விளைவிப்பரும் இடையில் பல நிலைகளில் வேலை செய்பவரும் யாவரும் நன்மை பெறவேண்டும். மேலும், தேவைப்பட்டு வாங்குவோருள்ளும் ஏழை எளியவர், சிறியவர் முதியவர், தெரிந்தவர் தெரியாதவர் யாவரும் இதனால் நன்மையடைய வேண்டும். தேவைப் பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால் பெறுகின்ற மக்கள் மனதில் அமைதியும் இன்பமும் உண்டாகும். இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளைச் சிறந்த நிலையில் பெற்று அமைதியாகவும் இன்பமாகவும் மனநிறைவோடும் வாழுமாறு தன் செயலை நாணயமாகவும் ஒழுங்காகவும் செய்வது தான் உண்மையான வாணிகம்; இது பற்றியே, பொதுமக்கட்குச் செய்யும் தொண்டுகளில் தலைசிறந்தது வாணிகம் என அறிஞர் கூறுகின்றனர்.

இந்த மறக்கலாகா மந்திரம் உரிமைகொண்டு வாழும் உலகில் முன்னேறிய நாடுகளில் வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பதால், அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்றுத் திகழ்கின்றன. நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்கட்குச் செய்யும் பெரிய தொண்டு என்பதை அறிய முடியாத பேதைகளல்லர்; அதனால் அவர்கள் இந்த “நால்வகை மந்திரங்களையும்” கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவார்களானால் சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல நமது நாடும் பொருளும் புகழும் பூத்துப் பொன்னாடாய்ப் பொற்புமிகும்.

வளர்க வாணிகம்! வாழ்க தமிழகம்!

சுந்தரகாண்டம் முதற்பகுதி(மாதிரிப்பதிப்பு) மதிப்புரை


(கம்பர் பாடிய இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் உள்ள படலங்களுள் முதல் ஐந்து படலங்களைத் தொகுத்து மாதிரிப் பதிப்பாக வெளிவந்திருக்கும் இந்த நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழா மலர்; இதனை அண்ணாமலைப் பல்கலைக் கழகம், துணை வேந்தராய் முன்னாள் இருந்த திரு. C.P. இராமசாமி ஐயர் அவர்களின் ஆங்கில முன்னுரையும் அவர்க்கு உதவியாய் இருந்த திரு. இராமநாதபிள்ளையவர்களின் தமிழ் முன்னுரையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது விற்பனைக்குரிய தன்மையில் விலை குறிக்கப்படவில்லை போலும்.)

இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் தமிழில் தோன்றிய பெருங்காப்பிய நூல்களில் கம்பரது இராமாயணம் தலைசிறந்தது. அஃது ஏழு காண்டங்களையுடையது; எனினும் முதல் ஆறு காண்டங்களே கம்பர் பாடியவை என்ற கருத்துத் தமிழகத்தில் நன்கு வேரூன்றியுளது. ஏழாவதாகிய உத்தரகாண்டம் கம்பர் செய்தது அன்று என்றும்; ஒட்டக்கூத்தர் பாடியது என்றும் ஒரு கருத்து, கம்பரும் ஒட்டக் கூத்தரும் என்ற தலைப்பில் பிற்காலத்தார் புனைந்து விட்ட ஆதாரமற்ற பொய்க்கரைகளை அடிப்படையாகக் கொண்டு நிலவுகிறது.

கம்பராமாயணம் மூலம் மட்டில் சென்ற எழுபது ஆண்டுகளில் பல அறிஞர்களால் பல வேறு சமயங்களில் அச்சிட்டு வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. இவற்றின் பொதுவாக அச்சுத் தொழிலிலும் கையெழுத்து வகையிலும் எத்தனை வகையான பிழைகள் செய்யப் படுமோ அத்தனையும் ஒருங்கே காணத்தக்க வகையில் இவ்வெளியீடுகள் இருந்து வந்தன. இப்போது கடைத்தெருக்களில் கம்பராமாயண மூலமே கிடைப்பது அரிதாய் விட்டது.

சென்ற சில பல ஆண்டுகளாகக் கம்பராமாயணத்தைப் படிப்பதிலும் ஆராய்வதிலும் தமிழ்மக்களிடையே பேரூக்கம் எழுந்து நல்ல பயன் விளைத்து வருகிறது. அதன் பயனாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நாட்டில் கிடைக்கப் பெறும் ஓலைச்சுவடிகளையும் அச்சுப்படிகளையும் கொண்டு பாடவேறு பாடகளை ஆராய்ந்து மிகச்சிறந்தமுறையில் வெளியிடுதற்கு முன்வந்துள்ளது. தமிழகத்தின் நடுநாயகமாய் விளங்கும் தில்லையில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பல்கலைக் கழகமெனப் பாராட்டப்படும் தகுதியும் பணியும் உடையதாகையால், இந்துப் பெருங் காப்பியத்தை நன்கு ஆராய்ந்து வெளியிடுவது பெரிதும் பொருத்தமும் சிறப்புமாகும். அது பற்றித் தமிழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு நன்றி செலுத்தப் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. இதனைப் பல்கலைக்கழகம் வெளியிடுதற்குக் காரண முதல்வராயிருந்தவர் அதன் துணைவேந்தராய் விளங்கிய திரு. ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களாவர். அவர்களுடைய இந்த அரும்பணியைத் தமிழகம் ஒருகாலும் மறவாது. இதற்கு ஆதரவளித்த தமிழ்ப் பெருமகனார் ராஜா. சர்.முத்தையா செட்டியார் அவர்கட்கும் பெரு நன்கொடை வழங்கிச் சிறப்பித்த திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தி தம்பிரான் சுவாமிகள் அவர்கட்கும் இன்றைய தமிழ் மக்களின் நன்றி பெரிதும் உரியதாகும்.

இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழா மலராக வெளி வந்திருப்பது கம்ப ராமாணத்துச் சுந்தரகாண்டத்தின் முதற்பகுதியின் மாதிரிப் பதிப்பு, இதனை வெளியிடு முகத்தால் தமிழகத்து அறிஞர்களை இதன்கண் கருத்தைச் செலுத்தி இவ்வெளியீடு சிறந்தமுறையில் அமைவதற்கேற்ற திருத்தங்களை வழங்குமாறு பதிப்பாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இம் மாதிரிப் பதிப்பின் முன்னுரை, கம்பராமாயணத்துக்கு இராமாவதாரம் எனக் கம்பர் பெயரிட்டதிறமும், அவதார மென்பதன் பொருள் விளக்கமும் இராமாவதாரத்தின் அமைப்பும் இராமாவதார நூலாசிரியரான கம்பரது வரலாற்றுக் குறிப்பும் அவர் வாழ்ந்த காலமும் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இந்நூற்கள் பல காண்டங்கள் இருப்ப, சுந்தரகாண்டத்தை முதற்கண் வரைந்து கொண்டதற்குக் காரணம், “உலகநூன் முறையாலும் அறிவுனூன் முறையாலும் பல்வேறு உறுதிப் பொருள்களை நுவலுதலால் சுந்தரகாண்டம் மற்றைக்காண்டங்களிலும் சிறப்புடைத்து என்பது” என்றும், “சுந்தர காண்டம் பல்லோராலும் சிறப்பாகப் போற்றிப் பாராயணம் செய்யப்படுதல் உலகம் அறிந்த தொன்று” என்றும் இப் பதிப்பின் முன்னுரை எடுத்து மொழிகின்றது.

சுந்தரகாண்டத்தின் முதற்பகுதியாகிய இம் மாதிரி பதிப்பில் முதல் ஐந்து படலங்களே எடுத்துக் கொள்ளப்பட்டன.

சுந்தரகாண்டம் நுதலிய பொருளும் படலந்தோறும் படலம் நுதலிய பொருளும் முறையே தொடக்கத்தில் தந்திருப்பதும் பாட்டுக்களின் பொருளைப் படிப்பவர் இனிது உணர்ந்து கொள்ளுமாறு அருஞ்சொற் றொடர்கட்கப் பொருளும், வேண்டுமிடங்களில் வினை முடிபும், சிறிது விரிவாகத் தொடர்க்கருத்தும் எழுதியிருப்பதும் இப் பதிப்புக்கு மிக்க அழகு தருகின்றன. முடிவில் ஒவ்வொரு பாட்டிலும் காணப்பட்ட பாட வேறுபாடுகள் கண்ணும் கருத்துமாய் ஆராய்ந்து காட்டப்பட்டிருப்பது பதிப்பாசிரியர்களின் உழைப்பின் பெருமையை உலகறியச் செய்கின்றது.

இந் நூற்பதிப்பை அச்சிடும் வகையில் மாசுமறுவின்றிக் கண் கவரும் வகையில் அச்சிட்டுத் தந்தவர்களின் திறம் கண்டு வியந்து பணிகொண்ட பல்கலைக் கழகத்தின் செயல்வன்மை பெரிதும் பாராட்டற்குரிய தொன்று. இத்தகைய அச்சு வேலைப்பாடு இது காறும் வெளிவந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடுகளுள் எதற்கும் வாய்த்ததில்லை.

இம் மாதிரிப்பதிப்பு இம்முறையிலே நடைபெறுவதுதான் யாவரும் விரும்புவது. எனினும், ஒவ்வொரு பாட்டையும் சந்தி பிரிக்காமல் சீர் முதலிய யாப்பமை குன்றாத வகையில் ஒரு முறையும், “சந்தி பிரித்துப் பொருள் இயைபிற் கேற்பச் சீர் வரையறை நோக்காது சொற்களைக் கூட்டியும், தொடர்மொழிக் குறியீடுகளை ஆங்காங்கு இட்டும்” ஒரு முறையுமாக இரண்டுமுறை அச்சிடுவது வேண்டத் தக்கதன்று. யாதேனும் ஒன்றைக் கடைப் பிடிப்பது நல்லது; இரண்டனுள் யாப்பமைதி குன்றாமல் முதற்கண் பதித்த முறையே பல்கலைக் கழகப்பதிப்புக்கு மாண்பு தருவதாகும். சீர்களைச் சிதைத்து யாப்பமைதி கெடுத்து எழுத்தெழுத்தாகப் பிரித்து அச்சிடுவது கம்பருடைய பாட்டிசையைக் கேட்க விரும்பாதார் செய்யவிரும்பும் செய்யுட் கொலையாம் என்பதை வருத்தத்தோடு தெரிவிப்பதுடன், இக் கொலை வினையைப் பல்கலைக் கழகம் செய்தல் அறமன்றென்பதையும் வற்புறுத்த விரும்புகிறோம்.

பல்லாயிரக்கணக்கில் உள்ள கம்பராமாயணப் பாட்டுக்கட்கு உரைக்குறிப்பு எழுதிச் சேர்ப்பது இக்காலத்துக்கு வேண்டுவ தொன்றே. இத்தகைய பெருங்காப்பியத்துக்குப் பள்ளிமாணவர் பாடங்கட்கு எழுதப்படும் உரைபோலப் பதவுரை பொழிப்புரை எழுதிச் சேர்ப்பதும் மிக விரிந்த குறிப்புரை எழுதிச் சேர்ப்பதும் இப்பதிப்புக்களை எல்லோரும் வாங்கிப்படிக்கும் அத்துணை எளிய நிலைக்குக் கொண்டுசெல்லா. “சீவகசிந்தாமணி என்ற பெருங்காப் பியத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதிக்காட்டியிருக்கும் உரை முறை தான் கம்பராமாயணம் கந்தபுராணம் பாரதம் முதலிய பொருள் காப்பியங்கட்கு எழுதத்தக்க உரை முறை” என்று காலஞ்சென்ற டாக்டர் திரு.உ.வே. சாமிநாதையர் முதல் அண்மையில் நம்மிடை இருந்து மறைந்த திரு. பண்டிதமணி மு.கதிரேசன்செட்டியார் உள்ளிட்ட அறிஞர் பலரும் கூறிச்சென்றனர். இனி வரும் பதிப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய உரைநெறி மேற்கொள்ளப்படுமாயின், யாவரும் எளிதில் வாங்கிப்படித்துப் பயன் பெறத்தக்க சிறப்பு இப்பதிப்புக்கட்கு உண்டாகும் என்பது உண்மை.

இனி, கம்பருடைய வரலாறு கூறுமிடத்து இவரைப் பற்றி நாட்டில் வழங்கும் பல்வேறு குறிப்புக்களையும் தொகுத்துக் காட்டிப் பொய்யும் புனைந்துரையு மாவனவற்றைக் களைந்து எறிதலும் கம்பருடைய காலநிலை பற்றிய பலவேறு குறிப்புக் களையும் எடுத்தோதி முடிவு காட்டுதலும் இப் பதிப்புக்களின் முன்னுரையில் இடம் பெறுவது சிறப்பு.

இறுதியில் காட்டப் பெற்றிருக்கும் பாடவேறுபாடுகள் அனைத்தையும் அவ்வப் பாட்டின் அடிக்குறிப்பில் காட்டுவதுதான் படிப்போர் உண்மை யுணர்தற்கு அமைந்த முறை; அப்பொழுதும் பொருள் வேறுபாடும் சொல் வேறுபாடும் பொருந்திய பாடலகளை மாத்திரம் மேற்கொண்டு ஏடு படித்தோராலும் ஏடு எழுதினோராலும் பெயர்த்துக் காகிதத்தில் எழுதினோராலும் ஆக்கப்பட்ட பிழைப் பாடல்களை ஆங்காங்கே கையுதிர்த் தொழிதலே செய்யத்தக்கதாகும். இதற்கு டாக்டர் உ.வே.சா.ஐயர் வெளியிட்டுள்ள பாலகாண்டம் நேரிய வழிகாட்டியாகும்.

வாழ் நாள்


உலகின்கண் தோன்றி, நின்று, மடியும், உயிர்கள் உடலோடு தோன்றி நிலவுதலைக் காண்பவர், “இவ்வுயிர்கள் வாழ்கின்றன,” என்றும், தான் நின்ற உடம்பின் நீங்கி உயிர்பிரிந்த வழி, “இவ்வுயிர் கள் வாழ்நாள் முடிந்தன,” என்றும் வழங்குவர். இவ்வழக்கம், “வாழ்நாள்” என்னும் தொடர்க்கு “உயிர் உடலோடு கூடியுறையும் காலம்” என்னும் பொருளைத் தருகின்றது. உடலோடு கூடியுறையும் உயிர், அவ்வுடலைத் துணைகொண்டு வினைசெய்யுமிடத்து நுகரும் இன்பம், துன்பம் என்னும் இரண்டனுள் இன்பமே மிக்கு அவ்வுயிரால் நுகரப்படும்போது, “இவ்வுயிரின் வாழ்வே வாழ் வாகும்” எனச் சிறப்பித்தும், ஏனையது மிக்க வழி, “இவ்வுயிரின் வாழ்வு வாழ்வாகாது” என்றும் கூறும். கருத்துப் பற்றி, “முப்பது வருஷம் வாழ்ந்தவரும், நிகழ்வு முதலிய வேறுபாடே பற்றிக் காலம் பலவென்றல் சாலாதெனின்! - அற்றன்று; ஒருவன் தானே தந்தையை நோக்கி மகனும், மகனை நோக்கித் தந்தையுமாதலும், நெடியனை நோக்கிக் குறியனும், குறியனை நோக்கி நெடியனுமாதல்போல, பலவேறு வகைப்பட்ட பொருள்களை நோக்கிப் பலவேறு வகைப்பட வழங்கும் இறப்பு முதலியன மாறுபட்ட தன்மைய வல்லவாகலின், அவற்றை நோக்கிக் காலம் ஒன்றேயாயினும், ஒரு குடத்தின் கண்ணவாகிய இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பன மாறுபட்ட தன்மையவாதல் காட்சிப் புலனாகலின், அவற்றைநோக்கி காலம் பலவாதல் சாலும் என்க,” என்று விரித்துரைத்தருளினர். இவ் விரிவுரையாற் காலம் உள்ளதே என்பதும், அது பலவாமென்பதும் பெறப்பட்டனவாம்.

