கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
நூல் அமைப்பு, அறிமுகம்,பாடல் 1 & 2
கலேவலா, பின்லாந்தின் தேசீய காவியம்: ஓர் அறிமுகம் TOP
அஸ்கோ பார்பொலா (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம்)
(ஆங்கில அறிமுகத்தின் தமிழாக்கம்)
கலேவலாவும் பின்லாந்தின் ஆதிகால நாட்டுப் பாடல்களும்
உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றான கலேவலா என்னும் பின்லாந்தின் தேசீய காவியம் 1849ல் ஒரு சரியான உருவத்தைப் பெற்றது. ஆனால் இது நேரடியாக வாய்மொழிப் பாடல்களின் அடிப்படையிலிருந்து கிறிஸ்துவின் வரலாற்றுக் காலத்தின் முதலாவது ஆயிரம் வருடப் பகுதியில் உருவம் கொண்டது. சிறந்ததும் முற்றிலும் பாட பேதங்கள் நிறைந்ததுமான தொன்மையான நாட்டுப் பாடல்களிலிருந்து சிறந்த மொழிநூல் வல்லுரான எலியாஸ் லொண்ரொத் (Elias Lo*nnrot, 1802 - 1884) அவர்களாலும் மற்றும் பின்லாந்தின் நாடோ டி இலக்கியத்தின் முன்னோடிகளாலும் கரேலியாவின் காட்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டன.
கரேலியா ஒரு மிகப் பெரிய பிரதேசம். இப்பொழுது அதன் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது; (படம் 1, வர்ணப் படம் 1). இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, இருபதாம் நூற்றாண்டு வரைகூட, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்தன; ஏனென்றால், புனரமைத்தலும் லுத்தரன் கிறிஸ்தவ இயக்கமும் (Lutheran Christianity) ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த ஆர்தடக்ஸ் தேவாலயம் (Orthodox Church) பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே காரணமாகும்; இதுவே பின்னாளில் புறச் சமயப் பரம்பரையை அழித்தொழிக்க முறைப்படி இயங்கலாயிற்று. கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனைக் கதைகளையும் பிரதிபலித்தாலும், இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி.1155ல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறிஸ்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.
1548ல் அச்சிடப்பட்ட புதிய ஏற்பாட்டின் மிக்கல் அகிரிகோலாவின் (Mikael Agricola) மொழிபெயர்ப்பே பின்னிஷ் மொழியில் நிலைத்திருக்கும் பழைய நேரடித் தொடர்புடைய நூலாகும். நெருங்கிய உறவுடைய கரேலிய மொழியில் காணப்படும் மிகச் சிறிய மாதிரிக் குறிப்புகள் முன்று நூற்றாண்டுகள் பழமையானவை. மிலாறு மரப்பட்டையில் எழுதப்பட்டிருந்த இந்த மந்திரக் குறிப்புகள் ரஷ்ஷியாவில் வொவ்கொறட் (Novgorod) நகரில் காண்பட்டன. இந்த நாட்டுப் பாடல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் சேகரிக்கப்பட்ட போதிலும், இவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம்வரை செல்வதோடு வெவ்வேறு பரந்த பிரதேசங்களில் பெறப்பட்ட பேரளவு கருப்பொருட்களைக் கொண்டவை; இவை பின்னிஷ் மொழியினதும் மதத்தினதும் ஆதிகால கட்டங்களுடன் தொடர்புடைய மிக முக்கியமான நினைவுச் சின்னங்களாகும்.
இன்றைக்கு மொத்தமாகச் சுமார் இரண்டு கோடி மக்களால் பேசப்படும் யூராலிக் மொழிக் குடும்பத்தின் (Uralic language family) கிளைமொழியே பின்னிஷ் மொழி என்று தகுதி வாய்ந்த பன்மொழி வல்லுநர் காட்டியுள்ளனர். (இதில் அதிகம் மக்களால் பேசப்படும் மொழிகள் ஹங்கேரிய, பின்னிஷ், எஸ்தோனிய மொழிகளாகும்; முறையே ஒரு கோடியே நாற்பது லட்சம், ஐம்பது லட்சம், பத்து லட்சம் மக்களால் பேசப்படுகின்றன. மற்றைய மொழிகள் ரஷ்ஷியாவில் சிறிய சிறுபான்மையினரால் பேசப்படுகின்றன). கலேவலாவின் மொழியியலின் பின்னணி பற்றியும் இங்கே சுருக்கமாக சொல்லப் போகிறேன்; ஏனெனில் இது இந்திய மொழிகளுடன் சுவையான தொடர்புகளைக் கொண்டது.
யூராலிக் - திராவிட மொழிக் குடும்பங்களிடையே மரபுவழியுறவு?
கி.மு. 6000-4000க்கு முன் பின்னாக, 'முன்-யூரல்' மொழி பேசியவர்கள் (Speakers of the Proto-Uralic language) ஐரோப்பாவின் வடகீழ்ப் பிரதேசத்துக் காட்டுப் பகுதிகளில், யூரல் மலைகளின் இரு பக்கங்களிலும் வேடராகவும் மீனவராகவும் வாழ்ந்தனர். சைபீரியாவின் சமோயெட்ஸ (Samoyeds) என்னும் மொழி யூரல் மொழிக் குடும்பத்தின் கிழக்குக் கிளையை பிரதிநிதித்துவம் செய்த அதே வேளையில், கி.மு.4000-2500க்கு முன்பின்னாக மத்திய ரஷ்ஷியாவில் வாழ்ந்த பின்னிஷ் - உகிரியர்களின் ஆதிமுன்னோர் (Proto - Finno - Ugrians) இதன் மேற்குக் கிளையை உருவாக்கினர்.
திராவிட மொழிக் குடும்பத்தின் தூரத்து உறவுகளாக இருக்கக்கூடிய சாத்தியங்களில் யூராலிக் மொழிக் குடும்பம் (அல்லது அதன் பின்னோ-உகிரிக் கிளை Finno - Ugric branch) திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தேசக் கோட்பாட்டை ஆதரித்த மிகப் பிரபலமான திராவிட இயல் அறிஞர்கள் பலரில் ('சிதியன்' Scythian மொழிகள் பேசிய) றொபேட் கால்ட்வெல் (Robert Caldwell), தோமஸ் புறோவ் (Thomas Burrow 1943-46), எம்.எஸ். அன்ட்றோனொவ் (M.S.Andronov) போன்றோரும் அடங்குவர். நான் திராவிட இயலின் பின்லாந்து மாணவனாக இருப்பதால், இயல்பாகவே இதில் அக்கறை கொண்டதோடு பல வருடங்களாகவே இந்தத் தலைப்பில் ஒரு நூல் எழுதக்கூடிய அளவு விடயங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். எனினும் இந்த விடயத்தில் கருதப்பட்டபடி தூரத்து மரபுவழியுறவை மொழி வழியாக உறுதிப்படுத்த முடியாது என்று நம்பியதால், இவ்வேலையை நான் முடிக்கவேயில்லை. இரண்டு ஆதி மொழிகளுக்கிடையே உள்ள ஒழுங்கான குரலொலித் தொடர்புகளை நிலைநாட்டுவதன் முலம் மட்டுமே மரபுவழியுறவை உறுதிப்படுத்த முடியும். இதை நம்பக்கூடிய வகையில் செய்வதனால், இரண்டு மொழிகளுக்குமிடையே ஒப்பு நோக்குவதற்குக் குறைந்தது நூறு சொல்லாக்க விளக்கங்களாவது தேவை. வேறு விதமாகச் சொல்லப் போனால், இந்த வேலையைத் தொடங்கி ஆதி மொழிகளுக்காக இரண்டு பக்கங்களிலும் புனரமைப்புச் செய்து பார்ப்பதற்குக் குறைந்தது நூறு சொற்களின் சோடிகளாவது தேவை; அத்துடன் இத்தகைய புனரமைப்புகள் குரலொலி சொற்பொருள் இரண்டிலும் நியாயமாகவும் நெருக்கமாகவும் ஒன்றோடொன்று ஒத்திருத்தல் வேண்டும். 'முன்-பின்னோ-உகிரிக்' மற்றும் 'முன்-சமோயேதிக்' மொழிகளும் (Proto-Finno-Ugric and Proto-Samoyedic [Janhunen 1981]) பகிர்ந்து கொண்ட சுமார் 140 ஏற்கப்பட்ட சொல்லாக்க விளக்கங்களில் மட்டும் யூராலிக் குடும்பத்தின் புனரமைப்புகளே அமைந்திருக்கின்றன. மிகப் பழமையான உத்தேச யூராலோ-திராவிட மொழிகளின் (Uralo-Dravidian) பெரும்பிரிவில் சுமார் 20க்கு மேற்பட்ட சொல்லாக்க விளக்கங்கள் இருக்கலாம் என்று யாருமே விதிமுறைப்படி எதிர்பார்க்க முடியாது; இவை உத்தேசக் கோட்பாட்டை மெய்ப்பிக்கும் அளவுக்குப் போதியன அல்ல. ஆயினும் இவை உத்தேசக் கோட்பாட்டை நிச்சயமாக மறுப்பவையல்ல. முடிவில் எல்லா மொழிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக வரலாம்; பூகோளத்தைச் சுற்றிப் பரவியுள்ள மனித இனத்தின் உத்தேசக் குடும்ப மரத்தை உயிரியலிலிருந்து வருவித்த முடிவுடன் எல். எல். கவல்லி-ஸ்பொர்ஸா (L. L. Cavalli-Sforza) சமீபத்தில் ஒப்பிட்டிருக்கிறார்.
(எழுத்துக் குறியீடுகள் அமைப்பதில் ஏற்பட்ட சிரமத்தினால் இதில் ஒரு பந்தி தவிர்க்கப்பட்டது)
மேலும், 'முன்-யூராலிக்' 'முன்-திராவிட' மொழிகள் அமைப்பிலும் பல விதங்களில் ஒத்திருக்கின்றன; உதாரணமாகப் பகுதி நிலையிலே இணையும் இயல்புடைய சொல் வடிவ அமைப்பையும் அதன் தொடர்பான (தொடக்க மெய்யெழுத்துச் சேர்க்கையற்ற) தனியசை அமைப்பையும் கூறலாம். சில இலக்கண வடிவங்களும் ஒத்திருக்கின்றன. 'இன்' உடைமையைக் குறிக்கும் உருபாகவும் (யூ.) அல்லது எழுவாயொழிந்த வேற்றுமை வடிவாகவும் (திரா.) அல்லது 'இ' இறந்த கால அமைப்பாகவும் இருப்பதைக் கூறலாம்; (இது 'முன்-பின்னோ-உகிரிக்' (Proto-Finno-Ugric) பகுதியில் யூராலிக் பிரிவுக்கு மட்டுமே பொருந்தும்; சமொயேடிக் வினை விகுதியான (Samoyedic Verbal suffix) 'y' எந்தக் காலங்களையும் குறிப்பதாகத் தெரியவில்லை.)
பின்னோ-உகிரியருக்கும் முற்கால ஆரியருக்கும் இடையிலான ஆதிகாலத் தொடர்புகள்
சுமார் கி.மு. 4000-2500 ஆண்டுகளில் மத்திய ரஷ்ஷியாவின் காடுகளில் வாழ்ந்த 'முன்-பின்னோ-உகிரியரு'க்கு (the Proto-Finno-Ugrians) தென் ரஷ்ஷியாவின் சமவெளிகளில் வாழ்ந்த 'முன்-இந்தோ-ஐரோப்பிய' (the Proto-Indo-European) மொழி பேசியோர் அயலவராக இருந்தனர் (சுமார் 4500-2800 கி.மு.); பின்னர் அதன் வழிவந்த மொழிகளில் ஒன்றைப் பேசிய 'முன்-ஆரியரின்' (the Proto-Aryans) (சுமார் 2800-2000 கி.மு.) வழித் தோன்றல்கள் கி.மு. 2000ஐ அடுத்து சமஸ்கிருதத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர் (பார்பொலாவின் ஆக்கம் - அச்சில்). சில பழைய சமஸ்கிருத இரவல் சொற்கள் பின்னிஷ் மொழியில் பாதுகாக்கப்படுகிறது; ஓர் எடுத்துக்காட்டாக, 'நூறு' என்னும் பொருளுடைய 'sata' 'சத' என்ற பின்னிஷ் சொல், 'sata' என்ற சமஸ்கிருதச் சொல்லுடன் கிட்டத்தட்டச் சரியாக ஒத்திருக்கிறது. ஆதியில் இருந்த பின்னிஷ் மதம் ஆரியக் கொள்ளைகளின் தாக்க விளைவாகக்கூட இருந்திருக்கலாம். இவ்வாறு 'கடவுள்' என்னும் பொருளுடைய 'jumala' என்ற பின்னிஷ் மூலச் சொல், இருக்குவேதப் பாடல்களில் போருக்கும் இடிமுழக்கத்துக்கும் தெய்வமான இந்திரனைக் குறிப்பிடும் 'பிரகாசித்தல்' என்னும் பொருளுடைய 'dyumat' என்ற பழைய ஆரியச் சொல்லில் இருந்து வந்திருக்கலாம். இந்திய ஆரியர்களின் தெய்வங்களில் இந்திரன் உயர்ந்த நிலையைப் பெற்றார்; பின்னிஷ் பழைய தெய்வங்களில் இடிமுழக்கத்தின் தெய்வமான 'உக்கோ' (Ukko)வும் அவ்வாறே கருதப்பட்டார். இன்னொரு எடுத்துக்காட்டு கலேவலாவில் வரும் 'சம்போ' என்னும் அற்புத ஆலையாகும். சுழலும் சுவர்க்கத்தின் நட்சத்திரப் புள்ளிகளுடைய இயலுலக அண்டத்துக்குரிய 'ஆலை'யிலிருந்து இந்த அற்புத ஆலைக்கான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சம்போவின் 'புள்ளிகளுள்ள மூடி' என்ற நிலையான அடைமொழி கருத வைக்கிறது. 'சம்போ' (sampo) என்னும் சொல்லில் இருந்து வரும் 'தூண்' என்னும் பொருளுள்ள திரிபுரு sammas என்பது, skambha அல்லது stambha என்ற சமஸ்கிருதச் சொல்லின் தொடர்பை நினைவூட்டுகிறது; வேதத்தில் இது வானத்தைத் தாங்கி நிற்கும் இயலுலக அண்டத்துக்குரிய தூணைக் குறிக்கிறது.
பின்லாந்தியரின் முன்னோரும் லாப்பியரும்
கிறிஸ்துவுக்கு முந்திய முதல் ஆயிரம் ஆண்டுப் பகுதியில் யூராலிக் மொழிக் குடும்பத்தில் இருந்து கிளைவிட்ட பால்டோ -பின்னிக் (Balto-Finnic), பால்டிக் பிரதேசத்தையும் பின்லாந்தையும் அடைந்து இரு பெரும் கிளைகளாகப் பிரிந்தது. லாப்பியரின் முன்னோர் வட பகுதிகளில், பெரும்பாலும் பின்லாந்தின் பெரும் பகுதிகளில் தங்கிய காலத்தில், பின்லாந்தியரின் முன்னோர் எஸ்தோனியாவிலும் கரேலியாவிலும் பின்லாந்தின் தென் பகுதிகளிலும் குடியேறினர்; (இவர்களுடைய இன்றைய மொழிவழித் தோன்றல்கள் எஸ்தோனியா, கரேலியா, பின்னிஷ் மொழிகளைப் பேசுபவர்களில் அடங்குவர்.) கலேவலாக் கவிதைகள் 'முன்-பின்னிஷ்' (Proto-Finnish) கிளையைச் சேர்ந்தது. பின்லாந்தியரின் முன்னோர் பண்டைய விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததோடு, ஜெர்மானிய (நோர்டிக் அல்லது ஸ்கன்டினேவிய), பால்டிக் (லத்வியன் + லித்துவேனிய), ஸ்லாவிய (ரஷ்ய) இனத்தவர் உட்பட்ட இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களிடமிருந்து பெற்ற இரவல் சொற்கள், கொள்களிலிருந்து அபிவிருத்தி அடைந்த முன்னேற்றமான கலாசார அடிப்படையையும் கொண்டிருந்தனர். கலேவலாப் பாடல்கள், பின்லாந்தியரின் முன்னோரின் வடக்கு நோக்கிய விரிவாக்கத்தையும், லாப்பியர்பால் இருந்த பகைமையையும், மொழித் தொடர்புகளையும் எடுத்துக்காட்டுகிறது; இந்த லாப்பியர் இப்பொழுது வட சமுத்திரத்துக்கு அருகில் ஸ்கன்டினேவியாவின் வடபுற எல்லையில் ஒரு சிறிய சிறுபான்மையினராகக் காலம் தள்ளுகின்றனர். லாப்பியர் பரம்பரை பரம்பரையாக வேட்டைக்காரராகவும் கலைமான் மந்தைகளை வளர்க்கும் நாடோ டிகளாகவும் இருந்தனர். கி. பி. 98ல் றோமன் நூலாசிரியர் டஸிட்டஸ் (Tacitus) ஐரோப்பிய வடபுற எல்லைகளைப் பற்றி விபரிக்கையில் வேட்டையாடி, உணவுகள் சேகரித்து, நிரந்தரமான வீடுகளில்லாத 'பென்னி' (Fenni) என்ற ஒரு இனத்தவரைப் பற்றிக் கூறியிருக்கிறார்; இது பெரும்பாலும் இந்த லாப்பியராக இருக்கலாம்.
கலேவலாவின் உள்ளடக்கம்
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரினைப் போல அல்லது இராமாயணத்தில் இராமர் இலங்கைக்கு மேற்கொண்ட படையெழுச்சியைப் போல, கிறிஸ்துவுக்கு பிற்பட்ட முதல் ஆயிரம் ஆண்டுப் பகுதியில் நிகழ்ந்த ஸ்கன்டினேவியக் கடல்வீரர்களின் தாக்குதல்களினால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியுமுடைய கலேவலாவின் போர் நடவடிக்கைகள் இப்பாடல்களின் முதுகெலும்பாக அமைந்தன. ஆனால் எக்காரணம் கொண்டும் இப்பாடல்கள் போர்க் கருப்பொருளை மட்டும் அடிப்படையாகக் கொண்டவையல்ல. இந்தியாவின் காவியங்களில் வரும் சுயம்வரங்களைப் போல, மாப்பிள்ளையாகப் போகிறவர் பெண்ணை நயந்து பெறுதலும் மக்கள் விரும்பும் ஒரு காவியக் கருவாகும். விவசாயம் (படம் 2), கால்நடை வைத்திருத்தல் (வர்ணப் படம் 6), விவாகங்கள், மருத்துவச் சடங்குகள் போன்ற எல்லா வகையான கிராமீய வழக்கங்கள், அல்லது இளம் மக்களின் பொழுதுபோக்குகள் என்பவற்றோடு உலக நோக்கும் மதமும் கூட உட்பட்ட நாளாந்த வாழ்க்கையின் பல்வேறு பண்புகள் பற்றியும் கலேவலா கூறுகிறது. பண்டைய தமிழரின் கலாசாரத்தின் எல்லாப் பக்கங்களையும் சிலப்பதிகாரத்தில் அளித்திருப்பது போல, பண்டைய பின்லாந்தியரின் கலாசாரத்தின் சிறந்த விரிவான வர்ணனையைக் கலேவலாவில் காணலாம். (இருப்பினும் தமிழ் மக்களுடைய நேர்த்தி நுட்பமானதும் பெருமளவில் நகரப் பண்பானதுமான கலாசாரத்திலும் பார்க்க, பின்லாந்தியரின் கலாசாரம் முற்றிலும் கிராமீயமானதும் மிகவும் எளிமையானதுமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.) யூராலிக் மொழிகள் பேசும் மக்களின் மிகப் பழைய மதம் அனேகமாக 'ஷமானிசம்' (Shamanism) ஆக இருந்திருக்கலாம்; ஆனால் பால்டிக்-பின்லாந்தியர் தொடர்பு கொண்டிருந்த பிற மக்களின் விளைவாட்சிக்கு உட்பட்ட மதமே கலேவலாவில் பிரதிபலிக்கிறது. உண்மையில், கலேவலாவில் பல உலக நோக்குகளைக் காணலாம்; அவை உலகப் படைப்புப் பற்றிய பாடல்கள், பெரிய சிந்துரம் (great oak) வீழ்த்தப் படுதல் (இது பற்றிக் கீழே கூறப்படுகிறது), ஸ்கன்டினேவியக் கடல்வீரர்களின் சாகசச் செயல்கள் பற்றியும் கிறிஸ்துவம் பற்றியும் பரம்பரைக் கதைகள், விவசாயிகள், மந்திரக்காரர்கள், மந்திரக்காரிகளின் பாடல்கள் ஆகியவை அடங்கிய கற்காலம் வரை பின்நோக்கிச் செல்லக்கூடிய பெளராணிகக் கருத்துகளாகும்.
மாபெரும் சிந்தூரமும், அது வீழ்தலும்
கலேவலாவின் உள்ளடக்கத்துக்கு ஓர் உதாரணமாக அதன் இரண்டாவது பாடலைச் சற்று விரிவாகக் கூற விரும்புகிறேன்; முதலாவது பாடலில் வரும் உலகம் படைக்கப்பட்ட புராணக் கதையைத் தொடர்ந்து இப்பாடல் வருகிறது. ஆதியில் தோன்றிய சமுத்திரத்தில் எழுந்த தீவுகளிலும் தலைநிலப் பரப்பிலும் மரங்களை விதைத்து உண்டாக்க விரும்புகிறான் பேரறிவு படைத்த ஞானியான வைனாமொயினன். மண்வளத்தைக் காக்கும் தேவசக்தியான சம்ஸா பெல்லர்வொயினனால் இது நடைபெறுகிறது. சிந்தூர மரத்தைத் தவிர மற்ற எல்லா விதைகளும் முளைத்துச் செழிக்கின்றன. கடலின் உபதேவதைகள் கொஞ்ச வைக்கோலை எரித்து, அதன் சாம்பர்மேல் சிந்தூர மரத்தின் வித்து விழுந்த பின்னர் தான் சிந்தூரம் முளைக்கத் தொடங்குகிறது. ஆனால் அது ஒரு மாபெரும் விருட்சமாக வானம் வரை வளர்ந்து சூரியனும் சந்திரனும் ஒளிர்வதைத் தடுக்கிறது. முழு உலகமே இருளில் அமிழ்கிறது. வைனாமொயினன் இந்த இராட்சச மரத்தை வீழ்த்தக் கூடிய ஒருவனைத் தேடிக் கிடைக்காமல், கடைசியில் தனது தாயான கடல்மகளை வணங்குகிறான். அவள் பெருவிரல் அளவு நீளமான ஒரு சின்னஞ்சிறிய மனிதனை அனுப்புகிறாள்; விஷ்ணு பகவான் குறள் வடிவில் அவதாரம் எடுத்த போது பலி என்னும் அரக்கன் அவரைத் தவறாக நினைத்ததைபோல, இந்தக் குறள் மனிதனையும் பார்த்து வைனாமொயினன் சிரித்து ஏளனம் செய்கிறான். ஆயினும், வாமனனைப் போல இந்தச் சின்னஞ்சிறிய செப்பு மனிதனும் திடீரென மாபெரும் அளவு உருவத்தைப் பெற்று, அந்தப் பயங்கர மரத்தைக் கோடாரியால் மும்முறை தாக்கி வீழ்த்துகிறான்; (இந்தத் தோற்றம் சென்னிறமான உதயக்கால சூரியனின் உருவகமே என்பதில் சந்தேகமில்லை). இயற்கை இப்பொழுது இருள் என்னும் கேட்டிலிருந்து விடுபட்டு மலர்ச்சியடையத் தொடங்குகிறது. (தேவன் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்று, இந்த அரக்கன் தடுத்து வைத்திருந்த மழை முகில்களை எல்லாம் விடுவித்து உலகத்துக்கு விடுதலை தந்ததை இங்கு நினைவு கூறலாம்). வீழ்ந்த சிந்தூர மரத்தின் துண்டுகள் உலகெல்லாம் இன்பத்தைப் பரப்புகிறது. இதன் நோக்கம் மந்திர சக்தி வாய்ந்த, புனிதமான சோலை மத்தியில் சிந்தூரத்தைச் சுற்றி 'பீர்' என்னும் பானம் வடிக்கும் சடங்குகள், சிந்தூர மரத்தில் 'பீர்'ப் பானக் கிண்ணங்கள் இயற்றுதல் போன்றவற்றைத் தொடர்புபடுத்துவதாகத் தெரிகிறது. பாடலின் ஏனைய பகுதி ஆதிகாலத்தில் சாதாரணமாகக் கையாளப்பட்ட காடுகளை எரித்தழித்துச் செய்த விவசாயம் பற்றிக் கூறுகிறது; இது இப்பொழுது வழக்கிலில்லை; (சரியாகச் சொல்லப் போனால் தடைசெய்யப்பட்டுள்ளது); அதாவது சாம்பலில் விதைகளை விதைப்பதற்கு முன்னால் பெரும் பிரதேசத்தில் உள்ள எல்லா மரங்களையும் முற்றாக எரிப்பது (படம் 2). எனினும், குயில் வந்து அமர்வதற்காக வைனாமொயினன் ஒரு மிலாறு மரத்தைப் பாதுகாக்கிறான்.
கலேவா
கலேவலா Kalevala என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -la என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் எஞ்சிய அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர்; கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது; [மான்தலை விண்மீன்குழுவை (the belt of orion) 'கலேவாவின் வாள்' என்று அழைப்பர்.] இடியேறு போன்ற வானுலகக் காட்சியை 'கலேவலாவின் நெருப்பு' என்பர். கலேவாவின் ஆண் மக்களை, வயல்களை உண்டாக்குவதற்காக (மரங்களை எரித்துச்) சுட்டழித்த காட்டு விவசாயத்துறையின் அதிசக்தி வாய்ந்த பூதங்கள் என்பர். கலேவா என்னும் பெயரின் சொல்லாக்க விளக்கம் உறுதியாக சொல்வதற்கில்லை. 'கொல்லன்' என்னும் பொருள் வரும் kalvis என்ற லித்துவேனியன் சொல்லும் பழைய பால்டிக் கொல்வேலைத் தெய்வம் kalevias என்பதும் தான் தொடர்புபடுத்தக்கூடிய மிக நெருங்கிய விளக்கமாகும்.
இல்மரினன் என்னும் தேவ கொல்லன்
கலேவலாவின் முக்கிய நாயகர்களில் ஒருவனான இல்மரினன் கொல்லன் என்னும் தனிச் சிறப்புடையவன். இவனுடைய முக்கிய அருஞ்செயல்களில் சில: இரும்பைப் படிமானமாக்குதல், சம்போ என்னும் அற்புத ஆலையை உலையில் உருவாக்குதல் (வர்ணப்படம் 2), பாம்புகள் நிறைந்த வயலை உழுதல் (வர்ணப்படம் 5), தங்கத்தில் ஒரு மங்கையை இயற்றுதல், விண்ணுலக ஒளிகளை வடநிலப் பாறைகளிலிருந்து விடுவித்தல் என்பனவாம். பழைய நாடோ டிப் பாடல்களின்படி, இல்மரினன் சம்போவைப் போலவே விண்ணுலகின் கவிகை விமானத்தையும் செய்திருக்கிறான். லாப்புலாந்திலிருந்து கிடைத்த 1692ம் காலத்தைய 'ஷமானிஸ' மதகுருவின் முரசின்படி (drum) இல்மரிஸ் என்னும் மன்புனைவான தெய்வம் காற்றையும் காற்றுவீச்சையும் ஒழுங்கிசைவுப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பின்னிஷ் மொழியில் ilma என்னும் சொல்லுக்குக் காற்று என்று பொருள். ரஷ்ஷியாவில் வாழும் 'வொத்யாக்ஸ்' (Votyaks) இனத்தவர் இன்னமும் 'இன்மர்' Inmar அல்லது 'இல்மெர்' Ilmer என்னும் விண்ணுக்குரிய தெய்வத்தை வழிபடுகின்றனர்.
வைனாமொயினனும் பாடல்களின் சக்தியும்
கலேவலாவின் முக்கிய நாயகனான வைனாமொயினன் மனிதச் சிறப்பு தெய்வச் சிறப்பு ஆகிய இரண்டும் கொண்ட ஒரு பாத்திரமாகும். புராணத்துறைத் தனிச்சிறப்புகளின் அடிப்படையில் லொண்ரொத் (Lo*nnrot) பின்னதற்கே சாதகமாக இருக்கிறார் என்று தெரிகிறது. முதலாவது பாடலில் வைனாமொயினனே ஆதி காலத்துக் கடலில் பிறந்த படைப்புக் கடவுளாகிறான்; அவனுடைய பெயர் 'அகன்று ஆழமானதும் மெதுவாகப் பாய்வதுமான ஆறு' என்னும் பொருளில் உள்ள va*ina* என்னும் சொல்லில் இருந்து வந்ததால், ஆதியில் தண்ணீரோடு தொடர்புடைய கடவுளாகவும் இந்தியாவின் புராணங்களில் வரும் வருணனைப் போலவும் இருந்திருக்கலாம் என்று கருதவைக்கிறது. வைனாமொயினன் ஒரு கலாசார நாயகனாகவும் கருதப்படுகிறான்; ஒரு படகை முதலில் கட்டியவன் அவனே; ஒரு யாழை முதலில் செய்து இயற்கை முழுவதையும் தனது இசையால் மயக்கியவனும் அவனே. வைனாமொயினனின் பண்பை விளக்கும் சிறப்புப் பெயர்கள் அவனுடைய வயதையும் அறிவையும் அழுத்திக் கூறுகின்றன; அவன் உலகியலுக்கு அப்பாற்பட்ட அறிவு படைத்த ஒரு வல்லமைமிக்க ஞானி; மந்திரப் பாடல்களாலும் சக்தி வாய்ந்த சொற்களாலும் தனது அருஞ்செயல்களை நிகழ்த்துபவன். ஒரு பழைய இறந்த பூதத்திடம் தேவையான மந்திரச் சொற்களைப் பெறுவதற்காக ஒரு மந்திர சூனிய மதகுருவைப்போல பாதாள உலகத்துக்குச் செல்பவன். வைனாமொயினன் ஒரு போர்வீரனைப் போல அடிக்கடி காட்சியளித்தாலும், அவனுடைய போர்வீரனுக்குரிய செயலாற்றல் அவனுடைய ஞானத்தின் தேர்ச்சியளவுக்குப் பாராட்டப்படவில்லை. இதன் தொடர்பாக, நாயகன் வீரன் என்பதைக் குறிக்கும் பின்னிஷ் சொல் sankari, பாடகன் என்னும் பொருளுள்ள பழைய நோர்டிக் (Old Nordic) சொல்லான sangare வரை பின் நோக்கிச் செல்கிறதைக் கவனித்தல் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வைனாமொயினனின் சக்தி வாய்ந்த சொற்கள் எதிராளியைச் சேற்றில் அமிழ வைக்கிறது (முகப்பு படத்துக்கான விளக்கம் பார்க்க). வைனாமொயினனின் பாத்திரப் பண்பை எளிமையான முறைகளில் தெரிந்துக் கொள்ளப் பல்வேறு கல்விமான்கள் எடுத்த முயற்சிகள் மிகவும் வித்தியாசமான மாறுபாடான முடிவுகளையே தந்தன. கலேவலாவில் வரும் வேறு பல பாத்திரங்களுக்கும் இது பொருந்தும். இந்தியாவின் காவியங்களின் ஆய்விலும் இத்தகைய நிலமை நிகழ்வதைக் காணலாம்: உதாரணமாக, ஏற்கனவே முற்காலத்தில் இருந்த பல்வேறு தேவர்களின் மறுபிறப்பே பஞ்சபாண்டவர்கள் என்று கூறப்பட்ட அதே வேளையில், வேறு கல்விமான்கள் அவர்களை வரலாற்று மனித நாயகர்கள் என்று கருதுகிறார்கள்.
எலியாஸ் லொண்ரொத்
கலேவலா பழைய நாடோ டிப் பாடல்களின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், அதன் அமைப்பில் அதன் தொகுப்பாசிரியருக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இது எலியாஸ் லொண்ரொத்தின் (Elias Lo*nnrot, 1802-18884) ஆக்கமாகவே நிலைத்திருக்கிறது; ஒரு கிராமத்து ஏழைத் தையற்காரரின் மகனான இவர், ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கி, சிறந்த மிகப் பெரிய அளவிலான கலாசாரச் செயல்கள் முலமாகப் பின்னிஷ் மொழியின் பேராசிரியர் ஆனார். பதினொரு நெடுந்தூரப் பயணங்களில், பெரும்பாலும் தெருக்களே இல்லாத காட்டுப் பிரதேசங்கள் வழியாக, இருபதினாயிரம் கிலோ மீட்டர் தூரம் கால்நடையாகவே சென்று, கலேவலா நாட்டுப் பாடல்கள் அமைப்பில் உள்ள 65,000 பாடல் அடிகளை லொண்ரொத் சேகரித்தார். வைனாமொயினன் தொடர்பான பாடல்கள் பற்றிய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்குப் பின்னர் (1822), "பழைய கலேவலா" என்று அழைக்கப்படும் கலேவலாவின் முதலாவது பதிப்பை 1835ல் வெளியிட்டார். இரண்டாவதும் முழுமையானதுமான பதிப்பு, முதலாவது பதிப்பிலும் பார்க்க இரண்டு மடங்கு நீளத்தில், மொத்தமாக 22,795 அடிகள் கொண்ட ஐம்பது பாடல்களுடன் 1849ல் வெளிவந்தது. 1840-41ல் லொண்ரொத் 'கந்தலேதார்' (Kanteletar) என்னும் யாழிசைப் பாடல் தொகுதி ஒன்றை வெளியிட்டார். இந்த வெளியீடுகளுக்கான முலப் பிரதிகள் இன்னமும் இருந்து, உண்மையான நாடோ டிப் பாடல்களின் தொடர்பு பற்றிய ஒரு தெளிவான கருத்தைத் தருகின்றன. நாடோ டி இலக்கியத்தில், பல்வேறு உண்மையான சுதந்திரமான கிளைக் கதைகளைத் தொடர்புபடுத்தும் இணையற்ற சுமார் 600 அடிகளை லொண்ரொத் தாமே இயற்றிக் கலேவலாவுக்கு ஒரு முழுமையான அமைப்பையும் வடிவத்தையும் கொடுத்தார்.
கலேவலாவுக்கும் கந்தலேதாருக்கும் அடிப்படையாக உள்ள மூல நாடோ டிப் பாடல்களின் ஒரு மாபெரும் தொகுதி Suomen Kansan vanhat runot ('பின்னிஷ மக்களின் பண்டைய பாடல்கள்') என்ற பெயரில் 33 பெரிய பாகங்களாக 1908-1948ல் வெளியிடப்பட்டது. இந்தப் பெரிய செயற்பாடுகூட நூற்றுக்கணக்கான கல்விமான்களாலும் தாமாக முன்வந்த சேவையாளர்களாலும் பின்னிஷ் இலக்கிய மன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் குவித்து வைக்கப்பட்ட செழிப்புமிக்க சேகரிப்புச் செல்வங்களை வற்றச் செய்ய முடியவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள பரம்பரை பரம்பரையாக வந்த வாய்மொழிப் பாடல்களின் பழையதும் பெரியதுமான சேகரிப்புகளில் 1831ல் நிறுவப்பட்ட பின்னிஷ் இலக்கிய மன்றமும் ஒன்று. இந்த சேகரிப்புகளில் 1977ல் பின்வருவன அடங்கியிருந்தன: கலேவலாப் பாடல்களின் சீரில் அமைந்த 86,800 பாடல்கள்; மற்றும் சந்த ஒழுங்கில் அமைந்த 129,400 நாடேடிப் பாடல்கள்; 52,400 மந்திரப் பாடல்கள்; 336,000 மந்திரங்கள், நம்பிக்கைகள், சகுனங்கள்; 187,400 விளையாட்டுகள்; 9,300 அர்த்தமற்ற பாடல்களும் புலம்பல்களும்; 103,200 தெய்வீக ஆற்றல் கதைகளும் நினைவாற்றல் கதைகளும்; 77,800 வரலாற்றுக் கதைகளும் உள்ளுர்க் கதைகளும்; 7,700 காரண காரியக் கதைகளும் புராணக் கதைகளும்; 766,500 பழமொழிகள் (ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் சேகரித்த 1,425,000 திரிபுருப் பழமொழிகளில் இருந்து பெறப்பட்டவை); 117,300 விடுகதைகள்; 23,200 நாடோ டிப் பாடல் மெட்டுகள்; 54,000 மானிடவியல் வர்ணனைகள்.
கலேவலா, பின்லாந்தியரின் தேசீய காவியம்
லொண்ரொத்தின் ஆக்கங்கள், குறிப்பாகக் கலேவலா வெளியீடு 1155 தொடக்கம் 1809 வரை சுவீடிஷ்காரராலும், அதன் பின்னர் (சுவீடிஷ்காரருக்கும் ரஷ்யருக்கும் ஏற்பட்ட போரில் சுவீடிஷ்காரர் தோல்வி கண்ட பின்) 1809ல் இருந்து கடைசியாகச் சுதந்திரம் பெற்ற 1917 வரை ரஷ்ஷியராலும் ஆளப்பட்டு வந்த பின்னிஷ் மக்களின் சுயவிழிப்புணர்விலும் தேசீய உணர்விலும் ஒரு பாரிய விளைபயனை ஏற்படுத்தியது. பழைய பரம்பரைச் செல்வங்களை அழிவிலிருந்து காப்பாற்றி உலக இலக்கியத்துக்கு லொண்ரொத் செய்த சேவையை, பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களுக்கு உயிருட்டியவரான பிரபல டாக்டர் உ. வே. சாமிநாதையரின் சேவைக்கு ஒப்பிடலாம். ஜெயன் சிபெலியுஸ் [Jean Sibelius (1865-1957)] அவர்கள் கலேவலாவின் பல பாடல்களை உலகளாவிய இசைக்கு அறிமுகம் செய்தார். இவரால் இசையமைக்கப்பட்டு பின்னிஷ் மக்களின் இதயங்களில் இடம்பெற்ற கலேவலாப் பண்கள், தமிழ் மக்களின் இதயங்களில் இடம்பெற்ற தியாகராஜரின் கீர்த்தனைகளுக்கு இணையாகும். கலேவலா பாடல்கள் மாபெரும் பின்னிஷ் ஓவியர்களுக்கும் அதிகப்படியான உளக்கிளர்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன; இந்த வரிசையில் எல்லாருக்கும் மேலாக அக்செலி கல்லேன்-கல்லேல [Akseli Gallen-Kallela (1865-1931)]வைக் குறிப்பிடலாம். இந்நூலில் பாடல்களின் தொடக்கத்திலும் முடிவிலும் காணப்படும் கொடிவரைப் பின்னணிப் பிரதிமைகள் இவருடைய கலேவலா சித்திர வெளியீட்டில் இருந்து எடுக்கப்பட்டவை; இவருடைய கலேவலா ஓவியங்கள் சுவர்க்கோலங்களில் சில தெரிந்தெடுக்கப்பட்டு வர்ணப்படங்களாக இந்நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் ஏரிகளாலும் காடுகளாலும் தனிச் சிறப்பு அளிக்கும் இக்காட்சிகள் பின்லாந்தின் இயற்கை பற்றிய சில அழுத்தமான பதிவுகளை உள்ளத்தில் ஏற்படுத்தத் துணை நிற்கும் என்று நம்பப்படுகிறது; இப்பாடல்களைப் படைக்க ஆதாரமாயிருந்த கலாசாரச் சூழல் பற்றிய ஓவியரின் நோக்கு இந்த ஓவியங்களில் பிரதிபலிக்கின்றது.
ஆர். சிவலிங்கம் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு
கலேவலா நூலின் கெய்த் பொஸ்லி (Keith Bosley) என்பவரின் ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பை 'உலகளாவிய இலக்கியங்கள்' என்ற வரிசையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் (Oxford University Press) சமீபத்தில் வெளியிட்டுள்ளது (1989). இந்த மொழிபெயர்ப்புடன் இதற்கு முன் வந்த W.F. கிர்பி (W.F. Kirby 1907, மறுபதிப்பு Gallen-Kallela, 1985), F.B மகோன் jr. (F.B. Magoun jr.- 1963) என்பவர்களின் மொழிபெயர்ப்புகளும் வேறு சில ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இந்தத் தமிழாக்கத்துக்குப் பயன்படுத்தபட்டுள்ளன. இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளரான இலங்கையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவலிங்கம் ஓர் அனுபவம் நிறைந்த தமிழ் எழுத்தாளர்; 'உதயணன்' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவருடைய 'பொன்னான மலரல்லவோ', 'அந்தரங்க கீதம்' ஆகிய இரண்டு நாவல்களை கொழும்பிலுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட். நிறுவனம் 'வீரகேசரிப் பிரசுரங்கள்' என்ற வரிசையில் வெளியிட்டன. பத்து வருடங்களுக்கு மேலாகப் பின்லாந்தில் வாழ்ந்து வரும் இவர், பின்னிஷ் மொழியுடனும் பின்னிஷ் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், பின்னிஷ்-கரேலிய முலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தர முடிந்தது. இவர் தனது நண்பரும் இலங்கை கவிஞருமான எஸ். கிருஷ்ணபிள்ளை ('திமிலைத்துமிலன்') அவர்களின் உதவியுடன் இதன் அமைப்புக்குக் கவனமாக மெருகூட்டியுள்ளார்.
மூல நூலில் இருக்கும் எல்லாக் கவிதைச் சிறப்புகளையும் மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது சாத்தியமானதல்ல. கலேவலாப் பாடல்கள் நெடில்குறில் ஈரசையாலான நாற்சீரடிகளாக இருக்கின்றன (-v / -வv / -v / -v / ); வழக்கமாக ஒரு சோடியாக அமையும் இத்தகைய இரண்டு அடிகளில், முதல் அடியில் சொல்லப்பட்ட செய்தியையே இரண்டாவது அடி வேறு வார்த்தைகளில் திருப்பிச் சொல்லும். பாடலடியின் கடைசி ஒலியியைபில் அமைவதற்குப் பதிலாக முதலெழுத்துகள் ஒன்றிவரும் மோனைத்தொடையில் பெரும்பாலும் இருக்கின்றன; ஒரு அடியில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரே ஒலியில் தொடங்கும். கடைசியாகக் கூறியதைத் தமிழ் மொழிபெயர்ப்பில் பின்பற்றக் கூடியதாக இருக்கிறது. பின்னிஷ் மூல நூலிலும் தமிழ் மொழிபெயர்ப்பிலும் வரும் தொடக்கப் பாடல் அடிகளைக் கீழே தருகிறேன்.
Mieleni minun tekevi, எனதுளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது
aivoni ajattelevi, எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெல்லாம்
la*htea*ni laulamahan, பாடலையான் பக்குவமாய்ப் பாடுவதற்கு வந்திட்டேன்
saa'ani sanelemahan, பாடலையான் பண்ணுடனே பலபேர்க்கும் பகருகிறேன்
sukuvirtta* suoltamahan சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு
lajivirtta laulamahan. உற்றதொரு பேரினத்தின் பழங்கதையை ஓதுதற்கு;
Sanat suussani sulavat, வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது
puhe'et putoelevat, நேர்த்திமிகு சொற்றொடர்கள் நேராய்ச் சொரிகிறது
kielelleni kerkia*va*t, நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது
hampahilleni hajoovat. பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது.
Veli kulta veikkoseni, அன்பான சோதரனே, அரியஎன்றன் தோழர்களே!
kaunis kasvinkumppalini, என்னோடே வளர்ந்துயர்ந்த எழில்மிகுந்த நண்பர்களே !
la*he nyt kanssa laulamahan, இப்போது வந்திடுங்கள் இணைந்தொன்றாய்ப் பாடிடுவோம்
saa kera sanelemahan, நற்சுவையாய்ச் சொல்லுதற்கு நல்லுளத்தைத் தாருங்கள்
yhtehen yhyttya*mme ஒன்றாகக் கூடியுள்ளோம் ஒன்றாகச் சந்தித்தோம்
kahta'alta ka*ytya*mme! நன்றாய் இருவேறு இடமிருந்து நாம் வந்தோம்;
Harvoin yhtehen yhymme, அரிதாகக் கூடிடுவோம அரிதாகச் சந்திப்போம்
saamme toinen toisihimme, அரிதாக ஒருவரினை ஒருவர்நாம் சந்திப்போம்
na*illa* raukoilla rajoilla, வறிதாகிப் போய்வீணே மயங்குகின்ற எல்லைகளில்
poloisilla Pohjan mailla. தெரியும்வட பால்நிலத்தில் செழிப்பிழந்த பூமியின்கண்.
Lyo*ka*mme ka*si ka*tehen, கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோர்த்து
sormet sormien lomahan, விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோர்த்து
Lauloaksemme hyvia*, நன்றாய்நாம் பாடிடுவோம் நயம்திகழப் பாடிடுவோம்
parahia pannaksemme, ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையொடு பாடிடுவோம்
kuulla noien kultaisien, பொன்னான நல்லிதயம் படைத்தவர்கள் கேட்கட்டும்
tieta* mielitehtoisien, இனிமையுறு நன்நெஞ்சம் இயைந்தவர்கள் அறியட்டும்
nuorisossa nousevassa, எழுச்சி மிகுந்தோங்கும் இளைஞர்களின் மத்தியிலும்
kansassa kasuavassa: வளர்ந்துவரும் தேசீய மக்களவர் மத்தியிலும்
noita saamia sanoja, யாமறிந்து கொண்டுள்ள நல்லியல்புச் சொற்களையும்
virsia* viritta*mia*, நமதுளத்தில் ஊறுகின்ற நற்சுவைசேர் கதைகளையும்
vyo*lta* vanhan Va*ina*mo*isen, முதியவைனா மொயினனரைக் கச்சணியி லேயிருந்து
alta ahjon Ilmarisen, இல்மரினன் ஊதுலையின் இயைஆழத் தேயிருந்து
pa*a*sta* kalvan Kaukmielen, தூரநெஞ்சி னன்வாளின் தொடுகூர் முனையிருந்து
Joukahaisen jousen tiesta*, யொவுகாஹை னன்குறுக்கு வில்லினது வழியிருந்து
Pohjan peltojen perilta*, வடபால் நிலத்துற்ற வயல் களிலே தானிருந்து
Kalevalan kankahilta. கலேவலாப் பகுதியதன் கனவெளிக ளுடிருந்து.
(படம் 5ம் அதன் விளக்கமும் இவ்விடத்தில் தவிர்க்கப்பட்டது)
நாட்டுப் பாடல்களைப் பாடுபவர்கள் தங்கள் நிகழ்ச்சியை அறிமுகம் செய்யப் பயன்படுத்தும் ஒரே மாதிரியான நிலையான சொற்றொடர்களே இந்த ஆரம்ப அடிகள். இருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு உடல்களை அக்கம்பக்கமாக ஆட்டியசைத்துப் பாடுவது வழக்கம் (படம் 3). 'கந்தலே' (kantele) என்னும் நரம்பிசைக் கருவியின் இசையும் பக்க வாத்திய இசையாக வழங்கப்பட்டது (படம் 4). இரண்டு பிரதான வகைகளாகக் கூறப்படும் எளிமையான இன்னிசைப் பாடல்களாகக் கலேவலா போன்ற பாடல்கள் பாடப்பட்டன (படம் 5). இன்னிசைப் பாடல்கள் எளிமையாக இருப்பினும், திறமையுள்ள பாடகர்கள் அவற்றை தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசையிலேயே பலவிதமாக மாற்றியும் திருப்பியும் பாட வல்லவர்கள்.
உண்மையில், தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளிலும் பார்க்க நில இயலிலும் கலாசாரச் சூழலிலும் முற்றிலும் மாறுபட்ட மொழிபெயர்ப்பு வேலை ஏராளமான சிக்கல்களைத் தரக்கூடிய ஒன்று. நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னர் பனிமழையும் பனிக்கட்டியில் சறுக்குதலும் தமிழ் மக்கள் முற்றிலும் அறியாத சங்கதிகளாகும் என்பதை இங்கு நினைவுகூர்வோம். அத்துடன் தென் ஆசியாவில் வளராத செடிகளுக்கும் சிறு பழங்களுக்கும் எப்படிப் பெயர் கூறுவது? இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் முற்றிலும் தீர்க்கப்படவில்லை; எனினும், இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக பொதுப் பெயர்களுக்கும் சிக்கலான சொல்லமைப்புகளுக்கும் (மொழிப்பெயர்ப்பில் ஒற்றை இரட்டைப் புள்ளி அடையாளங்கள் இட்டு) நூலின் கடைசியில் முறையே சொற்றொகுதியிலும் விளக்கக் குறிப்புகளிலும் தமிழ் வாசகர்களுக்கு மேலதிக விபரங்கள் தரப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் ஆர்வமுள்ள வாசகர்கள் என்பதையும் கலாசாரத்தில் ஈடுபாடுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்; இவர்கள், கலேவலாப் பாடல்களின் காலத்துக் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றை வைத்திருப்பதற்காகப் பெருமைப் படுபவர்கள். உலகளாவிய இலக்கியங்களில் ஒன்றைச் சிறப்பாகவும் முனைப்பாகவும் அளித்துத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வளமுட்டிய ஆர். சிவலிங்கம் அவர்களின் சேவையைத் தமிழ் மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்; அதேபோல பின்னிஷ் மக்களாகிய நாங்களும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் எங்களுடைய பண்டைய பாரம்பரியச் செல்வம் பூகோளத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நல்ல இலக்கியப் பிரியர்களை அடைய முடிகிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். கலேவலா முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட வகையில் தமிழ் முப்பதாவது மொழியாகும்; சுருக்கமான மொழிபெயர்ப்புகள் பன்னிரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.
இந்த வேலைத் திட்டத்துக்கு உதவியோர்
ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களமும் பின்னிஷ் இலக்கிய மன்றமும் [பொதுச் செயலாளர்: உர்போ வெந்தோ (Mr. Urpo Vento)] இணைந்து, கலேவலா தமிழ் வேலைத் திட்டத்தின் நிதியுதவி விண்ணப்பங்களைக் கையாண்டன. திரு. சிவலிங்கத்துக்கு அளிக்கப்பட்ட புலமைப் பரிசிலுக்காகவும் அச்சுவேலை மானியமாக தரப்பட்ட கணிசமான தொகைக்காகவும் பின்லாந்தின் கல்வி அமைச்சுக்கு நன்றி கூறுகிறோம்.
திரு. கலெர்வோ சீக்கலாவுக்கும் (Mr. Kalevaro Siikala) சர்வதேச அலுவல்கள் திணைக்களத்தின் இயக்குனரும் உதவி இயக்குனருமான திரு. முத்தி குஸ்தவ்ஸனுக்கும் (Mr. Matti Gustafson) அத்துடன் கல்வி அலுவல்கள் ஆலோசகர் Ms. மரீத்தா சவோலாவுக்கும் (Ms. Marita Savola) விசேடமான நன்றியைத் தெரிவிக்கிறோம். விசேட தொழில் நிதியை நிர்வகிக்கும் ஹெல்சிங்கி மாநகரமும் ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகமும் இம்மொழிபெயர்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்தன. Ms. ஐவி கல்லேன்-கல்லேல (Ms. Aivi Gallen-Kallela), அவருடைய கணவர் டாக்டர் மத்தி சிரேன் (Dr. Matti Siren), 'வெர்னர் ஸொடர்ஸ ஒஸாகே உக்தியோ' (Werner So*derstro*m Osakeyhtio* [WSOY]) என்னும் நிறுவனமும் அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் யொர்மா கைமியோவும் (Dr. Jorma Kaimio), முன்னால் இயக்குனர் திரு. ஹன்னு தர்மியோவும் (Mr. Hannu Tarmio), பொர்வோவில் இருக்கும் WSOY அச்சக மேலாளர் திரு. தவுனோ ஹொம்மா (Mr. Tauno Homma)- இவர்கள் எல்லோரும் அக்செலி கல்லேன்-கல்லேல (Akseli Gallen-Kallela)வின் ஓவியங்கள் தொடர்பாக மிகவும் உதவி புரிந்தனர். இந்த நூலின் கணனி அச்சமைப்பையும் சரிபிழைபார்த்தலையும் இந்த அறிமுக உரையின் மொழிபெயர்ப்பையும் திரு சிவலிங்கம் தானே பொறுப்பேற்றுச் செய்து தந்தார். இந்த நூலின் அமைப்பை முற்றுப் படுத்தும் வேலைகளில் திரு. பெத்தரி கொஸ்கிகல்லியோ (Mr. Petteri Koskikallio) பெரிதும் உதவியாக இருந்தார். இந்த நூலைக் கவர்ச்சியாக அச்சிட்டு இலக்கிய பிரியர்களான தமிழ் மக்களுக்கு எட்டக்கூடிய விலையில் சிறப்பாக வெளியிட்ட ஹொங்கொங், ஆல்டனேற்றிவ் அச்சக (Alternative Press, Hong Kong) அதிபர் திரு. கார்லோ ஸ்கெபெல் (Mr. Kaarlo Schepel)லுக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறோம்.
Department of Asian and African Studies,
POB 13 (Meritullinkatu 1),
00014 University of Helsinki,
Finland.
1 November 1994
என்னுரை TOP
வணக்கம்
பழைய தமிழ் இலக்கியங்களைப் பின்னிஷ் மொழியில் மொழிபெயர்க்கும் திட்டத்துடன் தான் நான் 1986ல் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்றேன். அந்த வகையில் திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டிற்குமான எனது பங்களிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், அவற்றை வெளியிடுவதில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பின்னிஷ் மொழியிலிருந்து தமிழுக்கு ஒரு நூலைக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் 'கலேவலா' என்ற இந்த உலகளாவிய காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடங்கப்பட்டது. மூன்றாண்டு கால முழு நேர உழைப்பின் பலன் இந்த மொழிபெயர்ப்பு. பின்னிஷ் மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வந்த முதலாவது நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு. அதே நேரம் ஒரு நீண்ட பிற மொழிக் காவியத்தை தமிழாக்கிய மனநிறைவு எனக்கும் உண்டு.
கலேவலா
இந்த காவியம்பற்றி அறிமுக உரையில் விபரமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 'கலேவா' என்பது ஒரு முதாதையரின் பெயரிலிருந்து வந்த ஓர் இனத்தவரின் பெயர். கலேவா இனத்தவர் வாழ்ந்த இடத்தைக் கலேவலா என்று அழைப்பர். அதுவே இந்நூலின் பெயருமாயிற்று. வாய் மொழிப்பாடல்களாக இருந்ததாலும் இதில் அடங்கியுள்ள மந்திரப் பாடல்களாலும் இதை ஓர் இதிகாச நூல் என்பர் சிலர். ஆனால் இதை தொகுத்து அளித்த முறையிலும் தற்போதைய அமைப்பிலும் இது இதிகாசம் என்ற எல்லையைக் கடந்து உலக இலக்கியம் என்ற தரத்தைப் பெற்றுவிட்டது என்பர் அறிஞர். பின்லாந்தின் தலைசிறந்த புகழ் பூத்த இசைக்கலைஞரான ஜெயன் சிபெல்லியுஸ் (Jean Sibelius) இப்பாடல்கள் சிலவற்றுக்கு இசையமைத்து உலக அளவில் அரங்கேற்றியதும் இந்தக் காவியம் 'உலக இலக்கியம்' என்ற தரத்தைப் பெற ஒரு காரணமாகும். லண்டன் பீபீசீ (BBC) நிலையம் பல தடவைகள் பல வடிவங்களில் இக்காவியத்தின் பகுதிகளை ஒலிபரப்பி உலகளவில் அறிமுகம் செய்தது. பின்லாந்தைப் பொறுத்த வரையில் இது ஒரு தேசீய காவியமாக அங்கீகாரம் பெற்றது. கல்லூரிகளில் பாட நூலாக ஏற்கப்பட்டது. 1835ல் வெளியான முதலாவது பதிப்பின் முன்னுரையின் திகதியான பெப்ரவரி 28 'கலேவலா தினம்' என அரசால் பிரகடனம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
தமிழ் மொழிபெயர்ப்பு
இம்மொழிபெயர்ப்பு முற்றுப் பெற்றபொழுது நான் இந்நாட்டுக்கு வந்து பதினோரு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. எனவே இவ்வேலையைத் தொடங்கிய சமயம் எனக்கு இந்நாட்டு வாழ்க்கையும் மொழியும் கலாசாரமும் ஓரளவு பழக்கப்பட்டுவிட்டன. அந்த துணிச்சலில் தான் இப்பாரிய பணியைத் தொடங்கினேன். ஆனால் போகப் போகத்தான் அதன் சுமை தெரிந்தது. இந்தியாவிலோ இலங்கையிலோ அன்றேல் உலகின் வேறெந்த முலையிலோ வாழும் ஒரு வாசகருக்கு இம்மொழிபெயர்ப்புக் கிடைக்குமாயின், அவ்வாசகர் முன்பின் கண்டு கேட்டு அறியாத இந்த நாட்டுப் பழக்க வழக்கங்களை, தாவரங்களை, உயிரினங்களைப் பற்றி எவ்வாறு புரிய வைக்கப் போகிறேன் என்ற மலைப்பு ஏற்பட்டது. இன்று இந்த நாட்டில் அறுபது, எழுபது தமிழர்கள் வரையில் நாடெங்கும் சிதறி வாழ்கின்ற போதிலும், அவர்களிடையே தமிழறிவுடையோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இங்கு தமிழர்கள் ஒரு நூறு பேர்கூட இல்லாத நிலையில், ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்களத்தின் நூல் நிலையத்தைத் தவிர வேறு எங்கேயுமே தமிழ் நூல்கள், அகராதிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கில்லை. இந்த நூல் நிலையத்திலுள்ள தமிழ் மொழி, கலாசாரம் பற்றிய ஐம்பது, நூறு தமிழ், ஆங்கில நூல்களிலும் பெரும்பாலானவை பழைய பதிப்புகள். அதனால் கடந்த ஐந்து பத்தாண்டுகளில் தமிழ் மொழியில் வழக்குக்கு வந்த சொற்களை அறியும் வாய்ப்பும் எனக்கு மிக மிக அரிது. இந்நிலையில் கலேவலா காவியம் தொடர்பாக பின்னிஷ் ஆங்கில மொழிகளில் பெறக்கூடிய அத்தனை நூல்களையும் வாங்கிப் பரப்பி வைத்துக்கொண்டு தனியனாய்த் துணிந்து தொடங்கினேன்.
'ஸ்ரோபரி' (strawberry) என்று ஆங்கிலப் பெயரையே சொன்னால், தமிழ்நாட்டில் எங்கோ ஒரு முலையில் வாழும் ஒரு வாசகர் அதை ஒரு பழம் என்று ஊகிக்கலாம்; ஆனால் பலாப்பழம் போன்ற பெரிய பழமா? இலந்தைப்பழம் போன்ற சிறிய பழமா? என்று ஊகிக்க முடியாமல் போகலாம். மாம்பழம் போன்று இனிமையானதா? வாழைப்பழம் போன்று சுவையானதா? அல்லது வேறு ஏதோ ஒரு விதமானதா? என்று உணர முடியாமல் போகலாம். இதற்கு நானே ஒரு புதிய தமிழ்ப் பெயரையும் கண்டுப்பிடித்துக் கூறினால் குழப்பம் இன்னும் அதிகமாகலாம். அதனால் 'ஒரு பழம்' 'ஒரு செடி', 'ஒரு மரம்' என்று மொழிபெயர்ப்பில் ஆங்காங்கு கூறி, அவற்றின் பின்னிஷ் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்கள் அனைத்தையும் 'விளக்கக் குறிப்புகளில்' தந்திருக்கிறேன். தவிர, ஆம்பல், குவளை, அரசு, சிந்தூரம், சூரை, பேரி போன்ற தாவரங்களின் பெயர்களையும் குயில், அன்னம், கீரி போன்ற பிராணிகளின் பெயர்களையும் வாசகர்கள் ஆங்காங்கு காணலாம். ஆனால் நமது நாடுகளில் வளரும் அசல் ஆம்பல் மலரோ அரச மரமோ அல்லது அங்கே வசிக்கும் அதே குயிலோ கீரியோ இங்கேயும் இருக்கிறது என்று கற்பனை செய்ய வேண்டாம். வருடத்தில் ஆறு மாதங்கள் உறைபனியால் முடப்பட்டிருக்கும் இந்நாட்டில் அந்தத் தாவரங்கள் அப்படியே வளர்வதும் சாத்தியமில்லை; அந்த பிராணிகள் வசிப்பதும் சாத்தியமில்லை. இந்த நாட்டின் தட்பவெப்ப நிலையில் வளரக் கூடிய அதே இனத்தைச் சார்ந்த அதே குடும்பத்தைச் சார்ந்த ஒரு மரம் அல்லது பிராணி என்று விளங்கிக் கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவற்றின் பின்னிஷ் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள், அறிவியல் பெயர்களையும் தந்திருக்கிறேன். 'கலேவலா'வின் பின்னிஷ் நூலில் உள்ள சில பின்னஷ் சொற்கள் தற்கால வழக்கில் இல்லை என்பதையும் அவை தற்கால அகராதிகளில் கூட இடம் பெறவில்லை என்பதையும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதனால் ஒரே சொல்லை மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு விதமாக விளங்கிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இப்படியான சிலவற்றையும் விளக்கக் குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.
சில ஒற்றுமைகள்
நாடு, மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றால் மக்கள் வேறுபட்டு இருந்தாலும், உலகெல்லாம் வாழும் மனித இனத்திடையே மனத்தளவில் சிந்தனையில் நம்பிக்கைகளில் ஓர் ஒற்றுமை இருப்பதை இக்காவியத்தைப் படித்து அறிந்து கொள்ளலாம். மனத்தின் அடியாழத்தில் இருக்கக்கூடிய ஒருமைப்பாடு மனிதக் குலத்துக்குப் பொதுவானது. கனவு, சகுனம், குறி பார்த்தல் போன்றவை நமது புராணங்களிலும் இலக்கியங்களிலும் வருகின்றன. ஒரு காலத்தில் இவையெல்லாம் எல்லா நாடுகளிலும் எல்லா இனத்தவரிடமும் இருந்தன என்பதற்கு இது ஒரு சான்று. இந்தக் 'கலேவலா' என்னும் காவியத்தில் வரும் சில சம்பவங்கள் இதோ:
லெம்மின்கைனன் என்னும் அஹ்தி வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அவனுடைய மனைவி குயிலி ஒரு கனவு கண்டு அவனது பயணத்தைத் தடுக்கிறாள். அவள் கனவு கண்டு பயந்தது போலவே அவனுக்கு மரணம் வருகிறது. இந்தக் கட்டத்தில் குயிலியின் கூற்று 'வீரபாண்டிய கட்டப்பொம்மனி'ல் வரும் "போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொற்பனம் நானும் கண்டேன்" என்ற அடிகளை நினைவூட்டுகிறது:
"அன்பே, இனியஎன் அஹ்தியே, கேளாய்!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்
துயிலும் பொழுது தோன்றிய தோர்கனா
அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்:
உலைக்களம் போல ஒருநெருப் பெழுந்தது
சுவாலையாய் எழுந்து சுடர்விட் டெரிந்தது
சாளரத் தின்கீழ் சரியாய் வந்தது
பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது
உடன்சுழன் றங்கிருந் துள்ளே நுழைந்தது
உக்கிரம் கொண்டது உயர்நீர் வீழ்ச்சிபோல்
தரையிலே இருந்து தாவிக் கூரை
பலகணி பலகணி பரவிச் சென்றது." - பாடல் 12.
தடுத்தது அவனுடைய மனைவி குயிலி மட்டுமல்ல; தாயும் தடுத்தாள். அந்நேரம் தலை சீவிக் கொண்டிருந்த லெம்மின்கைனன், அந்தச் சீப்பைச் சுவரில் எறிந்துவிட்டு, "எனக்கு ஏதாவது கெடுதி நேர்ந்தால் இந்த சீப்பிலிருந்து இரத்தம் வடியும்" என்றான். அப்படியே வடநாட்டில் அவன் இறந்தபோது இங்கே சீப்பிலிருந்து இரத்தம் வடிந்தது. அதைக் கண்ட தாய் பதறிக் கொண்டு புறப்பட்டுப் போனாள்.
அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்கள் தெரிந்த ஒரு பூதம். தனது வயிற்றில் இருக்கும் வைனாமொயினனை ஒரு ஆவி என்று எண்ணி அதை வெளியேற்ற மந்திரம் செபிக்கிறான். அது ஒரு நீண்ட செபம். இடையே அந்த ஆவி தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்ததற்கு ஓர் அடையாளம் காட்டும்படி இப்படிக் கேட்கிறான்:
அங்குவந் ததற்கோர் அடையா ளம்மிடு
சார்ந்த(தற் கி)ரகசியச் சைகையைக் காட்டு
அடையா ளம்மிடு அதிர்இடி முழக்கமாய்
மின்னலாய் மின்னி வெளியிடு சைகையை
தோட்டக் கதவைத் தொட்டுவீழ்த் துதைத்து
சாளரக் கதவைத் தான்தகர்த் தெறிந்திடு! - பாடல் 17.
தமிழ் மக்களிடையே இருந்த எத்தனையோ வைத்தியம், சோதிடம், வர்மம், மாந்திரீகம் போன்ற அரிய கலைகளில் சில அழிந்துவிட்டன; அல்லது அவை தமது முழுமையை இழந்து குறுகிவிட்டன என்றும் சொல்லலாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாணவன் தன்னை மிஞ்சிவிடக் கூடாதே என்ற குறுகிய நோக்கில் குரு முழுக் கலையையும் மாணவனுக்குக் கற்பிப்பதில்லை. தன்னை இனம்காட்ட ஏதாவது ஒன்று தனக்கு மட்டும்தான் தெரிந்திருக்க வேண்டும் என்ற சுயநலத்தில் எதையாவது மறைத்து விடுவார்; அந்த மாணவன் தான் பெற்ற மகனாக இருந்தாலும் இந்தச் சுயநலத்துக்கு விதிவிலக்கில்லை. இப்படியே ஆளுக்கொன்றாய் மறைக்கப் போய் அடியோடு அழிந்ததுமுண்டு. சிலர் தமது வயோதிப காலத்தில் சில ஏட்டுச் சுவடிகளை ஆற்றில் விட்டதாகவும் நெருப்பில் எரித்ததாகவும் அறிந்திருக்கிறோம். இக்காவியத்தில் வைனாமொயினன் வாய்மொழியாக வரும் இந்த அடிகளைப் பாருங்கள்:
"... மந்திரச் சொற்கள் மறைத்தல்ஆ காது
பகர்மந் திரமொழி பதுக்குதல் ஆகா(து)
நிலத்துக் கடியிலே புதைத்தலும் ஆகா(து)
மந்திரவாதிகள் மறைந்துபோ னாலும். - பாடல் 17.
இராவணன் யாழ் மீட்டிச் சிவனை மகிழ வைத்தது தொடக்கம் இசை இயற்கையையே நெகிழ வைத்ததுவரை இசையின் சக்தியை நாம் அறிவோம். இந்தக் காவியத்திலும் வைனாமொயினன் 'கந்தலே' என்னும் யாழை மீட்டி இசையின்பம் அளிப்பதை இரண்டு சந்தர்ப்பங்களில் காண்கிறோம். ஆனால் அந்தரோ விபுனன் மந்திரப் பாடல்களைப் பாடும்போது நிகழ்ந்தவை வருமாறு:
பாடலைக் கேட்கப் பகலவன் நின்றனன்
நின்றே தங்க நிலவும் கேட்டது
அலைகள்நீர்ப் பரப்பில் அசையா நின்றன
அவ்விதம் கரையிலும் அலைகள் நின்றன
அருவிகள் ஓடா(து) அமைந்தே நின்றன
நிமிர்நுரை உறுத்தியா நீர்வீழ்ச்(சி) நின்றது
வுவோக்சிநீர் வீழ்ச்சிப் பாய்ச்சலும் நின்றது
அவ்விதம் யோர்தான் ஆறதும் நின்றது. -பாடல் 17.
வைனாமொயினன் இரண்டாவது தடவை கந்தலே என்னும் யாழை மீட்டியபோது நடந்தவை வருமாறு:
மீட்டினன் வைனா மொயினன் விரலால்
கந்தலே நரம்புகள் கனிவா யொலித்தன
பன்மலை முழுங்கின பாறைகள் மோதின
உயர்குன் றங்கள் ஒருங்கசைந் தாடின
கற்பா(றை) வீழ்ந்து கனதிரைத் தெறித்தன
கூழாங் கற்கள் குளிர்புனல் நகர்ந்தன
தேவ தாருகள் திளைத்தன மகிழ்ச்சியில்
கவின்புற் றரைமரக் கட்டைகள் துள்ளின.
கலேவாப் பெண்கள் கவின்மைத் துனிமார்
சித்திரத் தையலின் மத்தியி லிருந்தனர்
நதியினைப் போலவே நங்கையர் விரைந்தனர்
அருவியைப் போலவே அனைவரு மோடினர்
நகைத்த வாயிள நங்கைய ரோடினர்
மகிழ்ந்த மனத்துடன் மனைவியர் கூடினர்
யாழினை மீட்பதை நலமாய்க் கேட்கவே
இசையின் பத்தை இனிதே நுகர.
மருங்கினில் நின்ற மனிதர்கள் அனைவரின்
கரங்களி லிருந்தன கவிழ்த்தவர் தொப்பிகள்;
பக்கம் முதிய பாவையர் யாவரும்
கன்னம் தாங்கிக் கைகளில் நின்றனர்
நிலத்தூன்(றி) முழங்கால் நின்றனர் மைந்தர்
கந்தலே இசையினைக் கவினுறக் கேட்க
இசையின் பத்தை இனிதே நுகர - பாடல் 44.
பாடல் 9ல் வைனாமொயினனுக்குக் காயம் ஏற்பட்டு இரத்தம் பெருகுகிறது. இப்பாடலிலும் பெரும்பகுதி மந்திரம் சொல்வதாகவே அமைந்து விட்டது. இரத்தப் பெருக்கை நிறுத்த மந்திரத்தால் ஆணையிடும் சில அடிகள்:
இரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல்!
மிகுசோரி ஆறே வேலியைப் போல்நில்!
ஆழியில் நிற்கும் வாளென நிற்பாய்!
கொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென!
வயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்!
நீர்வீழ்ச்சி யில்உறு நெடுங்கல் எனநில்!
வைனாமொயினன் தான் மணம் செய்வதற்கு வட நாட்டு மங்கையைக் கேட்பதற்காக ஒரு படகில் புறப்பட்டுச் செல்கிறான். இதையறிந்த இல்மரினன் தனும் ஒரு சறுக்கு வண்டியில் விரைகிறான். ஒரே பெண்ணுக்குப் போட்டியிட்ட இரு மாப்பிள்ளைகளும் வழியில் ஒருவரையொருவர் சந்திக்கின்றனர். இருவரது மனநிலையும் எப்படி இருந்திருக்கும்? இதோ இது வைனாமொயினனின் கூற்று:
"நட்புடன் படிக்கை நான்ஒன் றமைப்பேன்
பெண்பல வந்தமாய் பெயர்த்தெழல் இல்லை
அவள்நசைக் கெதிர்மணம் ஆவதும் இல்லை,
அவனுக் கேபெண் அளித்திடல் வேண்டும்
அவனுக் கேஅவள் எவனை விரும்பிலும்,
வெறுப்பி ல்லாமல் மிகநீள் காலம்
பல்லாண் டகவை பகையில் லாமல்." - பாடல் 18.
தூரத்தில் மக்கள் கூட்டமாக வருவதை வடநிலத் தலைவி காண்கிறாள். அவள் தனது அடிமைப் பெண்ணுக்குச் சொல்கிறாள்: "பேரிச் சுள்ளியை எடுத்து நெருப்பிலே போடு. அதிலே இரத்தம் ஊற்றெடுத்தால் எம்மைத் தேடி ஒரு போர் வருகிறது என்று அர்த்தம். தண்ணீர் ஊற்றெடுத்தால், அது போரல்ல; நாங்கள் அமைதியாய் வாழலாம்." ஆனால் இரத்தமோ தண்ணீரோ ஊற்றெடுக்கவில்லை; தேன் சுரந்தது. அதற்கு ஒரு முதியவள் பலன் சொல்கிறாள்: "மணப்பெண்ணைக் கேட்டு மாப்பிள்ளையும் குழுவினரும் வருகிறார்கள்" என்று. (பாடல் 18)
இரு மாப்பிள்ளைகளும் போட்டி போட்டுக் கொண்டு வருவதை அறிந்த வடநிலத் தலைவி, "முதிய வைனாமொயினன் நிறைந்த செல்வத்துடன் படகில் வந்து கொண்டிருக்கிறான். நீ அவனையே தேர்ந்து மணந்து கொள்!" என்று மகளுக்கு ஆலோசனை கூறுகிறாள். அதற்கு மகளின் மறுமொழி இது:
"எனைச்சுமந் தவளே,ஓ,என் அம்மா!
எனைவளர்த் தவளே,ஓ,என் அன்னாய்!
வருசெல் வந்தனை மணப்பதற் கில்லை
உயர்மா னிடஅறி வொருபொரு ளல்ல
இனிநான் மணப்பது எழில்நுத லுடையோன்
அங்கம் முழுவதும் அழகு படைத்தோன்;
இதுநாள் வரையில் ஏந்திழை யாரையும்
வியன்பொரு ளுக்காய் விற்றதே இல்லை
மங்கையைத் தானமாய் வழங்குதல் நல்லது ... ..." பாடல் 18.
சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் கல்கி அல்லது ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் படித்த ஒரு தமிழ் நாட்டுப் பாடல் நினைவுக்கு வருகிறது. இது ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம் பெற்றது. அந்த நாட்டுப் பாடலில் சில அடிகள் இவை தான் என்று நினைக்கிறேன்: "ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே; நல்ல பாம்பு வேடம் கொண்டு நடுச்சாமம் வந்தாயானால் ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன்; ஊர்க்குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால் செம்பருந்து வேடம் கொண்டு வெந்தூக்காய்த் தூக்கிடுவேன் ... ..." 'கலேவலா' காவியத்தில் வரும் இந்த அடிகள் எப்படி?
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்
ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கோலோச்சி மீனாய்க் குமரிபின் தொடர்வேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"இருப்பையேல் விடுவியா திக்கிருந் தென்னை
அடவியுட் சென்று அங்கே மறைவேன்
கீரியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"இருப்பையேல் விடுவியா திக்கிருந் தென்னை
மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்
மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கழுகுரு வெடுத்துக் கன்னிபின் தொடர்வேன்." - பாடல் 38
பின்னிஷ் மொழியில் vilja 'வில்யா' என்ற சொல்லுக்குத் தானியம் என்று பொருள். இந்தச் சொல் இதே பொருளில் இன்றும் வழக்கில் இருக்கிறது. ஆனால் 'கலேவலா' காவியத்தில் இச்சொல் பல இடங்களில் 'செல்வம்' என்ற பொதுச் பொருளில்தான் வருகிறது. ஆங்காங்கு இந்தச் செல்வம் என்ன என்று பார்த்தால் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் அது குறிக்கும்: தானியம், கால்நடை, வேட்டையின் இலக்கு. வாழ்க்கைக்கு முக்கியமான தானியம் என்னும் 'வில்யா' மனிதனின் செல்வமாயிற்று. பின்னர் வாழ்க்கைக்கு முக்கியமான எல்லாம் [உ.ம். கால்நடை] செல்வம் vilja என்று கருதப்பட்டது.
தமிழரும் பண்டைக் காலத்தில் கால்நடையைச் செல்வமாகவே கருதினர். மாடு என்றால் செல்வம் என்ற ஒரு பொருளும் உண்டு. அந்தக் காலத்திலேயே செல்வப் பொருளாகக் கால்நடைகள் அமைந்த காரணத்தினாலேயே அது சமுதாயத்திலே போருக்குக் காலாயமைந்தது. பசுவைக் கவருவோரும், கவருவோரைத் தடுக்க முனைபவரும் மூர்க்கமான போரில் ஈடுபட்டனர் என்று சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன. இக்காவியத்திலும் வடநிலத் தலைவிக்கும் கலேவலா இனத்தவருக்கும் பகை ஏற்பட்ட கட்டத்தில் கலேவலாப் பகுதியின் பயிர்களையும் கால்நடைகளையும் அழிப்பேன் என்று வடநிலத் தலைவி கூறி அவ்விதமே செய்யவும் முயல்கிறாள். அவள் கூற்று வருமாறு:
"கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்புவேன்
பெரியபற் பிராணியை நறுந்தேவ தாருவில்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கால்நடை யாவையும் கவிழ்த்தே வீழ்த்திட
பசுவினம் முழுதையும் பரப்பிடச் சிதறி;
அனைத்துமக் களையும் அழிப்பேன் நோயினால்
உன்றன் இனத்தை ஒன்றிலா தொழிப்பேன்,
என்றுமே இந்த எழில்நில வுளவரை
அவர்களைப் பற்றி அவனியில் பேச்செழா(து)." - பாடல் 43.
'சம்போ'வை இழந்ததால் ஆத்திரம் கொண்ட வடநிலத் தலைவி கலேவலா மக்களுக்குப் பலவிதமான தொல்லைகளைக் கொடுக்கிறாள். முதலில் வழக்கத்தில் இல்லாத கொடிய நோய்களை அனுப்புகிறாள். அடுத்து ஒரு கரடியை ஏவி விடுகிறாள். முன்றாவதாகச் சூரிய சந்திரர்களைத் திருடி ஒரு மலையில் ஒளித்து விடுகிறாள். அதனால் இரவு வந்தது; இடைவிடா திருந்தது. இருள் நிறைந்தது; இரவதே நீண்டது. கலேவலாப் பகுதியில் கடுமிருளானது. சூரிய சந்திரர்கள் எங்கே மறைந்தனர் என்றே தெரியாத நிலையில், வைனாமொயினன் திருவுளச் சீட்டு முலம் உண்மையை அறிய முற்படுகிறான். பூர்ச்ச மரத்தில் துண்டுகள் சீவி, அவற்றை ஒழுங்காக அடுக்கித் திருப்பி, இறைவனைப் பிரார்த்தித்து உண்மையை அறிகிறான். இது வைனாமொயினன் கூற்று:
"ஆண்டவ ரிடமொரு அனுமதி கேட்கிறேன்
ஆம்,சரி யாம்பதில் அதுவொன் றவசியம்:
இறைவனின் சீட்டே இயம்புவாய் உண்மை
தேவனின் திருவுளச் சீட்டே யுரைப்பாய்
செங்கதிர் எமைவிட் டெங்கே சென்றது
எங்கே மறைந்தது எமைவிட் டேமதி?
என்றுமே வாழ்வில் இல்லையே அவைகள்
இல்லை அவற்றைவான் என்றும் காணுதல்.
உள்ளதை உள்ளவா றுரைப்பாய் சீட்டே!
மனிதனின் விருப்புபோல் மற்றுநீ உரையேல்
உண்மைச் செய்தியை உடனிங் கருள்வாய்
விதித்தது எதுவோ விளம்புவாய் அதனை!
திருவுளச் சீட்டுச் செப்பினால் பொய்யுரை
சீட்டின் மகிமைச் சிறப்பதால் குறையும்
திருவுளச் சீட்டேத் தீயிடை வீசுவர்
மனிதரின் ராசிகள் மற்றெரி படலாம்." -பாடல் 49
இக்காவியத்தில் கடவுள் நம்பிக்கை வெளிப்படையாகவே தெரிகிறது. காடு, கடல், சேற்று நிலம் போன்றவற்றின் சக்திகள் அல்லது அதிபதிகள் சிறு தெய்வங்களாவார். உதாரணமாகக் காட்டின் அதிபதி தப்பியோ; அவரது மனைவி மியெலிக்கி; மகன் நுயீரிக்கி; பெண்கள் தெல்லர்வோவும் தூலிக்கியும். காட்டில் ஒரு சம்பவம் நிகழும் போது இவர்களை அழைத்து முறையிட்டு உதவி கோருவதைக் காணலாம். இப்படியான சிறு தெய்வங்களுக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார். இவரை முன்னாளில் 'உக்கோ' Ukko என்று பின்னிஷ் மொழியில் அழைத்தார்கள். 'உக்கோ' என்றால் கிழவன் என்றும் ukko/nen என்றால் முழக்கம் என்றும் பொருள். ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் Old man என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். கடவுளைக் "கிழவா!" என்று விளிக்க எனது மனம் ஒப்பவில்லை. அத்துடன் பெயரில்லாமல் 'முதியவன்' என்று அழைக்கப்பட்ட சில பாத்திரங்களும் காவியத்தில் இடையிடையே வருகின்றன. எனவே 'முது மனிதன்' என்றும், மனுக் குலத்தின் முதல்வன் என்ற பொருளில் 'மனு முதல்வன்' என்றும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். முது மனிதன், உயர்மா தெய்வம், காற்றுகளையும் இடி முழக்கங்களையும் ஆள்பவர், நீலக் காலுறையும் குதி உயர்ந்த காலணிகளும் அணிந்து முகில்களின் மேல் நடப்பவர் என்றெல்லாம் கடவுள் வர்ணிக்கப்படுகிறார். வெவ்வேறு இடங்களில் வரும் சில அடிகளைச் சேர்த்துக் கீழே தருகிறேன்:
"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
மனுமா முதல்வனே மாபெரும் தேவே!
வானகம் வதியும் மாமுது தந்தையே
முகிற்குலம் புரக்கும் முதுகா வலனே!
முழங்கும் முகில்களை முழுதாள் சக்தியே
வாயுவின் வழியாய் வாக்குரைப்பவனே!
மேகம் மேலுறும் வியன்சபை யமர்பவர்
உயர்ந்து தெளிந்த உயர்மன் றுறைபவர்
நிலைபெறும் சுவர்க்கமாள் நேசத் தந்தை
வருவாய் அழைக்கும் தருணத் திங்கே
கூவி உழைக்கையில் குறைநீக்க வருக
அனல்உமிழ் அலகுறும் அரியவா ளுடன்வா!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . ."
நாம் பிரார்த்தனை செய்யும்போது கடவுளிடம் பொதுவாகச் "சிறப்பான வாழ்வு" வேண்டும் என்று கேட்பது வழக்கம். வைனாமொயினனும் ஓரிடத்தில் "சிறப்பான வாழ்வு" வேண்டும் என்று கேட்கிறான்; அடுத்த அடியில் "மேன்மையான மரணம்" வேண்டும் என்றும் கேட்கிறான். இதோ அந்த அடிகள்:
தந்தருள் கர்த்தனே, தந்தருள் இறைவா!
தந்தருள் பாக்கியம் தான்நிறை வாழ்வை
என்றும் சிறப்பாய் இனிதுவாழ் வரத்தை
தந்தருள் மேன்மை தான்மிகு மரணம்
இப்பின் லாந்து இனிமையாம் நாட்டில்
கவின்நிறைந் திடுமிக் கர்யலாப் பகுதியில்.-பாடல் 43.
இந்தக் காவியம் முழுவதிலும் எனக்குப் பிடித்த பகுதி எதுவென்று கேட்டால், இல்மரினனின் திருமணத்தின் பின்னர், மணமகனும் மணமகளும் இல்மரினனின் வீட்டுக்குப் புறப்பட்ட சமயம், அவர்களுக்குத் தனித்தனியே கூறப்பட்ட அறிவுரை தான். அதில் சில அடிகளை மட்டும் இங்கு கூறுவது சாத்தியமில்லை; முழுவதையுமே வாசகர்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு, முன்னிணைப்புகள், பின்னிணைப்புகள் யாவும் சேர்ந்து சுமார் ஆயிரம் பக்கங்கள் வந்தன. இதை ஓர் உயர்தர பதிப்பாகவும் வெளியிட விரும்பினோம். ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நூல் சிறந்த முறையிலும் பதிப்பிக்கப்பட்டால், ஒரு சராசரி வாசகன் அதை வாங்க முடியாத விலையில் விற்க நேரிடும். அதனால் கொஞ்சம் பெரிய அளவு காகிதத்தில், ஒரு பக்கத்தில் இரண்டு பத்திகளில் (columns) சிறிய எழுத்துகளில் பாடல்களை வெளியிட்டுப் பக்கங்களை 500 அளவில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் இந்நூல் வெளியீட்டுக்கு ஒரு மானியம் கோரி பின்னிஷ் இலக்கிய மன்றத்தையும் அவர்கள் மூலமாகக் கல்வி அமைச்சையும் ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகம் அணுகியது. நூறு தமிழர்கள் கூட வாழாத இந்த நாட்டில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு தமிழ் நூலை வெளியிட அவர்கள் உற்சாகத்துடன் உதவிக்கு வந்தார்கள்.
இவ்வளவுக்கும் பின்னணியில் நின்று எல்லாவற்றையும் இயக்கி நிறைவு படுத்தியவர் பேராசிரியர் அஸ்கோ பார்பொலா (Dr. Asko Parpola) அவர்கள். இவரே ஹெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தின் 'ஆசிய ஆபிரிக்க நாடுகள் தொடர்பான கல்வித் திணைக்கள'த்தின் இந்தியவியல் சம்பந்தப்பட்ட கல்விக்குப் பொறுப்பானவர். இம்மொழிபெயர்ப்புக்கு மனமுவந்து ஓர் அறிமுக உரை எழுதியிருக்கிறார். எனது இனிய நண்பர்.
இந்தக் காவியத்தின் வேறு மொழிபெயர்ப்புகளில் சில உரைநடையிலும் சில கவிதை நடையிலும் வெளிவந்திருக்கின்றன. தமிழிலும் உரைநடையாக வெளியிடுவது என்ற திட்டத்துடன்தான் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னிஷ் நூல் கவிதையடிகளாக இருந்ததால், அந்தச் சிறிய அடிகளைத் தமிழில் ஆக்கியபோது, தமிழ் மொழிபெயர்ப்பும் இயல்பாகவே கவிதைநடையில் அமைந்துவிட்டது. ஆனால் பல இனப் பாக்களும் கலந்து இருந்தன.
கவிஞர் திமிலைத்துமிலன் இந்த மொழிபெயர்ப்பு முழுவதையும் படித்துப் பார்த்து மரபுக் கவிதைகளாக அமைக்கச் செய்த உதவி மகத்தானது. யாப்பமைதியோடு இருந்த மொழிபெயர்ப்பு அடிகள் தவிர, ஏனைய ஏராளமான அடிகளை யாப்புக்கேற்பத் திருத்திச் சீர்களுள் சரிவர அமைத்துத் தந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பின்லாந்துக்கு வந்திருந்த சமயம் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பாடல்களைப் பார்வையிட்டுத் தனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் அன்புடன் கூறினார்.
அலுவகத்துக்குப் போய் மணிக்கூட்டைப் பார்த்துக்கொண்டு எட்டு மணி நேர வேலை செய்திருந்தால் இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுதும் முடிந்திராது. இதன் பெரும் பகுதியை வீட்டில் இருந்தே செய்து முடித்தேன். சனி, ஞாயிறு, விடுமுறை என்ற ஓய்வில்லாமல் காலை நாலு மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை உழைத்த நாட்கள் எத்தனையோ. அப்பொழுதெல்லாம் தேவையான ஒத்துழைப்பைத் தந்து என்னை ஊக்கப்படுத்திய என் மனைவியையும் மக்களையும் இங்கு கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மேற்கூறிய அனைவருக்கும் எனது நன்றியைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
காணிக்கை
பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இந்த நாட்டுக்கு வந்தபோது சந்தித்த முதல் மனிதர் இன்னமும் எனது நெஞ்சில் முதலாம் இடத்திலேயே இருக்கிறார். இவர் பல நாடுகளில் பல இன மக்களோடு சேர்ந்து வாழ்ந்து, அன்புக்கும் பண்புக்கும் அர்த்தம் சொல்லிவிட்டு இங்கே வந்தவர். மனித நேயத்தின் இலக்கணத்தைச் செயலில் காட்டுபவர். எனது உள்ளத்தைத் துடைத்துத் தூய்மையாக்கி அதிலே நட்புக்கு நயம் எழுதி வைத்தவர். 'இறைவனே உயர்ந்தவர் ' என்பது கொள்கை. 'எல்லோரும் நல்லவரே' என்பது கோட்பாடு. பிறப்பால் அமெரிக்கர். வயது எழுபது. இவர் பெயர் டாக்டர் லொயிட் சுவான்ஸ (Dr. Lloyd Swantz). இவருக்கு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தரங்க சுத்தியுடன் அர்ப்பணம் செய்கிறேன்.
முடிவாக ...
மொழி, கலை, கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட ஒரு காவியத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பதே சிரமம். அதையும் மரபு கவிதையில் சொல்வது மிக மிகச் சிரமம். பின்னிஷ் மொழியில் உள்ள ஒரு வரியை தமிழில் ஒரு சொல்லில் சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் இருந்தது; ஒரு சொல்லை விளக்கத் தமிழில் நான்கு வரிகள் தேவை என்ற நிலையும் வந்தது. 'விளக்கக் குறிப்புகள்' என்ற பின்னிணைப்பு இவ்வளவு நீளமாக அமைந்ததற்கு இதுவும் ஒரு காரணம். மொழிபெயர்ப்பது, கணனிக்கு ஊட்டுவது, கணனியின் அச்சுப் பிரதிகளில் சரிபிழை பார்ப்பது, திருத்தங்களை செய்வது போன்ற சகல வேலைகளையும் நான் ஒருவனே செய்ய வேண்டியிருந்ததால் ஆங்காங்கு சில பிழைகள் இருக்கலாம். குற்றம் குறைகளை மன்னியுங்கள்; கருத்துகளைக் கூறுங்கள்; திருத்தங்களை எழுதுங்கள்.
அன்புடன்,
ஆர். சிவலிங்கம்
(உதயணன்)
Laakavuorentie 4 C 41,
00970 Helsinki,
Finland.
10.09.1994
பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு TOP
அடிகள் 1-102: பாடல் ஆரம்பம்.
அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள்.
அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது.
அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன.
அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள்.
அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்டு, முடிவில் கரையேறுகிறான்.
* இவ்வடையாளமிட்ட சொற்களை சொற்றொகுதியில் பார்க்க
** இவ்வடையாளமிட்ட சொற்களை விளக்கக் குறிப்புகளில் பார்க்க
எனதுள்ளத்தில் உள்ளுணர்வு இப்போ விழிக்கிறது
எனதுள்ளே உயிர்பெற்று எழுகிறது எண்ணமெல்லாம்
பாடலையான் பக்குவமாய்ப் பாடுவதற்கு வந்திட்டேன்
பாடலையான் பண்ணுடனே பலபேர்க்கும் பகருகிறேன்
சுற்றத்தின் வரலாற்றைச் சுவையாகச் சொல்வதற்கு
உற்றதொரு பேரினத்தின் பழங்கதையை ஓதுதற்கு ;
வார்த்தைகளோ வாயினிலே வந்து நெகிழ்கிறது
நேர்த்திமிகு சொற்றொடர்கள் நேராய்ச் சொரிகிறது
நாவிலே நயமாக நன்றாகப் புரள்கிறது
பாவாகிப் பற்களிடைப் பதமாய் உருள்கிறது. 10
அன்பான சோதரனே, அரியஎன்றன் தோழர்களே !
என்னோடே வளர்துயர்ந்த எழில்மிகுந்த நண்பர்களே !
இப்போது வந்திடுங்கள் இணைந்தொன்றாய்ப் பாடிடுவோம்
நற்சுவையாய்ச் சொல்லுதற்கு நல்லுள்ளத்தைத் தாருங்கள்
ஒன்றாகக் கூடியுள்ளோம் ஒன்றாகச் சந்தித்தோம்
நன்றாய் இருவேறு இடமிருந்து நாம் வந்தோம் ;
அரிதாகக் கூடிடுவோம அரிதாகச் சந்திப்போம்
அரிதாக ஒருவரினை ஒருவர்நாம் சந்திப்போம்
வறிதாகிப் போய்வீணே மயங்குகின்ற எல்லைகளில்
தெரியும்வட பால்நிலத்தில் செழிப் பிழந்த பூமியின்கண். 20
கரத்தோடு கரம்சேர்த்துக் கனிவாகக் கைகோர்த்து
விரலோடு விரல்சேர்த்து விரலையழ காய்க்கோர்த்து
நன்றாய்நாம் பாடிடுவோம் நயம்திகழப் பாடிடுவோம்
ஒன்றிச்சீர் கொண்டவற்றை உவகையோடு பாடிடுவோம்
பொன்னான நல்லிதயம் படைத்தவர்கள் கேட்கட்டும்
இனிமையுறு நன்நெஞ்சம் இயைந்தவர்கள் அறியட்டும்
எழுச்சி மிகுந்தோங்கும் இளைஞர்களின் மத்தியிலும்
வளர்ந்துவரும் தேசீய மக்களவர் மத்தியிலும்
யாமறிந்து கொண்டுள்ள நல்லியல்புச் சொற்களையும்
நமதுளத்தில் ஊறுகின்ற நற்சுவைசேர் கதைகளையும் 30
முதிய*வைனா மொயினனரைக் **கச்சணியி லேயிருந்து
*இல்மரினன் ஊதுலையின் இயைஆழத் தேயிருந்து
*தூரநெஞ்சி னன்வாளின் தொடுகூர் முனையிருந்து
*யொவுகாஹை னன்குறுக்கு **வில்லினது வழியிருந்து
**வடபால் நிலத்துற்ற வயல்களிலே தானிருந்து
*கலேவலாப் பகுதியதன் கனவெளிக ளுடிருந்து.
என்தந்தை முன்பொருகால் இனிதிசைத்த பாடலிது
முன்னர்ஒரு கோடரிக்குப் பிடிசமைத்த நேரமதில்
என்அன்னை கற்பித்த எழிற்பாடல் தானிதுவாம்
**தறித்தண்டில் நூலதனைத் தான்சுற்றும் வேளையிலே 40
சிறுகுழந்தை யாய்நிலத்தில் செம்மையுறத் தான்தவழ்ந்து
அவள்முழங்கா லவைமுன்னே அழகாகத் தான்நகர்ந்து
**பால்தாடி கொண்டுள்ள பராரிக் குழந்தையதாய்
வாயில் **புளித்திட்ட பாலொழுக வந்திடுங்கால்.
*சம்போவின் சொற்களுக்குத் தனிப்பஞ்ச மொன்றில்லை
*லொவ்ஹியின் மாயங்கட் கெல்லையே ஒன்றில்லை:
வார்த்தைகளில் சம்போவும் வாகாய் முதிர்ந்ததுண்டு
மாயத்தால் லொவ்ஹியும் மறைந்தன்றோ போய்விட்டாள்
பாடலினால் *விபுனனும் பட்டிறந்து போய்விட்டான்
ஆடலினால் அழிந்திட்டான் ஆடவனாம் *லெ(ம்)மின்கைனன் 50
இன்னும் பலகதைகள் இருக்கின்ற தோதுதற்கு
மன்னும் இவைதவிர மாயவுரை யானறிவேன்
பாதையிலே பொறுக்கியது பாதிக் கதைமேலும்
புதர்களிலே பறித்தெடுத்தேன் மீதிக் கதையின்னும்
பற்றைகளில் நான்கொஞ்சம் பதமாகப் பெற்றிட்டேன்
கண்டுகொண்டேன் முளைகளிலே கதைவேறு கொஞ்சந்தான்
புல்முனையின் பசுமையிலும் புணர்ந்ததுண்டு சிற்சிலவே
சிறுப்பாதைப் பரப்பினிலும் சேர்ந்ததுண்டு சிலகதைகள்
நான்மந்தை களைமேய்த்து நடக்கும் இடையனென
சிறுவனெனப் புல்வெளியில் சென்றிட்ட போதினிலும் 60
தேன்வடியும் மேட்டுநிலச் சீர்சால் மடியினிலும்
பொன்னான குன்றின் புகழ்சார் முடியினிலும்
கருநிறத்து *முரிக்கி யதனை நனிதொடர்ந்தும்
புள்ளியுள்ள நல்லாவாம் *கிம்மோ அருகினிலும்.
குளிர்வந்து தந்ததுண்டு குணமார் சிலகதைகள்
கார்வந்து சொன்னதுண்டு கவினார் சிலகவிகள்
காற்றுவந்து கூறியது கவியொன்று கேட்டேன்யான்
கடலலையும் கூடவந்து கவிகூறக் கேட்டேன்யான்
புதுப்பாடல் புள்ளினங்கள் புகன்றுதர வும்பெற்றேன்
மரநுனிகள் மாயச்சொல் வகைசொல்ல வும்கேட்டேன். 70
இவற்றையெல்லாம் பந்தாக இணைத்தொன்று சேர்த்திட்டேன்
நயத்துடனே ஒழுங்கமைத்து நற்பொதியாய்க் கட்டிவைத்தேன்
**சறுக்குகின்ற வண்டியிலே தான்பந்தை நான்வைத்தேன்
வண்டியையும் வீட்டுக்கு மகிழ்வூரக் கொண்டுசென்றேன்
களஞ்சியத்தில் வண்டியினைக் கவனமாய் விட்டுவைத்தேன்
சரக்கையெல்லாம் கூடத்தின் சரியான மேற்றளத்தில்
சிறுசெப்புச் சிமிழொன்றில் சேர்த்தேயான் வைத்திருந்தேன்.
பலகாலம் என்கதைகள் படுகுளிரில் தான்தங்கி
பல்லாண்டு மறைவாகப் பாங்கா யிருந்ததுண்டு. 80
என்கதையைப் படுகுளிரில் இருந்தெடுத்து விடலாமா?
உறைகுளிரில் இருந்தந்த உயர்பாட்டை மீட்பதுவா?
சிறுகுமிழை வீட்டுக்குள் சீரமையக் கொண்டுவந்து
ஆசனத்தின் நுனியினிலே அச்சிமிழைத் தான்வைத்து
சீரான கூரைமரத் தம்பத்தின் கீழாக
சிறப்புடைய முகட்டின்கீழ் செம்மையுற வைப்பதுவா?
சொற்களின் பெட்டகத்தைத் துணிவாய்த் திறந்தெடுத்து
கதைகளின் பெட்டகத்தைக் கவனமுடன் தான்திறந்து
பந்தாக விருந்தவதைப் பக்குவமாய்த் தான்கழற்றி
நான்பொதியின் நன்முடிச்சை நன்றாய் அவிழ்ப்பதுவா? 90
சிறப்பான பாட்டொன்று செம்மையுறப் பாடுவன்யான்
சீரான இசைக்கூட்டிச் செம்மையுறப் பாடுவன்யான்
**தானியத்து ரொட்டிசிறி தாயெடுத்து உண்டதன்பின்
**பார்லிப்பா னம்சிறிது பார்த்துப் பருகிவிட்டு;
பார்லியின் பானமது பருகுதற்கு இல்லையெனின்
மதுபானம் கூட வைத்திருக்க வில்லையெனின்
வறட்சியுற்ற வாயதனால் வளமாகப் பாடுவன்யான்
வெறும்நீரை யானருந்தி விருப்புடனே பாடுவன்யான்
எமதிந்த அந்தியினை இன்றே மகிழவைக்க
பேரான இப்பகலைப் பெரிதாய்ச் சிறப்பிக்க 100
நாளை வரும்பொழுதை நலமாக ஆக்கிவைக்க
புதிதாம் புலரியொன்றைப் பொன்னாய்த் தொடங்கிவைக்க.
இவ்விதமே கூறுகதை இனிதாக யான்கேட்டேன்
எவ்வாறு ஆனதென்றும் எளிதாய்த் தெரிந்துகொண்டேன்:
எங்களிடம் தனியாக இரவெல்லாம் வந்திருந்து
தனியாகப் பகலெல்லாம் தானே புலர்வகையில்.
தனியாகத் தோன்றினான் தகைவைனா மொயினனவன்
தோன்றியது நிலையான துய்ய கவிச்செல்வம்
அவனைச் சுமந்த அழகான நங்கையென்னும்
அன்னையாம் *வாயுமகள் அவளிடத்தி லேயிருந்து. 110
வாயுக்குக் கன்னி மகளொருத்தி யன்றிருந்தாள்
வனப்பெல்லாம் இயற்கைமகள் வளமாகத் தான்பெற்றாள்
தூய்மையுடன் பலநாள் துணிவோடு வாழ்ந்திருந்தாள்
திடமான கன்னிகையாய்ச் சீராக வாழ்ந்திருந்தாள்
வாயுவின் முன்றிலிலே வளமாய் விரிபரப்பில்
விண்வெளியின் விசாலித்து விரிந்த விளைநிலத்தில்.
நாளாக நாளாக நன்றாய் மனம்சலித்து
"ஐயகோ, வாழ்விதுவா?" அலுத்திட்டாள் இவ்விதமாய்
தனியாக எப்போதும் தானாகச் சுற்றிவந்து
கன்னிகையாய் எப்போதும் காலத்தைப் போக்கிவந்தாள் 120
வானத்து வெளியெல்லாம் வந்தாள் பவனியதாய்
வெறுமைமிகு விண்வெளியின் வீதியெல்லாம் தான்தவழ்ந்தாள்.
ஆனதனால் மெதுவாய் அங்கிருந்து கீழிறங்கி
அழகுமிகு நீரலைமேல் அவள்படிந்து நின்றிட்டாள்
தெளிவாக நீண்டு தெரியும் சமுத்திரத்தின்
திடமாம் மடியதனில் சேரவந்து வீழ்ந்திருந்தாள்.
அப்போ பெருங்காற்று அதிபலமாய்த் தோன்றியது
கிழக்கிருந்து காலநிலை கெட்டுச் சினந்தெழுந்து
சமுத்திரத்தை யேநுரையாய்த் தாக்கிக் கலக்கிவைக்க
திரைதிரை யாய்மோதிச் சீரழித்த தேயாங்கு. 130
காற்றவளைக் கீழ்மேலாய்க் கலக்கி யசைத்தாட்ட
பாவை யவள்துரத்தப் பட்டாள் நுரைதிரையால்
நீல நிறத்தோடு நீண்ட சமுத்திரத்தில்
வெள்ளைத் திரைபரந்து மிகுந்த கடற்பரப்பில்;
காற்றுவந்து கர்ப்பத்தில் கலந்தந்தக் கன்னிகையும்
சமுத்திரத்தின் நல்வலியால் தகைசால் பொலிவானாள்.
கனமாம் கருவொன்று கவினுதரம் தங்கியதால்
கனத்த வயிற்றோடு கன்னியவள் வாழ்ந்திட்டாள்
ஒன்று இரண்டல்ல உறுமெழுநூ றாண்டுகளாய்
மனித வரலாற்றில் மன்னுபொன்பான் வாழ்காலம் 140
ஆனாலும் ஓர்பிறப்பும் அங்கே நடக்கவில்லை
ஏதும் படைப்பொன்றும் இன்னும் நிகழவில்லை.
நீரன்னை யாகவவள் நெடுநாளாய்ச் சுற்றிவந்தாள்
நீந்திக் கிழக்கினிலும் நீந்தினாள் மேற்கினிலும்
நீந்தி வடமேற்கே நீந்திட்டாள் தெற்கனைத்தும்
வாயுக் கரையெல்லாம் வந்திட்டாள் நீந்தியவள்
பிரசவத்து நோவலியால் பெருந்துயரம் தான்கண்டு
கருவதனால் நேர்ந்திட்ட கடுந்துயரம் தான்கொண்டாள்
ஆனாலும் ஓர்பிறப்பும் அங்கே நடக்கவில்லை
ஏதும் படைப்பொன்றும் இன்னும் நிகழவில்லை. 150
அழுதாள் அரற்றினாள் ஆற்றா தலமந்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாளே இவ்விதமாய்:
"நானோவிந் நாளினிலே நலமிழந்த பாவியையோ
ஏழைச் சிறுமியென எங்கும் அலைகின்றேன்!
ஏதோ முடிவொன்றுக் கிப்போது வந்திட்டேன்
என்றென்று மேயிந்த எழில்வானத் தின்கீழாய்
கடுங்காற்று வந்து கதிகீழ்மேல் நின்றசைக்க
நுரைதிரை யிங்கெழுந்து நொந்தவென்னை யேதுரத்த
அகன்று பரந்திட்ட அந்நீர்ப் பரப்பினிலே
விரிந்து பரந்திட்ட வியன்கடலின் வீழ்மடியில். 160
பவனத்தி லிருந்திருந்தால் பலனா யிருந்திருக்கும்
காற்றினது கன்னிகையாய் கனநலமாய் வாழ்ந்திருப்பேன்
இப்போது போல எங்குமலைந் தோயாமல்
நீரன்னை யாக நிலைகெட்டுப் போகாமல்:
இங்கே யிருப்பதுவோ இகல்குளிராய்க் காண்கிறது
நீரில் நடுங்கி நிதம்நலிந்து வாடுகிறேன்
எடுத்தே யெறியும் இவ்வலைமேல் வாழ்வதனால்
நெடிதாகி நீண்ட நீர்ப்பரப்பில் நீந்துவதால்.
ஓ,மா **முதுமனிதா, உயர்மா தெய்வமதே!
வானம் முழுவதையும் வலிதாங்கும் தற்பரனே! 170
தேவைப் படும்தருணம் தெரிந்திங்கு வந்திடுவாய்
கூவி யழைக்கையிலே குறைபோக்க வந்திடுவாய்
துயருற்ற பெண்ணெனது துன்பத்தைத் தீர்த்திடுவாய்
வயிற்றில் வரும்நோவின் வாதையைப் போக்கிடுவாய்
விரைவில் வருவாய் வெளிப்படுவாய் இக்கணத்தில்
தேவைமிகு நேரமிது திண்ணமாய் வந்திடுவாய்".
*** *** ***
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
**நேராய்ப் பறக்கும் **தாரா வந்தது
வறிதாய் அங்கும் இங்கும் பறந்தது 180
கூடொன் றமைக்கும் இடத்தைத் தேடி
குடிலொன்று கட்டி வாழ்ந்திடல் நாடி.
கிழக்கே பறந்தது மேற்கே பறந்தது
கிளர்வட மேற்கொடு தெற்கும் பறந்தது
ஆயினும் அதற்கிட மொன்றும் கிடைத்தில(து)
அங்குவீண் போக்கிட மொன்றுங் கிடைத்தில(து)
கூடொன்று கட்டிக் குடியிருந் தாறிட
வீடொன் றமைத்து விரும்பிவாழ்ந் தோய்திட.
அந்தரந் தன்னிலே அகலா நின்றது
சிந்தனை செய்தது சீருற நினைத்தது 190
"நான்என் கூட்டைக் காற்றில் கட்டவா?
நல்ல வசிப்பிடம் அலையில் அமைக்கவா?
காற்றுவந் தேயதைக் கட்டொடு வீழ்த்தும்
கதறும் திரையதைத் திண்ணம் அழிக்கும்."
அப்போ தங்குநீ ரன்னையாம் பெண்ணாள்
அழகுநீ ரன்னை காற்றதன் கன்னி
கடல்மேல் தன்முழங் காலதைத் தூக்கி
கடலலை மேல்தன் தோளை உயர்த்தி
பொன்வாத் துக்குப் புகலிடம் தந்தாள்
பொலிவாம் ஓரிடம் வாழ்ந்திடத் தந்தாள். 200
வனப்புறு வாத்தது வண்ணவான் பறவை
வானத்தி லூர்ந்துமே லந்தரம் நின்று
நீரன்னை தந்த முழங்கால் கண்டு
நீல நிறத்துநீர்ப் பரப்பதன் மேலே
புல்வளர் ஓர்திடல் புதிதென் றெண்ணி
பொன்வசந் தப்பரப் பென்றெண் ணியது.
பறந்துவாத் தந்தரம் பறவா நின்று
பவிசுறு முழங்கா லதில்மெது விறங்கி
வீட்டின் தேவையால் கூடொன் றமைத்து
இதப்பத மாயிருந் திட்டது முட்டை 210
எழில் பொன் முட்டை இட்டது ஆறு
இரும்பா லானது ஒன்றுடன் ஏழு.
*** *** ***
முட்டைகளை அப்பறவை முனைந்து அடைக்காக்க
முழங்கால் சூடாகி வெப்பமாய் மாறிற்று;
முதல்நாள் மறுநாளும் முழுதுமடை காத்ததது
மூன்றா வதுநாளும் விரைந்துஅடை காத்ததுவே
அப்போது அங்கிருந்த அழகுநீ ரன்னையவள்
நீரன்னை யான நெடுங்காற் றதன்கன்னி
மேலெல்லாம் வெந்நெருப்பால் வேகுவது போலறிந்து
தோலெல்லாம் தீப்பற்றிச் சுடுவதுபோ லேயுணர்ந்தாள்: 220
முழங்கால் முழுவதிலும் முண்டதீப் பற்றிவந்து
முற்றாய் நரம்புகளு முருகுவதா யாங்குணர்ந்தாள்.
அப்போ தவசரமாய் அசைத்தாள் முழங்காலை
உடலுறுப்பு அத்தனையும் உலுப்பினாள் ஒன்றாக
முட்டைக ளெல்லாம் முழ்கினவே நீரோடி
ஆழி அலைகளிலே அமிழ்ந்தனவே போராடி;
முட்டை யெலாம் மோதுண்டு முற்றாய் நொருங்கிடவே
சிதறினவே யாங்கு சிறுசிறிய துண்டுகளாய்.
அச்சிறிய துண்டுகளோ அமிழவில்லைச் சேற்றினிலே
நீரிற்போய்த் துண்டுகளும் நேராய் அழியவில்லை; 230
துண்டுகள் நற்பொருட்க ளாய்மாறித் தோன்றினவே
தூய பொருட்களெனத் துகளெல்லாம் மாறினவே:
முட்டை யொன்றன் கீழ்ப்பாதி முழுதாக மாற்றமுற்று
பூமியன்னை யாய்க்கீழே பொலிந்து விளங்கிற்று
உடைந்தமுட்டை தன்னுடைய உயர்வான மேற்பாதி
சுவர்க்கமாய் மேலெழுந்து தோன்றி ஒளிர்ந்ததுவே,
மேற்பாதி யிலிருந்த மிகுமஞ்சள் ஒண்கருவோ
மங்கள சூரியனாய் வந்து திகழ்ந்ததுவே,
மேற்பாதி யிலிருந்த வெள்ளைக் கருவதுவும்
நிலவாக வானில் நீள்பவனி வந்ததுவே, 240
முட்டையிலே பன்னிறத்தும் முண்டிருந்த புள்ளியெலாம்
வான வெளியினிலே வந்தனவே விண்மீனாய்,
முட்டையிலே கார்நிறத்தில் முன்பிருந்த யாவையுமே
வானில் முகில்களென மாறித் திகழ்ந்தனவே.
*** *** ***
கரைந்தது நேரம் கடந்தது காலம்
வருடங்க ளோடி மறைந்தன விரைவாய்
புதிய சூரியன் பொலிவுடன் எழுந்தான்
புத்தெழில் நிலவும் பொன்வான் திகழ்ந்தது.
இன்னும் நீந்தினள் எழில்நீ ரன்னை
கன்னிநீ ரன்னை காற்றதன் புதல்வி 250
புகார்நிறைந் திருந்த பொலிதிரை களின்மேல்
நுரைத்தெழுந் திட்ட நுண்திரை மடியில்
அவளின் முன்னால் அகன்ற நீர்ப்பரப்பு
அவளின் பின்னே அகல்தெளிந் திடுவான்.
அங்ஙனம் சென்ற ஆண்டொன் பதிலே
பத்தாவ தான பருவக் கோடையில்
கடலிலே யிருந்து காண்தலை தூக்கினள்
நீரிலே யிருந்து நெற்றியை யுயர்த்தினள்
அடுத்துத் தொடங்கினள் படைத்தற் றொழிலை
பிராணி வகைகளைப் பெரிதும் படைத்தனள் 260
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்.
தூக்கிக் கரங்களைச் சுற்றிலும் திருப்பி
மேட்டு நிலங்களை வெளிவரச் செய்தனள்
அடியில் கால்களை அழுத்தமா யூன்றி
மீனினம் வாழும் மிகுகுழி பறித்தனள்
நீரின் அடியிலே நிறைவுடன் நீந்தி
ஆழியின் அடியில் ஆழம் படைத்தனள்.
பின்னர்பக் கத்தைப் பெருங்கரை திருப்பி
கரைகளைக் கொஞ்சம் கவனமாய்ச் செய்தனள் 270
நிலத்தினை நோக்கி நீட்டினாள் கால்களை
**வஞ்சிர மீன்வலை வீச்சிடம் வந்தது
தலையைத் திருப்பித் தரையை நோக்கினள்
கடலின் கரையில் வளைகுடா வந்தது.
நீந்தினள் மீண்டும் நிலத்திலே யிருந்து
அகன்றநீர்ப் பரப்பில் அமைதியும் கொண்டனள்;
நீரின் நடுவே பாறைத் தீவுடன்
கடலின் மறைவிற் கற்குன் றமைத்தனள்
கடலிலே நகரும் கப்பல்கள் மோதி
கடற்றொழி லாளர் காண்தலை யழிக்க. 280
தீவெலாம் தோன்றிச் சீராய் முடிந்தன
பாறைத் தீவுகள் பரவையில் தோன்றின
தூண்கள் வானிடைத் தோன்றி நிமிர்ந்தன
நாடுகண் டங்கள் நன்கே யமைந்தன
பாறைகள் மீதெலாம் பல்கின **சித்திரம்
வெற்பெலாம் கோடுகள் பெற்று விளங்கின;
வைனா மொயினன் வந்து பிறந்திலன்
நிலைபே றுடைக்கவி நிலம்பிறந் திலனே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தாயின் வயிற்றுள் தவழ்ந்து திரிந்தான் 290
முப்பது கோடை முழுதாம் பருவமும்
குளிர்தரும் அத்தகைக் கூதிர் காலமும்
புகார்நிறைந் திருந்த பொலிதிரை களின்மேல்
நுரைத்தெழுந் திட்ட நுண்திரை மடியில்.
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்ஙனம் எவ்விதம் இங்கே வாழ்வது
இருண்ட இந்த இகல்மறை விடத்தில்
நெருக்கம் நிறைந்த நிதவசிப் பிடத்தில்
சந்திரன் தண்ணொளி கண்டதே யில்லை
சூரியன் பேரொளி வந்ததே யில்லை. 300
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்வித முரைத்தான்:
"நிலவே விடுவி, கதிரே கரைசேர்,
**தாரகைக் குலமே சதாவழி காட்டு
மனிதனை மர்ம வாயில்க ளிருந்து
அந்நிய மான அகல் கதவிருந்து
கொடியஇச் சிறிய குடம்பையி லிருந்து
குறுகி ஒடுங்கிய குடிலினி லிருந்து.
பயணியை இந்தப் பாரிடைக் கொணர்வாய்
மனிதக் குழந்தையை வளர்வெளிக் கருள்வாய் 310
வானக நிலவின் வண்ணம் காண
சூரியன் ஒளியைச் சுகித்துயான் நயக்க
தாரகைக் குலத்தைத் தனிமையில் நோக்க
வானநட் சத்திர வகையினைக் கற்க."
விண்மதி அவனை விடுவியா நிலையில்
கதிரவன் அவனைக் கைதரா நிலையில்
நாட்கள் எல்லாம் நரகமா யமைய
வாழ்வே சுமையாய் மாறிப் போகும்;
நகர்த்தி கோட்டைக் கதவம் திறந்தான்
மெதுவாய் மோதிர விரலினை யெடுத்து 320
எலுப்பின் பூட்டைச் சிறிதிடை விலக்கி
இடதுகாற் பெருவிரல் இட்டான் வெளியே
நகத்தினை வாயிலின் நனிவெளி நகர்த்தினன்
கதவின் வெளிமுழங் கால்களை வைத்தனன்.
கடலினை நோக்கிக் காண்சிரம் முன்வர
அவனது கரங்கள் அலைகளில் திரும்ப
இங்ஙனம் மானிடன் இருங்கடல் தங்கினன்
மாபெரும் வீரன் வளர்திரை தங்கினன்.
ஐந்து ஆண்டுகள் அங்கே இருந்தனன்
ஐந்தா றாண்டுகள் அவ்வா றிருந்தனன் 330
ஏழாம் ஆண்டோ டெட்டும் முடிந்தது
கடைசியில் நின்றனன் கடற்பரப் பினிலே
பெயரிலா மேட்டில் பின்பவன் நின்றனன்
மரங்களே யில்லா மண்ணதில் நின்றனன்.
முழங்கால் தரையிடை முழுமையாய்ப் பதித்து
கரங்களை ஊன்றி மெதுவாய்த் திரும்பி
நிலவைப் பார்க்க நின்றான் எழுந்து
செங்கதி ரோனைச் சீராய் நயக்க
தாரகைக் குலத்தைத் தனிமையில் நோக்க
வானநட் சத்திர வகையினைக் கற்க. 340
வைனா மொயினனின் வருபிறப் பதுவே
தொன்னிலைப் **பாவலன் தோன்றிய கதையே
அவனைச் சுமந்த அழகிய நங்கை
வாயு மகளாம் தாயிட மிருந்து.
பாடல் 2 - வைனாமொயினனின் விதைப்பு TOP
அடிகள் 1 - 42: வைனாமொயினன் மரங்களற்ற தரைக்கு வந்து, விளைநில மைந்தன் சம்ஸா பெல்லர்வொயினனை விதைக்கச் சொல்லுகிறான்.
அடிகள் 43 - 110 : முதலில் சிந்தூர மரம் முளைக்கவில்லை. பின்னர் முளைத்த மரம் ஓங்கி வளர்ந்து நாட்டையும் சூரியனையும் சந்திரனையும் மறைக்கிறது.
அடிகள் 111 - 224 : ஒரு சிறிய மனிதன் கடலிலிருந்து உதயமாகிச் சிந்தூர மரத்தை வெட்டி வீழ்த்திச் சூரியனையும் சந்திரனையும் மீண்டும் பிரகாசிக்கச்
செய்கிறான்.
அடிகள் 225 - 256 : மரங்களில் பறவைகள் பாடுகின்றன; புல்லினம், பூஞ்செடிகள், சிறுபழச் செடிகள் வளர்கின்றன; பார்லி மட்டும் வளரவில்லை.
அடிகள் 257 - 264 : வைனாமொயினன் நீர்க் கரையின் மணலில் சில பார்லித் தானியங்களைப் பெறுகிறான்; பறவைகளுக்குப் புகலிடமாக ஒரு மிலாறு மரத்தை மட்டும் தவிர்த்துவிட்டுக் காட்டை வெட்டி அழிக்கிறான்.
அடிகள் 265 - 284 : புகலிடத்திற்கு ஒரு மரத்தை விட்டதற்காக நன்றியுள்ள ஒரு கழுகு நெருப்பை உண்டாக்கி வெட்டிய மரங்களை எரிக்கிறது.
அடிகள் 285 -378 : வைனாமொயினன் பார்லியை விதைத்து, அதன் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் பெருக்கத்துக்குமாகப் பிரார்த்திக்கிறான்.
எழுந்தான் பின்னர் வைனா மொயினன்
இரண்டுகால் களையும் இத்தரை வைத்தான்
செறிகடல் சூழ்ந்த தீவக நிலத்தில்
மரங்கள்இல் லாத மண்ணதன் மேலே.
பல்லாண் டூழி பயின்றாங் கிருந்தான்
எப்போதும் ஆங்கே இருந்துவாழ்ந் திட்டான்
மொழிகளே யற்று மெளனமா யிருந்தான்
மரங்கள்இல் லாத மண்ணதன் மீதே.
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
நீண்டகா லங்கள் நெடிதுசிந் தித்தான்: 10
இந்த நிலத்தில் எவர்தான் விதைப்பது
பயன்தரு பயிரை பாங்காய் விளைப்பது?
விளைநில மைந்தன் *பெல்லர் வொயினன்
*சம்ஸா என்னும் தனிச்சிறு வாலிபன்
நிலத்தில் அவனே விதைத்திடல் வேண்டும்
பயனுறப் பயிரைப் பண்ணலும் வேண்டும்.
விதைத்தலை நிகழ்த்த வெளிக்கிட் டானவன்
நிலத்திலும் விதைத்தான் சேற்றிலும் விதைத்தான்
வளர்கான் வெளியின் மணலிலும் விதைத்தான்
தேய்ந்து தேறிய குன்றிலும் விதைத்தான். 20
**தேவ தாருவைத் திகிரியில் வைத்தான்
உவந்தின் **னொன்றை உயர்நிலம் வைத்தான்
கம்பம் **புல்லினைக் கரம்பையில் நட்டான்
நாற்றுச் செடிகளைத் தாழ்நிலம் நட்டான்.
**மிலாறுவைத் தாழ்ந்த விளைநிலம் வைத்தான்
சொரிந்த மண்ணிலே **சிறுமரம் வைத்தான்
**ஒருசிறு பழச்செடி உயர்புது மண்ணிலும்
ஒருசிறு **மரத்தை ஒளிர்பசுந் தரையிலும்
**பேரியைப் புனிதப் பெருமண் தரையிலும்
**அலரியை மேட்டிலும் அவன்நட் டிட்டான் 30
**சூரைச் செடியைத் தொடுவெறு நிலத்திலும்
**சிந்துர மரத்தைத் திடலிலும் நட்டான்.
மரங்கள் யாவும் வளர்ந்துயர்ந் திட்டன
நாற்றுச் செடிகள் நன்றாய் ஓங்கின;
மலர்ந்த முடியுடன் **மரமொன் றெழுந்தது
தேவ தாருவும் செறிந்து விரிந்தது
சதுப்பு நிலத்தில் மிலாறு தழைத்தது
சொரிந்தமண் ணிடையே **சிறுமர வினமும்
புதுமண் புலத்தில் **சிறுபழச் செடியும்
தொல்வெறு நிலத்துச் சூரைச் செடியும் 40
சூரைச் செடிகளின் சுவைமிகு பழங்களும்
சிறுசெடிப் **பழங்களும் திகழ்ந்தன கனிந்து.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிகழ்ந்ததை நோக்க நேரிலே வந்தான்
சம்ஸா என்பான் தானிடு விதைகளை
பெல்லர் வொயினன் பெய்திடு விதைகளை:
மரங்களத் தனையும் வளர்ந்ததைக் கண்டான்
நாற்றுச் செடிகளின் நளினமும் கண்டான்;
சிந்துர மரத்தில் செழுந்தழை இல்லை
தேவநற் றருவில்வேர் தெரியவு மில்லை. 50
அதன்விதி அதுவென அப்பால் சென்றனன்
தானே முளைத்துத் தழைக்குமென் றெண்ணினன்
முன்று இரவுகள் முழுமையாய் முடிய
முன்று பகல்களும் முனைந்துகாத் திருந்தான்.
ஒருமுறை பார்க்கப் போயினன் பின்னர்
வாரமொன் றகல வந்துநோக் கினனால்:
சிந்துர மரத்திற் செழுந்தழை இல்லை
தேவநற் றருவில்வேர் தெரியவு மில்லை.
கண்டனன் பின்னர்நற் கன்னியர் நால்வர்
ஐவர்நீர் எழுந்தனர் அவர்மணப் பெண்போல்; 60
புல்லினை வெட்டியே பொற்புற வைத்தனர்
பனிபடர் புல்லினைப் பாங்குற அள்ளினர்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்;
வெட்டிய புல்லதை விரைந்தொன் றாக்கினர்
கட்டியே குவித்துக் கவினுற வைத்தனர்.
**நீர்விலங் கொன்றந் நீரில் எழுந்தது
நேராய் எழுந்தது நின்றது அலைமேல்;
காய்ந்தவப் புற்களைக் கனலிடை யிட்டது
கனலதும் ஓங்கிக் கடுகதி எழுந்தது 70
அனைத்தையும் சாம்பரா யாக்கிய தக்கினி
சாம்பர்கள் சேர்ந்தன தகர்துக ளாயின.
துகளெலாம் சேர்ந்தொரு தொடர்திட் டாகியே
தோய்ந்துலர் சாம்பராய் தொட்டுயர்ந் திருந்தது.
ஆங்கிருந் ததுவொரு அழகிய செழும்இலை
செழுமிலை யிருந்ததோர் சிந்துர விதையொடு
அவற்றிலே யிருந்தொரு அரும்முளை வந்தது
பசுந்தளிர் செழுப்பொடு பாங்காய் வளர்ந்தன
எழில்நிலத் தேயொரு இதச்சிறு **செடியென
இரட்டைக் கிளைகளாய்ப் பிரிந்து வளர்ந்தது. 80
கிளைகள் வளர்ந்து கிளர்ந்து விரிந்தன
இலைகள் செழித்து எங்கும் செறிந்தன:
உச்சி உயர்ந்து ஒளிர்விண் நின்றது
வானில் இலைகள் வளர்ந்து விரிந்தன
முகில்களை மோதி முட்டி நிறுத்தின
ஆவிநீ ராவதை அடியோ லகற்றின
ஆதவன் ஒளிர்வதை அவைதடுத் திட்டன
விரிநில வொளியையும் விண்மிசைத் தடுத்தன.
முதிய வைனா மொயினன் பின்னர்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான் 90
சிந்துர மரத்தைச் சிதைப்பவர் உளரோ
அகல்பெரு மரத்தை அழிப்பவர் உளரோ?
மானிட வாழ்வு சோகமா கிறதே
மீனினம் நீந்தச் சிரமமா கிறதே
ஆதவன் ஒளியும் அருகிப் போனதால்
தண்ணில வொளியும் தடுக்கப் பட்டதால்.
ஆயினும் அங்கொரு ஆளும் இல்லையே
விறல்நெஞ் சுடைய வீரன் இல்லையே
சிந்துர மரத்தைச் சிதைத்து வீழ்த்திட
உயர்ந்து நூறான உச்சியை ஒடிக்க. 100
முதிய வைனா மொயினனப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னையே, பெண்ணே, அரிதெனைச் சுமந்த
இயற்கையின் மகளே, எனை வளர்த்தவளே!
தண்புன லிருந்தொரு சக்தியை யனுப்பு
தண்புனல் அமைந்த சக்திகள் அனேகம்
சிந்துர மரமிதைச் சிதைத்து விழுத்திட
தீயஇம் மரத்தைச் சிதல்சித லாக்க
உதய சூரியன் ஒளியினி லிருந்து
வண்ண நிலவதன் வழியினி லிருந்து." 110
ஆழியி லிருந்தொரு ஆடவன் எழுந்தான்
அலையிலே யிருந்தொரு ஆண்மகன் எழுந்தான்;
அவனோ பென்னம் பெரியஆ ளல்லன்
ஆயினும் சின்னஞ் சிறியனு மல்லன்:
நீளமோ மனிதன் நேர்பெரு விரலாம்
உயரமோ பெண்ணின் ஒருகைச் சாணாம்.
செப்பினா லான தொப்பிதோ ளதிலே
செப்பினா லான செருப்புகள் காலில்
செப்பினால் செய்து திகழும் கையுறை
கையுறை மீதில் கவின்செப் போவியம் 120
இடுப்பினைச் சுற்றிச் பட்டிசெப் பினிலே
பட்டியின் பின்புறம் **பரசுசெப் பினிலே
பரசின் பிடியொரு பெருவிரல் நீளம்
பரசின் அலகோ பகர்நகத் தளவு.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:
பார்க்கப் புகுந்தால் பாங்குறு மனிதனே
தோற்றம் நோக்கித் துணிதலும் மனிதனே
நீளமோ மனிதன் நேர்பெரு விரலாம்
உயரமோ எருதின் ஒண்குளம் பளவு. 130
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"எவ்வகை இனத்தில் இயைந்தமா னுடன்நீ
எளியமா னுடனே, எத்தகை மனிதன்?
உயரிலா உடலிலும் உயர்ந்துளாய் சற்றே
சவத்தினைக் காட்டிலும் சற்றே சிறந்துளாய்?"
செறிகடல் தோன்றிய சிறுமகன் சொன்னான்
அலைகளில் எழுந்த அவன்விடை பகர்ந்தான்:
"நவில்வகை யாவினும் நானொரு மனிதன்
சிறுமா னுடன்தான் செறிபுனற் சக்தி 140
சிந்துர மரத்தைச் சிதைக்கவே வந்தேன்
அதனைத் துண்டிட் டழிக்கவே வந்தேன்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எண்ணவே இல்லைநான் உன்னைப் படைத்ததும்
உன்னைப் படைத்து உனையனுப் பியதும்
வலிய சிந்துர மரம்விழற் கல்ல
மாபெரும் மரத்தை மாய்ப்பதற் கல்ல."
அவ்வித மாக அவன்பகர் வேளை
மீண்டும் பார்வையை வீசிய பொழுது 150
மனிதனோ முற்றிலும் மாறிடக் கண்டான்
வீரனோ புதியனாய் விளங்கிடக் கண்டான்.
பாதங்கள் தரையிற் பதிந்து நின்றன
தலையோ நிமிர்ந்து முகிலைத் தொட்டது
தாடியோ முழுங்கால் தன்னிலும் தாழ்ந்தது
தலைமயிர் குதிவரை தழைத்துநீண் டிருந்தது
இருவிழிக் கிடையே இடைவெளி ஆறடி
காற்சட் டையதும் காற்புறம் ஆறடி
முழங்காலின் பக்கமும் முழுமையாய் ஒன்றரை
இடுப்பின் சுற்றள விரண்டா யிருந்தது. 160
கைவிரல் கோடரிக் காம்பினில் வைத்து
அலகினைத் தீட்டி ஆக்கினன் கூர்மை
ஆறு கற்களில் அதனைத் தீட்டினன்
ஏழாம் கல்லிலும் இன்னும் தீட்டினன்.
எழுந்தான் நகர்ந்தான் எதிர்ப்புறம் வந்தான்
இன்னும் சுலபமாய் முன்னே நடந்தான்
அவன்காற் சட்டை அகன்ற உடையொடு
விரிந்தகாற் சட்டை பரந்த உடையொடு;
முதலடி எடுத்து முன்னே வைத்தான்
மென்மைகொண் டமைந்த மிகுமணற் பரப்பில், 170
இரண்டடி வைத்து இன்னுமுன் வந்து
**ஈரல் நிறத்தில் இயைந்தமண் ணடைந்தான்,
முன்றாம் அடியை முயன்றுமேல் வைத்து
சிந்தூ ரத்தின் செறிவே ரடைந்தான்.
கோடரி கொண்டே கொடுமரம் தாக்கி
ஓங்கி வெட்டினன் உயர்கூ ரலகால்
ஒருமுறை வெட்டி இருமுறை வெட்டினன்
மூன்றாம் முறையும் முயன்றான் விரைவாய்;
அனற்பொறி கோடரி அலகில் எழுந்தது
சிந்துர மரத்தில் தீப்பொறி தெறித்தது, 180
நொந்து சரிந்து வந்தது சிந்துரம்
அடற்பெரு மரமும் ஆட்டங் கண்டது.
முயன்றஅவ் வாறமை மூன்றாம் முறையில்
சிந்துர மரத்தைத் தீர்த்துக் கட்டினன்
பெருவலி மரமும் பெயர்ந்து வீழ்ந்தது
நூறாம் கிளைகளைத் துணிபடச் செய்தது.
கிழக்கே அடிமரத் துண்டைக் கிடத்தினன்
வடமேற் கினிலே மரமேற் பகுதி
வடக்கே இலைதழை வந்துவீழ்ந் ததுவால்
கொம்பர்கள் வடக்கில் குவிந்துவீழ்ந் தனவே. 190
அவனொரு கிளையினை அங்கையி லெடுத்து
எல்லையில் லாத இன்பம் பெற்றான்;
உச்சி மரத்தை ஒடித்தான் எளிதாய்
முடிவிலா மாய வித்தையைக் கண்டான்;
இலையுறும் கிளையை எடுத்தான் தனித்து
திடமாம் அன்பைத் தொட்டெடுத் திட்டான்.
எஞ்சிய சிதைவுகள் எங்கும் சிதறின
மிஞ்சிக் கிடந்த மிகுமரத் துண்டுகள்
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
பரந்து விரிந்த படரலை களின்மேல் 200
காற்று வந்துதா லாட்டிச் சென்றது
கடலலை எழுந்து கடத்திச் சென்றது
திறந்த நீரிலே செல்லும் தோணிபோல்
அலைகடல் மீது அலையும் கப்பல்போல்.
வடநா டவற்றை வாயு சுமந்தது;
வடநிலச் **சிறுபெண் மங்கையாங் கொருத்தி
சிறுசிறு துணிகளைச் செம்மையாய்த் தோய்த்தாள்
உடைகளைக் கழுவி உலரவும் வைத்தாள்
நீரின் கரையில் நிலைத்தபா றையிலே
நீண்ட கரையில் நிலவும் முனையில். 210
மிதந்ததுண் டுகளை மெல்லியள் கண்டாள்
கைப்பை ஒன்றிலே கவனமாய்ச் சேர்த்தாள்
பையினை யெடுத்துப் படர்ந்தில் லடைந்தாள்
முன்றிலில் வைத்தாள் முழுநீள் பிடிப்பை
மாயவித் தைக்கு வலுசரம் செயற்கு
படைக்கலம் மந்திரப் பணிக்காய்ச் செய்ய.
சிந்துர மரத்தைச் சிதைத்தபோ தினிலே
தீயஅத் தருவும் தீர்த்தழிந் ததுவால்
கதிரவன் மீண்டும் கதிர்களைத் தந்தான்
திங்களின் நீள்நிலா திரும்பிவந் திட்டது 220
மேகம் நீண்டு மேலே மிதந்தது
வானவில் விண்ணில் வளைந்து நின்றது
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.
முழுதாய்க் காடுகள் முளைத்துத் தழைத்தன
வனங்கள் செழித்து வளர்ந்திட லாயின
தருக்களில் இலைகள், தரையினிற் புற்கள்,
மரங்களிற் பாடி மகிழ்புட் குலங்கள்,
பாடும் பறவைகள் பரவசப் பட்டன
மரத்தின் உச்சியில் **மணிக்குயில் கூவின. 230
பூமியிற் சிறுபழச் செடிகள் பொலிந்தன
வயல்களில் பொன்னிறப் பூக்கள் மலர்ந்தன
பல்லினப் புற்களும் பாங்காய் முளைத்தன
வளர்ந்தன பற்பல வடிவங் களிலே;
ஆயினும் பார்லி அங்கெழ வில்லை
அரிதாம் அப்பயிர் அதுமுளைத் திலதே.
முதிய வைனா மொயினன் அதன்பின்
எங்கும் நடந்தே எண்ணிப் பார்த்தான்
நீலக் கடலின் நீள்கரை தன்னில்
மாபெருங் கடலின் மடிவின் எல்லையில்; 240
ஆறுதானிய அருமணி கண்டான்
ஏழு விதைகளை எடுத்தனன் ஆங்கே
ஆழியின் எல்லை யாம்பரப் பிடத்தே
மணல் நிறைந்திட்ட வண்கரை மீது
அவற்றைக் **கீரியின் அருந்தோல் வைத்தான்
கோடை அணிலின் குறுங்கா லடியில்.
விதைகளை நிலத்தில் விதைக்கச் சென்றான்
சென்றான் தானியச் செழும்விதை தூவ
*கலேவலாப் பகுதியின் கற்கிணற் றருகே
*ஒஸமோ வின்வயல் உளவிளை விடத்தே. 250
மரமிசை யொருபுள் வாய்திறந் திசைத்தது:
"ஒஸமோவின் பார்லி ஒன்றுமே முளையா
கலேவலாவின் **பயிறும் கவினுற வளரா
மண்ணைக் கிளறிப் பண்செய் யாவிடில்
அடர்வன மரங்களை அழித்தி டாவிடில்
அழித்த மரங்களை எரித்தி டாவிடில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கூரிய அலகுக் கோடரி செய்தான்
விரிபெரும் பகுதியை வெட்டியே அழித்தான்
மண்ணைக் கிளறிப் பண்செய் திட்டான் 260
வியன்மர மனைத்தையும் வெட்டி வீழ்த்தினன்
தனிமிலா றொன்றே தவிர்ந்து நின்றது
பறவை யினங்கள் பாங்குறத் தங்க
குயில்வந் திருந்து கூவுதற் காக.
விண்ணிலோர் கழுகு வீச்சா யெழுந்தது
விண்ணகம் முழுவதும் மேவிப் பறந்தது
அதனைப் பார்க்க அவ்விடம் வந்தது:
"இம்மரம் மட்டுமேன் இங்குநிற் கிறது?
மிலாறு மரத்தையேன் வீழ்த்திட வில்லை?
எழிலுறு மரமிதை ஏன்வெட் டிடவி(ல்)லை?" 270
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இம்மரம் மட்டுமிங் கிருப்பதன் காரணம்:
பறவைகள் வந்து பாங்காய்த் தங்க
வானக் கழுகு வந்துநன் கமர."
விண்ணகப் பறவை விறற்கழு குரைத்தது:
"இங்குநீ நல்லதோர் இருந்தொழில் செய்தனை:
மிலாறு மரத்தினை வெட்டா திட்டனை
உன்னதத் தருவை உயர்ந்திட விட்டனை
பறவைகள் வந்து பாங்குறத் தங்க
நானே வந்து நன்றா யமர." 280
விண்ணகப் பறவைதீ விரைந்துமுட் டிற்று
எரியினை யோங்கி எழுந்திட வைத்தது
வடக்கின் காற்று வன்கா டழித்தது
வடகீழ்க் காற்றும் மரங்களை யுண்டது
எல்லா மரங்களும் எரிந்து முடிந்தன
சாம்பலாய் மாறித் தகர்துக ளாயின.
அப்போ முதிய வைனா மொயினன்
ஆறு விதைகளை அள்ளினான் ஒன்றாய்
ஏழு விதைகளை எடுத்தான் கையில்
கீரித் தோலதன் கீழே யிருந்து 290
கோடை அணிலின் காலிடை யிருந்து
கோடைப் **பிராணியின் கொழுங்கா லிருந்து.
பிற்பா டவன்நிலம் வித்திடப் போனான்
தானிய மணிகளைத் தூவிச் சிதறி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"விதைக்கப் போகிறேன் நான்இவ் விதைகளை
படைப்பின் பெரியோன் பணைவிர லிருந்து
சகலதும் வல்லோன் தன்கரத் திருந்து
இந்தப் புவிமிசை இவைமுளைத் துயர
வளர்ந்து செழித்து வளமுடன் பல்க. 300
புவியின் கீழெழில் பொலிமுது மகளே!
மண்ணின் மங்கை, மாநிலத் தலைவி!
முளையை வெளியே முளைத்துய ரச்செய்
செழித்து வரச்செய் திகழ்மண் துணையால்;
நிலத்தின் சக்தி நிதம்பொய்க் காது
இந்தப் பூமி இருக்கும் வரைக்கும்,
தந்தவன் அன்பு தரித்திருப் பதனால்
இயற்கையின் மகளின் இருந்துணை யதனால்.
மண்ணே, எழுவாய் வளர்துயி லிருந்து!
படைப்போன் புற்களே, படுக்கையி லிருந்து! 310
தண்டுகள் எழட்டும் தரையினைக் கிழித்து!
காம்புகள் கிளர்ந்து கடுகநின் றிடடட்டும்!
கதிர்மணி யாயிரம் கவினொடு வரட்டும்!
நூறுநூ றாகக் கிளைபடர்ந் திடட்டும்!
எனது உழவினில், எனது விதைப்பினில்,
எனது உழைப்பிற் கியையூ தியமாய்!
ஓ, மனு முதல்வ, உயர்மாதெய்வமே!
விண்ணகம் வாழும் மேல்வகைத் தந்தையே!
முகிற்குலம் புரக்கும் முதுகா வலனே!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே! 320
முகில்கள் யாவையும் குவிவுற வணைத்து
சந்திக்க வைப்பாய் தவழ்வான் வெளியில்,
இயக்குவாய் கிழக்கில் இருந்தொரு முகிலை
வடமேற் கொன்று வந்துதிக் கட்டும்
மேற்கி லிருந்து மிகுதியை அனுப்பு
அனுப்புதெற் கிருந்தும் அதிவிரை வாக
தொல்வா னிருந்து தூறல்கள் வரட்டும்
எழிலியி லிருந்துதேன் துளிகள் விழட்டும்
முதுபுவி முளைக்கும் முளைகளின் மீது
உயிர்பெற் றுயரும் பயிர்களின் மீது." 330
மானிட முதல்வன், மாபெருந் தேவன்
நிலைபெறும் சுவர்க் கமாள் நேசத் தந்தை
மேகம் மேலுறும் வியன்சபை யமர்பவர்
உயர்ந்து தெளிந்த உயர்மன் றுறைபவர்;
ஒருமுகில் கிழக்கிருந் துடன் வருவித்தார்
வடமேற் கிருந்தொரு மழைமுகில் படைத்தார்
இன்னொன்றை மேற்கே இருந்தும் அனுப்பினார்
அனைத்தையும் தெற்கிருந் தவர்விரை வித்தார்
அனைத்தையும் ஒன்றுசேர்த் தழுத்தித் தள்ளினார்
ஒன்றுடன் ஒன்றை உராயப் பிணித்தார். 340
வானத் திருந்து மாரியைப் பொழிந்தார்
தேன்துளி தெளித்தார் திரள்முகில் அதனால்
முளைத்து வந்த முளைகளின் மேலே
உயிர்பெற் றுயர்ந்த பயிர்களின் மேலே.
கூர்முனை ஒன்று குதித்துமே லெழுந்தது
இளந்தூர் ஒன்று இதமாய் வளர்ந்தது
பசுமை வயலின் படர்நிலத் திருந்து
வைனா மொயினனின் கைவினைத் திறத்தால்.
இரண்டு நாட்கள் இனிது முடிந்தன
இரண்டாம் முன்றாம் இரவுகள் போயின 350
முழுமையாய் வாரம் ஒன்று முடிந்தபின்
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வளர்ச்சியைப் பார்க்க வலமாய் வந்தான்
தானே உழுது தானே விதைத்த
ஊக்கத் துறுபலன் நோக்குதற் காக;
விரும்பிய வாறே விளைந்தது பார்லி
ஆறு வழிகளில் அகல்கதிர் செறிந்து
தண்டுகள் முத்திசை தாமே பிரிந்து.
முதிய வைனா மொயினனு மாங்கே
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி 360
குலவும் வசந்தக் கோகிலம் வந்தது
வளர்ந்த மிலாறினை வந்ததும் கண்டது:
"இம்மரம் மாத்திரம் ஏனிங்கு நின்றது?
மிலாறு மட்டுமேன் வீழாது நின்றது?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இம்மரம் மட்டுமேன் இங்குநிற் கிறதெனில்
மிலாறு மட்டுமேன் வீழ்ந்திட விலையெனில்
உனக்காய் நீவந் துறைவதற் காக;
குயிலே குயிலே கூவுவாய் இப்போ
இனிய நெஞ்சால் இன்பமாய்ப் பாடு. 370
வெண்பொன் நெஞ்சால் மிகுபாட் டிசைப்பாய்
**ஈயநன் நெஞ்சால் எழிற்பா விசைப்பாய்
காலையில் பாடு, மாலையில் பாடு,
நண்பகல் ஒருமுறை நலமிகப் பாடு
என்விளை நிலமிரும் மகிழ்ச்சியில் திளைக்க
எனதுகா னகமெல்லாம் எழிலொடே வளர
தடமெல்லாம் தாழ்விலாச் செழிப்பினில் கொழிக்க
எனதுமா நிலமெல்லாம் எழில்வளம் பொலிய."
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 3-10
பாடல் 3 - பாடற்போட்டி
அடிகள் 1 - 20: வைனாமொயினன் அறிவில் விருத்தி பெற்றுப் பிரபலமாகிறான்.
அடிகள் 21 -330: அவனுடன் போட்டிக்கு வந்த யொவுகாஹைனன், அவனை அறிவில் வெல்ல முடியாமல் போருக்கு அழைக்கிறான். சினங் கொண்ட வைனாமொயினன் மந்திரப் பாடல்களைப் பாடி அவனைச் சேற்றில் அமிழ வைக்கிறான்.
அடிகள் 331 - 476: மிகவும் துயருற்ற யொவுகாஹைனன், தனது சகோதரி ஐனோவை வைனாமொயினனுக்கு விவாகம்ம்செய்து தருவதாக வாக்களிக்கிறான். அதை ஏற்றுக்கொண்டு வைனாமொயினன் அவனை விடுவிக்கிறான்.
அடிகள் 477 - 524: மன வருத்தத்துடன் வீட்டுக்குச் சென்ற யொவுகாஹைனன், தனக்கு ஏற்பட்ட துரதிர்ஷடங்களைப் பற்றித் தாயாருக்குக் கூறுகிறான்.
அடிகள் 525 - 580: வைனாமொயினன் தனது மருமகனாக வரப் போவதை அறிந்து தாயார்மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் மகள் ஐனோ கவலைப்பட்டு அழுகிறாள்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வாழ்நாள் முழுதும் வாழ்ந்தே வந்தான்
*வைனோ நிலத்து வனவெளி களிலே
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்.
தன்கதை பலப்பல தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்.
நாளும் பொழுதும் பாடியே வந்தான்
இரவோ டிரவாய் இசைத்தே வந்தான்
நீண்ட தொன்மையின் நினைவுக் கதைகளை
தொடக்க காலத் தூயநற் கதைகளை 10
எல்லாச் சிறாரும் இவைகற் றிலராம்
வீரர்கள் மாத்திரம் விளங்கிக் கொண்டனர்
தீமை நிறைந்து தெரியுமிந் நாட்களில்
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.
பாடற் செய்திகள் பரந்து கேட்டன
வெளியே செய்திகள் விரைந்து கேட்டன
வைனா மொயினனின் வனப்புறு பாடல்
நாயகன் தந்த ஞானச் செல்வம்
செய்திகள் சென்று தெற்கிலே பரவி
வடநிலம் புகுந்தும் விளக்கம் தந்தன. 20
இருந்தா னிளைஞன் யொவுகா ஹைனன்
லாப்பு லாந்தின் இளைத்ததோர் பையன்
ஒருமுறை கிராமம் ஒன்றிடைச் சென்றான்
அற்புதப் பாடலை அங்கே கேட்டான்
பாடல்கள் பாடும் பாங்கினைக் கேட்டான்
எழில்மிகும் பாடல்கள் இசைப்பதைக் கேட்டான்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்
அவைஅவன் அறிந்த அரும்பா டலிலும்
தந்தையின் பாட்டிலும் சாலச் சிறந்தவை. 30
அதனால் அகத்தே அல்லல் எழுந்து
நெஞ்சில் பொறாமை நிறைந்து வழிந்தது
வைனா மொயினன் எனும்வான் பாடகன்
தன்னிலும் சிறந்த தகையோன் என்பதால்;
அன்னையை நோக்கி அவன் புறப்பட்டான்
ஈன்ற குரவரை எதிர்கொள வந்தான்
புறப்படும் போதே புகன்றான் ஒருமொழி
மீண்டும் வருவது வெகுநிசம் என்றே
*வைனொலா நாட்டின் வதிவிடங் களிலே
எதிர்த்துவை னோவை எழிற்பாட் டிசைக்க. 40
தந்தை அவனைத் தடுத்துச் சொன்னார்
தந்தையும் தடுத்தார் தாயும் தடுத்தாள்
அவன்வை னோநிலம் அடைவது பற்றி
வைனோவை எதிர்த்து வாதிடல் பற்றி;
"எதிர்ப்புப் **பாடல்கள் எழுந்தாங் கேமிகும்
பாடல்கள் தோன்றிப் படுவாய் மயக்கில்
வாயும் தலையும் வளர்பனிப் புதையும்
இரண்டுகை முட்டியும் இதனால் மரக்கும்
கைகளை அசைத்தல் கடினம தாகும்
கால்களை நகர்த்தலும் கைகூ டாது." 50
இளைஞன் யொவுகா ஹைனன் சொன்னான்:
"எந்தையின் அறிவு ஏற்றமிக் குயர்ந்தது
தாயின் அறிவுமத் தகைசால் சிறந்தது
எனதறி வதைவிட இயல்பாற் சிறந்தது;
போட்டிநான் விரும்பிப் போட்டேன் என்றால்
மனிதர்கள் மத்தியில் வந்தெதிர்த் தேனெனில்
போட்டிப் பாணன்மேற் பொங்கிநான் பாடுவேன்
சொல்பவன் மீது சொற்களை வீசுவேன்
தேர்ந்த பாடகன் செருக்கறப் பாடுவேன்
தோற்ற பாடகனாக் குவேன் அவனை 60
பாதம் கல்லின் படுவணிப் புதையும்
மரத்தின் ஆடைகள் அரைத்தல மிருக்கும்
உள்ளம் பெரிய கல்லாய்க் கனக்கும்
தோள்களின் மீது தோன்றும் பாறைகள்
கல்லின் உறைகள் கைகளை முடும்
கடுங்கல் தொப்பி கொடுந்தலை யிருக்கும்."
புறப்பட் டேகினன் புகல்மொழி கேளான்,
வீரிய மழிந்த விலங்கினை எடுத்தான்
விலங்கதன் வாயினில் வெங்கனல் வந்தது
கால்களி லிருந்து கனற்பொறி யெழுந்தது 70
ஆங்கார விலங்கில் அணிகல மேற்றினன்
வன்னப் பொன்னிலாம் வண்டியின் முன்னே;
தானே வண்டியில் தருக்கோ டேறினன்
ஆசனத் தேறி அமர்ந்து கொண்டனன்
தாவும் பரிமேற் சாட்டை வீசினன்
மணிமனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்
புரவியும் பயணம் புறப்பட் டதுவே
பாய்பரி விரைந்து பறந்துசென் றதுவே.
தொடங்கிய பயணம் தொடர்ந்து நடந்தது
ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான் 80
முன்றாம் நாளும் முழுதும் விரைந்தான்
முன்றாம் நாளின் முடிவிலே பயணம்
வந்து சேர்ந்தான் வைனோ நாட்டில்
கலேவலா என்னும் கடும்புதர்ச் சமவெளி.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
பாதை வழியே படர்ந்துகொண் டிருந்தான்
அமைதியாய்த் தன்வழி அவன்வர லானான்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா என்னும் கடும்புதர்ச் சமவெளி. 90
வந்தான் இளைஞன் யொவுகா ஹைனன்
நேருக்கு நேராய் நெடுவழி வந்தான்
ஏர்க்கால் ஏர்க்காலை இடித்துமுட் டியது
வளர்பரிக் கழுத்து வட்டப் பட்டியும்
இழுவைப் பட்டியும் பட்டியில் மோதின
இழுவை வளையம் வளையத் திடித்தது.
இங்ஙனம் ஆங்கே இரண்டும் நின்றன
நிலைத்து நின்றனர் நினைத்துப் பார்த்தனர்
வியர்வை ஏர்க்கால் மீமிசை வழிந்தது
ஏர்க்கால் களிலே எரிப்பொறி பறந்தது. 100
முதிய வைனா மொயினன் கேட்டான்:
"எந்த இனத்தை இயைந்தவன் நீதான்?
முட்டாள் தனமாய் முன்னே வந்தாய்
இவ்வழி விவேகம் இன்றியே வந்தாய்
வளைமரக் கண்ட **வளையம் முறித்து
இளமரத் தமைந்த ஏர்க்கால் உடைத்து
எனது வண்டியை இடித்து நொருக்கி
நான்படர் வண்டியை நாடிச் சிதைத்தது?"
அப்போ திளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 110
"நான்தான் இளைஞன் யொவுகா ஹைனன்
எதுஉன் சொந்த இனம்அதை இயம்பாய்
எந்த இனத்தை இயைந்தவன் நீதான்
இழிந்தவன், இழிந்த பாங்கினில் இயைந்தோன்?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தனது பெயரைத் தானே புகன்று
தொடர்ந்து மேலும் சொல்லுரை பகர்ந்தான்:
"இளைஞன் யொவுகா ஹைனன் நீயெனில்,
விலகிநில் வழியை விட்டுச் சற்றே,
என்னிலும் பார்க்க இளையவன் வயதில்". 120
அப்போ திளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இளமை ஒருபொருட் டில்லைமா னுடரில்
இளமையும் முதுமையும் ஏதெனல் இல்லை
அறிவிற் சிறந்தோர் ஆரிங் கறியலாம்
ஆற்றலும் திறனும் ஆர்க்குள தறியலாம்
நிற்கலாம் பாதையில் நிகரில் அறிவினன்
மற்றவன் விலகி வழியினை விடலாம்;
முதிய வைனா மொயினன் நீயெனில்
நிலைபெறும் பாடகன் நீயே யென்றால் 130
பாடல் நாமே பாடத் தொடங்குவோம்
படித்த சொற்களைப் பகரத் தொடங்குவோம்
ஒருவரை ஒருவர் சோதனை செய்து
ஒருவரை ஒருவர் தோற்கச் செய்வோம்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்னைப் பற்றியான் எதுசொல வப்பா?
மாயம் தெரிந்ததோர் வளர்பா டகனாய்
என்றும் வாழ்ந்தேன் எனதுவாழ் நாளில்
இவ்விளை நிலத்தில் இந்நிலப் பரப்பில் 140
இல்லத்து வயலின் எல்லைப் புறத்தில்
வீட்டுக் குயிலினைக் கேட்டுக் கொண்டே;
ஆயினும் அவைகள் அங்ஙனம் இருக்க,
செப்புவாய் எனக்குச் செவிகள்தாம் கேட்க
உனக்கு தெரிந்தவை எனைத்து என்பதை
மற்றையோர் தமைவிடக் கற்றுக் கொண்டதை?"
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"சிலசங் கதிகள் தெரியும் எனக்கு
தெரியும் அவைகள் தெளிவாய் எனக்கு
அவற்றின் விளக்கமும் அறிவேன் நன்றாய்; 150
புகைத்துளை ஒன்று முகட்டில் இருந்தது
அடுப்பின் அருகே அனலும் இருந்தது.
நன்றாய் ஒருகடல் நாயும் வாழ்ந்தது
அங்கே சுற்றித் திரிந்ததப் புனல்நாய்
மருங்கே யிருந்த வஞ்சிர மீனையும்
வெண்ணிற மீனையும் விருப்போ டுண்டது.
வெண்ணிற மீனின் விரிவயல் மென்மை
வஞ்சிர மீனின் வளர்ப்பரப் பகன்றது
**கோலாச்சி மீன்பனிக் கொழும்புகார் மீதும்
சேற்றுமீன் குளிரிலும் சிந்தின முட்டை. 160
கூனிய கழுத்துறும் **மீனினம் ஒன்று
ஆழத்தில் இலையுதிர் காலத்து நீந்தும்
கோடையில் உலர்ந்தநன் மேடையில் சினைக்கும்
ஓரத்துக் கரையெலாம் உலாவியே திரியும்.
இதுவும் போதா தின்னமு மென்றால்
நுட்பச் செய்திவே றுளநன் கறிவேன்
இன்னொரு சங்கதி எனக்குத் தெரியும்:
**மானிடம் கொண்டே வடக்கில் உழுதனர்
பெண்பரி தெற்குப் பெரும்பகு தியிலும்
லாப்பில் **காட்டெரு தும்பயன் பட்டன; 170
*பிஸாமலை மரங்களைப் பெரிதும் அறிவேன்
அறிவேன் *அசுர மலைத்தேவ தாருவை
பிஸாமலை மரங்கள் பெரிதுயர்ந் துறுபவை
வளர்தோங் கசுர மலைத்தேவ தாருவாம்.
மூன்றுநீர் வீழ்ச்சிகள் முழுவலி யுடைத்தாங் (கு)
ஊன்று மூவேரிகள் உயர்சிறப் புடனுள
மூன்று உயர்ந்த முதுமலை தாமும்
வானக் கூரை வளைவின் கீழே:
*ஹமேஎனு மிடத்தில் *ஹல்லா நீர்ச்சுழி
*கரேலி யாவில் *காத்ரா வீழ்ச்சி 180
*வுவோக்ஸியை யாரும் வென்றது மில்லை
*இமாத்திரா யாரும் கடந்தது மில்லை."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"பிள்ளையின் அறிவு, பெண்ணின் புத்தி,
தாடி யுளோர்க்குத் தகுந்ததே யில்லை,
பொருத்தமே யில்லைப் புணர்மனை யுளார்க்கு
ஆழ்ந்த முலத்தின் அர்த்தம் சொல்வாய்,
நித்தியப் பொருட்களின் தத்துவம் சொல்வாய்!"
பின்னர் இளைய யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 190
"ஒருசிறு **குருவியின் பிறப்புத் தெரியும்
அதுஒரு பறவை இனமெனல் புரிவேன்
**விரியன் பாம்பு விடப்பாம் புணர்வேன்
**நன்னீர் மீனை மீனென் றுணர்வேன்
இரும்பு கடினம் என்பதை யறிவேன்
கருமைச் சேறு கடும்உவர்ப் புணர்வேன்
கொதிக்கும் நீரோ கொடுந்துய ரிழைக்கும்
நெருப்பின் சூடு பெருங்கே டமைக்கும்.
புனல்தான் தொன்னாள் பூச்சு மருந்து
நீர்ச்சுழி நுரையே நேர்ப் பரிகாரம் 200
படைத்தவன் தான்பெரும் மந்திர வாதி
இறைவன் தான்பழம் மருத்துவ னாவான்.
நீரின் பிறப்பு நீண்மலை முடியில்
தீயின் பிறப்புத் திகழ்சொர்க் கத்தே
இரும்பின் முலம் துருவின் துகள்கள்
தாமிரம் கிடைப்பது மாமலை முடிவில்.
ஈரமேல் நிலமே வீறுகொள் பழம்பதி
அலரி மரமே முதல்வளர் தருவாம்
தேவதா ரடியே திகழ்முத லில்லம்
கல்லால் ஆனதே கலயமா தியிலே." 210
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இன்னமும் நினைவில் இருப்பன வுளவோ
குதர்க்கம் யாவும் கூறி முடிந்ததோ?"
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"இன்னமும் நினைவில் இருப்பன கொஞ்சம்
அந்நே ரத்தை அகத்திடை மீட்கிறேன்
ஆழியை நான்உழும் அப்போ தினிலே
ஆழியில் ஆழம் அமைந்தஅந் நேரம்
மீனின் வளைகள் மிகத்தோண் டுகையில் 220
ஆழத்தின் ஆழம் அகழ்ந்தவே ளையிலே
ஏரிகள் யாவும் இயற்றிடும் நேரம்
பருவதம் யாவையும் பாங்குறப் பிரித்து
குன்றுகள் யாவையும் குவித்தவே ளையிலே.
வேறென்ன நானே ஆறாம் மனிதன்,
ஏழாம் விறல்சேர் ஏந்தலும் நானே
இந்த வையகம் தோன்றிய பொழுது
பைங்கால் பிறந்து பரவிய பொழுது
நீள்வான் இடைத்தூண் நிறுவிய பொழுது
சுவர்க்க வளைவுகள் தோன்றிய வேளை 230
நன்னிலா வானில் நகர்ந்தநே ரத்தே
செங்கதிர்க் குதவிகள் செய்தநே ரத்தே
தாரகைக் குலத்தைச் சமைத்தஅவ் வேளை
நீலவான் மீன்கள் நிறைத்தவந் நேரம்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"உண்மையில் நீதான் உரைத்தவை பொய்யே
அந்நே ரம்நீ அவனியில் இல்லை
ஆழப் பெருங்கடல் அன்றுழு கையிலே
கடலிற் குழிகள் குடைந்தவே ளையிலே
மீனின் வளைகள் மிகத்தோண் டுகையில் 240
ஆழத்தின் ஆழம் அகழ்ந்தபோ தினிலே
ஏரிகள் அனைத்தும் இயைந்தபோ தினிலே
பருவதம் யாவையும் பாங்குறப் பிரித்து
குன்றுகள் யாவையும் குவித்தவே ளையிலே.
உன்னைக் கண்டவர் ஒருவரு மில்லை
கண்டது மில்லைக் கேட்டது மில்லை
இந்த வையகம் தோன்றிய பொழுது
பைங்கால் பிறந்து பரவிய பொழுது
நீள்வான் இடைத்தூண் நிறுவிய பொழுது
சுவர்க்க வளைவுகள் தோன்றிய வேளை. 250
நன்னிலா வானில் நகர்ந்தநே ரத்தே
செங்கதிர்க் குதவிகள் செய்தநே ரத்தே
தாரகைக் குலத்தைச் சமைத்தஅவ் வேளை
நீலவான் மீன்கள் நிறைத்தவந் நேரம்."
அப்பொழு திளைய யொவுகள் ஹைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"கூர்மைஎன் அறிவில் கூடிடா வேளை
கிளர்வாட் கூர்மையைக் கேட்பது உண்டு;
ஓ,நீ முதிய வைனா மொயின!
பாரியவா யுடைப் பாடகன் நீயே 260
எங்கள்வாள் முனைகளே இனித்தீர்ப் பளிக்கும்
வாள்களின் வீச்சே வருவிறல் காட்டும்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அச்சம் என்பதென் ஆண்மையில் இல்லை
உனதுவா ளினிலோ உன்னறி வினிலோ
கத்தி முனையிலோ கள்ளத் தனத்திலோ.
அதுவது இப்போ தப்படி யிருப்பதால்,
கடுவாள் வீரம் காட்டஎண் ணுகிலேன்
உன்னுடன் மோதி, ஓ,நீ இழிந்தவன்,
ஓ,இழிந் தவனே, உன்னுடன் மோதி." 270
அப்பொழு திளைய யொவுகா ஹைனன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே;
"எதிர்வாள் வீச்சை எவன்ஏற் கானோ
வன்வாள் முனையை மதிக்கான் எவனோ
அவனைப் பன்றியே ஆகப் பாடுவேன்
படுநீள் முகத்துப் பன்றி யாக்குவேன்
அத்தகு மனிதரை அங்ஙனம் செய்வேன்
அவனையவ் வாறே இவனையிவ் வாறே 280
அடர்எருக் குவியலில் அழியப் பண்ணுவேன்
முதுப்பசுத் தொழுவ முலையிற் போடுவேன்."
வைனா மொயினன் வஞ்சினங் கொண்டான்
வெஞ்சினத் தோடு வெட்கமு மடைந்தான்
அதனால் பாடற் கவனே தொடங்கினன்
அறிவுச் சொற்களை அவன்வெளி யிட்டான்;
பாடல்கள் குழந்தைப் பாடல்க ளல்ல
பிள்ளைப்பா வல்லது பெண்கேலி யல்ல
விறல்மிகும் தாடிகொள் வீரனின் பாட்டது
எல்லாப் பிள்ளையும் இசைக்கொணாப் பாட்டது 290
பாதிப் பையன்கள் பயின்றிடாப் பாட்டது
மூன்றிலோர் காதலர் மொழிந்திடாப் பாட்டது
தீமை நிறைந்து தெரியுமிந் நாட்களில்
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில்.
முதிய வைனா மொயினன் பாடினன்
இப்புவி குலுங்கிற்(று) ஏரிகள் கலங்கின
தாமிர வெற்புகள் தலைநடுக் குண்டன
பெரும் பாறைகளோ பிளக்கத் தொடங்கின
குன்றுகள் இரண்டு கூறாய்ப் பறந்தன
சிகரம் சிதறித் தெரிகரை வீழ்ந்தன. 300
இளைய யொவுகா ஹைனனைப் பாடினான்:
உடைகளை நாற்றுச் செடிகளா யாக்கினான்
புரவியின் பட்டியை அலரியா யாக்கினான்
இழுவை**வார் அதைவளர் **சிறுமர மாக்கினான்;
பொன்னொளிர் வண்டிமேற் போந்தவன் பாடினான்
வாவியில் மரத்தினைப் போல்விழப் பாடினான்,
தளர்மணி தொங்கிய சாட்டையைப் பாடியே
நீரதன் கரையிலே நின்றபுல் லாக்கினான்,
வெண்சுட்டி முகத்தொடு விறற்பரி பார்த்தவன்
படிசுனை யருகுறும் பாறையா யாக்கினான். 310
கனகமார் அவனது கைப்பிடி வாளினை
விண்ணகத் தொளிர்தரு மின்னலா யாக்கினான்,
வளமுறுங் கோலத்து வச்சிர தனுவதை
புனலின்மேற் பொலிவுறும் வானவில் லாக்கினான்,
அலர்சிறை பொருந்திய அம்புகள் அனைத்தையும்
விரைந்துவிண் பறந்திடும் பருந்துக ளாக்கினான்
கோணிய அலகுடை நாயினைப் பார்த்தவன்
நிலத்திலே கல்லென நிற்கவே சபித்தனன்.
பாடலால் தலைமிசைப் பதித்தநல் தொப்பி
மேலே எழுந்துவிண் மேகமாய் நின்றது, 320
மற்றொரு பாடலால் மலர்கரக் கையுறை
**குவளை மலரெனக் குளிர்புனல் நின்றது,
அவனணிந் திருந்த நீலமே லாடை
மேகக் கூட்டமாய் விண்மிசை யூர்ந்தது,
எழிலாய் இணைந்த இடுப்பின் பட்டி
விண்மிசை சிதறி விண்மீ னானது.
யொவுகா ஹைனனைத் தொடர்ந்தும் பாடினான்
சென்றான் அரைவரை சேற்றுச் சகதியில்
புதைந்தது இடுப்புப் பூட்டுச் சகதியில்
சென்றது **கக்கம் செறிமண் வரைக்கும். 330
இப்போ திளைய யொவுகா ஹைனன்
தெரிந்து கொண்டனன் சீராய் உணர்ந்தனன்
தான்வந்த வழியைச் சரியாய் அறிந்தனன்
பயண மொன்றினைப் படுமனம் கொண்டதும்
பாப்போட் டியிலே பாடிட வந்ததும்
முதிய வைனா மொயினனை எதிர்த்ததும்.
நிலத்தில் காலைப் பெயர்த்துப் பார்த்தான்
முன்கால் தூக்க முடியவே யில்லை
அடுத்த காலையும் அசைத்துப் பார்த்தான்
அதுகற் காலணி இறுகிக் கிடந்தது. 340
பின்னர் இளைய யொவுகா ஹைனன்
வளர்நோ வறிந்தான் வருத்தப் பட்டான்
தொல்லைகள் கூடத் துயரம் உணர்ந்தான்.
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,உயர் ஞான வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
மாயச் சொற்களை மீளப் பெறுவாய்
மந்திரப் பாடலை வாங்குவாய் திரும்ப
இந்தச் சிக்கலில் இருந்தெனை விடுப்பாய்
துன்பத் திருந்து தூக்கிநிம் மதிதா 350
அதிக பெறுமதி அளிப்பேன் உனக்கு
அரிதாம் பரிசுகள் அளிப்பேன் பற்பல."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சரிதான் எனக்குத் தருவாய் எவ்வெவை
மாயச் சொற்களை மீளப் பெற்றால்
மந்திரப் பாடலை வாங்கிக் கொண்டால்
இந்தச் சிக்கலில் இருந்துனை மீட்டால்
துன்பத் திருந்துகை தூக்கியே விட்டால்?"
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"என்னிடம் தனுக்கள் இரண்டு உள்ளன 360
எழிலார் குறுக்கு இருஞ்சிலை இரண்டு
அவற்றிலே ஒன்று அடுகதித் தாக்கும்
மற்றொன் றோகுறி வைத்தே பாயும்
இரண்டு வில்லில்நீ ஒன்றைப் பெறுவாய்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஆ,உன் தனுக்களில் ஆசையே இல்லை
அவ்இழி சிலைகளில் அக்கறை இல்லை
என்னிட முண்டு எண்ணிலாச் சிலைகள்
சுவர்களொவ் வொன்றிலும் சொருகியுள் ளனவே
ஆப்புகள் அனைத்திலும் அனேகம்உள் ளனவே 370
மனித ரின்றியே வானெலாம் திரியும்
வேட்பவ ரின்றியே வெளித் தொழில் புரியும்."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"என்னிடம் தோணிகள் இரண்டு உள்ளன
மங்கல மான மரக்கல மிரண்டு
கனமிலாத் தோணி கடுகதி செல்லும்
பெரும் பாரமேற்றும் பிறிதொரு தோணி
இரண்டி லொன்றை எடுத்துச் செல்வாய்." 380
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அத்தோ ணிகளில் ஆசையே இல்லை
இரண்டில் ஒன்றையும் இல்லைநான் பெறுதல்
அவற்றில் என்னிடம் அநேகமுள் ளனவே
உருளையொவ் வொன்றிலும் உறும்தடைப் பட்டே
ஒவ்வொரு குடாவிலும் உறும்அடை பட்டு
சீறுகாற் றெதிர்த்தும் சிலதோணி செல்லும்
சீரறு நிலையிலும் சிலபட கேகும்."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான். 390
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன் :
"என்னிடம் உள்ளன இருபொலிக் குதிரை
எழிலார் புரவிகள் இரண்டென் னிடமுள
ஒன்றன் கடுகதிக் கொப்பிணை யில்லை
இழுவையின் இலட்சணம் எனலாம் மற்றது
இரண்டி லொன்றைநீ யீங்குபெற் றகல்வாய்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அட,உன் புரவியில் ஆசையு மில்லை
வெண்காற் குதிரைகள் வேண்டிய தில்லை
அவற்றில் என்னிடம் அனேகமுள் ளனவால் 400
தொட்டிகள் அனைத்திலும் கட்டிக் கிடக்கும்
நிறைந்தே தொழுவம் அனைத்திலும் நிற்கும்
தெளிபுனல் போலத் திரண்ட முதுகுடன்
பின்புறங் கொழுத்த பெருந்தசை யுடனே."
இளைய யொவுகா ஹெனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
மாயச் சொற்களை மீளப் பெறுவாய்
மந்திரப் பாடலை வாங்குவாய் திரும்ப 410
பொன்தொப்பி நிறைகொள் பொற்கா சளிப்பேன்
அள்ளுமோர் தொப்பிகொள் வெள்ளிக ளளிப்பேன்
எந்தைபோ ரினிலே இவைகளைப் பெற்றார்
வெற்றிப் போரிலே பெற்றதிப் பொருள்கள்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"வெள்ளிகள் எதுவும் வேண்டவே வேண்டாம்
இழிந்தோய், உனதுபொற் காசுகள் ஏற்கேன்
அவைகள் என்னிடம் அனேகம் உள்ளன
களஞ்சியம் அனைத்தும் கனத்தே கிடப்பன
பெட்டிகள் அனைத்தும் பெருகவே உள்ளன 420
நிலாவொளி நிகர்ப்ப நிலைபெறும் பொன்னாம்
தொல்பக லோன்போல் தோன்றிடும் வெள்ளிகள்."
இளைய யொவுகா ஹைனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
இந்தச் சிக்கல் இருந்தெனை விடுவிப்பாய்
துன்பத் திருந்து தூக்கிநிம் மதிதா
வீட்டு வைக்கோல் மிகுபோர் தருவேன்
அகல்மண் வயலெலாம் அடைக்கலம் தருவேன் 430
என்னுடை வாழ்வைமீட் டெடுப்பதற் காக
என்னைமீட் டெடுத்துக் கொள்வதற் காக."
முதிய வைனா மொயினன் மொழிந்தான் :
"வைக்கோற் போரிலே இச்சையும் இல்லை
இழிந்தமா னிடனே செழித்தமண் வயலிலும்;
மண்வயல் அனேகம் உண்டே எனக்கும்
எல்லாத் திசையிலும் இருப்பன அவைகள்
எல்லா வெளியிலும் இகல்போர் உளவாம்
எனது வயல்கள்தாம் எனக்குகந் தனவாம்
தானியக் குவியல்கள் சாலச் சிறந்தவை." 440
இளைய யொவுகா ஹைனனைப் பாட
மேலும் சேற்றில் மிகஆழ்ந் திட்டான்.
பின்னர் இளைய யொவுகா ஹைனன்
ஆற்றல் அனைத்தும் அழிந்த நிலையில்
தாடை வரைக்கும் தாழ்ந்தே நின்றான்
தாடியோ தீதுறும் தலத்திலே யிருக்க
வாயினை நிறைத்து வன்சே(று) ஆர்ந்திட
படுமரத் துண்டிலே பற்கள்போய் இறுக.
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன்:
"ஓ,உயர் ஞான வைனா மொயின! 450
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
மீண்டும் பாடுநின் மேனிலைப் பாடலை
இளைத்த எனக்கிவ் விகவாழ் வருள்வாய்
எனக்கு விடுதலை இதிலிருந் தருள்வாய்
நீரோடை வந்ததென் நிலக்காற் கீழே
மண்ணும் எரிச்சலைக் கண்களில் தந்தது.
புனிதநற் சொற்களை இனிதுமீட் டழைத்தால்
மந்திர சக்தியை வரமீட் டெடுத்தால்
தருவேன் உனக்குச் சகோதரி *ஐனோ
தருவேன் உனக்குத் தாயீன் தனையை 460
தூய்மையா க்குவள்நின் தொல்வாழ் விடத்தை
நிலத்தைப் பெருக்கி நலத்தைச் செய்வாள்
மரத்தின் தட்டை உலர்த்தி எடுப்பாள் ;
கழுவித் தருவாள் முழுமே லாடைகள்
நேர்த்தியாய் பொன்னுடை நினக்கவள் நெய்வாள்
தேன்பல காரம் செய்வாள் இனிப்பாய்."
முதிய வைனா மொயினன் முடிவில்
இவ்வுரை கேட்டு இன்பமே கொண்டான்
யொவுகா ஹைனனின் யுவதியைப் பெற்றால்
கடுமுது காலம் கவனிப் பாளென. 470
களிப்பெனும் கல்லில் கருத்தோ டமர்ந்து
உயர்கவிக் கல்லில் ஓய்தலைப் பெற்று
ஒருகணம் பாடினான் மறுகணம் பாடினான்
படர்மும் முறையும் பாடலை யிசைத்தான்
புனிதச் சொற்களை இனிதுமீட் டழைத்தான்
மாயச் சொற்றொடர் மீளவும் பெற்றான்.
இளைய யொவுகா ஹைனன் மீண்டான்
தாடையோ சேற்றைத் தவிர்வெளி வந்தது
தாடியோ தீதுறும் தலம்வெளி வந்தது
பாறையில் இருந்துமீள் பரியதும் வந்தது 480
வண்டியோ புனற்கரை மரத்தினால் வந்தது
சலக்கரைப் புதர்நீள் சாட்டையும் வந்தது.
சறுக்குவண் டியிலே சாடியே ஏறினான்
வண்டியில் ஏறி வளமாய் அமர்ந்தான்
முறிந்த மனத்துடன் விரைந்தே சென்றான்
இதயம் நிறைந்திடும் துயருடன் சென்றான்
அன்புறும் அன்னையின் அருகினை நோக்கியே
உயர்வுறும் ஈன்றவர் உறைவிடம் நோக்கியே.
பெரும்ஒலி யார்ப்பக் கடுகதி சென்றான்
அகல்இல் நோக்கி ஆவலாய்ப் போனான் 490
வருகளஞ் சியத்தே வண்டியை நொருக்கி
வாயிற் படியிலேர்க் காலினை யுடைத்தான்.