ஒருபொருள் மற்றொரு பொருளொடு தொகுமிடத்து, அவ்விரண்டற்கும் தொடர்பொன்றும் இல்லையேல் தொகுதல் ஆகா தென்பது யாவரும் அறிந்தது. அப்பொருளிடமாக நிகழும் சொற்களும் அன்னவாகலின், வாழ்நாள் என்ற தொகைச்சொற்கண் வாழ்தல் என்ற வினையும், நாள் என்னும் பெயரும்தொக்கு நிற்றற்குரிய தொடர்புவேண்டும். அத்தொடர்புகள் பலவாயினும், ஆசிரியர் தொல்காப்பியனார் வினைச்சொல் பெயர்ச்சொல் லொடுதொக்கும், எச்சமாய் நின்று பெயர்கொண்டும் முடிதற்கு “நிலனும் பொருளும் காலமும் கருவியும், வினை முதற் கிளவியும் வினையுமுளப்பட, அவ்வறு பொருட்கும் ஓரன்னவுரிமைய” (தொல். சொல். 234) என்னும் சூத்திரத்து நிலம் முதலியன தொடர்புடைய என்றனராகலின், இத்தொகைச் சொல்லினும் வாழ்தல் வினைக்குரிய காலம் முடிக்குஞ் சொல்லாய், வினையொடு தொக்கு ஒரு சொல்லாய் நிற்பதாயிற்று. ஆகலின், வினைக்கும் காலத்துக்கும் தொடர்புண்மையும் பெற்றாம்.

உயிர்கள் உணருந் தன்மையுடையவாகலின் வினை முதலா தற்குரியனவாகும். இன்ப துன்பங்களை யுணர்தலும் நுகர்தலுமே உயிருணர்வின் பயனாகலின், அவ்வுயிர்கள் அவற்றைப் பெறுதற் குரிய வினைகட்கு வினைமுதலாகின்றன. உயிர்கள் உடலோடு கூடுதலே வினைப்பயனாகிய இன்பதுன்பங்களை நுகர் தற்பொருட் டேயாகலின், உடலோடு ஒன்றிய உயிர்தோன்றும் பொழுதே வினையும் உடன் தோன்றுகின்றது. அங்ஙனம் தோன்றும் வினைக்கு அது வினைமுதலாய், அவ்வினையை நிகழ்த்துமிடத்து அதன் பயன் தோன்றாதொழிதல் ஒருகாலுமில்லை. ஆதலால், தான் நுகர்தற் பாலதாகிய வினைப்பயன் குறித்து உயிர் வினை முதலாதலும் வினையுளதாதலும் ஒருதலை யென்று கோடல்வேண்டும். அங்கு உளதாகத் துணிந்த வினைமேல் வினைமுதலாகிய உயிர்கள் சென்று அதனைச் செய்தற்குரிய நெறியினைச் சமய நூல்கள் கலாதத்துவம் என்றும் கூறும், உயிர் கட்கு அறிவு, இச்சை, தொழில் என மூன்று நிலையுண்டென்றும், அவ்வுயிர்கள் வினைப்பயன் நுகர்தல் கருதித் தொழின் மேற் செல்லுமாறு அத்தொழில் நிலையை விளக்குவது இக்கலாதத்துவமாகும் என்றும் கூறுப. வினை, தொழில், செய்கையென்பன ஒரு பொருளன.

இனி, கலையால் விளக்கமுற்று வினைபுரிவான் வினை முதலாகிய உயிர்க்கு வேண்டுவது வினைப்பயனேயன்றி வேறு ஒன்றும் அன்று. அப்பயனை விளைக்கும் வினை, அதற்குக் காரண மாயினும், அதனை வரையறைப்படுத்து, உயிரை நுகர்விக்கு மிடத்து, காலம் பெருந்தொடர்பு பெறுகின்றது. இப்பெருந் தொடர்பு தானும் துணைக்காரணத் தொடர்பேயாம். ஒருவன் தன் நுகர்ச்சிக்கென ஈட்டிய பொருள் மலையெனக் குவிந்தகாலையும், ஒருநாளை நுகர்ச்சி, இருநாளை நுகர்ச்சியெனக் காலத்தால் வரையறை செய்யப்பட்டு அந்நுகர்பொருள் கழிதலை நாடோறும் நாம் காணுதலின், பயனாகிய நுகர்பொருளைக் காலம் நுகர்விக்கும் துணைக்காரணமாய் நிற்றல் அறியப்படுகின்றது. அன்றியும், ஒரு வினை தொடங்கியவுடனே பயன் காண்டல் இன்மையின், அது தொடங்கி, நிலவி, முடிதற்கும் காலம் துணை செய்தலின், வினை நிகழ்ச்சிக்கும் காலம் துணைக்காரணமாதல் பெறப்படும். இது பற்றியே, “அருத்திமிகம் கலைகால நியதியுடன் வித்தையராகமிவை அனந்தரான் மாயை தனிலாகும்” எனச் சிவப்பிரகாசம் என்னும், தண்டமிழ் நூலும், “கலாதத்துவம், காலமும் நியதியும் தனக்குத் துணைக்கருவியாகக்கொண்டு, முதற்காரணமாய் நின்று, வித்தை, அராகம் முதலிய தத்துவங்களெல்லாவற்றையும் தன்பால் நின்றும் தோற்றுவிக்கும்,” எனத் தத்துவப் பிரகாசம் என்னும் வடநூலும் ஓதுகின்றன. தொல்காப்பியமென்னும் செந்தமிழ் இலக்கணமும், “வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங்காலைக் காலமொடு தோன்றும்” என்றும், காலமொடு தோன்றாதனபோல் தோன்றும் குறிப்புவினையும் நினையுங்காற் காலமொடு தோன்று மென்பதனை “நினையுங்காலை” என்ற இலேசினால் எய்துவித்து, “அம்முக்காலமும் குறிப்பொடுகொள்ளும், மெய்ந்நிலையுடைய” எனவரும் சூத்திரத்தால் யாப்புறுத்தும் கூறுவதாயிற்று.

இனி, வினைக்கும், வினைப்பயன் நுகர்ச்சிக்கும் துணைக் காரணமாய் நிற்கும் காலம், வினையின், திட்பநுட்பங்கட்கும், வினைப்பயன்களின் பெருமை சிறுமைகட்கும் தக நீண்டும் குறுகியும் நிலவும் என்பது போதரும். ஒரு வினைமுதல் ஈட்டிய வினைப்பயன் பெரிதாயவழி, அதுதான் நின்ற உடலோடு நெடிதுநின்று அதனைத் துய்த்துத் தீரும்; அப்பயன் கழியுமளவும் அதனை வரையறை செய்து அவ்வுயிரை நுகர்வித்தல் வேண்டுதலின், அதன் வாழ்நாள் நீடுதல் தானே அமையும். இதனை நினையாது ஓருயிர்க்கு வாழ்நாள் இத்துணை என வகுத்தல் வாய்மையாகாது கழிதல் பெரும்பான்மை.

ஓருயிர் நுகர்தற்குரிய வினைப்பயனும், அதற்குரியவினையும் அவ்வுயிரால் அறியமுடியாமையின், வாழ்நாளை வரையறுத்துக் கூறுதல் கூடாமையின்பாற் படுவதாயிற்று. முற்றத்துறந்த முனிவரரும், கற்றுத் துறைபோகிய காட்சியரும் இந்நெறியில் மயங்குகின்றனர். நெடிது வாழலாமெனக் கருதுமோருயிர், கடிதுபொழுதில் உடல் விட்டேகுதல் நாடோறும் நிகழும் நிகழ்ச்சியாயிற்று. இதனைக் கண்ணுற்றே நம் வன்றொண்டப் பெருந்தகையார்,

“ஒன்றலா வுயிர்வாழ்க்கையை நினைந்திட்
டுடல்தளர்ந்தருமா நிதியியற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யெனவே நினையுளமே”

என்றும், திருவாரூர்ச் செல்வனார்,

“தந்தையார் தாயாருடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தாமாரே
வந்தவாறெங்ஙனே போமாறேதோ
மாயமாம் இதற்கேது மகிழவேண்டா”

என்றும், சீகாழிப் பிள்ளையார்,

“மற்றிவ் வாழ்க்கை மெய்யெனும்
மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி
பணிந்துவந் தெழுமினோ” (கோடிகா. 8) என்றும்

கூறிப்போயினர்.

இனி, இக்காலத்தையும் ஒருவாறு துணிந்து கூறுதலுமுண்டு. இத்துணிபிற்குரிய பொருள்கள் திண்ணியவாய்க் கிடைத்தில வாயினும், உயிர்களுட் பல நெடிது வாழ்தலைக்கண்டு அந்நெடு வாழ்வின் முறையே பிறவுயிரும் வாழலாம் என எதிர்நோக்கிக் கூறுவதேயாம். அளவைகளாலும் பொருந்துமாற்றாலும் பொருள் களையாராய்ந்து கூறிய தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லையென்னும், பெருமை யுடைத்திவ்வுலகு” என்றதையன்றி, வாழ்நாளெல்லையை வரையறுத்துக் கூறிற்றிலர். “வேதநூற் பிராயம் நூறு” என ஓதிய பெரியார் வாய்மொழியினையும், பிறவாழ்க்கை நிலைகளையும் கண்டு மக்களுயிர்க்கு வாழ்நாளெல்லை நூறாண்டாகும் என்ப.

இனி, மேனாட்டார் கருதிக் கூறுவனவற்றை யாராய்வாம்: மக்களுயிருள் ஒன்று உலகிற்றோன்றித் தானே தன் வாழ்க்கையைத் தொடங்குதற் கெய்துங்காலம் அதற்குரிய வளர்ச்சிக் காலமாகும். அக்காலத்திற்குவேண்டும் யாண்டுகளின் தொகையினை ஆறாதல் ஏழாதல்கொண்டு பெருக்கியவழியெய்தும்யாண்டுகளின் தொகை அவ்வுயிர் உடலோடுகூடி வாழுங் காலநிலை யென்று ஒரு முடிபு கொண்டு, மேனாட்டறிஞர் பலர் வாழ்நாளெல்லையை வரை யறுக்கப் புகுந்தனர். அவருட்டலையாயவர் பபூன் என்பாராவர்.

அவர், “மக்கள் வளர்ச்சிக்குரிய வாலப்பருவம் பதினான் காண்டுகளாதலின், அவர் தம் வாழ்நாளும் எண்பத்து நான் காண்டாதல் தொண்Qற்றெட்டு யாண்டுகளாதல்வேண்டும்,” என்று கூறினர். அவர் கூற்று, நூறாண்டென்பார் கூற்றோடு நெருங்குதலின், உடன்படற்பாலதாயினும், வளர்ச்சிக் காலமாகிய வாலப்பருவத்துக்கு வகுத்த யாண்டுகள் சாலா. அவ் “வாலப்பருவம்” பதினான்கினும் மிக்க யாண்டுகள் வேண்டி நிற்பதை இன்றும் காணலாம். அன்றியும், மக்களுட் பலர் தொண்ணுற்றெட்டியாண்டு கழிந்த காலையும் கட்டுக்குலையா உடல்வன்மையும், நிறப் பொலிவும் ஒளியும் உடையராய்த் திகழ்வார் உளராகலின், அவ்வரையறை வாழ்நாள் எல்லையாதற் கியைவதன்றாம்.

இவர் கூற்றினால் ஊக்கப்பெற்றெழுந்த பிளாரன்ஸ் என்பார், மக்களுயிரோடு விலங்கினங்களின் உயிரையும்கொண்டு, உயிர்கட் குரிய வாழ்நாளெல்லையை வரையறை செய்யத் துணிந்தார்.

விலங்கினம் வாலப்பருவம் வாழ்நாளெல்லை
ஒட்டகம் 8 ஆண்டு 40 ஆண்டு
குதிரை 5 ” 25 ”
ஆனேறு 4 ” 15,20 ”
அரியேறு 4 ” 15,20 ”
நாய் 2 ” 10,12 ”
மக்கள் 20 ” 100 ”
மிகுதி.

இவற்றை நோக்குமிடத்து, பபூன் என்பார் கூறியதுபோலாது, வளர்ச்சிக்குரிய யாண்டுகள் வாழ்நாளெல்லைக்குவேண்டும் யாண்டுகளுட் சற்றேறக்குறைய ஐந்தனுள் ஒரு பகுதியாமென்பது பெறப்படுகின்றது.

இனி, டேவிட் என்பவர் மக்கட்கு வயது எழுபஃதென்றும், அவருள் உயர்குலமக்கட்கு ஐம்பதும், வணிகர் முதலிய மடியிலா மக்கட்கு ஐம்பத்தைந்தும், உழப்பிற் காழ்த்த உடலுடையார்க்கு ஐந்து தலையிட்ட அறுபஃது என்றும், கைத்தொழிற்சாலையில் உழைக்கும் கருங்கை வினைஞர்க்கு எழுபஃது என்றும் வாழ் நாள் எல்லை வகுப்பர். மற்று, இவர் கூறிய ஆண்டெல்லை, மேலே துணிந்த நூறாண்டெல்லைக்கு முப்பஃது குறைதலும், அவலக் கவலை முதலியவற்றால் தவலா வாழ்வினர் பலர் இவர் கூறிய எல்லையின் மிக்குவாழ்தலுமுண்மையின், பொருந்தாமை எய்துகின்றது.

இனி, ஒரு சாரார் வாழ்வாவது இணைவிழைச்சுப் பெற்று இன்பநுகர்தற்குரிய நிலைமை யென்றும், அதற்குரிய காலமே வாழ்விற்குச் சிறந்த காலமாவது என்றும் கூறுவர். இந்நுண்ணுணர் வில்லார் இன்பத்தோடியைந்த வாழ்வு, இணைவிழைச்சின்பத் தோடியைந்த வாழ்வு இரண்டுநாளைய வாழ்வாயினும் அமையும் என்பர். உயிர்கள் வாழ்க்கைச்சாகாட்டையுகைக்கு மிடத்து, விரையச்செலுத்தலுறின், இளமை, முதுமை முதலிய நிலைவகை யல்லற்பட்டு, ஏனை நிலைக்குரிய வலியும் திறலுமிழந்து, முதிரா முதுமையுற்றுப் பெரும் பிறிதுறுவர் என்பது அறிஞர்துணிபு. இத்துணிபினையுட்கொள்ளாராய், இப்பெற்றியோர், முதுக்குறைவும் இணைவிழைச்சும்பெற்று, முதுமையும், முடிவுநிலையாகிய சாக்காடும் விரையப்பெற்றுக் கழிவர். இது மேலேகூறிய கருங்கை வினைஞர்குழுவில் என்றும் காணப்பெறும் காட்சியாகும். பத்து மூன்றும் கடந்ததும் மகளிர் பருவ அச்சீமாட்டிக்கு வயது நூற்று நாற்பதிற்குக் குறையாது; அவர்க்கு மூன்று முறை பற்கள் விழுந்து முளைத்தன, என்று வரைந்துள்ளார்.

7 வின்னிங்டன் (winnington) நாட்டு ஆல்பர்பரி (alberbury) என்னுமிடத்தில் 1483 ஆம் ஆண்டில் ஜான் பார் என்பாருக்குத் தாமஸ்பார் (thomas parr) என்பவர் பிறந்து எண்பது ஆண்டுகாறும் மண வினையின்றியிருந்து பின், ஜேன் (jane), என்னும் பெண் ணொருத்தியை மணந்து, அவரோடு முப்பத்திரண்டு யாண்டுகள் வாழ்ந்தார். அக்காலவெல்லைக்குள். அப்பெண் இரண்டுமக்களைப் பயந்தாள், அவற்றுள் ஒன்று ஒரு திங்களும், மற்றொன்று சிலயாண்டுகளுமிருந்து, பின்னர் இறந்தொழிந்தன.

பத்துயாண்டுகட்குப்பின், இவர்தம் நூற்றிருபதாம் ஆண்டில் காதரைன் மில்டன் (catharine milton) என்னும் குமரியைக்காதலித்து மணந்து, ஒருமகனைப் பெற்று, தம்நூற்றியைம்பத்திரண்டாமாண்டில் உயிர்துறந்தார். இவர் இறப்பதற்கு இருதிங்களின்முன் அருண்டேல் நாட்டுத்தலைவரான தாமஸ் (thomas, earl of arundale) என்பார் வெஸ்டு மினிஸ்டர் (westminister) என்னுமிடத்திற்குக் கொண்டு போந்தனர். இதனை நோக்க ஆசிரியர் நக்கீரனார் “அறுநான் கிரட்டியிளமை நல்லியாண்டு, ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை” யரைக்கூறியது புனைந்துரையன்மை புலனாம். அங்கு, இவர் பெரும் பாலானகாலத்தை உறங்கியே கழித்தார். அக்காலத்து இவரைக் காணப் போந்த மக்கள் மிகப்பலர்; தாம்தங்கியவிடமும், உண்ட உணவும் தம்முடலுக்கு ஒவ்வாமையின், விரைவில் 1635 ஆம் ஆண்டின் நவம்பர்த்திங்கள் பதினைந்தாம் நாள் விண்ணுலக நெடுவாழ்வை விரும்பியேகினர். இவ்வகைய நீடியவாழ்க்கையர் அரியர் ஆகலின், இவருடல் வெஸ்ட் மினிஸ்டரைச்சார்ந்த இடு காட்டுக் கோட்டத்தே இடப்பெற்றுளது.