அன்னையென் பவள்ஆழ் சிந்தனை செய்தாள்
தந்தையார் இங்ஙனம் வந்தெதிர் சொன்னார் :
"வன்கா ரணத்தொடே வண்டியை உடைத்தாய்
ஏர்க்கால் உடைத்ததில் இயல்கருத் துண்டு
ஏனப்பா நூதனம் இவ்வண்டி ஓட்டம்
வெகுமுட் டாள்போல் வீடேன் வந்தாய்?"
இளைய யொவுகா ஹைனன் அப்போது
கண்ணீர் பெருக்கிக் கவலைப் பட்டான் 500
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொப்பியைத் தூக்கி அப்புறம் வைத்தான்
உதடுகள் உலர்ந்து உரத்துப் போயின
வாய்வரை நாசி வளைந்து வந்தது.
தயங்கி தயங்கித் தாயவள் கேட்டாள்
வருத்தத் தாலொரு வாய்வினாக் கேட்டாள்:
"எதற்கு அழுதனை? என்மகன் இயம்பு!
இரங்கிய தெதற்கென் இளமையின் பயனே!
உதடுகள் உலர்ந்து உரத்தது எதற்கு
வாய்வரை நாசி வளைந்தது மெதற்கு?" 510
இளைய யொவுகா ஹைனன் இயம்பினன் :
"அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!
நிகழ்வின் காரண நிலையொன் றுண்டு
மந்திர வேலைகள் வலிதில் நடந்தமை
கண்ணீர் சிந்தக் காரண மாயின
மாயவித் தைகளால் வாய்புலம் பிட்டது;
நானும் இதற்காய் நாளெலாம் அழுவேன்
வாழ்நாள் முழுவதும் வேதனைப் படுவேன்
சமர்ப்பணம் செய்தேன் சகோதரி ஐனோ
அன்னையின் மகளை அளிக்கவாக் களித்தேன் 520
வைனா மொயினனைப் பேணுதற் காக
பாடகன் வாழ்க்கைப் படுதுணை யாக
உறுநொய் துற்றோன் ஒருதுணை யாக
முலையில் கிடப்போன் பாதுகாப் பிற்காய்."
செங்கரம் இரண்டையும் தேய்த்தனள் அன்னை
அங்கை இரண்டையும் அன்னாள் தேய்த்தபின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அரியஎன் மகனே, அழுவதை நிறுத்து!
எதுவுமே காரணம் இல்லை அழற்கு
அதிகம் துன்புறற் கவசியம் இல்லை; 530
நான்நாட் களெலாம் நண்ணிய தொன்று
நாளெலாம் வாழ்வில் நச்சிய தொன்று
உயர்ந்தோன் எமது உறவினன் ஒருவன்
விறலோன் ஒருவன் வருவான் என்றே
வைனா மொயினன் மருமக னாக
உயர்பா டகனே உறவின னாக."
இளைய யொவுகா ஹைனன் சோதரி
செய்தியைக் கேட்டுச் சிந்தினள் கண்ணீர்
ஒருநாள் அழுதாள் இருநாள் அழுதாள்
வாயிற் படிகளின் வலமிருந் தழுதாள் 540
பெருந்துயர் கொண்டு பின்னரும் அழுதாள்
இதயத் துயரினால் ஏங்கியே அழுதாள்.
அவளது அன்னை அவளிடம் சொன்னாள்:
"என்னுயிர் ஐனோ, எதற்காய் அழுதாய்?
மாவலோன் ஒருவன் மாப்பிள்ளை யாவான்
உயர்ந்தோன் ஒருவனின் உயர்மனை யிருந்து
பல்கணி வழியே பார்வையைச் செலுத்தி
பேச்செலாம் பேசலாம் பீடத் தமர்ந்து."
இவ்விதம் அந்த எழில்மகள் இசைத்தாள்:
"அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே! 550
அழுவதற் கெனக்கோர் அருங்கா ரணமுள
அழுதேன் எனது அழகுறும் குழற்கே
சடையாய் **வளர்ந்தஎன் தாழ்குழற் கழுதேன்
மென்மையாய் வந்தஎன் பொன்முடிக் கழுதேன்,
இளமையில் எல்லாம் ஒளித்தே யிருந்து
மறைவாகிப் போயின் வளர்ந்ததன் பின்னே.
எனதுவாழ் நாளெலாம் இதற்காய் அழுவேன்:
எல்லவன் ஒளியின் இனிமையைப் பார்த்து
விண்மதி ஒளியின் மென்மையைப் பார்த்து
வானத் தொளிரும் வண்ணம் பார்த்து. 560
இளமையில் இவற்றை இழத்தலும் வேண்டும்
வளர்சிறு வயதில் மறத்தலும் வேண்டும்
என்னுடைச் சகோதரன் இருந்தொழில் தளத்தில்
பரியுமென் தந்தையின் பலகணிப் பீடம்."
அன்னை யென்பவள் அவள்மகட் குரைத்தாள்
பிள்ளைக் கிவ்விதம் பிரியமாய்ப் பகர்ந்தாள்:
"தோய்மதி யீனத் துன்பம் தவிர்ப்பாய்
கண்ணீர் சொரியக் காரண மில்லை
எதுவித ஏதுவும் எழுதுயர்க் கில்லை
அல்லற் படுவதில் அர்த்தமும் இல்லை 570
கடவுளின் செங்கதிர் கதிர்களை ஒளிரும்
இகதலத் தெத்தகு இடத்திலு மிருந்து
மகிழ்பிதாச் சாளரம் மட்டிலு மல்ல
சோதரன் தொழிற்களத் தொன்றிலு மல்ல.
வளர்சிறு பழவகை மலையிலே யுண்டு
தனியொரு **பழவகை தரையிலும் உண்டு
அவற்றைநீ நன்குபோய் ஆய்ந்தெடுத் திடலாம்
புகுமிட மெங்கணும் போய்ப்பறித் திடலாம்
தந்தையின் வயல்வெளி தன்னிலென் றென்றும்
சகோதரன் **தீய்ந்நிலம் தங்குதற் கில்லை." 580
பாடல் 4 - ஐனோவின் முடிவு TOP
அடிகள் 1 - 30: வைனாமொயினன் யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவைக் காட்டில் சந்தித்து உரையாடுகிறான்.
அடிகள் 31 - 116: ஐனோ அழுதபடியே வீட்டுக்கு ஓடிப் போய்த் தாயாருக்குச் சொல்லுகிறாள்.
அடிகள் 117 - 188: தாயார் அழுகையை நிறுத்திவிட்டு, அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கச் சொல்லுகிறாள்.
அடிகள் 189 - 254: ஐனோ மென்மேலும் அழுது ஒரு வயோதிப மனிதனை விவாகம் செய்ய முடியாது என்கிறாள்.
அடிகள் 255 - 370: ஐனோ கவலையில் காடுகளில் திரிந்து, ஒரு அபூர்வமான கடற்கரையை அடைந்து அதில் குளிக்கும் பொழுது அமிழ்ந்து போகிறாள்.
அடிகள் 371 - 434: அவளுடைய மரணச் செய்தியை ஒரு முயல் போய் வீட்டில் சொல்லுகிறது.
அடிகள் 435 - 518: அவளுடைய தாய் இரவு பகலாக அழுகிறாள்.
அதன்பின் இளமைப் பருவத்து ஐனோ
யொவுகா ஹைனனின் யெளவனச் சோதரி
துடைப்பம் பெறற்காய்த் தொடர்கா டடைந்தாள்
சென்றாள் **தூரிகை தேடிப் புதரிடை
ஒன்றைத் தந்தைக் கொடித்துச் சேர்த்தாள்
இரண்டாவ தொன்றை எடுத்தாள் தாய்க்காய்
மூன்றாவ தொன்றை முனைந்தாங் கெடுத்தாள்
தாழ்வில் செழுமைச் சகோதர னுக்காய்.
வீடு நோக்கிக் காலடி பெயர்த்தனள்
**பூர்ச்சம் புதர்கள் புணர்வழி யூடே 10
முதிய வைனா மொயினன் வந்தனன்
காரிகை யவளைக் காட்டிலே கண்டனன்
இலைதளை அடர்ந்த இருள்சோ லையிலே;
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"பிறருக் கல்ல பருவப் பெண்ணே,
எனக்குமட் டும்தான் இளங்கா ரிகையே
நித்தில ஆரம் நீகழுத் தணிவாய்
திகழ்மார் பதிலே சிலுவையை அணிவாய்
எழிலார் குழலை இணைத்துப் பின்னி
பட்டுத் துணியைப் பாங்குறக் கட்டு." 20
இனிவரும் சொற்களில் இளமகள் இசைத்தாள்:
"உனக்காக அல்ல ஒருவர்க்கு மல்ல
மார்பிற் சிலுவை மாண்போ டணிதல்
பட்டுத் துணியினால் பைங்குழல் பிணைத்தல்
**கப்பல் துணியில் அக்கறை இல்லை
கோதுமை ரொட்டிக் குறுதுய ரில்லை
கைத்தறித் துணிகளில் காலங் கழிக்கிறேன்
ரொட்டித் துகள்களில் திட்பமாய் வளர்கிறேன்
அன்புடை நெஞ்சத்(து) அப்பா அருகில்
மங்காப் பாசத்து மாதா துணையில்." 30
திருகிப் பிடுங்கினள் மார்பின் சிலுவையை
விரலணி விலக்கினள் விரல்களி லிருந்து
கழுத்தி லிருந்து கழற்றினள் மணிகள்
சிரசி லிருந்து செந்துணி விலக்கினள்
நிலத்தினி லிட்டனள் நிலத்துக் காக
சோலையில் எறிந்தனள் சோலைக் காக
விழிநீர் சிந்தி வீட்டை அடைந்தனள்
துன்புற் றழுதவள் தோட்டம் நடந்தனள்.
தந்தை பலகணி தன்மருங் கிருந்தார்
கோடரிப் பிடியைச் சீர்செய் தவராய்: 40
"எதற்காக அழுகிறாய், எளியஎன் மகளே?
எளியஎன் மகளே, இளமைப் பெண்ணே!"
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனா லேதான் அழுகிறேன் அப்பா
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்
மார்பின் சிலுவை வறிதே கழன்றது
பட்டியி லிருந்தொரு படர்பூட் டவிழ்ந்தது
வியன்மார் பிருந்த வெள்ளிச் சிலுவையும்
இடுப்புப் பட்டியின் இயல்செப் பணியும்." 50
இருந்தான் சோதரன் எழில்வா யிற்கடை
வண்டிஏர் செதுக்கிய வண்ணம தாக:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் சோதரி?
எளியஎன் சோதரி, இளமைப் பெண்ணே!"
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனா லேதான் அழுகிறேன் சோதரா
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன்
விரலி லிருந்து விரலணி கழன்றது
கழுத்தி லிருந்து கதிர்மணி உதிர்ந்தது 60
விரலி லிருந்தஎன் வியன்பொன் மோதிரம்
கழுத்து மாலையின் கவின்வெண் மணிகள்."
இல்லின் கூடத்(து) இருந்தாள் சோதரி
பொன்னிலே கச்சணி பின்னிய வண்ணம்:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் சோதரி?
எளியஎன் சோதரி, இளமைப் பெண்ணே!"
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
அதனால் அழுகிறேன் அருமைச் சோதரி
மிகவழு(து) அதனால் விண்ணப் பிக்கிறேன் 70
புருவத் திருந்து பொன்னணி கழன்றது
கூந்தலின் வெள்ளணி குலைந்து வீழ்ந்தது
நீலப் பட்டு நீள்விழி யிருந்து
சென்னிறப் பட்டும் சென்னியி லிருந்து."
முன்மணி மண்டபத்(து) அன்னை இருந்தாள்
பாலிருந் தாடை பகுத்த வண்ணமே:
"எதற்காக அழுகிறாய், எளியஎன் மகளே?
எளியஎன் மகளே, இளமைப் பெண்ணே!"
"தாயே, என்னைத் தனிசுமந் தவளே!
எனைவளர்த் தவளே, என்னுயி ரன்னாய்! 80
"ஏங்கி அழுவதற் கேதுக் கள்ளுள
கவலைப் படற்கும் காரணம் உள்ளன
எளியஎன் தாயே, இதனால் அழுகிறேன்,
மிகஅழு(து) இதனால் விண்ணப் பிக்கிறேன்
துடைப்பம் பெறற்காய்த் தொடர்கா டடைந்தேன்
சென்றேன் தூரிகை தேடிப் புதரிடை
ஒன்றைத் தந்தைக் கொடித்துச் சேர்த்தேன்
இரண்டாவ தொன்றை எடுத்தேன் தாய்க்காய்
மூன்றாவ தொன்றை முனைந்தாங் கெடுத்தேன்
தாழ்வில் செழுமைச் சகோதர னுக்காய். 90
வீடு நோக்கிக் காலடி பெயர்த்தேன்
நற்புதர் வழியாய் நடந்தே வந்தேன்
குகைவழி வந்தகுரிசில் *ஒஸ் மொயினன்
தீய்ந்த நிலத்தில் *கலேவைனன் கூறினன்:
"எனக்காய் அணிவாய் எளிமைப் பெண்ணே
எனக்காய் மட்டும் எளிமைப் பெண்ணே
கழுத்தில் அணிவாய் கவின்மணி மாலை
திகழ்மார் பதிலே சிலுவையை அணிவாய்
எழிலார் குழலை இணைத்துப் பின்னி
பட்டுத் துணியினால் பாங்குறக் கட்டு." 100
சிறந்தஎன் மார்புச் சிலுவையைப் பெயர்த்தேன்
கழுத்தி லிருந்து கழற்றினேன் மாலை
நீல நூலினை நீள்விழி யிருந்து
சிவப்பு நூலினைச் சிரசினி லிருந்து
நிலத்திற் போட்டேன் நிலத்திற் காக
சோலையில் எறிந்தேன் சோலைக் காக
இங்ஙனம் நானே இயம்பினேன் பின்னர்:
"உனக்கா யல்ல ஒருவர்க்கு மல்ல
மார்பிற் சிலுவை மாண்போ டணிதல்
பட்டுத் துணியினால் பைங்குழல் பிணைத்தல் 110
கப்பல் துணியில் அக்கறை இல்லை
கோதுமை ரொட்டிக் குறுதுய ரில்லை
கைத்தறித் துணிகளில் காலங் கழிக்கிறேன்
ரொட்டித் துகள்களில் திட்பமாய் வளர்கிறேன்
அன்புடை நெஞ்சத்(து) அப்பா அருகில்
மங்காப் பாசத்து மாதா துணையில்."
பின்னர் இவ்விதம் அன்னையும் சொன்னாள்
பெற்றவள் மகளைப் பார்த்துப் பேசினாள்:
"அழுகையை நிறுத்துஎன் அன்புடைப் புதல்வி!
ஏக்கம் எதற்கென் இளமையின் பயனே! 120
உருகிய வெண்ணையை ஓராண் டுண்பாய்
பாங்குளோர் தமைவிடப் பசுமையாய் வருவாய்,
ஆண்டிரண் டினிலே அயில்வாய் **பன்றியை
வேறெவர் யாரிலும் மென்மையாய் வருவாய்,
உண்பாய் மூன்றில் ஒளிர்பா லேட்டை
ஏனைய யாரிலும் எழிலாய் வருவாய்.
மலையதி லுள்ள மண்டபம் சென்று
சீருடன் இருக்கும் சிறுஅறை திறப்பாய்
பெட்டக மீமிசை பெட்டக மாங்குள
பெட்டிக ளருகில் பெட்டிக ளிருக்கும் 130
திறப்பாய் மிகமிகச் சிறந்த பெட்டியை
மின்னும் முடியை மெதுவாய்த் திறப்பாய்
கனகத் தியற்றிய கச்சுகள் ஆறும்
நீலப்பா வாடை ஏழும் இருக்கும்
நிலவின் மகளால் நெய்தவை தாமவை
செங்கதி ரோன்மகள் செய்தவை தாமவை.
நற்சிறு பெண்ணாய் நானிருக் கையிலே
நளிர்இளம் பெண்ணாய் நானிருக் கையிலே
சிறுபழம் நாடிச் சென்றேன் வனத்துள்
பனிமலைச் சரிவிலே பழம்சில தேடினேன் 140
நிலாமகள் அப்போ(து) நெய்ததைக் கேட்டேன்
பெருங்கதி ரோன்மகள் பின்னிடக் கேட்டேன்
நீல நிறப்பொழில் நேர்பின் புறத்தில்
செழித்த பசும்பொழில் திகழ்பக் கத்தே.
மாதரின் பக்கம் வந்தேன் மெதுவாய்
அரிவையர் தமது அருகே நெருங்கி
நாரியர் தம்மிடம் நான்கேட் டேனால்
இனிவரும் சொற்களில் இயம்பினன் நானே:
'திங்களின் மகளே, நின்பொன் தருவாய்,
வெங்கதிர் மகளே, வெள்ளியைத் தருவாய், 150
எதுவுமே யற்ற இச்சிறு மிக்கு
கனிவாய்க் கேட்கும் காரிகை எனக்கு.'
திங்களின் மகளும் செம்பொன் தந்தாள்
வெங்கதிர் மகளும் வெள்ளிதந் திட்டாள்
பொன்னை எனது புருவம் வைத்தேன்
வெள்ளியைச் சென்னி விளங்கவைத் திட்டேன்
மலரைப் போல மனையை நாடினேன்
தேடிவந் தேன்என் தாதையி னிடமே.
அணிந்துநான் பார்த்தேன் அந்நாள் மறுநாள்
தனிமுன் றாம்நாள் தரித்துப் பார்த்தேன் 160
புருவத் துப்பொன் பிரித்தே எடுத்து
சென்னிவெள் ளியையும் சேர்த்தே யெடுத்து
குன்றுயர் மாடம் கொண்டே சேர்த்து
பத்திர மாகப் பெட்டகத் திட்டேன்,
அன்று முதல்அவை அங்கே இருந்தன
இன்று வரைநான் எடுத்துப் பார்த்திலன்.
நயனத் தணிவாய் நல்லதோர் பட்டணி
பூணுவாய் புருவம் பொலிவுறு பொன்னணி
நித்தில ஆரம் நேர்கழுத் தணிந்து
பூணுக மார்பிற் பொன்மணிச் சிலுவை 170
மென்மையாய் செய்த மேலுடை அணிக
நுட்பமாய் நெய்த நூலா டையது
கம்பளி யதிலியை கனத்தபா வாடையும்
பாவாடை மேலொரு பட்டுப் பட்டியும்
பாங்குறப் பட்டிலே பண்ணுகா லுறையும்
எழிற்கா லணியும் இருகால் பூணுக;
கார்குழல் பின்னிக் கட்டிய பின்நீ
பட்டுப் பட்டி பாங்குறச் சூடுக
கனகநல் மோதிரம் கைவிரற் புனைந்து
பொன்னிலாம் வளையல்கள் பூணுக கைகளில். 180
அவ்விட மிருந்து அகத்திடை வருக
களஞ்சியப் பக்கல் காலடி வைக்க!
உவகையில் திளைப்பர் உறவினர் எல்லாம்
திளைப்பர் இனத்தவர் செழுமென் னினைவில்;
பாதையில் பூப்போல் பவனிநீ வந்து
**சிறுபழம் போலே செம்மையுற் றுலவுவை
முன்னரை விடவும் முழுமெரு கொளிர்வாய்
அன்றிலும் பார்க்க அழகுடன் பொலிவாய்."
இவ்வித மொழிகளில் இயம்பினாள் அன்னை
மகளுக் கன்புடன் மாதா புகன்றாள் ; 190
ஆயினும் புதல்வி அதைமனம் கொண்டிலள்
மாதா மொழிகளை மகளோ கேட்டிலள்
அப்புறத் தோட்டத்து அழுது திரிந்தனள்
துன்பம் தோய்ந்து தோட்டம் நடந்தனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள் :
"நலமுறு நெஞ்சம் நயக்கும் உணர்வெது?
பாக்கியம் பெற்றோர் பயனுறு நினைவெது?
உறுநல நெஞ்சம் உணர்ந்திடு மிவ்விதம்
பாக்கியம் பெற்றவர் பாங்குறும் பேறிது 200
தொன்னீர் தோன்றிடும் துள்ளலைப் போலவும்
அல்லது மென்னீர் அலையது போலவும் ;
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்வெது?
தனிநீள் வாலுடைத் தாரா நினைவெது?
பாக்கியம் அற்றோர் பாங்குறும் உணர்விது
தனிநீள் வாலுடைத் தாரா நினைவிது
பருவத முடியின் பனிக்கட் டியைப்போல்
கிணற்றிடைப் பட்ட கிளர்நீ ரதைப்போல்.
அடிக்கடி நானோர் அல்லலில் வீழ்கிறேன்
அல்லலின் பிள்ளையாய் அடிக்கடி தாழ்கிறேன் 210
எண்ணம் மிதிபடும் எளியபுல் லாயினன்
பேதையாய் தவழ்கிறேன் பெரும்புதர் நடுவில்
புற்றரை மத்தியில் போய்நான் திரிகிறேன்
தோப்பிலும் தூற்றிலும் தொடர்ந்தலைந் துழல்கிறேன்
கிளர்ந்தெழும் மனநிலை **கீலிலும் சிறப்பி(ல்)லை
என்னுளம் கரியிலும் இ(ல்)லையொரு வெளுப்பே.
அமையும்என் நிலையோ அருமையாய் இருந்திடும்
மென்மேல் என்நிலை மேன்மையுற் றிருந்திடும்
பிறப்பெடா திருந்தால் வளர்ந்திடா திருந்தால்
பெரிதாய் நானுருப் பெறாதிருந் திருந்தால் 220
இன்னல்கள் நிறைந்த இவைபோல் நாட்களில்
இன்பங்க ளற்ற இத்தகு பூமியில்;
ஆறாம் நிசிவய ததில்இறந் திருந்தால்
அன்றெட் டாம்நிசி வயதழிந் திருந்தால்
எனக்கெனத் தேவைகள் ஏற்பட் டிருக்கா(து):
தூயசாண் நீளத் துணியது ஒன்றும்
அகத்தினில் வாழ அருநிலப் பரப்பும்
அன்னை யவளின் அழுகைசிற் றளவும்
எந்தையின் கண்ணீர் இன்னும் சிறிதும்
சகோதரன் விழிநீர் சற்றும் இருக்கா(து)." 230
அங்ஙனம் ஒருநாள் மறுநாள் அழுதாள்
அன்னையும் பின்னர் அகங்கனிந் துசாவினள் :
"பேதாய், பொருமுவ தெதற்குப் பெண்ணே?
வியாகுலப் பெண்ணே, வீண்முறை யீடேன்? "
"நான்பே தைப்பெண் நான்அழல் இதற்கே
முழுப்பொழு தும்நான் முறையீ டிட்டேன்
பேறிலா எனைநீ பெறுமா றுரைத்தாய்
உன்னுயிர் மகளுக் குரைத்தாய் இதனை
முதியஆ டவற்கு வதுவைக் கிசைத்தாய்
வயதாம் மனிதர்(க்கு) வழிகாட் டென்றாய் 240
தொய்து தளர்ந்தோன் துணையென எண்ணி
முலையிற் கிடப்போன் மனைவியா கென்றாய்
ஆணையிட் டாயேல் அதுநன் றிதைவிட
ஆழக் கடலின் அலைகள் அடியில்
தொல்வெண் மச்சச் சோதரி யாகென
தவழ்மீன் குழுநடுச் சகோதர னாகென ;
நடுக்கடல் இதைவிட நன்றா யிருக்கும்
அலைக்கீழ் வாழ்வது அருமையா யிருக்கும்
வெண்மீ னதனின் அண்முசோ தரியாய்
மீனின் மத்தியில் மிகுசகோ தரனாய் 250
வயதே றியவன் மனைவியா காமல்
தொய்ந்து தளர்ந்தோன் துணையா காமல்
தளர்கா லுறையொடு தள்ளா டுபவர்க்(கு)
தடிமேல் வீழ்ந்து தடுமா றுபவர்க்(கு). "
மலைமிசை யுள்ள மண்டபம் சென்றாள்
மண்டபத் துள்ளே மங்கையும் போனாள்
பேர்மிகும் சிறந்த பெட்டியைத் திறந்து
மூடியைப் பின்னால் வேகமாய்த் தள்ளி
அம்பொன் கச்சுகள் ஆறையும் தேடி
நீலப்பா வாடைகள் ஏழையும் கண்டாள் 260
அவைகளை எடுத்து அணிந்தாள் அவளே
அலங்கார மெல்லாம் அருமையாய்ச் செய்தாள் ;
பொன்னணி யதனைப் பூண்டாள் நுதலில்
வெள்ளியால் ஆனதை மிலைந்தாள் குழலில்
நீலப் பட்டதை நீள்விழிக் கணிந்து
சிவப்பிலாம் இழைகளை சிரசிற்சூ டினளே.
களஞ்சியம் அகன்று கடிதினிற் போந்து
கழனிப் பரப்பெலாம் கடந்தப் பாலும்
சதுப்பிலும் மேட்டுத் தரையிலும் திரிந்து
கலங்கிமங் கொளியிற் காடெலாம் அலைந்தாள் 270
னோ போக்கிலே புதுப்பாட் டிசைத்தாள்
அலைந்து திரிகையில் அவள்இவை புகன்றாள் :
"இதயம் நிறைய இன்னல் இருக்குமால்
தலைவலி ஒன்றும் தனியாய் வந்தது
ஆனாலும் இன்னல் இன்னலா காது
வலியென வந்தது வலியா யிராது
அதிட்டம் அற்றநான் அழிந்திட நேர்ந்தால்
மிகுதுயர் பேதைநான் விலகவும் நேர்ந்தால்
இப்பெருந் துன்பங்க ளிடையிலே யிருந்து
இவற்றிலே யிருந்தகன் றெழுந்திட முடிந்தால். 280
இதுதான் உவப்பாய் எனக்குறும் நேரம்
வியனுல கிருந்துநான் விடைபெற் றேக
*மரண உலகின் மடிமேல் நடக்க
*துவோனி உலகைத் தொடர்ந்திடும் நேரம்;
என்னுயிர்த் தந்தை இனியழ மாட்டார்
தூயதாய் எனக்காய்த் துயர்ப்பட மாட்டாள்
சோதரி முகத்தில் துளிநீர் இராது
சகோதரன் விழிநீர் தான்சிந் தாது
அகல்நீர் புரண்டுநான் அழிந்து போனாலும்
மீன்நிறை கடலில் வீழ்ந்துவிட் டாலும் 290
ஆழத் தலைகளில் அமிழ்ந்துபோ னாலும்
கருநிறச் சேற்றில்நான் கடிதமிழ்ந் தாலும்."
ஒருநாள் நடந்தாள் இருநாள் நடந்தாள்
முன்றா வதுநாள் முற்றும் நடந்தாள்
கடைசியில் வந்தவள் கண்டாள் அலைகடல்
முதுபுதர்க் கடற்கரை முகம்கொடுத் திட்டாள்
இராவெனும் பொழுதும் எதிர்கொள வந்தது
மயங்கிருள் வந்துமுன் மறித்துநின் றதுவே.
அழுதனள் கன்னி அந்திப் பொழுதெலாம்
இருளாம் இரவெலாம் ஏங்கித் தவித்தனள் 300
நீர்நனைந் திட்ட நெடுங்கரைப் பாறையில்
வான்விரி பரந்த வளைகுடா எல்லையில்;
புலர்மறு காலைப் பொழுதும் விடிந்தது
கடல்முனை நோக்கி கயல்விழி செலுத்தி
வன்கடல் முனைமும் மாதரைக் கண்டனள்
மூவரும் கடலில் மூழ்கிக் குளித்தனர்
ஐனோ நான்காம் அரிவையா யிணைந்தாள்
ஆங்கொரு மெல்லியள் ஐந்தாவ தாகினள்.
அணிமேற் சட்டையை **அலரிமேற் போட்டாள்
**அரசில்பா வாடை யதனை யிட்டனள் 310
காலுறை கழற்றிக் கழித்தாள் வெறும்தரை
பாதணி எடுத்தீர்ம் பாறையில் வைத்தனள்
மணிகளை விலக்கி மணற்றரை சிந்தினள்
மிகுபரற் கற்றரை விரலணி வைத்தனள்.
பாறை தெரிந்தது படுகடல் நடுவண்
பொன்போல் மின்னிப் பொலிவாய் ஒளிர்ந்தது
நினைத்தனள் பாறையை நீந்தியே யடைய
நச்சினள் பாறைப் பக்கம் சாரவே.
பாவையும் முடிவிலே பாறையைச் சார்ந்து
பாங்குற விருந்தனள் பாறையுச் சியிலே 320
பொலிவுற மிளிரும் பொற்பா றையிலே
எண்ணிலா வர்ணம் இயைந்தொளிர் பாறையில்;
பாறையும் மெதுவதாய்ப் பைம்புனல் தாழ்ந்தது
அலைகளின் அடியிலே ஆழ்ந்துபோ னதுவால்
பாவையும் பாறையும் படுபுனல் அடியில்
ஐனோவும் பாறையின் அடிமிசைச் சென்றனள்.
அந்த இடம்தான் **கோழியின் அழிவிடம்
அங்குதான் பேதை அப்பெண் ணிறந்தாள்
மரணித்த நேர மங்கையின் கூற்றிது
ஆழத் தமிழ்கையில் அவள்புகல் மொழிகள்: 330
"குரைகடல் நானும் குளித்திடச் சென்றேன்
நீரின் பரப்பிலே நீந்தமுற் பட்டேன்
அங்கே நானோரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடைத் தாதை என்அன் பப்பா
என்றுமே இந்த இகமுள வரையில்
பிடிக்கவே மாட்டார் பிறழ்மீ னாங்கே
படர்ந்து செறிந்தஅப் படர்புனற் பரப்பில்.
கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன் 340
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடை அன்னை என்அன் பம்மா
என்றுமே இந்த இகமுள வரையில்
குளிர்புனல் அள்ளிக் கொள்ளாள் கலயம்
மனையின் அயலுள வளைகுடா வதனில்.
கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன்
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன் 350
என்னுடைச் சோதரன் அன்புச் சோதரன்
என்றுமே இந்த இகமுள வரையில்
அடுப்போர்ப் புரவிக் காங்குநீர் வழங்கார்
கடலின் அயல்சார் கரைகளிற் சென்றேன்.
கரையிலே நானும் கழுவிடப் போனேன்
குரைகடல் இறங்கிக் குளித்திடச் சென்றேன்
அங்கே நானொரு கோழியாய் வீழ்ந்தேன்
அங்கே பறவையாய் அகாலத் திறந்தேன்
என்னுடைச் சோதரி அன்புச் சோதரி
என்றுமே இந்த இகமுள வரையில் 360
நனிநீ ரள்ளி நயனம் கழுவாள்
மனையின் அருகுள வளைகுடா வதனில்.
கடல்நீ ராகக் காணும் அனைத்தும்
என்னுடல் ஓடும் இரத்தமே யாகும்
கடல்மீ னாகக் காணும் அனைத்தும்
என்னுடல் எடுத்த இறைச்சியே யாகும்
கரையிலே காணும் தாவர மனைத்தும்
வாய்ப்பிலாப் பேதையின் வளர்விலா வெலும்பே
பூமியில் தோன்றும் புல்லின மனைத்தும்
சிதைந்த பேதையின் சிகையதே யாகும்." 370
*** *** ***
மடமகள் முடிவிலே மரித்தனள் இவ்விதம்
எழிலுறும் கோழியொன் றிறந்ததிவ் விதமே.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
கரடிவந் திச்செய்தி கடிதேற்றுச் செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொலக் கரடிவர வில்லை
அதுதொலைந் தாயிற்றாம் ஆன்கூட்ட மொன்றில். 380
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
ஓநாய்வந் திச்செய்தி உடன்கொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொல ஓநாய்வர வில்லை
அதுதொலைந் தாயிற்றாம் மறிக்கூட்ட மொன்றில்.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார் 390
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்?
நரியொன்று இச்செய்தி நனிகொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
ஆனாலும் செய்திசொல நரிவந்த தில்லை
அதுதொலைந் தாயிற்றாம் வாத்துக்கள் நடுவில்.
இச்செய்தி யிப்போயா ரெடுத்தேக வல்லார்
வாயாலே யாரிந்த வார்த்தைபோய்ச் சொல்வார்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில்? 400
முயலொன்று பெறும்செய்தி மொழிகொண்டு செல்லும்
வாய்கொண்டு இவ்வார்த்தை வடிவாகச் சொல்லும்
செய்தியது முயல்கொண்டு சென்றங்கு சொல்லும்:
"மனிதரிடை இச்செய்தி மறைந்திட மாட்டாதே. "
முயல்வந்து செய்திகொடு முனைந்தோடிச் சென்று
**'முழுநீளச் செவி' யாங்கு கதைகொண்டு போந்து
வளைவான கால்கொண்டு வலுவிரைவி லோடி
**'சிலுவைவாய்' யதுவாங்கு சென்றுகடி தடையும்
பொற்பாவை சீரான புகழ்பெற்ற வீட்டில்
மடவாளின் கவினான வளர்தோட்டக் காட்டில். 410
வந்தமுயல் *சவுனாவின் மண்டபத்து ளோடி
மண்டபத்து வளைவினிலே பருங்கியது வாடி.
குளியலறை மண்டபத்தில் கோதையர்கள் கூடி
தூரிகையும் கையுமாய் வரவேற்றார் நாடி:
"சமையலாய் மாறவா சடிதியிலே வந்தாய்
பூத்தபெரு விழிகளினைப் பொரித்திடவா வந்தாய்
இல்லத்து எசமானர் இரவுணவுக் காக
இல்லையேல் எசமாட்டி நல்லுணவுக் காக
அல்லையேல் அருமைமகள் சிற்றுணவுக் காக
அதுவுமிலை யேல்மகனின் பகலுணவுக் காக?" 420
பின்னர் மெதுவாகப் பேசிற்று முயலும்
கூர்**'வட்ட விழி' விரிவாய்க் கூறிற்றே யாங்கு:
"பெரும்பாலும் இவண்வந்து பிசாசுதான் கூடும்
பெய்யுகல மதிற்சேர்ந்து கறிகளாய் மாறும்;
இப்போது நானிந்தச் செய்திகொடு வந்தேன்
என்வாயால் நானிந்த மொழியியம்பு கின்றேன்.
அழிந்ததுவே இங்கோயோர் அழகினிலும் அழகு
ஆ, அழிந்து போனதொரு **தகரமார் பணியே
வீழ்ந்ததுவே வெள்ளியினால் ஆனதொரு பட்டம்
**வெறிதாழ்ந்து போனதொரு செப்பினரும் பட்டி 430
அலைகடலின் ஆழத்தில் அதுதாழ்ந்து போச்சே
அலைதிரையின் அடிநீரில் அதுமாண்டு போச்சே
வெண்மீனின் நல்லதொரு சோதரியே யாக
மீனினத்தின் நடுவணொரு சோதரனே யாக."
*** *** ***
அன்னை அறிந்து அல்லலுற் றழுதாள்
புனற்றடம் போலப் புரண்டது விழிநீர்
இதன்பின் அன்னை இயம்பத் தொடங்கினள்
திரமிகு மொழிகளில் செப்பிட லானாள்:
"தவப்பே றில்லாத் தாயீர் வேண்டாம்
என்றும் ஆயுளில் இச்செயல் வேண்டாம் 440
தங்கள் மகளிரைத் தாலாட் டாதீர்
அவரவர் பிள்ளையை ஆராட் டாதீர்
மனம்மா றானால் வதுவைசெய் யாதீர்
என்போல் அதிட்டம் இல்லா அன்னையாய்,
பெண்களைச் சீராய்ப் பெரிதுதா லாட்டி
சிறியகோ ழிகளை விருப்புற வளர்த்தேன்."
அன்னை அழுதாள் கண்ணீர் உருண்டது
வருபுன லாகப் பெருகி வழிந்தது
நீல நிறத்து நெடுவிழி யிருந்து
காணாப் **பாக்கியக் கன்னங் களின்மேல். 450
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
காணாப் பாக்கியக் கன்னத் தின்வழி
மிதந்து பரந்த வியன்மார் பகத்தே.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
மிதந்து பரந்த வியன்மார் பூடே
மேதகு நெசவார் மேலுடை மீதே.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது 460
மேதகு நெசவார் மேலுடை வழியாய்
சிவப்பினில் இயைந்த செழுங்கா லுறைமேல்.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
சிவப்பினில் இயைந்த செழுங்கா லுறைவழி
பொன்னிறம் மின்னும் புதுக்கா லுறைமேல்.
ஒருதுளி உருள உருண்டதின் னொன்று
வருபுனலாகப் பெருகி வழிந்தது
பொன்னிறம் மின்னும் புதுக்கா லுறைவழி
படிமிசை நிலத்தில் பாதத் தின்கீழ் 470
தரையில்ஓ டும்நீர் தரைக்காய்ச் சேர்ந்தது
நீரா யோடுநீர் நீர்க்காய்ச் சேர்ந்தது.
ஓடி நிலத்தில் ஒன்றாய்ச் சேர்ந்தநீர்
**ஓடு மாறாக உருக்கொளத் தொடங்கி
நதிகள் முன்றாய் நன்றாய் வளர்ந்தது
அவள்அழும் செயலால் ஆங்குகும் விழிநீர்
தலையினி லிருந்து தவழ்ந்திடு கண்ணீர்
கண்மட லிருந்து கழிந்திடு கண்ணீர்.
தோன்றிற் றப்பா ஒவ்வொரு நதியிலும்
முன்று பயங்கர முழுநீர் வீழ்ச்சிகள், 480
ஒவ்வொரு வீழ்ச்சியில் உயரும் நுரையிலும்
முன்று பாறைகள் முறையாய் எழுந்தன,
ஒவ்வொரு பாறை யுளமுனை தோறும்
பைம்பொன் இயைந்த பருவதம் வந்தது,
ஒவ்வொரு பருவத உச்சியின் மேலும்
முன்று மிலாறு மரங்கள் முளைத்தன,
ஒவ்வொரு மிலாறு மரமுடி யினிலும்
அம்பொன் குயில்கள் அமர்ந்தன முன்று.
குயில்கள் இனிதே கூவத் தொடங்கின:
ஒருகுயில் இசைத்தது :'காதல்,காதல்!' 490
மறுகுயில் விளித்தது :'அன்னே,அன்பே!'
முன்றாம் குயிற்குரல் :'இன்பம்,இன்பம்!'
'காரல், காத' லென் றிசைத்த கருங்குயில்
முன்றுமா தங்கள் முழுதும் இசைத்தது
காதலை யறியாக் காரிகைக் காக
ஆழியில் உறங்கும் அரிவைக் காக.
'அன்பே, அன்பே'யென் றழைத்த குயிலது
ஆறுமா தங்கள் ஆங்கிருந் திசைத்தது
அமைதியை இழந்த அன்பருக் காக
துன்பத்து முழ்கிய துணைவருக் காக. 500
'இன்பம், இன்ப'மென் றிசைத்த குயிலது
வாழ்நாள் எல்லாம் மணிக்குரல் தந்தது
இன்பம் இழந்த இணையிலாத் தாய்க்காய்
விழிநீர் நாளெலாம் விடுமன் னைக்காய்.
இனிவரும் சொற்களில் இயம்பினள் அன்னை
கிளர்குயிற் கூவல் கேட்டபின் மொழிந்தாள் :
"அரும்பே றிழந்த அன்னையெக் காலும்
நெடுநாள் கூவல் நின்றுகேட் டிடற்க
காதிலே குயிலின் கானம் வீழ்கையில்
என்னுளம் அடித்து எழுந்து மாய்கிறது 510
கண்ணீர் விழிகளில் கழிந்துபாய் கிறது
கன்னம் வழியாய்ப் புனல்கழி கிறது
**பயற்றம் விதையிலும் பருத்தநீர்த் துளிகள்
**அவரையைக் காட்டிலும் கொழுத்த நீர்த்துளிகள்;
குறுகுமென் வாழ்நாள் கொடுமுழத் தளவு
குன்றுமென் உயரம் குறுஞ்சாண் அளவு
மேனி முழுவதும் மிகுபல மிழந்தேன்
வசந்தக் குயிலிசை வந்துவீழ் கையிலே. "
பாடல் 5 - கடற்கன்னி TOP
அடிகள் 1-72 : வைனாமொயினன் மீன் பிடிக்கச் சென்று யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவை மீன் வடிவில் பிடித்துத் தோணியில் ஏற்றுகிறான்.
அடிகள் 73-133 : அவன் அந்த மீனை வெட்டப்போகும் சமயத்தில், அவள் நழுவி நீரில் குதித்துத் தான் யார் என்று சொல்கிறாள்.
அடிகள் 134-163 : வைனாமொயினன் அந்த மீனை மீண்டும் பிடிக்க முயன்று தோல்வியடைகிறான்.
அடிகள் 164-241 : மனமுடைந்து வீடு திரும்பிய அவனை, வடநாட்டு மங்கையை நேசிக்கும்படி அவனுடையகாலம் சென்ற தாய் ஆலோசனை கூறுகிறாள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செய்தி எங்கணும் செறிந்து சென்றது
பாரெலாம் புதினம் பரவிச் சென்றது
நீருக் கடியில் நித்திரை செய்த
அழகிய நங்கை அழிந்த செய்தியே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பரவும் செய்தியாற் பெரிதும் வருந்தினன்;
மாலையில் அழுதான் காலையில் அழுதான்
இரவுகள் எல்லாம் இரங்கி அழுதான்
வியனெழில் நங்கை வீழ்ந்தது கேட்டு
தூயவள் நீரில் துயில்வதைக் கேட்டு 10
சேற்றுக் கடலுள் சென்றதை யறிந்து
அலையின் அடியில் அமிழ்ந்ததை அறிந்து.
சுடுநெடு மூச்சும் துயருமாய்ச் சென்றான்
இதயம் நிறைய இன்னலைச் சுமந்து
நீலக் கடலின் நீண்ட கரைகளில்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"கனவின் சக்திநின் கனவினைப் புகல்க
காசினி நிறைந்தநின் காட்சியைப் புகல்க
*அஹ்தோ வாழும் அகமெங் குளது
*வெல்லமோ மகளிர்தம் நல்லுலா வெவ்விடம்?" 20
கனவின் சக்திதன் கனவினைச் சொன்னது
காசினி நிறைந்த காட்சியைச் சொன்னது:
"அஹ்தோ வாழும் அகமாங் குளது
வெல்லமோ மகளிர்தம் நல்லுலா வவ்விடம்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்
ஆழத் தடியினில் அலைகளின் கீழே
மிகுகருஞ் சகதி மேடையின் மேலே.
அதுவே அஹ்தோ அமைவசிப் பிடமாம்
வெல்லமோ மகளிர் நல்லுலா விடமாம் 30
அகலம் குறைந்ததோர் ஒடுங்கிய மாடம்
அளவில் சிறியதோர் குறுகிய கூடம்
பளிங்குக் கற்களின் படர்சுவர்ப் பக்கம்
கனத்துத் தடித்தகற் கட்டிகள் நடுவண்."
முதிய வைனா மொயினனப் போது
**தோணித் துறைக்குத் துரிதமாய்ச் சென்று
மீன்பிடிக் கயிற்றை விழியுறல் செய்து
மீன்பிடி முளையை மீளவும் நோக்கி
பருமுளை ஒன்றைப் பையிலே போட்டு
கரும்பொன் முளையைச் கைச்சாக் கிட்டான். 40
படகின் துடுப்பைப் பதமாய்ச் செலுத்தி
திண்ணமா யடைந்தான் தீவின் கரையை
புகார்படி கடலதன் புணர்முனை நுனியை
செறிபனிப் புகாருள தீவதன் கரையை.
மீன்பிடி முளையுடன் விழித்தாங் கிருந்தனன்
மீன்பிடி கயிற்றுடன் விழித்தாங் கிருந்தனன்
அசைத்தனன் கைவலை அதனைமுன் பின்னாய்
தூண்டில் இரையினைத் தூரத்து வீசினன்
அசைத்து முன்பின் அதனை நகர்த்தினன்;
செப்பின் பிடிகோல் செறிநடுக் குற்றது 50
வெண்பொற் கயிற்றினில் கிண்கிணி யோசை
பொன்னணிக் கோலினில் இன்னிசை யெழுந்தது.
பலநாள் கழிந்து ஒருநாள் நடந்தது
பலவிடி வகன்று ஒருவிடி வியன்றது
மீன்பிடி முள்ளை மீனொன் றெடுத்தது
தொங்கிய தம்மீன் தொடுமுள் முனையில்;
தோணியின் உள்ளே மீனை இழுத்தனன்
தோணித் தட்டிலே தூக்கிப் போட்டனன்.
தீரமாய்ப் பார்த்தனன் திருப்பிப் புரட்டினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 60
"உயர்மீ னினத்தில் ஒருவகை மீனிது
இதுபோல் மீனை என்றுமே பார்த்திலேன்!
**வெண்மீ னதைவிட மென்மையில் மிகுதி
**நன்னீர் மீனிலும் நன்கமை வெண்மை
**கோலாச்சி மீனிலும் குறைந்தது கருமை
மிகுசினை மீனெனின் மென்மையாய்க் காணேன்
ஆணென நோக்கிலும் அவ்வியை பில்லை
இதன்தலை மொட்டை இளம்பெண் ணல்ல
**அப்புவாழ் மகளெனின் அரைப்பட்டி எங்கோ!
இல்லப் பறவையா இல்லையே காதுகள்! 70
**ஆழிமீன் போல அதிகஒற் றுமைகள்
அலைகளின் அடியிலே உலாவரும் **மீனிது."
வைனா மொயினனின் வாள்இடுப் பினிலே
வெள்ளியின் நிறத்து மிகுகூர் மையது
பக்கத் திருந்து கத்தியை இழுத்தான்
விரியுறை யிருந்து வெண்முனைக் கத்தியை
கொழுமீன் கிழித்துக் கூறுகள் போட
தொடுமீன் வெட்டித் துண்டுதுண் டாக்க
உதய காலை உணவுடன் சேர்த்து
காலை யுணவாய்க் களிப்புடன் அமைக்க 80
நண்பகல் உணவாய் நன்றாய்ச் சமைக்க
இரவின் உணவாய் இனிதே யாக்க.
விரும்பினன் வஞ்சிர மீனினை வெட்ட
கத்தியால் கிழிக்கக் கருதி யிருந்தனன்;
விரைந்தது வஞ்சிர மீனும் கடலில்
எழில்மிகு மீனும் எகிறிப் பாய்ந்தது
செந்நிறத் தோணியின் திகழ்தட் டிருந்து
வைனா மொயினனின் வன்பட கிருந்து.
அப்போ ததுதன் அருஞ்சிர முயர்த்தி
துலங்கும் வலப்புறத் தோளையும் உயர்த்தி 90
ஐந்தாவ தாய்வரும் அலையதன் மேலே
ஆறாவ தாயுயர் அலையதன் மேலே
வியன்வலக் கரத்தை வெளியிலே காட்டி
இடதுகா லதையும் எடுத்துயர்த் தியது
ஏழாவ தாயுயர் எழிற்றிரை யதன்மேல்
உயர்ந்துபின் வந்த ஒன்பதாம் அலையில்.
அவ்வா றிருந்து இவ்வித மொழிகளில்
உரைத்தே அதுதான் உரைசெய லானது:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
இங்குநான் வந்தது இதற்கா யல்ல 100
மிளிர்வஞ் சிரமீன் வெட்டுதற் கல்ல
கொழுமீன் போலெனைக் கூறிடற் கல்ல
உனது காலை உணவுக் கல்ல
உதயகா லத்து உணவுக் கல்ல
பருவஞ் சிரமீன் பகலுண வல்ல
அரும்இர வுணவாய் ஆவதற் கல்ல."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அவ்வா றாயின் எதற்காய் வந்தாய்?"
"இதற்கா யேதான் இங்குனை யடைந்தேன்
நேர்கை யணைப்பில் நின்கோ ழியதாய் 110
என்றுமுன் அருகில் இருப்பதற் காக
இல்லத் துணையென முழங்கா லிருக்க
படுக்கையை விரித்துப் பக்குவம் செய்ய
தலையணை யெடுத்துத் தனியாய் வைக்க
தோன்றுநின் சிறுகுடில் சுத்தம தாக்க
நிலத்தைப் பெருக்கி நலத்தைப் பேண
வீட்டுள் ளடுப்பை மூட்டிவைத் திருக்க
விளக்கினை ஏற்றி விளங்கவைத் திருக்க
தொடுபரும் ரொட்டிகள் சுட்டுவைத் திருக்க
அடர்தே னடைகளை ஆக்கிவைத் திருக்க 120
**பானக் கலயம் படிசுமந் தேக
உனக்காம் உணவினை ஒழுங்குசெய் தமைக்க.
வருநான் கடல்வாழ் வஞ்சிர மல்ல
விரிதிரை யடிவாழ் மீனின மல்ல
நானோர் இளம்பெண் நல்லிள அணங்கு
இளமை யொவுகா ஹைனன் சோதரி
வாழ்நாள் எலாம்நீ தேடிய மங்கை
வாழ்க்கை முழுதும்(நீ) மனங்கொளும் வனிதை.
ஏறும் வயோதிபத் திழிந்த மனிதனே,
மடத்தனம் மிகுந்த வைனா மொயினனே, 130
ஆதரிப் பதற்கு அறியாய் நீயே
வெல்ல மோவின் வியன்னீர் நங்கையை
அஹ்தோ பெற்ற அழகிய பிள்ளையை."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்:
"ஓ,நீ யொவுகா ஹைனனின் சோதரி
வருவாய் மீண்டும் மற்றொரு முறையே!"
வந்திலள் மீண்டும் மங்கை ஒருமுறை
வாழ்நாள் முழுக்க வரவே யில்லை
இப்போது திரும்பி இளங்கொடி சென்றாள் 140
மிகுபுனற் பரப்பில் விலகி மறைந்தாள்
படர்ஒளி விளங்கும் பாறைகள் உள்ளே
ஈரல் நிறத்துப் பாறைப் பிளவிடை.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
எண்ணினன் கருத்தில் இவற்றையப் போது
என்ன செய்வது எங்ஙனம் வாழ்வது;
பட்டுநூல் கொண்டொரு பருவலை பின்னினன்
நீரதன் குறுக்கிலும் நேரிலும் வீசினன்
வீசினன் **நீரிணை மீண்டும் வீசினன்
அமைதிநீர்ப் பரப்பிடை அசைத்தசைத் திழுத்தனன் 150
பருவஞ் சிரம்வாழ் பாறைகள் நடுவில்
வைனோ நிலத்திடை வயங்குநீர்ப் பரப்பில்
கலேவலாப் பகுதியின் கரைபுனல் முனையில்
ஆங்கிருண் டியைந்திடும் ஆழத்து நீரில்
விரிந்து படர்ந்து செறிந்தநீர திலே
யொவுகோ நாட்டின் உறுநதி யனைத்திலும்
லாப்பு லாந்தின் வளைகுடாக் கரைகளில்.
உறுபல் லினமீன் பெரிதும் பிடித்தனன்
அகல்புனல் நிறைந்த அனைத்தையும் பிடித்தனன்
தேடுமீன் மட்டும்கை கூடவே யில்லை 160
இதயத் திருந்தமீன் எதிர்ப்பட வில்லை
வெல்ல மோவின் விரிபுனல் மங்கை
அஹ்தோ பெற்ற அழகிய பிள்ளை.
முதிய வைனா மொயினன் அதன்பின்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொப்பியைச் சற்றுத் தொடுபுறம் சாய்த்து
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓகோ, நானொரு உயர்பைத் தியந்தான்
ஆண்மைக் கேற்ற அறிவற் றவன்நான்
முன்னொரு நாள்மனம் என்னிட மிருந்தது 170
அந்த மனமெலாம் சிந்தனா சக்தியே
உயர்ந்தசிந் தனைகள் நிறைந்து
கிடந்தன
அதுவெலாம் முன்னர் அன்றொரு நாளில்;
எனினும் இன்றைக் கிந்த நாட்களில்
இன்னல் நிறைந்த இன்றைய நாட்களில்
வயதும் வலிமையும் வாடியநாட் களிலே
சிந்தனை யனைத்துமே சீரழிந் தொழிந்தன
உள்ளுணர் வதன்தரம் உடைந்துகாண் கிறது
எல்லாம் எதிர்மா றியங்குகின் றனவே.
பல்லாண் டவட்காய்ப் பார்த்துநான் இருந்தேன் 180
வாழ்க்கையிற் பாதிநாள் வளர்விருப் புற்றேன்
வெல்ல மோவின் நற்புனல் மங்கை
கடைசியிற் புனல்தரு கவினுறு நங்கை
என்றுமே தோழியாய் எனக்கினி யவளாய்
வாழ்நாள் முழுவதும் மனையாள் ஆக
போட்டஎன் தூண்டிலைப் பார்த்துவந் தெடுத்தாள்
தோணியில் எனக்காய்த் துள்ளிவந் தமர்ந்தாள்;
அவளைவைத் திருக்கும் அறம்தெரிந் திலன்யான்
எடுத்தில் லடைந்திட இயலவே யில்லை
ஆனதால் மீண்டும் அவள்நீ ரடைந்தாள் 190
அலைகளின் ஆழத் தடிமிசை சென்றாள்."
*** *** ***
சிறுதூரம் அப்படியே சென்றான் அவன்பயணம்
துயரநெடு மூச்சோடும் சோர்ந்து நடந்துவந்தான்
அதன்பின் அவன்வீடு அதுநோக்கி வந்திட்டான்
வரும்போது இவ்வாறு வாஞ்சையொடு கூறிவந்தான்:
"குயிலினங்கள் முன்நாளில் கூடிவந்து கூவுமிங்கு
அந்நாள் அவைஎனது அகமகிழ்ச்சிக் காய்க்கூவும்
முன்னர் அவைகூவும் முழுக்காலை மாலையிலும்
நண்பகல் வேளையிலும் நன்கொருகால் கூவிடுமே,
எதற்காய் இனியகுரல் இன்றுவளம் மாறியது? 200
எழிலார் குயிலின்று எவ்வண்ணம் மாறியது?
இடர்வந் தழித்ததுவே இனிமைதரும் நற்குரலை
துயர்வந்து தீய்த்ததுவே தோய்ந்தநறை இன்குரலை
ஆனதினால் கூவுவதே இல்லையவை இப்போது
கதிரவன் சாய்பொழுதும் கண்டுஅவை கூவவில்லை
மாலை யிலேவந்து மகிழ்விப்ப தில்லையென்னை
காலை யிலேவந்து களிசேர்ப்ப தில்லையவை.
இதன்மேலே சிந்திக்க எனக்கெதுவு மில்லையந்தோ
எவ்வண் இருப்பதுவோ எவ்விதம்யான் வாழ்வதுவோ
வாழ்க்கைதான் இவ்வுலகில் வாகாய் நடப்பதெல்லாம் 210
இந்நாட்டின் நற்பயணம் இயல்பாய் நடக்கையிலே;
இப்போ துயிரோடு என்தாய் இருப்பாளேல்
என்னைப் பயந்தவள்தான் தன்னுணர்வோ டிங்கிருந்தால்
இயலும் அவளாலே எடுத்துண்மை தான்சொல்ல
எவ்வாறு தாங்கி இவ்வுலகில் வாழ்வதென்று
இன்னலுற்றுப் போயுடைந்த இதயம் தனையின்று
துயரமுற்றுத் தீய்ந்து தொலைந்த அதைஎன்று
இடுக்கண் மிகவுடைய இத்தகைய நாட்களிலே
இடும்பைவந் துற்ற இத்தகைய போழ்தினிலே."
அன்னையிதைக் கல்லறைக்குள் ஆங்கிருந்து கேட்டனளே 220
மென்திரையின் கீழிருந்து விடையதனைத் தந்தாளே:
"உன்னன்னை இன்னும் உயிரோடே தானுள்ளாள்
உன்னையே ஈன்றெடுத்தாள் உள்ளாள் விழிப்போடு
இதுதான் அவள்உனக்கு எடுத்துகந்து சொல்லுவது
எங்ஙனம்தான் தாங்குவது இந்தத் துயரையென்று
இன்னலுற்றுப் போயுடைந்த இதயம் தனையின்று
துயரமுற்றுத் தீய்ந்து தொலைந்த அதைஎன்று
இடுக்கண் மிகவுடைய இத்தகைய நாட்களிலே
இடும்பைவந் துற்ற இத்தகைய போழ்தினிலே;
வடபால் மகளிர் வாழிடத்து நீசெல்வாய் 230
அங்கே மகளிர் அழகில் மிகச்சிறந்தார்
அங்கே இருமடங்கு அழகுடைய நங்கையராம்
உயிர்ப்பு ஐந்தாறு உயர்மடங்கு உள்ளவராம்
யொவுகோவின் சோம்பல் நாரியர்போல் இல்லையவர்
*லாப்லாந்தின் பாங்கறியாப் பிள்ளைகளே அல்லர்அவர்.
என்மகனே அங்கே எடுப்பாய் மனையாளை
வடபால் எழில்சிறந்த மங்கையர்கள் தம்மிடையே
அழகு நயனம் அமைந்தவளை நீயடைவாய்
பார்வைக் கழகுப் பேரழகி யோர்பெண்ணை
கடுகதியில் செல்லும் கால்கள் உடையாளை 240
சுறுசுறுப்பு என்றும் தொடுசெயலில் சேர்ந்தாளை."
பாடல் 6 - சகோதரனின் பழிவாங்கல் TOP
அடிகள் 1-78 : வைனாமொயினனில் வெறுப்புற்ற யொவுகாஹைனன் வைனாமொயினனின் வடநாட்டுப் பயணத்தின்போது வழியில் காத்திருக்கிறான்.
அடிகள் 79-182 : வைனாமொயினன் வரும்பொழுது யொவுகாஹைனன் அம்பு எய்கிறான்; ஆனால் குதிரை மட்டுமே இறக்கிறது.
அடிகள் 183-234 : வைனாமொயினன் நீரில் விழுந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகிறான். வைனாமொயினனை எய்ததற்காக யொவுகாஹைனன் மகிழ்ச்சியடைகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
ஒருபய ணம்செய உடன்முடி வெடுத்தான்
கிளர்குளிர் நிறைந்த கிராமம் அதற்கு
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே.
வழுது **நிறப்பொலிப் புரவியை எடுத்தான்
பயற்றம் **தண்டுப் பதநிறக் குதிரையை
வாயிலே பொற்கடி வாளமும் மாட்டி
தலையிலே வெள்ளியின் தலையணி சூட்டி
வியன்முது கேறி மெதுவா யமர்ந்து
அகற்றிப் பரப்பி அவன்கால் போட்டு 10
ஆரம்ப மானது அரியதோர் பயணம்
மெதுவாய்ப் பயணம் மிகநீண் டதுவாம்
வழுது நிறத்து வான்பொலிப் பரியில்
பயற்றம் தண்டுப் பதநிறக் குதிரை.
படர்ந்தான் வைனோ பரந்த நிலத்திடை
கலேவலாப் பகுதிக் கடும்புதர்ப் பாதை
நிமிர்பரி விரைந்தது நீண்டது பயணம்
வீடுபின் தங்க மிகுவழி குறுக.
கடல்கள் யாவையும் கடந்தே சென்று
வெட்ட வெளிகளில் விரைந்திட லானான் 20
எழுபரிக் குளம்பில் ஈரம் படாமல்
அதன்கால் நீரில் அமிழ்ந்துபோ காமல்.
இளைஞன் யொவுகா ஹைனன் என்பவன்
லாப்பு லாந்தினன் இளைத்த இளைஞன்
நெஞ்சிலே வன்மம் நெடுநாள் வைத்து
அவனுளம் நிறைய அழுக்கா றுற்றான்
முதிய வைனா மொயினன் மீது
படர்புகழ் நிலைபெறும் பாடகன் மீது.
மிகுகனக் குறுக்கு வில்லொன் றியற்றி
அதற்கென அமைத்தான் அழகுறும் அம்பு ; 30
உரம்பெறும் இரும்பில் உறுசரம் செய்தான்
செம்பிலாம் தகட்டினைச் சேர்த்துமேற் பதித்தான்
பொன்னால் அதையலங் காரமே புனைந்தான்
வெள்ளியை உருக்கி வேலைகள் புரிந்தான்.
தேவை நாணொன்று தேடல்எங் ஙனமோ
சிலைக்குநாண் எங்குதான் சென்றுபெற் றிடலாம்?
**அரக்கராம் விலங்கதன் நரம்புகள் எடுத்தான்
**பிசாசமாம் செடியதன் நாரிலே தொடுத்தான்.
வில்லின் வேலை விரைவாய் முடிந்தது
குறுக்குவில் நிறைவைக் கொண்டிட லானது 40
பார்வைக்கு வில்லும் பகட்டாய் இருந்தது
செலவுக்கு ஏற்பச் செம்மையாய்த் தெரிந்தது.
வில்லின் முதுகில் விறற்பரி** நின்றது
பரியின் குட்டியோ பாய்ந்தது அடியில்
சிலையின் வளைவிலே சேயிழை உறங்கினள்
பதுங்கியே முதுகில் படுத்திருந் ததுமுயல்.
கணைகளைக் கொஞ்சம் கவனமாய்ச் செய்தான்
அம்புகள் அனைத்திலும் அமைந்தமுச் சிறகுகள்
அடிப்புறம் சிந்துர மரத்தினால் ஆனது
முனைகள் **மரப்பிசி னாலே முடிந்தன 50
வாளிகள் இங்ஙனம் வடிவாய் முடிந்ததும்
கட்டினான் இறகுகள் கணைகளின் மீது
**தூக்கணங் குருவியின் தோகை கொஞ்சமாம்
**சிட்டுக் குருவியின் சிறகுகள் கொஞ்சமாம்.
வாளிகள் அனைத்தையும் வயிர மாக்கினான்
கணைகள் யாவையும் கடுங்கூ ராக்கினான்
ஊரும் பிராணியின் காரிருள் நஞ்சுடன்
உரகத்து நச்சு உதிரம் பூசினன்.
மொட்டையம் புகளை முழுத்தயா ராக்கினன்
வளைத்து இழுக்கவில் வலுதயா ரானது 60
வைனா மொயினனின் வழிபார்த் திருந்தான்
**அமைதிநீர் மனிதனை அங்கெதிர் பார்த்தான்
மாலையில் பார்த்தான் காலையில் பார்த்தான்
பார்த்தான் நண்பகல் நேரத் தொருமுறை.
பார்த்தான் வைனா மொயினனைப் பலகால்
பலகால் களைப்பே இன்றிப் பார்த்தான்
பலகணி யிருந்தும் பலதிசை பார்த்தான்
சின்னாள் இருந்தான் சிறுகுடிற் பின்புறம்
தெருவழி வந்தே செவிகொடு கேட்டான்
வயற்புறம் வந்து வறிதுகாத் திருந்தான் 70
முதுகினில் அம்புறைத் தூணிமொய்த் திருந்தது
நல்வில் தயாராய் நற்புயத் திருந்தது.
இன்னமும் இன்னமும் எதிர்பார்த் திருந்தான்
பக்கத்து வீட்டின் பக்கலில் நின்றான்
நின்றனன் மேட்டின் நிமிர்முடி யேறி
நின்றான் வளைவிலே நிலத்து முனையினில்
நின்றான் நுரைத்தநீர் வீழ்ச்சியின் அருகில்
நின்றான் புனித நதியின் கீழ்ப்புறம்.
பலநாள் கழிந்து ஒருநாள் நடந்தது
பலவிடி வகன்று ஒருவிடி வியன்றது 80
வடமேற் கவன்விழி வைத்தவே ளையிலே
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினன்
கரும்புள்ளி யொன்று கடலில் தெரிந்தது
நிமிர்நுரை திரைமேல் நீலமாய்த் தெரிந்தது;
"கிழக்கே தெரிவது கிளர்கார்க் கூட்டமா
வடகீழ்க் கரையிலே வருகதிர் உதயமா?"
கிழக்கே தெரிவது கிளர்கார் அல்லவே
வடகீழ்க் கரையிலே வருகதிர் அல்லவே
வந்தவன் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன் 90
விரிவட பால்நிலம் விரைந்து செல்பவன்
காரிருள் புவிக்குக் கடுகிச் செல்பவன்
**வழுது நிறப்பொலிப் புறவியிற் சென்றான்
பயற்றம் தண்டுப் பதநிறக் குதிரையில்.
பின்னர் இளைஞன் யொவுகா ஹைனன்
லாப்பு லாந்தின் இளைத்த இளைஞன்
செய்தனன் தயார்நிலை தீயுமிழ் வில்லினை
தேர்ந்து எடுத்தனன் சிறந்த கணையினை
வைனா மொயினனின் வன்தலை நோக்கி
அமைதிநீர் மனிதனை அழிப்பதற் காக. 100
விரைந்து வந்து வினவினள் அன்னை
விரைந்தாள் பெற்றவள் விசாரணை செய்தாள்:
"குறுக்கு வில்லதன் இலக்கு எவர்க்கு
இரும்பு வில்லினை எடுத்தது எதற்கு?"
அப்பொழு திளைஞன் யொவுகா ஹைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"குறுக்கு வில்லதன் இலக்கு அவனே
இரும்பு வில்லினை எடுத்ததும் இதற்கே
வைனா மொயினன் அவன்வன் தலைக்கு
அமைதிநீர் மனிதனை அழிப்பதற் காக; 110
முதிய வைனா மொயினனை எய்வேன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனை
இதயத் தூடாய் ஈரலின் ஊடாய்
தோள்தசை ஊடாய்த் துளைப்பதற் காக".
தாயார் எய்வதைத் தடுத்து நின்றனள்
இங்ஙனம் தடுத்தவள் இயம்பினள் மீண்டும்:
"வைனா மொயினனை வாளிகொண் டெய்யேல்
கலேவலா மனிதனைக் கனன்றுகொல் லாதே
வைனோ என்பவன் மாபெரும் உறவினன்
மைத்துனன் சோதரி மைந்தனே **யாவான். 120
வைனா மொயினனை வாளிகொண் டெய்தால்
கலேவலா மனிதனைக் கணையால் வீழ்த்தினால்
இன்பம் உலகத் திருந்தே ஒழியும்
பாடல்கள் அழியும் பாரினில் இருந்தே
இன்பமே உலகின் இணையற் றதுவாம்
பாடல்கள் பார்மிசைப் பயனுள தாகும்
**இறந்தோர் உலகில் இருப்பதைப் பார்க்கிலும்
**செத்தோர் உலகினில் செறிந்ததைப் பார்க்கிலும்."
அப்போ திளைஞன் யொவுகா ஹைனன்
சிறிது நேரம் சிந்தனை செய்தான் 130
கொஞ்ச நேரம் நின்றுயோ சித்தான்
செங்கரம் எய்தலைச் செய்யச் சொன்னது
ஒருகை எடுத்தது மறுகை தடுத்தது
உந்துதல் செய்தன உறுவிரல் நரம்புகள்.
முடிவினில் இவ்விதம் மொழியத் தொடங்கினன்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"தொல்லையில் இருதரம் தொலைந்தது போலவே
உலகில்எம் இன்பமே ஒழிந்து போகட்டும்
பாடல்கள் யாவும்இப் பாரைநீங் கட்டும்
எய்வது நிச்சயம் எய்தலைத் தவிரேன்." 140
பெரிதாய்ப் பயங்கரப் பேர்வில் வளைத்து
செப்பின் சிலையைச் சிறிதே இழுத்து
இடமுழங் காலில் எடுத்துமேல் வைத்து
வலது பாதத்தின் வலுவடித் தாங்கி
அம்புறு தூணியில் அம்பொன் றெடுத்தான்
பொற்சிறை மூன்று பொருந்திய கணையை
விரைந்து செல்லும் விறல்வெங் கணையை
கடுங்கூர் மிகுந்த கணையை எடுத்து
சிலையின் பள்ளம் திணிப்புற வைத்து
நாணுடன் கணையை நன்றாய்ச் சேர்த்தான். 150
பின்னர் பயங்கரப் பெருஞ்சிலை தூக்கி
வலது தோளில் வலுவுடன் வைத்து
வசதியாய் வில்லை வளைத்திட நின்றான்
வைனா மொயினனை வதைப்பதற் காக,
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மாய்ப்பாய், மிலாறு மரத்தின் முனையே!
தைப்பாய், தேவ தாருவின் தண்டே!
அறைவாய், பிசாசுச் செடியின் நாணே!
தழுவுமென் கரங்கள் தாழ்ந்தநே ரத்தில்
உறுசரம் எழுந்து உயர்ந்துபோ கட்டும், 160
உந்துமென் கரங்கள் உயர்ந்த வேளையில்
சரிந்து கணைகள் தாழ்ந்துபோ கட்டும்!"
விரல்களை வில்லின் விசையினில் வைத்தான்
அவனும் முதற்கணை அதனை ஏவினான்
உயரப் பறந்தெழுந் துடன்அது சென்றது
சிரசின் மேலே திகழ்வான் நோக்கி
முகிலை முட்டி மோதிச் சென்றது
சிதறிய முகிலில் சென்றதே சுழன்று.
அங்ஙனம் எய்தனன் அதுபணிந் திலதால்
இன்னொரு கணையை எடுத்துச் செலுத்தினன் 170
தாவிய கணைமிகத் தாழ்ந்தே சென்றது
கிளர்மண் தாயின் கீழாய்ச் சென்றது
அன்னை பூமியோ அழிவின் பக்கம்
பெருமண் மேடெலாம் பிளக்கப் பார்த்தன.
மீண்டும் எய்தனன் மூன்றாங் கணையை
மூன்றாம் தடவை முழுநேர்ப் பாய்ச்சல்
**நீல மாட்டின் தோளைத் துளைத்து
முதிய வைனா மொயினனின் கீழே;
வழுது நிறப்பொலிப் புரவியை எய்தான்
பயற்றம் தண்டுப் பதநிறக் குதிரையை 180
தோளின் கீழே தொடுதிசைப் பகுதி
இடது பக்கத்து இயல்முன் காலில்.
முதிய வைனா மொயினனப் போது
விரல்கள் தாழ்ந்து விரிபுனல் நனைய
கைகள் திரும்பி கடல்அலை தோய
முட்டி நுரையில் மூழ்கிட வீழ்ந்தான்
நீல மாட்டின் நிமிர்முது கிருந்து
பயற்றந் தண்டுப் பரிமிசை இருந்து.
அப்பொழு தொருபெரும் அடர்காற் றெழுந்தது
கடல்மிசைக் கொடியதோர் கருந்திரை யெழுந்தது 190
வைனா மொயினனை வளமாய்த் தாங்கி
கரையிருந் துதைத்துக் கடலுட் சென்றது
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்.
அத்துடன் இளைஞன் யொவுகா ஹைனன்
பெருமையாய் நாவை அசைத்துப் பேசினன்:
"ஓ,நீ இல்லை வைனா மொயினன்
ஒளிர்விழி யுடனே உயிரோ டில்லை
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் 200
வைனோ நிலத்து வன்பரப் பேகுவாய்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளி.
அங்கே ஆறு ஆண்டுகள் உழல்வாய்
அலைந்து உழல்வாய் அருமேழ் கோடைகள்
எட்டு ஆண்டுகள் இன்னலை அடைவாய்
அகன்று பரந்த அகல்நீர்ப் பரப்பில்
இந்த அகன்ற இருநீர்ப் பரப்பில்
ஆறு ஆண்டுகள் அலைவாய் மரம்போல்
தேவ தாருபோல் ஏழாண் டிருப்பாய்
எட்டாண் டிறுமரக் கட்டைபோல் ஆவாய்!" 210
அதற்கு பின்னர் அவன்இல் சென்றான்
அங்கே அன்னை அவனிடம் கேட்டாள்:
"வைனா மொயினனை எய்தது உண்டா
கலேவா மைந்தனைக் கொலைசெய் தாயா?"
நன்றென இளைஞன் யொவுகா ஹைனன்
மறுமொழி யாக வழங்கினன் ஒருசொல்:
"வைனா மொயினனை எய்ததும் உண்டு
கலேவா மனிதனைக் கவிழ்த்ததும் உண்டு
ஆழ்கடல் பெருக்க அவனை அனுப்பினேன்
அலைகளைக் கூட்ட அவனை அனுப்பினேன்; 220
திரைநுரை நிறைந்த திகழ்பெருங் கடலில்
அலையெழுந் தெறியும் ஆழக் கடலில்
முதியமா னிடன்தன் முழுவிரல் தாழ்த்தி
கரங்களைத் திருப்பிக் கடல்நீர் அமிழ்ந்து
பக்கமாய் நகர்ந்து புக்கினான் புதைந்தே
முதுகினில் தங்கி மூழ்கினான் ஆழம்
அலைகளின் மேலே உழலுவான் அங்கே
ஒதுங்குவான் அங்கே உயர்நுரைத் திரைகளில்."
ஆயினும் இவ்விதம் அன்னையும் சொன்னாள்:
"சிறுபே தாய்நீ செய்தது தீவினை 230
இங்ஙனம் வைனா மொயினனை எய்தது
வழங்கிய கலேவா மனிதனை அழித்தது
உயர்வுறும் அமைதிநீர் ஒருதனி மனிதனை
கலேவலா பெற்றநற் கவின்திறல் வீரனை."
பாடல் 7 - வைனாமொயினனும் லொவ்ஹியும் TOP
அடிகள் 1 - 88 : வைனாமொயினன் பல நாட்கள் கடலிலே மிதக்கிறான்.
அடிகள் 89 - 274 : முன்னொரு காலத்தில் வைனாமொயினன் காட்டை அழித்தபொழுது கழுகு வந்து அமர்வதற்காக ஒரு மரத்தை மட்டும் விட்டிருந்தான். நன்றியுள்ள அந்த கழுகு வைனாமொயினனைத் தனது சிறகில் சுமந்து சென்று வடநாட்டில் சேர்க்கிறது. வடநாட்டுத் தலைவி அவனைத் தனது வசிப்பிடத்துக்கு அழைத்துச் சென்று ஆறுதல் தருகிறாள்.
அடிகள் 275 - 322 : வைனாமொயினன் தனது சொந்த நாட்டுக்குச் செல்ல விரும்புகிறான். அவன் சம்போவைச் செய்து தந்தால், சொந்த நாட்டுக்கு அனுப்புவதோடு தனது மகளையும் விவாகம் செய்து தருவதாக வடநாட்டுத் தலைவி கூறுகிறாள்.
அடிகள் 323 - 368 : வைனாமொயினன் தான் சொந்த நாட்டுக்குச் சென்றதும் சம்போவைச் செய்வதற்குக் கொல்ல வேலைக் கலைஞன் இல்மரினனை அனுப்புவதாக வாக்களிக்கிறான். வடநாட்டுத் தலைவியிடம் ஒரு குதிரையையும் வண்டியையும் பெற்றுச் சொந்த நாட்டுக்குப் புறப்படுகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நீண்ட கடலிடை நீந்திச் சென்றனன்
உழுத்த மரமென உடலசைத் தேகினன்
திரிந்தனன் உழுத்த தேவதா(ரு) மரம்போல்
கோடையாம் காலக் கொளும்அறு நாட்களாய்
அடுத்து வந்தூர்ந்த ஆறு இரவுகள்
அவனுக்கு முன்னால் அகன்ற நீர்ப்பரப்பு
அவனின் பின்னே தெளிந்தநல் வானம்.
இரவுகள் மீண்டும் இரண்டு நீந்தினான்
நீந்தினான் இரண்டு நீண்ட பகலிலும் 10
நீந்தினான் ஒன்பதாம் நிசிபுலர் வரையிலும்
அவ்விதம் எட்டாம் அப்பகல் கழிந்ததும்
வந்ததே உடலின் வாதைகள் பெரிதாய்
வாதையும் வளர்ந்து வேதனை தந்தது
ஏனெனில் கால்களில் இல்லையாம் நகங்கள்
பொலிவுறு கைவிரற் பொருத்துகள் இல்லை.
முதிய வைனா மொயினன் பின்னர்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"துயரப் பிறவிநான் துர்ப்பாக் கியவான்
திணிவுறும் துன்பத் தீதுகொள் சென்மம் 20
உரிமைகொள் நாடகன் றொதுங்கிச் செல்கிறேன்
வாழ்ந்தநல் நாட்டினை வலுவில் இழக்கிறேன்
வாழ்நாள் முழுவதும் வானதன் கீழே
தினகரன் திங்களின் திறந்த வெளியிலே
வெங்கால் எங்ஙணும் விரட்டிய நிலையிலே
தொடுதிரை திரண்டு துரத்தும் தன்மையில்
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்;
குளிரில் விறைத்துக் கொடுகிக் கிடக்கிறேன்
விதிர்ப்பு வந்ததால் வியாகுலம் வந்தது 30
பொழுதெலாம் எறியும் பொங்கலை வசித்தலால்
தண்ணீர்ப் பரப்பிலே தவித்திருப் பதனால்.
எதுவும் தெரியவும் இல்லை எனக்கு
எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே
காலம் கரையும்இக் காலகட் டத்தில்.
காற்றிலே எனக்குக் கட்டவா ஓர்குடில்
வாரியில் எனக்கொரு வசிப்பிடம் அமைக்கவா?
காற்றிலே எனக்குக் கட்டினால் ஓர்குடில்
ஆதாரம் காற்றில் அதற்கென இல்லையே 40
வாரியில் எனக்கொர் வசிப்பிடம் அமைத்தால்
வாரியும் வீட்டை வாரிச் செல்லுமே."
லாப்பிருந்து ஒருபுள் எழுந்தூர்ந்து இவர்ந்தது
வடகிழக் கிருந்து வந்ததோர் கழுகு
அதன்அள வதுபெரி தானது மல்ல
ஆனால் அதுசிறி தானது மல்ல
ஒற்றை இறகதால் உளநீர் துடைத்தது
மற்றோர் இறகினால் வான்பெருக் கிற்று
பறவையின் வாலது பரவையில் தங்கிட
அலகது குன்றிலும் அதியுயர்ந் திருந்தது. 50
பறவை பறந்தது, பறவை கிளர்ந்தது
பார்த்துத் திரும்பிப் பறவை சுழன்றது;
பறவையும் வைனா மொயினனைப் பார்த்தது
நீல நிறத்து நீள்கடற் பரப்பில்:
"எதற்கு மனிதா இக்கடல் உள்ளாய்
வீரனே அலைகளில் மிதக்கிறாய் எதற்கு?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"கடலில்நான் வந்ததன் காரணம் இதுதான்
அலைகளின் நடுவே ஆடவன் வந்துளேன் 60
வந்தனன் தேடியே வடபுல வனிதையை
நாடினேன் நாரியை நனியிருட் பூமியில்.
விரைந்தே பயணம் மேற்கொள லானேன்
உருகா திருந்த ஒளிர்கட லதன்மேல்
பலபகற் பொழுதில் ஒருபகற் பொழுது
பலநாட் காலையில் ஒருநாட் காலை
**தொல்தீ வமைந்த துரவினை அடைந்தேன்
அழகிய **யொவுகா ஆற்றினை அடைந்தேன்
எனக்குக் கீழே எழிற்பரி எய்தனன்
எனக்கு விடுகணை ஏறிய ததன்மேல். 70
இங்ஙன மாய்நான் இருங்கடல் வீழ்ந்தேன்
விரல்கள் முன்னர் விழுந்தன அலையில்
காற்றுவந் தென்னை கடத்திச் சென்றது
அலைகள் எழுந்தெனை அடித்துச் சென்றன.
வடமேற் கிருந்தொரு வாடை வந்தது
கிழக்கிருந் தொருபெருங் கிளர்காற் றூர்ந்தது
வாடை இழுத்து வலுதொலை சென்றது
கரையிலே இருந்து காற்றெடுத் தூர்ந்தது;
பற்பல பகலெலாம் படுபோ ராடினேன்
நீந்திநான் சென்றேன் நெடுநிசி பற்பல 80
இந்த அகன்ற இருநீர்ப் பரப்பிலே
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்;
எதுவும் தெரியவே யில்லை எனக்கு
சிந்தனை யில்லைத் தெளிவுமே யில்லை
இறுதியில் எங்ஙனம் இறப்பேன் என்று
எவ்வகை மரணம் எனக்குறு மென்று
வளர்பசி எனக்கு மரணம் தருமோ
அல்லது கடலில் ஆழ்வதால் வருமோ?"
காற்றினைச் சேர்ந்த கழுகு சொன்னது:
"வளர்வே தனையால் வருந்துதல் வேண்டாம் 90
எழுந்திரு எழுந்தென் இகல்முது கமர்வாய்
எழுந்திரு இறகின் இயல்முனை யமர்வாய்
கடலிருந் துன்னைக் கடிதுகொண் டூர்வேன்
உன்மனத் துள்ள உறைவிடம் செல்வேன்
இன்னமும் அந்நாள் என்நினை வுளது
இனியஅந் நாட்களை இன்னும் நினைக்கிறேன்
கலேவலாக் காடுகள் கடிதுநீ அழித்துழி
ஒஸ்மோ நிலவனம் ஒருங்குநீ வெட்டுழி
மிலாறெனும் ஒருமரம் விட்டாய் வளர
அழகிய ஒருமரம் ஆங்குற விடுத்தாய் 100
பறவைகள் வந்து பாங்குறத் தங்க
நானே வந்து நன்றாய் அமர."
முதிய வைனா மொயினன் பின்னர்
தண்ணீ ரிருந்து தலையைத் தூக்கினன்
மாகட லிருந்து மனிதன் எழுந்தனன்
விரிதிரை யிருந்த வீரன் உயர்ந்தான்
சிறகுகள் மீது ஏறி யமர்ந்தான்
கழுகதன் இறகின் கவின்முனை யமர்ந்தான்.
காற்றின் பறவைஅக் கழுகதன் பின்னர்
முதிய வைனா மொயினனைச் சுமந்து 110
தூக்கிச் சென்றது தொடர்வாய்வு இடையே
பவனப் பாதையில் பறந்து சென்றது
எழில்வட பால்நிலத் தெல்லையை நோக்கி
புகார்படி *சரியொலாப் புகுநிலப் பரப்பில்;
வைனா மொயினனை மகிழ்ந்தாங் கிறக்கி
விண்ணில் ஏறி விரைந்து மறைந்தது.
அங்கே வைனா மொயினன் அழுதனன்
அங்கே அவனும் அழுது புலம்பினன்
கடலின் விரிந்த கரையதில் நின்று
அறிபெயர் தெரியா அவ்விடத் திருந்து 120
நுறுகா யங்கள் நொந்தரு கிருந்தன
ஆயிரம் புயல்கள் அடித்து வீசின
அசிங்கமாய்த் தாடியும் அமைந்தாங் கிருந்தது
சிகையும் சேர்ந்து சிக்கலாய் இருந்தது.
இரண்டு மூன்று இரவுகள் அழுதான்
அழுதான் பகலின் அத்தனை பொழுதிலும்
போக்கிடம் எதுவெனப் புலப்பட வில்லை
அன்னிய னாதலின் அவன்வழி தெரிந்திலன்
வீட்டினை நோக்கி மீண்டும் சென்றிட
பழகிய இடங்களைப் பார்த்துச் செல்ல 130
பிறந்த இடத்தை அறிந்தவன் செல்ல
வாழ்ந்தநாட் டிற்கு மறுபடி செல்ல.
வடபுலம் சார்ந்த வளர்சிறு **நங்கை
வெண்மை நிறத்து மெல்லியள் ஒருத்தி
உயர்கதி ரோடொரு உடன்பா டுற்றவள்
தினகர னோடும் திகழ்மதி யோடும்
ஒன்றாய் இவைகள் உதிப்பது என்றும்
ஒன்றாய் இவைகள் எழுவது என்றும்
இவைகளின் முன்னர் எழுந்திருப் பவளவள்
சூரிய சந்திரர் தோன்றிடு முன்னர் 140
சேவற் கோழியின் கூவலின் முன்னர்
கோழிக் குஞ்சுதன் பாடலின் முன்னர்.
ஆட்டுரோ மங்கள் ஐந்தை எடுப்பாள்
ஆடுகள் ஆறிருந் தவற்றை எடுப்பாள்
இணைப்பாள் ரோமம் இயல்கைத் தறியில்
அவற்றில் ஆடைகள் அழகுற நெய்வாள்
ஆதவன் உதயம் ஆவதன் முன்னர்
வண்ணநற் கதிரொளி வருவதன் முன்னர்.
மேலும் அடுத்துநீள் மேசையைக் கழுவி
படர்ந்த நிலத்துப் பரப்பினைப் பெருக்குவள் 150
சிறுசிறு குச்சியில் செய்ததூ ரிகையால்
இலைதழை கட்டிய இயைதுடைப் பத்தால்;
குப்பைகள் யாவையும் கூட்டி யெடுத்து
செப்பினாற் செய்த பெட்டியிற் சேர்த்து
கதவம் வழியே கடிதெடுத் தேகினள்
முன்றிற் பக்க முதுதோட் டத்திட
தோட்டத் தாங்கே தூரத் தொலைவில்
வேலியோ ரத்து வெட்ட வெளியினில்;
குப்பைமே டதிலே சற்றுநிற் கையிலே
என்னவோ கேட்டது பின்னாய்த் திரும்பினள் 160
அழுகுரல் கேட்டது ஆழியில் இருந்து
ஆற்றினூ டாகவும் அக்குரல் கேட்டது.
ஓடி நடந்து உடன்மீண் டேகினள்
விரைந்தவள் நின்றாள் வீட்டின் கூடம்
நின்றவள் வெளியே நேர்ந்ததைக் கூறினள்
சென்றதும் அவ்விடம் செப்பினள் இங்ஙனம்:
"ஆழியில் இருந்தோர் அழுகுரல் கேட்டேன்
ஆற்றினூ டாகவும் அக்குரல் கேட்டேன்."
*லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண் 170
விரைந்துதோட் டத்து வெளிக்குச் சென்றனள்
வந்து வேலியின் வாயிலில் நின்றனள்;
காதைக் கொடுத்துக் கவனமாய்க் கேட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இதுவோ குழந்தையின் அழுகைபோ லில்லை
பூவையர் புலம்பல் போலவும் இல்லை
தாடி வைத்த தலைவனின் அழுகை
தாடையில் தாடி தரித்தவர் அழுகை."
நீள்பட கொன்றினை நீரிலே தள்ளினள்
அலையில்முப் பலகையின் படகைத் தள்ளினள் 180
தோணியை வலிக்கத் தொடங்கினள் தானே
வலித்து வலித்து விரைந்துமுன் னேறினள்
அடைந்தாள் வைனா மொயினனின் அருகை
புலம்பிய தலைவன் புக்கிடம் போயினள்.
வைனா மெயினன் வறிதாங் கழுதான்
அமைதிநீர் மனிதன் அங்கே புலம்பினன்
அலரிக் கொடுஞ்செடி அமைபுனல் ஓரம்
**சிறுபழச் செடியதன் குறுபுதர்ப் பக்கம்.
தாடி தளர்ந்தது தனிவாய் அசைந்தது
தாடையோ சற்றும் தளர்ந்தசைந் திலது. 190
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
பின்வரு மாறுபேச் சுரை யாடினாள்:
"ஓ,நீ, அதிட்டம் ஒன்றிலா முதியோய்!
அன்னிய நாட்டில் அமர்ந்தீங் குள்ளாய்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தலையை தூக்கிச் சற்றுமேற் பார்த்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போழு தியானே இதுதெரிந் துணர்வேன்
அன்னிய நாட்டிலே அமர்ந்திருக் கின்றேன்
சிறிதும் முன்னர் அறியா இடம்தான் 200
நான்சொந்த நாட்டில் நற்சீ ருற்றவன்
சொந்தவீட் டில்நான் தொல்சிறப் புற்றவன்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஒன்றையிப் போது உனக்குச் சொல்லவா
உன்னிடம் கேட்க உண்டா அனுமதி
எந்த இனத்தை இயைந்தவன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 210
"நன்று, எனையே நன்றாய் அறிவார்,
முன்னொரு நாளில் முழுப்புகழ் உற்றவன்
மாலை வேளையில் மகிழ்வோ டிருப்பவன்
எல்லா இடத்திலும் இனியபா டகனாய்
வைனோ என்னும் வளமுறு றாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்
ஆயின்இன் றெவ்வள வாகநான் தாழ்ந்தேன்
எனக்கே தெரிந்தில தென்னை யாரென்று."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 220
"இரும்சே றகன்று எழுவாய் மனிதா
தேடுக விறலோய் செழும்புதுப் பாதை
புகலுக நினக்குப் புணர்துன் பத்தை
நடந்த கதையை நயம்படக் கூறு."
அழுகையை இங்ஙனம் அவள்புகன் றடக்கினள்
வீரனின் புலம்பலிவ் விதம்தடுத் தகற்றினள்
தன்னுடைத் தோணியில் தான்கொணர்ந் தேற்றினள்
தோணியின் தட்டிலே துணிந்திருப் பாட்டினள்
துடுப்பினைத் தானெடுத் துறுபுன லிட்டனள்
வளமதாய் அமர்ந்தவள் வலிக்கவும் தொடங்கினள் 230
வடபுல நிலமிசை மற்றவள் சென்றனள்
அன்னியன் தன்னையே அகத்திடைச் சேர்த்தனள்.
அவன்பசிக் குணவினை அமைவுறக் கொடுத்தனள்
நனைந்த அம்மனிதனை நன்குலர் வாக்கினள்
நீள்பொழு தவனுடல் நிலைபெறத் தேய்த்தனள்
உடலினைத் தேய்த்து உயர்சூ டேற்றினள்
மனிதனை மீண்டும்நல் வயநிலைக் காக்கினள்
வீரனை மேலும் சீருறச் செய்தனள்
விசாரணை செய்தாள் விரிவாய்க் கேட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 240
"வைனா மொயினனே மனமடி வெதற்கு
*அமைதிநீர் மனிதனே அழுதது எதற்கு
இன்னல் நிறைந்தவவ் விகல்தீ திடத்திலே
கடலினோ ரத்துக் கரையதன் மேலே?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஏங்கி யழவெனக் கேதுக் கள்ளுள
கவலைப் படற்குக் காரணம் உண்டு
நெடும்பொழு தாழியில் நீந்தித் திரிந்தேன்
எற்றலை நடுவே எறிபட் டுழன்றேன் 250
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்.
இதற்காய் வாழ்நாள் எல்லாம் அழுவேன்
வாழ்க்கை முழுவதும் மனமடி வுறுவேன்
சொந்தநா டகன்று தொடர்ந்து நீந்தினேன்
பழகிய இடமாம் பதிபிரிந் தெழுந்தேன்
முன்னறி யாதஇம் முதுமுன் வழிக்கு
அன்னிய மானஇவ் வருவா யிலுக்கு;
இங்குள்ள மரங்கள் எனைக்கடிக் கின்றன
தாருவின் குச்சிகள் தாம்அடிக் கின்றன 260
மிலாறுவின் தடிகள் மிகவறை கின்றன
இன்னொன் றின்னலை எடுத்தளிக் கின்றது;
பயில்கால் மட்டுமே பழக்கப் பட்டது
கதிரையும் முன்னர் கண்ட துண்டுயான்
அன்னிய மானஇவ் வகல்நாட் டினிலே
பழக்கப் படாதஇப் படர்புது வாயிலில்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்:
"வைனா மொயினா, வறிதழ வேண்டாம்!
அமைதிநீர் மனிதா, அழுதிரங் கிடற்க! 270
இங்கு நீ வந்தது இனியநற் செய்கை
தரிப்பது இங்குநீ தரமிகும் செய்கை
உண்ணலாம் தட்டிலே உயர்வஞ் சிரமீன்
அத்துடன் பன்றி இறைச்சியை அயிரலாம்."
முதிய வைனா மொயினன் பின்னர்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னிய உணவில் ஆக்கமே இல்லை
சிறப்பாக இருப்பினும் பிறிதொரு வீட்டில்.
சிறப்புமா னிடர்க்குத் திகழ்தாய் நாடே
உயர்வா யிருக்கும் உரியவீ டதுதான்; 280
இரக்கமிக் கிறையே, இரங்குவாய் எனக்கு!
கருணையின் கர்த்தா, கதிதா எனக்கு!
சொந்தநா டடையத் தூயோய், அருள்வாய்!
நான்வாழ்ந் திருந்த நாட்டையந் நாட்டை!
உரியநாட் டிருப்பதே உயரிய **சிறப்பு
மிலாறுக் காலணி மிதிதட நீரு(ண்)ணல்
அன்னிய தேசத் தந்நாட் டருந்தும்
தேங்குபொற் குவளைத் தேனதைக் காட்டிலும்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்; 290
"அப்படி யாஎனக் களிப்பது யாதுநீ
உடையநா டதையே அடையச் செய்திடில்
வயல்உன் னுடையதில் வாழ்ந்திடச் செய்தால்
நின்சவு னாவை நீபெறச் செய்தால்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"என்னப்பா கேட்கிறாய் என்னிட மிருந்து
என்றன் நாட்டுக் கெனையனுப் புதற்கு
சொந்த வயல்களில் நன்குசேர்ப் பதற்கு
கொஞ்சுமென் குயிலின் கூவலைக் கேட்க
சொந்தப் பறவையின் சிந்தினைக் கேட்க 300
தொப்பிகொள் பொற்பண மிப்போ தேற்பையா
தொப்பி நிறைந்திடும் பற்பல வெள்ளிகள்."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்;
"ஓ,உயர் ஞான வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
கிளர்பொற் காசுநான் கேட்கவு மில்லை
வெள்ளிகள் எனக்கு வேண்டிய தில்லை.
பொற்பணம் சிறுவரின் பொருள்விளை யாட்டில்
வெள்ளியும் புரவியின் வெறும் அலங்காரம் 310
*சம்போவை உன்னால் சமைக்க முடிந்தால்
**முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்தால்
அன்னத் தோகையின் அணிமுனை யிருந்து
மலட்டு மாட்டின் மடிப்பா லிருந்து
ஒற்றைப் பார்லி ஒளிர்மணி யிருந்து
ஒற்றை ஆட்டின் உரோமத் திருந்து
அப்போ துனக்கோர் அரிவையைத் தருவேன்
ஊதிய மாயோர் உயர்மகள் தருவேன்
சொந்த நாட்டைநீ சார்ந்திடச் செய்வேன்
உன்றன் பறவையின் உயர்குரல் கேட்க 320
சொந்தக் குயிலின் தொல்லிசை கேட்க
மீண்டும் உனது மிளிர்வயல் வெளியில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"சம்போ எனக்குச் சமைக்க இயலா
அவிரொளி மூடியை அடிப்பதும் அரிது
ஆயினும் சொந்தநா டதில்எனைச் சேர்ப்பாய்
இங்ஙனுப் பிடுவேன் கொல்லன்*இல் மரினனை
அவன் சம்போவை ஆக்குவான் உனக்கு
அவிரொளி மூடியை அமைப்பான் உனக்கு 330
உன்றன் பெண்ணை உவகைப் படுத்த
உன்றன் மகளின் உளமகிழ் விக்க.
"அவனொரு கைவினை யாளன்நற் கொல்லன்
கலைத்திறன் படைத்த கைவினைக் கலைஞன்
விண்ணைச் செய்த வினைவலான் அவனே
அவனே சுவர்க்க மூடியை அடித்தோன்
ஆயினும் சுத்தியல் அடிச்சுவ டில்லை
கருவிகள் படுத்திய கறைஅதில் இல்லை.
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 340
"அவனுக் களிப்பேன் அரியஎன் மகளை
எனதுபெண் அவனுக் கென்றே யுரைப்பேன்
அரிய சம்போவை அமைப்பவ னுக்கு
அவிரொளி மூடியை அடிப்பவ னுக்கு
அன்னத் தோகையின் அணிமுனை யிருந்து
மலட்டு மாட்டின் மடிப்பா லிருந்து
ஒற்றைப் பார்லி ஒளிர்மணி யிருந்து
ஒற்றை ஆட்டின் உரோமத் திருந்து."
படர்ஏற் காலில் பரியினைப் பூட்டினள்
மண்ணிறப் புரவியை வண்டியின் கட்டினள் 350
முதிய வைனா மொயினனை ஏற்றினள்
அவனைப் பொலிப்பரி வண்டியில் அமர்த்தினள்
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"உயரத் தலையை உயர்த்தலும் வேண்டாம்
உயர்த்திப் பார்த்தலும் வேண்டாம் உச்சியை.
பொலிப்பரி சிறிதும் களைக்கா திருந்தால்
மாலை வேளையும் வராது இருந்தால்;
உயரத் தலையை உயர்த்துதல் செய்தால்
உயர்த்தி உச்சியை நோக்குதல் செய்தால் 360
அழிவு வந்தே அடைந்திடும் உன்னை
தீய காலமும் தேடியே வந்திடும்."
முதிய வைனா மொயினன் பின்னர்
உயர்பரி அடித்து ஓடச் செய்தனன்
விரையச் செய்தனன் பிடர்மயிர்ப் புரவி
ஒலியெழும் பயணம் பொலிவுறச் செய்தனன்
நீளிருள் வடபால் நிலத்திடை யிருந்து
மருண்ட சரியோலா மண்ணிடை யிருந்து.
பாடல் 8 - வைனாமொயினனின் காயம் TOP
அடிகள் 1 - 50 : பயணத்தின் போது வழியில் வைனாமொயினன் அழகாக உடையணிந்த வடநில மங்கையைக் கண்டு தனக்கு மனைவியாகும்படி கேட்கிறான்.
அடிகள் 51 - 132 : கடைசியில் வடநில மங்கை தனது தறிச் சட்டத்தில் சிந்திய துகள்களில் ஒரு தோணியைச் செய்து அதைத் தொடாமல் நீரில் விட்டால் அவனுடைய விருப்பத்திற்கு இணங்குவதாகக் கூறுகிறாள்.
அடிகள் 133 - 204 : வைனாமொயினன் தோணியைச் செய்யும் பொழுது, கோடரி முழங்காலில் தாக்கியதால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கை நிறுத்த முடியவில்லை.
அடிகள் 205 - 282 : வைனாமொயினன் இரத்தப் பெருக்கை நிறுத்தப் பரிகாரம் தேடிப் புறப்பட்டு, இரத்தப் பெருக்கை நிறுத்துவதாகக் கூறும் ஒரு முதியவனைச் சந்திக்கிறான்.
வனப்புறும் வனிதை **வடபுல நங்கை
நிலத்திடைக் கீர்த்தி நீரிலும் சிறந்தோள்
வானத்து வளைவில் வனப்பா யிருந்தாள்
விண்ணக வில்லின் மின்னலா யொளிர்ந்தாள்
தூயநல் லாடை சுத்தமா யணிந்து
வெண்ணிற உடையில் வண்ணமா யிருந்தாள்.
பொன்னிழை ஆடையைப் பின்னி யெடுக்கிறாள்
வெள்ளியில் சோடனை வேலைகள் செய்கிறாள்
தங்கத் தானது தறியில்நெய் கருவி
வெள்ளியில் ஆனது நல்லச் சுக்கோல். 10
அவளது பிடியிலே அசைந்தது கருவி
சுழன்றது அச்சவள் சுந்தரக் கரத்தில்
செப்பின் சட்டம் சத்தம் எழுப்பின
வெள்ளியின் அச்சிலே மிகுஒலி எழுந்தது
ஆடையை நங்கையும் அழகுற நெய்கையில்
ஆடையை வெள்ளியில் ஆக்கிய போதினில்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
செய்தான் பயணம் திகழுதன் வழியில்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
புகார்படி சரியொலாப் புகுநிலத் திருந்து. 20
சிறுதொலை பயணம் செய்தவப் பொழுது
கொஞ்சத் தூரம் குறுகிய நேரம்
கைத்தறி அசைந்த காற்றொலி கேட்டது
உயரத் தலைமேல் ஒலியது கேட்டது.
அப்போ தலையை அவன்மேல் தூக்கினன்
படர்வான் நோக்கிப் பார்வையை விட்டனன்:
வானத் தொருவில் வனப்பா யிருந்தது
வில்லில் இருந்தனள் மெல்லியள் ஒருத்தி
ஆடைகள் செய்கிறாள் அவள்தங் கத்தில்
வெள்ளியில் ஓசை விளைக்கிறாள் அவளும். 30
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிறுத்தினன் பரியை நேராய் அக்கணம்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"வருவாய் பெண்ணே எனதுவண் டிக்கு
எனது வண்டியுள் இறங்கி வருவாய்."
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
இவ்விதம் அவளே இயம்பிக் கேட்டனள்:
"வனிதை உனது வண்டியில் எதற்கு
வண்டியுள் வனிதை வருவது எதற்கு?" 40
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நன்று என்று நயமாய்ச் சொன்னான்:
"வனிதை எனது வண்டியில் இதற்கே
வண்டியுள் வனிதை வருவதும் இதற்கே
தேனில் ரொட்டிகள் செய்வதற் காக
பானம் வடிப்பதை பார்லியில் அறிய
இருக்கையில் அமர்ந்து இசைப்பதற் காக
சாளர வாயிலில் தனிமகிழ் வடைய
வைனோ நாட்டின் வளர்கா வெளிகளில்
கலேவலா வென்னும் கவின்பெரு விடங்களில்." 50
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"நான்புற் படுக்கையில் நடந்த பொழுதிலே
மஞ்சள் புற்றரைப் பவனியில் வந்துழி
நேரம் கடந்த நேற்றைய மாலையில்
தகிகதிர் வானில் சாய்ந்துசெல் பொழுதில்
சோலையில் இருந்தொரு தூயபுள் இசைத்தது
எழில்வயற் **பறவையின் இன்னிசை மாந்தினேன்
மகளிரின் வயமெழு மனவுணர் விசைத்தது
எழில்மரு மகள்மன இயல்புமாங் கிசைத்ததே. 60
பறவையை நோக்கிப் படிநின் றுரைத்தேன்
பின்வரும் வார்த்தையில் பிறிதொன் றுசாவினேன்:
'பறவையே, பறவையே, சிறுவயற் பறவையே!
பாடுவாய் செவிகளில் பாடலைக் கேட்க:
இரண்டிலே சிறந்தது எதுவெனப் புகல்வாய்
உயர்வெவர் வாழ்வென ஒருமொழி சொல்வாய்
தந்தையர் இல்லிடைத் தையலர் வாழ்க்கையா
கணவரின் வீட்டகக் காரிகை வாழ்க்கையா?'
சிறியபுள் ஆங்கே சீருறும் சொல்லில்
தண்வயற் பறவையும் தந்ததோர் விளக்கம்: 70
'வேனிற் பொழுதெலாம் மிகமிக ஒளிரும்
அதைவிட ஒளிரும் அரிவையின் இயல்பு;
உறைபனி இரும்பு உறுகுளி ரடையும்
மருமகள் நிலைமையோ மற்றதிற் **குளிராம்;
தந்தையார் வீட்டில் தரிக்கும் தையலோ
நன்னிலம் தந்த நற்சிறு பழமாம்;
மணப்பவன் வீட்டில் மருமகள் என்பவள்
சங்கிலி பூட்டிய தனிநாய் போன்றவள்;
அடிமைக் கின்பம் அரிதாய் வந்துறும்
என்றும் மருமகட் கில்லையிந் நிலையே.' " 80
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பறவை சொன்னது பயனிலாக் கூற்று
வயற்புட் கூற்று வாய்வழிக் கத்தல்
வீட்டிலே மகளிர் வெறுங்குழந் தைகளாம்
மங்கையாய் மலர்வது மணம்பெறும் போதே
வருவாய் எனது வண்டியில் மங்காய்
எனது வண்டியுள் இறங்கிநீ வருவாய்
மதிப்பே யற்ற மனித னல்லயான்
ஏனைய வீரர்க் கிளைத்தவ னல்லயான்." 90
கூறினள் காரிகை கூர்மையாய் ஒருமொழி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உனையொரு மனிதனென் றுரைத்திடு வன்யான்
நாயகன் என்று நானுனை மதிப்பேன்
கிளர்பரி மயிரைநீ கிழிக்க முடியுமா
முழுக்கூர் மையிலா மொட்டைக் கத்தியால்
முடிச்சு ஒன்றினுள் முட்டைவைப் பாயா
பார்த்தால் முடிச்சுப் பாங்குதோன் றாமால்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கிளர்பரி மயிரைக் கிழித்துக் காட்டினன் 100
முழுக்கூர் மையிலா மொட்டைக் கத்தியால்
முற்றிலும் முனையிலா மொட்டைக் கத்தியால்;
முடிச்சு ஒன்றினுள் முட்டையை வைத்தனன்
பார்க்க முடிச்சுப் பாங்குதோன் றாமால்.
வனிதையை வண்டியுள் வருமா றியம்பினன்
தனது வண்டியுள் தையலை யழைத்தான்.
கூறினள் காரிகை கூர்மையாய் ஒருமொழி:
"நன்று உன்னிடம் நான்வரு வேன்எனின்
கல்லதன் தோலைக் கடிதுரித் தெடுத்தால்
கம்பங் கள்பனிக் கட்டியில் வெட்டினால் 110
சிறுதுண் டேனும் சிதறி விடாமல்
சிறுநுண் துகளும் சிந்துதல் இன்றி."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிறிது கூடச் சிரமமில் லாமல்
கல்லின் தோலை கடிதுரித் தெடுத்தான்
கம்பங் கள்பனிக் கட்டியில் வெட்டினான்
சிறுதுண் டேனும் சிதறி விடாமல்
சிறுநுண் துகளும் சிந்தி விடாமல்.
வனிதையை வண்டியுள் வருமா றுரைத்தான்
தனதுவண் டியுனுள் தையலை அழைத்தான். 120
கூறினள் காரிகை கூர்மையாய் ஒருமொழி
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்:
"நன்றுநான் எவனை நாடுவேன் தெரியுமோ?
எனக்கொரு படகை இயற்றுவோன் தன்னை,
என்தறி மரத்தில் இழிந்த துகள்களில்
தறியின் சட்டத் துண்டுகள் தம்மில்,
படகை நீரிற் படுத்துவோன் தன்னை
புதுப்பட கலையிற் புணர்த்துவோன் தன்னை,
முழங்கால் படகில் முட்டுதல் கூடா
படகில் முட்டிகள் படுதலும் கூடா 130
திகழ்புயம் எங்ஙணும் திரும்புதல் கூடா
வயத்தோள் முன்னே வருதலும் கூடா."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இல்லையெந் நாட்டும் இல்லையெப் புவியும்
இவ்வா னின்கீழ் எங்ஙணும் இல்லை
படகைக் கட்டும் பணித்திறன் உள்ளோன்
என்னைப் போலொரு எழிற்பட கமைப்போன்."
தறிமரம் சிந்திய தனித்துகள் எடுத்தான்
பகுதறிச் சட்டப் பலகைகள் சேர்த்தான் 140
படகு ஒன்றினைப் படைக்கத் தொடங்கினான்
பலகைகள் நுறு பதிக்கும் படகினை
உருக்கினால் ஆன உயர்மலை முடியில்
இரும்பினால் ஆன இகல்மலை முனையில்.
திறனாய்ச் செய்தான் செறிபட கொன்று
பலகையால் மாண்பொடு படகைச் செய்தான்
கட்டினான் முதல்நாள் கட்டினான் மறுநாள்
கட்டினான் மூன்றாம் நாளும் கடுகதி
முதுமலை கோடரி முட்டிய தில்லை
தொல்குன் றலகு தொட்டது மில்லை. 150
மூன்றா வதுநாள் முடிந்த வேளையில்
கோடரிப் பிடியைக் **கூளி அசைத்தது
**அலகை கோடரி அலகை இழுத்தது
கொடிய சக்தியால் பிடிவழு வியது:
பாறையிற் கோடரி பட்டுத் தெறித்தது
கூர்முனை தவறிக் குன்றிற் பாய்ந்தது
பாறையில் பட்ட கோடரி திரும்பி
புகுந்தது தசையில் புதைந்து கொண்டது
இளைஞன் முழங்கால் இரிந்துட் சென்றது
வைனா மொயினன் வன்கால் விரலுள்; 160
அவனது தசைக்குள் **அலகை அறைந்தது
புதைந்தது **பிசாசு புணர்நரம் பூடே
சோரி பொங்கிச் சுரந்து வழிந்தது
நீரூற் றெனவே நில்லா திழிந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
உரைத்தே இவ்விதம் உரைசெய லாயினன்:
"அலகு வளைந்த அடர்கோ டரியே
கோடரி யதனின் கூரிய அலகே 170
மரத்தை மோதி விழுத்தும் நினைப்போ
**ஊசி மரத்தை யழிக்கும் உன்னலோ
தேவ தாருவைச் சிதைப்பதாய்க் கருத்தோ
பெரும்பூர்ச் சமரம் பிளப்பதாய் உணர்வோ
எனது தசைக்குள் ஏறிய வேளையில்
எனது நரம்பினுள் இறங்கிய போதினில்?"
மந்திரச் சொற்களை வழங்கத் தொடங்கினான்
மனத்திலே உன்னி மந்திரம் கூறினான்
மூலமாம் மொழிகளை ஆழமாய்க் கூறினான்
ஓதினான் அடுக்காய் ஒழுங்காய் உரைத்தான் 180
ஆயினும் நெஞ்சில் அவையிலா தொழிந்தன
இரும்புமூ லத்தின் சிறந்தநற் சொற்கள்,
சட்டமாய் நின்று கட்டும் திறத்தன
வன்பூட் டாகும் மந்திரச் சொற்கள்,
இரும்பினா லான இரணம் காக்க
நீலவாய் அலகின் காயம் போக்க.
குருதி நதிபோற் குமுறிப் பாய்ந்தது
நீள்நுரை ததும்பிநீர் வீழ்ச்சிபோல் வந்தது;
பழச்செடி தரையில் படிந்திடப் பாய்ந்தது
புற்றரைச் செடிகளில் பற்றையில் பாய்ந்தது 190
ஆங்குமண் மேடெதும் **அமைந்திட வில்லை
முகிழும் சோரிநீர் மூழ்கா நிலையில்
தடையில் குருதியில் தாழா நிலையில்
வருபுனல் ஆறென வழிந்தசெங் குருதி
முதுபுகழ் வீரன் முழங்கா லிருந்து
வைனா மொயினன் வன்கால் விரலால்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பாறை யிருந்துசில் பாசிகள் பிடுங்கி
பாசிகள் சதுப்புப் படிவிலும் சேர்த்து
மண்ணிலே யுளமண் மேட்டிலும் எடுத்தான் 200
அகல்குரு திப்பொந் தடைப்பதற் கெண்ணி
தீயதாம் சக்தியின் வாயிலை மூட;
ஆயினும் பயனெதும் அதனால் இலது
சிறிதும் அச்செயல் சித்தித் திலது.
வருத்தம் வளர்ந்து வாதையைத் தந்தது
துன்பம் தொடர்ந்து தொந்தர வானது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கண்ணீர் விட்டுக் கதறிய ழுதான்;
புரவியைச் சேணம் பூட்டினன் பின்னர்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது 210
வண்டியில் தானே வலுவிரை வேறினன்
அமர்ந்து கொண்டனன் அவ்வண் டியினுள்.
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சாட்டை வான்பரி அறைந்தான்
பறந்தது புரவி பயணம் விரைந்தது
வண்டி உருண்டது வருதொலை குறைந்தது.
காணவோர் சிற்றூர் கண்ணில் தெரிந்தது
மூன்று தெருவின்முற் சந்தியும் வந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வருதாழ் தெருவில் வண்டியைச் செலுத்தினன் 220
தாழ்ந்த தெருவின் தாழ்ந்தவீட் டுக்கு.
இல்ல வாயிலில் இவ்வா றுசாவினன்:
"இந்த வீட்டிலே எவரெனு முளரோ
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
வீரன் அடைந்த வெந்துயர் மாற்ற
இன்னலை யாக்கும் இரணம் போக்க?"
ஆங்கொரு குழந்தை அகலத் திருந்தது
அடுப்பின் அருகில் அமர்ந்தொரு சிறுவன்
இவ்வுரை யப்போ திவ்வித மொழிந்தான்:
"இந்த வீட்டிலே எவருமே யில்லை 230
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
வீரன் அடைந்த வெந்துயர் மாற்ற
காயத்தால் வந்த கடுநோ தீர்க்க
இன்னலை ஆக்கும் இரணம் போக்க;
அடுத்த வீட்டில் ஆரும் இருப்பர்
அங்ஙனம் செல்வாய் அடுத்தவீட் டுக்கு."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சவுக்கைச் சுழற்றி சாடினன் பரியை
திரும்பி வண்டி சென்றது பறந்தது.
தூரம் சிறிது தொலைந்தபின் அங்ஙனம் 240
வந்தது ஒருதெரு வழியின் மத்தியில்
வீதியின் மத்தியில் வீடொன் றிருந்தது.
வந்தில் வாயிலில் வருமா றுசாவினன்
இரந்தவன் கேட்டான் இற்பல கணிவழி:
"இந்த வீட்டில் எவரெனு முளரோ
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
இரத்த மழையைத் தடுத்து நிறுத்த
அறுநரம் பதிலொழு கருவியைத் தடுக்க?"
முதிர்ந்தபெண் ஒருத்தி முழுநீள் அங்கியில்
அடுக்களை மணையில் அமர்ந்தே உளறுவாய் 250
வயதுறும் மாது வருமா றுரைத்தாள்
மூன்றுபல் தெரிய மொழிந்தனள் ஆங்கு:
"இந்த வீட்டிலே எவருமே யில்லை
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
செந்நீர் மூலம் தெரிந்தவ ரில்லை
காயத் தால்வரு கடுநோ தீர்க்க
அடுத்த வீட்டில் ஆரும் இருப்பர்
அங்ஙனம் செல்வாய் அடுத்தவீட் டுக்கு."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சவுக்கைச் சுழற்றி சாடினன் பரியை 260
திரும்பி வண்டி சென்றது பறந்தது.
தூரம் சிறிது தொலைந்தபின் அங்ஙனம்
பாதையின் உயரம் படியுயர் வீதி
வீடுகள் நடுவண் மிகவுயர் வீடு
வந்தில் வாயிலில் வருமா றுசாவினன்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:
"இந்த வீட்டில் எவரெனு முளரோ
இரும்பினால் விளைந்த இரணம தாற்ற
இரத்தவெள் ளத்துக் கிடுதற் கொருஅணை
இரத்தப் பெருக்கைத் தடையிட் டடைக்க?" 270
ஆன வயதோன் அடுப்பரு கிருந்தான்
வளர்நரைத் தாடியில் மணையிலே இருந்தான்
உறுமினான் கிழவன் உறும்அடுப் பருகில்
கடுநரைத் தாடியன் கத்தினான் கண்டதும்:
"உயர்ந்த பொருட்கள் உடன்மூ டுண்டன
சிறந்த பொருட்கள் தினம்தோற் றிட்டன
படைத்தவன் பகர்ந்த படிமுச் சொற்களால்
மூலத்து ஆழம் மூண்ட நியதியால்:
எழில்நதி வாயிலும் ஏரிகள் தலையிலும்
பயங்கர அருவிகள் பாயும் கழுத்திலும் 280
வளைகுடாப் பகுதிமேல் வருநில முனையிலும்
ஒடுங்கிய பூமி உடன்தொடு கரையிலும்."
பாடல் 9 - இரும்பின் மூலக்கதை TOP
அடிகள் 1-266 வைனாமொயினன் இரும்பின் மூலத்தை முதியவனுக்குச் சொல்லுகிறான்.
அடிகள் 267-416 : முதியவன் இரும்பை நிந்தித்து இரத்தப் பெருக்கை நிறுத்த மந்திர உச்சாடனம் செய்கிறான்.
அடிகள் 417-586 : முதியவன் தனது மகன் மூலம் ஒரு மருந்து தயாரித்துக் காயத்துக்குப் பூசிக் கட்டுவிக்கிறான். வைனாமொயினன் குணமடைந்து, கடவுளின் கருணையை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறுகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வண்டியி லிருந்து வந்துகீ ழிறங்கினன்
தானே துயர்ப்படாத் தகவில் இறங்கினன்
உதவிக ளின்றி உடன்தா னிறங்கினன்
வீட்டின் உள்ளே விரைந்து சென்றனன்
கூரையின் கீழ்நடை கொண்டே சென்றனன்.
குடுக்கை வெள்ளியில் கொணரப் பட்டது
கொளும்பொன் கிண்ணமும் கொணரப் பட்டது.
கொள்கலன் கொஞ்சமும் கொள்ளவு மில்லை
ஒருதுளி தானும் உட்செல வில்லை 10
முதிய வைனா மொயினனின் குருதி
வீரன் பாத மிகுபொங் கிரத்தம்.
உறுமினன் கிழவன் உறும்அடுப் பருகில்
கடுநரைத் தாடியன் கத்தினான் கண்டதும்:
"எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்?
ஏழு தோணிகள் எலாம்நிறை குருதி
எட்டுத் தொட்டிகள் முட்டிய இரத்தம்
படுமுழங் காலால் பாக்கிய மற்றோய்,
பாய்ந்து தரையில் பரந்துபோ கின்றது; 20
எனக்கு நினைவுள தேனைய மந்திரம்
ஆயினும் பழையது அறநினை வில்லை
முதல்இரும் புதித்த மூலத் தொடக்கம்
தொடக்கத் தின்பின் தொடர்ந்ததன் வளர்ச்சி."
முதிய வைனா மொயினன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இரும்பின் பிறப்பு எனக்குத் தெரியும்
உருக்கின்உற் பத்தி உணர்வேன் நானும்
தாய்களின் முதலவள் தவழ்காற் றாகும்
சலமே மூத்தவன் சகோதரர் களிலே 30
இரும்புடன் **பிறப்பில் எல்லாம் இளையவன்
மத்தியில் அமைந்ததே வளர்நெருப் பாகும்.
மானிட முதல்வன், மாபெருந் தேவன்,
விண்ணில் உள்ள மேலவன் அவனே,
நீர்பிரிந் ததுவாம் நீள்வாய் விருந்து
நீரில் இருந்தே நிலமும் வந்தது
ஏழ்மை இரும்புக் கில்லைப் பிறப்பு
பிறந்ததும் இல்லை வளர்ந்ததும் இல்லை.
மானிட முதல்வன், வானகத் திறைவன்,
அகங்கை இரண்டை அழுத்தித் தேய்த்தான் 40
இரண்டையும் ஒன்றாய் இணைத்து அழுத்தினான்
இடமுழங் காலில் இயைந்த முட்டியில்
அதிலே பிறந்தனர் அரிவையர் மூவர்
மூவரும் இயற்கை முதல்தாய் மகளிர்
துருவுடை இரும்பின் தொல்தா யாக
நீலவா யுருக்கின் நெடுவளர்ப் பன்னையாய்.
நங்கையர் நடந்தனர் நல்லுலாப் போந்தனர்
வானத்துக் காரின் வளர்விளிம் பெல்லையில்
பூரித்து மலர்ந்த பூத்த மார்புடன்
மார்பின் காம்பில் வந்துற்ற நோவுடன்; 50
பாலைக் கறந்து படிமிசைப் பாய்ச்சினர்
மார்பகம் நிறைந்து பீரிட்டுப் பாய்ந்தது;
தாழ்நிலம் தோய்ந்து சகதியில் பாய்ந்தது
அமைதியாய் இருந்த அகல்புனல் கலந்தது.
கறந்தனள் ஒருத்தி கருநிறப் பாலாம்
மூவர்மங் கையரில் மூத்தவள் அவளே;
மற்றவள் கறந்தது மதிவெண் ணிறப்பால்
மங்கையர் மூவரில் மத்தியில் உள்ளவள்;
சிவப்பாய் கறந்தனள் திகழ்மூன் றாமவள்
மங்கையர் மூவரில் வளர்இளை யவளே. 60
கருமைப் பாலைக் கறந்தவள் எவளோ
அவளால் பிறந்தது அருமெல் இரும்பு;
கவின்வெண் ணிறப்பால் கறந்தவள் எவளோ
அவளால் பிறந்தது அரும்உருக் கென்பது;
கனிசெந் நிறப்பால் கறந்தவள் எவளோ
அவளால் பிறந்தது அடுகன இரும்பு.
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
தானே இரும்பது சந்திக்க விரும்பி
அன்புடை மூத்த அண்ணன் சகோதரன்
படர்செந் நெருப்பொடு பழக நினைத்தது. 70
கனலது தீய குணம்சற் றுடையது
ஆங்கா ரத்தொடு ஆவேச மானது;
பாக்கிய மற்ற பாவியை எரித்தது
இரும்பாம் பேதைத் தம்பியை எரித்தது.
ஓடி இரும்பு ஒளியப் பார்த்தது
ஒளிந்து தன்னைக் காக்கவுள் ளியது
கனன்ற கனலின் கரங்களி லிருந்து
சினந்த தீயின் செவ்வா யிருந்து.
அபயம் பெற்றது அதன்பின் இரும்பு
இனிதொளி **வபயம் இரண்டையும் பெற்றது 80
தனிநகர்ந் தசைந்த சகதிச் சேற்றினில்
கிளைத்துப் பாய்ந்த கிளர்நீ ரூற்றில்
தடம்திறந் தகன்ற சதுப்பு நிலத்தில்
கடினமாய்க் கிடந்த கடுங்குன் றுச்சியில்
அன்னம் முட்டை யிடும்அயல் இடங்களில்
வாத்துக் குஞ்சைப் பொரிக்குமால் பதிகளில்.
இரும்பு சேற்றில் இருந்தது ஒளிந்து
சதுப்பின் அடியில் தலைநிமிர்ந் திருந்தது
ஓராண் டொளித்தது ஈராண் டிருந்தது
மூன்றாம் ஆண்டும் முயன்றொளித் திருந்தது 90
இரண்டடி மரத்தின் இடைநடு வினிலே
முதுபூர்ச் சமர மூன்றுவே ரடியில்.
ஆயினும் தப்பிய தில்லையவ் விரும்பு
கொடிய நெருப்பின் கொல்கரத் திருந்து;
மீண்டொரு முறைவர வேண்டி யிருந்தது
தீயின் வசிப்பிடத் திருவா யிலுக்கு
படைக்கல அலகாய் படைக்கப் படற்கு
வாளின் அலகாய் மாற்றப் படற்கு.
ஓடிய **தோநாய் ஒன்றுறை சேற்றில்
செறிபுத ரிடையே திரிந்ததோர் கரடி 100
ஓநாய் **அடியில் உறுசேறு ஊர்ந்தது
கரடியின் கால்களில் காடு கலைந்தது.
கனிந்தாங் கெழுந்தது கடினவல் இரும்பு
உருக்கின் துண்டாங் குருவம் கொண்டது
ஓநாய் பாதம் ஊன்றிய இடத்தில்
கரடியின் குதிகள் கல்லிய இடத்தில்.
இல்மரி னன்எனும் கொல்லன் பிறந்தான்
பிறந்ததும் வளர்ந்ததும் இரண்டும் நிகழ்ந்தன
நிலத்தவன் பிறந்தது நிலக்கரிக் குன்றிலே
நிலத்தவன் வளர்ந்தது நிலக்கரிப் பரப்பிலே 110
செப்பின் சுத்தியல் செங்கரத் திருந்தது
சிறியதோர் குறடும் சேர்ந்தே இருந்தது.
இல்மரி னன்பிறப் பிரவுநே ரத்திலாம்
கொல்லவே லைத்தளம் எல்பகல் செய்தனன்
ஓர்இடம் பெற்றனன் உயர்தொழில் தளம்உற
ஊதுலைத் துருத்தியை ஓர்இடம் நிறுவிட
சேற்று நிலத்தொரு சிற்றிடம் கண்டனன்
ஈரமாய் அச்சிறு இடமதே யானதாம்
சென்றனன் அவ்விடம் செம்மையாய்ப் பார்த்திட
அண்மையில் நின்றவன் ஆய்வினைச் செய்யவே 120
அவ்விடம் ஊதுலைத் துருத்தியை அமைத்தவன்
உலைக்களம் ஒன்றினை உருப்பெறச் செய்தனன்.
ஓநாய்ச் சுவட்டை ஒற்றியே போனான்
கரடியின் அடியையும் கவனித் தேகினன்;
கண்டனன் அவ்விடம் கடினநல் இரும்பு
உருக்கதன் துண்டுகள் இருப்பதும் கண்டான்
ஓநாய்ச் சுவடுகள் உள்ளவவ் விடத்தில்
கரடியின் குதிக்கால் பதிவுகாண் பதியில்.
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:
'ஐயகோ, ஏழைநீ யானகார் இரும்பே 130
இருக்கிறாய் கேவல மானவிவ் விடத்தில்
தாழ்ந்தவாழ் விடத்தில் தான்வாழ் கின்றாய்
ஓநாய்ச் சுவட்டில் உறுசேற் றுநிலம்
கரடியின் பாதம் பதிந்துகாண் பதியில்!'
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்:
'உன்னுடை விளைவு என்னவாய் இருக்கும்
தீயில் உன்னைத் தோய்த்துக் காய்ச்சினால்
உலைக்களத் தினிலே உன்னையிட் டாக்கால்?'
இதைக்கேட் டேழை இரும்பு அதிர்ந்தது
அதிர்ந்தல மந்து அச்சம் கொண்டது 140
கனலின் சொல்லைக் காதில் கேட்டதும்
பெருங்கன லுடைய பேச்சு வந்ததும்.
இல்மரி னன்எனும் கொல்லன் கூறினன்:
'வருத்தப் படற்கு வகையேது மில்லை
தெரிந்தோரை நெருப்புத் தீய்ப்பதே யில்லை
சுற்றத்தை நெருப்புச் சுடுவதும் இல்லை.
கொதிகன லோனுடைக் கூடத் திருந்தால்
கொழுந்துவிட் டெரியும் கோட்டையில் வந்தால்
அழகுறும் உருவாங் கடைவதே யியல்பு
வனப்பொடு வண்ணமும் வருவதே யுண்டு 150
ஆண்களுக் குரிய அழகுறும் வாளாய்
பாவையர் இடுப்பின் பட்டிப் பட்டமாய்.'
அங்ஙனம் அந்தநாள் அன்று முடிந்ததும்
இரும்பைச் சதுப்பில் இருந்தே எடுத்து
சேற்று நிலத்தில் செறிந்ததை மீட்டு
கொல்லன் உலைக்குக் கொணரப் பட்டது.
கொல்லன் இரும்பைக் கொடுங்கனல் தள்ளினன்
இரும்பை உலையிடை இட்டனன் கொல்லன்
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினான்
மூன்றாம் முறையும் மீண்டும் ஊதினான் 160
குழைந்து இரும்பு குழம்பாய் வந்தது
கடின இரும்பு கனிந்தே வந்தது
கொண்டது வடிவம் கோதுமைக் களிபோல்
தானிய அடைக்குச் சரிப்படும் பசையாய்
கொல்லன் உலையில் கொதித்த தீயதில்
கொழுந்துவிட் டெரியும் கொதிகனற் சக்தியில்.
அப்பொழு தேழை இரும்பழுது உரைத்தது:
'ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
இங்கிருந் தென்னை எடுப்பாய் வெளியே
வருத்தும் சென்னிற வளர்கன லிருந்து!' 170
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
'ஒளிர்கன லிருந்து உனைநான் எடுத்தால்
கோரமாய் ஓர்உரு கொள்ளுவாய் நீயே
கொடுமை நிறைந்த கருமம் செய்வாய்
தாக்கவும் கூடும்நின் சகோதர னையே
இன்னலைத் தருவைநின் அன்னையின் சேய்க்கே.'
ஏழை யிரும்பப் போத()ணை யிட்டது
சுத்தமாய் உண்மையாய்ச் சத்தியம் செய்தது
ஆணை உலைமேல் ஆணைகொல் களம்மேல்
ஆணைசுத்தி யல்மேல் ஆணைகட் டையின்மேல் 180
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னது
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தது:
'கடித்து விழுங்கக் கனமர முண்டு
உண்ணவும் கல்லின் உள்ளங்க ளுண்டு
தாக்கவும் மாட்டேன் சகோதரன் தனைநான்
அன்னையின் பிள்ளைக் கின்னலும் செய்யேன்.
எனக்குச் சிறந்தது அழியாது இருப்பதே
என்றுமே வாழ்ந்து இருப்பதே மிகநலம்
தோழரோ டிணைந்து துணையாய் இருப்பது
தொழிலாள ராயுதத் தொன்றா யிருப்பது 190
சொந்த உறவினை உண்பதைப் பார்க்கிலும்
ஆனஎன் உறவினை அழிப்பதைப் பார்க்கிலும்.'
அப்போ கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
இரும்பை அனலில் இருந்தே எடுத்தான்
அதனைப் பட்டடை அதன்மேல் வைத்தான்
அதனை மென்மையாய் அடித்தே எடுத்தான்
கருவிகள் கூர்மையாய்க் கவினுறச் செய்தான்
ஈட்டிகள் கோடரி எல்லாம் செய்தான்
பல்வகை யான படைக்கலம் செய்தான். 200
ஆயினும் குறைபா டதிலெதோ விருந்தது
ஏழை இரும்பில் இடர்ப்பா டிருந்தது
இரும்பின் நாக்கு இளகா திருந்தது
உருக்கின் வாயே உருவாக வில்லை
இரும்பிலே சிறிதும் இல்லையே வலிமை
அதனை நீரிலே அமிழ்த்தாத போது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
சிறிது தானே சிந்தனை செய்தான்:
சாம்பலை ஒன்றாய்த் தான்சிறி தெடுத்து
காரநீர் கொஞ்சம் கலந்துசற் றிணைத்து 210
உருக்கை உருக்கும் ஒருபசை யாக்கி
செய்தனன் இரும்பை இளக்கும் திரவம்.
நாவினால் திரவம் நக்கிப் பார்த்து
சுவைத்தான் நினைத்தது தோன்றிற் றோவென
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
'இவைகள் உகந்ததாய் இன்னமும் இல்லை
திரவம் உருக்கைச் செய்யுமா றில்லை
இரும்பில் பொருட்கள் இயற்றுமா றில்லை.'
நிலத்தி லிருந்தொரு நெடுவண் டெழுந்தது
நீலச் சிறகுடன் நேர்புல் திடலால் 220
அசைந்தது நகர்ந்தது அசைந்து படர்ந்தது
கொல்லுலை வேலைக்கு உளகளம் சுற்றி.
இங்ஙனம் அப்போ தியம்பினன் கொல்லன்:
'வண்டே, நிறைகுறை மனிதனே, ஓஓ!
தேனை உனது சிறகில் சுமந்துவா!
திகழுமுன் நாவிலே தேன்அதை ஏந்திவா!
அறுவகைப் பூக்களின் அலர்முடி யிருந்து
எழுவகைப் புல்லின் எழில்மடி யிருந்து
உருக்குப் பொருட்களை உருவாக் குதற்கு
இரும்பிற் பொருட்களை இயற்றுவ தற்கு.' 230
குளவியொன் றப்போ கூளியின் குருவி
அங்கே பார்த்து அதனைக் கேட்டது
குந்திப் பார்த்தது கூரைக் கோடியில்
பார்த்தது **மிலாறுப் பட்டைகீழ் இருந்து
உருக்குப் பொருட்கள் உருவம் ஆவதை
இரும்பில் பொருட்கள் இயற்றப் படுவதை.
பறந்தது ரீங்காரம் இட்டுஅது சுழன்றது
பரப்பி வந்தது பேயின் பயங்கரம்
திரிந்தது சுமந்து செறிஅரா நஞ்சம்
விரிகருங் கிருமி விடத்துடன் வந்தது 240
எறும்பதன் அரிக்கும் எரிதிர வத்தொடு
வந்தது தவளையின் மர்மநஞ் சுடனே
ஊட்டவே ஆலம் உருக்குப் பொருள்களில்
கூட்டவே இரும்பு பதஞ்செயும் திரவம்.
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
நித்திய வாழ்வுடை நேரிய கொல்லன்
எண்ணம் கொண்டான் இனிதுசிந் தித்தான்
தேன்உண் வண்டு திரும்பி வந்தது
தேவைக் குரிய தேனுடன் வந்தது
தேனைச் சுமந்து திரும்பி வந்தது 250
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
'எனக்கு நல்லது இவைகள் இருப்பது
செவ்வுருக் காக்கும் திரவம் சமைக்க
இரும்பின் பொருட்களை விரும்பி அமைக்க.'
அடுத்து உருக்கை அவன்கை எடுத்து
ஏழை இரும்பையும் எடுத்தான் ஒன்றாய்
நெருப்பில் இருந்ததை நேர்கைக் கொண்டு
உலையில் இருந்ததை ஒன்றாய் எடுத்தான்.
தீக்குணம் கொண்டது செவ்வுருக் கப்போ
இரும்புக் கடங்காப் பெருஞ்சினம் வந்தது 260
அதுதீக் குணத்தால் ஆணையை மீறி
வறுநாய் போல மாண்பை இழந்தது;
இழிந்துசோ தரனை எற்றிக் கடித்தது
உற்றசுற் றத்தை உறுவாய் கொண்டது
குருதியை ஆறாய்ப் பெருக வைத்தது
படர்நீ ரூற்றாய்ப் பாய வைத்தது."
உறுமினான் கிழவன் உறும்அடுப் பருகில்
தாடி அசைந்தது தலைகுலுங் கிற்று:
"இரும்பதன் பிறப்பு எனக்குத் தெரியும்
உருக்கதன் தீய வழக்கமும் தெரியும். 270
ஓ,நீ ஏழை, ஏழை இரும்பு,
ஏழை இரும்பு, பயனிலா இரும்பு,
உருக்கு அடுத்தது ஒருசூ னியப்பொருள்
நீயும் பிறந்த நிலையிப் படியா
தீயவை செய்யத் தினம்வளர்ந் திட்டது
தோற்றம் கொண்டது தொடர்பெரும் பொருட்களாய்?
முன்ஒரு கால்நீ முழுப்பெரி தல்லை
பெரியையு மல்லை சிறியையு மல்லை
அத்தனை அழகு அமைந்தது மில்லை
தீமைஅவ் வளவு திகழ்ந்தது மில்லை 280
நீபால் ஆக நிலைத்தவே ளையிலே
சுவையுறும் பாலாய் சுரந்தபோ தினிலே
இளமைப் பெண்ணின் எழில்மார் பகத்தில்
வனிதையின் கைகளில் வளர்ந்தநே ரத்தில்
விண்ணக மேக விளிம்பின் எல்லையில்
வளர்ந்து பரந்த வானதன் கீழே.
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
ஊற்றுச் சேற்றில் ஒளிந்த வேளையில்
தெளிந்த நீராய்த் திகழ்ந்த போதினில் 290
சதுப்பு நிலத்தின் தான்அகல் வாய்தனில்
கடினப் பாறைக் கற்குன் றுச்சியில்
மண்ணின் சேற்றுள் மாறிய வேளையில்
செந்துரு மண்ணாய்த் தேறிய வேளையில்.
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
**காட்டே றுன்னைச் சேற்றுறுத் துகையில்
**புல்வாய் மேட்டில் போட்டு மிதிக்கையில்
கால்களால் ஓனாய் கடிதழுத் துகையில்
கரடியின் பாதம் கடந்தவே ளையிலே. 300
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
சேற்றினில் இருந்துனை மீட்டவே ளையிலே
சதுப்புப் பூமியில் பெறப்படும் போதினில்
கொல்லன் தளத்துக் கொணர்ந்தநே ரத்தில்
இல்மரி னன்உலைக் களத்துறும் வேளையில்.
அப்போது நீயோ பெரியையும் அல்லை
பெரியையும் அல்லைச் சிறியையும் அல்லை
கடும்இரும் பாயாங் குறுமிய வேளையில்
அடிவெந் நீர்உனை அமுக்கிய போதினில் 310
உலைத்தீ அதிலே அழுத்திய நேரம்
சத்தியம் உண்மையாய்த் தான்செய்த வேளை
கொல்களம் மீதிலும் கொளும்உலை மீதிலும்
சுத்தியல் மீதிலும் தொடுகட்டை மீதிலும்
கொல்லனின் வேலை கொள்கள மீதிலும்
உலைத்தரை மீதிலும் உரைத்த()ணை யிடுகையில்.
பேருரு இப்போ பெற்றுவிட் டாயா?
உனக்கு ஆத்திரம் உதித்தே விட்டதா
இழிந்தோய், உன்ஆணை இன்றுடைந் திட்டதா?
நாய்போல் மதிப்பு நாசமா கிற்றா? 320
இன்னல் உனது இனத்துக் கிழைத்தனை
வறியஉன் கேளிரை வாயில் கொண்டனை.
தீய செயல்உனைச் செயத்தூண் டியதார்?
கொடுந்தொழில் செயவுனைக் கூறிய தெவர்கொல்?
உனைப்பயந் தவளா? உன்னுடைத் தந்தையா?
அல்லது மூத்தஉன் அருஞ்சகோ தரனா?
அல்லது இளையஉன் அருஞ்சகோ தரியா?
அல்லது யாரெனும் அரும்உற வினரா?
உந்தையும் அல்ல உன்தாய் அல்ல
மூத்த சகோதரன் முதல்எவ ரும்மிலர் 330
இளைய சகோதரி எவருமே அல்ல
உரிய உறவினர் ஒருவரும் அல்ல;
நீயாய்த் தானே நிகழ்த்தினை தீத்தொழில்
நெடும்பெரும் பிழையை நிகழ்த்தினை நீயே.
உணர்வாய் வந்து உன்தவறு இப்போ(து)
தீச்செய லுக்குச் செய்பரி காரம்
உனது தாயிடம் உரைப்பதன் முன்னர்
முறைப்பாடு செய்வதன் முன்பெற் றோரிடம்
அளவிலா வேலைகள் அன்னைக் குண்டு
பெரிய தொல்லைகள் பெற்றோர்க் குண்டு 340
தனையன் ஒருவன் தான்பிழை செய்கையில்
பிள்ளை ஒன்று பெருந்தவ றிழைக்கையில்.
இரத்தமே உனது பெருக்கை நிறுத்து!
உயர்சோரி ஆறே ஓட்டம் நிறுத்து!
பாய்வதை நிறுத்து பார்த்துஎன் தலையில்!
படர்ந்தென் நெஞ்சிற் பாய்வதை நிறுத்து!
இரத்தமே நில்முன் எதிர்சுவ ரைப்போல்!
மிகுசோரி ஆறே வேலியைப் போல்நில்!
ஆழியில் நிற்கும் **வாளென நிற்பாய்!
கொழுஞ்சே றெழுந்த கோரைப் புல்லென! 350
வயலிலே உள்ள வரம்பினைப் போல்நில்!
நீர்வீச்சி யில்உறு நெடுங்கல் எனநில்!
ஒருமனம் அப்படி உனக்கு இருந்தால்
வேகமாய் ஓடிப் பாயவேண் டுமென
தசைகள் ஊடே தான்செறிந் தோடு
எலும்பின் வழியே இனிப்பரந் தோடு
உடம்பின் உள்ளிடம் உனக்குச் சிறந்தது
தோலின் கீழே தொடர்தல்மிக் குகந்தது
நல்லது பாய்வதும் நரம்புக ளூடாய்
எலும்புகள் வழியாய்ப் பரம்பலும் நன்று 360
படிமிசை வீணாய்ப் பாய்வதைக் காட்டிலும்
அழுக்கிலே சிந்தி அகல்வதைக் காட்டிலும்.
பாலே மண்மேல் பரந்துசெல் லாதே
களங்கமில் குருதியே கடும்புல்புக் காதே
மனிதரின் சிறப்பே வளர்புல் ஏகேல்
வீரர்பொற் றுணையே மேடுசெல் லாதே
இருப்பிடம் உனக்கு இதயத் துள்ளது
சுவாசப் பைகளின் தொடர்கீழ் அறைகளில்;
பகருமவ் விடங்களில் பரவுக விரைவாய்
விளங்குமவ் விடங்களில் வேகமாய்ப் பாய்வாய்! 370
ஓடிட நீயொரு உயர்நதி யல்லை
பெருகிட நீயொரு பெருவாவி யல்ல
சிந்திடச் சதுப்புச் செழுநில மல்லைநீ
மரக்கலம் மோதித் தெறிக்குநீ ரல்லைநீ.
ஆனதால் அன்பே அறச்செய் பெருக்கினை
உலர்ந்துபோ அங்ஙனம் உடன்செய் யாவிடில்!
வரண்டதும் உண்டுமுன் வளர் *துர்யா வீழ்ச்சியும்
*துவோனலா நதியும் சேர்ந்துலர்ந் துள்ளது
கடலும் விண்ணும் காய்ந்தது வரண்டது 380
வரட்சிமுன் பெரிதாய் வந்தநே ரத்தில்
கொடுந்தீ பற்றிக் கொண்டநே ரத்தில்.
இதற்குநீ இன்னும் பணியா திருந்தால்
நினைவினில் உளவே நேர்பிற வழிகள்
புகல்வேன் அறிந்து புதிய மந்திரம்
அலகை யிடத்தொரு கலயம் கேட்பேன்
குருதியை அதனுள் கொதிக்கவும் வைப்பேன்
மூண்டசெங் குருதி முழுதையும் ஆங்கே
ஒருதுளி தானும் பெருநிலம் விழாமல்
சிவந்த இரத்தம் சிந்தப் படாமல் 390
பெருநிலத் திரத்தம் பெருக விடாமல்
மென்மேற் குருதி மிகுந்துபா யாமல்.
எனக்கிலை மனித சக்தியே என்றால்
மானிட முதல்வன் மகனல்ல என்றால்
இரத்தப் பெருக்கைத் தடுத்து நிறுத்த
நரம்பில் பாய்வதை வரம்பிட் டணைக்க
விண்ணிலே உள்ளார் விண்ணகத் தந்தை
எழில்முகில் களின்மேல் இருக்கும் இறைவன்
மனிதர்கட் கெல்லாம் மாபெரும் சக்தி
வீரர்கட் கெல்லாம் மிகப்பெரும் வீரன் 400
இரத்தத் தின்வாய் அடைத்து நிறுத்த
வெளிவரும் குருதியை முழுதாய் நிறுத்த.
மானிட முதல்வா, மாபெரும் கர்த்தா!
விண்ணுல கத்தே நண்ணிவாழ் இறைவா!
தேவையாம் தருணம் தெரிந்திங் கெழுக
வருவாய் அழைக்கும் தருணத் திங்கே
திணிப்பாய் நினது திருமாண் கரங்கள்
அழுத்துவாய் நினது அருவிறற் பெருவிரல்
காயத் துவாரம் கடிதடைத் திறுக்க
தீய கதவைத் திண்ணமாய் அடைக்க; 410
மென்மை இலைஅதன் மீதே பரப்பு
**தங்கநீ ராம்பலால் தடுத்ததை மூடு
குருதியின் வழிக்குக் கொள்தடை யொன்றிட
வெளிப்படும் பெருக்கை முழுப்படி நிறுத்த
குருதிஎன் தாடியில் கொட்டா திருக்க
ஓடா திருக்கஎன் உடுகந் தையிலே."
அங்ஙனம் இரத்த அகல்வா யடைத்தான்
அங்ஙனம் இரத்த அதர்வழி யடைத்தான்.
அனுப்பினான் மகனை அவன்தொழில் தலத்தே
பூசுமோர் மருந்து புண்ணுக் கியற்ற 420
புல்லில் இருக்கும் புணர்தா ளிருந்து
ஆயிரம் தலைகொள் மூலிகை யிருந்து
தரையிலே வடியும் தண்நறை யிருந்து
சொட்டும் இனியதேன் துளியிலே யிருந்து.
வேலைத் தலத்தே விரைந்தான் பையன்
பூச்சு மருந்தை வீச்சொடே சமைக்க
சிந்துர மரத்தைச் செல்வழி கண்டான்
இவ்விதம் கேட்டான் இகல்சிந் துரத்தை:
"உன்கிளை களிலே உண்டோ தேறல்
பட்டையின் உள்ளே படிதேன் உளதோ?" 430
சிந்துர மரமும் செப்பிய தொருமொழி:
"நேற்றே நேற்று நிகழ்பகல் வேளையில்
தேன்சொட் டியதென் செறிகிளை களிலே
தேன்மூடி நின்றதென் செழும்பசும் உச்சியில்
முகிலிலே யிருந்து முகிழ்ந்து வடிந்ததேன்
முகிலின் ஆவியில் முகிழ்ந்ததேன் அதுவே."
ஒடித்தான் சிந்துர ஒளிர்மரச் சுள்ளிகள்
எடுத்தான் மரத்திலே இருந்துஉகு துகள்களை
சிறந்த புல்லில் சிற்சில எடுத்தான்
பல்வகை மூலிகை பலவுமே எடுத்தான் 440
இவைகளைக் காணொணா திந்நாட் டினிலே
எல்லா இடத்திலும் இவைவளர்ந் திலவாம்.
கலயம் எடுத்து கனலிலே வைத்தான்
அதனுள் கலவையை அவன்கொதிப் பித்தான்
நிறைத்தான் சிந்துர நிமிர்மரப் பட்டைகள்
சேர்த்தான் சிறப்பாய்த் தேர்ந்த புற்களை.
கலகல ஒலியொடே கலயம் கொதித்தது
மூன்று இரவுகள் முழுதும் கொதித்தது
வசந்தத்து மூன்று வருபகல் கொதித்தது
பூச்சு மருந்தினைப் பார்த்தான் பின்னர் 450
பயன்படுத் தத்தகு பதமா மருந்தென
உகந்ததா மந்திரம் உறுமருந் தென்று.
ஆயினும் தகுந்ததாய் அம்மருந் தில்லை
உறுமந் திரமருந் துகந்ததா யில்லை;
சேர்த்தான் மேலும் சிலவகைப் புற்களை
பல்வகை மூலிகை பலதையும் சேர்த்தான்
பல்வே றிடங்களில் பாங்குறப் பெற்றவை
அவைசதப் **பயண அரும்வழி சேர்த்தவை
தந்தவை ஒன்பது மந்திர வாதிகள்
எண்மர் வைத்தியம் அறிந்தவர் ஈந்தவை. 460
கொதிக்க வைத்தான் அடுத்துமூன் றிரவுகள்
இறுதியாய் ஒன்பது இரவுகள் வைத்தனன்
அடுப்பினில் இருந்து எடுத்தான் கலயம்
பூச்சு மருந்தினைப் பார்த்தான் மீண்டும்
பயன்படுத் தத்தகு பதமா மருந்தென
உகந்ததா மந்திரம் உறுமருந் தென்று.
கிளைபல செறிந்த **வளவர சொன்று
வயலின் ஓரம் மறுகரை நின்றது
கொலைத் தொழிற் பையன் கூர்ந்ததை உடைத்து
இரண்டே இரண்டு பாகமாய்க் கிழித்தான்; 470
பூச்சு மருந்தைப் பூசினான் அதனில்
வைத்தியம் செய்தான் மருந்தத னாலே
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மருந்து இதி லொரு மகிமை இருந்தால்
புண்களின் மீது பூசலாம் என்றால்
பூசிக் காயம் போக்கலாம் என்றால்
அரசே முழுமையாய் அமைந்துநன் கெழுவாய்
சிறந்துமுன் னரிலும் செழுமையாய் எழுவாய்!"
அரசு முழுமையாய் அமைந்துநன் கெழுந்தது
சிறந்துமுன் னரிலும் செழுமையாய் எழுந்தது 480
முடிவரை வளர்ந்து வடிவாய் நின்றது
அடிமரம் இன்னும் அமைந்துநன் கிருந்தது.
பின்னரும் மருந்தை நன்குசோ தித்தான்
பயனுடன் மருந்தின் பரிகரிப் புணர்ந்தான்
தேய்த்தான் உடைந்து சிதறிய கற்களில்
பகுபட வெடித்த பாறையில் தேய்த்தான்;
கற்கள் கற்களாய் கடும்பலத் தொன்றின
பாறைகள் இணைந்து பாங்காய்ப் பொருந்தின.
வேலைத் தலத்தினால் மீண்டான் பையன்
பூச்சு மருந்தினை ஆக்கலில் இருந்து 490
கலவை மருந்தினைக் கலப்பதில் இருந்து
முதியோன் கரங்களில் அதைஅவன் வைத்தான்:
"இதோநம் பிக்கைக் கேற்றநல் மருந்து
சித்தி வாய்ந்த சிறப்புறு மருந்து
மலைகளை இணைக்க வல்லது ஒன்றாய்
அனைத்துப் பாறையும் இணைத்திட வல்லது."
நாக்கினால் கிழவன் நன்குசோ தித்தான்
இனிய வாயால் நனிசுவைத் திட்டான்
பயன்பரி காரம் பாங்கா யுணர்ந்தான்
சித்தியும் சிறப்பும் தேர்ந்தறிந் திட்டான். 500
வைனா மொயினனில் மருந்தைப் பூசினன்
நோயடைந் தோனை நுவல்சுக மாக்கினன்
மேற்புறம் பூசினன் கீழ்ப்புறம் பூசினன்
பூசினன் மத்திய பாகமும் பூர்த்தியாய்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"எனது தசையினால் இதைப்போக் கிலன்யான்
கர்த்தரின் தசையால் கடிதுபோக் குகிறேன்
எனது சக்தியால் இதுசெய் திலன்யான்
சர்வவல் லவனின் சக்தியால் செய்கிறேன் 510
எனது வாயினால் நான் பேசவில்லை
இறைவனின் வாயினால் நான்பேசு கின்றேன்;
எனது வாயே இனியது என்றால்
இறைவனின் வாயே இனியது அதனிலும்
எனது கரங்கள் சிறந்தவை என்றால்
இறைவனின் கரங்கள் அதனினும் சிறந்தவை."
பூச்சு மருந்தைப் பூசிய பொழுது
சிறப்புறு மருந்தைத் தேய்த்தபோ தினிலே
நினைவின் சக்தியில் பாதியை நீக்கி
வைனா மொயினனை மயங்கச் செய்தது; 520
அறைந்தான் இப்புறம் அறைந்தான் அப்புறம்
அமைதி அற்றனன் ஆறுதல் அற்றனன்.
ஓட்டினன் கிழவன் உறுநோய் இங்ஙனம்
துன்பம் தருநோய் தூரவிலக் கினான்
**நோவின் குன்றில் நோவை ஏற்றினான்
நோவின் மலையின் நுவல்முடி யேற்றினான்
**சிலையிடை நோவைத் திணித்தனன் அங்கே
தந்தனன் பாறைகள் பிளக்கத் தகுதுயர்.
எடுத்தனன் ஒருபிடி இயல்பட் டுத்துணி
நீளத் துண்டுகள் நிலைபெற வெட்டினன் 530
சிறுசிறு துண்டுகள் சிதையக் கிழித்தனன்
உருட்டிச் சுற்றுத் துணிஉரு வாக்கினன்;
கட்டினன் உருட்டிய பட்டுத் துணியினால்
கட்டினன் அழகுறு பட்டுத் துணியினால்
மனிதனின் முழங்கால் வருரணம் சுற்றினன்
வைனா மொயினன் வல்விரல் சுற்றினன்.
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"ஆண்டவன் பட்டுத் துணிஇது ஆகுக
ஆகுக சுற்றுத் துணிஇறை ஆடையே 540
நலமுறும் இந்த நன்முழங் காற்கு
தூய்மை யுறுங்கால் தொடுபெரு விரற்கு
இப்பொழு தருள்மிகும் இறைவனே, பாரீர்!
மாபெரும் கர்த்தரே, வந்துகாப் பளியும்!
அருள்வீர் துன்பம் அணுகா தெதுவும்
தீதெதும் தொடரா திருந்துகாப் பீரே!"
முதிய வைனா மொயினன் பின்னர்
உதவி வந்ததை உணரப் பெற்றான்
வாய்த்தது நலமும் வந்தே விரைவில்
வளர்ந்து தசைகள் வளமும் பெற்றன 550
பெற்றனன் கீழ்ப்புறம் பெரும்நலம் சுகமும்
மறைந்தன நோவும் நோயும் மத்தியில்
போனது பக்கத் திருந்த புணர்நோ
அழிந்தது மேற்புறத் தமைந்த காயமும்
முன்னரைக் காட்டிலும் முழுப்பலம் பெற்றான்
நலம்மிகப் பெற்றான் நாடுமுன் நாளிலும்
நடக்க முடிந்தது நன்குஇப் பொழுதவன்
முழங்கால் மடக்க முடிந்தது நிறுத்த,
அடியொடு நோயும் நோவும் அற்றன
துளியும் இல்லை தொடர்வதை வருத்தம். 560
முதிய வைனா மொயினனப் போது
விழிகளைத் திருப்பி மேலே நோக்கி
ஆங்கு பார்வையை அழகாய்ச் செலுத்தினன்
சிரசின் மேலே தெரிவிண் உலகு
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"கருணையாங் கிருந்து கணந்தொறும் பெருகும்
அன்பும் அபயமும் அனுதினம் கிடைக்கும்
வானத்தில் விண்ணின் மறுஉல கிருந்து
எல்லாம் வல்ல இறையிட மிருந்து. 570
இறைவனே, நன்றி இப்போ புகல்வோம்,
இறைநின் புகழே இசைப்போம் கர்த்தரே!
இந்த உதவியைத் தந்தமைக் கெனக்கு
அன்புடை அபயம் அளித்தமைக் கெனக்கு
கொடுயதாய் வந்த இடும்பையி லிருந்து
இரும்பின் கூரிய இன்னலி லிருந்து!"
முதிய வைனா மொயினனப் போது
பின்வரும் பொழிகளில் பேசினன் பின்னும்:
"இனிவரும் மக்களே இதுஅற வேண்டாம்
வேண்டாமெப் போதும் மிகுவளர் மக்காள் 580
வீம்புவார்த தைக்கு மிளிர்பட கமைத்தல்
படைத்தலும் வேண்டாம் படகுக் கைமரம்;
மன்னுயிர் போம்வழி வகுத்தவன் இறைவன்
பயணத் தெல்லையைப் பகர்ந்தவன் கர்த்தன்
மனித தீரத்தில் வயமேது மில்லை
வீரனின் சக்தியில் விளைவேது மில்லை."
பாடல் 10 - சம்போவைச் செய்தல் TOP
அடிகள் 1 - 100 : வைனாமொயினன் வீட்டுக்கு வந்து, இல்மரினனை வட பகுதிக்குச் சென்று சம்போவைச் செய்து வடநில மங்கையைப் பெறும்படி கூறுகிறான்.
அடிகள் 101 - 200 : இல்மரினன் வடபகுதிக்குச் செல்ல மறுக்கிறான். வைனாமொயினன் வேறு வழிகளைக் கையாண்டு அவனை வடபகுதிக்கு அனுப்புகிறான்.
அடிகள் 201 - 280 : இல்மரினன் வடபகுதிக்கு வருகிறான். அங்கு அவன் நன்கு வரவேற்கப்பட்டுச் சம்போவைச் செய்வதாக வாக்கு அளிக்கிறான்.
அடிகள் 281 - 432 : இல்மரினன் சம்போவைச் செய்து முடித்ததும் வடநிலத் தலைவி அதை வடக்கே மலைப் பாறைகளில் வைக்கிறாள்.
அடிகள் 433 - 462 : இல்மரினன் தனது வேலைக்கு ஊதியமாக வடநில மங்கையைக் கேட்கிறான். அவள் தான் இன்னமும் வீட்டை விட்டுப் புறப்படக்கூடிய நிலையில் என்கிறாள்.
அடிகள் 463 - 510 : இல்மரினன் ஒரு படகைப் பெற்று வீட்டுக்குத் திரும்பி, தான் வட பகுதியில்சம்போவைச் செய்துவிட்டதாக வைனாமொயினனுக்குக் கூறுகிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
எடுத்தான் **பழுப்பு இகல்பொலிப் புரவி
புரவியைச் சேணம் பூட்டினன் பின்னர்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
வண்டியில் தானே வலுவிரை வேறினன்
அமர்ந்து கொண்டனன் அவ்வண் டியினுள்.
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சாட்டையால் வான்பரி அறைந்தனன்
பறந்தது புரவி பயணம் விரைந்தது
வண்டி உருண்டது வருதொலை குறைந்தது 10
மிலாறுவின் சட்டம் மிகச்சல சலக்க
**பேரியின் ஏர்க்கால் பின்கட கடத்தது.
அதன்பின் தொடர்ந்து அவன்பய ணித்தான்
நாட்டின் பரப்பிலும் நகர்நிலச் சதுப்பிலும்
திறந்து கிடந்த செறிவன வெளியிலும்.
ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான்
சென்றான் அங்ஙனம் மூன்றாம் நாளிலும்
வந்தான் பாலம் வருநீள் முடிவில்.
கலேவலா விருந்த கவின்பெரு விடங்களில்
வந்தான் ஒஸ்மோ வயல்களின் எல்லையில். 20
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"ஓநாய், உணவுகொள், கனவுகாண் பவரை,
லாப்லாந் தியரை இங்குகொல், நோயே,
'நான்இல் செல்லேன்' என்றவர் நவின்றார்
மேலும் 'வாழேன் விழியோ' டென்றார்
'இனிஇவ் வுலகில் இல்லைநான்' என்றார்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
வைனோ என்னும் வளமுறு நாட்டில்
கலேவலா எனும்புதர்க் கவின்சம வெளியில்." 30
முதிய வைனா மொயினன் பின்னர்
பாடினான் மந்திரப் பாடலைப் பயின்றான்
பாடினான் தேவ தாருயர்ந் தலர்ந்தது
மலருடன் பொன்னிலை வளர்ந்து செழித்தது
எட்டிநின் றதுஅதன் எழில்முடி வானை
தவழ்முகில் களின்மேல் தழைத்து நின்றது
படர்கிளை வானில் பரப்பி நின்றது
திகழ்வான் எங்கும் செறிந்து நின்றது.
பாடினான் மந்திரப் பாடலைப் பயின்றான்
திங்களின் நிலவு திகழப் பாடினன் 40
பொன்முடித் தாரு பொலியப் பாடினன்
கவின்கிளைத் **தாரகைக் கணத்தைப் பாடினன்
அதன்பின் தொடர்ந்து பயணம் செய்தனன்
நச்சிய வசிப்பிடம் புக்கச் சென்றனன்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து,
அவனே கொல்லன் அவ்வில் மரினனை
கவினழி வில்லாத கைவினைக் கலைஞன்
வழியனுப் புவதாய் வாக்களித் தானே
தன்தலை போயினும் தருவதாய்ச் சொன்னான் 50
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
புகார்படி *சரியொலாப் புகுநிலப் பரப்பில்.
நிமிர்பொலிப் பரியை நிறுத்தினன் முடிவில்
ஒஸ்மோ வின்புது உயர்வய லருகில்
முதிய வைனா மொயினன் அதன்பின்
வண்டியில் இருந்தே வன்தலை தூக்கி
வேலைத் தலத்தின் மிகுஒலி கேட்டனன்
நிலக்கரிக் குடிசையின் **கலக்கொலி கேட்டனன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வேலைத் தலத்தில் தானே நுழைந்தனன் 60
இருந்தனன் அங்கே கொல்லன்இல் மரினன்
வியன்சுத் தியலால் வேலைசெய் தவனாய்.
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"வருவாய் முதிய வைனா மொயினனே
இந்நீள் நாட்கள் எங்கே சென்றனை
எங்கே இருந்தனை இத்தனை காலமும்?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அங்கே சென்றேன் அந்தநீள் நாட்கள்
அங்கே இருந்தேன் அத்தனை காலமும் 70
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
புகார்படி சரியொலாப் புகுநிலப் பரப்பில்
லாப்பின் பனியிலே வழுக்கிச் சென்றேன்
மந்திர அறிஞரின் வன்புலத் திருந்தேன்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, முதிய வைனா மொயின!
நிலைபெறும் மாய நெறியறி முதல்வ!
பார்த்தது என்ன பயணப் போதிலே
வந்தாய் நின்இல் வழங்குக விபரம்" 80
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சங்கதி எ(வ்)வளவோ சாற்றுதற் குண்டு
வடக்கே வாழ்கிறாள் வனிதை ஒருத்தி
குளிர்மிகும் கிராமக் குமரி ஒருத்தி
வாழ்வின் துணைவனை வரிக்கிறாள் இல்லை
நலமிகும் கணவரை நாடுவாள் இல்லை
வடநிலப் பாதி புகழ்கிற தவளை
அழகில் நிகரே அற்றவள் என்று:
விழியின் புருவத் தொளிரும் சந்திரன்
சூரியன் அவளின் மார்பிலே மிளிரும் 90
தோள்களில் துள்ளும் **தாரகைக் கூட்டம்
ஏழு தாரகை எழில்முது கொளிரும்.
இப்போது கொல்லன் இல்மரி னன்நீ,
கவின்அழி வில்லாக் கொல்வினைக் கலைஞ!
செல்வாய், அந்தச் சேயிழை அடைவாய்,
மின்னும் கூந்தலின் பொன்தலை காண்பாய்
சம்போ என்னும் சாதனம் செய்தால்
பாங்குடன் ஒளிரும் மூடியும் படைத்தால்
அரிவையை ஊதிய மாகநீ அடைவாய்
அழகியைத் தொழிற்குப் பலனாய் அடைவாய்." 100
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"ஓகோ, முதிய வைனா மொயினனே!
வாக்களித் தனையோ மற்றெனைத் தரலாய்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
உன்தலை காத்தற் குறுதுணை யாக
உனக்கு விடுதலை தனைப்பெறற் காக?
என்நீள் வாழ்நாள் என்றுமே செய்யேன்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
வடபால் நிலத்து வசிப்பிடம் போகேன்
சரியோ லாப்புறத் துறுகுடில் செல்லேன் 110
மனிதரை உண்ணும் மருண்டபூ மிக்கு
இகல்வலார் அழிக்கும் ஏழ்மைநாட் டுக்கு."
முதிய வைனா மொயினன் பின்னர்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இன்னோர் அற்புதம் இருக்கிற தங்கே
மலர்முடித் தேவ தாரொரு மரமுள
மலர்முடி யோடு வளர்பொன் இலைகள்
ஆங்குஒஸ் மோவின் அகல்வயல் எல்லையில்
உச்சியில் திங்களின் உயர்நிலா வொளிரும்
கவின்கிளைத் தாரகைக் கணங்கள் இருக்கும்." 120
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"நம்புதற் கில்லைநீ நவிலும்இக் கூற்றைநான்
நேரிலே போயதைப் பார்வைகொள் வரையிலும்
எனதுகண் களால்அதை எதிர்கொளும் வரையிலும்!"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"நம்புதல் உனக்கு நன்கிலை யென்பதால்
நேரிலே சென்றுநாம் நிகழ்வதைப் பார்க்கலாம்
உணரலாம் பொய்யா உண்மையா என்பதை."
ஏகினர் பார்த்திட இருவரும் நேரில்
மலர்களால் மூடிய வளர்முடி மரத்தை 130
முதிய வைனா மொயினன் முதலில்
கொல்லன்இல் மரினன் கூடும் அடுத்தவன்.
அங்கே இருவரும் அடைந்தநே ரத்தில்
ஒஸ்மோ வயலில் ஒருப்படும் எல்லையில்
நிறுத்தினன் நடையை நின்றனன் கொல்லன்
திகைத்தனன் கண்டு தேவ தாருவை
கிளர்தா ரகைக்கணம் கிளையில் இருந்தது
மரத்தின் முடியினில் வளர்நிலா இருந்தது.
முதிய வைனா மொயினனு மாங்கே
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 140
"இப்போநீ கொல்ல, இனியசோ தரனே!
மரத்தில் ஏறுவாய் மதியினை எடுக்க
கைகளில் தாரகைக் கணத்தினைக் கொள்ள
உச்சியைப் பொன்னிலே உடைய மரத்திலே!"
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
ஏறினன் உயரத் தெழில்மரம் மேலே
விண்வரை உயர விரைந்துயர் வேறினன்
கவினுறு திங்களைக் கைகொள வேறினன்
எடுத்திட ஏறினன் இனியதா ரகைக்குழாம்
திகழ்பொன் முடியுடைத் தேவதா ருவிலே. 150
பொன்மலர் முடியொடு பொலிந்த தாரது
அகன்ற தலையுடை அருந்தரு மொழிந்தது:
"ஐயகோ, சித்தம் அற்றபேய் மனிதா,
அனுபவம் அற்ற அப்பாவி மனிதா,
வேடிக்கை மனிதனே விரிகிளை ஏறினாய்
வந்தனை குழந்தைத் தனமாய் முடிவரை
திங்களின் சாயையைச் சீராய்ப் பெறற்காய்
பொய்யாம் உடுக்களைப் புக்கெடுப் பதற்காய்!"
முதிய வைனா மொயினனப் போது
பதமென் குரலால் பாடத் தொடங்கினன் 160
தொடர்காற் றெழுந்து சுழலப் பாடினன்
கொடுங்காற் றகோரம் கொள்ளப் பாடினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"சுழல்கால் இவனையுன் தோணியிற் கொள்வாய்
பவனமே உனது படகினில் பெறுவாய்
கொண்டுநீ சேர்ப்பாய் கொடுந்தொலை நாட்டில்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே!"
காற்றுச் சுழன்று கடுகதி எழுந்தது
வாயு ஆங்கார மதுகொண் டெழுந்தது 170
கொல்லன்இல் மரினனைக் கொண்டு சென்றது
தூர தேசத்துத் தூக்கிச் சென்றது
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
புகார்படி சரியொலாப் புகுநிலப் பரப்பில்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
சென்றான் தொடர்ந்து செய்தான் பயணம்
காற்று வீசிய கடுவழி சென்றான்
வாயு வீசிய வழியினிற் சென்றான்
திங்களின் மேலும் செங்கதிர்க் கீழும்
தாரகைக் கணத்தின் தயங்குதோள் மீதும்; 180
வடபால் முற்றம் வரையிலும் சென்றான்
சரியொலா சவுனா தம்தெரு சென்றான்
அவனை நாய்களோ அறியவே யில்லை
கடுங்குரை நாய்கள் கவனிக்க வில்லை.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
வந்துமுற் றத்தில் வனப்பொடு நின்றாள்
இவ்விதம் தானே இயம்பிட லானாள்:
"எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன் 190
பவனம் வீசும் பாதையில் வந்தாய்
வந்தாய் வாயுவின் வழியின் தடத்திலே
ஆயினும் நாய்கள் அவைகுரைத் திலவே
சடைவால் நாய்கள் சத்தமிட் டிலவே."
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"நானும் இங்கு நண்ணிய துண்மையாய்
கிராமத்து நாய்கள் கிளர்ந்தெழ அல்ல
செறிசடை வால்நாய் சினப்பதற் கல்ல
அன்னிய மானஇவ் வகல்கடை வாயிலில்
அறிமுக மற்றஇவ் வகல்வாய் வழியினில்." 200
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உறுநவ அதிதியை உசாவினாள் இப்படி:
"அறிந்ததுண் டோ நீ, அறிமுகம் உண்டோ ?
உண்டோ கேட்டது உனக்குத் தெரியுமோ?
இல்மரினன் எனும் வல்லஅக் கொல்லனை
கைவினை வல்லோன் கவின்மிகும் கலைஞன்?
எதிர்பார்த் தவனை இருந்தோம் பலநாள்
இருந்தோம் வருவான் இங்கென வெகுநாள்
இந்த வடபால் இயைநிலப் பகுதியில்
சம்போ புதியாய்ச் சமைப்பதற் காக." 210
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறிவேன் என்றும் சொல்லலாம் அவனை
வல்லஇல் மரினன் எனுமக் கொல்லனை
ஏனெனில் நான்இல் மரினன்என் பான்தான்
கவினழி வில்லாக் கலைஞனும் நானே."
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
வீட்டினுக் குள்ளே விரைந்து சென்றனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்: 220
"எனது செல்வியே, இளமென் மங்கையே,
பிள்ளைகள் அனைத்திலும் பெரும்இகல் பிள்ளாய்,
அணிவாய் ஆடைகள் அனைத்திலும் சிறந்ததை
வெண்மையாய் உள்ளதை மேனியில் தரிப்பாய்
மென்மையாய் இருப்பதை மிலைவாய் மார்பில்
நேர்த்தியாய் இருப்பதை நெஞ்சிலே அணிவாய்
சிறந்த அணிகளைச் செழுங்கழுத் தேற்றி
தரிப்பாய் நல்லதைத் தண்ணுதற் புருவம்
கன்னம் செந்நிறக் கவினுற மாற்றி
அலங்கா ரிப்பாய் அழகாய் வதனம் 230
இப்போ கொல்லன்இல் மரினன் என்பவன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
சம்போ செய்யத் தானிங் குற்றான்
திகழ்ஒளி மூடியும் செய்வான் அதற்கே."
வடபால் நிலத்து வளமுறு நங்கை
நீரிலும் நிலத்திலும் நெடும்புகழ் பெற்றவள்
ஆடைகள் அனைத்திலும் அரியதை எடுத்தாள்
சுத்தமா யிருந்த சுடருடை எடுத்தாள்
ஆடைகள் அணிந்தாள் அலங்கரித் திட்டாள்
தலையணி ஆடை நலஒழுங் கமைத்தாள் 240
செப்பினால் பட்டியை செறித்தனள் இடையில்
பொன்னிலாம் மின்னரைக் கச்சினைப் பூட்டினள்.
வீட்டினி லிருந்து விரைந்தனள் கூடம்
முற்றத்தில் மெல்லடி வைத்துநின் றிட்டாள்
பேரொளி அவளது பெருவிழித் தெரிந்தது
காதுகள் உயர்ந்து கவினுற விளங்கின
முகத்திலே அழகது முழுமையா யிருந்தது
செழுமையாய் மிளிர்ந்தன சிவந்தகன் னங்கள்
பொன்னணி மின்னின பொலிந்துமார் பினிலே
மின்னின சென்னியில் வெள்ளிநல் அணிகள். 250
அவளே வடநிலத் தலைவியப் போது
கொல்லன்இல் மரினனைக் கூட்டிச் சென்று
வடபால் நிலத்து மாடங்கள் காட்டி
கூடம் சரியொலா எங்கும் காட்டினள்.
அங்கே அவனுக் கருவிருந் தளித்து
பானம் நிறையப் பாங்காய்க் கொடுத்து
மனம்நிறைந் தவனை உபசரித் திட்டாள்
தானே இவ்விதம் சாற்றத் தொடங்கினள்
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞ! 260
சம்போ உன்னால் சமைக்க முடிந்தால்
முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்தால்
அன்னத் திறகின் அணிமுனை யிருந்து
மலட்டுப் பசுவின் மடிப்பா லிருந்து
ஒருசிறு பார்லி ஒளிர்மணி யிருந்து
கோடை ஆட்டின் குறுமயி ரிருந்து
அரிவையைப் பெறுவாய் அதற்கூ தியமாய்
அப்பணிக் கேற்ப அழகியைப் பெறுவாய்."
அப்போ கொல்லன் அவன்இல் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 270
"என்னால் சம்போ இயற்றிட முடியும்
முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்வேன்
அன்னத் திறகின் அணிமுனை யிருந்து
மலட்டுப் பசுவின் மடிப்பா லிருந்து
ஒருசிறு பார்லி ஒளிர்மணி யிருந்து
கோடை ஆட்டின் குறுமயி ரிருந்து
ஏனெனில் விண்ணை இயற்றியோன் நானே
வானக மூடியை வனைந்தவன் நானே
ஒன்றுமே யில்லா ஒன்றினி லிருந்து
அடிப்படை எதுவுமே அற்றதி லிருந்து." 280
அவன்சம் போசெய ஆயத்த மானான்
முதிர்ஒளி நிறங்களில் மூடியும் செய்ய
வேலைத் தலமாய் வேண்டினன் ஓரிடம்
கேட்டான் வேண்டிய கருவிவே லைக்கு;
ஆயினும் வேலைக் கங்கிட மில்லை
தொடர்தொழில் தலமும் துருத்தியும் இல்லை
இல்லை உலைக்களம் இல்லைப் பட்டடை
இல்லை சம்மட்டி இல்லைக் கைப்பிடி.
அப்போ கொல்லன் அவன்இல் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 290
"தளர்முது பெண்கள் சந்தே கிப்பர்
சிறுமன மாந்தர் செய்வர் குறைத்தொழில்
இழிந்தவன் கூடஆண் இதுசெய மாட்டான்
சோம்புறு மனிதனும் வீம்பெதும் செய்யான்."
ஓரிடம் தேடினன் உலைக்களம் வைக்க
பார்த்தனன் ஒருதடம் பட்டடை அமைக்க
அவ்வட நாட்டின் அகல்பரப் பினிலே
வடநிலத் தமைந்த வயற்பரப் பினிலே.
ஒருநாள் தேடினன் மறுநாள் தேடினன்
மூன்றாம் நாளும் முடிவாய்த் தேடினன் 300
கடைசியில் மின்னுமோர் கல்லினைக் கண்டான்
கண்டான் கனத்துச் செறிந்தகற் பாறை.
தேடலை நிறுத்தித் தேர்ந்தஅவ் விடத்தில்
கொழுங்கன லாங்கே கொல்லன் மூட்டினன்
அங்கே பட்டடை அமைத்தான் முதல்நாள்
மறுநாள் உலைக்களம் மகிழ்ந்தொன் றமைத்தான்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
உறுபொருட் களையவ் வுலையினில் வைத்து
உலையின் அடியில் உயர்தொழில் தொடங்கினன் 310
அடிமைகள் கொண்டான் அவ்வுலை ஊத
இயக்கினர் துருத்தியை இடைநின் றடிமைகள்.
ஊதினர் அடிமைகள் உலையினை நின்று
துருத்தியை இயக்கித் தொடர்தொழில் செய்தனர்
கோடைகா லத்துக் கொள்பகல் மூன்றிலும்
கோடைகா லத்துக் குளிர்நிசி மூன்றிலும்
கற்கள் குதிகாற் களின்கீழ் வளர்ந்தன
எழுந்தன பாறைகள் இகல்பெரு விரலடி.
அவ்விதம் வந்து அணைமுத லாம்நாள்
அவனே கொல்லன் அவன்இல் மரினன் 320
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தான்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்
என்ன வருவது என்பதை அறிய
தீயினி லிருந்து செருகன லிருந்து.
உலையில் குறுக்குவில் ஒன்றிருந் தெழுந்தது
விளங்குபொன் தனுவது வெப்பத் திருந்து
முனையது வெள்ளியம் முழுவில் தங்கம்
செப்பின் ஒளியொடே திகழ்விற் கைப்பிடி.
சிலையது பார்க்கச் சிறப்புறு தோற்றம்
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது 330
கேட்டது நாள்தொறும் கிளர்வில் ஓர்தலை
இருதலை கேட்டது இயையும் நல்நாள்.
அவனே கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை
வேறிரு துண்டாய் வில்லை முறித்தான்
மீண்டும் போட்டான் வெங்கனல் மீதே
ஊதினர் அடிமைகள் உடன்நின் றுலையை
துருத்தியை இயக்கித் தொழிலதை ஆற்றினர்.
அந்தநாள் முடிந்து அடுத்தநாள் வந்தது
கொல்லன்இல் மரினன் குறிப்பாய்த் தானே 340
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்
உலையில் இருந்து உதித்ததோர் படகு
செந்நிறப் படகு செறிகன லிருந்து
முன்முனைப் படகு பொன்னில் மிளிர்ந்தது
**மிண்டுக் குவடு மிளிர்ந்தன செப்பால்.
பார்க்க நன்றாய்ப் படகு இருந்தது
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது
காரண மின்றிப் போருக் கெழுந்தது
ஆதார மின்றி அதுபோர் கேட்டது. 350
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை
துண்ட துண்டமாய்த் துணித்தான் படகை
அனலிலே மீண்டும் அதையிட் டிட்டான்
ஊதினர் அடிமைகள் உடன்நின் றுலையை
துருத்தியை இயக்கித் தொழிலதை ஆற்றினர்.
முடிந்தது அந்நாள் மூன்றாம் நாள்வர
கொல்லன்இல் மரினன் குறிப்பாய்த் தானே
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில் 360
கன்னிஆ வொன்று கனலுலை எழுந்தது
பொன்னின் கொம்புடன் பொருகன லிருந்து
தாரகைக் கணம்அதன் தனிநுதல் இருந்தது
தலையினில் சூரிய சக்கரம் இருந்தது.
பார்க்க நன்றாய்ப் பசுவும் இருந்தது
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது
படர்வனம் பொழுதெலாம் படுத்துக் கிடந்தது
பாலைவீ ணாகப் படியிற் கறந்தது.
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை 370
துண்ட துண்டமாய்த் துணித்தான் பசுவை
அனலிலே மீண்டும் அதையிட் டிட்டான்
ஊதினர் அடிமைகள் உடன்நின் றுலையை
துருத்தியை இயக்கித் தொழிலதை ஆற்றினர்.
நடந்தது அந்நாள் நான்காம் நாள்வர
அவனே கொல்லன் அவன்இல் மரினன்
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்
உழுபடை ஒன்று உலையில் எழுந்தது
பொன்னின் கொழுவுடன் புணர்கன லிருந்து 380
செம்பொன் கொழுவது செப்பிற் கைமரம்
வெள்ளியிற் கைப்பிடி மேற்புறம் ஆனது.
பார்க்கநன் றாயுழு படையோ இருந்தது
ஆயினும் தீச்செயல் அதன்கண் ஆனது
கலப்பை கிராமக் கனவயல் உழுதது
ஊரவர் நிலங்களை உழுபடை உழுதது.
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
நெஞ்சத் ததனால் நிறைவே இல்லை
ஓரிரு துண்டாய் உழுபடை முறித்து
அனலிலே மீண்டும் அதையிட் டிட்டான் 390
உலையிற் காற்றை ஊதச் செய்தனன்
வேகமாய் வாயுவை ஊதச் செய்தனன்.
வெங்கால் எழுந்து வேகம் கொண்டது
கீழ்மேல் காற்றுகள் கிளர்ந்து வீசின
தென்காற் றின்னும் சினந்துவீ சிற்று
வடகாற் றுக்கிர மாகவீ சிற்று.
வீசின ஒருநாள் வீசின மறுநாள்
வீசின விரைந்து மிகமூன் றாம்நாள்
சாளரம் தன்னில் தணலெரி மூண்டது
கதவுகள் எல்லாம் கனற்பொறி கக்கின 400
விரைந்தன தூசுகள் விண்ணினை நோக்கி
புகையெலாம் திரண்டு முகில்களாய் மாறின.
அந்தக் கொல்லன் அவன்இல் மரினன்
முடிந்தஅந் நாள்பின் மூன்றுநாள் முடிவில்
இருந்து குனிந்துள் எட்டிப் பார்த்தனன்
அவனது உலைக்கள அடிப்புறம் தன்னில்.
கண்டான் சம்போ கனிந்துட் பிறந்ததை
ஒளிரும் மூடியும் வளர்வதைக் கண்டான்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் 410
தகுசுத் தியலால் தட்டினன் தட்டினன்
அடித்துமென் மேலும் அடித்து அறைந்தனன்
திறமையின் பயனாய்ச் செய்தான் சம்போ;
சம்போ ஒருபுறம் தானிய ஆலை
இன்னொரு பக்கம் இலவண ஆலை
மூன்றாம் பக்கம் முழுப்பண ஆலை.
அரைக்கத் தொடங்கிய தப்புதுச் சம்போ
சுடர்மிகும் மூடியும் சுழன்றே வந்தது
அந்தியில் கொள்கலம் ஆர்ந்திட அரைத்தது,
ஒருகலம் நிறைய உணவுக் கரைத்தது 420
விற்பனைக் கொன்றை விரைந்தே அரைத்தது
அரைத்தமூன் றாவது அகச்சே மிப்பாம்.
வடநில முதியவள் மகிழ்ச்சியில் மிதந்தாள்
வந்துபெற் றேகினள் மாபெரும் சம்போ
வடநிலக் குன்றதன் மணிமுக டதன்மேல்
செப்பினால் இயைந்தசெம் மலைகளுக் குள்ளே
பூட்டினள் ஒன்பது பூட்டுகள் போட்டு;
இறங்கின சூழ்ந்ததை இகல்வல் வேர்கள்
ஒன்பது மடங்கிலோர் **ஆறடி ஆழம்;
அன்னையாம் புவியில் அதிலொன் றிறங்க 430
மற்றவேர் நீர்க்கரை வழியரு கிறங்க
மூன்றாம் வேர்முது மனைமலைச் சென்றது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
பெண்ணைப் பெறற்குப் பெருமையோ டெழுந்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போ மங்கை எனக்குத் தானே
சம்போ இயற்றிச் சரியாய் முடித்ததால்
ஒளிரும் அழகுறும் ஒருமூ டியுடன்?"
வடக்கின் அழகிய மங்கையப் போது
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 440
"ஆரப்பா இனிவரும் அடுத்த ஆண்டினிலே
ஆரப்பா மூன்றாம் அடர்கோ டையதில்
குயிலை இங்கேக் கூவச் செய்வது
பறவைகள் அனைத்தையும் பாட வைப்பது
இன்னொரு நாடுநான் ஏகுவ தானால்
அந்நிய நாட்டிலோர் அருஞ்சிறு பழம்போல்?
இந்தக் கோழி இல்லா தொழிந்தால்
இந்த வாத்தும் எங்கும் அலைந்தால்
வழிமாறி அன்னையின் வம்சமும் போனால்
**செந்நிறப் பழமும் சீர்கெட் டழிந்தால் 450
இன்குயில் அனைத்தும் இல்லா தொழியும்
மகிழ்வுறும் பறவைகள் மறைந்தே போகும்
இந்த மலையின் எழில்முடி யிருந்து
இந்த மேட்டு எழில்நிலத் திருந்து.
அதுவிலா தெனக்கோ அவகா சமி(ல்)லை
கன்னிஎன் பருவம் கடக்கவு மில்லை
இந்தவே லைகளை இயற்றவும் வேண்டும்
அலர்கோ டைப்பொழு தவசர நாட்களில்:
படிமிசை சிறுபழம் பறிபடா திருக்கும்
நீர்க்கரைப் பாடல்கள் நிகழா திருக்கும் 460
உயர்மேட் டினிலம் உலாவற் றிருக்கும்
அழகுதோப் பெலாம்நான் ஆடா திருக்கும்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து
சிறிதுசித் தத்தே சிந்திக்க லானான்
நீண்ட நேரமாய் நிகழ்த்தினன் யோசனை
இல்லகப் பயணம் எப்படிச் செய்வது
பழகிய நாடு படர்வது எங்ஙனம் 470
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
புகார்படி சரியொலாப் புகுநிலத் திருந்து.
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
சோர்ந்து மனமது துயரம் கொண்டதேன்
சரிந்து தொப்பியும் சாய்ந்து வந்ததேன்
பயணம் செய்வது பற்றிய எண்ணமா
வாழ்ந்தமுன் னிடத்து மீள்வது பற்றியா?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"எனது எண்ணம் ஏகுவ தங்கே 480
எனதுவீட் டிற்கு இறந்துபோ தற்கு
எனதுநாட் டிற்கு இளைத்தே குதற்கு."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
மனிதனுக் குணவும் பானமும் வழங்கி
படகுபின் தட்டில் பாங்குற அமர்த்தினள்
படகின் துடுப்போ படர்செப் பானது
காற்றினை வீசக் கட்டளை யிட்டனள்
வடக்குக் காற்றினை வளர்கதி வீச.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் 490
நுவல்சுய நாட்டினை நோக்கிச் சென்றனன்
நீலக் கடலின் நீண்ட பரப்பிலே.
பயணம் ஒருநாள் பயணம் இருநாள்
சென்றான் அங்ஙனம் மூன்றாம் நாளிலும்
கொல்லன்இப் போது கூடும்இல் அடைந்தான்
பிறந்து வளர்ந்த பேரிடம் அடைந்தான்.
முதிய வைனா மொயினன் கேட்டனன்
இல்மரி னன்எனும் கொல்ல னிடத்தே:
"சகோதர, கொல்ல தகைஇல் மரின!
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞ! 500
புதிய சம்போ புனைந்து முடிந்ததா
திகழ்ஒளி மூடியும் செய்து முடிந்ததா?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
தானாய் ஒருபதில் தகுதியாய் உரைத்தான்:
"அரைத்திடு கின்றது அதிநவச் சம்போ
சுழன்றிடு கின்றது சுடர்மூ டியதும்
அந்தியில் கொள்கலம் ஆர்ந்திட அரைக்கும்
அரைக்குமோர் கொள்கலம் அதுஉண வுக்காம்
விற்பனைக் கரைக்கும் வேறொரு கொள்கலம்
சேமிக்க அரைக்கும் திரும்ப மூன்றாவதை." 510
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 11-18
பாடல் 11 - லெம்மின்கைனனின் விவாகம் TOP
அடிகள் 1-110 : லெம்மின்கைனன் தீவின் உயர் குலப் பெண்களில் ஒரு மனைவியைப் பெறப் புறப்பட்டுப் போகிறான்.
அடிகள் 111-156 : அந்தத் தீவின் பெண்கள் முதலில் அவனை ஏளனம் செய்கிறார்கள்; பின்னர் நட்பாகப் பழகுகிறார்கள்.
அடிகள் 157-222 : அவன் தேடி வந்த குயிலிக்கி அவனுடைய எண்ணத்துக்கு இணங்கவில்லை; அதனால் அவன் குயிலிக்கியைப் பலவந்தமாக வண்டியில் ஏற்றிக் கடத்திச் செல்கிறான்.
அடிகள் 223-314 : குயிலிக்கி அழுகிறாள்; குறிப்பாக லெம்மின்கைனன் போருக்குச் செல்வதை அவள் விரும்பவில்லை. அதனால் லெம்மின்கைனன் தான் இனிமேல் போருக்குச் செல்வதில்லை என்றும் குயிலிக்கி இனிமேல் கிராமத்துக்கு நடனம் ஆடச் செல்வதில்லை என்றும் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொடுக்கிறார்கள்.
அடிகள் 315-402 : லெம்மின்கைனனின் தாய் தனது மருமகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள்.
*அஹ்தியைப் பற்றியிஃ தறிந்துசொல் தருணம்
போக்கிரி அவன்நிலை புகன்றிடும் நேரம்
தீவினில் வசித்துத் திகழுமிவ் வஹ்தி
*லெம்பியின் குறும்புடை அம்புவி மைந்தன்
வானுயர் இல்லில் வளர்ந்தவன் அவனே
அன்புமிக் கன்னையின் அருகினில் வளர்ந்தோன்
படர்ந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
காண்தொலைக் குடாவதன் கைவளைப் பரப்பில்.
*தூரநெஞ் சினனவன் மீனயின் றுயர்ந்தான்
ஒருவகை **மீனயின் றுயர்ந்தனன் அஹ்தி 10
மனிதரில் சிறந்தவோர் வல்லவ னானான்
சிவந்தநற் குருதிபோல் திகழ்ந்தவா லிபனாம்
தரமுடன் அமைந்தது தலைஅவ னுக்கே
தீரமும் திறமையும் திகழ்ந்தன துணையாய்;
ஆயினும் சிறுகுறை அவனில் இருந்தது
தனித்தவன் நடத்தையில் தரம்குறைந் திருந்தது:
பூவைய ரோடுதன் பொழுதெலாம் கழிப்பான்
அலைந்திரா முழுவதும் அவன்திரிந் திடுவான்
மங்கையர் தம்மையே மகிழவைத் திடுவான்
குழலியர் தம்முடன் குலவிக் களிப்பான். 20
தீவக மடந்தையாய்த் திகழ்பவள் *குயிலி
தீவக மடந்தை தீவின் மலரவள்
வானுயர் வீட்டில் வளர்ந்தாள் அவளே
எழிலாய் அழகாய் இனிதாய் வளர்ந்தாள்
தந்தையின் இல்லில் சதாஅமர்ந் திருப்பவள்
அழகுயர் சாய்மணை ஆசனப் பலகையில்.
நெடிதாய் வளர்ந்தவள் நீள்பெரும் சீர்த்தியள்
தூரதே சத்தால் துணைவர்கள் வந்தனர்
மிகமிகப் புகழுடை மெல்லியள் இல்லம்
சிறந்ததோட் டத்துச் சீர்சால் பகுதி. 30
அவளைத் தன்மகற் கருக்கன் கேட்டனன்
அவள்புக வில்லை அருக்கனின் நாடு,
அருக்கனின் அருகே அவள்ஒளி வீசி
கோடையிற் காயக் கொண்டிலள் விருப்பே.
சந்திரன் கேட்டான் தன்மகற் கவளை
சந்திர நாடு தான்புக் கிலளாம்,
சந்திர னருகில் தண்ணொளி வீசி
வானம் சுற்றி வரும்விருப் பிலளே.
தாரகை கேட்டது தன்மகற் கவளை
தாரகை நாடு தான்புக் கிலளாம், 40
நீண்ட இரவுகள் நேத்திரம் சிமிட்டி
குளிர்வான் இருக்கக் கொண்டிலள் விருப்பே.
*எஸ்த்தோனி யாவிருந் தேகினர் வரன்மார்
*இங்கிரி யாவிருந் தெழுந்தனர் பிறசிலர்
அங்கெலாம் பாவை அவள்புக் கிலளாம்
அவளே அளித்தாள் அதற்கோர் மறுமொழி:
"விரயமா கிறது வீணாய் நும்பொன்
வெள்ளியும் வீணாய் விரைந்தழி கிறது
நாடுஎஸ்த் தோனியா நான்புக மாட்டேன்
போவதே யில்லைநான் போகவே மாட்டேன் 50
எஸ்த்தோனி(ய) நீரில் எழிற்பட கோட்டேன்
தீவினில் பகடையாய் தினந்தொறும் மாறேன்
எஸ்த்தோனி யாமீன் எடுத்துண மாட்டேன்
எஸ்த்தோனி யா**ரசம் எடுத்துநான் குடியேன்.
இங்கிரி யாவும் ஏகநான் மாட்டேன்
அதன்நீர்க் கரைக்கும் அயல்மேல் நிலத்தும்
பசியுள தாங்கு பலதும் குறைவு
மரக்**குச் சியொடு மரங்களும் பஞ்சம்
குடிநீர்ப் பஞ்சம் கோதுமைப் பஞ்சம்
உறுதா னியத்து ரொட்டியும் பஞ்சம்." 60
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அழகிய தூர நெஞ்சினன் அவன்தான்
செய்தான் முடிவு செய்திடப் பயணம்
தீவதன் மலரைத் திருமணம் செய்ய
தனித்துவம் வாய்ந்த மணப்பெண் அவளை
அழகிய கூந்தல் அமைந்த பாவையை.
ஆயினும் சொன்னாள் அன்னையோர் தடையே
வயோதிப மாது வந்தெச் சரித்தாள்:
"செல்வஎன் மகனே சென்றிட வேண்டாம்
உன்னிலும் பார்க்க உயர்விடம் நோக்கி 70
அங்கே உன்னை அவர்கள் ஏற்றிடார்
உயரிய தீவின் உறவினர் மத்தியில்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"என்இல் சிறந்ததே இல்லையா யிடினும்
என்னினம் சிறந்ததே இல்லையா யிடினும்
காரியம் என்உடற் கவினால் ஆகும்
நேர்பிற சிறப்பால் நினைத்தது நடக்கும்."
அன்னை தடையாய் இன்னும் நின்றாள்
லெம்மின் கைனன் செய்பய ணத்து 80
தீவில் வாழ்ந்த சிறப்பினத் துக்கு
உயர்வாய் வாழ்ந்த உறுகுடி யினரிடம்:
"ஏளனம் செய்வராங் கிருக்கும் மகளிர்
பாவையர் உன்னைப் பார்த்துச் சிரிப்பர்."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அரிவையர் சிரிப்பைநான் அடக்குவேன், ஆமாம்,
நிறுத்துவேன் மகளிர் நிகழ்த்தும் சிரிப்பை
வழங்குவேன் பையனை மார்பினில் சுமக்க
தருவேன் குழந்தையைத் தளிர்க்கர மணைக்க 90
அப்போ தேளனம் அவர்கள் செய்திடார்
இகழ்ச்சியாய் என்னை எதுவுமே சொல்லார்."
இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"அடடா, பேதைநான் ஆகினேன் வாழ்வில்,
தீவின் மகளிரைச் செய்தால் கேவலம்
அவமானம் தூய மகளிர்க் களித்தால்
அதனால் நீயோ அடைவது கலகம்
பெரும்போர் தொடர்வது பிறிதொரு உண்மை
அனைத்துத் தீவின் அருமண வாளரும்
வாளொடு நூறென வந்திடு வார்கள் 100
பேதை மகனே பெரிதுனைத் தாக்குவர்
சுற்றித் தனியாய்ச் சூழ்ந்து வளைப்பர்."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
தாயினெச் சரிக்கை தனையும் இகழ்ந்தான்
எடுத்தான் சிறந்த எழிற்பொலிப் புரவி
ஏர்க்காற் பூட்டினன் இகல்தெரி புரவி
புறப்பட் டெழுந்து போனான் பயணம்
தீவின் போர்பெறும் திருவூ ரதற்கு
தீவதன் மலரைத் திருமணம் செய்ய
தீவின் தனித்துவச் செல்வியாம் மகளை. 110
நங்கையர் லெம்மின் கைனனை நகைத்தனர்
மங்கையர் கேலி வலுவாய்ச் செய்தனர்
பாதையில் வினோதமாய்ப் படர்ந்தபோ தினிலே
தோட்டத்து வினோதத் தொடர்பய ணத்திலே,
வண்டியை அதுகவிழ் வரையும் ஓட்டினன்
உருட்டி வாயிலில் உடனதை வீழ்த்தினன்.
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 120
"இதுபோல் கண்டதே இல்லைமுன் னாளில்
இல்லையே கண்டதும் இல்லையே கேட்டதும்
என்னைப் பார்த்தொரு பெண்சிரிப் பதனை
ஏளனம் மகளிர் என்னைச் செய்வதை."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"விரும்புமித் தீவில் வெற்றிடம் உண்டா
இடமெது முண்டா இந்நில மேட்டில்
என்விளை யாட்டை இனிவிளை யாட
நிலமெதும் உண்டா நிகழ்த்துவதற் காடல் 130
தீவக மகளிரைச் செறிகளிப் பூட்ட
கூந்தலார் பெண்களைக் கூடிநன் காட?"
தீவுப் பெண்கள் செப்பினர் இப்படி
கடல்முனைக் கன்னியர் கள்விடை கூறினர்:
"ஆமாம், தீவிலே அகல்வெற் றிடமுள
தீவின் மேட்டிலே திகழிட முளது
உன்விளை யாட்டை உயர்வாய் நிகழ்த்த
ஆடலைச் செய்ய அகல்நில முண்டு
ஆயனுக் கேற்ற அமைவெறும் பூமி
எரித்த காடு இடையனுக் குண்டு 140
தீவுப் பிள்ளைகள் தேகம் மெலிந்தவர்
ஆயினும் கொழுத்தவை அணிபரிக் குட்டிகள்."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
தொழிலொன் றிடையனாய்த் துணிவுடன் பெற்றான்
மந்தை மேய்த்தலை வளர்பகல் செய்தான்
இரவில் மகளிரின் இனிமையில் களித்தான்
அங்குள பெண்களோ டாடி மகிழ்ந்தான்
**கூந்தலார் பெண்களைக் கூடிநன் காடினான்.
குறும்பன் லெம்மின் கைனனிவ் வாறு
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன் 150
அரிவையர் நகைப்புக் கமைத்தான் முடிவு
ஏளனப் பேச்சை இல்லா தொழித்தான்;
அந்த இடத்திலோர் அரிவையும் இல்லை
தூய்மையா னவளும் சொல்லவாங் கில்லை
அவன்தொடாப் பெண்ணென அறுதியிட் டுரைக்க
அவன்அரு கேதுயில் அயராப் பெண்ணென.
எல்லோர் நடுவிலும் இருந்தாள் ஒருகுமர்
தீவின் உயர்ந்த செழுங்குடி மரபாள்
ஏற்கா திருந்தாள் எம்மண மகனையும்
நினையா திருந்தாள் நேரிய கணவனை 160
குயிலிக்கி அழகிய குமரியே அவளாம்
தீவிலே மலர்ந்த செழும்எழில் மலரவள்.
குறும்பன் லெம்மின் கைன னப்போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
அணிந்து காலணி அழித்தான் நூறு
துடுப்புகள் வலித்துத் தொடர்ந்துநூ றழித்தான்
பெண்ணவள் தேடும் பெரும்வே லையிலே
அக்குயி லிக்கியை அடையுமெ ண்ணத்தில்.
குயிலிக்கி என்னும் கொழுமெழில் மங்கை
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 170
"எளிய மனிதா எதற்கா யலைகிறாய்?
கரைநிலப் புள்போல் கடிதூர்ந் தலைகிறாய்?
இங்குள பெண்டிரை ஏன்கேட் டலைகிறாய்?
**ஈயநெஞ் சினரை ஏன்விசா ரிக்கிறாய்?
இங்கிதற் கெனக்கு இலையவ காசம்
திரிகைக் கல்லைச் சேர்த்தரைக் கும்வரை
உலக்கையை இடித்து உறத்தேய்க் கும்வரை
உரலை இடித்தணு உருவாக் கும்வரை.
மதியேன் நான்சிறு மதிபடைத் தோரை
சபலம் சிறுமதி தாம்உடை யோரை, 180
உரம்பெறும் தரமுடை உடல்தான் வேண்டும்
உரமும் தரமும் உடையஎன் உடற்கு,
அழகும் எழிலும் அமையுருத் தேவை
எழிலார் அழகுடை எனதுரு வதற்கு,
வடிவுடைக் கவினார் வதனமே தேவை
வடிவும் கவினும் வாய்ந்தஎன் முகத்துக்(கு)."
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
அரிதாய் மாதத் தரைக்கூ றழிந்தது
பலநாள் சென்று ஒருநாள் வந்தது
பலமாலை களிலே ஒருமாலை வேளை 190
விளையாட் டினிலே மின்னார் மூழ்கினர்
அழகுறும் அரிவையர் ஆடலில் ஆழ்ந்தனர்
இரகசிய மாக இருந்தவூர்த் தோப்பில்
புல்தரைப் பக்கமாய்ப் புணர்வெளி ஒன்றிலே
எல்லோர்க் கும்**மேல் இருந்தனள் குயிலி(க்கி)
தீவதன் சிறப்புடைச் செறிபுகழ் மலரவள்.
வந்தனன் போக்கிரி மன்னுசெங் கதுப்பினன்
குறும்பன் லெம்மின் கைனன் விரைந்தனன்
தனக்கே உரிய தனிப்பொலிப் புரவியில்
தேர்ந்தே எடுத்த சிறப்புறும் குதிரையில் 200
விளையாட் டயரும் வியன்நில மத்தியில்
அழகிய மாதர் ஆடிய இடத்தில்;
குயிலிக்கி அவளைக் குறுகியே பற்றினன்
ஏற்றினான் பெண்ணை இயைந்ததன் வண்டி
அமர்த்தினன் தனதுதோ லாசனத் தவளை
வண்டியின் அடியில் வைத்தனன் அவளை.
சவுக்கினால் பரியைச் சாடினான் ஓங்கி
சாட்டை சுழற்றிச் சாற்றிநன் கறைந்தான்
அவனது பயணம் அவ்வா றெழுந்தது
புறப்படும் போதே புகன்றனன் இவ்விதம்: 210
"ஒருக்கால்(உம்) வேண்டாம் ஓ,இள மடவீர்!
நடந்த கதையினை நவிலவும் வேண்டாம்
மற்றுநான் இங்கே வந்தது பற்றியும்
செல்வியைக் கடத்திச் சென்றது பற்றியும்.
பகருமிம் மொழிக்குப் பணியா விடிலே
கொடிய சம்பவம் கூடுமுங் களுக்கு
பாடுவேன் போர்க்களம் படரநும் துணைவர்
பாடுவேன் வாளிற் படநும் இளைஞர்
என்றுமே அவர்தம் செய்திகள் கேட்கீர்
வாழ்நாள் என்றுமே மற்றவர் காணீர் 220
பாதையில் அவர்கள் படர்ந்துசெல் வதையும்
வண்டியிற் செல்வதும் வயலிடைக் காணீர்."
மெய்குயி லிக்கி மேல்முறை யிட்டாள்
தீவின் மலரவள் தேம்பி அழுதாள்:
"இங்கிருந் தென்னை ஏகிட விடுவாய்
பிள்ளை சுதந்திரம் பெறவிடு விப்பாய்
திரும்பியே வீடு சென்றிட விடுவாய்
அழுது புலம்பும் அன்னையின் அருகில்,
எனைச்சுதந் திரமாய் ஏக விடாயேல்
வீட்டுக்குச் செல்ல விடாதுபோ னாலோ 230
இன்னும் சோதரர் இருக்கிறார் ஐவர்
எழுவர் மாமனின் மக்கள் இருக்கிறார்
முயலைத் தொடர்ந்து முன்னோடி வருவர்
கன்னியின் தலையைக் காத்திட வருவர்."
அவட்கு விடுதலை அமையா நிலையில்
கண்மடை திறந்து கண்ணீர் பெருக்கினள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"பேதைநான் வீணாய்ப் பிறந்தேன் உலகில்
வீணாய்ப் பிறந்தேன் வீணாய் வளர்ந்தேன்
வாழ்நாள் முழுக்க வாழ்ந்தேன் வீணாய் 240
பெறுமதி யற்ற பிறன்கைப் பட்டேன்
மதிப்பெது மில்லா மனிதனைச் சேர்ந்தேன்
போரிடும் ஒருவன் புறம்வந் தணைந்தேன்
ஓய்விலாப் போர்செயும் ஒருவனைச் சார்ந்தேன்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழில்மிகு தூர நெஞ்சினன் இயம்பினன்:
"கண்ணே, குயிலி(க்கி), கனிவன் புளமே!
எனது சிறிய இனியநற் பழமே!
எதற்கும் துன்பம் இவ்வா றுறாதே
உனைநான் வருத்தேன் ஒருபொழு தேனும் 250
அணைப்பினில் இருப்பாய் அடி,நான் உண்கையில்,
கரங்களில் இருப்பாய் கனி,நான் நடக்கையில்,
அருகினில் இருப்பாய் அயல்நான் நிற்கையில்,
பக்கத் திருப்பாய் படுக்கும் பொழுதே.
எனவே நீயும் எதற்கு வருந்தல்?
நெடுமூச் செறியும் நீள்துயர் எதற்கு?
இதற்கா வருந்தி இடர்நீ படுகிறாய்
இதற்கா நெடுமூச் செறிந்து அழுகிறாய்
பஞ்சம் பசுக்கள், பஞ்சம் ரொட்டி,
எல்லாம் குறைவு என்றே எண்ணமா? 260
எதற்கும் வருந்தல் இப்போ வேண்டாம்
பசுக்களும் என்னிடம் பலப்பல உண்டு
கறக்கும் பசுக்களும் கணக்கிலா துள்ளன
முதலில் சதுப்பு நிலத்து **'மூ ரிக்கி'
அடுத்துக் குன்றில் அலையு(ம்) **'மன் ஸிக்கி'
**'புவோலுக் கா'எரி காட்டின்மூன் றாவது
உண்ணா மலேஅவை உரமாய் உள்ளன
கவனிப் பின்றியே கனசிறப் புற்றன;
மாலையில் கட்டி வைப்பது மில்லை
காலையில் அவிழ்த்துக் கலைப்பது மில்லை 270
அவைக்கு வைக்கோல் அளிப்பது மில்லை
உப்பில் உணவில் பஞ்சமொன் றில்லை.
அல்லது இதற்கா உள்வருந் துகிறாய்?
நெடுமூச் சிதற்கா நீயெறி கின்றாய்?
உயர்உற வினர்எனக் குற்றிலர் என்றா?
எனக்குச் சிறந்தவீ டில்லையே என்றா?
உயருற வினரெனக் குற்றிலர் எனினும்
எனக்குச் சிறந்தவீ டில்லையே எனினும்
என்னிட முளதொரு இகல்மகத் துவவாள்
ஒளிவிடும் அலகொடு ஒருவாள் உண்டு 280
அதுவே எனக்கு அதியுயர் உறவு
அதுவே எனக்கு ஆம்சீர்க் குடும்பம்
அலகைகள் அமைத்து அருளிய வாளது
கடவுளர் தீட்டிக் கைத்தரும் வாளது
எனது உறவினை இவ்வா றுயர்த்தினேன்
என்குடும் பத்தை இயல்சிறப் பாக்கினேன்
கூர்மை மிக்கஅக் கொடுவாள் அதனால்
அலகுமின் எறிக்கும் அந்தவாள் அதனால்."
பேதைப் பெண்ணாள் பெருமூச் செறிந்தாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 290
"ஓகோ, அஹ்தி, லெம்பியின் புதல்வா!
ஒருபெண் என்போல் உனக்குவேண் டுமெனின்
துணைவாழ் நாளெலாம் தொடரவேண் டுமெனின்
கோழிஉன் அணைப்பில் கொள்ளவேண் டுமெனின்
அகலா நிரந்தர ஆணையொன் றுரைப்பாய்
போருக்கு இனிமேல் போகேன் என்று
பொன்பெற நேரினும் போகேன் என்று
வெள்ளியின் ஆசையால் விலகேன் என்று."
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 300
"அழியாச் சத்தியம் அளிக்கிறேன் நான்இதோ
போருக்கு இனிமேல் போகவே மாட்டேன்
பொன்தேவைப் படினும் போகவே மாட்டேன்
வெள்ளியை விரும்பியும் விலகவே மாட்டேன்;
நீயொரு சத்தியம் நிகழ்த்துவாய் இப்போ
போகாய் உன்ஊர்ப் புறம்நீ என்று
விருப்புடன் துள்ளி விளையாட் டயர
ஆசையாய் நடனம் ஆடிக் களித்திட."
அப்போ(து) இருவரும் அளித்தனர் சத்தியம்
ஒப்பந்தம் என்றும் உரைத்தனர் நிலைபெற 310
எனைவரும் உணர்ந்திடும் இறைவனின் முன்நிலை
சர்வவல் லோனது தண்முகத் தின்கீழ்
போகேன் அஹ்தி போருக்கு என்று
குயிலிக்கி ஊர்ப்புறம் குறுகேன் என்று.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
ஓங்கி அடித்தான் உறுபரி சவுக்கால்
பொலிப்பரி யதனைப் புடைத்தான் சவுக்கால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"தீவின்புற் றிடரே, செலவிடை பெறுகிறேன்,
ஊசிமர வேரே, உயர்தா ரடியே, 320
நற்கோ டையில்நான் நடந்த தடங்களில்
குளிர்கா லத்துயான் உலாவிய இடங்களில்
மேகமூ டிராநட மாடிய விடங்களில்
சீறிய காற்றிலே போயொதுங் கிடங்களில்
இக்கான் கோழியை இனிதுதே டுகையிலே
இந்தவாத் தினைத்துரத் திட்டநே ரத்திலே."
பயணம் தொடர்ந்து பாங்காய் நடந்தது
வீடு கண்ணில் விரைந்து தெரிந்தது
இந்தச் சொற்களில் இயம்பினள் அரிவை
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: 330
"அங்கோர் வசிப்பிடம் அதோ தெரிகிறது
சிறிதாய் வறிதாய்த் தெரிகின் றதது
அந்தக் குடிசை ஆருக் குரியது
உரியது யார்க்கப் பொலிவிலா இல்லம்?"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வசிப்பிடம் பற்றி வருந்தவும் வேண்டாம்
குடிசைக் காய்ப்பெரு மூச்சதும் வேண்டாம்
வேறு வசிப்பிடம் விரைந்துகட் டப்படும்
மிகவும் சிறந்தவை அவைநிறு வப்படும் 340
பலமிகச் சிறந்த பலகை யவற்றால்
சிறப்பு மிகுந்த மரங்கள் அவற்றினால்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
விரைந்து வந்து வீட்டை அடைந்தான்
அருமை அன்னை அருகை அடைந்தான்
மதிப்புடைப் பெற்றவர் வயமருங் கணைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"காணவே யிலையுனைக் கனநாள் மகனே,
வெகுநாள் அந்நிய நாட்டில்வே றிருந்தாய்." 350
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அவமா னம்அவ் வரிவையர்க் கமைத்தேன்
பதிலடி தூய பாவையர்க் களித்தேன்
பார்த்தெனை அவர்கள் பழித்ததற் காக
நன்கெனை அவர்கள் நகைத்ததற் காக;
வண்டியில் சிறந்ததோர் வனிதையைக் கொணர்ந்தேன்
அவள்தோ லிருக்கையில் அமரவைத் திட்டேன்
வண்டிப் பீடம் வைத்தேன் அவளை
தூயகம் பளியில் சுற்றி யெடுத்தேன் 360
கோதையர் நகைக்குக் கொடுத்தேன் பதிலடி
ஏந்திழை யாரின் ஏளன உரைக்கு.
அன்னையே, தாயே, எனைச்சுமந் தவளே!
என்னுடை அம்மா, எனைவளர்த் தவளே!
எதற்கே கினனோ அதனைப் பெற்றேன்
தேடிய தெதுவோ நாடியஃ துற்றேன்;
சிறந்ததோர் மெத்தையைத் தெரிந்து விரிப்பாய்
தருவாய் மென்மைத் தலையணை யினிதே
சொந்தஎன் நாட்டில் சுகத்துடன் படுக்க
என்னுயிர்க் கினிய இளமைப் பெண்ணுடன்." 370
இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இறைவனே, உனக்கு இயம்பினேன் நன்றி,
கர்த்தனே, நின்புகழ் கனிந்தே இசைத்தேன்,
எனக்கொரு மருமகள் ஈந்ததற் காக
நல்லதீ ஊத நல்லவள் ஒருத்தியை
துணிநெய்யச் சிறந்த துடியிடை ஒருத்தியை
நல்லுடை பின்ன வல்லவள் ஒருத்தியை
துணிமணி தோய்த்துப் பணிசெயு மொருத்தியை
துணிமணி வெளுக்கத் துணைதந் ததற்காய். 380
நீபெற்ற பேற்றை நினைத்துநீ நன்றிசொல்
நல்லதே பெற்றாய் நல்லதே யடைந்தாய்
நல்லதைக் கர்த்தர் நயந்துதந் ததற்காய்
அருங்கரு ணைக் கடல் அளித்தநன் மைக்கு.
பனித்திண்மப் **பறவை பரிசுத்த மானது
அதனிலும் தூய்மை அரியஉன் துணைவி
நுவல்கடல் அலையும் நுரையே வெண்மை
அதனிலும் வெண்மைநீ அரிதுபெற் றவளாம்
கடலிடை வாத்து கவின்வனப் புடையது
அதனிலும் வனப்புநீ அரிதுகொணர்ந் தவள் 390
உயர்வான் தாரகை ஒளிமய மானது
அதனிலும் ஒளிர்பவள் அரியஉன் மணப்பெண்.
கூடத்தின் தரையைக் கூட்டி **அகற்று
பயன்மிகு பெரிய பலகணி கொணர்வாய்
பொற்சுவ ரெல்லாம் புதிதாய் நிறுத்து
வசிப்பிட மனைத்தையும் மாற்று சிறப்புற
கட்டு கூடங்கள் கடிமனைக் கெதிரே
பூட்டு கூடத்தில் புதிய கதவுகள்
இளம்பெண் ஒருத்தியை இன்றுநீ பெற்றதால்
நேர்எழில் பெண்ணை நீபார்த் ததனால் 400
உன்னிலும் மேலாம் உயர்சிறப் பொருத்தியை
உன்னினத் தோரிலும் உயர்ந்தவள் ஒருத்தியை."
பாடல் 12 - சத்தியம் தவறுதல் TOP
அடிகள் 1 - 128 : குயிலிக்கி சத்தியத்தை மறந்து கிராமத்துக்குப் போகிறாள். அதனால் சினமடைந்த லெம்மின்கைனன் அவளை விலக்கிவிட்டு வடபகுதி மங்கையிடம் புறப்படுகிறான்.
அடிகள் 129 - 212 : லெம்மின்கைனனின் தாய் அவன் அங்கே கொல்லப்படலாம் என்று தடுக்கிறாள். தலை வாரிக் கொண்டிருந்த லெம்மின்கைனன் தனக்கு கெடுதி நேர்ந்தால் அந்தச் சீப்பில் இருந்து இரத்தம் பெருகும் என்று உரைக்கிறான்.
அடிகள் 213 - 504 : அவன் புறப்பட்டு வட நாட்டுக்கு வருகிறான். அங்கே மந்திரப் பாடலைப் பாடி எல்லா அறிஞர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறான், ஒரேயொரு கொடிய இடையனைத் தவிர.
அதன்பின் அஹ்தி லெம்மின் கைனன்
அவன்தான் அழகிய தூர நாட்டினன்
எல்லாக் காலமும் இனிதே வாழ்ந்தான்
இளமைப் பருவ ஏந்திழை தன்னுடன்;
போருக் கேயவன் போனதும் இல்லை
குயிலிக்கி கிராமம் குறுகவு மில்லை.
போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
அவன்தான் அஹ்தி லெம்மின் கைனன்
மீன்சினைக் கின்றதோர் வியனிட மடைந்தான் 10
மாலையில் வீடு வந்தனன் இல்லை
அடுத்தநாள் இரவும் அவன்இல் வந்திலன்
குயிலிக்கி அதனால் குறுகினள் கிராமம்
அங்குள மகளிரோ டாடிடப் போனாள்.
இந்தச் செய்தியை எவர்கொண் டேகுவர்
இப்புதி னத்தை எவர்போய்ச் சொல்வார்?
அஹ்தியின் சகோதரி அவள்*ஐ னிக்கி
செய்தியை அவளே தெரிந்தெடுத் தேகினள்.
செய்தியைச் சுமந்து சென்றாள் அவளே:
"அன்பே, அஹ்தி, அரியஎன் சோதரா, 20
குயிலிக்கி எழுந்து குறுகினள் கிராமம்
அந்நியர் வாயில்போய் அடைந்தனள் அவளே
சென்றனள் கிராமப் பெண்டிரோ டாட
நறுங்குழ லாருடன் நடமிடச் சென்றாள்."
அஹ்திப் பையன் அவன்நிக ரில்லான்
அவன்தான் குறும்பன் லெம்மின் கைனன்
கோபம் கொண்டான் குரோதம் கொண்டான்
நீண்ட நேரமாய் நெடுஞ்சினங் கொண்டான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே! 30
என்மே லாடையை எடுத்துநீ கழுவினால்
கறுத்தப் பாம்பின் கடுங்கொடு நஞ்சிலே,
உடன்அதை விரைவாய் உலரப் பண்ணினால்,
போருக்கு நானும் புறப்பட் டிடுவேன்
வடபால் இளைஞர் வளர்தீத் தடத்தே
லாப்பு மைந்தர் இருப்பிடம் அதற்கு
குயிலிக்கி கிராமம் குறுகியே விட்டாள்
அந்நியர் வாயிலை அடைந்தே விட்டாள்
அந்தப் பெண்களோ டவள்விளை யாட
நறுங்குழ லாருடன் நடனமா டற்கு." 40
குயிலிக்கி இப்போ கூறினள் ஆமாம்
முதலில் பெண்ணவள் மொழியமுன் வந்தாள்:
"அன்பே, இனியஎன் அஹ்தியே, கேளாய்!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்
துயிலும் பொழுது தோன்றிய தோர்கனா
அமைதியாய் உறங்கும் அப்போ கண்டேன்:
உலைக்களம் போல ஒருநெருப் பெழுந்தது
சுவாலையாய் எழுந்து சுடர்விட் டெரிந்தது
சாளரத் தின்கீழ் சரியாய் வந்தது
பின்சுவர்ப் பக்கமாய்ப் பெரிதாய்ச் சென்றது 50
உடன்சுழன் றங்கிருந் துள்ளே நுழைந்தது
உக்கிரம் கொண்டது உயர்நீர் வீழ்ச்சிபோல்
தரையிலே இருந்து தாவிக் கூரை
பலகணி பலகணி பரவிச் சென்றது."
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பெண்களின் கனவைநான் நம்புவ தில்லை
மனைவியர் சத்திய வாக்கும்நான் நம்பேன்
அன்னையே, தாயே, எனைச் சுமந்தவளே!
எனதுபோ ராடையை இங்கே கொணர்க! 60
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!
உள்ளுணர் வென்னுள் ஓ,விழிக் கின்றது
போருக் கானதாம் **பானம் பருக
போருக் குரியநற் புதுநறை நுகர."
இவ்வா றப்போ தியம்பினள் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
போருக்கு நீயும் புறப்பட வேண்டாம்!
பானம்எம் வீட்டில் பருகிடற் குளது
**மரப்பீப் பாக்களில் மதுமிக வுளது
சிந்துர மரத்தில் செய்தமூ டியின்பின்; 70
உனக்கு அருந்தயான் உடனே கொணர்வேன்
வரும்நாள் முழுக்க மனம்போல் அருந்தலாம்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வேண்டேன் வடித்த வீட்டுப் பானம்
அதற்குமுன் பாக ஆற்றுநீர் குடிப்பேன்
வலிக்கும் சுக்கான் வல்லல கேந்தி;
ஏந்துமந் நீரெனக் கினிமையா யிருக்கும்
இல்லிலே வடித்த இனியபா னத்திலும்,
எனதுபோ ராடையை இங்கே கொணர்வாய்!
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக! 80
வடபால் நிலத்து வசிப்பிடம் போகிறேன்
லாப்பு மைந்தரின் இருப்பிடம் போகிறேன்
பெரும்பொன் கேட்டுப் பெறற்குப் போகிறேன்
வெள்ளி கோரிமிகப் பெறப் போகிறேன்."
கூறினள் லெம்மின் கைனன் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
இல்லிலே நிறைய நல்லபொன் உளது
வெள்ளியும் கூடம் மிகநிறைந் துளது
சரியாய் நேற்றுஇச் சம்பவம் நடந்தது
வைகறைப் பொழுதும் மலர்ந்திடும் நேரம் 90
விரியன் வயல்களை அடிமை உழுதனன்
இகல்அரா நிறைந்த இடத்தைப் புரட்டினன்
உழுமுனை பெட்டக மூடியொன் றுயர்த்த
உழுமுனைப் பின்புறம் ஒரு**கா சிருந்தது
நுழைந்துள் இருந்தவை நூறு நூறாகும்
அதிற்புக் கிருந்தவை ஆயிர மாயிரம்
பெட்டகம் களஞ்சியப் பெரும்அறைக் கொணர்ந்து
அறையின் மேல்தட் டதனைவைத் திட்டேன்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வீட்டுச் செல்வம் வேண்டேன் எதுவும் 100
போருக்குச் சென்றொரு **மார்க்குப் பெறினும்
அதையே சிறந்ததாய் அகம்நான் கருதுவன்
இல்லிலே உள்ள எல்லாப் பொன்னிலும்
உழுமுனை தூக்கிய உயர்வெள் ளியிலும்;
எனதுபோ ராடையை இங்கே கொணர்வாய்!
எனதுபோ ருடைகளை ஏந்திவந் திடுக!
போகிறேன் வடபால் நிலம்போ ருக்கு
லாப்பின் மைந்தரோ டேகிறேன் போர்க்கு.
உள்ளுணர் வென்னுள் உடன்விழிக் கிறது
எண்ணம் உயிர்பெற் றெழுகின் றனஆம் 110
என்செவி தாமாய் இதமுறக் கேட்க
என்விழி தாமாய் இனிமையாய்ப் பார்க்க
ஒருபெண் வடக்கிலே உள்ளனள் என்பதை
இருண்ட பூமியில் ஏந்திழை உள்ளதை
மணாளர் தம்மையே வரித்திடா மங்கை
அரியநற் கணவரை அடைந்திலா நங்கை."
கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"ஓ,என் அஹ்தி, உயர்ந்தஎன் மகனே!
இல்லில் குயிலி(க்கி) இருக்கிறாள் உனக்கு
உயர்குடிப் பிறந்த உத்தம மனையாள்; 120
இரண்டு பெண்கள் இருப்பது கொடுமை
மனிதன் ஒருவனின் மலர்மஞ் சத்தே."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"குயிலிக்கி என்பவள் குறுகுவோள் கிராமம்
ஆட்டம் அனைத்திலும் அவள்கலந் திடட்டும்
பலவீட் டினிலும் படுத்தெழுந் திடட்டும்
ஊர்ப்பெண் களையெலாம் உவகையூட் டட்டும்
நளிர்குழ லாருடன் நடனமா டட்டும்."
தாயும் அவனைத் தடுக்க முயன்றாள்
எச்சரித் தனளவ் வெழில்முது மாது : 130
"ஆயினும் வேண்டாம் அரியஎன் மகனே,
வடபால் நிலத்து வசிப்பிடம் போவது
மந்திர சக்தியின் வளரறி வின்றி
அறிவுடன் ஆழ்ந்த ஆற்றல்இல் லாமல்
வடபால் இளைஞரின் வளர்தீத் தடத்தில்
லாப்பு மைந்தரின் இருப்பிடம் நோக்கி!
லாப்பியர் மந்திரப் பாடலை இசைப்பர்
அங்கே *துர்யா ஆடவர் திணிப்பர்
உன்வாய் கரியிலும் உன்தலை சேற்றிலும்,
முன்கரம் புழுதியிலும் முழுதும் அமுக்குவர் 140
புதைப்பர் உன்முட்டியைப் புணர்சுடு சாம்பலில்
எரிந்தெழும் அடுப்பின் இயல்கல் நடுவில்."
லெம்மின் கைனன் அப்போ தியம்பினன்:
"மந்திர காரர்கள் மாயம்முன் செய்தனர்
மாயம் செய்தனர் **வல்அராச் சபித்தன
லாப்பியர் மூவர் என்னுடன் மோதினர்
கோடை காலக் குளிர்இர வொன்றில்
நிர்வாண மாயொரு நெடும்பா றையிலே
ஆடையும் இடுப்புப் பட்டியும் அகன்று
என்னுடல் சிறுதுணி இல்லா நிலையில்; 150
இதுதான் அவர்கள் என்னிடம் பெற்றது
இழிந்த மனிதர் இதுதான் பெற்றனர்
பாறையில் மோதிய கோடரி போல
குன்றிலே பாய்ந்த நுண்துளைக் **கோல்போல்
பனித்திடர் வழுக்கிய தனிமரக் கட்டைபோல்
வெற்று வீட்டில் விளைமர ணம்போல்.
ஒருவழி நிலைமை உறுமச் சுறுத்தலாய்
வேறு விதமதாய் மாறியே வந்தது,
எனைவென் றிடற்கே எலாம்முயன் றார்கள்
அமிழ்த்தி விடுவதாய் அச்சுறுத் திட்டனர் 160
சதுப்பு நிலமதன் தனிநடை பாதையாய்
அழுக்கு நிலத்திலே குறுக்குப் பலகையாய்
செய்யஎன் தாடையைச் சேற்றிலே தாழ்த்தி
அழுக்கிலே தாடியை அமிழ்த்தவும் நினைத்தனர்
ஆயினும் நானொரு அத்தகு மனிதனே
அஞ்சிட வில்லைநான் அதற்கெலாம் பெரிதாய்
மாறினேன் நானொரு மந்திர வாதியாய்
அறிந்தவன் ஆயினேன் அரியமந் திரங்கள்
கணையுடன் பாடினேன் சூனியக் காரரை
எய்யவந் தோரை எறிபடைக் கலத்தொடும் 170
எதிர்மா யாவிகள் இரும்புவா ளுடனும்
உயர்அறி வுடையரை உருக்குடன் சேர்த்தும்
வீழ்த்தினேன் பயங்கர வீழ்ச்சியாம் துவோனி
திரண்ட கொடிய திரைநுரை நடுவில்
உயரப் பாயும் உறுமரு விக்கீழ்
அனைத்திலும் கொடிய அடிநீர்ச் சுழியில்
மந்திர வாதிகள் அங்குதுஞ் சட்டும்
பொறாமைக் காரர்கள் போய்த் துயிலட்டும்
புற்கள் முளைத்து புறமெழும் வரைக்கும்
தொப்பியின் ஊடாய் தொடுந்தலை ஊடாய் 180
சூனியக் காரரின் தோள்மூட் டூடாய்
தோளின் தசையைத் துளைத்துக் கொண்டு,
சூனியக் காரர் தூங்கும் இடத்தில்
பொறாமை பிடித்தோர் போய்த்துயி லிடத்தில்."
இன்னமும் அவனின் அன்னை தடுத்தாள்
லெம்மின் கைனன் நிகழ்த்தும் பயணம்
தாயவள் தடுத்தாள் தன்னுடை மகனை
மாது அந்த மனிதனைத் தடுத்தாள்:
"அங்கே செல்வதை அடியொடே நிறுத்து
குளிருடைக் கிராமக் கொடும்பகு திக்கு 190
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே!
அழிவு நிச்சயம் அணுகிடும் உன்னை
எழுச்சிகொள் மகர்க்கு ஏற்படும் வீழ்ச்சி
துயரம் குறும்பன் லெ(ம்)மின்கை னற்கு;
நூறு வாயினால் நுவன்ற போதிலும்
நம்புதற் கில்லை நான்உனை இன்னும்
உனக்குள் மந்திரப் பாடகன் உறைந்திலன்
வடக்குமைந் தர்க்கு வருமீ டிணையாய்
நீஓர்ந்த தில்லை நெடிய*துர் யாமொழி
லாப்பியர் பாடலும் ஏதும்நீ அறிந்திலை." 200
குறும்பன் லெம்மின் கைனன் அப்போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
வாரத் தொடங்கினன் வாகாய்த் தன்தலை
சீவத் தொடங்கினன் சீராய்த் தலைமயிர்
எடுத்துச் சுவரில் எறிந்தனன் சீப்பை
தூணில் எறிந்தனன் தொடுமயிர்க் **கோதியை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"அப்போ லெ(ம்)மின்கை னனையழி வணுகும்
எழுச்சி மகற்கு வீழ்ச்சியேற் படுகையில் 210
மயிர்க்கோ தியினால் வழிந்திடும் குருதி
சீப்பினி லிருந்து செந்நீர் பெருகிடும்."
குறும்பன் லெம்மின் கைனன் சென்றனன்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
தாயார் அவனைத் தடுத்த போதிலும்
பெற்றவள் எச்சரித் திட்ட போதிலும்.
இடுப்பில் பட்டியை இட்டுப் பூட்டினான்
இருப்பு மேலாடை எடுத்தே அணிந்தான்
கொளுக்கியை உருக்குப் பட்டியில் கொளுவினான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 220
"ஆயுதம் மனிதருக் கானதோர் காப்பு
இரும்பு மேலாடை இதனிலும் காப்பு
உருக்குப் பட்டி உயர்ந்தது சக்தியில்
மந்திர வாதிகள் மத்தியில் அவர்க்கு
தீயோர் பற்றிச் சிறிதி(ல்)லைக் கவலை
அஞ்சுதல் நல்லவர் ஆயினும் இல்லை."
கையிலே சொந்தக் கதிர்வாள் எடுத்தான்
தீயுமிழ் அலகைச் செங்கர மெடுத்தான்
அலகைகள் தட்டி அமைத்தநல் வாளது
தெய்வமே தீட்டித் திருத்திய வாளது 230
வாளைக் கட்டினான் வலியதன் பக்கம்
செருகினான் உறையுள் செருந்திறல் வாளை.
இருப்பது கவனமாய் எங்கே மனிதன்?
காப்பது எங்கே கருமவீ ரன்த(ன்)னை?
இங்கே கவனமாய் இருந்தனன் கொஞ்சம்
தன்னை இங்கே தற்காப் பாக்கினன்:
உத்தரத் தின்கீழ் உயர்கடை வாயிலில்
வசிப்பிடம் அதனின் வருகடை நிலையில்
முன்றிலின் நல்வழி முன்தொடக் கத்தில்
இறுதி வரைக்கும் எழில்வாய் அனைத்திலும். 240
அங்ஙனம் மனிதன் அருங்காப் பியற்றினன்
பெண்கள் இனத்தின் பெரும்எதிர்ப் பெதிராய்
ஆயினம் காவல் அவைபலம் அல்ல
பயனுள தல்ல பாதுகாப் பணிகள்
தன்னை மீண்டும் தற்காப் பாக்கினன்
ஆண்கள் இனத்தின் அரும்எதிர்ப் பெதிராய்
இரண்டு வழிகள் இணைபிரி இடத்தில்
நீல மலையின் நீடுயர் உச்சியில்
நகர்ந்து திரிந்திடும் நளிர்சேற் றிடங்களில்
நீர்நிறைந் தோடும் நீரூற் றுக்களில் 250
வேகமாய்ப் பாயும் வியன்நீர் வீழ்ச்சியில்
பலமாய்ப் பெருகும் பல்நீர்ச் சுழிப்பினில்.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"எழுவீர், புவியிருந் தெதிர்வாள் மனிதர்காள்!
வியன்நில வயதுகொள் வீரர்கள், எழுவீர்!
எழுவீர், கிணற்றிருந் திகல்வல் மறவர்காள்!
எழுவீர், ஆற்றிருந் திகல்வில் வீரர்காள்!
அடவியே, எழுகநின் ஆட்களோ டிங்கே!
வனங்க ளெலாநும் மக்கள் தம்முடன், 260
மலைகளின் முதல்வ,நின் வன்சக் தியுடன்,
நீரின் சக்தியே, நின்பயங் கரத்துடன்,
நீரின் தலைவியே, நினது பலத்துடன்,
நீர்முதி யோளே, நினது வலியுடன்,
பாவையீர், ஒவ்வொரு பள்ளத் திருந்தும்,
எழில்உடை அணிந்தோர் இருஞ்சேற் றிருந்தும்,
ஒப்பிலா மனிதனின் உதவிக்கு வருக!
நற்புகழ் மனிதனின் நட்புக்கு வருக!
சூனியக் காரரின் சுடுகணை தவிர்க்க,
மந்திர வாதிகள் வல்லுருக் காயுதம் 270
இகல்மா யாவிகள் இரும்புக் கத்திகள்
வில்லவர் படைக்கலம் வல்லியக் கொழிய!
இதுவும் போதா தின்னமு மென்றால்
இன்னும் ஒருவழி என்நினை வுள்ளது
நேர்மேற் பார்த்து மெடுமூச் செறிவேன்
அங்கே விண்ணுறை அருமுதல் வனுக்கு
எல்லா முகிலையும் இருந்தாள் வோற்கு
ஆவிநீ ரனைத்தின் அரசகா வலர்க்கு.
ஓ,மானுட முதல்வனே, உயர்மா தெய்வமே!
வானகம் வதியும் மாமுது தந்தையே! 280
முகில்களின் ஊடாய் மொழிந்திடு வோனே!
வாயுவின் வழியாய் வாக்குரைப் பவனே!
தீயுமிழ் ஒருவாள் தேர்ந்தெனக் கருள்வாய்!
உமிழ்தீ வாளுறை ஒன்றினில் வைத்து
அதனால் தடைகளை அடியேன் நொறுக்குவேன்
அதனால் நானும் அழிவை அகற்றுவேன்
தொல்புவிச் சூனியக் காரரைப் புரட்டுவேன்
நீர்மா யாவியை நெடிததால் வெல்வேன்
எனக்கு முன்வந் தெதிர்த்திடும் பகைவரை
எனக்குப் பின்னே இருந்தெழும் தெவ்வரை 290
தலைக்கு மேலும் தழுவென் பக்கமும்
என்விலாப் பக்கம் இரண்டிலு மாக
அழிப்பேன் மாய ஆவிகள் அம்புடன்
இரும்புக் கத்தியோ டிகல்சூ னியரை
உருக்கா யுதத்துடன் உறுமாந் திரிகரை
தீயவல் மாந்தரைச் செறுமவர் வாளுடன்!"
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
பற்றையில் நின்ற பரிதனை அழைத்தனன்
புல்லில் நின்றபொன் பிடர்மயிர்ப் புரவியை 300
அதன்பின் புரவிக் கணிகலன் பூட்டினன்
தீநிறக் குதிரையை ஏர்க்காற் பூட்டினன்
அவனே ஏறி அமர்ந்தனன் வண்டியில்
வண்டியில் ஏறி வசதியா யமர்ந்தனன்
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
சாட்டையால் குதிரையை சாடியே ஏவினன்;
பரியும் பறந்தது பயணம் தொடர்ந்தது
வண்டியும் உருண்டது வழித்தொலை குறைந்தது
வெள்ளிமண் சிதறி வேகமாய்ப் பரவின
பொன்னிறப் புதர்கள் புத்தொலி யெழுப்பின. 310
ஒருநாள் சென்றான் இருநாள் சென்றான்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகினான்
மூன்றாவ தாக முகிழ்த்தஅந் நாளில்
அவன்ஒரு கிராமம் அடைந்திட லானான்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பாதையில் தனது பயணம் தொடர்ந்தான்
தொலையில் இருந்த தொடர்வழி ஒன்றின்
தூரத்தில் இருந்த வீடு ஒன்றுக்கு;
இல்லின் கூடத் திங்ஙனம் கேட்டனன்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்: 320
"இந்த வீட்டிலே எவரும் உளரோ
படியும்என் மார்புப் பட்டியை அவிழ்க்க
எனதேர்க் காலை இறக்கக் கீழே
கழுத்துப் பட்டியைக் கழற்றி விடற்கு?"
பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
பகுவாய்ப் புறத்தொரு பையன் இயம்பினன்:
"இந்தஇல் லத்தே எவருமே இல்லை
படியும்உன் மார்புப் பட்டியே அவிழ்க்க
உனதேர்க் காலை உடன்கீழ் இறக்க
கழுத்துப் பட்டியைக் கழற்றி விடற்கு." 330
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
சவுக்கைச் சுழற்றிச் சாடினன் பரியை
மணிமுனைச் சவுக்கால் வாகாய் அறைந்தான்
பாதையில் தனது பயணம் தொடர்ந்தான்
மத்தியில் இருந்த வழியொன் றினிலே
வீதி மத்தியில் வீடொன் றுக்கு;
இல்லின் கூடத் திங்ஙனம் கேட்டான்
கூரை மரப்பின் குறுகிநின் றுசாவினன்:
"இந்த வீட்டில் எவரும் உளரோ
பரிக்கடி வாளம் பற்றிக் கழற்ற 340
படியும்என் மார்புப் பட்டியை அவிழ்க்க
கடிவாள வாரைக் கைப்பிடித் திழுக்க?"
அடுப்புக் கல்லின் அருகிலோர் முதுமகள்
அடுப்பா சனத்தில் அமர்ந்தவள் அரற்றினாள்:
"ஆமாம், இந்த அகத்திலே உள்ளனர்
பரிக்கடி வாளம் பற்றிக் கழற்ற
படியும்உன் மார்புப் பட்டியை அவிழ்க்க
எடுத்துன் ஏர்க்கால் இறக்கக் கீழே
உளரப் பாஇங் உயர்பல **பதின்மர்
நூற்றுக் கணக்கிலும் ஏற்கலாம் விரும்பின் 350
பயண வண்டியும் பார்த்துனக் கருளுவர்
சவாரிக் குதிரையும் தந்தே உதவுவர்
உனது வீடுபோய் உறற்குக் கள்வனே
உனது நாடுபோய் உறற்குத் தீயோய்
உனதுதெச மானனின் உறைவிடத் துக்கு
உனதெச மானி உற்றுவா ழிடத்து
நின்சகோ தரனின் நீள்நுழை வாயில்
நின்சகோ தரியின் நெடும்இற் கூடம்
இந்தப் பகற்பொழு திதுமுடி தற்குள்
சூரியன் கீழே சோர்ந்துசாய் வதற்குள்." 360
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"சுடப்பட வேண்டியோள், தொல்கிழ விநீ!
நொருக்கவேண் டியது வளைந்தநின் தாடை."
அதன்பின் குதிரையை அவன்விரைந் தோட்டினன்
தொடர்ந்து செய்தனன் துணிந்துதன் பயணம்
அனைத்து வழியிலும் அதிஉயர் பாதையின்
உள்ளவீ டனைத்திலும் உயர்ந்தவீட் டுக்கு.
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
அந்த வீட்டின் அருகிற் சென்றதும் 370
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"பிசாசே, குரைக்கும் பெருவாய் மூடு!
நாயின் அலகை மூடிடு பேயே!
வாயின் முன்னொரு வன்தடை போடு
பற்களின் இடையிலோர் நற்பூட் டையிடு
அதன்வாய்ச் சத்தம் அற்றே இருக்க
அவ்வழி மனிதன் அகன்றுபோம் வரையில்."
முற்றத் திவ்விதம் முன்வந் துற்றான்
சாட்டையால் நிலமிசைச் சாற்றினான் ஓங்கி 380
சாட்டையின் திசையிலோர் சார்புகார் எழுந்தது
புகாரின் நடுவொரு புதுச்சிறு மனிதன்
மார்புப் பட்டியை வந்தவிழ்த் தவனவன்
ஏர்க்கால் கீழே இறக்கியோன் அவனே.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது செவிகளால் தானே கேட்டான்
ஒருவரும் அவனை உடன்கவ னித்திலர்
அவதா னிப்போர் ஆங்கெவ ரும்மிலர்;
வெளியே இருந்தவன் வியன்கவி கேட்டனன்
**பாசியில் இருந்து பலசொல் கேட்டனன் 390
கனசுவர் வழியாய்க் கலைஞர் இசையையும்
பலகணி வழியாய்ப் பாடலும் கேட்டனன்.
அங்கிருந் தில்லுள் அவனும் பார்த்தனன்
இரகசிய மாக எட்டிப் பார்த்தனன்
அறையில் நிறைய அறிஞர் இருந்தனர்
பல்லா சனத்தும் பாடகர் இருந்தனர்
இருஞ்சுவர்ப் பக்கம் இசைவல் லார்கள்
கதவு வாயிலில் கனநுண் ஞானிகள்
வகுத்தபின் ஆசனம் மந்திர வாதிகள்
புகைபோக்கி மூலையில் சூனியக் காரர்கள்; 400
லாப்பின் பாடலை இசைத்தனர் அவர்கள்
பலபேய்க் கதைகளைப் பாடினர் அவர்கள்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
வாய்த்ததன் உருவை மாற்ற எண்ணினன்
இன்னொரு வேடமாய்த் தன்னை மாற்றினன்
மூலையில் இருந்து முனைந்தறை சென்றான்
சுவர்இடுக் கிருந்து துணிந்துட் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"முடிவிலே பாடல்கள் மூட்டும் இன்பமே
சிறப்பு வாய்நதவை சீர்க்குறுங் கவிகள் 410
நினைந்துதம் பாடலை நிறுத்துதல் நல்லது
நடுவில் புகுந்ததை நாம்தடுப் பதிலும்."
அவளே வடநிலத் தலைவியப் போது
எழுந்து நடந்து எழில்தரை நின்று
அறையின் மத்திய அமைவிடம் மடைந்து
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இங்கே முன்பு இருந்தது ஒருநாய்
இரும்புச் சடையோ டெதிர்கொளும் நீசநாய்
இறைச்சியை அயின்று எலும்பைக் கடிப்பது
புதிதாய் வருவோர் குருதி குடிப்பது. 420
எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன்
இவ்வறை யுள்ளே எளிதாய் நுழைந்தாய்
இவ்வில் உட்புறம் இனிதே வந்தாய்
கிளர்ந்தெழு நாயுனைக் கேட்கவு மில்லை
குரைக்கும் நாயுனைக் குறிகொள்ள வில்லை."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"உண்மையாய் நானிங் குற்றிட வில்லை
திறமையும் அற்றுத் திகழ்அறி வற்று
வீரமும் அற்று ஞானமும் அற்று 430
தந்தையின் மந்திர சக்தியு மற்று
பயந்தபெற் றோரின் பாதுகாப் பற்று
உங்கள் நாய்கள் உண்பதற் காக
குரைக்கும் நாய்கள் கிழிப்பதற் காக.
எனது அன்னை என்னைக் கழுவினாள்
கழுவினள் சிறுவனாம் காலத் தினிலே
கோடை நிசியில் கூடுமுத் தடவை
இலையுதிர் காலத் திரவொன் பதுமுறை
அறிஞனாய் ஒவ்வொரு துறையிலும் ஆகென
சீர்த்தியோ டொவ்வொரு நாட்டிலும் திகழென 440
இருக்கஎன் வீட்டிலோர் இசைப்பா டகனாய்
சிறக்கநுண் அறிஞனாய்ச் சேர்பிற நாடெலாம்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
மாறினான் மந்திர வாதியே யாக
பாடுவோன் ஆயினான் மந்திரப் பாடல்கள்
தீப்பொறி மேலுடைத் திகழ்மடிப் பெழுந்தது
அவனது கண்கள் அனலைச் சிந்தின
லெம்மின் கைனன் நின்றுபா டுகையில்
மந்திரம் செபிக்கையில் வருபாட் டிசைக்கையில். 450
வெகுதிறற் பாடகர் மீதே பாடினான்
படிமிகத் தாழ்ந்த பாடகர் ஆக்கினான்
அவர்களின் வாய்களில் அவன்கல் திணித்தான்
பக்கங் களிலெலாம் பாறையுண் டாக்கினான்
மிகுசிறப் புற்ற வியன்பா டகற்கு
தேர்ச்சிமிக் குயர்ந்து திகழ்கவி ஞர்க்கு.
இவ்விதம் பாடினான் இத்தகு மனிதரை
ஒருவரை இங்கும் ஒருவரை அங்குமாய்
மரம் செடியற்ற மலட்டு நிலத்தே
உழப் படாவெற்று உலர்நிலத் துக்கு 460
மீன்களே யற்ற வெறும்நீர் நிலைக்கு
நன்னீர் **மீனினம் நாடாப் புலத்து
பயங்கர *உறுத்தியாப் படர்நீர் வீழ்ச்சியில்
இரைந்து விரையும் இகல்நீர்ச் சுழிகளில்
நுரைத்தெழும் நதியின் அடிப்பா றைகளில்
நீர்வீழ்ச் சிகளின் நேர்நடுக் குன்றில்
நெருப்பென எரிந்து நீறா வதற்கு
தீப்பொறி யாகிச் சிந்தியே குதற்கு.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
பாடினான் வாளுடைப் பலமுறு மனிதரை 470
பாடினான் படைக்கல முடையபல் வீரரை
பாடினான் இளைஞரைப் பாடினான் முதியரை
பாடினான் நடுவய துடையபன் மக்களை
ஒருவனை மட்டுமே உருத்தவன் பாடிலன்
அவனொரு கொடியவன் ஆநிரை மேய்ப்பவன்
பார்வையே அற்றவன் படுகிழ வயோதிபன்.
*நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"லெம்பியின் மைந்தா நீ,ஓ, குறும்பா!
பாடினாய் இளைஞரைப் பாடினாய் முதியரை 480
பாடினாய் நடுவய துடையபன் மக்களை
என்னைச் சபித்து எதற்குப் பாடிலை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"உன்னைத் தொடாமல் ஒதுக்கிய திதற்கே
பார்க்கநீ இழிந்த பண்பினன் ஆனதால்,
கிளர்ந்துநான் தொடாமலே கீழ்மகன் ஆனவன்;
இளைஞன் ஆகநீ இருந்தவந் நாட்களில்
இடையர்க ளிடையோர் இழிந்தவ னாகினை
மாசுறுத் தினைநின் மாதா பிள்ளையை
உடன்பிறந் தவளின் உயர்கற் பழித்தனை 490
திகழ்பரி அனைத்தையும் சேர்த்தே அழித்தனை
குதிரைக் குட்டிகள் கொன்றே ஒழித்தனை
திறந்த சதுப்பில் சேர்தரை நடுவில்
சேற்று நீரோடும் திணிநிலப் பரப்பில்."
நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
கோபம் கொண்டான் கொடுஞ்சின முற்றான்
கதவின் வாயில் கடந்தே சென்றான்
முற்றம் கடந்து முன்வய லடைந்தான்
துவோனலா நதியின் தொலைபார்த் தோடினான்
போனான் அருவியின் புனிதநீர்ச் சுழிக்கு 500
தூரநெஞ் சினனை தொடர்ந்தெதிர் பார்த்தான்
லெம்மின் கைனனை நெடிதுகாத் திருந்தான்
வடநா டிருந்து வழிதிரும் புகையில்
வீடு நோக்கி விரைந்தஅப் பாதையில்.
பாடல் 13 - பிசாசின் காட்டெருது TOP
அடிகள் 1 - 30 : லெம்மின்கைனன் வடபகுதித் தலைவியிடம் அவளுடைய மகளைத் தனக்கு மனைவியாக்கும்படி கேட்கிறான். வடபகுதித் தலைவி, பனிக்கட்டிச் சறுக்கணிகளில் சென்று பிசாசின் காட்டெருதைப் பிடித்தால் தனது மகளைத் தருவதாகக் கூறுகிறாள்.
அடிகள் 31 - 270 : லெம்மின்கைனன் செருக்குடன் காட்டெருதைப் பிடிக்கப் புறப்படுகிறான். ஆனால் காட்டெருது தப்பிவிடுகிறது; அவனுடைய பனிக் காலணிகளும் ஈட்டியும் உடைகின்றன.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
முதிய வடபால் முதல்விக் குரைத்தான்:
"தகுமுதி யவளே தருகநின் மகளிர்
இங்கே கொணர்கநின் எழில்மங் கையரை
அனைத்து அணங்கிலும் அதிசிறந் தவளை
அரிவையர் குழாத்தில் அதிஉயர்ந் தவளை!"
அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தருவதற் கில்லை தகுமென் பெண்கள்
அளிப்பதற் கில்லை அரியஎன் மகளிர் 10
சிறந்தவ ளாயினும் சிறப்பிலள் ஆயினும்
உயர்ந்தவ ளாயினும் உயர்விலள் ஆயினும்
உனக்கேற் கனவே உள்ளாள் இல்லாள்
நிலைபெறும் மனையாள் நினக்குமுன் உள்ளாள்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"பெயர்குயி லிக்கியைப் பிணைப்பேன் கிராமம்
படர்ஊர்க் கூடப் படிகளில் வைப்பேன்
வளர்வெளி அந்நிய வாயிலில் வைப்பேன்
இங்கே சிறந்தவோர் அணங்கினைப் பெறுவேன்
இப்பொழு துன்பெண் இங்கே கொணர்வாய் 20
எல்லாப் பெண்ணிலும் இயல்சிறப் பொருத்தியை
அனைத்து அணங்கிலும் அழகுறும் ஒருத்தியை!"
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"கொடுக்கவே மாட்டேன் கொணர்ந்தென் பெண்ணை
பெறுமதி யற்ற நரர்எவ ருக்கும்
வருபய னற்ற மானுடர் எவர்க்கும்.
ஆயினும் நீயென் அரிவையைக் கேட்கலாம்
தலையில்பூச் சூடிய தையலைக் கேட்கலாம்
பிசாசுகாட் டெருதைப் பிடித்தால் **சறுக்கி
பேயின் வயலின் பெருவெளிக் கப்பால்." 30
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது ஈட்டியில் முனைகள் பொருத்தினன்
குறுக்கு வில்லில் முறுக்குநாண் கட்டினன்
கணைகளின் தலைப்பில் கடுங்கூர் பூட்டினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போ தீட்டியில் இகல்முனை பொருத்தினேன்
அம்புகள் அனைத்தும் ஆயத்த மாயின
குறுக்கு வில்லில் முறுக்குநாண் கட்டினேன்
உந்திச் சென்றிட இ(ல்)லைஇடச் **சறுக்கணி
வளமாய் முந்திட **வலதணி இலது." 40
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்கே பெறலாம் எழிற்பனி மழைஅணி
சறுக்கும் பாதணி பெறப்படல் எங்ஙனம்?
*கெளப்பியின் தோட்டக் கவின்இல் சென்றான்
*லூலிக்கி வேலைத் தளத்தினில் நின்றான்:
"வடநாட் டவரே, திடநுண் மதியரே!
எழிலுறும் கெளப்பியே, லாப்புலாந் தியரே!
பயனுள சறுக்கணி படைப்பீர் எனக்காய்,
அழகிய சறுக்கணி அமைப்பீர் சிறப்பாய், 50
பேய்க் காட்டெருதைப் பிடித்திடச் செல்ல,
பிசாசின் வயலின் பெருவெளிக் கப்பால்."
லூலிக்கி என்பவன் உரைத்தான் ஒருசொல்
நாவினால் கெளப்பி நவின்றான் இப்படி:
"லெம்மின் கைனனே நீவீண் போகிறாய்
பேய்க்காட் டெருதின் பெருவேட் டைக்கு
உழுத்த மரத்துண் டொன்றுதான் பெறுவாய்
அதுவும் துன்பம் அதிகம் பெற்றபின்."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 60
"செய்வாய் உந்திச் செல்ல இடதணி
வலதையும் செய்வாய் வலிதே முன்செல
எருத்து வேட்டைக் கிதோபுறப் பட்டேன்
பேயின் வயலின் பெருவெளிக் கப்பால்."
திகழ்இடச் சறுக்கணி செ(ய்)யும்லூ லிக்கி
திடவலச் சறுக்கணி செய்யும் கெளப்பி
இலையுதிர் காலத் திடதணி செய்தான்
வளர்குளிர் காலம் வலதணி செய்தான்
**தண்டுகள் அணிக்குச் சமைத்தான் ஒருநாள்
தண்டுக்கு **வளையம் சமைத்தான் மறுநாள். 70
இதமாய் உந்த இடதணி கிடைத்தது
வளமாய் முந்த வலதணி வந்தது
அணிகளின் தண்டுகள் ஆயத்த மாயின
பொருத்தப் பட்டன புதுஅணி வளையம்
ஈந்தான் தண்டுக் கீடுநீர் **நாய்த்தோல்
வளையத் தின்விலை பழுப்பு நரித்தோல்.
வெண்ணெய் சறுக்கணி மேலெலாம் பூசி
கலைமான் கொழுப்பையும் கலந்துடன் தேய்த்தான்
சிந்தனை பின்னர் செய்தான் அவனே
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: 80
"இளைஞர்கூட் டத்துள் எவருமிங் குளரோ
உண்டோ எவருமிங் குளவளர் வோர்களில்
எனதிடச் சறுக்கணி இதனைமுன் தள்ள
வலதணி உதைக்க வலியதன் குதியால்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
சென்னிறக் கன்னப் போக்கிரி செப்பினன்:
"இளைஞர்கூட் டத்துள் எவரோ இங்குளர்
வளர்ந்திடு வோரில் மற்றெவ ரோஉளர்
எனதிடச் சறுக்கணி இதனைமுன் தள்ள
வலதணி உதைக்க வலியதன் குதியால்." 90
அம்புறைக் கூட்டை அவன்முது கிட்டனன்
தோளில் புதியதோர் தொடுவில் கட்டினன்
தண்டைக் கையிலே சரியாய்ப் பிடித்தனன்
இடச்சறுக் கணியை எடுத்துமுன் தள்ளினன்
உந்தி வலதணி உதைத்தான் குதியால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இல்லை இறைவனின் இந்தக் காற்றினில்
வானம் இதனின் வளைவதன் கீழே
எதுவுமே வனத்தில் இல்லைவேட் டைக்கு
நான்கு கால்களில் பாய்ந்திடும் பிராணி 100
வென்றிட முடியா வேறெதோ வொன்று
இலகுவாய்க் (கைப்)பற்ற இயலாத தொன்று
கலேவா மைந்தன் காற்சறுக் கணியால்
லெம்மின் கைனனின் நேர்ச்சறுக் கணிகளால்."
அலகைகள் இதனை அறிந்திட நேர்ந்தது
**தீய சக்திகள் தெரிந்திட நேர்ந்தது
பேய்கள்காட் டெருதை ஆக்கத் தொடங்கின
படைத்தன கலைமான் பலதீச் **சக்திகள்
தலையை உழுத்த கட்டையில் சமைத்தன
**சிறுமரக் கிளைகளில் சேர்கொம் பியற்றின 110
பாதம் சுள்ளிகள் கொண்டு படைத்தன
கால்களைச் சேற்றுக் கம்பினால் செய்தன
வேலித் தம்பத்தால் விரிமுது கியற்றின
வாடிய புற்களால் வைத்தன நரம்புகள்
நீராம்பல் முகைகளால் நேத்திரம் அமைத்தன
நீராம்பல் இதழ்களில் நெடுஞ்செவி நிமிர்த்தின
தேவதா ருரியிலே செய்தன தோலினை
பதன்கெடு மரங்களில் படைத்தன தசையினை.
எருத்துக் குயோசனை இருண்டபேய் சொன்னது
மானுக்கு இங்ஙனம் வாயினால் சொன்னது: 120
"இரும்பேய் எருதே, இப்போ தோடு!
தாவுநின் கால்களால் சாந்தப் பிறவியே!
ஓடிடு மானே, உன்சினைப் பிடத்தே!
லாப்பு மைந்தரின் எழில்புல் வெளிக்கு
சறுக்குணி மனிதரைக் களைப்புறச் செய்வாய்
குறிப்பாய் லெம்மின் கைனனைச் செய்வாய்!"
மிகுபேய் எருது விரைந்தோ டியது
காட்டுக் கலைமான் கடுகதி விரைந்தது
வடக்கினில் அமைந்த அடைப்புகள் வழியாய்
லாப்பு மைந்தரின் இளம்புல் வெளிகளில் 130
உதைத்தது சமையற் கூடத் தொட்டியை
உருட்டிற் றதுகீழ் நெருப்பெழு கலயம்
சாம்பரில் இறைச்சியைத் தள்ளிப் போட்டது
அடுப்படி இரசம் அதுசிந் திற்று.
அப்போ தெழுந்தது அங்கே கூச்சல்
லாப்பு மைந்தரின் இளம்புல் வெளியில்
லாப்பு நாட்டின் இகல்நாய் குரைத்தன
லாப்பு நாட்டின் இளஞ்சிறார் அழுதனர்
லாப்பு நாட்டின் ஏந்திழை சிரித்தனர்
மற்றும் சிலரோ சற்றே முனகினர். 140
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
எருதின் பின்னே சறுக்கிச் சென்றான்
சறுக்கிச் சேற்றிலும் தரையிலும் சறுக்கினன்
திறந்த வெளியிலும் சென்றான் சறுக்கி
சறுக்கணி தன்னில் தகிநெருப் பெழுந்தது
தண்டின் நுனியில் தழற்புகை பறந்தது
ஆயினும் எருதை அவனோ கண்டிலன்
இல்லைக் கண்டதும் இல்லைக் கேட்டதும்.
நாட்டிலும் சென்றான் நகரிலும் சென்றான்
தண்கடற் பின்னால் தரையிலும் சென்றான் 150
அலகையின் தோப்புகள் அனைத்திலும் சென்றான்
*இடுகாட் டாவியின் **ஏற்றமும் சென்றான்
மரண வாயில் வழிவரை சென்றான்
இடுகாட் டின்பின் இயல்கா டடைந்தான்;
மரணம் தனது வாயைத் திறந்தது
இடுகாட் டாவி எடுத்தது தலையை
மனிதனை உள்ளே வரவிடு தற்கு
லெம்மின் கைனனை நேராய் விழுங்க
ஆயினும் உண்மையில் அவனைப் பெற்றில(து)
கடுகதி கொண்டு கைக்கொண் டிலது. 160
அவன் சென்றிலனே அனைத்திடத் துக்கும்
தொடாத பகுதியோர் தொல்புற மிருந்தது
வடபால் நிலத்து மறுகோ டியிலே
லாப்பு நாட்டின் அகல்நிலை வெளிகளில்
அந்த இடத்துக் கவன்புறப் பட்டான்
அதனையும் தொட்டு அறிந்திட நினைத்தான்.
அந்த இடத்தை அவன்போ யடைந்ததும்
அங்கொரு கூச்சலை அவனும் கேட்டான்
வடபால் நிலத்து மறுகரை யதனில்
லாப்பு மைந்தரின் நிலப்புல் வெளிகளில் 170
லாப்பு நாய்களின் குரைப்புக் கேட்டது
லாப்புச் சிறாரின் அழுகுரல் கேட்டது
லாப்பு மகளிரின் சிரிப்பொலி கேட்டது
மற்றும் சிலரோ சற்றே முனகினர்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
சறுக்கினன் உடனே சார்ந்தப் பக்கமாய்
நாய்கள் குரைத்தஅந் நாட்டின் பக்கமாய்
லாப்பின் மைந்தரின் நிலப்புல் வெளிக்கு.
அங்ஙகவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்
வந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்: 180
"ஏந்திழை யர்இங் கெதற்காய்ச் சிரித்தனர்
பாவையர் சிரித்ததும் பிள்ளைகள் அழுததும்
முதிய மனிதர்கள் முனகலும் எதற்கு
நரைநிற நாய்கள் குரைத்ததும் எவரை?"
"ஏந்திழை யர்இங் கிதற்காய்ச் சிரித்தனர்
பாவையர் சிரித்தனர் பிள்ளைகள் அழுதனர்
முதிய மனிதர்கள் முனகிய திதற்கு
நரைநிற நாய்களும் குரைத்தது இதற்கு:
இருட்பேய் எருது இங்கிருந் தோடிய(து)
மென்மைக் குளம்பால் முன்பாய் தோடிய(து) 190
உதைத்தது சமையற் கூடத் தொட்டியை
உருட்டிற் றதுகீழ் நெருப்பெழு கலயம்
கஞ்சியை உதைத்துக் கவிழ்த்தது கீழ்மேல்
அடுப்படி இரசம் அதுசிந் திற்று."
சென்னிறக் கன்னப் போக்கிரி அதன்பின்
குறும்பன் லெம்மின் கைனனப் போது
பனியில் இடது பாதணி தள்ளினான்
செறிபுற் றரையின் விரியன் பாம்பென,
தேவதா ரணியைச் செலுத்தினான் முன்னே
உயிர்ப்பாம் பசைந்து ஊர்வது போலே, 200
செல்லும் போதினில் செப்பினன் இவ்விதம்
தண்டைக் கையில் கொண்டவ னிசைத்தான்:
"லாப்பிலே வாழும் எல்லா மனிதரும்
எருதைச் சுமந்து எடுத்துவந் திடட்டும்,
லாப்பிலே வாழும் ஏந்திழை யாரெலாம்
சட்டி கழுவத் தாம் தொடங் கட்டும்;
லாப்பிலே வாழும் இளம்சிறார் அனைவரும்
தீப்படும் சுள்ளிகள் சேர்த்து வரட்டும்;
லாப்பிலே இருக்கும் எல்லாக் கலயமும்
எருதைச் சமைக்க எழட்டும் தயாராய்!" 210
விரைவாய்ச் சென்றனன் மிகுபலம் கொண்டனன்
உதைத்துப் போயினன் உந்திச் சென்றனன்
முதல்முறை உந்தி முன்செல் கையிலே
ஒருவர் விழியிலும் தெரிபடா தேகினன்
அடுத்த தடவை அவன்போ கையிலே
ஒருவர் காதிலும் ஒலிவிழா தேகினன்
மூன்றாம் முறையவன் முன்பாய் கையிலே
தடிப்பேய் எருதின் தடத்தை அடைந்தனன்.
**'மாப்பிள்' மரத்தின் வன்கயி றெடுத்தான்
மிலாறுவின் முறுக்கிய வெங்கொடி எடுத்தான் 220
பேய்க்காட் டெருதைப் பிடித்துக் கட்டினான்
சிந்துர மரத்தாற் செறிஅடைப் புக்குள்:
"பேய்க்காட் டெருதே பிணைப்புண் டிங்குநில்
காட்டுக் கலையே கேட்டிங் குலவுக."
முயன்றவ் விலங்கின் முதுகைத் தடவினான்
தட்டினான் விலங்கின் தடித்ததோ லதனில்:
"எனக்குவப் பான இடமே இதுவே
இதுவே படுக்கைக் கேற்றநல் இடமாம்
ஒளிரிளம் பருவ ஒருத்தி தன்னுடன்
வளரும் பருவத் திளங்கோ ழியுடன்." 230
அப்போ பேய்எரு ததுசினந் தெழுந்தது
கலைமான் அதிர்ந்து கனன்றுதைத் தெழுந்தது
பின்னர் அதுவே பேசியது இங்ஙனம்:
"பேய்உனக் குதவி பெரிதுசெய் யட்டும்
இளம்பரு வத்து மகளிரோ டுறங்க
நாள்தொறும் நல்ல நங்கையோ டுலாவ!"
உரங்கொண் டெழுந்தது உடன்கிளர்ந் தெழுந்தது
மிலாறுவின் கொடியை வெகுண்டறுத் தெறிந்தது
**'மாப்பிளி'ன் கயிற்றை ஆர்த்தறுத் தெறிந்தது
சிந்துர அடைப்பை சினந்துடைத் தழித்தது; 240
ஓடத் தொடங்கிய துடன்முன் வேகமாய்
நழுவி விரைந்தது நவில்காட் டெருது
தரையையும் சேற்றுத் தலத்தையும் நோக்கி
கொழும்புதர் நிறைந்த குன்றுகள் நோக்கி
ஒருவர் விழியிலும் தெரிபடா தகன்றது
ஒருவர் காதிலும் விழாதுசென் றிட்டது.
சென்னிறக் கன்னப் போக்கிரி அதன்பின்
நிமிர்சினங் கொண்டான் நிதான மிழந்தான்
கொடுங்கோ பத்தோடு கொண்டான் சினமிக
சறுக்கிச் சென்றான் தாவும் கலைபின்; 250
அவ்வா றொருதரம் அவனுந் துகையில்
இடது சறுக்கணி வெடித்தது நுனியில்
சறுக்கணி பாதத் தட்டில் உடைந்தது
வலதணி உடைந்தது வருகுதிப் பக்கம்
விழுந்தது ஈட்டியின் மேல்முனை உடைந்து
தண்டு வளையத் தடியில் உடைந்தது
பேய்க்காட் டெருது போயிற் றோடி
தநலுதெரி யாமல் தாவி மறைந்தது.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன் 260
வெறித்துப் பார்த்தான் உடைந்த பொருட்களை
இனிவரும் சொற்களில் இயம்பினன் அவனே:
"வேண்டாம் வாழ்நாள் என்றும் வேண்டாம்
இன்னொரு மனிதன் ஏகவே வேண்டாம்
வேட்டையை நாடிக் காட்டிடைப் போதல்
தேடிச் சறுக்கிச் செல்லல்காட் டெருதை
பாக்கியம் அற்றஇப் பாவியைப் போல
தரமிகு சறுக்கணி தம்மை அழித்தேன்
அழகிய தண்டுகள் அவற்றையு மிழந்தேன்
ஈட்டிக் கம்பில் இழந்தேன் உயரந்ததை." 270
பாடல் 14 - லெம்மின்கைனனின் மரணம் TOP
அடிகள் 1 - 270 : லெம்மின்கைனன் வன தேவதைகளை வணங்கி, முடிவில் காட்டெருதைப் பிடித்து வடபகுதித் தோட்டத்துக்குக் கொண்டு வருகிறான்.
அடிகள் 271 - 372 : அவனுக்கு இன்னொரு வேலை தரப்படுகிறது; அதன்படி அவன் அனல் கக்கும் குதிரையைப் பிடித்துக் கொண்டு வருகிறான்.
அடிகள் 373 - 460 : துவோனலா ஆற்றில் ஓர் அன்னத்தைக் கொல்லும்படி அவனுக்கு மூன்றாவது வேலையும் தரப்படுகிறது. அவன் ஆற்றுக்கு வரும் வழியில் காத்திருந்த 'நனைந்த தொப்பியன்' என்ற இடையன், லெம்மின்கைனனைக் கொன்று துவோனியின் நீர்வீழ்ச்சியில் எறிகிறான்; துவோனியின் மைந்தன் அவனது உடலைத் துண்டுகளாக்கி ஆற்றில் எறிகிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எந்தப் பாதையில் ஏகலாம் என்று
எங்கே காலடி இடலாம் என்று:
பேய்க்காட் டெருது பிடிப்பதை விட்டு
வீட்டை நோக்கி விரைவதா தானாய்
அல்லது மேலும் அச்செயல் ஏற்று
மெதுவாய்ச் சறுக்கி மிகமுன் செல்வதா
செறிகான் தலைவியைத் திருப்தி செய்தற்கு
தோட்ட மகளிரைத் தோய்மகிழ் வுறுத்த. 10
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"ஓ,மனு முதல்வனே, உயர்மா தெய்வமே!
விண்ணிலே உறையும் மேல்வகைத் தந்தையே!
நேராம் சறுக்கணி நீர்எமக் கமைப்பீர்
கனமே இல்லாக் காற்சறுக் கணிகள்
சுலபமாய் சறுக்கித் தொடர்ந்தவற் றேக
சதுப்பு நிலத்திலும் சமதரை மீதிலும்
பிசாசுகள் வாழும் பெருநில மீதும்
வடபால் நிலத்து வளர்புற் தரையிலும் 20
பேய்க்காட் டெருது பெரிதுலா விடத்து(க்கு)
காட்டுக் கலைமான் கலைதிரி தடத்து(க்கு).
மனிதரைப் பிரிந்து வனம்ஏ குகிறேன்
வீரரை விலகி வெளிக்களம் போகிறேன்
*தப்பியோ லாவின் தனிவழி யூடாய்
*தப்பியோ வாழும் தரிப்பகத் தூடாய்.
வாழ்க மலைகளே, வாழ்ககுன் றுகளே!
வாழிய எதிரொலி வருதா ருகளே!
வாழிய வெண்பசும் மரஅர சுகளே!
வாழிய நும்மை வாழ்த்துவோர் அனைவரும்! 30
அன்புகாட் டுங்கள், அடவிகாள், வனங்காள்!
மேன்மைகொள் தப்பியோ, மிக்கருள் கூர்வீர்!
மனிதனைத் தீவகம் வந்தெடுத் தகல்வீர்!
**உச்சவன் அடைய உடன்வழி நடத்துவீர்!
நிறைவேட் டைத்தொழில் நிகழ்விடத் துக்கு!
பயன்மிக விளையுமப் படர்தடத் துக்கு!
தப்பியோ மைந்தனே, தகை*நுயீ ரிக்கியே!
தூய்மைகொள் மனித,செந் தொப்பியை யுடையோய்!
கணவாய்க ளமைப்பாய் கவின்நீள் நிலத்தில்!
வரைகளின் வழிகளில் வழித்தடம் அமைப்பாய் 40
மடையன் எனக்கு வழிதெரி தற்காய்
அந்நியன் முற்றிலும் அறியப் பாதைநான்
தேடும் பாதைநான் தெரிந்துகொள் ளற்கு
நாடும் ஆடலை நான்அடை தற்காய்.
வனத்தின் தலைவியே, வளர்*மியெ லிக்கியே!
தூய்மைப் பெண்ணே, சுடர்அழ குடையளே!
பசும்பொன் வழியில் பயணிக்க வைப்பாய்
வெள்ளியை வைப்பாய் வெளிநகர்ந் துலவ
தேடும் மனிதனின் திருமுன் பாக
நாடும் மனிதனின் நல்லடிச் சுவட்டில். 50
திறவுகோல் பொன்னால் செய்ததை எடுப்பாய்
வயத்தொடை இருக்கும் வளையத் திருந்து
தப்பியோ களஞ்சியத் தரிப்பிடம் திறப்பாய்
திறந்துவைத் திருப்பாய் உறுகான் கோட்டையை
நான்வேட்டை யாடும் நல்லஅந் நாட்களில்
நான்இரை தேடும் நல்லஇவ் வேளையில்.
உனக்குச் சிரமம் ஒன்றி(ல்)லை யானால்
உனது மகளிரை உடனே அழைப்பாய்
ஊதிய மகளிர்க் கொருசொல் உரைப்பாய்
கட்டளை யிடுவாய் கட்டளை ஏற்போர்க்(கு)! 60
சத்தியம் நீஒரு தலைவியே யல்ல
ஏவற் பெண்கள் இல்லை உனக்கெனில்,
ஒருநூறு நங்கையர் உனக்கிலை யென்றால்,
ஆணையை ஏற்போர் ஆயிரம் பேரும்
உனது உடைமையை ஊர்ந்துகாப் பவரும்
இரும்பொருள் காப்போர் எவரு மிலையெனில்.
சின்னஞ் சிறிய செறிகான் மகளே!
தண்தேன் இதழுடைத் தப்பியோ மகளே!
நறைபோன் றினிய நற்குழல் ஊது
இசைப்பாய் தேனென இனிய குழலினை 70
மூளுமன் புடைநின் முதல்வியின் செவிகளில்
கவினார் நினது கானகத் தலைவிக்(கு)
அவ்விசை விரைந்து அவள்கேட் கட்டும்
வீழ்துயில் அமளியை விட்டே எழட்டும்
ஏனெனில் அவளோ இப்போ கேட்டிலள்
இருந்துயில் அகன்று எழுந்தனள் இல்லை
இப்போ திங்குநான் இரந்தே நிற்கையில்
பசும்பொன் நாவினால் பரிந்துநின் றிருக்கையில்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நேரம் முழுதும் தேடிப் பெறாமல் 80
சதுப்பு நிலத்திலும் தரையிலும் சறுக்கி
முரட்டுக் காட்டிலும் சறுக்கிச் சென்றான்
கடவுளின் எரிந்த காமரக் குன்றிலும்
வெம்பேய் நிலக்கரி மேட்டிலும் சறுக்கினன்.
ஒருநாள் சறுக்கினான் இருநாள் சறுக்கினான்
மூன்றாம் நாளும் முடிவாய்ச் சறுக்கினான்
உயர்ந்து மலையில் உரம்பெற் றேறினான்
பருத்துக் கிடந்த பாறையில் ஏறினான்
பார்வையை வடமேற் பக்கம் செலுத்தினான்
வளர்சதுப் பூடாய் வடக்கே பார்த்தான்: 90
தப்பியோ வீடு தவழ்விழிப் பட்டது
கனகம் ஒளிரும் கதவுகள் இருந்தன
வளர்சதுப் பதனின் வடதிசைப் பக்கமாய்
குறுங்கா டார்ந்த குன்றதன் கீழே.
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அந்த இடத்தை அடைந்தான் உடனே
அந்த இடத்திற் கண்மிச் சென்றான்
தப்பியோ வீட்டின் சாளரத் தின்கீழ்;
குனிந்து முன்னால் கூர்ந்துட் பார்த்தான்
ஆறாம் சாளரம் அதன்ஊ டாக 100
வழங்குவோர் அங்கே வாசம் செய்தனர்
**வேட்டை வயோதிப மெல்லார் கிடந்தனர்
தொழிலுடை அணிந்து தோற்றம் தந்தனர்
அழுக்குக் கந்தை ஆடையில் இருந்தனர்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எழில்வனத் தலைவீ, எக்கா ரணத்தால்
வன்தொழில் உடைகளில் வாசம் செய்கிறாய்?
அழுக்குக் கந்தல் ஆடைகள் அணிகிறாய்?
காட்சியில் மிகவும் கறுப்பாய் இருக்கிறாய்?
பார்க்கப் பயங்கரப் பண்போ டிருக்கிறாய்? 110
தயங்குநின் மார்புகள் தருவது விரக்தி
வயங்குநின் உருவால் வருவது குரூபம்!
நான்முன் காட்டில் நடந்த வேளையில்
காட்டிலே இருந்தன கோட்டைகள் மூன்று
ஒன்று மரத்தினால் இன்னொன் றெலும்பினால்
மூன்றாம் கோட்டை மூண்டது கல்லினால்
ஆறுசா ளரங்கள் **அமைந்தன பொன்னால்
முழுக்கோட் டையதும் மூலையில் இருந்தன;
நன்கவற் றூடாய் நான்உட் பார்த்தேன்
நற்சுவ ரின்கீழ் நான்நிற் கையிலே: 120
தப்பியோ வீட்டின் தலைவன் அவனொடு
தப்பியோ வீட்டின் தலைவியும் கண்டேன்
*தெல்லெர்வோ என்னும் செல்வி தப்பியோ
மற்றம் தப்பியோ மனிதரும் இருந்தனர்
அனைவரும் பொன்னில் ஆர்ந்தே இருந்தனர்
அனைவரும் வெள்ளியில் ஆழ்ந்தே இருந்தனர்;
அடவியின் தலைவி அவளும் கூட
கருணை மிக்க காட்டுத் தலைவியின்
கரங்களில் இருந்தன காப்புகள் பொன்னில்
விரல்களில் இருந்தன விரலணி பொன்னில் 130
சிரசினில் இருந்தன சிரசணி பொன்னில்
மலர்குழல் இருந்தன வளையங்கள் பொன்னில்
கர்ணத் திருந்தன காதணி பொன்னில்
நன்மணி அவளது நளிர்கழுத் திருந்தன.
காட்டின் தலைவி, கருணைமிக் கோய்,ஓ!
வனத்தின் இனிய வயோதிபப் பெண்ணே!
வைக்கோற் காலணி வைப்பாய் கழற்றி
பட்டைப் **பூர்ச்சம் பாதணி கழற்று
அழுக்குக் கந்தல் ஆடைக ளகற்று
தொழிலுக் குரிய தொல்லுடை அவிழ்ப்பாய் 140
செல்வம் செழிக்கும் சிறப்புடை அணிவாய்
ஆடலுக் கானமேல் ஆடையை அணிவாய்
மிகும்என் வனத்து வேட்டை நாட்களில்
இரையைத் தேடும் எனதுநே ரத்தில்;
எனக்கு வந்தது ஏதோ சோர்பு
சோர்பு வந்ததித் தொடர்புறு வழிகளில்
வெற்று நேரத்தில் விளைந்ததிச் சோர்பு
வேட்டையே இல்லா வேளையாம் இதிலே
ஏனெனில் நீதர வில்லைஎப் போதும்
அரிதினும் நீயெனை ஆதரித்தா யிலை 150
மகிழ்வுறும் மாலை மனஞ்சோர் வானது
நீள்பகற் போது நிர்ப்பய னானது.
கான்நரைத் தாடி கடுமுது மனிதா!
தளிரிலைத் தொப்பி **தரிபா சாடையோய்!
மென்மைத் துணிகளால் வியன்கா டுடுத்துவாய்
அகன்ற துணிகளால் அலங்கரி கானகம்
அரசுக் கணிவாய் அருநரை நிறவுடை
**'அல்டர்' மரங்களை அழகிய உடையால்
தேவ தாருவை திகழ்வெள்ளி உடையால்
பொன்னால் வேறு **மரத்தைப் புனைவாய் 160
செம்புப் பட்டியால் திகழ்முது **தாருவை
வெள்ளிப் பட்டியால் வேறொரு **தாருவை
பொன்னின் மலர்களால் பூர்ச்ச மரத்தை
புனைவிப் பாயடி மரங்களைப் பொன்னணி
அலங்கரிப் பாய்அவை அந்நாள் அமைதல்போல்
உனது சிறந்தஅவ் வுயர்நாள் களைப்போல்:
செறி**மரக் கிளைகளில் திங்கள் திகழ்தல்போல்
திகழ்**தா ருச்சியில் தினகரன் சுடர்போல்
வனத்தில்தே னார்ந்து மணத்ததைப் போல
நீல்நிறக் கான்நறை நிலைத்ததைப் போல 170
அடல்எரிக் கானக மதன்மா வூறல்போல்
உறுசேற் றுநிலம் உருகிய வெண்ணெய் போல்.
வனத்தின் வனிதையே, மனமுவந் தவளே!
*தூலிக்கி யே,தப்பி யோவின் மகளே!
வேட்டையைத் வெம்மலைச் சரிவுகட் கனுப்பு
வேட்டையைத் திறந்தபுல் வெளிகளுக் கனுப்பு;
ஓடிநீ ஏக உளதெனில் சிரமம்
விரைந்து நீசெல்ல விளையுமேல் சோம்பல்
எடுப்பாய் பற்றையில் இருந்தொரு சாட்டை
ஒடிப்பாய் மிலாறுவில் உடன்ஒரு சுள்ளி 180
கூச்சம் இடுப்பதன் குறிக்கீழ் கூட்ட
உணர்ச்சியைக் கால்களின் இடையே ஊட்ட;
தானே விரைந்து தனிச்செல விடுவாய்
விடுவாய் விரைந்து விரைந் தேகிடவே
தேடியே வந்து செலுமா னிடன்முன்
வேட்டைக்கு வந்தோன் வியனடிச் சுவட்டில்.
வழிச்சுவ டதிலே வருகையில் வேட்டை
வேட்டையைக் கொணர்வாய் வீரனின் முன்னே
உனதிரு கரங்களும் உறமுன் வைத்து
வழிநடத் துகநீ வருமிரு பக்கமும் 190
வேட்டைஎன் னிடத்து விலகா திருக்க
அகலா திருக்க அதுவழித் தடத்தே
வேட்டைஎன் னிடத்து விலகிப் போயிடில்
அகன்று வழித்தடம் அப்பால் போனால்
வழிநடத் துகஅதன் வன்செவி பற்றி
கொம்பைப் பற்றிக் கொணர்வாய் வழிக்கு.
குறுக்கே மரத்துக் குற்றியொன் றிருந்தால்
அதனைப் பாதையின் அக்கரைத் தள்ளுக
பாதையின் நடுவண் பன்மர மிருந்தால்
இரண்டாய் உடைத்து எறிவாய் அவற்றை. 200
உனக்குக் குறுக்கே வேலியொன் றுற்றால்
வேலியை மோதி மிதித்தழித் திடுவாய்
தம்பம் ஐந்து தவிர்த்துய ரத்தே
தம்பம் ஏழைத் தவிர்த்தக லத்தில்.
ஒருநதி உன்னெதிர் ஓடியே வந்தால்
பாதையின் குறுக்கே படர்ந்தால் சிறுநதி
பட்டினா லேயொரு பாலமங் கமைத்து
சிவப்பு துணியினால் அமைப்பாய் படிகள்
வெளிக்கால் வாயால் வேட்டையைக் கொணர்ந்து
வருவாய் இழுத்து மலிநீர்க் குறுக்காய் 210
ஓடும் வடநாட் டுயர்நதி யூடாய்
நுரைத்தநீர் வீழ்ச்சிப் பரப்பதன் மேலாய்.
தப்பியோ வீட்டின் தகமைத் தலைவா!
தப்பியோ வீட்டின் தண்ணளித் தலைவி!
கான்நரைத் தாடிக் கனமுது மனிதா!
கானக மதனின் கனமன் னவனே!
*மிமெர்க்கியே, காட்டின் விந்தைத் தலைவியே!
அன்புடை வனத்தின் ஆடலின் காவலீர்!
நீல்உடை அணிந்த சோலையின் மங்கையே!
சிவப்புக்கா லுறையணி சதுப்புலத் தலைவியே! 220
வருவாய் இப்போ வழங்கிடப் பொன்னே
வருவாய் இப்போ வழங்கிட வெள்ளி
சந்திரன் வயதுகொள் தங்கமென் னிடமுள
சூரியன் வயதுகொள் சுத்தவெள் ளியுமுள
பெரும்போர் வெற்றியால் பெற்றவை அவைகள்
வீரரை மோதிநான் வென்றவை அவைகள்;
வெறுமனே பையில் மிகக்கா சுள்ளன
கிடக்கின் றனவீண் பணப்பைக் காசுகள்
அரும்பொ(ன்)னாய் மாற்ற ஆருமில் லாஇடம்
எழில்வெள்ளி மாற்ற எவருமில் லாவிடம். " 230
குறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்
சாலநீள் நேரம் சறுக்கிச் சென்றனன்
பற்றைகள் வழியே பாடினன் பாடல்கள்
பாடல்கள் மூன்று பாடினான் புதரில்
காட்டின் தலைவியை கனமகிழ் வூட்டினான்
அங்ஙனம் செய்தான் அடர்கான் தலைவனை
அரிவையெல் லோரையும் அவன்களிப் பூட்டினான்
தப்பியோ மகளிரைத் தன்வச மாக்கினான்.
அவர்கள் துரத்தினர் அதனை விரட்டினர்
வன்பேய் எருதை மறைவிடத் திருந்து 240
தப்பியோ குன்றின் பின்புற மிருந்து
காட்டெருத் ததன்உட் கோட்டையி லிருந்து
தேடிவந் திட்ட திண்மா னுடன்முன்
மந்திரப் பாடகன் வசதியாய்ப் பிடிக்க.
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
சருக்குக் கண்ணியைச் சுழற்றி எறிந்தான்
பிசாச எருத்தின் பெருந்தோள் மீது
ஒட்டகம் போன்று உறும்அதன் கழுத்தில்
அதுவே அவனை உதையா திருக்க
அதன்முது கதனை அவன்தட வுகையில். 250
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினான் அவனே:
"வனத்தின் தலைவ, நிலத்ததி பதியே!
அழகொளிர் பவனே **அம்பசும் புற்புதர்!
கவின்மிய லிக்கியே, காட்டின் தலைவியே!
அருவனத் தாடலின் அன்புக் காவல!
இப்போ வருவீர், எழிற்பொன் பெறற்கு!
வெள்ளியைத் தெரிய விரைந்திங் குறுக
விரிப்பீர் நிலத்தில் மிகநும் துணியை
சிறப்புறும் துணியைப் பரப்புக நிலத்தில் 260
மின்னி ஒளிரும் பொன்னதன் கீழே
பிரகாச முடைய பெருவெள் ளியின்கீழ்
நிலத்திலே அவற்றை நீடுபோ டாமல்
அழுக்கிலே அவற்றை அறச் சிந்தாமல்."
அதன்பின் வடக்கே அவன்பய ணித்தான்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தான்:
"பேய்எரு துக்காய்ப் போனேன் சறுக்கி
பிசாசின் வயலின் பெருவெளி யிருந்து
வயோதிப மாதுஉன் மகளைத் தருவாய்
இளம்மணப் பெண்ணை எனக்குத் தருவாய்!" 270
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
அதற்கு இவ்விதம் அளித்தாள் மறுமொழி:
"நான்என் மகளை நல்குவேன் உனக்கு
இளம்மணப் பெண்ணை ஈவேன் உனக்கு
வீரிய மொடுக்கிய விறல்விலங் கடக்கினால்
பழுப்புப் பேய்நிறப் பரியினைப் பிடித்தால்
பிசாசின் நுரைவாய்ப் புரவியைப் பிடித்தால்
பிசாசின் புல்வெளிப் பெருநிலத் தப்பால்."
குறும்பன் லெம்மின் கைனனப் போது
கனகத் தமைந்த கடிவ()ள மெடுத்தான் 280
வெள்ளிவாய்ப் பட்டியை விறற்கரம் எடுத்தான்
புரவியைத் தேடிப் புறப்பட் டேகினான்
புற்சடைப் புரவி போனான் நாடி
பிசாசின் புல்வெளிப் பெருநிலத் தப்பால்.
புறப்பட் டுஅவன் போனான் விரைவாய்
தன்பய ணத்தைச் சரியாய்த் தொடர்ந்தான்
புணர்ஒரு பசுமைப் புல்வெளி நோக்கி
புனிதம் நிறைந்தவோர் புல்வயல் வெளிக்கு
தேடிப் பார்த்தான் திகழ்பரி ஆங்கு
செவிமடுத் திட்டான் செறிசடைப் பரிக்கு 290
இடுப்புப் பட்டியில் அடக்குவார் இருந்தது
குதிரையின் கடிவ()ளம் கொழுந்தோள் இருந்தது.
ஒருநாள் தேடினான் மறுநாள் தேடினான்
மூன்றாம் நாளும் முனைந்தவன் தேடினான்
பெருமலை ஒன்றிலே பின்அவன் ஏறினான்
பாரிய பாறைப் பகுதிமேல் ஏறினான்
பார்வையைக் கீழ்த்திசை படரச் செலுத்தினான்
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினான்
மணல்மேற் கண்டவன் வலியஅப் புரவி
தாருவின் நடுபுற் சடையது நின்றது 300
அதன்உரோ மத்தினால் அனல்பறந் திட்டது
புற்சடை யிருந்திரும் புகைஎழுந் திட்டது.
லெம்மின் கைனன் இயம்பினன் இவ்விதம்:
"ஓ,மனு முதல்வனே, உயர்மா தெய்வமே!
மானிட முதல்வனே, மழைமுகிற் காவலா!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே!
விண்ணுல கத்தின் வியன்வாய் திறப்பாய்
அகல்வான் சாளரம் அனைத்தையும் திறப்பாய்
இரும்புக் கற்களை இனிக்கீழ்ப் பொழிவாய்
கிளர்பனித் துண்டுகள் கீழே வீழ்த்துவாய் 310
நல்ல குதிரையின் நளிர்சடை மயிர்மேல்
பிசாசக் குதிரையின் பெருங்கன லுடல்மேல்."
மானிட முதல்வன்அம் மாவுயர் கர்த்தன்
மழைமுகில் களின்மேல் வாழ்ந்திடும் இறைவன்
கந்தை கந்தையாய்க் கனன்றுவிண் கிழித்தார்
இரண்டாய்ப் பிளந்தார் இகல்விண் மூடியை
பனிக்கட் டியொடு பனிக்கூழ் பொழிந்தார்
இரும்புக் கட்டியாய் எழும்மழை பொழிந்தார்
குதிரைத் தலையிலும் சிறியதக் கட்டிகள்
மனிதத் தலையிலும் பெரியதக் கட்டிகள் 320
நல்ல குதிரையின் நளிர்சடை மயிர்மேல்
பிசாசக் குதிரையின் பெருங்கன லுடல்மேல்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அதனைப் பார்க்க அங்கே சென்றான்
அவதா னிக்க அருகில் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பிசாச தேசத்துப் பேரெழிற் புரவியே!
வரையிடை வாழும் நுரைவாய்ப் பரியே!
உன்பொன் வாயை உடன்நீ தருவாய்
வெள்ளித் தலையை விரும்பித் திணிப்பாய் 330
மணிப்பொன் வனைந்த **வளையத் துள்ளே
வெள்ளியில் அமைந்த வியன்மணி **நடுவே!
கொடுமையாய் உன்னைக் கொண்டுநான் நடத்தேன்
கடுமையாய்ச் சவாரி கடுகிநான் செய்யேன்
சிறிய தூரமே சவாரிநான் செய்வேன்
அதுவும் சிறிய அதர்களின் வழியாய்
வடக்கின் ஆங்கே வசிப்பிடங் களுக்கு
ஆணவம் கொண்ட மாமியார் அருகே;
கயிற்றுப் பட்டியைக் கடிது(ன்)னில் வீசின்
விசையதைக் கொண்டு விரைந்துனைச் செலுத்தின் 340
பட்டினால் அமைந்த பட்டியால் வீசுவேன்
செலுத்துவேன் துணியால் செய்தமென் விசையால்."
பிசாசின் பழுப்புப் பெருநிறக் குதிரை
பிசாசின் நுரைவாய்ப் பிடர்மயிர்க் குதிரை
பொன்வாய் உள்ளே புகத்திணித் திட்டது
வெள்ளியி லான சென்னியும் வைத்தது
தங்கத் தியைந்த தளைவளை யத்துள்
வெள்ளியில் செய்த வியன்மணி நடுவே.
குறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்
வீரிய மடக்கிய விறற்பரி கட்டி 350
கனகநல் வாய்க்குக் கடிவ()ள மிட்டு
பிடிவார் வெள்ளிப் பெருந்தலை கட்டி
நல்ல விலங்கதன் நடுமுது கேறி
எரியுடற் குதிரையில் இனிதே யிருந்தான்.
சவுக்கால் ஓங்கிச் சாடினான் பரியை
அலரித் தடியால் அடித்தான் ஓங்கி
சிறிது தூரம் செய்தான் பயணம்
பலமலை யூடாய்ப் பயணம் செய்து
வந்தான் மலையின் வடக்குப் பக்கம்
உயர்பனி மழைவீழ் உச்சியின் மேலே 360
வடபால் நிலத்து வசிப்பிடங் களுக்கு
முற்றத் திருந்து முன்உட் சென்றான்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தான்
வடபால் நிலத்தே வந்து சேர்ந்ததும்:
"கடிவ()ள மிட்டேன் கனநல மடிபரி
பிடித்துக் கட்டினேன் பிசாசின் குதிரை
பசுமை மிகுமொரு படர்புல் வெளியில்
புனித முறுமொரு புல்வயல் வெளியில்
பிசாசெரு துக்கும் பின்நான் சறுக்கினேன்
பிசாசின் வயல்களின் பெருவெளி யிருந்து 370
வயோதிப மாதுன் மகளைத் தருவாய்
இளம்மணப் பெண்ணை எனக்குத் தருவாய்!"
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"எனது மகளை ஈவேன் உனக்கு
இளமை மணப் பெண்ணை ஈவேன் உனக்கு
ஆற்றிலே இருக்கும் **அன்னமஃ தெய்தால்
அருவியில் வாழும் பறவையைச் சுட்டால்
அங்கே துவோனியின் அடர்கரு நதியில்
புனித நதியின் புணர்நீர்ச் சுழியில் 380
எய்தலும் வேண்டும் எழும்ஒரே முயற்சியில்
எய்தலும் வேண்டும் இனிதொரே அம்பால்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
அன்னம் ஒலிசெயும் அகலிடம் சென்றான்
கழுத்துநீள் பறவையைக் காணுதற் காக
துவோனியின் கறுப்புத் தொடர்நிற நதியில்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கில்.
அவன் தன்வழியே அசைந்து சென்றனன்
தன்வழி யேஅவன் தனிநடை கொண்டனன் 390
தொடர்தாங் கிருந்த துவோனியின் நதிக்கு
புனித நதியின் புகுநீர்ச் சுழிக்கு
குறுக்கு வில்லைக் கொழுந்தோள் தாங்கி
அம்புக் கூட்டை அவன்முது கேந்தி.
நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
வடநிலக் குருடன் வயோதிப மனிதன்
துவோனியின் நதியின் தொடரயல் நின்றான்
புனித நதியின் புகுநீர்ச் சுழியில்;
**பார்த்தனன் அங்கு, பார்த்தனன் திரும்பி,
லெம்மின் கைனன் நேர்வர வாங்கே. 400
பலநாள் சென்று ஒருநாள் வந்ததும்
குறும்பன் லெம்மின் கைனனைக் கண்டான்
கண்டான் வருவதைக் கடுகிவந் தணைவதை
அந்தத் துவோனியின் அருநதிக் காங்கே
பயங்கர மான பக்கநீர் வீழ்ச்சி
புனிதம் மிக்க புணர்நீர்ச் சுழிக்கு.
நீரில் இருந்தொரு நீர்ப்பாம் பெடுத்தான்
**நீர்க்குழல் போன்றதை நெடுந்திரை யிருந்து
ஏற்றினன் மனிதனின் இதயத் தூடாய்
லெம்மின் கைனனின் ஈரலின் ஊடாய் 410
இடதுபக் கத்துக் கக்கத் தூடாய்
பலமிகு வலதுதோட் பட்டையி னுள்ளே.
குறும்பன் லெம்மின் கைனனப் போது
வாதை கொடிதாய் வருதல் உணர்ந்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அதுவே நான்புரி அரும்பிழை வேலை
கேட்க ஞாபகம் கெட்டுப் போனது
எனது தாயிடம் எனைச்சுமந் தவளிடம்
மந்திர வேலையின் மற்றிரு சொற்களை
அதிகமாய் மூன்றுசொல் அங்ஙன மிருக்கும் 420
எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது
இடுக்கண் நிறைந்த இத்தகை நாட்களில்
நீர்அராக் கொடுமையை நிசம்நான் அறிந்திலன்
நீர்க்குழல் போன்றதன் தீண்டலும் அறிந்திலன்.
எனதுமா தாவே, எனைச்சுமந் தவளே!
துன்பந் தாங்கித் தோள்வளர்த் தவளே!
தெரியுமா உனக்குத் தெரிந்திட முடியுமா,
அபாக்கிய மானஉன் அருமகன் எங்கென?
நிச்சயம் தெரிந்தால் நீயிவண் வருவாய்
விரைந்தெனக் குதவ விரும்பியிங் குறுவாய் 430
அபாக்கிய மகனை அகற்றிட வருவாய்
இம்மர ணத்தின் எதிர்வழி யிருந்து
உறுமிள வயதின் உறக்கத் திருந்து
**அரத்தச் செழிப்புடன் அழிவினி லிருந்து.
அதன்பின் கண்ணிலா அகல்வட நாட்டவன்
நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
குறும்பன் லெம்மின் கைனனைச் செலுத்தினன்
வீழ்த்தினன் கலேவலா வியன்குல மைந்தனை
துவோனியின் கறுப்பு தொடர்நிற நதியில்
நிலைகொடி தான நீர்ச்சுழி தன்னில்; 440
குறும்பன் லெம்மின் கைனன் சென்றான்
ஆர்த்திரை கின்ற அந்நீர் வீழ்ச்சியுள்
ஒளிர்ந்து பாய்ந்திடும் நளிர்அரு வியினுள்
துவோன லாவின் தொல்வசிப் பிடத்தே.
இரத்தக் கறையுள *மரணத் தின்மகன்
மனிதனை ஓங்கி வாளால் அறைந்தான்
குறுவாள் கொண்டே குத்தி அவனை
ஒளிர்ந்தே தெறிக்க ஓங்கி அடித்து
ஐந்து பங்குகள் ஆக்கி மனிதனை
அட்ட துண்டுகள் ஆக்கியே அவனை 450
துவோனலா ஆற்றில் தூக்கி யெறிந்தான்
மரண உலகின் வல்லாற் றெறிந்தான்;
"என்றுமே என்றும் இருப்பாய் ஆங்கே
குறுக்கு வில்லுடன் கூரிய அம்புடன்
ஆற்றிலே அன்னம் அதனையெய் தவனாய்
கரைநீர்ப் பறவை கடிதெய் தவனாய்."
அதுவே லெம்மின் கைனனின் அழிவு
நற்சுறு சுறுப்பு நாயகன் மரணம்
துவோனியின் கறுப்புத் தொடர்நிற ஆற்றில்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கில். 460
பாடல் 15 - லெம்மின்கைனன் உயிர்த்தெழுதல் TOP
அடிகள் 1 - 62 : ஒருநாள் லெம்மின்கைனனின் வீட்டில் அவன் விட்டுச் சென்ற சீப்பிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்ட அவனுடைய தாய், லெம்மின்கைனனுக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணர்கிறாள்; அவள் வடநாட்டுக்கு விரைந்து சென்று வடநாட்டுத் தலைவியிடம் லெம்மின்கைனனுக்கு நிகழ்ந்தது என்ன என்று வினவுகிறாள்.
அடிகள் 63 - 194 : லெம்மின்கைனனைத் தான் அனுப்பிய செய்தியை வடநாட்டுத் தலைவியும், அவனுக்கு மரணம் சம்பவித்த விபரங்களைச் சூரியனும் கூறுகிறார்கள்.
அடிகள் 195 - 554 : லெம்மின்கைனனின் தாய் ஒரு நீண்ட குப்பை வாரியுடன் மரண நீர்வீழ்ச்சிக்குச் சென்று நீர்வீழ்ச்சியை வாரி அவனுடைய உடலின் துண்டுகள் அனைத்தையும் எடுத்து அவற்றை ஒன்று சேர்த்துத் தனது மந்திர சக்தியினால் உயிர்பிக்கிறாள்.
அடிகள் 555 - 650 : உயிர்த்தெழுந்த லெம்மின்கைனன் துவோனலா ஆற்றில் தான் இறந்த விபரங்களைக் கூறித் தாயுடன் வீட்டுக்குத் திரும்புகின்றான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறும்பன் லெம்மின் கைனனின் அன்னை
சிந்தனை வீட்டில்எந் நேரமும் செய்தாள்:
"எங்கே ஏகினன் லெம்மின் கைனன்?
எங்ஙனம் மறைந்தான் தூர நெஞ்சினன்?
அவனின் வரவையிட் டறிந்திலேன் எதுவும்
பாரகம் சுற்றும் பயணத் திருந்து!"
அன்னைதுர்ப் பாக்கியவள் அறியவு மில்லை
அவனைச் சுமந்தவள் உணரவு மில்லை
தன்தசை நடமிடும் தகவலைப் பற்றி
இரத்தத்தின் இரத்த இயக்கம் பற்றி, 10
பசுமை செறிமலைப் பக்கஏ கினனோ!
புற்றரை மேட்டு புறநிலத் தினிலோ!
அல்லது கடற்பரப் பவனின் பயணமோ!
அடர்நுரை வீசும் அலைகளின் மீதோ!
அல்லதே தேனும் அரியபோர் தனிலோ!
அல்லதே தேதோ அச்சுறல் யுத்தமோ!
இயல்கணைக் காலில் இரத்தம் வடியுமோ!
அல்லது முழங்கால் ஆனதோ செந்நிறம்!
குயிலிக்கி என்பாள் கொழும்எழுல் மங்கை
பார்த்தனள் அங்கு, பார்த்தனள் திரும்பி, 20
குறும்பன் லெம்மின் கைனனின் வீட்டில்
தூர நெஞ்சினன் தோட்டத்து வெளியில்
பார்த்தாள் சீப்பைப் படர்மா லையிலே
தூரிகை அதையும் காலையில் பார்த்தாள்;
போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
சீப்பினி லிருந்து சிந்திய(து) இரத்தம்
தூரிகை அதனில் துளிர்த்தது குருதி.
குயிலிக்கி என்பாள் கொழும்எழுல் மங்கை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 30
"என்னிட மிருந்து என்னவன் ஏகினான்
அழகிய தூர நெஞ்சினன் அகன்றான்
வாழ்விட மின்றி வளர்பய ணத்தே
முன்ன றியாத வன்பா தைகளில்
சீப்பினி லிருந்து சிந்துதே குருதி
தூரிகை அதனில் துளிர்க்கிற திரத்தம்!"
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
சீப்பினை வந்து நோக்கினள் அவளே
கவலை யடைந்தாள் கண்ணீர் விட்டாள்:
"ஐயகோ, அதிர்ஷ்டம் அற்றஇந் நாளில்நான் 40
எனது காலத்தில் இன்னல் அடைந்தவள்
இப்போ பாக்கிய மில்லா என்மகன்
பாக்கிய மற்றஎன் பாவவம் சத்தினன்
நலமிலாத் தீயதாம் நாட்களைப் பெற்றனன்
ஈடிலாப் புதல்வனைச் சீரழி வடுத்தது
குறும்பன் லெம்மின் கைனனின் வீழ்ச்சி
சீப்பினி லிருந்து சிந்துதே குருதி
தூரிகை அதனில் துளிர்க்கிற திரத்தம்!"
கைத்தலத் தெடுத்தாள் கடிதுதன் உடைகளை
கரங்களில் பற்றினாள் கடிதுதன் துணிகளை 50
மிகநீள் தூரம் விரைந்தே ஓடினாள்
ஓட்டமா யோடி உடன்விரைந் தேகினாள்;
அகல்கையில் மலையெலாம் அதிர்ந்தொலி யெழுப்பின
தாழ்நிலம் உயரந்தது மேல்நிலம் தாழ்ந்தது
மேட்டு நிலங்கள் மிகக்கீழ்ப் போயின
தாழ்ந்த நிலங்கள் தடித்துமே லுயர்ந்தன.
வடக்கு நாட்டின் வசிப்பிடம் வந்தாள்
வியன்மகன் பற்றிய விபரம் கேட்டாள்
இவ்விதம் அவளே இயம்பிக் கேட்டனள்:
"ஓ,நீ வடபால் உயர்நிலத் தலைவியே! 60
லெம்மின் கைனனை எங்கே அனுப்பினை?
எனதுநன் மகனை எங்கே அனுப்பினை?"
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
அதற்கு இவ்விதம் அளித்தாள் மறுமொழி:
"உன்மகன் பற்றி ஒன்றுமே அறியேன்
மற்றெங் கவன்போய் மறைந்தான் என்பதை;
அணிபரி வண்டியில் அவனை அமர்த்தினேன்
பொருகொடும் குதிரை பூட்டிய வண்டியில்,
உருகும் பனிமழை யுற்றாழ்ந் தனனோ?
உறைபனிக் கடலில் இறுகி விட்டானோ? 70
ஓநாய் வாயில் உறவீழ்ந் தானோ?
அல்லது கரடியின் அகல்கொடு வாயிலோ?
கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"நிச்சயம் உன்சொல் நேரிய பொய்யே
ஓநாய் எனது உறவை உண்ணாது
லெம்மின் கைனனை நிசம்தொடா கரடி
வெறியோ நாய்களை விரலால் அழிப்பான்
கரடியைத் தனது கைகளால் ஒழிப்பான்;
உண்மையில் நீயும் உரையா விட்டால்
லெம்மின் கைனனை நீபோக் கிடத்தை 80
காண்புதுக் களஞ்சியக் கதவை நொருக்குவேன்
சம்போ இணைப்பைச் சாடி உடைப்பேன்."
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"உண்ண அவனுக் குணவு கொடுத்தேன்
அருந்தப் பானம் அவனுக் களித்தேன்
சோரும் வரையுப சாரம் செய்தேன்
இருத்தினேன் தோணி இயல்பின் புறத்தடம்
அதிர்நீர் வீழ்ச்சியால் அவனை அனுப்பினேன்
ஆயினும் எனக்கு அதுபுரிந் திலது
எளியவன் எங்கே ஏகினான் என்று, 90
நெடுநுரை பாயும் நீர்வீழ்ச் சியிலோ
அல்லது சுழலும் அருவியில் தானோ?"
கூறினள் லெம்மின் கைனன் அன்னை:
"நிச்சயம் உன்சொல் நேரிய பொய்யே
சரியாய் இப்போ சாற்றுவாய் உண்மை
இனிப்பொய் புகல்வது இதுவே கடைசி
லெம்மின் கைனனை எங்கே அனுப்பினை
மறைத்தது எங்கே கலேவலா மனிதனை
அல்லது உன்னை அணுகும் இறப்பு
உடனே மரணம் உன்னைச் சேரும்." 100
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"உனக்கு உண்மையை உரைக்கலாம் இப்போ
எருத்தினைத் தேடிச் சறுக்குதற் கனுப்பினேன்
மிகுவலி **விலங்கின் வேட்டைக் கனுப்பினேன்
வீரிய மொடுக்கிய விறற்பரிக் கனுப்பினேன்
புரவியை ஏர்க்கால் பூட்டிடக் கூறினேன்
அன்னத்தைத் தேட அவனை அனுப்பினேன்
போக்கினேன் புனிதப் புள்வேட் டைக்கு
இப்போ விளங்கவே இல்லை எனக்கு
எங்ஙனம் இயைந்தது இவ்வழி வென்று 110
எதிர்ப்பு வந்தது எவ்விதம் என்று
அவன்மீண் டிடுவதை அறிந்ததே யில்லை
மணமகள் ஒருத்தியை வரிப்பதற் காக
எனதுபெண் அவளை ஏற்பதற் காக."
மறைந்த மைந்தனை மாதா தேடினள்
இழந்த பையனை ஈன்றோள் தேடினள்
ஓடினாள் சேற்றிலே ஓநாய் போல
கரடிபோல் தீய்ந்த காட்டிலே திரிந்தாள்
**நீர்நாய் போல நீரில் நீந்தினாள்
நிலத்திலே அலைந்தாள் **வளைக்கர டியைப்போல் 120
**குளவிபோல் வந்தாள் குரைகடல் முனையில்
ஏரிக் கரைகளில் ஏகினாள் முயல்போல்;
பாறைக் கற்களைப் பக்கம் தள்ளினாள்
மரக்குற் றிகளை மண்கீழ் வீழ்த்தினாள்
தெருவின் கரைகளில் சேர்த்தாள் சுள்ளிகள்
வழிகளி லிருந்து கிளைகளை ஒதுக்கினாள்.
தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்
மைந்தனைப் பற்றி மரங்களைக் கேட்டாள்
தொலைந்தவ னுக்காய்த் துயர்மிகத் கொண்டாள் 130
தருவொன் றுரைத்தது தாருநெட் டுயிர்த்தது
சிந்துர மரமும் செம்மையாய்ச் சொன்னது:
"சுயமாய் எனக்கே துயர்கள் உள்ளன
கவனித்த திலைநின் காதற் புதல்வனை
பெருந்துயர் படவே பிறப்பெடுத் தேன்நான்
இங்கே இருக்கிறேன் என்கொடுங் காலம்
பெருந்துண் டுகளாய்ப் பிளக்கப் படற்கு
விறகுக ளாக வெட்டப் படற்கு
சூளையில் கிடந்து தொடர்தழி தற்கு
அல்லது வெட்டி அடுப்பெரிப் பதற்கு." 140
தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்
ஒருசிறு பாதையை உடன்வந் தடைந்தாள்
அந்தப் பாதைக் கவள்சிரம் தாழ்த்தினாள்:
"ஓ,சிறு பாதையே, உயர்இறை படைப்பே!
காதல்என் மகனைக் கண்டது இல்லையா,
அரும்பொன் ஆனஎன் அப்பிள் பழத்தை,
வெள்ளியில் செய்தஎன் மென்கைத் தடியை?"
பாதை அவளிடம் பாங்காய்ச் சொன்னது
அவளுடன் பேசி அதுவிடை யிறுத்தது: 150
"சுயமாய் எனக்கே துயர்கள் உள்ளன
கவனித்த திலைநின் காதற் புதல்வனை
பெருந்துயர் படவே பிறப்பெடுத் தேன்நான்
இங்கே இருக்கிறேன் என்கொடுங் காலம்
ஒவ்வொரு நாயும் ஓடுதற் காக
வன்பரிச் சவாரி மனிதர்கள் செய்ய
கடினகா லணிகள் கவினுற நடக்க
ஒவ்வொரு குதியும் உராய்ந்துதேய்ப் பதற்காய்."
தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும் 160
வளர்சந் திரனை வழியிலே கண்டாள்
தாழ்த்தினாள் தலையைச் சந்திரனுக்கு:
"எழிற்பொன் நிலவே, இறைவன் படைப்பே!
காதல்என் மகனைக் கண்டது இல்லையா
அரும்பொன் ஆனஎன் அப்பிள் பழத்தை
வெள்ளியில் செய்தஎன் மென்கைத் தடியை?"
எழிற்பொன் நிலவு இறைவன் படைப்பு
இவ்விதம் செவ்விதாய் இறுத்தது விடையே:
"சுயமாய் எனக்கே துயர்கள் உள்ளன
கவனித்த திலைநின் காதற் புதல்வனை 170
பெருந்துயர் படவே பிறப்பெடுத் தேன்நான்
இங்கே இருக்கிறேன் என்கொடுங் காலம்
பனிஇராப் பயணம் தனியே செய்கிறேன்
உயர்பனிப் புகாரிலும் ஒளியைத் தருகிறேன்
காவல் குளிர்கா லத்திலும் செய்கிறேன்
கோடையில் தேய்ந்து குறுகிப் போகிறேன்."
தொலைந்தவன் தனைநாள் தோறும் தேடினாள்
காணவே யில்லை கனநாள் தேடியும்
வரும்சூ ரியனை வழியிலே கண்டாள்
செங்கதி ரோற்குச் சிரசைத் தாழ்த்தினாள்: 180
"ஓ,நீ கதிரே, உயர்இறைப் படைப்பே!
காதல்என் மகனைக் கண்டது இல்லையா
அரும்பொன் ஆனஎன் அப்பிள் பழத்தை
வெள்ளியில் செய்தஎன் மென்கைத் தடியை?"
செங்கதி ரோற்குத் தெரியும் என்னவோ
பரிதிஇப் போது பதிலாய்ச் சொன்னது:
"பாங்குறும் உன்மகன் பாக்கிய மற்றவன்
தொலைந்தே போனான் சோர்கொலை யுண்டான்
துவோனியின் கறுப்புத் தொடர்நிற நதியில்
அகலமாய் வுலகில் அழிவிலா நீரில் 190
பாய்நீர் வீழ்ச்சியில் பயணம் சென்றனன்
ஓடும் அருவியில் உள்ஆழ்ந் தேகினன்
அங்கே துவோனி ஆற்றின் அடியில்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கில்."
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
அவள்தான் அழுது அங்கணீர் உகுத்தாள்
கொல்லன் வேலைக் கொள்களம் சென்றாள்:
"ஓ,நற் கொல்ல உயர்இல் மரின!
முன்னரும் நேற்றும் முனைந்தே செய்தனை
இன்றைக்கும் ஒன்று இயற்றுவாய் அங்ஙனம் 200
செப்புப் பிடியுடன் செய்வாய் வாரியை
முட்களை அதற்கு மூட்டுவாய் இரும்பில்
அதன்முன் நீளம் **அறுநூ றடியாம்
அதன்கைப் பிடியோ **ஐந்நூ றாறடி."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
செப்பிலே பிடியுடன் செய்தான் வாரியை
அதற்கு முட்களை அமைத்தான் இரும்பி
அதன்முன் நீளம் அறுநூ றடியாம்
அதன்கைப் பிடியோ ஐந்நூ றாறடி. 210
அவளே லெம்மின் கைனனின் அன்னை
வல்லிரும் பியைந்த வாரியைப் பெற்றாள்
துவோனலா ஆறு துரிதமாய்ப் போனாள்
வணங்கிக் கதிரினை வருமாறு இசைத்தாள்:
"ஓ,நீ கதிரே, உயர்இறைப் படைப்பே!
கர்த்தரின் படைப்பே, காலுமெம் ஒளியே!
ஒருகண நேரம் ஒளிர்வாய் மிகவே
இரண்டாம் வேளை எரிவாய் மங்கலாய்
மூன்றில் முழுமைச் சக்தியோ டொளிர்வாய்
தீய இனத்தைச் செலுத்துக துயிலில் 220
மாய்புவிச் சக்தியைத் தேய்ந்திடச் செய்வாய்
துவோனியின் சக்தியைத் தூர்ந்திளைத் திடச்செய்."
அந்தக் கதிரவன் ஆண்டவன் படைப்பு
கர்த்தரின் படைப்பு கதிரோன் அப்போ
வளைந்த மிலாறு மரத்தை யடைந்தது
வளைந்த பூர்ச்ச மரக்கிளை யிருந்தது
ஒருகண நேரம் ஒளிர்ந்தது மிகவும்
இரண்டாம் வேளை எரிந்தது மங்கலாய்
மூன்றிலே முழுமைச் சக்தியோ டொளிர்ந்தது
தீய இனத்தைச் செலுத்திய துறங்க 230
மாய்புவிச் சக்தியைத் தேய்ந்திடச் செய்தது
உளஇள மனிதர்கள் உறங்கினர் வாளுடன்
காண்முது மனிதர்கள் கைத்தடி தம்முடன்
இகல்நடு வயதினர் ஈட்டிகள் தம்முடன்
அதுபின் உயரத் தாங்கே சென்றது
உயரச் சுவர்க்கத் துச்சி அடைந்தது
இதன்முன் இருந்த இடத்தை அடைந்தது
தனது பழைய தங்கிட மடைந்தது.
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
வல்லிரும் பியைந்த வாரியை எடுத்தாள் 240
மைந்தனைத் தேடி வாரிட லானாள்
ஆரவா ரிக்கும் அந்நீர் வீழ்ச்சியுள்
பாய்ந்து பெருகிப் படர்அரு வியினுள்
வாரிய போதிலும் வந்தவன் கிடைத்திலன்.
மேலும் நீரதன் ஆழத் திறங்கினாள்
அவ்வழி சென்றனள் ஆழியின் வரையும்
காலுறை வரைக்கும் ஆழத் தேகினள்
இடுப்பு வரைக்கும் இறங்கினள் நீரில்.
மைந்தனைத் தேடி வாரிட லானாள்
துவோனலா ஆற்றுத் தொடர்நீள் வழியினில் 250
வாரித் தேடினாள் வளர்அரு வியினுள்
ஒருமுறை வாரினாள் இருமுறை வாரினாள்
மைந்தனின் ஒருமேற் சட்டைவந் திட்டது
சட்டை வந்ததால் தாங்கொணா மனத்துயர்
வாரியால் மீண்டும் வாரினாள் ஒருமுறை
கிடைத்தது காலுறை கிடைத்தது தொப்பியும்
காலுறை கண்டதும் கடுந்துயர் வந்தது
தொப்பியைக் கண்டதும் துயர்மனத் துயர்ந்தது.
மேலும் இறங்கினாள் விரியும் அருவியுள்
படுமாய் வுலகின் பள்ளத் தாக்கிலே 260
ஒருமுறை வாரினாள் உறுநீள் நீரினுள்
இரண்டாம் முறையும் எதிர்த்தே நீரினை
மூன்றாம் முறையும் முழுநீர் அடியிலே;
இப்போ திந்த இயல்மூன் றாம்முறை
உடல்தசைத் தொகுப்பு ஒன்றுமுன் வந்தது
இரும்பு வாரியின் இகல்முனை யினிலே.
அதுவுடல் தசைத்தொகுப் பானதே யல்ல
குறும்பன் லெம்மின் கைனன்அஃ தப்பா
அதுவே அழகிய தூர நெஞ்சினன்
வாரியின் முட்களில் வந்தகப் பட்டனன் 270
கொள்மோ திரவிரல் கொளுவி இருந்தனன்
வல்இடக் கால்விரல் மாட்டி இருந்தனன்.
குறும்பன் லெம்மின் கைனன் எழுந்தான்
கலேவாவின் மைந்தன் கரைமேல் வந்தான்
சேர்ந்தே செப்பினால் செய்த வாரியில்
வந்தான் தெளிந்த வளர்நீர் மேற்புறம்
ஆயினும் சிறிது அங்கிலா திருந்தது
தனதுகை ஒன்று தலையிலே பாதி
இன்னும் சிறுசிறு இணைந்த பகுதிகள்
அதன்மேல் அவனது ஆவியும் இல்லை. 280
அப்போ தவனது அன்னை எண்ணினாள்
அவளே அழுது அரற்றினள் இவ்விதம்:
"இனிஇதில் இருந்தொரு மனிதன் எழுவானா
உருவா குவனா ஒருபுது வீரன்?"
**அண்டங் காகமொன் றதனைக் கேட்டது
அதுஇவ் விதமாய் அளித்தது ஓர் பதில்:
"உட்சென் றவர்களில் ஒருமனி தருமிலர்
ஒன்றும்வந் தவைகளால் உருப்படல் இல்லை
கண்களை வெண்மீன் கடித்தயின் றிட்டன
கோலாச்சி மீன்கள் தோள்களைப் பிளந்தன 290
**வாரியுள் மனிதனை ஏகவே விடுவாய்
துவோனலா ஆற்றில் துணிந்துதள் ளிடுவாய்
ஒரு**மீ னாயவன் உருவம் பெறலாம்
அல்லது திமிங்கல மாகவும் மாறலாம்."
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
தனயனை நீரில் தள்ளவு மில்லை
வாரினாள் நீரை மற்றொரு முறையே
செம்மையாய் செப்பால் செய்தவா ரியினால்
துவோனலா ஆற்றுத் தொல்நீள் வழியினில்
வாரினாள் நீளமாய் வாரினாள் குறுக்காய் 300
தனிக்கை கிடைத்தது தலையும் கிடைத்தது
பருமுது கெலும்பின் பாதியும் கிடைத்தது
மார்பு எலும்பின் மற்றொரு பாதியும்
வேறுபல் துண்டுகள் மீண்டே வந்தன;
மகனைச் சேர்த்தனள் மற்றிவற் றிருந்து
குறும்பன் லெம்மின் கைனனை ஆக்கினள்.
தசையை எடுத்துத் தசையோ டிணைத்தனள்
எலும்பை எடுத்து எலும்பொடு சேர்த்தனள்
உறுப்புகள் அனைத்தையும் ஒன்றாய்ப் பொருத்தினள்
நரம்பை எடுத்து நரம்பொடு வைத்தனள். 310
உளநரம் பனைத்தையும் ஒன்றாய்க் கட்டி
நரம்பு முனைகளை நனிதைத் திணைத்து
தைத்த நுல்களைத் தான்பார்த் துரைத்தாள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்:
"அமைநரம் புகளின் அழகிய பெண்ணே!
நரம்பு மகளே, நலலெழில் நங்கையே!
நேர்நரம் பிணைத்து நெசவுசெய் மகளே!
கவின்நிறைந் திட்ட கைத்தறி யுடனே
கனசெப் பியன்ற கைத்தறித் தண்டுடன்
தனிஇரும் பியைந்த சக்கரத் துடனே, 320
தேவையாம் நேரம் தெரிந் கெழுக
கூவி யழைக்கையில் குறைநீக் கிடவா
உனது கரங்களில் ஒருங்கிணை நரம்புகள்
உனதுகை களிலே உறுப்பின் உருண்டைகள்
நரம்பினை இணைத்து நன்குகட் டுதற்காய்
நரம்பின் நுனிகளை நன்குதைப் பதற்காய்
திறந்து விரிந்து திகழ்ரண மீது
புறம்பிளந் துள்ள புண்களின் மீது.
இதுவும் போதா தின்னமு மென்றால்
வானிலே இருக்கிறாள் வனிதை யொருத்தி 330
செப்பினால் செய்த திகழ்பட கொன்றில்
உயர்செந் நிறத்து ஓடம் ஒன்றிலே;
வானத்தை விட்டு வருகநீ பெண்ணே!
சுவர்க்கத் திருந்து துணிந்துவா கன்னியே!
நரம்புகள் மீதுன் நற்பட கோட்டு
உறுப்புகள் மீது உடன்நீ நகர்ந்திடு
எலும்பின் இடையில் இணைந்தசைந் தேகு
உறுப்புள் உடைவின் ஊடாய்ச் செல்லு!
அவ்வவ் விடங்களில் அமைத்துவை நரம்பை
உறுசரி இடங்களில் ஒழுங்காய் வைப்பாய் 340
நரம்பில் பெரியதை நன்நேர் வைத்து
பிரதான நரம்பை பிடித்தெதிர் வைப்பாய்
இரட்டிப் பாய்நல் இகல்நரம் பமைப்பாய்
இணைப்பய் நரம்பின் இயைசிறு முனைகளை.
சிறிய ஊசியைத் தேர்ந்துபின் எடுத்து
பட்டினால் இயைந்த பதநூல் கோர்த்து
சிறந்த ஊசியால் செய்வாய் தையலை
தகரத் தூசியால் தையலைச் செய்வாய்
நரம்பின் முனைகளை நனியுறப் பின்னி
பட்டினால் செய்த பட்டியால் கட்டு. 350
இதுவும் போதா தின்னமு மென்றால்
எழில்வான் வாழும் இறைவா, நீரே,
வல்லநின் பரிகளை வண்டியில் பூட்டி
அரியநின் பரிகளை சரித்தயார் செய்வீர்
சிறந்தநின் வண்டியைச் செலுத்தி வருவீர்
எலும்பு நரம்புகள் என்பன ஊடாய்
ஒழுங்கு மாறிய ஊன்தசை ஊடாய்
நழுவி வழுக்கும் நரம்புகள் ஊடாய்;
எலும்புகள் அனைத்தையும் இணைப்பாய் தசைகளில்
நரம்பின் நுனியை நரம்பின் நுனியொடு 360
மிகும்எலும் புடைவில் வெள்ளியைப் பூசி
நரம்பின் வெடிப்பில் நற்பொன் பூசுவீர்.
தோற்சவ் வெங்கே தொய்நது கிழிந்ததோ
அங்கே தோற்சவ் வதைவளர்த் திடுவீர்
அமைநரம் பெங்கே அறுந்து போனதோ
அங்கே நரம்பை அமைவுறத் தைப்பீர்
எங்கே குருதி வெளியே றியதோ
அங்கே ஓட அதைவைத் திடுவீர்
ஒள்ளெலும் பெங்கே உடைந்து போனதோ
அங்கே எலும்பை அமைப்பீர் பொருத்தி 370
தசைகள் எங்கே தளர்ந்து போனதோ
அங்கே தசையை அமைப்பீர் இறுக
ஆசியோ டமைப்பீர் அவ்வவ் விடங்களில்
உரிய இடங்களில் ஒழுங்காய் வைப்பீர்
எலும்பை எலும்புடன் இயல்தசை தசையுடன்
உறுப்பை உறுப்போ டொன்றாய் வைப்பீர்."
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
ஆக்கினள் மனிதனை அமைத்தாள் வீரனை
உயிருடன் முன்னர் ஒருங்கிருந் ததுபோல
உயிருடன் முன்உள உருவத் தோடே. 380
தரிநரம் பனைத்தும் தைக்கப் பட்டன
நுனிநரம் பெல்லாம் நுட்பமோ டிணைந்தன
ஆயினும் மனிதன் வாய்கதைத் திலது
பிள்ளைக் கின்னும் பேச்சுவந் திலது.
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"பூச்சு மருந்தைப் போய்எவண் பெறலாம்
எங்கே சிறிது தேன்துளி கிடைக்கும்
இளைத்தவன் மீது எடுத்துப் பூசிட
குறைநோ யாளியைக் குணமாக் கிடற்கு 390
மீண்டும் பேசத் தூண்டிட மனிதனை
பாடலை மீண்டும் பாடவைத் தற்கு?
ஓ,எம் வண்டே, உயர்ந்த பறவையே!
காட்டு மலர்களின் கவினுறும் அரசே!
தேனை இப்போ சென்றே கொணர்வாய்
தேனைஎங் கேனும் சென்றே பெறுவாய்
களிப்பு நிறைந்த காட்டு வெளிகளில்
தனிக்கவ னம்நிறை தப்பியோ இடங்களில்
பலவிதமான மலர்களின் இதழ்களில்
பலவித மான பனிப்புல் மடல்களில் 400
புலர்நோ யாளியின் பூச்சு மருந்தாய்
குறைநோ யாளியைக் குணமாக் கற்கு."
சுறுசுறுப் பான பறவையவ் வண்டு
பறந்து சென்று பயணம் செய்தது
களிப்பு நிறைந்த காட்டு வெளிகளில்
தனிக்கவ னம்நிறை தப்பியோ இடங்களில்
வன்மேல் நிலத்து மலர்களில் எடுத்தது
சிறியதன் நாவில் தேனைச் சேர்த்தது
ஆறு மலர்களின் அலர்நுனி யிருந்து
நூறு புற்களின் நுண்மட லிருந்து; 410
தேனளி மெதுவாய்த் திரும்பி வந்தது
விரைந்து பின்னர் பறந்து வந்தது
சிறகுகள் முழுதிலும் தேனே இருந்தது
இறக்கைகள் மீது இனியதேன் வடிந்தது.
லெம்மின் கைனனின் அன்னை அவளே
பூச்சு மருந்தினைப் பூக்கரத் தெடுத்து
இளைத்தவன் மீது இனிதே தடவினள்
நலமற் றோன்மேல் நன்றாய்ப் பூசினள்;
ஆயினும் குணமதால் ஆகிட வில்லை
மனிதன் வாயிலே வரவிலைச் சொல்லே. 420
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்!
"வண்டே, எனது மன்சிறு பறவையே!
பறப்பாய் வேறு பக்கமாய் அங்கே
கடல்ஒன் பதினைக் கடந்தே செல்வாய்
செறிந்து பரந்தநீர்த் தீவுக் கேகுவாய்
தேன்நிறைந் திட்ட திருநிலம் செல்வாய்
*தூரியின் புதிய தொடர்வீ டடைவாய்
வணங்குதற் குரிய மாமே லோனவன்.
அங்கே சிறப்புறும் அரியதேன் உளது
அங்கே தரமிகும் அருமருந் துளது 430
நரம்புகட் கேற்ற நல்மருந் ததுவே
உறுப்புகட் குவந்த உயர்மருந் ததுவே;
அந்த மருந்தில் கொஞ்சம் கொணர்வாய்
மந்திர மருந்தை இங்கே கொணர்வாய்
காயப் பட்டவன் மேனிமேற் பூச
ஏற்பட்ட காயத் திடங்களில் தடவ."
கரியஅவ் வண்டு கனமிலா மனிதன்
பறந்தது மீண்டும் பயணம் செய்தது
கடல்கள் ஒன்பது கடந்து சென்றது
பத்தாம் கடலிலும் பாதியைத் தாண்டி; 440
ஒருநாள் பறந்தது இருநாள் பறந்தது
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகி
அதுஎப் புல்லிலும் அமரா தகன்று
எந்த இலையிலும் இருக்கா தகன்று
சென்றது பரந்த செறிநீர்த் தீவு
தேன்நிறைந் திட்ட திருநிலம் சென்றது
விரைந்து பாய்ந்தநீர் வீழ்ச்சியின் அருகில்
புனித அருவிநீர்ப் பொழிசுழிப் பக்கம்.
தேன்உரு வாகித் திகழ்ந்தஅவ் விடத்தில்
அரியபூச் செளடதம் ஆக்கிடப் பட்டது 450
சின்னஞ் சிறிய மண்சட் டிகளில்
அழகா யிருந்த கலயங் களிலே
அளவில் பெருவிரல் ஆம்கல யங்கள்
நுனிவிரல் மட்டுமே நுழையத் தக்கன.
கரியஅவ் வண்டு கனமிலா மனிதன்
செம்பூச் செளடதம் சிறிதே எடுத்தது
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
பறந்து வந்தது பண்ரீங் கரத்தொடு
பயணம் முடித்து பறந்து மீண்டது 460
ஆறுகிண் ணங்கள் அதன்கரத் திருந்தன
ஏழுகிண் ணங்கள் இருந்தன முதுகில்
அவைநிறைந் திருந்தன அரும்பூச் செளடதம்
நிகரில்நல் தைலம் நிறைய இருந்தது.
லெம்மின் கைனனின் அன்னை அவளே
பூசினாள் அந்தப் பூச்சு மருந்தை
வல்லஒன் பதுவகை மருந்தைப் பூசினாள்
தகும்எண் வகையாம் தைலம் பூசினாள்
ஆயினும் இன்னும் அடைந்திலன் குணமே
உண்டாக வில்லை ஒருபயன் தானும். 470
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்:
"கரிய வண்டே, காற்றின் பறவையே!
முனைந்தே பறப்பாய் மூன்றாம் முறையாங்(கு)
உயரும் விண்ணின் உலகம் செல்வாய்
ஒன்பது சுவர்க்கம் உடன்கடந் தேகுவை
அங்கே தேனும் அதிகமே யுண்டு
இதயம் நிறைந்த இனியதேன் உண்டு
தேவன் மந்திரம் செபித்த தேனது
இறைவன் புனிதன் இரட்சித்த தேனது 480
கர்த்தர் பிள்ளைகட் கதனைப் பூசினார்
கடும்தீச் சக்தியால் காயமேற் படுகையில்,
தேனிலே உனது சிறகினைத் தோய்ப்பாய்
நனைப்பாய் இறக்கை நனிகரை நறையில்
தேனைக் கொண்டு சிறகில் வருவாய்
வருவாய் ஆடையில் வளநறை சுமந்து
காயப் பட்டவன் மேனிமேற் பூச
ஏற்படு காயத் திடங்களில் தடவ."
அந்த வண்டு அன்புடைப் பறவை
இந்தச் சொற்களில் இயம்பிய ததுவே: 490
"அங்கே எப்படி அடியேன் செல்வது
நானோ இளைத்த நனிசிறு மனிதன்?"
"சுலபமாய்ப் போகலாம் துணிந்தாங் கேநீ
அழகுறப் பயணித் தங்கே யடையலாம்,
கதிரின் மேலே கலைநிலாக் கீழே
விண்ணில் இருக்கும் மீன்களின் நடுவே,
சிறகை அடித்து சென்றே ஒருநாள்
அடைவாய் திங்களின் அதியுயர் விளிம்பை!
அடுத்த நாளிலும் அதிவிரைந் தேகி
தாரகைக் கூட்டத் தனித்தோ ளடைவாய், 500
உறுமூன் றாம்நாள் உயரப் பறந்து
ஏழு மீன்களின் எழில்முது கடைவாய்,
சிறியது அதன்பின் செய்யும் பயணம்
அடுத்து வருவது அதிகுறும் தூரம்
புனிதக் கடவுளின் பொலியும் வதிவிடம்
பேரின்ப மானவர் பெரிதுறை வீடு."
எழுந்தது வண்டு இருநிலத் திருந்து
திடரினி லிருந்து தேன்சிற கெழுந்தது
விரைந்து விரைந்து பறந்து சென்றது
சிறிய சிறகினால் பறந்தது விரைந்து 510
பறந்தது சந்திர வளையப் பக்கம்
பரிதியின் எல்லையில் பறந்து திரிந்தது
தாரகைக் கூட்டத் தனித்தோள் கடந்தது
ஏழு மீன்களின் எழில்முது கேகிய(து)
கர்த்தர்வாழ் கூடம் கடிதுட் பறந்தது
சென்றது சர்வ வல்லோன் திருமடம்
அங்குபூச் செளடதம் ஆக்கப் பட்டது
தைலம் அங்கே தயார்செயப் பட்டது
வெள்ளியில் ஆன கொள்கல யத்திலும்
தங்கத் தியன்ற சட்டிகள் பலவிலும் 520
தேறல் கொதித்தது திகழ்நடுப் பகுதியில்
அருகிலே வெண்ணெய் உருகியே வந்தது
தெற்குக் கரையில் தேறல் இருந்தது
வடக்குக் கரையில் மலர்ந்தது தைலம்.
கரியஅவ் வண்டு காற்றின் பறவை
போதிய தேனை போந்தேற் றெடுத்தது
இதயம் நிறைய எடுத்தது தேனை
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
வண்டு திரும்பி வந்தது மெதுவாய்
பறந்து பின்னர் விரைந்து வந்தது 530
**கொம்புகள் நூறு கொடுங்கைகள் நிறைய
ஆயிரம் வேறு **அடர்கட் டிருந்தன
இதிலே தேனும் இனிததில் நீரும்
இன்னு மொன்றிலே இயைசீர் மருந்தும்.
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
சொந்தமாய்த் தனது தூயவாய் வைத்து
நாவினாற் சோதனை நன்றே செய்தாள்
நன்மனம் நிறைய நனிசுவைத் திட்டாள்:
"அந்தப் பூச்சு அருமருந் திவையே
சர்வ வல்லவன் தன்னுடை மருந்து 540
புனிதக் கடவுள்தாம் பூசிய மருந்து
உயர்இறை காயத் தூற்றிய மருந்து."
போய்இளைத் தவன்மேல் பூசினாள் மருந்தை
தளர்நலத் தோன்மேல் தடவினாள் மருந்தை
உடைந்த எலும்பின் ஊடாய்ப் பூசினாள்
உறுப்புகள் வெடிப்பின் ஊடாய்ப் பூசினாள்
பூசினாள் கீழும் பூசினாள் மேலும்
பூசினாள் மத்திய புறம்ஒரு முறையும்;
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்: 550
"எழுவாய் உறக்கத் திருந்துஇப் போது
கனவினி லிருந்து கண்விழிப் பாய்நீ
இந்தத் தீய இடத்தினிலிருந்து
அதிர்ஷ்ட மற்ற அமளியி லிருந்து!"
எழுந்தான் உறக்கத் திருந்தே மனிதன்
கனவினி லிருந்து கண்களை விழித்தான்
இப்போது அவனால் இயம்பிட முடிந்தது
உரியதன் நாவால் உரைத்திட முடிந்தது:
"எளியோன் நெடுநாள் இருந்தேன் துயிலில்
பாக்கிய மற்றவன் பலநாள் உறங்கினேன் 560
இனிய துயிலில் இருந்திட லானேன்
அமைதித் தூக்கம் ஆழ்ந்தே இருந்தேன்."
கூறினள் லெம்மின் கைனனின் அன்னை
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இன்னும் பல்லாண் டிருப்பாய் உறங்கி
பலகா லம்நீ படுக்கையில் இருப்பாய்
இல்லா விடில்உன் ஏழ்மைத் தாய்தான்
இல்லா விடில்உன் ஈனச் சுமந்தவள்.
சொல்வாய் இப்போ துர்ப்பாக் கியனே
புகல்வாய் அதனைஎன் புன்செவி கேட்க 570
வெம்மாய் வுலகுநீ விரைந்தது எதனால்
தண்துவோ னலாநதி தாழ்ந்தது எவரால்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
அன்னைக் கிவ்விதம் அளித்தான் மறுமொழி:
"நனைந்த தொப்பியன் நன்னிரை மேய்ப்பவன்
*கனவுல கத்தின் கட்புல னற்றவன்
மரண உலக மனுப்பியோன் அவனே
தண்துவோ னலாநதி தள்ளியோன் அவனே
நீரி லிருந்தொரு நெடும்பாம் பெடுத்தான்
**பறவைநா கத்தை படர்திரைப் பெயர்த்தான் 580
என்மேல் **பாக்கியம் இல்லான் ஏவினன்
அதைதான் முன்னர் அறிந்தது மில்லை
நீர்அரா வெறுப்பை நிசம்நான் அறிந்திலேன்
நீர்க்குழல் அதனின் நெடுங்கொடும் கடியை."
கூறினள் லெம்மின் கைனனின் அன்னை:
"அடடா, நுண்ணறி வற்றவன் என்பேன்,
மாந்திரீ கனுக்கு மந்திரம் செய்வேன்
படர்லாப் பியரைப் பாடுவேன் என்றாய்,
நீர்அரா வெறுப்பை நீதெரிந் திலையே
நீர்க்குழற் கடியை நீஅறிந் திலையே! 590
நீர்அராப் பிறப்பது நீரின் நடுவிலே
நீர்க்குழல் பிறப்பது நீரின் அலையிலே
முன்இது **வாத்துநல் மூளையில் பிறந்தது
தண்கடற் **பறவையின் தலையுட் பிறந்தது
இதனை **அரக்கி இருநீர் உமிழ்ந்தாள்
எச்சிற் குமிழை இறக்கினாள் அலைகளில்
நீரோ அதனை நீளமாய் வளர்த்தது
வெய்யோன் அதனை மென்மையாக் கிற்று
தண்காற் றதனைத் தாலாட் டிற்று
ஆராட்டி வளர்த்தது அகல்நீ ராவி 600
கரைக்குச் சுமந்தது கடலலை அதனை
தரைக்குக் கொணர்ந்தது தண்திரை அதனை."
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
அவனைத்தா னறிந்த வாறுசீ ராட்டி
அவனது முந்திய அழகுரு வாக்கி
பழையதோற் றத்தைப் பாங்குற வமைத்தனள்
இப்போ சற்றவன் இருந்தான் நலமாய்
நிலவிய முந்திய நிலையிலும் பார்க்க.
பின்னர் மகனைப் பெற்றவள் கேட்டாள்
ஏதும் குறைபா டிருக்கிற தாவென. 610
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எ(வ்)வளவோ குறைபா டின்னமு முள்ளது
எனதுளவேட்கை இருக்கிற தாங்கே
ஆவலும் ஆசையும் அங்கே உறங்கும்
வடபால் நிலத்து மங்கையர் மத்தியில்
அழகுறும் கூந்தல் அரிவையர் தம்மிடம்.
குமிழ்ச்செவி வடநிலக் குணமிலா மாது
தன்னுடைத் தனையைத் தருவதாய் இல்லை
வாத்தைநான் எய்து வந்தால் தவிர
அந்த அன்னத்தை அடித்தாற் தவிர 620
அந்தத் துவோனலா அருநதி யாங்கே
ப,னித அருவிப் பொங்குநீர்ச் சுழியில்."
கூறினள் லெம்மின் கைனனின் அன்னை
உரைத்தே அவள்தான் உசைய லாயினள்:
"எளியஅன் னத்தை இனிக்கை விடுவாய்
வாத்தினை ஆங்கே வாழ்ந்திட விடுவாய்
துவோனலா அதனின் தொல்கறுப் பாற்றில்
புகார்கள் படிந்த பொங்குநீர்ச் சுழியில்;
இல்லப் பக்கமாய் இப்போ தேகுவாய்
அகமகிழ் விழந்த அன்னை என்னுடன் 630
இனியுமுன் நலனுக்கு இயம்பிடு நன்றி
அனைவரும் அறிந்த ஆண்டவ னுக்கு
உண்மையாய் உனக்கு உதவிய தற்காய்
இவ்வுயி ருடன்மீட் டெழுப்பிய தற்காய்
துவோனியின் வலிய தொல்வழி யிருந்து
மரண உலகதன் வசிப்பிட மிருந்து
என்னால் முடிந்தது எதுவுமே யில்லை
எதுவும் நானே இயற்றுதற் கில்லை
கர்த்தர் அவரின் கருணை யில்லாமல்
இறைவழி நடத்தல் இல்லா விடினே." 640
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
இல்லம் நோக்கி எழுந்திட லானான்
அன்புடைத் தனது அன்னை தன்னுடன்
மாண்புடைத் தனது மாதா தன்னுடன்.
இழக்கிறேன் துரநெஞ் சினனையாங் கிப்போ
குறும்பன் லெம்மின் கைனனை விடுகிறேன்
நீள்கா லத்தென் நெடுங்கதை யிருந்து
போகிறேன் இன்னொரு கதையின் புறமே
பாடலை வேறொரு பக்கமாய் விடுகிறேன்
அதைத்திருப் புகிறேன் அகல்புதுப் பாதையில். 650
பாடல் 16 - மரண உலகில் வைனாமொயினன் TOP
அடிகள் 1 - 118 : வைனாமொயினன் ஒரு படகு செய்வதற்கு பலகைகள் கொண்டு வருமாறு சம்ஸாவைப் பணிக்கிறான்; அங்ஙனம் கிடைத்த பலகைகளில் ஒரு படகைச் செய்கிறான்; ஆனால் மூன்று மந்திரச் சொற்கள் நினைவுக்கு வரவில்லை.
அடிகள் 119 - 362 : இந்த மந்திரச் சொற்கள் கிடைக்காமல் போனதால், அவற்றைப் பெறுவதற்குத் துவோனலா என்னும் மரண உலகத்துக்குப் போகிறான். அங்கே அவன் தடுத்து வைக்கப் படுகிறான்.
அடிகள் 363 - 412 : வைனாமொயினன் அங்கிருந்து தப்பி வந்து விடுகிறான். இனிமேல் அங்கே ஒருவரும் போகக் கூடாது என்று எச்சரிக்கை செய்வதோடு அது தீய மக்கள் வாழும் பயங்கரமான இடம் என்றும் வர்ணிக்கிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
செம்பட கொன்றைச் செய்யத் தொடங்கினான்
தொடங்கினன் புதிய தோணியொன் றியற்ற
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.
கலக்கலை ஞற்குக் கிடைத்தில துமரம்
படகுசெய் வோற்குப் பலகையாங் கில்லை.
தேவையாம் மரத்தைத் தேடுவார் யாரோ
பெருஞ்சிந் துரமரம் பெறுவர் யாரோ 10
வைனா மொயினன் வன்பட கியற்ற
ஓடத் தடித்தட்(டு) உடன்செயப் பாடகன்?
பெருவிளை நிலமகன் பெல்லர் வொயினன்
சம்ஸா என்னும் தனிச்சிறு வாலிபன்
அந்த மரத்தை அவனே தேடுவான்
அடர்சிந் துரமரம் அவனே பெறுவான்
வைனா மொயினன் வன்பட கியற்ற
ஓடத் தடித்தட்(டு) உடன்செயப் பாடகன்.
அவன்நடை போட்டான் அகல்தன் பாதையில்
வலம்வந் திட்டான் வடகிழக் குலகில் 20
ஒருகுன் றேறினான் உடன்இன் னொன்றிலும்
மூன்றாம் குன்றும் முயன்றயல் ஏகினான்
தங்கக் கோடரி தடத்திண் தோள்களில்
செப்பினால் ஆன கைப்பிடிக் கோடரி
அரச மரமொன் றருகினில் வந்தான்
அம்மரத் துயரம் அதுபதி னெட்டடி.
அரச மரத்தை அவன்தொட எண்ணினான்
தொடுகோ டரியினால் துணிக்க நினைத்தான்
அப்போ தந்த அடர்மரம் சொன்னது
தன்நா வால்அது சாற்றிய திவ்விதம்: 30
"என்னிடம் மனிதா என்னதான் வேண்டும்
எப்படி யாயினும் என்னநின் விருப்பம்?"
பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
இனிவரும் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதுவே உன்னிட மிருந்துவேண் டுவது
இதுவே தேடிய(து) இதுவே விரும்பிய(து)
வைனா மொயினன் வன்பட கியற்ற
பாடகன் தோணிப் பலகைகள் தேவை."
அதிசயப் பட்டு அரசும் சொன்னது
நூறுகிளை மரம் நுவல முடிந்தது: 40
"ஓட்டைப் படகையே உகந்தெ(ன்)னாற் பெறுவாய்
உடன்நீர் அமிழும் ஓடமே கிடைக்கும்
அடிமரம் எனது ஆனது குழல்போல்,
இந்தக் கோடையில் ஒருமுத் தடவைகள்
என்இத யத்தை இழிபுழு தின்றது
பூச்சி அரித்துப் போட்டதென் வேர்களை."
பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
நடந்து மேலும் நகர்ந்தே பார்த்தான்
நடந்த பொழுதே நன்குசிந் தித்தான்
வதியுமிவ் வுலகின் வடக்குப் பக்கம் 50
எழில்தேவ தாரவன் எதிரே வந்தது
முப்பத்தி யாறடி முழுமரத் துயரம்.
அறைந்தான் மரத்தை அவன்கோ டரியால்
கோடரிக் காம்பைக் கொண்(டு)உரத்(து) அடித்தான்
வினவினன் இவ்விதம் விளம்பினன் இவ்விதம்:
"உயர்தேவ தாருவே உன்னால் முடியுமா
வைனா மொயினன் வன்பட காக
பாடகன் தோணிப் பலகையாய் மாற?"
வியன்தேவ தாரு விரைந்தே சொன்னது
உரத்த குரலில் உடன்அதே சொன்னது: 60
"வராது படகுஎன் வயத்தே யிருந்து
வராது ஆறு **வங்(கக்)காற் படகு
கணுக்கள் நிறைந்த கவின்தே(வ) தாருநான்
மூன்று தடவைகள் முனைந்திக் கோடையில்
அண்டங் காகம் அசைத்தது உச்சியை
காகம் கிளைகளில் கரைந்தது இருந்து."
பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
நடந்துமென் மேலும் நகர்ந்தே பார்த்தான்
நடந்த பொழுதே நன்குசிந் தித்தான்
திகழுமிவ் வுலகின் தெற்குப் பக்கம் 70
ஒருசிந் துரமரம் ஒளிர்ந்துமுன் வந்தது
ஐம்பத்து நாலடி அதன்சுற் றளவு
பின்னர் இவ்விதம் பேசினான், கேட்டான்:
"உன்னால் முடியுமா உயர்சிந் தூரமே
வேட்டைப் படகின் வியன்உறுப் பாக
அணிபோர்ப் படகின் அடிப்புற மாக?"
சிந்துரம் சீராய்ச் செப்பிய துத்தரம்
விதையுள மரமும் மிகுதரத் துரைத்தது:
"படகு(க்கு)ப் பலகைகள் பலஎன் னிடமுள
அடிப்புற முள்ளது அகல்பட கமைக்க 80
கணுக்கள் விழுந்ததோர் கடைமரம் நான(ல்)ல
உள்ளே குழல்போல் உருவந் திலது
முகிழ்இக் கோடையில் மூன்று தடவைகள்
இந்தக் கோடை இயைபரு வத்தில்
நடுமரம் சுற்றி நகர்ந்தது பருதி
சந்திரன் திகழ்ந்து தரித்ததென் உச்சி(யில்)
எனது கிளைகளில் இருங்குயில் அமர்ந்தன
பறவைகள் இலைகளில் படிந்தோய் வுற்றன."
பையன் சம்ஸா பெல்லர் வொயினன்
கோடரி எடுத்தான் கொள்தோ ளிருந்து 90
வன்கோ டரியால் மரத்தை அறைந்தான்
வெட்டினான் அலகால் வியன்சிந் துரமரம்
விரைவாய் மரத்தை வீழ்த்த முடிந்தது
தனியெழில் மரத்தைத் தரையில் வீழ்த்தினான்.
வெட்டி உச்சியை விலக்கினான் முதலில்
துண்டுதுண் டாக்கினான் தொடர்ந்தடி மரத்தை
அதிலே யிருந்து அடிப்புறம் செய்தான்
எண்ணிலாப் பலகைகள் எடுத்துடன் சீவினான்
பாடக னுக்குப் படகுகள் செய்ய
வைனா மொயினனின் வன்பட கமைக்க. 100
முதிய வைனா மொயினன் பின்னர்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
தூயதன் அறிவால் தோணியைச் செய்தான்
கப்பலை மந்திரப் பாடலால் கட்டினான்
தூயசிந் தூரத் துண்டுகள் தம்மால்
சோர்ந்துடை மரத்தின் துணுக்கினி லிருந்து.
பாடிஓர் பாடல் பண்ணினான் அடிப்புறம்
பாடல்மற் றொன்றால் பக்கங்(கள்) பொருத்தினான்
பாடியே மூன்றாம் பாடலை விரைந்து
வேண்டிய துடுப்புகள் மிடுக்குடன் செய்தான் 110
வங்கக் கால்களை வகையுறச் செய்தான்
பொருத்துகள் அனைத்தையும் பொருத்தியொன் றாக்கினான்.
படகுக்கு வங்கக் கால்களைப் படைத்து
எல்லாப் பக்கமும் இணைத்த பின்னரும்
மூன்றுமந் திரச்சொல் வேண்டி(யே) யிருந்தன
முன்னணி விளிம்பை மொய்ம்புறப் பூட்ட
முன்பா கத்தை முற்றுப் படுத்த
கனத்தபின் அணியம் கட்டி முடிக்க.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன் 120
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,என் நாட்களில் ஒருபாக் கியமிலான்
இறக்க முடிந்தில(து) இப்பட(கு) அப்பில்
அகல்புதுத் தோணியை அலைகளின் மீது."
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்கே அச்சொல் இருந்துபெற் றிடலாம்
திருமந் திரச்சொல் தேடுவ தெங்கே
தூக்கணஞ் சிட்டின் தொடுஉச் சியிலா
அன்னக் கணத்தின் மென்தலை களிலா
வாத்துக் கூட்ட வளர்தோள் இருந்தா? 130
திருமந் திரச்சொல் தேடிச் சென்றான்
அன்னக் கூட்டம் அதுவொன் றழித்தான்
கொன்றான் வாத்துக் கூட்டம் ஒன்றினை
தூக்கணங் குருவிகள் சொற்கணக் கடங்கா
ஆயினும் கிடைத்தில அந்தச் சொற்கள்
இல்லைசொல் ஒன்றுமே இல்லைஓர் **அரையும்.
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
"அச்சொல் நூறு அங்கே இருக்கலாம்
கோடை மானின் கொழுநாக் கடியில்
அரியவெண் ணிறத்து அணிலின் வாயில்." 140
திருமந் திரச்சொல் தேடிச் சென்றான்
மர்மச் சொற்களை வாகாய்ப் பெறற்காய்,
வெட்டித் திறந்தான் வெகுவயல் மான்களை
ஆங்கொரு பெரிய அணிலின் குழுவையும்
அதிக சொற்களை அங்கே பெற்றான்
ஆயினும் சொற்கள் அவைபய னற்றவை.
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
"அச்சொல் நூறு அங்கே பெறுவேன்
துவோனியின் இருண்ட தொல்வதி விடத்தில்
காலங் கடந்த மாய்வுல கில்லில்." 150
சொற்கள் வேண்டித் துவோனியை அடைந்தான்
மந்திர மொழிக்காய் மரண உலகம்;
அமைதி யாக அடிவைத் தேகினான்
வாரமொன் றுபுதர் வழியூ டேகினான்
**சிறுபழச் செடிவழி திகழ்மறு வாரம்
மூன்றாம் வாரம் சூரைச் செடிவழி
மரணத் தீவு வந்தது கண்ணெதிர்
துவோனியின் குன்று தொடர்ந்தெதிர் ஒளிர்ந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உறுபலக் குரலில் உரத்துக் கத்தினான் 160
அங்கே துவோனியின் அந்தஆற் றிடையே
மரண உலகின் வலுதாழ் விடத்தில்:
*"துவோனியின் மகளே, தோணிநீ கொணர்வாய்!
மரண(த்தின்) மதலாய், வருவாய் படகொடே!
இந்தநீ ரிணையை இனிநான் கடக்க!
ஆற்றைக் கடந்து அக்கரை சேர!"
துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
சலவைத் தொழிலைத் தான்செய் திருந்தாள்
அடித்துத் துணிகளை அலம்புதல் செய்தாள் 170
துவோனியின் கறுப்புத் தொடர்நிற ஆற்றில்
மரண உலகின் வலுதாழ் நீரில்;
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"இங்கிருந் தோடம் இனிக்கொண ரப்படும்
என்ன காரணம் என்பதைச் சொன்னால்
மரண உலகுநீ வந்தது எதற்கு
வருநோய் உனக்கு மரணம் தராமல்
இயற்கையாய் உனக்கு இறப்பு வராமல்
வல்விதி எதாலும் மரணம் வராமல்?" 180
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"துவோனி என்னை இங்கே கொணர்ந்தது
என்நாட் டிருந்து இழுத்தது மரணம்."
துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"கண்டுகொண் டேன்யான் கள்ளன் ஒருவனை
உன்னைத் துவோனி இங்கே கொணர்ந்தால்
உன்நாட் டிருந்து உறுமிறப் பிழுத்தால் 190
தன்னுடன் துவோனி தான்கொணர்ந் திருக்கும்
படும்இறப் புன்னுடன் பயணித் திருக்கும்
மரணத்(தின்) தொப்பிநின் வன்தோள் வைத்து
மரணத்(தின்) கையுறை வன்கரம் தந்து
வழங்குக உண்மை(யை) வைனா மொயினனே,
மரண உலகுநீ வந்தது எதற்கு?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இவ்விதம் அதன்பின் இயம்பினன் அவனும்
"இறப்புல குக்கெனை இரும்பு கொணர்ந்தது
உருக்குத் துவோனியின் உலகிற் கொணர்ந்தது." 200
துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அறிந்துகொண் டேன்யான் அரியதோர் கள்ளனை
இறப்புல குக்குனை இரும்பு கொணர்ந்தால்
உருக்கே துவோனியின் உலகிடைக் கொணர்ந்தால்
இரத்தம் பெருக்கும் ஏற்றநின் ஆடை
பாயும் இரத்தம் படுரண மிருக்கும்
வழங்குக உண்மையை வைனா மொயினனே
இரண்டாம் தடவை வழங்குவாய் உண்மை." 210
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மரண உலகெனை வண்புனல் கொணர்ந்தது
துவோனியின் உலகெனைத் தொடர்அலை கொணர்ந்தது."
துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தெரிந்துகொண் டேன்யான் திரும்பவோர் பொய்யனை
மரண உலகுனை வண்புனல் கொணர்ந்தால்
துவோனியின் உலகுனைத் தொடர்அலை கொணர்ந்தால் 220
தண்ணீர் பெருக்கும் தரித்தநின் ஆடை
நீரைச் சொட்டும் நின்உடைக் கரைகள்;
உண்மையைச் சரியாய் உரைப்பாய் இப்போ(து)
மரண உலகு வந்தது எதற்கு?"
முதிய வைனா மொயினன் அங்கே
கடிதுமற் றொருமுறை களவே செய்தான்:
"மரண உலகெனை வளர்தீ கொணர்ந்தது
துவோனியின் உலகெனைச் சுடுகனல் கொணர்ந்தது."
துவோனியின் குள்ளத் தொல்லுருப் பெண்ணவள்
மரண உலகின் வன்குறு மகளவள் 230
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"உணர்ந்துகொண் டேன்யான் உயர்ந்ததோர் பொய்யனை
மரண உலகுனை வளர்தீ கொணர்ந்தால்
துவோனியின் உலகுனைச் சுடுகனல் கொணர்ந்தால்
கனத்தஉன் தலைமயிர் கருகியே யிருக்கும்
இரிந்தநின் தாடிநன் கெரிந்துபோ யிருக்கும்.
ஓ,நீ முதிய வைனா மொயினனே!
ஓடம்இங் கிருந்து உனக்குத் தேவையேல்
உண்மையைச் சரியாய் உரைப்பாய் இப்போ(து)
பொய்யே சொல்வது போய்முடி யட்டும் 240
மரண உலகம் வந்தது எவ்விதம்
வருநோய் உனக்கு மரணம் தராமல்
இயற்கையாய் உனக்கு இறப்பு வராமல்
வல்விதி எதாலும் மரணம் வராமல்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சிறுபொய் சிலநான் செப்பிய துண்டு
இரண்டாம் தடவையும் இழைத்தேன் களவு
உண்மையை இப்போ உரைப்பேன் யானே:
அமைத்தேன் படகொன்(று) அறிவின் சக்தியால்
பாடலின் தன்மையால் படகொன் றாக்கினேன் 250
ஒருநாள் பாடினேன் இருநாள் பாடினேன்
அங்ஙனம் பாடினேன் அடுமூன் றாம்நாள்
பாட்டெனும் வண்டி பட்டென உடைந்தது
பாடற் சொல்நடை பட்டது குழப்பம்
ஊசியொன் றினுக்காய் உற்றேன் துவோனலா
துறப்பணம் தேடி இறப்புல கடைந்தேன்
கடிதுஎன் வண்டியைக் கட்டி யமைத்திட
என்பா வண்டியை ஏற்றதாய்த் திருத்த
இங்கொரு ஓடம் இப்போ(து) கொணர்வாய்
அடுத்துன் படகொன் றாயத்த மாக்கு 260
இந்த நீரினையை இனிநான் கடக்க
ஆற்றைக் கடந்து அக்கரை சேர."
ஏசினாள் துவோனியின் எழில்மகள் அவனை
தகரா றிழைத்தனள் சாவுல கத்தவள்:
"நீயொரு மூடன், நீள்மடத் தனத்தோன்,
மூளைக்கோ ளாறு மூண்டுள மனிதன்,
துவோனலா காரணத் தொடர்பிலா தடைந்தாய்
நோயின்றி மரண நுண்ணுல குற்றாய்
உனக்கொரு காரியம் உகந்ததா யிருக்கும்
திரும்பிநின் நாடு செல்வதே யதுவாம் 270
வந்தது உண்டு மற்றிங் கனேகர்
ஆனால் திரும்பி அனேகர் சென்றிலர்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"பாதையை ஒருமுதுப் பாவைதான் மாற்றலாம்
ஆயினும் இளைத்ததோர் ஆடவன் செய்திடான்
சோம்பிய மனிதனும் துணிந்ததைச் செய்திடான்
துவோனியின் மகளே தோணியைக் கொணர்வாய்
கொணர்வாய் மாய்புலக் குழந்தையே படகினை!"
துவோனியின் மகளும் தோணியைக் கொணர்ந்தாள்
முதிய வைனா மொயினனை அதிலே 280
நீரிணை கடந்து நேராய்க் கொணர்ந்தாள்
ஆற்றைக் கடந்து அக்கரை வந்தாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"வைனா மொயினநீ வந்தனை, பாவம்,
இறப்பிலா திந்த இறப்புல கடைந்தாய்
மரண மின்றியே வந்தாய் துவோனலா."
துவோனியின் மகளெனும் துணிந்தநற் தலைவி
மரணலோ கத்து மகள்முது மாது
கொஞ்சமாய்க் குடுக்கையில் கொணர்ந்தாள் 'பீர்'அது
இரண்டுகைப் பிடியுள ஏந்திய கெண்டியில் 290
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"முதிய வைனா மொயினனே பருகுக!"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
குடுக்கையின் உள்ளே குனிந்து நோக்கினான்
சினைத்தன தவளைகள் சிறுகுடுக் கையினுள்
புரண்டுபக் கங்களில் புழுக்கள் நெளிந்தன
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:
"இங்குநான் வந்தது இதற்காய் அல்ல
மாய்புல(க)க் குடுக்கையில் மதுக்குடிக்(க) அல்ல
துவோனியின் கெண்டியில் தொட்டருந்(த) அல்ல 300
போதையே கொள்பவர் புணர்'பீர்' குடிப்போர்
சாடியில் குடிப்போர் தரையினில் வீழ்வார்."
சொன்னாள் துவோனித் தொல்புவித் தலைவி:
"ஓ,நீ முதிய வைனா மொயின!
மரண உலகம் வந்தது எதற்கு?
துவோனலாப் பயணம் தொடர்ந்தது எதற்கு?
நினைவரும் பாத நேரம் துவோனி?
அம்புவி யிருந்துசா வழைக்கா நிலையில்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"படகு ஒன்றையான் படைத்தபோ தினிலே 310
புதிய தோணியைப் புனைந்தபோ தினிலே
தேவை யாயினமுத் திருமந் திரச்சொல்
முன்பா கமதை முற்றுப் படுத்த
கனப்பின் னணியம் கட்டி முடிக்க;
அவற்றை எங்குமே அடையா நிலையில்
இப்புவி அவைகள் இல்லா நிலையில்
வன்துவோ னலாயான் வரநேர்ந் ததுவே
பயணிக்க நேர்ந்தது பருமிறப் புலகு
தேவையா யிருந்த செஞ்சொல் தேடி
மந்திரச் சொற்களை வாகுறக் கற்க." 320
அப்போ(து) துவோனியின் அம்புவித் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"துவோனி சொற்களைச் சொ(ல்)லித்தரற் கில்லை
பலமதை மாய்நிலம் பகிர்வதற் கில்லை
இங்கிருந்து உன்னால் இனித்திரும் பொண்ணா
என்றும்உன் வாழ்வில் இனிமுடி யாது
பயணிக்க முடியா பழகுநின் இல்லம்
செல்லவும் முடியா சொந்தநா டினிநீ."
அவள்அம் மனிதனை அணைதுயில் ஆக்கினாள்
பயணியைக் கீழே படுக்கவைத் திட்டாள் 330
துவோனி செய்த தோற்படுக் கையிலே;
படுத்துக் கிடந்தான் படிந்ததில் மனிதன்
உறக்கத் திருந்தான் உயர்விற லோனதில்
உடைகள்காப் பளித்தன உறங்கினன் மனிதன்.
துவோனலா விலேயொரு தொல்முது மாது
முதியவள் ஒருத்தி முன்நீள் தாடையள்
இரும்புநூல் நெசவினை இனிதுசெய் கின்றவள்
செப்பிலே யிருந்துநூல் செய்வதே வருபவள்
நூற்றுக் கணக்கிலே நூல்வலை பின்னுவாள்
ஆயிரக் கணக்கிலும் ஆக்கியே முடிப்பாள் 340
கோடைகா லத்துகொள்இரா ஒன்றிலே
நீரில் கிடந்ததோர் நெடியபா றையின்மேல்.
துவோனலா விலேயொரு தொல்முது மனிதன்
மூன்று விரலுறும் முதியவன் இருந்தான்
இரும்பில் வலைகளை எடுப்பவன் பின்னி
செப்பிலும் வலைகளை செய்தே எடுப்பவன்
நூற்றுக் கணக்கிலே நூல்வலை பின்னுவான்
ஆயிரக் கணக்கிலும் ஆக்கியே முடிப்பான்
கோடை காலத்துக் கொள்அதே இரவில்
நீரில் கிடந்தநீள் அதே பாறையில். 350
தொடுகோ ணல்விரல் துவோனியின் மைந்தன்
கூர்இரும் பாலமை கோணிய விரலான்
நூற்றுக் கணக்கிலே நூல்வலை இழுப்பான்
துவோனியின் ஆற்றின் தொடுகுறுந் திசையில்
குறுக்குத் திசையிலும் கொள்நீள் திசையிலும்
திகழ்சாய் சரிவுத் திசையிலும் இழுப்பான்
வைனா மொயினன் வழிச்செலல் நிறுத்த
அமைதிநீர் மனிதன் அகல்வதைத் தடுக்க
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் 360
துவோனலா வதிவிடத் தொல்லிட மிருந்து
காலங் கடந்தசாக் கதிநிலத் திருந்து.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வல்லழி வெனக்கு வந்தே விட்டதா?
இன்னற் காலம் எனக்கு வந்ததா?
துவோனலா வெனுமித் தொல்வதி விடத்தில்?
மரண உலகின் வாழ்விடம் தன்னில்?"
உடனே தனது உருவம் மாற்றினான்
விரைந்து வேறொரு வேடம் கொண்டனன் 370
கறுப்பு நிறத்தில் கடலிடைச் சென்றான்
கோரைப் புற்றட நீர்நாய் போலவே
இரும்புப் புழுப்போல் ஏகினான் தவழ்ந்து
நஞ்சுப் பாம்புபோல் நகர்ந்தே சென்றான்
துவோனலா ஆற்றின் தொடுகுறுக் காக
துவோனியின் வலைகளின் ஊடாய்த் துணிவொடே.
தொடுகோ ணல்விரல் துவோனியின் மைந்தன்
கூர்இரும் பாலமை கோணிய விரலான்
அங்கே சென்றான் அதிகா லையிலே
விரித்தன் வலைகளை மீண்டும் பார்க்க; 380
நன்னீர் மீன்கள் நன்குநூ றிருந்தன
சிறுமீன் கிளைகள் திகழ்ந்தன ஆயிரம்
வைனா மொயினன் வந்ததில் பட்டிலன்
அமைதிநீர் முதியோன் அகப்பட வில்லை.
முதிய வைனா மொயினன் அதன்பின்
துவோனலா விருந்து துணிந்தே வருகையில்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"எக்கா லத்தும் இறைவனே வேண்டாம்!
என்றும் நிகழ்த்தவும் வேண்டாம் இங்ஙனம், 390
தானே மரண உலகுசார்ந் தோர்க்கு
துவோனலா நுழைந்த தூயமா னிடர்க்கு
அங்கே சென்றவர் அநேகர் உள்ளனர்
மிகவும் குறைவு மீண்டவர் அங்கிருந்(து)
துவோனலா வதிவிடத் தொல்பதி யிருந்து
காலங் கடந்தசாக் கதிநிலத் திருந்து."
பின்வரும் சொற்களில் பேசினான் இன்னும்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்
எழுச்சிபெற் றோங்கும் இளைஞர் தமக்கும்
வளர்ந்திடும் தேசீய மக்களார் தமக்கும்: 400
"ஒருபோதும் வேண்டாம், உயர்மனு மக்காள்!
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
குற்றமற் றோர்மேல் குற்றமேற் றாதீர்
தவறற் றோர்மேல் தவறு சாட்டாதீர்;
கடுமையாய்க் கூலி கணித்ததற் கிடப்படும்
அங்கே துவோனியின் அவ்வதி விடத்தில்;
குற்ற மிழைப்போர்க் குண்டொரு தனியிடம்
பாவிகட் கங்கே படுக்கைகள் உண்டு
கட்டில்கள் கொதிக்கும் கற்களில் உண்டு
கனல்விடும் பாளக் கற்களாங் குண்டு 410
புணர்அரா நஞ்சிலே போர்வைகள் உண்டு
துவோனிப் புழுக்களைத் தொடுத்தவை நெய்தவை."
பாடல் 17 - வைனாமொயினனும் அந்தரோ விபுனனும் TOP
அடிகள் 1 - 98 : அந்தரோ விபுனனிடம் மந்திரச் சொற்களைப் பெறச் சென்ற வைனாமொயினன் பூமியின் கீழ் நீண்ட தூக்கத்தில் இருந்த அவனை எழுப்புகிறான்.
அடிகள் 99 - 146 : அந்தரோ விபுனன், வைனாமொயினனை விழுங்குகிறான்; வைனாமொயினன் வயிற்றுக்குள் இருந்து அவனைச் சித்திரவதை செய்கிறான்.
அடிகள் 147 - 526 : அந்தரோ விபுனன் வைனாமொயினனை வயிற்றிலிருந்து வெளியேற்ற எல்லா வழிகளையும் கையாளுகிறான். அவனுடைய வாக்குறுதிகள், மந்திரம், மாயம், சூனியம் எதுவும் பயனளிக்கவில்லை. தனது படகை முடிப்பதற்குத் தேவையான மூன்று மந்திரச் சொற்கள் கிடைத்தால் மட்டுமே தான் வயிற்றிலிருந்து வெளியேறுவதாக வைனாமொயினன் கூறுகிறான்.
அடிகள் 527 - 628 : அந்தரோ விபுனன் தனக்குத் தெரிந்த மந்திர அறிவுப் பாடல்கள் அனைத்தையும் பாடுகிறான். வைனாமொயினன் வயிற்றிலிருந்து வெளியேறிப் படகு கட்டும் இடத்துக்கு வந்து படகைக் கட்டி முடிக்கிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கிளர்மந் திரச்சொல் கிடைக்கா நிலையில்
வளருமத் துவோனலா வதிவிட மிருந்து
அழிவிலா மரண அகலுல கிருந்து
சிந்தனை பொழுதெலாம் செய்துகொண் டிருந்தான்
நீண்ட காலம் நிகழ்த்தினான் சிந்தனை
அந்தச் சொற்களை அடைவதெங் கிருந்து
மனங்கொளும் மந்திரம் மற்றெங் கடையலாம்.
ஒருநாள் இடையன் ஒருவன் வந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 10
"அங்கே நூறு அருஞ்சொற் பெறலாம்
மந்திரச் சொற்களோ வயப்படும் ஆயிரம்
அந்தரோ விபுனன் என்பவன் வாயில்
வார்த்தைகள் நிறைந்த வயிற்றில் அவனிடம்;
ஆயினும் அங்கே அடைந்திடல் வேண்டும்
செல்லும் பாதையைத் தெரிதலும் வேண்டும்
பயணம் அதுநற் பயணமு மல்ல
ஆயினும் தீயதும் அல்லஅவ் வளவே;
ஓடுதல் வேண்டும் ஒருமுதற் கட்டம்
வனிதையர் ஊசிகள் **வாய்முனை மீது 20
நடத்தலும் வேண்டும் நவில்மறு கட்டம்
ஆடவர் வாள்களின் **அணிமுனை மீது
மூன்றாம் கட்டம் நீண்டடி வைத்திடல்
வீரன் ஒருவனின் கோடரி அலகில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
திட்டமிட் டனனே செய்திடப் பயணம்
கொல்லனின் வேலை கொள்களம் நுழைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓகோ, கொல்ல உயர்இல் மரின!
இரும்பினால் பாதணி இதமுறச் செய்வாய் 30
இரும்பினாற் செய்வாய் ஏற்றநற் கையுறை
இரும்பினால் செய்வாய் இனியநற் சட்டை
இரும்பினால் செய்வாய் இருங்கூர்த் **தண்டமும்
அவ்விதம் கூலிக்கு ஆக்குவாய் உருக்கில்
உருக்கிலே நடுத்தண்டு ஒன்றையும் செய்து
அதன்மேல் வார்ப்பாய் அழகுமெல் இரும்பு;
சிலசொற் களையான் தேடிச் செல்கிறேன்
நல்மந் திரச்சொல் நாடிச் செல்கிறேன்
அவனது வார்த்தைகள் ஆர்ந்தஅவ் வயிற்றில்
அந்தரோ விபுனன் என்பவன் வாயில்." 40
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வெகுநாள் முன்பு விபுனன் இறந்தான்
அனேககா லம்முன் அந்தரோ மறைந்தான்
அவனே அமைத்த அப்பொறி யிருந்து
கடிதுஅவன் செய்த கண்ணியி லிருந்து
அங்கொரு சொல்லும் அடைந்திட மாட்டாய்
ஒருசொற் பாதியும் பெறல்உனக் கரிது."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அதைக்கவ னிக்காது அப்பால் தொடர்ந்தனன் 50
சென்றான் ஒருநாள் சிறுமென் நடையில்
வனிதையர் ஊசிகள் வாய்முனை மீது
இரண்டாம் நாளும் ஏகினன் அமைதியாய்
ஆடவர் வாள்களின் அணிமுனை மீது
மூன்றில் நீண்டடி முன்வைத் தேகினன்
வீரன் ஒருவனின் கோடரி அலகில்.
நிறைந்த பாடல்கள் நிலைகொள் விபுனன்
வார்த்தைகள் பொதிந்த வன்முது மனிதன்
பாடல்க ளோடு படுத்தனன் ஓய்ந்து
மந்திரத் தோடு மல்லாந் திருந்தான்; 60
அவனது தோள்களில் அரசு வளர்ந்தது
கண்ணிமை மேலே கனமிலா றெழுந்தது
தாடையில் பூர்ச்சம் தண்மரம் முளைத்தது
அடர்தா டியின்மேல் அலரிப் பற்றை
புருவத்தில் தாரு பொலிந்தது அணிலுடன்
பசியநல் மரங்கள் பற்களில் இருந்தன.
வந்தான் அங்கே வைனா மொயினன்
எடுத்தான் இரும்பு இகல்வாள் உருவினன்
தோலினால் செய்த தோலுறை யிருந்து
மென்மையாய்ச் செய்த மிளிர்பட்டி யிருந்து 70
வீழ்த்தினான் அரசை வியன்தோ ளிருந்து
வெட்டினான் கண்ணிமை மீதுள மிலாறு
அழித்தான் தாடையின் அகன்றபூர்ச் சமரம்
அடர்தா டியின்மேல் அலரிப் பற்றையை
புருவத்துத் தாருவைப் பொருந்திய **அணிலொடே
பசியநல் மரங்களைப் பற்களி லிருந்தே.
இரும்புத் தண்டம் எடுத்துள் திணித்தான்
அந்தரோ விபுனன் என்பவன் வாய்க்குள்
முன்இளி அவனது முரசுகள் உள்ளே
இறுகிய அலகினுள் இறுக்கித் திணித்தான் 80
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எழுவாய், மனித இனத்தின் அடிமையே!
நிலத்தின் கீழே நேர்துயி லிருந்து!
நீண்ட கால நெடுந்துயி லிருந்து!"
நிறைந்த பாடல்கள் நிலைகொள் விபுனன்
உடனே தூக்கம் உதறிவிட் டெழுந்தான்
கடுமையாய் தன்னைத் தொடுவதை உணர்ந்தான்
வன்கொடும் நோவும் வருவதை அறிந்தான்
தனியிரும் பியைந்த தண்டம் கடித்தான்
இருந்தமேல் மென்மை இரும்பையும் கடித்தான் 90
ஆயினும் முடிந்தில(து) அவன்உருக்(கு) கடித்தல்
இரும்பின் நடுத்தண்(டு) ஏற்றுண்ண முடிந்தில(து).
முதிய வைனா மொயினன் அங்கே
வாயின் அருகில் வந்துநின் றிருந்தான்
அவனது ஒருகால் அதுசறுக் கியது
இடதுகால் வழுக்கி இறங்கி ஏகியது
அந்தரோ விபுனனின் அகல்வா யுள்ளே
அவனது அலகின் அகல்இடை நடுவில்.
உடனே பாடல்கள் உள்நிறை விபுனன்
விரித்துப் பெரிதாய் வியன்வாய் திறந்தான் 100
அலகை அகட்டி அகலத் திறந்தான்
உள்ளே விழுங்கினான் உடன்வாள் மனிதனை
அவனைத் தொண்டையுள் அவனே விழுங்கினான்
முதிய வைனா மொயினன் அவனையே.
பின்னர் பாடல்கள் பெரிதார் விபுனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"முன்னர் எதோவெலாம் முழுமையா யுண்டுளேன்
உண்டேன் வெள்ளாடு உண்டேன் செம்மறி
மலட்டுப் பசுவையும் மகிழ்வா யுண்டுளேன்
காட்டுப் பன்றியும் கனக்க உண்டுளேன் 110
இதுபோல் என்றும் ஏற்றுண் டிலனே
இச்சுவைக் கவளம் இனிதுண் டிலனே."
முதிய வைனா மொயினன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எனது அழிவு இதோவரு கின்றது
துயர நாட்கள் தொடங்கு கின்றனவே
இப்பூ தத்தின் இரும்பிலத் தினிலே
இவ்விறப்(பு) ஆவியின் இழிகிடங் கினிலே."
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எப்படி எருப்பது எங்ஙனம் வாழ்வது; 120
வைனா மொயினனின் **'வார்'அதில் கத்தி
கத்தி யதிலே கணுவுறும் கைப்பிடி
அதனால் படகை அவனும் செய்தனன்
படகை மந்திர அறிவால் படைத்தனன்
படகை வலித்தனன் பாடசைந் தேகினன்
ஏகினன் நரம்புதொட்டு இயல்மறு முனைக்கு
ஒவ்வொரு இடுக்கிலும் உறவலித் தேகினன்
ஒவ்வொரு வழியிலும் உடன்றுசுற் றிட்டனன்.
பாடல்கள் நிறந்த பழமுது விபுனன்
கண்டஇத் தனையும் கவனித்த திலனாம் 130
முதிய வைனா மொயினனப் போது
கொல்லனா யாக்கிக் கொண்டான் தன்னை
கொள்இரும்(பு) அடிக்கும் கொல்லனே ஆகினன்
தோள்மேற் சட்டையைத் தொழிற்கள மாக்கினன்
உறும்அதன் மடிப்பை உலைக்கள மாக்கினன்
கம்பளி ஆடையில் கட்டினன் துருத்தி
குழல்கள்காற் சட்டை கொண்டே செய்தனன்
காலுறை யாலே கடுங்குழல் வாய்முனை
பட்டறை யாக்கினன் படர்முழங் காலினை
சுத்தியல் ஆக்கினன் தொடுமுழங் கையினை. 140
சுத்தியல் கொண்டு தொடர்ந்தே தட்டினன்
அடித்து அடித்து அறைந்தனன் மென்மேல்
இரவெலாம் ஓய்வு இன்றியே அடித்தான்
அடித்தான் பகல்எலாம் அவன்மூச் சின்றி
அமைவுறும் பாடல்சேர் அவனது வயிற்றில்
மந்திர அறிவு வாய்ந்தவன் நெஞ்சில்.
அப்போ(து) பாடல்கள் அவைநிறை விபுனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"எவ்வகை மனித இனத்தினன் நீதான்
வீரனே யாயினும் எவ்வகை வீரன் 150
நூறுவீ ரரைநான் நொடியில் உண்டுள்ளேன்
ஆயிரம் மனிதரை அழித்ததும் உண்டு
உண்டதாய் நினைவி(ல்)லை ஒருவனை இப்படி;
வருகிற தெனது வாயிலே கரியே
நனிஎரித் தணல்என் நாவிலே யுளது
இரும்பின் கழிவுகள் எனதுதொண் டையிலே.
அதிசயப் பிராணியே, ஆகுக பயணம்!
புறப்பட்ட டேகு, புவிக்கொடும் பிராணீ!
நான்உன் அன்னையை நாடித் தேடுமுன்
உனைப்பெறு மாண்புறும் அவளைநான் நாடுமுன் 160
உனது தாயிடம் உடன்நான் சொன்னால்
பெற்றவ ளிடம்நான் மற்றிதை முறையிடில்
வேலை அதிகம் மிகுந்திடும் தாய்க்கு
பெற்றவ ளுக்குப் பெருகிடும் துன்பம்
அவளது மைந்தன் ஆற்றும் பிழைகளால்
முறைகெட்(டு) அவள்மகன் முயன்றிடும் போதே.
எதுவும் விளங்கிட வில்லையே எனக்கு
உனதுமூ லப்பிறப் பொன்றும் அறிந்திலன்
எங்கிருந் தொட்டினாய் என்னில்வெம் பூதமே?
எங்கிருந் திங்குவந் திழிந்தைதீப் பிராணியே? 170
கடித்திடு தற்கும், வதைத்திடு தற்கும்,
உண்டிடு தற்கும், உடன்மெல் தற்கும்,
கர்த்தர் படைத்த கடும்நோய் நீயா?
இறைவன் ஆக்கிய மரணமே நீயா?
வெறுமனே மனிதரால் விளைந்ததோர் செய்கையா?
யாரோ செய்து யாரோ கொணர்ந்ததா?
கூலிக் கிங்கே கொணரப் பட்டதா?
செறிகா சுக்காய்ச் செய்தஏற் பாடா?
கர்த்தர் படைத்த கடும்நோய் நீயெனில்,
இறைவன் ஆக்கிய மரணமே என்றால், 180
எனது கர்த்தரை இனிநான் நம்புவேன்
எனது இறைவனை இனிநான் நோக்குவேன்
ஆண்டவர் கைவிடார் அமைந்தநல் லோரை
கர்த்தர் இழந்திடார் காணுநன் நெறியரை.
வெறுமனே செயப்படும் விழற்செயல் எனில்நீ
பிறிதெவ ரோபுனை பிரச்சினை யானால்
உன்இனம் நிச்சயம் உடன்நான் அறிவேன்
எங்குநீ பிறந்தாய் என்பதை அறிவேன்.
அங்கிருந் தேதான் அடைந்தன துயரம்
அங்கிருந் தேதான் ஆயின துன்பம் 190
சூனியம் கற்ற மானிடத் திருந்து
மந்திரப் பாடல்சேர் மற்றிடத் திருந்து
தீயோர் வாழும் செறிஇல் இருந்து
மந்திர வாதிகள் மானிலத் திருந்து
புன்மர ணப்புவிப் புல்வெளி யிருந்து
பூமியின் கீழுறும் புனலிடத் திருந்து
இறந்த மனிதரின் இருப்பிடத் திருந்து
மறைந்தோர் தோட்ட வளர்நிலத் திருந்து
சொரிந்து போகும் தூர்மண் ணிருந்து
குழம்பிப் போகும் வளப்புவி யிருந்து 200
சுழன்றுமா றும்சிறு தொடர்கற்க ளி(லி)ருந்து
சலசலக் கும்சிறு தனிமண லிருந்து
நிலைதாழ் சதுப்பு நிலத்தினி லிருந்து
திகழ்பா சியி(ல்)லாச் சேற்றினி லிருந்து
பெருகிடும் சேற்றுப் பெருநிலத் திருந்து
அடர்ந்துபாய்ந் தோடும் அருவியி லிருந்து
காட்டுப் பூதக் கடுங்குகை யிருந்து
ஐந்து மலைகளின் வெம்பிள விருந்து
செப்பு மலைகளின் செறிசரி விருந்து
செப்பு மலைகளின் உச்சியி லிருந்து 210
தாம்முணு முணுத்திடும் தாருவி லிருந்து
பெருமூச் செறியும் பசுமரத் திருந்து
உழுத்(த)தேவ தாருவின் உச்சியி லிருந்து
சிதைந்த தாருவின் திகழ்முடி யிருந்து
நரிகள்தாம் கத்தும் நவிலிடத் திருந்து
காட்டேறு வேட்டைக் கனதடத் திருந்து
மண்ணிறக் கரடியின் கற்குகை யிருந்து
கரடியின் பாறை வசிப்பிடத் திருந்து
வடநிலத் தூர எல்லையி லிருந்து
லாப்புவின் அகன்ற நிலப்பரப் பிருந்து 220
வெறும்புல் புதரிலா விரிவெளி யிருந்து
விதைக்கப் படாத விழல்நிலத் திருந்து
கடிய பெரும்போர்க் களங்களி லிருந்து
மனிதர் கொலையுறும் வல்லிடத் திருந்து
சரசரத் திடும்புல் சார்இடத் திருந்து
இரத்த மோடும் இரணங்க ளிலிருந்து
பாரிய கடல்நீர்ப் பரப்பினி லிருந்து
திறந்த கடல்அகல் செறிபரப் பிருந்து
கடலின் கருமைக் கருஞ்சேற் றிருந்து
பல்லா யிரமடி படிதாழ் விருந்து 230
நீடுபாய்ப் பயங்கர நீரூற் றிருந்து
புகைந்துபாய் நீர்ச்சுழிப் புதைவுக ளிருந்து
மிகுவலு உறுத்தியா வீழ்ச்சியி லிருந்து
நீடிய சக்திசேர் நீரோட்டத் தினால்
பரந்தசொர்க் கத்துமேற் பக்கத் திருந்து
நற்கவி **நிலையுறு முகில்மறு புறத்தால்
குளிர்கால் வீசிடும் நளிர்வழி யிருந்து
தொடர்முகிற் கூட்டத் தொட்டிலி லிருந்து.
நீயும்அங் கிருந்தோ நேராய் வந்தனை?
வந்தனை சித்திர வதையாங் கிருந்தோ? 240
ஏதமில் எனது இதயத் துள்ளுற
மறுபழு தற்றஎன் வயிற்றினுள் நுழைய
உண்ணுவ தற்கும் உறமெல் வதற்கும்
கடித்திடு வதற்கும் கிழித்திடு வதற்கும்?
பூத வேட்டைநாய், பெறுபெறு அமைதி!
நீள்மாய் வுலகின் நீசனே, நாயே!
என்னுடல் விட்டு இறங்குபோக் கிரியே!
இகக்கொடும் பிராணியே, ஈரல்விட் டிறங்கு
உண்பதை விட்டென் உட்புற இதயம்
கிடக்கும்மண் ணீரல் கிழிப்பதை விட்டு 250
நேரும்என் வயிறு நிறைப்பதை விட்டு
சேர்சுவா சப்பை திருகுதல் விட்டு
விரும்பித் தொப்புள் மெல்வதை விட்டு
இருக்கும் குடல்களை இறுக்குதல் விட்டு
உறுமுது கெலும்பை உடைப்பதை விட்டு
தொடும்என் பக்கம் துளைப்பதை விட்டு.
மீளா விடில்ஒரு மனிதனின் விறலில்நான்
சிறந்த முறைகளைத் தெரிந்துகை யாள்வேன்
இந்தச் சிக்கலை இனித்தீர்ப் பதற்கு
இந்தப் பயங்கர இழிதுயர் ஒழிக்க. 260
எழுப்புவேன் புவியிருந்(து) இகல்மண் மகளிரை
அழைப்பேன் வயலிருந்(து) அரும்எச மானரை
அனைத்து வாள்வீரரும் அகல்நிலத் திருந்து
மாபரி வீரரை மண்மிசை யிருந்து
என்பலத் துக்கும் என்சக் திக்கும்
என்பாது காப்பு என்உத விக்கும்
இப்போ(து) நான்உறும் இன்னலுக் காக
கூடிடும் இந்தக் கொடியநோ வுக்காய்.
அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில் 270
உன்மக்க ளுடனே உடன்எழு, காடே!
சூரைச் செடிகளே தொடர்நும் சனத்துடன்
தேவதா ருவேநின் திருக்குடும் பத்துடன்
தங்கு(ம்)ஏ ரியேநின் தகுபிள் ளைகளுடன்
ஒருநூறு மனிதர்கள் ஓங்குவாள் களுடன்
ஆயிரம் இரும்பு அடல் வீரர்களும்
இப்பூ தத்தை இங்கே ஒழிக்க
**இக்கொடும் பிராணியை இங்கே நசுக்க.
அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில் 280
நீரின் தலைவியே, நீரிலிருந் தெழு!
நீலத் தொப்பிநீர் அலையிருந் துயர்த்து
சிறந்தஆ டைகளுடன் சேற்றினி லிருந்து
ஊற்றினி லிருந்துஓ, அழகிய உருவே!
இச்சிறு வீரனின் இகல்பலத் துக்காய்
சிறியஇம் மனிதன் பெறுகாப் பாக
காரண மின்றியான் கடிது(ண்)ணப் படுகிறேன்
கொடுநோ யின்றிநான் கொல்லப் படுகிறேன்.
அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில் 290
எழிலார் பெண்ணே, இயற்கை மங்கையே!
பொன்னின் அழகு பொலியும் நங்கையே!
முழுப்பெண் களிலும் முதிர்ந்தவள் நீயே!
அனைத்(து)அன் னையரிலும் அதிமுதிர்ந் தோள்நீ!
இப்போ(து) வந்துபார் என்துய ரத்தை
என்துயர் நாட்களைஇங்கிருந் தோட்டிட
தூரத்(து) அகற்றித் தொலைக்கஇவ் வின்னலை
வெந்நோ யிருந்துநல் விடுதலை தந்திட.
அப்போது(ம்) இத்துயர் அகலா விட்டால்
அதனால் கொஞ்சமும் அகன்(று)மா றாவிடில் 300
சுவர்க்கத் **துருவத்து மானிட முதல்வனே!
இடிமுகில் அதனின் எல்லையில் இருப்போய்!
தேவையாம் தருணம் தெரிந்திங் கெழுக!
அழைத்திடும் வேளையில் அரும்இவ் வழிவா!
தீயஇச் செயல்களைச் சேர்த்தே அகற்றிட
இந்தநோய்க் கொடுமையை இக்கணம் தீர்த்திட
அனல்உமிழ் அலகுறும் அரியவா ளுடன்வா
பொறிசிந்(தும்) அலகுறும் பொற்புவா ளுடன்வா.
புறப்படு அதிசயப் பிராணிஇப் போதிலே
படர்புவிக் கொடுமையே பயணம் முடிப்பாய் 310
இங்கே உனக்கு இடமெது மில்லை
உனக்கிட மொன்று உடன்தே வைப்படின்
இல்லம் வேறு இடத்தே மாற்றுவாய்
வசிப்பிடம் மாற்றுவாய் மற்றெங் காயினும்
உன்எச மானன் உகந்தமர் இடத்தே
நின்எச மாட்டியின் நடைநிகழ் இடத்தே.
அந்த இடத்தைநீ அடைந்திடும் பின்னர்
உனது பயணம் உடன்முடி வானபின்
உன்னைப் படைத்தவன் உள்ள இடத்திலே
உன்னை ஆக்கியோன் உறையும் இடத்திலே 320
அங்குவந் ததற்கோர் அடையா ளம்மிடு
சார்ந்த(தற் கி)ரகசியச் சைகையைக் காட்டு
அடையா ளம்மிடு அதிர்இடி முழக்கமாய்
மின்னலாய் மின்னி வெளியிடு சைகையை
தோட்டக் கதவைத் தொட்டுவீழ்த் துதைத்து
சாளரக் கதவைத் தான்தகர்த் தெறிந்திடு
பின்னர்அங் கிருந்து பெயர்ந்துள் நுழைவாய்
புயற்காற் றுப்போல் போய்ப்புகு வீட்டினுள்
உறுதியாய்ப் பாதம் ஊன்றுவாய் நிலத்தில்
ஊன்றியே நிற்பாய் உன்சிறு குதிக்கால் 330
உன்எச மானரை ஓட்டுமூ லைக்கு
எசமாட் டிகளை இயல்கடை நிறுத்து
காண்எச மான்களின் கண்களைத் தோண்டு
அடித்து நொருக்கெச மாட்டிகள் தலைகள்
வளைத்திடு எதிர்ப்புறம் வரும்அவர் விரல்களை
சென்னிகள் முறுக்கித் திருகித் திருப்பு.
செயல்இதன் விளைவு சிறிதாய் இருந்தால்
வேலாய் மாறித் தெருமிசைப் பறப்பாய்
கோழியாய் மாறிக் கொண்டுசெல் தோட்டம்
குப்பை மேட்டினைக் குறுகிடு நேராய் 340
தொழுவத்து நிற்கும் துரவம் துரத்து
கொம்புள விலங்கைக் கொள்தொழு விட்டு
சாணக் குவியலில் தாழ்த்திடு கொம்புகள்
வால்களைச் சிந்தி வன்தரை போடு
கோணலாய் வளைத்துக் கூர்விழி திருப்பு
கழுத்தைத் திடீரெனக் கடிதே முறித்திடு.
காற்றுக் கொணர்ந்த கடுநோய் நீயெனில்,
காற்று கொணர்ந்தால், கதிபுனற் பிறந்தால்,
வசந்தக் காற்று வழங்கி இருந்தால்,
குளிர்வா யுவொடு கூடிவந் திருந்தால், 350
புறப்பட் டுச்செல் புணர்காற் றுவழி!
வசந்தக் காற்றின் வழிசறுக் கிச்செல்!
ஒருமரத் தேறி உட்கார்ந் திடாமல்,
பூர்ச்ச மரத்தில் போய்ஓய் வுறாமல்,
செப்பு மலைகளின் சிகரத் தினையடை!
செப்பு மலையின் முகட்டுக்குச் செல்!
தாலாட் டட்டும் தவழ்காற் றாங்கே
சீராட் டட்டும் செறிகுளிர் காற்றுனை.
சுவர்க்கத் திருந்துநீ தொடவந் திருந்தால்,
பாங்குயர் முகிலின் பரப்பினி லிருந்து, 360
சுவர்க்கம் நோக்கி தொடர்ந்தெழு மீண்டும்!
அந்தவா னத்தின் அதியுய ரம்செல்!
மழைத்துளி சொட்டும் வான்முகி லிடைச்செல்!
கண்ணைச் சிமிட்டும் விண்மீ னிடைச்செல்!
அங்கே நெருப்பாய் ஆர்ந்தே எரிந்துபோ!
பறந்துபோய் மின்னிப் பொறிகளாய்ச் சிந்து!
சூரியன் வலம்வரும் தொடர்பா தையிலே
சந்திர வட்டம் தான்சுழல் வீதியில்!
நீர்கொணர் தீமையாய் நீயே இருந்தால்,
கடலலை விரட்டிக் கலைத்ததே யென்றால், 370
சிறுமையே மீண்டும் சென்றிடு நீருள்!
ஆழ்கடல் அலையின் அடித்தளம் செல்க!
சேற்றினால் கட்டிய கோட்டையுள் செல்க!
அமர்ந்திரு அலைகள் அமைத்த தோள்களில்!
அங்கே உன்னை அலையுருட் டட்டும்!
தாலாட் டட்டும் தவழ்இருள் நீர்உனை!
மாய்நிலப் புல்வெளி வழிவந் திருந்தால்,
மறைந்தோர் முற்றாய் வதிவிடத் திருந்தெனில்,
இல்லம் திரும்பநீ எடுத்திடு முயற்சி!
அம்மர ணப்புவி அகல்தோட் டவெளி! 380
அந்தச் சொரிந்துபோம் அகல்மண் ணுக்கு!
அந்தக் குழம்பிடும் ஆழ்பூ மிக்கு!
மக்கள்வீழ்ந் திருக்குமம் மறுஇடத் துக்கு!
அந்தமா வீரன் அழிந்தபா ழிடத்தே!
இங்கே யிருந்துவந் திடில்தீச் சக்திநீ,
கானகப் பூதக் கருங்குகை யிருந்து,
வளர்தேவ தாருவின் மறைவிடத் திருந்து,
பசுமை மரங்களின் பகுதிக ளிருந்து
அங்குனைத் துரத்தி அகற்றியே வைக்கிறேன்
கானகப் பூதக் கருங்குகை களுக்கு 390
பசுமை மரங்களின் பகுதிக ளுக்கு
வளர்தேவ தாருவின் மறைவிடங் களுக்கு
நீஅங் கேயே நீடுதங் கிடுக!
நிலத்துப் பலகைகள் உழுக்கும் வரையில்,
சுவரில் காளான் முளைக்கும் வரையில்
முகடு இடிந்து முன்விழும் வரையில்.
அங்குனைத் துரத்தி அகற்றியே வைக்கிறேன்
அங்குனை விரட்டுவேன் அதிதீச் சக்தியே!
கிழட்(டு)ஆண் கரடியின் கீழ்வதி விடத்தே!
பெண்கிழக் கரடியின் பெருந்தோட் டத்தே! 400
ஆழ்ந்த சேற்றுத் தாழ்நிலத் துக்கு!
உறைந்த சதுப்பு உவர்நிலத் துக்கு!
நகர்ந்துசெல் சேற்று நனைகிடங் குக்கு!
நெடிதுபாய்ந் தோடும் நீரரு விக்கு!
மீனே இல்லா வெறுங்குளங் களுக்கு!
நன்னீர் **மீனிலா நளிர்நீர் நிலைக்கு.
அங்கே **உனக்கிட மதுகிடைக் காவிடில்
இங்குனைத் துரத்தி இதோவிலக் குகிறேன்
அதாவது வடக்கு அருந்தொலை வெல்லைகள்!
லாப்புவின் பரந்த இடங்கள் அவைக்கு! 410
விரிபுல் புதரிலா வெறும்நிலங் களுக்கு!
உழுது விதைபடா துளநிலங் களுக்கு!
இரவி, சந்திரன் இலாநிலங் களுக்கு!
பகலொளி என்றும் படாஇடங் களுக்கு;
அங்குநீ வாழ அடைந்தாய் பாக்கியம்
நீஅங் கிருக்க நேர்விருப் புறுவாய்,
தொங்குகின் றனமரந் தோறும் எருதுகள்
கொலையுணப் படுவன கலைமான் ஆங்கெலாம்
பசியுறும் மனிதர் பாங்குறப் புசிக்க!
விரும்பியோர் அவற்றை விருப்பொடு கடிக்க! 420
அங்குனைத் துரத்தி அகற்றியே வைக்கிறேன்
அதையுனக் கியம்பி ஆணை இடுகிறேன்
உறுத்தியாப் பயங்கர உயர்வீழ்ச் சிக்கு!
நெடும்புகை கிளம்பும் நீர்ச்சுழி களுக்கு!
அவற்றில் மரங்கள் அவைவீழ்ந் திருக்கும்
தேவதா ருருண்டு திசைவரும் வேரொடு
சுழன்றுவந் திடும்பசும் அடிமரத் துண்டுகள்
சடைத்திடு (முடித்)தேவ தாருறும் முடியுடன்
கெட்டஅஞ் ஞானியே கிடந்துநீந் திடுக
நுரைத்துறப் பாய்ந்திடு நுவலுநீர் வீழ்ச்சியில் 430
சுற்றிச் சுழன்றகல் துரிதநீர்ப் பரப்பில்
குறுகிய நீரதன் செறிவதி விடத்தில்.
அங்கே உனக்கிடம் அதுகிடைக் காவிடில்
இங்குனைத் துரத்தி இதோவிலக் குகிறேன்
அதாவது துவோனியின் கரும்ஆற் றினிடை!
மரணத்து உலகதன் அழிவற்ற அருவிக்கு
அங்கிருந் துன்னால் அகன்றிட முடியா(து)
மிகுவாழ் நாளெலாம் வெளிவர முடியா(து)
உன்னைநா னாகவே உறவிடு(வி)க் காவிடில்,
வந்துநான் விடுதலை வழங்கா விடினே, 440
ஒன்பது செம்மறி உயர்கடா வுடன்வந்(து)
ஒன்பதும் ஒற்றைநன் மறியே ஈன்றது,
ஒன்பது எருத்துநல் லுயர்மாட் டுடன்வந்(து)
ஒன்பது மொற்றை உயர்பசு ஈன்றது,
ஒன்பது நல்லாண் உயர்பரி கொடுவந்(து)
ஒன்பது மொற்றைப் பெண்பரி ஈன்றது.
பயணிக்க வசதி படருநின் தேவையேல்,
பயணிக்க நல்ல பரிவேண்டு மேயெனில்,
திண்ணமாய்ப் பயண வசதிநான் செய்வேன்
பயணிக்க நானே பரியினைத் தருவேன் 450
பூதத் திடம்நற் புரவியொன் றுண்டு
வாய்த்தசெஞ் சடையுடன் மலையிலே உள்ளது
அதன்வா யிருந்து அக்கினி வெளிவரும்
மூக்கினி லிருந்து மூள்கனல் வெளிவரும்
அதன்குதிக் கால்கள் ஆனவை இரும்பால்
அவைகள் உருக்கினால் ஆனவை மேலும்
அதனால் முடியும் அவைமலை ஏறல்
பள்ளத் தாக்கிடைப் படரவும் முடியும்
நற்பரி வீரன் இத்தலத் திருந்தால்
திறமாய்ச் சவாரி செய்பவன் என்றால். 460
இதுவும் போதா தின்னமு மென்றால்
பூதம் சறுக்கும் பொருட்களை எடுப்பாய்
பிசாசின் மரத்துச் சறுக்கணி பெறுவாய்
தடித்த சறுக்குத் தண்டும் உள்ளது
பூத நாட்டினிற் போய்ச்சறுக் கிடற்கு
பிசாசின் தோட்டம் பெரிதும் சுற்றிட
பூத நாட்டினில் புகுந்து விரைந்திட
தீயவன் இடத்தில் சென்று திரிந்திட;
பாதையின் குறுக்கே பாறையொன் றுண்டு
அதனைத் துகள்துகள் ஆகநொ ருக்கு 470
ஒருமரக் கட்டை யுள்ளது வழியில்
உடைத்துப் போடுஉடன் அதை இரண்டாய்
பாதை நடுவிலோர் வீரன் உள்ளனன்
அவனையோர் கரைக்கு அனுப்பி வைத்திடு.
எழுக, சோம்பலோய், இப்பொழு துன்வழி,
பொல்லா மனிதனே, போ,நகர்ந் தேகுக,
பொழுது உதித்துப் புலர்வதன் முன்னர்
விடியற் கடவுளின் விடிவின் முன்னர்
எறிகதி ரோன்மேல் எழுவதன் முன்னர்
சேவலின் கூவல் செவிப்படு முன்னர். 480
இதுவே சோம்பலன் எழுந்துசெல் நேரம்
பொல்லாப் பிராணியின் புறப்படு நேரம்
நடப்பதற் குளது நற்சந் திரஒளி
வெளிச்சமும் உளது வெளிச்சென் றுலவ.
விரைந்துநீ விலகி வெளிச்செலா விட்டால்
தாயிலா நீசநீ தான்புறப் படாவிடில்
நகங்களைப் பெறுவேன் நான்ஒரு கழுகிடம்
உதிரம் குடிப்பதன் உகிர்களைப் பெறுவேன்
ஊன்அயில் பறவையின் உகிர்களைப் பெறுவேன்
பற்றித் தூக்கும் பருந்தின் அவயவம்; 490
இவற்றால் பற்றுவேன் எளியபோக் கிரிகளை
நிறுத்துவேன் தடுத்து நிமிர்தீச் சக்தியை
திருப்ப முடியா திருக்கும் அதுதலை
மூச்சை விடவும் முடியா திருக்கும்.
**முற்படைப் பாம்பேய் முடிவுற நேர்ந்தது
அன்னை யிலாமகற் கழிவும் வந்தது
கடவுளின் விடிவுறும் காலம் வருகையில்
கர்த்தரின் உதவி கைமேற் கிடைக்கையில்;
அன்னையின் பிறவியே அழிந்துபோ காயோ
செயற்கைப் பிராணிநின் செயல்நிறுத் தாயோ 500
எசமான் இலாநாய் இனிமறை யாயோ
தாயிலா நீசநீ தான்புறப் படாயோ
இம்மணித் தியாலம் இதுமுடி வதனுள்
திகழ்இச் சந்திரன் தேய்வதற் குள்ளே."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பின னப்போ(து)
"இங்கே இருப்பது எனக்கு நல்லது
இங்கே வசிப்பது இனிமை யானது
எனக்கு ரொட்டியாய் ஈரல் இருக்கும்
உண்ணக் கொழுப்பும் உண்டு அதனுடன் 510
உளசுவா சப்பை உண்டிட வறுத்து
கொழுப்பும் அதனுடன் கொள்இத உணவு.
எனது பட்டடையை இங்கே அமைக்கிறேன்
ஆகும்உன் இதய ஆழப் பகுதியில்
அடிப்பேன் கடுமையாய் அடர்சுத் தியலால்
இன்னும் நொந்துபோய் இருக்கு(ம்)வே றிடங்களில்
என்றுமே விடுதலை இல்லை உனக்கு
உன்வாழ் நாளில் என்றுமே யில்லை
நாடும்அச் சொற்களை நான்கேட் காவிடில்
விரும்பிய மந்திரம் பொருந்த வராவிடில் 520
போதிய சொற்களை நேரிற் பெறாவிடில்
மந்திரம் ஆயிரம் ஆயிரம் வராவிடில்.
மந்திரச் சொற்களை மறைத்தல்ஆ காது
பகர்மந் திரமொழி பதுக்குதல் ஆகா(து)
நிலத்துக் கடியிலே புதைத்தலும் ஆகா(து)
மந்திர வாதிகள் மறைந்துபோ னாலும்."
அப்போ(து) பாடல்கள் அகம்நிறை விபுனன்
வார்த்தைகள் நிறைந்த மாமுது மனிதன்
வாயிலே மாபெரும் மந்திர அறிவுளோன்
மார்பிலே அளவிலா மறத்திற லுடையவன் 530
சொற்கள் இருந்த பெட்டகம் திறந்தான்
பெருமந் திரச்சொல் பெட்டியைத் திறந்தான்
நல்ல பாடல்கள் நனிசில பாட
சிறந்த மந்திரச் செம்பா இசைக்க
பாடிடப் படைப்பின் மூலத்(து) ஆழம்
பாடிடக் காலத்(துத்) தொடக்க(த்து) மந்திரம்
இவைஎ(ல்)லாப் பிள்ளையும் இசைக்கும் பாட்ட(ல்)ல
வீரர்கள் மட்டுமே விளங்கும் பாட்டிவை
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே
வாழ்வே முடிவுறும் வறுங்கடை நாட்களில். 540
படைப்பின் மூலத்(து) ஆழம் பாடினான்
மந்திர சக்தியை வலுவொழுங் கிசைத்தான்
கர்த்தர் மொழிந்த கட்டளை யாலும்
அனைத்தும் வல்லோன் ஆணையி னாலும்
பெருவான் தானாய்ப் பிறந்ததைப் பாடினான்
பெருவிண் இருந்துநீர் பிரிந்தது எவ்விதம்
நிலம்வந்(த) தெவ்விதம் நீரிலே யிருந்து
நிலத்தில் சகலதும் நேர்ந்தது எவ்விதம்.
நிலவுக்(கு) உருவம் நேர்ந்ததைப் பாடினான்
படர்கதிர் நிறுவப் பட்டதைப் பாடினான் 550
நெடுவான் தூண்கள் நிறுத்தப் பட்டதை
நீள்விண் மீன்கள் நிறைக்கப் பட்டதை.
அதன்பின் பாடல்கள் அகம்நிறை விபுனன்
பாடினான் உண்மையாய், பாடினான் முடிந்ததை,
பார்த்ததோ கேட்டதோ என்றும்இப் படியி(ல்)லை
என்றைக்கு மேயிவ் விரும்புவி நாட்களில்
இத்தனை சிறந்ததோர் இனியநற் பாடகன்
இத்தனை திறனுடை இனியதோர் நிபுணனை;
வாயிலே யிருந்துநேர் வார்த்தைகள் கொட்டின
நாவிலே யிருந்துசொற் றொடர்நனி பெருகின 560
விரைபரிக் குட்டியின் வியன்கால் போலவும்
பாய்ந்திடும் குதிரையின் பாதம் போலவும்.
அந்தமில் பலநாள் அவனும் பாடினான்
அவ்விதம் இரவுகள் அனைத்தும் பாடினான்
பாடலைக் கேட்கப் பகலவன் நின்றனன்
நின்றே தங்க நிலவும் கேட்டது
அலைகள்நீர்ப் பரப்பில் அசையா நின்றன
அவ்விதம் கரையிலும் அலைகள் நின்றன
அருவிகள் ஓடா(து) அமைந்தே நின்றன
நிமிர்நுரை உறுத்தியா நீர்வீழ்ச்(சி) நின்றது 570
வுவோக் சிநீர் வீழ்ச்சிப் பாய்ச்சலும் நின்றது
அவ்விதம் *யோர்தான் ஆறதும் நின்றது.
முதிய வைனா மொயினனப் போது
மந்திரச் சொல்செவி வாங்கிய தாலும்
சொற்கள்போ தியன பெற்றத னாலும்
விரும்பிய சொற்களை அடைந்தத னாலும்
புறப்பட வெளிவரப் புந்தியில் நினைந்தான்
அந்தரோ விபுனன் அகல்வா யிருந்து
வார்த்தைகள் நிறைந்தவன் வயிற்றினி லிருந்து
மந்திர அறிஞனின் மார்பிலே யிருந்து. 580
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஐயகேள் ஓஓ, அந்தரோ விபுனனே,
வாயை இன்னும் வலுபெரி தாய்த்திற
அலகை இன்னும் அகலத் திறந்திடு
வருவேன் புவிஉன் வயிற்றினி லிருந்து
புறப்பட்டு வீட்டினை நோக்கிப் போவேன்."
அப்போது பாடல்கள் அகம்நிறை விபுனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"உண்டதும் அனேகம் குடித்ததும் அநேகம்நான்
ஆயிரக் கணக்கில் அழித்ததும் உண்டு 590
ஆயினும் என்றும் அயின்றதே யில்லை
முதிய வைனா மொயினனை உ(ண்)ணல்போல்;
நீவந்த போது நேராய் நடந்தனை
சிறப்புறச் செய்கநீ செல்லும் போதே."
அப்போ(து) அந்த அந்தரோ விபுனன்
இளித்துத் தன்முர செடுத்துக் காட்டினான்
இன்னும் பெரிதாய் இரும்வாய் திறந்தான்
அலகினை மேலும் அகலமாய் வைத்தான்;
முதிய வைனா மொயினன் அவனே
மாபெரும் அறிஞன் வாய்வழி வந்தான் 600
வார்த்தைகள் நிறைந்தவன் வயிற்றினி லிருந்து
மந்திர அறிஞனின் மார்பிலே யிருந்து;
வாயிலே யிருந்து வந்தவன் வெளியே
நின்றான் குதித்து நெடும்புற் றரைமேல்
அம்பொனில் ஆன அணிலதைப் போல
கிளர்பொன் நெஞ்சுடன் கீரியைப் போல.
அவனும் தன்வழி அதன்பின் சென்றான்
கொல்ல வேலைக் கொள்தளம் வந்தான்;
கொல்லன் இல்மரினன் கூறினன் அங்கே:
"மந்திரச் சொற்கள் வாய்க்கப் பெற்றதா 610
நச்சிய மந்திரச் சொற்கள் கிடைத்ததா
படகின் பக்கம் சரிவர இணைக்க
பின்னணி யத்தைப் பிணைத்து வைத்திட
வளைவுத் தட்டினை உயர்த்திப் பொருத்திட?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போது நூறு சொற்களைப் பெற்றேன்
பெற்றேன் ஆயிரம் பேசுமந் திரவிதி
மறைவிடத் திருந்து வரவெளிக் கொணர்ந்தேன்
புதைவிட மிருந்து கொணர்ந்தேன் மந்திரம்." 620
படகு இருந்த பக்கம் சென்றான்
மந்திரச் சொற்கள் வாய்ந்தன நிறைவாய்
தன்பட கின்தொழில் தன்னையே முடிக்க
படகின் பக்கம் சரிவர இணைத்தான்
பின்அணி யத்தைப் பிணைத்துவைத் திட்டான்
வளைவுத் தட்டை உயரப் பொருத்தினான்
செதுக்கப் படாமலோர் புதுப்பட குதித்தது
சீவப் படாமலோர் செல்கலம் வந்தது.
பாடல் 18 - வைனாமொயினனும் இல்மரினனும் வடநாடு செல்லுதல் TOP
அடிகள் 1 - 40 : வடநாட்டு மங்கையின் உறவை விரும்பி வைனாமொயினன் தனது புதிய கப்பலில் பயணமாகின்றான்.
அடிகள் 41 - 266 : இல்மரினனின் சகோதரி அவனைக் கண்டு, கரையிலிருந்து அவனுடன் பேசி, அவனுடைய நோக்கத்தை அறிந்து, விரைந்து சென்று தன் சகோதரனிடம் ஒரு போட்டியாளன் வடநாட்டு மங்கையைப் பெறுவதற்குப் புறப்பட்டுவிட்டான் என்று கூறுகிறாள்.
அடிகள் 267 - 470 : இல்மரினன் ஆயத்தமாகித் தனது சறுக்கு வண்டியில் கடற்கரை வழியாக வடநாட்டுக்குப் புறப்படுகிறான்.
அடிகள் 471 - 634 : மணவாளர்கள் வருவதைக் கண்ட வடநிலத் தலைவி, வைனாமொயினனை மணம் முடிக்கும்படி தன் மகளுக்கு ஆலோசனை கூறுகிறாள்.
அடிகள் 635 - 706 வடநில மங்கையோ சம்போவைச் செய்த இல்மரினனையே மணமுடிக்க விரும்புகின்றாள். முதலில் அங்கு வந்து சேர்ந்த வைனாமொயினனிடம் அவனை மணம் முடிக்க முடியாது என்று அவள் கூறுகிறாள்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
ஏந்திழை உறவை ஏற்பது பற்றி
பின்னிய குழலியை நண்ணிநோக் குதற்கு
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
செறிபுகார் நாடாம் சரியோ லாவில்
வடபால் நிலத்து வளர்புகழ் மங்கையை
வடக்கின் சிறந்த மணமக ளவளை.
நீல்நிறச் சோடனை நிகழ்த்திக் கப்பல்
பக்கம் சிவப்பு பதநிறம் பூசி 10
அணியம் பொன்னால் அலங்கரித் ததற்கு
வெள்ளியில் சாயமும் விரும்பித் தீட்டினான்;
காலைகள் கழிந்தொரு காலையும் வந்தது
வளரும் காலை வைகறைப் பொழுதில்
படகினைத் தள்ளிப் படிநீர் விட்டான்
பலகைநூ றமைந்த பட(கு)அலை யிட்டான்
மரப்பட்(டை) உருளையின் வயமதி லிருந்து
கமழ்தேவ தாருவாம் கட்டையி லிருந்து.
பாய்மரம் உயர்த்தி பாங்குற நிமிர்த்தி
பாயையம் மரத்திற் பார்த்தே கட்டினான் 20
சிவப்பு நிறத்திலோர் திகழ்பாய் கட்டினான்
இன்னொரு பாயை எழில்நீல் நிறத்திலே
கப்பலின் உள்ளே காலடி வைத்து
படகின் உள்ளே பக்குவ மாயமர்ந்(து)
பயண மாயினன் பனிக்கடல் மீது
நீல்நீர்ப் பரப்பில் நிகழ்த்தினான் பயணம்.
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"இப்போ(து) கப்பலுக் கிறைவனே, வாரும்!
கருணையுள் ளவரே, கப்பலுக் கெழுந்திடும்! 30
சிறியஇவ் வீரனின் சீரிய சக்தியாய்,
சிறியஇம் மனிதனின் திகழுமாண் பலமதாய்,
அகன்று பரந்த இந்நீர்ப் பரப்பில்
பரந்து விரிந்த படரலை களின்மேல்.
காற்றே இந்தக் கப்பலை அசைப்பாய்
அலையே கப்பலை அசைத்துச் செலுத்து
வலிக்கப் படாமல் மற்றென் விரல்களால்
குழப்பப் படாமல் கொழுநீர்ப் பரப்பு
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்." 40
*அன்னிக்கி யென்னும் அரும்பெய ருடையாள்
வளர்இரா நங்கை வைகறை வனிதை
கடன்அதி காலை கனபொழு தியற்றுவோள்
வைகறைப் பொழுதில் வளர்துயில் எழுபவள்,
அன்றுக ழுவும்தொழில் அவள்செய நேர்ந்தது
உடைகளைக் கழுவி உலரப் போட்டனள்
செந்நிறப் படிக்கட் டதன்சேர் முடிவில்
அந்த அகன்ற அதேநிலப் பரப்பில்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில். 50
பார்த்தனள் அங்கு, பார்த்தனள் திரும்பி,
நற்கால நிலையைச் சுற்றிலும் பார்த்தனள்
வாரியதலை மேல் வானம் பார்த்தாள்
கடலின் பக்கமாய்க் கரையைப் பார்த்தாள்
சூரியன் மேலே சுடர்ந்துகொண் டிருந்தது
மினுமினுத் திட்டன விரிகீழ் அலைகள்.
கடலின் பக்கமாய்க் காரிகை பார்த்தனள்
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினள்
பின்லாந்(து) நதிவாய் தன்நோக் குறுகையில்
வைனோ நாட்டுநீர் வளர்முடி வெல்லையில் 60
கறுத்ததோர் புள்ளியைக் கடலில் கண்டனள்
அலையில் நீலமாய் எதையோ கண்டனள்.
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"என்னநீ கறுப்பாய் இருப்பது கடலிலே
யார்நீ நீல நளிர்நிறம் அலையிலே?
நீயொரு வாத்தின் நேர்கண மானால்
இனிய வாத்தின் குழுவாய் இருந்தால்
அப்படி யானால் அசைந்தெழு பற(ந்து)போ!
உயரமாய் வானின் உறுவெளி யதனில்! 70
கொழுவஞ் சிரமீன் கூட்டமா யிருந்தால்
கிளர்வே றினமீன் கிளையா யிருந்தால்
தெறித்தெழு நீந்திச் செல்லப் படியெனில்
நீருக் குள்ளே நேராய் விழுந்துசெல்!
நீயொரு பாறை நெடுங்கல் லானால்
கனைநீர் மிதக்கும் கட்டையா யிருந்தால்
முகிழ்அலை உன்னை மூடிச் செல்லும்
அகல்நீர் உன்னை அடித்துச் செல்லும்."
படகு சிறிதே பக்கம் வந்தது
பயணம் வந்தது படர்புதுக் கப்பல் 80
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்.
அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
படகு வருவதைப் பார்த்தனள் இப்போ(து)
பார்த்தனள் பலகைநூ றமைபட கசைவதை
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"நீஎன் சகோதரன் நேர்பட கானால்
அல்லது தந்தையின் அகல்கல மானால்
பயணம் வீட்டுப் பக்கமாய் மாற்று
பாதையைச் சொந்தஊர்ப் பக்கமாய்த் திருப்பு! 90
இத்துறை நோக்கி எழுமுன் னணியம்
பிறதுறை நோக்கி உறுபின் னணியம்.
அந்நியன் கப்பலே யாகநீ யிருந்தால்
செல்லுக வேறு திசையிலே நீந்தி
வேறு துறைப்பால் விரைகமுன் னணியம்
இத்துறை நோக்கி இயைகபின் னணியம்."
அவள்வீட் டுப்பட கதுவே யல்ல
காணுமோர் அந்நியன் கப்பலு மல்ல
அதுவே வைனா மொயினனின் கப்பல்
என்றுமே நிலைத்த பாடகன் கப்பல்; 100
அவளின் அருகை யடைந்தது கப்பல்
உரைசெய லுக்காய் ஊர்ந்தது அண்மி
ஒருசொல் சொல்ல இருசொல் லியம்ப
உரமாய் மூன்றாம் சொல்லை யுரைக்க.
அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
வளர்இரா நங்கை வைகறை வனிதை
கப்பலை நோக்கிக் கேட்கத் தொடங்கினள்:
"எங்கே எழுந்தனை வைனா மொயினனே?
அமைதிநீர் மணமகன் ஆம்செல வெவண்கொல்?
ஆயத்த மானதெங்(கு) அரியநாட் டண்ணலே?" 110
முதிய வைனா மொயினனப் போது
கப்பலி லிருந்து கூறினான் இவ்விதம்:
"பெருவஞ்சிர மீன் பிடித்திட எழுந்தேன்
சினைக்கும் **மீனைச் சிறைப்பிடிப் பதற்காய்
துவோனியின் கறுப்புத் தொல்லாற் றிருந்து
அகல்*மர(ண) ஆற்றின் ஆழத் திருந்து."
அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"சொல்லிட வேண்டாம் தொடர்வெறும் பொய்யே
மீனின் சினைத்தலை நானும் அறிவேன் 120
சத்திய மாய்என் தந்தையும் முன்னர்
உண்மையாய் எனது உயர்ந்தபெற் றோரும்
பெருவஞ் சிரமீன் பிடிக்கச் சென்றனர்
பெருநன் னீர்மீன் பிடிக்க முயன்றனர்
அவர்பட கார்ந்து அகல்வலை இருந்தன
கப்பல் நிறையக் கனபொறி இருந்தன
கைவலை இப்புறம் கயிறுகள் அப்புறம்
மறுபுறம் நீரில் வலிந்தடிக் கம்புகள்
குறுக்குப் பலகைகீழ் குத்திடும் ஈட்டிகள்
பின்னணி யம்நீள் பெரியகம் பங்கள்; 130
எங்கே எழுந்தனை வைனா மொயினனே
அமைதிநீர் மணமகன் ஆம்செல வெவண்கொல்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"வாத்துகள் தேடிநான் வழிபுறப் பட்டேன்
மின்னும் சிறகுறும் வியன்புள் வேட்டை(க்கு)
*சக்ஸா நீரிணைத் தன்ஆழ் பகுதியில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்."
அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 140
"உண்மை பேசும் ஒருவனை அறிவேன்
அசத்தியம் பேசும் ஆளையும் அறிவேன்;
சத்திய மாய்என் தந்தையும் முன்னர்
உண்மையாய் எனது உயர்ந்த பெற்றோரும்
வாத்துவேட் டைக்கு வழிசெலல் உண்டு
சிவந்தவாய்ப் பறவையைத் துரத்துவ துண்டு
அவர்பெரும் குறுக்குவில் அமையும் நாணுடன் அவர்வளைத் திடும்வில் அழகுடன் இலங்கும்
கறுத்தநாய் ஒன்றாங்(கு) கட்டியே யிருக்கும்
வங்கக் காலிலே வன்கட் டமைந்திடும் 150
கள்ளநாய் பலதெருக் கரையெலாம் ஓடும்
பாறையில் குட்டிகள் பலவிரைந் தேகும்
வைனா மொயினனே வாய்மையைச் சொல்வாய்
எங்குநீ பயணம் இப்போ(து) செய்கிறாய்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இங்கே செல்கிறேன் எனில்அதால் என்ன
அந்தப் பெரிய அடும்போர்க் கென்னில்
சமமா னோருடன் தான்பொரு தற்கெனில்
திகழ்கெண் டைக்கா(லி)ல் தெறிக்கக் குருதி
இரத்தம் முழங்கால் வரைக்கும் இருக்க?" 160
அன்னிக்கி மீண்டும் அதையே சொன்னாள்
ஈய மார்பினள் இயம்பினள் கடிந்தே:
"அறிவேன் போருக் காய்ச்செலல் பற்றி
முன்னர் தந்தைபோய் முயன்றபல் பொழுதில்
அந்தப் பெரிய அடுபோர் களுக்கு
சமமா னோருடன் தான்பொரு வதற்கு
மனிதர் தூற்றுவர் வலிப்பராம் தண்டு
ஆயிரம் மக்கள் அருகினில் இருப்பர்
முனைப்பாய் குறுக்குவில் முன்னணி யிருக்கும்
அலகுறும் வாள்கள் ஆசனத் தருகாம்; 170
சொல்வாய் உண்மை சொல்வாய் வாய்மை
நேர்மையைச் சொல்வாய் நெடும்பொய் யின்றி
எங்கே எழுந்தனை வைனா மொயினனே
எங்கே அமைதிகொள் இகல்நீர் மனிதனே?"
முதிய வைனா மொயினனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எனதுகப் பலுக்கு எழுந்தருள் பெண்ணே
எனது படகினுள் இனிவா மங்கையே
அந்த உண்மையை அப்போ துரைப்பேன்
பொய்யில் லாமல் புகல்வேன் நேர்மை." 180
ஆயினும் சொன்னாள் அன்னிக்கி ஒருசொல்
ஈய மார்பினள் இயம்பினள் கடிந்தே:
"காற்று உனது கப்ப(லி)ல்வீ சட்டும்
குளிர்கால் படகில் கூடவீ சட்டும்
கவிழ்த்துப் போடுவேன் கடிதுன் கப்பல்
முன்னணி யத்தை மூழ்கடித் திடுவேன்
அந்த உண்மைநான் அறிந்துகொள் ளாவிடின்
எங்கே(க) நினைத்தாய் எனஅறி யாவிடின்
உண்மைநீ சொல்வதை உடன்கேட் காவிடின்
பொய்யின் இறுதியைப் புரிந்துகொள் ளாவிடின்." 190
முதிய வைனா மொயினனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நல்லதிப் போது நவில்வேன் உண்மை
பொய்யைச் சிறிதாய்ப் புகன்றது முண்டு
நங்கை ஒருத்தியை நாடிப் போகிறேன்
கன்னி ஒருத்தியை உன்னிப் போகிறேன்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
செறிபுகார் நாடாம் சரியொலா விருந்து
மனிதரை உண்ணும் வறுநாட் டிருந்து
இகல்வோர்க் கவிழ்த்து ஆழ்த்திடத் திருந்து." 200
அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
வளர்இரா நங்கை வைகறை வனிதை
அந்த உண்மையை அறிந்த போதினில்
பொய்யிலா உண்மை புரிந்து கொண்டதும்
ஆடைகள் நீரில் அலம்பா திருந்தனள்
துணிகளை நீரில் தோய்க்கா திருந்தனள்
அகன்று பரந்தஅவ் விறங்கு துறையில்
செந்நிறப் படிக்கட் டதன்சேர் முடிவிலே
துணிகளை அள்ளித் தொடுகரத் தெடுத்தாள்
பாவ()டை பொறுக்கிப் பைங்கரம் சேர்த்தாள் 210
அவ்விட மிருந்து அவள்நடந் தேகினள்
விரைந்து ஓடி வேகமாய்ச் சென்றனள்
கொல்லனின் வீட்டைக் குறுகினள் வந்து
வேலைத் தளத்தை மிதித்தடி வைத்தனள்.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
பெரும்இரும் பாசனப் பீடம் அமைத்தான்
வெள்ளியால் அங்ஙனம் வேறொன் றியற்றினான்
அவன்தலை ஒருயார் அளவுதூ(சி) யிருந்தது
தோளில்ஆ றடியுயர் தூட்கரி யிருந்தது. 220
வாச(லி)ல் அன்னிக்கி வைத்தாள் காலடி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"சகோதர, கொல்ல, தகைஇல் மரின!
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞ!
ஒருதறி **(நூ)னாழி உடன்எனக் குச்செய்
விரலுக்குச் சிறந்த விதமோ திரம்செய்
இரண்டு மூன்று இடுகா தணிசெய்
ஐந்தா றிடுப்பு அணிசங் கிலிசெய்
ஏனெனில் உனக்கு இயம்புவேன் உண்மை
பொய்யே யில்லா மெய்யதைப் புகல்வேன்." 230
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"நீநற் செய்தியை நிசமாய்ச் சொன்னால்
ஒருதறி நூனாழி உனக்குச் செய்வேன்
சிறந்தமோ திரமே செய்வேன் விரற்கு
சிலுவையை நன்கே செய்வ(ன்)மார் புக்கு
தலைக்குத் தகுந்த தலையணி செய்வேன்;
தீய செய்திநீ செப்புவ தானால்
அனைத்துப் பழைய அணிகளும் உடைப்பேன்
அனைத்துன் அணியையும் அனலிடை எறிவேன்
எனதுலைக் களத்தில் இடுவேன் அடியில்." 240
அன்னிக்கி என்னும் அரும்பெய ருடையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
மணக்க எண்ணிய மங்கையை நினைவாய்
வாக்களிக் கப்படு வனிதையை நினக்கு(முன்)
(in tamil script, unicode/utf-8 format)
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 19-25
பாடல் 19 - வடநில மங்கையை இல்மரினனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தல் TOP
அடிகள் 1 - 32 : இல்மரினன் வடநாட்டின் வீட்டுக்கு வந்து வடநில மகளை மணம் செய்யக் கேட்கிறான். அவனுக்குச் சில பயங்கரமான வேலைகள் தரப்படுகின்றன.
அடிகள் 33 - 344 : வடநில மகளின் ஆலோசனைப்படி அவன் அந்த வேலைகளைச் செய்து முடிக்கிறான். முதலாவதாக பாம்புகள் நிறைந்த வயலை உழுகிறான்; இரண்டாவதாக துவோனியின் கரடியையும் மரண உலகின் ஓநாயையும் பிடிக்கிறான். மூன்றாவதாக துவோனலா ஆற்றில் ஒரு பெரிய பயங்கர மீனைப் பிடிக்கிறான்.
அடிகள் 345 - 498 : வடநாட்டுத் தலைவி தனது மகளை இல்மரினனுக்குத் தருவதாக வாக்களித்து விவாக நிச்சயம் செய்கிறாள்.
அடிகள் 499 - 518 : வைனாமொயினன் மனத்துயருடன் வடநாட்டை விட்டுத் திரும்புகிறான். எவரும் தன்னிலும் பார்க்க இளையவர்களுடன் விவாகத்தில் போட்டியிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறான்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தானே வீட்டின் தனியுள் நுழைந்து
நற்கூ ரையின்கீழ் நடந்தே போனான்.
குடுவையில் தேனும் கொணரப் பட்டது
சாடி ஒன்றிலே தேன்வந் தடைந்தது
கொல்லன்இல் மரினனின் கொழுங்கரங் களிலே;
இந்தச் சொற்களில் இயம்பினன் கொல்லன்:
"இந்தவாழ் நாளில் என்றுமே யில்லை
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் 10
அருந்துவ தில்லை அளித்தஇப் பானம்
எனது**சொந் தத்தை இனிக்காண் பதன்முன்
அன்புக் குரியாள் ஆயத்த மாகுமுன்
நான்காத் திருந்தவள் நற்றயா ராகுமுன்."
அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உனது மணமகள் உளள்பெரும் சிக்கலில்
காத்திருந் தவட்கொரு கடுந்தொ(ல்)லை வந்தது
புனையுமோர் பாதணி பொருத்தம தாயிலை
அடுத்ததும் கூடவே அளவாய் இல்லையாம்; 20
ஆயத்த மானவள்நின் அன்புக்கு உரியவள்
உண்மையில் அவளைநீ உடையவன் ஆகலாம்
விரியன் பாம்பார் விளைவயல் உழுதிடில்
உறும்அரா வயலினை உழுதே புரட்டினால்
பயன்படுத் தாமலோர் பாய்ந்திடு கலப்பையும்
நகர்த்தப் படாமலோர் நனிதவழ் உழுமுனை;
அதனையே புதமொன் றந்தநாள் உழுதது
வாய்க்கால் பறித்தது வலியபேய் ஒன்றுதான்
செப்பினாற் செய்ததோர் செழும்உழு முனையினால்
கூரிய அலகினைக் கொள்கலப் பையினால் 30
அதிர்ஷ்ட மற்றவன் அன்புறும் என்மகன்
பாதியை உழுதனன் மீதியை விட்டனன்."
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"வளர்இரா நங்கையே, வைகறைப் பெண்ணே!
உன்நினை வினிலே உளவோ அந்நாள்?
திகழ்புதுச் சம்போ செய்தஅந் நாட்களை?
அரும்ஒளிர் மூடியை அடித்தவந் நாட்களை?
அப்போது நீயொரு சத்தியம் செய்தனை 40
அனைவரும் அறிந்த ஆண்டவன் பேரிலே
சர்வ வல்லவன் தன்முகத் தின்கீழ்
என்னிடம் வருதற் கிசைவைக் காட்டினாய்
அரியநற் கணவன் ஆகிய என்னிடம்
திகழ்நாள் முழுவதும் சினேகிதி யாக
என்கை யணைப்பில் இருக்குமோர் கோழியாய்;
அன்னைஇப் போதுனை அளிக்கிறா ளில்லை
தன்பெ(ண்)ணை எனக்குத் தருகிறா ளில்லை
உறுவிரி யன்வயல் உழாதே போனால்
போயுழு தராவயல் புரட்டா விட்டால்." 50
மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞ!
செய்வாய் தங்கத் திலேயொரு கலப்பை
அதனை வெள்ளியால் அலங்கரித் திடுவாய்
உறுவிரி யன்வயல் உழலாம் அதனால்
பொறியரா வயலைப் புரட்டிப் போடலாம்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கொல்லுலை வைத்தான் கொழும்பொன் எடுத்தே 60
வெள்ளியும் வைத்தான் வியனுலைத் துருத்தியில்
அமைத்தான் கலப்பையொன் றதிலே யிருந்து;
இரும்பிலே பாதணி இயற்றினான் அடுத்து
அமைத்தான் உருக்கிலே அதன்பின் காலணி
அவற்றை அவனும் அணிந்தே கொண்டனன்
தன்கால் அணிகளைத் தரித்துக் கொண்டனன்
அணிந்தனன் இரும்பினால் ஆனமேற் சட்டை
உருக்கு வளையம் உறுத்தினான் பட்டியை
எடுத்தான் இரும்பில் இயைந்தகை யுறைகளை
கல்லினால் ஆன கையுறை கொண்டான் 70
கொடுங்கனல் கக்கும் குதிரையைப் பெற்றான்
அந்நற் புரவிக் கணிகலன் புட்டினான்
புறப்பட் டேகினான் போய்வயல் உழற்கு
புன்னிலம் உழுது புரட்டிப் போட்டிட.
போந்தாங்கு நோக்கினன் புரள்நெளி தலைகளை
சலசலத் திரையும் **தலையோடு கண்டான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:
"ஏ,நெளி புழுவே, இறைவனின் படைப்பே!
உனது தலையினை உயர்த்தி யதுயார்?
எவர்தான் சொன்னார், எவரது கட்டளை? 80
உன்தலை உயர்த்தி உயரமாய் நிற்க
நேராய்க் கழுத்தை நிமிர்த்தியே நிற்க?
இப்போது பாதையில் இடம்விட் டகல்க!
புன்மைப் பிராணியே புல்லினுள் மறைக!
பற்றையின் உட்புறப் பால்நுழைந் திடுக!
புற்புத ருள்ளே புகுந்துசென் றிடுக!
நீஅங் கிருந்து நிமிர்த்தினால் தலையை
நொருக்குவார் உன்தலை நுவல்மனு முதல்வன்
உருக்கு முனையுடை ஒளிர்கணை களினால்
இரும்புக் குண்டாம் இகல்மழை பொழிவார்." 90
பின்னர்நச் சரவப் பெருவயல் உழுதான்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினான்
பார்த்துழும் நிலத்திலே பாம்புகள் எடுத்தான்
புரட்டிய மண்ணில் புகும்பாம் பெடுத்தான்
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"உழுதிப்போ(து) முடித்தேன் உறுவிரி யன்வயல்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினேன்
பாம்புகள் நிறைந்த பன்னிலம் கிளறினேன்,
இப்போது பெண்ணை எனக்கீய லாமா?
என்இணை யில்லா அன்புக் குரியளை?" 100
அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அரிவை உனக்கு அளிக்கப் படுவாள்
பெண்ணிங் குனக்குப் பெறத்தரப் படுவாள்
இங்கு துவோனியின் கரடி கொணர்ந்தால்
மாய்வுல கோநாய் மடக்கி யடக்கினால்
அங்கே துவோனியின் அடர்கா டிருந்து
மரண உலகின் வதிவிடத் திருந்து;
சென்றனர் நூற்றுவர் திசைபிடித் தடக்க
மீண்டு திரும்பினோர் வியன்நிலத் தில்லை." 110
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வேலையொன் றெனக்கு விதித்திடப் பட்டது
மாய்வுல கோநாய் மடக்கிப் பிடிக்க
துவோனிக் கரடிகள் அவைகளைக் கொணர
அங்கே துவோனியின் அடர்கா டிருந்து
மரண உலகின் வதிவிடத் திருந்து."
மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை: 120
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞ!
ஒருகடி வாளம் உருக்கிலே செய்வாய்
வாய்பிணை கருவியை வடிப்பாய் இரும்பிலே
நனைந்து கிடக்குமோர் நளிர்பா றையிலே
மூன்றுநீர் வீழ்ச்சியின் தோன்று நுரையினால்;
துவோனிக் கரடிகள் அவற்றால் கொணர்வாய்
மாய்வுல கோநாய் மடக்கி அடக்குவாய்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாத கைவினைக் கலைஞன் 130
ஒருகடி வாளம் உருக்கிலே செய்தான்
வாய்பிணை கருவியை வடித்தான் இரும்பில்
நனைந்து கிடந்ததோர் நளிர்பா றையிலே
மூன்றுநீர் வீழ்ச்சியின் தோன்று நுரையினால்.
பிடித்து அடக்கப் பின்புறப் பட்டான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பனிப்புகார் மகளே, பனிமறை பாவாய்!
மூடு பனியினை முன்சுள கால்தெளி!
பனிப்புகார் அதனை நனிமிதக் கச்செய்!
வேட்டை மிருகம் மிகஉலா விடத்தில் 140
கேளா திருக்கஎன் காலடி யைஅது
உறும்எனை முந்தியஃ தோடா திருக்க."
பிடித்தோ நாயைப் பொருத்தினன் கடிவளம்
கரடிக் கிரும்புச் சங்கிலி கட்டினன்
அங்கோர் துவோனியில் அமைபுற் புதரில்
நெடிதுட் புறமுள நீலக் காட்டினில்
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"வயோதிப மாதே வழங்குக நின்மமகள்
துவோனியின் கரடி கவனமாய்க் கொணர்ந்தேன்
மாய்வுல கோனாய் மடக்கி அடக்கினேன்." 150
அந்த வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"வாத்து உனக்கு வழங்கப் படுவாள்
நீலவாத் துனக்கு நிசம்தரப் படுவாள்
**கோலாச்சி பெரும்செதிற் கொழுமீன் பிடித்தால்
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தால்
அந்தத் துவோனலா ஆற்றிலே அங்கே
பாதாள மாய்புவிப் படுகிடங் கினிலே
கரைவலை ஒன்றைக் கையெடுக் காமல்
திருப்பி யிடாமல் சேருமோர் கைவலை 160
சென்றோர் நூற்றுவர் சேர்ந்ததைப் பிடிக்க
திரும்பிவந் தோர்கள் செகத்திலே இல்லை."
இப்போ தவனுக் கெழுந்தது கவலை
தொல்லையாய்ப் பட்டன எல்லா அலுவலும்
அரிவை இருந்த அறையினுட் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வேலையொன் றெனக்கு விதிக்கப் பட்டது
தந்ததைக் காட்டிலும் தரமிகு வேலை
கோலாச்சி பெருஞ்செதிற் கொழுமீன் பிடிக்க
விரையும் கொழுத்த மீனதைப் பிடிக்க 170
அந்தத் துவோனியின் அகல்கறுப் பாற்றில்
மரண உலகின் **மாயா அருவியில்
கைவலை கரைவலை எவையுமில் லாமல்
எந்தப் பொறியும் எடுத்தல்இல் லாமல்."
மணமகள் அப்போ(து) வந்தாள் உதவிட
நங்கை யவற்கு நவின்றாள் யோசனை:
"ஓகோ, கொல்ல, உயர்இல் மரின!
இதற்காய் வீணாய் வருத்தப் படாதே
அனல்உமிழ் கழுகொன் றமைப்பாய் இப்போ(து)
அனற்புள் படைப்பாய் அதிபிர மாண்டமாய்! 180
பிடிப்பாய் அதனால் பெருங்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனைப் பிடிப்பாய்
அந்தத் துவோனியின் அகல்கறுப் பாற்றில்
மாய்வுல கத்தின் பாத()ளக் கிடங்கில்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
அனல்உமிழ் கழுகொன் றமைத்திட லானான்
அனற்புள் படைத்தான் அதிபிர மாண்டமாய்
பறவையின் கால்களைப் படைத்தான் இரும்பால்
பாத நகங்களைப் படைத்தான் உருக்கால் 190
படகின் புறங்களால் படைத்தான் சிறகுகள்
தானே பறவையின் தவழ்சிற கேறினான்
அமர்ந்தனன் பறவையின் அகல்முது கினிலே
சிறகு எலும்பின் செறிமுனை அமர்ந்தான்.
இதன்பின் கழுகுக் கியம்பினான் வழிமுறை
பெரியதீப் பறவைக் கறிவுரை சொன்னான்:
"என்னுடைக் கழுகே, எனது பறவையே!
நான்சொல் இடத்தை நாடிப் பறந்துசெல்
துவோனியின் கறுப்புத் தொல்நிற நதிக்கு
மாய்வுல கத்தின் பாத()ளக் கிடங்குக்(கு) 200
அறைவாய் பெருஞ்செதில் அக்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனை அடிப்பாய்!"
அந்தக் கழுகு அழகிய பறவை
எழுந்தது மேலே பறந்தே சென்றது
விரைந்துகோ லாச்சி வேட்டைக் ககன்றது
பல்லு(ள்)ள பயங்கரப் பருமீன் தேடி
அந்தத் துவோனலா ஆற்றுக் காங்கே
மாய்வுல கத்தின் பாதளக் கிடங்குக்(கு);
ஒற்றைச் சிறகு **அப்பைக் கலக்க
மற்றச் சிறகு வானைத் தொட்டது 210
நகங்கள் கடலில் இறங்கிப் பிறாண்ட
பாறையில் அலகு மோதிமுட் டியது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வேட்டையைத் தேடி விரைந்தே சென்றான்
அந்தத் துவோனலா ஆற்றுக் காங்கே
கழுகவ னுக்குக் காவல் இருக்க.
நீரில் இருந்தொரு **நீர்விசை எழுந்தது
இல்மரி னனையே இறுகப் பிடித்தது
கழுகு அதனது கழுத்தில் குதித்தது
திருகிய துநீர்ச் சக்தியின் சென்னியை 220
இழுத்தது பிடித்து இரும்தலை கீழே
காலடிக் கிடந்த கறுப்புச் சேற்றினுள்.
வந்தது துவோனியின் வலுக்கோ லாச்சி
நீர்வாழ் நாயும் நேராய் வந்தது
சின்னஞ் சிறியகோ லாச்சியு மல்ல
பென்னம் பெரியகோ லாச்சியு மல்ல;
கோடரி இரண்டு கொள்கைப் **பிடிநா
குப்பைவா ரிகைப் பிடிநீள் பற்கள்
மூன்றுநீர் வீழ்ச்சிமுன் கடைவாய் அளவு
ஏழு தோணிகள் நீளம் முதுகு 230
வந்தது கொல்லனை வலிதுகைப் பற்ற
கொல்லன்இல் மரினனைக் கொன்று(ண்)ண வந்தது.
கழுகு எதிரே கடுகதி வந்தது
காற்றின் பறவை கடிததை அறைந்தது
அந்தக் கழுகு அதுசிறி தல்ல
ஆனால் உண்மையில் அதுபெரி தல்ல:
வாயின் அகல மதுவறு நூறடி
ஆறுநீர் வீழ்ச்சி அளவது கடைவாய்
நாக்கின் நீளம் ஈட்டிஆ றலகு
அதன்நகம் ஐந்து அரிவாள் நீளம்; 240
அதுபெரும் செதிற்கோ லாச்சியைக் கண்டது
கூடிய விசைசெலும் கொழுத்த மீனதனை
அந்தமீ னினையே அடித்தது பாய்ந்து
அந்தமீன் செதிலை அடித்தே கிழித்தது.
அப்போ தந்த அதிபெரும் செதில்மீன்
விரைந்தே செல்லுமம் மிகுகொழுப் புறுமீன்
கழுகின் நகங்களைக் கடிதுதொட் டிழுத்தது
தெளிந்தநீ ரதனின் திகழடி ஆழம்;
என்னினும் கழுகு எழுந்தே பறந்தது
வானதில் உயர வலுவுடன் சென்றது 250
கறுப்புச் சேற்றினைக் கலக்கிக் கிளப்பி
தெளிந்தநீர் மேலே சேரக் கொணர்ந்தது.
வட்டமிட் டுயர வந்தது முன்பின்
முயற்சித் ததுஒரு முறையது மீண்டும்
உள்திணித் ததுதன் ஒற்றை நகத்தை
பயங்கர மிகுந்த படர்கோ லாச்சிதோள்
நீர்நா யதனின் நீள்வளை வெலும்பில்;
அடுத்ததன் நகத்தை அதிஉள் திணித்தது
உருக்கில் அமைந்த உறும்மலை யுள்ளே
இரும்பினால் ஆன இருங்குன் றுள்ளே; 260
ஆயினும் பாறையில் அந்நகம் வழுக்கி
விலகிச் சென்றது விரிகுன் றிருந்து
கோலாச்சி வழுவிக் கொண்டது அதனால்
நழுவிச் சென்றது நளிர்நீர் விலங்கு
கழுகின் கால்நகங் களிலே யிருந்து
பிரம()ண்டப் பறவைப் பிடிவிர லிருந்து
நெஞ்செலும் புகளில் நேர்நகக் கீறலும்
கிழித்த காயமும் கிடந்தன முதுகில்.
பின்னர் இரும்புப் பெருநகக் கழுகு
இன்னொரு தடவை எடுத்தது முயற்சி 270
அதன்சிற கினிலே அனல்வீ சியது
கனலும் நெருப்பாய்க் கனன்றன விழிகள்
பிடித்தது நகங்களால் பெருங்கோ லாச்சியை
தன்பிடிக் கொணர்ந்தது தனிநீர் நாயை
உறுசெதிற் கோலாச்சி(யை) உயர்த்தி எடுத்தது
இழுத்து வந்தது இரும்நீர் விலங்கை
ஆழத் தலைகளின் அடியிலே யிருந்து
தெளிந்த நீரதன் திகழ்மேற் பரப்பு.
இரும்பு நகக்கழு கிப்படி யாக
அதனுடை மூன்றாம் அருமுயற் சியினால் 280
பெற்றது துவோனியின் பெருங்கோ லாச்சியை
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தது
அந்தத் துவோனலா ஆற்றிலே யிருந்து
படுமாய் வுலகின் பாதளத் திருந்து;
தண்ணீர் நீராய்த் தான்தெரிந் திலது
பெருங்கோ லாச்சிப் பிறழ்மீன் செதில்களால்
வருகால் காலாய் **மணக்கவு மில்லை
பருத்த கழுகின் பறப்பிற குகளால்.
இரும்புப் பாதத் திருங்கழு கதன்பின்
சென்றது சுமந்து செதிற்கோ லாச்சியை 290
பெரியசிந் தூரச் செறிமரக் கிளைக்கு
படர்தேவ தாருவின் தொடர்முடி யதற்கு;
சுவையை அங்கே சுவைத்துப் பார்த்தது
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தது
நெஞ்சு எலும்பை நேர்பிளந் தெடுத்தது
அடித்து நொருக்கி அதன்தலை போட்டது.
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"ஓ,நீ இழிந்த ஊனுண் கழுகே,
எந்த இனம்நீ இயைந்தபுட் குலத்தில்
எவ்வகைப் பிராணிநீ இருக்கும் வகையில் 300
சுவையை இவ்விடம் சுவைத்துப் பார்த்தாய்
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தாய்
பிளந்தே எடுத்தாய் பெரியநெஞ் செலும்பை
அடித்து நொருக்கி அதன்தலை போட்டாய்."
அப்போ(து) இரும்பால் ஆம்நகக் கழுகு
சினந்தே எழுந்து சென்றது பறந்து
படர்வான் உயரப் பறந்தே சென்றது
மேகமண் டலத்து வெளிபரப் புடே
மேகம் கலைந்தது விண்முழங் கிற்று
வான்அதன் மூடி வளைந்தே வந்தது 310
மானிட முதல்வனின் மாவில் தெறித்தது
திங்களின் கூரிய கொம்புகள் உடைந்தன.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
கொண்டே சென்றான் குறித்தமீன் தலையை
மாமியா ருக்கு வருமன் பளிப்பாய்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நாற்க()லி ஒன்றிதோ நாளெலா மழியா(து)
வடபுல நல்ல வதிவிடத் துக்கு."
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்: 320
"விரியன் வயலை விரைந்துழு(து) முடித்தேன்
புழுக்கள் நிறைந்த புமியைப் புரட்டினேன்
உயர்மாய் வுலகின் ஓநாய் பிடித்தேன்
கடிதே துவோனியின் கரடிகள் கட்டினேன்
பெரிய செதிற்கோ லாச்சியைப் பெற்றேன்
விரையும் கொழுத்த மீனைப் பிடித்தேன்
துவோனலா வதனின் தொன்னதி யிருந்து
படர்மாய் வுலகின் பாதளத் திருந்து
அரிவையிப் போது அளிக்கப் படுவளா
தையலாள் இங்கே தரப்படு வாளா?" 330
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஆயினும் அதிலே ஆற்றினாய் ஓர்பிழை
அடித்துத் தலையை நொருக்கிப் போட்டாய்
கோலாச்சி வயிற்றைக் குறுக்கே கிழித்தாய்
நெஞ்சின் எலும்பை நேர்பிளந் தெடுத்தாய்
சுவையை ஆங்கே சுவைத்துப் பார்த்தாய்."
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"விளைசே தமிலா வெற்றியொன் றில்லை
எம்மிகச் சிறந்த இடங்களிற் கூட 340
நதிதுவோ னலாவிது நனிபெறப் பட்டது
படுமாய் வுலகின் பாதளக் கிடங்கில்;
ஆயத்தம் தானா அணங்(கு)எதிர் பார்த்தோள்
தயார்நிலை யுள்ளளா தனிக்காத் திருந்தவள்?"
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"ஆயத்த மானாள் அணங்(கு)எதிர் பார்த்தோள்
தயாரா யுள்ளனள் தனிக்காத் திருந்தோள்
அளிக்கப் படுவள் அரியஉன் தாரா
தரப்படு வாள்உன் தனிவாத் துனக்கு 350
இல்மரி னன்எனும் இகல்கொல் லற்கு
என்றுமே அருகில் இருந்திட அமர்ந்து
முழங்கால் மனையளாய் அமர்ந்தே இருக்க
கொள்கரத் தணைப்பில் கோழியா யிருக்க!"
ஆங்கொரு பிள்ளை அகலத் திருந்தது
பெருநிலத் திருந்தொரு பிள்ளைபா டிற்று:
"இவ்வதி விடங்கட் கிப்போ(து) வந்தது
எங்கள்கோட் டைக்கு இன்னொரு பறவை
வடகிழக் கிருந்தே பறந்ததக் கழுகு
கவின்வான் குறுக்கே கருடன் பறந்தது 360
விரிசிற கொன்றுவான் விளிம்பைமுட் டிற்று
மற்றது அலைமேல் வந்துதட் டிற்று
வால்கடற் பரப்பை வலிதே தொட்டது
தலைவான் முகட்டில் தட்டுப் பட்டது;
பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
ஆண்களின் கோட்டை அதன்மேல் அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;
இரும்புக் கூரை **இயைந்த(து)ஆண் கோட்டை
அதனால் உட்புக லதுமுடிந் திலது. 370
பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
அரிவையர் கோட்டை அதன்மேல் அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது;
செப்புக் கூரை செறிந்த(து)பெண் கோட்டை
அதனால் உட்புக லதுமுடிந் திலது.
பார்த்தது சுற்றிலும் பார்த்தது திரும்பி
பெருவட்ட மொடே பின்முன் பறந்தது
மடவார் கோட்டைமேல் வந்தே அமர்ந்தது
அலகால் அதனை அதுகொட் டியது; 380
சணற்றுணிக் கூரையில் **தையலர் கோட்டை
அதனால் உட்புகல் அதற்கு முடிந்தது.
கோட்டை யதன்புகைக் கூண்டில்வந் தமர்ந்தது
கூரை விளிம்பைக் குறுகியங் கிருந்தது
திறந்தது கோட்டைக் கதவம் தட்டி
அமர்ந்தது கோட்டைச் சாளர மதன்மேல்
சுவரரு கணைந்தது தொடர்பசு மிறகுடன்
நூறிற குடன்சுவர் மூலையை யடைந்தது.
பின்னிய நறுங்குழற் பெண்களைப் பார்த்தது
நறுங்குழல் தலைகளை நன்கா ராய்ந்தது 390
மங்கையர் குழுவில் மாசிறப் பினளை
பின்னல் தலைகளில் பெரும்பே ரழகியை
முத்துத் தலைகளில் மிக்கொளி யுடையளை
மலர்தலை களில்மிகு மாபுகழ் உடையளை.
கழுகுபின் அவளைக் கடிதுபற் றியது
அவளைக் கருடன் அணைந்து பிடித்தது
குழுவில் மிகநலக் குமரிபற் றியது
வாத்துக் கணத்தில் வனப்புள் ளாளை
ஒளியும் மென்மையும் ஒருங்கிணைந் தாளை
செம்மையும் வெண்மையும் சேரவுள் ளாளை 400
அவளையே பிடித்தது அரியகாற் றின்புள்.
நீண்ட நகங்களில் தாங்கிய தவளை
எழில்தலை நிமிர்த்தி இருந்திடு மவளை
அருவடி வுகந்த அமைப்புடை யாளை
இறகினைப் போன்ற இனியமென் மையளை
தண்ணிய தோகைச் சாயலுயுள் ளாளை."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அன்புக் குரியநீ எங்கிருந் தறிந்தாய்,
கேட்டது எவ்விதம் கிளர்பொன் அப்பிளே, 410
வனிதையாம் இவளும் வளர்வது பற்றி,
நற்சணற் குழலாள் நடமிடல் பற்றி?
அரிவையின் வெள்ளி அணிஒளிர்ந் ததுவா?
பாவையின் பொன்பிர சித்தமுற் றதுவா?
எங்கள்செம் பருதி அங்கெறித் ததுவா
எங்கள் திங்கள் அங்குதிகழ்ந் ததுவா?"
பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
வளர்ந்து வருமது வருபதில் சொன்னது:
"அன்புக்கு உரியது அறிந்தது இவ்விதம்
பாக்கியம் உள்ளவன் பாதையை அறிந்தான் 420
மகிமை பெற்ற மங்கைவீட் டுக்கு
அவளது அழகிய அகல்கா வெளிக்கு;
அவளது தந்தை அருமதிப் புள்ளவர்
கப்பல் பெரிதாய்க் கட்டி முடிப்பதால்,
அவளது அன்னையோ அதிலும் சிறந்தவள்
தடிப்பாய் ரொட்டிகள் தாம்சுட் டெடுப்பதால்,
ரொட்டி கோதுமையில் சுட்டுவைப் பதனால்,
வந்தோரை ஏற்று வைப்பதால் விருந்து.
அன்பபுக்கு உரியது அறிந்தது இவ்விதம்
சரியாம் அந்நியர் தாமும் அறிந்தது 430
இளமைப் பெண்ணாள் வளர்கிறாள் என்பதை
கன்னி நல்விருத்தி காண்கிறாள் என்பதை:
ஒருமுறை முற்றத் துலாவிய வேளையில்
களஞ்சியக் கூடம் காலிடும் வேளையில்
புலர்அதி காலைப் பொழுதுஅன் றொருநாள்
வளர்புலர் போதின் வைகறை வேளை
நுண்புகை கிளம்பி நுலாய் எழுந்தது
புகைதடித் தெழுந்தது புகாராய் வந்தது
சீர்த்திகொள் பாவையின் திருஇல் இருந்து
வளரும் வனிதையின் எழிற்கா விருந்து; 440
அரைத்துக் கொண்டு அவளே யிருந்தனள்
திரிகையின் பிடியில் செயற்பட் டிருந்தாள்;
திரிகையின் கைப்பிடி குயிலென ஒலித்தது
காட்டு வாத்தெனக் கைத்தண் டொலித்தது
திரிகையின் சக்கரம் குருவிபோன் றிசைத்தது
திரிகை அசைந்தது திகழ்முத் துப்போல்.
மீண்டும் ஒருமுறை விரைந்துசெல் வேளையில்
வயல்எல் லையிலடி வைத்திடு வேளையில்:
பசும்புல் தரையிலே பாவையும் இருந்தனள்
மஞ்சள்புல் தரையில் வழிநகர்ந் தேகினள் 450
கலயம் நிறைசெஞ் சாயம் காய்ச்சினள்
மஞ்சள்சா யத்தை வடித்தாள் கெண்டியில்.
மூன்றாம் முறையில் முனைந்துசெல் வேளை
பாவைபல் கணிக்கீழ் படர்ந்துசெல் வேளை
நங்கையின் நெசவு நன்றாய்க் கேட்டது;
தறியின் அச்சவள் தளிர்க்கைமோ திற்று;
சிறிய**நூ னாழி வழுவிச் சென்றது
குன்றதன் குழியில் துன்று**கீ ரியைப்போல்
தறியச் சுப்பல் செறிந்தொலி யெழுப்பின
மரத்தில் இருக்கும் மரங்கொத் தியைப்போல் 460
பாவோ(ட்)டு **சட்டம் படுவிசை சுழன்றது
மரத்துக் கிளையின் மரவணி லதுபோல்."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதுதான் அதுதான் அழகென் பெண்ணே!
உனக்கெப் போதும் உரைப்பேன் அல்லவா,
கூவிடேல் தேவ தாருக ளிடையென,
பள்ளத் தாக்கிலே பாடா தேயென,
கழுத்தின் வளைவைக் காட்டா தேயென,
கரங்களின் வெண்மையைக் காட்டா தேயென, 470
இளமை மார்பதன் எழுச்சியை என்று,
ஏனைய உறுப்பின் எழிலினை என்று!
இலையுதிர் காலம் முழுவதும் சொன்னேன்
பாடினேன் இந்தக் கோடைஎக் காலமும்
விரைந்து செல்லும் வசந்தத் தியம்பினேன்
அடுத்த விதைப்புப் பருவத் திசைத்தேன்:
இரகசிய மானதோர் இல்லம் கட்டுவோம்
இரகசியச் சாளரம் சிறிதாய் வைப்போம்
நேரிழை யார்துணி நெய்வதற் காக
இழைநான் **கூடுநூல் இரைச்சலி னோடு, 480
செவிகொடார் பின்லாந்(து) திகழ்மண வாளர்
பின்லாந்(து) மணவ()ளர், பெருநாட்(டு) வரன்மார்."
பெருநிலத் திருந்தொரு பிள்ளை சொன்னது
**ஒருபட்சக் குழவி உரைத்ததிவ் வாறு:
"மாபரி ஒன்றை மறைப்பது சுலபம்
முரட்டு மயிர்ப்பரி மறைப்பது எளிது
மங்கை ஒருத்தியை மறைப்பது சிரமம்
உயர்நெடுங் குழலியை ஒளிப்பது சிரமம்;
கல்லினால் கோட்டைநீ கட்டிய போதிலும்
உயர்ந்து கிளர்ந்த ஒலிகடல் நடுவில் 490
மகளிரைத் தடுத்து வைத்தற் காங்கே
நின்கோ ழிகளை நேர்வளர்த் தெடுக்க
மகளிரை அங்கே மறைத்தலு மரிது
அங்கே வளர்தலும் அரிதுகன் னியர்கள்
மாப்பி(ள்)ளை கைகளில் மாட்டப் படாமல்
நன்மண வாளர், நாட்டு வரன்மார்,
உயர்ந்த தொப்பிகள் அணிந்திடு மனிதர்
உருக்குக் குளம்பு உயர்பரி யுடையோர்."
முதிய வைனா மொயினன் அவனே
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன் 500
வீடு நோக்கி விரைந்திடும் வேளை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"நான்அபாக் கியவான் நவில்துர்க் கதியினன்
ஏனெனில் எனக்கு இதுதெரிந் திலது
திருமணம் இளமையில் செய்து களிக்க
வாழ்கா லத்தில் வழித்துணை தேட!
**தன்கரு மம்மெலாம் தனியே வருந்துவான்
இளமையில் திருமணம் இயைந்தே செய்பவன்
பிள்ளைப் பருவம் பிள்ளைப் பெறுபவன்
சிறுபரா யத்தில் பெறுபவன் குடும்பம்." 510
அப்போ(து) வைனா மொயினன் தடுத்தான்
அமைதிநீர் மனிதன் அவன்தடுத் துரைத்தான்
வயோதிபன் இளமை மங்கையை நாடலை
அழகிய பெண்ணை அடைய முயல்வதை
போட்டியில் சேர்ந்து நீந்திப் போவதை
போட்டிக் காகப் புனலில் விரைவதை
இளம்பெண் ஒருத்திக்கு இடுவதைப் போட்டி
இளம்பரு வத்தில் இருக்கையில் அடுத்தவன்.
பாடல் 20 - விவாக விருந்துக்குப் பெரிய எருது கொல்லப்படுதல் TOP
அடிகள் 1 - 118 : திருமணக் கொண்டாட்டத்திற்கு மிகப் பெரிய எருது ஒன்று கொல்லப்படுதல்.
அடிகள் 119 - 516 : 'பீர்' என்னும் பானம் வடித்து உணவுகள் தயாரித்துத் திருமணக் கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெறுதல்.
அடிகள் 517 - 614 : நாயகர்களைத் திருமணத்திற்கு அழைக்கத் தூதுவர் அனுப்பப்படுதல்; ஆனால் லெம்மின்கைனன் மட்டும் அழைக்கப் படவில்லை.
என்ன பாடலை இப்போ(து) பாடுவோம்?
எந்தக் கதைகளை இப்போ(து) கூறுவோம்?
பாடுவோம் நாங்கள் பாடலை இவ்விதம்
இயம்புவோம் நாங்கள் இந்தக் கதைகளை:
வியன்வட பால்நில விழாக்களைப் பற்றியும்
தெய்வீகப் பானமே தேர்ந்து(ண்)ணல் பற்றியும்.
கடிமண ஒழுங்குகள் கனநாள் நடந்தன
ஆயத்த மாயின அனைத்துப் பொருட்களும்
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
சரியோலாப் பகுதியின் தகுவாழ் விடங்களில். 10
அங்கே கொணர்ந்த அவைஎவை எவைகள்
வந்து சேர்ந்திட்ட வகைப்பொருள் எவைஎவை
வடபால் நிலத்துநீள் மணவிழா வுக்கு
குடித்து மகிழ்பெருங் குழுவத னுக்கு
உறுநாட்டு மக்களுக் குபசாரம் செய்ய
உயர்பெருங் குழுவுக் குணவு படைக்க.
*கரேலியா இடத்திலோர் காளை வளர்ந்தது
நின்றது கொழுத்துப் பின்லாந் தெருது
அதுவும் பெரியதோ சிறியதோ அல்ல
இளங்கன்று தானது இனிதாய் வளர்ந்தது; 20
*'ஹமே'யெனு மிடத்தில் அதன்வால் சுழன்றது
*'கெமி'யெனு மாற்றில் அதன்தலை அசைந்தது
அதன்கொம்பு நீளம் அறுநூ றடிகள்
தொ(ள்)ளாயிரம் அடிகளாம் தொடர்வாய்ப் புட்டு;
வாரமொன் றெடுக்கும் வலம்வரக் கீரி
நுவல்எரு தொருபுற நுகக்கட் டதன்மேல்;
**தூக்கணத் துக்கொரு நாட்பொழு தெடுக்கும்
பறந்து முடித்திடப் படிகொம் பிடையே
விரைந்து பபறந்து விறல்முனை யடையும்
இடையில் தங்கி எடுக்கா தோய்வு; 30
திங்களொன் றோடித் திரிந்ததோர் **கொடையணில்
கழுத்தி லிருந்துவால் கரைமுனை நோக்கி
அதுவால் முனையை அடையவே யில்லை
அடுத்த மாதமும் அடையவே யில்லை.
கட்டுக் கடங்காக் கன்றது இளையது
பின்லாந்து நாட்டின் பெரியதோர் காளை
கரேலியா விருந்து கொணரப் பட்டது
வடபால் நிலத்து வயல்களின் பக்கம்;
கொம்புகள் பக்கம் நின்றொரு நூறுபேர்
வாய்ப்புட் டுப்புறம் மற்றா யிரம்பேர் 40
அந்தக் காளையை அடுத்துப் பிடித்தனர்
வடநாட்டு கொண்டு வந்தபோ தினிலே.
வழியிலே நடந்து வந்தது எருது
நேர்சரி யோலா நீரிணை வாயிலில்
சேற்று நிலங்களில் செறிபுல் மேய்ந்தது
முதுகுமேற் புறமோ முகிலில் தோய்ந்தது;
அடித்ததை வீழ்த்த அங்கெவ ரும்மிலர்
நாட்டின் குரூரம் வீழ்த்துவோ ரங்கிலர்
வடக்கு மாந்தர் வரிசைத் தரத்தில்
உயர்ந்த பெரிய உறவின ரிடையே 50
எழுச்சிகொண் டுயரும் இளைஞரி னிடையே
அல்லது முதியோர் அவரிலும் இல்லை.
வயோதிபன் வெளிநாட் டொருவன் வந்தான்
*'விரோகன் னாஸ்'என்னும் கரேலியன் அவனே
இந்த சொற்களில் இயம்பினன் அவனே:
"பொறுப்பாய், ஏழை எருதே பொறுப்பாய்!
இதோநான் வருகிறேன் இகல்தண் டத்தொடே
தண்டா யுதத்தால் சார்ந்துனை அறைகிறேன்
அபாக்கியப் பிராணியே அடிப்பேன் மண்டையில்
உன்னால் முடிந்திடா தின்னொரு கோடையில் 60
முடியா துனது மூக்குவாய் திருப்ப
வாய்ப்புட்(டுத்) திருப்பிப் பார்க்கவொண் ணாது
இந்த வயல்களின் எல்லை வெளிகளில்
நேர்சரி யோலா நீரிணை வாயிலில்."
முதியவன் சென்றான் முன்விலங் கறைய
விரோக(ன்)னாஸ் அதைத்தொட விரைந்தே சென்றான்
போற்றுதற் குரியோன் போனான் பிடிக்க:
அங்கே எருது அசைத்தது தலையை
கறுத்த விழிகளைச் சுழற்றிப் பார்த்தது;
முதியோன் தாவித் தேவதா ரேறினான் 70
விரோகன்னாஸ் பாய்ந்தான் விரியும் புதருள்
போற்றுதற் குரியோன் புகுந்தான் செடிப்புதர்.
எருதினை அடிக்க ஒருவனைத் தேடினர்
ஒருவனைப் பெரிய எருதினை வீழ்த்திட
அழகிய கரேலியா அயற்புறத் திருந்து
பெரியதோட் டத்தில் பின்லாந் திருந்து
அமைதி ரஷ்யா அகல்நாட் டிருந்து
விறல்நிறை சுவீடன் வியன்நாட் டிருந்து
லாப்புவின் அகன்ற இரும்வெளி யிருந்து
மிகுவலித் *துர்யா வினிலுமே யிருந்து 80
துவோனலா நிலத்திலும் ஒருவனைத் தேடினர்
மரண உலகின் மண்ணின் அடியிலும்
தேடினர் ஆயினும் சேர்ந்திலர் எவரும்
நாடினர் ஆயினும் நண்ணிலர் எவரும்.
எருதினை அடிக்க ஒருவனைத் தேடினர்
அறைந்து வீழ்த்திட ஆளொன்று தேடினர்
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
பரந்து விரிந்த படரலை களின்மேல்.
கறுத்த மனிதன் கடலிடை எழுந்தான்
வீரன் ஒருவன் விளங்கினான் அலையில் 90
சரியாய்த் தெளிந்த தண்ணீ ரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து);
உயர்ந்தோர் தம்மில் ஒருவனு மன்றவன்
சிறியவர் தம்மையும் சேர்ந்தவ னன்றவன்
ஒருகல யக்கீழ் உறங்கத் தக்கவன்
நேர்ஒரு முறம்கீழ் நிற்கத் தக்கவன்.
முதியோன் இரும்பு(க்)கை முட்டியை யுடையவன்
இரும்புரோ மமுளோன் எதிர்பார் வைக்கு
தொல்பா றையிலாம் தொப்பி தலையிலே
கற்களில் செய்த காலணி கால்களில் 100
கனகத் தியைந்த கத்தி கரத்திலே
கத்தியில் இருந்தது கைப்பிடி செப்பினால்.
எருதை அடிக்க ஒருவன் கிடைத்தனன்
கொன்று வீழ்த்தக் கண்டனர் ஒருவனை
பின்லாந் தெருதைப் பிடித்தடிப் பவனை
நாட்டின் குரூரம் வீழ்த்துவோன் தன்னை.
தன்னுடை இரையைத் தான்கண் டதுமே
தாவி விரைந்து தாக்கினான் கழுத்தில்
காளையை முழங்கால் களிற்பணித் திட்டான்
விலாவைப் பற்றி வீழ்த்தினான் நிலத்தில். 110
அதிக இரையை அவன்பெற் றானா?
அதிக இரையை அவன்பெற வில்லை:
பேழைகள் நூறு பெய்த இறைச்சியும்
அறுநூறு அடியில் அமை**பதன் இறைச்சியும்
ஏழு தோணிகள் எலாம்நிறை இரத்தமும்
ஆறு சாடிகள் அவைநிறை கொழுப்பும்
அந்த வடநிலத் தமைவிழா வுக்கு
அச்சரி யோலா அதன்விருந் துக்கு.
கட்டப் பட்டதோர் கவின்இல் வடக்கே
ஒருபெரும் வீடு உயர்பெரும் கூடம் 120
ஐம்பத்து நாலடி அதன்நீள் பக்கம்
நாற்பத் திரண்டடி நனிஉயர் அகலம்
கூரையில் நின்றொரு சேவல் கூவினால்
அதன்குரல் தரையில் அறக்கேட் காது,
கொல்லையில் நின்றொரு குட்டிநாய் குரைத்தால்
அதன்கத வம்வரை அதுகேட் காது.
அந்த வடநிலத் தலைவியும் அங்கே
வந்தாள் நடந்து வளர்தரை கடந்து
வந்து சேர்ந்ததும் மத்தித் தரைக்கு
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்: 130
"'பீரை' எப்படிப் பெறலா மப்பா
மதுவைத் தரமாய் வடிப்ப தெப்படி
திருமண விழாவில் உபசா ரம்செய
விவாக வீட்டு விருந்தில் வழங்க?
மதுவினை வடிக்கும் வகைநான் அறியேன்
வியன்'பீர்' தோன்றிய விதமும் அறியேன்."
அங்கே இருந்தான் அடுப்பில் கிழவன்
இயம்பினன் அடுப்பினில் இருந்த கிழவனும்:
" 'பீர்'தான் பிறந்தது பார்லியி லிருந்து
**போதைச் செடியால் பொலிந்த நற்பானம் 140
ஆயினும் நீரிலா ததுபிறந் திலது
எரியும் நெருப்பு இலாமலு மல்ல."
**ஆரவா ரத்தின் அருமகன் அச்செடி
நன்னிலம் சிறிதாய் நாட்டப் பட்டது
உறுமராப் போல்நிலத் துழவும் பட்டது
**காஞ்சொறிச் செடியெனக் களைந்தெறி பட்டது
கலேவாப் பகுதியிற் காண்கிணற் றருகினில்
ஒஸ்மோ வயலின் உளகரை யோரம்;
ஓரிளம் நாற்று உடனங் கெழுந்தது
முளையொன்(று) பசுமையாய் முளைத்து வந்தது 150
ஒருசிறு மரத்தில் உயரப் படர்ந்தது
உச்சியை நோக்கி உயர்ந்தே சென்றது.
பார்லியை அதிர்ஷ்டத் தேவதை விதைத்தது
ஒஸ்மோப் புதிய உயர்வயல் திடலில்;
அழகாய் பார்லி அங்கே வளர்ந்தது
செழித்து உயர்ந்து சீராய் வந்தது
ஒஸ்மோப் புதிய உயர்வயல் திடலில்
கலேவா மைந்தனின் காட்டு வெளியினில்.
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
அழைத்தது மரத்திருந் தப்போ தைச்செடி 160
திடல்வயல் பார்லி செப்பிட லானது
கேட்டது கலேவாக் கிணற்றிநீ ரதுவும்:
'கூடுவ தெப்போ(து) குவிந்தொன் றாய்நாம்
எப்போ தொருவரை ஒருவர்சந் திப்பது
தனித்த வாழ்வு தருவது துயரம்
இருவர் மூவர் இணைவது இனிமை.'
ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
பார்லித் தானியம் பைங்கரத் தெடுத்தாள்
ஆறு பார்லி அருமணி எடுத்தாள் 170
போதைச் செடிப்புக் குஞ்சமே ஏழு
எடுத்தாள் நீரை எட்டு அகப்பைகள்
பானையைப் பின்னர் தீயினில் வைத்தாள்
கொதிக்கச் செய்தாள் நெருப்பில் கலவை
பார்லி மணிகளில் 'பீரை'க் காய்ச்சினாள்
கரையும் கோடை காலத்து நாட்களில்
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்
மரத்தில் குடைந்த வன்புதுச் சாடியில்
மிலாறு மரத்தின் வியனார் தொட்டியுள் 180
எடுத்தாள் 'பீரை' இதமாய் வடித்து
பெற முடிந்திலது உறுபுளித் தன்மை
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
வேறு எதனைத் தேடிப் பார்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப் 'பீர்'ப்பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '
கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள் 190
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
கண்டனள் **சிராய்த்த துண்டினைத் தரையில்
தரையிலே யிருந்து சிராயை எடுத்தனள்.
அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம் 200
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '
தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் விரல்களின் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
அங்கே வெள்ளை அணிலொன் றுதித்தது. 210
தன்மக னுக்குச் சாற்றினாள் வழிமுறை
அவ்வணி லுக்கு அறிவுரை புகன்றாள்:
'புல்மேட்(டுப்) பொன்னே, புதியஎன் அணிலே!
புல்மேட்டு மலரே, புமியின் எழிலே!
நான்புகல் இடத்தே நனிவிரைந் தேகு!
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்!
களிப்பு நிறைந்த கானகம் அதற்கு
தப்பியோ வாழும் முக்கிய வனத்தே
ஒருசிறு மரத்தில் ஓடிமே லேறு
தளைத்துச் சடைத்த தனிமர முடிக்கு 220
அதனால் கழுகு அதுபிடிக் காது
காற்றின் பறவை கண்டடிக் காது
கொணர்வாய் தேவ தாருவின் **கூம்பை
கொணர்வாய் தாருவின் கூம்பின் **செதிலை
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் உயர்'பீர்'ப் போடு!'
அணிலுக்(கு) ஓட அழகாய்த் தெரிந்தது
விரையத் தெரிந்தது **சடைவா லதற்கு
நீடிய பாதையை ஓடியே கடக்க
செறிதொலைப் பயணம் செய்தே முடிக்க 230
ஒருகா முடித்தது மறுகா **கடந்தது
கடந்தது குறுக்கே காவொரு மூன்றும்
களிப்பு நிறைந்த கானகம் சென்றது
தப்பியோ வாழும் முக்கிய வனத்தே.
கண்டது மூன்று கானகத் தருவை
சிறிய நான்கு தேவதா ருக்களை
தளர்சேற்று நின்ற தாரு(வில்)ஏ றிற்று
புற்றிடர் மரமேற் போயிட லானது
பெருங்கழு கதனைப் பிடிக்கவு மில்லை
அடர்காற் பறவை அடிக்கவும் இல்லை. 240
குலதேவ தாருவின் கூம்பைப் பறித்தது
தாரு மரத்தில் தழைகளை ஒடித்தது
நகங்களில் அவற்றை நன்கொளித் திட்டது
பாதத்தைச் சுற்றிப் பத்திரம் செய்தது
அரிவையின் கைகளில் அவற்றினை வைத்தது
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்.
பெண்ணவள் அவற்றை 'பீரி'ல் போட்டனள்
பகர்ஒஸ் மோமகள் பானத் திட்டனள்
ஆயினும் புளித்தெழ வில்லை யப்'பீர்'
இளமைப் பானம் எழவிலை நுரைத்து. 250
ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
சிந்தனை பின்னர் செய்தனள் தொடர்ந்து:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப்'பீர்'ப் பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? '
கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை 260
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
கண்டனள் **சீவற் துண்டினைத் தரையில்
தரையிலே யிருந்து சீவலை எடுத்தனள்.
அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில் 270
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '
தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால்
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
கிளர்பொன் மார்புக் கீரியொன் றுதித்தது.
வந்தகீ ரிக்கு வழிமுறை சொன்னாள்
அனாதைப் பிள்ளைக் கறிவுரை சொன்னாள்: 280
'எனதுநற் கீரியே என்னிளம் பறவையை
அழகிய கம்பளி அருமைத் தோலே
நான்புகல் இடத்து நனிவிரைந் தேகு
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்
பழுப்புக் கரடியின் பாறைக் குகைக்கு
காட்டுக் கரடியின் தோட்ட வெளிக்கு
கரடிகள் பொருதும் காட்டகத் தாங்கே
கொடிய கரடிகள் கூடிவா ழிடத்தே;
**புரையைநின் காலில் போய்நீ எடுத்து
கால்களில் புளித்த மாவுறை சேர்த்து 290
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் ஒளிர்தோள் சேர்ப்பாய்.'
கீரிக்(கு) இப்போ(து) ஓடத் தெரிந்தது
பொன் மார்புக்குப் போகத் தெரிந்தது
விரைந்து கடந்தது விரிநீள் பாதை
செய்து முடித்தது சேர்தொலைப் பயணம்
ஒருநதி நீந்தி மறுநதி கடந்தது
கடந்தது குறுக்கே கவின்மூன் றாம்நதி
பழுப்புக் கரடியின் பாறைக் குகைக்கு
கரடிகள் இருக்கும் கற்குகை யதற்கு 300
கரடிகள் பொருதும் காட்டகத் தாங்கே
கொடிய கரடிகள் கூடிவா ழிடத்தே
இரும்பினா லான இருங்குன் றதற்கு
உருக்கினா லான உயர்மலை யதற்கு.
கரடியின் வாயில் கனநுரை வழிந்தது
கொடிய கரடிவாய்க் கனபுரை இருந்தது
கைகளில் சற்றே காண்நுரை யெடுத்தது
பாதத் **திலும்பின் படிபுரை சேர்த்தது
அரிவையின் கைகளில் அவற்றினை வைத்தது
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில். 310
ஒஸ்மோ மகளும் உடன்தன் 'பீரி'ல்
வடித்தபா னத்தில் வந்ததை யிட்டனள்
ஆயினும் புளித்தெழ வில்யை யப்'பீரே'
மனிதனின் பானம் வரவி(ல்)லை நுரைத்தே.
ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள்,
சிந்தனை பின்னர் செய்தனள் தொடர்ந்து:
'இதற்கு இன்னும் எதனைச் சேர்க்கலாம்
புளிக்க வைத்திடப் புதுப்'பீர்'ப் பானம்
வடித்த மதுவை வைத்திட நுரைக்க? ' 320
கலேவா வின்மகள் கவினுறு நங்கை,
மனோகர மென்மை மங்கையின் விரல்கள்
என்றும் பாங்காய் அசையும் இயல்பின
காலணி என்றும் கனதி குறைந்தவை
தரையின் பரப்பில் விரையும் இயல்பின
நன்னில மத்தியில் நடந்தே வந்தனள்
அடுத்ததில் ஒன்றில் அலுவல் புரிந்தனள்
இரண்டு கெண்டிகள் இடையில் அலுவல்கள்
பயற்றம் **நாற்றைப் படிதரைக் கண்டனள்
நாற்றை எடுத்தனள் நற்றரை யிருந்தே. 330
அதனைப் பார்த்தனள் அதனைத் திருப்பினள்:
'இதிலே யிருந்து எதனைச் செய்யலாம்
அழகு படைத்த அரிவையின் கைகளில்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
இளமைப் பெண்ணாள் எழிற்கரம் கொடுத்தால்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்? '
தனது கரங்களில் தானதைப் பெற்றாள்
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில்
நல்லிளம் பெண்ணாள் உள்ளங் கைகளால்
தேய்த்தனள் தனது திகழ்இரு கரத்தால் 340
தேய்த்தனள் தனது செழுமிகு தொடைகளில்
அதிலே பிறந்ததோர் அழகிய வண்டு.
தன்பற வைக்குச் சாற்றினள் வழிமுறை
தன்வண் டுக்குச் சாற்றினள் அறிவுரை:
'வண்டே, வண்டே, வான்விரை பறவையே!
புதுப்பசும் புல்நிலப் பூக்களின் அரசே!
நான்புகல் இடத்தே நனிவிரைந் தேகுக!
இயம்பிஆ ணையிடும் இடத்தே விரைவாய்!
இகல்விரி கடலில் இருக்கும் தீவகம்
கிளர்கடல் நடுவே கிடக்கும் பாறை 350
ஒருபெண் ஆங்கே உறக்கத் திருப்பாள்
செப்பிடைப் பட்டி தெரியும் கழன்று
தேன்புல் அவளது செறிமருங் கிருக்கும்
திகழ்உடை ஓரம் தேன்புல் இருக்கும்
கொஞ்சத் தேனைக் கொணர்வாய் சிறகில்
ஆடையில் தேனை அள்ளி வருவாய்
ஒளிரும் புல்லின் உயர்நுனி யிருந்து
இனிய பொன்மலர் இதழினி லிருந்து
அரிவையின் கைகளில் அவற்றினை வைப்பாய்
ஒஸ்மோ மகளின் ஒளிர்தோள் சேர்ப்பாய்.' 360
அந்த வண்டு அதிவிரை பறவை
சென்றது பறந்து சென்றது விரைந்து
விரைந்து கடந்தது மிகுசிறு தூரம்
குறுகியே வந்தது கொண்டநீள் தூரம்
குறுக்கே ஒருகடல் குறுக்கே மறுகடல்
கடந்தது மூன்றாம் கடலநயும் குறுக்கே
எறிகடற் பரப்பில் இருந்ததீ வுக்கு
கிளர்கடல் நடுவே கிடந்தபா றைக்கு
நற்துயில் புரிந்த நாரியைக் கண்டது
ஈய மார்பினள் வாடிக் கிடந்தனள் 370
புனைபெய ரில்லா புல்மே டொன்றில்
வளர்நறை நிறைந்த வயலின் அருகில்
அம்பொற் புற்கள் அவளது இடையில்
வெள்ளிப் புற்கள் மிளிர்ந்தன பட்டியில்.
சிறகை வண்டு தேனில் தோய்த்தது
உருகும் நறையில் சிறகைத் தோய்த்தது
ஒளிரும் புல்நுனி ஒன்றின் மேலே
பைம்பொன் மலரின் படர்முனை ஒன்றில்
மங்கையின் கைகளில் வைத்தது கொணர்ந்து
கன்னிநல் லாளின் கைவிரல் நுனியில். 380
ஒஸ்மோ வின்மகள் உடன்தன் 'பீரி'ல்
வடித்தபா னத்தில் மற்றதைப் போட்டனள்
புளித்து வந்தது புதுப்பீர் இப்போ(து)
நுரைத்து எழுந்தது நுவல்இளம் பானம்
குணப்புது மரத்தில் குடைந்த சாடியில்
தேவதா ருமரத் திகழ்நற் றொட்டியில்
பொங்கி எழுந்தது புனைகைப் பிடிவரை
நுரைத்து நின்றது நுரைவாய் விளிம்பில்
உயர்தரை வழிந்து ஓடிடப் பார்த்தது
படர்நிலம் சிந்திப் பாய்ந்திடப் பார்த்தது. 390
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
குடிக்க மனிதர்கள் கூட்டமாய் வந்தனர்
பெற்றனன் முதலிடம் பேர்லெ(ம்)மின் கைனனே
குடித்தனன் அஹ்தி, கொள்தூர நெஞ்சினன்,
குடித்தனன் செந்நிறக் கன்னத்துப் போக்கிரி
வளர்ஒஸ் மோமகள் வடித்தவப் 'பீரை'யே
கலேவா வின்மகள் காய்ச்சிய மதுவை.
ஒஸ்மோ வின்மகள், உயர்'பீர்' வடிப்பவள்,
பாவையே பானம் பக்குவம் செய்பவள், 400
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
'ஓ,அபாக் கியள்எனக் குரியவிந் நாட்கள்
தீயஇப் 'பீர்'நான் தேர்ந்தே வடிக்கையில்
நான்செய்த போதுவிந் நனிகெடும் பானம்
தொட்டியின் வாய்வரை தொடர்துயர்ந் தெழும்பி
நுரைத்தே வழிந்து நிலத்திடைப் போனதே! '
பாடிற்று மரத்திலோர் பவளச்செங் குருவி
கூரையின் மரத்திலே கூறிற்றோர் குருவி:
'தீயதன் மையில்அது திகழ்'பீ ர'ல்ல
அதுநல் வகையாம் அருமந்த பானம் 410
பீப்பாவி லூற்றியே பிறிதுவைத் திடலாம்
களஞ்சிய அறைதம்மில் கனமாய்வைத் திடலாம்
சிந்துரக் கலயம் சேர்த்துவைத் திடலாம்
வைக்கலாம் செப்பான வளையச்சா டிக்குள்.'
'பீர்'தான் பிறப்புப் பெற்றதிவ் விதமாம்
கலேவாவின் வடிப்பின் கதையினா ரம்பமாம்
அவ்விதம் நல்லதோர் அரும்பெயர் பெற்றது
புகழொடு மதிப்பும் பொருந்திடப் பெற்றது
நல்லதாம் வகையென நற்பெயர் பெற்றது
உயர்ந்தநல் மனிதரின் உயர்பான மானது 420
நாரியர் களைமது நகைத்திட வைத்தது
நல்மன நிலையினை நல்கிய தாடவர்க்(கு)
உயர்ந்தநல் மானிடர்க் குவகையைத் தந்தது
மயங்கியே பிதற்றினர் மடையர்கள் போதையில்."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
'பீரி'ன் பிறப்பைப் பெரிதும் கேட்டதும்
தூநீர் பெரிய தொட்டியில் நிறைத்து
வைத்ததன் அருகே மரப்புதுச் சாடி
போதிய பார்லியைப் போட்டதன் உள்ளே
சேர்த்துப் போதைச் செடித்தழை நிறைய 430
மதுப்'பீர்' காய்ச்சி வடிக்கத் தொடங்கினள்
கனபல நீரைக் கலக்கத் தொடங்கினள்
கவின்புது மரத்துக் கலயம் ஒன்றிலே
மிலாறு மரத்தொரு விரிசா டியிலே.
கற்கள்பல் திங்கள் கடுஞ்சூ டேற்றி
கோடை முழுவதும் கொள்நீர் காய்ச்சி
காடு காடாய்க் கனமர மெரித்து
கிணறு கிணறாய் கிளர்நீர் கொணர்ந்தாள்;
மரங்கள் குறைந்து வந்தன காட்டில்
அருவியில் நீரும் அருகியே வந்தது 440
வனப்'பீர்' வடித்து வந்தவே ளையிலே
மயக்கப் பானம் வடித்தவே ளையிலே
வடநிலப் பெரிய வருவிருந் துக்கு
மாந்தி மகிழநல் மானிடர் களுக்கு.
தீவு முழுவதும் செறிபுகை படிந்தது
மேட்டு நிலத்தில் செந்தீ எரிந்தது
தடித்த புகையும் சார்ந்துயர்ந் தெழுந்தது
நீராவி பரந்து நெடுங்கால் கலந்தது
கனன்று எரிந்த கனலினி லிருந்து
பெரிதாய் எரிந்த பெருநெருப் பிருந்து 450
வடநிலத் தையது மறைத்தது பாதி
இருளைக் கரேலியா முழுதும் நிறைத்தது.
முற்றும் பார்த்தனர் முழுமாந் தர்களும்
அறிய விரும்பினர் அதையெலாம் பார்த்தோர்:
"இப்புகை வருகிற தெங்கே யிருந்து
காற்றில்நீ ராவி கலந்தது எவ்விதம்?
இகல்போர்ப் புகையெனில் இதுமிகச் சிறிது
இடையரின் தீயெனில் இதுமிகப் பெரிது."
லெம்மின் கைனனின் அன்னையிப் போது
காலைப் பொழுததி காலைவே ளையிலே 460
புனல்பெற வேண்டிப் போனாள் அருவி
கண்டனள் எங்கணும் கனத்த புகையினை
வடக்கு நிலத்தின் வான்மீ தினிலே
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"போரினால் மூண்டு எழுந்த புகைஅது
அமரினால் மூண்டு அனலும் நெருப்பது."
அவனே அஹ்தி அத்தீ **வருமகன்
தோன்றுமவ் வழகுறு தூர நெஞ்சினன்
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்: 470
"நானே சென்று நனிநேர் பார்க்கலாம்
பக்கத்து நின்று பார்த்து அறியலாம்
எங்கிருந் தென்று இப்புகை வருவது
காற்றில்நீ ராவி கலந்ததெவ் விதமென
போரினால் மூண்ட புகையா என்பதை
அமரினால் எரியும் அனலா என்பதை."
தூர நெஞ்சினன் நேரிலே போனான்
எழும்புகை பிறந்த இடத்தினை அடைந்தான்
போரினால் மூண்ட புகையே யல்ல
அமரினால் எரியும் அனலுமே யல்ல 480
இனியபீர் வடிக்கும் இடத்தின் நெருப்பு
போதைப் பானம் காய்ச்சும் தீயது
நிமிர்சரி யொலாவின் நீரிணை வாயிலில்
மேட்டு நிலத்தின் மிகுவளை முனையில்.
தூர நெஞ்சினன் தொடர்தங்(கு) பார்த்தான்
ஒருவிழி சுழன்றது உயர்அவன் தலையில்
அவ்விழி சுழல அடுத்தது சாய்ந்தது
வாயும் சற்றே வளைந்தே நெளிந்தது
பார்த்தவன் பின்னர் பகர்ந்திட லானான்
நீரிணைக் கப்பால் நின்றே உசாவினன்: 490
"ஓ,என் அன்புக் குரியநல் மாமி!
வடபால் நிலத்தின் மாண்புறு தலைவி!
சிறந்த 'பீரை'ச் சீராய் வடித்தெடு!
போதைப் பானம் நேராய்க் காய்ச்சு!
மாபெரும் கூட்டம் மகிழக் குடித்து!
வாகாய் லெம்மின் கைனனும் மாந்திட!
திகழ்தன் சொந்தத் திருமண நாளில்,
வளருநின் இளமை மகளவ ளுடனே!"
தயாராய் வந்தது தக்க'பீர்'ப் பானம்
வந்தது முடிவு(க்கு) மனிதரின் இரசம் 500
வடிந்தே வந்தது மகிழ்செம் 'பீரே'
வந்தது போதை மதுநன் றாக
திணிநிலத் தடியில் சேர்த்தே வைக்கலாம்
கல்லில் அமைந்த களஞ்சிய அறையில்
வைக்கலாம் மிலாறு மரத்துச் சாடியில்
வைக்கலாம் செப்பு வன்முளைப் பீப்பா(வில்).
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
வெந்த உணவை வெப்பமா யாக்கி
கெண்டிகள் அனைத்திலும் கிளர்**குமிழ் எழுப்பி
சட்டிகள் அனைத்தையும் **சலசலப் பாக்கினள் 510
பின்னர் சுட்டனள் பெரிய ரொட்டிகள்
தட்டி எடுத்தனள் தகுபணி யாரம்
உறும்நல் மனிதரை உபசா ரம்செய
உயர்பெரும் குழுவிற் குணவு அளிக்க
வடக்கில் நிகழும் மாபெரும் விருந்தில்
சரியொலாப் பகுதி சார்குடிப் போர்க்கு!
ரொட்டிகள் நன்றே சுட்டு முடிந்தன
தட்டி முடிந்தன தகுபணி யாரம்
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநேர ரம்சில கடந்தே முடிந்தது 520
சாடியி லே'பீர்' தனிக்கொதித் தெழுந்தது
களஞ்சிய அறையில் கதித்து நுரைத்தது:
"இப்போ(து) குடிப்பவன் இங்கே வரலாம்
வருதலும் கூடும் மதுச்சுவை மனிதன்
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பதிதி
பகருமென் சரியாம் பாடகன் வருவான்."
பாடகன் ஒருவனைத் தேடித் திரிந்தனர்
பொருத்தம தானதோர் புகழ்ப்பா டகனை
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பிசைஞனை
நவஅழ குடைய நல்லபா டகனை; 530
பாட வஞ்சிர மீனை யழைத்தனர்
கோலாச்சி நீனைப் போட்டிக் கழைத்தனர்
ஆயினும் வஞ்சிரம் அதுபா டாது
கோலாச் சிக்கது கூடி வராது
வஞ்சிர மீனின் வாயோ கோணல்
பகர்கோ லாச்சிமீன் பற்களில் நீக்கல்.
பாடகன் ஒருவனைத் தேடித் திரிந்தனர்
பொருத்தம தானதோர் புகழ்பா டகனை
குயிலாய்க் கூவும் குணச்சிறப் பிசைஞனை
நவஅழ குடைய நல்ல பாடகனை; 540
பாலகன் ஒருவனைப் பாட அழைத்தனர்
பாடல் போட்டியில் பையனை அழைத்தனர்;
ஆயினும் பாலகன் அவன்பா டுகிலான்
கூவா(து) எச்சில் வழியும் குழந்தை
குழந்தையின் நாக்கோ கொண்டது கீச்சிடல்
அடிநாக் கதுவோ அமைந்தது விறைப்பாய்.
பொங்கி யெழுந்தது பொருசெம் 'பீரே'
தனியிளம் பானம் சபிக்க வந்தது
தகுசிந் துரமரச் சாடியி லிருந்து
செப்பினால் அமைந்த தொட்டியி லிருந்து: 550
"ஒருபா டகனை உடன்கொண ராவிடில்
பண்புறு முகந்த பாடகன் ஒருவனை
குயிற்குரற் சிறப்புக் கொண்டபா டகனை
நவஎழில் நிறைந்த நல்ல பாடகனை
உதைத்துத் தள்ளுவேன் உள்ளநல் வளையம்
விரைந்தடி உடைத்து வெளியே வருவேன்."
அந்த வடநிலத் தலைவியப் போது
அழைப்பை வெளியே அகல விட்டனள்
அனுப்பினள் வெளியே அவள்தூ துவரை
இந்தச் சொற்களில் இயம்பினன் அவளே: 560
"ஏய்,என் சிறிய இளமைப் பெண்களே!
அகலா நித்திய அடிமை யாளரே!
ஒன்றாய் அழைப்பீர் உடனெலாச் சனத்தையும்
குடிக்கும் மாந்தரைக் கூப்பிட்டு வாரீர்
இழிஞரை அழைப்பீர் எளியரை அழைப்பீர்
குருடரி னோடு குணக்கே டரையும்
வண்டி முடவர்கள் நொண்டிகள் தமையும்;
குருடரைத் தோணி கொண்டே(ற்றி) வருவீர்
நொண்டியைப் புரவி கொண்டே(ற்றி) வருவீர்
வண்டியில் இழுத்து வருவீர் முடவரை. 570
வடநிலத் தனைத்து மக்களை அழைப்பீர்
கலேவாச் சந்ததி கள்ளெலாம் வரட்டும்
முதிய வைனா மொயினனை அழைப்பீர்
சிறந்தபா டகனாய்த் திகழ்ந்தே யிருக்க,
ஆயினும் வேண்டாம் தூர நெஞ்சினன்
தீயஅஹ் தியெனும் தீவினன் வேண்டாம்."
அப்போ(து) சிறிய அந்தப் பெண்ணவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"தூரநெஞ் சினற்குத் தொட(ர்)அழைப் பேனி(ல்)லை
அஹ்தி என்னும் அத்தீ வினற்கு?" 580
அந்த வடநிலத் தலைவியப் போது
மறுமொழி யாக வழங்கினள் ஒருசொல்:
"அத்து()ர நெஞ்சற் கழைப்பிலை இதனால்
குறும்பன் லெம்மின் கைனன் தனக்கு
கொள்ளுமெவ் வழியிலும் குழப்பம் செய்பவன்
சண்டை என்றால் சடுதிமுன் நிற்பவன்
திருமண வீட்டில் செய்வோன் அவமதிப்(பு)
பெரிய குற்றம் புரிபவன் விழாவில்
கற்புமா தர்க்குக் களங்கம் விளைப்பவன்
அவர்கள் புனிதமாம் ஆடையி லிருப்பினும்." 590
அப்போ(து) அந்த அருஞ்சிறு பெண்ணவள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"எவ்விதம் அறிவது இகல்து()ர நெஞ்சனை
அவனை மட்டும் அழையா திருக்க
அஹ்தியின் இல்லம் அறியேன் நானே
தூர நெஞ்சினன் தோட்டமு மறியேன்."
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"தூர நெஞ்சினனைத் தீரநன் கறியலாம்
அஹ்தி என்னும் அகல்தீ வின்மகன் 600
அஹ்தி என்பவன் அத்தீ வுறைபவன்
பொருநீர்க் கரையிலப் போக்கிரி உள்ளான்
படர்ந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
காண்தொலைக் குடாவதன் கைவளைப் பரப்பில்."
அந்தச் சிறிய அரிவையும் அங்கே
குற்றே வல்செ(ய்)யக் கூலிக்கு வந்தவள்
ஆறு வழிகளில் அழைப்பு விடுத்தனள்
எட்டு வழிகளில் ஏகினள் அழைக்க
வடநில அனைத்து மக்கள் தம்மையும்
கலேவாச் சந்ததிக் குலமக் களையும் 610
குடில்வாழ் ஏழைக் குலநலிந் தோரையும்
இறுகிய ஆடை ஏவலர் தமையும்;
அஹ்தி என்னுமப் பையனைத் தவிர
அவனை மட்டுமே அழைக்கா திருந்தனள்.
பாடல் 21 - திருமணக் கொண்டாட்டம் TOP
அடிகள் 1-226 : மணமகனையும் அவன் கூட்டத்தினரையும் வட நாட்டில்
வரவேற்றல்.
அடிகள் 227-252 : விருந்தாளிகளுக்கு நிறைய உணவும் பானமும்
கொடுத்து உபசரித்தல்.
அடிகள் 253-438 : வைனாமொயினன் அந்நாட்டு மக்களைப் பாடிப் புகழுதல்.
அந்த வடநிலத் தலைவியப் போது
சரியொ லாவின் முதுநல் மனைவி
வெளியிலே நின்றாள் மிகச்சிறு நேரம்
வீட்டு வேலையில் நாட்டமுற் றிருந்தாள்
சதுப்பு நிலத்தில் சாட்டையின் ஒலியும்
உறுகரை வண்டியின் ஓசையும் கேட்டது
செலுத்தினள் பார்வை திகழ்வட மேற்திசை
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினள்
சிந்தனை செய்தாள் சீருற நினைத்தாள்:
"இங்கே எதற்காய் இவ்வள வாட்களும் 10
ஏழைஎன் னுடைய இகல்கடற் கரைகளில்
போருக்கு வந்த பொருபெரும் படைகளோ?"
வெளியே வந்தாள் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றாள் ஆராய்ந் தறிய
அதுபோர்க் கெழுந்த அதிபெரும் படைய(ல்)ல
விவாக வீட்டு விருந்தினர் கூட்டம்
மருமகன் அவர்களின் மத்தியில் இருப்பவர்
நாட்டு மக்களின் நடுவிலே உள்ளார்.
அவளே வடநிலத் தலைவியப் போது
சரியொ லாவின் முதுநல் மனைவி 20
தனது மருமகன் தான்வரல் உணர்ந்ததும்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"காற்றடிக் கிறதெனக் கடிதே நினைத்தேன்
காட்டிலோர் பகுதிக் கரைசரி கிறதென
கடலின் ஓரம் இரைகிற தோவென
கூழாங் கற்கள் குலைந்துருள் கிறதென;
வெளியே வந்தேன் விபரம் பார்த்திட
அண்மையில் சென்றேன் ஆராய்ந் தறிய
அங்கே காற்று அடிக்கவு மில்லை
காட்டிலோர் பகுதிக் கரைசரிந் திலது 30
கடலின் ஓரம் இரையவும் இல்லை
கூழாங் கற்கள் குலைந்துருண் டிலது:
மருமகன் குழுவினர் வந்தனர் அங்கே
இருநூறு மக்கள் இப்புறம் வந்தனர்.
அருமரு மகனைநான் அறிவது எங்ஙனம்
இம்மனுத் திரளில் என்மரு மகனை?
மருமகன் தனையே மக்களுள் அறியலாம்
சிறுபழச் செடிபோல் திகழ்மர மத்தியில்
சிறுசெடி மத்தியில் சிந்துர மரம்போல்
வானத்து மீன்களில் வண்ண நிலவுபோல். 40
மருமகன் வருகிறார் வன்கரும் புரவியில்
இரைதேர் (ஓ)நாயில் இவர்வது போல
இலக்குதே **டண்டங் காக்கைமேல் வரல்போல்
வான்ஊர் **மாயக் கழுகுமேல் வரல்போல்;
ஆறு பொன்னிற அம்புள் ஆங்கே
இசைத்தன வண்டியின் ஏர்க்கால் மேலே,
ஏழு நீல இருங்குயில் போல்மணி
ஒலித்தன வண்டியின் உறுசட் டத்தே."
எழுந்தது சத்தம் எங்கும் பாதையில்
கிணற்று வழிமிசை ஒலித்தது ஏர்க்கால் 50
முன்றிலின் முன்னே வந்தார் மருமகன்
தோட்டம் சேர்த்தனர் தொடர்ந்துடன் வந்தோர்
மக்கள் மத்தியில் மருமகன் நின்றார்
நல்ல மக்களின் நடுவினில் நின்றார்
மக்கள் குழுமுன் வரிசையில் இல்லை
ஆயினும் பின்புறத் தப்புறத் தில்லை.
"வீரரே, இளைஞரே, வெளியே செல்வீர்!
உயரந்த மனிதர்காள், உறுகமுற் றத்தே!
நெஞ்சப் பட்டியை நேராய்க் கழற்ற
கடிவா ளத்தைப் பிடித்தே நிறுத்த 60
ஏர்க்கால் நுகத்தை இறக்கக் கீழே
மருமக னாரை வரஉள் அழைக்க!"
மருமகனின் குதிரை வந்தது ஓடி
அலங்கார வண்டி அதிகதி வந்தது
மாமனார் வீட்டின் வண்ணமுன் றில்முன்;
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"ஏய்,அடி மைகளே, ஏவுகூ லியரே!
கிராமத் தழகிய கிளர்தொழி லாளரே!
மருமக னாரின் மாபரி பிடிப்பீர்
நெற்றிச் சுட்டி நிமிர்பரி எடுப்பீர் 70
செப்பினால் இழைத்த திகழ்அணி யிருந்து
ஈயநெஞ் சத்து **இயைவார் இருந்து
தோலிலாம் நற்கடி வாளத் திருந்து
இளமை மரத்து ஏர்க்கா லிருந்து;
மருமகன் பரியை வழிநடத் துங்கள்
அதிமிகக் கவனமாய் அதைநடத் துங்கள்
பட்டிலாம் நற்கடி வாளம் பற்றி
தனிவெள் ளியிலாம் தலையணி தொட்டு
உருண்டு புரண்டிட உயர்மெது விடத்தே
சமதரை யுள்ள தகுசிறப் பிடத்தே 80
புதிதாய்ப் பனிமழை பொழிந்தநல் லிடத்தே
பால்போல் வெளுத்து படிவிளங் கிடத்தே!
மருமகன் பரிக்கு வளநீ ரூட்டுக
அண்மையில் இருக்கும் அருவியொன் றினிலே
உறைந்துபோ காது உறுநல் லருவியில்
நீர்நனி சொட்டுநல் நீரரு வியிலே
அழகிய தாருவின் அகல்வேர டியில்
தளிர்க்கும் தேவ தாருவின் அருகில்!
மருமகன் பரிக்கு மகிழ்ந்துண வூட்டுக
கொழும்பொன் னிழைத்த கூடையி லிருந்து 90
செப்பினால் செய்த பெட்டியி லிருந்து
கழுவிய பார்லியை, கனவெண் ரொட்டியை,
கோடைக் கோதுமை கொ(ண்)டுஅட்ட **உணவை,
கோடைத் **தானியக் கொழுநொருக் குணவை.
மருமகன் பரியை வழிநடத் துங்கள்
வளமிகு சிறந்த வைக்கோற் போரிடை
மிகவும் சிறந்து விளங்குமோ ரிடத்தே
தோட்டத் துள்ளே தொலைவிடத் துக்கு;
அருமரு மகன்பரி அங்கே கட்டுக
பொன்னினால் செய்த புதுவளை யத்தால் 100
இரும்பினால் செய்த எழில்வளை யத்தால்
வளைந்த மிலாறு மரத்தம் பத்தில்;
மருமகன் பரிக்கு வழங்குக இவ்விதம்
புதிதாய் ஒரு**படிப் **புல்லரி சிமணி
அடுத்தது மென்மையாய் அமைந்தநல் வைக்கோல்
மூன்றாவ தரிந்து முடித்தவைக் கோல்தீன்.
வாருவீர் பின்னர் மருகனின் பரியை
கடற்பரி எலும்பின் கவினார் சீப்பினால்
உரோமம் எதுவும் உதிரா திருக்க
நீண்ட உரோமம் நீங்கா திருக்க; 110
இவ்வாறு மருகனின் எழிற்பரி போர்ப்பீர்
வெள்ளி விளிம்பு விளங்குபோர் வையினால்
தங்கத் திழைத்த தனிப்பாய் அதனால்
செப்பினால் செய்த திகழ்துணி யதனால்.
கவின்ஊர் இளைஞரே, கனிவுறு மக்களே!
வாருங்கள் அழைத்து மருகனை உள்ளே
தலைமயி(ரில்) தொப்பி தரித்திலா நிலையில்
கையுறை எதுவும் கரத்தில்இல் லாமல்.
பார்க்கிறேன் பொறுங்கள் படர்மரு கனைநான்
'நுவல்மரு கன்உள் நுழைவரா' என்று 120
கதவு இங்கே கழற்றப் படாமல்
பெருங்கத வின்நிலை பிடுங்கப் படாமல்
உறுமேல் உத்தரம் உயர்த்தப் படாமல்
படிவா யிற்படி பணிக்கப் படாமல்
இணைமூ லைச்சுவர் இடிக்கப் படாமல்
நற்சுவர் விட்டம் நகர்த்தப் படாமல்.
அல்ல, மருகன் அவர்புக முடியா(து)
நற்பரி சாமவர் நனிகூ ரையின்கீழ்
கதவு இங்கே கழற்றப் படாமல்
பெருங்கத வின்நிலை பிடுங்கப் படாமல் 130
உறுமேல் உத்தரம் உயர்த்தப் படாமல்
படிவா யிற்படி பணிக்கப் படாமல்
இணைமூ லைச்சுவர் இடிக்கப் படாமல்
நற்சுவர் விட்டம் நகர்த்தப் படாமல்
ஏனெனில் மருகனின் எழிற்சிர முயர்ந்தது
உறுசெவி அளவும் உயரமே யானது.
உறுமேல் உத்தரம் உயரத் தூக்குக!
தலையின் தொப்பி தட்டா திருக்கும்,
பணிப்பீர் வாயிற் படியினைக் கீழே!
இருக்கும் முட்டா தியைகா லணிக்குதி, 140
கதவு நிலைகளைக் கழற்றிவை யுங்கள்!
திகழ்கத வகலத் திறந்து வையுங்கள்!
மருமகன் உள்ளே வந்திடும் வேளை,
அதியுயர்ந் தோர்உள் அடியிடும் வேளை.
அழகுத் தெய்வமே, அர்ப்பணம் நன்றிகள்!
மருகனார் உள்ளே மகிழ்வொடே வந்தார்
பொறுப்பீர் ஒருகணம், புகும்இல் பார்க்கலாம்,
விழிகளைச் சற்று வீட்டுட் செலுத்தலாம்
இங்குள மேசைகள் எல்லாம் கழுவி
**நெடுவாங் கெல்லாம் நீரினால் அலசி 150
உறுமென் பலகைகள் மறுவறத் துடைத்து
தொடர்தரைப் பலகைகள் சுத்தமோ வென்று.
இப்போ(து) பார்க்கிறேன் இந்தஇல் லத்தை
எனக்கோ சரியாய் எதுவும் தெரிந்தில(து)
எந்த மரத்தால் இவ்வில் ஆனது
இக்குடில் வந்தது எங்கே யிருந்து
எதனால் சுவர்கள் இவ்வித முள்ளன
எப்படித் தரையும் இப்படி யுள்ளது?
பக்கச் சுவர்முட் பன்றியின் எலும்பால்
கலைமான் எலும்பினால் காண்பிற் புறச்சுவர் 160
சேர்கத வுறுசுவர் **கீரியின் எலும்பால்
ஆனது கதவுமேல் நிலைஆட் டெலும்பால்.
அப்பிள் மரத்தினால் ஆனமேல் உத்தரம்
வளைந்த மிலாறு மரத்திலாம் தூண்கள்
அடுக்களைப் பக்க அமைப்புநீ ராம்பலால்
**கெண்டைமீன் செதில்களைக் கொண்டமை கூரையாம்.
ஆசனம் அனைத்தும் ஆனவை இரும்பால்
*சக்ஸாப் பலகையால் சமைத்தநல் வாங்குகள்
அலங்கார(ம்) மேசைக் கமைந்தது பொன்னினால்
படிமிசை விரித்தவை பட்டிலாம் கம்பளம். 170
அடுப்புகள் செம்பினால் ஆனவை இருந்தன
அடுப்பின் அடித்தளம் அமைந்தது கல்லினால்
அலைகடற் பாறையால் ஆனதீக் கற்களாம்
அடுப்பின்வா **யாசனம் அதுகலே வாமரம்.
நல்மண மகனும் இல்லுள் வந்தார்
வியன்கூ ரையின்கீழ் மெதுவாய் நடந்தார்
உரைத்தார் ஒருசொல் உரைத்தார் இவ்விதம்:
"இறைவனே, நின்னருள் இங்கும் தருக!
புகழுறு கூரைப் புணர்தம் பக்கீழ்
குறைவிலாக் கீர்த்திசேர் கூரையின் கீழே!" 180
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"நம்பி,நின் வருகை நல்வர வாகுக!
இந்தச் சிறிய இல்லதன் உள்ளே, தாழ்ந்திடும் இந்தத் தனிக்குடில் உள்ளே,
அரும்பசு மரத்தின் அறையதன் உள்ளே,
கொழுந்தேவ தாருவின் கூடதன் உள்ளே!
ஏய்,சிறு பெண்ணே, எனது அடிமையே!
கூலிக்கு வந்த குறும்ஊ ரவளே!
மிலாறுப் பட்டையில் விளைதீக் கொணர்வாய்
**கீல்மர நுனியில் கிளர்சுடர் ஏற்று 190
மருமக னாரை வடிவாய்ப் பார்க்க
மணமகன் விழிகளை வாஞ்சையாய் நோக்க
நெடும்அவர் கண்கள் நீலமா சிவப்பா
அல்லது துணிபோல் வெள்ளை நிறத்ததா!"
சிறியவள் அந்தச் சிறுஅடி மைப்பெண்
குறும்ஊ ரிருந்து கூலியாய் வந்தவள்
மிலாறுப் பட்டையில் மிளிர்தீக் கொணர்ந்தாள்
கீல்மர நுனியில் கிளர்சுடர் ஏற்றினாள்.
"மிகுசட சடத்தெழும் மிலாறு மரத்தீ
கிளர்கரும் புகைஎழும் கீல்மரச் சுடரில் 200
மருகனின் விழிகளில் கறைஅது ஆக்கும்
எழிலுறும் தோற்றம் இருளதாய்ப் போகும்
மெழுகுவர்த் தியிலே மிளிர்தீக் கொணர்வாய்
மெழுகினால் செய்ததில் மிகுசுடர் கொணர்வாய்."
சிறியவள் அந்தச் சிறுஅடி மைப்பெண்
குறும்ஊ ரிருந்து கூலியாய் வந்தவள்
மெழுகு வர்த்தியில் மிளிர்தீக் கொணர்ந்தாள்
மெழுகினால் செய்ததில் மிகுசுடர் கொணர்ந்தாள்.
மெழுகிலே யிருந்து வெண்புகை எழுந்தது
மெழுகுவர்த் தியிலே மிகவொளிர் தீச்சுடர் 210
மருமகன் விழிகளில் வரச்செய்த தொளியை
மருமகன் வதனம் மலர்ந்தொளி தந்தது.
"இப்போ(து) மருமகன் எழில்விழி பார்க்கிறேன்
நிறம்சிவப் பதுவோ நீலமோ அல்ல
நேர்துணி வெள்ளை நிறத்தது மல்ல
மிகுகடல் நுரைபோல வெளுத்த நிறமவை
படர்கடல் நாணல்போல் பழுத்த நிறமவை
**கடற்செடி போலக் கவின்படைத் தனவே.
கவின்ஊர் இளைஞரே, கனிவுறு மக்களே!
அழைத்து வருவீர் அருமரு மகனை 220
உயர்ந்த ஆசனம் ஒன்றினுக் கிங்கே
சிறப்பா யிருக்கும் திருவிட மீதில்
முதுகுப் புறம்நீல் சுவரோ டிருக்க
செந்நிற மேசை முன்புற மிருக்க
அழைத்த அதிதியை அவரெதிர் நோக்கிட
நாட்டு மக்களின் நடுஅம ரட்டும்."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
கொடுத்தாள் விருந்தினர்க் குணவும் பானமும்
உருகிய வெண்ணெயை ஊட்டினாள் வாயில்
பால()டைப் பணிய()ரம் பகிர்ந்தனள் நிறைய 230
அழைத்த விருந்தரை அவள்உப சரித்தாள்
தந்தனள் முதலிடம் தம்மரு மகற்கு.
வடிவுறும் தட்டில் வஞ்சிர மீனும்
படர்அவற் றருகில் பன்றி இறைச்சியும்
நிறைந்து வழிந்தன நெடுங்கிண் ணமெலாம்
நிறைந்து பெருகின நீள்கல யங்களில்
விருந்துக் குவந்தோர் மிகஉண் பதற்காய்
விசேடமாய் உண்ண வியன்மரு மகனும்.
வடநிலத் தலைவி வருமா ரைத்தாள்:
"ஏய்,நீ சிறிய எமதடி மகளே! 240
சாடி நிறையப் 'பீரை'க் கொணர்வாய்
இரண்டு கைப்பிடி இருக்கும் சாடியில்
அழைத்த விருந்தினர் அருந்துதற் காக
முதலிடம் தருவாய் முறைமரு மகற்கு."
அப்போ(து) சிறிய அடிமைப் பெண்ணவள்
கூலிக்கு வந்து குற்றேவல் புரிவோள்
சாடிகள் நிறையத் தான்பரி மாறினள்
சுற்றிவந் திட்டதைம் பட்டிச் சாடிகள்
பானத் தனைத்துத் தாடியும் நனைந்தன
தாடிகள் வெண்நிற மாயின நுரையால் 250
அழைத்த விருந்தினர் அனைவரும் ஆங்கே,
முதலிடம் பெற்றார் முறைமரு மகனார்.
இப்போ(து) 'பீரு'ம் எதனைச் செய்யும்
தளம்புமைம் பட்டிச் சாடியின் பானம்
பாடகன் ஒருவன் பக்கத் திருக்கையில்
கைதேர் பாவலன் கலந்தாங் கிருக்கையில்?
முதிய வைனா மொயினன் இருந்தான்
அழிவிலாப் பாடலின் ஆத()ரத் **தூணவன்
பாடகர் தம்முளே பகர்தரப் பாடகன்
மந்திரப் பாடலில் வல்லவன் பாடிட. 260
முதலில் கொஞ்சம் மொய்ம்'பீர்' எடுத்தான்
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:
"அன்பார்(ந்த) பானமே, அருமைப் 'பீரே'
மனிதர்கள் குடித்து மயங்குதல் தகாது
மனிதரைப் பாட வைப்பாய் பாடல்கள்
கூவ வைத்திடுவாய் கொழும்பொன் வாயால்
வீட்டின் தலைவர்கள் வியப்படை யட்டும்
இல்லத் தலைவிகள் இனிதெண் ணிடட்டும்:
சற்றுப் பாடல்கள் தாம்இசை மாறினால்
மகிழும் நாக்குகள் வழிதிசை மாறினால் 270
அல்லது தாழ்ந்து அமை'பீர்' கொடுத்தால்
பானம் தரக்குறை வானது கொடுத்தால்
எமது பாடகர் இசைக்கவே மாட்டார்
இன்னிசை யாளர் இருந்தே பாடிடார்
அரிய விருந்தினர் அரும்பாட் டிசையார்
மகிழ்ச்சிக் குயில்கள் மகிழ்வுடன் பாடா.
இங்கே இன்னிசை இசைப்பது எவரோ
நாவால் பாடல்கள் நவில்வது எவரோ
இங்கே வடநிலத் திந்த விழாவில்
சரியோ லாவின் களியாட் **டயர்வில்? 280
இங்குள **வாங்கோ இசைத்திட மாட்டா
வாங்கிலே இருப்போர் வாய் திறவாமல்,
நிலமும் இங்கே நவிலமாட் டாது
நன்னிலம் நடப்போர் நாவசை யாமல்,
சாளரம் இங்கே தான்மகி ழாது
சாளரத் ததிபர்கள் தாம்மகி ழாமல்
மேழையின் விளிம்புகள் பேசமாட் டாது
மேளையின் அருகுவீற் றிருப்பவ ரின்றி,
உயர்புகைக் கூண்டும் ஓசை தராது
அதன்கீழ் இருப்போர் அமர்ந்திசை யாமல்." 290
ஆங்கொரு பிள்ளை அகலத் திருந்தது
அடுப்பா சனத்தில் அமர்ந்தபால் தாடி
பெருநிலத் திருந்த பிள்ளை சொன்னது
அடுப்பா சனத்து அமர்பயல் கூறினான்:
"நானோ வயதில் நனிமுதிர்ந் தோனலன்
வளர்ந்து உயர்ந்த வலியவன் அல்லன்
இப்படி இங்ஙனம் இருந்தபோ தினிலும்
ஏனைய கொழுத்தோர் இசையா நேரம்
பருத்த மனிதர்கள் பாடா(த) வேளை
இரத்தம் நிறைந்தோர் இசைக்காப் போதில் 300
பாடுவேன் நானொரு பையன் மெலிந்தோன்
வலியிலாப் பையன் வகையாய்க் கூவுவன்
பாடுவேன் தளர்ந்த பலமிலாத் தசையோன்
சிறிய இடுப்பைச் சேர்ந்தோன் பாடுவேன்
மாலைப் பொழுதிதை மகிழ்வாக் கிடவே
மதிப்பாக் கிடஇம் மாபுகழ் நாளை."
அடுப்பிலே முதியதோர் ஆடவன் இருந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பிள்ளைகள் பாடலில் பெறுபயன் இல்லை
எளியவர் கூவலில் எதுவுமே யில்லை 310
பிள்ளைகள் பாடல் பெரும்பொய் நிறைந்தவை
சிறுமியர் பாடலோ வெறுமையே யானவை;
முழங்குக பாடல் முதல்எவ் வறிஞரும்
இன்னிசை வழங்குக இருக்குமா சனத்தோர்."
முதிய வைனா மொயினனப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இங்கே இருக்கும் இளைஞர்கள் மத்தியில்
மாபெரும் சுற்ற மக்கள் அனைத்திலும்
கரத்தொடு கரத்தைக் கனிவாய்க் கோர்த்து
ஒருவர் கரத்தொடு ஒருவர்கை சேர்த்து 320
வளர்பாட் டிசைக்க வல்லவர் உண்டா
இன்னிசை எழுப்ப இயன்றவர் உண்டா
இந்நாள் முடிவை இனிதாய்க் கழிக்க
மாபுகழ் மாலையை மதிப்புள தாக்க?"
அடுப்பிலே அமர்முது ஆடவன் சொன்னான்:
"இதுவரை அறிந்ததே இல்லைஇப் படியே
இல்லையே பார்த்ததும் இல்லையே அறிந்ததும்
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பண்மிகச் சிறந்த பாடகன் ஒருவனை
கைதேர் தரமுறும் கவிவலோன் ஒருவனை 330
என்றனை யும்விட என்கூ வலைவிட
பாடல்கள் பிள்ளைப் பருவத் திசைத்தேன்
விரிகுடாக் கடல்நீர் மீதிலும் பாடினேன்
மிகுபுல் வெளியதன் மீதிலும் பாடினேன்
வண்தேவ தாருவின் மரத்திலும் பாடினேன்
நெடுங்கான் வெளியின் நிலத்திலும் பாடினேன்.
என்குரல் உயர்ந்து இனிமையாய் இருந்தது
என்னிசை யமைப்பு எழிலாய் அமைந்தது
ஆறொன்று ஓடி அசைந்த பாங்குபோல்
அருவியில் பாய்ந்து ஓடிய நீரைப்போல் 340
தண்பனிக் கட்டிமேல் சறுக்கணி போல
நீரலை மேற்செல் நெடுநா வாய்போல்;
இப்போ(து) என்னால் இயம்புதற் கியலா
ஒழுங்காய் என்னால் உணரவும் முடியா
உயர்ந்தஎன் குரற்கு விளைந்தது எதுவென
இனியஎன் குரலோ இறங்கிய தேனென;
ஆறொன்று இப்போது ஓடிய வாறிலை
அலைகளில் எழும்பும் குமிழ்களைப் போலிலை
முளைநிலத் திழுத்த **பரம்புப் பலகைபோல்
இறுகிய பனியில் எழில்தேவ தாருபோல் 350
சாகரக் கரைமணற் சறுக்கணி போல
காய்ந்த பாறையிற் கடிதூர் படகுபோல்."
முதிய வைனா மொயினனப் போது
இந்த சொற்களில் இயம்பினன் அவனே:
"எழுந்து யாருமே இவ்விடம் வந்து
என்னுடன் சேர்ந்து இசைத்திடாப் போது
தனியனாய் நின்று சமைப்பேன் கவிதைகள்
ஒருவனாய் நின்று உயர்கவி பாடுவேன்
பாடக னாகநான் படைக்கப் பட்டதால்
பாடுவோன் மந்திரப் பாடல்கள் என்பதால் 360
மற்றொருத் தனிடம் வழிவகை கேளேன்
அன்னியன் உதவியால் அரும்பா முடியேன்."
முதிய வைனா மொயினன் பின்னர்
அழிவிலாப் பாடலின் ஆத()ரத் தூணவன்
ஆனந்த வேலைக்கு அமைந்தனன் ஆங்கே
அர்ப்பணித் தான்தனை அருஇசைத் தொழிற்கு
பக்கத்து மகிழ்வுறும் பாடலை வைத்து
அழகுறும் சொற்களில் ஆயத்த மாயினன்.
முதியவ வைனா மொயினன் பாடினன்
நற்பா பாடினன் ஞானம் காட்டினன் 370
சொற்களில் சொற்குத் துளிபஞ் சமி(ல்)லை
புகன்றிடும் ஆற்றலும் அகன்றதே யில்லை
கனமலைக் கற்கள் காணா தொழிந்தன
அருவிநீ ராம்பல் அகன்றதே போனது.
வைனா மொயினன் மகிழ்ந்தாங் கிசைத்தனன்
மாலைப் பொழுதெலாம் மகிழ்வுடன் பாடினன்;
பூவையர் யாவரும் புன்னகை பூத்தனர்
ஆடவர் நல்ல அகநிலை பெற்றனர்
அமைதியாய்க் கேட்டனர் அதிசயப் பட்டனர்
வைனா மொயினனின் வளச்சொல் கண்டு 380
அற்புதம் என்றனர் அவைகேட் டோ ரெலாம்
அதிசயப் பட்டனர் அங்குளர் அனைவரும்.
முதிய வைனா மொயினன் கூறினன்
பாடலின் முடிவில் பகர்ந்தனன் இவ்விதம்:
"எனது வசத்தினில் என்னப்பா உள்ளது
பாடகன், மந்திரப் பணிவ(ல்)லன் என்பதால்;
என்னால் ஆவது எதுவுமிங் கில்லை
எனது ஆற்றலால் இயல்வது ஒன்றிலை;
படைத்தவன் பாரினில் பாடலைப் பாடினால்
இனியநல் வாயினால் இசைப்பா பாடினால் 390
படைத்தவன் பாடுவான் பண்ணுறும் பாடலை
வழங்குவான் பாடலை மந்திர மியற்றுவான்.
வாரிதி தேனாய் மாறிடப் பாடுவான்
கடற்குழாங் கற்களை காண்*பய றாகவும்
மறிகடல் மண்ணையே **மாவூற லாகவும்
கடற்பரற் கற்களைக் கரிக்கும்உப் பாகவும்
உயர்ந்தடர் சோலைகள் ரொட்டியின் வயல்களாய்
வெட்டிய வனங்களை விளைகூல வயல்களாய்
தொடர்உயர் குன்றுகள் சுவைப்பணி யாரமாய்
பாறையைக் கோழியின் பருமு(ட்)டை யாக்குவான். 400
வழங்குவான் பாடலை மந்திர மியற்றுவான்
மந்திரம் பாடுவான் மகத்துவம் ஆற்றுவான்
விழங்குமிவ் வில்லத்து மீதிலும் பாடுவான்
துன்னுகால் நடைநிறை தொழுவம் பாடுவான்
பாதையில் நிறைந்திடும் பணைக்கோட்(டுத்) **தலைகளை
பரந்தநல் வெளிகளின் பால்தரு வோர்களை
கனமுறு கொம்புகொள் கால்நடை நூறினை
பாடுவான் ஆயிரம் பால்மடி கொணர்()வ()ரை.
வழங்குவான் பாடலை மந்திர மியற்றுவான்
மந்திரம் பாடுவான் மகத்துவம் ஆற்றுவான் 410
மேலாடை தலைவர்க்(கு) மிளிர்**சிவிங்(கி) உரோமத்தில்
தலைவியர்(க்கு) மேலாடை **தனித்தகல் துணிகளில்
கவர்ச்சியே மிக்கதாய்க் காலணி மகளிர்க்(கு)
மிளிருசெந் நிறத்தமை மேற்சட்டை மைந்தர்க்கு.
இறைவனே, எங்கட்(கு) என்றும் வழங்குவீர்!
மெய்யாம் கர்த்தரே, மீண்டும்(நீர்) வழங்குவீர்!
இதுபோல் யாவரும் இனிதாய் வாழ
இனியும் இவ்விதம் இயற்றியே முடிக்க
வடபால் நிலத்தின் வகையுறு விழாவில்
சரியொலாப் பகுதிக் களியாட்(ட) விருந்தில்; 420
'பீரெ'னும் பானம் பெருகும் ஆறென
நறையது(ம்) பாய்ந்திடும் நல்தூ(ய) அருவிபோல்
வடபுல நிலத்தின் வதிவிடம் யாவும்
சரியொலாப் பகுதித் தகுமில் யாவும்
இனியஅந் நாளிலும் இன்னிசை யிசைப்போம்
மாலைப் பொழுதை மகிழ்வொடு கழிப்போம்
அரியஇத் தலைவன் அனைத்துநாட் களுமே
வனிதைஇத் தலைவி வாழ்நாள் முழுதுமே.
மிகுவலித் தேவே வெகுமதி தருக!
ஆண்டவா, ஆசி(யும்) அருளும் அளியும்! 430
விருந்தில் தலைவராய் விளங்குப வர்க்கு
களஞ்சியக் கூடக் கவின்தலை வியர்க்கும்
மீன்பிடித் துவரும் விறல்மைந் தர்க்கும்
கைத்தறி அமர்ந்த கன்னியர் தமக்கும்
வாழ்நா ளெலாமவர் வருந்தா திருக்க!
தொடர்மறு ஆண்டிலும் துயரிலா(து) வாழிய
பெரிதாய் நிகழ்ந்தவிப் பெருவிழா வதனால்
கலந்த பெருஜனக் களியாட்(ட) விருந்தால்.
பாடல் 22 - மணமகளின் பிரிவுத்துயர் TOP
அடிகள் 1 - 124 : மணமகள் பயணத்துக்கு ஆயத்தமாகிறாள். அவள் தனது கடந்த வாழ்க்கையையும் இனி வரப்போகிற எதிர்கால வாழ்க்கையையும் எண்ணிப் பார்க்கிறாள்.
அடிகள் 125 - 184 : மணமகள் கவலைப்படுகிறாள்.
அடிகள் 185 - 382 : மணமகள் அழ வைக்கப்படுகிறாள்.
அடிகள் 383 - 448 : மணமகள் அழுகிறாள்.
அடிகள் 449 - 522 : மணமகளுக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.
நற்றிரு மணஇல் நன்கே குடித்து
விழாவும் முடிந்து விருந்தும் முடிகையில்
வடபால் நிலத்து வதிவிடங் களிலே
இருண்ட பூமியின் இனிய விருந்தில்
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்
இல்மரி னன்எனும் இளமரு மகற்கு:
"இருப்பது எதற்கு, இனிதுயர் பிறப்பே?
எதிர்பார்ப் பதெது, எம்நிலச் சிறப்பே?
இருப்பது தந்தையின் இனிமைக் காகவா?
அல்லது அன்னையின் அன்புக் காகவா? 10
இல்லிட மதற்கு எழிலைக் கூட்டவா?
திருமண வீட்டை அருமழ குறுத்தவா?
இருப்பது தந்தையின் இனிமைக் கல்ல
அன்னையின் அன்புக் காகவு மல்ல
இல்லிடத் துக்கெழில் ஏற்றவு மல்ல
அரும்மண வீட்டின் அழகுக் கல்ல;
இந்தக் கன்னியின் இனிமைக் காகவும்
அழகிளம் பெண்ணின் அன்புக் காகவும்
விரும்பிய வனிதையின் வியன்வனப் புக்கும்
இயைகுழல் தலையாள் எழிற்கும் இருக்கிறீர். 20
அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை
பெண்குழற் பாதிதான் பின்னி முடிந்தது
இன்னுமோர் பாதி பின்னா துள்ளது.
அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை 30
சட்டை(க்)கை மடிப்பு பாதிதான் முடிந்தது
மறுபாதி இன்னும் முடியா துள்ளது.
அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும்
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை
பாதணி தரிப்பது பாதிதான் நடந்தது
மறுபாதி இன்னும் தரியா துள்ளது.
அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுப்பீர் இனியும் 40
இல்லைஆ யத்தம் இனியநின் காதலி
வாழ்நாள் துணைவி வரத்தயா ரில்லை
அணிவது கையுறை அரைதான் முடிந்தது
அரைவாசி இன்னும் அணியா துள்ளது.
அருமண மகனே, அன்புச் சோதர!
பொறுத்தீர் வெகுநாள் பொறுத்தீர் சலிப்பற
ஆயத்தம் இப்போ ஆகினள் காதலி
தயாரா யுள்ளனர் தக்கநின் வாத்து.
விலையான பெண்ணே, விரைவாய், இப்போ(து)!