8 “யார்க்ஷயர் (yorkshire) நாட்டைச் சேர்ந்துள்ள போல்டன் (bolton) என்னுமிடத்தே என்ரிஜென்கின்ஸ் (henry jenkins) என்னும் பெயருள்ள ஒருவர் இருந்தனர். அக்காலத்தே நீதிமன்றத்தில் நிலவழக்கொன்றின் பொருட்டுச் சான்று பகர்தல் வேண்டி இவர் போந்திருந்தார். இவருடன் அம்மன்றத்தே எண்பது வயது நிரம்பியசான்றோர் இருவர் வந்திருந்தனர். அக்காலை, நீதிபதி, ஹென்ரியை நோக்கி, “ஐயன்மீர், முதுமைமிக்க சான்றோர் இருவர் வேறே உளர் என்பதனையுட்கொண்டு, நீவிர் கூறுவதனை நன்கு நினைந்து கூறுமின்”, என்றனர். என்றார்க்கு இவர், “அறிஞர் பெரும, அவ்விருவரையும் அவர்தம் இளமை யினின்றே யறிந்துளேன்; அவர் பிள்ளைப்பருவத்தே துள்ளி யாடியசெய்கை என்நினைவின்கண்நிற்கின்றது,” என்று இசைத்தனர். அதுகேட்ட நீதிபதி, வியப்புற்று, அவ்விருவரையும் நோக்கினாராக, அவர்தாமும், “அறவோர் தலைவ, இப்பெரியார்யாம் அறிந்தவரே. யாங்கள் பள்ளியிற்பயிலும் போதே, இவர் எம்மிற்பலயாண்டு மூத்துத் தோன்றினர்; எம்மின் மூத்துளயாண்டுகள் இத்துணைய வென்றலும் எங்கட்காகாது,” என்று வலியமொழிந்தனர். இச்செய்தியைக் கூறும் தாங்க்ரைட்ராபின்சன் (tankrite robinson) என்னும் அறிஞரும், “ஹென்ரி ஜான்கின்சனுக்கு ஹென்ரி viii என்னும் இங்கிலாந்து வேந்தனும், பிளாடன் பீல்டு (flodden field) என்னுமிடத்து நிகழ்ந்த போரும் நன்குதெரியும்; அக்காலத்து அவர்க்கு வயது பன்னிரண்டு; இவர் 1670 ஆண்டு டிசம்பர்திங்கள் எட்டாம் நாள் தம் நூற்றி யறுபத்தொன்பதாம் ஆண்டில் எலர்ட்டன் அப்பான்ஸ்வேல் என்னுமிடத்தே தம் இம்மை வாழ்வுநீத்தார்,”

இனி, நம்நாட்டிலும் நீண்ட ஆயுளையுடைய மக்கள் இருந் திருப்பர் என்றதற்கு ஐயமில்லை, எனினும் எடுத்துக் காட்டு தற்குரிய சான்றுகள் கிடைத்தல் அருமையென்று கோடல் வேண்டு மேயன்றி, அப்பெற்றியோர் இருந்திலர் என்று கோடலாகாது. மீசை மயிரின் கருமை குலையாதிருந்த ஜூரன்பார் என்பாரைப்போல யாண்டுபலவாகியும் நரை திரையின்றி உடலுரங்கொண்டிருந்த பிசிராந்தையார், அருநெல்லிக்கனி யுண்டு பலவாண்டுகள் வாழ்ந்த ஒளவையார் முதலியபலரும் உளர் என்று உணர்தல் வேண்டும்.

“இன்றுளேம் நாளையில்லோம்,” “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை,” என்றெல்லாம் கூறியபெரியார் சொற்களின் கருத்தை உணராமல், “நாளைக்கிருப்பது நாமறியோம்” என்றுகூறி மடியுற்று, தாளாண்மை கல்வியறிவுடைமை, ஒப்புரவுடைமை முதலிய நற்செய்கைகளைக் கைவிட்டுத் திரியாது, நாம் நூறாண்டினும் மிக்கயாண்டு வாழ்தல் கூடும் என்னும் உணர்வுடன் வாழ்தலே யாவரும் வேண்டுவதாகும். ஆகுங்கால் வினைப்பயன்களின் பெருமை சிறுமைகட்கேற்பக் காலம் நீடலும் குறுகலும் உண்டென்பதனை யுட்கொண்டு, அதனால் பயன் நுகர்ச்சியை நெடிது துய்த்து, அத்துய்ப்புக்குத் துணையாகும் காலத்தை நல்வினையாக்கத்தே செலவிடுதல் அயராவின்பம் அடைதற்குரிய ஆக்கமாம் என்றறிந்தமைதல் வேண்டும்.

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.”

தமிழ்ப் பொழில்

கருவிலே வாய்த்த திரு


உலகில் மக்கள் பலவேறுவகையான செயல்களைச் செய் கின்றனர். ஒருசிலர் தாம் செய்ய வேண்டியவற்றைப் பிறர்துணை யன்றி தாமாகவே நினைந்து செய்கின்றனர்; ஒருசிலர், பிறர்துணை கொண்டு செய்கின்றனர்; வேறுசிலர் பிறர் ஏவல் வழிநின்று, அவர் காட்டக் கண்டு செய்கின்றனர். செய்வோர் திறம் இதுவாக, செயப்படு பொருள்கள், ஒருசில யாவராலும் மதிக்கத்தகுவனவாகவும், ஒருசில வியக்கத் தகுவனவாகவும், வேறு சிலவியப்பும் மதிப்பும் இலவாகவும் இருக்கின்றன. யாவராலும் வியக்கத்தகும் செயப்படு பொருள்கள் தாமும், பிறர் துணையின்றி ஒருவரால் தனிமையிற் செய்யப்படின், செய்தவரது அறிவுமாண்பும் கருவிமாண்பும் பிறவும் வியப்போரால் நினைத்துப் பாராட்டப் படுகின்றன. இவ்வாறு பாராட்டப்பெறும் தக்கோரது செயலின் சிறப்பியல்பினை ஆராய்ந்து உண்மை காண முயல்வோர் சிலரே; அத் தக்கோரது தகவு கருவிலேயே வாய்த்ததிரு என்று கூறியமைவோரோ பலர். உண்மைகாணும் அறிவுரம் பெற்றாரும் உயர்ந்தோர் ஒருவர்பால், நிகழும் வினையாற் பிறக்கும் செயப்படுபொருள்கள், உயர்ந்த தோர் பலரும் உவந்துபாராட்டக் தக்க நிலையில் நிற்ப. அவற்றைகாணுங்கால், அவர்பால் அச்செயற்குறிய தளர்ச்சியும், சோர்வும் புலனாகாமை கண்ட விடத்து, “இன்னோரன்னவற்றைச் செய்வது இவர்கட்கு எளிதன்று. இச் செயல்வன்மை இவர்கட்குக் “கருவிலேவாய்த்த திரு,” என்கின்றனர். எனவே, செயற்கரிய செய்யும் பெரியார்பால், அரிய செய்கை யொன்று நிகழ்ந்த விடத்து, செயலருமை காணும் சிறப்புடைய மக்கள், அச்செயலின் சிறப்புத் தோன்ற, “கருவிலே வாய்த்த திரு” என்ற தொடரைச் சிறக்கக் கூறிப்பாராட்டுவர் என்பது விளங்குகிறது.

கருவிலே வாய்த்ததிரு என்ற தொடருள், கருவென்பது பிறப்பையும், திருவென்பது சிறப்பையும் சுட்டிநிற்கின்றன. கருவாய்க்கிடந்து உருவு சிறந்து பிறவி பெறுதல் உயிர்கட்கு இயல்பு. ஆதலால், இத்தொடரும் உயிருடைப் பொருளையே சுட்டி வருதலுடையதாகும். மேலும், திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை யென்பவாகலின், ஓருயிரிடத்து கண்டாரால் விரும்பிப் பாராட்டப்பெறும் செயற் சிறப்புத் தோன்றினும், அதுதானும், எல்லாவுயிர்க்கும் பொதுவாய். அமையாது. சிலவற்றின் பால் சிறப்பாய் அமைந்து தோன்றினும், அச்சிறப்பும் அமைதியும் ஒருங்க விளங்குதற்கு, கருவிலே வாய்த்த திரு என்ற சொற்றொடர் அழகுற வழங்கப் பெறும்.
மனிதவுயிர் மண்ணிற் றோன்றிப் பலநாள் கழித்த பிறகே தனக்குறியவற்றைத் தானே தேடிச் செய்வன செய்யும் திறம் பெறுகிறது. ஏனைமாக்களுட் சிலவும், புள்ளினத்துப் பலவும் பிறக்கும்போதே, தாம் வாழும் இடம், காலம் முதலியவற்றின் நிலைக்கேற்ப, வினையறிவும், வினையினை ஆற்றற்குறிய திட்பமும் பெற்றுத் திருவுடையவாய் விளங்குகின்றன. ஏனைவுயிர்களை நோக்கப் புள்ளுயிர்கள், சில இயல்புகளைக் கருவிலேயே திருவுறப் பெற்றிருத்தலை நாம் நாளும் காணலாம். இவற்றின் திருவுடைமை யினை ஆராய்ந்து கண்ட மில்ட்டன் மெக்காயி (milton mackaye) என்னும் அமெரிக்க நாட்டு அறிஞர் கூறிய செய்தியினை ஈண்டுத் தமிழில் எழுதுகின்றேன்.

ஆஸ்திரேலியாவில் ஒருவகை வான் கோழிகள் வாழ்கின்றன. அவற்றைத் தர்மா மீட்டர் (Thermometer) பறவை யென்று அங் குள்ளவர் கூறுகின்றனர். அவை ஆணும் பெண்ணுமாகக் கூடிவாழும் அமைதியுடையவாகும். அவை கூடமைக்கும் முறை மிக அழகிது. அவற்றுட் பெண்கோழி முட்டையிடுதற்குரிய காலம் நெருங்குகையில், ஞாயிற்றின் வெயில் உறைப்பதும், மணற்பாங்கானதுமான ஓர் இடத்தைக் கண்டு, ஓரடியாழமுள்ள குழியொன்றைச் செய்யும், பின்பு, அதனுள் சருகும் புல்லும் கொணர்ந்து பெய்து, அவை வெயிலாலும் மழையாலும் உறைபட்டு மட்குவிக்கும், அவை மட்கத்தொடங்குங்கால், அக்குழியின்மேல் தன் கூட்டினைக் கட்டத்தொடங்கும் சேவற்கோழியும், அச்செயற்குத் தன்னின் இயன்ற உதவியினைச் செய்கின்றது.

இக் கோழி யமைக்கும் கூடு மூன்றடி உயரம் பெற்று வட்டமாக சமைந்து நிற்கிறது. இதன் குறுக்களவு (Diameter) நான்கடியாகும். கூட்டின்புறம் குச்சிகளாலும் சிறுசிறு கொம்பு களாலும் சன்னல் பின்னலாகத் தொடுக்கப்பட்டுளது. மேலும், இது, மிக்க வன்மை யுடையதாகலின், காற்றிற்கும் மழைக்கும் பிறவற்றிற்கும் சிறிதும் தளர்வுறுவதும் இல்லை. இத்துணை வன்மை யுறக் கட்டப் பெற்ற இக்கூடு முடிவு பெற்றதும், இப்பறவைகள், இதன்கண் வந்து தங்குவதில்லை. ஆறுநாட்களோ, ஒன்பதுநாட்களோ கழிந்தபிறகுதான், இக்கூட்டிற்குவரும்.

வரும்போது பெண்கோழி, புறத்தே வழியொன்று செய்து கூட்டின் உட்புகுந்து முட்டை யொன்றையிடும். பின்பு, அதனை மூடி விட்டுச் சேவலொடு நீங்கிவிடும்; மறுபடியும் மூன்று நாள் கழித்தே கூடுநோக்கி வரும். வரும்போதும், அது, முன்போலவே குழிசெய்து, உட்புகுந்து ஒரே முட்டை யிட்டுவிட்டு நீங்கிவிடும். இவ்வாறு அது, மூன்று நாட்களோ, நான்கு நாட்களோ, இடை யிட்டு இடையிட்டு, பதினான்கு முட்டைகளை இடும். அதற்குமேல், பெண்கோழி முட்டையிடுவதாகத் தெரியவில்லை.

இவ்வாறு பதினான்கு முட்டைகளும் இடப்பட்டவுடன், அக்கோழி, அக்கூட்டிற்குள் நுழையாமல், புறத்தே தான் செய்த வழியையும் மூடிவிடுகிறது. அதனால், கூட்டின் உட்புறத்தே புழுக்கம் உண்டாகிறது; வெப்பமும் மிகுகின்றது. முட்டைக்குத் தொண்Q று திகிரி (Degree)யளவுள்ள வெப்பமே வேண்டப்படுகிறது. கூட்டின் அகத்தேநிலவும் வெப்பம் அவ்வளவில் மிகுமாயின், அதனைத் தாய்க்கோழி எவ்வண்ணமாகவோ தெரிந்து கொண்டு, புறத்தே வழியொன்று செய்து, அதன் வழியாகக் குளிர் காற்று உள்ளே செல்லவிடுகின்றது. மிக்குற்ற வெப்பம் அத்தொண்Q று திகிரிக்கு இறங்கியதும், குளிர் காற்று நுழைந்து, மேலும் இறங்காத வாறு தாய்ப்பறவை தடைசெய்து விடுகின்றது. இவ்வாறு, கூட்ட கத்தில் தொண்Qறு திகிரி யளவுள்ள வெப்பமே நிலவுமாறு செய்யும் இத் தருமாமீட்டர் பறவையின் வித்தகம் நினைக்குந் தோறும் வியப்புத் தருகின்றது.

இவ்வகையில் சுமார் நாற்பத்தைந்து நாட்கள் சென்றதும் முட்டைகள் பொரிக்கின்றன. குஞ்சுகள் வெளிப்பட்டு, அக் குழியிலிருந்து மண்வழியே மேலேறி வெளிவருகின்றன. தாம் இருக்குமிடத்து வெப்பம் தமக்குப் போதாதென்று அக்குஞ்சுகள் வெளிவந்து விடுகின்றன என்பர். இவ்வாறு தன்னைச்சுற்றி நிலவும் காற்றினது வெப்பநிலையை அளந்து காண்டலும், ஓரளவிலேயே வெப்பநிலையை நிறுத்திக் கொள்ளலும் ஆகிய இச்செயல்கள், மக்களுள், இயற்கை நூற்புலவர் பெரு மக்களுள் சிறந்தவர்க்கும் எளிதில் முடியாதனவாக இருக்க, இவற்றைச் சிறு வருத்தமும் முயற்சியும் கருவியும் பிறவுமின்றி, இவ்வாஸ்திரேலிய வான் கோழிகள் செய்துகொள்ளும் திறம் இவற்றிற்கு கருவிலேயே வாய்த்த திரு என்று கொள்ளவேண்டும்.

நம் தமிழ் நூல்களில், புள்ளினங்களை அறிஞர் ஐயறிவுயிராகக் கொண்டுளராயினும், இவற்றிற்கு மனவுணர்வு உண்டென்று கூறுவதிலர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் “மாவும் மாக்களும்” என்றற்றொடக்கத்து விதிகளால், பறவைகட்கு மனவுணர்வு இன்மை தோன்றவே கூறினர். மற்று, மேனாட்டு மக்கள் பலரும் புள்ளினங்கள் நுண்ணறிவுடையவென்றே கருதி வந்தனர். உயிர் நூற் புலவர்கள், ஆண்டுதோறும், இவற்றின் குணஞ்செயல்களை ஆராய்ந்து கொண்டே வருகின்றனர். அவர்கள், “புள்ளினம் நுண்ணுணர்வுடையவென்றல் உண்மையன்று. அவற்றிற்கு நினைத்தல் என்ற செய்கையே கிடையாது; நினைக்கவேண்டிய நியதியும் அவற்றிற்கு வேண்டா. அவற்றின் உயிர்த் தன்மையே (Instinct), அவை செய்தற்குரிய செயற் பன்மைக் காகிய செம்மை நெறிக்கண் அவற்றைச் செலுத்துகிறது.” என்றே கூறுகின்றனர். அமரிக்க நாட்டு நியூயார்க் நகரத்தில், உயிராராய்ச்சிக் கழகம் ஒன்று உளது. அங்கு உயிராராய்ச்சிப் புலவர்களுள் தலைமைப் புலமை நடாத்தும் ராபாட் குஷ்மான் மர்பி* என்பார் பின் வருமாறு கூறுகின்றார்.

புள்ளினங்களுள் உயர்வுடையன எனக் கருதப்படும் கிளியும், காக்கையும், பிற இன்னிசைப் பறவைகளும் நினைத்தற்குரிய மனப்பொறி, மிகச் சிறிதே யுடையவாகும். சிறு புழுக்களுக்குரிய மனப்பொறியும், இவற்றின் மனப்பொறியும் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஆயினும், உயிர்த்தன்மையினையே (Instinct) உணர்வுக் கருவியாகக் கொண்டு, செய்வனசெய்து, உயிர்வாழும் புள்ளினங்கள், பல அரிய செயல்களைக் காரணம் தேராமலே, செய்து வருகின்றன. ஒரு செயலைச் செய்தல் வேண்டும் என்றெழும் உயிர்க்கிளர்ச்சியும், செய்கையாற் பிறக்கும் அமைதியும் ஒன்றையொன்று இன்றி யமையாது தொடர் புற்றிருக்கின்றன. *அத்தொடர்புக்குரிய உயிர்ப்பண்பே, பறவைகளின் அருஞ்செயற்குப் போதிய ஏதுவா கின்றது. எவ்வகையாலேனும் இத்தொடர்பு இடையறுமாயின், அவற்றிற்கு உளதாகும் கையறவு நம் நினைவு நிலையினைக் கடந்து நிற்கும் என்பது அப்பெரியார் கூறும்பொருள்.

பறவைகள் சில காலங்களில் பாடுதலில் வேட்கை மிகுகின்றன. அக்காலத்து அவ்வேட்கையினை அடக்கிக்கொள்ளும் மனநிறை அவற்றிற்கு இருப்பது கிடையாது. வேண்டுங் காலத்துப் பாடுதலும், வேண்டாக் காலத்துப் பாடாதமைதலும் அவற்றிற்கு ஒல்லுவதில்லை. நீர் வழிச் செல்லும் மிதவை போல, வேட்கை வழிச் செல்லும் இயல்பே யுடைமையின், புள்ளினம் உயிர்த் தன்மையினையே உறுவ ஆகின்றன.

ஒரு பறவை இட்டு வைத்துள்ள முட்டைகளை நீக்கிவிட்டு, அவற்றைப்போல உருவமும், நிறமும் உடைய கோலி (ரவை) குண்டுகளை வைப்போமாயின், அப்பறவை, உண்மை துணிய மாட்டாது, அவற்றை முட்டையென்றே கருதி யமைந்துவிடக் காணலாம். இதனாலும், அவற்றிற்கு நினைவுச் செய்கை இல்லை யென்பது விளங்குகின்றது. இதைக்காணும் அறிஞர்க்கு, இக்காலத்திற் சிலர் கோழி முட்டைகளோடு வாத்துக்களின் முட்டைகளை வைத்துப் பொரிப்பிக்கும் இயல்பு புதுமையாகா தென்பது தோன்றும். புனைந்துரை வழக்கிலும், புலவர்கள் சங்கீன்ற முத்துக்களை அன்னம் தன் முட்டையெனக் கருதி அடைகாக்க முயலும் எனப் புனைந்துரைத்தற்கும் இயைபுண்டென்று அறியலாம்.

ஒரு பறவை தன் கூட்டைவிட்டு, இரைதேடற் பொருட்டு நெடுந் தொலைவு செல்லும், செல்லினும்,பொழுது சாய்ந்ததும் அது தன்கூடு இருக்கும் இடத்தைத் தப்பாது சென்று சேர்ந்து விடும். இதனால் இதற்கு உண்மையறிவு உண்டு என்று காணலாம் ஆயினும்,அப்பறவை யில்லாதபோது, அக்கூட்டினை எடுத்து ஒரு கச தூரத்தில் பெயர்த்து வைத்துவிடின், திரும்பிவரும் அப்பறவை நேரே தன் கூட்டைத் தேடியடைவது கிடையாது. முன்னே அமைந்த இடத்தில் அக்கூடு இன்மை கண்டதும், அது விரைந்து பறந்து நெடுந்தூரம் சென்று மீண்டு அவ்விடத்துக்கேவரு கின்றது. இவ்வாறுபலமுறையும் போவதும் வருவது மாகவுழன்று, முடிவில் குருட்டுநெறியாகத் தன் கூட்டை அடைவது உண்டே தவிர, தான்சமைத்த கூட்டினையே சிறிது அமைதியுடன் தேடிக் காணும் திறமை அதன்பால் காணப்பட்டிலது, இரண்டு கசதூரத்தில் பெயர்த்து வைக்கப் பட்டிருந்த தன் கூட்டை யடைவதற்கு ஒரு பறவைக்கு மூன்றுமணி நேரம் வேண்டியிருந்ததாகவும், அத்துணை நேரம் வருந்தி யலைந்தும் முடிவில் தற்செயலாக அக்கூட்டைக் காணமுடிந்ததேயன்றி, தன் அறிவுப்பொறியால் ஆராய்ந்து காணமுடிந்தததாகத் தெரியவில்லை யென்றும் ஆங்கில நாட்டு உயிர் நூலாராய்ச்சியாளர் கூறுகின்றார். “பறவைக் கூட்டைக் கலைக்காதே, பாவம் அது தான் பொல்லாதே” என்று தமிழ் நாட்டில் ஒருபொருளுரை நிலவுவதும், பறவையின் இம்மடமை நிலை கருதியே போலும்!

பறவைகள் தம் கூடுகட்கு வருவதும் போவதும் செய்யுமிடத்து, சிறப்புடைய செயலொன்று அவற்றாற் செய்யப்படுகின்றது. வரும்போது ஏதாவதொன்றைக் கொணருவதும் போம்போது ஏதாவதொன்றைக் கொண்டேகுவதும் அவற்றிற் கமைந்த உயிர்த் தன்மை. இத்தன்மை அவை தம் கூட்டைச் “சுகாதார நிலையில்” தூய்தாக, வைத்துக் கோடற்கு உபகாரமாகின்றது. அவைதம் கூடுகளில் தங்கியிருக்குங் காலத்தில் அவற்றால் இடப்பெறும் எச்சங்களால், அக் கூடுகள் தூய்மையின்றிக் கெடலாம். போம் போது ஏதாவதொன்றைக் கொண்டேகுவதாகிய உயிர்த்தன்மையால், அவை குடம்பை நீங்கிப் போம்போது, அவ்வெச்சங்களை எடுத்தேகி விடுகின்றன. அதனால், அக்கூடுகள் எப்போதும் தூயநிலையில் அமைந்து நிற்கின்றன. இதனை நோக்கின், பறவைகள் மக்களைவிட எத்துணைச் சீரிய “சுகாதார” நெறியினவாக இருக்கின்றன என்பது தோன்றும்! இவ்வாறு செய்வதால், குடம்பைகள் தூயவாதலோடு, பகையினங்கள், எச்சங்களின் நாற்றம் உணர்ந்து போந்து தீங்கு செய்தற்கும் ஏது இலதாகின்றது. இவ்வியல்பினை முதன் முதலாகக் கண்ட அறிஞர் சிலர், இவ்வண்ணம் தம் உறையுளை மாசுபடா வகையிற் காக்கும் பறவைகட்கு இந் நன் மாண்புடைமை அவற்றின் இயற்கை மதிநுட்பத்தின் பயன் என்றே துணிந்தனர். கேம்பிரிட்ஸ் சர்வகலாசாலை (cambridge university) யினுள்ள மாணவர் சிலர், இதன் உண்மை துணிய வேண்டி, ஒருபறவையின் கூட்டை, அப்பறவை புறத்தே சென்றது திரும்பிவருவதற்குள், அதன் பார்ப்புக்கள் இட்டிருந்த எச்சம் முதலிய கழிபொருள்களைத் தாமே களைந்து, தூய்மை செய்துவைத்தனர். திரும்பி வந்த பறவை தான் கொணர்ந்த இரைப்பொருளைத் தன் காதற் பார்ப்புகட்கு அருத்திவிட்டு, ஒரு குச்சியினை எடுத்தேகிற்று. அம்மாணவர்கள் முன்போலவே, அக்கூட்டினை அடிக்கடித் தூய்மை செய்து வரலாயினர்; அப்பறவையும் போம்போதெல்லாம் கூட்டிலிருந்தே ஒரு குச்சியினை எடுத்தேகிக் கொண்டே வந்தது. இதற்குள் பார்ப் புக்களும் முதிர ஆரம்பித்தன. முடிவில் அக்கூடு கலைந்தே போயிற்று. “வரும்போதொன்றைக் கொண்டு வருவதும், போம்போ தொன்றைக் கொண்டு செல்வதும் அவற்றிற்கு, ஒரு காரணமுமின்றி நிகழும் செயல்வகையாகலின், புழு முதலிய இரைப்பொருள் கொண்டுவந்த தான், கொண்டு போதற்குரிய எச்சமாதல், பிறவாதல் ஏதும் இல்லாமையால், கூட்டின் குச்சியையே கொண்டு போவ தாயிற்று,” என்று டாக்டர் மர்பி என்னும் பேராசிரியர் காரணங் கூறுகின்றார்.

ஆப்பிரிக்கா நாட்டில் தூக்கணங் குருவி யினத்தைச் (Weaver bird) சேர்ந்த ஒருவகைப் பறவை இருக்கிறது. சிறு சிறு நார்களையும், குச்சிகளையும் கொணர்ந்து இறுகப் பிணித்து ஒள்ளிய முடிச்சுகளை இட்டுக் குடம்பை (கூடு) யமைத்தல் அதற்கு இயல்பு. உலகில் நல்லறிவுடைய உயிர்களால் அமைக்கப்பெறும் முடிச்சுகளைவிட இதன் முடிச்சுகள் அருமையும் செம்மையும் உடையவாய் இருத் தலின், இவற்றை ஒள்ளிய முடிச்சுகள் என்றாம். இவற்றைக்கண்ட உயிர்நூல் அறிஞர்க்கு, இப்பறவைக்கு இவ்வாறு முடியிடும் வன்மை எவ்வாறு உண்டாயிற்றெனும் ஆராய்ச்சி தோன்றுவதாயிற்று. பலர் பல முடிவுகளைக் கூறுவாராயினர். ஒரு சிலர், இப்பறவையின் தோற்றத்துக்கு முதற்காரணமாக இருந்த முதற்பறவைவகை இவ்வண்ணம் குடம்பை நெய்தமைக்கும் நேர்மையுடையவாய் இருந்திருத்தல் வேண்டும்; அந்நேர்மையே அவற்றின் வழிவந்த இப்பறவைபால் விளங்குவதாயிற்று என்று கூறினர். இக்காலத்து அறிஞர் சிலர் இதன் உண்மை நிலையினைத் துணிந்து காண விரும்பி, இப்பறவையின் முட்டைகளைச் செயற்கை முறையால் பொரிக்கச் செய்து, அப்பொரித்த பார்ப்புக்களையும் தனிப்பட வளர்த்து வந்தனர்; வளர்ந்த அவை, திருந்திய பறவையாகிய வழி, அவற்றின் இனத்துள் எதனோடும் கூடாமலும், காண்பதின்றியும் தனிப்பட வளர்ந்தனவாயினும், தாய்ப் பறவையும் பிறவும் எவ்வாறு அமைத்தனவோ, அவ்வாறே முடிச்சுகள் அமைத்துக் குடம்பை யமைக்கத்தொடங்கின. குலவிச்சை கல்லாமற்பாகம் படுமன்றோ! இதைக்கண்டதும், அவ்வுயிர் நூல் அறிஞர், இச்செய்கை பரமனது திருவருளால் இப்பறவைகட்குக் கருவிலே வாய்ந்த திருவாதல் வேண்டும் என்றே துணிபு கொண்டனர்.

உயிர் நூலாராய்ச்சியாளர்களால் இதுகாறும் ஆராய்ந்து கூறப் பட்டவற்றால் பறவைகள் மிக்க நுண்ணிய பொறியுணர்வுடையன என்பது தெரிகிறது. ஏனைய உயிரினங்களை நோக்க, பறவையின் பொறியுணர்வு சிறந்ததென்றே ஒரு சிலர் கூறுப. நாகரிகக் குறை வுடைய மக்கள் வாத்து, கோழி முதலியவற்றைத் தங்கள் உறை விடங்களில் மிகுதியாக வைத்து வளர்ப்பர். ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் இவ்வாறு வைத்திருப்பதைக் கண்ட காப்டன் ரெயினாள்ஸ் (Reynolds) என்பவர், அவர்களைக் காரணம் வினவ, அவர்க்கு அவர்கள் பகைவர் வரவை முன்னறிந்துணர்த்தும் முதுக் குறைவு அவற்றின்பால் உண்டு என்று கூறினராம். பகைவர்கள் சேய்மையில் வரும்போதே அவர் வரவினால் எழும் ஓசையை முன்பேகேட்டு, அப்புள்ளினம் சிலைக்கத் தொடங்கும்; அதனைக் கேட்டு நாய்கள் குரைக்கும்; அதனால் அவற்றையுடைய மக்கள் தம்மைக் காத்துக்கோடற்கு வேண்டு வனவற்றை விரைவில் செய்து கொள்வர். நடந்த “மகா யுத்தத்தில்” பிரஞ்சுக்காரருடைய கோட்டைகளுள், ஏபல்டவர் (Eiffel Tower) என்ற விடத்தில் வளர்க்கப்பட்டு வந்தகிள்ளைகள், வான விமானங்கள் மக்கள் கண்ணுக்கும், கண் செய் பொறிக்கும் (Observers) புலனாவதற்கு முன்பே, தமது ஒள்ளிய செவிப் புலனால் இனிதுணர்ந்து அஞ்சி இரைச்சலிடத் தொடங்கினவாம். டாகர் பாங்க் (Dogger Bank) என்னுமிடத்தில் 1915 ஆம் யாண்டில் நடந்த கடற்போரில் இருநூற்றுப் பதினாறு மைல் தூரத்துக்கப்பால் இருந்த சிறு பறவைகள், துப்பாக்கிகளின் வெடிப்போசை கேட்டுச் சிலம்பின என்று குறித்திருக்கின்றனர். அருகிலிருந்த மக்களுள் ஒருவரேனும் அப்போர் முழக்கத்தைக் கேளாதிருக்கவும், இப் பறவைகள் அவ்வோசையினைக் கேட்டுப் பேராவாரம் செய்தன என்பதைச் சிறிது நினைத்துப் பார்க்கின், நுண்ணிய செவிப்புலனுடைமையும் இவற்றிற்குக் கருவிலே பரமனருளால் வாய்த்த திரு என்பது விளங்கும்.