விரைவாய், அவருடன் விலைப்படு கோழியே! 50
அருகினில் வந்ததுன் அரியதாம் காலம்
புறப்படும் நேரம் புக்கது பக்கம்
உன்னுடைத் தலைவர் உன்னுடன் உள்ளார்
உள்ளார் வாயிலில் உனதன் பாளர்
கடித்து நிற்கிறது கடிவளம் புரவி
சறுக்கு வண்டிபெண் தனையெதிர் பார்க்கிற(து).
பணமெனில் உனக்குப் பாரிய விருப்பம்
உன்கரம் விரைவாய் முன்புறம் நீட்டி
தேடி ஆர்வமாய்த் திருமணப் பொருத்தம்
பெற்றாய் வண்ணமாய் பெறலரும் விரலணி 60
வனிதையே இப்போ(து) வண்டியில் ஏறு
படரொளி வண்டியில் பாங்குடன் ஏறு
கிராமம் நோக்கிக் கிளர்கனி வுடன்செல்
நல்ல பெண்போல் நலமுடன் செல்வாய்.
பருவப் பெண்ணே பார்த்திலை எண்ணிநீ
இருபக் கமும்நீ இனிதுசிந் தித்திலை
தலையில் நினைத்துநீ தானே உணர்ந்திலை
செய்தனை காரியம் சிந்தை வருந்துதற்(கு)
முழுவாழ் நாளும் அழுவதற் கென்று
ஆண்டாண்டு காலம் அழுவதற் கென்று 70
தந்தையின் இல்லம் தனைநீங்கு வதால்
பிறந்த இடத்தைநீ பிரிவத னாலே
அன்னையின் அன்பைநீ அகல்வத னாலே
சுமந்தவள் தோட்டத் தொடர்பறுப் பதனால்.
எவ்விதம் இருந்தது இயைந்தநின் வாழ்வு
உனது தந்தைக் குரியஇல் லங்களில்
வளர்ந்தாய் பாதையில் மலர்ந்தபூப் போல
படர்கான் **சிறுசெடிப் பழமாய் மலர்ந்தாய்
விழிதுயின் றெழுந்ததும் வெண்ணெயை யுண்டாய்
படுக்கைவிட் டெழுந்ததும் பாலைக் குடித்தாய் 80
ரொட்டி இருந்தது உன்கரம்நீள் தொலை
அருகிலே தட்டில் ஆம்புது வெண்ணெய்
வெண்ணையை உண்ண விரும்பா(த) நேரம்
பன்றி இறைச்சிப் பலதுண் டமைத்தாய்.
வருந்த உனக்கிங்(கு) வகையெது மில்லை
சிந்தனை செய்யச் செயலெது மில்லை
விட்டாய் மனத்துயர் விரிபசு மரங்களில்
வேலிக்கம் பத்தில் விதைத்தாய் சிந்தனை
துயரினைச் சதுப்புத் தொல்தேவ தாருவில்
புதரிலே வளர்ந்த பூர்ச்ச மரத்தில் 90
பசும்இலை எனநீ பறந்த அந்நேரம்
வண்ணத்துப் பூச்சியாய் வளர்சிற கடிக்கையில்
ஒருசிறு பழம்போல் **அமைந்தாய் மண்ணில்
சிவந்த **பழம்போல் உயர்பெரு வெளியில்.
இப்போ திந்த இல்லம் பிரிகிறாய்
இன்னொரு மனையில் இனிப்புகப் போகிறாய்
அடுத்தொரு தாயின் ஆட்சியில் இருப்பாய்
அடைவாய் அன்னியம் ஆனதோர் குடும்பம்;
அங்கே ஒன்று இங்குமற் றொன்று
வெவ்வேறு வீட்டில் வெவ்வேறு விதமாம் 100
ஆங்கா யர்குழல் அன்னிய மானது
கதவு கிறீச்சிடும் கடிதுமற் றொருவிதம்
வாயிற் சத்தமும் வேறாய்க் கேட்டும்
இரும்புப் பிணைச்சலில் எழும்ஒலி மாறும்.
கதவு வழியால் நுழைவது சிரமம்
கதவின் வழியால் **கனவாய் வழியால்
வீட்டில் பழகிய மெல்லியள் போல;
முனைந்துதீ ஊதிநீ மூட்டவே யறிவாய்
வெப்பத்தை யாக்கும் விதமுமே யறியாய்
வீட்டு மனிதரின் விருப்புக் கிணங்க. 110
இளமைப் பெண்ணே, எண்ணிய துண்டா?
எண்ணிய துண்டா, இருந்தறிந் தனையா?
இரவு வேளையில் எழுந்தே சென்று
மறுநாள் திரும்பி வருவதாய் நினைப்போ?
நீஎழுந் தேகுதல் ஓர்நிசிக் கல்ல
ஓர்நிசிக் கல்ல ஈர்நிசிக் கல்ல
நீள்பெருங் காலம் நீயங் கிருப்பாய்
பலநாள் மாதம் விழிபடா தகல்வாய்
பெருவாழ் நாளெலாம் பிதாஇல் லிருந்து
என்றென் றைக்கும்அன் னையிட மிருந்து; 120
தோட்டத்து முற்றம் நீண்டிடும் ஓரடி
ஒருமரம் உயர்ந்திடும் உறுகளஞ் சியவறை
மற்றிங்கு மீண்டுநீ வருகை தருகையில்
ஒருமுறை நீயும் திரும்பி வருகையில்."
ஏழை பெண்ணவள் எறிந்தாள் நெடுமூச்(சு)
நெடுமூச் செறிந்து நெஞ்சம் துவண்டாள்
இன்னல் வந்து இறங்கிற் றிதயம்
கண்ணீர் வந்து கண்களை நிறைத்தது
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"அப்படித் தெரியும் அப்படி நினைத்தேன் 130
அப்படி உணர்ந்தேன் ஆனஎன் (வாழ்)நாட்களில்
மொழிந்தேன் வளர்ந்த முழுக்கா லமுமே:
பெண்ணே முடியா(து) பெண்ணா யிருப்பது
தங்கிச் சொந்தத் தாய்தந் தையரில்
தந்தையின் சொந்தத் தரையதன் மீது
உன்னுடை முதிய அன்னையின் வீட்டில்;
வளருமோர் பெண்ணாய் மட்டும்நீ யிருப்பது
கணவரின் வீட்டில் காலடி வைக்கையில்,
ஒரடி களஞ்சிய ஒளிர்அறை வைத்துநீ
மறுவடி மணமகன் வண்டியில் வைக்கையில், 140
உன்சிர மப்பொழு துயரமா யிருந்திடும்
உன்செவி கூடவே உயரமாய்த் தெரிந்திடும்.
இதனையே வாழ்நாள் எல்லாம் விரும்பினேன்
எதிர்பார்த்(த) திதுவே என்வளர் நாட்களில்
நலம்தரும் வருடம் நான்பார்த் திருந்தேன்
கோடையின் வருகை குறித்தெதிர் பார்த்தேன்;
எதிர்பார்த் திருந்தது இன்றுமெய் யானது
புறப்படு நேரம் விரைந்தரு கணைந்தது
ஓரடி களஞ்சிய ஒளிர்அறை இருக்க
மறுவடி மணமகன் வண்டியில் இருக்க. 150
எனக்கு விளங்கவே யில்லை ஆயினும்
மனத்தின் நிலமையை மாற்றிய தெதுவென:
மனத்திலே நிறைவுடன் புறப்பட வில்லை
மகிழ்ச்சியாய்ப் பிரிந்து வழிச்செல வில்லை
வாய்த்த அருமை வாழ்விடத் திருந்து
இளமையில் இருந்த இவ்விட மிருந்து
வளர்ந்தஇத் தோட்ட மதிலே யிருந்து
தந்தையார் அமைத்த தகுமனை யிருந்து;
இளைத்தவள் அகல்கிறேன் இன்னல்க ளோடு
வெவ்வருத் தத்தொடு விலகிச் செல்கிறேன் 160
இலையுதிர் காலத் திரவதன் அணைப்பில்
வசந்தகா லத்து வழுக்கும் பனியில்
பாதத்தின் பதிவு பனியில் அமையா(து)
நிலத்தில் வராது நெடுமடிச் சுவடு.
ஏனையோர் நினைவு எப்படி யிருக்கும்?
மற்றய மணமகள் மனநிலை யென்ன?
மற்றையோர் நிச்சயம் வருந்தமாட் டார்கள்
சுமக்கமாட் டார்கள் துயரத்தை நெஞ்சில்
துர்ப்பாக் கியநான் சுமப்பது போல
கருமைத் துயரைநான் கட்டிச் சுமத்தல்போல் 170
அடுப்புக்கரி போல் ஆனதென் னிதயம்
கரிய நிறமாய் அதுமா றிற்று.
இவ்விதம் அதிர்ஷ்ட இயல்பினர் எண்ணுவர்
ஆசியைப் பெற்ற அவர்இவ்வா றுணருவர்
புதுவசந் தத்துப் புலரியைப் போலவும்
காலை வசந்தக் கதிரவன் போலவும்;
என்மன உணர்வுகள் எத்திறத் தனவோ
என்மன ஆழத்து இருள்எவ் வகையோ?
நீர்நிலை ஒன்றின் நேர்சமக் கரையென
கார்க்கண மொன்றின் கறுத்த விளிம்பென 180
இலையுதிர் காலத் திருண்ட இரவென
படிகுளிர் காலத்துப் பகலென உள்ளது
இவைகளைக் காட்டிலும் இன்னும் இருண்டது
இலையுதிர் காலத் திரவிலும் இருண்டது."
இருந்தனள் முதியள் இல்லத்து வேலையள்
எப்போதும் அந்த இல்லிலே வாழ்பவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"பருவப் பெண்ணே பார்இப் பொழுது
இயம்பிய துநான் இல்லையா நினைவில்?
கூறினேன் நூற்றுக் கணக்காம் தடவை: 190
மணமகன் கண்டுநீ மையல்கொள் ளாதே
மணமகன் வாயில் மயக்க முறாதே
கண்களைக் கண்டுநீ நம்பி விடாதே
நலமுறும் கால்களில் நாட்ட முறாதே!
வாயினை அவனும் வனப்பாய் வைத்து
விழிகளைத் திருப்புவன் அழகா யாயினும்
அவனது தாடையில் அமர்வது பிசாசம்
வாயிலே வாழ்ந்து வருவது மரணமாம்.
மகளிர்க்கெப் போதும் வழங்கினேன் அறிவுரை
அவர்கட் கிவ்விதம் அளித்தேன் வழிமுறை: 200
'மதிப்புறு மணவார் வந்திடும் போதில்
நாட்டு மணவ()ளர் நன்மண மக்கள்
அவர்க்கு நேரில் அறைவீர் இவ்விதம்
உங்கள் சார்பிலே உரைப்பீர் நீரே
இவ்வித வார்த்தையில் இயம்புவீர் இப்படி
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிவீர்:
'என்னிடம் இருப்பது எதுவுமே யில்லை
எதுவுமே யில்லை இயல்பொடு மில்லை
மருமக ளாக வருமுறை கொள்ள
அடிமையாய் என்னை அழைத்துச் செல்ல 210
என்னைப் போல இயல்புறு மொருபெண்
அடிமையாய் வாழ அறிந்தவ ளல்ல,
நினைப்பவ ளல்ல நேராய்ச் சென்று
ஆடவன் பெருவிரல் ஆட்சியில் வாழ;
என்னிடம் அடுத்தவன் இயம்பிடில் ஒருசொல்
இருசொலில் அவற்கு இயம்புவேன் உத்தரம்,
படருமென் குழலவன் பற்றிட வந்தால்
கவின்குழல் அள்ளிக் கைக்கொள வந்தால்
அம்குழ லிருந்து அகற்றுவேன் தூர
அழகத் திருந்து அகற்றி விரட்டுவேன்.' 220
இவற்றை நீயும் ஏற்கா திருந்தாய்
கூறுமென் வார்த்தை கேட்கா திருந்தாய்
தெரிந்து கொண்டே தீயிலே நடந்தாய்
கனகொதிக் **கீலில் காலடி வைத்தாய்
வருநரிச் சறுக்கு வண்டியில் முட்டினாய்
ஏகினாய் கரடி வண்டியேற் காலில்
இளநரி வண்டியில் இழுத்துச் செல்ல
கரடி தொலைவுனைக் கடத்திச் செல்ல
எசமான் அடிமையாய் என்றும் இருக்க
ஆயுள் அடிமையாய் மாமிக் கிருக்க. 230
இல்லத் திருந்து பள்ளி(க்கு)ச் சென்றாய்
துயர்பெறச் சென்றாய் பிதாதோட் டத்தால்;
பள்ளியின் அனுபவம் அல்லலாய் இருக்கும்
நீணடதாய் இருக்கும் தாங்கும் துயரமும்:
வாங்கி யாயிற்று நாணயக் கயிறங்(கு)
சிறைக்குக் கம்பிகள் நிறுத்தி யாயிற்று
அவைகள்யா ருக்கும் ஆகவும் அல்ல
ஏழைப் பெண்ணே, எல்லா முனக்காய்.
பேதையே விரைவில் பெறுவாய் துயரம்
விதியிலாப் பெண்ணே மிகுதுயர் பெறுவாய் 240
மாமனின் எலும்பு வாய்க்கடை யிருந்து
மாமியின் கல்போல் வன்னா விருந்து
மைத்துனன் கொடிய வார்த்தையி லிருந்து
மைத்துனி தலையின் வருஅசைப் பிருந்து.
நான்புகல் வதனை நனிகேள் பெண்ணே!
நான்புகல் வதனை, நான்மொழி வதனை!
மனையிலே நீயொரு மலர்போ லிருந்தாய்
தந்தையின் முன்றிலில் தனிமகிழ் வடைந்தாய்
தண்ணிலா வொளியெனத் தந்தை அழைத்தார்
ஆதவன் கதிரென அன்னையு மழைத்தாள் 250
தண்ணீர் ஒளியெனச் சகோதரன் சொன்னான்
'அகன்றநீ லத்துணி' புகன்றாள் சகோதரி;
இன்னொரு இல்லம் இப்போ தேகிறாய்
அன்னிய அன்னையின் ஆட்சியின் கீழே:
என்றும் அன்னைக் கீடிலர் அன்னியர்
பிறிதொரு பெண்ணோ பெற்றவ ளாகாள்;
இனிமையாய் அன்னியர் ஏசுதல் அரிது
ஒழுங்காய் அறிவுரை உரைத்தலு மரிது;
மாமனார் உன்னை **மரக்கிளை என்பார்
மாமியார் உன்னை **மான்வண்டி யென்பாள் 260
'வாயிற் **படிக்கல்' மைத்துன னுரைப்பான்
தீயவள் என்றுனைச் செப்புவள் மைத்துனி.
உனக்கு நன்மையாய் உருப்பெறு நேரமும்
உனக்கு அமையும் உகந்தநற் பொழுதும்
புகார்போல் வெளியே போகும் வேளைதான்
புகைபோற் தோட்டத் துலவும் வேளைதான்
இலைபோற் சுழன்று அகலும் வேளைதான்
பொறியாய் விரைந்து பரவும் வேளைதான்.
ஆயினும் பறவையே அல்லநீ பறக்க
இலையுமே யல்லநீ இடம்சுழன் றேக 270
பொறியுமே யல்லநீ புறம்பரந் தோட
புகையுமே யல்லநீ போய்த்தோட்ட முறவே!
ஓ,என் பெண்ணே, உடமைச் சோதரி!
இப்போ(து) மாற்றினாய், எதற்கெதை மாற்றினாய்?
தனியன் புறுநின் தந்தையை மாற்றினாய்
வலியதீக் குணமுறு மாமனார் தனக்கு,
அன்புக் கினியநின் அன்னையை மாற்றினாய்
வல்லகங் காரமார் மாமியார் தனக்கு,
கண்ணிய மான கவின்சகோ தரனையும்
வளைந்த கழுத்து மைத்துனன் தனக்கு, 280
துன்னுபண் புறுநின் சோதரி தனையும்
கண்பழு தான கடியமைத் துனிக்கு,
கவின்சணல் விரிப்புக் கட்டிலை மாற்றினாய்
புகைபடி அடுப்பின் புன்தளத் துக்கு,
தெளிந்த வெண்மைத் திகழ்நீர் மாற்றினாய்
செறிந்த அழுக்குடைச் சேற்றுநீ ருக்கு,
நிதம்மணல் நிறைந்த நீர்க்கரை தன்னையும்
அகல்கரும் சேற்று அடித்தள மாக்கினாய்,
வெட்டித் திருத்திய விரிவன வெளியை
படர்புற் புதர்நிறை பற்றைக ளாக்கினாய், 290
சிறுபழம் நிறைந்த சின்மலை யாவையும்
அடல்எரி கருக்கிய அடிமரம் ஆக்கினாய்.
எண்ணிய **துண்டா? இளமெழிற் பெண்ணே!
உண்மையாய் நீயொரு ஒளிர்வளர் கோழியாய்,
அன்பா தரவு அலுவல்கள் அனைத்துமே
விளைந்த இம்மாலை விருந்துடன் முடிந்ததை?
அமளிக்கு உன்னை அழைத்துச் செல்வார்
இன்துயி லுக்கங் கேகுவாய் என்பதை?
ஆயினு முனக்கங் கமளியு மில்லை
நிம்மதி கொள்ளும் நித்திரை யில்லை 300
தூக்கமே யின்றித் தொடர்ந்துகண் விழித்து
கருமம் யாவையும் கவனத் தெடுத்து
சிந்தனை செய்தே சித்தம் குழம்பி
மனநிலை கெட்டு மறுகவும் செய்வர்.
தலைத்துணி யின்றி தனிநீ திரிகையில்
இன்னல்க ளின்றி இனிதே திரிந்தனை;
முகத்திரை யின்றி முன்நீ உலாவையில்
மனத்துய ரின்றி மகிழ்வா யுலாவினை;
தலைத்துணி யிப்போ(து) தரும்மிகு துன்பம்
முகத்திரை யிப்போ(து) மனத்துய ரேற்றும் 310
அளவிலா இன்னலை ஆக்கும்முக் காடு
சணல்துணி முடிவில்லாச் சஞ்சல மாக்கும்.
எங்ஙனம் அரிவைதன் இல்லத் திருப்பாள்?
தந்தையார் வீட்டில் தையலாள் வசிப்பாள்?
மன்னனின் கோட்டையில் மன்னனைப் போல
வாள்மட்டும் அவளது வயமிலா திருக்கும்.
ஏழை மருமகள் நிலையென்ன வாகும்?
கணவனின் வீட்டில் காரிகை நிலையும்?
திகழ்ரஷ்ய நாட்டின் சிறைக்கைதி போலாம்
ஆள்மட்டும் காவலுக் கமைந்திடா திருக்கும். 320
வேலைநே ரத்தில் வேலைகள் செய்வாள்
தோள்களும் துவண்டு சோர்ந்து தளர்வுறும்
மேனி முழுவதும் வியர்வையில் ஊறும்
நுதலதும் வெண்மையாய் நுரைத்தே மாறும்;
இவ்வா றுருப் பெறும் இன்னொரு வேளை
வெங்கனல் மூட்டியே வேலைகள் செய்ய
அடுப்பொழுங் காக்கி அலுவல்கள் செய்ய
அனைத்தையும் ஒருத்தியின் அங்கையால் முடிக்க.
அப்போ தவட்கு ஆகும்இப் படித்தான்
ஏழைப் பெண்ணுக் கிப்படித் தான்ஆம் 330
**வஞ்சிர நெஞ்சும் **(நன்)னீர்மீன் நாவும்
குளத்திலே **வாழ்மீன் கொண்ட சிந்தனையும்
**வெள்ளிமீன் வாயும் **வெண்மீன் வயிறும்
**கடல்வாத் தறிவும் காணும்உண் டாகி.
ஒருவரும் அறிய உறுவாய்ப் பில்லை
ஒன்பது பேரும் உற்றறி யார்கள்
தாயார் பெற்ற தையலர் மத்தியில்
பெற்றவர் பேணிய பெண்களி டத்தே
எங்கே பிறப்பார் உண்பவர் என்பதை
**எங்குபோய்க் கடிப்பவர் இவர்வளர் வாரென 340
இறைச்சி உண்பவர் எலும்பு கடிப்பவர்
அம்குழல் காற்றில் அலைந்திட விடுபவர்
விரித்துக் கூந்தலைப் பரப்பி வைப்பவர்
கொடுப்பவர் இரைதான் குளிர்காற் றுக்கு.
அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,
அழுவாய் கண்ணீர் அங்கே நிறைய
உள்ளங் கைநிறைந் தொழுகநீர் வரட்டும்
தந்தைதோட் டத்துக் கண்துளி விழட்டும்
விழிநீர் குளமாய் மிகட்டும் பிதாநிலம் 350
அழுவாய் வெள்ளம் அறைகளில் ஓட
தரையிலே பரந்து திரைகள் எழட்டும்.
அழச்செய்(த) இப்போ அழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்
தந்தையின் வீடு தனித்திரும் புகையில்
வயோதிபத் தந்தையை வந்துநீ காண்கையில்
இருப்பார் புகைசூழ் சவுனா அறையில்
இருக்கும் காய்ந்த இலைப்பிடி கைகளில்.
அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ, 360
அழச்செய்(த) இப்போ அழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்
அன்னையின் இல்லுக் கடுத்து வருகையில்
வயோதிப அன்னையை வந்துநீ காண்கையில்
மாட்டுத் தொழுவில் மூச்சடைத் திருப்பாள்
வைக்கோற் கட்டுடன் மாண்டே கிடப்பாள்.
அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,
அழச்செய்(த) இப்போ தழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய் 370
இந்தவீட் டுக்கு இனிவரும் போது
காண்பாய் செந்நிறத் தனிச்சகோ தரனை
வழியிலே காண்பாய் மயங்கிவீழ்ந் திருக்க
தோட்ட(த்து) முற்றம் துவண்டுவீழ்ந் திருக்க.
அழுவாய், அழுவாய், அழகிளம் பெண்ணே!
அழுவாய் நன்றாய் அழும்போ தேநீ,
அழச்செய்(த) இப்போ அழாதே போனால்
இனித்திரும் புகையில் இன்னலுற் றழுவாய்
இந்தவீட் டுக்கு இனிவரும் போது
அன்புச் சகோதரி அவளையும் காண்பாய் 380
துணிதோய் பாதையில் தனிப்புதைந் திருப்பாள்
ஒருதுணி **யடித்தடி உறுகரத் திருக்கும்."
பேதைப் பெண்ணவள் பெருமூச் செறிந்தாள்
பெருமூச் செறிந்து பெருந்துயர் கொண்டாள்
அப்போ தவளே அழவும் தொடங்கினள்
கண்ணீர் பெருக்கிக் கலங்கி யழுதாள்.
அழுதாள் கண்ணீர் அம்கை நிறைந்தெழ
உள்ளங் கைநிறைந் தொழுகிய(து) விழிநீர்
தந்தையின் கழுவிய தகுவசிப் பிடத்தில்
பிதாவின் நிலத்தில் குளமாய் அழுதாள் 390
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
உரைத்தே அவள்தான் உரைசெய லாயினள்:
"ஓ,சகோ தரிகாள், உறுமென் **குருவிகாள்!
என்வாழ் நாளின் முன்னாள் தோழிகாள்!
என்னுடன் வளர்ந்த எலாச்சிநே கிதிகாள்!
இங்குநான் உரைப்பதை எல்லிரும் கேட்பீர்:
ஆனஎன் அறிவுக் கப்பால் உள்ளது
எனக்கு நடந்தது என்னதான் என்பது
இத்தனை இன்னல் எப்படி வந்தது
இத்தனை சுமையும் எதற்காய் என்பது 400
இந்தத் துயரை எதுதான் கொணர்ந்தது
இத்துணை துன்பம் எங்ஙனம் வந்தது?
வேறாய் உணர்ந்தேன் வேறாய் அறிந்தேன்
வாழ்நாள் வேறாய் வருமென நினைத்தேன்
குயில்போற் சென்று உலவவும் எண்ணி
குன்றிலே நின்று கூவவும் நினைத்தேன்
இந்த நாட்களே வந்தநே ரத்தில்
இந்த நினைவுகள் இயைந்தவே ளையிலே;
ஆயினும் குயிலாய் அடைந்தே இப்போ(து)
குன்றிலே நின்று கூவவும் மாட்டேன் 410
அலையின் நடுவில் அலையும் வாத்துநான்
அகன்ற குடாக்கடல் அலைதா ராநான்
நிறைகுளிர் நீரில் நீந்தி வருகிறேன்
பனிக்கட்டி நீரில் பதறி நிற்கிறேன்.
ஐயகோ, எனது அன்னையே, தந்தையே!
ஐயகோ, எனது அரியபெற் றோரே!
எதற்காய் என்னை இங்கே படைத்தீர்
பேதை யென்றனைப் பெற்றது எதற்கு
இத்தனை இன்னலில் இருந்தழு வதற்காய்
இத்தனை சுமையையும் ஏற்பதற் காக 420
அடையா இத்துயர் அடைவதற் காக
இத்துணை துன்பம் இதுபெறற் காக!
ஏழையம் மா,முன் இதுசெய் திருக்கலாம்,
எனைத்தாங் கழகியே, இதுசெய் திருக்கலாம்,
பாலூட்(டி) வளர்த்த பரிவுறும் அன்னாய்!
ஆளாக்கி எடுத்த(என்) அன்புக் கினியளே!
கட்டையைத் துணியால் சுற்றிவைத் திருக்கலாம்
கற்கள் சிறியவை கழுவிவைத் திருக்கலாம்
இம்மகள் கழுவி எடுத்தநே ரத்தில்
சுற்றிய நேரம் துணியில்நின் அழகி 430
இத்துணை துயரை இதுகொணர்ந் ததுவே
மனநிலை கெட்டு மறுகி மடிந்ததே!
பல்வே றிடங்களில் பலரிதைச் சொல்வார்
இன்னும் பற்பலர் இப்படி நினைப்பார்:
அறிவிலா மூடர்க் கக்கறை யில்லை
என்றுமே கவலை இல்லையே யென்று;
நல்ல மனிதரே, சொல்லீர் அவ்விதம்!
சொல்லீர் என்றுமே, சொல்லீர் அவ்விதம்!
ஏனெனில் அக்கறை எந்தனுக் குண்டு
கனநீர் வீழ்ச்சிக் கற்களைக் காட்டிலும் 440
தீய நிலத்துச் செடிகளைப் பார்க்கிலும்
படர்புதர் முளைத்த பற்றையைப் பார்க்கிலும்
இகல்பரி யொன்று இழுக்க மாட்டாது
இரும்புக் கழுத்து இகல்பரி இழாது
உறும்ஏர்க் கால்மேல் உயர்த்தப் படாமல்
ஏர்க்கால் சற்றும் அசைக்கப் படாமல்,
மெலிந்தவ ளாயினும் மனத்துய ரடைந்தேன்
கருமையாய் இவ்விதம் கடுந்துய ரடைந்தேன்."
படிமிசை யிருந்து பாடிற் றோர்சிசு
புகன்றதிவ் விதம்புகை போக்கியில் வளர்வது: 450
"அரிவை இப்படி அழுவது என்ன
மாபெரும் துயரும் வந்தது என்ன?
படுதுயர் அனைத்தும் பரிக்குக் கொடுங்கள்
கறுத்தவாத் துக்குக் கடுந்துயர் கொடுங்கள்
இரும்புவா யதனை இரங்க விடுங்கள்
விடுங்கள் புலம்பலை வியன்பெருந் தலைக்கு;
சிறந்த சென்னிகள் திகழ்பரிக் குண்டு
பல்சீர்த் தலைகளும் பலமுறு மெலும்பும்
வளைந்த கழுத்தது வல்லது சுமக்க
உடலம் முழுவதும் உறுதியா யுடையது. 460
ஏதுக்கள் இங்கு இல்லை அழுதிட
கடுந்துயர் கொள்ளக் காரண மில்லை
உனைக்கொடு செல்லார் உறுசேற் றுநிலம்
உனைக்கொடு செல்லார் ஒருபாழ்ங் குழிக்கு
இத்தா னியமேட் டிருந்துனைப் பெற்று
இன்னும் சிறந்த இடத்தே போவார்
'பீர்'அருந் தும்மிப் பெருவீ டிருந்து
இகல்மதுப் பெருகும் இடத்தே போவார்.
விலாப்புறம் திரும்பி விரும்பிநீ பார்த்தால்
வலது பக்கமாய் மகிழ்ந்துநீ பார்த்தால் 470
மாப்பிளை இருப்பார் காப்பதற் காக
செந்நிற மனிதர் சேர்ந்தரு கிருப்பார்
ஒருநல் மனிதன் ஒருநற் குதிரை
வீடு நிறைய வேண்டிய துண்டு
காட்டுக் கோழிகள் கடுகதி பறந்து
வண்டிஏர்க் காலில் மகிழ்ந்திசை பயிலும்
**குருவி யினங்கள் குதூகலங் கொண்டு
நுகத்தடி மரத்தில் மகிழ்பாட் டிசைக்கும்
ஆறு பொன்னிறத் தம்குயில் போல்மணி
பரியின் கழுத்துப் பட்டியில் துள்ளும் 480
ஏழு நீல எழிற்புள் மணிகள்
ஓசை வண்டியின் ஒளிர்நுகத் தெழுப்பும்.
எனவே கவலை எதற்கு முறாதே
எதற்குமே வேண்டாம் **இனிதாய் மகளே
எதுவுமே தீமை இனியுனைத் தொடாது
நண்ணும் யாவுமே நன்மையாய் முடியும்
உழவன்உன் கணவன் உறுமவ னருகில்
விவசாயி அவனது மெல்லா டையின்கீழ்
உணவுக்கு உழைப்பவன் ஒளிர்தாடை யின்கீழ்
மீனவன் அவனது வியன்கை யணைப்பிலே 490
உயர்மான் சறுக்கி ஓட்டுவோன் துணையில்
கரடி பிடிப்பவன் கவின்சவு னாவில்.
உயர்ந்தோன் கணவரில் உனக்குக் கிடைத்தான்
மிகவும் மேன்மை மிக்கவன் மனிதரில்
சோம்பி யிராது தொடும்அவன் குறுக்குவில்
அம்புக் கூட்டிலே அம்புகள் தங்கா
வீட்டிலே நாய்கள் தூக்கம் கொள்ளா
குட்டிகள் ஓய்ந்து வைக்கலில் கிடவா.
முகிழ்ந்தவிவ் வசந்தம் மூன்று தடவைகள்
புலரும் காலைப் பொழுததி காலையில் 500
எரிதீ யெதிரே எழுந்தே நின்றனன்
சுள்ளிப் படுக்கைத் துயில்விட் டெழுந்தான்;
முகிழ்ந்தவிவ் வசந்தம் மூன்று தடவைகள்
துளிப்பனி அவனது விழிக்கடை வீழ்ந்தது
தடவின அவனது தலையைச் சுள்ளிகள்
கணுக்கள் அவனது கவினுடல் வருடின.
வளர்ப்பவன் அந்த மனிதனோ கால்நடை
வளர்த்துப் பெருக வைப்பவன் கால்நடை
இங்கே வந்த எம்மண மகனிடம்
வனத்திலே நடக்கும் மந்தைகள் உண்டு 510
மணல்மேட் டினிலே மந்தைகள் திரியும்
பள்ளத் தாக்கிலே பரந்தே உலாவிடும்
கோட்டு விலங்குகள் நூற்றுக் கணக்கிலே
மடியுள விலங்குகள் மற்றாயிர வகை;
வைக்கோல் பட்டடை மிக்குறும் வெளிகளில்,
கரைகளில் தானியக் களஞ்சியம் அருவியின்,
பூர்ச்சந் தோப்புகள் பொதுவயல் ஆகின
பள்ளப் பரப்பினில் பார்லிநன் னிலங்கள்
புல்நல் லரிசிப் புனம்பா றைப்புறம்
ஆற்றங் கரைகளில் கோதுமை வயல்கள் 520
கூழாங் கற்கள் **கொள்பண நாணயம்
சிறுகற் களெலாம் சில்லறை நாணயம்."
பாடல் 23 - மணமகளுக்கு அறிவுரைகள் TOP
அடிகள் 1 - 478 : கணவனின் வீட்டில் எவ்விதம் வாழ வேண்டும் எவ்விதம் ஒழுக வேண்டும் என்று மணமகளுக்கு அறிவுரை கூறுதல்.
அடிகள் 479 - 850 : ஒரு வயோதிபப் பெண் தான் பெற்றோருக்கு மகளாகவும் கணவனுக்கு மனைவியாகவும் கணவனைப் பிரிந்த பின் தனியாகவும் வாழ்ந்த அனுபவங்களைக் கூறுதல்.
அரிவைக்(கு) இப்போ தறிவுரை தேவை
மணமக ளுக்கு வழிமுறை தேவை
அரிவைக் கறிவுரை யளிப்பவ ரெவரோ?
பாவைக்குப் புத்தி பகர்பவர் யாரோ?
ஒஸ்மோ மகளெனும் ஒண்செழிப் பரிவை
கலேவா மகளெனும் கவினுறு நங்கை
அவள்தான் பெண்ணுக் கறிவுரை சொல்வாள்
அனாதைக் கவளே அளிப்பாள் வழிமுறை
விவேகமாய் வாழ்ந்திடும் விதம்எது என்பதை
மாசில்லா தெங்ஙனம் வாழ்வது என்பதை 10
விவேகமாய்க் கணவனின் வீட்டிலும் எங்ஙனம்
மாசில்லா தெங்ஙனம் மாமியார் வீட்டிலும்.
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்:
"அருமண மகளென் அன்புச் சோதரி!
இதயம் நிறைந்த இனியளே, அன்பே!
நான்மொழி கையிலே நன்குநீ கேட்பாய்
வெவ்வேறு விதமாய் விளம்ப நீகேட்பாய்.
மலரேயிப் போது மனைவிட் டகில்கிறாய்
சிறியசெம் **பழம்நீ செல்லப் போகிறாய் 20
தடித்த துணிநீ தான்நகர் கின்றனை
**'வெல்வெட்' துணியே வெகுதொலை போகிறாய்
எழில்புகழ் பெற்றஇவ் வில்லத் திருந்து
தொல்லெழில் வாய்ந்தஇத் தோட்டத் திருந்து;
இன்னோ ரிடத்து இல்லம் வருகிறாய்
அன்னிய மானதோர் அகல்இல் வருகிறாய்
மாறு பட்டதோர் மனைக்குநீ வருகிறாய்
மற்றவர் மத்தியில் **மறாளாய் வருகிறாய்;
சிந்தித் தடியிடல் சீரா யிருக்கும்
கவனமாய் அங்குநீ கருமம் செய்வாய், 30
அப்பாவின் நிலத்தில் அமைந்தது போல(ல்)ல
உரிமைத் தாயின் தரைபோ லிருக்கா(து)
பள்ளத் தாக்கிலே பாட்டுகள் பாடியும்
வழிகளில் கூவியும் வாழ்வது அரிது.
இந்த வீட்டி லிருந்துநீ போகையில்
உனது பொருள்கள் அனைத்தையு மெடுப்பாய்
ஆயினும் வீட்டில்விட் டகல்கவிம் மூன்றையும்
பகலிலே தூங்கும் பழக்கமஃ தொன்று,
அன்புறு மன்னையின் அறிவுரை, அடுத்தது
சுத்தமாய் கடைந்த சுவையுறும் வெண்ணெய். 40
ஆனஇல் லப்பொருள் அனைத்தையும் நினைவாய்
எனினும் துயிலதை எளிதினில் மறப்பாய்
இருக்கட் டுமது இல்வாழ் மகளிர்க்(கு)
இருக்க(ட்டும்) அடுக்களை இதமூ லையிலே;
பாடல்கள் ஆசனப் பலகைதங் கட்டும்
இருக்க(ட்டும்) சாளரத் தினியநற் கதைகள்
தூரிகைப் பிடியிலே **ஆர்கசின் னவள்இயல்(பு)
கேலியும் கிண்டலும் போர்வையின் விளிம்பிலே
ஆன தீப் பழக்கமே அடுக்களைப் பீடமாம்
உனதுசோம் பலைநிலத் துறும்படி விட்டுவை 50
அல்லது திருமணத் தோழிக்(கு) அளித்திடு
அவளது கைகளில் அவற்றையே சுமத்திடு
புற்றரை மேட்டிடைப் போகட்டு(ம்) கொண்டவள்
புதருக்குச் செல்கையில் கோக(ட்டும்) கூடவே.
நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
அப்பாவின் அன்பை அகற்றிடல் நன்று
மாமனின் அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும். 60
நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
அன்னையின் அன்பை அகற்றிடல் நன்று
மாமியின் அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.
நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
சகோதரன் அன்பைத் தள்ளிடல் நன்று
மைத்துனன் அன்பை மனங்கொளல் நன்று 70
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.
நற்புது முறைகளை நனிகொளல் வேண்டும்
பழையன யாவையும் களைதலும் வேண்டும்
சகோதரி அன்பைத் தள்ளிடல் நன்று
மைத்துனி அன்பை மனங்கொளல் நன்று
பழக்கத்தில் வேண்டும் பணிவுறு நடத்தை
பரிவுறு மொழிகளைப் பகருதல் வேண்டும்.
உன்வாழ் நாளில் என்றுமே வேண்டாம்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம் 80
பொல்லா நினைவுடன் புக்ககம் செல்லுதல்
திறமை இல்லையேல் திருமணம் வேண்டாம்.
இல்லத்து வாழ்ந்திட இனியவை தேவை
நலமுறு வீட்டில் நன்பண்பு தேவை
கணவனாய் வந்தவன் கடிதுசோ திப்பான்
அறிவுடைக் கணவனும் அங்ஙனம் செய்வான்;
அறிவும் கவனமும் அவசியம் நினக்கு
நீபுகும் வீடு நிலையிலா திருந்தால்,
வலியும் விவேகமும் வரனுலக் கவசியம்
தரங்கெட்ட கணவன் தன்திசை மாறின். 90
மூலைஓ நாய்போல் முதியவன் இருப்பினும்
மொய்புதர்க் கரடிபோல் முதியவள் இருப்பினும்
அரவுபோல் களஞ்சிய அறையில் மைத்துனன்
மைத்துனி தோட்டத்து நத்தையா யிருப்பினும்
சமமதிப் பினைநீ சளைக்கா தேகொடு
பணிவான நடத்தை பழக்கத்து வேண்டும்
அம்மா விடத்தில் அமைந்ததைப் பார்க்கிலும்
அப்பாவின் வீட்டில் அமைந்ததைப் பார்க்கிலும்
பிதாவிடம் காட்டிய பணிவைப் பார்க்கிலும்
மாதாவுக் கீந்த மதிப்பைப் பார்க்கிலும். 100
எப்போது முனக்கு இவையிவை தேவை
தெளிவுறு தலையும் திகழ்தர அறிவும்
நிதானம் கண்டிப்பு நிறைந்தசிந் தனையும்
விளம்பலைச் செயலை **விளங்கும் ஆற்றலும்,
மாலையில் கூர்மை மலர்விழிக் கவசியம்
மனையிலே விளக்கு மங்கா திருக்க,
காலையில் செவியில் கவனமும் அவசியம்
சத்தமாய்ச் சேவலின் தனிக்குரல் கேட்க;
சேவல் முதல்முறை கூவிய பின்னர்
சேவலின் அடுத்த கூவலின் முன்னர் 110
இளையவர்க் கதுவே துயிலெழும் நேரம்
முதியவர்க் கதுவே ஓய்வுகொள் நேரம்.
சேவலும் ஒருநாள் கூவா திருந்தால்
தலைவனின் பறவை ஒலிதரா விட்டால்
திங்களை உந்தன் சேவலாய்க் கருது
தாரகைக் குலம்வழி காட்டியா யாக்கு
வெளியே அடிக்கடி விரைந்தெழுந் தேகி
சந்திரன் திகழ்வதைச் சரியாய்ப் பார்ப்பாய்
வழிவகை தாரகை வண்குலத் தறிவாய்
விண்மீ னிடத்தே விதிமுறை கற்பாய். 120
**விண்மீன் குலமும் விளக்கமாய்த் தெரிந்து
அவற்றின் கொம்புகள் அவைதெற் கமைந்து
வடதிசை பார்த்து வாலும் இருந்தால்
உனக்கது துயிலெழ உகந்தநல் நேரம்
இளமண வாளன் இனிதரு கிருந்து
செந்நிறத் தோனின் திகழ்அரு கிருந்து
சாம்பரைக் கிளறித் தகிஅனல் மூட்ட
தீக்கற் பெட்டியில் தீப்பொறி யாக்க
ஊதி விறகில் உறுகனல் மூட்ட
பக்கம் நெருப்பும் பரவா தமைப்பாய். 130
சாம்பரில் நெருப்புத் தானிலா திருந்தால்
பெட்டியி லிருந்தும் பெயரா விடிற்பொறி
அன்புறு கணவனை அன்புடன் கேட்பாய்
எழிலுறும் கணவனை இவ்விதம் கேட்பாய்:
'அன்புக்(கு) உரியரே, அழல்சிறி தருளிரோ,
செஞ்சிறு பழமே, செந்தீ தாரிரோ?'
சிறியதீக் கல்லைப் பெறுவையப் போது
தீக்கல் மிகமிகச் சிறியதைப் பெறுவாய்
தேய்த்துப் பொறியை ஆக்குதீக் கல்லில்
காய்ந்த குச்சியில் கனலதை மூட்டு 140
வெளியில் சென்று தொழுவதும் பெருக்கு
உணவைக் கால்நடை உண்ண அளித்திடு;
பக்கம் மாமியின் பசுவொன் றலறும்
கவின்மா மன்பரி கனைக்கு(ம்)முன் னின்று
மைத்துனன் பசுவும் வந்த லறும்முன்
மெதுவாய் மைத்துனி பசுக்கன் றலறும்
மென்மைவைக் கோலை வீசவை கட்கு
அள்ளிச் சற்றே **மணப்புல் நீகொடு
பாதையில் சற்றுப் பணிவுடன் சென்று
நுழைந்து கால்நடைத் தொழுவிற் குனிந்து 150
பசுவுக்(கு) உணவைப் பதமாய் வைத்து
ஆட்டுக் குணவை அன்பா யூட்டு;
சரியாய் வைக்கோல் தந்தா வுக்கு
மெலிந்தகன் றுக்கும் மிதநீர் கொடுத்து
தெரிந்த வைக்கோல் பரிக்குட் டிக்கும்
இடுவாய் செம்மறிக் குட்டிக் கிதப்புல்;
ஏனக் குழாத்தை ஏசுதல் கூடா(து)
வராகக் குட்டியை உதைத்தலும் ஆகா(து)
பதவூண் தொட்டியைப் பன்றிக்(கு) ஈந்து
குட்டிக் குணவுத் தட்டத்தைத் தருவாய். 160
ஓய்தல் தகாது கால்நடைத் தொழுவில்
சோம்பலும் தகாது செம்மறித் தொழுவில்
கால்நடைத் தொழுவில் கருமம் முடிந்ததும்
அனைத்து மந்தையின் அலுவல் முடிந்ததும்
அவ்விடம் விட்டு அகன்றுநீ செல்வாய்
பனிப்புயல் போலே படர்வாய் வீட்டுள்
அங்கொரு பிள்ளை அழுதுகொண் டிருக்கும்
போர்வையின் உட்சிறு பிள்ளை யிருக்கும்
பேதைக் குழந்தை பேச வராது
நாவாற் சொல்லும் நயம்தெரி யாது 170
கூறா(து) குளிரெனக் கூறா(து) பசியென
அல்லது வேறென்ன சொல்லா தெதனையும்
பழகிய யாரும் பக்கம் வரும்வரை
தாயின் குரலும் காதில் விழும்வரை.
நேரே இல்லுள் நீவரும் போது
உறுநாற் பொருளில் ஒன்றென வருவாய்
நீர்நிறை வாளி நின்கரத் திருக்கும்
குளியற் **தூரிகை கக்கத் திருக்கும்
எயிற்றின் இடையினில் இருக்கும்தீக் குச்சி
நான்காம் பொருளென நனிநீ யிருப்பாய். 180
பெருநிலம் அடுத்துப் பெருக்கிக் கூட்டி
நிலத்துப் பலகையை நீசுத் தம்செய்;
தண்ணீர் அள்ளித் தரையிலே வீசு
குழந்தையின் தலையில் கொட்டி விடாதே;
குளிர்தரை நீயொரு குழந்தையைக் கண்டால்
மைத்துனி பெற்ற மழலையஃ தாயினும்
பிள்ளையைத் தூக்கிப் பீடத் திருத்தி
கண்களைக் கழுவிக் காண்தலை வருடி
குழந்தைக்கு ரொட்டி கொடுத்துக் கையில்
கொஞ்சம் ரொட்டிமேல் கொழுவெ(ண்)ணெய் பூசு 190
இல்லத்து ரொட்டியும் இல்லாது போனால்
மரக்குச்சி யொன்றை மழலைகை வைப்பாய்.
வீட்டில் கழுவுதல் மேசைகள் என்றால்
கூடிய காலம் வாரத் தொருநாள்,
கழுவு மேசையைக் கரையையும் நினைவாய்
கழுவவும் வேண்டும் கால்மறக் காமல்;
ஆசனப் பலகையை நீரினாற் கழுவு
சுவரெல்லாம் துடைத்துச் சுத்தமாய்ச் செய்து
ஆசனப் பலகையின் அருகெலாம் கழுவி
கழுவு சுவரையும் காண்சுவர் மூலையும் 200
மேசையின் மேலே தூசுகள் படிந்தால்
சாளர மேலே சார்அழுக் குறைந்தால்
துடைப்பத் தோகையால் துப்புர வாக்கி
ஈரத் துணிகொண் டெடுப்பாய் அழுக்கை
அப்போ தழுக்குகள் அயற்புறம் போகா
தூசுகள் பறந்து கூரையிற் படியா.
கூரையில் சேர்ந்த குப்பையைக் கூட்டி
அடுப்பங் கரையின் அசுத்தம் நீக்கு
கதவின் நிலைகளில் கவனம் வைத்திரு
உத்தரம் யாவையும் நித்தமும் நினைவாய் 210
அப்போ(து) குடிவாழ் குடிலா யதுவரும்
வாழத் தகுந்த வதிவிட மாய்வரும்.
நான்மொழி கையிலே நங்கைநீ கேட்பாய்
நான்மொழி கையிலும் நான்உரைக் கையிலும்!
வெளியா டையிலா(து) வெளிச்செல் லாதே
மேலாடை யின்றி வெளியலை யாதே
எங்கும் **கைத்துணி யின்றியே காதே
காலணி யின்றிக் காலாற நடந்திடேல்:
மாப்பிள்ளை பார்த்தால் மகாசினம் கொள்வார்
இளமைக் கணவர் எதுவெனும் சொல்வார். 220
அந்தச் செடிகளில் அதிகவ னம்வை
பெருந்தோட் டம்வளர் **பேரிச் செடிகளில்;
தோட்டத் துப்பேரி தூய்மையே யானது
பேரியின் கிளைகள் பெரிதும் புனிதம்
கிளைகளின் இலைகளும் உளமிகப் புனிதம்
அதன் சிறுகனிகளே அனைத்திலும் புனிதம்,
இளங்கொடி அறிவது இவற்றினால் எதுவெனில்
இருப்பவள் அனாதைபோல் எதுகற்ப தோவெனில்
வருமிளங் கணவனை மகிழச்செய் வகையதே
மணமகன் உளமதை மகள்தொடு விதமதே. 230
செவியிலே வேண்டும் எலியதன் கூர்மை
பாதத்தில் வேண்டும் முயற்பரி சுத்தம்:
பருவக் கழுத்துப் பணிந்து பின்புறம்
வனப்புறும் கழுத்து வளைதலும் நன்று
சிலிர்ப்பொடு முளைவிடு **செடிசூ ரையைப்போல்
பசுமை வளர்சிறு பழச்செடி யைப்போல்.
விழிப்புணர் வுனக்கு வேண்டும் வழக்கில்
கணந்தோறும் விழிப்புணர் கவனமும் வேண்டும்
ஆசனம் பொழுதெலாம் அமர்தலும் வேண்டாம்
பலகையில் நீளப் படுத்தலும் வேண்டாம் 240
போர்வையுள் சதாநீ புதைதலும் வேண்டாம்
படுக்கைநா டிப்புறப் படலதும் வேண்டாம்.
வருவான் உழுதலை மைத்துனன் முடித்தபின்
வருவார் வேலியை மாமன்கட் டியபின்
வெளிப்புற மிருந்துன் கொழுநன் வருவார்
அடர்கான் திருத்திஉன் அழகனும் வருவார்;
கலயம் ஒன்றிலே புனலினைக் கொணர்வாய்
கைத்துணி ஒன்றையும் அத்துடன் கொணர்வாய்
தலையைச் சிறிது தாழ்த்தியே பணிந்து
அன்புறும் சொற்களை அருமையாய்க் கூறு. 250
மாமியார் களஞ்சியக் கூடத்தால் வருவார்
அரைத்தமாக் கூடை இருக்கும் கக்கம்
மாமியை எதிர்கொள ஓடுமுற் றத்தே
தலையைச் சற்றுத் தாழ்த்திப் பணிந்து
கேட்டுநீ கக்கக் கூடையை வாங்கு
இல்லத்தின் உள்ளே எடுத்ததை ஏகு.
ஊகிக்கச் சிந்திக்க உனக்கிய லாவிடில்
சுத்தமாய் விளங்குதல் மெத்தவும் சிரமமேல்
எந்தெந்தப் பணியை எப்போது செய்வது
எதையெதைத் தொடங்கி இனிதியற் றுதலென 260
வீட்டின் முதியளை வினயமாய்க் கேட்பாய்:
'ஓ,என் அன்பு உடைய மாமியே!
எங்ஙனம் வேலைகள் இங்கே நடப்பது
எவ்விதம் முடிவெடுத்(து) இயற்றுதல் ஒழுங்காய்?'
முதியவள் இங்ஙனம் மொழிவாள் மறுமொழி
மாமியார் இவ்விதம் மறுமொழி சொல்வாள்:
'இப்படித் தான்செயல் இங்கே நடப்பது
இவ்விதம் முடிவெடுத்(து) இயற்றுதல் ஒழுங்காய்
இடித்தல் குத்துதல் அரைத்தல்இங் குண்டு
கல்லின் திரிகையைக் கைகளால் சுற்றலும் 270
அத்துடன் தண்ணீர் அள்ளி வருதலும்
பசையாய் மாவைப் பிசைதலும் இங்குள;
விறகை எடுத்து வீட்டுட் கொ(ண்)டுசெலல்
அடுப்பை மூட்டி அனலையுண் டாக்கல்,
அடுத்து ரொட்டிகள் அடுப்பில் சுடலுள
கனமாம் பெரிய பணிய()ரம் சுடலுள
கலயம் சட்டிகள் கழுவும் செயலுள
ஊண்மரத் தட்டை உடனலம் பலுமுள.'
முதியவ ளிடத்தே முயற்சிகள் கேட்டதும்
ஒழுங்காய் மாமியார் உரைத்தலும் அலுவலை 280
காய்ந்த தானியம் கணப்பில்நீ யெடுத்து
அரைக்கும் குடிற்கு அவசரம் ஏகுவாய்;
அந்த இடத்தைநீ சென்று அடைந்தபின்
அரைக்கும் குடிற்கு அவசரம் வந்தபின்
குயிற்குர லெடுத்துக் கூவுதல் கூடா
கண்டக் குரலால் கத்தலும் ஆகா
கூவலைத் திரிகைக் கைப்பிடிக் களித்திடு;
பாடலைத் திரிகைக் கைப்பிடிக் களித்திடு;
பலமிகும் ஒலியில் புலம்பலும் கூடா(து)
திரிகைக் கல்மேல் சேர்ந்தூத லாகா(து) 290
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
பலமாய்ச் சினங்கொடு புலம்பினாய் நீயென
நெஞ்சம் வெறுப்பொடு நெட்டுயிர்த் தாயென.
அரைத்த மாவை அரித்தெடுத் தருமையாய்
தட்டிலே வைத்து வீட்டுள் கொணர்வாய்,
மென்மை ரொட்டிகள் மெதுவாய்ச் சுடுவாய்
கவனமாய்ப் பிசைந்தமாக் களியிலே யிருந்து,
அங்கிங்கு கட்டிமா அமைதல்கூ டாது
புளித்தமாச் சேராது போகலா காது. 300
சரிந்ததோர் தொட்டியாங் கிருந்திடக் காண்பாய்
தொட்டியைத் தூக்கியுன் தோளிலே வைத்து
கைவாளி யொன்றைக் கக்கத் தெடுத்து
புனலள் ளிவரப் போதுறை நோக்கி
தொட்டியை யழகாய்த் தோளில்நீ சுமப்பாய்
கொளுவிநீ சுமந்தாய் கொண்டோ ர் **காத்தடி
வாயுபோல் விரைந்துநீ வீடு திரும்புவாய்
குளிர்ருதுக் காற்றெனக் குறுகுவாய் கடிதில்
சற்றும் சோம்புதல் நீர்த்துறைக் கூடா(து)
அத்துடன் ஓய்வுறல் ஆகா(து) கிணற்றடி 310
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
உன்மத்த மாயினாய் உன்னுருப் பார்த்தென
உன்னையே பார்த்துநீ உளமகிழ்ந் தனையென
உன்செந் நிறத்து உருவம் தண்புனல்
மருண்டனை கிணற்றிலுன் வளர்எழில் கண்டென.
நீள்விற கடுக்கில் நீபோய் நிற்கையில்
விறகை யெடுக்க விரும்புமவ் வேளையில்
நிந்தையாய் விறகை நீநோக் காதே
**அரசம் விறகை அளவொடு நீபெறு 320
விறகை மெதுவாய் வீழ்த்திடு மண்ணில்
ஓசைகடுமையாய் ஒன்றும் வராமலே
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
வெறுப்பினால் விறகதை விட்டெறிந் தாயென
கடுஞ்சின மதாலெழுங் கடுமொலி யதுவென.
நெடுங்களஞ் சியவறை நீசெ(ல்)ல நேர்ந்தால்
அரைத்தமா அள்ளிநீ அயல்வரப் போனால்
களஞ்சியத் தில்வீண் காலம்போக் காதே
களஞ்சியப் பாதையில் கழியேல் வெகுகணம் 330
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
பலருக்கு மாவைநீ பங்கிட் டாயென
கொடுத்தனை கிராமக் கோதையர்க் கேயென.
சமையல் பாத்திரம் சரியாய்க் கழுவையில்
மரத்தட் டுகளை மற்றுநீ யலம்பையில்
கழுவிடு குடுக்கைகள் கைபிடி யதனொடே
கலய(த்து)க் குழிவிழும் கரையையும் கழுவுநீ
மறவா(மல்) சாடியின் மறுபுறம் கழுவுநீ
கைபிடி நினைவில்வை கரண்டிக ளாகிடில். 340
கரண்டிகள் தொகையைக் கவனத்(து) இருத்துக
எண்ணிடு பாத்திரம் எல்லாம் பக்குவம்
அல்லது நாயெடுத் தவைசெல வழியுள
பூனையும் சிலதைப் புறங்கொடு போகலாம்
குருவிகள் பறவைகள் கொடுசெல வாய்ப்புள
நிலத்திலே பரப்பியே நீக்கலாம் பிள்ளைகள்
இருக்கிறார் கிராமம் ஏர()ளம் பிள்ளைகள்
சிறுதலை படைத்திட்ட சிறுவர்ஏ ராளம்
சிறுவர் சாடிகொடு செல்வராங் கிருந்து
அச்சிறார் எடுத்தெறிந் தகப்பைகள் பரப்புவார். 350
நீராவிக் குளியல் நேரமா லையிலே
சுத்தநீ ரிறைத்துத் **தூரிகை கொணர்ந்து
அவைமெது வாக்கி ஆயத்த மாக்கி,
புகைவெளி யேற்றிப் பொருந்தும் பதமதை,
நீள்கணம் சவுனா(வில்) நிற்றலும் கூடா(து)
அதற்கா யாங்கிருந் தகல்தலு மாகா(து)
ஏனெனில் மாமனார் நினையா(து) இருக்க
இவ்விதம் மாமியும் எண்ணா(து) இருக்க
சவுனாப் பலகையில் சாய்நதிருந் தாயென
குதித்துப் பலகையில் **கும்மலித் தாயென. 360
மீண்டுநீ அங்கிருந்(து) வீட்டுள் வந்ததும்
மாமனார் குளிக்க மனமுவந் துரைப்பாய்:
'ஓ,என் அன்புடை உயர்மா மாவே!
ஆவிக் குளிப்பறை ஆயத்த முள்ளது
தூயநீ ரிறைத்துத் தூரிகை வைத்துள்ளேன்
பலகைகள் யாவையும் பாங்காய்ப் பெருக்கினேன்
மனம்நிறை யும்வரை மகிழ்வாய்க் குளிப்பீர்
நினைப்புபோல் நிறைவாய் நீரா டுங்கள்
நீராவி இயக்கம் நேர் கவனிப்பேன்
நீள்மே டையின்கீழ் நின்றே இயக்குவேன்.' 370
நிதம்நூல் நூற்கும் நேரம் வந்திடில்
நெய்தல்வே லைக்கு நேரம் வந்திடில்
கிராமம் வென்று கேளேல் கருத்து
அறிவுரை வேண்டி **அகழ்கடந் தேகேல்
அடுத்தவர் வீட்டுக் கதுகேட் டேகேல்
**பாவுநூல் கேட்டுப் படரேல் புதுவிடம்.
நூற்றெடுப் பாய்நீ நூலை உனக்காய்
நெசவு(ப்)பா வுநூலை நீஉன் விரல்களால்
சற்று(ப்)பா வுநூலைத் தளர்ச்சியாய் நூற்று
இறுக்கமாய் இழைநூல் என்றும் பின்னு; 380
உறுதியாய்ப் பந்துபோல் உடன்அதைச் சுற்றிநீ
உருளையில் பலமாய் உடனதைச் சேர்த்து
திருகு விட்டத்தில் திடமிணைத் ததனை
நெய்யும் கருவியில் நேராய்ப் பூட்டுவாய்; கைத்தறிச் சட்டம் கனபலத் தியக்கி
ஊடிழைக் **கயிற்றை உடன்மெது விழுப்பாய்
அடுத்ததாய் இ(ல்)லப்பல் லாடைகள் நெய்வாய்
கம்பளித் துணியிலே கவின்பா வாடைசெய்
அவ்வா றோராட்டு உரோமத்(தால்) ஆக்குவாய்
ஒருகுளிர் ருதுஆட்(டு) உரோமத் திருந்து 390
வசந்தச் செம்மறி மணிக்குட்(டி) இருந்து
வளர்கோ(டைச்) செம்மறி மறியாட் டிருந்து.
நான்கூ றுகையில்நீ நனியிவை கேட்பாய்
இன்னமும் சொல்வதை இப்போ(து) கேட்பாய்
பார்லி(த்)தா னியத்திலே 'பீர்'நீ வடிப்பாய்
பகர்சுவை மாவூ(றற்) பானம் வடிப்பாய்
ஒருமணிப் பார்லியாம் அரிசியி லிருந்து
பாதியாம் மரமதன் படுவிற கெரித்து.
பார்லிப் பானம் பக்குவம் செய்கையில்
மாவூ(றற்) பானம் வளர்சுவை யாக்கையில் 400
கொளுவியால் நீயதைக் கிளறுதல் ஆகா(து)
குச்சியால் கிளறுதல் கூடா(து) நீயதை
உன்கை முட்டியால் கிளறுதல் வேண்டும்
கிண்டுதல் வேண்டும் கொண்டுள் ளங்கை;
அடிக்கடி ஆவிக் குளிப்பறை செல்வாய்
முளைத்த முளையெதும் மழுங்கா தமைப்பாய்
அமர்தல் பூனைகள் ஆகா(து) முளைமேல்
கூடா(து) பூனையின் குட்டிகள் படுத்தல்
ஓடியே வந்திடும் ஓநாயென் றஞ்சிடேல்
பயப்பட வேண்டாம் பருவிலங் குறுமென 410
நீராவிக் குளிப்பறை நீசெல்லும் போது
நடுச்சாமத் தினிலும் நடக்குமட போதுநீ.
வெளியார் எவரும் வீட்டுக்கு வந்தால்
வெளியாரை என்றும் வெறுத்த லாகாது
எப்போதும் நலமுடை இல்லத் துளது
வரவேற்க வெளியார் வகையாம் பொருட்கள்
இறைச்சித் துண்டுகள் இருக்கும்ஏ ராளம்
எழிலார் பலக()ரம் இருக்கும்எவ் வளவோ.
அன்னியர் வந்தால் அடுத்தம ரச்சொல்
அவரோ டமைதியாய் உரையா டிடுவாய் 420
சுவையா(க) யூட்டு சொற்கள்வந் தவர்க்கு
ஊண்ரசம் தயாராய் உற்றிறக் கும்வரை.
அவர்பின் இல்விட் டகலும் வேளை
எழுந்து 'போய் வருவேன்' எனப்பிரி நேரம்
வந்தவர் பின்போய் வழியனுப் பாதே
வெளிப்பட வேண்டாம் வழிவாய் நுழைந்து
ஆத்திரம் கொள்வார் அரியஉன் கணவர்
அழகுறும் உன்னவர் அருவருப் பாரதை.
சிலகணம் நின்மணம் சித்தமா யானால்
எங்கெனும் பக்கத் தேகவேண் டுமென 430
பரிவொடு போக விடையது கேட்பாய்
அயல்வீட்(டில்) உரையசெய அனுமதி கேட்பாய்;
அவ்வா றுரையசெய அயல்வீ டேகினால்
கவனமாய்ப் பொருளு(ள்)ள கதைகளைச் சொல்வாய்
உள்ளகக் குறைகுற்றம் உரைத்தல்ஆ காது
இறக்கமாய் மாமியை இயம்பல்ஆ காது.
வளம்நீ போம்இல் மருகியார் கேட்பார்
கேட்பார்கள் எவரெனும் கிராமமங் கையர்கள்;
'உனக்கிங் கீவாளா உயர்வெ(ண்)ணெய் மாமி
உன்இல் முன்நாள் அன்னையைப் போல?' 440
ஒருக்காலும் இவ்வாறு உரைக்கா தேபதில்:
'மாமியார் எனக்குங்(கு) வழங்கார் வெண்ணெய்!'
அவளுனக் கென்றும் அளிப்பளே என்பாய்
அகப்பையில் நிறைவாய் அளிப்பளே என்பாய்
ஒருகால் கிடைத்திடும் உயர்கோ டையிலே
குளிர்நாளி **லிருந்தது கூடவே இருமை.
இன்னும் நான்சொல இவைநீ கேட்பாய்
இனியும் சொல்வதை இப்போ(து) கேட்பாய்
இந்தஇல் லகத்திலே யிருந்துநீ ஏகி
மற்றொரு வீடு வரும்போ தினிலே 450
உனையீன் அன்னையை ஒருகா(லும்) மறவேல்
தாயவள் உள்ளம் தளரவை யாதே;
உனைவளர்த் தெடுத்தவள் உனதுதா யன்றோ
முலையால் இனிதாம் அமிழ்துதந் துயர்த்தினள்
தரமாம் உடலால் தனையே தந்தாள்
வெள்ளையாம் உடலால் விரும்பிய தீந்தாள்;
இரவுகள் எத்தனை உறங்காக் கழித்தாள்
எத்தனை நாள்ஊணை எடுத்துண மறந்தாள்
தனித்ததொட் டிலில்உனைத் தாலாட்டு கையில்
சீராட்டி வளர்க்கையில் சிசுவாய்த் தானும். 460
தத்தம் அன்னையை தாம்எவர் மறப்பரோ
தாயவள் இதயம் தளர்வுறச் செய்வரோ
மரண உலகவர் புகாதிருக் கட்டும்
தூயநன் நெஞ்சோடு துவோனியின் உலகு:
மரண உலகம் கடும்விலை கொடுக்கும்
துவோனியின் உலகு கொடும்பரி சளிக்கும்
தாயினை மறந்த தரங்கெட் டோ ர்க்கு
தாய்தளர்ந் திடச்செய் தீமனி தர்க்கு;
துவோனியின் மகளார் சொலிலிகழ்ந் தேசுவார்
கன்னியர் சாப்புவிக் கலகஞ்செய் திடுவர்: 470
'அன்னையை மறத்தலும் எங்ஙனம் ஆனது?
தன்தாயை எவ்வாறு தளரவிட லானது?
அன்னையே உழன்றாள் அளவிலாத் துன்பம்
பெற்றவள் பட்டது பெருந்துய ரன்றோ
நீராவி யறையில் நீண்(டு)சய னித்தாள்
பரப்பிவைக் கோலைப் படுத்தாள் அதன்மேல்
அப்போ துனையீன் றளித்தவந் நாளில்
எளிய பிறவியே எடுத்துனைச் சுமக்கையில்!' "
முன்நிலத் தங்கோர் முதியோள் இருந்தாள்
மேலா டைதரி(த்த) வியன்முது கிழவி 480
கிராமக் களஞ்சியம் திரிந்து வருபவள்
அந்தவூர் வீதி அலைந்தே திரிபவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"சேவலொன் றினியதன் சோடிக் குரைத்தது
கோழியின் குஞ்சுதன் அழகுக் குரைத்தது
காகம் **பங்குனி மாதம் கரைந்தது
இனிய வசந்தத் திசைத்துப் பறந்தது;
பாடலை நானே பாடுதல் வேண்டும்
அடுத்தவர் பாடலை நிறுத்தலும் வேண்டும்: 490
அன்புளோர் உண்டு அவரவர் வீட்டில்
அன்புளோர் அவரவர் அருகிலே யுள்ளார்
எனக்கிலை அன்புளோர் இல்லமு மில்லை
என்றுமே அன்புளோர் இல்லா துள்ளேன்.
நீகேள் சோதரி நான்கூ றுகையில்
கணவனின் இல்நீ கால்வைக் கையிலே
ஏற்று நடந்திடேல் எண்ணம் கணவனின்
நான்பேதை ஏற்று நடந்ததைப் போல
**வானம் பாடிநா மணாளனின் எண்ணம்
என்பெருங் கணவனின் இதய மதுவே. 500
என்வாழ் நாளில் இருந்தேன் மலர்போல்
பற்றையில் வளர்ந்த பசும்புலா யிருந்தேன்
முன்வெடித் தெழும்பிய முளையா யிருந்தேன்
முகைத்து நீண்ட மொட்டா யிருந்தேன்
**தேன்சிறு பழமெனச் செப்பிடப் பட்டேன்
பொன்னெனப் பெருமையாய்ப் புகன்றிடப் பட்டேன்
தந்தையார் தோட்டக் காட்டுவாத் தானேன்
தாரா வாய்த்திரிந் தேன்தாய் நிலத்தில்
சகோதரன் அருகுநீர்ப் பறவையா யானேன்
சகோதரி பக்கம் தனில்சிறு **புள்நான்; 510
பாதையின் வழியில் பூவாய் நடந்தேன்
வயல்வெளி களிற்சிறு பழமா யிருந்தேன்
தொடர்நீர்க் கரைமணல் துள்ளித் திரிந்தேன்
மலர்நிறை மேடெலாம் மகிழ்ந்தா டிட்டேன்
பள்ளத் தாக்கிலே பாடித் திரிந்தேன்
ஒவ்வொரு குன்றிலும் உயர்ந்திசை பாடினேன்
வளமுறு சோலைகள் விளையாட் டிடமாய்
மகிழ்ச்சியின் இடமாய் மாறின தோப்புகள்.
தன்வா யாலே தான்நரி வீழ்ந்தது
கீரிதன் நாக்கால் கெட்டகப் பட்டது 520
கணவனின் வீட்டைக் காரிகை எண்ணினள்
மற்றொரு இ(ல்)லிற்கு வழிமுறை தேடினள்:
ஆதலால் மகளிர்க் காம்இயல் நெறியிது
மகளாய்ப் பிறந்தவள் மாறியே மனம்பின்
மணாளன் வீட்டிலே மருமக ளாவதும்
அடிமையாய் மாமியார் அகத்துக்(கு) ஏகலும்.
விழுந்தேனொர் அந்நிய வியன்நிலம் பழமென
மற்றொரு சிறுபழ மாய்ப்புனற் கிடந்தேன்
தண்செம் **பழம்நான் சஞ்சலங் கொண்டேன்
நிலநலப் **பழம்நான் நிந்தனை கண்டேன் 530
ஒவ்வொரு மரமும் உடனெனைக் கடிக்கும்
இன்னொரு **வகைமரம் என்னையே கிழிக்கும்
மிலாறு மரமது மிகஎனை வருத்தும்
**அரசெனைப் பார்த்து அதிரக் குரைக்கும்.
மணந்தபின் மாப்பி(ள்)ளை மனைக்குச் சென்றேன்
மாமியின் மனைக்கு மகிழ்ந்துகொண் டேகினர்
இங்ஙனம் அப்போ தெனக்குக் கூறினர்
மணந்தபின் அங்கே மணப்பெண் சென்றால்
ஆறாம் தேவதா ரமைத்தநல் வீடுகள்
அறைகளின் தொகையோ அதிலிரு மடங்காம் 540
காட்டின் எல்லையில் களஞ்சியக் கூடம்
பாதையின் மருங்கில் பன்மலர் மேடை
பள்ளத் தரையில் பார்லி வயல்கள்
புல்வெளி யருகினில் **புல்லரி சிப்புனம்
தொட்டிகள் நிறையத் தூற்றிய தானியம்
தூற்றாத் தானியத் தொட்டிகள் அனேகமாம்
கிடைத்த **காசுகள் இதுவரை நூறாம்
இனிவரப் போவன இன்னொரு நூறாம்.
பேதைநான் சென்றதும் பெற்றது பலவகை
ஏழைநான் கையினில் எடுத்தது ஒருவகை: 550
அகமதைத் தாங்கிய தாறே தூண்கள்
ஏழு மரங்களில் இல்லம் இருந்தது
கருணையில் லாமை காட்டில் இருந்தது
அன்புஇல் லாமை அமைந்தது தோட்டம்
பாவியென் பேணலில் பாதைகள் இருந்தன
தீய நினைவுகள் சோலைகள் அனைத்திலும்
தொட்டிகள் நிறையத் துயர்தரும் தொல்லைகள்
துயர்தரப் போகும் தொட்டிகள் அனேகம்
இகழ்வாம் சொற்கள் இதுவரை நூறாம்
இனிவரப் போவன இன்னொரு நூறாம். 560
எதையுமே பொருட்டாய் எண்ணிய தில்லைநான்
மாசில்லா வாழ்வை வாழமுற் பட்டேன்
முழுமதிப் பைப்பெற முயன்றனன் அங்கே
விரும்பினேன் அன்பை வென்றிட இவ்விதம்
வீட்டுள்ளே தீயினால் வெப்பமுண் டாக்கினேன்
விறகுச் சுள்ளிகள் சிராய்கள் பொறுக்கினேன்
நெற்றியைக் கதவில் நெட்டி முட்டினேன்
தலையைக் கதவு நிலையில் மோதினேன்;
அக்கத வம்வழி அன்னிய விழிகள்
நெருப்பிட மூலையில் நெருக்குறு நோக்கு 570
கூடத்து மத்தியில் கூர்கடை விழிநோக்(கு)
வெளியிலே இருப்பதோ வெறுப்பு நிறைந்தது;
வாயிலே வெந்தீ வரும்வெளி வீச்சு
நாக்கின் அடியிலே தீச்சுடர் பறக்கும்
கொடிய தலைவனின் தடிவா யிருந்து
அன்பிலா நாவின் அடிப்புற மிருந்து.
எதையும் பொருட்டாய் எண்ணிய திலைநான்
எப்படி யாயினும் ஒப்பேற்ற முயன்றேன்
அவர்களின் மத்தியில் அன்பாய் வாழ்ந்திட
சாந்தமாய் சுத்தமாய் தாழ்மையாய் வாழ்ந்திட; 580
முயலின் பாதமாய் முன்குதித் தோடினேன்
கீரியின் பாத நேர்சுவட் டேகினேன்
வெகுபொழு தாகி வீழ்ந்தேன் படுக்கையில்
இயைவை கறையில் எழுந்தேன் விழித்து;
ஆயினும் பேதைக் கங்கிலை மதிப்பு
ஏழைநான் அன்பை எங்கும் கண்டிலேன்
ஒருமலை பெயர்த்து உருட்டி யிருக்கலாம்
உயர்கல் இரண்டாய் உடைத்து மிருக்கலாம்.
வீணாய் ப் போனது நான்மா வரைத்தது
தானியம் கொழித்தது போனது பயனற 590
ஆங்கா ரங்கொள் மாமியின் ஊணாய்
கனலாம் தொண்டையால் கடித்தே விழுங்க
நீண்டமே சையிலே நேர்தலை யிடத்தே
தங்க விளிம்புத் தகுகிண் ணங்களில்;
பாவ மருமகள் யானோ உண்டது
திருகைக் கல்லில் சிதறிய மாவிலே
அடுப்படிப் பலகையே ஆனஎன் மேசை
மரத்தின் அகப்பைதான் வனப்புறென் கரண்டி.
எழுந்தது அடிக்கடி இன்னல் மனதிலே
மணாளன் வீட்டில் மருமக ளானதில் 600
படர்சதுப் புநிலப் பாசியை எடுத்தேன்
அவற்றில் ரொட்டியை அமைத்தேன் எனக்கு
கிணற்று நீரைக் கொணர்ந்தேன் வாளியில்
அதையே பானமாய் அருந்தினேன் நானும்;
பேதைநான் உண்டது தசைமீன் மட்டுமே
ஒருவகை **மீனையே உண்டேன் அபலையங்(கு)
மீன்வலை மீதுநான் மெதுவாய்ச் சாய்கையில்
நடுவில் தோணியில் நான்தள் ளாடையில்;
என்றும் பெற்றதே இல்லையோர் மீனும்
மாமியார் எனக்கு வழங்கிய உணவில் 610
ஒருநாள் தேவைக் குகந்த மீனினையோ
ஒருபொழு துணவுக் குகந்த மீனினையோ.
கோடையில் கால்நடைக் குணவு தேடினேன்
குளிரில் **கவர்க்கோல் கொடுதொழி லாற்றி
ஊதியம் பெற்றிடும் ஊழியர் போலவும்
கூலிக்கு வந்தகொத் தடிமையைப் போலவும்;
என்றும் மாமியின் இல்லக மதனிலே
எனக்குக் கிடைத்தவை இவையிவை அலுவல்கள்
சூடடிக் களம்மிகப் பெரியசூ டடிக்கோல்
சவுனா(வில்) கிடைத்தது தனிக்கன நெம்புகோல் 620
கடற்கரை வேலைக்(குக்) கடினமாய் ஒருதடி
பண்ணைமுற் றத்திலோர் பரும்எரு வாரி
நான்சோர் களைப்பை நம்பினோர் இலையே
இளைத்தி(ன்)னற் பட்டதை எண்ணினோர் இலையே
வீரர்கள் களைத்து விறலறச் சோர்ந்துளர்
பரிக்குட் டிகளும் படுவதுண் டிளைத்தி(ன்)னல்.
ஏழைப்பெண்நான் இங்ஙனம் நாள்தொறும்
வேலைநே ரத்தில் வேலைகள் செய்துளேன்
தோளால் யாவையும் தூக்கிச் சுமந்துளேன்;
அக்கா லம்போய் அடுத்து வந்தது 630
தகிஅனற் கிடங்கெனைத் தள்ளினர் இப்போ(து)
தீயதன் கரங்களில் திணித்தனர் இப்போ(து).
ஆத()ரம் இன்றி அலம்பும் கதைகள்
இகழும் கதைகள் இசைத்தனர் நாவால்
ஒழுங்குறும் எனது பழக்கத் தெதிராய்
வாகார் புகழ்கொளென் மதிப்பிற் கெதிராய்;
தலையில் வார்த்தை மழையாய்ப் பொழிந்தன
மொழியொடு பேச்சும் கதையாய் வளர்ந்தன
கொடிய நெருப்பின் கொழுங்கனற் பொறிபோல்
இரும்புறை விண்மழை பொழிந்தது போல. 640
ஆயினும் எனையிது அறமாற் றிலது
இப்படிச் சென்று என்நாள் கழிந்திடும்
ஆங்கா ரங்கொள் அக்கிழத் துதவியாய்
அனல்தொண் டைக்கு ஆனகூட் டாளியாய்;
ஆயினும் எனக்கின்னல் ஆனது இவ்விதம்
பெருந்துயர் வந்து பெருகிய திவ்விதம்
மணாளர் எனக்கு(ஓ) நாயாய் மாறினார்
கவினுறும் என்னவர் கரடியாய் மாறினார்
புறங்காட்(டித்) துயின்றார் அருகிலே அயின்றார்
புறங்காட்(டிச்) செய்தனர் புரியும் செயலெலாம். 650
இதையே எண்ணிநான் இருந்தழு தரற்றினேன்
களஞ்சிய அறையில் கடிதுசிந் தித்தேன்
நடந்த நாட்களை நான்நினைந் திட்டேன்
இளமைப் பொழுதெலாம் எண்ணிப் பார்த்தேன்
தந்தையின் நீண்ட முன்றில் பரப்பினில்
அன்புறும் அன்னையின் அகத்து வெளியினில்.
இவ்வா றடுத்து இயம்பத் தொடங்கினேன்
நானே கூறினேன் நனியிஃ துரைத்தேன்
'எனது அன்னை என்பவள் அறிவாள்
அப்பிளை எங்ஙனம் அடைவது என்பதை 660
வளர்ப்பது எங்ஙனம் வளர்முளை என்பதை,
ஆயினும் செடிநட அவளோ அறியாள்:
எழிலுறும் முளையை இவ்விதம் நட்டனள்
தீமை நிறைந்த தீய இடங்களில்
கொடுமை நிறைந்த கொடிய இடங்களில்
மிலாறு வேர்விட்ட மிகக்கடு மிடங்களில்
ஆயுள் முழுவதும் அழுவதற் காக
புணர்வாழ் நாளெலாம் புலம்புதற் காக.
என்தகு திக்கு இருக்கலாம் ஒழுங்கொடு
நன்மை நிறைந்த நல்ல இடங்களில் 670
பரந்தமுற் றத்துப் படர்நீள் வெளிகளில்
அகன்று விரிந்த அணிநிலத் தரைகளில்
சீரியர் ஒருவரின் சிறந்த துணையாய்
சென்னிறங் கொண்டவர் சீருறும் துணையாய்;
எனினும் மந்தர் இவருட னிணைந்தேன்
கொழுத்துப் பருத்த கொழுநரைச் சேர்ந்தேன்:
காணும் இவருடல் காகம் போன்றது
அண்டங் காக அகல்மூக் குடையவர்
ஓடிஇரைக் கலை ஓநாய் போன்றவர்
புறத்தோற் றமெலாம் கரடியைப் போன்றது. 680
பெற்றிருப் பேனே இப்படியொ ருவரை
ஆனகுன் றினிலே அலைந்து திரிந்து
தேவ தாருவைத் தெருவினில் எடுத்து
பூர்ச்சங் கட்டையைத் தோப்பினில் எடுத்து
ஒருபிடி புல்லால் உறுமுகம் செய்து
தாடியை அழுகிய பாசியால் படைத்து
பாறையால் வாயும் பதக்களித் தலையும்
கனலின் கரியினால் கண்களும் அமைத்து
மிலாறுவின் கணுக்களால் மிளிர்செவி செய்து
**மரக்கவர்க் கால்களும் அமைத்திருந் தாலே.' 690
இத்துணை துன்பத் திவ்விதம் பாடினேன்
பெருந்துயர் வந்ததால் பெருமூச் செறிந்தேன்
எழிலார் என்னவர் இதுகேட்க நேர்ந்தது
சுவரின் அருகிலே அவர்நிற் கையிலே;
அவ்விட மிருந்து அவர்வரும் வேளை
கூடத்துப் படிகளில் காலடி வைக்கையில்
அறிவேன் வருபவர் அவரே என்பதை
காலடி ஒலிஅடை யாளம் தெரியும்:
காற்றில் லாமலே கலைந்தது கேசம்
குழல்காற் றோட்ட மின்றி(யே) குலைந்தது 700
படர்சின முற்றதால் பல்லீறு தெரிந்தது
வெகுளியால் வெளியே விழிகள் வெறித்தன
கரத்திலே ஒருசிறு மரக்குச் சிருந்தது
வளைந்தகோ லொன்று மறுகக் கத்திலே
அதனால் என்னை அடிக்க விரைந்தனர்
தலையில் ஓங்கித் தந்து முடித்தனர்.
அந்திப் பொழுது அடுத்தே வந்தது
படுக்கைக் கென்னவர் படர்ந்தபோ தினிலே
கூடவே சாட்டையைக் கொண்டே சென்றார்
கொளுக்கி லிருந்த கொழுந்தோற் சாட்டையை 710
அதுவேறு யார்க்கு ஆகவு மல்ல
ஏழைப் பெண்ணாள் எனக்குத் தானது.
படுக்கைக் கியானும் படர்ந்தேன் பின்னர்
சென்றேன் உறக்கம் அந்தியில் வேண்டி
படுத்தேன் மணாளர் படுக்கையில் அருகில்
எனது மருங்கிலே என்னவர் படுத்தார்
முழங்கையால் எனக்கு முழுமையும் தந்தார்
வெறுப்புறும் கைகளால் வெகுவாய்த் தந்தார்
கொடிச்செடிக் குச்சியால் கொடுத்தார்எவ் வளவோ
கடற்பசு எலும்பின் கைப்பிடிச் சவுக்கிலும். 720
படுகுளிர் அவரது பக்கத் தெழுந்தேன்
இருங்குளிர்ப் படுக்கையி லிருந்தே எழுந்தேன்
மணாளர் துரத்தி வந்தார் எனையே
வைதே விரட்டினர் வாயிலில் வெளியே
குறுகிக் கரங்களென் கூந்தலுள் நுழைந்தன
கையால் கூந்தலைக் கலைத்துத் துளாவினார்
குலைத்தனர் அலையக் கூந்தலைக் காற்றில்
பரந்து வளியிலே விரிந்திடச் செய்தனர்.
இதன்பின் செய்வது எவ்வழி முறைநான்
எவ்வறி வுரையினை ஏற்று நடப்பது? 730
உருக்கின் காலணி உண்டென் னிடத்திலே
இருந்தது செப்பினால் இயைந்த பட்டியும்
அவ்வீட் டின்சுவர் அருகினில் நின்றேன்
பாதை எல்லையின் ஓசையைக் கேட்டேன்
கோபம் சிலகணம் குறைந்திடு மென்றும்
ஆத்திரம் அடங்கிடும் அவர்க்கென எண்ணினேன்
ஆயினும் அவர்சினம் அடங்கவே யில்லை
அமைதியோர் காலும் அடைந்ததே யில்லை.
கடையில் என்னைக் கடுங்குளிர் பிடித்தது
வெறுப்பு வந்து வேகமாய்ச் சேர்ந்தது 740
அவ்வீட் டின்சுவர் அருகில்நான் நிற்கையில்
கதவின் அருகிலே காத்துநிற் கையிலே;
சிந்தனை செய்தேன் சீருற நினைத்தேன்:
இங்ஙனம் பொறுத்து இருப்பது சிரமம்
கடினம் சுமப்பது காலநீள் வெறுப்பை
இகல்நீள் கால இகழ்ச்சியை ஏற்பது
இந்தப் பிசாச எதிர்க்கண மத்தியில்
அரக்கர்கள் வாழ அமைந்தஇக் கூட்டினில்.
எழிலுறும் எனதுஇல்ல(த்)தை விட்டேன்
அருமையில் லத்தை அகன்று விலகினேன் 750
பலமிலா நிலையிலும் அலையத் தொடங்கினேன்
அலைந்தேன் சேற்றிலும் அலைந்தேன் நிலத்திலும்
பரந்தஆ ழத்து புனலிலும் அலைந்தேன்
சென்றேன் சகோதரன் செறிவயல் எல்லையும்;
காய்ந்த மரங்களும் கூவின அங்கே
இசைத்தது முடியுடை எழில்தேவ தாரு
காகங்கள் எல்லாம் கரைந்தன கூடி
**பறவைகள் கூடிப் பண்ணொடு பாடின:
'இங்கே இருப்பதுன் இல்லமே யல்ல
இங்கே இருப்பதுன் பிறப்பிடம் அல்ல.' 760
எனக்குஅக்கறை இவைகளில் இல்லை
அண்மினேன் சகோதரன் அழகில்(ல) முற்றம்;
வீட்டின் வாயில் விளம்ப லாயிற்று
முற்றமும் என்னிடம் முறைப்பா டுரைத்தது:
'இல்ல(த்)தை நோக்கி எதற்காய் வந்தனை
எளிய பிறப்பே எதுகேட் டிவர்ந்தனை?
நின்(தந்)தை யிறந்து நெடுநா ளானது
உனைச்சுமந் தழகிபோய் ஓய்ந்ததே பலநாள்
நினக்கோர் அந்நியன் நிகர்த்தவன் சோதரன்
அவன்மனை(வி) ரஷ்ஷியா நாட்டாள் அனையளே.' 770
எனக்கு அக்கறை இவைகளில் இல்லை
வாயில் வழியாய் வந்தேன் வீட்டினுள்
கதவின் கைப்பிடி கடிதே பற்றினேன்
கைபிடி எனக்குக் கனகுளி ரானது.
வாயிலின் வழியாய் வந்ததும் வீட்டினுள்
கதவின் பக்கமாய் காத்துநின் றேன்கணம்;
வீட்டின் தலைவி மிகுகர் வத்தாள்
அருகெனை வந்து அணைக்கவு மில்லை
வரவேற் றுக்கரம் வழங்கவு மில்லை;
நானும் அவள்போல் நல்லகர் வத்தாள் 780
அருகுநான் அவளை அணைக்கவு மில்லை
கைகொடுத் தவளைக் கணிக்கவு மில்லை;
அடுப்பின் மீது அங்கைகள் வைத்தேன்
அடுப்பின் கற்கள் அனைத்தும் குளிர்ந்தன
திருப்பினேன் கைகள் நெருப்பின் பக்கமாய்
நெருப்பின் கரிகள் நேராய்க் குளிர்ந்தன.
வாங்கிலே சகோதரன் சோம்பி யிருந்தான்
அடுப்பின் பீடம் வெறித்துப் பார்த்தான்
பணைத்தோள் கரித்துகள் பலவடி யுயரம்
பருவுடல் இருந்ததோ பலசாண் அளவு 790
உயர்தலைச் தூசு ஒருமுழத் தளவு
கரிப்புகைப் படிவு அரையடி யளவு.
சகோதரன் அதிதி தன்னையே கேட்டான்
என்னையே புதிதாய் எழுந்ததாய்க் கேட்டான்:
'அன்னியர் எங்கிருந்து அலைகடந் தெழுகிறார்?'
அதற்குநான் உத்தரம் அளித்தேன் இவ்விதம்:
'தெரிந்தில தோவுடன் பிறந்தசோ தரியை
அறிந்திலை யோஉன் அன்னைபெற் றவளை?
ஒருதாய் வயிற்றுப் பிறந்தபிள் ளைகள்நாம்
ஒருபுள்(தா) லாட்டில் உயர்ந்தவர் நாங்கள் 800
ஒருவாத் தடைகாத் துதித்தகுஞ் சுகள்நாம்
ஒருகான் கோழியின் குடம்பையில் வளர்ந்தவர்.'
அப்போ(து) சோதரன் அழுதனன் இரங்கி
கண்களில் பெருகிக் கண்ணீர் வடிந்தது.
சகோதரன் பின்னர் தன்மனைக் குரைத்தான்
இனியதன் மனைவிக் கிவ்வா றியம்பினன்:
'என்சகோ தரிக்கு எடுத்துவா உணவெதும்!'
ஏளன விழியுடன் எடுத்துவந் தாள்மனை(வி)
அடுக்களை யிருந்து **இலைக்கறி ரசத்தை
ரசத்துக் கொழுப்பைச் சுவைத்திருந் ததுநாய் 810
நாயொன்று உப்பை நக்கி யிருந்தது
கறுப்புநாய் உணவை ருசிபார்த் திருந்தது.
சகோதரன் பின்னர் தன்மனைக் குரைத்தான்
இனியதன் மனைவிக் கிவ்வா றியம்பினன்:
'விருந்தா ளிக்கு அருந்து'பீர்' கொண்டுவா!'
ஏளன விழியுடன் எடுத்துவந் தாள்மனை(வி)
விருந்தா ளிக்கு வெறும்நீர் மாத்திரம்
அதுவும் சுத்தமாய் அமைந்திட வில்லை
கண்களைச் சகோதரி கழுவிய நீரது
அரியமைத் துனிமுகம் அலம்பிய நீரது. 820
சகோதரன் இல்லம் தனிலிருந் தகன்றேன்
பிறந்தகம் விட்டுப் பிறிதிட மலைந்தேன்
பேதைநான் நடந்து பிறநிலந் திரிந்தேன்
அலைதலும் திரிதலும் அதுபே தைக்காம்
நீர்க்கரை யோரம் ஏழைநான் நடந்தேன்
ஏழைநான் அலைந்து என்றும் திரிந்தேன்
என்றும் அன்னியர் இல்லத்து வாயிலில்
வெளியார் வாயிலின் வெளிக்கத வருகில்
எதிர்க்கரை வாழும் ஏழைப் பிள்ளையாய்
கிராமமா தரிக்கும் கீழ்நிலைப் பேதையாய். 830
இப்போ(து) பலரைநான் என்கணாற் பார்க்கிறேன்
எத்தனை யோபேர் இவ்வித முள்ளனர்
வெறுப்புறும் குரலிலே வீசுவோர் வார்த்தைகள்
கொடிய குரலினைக் கொண்டு தாக்குவர்;
ஆயினும் இல்லையே அதிகபேர் என்னிடம்
அன்புறும் சொற்களை அளிக்கும் மானுடர்
இனியநல் வாயால் இதமாய்ப் பேசுவார்
அடுக்களை யதற்கே அன்பா யழைப்பவர்
மழையிலே நனைந்துநான் வந்திடும் வேளை
கொடிய குளிரில்நான் கொடுகிய நேரம் 840
ஆடையை உறைபனி மூடிய போது
பனிமழை ஆடையில் படிந்திட்ட காலை.
இளமையாய் ஒருகால் இருந்தநாட் களிலே
இப்படி வருமென இருந்திலேன் நம்பி
நூறுபேர் ஒன்றாய்க் கூறிய போதிலும்
நாக்குகள் ஆயிரம் நவின்றிட்ட போதிலும்
இத்துணை துயரம் ஏற்படும் எனக்கென
இந்தநாட் களிலே இப்படி வருமென
எனினும் வீழ்ந்தது என்தலை வீழ்ந்ததே
சுமைகளை என்கரம் சுமந்தது சுமந்ததே." 850
பாடல் 24 - மணமகனும் மணமகளும் புறப்படுதல். TOP
அடிகள் 1 - 264 : மணமகன் மணமகளை எவ்விதம் நடத்த வேண்டும் என்றும் அவளைக் கொடுமைப் படுத்தக் கூடாது என்றும் மணமகனுக்கு அறிவுரை கூறுதல்.
அடிகள் 265 - 296 : ஒரு முதியவன் தனது மனைவியை, தன்னை விரும்பும்படி எப்படி மாற்றினான் என்ற அனுபவத்தைக் கூறுதல்.
அடிகள் 297 - 462 : மணமகள் தனது பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிவதை உணர்ந்து அனைவரிடமும் கண்ணீருடன் விடை பெறுகிறாள்.
அடிகள் 463 - 528 : இல்மரினன் மணமகளைச் சறுக்கு வண்டியில் ஏற்றிப் பயணித்து மூன்றாம் நாள் மாலை வீட்டை அடைகிறான்.
அரிவைக் கிப்போ(து) அறிவுரை கிடைத்தது
மணமகள் தனக்கு வழிமுறை கிடைத்தது;
அரியஎன் சோதரற் கடுத்துநான் சொல்வேன்
வாயினால் எனது மாப்பிளைக் குரைப்பேன்:
"மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சோதர னைவிடத் தூயசீ ருடையரே!
அன்னையின் மக்களில் அன்புமிக் குடையரே!
பிதாபெற்ற மகவில் பெரும்பண்பு உடையரே!
நான்மொழி கையிலே நன்குநீர் கேட்பீர்,
நான்மொழி கையிலும் நான்உரைக் கையிலும், 10
இசைபாடு மிச்சிறு **இளம்புள் பற்றி,
கொண்ட நின்சிறிய கோழியைப் பற்றி.
நவிலுக மாப்பிளாய், நன்றிநின் அதிர்ஷ்டத்(துக்கு)
நல்லதோர் பேற்றின் நலம்கிடைத் ததற்கு
நன்றி புகல்கையில் நன்கதைக் கூறும்:
நலத்தையே பெற்றீர் நலம்சந் தித்தீர்
படைத்தவன் உமக்குப் பயனுள தளித்தான்
இரக்கமுற் றிடுமவன் இனியதொன் றீந்தான்!
மனையாள் பிதா(வு)க்கு மனம்நிறை நன்றிசொல்(க)
அதற்கும்மே லாக அன்னைக்கு நன்றிசொல்(க) 20
பெண்ணையித் தகையளாய்ப் பேணிய செயற்கு
மணப்பெண்இத் தகையளாய் மாண்பொடீன் றதற்கு.
இருப்பவள் அருகில் இளம்புனி தப்பெண்
உம்முடன் இணைந்தவள் உள்ளொளி நிறைந்தவள்
வாய்த்தவள் உமக்கு வண்ணமாம் வெண்மையள்
அழகுளாள் நும்காவ லதனுளே வந்தவள்
உன்மருங் கிருப்பவள் உறுதிமிக் குடையவள்
காரிகை நின்அயல் கன்னமே சிவந்தவள்
போரடி களத்திலே புதுப்பலப் பாவையள்
வைக்கோல்தூற் றிடவ(ல்)ல வனப்பான வனிதையள் 30
துணிமணி அலம்பலில் துடிப்பான தையலாள்
துணிகளை வெண்மையாய்த் தோய்த்திடும் திறனுளாள்
நூல்நூற்றல் நுட்பமே மேலாகக் கற்றுளாள்
கருமமாம் துணிநெய்தல் தரமிகச் செயவலள்.
கைத்தறி அச்சொலி கனதொலை ஒலிக்கும்
குயிலொன்று மலையுச்சி கூவிடும் ஒலிபோல்;
நுவல்மகள் கைத்தறி நூனாழி கலவெனும்
காட்டுளே ஒருகீரி கலகலத் திடல்போல்;
நூல்சுற்றும் சில்சுற்றி நுட்பமாய்ச் சுழலும்
அணில்வாயில் சுழல்கின்ற **கூம்புக்காய் அதுபோல்; 40
அக்கிரா மத்தோர் அமைதியாய்த் துயின்றிலர்
நாட்டின் மாந்தர்கள் நன்றாய்த் துயின்றிலர்
சட்டம்கைத் தறியினில் சடசட ஒலியினால்
நுவல்மகள் கைத்தறி நூனாழி ஓசையால்.
மாப்பிள்ளை யாரே, வளர்இள மையரே!
கணவரா னவரில் கவினுடை யவரே!
அரிவாள் கூர்மையாய் ஆக்குவீர் உருக்கில்
சிறப்புமிக் கொருபிடி யதற்கிணைத் திடுவீர்
வைப்பீர் செதுக்கி வாயிற் புறமதை
மரத்துக் கட்டையில் அடித்திறுக் கிடுவீர்; 50
பகலொளி வந்து பட்டொளிர் நேரம்
புற்றரை நிலத்துப் போவீர் மாதுடன்
பார்ப்பீர் அங்கே படபடக் கும்புல்
கடின வைக்கோல் கலகலப் பதனை
கிளர்கோ ரைப்புல் கிலுகிலுப் பதனை
**காரப் பூண்டுகள் கவின்மெது வசைவதை
மேட்டு நிலங்கள் மிகுமட்ட முறலை
நாற்றுச் செடிகள் நனிமுறி படலை.
மற்றொரு நாளிவ் வாறே வந்ததும்
நல்ல நூனாழி நங்கைக் களிப்பீர் 60
அடர்பா(வு) பலகையும் அளிப்பீர் பொருத்தமாய்
தரப்பா வோடுஞ் சட்டமும் தருவீர்
மெல்லநற் செதுக்கிய மிதிக்கும் பலகையும்
கைத்தறிக் கான கனபொருள் தருவீர்
பூவையைக் கைத்தறிப் பொறியிலே நிறுத்தி
பாவோடு பலகையைப் பைங்கரத் தளிப்பீர்:
அப்போநூ னாழி அசையும் ஒலியெழும்
கைத்தறிப் பொறியும் கடகடத் தோடும்
கிராமம் கைத்தறிச் சத்தம் கேட்கும்
அதையும் மிஞ்சும்நூ னாழியின் ஓசை. 70
வயதுறும் பெண்கள் வியப்பாய் நினைப்பர்
கிராமப் பெண்கள் கேட்பர்இவ் வாறு:
'நேராய் யார்துணி நெய்வ(து) இப்போது?'
தகுந்ததோர் பதிலைத் தருவிர்அப் போது:
'சொந்தஎன் அன்பவள் துணிகள் நெய்கிறாள்
இதயத் தினியவள் எழுப்புவள் ஓசை;
எங்கெனும் துணியில் இயைஒழுங் கிலதா
அசைவில்நூ னாழி இழைதப் பியதா?'
'இல்லை துணியில் ஒழுங்கழிந் திலது
அசைவில்நூ னாழி இழைதப் பியதிலை: 80
நேர்நிலா மகளார் நெய்தது போல
பெருங்கதிர் மகளார் பின்னிய வாறு
**தாரகைக் குலத்தின் தரமார் கைத்திறன்
விண்மீன் மகளின் மிகுவனப் புச்செயல்.'
மாப்பிள்ளை யாரே, மதிப்புளச் சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்போ திங்கிருந்(து) எழப்போ கின்றீர்
இப்போ திங்கிருந்(து) எழுகிறீர் பயணம்
உமக்கு வாய்த்த ஒளிரிளம் பெண்ணுடன்
அழகு படைத்த அருங்கோ ழியுடன் 90
**சிட்டுக் குருவியை விட்டிடீர் அலைய
இசைபாடு மிந்த இன்சிறு **பறவையை
நன்நீர்க் கரைவழி நகரவிடாதீர்
வேலி மூலையில் விடாதீர் செல்ல
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை நிலத்திலும் படர விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
நவில்நீர்க் கரைவழி நகர்ந்ததே யில்லை
வேலியின் மூலைக் கேகிய தில்லை 100
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை நிலத்திலும் படர்ந்ததே யில்லை.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்பெண் உமதவள் ஏகவி டாதீர்
அன்புக் குரியளை அகலவி டாதீர்
திகழ்கோடி மூலையில் திரியவி டாதீர்
அமைகோடி மூலையில் அலைய விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
முந்திய அன்னையின் இல்லத்தி லில்லை 110
திகழ்மூலை கோடியில் திரிந்ததே யில்லை
அமைகோடி மூலையில் அலைந்ததே யில்லை;
இருப்பாள் சாளரப் பீடம்மெப் போதும்
இருப்பாள் நிலத்தில் எழில்தரை மத்தியில்
மாலை தந்தையின் மகிழ்ச்சி வடிவாய்
அதிகாலை அன்னை அன்புமா யிருப்பாள்.
அதிர்ஷ்டமில் கணவ அனுதினம் வேண்டாம்
இந்தக் கோழியை என்றும் அனுப்புதல்
**சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில் 120
**வைக்கோல் அரைத்துமா ரொட்டி சுடற்கு
இடித்திடத் தேவ தாரெழிற் பட்டை.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில்
வைக்கோல் அரைத்துமா ரொட்டி சுடற்கு
பட்டைத்தா ரிடிக்கவும் படர்ந்தன ளேயிலை.
ஆயினும் நீரிக் கோழியை அனுப்பலாம்
குவியலாய்த் தானியம் குவிந்துள்ள மேடு 130
ஒருகொள் கலத்தை வெறுமையாக் கற்கும்
தானியக் கலத்தில் தானியம் பெறற்கும்
பருமனாய் ரொட்டி பலசுட் டெடுக்கவும்
தானியப் பானம் தரமாய் வடிக்கவும்
தட்டிமாக் கோதுமை ரொட்டிகள் சுடவும்
உணவுக்கு மாப்பசை அமைக்கவு மனுப்பலாம்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
எங்கள்இவ் வாத்துக் கிந்நிலை வேண்டாம்
ஏங்கித் துயருற் றிவளழ வேண்டாம் 140
ஒருக்கால் துயருறும் ஒருநிலை வந்தால்
வனிதைக் கேக்கமும் வருத்தமும் வந்தால்
புகல்பழுப் புப்பரி பூட்டுமேர்க் காலில்
அல்லது வெள்ளைக் கலங்கா ரம்செய்(க)
தந்தையின் இல்லம் தையலைக் கொணர்க
அவளே பழகிய அன்னையின் இல்லம்.
இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
இசைபாடு **பறவைக் கெப்போதும் வேண்டாம்
நீர்பெறும் அடிமையாய் நினைக்கவும் வேண்டாம்
கூலிக்கு வந்தளாய்க் கொள்ளவும் வேண்டாம் 150
தடைபோட வேண்டாம் களஞ்சியக் கூடம்
பூட்டவும் வேண்டாம் புறவெளி நிறுத்தி!
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
தம்முடை அடிமையென் றெண்ணிய தில்லை
கூலிக்கு வந்ததாய்க் கொண்டது மில்லை
தடைபோட்ட தில்லைக் களஞ்சியக் கூடம்
பூட்டவு மில்லைப் புறவெளி நிறுத்தி.
கோதுமை ரொட்டியைக் கொள்துண் டாக்குவள்
கோழிமுட் டைகளைத் தேடிப் பொறுக்குவள் 160
பாற்கலங் களையெலாம் பார்த்தே அத்துடன்
கலங்களில் மதுவையும் கண்கா ணிப்பாள்
காலையில் திறபடும் களஞ்சியக் கூடம்
மாலையில் பூட்டுதல் மட்டுமே வழக்கமாம்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
பக்குவ மாகவே பார்த்தால் பெண்ணைநீர்
நினைவில்அவ் வளவும் நிற்கும் நன்மையாய்:
மாமனார் வீடு நீர்வரும் வேளையில்
அன்பு மாமியின் அகம்வரு வேளையில் 170
உண்டிடச் சிறந்த உணவுகள் கிடைக்கும்
உண்டிட உணவுடன் அருந்திடப் பானமும்
ஆனஉம் குதிரைக் கவிழ்த்தலங் காரம்
தொழுவம் அதனைத் தொட்டே கொணர்ந்து
உண்ணவும் அருந்தவும் உகந்தெலா மீந்து
**உதவலாம் கூலப்புல் லரிசியோர் பெட்டியும்.
எங்கள் பெண் பற்றி இவ்விதம் சொ(ல்)லாதீர்
இசைபாடு மெம்சிறு **பறவையைப் பற்றி
உறவினர் அவட்கு உற்றிலர் எ(ன்)னாதீர்
உயர்சுற் றத்தார் இலர்என் றுரையீர்; 180
எமதிப் பெண்மணிக் கிருக்கிறா ரனைவரும்
உயர்சுற் றத்தார் உறுபெரு மினசனம்
**ஒருபடி **யவரை உயர்விதை விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருமணி மட்டுமே!
ஒருபடி சணல்விதை உவந்தே விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருநார் மட்டுமே!
அதிர்ஷ்டமில் மணாள, அறவே வேண்டாம்!
சுந்தரி இவளைத் துன்புறுத் தாதீர்
அடிமைச் சவுக்கால் அறிவுரை வேண்டாம்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வேண்டாம் 190
ஐந்துசாட் டைகளால் அழவிட வேண்டாம்
குடிசையின் வாசலில் குழறவைக் காதீர்
என்றுமே இவளுக் கிவ்விதம் நேர்ந்ததில(து)
தாதையின் வீட்டிலோர் போதுமே நிகழ்ந்தில(து)
அடிமைச் சவுக்கால் அறிவுரை புகன்றிலர்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வைத்திலர்
ஐந்துசாட் டைகளால் அழவும் வைத்திலர்
குடிசையின் வாசலில் குழறவும் வைத்திலர்.
அவளின் முன்னால் சுவர்போல் நிற்பீர்
நிற்பீர் கதவின் நிலைபோல் அவள்முன் 200
அடிக்கும் மாமியின் அல்லல்வை யாதீர்
மாமனார் ஏச்சால் மலங்கவைக் காதீர்
வேறெவ ராலும் வெறுக்கச்செய் யாதீர்
அயல்வீட் டார்குறை கூறவை யாதீர்!
அடிக்கலாம் என்று அறைந்தனர் வீட்டார்
துன்புறுத் தலாமெனச் சொல்லினர் மறுசிலர்
ஆயினும் பெண்ணைநீர் அடிக்கவே முடியா
ஏழையாள் துன்புற இதயம்நீர் தாங்கீர்
ஆண்டொரு மூன்று அவட்காய் இருந்தீர்
வெகுநாள் அவளை விரும்(பி)எதிர் பார்த்தீர். 210
மங்கைக் கறிவுரை வழங்குக, மாப்பிள்ளாய்!
**அப்பிள் பழம்போல் அவள்கற் பிப்பீர்
அரிவைக் கமளி(யில்)ஆ லோசனை புகல்வீர்
கதவின் பின்புறம் கற்பிப் பீர்பெண்
ஓராண்(டு) காலம் ஓரிடம் பயிற்றுவீர்
வாய்ச்சொலால் முதலாம் ஆண்டுகற் பிப்பீர்
இரண்டாம் ஆண்டுகண் சிமிட்டால் புகட்டுவீர்
மூன்றில் கால்நிலத் தூன்றிப் பயிற்றுவீர்.
காரிகை இனைத்தையும் கவன மெடாமல்
அவதான மின்றி அசட்டை செய் திட்டால் 220
**கோரை இனத்திலோர் கொழும்புல் பறிப்பீர்
**பரிவால் ஒன்றைப் பற்றையில் ஒடிப்பீர்
அதைக்கொண் டவளுக் கறிவுரை புகல்வீர்
நான்காம் வருடம் நாரிக் கோதுவீர்
பரிவால் கொண்டு பைய அடிக்கலாம்
குற்றுவீர் மங்கையைக் கோரையின் நுனியால்
ஆயினும் சவுக்கால் அடித்த லாகாது
கோல்கொ(ண்)டு திருத்துதல் கூடா தரிவையை.
காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால் 230
பற்றையில் ஒருசிறு குச்சியை ஒடிப்பீர்
மிலாறுவை ஒடிப்பீர் வெங்கான் பள்ளம்
மடிப்பில்மேற் சட்டையில் மறைத்ததைக் கொண்டு
அயல்இல் மனிதர் அறியா(து) வருவீர்;
நச்சினாள் பார்க்கவே குச்சியைக் காட்டுவீர்
ஆசைத்துக் காட்டுவீர் அடித்தல் ஆகாது.
காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால்
கோல்கொண் டவட்கு கூறுவீர் அறிவுரை
மிலாறுவின் கிளையால் நடத்துவீர் பாடம் 240
நான்கு சுவர்களின் நடுவில் நடத்துவீர்
கூறுவீர் பாசியால் **மூடிய அறையிலே
அடித்திடல் புற்றரை மேட்டி லாகாது
அகல்வயற் காட்டிலும் அடித்த லாகாது:
சத்தமும் கிராமம் சாரும் அவ்விதம்
பக்கவீட் டுக்குப் படர்ந்திடும் கலகம்
அரிவையின் அழுகை அயல்வீ டடையும்
குழப்பம் பெரிதாய்க் கொழுங்கா டார்ந்திடும்.
என்றும் தோள்களில் வெப்பம் ஏற்றிடும்
மெல்லியள் பின்புறம் மென்மையா கட்டும் 250
கண்ணிலோர் போதும் தண்டனை ஆகா(து)
அவ்விதம் காதிலும் அறைதலா காது:
திரட்சியாய் ஏதெனும் புருவத் தேற்படில்
கண்களில் நீலமாய்க் கட்டிகள் வந்தால்
மைத்துனர் அதனை வந்தாய்ந் திடுவார்
மாமனார் ஏதெனும் மனத்தெண் ணிடுவார்
கிராமத் துழவோர் இருகண்(ணால்) பார்ப்பார்
நங்கையர் கிராமத்(தில்) நகைப்பரிவ் விதமே:
'சண்டைக் கிவளெங் கேனும் போனளோ
போரில் சமரில் போய்ப்பங் கேற்றளோ 260
அல்லது ஓநாய் அருகுபோய்க் கிழித்ததோ
அல்லது கரடியும் அறைந்ததோ காட்டில்
அல்லது கீறிய ஓனாய் கணவனோ
கணவனே காட்டிக் கரடியா யினனோ?' "
அடுப்பிலே முதியதோர் ஆடவன் இருந்தான்
இருந்தான் தேசாந் திரியவன் கணப்பில்
அடுப்படி முதியவன் அங்கே சொன்னான்
சொன்னான் தேசாந் திரியவன் கணப்பில்:
"ஏழைமாப் பிள்ளாய், இவ்விதம் செய்யேல்,
மாதவள் கருத்து மதிப்புத் தராதீர் 270
மகளிரின் கருத்து **முகிற்புள் நாக்கு
அதிர்ஷ்டமில் பயல்நான் முடித்ததைப் போல!
வாங்கினேன் இறைச்சி வாங்கினேன் ரொட்டி
வாங்கினேன் வெண்ணெய் வாங்கினேன் 'பீரு'ம்
எல்லா வகையாம் நல்மீன் வாங்கினேன்
பலபல சுவையுறும் பல்பொருள் வாங்கினேன்
சொந்தஎன் நாட்டில் தோன்றிய 'பீரு'ம்
அயல்நாட்(டுக்) கோதுமை அதையும் வாங்கினேன்.
ஆயினும் நன்மை(யாய்) ஆனதொன் றில்லை
பயனுள கருமம் செயலெதும் நிகழ்ந்தில; 280
அரிவையும் வீட்டின் அகப்புறம் வந்திடில்
புரிகுழல் பிய்ப்பவள் போல வருவளே
வதனம் மாற்றி மறுவடி வாக்குவள்
உருட்டி விழிகளைத் திரட்டியே நோக்குவள்
ஏசுவள் ஆத்திரம் எப்போதும் கொ(ண்)டே
வெறுப்புறும் வார்த்தைகள் புறப்படும் அக்கணம்
உடலால் பருத்த உலுத்தனென் றழைத்தாள்
மரமண் டையென வார்த்தையால் குரைத்தாள்.
முறையொன்(று) புதிதாய் மூண்டது மனத்தில்
வகையுறக் கண்டனன் மறுவழி யொன்றை: 290
மிலாறுக் கிளையை முறித்தஅவ் வேளை
அருமப் பறவையென் றணைத்திட வந்தாள்;
சூரைச் செடியின் தொடுமுடி யொடிக்கையில்
அன்பே யென்று அவள்தலை குனிந்தாள்;
அலரிச் செடியின் தடியினால் வைக்கையில்
கழுத்தை யணைத்தாள் கட்டி பிடித்தாள்."
பேதையிப் போது பெருமூச்செறிந்தாள்
கடுமூச் செறிந்து களைத்துச் சோர்ந்தாள்
அவள்பின் அழுது விழிநீர் விட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 300
"மற்றயோர் புறப்படும் மணிப்பொழு தணைந்தது
மற்றயோர் காலமும் நேரமும் வந்தது
என்புறப் பாட்டு இரும்பொழு தணைந்தது
என்கால நேரம் இங்குவந் தடுத்தது
பிரிந்து புறப்படல் பெருந்துய ராயினும்
விடைபெற் றேகுமிவ் வேளையும் நேரமும்
கீர்த்திகொள் இந்தக் கிராமத் திருந்து
அழகாய் அமைந்தஇவ் வகல்தோப் பிருந்து
வனப்பாய் நானும் வளர்ந்தவிவ் விடத்தில்
இனிப்பாய்ச் சிறப்பாய் எழுந்தவிவ் விடத்தில் 310
வளர்ந்து வந்தஎன் வாழ்நாள் முழுவதும்
குழந்தைப் பருவம் கழித்தநாள் முழுவதும்.
இதற்குமுன் என்றுமே எண்ணிய தில்லை
என்றும்என் வாழ்நாள் நம்பிய தில்லை
இனிவிடை பெறுவனென் றெண்ணிய தில்லை
பிரிந்துபோ வேனெனத் தெரிந்துநம் பியதிலை
அரியஇக் கோட்டையின் அயற்புறத் திருந்து
பரந்த இம்மேட்டின் படர்புயத் திருந்து;
இப்போ நினைக்கிறேன் என்விடை பெறலை
இப்போ(து) பிரிந்து ஏகல்நம் புகிறேன் 320
வெறுமையா யினபிரி யாவிடைச் சாடிகள்
விடைபெறும் 'பீரு'ம் முடிந்தது குடித்து
வண்டியும் விரைவில் வழிதிரும் பிடலாம்
முன்புறம், வெளியே பின்புறம் வீட்டே
ஒருபுறம் தந்தையின் உயர்களஞ் சியவறை
மறுபுறம் தொழுவம் வழிபார்த் திருக்கும்.
இப்போ(து) பிரிந்துநான் எதைக்கொண் டேகுவேன்
பேதைப் பெண்நான் பிரிவிடைச் செல்கையில்
தாய்ப்பால் விலைக்குத் தருவது எதைநான்
அத்துடன் தந்தையார் ஆற்றுநன் மைக்கெலாம் 330
சகோதரன் அன்புக்(கு) தருவது எதுகொல்
சகோதரி காட்டிய கனிந்த பண்புக்கு?
தந்தாய், உமக்குச் சாற்றுவேன் நன்றி
முன்னாள்(என்) வாழ்வு முழுதும் மகிழ்ந்ததால்
சென்றநாட் களில்நான் உண்டஊண் அதற்கு
சிறப்பாய்க் கிடைத்த சிற்றுண்(டி) வகைக்கு.
தாயே, உமக்குச் சாற்றுவேன் நன்றி
இளமைதா லாட்டில் எனைவளர்த் ததற்கு
ஏந்தியே சிறுநாள் எனைவளர்த் ததற்கு
முலைப்பா லுட்டி முன்வளர்த் ததற்கு. 340
சோதரா, அடுத்துநான் சொல்லுவேன் நன்றி
என்னருஞ் சோதரா, என்னருஞ் சோதரி,
குடும்பத் தோர்க்கெலாம் கொடுப்பேன் திருப்பி
என்னோடு வளர்ந்த எல்லா ருக்கும்
என்னோடு வாழ்ந்த எல்லா ருக்கும்
வாழ்வில் கூடிநான் வளர்ந்தஎல் லார்க்கும்.
என்இன் தந்தையே இப்போ(து) வேண்டாம்
என்அன் பன்னையே இப்போ(து) வேண்டாம்
என்பெருஞ் சுற்றத்து எவருஞ்செய் யாதீர்
இரும்புகழ் பெற்றஎன் இனசனக் கணத்தில் 350
மனதிலே யாருமே வருத்தம் கொள்ளாதீர்
இனிப்பெரும் துயருக்கு இடம்கொடுக் காதீர்
வேறொரு நாடுநான் ஏகவிருப் பினும்
பிரிந்து புறப்பட்டுப் போக விருப்பினும்!
இயற்றியோன் பருதி என்றுமே ஒளிரும்
இயற்றியோன் மதியும் என்றுமே திகழும்
சுவர்க்கத்து விண்மீன் சுடரும்எப் போதும்
விரிந்தெங்கும் பரவும் விண்மீனின் கூட்டம்
விண்ணின்வே றேயோர் விரிபக் கத்திலும்
வையத்தின் வேறோர் வளர்பக் கத்திலும் 360
தந்தையார் முற்றம் தனில் மட்டுமல்ல
வளர்ந்தஎன் தோட்டம் மட்டுமே யல்ல.
இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
அன்பாய்நே சித்த அகத்தினி லிருந்து
தந்தையார் அமைத்தவித் தனியகத் திருந்து
கருணையன் னையின்நிறை களஞ்சியத் திருந்து;
என்சதுப் புத்தரை எழில்நிலம் விடுகிறேன்
என்புற் றரைமேட் டியைபுவி விடுகிறேன்
என்வெண் புனல்விட் டிங்கே பிரிகின்றேன்
மணல்நிறை என்புனல் வளர்கரை விடுகிறேன் 370
கிராம மதில்வாழ் கிழவிகள் குளித்திட
மந்தைமேய்த் திடுமிடை மாந்தர்கள் சிந்திட.
சதுப்பு நிலத்தை மிதித்திடு வோர்க்கும்
அலைந்திடு வோர்க்கும் நிலங்கள் விடுகிறேன்
இளைப்பாறி ஏகுவோர்க் கிரும்**பூர்ச்ச மரங்களை
உலாவித் திரிவோர்க் குயர்பைம் புற்றரை
அடிவைத்(துத்) திரிவோர்க் ககல்வே லிப்புறம்
பயணித்துச் செல்வோர்க்(கு) பாதைமூ லைகளை
நடந்தோடிச் செல்வோர்க்(கு) நல்லநீள் முற்றம்
நெடுஞ்சுவர்ப் பக்கம் நிற்போர்க்(கும்) விடுகிறேன் 380
சுத்தம்செய் வோர்க்கு நிலத்தடிப் பலகையை
பெருக்கிவைப் போர்க்கு பெருந்தரைப் பகுதியை
கலைமான் ஓட வயல்களை விடுகிறேன்
**சிவிங்கிகள் திரியத் திகழ்வனப் பகுதிகள்
வாத்துகள் வாழ வளமார் புல்வெளி
பறவைகள் ஓய்வுறப் பாங்குள சோலைகள்.
இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
புறப்பட் டேகும் பிறிதொரு துணையொடு
இலையுதிர் கால இரவணைப் புக்கு
பசிய வசந்தப் பனித்திண் பரப்பு(க்கு) 390
பனித்திண் மத்திலே படிசுவ டெதுமிரா(து)
பாதைப் பரப்பினில் பாதச் சுவடிரா(து)
பாவாடை நூலிழை பனித்துளி களிலிரா(து)
ஆடைக் கரைச்சுவ(டு) அப்பனி யிலேயிரா(து).
பின்னர்நான் திரும்பிப் பிறந்தஇல் வருகையில்
விருந்தாளி யாயென் வீடு வருகையில்
என்தாய்க் குக்குரல் எதுவுமே கேளா(து)
அழுமொலி தந்தை அறியவும் வாய்ப்பிலை
மூலையில் நின்றுநான் முனகிப் புலம்பினும்
அவர்களின் தலைமுன் னாலே பாடினும்; 400
இளையபுல் மேடு எழுந்துயர்ந் திருக்கும்
சூரையின் நாற்று துளிர்த்துயர்ந் திருக்கும்
எனைவளர்த் தவளின் இதவுடல் தோலிலே
எனைச்சுமந் தவளின் எழில்முகப் பரப்பிலே.
பின்னர்நா னிங்கு பெயர்ந்திடும் வேளை
மிகநீண் டகன்று விரிந்தவிம் முன்றிலில்
அடுத்தவர்க் கென்னை அறிமுக மிராது
ஆயினும் என்னையே அறியுமிவ் விருபொருள்
ஒன்று வேலியில் தாழ்வரிச் சுமரம்
வயல்வெளித் தூர(வேலி) மரம்மற் றொன்று 410
சிறுமியாய் இருக்கையில் சீராய் நட்டவை
கன்னிகை யானபின் கைபட நட்டவை.
வளர்த்தனள் அன்னை மலட்டுஆ அறியும்
அதற்குநீர் இளமைப் பருவத் **தருத்தினேன்
கன்றா யிருக்கையில் கவனமாய் வளர்ந்துளேன்
கண்டால் கிட்டக் கதறியோ டிவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அப்பசு வெனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென. 420
தந்தையின் கிழட்டுத் தனிப்பொலிக் குதிரை
உணவதற் கூட்டிய(து) உண்டிள வயதில்
அளித்துளேன் புல்ஊண் அரிவையா யானபின்
கண்டால் அருகே கனைத்தோடி யேவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
என்றுமப் பரிதான் எனையே அறியும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.
நித்திய வயதில் நற்சோதரன்நாய்
ஊட்டிவந் ததுவூண் உண்டிளம் பருவம் 430
கற்பித்த துண்டு கன்னிகை யானபின்
கண்டால் குரைக்கும் கடிதிலே யருகுறும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அந்தநாய் எனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.
ஏனைய எவையும் எனையறி யாவே
திரும்பிநான் என்இல் சேரும்வே ளையிலே
தோணிகள் கரைபுகும் தொல்லிட மாயினும்
முன்னர்நான் வாழ்ந்தஇந் நன்னிட மாயினும் 440
வெண்ணிற மீனினம் விளையாடி யேவரும்
பலவலை விரியும் பரந்தநல் இடத்திலும்.
விடைபெறு கின்றேன், வீடே, போய்வர!
பலகைகள் கூரை பரப்பிய இல்லமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.
வாயிற் கூடமே, போய்வர விடைதா!
பலகைகள் பரப்பிப் பதித்தமண் டபமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம். 450
முன்றிலே, போய்வர முழுவிடை பெறுகிறேன்,
நிறைந்த பேரி வளர்ந்துள முன்றிலே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.
அனைவரும் நல்விடை அருளினீர் போய்வர,
நிலத்தும், சிறுபழம் நிறைவனத் திருந்தும்
மலர்ந்திடும் பூக்கள் வழிகரை யிருந்தும்
பசும்புல் வளர்புதர்ப் பற்றையி லிருந்தும்
நூறுபல் தீவுகொள் ஏரிகளி லிருந்தும்
நிதம்வெண் மீனுலா நீரிணை யிருந்தும் 460
ஊசி யிலைமர உயர்மே டிருந்தும்
மிலாறுவின் தழைகிளை முழுதிலு மிருந்தும்!"
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
வனிதையைப் பற்றினன் வண்டியி லேற்றினன்
சாட்டையால் குதிரையைச் சாடி யடித்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஏரிக் கரைகளே, இதோவிடை பெற்றேன்!
ஏரிக் கரைகளே, எழில்வயல் எல்லைகாள்!
உயர்மலை வளர்ந்த ஊசி(யி)லை மரங்காள்!
தாருவின் தோட்டத்து நீடிய மரங்களே! 470
வீட்டின் பின்**சிறு மிகுபழச் செடிகளே!
பாதைக் கிணற்றடிச் சூரைச் செடிகளே!
தரையெலாம் பரந்த சிறுபழக் காம்புகாள்!
சிறுபழக் காம்புகள் திகழ்புல் தாள்களே!
அலரிப் புதர்களே, அலர்தாரு வேர்களே!
பூர்ச்சந் தழைகளே, பொன்மிலா றுரிகளே!"
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வடபால் முற்ற மதைவிட் டகன்றான்
பிள்ளைகள் நின்று பிரிபாட் டிசைத்தனர்
சிறார்கள் இசைத்துச் செப்பினர் இவ்விதம்: 480
"இனியதோர் கரும்புள் இவ்வழிப் பறந்தது
வியன்வனத் தூடாய் விரைந்தே பறந்தது
வாத்தையெம் மிடத்தால் மயக்கிப் பிரித்தது
வளர்சிறு பழத்தினை மருட்டிப் பறித்தது
அப்பிளை எம்மைவிட் டதுஎடுத் தகன்றது
புனல்மீ னெடுத்தது போட்டது தரையிலே
சிறுபணம் காட்டி அவளைஏ மாற்றிய(து)
வெள்ளிப் பணத்தினால் வஞ்சக மிழைத்தது;
யாரெமை யிப்போ(து) நீர்க்கொண் டேகுவார்?
ஆற்றிடைப் படுத்த ஆர்தான் இங்குளார்? 490
தண்ணீர்க் கலயம் தாம்ஓய்ந் திருக்குமே
**காவுதண் டங்கள் சோர்வடைந் திருக்குமே
பலகைகள் துடைக்கப் படாதங் கிருக்குமே
நிலம் பெருக்காமல் நலமற் றிருக்குமே
**குவளை விளிம்புகள் அழுக்கடைந் திருக்குமே
கைப்பிடிச் சாடியில் கறைபடிந் திருக்குமே!"
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
தன்பரு வத்துத் தையல் தன்னுடன்
தனது வழியில் தான்விரைந் தேகினன்
வடபால் நிலத்து வளர்கரைப் பாதையில் 500
நறைபோல் இனிய நிறைநீ ரிணைவழி
மணல்நிறை மேட்டை வாகாய்க் கடந்து;
சிறுகல் சலசல மணல் கலகலக்க
வண்டி உருண்டது வளர்வழி ஒளிர்ந்தது
பரியதன் இரும்புப் பட்டி ஒலித்தது
மிலாறுவின் சறுக்கு வில்கட கடத்தது
வளைந்த சலாகை மரம் படபடத்தது
பழமரப் பட்டம் முழுதா யசைந்தது
சாட்டையின் சுழற்சியில் சதாஒலி எழுந்தது
செப்பிலாம் வளையம் சேர்ந்தே யசைந்தது 510
உயர்குலப் புரவி ஓடிய போதினில்
வெண்சுட்டிப் புரவி விரைந்தவே ளையிலே.
ஒருநாள் சென்றனன் இருநாள் சென்றனன்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகினன்
கையொன் றுபரிக் கடிவ()ளம் பிடித்தது
மறுகை மங்கையின் மருங்கினை யணைத்தது
ஒருகால் வண்டியின் ஒருபுறத் திருந்தது
தளவிரிப் பின்கீழ் மறுகால் இருந்தது
பரியும் விரைந்தது பயணம் தொடர்ந்தது
நீள்நாள் கழிந்தது நெடுந்தொலை குறைந்தது 520
மூன்றா வதுநாள் முன்வரும் போதினில்
சூரியன் கீழே தொடர்ந்துசெல் நேரம்
கொல்லனின் இல்லம் நல்விழித் தெரிந்தது
*இல்மா(வின்) இல்லமும் எதிர்த்தோன் றியது:
நூலிழை போல மேலெழுந் ததுபுகை
தடித்த புகையும் தான்வெளிப் போந்தது
இல்லதன் உட்புறத் திருந்தே வந்தது
மேகத்தை நோக்கி மேலெழுந் ததுவே.
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 25-34
பாடல் 25 - மணமகனும் மணமகளும் வீட்டில் வரவேற்கப்படுதல் TOP
அடிகள் 1 - 382 : மணமகனையும் மணமகளையும் அவர்களுடன் சேர்ந்து வந்தவர்களையும் இல்மரினனின் வீட்டில் வரவேற்றல்.
அடிகள் 383 - 672 : கூட்டத்தினரைச் சிறப்பாக உபசரித்து உணவும் பானமும் வழங்குதல்; தலைவன், தலைவி, விருந்து நிகழ்ச்சியின் தலைவன், மணமகளின் தோழி, விவாகத்தில் கலந்து கொண்டோ ர் ஆகியோரைப் புகழ்ந்து வைனாமொயினன் பாடுகிறான்.
அடிகள் 673 - 738 : விவாகத்தில் கலந்துவிட்டுத் திரும்பும்போது வைனாமொயினனின் சறுக்கு வண்டி உடைகிறது; அதைத் திருத்திக் கொண்டு அவன் வீடு திரும்புகிறான்.
காத்தே யிருந்தனர் கனநீள் நேரமாய்
காத்தே யிருந்தெதிர் பார்த்தே யிருந்தனர்
பாவையோ டிணைந்த பரிவ()ர வரவை
கொல்லன்இல் மரினனின் இல்லம தற்கு:
முதியவர் விழிகள் அருவிகள் ஆகின
சாளரத் தருகே தரித்தவ ரிருந்தால்,
இளைஞரின் முழங்கால் இறங்கிப் பணிந்தன
வாயி லவரெதிர் பார்த்தே யிருந்ததால்,
குழந்தைகள் கால்கள் குளிரில் விறைத்தன
சுவரின் அருகில் அவர்கள்நின் றிருந்ததால், 10
காண்நடு வயதினர் காலணி சிதைந்தன
நீர்க்கரை யதிலே நெடிதலைந் திட்டதால்.
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் காலை
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் பகலில்
மரக்காட் டிருந்து வந்ததோர் சத்தம்
வண்டியின் ஓசை வந்தது புல்வெளி.
கவின்*லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"மகனின் சறுக்கு வண்டியே அதுதான் 20
வடநா டிருந்து வருகிறா னென்மகன்
தன்இள மனையாம் பெண்ணவ ளுடனே.
இந்நாடு நோக்கி இப்போ(து) வருகிறான்
இத்தோட் டத்து எழில்வெளி நோக்கி
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தே
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தே."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
விரைந்தே வந்து வீட்டினை யடைந்தான்
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தை
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தை; 30
வனக்கோழி வடிவ மணிகள் ஒலித்தன
இளமரத் தியைந்த ஏர்க்கால் தம்மிலே,
இன்குயில் வடிவில் இசைத்தன மணிகள்
மின்னும் வண்டியின் முன்னணி யத்தில்,
செதுக்கிய அணில்கள் திரிந்தன துள்ளி
**'மாப்பிள்' மரத்து வண்டியின் நுகத்தில்.
கவின்லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: 40
"ஊர்காத் திருந்தது ஒளிர்புது மதிக்கு
இளையோர் சூரிய உதய மதற்கு
பிள்ளைகள் **சிறுபழச் செடியார் தரைக்கு
நீர்காத் திருந்தது கீல்பட குக்கு;
அரைச்சந் திரற்கும் அதைநான் காத்திலேன்
அல்லது பானுவை அறவெதிர் பார்த்திலேன்
எனதுசோ தரனை எதிர்பார்த் திருந்தேன்
எனதுசோ தரனையும் என்மரு மகளையும்
காலையில் பார்த்தேன் மாலையில் பார்த்தேன்
எப்படி மறைந்தான் என்பதை யறியேன், 50
வளர்சிறு பிள்ளையை வளர்க்கின் றானா
அல்லது மெலிந்ததைக் கொழுப்பாக் குவனா
எப்படியும் அவன் இங்குமீ ளாததால்
அவனும் உண்மையாய் அளித்துவாக் ககன்றான்
காண்அடிச் சுவடுகள் கலையுமுன் வருவதாய்
குளிர்ந்த சுவடுகள் அழியுமுன் வருவதாய்.
எப்போதும் காலையில் இருந்தேன் வழிபார்த்(து)
பலநாள் நெஞ்சில் நினைவா யிருந்தேன்
சகோதரன் வண்டி தான்உரு ளாததால்
சகோதரன் வண்டி தான்ஒலிக் காததால் 60
இந்தச் சிறிய முன்றிலின் பரப்பில்
இந்தத் தோட்டத் தியைகுறு வெளியில்;
வைக்கோல் ஆனதோர் வனப்பரி இருப்பினும்
வலியஈர்ச் சட்ட வண்டியா யிடினும்
ஒருவண்டி யென்றே உரைப்பன்நான் அதையும்
சறுக்குவண் டியெனச் சாற்றுவேன் உயர்வாய்
என்சோ தரனையஃ திங்கு கொணருமேல்
என்அழ கனையஃ தில்லம் கொணருமேல்.
எதிர்பார்த் திருந்தேன் எல்லாக் காலமும்
பகற்பொழு தெல்லாம் பார்த்துநா னிருந்தேன் 70
எதிர்பார்த் திருந்தேன் என்தலை சாய்வரை
தளர்குழற் குடுமி சரிந்து விழும்வரை
நேர்பார் வைவிழி சோர்வாம் வரையும்
என்சகோ தரன்வரு மெனநம் புகிறேன்
இச்சிறு முற்ற எழிற்பரப் புக்கு
இத்தோட் டத்து இயல்குறு வெளிக்கு;
இங்குவந் தவனும் இறுதியில் சேர்ந்தான்
இறுதியில் ஒருதரம் இதைச்செய் திட்டான்
செந்நிற முகத்தாள் சேர்ந்தரு குள்ளாள்
சிவந்தகன் னத்தாள் திகழ்ந்தரு குள்ளாள். 80
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
நுதற்சு(ட்)டிப் புரவியை இதம்செ(ல்)ல விடுவீர்
நல்லினப் பரியதைச் செல்லவிட் டிடுவீர்
பழக்கம் அதற்குள பதவைக் கோற்கு
தகுமதன் வழக்குடைத் **தானியத் துக்கு;
பொருந்தடுத் தெமக்கு விருந்தொன் றளிப்பீர்
ஏனையோர்க் களியும் எமக்கும் தாரும்
அனைத்துக் கிராமத் தவர்க்கும் தாரும்.
விருந்தெலாம் தந்து விரைந்து முடிந்தபின்
உரைப்பீர் எங்களுக் குமது கதைகளை 90
பகர்வதற் கொன்றிலாப் பயணம் முடிந்ததா
நலமாய்ச் சுகமாய் நடந்ததா வழிச்செலல்?
மாமியார் அவளிடம் போய்ச்சேர் கையிலே,
விரிபுகழ் மாமனார் வீடடை கையிலே?
அரிவையை யடைந்திரா? ஆட்சியைப் பிடித்திரா?
போர்க்குவந் தவரைப் புறம்கண் டீரா?
பலகைக் கோட்டையைப் பணிய வைத்தீரா?
எதிர்எழும் சுவரை இடித்துவீழ்த் தினீரா?
மாமியார் இடத்தடி வைத்தேகி னீரா?
எசமானன் இடத்தில்நீர் இருந்துகொண் டீரா? 100
இல்லாது வினாவல் இப்போ(து) பார்க்கிறேன்
உசாவல் இன்றியே உளத்தில் உணர்கிறேன்
நலமாய்ச் சுகமாய் நடந்தது வழிச்செலல்
சிறப்பாய் இனிப்பாய் செலவவர்க் கானது
பெற்றனர் வாத்துப் பிடித்தனர் ஆட்சி
போர்க்குவந் தவரைப் புறம்கண் டிட்டார்
பலகைக் கோட்டையைப் பணியவும் வைத்தார்
**பலகைச் சுவரைப் படியில் விழுத்தினார்
மாமியா ரிடத்தினிலே மகிழ்ந்திருக் கையிலே
இணையிலா மாமனார் இல்லத் திருக்கையில்; 110
பொன்னாம் வாத்துப் போந்தரு கிருந்தாள்
கோழிகக் கத்துக் கொள்அணைப் பிருந்தாள்
அருகிலே தூய அரிவையு மிருந்தாள்
அவனுடை ஆட்சியில் அமர்ந்தள்வெண் ணிறத்தாள்.
இப்பொ(ய்)யை இங்கு எவர்எடுத் தடுத்தார்?
கொடிய செய்தியைக் கொணர்ந்ததா ரப்பா?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வருகிறார் என்று,
பொலிப்பரி அங்கே போனது வீணென?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வரவி(ல்)லை யிங்கு
பொலிப்பரி அங்கே போந்தில துவீண்: 120
ஏதோஇருக் கிறது இழுத்துவ ரப்பரி
**'சணற்சடை' அசைவில் தரித்துள தர்த்தம்
ஏனெனில் வியர்த்து இருக்கிற து(நற்)பரி
நுரைத்துநிற் கிறது தரப்பரிக் குட்டி
**அளகுக் குஞ்சையிங் கழைத்துவந் ததனால்
இரத்த நிறத்தளை இழுத்துவந் ததனால்.
இப்போது வண்டியி லிருந்தெழு, அழகே!
தரமிகு பரிசே, சறுக்குவண் டியிலிருந்(து)!
நீயாய் எழுவாய் நினைக்கரம் தொடாமல்
எழுவாய் உதவிநீ இல்லா தெதுவும் 130
இளங்கண வன்உனை ஏந்திட வரலாம்
இரும்சிறப் புன்னவன் எழுப்பிட வரலாம்.
சறுக்குவண் டியின்மேல் தான்நீ யெழுந்து
வியன்புற வழியாய் வெளியே றுகையில்
பழுப்பு நிறத்துப் பாதையில் அடிவை
ஈரல் நிறத்துப் பூமியில் கால்வை
பன்றியின் நடையால் மென்மையாம் தரையில்
பன்றிக் கணங்கள் பதம்மிதி பூமியில்
ஆட்டுக் குழுதிரிந் தமைந்தமென் நிலத்தில்
திகழ்பரிப் பிடர்மயிர் தேய்படு பூமியில். 140
தாரா அடிபோல் தரைமிசை அடிவை
வாத்தின் பதம்போல் வைப்பாய் வெளிகால்
முழுமையாய்க் கழுவிய முற்றப் பரப்பிலே
மட்டமாய்ப் பரந்தஇவ் வன்னமாம் நிலத்தில்
மாமனார் செய்தவிவ் வன்முற்றப் பரப்பிலே
மாமியார் படைத்தே வைத்தஇவ் விடங்களில்
சகோதரன் செதுக்கிய தன்தொழில் தலத்திலே
சகோதரி நீலத் தண்பசும் புல்நிலம்;
பாதம் மெதுவாய்ப் படிமிசை வைப்பாய்
மண்டபப் பலகைக்(கு) மாற்றுவாய் அதைப்பின் 150
மண்டபத் தூடே மற்றுநீ மேற்செல்
அங்கிருந் துள்ளே அதன்பின் இடம்பெயர்
புகழ்பெறும் கூரைப் புணர்தம் பக்கீழ்
இல்லத் தழகாய் இயைகூ ரையின்கீழ்.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
தாரா எலும்பால் தரையெலாம் மிசைத்தது
ஆரேனும் வந்தவ் வகல்தரை நிற்க,
ஒலித்தது பொன்இயை பொலிமனைக் கூரை
யாரேனும் வந்து நடப்பதற் கதன்கீழ், 160
சாளரம் யாவுமே தனிமகிழ் வுற்றன
ஆரேனும் வந்து அமர்வதற் கவற்றில்.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
கதவில் கிறீச்சென கைப்பிடி ஒலித்தது
மோதிரக் கையினால் மூடப் படற்கு,
களஞ்சியக் கூடத்தும் கனவொலி எழுந்தது
சிறந்தமே லங்கி திகழழ **காட்கு,
என்றும் கதவுகள் இருந்தன திறந்தே
வருபவர் திறந்திட, வரவெதிர் பார்த்தே! 170
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
சுழல்காற்று இவ்வறை சுழன்றுவீ சியது
யாரேனும் வந்தே நனிதுகள் துடைக்க,
கூடம் இடமொதுக்கி ஆயத்தம் கொண்டது
யாரேனும் வந்து நேரிற்சுத் தம்செய,
புத்தில்லக் குடில் புலம்பித் தவித்தன
யாரேனும் வந்தே நன்றாய்ப் பெருக்கிட.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள் 180
மறைவாய் முன்றில்கள் மாறிவந் தனவிடம்
யாரேனும் வந்து நனிதுகள் பொறுக்கிட,
மாடங்கள் தாமாய் வந்தன கீழே
யாரேனும் வந்து நனியுள் நுழைய,
உயர்வளை வளைந்தது உத்தரம் பதிந்தது
இளம்மனை ஒருத்தியின் எழில்உடை களுக்கு.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
ஒழுங்கைசந் தெல்லாம் ஒலிசெய் தழைத்தன
யாரேனும் வந்து நடந்திடத் தம்மேல், 190
மாட்டுத் தொழுவுகள் வந்தன நெருங்கி
யாரேனும் வந்து நற்சுத் தம்செய,
களஞ்சிய முற்றம் நகர்ந்து பின்போனது
வாத்தொன்று வந்து ஆற்றிடஅதில் தொழில்.
இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
வேளைகத் தியது வியன்பசு மாடு
காலையூண் கொடுப்போர் களைஎதிர் பார்த்து,
குதிரையின் குட்டிகள் குரல்கொடு கனைத்தன
யாரேனும் வந்து வீசிட வைக்கோல், 200
வசந்தத்து ஆடு வலிதுகத் தியது
எதிர்பார்த்து மென்மேல் இரைவைப் போரை.
இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
அமர்ந்தனர் சாளரத் தனைத்து முதியரும்
காண்பிள் ளைகள்நீர்க் கரைகளில் திரிந்தனர்
அரிவைய ரோசுவர் அருகினில் நின்றனர்
நின்றனர் பையன்கள் நெடுங்கடை வாயிலில்
வருமிளம் மனைவியின் வரவினை நோக்கி
மணப்பெண் ஒருத்தியை மகிழ்ந்தெதிர் பார்த்து. 210
இப்போ(து) முன்றிலில் இருப்போர்(க்கு) வாழ்த்துக்கள்!
வெளியில் நிற்கும் வீரர்கள் யா(வ)ர்க்கும்!
உனக்கும் குடிசையே, உளோர்க்கும் வாழ்த்துக்கள்!
குடிற்கும், தங்கிக் கொண்டஅன் னியர்க்கும்!
கூடமே, உனக்கும்நீ கொண்டுளோர் தமக்கும்!
மிலாறுரிக் கூரை(க்கும்), மிகக்கீ ழுளோர்க்கும்!
மாடமே, உனக்குமுள் வாழ்வோர்(க்கும்) வாழ்த்துக்கள்!
பலகைநூ றி(ல்லிற்கும், படிந்துளசிறார்க்கும்!
வான்நிலா வாழ்த்துக்கள், மன்னனே வாழ்த்துக்கள்!
இளையநற் பரிவ()ரம் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள் 220
ஒருபோ தும்முன் இருந்தில திங்கே
இருந்தில முன்னும் இருந்தில நேற்றும்
இவ்வித மொருகுழாம் இங்கிருப் பவர்போல்
எழிலுறும் மனிதர்கள் இங்கிருப் பவர்போல்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சிவப்புச் சிறுதுணி அவிழ்த்துப் போடுக
பட்டு முகத்திரை அப்பால் நீக்குக
கிளருமும் அன்புடைக் **கீரியைக் காட்டுக
காத்திருந் தீர்இதற் காயைந் தாண்டுகள்
எட்டாண்டு விரும்பி எதிர்பார்த் திருந்தீர். 230
நீர்முயன் றிருந்தபொற் காரிகை கொணர்ந்திரா?
குயிலாள் ஒருத்தியைக் கொணர முயன்றிரே!
நீள்புவி வெள்ளை நிறத்தளைத் தெரிந்திரே!
சிவந்தகன் னத்தளை புனற்பெற இருந்திரே!
எவ்வினா வும்மிலா திப்போ பார்க்கிறேன்
கேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன்
குயிலாள் ஒருத்தியை கொணர்ந்தீர் உம்முடன்
நீலநல் தாரா நிதமும் காப்பினில்
உச்சியில் தளிர்த்தநற் புத்தம் புதுத்தளிர்
பலபசுந் தளிரதில் ஒரேயிளம் தளிரதை 240
சிறுபழச் **செடியிலே மிகப்புதுத் தழையதை
பலபுதுச் செடிகளில் ஒருபுதுச் **செடியதை."
அங்கொரு பிள்ளை அகல்தரை யிருந்தது
தரையிலே யிருந்தஅப் பிள்ளைசாற் றியது:
"இழுத்துவந்(த) தென்னநீ இனியஓ, சோதர!
அழகில்கீல் பூசிய அடிமரக் கட்டையாம்
தார்ப்பீப்(பா) பாதியதாம் சரிநீ ளத்தினில்
நூனாழி அளவாம் நுதலிய உயரம்.
அப்படி யப்படி அப்பாவி மாப்பிளாய்
இதைக்காத் திருந்தீர் இந்நாள் முழுதும் 250
தெரிவேன் நூறுபெண் சமன்என் றீரே
கொணர்வேன் ஆயிரத் தொருத்தி யென்றீரே;
நூறிலே நல்லளாய் நுவலஒன் றடைந்தீர்
அவலட் சணம்சமம் ஆயிரம் பெற்றீர்
காண்சதுப் புநிலக் **காகம் போலவும்
வேலியி லிருந்திடும் வெறும்**புள் போலவும்
வயல்களில் வைத்திடும் வெருளியைப் போலவும்
தருசி நிலக்கரிக் குருவியைப் போலவும்.
இத்தனை நாட்களும் என்னசெய் தாளவள்
கடந்தகோ டையிலே நடந்தது தானெது? 260
வன்னக்கை யுறையெதும் பின்னா திருந்திடில்
தூயகா லுறையெதும் தொடங்கா திருந்திடில்.
வெறுங்கையை வீசியே வீடு வருகிறாள்
நவில்மாமன் **இற்கு நற்பரி சின்றியே
அவள்கூடைச் சுண்டெலி சலசலத் தோடுதாம்
**'பெருஞ்செவி' பெட்டியுள் பரபரத் தோடுதாம்."
கவின்லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகிய மனையாள்
அதிசய மாம்இக் கதையது கேட்டு
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 270
"என்னநீ சொன்னாய்? ஈனப் பிள்ளையே!
பிதற்றிய தென்ன? பதரெனும் பிறப்பே!
அறியலாம் பிறரது அதிசயச் செய்தி
இகழ்வுறும் செய்தியும் எங்கும் பரவலாம்
எனினுமொன் றரிவையாம் இவள்சார் பில்லையே
பகர்இவ்வில் வாழ்பவர் பற்றியும் இல்லையே.
தீயதோர் வார்த்தையை செப்பினாய் இப்போ(து)
வார்த்தையும் இப்போ(தே) வந்தது கொடியதாய்
ஒருநிசி வயதுறும் ஒருகன் றின்வாய்
ஒருபகல் வயதுறும் ஒருகுட் டியின்தலை; 280
மாப்பிள்ளை பெற்றது வன்னநல் நங்கையே
நனி**விழு நாட்டினால் கொணரப் பட்டவள்
பாதியே பழுத்த **சிறுபழம் போன்றவள்
ஒருகுன் றுதித்த **சிறுபழம் அனையவள்
அல்லது மரத்திலே அமர்ந்துள குயிலவள்
**பேரியில் தங்கிடும் ஒருசிறு புள்ளவள்
மிலாறுவின் எழிலுறும் வியன்சிறைப் பறவையாம்
'மாப்பிள்' மரத்தமர் ஒளிர்மார் புடையவள்.
ஜெர்மனி நாட்டிலும் எவரும் பெறவொணா
எஸ்தோனி யாவுக் கப்பால்(உம்) பெறவொணா 290
இந்த அரிவையின் இத்தனை அழகையும்
இந்த வாத்ததின் இனிமையின் தன்மையை
இந்த வதனத்து இதுபோல் எழிலினை
இந்தத் தோற்றத்தில் தெரிகின்ற மகிமையை
இந்தக் கரங்களில் இருக்கும் வெண்மையை
மென்மைக் கழுத்தில் வியப்பமை வளைவினை.
அத்துடன் வெறுங்கையாய் அரிவையும் வந்திலள்
கம்பளித் துணிகள் நம்புவிக் கொணர்ந்தவை
மேலங்கி வகைகளும் மிக்கன அவற்றுடன்
அகல்விரிப் புகளும் மிகச்சுமந் துற்றனள். 300
பெண்ணுக்கு இங்கே திண்ணமாய் நிறைந்துள
சொந்தத் தறியின் தொழிலாம் பொருட்களும்
சொந்தராட் டினத்தில் விந்தைநெய் துணிகளும்
சொந்த விரல்நுனித் தோன்றிய வகைகளும்
வெள்ளை நிறத்தில் மிகுவகை ஆடைகள்
குளிர்கா லத்தில் கழுவிய உடைகளும்
வசந்த வெய்யிலில் வைத்துலர் துணிகள்
கோடை நிலவிலே காய்ந்தது முள்ளன:
நலமார் விரிப்புகள் சலசலத் தசையும்
தடித்த தலையணை பிடித்தநல் மென்மை 310
பட்டுத் துணிகள் பளபளத் தாடும்
கம்பளி யாடைகள் பைம்பொனா யொளிரும்.
நல்ல நங்கையே, நவிலெழி லணங்கே!
அழகிய செந்நிற அரிவையே, கேளாய்!
இல்லில்நீ நிறைவாய் புகழோ டிருந்தவள்
பிதாவின் வீட்டிலே மகளா யிருக்கையில்,
நிறைவாம் புகழோடு நிலைப்பாய் வாழ்வெலாம்
மருமக ளாக மணாளனின் மனையிலே.
துன்பப் படுதலைத் தொடங்கவும் வேண்டாம்
தொல்லைகள் வருமெனத் துணியவும் வேண்டாம் 320
அழைத்துனை வந்தது சதுப்புத் தரைக்கல
படர்ந்துனைக் கொணர்ந்தது படுகுழிக் கல்ல,
தானிய மேடிருந்(து) தனிக்கொணர் பட்டனை
இன்னுமோர் அதிகமாய் இருக்கும்தா னியவிடம்,
நீகொணர் பட்டனை 'பீரு'ள வீடிருந்(து)
'பீர்'இன்னும் மிக்குள வீடொன்று நோக்கியே.
நல்ல நங்கையே, நவிலெழி லணங்கே!
இப்போ துன்னிடம் இவ்விதம் கேட்கிறேன்:
இங்குநீ வருகையில் இதுகண் டனைகொல்
கதிர்த்தா னியத்திரள் கட்டிவைத் திருந்ததை 330
செறிகனக் கதிர்களைத் திரட்டிவைத் திருந்ததை?
அவையனைத் தும்மிவ் வகத்தையே சேர்ந்தவை
உயர்ந்தஇம் மாப்பிளை உழுததால் வந்தவை
உழுததால் வந்தவை விதைத்ததால் விளைந்தவை.
பாவையே, இளமைப் பருவப் பெண்ணே!
இப்போ துனக்கு இதனைக் கூறுவேன்:
இம்மனை நீவர எவ்வா றறிந்தையோ
அதுபோல் பழகலும் அறிந்தே யுள்ளாய்
இங்கே ஒருபெண் இருப்பது நல்லது
மருமகள் இங்கே வளர்வதும் நல்லது 340
**நிறைதயிர்ச் சட்டி நின்கரத் துள்ளது
வெண்ணெய்க் கிண்ண மெலாமுன துடமை.
ஒருபெண் ணிங்கே உறைவது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
சவுனாப் பலகையிங் ககலமா யானவை
அகத்தரைப் பலகைகள் அமைவன விசாலம்
தலைவர்கள் இனியர்நின் தந்தையைப் போல
தலைவிகள் இனியர்நின் தாயார் போல
புத்திரர் நல்லவர் போலநின் சோதரர்
நல்லவர் புதல்விகள் நின்சகோ தரிபோல். 350
ஏதெனும் முனக்கு ஆசையேற் பட்டால்
வந்தால்ஏ தெனும் மனதில் விருப்பம்
உந்தை பிடிக்கும் உயர்மீன் போலோ
வேட்டைச் சோதரன் காட்டுக் கோழியோ
அதைமைத் துனரிடம் அடுத்துப் பேசேல்
மாமனா ரிடம்போய் மற்றதைக் கேளேல்
மாப்பிள்ளை யிடத்தே வந்துநே ராய்க்கேள்
உனைக்கொணர்ந் தவரிடம் உகந்ததைப் பெறுவாய்.
எதுவுமே இல்லையே இருக்குமக் காட்டில்
நான்குகால் களிலே நனிவிரை பிராணிகள், 360
வானப் பறவைகள் மற்றெதும் இல்லையே
வியன்சிறை இரண்டினை விசிறிப் பறப்பவை,
அத்துடன் நீரிலும் மற்றெது மில்லையே
மிகவும் சிறந்திடு மீன்கணக் கூட்டம்,
உன்னைப் பிடித்தவர் பிடிக்கொணா ஒன்று
பிடித்தவர் பிடியா(தது) கொணர்ந்தவர் கொணரா(தது).
இங்கொரு மங்கை இருப்பது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
திரிகைக் கற்கிங் கவசர மில்லை
உரலைப் பெறற்கும் ஒருகவ லையிலை 370
தண்ணீர் கோதுமை தனையிங் கரைத்திடும்
நீர்வீழ்ச்சி நன்கே **தானியம் கலக்கிடும்
பாத்திரங் களைஅலை பதமாய்க் கழுவிடும்
அவற்றைக் கடல்நுரை ஆக்கிடும் வெளுக்க.
ஓ,நீ அன்புடை உயரிய கிராமமே!
விரிந்தஎன் நாட்டில் மிகச்சிறப் பிடமே!
கீழே புற்றரை மேலே வயல்நிலம்
இடைநடு வினிலே இருப்பது கிராமம்
இயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை
அந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது 380
வாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்
விரிநீர்ப் பறவைகள் விளையாட் டயர்தலம்."
வந்தோர்க் குப்பின் வழங்கினர் பானம்
வழங்கினர் உணவு வழங்கினர் பானம்
ஏர()ள மிருந்தன இறைச்சித் துண்டுகள்
அத்தொடு பணிய()ர அழகிய வகைகள்
பார்லியில் வடித்த 'பீரு'ம் இருந்தது
கோதுமை யூறற் பானமு மிருந்தது.
புத்தாக்க உணவு போதிய திருந்தது
போதிய உணவும் போதிய பானமும் 390
தயங்கு செந்நிறச் சாடிகள் பலவிலும்
அழகிய கிண்ணம் அவைகள் பலவிலும்
நனிபிய்த் துண்ணப் பணியா ரங்கள்
விரும்பிக் கடிக்க வெண்ணெய்க் கட்டிகள்
வெட்டி யெடுக்க வெண்ணிற மீன்கள்,
துண்டு துண்டாக்க வஞ்சிர மீன்கள்
வெள்ளியில் அமைந்த வெட்டுக் கத்தியால்
தங்கத் தமைந்த தனியுறைக் கத்தியால்.
வாங்கப் படாத'பீர்' வழிந்தோ டிற்று
செலுத்தா **மர்க்காத் தேன்பெரு கிற்று 400
உத்தர உச்சி(யி)ருந் தோடிற் றுப்'பீர்'
பீப்பாவு ளிருந்து பெருகிற் றுத்தேன்
அருந்து'பீர்' இருந்தது அதரங்க ளூற
தேனங் கிருந்தது சேர்ந்துள மயங்க.
இங்கே குயில்போல் இனிதுயார் பாடுவார்?
பொருத்தம தான பொற்பா டகன்யார்?
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
பாடல்கள் அங்கே பாடத் தொடங்கினன்
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கினன் 410
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"அன்புடைச் சோதர, அரியஎன் சோதர!
என்னொடு இணைந்த இனியசொல் வல்லவ!
நாவன்மை படைத்தவென் நல்லதோ ழர்களே
இப்போநான் புகல்வதை இனிதுகே ளுங்கள்
வாத்துக்கள் சேர்வது **வாய்க்குவாய் அரிது
கண்ணொடு சோதரி கண்ணைநோக் குதலும்
அருகரு கிருப்பதுவும் அரிதுசோ தரர்கள்
தோளொடு **தோள்தாய்த் தோன்றல்கள் நிற்பதும் 420
வறிதாய் வீணே மயங்கிடும் எல்லையில்
தெரியும் வடபால் செழிப்பிலா நிலத்தில்.
பாடல்கள் இவ்விதம் பாடத் தொடங்கவா?
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கவா?
பாடல்கள் பாடலே பாடகர் தொழிலாம்
கூவுதல் வசந்தக் குயிலின் தொழிலாம்
**நீலமா தர்க்குச் சாயம் அழுத்தலும்
**தறியமர் மகளிர்க்(கு) நெய்தலும் தொழிலாம்.
லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர் 430
இரும்காட் டருமெரு திறைச்சியுண் நேரம்
சிறுகலை மான்ஊன் தின்றிடும் நேரம்;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
உயர்தா னியத்தில்நல் உணவுண் நேரம்
வாய்நிறை உணவை மகிழ்ந்துண் கையிலே?
லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
ஒருகிண் ணம்நீர் உவந்தருந் துகையில்
**மரப்பட்டை ரொட்டி மகிழ்ந்துமெல் லுகையில்; 440
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
தானியம் வடித்த பானம் பருகையில்
பார்லியில் செய்த 'பீர்'அருந் துகையில்?
லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
வெளியே புகைபடி கூடார ஒளியில்
படிந்த கறைநிறை படுக்கை யதிலே;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர் 450
உயர்புக ழுடையஇவ் உத்தரத் தின்கீழ்
குறையா அழகுக் கூரையின் கீழே?
ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
'பீர்'நிறைந் திருக்குமிப் பீப்பாப் பக்கம்
தேன்நிறைந் திருக்குமிச் சாடியைச் சூழ்ந்து
எங்கள் அருகில்வெண் மீனின் நீரிணை
அருகில்வஞ் சிரத்தின் அகல்வலை வீச்சிடம்
உண்கையில் உணவெதும் ஒழிந்துபோ னதேயிலை
பபானம் பருகையில் பற்றா நிலையிலை. 460
ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
உறுதுய ரோடிங்(கு) உணல்கிடை யாது
கவனிப்(பு) ஒன்றிலாக் கழியும் வாழ்விலை;
உறுதுயர் இன்றியே உண்ணுதல் இங்குள
கவனிப்பு நிறைந்த கவின்வாழ் விங்குள
இந்தத் தலைவனின் எல்லாக் காலமும்
இந்தத் தலைவியின் இன்வாழ் நாளெலாம்.
இங்கே முதலில் எவரைப் புகழ்வேன்?
தலைவர் இவரையா தலைவி இவளையா? 470
வீரர் வழமையாய் மிகுமுன் பொழுதெலாம்
தலைவரைப் புகழ்ந்தே தனிமதித் தார்முதல்
தலைவர் அமைத்தவர் சதுப்பில் வசிப்பிடம்
வனத்தி லிருந்தொரு வசிப்பிட மமைத்தவர்
அகல்பெரு ஊசி(யி)லை அடிமரம் கொணர்ந்தார்
தாருவைத் துணித்துத் தலையுடன் கொணர்ந்தார்
அவற்றைநல் லிடத்தில் அமைவுடன் வைத்தார்
அவற்றை உறுதியாய் ஆங்காங்கு நிறுத்தி
உயர்ந்த குடிக்கு உயர்பெரும் வசிப்பிடம்
அழகுறும் தோட்டத் தமைத்தனர் வீட்டை; 480
கட்டினார் சுவர்மரக் காட்டினி லிருந்து
உத்தரம் பயங்கரக் குன்றிலுண் டானது
பல்குறுக் குமரம் பாறை நிலத்திலும்
சிறந்தசட் டமெலாம் சிறுபழப் புதரிலும்
**சிறுபழச் செடியுள திடரினில் பட்டையும்
உறைந்திடாச் சேற்றினில் பாசியும் பெற்றனர்.
வாழ்விடம் சரியாம் வகைகட் டியதும்
இருப்பிடம் சரியாம் இடத்தில் அமைந்தது
சுவர்வே லைக்குத் தோற்றினர் நூற்றுவர்
இல்லக் கூரையில் இருந்தனர் ஆயிரம் 490
இந்தவாழ் விடமதை இனிதாய் அமைத்திட
பகருமிந் நிலத்தைப் பரப்பி யமைத்திட.
ஆயினும் இவ்வா றமைந்தஇத் தலைவர்
வாழ்விடம் அமைத்து வருகையில் இவ்விதம்
கண்டது இவர்சிகை காற்றுப் பலதினை
கொடுங்கால நிலையைக் குழலும் கண்டது
அடிக்கடி இந்தநல் லழகிய தலைவரின்
கையுறை பாறைக் கல்லில் இருந்தது
தாருவின் கிளையில் தரித்தது தொப்பி
சேற்றில் காலுறை திணிந்து கிடந்தது. 500
அடிக்கடி இந்த அழகுநல் தலைவர்
காலையில் மிகஅதி காலைவே ளையிலே
மற்றைய மனிதர் வளர்துயி லெழுமுன்
கிராமச் சனங்கள் கேட்பதன் முன்னர்
அனல்வெப்ப மருங்கு அகல்வார் துயிலால்
குச்சியால் கட்டிய குடிசையில் எழுவார்
துரிகைகொண்டு வாரித் தலையை
பனித்துளி யால்விழி பாங்காய்க் கழுவுவார்.
அதன்பின் இந்த அழகுநல் தலைவர்
அறிந்த மனிதரை அகத்துள் கொணர்வார் 510
பாடகர் வாங்கில் பலர்மிக் கிருப்பர்
திளைப்போர் களிப்பில் திகழ்வர்சா ளரத்தே
மந்திரம் சொல்பவர் வன்னிலப் பலகையில்
மூலையில் இருப்பர் மாயம் செய்பவர்
சுவரின் பக்கம் தொடர்ந்து நிற்போரும்
வேலியோ ரத்தை மிதித்தகல் வோரும்
முன்றிலில் நீடு நடந்துசெல் வோரும்
நாட்டின் குறுக்கே நனிபய ணிப்பரும்.
தலைவரை முதலில் தனிப்புகழ்ந் திசைத்தேன்
தருணமிஃ தன்புத் தலைவியைப் புகழ்வேன் 520
தயாராய் உணவைச் சமைத்துவைத் ததற்கு
நீண்ட மேசையை நிறைத்து வைத்ததற்கு.
தடித்த ரொட்டிகள் படைத்தவள் அவளே
தகுபெரு மாப்பசை தட்டி யெடுத்தவள்
உவந்தவள் விரையும் உள்ளங் கைகளால்
அவளது வளைந்த ஐயிரு விரல்களால்
ரொட்டிகள் மெதுவாய்ச் சுட்டே எடுப்பாள்
விருந்தா ளிகளை விரைந்துப சரிப்பாள்
பன்றி இறைச்சியும் பலதொகை சேர்த்து
அத்துடன் மீன்பணி யாரமும் கலந்து; 530
கத்தியின் அலகுகள் மெத்த நழுவிடும்
உறைக்கத்தி முனையும் உடனாய் வழுவும்
வஞ்சிர மீனின் வன்தலை துணிக்கையில்
கோலாச்சி மீனின் கொழுந்தலை அறுக்கையில்.
அடிக்கடி இந்த அழகுநல் தலைவி
கவனம் மிகுமிக் கவின்அக மனையாள்
சேவல்இல் லாமலே தெரிந்தவள் துயிலெழ
கோழிக் குஞ்சுக் குரலிலா தேகுவாள்
உகந்தஇவ் வதுவை ஒழுங்காம் காலம்
பணியா ரம்பல பலசுடப் பட்டன 540
புளித்த மாவுறை முழுப்பதப் பட்டது
'பீரு'ம் வடித்துப் புர்த்தியா யிருந்தது.
சிறப்புறும் இந்தத் திகழ்நல் தலைவி
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அறிவாள் 'பீரை' அரும்பதம் வடிக்க
பெருகவே விடுவாள் பெருஞ்சுவைப் பானம்
நுரைக்கும் முளைகள் நுண்தளிர் இருந்து
கூலத் தினிக்கும் ஊறலி லிருந்து
கவின்மர அகப்பையால் கலக்கவும் மாட்டாள்
கிடைத்தகாத் **தண்டினால் கிளறவும் மாட்டாள் 550
கைமுட்டி கொண்டு தானே கலக்குவாள்
தொட்டதன் கரங்களால் மட்டும் கிளறுவாள்
கவினார் புகையில்லாச் சவுனா வறையில்
சுத்தமாய்ப் பெருக்கித் துடைத்த பலகையில்.
இந்தநல் தலைவி என்றுமே செய்யாள்
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அடித்து முளைகள்கூ ழாக்கவும் மாட்டாள்
கூலமா வூறலைக் கொட்டாள் நிலத்தில்
ஆயினும் சவுனா அடிக்கடி செல்வாள்
நடுநிசி நேரமும் நனிதனிச் செல்வாள் 560
ஓநாய் பற்றி உறாளாம் அச்சம்
வனவிலங் கெதற்கும் மனத்துப் பயப்படாள்.
இப்போ(து) புகழந்து இசைத்தேன் தலைவியை
பொறுங்கள் என் சிறந்த மனிதரைப் புகழுவேன்!
சிறந்த மனிதராய்த் திகழ்ந்தவர் எவரோ?
இன்றைய காட்சியின் இயக்குனர் யாரோ?
சிறந்தவர் கிராமச் சிறந்த மனிதராம்
காட்சியை நடாத்தும் பாக்கியம் பெற்றவர்.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அகன்ற துணிமே லாடையில் இருக்கிறார் 570
அவ்வுடை கைக்கீழ் அளவா யுள்ளது
இடுப்பின் பரப்பில் இறுக்கமா யுள்ளது.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
ஒடுங்கிய நீண்ட உடையி லிருக்கிறார்
ஆடையின் விளிம்பு அதுமண் தொடுமாம்
ஆடையின் பின்புறம் அதுநிலம் படியும்.
மேற்சட்டை சிறிது வெளித்தெரி கிறது
எட்டிப் பார்க்கிற ததிற்சிறு பகுதி
நிலவின் மகளவள் நெய்ததைப் போன்று
ஈயத்து நெஞ்சாள் இயற்றிய தைப்போல். 580
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அரையினில் கம்பளி அமைந்தநற் பட்டி
ஆதவன் மகளவள் அமைத்தநற் பட்டி
மிளிர்நக முடையவள் மினுக்கிய பட்டி
தீயில் லாத காலம் நடந்தது
நெருப்பையே அறியா நேரம் நடந்தது.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவின்பட் டிழைத்த காலுறை கால்களில்
காலுறைப் பட்டியும் கவின்பட் டானது
காலதன் பட்டிஒண் கவின்பட் டானது 590
எழிற்பொன் னாலிவை இழைக்கப் பட்டன
அலங்க()ரம் வெள்ளியால் ஆக்கப் பட்டன.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவினார் ஜேர்மனிக் காலணி கால்களில்
ஆற்றிலே அன்னம் அழகாய் மிதத்தல்போல்
வாத்துக் கரைகளில் வந்துநீந் துதல்போல்
தாராக் கிளைகளில் தரித்திருப் பதுபோல்
மரம்வீழ் காட்டில் இடம்பெயர் புட்போல்.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
பொன்னிறத் தினிலே மென்சுருள் தலைமயிர் 600
தங்கப் பின்னலாய்த் தான்மிளிர் தாடி,
தலையில் மிலைந்த தனிநீள் தொப்பியோ
முகிலைத் துளைத்து முன்உயர்ந் திருந்தது
காடுகள் அனைத்தும் கவினொளி விதைத்தது
கொடுத்தும் நூறு கொள்ளவே முடியா
**மர்க்காஆ யிரத்திலும் வாங்கிட முடியா.
இப்போ புகழ்ந்தேன் என்சீர் மனிதரை
பொறுங்கள், மணமகள் தோழியைப் புகழ்வேன்!
மணமகள் தோழி வந்தளெங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததெங் கிருந்து? 610
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*தனிக்காக் கோட்டைத் தன்பின் புறத்தால்
*புதிய கோட்டைப் புணர்வெளிப் புறத்தால்.
அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறற்கு ஆதாரம் சற்றிலை
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*வெண்கட லிருக்கும் வியன் நீரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து). 620
அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறறற்கு ஆதாரம் சற்றிலை
திகழ்தரை **சிறுபழச் செடியொன்(று) வளர்ந்தது
படர்புதர் செந்நிறப் பழந்தரு **மொருசெடி
வளர்ந்தது ஒருபுல் வயலில் ஒளியொடு
பூத்தது பொன்னிறத் தொருபூ காட்டிலே
மணமகள் தோழி வந்தள்அங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அங்கிருந் தெடுத்தனர்.
மணப்பெண் தோழியின் வாய்அழ கானது
நுவல்பின் லாந்தின் **நூனாழி போன்றது, 630
உயர்மணத் தோழியின் உயிர்ப்புள விழிகள்
விண்ணகத் தொளிரும் விண்மீ னனையவை,
மணப்பெண் தோழியின் வளப்புகழ்ப் புருவம்
கடல்மேற் திகழும் கவின்நிலாப் போன்றவை.
தோன்றுமெம் மணப்பெண் தோழியைக் காண்பீர்
பூக்கழுத் தில்நிறை பொன்னிறச் சுருள்கள்
சென்னியில் நிறைய பொன்னிறக் கூந்தல்
தங்க வளையல்கள் தளிர்க் கரங்களிலே
பொன்னினால் மோதிரம் பூவிரல் களிலே
பொன்னினால் அமைந்த பொன்மணி காதிலே 640
தங்கநூல் முடிச்சுகள் துங்கவிற் புருவம்
முத்தலங் காரம் வித்தகக் கண்ணிமை.
நனிமதி திகழ்வதாய் நானும் எண்ணினேன்
பொன்னின் வளையம் மின்னிய போதினில்;
எல்லவன் ஒளிர்வதாய் எண்ணினேன் நானும்
சட்டையின் கழுத்துப் பட்டி ஒளிர்கையில்;
நாவாய் ஒன்று நகர்வதா யெண்ணினேன்
தலையில் தொப்பி தளர்ந்தசை கையிலே.
மணப்பெண் தோழியை வானாய்ப் புகழ்ந்தேன்
பார்க்க விடுங்கள் நோக்குமெல் லோரையும் 650
அனைவரும் இங்கே அழகா னவரா
முதியோர் எல்லாம் அதிமதிப் பினரா
இளைஞர்கள் எல்லாம் எழிலா னவரா
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினரா!
மற்றஎல் லோரையும் இப்போது பார்த்தேன்
அனேகமாய் அனைவரும் அறிந்தவர் தாமே
இங்கிப் படிமுன் னிருந்தது மில்லை
இருக்கப் போவது மிலையினி நிச்சயம்
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினராய்
அனைவரும் இங்கே அழகா னவராய் 660
முதியோர் எல்லாம் அதிமதிப் பினராய்
இளைஞர்கள் எல்லாம் எழிலான வராய்;
வெளுப்புறு முடையில் முழுப்பே ருமுளர்
உறைபனி மூடிய உயர்காட் டினைப்போல
கீழ்ப்புறம் எல்லாம் கிளர்புல ரொளிபோல்
மேற்பபுற மெல்லாம் மிளிர்வை கறைபோல்.
வெள்ளிக் காசுகள் மிகமலிந் திருந்தன
பொற்காசு விருந்தில் பொலிந்து கிடந்தன
முழுக்கா சுப்பை முன்றிலில் கிடந்தன
பணப்பை பாதையில் பரவிக் கிடந்தன 670
அழைக்கப் பட்ட அயல்விருந் தினர்க்காய்
அழைத்த விருந்தினர் அதிபெரு மைக்காய்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அழிவிலாப் பாடலின் ஆத()ரத் தூணவன்
வண்டியில் இதன்பின் வந்தே யேறினன்
திகழ்அகம் நோக்கிச் செய்தனன் பயணம்;
தன்கதை பற்பல தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்
ஒருகதை பாடினான் இருகதை பாடினான்
மூன்றாம் கதையும் முடிவுறும் போது 680
மோதிற்று பாறையில் முன்வண்டி விற்கால்
முட்டிற் றடிமரக் குற்றியில் ஏர்க்கால்
நொருங்கிச் சிதைந்தது பெருங்கவி வண்டி
பாடகன் விற்கால் ஊடிற்று வீழ்ந்தது
ஏர்க்கால் வெடித்து இற்றுப் பறந்தது
பலகைகள் கழன்று பரவின பெயர்ந்து.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"இங்கே இருக்கும் இளைஞர்கள் மததியில்
வளர்ந்திடும் தேசிய மக்களின் மத்தியில் 690
அல்லது முதுமை அடைந்துளார் மத்தியில்
தளர்ந்தரு கிவரும் சந்ததி மத்தியில்
துவோனலா ஏகுவார் எவரெனு முளரோ
சாவுல குக்குப் போவார் உளரோ
துவோனலா விருந்து துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க?"
இளைஞரும் அத்துடன் இவ்விதம் கூறினர்
முதுமையுற் றோரும் மறுமோழி கூறினர்: 700
"இல்லை யிங்குள இளைஞரின் மத்தியில்
இல்லை முதியவர் எவரிலும் நிச்சயம்
உயர்குடி மக்களில் ஒருவரு மில்லை
வீரம் நிறைந்த வீரரில் இல்லை
வல்லவன் துவோனலா செல்லுதற் கொருவர்
இறப்புல குக்கு எழுவோர் ஒருவர்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க." 710
முதிய வைனா மொயினன் பின்னர்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
தானே மீண்டும் போனான் துவோனலா
படுமாய் வுலகு பயணம் செய்தான்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர்ந்தான்
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர்ந்தான்.
முதிய வைனா மொயினன் அதன்பின்
நீல நிறவனம் நிமிர்ந்தெழப் பாடினான்
அரியசிந் தூரம் அதிலெழப் பாடினான்
உகந்ததாய்ப் பேரி உயர்ந்தெழப் பாடினான் 720
அவற்றிலே யிருந்து அமைத்தான் வண்டி
அவற்றில் விற்கால் அமைத்தான் வகையாய்
ஏர்க்கால் அவற்றில் எடுத்தான் பின்னர்
நுகமரம் எல்லாம் இயற்றி முடித்தான்
சறுக்கு வண்டி திருத்தினான் இவ்விதம்
அப்புது வண்டியை அமைத்து முடித்தான்
புரவிக் குட்டியை அலங்கா ரித்தான்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
ஏறிச் சறுக்கு வண்டியில் இருந்தனன்
ஏறி வண்டியில் இருந்து கொண்டனன்; 730
சாட்டைவீ சாமல் தனிப்பரி விரைந்தது
**மணிஅடி யிலாமலே வளர்பரி விரைந்தது
பழகிய சதுப்பு படர்நிலம் விரைந்தது
இரையுள்ள இடத்தே எழிற்பரி விரைந்தது
முதிய வைனா மொயினனைக் கொணர்ந்தது
என்றுமே நிலைத்த இசைப்பா டகனை
அவனது சொந்த அகல்கடை வாயில்
சொந்தக் களஞ்சிய முன்றிலின் முன்னே.
பாடல் 26 - லெம்மின்கைனனின் ஆபத்தான பிரயாணம் TOP
அடிகள் 1 - 382 : தன்னைத் திருமணத்துக்கு அழைக்காத காரணத்தால் ஆத்திரம் கொண்ட லெம்மின்கைனன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றியும் முன்னர் அங்கு ஏற்பட்ட மரணங்கள் பற்றியும் கூறித் தாய் தடுத்தும்கூடக் கோளாமல் பயணத்தை மேற்கொள்கிறான்.
அடிகள் 383 - 776 : அவனுடைய பயணத்தின்போது பல ஆபத்தான இடங்களைக் கடக்க நேர்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாகத் தனது மந்திர அறிவினால் எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறான்.
அஹ்தி என்பான் அகல்தீ வுறைபவன்
பரந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
உழுதுகொண் டிருந்தான் ஒருவயல் அவனே
உழுது புரட்டினான் ஒருவய லையவன்
அவனது செவிகள் அதிநுண் தகையன
கேட்கும் சக்தியும் கிளர்கூர் மையது.
கேட்டதோர் கூச்சல் கிராமத் திருந்து
ஏரிக்கு அப்பால் எழுந்தது சத்தம்
பனிக்கட்டி மீதில் பாதம் ஊன்றொலி
சமபுற் றரைமேல் சறுக்குவண் டியினொலி; 10
அவனுக் கொருநினை வப்போ துதித்தது
நெஞ்சிலோர் சிந்தனை நேரா யெழுந்தது;
வடபால் நிலம்திரு மணம்நடந் ததுவோ
எழும்குடி மனிதரின் இரகசியக் கூட்டமோ!