இவ்வாறு பறவைகள் நேரிய செவிப்புலன் உடையவாத லோடு மிக்க சீர்மையும் கூர்மையுமுடையகட்புலனும் உடையவா மென்பது உயிர் நூலாராய்ச்சியால் அறியப் பட்டிருக்கிறது. அவற்றின் கண்கள் தலையின் இருபக்கத்திலும் நிற்றலின், அவற்றின் இருபார்வையும் நடுநிலைக்கண் ஒன்றும் (Focus) தகுதிப்பேறு பெற்றில. நமது முகத்துக் கண்கள் நேர்முகமாக நின்று பொருளைப் பார்க்குமிடத்து நடுநிலைஒற்று (Focus) பெறுமாறு அமைந்துள. அதனால் நாம் இருகண்களாலும் ஒரு பொருளையேநோக்கும் தகுதிப்பேறு உடையேமாயினோம்; கண்களும் நிலைபெயராது நின்றாங்கு நோக்குகின்றன. பறவையின் பார்வையோவேறுபட்டுளது; ஒரு கண்ணால் ஒரு பொருளை நோக்கு மிடத்து மற்றொருகண் செயலின்றித் தாழ்ந்துவிடுதலும். மூடப் பெறுதலும் உண்டு. ஒரு கட்பார்வை நிகழுமிடத்துக் காக்கைக்கு, மற்றைக்கண் மூடப்படுதல் உண்மை கண்ட திருக்கோவை புடையார், “காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந்தாங்கு இருவர் ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம் இன்று” (71) என்று கூறியருளினர். இவ்வாறுவேறுபடும் இக் கண்கள், நேர்பொருளை ஆழ்ந்துநோக்கற்கண், தம்மிற்றாமே ஒப்ப அமைந்துகொள்ளும். இதனை நெடிதாய்ந்தறிந்த வில்லியம் பீபீ (William Beebe) என்பவர், “பறவையின்கண் ஒருசிறு பொழுதிற்குள் தூரதிட்டி யிலிருந்து சூக்குமதிட்டி யாகவும், சூக்குமத்திலிருந்து தூரதிட்டியாகவும் மாறுவது இயல்பாகக் கொண்டு விளங்குகிறது,” என்று துணிந்து கூறியுள்ளனர். இதனாற்றான் விரைந்துபறக்கும் வன்மையினையுடைய பருந்து, கழுகு முதலியன, வானத்தே மிக்க உயரத்தே பறக்கும்போதே தரையில் நகர்ந்து செல்லும் சிறுபூச்சி யினையும் கட்புலனால் தெரிந்து ஞெரேலெனப் பாய்ந்து பற்றுதலும், இவற்றின் வரவினைக் கோழிகள் முன்னறிந்து தம் பார்ப்புக்களைப் புறங்காத்தலும் செய்கின்றன. மணிக்கு எண்பதுமைல் வீதம் பறந்தேகும் புள்ளினம், தரையில் குண்டூசியின் நுனியளவிற்றாய பூச்சியினையும் காண்டலும், கண்டாங்குக் குறிதவறாது அதன்மேற் பாய்ந்து கவர்ந்தேகுதலும் செய்கின்றன. இன்னோரன்ன திருவுடைக் காட்சி யுணர்வு, இவற்றிற்குப் பரமன் திருவருளால் கருவிலே வாய்த்துள தெனக் கூறுவதல்லது பிறிதுயாதும் கூறுதற்கில்லேம்.

பறவைகளின் சிறப்பியல்புகளை ஆராயப்புகுந்த அறிஞர் பலரும் வேறுபுலம் பெயர்தல் (Migration) என்னும் செய்கை யொன்று பறவைகளின்பால் சிறந்து நிற்கிறதென்கின்றனர். இதனைப் பண்டைக்காலத்துத் தமிழறிஞரும் அறிந்திருந்தனர். “வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர், உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன்” என்று கூறும் கம்பர் மொழியின்கண், பறவையின் சிறப்பியல்பு உணரப்பட்டமை நாம் உணர நிற்கின்றது. பறவைகள் ஒருசில பருவகாலங்களில் ஓரிடத்திலும், வேறு காலங்களில் வேறிடங் களிலும் காணப்படுவதுண்டு. தமக்கு உரிய இரைப்பொருள் கிடைத்தற்கு அமைந்த காலங்களில், அக்கால நிகழ்ச்சியுள்ள இடத்தில் இருப்பதும், இவ்வழி வேறிடத்துச் செல்லுதலுமாகிய இச்செய்கை யியல்பே வேறுபுலம் பெயர்தல் எனப்படுகிறது. பருவ வரவு தேர்தலும் தேர்ந்து செய்வன செய்தலும் கூரிய உணர்வுடை யுயிர்கட்கே ஒல்லும் செய்கையாகும். அவ்வியல்பினால், பறவைகள் வேறுபுலம் பெயரும் இயல்பினவாதற்குக் காரணம் யாதாகும் எனச்சில அறிஞர் ஆராய்வாராயினர். அவருட் பலரும், “பருவ வரவின்கண், பறவைகளின் யாக்கையமைப்பில் எழும் சில ரசாயனக் கிளர்ச்சியே, வேறுபுலம் பெயர்தற்கு ஏதுவாகும்” என்கின்றனர். (Scientists generally accept the theory that these seasonal flights are the result of some chemical disturbance in the bird itself) இதனாற்றான், வீடுகளில் கூடமைத்து வளர்க்கப் பெறும் பறவையினமும் அவ்வப் பருவ வரவின்கண் அமைதியின்றி அலைப்பும் சிலைப்பும் கொள்கின்றன என்றும் கூறுப.

இவ்வண்ணம் பருவ வரவு தேர்ந்து வேறுபுலம் படரும் பறவைகளின் செலவினைச் சில அறிஞர் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாராய்ச்சியின்கண் அரிய செய்திகள் பல அறியப்படுகின்றன. தாட்டரல் (Dotteral) என்னும் பறவை மாலையில் வடவாப்பிரிக்கா வில் உணவுகொண்டு, மறுநாட்காலையில் ஸ்காந்தி நேவியக் கடற்கரையில் (Scandinavian shores) இரைதேர்ந்துண்டு இன்புறுகிறது. திரசி (Thrush) என்னும் புள்ளினத்துள் சாம்பல் நிறமுடையவை, ஏப்பிரல் திங்களில் வட அமரிக்கநாட்டு ஐக்கியமாகாணத்தின் தென்பகுதியில் தங்கி, ஒருதிங்கட்கு பின், அலாஸ்கா என்னும் நாட்டையடைகின்றன. அவற்றின் செலவு நாளொன்றுக்கு 130 மைல் ஆகிறதெனக் கணக்கிட்டிருக்கின்றனர். அந்நாட்டுப் பறவைகளுள் இராபின் (Robin) என்பது நம் நாட்டுக் காக்கையைப் போல ஆங்காங்குத் தங்கி இரைகொள்ளும் இயல்பிற்று. வேறுபுலம் பெயரும் விரகின்கண், அஃது வடவமரிக்காவின் வடபகுதியினைச் சாரச்சார, நாளொன்றுக்கு பதின்மூன்றுமைல் விழுக்காடு செலவு கொண்டு, பின்பு மின்னஸ் டோவா (Minnestoa) என்னும் இடத்தினைக் கடந்ததும், அலாஸ்காநாட்டை நோக்கி, ஏனைப் பறவையினத்தோடு கூடி, மணிக்கு எழுபதுமைல் விழுக்காடு செலவு பெற்றுச்செல்கிறது.

இனி, இவ்வண்ணம் வேறுபுலம் பெயரும் விரகுடை உயிர் கட்குத் திசைநிலை காட்டுவது யாதாகும்? பரந்த கடலிலும், விரிந்த மணற்பாலையிலும், உறைந்த பனிவெளியிலும் விரைந்து பறந்தேகும் புள்ளினங்கள், தாம் படர்ந்துசெல்லும் நாடு இருக்கும் திசை தப்பி மயங்கி விடுகின்றனவா? இல்லையே! தாம் படர்ந்த நாட்டைத் தப்பாது சென்றடைதலின், இவற்றிற்குத் திசைகாட்டி நிற்கும் திருவுடைக் கருவியாது கொல்லோ? இவை செல்லுநெறி யில், பிழையாது சேறற்கண் துணைபுரிதற்கு யாதானுமொன்று இருந்தே தீர்தல் வேண்டுமன்றோ! அக்கருவியின் முன், -அத்திப்பியக் கருவியின்முன், -மனிதவுணர்வால் செய்யப்பட்ட செயற்கைத் திசையறி கருவி முன்னிற்றல் கூடுமா? கூடாது, கூடாது. இயற்கை வழியியங்கும் இயல்புடைக்கருவி முன், செயற்கை வழி இயலும் செய்வினைக்கருவி யாது செய்யவல்லதாம்?

மேலை அமரிக்காவில் வாழும் புலாவர் (Plover) என்னும் பறவைகள் அலாஸ்கா நாட்டிலிருந்து தெற்குநோக்கி அலூஷியன் தீவுகட்குச் செல்கின்றன. அவற்றின் எதிரே பசிபிக் கென்னும் பரந்த பாய்திரைப் பெருங்கடல்,மாசு மறுவின்றி, நாற்றிசையும் தன் பரப்பே தோன்ற, கருநிறங் காட்டிக் கலக்க மின்றிக் கிடக்கின்றது. பின்பு, அதன் நடுவே ஒருபுறத்தே, நீலப்பெரும் புடவையின் ஒருபுறத்தே வெண்ணித்திலம் பதித்தாற்போல ஹாவாய் (Howai) என்னும் சிறிய தீவு காணப் பெறுகிறது. அச்சிறு நிலப் பகுதியினை நோக்கி இப்பொன்னிறப் புலாவரினம் படர்ந்து வருகின்றது! அட்லாண்டிக் என்னும் பெருங் கடற்கரையில் வாழும் புலா வரினங்கள் நோவாஸ் கோஷியாவிலிருந்து, தரையைத் தீண்டாமலே தென்னமரிக்காவின் தென்பகுதியினை யடைகின்றன, அடைபவை திரும்பு காலையில் வேறு வழியைத் தொடர்ந்து வருகின்றன; மிசிசிப்பி நதிபாயும் வளநாட்டின் வழியே படர்ந்து, உள் நாட்டைக் கடந்து, வடகடற்கரையை யடையும். ஆர்க்டிக் உலகத்தில் தரன் (Tern) என்னும் பறவைகள் வாழ்கின்றன. வடதுருவத்தைக் காணப் புகுந்த வீரர்கள், தாம் இவற்றின் கூடுகளை வடதுருவத்துக்கு நானூற்றைம்பது மைல் தூரத்தே கண்டதாகக் கூறுகின்றனர். அங்குள்ள இவை மாரிக்கால வரவு தேர்ந்து, பதினோராயிரமைல் தூரத்தில் உள்ள தென் துருவ அன்டார்க்டிக் உலகுநோக்கிச் செல்கின்றன. இவ்வரிய காரியத்தை இவை எவ்வண்ணம் செய்கின்றன? இச்செயற்கண் இவை பிழையின்றி ஒழுகுதற்குத் துணையாவது யாது? இவையாவும் இவற்றால் இயல்பாகவே நடைபெறுவன; இஃது இவற்றிற்குக் கருவிலே வாய்த்ததிரு என்பதல்லது பிறிதில்லை.

செந்தமிழ்ச் செல்வி

ஞானியார் சுவாமிகள் பொன்விழாப் பாராட்டுரைகள்


உலகெலாம் மலர்ந்த பரமன் திருவருள் நலம் நிலவும் நம் தமிழ் நாட்டில் திருந்திய செல்வமுடையார் பலர் உளர்; சீரிய குணஞ் செயல்களுடையாரும் அவரொப்பவுளர். எனினும் இவர்தம் பெயர்க்கும், குணஞ் செயல்கட்கும் ஒற்றுமை பெரிதும் காண்பதரிது. அவ்வாறு காணப்பெறும் தகுதி யுடையார் ஒருவர் உளரெனின், அவருண்மை அந்நாட்டின் அரும் பேறுகளுள் பெரும் பேறாகும். அவரைத் தம்மிடையே பெற்று, அவரது சொல்லும் செயலும் கேட்டும் கண்டும் பேரின்பமடையும் மக்களே பெருமக்களாவ ரெனின், அஃது அனைவரும் விரும்பி யேற்கப்பெறுவ தொன்றாகும். அத்தகைய பெருமக்களாம் பெருமை இன்று நமக்கு எய்தியுளது. இப்பெருமை யெய்தற்குரிய சொல்லும் செயலும், அவற்றிற்கியைந்த பெயரொற்றுமையும் யாவும் ஒப்பவுடைய பெருமகனார், இதுபோது நமக்கு அறிவுச்சுடர் வழங்கிச் சமயவுண்மையும் தமிழ்ப்பெருநூல் நுண்மாண்பும் இனிதுகாட்டி நம்மை உய்வித்து வரும் வள்ளலாகிய தமிழ் மாண்புலமைச் சைவப் பெருந்திரு, சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய அடிகளாராவர். இவர்களை இன்று தமிழுலகம், “சிவமணம்கமழும் செஞ்சொல்லும் சண்முகப் பரமனது தனியருள் காட்டும் தகுசெயலும், பொய்யறிவும் பொய்யொழுக்கமும் போக்கி மெய்யறிவும் மெய்யொழுக்கமும் விளக்கி யாவரும் சிவமாந்தன்மை யெய்துவிக்கும் ஆசாரியநெறிடையும், குறைவற நிறைந்த அடிகள், எங்கள் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகளே” எனப் பொன்விழாக் கொண்டாடிப் புகழ்ந்து மகிழ்கின்றது. எங்கள் ஆசிரியப் பெருந்தகையாகிய இப்பெருமான் திருவடிகள் இம்மாநிலத்துப் பல்லாண்டு மருவி வாழ்க! எங்கும் என்றும் இன்பமே நிலவுக!

நல்லதன் நலனும், தீயதன் தீமையும், உள்ளவாறு காண்டல் அறிவு என்பர். “எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பர் நம் திருவள்ளுவப் பெருந்தகையார். இவ்வறிவு மக்களினத்து ஒவ்வொருவரிடத்தும் நிலவுகிறதெனினும், செயலாற் பலருமறிய விளங்கி நிற்குமிடத்திற்றான், தன்னுண்மையினை எடுத்துக் காட்டுகின்றது. அதனையுடையாரே அறிவுடையார் என உலகம் போற்றி மகிழ்கின்றது. அவ்வறிவும், பிறர் அறிவுக்கு எளிதிற் புலனாகாச்சமய நுண்பொருளையெடுத்து விளக்குமிடத்து, “ஞானம்” என இந்நாளில் வழங்குகின்றது. இந்த உயரிய ஞான முடையவரையே, “ஞானியார்” என்று பாராட்டி வழங்கற்கு அறிவுடையுலகம் ஒருப்படும். இன்று, “நீவிர் ஞானியார் சுவாமிகளை அறிதிரோ?” என்றும், “ஞானியார் சுவாமிகள் பேசுதல் வேண்டும்; நாம் கேட்க வேண்டும்” என்றும் பலரும் சொல்லாடுவது பெருவழக்காகவுளது. இவ்வழக்கில் வரும் “ஞானியார்” என்னும் சொல்லின் பொருளாக விளங்குபவர் ஒருவர் உளராயின், அவர், மக்களின் மனநிலத்தில் எத்துணை உயரிய இடம் பெற்றுள்ளனர் என்பது, இனிது தோன்றி இன்பம் செய்யும். அந்த, இனிய, அரிய, பெரிய, தூய சொல்லாய ‘ஞானியார்’ என்னும் சொற்பொருள் ஆகிய பெருமான், நம் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகளேயாவர். “லோககுரு” “மடாதிபதி” எனவரும் சிறப்புப் பெயரையும், “ஞானியார்” என்னும் சிறப்புப் பெயரையும் ஒப்பு நோக்கின், “உண்மை ஞான நிலையம் யாண்டுளது என்பதை நன்கு அறிந்தே, இத்தமிழுலகம் இப்பெருமானைப் பொன்விழா வெடுத்துப் பொலிகின்ற” தென்று அறிவுடையார் அனைவரும் துணிபு காண்பார்.

தமிழ்நாட்டில், அறிஞர் உலகில், மூன்று பெருமொழிகள் வழக்கில் உள்ளன. அவை, தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் என்பன வாகும். இம்மூன்றினும் ஒத்த புலமையுடையர் மிகச்சிலரேயாவர். அவருள்ளும் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையுடைய சொல்வன்மை பெற்றார் மிகச்சிலரே; அச்சிலர் தம் முடிமணியாய்த் திகழும் செம்மை, நம் “ஞானியார் சுவாமிகட்கே உண்டு” என்பது மிகையென மேலோர் நினையார்கள்.

நம் “ஞானியார் சுவாமிகள்” சீரிய சொல்வன்மையுடையர் என்பது உலகறிந்த செய்தி. “கேளாரும் வேட்பமொழிவதாம் சொல்” என்னும் திருமறை, இவர்தம் சொல்லையே பேரிலக்கிய மாகக் கொண்டது என்னின், அது புனைந்துரையாகாது. இவர்தம் விரிவுரையின் பெருநலத்தை வியந்த எங்கள் கரந்தைக் கவியரசர், “இமையவர் நாட்டமிழ்தினிலும் இனிதினிக்கும் விரிவுரையின் ஏற்றம் ஓரின், இமையமொடு குமரியிடை இந்நாட்டன்றெந் நாட்டும் இணையொன்றுண்டோ” என்றும், “தெய்வமணப்பாங்கு” பெற்றது என்றும் பாடிப் பரவியுள்ளார் எனின், யாம் வேறு கூறுவ தென்னை? எனினும், இவர்தம் சொல்வன்மையின் சிறப்பியல்புகளுள் இரண்டொன்றினை ஈண்டுக் கூறிப் பாராட்டற்கு எம் உள்ளம் விழைகின்றது.

நல்லிசைப் புலமை நலம் மிக வாய்க்கப்பெற்ற ஒருவர், தம் புலமைக்கண் தோன்றிய நுண்பொருள்களைப் பிறர்க்கு உணர்த்த வேண்டுமென விழைவது இயல்பு. அச்செயற்கு உரிய துணை செய்யும் சிறப்பு சொல்வன்மைக்கேயுண்டு. சொல்லப்படும் நுண்பொருளைக் கேட்போர் ஏற்கும் வகையறிந்து அவர் பயின்றுள்ள சொல்வழியாக உணர்த்துந்திறம் சொல்வன்மையின் முதற்பண்பாகும். சொல்வோரது அறிவு நிலைக்கும், கேட்போரது அறிவு நிலைக்குக் வேறுபாடு பெரிது உண்டெனினும், சொல்லுங்கால், கேட்போரறிவைத் தம் சொற்பொருளை ஏற்கும் நிலைக்குக் கொணர்ந்து, அதனை யூட்டும் வினைத்திறம், மிக அரியதொன்றாகும். ஒருகால் கொணர்ந்தபின், அறிவு வுரம் இன்மையின், கேட்போர் மனம் சொல்லப்படும் சொற்பொருள்வழி நில்லாது மெலிந்து நெகிழ்வது முண்டன்றோ! அதனையறிந்து, அதற்குப் பிறவாற்றால் வன்மை யூட்டி, சொற்பொருளைக் கேட்குமாறு செய்வது சொல் வன்மைக் குரிய வேறொரு பண்பாகும். இன்னோரன்ன பண்புகளால், சொல்வன்மையைப் பெருந்துணைகொண்டு கல்லா மாக்கட்கும் கலைச்சுவை காட்டிச் சமயவுண்மையின் நுண்மை நலங்களை யறிவுறுத்திச் செம்மை செய்யுந்திறம் நம் ஞானியார் அடிகளின் சொற்பொழிவில் இனிது விளங்குகின்றது. “அத்து விதம்”, “சிவோகம் பாவனை” “மாயேயமலம்” முதலிய சமய நூல் நுட்பங்கள் பல்லாயிரக்கணக்கினராய மக்கட்கு, அடிகளின் சொற்பொழிவால் நன்கு விளக்கப்பெற்றிருக்கின்றன. சைவசித்தாந்தம், விசிட்டாத்து வைதம், ஆருகதம், கௌமாரம் பௌத்தம். முதலிய சமயஞானமும், இவற்றைக் காய்தல், உவத்தலின்றி ஆராய்ந்து கூறும் ஆராய்ச்சித் திறமும் கலைப்புலமை மிக்க நுண்ணியார்க்கும் தெளியக்காட்டொணாத அருமை வாய்ந்தவையாயினும், இவை, நம் ஞானியார் சுவாமிகளின் சொற்பொழிவில், இளஞ்சிறாரும் இனி துணரும் நிலையில், எளியவாய் வெளிப்பட்டு மிளிர்வதுண்டு.

இனி, ஒருவரது சொல்வன்மையும், புலமைச் சிறப்பும் அவர்தம் சொற்பொழிவில் வழங்கும் உவமைகளால் கேட்போர் அறிந்து பரவுதற்குரிய தகுதி பெறுவது இயல்பு. வாழ்க்கை, நூலாராய்ச்சி, தக்காரொடு பயிறல் முதலிய நிகழ்ச்சிகளிற் காணப்பெறும் பொருள்கள், ஒருவர்உள்ளத்தே உணர்வு வடிவாய் நின்று; வேண்டுங்கால் உவம முகத்தாலும், எடுத்துக் காட்டாலும், சொல்வன்மைக்கு ஆக்கஞ்செய்து, கேட்போர் உணர்வை வளம் படுக்கும் என்பது மேனாட்டு உள நூற் புலவரான தாண்டைக் (thorndike) முதலியோரது முடிப்புரையாகும். அந்நெறியே நோக்கின், நம் அடிகளார் சொற்பொழிவில் மிகவுயர்ந்த கருத்தமைந்த உவமைகள் பல்கித்தோன்றக் காண்கின்றோம். சென்ற யாண்டில் அடிகளார் போளூர் போர்டு உயர்கலாசாலை மாணவர் கட்குச் “சமயக் கல்வி” என்றபொருள்பற்றிய சொற்பொழிவொன்று ஆற்றினர். அச்சொற்பொழிவின் முடிபொருள், “பரம்பொருள் ஒன்று உண்டு; அதனைப்பரவுவது அனைவர்க்கும் கடன். அப்பொருள் சிவனாயினு மாகுக; திருமாலாயினும் ஆகுக; அல்லாவாயினு மாகுக; யாவராயினு மாகுக. யாவும் ஒன்றே; ஒவ்வொன்றையும் வழிபடுவோர் ஒரு முடிவையே பெறுவர்; அதனால் அவரைக் காய்தலும், பூசலிடுதலும் கூடா” என்பதாகும். இதனை விளக்குதற்குக் கையாண்டவுவமை அந்தக் கலாசாலைக்கு, கல்விப்பயனும், மாணவரும், அவர்கள் பலாசாலைக்கு வரும் வழிநெறிகளு மேயாயின, முடிவில் சைவரும் வைணவரும், திருநீறும் திருமண்ணும் அணிதல் வேண்டுமென வற்புறுத்தப்புகுந்த அடிகளார், அம்மாணவர்கள், கலாசாலைக்கு வருங்கால் தூயவுடையும் சட்டையும் அணிந்துவரும் செய்தியை அரியவுவமையாகக் காட்டியது, வந்திருந்த அறிவுடைப் பெருமக்கள் அனைவரையும், “உலகமக்கட்குச் கமயஞானமளிக்கும் ஞானியார் என்பது இவர்க்கே தகும் தகும்” எனத் தம் மனம் குளிர, வாய் குளிர நினைந்து பரவிப் பாராட்டச் செய்ததெனின் வேறே என்னென்பது!

இனி, அடிகளார் தம் சொற்பொழிவில் ஆங்காங்கே பல இன்றமிழ்ச் செய்யுட்களை எடுத்துக்காட்டி, மக்கள் மனத்தில் அச்செய்யுளின் பொருளை விளக்கி மகிழ்விப்பது இயல்பு. இவ்வியல்பு சொற்பொழிவாளர் பலரிடத்தும் பெருகக் காணக் கிடப்பதே யெனினும், அப்பல்லோரிடத்தும் காணப் பெறாத ஒரு சிறப்புநலம் அடிகளார் சொற்பொழிவில் இனிது திகழ்கின்றது. அடிகளார்; ஒரு செய்யுளை எடுத்துக்காட்டலுறுவா ராயின், அதனைப் பொருள் நிலைக்கியையப் பதச் சேதம் செய்து இசைத்து, அப்பொருள் நிலையை, கேட்போர் செவிப்புலம், நிறைய வாங்கி, உள்ளத்தே விரையத் தேக்கிக்கொள்ளுமாறு அமையக் கூறுவர். பின்னர், அவர், அதனைப் புரை புரையாகப் பகுத்துச் சொல் ஒவ்வொன்றினும் பொதிந்து நிற்கும் பொருளை அடைவேகாட்டி, வற்புறுத்துந் திறம் நினைத்தொறும், கேட்டோர்க்கு இன்பவுணர்வை எழுப்பு கின்றது. அடிகள், வேலூரிற் கூடிய சைவசித்தாந்த மகாசமாசப் பெருவிழாவில் தலைமை தாங்கி நிகழ்த்திய சொற்பொழிவுகள் ஒன்றில், அப்ப மூர்த்திகள் பாடியருளிய திருவிருத்த மொன்றை யெடுத்துக் காட்டியது இன்றும் என் நினைவில் நின்று இன்புறுத்துகின்றது. அத்திருவிருத்தம்,

’ஊனத்தைநீக்கி யுலகறிய பென்னை யாட்கொண்டவன்,
தேனொத்தெனக் கினியான் தில்லைச்சிற்றம் பலவன் எங்கோன்,
வானத்தவருய்ய வன்னஞ்சை யுண்டகண்டத் திலங்கும்,
ஏனத்தெயிறுகண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே,

யென்பது. இதன்கண், பரமன் நாவேந்தரை ஆட்கொண்ட திறத்தை அவையினர்க்கு வற்புறுத்தத் திருவுளங் கொண்ட அடிகளார், “என்னையாட் கொண்டவன்” என்ற தொடரை வாங்கி, சீரிய வினாக்களால் அவையினர் உள்ளத்தில் அவாவையெழுப்பி, “என்னையாட்கொண்டான்” என்றால் அதனை யார் அறிவார்? யாவரும் அறிய என்னை ஆட்கொண்டான். யாவர் என்றால் இன்னார் என்ன வேண்டாமா? உலகு அறிய என்னை ஆட்கொண்டான்; “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று கூறுவரல்லவா? உயர்ந்தோர் அறிய என்னை ஆட்கொண்டான். அப்படி யாயின், உன்னை எவ்வாறு ஆட்கொண்டான்? நீக்கி உலகறிய ஆட்கொண்டான். நீக்கி என்றால் எதனை நீக்கினான்? ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டான்” என்று ஒவ்வொரு சொல்லையும் அதன்பொருள் நிலை நிரம்பச் சொல்லியருளினர். இவ்வாறு அவாய்நிலைமுறையால் செய்யுட்குப் பொருளுரைக்குந்திறம் நம் அடிகளார் சொல்வன்மையின் பலநலங்களில் ஒன்றாகும். இம்முறையைப் பின்பற்றிச் சொல்லப் புகுவோர் சிலர் இப்போது உளர். ஆயினும், அவர் பால் அது வித்தகம் பெறாது கேட்போருள்ளத்தை மகிழ்விக்கும் வன்மை யிழந்து நிற்றலால், இத்திறம் அடிகட்கே இயல்பாய் அமைந்த பெருநலம் என்பதனை யாம் போற்றிப் பரவுகின்றோம்.

இனி, அடிகளார் சொற்பொழிவு செய்யும்போது அதனைக் கேட்கும் மக்களது உள்ளப்பான்மைனய அறிந்து காலத்தை நீட்டுதலும் சுருக்குதலும் செய்துகொள்வர். சீரிய கூரிய அறிவினர் பாலும் பெருகக் காணப்பெறாத இவ்விரகு, இவர்கள்பால் மிக எளிதாய் உளது. மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என மணிக்கணக்கான காலம் சொற் பொழிவு நிகழ்த்துவது என்பது அடிகட்கு மிக எளிமையாகவுளது. அத்துணை நெடுநேரத்தை மக்கள் ஒரு சிறு வருத்தமுமின்றி இருந்து கேட்குமாறு அவர் மன நிலையறிந்து நகைச் சுவையும், உவகைச்சுவையும் என்ற சுவை பலவும் தோன்றச் சொற்பொழிவாற்றும் வன்மை இவரது நா நலத்தின் ஆக்கமாக வுளது. நகைச்சுவை தோன்ற வுரைக்குமிடத்து அவையினர் நகைப்பொலி யெழுந்து அவையகம் முழுதும் குழுமுங்கால், இவரது அரியதிருவாயின் இதழ்கள் சிறிதே விரிந்து, உண்ணிற்கும் பற்களைச் சிறிதும் காட்டாது முகிழ்த்து மலரிதழ்போல் முறுவலிப்ப தொன்றையே செய்ய, முகத்தின் ஞானவொளி அறிவுடையார் உள்ளத்தில் வியப்பும் நன்மதிப்பும் பயக்கின்றது. மக்களின் ஒழுக்கக் குறைவுகளை எடுத்தியம்பித் திருத்த முயலுமிடத்துச் சில இனிய வுரைகள் பகர்வர். அக்குறையுடையாரும் அவற்றை இனிதேற்கும் முறையில் சொற்கள் “தென்னுண் தேனின் தேக்கிய” வாய் அமைந்து நிற்கின்றன.

இனி, அடிகளோடு தனித்து உரையாடுமிடத்து இனிய நயமொழிகள் போந்து உள்ளுதோறுள்ளுதோறும் உள்ளம் உருக்கி நிற்கும். யான் அடிகளோடு ஒருகால் உரையாடுங்கால் துறவி யொருவரைப் பற்றிய பேச்சு நிகழ்ந்தது. அப்போது, அடிகளார், முகம் மலர்ந்து, இன்பமொழுக, “அவர்கள்……………… ஆதீன சம்பிரதாயங்களை நன்கறிவார்கள். மகா சந்நிதானங்களை எப்படிக் காண்பது; காணச்செல்வோர் எவ்வாறு உடைதரிப்பது; எவ்வாறு கை கட்டுவது; எவ்வகையில்வாய் பொத்துவது; எவ்வாறு உண்பது; எப்படி கைகால்களைத் தூய்மை செய்வது என இவற்றைச் செவ்வையாக அறிவார்கள். எவ்வெந்நூல்களை யாராய்வது என்பதை நோக்குதற்கு மட்டில் போதிய அவகாசம் அவர்கட்குக் கிடைத்திலது” என்றார்கள். பின்னர் யான் அவர்கூறிய அனைத்தும் உண்மையாதல் கண்டதும் மெய்குளிர்ந்தது ஒரு புறம் இருக்க, அவர் மொழிந்தவற்றிற் பிறந்த நகைச்சுவையின் மாண்பு பெரிதும் இன்புறுத்துகின்றது. மற்றொரு ஞான்று, இந்நாளில் நிலவும் தமிழ்க்கல்வி நிலையைப்பற்றிய பேச்சு எழுந்தபோது, இக்காலத்துக் கலாசாலையிலுள்ள “சரித்திரம், பூகோளம், அறிவுநூல்” முதலியவற்றைப் பற்றிக்கூறும்போது, மேனாட்டறிஞர்களான மெக்காலே, அக்சிலி முதலியவர்கள் எழுதிய “சரித்திரம்” “அறிவுக்கலை முதலிய உரை நூல்கள், சிறந்த உரையிலக்கியங்களாகத் திளழ்தல்போல, தமிழில் எவையும் இல்லை; மாணவர்கள் வகுப்பு உயரவுயர, அவர் படிக்கும் இந்நூல்களின் நடையும் பொருளும் உயரவில்லை யென்ற சொற்கள் பிறந்தன. அது போது, அடிகளார் ஒர் அரிய பொருளுரை விளம்பினார்கள்.” “இக்காலக் கல்வியாளர்கட்கோ, ஆசிரியர்கட்கோ அத்தகைய அறிவு வேட்கை யிருப்பதாகவே தோன்றவில்லை” என்று கூறினார்கள். அவர்கள் கூற்றின் உண்மையை, இதுபோது வெளியாகும் தமிழ் உரை நூல்களின் இழிந்த தமிழ் நடையும் பொருளுயர்வின்மையும் இனிது காட்டுகின்றன. இவற்றை நோக்கின் அடிகள் சமயவொழுக்கத்துக்குரிய உண்மையாராய்ச்சியோடு சிறார்களின் கல்விவளர்ச்சியிலும் மிக்கநாட்டமுடையவர் என்பது நன்கு விளங்கும். இன்ன நலமுடைய அடிகள் தம் கருத்தை அயன்ற அளவில் செயல் முறையிலும் காட்டுவார்போல, தமிழ்க்கல்லூரி யொன்று நிறவியும், தனித்தமிழ் மாணவர்கட்குத் தமிழ்க்கல்வி வழங்கியும் தமிழ்ப்பெருந்தொண்டாற்றி வருகின்றனர். இதனை நினைக்கும்போது நம் கரந்தைக் கவியரசர் அடிகளைப் பாராட்டிக் கூறிய இனிய பாட்டொன்று நினைவிற்கு வருகிறது.