தன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
குருதியும் வடிந்து கொடிதிறங் கிற்று
காண்அபாக் கியவான் கன்னத் திருந்து;
உடனே தனது உழவினை நிறுத்தினான்
புரட்டலைப் பாதிப் புன்வயல் நிறுத்தினான் 20
எழில்நிலத் திருந்து ஏறினான் குதிரையில்
புறப்பட் டான்இல் போவதற் காக
அன்பு நிறைந்த அன்னையின் அருகே
பெரும்புக ழுறுதன் பெற்றோர் பக்கம்.
சென்றதும் அவ்விடம் செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனன்:
"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே!
உணவினை விரைவாய் உடனெடுத் திடுவாய்
இங்கொரு பசியுளோன் இருக்கிறான் உண்ண
ஒருகடி கடிக்க உளம்கொள் பவற்கு; 30
அதேகணம் சூட்டை ஆக்கிடு சவுனா
அறையில்தீ மூட்டி ஆக்கிடு வெப்பம்
மனிதனைச் சுத்தமாய் மாற்றுமவ் விடத்தில்
தனிவிறல் வீரனைத் தயார்செயு மிடத்தில்."
அப்போது லெம்மின் கைனனின் அன்னை
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தாள்
பசியுறு மனிதன் பார்த்துண் பதற்காய்
ஒருகடி கடிக்க உளம்கொளு பவற்காய்
குளியல் குடிசையும் கொண்டது தயார்நிலை
ஆயத்த மானது அச்சவு னாவறை. 40
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தான்
அந்நே ரத்தே அடைந்தான் சவுனா
குளியல் அறையுளும் குறுகினன் அங்ஙனம்;
அங்கொரு **பறவை அலசிக் கொண்டது
செய்தது சுத்தம் திகழ்**பனிப் பறவை
தலையை ஒருபிடி சணலைப் போலவும்
கழுத்தையும் வெளுப்பாய்க் கழுவிக் கொண்டது.
வீட்டினுள் சவுனா விருந்தவன் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 50
"ஓ, என் அன்னையே, உயர்வய தினளே!
குன்றத் திருக்கும் குடிற்கே விரைவாய்
அங்கிருந் தெடுத்துவா அழகிய உடைகளை
மாசிலா ஆடைகள் வாகாய்ச் சுமந்துவா
நானே அவற்றை நன்கணி வதற்கு
என்னுடல் அவற்றை எடுத்துத் தரிக்க!"
விரைந்து அன்னையும் வினவுதல் செய்தாள்
மிகுவய துப்பெண் விசாரணை செய்தாள்:
"எங்கே செல்கிறாய் எந்தன் மகனே
**சிவிங்கிவேட் டைக்கா செல்லப் போகிறாய் 60
அல்லது காட்டெரு ததன்பின் சறுக்கவா
அல்லது எண்ணமா அணிலதை எய்ய?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தாய்!
சிவிங்கிவேட் டைக்குச் செல்லுதற் கில்லை
சறுக்கவு மில்லைத் தனிக்காட் டெருதுபின்
அல்லது இல்லை அணிலையும் எய்தல்:
வடநாட்(டு) விருந்து புறப்படப் போகிறேன்
இரகசியக் குடியர் இடம்போ கின்றேன்; 70
எழிலார் உடைகளை என்னிடம் கொணர்வாய்
கொணர்வாய் என்னிடம் குறைவிலா ஆடை
கடிமண வீட்டில் காட்சியா யிருக்க
விருந்து நிகழ்ச்சிக் கணிந்து நான்செல்ல."
தனது மைந்தனைத் தடுத்தாள் அன்னை
தனது மனிதனைத் தடுத்தாள் பெண்ணவள்
வேண்டாம் என்றனர் விளங்கிரு பெண்கள்
தடுத்தனர் இயற்கையின் தையலர் மூவர்
புறப்ப(ட்)டு லெம்மின் கைனன் போவதை
நிகழ்நல் வடபால் நிலவிருந் துக்கு. 80
மாதா இவ்விதம் மகனுக் குரைத்தாள்
பெருவய தினள்தன் பிள்ளைக் குரைத்தாள்:
"அன்பின் மகனே, அகலுதல் வேண்டாம்!
நேசமார் மகனே, தூரநெஞ் சினனே!
வைபவ விருந்து வடநாட் டுக்கு
குழுவினர் பலபேர் குடிக்கும் வைபவம்!
அங்கே நீயும் அழைக்கப் பட்டிலை
நீயோ அங்கே தேவைப் பட்டிலை."
குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 90
"அழைப்புக் கேகுவர் அதிஇழிந் தவர்கள்
அழைப் பில்லாமல் அரியோர் துள்ளுவர்;
அழைக்கப் பட்டவர் அம்நிலா வயதினர்
ஓய்வே இல்லா உயர்தூ துவராம்
தீப்பொறி சிந்தும் திகழ்வாள் அலகில்
குவிந்தொளி சிதறும் கூரிய முனையில்."
லெம்மின் கைனனின் அன்னையப் போது
தடுக்க முயன்றாள் தனையனை இன்னும்:
"வேண்டாம் வேண்டாம் விறல்என் மதலாய்!
வடபுல விருந்தில் வலிந்தே செல்லல்! 100
பயணத் தறிவாய் பற்பல அற்புதம்
மாபெரும் அதிசயம் வந்திடும் வழியில்
வன்கொடு மூன்று மரணம் நேர்ந்திடும்
மனிதனின் இறப்பும் வந்திடும் மூன்று."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வயோதிப மாதர்க்(கு) மரணம்என் றும்தான்
எல்லா இடத்திலும் இவர்க்கிறப் புத்தான்
இவைசார் அக்கறை இல்லைவீ ரர்க்கு
இவைபற்றி கவனமும் இல்லைஅ வர்க்கு 110
ஆயினும் அவைஅவை அங்ஙனம் நிகழ்க,
என்றன் காதில்நீ இயம்புவாய் கேட்க
எந்த மரணம் இனிமுதல் நிகழ்வது
முதலில் நிகழ்வதும் முடிவில் நிகழ்வதும்?"
லெம்மின் கைனனின் அன்னை மொழிந்தனள்
முதிய மாதவள் மொழிந்தாள் மறுமொழி:
"மரணம் பற்றி வழுத்துவேன் உள்ளதை
மனிதன் விருப்புபோல் மரணம் நிகழா
முதல்வரப் போகும் மரணம் மொழிவேன்
மரணம் இதுவே வருமுதல் மரணம் 120
சிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்
பாதையில் ஒருநாள் பயணம் முடிப்பாய்
அப்போ(து) நெருப்பு ஆறொன் றெதிர்ப்படும்
அந்தஆ றுன்னெதிர் வந்தே அடுக்கும்
ஆற்றில்தீ வீழ்ச்சி அங்கே தோன்றிடும்
படர்தீ வீழ்ச்சியில் பாறைத்தீ வொன்(று)
பாறைத் தீவிலே பதிந்ததோர் தீமுடி
தீமுடி யதிலே தீக்கழு கொன்று
இரவில் அலகை எடுத்திடும் தீட்டி
பகலில் நகத்தைப் படுகூ ராக்கிடும் 130
அவ்வழி வந்திடும் அந்நிய மனிதர்க்(கு)
தன்வழி வந்திடும் தனிநபர் ஒருவர்க்(கு)."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இந்த மரணம் அரிவையர் மரணம்
வல்வீ ரன்தன் மரணமே அல்ல
நல்லது அதற்கோர் நல்வழி காண்பேன்
ஏதெனும் நல்லதாய் எண்ணுவேன் கருமம்:
பரியொன்று தோன்றநான் பாடுவேன் **'அல்டரி'ல்
'அல்டரி'ல் மனிதனும் அமையநான் பாடுவேன் 140
என்னுடைய பக்கத் தேகுதற் காக
என்றன் முன்புறம் இனிதுற நடக்க;
தாரா போல்நான் மூழ்குவேன் அப்போ
அடியில் வாத்தாய் ஆழத் தேகுவேன்
கழுகின் கூரிய உகிர்களின் கீழாய்
**இராட்சசக் கழுகின் இகல்விரற் கீழாய்;
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இடையில்வந் தெய்தும் இறப்பினை நவில்க!"
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"இந்த மரணம் இரண்டாம் மரணம் 150
சிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்
பயணம் முடிப்பாய் பகரிரண் டாம்நாள்
நெருப்புக் கணவாய் நேர்ப்படும் அப்போ
அதுஉன் பாதையில் அணுகும் குறுக்கே
வெகுதொலை கிழக்கில் மிக்குநீண் டிருக்கும்
வடமேல் எல்லையும் முடிவற் றிருக்கும்
கொதிக்கும் கற்களைக் கொண்டது நிறைய
எரியும் பாறைகள் இருக்கும் அதனுள்;
அதனுட் சென்ற ஆட்கள்பல் நூற்றுவர்
அதனுள் நிறைந்தவர் ஆயிரக் கணக்காம் 160
வாள்விற லார்எ(ண்)ணில் வரும்ஒரு நூறுபேர்
இரும்புப் பரிகள் இருக்குமோ ராயிரம்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அதுவொரு மனிதனின் மரணமே அல்ல
அதுவொரு வீரனின் அழிவுமே யல்ல
ந(ல்)லது அதற்கொரு நனிசூழ் வெண்ணினேன்
நினைத்தேன் சூழ்ச்சியை நேர்வழி கண்டேன்
பாடுவேன் தோன்றிடப் பனித்திரள் மனிதன்
மிகுபலப் பனித்திரள் வீரனைப் பாடுவேன் 170
அனலின் நடுவிலே அவனைத் தள்ளுவேன்
அழுத்துவேன் பலமாய் அவனை நெருப்பில்
கொதிசவு னாவில் குளிப்பதற் காக
அத்துடன் செப்பில் அமைந்த தூரிகை;
மாறியப் போதே மறுபுறம் செல்வேன்
எரியின்ஊ டாக எனைக்கொடு போவேன்
எனது தாடியாங் கெரியா திருந்திடும்
சுருளுறும் தலைமுடி கருகா திருந்திடும்
ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இறுதிவந் தெய்தும் இறப்பினைப் பகர்வாய்!" 180
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"மொழியுமிம் மரணம் மூன்றாம் மரணம்
செல்லுவாய் இன்னும் சிறுதொலை பாதையில்
முடிந்திடும் இன்னொரு முழுநாள் இதிலிருந்(து)
வடபால் நிலத்து வாயிலை நோக்கியே
அந்தமா நிலத்து அமைகுறும் பாதையில்
உன்மீ தப்போ ஓரோநாய் பாய்ந்திடும்
அடுத்ததாய்க் கரடியும் அடித்திடும் உன்னை
வடபால் நிலத்து வாயில் தலத்தினில்
மிகவும் குறுகிய மிகச்சிறு ஒழுங்கையில்; 190
உண்டது இதுவரை ஒருநூற் றுவராம்
அழிந்து போனவர் ஆயிரம் வீரராம்
உனைஏன் அவையும் உண்டிட மாட்டா
காப்பில்லா உனைஏன் கடிதழித் திடாவாம்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"செம்மறி யாட்டுக் குட்டியைத் தின்னலாம்
பச்சையாய்க் கிழித்துப் பலதுண் டாக்கலாம்
ஆயினும் முடியா அதுபல வீனரை
அல்லது சோம்பேறி யானவீ ரரையும்! 200
மனிதனின் பட்டிநான் நனிபூட் டியுளேன்
நனிபொருத் தியுளேன் மனிதனின் ஊசிகள்
வலிதுகட் டியுளேன் மறவரின் வளையம்
ஆதலால் நானும் வீழவே மாட்டேன்
*உந்தமோ என்பான் ஓநாய் வாய்களில்
பெரிதே சபிப்புறு பிராணியின் அலகில்.
இப்போ தோநாய்க்(கு) எண்ணினேன் சூழ்ச்சியொன்(று)
கரடிக்கும் கூடக் கண்டுளேன் ஓர்வழி
ஓநாய் வாய்க்கட் டுண்டிட விசைப்பேன்
கரடிக்கு இரும்புக் கட்டுறப் பாடுவேன் 210
தரைமட்ட மாக்கித் தரிபத ராக்குவேன்
சுளகிலே சலித்துப் துகளாக மாற்றுவேன்
இங்ஙனம் விடுவித் தென்னையே கொள்வேன்
இங்ஙனம் பயணத் தெல்லையை அடைவேன்."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"எல்லையை இன்னும்நீ எய்தவே யில்லை!
அப்படிப் பயணித் தகலும் காலை
மாபெரும் அற்புதம் வரும்பய ணத்தில்
துயர அதிசயம் தோன்றிடும் மூன்று
மனிதச் சாவுக்கு வந்திடும் முவ்வழி; 220
அவ்விடத் தைநீ அடைந்திடும் நேரம்
நேர்ந்திடும் இன்னும் நெடுந்துயர்ச் சம்பவம்:
பயணித் தொருகுறும் பாதையில் செல்வாய்
வடநாட்டு முற்றம் வந்துநீ சேர்வாய்
அங்கொரு வேலி அமைந்திடும் இரும்பால்
அடைப்பு உருக்கினால் ஆனதும் வந்திடும்
நிலத்தினி லிருந்து நீள்வான் வரையிலும்
விண்ணிலே யிருந்து வியன்புவி வரையிலும்
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை 230
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
கனபல்லிக் **கணத்தால் கட்டிய வேலியாம்;
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள் முழுதசைந் தாட
மண்டை ஓடுகள் வாய்உமிழ்ந் திருக்க
வாலெலாம் உள்ளே வருதலை வெளியே.
பூமியில் இருந்தவை புழுக்கள்வெவ் வேறாம்
வரிசையாய்ச் சர்ப்பம் விரியன் பாம்புகள்
மேலே நாக்குகள் சீறிக் கிடப்பன
கீழே வால்கள் ஆடிக் கிடப்பன; 240
அனைத்திலும் பயங்கர மான ஒன்றுளது
குறுக்கே வாயிலில் படுத்துக் கிடப்பது
நீண்டது வசிப்பிட மரத்திலும் நெடியதாய்
ஒழுங்கைக் கதவத் துயர்தூண் பருப்பம்
மேலே நாவினால் சீறிக் கிடக்கும்
மேலே வாயினால் மிகஇரைந் திருக்கும்
எதிர்பார்த் தல்ல எவரையும் வேறு
ஏழை உனையே எதிர் பார்த்தங்கு."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்: 250
"அந்த மரணம் அதுகுழந் தையின்சா
அதுவொரு வீரனின் மரணமே யல்ல;
அனலை வசியப் படுத்தவும் அறிவேன்
தணலை அணைத்துத் தணிக்கவும் அறிவேன்
தடுத்துப் புழுக்களை நிறுத்தவும் அறிவேன்
அரவைத் திருப்பி அனுப்பவும் அறிவேன்;
நேற்றுத் தானே நிகழ்ந்த திச்சம்பவம்
விரியன் பாம்பு விளைநிலம் உழுதேன்
பாம்புப் பூமியைப் பாங்காய்ப் புரட்டினேன்
விளங்கிய எனது வெற்றுக் கைகளால் 260
விரியன் பாம்புகள் விரல்நகத் தெடுத்தேன்
தூக்கினேன் பாம்புகள் துணிந்தென் கைகளால்
பத்து விரியன் பாம்புகள் கொன்றேன்
அழித்தேன் நூறு கறுத்தப் புழுக்களை
ஆயினும் விரியனின் இரத்தமென் உகிர்களில்
பாம்பின் கொழுப்புப் படிந்தது கைகளில்;
ஆதலால் எனக்கு அதுநிக ழாது
என்றுமே இனிமேல் ஏற்பட மாட்டா
இராட்சசப் புழுவின் வாய்க்குண வாக
பாம்பொன் றின்வாய்ப் படுமிரை யாக: 270
நீசப் பிராணிகள் நீள்கரத் தெடுப்பேன்
கழுத்துக்கள் அனைத்தையும் முறுக்கிப் பிழிவேன்
விரியன் பாம்பினை வீழ்த்துவேன் ஆழம்
இழுப்பேன் தெருவின் ஓரம் புழுக்களை
வடநில முன்றிலால் வைப்பேன் அடிகளை
செல்வேன் முன்னே இல்லத் துள்ளே."
லெம்மின் கைனின் அன்னை கூறினள்:
"வேண்டாம், எனது வியன்மகன் வேண்டாம்!
வடபுல வசிப்பிட வழிச்செலல் வேண்டாம்!
வேண்டாம் சரியொலா வில்அமை வீட்டினுக்(கு)! 280
வன்**வார் வாளுறு மனிதர் அங்குளார்
போரின் படைக்கல வீரர்கள் அங்குளார்
குடித்துன் மத்தம் பிடித்த மனிதர்கள்
அதிகம் குடித்து அறக் கெட்டவர்கள்
ஏழையே உன்னை இனிச்சபித் திசைப்பார்
கூரிய அலகுறும் கொடுவாள் களுக்கு;
பாடப் பட்டனர் பலசீர் மனிதர்முன்
வெல்லப் பட்டனர் மிகவுயர் மனிதரும்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்: 290
"நான்அங்கு முன்னர் நனிசென் றுள்ளேன்
வாபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
எனைப்பா டினரிலை லாப்பியர் எவரும்
என்னைச்சா டினரிலை எத்துர்யா மனிதரும்
நானே பாடுவேன் நவில்லாப் பியரை
சாடுவேன் துர்யா மனிதர்கள் தம்மையும்
அவர்கள் தோள்ஊடாய் அங்குநான் பாடுவேன்
தாடையின் ஊடாய்ச் சரியாய்ப் பேசுவேன்
சட்டைக் கழுத்து சரியிரண் டாம்வரை
மார்பு எலும்புகள் வலிதுடை படும்வரை." 300
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஓ,என் மைந்தா, அபாக்கிய வானே!
முன்னைய நிகழ்ச்சியை இன்னமும் நினைவாய்
பழையதைப் பற்றிப் புழுகியே நிற்கிறாய்
நீயங்கு சென்றது நிசம்தான் முன்னர்
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
தேங்கிய குளங்களில் நீந்திய துண்டுதான் பயின்றாய் **முட்செடி பலவுள குளங்களில்
இரையுநீர் வீழ்ச்சியில் இறங்கி விழுந்தாய்
பொங்கிப் பாயும் புதுநீ ரோட்டம் 310
துவோனிநீர் வீழ்ச்சியைத் தொட்டே அறிந்தாய்
அளந்தாய் மரண அகிலத் தருவியை
இன்றும் அங்குதான் இருந்திருப் பாய்நீ
ஆயினும் ஏழையுன் அன்னையால் தப்பினாய்.
நெஞ்சில்வை யப்பா நினக்குநான் மொழிவதை
வருகிறாய் நீயே வடபுல வசிப்பிடம்
உண்டு கழுமரம் குன்றுகள் நிறைய
முன்றில்கள் நிறைய முழுத்தூண் உள்ளன
நிறைய மனிதரின் தலைகள் அவற்றிலே
கழுமர மொன்றுதான் தலையிலா துளது 320
அக்கழு மரத்தின் அருங்கூர் முனைக்கு
உன்தலை கொய்தே உடனெடுக் கப்படும்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"மடையன் அவற்றால் மனத்துயர் கொள்வான்
தகுதியற் றவன்தான் தான்கவ னிப்பான்
ஐந்து ஆறுபோ ராட்டஆண் டுகளில்
கொடும்ஏழ் யுத்தக் கோடைகா லத்தில்
மறவன் அவற்றை மனதில் கொள்ளான்
தவிர்க்கவ<ம் செய்யான் தான்குறைந் தளவு; 330
என்போ ராடை எடுத்துக் கொணர்வாய்
பழைய போராடையைப் பாங்காய்க் கொணர்வாய்!
எந்தையின் வாளை இனிநான் எடுக்கிறேன்
அப்பா வின்வாள் அலகைத் தேடுவேன்;
அதுவும் வெகுநாள் அருங்குளிர்க் கிடந்தது
இருந்தது மறைவாய் இயைபல் லாண்டு
அங்கே இதுவரை அழுதுகொண் டிருந்தது
தரிப்போன் ஒருவனை எதிர்பார்த் திருந்தது."
அங்ஙனம் யுத்த ஆடையைப் பெற்றனன்
படுபழம் போரின் உடையைப் பெற்றனன் 340
தந்தையின் நித்தியத் தனிவாள் எடுத்தனன்
தாதையின் போரின் தோழனைக் கொண்டனன்
பலகையில் அதனைப் பலமாய்க் குத்தினான்
நிலத்தில் குத்தி அலகைத் திணித்தான்:
திருப்பி வாளினைச் செங்கைப் பிடித்தான்
பழச்செடி முடியில் ஒருபுதுப் பறவைபோல்
அல்லது வளர்**சூ ரைச்செடி போல;
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வடபால் நிலத்து மனைகளில் அரிது
சரியொலாப் பகுதியின் தங்ககத் தரிது 350
அரியஇவ் வாளினை அளக்க முடிந்தவன்
இகல்வாள் அலகை எதிர்க்க முடிந்தவன்."
உருவினன் குறுக்குவில் உறும்சுவ ரிருந்து
உரமுறு கொளுவியில் இருந்தே ஒருவில்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"நானொரு மனிதனாய் நவில்வேன் அவனையே
நானொரு வீரனாய் நம்புவேன் அவனையே
எந்தன் குறுக்குவில் இழுப்பவன் தன்னை
வளைந்தஎன் வில்லை வளைப்பவன் தன்னை 360
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
அந்தச் சரியொலா அமையகங் களிலே."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
எழிலார் தூர நெஞ்சினன் என்போன்
அமர்க்காம் உடைகளை அணிந்து கொண்டனன்
சமர்க்காம் உடைகளைத் தரித்துக் கொண்டனன்
தன்அடி மைக்குச் சாற்றினான் இவ்விதம்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறவிலைக் கெடுத்த அடிமையே கேள்நீ!
காசுக்குப் பெற்ற கூலியே, கேள்நீ! 370
அமர்க்காம் குதிரையை ஆயத்தம் செய்வாய்
போர்ப்பரிக் குட்டிக்குப் பூட்டு அணிகலன்
நான்விருந் துக்கு நலமுடன் செல்ல
கூளிக் குடியரின் கூட்டத் தேக!"
அந்த அடிமை அமைபணிச் சேவகன்
முன்னேர் விரைந்து முன்றிலை யடைந்து
அம்பரிக் குட்டிக் கணிகலன் பூட்டி
தீச்செந் நிறத்ததை ஏர்க்கால் பூட்டி
அங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:
"என்வே லையைநான் இனிதே முடித்தேன் 380
ஆயத்த மாக்கினேன் அரியநும் பரியை
நற்பரிக் குட்டியை நன்கலங் கரித்தேன்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
புறப்பட் டேகப் புணர்ந்தது நேரம்
ஒருகை இணங்க மறுகை பிணங்க
நரம்புள விரல்பல வந்தம் செய்தன;
நினைத்தவா றவனே நேர்புறப் பட்டான்
அவதான மிலாதே அவன்புறப் பட்டனன்.
சேய்க்குத் தாயவள் செய்தாள் போதனை
மூத்தோள் பிள்ளையை முன்னெச் சரித்தாள் 390
உத்தரத் தின்கீழ் உயர்கத வருகே
கலயமும் கெண்டியும் கலந்தவைப் பிடத்தில்:
"எந்தன் மகனே, இணையிலா தவனே!
எனது குழந்தாய், இகலுரப் பிள்ளாய்!
நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
சாடியில் உள்ளதில் பாதியை அருந்து
கலயப் பாதியே கவனமா யருந்து
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி 400
சாடியின் அடியிலே சார்ந்துள புழுக்கள்
ஆழக் கலயத் தமைவன கிருமி."
போதனை இன்னம் புரிந்தாள் மகற்கு
தன்பிள் ளைக்குச் சாற்றினள் உறுதியாய்
தூரத்து வயல்கள் தொடுமுடி விடத்தில்
கடைசி வாயிற் கதவத னருகில்;
"நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
இருக்கையில் பாதி இருக்கையி லிருப்பாய்
அடியிடும் போது அரையடி வைப்பாய் 410
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி
அவ்விதம் வருவாய் அருமனி தனாய்நீ
நீமா றிடுவாய் நிகரிலா வீரனாய்
மக்கள்மன் றங்கள் மற்றுநீ செலலாம்
வழக்குகள் ஆய்ந்து வழங்கலாம் சமரசம்
வீரர்கள் நிறைந்த வியன்குழு மத்தியில்
மனிதர்கள் நிறைந்த கணங்களின் மத்தியில்."
பின்புறப் பட்டான் லெம்மின் கைனன்
அரும்பரி வண்டியில் அமர்ந்தவ னாக 420
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்:
இகல்பரி வண்டியை இழுத்துச் சென்றது
உயர்பரி விரைந்து ஓடிச் சென்றது.
சற்றுநே ரம்மவன் சவாரியே செய்தான்
நற்சிறு பொழுதே நடத்தினன் பயணம்
பாதையில் கோழிப் பல்கணம் கண்டனன்
காட்டுக் கோழியின் கூட்டம் பறந்தது
பறவைகள் கூட்டமும் பறந்தே வந்தது
ஓடிச் சென்ற உயர்பரி முன்னே. 430
சிறுதொகை மட்டுமே இறகுகள் இருந்தன
காட்டுக் கோழியின் கவின்சிறை வழியில்
எடுத்தனன் லெம்மின் கைனனே அவற்றை
சேர்த்தே வைத்தனன் சிறுபை யொன்றிலே;
என்ன வருமென எவருமே யறியார்
பயணத் தென்ன நிகழுமென் றுணரார்
பயிலகத் தெதுவும் பயனுள தாகலாம்
அவசர தேவைக் கவைநலம் தரலாம்.
சிறிதே இன்னமும் செய்தனன் சவாரி
பாதையிற் கொஞ்சம் பயணம் செய்தனன் 440
அப்போ குதிரை நிமிர்த்திற் றதன்செவி
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
அவன்தான் குறும்பன் தூர நெஞ்சினன்
சறுக்கு வண்டியில் தானே எழுந்து
சற்றே சரிந்து எட்டிப் பார்த்தனன்:
அன்னை சொன்னது அதுபோ லிருந்தது
சொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது
நிசமாய் அங்கொரு நெருப்பா றிருந்தது
குதிரையின் முன்னே குறுக்காய் எழுந்தது 450
ஆற்றிலே நெருப்பு வீழ்ச்சிதோன் றிற்று
பாய்வீழ்ச் சியில்தீப் பாறைத் தீவு
பாறைத் தீவிலே படியும் தீமுடி
நெருப்பு முடியிலோர் நெருப்புக் கழுகு
கழுகின் தொண்டையில் கனலே மூண்டது
வாயிலே தீவெளி வந்தது சீறி
இறகுகள் அனலாய் எங்கும் ஒளிர்ந்தன
தீப்பொறி சிதறி திசையெலாம் பறந்தது.
தூரநெஞ் சினனை தொலைவிற் கண்டது
லெம்மின் கைனனை நெடுந்தொலை கண்டது: 460
"எங்கப்பா பயணம் ஏ,தூர நெஞ்சின?
லெம்பியின் மைந்தனே, எங்கே எழுந்தனை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வடபுல விருந்து, வழிப்புறப் பட்டேன்,
குடிக்கும் இரகசியக் குழுவிடம் போகிறேன்;
சற்று அப்பால் தள்ளியே நிற்பாய்
வழியினை விட்டே விலகியே நிற்பாய்
பயணியைப் போகப் பாங்குடன் விடுவாய்
லெம்மின் கைனனை விடுவாய் சிறப்பாய் 470
கடந்துசெல் தற்கு கடுகிநின் புறமாய்
உனக்கப் பாலே உடன்நடந் தேக!"
இவ்விதம் கழுகால் இயம்ப முடிந்தது
வியன்தீத் தொண்டையால் மெதுவாய்ச் சொன்னது:
"நானொரு பயணியை நனிசெல விடுவேன்
நிசமதிற் சிறப்பாய் லெம்மின் கைனனை
என்வா யுடா யேகுவ தற்கு
தொண்டையின் ஊடாய்த் தொடர்செல வுக்கு
அங்குதான் உன்றன் அகல்வழி செல்லும்
அங்கிருந் ததனுடை அமைநிலத் தேக 480
அந்தநீள் பெரிய அருவிருந் துக்கு
நிரந்தர மானதோர் நேரமர் வுக்கு."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
அதைப்பொறுத் ததிகம் அக்கறை யில்லை
சட்டைப் பையினில் தன்கை விட்டான்
சுருக்குப் பையினில் தொடுவிரல் நுழைத்தான்
காட்டுக் கோழியின் கறுப்பிற கெடுத்தான்
சிறிதே அவற்றை மெதுவாய்த் தேய்த்தான்
தன்னிரு உள்ளங் கைகளின் நடுவே
தன்விரல் பத்தின் தனியிடத் திடையே 490
காட்டுக் கோழியின் கூட்டம் பிறந்தது
காட்டுக் கோழியின் கூட்டம் முழுவதும்
கழுகின் தொண்டையுள் கடிதவை திணித்தான்
பெரும் பட்சணியின் பேரல குக்குள்
கழுகின் நெருப்பு உமிழ்தொண் டைக்குள்
இரையுண் பறவையின் ஈறுகள் நடுவே;
இடுக்கணில் அன்றவன் இவ்விதம் தப்பினான்
அவன் முதல்நாளை அங்ஙனம் கடந்தான்.
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்; 500
படர்பொலிப் புரவி பாய்ந்தே சென்றது
பரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.
சிறிதே பயணப் பாதையில் சென்றனன்
சிறிது தூரம் சென்றனன் கடந்து
அதிர்ச்சியிப் போது அடைந்தது குதிரை
பயந்து கத்திப் பாய்பரி நின்றது.
எழுந்தனன் சறுக்கு வண்டியி லிருந்து
எட்டிப் பார்க்க எடுத்தனன் கழுத்தை
அன்னை சொன்னது அதுபோ லிருந்தது
சொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது 510
நெருப்புக் கணவாய் நேரெதிர் வந்தது
அந்தப் பாதையில் அதுகுறுக் கிட்டது
கிழக்கில் வெகுதொலை முழுக்கநீண் டிருந்தது
வடமேல் எல்லையும் முடிவற் றிருந்தது
கொதிக்கும் கற்களும் கூடவே இருந்தன
எரியும் பாறைகள் தெரிந்தன அதனுள்.
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
மானிட முதல்வனை மனதில் வணங்கினன்:
"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
விண்ணுல குறையும் வியனார் தந்தையே! 520
வடமேற்கிருந்தொரு மஞ்சினை யெழுப்பு
இன்னொன்றை மேற்கில் இருந்தே யனுப்பு
மூன்றாவ தொன்றை முதிர்கிழக் கிருந்து
வடகிழக் கொன்றினை வாகாய் உயர்த்து
அவற்றின் கரைகளை அமைப்பாய் ஒன்றாய்
ஒன்றொடு அவற்றை ஒன்றில் மோது!
சறுக்கு மரமாழ் தண்பனி மழைபொழி
ஈட்டி ஆழம் எழட்டும் பொழிந்து
அச்செங் கனலும் அகன்ற பாறைமேல்
பற்றி எரியுமப் பாறைகள் மேலே!" 530
அம்முது மனிதர், அதிஉயர் தெய்வம்,
வானகம் வதியும் மாமுது தந்தை,
வடமேற் கிருந்தொரு மஞ்சினை எழுப்பினார்
இன்னொன்றை மேற்கில் இருந்தே அனுப்பினார்
கிழக்கி லிருந்தும் கிளர்முகில் படைத்தார்
வடகிழக் கிருந்து வருகாற் றுயர்த்தினார்
அவைகள் அனைத்தையும் அமைத்தார் ஒன்றாய்
ஒன்றொடு அவற்றில் ஒன்றை மோதினார்
சறுக்கு மரமாழ் தண்மழை பொழிந்தது
ஈட்டிஆ ழத்தில் எழுந்தது பொழிந்து 540
அச்செங் கனலும் அகன்ற பாறைமேல்
பற்றி எரியுமப் பாறைகள் மேலே;
ஒருபனி மழைக்குளம் உதித்தது ஆங்கே
உறுகுழம் பினிலேரி உருவா யிற்று.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பனித்திரள் பாலம் பாடினான் அதன்மேல்
பனிமழை நிறைந்த படிகுளக் குறுக்கே
ஒருகரை யிருந்து மறுகரை வரைக்கும்
அங்ஙனம் தாண்டினன் அந்தஆ பத்தை
பகர்இரண் டாம்நாட் பயணம் முடித்தான். 550
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்;
விரைந்து குதிரை பறந்தே சென்றது
பரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.
ஓரிரு **மைல்கல் ஓடிற் றுப்பரி
சிறந்தநாட் டுப்பரி சிறுதொலை சென்றது
சென்றபின் அப்பரி திடீரென நின்றது
அசையா(து) நின்றது அந்த இடத்திலே.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
துள்ளி யெழுந்தான் துணிந்தே பார்த்தான் 560
வாயிலில் ஆங்கே ஓநாய் நின்றது
ஒழுங்கையில் கரடி ஒன்றெதிர் நின்றது
வடபால் நிலத்து வாயிலில் ஆங்கு
எதிர்நீள் ஒழுங்கையின் எல்லையில் ஆங்கு.
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
சட்டைப் பையில் தன்கை யிட்டான்
சுருக்குப் பையில் தொடுகை நுழைத்தான்
செம்மறி உரோமம் சிறிதே யெடுத்தான்
சிறிது மென்மையாய் தேய்த்தான் அவற்றை 570
தன்னிரு உள்ளங் கைகளின் நடுவில்
தன்விரல் பத்தின் தனியிடத் திடையே.
உள்ளங் கையில் ஒருமுறை ஊதினான்
செம்மறி யாடுகள் திசைவிரைந் தோடின
செம்மறிக் கூட்டம் சேர்ந்தெலாம் விரைந்தது
மாபெரும் ஆட்டு மந்தைகள் ஓடின;
ஓநாய் அவ்வழி ஓடின விரைந்து
அவற்றைக் கரடிகள் தாக்கத் தொடங்கின
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
தொடங்குதன் பயணம் தொடர்ந்தே சென்றனன். 580
தன்வழி சிறுதொலை தானே சென்றதும்
அடைந்தனன் வடபால் அகல்நில முற்றம்
அங்கே வேலியும் ஆனது இரும்பால்
அடைப்பும் உருக்கால் அடைக்கப் பட்டது
அறுநூறு அடிகள் அகழ்மண் ணுள்ளே
ஆறா யிரமடி அகலவிண் ணோக்கி
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
பல்லிக் கணத்தால் பிணைத்த வேலியாம்; 590
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள் முழுதசைந் தாட
நவில்பெருந் தலைகள் நடுங்குதற் காக
வாலெலாம் உள்ளே வருதலை வெளியே.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
தெரிந்தனன் பினனர் சிந்தனை செய்தான்:
"எந்தன் அன்னை இயம்பிய வாறிது
சுமந்தவள் என்னை, புலம்பிய வாறிது,
அத்தகை வேலி ஆங்கே யுள்ளது
மண்ணி லிருந்து விண்ணுக் கிணைத்தது 600
விரியன் பாம்பு இரிந்தூர் வதுகீழ்
ஆயினும் வேலி அதன்கீழ் உள்ளது
பறவை உயரப் பறக்கிற தொன்று
ஆயினும் வேலி அதன்மே லுள்ளது."
அந்த லெம்மின் கைனனப் போது
அதிகம் அக்கறை அவன்கொள வில்லை
உறையி லிருந்து உருவிக் கத்தியை
கூரிய இரும்பைக் கொண்டபை யிருந்து
வேலியை அதனால் வெட்டினான் ஆங்கே
கம்பை இரண்டாய்க் கத்தி கிழித்தபின் 610
இரும்பு வேலியை இழுத்துத் திறந்தான்
கலைத்தான் பாம்புக் கணத்தை ஒருபுறம்
ஐந்து தூண்இடை அகல்வெளி பெற்றான்
எடுத்தான் கம்புகள் ஏழு அகலம்
முனைந்தான் பயணம் முன்எதிர் நோக்கி
வடபால் நிலத்தின் வாயிலின் முன்னே.
பாதையில் நெளிந்தது பாம்புதா னொன்று
குறுக்கே வாயிலில் படுத்துக் கிடந்தது
வீட்டுஉத் தரத்திலும் மிகநீண் டதுஅது
கதவுத் தூணிலும் கனதடிப் பானது 620
ஊரும் பிராணிக்கு உளவிழி நூறு
அந்தப் பிராணிக் காயிரம் நாக்குகள்
கண்அரி தட்டின் கண்களை யொத்தவை
ஈட்டியின் அலகுபோல் இகல்நீள் நாக்கு
வைக்கோல் வாரியின் வன்பிடி போற்பல்
ஏழு தோணிகள் போல்முது களவு.
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
துணிந்தா னில்லைத் தொடுகரம் வைக்க
நூறு விழியுள சீறும் பிராணிமேல்
ஆயிரம் நாக்குகள் உரியபாம் பதன்மேல். 630
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நிலத்துள் வாழும் நீள்கரும் பாம்பே!
மரணச் சாயலை வாய்த்துள புழுவே!
காய்ந்த புல்லின் கண்நகர் பிராணியே!
பிசாச வேர்களில் வசிக்கும் பிறவியே!
புல்மே டுகளில் போய்ஊர் சீவனே!
மரவேர் களிலே மறைந்துவாழ் சன்மமே!
புற்களி லிருந்துனை பற்றினோர் எவரோ?
புல்வே ரிருந்துனைப் பிடித்தவ ரெவரோ? 640
புமியில் இங்ஙனம் புரள்வதற் காக?
வழியிலே இவ்விதம் நெளிவதற் காக?
உந்தன் தலையை உயர்த்திய தெவரோ?
கூறிய தெவரோ, வேறெவர் ஆணையோ?
விறைப்பாய்த் தலையை உயர்த்திய தெவரால்?
கழுத்தைப் பலமாய் நிறுத்தியது எவரால்?
உந்தன் தந்தையா, அல்லது அன்னையா?
உனக்கு முன்பிறந்த உயர்அண் ணன்களா?
அல்லது பின்வரும் அருத்தங் கைகளா?
அல்லது வேறு அமையுற வினரா? 650
வாயை மூடிப்போ மறைப்பாய் தலையை
உள்ளே ஒளிப்பாய் உன்சுழல் நாக்கை
சுருண்டு சுருண்டு சுருளாய்க் கிடப்பாய்
வளைந்து வளைந்து வளையமாய்ப் படுப்பாய்
பாதையைத் தருவாய் பாதிப் பாதையை
பயணியை மேலும் பயணிக்க விடுவாய்
அல்லது வழியைவிட் டகல்வாய் நீயே
இழிந்த பிறப்பே ஏகுக புதருள்
புற்பற் றைக்குள் போய்நீ மறைவாய்
பாசி நிலத்திற் படர்ந்துநீ ஒளிவாய் 660
கம்பிளிக் கட்டுபோல் கடுகிநீ நழுவுவாய்
அரசங் குற்றிபோல் உருண்டுநீ செல்லுவாய்
புற்புத ருள்தலை போகத் திணிப்பாய்
புற்பற் றையுளே போவாய் மறைந்து
புற்புத ருள்ளே உள்ளதுன் வீடு
புற்பற் றையுளேயுன் இல்லம துள்ளது;
நீஅங் கிருந்து நேர்தலை தூக்கினால்
இறைவன் உன்தலை இன்றே நொருக்குவான்
உருக்கு முனைகொள் ஊசிக ளாலே
இரும்பினா லான எறிகுண் டுகளால்." 670
அப்படிச் சொன்னான் லெம்மின் கைனன்
ஆயினும் பாம்போ அதைக்கணித் திலது
உமிழ்ந்து கொண்டே நெளிந்தது பாம்பு
நாக்கைச் சுழற்றி நனிசீ றியது
வாயை உயர்த்தி வலிதே ஒலித்தது
லெம்மின் கைனனின் சிரசிலக் கானது.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நிகழ்பழஞ் சொற்களை நெஞ்சிற் கொண்டான்
முதுதாய் முன்னர் மொழிந்த சொற்களை
தாயின் முந்திய போதனைச் சொற்களை; 680
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இதற்கும்நீ கவனம் எடுக்கா திருந்தால்
கணிப்புக் கொஞ்சமும் காட்டா திருந்தால்
நோவால் உன்னுடல் ஊதிப் போகும்
வெந்துயர் நாட்களால் வீங்கிப் போகும்
கொடியநீ வெடிப்பாய் இரண்டாய்ப் பிளப்பாய்
நீசநீ மூன்று நெடுந்துண் டாவாய்
உன்தாய் அவளைநான் உரப்பி அழைத்தால்
அழைத்தால் உன்புகழ் அரும்பெற் றோரை; 690
சுருண்ட பிராணிஉன் தொல்பிறப் பறிவேன்
நிலத்தின் அழுக்குன் வளர்ப்பையு மறிவேன்
உன்அன் னைபெரும் ஊணே **உண்பவள்
உன்னைப் பெற்றவள் புனற்பெருஞ் சக்தி.
பெருமூண் உண்பவள் விரிபுனல் துப்பினாள்
எச்சிலை நீரின் எழும்அலை யிட்டனள்
காற்றுவந் ததனை ஆட்டி யசைத்தது
நீரின் சக்திதா லாட்டிச் சென்றது
ஆறு வருடமும் அதுதா லாட்டிய(து)
ஏழு கோடையும் இதுவே நிகழ்ந்தது 700
தெளிந்த கடலின் செறுமுய ரலைகளில்
நுரைத்து எழுந்த நுடங்கலை நடுவே;
இரும்தொலை நீரதை இழுத்துச் சென்றது
வெங்கதிர் காய்ச்சி மென்மையா யாக்கினன்
தவழ்அலை அதனைத் தரைதள் ளியது
கடலலை அதனைக் கரைவிரட் டியது.
மூவர் இயற்கைப் பாவையர் நடந்தனர்
திரையெறி கடலின் கரையில் நடந்தனர்
இரையும் கடலதன் கரைதனில் நடந்தனர்
நடந்தவர் அதனை நனிகரைக் கண்டனர் 710
கண்டதும் இங்ஙனம் களறினர் கன்னியர்:
'இதிலே யிருந்து எதுதான் தோன்றலாம்
கர்த்தர் சுவாசம் கடிதிதற் கீந்து
கண்களைக் கொடுத்துக் கருணையும் காட்டினால்?'
கர்த்தர்இக் கூற்றைக் கேட்கவும் நேர்ந்தது
உரைத்தார் ஒருசொல் உரைத்தார் இவ்விதம்:
"தீயதி லிருந்து தீயதே தோன்றும்
கொடியதன் உமிழ்நீர் கொடியதே ஆகும்
நானும் சுவாசம் நன்கிதற் கூட்டினால்
கண்வைத் துத்தலை கருணையும் காட்டினால்." 720
கெட்ட பிசாசிதைக் கேட்கவும் நேர்ந்தது
கருங்கொடு மானுடம் கவனிக்க லானது
வலிந்துதான் கர்த்தராய் மாறவும் நினைத்தது
சுவாசத்தை ஊட்டிப் பிசாசம் வைத்தது
உறுதீக் கொடியாள் உமிழ்நீ ருக்கு
இரும்ஊண் உண்பவள் எச்சில் அதற்கு
பின்னர் அதுஒரு பெரும்பாம் பானது
மாகரும் புழுவாய் மாற்றம் பெற்றது.
எங்கிருந் தந்தச் சுவாசமும் வந்தது?
பிசாசின் எரிதழற் பிறந்தே வந்தது; 730
எங்கிருந் திதயம் அதற்கும் வந்தது?
பெருமூண் உண்பவள் பெற்றிட்ட இதயமாம்;
கொடியவிம் மூளையும் கொண்டது எவ்விதம்?
பயங்கர அருவியின் பறிநுரை யதனில்;
வந்தது எவ்விதம் வன்கொடுங் குணங்குறி?
பெரியநீர் வீழ்ச்சியின் நுரையிலே யிருந்துதான்;
தீயஇச் சக்தியின் திகழ்தலை எதனினால்?
அதன்தலை அழுகிய பயற்றம் விதையினால்.
அதற்கு விழிகளும் ஆனது எதனினால்?
ஆனது பிசாசதன் அரிசணல் விதைகளால்; 740
கெட்டதன் காதுகள் கிட்டிய தெதனினால்?
பிசாசதன் மிலாறுவின் பிஞ்சிலை யவைகளால்;
எதனினால் வாயும் இதற்கமைந் திட்டது?
பேருண்டி யாள்**வார்ப் பிரிவளை யத்தினால்;
இழிந்ததன் வாய்நாக் கெவ்வித மானது?
தீயஇச் சக்தியின் தெறிஈட்டி அதனினால்;
கொடியஇப் பிராணியின் கூர்எயி றெவ்விதம்?
துவோனியின் பார்லியின் சோர்உமி அதனினால்;
தீயஇச் சக்தியின் செவ்வீறு எதனினால்?
கல்லறைக் கன்னியின் கழலீறு அதனினால். 750
முதுகினைக் கட்டி முடித்தது எதனால்?
கடும்பிசா சின்தீக் கரிகளி லிருந்து;
ஆடும் வாலையும் அமைத்தது எதனால்?
பெரும்தீச் சக்தியின் பின்னிய கூந்தலால்;
குடல்களைப் பிணைத்துக் கொண்டது எதனால்?
அந்திம காலச் சங்கிலிப் பட்டியால்.
இவ்வள வேஉன் இனத்தவ ராவார்
பேர்பெறும் கெளரவப் பெருமையிவ் வளவே
நிலத்தின் கீழ்வாழ் பிலங்கரும் புழுவே
மரண(த்து) நிறம்கொள் வலிய பிராணியே 760
பூமியின் நிறமே, **பூண்டின் நிறமே,
வானத்து வில்லின் வர்ணம் அனைத்துமே
இப்போது பயணியின் இடம்விட் டகலு
இடம்நகர் மனிதனின் எதிர்புற மிருந்து
இப்போ பயணியை ஏக விடுவாய்
லெம்மின் கைனனை நேர்செல விடுவாய்
வியன்வட பால்நில விருந்தத னுக்கு
நற்குடிப் பிறந்தார் நல்விருந் துக்கு."
இப்போ(து) பாம்பு இடம்விட் டகன்றது
விழிநூ றுடையது விலகிச் சென்றது 770
தடித்த பாம்பு தான்திரும் பியது
ஓடும் பாதையில் இடம்மா றியது
பயணியை அவன்வழி படரவும் விட்டது
லெம்மின் கைனனை நேர்செல விட்டது
வியன்வட பால்நில விருந்தத னுக்கு
குடிக்கும் ரகசியக் குழுவி னிடத்தே.
பாடல் 27 - வடநாட்டில் போரும் குழப்பமும் TOP
அடிகள் 1 - 204 : வடபால் நிலத்துக்கு வந்த லெம்மின்கைனன் பல வழிகளிலும் முரட்டித்தனமாக நடக்கிறான்.
அடிகள் 205 - 282 : வடநாட்டுத் தலைவன் கோபங் கொண்டு லெம்மின்கைனனை மந்திர சக்தியால் தோற்கடிக்க முயற்சித்து, முடியாத கட்டத்தில் வாட் போருக்கு வரும்படி சவால் விடுகிறான்.
அடிகள் 283 - 420 : இந்தப் போரின்போது லெம்மின்கைனன் வடநாட்டுத் தலைவனின் தலையைச் சீவி எறிகிறான். அதனால் ஆத்திரம் கொண்ட வடநாட்டுத் தலைவி ஒரு படையைத் திரட்டி லெம்மின்கைனனை எதிர்க்கிறாள்.
கொணர்ந்தேன் இப்போ தூர நெஞ்சினனை
அஹ்தி தீவினன் அவன் வருவித்தேன்
மரணப் பற்பல வாயில்கள் கடந்து
கல்லறை நாக்கின் கனபிடி கடந்து
வடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
இரகசியக் குடியர் எலாம்கூ டிடத்தே;
இனிநான் புகலும் விடயம் எதுவெனில்
எனது நாவினால் இயம்புவ தெதுவெனில்
குறும்பன் லெம்மின் கைனன் எவ்விதம்
அவனே அழகிய தூர நெஞ்சினன் 10
வடபால் வசிப்பிடம் வந்தான் என்பது
சரியொலா இருப்பிடம் சார்ந்தான் என்பது
அமையும் விருந்துக் கழைப்பில் லாமல்
குடிக்கும் நிகழ்வுக் கொருதூ தின்றி.
குறும்பன் லெம்மின் கைனனப் பாது
பையன் செந்நிறப் படுபோக் கிரிபின்
வந்து உடனே வசிப்பிடம் சேர்ந்ததும்
தரைமத் திக்கு அடிவைத் தேகினன்
ஆட்டம் கண்டது **அப்பல கைத்தளம்
எதிரொலி செய்தது தேவதா ரின்மனை. 20
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"நானிங் குற்றதால் நலமார் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கூறவந் தோர்க்கும் வாழ்த்துக்கள்
கேளாய், வடபுலக் கீர்த்திகொள் தலைவனே!
இங்கே இந்த இல்லத் துளதா
பாய்பரி கடிக்கப் பார்லித் தானியம்
அருந்த வோர்வீரன் அரும்'பீர்'ப் பானமும்?"
அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
நீள்மே சையின்முனை நிமிர்ந்தே யிருந்தான் 30
அவனும் அவ்விடத் தமர்ந்தே கூறினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எங்கெனும் இந்த இல்லத் திருக்கலாம்
குதிரை தங்க இடமும் இருக்கலாம்
இங்கே தடையெதும் இல்லை உனக்கும்
இந்த மனையில்நற் பண்போ டிருந்தால்
நற்கடை வாயிலின் பக்கமும் நிற்கலாம்
உயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்
இரண்டு கலயத் திடைநடு வினிலே
மூன்று **முளைகள் முட்டும் இடமதில்." 40
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
சட்டியின் நிறத்தில் தானிருந் த(அ)தனை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"பிசாசுதான் இந்த வசிப்பிட மடைய,ம்
நற்கடை வாயிலின் பக்கலில் நிற்க
படிந்த ஓட்டடை துடைத்திட இவ்விடம்
பெருக்கியே யெடுக்க புகைச்சுடர்க் குப்பை.
எந்தன் தந்தையும் இதைச்செயார் என்றும்
இசையுறும் எந்தன் ஈன்றவர் செய்யார் 50
அந்த இடத்தில் அவ்விதம் நிற்பதை
உயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்
ஏனெனில் அப்போ திடமும் இருந்தது
கவினார் பரிக்குக் களஞ்சிய முன்றிலில்
கழுவிய அறைகள் வரும்மனி தர்க்கு
கையுறை வீசிடற் கமைந்தன கொளுவி
மனிதரின் கையுறை முளைகளும் இருந்தன
சுவர்களும் வாள்களைச் சொருகிட விருந்தன
எனக்கு மட்டுமே ஏனது இங்கிலை
இதன்முன் எந்தைக் கிருந்தது போலவே?" 60
அடுத்ததாய் மேலும் அவன்முன் னேறினான்
மேசையின் ஒருபுற வெறுமுனைக் கேகினன்
ஆசன ஓரத் தவனுட் கார்ந்தனன்
அமர்ந்தனன் தேவதா ரரும்பல கையிலே
அடிப்புறம் வெடித்த ஆசனத் தமர்ந்தான்
ஆடிய தேவரா ரதன்பல கையிலே.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வரவேற் புடைய பெருவிருந் தலநான்
'பீர்'க்குடி பானம் நேர்க்கொண ராவிடின்
வந்து சேர்ந்தவிவ் வளவிருந் தினற்கு." 70
*இல்போ மகளவள் நல்லெழில் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஓஹோ பையனே உறுலெம்பி மைந்தனே
எவ்வகை விருந்தினன் இயம்புக நீயே
வந்தனை எந்தன் மண்டையை மிதிக்கநீ
எந்தன் மூளையை இழிவு படுத்தநீ;
எங்கள்'பீர்' பார்லியாய் இன்னமும் உள்ளது
சுவைப் பானம்மா வூறலா யுள்ளது
சுடப்படா துள்ளன துண்டிலாம் ரொட்டிகள்
தகுந்தமா மிசக்கறி சமையாது உள்ளன. 80
ஓர்நிசி முந்திநீ யுவந்துவந் திருக்கலாம்
அல்லது அடுத்தநாள் அன்றுவந் திருக்கலாம்."
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஆகவே விருந்திங் கருந்தப் பட்டது
விவாகக் குடியும் விருந்தும் நிகழ்ந்தது
பருகு'பீர்'ப் பானம் பங்கிடப் பட்டது
அருநறை மனிதர்க் களவிடப் பட்டது 90
சாடிகள் அனைத்தும் சரிசேர்ப் புண்டன
வைக்கப் பட்டன வன்கல யம்மெலாம்.
ஓ,நீ வடபால் உயர்நிலத் தலைவியே!
இருண்ட நாட்டின் எயிறுநீள் பெண்ணே!
பொல்லா தவருடன் புரிந்தனை திருமணம்
நாய்மதிப் புடையரை நாடியே அழைத்தனை
தொடுபெரும் ரொட்டித் துண்டுகள் சுட்டனை
பார்லி மணியில் 'பீர்'ப்பானம் வடித்தனை
ஆறு வழிகளில் அனுப்பினை அழைப்பு
அழைப்பவர் ஒன்பது அகல்வழிச் சென்றனர் 100
இழிஞரை அழைத்தனை ஏழையை அழைத்தனை
அழைத்தனை ஈனரை அழைத்தனை அற்பரை
குடிசைவாழ் மெலிந்த குழுவினர் தம்மையும்
நன்கிறு கியவுடை நாடோ டி தம்மையும்
அழைத்தனை பலவகை ஆட்கள்எல் லோரையும்
அதிலெனை மாத்திரம் அழையாது விட்டனை.
எதற்காய் இதனை எனக்குநீ செய்தனை,
தந்துமா எந்தன் சொந்தப் பார்லியை?
அகப்பை அளவிலே அடுத்தோர் கொணர்ந்தனர்
பார்லியைக் கொட்டினர் பாத்திரத் தொருசிலர், 110
**பறையிலே அளந்து பார்த்துக் கொணர்ந்தனே
அரையரை **மூடையாய் அள்ளி யெறிந்தனே
பார்லிஎன் சொந்தப் பயன்தா னியத்தை
உழுதுநான் விளைத்த உயர்தா னியத்தை.
லெம்மின் கைனன்நா னிப்போ தலவோ,
மிகுநற் பெயருடை விருந்தின னலவோ,
'பீரி'னைக் கொணராப் போனதால் இங்கு
அடுப்பில் கலயம் இடாதே போனதால்
கலயத் துள்ளே கறியு மிலாததால்
பன்றி யிறைச்சிகாற் **பங்கு மிலாததால் 120
நானுண் பதற்கும் நான்குடிப் பதற்கும்
நீண்டஎன் பயண நிகழ்வின் முடிவில்."
இல்போ மகளவள் நல்லெழில் தலைவி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"ஏய், யா ரங்கே, இளஞ்சிறு பெண்ணே!
எந்தன் நிரந்தர இணையில் அடிமையே!
கலயத் துள்ளே கறியதை வைப்பாய்
விருந்தாளிக்கு வியன்'பீர்' கொணர்வாய்!"
சிறிய அப்பெண் வெறுமைப் பிள்ளை
கலயம் ஒழுங்கறக் கழுவி எடுப்பவள் 130
குறையாய் அகப்பையைத் துடைத்து வைப்பவள்
கரண்டியைச் சிறியதாய்ச் சுரண்டு கின்றவள்
கலயத்தி னுள்ளே கறியதை வைத்தாள்
மாமிச எலும்பையும் மற்றுமீன் தலையையும்
**கிழங்கின் பழைய கீழ்த்தண் டுகளையும்
தொடுகன ரொட்டியின் துண்டு துகளையும்;
சாடியில் அடுத்துப் 'பீரை'க் கொணர்ந்தனள்
தரமிலாப் பானம் தனைக்கல யத்தில்
குறும்பன் லெம்மின் கைனன் குடிக்க
பெருங்குடி கேட்டவன் பெரிதுங் குடிக்க. 140
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"உண்மையில் நீயொரு உயர்சரி மனிதனா
இப்'பீர்'ப் பானம் எடுத்தருந் துதற்கு
இம்முழுச் சாடியும் ஏற்றுக் குடிக்க?"
குறும்புப் பையன் லெமம்மின் கைனன்
அப்போ பார்த்தனன் அந்தச் சாடியுள்:
அடியா ழத்தில் கிடந்தன புழுக்கள்
பாதி வழிவரை பாம்புகள் மிதந்தன
விளிம்புப் பகுதியில் நெளிந்தன ஊர்வன
பல்லி யினங்களும் பதிந்துட னூர்ந்தன. 150
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
தூர நெஞ்சினன் சொல்லினன் திடீரென
"சாடியைக் கொணர்ந்தோர் ஏகுவர் துவோனலா
கலயம் சுமந்தோர் கடுமிறப் புலகு
சந்திர உதயம் தான்வரு முன்னர்
இன்றையப் பொழுது ஏகி முடியுமுன்!"
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:
"ஓ,நீ 'பீர்'எனும் உரமுள பானமே!
இங்கே வீணாய் இப்போ வந்தனை
வந்தாய் பொருளிலா வழிகள்பின் பற்ற; 160
வாயால் குடிப்பது வடித்த'பீர்'ப் பானம்
கழிவைப் பின்னர் எறிவது நிலத்தில்
மோதிர விரலின் முழுத்துணை கொண்டு
அத்துடன் இடது கட்டை விரலினால்."
சட்டைப் பையில் தன்கை நுழைத்தனன்
சுருக்குப் பைக்குள் துழாவிப் பார்த்தான்
தூண்டிலைப் பையினால் தூக்கி எடுத்தான்
இரும்பு கொளுவியை எடுத்தான் பையிருந்(து)
சாடிக் குள்ளே தாழ்த்தினன் அதனை
'பீர்'ப் பானத்தில் போட்டனன் தூண்டில் 170
தூண்டிலில் தடக்கித் தொங்கின புழுக்கள்
வெறுப்புறு விரியன் விழுந்தன ஊசியில்
பிடித்தான் தூண்டிலில் பெருநுணல் நூறு
ஓரா யிரம்கரும் ஊர்வன வந்தன
புமியில் வீசினன் புவிநலத் துக்காய்
அந்தத் தரையிலே அனைத்தையும் போட்டான்;
உருவினான் தனது ஒருகூர்க் கத்தியை
பதவுறை யிருந்த பயங்கர இரும்பை
வெட்டினான் பின்னர் வியன்புழுத் தலைகளை
முறித்தான் பாம்புகள் அனைத்தையும் கழுத்தில் 180
போதிய வரைக்கும் 'பீரை'க் குடித்தான்
கறுத்தத் தேனைத் தன்மனம் நிறைய
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மிகமன முவந்துகொள் விருந்தாளி யல்லநான்
'பீர்'ப்பானம் கொணரும் பேறிலாப் படியால்
தரமான பானம் தரவும் படாமையால்
தாராள மான தரும்கரங் களினால்
இன்னமும் பெரிதாம் எழிற்கல யங்களில்
கொல்லப் படவிலை கொழும்நற் செம்மறி
வெட்டப் படவில்லை மிகப்பெரும் எருது 190
கொணரப் படவில்லை கொழும்எரு தில்லம்
குளம்புறும் கால்நடை விளம்பறைக் குள்ளிலை."
அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆதலால் எதற்குநீ அடைந்தனை இவ்விடம்
உன்னையார் அழைத்தார் உவந்துஇக் கூட்டம்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அழைப்புள்ள விருந்தினன் ஆவான் சிறந்தவன்
அழைப்பிலா விருந்தினன் அவனிலும் சிறந்தவன்; 200
வடநில மைந்தநீ வருவிப ரம்கேள்
வடபால் நிலத்திடை வன்எச மானன்நீ
விலைக்குப் 'பீரை' விடுவைநீ வாங்க
பணத்துக்குக் கொஞ்சம் பானம் பெறுவேன்."
அப்போது வடபுல அந்நாட் டதிபன்
சினமே கொண்டான் சீற்றமும் கொண்டான்
கடுமையாய்க் கோபமும் காய்தலும் கொண்டான்
தரையிலே ஓர்குளம் தான்வரப் பாடினான்
லெம்மின் கைனனின் நேர்எதிர் ஆங்கே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 210
"அதோஓர் அருவி அருந்துதற் கேநீ
குளமும் ஒன்றதோ குடிக்கநீ நக்கி."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
**"மனைவியர் வளர்த்த வளர்கன் றல்லநான்
வாலொன் றுடைய வல்லெரு தல்லநான்
அருவியில் ஓடும் அந்நீர் குடிக்க
குளத்திலே யுள்ள கொடுநீர் குடிக்க!"
பாடத் தொடங்கினன் மந்திரப் பாடல்கள்
பாடத் தொடங்கினன் அவனே பாடல்கள் 220
எருதொன்(று) தரையிலே ஏற்படப் பாடினான்
மாபெரும் காளை வளர்பொற் கொம்புகள்;
குளத்திலே இறங்கிக் கலக்கிக் குடித்தது
அருவியில் மனம்போல் அருந்திய ததுநீர்.
வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
வாயி லிருந்தொரு ஓநாய் **அழைத்தனன்
தரையிலே வந்தது தரிக்கப் பாடினான்
கொழுத்த காளையைக் கொல்வதற் காகவே.
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
வெண்ணிறத் தொருமுயல் வெளிவரப் பாடினான் 230
தரையிலே துள்ளித் தானது குதிக்க
அவ்வோ நாயின் அகல்வாய் முன்னால்.
வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
கோணல் அலகுறும் நாய்வரப் பாடினன்
குறித்தவம் முயலைக் கொல்வதற் காக
வாக்குக்கண் பிராணியை வாயால் கிழிக்க.
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
அவ்வுத் தரம்மேல் அணில்வரப் பாடினன்
உத்தரம் மீதிலே ஓடித் திரியவே
அதனைப் பார்த்து அந்தநாய் குரைக்க. 240
வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
பொன்னெஞ்(சுக்) கீரி புதிதெழப் பாடினன்
அந்தக் கீரிபாய்ந் தணிலைப் பிடித்தது
உத்தரம் மீது உற்றிடும் அணிலை.
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
நற்பழுப் புநிற நரிவரப் பாடினன்
பொன்னெஞ்(சுக்) கீரியைப் போய்ப்பிடித் துண்டது
கவினார் **உரோமம் காணா தொழிந்தது.
வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
வாயி லிருந்தொரு கோழியை **எடுத்தனன் 250
படர்தரைக் கோழியும் படபடத் தோடவே
அந்த நரியின் அகல்வாய் எதிரிலே.
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
வாயிலே பருந்து வந்திடப் பாடினன்
நாவிலே யிருந்து நனிவிரை **நகப்புள்
வந்தது கோழியை வலிப்பாய்ந் தெடுத்தது.
வடநிலத் தலைவன் வருமா றுரைத்தனன்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"இங்கே விருந்து நன்கமை யாது
விருந்தினர் அளவு மிகக் குறையா விடின்; 260
வேலைக்கு வீடு விருந்தினர் வழிக்கு
நல்ல குடியரின் நாள்நிகழ் விருந்தும்.
பேய்வெளிப் பாடே, போஇங் கிருந்துநீ!
மனித வர்க்க வருபுணர்ப் பிருந்து
நீசனே, இழிந்தோய், நின்வீட் டுக்கு!
தீயனே, உடனே செல்கநின் நாடு!"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"சபித்தலால் ஒருவனைச் சமைத்திடல் முடியா
எத்துணை தீயவன் என்றபோ திலுமே 270
அவனது இடந்திருந் தகற்றிட அவனை
அவனது நிலையிருந் தவனைத் துரத்திட."
அப்போது வடபுல அந்நாட் டதிபன்
சுவரி லிருந்தொரு சுடர்வாள் பெற்று
பயங்கர அலகைப் பற்றிக் கரத்தினில்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,நீ அஹ்தி, தீவில்வாழ் பவனே!
அல்லது அழகிய தூரநெஞ் சினனே!
எங்களின் வாள்களால் எங்களை யளப்போம்
எங்களின் அலகால் எங்களைக் கணிப்போம் 280
என்வாள் சிறந்ததா இல்லையா என்பதை
அல்லது தீவினன் அஹ்தி வாள் என்பதை!"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"என்வாள் பற்றி இயம்புவ தானால்
எலும்புக ளதனை என்வாள் பிளந்தது
என்வாள் நொருக்கிய தெல்லா மண்டையும்!
அங்ஙனம் அதுவும் அமையும் போதிலே
இங்கே விருந்து நன்கமை யாது
ஆதலால் வாள்களால் அளப்போம் கணிப்போம்
எவரது வாள்தான் கூரிய தென்பதை! 290
முன்னொரு போதும் எந்தன் தந்தை
அளக்க வாளால் அஞ்சிய தில்லை
மைந்தனின் சந்ததி மாறியா போகும்
பிள்ளையின் தலைமுறை பிறவே றாகுமா?"
எடுத்தான் வாளை இரும்பை உருவினான்
அனற்பொறி சிந்தும் அலகைப் பற்றினான்
தோலினா லான தொடுமுறை யிருந்து
தோலினால் இயைந்த தொடர் பட்டியினால்;
அவர்கள் கணித்தனர் அளந்தனர் அவர்கள்
அந்த வாள்களின் **அளவுநீ ளத்தை: 300
சிறிதே நீளமாய்த் தெரிந்தது ஒன்று
வடபுலத் தலைவனின் வாளே அதுதான்
விரல்நக மேற்கரும் புள்ளியின் நீளம்
பாதி விரலின் பகுகணு வளவு.
தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"உன்றன் வாள்தான் உயர மானதால்
உன்முறை வீசி உடன்முதல் அறைதல்."
அதன்பின் வடபுல அந்நாட் டதிபன்
வீசி அறைந்தனன் விறற்குறி நெருங்கினன் 310
குறியை நெருங்கிக் குறுகினும் தவறினன்
லெம்மின் கைனனின் நேர்தலைக் குறியை;
அடித்தனன் ஒருமுறை அங்குள உத்தரம்
கூரை மரத்தின் மீதும் மோதினன்
ஓசை யெழுப்பிய உத்தர முடைந்தது
கூரை மரமும் கூறிரண் டானது.
தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"உத்தரம் செய்த உயர்பிழை என்ன
கூரை மரத்தின் குற்றமும் என்ன 320
உத்தரம் மீது ஓங்கி அறைந்தனை
கூரை மரத்தைக் குறிபார்த் தடித்தனை?
வடபால் வாழும் மைந்தனே, கேள்நீ!
வடபால் நிலத்தின் வன்தலை வன்நீ!
மிகவும் சிரமம் வீட்டினுள் பொருதலும்
முதுமா தரிடம் மிகுதுணிச் **செயலும்;
புதியஇவ் வில்லினை அதிபழு தாக்குவோம்
தரையைக் குருதியால் கறையாக் கிடுவோம்;
முற்றம் நோக்கிநாம் முன்வெளிச் செல்லலாம்
போரிட வெளியே போகலாம் வயற்புறம் 330
புற்திடர் நோக்கியே போகலாம் சமர்க்கு;
இருந்திடும் நன்கே இரத்தம் முன்றிலில்
அழகாய் அமைந்திடும் அயல்தோட் டவெளி
இயற்கையாய் தெரிந்திடும் இதுபனி மழைமேல்."
அவர்கள் வந்தனர் அவ்வெளி முற்றம்
பசூசுவின் ஒருதோல் நனிகொணர் பட்டது
அதுவும் முற்ற மதில்விரி பட்டது
இருவரும் அதன்மேல் இனிதுநிற் பதற்கு.
தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
"வடபால் நிலத்தின் மைந்தனே கேட்பாய்! 340
உந்தன் வாள்தான் உயர்நெடி தானது
உந்தன் வாளே உயர்பயங் கரமாம்
ஆயினும் தேவை அதுஉனக் காகலாம்
இருவரும் நாங்கள் இங்கு பிரியுமுன்
உந்தன் கழுத்து உடைவதன் முன்னே
வடநில மைந்தா வாமுதல் வீசு!"
வடநில மைந்தன் வந்துமுன் வீசினன்
ஒருமுறை வீசினன் இருமுறை வீசினன்
அறைந்தனன் மூன்றாம் முறையும் விரைந்து
ஆயினும் இலக்கில் அறைவிழ வில்லை 350
அதுசீவ வில்லை அவன்சதை கூட
அதுதொட வில்லை அவன்தோல் கூட.
தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"எனக்கொரு வாய்ப்பை இப்போ தருவாய்
இனிவரப் போவது எந்தன் முறையே!"
அப்போ(து) வடபுல அந்நாட் டதிபன்
செப்பிய மொழிக்குச் செவிசாய்த் திலனே
அறைந்தான் ஓயா தறைந்தான் மீண்டும்
குறிபார்த் தானெனில் குறிதவ றிற்று. 360
தீப்பொறி பயங்கர இரும்புசிந் திற்று
உருக்கின் அலகில் நெருப்பு எழுந்தது
குறும்பன் லெம்மின் கைனனின் கையில்
எழுந்து சென்றதோர் இகல்ஒளிப் பிழம்பு
நோக்கிக் கழுத்தை நுழைந்தழிப் பதற்கு
வடபால் நிலத்தின் மைந்தனின் கழுத்தை.
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஆஹா, வடபால் அகல்நிலத் தலைவ!
இழிந்த மனிதனே இயைந்தநின் கழுத்து
மிகச்சிவந் துளது விடியலைப் போல." 370
அப்போ வடபால் அகல்நில மைந்தன்
அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
தனது பார்வையைத் தான்பின் திருப்பி
நோக்கினன் சொந்த நுவல்தன் கழுத்தை;
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அறைந்தனன் ஓங்கி விரைந்தே வாளால்
மனிதனை அங்கே வாளால் அடித்தனன்
தாக்கினன் வீசித் தன்வாள் அலகை.
அறைந்தான் பின்னர் அங்கே ஒருதரம்
பெயர்த்தான் தலையைப் பெருந்தோ ளிருந்து 380
மண்டையை நொருக்கினன் வன்கழுத் திருந்து
**கிழங்கின் தண்டை எழுந்தொடிப் பதுபோல்
கதிர்த் தானியத்தை அறுத்தெடுப் பதுபோல்
முழுமீன் சிறகை முன்அரி தலைப்போல்;
முன்றிலில் உருண்டு முன்தலை சென்றது
மனிதனின் மண்டை வெளித் தோட் டத்தில்
செருகணை தூக்கிச் சென்றது போல
மரத்தினால் விழுந்ததொர் மரக்கோ ழியைப்போல்.
நின்றன கழுமரம் குன்றிலே நூறு
முன்றிலில் ஆயிரம் முன்எழுந் திருந்தன 390
கழுவிலே நூற்றுக் கணக்காம் தலைகள்
இருந்தது தலையிலா தொருகழு மரந்தான்
அந்தக் குறும்பன் லெம்மின் கைனன்
மதிப்புறும் பையனின் வன்தலை எடுத்தான்
முன்றிலி லிருந்து மண்டையைக் கொணர்ந்தான்
அந்தக் கழுமர அருமுனை தனக்கு.
பின்னர் அஹ்தி என்னும் தீவினன்
அழகிய தூர நெஞ்சினன் அவனே
உள்ளே திரும்பி உடன்இல் வந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 400
"வெறும்புனல் கொணர்வாய், வெறுப்புறு பெண்ணே!
எனது கைகளை இங்கே கழுவிட
தீய தலைவனின் செந்நீ ரிருந்து
கொடியோன் உறைந்த குருதியி லிருந்து!"
வடநில முதியவள் மாசின முற்றனள்
சினமே கொண்டாள் சீற்றமும் கொண்டாள்
வாளுடை வீணரர்கள் வரவெளிப் பாடினள்
நற்படைக் கலம் கொடு நாயகர் வெளிவர
வாள்கைக் கொண்ட மனிதர்கள் நூறுபேர்
வாள்களைச் சுமந்து வந்தபே ராயிரம் 410
லெம்மின் கைனனின் நிமிர்தலை குறித்து
தூர நெஞ்சினன் தொடுகழுத் ததில்விழ.
நிசமாய் இப்போ(து) நேரமும் வந்தது
சென்று கொண்டிருந்தது நிகழ்நாள் நழுவி
வருந்தத் தக்கதாய் வந்தது சூழ்நிலை
அனைத்தும் தொல்லையாய் ஆனது நிலமை
அஹ்திப் பையன் அங்கிருப் பதற்கு
தங்கி இருந்திட லெம்மின் கைனன்
வடபால் நிலத்து நடைபெறு விருந்தில்
இரகசியக் குடியரின் இகல்கூட் டத்தில். 420
பாடல் 28 - லெம்மின்கைனனும் அவனது அன்னையும் TOP
அடிகள் 1 - 164 : லெம்மின்கைனன் வடநாட்டிலிருந்து விரைவாகத் திரும்பி வீட்டுக்கு வருகிறான். வடநாட்டிலிருந்து ஏராளமானோர் தன்னுடன் போருக்கு வருவதாகவும், தான் எங்கே போய் மறைந்து வாழலாம் என்றும் தாயிடம் ஆலோசனை கேட்கிறான்.
அடிகள் 165 - 294 : வடநாட்டுக்குச் சென்றதற்காக முதலில் தாய் அவனைக் கடிந்தாலும் பின்னர் மறைந்து வாழக்கூடிய பல்வேறு இடங்களைப் பற்றிக் கூறுகிறாள். கடைசியாக, ஒரு பெரிய போர் நடைபெற்ற காலத்தில் அவனுடைய தந்தை அமைதியாக வாழ்ந்த இடமான, பல கடல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தீவுக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறாள்.
இப்போ(து) அஹ்தி என்னும் தீவினன்
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
ஓரிடம் தேடினான் ஒளிந்து வாழ்ந்திட
விரைந்தே யவ்விடம் விட்டே ஓடினான்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
மங்கிய *சராவின் வாழ்வீ டிருந்து.
பனிப்புயல் போலவன் புறப்பட் டேகினன்
மூடு புகைபோல் முன்றிலை யடைந்தான்
தீச்செய லிருந்து சென்று விடுபட
தனதுகுற் றத்தால் தான்மறை தற்காய். 10
அங்ஙனம் முன்றிலால் அவன்வரு கையிலே
செலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி
முன்னர் கொணர்ந்த மொய்ம்பரி தேடினான்
முந்திய பரியை முயன்றவன் கண்டிலன்
ஆனால் வயலிலோ அமைந்ததோர் பாறை
அலரிப் பற்றையோர் அருகினில் இருந்தது.
இப்போ(து) நல்ல தெதுவாம் உபயம்
எதைப்பின் பற்றலாம் ஏற்றநல் வழியென
செறும்அவன் தலைக்குத் தீது வாராமல்
அவன்கே சத்துக் கழிவுநே ராமல் 20
அல்லது எழில்மயிர் அதுவீழ்ந் திடாமல்.
இந்த வடநிலத் திருக்கும் முன்றிலில்
கிராமத் திப்போ கேட்டதோர் ஓசை
இரைச்சலும் கேட்டது எலாஅயல் இல்லிலும்
உட்கிரா மத்திலோர் ஒளிக்கீற்று மின்னல்
சாளரத் தூடாய்த் தரிசித் தனகண்.
குறும்பன் லெம்மின் கைனன் அங்கே
அவன்தான் தீவில் வாழ்பவன் அஹ்தி
மற்றெது வாகவோ வரநேர்ந் ததுவே
ஏற்றுள தன்னுரு மாற்றநே ரிட்டது: 30
கழுகாய் மாறிக் ககனத் தெழும்பினன்
விண்ணினை நோக்கி மேற்பறக்(க) எண்ணினன்
கன்னம் இரண்டையும் காய்ந்தது சூரியன்
புருவம் இரண்டையும் எரித்தது சந்திரன்.
குறும்பன் லெமம்ன் கைனனு மங்கே
மானிட முதல்வனை மனதில் வணங்கினன்:
"ஓ,முது மனிதனே, உயர்நல் தெய்வமே!
விண்ணிலே உறையும் மெஞ்ஞா னவனே!
முழங்கும் முகில்களை முழுதாள் சக்தியே!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே! 40
புகாருள காலப் புதுநிலை யாக்குவாய்
சிறிது சிறிதாய் செழுமுகில் படைப்பாய்
அந்த ஒதுக்கில்நான் அகன்றுபோய்ச் சேரலாம்
எந்தன்இல் லத்தை நனிபெற முயலலாம்
மீண்டுமென் அன்புறும் மேலாம் தாயிடம்
என்றன் புகழ்சேர் ஈன்றவ ரிடத்தே."
அங்ஙனம் அவனும் அகன்றனன் பறந்து
செல்கையில் ஒருமுறை திரும்பிப் பார்த்தனன்
கலங்கிய நிறத்தொரு கருடனைக் கண்டனன்
அதனுடை விழிகள் அனலாய் எரிந்தன 50
வடபால் நிலத்து மைந்தனைப் போலவே
வடக்கின் முன்னால் திடத்தலை வன்போல்.
கலங்கிய நிறத்தக் கருடன் மொழிந்தது:
"ஓகோ, அஹ்தி, என் உயர்சோ தரனே!
முன்னாள் யுத்தம் நின்நினை வுளதா
சமமாய் நடந்த சமர்நினை வுளதா?"
செப்பினன் அஹ்தி என்னும் தீவினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என் கருடனே, ஒளிருமென் பறவையே!
வீட்டினை நோக்கிநீ விரைவாய்த் திரும்பி 60
சென்றதும் அங்கு செப்புவாய் இங்ஙனம்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே:
'கழுகொன்று பிடிப்பதும் கடினம் கைகளால்
உளசிறப் பறவையை உண்பதும் உகிர்களால்.' "
விரைந்தே அவனும் வீட்டினை யடைந்தான்
அன்புறும் தாயின் அருகினில் வந்தான்
முகத்தில் கவலை முழுமையாய் இருந்தது
நெஞ்சமும் துயரம் நிறைந்தே கிடந்தது.
அன்னையின் எதிரில் அவனும் வந்தான்
ஒழுங்கையில் அவளும் உடன்நடக் கையிலே 70
விரைந்தடி வைக்கையில் வேலியின் அருகில்;
ஆவலாய்க் கேட்டாள் அப்போ தன்னை:
"எந்தன் மகனே, என்னிளம் மகனே!
எந்தன் பிள்ளையே, இகல்மிகும் பிள்ளையே!
மனதிலே கவலை வந்தது எதனால்
திகழ்வட நாட்டினால் திரும்பிய வேளை?
அநீதி நற்சாடி அளிக்கையில் நடந்ததா?
வடநில விருந்து வைபவம் அதிலே?
அநீதி நற்சாடி அளிக்கையில் நடந்தால்
பெருந்திறச் சாடியைப் பெறுமை நீயிங்கு 80
உந்தையார் போரிலே உரிமையாய்ப் பெற்றது
அமரில் பெற்றிங் கரிதே கொணர்ந்தது."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
சாடியால் அநீதி தாமிழைப் பவர்யார்?
தலைவரைக் கூடநான் தனிஏ மாற்றுவேன்
வீரர்நூற் றுவரை ஏமாற்ற வல்லவன்
எதிர்கொள்ள முடிந்தவன் எதிர்க்குமா யிரவரை."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்? 90
பொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்ததா?
அவமானம் குதிரைக் குட்டியால் ஆனதா?
பொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்திடில்
சிறப்புடைப் பொலிப்பரி தேர்ந்தொன்று வாங்குவாய்
உந்தை பெற்றிட்ட உயர்பொருட் களினால்
பெற்றவர் தேடிய சொத்துக் களினால்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே
அவமதிப் பதற்கு எவருளர் பரியால்?
என்னை வெல்பவர் எவர்பரிக் குட்டியால்? 100
நானே தலைவரை நன்கவ மதிப்பவன்
மாபரி யோடும் மனிதரை வெல்பவன்
வலியுடை மனிதரை மற்றவர் குதிரையை
வீரரை அவரவர் விறற்பொலிப் பரியுடன்."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்?
நெஞ்சில் துயரமும் நிறைந்தது எதனால்?
வடநிலத் திருந்து வந்திடும் வேளை
நங்கையர் பார்த்துனை நகைத்தது முண்டா?
அல்லது கேலி அரிவைசெய் தனரா? 110
அங்ஙனம் உனைப்பார்த் தரிவையர் நகைத்தால்
அல்லது கேலி அரிவையர் செய்தால்
அரிவையர் மீண்டும் அதேசெயப் படுவர்
நங்கையர் பின்னர் நகைத்திடப் படுவர்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
எவருளர் மகளிரால் எள்ளியே நகைப்பவர்,
யாருளர் மகளிரால் கேலிசெய்(து) நகுபவர்!
நானே தலைவரை நகைப்பவன் பார்த்து
எல்லாப் பெண்ணையும் கேலியே செய்பவன் 120
நானே நகைப்பவன் நங்கைநூற் றுவரை
மணக்கோ லத்து மாதரா யிரவரை."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"என்றன் மைந்தஉன் சங்கதி என்ன?
நிசமாய் உனக்கு நேர்ந்தது என்ன
நீவட பாலாம் நிலம்சென்(ற) நேரம்,
அல்லது அதிகமாய் அயின்றதன் பின்னர்
அதிகமாய் உண்டு அருந்திய பின்னர்
நூதன மான நுவல்கனா வந்ததா
நீதுயின் றிட்ட நீள்இரா வேளை? " 130
குறும்பன் லெமமின் கைனனப் போது
இவ்வித வார்த்தையில் இயம்பவும் முடிந்தது:
"முதிய மாதர் அதைநினைக் கட்டும்
கார்நிசி தோன்றிய கனவுகள் பற்றி!
என்இராக் கனவுகள் இருப்பன நினைவில்
தெளிவாய் மேலும் திகழ்வது பகற்கனா;
அன்னையே, என்றன் அரும்முது பெண்ணே!
சாக்கிலா காரத் தகுபொருள் கட்டு
சணல்நூற் பையிலே உணவுகள் வைப்பாய்
துணிப்பை ஒன்றிலே கட்டுவாய் **உப்பினை 140
புறப்படும் வேளை புணர்ந்தது பையற்(கு)
சுயநா டகன்று பயணிக்கும் நேரம்
பொன்னெனும் இந்தப் போற்றும்இல் லிருந்து
அழகுறு தோட்ட அகல்வெளி கடந்து
வாள்களைத் தீட்டுவர் மனிதர்கள் இங்கே
சாணை பிடிக்கிறார் சமர்க்காம் ஈட்டிகள்."
அன்னையும் விரைந்து இங்ஙனம் கேட்டனள்
வருத்தம் கண்டு வாகாய் வினவினள்:
"வாள்களை எதற்கு வலிதே தீட்டுவார்
எதற்காய் ஈட்டியைப் பிடிக்கிறார் சாணை? " 150
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வாள்தீட்டு கின்றனர் வலிந்திதற் காக
ஈட்டியைச் சாணை இதற்காய்ப் பிடிக்கிறார்:
இல்லாப் பாக்கியன் என்தலைக் காக
இழிந்த மனிதன் என்கழுத் துக்காய்;
அங்கொரு நிகழ்ச்சி, சங்கதி நடந்தது,
அந்த வடநில அகல்முற் றங்களில்
வடபுல மைந்தனை வலிந்துநான் கொன்றேன்
அந்த வடநாட் டதிபதி அவனையே 160
வடநாடு போர்க்கு வரத்திரண் டெழுமால்
கலகக் காரர்கள் கடும்போர்க் கெழுகிறார்
இருந்துயர் கொண்டவன் எந்தனுக் கெதிராய்
தனியனாய் நிற்கும் தமியனைச் சுற்றி."
இந்த சொற்களில் இயம்பினள் அன்னை
முதியவள் மகற்கு மொழிந்தனள் இவ்விதம்:
"ஏலவே உனக்குநான் இயம்பிய துண்டு
இதையே நிசமாய் எச்சரித் துள்ளேன்
முயன்றேன் எவ்வளவோ முன்உனைத் தடுக்க
வடபால் நிலத்து வழிசெலல் நிறுத்த; 170
சரியாம் வழிநீ தான்நடந் திருக்கலாம்
தாயின் வசிப்பிடம் நீவாழ்ந் திருக்கலாம்
உரியபெற் றோர்பரா மரிப்பில்நின் றிருக்கலாம்
உன்னைச் சுமந்தோள் தன்தோட் டவெளி(யில்)
அமரென எதுவும் அடுத்திருக் காது
சண்டைசச் சரவு தான்நிகழ் திராது.
இப்போது எங்கே, அதிர்ஷ்டமில் என்மகன்,
எங்குநான் சுமந்து ஈன்றசேய் ஏழ்மையன்
நவையிழைத் தமையால் மறைவிடம் ஏகவா
தீச்செயல் புரிந்ததால் மூச்சிலா தோடவா 180
கேடுன் தலைக்குக் கிட்டி வராதிட
எழிலார் கழுத்தும் உடையா திருந்திட
சடைமயிர் துயரம் தான்கொளா திருக்க
உதிரா திருக்க உன்சீர்க் கேசம்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எனக்கு ஓரிடமும் இன்னும் தெரிந்தில
எங்கே செல்லலாம் எங்ஙனம் செல்லலாம்
என்நவைச் செயல்களில் இருந்தே மறைய;
எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
எங்கே மறைந்து இருக்கலாம், சொல்வாய்? " 190
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"எங்கென்று சொல்ல, எனக்குத் தெரிந்தில,
எங்கெனச் சொல்ல, எங்கே செல்லென,
தேவநல் தாருவாய் சென்றுநில் குன்றிலே
சூரைச் செடியாய் மாறுவாய் புதரில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
ஏனெனில் அடிக்கடி எழில்மலைத் தாருவும்
சிறுதுண்டுப் பலகைக்குச் சிதைந்தறு படல்உள 200
புதருள சூரைப் பொழிற்செடி அடிக்கடி
கம்புகள் அமைக்கக் கழிப்பதுண் டழித்து.
நீயெழு மிலாறுவாய் நிலச்சதுப் பதனிடை
புர்ச்சநல் மரமெனப் பொதுப்பொழில் ஒன்றில்நில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
ஏனெனில் சதுப்பிலே இம்மிலா றடிக்கடி
விறகினைப் பெற்றிட வெட்டிடப் படலுள
பொதுப்பொழி லதிலுள பூர்ச்சமும் அடிக்கடி
விளைநில மாக்கவே வெட்டியும் சுடலுள. 210
சென்றுநீ மலைமேல் சிறுபழ மாகிநில்
பசும்புல் தரையிலே **பழமொன் றாயிரு
எழிற்செம் **பழமென இருப்பைநீ பூமியில்
நீலக் **கருங்கனி யாகுவே றிடங்களில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
உன்னைப் பொறுக்குவர் ஒளிரிள மங்கையர்
**ஒடித்தீய நெஞ்சத்து ஒண்டொடி எடுப்பர்.
கோலாச்சி மீனாய் குடாக்கடற் செல்லுக
மெதுவாம் நதியிலே வெள்ளைமீ னாகுக 220
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
புகார்போல் நிறத்தோர் புத்திளம் மனிதன்
வலைகொடு வருவான் வளர்நீர்ப் பரப்பெலாம்
கரைவலை யிளமீன் கவர்ந்திழுத் திடுவான்
மீன்வலை யால்முது மீனெலாம் பிடிப்பான்.
ஓநாய் உருவெடு உயர்வனம் சென்று
காட்டினுட் புறத்தில் கரடியாய் மாறுவாய்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை 230
புகார்த்தோற் றத்தோர் புத்திள மனிதன்
ஈட்டிகள் தீட்டி எடுப்பான் கூர்மையாய்
காட்டோ நாய்களைக் கடிதுகொன் றழிக்க
மிகுவனக் கரடிகள் வீழ்த்தி யொழித்திட."
குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறிவேன் பயங்கர அகலிடங் களைநான்
எனக்குத் தெரியும் எலாக்கொடும் இடங்களும்
மரணம் எங்குதன் வாய்க்கவ் வும்என
எங்கெ கொடுமுடி வேற்படும் என்று; 240
எந்தன் அன்னையே, எனைவளர்த் தவளே!
அம்மா, எனக்கு அரும்பா லூட்டினோய்!
எங்கே மறைந்து இருக்கச் சொல்கிறாய்
எங்ஙனம் மொழிகிறாய், எங்ஙனம் இசைக்கிறாய்?
வாயெதிர் வந்தே மரணம்நிற் கிறது
தாடிக்கு நேராய்த் தீநாள்நிற் கிறது
ஒருமனி தன்தலை தப்பஓர் நாள்உள
ஒருமுழு நாளே உளததில் தப்பிட."
லெம்மின் கைனனின் அன்னையப் போது
உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்: 250
"நல்லதோ ரிடத்தை நானிவண் மொழிவேன்
பெருஞ்சிறப் பொருவிடம் பெயரொடு மொழிவேன்
தீச்செய லிருந்து தெரிந்திடா தொளிக்க
இழிந்த குணமுளோன் விரைந்துபோய் மறைய:
இப்போ தொருசிறு இடத்தை நினைக்கிறேன்
ஒருஇடம் பற்றி ஒருசிறி தறிவேன்
உணப்படா திருக்க, அடிபடா திருக்க
வாள்வீ ரர்களும் வந்துசே ராவிடம்,
என்றென்றும் நிலைக்க இடுவையோர் ஆணை
பொய்யும் கேலியும் புணர்ந்திடா ஆணையொன்(று) 260
ஆறு,பத் தாண்டு அருங்கோ டைருது
இகல்போ ருக்குஏ கேனென் றாணை
வெள்ளியை விரும்பியும் செல்லேன் அத்தோடு
பொன்வேண் டியும்நான் புகேன்என் றாணை."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"ஆணையொன் றிட்டேன் அதிபல மாய்இதோ!
கோடை முதல்வரும் காலத்தி லில்லை
அல்லது பருவம் அடுத்ததில் இல்லை
போர்பெரி துக்கும் போவதே யில்லை
மொய்ம்வாள் அவைகள் மோதிடங் களுக்கு; 270
காயங்கள் இன்னும் கவின்தோள் உள்ளன
ஆழத் துவாரம் அகல்மார் புளது
நடந்து முடிந்த நாட்களி யாட்டம்
கடந்த மோதல் களினால் இவைகள்
பெரும்போர் நிகழ்ந்த பெருமலை களிலே
மனிதரின் கொலைவீழ் தனிக்களங் களிலே."
லெம்மின் கைனனின் அன்னையப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"உன்றன் தந்தையின் உயர்பட கெடுப்பாய்
அங்கே சென்று அரும்மறை வேற்பாய் 280
ஒன்பது கடல்களில் சென்றப் பாலே
பத்தாம் கடலின் பாதியைக் கடந்து
திறந்தநீர்ப் பரப்பின் தீவகம் ஒன்றிலே
பரவையி லுள்ள பாறைத் தீவிலே
உந்தை முன்னர் ஒளித்த இடமது
ஒளித்துத் தன்னைக் காத்த ஓரிடம்
கோடைக் காலக் கொடும்போர் தம்மிலே
கடும்போர் நிகழ்ந்த கொடும்வரு டங்களில்
அவரங் கிருந்தது ஆனது நன்மையாய்
நாட்களைக் கழிப்பது நன்மையாய் யிருந்தது; 290
அங்கே ஒளிப்பாய் ஓர்ஈர் ஆண்டு
அகத்தினை நோக்கி ஆண்டுமூன் றினில்வா
உன்றன் பழகிய தந்தையார் மனைக்கு
பெற்றார் அமைத்த நற்பட குத்துறை."
பாடல் 29 - லெம்மின்கைனனின் அஞ்ஞாத வாசமும் துணிக்கர செயல்களும் TOP
அடிகள் 1 - 78 : லெம்மின்கைனன் தனது படகில் கடல்களின் ஊடாகப் பயணம் செய்து பாதுகாப்பாக அந்தத் தீவை அடைகிறான்.
அடிகள் 79 - 290 : லெம்மின்கைனன் அந்தத் தீவில் பருவமடைந்த மகளிருடனும் மற்றும் மாதருடனும் உல்லாசமாகக் காலம் கழிக்கிறான். போருக்குச் சென்றிருந்த ஆண்கள் திரும்பி வந்து அவனுடைய செய்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்து அவனைக் கொல்வதற்குச் சதித் திட்டம் வகுக்கிறார்கள்.
அடிகள் 291 - 402 : லெம்மின்கைனன் தீவைவிட்டு ஓடிப் போகிறான்; அதனால் அவனும் அவனில் பிரியம் கொண்ட பெண்களும் வருந்துகிறார்கள்.
அடிகள் 403 - 452 : லெம்மின்கைனனின் படகு ஒரு பெரும் புயலில் அகப்பட்டுச் சேதமடைகிறது. அவன்நீந்திக் கரையை அடைந்து, அங்கு ஒருபடகைப் பெற்றுத் தனது நாட்டின் கரைக்கு வந்து சேர்கிறான்.
அடிகள் 453 - 514 : லெம்மின்கைனன் தனது பழைய வீடு எரிக்கப் பட்டிருப்பதையும் எல்லா இடங்களும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டு வருந்துகிறான்; குறிப்பாகத் தனது தாயும் இறந்திருக்கலாம் என்று எண்ணி அழுகிறான்.
அடிகள் 515 - 546 : ஆனால் அவனுடைய அன்னை அப்பொழுது உயிரோடுதான் இருந்தாள்; கடுங்காட்டில் தஞ்சம் புகுந்திருந்தாள்; இதனை அறிந்த லெம்மின்கைனன் மகிழ்ச்சியடைகிறான்.
அடிகள் 547 - 602 : லெம்மின்கைனனின் தாய் வடநாட்டு மக்கள் வந்து வீடுகளை எரித்துச் சாம்பராக்கிய விபரங்களைக் கூறுகிறாள்; லெம்மின்கைனன் இன்னமும் சிறந்த வீடுகளை அமைப்பேன் என்றும் தன் தாய் பட்ட துன்பங்களுக்காக வடநாட்டைப் பழிக்குப்பழி வாங்குவேன் என்றும் சபதம் செய்கிறான்; அத்துடன் தீவில் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தான் மகிழ்ச்சியாக வாழ்ந்த விபரங்களையும் தாய்க்குக் கூறுகிறான்.
லெம்மின் கைனன் குறும்புப் பையன்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
தன்உண வுப்பொருள் சாக்கிலே பெற்றான்
கோடை வெண்ணெயைக் கொண்டான் பெட்டியில்
ஒருவரு டம்மவன் உண்டிட வெண்ணெய்
அடுத்த ஆண்டில் அயிலப் பன்றியூன்;
மறைவிடம் நோக்கி மற்றவன் சென்றான்
சென்றான் அத்துடன் சென்றான் விரைந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"செல்கிறேன் இப்போ செல்கிறேன் விரைந்து 10
முழுதாய் எதிர்கொளும் மூன்று கோடைக்கு
அடுத்தே வந்திடும் ஐந்தாண் டுக்கு
புழுக்களை விடுகிறேன் புசிக்கவிந் நாட்டை
எழிற்பொழில் **சிவிங்கி இருந்திளைப் பாற
கழனியில் புரண்டு கலையுரு ளட்டும்
வனத்து வெளிகளில் வாத்து வாழட்டும்.
என்நலத் தாயே, இதோவிடை பெற்றேன்,
வடபுல மக்கள் வந்தால் இவ்விடம்
இருண்ட பூமியின் திரண்டிடும் மக்கள்
உறும்என் தலையை உசாவிக் கொண்டு 20
நான்புறப் பட்டதாய் நவில்வாய் அவர்க்கு
இவ்விட மிருந்துநான் எழுந்துபோ னேனென
சுட்டுக் கொழுத்திய சுடுகானக வெளி
கதிர்களை வெட்டிக் கட்டிய பின்னர்."
படகை நீரின் பரப்பில் தள்ளினான்
கப்பலை அலைமேல் கடிதே விட்டான்
உருக்கினா லான உருளைக ளிருந்து
செப்புப் படகுத் திகழ்துறை யிருந்து
பாய்மரம் தனிலே பாயினை விரித்தான்
கம்பத் தேதுணி கட்டிப் பரத்தினான்; 30
அகல்பின் னணியம் அவனும் அமர்ந்தான்
ஆயத்த மானான் அவன்புறப் படற்கு
நம்பியே மிலாறு நல்முன் னணியம்
தொடர்கலம் நடத்தும் சுக்கான் துணையுடன்.
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"காற்றே வீசு கப்பலின் பாய்க்கு
வாயுவே விரட்டி வன்கலம் செலுத்து
விரிமரக் கலத்தை விடுவாய் ஓட
தாருவின் படகைத் தான்செல விடுவாய் 40
**உறுசொற் களேயிலா ஒருதீ வுக்கு
பெயரிடப் படாத பெருங்கடல் முனைக்கு.
தவழ்கால் படகைத் தாலாட் டியது
தண்கடல் நுரையும் தள்ளிச் சென்றது
திறந்து பரந்தநீர்ச் செழும்பரப் பதனில்
விரிந்த விசால வியன்கடற் புறத்தில்;
மாதம் இரண்டு தாலாட் டியது
மூன்றிலும் அங்ஙனம் முன்விரைந் திட்டது.
அவ்விடம் கடல்முனை அரிவையர் இருந்தனர்
நீலக் கடலின் நீள்கரை யோரம் 50
அவர்கள் பார்த்தனர் அவர்கள் திரும்பினர்
நீலக் கடற்றிசை நீந்தின கண்கள்
சகோதர னுக்காய்த் தரித்தனள் ஒருத்தி
எதிர்பார்த் திருந்தாள் வரும்தந் தையினை
ஆயினும் உண்மையில் ஒருத்தியாங் கிருந்தது
மணமகன் தனக்காய் வருவதை நோக்கி.
தொலைவில் தெரிந்தனன் தூர நெஞ்சினன்
தூரநெஞ் சினன்கலம் தொலைவிலே வந்தது
நளிர்சிறு முகிற்திடர் நகர்வதைப் போல
வயன்நீ ருக்கும் வானுக் கும்நடு. 60
கடல்முனை அரிவையர் கடிதுசிந் தித்தினர்
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்:
"அதெ(ன்)னப்பா கடலிலே அபூர்வமாக தெரிவது
அலைமேல் அதிசயம் ஆனது எவ்விதம்?
எங்களைச் சார்ந்ததாய் இருந்தால் கப்பல்
தீவின் பாய்மரச் செழும்பட கானால்
இல்லத்தை நோக்கி இப்புறம் திரும்பு
தீவின் படகுத் துறையதை நோக்கி:
செய்திகள் நாங்கள் செவிமடுக் கவுளோம்
வெளிநிலப் புதினம் தெரியவு முள்ளோம் 70
கரையோர மாந்தர் அமைதியில் உளரா
அல்லது போரோ அவர் வாழ்வென்றே."
காற்றும் கலத்தைக் கடத்திச் சென்றது
அலையும் கப்பலை அடித்துச் சென்றது
குறும்பன் லெம்மின் கைனன் விரைவாய்
படகை ஓட்டினன் பாறை ஒன்றுக்கு
தீவினெல் லைக்குச் செலுத்தினன் கப்பல்
தீவின் கடல்முனை நுனிக்குச் சென்றனன்.
சென்றதும் அங்கு செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்: 80
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
கப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்க்க
கலத்தைக் கவிழ்க்கக் காய்ந்த மண்ணிலே?"
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
கப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்த்திட
கலத்தைக் கவிழ்த்திடக் காய்ந்த மண்ணிலே: 90
இங்குள துறைகள் இருப்பன விசாலமாய்
கரைகளில் நிறைய உருளைகள் உள்ளன
நூறு கலங்களில் ஏறிநீ வரிலும்
ஆயிரம் மரக்கலம் அவையிங் கடையினும்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
கலத்தை இழுத்துக் கரையில் சேர்த்தனன்
மரத்து உருளைமேல் வடிவாய் ஏற்றினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும் 100
ஒருசிறு மனிதன் ஒளிப்பதற் காக
அங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட
முழங்கும் பெரும்போர் முனைகளி லிருந்து
கூரிய வாள்களின் மோதலி லிருந்து?"
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
ஒருசிறு மனிதன் ஒளிப்பதற் காக
அங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட: 110
எம்மிடம் உண்டிங் கேற்றபல் கோட்டைகள்
வாழ்வதற் குண்டு வனப்புள தோட்டம்
வீரர்கள் வந்துற்ற போதிலும் நூற்றுவர்
ஆயிரம் மனிதர்வந் தடைந்தபோ தினிலும்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
மிலாறு மரத்து வனத்திலோர் பகுதி
மற்றும் காட்டு வளர்புறத் தொருநிலம் 120
வெட்டிச் சுட்டது மிக்கழித் திடநான்
நல்லதோர் இடம்நான் நனிமுன் னோடியாய்?"
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"இந்தத் தீவிலே இடமெது மில்லை
தீவின் தலையிடத் தில்லை நிலமெதும்
இகல்உன் முதுகள விடமுமே யில்லை
நிகர்**பறை யளவு நிலமுமே யில்லை
வெட்டிச் சுட்டது மிக்கழித் திடநீ
நல்லதோர் இடம்நீ நனிமுன் னோடியாய்: 130
தேர்ந்தள பட்டன தீவகக் காணிகள்
வயல்கள்கோல் களினால் வகுக்கப் பட்டன
பல்காட்டு வெளிகள் பங்கிடப் பட்டன
நீதிமன் றங்களாய் நிலைத்தன புற்றரை."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் உசாவினன்:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
எந்தன் பாடல்கள் இசைத்தே மகிழ்ந்திட
நீண்டகா வியங்களை நன்றாய்த் தொனிக்க 140
என்வாயி லேசொல் இனிதுரு(கு) கின்றன
முரசி லிருந்தவை முளைத்தெழு கின்றன."
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
இனியஉன் பாடல்கள் இசைத்து மகிழ்ந்திட
நல்லகா வியங்களை நன்றாய்த் தொனித்திட
சோலைகள் உனக்குள சுகம் விளையாட
நடனங்கள் ஆடவும் நல்வெளி நிலமுள." 150
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பாடலைத் தானே பாடத் தொடங்கினன்
முன்றிலில் **பேரி முளைக்கப் பாடினன்
திகழ்களஞ் சியவெளி சிந்துர மரங்கள்
சிந்துர மரத்தில் சிறப்புறு கிளைகள்
ஒவ்வொரு கிளையிலும் ஒளிரும் பழமாம்
அந்தப் பழங்களில் தங்கப் பந்துகள்
தங்கப் பந்திலே வந்தது ஓர்குயில்
குலவுமக் குயிலும் கூவிய வேளையில்
வாயிலே தங்கம் வந்தது பெருகி 160
அலகிலே செம்பு அருவியாய்ச் சொரிந்தது
வெள்ளியும் நுரைத்து வெளியே வந்தது
பொன்னிலே ஆன பொன்மே டொன்றிலே
வெள்ளியா லான வெண்மலை யொன்றிலே.
மேலும் பாடினன் லெம்மின் கைனன்
மற்றும் பாடினன் மந்திரப் பாடல்கள்
மணலின் துகள்களை வெண்முத் தாக்கினன்
பளிச்சொளி விடும்வரை பாறையைப் பாடினன்
வண்செஞ் சுடர்விட மரங்களைப் பாடினன்
பொன்னிறம் பெறும்வரை பூக்களைப் பாடினன். 170
மேலும் பாடினன் லெம்மின் கைனன்
தோட்ட வெளிகளில் தோன்றின கிணறுகள்
அந்தக் கிணறெலாம் தங்கநல் மூடிகள்
மூடியின் மேலொரு முகிழ்பொன் வாளியாம்
சகோதரர் குடிக்கலாம் அந்தக் கிணற்றுநீர்
சோதரி கள்தம் சுழல்விழி கழுவலாம்.
தரையிலே தோன்றவும் தடாகம் பாடினன்
நீலவாத் துக்கள் நீந்தின பொய்கையில்
தங்கத்தில் நெற்றி தலைகளோ வெள்ளி
எல்லா விரல்களும் இயைந்தன செம்பினால். 180
தீவகக் கன்னியர் திகைத்துப் போயினர்
கடல்முனைக் கன்னியர் கண்டதி சயித்தனர்
லெம்மின் கைனனின் நிகரில் பாடலால்
வீரன் காட்டிய மிகுதிறன் கண்டதால்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நலமுறு பாடலை நயத்தொடு பாடுவேன்
சிறப்புறும் பாடலைச் சீராய்ப் பாடுவேன்
ஒருகூ ரையின்கீழ் உவந்துநா னிருந்தால்
முன்நீள் மேசை முகப்பிலே யிருந்தால்; 190
வழங்கு வதற்கொரு வனப்பில் இலையெனில்
தருவதற் கேயொரு தரையே யிலையெனில்
தொல்கா னடைந்தென் சொற்களைப் பாடுவேன்
பற்றையி னுள்ளென் பாடலைப் போடுவேன்."
தீவகக் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கோதையர் கவின்மனத் தெண்ணினர்:
"வருவதற் கெம்மிடம் வாய்ந்துள வீடுகள்
வசிப்பதற் குள்ளன வளர்பெரும் தோட்டம்
பனிக்குளி ரிருந்து பாடலைக் கொணர
வெளிப்புறத் திருந்து மிகுசொற் பெறற்கு." 200
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
வாழ்இல் லத்துள் வந்த கணத்தில்
பாடினன் அப்புறப் பக்கச் சளளாடிகள்
மேசையின் முனைவரை மிகநீண் டிருந்தவை,
'பீர்'பெரு கிற்றுச் சாடிகள் நிறைந்து
கலயத்து வந்தது கடிகமழ் தரத்தேன்
தகழிகள் எல்லாம் ததும்பி வழிந்தன
விளிம்பு வரைக்கும் நிறைந்தன கிண்ணம்
இருந்தது சாடிகள் நிறைந்து'பீர்'ப் பானம்
நறைகொணர்ப் பட்டது நிறையக் கலயம் 210
தயாராய் இருந்தது தண்ணொளிர் வெண்ணெய்
அத்துடன் பன்றி அதனூ னிருந்தது
குறும்பன் லெம்மின் கைனன் உண்டிட
தூர நெஞ்சினன் துய்ப்பதற் காக.
தூர நெஞ்சினன் இறுமாப் புற்றனன்
சுவையுண வுணணத் தொடங்கவே யில்லை
முற்றும் வெள்ளி முனைக்கத் தியிலா(து)
பொன்னில் குறுவாள் தன்கை யிலாமல்.
முற்றும் வெ(ள்)ளி முனைக்கத்தி கிடைத்தது
பொன்னில் குறுவாள் பின்வரப் பாடினன் 220
அதற்குப் பின்னர் அயின்றனன் நிறைய
வேண்டிய வரைக்கும் மிகு'பீர்' பருகினன்.
பின்னர் குறும்பன் லெம்மின் கைனன்
கிராமப் புறங்களில் உலாவித் திரிந்தனன்
தீவரி வையரொடு தினங்களித் திருந்தனன்
எழிலார் பினனல் இணைதலை யார்நடு
தலையை எப்புறம் தானே திருப்பினும்
அப்புறம் ஒருவாய் முத்தம் பொழிந்தது
எப்புறம் கையை எடுத்தே நீட்டினும்
அப்புறம் ஒருகை அதனைப் பிடித்தது. 230
இரவு முழுவதும் இருந்தனன் வெளிப்புறம்
இருண்ட கரிய இருளின் நடுவிலே
கிடந்தஅத் தீவில் கிராமமே ஒன்றிலை
இனியபத் தில்லம் இல்லாக் கிராமமாய்,
அக்கிரா மத்தில் அமைந்தவீ டொன்றிலை
ஏந்திழை பதின்மர் இல்லாஇல் லமாய்,
யாருமே மகளெனக் கூறுதற் கில்லையே
அன்னையீன் பிள்ளைகள் அங்கொருத் தியுமிலை
பக்கத் தவன்போய்ப் படுக்காப் பாவையாய்
அவன்சென் றணையா அழகுக் கரத்தளாய். 240
ஆயிரம் மணப்பெண் அவனும் அறிந்தனன்
நூறு விதவையோ டோ ய்வுற் றிருந்தனன்
அரிவை பதின்மரில் அங்கிலை இருவரும்
முழுநூறு பேரிலே மூவரும் இல்லையே
அவன் அணைக்காத அரிவையென் றிம்ப
படுக்காத விதவைப் பாவையென் றுரைக்க.
குறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்
சுகபோக வாழ்க்கை சுகித்தே நடத்தினன்
மூன்று கோடையின் முழுக்கா லத்திலும்
இருந்தஅத் தீவின் பெருங்கிரா மத்தில், 250
கிராமப் பெண்களுக் கருமின் பூட்டினன்
விதவை யெலாரையும் நிறைவு படுத்தினன்;
திருப்திப் படாமல் இருந்தவள் மிஞ்சி
இழிந்தவள் ஒருத்தி முதிர்ந்ததோர் கன்னி
தீவின் நீள்தலைத் திகழ்புற மிருந்தவள்
பத்தாம் கிராமம் பாவையங் குறைபவள்.
பயணிக்க இப்போ அவனும் விரும்பினன்
உரியநா டேக உன்னினன் அவனே
வந்தாள் முதிய வன்முது கன்னி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 260
"இழிந்த தூர நெஞ்சினன் எழிலோன்
என்னை உனக்கு இல்லையேல் நினைவு
இங்கிருந் தேநீ ஏகலில் செய்வேன்
பாறையில் படகை மோதவே செய்வேன்."
துயிலெழச் சேவல் தொனிகேட் டிலது
இலை**குக் குடக்குஞ் சிலைப்புறப் பாடும்
இனபமக் காரிகைக் கினிதே தரற்கு
நாரியவ் வேழையை **நகைக்கவைத் தற்கு.
போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
பலமா லைகளில் ஒருநாள் மாலை 270
நிச்சயம் எழற்கோர் நேரம் குறித்தான்
சேவல் கூவற்கும் திகழ்நிலா வுக்கும்முன்.
எழுந்தான் வழமையாய் எழுநேர த்துமுன்
குறித்த பொழுதுமுன் கொள்துயி லெழுந்தான்
எழுந்ததும் உடனே புறப்பட் டேகினன்
கிராமத் தூடாய்த் திரிந்தான் அலைந்து
அந்தக் காரிகைக்கு கின்பம் தரற்காய்
நாரியவ் வேழையை நகைக்கவைத் தற்கு.
இரவுநே ரத்தில் ஏகினன் தனியாய்
கிராமத் தூடாய்ப் புறப்பட் டேகினான் 280
நீண்ட கடல்முனை நேர்தலை யிடத்தே
பத்தாவ தான படர்கிரா மத்துள்
அங்கொரு வீட்டையும் அவன்கண் டிலனே
மூன்று மனைகள் மூண்டுள வீட்டை
அங்கொரு மனையையும் அவன்கண் டிலனே
மூன்று மனிதர்கள் ஈண்டிவாழ் மனையை
அவன்எம் மனிதரும் அங்குகண் டிலனே
தம்தம் வாளை நன்குதீட் டார்களை
போர்க்கோ டாரியைக் கூராக் கானை
லெம்மின் கைனனின் நிமிர்தலை குறித்து. 290
குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, அன்பே, உதித்தனன் ஆதவன்,
இனிய சூரியன் இதமாய் எழுந்தான்
எழைப் பையன் எந்தன் தலைக்கு
இழிந்தவன் எனது எழிற்கழுத் துக்கு!
பிசாசு வீரனைப் பெரிதுகாக் கட்டும்
ஒருதனி வீரனை உரிய உடையினில்
அவனது ஆடையில் அவனை வைத்திருக்க
அவனது போர்வையில் அவனைக் காக்க 300
எதிர்த்து நூற்றுவர் எழுந்திடும் போது
ஆயிரம் பேர்கள் தாக்க வருகையில்! "
அணைக்கப் படாமலே அரிவைய ரிருந்தனர்
அணைக்கப் பட்டவர் அணைபடா திருந்தனர்
படகின் உருளையைப் பார்த்தே நடந்தனன்
பாககிய மிலான்தன் படகினை நோக்கி
எரிந்து படகாங் கிருந்தது சாம்பராய்
உருந்திரிந் திருந்தது சாம்பராய் துகளாய்.
அழிவொன் றடுப்பதை அவனும் உணர்ந்தனன்
தொல்லை நாட்கள் தொடர்வதும் தெரிந்தது 310
செதுக்கத் தொடங்கினான் செம்பட கொன்றை
படகைப் புதிதாய்ப் படைக்கத் தொடங்கினன்.
மரக்கல மமைத்திட மரங்கள்தாம் வேண்டுமே
படகுசெய் வோற்குப் பலகைகள் வேண்டுமே
மரங்கள் கிடைத்தன வருமிகு கொஞ்சம்
பபலகைகள் கிடைத்தன பயனிலா அற்பம்
நூல்நூற் கும்தடி நுவல்ஐந்(து) துண்டு
இராட்டினப் பலகையில் இருமுத் துண்டு.
அவற்றினி லிருந்தே அமைத்தான் படகை
தோணியைச் செய்யத் தொடங்கினான் புதிதாய் 320
மந்திர அறிவால் மரக்கலம் கட்டினன்
ஆற்றலால் அறிவால் ஆக்கம் செய்தனன்;
ஒருமுறை அறைந்தான் ஒருபுறம் வந்தது
மறுமுறை அடித்தான் மறுபுறம் பிறந்தது
மூன்றாம் முறையும் மீண்டும் அறைந்தான்
அப்போ(து) வந்தது அகல்முழுப் படகு.
இப்போ(து) படகை இகல்நீர்த் தள்ளினான்
விட்டான் கப்பலை விரியலை களின்மேல்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்: 330
"நீரில் படகே நீர்க்குமி ழாய்ச்செல்
அலையிலே மிதந்துசெல் அணிநீ ராம்பல்போல்
கழுகே(யுன்) இறகில் கொணர்வாய் மூன்றை
கழுகே மூன்று **காகமே இரண்டு
இச்சிறு படகின் இணைகாப் பாக
காத்திட ஏழைக் கவின்கல முன்புறம்."
கலத்தின் உள்ளே காலடி வைத்தான்
திருப்பினன் படகின் திகழ்பின் னணியம்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து 340
இரவிலே அங்கு இருக்கொணா ததனால்
வருபகல் அங்கு வாழொணா ததனால்
இன்பம் தீவக மகளிர்க் கீந்திட
பின்னிய கூந்தற் பெண்களோ டாட.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"பையன் புறப்படப் படர்ந்தது வேளை
இவ்வில் களிலிருந் தேகும் பாதையில்
இந்தப் பெண்ணின இன்பத் திருந்து
அழகிய மாதரின் ஆடலி லிருந்து; 350
ஆயினும் நான்எழுந் தப்புறம் போனபின்
நானிங் கிருந்துபோய் நடந்து முடிந்தபின்
இங்குள பெண்கள் இன்பமே யடையார்
பின்னிய கூந்தலார் பேசார் மகிழ்வுடன்
இருண்ட இந்த இல்லங் களிலே
எளியஇத் தோட்டத் தியைந்த பரப்பிலே."
அழுதனர் தீவதன் அரிவையர் இப்போ(து)
கடல்முனைக் கோதையர் கலங்கித் தவித்தனர்:
"ஏன் புறப்பட்டாய் லெம்மின் கைனனே
ஏன்பய ணித்தாய் இனியமாப் பிள்ளையே 360
பெண்புனி தத்தால் பெயரலுற் றனையா
அல்லது அரிவையர் அரிதென்ப தாலா?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"பெண்புனி தத்தால் பெயர்ந்திட வில்லைநான்
அல்லது அரிவையர் அரிதென்று மல்ல
நூறு பெண்களை நான்பெறு வேனிங்(கு)
ஆயிரம் மாதரை அணைத்தெடுத் திருப்பேன்;
லெம்மின் கைனன் புறப்பட லிதற்கே
இனியமாப் பிள்ளையின் பயணம் இதற்கே 370
எனக்கொரு பெரிய ஏக்கம் வந்தது
சொந்த நாட்டைத் தொட்டதவ் வேக்கம்
சொந்தநாட் டினது **சிறுபழத் தெண்ணம்
உரியகுன் றோர **ஒருபழத் தாசை
சொந்தக் கடல்முனை மங்கையர் தவிப்பு
கொடும்சொந் தப்பொழிற் கோழிகள் கலக்கம்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது கப்பலைத் தள்ளினன் வெளிப்புறம்
காற்று வந்தது கடத்திச் சென்றது
அலையும் எழுந்தது இழுத்துச் சென்றது 380
நீல நிறத்து நீள்கடற் பரப்பில்
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்;
இழிந்த பாவையர் எஞ்சினர் கரையில்
மென்மன மங்கையர் மிகுஈர்ம் பாறையில்
தீவகத் தோகையர் தேம்பினர் துயருடன்
பொன்போற் பாவையர் புலம்பித் தவித்தனர்.
தீவகப் பாவையர் தேம்பினர் துயரதால்
கடல்முனைக் கன்னியர் கலங்கிப் புலம்பினர்
பாய்மரம் பார்வையில் படிகின்(ற) வரையிலும்
இரும்பதன் இணைப்புகள் தெரிந்திடும் வரையிலும்; 390
பாய்மரத் துக்காய்ப் பாவையர் அழுதிலர்
இரும்பிணைப் புக்காய்ப் பெருந்துய றுற்றிலர்
பாய்மரக் கீழுறும் பையனுக் கழுதனர்
சுக்கான் பீடத் தோனுக் கழுதனர்.
லெம்மின் கைனனும் நெஞ்சுற அழுதனன்
ஆனால் அழுததும் அடைகடுந் துயரும்
தீவதன் தரையே தெரிகின்ற வரைதான்
கடல்தீவு மேடுகள் காண்கிற வரைதான்;
தீவதன் தரைக்காய்த் திகைப்புற் றழுதிலன்
தீவுமேட் டுக்காய்ச் சேர்துயர் கொண்டிலன் 400
ஆனால் தீவதன் அரிவையர்க் கழுதனன்
மேட்டு நிலத்து வாத்துகட் கழுதனன்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நீலக் கடலில் நெடுந்தொலை சென்றனன்
சென்றனன் ஒருநாள் சென்றனன் இருநாள்
மூன்றாம் நாளில் முழுமையும் சென்றனன்
அப்போ(து) காற்று அங்கார்ந் தெழுந்தது
அத்துடன் அடிவான் அதுஇடித் தார்த்தது
வலியகாற் றொன்று வடமேற் கினிலே
கடும்காற் றொன்று காண்வட கிழக்கிலே 410
பற்றிய தொருபுறம் பற்றிய(து) மறுபுறம்
முற்றாய்ப் படகை முடித்தது புரட்டி.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நீரை நோக்கி நீள்கரம் திருப்பி
வலித்துச் சென்றனன் வன்விரல் களினால்
உதைத்துச் சென்றனன் உறுதன் கால்களால்.
நேர்இரா நெடும்பகல் நீந்திச் சென்றபின்
அதிக தூரம் அவன்உதைத் தானபின்
நகர்வதைக் கண்டனன் நன்கோர் சிறுமுகில்
விரிவட மேற்கதன் விளிம்பைக் கண்டனன் 420
அதுபின் நிலமாய் அங்குமா றிட்டது
கடலின் முனையாய்க் காட்சியும் தந்தது.
கரையில் ஏறினன் கரையிலோர் இல்லம்
ரொட்டிகள் தலைவி சுட்டவா றிருந்தனள்
தையலர் அவற்றைத் தட்டிட லாயினர்:
"ஓ,நற் கருணைகூர் உயர்ந்த தலைவியே!
உன்னால் என்பசி உணர்ந்திட முடிந்தால்
எந்தன் நிலமையை இனிதுநீ அறிந்தால்
களஞ்சிய அறையை காணநீ ஓடு!
பனிப்புய லாய்ப்'பீர்'ப் பானத் தறைக்கு 430
சாடியொன் றார்'பீர்'ப் பானம் கொணர்வாய்
பன்றி யிறைச்சித் துண்டுகள் கொணர்வாய்
அவற்றைப் பின்னர் அனலில் வாட்டுவாய்
மிகைஅவை மீது வெண்ணெயைப் பூசுவாய்
இளைத்ததோர் மனிதன் எடுத்துணற் காக
நீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த
நானிராப் பகலாய் நளிர்கடல் நீந்தினன்
திறந்த கடலதன் பரந்த அலைகளில்
காற்றொவ் வொன்றையும் கருதித் தஞ்சமாய்
கடலின் அலைகளைக் கருணையாய்க் கருதி." 440
அப்போ(து) கருணைகூர் அந்தத் தலைவி
கவின்குன்றி லேயமை களஞ்சியம் சென்றனள்
வெண்ணெயைக் களஞ்சியத் திருந்தே வெட்டினள்
பன்றி யிறைச்சியைத் துண்டுதுண் டாக்கினள்
அவற்றை வாட்ட அனலில் போட்டனள்
பசியுறு மனிதன் புசிப்பதற் காக
சாடியொன் றினில்'பீர்'ப் பானம் கொணர்ந்தனள்
நீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த;
பின்னர் புதியதோர் பெரும்பட கீந்தனள்
தயாராய் இருந்த தக்கதோர் தோணி 450
மனிதன் வேறொரு நனிநா டேக
இல்லினை நோக்கி எழுந்திடப் பயணம்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
இல்லம் வந்து இறங்கிய போது
அறிந்தனன் நிலத்தை அறிந்தனன் கரையை
தீவுக ளோடு தெரிந்தனன் நீரிணை
தொன்நாட் படகுத் துறையையும் உணர்ந்தனன்
வழக்கமாய் வாழ்ந்த வளவிடம் உணர்ந்தனன்
குன்றையும் குன்றின் குலத்**தேவ தாருவும்
மேட்டையும் மேட்டின் வியன்**தாரு மரத்தையும் 460
ஆயினும் இல்லத் தடத்தை யறிந்திலன்
இல்லதன் சுவர்கள் இருந்தஅவ் விடத்தை
இல்லம் இருந்த இடத்திலிப் போது
இளம்பழச் **செடிகள் சலசலத் திருந்தன
தேவதா ரிருந்தது திகழ்மனைக் குன்றிலே
சூரைச் செடிகளாம் சுவரின் பாதையில்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நான்உலா வியபொழில் நன்கதோ உள்ளது
அங்கே யுளனயான் அடியிட்ட பாறைகள் 470
நான்விளை யாடிய நற்புற் றரையதோ
துள்ளித் திரிந்தஎன் நல்வயற் கரைஅதோ;
பழகிய என்னிலைப் பறித்தே கியதெது
அழகிய கூரையை அகற்றிய வர்யார்?
வீட்டை யெரித்ததால் சாம்பரா யானது
சாம்பரைக் காற்றும் தானடித் தகன்றது."
அங்கே அவன்பின் அழவும் தொடங்கினன்
ஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன்;
அவனே அழுதது அகத்துக் கல்லவே
களஞ்சிய அறைக்காய்க் கவலையு முற்றிலன் 480
இ(ல்)லத்துப் பழகிய ஏந்திழைக் கழுதான்
அக்களஞ் சியவறை அன்புளாட் கழுதான்.
பறவை ஒன்று பறப்பதைக் கண்டனன்
ஓர்கழு கங்கு உயர்ந்தசைந் தகல்வதை
அதனை இவ்விதம் அவனும் வினவினன்:
"ஓ,என் கழுகே, உயர்நற் பறவையே!
உரைத்திட எனக்கு உனாலா காதா
எனது முந்திய இனியதாய் எங்கே
என்னைச் சுமந்தஅவ் வெழில்மகள் எங்கே
எனைமுலை யுட்டிய இனியவள் எங்கே? " 490
எதுவும் நினைவிலை ஏகிய கழுகுக்(கு)
மூடப் பறவை முற்றொன் றறியா(து)
இறந்தாள் அவளே எனக்கழு கறியும்
காணா தொழிந்ததைக் **காகமும் அறியும்
ஒருவாள் செயலால் வறிதே மறைந்தாள்
கொடும்போர்க் கோடரிக் கொலையுண் டனள்என.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஐயகோ எனைச்சுமந் தளித்த அழகியே!
முலையுட்டி வளர்த்த முந்தென் இனியளே! 500
எனைச் சுமந்தவளே, இறந்து போயினையோ?
அன்புறும் அன்னாய், அகன்று போனாயோ?
அன்னாய் தசைநிலத் தழுகி யழிந்ததோ!
தேவதா ரதன்மேல் செறிந்து முளைத்ததோ!
குதிக்கால் சூரைக் கொழும்செடி வளர்ந்ததோ!
அலரியும் விரல்நுனி அவற்றில் எழுந்ததோ!
தண்டனைக் குரியவன் தான்நான் இழியவன்
துர்பாக் கியவான் அற்பப தராதி
எந்தன் வாளை எடுத்தாங் குயர்த்தினேன்
அழகிய ஆயுதம் அதைநான் ஏந்தினேன் 510
அங்கே வடபால் அகல்நில முன்றிலில்
வல்லிருட் பூமியின் வயற்கரை யோரம்
சொந்த இனத்தொரு தோகையைக் கொல்ல
அன்றெனைச் சுமந்த அன்னையை இழக்க."
பார்த்தனன் திரும்பிப் பார்த்தனன் சுற்றிலும்
காற்சுவ டொன்றைக் கண்டனன் சிறிதே
காண்புல் நடுவில் கசங்கிக் கிடந்ததை
அப்பசும் புற்றரை அழிந்து கிடந்ததை;
அந்தப் பாதையில் அறிதற் கேகினன்
அவ்வழி ஏகினன் அதைஓர் வதற்காய் 520
அவ்வழி வனத்தின் அமைவுட் சென்றது
அவ்வழி அவனை அழைத்துச் சென்றது.
ஏகினன் ஒன்று இரண்டு**மைல் தூரம்
சிறிதே தூரம் தரையில் விரைந்தனன்
உயர்இருட் காட்டின் உள்ளே நுழைந்தனன்
வலிதடர் காட்டின் வளைவில் மூலையில்;
இரகசியச் சவுனா இருக்கக் கண்டனன்
மறைந்தொரு சிறிய மனைக்குடில் இருந்தது
இருஉயர் பாறை இடைநடு வினிலே
முத்தேவ தாரு மூலையின் கீழே 530
அன்புறும் அன்னையை அங்கே கண்டனன்
உயர்சிறப் புடையாள் ஒளித்தாங் கிருந்தனள்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பெரிதும் மகிழ்ந்தான் பேர்களிப் படைந்தான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்தச் சொற்களில் இவ்விதம் மொழிந்தான்:
"ஓகோ, எந்தன் உயர்வன் பன்னாய்!
தாயே, என்னைத் தனிவளர்த் தவளே!
இன்னும் உயிரோ டிருக்கிறா யம்மா!
ஈன்றநீ இன்னும் இருக்கிறாய் விழிப்பாய் 540
இறந்து போனதாய் இதுவரை அறிந்தேன்
எல்லா வகையிலும் இழந்ததாய் நினைத்தேன்
வாளின் வலியால் வலிதே சென்றதாய்
ஈட்டி குத்தியும் இறந்ததாய் நினைத்தேன்;
அழுதேன் இனிய அகல்விழி மறைய
அழகிய முகமும் அழிந்தே போக."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"இன்னும் உயிரோ டிருக்கிறேன், ஆமாம்,
அங்கிருந் தேநான் அகன்றிட நேரினும்,
மறைந்து வாழ்நிலை வந்திட்ட போதிலும், 550
இந்தக் காட்டின் இருண்டவிவ் விடத்தே
அடர்ந்த காட்டின் அமைவளை மூலையில்;
ஒருபெரும் யுத்தம் வடநிலம் தொடுத்தது
போருக்கு வந்ததோர் புதுப்பெருங் கூட்டம்
இழிந்த மனிதன் எதிராய் உனக்கு
அதிர்ஷ்ட மற்றவ னாமுனக் கெதிராய்
இல்களைச் சாம்பராய் எரித்தே யாக்கினர்
எங்கள் தோட்டம் எல்லாம் வீழ்த்தினர்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"என்றன் அன்னையே, எனைச்சுமந் தவளே! 560
என்றுமே இதற்காய் இனித்துயர் வேண்டாம்
அதற்காக வேனும் எதற்காக வேனும்
கவின்மனை புதிதாய்க் கட்டத் தொடங்கலாம்
இன்னும் சிறந்த இல்கள் கட்டலாம்
வடநில மீது வன்போர் தொடுபடும்
பிசாச இனத்தவர் பேரழி வுறுவர்."
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"வெகுநாள் தங்கினாய் வெளியே மகனே
தூரநெஞ் சினனே தொலைவிலே வாழ்ந்தாய் 570
அந்த வெளிப்புற அயல்நா டுகளில்
அன்னிய மான அம்மனை வாயிலில்
பெயரிடப் படாத பெருங்கடல் முனைகளில்
**உறுசொற் களேயிலா ஒருதீ வதனில்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது
திரிந்து மகிழ்ந்தது தினம் இனிப்பானது
திகழுமம் மரங்கள் சிவப்பாய் மிளிர்ந்தன
மரங்களோ சிவப்பு மண்ணதோ நீலம் 580
ஊசி யிலைமரத் துயர்கிளை வெள்ளி
புதர்ச்செடிப் **பூக்கள் பொன்னா லானவை;
தேன்நிறை குன்றுகள் செறிந்தாங் குள்ளன.
பாறைகள் எங்ஙணும் கோழியின் முட்டைகள்
பட்ட**தா(ரு) மரமெலாம் பசுந்தேன் வடிந்தது
உழுத்திடும் **தேவதா ரூற்றிய துபால்
வேலிகள் மூலையில் வெண்ணெயாய் வழிந்தது
வேலியின் கம்பத்தில் மிகுந்த'பீ ரொ'ழுகிற்று.
அங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது
காலம் மதுரமாய்க் கழிந்துகொண் டிருந்தது; 590
அங்குபின் வாழ்வது ஆனது கொடுமையாய்
அங்குநான் இருப்பது அன்னிய மானது:
அஞ்சினர் அவர்கள்தம் பெண்களைப் பற்றியே
நம்பினர் கெட்டவர் நடத்தையில், என்பதாய்,
எளிய பிறவிகள் இரும்பானை **வயிறுளார்
தீய கொழுத்த செயல்கெடும் பிறவிகள்,
தையலர் இருந்தனர் தகாத நடத்தையில்
என்னுடன் கழித்தனர் இரவுகள் பலவென;
மறையலா யினேன்நான் மங்கைய ரிடத்திருந்(து)
கவனமா யிருந்தேன் வனிதையர் மகளார்க்(கு) 600
ஓநாய் பன்றிகட் கொளிப்பதைப் போல
கிராமக்கோ ழிக்குக் கழுகு மறைதல்போல்."
பாடல் 30 - லெம்மின் கைனனும் உறைபனி மனிதனும் TOP
அடிகள் 1-122 : லெம்மின்கைனன் வடநாட்டின் மீது போர் தொடுப்பதற்கு உதவுமாறு தனது பழைய தோழனான தியேராவைக் கேட்கிறான்.
அடிகள் 123-316 : வடநிலத் தலைவி உறைபனியை உருவாக்கி கடலில் இருந்த கப்பல்களை உறையச் செய்கிறாள். உடன் இருந்த வீரர்களும் உறையப் போகும் சமயத்தில் லெம்மின்கைனன் தனது மந்திர சக்தியாலும் மாயச் செயல்களாலும் உறைபனியினால் ஏற்பட்ட அகோரத்தைத் தாங்குகிறான்
அடிகள் 317- 500 : லெம்மின்கைனன் பனிக்கட்டி மேல் நடந்து கடற்கரைக்கு வருகிறான். பின்னர் வெகுகாலம் காடுகளில் துன்பத்துடன் அலைந்து திந்து கடைசியில் தனது வீட்டை அடைகிறான்.
அஹ்திப் பையன் அவன்நிக ரற்றோன்
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
காலை ஒருநாள் வேளை வைகறை
அந்த நாளில் முன்புலர் நேரம்
படகுச் சாலையுட் பதித்தான் காலடி
நற்கப் பற்றுறை நடந்தான் நோக்கி.
அங்கே மரத்தின் அகல்பட கழுதது
புலம்பிற் றிரும்பின் துடுப்புப் பூட்டு:
"எவரோ கட்டிய எனக்கெது வுண்டு
எவரோ செதுக்கிய எளியேன் எனக்கு? 10
செருபோ ருக்கெனைச் செலுத்திலன் அஹ்தி
ஆறு,பத் தாண்டு அருங்கோ டைருது
வெள்ளியை அவனும் விரும்பிய தில்லை
பொன்னைத் தேடிப் போனது மில்லை."
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
படகினை அறைந்தான் பருகை யுறையால்
எழிலாய் மின்னும் இகத்தோ லுறையால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"தாருவின் மிதவையே தனித்துயர் வேண்டாம்
மரத்தின் புறமே முறையிடல் வேண்டாம் 20
இனியும் போர்க்கெழ இருக்கும் வாய்ப்பு
சண்டைக் கேகும் சந்தர்ப் பம்வரும்:
துடுப்புக் காரரால் நிரப்பப் படுவைநீ
நாளை விடியும் நற்பொழு திருந்து."
அன்னையின் அருகே அடிவைத் தடைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னையே இப்போ தழுவது வேண்டாம்!
பெற்றவ ளேயெனை, பொதும் புலம்பேல்!
எங்கா வதுதான் ஏகுவ தானால்
போர்க்களத் துக்குப் போவதா யிருந்தால்; 30
என்றன் மனதில் இதுதோன் றியது
எனக்கு வந்த எண்ணமு மிதுவே
வீழ்த்துதல் வேண்டும் மிகுவட நாட்டாரை
தண்டிக்க வேண்டும் தாழ்விழி மாந்தரை."
அவனைத் தடுக்க அன்னையும் முயன்றாள்
எச்சாத் தனளவ் விருமுது பெண்ணே:
"செல்லுதல் வேண்டாம், செல்வஎன் மகனே!
அந்த வடபால் அகல்நிலப் போர்க்கு!
எதிர்நோக் கிவரும் இறப்பே யங்கு
சந்திக்க நேரும் தனிநின் மரணம்." 40
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
செல்வது என்றே தீர்மா னித்தான்
புறப்பட் டேக ஒரேமுடி வெடுத்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இன்னொரு மனிதனை எங்கே பெறலாம்
இன்னொரு மனிதனும் இன்னொரு வாளும் அஹ்தி போர்க்கே அருந்துணை யாக
உதவிக் கின்னொரு உரமுறு மனிதனை?
தொந்தவன் எனக்குத் *தியேரா உள்ளான்
*பனிப்பத மனிதனை பல்கால் அறிவேன் 50
பெறுவேன் அவனைப் பிறிதொரு மனிதனாய்
பிறிதொரு மனிதனும் பிறிதொரு வாளும்
அஹ்தி போர்க்கே அருந்துணை யாக
உதவிக் கின்னொரு உரமுறு மனிதன்.
கிராமத் தூடாய் விரைந்தவ னேகினன்
தியேரா தோட்டத் தெருக்களின் வழியாய்
அங்கவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்
சேர்ந்ததும் வந்து செப்பினன் விவரம்:
"தியேரா, என்விசு வாசத் தோழனே!
இன்னரும் நண்பனே, இனிய மித்திரனே! 60
அந்தநாள் ஞாபகம் சிந்தையி லுளதா
வந்ததா அந்தநாள் வாழ்க்கையும் நினைவில்
இருவரும் ஒன்றாய் ஏகினோம் அன்று
பொயதாய் நடந்த பேரமர்க் களங்களில்?
அப்போ கிராமம் அங்கொன் றிலையே
இல்லம் பத்தே இல்லாக் கிராமமாய்.
அப்போ தங்கொரு அகமுமே யிலையே
வீரர்கள் பதின்மர் விளங்கா இல்லமாய்,
அங்கொரு வீரனும் அப்போ தில்லையே
கணிப்புள மனிதனாய் மதிப்புள மனிதனாய் 70
வீரர்நா மிருவரும் வீழ்த்தா மனிதனாய்
தருக்கிநாம் வெட்டிச் சாதிக்கா மனிதனாய்."
சாளரப் பீடம் தந்தையார் இருந்தார்
பிடிஈட் டிக்குச் செதுக்கிய வாறே
அன்னையும் களஞ்சியக் கூடத் தமர்ந்தனள்
தாய்மத் தொன்றால் தயிர்கடை தன்மையில்
வாயிலில் சகோதரர் வழியினில் நின்றனர்
சறுக்கு வண்டியைப் பிணைத்த வண்ணமாய்
சோதா முனையில் துறையதில் நின்றனர்
கழுவித் துணிகளை அலசிய வண்ணமாய். 80
சாரளத் திருந்த தங்தையும் மொழிந்தார்
களஞ்சியக் கூடத் திருந்ததாய் கேட்டனள்
வாயிலில் நின்ற சகோதரர் விளித்தனர்
துறைமுனைச் சோதா சொல்லினர் இப்படி:
"நேரமே யில்லை தியேராபோர்க் கேக
தியேரா ஈட்டி செய்சமர்க் கலக்க;
தியேராவோர் இணக்கம் செய்தனன் புகழுற
நீடுமொப் பந்தம் நேர்ந்தொன் றியற்றினன்
இளம்பெண் ஒருத்தியை இப்போ மணந்தனன்
தனக்கென உத்தாய்த் தலைவியை ஏற்றனன் 90
இன்னும் விரல்படா திருப்பன முலைக்காம்(பு)
திகழ்மார் பின்னும் தேய்படா துள்ளன."
இருந்தனன் தியேரா இதஅடுப் பருகே
கணப்பின் மூலையில் பனிப்பத மனிதன்
ஒருகால ணியை அடுப்பின் அருகிலும்
மற்றதைப் பீடமேல் வைத்தனன் கணப்பில்
இடுப்பின் பட்டியை இட்டே வாயிலில்
நடைபயின் றிட்டான் நன்கே வெளிப்புறம்;
தியேரா(தன்) ஈட்டியைச் செங்கர மெடுத்தான்
பென்னம் பொய ஈட்டியஃ தல்ல 100
சின்னஞ் சிறிய ஈட்டியு மல்ல
ஆயினும் ஒருநடுத் தரமே யானது:
அதன்முனை **பாயொன் றங்கே நின்றது
அலகின் அருகிலே முயலும் குதித்தது
ஓநாய்ப் பொருத்தில் ஊளை யிட்டது
கரடி குமிழில் கனன்றுறு மியது.
அவன்தன் ஈட்டியை அங்கே சுழற்றினான்
சுழற்றினான் ஈட்டி சுற்றி விசிறினான்
ஆறடி ஈட்டியின் அலகைச் செலுத்தினான்
வயலின் களியாம் மண்ணா ழத்தில் 110
ஏதும் பயிரிலா இயல்பொது மண்தரை
மேடுஇல் புற்றரை மீதே நிலத்தில்.
திணித்தான் தனது ஈட்டியைத் தியேரா
அஹ்திவைத் திருந்த அவனது ஈட்டியுள்
வந்தான் பின்அவன் வந்தான் விரைவாய்
போரிலஹ் திக்குப் பொருந்தும் உறுதுணை
பின்னர் அஹ்தி பெருந்தீ வின்மகன்
இறக்கினன் தோணியை இரும்நீர்த் தள்ளி
வெளிர்புல் லுறையும் வியன் பாம்புபோல்
அல்லது உயிருடை அரவம் போல 120
புறப்பட் டேகினர் புறம்வட மேற்காய்
வடபுலப் பூமியின் கடலதி லாங்கே.
அந்த வடநிலத் தலைவியைப் போது
*உறைபனி மனிதனை உருச்செய் தனுப்பினள்
வடபுலப் பூமியின் கடலதி லாங்கே
விந்து பரந்த வியன்கடல் மடியில்;
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
கூறினாள் இவ்விதம் கொடுத்தாள் கட்டளை:
"உறைபனி மைந்தனே ஓ,சிறு பையனே!
என்றன் சொந்த எழிலார் வளர்ப்பே! 130
நான்புகல் இடத்தே நீசெலல் வேண்டும்
நான்புகல் இடத்தே நன்கென் ஆணைபோல்:
துடுக்கான் தோணியைப் படுத்துறை குளிராய்
குறும்பன் லெம்மின் கைனனின் படகை
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
விந்து பரந்த வியன்கடல் மடியில்!
தலைவன் தனையே சாயாய்க் குளிர்செய்
துடுக்கனை நீல் உறைந்து போகச்செய்
என்றும் அவன்வெளி வந்திடா திருக்க
என்றுமே விடுதலை யில்லா திருக்க 140
விரும்பி நானே விடுத்தால் தவிர
சென்றுநான் விடுதலை தந்தால் தவிர!"
உறைபனி யோன்எனும் நிறைதீச் சக்தி
தீய மனத்தொடு திகழுமப் பனிப்பையல்
புறப்பட் டான்கடல் நிறைகுளி ராக்க
அலைகளை நிறுத்தி அவையுறைந் திடச்செய;
அவ்வா றவனும் அவ்வழி செல்கையில்
தரையிலே நடந்து தான்செல் வேளையில்
மரங்களைக் கடித்து மரத்திலை யகற்றினான்
புற்களின் தாள்களைப் போக்கினான் அவ்விதம். 150
அங்கே பின்அவன் அடைந்தநே ரத்தில்
வடபுலக் கடலின் வருவிளிம் பெல்லையில்
முடிவே யில்லாப் படிநீர்க் கரையில்
உடன்வரு முதலாம் உறுஇர வதனில்
குளிர்வித் தான்குடா, குளிர்வித் தான்குளம்,
கடலின் கரைகளைக் **கடினம தாக்கினான்
ஆனால் இன்னும் ஆழியை ஆக்கிலன்
படிய வைத்திலன் படரலை நிறுத்தி;
ஒலிகடல் நீர்மேல் ஒருசிறு **குருவி
வளர்அலை மேலொரு **வாலாட் டிப்புள் 160
இன்னும் குளிர(க) விலையதன் நகங்கள்
குளிர்பிடித் திலதது கொள்சிறு தலையில்.
அதிலிருந் திருநிசி அங்கே கடந்தபின்
வளர்ந்தது மாபெரும் வல்லமை யுடையதாய்
ஈடுபா டுற்றது எழு**நா ணின்றியே
மிகமிகப் பயங்கர மாய்மேல் வளர்ந்தது
உள**விசை முழுதினால் உறையவே வைத்தது
உறைபனி யோன்விசை உக்கிர மானது
உதித்தது பனிக்கட்(டி) ஒருமுழத் தடிப்பில்
சறுக்கணித் தடியாழ் உறைபனி பொழிந்தது 170
வந்தது துடுக்கனின் வன்கலம் குளிராய்
அஹ்தியின் கப்பலும் அலைகடல் மீதே.
அஹ்தியைக் குளிர்செய அங்கவன் கருதினன்
விறைக்கவைக்(க) எண்ணினன் மிகுவீ றுடையனை
அவனுடை உகிர்களை அவன்கேட் டேகினன்
அடிமுதல் விரல்வரை அவன்தேடி யேகினன்;
லெ(ம்)மின்கைன னப்போ நெடுஞ்சினங் கொண்டனன்
பாதிப்பு முற்றனன் படுபெருஞ் சினத்தொடே
உறைபனி யோனையே உடன்அனல் இட்டனன்
தள்ளினான் இரும்பினால் தானமை சூளையுள். 180
உறைபனி யோனிலே உடன்கரம் வைத்தவன்
கொடுங்கால நிலையினை கொண்டிட லாயினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"உறைபனி யோனே, உயர்வாடை மைந்த!
குளிர்ப்பரு வத்துக் குளிராம் மகனே!
எனது நகங்களுக் கேற்றிடேல் குளிரை
எனது விரல்களை இனிக்கேட் காதே
எனது செவிகளை இனிநீ தொடாதே
எனது சிரத்தை இனிக்கடிக் காதே! 190
நீகுளி ராக்க நிறையவே யுள்ளன
குளிரூட் டுதற்குக் கோடிகள் உள்ளன
மனிதனின் தோல்தனை மாத்திரம் தவிர்த்து
அன்னைபெற் றெடுத்த அழகுடல் தவிர்த்து:
குளிரூட்(டு) சதுப்பைக் குளிரூட்(டு) நிலத்தை
குளிராம் பாறை குளிரூட் டிடுமேல்
நீர்க்கரை அலாயை நீகுளி ராக்கு
காட்டர சதனின் கணுக்களைக் குளிரச்செய்
மிலாறுவின் பட்டையைமிக்நோ கச்செய்
இளம்ஊ சி(யி)லை எழில்மர மாத்தெடு 200
ஆனால் வேண்டாம் அருமானுடன் தோல்
ஒருபெண் ஈன்ற உத்தமன் மயிரும்!
இதுவும் போதா தின்னமு மென்றால்
மற்றும் அதிசய மாம்பொருள் குளிர்ச்செய்
கொதிக்கும் பாறைக் கொடுங்கல் குளிர்ச்செய்
கனன்றே எயும் கற்பா ளங்களை
இரும்பால் ஆன எழிற்குன் றுகளை
உருக்கினா லான உயர்ந்த மலைகளை
வுவோக்சியின் பயங்கர முறுநீர் வீழ்ச்சியை
கொடுமையே தானாய்க் கொள்இமாத் திராவை 210
நீர்ச்சுழல் தொண்டை நெடுமதன் வாயை
கொடிய பயங்கரம் கொள்நீர்ச் சுழியை!
உனதுவம் சத்தை உரைக்கவா இப்போ
உன்கெள ரவத்தை உறவெளிப் படுத்தவா
உன்வம் சத்தின் உடைமைகள் அறிவேன்
நீவளர்ந் தவித நிசமெலா மறிவேன்:
உறைபனி யோனின் உதிப்பல ச்செடி
வெய்யகா லநிலை மிலாறுவின் மத்தி
வடபால் நிலத்து வசமுள இல்லுள்
இருள்சூழ் வசிப்பிட இயைஆ ழத்தில் 220
மாசு படிந்ததோர் வன்தந் தைக்கு
பயனில் லாததோர் பதராம் தாய்க்கு.
யார்உறை பனியனை நேர்பால் ஊட்டினர்
பெருங்கொடுங் காற்றைப் பேணி வளர்த்தவர்
அன்னை யிடம்பால் அற்றவந் நேரம்
அன்னை யிடம்முலை இல்லா நிலையில்?
வியன்பா லூட்டிய துறைபனி யோற்கு
வியன்பா லூட்ட ஒருபாம் பூட்டுமூண்
முனையில் லாத முலைக்காம் புகளால்
பால்அற நேர்ந்த மார்பகங் களினால்; 230
அவனை வாடை அங்குதா லாட்ட
அவனைக் குளிர்காற் றாராட் டிற்று
கொடிய அலா கொள்நீ ரோடையில்
நிரம்பி வழிந்த சதுப்பு நிலங்களில்.
தீய மனத்தவன் ஆனான் சிறுபையல்
அழிக்கும் ஆற்றலை அவன்பெற் றிருந்தான்
இன்னும் அவனுக் கிடுபெய ரொன்றிலை
பயனெது மற்ற பைய னவற்கு;
தீப்பைய னுக்குச் செப்பினர் ஒருபெயர்
உறைபனி யோனென உரைத்தனர் அவனை. 240
வேலிகள் மீதவன் மோதிச் சென்றனன்
தண்பற் றைகளிடைச் சலசலத் திட்டனன்
கோடையில் சேற்றில் குறைவிலா துலவினன்
தனிப்பெரும் திறந்த சதுப்பு நிலங்களில்
குளிர்கா லத்தில் குதித்தான் தாருவில்
வளர்தேவ தாரு மரங்களில் இரைந்தான்
மோதித் திந்தான் மிலாறு மரங்களை
பூர்ச்சம் பொழிலில் புகுந்தே யாடினான்
வழுதுகள் மரங்களைக் குளிரச் செய்தனன்
மேட்டு நிலங்களை மட்டம தாக்கினன் 250
மரங்களைக் கடித்து மரத்திலை அகற்றினான்
புதர்ச் **செடிகளிலே பூக்களை அழித்தான்
பூர்ச்ச மரங்களில் போக்கினான் பட்டையை
ஊசி யிலைமரத் துறுசு(ள்)ளி வீழ்த்தினான்
இப்போ துநீ எடுத்தனை பேருரு
அழகாய் மிகவும் வளர்ந்தவ னானாய்
எனைக்குளி ராக்கலாம் என்றா கருதினை
என்செவி வீங்கவைத் திடுதற் கெண்ணமா
அடியிருந் தென்கால் அடையும் நினைவா
மேலிருந் தெனது விரல்நகம் கேட்கவா? 260
ஆனால் நீயெனை அக்குளி ராக்கிடாய்
கொடுமையா யுறையக் கூடிய தாக்கிடாய்
நெருப்பைத் திணிக்கிறேன் நிறையஎன் காலுறை
கொள்ளி களையென் குளிர்கா லணிக்குள்
தணலையென் ஆடை தம்விளிம் புகளுள்
காலணி களின்நூற் கோலநா டாக்கீழ்
உறைபனி யோனெனை உறைய வைத்திடான்
கொடுங்கால நிலையும் குறித்தெனைத் தொடாது.
உன்னைச் சபித்துநான் ஓட்டுகி றேனங்(கு)
வடபால் நிலத்தின் வளர்கோ டிக்கரை; 270
அந்த இடத்தைநீ அடைந்ததன் பின்னர்
உனது வீட்டைநீ ஓடி யடைந்தபின்
அனலுறும் கலயம் அறக்குளி ராக்கு
அடுப்பிலே எயும் அந்த அனலையும்
மாப்பசை யில்லுள மங்கையர் கைகளை
பாவையர் மார்புப் பையன் களையும்
செம்மறி யாட்டின் சேர்மடிப் பாலை
குதிரையின் வயிறுறும் குதிரைக் குட்டியை!
அதற்கும் நீபணி யாதே போனால்
அதற்குமப் பாலுனைச் சபித்துத் துரத்துவேன் 280
அரக்கான் மத்தியில் இருக்கும் அனலிடை
பிசாசு களின்பெரு நெருப்புச் சூளை(க்கு)
நீயே அங்குனைத் தீயில் திணிப்பாய்
கொல்லுலை தன்னிலே உன்னைக் கொடுப்பாய்
கொல்லன் சுத்தியல் கொண்டடிப் பதற்கு
சம்மட்டி யாலுனைச் சாடியே நொருக்க
சுத்திய லாலுனைத் தொடர்ந்துரத் தறைய
சம்மட்டிக் கொண்டுனைச் சாயாய் நொருக்க!
அதற்கும் நீபணி யாதே போனால்
அதைநீ சற்றும் கவனியா திருந்தால் 290
இன்னொரு இடத்தை எடுப்பேன் நினைவில்
மற்றொரு புறத்தை மெத்தவும் உணர்வேன்
உன்வாய் தென்திசைக் கோட்டிச் செல்வேன்
கோடைவீட் டுக்குக் கொடியவுன் நாவை
என்றும்நீ அங்கிருந் தெழுந்திட முடியா
என்றுமே விடுதலை ஏற்றிட மாட்டாய்
விரைந்துநான் வந்துனை விடுத்தலே யன்றி
நானே விடுதலை நல்கினா லன்றி."
வாடையின் மைந்தன் வருமுறை பனியோன்
உறுமழி வொன்றினை உணர்ந்தான் தானே 300
கருணைக் கேட்டுக் கெஞ்சத் தொடங்கினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போ செய்யலாம் ஒப்பந்த மொன்றுநாம்
ஒருவரை யொருவர் வருத்துவ திலையென
என்றுமே வருத்துவ தில்லை நாமென
பொன்னில்லாத் திகழும் பொற்பொழு தெல்லாம்.
நான்குளி ரூட்டலாய் நீயுணர்ந் தாயேல்
திரும்பவும் தவறைச் செய்வதை யறிந்தால்
திணிப்பாய் அடுப்பில் திகழும் நெருப்பில்
புதைப்பாய் கனன்று பொங்கும் தீய்க்குள் 310
கொல்லன் உலையில் கொடுங்கன லுள்ளே
இல்மா னன்னவன் கொல்லுலைக் குள்ளே
அல்லது கொண்டுசெல் அங்குதெற் கென்வாய்
கோடைவீட் டுக்குக் கொடும்என் நாக்கை
என்றுமே வெளிவரா திருப்பேன் அங்கு
என்றுமே விடுதலை யில்லா திருப்பேன்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
விட்டான் குளிருறக் கப்பலை யங்கே
நிற்கப் போர்க்கலம் நிலையாய் அங்கே
தானே புறப்பட் டேகிட லானான்; 320
இரண்டாம் ஆளாய் இணைந்தான் தியேரா
துடுக்குப் பையனின் சுவட்டின் பின்னால்.
மட்ட மாம்பனிக் கட்டிமேல் நடந்தான்
பனிக்கட்டி மென்மையில் படர்ந்தான் வழுக்கி;
ஒருநாள் நடந்தான் இருநாள் நடந்தான்
மூன்றா வதுநாள் முன்வரு போதில்
**பசிக்கடல் முனையைப் பார்க்க முடிந்தது
இழிந்த கிராமம் எட்டிற் றுவிழி(யில்).
கடல்முனைக் கோட்டையின் இடம்கீழ் வந்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 330
"இந்தக் கோட்டையில் இறைச்சியு முளதோ
மிளிருமித் தோட்டம் மீன்களு முளவோ
இளைத்துப் போன இகல்வீ ரனுக்காய்
களைத்துப் போன கவின்மனி தனுக்காய்?"
அந்தக் கோட்டையில் அமைந்தில திறைச்சி
அந்தத் தோட்டத் தங்குமீ னில்லை.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"எப்பாய் நெருப்பே, இம்மடக் **கோட்டையை!
எடுப்பாய் நீரே இத்தகு இடத்தைநீ!" 340
முன்னே றியவன் முனைந்துமுன் சென்றான்
காட்டின் உள்ளே கடுகியே சென்றான்
வசிப்பிட மில்லா வழியினில் சென்றனன்
முன்னறி யாத முனைவழிச் சென்றான்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
கம்பளி நூலைக் கற்களிற் பிடுங்கினான்
பாறை முனையில் உரோமம் கிழித்தான்
அவற்றில் செய்தனன் அழகிய கையுறை
கைக்கு அணியும் கவினுறை இயற்றினான் 350
குளிர்ஆ திக்கம் கொள்இடத் துக்கு
உறைபனி யோனின் உயர்கடி தாங்க.
அறியப் பாதையை அவன்மேற் சென்றனன்
சென்றான் தொடர்ந்து தொந்திட வழிகள்;
பாதைகள் உள்ளே படர்ந்தன காட்டில்
வழிகள் அவனை வரவேற் றேகின.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ, தியேரா, உயர்என் சோதர!
இப்போது வந்து எங்கேயோ சேர்ந்துளோம் 360
திங்களும் தினங்களும் திந்தலை தற்கு
என்றென்று மந்த அடிவான் நோக்கி."
தியேரா இந்தச் சொற்களில் சொன்னான்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"வஞ்சம் தீர்க்கநாம் வருமிழி பிறப்புகள்
வஞ்சம் தீர்க்கநாம் வறியபாக் கியர்கள்
பெற்றோம் ஒன்றினைப் பெரும் போராக
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
எங்கள் சொந்த இழப்பிற் குயிர்களை
எம்மையே என்றும் இழப்பதற் காக 370
தீமைகள் நிறைந்தவித் தீதா மிடங்களில்
முன்னறி யாதவிம் வன்தெருக் களிலே.
எதுவும் தொயவே யில்லையெங் களுக்கு
தொயவு மில்லைநாம் தேர்ந்துணர்ந் ததுமிலை
எத்தெரு அழைத்து எங்களைச் செல்லும்
எவ்வழி செல்லும் எமைவழி காட்டி
அடர்ந்த வனத்தில் இறந்துபோ தற்கு
புதால் புற்றரையில் போய்வீழ் வதற்கு
அண்டங் காக்கையின் அவ்வில் லங்களில்
காகம் வாழும் கவின்பெரு வெளியில். 380
அண்டங்கா கங்கள் அங்கிடம் மாற்றும்
கொடிய பறவைகள் கடிதெமைச் சுமக்கும்
இறைச்சி கிடைக்கும் எல்லாப் புட்கும்
காகங் களுக்குச் சூடாம் குருதி
அண்டங் காக்கையின் அலகை நனைக்க
இழிவாம் எங்கள் இரும்பிணத் திருந்து
எங்கள் எலும்பை இடும்பா றைகளில்
கற்குன் றுக்குக் கடிதுகொண் டேகும்.
இதனை அறிந்திடாள் என்தாய் பேதை
என்னைச் சுமந்தவள் இதனை உணர்ந்திடாள் 390
அவளது தசையெங் கசைகிற தென்பதை
அவளது குருதியெங் கதிர்ந்தோடு மென்பதை
பொதாய்ப் பொருதும் அமாலா என்பதை
சமமாம் ஓர்பெரும் சமாலா என்பதை
அல்லது பெருங்கடல் அதனிலா என்பதை
மிகுந்துயர் அலைகளின் மீதிலா என்பதை
அல்லது தாருக்குன் றலையுமா என்பதை
சிறுபற்றை வனங்களில் தியுமா என்பதை.
என்னுடை அன்னை எதையுமே அறியாள்
அபாக்கிய மானதன் அருமகன் பற்றி 400
தன்மகன் இறந்ததைத் தாயவள் அறிவாள்
தூயதான் சுமந்தவன் தொலைந்தான் என்பதை;
என்றன் அன்னை இவ்விதம் அழுவாள்
புகழ்ந்தெனைப் பெற்றவள் புலம்புவாள் இவ்விதம்:
'பாக்கியம் அற்றஎன் பாலகன் அங்கே
அறியாப் பாவிஎன் ஆத()ரம் அங்கே
துவோனியின் விளைவுறும் தொன்னிலம் தன்னில்
படர்கல் லறையிடம் பரவிய மண்ணில்;
இப்போ தென்றன் எழில்மகன் விடுகிறான்
பாக்கிய மற்றஎன் பாலகன் அவனே 410
உயர்தன் குறுக்குவில் ஓய விடுகிறான்
கடிவலு வில்லினைக் காய விடுகிறான்
பறவைகள் நன்கே பாங்குறக் கொழுக்க
காட்டின் கோழிகள் கனகுதூ கலம்பெற
சிறப்பாய்க் கரடிகள் செழிப்புடன் வாழ
வயல்களில் கலைமான் இனிதலைந் துலவ.' "
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஆமாம், அதுசா, அன்னை ஏழையள்,
ஆமப்பா, பாவியே, அன்றெனைச் சுமந்தாய்! 420
ஒருவைப்பின் கோழிகள் உவந்துநீ வளர்ந்தாய்
அன்னக் கணமென் றனைத்தையும் வளர்த்தாய்
செறிகாற் றடித்தது சிதறச் செய்தது
கலையச் செய்தது கடும்பேய் வந்தது
ஒன்று அங்கே இன்னொன் றிங்கே
மூன்றாவ தெங்கோ முன்னே போனது.
இன்றந் நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்
சிறந்தவப் பொழுதைச் சிந்தனைச் செய்கிறேன்
மலர்களைப் போலநாம் உலாவிய நாட்களை
உயநம் நிலத்து உயாய பழம்போல்; 430
எமதுதோற் றங்களை அனைவரும் பார்த்தனர்
உற்றுப் பார்த்தனர் உருவம் எமதை
அதுஇந் நாட்கள்போல் அறவே இல்லை
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே;
காற்றொன் றேயெமக் கேற்றநட் பாயுள
தொன்னாட் கண்டதில் சூயன் ஒன்றுதான்
முகில்கூட இப்போ மூடி விலகிட
மழையும் மறைந்து மறைந்து செல்கிறது.
எனக்கெதும் அக்கறை யிலையே இதனால்
இனிப்பெருந் துயர்ப்பட எதுவுமே இல்லை 440
கன்னிப் பெண்கள் களிப்புடன் வாழ்ந்தால்
மகிழ்வுடன் பின்னல் தலையினர் உலவினால்
நங்கைய ரனைவரும் நகைப்புட னிருந்தால்
வதுவை மகளிர் மனமகிழ் வடைந்தால்
ஏக்கத் தாலெழும் இன்னலை விடுத்து
தொல்லைகள் தந்திடும் துயரம் ஒழித்து.
எமையினும் மயக்கிலர் இம்மாந் திணகரே
பார்ப்பவர் பார்வைமாந் திணகான் மயக்கலும்,
இந்த வழிகளில் இறந்தொழி தற்கு
பயணப் பாதையில் புதைந்துபோ தற்கு 450
இளம்பராய த்திலேயே உறக்கம் கொளற்கு
இரத்தச் செழிப்புடன் இறந்துவீழ் தற்கு.
மயக்குவோன் எந்தமாந் திணகனே யாயினும்
பார்ப்பவன் எத்தகு பார்வையோன் ஆயினும்
அவன் செயல் அவனுடை அகத்திருக் கட்டும்
அவன்வசிப் பிடத்தில் அடிகோ லட்டும்;
அவர்களை யேமயக் கத்தில்ஆழ்த் தட்டும்
பாடட்டும் அவர்கள்தம் பாலர்கள் மீதே
அவர்கள்தம் இனத்தையே அழித்தொழிக் கட்டும்
தம்முற வையவர் தாம்சபிக் கட்டும்! 460
எந்தைமுன் என்றுமே இதுபுந் தாலை
உயர்ந்த சீர்ப்பெற்றார் ஒருக்கா லும்மிலை
மாந்திணகன் மனதை மதித்தது மில்லை
லாப்பியற் கீந்ததும் இல்லை வெகுமதி;
இவ்வா றுரைத்தார் என்னுடைத் தந்தை
நானுமவ் விதமே நவில்கிறேன் இங்கு:
நிலைபெரும் கர்த்தரே நீரெனைக் காப்பீர்
எழிலார் தெய்வமே எனைக்காப் பாற்றுவீர்
உதவிக்கு வாரும் உமதின் கரங்களால்
நீர்பெற் றிருக்கும் மேதகு சக்தியால் 470
மானுடர் மனத்திலே வருவிருப் பிருந்து
எழும்முது மாதான் எண்ணத் திருந்து
தாடிசேர் வாய்களின் தகுமொழி யிருந்து
தாடியற் றோர்கள் தம்சொல் லிருந்து!
என்றும் எமக்கே இருப்பீர் உறுதுணை
ஆகுவீர் நிலைபெறும் பாதுகா வலராய்
பிந்துபோ காதெப் பிள்ளையு மிருக்க
அன்னையீன் மதலை அழிந்திடா திருக்க
ஆண்டவன் படைத்த அருநெறி யிருந்து
இறைவனார் ஈந்த இவ்வழி யிருந்து!" 480
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
கவனம் அனைத்தையும் கனபா யாக்கினான்
கவலை அனைத்தையும் கருமா வாக்கினான்
தீயநாட் களினால் சேர்ந்தது தலைக்கணி
இரகசிய வெறுப்பினால் இயைந்தது ஆசனம்;
அதன்நல் முதுகில் அவன்பாய்ந் தேறினன்
நற்சுடர் நுதலுடை மெச்சிடும் சடைமேல்
பயணம் தனது பாதையில் தொடங்கினன்
சேர்தன் தோழன் தியேரா தன்னுடன் 490
கடற்கரை தனிலே கலகலத் தோடினன்
சென்றனன் தொடர்ந்து திகழ்மணற் றரைமேல்
அன்பான அன்னையின் அருகே மீண்டும்
சீர்மிகும் பெற்றோர் திருமுகம் நோக்கி.
என்தூர நெஞ்சனை அங்கே விடுகிறேன்
எனதுஇக் கதையி லிருந்தே சிலகால்
தியேரா வைவழிச் செல்லவே விடுகிறேன்
அவன்இல் நோக்கி அவன்பய ணிக்க
இந்தக் கதையை இப்போ மாற்றுவேன்
மற்றொரு பாதையில் வழிச்செல விடுகிறேன். 500
பாடல் 31- குலப் பகையும் அடிமை வாழ்வும் TOP
அடிகள் 1-82 : உந்தமோ தனது சகோதரன் கலர்வோ என்பவனுக்கு எதிராகப் போர்த்தொடுத்து அவனையும் அவனுடைய படையையும் அழிக்கிறான். கலர்வோவின் இனத்தில் கர்ப்பவதியான ஒரு பெண் மட்டுமே உயிர்வாழ விடப்படுகிறாள். அழைத்துச் செல்லப்படும் அந்தப் பெண்ணுக்கு உந்தமோவின் தோட்டத்தில் குல்லர்வோ என்ற மகன் பிறக்கிறான்.
அடிகள் 83-202 : குல்லர்வோ தொட்டிலில் இருக்கும் பொழுதே உந்தமோவைப் பழிக்குப்பழி வாங்கத் தீர்மானிக்கிறான். உந்தமோ குல்லர்மோவைக் கொல்லப் பலவழிகளில் முயன்றும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அடிகள் 203-374 : குல்லர்வோ வளர்ந்ததும் உந்தமோவுக்குப் பலவழிகளிலும் தொல்லை தருகிறான். அலுத்துப் போன உந்தமோ குல்லர்வோவை இலமானனுக்கு அடிமையாக விற்று விடுகிறான்.
வளர்த்தாள் கோழி வளர்குஞ் சொருதாய்
ஒருபெருங் கூட்டம் உயரன் னங்களை
கோழிக் குஞ்சுகள் வேலியில் வைத்தாள்
அன்னங் களையெடுத்(து) **ஆறு கொணர்ந்தாள்;
அங்கொரு கழுகுவந் தவற்றைப் பிடித்தது
கருடன் வந்து சிதறிடச் செய்தது
கவின்சிறைப் பறவை கலையச் செய்தது:
கடத்திய தொன்றைக் *கர்யா லாவுக்(கு)
ஒன்றைக் கொணர்ந்தது ரஷ்ய மண்ணிடை
வீட்டொடு மூன்றா வதையது விட்டது. 10
ரஷ்ய நாட்டுக் குடன்கொடு சென்றது
வர்த்தக மனிதனாய் வளர்ந்தது அங்கே;
கர்யலா வுக்குக் கடத்திச் சென்றது
*கலர்வோ வாக கவினுற வளர்ந்தது;
வீட்டோ டிருக்க விட்டுச் சென்றது
*உந்தமோ வாக உயர்ந்து நிமிர்ந்தது
தினமெலாம் பிதாவின் தீயவன் அவனே
அன்னையின் உளத்தை அவனே உடைப்பவன்.
உந்தமோ வித்து உயர்வலை பரப்பினன்
மீன்களைக் கலர்வோ விரும்பிப் பிடிப்பிடம்; 20
வந்தவன் கலர்வோ வலைகளைக் கண்டனன்
மீன்களைத் தன்பை மிகச்சேர்த் திட்டனன்;
வீரமும் வலிமையும் மிகுந்தவன் உந்தமோ
அவன்சினங் கொண்டனன் ஆத்திரப் பட்டனன்
விரல்களி லிருந்தே விறற்போர் தொடங்கினன்
உள்ளங்கை அருகினால் உறுபோர் கேட்டனன்
மீன்குட லால்ஒரு மிகுபோர்க் கெழுந்தனன்
பொத்தநன் னீர்மீனால் பெருத்தபோ ரொன்றுக்(கு).
செய்தனர் கலகம் செருத்துப் பார்த்தனர்
ஒருவரை ஒருவர் உறவென் றிலராம் 30
எவன்மற் றவனை ஓங்கி அடித்தானோ
அவனே கொடுத்ததை அதன்பதில் பெற்றனன்.
இதற்குப் பின்னர் இன்னொரு வேளை
இரண்டு மூன்றுநாள் ஏகிமுடிந்த பின்
கொஞ்சம் கலர்வோ **கூலம் விதைத்தான்
உந்தமோ வாழ்ந்த ஓல் லின்பின்.
உந்தமோ தோட்டத் துரம்பெறும் செம்மறி
கலர்வோ தானியக் கதிரைத் தின்றது
கலர்வோ பயங்கரக் கடிநாய் அப்போ
உந்தமோ செம்மறி உடலம் கிழித்தது. 40
உந்தமோ பின்பய முறுத்திட லாயினன்
கலர்வோஓர் வயிற்றில் கனிந்த சோதரனை
சொன்னான் கலர்வோ சுற்றம் கொல்வதாய்
அடிப்பதாய்ப் பொதாய் அடிப்பதாய்ச் சிறிதாய்
அனைத்து இனத்தையும் அழிப்பதாய் மாய்ப்பதாய்
இல்களைச் சாம்பராய் எத்து முடிப்பதாய்.
மனிதான் பட்டியில் வாள்களைச் செருகினன்
ஆயுதம் தந்தனன் அவன்மற வோர்கரம்
சிறுவர்கள் பட்டியில் சேர்ந்தகுத் தூசிகள்
அழகிய தோள்களில் அபுல் வாள்களும்; 50
பொதிலும் பொதாம் பெரும்போர்க் கேகினர்
கூடிப் பிறந்தவர் குறையில்சோ தரனுடன்.
கலர்வோ(வின்) மருமகள் கவினுறு மொருத்தி
அமர்ந்து சாரளத் தருகினில் இருந்தனள்
சாரளத் தூடாய்த் தான்வெளிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அங்கே தடித்த அதுவென்ன புகையாய்
அல்லது நிறத்தில் அதுகரு முகிலோ
தொலைவிலே தொயும் தொடர்வயல் வெளிகளில்
புதிய ஒழுங்கையின் புறக்கடை முடிவினில்?" 60
ஆயினும் அதொன்றும் புகாரான புகாரல்ல
அல்லது தடிப்புறும் புகையுமே அல்லவாம்:
அங்ஙனம் தொந்தனர் உந்தமோ வீரர்கள்
புறப்பட்டு வந்தனர் போர்பொ துக்கென.
வந்தனர் உந்தமோ என்பவன் வீரர்கள்
வாள்பட்டி யதிலுறும் மனிதர்கள் சேர்ந்தனர்
கலர்வோ(வின்) கூட்டத்தைக் கடிதுகீழ் வீழ்த்தினர்
பொதான இனமதைப் பொதுகொன் றழித்தனர்
இல்களைச் சாம்பராய் எத்தவர் முடித்தனர்
மாற்றியே அமைத்தனர் வரவெ(ற்)று நிலமதாய். 70
கலர்வோவின் ஒருத்தியே காகை மிஞ்சினாள்
அவளுக்கு வயிறதோ அதிகனத் திருந்தது
உந்தமோ என்பவன் உறுவீர ரப்போ(து)
தம்முடன் வீட்டிடைத் தையலைக் கொணர்ந்தனர்
சிறியதாம் ஓர்அறை செய்யவும் சுத்தமாய்
தரையினைப் பெருக்கியே தான்கூட்டி வைக்கவும்.
சிறுகாலம் மெதுவாகச் சென்றிட லானது
சிறியதோர் பையனாய் ஒருசேயும் பிறந்தது
மகிழ்ச்சியே இல்லாத மங்கையவ் வன்னைக்கு;
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல் 36 - குல்லர்வோவின் மரணம் TOP
அடிகள் 1-154 : குல்லர்வோ போருக்கு ஆயத்தமாகித் தன்
குடும்பத்தாரிடம் விடை பெறுகிறான். அவனுடைய தாய் மட்டும்
அவனைப் பற்றியும் அவன் எங்கே போகிறான் என்பதைப்
பற்றியும் அவன் இருப்பானா இறப்பானா என்பதைப் பற்றியும்
எண்ணி வருந்துகிறாள்.
அடிகள் 155-250 : குல்லர்வோ உந்தமோவின் தோட்டத்துக்கு
வந்து எல்லோரையும் வீழ்த்தி எல்லா வசிப்பிடங்களுக்கும் தீ
வைத்து அழிக்கிறான்.
அடிகள் 251-296 : அவன் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது
வீட்டில் யாருமே இல்லாமல் வெறுமையாக இருக்கிறது.
ஆனால் அங்கே ஒரு கிழட்டுக் கறுப்பு நாய் மட்டும் நிற்கிறது.
வேட்டையாடி வாழ்வதற்காக அந்த நாயுடன் காட்டுக்குள்
போகிறான்.
அடிகள் 297-360 : காட்டுக்குச் செல்லும் வழியில், முன்னொரு
நாள் தனது சகோதரியைச் சந்தித்து அவளுடன் தகாத
முறையில் நடந்து கொண்ட இடத்துக்கு வருகிறான். அங்கே
மனச்சாட்சியின் உறுத்தலினால் தனது வாளினாலேயே தனது
உயிரை மாய்க்கிறான்.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
அங்ஙனம் போர்க்கு ஆயத்த மாயினன்
சமர்ப் பாதைக்குத் தயாராய் நின்றனன்;
வருமொரு கணத்தே வாளைத் தீட்டினன்
அடுத்ததில் ஈட்டியை ஆக்கினன் கூர்மை.
இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"வேண்டாம் பாக்கிய மேயிலா என்மகன்
பெரும்போ ரொன்றைப் பெற்றிட வேண்டாம்
வாட்களை மோத வழிச்செல வேண்டாம்! 10
காரண மின்றியே கடும்போர்க் கேகுவோன்
சண்டையைத் தொடங்கித் தானாய் வைப்பவன்
அவனும் போரில் அழிக்கப் படுவான்
கொடும்போ ரில்லவன் கொல்லப் படுவான்
வெவ்வாள் களாலவன் வீழ்த்தப் படுவான்
அதிர்வாள் அலகினால் அழகிக்கப் படுவான்.
ஆடொன்று மீதுநீ அமருக் கெழுகிறாய்
ஆட்டுக் கடாவிலே அமர்பொரச் செல்கிறாய்
வெள்ளாடு விரைவில் வென்றிட வும்படும்
கடாவும் அழுக்கில் கடிதுவீழ்த் தப்படும் 20
நாயொன்றில் ஏறிநீ நண்ணுவாய் வீட்டை
தவளையின் மீதுதான் முன்றிலை யடைவாய்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அப்படி யாயில்நான் அமிழேன் சேற்றில்
அல்லது வீழேன் அகல்பசும் புற்றரை
அல்லது அண்டங் காகத் தகத்தில்
அல்லது காகம் அண்மிவா ழிடங்களில்
போர்க்களத் தில்நான் போய்அமிழ் வேளையில்
போர்க்கள மீதில் போய்வீழ் வேளையில். 30
மாள்வது போரின் வழிமிகச் சிறந்தது
வாள்களின் மோதலில் வீழ்வதும் நல்லதே!
அமரெனும் நோயோ அதுமிக இனியது
திடீரென அதிலே செல்வான் பையன்
வருந்ததுத லின்றி விரைந்தவன் செல்வான்
நலிவு றாமலே நடுநிலம் வீழ்வான்."
இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை:
"போருக்கு நீபோய்ப் பொன்றுவ தானால்
உன்தந் தைக்கு உறமிஞ் சுவதெது
வயதாம் அவரது வறியநாட் களிலே?" 40
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"தொழுவத் தெருவின் குவைச்சா கட்டும்
தோட்டத்து வீழ்ந்து தொடுசா வவுறட்டும்."
"உன்அன் னைக்கு மிஞ்சுவ தெதுவோ
வயதாம் அவளது வறியநாட் களிலே?"
"மாளட் டும்கை வைக்கோற் கட்டுடன்
மாட்டுக் கொட்டிலில் மூச்சடைக் கட்டும்."
"உன்சகோ தரற்கு மிஞ்சுவ தெதுவோ
இனிவரப் போகும் நனிநாட் கழிக்க?" 50
"அவனைக் காட்டை அடைந்திட விடலாம்
காண்தோட் டவெளிக் கைவிடப் படலாம்."
"உன்சகோ தரிக்கு மிஞ்சுவ தெதுவோ
இனிவரப் போகும் நனிநாட் கழிக்க?"
"கிணற்று வழியவள் கிடந்துசா கட்டும்
தோய்க்கும் துறையவள் ஆழ்ந்து போகட்டும்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
வீட்டை விட்டே விரைந்தே எழுந்தான்
உரைத்தான் தந்தைக் கொருசொல் இவ்விதம்:
"விடைபெற் றேன்என் னுடையன் பெந்தையே! 60
நிகழுமா எனக்காய் நீங்கள் அழுவது
அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால்
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
இந்தச் சொற்களில் இயம்பினார் தந்தை:
"அறிந்துனக் காய்நான் அழப்போவ தில்லை
அங்கிறந் தாயென அறியவும் நேர்ந்தால்
பெற்றுக் கொளலாம் பிறிதொரு மகனை
இன்னமும் மிகமிக இயைசிறப் பினனை
பாரில் பெருந்திறன் படைத்ததோர் மகனை." 70
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆம்உமக் காய்நான் அழப்போவ தில்லை
இறந்துநீர் போனீர் என்பதை அறிந்தால்;
இதுபோல் தந்தையை இவ்விதம் பெறுவேன்:
களிமண் வாயும் கல்லிலே தலையும்
சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும்
வாடிக் காய்ந்த வறுபுல் தாடியும்
**அலரிக் கவர்த்தடி யாகிய கால்களும்
மக்கி மடிந்த மரத்திலே தசையும்!" 80
சோதரற் பார்த்துச் சொன்னான் அவன்பின்:
"விடைபெற் றேனென் னுடைச்சோ தரனே!
நிகழுமா எனக்காய் நீயும் அழுவது
அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால்
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
சகோதரன் இந்தச் சொற்களில் சாற்றினன்:
"அறிந்துனக் காய்நான் அழப்போவ தில்லை
அங்கிறந் தாயென அறியவும் நேர்ந்தால்
பெற்றுக் கொள்ளலாம் பிறிதொரு சோதரன் 90
இன்னமும் மிகமிக இனியசோ தரனை
இரண்டு மடங்கு எழிலார் ஒருவனை."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை
இறந்துநீ போனாய் என்பதை அறிந்தால்;
இதுபோல் சோதரன் இவ்விதம் பெறுவேன்:
கல்லிலே தலையும் களிமண் வாயும்
சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும்
வாடிக் காய்ந்த வறுபுற் கேசமும் 100
**அலரிக் கவர்த்தடி யாகிய கால்களும்
மக்கி மடிந்த மரத்திலே தசையும்!"
சொன்னான் பின்னர் சோதரிக் கவனே
"விடைபெற் றேனென் னுடைச்சோ தரியே!
நிகழுமா எனக்காய் நீயும் அழுவது
அங்கிறந் தேனென அறியவும் நேர்ந்தால்
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
இவ்வாறு சோதரி இயம்பினள் சொற்களில்:
"ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை 110
ஆங்கிறந் தாயென் றறியவும் நேர்ந்தால்
பெற்றுக் கொள்ளலாம் பிறிதொரு சோதரன்
இன்னமும் மிகமிக இனிய சோதரனை
இன்னமும் விவேகம் இயைந்த ஒருவனை."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆம்உனக் காய்நான் அழப்போவ தில்லை
இறந்துநீ போனாய் என்பதை யறிந்தால்;
இதுபோற் சோதரி இவ்விதம் பெறுவேன்:
கல்லிலே தலையும் களிமண் வாயும் 120
சேற்று நிலத்துச் **சிறுபழக் கண்களும்
வாடிக் காய்ந்த வறுபுற் கூந்தலும்
குளத்து **அல்லிக் கொழுமலர்ச் செவிகளும்
உடலொன்று பின்னர் **'மாப்பிள்' மரத்திலும்!"
அதன்பின் உரைத்தனன் அன்னைக் கிவ்விதம்:
"அன்னையே, என்றன் அன்புமிக் குடையளே!
என்னைச் சுமந்தஎன் எழிலார் அணங்கே!
கருவில் தாங்கிய கனகம் அனையளே!
நீங்கள் அழுவது நிகழுமா எனக்காய்
அங்கிறந் தேனென் றறியவும் நேர்ந்தால் 130
எம்மனு மத்தியில் இருந்தே தொலைந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்தே னென்றால்?"
இவ்விதச் சொற்களில் இயம்பினள் அன்னை
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"அன்னையின் மனத்தை அறியமாட் டாய்நீ
அன்னையின் இதயம் அதையுண ராய்நீ
ஆமப்பா, உனக்காய் அழுவேன் நானும்
அங்கிறந் தாயென அறிந்தஅவ் வேளை
என்மனு மத்தியில் இருந்துநீ பிரிந்தால்
அருமினம் பிரிந்து ஆழ்ந்ய் என்றால்: 140
வெள்ளம் வரும்வரை வீட்டில் அழுவேன்
அகத்தின் தரையில் அலையெழ அழுவேன்
வழிகள் எங்ஙணும் வளைந்த உடலுடன்
தொழுவம் அனைத்திலும் தொடுகூன் முதுகுடன்;
பனியைக் கட்டியாய்ப் படைக்க அழுவேன்
பனிக்கட்டி மாறி படிவெறி தாகும்
பின்னர் வெறுந்தரை வியன்பசும் நிலமாம்
பசுமை நிலம்பின் வெளுறியே போகும்.
எனக்கழ முடியா நிலையுள எதுவெனில்
வருந்த முடியா வகைநிலை எதுவெனில் 150
மக்கள் மத்தியில் மிக்கழு வதுவாம்
அழுவேன் ரகசிய மாய்ச்சவு னாவில்
அமரும் வாங்கில்நீர் அதுவழிந் தோட
சவுனாப் பலகையில் தவழ்அலை எறிந்தெழ."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
இசைப்பா டலுடன் ஏகினான் போர்க்கு
களிப்புடன் அவனும் கடும்போர்க் கேகினன்;
இசைத்தனன் சேற்றில் இசைத்தனன் தரையில்
பசும்புற் றரைகளில் பண்ணெதி ரொலித்தனன் 160
பெரும்புல் வெளிகளில் பெருமுழக் கிட்டனன்
வைக்கோல் நிலத்தினில் வந்தொலி யெழுப்பினன்.
ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது
செய்தி வந்தவன் செவியில் விழுந்தது;
"உந்தை இறந்தனர் உன்றன தில்லம்
வளர்புகழ் பெற்றவர் மரணித்து வீழ்ந்தனர்
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
இறந்தவ ருடைய ஈமக் கிரியையை!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை: 170
"இறந்தா ரவரெனின் இறந்துபோ கட்டும்!
எம்மகத் துள்ளது எழிலார் பொலிப்பரி
அவரைப் பூமிக் கதனில் கொண்டுபோய்
கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"
செல்லும் போதினில் சேற்றி லிசைத்தனன்
வெட்டிச் சுட்ட வெளியினி லொலித்தனன்
ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது
செய்தி வந்தது செவியில் விழுந்தது;
"இல்லத்(தில்) உன்றன் சோதர னிறந்தனன்
நினைஈன் றோர்பி(ள்)ளை நெடுந்துயி லாழ்ந்தனன் 180
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
இறந்தவ னுடைய ஈமக் கிரியையை !"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை:
"இறந்தான் அவனெனில் இறந்து போகட்டும்!
அங்குள வீட்டினில் அழகிய பொலிப்பரி
அவனைப் புமிக் கதனில் கொண்டுபொய்
கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"
சேற்றினில் நடக்கையில் சென்றனன் இசைத்து
தாருவின் இடைகுழ லூதிச் சென்றனன் 190
ஒருபுதி னம்தொடர்ந் தோடடியே வந்தது
செய்தி வந்தவன் செவியில் விழுந்தது:
"இல்லத்(தில்) உன்றன் சோதரி யிறந்தனள்
நினைஈன் றோர்பி(ள்)ளை நெடுந்துயி லாழ்ந்தனள்
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
இறந்தவ ளுடைய ஈமக் கிரியையை!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூறினன் அவன்தான் கூறினன் பதிலுரை:
"இறந்தா ளவளெனில் இறந்துபோ கட்டும்!
எம்மிடம் வீட்டிலே இருப்பது பெண்பரி 200
அவளைப் பூமிக்கு அதனில் கொண்டுபோய்
கல்லறை யொன்றில் கட்டிவைக் கட்டும்!"
எழிற்புற் றரைமேல் இசைத்துச் சென்றனன்
வைக்கோல் நிலத்தில் மகிழ்ந்தொலித் தேகினன்
ஒருபுதி னம்தொடர்ந் தோடியே வந்தது
செய்தி வந்தவன் செவியில் விழுந்தது:
"உந்தனன் பான உயர்தா யிறந்தனள்
இனியஉன் தாய் இறந்தே வீழ்ந்தனள்
ஆதலால் செல்வாய் அவ்விடம் பார்க்க
அவளை ஊர்மக்கள் அடக்கம் செய்வதை!" 210
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,நான் அதிர்ஷ்டம் ஒன்றிலாப் பையனே
இறந்தே போனதால் என்னுடை அன்னையும்
திரைத்துணி செய்தவள் களைத்து ஓய்ந்தனள்
வீழ்ந்தனள்மே லாடை விசித்திரம் வரைந்தவள்
நூல்கநளை நீளமாய் நூற்றே வைப்பவள்
நூற்புக் கழியை நொடியிழுத் தசைப்பவள்;
இறுதிநே ரத்தில் இல்லைநான் அருகில்
ஆவி பிரிகையில் அவளயல் நானிலை 220
மரணும் வந்ததா வன்குளிர் வந்ததால்
அல்லதூண் ரொட்டி அதுஇலா தானதால்!
மனைக்கழு வட்டும் மாண்டவள் உடலினை
தண்ணீர் ஜேர்மனிச் சவர்க்க()ரம் கூட்டி
பின்பட் டுத்துணி **நன்குசுற் றட்டும்
சணல்நூல் வண்ணத்துத் துணியில்வைக் கட்டும்
செல்லட்டும் எடுத்தாங்கே சேர்பூமி அவளைப்பின்
அவளைக் கல்லறை அடக்கி மூடட்டும்
புலம்பலின் ஒலியொடு புவியுள்ஏ கட்டும்
இறங்கட்டும் கல்லறை இனியபாட் டிசையொடு 230
இல்லத்துக் கினும்நான் ஏகிடு நிலையிலை
திருப்பிக் கொடுபட்ட திலையுந் தோக்கினும்
வீழ்த்தவும் படவிலை வெந்தீ மானுடன்
அழிக்கவும் படவிலை அதிகெடு மானுடன்."
இசைத்த படியே ஏகினன் சமர்க்கு
உந்தோநாட் டுக்கு உவகையோ டேகினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே!
எனக்கொரு வாள்இங் கினிது தருவையேல்
அதிலும் சிறப்பாம் அலகுள ஒன்றினை 240
ஒருமுழக் குழுவுக் குரைக்கும் அதுவகை
ஒருநூறு பேர்க்கு உறுநிகர் நின்றிடும்."
பெற்றனன் ஒருவாள் நச்சிய வாறே
அனைத்திலும் சிறந்த அலகு படைத்ததை
அதனால் ஓரினம் அனைத்தும் வீழ்த்தினன்
உந்தமோ என்பான் உறுகூட் டழித்தனன்;
மனைகளை எரித்து மாற்றினான் சாம்பராய்
அழித்து அனைத்தையும் ஆக்கினன் துகள்துகள்;
கற்களை அடுப்பங் கரையிலே விட்டனன்
முற்றத்து விட்டனன் முதுஉயர் பேரியை. 250
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
இப்போ திரும்பினன் இல்லம் நோக்கி
கால மாகிய கவின்பிதா வசிப்பிடம்
பெற்றவர் வாழ்ந்த பெருந்தோட் டவெளி;
வந்ததும் வெற்று வசிப்பிடம் கண்டனன்
திறந்ததும் கண்டனன் தெரிபாழ் இல்லம்;
அணைத்திட ஒருவரும் அங்கே வந்திலர்
இருகரத் தேற்க எவருமே யங்கிலர்.
அடுப்புக் கரியில் அவன்கை வைத்தனன்
அடுப்பின் கரியோ அதிகுளிர்ந் திருந்தது; 260
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
அன்னையும் உயிரோ டங்கிலை யென்பதை.
கையை நுழைத்துக் கணப்பில் பார்த்தனன்
கற்கள் குளிராய்க் கணப்பில் இருந்தன
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
தந்தை உயிரொடு தானிலை யென்பதை.
விழிகளை வலம்வர விட்டனன் நிலத்தில்
படர்தரை பெருக்கப் படாமல் இருந்தது
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
சகோதரி உயிரொடு தானிலை யென்பதை. 270
பார்தனன் நீர்த்துறைப் பக்கம் சென்று
தோணிகள் எதுவுமே துறையினில் இல்லை
அங்கவன் வந்ததும் அறிந்தே கொண்டனன்
சகோதரன் உயிரொடு தானிலை யென்பதை.
அவனங் கப்போ அழவே தொடங்கினன்
ஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓ,அன் பான உயர்ந்தஎன் அன்னாய்!
எனக்காய் இங்குநீ எதனை விட்டனை
நீடுமிப் பூமியில் நீவாழ் காலம்? 280
ஆயினும் அன்னாய் அதைநீ கேட்டிலை
விம்மிநான் உந்தன் விழிகளில் அழுகையில்
புலம்பிடும் வேளையுன் புருவத்தி லேநான்
கூறியுன் சிரத்தில் குறைமுறைப் படுகையில்."
கல்லறை யிருந்து நல்லதாய் எழுந்தனள்
மண்ணின்கீ ழிருந்து நன்னினை வுறுத்தினள்:
**" 'முஸ்தி' நாயினை விட்டுச் சென்றுளேன்
வேட்டைக் கதனுடன் வெளிச்செல லாமதால்;
கூடஉன் நாயினைக் கொண்டுநீ சென்றிடு
காட்டினுள் அங்குநீ வேட்டைக்(கு) ஏகிடு 290
அடர்ந்த அடவியின் அதனுட் புறம்செல்
வனத்தின் வனிதையர் வாழிடத் துக்கு
நீல்நிறப் பெண்கள் வாழ்முற் றத்தே
தேவ தாருவின் செறிகோட்(டை) எல்லை
ஆகா ரப்பொருட்கள் அங்கே பெறற்கு
வனத்தின் ஆடலை தினம்நா டிப்பெற!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கூடவே தன்நாய் கொண்டே சென்றனன்
தெருவின் வழியே சென்றான் நடந்து
அடர்ந்த அடவியை அடைதற் காகவே 300
சிறுதொலை அங்ஙனம் சென்றிடும் நேரம்
சிறுதொலை பாதையில் அடிவைத் தேகையில்
அந்தத் தீவதன் அகலிடம் வந்தனன்
நிகழ்ச்சி நடந்தஅந் நிலையம் வந்தனன்
பாவையின் கற்பைப் பறித்த இடத்தே
தன்தாய் ஈன்றளைத் தான்கெடுத் தவிடம்.
அழுதுகொண் டிருந்தாங் கெழிலார் புல்நிலம்
புலம்பிக்கொண் டிருந்தது புலர்இன் வனவெளி
வருந்திக்கொண் டிருந்தது வளரிளம் புற்கள்
பொழிந்தன கண்ணீர் புல்வெளி மலர்கள் 310
பாவையின் கற்பைப் பறித்தகா ரணத்தால்
தன்தாய் ஈன்றலைத் தானே கெடுத்ததால்
இளம்புல் எதுவும் இலையே முளைத்ததும்
வளர்ந்ததே யில்லை வளர்புல் வெளிமலர்
எழுந்ததே யில்லை எழியஅத் தலத்தில்
அந்தக் கொடிய அகல்நிலப் பரப்பிலே
பாவையின் கற்பைப் பறித்த இடத்திலே
தன்தாய் ஈன்றளைக் கெடுத்தவத் தரையிலே.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உருவினன் கடிதில் உயர்கூ ரியவாள் 320
அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன்
அதனைக் கேட்டனன் அதனை உசாவினன்;
அந்தவாள் விருப்பை அவனே கேட்டனன்
அவ்விதம் அதற்கு அமைந்ததா எண்ணம்
குற்றம் புரிந்த கொடுந்தசை யுண்ண
பாவம் புரிந்த சோரியைப் பருக.
மனிதனின் மனதை வாளும் அறிந்தது
நாயகன் நினைவை நல்வாள் உணர்ந்தது
இந்தச் சொற்களில் இயம்பிற் றதுவிடை:
"நச்சிய அதனை நான்ஏன் உண்ணேண் 330
குற்றம் புரிந்த கொடுந்தசை ஏனுணேன்
பாவக் குருதியை பருகேன் ஏன்நான்?
தனிக்குற் றமிலாத் தசையையும் உண்பேன்
கொள்பாவ மிலாக் குருதியும் குடிப்பேன்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
வாளின் பிடியை வயலுள் தள்ளினன்
பசும்புற் றரையில் பாய்ச்சினன் கைப்பிடி
மார்புக் கெதிராய் வாட்கூர் திருப்பினன்
தன்னைக் கூர்மேல் தானே செலுத்தினன் 340
அவ்விதம் இறப்பினை அடைந்தனன் அவனே
தன்மர ணத்தினைத் தழுவிக் கொண்டனன்.
இளைஞன் ஒருவனின் இறப்புமற் றிதுவே
நாயகன் குல்லர்வோ நாடிய மரணம்
நாயகன் ஒருவனின் நவில்கடை முடிவு
உயர்பாக் கியமில் ஒருவனின் மரணம்.
முதிய வைனா மொயினனப் போது
இறந்தான் அவனென அறிந்தஅவ் வேளை
இறந்தான் குல்லர்வோ என்பதைக் கேட்டதும்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 350
"வருங்கா லம்வாழ் மக்களே வேண்டாம்
கோணலாய்ப் பிள்ளையை பேணலும் வேண்டாம்
மூடத் தனமாய்த் தாலாட்(ட) யாரும்
எவரும் அந்நியர் இயைதுயி லாக்க!
கோணலாய் வளர்த்த குமாரன் எப்போதும்
மூடத் தனமாய்த் தாலாட் டும்சிறான்
விடயம் பொதுவாய் விளங்கவே மாட்டான்
மனிதனின் மனதை மற்றவன் பெற்றிடான்
வயோதிபம் வரையும் வாழ்ந்தா லுமவன்
உரமுறும் உடலை உடைய னாயிடினும்." 360
பாடல் 37 - பொன்னிலும் வெள்ளியிலும் மணமகள் TOP
அடிகள் 1-162 : இல்மரினன் தனது இறந்த மனைவிக்காக வெகுகாலம்
அழுகிறான். பின்னர் மிகவும் பிரயாசைப்பட்டுப் பொன்னிலும் வெள்ளியிலும்
- ஆனால் உயிர் மூச்சு இல்லாத - ஒரு மணமகளை உருவாக்குகிறான்.
அடிகள் 163-196 : இரவிலே தனது பொன் மணமகளின் அருகில் உறங்குகிறான்.
அந்தப் பொன்னுருவின் எந்தப் பக்கமாய் அவன் உறங்குகிறானோ அந்தப்
பக்கம் குளிராய் இருப்பதைக் காலையில் உணருகிறான்.
அடிகள் 197-250 : இல்மரினன் அந்தப் பொன் மணமகளை வைனாமொயினனுக்குக்
கொடுக்கிறான். வைனாமொயினன் அதனை ஏற்க மறுத்து, அதிலிருந்து வேறு
பயனுள்ள பொருட்களைச் செய்யும்படி அல்லது பொன்னை விரும்பக்கூடிய மக்கள்
வாழும் வேறு நாடுகளுக்கு அனுப்பும்படி கூறுகிறான்.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
அழுதான் மனைவிக் காய்முழு மாலையும்
அழுதான் இரவிலும் அவன்துயி லின்றியே
அழுதான் பகலிலும் அவனுண் ணாமல்
புலம்பினன் எழுந்து புலர்வை கறையில்
எறிந்தனன் பெருமூச் செல்லாக் காலையும்
இளமைப் பெண்ணவள் இறந்தே போனதால்
கல்லறை அழகியைக் கட்டி விட்டதால்.
அவனது கையில் அசைந்ததே யில்லை
செப்பினில் செய்த சுத்தியல் அலகு, 10
ஒலியெழ வில்லை உழைக்கும் தொழில்தலம்
கடந்து முடிந்ததோர் கால மாதமாய்.
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"அபாக்கியப் பைய(ன்)நான் அறிந்திலன் எதையும்
எப்படி இருப்பது எங்ஙனம் வாழ்வது;
இரவிலே உட்கார்ந் திருப்பதா துயில்வதா
நீண்டதோ இரவு நேரமோ துயரம்
நிறைந்தது தொல்லை குறைந்தது உடற்பலம்.
என்மாலை வேளைகள் ஏக்கம் நிறைந்தவை
என்காலை வேளைகள் எல்லாம் மனத்துயர் 20
இரவில் இருப்பது இன்னல் மட்டுமே
துயில்விட் டெழுவது துன்பம் அதைவிட
எழில்மா லைப்பொழு(து) **ஏக்கம் கொண்டிலன்
வருகாலை வேளை மனத்துயர் கொண்டிலன்
மற்றைய போதும் மனத்துயர் கொண்டிலன்;
அன்புக் குரியளால் அடைந்தேன் ஏக்கமே
மனதுக் கினியளால் மனத்துயர் பெற்றேன்
கரும்புரு வத்தளால் கடுந்துயர் கொண்டுளேன்.
இங்கே இப்போ இத்தகு நாட்களில்
மனச்சோர்(பு) மட்டும் மனத் தெழுகிறது 30
நள்ளிராத் தோன்றும் நனவிலாக் காட்சிகள்
கைதொட்ட இடத்தில் காண்பது வெறுமை
கரம்பட்ட இடத்தில் காண்பது பொய்மை
இடுப்பின் கீழே இரண்டு புறத்திலும்."
கோதையில் லாமல் கொல்லன் வாழ்ந்தனன்
வாழ்க்கைத் துணையிலா வயோதிப மடைந்தனன்;
மாதமோர் இரண்டு மூன்றுமா யழுதான்
ஆமப்பா, அதன்மேல் நாலாம் மாதம்
பொன்னைக் கடலில் பொறுக்கியே யெடுத்தான்
அலையில் கொஞ்சம் அள்ளினான் வெள்ளி; 40
மரத்துண்(டு) சிலதை மற்றவன் சேர்த்தான்
மரத்துண்(டு) சறுக்கு வண்டிமுப் பதிலாம்;
எரித்து மரத்தைக் கரித்துண் டாக்கி
கொல்லுலை கரித்துண் டுள்ளே திணித்தான்.
தன்னிடத் திருந்த தங்கம் எடுத்தான்
அத்தொடு வெள்ளியும் அவன்தேர்ந் தெடுத்தான்
திகழ்இலை யுதிர்ருதுச் செம்மறி அளவிலே
கடுங்குளிர் ருதுமுயல் கனத்தின் தரத்திலே
தங்கத்தை வெப்பத் ததனுள் திணித்து
வெள்ளியும் வைத்தான் வியனுலைக் களத்துள் 50
அடிமைகள் கொண்டு அங்கே செய்தனன்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள்
கையுறை எதுவும் கையிலில் லாமல்
எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்;
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன்
தங்கத் தோருருத் தான்பெறற் காக
வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய். 60
அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை
அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்;
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன்
அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன்
எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்
உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென
ஊடுரு வியெது ஊதுலை வருமென. 70
ஒருசெம் மறியா டுதித்தது உலையிலே
உலையிலே இருந்தது வந்ததூ டுருவி
தங்கத்தோ(ர்) ரோமம் தனிச்செப்(பில்) இ(ன்)னொன்று
வெள்ளியில் மூன்றாம் விதரோம மிருந்தது;
அதற்காய் ஏனையோர் அதிகளி கொண்டனர்
ஆயின்இல் மரினனோ அதாற்களி அடைந்திலன்.
கொல்லன்இல் மரினன் கூறின்ன் இவ்விதம்:
"ஓநாய் ஒன்றே உனையெதிர் பார்த்திடும்
எதிர்ப்பார்த் தேன்பொன் னில்வாழ் துணையை
இருந்தேன் காத்துநான் இணையொன்(று) வெள்ளியில்." 80
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
செம்மறி ஆட்டைச் சேர்த்தனன் நெருப்பில்
மேலும் கொஞ்சம் மிகுபொன் னிட்டான்
நிறையும் வரையும் நிறைத்தான் வெள்ளி
ஊதுதல் அடிமைகள் உதவியால் செய்தான்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள்
கையுறை எதுவும் கையிலில் லாமல்
எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்; 90
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன்
தங்கத் தோருருத் தான்பெறற் காக
வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய்.
அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை
அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்;
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன்
அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன் 100
எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்
உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென
ஊடுரு வியெது ஊதுலை வருமென.
உலையிருந் துதித்தது ஒருபரிக் குட்டி
ஊடுரு வியதது ஊதுலை யிருந்து
தங்கப் பிடர்மயிர் தலையோ வெள்ளி
காற்குளம் பனைத்தும் கவின்செம் பானவை;
அதற்காய் ஏனையோர் அதிகளிகொண்டனர்
ஆயின்இல் மரினனோ அதாற்களி அடைந்திலன். 110
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"ஓநாய் ஒன்றே உனையெதிர் பார்த்திடும்
எதிர்ப்பார்த் தேன்பொன் னில்வாழ் துணையை
இருந்தேன் காத்துநான் இணையொன்(று) வெள்ளியில்."
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
குதிரைக் குட்டியைக் கொடுகனல் தள்ளினன்
மேலும் கொஞ்சம் மிகுபொன் னிட்டான்
நிறையும் வரையும் நிறைத்தான் வெள்ளி
அடிமைகள் கொண்டு அங்கூதல் செய்தனன்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால். 120
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
அழுத்தலைச் செய்தனர் அங்கடை கூலிகள்
கையுறை எதுவும் கையிலில் லாமல்
எவ்வித முக்கா(டும்) இன்றியே தலையில்;
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
கொல்லுலைக் கருமமாய்க் கூடவே இருந்தனன்
தங்கத் தோருருத் தான்பெறற் காக
வெள்ளியில் மணமகள் வேட்டெடுப் பதற்காய்.
அடிமைகள் ஒழுங்காய் அங்கூத வில்லை
அழுத்தவும் இல்லை அக்கூ லிகளே 130
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உலைக்களம் தானே ஊதுதல் செய்தான்;
ஒருமுறை ஊதினான் இருமுறை ஊதினன்
அவ்விதம் மூன்றாம் முறையுமாய் ஊதினன்
எட்டி உலைக்களத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்
உலைக்களத் தென்ன உருக்கொ(ண்)டு வருமென
ஊடுரு வியெது ஊதுலை வருமென.
உதித்தனள் ஒருபெண் உலையினி லிருந்து
ஒருபொற் கூந்தலாள் ஊதுலை யிருந்து 140
தலையோ வெள்ளி தலைமயிர் தங்கம்
அவளது உடலோ அழகில் மிளிர்ந்தது;
அதற்காய் ஏனையோர் அதிதுய ருற்றனர்
ஆயின்இல் மரினனோ அடைந்திலன் துயரம்.
அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன்
தட்டியோர் பொன்னுருத் தானே யமைத்தனன்
தட்டியோய் வின்றித் தானிரா வமைத்தனன்
உயிர்த்திடப் பொழுதிலா துழைத்தனன் பகலும்;
பாவைக் கதன்பின் ப()தங்கள் செய்தனன்
செய்தனன் கால்கள் செய்தனன் கைகள் 150
ஆயினும் கால்களை அவள்மேல் உயர்த்திலள்
அணைக்கவு மில்லை அவள்கரம் திருப்பி.
தன்பெண் ணுக்குச் சமைத்தான் காதுகள்
ஆயினும் செவிகள் அவைகேட் டிலவே;
அவ்விதம் வாயை அழகாய்ப் பொருத்தினன்
உயிரோ(ட்)ட விழிகளும் உறுவெழில் வாயும்
வாயோ மொழியெதும் வழங்கவு மில்லை
இனிதாம் பார்வையும் இல்லை விழிகளில்.
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"இவளொரு சிறந்த ஏந்திழை யாவாள் 160
இவளாற் சொற்களை இயம்ப முடிந்தால்
நெஞ்சோடு நல்லதோர் நீள்நா விருந்தால்."
பின்னர் தனது பெண்ணைக் கொணர்ந்தனன்
அருமையாய்ச் செய்த அமளித் திரைக்குள்
மென்மையாய்ச் செய்த வியன்தலை யணையில்
பட்டினால் இயற்றிய படுக்கையின் மீது.
அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன்
வெப்ப மாக்கினன் விரும்பிக் குளிப்பறை
சவர்க்க()ரச் சவுனா தயாரா யாக்கினன்
இலைக்குச்(சித்) தூரிகை எடுத்தனன் தயாராய் 170
தொட்டி மூன்றினில் சுத்தநீ ரெடுத்தனன்
அந்தப் **பறவையை அங்கே கழுவினன்
நற்சுத்த மாக்கினன் நவவெண் **குருவியை
பொன்னின் களிம்புகள் போகக் கழுவினன்.
கொல்லனும் அதன்பின் குளித்தான் நிறைவாய்
தன்னைக் கழுவினான் தன்விருப் பளவும்
நீளமாய்ப் படுத்தான் நேரிழை அருகில்
அருமையாய்ச் செய்த அமளியின் திரைக்குள்
உருக்கிலே செய்த உயர்கூ டாரம்
இரும்பினால் செய்த இன்வலை யமைப்புள். 180
அங்கே கொல்லன் அவ்வில் மரினன்
அன்றே வந்த அம்முத லிரவில்
சிலபோர் வைகளைத் திண்ணமாய்க் கேட்டான்
தயாரா யாக்கினான் சட்டைப் போர்வைகள்
இரண்டோ மூன்றோ இருங்கர டித்தோல்
ஐந்தோ ஆறு அமளி விரிப்புகள்
படுப்பதற் காய்த்தன் பாவைத் துணையுடன்
தனது தங்கத் தனியுரு வத்துடன்.
அப்புறம் உண்மையில் வெப்பம் இருந்தது
போர்வைச் சட்டைப் புறமா யவனது; 190
ஆனால் இளம்பெண் அவளது பக்கம்
தங்கத் தமைந்த தன்னுருப் பக்கம்
குளிராய் வந்தது கூறுமப் பக்கம்
குளிரில் கடினமாய்க் கூட விறைத்தது
கடலின் உறைபனிக் கட்டியா யானது
திண்மைப் பாறையாய்ச் சேர்ந்திறு கிற்று.
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"இதுவோ எனக்கு ஏற்றது அல்ல;
வைனோ நாடு வனிதையைக் கொ(ண்)டுபோய்
அ(வ்)வைனா மொயினற் காதர வாக்கலாம் 200
அவன்முழங் காலில் ஆயுள் துணையாய்
அவனது அணைப்பில் அமையக் கோழியாய்.
வைனோ நாடு வனிதையைக் கொணர்ந்தான்
அங்ஙனம் அவ்விடம் அடைந்ததன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, முதிய வைனா மொயின!
இதோஉனக் கிங்கோர் ஏந்திழை யிருக்கிறாள்
உனைக்கவ னிக்கவோர் உயர்எழில் மங்கை
வீண்பேச் சுரைக்கும் வியன்வா யுளளலள்
அகலமா யிதழ்கள் அமைந்தவ ளல்லள்." 210
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உருவ மீதுதன் உறுவிழி வைத்தனன்
தங்கத்து மீதுதன் கண்கள் செலுத்தினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எதற்காய் இதனை என்னிடம் கொணர்ந்தாய்
பொன்னிலே புனைந்தவிப் புதுமா(ய) **வுருவை?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"வேறு எதற்கு? மிகுநலத் துக்கே!
ஆயுள்நாள் துணையாய் ஆகநின் முழங்கால்
ஒருகோழி யாக உன்அணைப் பினிலே." 220
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"ஓ,நற் கொல்லஎன் நேசச் சோதர!
தீக்குள் நீயே திணிப்பாய் நின்பெண்
எல்லா விதமாம் இயல்பொருள் செய்வாய்
அல்லது எடுத்து அகல்நா டிரஷ்ஷியா
ஜேர்மனி நாட்டுக்(கு) நீநின் உருவினை
பணமுளோர் போட்டி போடுவர் மணக்க
உயர்ந்தோர் பெண்ணுக்(கு) உறுபோர் புரிவர்;
எனது இனத்துக் கிதுஇணை யல்ல
எனக்கே கூட இதுபொருந் தாது 230
தங்கத் தானதோர் தகுபெண் எடுப்பது
ஆம்வெள்(ளி) உருவுக் கக்கறை கொள்வது."
அங்ஙனம் தடுத்தான் அ(வ்)வைனா மொயினன்
மணப்பெணைத் தவிர்த்தான் *அமைதிநீர் மனிதன்
வளரும் தலைமுறை மனிதரைத் தடுத்தான்
வளர்ந்து வருவோர் வழியினைத் தவிர்த்தான்
தங்கத் துக்காய்த் தலைவணங் குதலை
வெள்ளிக் காக வீண்தடு மாறலை;
இனிவரும் சொற்களில் இவ்விதம் மொழிந்தான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 240
"பாக்கிய மற்ற பையன்காள், வேண்டாம்!
இப்போ வளர்ந்துயர் இகல்வீ ரர்களே!
செல்வந்த ராகநீர் திகழ்ந்த போதிலே
அல்லது செல்வமற் றமைந்த போதிலும்
என்றுமே உங்கள் எவ்வாழ் நாளிலும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
தங்கத்தி லான தையலர் எடாதீர்
கொளாதீர் அக்கறை வெள்ளி உரு(வு)க்கு
தங்கத் தொளியோ தவழ்குளி ரானது
வெள்ளியின் மினுக்கம் மிகுசீ தளமாம்." 250
பாடல் 38 - வட நாட்டிலிருந்து இல்மரினனின் புதிய மணமகள்
TOP
அடிகள் 1-124 : இல்மரினன் வடநாட்டுக்குச் சென்று தனது முன்னாள்
மனைவியின் தங்கையைத் தனக்கு மணம் செய்து தரும்படி கேட்கிறான்.
ஆனால் அவனுக்கு ஓர் இகழ்ச்சியான மறுமொழியே கிடைக்கிறது.
அதனால் அவன் கோபமடைந்து பெண்ணைக் கவர்ந்து வீடு நோக்கிப்
புறப்படுகிறான்.
அடிகள் 125-286 : அந்தப் பெண் வழியில் இல்மரினனை அவமதித்துப்
பேசியதால் அவன் சினம் கொண்டு அப்பெண்ணைக் கடற்பறவை
ஆகும்படி சபித்துப் பாடுகிறான்.
அடிகள் 287-328 : இல்மரினன் வீட்டுக்குத் திரும்பி வந்து சம்போவைச்
செய்து கொடுத்ததால் வடநாட்டு மக்கள் எவ்வளவு மகிழ்வுடன்
வாழ்கிறார்கள் என்பதையும் மணப்பெண் பெறும் பொருட்டுத் தான்
வடநாட்டுக்குச் சென்று தோல்வி அடைந்ததையும் வைனாமொயினனுக்குக்
கூறுகிறான்.
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தான்தொலை எறிந்தனன் தங்கப் பதுமையை
வெள்ளியி லான வியன்பெண் உருவை
அம்பரிக் குட்டிக் கணிகள் சூட்டினன்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
அவனே ஏறி அமர்ந்தனன் வண்டியில்
வண்டியில் ஏறி வசதியா யமர்ந்தனன்;
எடுத்தனன் முடிவு எழுந்தே ஏகிட
அத்துடன் எண்ணம் அவனும் கொண்டனன் 10
வடநா டேகி வாஞ்சையாய்க் கேட்க
வடபுலம் வாழும் வனிதைமற் றவளை.
ஒருநாட் பயணம் ஒழுங்காய் நடந்தது
இருநாட் பயணம் இனிதாய் முடிந்தது
மூன்றா வதுநாள் முன்வரு போதினில்
வந்து சேர்ந்தனன் வடபால் முற்றம்.
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
முற்றப் பரப்பினில் முன்தான் வந்தாள்
அங்கு வந்துரை யாடத் தொடங்கினள்
அடுத்துத் திரும்பினள் அவள்வின வற்காய் 20
எங்ஙனம் தன்மகள் இருக்கிறாள் என்று
இனியவள் எவ்விதம் இருக்கிறாள் என்று
மணாளன் வீட்டில் மருமக ளாக
மாமியார் இல்லில் மனைவியே யாக.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்றன் மாமியே, இப்போ(து) வேண்டாம்!
வேண்டாம் அதுசார் வினவுதல் இப்போ(து) 30
எங்ஙனம் வாழ்கிறாள் என்பதை உன்மகள்
எவ்விதம் இருக்கிறாள் என்பதை உன்மகள்!
மரணம் ஏலவே வாய்க்கொண்ட தவளை
வந்து சேர்ந்தது வன்கொடும் முடிவு
இருக்கிறாள் புவியுள் என்சிறு பழமவள்
பசும்புற் றரைக்குளே படுப்பளென் அழகி
கரும்புரு வத்தள்புற் களின்நடு வினிலே
வெள்ளி நிகர்த்தவள் வைக்கோல் மத்தியில்.
அடுத்தஉன் மகளுக் காகநான் வந்துளேன்
உன்இளம் பெண்ணுக்(கு) ஓடியே வந்தேன்: 40
அன்புஎன் மாமியே, அவளைநீ தருவாய்,
அடுத்த உன்மகளை அனுப்புவாய் என்னொடு,
மனைவிஎன் முந்தியள் வாழ்ந்தஅவ் விடத்தே
அவளுடைச் சோதரி அமர்ந்தஅவ் விடத்தே."
லொவ்ஹி என்பவள் வடபுலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதிர்ஷ்டம் அற்றநான் அடாச்செயல் செய்தேன்
பாக்கியம் அற்றநான் பழிபெரி தாற்றினேன்
வாக்களித் தென்மகள் வழங்கிய நேரம்நான்
தவமகள் உன்னிடம் தந்திட்ட போதிலே 50
உறங்கவே தந்தேன் உளஇளம் வயதிலே
அழகுசெங் கதுப்பினாள் அழியவே விட்டேன்:
ஓநாய் வாய்க்குள் ஒப்படைத் தாற்போல்
கத்தும் கொடிய கரடியின் அலகினுள்.
இப்போ நான்தரேன் இரண்டாம் மகளை
அடுத்த மகளையும் அனுப்புதற் கில்லைநான்
உன்றன் குப்பை ஒட்டடை பெருக்க
சுரண்டி எடுத்திடத் துகள்கள்ஒட் டியதை;
அதனிலும் என்மகள் அவளைக் கொடுக்கலாம்
என்றன் உரமுறும் எழில்பிள்ளை யிடலாம் 60
இரைந்து பாயுமோர் இகல்நீர் வீழ்ச்சியில்
புகைந்து சுழிக்குமோர் புகுநீர்ச் சுழியில்
மரண உலகின் **வளமீன் வாய்க்குள்
துவோனிக்கோ லாச்சித் தொல்மீன் பற்களில்."
அதன்பின் கொல்லன் அவ்வில் மரினன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கி
தனது சுருண்ட தலையினை யசைத்தான்;
துணிவாய்த் தானே தொடர்ந்தில் புகுந்து
கூரையின் கீழே கொண்டே நன்நடை 70
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்னிடம் வருவாய் இப்போ பெண்ணே!
உனது சகோதரிக் குரிய இடத்தே
மனைவிஎன் முந்தியள் வாழ்ந்த இடத்தே
ரொட்டி- தேன் சேர்ந்ததைச் சுட்டே யெடுக்க
'பீர்'ப்பா னத்தைப் பின்வடித் தெடுக்க!"
பெருநிலத் திருந்தொரு பிள்ளைபா டிற்று
பாடிய தோடு பகர்ந்தது இவ்விதம்:
"எம்கோட்(டை) யிருந்துபோ, எதும்பய னற்றவா!
அந்நியோய், யி(வ்)வாயி லிருந்தே யகல்வாய்! 80
இக்கோட்(டை) பகுதியொன் றிடித்தே முடித்தனை
கோட்டையைச் சிறிதே கொடிதா யழித்தனை
முன்னொரு முறைநீ வந்தநே ரத்தில்
அகல்இக் கதவுநீ அடைந்தநே ரத்தில்.
பெண்நீ, சகோதரி, பேசுதல் கேட்பாய்!
மணமகன் கண்டு மயங்கிட வேண்டாம்
மாப்பிளை வாயில் வருமொழி கேட்டு
அவனது பாத அழகினைப் பார்த்து!
மாப்பிளை முரசு ஓனாய் முரசு
நரியின் வளைந்த நகங்கள் பையிலே 90
கக்கத் திருப்பவை கரடியின் நகங்கள்
குருதியுண் போரின் கொலைவாள் இடுப்பில்
அதனால் சீவுவார் அழகிய உன்தலை
முதுகை வெட்டி முதற்கிழித் திடுவார்."
பெண்ணவள் தானே பேசினள் இவ்விதம்
இல்மரி னன்எனும் கொல்லன் தனக்கு:
"புறப்பட் டுன்னுடன் வரற்குநா னில்லை
அடாச்சிறு மதியரில் அக்கறை யெனக்கிலை;
கொடிதுமுன் முடித்த கோதையைக் கொன்றனை
அழகென் சோதரி அழித்தே மாய்த்தனை 100
அங்ஙனம் என்னையும் அழிக்க முயலுவாய்
என்னையும் அவ்விதம் என்றுமே மாய்க்கலாம்;
பாரப்பா இந்தப் பாவையும் இப்போ(து)
எதிர்பார்த் திருக்கிறாள் இனியகீர்த் தியனை
அழகார் உடலுறும் அருந்தரச் சோடியை
சுந்தரன் ஒருத்தனின் வண்டியை நிறைத்திட
மிகமிகச் சிறப்பாம் விரும்பிட மடைந்திட
இகமதில் மிகஉயர் இருப்பிடம் சேர்ந்திட
அல்லஓர் கொல்லனின் அக்கரி இல்லம்
மூடன் ஒருவனின் மூள்அன லிடமல." 110
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவினழி வில்லாக் கைவினைக் கலைஞன்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்;
அக்கணத் துடனே அரிவையைப் பற்றினன்
இருகரம் வளைத்து இறுகப் பிடித்தனன்
பனிப்புயல் போல பாய்ந்தனன் வெளியே
சறுக்கு வண்டியில் மிடுக்கோ டேறினன்
அரிவையை வண்டி அதனுள் திணித்தனன்
வனிதையைத் திணித்து வண்டியுள் அடைத்தனன் 120
அவனே புறப்பட லாயின னுடனடி
அவன்புறப் படற்கு ஆயத்த மாயினன்
பரிக்கடி வாளத் தொருகை இருந்தது
மறுகை மங்கையின் மார்புக் காம்பினில்.
காரிகை அழுதனள் கத்திப் புலம்பினள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
**"சிறுபழத் துக்குச் சென்றேன் சதுப்பு
**சேம்பங் கிழங்குக் கேகினன் சேற்றிடை
தொலைவே னங்குநான் துடிக்குமோர் கோழியாய்
அகாலத் திறப்பேன் அங்கொரு பறவையாய். 130
கொல்லஇல் மரின, சொல்லும் மொழிகேள்!
இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
வண்டியை உதைப்பேன் துண்டுதுண் டாக
சறுக்குவண் டியினை நொருக்குவேன் துகளாய்
என்முழங் காலால் இடிப்பேன் பொடிப்பட
காலால் அடித்துக் கடுந்துக ளாக்குவேன்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அதனால் தான்கொல் லனின்ரதப் புறங்கள்
இரும்பைக் கொண்டு இயற்றப் பட்டது 140
தாங்கி உதைகளைத் தப்புதற் காக
புத்தெழிற் கன்னியின் போரினைத் தாங்க."
காரிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு **வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
ஆழிமீ னாயெனை யாக்கிடப் பாடுவேன்
ஆழவெண் மீனாய் அலையில்மா றிடுவேன்." 150
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கோலாச்சி மீனாய்க் குமரிபின் தொடர்வேன்."
காரிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை 160
அடவியுட் சென்று அங்கே மறைவேன்
**கீரியாய்ப் பாறைக் கீழ்க்குழி புகுவேன்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
**நீர்நாய் வடிவாய் நின்பின் தொடர்வேன்."
காரிகை அப்போ கத்திப் புலம்பினள்
அம்செப்பு வாரணி அவள்முறை யிட்டனள்
விரல்களைப் பின்னித் திருப்பி முறுக்கினள்
உடன்தன் கரங்களை உதறிப் பார்த்தனள் 170
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இருப்பையேல் விடுவியா திங்கிருந் தென்னை
மேகப்புள் ளாய் உயரமேற் பறப்பேன்
மேகப் பின்புறம் மிகமறைந் திருப்பேன்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அவ்விடம் உன்னால் அடைந்திட முடியா
கழுகுரு வெடுத்துக் கன்னிப்பின் தொடர்வேன்."
அதன்பின் பயணம் அமைந்தது சிறுதொலை
பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது 180
அப்போ குதிரை நிமித்திற் றதன்செவி
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள்
ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள்
இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்:
"இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?"
கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்:
"இப்போ குறுக்காய் ஏகிய ததுமுயல்."
பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள்
பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள் 190
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான்
நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால்
சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால்
விரைமுயல் வழித்தட மீதிருந் திருந்தால்
**'வளைந்தகால்' சுவட்டின் வயமிருந் திருந்தால்
மணஞ்செய வருமிவன் வண்டியி லிலாமல்
மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல்
ஏனெனில் முயல்ரோமம் இதில்மிக நன்று
வியன்முயல் வாயோ மேலும் சிறப்பு." 200
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி
தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்;
பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது
குதிரை மீண்டும் செவிநிமிர்த் திற்று
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள்
ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள்
இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்:
"இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?" 210
கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்:
"இப்போ குறுக்காய் ஏகிய ததுநரி."
பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள்
பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான்
நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால்
சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால்
ஒருநரி(யின்) வண்டியில் சவாரிசெய் திருந்தால்
இருந்தால் ஓய்விலா விரைந்திடும் வண்டி 220
மணஞ்செய வந்தவன் வண்டியி லிலாமல்
மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல்
ஏனெனில் **ஓரியின் ரோமம்மிக் குகந்தது
நரியதன் வாயோ நனிமேற் சிறப்பாம்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி
தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்;
பாதையில் கொஞ்சம் பகர்தொலை கழிந்தது
குதிரை மீண்டும் செவிநிமிர்த் திற்று
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின. 230
ஒண்டொடி தலையை உயர்த்திப் பார்த்தனள்
ஒருகா லடித்தடம் உறுபனிக் கண்டனள்
இவ்வா றுசாவினள் இவ்வா றியம்பினள்:
"இப்போ தோடிய தெதுவாம் குறுக்காய்?"
கொல்லனில் மரினன் கூறினன் இவ்விதம்:
"இப்போ குறுக்காய் ஏகிய தோநாய்."
பெருமபாக் கியவதி பெருமூச் செறிந்தனள்
பெருமூச் செறிந்தனள் பெரிதும் சோர்ந்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஐயகோ, எளியதோர் பிறப்பா யினன்நான் 240
நன்றிருந் திருக்கும் நானிவ்வா றிருந்தால்
சிறப்பிருந் திருக்கும் செயலிவ்வா றிந்தால்
இளைத்தோ டோ நாய் வழித்தடத் திருந்தால்
**'நீள்முக'த் தடிசுவட் டிலேயிருந் திருந்தால்
மணஞ்செய வந்தவன் வண்டியி லிலாமல்
மிகச்சுருங் குமுகன் மெத்தையி லிலாமல்
ஏனெனில் ஓநாய் ரோமம்மிக் குகந்தது
ஓநாய் வாயோ உயர்மேற் சிறப்பாம்."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
தன்இதழ் கடித்துத் தலையைத் திருப்பி 250
தொடர்ந்து வண்டியைத் துடிப்பாய்ச் செலுத்தினன்;
இரவில் புதிதாம் எழிலூ ரடைந்தனன்.
வழிச்செல வதனில் வந்த களைப்பினால்
அங்கே கொல்லன் அமைதியாய்த் துயின்றான்
பெண்ணையின் னொருவன் **புன்னகை யூட்டினன்
அவளது கொழுநன் அறத்துயில் நேரம்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
காலைநல் நேரம் கண்விழிப் புற்றதும்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பி
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்; 260
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்
நினைத்து அவனே உரைத்தான் இப்படி:
"இப்போ தேநான் இசைக்கத் தொடங்கவா?
இத்தகை மணப்பெ(ண்)ணை இப்போ பாடவா
வனத்துக் காக வனத்ததன் சொந்தமாய்
அல்லது புனலுக் காய்ப்புனற் சொந்தமாய்?
வனத்தின் சொந்தமாய் வனிதையைப் பாடேன்
ஏனெனில் வனத்துக் கின்னல்உண் டாகும்,
புனலதன் சொந்தமாய்ப் பூவையைப் பாடேன்
புனலிலே மீனினம் போகும் ஒதுங்கியே; 270
வெவ்வாள் அலகதால் விரைந்தே வீழ்த்துவேன்
அரிந்தென் வாளால் அழித்தே விடுவேன்."
வாளும் மனிதனின் வார்த்தையை அறிந்தது
நாயகன் சொல்லை நன்றாய் உணர்ந்தது
உரைத்தது ஒருசொல் உரைத்தது இவ்விதம்:
"என்னைப் படைத்தது இதற்கா யல்ல
மாதரைக் கொன்று மாய்ப்பதற் கல்ல
எளிய பிறவியை ஒழிப்பதற் கல்ல."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
இப்போ துண்மையாய் எழுந்தான் பாட 280
கோபம் கொண்டு கூறத் தொடங்கினன்
பாடினன் **கடலின் பறவையாய்த் தன்பெண்ணை
உயர்ந்த பாறையில் ஓய்ந்துபோய்த் தங்க
நீர்க்கற் பாறையில் நின்றுகீச் சிட்டிட
கடல்முனைப் பரப்பில் கத்தியே திரிய
காற்றின் மோதலில் கலங்கித் திரிய.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
தனது வண்டியில் தானே ஏறி
வண்டியைச் செலுத்திச் சென்றனன் தொடர்ந்து
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்; 290
தன்சொந்த நாடு தான்பய ணித்தனன்
தானே பழகிய நாட்டைவந் தடைந்தனன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சந்திக்க வந்தனன் தான்பா தையின்முன்
வந்ததும் இவ்விதம் வார்த்தை தொடங்கினன்:
"சகோதர, கொல்ல தகைஇல் மரின!
உள்ளனை எதற்கு உறுதுயர் மனத்துடன்
உயர்ந்த தொப்பிஏன் உற்றது சரிவாய்
வடபால் நிலத்தி லிருந்தே வருகையில்
வடபால் நிலத்தவர் வாழ்வெலா மெப்படி?" 300
கொல்லன்இல் மரினன் கூறினன் இப்படி:
"எத்தகு வாழ்வு இருப்பது வடபுலம்
அங்கே சம்போ அரைக்கிற தென்றும்
சுடரும் மூடியும் சுழன்றே வருவதாம்
உண்பதற் காக ஒருநாள் அரைக்கும்
விற்பனைக் காக மறுநாள் அரைக்கும்
சேமிக்க மனையில் திகழ்மூன் றாம்நாள்.
நானே சொன்னதை நவில்வேன் திரும்ப
சொன்னதை மீண்டும் சொல்வேன் ஒருமுறை
எத்தகு வாழ்வு இருப்பது வடபுலம் 310
சம்போ அங்கே தானிருப் பதனால்!
அங்கே உழுவார் அங்கே விதைப்பார்
வளரும் அனைத்து வகைகளும் உளவே
என்றென்று மங்கே இருப்பது அதிர்ஷ்டம்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சகோதர, கொல்ல தகைஇல் மரின!
எங்கே விட்டனை இளம்உன் மனைவியை
எவ்விடத் தில்உன் எழிலார் மணப்பெண்
வெறும்கை யுடனே மீண்டிங் குற்றனை
வந்து சேர்ந்தனை வனிதையில் லாமல்?" 320
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அந்தப் பெண்ணை அப்படிப் பாடினேன்
கடலின் பாறையில் ஒருகடற் பறவையாய்;
கத்தித் திரிகிறாள் கடற்பு(ள்)ளாய் இப்போ
கூவித் திரிகிறாள் குரைகடற் பறவையாய்
நீர்க்கற் பாறையில் கீச்சிட்ட டலைகிறாள்
பாறைக் குன்றில் படர்கிறாள் அலறி."
பாடல் 39 - வடநாட்டின் மீது படையெடுப்பு
TOP
அடிகள் 1-330 : வடநாட்டுக்குச் சென்று சம்போவை அபகரித்துக்
கொண்டு வரத் தன்னுடன் வருமாறு வைனாமொயினன் இல்மரினனைக்
கேட்கிறான். இல்மரினன் சம்மதித்ததால் படகில் வடநாட்டுக்குப்
புறப்படுகின்றனர்.
அடிகள் 331- 426 : வழியில் சந்தித்த லெம்மின்கைனன் அந்த
இருவரது பயண நோக்கத்தை அறிந்து தானும் அவர்களுடன்
செல்ல முன் வருகிறான். அவனை அவர்கள் ஏற்றுக் கொண்டதால்
மூன்று தோழர்களும் பயணத்தைத் தொடருகின்றனர்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓகோ, கொல்ல உயர்இல் மரின!
வடநாட் டுக்குப் புறபட் டேகுவோம்
நல்லசம் போவை நாமே பெறற்கு
பிரக()ச மூடியைப் பெரிதும் பார்க்க!"
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"சம்போ என்பதை நாம்பெறற் கில்லை
சுடரும் மூடியும் கொணருதற் கில்லை 10
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
செறிபுகார் நாடாம் சரியொலா விருந்து;
எடுத்தெழிற் சம்போ ஏகவும் பட்டது
ஒளிரும் மூடியும் உடன்போ யடைந்தது
வடநிலக் குன்றின் மணிமுக டதன்மேல்
செப்பினா லமைந்த செம்மலைக் குள்ளே
பூட்டினள் ஒன்பது புட்டுகள் போட்டு;
இறங்கின ததைச்சூழ்ந்(து) இகல்வல் வேர்கள்
ஒன்பது மடங்கிலோர் **ஆறடி யாழம்;
அன்னையாம் பூமியில் அதிலொன் றிறங்க 20
மற்றவேர் நீர்க்கரை வழிமருங் கிறங்க
மூ(ன்றா)ம்வேர் சென்றது முதுவில் மலைக்குள்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சோதரக் கொல்ல, துணைச்சோ தரனே!
வடபுல நாடு புறப்பட் டேகுவோம்
அச்சம் போவை அடைதற் கேநாம்
கப்பல் ஒன்றைக் கட்டுவோம் பெரிதாய்
எடுத்துவந் திடலாம் அதிற்சம் போவை
ஒளிரும் மூடியும் உடனே கொணரலாம்
வடநிலக் குன்றதன் மணிமுகட் டிருந்து 30
செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து
பூட்டிய ஒன்பது பூட்டினி லிருந்து."
கொல்லன்இல் மரினன் கூறினன் இவ்விதம்:
"படர்தரைப் பயணம் பாதுகாப் பானது
பிசாசுபோ கட்டும் பெருங்கடல் மீது
இகல்அகல் ஆழியில் இறப்புவந் திடட்டும்!
சுழற்காற் றங்கே சுற்றிய டிக்கும்
புயற்காற் றங்கே புறமெடுத் தெறியும்
விரல்கள் துடுப்பை மிகவலிந் திழுக்கும்
தொடும்உள் ளங்கை **தண்டைப் பிடிக்கும்." 40
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"படர்தரைப் பயணம் பாதுகாப் பானது
பாதுகாப் பானதும் படுகடி தானதும்
அத்துடன் சுற்றிய அதிதொலைப் பயணம்;
மகிழ்ச்சியைத் தருவது வலிக்குநீர்த் தோணி
அசைந்து மரக்கலம் அலைமிதந் தகல்வது
பரந்தநீர்ப் பரப்பை **பளீச்சிடச் செய்வது
தெளிந்தநீர்க் கடலில் செலுத்துதல் கப்பல்:
காற்றுப் படகுதா லாட்டிச் செல்லும்
அலைகள் தோணியை அசைத்துச் செலுத்தும் 50
மேல்காற் றூர்ந்து மெதுவாய் நகர்த்த
தென்காற் றதனைச் செலுத்தும் முன்னே
அதுவும் அவ்விதம் அமைவத னாலே
உண்மையில் நீகட லோடியே யல்ல
ஆதலால் தரைவழி யாகலாம் பயணம்
நீர்க்கரைப் பக்கமாய்ப் போராடிச் செல்லலாம்.
எனக்கொரு புதுவாள் இனிதடித் தெடுப்பாய்
தீப்பொறி யலகு திகழ்வாள் செய்வாய்
வேட்டை நாய்களை ஓட்டுவேன் அதனால்
விரட்டி அடிப்பேன் வியன்வட புலவினம் 60
சம்போ பெறற்குச் சாரும் சமயம்
குளிர்ந்தவக் கிராமம் குறுகும் பொழுது
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
செறிபுகார் நாடாம் சரியொலா விடத்து."
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன்
இரும்பைத் திணித்தான் விரும்பி நெருப்பில்
கொஞ்ச உருக்நக் கொடுங்கன லுள்ளே
கைப்பிடி யளவு கனகமும் போட்டான்
விரிகை யளவு வெள்ளியும் சேர்த்தான் 70
ஊதுதல் அடிமைகள் உதவியால் செய்தான்
அழுத்தலைச் செய்தான் அக்கூ லிகளால்.
அடிமைகள் ஊதினர் அடிமைகள் விசிறினர்
கூலிக்கு வந்தோர் குறைவிலா தழுத்தினர்:
இரும்பும் கூழாய் இளகியே வந்தது
உருக்கும் களியாய் உருகியே வந்தது
வெள்ளியும் நீராய் மின்னலா யிற்று
தங்கம் அலையாய்த் தான்கொதித் திட்டது.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
லகவின் அழிவில்லாக் கைவினைக் கலைஞன் 80
எட்டி உலைகளத் தின்உட் பார்த்தான்
கொல்லுலை விளிம்பைக் கூர்ந்தவன் பார்த்தான்:
வாளொன்று பிறந்து வந்தததைக் கண்டனன்
உருவாகி வந்ததை உயர்பொன் முனையுடன்.
அந்தப் பொருளை அனலிருந் தெடுத்தான்
நல்லஅப் பொருளை நனிகரத் தெடுத்தான்
பட்டடைக் **கற்குப் படும்உலை யிருந்து
சம்மட்டி **கட்குத் தகுசுத்தி யற்கு
விரும்பிய வாறே வெளிர்வாள் தட்டினன்
அதிமிகச் சிறந்த அலகுறும் வாளினை 90
தங்கத்தி னாலே தகுமுருப் பெற்றனன்
அலங்க()ரம் வெள்ளி யதனால் செய்தனன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அவ்விடம் வந்தனன் அதனைப் பார்க்க
தீப்பொறி அலகு திகழ்வாள் எடுத்தனன்
தனது வலக்கரம் தானே பெற்றனன்
அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மலர்ந்தஇவ் வாளொரு மனிதனுக் கேற்றதா
தரித்திருப் போற்குத் தகுந்ததா இவ்வாள்?" 100
ஆம்,ஒரு மனிதனுக் கதியுகப் பிவ்வாள்
தரித்திரிப் போற்குத் தகுந்தது இவ்வாள்
ஏனெனில் அதன்முனை எழில்நிலாத் **திகழ்ந்தது
வாளின் பக்கம் வயங்கினன் கதிரோன்
வியன்கைப் பிடியிலே விண்மீன் மின்னின
அலகினில் பரியொன் றழகாய்க் கனைத்தது
குனிந் தொருபுனை குமிழ்கத் திற்று
உறையில் நாய்நின் றுரக்கக் குரைத்தது.
அதன்பின் சுழற்றினன் அவனது வாளை
இரும்பினா லான இகல்மலை வெடிப்பில் 110
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இப்போ இங்கே இந்தநல் வாளினால்
வெற்பையும் கூட வெட்டிப் பிளப்பேன்
பாறையைக் கிழித்துப் பகுப்பிரண் டாக்குவேன்."
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எங்ஙனம் நானும் இலாதோன் பாக்கியம்
எதனால் ஏழை என்னைக் காப்பேன்
கவச மிடுவேன் கவின்வா ரமைப்பேன்
அகல்நிலம் நீரின் அபாயத் திருந்து? 120
கவச மிட்டே கடிதெனை மூடவா
இரும்புச் சட்டையை ஏற்றணிந் திடவா
உருக்குப் பட்டியால் உடன்மூ டிடவா?
கவச(த்தில்) மனிதன் கடினமாய் இருப்பான்
இரும்புச் சட்டை ஏற்றது அதனிலும்
உருக்குப் பட்டி உறுவலு அதிகம்."
புறப்படப் போகும் பொழுதும் வந்தது
வெளிப்புறப் பாட்டு வேளையும் வந்தது
முதிய வைனா மொயினன் முதல்வன்
அடுத்தவன் கொல்லன் அவன்இல் மரினன் 130
ஒருபரி பெறவே உடன்புறப் பட்டனர்
சணல்பிடர்ப் **புரவியைத் தாமே தேடினர்
ஒருவரு டப்பரிக்(குக்) கடிவளம் பட்டியில்
துரகத் தணிகலன் தோள்களில் இருந்தன
இருவரும் தேடினர் இகல்பரி ஒன்றினை
தளிர்மரத் தூடாய்த் தலையினைப் பார்த்தனர்
எங்ஙணும் கவனமாய் ஏகியே தேடினர்
நீல நிறத்து நீள்வனம் சுற்றியே;
பொழிலொன் றினிலே புரவியைக் கண்டனர்
**தாருவின் நடுவினில் சணற்பிடர்ப் புரவியை. 140
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அடுத்தவன் கொல்லன் அவ்வில் மரினன்
அழுத்திப் புட்டினர் அம்பொற் றலையணி
ஒருவரு டப்பரிக் குறுவாய்க் கடிவளம்
அதன்பின் பயணம் அவர்கள் தொடங்கினர்
நீர்க்கரை யோரமாய் நிகர்இரு மனிதரும்
கேட்டதோர் அழுகுரல் நீர்க் கரையிருந்து
படகுத் துறைமுறைப் பாடது கேட்டது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 150
"அங்கொரு அரிவை அழுதுகொண் டிருக்கிறாள்
கோழியொன் றழுது குமைகிற தங்கே
எதுவெனப் பார்க்கவங் கேகிட லாமா
அருகிலே சென்று ஆராய லாமா?"
அவனே அருகில் அடிவைத் தேகினன்
பக்கம் சென்றனன் பார்ப்பதற் காக;
அழுதுகொண் டிருப்பது அரிவையு மல்ல
குரல்கொடு புலம்புதல் கோழியு மல்ல;
அதுஒரு தோணி அழுதுகொண் டிருந்தது
முன்ஒரு படகு முறைப்பா டிட்டது. 160
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
படகின் பக்கம் படர்ந்ததும் கேட்டான்:
"எதற்கு அழுகை இரும்மரப் படகே
**உகைமிண்டுப் படகே உன்முறைப் பாடேன்
பலகையால் படைக்கப் பட்டதால் அழுகையா
உகைமிண் டுரமாய் உற்றதால் அழுகையா?"
மரத்தின் படகு வருபதில் சொன்னது
உகைமிண்டுப் படகு உரைத்தது இவ்விதம்:
"படகின் விருப்பம் பாய்புனற் செல்வது
உருகு**தார் புசிய உருளையி லிருந்து 170
காரிகை விரும்புவள் கணவனின் வீடே
பிறந்த இல்லமே உயர்ந்ததா யிருப்பினும்;
ஏழைப் படகுநான் அழுகிறேன் அதற்காய்
துயர்ப்பட்ட தோணி முறைப்படு கின்றேன்
அழுகிறேன் புனல்எனைச் செலுத்துவோற் காக
அழுகிறேன் ஓட்டுவோற் காய்அலை களில்எனை.
எனைக்கட் டியபொழு தியம்பப் பட்டது
எனைச்செய்த போது இசைக்கப் பட்டது
போர்க்கப்ப லொன்று ஆக்கப் படு(கிற)தென
அமர்க்கப்ப லொன்று அமைக்கப் படு(கிற)தென 180
என்னை நிறைத்து இரும்பொருள் கொணர
நிறையத் திரவியம் நிரப்பி வரவென;
போருக்கு நானோ போனதே யில்லை
பயணித்து நான்பொருள் பலகொணர்ந் ததுமிலை.
தரங்கெட்ட வேறு சரியிலாப் படகெலாம்
என்றுமே போருக் கேகின் றனவே
அமருக்கு நகர்ந்து அவைசெல் கின்றன,
பயணிப்பு மும்முறை படர்கோ டையிலே
நிறையப் பணத்தை நிரப்பிக் கொணர
நிறையத் திரவியம் நிரப்பிக் கொணர; 190
நானோ திறமையாய் நன்கமை படகு
பலகையோர் நூறினால் படைத்தநற் படகு
கழிவுத் துண்டில்நான் **உழுத்துப் போகிறேன்
நிதம்செதுக் கியவிடம் நீண்டே கிடக்கிறேன்;
மிகக் கேவலமாய் விளைநிலப் புழுக்கள்
வளையப் பட்டியில் வசித்திடு கின்றன
காற்றினிற் பறக்கும் கடுங்கொடும் பறவைகள்
கூடுபாய் மரத்தில் கொண்டமைக் கின்றன
தனிவனம் வாழும் தவளைகள் கூட
தொடுமுன் அணியத்தில் துள்ளித் திரிவன; 200
இருந்திருக் கும்இரு மடங்கிதில் நன்றாய்
இரண்டு மூன்று மடங்குநன் றாகும்
மலையில்ஊ சியிலை மரமா யிருந்தால்
தேவதா ராகச் செழும்புற் றரையில்
ஒருஅணில் ஓடி உலாவரக் கிளைகளில்
குட்டிநாய் தரையில் சுற்றியே வரற்கு."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அருமரப் படகே அழுதிடல் வேண்டாம்
உகைமிண்டுப் படகே உழன் றரற்றாதே 210
போர்க்கு விரைவில் போவாய் பயணம்
நகர்ந்து சமர்க்கு நன்குசெல் வாய்நீ.
இறைவனின் படைப்பாய் இருந்தால் தோணிநீ,
ஆண்டவன் படைப்பாய் அளிப்பவர் கொடையாய்,
முன்னணி யத்தை முகிழ்புனல் செலுத்து
பக்கத்தை அலையின் பக்கமாய் திருப்பு
கைமுட்டி எதுவும் கடிதுனைத் தொடாமல்
கரங்கள் எதுவும் கடந்துனிற் படாமல்
வன்தோள் எதுவும் வழிகாட் டாமல்
படுபுயம் எதையும் பயன்படுத் தாமல்." 220
மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது:
"என்வேறு பெரிய இனத்தால் முடியா
என்சகோ தரப்பட கெதாலும் முடியா
தள்ளப் படாமலே தண்புனற் செல்வது
அனுப்பப் படாமலே அலைகளிற் போவது
கைமுட்டி கொண்டு கடிது தொடாமல்
திகழ்புயம் கொண்டு திருப்பப் படாமல்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"தண்புனல் நான்உனைத் தள்ளியே விட்டால் 230
மகிழ்ந்தோட முடியுமா வலிக்கப் படாமலே
இடும்துடுப் புதவி எதுவும் இன்றியே
துளியும் தண்டு வலித்தலே யின்றி
பாயிலே காற்றுப் படியா திருக்கையில்?"
மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது:
"என்வேறு பெரிய இனத்தால் முடியா
எந்தன் குழுவெவ ராலும் முடியா
விரல்வலிக் காமல் விரைந்ததே யில்லை
இடுதுடுப் புதவி எதுவும் இன்றியே 240
துளியும் தண்டு வலித்தலே யின்றி
பாயிலே காற்றுப் படியா திருக்கையில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மகிழ்ந்தோட முடியுமா வலிக்கப் பட்டால்
உறுதுடுப் புதவியும் உனக்கே யிருந்தால்
தொடர்ந்து தண்டு வலித்தல்**நிற் கிருந்தால்
பாயிலே காற்றுப் படிந்துகொண் டிருந்தால்?"
மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: 250
"நிச்சயம் எனது மற்ற இனத்தவர்
எனது சகோதர எழிற்பட கெல்லாம்
உறுவிரல் வலிக்கையில் ஓடிச் சென்றன
இடுத்துடுப் புதவிகள் இருந்த போதிலே
தண்டு வலித்தல் தான்தொடர்ந் திருக்கையில்
பாயிலே காற்றுப் படிந்துகொண் டிருக்கையில்."
முதிய வைனா மொயினன் அதன்பின்
வருபரி தரையில் மணலில் விட்டனன்
கழுத்துப் பட்டியை கட்டினன் மரத்தில்
கடிவா ளத்தைக் கட்டினன் கிளையில் 260
தண்ணீ ருக்குள் தள்ளினன் தோணி
படரலை மிதந்த படகைப் பாடினன்
பெருமரப் படகைப் பின்னர் கேட்டனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"படுவலி வளையப் பட்டியின் படகே!
உரமாம் உகைமிண் டுயர்மரப் படகே!
பொருள்நிறைத் தேகப் பொருத்தமா யிருப்பையா
பார்வைக்கு நன்றாய்ப் படுவது போலவே?"
மரத்தின் படகு மறுமொழி சொன்னது
உகைமிண்டுப் படகு உத்தரம் சொன்னது: 270
"ஆமப்பா பொருள்பெயற் காவேன் நன்றுநான்
விரிகீழ்த் தளத்திடம் விசாலமா யுள்ளது
இருந்தே வலிக்கலாம் இகல்சத நாயகர்
ஆயிரம் பேரும் அமர்ந்தே செல்லலாம்."
முதிய வைனா மொயினன் அதன்பின்
பாடல்கள் அமைதியாய்ப் பாடத் தொடங்கினான்,
பாடினன் முதலிலோர் பக்கமே நிறைய
சிறந்த தலைகொள் சீர்மண வாளரை,
சிறந்த சிரங்களும் சீருரக் கரங்களும்
உயர்கா லணியுறும் உயர்வாம் மக்களை; 280
பாடினான் பின்மறு பக்கமும் நிறைய
ஈய அணிகொள் எழில்தலைப் பெண்களை,
ஈய அணித்தலை, எழிற்செப்பு **வார்கள்,
பொன் விரலுடைய புத்தெழிற் பெண்களை.
மேலும் பாடினன் வைனா மொயினன்
குறுகிய புறமெலாம் நிறையவே மக்களை
அவர்கள் அனைவரும் அதிமுது மாந்தராம்
அங்கே வாழ்நாள் அனைத்திலு மிருக்க
இருந்தது கொஞ்ச இடமே அதன்பின்
வந்த முதன்மை வளஇள மகார்க்கு. 290
அவனே சுக்கான் பக்கமா யமர்ந்தான்
பின்னால் மிலாறுவின் முன்னணி யத்தின்
கப்பலைப் போக விட்டனன் முன்னே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓடுக படகே, ஒருமர மிலாவிடம்,
தோணியே, செல்வாய் தொடுநீர்ப் பரப்பிலே,
செல்வைநீ கடல்மேல் திகழ்குமி ழியைப்போல
அலையில்நீ ராம்பல் மலர்களைப் போலநீ!"
துடுப்பைமாப் பிள்ளைகள் தொடுத்து வலிக்கவும்
அரிவையர் வெறுமனே அமரவும் செய்தனன்; 300
வலித்தனர் மாப்பிள்ளை வளைந்தன துடுப்புகள்
எதுவுமே பயணத் தில்லைமுன் னேற்றம்.
வனிதையர் துடுப்பை வலிக்கச் செய்தனன்
மாப்பிள்ளை அமர வைத்தனன் வாளா;
வலித்தனர் பெண்கள் வளைந்தன விரல்கள்
எதுவுமே பயணத் தில்லைமுன் னேற்றம்.
மாற்றினன் முதியரை வலிக்கத் துடுப்பு
அதனைப் பார்க்க இளைஞரை வைத்தனன்
முதியோர் வலித்தனர் முன்தலை நடுங்கின
இன்னமும் பயணத் தில்லை முன்னேற்றம். 310
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
அமர்ந்தனன் துடுப்பை அவனே வலிக்க
ஓடிற் றிப்போ உயர்மரப் படகு
படகோ டிற்றுப் பயணம் விரைந்தது
துடுப்புநீர்த் தெறிப்பொலி தொலைவில் கேட்டது
உகைமிண் டோ சையும் உயர்தொலைக் கேட்டது.
அங்கே இதமாய் அவனும் வலித்தனன்
அசைந்தன குறுக்கிடம் வளைந்தன பக்கம்
மோதிப் பொருதின **பேரித் துடுப்புகள்
காட்டுக் கோழியாய்க் கத்தின பிடிகள் 320
கருங்கோழி போலக் கத்தின அலகுகள்
அன்னமாய்த் தொடராய் அலறிற்று முன்னணி(யம்)
கதறிற் றண்டங் காக்கைபோல் பின்னணி(யம்)
தொடர்வாத் தைப்போல் உகைமிண் டிரைந்தது.
முதிய வைனா மொயினன் அவன்தான்
அப்பய ணத்தில் அதிவிரை வேகினன்
சிவப்புப் படகின் சுக்கான் திகழ்புறம்
பெருந்துடுப் புக்கு அரும்பொறுப் பாகி
பயணப் போதிலே பட்டதோர் **கடல்முனை
வறியதோர் கிராமம் வளர்விழித் தெரிந்தது. 330
அஹ்தி என்பான் கடல்முனை வசிப்பவன்
அதன்கை வளைவில் அமர்தூர நெஞ்சான்
தூர நெஞ்சினன் மீனிலா தழுதனன்
ரொட்டி யிலாத் தூரநெஞ்(சான்) சழுதான்
அஹ்தியின் குடிலோ அதுமிகச் சிறியது
இக்குறும் பனின்நிலை ஏழ்மையே யானது.
செதுக்கிட லாயினன் திகழ்பட கின்புறம்
ஒருபுதுப் படகின் **ஓடக் கட்டையை
நீள்பசி யுடையவந் நேர்கடல் முனையில்
வறுமையே மிக்கஅக் கிராமக் கரையில். 340
அவனது காதுகள் அதிகூர் மையன
கண்களோ இன்னும் கனகூர் மையன
வடமேற் பக்கமார் வருவிழி செலுத்தினன்
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினன்
வானவில் ஒன்றை வளர்தொலைக் கண்டனன்
அதற்குமப் பாலொரு அருஞ்சிறு முகிலை.
அதுவொரு வானவில் லல்லவே யல்ல
ஒருசிறு முகில்தனு முள்ளதங் கல்ல
ஓடிப் படருமோர் ஓடந் தானது
பயணித்தே செலும் படகே தானது 350
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்
இருந்தனன் உயர்ந்தவன் இணையில்பின் அணியம்
தோன்றெழில் மானுடன் துடுப்பின் பக்கமும்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"அந்தப் படகைநான் அறிந்ததே யில்லை
கண்டதே யில்லையிக் கவின்சீர்ப் படகை
பின்லாந் திருந்து முன்வரு கிறதது
கிழக்கி லிருந்ததன் துடுப்பசை கிறது
நோக்கிநிற் கிறதுசுக் கான் வட மேற்கை." 360
உரத்துக் கத்தினான் உளபலம் மட்டும்
அவனே கத்தினான் அவனே கூவினான்
கடல்முனை நுனியிலே கத்தினான் நின்றே
செங்கன்ன முடையோன் செறிநீர்க் குறுக்காய்:
"எவரது படகு இரும்நீர்ச் செல்வது?
எவரது கப்பல் எறிதிரை மிதப்பது?"
படகின் மனிதர் பகர்ந்தனர் இவ்விதம்
அத்துடன் அரிவையர் அளித்தனர் மறுமொழி:
"யாரப் பாநீ நளிர்வனம் வசிப்பவன்
செறிகான் மரத்திடைத் திரியும் நாயகன், 370
இந்தப் படகைநீ இனிதறிந் திலையா?
வைனோ நாட்டின் வன்பட குணர்ந்திலை?
வன்சுக் கானமர் மானுட னறிந்திலை?
துடுப்பின் பக்கத் திருப்பொனைத் தெரிந்திலை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"சுக்கான் பிடிப்பவன் இப்போ தறிகிறேன்
காண்கிறேன் துடுப்புக் காரனைக் கூட
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சுக்கான் பிடிப்பவன் நிச்சய மவனே
துடுப்பை வலிப்பவன் துரிதஇல் மரினன்; 380
மனிதர்காள், ஆயினும் வழிச்செலல் எங்கோ
பயணம் எவ்விடம் பயணநா யகர்காள்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"கடற்பிர யாணம் வடபுலம் நோக்கி
உயர எழுந்திடும் நுரைகளை நோக்கி
நுரைத்து எழுகின்ற அலைகளை நோக்கி;
முயன்றுசம் போபெறும் முயற்சிமேற் கொள்ள
ஒளிரும் மூடியை உவந்தே பார்த்திட
வடநிலக் குன்றின் மணிமுக டதன்மேல்
செப்பினா லமைந்த செம்மலைக் குள்ளே." 390
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"ஓகோ, முதிய வைனா மொயினனே!
என்னையும் ஏற்பா யிங்கொரு மனிதன்நான்
மூன்றாம் நாயக னாய்முனைந் திருப்பேன்
சம்போ பெறற்குத் தான்செல லானால்
பிரகாச மூடியும் கொணர்வதா யிருந்தால்,
என்னையும் அத்துடன் எண்ணலாம் மனிதனாய்
போரொன்று நேர்ந்து பொருபங் கேற்பதேல்
என்கரங் களுக்குநான் இடுவேன் கட்டளை
ஆணையும் இடுவேன் அகல்என் தோட்கும்." 400
நிலைபெறும் முதிய வைனா மெயினன்
மனிதனைச் சேர்த்தான் வளர்தன் பயணம்
எடுத்தான் குறும்பனை இனிதுதன் தோணியுள்;
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
அவ்விடம் வந்தனன் அதிவிரை நடையில்
தோணியில் ஏறத் தொடங்கினன் விரைவாய்
தன்னுடன் பலகையும் தான்சில கொணர்ந்தான்
வைனா மொயினனின் வன்தோ ணியினுள்.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"என்றன் தோணியில் இருப்பன மரங்கள் 410
படகில் போதிய பலகைகள் உள்ளன
திறமிகு தரத்தில் நிறையவே உள்ளன
ஏனிங்கு வைத்தனை ஏற்றஉன் பலகை
ஏன்அதி கரித்தாய் இப்பட கின்நிறை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
**"கவனிப்புப் படகைக் கவழ்க்கமாட் டாது
**வைக்கோற்போ ராதாரக் கட்டைசிந் தாது;
வடபுலக் கடலில் வழக்கமாய் நிகழ்வது
படகின் பலகையைப் படர்கால் கேட்பது
கேட்பது எதிர்கால் ஓடப் பக்கமே." 420
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அதனா லேதான் அமர்க்கெழும் தோணியின்
நெஞ்சுநல் லிரும்பால் நிமிர்த்தப் பட்டது
முன்னணி உருக்கால் மூட்டப் பட்டது
அதனைக் காற்றுவந் அடித்தேகா திருக்க
எடுத்தெறி யாது இருக்கவந் ததைப்புயல்."
பாடல் 40 - வைனாமொயினனின் கந்தலே என்னும் யாழ்
TOP
அடிகள் 1 - 94 : சம்போவைப் பெறுவதற்கு வந்த பயணத்தின் போது
படகு ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் வந்து ஒரு பெரிய கோலாச்சி மீனின்
முதுகில் தடைபட்டு நிற்கிறது.
அடிகள் 95 - 204 : அவர்கள் அந்த மீனைக் கொன்று அதன் பெரும்
பகுதியைத் தோணிக்குள் எடுத்து உணவு சமைத்து உண்கிறார்கள்.
அடிகள் 205 - 342 : அந்த மீனின் அலகு எலும்பிலிருந்து
வைனாமொயினன் 'கந்தலே' என்னும் ஒரு யாழிசைக் கருவியைச்
செய்கிறான். அந்த யாழை மீட்டப் பலர் முயன்று தோற்று தோல்வி
அடைகிறார்கள்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பின்னர் விரைவாய்ப் பெரும்பட கோட்டினன்
காணுமந் நீண்ட கடல்முனை யிருந்து
வறிய கிராம வல்லொலி யிருந்து;
பாடிக்கொண்டே படர்ந்தனன் நீரில்
அகழ்மகிழ் வோடு அலையில் சென்றனன்.
கடல்முனை நுனியில் கன்னியர் இருந்தனர்
கண்டனர் இவனைக் காதில் கேட்டனர்:
"கடலிலே செல்வது களிப்புடன் எதனால்
படர்அலை மீது பாடலும் எதற்கு 10
முன்னரைக் காட்டிலும் மூண்டபேர் மகிழ்ச்சி
ஏனைய பாட்டிலும் இணையிலாப் பாட்டு?"
முதிய வைனா மொயினன் சென்றனன்
தரைநீர்ப் பக்கமாய் ஒருநாள் சென்றனன்
சேற்று நீரிலே சென்றனன் அடுத்த நாள்
மூன்றாம் நாள்நீர் வீழ்ச்சிநீர்ச் சென்றனன்.
குறும்பன் லெம்மின் கைனனு மாங்கே
மந்திரச் சொல்சில மனதினில் நினைத்தான்
நேராய் இரைந்துபாய் நீர்வீழ்ச் சிப்புறம்
புனித அருவிநீர்ப் புகுசுழிப் புறத்தே; 20
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"நிறுத்து, நுரைப்பதை நீர்வீழ்ச் சியேநீ!
விறலுடை நீரே நிறுத்து, பெருக்கம்!
நீரின் நங்கையே, நிமிர்நுரைப் பெண்ணே!
நீர்இரைந் தோடும் நெடுங்கல் லமர்க!
நீர்இரைந் தோடும் பாறைக்கு வருக!
புயங்களால் அணைத்து புனல்அலை நிறுத்து!
கரங்களால் அவற்றைக் கட்டி யமர்த்து!
கையினால் நுரையைக் கட்டுப் படுத்து! 30
படருமென் மார்பவை பாயா திருக்க!
சென்னியில் தண்ணீர் தெறியா திருக்க!
அலையின் அடிவாழ் அரும்முது மாதே!
வருபுனல் நுரையில் வாழும் பெண்ணே!
நுரையின் மேற்கரம் வரமே லெழுவாய்
அலைகளை மார்புடன் தழுவி எழுவாய்
நீரின் நுரையை நேரொன் றமைக்க
நுரையுள திரையை நல்வழி நடத்த
நவையற் றோரை அவைதாக் காமல்
பிழையற் றோரைப் பெரிதுருட் டாமல்! 40
ஆற்றின் நடுவில் அமைந்த கற்களும்
நீர்நுரைத் தோடும் நிமிர்ந்துயர் பாறையும்
தத்தம் நெற்றியைத் தாழ்த்தி நிற்கட்டும்
குனிந்து தலைகளை நனிதாழ்த் தட்டும்
செந்நிறப் படகு செல்லும் பாதையில்
**தாருண் தோணி தான்போம் வழியில்!
இதுவும் போதா தின்னமு மென்றால்,
**சிலைவலு மகனே, திகழ்கற் றலைவா!
துளைகரு வியாலொரு துவாரம் அமைப்பாய்
துறப்பணம் கொண்டொரு தொடுபுழை யமைப்பாய் 50
நீர்வீழ் பாறையின் நேர்நடு விடத்தில்
கொடிய பாறையின் இடமொரு பக்கம்
தடையெது மின்றிப் படகது சென்றிட
சேதம தின்றியே சென்றிடத் தோணி!
இதுவும் போதா தின்னமு மென்றால்,
தண்ணீர்த் தலைவனே, தண்ணீர் வாழ்வோய்!
பாறைகள் அனைத்தையும் பாசிக ளாக்கு
மாற்றுதோ ணியைக்கோ லாச்சியின் **நுரைப்பை
நடுவாய்ப் படகு நகர்ந்திட நுரையில்
உயர்ந்தெழும் அலைகளின் ஊடாய்ப் போக! 60
நீர்வீழ்ச் சியில்வாழ் நேரிழாய், கேட்பாய்!
அருவியின் அருகே அமர்ந்துள்ள கன்னி!
நூலொன்று சிறப்பாய் நூற்பா யிப்போ
சிறப்பு மிகுந்திடும் சணற்பந் திருந்து
நீரினுட் செலாவாய் நினதுநூ லுடனே
நீல்நிற நூலுடன் நிமிர்அலைச் செல்வாய்
அந்நூல் வழியாய் எம்பட கேகிட
தாருண் மார்புறு தனிப்பட கேக
சராசரி அறிவே தானுள மனிதனும்
அன்னிய னாயினும் அவ்வழிச் செல்ல! 70
துடுப்பின் தலைவியே, தூயஅன் புடையளே!
இன்துடுப் பதனை நின்கரத் தெடுப்பாய்
அதாற்சுக் கானை அரிங்கைப் பிடிப்பாய்
மயக்கும் அருவியின் வழியூ டேகிட
லாப்புமாந் திரீகனின் இக்குடில் கடந்து
மந்திர வாதியின் வன்சா ளரக்கீழ்!
இதுவும் போதா தின்னமு மென்றால்,
ஓ,முது மனிதா, உயர்சொர்க் கநாதா!
சுக்கான் தாங்கு தொடர்ந்துன் வாளினால்
உருவிய வாளால் ஊக்கமாய் நடத்து 80
பயணித் தேகப் பருமரப் படகு
தாருவின் படகு தான்தொடர்ந் தேக!"
முதிய வைனா மொயினன் அவன்தான்
செலுத்தினன் விரைவாய்ச் செல்பட கெதிரே
நீர்ப்பா றைநடு நேராய்ச் செலுத்தினன்
செலுத்தினன் உயர்ந்து செறிநுரை நீர்நடு
மரப்பட கிடையில் வந்துநிற் கவுமிலை
தகுமறி ஞனின்கலம் தட்டவு மிலைத்தரை.
அந்த இடத்தே அவன்வந் தடைந்ததும்
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பிலே 90
நிறுத்திற் றோடம் நிகழ்ந்ததன் ஓட்டம்
விரைந்தே குவதை விட்டது படகு;
தரைதட்(டி) இறுகித் தங்கிற் றோடம்
ஓடம் நின்றது ஓரசை வின்றியே.
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
குறும்பன் லெம்மின் கைனன் அடுத்தவன்
அழுத்தினன் வலிக்கும் ஆழ்கடல் துடுப்பை
தாருவின் துடுப்பைத் தண்ணீர் அலையில்
தடைபட்ட படகைத் தள்ளும் முயற்சியில்
இறுகிய தோணியை இளக்கும் முயற்சியில்; 100
ஆயினும் படகு அதுவிரைந் திலது
மரத்தின் படகு வழிநடந் திலது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,நீ குறும்பா, லெம்பியின் மைந்தா!
சாய்ந்தொரு பக்கம் பார்ப்பாய் அப்புறம்
தடைபடு தோணி தரித்தது எதிலென
எதிலே யோடம் இறுகிநிற் கிறதென
விரிந்து பரந்தவிவ் வியன்நீர்ப் பரப்பில்
நீண்டு கிடக்கும் நெடுநீர்ப் பரப்பில் 110
அதுஎது கல்லா அல்லது கட்டையா
அல்லது வேறெதும் அடைவழித் தடையா?"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
சற்றுப் பார்க்கத் தானே திரும்பினன்
படகின் கீழ்ப்புறம் பார்வையைச் செலுத்தினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"படகு தடையுறல் பாறையில் அல்ல
பாறையி லல்ல படுமரத் தல்ல
தோணிகோ லாச்சி மீனின் தோளிலே
நீர்நாய் ஒன்றதன் நீள்வளை முதுகிலே." 120
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆற்றிலே இருக்கும் அதுவெது என்றால்
கோலாச்சி யாகலாம் கட்டையா யிருக்கலாம்;
இருக்கிறோம் கோலாச்சி இரும்தோள் என்றிடில்
நீர்நாய் வளைந்த நீள்முது கினிலெனில்
நீரினை வாளால் நேராய்க் கிழித்திடு
பிளந்திரு துண்டாய்ப் பெயர்த்திடு பெருமீன்!"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
பையன் செந்நிறப் படுபோக் கிரிபின் 130
பட்டியி லிருந்து பருவா ளுருவினன்
எலும்பை **அழிப்பதை இகல்பக் கத்திருந்(து);
நீரினை வாளால் நேராய்க் கிழித்தனன்
பக்கத் தின்கீழ்ப் பாய்ச்சி இழுத்தனன்
அப்போ நீரில் அவனே வீழ்ந்தனன்
அலைகளின் அடியில் ஆழ்ந்தே சென்றனன்.
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வீரனின் தலைமயிர் மீதிலே பற்றி
**வேலையி லிருந்து மேலே தூக்கினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 140
"அனைவரும் மானுடர் ஆக்கப் பட்டனர்
தாடி உடையராய் ஆக்கப் பட்டனர்
உன்னிப் பார்த்தால் ஒருநூ றாகலாம்
ஆயிர மாகவும் அதுநிறை வாகலாம்."
பட்டியி லிருந்து பருவா ளுருவினன்
உறையினி லிருந்து உயரிரும் பலகினை
அதனால் மீனை அறைந்தான் ஓங்கி
படகின் பக்கமாய்ப் பலமாய் வீசினன்:
உடைந்தது துகளாய் உடனே அவ்வாள்
உணர்ந்ததா யில்லை உறுமீன் எதையும். 150
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மனிதரில் பாதியும் வாய்த்தில துன்னிடம்
வீரனில் மூன்றிலோர் பங்குமே யிலையே.
அவசியம் எனஒன் றாயிடும் பொழுதில்
நனிமா னுடன்மனம் நாடிடும் போதில்
அப்போ மனமும் அலைந்தெங் கோபோய்
கவனமும் சிதறிக் கடந்துசெல் லலுமுள."
அப்போ(து) வாளை அவனே உருவினன்
கடுங்கூர் அலகைக் கையிற் பற்றினன் 160
திணித்தனன் வாளைச் செறிகட லுக்குள்
பக்க வழியாய்ப் பணித்ததைக் கொணர்ந்தான்
வாள்கோ லாச்சி வன்தோட் புதைத்தான்
நீர்நா யதனின் நீள்வளை முதுகில்.
தைத்தது வேகமாய்த் தனிவாள் இறங்கி
மூச்சுப் புழையில் மூர்க்கமாய்ச் சென்றது;
முதிய வைனா மொயினன் அதன்பின்
உயரத் தூக்கி உறுமீன் கொணர்ந்தான்
நீரிருந் திழுத்தான் நெடுங்கோ லாச்சியை
இரண்டாய் உடைத்தனன் இருங்கோ லாச்சிமீன் 170
அடியினில் தாழ்ந்தது அம்மீன் வாலோ
அதன் தலைப்பக்கம் மிதந்தது படகில்.
அதன்பின் படகும் அகன்றிட முடிந்தது
தடையி லிருந்தது தான்விடு பட்டது;
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
பாறைத் தீவிடைப் படகைக் கொணர்ந்து
கரைமருங் கதனைக் கட்டி நிறுத்தினன்
அதனைப் பார்த்தனன் அதனைத் திருப்பினன்
கோலாச் சிமீன் கொழுந்தலைப் பக்கம்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 180
"மாப்பிள்ளை மாரில் வளர்முதிர் வெவரோ
அவர்கோ லாச்சியை அரியத் தகுந்தவர்
மீனைக் கூறு போடத் தகுந்தவர்
சென்னியைத் துண்டாய்ச் சீவிட வல்லவர்."
படகின் மனிதர் பகர்ந்தனர் இவ்விதம்
பக்கத் திருந்த பாவையர் கூறினர்:
"மீனைப் பிடித்தவர் வியன்கரம் இனியவை
மீனைக் கொண்டவர் விரல்களும் புனிதம்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உருவினன் கத்தியை உறையினி லிருந்து 190
குளிர்ந்த இரும்பைக் கூட்டினி லிருந்து
கோலாச் சிமீன் கொண்டதாற் பிளந்தான்
வெட்டினன் துண்டு துண்டதாய் மீனை
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அரிவையில் இளமையாய் ஆனவள் எவளோ
அவளே மீனை ஆக்கத் தகுந்தவள்
காலை உணவாய்க் களித்துண் பதற்காய்
மீனுள்ள நண்பகல் வேளை உணவாய்."
மெல்லியர் வந்தனர் மீனைச் சமைக்க
போட்டியாய் விரைந்து போந்தனர் பதின்மர் 200
அதன்பின் மீனும் ஆக்கி முடிந்தது
காலை உணவாய்க் களித்துணற் காக;
சிற்சில எலும்புகள் கற்களில் கிடந்தன
இன்னும் சிற்சில இருந்தன பாறையில்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அங்கே வந்து அவற்றைப் பார்த்தான்
அவற்றைப் பார்த்தான் அவற்றைத் திருப்பினான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இவற்றி லிருந்து எவற்றைச் செய்யலாம்
இக்கோ லாச்சி மீனின் எயிற்றினில் 210
இந்த அகன்ற அலகின் எலும்பில்
கொல்லனின் கருமக் கூடத் திருந்தால்
கைவினை யாளனின் செய்தலத் திருந்தால்
கைதேர் கலைஞனின் கையில் இருந்தால்?"
கொல்லன்இல் மரினன் கூறினன் இங்ஙனம்:
"வெறுமையி லிருந்து எதுவும் வராது
கருவி வராதுமீன் எலும்பினி லிருந்து
கொல்லனின் கருமக் கூடத் திருப்பினும்
கைவினை யாளனின் செய்தலத் திருப்பினும்
கைதேர் கலைஞனின் கையில் இருப்பினும்." 220
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதனிலே யிருந்து ஏதேனும் வரலாம்
மீனெலும் பிருந்து விளையலாம் *கந்தலே
இயற்றத் தெரிந்தவர் எவரெனு மிருந்தால்
எலும்பிசைக் கருவிகள் இயற்றத் தெரிந்தால்."
செய்ய வல்லவர் செய்யமுன் வராவிடம்
இல்லாத போதினில் இயற்றத் தெரிந்தவர்
எலும்பிசைக் கருவி இயற்றத் தெரிந்தவர்,
நிலைபெறும் முதிய வைனா மொயினன் 230
தானே செய்பவன் ஆகமுன் வந்தனன்
இயற்றத் தெரிந்தவன் இடத்தைப் பெற்றனன்
கோலாச் செலும்பு கொண்டுயாழ் செய்தனன்
என்றுமே நிலைக்கும் இசையமு தீந்தனன்.
கந்தலே கீழ்ப்புறம் எந்தவா றமைந்தது?
பெரியகோ லாச்சியின் பெருமல கெலும்பினால்;
கந்தலே முளைகள் எந்தவா றமைந்தன?
கோலாச் சிமீனின் கூரிய பற்களால்;
கந்தலே நரம்புகள் எந்தவா றமைந்தன?
வீரிய மடக்கிய **விறற்பிசா சுரோமமால். 240
இப்போ(து) யாழும் இனிதுருப் பெற்றது
தயார்நிலை பெற்றதாய்த் தவழ்ந்தது கந்தலே
பெரியமீன் எலும்பிலே பிறந்தநல் யாழது
மீனல கெலும்பிலே விளைந்தயாழ் கந்தலே.
இளமை மானுடர் எழுந்தே வந்தனர்
விவாக மாகிய வீரரும் வந்தனர்
வாலிபக் காளைகள் மற்றாங்கு வந்தனர்
சிறிய பெண்களும் சிறப்புடன் வந்தனர்
இளங்கன் னியரொடு இதமுது மனைவியர்
மத்திம வயதுறு மங்கையர் வந்தனர் 250
கந்தலே யாழினைக் காண்பதற் காகவே
யாழிசைக் கருவியை ஆய்ந்திடற் காகவே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இளையோர்க் கியம்பினன் முதியோர்க் கியம்பினன்
மத்திம வயதுள மக்களுக் கியம்பினன்
விரல்களால் யாழினை மீட்டவே இயம்பினன்
எலும்பினால் ஆகிய நரம்பிசைக் கருவியை
கழிவுமீ னெலும்பெழும் கந்தலே யாழினை.
இசைத்தனர் இளையோர் இசைத்தனர் முதியோர்
மத்திம வயதுதுறு மக்களும் இசைத்தனர் 260
வாலிபர் இசைத்தனர் வளைந்தன விரல்கள்
முதியவர் இசைத்தனர் முன்தலை நடுங்கின
இன்பம் இன்பமாய் இயையவே யில்லை
யாழிசை இசையாய் நலம்தர வில்லை.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"அரைகுறைப் புத்தி யமைந்தபை யன்கள்நீர்
அத்துடன் மூடத் தனமமை மங்கையர்
மற்றயோர் எளிய குணமுடை மக்கள்.
உங்களில் இசைப்பவர் ஒருவரு மில்லை
சரியாய் இசைக்கத் தகுந்தவர் இல்லை; 270
என்னிடம் யாழை எடுத்துவா ருங்கள்
கந்தலே யாழைச் சுமந்துவா ருங்கள்
என்முழங் கால்கள் இரண்டின் மீதினில்
என்விரல் பத்தின் இயைந்திரு நுனியில்!"
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
கரங்களில் பெற்றனன் கந்தலே யாழை
இருந்தது அவனுக் கிசைநலம் அருகில்
யாழது விரல்களின் கீழே இருந்தது;
தொடங்கினன் ஏற்றத் தொடுயாழ்ச் சுருதியை
திருப்பினன் சுற்றித் திகழ்கந் தலேயாழ் 280
ஆயினும் யாழினில் இசையெழ வில்லை
இசைநலம் எதுவும் ஏற்பட் டிலதே.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இந்த இளைஞரில் எவருமே இல்லை
எவருமே இல்லை இதில்வளர் வோரில்
எவருமே இல்லை இம்முதி யோரிலும்
இந்த யாழினை இசைக்கத் தெரிந்தவர்
இசையின் பம்படைத் தின்பம் தருபவர்;
ஒருக்கால் வடபுலம் உளோரால் முடியலாம்
இந்த யாழினில் இசையினை எழுப்ப 290
இசையின் பம்படைத் தின்பம் நல்கிட
இதனை வடபால் இருக்குநா டனுப்பினால்?"
வடபால் நிலத்துக் குடன்யாழ் அனுப்பினன்
சரியொலா வுக்குத் தன்யாழ் கொணர்ந்தனன்
வடபுல நிலத்தினர் வாலிபர் இசைத்தனர்
வாலிபர் இசைத்தனர் வனிதையர் இசைத்தனர்
மனிதர்கள் இசைத்தனர் மனைவிய ருடனே
கோதையர் இசைத்தனர் கொழுனரோ டிசைத்தனர்
தம்தம் வீட்டின் தலைவியர் இசைத்தனர்
இவ்விதம் திருப்பினர் அவ்விதம் முயன்றனர் 300
வாசிக்க முயன்றனர் வலியதம் விரல்களால்
விரல்களோர் பத்தின் உகிர்களா லிசைத்தனர்.
வடபுலம் வாழும் வாலிபர் இசைத்தனர்
மற்றெல் லாவகை மக்களும் இசைத்தனர்
எனினும் இன்பம் இன்பமா யிலையே
சுருதியும் அங்கு சுத்தமா யிலையே:
ஒன்றுடன் ஒன்று நரம்புகள் சிக்கின
பரியதன் **சடைமயிர் பின்னியே முறுகின
ஓசையும் அவலமா யுடனெழ லானது
குறித்தயாழ்க் கருவியும் கோரமா யொலித்தது. 310
மூலையில் துயின்றனன் பார்வை யிழந்தவன்
வயோதிபன் ஒருவன் மனையெடுப் போரமாய்
அடுப்பரு குறங்கிய அவனாங் கெழுந்தனன்
அடுக்களைப் பக்கமாய் அமர்ந்தவன் உரைத்தனன்
உறங்கிய இடத்திலே உறுமத் தொடங்கினன்
மூலையில் கிடந்தோன் முனகத் தொடங்கினன்:
"நிறுத்துக இசைப்பதை நிறுத்துக ஒலிப்பதை,
ஒழிக்குக, இத்தொடு உடனே நிறுத்துக,
உளஎன் செவிகளை ஊடறுத் தேகிற(து)
தலையைத் துளைத்துத் தருகின் றதுதுயர் 320
உரோமம் சிலிர்த்து உயர்ந்தெழு கின்றது
நெடும்பொழு துறக்கம் நிறுத்திவைக் கின்றது.
பின்லாந்து மக்களின் பேரிசைக் கருவி
இசைநலம் எழுப்ப இயலாதே விடின்
தாலாட் டித்துயில் தராத வேளையில்
ஓய்வாய் இருத்தற் குதவாப் போதினில்
தூக்கி வீசுக தொடர்புனல் அதனை
அலைகளின் அடியில் ஆழத் திடுக
அல்லது மீண்டும் அதையெடுத் தேகுக
யாழினைத் திருப்பி நனியனுப் பிடுக 330
அதனைப் படைத்த அம்மா னுடன்கரம்
அதனை இசைக்கும் அம்மா னுடன்விரல்."
யாழிசைக் கருவிதன் நாவால் நவின்றது
சொற்களில் கந்தலே சொல்லிய திவ்விதம்:
"இரும்நீர் செல்நிலை இன்னமும் நானிலை
நீரலை மூழ்கிடும் நிலையிலும் நானிலை
இசைப்பவன் கைகளில் இசையினைத் தருவேன்
முயலொரு வற்கு மூட்டுவேன் இசைநலம்."
கொண்டே சென்றனர் குறித்ததைக் கவனமாய்
அழகாய் அதனை அவர்சுமந் தேகினர் 340
அதனைப் படைத்த அம்மா னுடன்கரம்
இயற்றிய மனிதனின் இயைமுழங் காற்கே.
பாடல் 41 - வைனாமொயினன் கந்தலே என்னும் யாழை இசைத்தல்
TOP
அடிகள் 1 - 168 : வைனாமொயினன் கந்தலே என்னும் யாழை இசைக்கிறான்.
அந்த இசையைக் கேட்க ஆகாயம் நிலம் நீர் ஆகியவற்றில் வாழும் சகல
உயிரினங்களும் விரைந்து வந்து கூடுகின்றன.
அடிகள் 169 - 266 : யாழிசையைக் கேட்ட எல்லோரது இதயங்களும்
நிறைகின்றன. அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
வைனாமொயினனின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிகிறது;
அங்ஙனம் வழிந்த கண்ணீர் தண்ணீருள் வீழ்ந்து அழகான நீலநிற
முத்துகளாக மாறுகின்றன.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
ஆயத்தம் செய்தனன் அரியதன் விரல்களை
தேய்த்துப் பெருவிரல் ஆயத்த மாயினன்;
களிப்பு என்னும் கல்லில் அமர்ந்தனன்
பாடல் என்னும் பாறையில் இருந்தனன்
வெள்ளியில் ஆன வியன்வரை முடியினில்
தங்கத்தில் ஆன தனிக்குன் றுச்சியில்.
விரல்களை வைத்தனன் வியன்யாழ்க் கருவியில்
வளைந்த கருவியை முழங்காற் றிருப்பினன் 10
கந்தலே யாழைக் கரங்களின் கீழே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போ வந்தெல் லோரும் கேட்கலாம்
முன்னொரு போதும் முயன்றுகே ளாதவர்
நித்தியப் பாடலின் நிறைந்தவின் பத்தை
கந்தலே யாழதன் கனிவாம் ஓசையை."
முதிய வைனா மொயினன் அதன்பின்
மீட்டத் தொடங்கினன் வியனெழில் யாழை
கோலாச்சி **என்பின் குணயாழ்க் கருவியை
கடல்மீன் எலும்பின் கந்தலேக் கருவியை; 20
விரைவாய் எழுந்தன விரல்கள் அனைத்தும்
பெருவிரல் அசைந்தது பிறந்தயா ழதன்மேல்.
இன்பமிப் போது இன்பமாய் மலர்ந்தது
ஆனந்த மிப்போ ஆனந்த மானது
இன்பிசை யிப்போ இன்பிசை யானது
பாடல்கள் நிறைந்த பாடல்களாகின;
கோலாச்சி எயிறுகள் குணவிசை யெழுப்பின
மீனதன் வாலும் மிகுவொலி தந்தது
புரவியின் சடைமயிர் புதுப்பண் இசைத்தது
குதிரையின் உரோமம் கொழுமிசை தந்தது. 30
முதிய வைனா மொயினன் இசைத்தனன்
அங்கே காட்டில் அமர்ந்தொன் றில்லை
நான்கு கால்களில் நனிவிரை பிறவிகள்
தொடுகால் ஊன்றித் துள்ளித் திரிபவை
வனப்பிசை கேட்டு மகிழ வராதவை
இன்னிசை கேட்டு இன்புற வராதவை.
அணில்கள் ஓடின அடைந்தன ஓடி
தளிருள கிளையால் தளிருள கிளைக்கு
கூடின **கீரிகள் கூடிச் சேர்ந்தன
வேலிக்கு வந்தன வேலியில் அமர்ந்தன 40
பாய்ந்தது **எருது பசும்புல் மேட்டில்
துள்ளின **சிவிங்கிகள் துள்ளி மகிழ்ந்தன.
உடன்சதுப் புறங்கிய ஓநாய் எழுந்தது
நிமிர்ந்தது புற்றரை மேல்நிலக் கரடி
**தேவ தாருவின் செழுங்குகை யிருந்து
**தாரு மரத்துத் தனிப்புத ரிருந்து;
ஓநாய் நெடுந்தொலை ஓடியே வந்தது
அம்புதர்க் கரடி அலைந்தே திரிந்தது
கடைசியாய் வேலியில் கரடி யமர்ந்தது
வாயின் கதவவை வரிசையாய் இருந்தன; 50
வேலி ஒடிந்து வீழ்ந்தது பாறையில்
காட்டு வெளியில் கதவம் கவிழ்ந்தது;
அனைத்தும் **தாரு அணிமரத் தேறின
அதன்பின் தேவ **ரதாருவில் மாறின
இசையைக் கேட்டு இன்புறற் காக
இசையின் பத்தை இனிதே நுகர.
தப்பியோ லாவின் தரமுடைத் தலைவன்
அவனே வனங்களின் அதிபதி யாவான்
தப்பியோ இனத்தைச் சார்ந்தமாந் தர்க்கெலாம்
வாலிபர் வனிதையர் வகையிரு பாற்கும், 60
முதுகுன் றேறி முடிக்குச் சென்றனன்
மங்கள இசையை மனத்தனு பவிக்க;
அவளே வனங்கள் அனைத்தின் தலைவி
தப்பியோ லாவின் தரமுறு மனைவி
நீலக் காலுறை நெடிதணிந் திருந்தனள்
சிவப்புச் சரிகையைச் சீராய்ச் சூடினள்;
மிலாறுவின் கூனிய வியன்கிளைத் தாவினள்
வேறொரு **மரத்தின் மிளிர்வளை விருந்தனள்
கந்தலே யாழின் கனிவிசை கேட்க
மங்கள இசையை மனமனு பவிக்க. 70
நீலவா னத்து நீந்துபுள் ளினமெலாம்
இரண்டு சிறகுள எல்லாப் பறவையும்
வந்தன பறந்து வான்மிசைச் சுழன்று
விரைவாய் வந்தன வேகம் கொண்டன
இசையினைக் கேட்டு இன்புறற் காக
இசையின் பத்தை இனிதே நுகர.
வீட்டிலே கழுகுகள் கேட்டபோ தினிலே
பின்லாந்து நாட்டின் பேரின் னிசையினை
குஞ்சுகள் னைத்தையும் கூட்டினில் விட்டே
தாமே பறந்து தனித்துச் சென்றன 80
இனிய நாயகன் இன்னிசை கேட்க
வைனா மொயினனின் வனப்பிசை கேட்க.
உயரத் திருந்து பறந்தது கழுகு
கருடன் கருமுகிற் கணத்தினூ டாக
எறியலை யடியி லிருந்து**வாத் துக்கள்
உறையாச் சேற்றிருந் துயரன் னங்கள்;
வந்தன சிறிய வன்னப் **பறவைகள்
கத்திக் கீச்சிடும் கானக் குருவிகள்
நூற்றுக் கணக்கில் நுண்சிறு **குருவிகள்
**வானம் பாடிகள் வருமோ ராயிரம் 90
விண்ணிலே நின்று மிகுகளிப் புற்றன
அவனது தோள்களில் அடித்துப் பறந்தன
இன்னிசை தந்தையார் எழுப்பிய போதினில்
வைனா மொயினன் இன்னிசை தருகையில்.
காற்றில் இயற்கைக் கடிமக ளவளே
காற்றின் பாவையர் கன்னியர் அத்துடன்
இசையின் பத்தை இனிதே நுகர்ந்தனர்
கந்தலே யாழைக் காதால் களித்தனர்
ஒருசிலர் வானத் தொண்வளை விருந்தனர்
வானவில் மீதிலும் மற்றுளர் அமர்ந்தனர் 100
ஒருசிலர் இருந்தனர் சிறுமுகில் மேலே
செந்நிற வனப்பொடு மின்னிய கரைதனில்.
நிலவின் மகளவள் நிதஎழிற் கன்னி
சிறப்பு மிகுந்த செங்கதிர் மகளவள்
தாங்கி யிருந்தனள் தான்நெச வச்சை
ஏந்தி யிருந்தனள் **ஊடிழைக் கயிற்றை
நெய்துகொண் டிருந்தனர் நிகரில் பொற்றுணி
செய்துகொண் டிருந்தனர் சிறந்தவெள் ளித்துணி
செந்நிற முகிலின் திகழ்மேல் விளிம்பில்
வளைந்த நீண்ட வானவில் நுனியில். 110
அவர்கள் அதனைக் கேட்டஅப் போதிலே
இனிய இசையின் இன்னிசை யொலியை
அச்சுக் கைப்பிடி யதில்நழு விற்று
வழுவிற்(று) நுனாழி வலியகை யிருந்து
அறுந்து வீழ்ந்தன அம்பொன் இழைகள்
ஒடிந்தது வெள்ளி ஊடிழைக் கயிறு.
இல்லை அங்கே எந்தப் பிறவியும்
இல்லைநீர் வாழ்வன எதுவுமே அங்கு
ஆறு **சிறகில் அசையும் பிராணிகள்
சிறந்த மீனினக் கணங்கள் எதுவுமே 120
மகிழ வராதவை வனப்பிசை கேட்டு
இன்புற வராதவை இசைநலம் கேட்டு.
நீந்திச் சென்றன நெடுங்கோ லாச்சிமீன்
நன்றாய் நகர்ந்துநீர் நாய்கள் வந்தன
வஞ்சிரம் நீந்தி வந்தன பாறையில்
ஆழத் திருந்துவெண் ணணிநிற மீன்களும்;
வந்தன **சிறுமீன் வந்தன **வெண்மீன்
**சிறுமீன் தம்மொடு மறுமீன் வந்தன
நாணற் புற்கரை நனிநேர் வந்தன
நகர்ந்திடம் பெற்றன நளிர்நீர்க் கரையில் 130
வைனோ பாடலை மகிழ்வுடன் கேட்க
மங்கள இசையை மனமனு பவிக்க.
அஹ்தோ என்பான் அலைகளின் அரசன்
புற்றாடி யுடையோன் பொலிநீர்த் தலைவன்
நீரின் மேற்புறம் நேராய் வந்தனன்
ஏறி அமர்ந்தனன் எழில்நீர் ஆம்பலில்
அங்கே கேட்டனன் அருமிசை யின்பம்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதுபோல் முன்நான் எங்கும் கேட்டிலன்
வளருமிவ் வென்றன் வாழ்நாள் முழுதும் 140
வைனா மொயினன் வழங்கிய இசையினை
நிலைபெறும் பாடகன் நிகரில் இசைநலம்."
வளர்சகோ தரியவர், வாத்தின் **சக்திகள்
நாணல் புற்களின் நல்மைத் துனிகள்,
கூந்தலை வாரிக் கொண்டிருந் தனர்தாம்
குழலைச் சீவிக் கொண்டிருந் தனர்தாம்
வெள்ளிப் பிடிகொள் வியன்வா ரியினால்
பொன்னிலே செய்த பொற்சீப் பதனால்;
அந்நிய மானதோர் அழகொலி கேட்டனர்
இனிதாய் எழுந்த இசையினைக் கேட்டனர்: 150
சீப்பு நழுவிச் செறிபுனல் விழுந்தது
வாரி வழுவி வளர்அலை மறைந்தது
வாரப் படாமலே வறுங்குழ லிருந்தது
பைங்குழல் சீவுதல் பாதியில் நின்றது.
தண்ணீ ருக்குத் தலைவியும் தானே
கோரைநல் மார்பு கொண்ட காரிகை
இப்போ தெழுந்தனள் இருங்கட லிருந்து
அலைகளின் அடியிருந் தவளே வந்தனள்
கோரைப் புற்களின் குவைமேல் மிதந்தனள்
ஒருநீர்ப் பாறைக் குடனே விரைந்தனள் 160
கேட்பதற் காயக் கிளர்ந்தெழு மோசை
வைனா மொயினன் வழங்கிய இசையை
ஏனெனில் அவ்விசை இனியஅற் புதமாம்
இசைத்த இசையும் இனிமையா னதுவாம்;
அங்கே அவளும் அமைதியா யுறங்கினள்
பாறையில் வயிறு படியத் தூங்கினள்
ஒருபிர காசப் பெருங்கல் மேற்புறம்
தடித்த பாறைத் தன்ஒரு பக்கமாய்.
முதிய வையினா மொயினனு மாங்கே
இசைத்தான் ஒருநாள் இசைத்தான் இருநாள் 170
எந்த வீரனும் எங்குமே யில்லை
எவனும் வல்லான் என்பவன் இல்லை
மனிதனு மில்லை மங்கையு மில்லை
இல்லைப் பின்னிய கூந்தலார் எவருமே
யாருமே இல்லை யழத்தொடங் காதோர்
ஒருவரு மில்லை யுள்ளுரு காதோர்
அழுதனர் இளைஞர் அழுதனர் முதியர்
மணம்முடி யாத மனிதரும் மழுதனர்
மணம்முடித் திருந்த மனிதரும் மழுதனர்
பாதி வளர்ந்த பையல்கள் அழுதனர் 180
பையன் அழுதனர் பாவையர் அழுதனர்
சிறிய பெண்களும் சேர்ந்தே அழுதனர்
ஏனெனில் அவ்விசை இனியஅற் புதமாம்
முதியோன் இசையும் முழுஇனி மையதாம்.
வைனா மொயினனாம் மனிதனி னிடத்தும்
கண்களிலி ருந்து கண்ணீர் வீழ்ந்தது
விழிகளி லிருந்து விழிநீர் வழிந்தது
உருண்டது நீர்த் துளி உருண்டு வீழ்ந்தது
பழம்சிறு **பழத்திலும் பருமன் உள்ளது
பயற்றம் **விதையிலும் தடிப்ப மானது 190
வனக்கோழி முட்டையின் வட்டமா யானது
பெரியது தூக்கணங் குருவித் தலையிலும்.
விழிகளி லிருந்து விழிநீர் வீழ்ந்தது
ஒன்றுபின் ஒன்றாய் ஓடி வடிந்தன
ஓடி வடிந்தன உதிர்ந்தன கதுப்பினில்
அவனது அழகிய வதனத் துதிர்ந்தன
அவனது அழகிய வதனத் திருந்து
அகன்ற அவனது தாடையில் வீழ்ந்தன
அகன்ற அவனது தாடையி லிருந்து
பருத்த அவனது மருமத் துதிர்ந்தன 200
பருத்த அவனது மருமத் திருந்து
உரத்த முழங்கா லுற்றே யுருண்டன
உரத்த முழங்கா லுற்றதி லிருந்து
சிறப்பா யமைந்த சீர்பதம் வீழ்ந்தன
சிறப்பா யமைந்த சீர்பதத் திருந்து
பாதத் தின்கீழ்ப் படிமிசை வீழ்ந்தன
ஐந்து கம்பளி அருஞ்சட் டையூடாய்
ஆறு பொன்னின் அகல்வார் ஊடாய்
ஏழுநீல் மார்பு எழிற்சட் டையூடாய்
எட்டுகைப் பி(ன்)னல்மேற் சட்டைக ளூடாய். 210
உருண்டது நீர்த்துளி உருண்டே வீழ்ந்தது
முதிய வைனா மொயினனி லிருந்து
நீலக் கடலதன் நீள்கரை யோரம்
நீலக் கடலின் நீள்கரை யிருந்து
தெளிந்த நீரதன் திகழா ழத்து
கறுத்தச் சேற்றின் கடுமூற் றின்மேல்.
முதிய வைனா மொயினன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இங்குள இளைஞர் இடையிலே உளரா
இங்குள அழகிய இளைஞர் மத்தியில் 220
இந்த மாபெரும் இனத்தவர் மத்தியில்
உயர்பிதா வழிவரு புதல்வர்கள் மத்தியில்
என்விழித் துளியெடுத் திணைப்பவர் ருளரா
தெளிந்த நீரதன் திகழடி யிருந்து?"
இவ்வித மங்குள இளைஞர் கூறினர்
முதிய மனிதரும் மொழிந்தனர் மறுமொழி:
"இந்த இளைஞரில் எவருமே யில்லை
இங்குள அழகிய இளைஞரி லில்லை
மாபெரு மினத்தவர் மத்தியி லில்லை
உயர்பிதா வழிவரு புதல்வரி லில்லை 230
உன்விழித் துளிகளை ஒருங்குசேர்ப் பவர்கள்
தெளிந்த நீரதன் திகழடி யிருந்து."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"என்கண் ணீரை எவரெனும் கொணர்ந்தால்
பொறுக்கிச் சேர்த்தால் பொழிவிழித் துளிகளை
தெளிந்த நீரதன் திகழடி யிருந்து
இறகுமே லாடை என்னிடம் பெறுவர்."
**அண்டங் காகம் அடித்துவந் ததுசிறை
முதிய வைனா மொயினன் மொழிந்தான்: 240
"காக்கையே என்றன் கண்ணீர் கொணர்வாய்
தெளிந்த நீரதன் திகழடி யிருந்து!
இறகு மேலாடை ஈவேன் உனக்கு."
ஆயினும் காகம் அதுபெற் றிலது.
நீல்நிற வாத்து நின்றதைக் கேட்டது
ஆதலால் நீல்வாத் தங்கே வந்தது
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"நீல்நிற வாத்தே நீயோ அடிக்கடி
அலகுடன் அடியில் ஆழ்வது முண்டு
தண்ணீர் மூழ்கித் தவழ்வது முண்டு; 250
எனவே சேர்த்துவா என்னுடைக் கண்ணீர்
தெளிந்த நீரதன் திகழடி யிருந்து!
தருவேன் உனக்குநான் தரமாம் வெகுமதி
இறகுமே லாடையை என்னிடம் பெறுவாய்."
விரிநீர் பொறுக்க விரைந்தது வாத்து
வைனா மொயினனின் கண்ணீர்த் துளிகளை
தெளிந்த நீரதன் திகழ்அடி யிருந்து
சேற்றின் கறுத்த ஊற்றின் மேற்புறம்;
கடலினி லிருந்து கண்ணீர் எடுத்தது
வைனாவின் கைக்கு வாத்துக் கொணர்ந்தது: 260
அவைவேறு பொருள்களா யாகி யிருந்தன
அழகாம் பொருட்களாய் அவைவளர்ந் திருந்தன
முத்துக்க ளாயவை முற்றி இருந்தன
நித்தில மாயவை நேர்ந்தே யிருந்தன
அரசரை மேன்மை ஆக்குதற் காக
மன்னரை என்றுமே மனமகிழ் விக்க.
பாடல் 42 - வடநாட்டிலிருந்து சம்போவைத் திருடுதல்
TOP
அடிகள் 1-58 : மூன்று நாயகர்களும் வடநாட்டுக்கு வந்ததும், சம்போவில்
பங்கு பெறத் தாம் வந்திருப்பதாகவும், அது தவறினால் பலாத்காரமாகச்
சம்போ பெறப்படும் என்றும் வைனாமொயினன் அறிவிக்கிறான்.
அடிகள் 59 - 64 : வடநாட்டுத் தலைவி சமாதானமாகவோ பலாத்காரமாகவோ
சம்போவை இழக்க விரும்பவில்லை. அதனால் வைனாமொயினன் குழுவினரை
எதிர்க்க வடநாட்டு மக்களை அழைக்கிறாள்.
அடிகள் 65 - 164 : வைனாமொயினன் தனது கந்தலே என்னும் யாழை எடுத்து
இசைத்து வடநாட்டு மக்கள் அனைவரையும் உறக்கத்தில் ஆழ்த்துகிறான்.
அதன்பின் வைனாமொயினன் தன் தோழர்களுடன் சம்போ இருந்த மலைக்குச்
சென்று சம்போவைப் பெயர்த்தெடுத்துத் தனது தோணிக்குக் கொண்டு செல்கிறான்.
அடிகள் 165 - 308 : சம்போவுடன் மகிழ்ச்சியுடன் தமது வீடு நோக்கி புறப்படுகின்றனர்.
அடிகள் 309 - 562 : மூன்றாம் நாளில் வடநாட்டுத் தலைவி கண் விழித்து சம்போ
அபகரிக்கப்பட்டதை அறிகிறாள். தான் திருடர்களைத் தொடர்வதற்காக
அவர்களைத் தடுத்து நிறுத்தக் கடும் பனிப் புகாரையும் பெரும் காற்றையும் வேறு
தடைகளையும் வடநாட்டுத் தலைவி உண்டாக்குகிறாள். இந்தத் தடைகளின்போது
வைனாமொயினனின் யாழ் கடலில் விழுந்து மறைகிறது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அடுத்தவன் கொல்லன் அவனில் மரினன்
குறும்பன் லெம்பியின் மகன்மூன் றாமவன்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
தெளிந்த கடலில் எழுந்தே சென்றனர்
பரந்த திரைகளில் பயணம் செய்தனர்
அந்தக் குளிர்ந்த அகலூ ருக்கு
இருண்டு கிடந்த இரும்வட புலத்தே
மனிதரை உண்ணும் அம்மண் ணுக்கு
வீரர் ஆழ்ந்திடும் வியன்பகு திக்கு. 10
யாரப்பா வலிப்பவன் ஆவான் துடுப்பை?
முதல்வன் கொல்லன் அவன்இல் மரினன்
அவனே வலிப்பவன் ஆவான் துடுப்பை
அமர்வான் முன்புறம் அவனே துடுப்பில்
குறும்பன் லெம்மின் கைனன் அடுத்தவன்
அமர்வான் பின்புறம் அவனே துடுப்பில்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அவனே சுக்கான் பக்கம் அமர்ந்தான்
விரைவாய்ப் படகை மிகமுன் செலுத்தினன்
திரைகளைக் கிழித்துச் சென்றான் முன்னே 20
உயர்ந்த நுரைகளின் ஊடாய்ச் சென்றனன்
வெண்ணுரை முடியுறும் வெள்ளலை யூடாய்
வடபுலப் படகு வன்துறை நோக்கி
தான்முன் அறிந்த தரிப்பிடம் நோக்கி.
அவர்கள் அவ்விடம் அடைந்த போதினில்
முடித்த நேரம் முயல்தம் பயணம்
தோணியை இழுத்தனர் தொடர்தரைப் பக்கமாய்
தாருண் மார்புள தகுமப் படகை
உருக்கினால் இயற்றிய உருளைகள் மீது
செம்பினா லாகிய திகழ்பட குத்துறை. 30
அவ்விட மிருந்து அவர்இல் வந்தனர்
விரைந்து சென்றனர் மிகநேர் உட்புறம்;
வடபுலத் தலைவி வருமா றுசாவினாள்
அவள்பார்த் துசாவினாள் அப்புது வரவினர்:
"உங்களின் செய்திகள் உளஎவை மனிதரே
வீரரே புதினம் ஏதேனும் உளவோ?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அதற்கு மாங்கே அளித்தான் மறுமொழி:
"மனிதரின் செய்திகள் இனியசம் போவாம்
வீரரின் புதினம் மிக்கொளிர் மூடியாம் 40
சம்போ(வில்) பங்குறத் தான்நாம் வந்துள்ளோம்
படரொளிர் மூடியைப் பார்க்கவும் வந்துள்ளோம்."
அவளே வடநிலத் தலைவியப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"குளிர்கான் கோழியீர் கூறாய்ப் பகிர்வதும்
படர்மூ வர்க்கணில் பகுப்பது மிலையே;
நன்றுதான் சம்போ நன்கிரைந் தொலிப்பதும்
நன்றுதான் கடைவதும் நின்றொளிர் மூடி
வடநிலக் குன்றதன் மணிமுக டதன்மேல்
செப்பினால் இயைந்தசெம் மலைகளுக் குள்ளே 50
இங்குநான் இருப்பது நன்றத னாலே
மாபெரும் சம்போ வதன்காப் பாளாய்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஒருபங் கினைநீ உகந்தளி யாயேல்
அச்சம் போவின் அடுத்த பாதியை
அனைத்தையும் நாங்கள்அகல்வோம் எடுத்து
எடுத்தகன் றேற்றுவோம் எங்கள் தோணியில்."
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
கண்டனள் அவ்வுரை கனமிகக் கொடியதாய் 60
அழைத்தனள் வடபுலம் அனைத்தையும் ஒன்றாய்
வாளுடன் அழைத்தனள் வல்லிள மனிதரை
அழைத்தனள் வீரரை அரும்படைக் கலத்தொடு
வைனா மொயினனின் வன்தலை குறித்து.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கந்தலே யாழினைக் கையினி லெடுத்தனன்
தானே அமர்ந்தனன் தனியிசைப் பதற்காய்
இனிதாய் யாழை இசைக்கத் தொடங்கினன்;
அனைவரும் நின்றனர் அவ்விசைக் கேட்க
இசையின் பத்தை இரசிக்க நுகர்ந்து 70
மானுடர் நல்ல மனநிலை கொண்டனர்
வனிதையர் சிரித்த வாயுட னிருந்தனர்
வீரர் இருந்தனர் விழிகளில் நீருடன்
பையன்கள் **முழங்காற் படியினி லிருந்தனர்.
மக்களைக் களைக்க வைத்தனன் அவனும்
இளைக்க வைத்தனன் எல்லாரையு மவன்
கேட்டே யிருந்தவர் கீழ்த்துயில் வீழ்ந்தனர்
பார்த்தே யிருந்தவர் பகருணர் விழந்தனர்
உறங்கினர் இளையோர் உறங்கினர் முதியோர்
வைனா மொயினனின் வனப்பிசை கேட்டு. 80
விவேகி வைனா மொயினனப் போது
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
பையினுக் குள்ளே கையினை விட்டனன்
துளாவித் தடவினன் தொடுபைக் குள்ளே
தூக்க ஊசிகள் தூக்கினன் கையினில்
துயிலை அவர்கள் துணைவிழிப் பூசினன்
கொள்கண் இமைகளைக் குறுக்காய்ச் சேர்த்தனன்
கொழுங்கண் மடல்களைக் கோர்த்துப் பூட்டினன்
அங்கே களைப்பாய் ஆனமாந் தர்க்கு
சோர்ந்துபோ யிருந்தவத் துவள்மனி தர்க்கு; 90
ஆழ்த்தினன் நீண்ட உறக்கத் தவர்களை
நீண்ட நேரம் நித்திரை யாக்கினன்
ஆங்கு வடநாட் டனைத்துக் குடும்பமும்
அத்தனை கிராமத் தம்மக் களையும்.
சம்போ பெறற்குத் தானெழுந் தேகினன்
சென்றனன் பார்க்கத் திகழ்ந்தொளிர் மூடியை
வடநிலக் குன்றதன் மணிமுக டதன்மேல்
செப்பினால் இயைந்தசெம் மலைகளுக் குள்ளே
பூட்டிய ஒன்பது பூட்டுகட் கப்பால்
பூட்டிய பத்தாம் பூட்டுக்கு மப்பால். 100
முதிய வைனா மெயினனு மங்கே
மென்மையாய் அதன்பின் வியனிசை தொடங்கினன்
செப்பினால் இயைந்தசெம் மலைகளின் வாயிலில்
கல்லினால் ஆனகற் கோட்டையின் பக்கலில்:
அப்போ(து) கதவுகள் அசைந்தன கோட்டையில்
இரும்புப் பிணையல்கள் எல்லாம் ஆடின.
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
இருந்தனன் அங்கே இரண்டாம் மனிதனாய்
பூட்டுகள் மீது பூசினன் வெண்ணெயை
பிணையல்கள் மீது பெய்தனன் கொழுப்பை 110
கதவுகள் சத்தம் காட்டா திருக்க
ஒலியைப் பிணையல்கள் ஊட்டா திருக்க;
விரல்களைப் பூட்டுள் விட்டுத் திருப்பினன்
தாளையும் மெதுவாய்த் தளர்த்தத் தொடங்கினன்;
அப்போ(து) துண்டுதுண் டாயின பூட்டுகள்
திறந்து விரிந்தன செம்பலக் கதவுகள்.
முதிய வைனா மொயினனு மதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓ, நீ குறும்பா, லெம்பியின் மைந்தா,
எனது நண்பரில் இனிதுயர் நண்பன் 120
எடுக்கச் சம்போ ஏகுவை உள்ளே
பிரகாச மூடியும் பெறற்குச் செல்வாய்."
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அதாவது அழகிய தூர நெஞ்சினன்
ஆணை யிடுமுன் ஆயத்த மாகினன்
தயார்நிலை பெற்றனன் தானே தூண்டுமுன்
சம்போ பெறற்குத் தான்உட் சென்றனன்
பிரகாச மூடி பெறற்கே ஏகினன்
சென்றதும் அவ்விடம் செப்பினன் இங்ஙனம்:
செல்கையில் வீம்புரை செப்பினன் இவ்விதம்: 130
"என்னுள் இருப்பவன் எவ்வகை மனிதன்
மனுமுதல் வோனின் மைந்தனி னுள்ளே
சம்போ தூக்குதல் தான்நிகழ் இப்போ
திருப்புதல் நிகழும் திகழ்ஒளிர் மூடியும்
வலப்புற என்றன் வன்கா லுதவியால்
தொடுதலைக் காலணிக் குதியால் செய்தலால்."
அப்போது லெம்மின் கைனன் தூக்கினன்
அப்போ தூக்கினன் அப்போ திருப்பினன்
சம்போ வைக்கைத் தழுவிப் பெயர்த்தனன்
நிலத்தில் முழங்கால் அழுத்திப் பெயர்த்தனன்: 140
ஆயினும் சம்போ அசைந்திட வில்லை
பிரகாச மூடி பெயரவு மில்லை;
ஏனெனில் வேர்விட் டிருந்தன வேர்கள்
ஒன்பது மடங்கிலோர் **ஆறடி ஆழம்;
வடநிலத் தொருநல் வல்லெரு திருந்தது
உரம்பெறு முடலோ டுலவிய தெருது
அதன்விலாப் பக்கம் அதிவலு வுடையது
தரமா யமைந்தன தசைநார் அதற்கு
அதன்கொம் புகளோ ஆறடி நீளம்
வாய்க்கட்(டுத்) தடிப்பம் வரும்ஒன் பதடி. 150
எருதைப் புற்றரை யிருந்தே கொணர்ந்தனர்
வயற்கரை யிருந்து கலப்பையும் கொணர்ந்தனர்
சம்போ வேர்களை தாம்அதால் உழுதனர்
பிரகாச மூடியின் பெருந்தளை உழுதனர்
அப்போ சம்போ அசைந்தது மெதுவாய்
பிரகாச மூடியும் பின்னர் நகர்ந்தது.
முதிய வைனா மொயினன் அதன்பின்
அடுத்தவன் கொல்லன் அவன்இல் மரினன்
குறும்பன் லெம்மின் கைனன்மூன் றாமவன்
வியன்பெரும் சம்போ மேலே தூக்கினர் 160
வடநிலக் குன்றதன் மணிமுக டிருந்து
செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து
தங்கள்தோ ணிக்குத் தாமெடுத் தேகினர்
கப்பலின் உள்ளே கவனமாய் வைத்தனர்.
தம்பட குக்குச் சம்போ பெற்றனர்
படரொளிர் மூடியைப் பக்கத் திருத்தினர்
தள்ளித் தோணியைத் தண்ணீர் விட்டனர்
அலையினில் பலகைநூ றாலமை படகை;
புனல் தெறித்திடவே போனது படகு
அதன்பெரும் பக்கம் அலையினிற் சென்றது. 170
இவ்விதம் கொல்லனில் மரினன் கேட்டனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எங்குசம் போவை எடுத்துச் செல்லலாம்
எவ்வழிக் கொண்டு ஏகலாம் அதனை
இந்தத் தீய இடங்களி லிருந்து
அதிர்ஷ்டமில் இவ்வட அகல்நா டிருந்து?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அங்குசம் போவை எடுத்துச் செல்லலாம்
செல்லலாம் அத்துடன் திகழொளிர் மூடியும் 180
புகார்படி கடலதன் புணர்முனை நுனிக்கு
செறிபனிப் புகாருள தீவதன் கரைக்கு
அங்கே இருப்பது அதிர்ஷ்டம் ஆகலாம்
அத்துடன் என்றும் அங்கே யிருக்கலாம்;
இனியதோர் சிறுஇடம் இருக்கிற தங்கு
உண்மையில் மிகவும் உகந்த சிறுவிடம்
அடிபிடி யில்லை அயில்வது மில்லை
மானுடர் வாள்களின் மோதலு மில்லை."
முதிய வைனா மொயினன் அதன்பின்
அகன்றான் வடநிலம் அதிலே யிருந்து 190
நல்மன நிலையில் நனிபய ணித்தான்
உரியநாட் டுக்கு உவகையோ டேகினன்;
இவ்விதம் பின்னர் இயம்பினன் அவனே
"படகே திரும்புவாய் வடநா டிருந்து
வீட்டினை நோக்கி விரைவாய்த் திரும்புவாய்
பிறநாட் டின்திசை பின்புற மிருக்க.
மாருதம் தோணியை ஆராட் டிச்செல்
தண்ணீர் படகைத் தாலாட் டிச்செல்
வலிக்கும் துடுப்புக்(கு) வழங்குக உதவி
தொடர்துடுப் புக்கு தொடர்ந்தளி ஆறுதல் 200
அகன்று பரந்த அந்நீர்ப் பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்.
இந்தத் துடுப்புகள் இருந்தால் சிறியதாய்
துடுப்பை வலிப்பவர் அடைந்தால் தளர்ச்சி
சுக்கான் பிடிப்பவர் தோன்றினால் சிறியராய்
பெரும்பட கோட்டுவோர் பிள்ளைக ளானால்
உன்றன் துடுப்புகள் உதவுவீர், அஹ்தோ!
உயர்நீர்த் தலைவனே, உன்றன் படகினை!
தருவீர் புதியவை, தருவீர் சிறந்தவை,
உரமிகு மின்னொரு தரத்துடுப் பருள்வீர், 210
அமர்வீர் துடுப்புகள் அருகினில் நீரே
துடுப்புகள் வலித்தலைத் தொடருவீர் நீரே
உயர்மரப் படகினை ஓடிட வைப்பீர்
இரும்பின் சுக்கான் இயக்குவீர் நீரே
உயர்ந்த அலையின் ஊடாய்ச் செலுத்துக
வெண்ணுரை முடியுறும் விரியலை யூடாய்!"
முதிய வைனா மொயினன் அதன்பின்
விரைவாய் முன்னே வியன்பட கோட்டினன்
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
குறும்பன் லெம்மின் கைனன் அடுத்தவன் 220
துடுப்பை வலித்துத் தொடர்ந்தாங் கேகினர்
வலித்தனர் துடுப்பை வலித்துச் சென்றனர்
தெளிந்த கடலின் செறிநீ ரதன்மேல்
பரந்து விரிந்த படரலை களின்மேல்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"முன்னொரு காலம் என்வாழ் நாளில்
வலித்திடத் துடுப்பு வளநீர் இருந்தது
பாடிடக் கதைகளும் பாடகர்க் கிருந்தன
ஆயினும் இல்லை ஆம்இந் நாட்களில்
என்றுமே கேட்பது இல்லையே நாங்கள் 230
படகிலே மந்திரப் பாடல்கள் இல்லை
இசைத்தலைக் கேட்பதும் இல்லை யலைகளில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"படகிலும் மந்திரப் பாடலக்ள் இல்லை
இசைத்தலைக் கேட்பதும் இல்லை யலைகளில்;
மக்களைச் சோம்பலாய் மாற்றிடும் பாடல்கள்
துடுப்பு வலித்தலில் கொடுத்திடும் தாமதம்;
பொன்னாம் பகலதும் போய்விடும் வெறிதாய்
அற்புத மாயிரா அகன்றிடும் நடுவில் 240
இந்த அகன்ற இருநீர்ப் பரப்பிலே
பரந்து விரிந்து படரலை களின்மேல்."
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எப்படி யிருப்பினும் இப்பொழு திழியும்
அழகிய பகலும் அவ்வா றகலும்
இரவும் விரைவாய் எதிரே வந்திடும்
மாலைப் பொழுதும் வந்திடும் முன்னே
பாடா திருப்பினும் பதிவாழ் பொழுதே
என்றும் இசையா திருப்பினும் மனதில்." 250
முதிய வைனா மொயினன் சென்றான்
நீல நிறத்து நெடுமுயர் கடலினில்
சென்றான் ஒருநாள் சென்றான் இருநாள்
சென்றா னப்பா மூன்றாம் நாளிலும்
குறும்பன் லெம்மின் கைனனப் போது
இரண்டாம் முறையாய் இவ்வா றுரைத்தான்:
"வைனா மொயினநீ பாடா துளதேன்?
இசையா(த) தெதற்கு **இந்ந(ன்)னீர் மனிதனே?
நல்லசம் போநீ நன்கடைந் திப்போ
செல்கிறாய் அல்லவா திசைசரி யானதில்? 260
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
சரியாய் அவன்தான் சாற்றினன் மறுமொழி:
"பாடல்கள் பாட படர்ந்தில நேரம்
களித்து மகிழவும் காலம் வந்தில;
பாடல்கள் பாடப் படர்சரி நேரமும்
களித்து மகிழக் கனித்திடு காலமும்
கண்களில் சொந்தக் கதவுகள் பட்டிடும்
சொந்தக் கதவுகள் ஒலித்திடும் நேரமே!"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"சுக்கான் பிடிப்பது தொடர்நதுநா னானால் 270
என்னால் இயன்றள வினிற்குப் பாடுவேன்
வலுவுள வரையில் குயிலாய்க் கூவுவேன்;
இன்னொரு நேரம் இயலா தாகலாம்
இவ்வள(வு) சக்தியு மிலாமற் போகலாம்
பாடுவ தாகநீ பகர்ந்திடா திருப்பின்
தொடங்குவேன் பாடல் தொடர்ந்துநா னிப்போ."
குறும்பன் லெம்மின் கைனனு மங்கே
அவனே அழகிய தூர நெஞ்சினன்
உறுவா யசைத்து ஒழுங்கு படுத்தினன்
ஆயத்த மாக்கினன் அமைத்தே இசையை; 280
இசையை யமைத்தனன் இராக மெடுத்தனன்
கொடுபலத் தெளியவன் கூவத் தொடங்கினன்
கத்தத் தொடங்கினன் கடுங்கொடுங் குரலில்
காய்ந்த தொண்டையால் கதறத் தொடங்கினன்.
குறும்பன் லெம்மின் கைனன் பாடினன்
தூர நெஞ்சினன் பேர்குரற் கத்தினன்
தன்வா யசைந்தது தாடியா டிற்று
தனிஅவன் முகத்துத் தாடைகள் நடுங்கின;
தொடங்கவன் பாடல்கள் தொலைவிலும் கேட்டன
கேட்டது உளறல் நீர்த்துறைக் கப்பால் 290
ஆறு கிராமம் அனைத்திலும் கேட்டது
கடல்கள்ஓ ரேழுக் கப்பால் கேட்டது.
கொக்கொன்று வந்து கட்டையி லமர்ந்தது
இருந்தது உச்சியில் ஈரத்து மேட்டில்
எண்ணிக்கொண் டிருந்தது இணைவிரல் நகங்கள்
செய்தது முயற்சி செழுங்கால் உயர்த்த;
அதனுளத் தப்போ அச்சம் எழுந்தது
லெம்மின் கைனன் நிகழ்த்தும் பாடலால்.
நிறுத்திய ததன்செயல் நேராய்க் கொக்கது
அச்சத் தாற்கொடி தலறத் தொடங்கிய(து) 300
உடனே எழுந்தது உயரப் பறந்தது
பறந்தது நோக்கிப் படர்வட பால்நிலம்;
அவ்விடம் அப்புள் அடைந்ததன் பின்னர்
சதுப்பில் வடக்கே சார்ந்ததன் பின்னர்
அதுபினும் கொடிதாய் அலறிக் கிடந்தது
அவலக் குரலில் அதுகத் தியது:
அவ்விதம் வடக்கை அப்புள் எழுப்பிய(து)
சக்தி - கொடியதைத் தான்துயி லெழுப்பிய(து).
அந்த வடநிலத் தலைவி எழுந்தாள்
நீண்டநே ரத்து நித்திரை விட்டே 310
உயர்மாட் டுத்தொழு வுட்புறம் சென்றனள்
களஞ்சியக் கூடம் காண்பதற் கோடினள்
கால்நடை யாவும் கவனமாய் நோக்கினள்
சரிபிழை பார்த்தனள் தன்சொத் துடைமைகள்:
கால்நடை எதுவும் காணா(து) போயில
பொருள்பண் டங்கள் போகா திருந்தன.
பின்னர் பாறையின் குன்றவள் போயினள்
செப்பினால் இயைந்த செம்மலைக் கதவகம்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனள்:
"ஐயகோ, பாவிநான், ஆனஎன் வாழ்நாள், 320
எவனோ அன்னியன் இங்குவந் துற்றனன்
அனைத்துப் பூட்டையும் அவன்நொருக் கிட்டனன்
கோட்டைக் கதவுகள் கொடுமசைப் புண்டன
இரும்புத் தாள்கள் இங்குடை பட்டன
கொண்டுசெல் பட்டதா சம்போவிங் கிருந்து
அனுமதி யின்றியே அகற்றிடப் பட்டதா?"
ஆம்,அங் கிருந்து சம்போ அகன்றது
பட்டொளிர் மூடியும் பறிபோய் விட்டது
வடநிலக் குன்றதன் மணிமுகட் டிருந்து
செப்பினால் இயைந்தசெம் மலைகளி லிருந்து 330
பூட்டிய ஒன்பது பூட்டுகட் கப்பால்
பூட்டிய பத்தாம் பூட்டுக்கு மப்பால்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
கொண்டனள் அதனைக் கொடியதா யவளும்
தனது சக்திகள் தளர்வதை யுணர்ந்தாள்
தனததி காரம் தவறுதல் கண்டாள்
*புகார் மகளவளைப் பிரார்த்தனை செய்தனள்:
"பனிப்புகார்ப் பெண்ணே, பனிப்புகைப் பாவாய்!
உன்றன் முறத்தினால் உடன்புகார் பரப்பு
மூடு பனியினால் முற்றிலும் நிரப்பு 340
பனிப்பட லத்தை இறக்குசொர்க் கத்தால்
வானத் திருந்து வரட்டும்மூ டிடுபனி
தெளிந்த கடலதன் செறிவிரி பரப்பில்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்
வைனா மொயினனின் வழிதனைத் தடுக்க
அமைதிநீர் மனிதன் அகல்வதைத் தடுக்க.
இதுவும் போதா தின்னமு மென்றால்
**முதியவன் மைந்தா, முனைகட **லரக்கனே!
இருங்கட லிருந்துன் பெருந்தலை யுயர்த்து
அலைகளி லிருந்து அருஞ்சிரம் தூக்கு 350
கலேவா மக்களைக் கடற்கீழ் வீழ்த்து
அமைதிநீர் மனிதரை அடியினில் ஆழ்த்து
கட்டோ டழிப்பாய் கடுங்கொடு மனிதரை
ஆழியின் ஆழத் தலைகளின் கீழே
சம்போவைக் கொணர்வாய் தகுவட பால்நிலம்
அதுகீழ் விழாது அமர்ந்திடப் படகில்.
இதுவும் போதா தின்னமு மென்றால்
ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
வானத்தில் வாழும் மாபொன் அரசனே!
ஆட்சியை நடத்தும் வெள்ளிஆ ளுனனே! 360
கால நிலையினைக் கடுங்கொடி தாக்கு
எழுப்பு பாரிய இகல்கால் சக்தியை
காற்றை ஆக்கு கடுந்திரை அனுப்பு
நேராய் அந்த நெடும்பட கெதிராய்
வைனா மொயினனின் வழிதனைத் தடுக்க
அமைதிநீர் மனிதனின் அகல்போக் கடைக்க.
பனிப்புகார்ப் பெண்ணவள் பனிப்புகை பாவை
பரவையின் மீது பனிப்புகார் உயிர்த்தனள்
பனிப் படலத்தைப் பவனம் பரப்பினள்
முதிய வைனா மொயினனைத் தடுத்தனள் 370
மூன்று இரவுகள் முழுமையா யங்கே
நீல நிறத்துக் நெடுங்கடல் நடுவே
போக்கிடம் நோக்கி போகவொண் ணாமல்
எவ்விடம் நோக்கியும் ஏகவொண் ணாமல்.
மூன்று இரவுகள் முழுமையா யாறினன்
நீல நிறத்து நெடுங்கடல் நடுவே
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"தாழ்வுறும் மனிதர்த் தானும் நிகழா(து)
சோம்பல்மா னிடருக்குத் துளியும் நடவா(து) 380
அடர்பனிப் புகாரிலே ஆழ்ந்து போவது
பனிப் படலத்தில் பட்டுத் தோற்பது."
நெடுவாள் எடுத்து நீரைக் கிழித்தனன்
வாளினை ஓங்கி வன்கட லறைந்தனன்
சென்ற வாள் வழியில் மலர்த்தேன் தெறித்தது
வாள்கிழிப் பிடத்தில் வருநறை பறந்தது
பனிப்புகார் எழுந்தது நனிவான் நோக்கி
பனிப்புகை சென்றது பரந்துவிண் நோக்கி
பனிப்புகா ரின்றிப் பரவை இருந்தது
கவிழ்பனிப் புகாரிலாக் கடலலை இருந்தது 390
பரவை பரந்து பெரிதாய் விரிந்தது
பூமியும் அதனால் பொலிந்தது பெரிதாய்.
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
அப்போ(து) கேட்டது அங்கோர் பெருமொலி
சிவப்பு நிறத்தின் திகழ்பட கோரமாய்
திரைநுரை எழுந்தது பறந்தது உயர
வைனா மொயினனின் வன்பட கெதிராய்.
அங்கே கொல்லன் அவ்வில் மரினன்
அதிகம் பயந்தனன் அச்சம் கொண்டனன் 400
வதனத்(தில்) இரத்தம் வரண்டு காய்ந்தது
கன்னம் செந்நிறம் காணா தொழிந்தது;
கம்பளிப் போர்வையால் கவின்தலை சுற்றினன்
இருசெவிப் பக்கமும் இழுத்தே விட்டனன்
அதனால் முகத்தை அழகாய் மூடினன்
இருவிழி சீராய் இன்னும் மறைத்தனன்.
முதிய வைனா மொயினன் அவன்தான்
பக்கம் திரும்பிப் பார்த்தனன் தண்ணீர்
படகின் பக்கமாய்ப் பார்வை செலுத்தினன்
அதிசய மானது அவன்எதோ கண்டனன்: 410
ஆழி அரக்கனாம் அதிமுதி யோன்மகன்
சிவப்பு நிறத்துத் திகழ்பட கோரம்
பரவையி லிருந்துதன் பெருந்தலை உயர்த்தினன்
அலைகளி லிருந்துதன் அருஞ்சிரம் தூக்கினன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அவனைப் பிடித்தனன் அவன்செவி பற்றி
உறும்செவி பிடித்தே உயரத் தூக்கினன்
அவனை வினவினான் அவனுக் குரைத்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"முதியவன் மைந்தா, முனைகட லரக்கனே! 420
எதற்குக் கடலி லிருந்துநீ எழுந்தாய்
எதற்கு அலைகளில் இருந்துநீ வந்தாய்
மனித இனத்தின்முன் வந்தது எதற்கு
அதிலும் கலேவாவின் தனையன்முன் வந்தாய்?"
முதியவன் மைந்தனாம், முனைகட லரக்கன்
மனதிலே அதனால் மகிழ்ச்சி கொண்டிலன்
ஆயினும் அகத்தில் அச்சமும் கொண்டிலன்
அத்துடன் மறுமொழி அவன்எதும் தந்திலன்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அடுத்தும் கவனமாய் அவனும் கேட்டான் 430
உசாவினன் மும்முறை உரத்த குரலிலே
"முதியவன் மைந்தா, முனைகட லரக்கனே!
எதற்குக் கடலில் இருந்துநீ எழுந்தாய்
எதற்கு அலைகளில் இருந்துநீ வந்தாய்?"
முதியவன் மைந்தனாம், முனைகட லரக்கன்
மூன்றாம் வினவிய முறையின் போதினில்
மறுமொழி யாக வழங்கினன் ஒருசொல்:
"இதற்குக் கடலில் இருந்துநான் எழுந்தேன்
இதற்கு அலைகளில் இருந்துநான் வந்தேன்:
என்றன் நெஞ்சினில் இருந்தது இதுதான் 440
கலேவா இனத்தைக் கட்டோ டழிப்பது
ஏற்றுச் சம்போ ஏகுதல் வடபுலம்;
என்னைநீ அலைகளில் இட்டால் இப்போ
இந்த எளியோன் உயிரைநீ ஈந்தால்
மற்றொரு தடவைநான் வரவே மாட்டேன்
மானுட இனத்துமுன் வரவே மாட்டேன்."
முதிய வைனா மொயினனப் போது
அலைகளில் வீசினன் அவ்வெளி யோனை
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"முதியவன் மைந்தா, முனைகட லரக்கனே! 450
இருங்கட லிருந்துநீ எழுதலும் வேண்டாம்
திரைகளி லிருந்துநீ வருதலும் வேண்டாம்
மானுட இனத்துமுன் வரவே வேண்டாம்
இந்நாள் இருந்து இனிவர வேண்டாம்!"
அந்தநாள் தொடங்கி அதன்பின் என்றும்
எழுந்ததே இல்லை இருங்கட லரக்கன்
மானுட இனத்துமுன் வரவே யில்லை
சந்திர சூரியர் தாமுள வரையிலும்
நற்பகற் போது நனிவரு வரையும்
வானம் மகிழ்வுடன் வயங்கும் வரையிலும். 460
முதிய வைனா மொயினன் பின்னர்
தனது கப்பலைத் தான்முன் செலுத்தினன்
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
கணநே ரம்சில கடந்தே முடிந்தது
மானிட முதல்வன், மாபெருந் தேவன்,
அவரே வானகம் அனைத்தின் தந்தை
காற்றினை வீசக் கட்டளை யிட்டனர்
கொடிய காற்றுக் கொடிதாய் எழவே.
எழுந்தது காற்று எழுந்துவீ சிற்று
கொடிய காற்றுக் கொடிதா யெழுந்தது 470
மேற்புறக் காற்று மூர்க்கமாய் வந்தது
வடமேற் காற்று வன்மையாய் வந்தது
தென்புறக் காற்றும் வன்மமா யெழுந்தது
கீழ்க்கால் கொடிதாய் கிளர்ந்துகூ வியது
கோரமாய் தென்கீழ்க் காற்று மொலித்தது
உரத்தொலி இட்டது வடக்குக் காற்று.
மரங்களின் இலைகளை வன்கால் பறித்தது
ஊசி(யி)லை மரங்கள் உளஇலை இழந்தன
புதர்ச்செடி யாவும் பூக்களை இழந்தன
புல்லினம் யாவும் நற்றாள் இழந்தன 480
கருஞ்சே றுயர்ந்து கடல்மேல் வந்தது
தெளிந்து பரந்த திகழ்தண் ணீர்மேல்.
கொடுங்காற் றப்போ கடுமையா யெழுந்தது
அலைகள் எழுந்து அடித்தன படகை
கோலாச்சி எலும்பைக் கொண்டயாழ் எடுத்தன
மீனெலும் பினிலமை வியன்கலந்த லேயை
வெல்லமோ மக்களின் நல்லமைக் காக
அஹ்தோவின் நிலைபே றானஇன் பினுக்காய்;
அஹ்தோ அதனை அலைகளில் கண்டனன்
அஹ்தோவின் பிள்ளைகள் அதைத்திரை கண்டனர் 490
நல்லிசைக் கருவியை நன்கவ ரெடுத்தனர்
எடுத்துக் கொண்டதை இல்லத் தேகினர்.
முதிய வைனா மொயினனுக் காங்கே
கண்களில் துயரால் கண்ணீர் வந்தது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"என்றன் படைப்பு இவ்விதம் போனதே
போனதே என்றன் ஆசையாழ்க் கருவி
நிலைக்குமென் னின்பம் நேராய்த் தொலைந்ததே
இதனிலும் சிறந்தது இனிக்கிடைக் காது
என்றுமே இந்த இகதல மீதிலே 500
கோலாச்சி பல்லில் கொண்டபே ரின்பம்
மீனதன் எலும்பில் விளைந்த இன்னிசை."
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
மதிலே பெரிய மனத்துயர் கொண்டான்
உரைத்ததான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஐயகோ வாழ்நாள் அதிர்ஷ்டம் அற்றநான்
இந்தக் கடல்களில் இவ்விதம் வந்தேன்
திறந்து பரந்த திகழ்நீர்ப் பரப்பில்
காலடி வைத்தேன் கடும்சுழல் மரத்தில்
நடுங்கும் மரத்து நகர்பட கதனுள் 510
காற்றினை என்தலை மயிரும் கண்டதே
என்சிகை பயங்கர இக்கால் நிலையை
கண்டதென் தாடியும் கடுந்தீ நாட்களை
கண்டு கொண்டதிக் கடுந்தண் ணீரிலே;
ஒருவன் அரிதிலும் அரிதாய்க் காணலாம்
இதுபோற் காற்றை இதன்முன் நாட்களில்
இவ்வள வுயர்ந்த இக்கொடு மலைகளை
வெண்ணுரை முடியுடை விதமாம் அலைகளை;
இப்பொழு தெனக்கிக் காற்றே அடைக்கலம்
கடலின் அலைகளே கருணையின் புகலிடம்." 520
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அப்போ திவ்விதம் அவன்சிந் தித்தான்:
"எவருமே தோணியில் இங்கழ வேண்டாம்
எவ்விதப் புலம்பலும் இப்பட கணுகேல்;
அழுகைதுன் பத்தை அகற்றி விடாது
புலம்பல் தீய நாட்களைப் போக்கா."
பின்வரும் மொழிகளில் பின்அவன் சொன்னான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"புனலே, உன்றன் புத்திர னைத்தடு!
பேரலை யே,உன் பிள்ளையை நிறுத்து! 530
அஹ்தோ, இந்த அலைகளை அடக்கு!
வெல்லமோ, நீரின் **நல்லினம் அமர்த்து!
தெறியா திருக்கத் திண்தோ ணிப்**புறம்
**வங்கக் காலில்நீர் வந்துவீ ழாமல்.
எழுவாய் காற்றே, எழுவாய் விண்ணகம்!
அடைவாய் முகில்கள் அமைந்திடு மிடத்தை
உன்றன் இனத்தை உன்கூட் டத்தை
உன்சொந் தத்தை உன்குடும் பத்தை!
கவின்மரப் படகைக் கவிழ்த்து விடாதே
ஊசி(யி)லை மரப்பட குடன்புரட் டாதே 540
காட்டு வெளிமரங் களைவீழ்த் திடுக
குன்றத் தூசிக் கொழுமரம் புரட்டுக!"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"லாப்புவின் கழுகே இங்கே வருவாய்
உன்றன் இறகுகள் ஒருமூன் றளிப்பாய்
கழுகே மூன்று காக்கையே இரண்டு
பாதுகாத் தற்குஇப் படர்சிறு படகை
இப்பட கிழிந்ததன் மேற்புறம் ஆக!" 550
பலகைகள் கொஞ்சம் பார்த்தவன் சேர்த்தனன்
பக்கப் படகா யத்தப் படுத்தினன்
பலகைகள் மேலும் பக்கம் பொருத்தினன்
ஆறடி உயரம் அதுஎழும் வரையும்
உள்வரும் திரைகளை உடகன்தடுத் தற்காய்
நிறுத்தத் தெறிப்பதை நேர்கல மேற்புறம்.
போதிய பலகைகள் பொருந்தின அப்போ
படகிலே போதிய பக்கப் பலகைகள்
மூர்க்கமாய்க் கொடிய காற்றது வீச
மோதிப் பலமாய் மொய்ம்திரை தள்ள 560
நுரைதிரை யூடாய் நுழைந்துசெல் வேளை
உயர்ந்தெழு மலைமீ தூர்ந்துசெல் லுகையில்.
பாடல் 43 - சம்போவுக்காக நடைபெற்ற கடற்போர்
TOP
அடிகள் 1-22 : வடநிலத் தலைவி ஒரு போர்க் கப்பலைத் தயார் செய்து சம்போவைத்
திருடியவர்களைப் பின்தொடர்கிறாள்.
அடிகள் 23 - 258 : சம்போவைத் திருடியவர்களை வடநாட்டுத் தலைவி அடைந்தவுடன்,
கலேவா இனத்தவருக்கும் வட நிலத்தவருக்கும் இடையே போர் மூள்கிறது. போரில்
கலேவா இனத்தவர் வெல்கிறார்கள்.
அடிகள் 259 - 266 : போரில் வெற்றி பெறாத போதிலும் வடநிலத் தலைவி சம்போவைக்
கப்பலில் இருந்து கடலுக்கு இழுக்கிறாள். அவ்விதம் இழுக்கும் பொழுது, அது துண்டு
துண்டுகளாக உடைகிறது.
அடிகள் 267 - 304 : பெரிய துண்டுகள் கடலில் ஆழ்ந்து கடலின் செல்வங்கள் ஆகின்றன.
சிறிய துண்டுகளை அலைகள் அடித்துக் கரை சேர்க்கின்றன.
அடிகள் 305 - 368 : வடநிலத் தலைவி கலேவா மாகாணம் முழுவதையும் அழிப்பதாகப்
பயமுறுத்துகிறாள். அதைக் கேட்டு வைனாமொயினன் அஞ்சவில்லை.
அடிகள் 369 - 384 : வடநிலத் தலைவி சம்போவின் சிறு துண்டுகளைப் பெற்றுப் பெரும்
துக்கத்துடன் வடநாட்டுக்குப் போகிறாள்.
அடிகள் 385 - 434 : வைனாமொயினன் கரையில் கிடந்த துண்டுகளைக் கவனமாகச்
சேர்த்து, அவற்றை வளர்த்து, எதிர்காலத்தில் நல்ல செல்வம் உண்டாக்கலாம் என்று
எதிர்பார்க்கிறான்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
வடநில மக்களை மற்றொருங் கழைத்தனள்
கூட்டத் தார்க்குக் குறுக்குவில் கொடுத்தனள்
அனைத்துமா னிடர்க்கும் அளித்தாள் வாள்களை
முடித்தனள் கட்டி வடநிலப் படகை
தயார்செய் திட்டனள் சமர்க்கலம் ஒன்று.
ஏற்றினள் மனிதரை இயைந்ததன் கப்பலில்
ஒழுங்காய் அமர்த்தினள் உளபோர் வீரரை,
வாத்தொன் றுதன் வளரிளம் குஞ்சினை
ஓதக் கடல்வாத் தொழுங்காக் குதல்போல், 10
வாளுடன் இருந்தனர் மனிதர்கள் நூற்றுவர்
வில்லுடன் இருந்தனர் வீரர்கள் ஆயிரம்.
உயர்த்தி நிறுத்தினள் உடன்பாய் மரங்களை
**பாய்தூக்(கும்) கொம்பினைப் பார்த்தனள் கவனமாய்
பாய்களைக் கட்டினள் பாய்மரங் களிலே
மரங்களில் கட்டினள் வன்பாய்த் துணிகளை
நீண்டு கிடந்ததோர் நெடுமுகில் திரள்போல்
வானில் குழுமிய மேகக் கணம்போல்;
அவளும் புறப்பட லாயினள் அதன்பின்
புறப்பட லாயினள் போயினள் விரைந்து 20
இறங்கச் சம்போ எடுக்கும் முயற்சியில்
வைனா மொயினனின் வன்பட கிருந்து.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நீலக் கடலில் நிகழ்த்தினன் பயணம்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே
படகின் சுக்கான் பகுதியி லிருந்தே:
"ஓ,நீ குறும்பா, லெம்பியின் மைந்தா!
எனது நண்பரில் இனிதுயர் நண்பா!
ஏறு பாய்மர இகல்மேல் உச்சி
பெரும்பாய் மரத்தின் அரும்நுனி யடைவாய் 30
எதிர்ப்புறக் **கவிநிலை எவ்வா றெனவறி
வானப் பின்புற வகைநிலை ஆராய்
திகழ்வான் தெளிவாய்ச் சீராய் உள்ளதா
சீரா யுள்ளதா சீரற் றுளதா!"
குறும்பன் லெம்மின் கைனனப் போது
பையன் செந்நிறப் படுபோக் கிரிபின்
ஆணை யிடுமுன் ஆயத்த மாகினன்
தயார்நிலை பெற்றனன் தானே தூண்டுமுன்
பாய்மரக் கம்பப் படுமுச்(சி) ஏறினன்
பெரும்பாய் மரத்தின் அரும்நுனி அடைந்தனன். 40
பார்த்தனன் கிழக்கே பார்த்தனன் மேற்கே
பார்த்தனன் தெற்கும் படர்வட மேற்கும்
வடக்குக் கரையைக் குறுக்கே பார்த்தனன்
பின்வரும் மொழிகளில் பின்அவன் சொன்னான்:
"எதிர்ப்புறம் கவிநிலை இருப்பது தெளிவாய்
இரும்பின் புறவான் இருளா யுள்ளது:
வடதிசை ஒருசிறு மழைமுகி லுள்ளது
முகில்திரள் உள்ளது முன்வட மேற்புறம்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இங்குநீ நிச்சயம் இயம்பினை பொய்யுரை 50
அதுஒரு போதும் முகிலா யிராது
இல்லைச் சாத்தியம் இருந்திட முகில்திரள்
பாய்கள் கட்டிய படகே அதுவாம்
மீண்டும் கவனம் ஊன்றி யதைப்பார்!"
பார்த்தனன் மீண்டும் பார்த்தனன் கவனமாய்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்:
"தீவொன் றங்கே தெரிகிற(து) தொலைவில்
மிகத்தூ ரத்தில் மின்னலாய்த் தெரிகிற(து)
நிறைந்து **காட் டரசில் நிற்பன பருந்துகள்
மிலாறுவில் புள்ளி வீழ்கான் கோழிகள்." 60
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
இங்குநீ நிச்சயம் இயம்பினை பொய்யுரை
அவைபருந் துகளா யாகவே மாட்டா
குறும்புள்ளி வீழ்கான் கோழியு மாகா
வடநிலப் பையன் மாரவ ராவர்
கவனமாய்ப் பார்த்திடு அதைமூன் றாம்முறை!"
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
மூன்றாம் முறையாய் மீண்டும் பார்த்தான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 70
"வருவது வடநில வன்படகு கிப்போ
துடுப்பு வளையம்நூ றமை(த்த) படகு
துடுப்பில் நூற்றுவர் இருப்பவர் மனிதர்
ஆயிரம் மக்கள் அருகினில் உள்ளனர்."
முதிய வைனா மொயினனப் போது
உண்மை முழுவதும் உணர்ந்தே கொண்டனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"வல்இல் மரினனே, வலிப்பாய் துடுப்பை!
குறும்பன் லெம்மின் கைனனே, வலிப்பாய்!
ஒன்றாய் வலிப்பீர் உளஎலா மக்களும் 80
இந்தப் படகு இனிவிரைந் தோட
வேகமாய் இந்தத் தோணிமுன் னேற!"
வல்இல் மரினன் வலித்தனன் துடுப்பை
குறும்பன் லெம்மின் கைனன் வலித்தனன்
ஒன்றாய் வலித்தனர் உளஎலா மக்களும்
தொடர்கனப் பலகைத் துடுப்புகள் வளைந்தன
மோதின பேரியி லாம்உகை மிண்டு
நடுங்கிற் றூசி(இ)லை நன்மரப் படகு;
ஒலித்தது நீர்நாய் போல்முன் னணியம்
சுக்கான் இரைந்தது தொடர்நீர் வீழ்ச்சிபோல் 90
கொதித்த தண்ணீர் குமிழிக ளாயின
உருண் டோ டுற்று உயர்நுரை திரண்டு.
வீரர்கள் போட்டிபோல் விரைந்து செலுத்தினர்
மனிதர்பந் தயத்தொடு வலித்தனர் துடுப்பு
எனினும் பயணத் தில்லைமுன் னேற்றம்
விரைந்திட வில்லை வியன்மரப் படகு
பாய்விரித் தோடிய படகதன் முன்னே
வடபால் நிலத்தால் வருபட கதன்முன்.
முதிய வைனா மொயினனப் போது
தனக்கு அழிவு தான்வரல் உணர்ந்தான் 100
துயர்தரும் நாட்கள் தலைமேல் வருவதை
சிந்தனை செய்தான் சீருற நினைத்தான்
எங்ஙனம் இருப்பது எவ்விதம் வாழ்வது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதற்கொரு தந்திரம் இன்னமும் அறிவேன்
அதிசயம் கொஞ்சம் ஆக்கிநான் பார்ப்பேன்."
தீத்த(ட்)டிக் கற்களைத் தேடித் தடவினன்
தீத்த(ட்)டிப் பெட்டியுள் தேடித் துழாவினன்
தீத்தட்டிக் கல்லொன்று சிறிய தெடுத்தனன்
சின்னஞ் சிறியதோர் தீத்தட்டிக் கல்லினை 110
அதனைத் தூக்கி ஆழியில் எறிந்தனன்
அவனது இடப்புற அகல்தோள் மேலாய்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"எழட்டுமோர் கடலடி இகல்கற் பாறை
இரகசியத் தீவதாய் எழுந்திடட் டும்அது
வந்துமோ தட்டும் வடநிலப் படகதில்
பிளக்கட் டும்சதத் **துடுப்(பு)வளை(ய)ப் படகு
கடற்புயல் வந்து கடிதுராய் வேளையில்
திரைநுரை எழுந்து தேய்க்கும் போதினில்." 120
கடலின் பாறையாய் அதுபின் எழுந்தது
மாறிநின் றதுகடல் வலியதோர் குன்றமாய்
அதன்நீள் பக்கம் அமைந்தது கிழக்கே
மற்றதன் குறுக்கு வடபுறம் பார்த்தது.
வடநிலப் படகு வந்தது விரைவாய்
ஓடிவந் ததுவது உளஅலை நடுவே
அதுவந்து மோதிற் றதுகடற் பாறையில்
படகு குன்றினில் பட்டுமுட் டியது;
உடைந்து பறந்தது உயர்மரப் படகு
பலகைநூ றமைந்த படகு சிதைந்தது 130
கப்பலின் பாய்கள் கடலில் வீழ்ந்தன
பாய்கள் அசைந்து பறந்துகீழ் வந்தன
அவற்றைக் காற்று அள்ளிச் செலற்கு
புயலும் எழுந்து புரட்டிச் செலற்கு.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
கால்களி னாலே கடல்நீர் ஓடினள்
தாங்கப் படகினைத் தானவ்வா றோடினள்
கப்பலைத் தூக்கிக் கடலில் நிறுத்திட;
எனினும் படகை உயர்த்தினாள் இல்லை
தூக்கி நிறுத்தினாள் தோணியும் இல்லை; 140
உடைந்தே போயின உடன்எலாப் பக்கமும்
துடுப்பு வளையம் அனைத்தும் சிதறின.
சிந்தான செய்தாள் சீருற நினைத்தாள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"எவ்வகை யோசனை இதையடுத் தெழுவது
எவரது உபாயம் இருப்பது முன்னே?"
அவள்தன் உருவை அதன்பின் மாற்றினள்
வேறொரு விதமாய் மாற்றினள் வடிவை
ஐந்தரி வாள்கள் அவள்கை எடுத்தனள்
அத்துடன் தேய்ந்த ஆறுமண் வெட்டிகள் 150
அவற்றை மாற்றினள் அவளும் நகங்களாய்
அவள்தன் கைகளில் அதன்பின் மாட்டினள்;
உடைந்துபோய்ப் படகு கிடந்தது பாதி
அவள்தன் கீழே அதனை வைத்தனள்
பக்கப் பலகைகள் படர்சிறை யாக்கினள்
வலிக்கும் துடுப்பை வாலாய் மாற்றினள்
இருந்தனர் நூறுபேர் இணைசிற கின்கீழ்
வாலின் முனையில் மற்றா யிரம்பேர்
வாளுளோர் அவ்விடம் மற்றும் நூறுபேர்
எய்யும் வீரர்கள் இருந்தனர் ஆயிரம். 160
அவளும் பறந்திட அகல்சிறை விரித்தனள்
உயரத் தூக்கினள் உடன்தனைக் கழுகுபோல்;
உயரத் தெழுந்து ஒழுங்காய்ப் பறந்தனள்
அவனே வைனா மொயினனைத் தேடி;
ஒருசிறை மேலே உயர்முகில் தொட்டது
மறுசிறை கீழே வருநீர் பட்டது.
நீரின் அன்னை, நேரெழில் மங்கை,
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"முதிய வைனா மொயினனே! ஓ,நீ!
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பு 170
பார்வையை வடமேற் பக்கம் செலுத்து
திரும்பிச் சற்றே திகழ்பின் புறம்பார்!"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
செங்கதி ரோன்கீழ் சென்னியைத் திருப்பினன்
பார்வையை வடமேற் பக்கம் செலுத்தினன்
சற்றே திரும்பித் தன்பின் நோக்கினன்:
வடநில மாது வந்துகொண் டிருந்தனள்
அதிசயப் பறவை அதுபறந் திருந்தது
பார்த்தால் தோள்களைப் பறக்கும் கருடன்
**இராட்சசக் கழுகுபோல் இருந்தது உடலும். 180
வைனா மொயினனை அதிசயப் படுத்தினள்
பாய்மர நுனியின் பக்கமாய்ப் பறந்தனள்
பாய்மரம் பெரியதன் பக்கமாய் விரைந்தனள்
பாய்மர உச்சியில் மேலாய் நின்றனள்;
படகு அடியில் அமிழப் பார்த்தது
கப்பல் புரண்டு கவிழப் பார்த்தது.
அங்கே கொல்லன் அவ்வில் மரினன்
தன்தேவ தைக்குத் தன்னையர்ப் பணித்தான்
தன்இறை கருணையைத் தானே நம்பினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்: 190
"வலிய தெய்வமே, வந்தெமைக் காப்பாய்
எழிலார் தெய்வமே, எங்களைக் காத்தருள்!
பையன் தொலைந்து செல்லா திருக்க
அன்னையின் பிள்ளை அழியா திருக்க
படைத்தவன் படைத்த படைப்பு(க்)க ளிருந்து
ஆக்கிய இறைவனின் ஆக்கத் திருந்து.
மனுமா முதல்வனே, மாபெரும் தேவே!
விண்ணுல கத்து மேதகு தந்தைநீர்!
அனல்உடை ஒன்றை அருள்வாய் எனக்கு
அணிவாய் எனக்கு அனல்வீ சாடையை 200
அதன்கா வலிலே ஆற்றுவேன் போரை
அதன்பின் நின்று அமர்நான் புரிவேன்
இன்னல்என் தலைக்கு ஏற்படா திருக்க
தலைமயி ருக்கு அழிவேற் படாமல்
ஒளிரும் இரும்புவாள் உயர்விளை யாட்டில்
உருக்கினால் ஆன உயர்கூர் வாள்முனை."
முதிய வைனா மொயினன் அவனே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, வடபுலத் தேசத் தலைவியே!
சம்போ(வை) இப்போ சரிபங் கிடுவமா 210
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள திவதன் கரையில்?"
வடநிலத் தலைவி வருமா றுரைத்தாள்:
"என்றும் பகிர்தலே இலைச்சம் போவை
எளியமா னுடனே இல்லை உன்னுடன்!
வைனா மொயினனே உன்னுட னில்லை!"
சம்போ(வைப்) பற்றத் தானே முயன்றாள்
வைனா மொயினன் வன்பட கிருந்து.
குறும்பன் லெம்மின் கைனனனு மங்கே
இடுப்புப் பட்டியி லிருந்துவா ளுருவினன் 220
உருக்கினா லான உயரல குருவினன்
இடப்புற மிருந்து இழுத்தான் வாளை
குறிபார்த் தறைந்தனன் கொடுங்கழு கின்கால்
பறவையின் பாதம் படஉரத் தறைந்தனன்.
குறும்பன் லெம்மின் கைனன் அறைந்தனன்
அறைந்தனன் அத்துடன் உரைத்தனன் இவ்விதம்:
"வீழ்க மானுடர் வீழ்க வாளெலாம்
வீழ்க சோம்பல் மிகவுடை மனிதரும்
இறகின் கீழுறும் ஒருநூற் றுவரும்
பருசிறை நுனியமர் பதின்மரும் வீழ்க!" 230
வடபுல முதியவள் வருமா றியம்பினள்
உச்சிப் பாய்மரத் துள்ளோள் கூறினள்:
"ஓ, நீ குறும்பா லெம்பியின் மைந்தா!
இழிந்தோய், எளிய ஏ, தூர நெஞ்சின!