“கல்லூரி நாட்டுவித்தாய்; கணக்காயன் தானேயாய்க்
 கற்பித்திட்டாய்;
சொல்லாடுந்திறமையினில் துணையில்லாக் கழகமது
 தோன்றச் செய்தாய்;
பல்லூரும் சைவநெறிப் பாங்குயர விரிவுரைகள்
 பகருமாறு
செல்வார் தம் செலவினுக்காம் செல்லலறப் பொருளளிக்கும்
 சிந்தை கொண்டாய்! ”

இவ்வினிய பாட்டின் நான்காவதடி யுணர்த்தும் பொருள் யாரும் குறிக்கொள்ளற்குரிய பொன் மொழியாகும். இதன் கண், அடிகள் தம் ஆதரவில் நடத்தும் சொற்பொழிவு விழாக்களில் வந்து, தம் சொற்பொழிவால் தொண்டாற்றும் அறிஞர்கட்கு நிரம்பப் பொருளளித்துச் சிறப்பிக்கும் வள்ளன்மை குறிக்கப் பெறுகின்றது. சொற்பொழிவு செய்பவர் மிகக் குறைந்த தகுதியினராயினும், அவர்க்கு அடிகள் இருபது வெண்பொற்காசுகட்குக் குறையாத தொகையருளுகின்றார்கள். அருளுங்கால், அவர்கள் “இத்தொகை உங்கள் புலமையை மதிப்பிட்டுத் தருவதன்று; உங்களுடைய வரவுசெலவுகட்கு வேண்டும் படிச்செலவே. எம்பெருமான் திரு முருகக் கடவுள் திருவருளே உங்கட்கு எல்லாம் அருளவல்லது” என்பர். இவ்வாறு தாம் போற்றி மகிழும் தமிழ்நலம் பிறர்பால் இருப்பக்கண்டு மகிழ்தலும், மகிழ்ச்சிக்குறியாக வேண்டுவன வருளும் வள்ளன்மையும் நம் அடிகள் பால் காணப்பெறும் சிறப்பியல்களாகும். ஒருஞான்று, செந்தமிழ்ப் புரவலரைப் பற்றிக் கூறுங்கால், “யாம் ஆண்டவனைப் பரவுமிடத்து, ஒரு சிலரை எம் உள்ளத்து உள்ளுவதுண்டு. அச்சிலருள், செந்தமிழ்ப் புரவலரின் சீரிய பெயர் தலை சிறந்து நிற்கும்” என்றார்கள். எனவே, அடிகளது உள்ளம் எத்துணைத் தூய்மை யுடையதென்பதும், தக்காரை யறிந்துள்ளும் தகைமை எத்துணை வீறுடன் இவர்தம் உள்ளத்து இலங்குகின்ற தென்பதும் யாவரும் இனிது காணத்தெளிவாகும்.

இன்னோரன்ன பண்பு மேம்பட்டுப் பொலியும் எங்கள் அருட்குரவர், தீவிய செந்தமிழ்ச் செல்வர், திருநெறியாய சைவம் வளர்க்கும் திருவருட் செம்மலாகிய திருமிக்க அடிகள், சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய அடிகள் செழுமைமிகும் உடல் நலமும் விழுமிய பொருணலமும் சிறந்து, செந்தமிழும் திருநெறிச் சைவமும் தவமுயன்று பெற்ற தனிப்பெருந் தோன்றலாய் என்றும் நின்று நிலவுகவென எண்ணியாங்கருளும் கண்ணுதற் பண்ணவனது வண்ணத் திருவடிகளை மனமுற வணங்கிப் பரவுகின்றேம்.

தமிழ்ப் பொழில்

இருபெரும் தமிழறிஞர்கள்


உயர்திரு திருவரங்கனார், கா. சு. பிள்ளை ஆகிய இரண்டு பெருமக்களின் திருவுருவப் படங்களைத் திறந்துவைக்கும் பெருமையை எனக்களித்தமைக்கு நன்றி செலுத்துகிறேன். பெரியார்களின் படங்களைத் திறந்து வைப்பதைவிட மிகவும் பழகிய நண்பர்களின் படங்களைத் திறந்து வைப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சியுண்டு.

சிந்தனையில் - அறிவு வளர்ச்சியில் - புதுப்பார்வை, புது உணர்ச்சி இன்று உண்டாகியிருக்கின்றன. நன்கு சிந்தித்தல் வேண்டும் என்ற உணர்வு தலைதூக்கி நிற்கிறது. எந்த நாட்டு மக்கள் அறிவியல் துறை அறிவைத் தங்கள் தாய் மொழியிலேயே பெறுகிறார்களோ அந்த நாட்டு மக்களதாம் புதுப்புதுக் கருவிகள் கண்டுபிடிப்புக்கள் கருத்துக்களிலும், விஞ்ஞானத் துறையிலும் ஏனை நாட்டினரை மிஞ்சி நிற்கின்றனர் என்பதை நாம் அறிய முடிகிறது. எல்லாக் கலைகளையும் தமிழில் பெறவேண்டும் என்ற உணர்ச்சி இன்று தோன்றியுள்ளது. எல்லாக் கலைகளையும் தமிழ் மொழி வாயிலாகவே பெறவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நல்ல சூழ்நிலைக்கு அரசியலாரும் துணை நிற்கின்றனர்.

“தமிழ் வாத்தியாருக்குத் தமிழ் தவிர வேறென்ன தெரியும் என்ற காலமொன்றிருந்தது. ஆங்கிலம் அறிந்தவருக்கு உலகியல் தெரியும் என்று கருப்பட்ட காலமது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசினால் பெருமைப்பட்ட காலம் நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுக்கு முன்பிருந்தது. அந்தந்தக் காலத்தில் ஆங்கிலம் அறிந்த வர்களும் தமிழ் அறிந்தவர்களும் ஒதுங்கி வாழ்ந்தார்கள். இரு சாராரும் கலந்து பழகும் வாய்ப்பு - சூழ்நிலை இல்லை.

தமிழ் கற்றவர்களையும், ஆங்கிலம் கற்றவர்களையும் கலந்து எண்ணவைத்த முதல் தமிழன் கா. சு. பிள்ளைதான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோது சட்டக் கருத்துக்களையும், தத்துவக் கருத்துக்களையும் நல்ல தமிழில், மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவார். கேட்கும் மாணவர்கள் இக்கருத்துக்கள் தமிழ் நூல்களில் உள்ள நல்ல கருத்துக்கள் என எண்ணுவர். இக் கருத்துக்கள் ஆங்கில நூல்களில் உள்ளன என எடுத்துக் கூறி மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவார்.

ஆங்கில நூல்களின் கருத்துக்களைத் தமிழில் மிக நயமாக எடுத்துக் கூறுவார்கள். ஆங்கிலத்தில் வல்லுநர்கள் அதன் நயத்தை நல்ல தமிழில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினால் கேட்போர் தமிழிலேயே சிந்திக்கத் துவங்குவார்கள். இந்த அரும் பணியை ஆரம்பத்தில் எடுத்துப் பரப்பிய முதல் தமிழ் மகன் கா. சு. பிள்ளைதான். இதனைத் தமிழன் மறக்கமுடியாது.

வாழ்க்கைக்கு ஏற்ற கல்வி பெறவேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டியவர் அவரே. படிப்பது வேலை செய்ய என்ற சூழ்நிலை மாறி, படிப்பது அறிவுவளர என்ற சூழ்நிலை ஏற்படவேண்டு மென்று எண்ணினார். அவரிடம் பயின்ற மாணவர் பலர் அரசியல் வாதிகளாக மாறிவிட்டனர். இன்று அமைச்சர்களாகவும் உள்ளனர்.

கா. சு. பிள்ளையவர்கள் திருமுறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். சிவபூசையினால்தான் அறிவில் தெளிவு பெறமுடியும் என்ற திடமான நம்பிக்கை கொண்டவர். தஞ்சையில் ஒரு முறை மாணவர்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்களை விளக்கிக்கூறக்கேட்டபோது சைவத்தின் கருத்தை 5 நிமிடத்தில் விளக்கிக் கூறினார். எந்தக் கருத்தையும் விரிவாகவும் சுருக்கமாகவும் கூறவேண்டும். அதுதான் அறிவுத் தெளிவு என்று கூறினார்கள்.

ஆயிரத்தில் ஒருவர் இருவர்தாம் சித்தாந்த நூல்களைப் பயில்கின்றார்கள். காரணம் தமிழ் இலக்கண இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றிருந்தால்தான் சித்தாந்த நூல்களைப் படித்தறிய முடியும். எளிமையாகச் சித்தாந்த நூல்களை அனைவரும் படித்துணரும் வண்ணம் மெய்கண்ட சாத்திர நூல்கள் பதினான்கை முதன் முதலில் இனிய எளிய தமிழ் எரை நடையில் தந்தவர்கள் கா. சு. பிள்ளை அவர்கள்தாம். அதேபோல் இலக்கிய வரலாறு தமிழில் முதலில் தந்தவர் எம். எல். பிள்ளைதாம். ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு இயற்றியவர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளையவர்கள். தமிழகத்தில் கற்றோர்க்கு அணியாகத் திகழ்ந்தவர் கா. சு. பிள்ளையவர்கள்.

இயற்கையறிவின் வரிவடிவம்தான் திருவரங்கனார். எங்கே யார் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவருடன் ஒரு நிமிடம் பேசினால்போதும் அறிந்து விடுவார்கள். செயற்கரிய காரியமாற்றுவதில் நுண்மாண் நுழைபுல மிக்கவர்கள். கழக வாயிலாகத் தமிழில் உள்ள நூல்கள் அனைத்தும் வெளிவரவேண்டுமெனத் திருவரங்கனார் எண்ண மிட்டார்கள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெருமுயற்சி மேற் கொள்வார்கள்.

திருவரங்கனார் அவர்கள் கழகத்தைத் துவங்கிய காலத்தில் மிக அஞ்சாநெஞ்சத்தோடு தொடங்கினார்கள். தொல்காப்பியம் எழுத்ததிகாரம், தேவாரம் ஆகிய நூல்களைக் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அந்தக் காலத்திலேயே வெளியிட்டார்கள். வெள்ளித் தகட்டில் பொன்னெழுத்துக்களில் பொறித்தாற்போல இந் நூல் களைப் பதிப்பித்தார்கள். அப்போது மூவர் தேவாரத்தின் விலை ரூ. 16 என எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் அவ்வளவு விலை கொடுத்து நூல்கள் வாங்குவோர் மிகக் குறைவு.

திருவரங்கனார் கூறுவார் புத்தக மதிப்புக்கன்று இந்த வில்லை. வாங்குகிறார்களோ இல்லையோ அது வேறு. அழகான காகிதத்தில் அச்சிட வேண்டும். நூல்களின் மதிப்பு - தரம் குறையக் கூடாது. இப்படிப் போனால் லாபம் வராதே என்று சிலர் குறைபட்டுக் கொண்டனர். ஆனால் திருவரங்கனார் அஞ்சாமல் காரியமாற்றினார்.

தான் ஈடுபட்ட தமிழ்த் தொண்டில் தம் இளவலையும் ஈடுபடுத்தினார். வேறு துறைக்குப் பயின்ற திரு. சுப்பையா பிள்ளை யைத் தம்மோடு அழைத்துத் தம் துறையில் புகுத்தினார். அதன் விளைவு தமிழ்நாட்டுக்குப் பெரும் பயனாக அமைந்தது. தவங் கிடந்தார் திருவரங்கனார். தவப் பயனாக வந்தவர் சுப்பையா பிள்ளை. அவர்கள் எந்த வேகத்தோடு எந்த ஊக்கத்தோடு பணி யாற்றினார்களோ, அந்த வேகத்தில் அந்த ஊக்கத்தோடு அவர் தம்பியும் பணியாற்றுகிறார். உடலைக் கொடுத்து, உயிரைக் கொடுத்து உழைக்கும் ஒரு தம்பியைப் பெற்றார் என்றால் அதுமிகை இல்லை.

தாமும் தம் உடன் பிறந்தாரும் கழகத்திற்கே உரியவர்களாகி அதன் மூலம் தமிழ் மணம் எங்கம் பரப்பி வருகிறார்கள். இன்று எழுந்துள்ள ‘திருவரங்கனார் நிலையக் கட்டிடம்’ அவர்களின் உழைப்பின் பலனாகும். அன்னார் திருவுள்ளம் போல் கழகம் மேலும் மேலும் வளர்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.

செய்தி மடலில் ஓர் இனிய காட்சி


“செய்தி மடல்” என்பது சக்தி சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் திங்கள் வெளியீடு. இவ்வாண்டு சூலைத் திங்கள் வெளியீட்டில் பல காட்சிகள் தோன்றிக் காண்பார்க்கும் படிப்பவர் க்கும் இன்பம் செய்கின்றன. அவற்றுள் ஓன்று ஆலைத் தொழிலாளர் ஒருவர்க்கு நடந்த திருமணக் காட்சி. அது, பார்த்து மகிழ்ந்த என் மனத்தைப் பரவசப் படுத்தியதுடன் நல்ல பல எண்ணங்களைத் தூண்டி விட்டது. ஆலை முதல்வர், அருள்வள்ளல் திரு நா. மகாலிங்கம் அவர்கள் மணமகனுக்குப் பரிசு வழங்கும் அரிய காட்சி. மணமக்களின் பெற்றோர்கள் கீழே அமர்ந்திருக்க, வள்ளல வர்கள் ஒருதட்டில் பரிசுகளை வைத்து நின்று அன்பு நிறைந்த முகமும் அருள் தவழும் முகிழ் நகையும் கொண்டு. வழங்குகிறார். பரிசு வழங்குவதும் பெறுவதுமாகிய நிகழ்ச்சி காட்டும் நிழற் படங்களில் இருவரும் படமெடுக்கும் கருவியை நோக்குவதுதான் பெரும்பான்மை; இங்கே, வழங்குவோரும் பெறுவோரும் ஒருவரை யொருவர் பார்த்து மகிழ்ந்த வண்ண முள்ளனர். இதனால், இருதிறத்தார்க்கும் படமெடுப்பதில் கருத்தில்லாமை இனிது விளங்குகிறது. பரிசு பெறுவோர் வழங்குபவரின் பெருந்தன்மையை வியக்கின்றார்கள். வழங்குகிற வள்ளல் பெறுவோரின் இன்முகம் கண்டு உவகை நிறைந்த உள்ளத்தராய் அகம் மலர்கின்றார்.

பரிசு வழங்கும் வள்ளால் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் உலவாப் புகழ் பெற்ற ஒரு பெருந் தொழிலதிபர். பரிசு பெறுவோர் அவ்வள்ளலின் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழி லாளர் பல்லாயிரவருள் ஒருவர். எளிய தொழிலாளி யொருவரின் திருமணத்தில் பெறலரும் புகழால் பாரத நாட்டுப் பண்புடைச் செல்வர் பலரும் நன்கறிந்து பாராட்டப் பெறும் தொழிலதிபர் கலந்து கொண்டு பரிசு தந்து சிறப்பிப்பது காண்டற் கரிய காட்சி யாகும். இந்தக் காட்சியின் உள்ளீடாக இருப்பது பெரிய தொழிலதிபர்க்கும் எளிய தொழிலாளிக்கும் இடையே நிலவும் உண்மையன்புத் தொடர்பாகும். இத்தகைய இனிய தொடர்பு நாட்டில் உள்ள தொழில் நிறுவன முதல்வர் எல்லார்பாலும் உளதாயின் நம் நாடு எத்துணைச் சிறந்த தொழில் வளம் பெற்றிருக்கும் என நினைந்த என் மனம், இக் காட்சியால் குளிர்ப் பெய்தி இறும்பூது கொண்டது.

எங்கோ அடித்த புயல் எங்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கெடுத்தது என்பதுபோல, மேலை நாட்டில் தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர் கட்கும் உண்டான வேறுபாடு நம் நாட்டுத் தொழில் வளர்ச்சியைக் கெடுத்து விட்டது. மேலை நாட்டுத் தொழிலதிபர்கள் தொடக்கத்தில் பொருளாசைப் பேய் பிடித்துத் தொழிலாளர்களை விலங்கினும் கீழாக மிதித்துக் கொடுமை செய்தனர். அதனால், தொழிலாளர் உள்ளத்தில் தொழிலதிபர் முதல்வர் ஆகியோர் மேல் உண்டான வெறுப்புப் பின்னர்ப் பகைமையாய்க் கேடு செய்ய லுற்றது. நம் நாட்டுத் தொழிலதிபர்கள் தொழில் வளர்க்கத் தொடங்கியபோது அத்தகைய தீமைக்கு இடமில்லாமல் இருந்தது. தொழிலதிபரும் தொழிலாளர்பால் அருளுள்ளமும தொழிலாளர் அறவுணர்வும் கொண்டு பொருட் பெருக்கத்துக்குப் பாடுபட்டனர். இருபாலாரிடத்தும் முகிழ்த்து மலர்ந்து நறுமணம் கமழ்ந்தது தொழில் வளம். அரைகுறை நூலறிவு படைத்து வாய்ப்பறை கொட்டும் தீய சக்திகள் தொழிலாளர் சூழலிற் புகுந்து அவர்களது அறியாமையைத் துணைக்கொண்டு பொருளுற்பத்தி பெருகா வண்ணம் கேடு சூழ்ந்தன. வேலை நிறுத்த வுருவிலும் அரசியற் கட்சிப் பூசலுருவிலும் உற்பத்திப் பெருக்கத்துக்கு அத்தீய சக்திகள் தீது புரிகின்றன. அவை தொழிலாள ரினத்தையும் சாராமல், தொழில் முதல் வரினத்தையும் சாராமல், வாழ்தல் வேண்டி இடை நுழைந்து தொழிலாளரை உறிஞ்சி யுண்ணும் வம்பர் இனமாகும். அந்த இனத்தின் சொல் வழித் தொழிலாளர் இயங்குவது அரிசன முன்னேற்றப் பணி, நாட்டு மக்களை அரிசனங்களாக்கி யொதுக்கிய இனத்தின் தலைமையில் இயங்கச் செய்வது போலாம். அத்தீய சக்திகள் நுழையாதபடி தொழிலாளரும் தொழிலதிபரும் கூடிக் கலந்து நிலைமையை ஆய்ந்து செய்வன தவிர்வன தெளிந்து கொள்ளும் நன்னாள் தோன்றி நலம் புரியத் தொடங்குமாயின் தொழிலாளர் நலம் பெறுவர்; தொழிலதிபர் வளமுறுவர். பொருள் உற்பத்தி மிகப் பெருகும்; நம் நாடும் பொன்னாடாகும்.

செந்தமிழ்ச் செல்வி

உயிர்களின் நுண்ணறிவு


மக்களுயிரையும் ஏனை உயிர்களையும் வேறுபடுத்தி நோக்கு கின்றவர்கள், மக்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கூறுங்கால், மக்களுயிர், தான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் காரணங்கொண்டே செய்கின்றது என்றும், ஏனை உயிர்கள் செய்யவேண்டுமென்ற கட்டாயமின்றித் தாமாகவே செய்கின்றன என்றும் கூறுகின்றனர். உதாரணமாக ஒரு பறவை, கூடு கட்டுவதாக வைத்துக் கொள்வோம்; அப்பறவை, வைக்கோல், காகிதம், நார், குச்சி முதலியவற்றைக் கொண்டுவந்து, தன் முன்னையவினம் செய்துவந்தபடியே கூடு கட்டுகிறது. அதற்குக் கூடு கட்டுவதாகிய அச்செயலைக் கற்றுக்கொடுத்தவர் யார்? ஒருவருமில்லை. ஆனால், அதற்குக் காரணம் ஒன்று உண்டு. அஃது அதற்குத் தானாகவே ஏற்பட்டுள்ள ஒரு குணம்; இயற்கையறிவு - ( Instinct). மனிதன் மட்டும் காரணத்துடன் வேலை செய்யவில்லை; சில தந்திரமான பிராணிகளும், நுண்ணறிவு படைத்த மிருகங்களும் காரணங்கண்டு உழைக்கின்றன. அவற்றுள் சிறப்புடையவை யானையும் நாயுமாகும். அவை செய்யும் தொழில்கள் சிலவற்றை உற்றுநோக்கின், காரணமின்றித் தாமாகவே செய்தல் அவற்றிற்கு இயலாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் விளங்கும்.

உயிர்களுள், மக்களுயிர் ஒழிய ஏனையவற்றுள், மிக்க நுண்ணறிவு உடையது யானை என்றே கூறலாம். அந்நுண்ணறிவை விளக்கும் கதைகள் மிகப்பல கூறப்படுகின்றன. பழகிய யானையின் செய்வகை களை என்னென்று கூறமுடியும்! ஓர் யானை மரக்கட்டை யொன்றைத் தூக்கி வைக்கவேண்டிய விடத்தில் சிறிதும் தவறுதலின்றி வைக்குமானால், அவ்யானையின் மதிநுட்பத்தை என்னென்பது? அதற்குச் சிந்திக்கும் சக்தி யில்லையானால், இவ்வாறு செய்தல் கூடுமா?

ஒரு சிற்றெறும்பை எடுத்துக்கொள்வோம். அதனுடைய நுண்ணறிவு வியப்புத் தருவதாகிறது. இதைக் குறித்ததொரு கதையும் உண்டு. இது கதையாயினும், இதன்கட் கூறப்படும் நிகழ்ச்சிகள் உண்மையாய் நடப்பனவேயாகும். உயிர்நூலறிஞர் ஒருவர், ஒருநாள் தம்முடைய வீட்டிலிருந்த சர்க்கரைப் பாத்திரத்தில் எறும்புகள் நிறைந்திருக்கக் கண்டார். உடனே தம்முடைய மேசையின் மீது அப்பாத்திரத்தை வைத்து, மேசைக்கும் சுவருக்கும் சம்பந்த மின்றி விலக வைத்துவிட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எறும்புகள் அங்கே வந்து சூழ்ந்துகொண்டன. பிறகு, அவற்றை முற்றிலும் ஓட்டிவிட்டு, அப்பாத்திரத்தைக் கொண்டு சென்று ஓர் உரியின்மீது வைத்தார். அங்கும், அவை சுவரின் வழியாகச் சென்று உரிக்கயிற்றின்மூலம் ஊர்ந்துவந்து குழுமிவிட்டன. என்ன செய்வார்? மறுபடியும் ஓர் உயர்ந்த பீடத்தின்மீது நீர்நிறைந்த தட்டொன்றின் நடுவில் அப்பாத்திரத்தை வைத்தார்; ஆனால் அப்பாத்திரத்தின் வாயைத் திறந்து வைத்திருந்தார்.. எறும்பனைத்தும் தட்டின் அருகில் வந்தன; பார்த்தன; யோசித்தன. அப் பாத்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேர்மேற்புறச் சுவரில் ஒரு துவாரமிருந்தது. அதன் மூலம் ஒவ்வோர் எறும்பும் ஏறிவந்து சர்க்கரைப் பாத்திரத்துள் துணிச்சலுடன் குதித்தது. மறுநாள் அந்த அறிஞர் பாத்திரத்துள் எறும்புகள் இருக்கக் கண்டு பேராச்சரியம் கொண்டார். கடைசிமுறையாக வேறொரு தடை செய்துபார்ப்பது எனக்கருதி, அவர்தம் தோட்டத்தின் மத்தியில் ஒரு பீடத்தை வைத்துத் தண்ணீர் நிறைந்த தட்டொன்றை அதன்மேல் இருத்தி, அந்நீர் நடுவே சர்க்கரைப் பாத்திரத்தை வைத்திருந்தார். இப்பொழுது சிற்றெறும்புகள் யாது செய்தன? சில வைக்கோல்களையும், இலைகளையும் கொணர்ந்து, தட்டிற்கு வெளியிலிருந்து, பாத்திரம் வரைக்கும் பாலம்போன்ற ஒரு பாதை கட்டி முடித்தன. என்ன நுண்ணறிவு பார்மின்! பின்னர் அவையனைத்தும் பாத்திரத்தை அடைந்தன. உயிர்நூலறிஞர் அவற்றின் உலையா முயற்சியினையும், அறிவின் ஒட்பத்தையும் கண்டு பிரமித்துவிட்டனராம்.

எறும்பிற்கு அடுத்ததாக இடையனுடைய நாயைக் கூறலாம். அந்நாய் தன் தலைவனுடைய மந்தையிலுள்ள ஓர் ஆடு, தவறி மற்றொரு மந்தைக்குட் புகுந்து சேர்ந்துவிடுமாயின், அஃது அதனைக் கண்டுபிடித்து விடுகிறது. தலைவனிடும் பணிகளைத் தவறின்றிச் செய்யும் தகுதிப்பாடு மிகவுடையது.

குதிரையும், குரங்கும் மேற்கூறியவற்றைப்போல் அவ்வளவு நுண்ணறிவு உடையவல்ல; எனினும் அவை தந்திரம் மட்டும் சிறிது உடைய எனக் கூறலாம். ஆகவே, உயிர்வகைதோறும் நுண்ணறிவு உளதென்பது இதனாற் கூறியவாறாம்.

அருள் விருந்தளிக்கும் அழகரடிகள்


திருக்குறள் பீடம் குருகுலம் அழகரடிகள்
மணிவிழாமலர் 2.5.1965
குருகுலம் அழகரடிகளின் மணிவிழா நிகழ்வது கேட்க என் உள்ளம் பெருமகிழ்ச்சி எய்துகின்றது. மக்கட்குப் பெரும்பயன் நல்கும் நல்வாழ்வு வாழ்ந்த நல்லோர் ஒருவருக்கு மணிவிழா நிகழ்வது யாவரும் மனங் குளிரக்கண்டு இன்புறத்தக்க தொரு பெருவாய்ப்பு.

அடிகளார் பாலசுந்தரமாகவும், இளவழகனாராகவும் இருந்து அரிய தமிழ்ப் பணி ஆற்றியது எனக்கு நினைவில் வருகிறது. அன்று கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் சிவத்திரு. மறைமலை யடிகள் தலைமை தாங்கிய போது அவரோடு உடன் வந்து உடனிருந்து செய்த இனிய சொற்பொழிவு மறக்கத்தக்க தன்று.

அவர்கள் இளவழகனாய்ச் சென்னையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் புலமைப்பணி செய்த காலத்தில் அடிகளாரை அடிக்கடி கண்டு அளவளாவி இன்புறும் வாய்ப்பு எனக்கு உண்டா யிற்று. சங்க இலக்கிய இன்கவித்திரட்டின் முதற்பகுதி அச்சாகிய காலத்தே அதன்நலங்கண்டு மிக்க இன்புற்றவர்களில் நானும் ஒருவன்.

நெல்லையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் நடத்திய மெய் கண்டான் மாநாட்டில் அழகர் அடிகள் கலந்து கொண்டதும், அவர்கள் சித்தாந்த சைவத் தத்துவங்களை விளக்கிய திறமும் மாநாட்டிற் கூடியிருந்த அறிஞர் பலர்க்கும் அருள் விருந்தாக விளக்கமும் இன்பமும் தந்தன.

அவரைக் காணும் போதெல்லாம் எனக்கு என்னையறி யாமலே ஓர் நன்மதிப்பும் அன்பும் உண்டாகும். திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் அவர் உள்ளத்தில் தோய்ந்து உருவாகியிருந்த செயல்திட்டம் ஒன்றை என்னிடம் சொன்ன போது, எனக்கே மிக்க வியப்புத் தோன்றிற்று. பெருஞ்செல்வமும் செல்வாக்கும் உள்ளதோடு திருக்குறள் வழங்கும் உண்மையறத்தில் ஊற்றமும் உடைய பெருமகன் மேற்கொள்ளற் கமைந்த திட்டம் இது; இக்கனவு நனவாயின் தமிழகம் பெருநலம் எய்தும் என்றேன். அண்மையில் அடிகளாரும் நானும் திருப்புத்தூரில் கலந்து உரையாடிய போது, திருக்குறட் குருகுலம் உருவாகியிருப்பது கேட்டறிந்து பெருமகிழ்ச்சி கொண்டேன். மாம்பாக்கத்தில் அக் குருகுலம் தோன்றி அரும்பணி புரிந்து வருவது அறிய என்மனம் மட்டிலா மகிழ்ச்சி கொண்டது. அன்று இராமலிங்க வள்ளலார் வடலூரில் இடம் கண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் சத்திய ஞானசபையும் கண்டது நினைவிற்கு வந்தது. “பெரிதே உலகம்; பேணுநர் பலரே” என்ற சங்கச் சான்றோரது உரை மெய்ம்மை யுரையாவது கண்டேன்.

அடிகளார் பணிந்த நடையும், வணங்கிய மொழியும், இணங்கிய முகப் பொலிவும் உடையர். யாரொடும் இனிமை கனியப் பேசும் இயல்பினர். சில சொற்களால் தமது ஈடு எடுப்பற்ற புலமை நலம் நன்கு புலப்படச் செய்யும் அவரது உரையாடல் கேட்போரைப் பிணிக்கும் தன்மை நிறைந்தது. அடிகளாரின் கையெழுத்து எனக்கு உயர்திரு மறைமலையடிகளாரின் கையெழுத்தை நினைப்பிக்கும். குரலிசையும் மறைமலை யடிகளாரின் நெருங்கிய தொடர்பால் மாறியிருக்குமோ என்று எண்ணி ஒரு முறை அவரையே கேட்டு விட்டேன். மறைமலையடிகளார் அதற்கு விடைகூறாமல் நகைத்து, “இளவழகனுக்குத் துறவுள்ளம் உண்டு” என்றார்கள்.

அரிய கருத்தமைந்த நூற்பொருளை விளக்குவதில் குருகுலம் அடிகளார் ஒருதனிநலம் வாய்ந்தவர். எதனையும் நன்கு எண்ணித் தெளிவு கொண்ட பின்பே வெளியிடுவர். வெளியிடுங்கால் இடையிடையே எழும் ஐயங்களையும் தாமே எண்ணித் தெளிவு படுத்துவர்.

குருகுலம் அடிகளார் ஒழுக்கம் விழுப்பம் தரும் என்பதில் உறுதியான கடைப்பிடியுடையர். இழுக்கு எய்தாத ஏற்றமுடைய ஒழுக்கம் உண்மை அறிவாலும் திண்ணிய மனத்தாலும் விழுப்பம் உறும் என்பதை அடிகளார் நன்கு தெளிந்தவர், அவ்வொழுக்கம் நாடு முழுதும் பரவவேண்டும் என்ற நாட்டம் அவர் மனத்தில் பல்லாண்டுகட்கு முன்பே குடிகொண்டது. அதன் விளைநிலமாக மாம்பாக்கம் குருகுலம் அமைந்துள்ளது.

இவ்வாறு தம் நினைவிற் பலகாலும் உருப்படுத்திய நல்லறப் பணியைச் செயற்படுத்திக் கண்குளிரக் கண்டு மனமார மகிழும் பேறு தவமுடையார்க்கன்றி ஆகாது. தவச்செல்வராகிய அடிகள் இவ்வகையில் பெருவெற்றி எய்தியவராதலால் அவரது மணி விழா மாண்புடைய விழாவாகும்.

இம்மணிவிழா இன்பத் திருவிழாவாகுக என வாழ்த்தி அடிகளார் இவ்வாறே பொன்விழா, வயிர விழா எனப்படும் பலவிழாக்களைக் கண்டு பல்லாண்டு பல்லாண்டு இன்புற அங்கயற் கண்ணியோடு அமர்ந்த ஆலவாய் அண்ணலின் வண்ணத் திருவடி களை யெண்ணிப் பரவுகின்றேன்.

திருக்குறள் பீடம் குருகுலம்

அழகடிரகள் மணிவிழா மலர் 2.5.1965

-   அந்தணர் என்னும் சொல் முற்றத் துறந்த முனிவர்க்கே உரியதென்பது திருவள்ளுவர் கருத்து; சாதிப் பெயரன்று என்பது அவர் நூலகத்தே விளங்கும். நச்சினார்க்கினியர் உரையும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.
-   வியாசபாடியமும் தத்துவ வைசாரதியும் IV - II
-   அத்த சாலினி பக். 89
-   பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியரும் மறைமலையாரின் மாணவருமான மணி. திருநாவுக்கரசரின் தம்பி மணி. கோடீசுவரரன். வேலூர் மகந்தை உயிர்நிலைப்பள்ளித் தலையாசிரியர். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளர்.

1.  இதிகாசங்கள் என்ற தலைப்பில், இதன் சுருக்கம், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தால் ஒலிபரப்பப்பட்டது.