சொந்தஉன் அன்னையை விந்தைஏ மாற்றினை
உன்பெற் றோர்க்கு உரைத்தனை பொய்யுரை;
போர்க்களம் போகேன் என்றுநீ புகன்றனை
ஆறு, பத்துக் கோடைகா லத்தில்
பொன்னை விரும்பியும் போகேன் என்றனை
வெள்ளி வேண்டியும் விரையேன் என்றனை." 240
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
எண்ணினன் கூடிய தென்றே நேரமும்
தருணம் வந்ததாய்த் தானே உணர்ந்தனன்;
இழுத்தனன் கடலில் இருந்தே துடுப்பினை
சிந்துர மரத்தின் துண்டை அலைகளில்
அறைந்தனன் அதனால் அம்முது மாதை
கழுகின் சிற்சில கடும்உகிர் அடித்தனன்
விழுந்தன ஏனைய **வள்ளுகிர் நொருங்கி
இருந்தது ஒருசிறு எஞ்சிய விரலே. 250
பையன்கள் வீழ்ந்தனர் பருமிற கிருந்தோர்
திரைகடல் வீழ்ந்து தெறித்தனர் மானுடர்
சிறகுகீழ் இருந்த ஒருநூறு மாந்தரும்
வாலதன் பக்க வீரரா யிரவரும்
கழுகும் தானாய்க் கடிதுகீழ் வந்தது
கப்பலின் வங்கக் கட்டைமோ தியது
மரத்தினால் வீழும் வனக்கோ ழியைப்போல்
ஊசி யிலைமரத் தொருஅணி லைப்போல்.
சம்போகைப் பற்றத் தான்முயன் றனள்பின்
அவள் தன்மோதிர அணியுறும் விரலால் 260
சம்போவை அப்போ தண்ணீர்ப் போட்டனள்
ஒளிரும் மூடி முழுதையும் வீழ்த்தினள்
படர்செம் படகின் பக்கத் திருந்து
நீல நிறத்து நெடுங்கடல் நடுவில்
சம்போ உடைந்து துண்டுக ளானது
ஒளிரும் மூடியும் உதிர்துணுக் கானது.
அவ்விதம் சென்றன அந்தத் துண்டுகள்
சம்போவின் உடைந்த தகுபெருந் துண்டுகள்
அமைதி நீரின் அடிக்குச் சென்றன
கரிய சேற்றின் கனமடி சென்றன. 270
தண்ணீர்க் காயவை தாம்விடப் பட்டன
அஹ்தோ இனத்துக் காம்நற் புதையலாய்;
வளருமிவ் வுலகின் வாழ்நா ளிலி(ல்)லை
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்
செல்வம் வேண்டிய தில்லைநீ ருக்கு
நிகரிலாத் திரவியம் நீரஹ் தோவுக்(கு).
உடைந்த ஏனைய உண்மைத் துண்டுகள்
மிகமிகச் சிறிய வியன்துண் டாவன
விழுந்தன நீல விரிகடற் பரப்பில்
பரந்த கடலின் படரலைச் சேர்ந்தன 280
காற்று அதைத்தா லாட்டிச் செல்ல
கடலலை அவற்றைக் கடத்திப் போக.
அவ்விதம் கால்தா லாட்டிச் சென்றது
கடலலை அவ்விதம் கடத்திச் சென்றது
நீலக் கடலின் நீர்ப்பரப் பினிலே
பரந்து விரிந்த படர்கட லலையில்
காற்றுத் தள்ளிச் சேர்த்தது தரையில்
கடலலை கடத்திக் கரையிடைச் சேர்த்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
எறிநுரை அவற்றை எறிந்ததைக் கண்டான் 290
செறிதிரை தரையில் சேர்த்ததைக் கண்டான்
கண்டனன் சேர்த்ததைக் கடலலை கரையில்
சம்போவின் சிறிய தகுதுண் டுகளை
பிரகாச மூடியின் சிறுதுண் டுகளை.
அதனால் அவனும் ஆனந்த முற்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"விதையின் முளைஅதில் இருந்துண் டாகும்
நிலைபெறும் இன்பம் அதிலுரு வாகும்
உழுதலி லிருந்து உறும்விதைப் பிருந்து
அதிலே எல்லா அரும்வகை வளரும் 300
அதிலே குளிர்மதி அகல்நிலாத் திகழும்
சிறந்த சூரியத் திகழொளி ஒளிரும்
பின்லாந்து நாட்டின் பெருந்தோப் பெல்லாம்
பின்லாந்து நாட்டின் நன்னில மெல்லாம்."
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"இதற்கொரு தந்திரம் இன்னமும் அறிவேன்
அறிவேன் இன்னமும் ஒருவழி காண்பேன்
உன்உழ வுக்கெதிர் உன்விதைப் புக்கெதிர்
உன்கால் நடைக்கெதிர் உன்பயிர் கட்கெதிர் 310
தவழும் நின்றன் தண்மதிக் கெதிராய்
ஒளிவிடும் ஆதவன் உயர்கதிர்க் கெதிராய்
பாறைக் கல்லுள் பால்நிலாத் திணிப்பேன்
அருணனைக் குன்று அதன்நடு மறைப்பேன்
உயர்குளிர் வந்து உறையச் செய்வேன்
நிறுத்திக் குளிர்நாள் நிலையினை வைப்பேன்
உன்றன் உழுதலில் உன்றன் விதைத்தலில்
உன்தா னியத்தில் உன்அறு வடையில்
இரும்புக் குண்டு எறிமழை பொழிவேன்
உருக்குத் துண்டாய் ஊற்றுவேன் மாரி 320
நன்கு வளர்ந்தஉன் நற்பயிர் மீது
உன்றன் சிறந்த உயர்வயல் களின்மேல்.
கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்புவேன்
பெரியபற் பிராணியை நறுந்தேவ தாருவில்
உன்விறல் அடக்கிய உயர்பரி அழிக்க
பெண்பரி அனைத்தையும் கொன்றே முடித்திட
கால்நடை யாவையும் கவிழ்த்தே வீழ்த்திட
பசுவினம் முழுதையும் பரப்பிடச் சிதறி;
அனைத்துமக் களையும் அழிப்பேன் நோயினால்
உன்றன் இனத்தை ஒன்றிலா தொழிப்பேன், 330
என்றுமே இந்த எழில்நில வுளவரை
அவர்களைப் பற்றி அவனியில் பேச்செழா(து)."
முதிய வைனா மொயினனப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"என்னைப் பாடி லாப்பியர் சபித்தலும்
துர்யா மனிதரின் திணிப்பும் நடவா;
கவிநிலைக் கட்டுமம் கடவுளி னிடத்திலும்
அதிர்ஷ்டத் திறவுகோல் ஆண்டவ னிடத்துள,
கடுங்கொடு மனிதர் கைகளில் அவையிலை
வெறுப்பவர் விரல்களின் விறல்நுனி யிலுமிலை. 340
நல்லிறை காப்பை நாடிநான் நின்றால்
கடவுளா ரிடத்தில் புகலிடம் பெற்றால்
என்பயிர்ப் புழுவை இல்லா தாக்குவார்
என்நிதி யிருந்து எதிரியை நீக்குவார்
தானியப் பயிர்வேர் தான்கிளம் பாமல்
விளைபயிர் எதுவும் வீழ்த்தப் படாமல்
எனதிளம் முளைகளை எடுத்தே காமல்
எனதுசெல் வங்கள் எதுவும் கெடாமல்.
நீ,வட பாலுள நிலத்தின் தலைவி,
பாறையில் திணிப்பாய் படுதுய ரெடுத்து 350
குன்றிலே அழுத்துவாய் கொடுமைகள் அனைத்தையும்
மலையின் முடியிலே வருநோ வேற்றுவாய்
ஆயினும் என்றுமே அல்லநல் மதியை
என்றுமே அந்த இரவியை அல்ல!
வந்து கடுங்குளிர் வலிதுறை யட்டும்
நின்று குளிர்கவி நிலைநிலைக் கட்டும்
உனக்குச் சேர்ந்த உன்னுடை முளைகளில்
நீயே விதைத்த நின்னுடை விதைகளில்
இரும்புக் குண்டு இயைமழை எழட்டும்
உருக்குத் துண்டு மாரியூற் றட்டும் 360
உனது சொந்த உழவதன் மேலே
வடபால் நிலத்து வயல்களின் மீதே!
கவின்பசும் புற்றரைக் கரடியை எழுப்பு
சினமுறும் பூனையை செறிபுத ரிருந்து
வளையுகிர்ப் பிராணியை வன்கா டிருந்து
ஊசி(யி)லை மரத்தடி **எயிறகல் மிருகம்
வடபால் நிலத்தின் வழிஒழுங் கைகளில்
வடபுலக் கால்நடை நடந்துசெல் தடத்தில்."
அந்த வடநிலத் தலைவியும் அதன்பின்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 370
"இப்போ தென்வலு இறங்குகிற தென்னால்
வற்றி வடிந்தென் வல்லமை போகிற(து)
என்றன் செல்வம் ஏகிய தாழியுள்
நொருங்கிச் சம்போ நுடங்கலை வீழ்ந்தது!"
அழுதுகொண் டவள் அடைந்தனள் இல்லம்
புலம்பிக் கொண்டவள் போயினள் வடநிலம்,
கிடைத்தவை இவையென வழுத்துதற் கில்லை
முழுச்சம் போவிலும் **முயன்றில் கொணர்ந்தவை;
ஆயினும் சிறிதே அவள்கொண் டேகினள்
தனது மோதிரத் தனிவிர லதிலே; 380
வடநாட் டுக்கவள் கொணர்ந்தாள் மூடியை
கைப்பிடி கொணர்ந்தனள் காண்சரி யோலோ;
வடநிலத் ததனால் வறுமையும் வந்தது
வந்தது ரொட்டியில் வாழ்வுலாப் பினிலே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அவனே கரையை அடைந்திடு நேரம்
சம்போத் துண்டுகள் தம்மைக் கண்டனன்
ஒளிரும் மூடியின் உடைதுகள் கண்டனன்
ஓதநீர்க் கரையின் ஓரப் பகுதியில்
மென்மை மணல்கள் விரவிய இடத்தில். 390
சம்போதத் துண்டுகள் தானெடுத் தேகினன்
வியனொளிர் மூடியின் வேறுபல் துண்டுகள்
புகார்படி கடலதன் புணர்முனை நுனிக்கு
செறிபனிப் புகாருள தீவதன் கரைக்கு
வளர்த்தெடுப் பதற்கு வளப்பெருக் குக்கு
விளைவிப் பதற்கு விரிசெழிப் புக்கு
பாரர்லித் தானியப் பருகுபீர்ப் பானமாய்
**தானிய உணவாம் தட்டிய ரொட்டியாய்.
முதிய வைனா மொயினனு மாங்கே
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 400
"தந்தருள் கர்த்தனே, தந்தருள் இறைவனே!
தந்தருள் பாக்கியம் தான்நிறை வாழ்வை
என்றும் சிறப்பாய் இனிதுவாழ் வரத்தை
தந்தருள் மேன்மை தான்மிகு மரணம்
இப்பின் லாந்து இனிமையாம் நாட்டில்
கவின்நிறைந் திடுமிக் கர்யலாப் பகுதியில்.
நிலைபெறும் தெய்வமே, நீகாப் பருள்வாய்!
இனியஎம் இறைவனே, இனிக்காப் பாயிரும்!
மனிதரின் தீய மனநினை வவைக்கு
முதிய மாதரின் சதிநினை வவைக்கு; 410
கொடும்புவிச் சக்திகள் குப்புற வீழ்த்துவீர்
புனற்சூ னியத்தரைப் புவியில்வென் றருளுவீர்.
உமது மக்களின் உறுமருங் கிருப்பீர்
என்றும் பிள்ளைகட் கிருப்பீர் உதவியாய்
நிசியில்எப் போதும் நிற்பீர் காவலாய்
பகலிலும் தருவீர் பாதுகாப் பினையே
ஒளிர்கதிர் கொடிதாய் ஒளிரா திருக்க
திகழ்மதி கொடிதாய்த் திகழா திருக்க
விரிகால் கொடிதாய் வீசா திருக்க
பொழிமழை கொடிதாய்ப் பொழியா திருக்க 420
உறுகுளிர் வந்து உறையா திருக்க
கொடிய கவிநிலை கூடா திருக்க.
இரும்பால் வேலி ஒன்றியற் றிடுவீர்
கல்லால் கோட்டை ஒன்றைக் கட்டுவீர்
என்றன் வதிவிடம் இதனைச் சுற்றியே
என்னின மக்களின் இரண்டு பக்கமும்
மண்ணிலே யிருந்து விண்ணகம் வரைக்கும்
விண்ணகத் திருந்து விரிபுவி வரைக்கும்
என்றுமே வாழ்விடம் எனக்கா கட்டும்
புகலிட மாக புனர்காப் பாக 430
எதிரிகள் உணவை எடுத்துணா திருக்க
செல்வம் பகைவர் திருடா திருக்க
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்!
பாடல் 44 - வைனாமொயினனின் புதிய யாழ்
TOP
அடிகள் 1 - 76 : வைனாமொயினன் தனது தொலைந்த யாழைக் கடலில் தேடிப்
பார்க்கிறான்; ஆனால் கிடைக்கவில்லை.
அடிகள் 77 - 334 : வைனாமொயினன் மிலாறு மரத்திலிருந்து ஒரு புதிய யாழைச்
செய்து, அதனை மீட்டி, எல்லா உயிரினங்களும் இன்பம் அளிக்கிறான்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தன்மூ ளையிலே தான் சிந்தித்தான்:
"இசைப்பது பொருத்தமாய் இருக்கும் இப்போ
இரசித்து மகிழ்வதும் இருக்கும் நன்றாய்
இப்போ வந்துள இப்புதுச் சூழ்நிலை
இந்த அழகிய இனியதோட் டவெளி;
ஆயினும் கந்தலே அதுதொலைந் திட்டது
இன்பமும் அடியோ டில்லா தானது
வாழும் மீன்களின் வதிவிடங் களுக்கு
வஞ்சிரம் வாழும் வன்பா றைக்கு 10
ஆழியின் ஆழம் ஆள்பவர் கட்கு
வெல்லமோ வினது மன்னுயிர் கட்கு
கொணரப் போவது அதைமீண் டுமிலை
அஹ்தோ மீண்டும் அதுதரு வதுமிலை.
ஓ,நீ கொல்ல, உயர்இல் மரின!
முன்னரும் நேற்றும் முனைந்தே செய்தனை
இன்றும் ஒன்றை இயற்றுவாய் அங்ஙனம்
இரும்பிலே வாரி இனிதொன் றாக்குவாய்
மூட்டுக வாரி முட்களை நெருக்கி
நெருக்கமாய் முட்கள் நீளமாய்க் கைபிடி 20
அதனால் நானும் அலைகளை வாருவேன்
திரைகளை அதனால் தினம்நான் கலக்குவேன்
வாரிபுற் படுகையை வைக்கோற் போராய்
கரைகளைக் கூலக் கதிராய் அலசுவேன்
யாழிசைக் கருவியை மீளப் பெறநான்
கந்தலே என்னும் கருவியை அடைய
உறையும் மீனினத் துறைவிடங் களிலே
வஞ்சிரம் வாழும் வன்கற் பாறையில்!"
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
கவின்அழி வில்லாக் கைவினைக் கலைஞன் 30
ஆக்கினன் வாரியை அகல்உலை இரும்பால்
அதற்குச் செப்பிலே அமைத்தான் கைபிடி
அதன்முன் நீளம் **அறுறூ றடியாம்
அதன்கைப் பிடியோ **ஐந்நூற் றாறடி.
முதிய வைனா மொயினன் அதன்பின்
எடுத்தனன் இரும்பினால் இயற்றிய வாரியை
அடிவைத் தேகினன் அவன்சிறு பாதையில்
செய்தனன் பயணம் சிறுதொலை தூரம்
உருக்கினால் செய்த உருளையின் இடத்தே
செப்பினால் செய்த செறிபட குத்துறை. 40
படகுகள் இருந்தன படகிரண் டவ்விடம்
இருந்தன படகுகள் இரண்டா யத்தமாய்
உருக்கினால் செய்த உருளைகள் மீதினில்
செம்பினால் செய்த செறிபட குத்துறை:
அவற்றிலோர் படகு அதிபுதி தானது
இன்னொரு படகு இருந்தது பழையது.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
புகன்றனன் இருந்த புதுப்பட குக்கு:
"செல்வாய் படகே தெளிபுனல் மேலே
தோணியே விரைவாய் தொடர்திரை களின்மேல் 50
உன்னைக் கைகளால் உறப்புரட் டாமல்
விரல்கள் வைத்து விரைந்துனைத் தொடாமல்!"
சென்றது படகு தெளிபுனல் மேலே
தோணி விரைந்தது தொடர்திரை மீது;
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தானே சுக்கான் தன்மருங் கமர்ந்தனன்
கடலைப் பெருக்கிக் காணப் போயினன்
அலைகளைக் கூட்டி அலசப் போயினன்;
நீராம் பல்மலர் நிறைத்தொன் றாக்கினன்
குப்பைகூ ளத்தைக் கொணர்ந்தனன் கரைக்கு 60
கோரைத் துணுக்குகள் வாரிக் குவித்தனன்
கோரைத் துணுக்குகள் நாணல் துண்டுகள்
ஆழப் பகுதிகள் அனைத்தும் வாரினன்
அகல்கற் பாறைகள் அனைத்தும் வாரினன்
காணவும் இல்லைக் கைப்பட வும்மிலை
இயைந்தகோ லாச்சி எலும்புக் கருவியை
அடியோ டிசைநலம் அழிந்தே போனது
கந்தலே யாழும் காணா தொழிந்தது.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இல்லம் நோக்கி எடுத்தடி வைத்தனன் 70
தாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்
உயர்ந்த தொப்பியும் உறச்சரிந் திருந்தது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதன்மேல் என்றும் இருக்கமாட் டாது
கோலாச்சி எயிற்றில் மிழற்றிய இன்னிசை
மீனின் எலும்பினில் விளைந்த பண்ணிசை."
அடவியின் வெளியில் அவனே குகையில்
வனத்தின் எல்லையில் வந்தநே ரத்தில்
அங்கொரு மிலாறு அழுததைக் கேட்டனன்
புரிசுருள் மரத்தின் புலம்பொலி கேட்டனன்; 80
அதன்பக் கத்தை அவன்சென் றடைந்தனன்
அருகில் சென்றனன் அருகில் நின்றனன்.
வினவினன் இவ்விதம் விளம்பினன் இவ்விதம்:
"அழகுறும் மிலாறுவே, அழுவது எதற்கு?
பச்சிளம் மரமே, புலம்புதல் எதற்கு?
**வெண்ப(ட்)டி மரமே, விசனமும் எதற்கு?
இகல்போர்க் குன்னை எடுத்தே கிடார்கள்
செருதற் கில்லைத் தேவைப் படுவதும்."
திறமாய் மிலாறு செப்பிய திப்பதில்
பசுமை மரமும் பகர்ந்தது இவ்விதம்: 90
"ஆமப்பா சிலபேர் அறைவர் இப்படி
சிலபேர் இப்படிச் சிந்தனை செய்வர்
மற்றுநான் இங்குநல் மகிழ்வுட னிருக்கிறேன்
உவகையில் திளைத்து உயிர்வாழ் கிறேனென;
எளிய மரம்நான் இன்னலில் இருக்கிறேன்
துன்பத் திலேதான் இன்பம் காண்கிறேன்
அல்லல் நாட்களில் அகப்பட் டுழல்கிறேன்
முன்மனத் துயரால் முணுமுணுக் கின்றேன்.
அழுகிறேன் எனது அறியா(மை) வெறுமைக்(கு)
பயனிலா என்நிலை பார்த்துப் புலம்பினேன் 100
அதிர்ஷ்ட மற்றநான் ஆத()ர மற்றநான்
அல்லலே பட்டநான் அபலையு மானநான்
தீமைகள் நிறைந்தவித் தீதா மிடங்களில்
திறந்து பரந்தவிச் செறிபுல் வெளிகளில்.
பேறுபெற் றவர்கள் பெருங்களி கொண்டவர்
என்றுமே அவர்கள் இதையெதிர் பார்ப்பர்
அழகிய கோடை ஆம்பரு வம்வர
வியன்சீர்க் கோடை வெப்ப நிலைவர;
ஆயினும் மடமைக் காளாம் நானோ
அச்சம் கொண்டு அல்லற் படுகின்றேன்; 110
உரியஎன் பட்டை உரிக்கப் படுவதால்
இலையுள கிளைகள் எடுத்திடப் படுவதால்.
அனேகமாய் என்றன் ஆம்இருள் நிலையில்
பெரும்பா(உம்) என்றன் பேரிருள் நிலையில்
விரைந்தே செல்லும் வசந்தப் பிள்ளைகள்
எனது மருங்கே இனிதே வருவார்
கிடைத்தஐங் **கத்தியால் கீறிக் கிழிப்பர்
சாறுஆர் வயிற்றைத் தாம்பிளந் தகற்றுவர்;
கோடைகா லத்தில் கொடிய இடையர்கள்
என்வெண் பட்டியை எடுத்துச் செல்வர் 120
நீர்ப்பைக் கொன்று, நெடுவாள் உறைக் கொன்(று),
இன்னொன்று சிறுபழம் எடுத்தகல் கூடைக்(கு).
அனேகமாய் என்றன் ஆம்இருள் நிலையில்
பெரும்பால்(உம்) என்றன் பேரிருள் நிலையில்
பெண்டிர் வருவார் என்கீழ் இருப்பார்
கூடியென் பக்கம் கும்மாள மிடுவார்
இலையுள கிளைகளை எடுப்பார் வெட்டி
**இலைக்கட் டமைத்துக் கிளைகளை முடிப்பார்.
அனேகமாய் என்றன் ஆம்இருள் நிலையில்
பெரும்பால்(உம்) என்றன் பேரிருள் நிலையில் 130
வெட்டி யெரிக்க வீழ்த்தப் படலுள
விறகாய் எரிக்க வெட்டிப் பிளப்புள
மூன்று முறைகள் மொழியுமிக் கோடையில்
இந்தக் கோடை இயைகா லத்தில்
என்கீழ் வருவார் இருப்பர் மனிதர்
கோடரி எடுப்பர் கூர்மைப் படுத்துவர்
ஏழைஎன் தலையை வீழத் தறிக்க
வலிமை குறைந்தஎன் வாழ்வினை முடிக்க.
கோடை காலக் குதூகலம் அதுவாம்
சிறப்புறு கோடைத் தினக்களிப் பிதுவாம்; 140
அதிலும் சிறப்பாய் ஆகா குளிர்நாள்
அதிலும் நன்றாய் ஆகா பனிநாள்.
அனேகமாய் முன்பெலாம் அமையு மிவ்வாறு
துயரமே என்றன் தோற்றம் மாற்றிடும்
தலையும் மாறிடும் தனிப்பெரும் பாரமாய்
வெளுத்து முகமும் வெண்ணிற மாகிடும்
நினைவிலே ஓடி நிதம்வரும் இருள்நாள்
தீய காலமும் சிந்தையில் வருமே.
இன்னலைக் கொணரும் இதன்பின் காற்று
கவலையீன் பனிப்புகார் கவனித் திடும்பின்: 150
என்பசும் மேலுடை எடுத்தே கிடும்கால்
எழிற்பா வாடையை எடுக்கும் கவிழ்பனி
அதனால் எனக்கோ அதிகம் பொருளில
எளிய மிலாறுநான் இங்கொரு பாவி
நிர்வ()ண மாக நிற்கிறேன் இவ்விடம்
ஆடைகள் முற்றாய் அணியா நிற்கிறேன்
உயர்கடும் குளிரால் உதற லெடுக்கிறேன்
நனிப்பனிப் புகாரால் நடுங்கிக் கிடக்கிறேன்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"அழகுபைம் மரமே, அழுதலும் வேண்டாம்! 160
பொற்பசுந் தழையே, புலம்பலும் வேண்டாம்!
வெண்ணிற் பட்டியே, இன்னலும் வேண்டாம்!
பெறுவாய் நீயும் பெரும்பாக் கியத்தை
இனிய வாழ்வினை எழிற்புது வாழ்வினை;
களிப்பின் கண்ணீர் காண்பாய் விரைவில்
மகிழ்ச்சியைக் கண்டு மனங்களி கூர்வாய்."
முதிய வைனா மொயினன் அதன்பின்
இசைநற் கருவியாய் இயற்றினன் மிலாறுவை;
ஒருகோடை நாள்முழு துவந்தே செதுக்கினான்
கந்தலே யாழாம் கருவியை இயற்றினான் 170
புகார்படி கடலதன் புணர்முனை நுனியில்
செறிபனிப் புகாருள தீவதன் கரையில்
கந்தலே கருவியின் கவினுருச் செதுக்கினன்
புத்திசை இன்பப் பொலிவுட லமைப்பை
வைர மிலாறுவில் வடிவம் வந்தது
உறுசுருள் மிலாறுவில் உடலமைப் பானது.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"அதோஇருக் கிறது எழிற்கந் தலேயுரு
அழியா இன்பத் தழகுட லமைப்பு 180
எனினும் முளைகளை எங்கே பெறலாம்
எங்கே பெறலாம் இதன்முறுக் காணிகள்?"
தொழுவமுன் றிலில்சிந் தூரம் வளர்ந்தது
முற்றத் தெல்லையில் முதிர்ந்ததோர் உயர்மரம்
சிந்துர மரத்தில் சிறப்புறும் கொம்புகள்
ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு **பழமாம்
ஒவ்வொரு பொற்பந் தொவ்வொரு பழத்திலும்
ஒவ்வோர்(பொற்) பந்திலும் ஒவ்வொரு குயிலாம்.
குயிலொவ் வொன்றும் கூவிய நேரம்
சுருதிகள் ஐந்து தொடர்ந்தொலி தருகையில் 190
பாய்ந்தது வாயிலே பசும்பொன் சுரந்து
வாயிலே வெள்ளியும் வழிந்தே வீழ்ந்தது
பொன்னா லாகிய பொன்மே டொன்றிலே
வெள்ளியில் விளைந்த வெண்ணிறக் குன்றில்
அங்குதான் கந்தலே யாழ்முளை ஆகின
உறும்சுருள் மிலாறுவின் உரு(வு)க்கு முறுக்க()ணி.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"கந்தலே யாழ்க்குக் கவின்முளை கிடைத்தது
உறும்சுருள் மிலாறுவின் உரு(வு)க்கு முறுக்க()ணி 200
எனினும் இன்னமும் எதுவோ குறையுள
யாழ்க்குத் தேவை நல்நரம் பைந்து;
எங்குநான் பெறுவேன் இந்த நரம்புகள்
தொடர்ஒலி எழுப்பிச் சுருதிகள் சேர்த்திட?"
நரம்புகள் தேடி நனிபுறப் பட்டனன்
அடிவைத் தேகினன் அடவியின் வெளியில்
காட்டினில் இருந்தனள் கன்னி யொருத்தி
ஈரத் தரையினில் இளம்பெண் ணொருத்தி
அரிவையும் அங்கே அழுதனள் அல்ல
ஆயினும் உவகையில் ஆழ்ந்தனள் அல்ல 210
தனக்குள் பாடித் தானே யிருந்தனள்
அந்திப் பொழுதை அவள்கழித் திருந்தனள்
நம்பி மணமகன் நாடியே வருமென
காதலன் நினைவில் கலந்த நிலையிலே.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
மெதுவாய்க் காலணி **மிலையா நகர்ந்தனன்
**விரல்துணி யின்றி விரைந்தனன் அங்கே;
அவனும் வந்து அவ்விடம் சேர்ந்ததும்
இறைஞ்சிக் கேட்டனன் இளம்பெண் கூந்தலை
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே: 220
"குமரியே, சிறிதுன் கூந்தலைத் தருவாய்!
செழும்எழிற் பெண்ணே, சிறிதுஉன் கூந்தலை!
கந்தலே யாழாம் கருவியின் நரம்பாய்
உயர்நிலை இன்பத் தொலியாய்த் திகழ்ந்திட!"
குமரியும் சிறிதுதன் கூந்தலைத் தந்தனள்
திகழ்எழிற் கூந்தலில் சிறிதவள் தந்தனள்
ஐந்தாறு கூந்தலை அரிவையும் தந்தனள்
அளவோ ரேழு அவள்குழல் தந்தனள்
கந்தலே நரம்புகள் கடிததில் அமைந்தன
கவின்இன் நித்தியக் கருவியின் நரம்புகள். 230
யாழிசைக் கருவி நனிதயா ரானது;
முதிய வைனா மொயினன் அதன்பின்
ஒருகற் பாறையில் உவந்தமர்ந் திருந்தனன்
படிக்கட் டிருந்த பாறையொன் றினிலே.
கரங்களில் எடுத்தனன் கந்தலேக் கருவியை
இசைஇன் கருவியை எடுத்தனன் அருகினில்
வைத்தனன் தலைப்புறம் வான்நோக் கியேயதை
அழுத்தினன் **முழங்கால் அதில்தோள் வைத்து
ஒழுங்காய் நரம்பினில் ஓசையை அமைக்க
சுருதியைச் சேர்த்து சுகஒலி எழுப்ப. 240
ஒழுங்காய் நரம்பினின் ஓசையை அமைத்தனன்
சுருதி யாழிசைக் கருவியில் சேர்த்தனன்
கரங்களின் கீழே கருவியைத் திருப்பினன்
முழங்காற் குறுக்காய் முழுயாழ் வைத்தனன்
பணித்தனன் விரல்களின் பத்து நகங்களை
ஐந்து விரல்களை அதன்மேல் வைத்தனன்
விளையா டிடவே நரம்புமேற் பறந்து
துள்ளித் திரிந்திடத் தொனியெழு தந்தியில்.
முதிய வையினா மொயினனு மாங்கே
கந்தலே என்னும் கவின்யாழ் மீட்டினன் 250
வியன்சிறு கரத்தால் மென்மை விரல்களால்
பெருவிரல் அவைதாம் பின்புறம் வளைந்தன
வலிசுருள் மிலாறு மரம்பே சியது
இலையுள இளமரம் இனிதே யொலித்தது
கொழும்பொன் குயில்கள் கூவி யழைத்தன
கன்னியின் கூந்தல் களிப்பைத் தந்தது.
மீட்டினன் வைனா மொயினன் விரலால்
கந்தலே நரம்புகள் கனிவா யொலித்தன
பன்மலை முழங்கின பாறைகள் மோதின
உயர்குன் றங்கள் ஒருங்கசைந் தாடின 260
கற்பா(றை) வீழ்ந்து கனதிரைத் தெறித்தன
கூழாங் கற்கள் குளிர்புனல் நகர்ந்தன
தேவ தாருகள் திளைத்தன மகிழ்ச்சியில்
கவின்புற் றரைமரக் கட்டைகள் துள்ளின.
கலேவாப் பெண்கள் கவின்மைத் துனிமார்
சித்திரத் தையலின் மத்தியி லிருந்தனர்
நதியினைப் போலவே நங்கையர் விரைந்தனர்
அருவியைப் போலவே அனைவரு மோடினர்
நகைத்த வாயிள நங்கையிய ரோடினர்
மகிழ்ந்த மனத்துடன் மனைவியர் கூடினர் 270
யாழினை மீட்பதை நலமாய்க் கேட்கவே
இசையின் பத்தை இனிதே நுகர.
மருங்கினில் நின்ற மனிதர்கள் அனைவரின்
கரங்களி லிருந்தன கவிழ்த்தவர் தொப்பிகள்;
பக்கம் முதிய பாவையர் யாவரும்
கன்னம் தாங்கிக் கைகளில் நின்றனர்;
பூவையர் விழிகளில் புனலுடன் நின்றனர்
நிலத்தூன்(றி) முழங்கால் நின்றனர் மைந்தர்
கந்தலே இசையினைக் கவினுறக் கேட்க
இசையின் பத்தை இனிதே நுகர 280
ஒரேகுர லெடுத்து உரைத்தன ரனைவரும்
ஒரேநா வெடுத்தே உரைத்தனர் மீண்டும்:
"இல்லையே முன்னர் இப்படி கேட்டது
இன்னிசை நிகழ்ச்சி இதுபோல் ஒன்றினை
வளருமிவ் வுலகின் வாழ்நாள் என்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்."
இனிமை நிறைந்த இசையும் கேட்டது
ஆறு கிராமம் அனைத்தும் கேட்டது;
எந்தப் பிராணியும் இலையாம் அங்கே
மகிழ்ந்து கேட்க வராத பிராணிகள் 290
இனிய அந்தயாழ் இசையின் பெருக்கை
கந்தலே தந்த கனிவுறும் ஒலியினை.
வாழும் அனைத்து வனவிலங் குகளும்
தரையில் உகிருறத் தாழ்ந்தே இருந்தன
கந்தலே இசையினைக் கனிவாய்க் கேட்க
இசையின் பத்தை இனிதே நுகர;
காற்றிற் பறந்து கடிதலை பறவைகள்
மரங்களின் கிளைகளில் வந்தொன் றாயின
நீரிலே வாழும் நீர்மீன் வகையெலாம்
ஒன்றாய் நீர்க்கரை யோரம் சேர்ந்தன 300
மண்ணதன் கீழ்உறை மண்புழு யாவும்
மண்ணின் மேற்புறம் வந்தன மெதுவாய்
நகர்ந்தவை வந்தன நல்லிசை கேட்டன
அந்த யாழின் அரும்மின் னிசையினை
நிகழ்கந் தலேயாழ் நித்திய இசையினை
வைனா மொயினனின் வண்ணநல் லிசையினை.
முதிய வையினா மொயினனு மாங்கே
உண்மையில் சிறப்பாய் உயர்யாழ் மீட்டினன்
எழிலார் ஒலியை எழுப்பி இசைத்தனன்;
இசைத்தனன் ஒருநாள் இசைத்தனன் இருநாள் 310
தொடங்கி ஒரேமுறை தொடர்ந்தே இசைத்தனன்
ஒரேயொரு காலை உணவுட னிசைத்தனன்
இடுப்புப் பட்டியை இணைத்தே ஒருமுறை
உடலில் சட்டையை ஒருமுறை அணிந்தே.
இல்லத் தவனும் இசைத்த போதினில்
ஊசி யிலைமரத் துருவாம் அறையினில்
எதிரொலி கூரையில் இருந்தே எழுந்தது
தரையிலே பலகைகள் சத்தம் போட்டன
உத்தரம் இசைத்தது உடன்கத வொலித்தது
சாளரம் அனைத்தும் தனிக்களிப் புற்றன 320
அடுக்களைக் கற்கள் ஆடி யசைந்தன
மிலாறுவின் தூண்கள் பதிலாய்ப் பாடின.
**தாருவின் பக்கம் தான்அவன் செல்கையில்
**தேவதா ரிடை யே திரிந்தவே ளையிலே
தாரு மரங்கள் தாழ்த்தின தலைகள்
தேவதா ரவைமலைத் திரும்பியே நின்றன
**கூம்புபுல் மேட்டில் புறம்வீழ்ந் துருண்டன
**சுள்ளிகள் வேரிலே சொரிந்து பரவின
பொழிலிடை அவனும் போய்நடக் கையிலே
அல்லது வெளியாம் அடவியில் செல்கையில் 330
ஆடின சோலைகள் ஆனந் தித்தன
காடுகள் என்றும் களிப்போ டிருந்தன
மலர்ந்த மலர்கள் மகிழ்ச்சியில் திளைத்தன
இளமரக் கன்றுகள் எழில்தலை தாழ்த்தின.
பாடல் 45 - கலேவா மாகாணத்தில் கொள்ளை நோய்
TOP
அடிகள் 1-190 : வட நாட்டின் தலைவி கொடிய நோய்களைக் கலேவா
மாகாணத்துக்கு அனுப்புகிறாள்.
அடிகள் 191-362 : மந்திர சக்தியாலும் மருத்துவத்தாலும் வைனாமொயினன்
நோய்களைக் குணமாக்குகிறான்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
செய்திகள் தனது செவிகளில் கேட்டனள்
*வைனொலா நாட்டின் வளர்சிறப் பனைத்தும்
கலேவலாப் பகுதியின் கவின்வளர்ச் சிகளை
அவர்கள் பெற்றஅச் சம்போத் துண்டினால்
ஒளிரும் மூடியின் ஒண்துணுக் குகளால்.
அதனால் அவளும் அழுக்கா றுற்றனள்
அதனைச் சிந்தனை அவள்சதா செய்தனள்
பொயதோர் அழிவைப் பெறச்செயல் எப்படி
எவ்விதம் மரணம் ஏற்படுத் திடலாம் 10
வைனொலா நாட்டு மக்களுக் கங்கே
கலேவலாப் பகுதியின் காண்இனத் தோர்க்கு.
மனுமுதல் வனையே மற்றவள் வணங்கினள்
முழக்க முதல்வனை முறையீ டிட்டனள்:
"ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
கலேவா மக்களைக் கட்டொடு வீழ்த்து
இரும்புக் குண்டு இகல்மழை பொழிந்து
உருக்கு முனையுள ஊசிகள் சொந்து
அல்லது நோயால் அவர்களை அழிப்பாய்
அவ்வெளி(ய) இனத்தை அடியோ டொழிப்பாய் 20
மனிதரைப் பொய வனத்தோட் டவெளி
பெண்களைத் தொழுவப் பெருமுற் றநிலம்!"
அவளோ துவோனலா அந்தகப் பெண்ணாம்
*லொவியத்தார் என்று நுவல்முது மாதவள்
துவோனியின் மக்களில் தொடர்தீ மையவள்
மரணத்(து) உலகிலே வன்மிகுக் கொடியவள்
முழுத் தீமைக்கும் முழுக்கா ரணமவள்
ஆயிர மழிவுக் காதா ரமவள்;
அவள்வடி வநிறம் அனைத்தும் கருமை
அவளது தோலோ அதிலும் கடும்நிறம். 30
அந்தத் துவோனியின் அதிகரும் பெண்ணவள்
*ஆழத் துலகில் அருநோக் கிழந்தவள்
படுக்கையைப் போட்டனள் பாதை நடுவிலே
தீமைப் பூமியில் சிறியதன் அமளியை;
காற்றுக்கு முதுகைக் காட்டிப் படுத்தனள்
தன்னொரு புறத்தை தகாக்கவி **நிலைக்கு
கடுங்குளிர்ப் பக்கம் காட்டினள் பின்புறம்
விடியலை நோக்கிமுன் புறமிகக் காட்டினள்.
பெருங்காற் றொன்று பீறிட் டெழுந்தது
கிழக்கினி லிருந்து கிளர்ந்ததோர் பெரும் புயல் 40
கொடுத்தது கர்ப்பம் கொடும்பிற விக்கு
நனைத்தது கர்ப்பம் நன்றாய் வளர்வரை
மரஞ்செடி யற்ற வெறும்தரை யொன்றிலே
புல்பூண் டில்லாப் பொன்றுபாழ் நிலத்திலே.
கடுமையாய்ச் சுமந்தனள் கனமுறு கர்ப்பம்
கடிதே தாங்கினள் கனம்நிறை வயிற்றை
மாதம் இரண்டு மூன்றும் சுமந்தனள்
சுமந்தனள் நாலிலும் சுமந்தனள் ஐந்திலும்
ஏழிலும் திங்கள் எட்டிலும் சுமந்தனள்
ஒன்பதாம் மாதம் முற்றும் சுமந்தனள் 50
கன்னியர் பழைய கணக்கதன் படியே
பத்தாம் மாதம் பாதியும் சுமந்தனள்
ஒன்பதாம் மாதம் ஊர்ந்து முடிந்து
மாதம் பத்து வந்து தொடங் கையில்
கர்ப்பம் மிகவும் கடினமா யிருந்தது
சுமையின் அழுத்தலால் தோன்றிய துநோ;
ஆயினும் பிறப்போ ஆகிய தொன்றிலை
ஏதும் படைப்போ ஏற்பட்ட தொன்றிலை.
அப்போ இடத்தை அவள்தான் மாற்றினாள்
தேர்ந்தின் னோடம் சென்றாள் அவளே 60
பிரசவத் துக்காய்ப் பரத்தைப் போந்தனள்
சிசுவைப் பெறற்காய்ச் சென்றனள் பொதுமகள்
இரண்டுசெங் குத்துப் பாறையின் இடைநடு
ஐந்து மலைகளின் அதனிடைப் பிளவில்;
ஆயினும் பிறப்போ ஆகிய தொன்றிலை
ஏதும் படைப்போ ஏற்பட்ட தொன்றிலை.
ஈனுத லுக்காம் இடத்துக் கெழுந்தாள்
வேறிடம் தேடி வெறிதாக் கிடவயி(று)
அசைந்து நகரும் அழிசே றுறைவிடம்
நீரோடி நிறையும் நீரூற் றுப்புறம்; 70
எனினும் அங்கே இடமெதும் கிடைத்தில
வயிறு வெறிதுற வகையும் கிடைத்தில.
ஈனுதல் முயற்சியும் இயைந்தது மெதுவாய்
உதரம் வெறிதுற ஒருங்கே முயன்றனள்
ஓர்பயங் கரநீர் வீழ்ச்சியின் நுரையில்
ஓர்வலு நீர்ச்சுழி உதிப்பின் சுழிப்பில்
மூன்றுநீர் வீழ்ச்சியின் மோதுநீர் வீழ்வுகீழ்
ஒன்பது நதிகளின் உறும்அணை களின்கீழ்
ஆயினும் பிறப்போ ஆகிய தொன்றிலை
கொடியவள் கர்ப்பம் எதுவும் புந்தில. 80
அப்போ(து) வெறுப்பொடு அழுதது பிராணி
கொடிய விலங்கு தொடங்கிற் றலற
போக்கிடம் எதுவும் புந்திலள் அவளே
செல்லும் இடமும் தொந்திலள் அவளே
தனது வயிற்றினைத் தான்வெறி தாக்கிட
தனது மக்களைத் தானீன் றெடுத்திட.
முகில்மே லிருந்து மொழிந்தனர் கடவுள்
விண்ணகத் திருந்து விளம்பினர் இறைவன்:
"சேற்றில்முக் கோணச் சிறுகுடில் ஒன்றுள
கடற் புறமாகக் கடற்கரை யோரம் 90
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே
செறிபு கார் நாடாம் சாயோ லாவில்;
பெற்றிடப் புறப்படு பிள்ளைகள் அங்கே
வயிற்றினை வெறுமையாய் மாற்றிடச் செல்வாய்
உனக்கொரு தேவை உள்ளது அங்கே
அங்கெதிர் பார்த்துளர் அவர்களுன் மக்களை."
பின்னர் துவோனியின் பெண்கரு நிறத்தாள்
மரண உலகின் வன்கொடும் மங்கை
வடபுலத் திருக்கும் வதிவிடம் வந்தாள்
சாயொலா நாட்டின் சவுனாப் பகுதி 100
தனது மக்களைத் தான்பெற் றெடுத்திட
தன்பிள் ளைகளைத் தானீன் றெடுத்திட.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
இரகசிய மாயவள் சவுனாச் சேர்த்தனள்
அழைத்தனள் களவாய்க் குளிப்பறை யதற்குள்
ஊரவர் எவரும் உணரா வண்ணம்
கிராமத் தொருசொலும் கேளா வண்ணம்.
வெப்பமேற் றினள்சவு னாமிக ரகசியம்
அவ்விடம் சென்று அடைந்தனள் விரைந்து 110
கபாடம் மீது`பீர்`ப் பானம் பூசினள்
பிணையல்கள் நனைத்தனள் **பெய்தகப் `பீரை`
கதவுகள் கறீச்சொலிக் காட்டா திருக்க
ஓசையை எழுப்பா தொழியப் பிணையல்கள்.
பின்வரும் சொற்களில் பின்அவள் சொன்னாள்
உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்:
"இயற்கையின் மகளே இருமுது பெண்ணே!
அழகிய பாவாய் அம்பொன் அணங்கே!
முழுமா தாலும் முதியவள் நீயே!
மானுட இனத்தின் வருமுதல் தாய்நீ! 120
ஓடுக, கடலினுள் உன்முழங் கால்வரை,
இடைப்பட்டி வரைக்கும் இருங்கடல் அலையினுள்
நன்னீர் **மீனின் நளிர்உமிழ் நீர்எடு
வேறொரு **மீனின் மிகுகழி வும்மெடு
எலும்புக ளிடையே ஒழுங்காய்ப் பூசு
பக்கங்க ளெல்லாம் பதமாய்த் தடவு
பெண்ணவள் நோவைப் பொதும் அகற்ற
மாதவள் வயிற்று வாதையைத் தீர்க்க
இந்தக் கொடிய இன்னலி லிருந்து
உதர வேதனைத் துயரத் திருந்து! 130
இதுவும் போதா தின்னமு மென்றால்,
ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
தேவையாம் தருணம் தொந்திங் கெழுக
கூவியழைக் கையில் குறைபோக் கிடவா
இங்கே ஒருத்தி இருக்கிறாள் நோவுளாள்
வனிதை வயிற்று வாதைப் படுகிறாள்
சூழ்ந்தெழும் சவுனா சுடுபுகை மத்தியில்
குறுங்கிரா மத்துறும் குளிக்கும் குடிலுள்.
பொன்னிலே யான பொற்கோல் எடுப்பீர்
உம்வலக் கரத்தில் உவந்ததைக் கொள்வீர் 140
தடைச்சட் டமெலாம் தவிர்ப்பீர் பொடிபட
கதவுத் தம்பங் களையுடைத் தெறிவீர்
படைப்போன் பூட்டைத் திருப்பித் திறப்பீர்
தாழ்ப்பாள் உட்புறம் தகர்த்துத் தறிப்பீர்
பொயதும் சிறியதும் சாநுழைந் தேவர
அவ்வாறு நுழைந்தே வரப்பல வீனரும்!"
அந்தக் கொடிதிலும் கொடியாள் அதன்பின்
பார்வை யிழந்தவள் துவோனியின் பாவை
ஆக்கினள் வெறுமை அவள்தன் வயிற்றை
பிள்ளைகள் வெறுப்பாய்ப் பெற்றே எடுத்தனள் 150
செப்பிழை பொருந்தித் திகழ்மே லாடைகீழ்
மென்மையாய் நெய்த விப்பதன் கீழே.
புத்திரர் ஒன்பதைப் பெற்றனள் பாவை
கோடைகா லத்து குறித்தவோ ரவில்
நீராவி யொருமுறை நிகழ்த்திய போதிலே
சவுனா ஒருமுறை தான்சூ டாகையில்
ஒற்றை வயிற்றின் உறுகரு விருந்து
கனத்த ஒற்றைக் கர்ப்பத் திருந்து.
மைந்தர்க் கதன்பின் வைத்தனள் பெயர்கள்
அடுத்து அவர்களை ஆயத்தம் செய்தனள் 160
அனைவரும் தத்தம் பிள்ளைக்கா ற்றல்போல்
படைத்த தமது படைப்புக் காற்றல்போல்;
ஆக்கினள் ஒன்றை அதிதுளை நோவாய்
வயிற்று வலியாய் வைத்தனள் அடுத்ததை
எலும்பு நோவா யின்னொன் றியற்றினள்
இன்னொன் றியற்றினள் இடர்கணை நோயாய்
மாற்றினள் மற்றதை வன்கட்டி நோயாய்
குட்ட நோயாய்க் குறித்தனள் மற்றதை
வேறொன்றைப் பண்ணினள் வெம்புற்று நோயாய்
மற்றொன்றை மாற்றினள் வருதொற்று நோயாய். 170
இருந்தது பெயரெதும் இல்லா தொன்றுதான்
ஒருமகன் வைக்கோல் உட்கூ ளத்தடி
அவனையும் பின்னர் அங்கே அனுப்பினள்
சூனியக் காரனாய்த் தொல்புனற் றள்ளினள்
மந்தர வாதியாய் வரவே சேற்றினுள்
தீய சக்தியாய்த் திகழ்ந்திட எங்கணும்.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
அப்பால் செல்ல அனுப்பினள் அனைவரும்
புகார்படி கடலதன் புணர்முனை நுனிக்கு
செறிபனிப் புகாருள தீவதன் கரைக்கு; 180
கொடும்பிறப் பவைக்குக் கோபமுண் டாக்கினள்
ஏவினள் **வழக்கத் தில்லா நோய்களை
வைனொலா நாட்டு மக்களின் மீது
எழிற்கலே வாநாட் டினத்தரை அழிக்க!
வைனொலாப் பையல்கள் வருநோய் வீழ்ந்தனர்
கலேவா மக்களும் கடும்நோ யுற்றனர்
வழக்கத் தில்லா வன்நோய் வந்ததால்
பெயர் தொயாத பிணிகள் பிடித்ததால்;
உளுத்துப் போனது உற்றகீழ்ப் புற்றரை
மேலே படுக்கை விப்புகள் மக்கின. 190
முதிய வைனா மொயினைப் போது
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
தலைகளை காக்கத் தலைப்பட் டேகினன்
உயிர்களைக் காக்க உடன்பட் டேகினன்
சாவுக் கெதிராய்ச் சமாடச் சென்றனன்
புன்பிணிக் கெதிராய்ப் போடச் சென்றனன்.
சவுனா ஒன்றினில் தக்கசூ டேற்றினன்
நீராவி கற்களில் நேர்ந்திடச் செய்தனன்
சுத்தமாய் வெட்டிய துண்டு மரங்களால்
விபுனல் வழிக்கொணர் விறகுக ளாலே; 200
ஒளித்துத் தண்ணீர் உடனே கொணர்ந்தனன்
குளியல் தூகை மறைவாய்க் கொணர்ந்தனன்
**கட்டிலைத் தூகை வெப்பமா யாக்கினன்
**சதஇலைத் தூகை தனைமெது வாக்கினன்.
தேன்போல் ஆவியைச் செறிந்தெழச் செய்தனன்
நறைநீ ராவியை நனியுயர் வாக்கினன்
கடுஞ்சூ டேறிய கற்களி லிருந்து
கனலை உமிழும் கற்களில் இருந்து
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 210
"இந்நீ ராவியுள் இறைவனே, வருக!
வானகத் தந்தையே, வருகவெப் பத்துள்!
நல்ல சுகத்தை நலமாய்த் தந்திட!
அமைதியைக் கட்டி அழகா யெழுப்பிட!
புனிதப் பொறிகளை நனிதுடைத் **தமர்த்துக!
புனித நோய்களை நனித்தணித் தகற்றுக!
கொடியநீ ராவியைப் படியடித் திறக்கு(க)
விலக்குக துரத்தி வெய்ய நீராவியை
அதுஉன் மைந்தரை எயா திருந்திட!
தீங்கு செய்யா திருக்கவுன் படைப்புக்(கு)! 220
நானே **எறியும் நந்நீ ரனைத்துமே
எகனற் கற்களில் எற்றுநீ ரனைத்துமே
தேனாய் மாறித் திகழக் கடவது!
பொழிநறை யாகப் பொலியக் கடவது!
ஒருதே னாறு ஊற்றெடுத் தோடுக!
நறைக்குள முதித்து நனிபெரு கட்டும்!
அடுக்கிய இக்கல் லடுப்பத னூடாய்!
தகுபாசி பூசுமிச் சவுனா வூடாய்!
உண்ணப் படோ ம்நாம் **ஒருகா ரணமிலா(து)
கொல்லப் படோ ம்நாம் கொடுநோ யின்றி 230
அரும்பெரும் காத்தான் அனுமதி யின்றி
இறைவனின் செயல்தரு மரணம் தவிர!
எமையெவ ரேனும் ஏதிலா துண்ணில்
அவர்மந் திரச்சொல் அவர்வா யடையும்
அவரது தீச்செயல் அவர்தலைக் கேகும்
அவரது சிந்தனை அவரையே சேரும்!
மனிதனின் தகைமை வாய்ந்துநா னிலையெனில்,
மானுட முதல்வனின் மகனிலை நானெனில்,
கொடுஞ்செய லிருந்து கொண்டிட விடுதலை,
தீச்செய லிருந்து சென்னியைத் தூக்கிட, 240
அவரே மானிட முதல்வர் இருக்கிறார்!
முகிற்குலம் புரக்கும் முதுகா வலரவர்!
வண்ண முகிலில் வசிப்பிடம் கொண்டவர்!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவரவர்!
ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
முகில்மே லுறையும் முதுமே லிறைவனே!
தேவையாம் தருணம் தொந்திங் கெழுக!
எங்கோ க்கை இரங்கிக் கேட்பீர்,
இந்தத் துயர்களை இனிதுணர்ந் தறிக,
துன்பநா ளிவற்றைத் தூர அனுப்பிட, 250
கொடுஞ்செய லிருந்து கொணர்ந்திட விடுதலை,
வஞ்செய லிருந்து வைக்க வெளிப்பட!
எடுத்து வருக எனக்கொரு கனல்வாள்!
பொறிகனல் அலகுறும் புதுவாள் கொணர்க!
அதனால் தீயவை அனைத்தும் அழிப்பேன்
கொடியவர் எவரையும் அடியொடு முடிப்பேன்
காற்று வழியிலே காண்துயர் ஒழிப்பேன்
காட்டு வெளியினில் கடுநோ வைப்பேன்.
நோவினை அங்கே நானே அனுப்புவேன்
அங்கே அனுப்பி அடக்குவேன் நோவை 260
கற்களால் கட்டிய கடுநில வறைக்குள்
இரும்பினா லான இருப்பிடத் துள்ளே
கற்களுக் கங்கே கடுந்துயர் கொடுக்க!
பாறைக் கற்களைப் பாடாய்ப் படுத்த!
கற்கள் நோவினால் கதறுவ தில்லை
பாறைகள் நோவால் பலத்தழல் இல்லை
அவற்றிலெவ் வளவை அழுத்திய போதிலும்
அளவுக்கு மீறிச் சுமத்திய போதிலும்.
நோவதன் பெண்ணே, துவோனியின் மகளே!
நோவெனும் கல்லில் நேரமர் பவளே, 270
மூன்று நதிகள் முனைந்தோ டிடத்தில்
மூன்று அருவிகள் முன்பி விடத்தில்
நோவெனும் கல்லை மேவிய ரைத்தே
நோவெனும் மலையைத் தாவி முறுக்கியே
சென்றுநீ நோவைச் சேர்ப்பாய் ஒன்றாய்
நீலப் பாறையின் நெடுவாய் அலகினுள்,
அல்லது நீருள்நீ அடித்துருட் டிடுவாய்
ஆழியின் ஆழத் தவற்றைநீ யெறிவாய்
அவற்றைக் காற்று அறியா தாகுக
ஆதவன் ஒளியும் ஒளிரா தாகுக. 280
இதுவும் போதா தின்னமு மென்றால்
நோவின் **மகளே! நா,நல் லவளே!
ஊனச் **சக்தியே! **ஓர்ந்துதேர்ந் தவளே!
சேர்ந்துநீ வருவாய் சேர்ந்துநீ போவாய்
நல்ல சுகத்தினை நலமாய்த் தருவாய்
அமைதியைக் கட்டி அழகோ டெழுப்புவாய்
நோவனைத் தினையும் நோவறச் செய்வாய்
ஊனமா மவற்றை உபாதையற் றிடச்செய்
நோயுளோ ரயர்ந்து நோவறத் துயில
நலிந்தவர் சற்று நல்லா றுதல்பெற 290
நோவுளோர் ஓய்வு நேயமாய்ப் பெற்றிட
காயம் பட்டோ ர் கள்நகர்ந் தசைய!
வாதையை அள்ளியோர் வாளியில் போடு
சேர்நோ வெடுத்தொரு செப்புப் பெட்டியில்
வாதையை அங்கே வாக் கொண்டேக
ஊனத்தை யங்கே ஒருங்காழ்த் துதற்கு
நோவெனும் குன்றின் நேர்நடுப் பகுதியில்
நோவெனும் மலையில் ஆம்உச் சியிடம்;
அங்கே கொதிக்க அந்நோ வைத்திடு
சின்னஞ் சிறியதோர் செறிகல யத்தில் 300
ஒருவிரல் நுழைய உவந்தவக் கலயம்
பெருவிர லளவே பொதாம் கலயம்.
அசலம் மத்தியில் அமைந்துள தொருகல்
கல்லதன் மத்தியில் காணும் ஒருபுழை
துளையூசி யாலது துளைக்கப் பட்டது
துறப்பணத் தாலூ டுருவப் பட்டது;
அங்கே திணித்து அமர்த்தலாம் நோவை
கொடுமூ னத்தை யடைத்தும் வைக்கலாம்
வலிய வாதையை வைக்கலாம் தள்ளி
அழுத்தித் துன்ப நாட்களை யமர்த்தலாம் 310
செறிநிசி நேரம் செயற்படா திருக்க
பகலிலே தப்பிப் படரா திருக்க."
முதிய வைனா மொயினன் அதன்பின்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
பூசினன் பழுதுறும் புறமெலாம் தொடர்ந்து
பூசினன் தடவிக் காயம் மீதெலாம்
பூச்சு மருந்துகள் புணருமொன் பதுவகை
மந்திர மருந்துகள் வகையொரு எட்டு
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 320
"ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
விண்ணகத் துறையும் மேதகு முதியோய்!
இயக்குவாய் கிழக்கி லிருந்தொரு முகிலை
வடமேற் கொன்று வந்துதிக் கட்டும்
மேற்கி லிருந்தொரு மேகத் திரள்விடு
பொழிக தேன்மழை பொழிக புனல்மழை
பூச்சு மருந்தாய்ப் புணர்நோ வுளவிடம்
ஊனங்க ளுக்கொரு உற்ற மருந்தாய்.
என்னா லாவது எதுவுமே யில்லை
ஆளமென் படைத்தோன் அருளிலா விட்டால்; 330
படைத்தவன் வரட்டும் பார்த்துத விக்கு
இறைவன் உதவி எனக்குத் தரட்டும்
நான்பார்த் தோர்க்கென் நயனங் களினால்
நான்என் கைகளால் நன்குதொட் டவர்க்கு
இனியஎன் வாயால் இயம்பியர்க் கேநான்
என்சுவா சத்தால் இனிதூதி யோர்க்கு.
எனது கைகள் எட்டித் தொடாவிடில்
ஆண்டவன் கைகள் அங்கே தொடட்டும்;
எனது விரல்கள் எட்டிப் படாவிடில்
ஆண்டவன் விரல்கள் அங்கே படட்டும்; 340
கடவுளின் விரல்கள் கவினா யமைந்தவை
கடவுளின் கரங்கள் சுறுசுறுப் பானவை.
உச்சாடனம் செ(ய்)ய உடன்வா இறைவனே!
வாய்மொழி பகர வருகநல் லிறையே!
அனைத்தும் வல்லவா, எமைப்பார்த் தருள்க!
நற்சுக மாக்கும், நளிர்நிசி எங்களை!
பகலிலும் அவ்விதம் நலமா யாக்கும்!
உணரா திருக்க உளஎவ் வாதையும்
அறியா திருக்க அந்நோ வெதையும்
இன்னல் சேரா திருக்க இதயம் 350
சிறிதும் கூட உணரா திருக்க
அதும் துயரை அறியா திருக்க
வளருமிவ் வுலகின் வாழ்நாளி லென்றும்
பொன்னிலாத் திகழும் பொற்பொழு தெல்லாம்."
நிலைபெறம் முதிய வைனா மொயினன்
நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்
மந்திர நோய்களை மாற்றினன் இவ்விதம்
வெஞ்செய லிருந்து வெளிப்பட வைத்தனன்;
மந்திர நோய்க்கெலாம் மருத்துவம் பார்த்தனன்
வெங்கொடும் செயற்கு விடுதலை தந்தனன் 360
மக்களை மீட்டான் மரணத் திருந்து
கலேவா இனத்தைக் காத்தான் அழிவில்.
பாடல் 46 - வைனாமொயினனும் கரடியும்
TOP
அடிகள் 1-20 : கலேவா மாகாணத்தின் கால்நடைகளை அழிக்கும்படி
வடநாட்டுத் தலைவி ஒரு கரடியை ஏவி விடுகிறாள்.
அடிகள் 21-606 : வைனா மொயினன் கரடியைக் கொல்லுகிறான்.
அதற்காக கலேவா மாகாணத்தில் ஒரு பொய கொண்டாட்டம்
நடைபெறுகிறது.
அடிகள் 607-644 : வைனாமொயினன் பாடுகிறான்; யாழ் இசைக்கிறான்;
கலேவா மாகாணத்துக்கு சிறப்பானதும் மகிழ்ச்சியானதுமான ஓர்
எதிர்காலம் வரும் என்று நம்புகிறான்.
செய்தி வடபுலம் சென்றிட லானது
போனது குளிர்க் கிரா மத்தே புதினம்
நாடு வைனோ நனிவிடு பட்டதாய்
விடுதலை கலேவலா விரைந்துபெற் றதுவாய்
மந்திரம் விளைத்த வன்துய ருந்து
**வழக்கில் நோய்களின் வன்பிடி யிருந்து.
லொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
அதனைக் கேட்டதும் அடைந்தனள் கடுஞ்சினம்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 10
"இன்னொரு தந்திரம் இருக்கும்என் நினைவில்
மற்றொரு பாதையின் வழிவகை யறிவேன்
எழுப்புவேன் புற்புத ருந்தொரு கரடியை
வளைந்த நகத்ததை வனத்தினி லிருந்து
வைனோ நாட்டின் வளர்கால் நடைமேல்
கலேவாப் பகுதியின் காண்நிரை களின்மேல்."
எழுப்பினள் புற்புத ருந்தொரு கரடியை
கடும்நிலத் திருந்தொரு கரடியை எழுப்பினள்
வைனோ நாட்டின் வளர்புல் வெளிமேல்
கலேவாப் பகுதியின் காண்நிரை களின்மேல். 20
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"சகோதர, கொல்ல, தகைஇல் மான!
புதிதாய் எனக்கொரு ஈட்டியைச் செய்வாய்
எழும்முக் கூருறும் ஈட்டியைச் செய்வாய்
செய்வாய் கைப்பிடி செப்பிலா னதுவாய்
இங்கொரு கரடியை எதிர்கொளல் வேண்டும்
மிகுபெறு மதியதை வீழ்த்திட வேண்டும்
தாக்கா திருக்கத் தகும்என் பொலிப்பா
அழிக்கா திருக்க ஆனஎன் பெண்பா 30
வீழ்த்தா திருக்க மிகுமென் கால்நடை
நசுக்கா திருக்க நற்பசுக் கூட்டம்."
ஈட்டி ஒன்றினை இயற்றினன் கொல்லன்
அதுகுறி தல்ல அதுநீண் டதல,
செய்தனன் அளவில் திகழ்நடுத் தரமாய்;
**ஓனாய் நின்றது உயர்அதன் நுனியில்
நின்றது கரடி நெடுமுருக் கலகில்
பொருத்திற்காட் டேறு சறுக்கிச் சென்றது
சென்றது குட்டிமா திகழ்கைப் பிடிவழி
கைப்பிடி முனையில் காட்டுக் கலைமான். 40
பெய்ததப்போது பெரும்புதுப் பனிமழை
பொழிந்தது சிறந்த புதிய பனிமழை
காண்இலை யுதிர்ருதுக் கம்பளி ஆடுபோல்
முழுக்குளிர் கால முயலின் தன்மைபோல்;
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"இப்போ(து) நானும் எண்ணுவ திதுவே
இருங்கா னுள்ளே ஏகிடல் வேண்டும்
கானக மகளிரைக் கண்டிட வேண்டும்
நீல நிறத்து நாயர் முன்றிலில். 50
மனிதரை விட்டு வனத்துக் கேகிறேன்
வீரரை விட்டு வெளியிடத் தேகிறேன்
ஒளிர்கான், என்னையுன் ஒருவனாய்ப் பெறுக!
என்னையுன் வீரனாய் ஏற்க, தப்பியோ!
அதிர்ஷ்டம் எனைத்தொட ஆற்றுக உதவிகள்
அடர்கா னகத்துறும் **அழகினை வீழ்த்த!
கவின்மியெ லிக்கியே, காட்டின் தலைவியே!
தகமைத் தெல்லர்வோ, தப்பியோ மனைவியே!
கட்டிவை யுங்கள் கடியநும் நாய்களை
பிணைத்து வையுங்கள் பெருநீச நாய்களை 60
ஒழுங்கையின் **கொடிபடர்ந் துள்ள பக்கமாய்
சிந்துர மரத்தின் திகழடைப் பொன்றினுள்!
கவினார் கரடியே **கானகத் தப்பிளே!
தடித்த **தேன்தோய் தகுநற் பாதமே!
நீகேட்க நேர்ந்தால் நான்வரு வதனை
வீரன்என் அடியொலி வீழில்நின் செவியில்
உன்சடைக் குள்ளே ஒளிப்பாய் நின்நகம்
வாய்முர சுக்குள் மறைப்பாய் பற்களை
அவையெனைத் தீண்டா தவ்வா றிருக்க
அவைநீ நகர்கையில் அசையா திருக்க! 70
என்றன் கரடியே, **இணையில் அன்பே!
தேனார் பாதமே. திகழ்என் அழகே!
உன்னைப் பசும்புல் உறுதரைத் தாழ்த்து
எழிலாய் அமைந்த இருங்கற் பாறைமேல்
**தேவதா ருயரே திகழ்ந் தாடுகையில்
**தாருவும் உயரத் தாடிச் சுழல்கையில்;
அங்கே வட்ட மடிப்பாய் கரடியே,
சுற்றி அங்கே சுழல்கதேன் பாதமே,
காட்டுக் கோழிதன் கூட்டில் இருப்பபோல்
வாத்தடை காத்து வாகா யிருப்பபோல்." 80
முதிய வைனா மொயினனு மாங்கே
நன்கு கேட்டனன் நாய்குரைப் பதனை
குட்டிநாய் உரத்துக் குரைப்பதன் ஒலியை
சிறுகண் படைத்தது ஒருமுற் றத்தே
நீண்டமூக் குடையது நேர்த்தொழுப் பக்கம்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இருங்குயில் கூவுவ தென்றே நினைத்தேன்
பாடுதல் செல்லப் பறவையென் றெண்ணினேன்
ஆயினும் கூவுவ தல்லக் குயிலுமே
பாடுதல் செல்லப் பறவையு மல்லவே; 90
எனது சிறந்தநாய் இங்கிருக் கிறது
மிகவும் சிறப்பாம் மிருகமென் னுடையது
கரடியின் வதிவிடக் கதவினின் வாயிலில்
தொல்எழில் மனிதனின் தோட்ட வெளியினில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அங்கே கொன்றனன் அந்தக் கரடியை
புரட்டிப் போட்டனன் பட்டுப் படுக்கையை
தங்கநேர் இடத்தைத் தலைக்கீ ழாக்கினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்: 100
"நான்உமக் கிறைவனே, நன்றிகள் புகன்றேன்!
ஏகனே, கர்த்தரே, ஏத்தினேன் நின்புகழ்!
எனக்குப் பங்காய்க் கரடிஈந் தமைக்கு
பொழில்வனப் பொன்என் பொருளா னமைக்கு!"
அவன்பின் பார்த்தனன் அயதன் **பொன்னை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்றன் கரடியே, என்னுடை அன்பே!
தேனார் பாதமே, திகழ்என் அழகே!
காரண மின்றிக் கடுஞ்சினம் வேண்டாம்
உன்னைவீழ்த் தியது உண்மைநா னல்ல 110
இழுவை வளையத் திருந்துருண் டதுநீ
தேவதார்க் கிளையால் தீரவீழ்ந் ததுநீ
உன்மரத் துடைகளை உறக்கிழித் திட்டாய்
தாருமே லாடையைத் தான்பிய்த் திட்டாய்;
இலையுதிர் காலம் இருப்பது வழுக்கல்
முகிலுறும் நாட்கள் மூள்இருள் நிறைந்தவை.
கானக மதனின் **கனகக் குயிலே!
உயர்எழில் சடைத்த உரோமப் பிராணியே!
இப்போ(து) கைவிடு இருங்குளிர் வீட்டை
விடுகநின் வசிப்பிடம் வெறுமைய தாக 120
மிலாறுக் கிளைகளால் விதித்தநின் வீட்டை
பிணைத்துச் சுள்ளியால் பின்னிய குடிலை;
புகழ்நிறைந் தனையே, புறப்பட் டேகுவாய்!
அடவியின் சிறப்பே, அடிவைத் தகல்வாய்!
கனமில்கா லணியே, கடிதகல் இப்போ!
நீல்க்கா லுறையே, நின்வழி நடப்பாய்!
தொடுமிச் சிறிய தோட்டத் திருந்து
இக்குறும் நடைவழி இவற்றினை விட்டு
வீரர்கள் நிறைந்த மிகுகணத் திருக்க,
மக்களாம் குழுவின் மத்தியில் இருக்க. 130
அங்கே கொடுஞ்செயல் அமைந்தது மில்லை
எவரையும் நடத்திய தில்லைக் கடுமையாய்:
அங்கே உணவாய் அளிப்பது தேனாம்
தருவார் பருகவும் தனிப்புது நறைதான்
புதிதாய்ச் செல்லும் புதுவிருந் தினர்க்கு
அழைக்கப்பட்ட அருமனி தர்க்கு!
இங்கிருந் தேநீ இப்போ புறப்படு
இச்சிறு குகையாம் இதனுள் ளிருந்து
உறும்எழிற் கூரை ஒன்றதன் கீழே
அழகாம் கூரை அதுஒன் றதன்கீழ்; 140
பனித்துமி மீதுநீ பதமாய் நடந்துசெல்
நீராம் பல்குளம் நிதமிதப் பதுபோல்,
பசுமரக் கொம்பால் பதனமாய் விரைந்திடு
கொம்பால் தாவும் கொழுமணி லதைப்போல்."
முதிய வைனா மொயினன் அதன்பின்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
இசைத்துச் சென்றனன் இருங்கான் வெளியில்
பசும்புற் றரைகளில் படைத்தனன் எதிரொலி
மிகுசீர் மிக்கதன் விருந்தினர் தம்முடன்
சடைத்த உரோமம் தானுடை அதனுடன்; 150
எங்கணும் வீடெலாம் இசையொலி கேட்டது
வீட்டுக் கூரைக்கீழ் கேட்டொலி நிறைந்தது.
வீட்டில் இருந்தவர் விளம்பினர் இவ்விதம்
எழிலார் இனத்தவர் இயம்பினர் இவ்விதம்:
"கேட்பீர் இந்தக் கிளர்ஒலி ஓசையை
அடவியில் இசைக்கும் அவனது சொற்களை
**கிளர்வனக் குருவியின் கீதம் போன்றது
கொழுவன மகளின் குழலிசைப் போன்றது."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
தோட்டத்து முன்றிலில் தொடர்ந்துதான் சென்றனன்; 160
வீட்டில் இருந்தவர் வெளிப்புறம் வந்தனர்
ஒளிர்எழில் இனத்தவர் உரைத்திட லாயினர்:
"இங்கே பயணித்து எழுவது தங்கமா
வெள்ளியா உலாவி வெளியே வருவது
அன்புச் செல்வமா அடிவைத் தெழுவது
காசுநா ணயமா கவின்வழி வருவது?
கானகம் தந்ததா தேன்உண் மனிதனை
செறிவனத் தலைவன் சிவிங்கி ஒன்றினை
ஏனெனில் நீங்கள் இசைத்தே வருகிறீர்
இசைத்த வண்ணமே சறுக்கி வருகிறீர்?" 170
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மந்திரச் சொற்களில் வாய்த்தது **கீ
மந்திரக் கருவோ வானவன் செல்வம்
பாடி அதனால் படர்கிறோம் நாங்கள்
இசைத்த வண்ணமே சறுக்கி வருகிறோம்.
ஆயினும் என்றுமே அதுகீ யல்ல
அல்ல கீயும் அல்லவே சிவிங்கியும்
பயணித்து வருவது பார்புகழ் ஒன்றே
அடிவைத் தெழுவது அடர்வனச் சிறப்பே 180
அசைந்துலா வருவது ஆதி மனிதனே
ஆடி நடப்பது அகன்ற மேலாடையே
விருந்தினர் வரவர வேற்பதே யாயின்
அகலத் திறப்பீர் அகல்கடை வாயில்!
விருந்தினர் வரவதை வெறுத்து ஒதுக்கிலோ
அடித்தே மூடுக அகல்கடை வாயிலை!"
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர்
எழிலார் இனத்தார் இயம்பினர் இவ்விதம்:
"வாழ்க கரடியே, வாழ்த்துக் கூறினோம்!
நின்வரு கைக்காய், நிகர்தேன் பாதமே! 190
சுத்தமா யிருக்குமிம் முற்றப் பரப்பினில்
எழிலார் தோட்டத் திந்த வெளியினில்!
எதிர்பார்த் திருந்தேன் இதற்காய்ப் பலநாள்
வழிபார்த் திருந்தேன் வளர்ந்த நாளெலாம்
தப்பியோ எக்க()ளம் தருவதற் கோசை
கானக் குழலிசைக் காதிலே விழற்கு
கானகத் தங்கம் களிநடை பயில
அடவியின் வெள்ளி அடையவே வந்து
சிறியமுற் றத்துத் திகழுமிப் பரப்பில்
இந்தத் தோட்டத் தெழிற்குறும் வெளியில். 200
ஒருநல் வருடம் எதிர்ப்பார்த் திருந்தேன்
வருகையில் கோடை வருமென நினைத்தேன்
சறுக்கணி யாய்ப்புதுப் பனிமழைக் குறுமென
இதமாய்ச் சறுக்கிட இடச்சறுக் கணியாய்
இளைய மணமகற் கியையிளம் பாவையாய்
கன்னம் சிவந்துடைக் கன்னியாய்த் துணைக்கு.
மாலையாம் நேரம் சாரளத் திருந்தேன்
காலைப் பொழுதில் கூடப் படிகளில்
வாரக் கணக்காய் வாயிற் கதவினில்
மாதக் கணக்காய் வழியின் முகப்பினில் 210
குளிர்ப்பொழு தெல்லாம் தொழுவின் வெளியினில்;
பனிமழை கட்டியாய்ப் படும்வரை நின்றேன்
பனிக்கட்டி யுருகி நனைதரை யாம்வரை
குளிண ரத்தரை கூழாங் க(ல்)லாம் வரை
நொருங்கிக்கூ ழாங்கல் நுண்மண லாம்வரை
படிநுண் மணல்பின் பசுமையா யாம்வரை;
இதனையோ சித்தேன் எல்லாக் காலையும்
எல்லா நாளிலும் எண்ணியே இருந்தேன்
காணும்இந் நாள்வரை கரடியெங் கேயென
கானக அன்பின் கழிந்தநாள் எங்கென 220
எஸ்தோனி யாவுக் கேகி யிருந்ததோ
பின்லாந்து நாட்டை பிந்ததோ விட்டு!"
முதிய வைனா மொயினன் அதன்பின்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"என்விருந் தாளியை எங்கே அமர்த்தலாம்
எனது அன்பை எவ்வழி நடத்தலாம்
உயர்புகழ்க் கூரை உத்தரத் தின்கீழ்
இவ்வில் லத்தின் எழிற்கூ ரையின்கீழ்?"
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர்
எழிலார் இனத்தார் இயம்பினர் இவ்விதம்: 230
"அவ்விருந் தாளியை அங்கே அமர்த்தலாம்
எமது அன்பினை இவ்வழி நடத்தலாம்
உயர்புகழ்ப் கூரை உத்தரத் தின்கீழ்
இவ்வில் லத்தின் எழிற்கூ ரையின்கீழ்;
ஆகார மங்கே ஆயத்த மாயுள
பானமும் தயாராய்ப் பருகிட உள்ளது
தொடர்தரைப் பலகைகள் சுத்தமுற் றுள்ளன
வளநிலம் பெருக்கி வைக்கப் பட்டது,
அவையர் உடையணிந் தனைவரு முள்ளனர்
உயர்சுத்த மான உடையணிந் துள்ளனர், 240
அவர்களின் தலைத்துணி அழகா யுள்ளது
அமைந்தன உடைகள் அரு(ம்)வெண் ணிறத்தில்."
முதிய வைனா மொயினன் அதன்பின்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"என்றன் கரடியே, **இனியஎன் பறவையே!
தேனார் பாதமே, திகழுமென்** பொதியே!
நீநட மாடிட நிலமுள இன்னும்
தவழ்ந்து திந்திட தகுபுல் வெளியுள.
பொன்னே, இப்போ புறப்படு போக!
அன்பே, நிலத்தில் அடிவை சென்றிட! 250
கறுப்புக்கா லுறையே,காலெடு நடக்க!
துணிக்காற் சட்டையே, தொடர்ந்துலாப் போக!
**சிறுபுள் செல்லும் திசைவழி நடக்க!
**சிட்டுக் குருவி திந்துலாம் பாதையில்,
காண்ஐங் கூரைக் கைமரங் களின்கீழ்,
உயர்அறு கூரை உத்திரங் களின்கீழ்.
இருங்கள்எச் சாக்கையாய் இழிந்தபெண் டிர்களே
அஞ்சிடா திருக்கநும் அயகால் நடைகள்
பயந்திடா திருக்கப் படர்சிறு நிரைகள்
தலைவியர் பசுநிரை தாக்குறா திருக்க 260
வந்துசேர் கையில்இவ் வளர்விடம் கரடி
இங்கே நுழைகையில் **எழிலுரோ மத்துவாய்.
பையன்காள், முன்கூடப் படியிருந் தேகுக!
அவையீர், கதவத்து நிலையிருந் தகலுக!
**நாயகன் வதிவிட நனியுள் வருகையில்
அடிவைத்துச் சிறப்புறும் ஆடவன் வருகையில்!
காட்டினில் வாழும் கரடியே, அப்பிளே!
செறிவனத் துறையும் திரட்சியா னவரே!
அவையைக் கண்டும் அச்சம் கொளாதீர்
பின்னிய குழலார்ப் பெரும்பயம் கொளாதீர் 270
தோகையர்ப் பார்த்துத் துணுக்குற் றிடாதீர்
சுருங்கிய காலுறை அணிந்தோர்க் **கழிகலீர்!
இல்லத் திருக்கும் எம்முது மாதரும்
புகைபோக்கி மூலையில் போயமர்ந் திருப்பர்
மனிதன் வதிவிடம் வருகையில் உட்புறம்
அரும்பெரும் பையன் அடிவைத் தடைகையில்."
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"இறைவனே வருவீர், இங்கும் வருவீர்,
உயர்புகழ்க் கூரையின் உத்திரத் தின்கீழ்
இவ்வில் லத்தின் எழிற்கூ ரையின்கீழ்! 280
எனதன் பெடுத்துநான் ஏகுவ தெங்கே
கொழுத்தஎன் பொதியை வழிப்படுத் துவதெங்(கே)?"
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர்:
"வருகநின் வரவு நல்வர வாகுக
பார்த்தவ் விடம்உம் பறவையைச் சேர்ப்பீர்
அன்பை வழிப்படுத்(த) அங்கே செல்வீர்
தாருவின்** வாங்கு நேர்பல கைநுனி
இரும்பா சனத்தின் இயைந்தவம் முனைக்கு,
உரோம ஆடையின் பாசோ தனைக்கு
கம்பளி யதனைக் கவனமாய்ப் பார்க்க! 290
கரடியே, அதனால் கடுந்துயர் வேண்டாம்!
வீணே மனநிலை பாழாக் கிடாதே
உரோம மதனைப் பாசோ திக்கையில்
கம்பளி யதனைக் கவனமாய்ப் பார்க்கையில்
எவருமும் கம்பளி யுடைசேத மாக்கிடார்
பார்க்கையில் மாறிப் படரவும் செய்திடார்
தாத்திரம் பிடித்த தரத்தனர் உடைபோல்
ஏழை எளியவர் ஆடைக ளைப்போல்!"
முதிய வைனா மொயினன் அதன்பின்
எடுத்தான் கரடியின் உரோமத் தாடையை 300
கூடமேற் றளத்தில் கொண்டதை வைத்தனன்
இறைச்சியைக் கலயம் ஒன்றிலே இட்டனன்
பொன்னாய் மின்னுமோர் புதுக்கல யத்திலே
செப்பினால் அடிப்புறம் சேர்கல யத்திலே.
அனலிலே யிருந்தன அடுத்ததாய்க் கலயம்
செப்புக் கரைகள் சேர்கல யங்கள்
நிறைந்து கிடந்தன நிறைந்து வழிந்தன
சிறுசிறு இறைச்சி தொந்தன துண்டுகள்
உப்புக் கட்டிகள் உள்ளே யிருந்தன
தொலைதே சத்தால் நலமாய்க் கொணர்ந்தவை 310
ஜேர்மன் நாட்டால் நேர்பெறல் உப்பு
*வெண்கடற் புறத்தால் வந்தநல் லுப்பு
*உப்பு நீணை உளவழி வந்தவை
இறக்கிக் கப்பலி லிருந்து கொணர்ந்தவை.
இரசம் கொதித்து இயல்தயா ரானதும்
கலயத்தை நன்கே கனலிருந் தெடுத்ததும்
**கொள்ளைச் செல்வம் கொணரப் பட்டது
எடுத்தேகப் பட்டது **இன்சிறு குருவி
நுவல்நீள் மேசையின் நுனிப்புற மாக
பொன்னிலே யான கிண்ணங் களுக்கு 320
நறைப்பா னத்தை நனிசுவைத் தருந்த
`பீர்`ப்பா னத்தைப் பீடுறக் குடிக்க.
தேவ தாருவில் செய்ததம் மேசை
செப்பினா லியந்தவை திகழ்கிண் ணங்கள்
வெள்ளியில் ஆனவை விளங்கும் கரண்டிகள்
இனியபொன் தட்டி எடுத்தவை கத்திகள்;
எல்லாக் கலயமும் இருந்தன நிறைந்து
வயங்குகிண் ணமெலாம் வழிந்தன நிறைந்து
காட்டினில் பெற்ற கவின்வெகு மதியால்
பொன்னான வனத்தின் புதிய இரையினால். 330
முதிய வைனா மொயினனைப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"மொய்ம்பொன் மார்புடை முதுமா மனிதா!
தப்பியோ வீட்டின் தலைவனே கேளாய்!
நற்கா னகமுறை நறைநிகர் பெண்ணே!
காட்டகம் வாழும் கவினார் தலைவி!
தகுஎழில் மனிதா, தப்பியோ மகனே!
திகழ்எழில் மனிதா, செந்தொப்பி யுடையோய்!
தனித்தெல் லர்வோ, தப்பியோ மகளே!
அனைத்துத் தப்பியோ இனத்தரும் சேர்ந்து 340
வருகநும் எருதின் மணத்தினுக் காக
நும்சடைப் பிராணியின் கொண்டாட் டுக்கு!
உண்டிட நிறைய உள்ளது இப்போ
அயின்றிட நிறைய, அருந்திட நிறைய,
நீங்கள்வைத் திருக்கவும் நிறையவே யுள்ளது
ஊலே கொடுக்கவும் உள்ளது நிறையவே."
மக்களோ இவ்விதம் மறுமொழி கூறினர்
எழிலார் இனத்தார் இயம்பினர் இவ்விதம்:
"கரடி பிறந்ததெக் கவினார் இடத்திலே
மதிப்புறும் குட்டி வளர்ந்ததும் எவ்விடம் 350
அமைந்ததா வைக்கோல் அமளியில் பிறப்பு
வளர்ப்புச் சவுனா அடுப்பு மூலையில்?"
முதிய வைனா மொயினனைப் போது
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"வைக்கோ(லி)ல் கரடி வந்து பிறந்தில
சூளையின் குப்பையில் தோன்றிய துவுமில
நிகழ்ந்தது கரடியின் நேர்ப்பிறப் பங்கே
தேன்பா தத்தின் திகழ்பிறப் பமைந்தது
திங்களின் இடத்தில் தினகரன் கருவில்
தாரகைக் குலத்தின் தகுதோள் மீது 360
காற்றின் கன்னியர் கலந்துவா ழிடத்தில்
இயற்கையின் மகளார் இனிதுவா ழிடத்தில்.
வான விளிம்பிலோர் வனிதை நடந்தனள்
சுவர்க்க மத்தியில் சுந்தா நடந்தனள்
முகிலோ ரத்தில் மொய்குழல் தாத்தனள்
வானின் எல்லையில் வனிதை இருந்தனள்
கால்களில் நீலக் காலுறை யிருந்தன
உயர்குதிக் காலணி ஒளிர்ந்தன மின்னி
கரங்களில் கூடை கம்பளி நூலொடு
உரோமக் கூடையும் உற்றது கக்கம்; 370
வீசினள் கம்பளி விபுனல் மேலே
அதனை எறிந்தனள் அலைகளின் மேலே
அதனைக் காற்று ஆராட் டியது
குறும்புடை வாயு தாலாட் டியது
அருநீர்ச் சக்தி அசைந்தாட் டிடவே
அலையும் சென்றது அடித்துக் கரைக்கு
நறைநிகர் கானக நன்கரை யதற்கு
தேனிகர் கடலின் செறிமுனை நுனிக்கு.
மியெலிக்கி என்பாள் மிளிர்கான் தலைவி
தப்பியோ லாவின் தரமுறு மனையாள் 380
கண்டனள் புனலில் கட்டினை எடுத்தனள்
அலையினில் பெற்றனள் அயமென் கம்பளி.
அதனை விரைந்து அங்கே சேர்த்தனள்
துணியால் ஒழுங்காய்ச் சுற்றியே வைத்தனள்
**`மாப்பிள்` மரத்தொரு வன்கூ டையிலே
அழகா யாடுமோர் அருந்தொட் டிலிலே;
துணிப்பொதிக் கயிற்றை தூக்கினள் உயர
பைம்பொன் இயைந்த பட்டியை உயர்த்தினள்
சடைத்து வளர்ந்ததோர் தனிமரக் கிளைக்கு
விந்து பரந்ததோர் வியன்இலைக் கிளைக்கு. 390
தானறிந் ததனை தான்தா லாட்டினள்
அன்புறும் அதனை அவளா ராட்டினள்
ஊசி(யி)லை மரத்தின் உயர்செழும் முடிக்குள்
சடைத்தநற் றேவ தாருவின் கீழே;
அங்கே கரடியை அவளும் வளர்த்தனள்
அம்சடைப் பிராணியை அங்கே வளர்த்தனள்
தேனை நிகர்த்ததோர் செறிபுதர் அருகில்
நறையை நிகர்த்ததோர் நல்வனத் துள்ளே.
அந்தக் கரடியும் அழகாய் வளர்ந்தது
தரமுறும் உருவம் தானும் பெற்றது 400
குறுகிய கால்கள் கூனிய ழுழங்கால்
மென்மையும் தடிப்பும் மேவிய முன்வாய்
தட்டையாம் மூக்கு தலையோ அகன்றது
உரோமம் சடைத்து உறுசெழிப் பமைந்தது;
ஆயினும் பற்கள் அதற்கி(ன்)னும் இல்லை
உகிர்கள் வளரவும் ஒழுங்காய் இல்லை.
மியெலிக்கி என்பாள் மிளிர்கான் தலைவி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
'நகங்களை இதற்கு நான்உரு வாக்குவேன்
இதற்கு நானும் எயிறுகள் கொணர்வேன் 410
ஏதும் கொடுஞ்செயல் இழையா திருப்பின்
தீச்செயல் ஏதும் செய்யா திருப்பின்.'
ஆனதால் சத்தியம் அளித்தது கரடி
கானகத் தலைவியின் கவின்முழங் கால்மேல்
ஒளிமய மான உயாறை வனின்முன்
சர்வ வல்லவன் தன்வத னக்கீழ்
எக்கொடும் செயலும் இழையேன் என்று
தீச்செயல் ஏதும் செய்யேன் என்று.
மியெலிக்கி என்பாள் மிளிர்கான் தலைவி
தப்பியோ லாவின் தரமுறு மனையாள் 420
தேடிப் பற்களைச் சென்றனள் எழுந்து
விசாரணை செய்தனள் வியன்உகிர் கேட்டு
பலமுற நின்ற **பசும்பே யிடம்
உரமுற நின்ற **உயர்சூ ரையிடம்
கணுக்கள் நிறைந்த கனமர வோடம்
**பிசின்வடி அடிமரப் பெருங்குற் றியிடம்;
அவ்விட மிருந்து அவள்நகம் பெற்றிலள்
பற்களைத் தானும் பார்த்திலள் அவ்விடம்.
வளர்ந்ததோர் **ஊசி(யி)லை மரம்புல் வெளியில்
திடானில் எழுந்தது திகழ்ஒரு **பசுமரம் 430
ஊசி(யி)லை மரத்தி லுறுவெள் ளிக்கிளை
பசுமை மரத்தின் பைம்பொன் கிளையது;
ஒடித்தனள் அவற்றை உவந்துதன் கைகளால்
அவற்றிலே யிருந்து ஆக்கினள் நகங்களை
இணைத்தனள் தாடை எலும்பினில் அவற்றை
பற்களின் **முரசில் பாங்குறப் பொருத்தினள்.
பின்னர் சடைத்த பிராணியை அனுப்பினள்
செல்லப் பிராணியை செல்வெளி விட்டனள்
சேற்று நிலங்களில் திந்தே அலைந்திட
புதர்பற் றைகளில் புகுந்தே புறப்பட 440
காட்டு வெளிகளில் கால்வைத் தேகிட
புல்மே டுகளில் போய்த்தவழ் தேறிட;
நன்றாய் நடக்க நவின்றனள் அதற்கு
அழகாய் ஓடவும் அதற்கு உரைத்தனள்
மகிழ்ச்சி மிக்கதாய் வாழ்வைக் கழிக்கவும்
புகழாய் நாட்களைப் போக்கவும் கூறினள்
திறந்த சதுப்பினில் திகழ்நிலப் பரப்பினில்
மிகுதொலைப் புற்றரை விளையாட்டு வெளியினில்
கோடையில் காலணி கொள்ளாது நடந்திட
இலையுதிர் காலத் தின்றியும் காலுறை 450
கொடிதாம் நாட்கள்தாம் கூடினும் வாழவும்
குளிர்கால மேற்படும் குளினைத் தாங்கவும்
சிறுபழச் செடியதன் சேர்அகத் துள்ளிலும்
கொழுந் தேவ தாருவின் கோட்டையின் பக்கமும்
வளர்சிறப்பூ சி(யி)லை மரத்ததன் அடியிலும்
சூரைச் சோலையின் மூலையின் புறத்திலும்
ஐந்து கம்பளி அகல்விப் படியிலும்
எட்டுப் போர்வைகள் இதக்கீழ் இருக்கவும்.
கொள்ளைச் செல்வக் குவையங் கடைந்தேன்
அங்கிருந் திவ்வென அருஇரை கொணர்ந்தேன்." 450
இளைய மக்களோ இவ்விதம் கூறினர்
முதிய மக்களோ மொழிந்தனர் இவ்விதம்:
"நெடுவனம் களிப்புற நிகழ்ந்தது எதுவெது?
கானகம் களிப்புற, கவின்வனம் மகிழ்வுற?
கானகத் தலைவர் களித்ததும் எவ்விதம்?
அன்புறும் தப்பியோ ஆனந்தம் கொண்டதும்
அயஇப் பிராணியை அன்புடன் அளித்ததும்
தேனாம் செல்வம் சென்றிட விட்டதும்?
ஈட்டியொன் றதனால் இதுபெறப் பட்டதா
அல்லது அம்பினால் அடைந்திடப் பட்டதா?" 470
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"கானகம் களிப்புற வைத்தனம் நாங்களே
கானகம் களிப்புற கவின்வனம் மகிழ்வுற
கானகத் தலைவர் களித்ததும் இவ்விதம்
அன்புறும் தப்பியோ ஆனந்தம் கொண்டதும்.
மியெலிக்கி என்பாள் மிளிர்வனத் தலைவி
தெல்லர்வோ என்னும் தப்பியோ திருமகள்
வனமதன் வனிதை வடிவுறும் காகை
கானகத் துறையும் ஒருகவின் சிறுபெண் 480
வழித்தடம் காட்ட வந்தனள் எழுந்து
அடிச்சுவட் டுக்கு அயை()ளம் கூறினள்
பாதையின் பக்கம் பதித்தாள் குறிகளை
புறப்பட்ட பயணம் போம்வழி காட்டினள்;
புகுமர வாசைப் புள்ளிகள் செதுக்கினள்
அடைய()ளம் இட்டே அமைத்தனள் மலைகளில்
கரடியின் வாயிற் கதவம் வரையிலும்
மற்றது வாழ்ந்த வதிவிடம் வரையிலும்.
அந்த இடத்தைநான் அடைந்திட் டதுமே
சேரும் இடத்தைச் சேர்ந்து முடிந்ததும் 490
அங்கி(ல்)லை ஈட்டியால் அடைந்திடும் அலுவலே
அங்கி(ல்)லை எய்து அடைந்திடும் வேலையே:
இளுவை வளையத் திருந்துதா னுருண்டது
கிடந்துஊ சிமரக் கிளையால் வீழ்ந்தது
வற்றிய கிளைகள் மார்பெலும் புடைத்தன
கிழித்துச் சுள்ளிகள் வயிற்றைத் திறந்தன."
பின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"என்றன் கரடியே, இணையில் அன்பே!
என்றன் பறவையே, என்றன் செல்லமே! 500
இவ்விதம் வைத்திடு இயைதலை யணிகளை
உன்றன் பற்களை ஒன்றாய்ச் சேர்த்திடு
கூய எயிற்றினைக் கொண்டுவா வெளியே
அகன்ற தாடை அவைஒன் றாய்ச் சேர்.
எதையும் கொடிதாய் எண்ணிட வேண்டாம்
எங்களுக் கெதுதான் இயைந்த போதிலும்
உடைதல் எலும்புகள், உடன்தலை நொருங்குதல்,
பற்கள் நறுநறு படுஒலி எழுப்புதல்.
* * *
இப்போது நான் கரடி எழில்நாசி யைப்பெறுவேன்
எப்போது மென்நாசிக் கிருக்கட்டும் மஃதுதவி 510
அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான் எடுக்கேன்
செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி இருசெவிக ளைப்பெறுவேன்
எப்போது மென்செவிக்கு இருக்கட்டு மஃதுதவி
அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன்
செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி இருவிழிக ளைப்பெறுவேன்
எப்போது மென்விழிக்கு இருக்கட்டு மஃதுதவி
அப்படியே யாயிடினும் அதை முற்றாய் நான்எடுக்கேன்
செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை. 520
இப்போது நான்கரடி யின்நெற்றி யைப்பெறுவேன்
எப்போது மென்நெற்றிக் கிருக்கட்டு மஃதுதவி
அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன்
செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி யின்வாயைய் பெறுகின்றேன்
எப்போது மென்வாய்க்கு இருக்கட்டு மஃதுதவி
அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன்
செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
இப்போது நான்கரடி யின்நாக்கைப் பெறுகின்றேன்
எப்போது மென்நாக்குக் கிருக்கட்டு மஃதுதவி 530
அப்படியே யாயிடினும் அதைமுற்றாய் நான்எடுக்கேன்
செப்பமதை மட்டும்தான் தேர்ந்தெடுப்பே னென்பதில்லை.
* * *
அவனையோர் மனிதனென் றழைக்கிறேன் இப்போ
மாபெரும் வீரனாய் மதிக்கிறேன் நானே
இறுகிய பற்களை எவரும் கணக்கிடில்
வாசையாய் அமைந்திடு வல்லெயி றிளக்கிடில்
உருக்கில் இயைந்தவாய் ஒண்தா டையினால்
கடுமிரும் பானதன் கைமுட் டியதால்."
வேறுஅப் போதுயாரு(ம்)முன் வந்திலர்
அத்தகு வீரர் அங்கிலை யெவரும் 540
இறுகிய பற்களை எண்ணித் தானே
வாசையாய் அமைந்த எயிறுகள் இளக்கிட
தனது முழங்கால் தனியெலும் பதன்கீழ்
கடுமிரும் பானதன் கைமுட்டி பற்றி.
கரடியின் பற்களைக் கையினா லெடுத்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"காட்டுக் கரடியே, கவினார் அப்பிளே!
கொழுவனத் தழகிய கொழுத்த பிராணியே!
உனக்கொரு பயணம் உள்ளது இப்போ
பிரய()ணம் ஒன்று பேணவந் துள்ளது 550
இந்தச் சிறிய எழிற்கூ டிருந்து
தாழ்ந்த இந்தத் தனிக்குடி யிருந்து
உயர்வாய் அமைந்த ஒருஇல் லுக்கு
விசாலமாய் அமைந்த வீடொன் றுக்கு.
பொன்னே, இப்போ புறப்படு போக!
அன்புச் செல்வமே, அடிவைத் தேக!
பன்றிகள் செல்லும் பாதையின் பக்கம்
பன்றிக் குட்டிகள் படரும் வழியாய்
குறுங்கா டடர்ந்த குன்றுகள் மேலே
உயர்ந்து ஓங்கிய ஒளிர்மலை மீது 560
சடைத்த தேவ தாருகள் நோக்கி
நூறுகொப் பூசி(யி)லை நுவல்மரம் நோக்கி!
அங்குநீ இருப்பது அமைந்திடும் நன்றாய்
காலத்தை அங்கே கழிப்பது சிறப்பு
பசுவின் மணியொலி படர்தொலைக் கேட்கும்
மணிகள் கணீடும் மற்றவ் விடத்தில்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அவ்விட மிருந்து அகன்றில் வந்தனன்
இளைய மக்களோ இவ்வித மியம்பினர்
எழிலார் இனத்தவர் இவ்விதம் கூறினர்: 570
"கொள்ளைச் செல்வம் கொண்டெங் கேகினை?
தேடிய இரையும் சென்றது எவ்வழி?
கட்டிப் பனிமேல் விட்டே கினிரா?
கூழப்பனி யுள்ளே மூழ்கவிட் டீரா?
அகலசதுப் பூற்றில் அமிழவிட் டீரா?
அம்புற் றரைவெளி அடக்கம் செய்திரா?"
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"கட்டிப் பனிமேல் விட்டிட வில்லை
கூழ்ப்பனி யுள்ளே மூழ்கிட வில்லை 580
குரைநாய் அதனைக் குழப்பித் தியும்
பறவைக் கொடியவை மறைந்திடச் செய்யும்;
அகலசதுப் புநிலத் தமிழ்த்தவு மில்லை
அம்புற் றரைவெளி அடக்கவு மில்லை
புழுக்கள் அதனை அழித்தே போடும்
கறுப்பு எறும்புகள் கடித்தே யுண்ணும்.
கொள்ளைச் செல்வம் கொண்டங் கேகினேன்
தேடிய இரையும் சென்றது அவ்வழி
தங்கத் தமைந்த தனிமலை முடிக்கு
வெள்ளிக் குன்றின் வியன்தோள் மேலே; 590
அகல்துய் யமரத் ததைநான் வைத்தேன்
நூறு கிளையுடை ஊசி(யி)லை மரத்தில்
சடைத்துத் தழைத்த தகுமொரு கிளைமேல்
இலைகள் நிறைந்த இதக்சுள் ளியின்மேல்
மனிதருக் கெல்லாம் மகிழ்ச்சியுண் டாக
வழிப்போக் கர்க்கு மதிப்புண் டாக.
கிழக்கே பார்த்திடக் கிடத்தினேன் முரசு
வடமேற் பக்கமாய் வைத்தேன் விழிகளை
இருப்பினும் சாயாய் இட்டிலன் உச்சியில்:
உண்மையி லங்ஙனம் உச்சியில் வைத்தால் 600
செறிகால் வந்து சேதப் படுத்தும்
குளிர்காற் றெழுந்து கொடுஞ்செயல் புயும்;
ஆனால் நிலத்திலும் அதனைநான் வைத்திலன்;
அங்ஙனம் நிலத்திலே அதனைவைத் திட்டால்
சேர்ந்து பன்றிகள் தியும் தூக்கி
புரட்டிக் கூர்வாய்ப் பிராணிகள் போடும்."
முதிய வைனா மொயினன் அதன்பின்
வெடித்துப் பாடினான் வெடித்தன பாடல்கள்
கவின்புகழ் அந்தியைக் கெளரவப் படுத்த
நிறைவுறும் நாளை நேர்மகிழ் வூட்ட. 610
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"சுடானை ஏந்தியே, சுடர்கொழுத் திடுவாய்,
பாடும் போதொளி பார்த்துநான் பாட,
இதோவரு கின்றது இசைக்கு மென்நேரம்
வாய்விழை கின்றது வழங்கிடப் பாட்டொலி."
பின்னர் பாடினன் பின்னர் இசைத்தனன்
மாலைப் பொழுது மகிழ்ந்தனன் முழுவதும்
பாடல்கள் பாடி முடிந்ததும் பகர்ந்தனன்
இறுதியில் அவனே இவ்விதம் கூறினன்: 620
"இன்னொரு நேரம் இறைவனேத் தாரும்!
எதிர்கா லத்தில் இறைநிரந் தரனே!
இவ்விதம் மகிழ்ந்து இன்புற் றிருக்க
இனியும் ஒருமுறை இவ்விதம் செயற்பட
கொழுத்த கரடியின் கொண்டாட் டத்தில்
பொதுநீள் உரோமப் பிராணியின் விழாவில்.
இறைவனே, எமக்கு என்றுமே யருளும்!
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
சொற்றொகுதி
[பெயர்கள் முதலில் தமிழிலும் அடுத்து பின்னிஷ் மொழியிலும் (அவசியமான இடங்களில் அடைப்புக்
குறிக்குள் ஆங்கிலத்திலும்) இடம் பெற்றுள்ளன].
அ
அசுரமலை: இம்மலை தீய ஆவிகள் உறைவதாகக் கருதப்படும் ஒரு மலை. Horna என்னும் பின்னிஷ் சொல்லுக்கு தீய ஆவி, அசுரன், பூதம் என்று பொருள். இம்மலை கல்லவெசி ஏரிக்கு தென்கிழக்கில், பின்லாந்தின் பெரிய தீவான சொய்ஸலோவில் இருந்ததாகக் கருதப்படுகிறது.
அந்தரோவிபுனன்: Antero Vipunen: மந்திரம் தெரிந்த ஒரு பெளராணிக பூதம்.
அமைதிநீர் மனிதன்: அமைதி நீரினன், நன்னீர் மனிதன் ஆகியன வைனாமொயினனின் சிறப்புப்பெயர்கள்.
அய்யோ: A*ijo*: இக்கு - துர்சோவின் தந்தை; பார்க்க 'இக்கு - துர்சோ'.
அலுவே: Alue: ஒரு ஆதி காலத்து நதியின் பெயர்.
அன்னிக்கி: Annikki: கொல்லன் இல்மரினனின் சகோதரி. 'நற்பெயருடையாள்' என்பது அவளுடைய சிறப்புப் பெயர். இரவிலும் அதிகாலையிலும் வீட்டுக் கடமைகளைச் செய்வதால் இரவின் நங்கை, வைகறை வனிதை என அழைக்கப் படுபவள்.
அஹ்தி: Ahti: லெம்மின்கைனனின் இன்னொரு பெயர்.
அஹ்தொலா: Ahtola: அஹ்தோவின் ஆளுகைக்கு உட்பட்ட இடம்.
அஹ்தோ: Ahto: அலைகளின் அதிபதி; கடலுக்கும் நீருக்கும் அதிபதி; அஹ்தோவின் மனைவியின் பெயர் வெல்லமோ.
அஹ்தோலைனன்: Ahtolainen: அஹ்தொலாவில் வசிப்பவர்.
ஆ
ஆழத்துலகம்: துவோனலா என்னும் மரண உலகத்தின் இன்னொரு பெயர். பாதாள உலகம்.
இ
இக்கு - துர்சோ: Iku-Turso: கடலரக்கன், கடற்பூதம், கடலின் மாபெரும் சக்தி (sea monster)
இங்கிரியா: Inkeri: பின்லாந்தின் குடாக் கடலுக்கு தென்கிழக்கில் உள்ள ஓர் இடம். ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. சென்ற், பீற்றர்ஸ் பேர்க் ( St. Petersberg ) [முந்திய லெனின் கிராட்] மாநிலத்தில் இருக்கிறது.
இடுகாட்டு ஆவி: Kalma: மரணம், மரண சக்தி, மரணத்தின் ஆவி என்னும் பொருளில் இடுகாடு உருவகப் படுத்தப்பட்டது.
இமாத்ரா: Imatra: வுவோக்ஸி நதியில் வீழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி; இப்பொழுது இந்த இடம் இமாத்ரா என்ற பெயரில் ஒரு நகரமாக மாறியிருக்கிறது. இங்கே தான் பின்லாந்தின் மிகப் பெரிய காகித ஆலையும் நீராற்றல் மின்சக்தி நிலையமும் அமைந்துள்ளன.
இல்போ[வின்] மகள்: Ilpotar: லொவ்ஹியின் இன்னொரு பெயர்.
இல்மத்தார்: Ilmatar: (air spirit) வாயுவின் மகள்; காற்றின் கன்னி; நீரன்னை; பூமியைப் படைத்தவள்; வைனாமொயினனின் கன்னித்தாய்.
இல்மரி, இல்மரினன்: Ilmari, Ilmarinen: இந்நூலின் மூன்று முக்கிய நாயகர்களில் ஒருவன்.
அழிவில்லாத ஆதிகாலத்து உலோக வேலைக் கலைஞன். இவனைக் "கொல்லன்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நமது வழக்கில் "கொல்லன்" என்றால் இரும்பு வேலைத் தொழிலாளியையே குறிக்கும். அதே நேரத்தில் "பொற்கொல்லன்" என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. பின்னிஷ் மொழியில் seppo என்றால் உலோகத் தொழிலாளி என்று பொருள். எந்த வகையான உலோகத்திலும் வல்லமையுடைய கலைஞன் என்றே பொருள். இதை ஆங்கிலத்தில் smith என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
வடநாட்டில் சம்போ என்னும் சாதனத்தைச் செய்த திறமை மிக்க தேவ கொல்லன். வானத்தைச் செய்தவன், விண்ணுலகின் மூடியைச் செய்தவன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவன். பின்னிஷ் மொழியில் Ilma என்றால் காற்று, ஆகாயம், வானம் என்று பொருள். இச்சொல்லில் இருந்து இப்பெயர் வந்தது. இப்பெயர் இன்னமும் பின்னிஷ் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இல்மரினனைப்பற்றிப் படிக்கும் பொழுது இந்திய மரபுப்படி புராணங்களில் வரும் தேவதச்சன் விசுவகருமாவும் அசுரதச்சன் மயனும் நினைவுக்கு வரலாம்.
இல்மரினனின் சகோதரி அன்னிக்கி.
வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளைத் திருமணம் செய்தவன். அடுத்த மகளைக் கவர்ந்து சென்று கடல் பறவையாகச் சபித்தவன்.
இல்மரினனின் தலைவி: Ilmarisen ema*nta*: இல்மரினனின் மனைவி; வடநாட்டுத் தலைவியான லொவ்ஹியின் மூத்த மகள்; விவாகத்துக்கு முன்னர் வடநில மங்கை என்றும் பின்னர் இல்மரினனின் தலைவி என்றும் அழைக்கப்பட்டவள்; பெயர் கூறப்படவில்லை.
இல்மா: Ilma: (i) இல்மரினனின் தோட்டம், (ii) இல்மரினனின் வசிப்பிடம், (iii) இல்மரினன் என்ற பெயரின் சுருக்கம்.
ஈ
ஈயநெஞ்சாள்: Tinarinta: ஈயம், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பெறுமதி குறைந்த நகைகளை அணியும் கன்னிப் பெண்ணை முன்னாளில் தகர மார்பணி அல்லது ஈய மார்பணி அணிந்தவள் என்னும் பொருளில் `ஈய நெஞ்சாள்`, `ஈயத்துநெஞ்சாள்`, `தகர நெஞ்சாள்`, `ஈய மார்பினள்`, `தகர மார்பினள்` என அழைத்தனர். பொதுவாக விவாகமாகாத ஒரு கன்னிப் பெண்ணையே இவ்விதம் அழைத்தனர் என்ற கருத்தும் உண்டு.
உ
உக்கோ: Ukko: முதியவன் என்று பொருள். முகில்களின் அதிகாரம் கொண்ட சுவர்க்கத்தை ஆளும் கடவுள் என்ற கருத்தில் "உக்கோ" என்று ஆதிகாலத்தில் அழைத்தனர்.
உந்தமோ: Untamo: 5ம் பாடலில் கனவின் சக்தி, கனவின் ஆக்க சக்தி, கனவின் ஆவி, கனவின் காரண கர்த்தா என்ற பொருளிலும் 26ம் பாடலில் ஓநாய்களை உடையவன் என்னும் பொருளிலும் கூறப்பட்டது. ஆனால் கலர்வோ என்பவனின் சகோதரனாக 31,34, 36ம் பாடல்களில் கூறப்படுகிறது.
உந்தாமொயினன்: Untamoinen: பார்க்க `உந்தமோ`.
உந்தோ: Unto: `உந்தமோ`வின் சுருக்கம்; பார்க்க `உந்தமோ`.
உப்பு - நீரிணை: Suolasalmi: ( the salt sound, the Sound); ஒரு உப்புக் கடற்கால்வாய், கடலுட் கால்வாய், தொடுவாய், நீரோட்டம். 46ம் பாடலில் கூறப்பட்ட இந்த நீரிணை தென் சுவீடனுக்கும் டென்னிஷ் தீவான சீலந்துக்கும் Sjaelland (Zealand) நடுவே அமைந்தது. இந்த நீரிணையின் இன்றைய பின்னிஷ் பெயர் Juutinrauma (`Jutland current`).
உறுத்தியா: Rutja: நோர்வேயின் வடகோடியில் லாப்லாந்தில் உள்ள இடம்; இதன் தற்போதைய பின்னிஷ் பெயர் உறுய்யா Ruija.
உறைபனி மனிதன்: Pakkanen: (Jack Frost); வடபுலத் தலைவி தனது பாதுகாப்புக்காக மந்திர சக்தியால் கொடிய உறைபனிக் குளிரை உண்டாக்கவல்ல ஒரு சக்தியை உருவாக்கி அதை லெம்மின்கைனன் மீது ஏவிவிடுகிறாள். இவன் உறைபனி மனிதன், உறைபனியோன், உறைபனி மைந்தன், பனிப் பையன் என்றும் அழைக்கப்படுகிறான். பின்னிஷ் மொழியில் புஹுரியின் மைந்தன்;
புஹுரி Puhuri என்பது கடுங் காற்றின் உருவகப் பெயர்.
எ
எஸ்த்தோனியா: Viro: (Estonia); முன்னர் சோவியத் யூனியனைச் சேர்ந்திருந்தது; இப்பொழுது ஒரு தனிநாடு.
ஐ
ஐனிக்கி: Ainikki: லெம்மின்கைனனின் சகோதரி.
ஐனோ: Aino: யொவுகாஹைனனின் சகோதரி; வைனாமொயினனுக்கு மனைவியாக்க வாக்களிக்கப்பட்டவள்; கடைசியில் நீரில் மூழ்கி இறக்கிறாள். இதிலிருந்து நீரில் மூழ்கி இறப்பவர்கள் பின்னர் நீரின் ஆவியாக/சக்தியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு.
ஒ
ஒஸ்மோ: Osmo: ஒரு பெளராணிக இடம்; கலேவாவின் இன்னொரு பெயர்.
ஒஸ்மொலா: கலேவலாவின் இன்னொரு பெயர்.
ஒஸ்மொயினன்: Osmoinen: கலேவாவின் சந்ததியினன் என்ற பொருளில் வைனாமொயினனைக் குறிக்கும்.
க
கந்தலே: kantale: ஒருவகை நரம்பிசைக் கருவி; ஆரம்பத்தில் ஐந்து நரம்புகளைக் கொண்டது. பல நூறு வருடங்களாகப் பின்லாந்து மக்களால் இசைக்கப்பட்டு வரும் ஒருவகை யாழ்.
கந்தலேதார்: Kanteletar: யாழிசைக் கருவியின் தேவதை; கலேவலா நூலின் தொகுப்பாசிரியர் லொண்ரொத் "கந்தலேதார்" என்ற பெயரில் ஒரு இசைப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
கர்யலா: Karjala: பார்க்க `கரேலியா`.
கரேலியா: Karelia: ரஷ்யா - பின்லாந்து எல்லையின் இரு புறமும் பரந்துள்ள பெரிய நிலப்பகுதி. இந்நூலின் பெரும்பாலான பாடல்கள் இங்குதான் சேகரிக்கப் பட்டன. இப்பகுதி கர்யலா Karjala என்றும் அழைக்கப்படும். Karja 'கர்யா' என்ற பின்னிஷ் சொல்லுக்குக் கால்நடை ( = ஆடுமாடுகள்) என்று பொருள். 'கர்யலா' என்பதை 'கால்நடை நாடு' 'கால்நடைப் பகுதி' என்று சொல்லலாம்.
கல்மா: Kalma: இடுகாடு; மரணத்தின் உருவகப் பெயர்; இதன் வேறு பெயர்கள்: துவோனி, மனா.
கலர்வோ: Kalervo: குல்லர்வோவின் தந்தை; உந்தமோவின் சகோதரன்.
கலர்வொயினன்: Kalervoinen: குல்லர்வோவின் ஒரு சிறப்புப் பெயர்.
கலேவா: Kaleva: இந்தக் காவியத்தின் நாயகர்களின் மூதாதையரின் பெயர்; ஆனால் இவர் ஒரு காவிய நாயகனாக இக்காவியத்தில் இடம்பெறவில்லை. இவர் வழி வந்தவரை கலேவா இனத்தவர் என்பர். இந்தக் கலேவா இனத்தவர் வாழ்ந்த இடம் கலேவலா என அழைக்கப்பட்டது. பாடல்களில் கலேவாவின் மைந்தர், கலேவாவின் மக்கள், கலேவாவின் பெண்கள் என வருவதைக் காணலாம்.
கலேவலா: Kalevala: ஒரு மாகாணப் பெயர்; அதுவே இந்நூலின் பெயரும் ஆயிற்று. 'கலேவா' என்பது ஓர் இனத்தவரின் பெயர். இந்நூலின் மூன்று முக்கிய நாயகர்களான வைனாமொயினன், இல்மரினன், லெம்மின்கைனன் ஆகியோரின் மூதாதையர் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஓரிடமே/நாட்டின் ஒரு பகுதியே 'கலேவலா'.
-லா -la அல்லது -la* என்பது வதிவிடங்களைக் குறிக்கும் ஒரு விகுதி. 'தப்பியோ' Tapio என்பவன் காட்டு அரசன். 'தப்பியோ'வின் வசிப்பிடம் 'தப்பியோலா' Tapiola. 'துவோனி' Tuoni என்பவன் மரண உலகின் தலைவன். 'துவோனி'யின் வசிப்பிடம் 'துவோனலா' Tuonela.
கலேவைனன், கலேவலைனன்: Kalevainen, Kalevalainen: கலேவாவின் வழித் தோன்றல்கள். பாடல் 4: 94ல் வைனாமொயினனைக் குறிக்கும்.
கலேவத்தார் அல்லது ஒஸ்மத்தார்: Kalevatar/Osmotar: ஆதிகாலத்து "பீர்" என்னும் பானம் வடித்த கலேவாவின் பெண்கள்.
கனவுலகம்: பின்னிஷ் மொழியில் 'உந்தமோ' Untamo நித்திரைக்கும் கனவுகளுக்கும் அதிபதி. 'உந்தமொலா' Untamola உந்தமோவின் உறைவிடம். பார்க்க 'உந்தமோ'.
கா
காத்ரா: Kaatra, Kaatrakoski: ஒரு கற்பனை நீர்வீழ்ச்சியின் பெயர்.
கி
கிம்மோ: Kimmo: (i) ஒரு பசுவின் பெயர் (ii) ஒரு பாறைக் கல்லின் பெயர்.
கு
குய்ப்பன: Kuippana: காட்டு அரசன் தப்பியோவின் இன்னொரு பெயர்; பார்க்க 'தப்பியோ'.
குயிலி, குயில்லி, குயிலிக்கி: Kylli, Kyllikki: லெம்மின்கைனன் கடத்திச் சென்று மணம்
முடித்த மங்கை; ஒரு தீவைச் சேர்ந்தவள்; தீவின் மலர் என அழைக்கப்பட்டவள்.
குல்லர்வோ: Kullervo, Kullervoinen: கலர்வோவின் மகன். சிறு வயதில் தவறாக வளர்க்கப் பட்டதால் மன வளர்ச்சி இல்லாதவன் என்று கருதப் பட்டவன்.
கெ
கெமி: Kemi, Kemijoki: வட பின்லாந்திலிருந்து பொத்னியாக் குடாக் கடலில் பாயும் ஓர் ஆறு. பின்னிஷ் மொழியில் joki என்றால் ஆறு. இங்கேயுள்ள ஒரு நகரமும் கெமி என்று அழைக்கப்படும்.
கெள
கெளப்பி: Kauppi: லாப்லாந்தைச் சேர்ந்த பனிக் கட்டியில் சறுக்கிச் செல்லும் பாதணிகளைச் செய்பவன்.
ச
சக்ஸா: Saksa: 'சக்ஸா' என்ற பின்னிஷ் சொல்லின் பொதுவான பொருள் ஜேர்மனி (நாடு) என்பதாகும். வர்த்தகம், வெளிநாடு என்றும் இந்நூல் தொடர்பாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாதணிகள், உப்பு, சவர்க்காரம், பலகைகள் தொடர்பாகவும் இச்சொல் சில இடங்களில் வருகிறது. எனவே பாடல் 18:137ல் வர்த்தகத் தொடர்புடைய ஒரு நீர்ப்பகுதி என்று கருதப்படுகிறது. பாடல் 21:168ல் இச்சொல்லுக்கு வெளிநாட்டுப் பலகைகள் என்று பொருள் கொள்ளலாம்.
சம்போ: Sampo: ஒரு மந்திரப் பொருள், மர்மப் பொருள். மாய சக்தி படைத்த சாதனம். செல்வச் செழிப்பின் சின்னம். இது மூன்று முகங்கள் அல்லது பக்கங்கள் கொண்ட மூன்று சக்தி படைத்த ஓர் ஆலை என்றும் கருதப்படுகிறது. இப்பக்கங்கள் முறையே தானியத்தையும் உப்பையும் காசையும் அளவில்லாமல் அரைத்துக் கொண்டு அல்லது செய்து கொண்டே இருக்கும். வடநாட்டுத் தலைவியின் மகளை மணம் செய்வதற்காகத் தேவ கொல்லன் இல்மரினனால் செய்யப்பட்டது. சம்போவைப் பற்றிச் சொல்லும் இடங்களில் அதன் பிரகாசமான அல்லது பல வர்ண அல்லது ஒளிப் புள்ளிகளுள்ள மூடியும் கூறப்படுகிறது. வடநிலத் தலைவி இதனை வடக்கில் ஒரு குகையில் நிறுவுகிறாள். அங்கே இது மூன்று வேர்கள் விட்டு நிற்கிறது. இதுபோல் மீண்டும் ஒன்றைச் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. சம்போவைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் வந்துள்ளன. ஆயினும் இதன் வடிவம் பற்றியும் இயல்பு பற்றியும் நூற்றுக் கணக்கான ஊகங்கள் சொல்லப்படுகின்றன.
சம்ஸா: Sampsa: விவசாயத்துக்குரிய ஆவி, சக்தி; முழுப் பெயர் சம்ஸா பெல்லர்வொயினன் Sampsa Pellervoinen.
சரா: Sara: வடநாட்டின் இன்னொரு பெயர்.
சரியொலா, ஸரியோலா: Sariola: வடநாட்டின் இன்னொரு பெயர்.
சவுனா, செளனா: sauna: நீராவிக் குளியல்; நீராவிக் குளியல் செய்யும் இடத்தையும் குறிக்கும். நீராவிக் குளியலுக்கென்று அந்த நாட்களில் ஒரு தனிக் குடிசையும் இந்த நாட்களில் வசிக்கும் வீட்டோ டு சேர்ந்த தனி அறையும் கட்டப்படுவது உண்டு. உள்ளே விறகுகளால் தீ மூட்டி அந்தத் தணலின் மேல் கற்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இந்த நாட்களில் மின் அடுப்புகளில் கற்களை அடுக்கிப் பயன்படுத்தினாலும் கிராமப் புறங்களில் இன்னமும் பழைய முறையையே விரும்பி அனுபவிக்கிறார்கள். இப்படி அடுக்கப்பட்ட கற்கள் கனன்று கொண்டிருக்கும். நீராவிக் குளியலைப் பெறுபவர் நீரை அள்ளி அக்கற்களில் எறியும் போது நீராவி எழுந்து அந்த அறையை நிறைப்பதோடு குளிப்பவரின் உடலிலும் படியும். நீராவியில் உள்ள வெப்பம் குறையும் போது மீண்டும் மீண்டும் நீரை எற்றுவார்கள். இடைக்கிடை இலைக் கட்டினால் விசிறி மெதுவாக உடலில் அடித்துக் கொள்வதும் வழக்கம். கடும் குளிர்ப் பிரதேசங்களான இந்நாடுகளில், இந்த நீராவிக் குளியல் அந்தக் காலத்தில் ஒரு மருத்துவ அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் சவுனாக் குடிசைகளையே சுகப் பிரசவங்களுக்காகப் பயன்படுத்தினார்கள். பாடல் 45ல் லொவியத்தார் என்னும் பெண்ணும் பாடல் 50ல் மர்யத்தாவும் பிரசவத்துக்குச் சவுனாவுக்குச் செல்வது கவனிக்கத்தக்கது.
சவோ: Savo: பின்லாந்தின் கீழ் மத்திய பகுதியில் கரேலியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு மாவட்டம். இப்பொழுது குவோப்பியோ மாகாணத்தில் ஒரு பகுதி; பின்னிஷ் பெயர் Kuopio.
சுவோமி: Suomi: (Finland); பின்லாந்தின் பின்னிஷ் (மொழிப்) பெயர்.
த
தப்பியோ: Tapio: காட்டின் காவலன்; காட்டின் அரசன்; காட்டில் நடக்கும் ஆடல்களைத் தலைமை தாங்கி நடத்தும் வன தேவதை.
தப்பியோலா: Tapiola: தப்பியோவின் வதிவிடம்.
தனிக்காக் கோட்டை: Tanikkan linna: எஸ்த்தோனியாவின் தலைநகரமும் துறைமுகமுமான தல்லினாவைக் குறிக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் டென்மார்க்கைச் சேர்ந்த கடல் வீரர்கள் கண்டுபிடித்த இந்த நகரம் டென்மார்க்கின் கோட்டை என்று அழைக்கப்பட்டது. டென்மார்க்கின் கோட்டை என்பது பின்னிஷ் மொழியில் 'தன்ஸ்கான் லின்னா' Tanskan linna எனப்படும். பின்னிஷ் மொழியில் 'தன்ஸ்கா' Tanska என்றால் டென்மார்க் (என்னும் நாடு) (gen: Tanskan) என்றும் 'லின்னா' என்றால் கோட்டை என்றும் பொருள். இதுவே பிற்காலத்தில் மருவி தனிக்காவின் கோட்டை என்னும் பொருளுள்ள Tanikkan linna ஆயிற்று என்று கருதப்படுகிறது. அதுவே இப்போது தல்லினா எனவும் வழங்குகிறது. Tanskan linna >Tanikkan linna >Taninlinna >(Est.) Tallinn > (Finn.) Tallinna. எஸ்த்தோனியாவின் பின்னிஷ் பெயர் `விரோ` Viro.
தி
தியேரா: Tiera: (snow - foot); லெம்மின்கைனனின் தோழன். பனிப்பாத மனிதன், வெண் பனிப்பாத மனிதன், உறைபனிப் பாதங்களை உடையவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவன். பனிமழை பொழிந்து பாதங்கள் உறைந்து போகும் அளவுக்குப் பூமியில் குவிந்து கிடந்தாலும் அதைத் தாங்கும் தன்மையும் வன்மையும் உடையவன் என்று பொதுவாகக் கருதப்படுபவன்.
து
துர்யா: Tyrja*, Tyrja*n koski: வடக்கில் இருந்ததாகக் கற்பனையாகக் கூறப்படும் ஒரு நீர்வீழ்ச்சி. லாப்லாந்தின் இன்னொரு பெயர். வடக்கில் கொடிய மாந்திரீகரின் வசிப்பிடம்.
துர்யா மனிதர்: லாப்லாந்து மக்கள்.
துர்யா மொழி: லாப்லாந்தியரின் மொழி; லாப்லாந்தியரின் மந்திரச் சொற்கள் என்ற பொருளிலும் சில இடங்களில் காணலாம்.
துவோனலா: Tuonela: ஒரு பெளராணிக இடம். மரண உலகம், இறப்புலகம் என்று பொருள். துவோனியின் வதிவிடம்.
துவோனி: Tuoni: மறு உலகத்து அல்லது மரண உலகத்துத் தலைவன்.
துவோனியின் மகள்: Tuonetar, Tuonen tytto*: மரண உலகத்துத் தலைவனின் மகள். வைனாமொயினன் ஆற்றைக் கடந்து மரண உலகம் செல்ல முயன்ற போது அவனைத் தடுத்து வாதாடுபவள்.
தூ
தூர நெஞ்சினன், தூர நாட்டினன்: Kaukomieli, Kaukolainen: லெம்மின்கைனன் என்ற பாத்திரத்தின் சிறப்புப் பெயர்கள்.
தூரி: Tuuri: ஒரு தேவதையின் பெயர். இது இடி முழக்கத்தின் அதிபதியான `தொர்` (Thor) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. வேறோர் இடத்தில் கடவுளை இடி முழக்கங்களின் தலைவர் என்று வர்ணிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
தூலிக்கி: Tuulikki: தப்பியோவின் மகள்; காற்றின் சக்தி, காற்றின் ஆவி என்று பொருள் உண்டு.
தெ
தெல்லர்வோ: Tellervo: தப்பியோவின் மகள்.
ந
நகத்து நீர்வீழ்ச்சி: Kynsikoski: மரண உலகில் இருப்பதாகக் கற்பனை செய்யப்பட்ட ஒரு நீர்வீழ்ச்சி. இந்த பின்னிஷ் சொல்லை ஆங்கிலத்தில் claw rapid என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
நனைந்த தொப்பி, நனைந்த தொப்பியன்: Ma*rka*hattu: (soppy-hat); ஈரமான தொப்பியை அணிந்திருப்பவன்; ஒரு குருட்டு இடையன் லெம்மின்கைனன் மரண ஆற்றில் இறப்பதற்குக் காரணமானவன்.
நு
நுயீரிக்கி: Nyyrikki: தப்பியோவின் மகன்.
நெ
நெவாநதி: Neva: முன்னர் 'பீட்டர்ஸ் பேர்க்' (St. Petersburg) என்றும் பின்னர் 'பீட்ரோகிராட்' (Petrograd) என்றும் [ இடைக்காலத்தில் 'லெனின்கிராட்' ( Leningrad) என்றும்] இப்பொழுது மீண்டும் 'பீட்டர்ஸ் பேர்க்' (St. Petersburg) என்றும் அழைக்கப்படும் பிரதேசத்தில் 'லடோ கா' என்னும் ஏரியிலிருந்து நாற்பது மைல் தொலைவில் பாயும் ஒரு நதி.
ப
பனிப்பாத மனிதன்: லெம்மின்கைனனின் தோழன். தியேரா என்பவனின் இன்னொரு பெயர். பார்க்க: 'தியேரா'.
பி
பிஸா மலை: Pisanma*ki, Pisanvuori: நில்ஸியா (Nilsia*) என்னும் இடத்திலுள்ள மலை. அந்நாளைய வழக்கு மொழியில் பேய் மலை என்று பொருள்.
பு
புகார் மகள்: பூமியில் பனிப்புகாரை உண்டாக்கக் கூடிய சக்தி, தேவதை; முகில் மகள் என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
புதிய கோட்டை: Uusi Linna: இந்த பின்னிஷ் சொல்லுக்கு புதிய கோட்டை என்பதே பொருள். ஆங்கிலத்தில் சிலர் Novgorod என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தச் சொல்லுக்கும் புதிய கோட்டை, புதிய நகரம் என்று தான் பொருள். ரஷ்ய மொழியில் 'Nov' என்றால் 'புதிய' என்றும் + 'gorod' என்றால் 'அடைக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட இடம்' என்றும் பொருள். இதுவே பின்னாளில் 'கோட்டை' என்றும் 'நகரம்' என்றும் மாறிற்று. இது ஆதியில் சுவீடன் நாட்டுக் கடலோடிகள் ரஷ்யாவில் குடியேறிய இடம்.
பெ
பெல்லர்வொயினன்: Pellervoinen: சம்ஸாவின் இன்னொரு பெயர்; முழுப்பெயர் சம்ஸா பெல்லர்வொயினன் Sampsa Pellervoinen.
பொஹ்யொலா: Pohjola: வடநாடு; கலேவலாவுக்கு வடக்கே இருந்த இருள் நிறைந்த நாடு; வடநாட்டுத் தலைவியான லொவ்ஹி என்பவளின் நாட்டையும் கோட்டையையும் இப்பெயரால் அழைப்பர்.
ம
மர்யத்தா: Marjatta: கன்னித்தாய்; கிறீஸ்துவ மதத்துக் கன்னி மேரியுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டது. மரியா என்ற பெயரே திரிந்து மர்யத்தா ஆகியது என்பர். ஆங்கிலத்தில் Mary என்பதை பின்னிஷ் மொழியில் Maria என்றே எழுதுவர். கன்னி மேரி என்பதை ஆங்கிலத்தில் Virgin Mary என்றும் பின்னிஷ் மொழியில் Neitsyt Maria என்றும் எழுதுவர். பின்னிஷ் மொழியில் marja என்றால் சிறுபழம் (berry) என்றும் பொருள் உண்டு. ஒரு சிறு பழத்திலிருந்து கர்ப்பம் ஆன கன்னிப் பெண்ணாகையால் இப்பெயர் ஏற்பட்டது என்று கருதுவோரும் உளர்.
மரண ஆறு: துவோனலா என்னும் மரண உலகத்தின் கறுப்பு நிற ஆறு.
மரணத்தின் மகன்: மரண உலகின் மகன், துவோனியின் மகன். பார்க்க 'துவோனி'.
மனா: Mana: மனா என்றால் மரண உலகின் அதிபதி. Manala என்பது மரண உலக அதிபதியின் உறைவிடம்; ஒரு பெளராணிக இடம். மரண உலகம் என்று பொருள்.
மி
மிமெர்க்கி: Mimerkki: காட்டுத் தலைவி மியெலிக்கியின் இன்னொரு பெயர்; காட்டுத் தலைவன் தப்பியோவின் மனைவி.
மியெலிக்கி: Mielikki: அன்பானவளே, மனதுக்கு உகந்தவளே என்று பொருள். காட்டுத் தலைவியின் இன்னொரு பெயர். தப்பியோவின் மனைவி.
மூ
மூரிக்கி: Muurikki: ஒரு பசுவின் பெயர்.
யொ
யொவுகோ, யொவுகாஹைனன்: Jouko, Joukahainen: ஓர் இளைஞன். வைனாமொயினனுடன் போட்டியாக மந்திரப் பாடல்கள் பாடித் தோற்பவன். தோல்வியின் காரணமாகத் தன் சகோதரியை வைனாமொயினனுக்கு மனைவியாக்குவதாக வாக்களிப்பவன். வைனாமொயினனின் குதிரையை எய்து கொல்பவன்.
யொவுகொலா: Joukola: யொவுகாஹைனனின் இடம்.
யோ
யோர்தான்: Juortanin joki: ஒரு கற்பனை நதி.
லா
லாப்பியர், லாப்லாந்தியர், லாப்புலாந்தியர்: lappalainen: (Lappish); லாப்லாந்தில் வாழும் மக்கள்.
லாப், லாப்லாந்து, லாப்புலாந்து: Lappi: ( Lapland); பின்லாந்தில் வட பகுதியில் உள்ள ஒரு மாகாணம்; மந்திரவாதிகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஓர் இடம்.
லூ
லூலிக்கி: Lyylikki: பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லும் பாதணிகளைச் செய்பவனான கெளப்பியின் இன்னொரு பெயர்.
லெ
லெம்பி: Lempi (gen.: Lemmen): லெம்மின்கைனனின் தந்தை. 'லெம்பி' என்ற பின்னிஷ் சொல்லுடன் ஆறாம் வேற்றுமை உருபு (genitive case) சேரும் பொழுது வல்லினம் மெல்லினமாகி லெம்பியின் என்ற பொருளில் 'லெம்மின்' என்று வரும். அதனால் தான் மகனுடைய பெயர் 'லெம்மின்'கைனன் ஆயிற்று. தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னாரின் மகன் என்று கூற வேண்டிய இடங்களில் லெம்பியின் மைந்தன் என்றும் பெயரைக் குறிப்பிடும் இடங்களில் லெம்மின்கைனன் என்றும் வருகிறது.
"லெம்பி" என்றால் 'அன்பு' 'பிரியம்' என்று பொருள். இது சமீப காலம் வரை ஓர் ஆண்பால் பெயராகவே இருந்தது. இன்று பெண்பால் பெயராக வழக்கில் உள்ளது.
லெம்போ: Lempo: ஒரு தீய சக்தி; ஹீசியின் இன்னொரு பெயர்.
லெம்மின்கைனன்: Lemminka*inen: மூன்று முக்கிய நாயகர்களில் ஒருவன். லெம்பியின் மகனாகையால் லெம்மின்கைனன் என்று பெயர் பெற்றவன். குறும்பன்,போக்கிரி என்று வர்ணிக்கப்படுபவன். பெண்களில் அதிக நாட்டம் உள்ளவன். தூர நெஞ்சினன், அஹ்தி, தீவின் அஹ்தி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுபவன்.
இவனுடைய சகோதரி ஐனிக்கி. துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இவனை உயிர்த்தெழ வைத்த இவனுடைய தாய் இவன் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறாள்.
லெம்மின்கைனனின் தாய்: Lemminka*isen a*iti: இவளின் பெயர் கூறப்படவில்லை.
லொ
லொக்கா: Lokka: இல்மரினனின் தாய்; கலேவாவின் ஒரு பெண் சந்ததியாள் என்பதால் 'கலேவாவின் மகள்' 'கலேவத்தார்' Kalevatar ஆகிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவள். பின்னிஷ் மொழியில் 'தார்' (-tar) என்பது ஒரு பெண்பால் விகுதி.
லொவ்ஹி: Louhi: வட நாட்டுத் தலைவி. திறமை மிக்க மந்திரவாதி. இல்மரினனின் இரு மனைவியரின் தாய். நீண்ட பல்லுடையவள், நீக்கல் பல்லுடையவள் என்று வர்ணிக்கப்படுபவள்.
லொவியத்தார்: Loviatar: துவோனலா என்னும் மரண உலகில் இருக்கும் ஒரு குருட்டு வயோதிபப் பெண். இவளே கொள்ளை நோயை உண்டாக்குபவள் என்று பாடல் 45ல் கூறப்படுகிறது.
வ
வடக்கு: வடக்கு, வடபகுதி, வடநிலம், வடபால் நிலம் என்ற வருபவை யாவும் பின்லாந்தின் வட பகுதியைக் குறிக்கும். வடநாட்டின் இன்னொரு பெயர் லாப்லாந்து. வேறொரு பெயர் சரியொலா; வடநாடு பொதுவாக இருண்ட நாடு, புகார் படிந்த நாடு என்று வர்ணிக்கப்படுகிறது.
வடநிலத் தலைவன்: Pohjolan isa*nta*: லொவ்ஹியின் கணவன். லெம்மின்கைனனால் தலை
வெட்டப்படுபவன். பெயர் கூறப்படவில்லை.
வடபுல நங்கை: Pohjolan / Pohjan neiti: மற்றும் வடநாட்டு மங்கை, வடநிலச் சிறுபெண் என்று வருபவை வடநாட்டுத் தலைவி லொவ்ஹியின் மகளைக் குறிக்கும். இல்மரினனை மணந்த பின்னர் 'இல்மரினனின் தலைவி' என்று அழைக்கப்பட்டாள். பெயர் கூறப்படவில்லை.
வா
வாயுமகள்: Ilmatar: வாயுவின் மகள்; காற்றின் கன்னி; நீரன்னை; பூமியைப் படைத்தவள்; வைனாமொயினனின் கன்னித்தாய்.
பாடல் 47:141ல் வைனாமொயினனும் இல்மரினனும் நெருப்பைத் தேடிச் செல்லும் வழியில் சந்திக்கும் பெண்ணும் வாயுவின் மகள், காற்றின் கன்னி Ilmatar என்றுதான் அறிமுகமாகிறாள். ஆனால் இவர்களின் உரையாடலிலிருந்து இவள் வைனாமொயினனுக்கு முற்றிலும் புதியவளாகத் தெரிகிறது.
வி
விபுனன்: Vipunen: அந்தரோவிபுனனைப் பார்க்க.
விரோகன்னாஸ்: Virokannas: பாடல் 20ல் விவாகக் கொண்டாட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட பெரிய எருதைக் கொல்வதற்கு எஸ்த்தோனியாவிலிருந்து வந்த ஒரு அறிஞனின் பெயராகக் கூறப்பட்டது. மீண்டும் ஐம்பதாம் பாடலில் திருமுழுக்குச் செய்பவராக வருகிறது. கிறிஸ்துவ மதத்தினரின் புதிய ஏற்பாட்டில் வரும் யோவான் என்னும் திருமுழுக்குநரை இப்பெயருடன் தொடர்புபடுத்திக் கூறுவர்.
வு
வுவோக்ஸி: Vuoksi: பின்லாந்தின் கிழக்குப் பகுதியின் ஒரு பெரிய நதி; சைமா ஏரிகளிலிருந்து ரஷ்யாவின் லடொகா ஏரிக்குப் பாய்கிறது.
வெ
வெண்கடல்: Vienanmeri: ரஷ்யாவின் கரேலியா ( Russian Karelia) பகுதியில் உற்பத்தியாகும் 'வியன்னன்யொக்கி' Vienanjoki ( Northen Dvina river) என்னும் ஆறு
பாயும் இடம் வெண்கடல். ( White sea).
வெல்லமோ: Vellamo: கடலுக்கும் நீருக்கும் அதிபதியான அஹ்தோவின் மனைவி.
வை
வைனா, வைனோ: Va*ina*, Va*ino*: வைனாமொயினன் என்ற பெயரின் சுருக்கம்.
வைனாமொயினனன்: Va*ina*mo*inen: வாயுமகளின் புத்திரன். இல்மரினன், லெம்மின்கைனன் உட்பட்ட மூன்று முக்கிய நாயகர்களில் முதன்மையானவன். அமானுஷ்ய சக்தி படைத்த பாவலன். 'கந்தலே' என்னும் இசைக்கருவியை இசைப்பதில் வல்லவன். 'நிலையானவன்' 'முதியவன்' என்பவை இவனுடைய தனித்தன்மை. நீண்ட காலம் கர்ப்பத்தில் இருந்ததால் பிறக்கும்போதே முதியவன் என்று பெயர் பெற்றவன்.
இவனுடைய அறிவையும் ஆற்றலையும் கூறும் பின்னிஷ் சொல் tieta*ja*. இதனை ஆங்கிலத்தில் wise man என்று மொழிபெயர்த்துள்ளனர். இதன் நேரடிப் பொருள் '[மந்திரமும் மாயமும்] அறிந்தவன்/தெரிந்தவன்' என்பதாகும். இச்சொல் வரும் அடி தமிழில் வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: "நிலைபெறும் மாய நெறியறி முதல்வன்".
யேசுநாதர் பிறந்த சமயத்தில், அவரைத் தரிசிக்கக் கிழக்கிலிருந்து வந்த மூன்று
அறிஞர்களைப்பற்றிக் கிறீஸ்துவ வேதாகமத்தில் கூறுமிடத்தில் tieta*ja* என்ற பின்னிஷ் சொல்லும் wise man என்ற ஆங்கில சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
வைனொலா: Va*ino*la*: வைனாமொயினன் வாழ்ந்த இடம்.
று
றுவோத்துஸ்: Ruotus: ஒரு கொடிய கிராமத் தலைவனின் பெயர். கிறீஸ்துவ வேதாகமத்தில் யேசுநாதரை விசாரணை செய்தவன் எனக் கூறப்பட்ட ஏரோது ( Herod) என்ற பெயருடன் தொடர்புபடுத்திக் கூறுவர்.
றுவோத்துஸின் தலைவி: Ruotuksen ema*nta*: றுவோத்துஸின் மனைவி; பெயர் கூறப்படவில்லை.
ஹ
ஹமே: Ha*me: தென் மத்திய பின்லாந்தில் ஒரு மாகாணம்.
ஹல்லா: Ha*lla*pyo*ra*: ஹமே மாகாணத்தில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு நீர்ச்சுழி.
ஹீசி: Hiisi: ஒரு தீய சக்தி.
ஹீத்தொலா: Hiitola: ஹீசியின் ஆளுகைக்கு உட்பட்ட இடம்.
ஹெர்மிக்கி: Hermikki: ஒரு பசுவின் பெயர்.
விளக்கக் குறிப்புகள்
(உதாரணம்: 1:31 = பாடல்1; அடி 31;
உதாரணம்: பார்க்க 2:22 = விளக்கக் குறிப்புகளில் 2:22 பார்க்க;
அடைப்புக் குறிக்குள் இருப்பவை ஆங்கிலப் பெயர்கள்.)
1:31 அணியிலிருந்து: அரைக் கச்சிலிருந்து, இடுப்புப் பட்டியிலிருந்து என்றும்
மொழிபெயர்க்கலாம்.
1:34 குறுக்குவில்: கணை அல்லது கல் எறிவதற்காக ஒரு காலத்தில் கையாண்ட
வில் போன்ற படைக்கலப் பொறி; இதற்கு வக்கிரதனு என்றும் ஒரு
பெயர் உண்டு. இதன் பின்னிஷ் சொல் jousi, kaari; (cross bow, arch).
1:35 வடபால் நிலம், வடபுலம், வட நாடு என்று வருபவை யாவும் பின்லாந்தின்
வடக்கில் உள்ள லாப்புலாந்தைக் குறிக்கும்; இருளான இடம், புகார்
படிந்த இடம் என்னும் பொருளில் சரியொலா என்றும் அழைக்கப் படும்.
1:40 துணி நெய்யும் தறியில் நூல் சுற்றும் தண்டு.
1:43 வாயிலிருந்து வழிந்து தாடி போலத் தெரியும் பாலைத் துடைக்கத் தெரியாத
சிறுபிராயம்.
1:44 இந்நூலில் பல இடங்களில் 'புளித்த பால்' 'தயிர்' என்ற சொற்கள் வருகின்றன.
புளித்த பால் என்றால் கெட்டுப் போன பால் என்றும் தமிழர் வாழும் சில
இடங்களில் கருதப்படுகிறது. ஆனால் மேல் நாடுகளில் பெரிதும் விரும்பிப்
பருகும், பாலில் இருந்து செய்யப்பட்ட ஒரு பானத்தை இப்படி அழைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இதனைத் தயிர் என்னும் பொருளில் curd என்றும் sour milk என்றும்
butter milk என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் இது தயிருமல்லாத
மோருமல்லாத ஒரு புளிப்புச் சுவையுள்ள சத்து நிறைந்த பானம். இதன் பின்னிஷ்
பெயர் 'பீமா' piima*.
1:73 பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லும் வண்டி; இதன் பின்னிஷ் பெயர்கள் kelkka,
reki (sledge, sleigh). இதன் மேல் வண்டி என்று வரும் இடங்களில் இச்சறுக்கு
வண்டியையே குறிக்கும்.
1:93 ரொட்டி, 'பாண்' (bread) செய்யப் பயன்படும் ஒருவகைத் தானியம். கம்புவகை,
புல்லரிசி; இதன் பின்னிஷ் சொல் ruis (rye, Secale cereale).
1:94 உணவுக்கும் மதுபானம் வடிப்பதற்கும் பயன்படும் ஒரு வகைத் தானியம்; பார்லி;
இதன் பின்னிஷ் பெயர் ohra (barley); பார்லியிலிருந்து வடிக்கும் பானம் 'பீர்'
(beer); இதன் பின்னிஷ் சொல் 'ஒளுத்' olut.
1:169 இந்நாட்டு மக்கள் முன்னாளில் கடவுளை 'உக்கோ' Ukko என்று அழைத்தனர்.
'உக்கோ' என்றால் கிழவன், முதியவன், வயோதிபன் என்றும் இடிமுழக்கத்தின்
அதிபதி என்றும் பொருள். இதையே சில இடங்களில் முது மனிதன், மானிட
முதல்வன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1:179(i) நேரான பறவை: நேராகப் பறக்கும் பறவை.
1:179(ii) ஒரு வாத்து இனப்பறவை. இதன் பின்னிஷ் சொல் 'சொத்கா', sotka; (pochard,
scaup, [duck], Aythya).
1:272 வஞ்சிர மீனினம். இதன் பின்னிஷ் சொல் பெயர் 'லொஹி', lohi (salmon,
Salmo salar).
1:285 மலைகள் பாறைகளில் இயற்கையாகத் தோன்றும் சித்திர வடிவங்கள்.
1:304 வட துருவத்திற்கு அருகில் காணப்படும் ஏழு மீன்கள் அல்லது சத்தரிஷிகள் என
அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டம். (Great Bear, the constellation Ursa major,
alias the Plough, alias Charle's Wain). இது தாரகைக் குழு, தாரகைக்குலம்,
விண்மீன் குலம் என்றும் பாடலில் வெவ்வேறு இடங்களில் வருகின்றது. துருவ
மண்டலம், சப்த மண்டலங்களில் ஒன்றான துருவ நட்சத்திரப் பிரதேசம். இதன்
பின்னிஷ் சொல் Otava.
1:342 பாவலன், பாடகன் என்று பல இடங்களில் சொல்லப்படுகின்றது. இது சபித்து
அல்லது வாழ்த்தி அல்லது ஏதோ ஒன்று நிகழ வேண்டும் என்று மந்திரப்
பாடல்களைப் பாடும் திறனுடையோரைக் குறிக்கும்; அகவர், அகவுநர், பாணர்.
2:21 இவ்வடியில் கூறப்பட்டது 'பைன்' என்னும் மரத்தை; தேவதாரு இன மரவினம்.
இதன் பின்னிஷ் சொல் ma*nty, (pine, Pinus).
2:22 இவ்வடியில் கூறப்பட்டது 'ஸ்புறூஸ்' என்னும் மரத்தை. இதுவும் தேவதாரு
இனத்தைச் சேர்ந்தது. இது ஊசியிலை மரம் என்றும் சொல்லப்படும். இதன்
பின்னிஷ் சொல் 'கூசி', kuusi, (spruce, Picea).
2:23 இது ஒரு குட்டையான புதர்ச்செடி வகை. இதன் பின்னிஷ் பெயர் 'கனெர்வா',
kanerva (heath[er], ling, Calluna vulgaris),
2:25 இது மிலாறு, பூர்ச்ச மரம் என்னும் மரவினத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ்
சொல் 'கொய்வு', koivu (birch, Betul).
2:26 'அல்டர்' மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் leppa*
(alder, Alnus).
2:27 இவ்வடியில் கூறப்பட்டது ஒரு சிறுபழ வகை; இதன் பின்னிஷ் சொல் tuomi
(bird cherry, Prunus padus).
2:28 இது அலரி இனத்தைச் சேர்ந்த ஒருவகைச் சிறிய மரம். இதன் பின்னிஷ் சொல்
raita (sallow, goat willow, great sallow, Salix caprea).
2:29 இது 'ரொவன்' என்னும் சிறிய பழங்கள் காய்க்கும் மரம்; ஒருவகைச் செந்நிறப்
பழம்; பேரி இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல் pihlaja (rowan,
mountain ash, Sorbus aucuparia).
2:30 இது 'வில்லோ' என்னும் சிறிய மரம். இதுவும் அலரி இனத்தைச் சேர்ந்தது.
இதன் பின்னிஷ் சொல் paju (willow, Salix).
2:31 இது 'ஜுனிப்பர்' என்னும் பழச்செடி. இது சூரைச்செடி இனத்தைச் சேர்ந்தது.
இதன் இன்னொரு பெயர் உரோதமம். இதன் பின்னிஷ் சொல் kataja (juniper,
Juniper communis).
2:32 இது சிந்தூர மரவினம்; இதன் தமிழ்ப் பெயர்களாவன சிந்தூர மரம், கருவாலி
மரம், அல்லோன் விருட்சம். இதன் பின்னிஷ் சொல் 'தம்மி', tammi (oak, Quercus).
2:35 பார்க்க 2:22
2:38 பார்க்க 2:26
2:39 பார்க்க 2:27
2:42 பார்க்க 2:27
2:67 வைனாமொயினனுக்கு உதவ வந்த ஒரு நீர்விலங்கு. இதன் பின்னிஷ் சொற்கள்
Tursas, turska; இதை நீர்ப் பாம்பு என்றும், வெட்ட வெட்ட முளைக்கவல்ல பல
தலைகளையுடைய நீர்ப்பாம்பு என்றும் சொல்வதுண்டு. இதனைக் கடற்குதிரை,
கடல்யானை என்றும் சில மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன (octopus, water
monster, Hydra, Octopodida).
2:79 இந்த அடியில் கூறப்பட்டது மஞ்சள் விதைகளையுடைய சிறிய சிவந்த சதைப்
பற்றுள்ள பழம். இதன் பின்னிஷ் சொல் 'மன்ஸிக்கா', 'மன்ஸிமர்யா' mansikka,
mansimarja (strawberry, Fragaria).
2:122 பரசு
2:172 ஈரல் நிறத்து மண்ணில் என்பது மூலபாடம்.
2:206 வடபுல நங்கை, வடநாட்டு மங்கை, வடநிலச் சிறுபெண் என்று வருவதெல்லாம்
வட நாட்டுத் தலைவியின் மகளைக் குறிக்கும். இந்த வடநிலத் தலைவியின்
பெயர் லொவ்ஹி; இவளுடைய மகளுக்குப் பெயர் கூறப்படவில்லை. எனவே
வடநிலத் தலைவியும் வடநில மங்கையும் ஒருவரல்ல என்பது கவனிக்கத்தக்கது.
2:230 இது குயில் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை; இதன் பின்னிஷ் சொல் 'குக்கூ'
kukku (cuckoo).
2:245 இது கீரி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி; இதன் பின்னிஷ் சொல் na*a*ta*
(marten, pine marten, Martes martes).
2:253 இது ஒரு புல்லரிசித் தானிய வகை; இதன் பின்னிஷ் சொல் kaura (oats,
Avena sativa).
2:292 இது பட்டிழை மயிர்த் தோலையுடைய கீரிவகை விலங்கு; இராஜ கீரி,
மரநாய் என்றும் சொல்வதுண்டு; இதன் பின்னிஷ் சொல் ka*rppa* (stoat,
ermine, weasel, Mustela erminea).
2:372 ஈயம், தகரம் போன்றவற்றால் செய்யப்பட்ட நகைகளை அணியும் கன்னிப்
பெண்ணை முன்னாளில் தகர மார்பணி அல்லது ஈய மார்பணி அணிந்தவள்
என்னும் பொருளில் 'ஈய நெஞ்சாள்', 'ஈயத்து நெஞ்சாள்', 'தகர நெஞ்சாள்'
'ஈய மார்பினள்' 'தகர மார்பினள்' என அழைத்ததை இக்காவியத்தின் பல
இடங்களில் காணலாம். (இந்த அடியில் குயிலை விளித்து 'ஈய நெஞ்சால்
பாடு!' என்று கேட்கப் படுகிறது.)
3:45 பாடல்கள் என்னும்போது அது மந்திரப் பாடல்களையே குறிக்கும்.
இக்காவியத்தின் நாயகர்கள் ஏதேனும் ஓர் உயிரினம் அல்லது ஓர் உயிரற்ற
பொருள் உண்டாகும்படி, உருவாகும்படி பாடிய சந்தர்ப்பங்களைப் பின்னால்
காண்போம். பாடல் 1:342 ஐயும் பார்க்க.
3:105 வளைந்த மரத்தினால் செய்யப்பட்ட குதிரையின் கழுத்திலுள்ள கண்ட வளையம்.
3:159 இது நீண்ட ஒடுங்கிய வாயும் கூரிய பற்களையுமுடைய பெரிய நன்னீர் மீனினம்;
கோலாச்சி மீன்; இதன் பின்னிஷ் சொல் hauki (pike, Esox lucius).
3:161 இந்த அடியில் கூறப்பட்டது 'பேர்ச்' என்னும் மீனை; இதன் பின்னிஷ் சொல்
ahven (perch, Perca fluviatilis).
3:168 இது ஒரு மான் இனம்; கலைமான், வட தேசத்து மான்; இதன் பின்னிஷ் சொல்
poro (reindeer, Rangifer tarandus).
3:170 இது காட்டெருது, காட்டுப் பசு, கடம்பை என்றும் அழைக்கப் படும்; மூல
பாடத்தில் உள்ள பின்னிஷ் சொல் tarvas; தற்கால பாவனையில் உள்ள பின்னிஷ்
சொல் hirvi (elk, Alces alces).
3:191 இது ஒரு சிறு பறவையினம்; இதன் பின்னிஷ் சொல் tiainen (tit, tomtit,
titmouse, Paridae).
3:193 விரியன் பாம்பு; இதன் பின்னிஷ் சொல் ka*a*rme (snake, viper, Ophiclia l.
Serpentes).
3:194 இது ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும்; இதன் பின்னிஷ்
சொல் kiiski (ruff, Acerina cernua).
3:304(i) இழுவைப்பட்டி
3:304(ii) பார்க்க 2:28.
3:322 இது ஒரு பூவினம்: அல்லி, ஆம்பல், நீராம்பல், குவளை; இதன் பின்னிஷ் சொல்
lumme (lily, water lily, Nymphaea). valkealumme: வெள்ளாம்பல் (white water
lily, Nymphaea alba). பாடல் 9:412ல் வருவது பொன்னாம்பல்; இதன் பின்னிஷ்
சொல் kultalumme.
3:330 கக்கம்
3:553 கூந்தலையுடைய பெண்கள், நீண்ட கூந்தலையுடைய பெண்கள், பின்னிய
கூந்தலையுடைய பெண்கள் என்று சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த
நாட்களில் விவாகம் ஆகும்வரை பெண்கள் நீண்ட கூந்தலை வளர்த்தனர்
என்றும் விவாகம் ஆனவுடன் கூந்தலை வெட்டித் தலைக்கு முக்காடு இட்டனர்
என்றும் கலேவலா அகராதி கூறுகிறது. அதனால் கூந்தலையுடைய பெண்
என்றால் பொதுவாக விவாகம் ஆகாத பெண் என்று கருதப்பட்டது. இதன்படி
விவாகம் ஆனதும் தான் தனது கூந்தலை இழக்க நேரிடும் என்பதும் இங்கே
ஐனோவின் கவலைக்கு ஒரு காரணம் ஆகலாம்.
3:576 பார்க்க 2:79.
3:580 எரிந்த நிலம்.
4:4 சவுனா (செளனா) sauna (sauna) எனப்படும் நீராவிக் குளியலின்போது உடலை
விசிறிக் கொள்ளப் பயன்படும் ஒருவகை இலைக்கட்டு (whisk). சொற்றொகுதியில்
பார்க்க 'சவுனா'.
4:10 பார்க்க 2:26.
4:25 கப்பல்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட துணிவகைகள்.
4:123 பன்றியிறைச்சி.
4:186 இது ஒருவகைச் சிறுபழம்; மூலநூலில் உள்ள பின்னிஷ் சொல் vaapukka; தற்காலப்
பெயர்கள் vadelma, vattu (raspberry, Rubus idaeus).
4:215 கீல், தார் என்பது நிலக்கரியிலிருந்து பெறப்பட்டு வீதிகள் அமைக்கப் பயன்படும்
பொருள் (tar).
4:309 பார்க்க 2:30.
4:310 இது ஓர் அரச மரவினம்; இதனைக் காட்டரசு என்றும் சொல்வதுண்டு; இதன்
பின்னிஷ் சொல் haapa (aspen, European aspen, Populus tremula).
4:327 வீட்டில் உள்ள ஒருவரை (செல்லமாகக்) கோழி என்று அழைப்பதாகத் தெரிகிறது.
சிலர் புறா, வாத்து, பறவை என்றும் மொழிபெயர்த்துள்ளனர், தமிழ் மக்கள் மயில்,
கிளி என்று அழைப்பது போல.
4:406 நீண்ட செவிகளையுடைய முயல்.
4:408 சிலுவை போன்ற வடிவமான வாயையுடைய முயல்.
4:422 வட்டமான விழிகளையுடைய முயல்.
4:428 பார்க்க 2:372.
4:430 செப்பினால் செய்யப்பட்ட ஒரு பட்டி வீணே ஆழ்ந்து போயிற்று.
4:450 பாக்கியமில்லாக் கன்னங்கள் மீது.
4:474 ஓடுகின்ற ஆறாக உருக்கொள்ளத் தொடங்கி -
4:513 இது ஒரு பயறு வகை; இதன் பின்னிஷ் சொல் herne (pea, Pisum).
4:514 இது ஒரு அவரையினம்; இதன் பின்னிஷ் சொல் papu (bean, Phaseolus).
5:17 Untamo 'உந்தமோ' என்ற பின்னிஷ் சொல் கனவு, நித்திரை என்னும் பொருள்படும்
uni என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். எனவே இவ்விடத்தில் கனவின் சக்தி,
கனவின் ஆக்க சக்தி, கனவின் ஆவி, கனவின் காரண கர்த்தா என்றும் மொழி
பெயர்க்கலாம். உந்தமோ என்ற இச்சொல் பாடல் 31ல் ஒரு கதாபாத்திரத்தின்
பெயராகவும் வருகிறது.
5:36 சில இடங்களில் கப்பல் என்றும் அதே மரக்கலத்தைப் பின்னர் படகு, தோணி,
ஓடம் என்றும் வருவதைக் காணலாம். ஏனைய மொழிபெயர்ப்பாளர்களைப்
போன்று மூல நூலில் உள்ளது அப்படியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
5:63 இது ஒரு மீனினம்; இதன் பின்னிஷ் பெயர் siika (powan, whitefish,
Coregonus lavaretus).
5:64 இது ஒரு மீனினம்; இதன் பின்னிஷ் சொல் kuuja, kuujanen, ja*rvilohi;
(trout, lake-trout, salmon, Salmo trutta). இதை ஆங்கிலத்தில்
lake-trout என்றும் salmon-trout என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
5:65 பார்க்க 3:159.
5:69 கடற்கன்னி, நீரரமகள்; பழம் பெளராணிக மரபுகளில் அரைக்கு மேல்
பெண்ணாகவும் அரைக்குக் கீழ் மீன் வாலாகவும் அமைந்த அரை மனித
உரு (mermaids).
5:71 இது ஒரு மீனினம்; வஞ்சிர மீன்; இதன் பின்னிஷ் சொல் merilohi (salmon,
Salmo trutta).
5:72 பார்க்க 3:161.
5:121 'பீர்' என்னும் பானக் கலயம்; பார்க்க 1:94.
5:149 நீரிணை: ஜலசந்தி, கால்வாய், தொடுவாய் (strait).
6:5 வைக்கோல் நிறத்து.
6:6 பார்க்க 4:513.
6:37 பின்னிஷ் மொழியில் Hiisi எனப்படும் தீய சக்தி; பேய், பிசாசு, கூளி,
அலகை, நரகம் என்று பொருள் (the devil).
6:38 பின்னிஷ் மொழியில் Lempo எனப்படும் தீய சக்தி; தீய ஆவி, பிசாசு,
அலகை என்றும் பொருள் (the devil).
6:43 இந்த அடியிலிருந்து அடி 46 வரை வில்லின் அலங்கார வர்ணனை;
வில்லின் முதுகுப்புறத்தில் ஒரு குதிரை நின்றது; அடிப்புறத்தில் பாயும்
பாவனையில் ஒரு குதிரைக் குட்டி நின்றது; வில்லின் வளைவிலே ஓர்
இளம்பெண் உறங்கினள்; மேற்புறத்தில் ஒரு முயல் படுத்திருந்தது.
6:50 மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால் (resin, gum, exudation from
certain trees). அம்புகளின் முனைகள் பிசினுள்ள மரத்தினால் என்றும்
மொழிபெயர்க்கலாம்.
6:53 இக்குருவி தூக்கணங்குருவி, தகைவிலாங்குருவி என்றும் அழைக்கப்படும்;
இதன் பின்னிஷ் சொல் pa*a*sky[nen] (swallow, Hirundinidae).
6:54 இக்குருவி ஊர்க்குருவி, சிட்டுக்குருவி, இல்லுறைக் குருவி, அடைக்கலாங்குருவி,
தகைவிலாங்குருவி என்றும் அழைக்கப்படும்; இதன் பின்னிஷ் சொல் varpunen
(sparrow, Passer).
6:62 அமைதிநீர் மனிதன், நன்னீர் மனிதன் என்பன வைனாமொயினனின்
சிறப்புப்பெயர்கள்.
6:93 வைக்கோல் நிறத்து.
6:120 விவாகத் தொடர்பால் சகோதரியின் கணவன், மனைவியின் சகோதரன்.
6:127 பின்னிஷ் மொழியில் Manala 'மணல' எனப்படும் ஒரு பெளராணிக இடம்.
மரண உலகம் என்று பொருள் (abode of the dead, the underworld, Hades).
6:128 பின்னிஷ் மொழியில் Tuonela 'துவோனலா' எனப்படும் ஒரு பெளராணிக
இடம். மரண உலகம் என்று பொருள். சொற்றொகுதியில் துவோனி,
துவோனலா என்ற சொற்களைப் பார்க்க; (Hades, the underworld).
6:177 பார்க்க 3:170.
7:67 Luotola - பின்னிஷ் மொழியில் luoto என்றால் பாறை, பாறைத்தீவு என்று
பொருள்; luotolaவை விரிகுடா, தீவு, தீவவுத்தோட்டம் எனலாம்.
7:68 Joukola - யொவுகாஹைனனின் இடம்; யொவுகாஹைனனின் தோட்டம்.
7:133 பார்க்க 2:206.
7:188 பார்க்க 2:27.
7:285 இந்த அடியிலிருந்து அடி 288 வரை: அன்னிய நாட்டில் தங்கக்
கிண்ணத்தில் தேன் அருந்துவதிலும் பார்க்க, சொந்த நாட்டில் மிலாறு
மரத்துக் காலணியில் இருக்கும் நீரைக் குடிப்பது சிறந்தது. ('மிலாறு
மரத்தின் காலணி பதிந்த தடத்தில் தேங்கிய நீரைக் குடிப்பது' என்றும்
மொழிபெயர்க்கலாம்).
7:312 சம்போவின் மூடியைப் 'பல நிறங்கள்' கொண்ட மூடி என்றும் 'ஒளிப்
புள்ளிகள்' உடைய மூடி என்றும் சிலர் விளங்கியுள்ளனர். 'ஒளிமிக்க'
என்பதே பலரது விளக்கம். 'சம்போ'வைச் சொற்றொகுதியில் பார்க்க.
7:350 பழுப்பு நிறம், மண்ணிறம்; பின்னிஷ் மொழியில் ruskea (brown colour).
8:1 பார்க்க 2:206.
8:58 மாரிகாலத்தை மேல்நாடுகளில் கழிக்கும் இன்னிசைப் பறவை வகை.
இதன் பின்னிஷ் பெயர் kynto*rastas, ra*ka*ttirastas (fieldfare,
Turdus pilaris).
8:74 பின்லாந்து போன்ற நாடுகளில் குளிர் கொடுமையானது. 'அதனிலும்
குளிராம்' என்பதை 'அதனிலும் கொடிதாம்' என்று பொருள் கொள்ளலாம்.
8:152 பார்க்க 6:37.
8:153 பார்க்க 6:38.
8:161 பார்க்க 6:38.
8:162 பார்க்க 6:37.
8:172 ஊசிபோன்ற இலைகளையுடைய மரம். இதன் பின்னிஷ் பெயர் honka.
இதைப் 'பைன்' மரம் என்றும் சொல்வதுண்டு. 2:21யும் பார்க்க.
8:191 இந்த அடியிலும் அடுத்த இரு அடிகளிலும் வரும் பொருள் வருமாறு:
அங்கே எந்த மண் மேடும் இல்லை இரத்த வெள்ளத்தில் மூழ்கா
நிலையில், தடையில்லாது பாய்ந்த குருதியில் மூழ்கித் தாழா நிலையில்.
9:31 உடன்பிறப்புகள் எல்லோரிலும் இரும்பே இளையவன்.
9:80 ஒளித்தல் அபயம் பெறுதல் ஆகிய இரண்டையும் பெற்றது.
9:99 உறைந்த சேற்றில் ஓர் ஓநாய் ஓடியது.
9:101 ஓநாய் கால் வைத்த அடித் தடத்தில் சேறு ஊர்ந்தது.
9:234 மிலாறுப் பட்டை - வீட்டுக்கூரையில் மிலாறு மரப்பட்டையின் கீழே
இருந்து பார்த்தது.
9:297 பார்க்க 3:170.
9:298 இது ஒரு மான் இனம்; கலைமான், வடதேசத்து மான்; இதன்
பின்னிஷ் சொல் poro (reindeer, Rangifer tarandus). இந்த அடியில்
பயன்படுத்தப்பட்ட பின்னிஷ் சொல் peura; இதைக் காட்டுக்கலை
என்றும் மொழிபெயர்க்கலாம்.
9:349 கடலில் நிற்கும் வாள் போல் நிற்பாய்! இது ஒரு கோரைப் புல்லினம்.
இதன் இலை அதாவது தாள் வாளின் அலகு போல நீரில் நிமிர்ந்து
நிற்கும் தன்மையுடையது. இதன் பின்னிஷ் பெயர் kurjenmiekka.
பின்னிஷ் மொழியில் miekka என்றால் வாள் என்று பொருள்
(iris, Iris pseudacorus).
9:412 பார்க்க 3:322.
9:458 அவை நூறு பயணத்து வழிகளில் சேர்க்கப்பட்டவை.
9:467 பல கிளைகள் பரந்த அரச மரமொன்று.
9:525 இந்த அடியும் அடுத்த அடியும்: நோவை ஒரு மலையில் ஏற்றி
அழிப்பதாக நம்பப்பட்டதால் 'நோவின் குன்று' என்றும் 'நோ மலை'
என்றும் பெயர்கள் வந்தன.
9:527 நோவை அங்கே கற்களில் திணித்தான்.
10:2 பழுப்பு நிறம், மண்ணிறம்; பின்னிஷ் மொழியில் ruskea (brown colour).
10:12 பார்க்க 2:29.
10:42 பார்க்க 1:304.
10:58 நிலக்கரிக் குடிசையிலிருந்து வந்த கலகலத்த ஒலியைக் கேட்டனன்.
10:91 பார்க்க 1:304.
10:346 படகுத்துடுப்புக்கு உகைப் பாதாரமான அமைவு; படகின் விளிம்பில்
துடுப்பிற்கு நெம்பு விசை மையமாய்ப் பயன்படும் இரு குவடுடைய
பள்ளப்பகுதி; இதைத் துடுப்பு நெம்புவிசைக் குவடு, மிண்டுக்குழி,
உகை மிண்டு, மிண்டுக்குவடு என்றும் அழைப்பர் (rowlock, tholepin).
10:429 மூல நூலில் yhdeksa*n sylen syva*ha*n என்பதை to a depth of nine
fathoms என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். Fathom என்பது
ஆறடி நீளம். அதனாலேயே தமிழில் இங்ஙனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்நூலில் வேறு சில இடங்களிலும் இந்த fathom என்னும் அளவை
கூறப்படுகிறது. அந்த இடங்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வாறே
அடிக்கணக்கில் கூறப்பட்டுள்ளது.
10:450 இது ஒரு வகைப் புதர்ச்செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்; இதன் பின்னிஷ்
சொற்கள் puna-puola, puolukka, puola (cranberry, mountain cranberry,
cowberry, lingonberry, Vaccinium vitis-idaea).
11:10 பார்க்க 3:161.
11:54 காய்கறிகள், மீன் , இறைச்சி வகைகள் வெந்த சாறு, ரசம் (soup).
11:58 இந்த மெல்லிய மரக்குச்சிகள் மெழுகுவர்த்திபோல எரிக்கப் பயன்படுத்தப்பட்டன.
11:148 பார்க்க 3:553.
11:174 பார்க்க 2:372.
11:195 குயிலிக்கி ஏனைய பெண்களுக்கு மேலாகச் சிறப்பாக இருந்தனள்.
11:264 இந்த அடியிலிருந்து அடி 266 வரை: பின்னிஷ் மொழியில் Muurikki,
Mansikki, Puolukka 'மூரிக்கி', 'மன்ஸிக்கி', 'புவோ லுக்கா' என்பன இந்த
அடிகளில் பசுக்களின் பெயர்கள். 'மூரிக்கி' அந்த நாட்களில் வழக்கிலிருந்த
பசுவின் பெயர்தான். ஆனால் 'மன்ஸிக்கா' ('மன்ஸிக்கி' அல்ல), புவோலுக்கா
என்ற பெயர்களில் சிறு பழங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. பார்க்க 2:79,
10:450. (ஓர் ஆய்வாளரின் கருத்து இது: "லெம்மின்கைனன் பசுக்களை
வைத்திருக்க முடியாத அளவுக்கு ஏழை. சில பூக்களுக்கும் இப்பெயர்கள்
இருந்தன. குயிலிக்கி பசுக்கள் என்று நினைக்கட்டும் என்ற எண்ணத்தில்
இங்கு பூக்களின் பெயர்களை இரு பொருளில் கூறுகிறான்.")
11:385 பனிக்கட்டிப் பறவை; இவ்வடியில் கூறப்பட்டது lumi-sirkku, pulmunen என
பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒரு சிறுகுருவி (bunting, snowbunting,
Plectrophenax nivalis, Emberiza nivalis).
11:393 கூடத்தின் நிலப்பரப்பைப் பெரிதாக்கி அமை.
12:63 'பீர்' என்னும் பானம்; பார்க்க 1:94.
12:69 இங்கு கூறப்பட்டது 'அல்டர்' என்னும் மரத்தினால் செய்த பீப்பாவை. பார்க்க 2:26.
12:94 மூல பாடத்தில் ஒரு பென்னி என்று இருக்கிறது; 12:101ஐயும் பார்க்க.
12:101 Markka 'மார்க்கா' என்பது பின்னிஷ் நாணயம்.
12:145 பாம்புகள் சபித்தன.
12:154 துளை கருவி, துறப்பணம், கன்னக்கோல் என்றும் பொருள் வரும்.
12:206 தலைமயிரை வார (அல்லது கோதப்) பயன்படும் கருவி, 'பிரஷ்' (brush).
12:349 Kymmenia* என்ற பின்னிஷ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் 'tens' என்று பொருள்.
அதையே தமிழில் 'பதின்மர்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.
12:363 இங்கே சுடுதலுக்கு அம்பு எய்தல் என்று பொருள்.
12:390 பாசி படர்ந்த இடத்திலிருந்து; பாசி படர்ந்த மரக்கட்டைகளிலிருந்து என்றும்
மொழிபெயர்ப்புகள் உண்டு.
12:462 பார்க்க 3:161.
13:29 பனிக்கட்டியில் சறுக்குதல்; சறுக்கிச் செல்லுதல். இதன் பின்னிஷ் சொல்
hiihta*a* (ski [along a skiing track]).
13:39 பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லப் பயன்படும் (இடது) சறுக்கணி. இதன் பின்னிஷ்
சொல் lyly (the longer ski [formerly used on the left foot]).
13:40 பனிக்கட்டியில் சறுக்கிச் செல்லப் பயன்படும் (வலது) சறுக்கணி. இதன் பின்னிஷ்
சொல் kalhu (short[er] ski, kick ski).
13:69 பனிக்கட்டியில் சறுக்கும் போது ஊன்றிச் செல்லும் தண்டுகள். இதன் பின்னிஷ்
சொல் sauva (staff).
13:70 ஊன்றிச் செல்லும் தண்டு தரையைத் தொடும் நுனிப் புறத்தில் இருக்கும் வளையம்.
இதன் பின்னிஷ் சொல் sompa (ring [ on a ski stick]).
13:75 ஆறுகளில் வாழும் மீன் உண்ணும் பிராணி. நீந்துவதற்கு வசதியாக விரல்கள்
ஒன்றோடொன்று இணைந்த நான்கு பாதங்களையும் தட்டையான வாலையும்
தடித்த பழுப்பு நிற உரோமத்தையும் உடையது. இது நீர்க்கீரி என்றும்
அழைக்கப்படும். இதன் பின்னிஷ் சொல் saukko 'சவுக்கோ' (common otter,
Lutra lutra).
13:106 இந்த அடியில் பின்னிஷ் மொழியில் பயன்படுத்தப்பட்ட சொல் Juutas. இது
ஆங்கில Judas என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் காட்டிக் கொடுப்பவன்
என்பதாகும். கிறிஸ்தவ வேதாகமத்தில் யேசுநாதரைக் காட்டிக் கொடுத்த
ஜூதாஸ் (Judas Iscariot) என்பவனின் பெயரிலிருந்து வந்ததாகும். சில ஆங்கில
மொழிபெயர்ப்பாளர்கள் 'ஜூதாஸ்' என்றே மொழிபெயர்த்துள்ளனர்; சிலர் கொடிய
பிராணி என்றும் தீய சக்தி என்றும் மொழி பெயர்த்துள்ளனர்.
13:108 பார்க்க 13:106.
13:110 இது ஒரு வகைச் சிறிய மரம்; இந்த மரத்துக் கிளைகளின் கவர்த்தடிகளைக்
கொண்டு கொம்புகள் செய்தன. இதன் பின்னிஷ் சொல் raita (sallow, goat willow,
great willow, Salix caprea).
13:152 இடுகாட்டு ஆவியின் மேட்டிலும் சென்றான்.
13:219 இந்த அடியில் கூறப்பட்டது ஒருவகை மரம். இதன் பின்னிஷ் சொல் vaahtera
(maple, Acer)
13:239 பார்க்க 13:219.
14:34 உச்சியை அவன் அடைய உடன்வழி நடத்துவீர்.
14:102 வேட்டை: மூல பாடத்தில் பின்னிஷ் சொல் vilja என்பதன் பொதுப்பொருள் தானியம்.
இந்நூலில் பல இடங்களில் 'செல்வம்', 'சொத்து' என்ற பொருளில் இச்சொல்
வருகிறது. சந்தர்ப்பத்திற்கேற்ப தானியம், கால்நடை, வேட்டை, வன விளையாட்டு
என்பனவற்றை இச்சொற்கள் குறிக்கின்றன. பாடல் 14:102ல் வேட்டைச்
செல்வத்துக்குரிய முதிய பெண்கள் கிடந்தனர் என்று பொருள்.
14:117 இந்த அடியையும் அடுத்த அடியையும் சேர்த்து இப்படிப் பொருள் கொள்க:
ஒவ்வொரு கோட்டையின் மூலையிலும் பொன்னால் அமைந்த ஆறு சாளரங்கள் இருந்தன.
14:138 பூர்ச்ச மரப்பட்டையால் செய்யப்பட்ட பாதணிகள்; பார்க்க 2:25.
14:154 தளிரிலைகளில் தொப்பியும் பாசியில் ஆடையும் அணிந்தவனே.
14:158 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26.
14:160 பார்க்க 2:22.
14:161 தாரு என்பது மரத்தின் பொதுப் பெயர்; தேவதாருவையும் குறிக்கும்.
இவ்வடியில் கூறப்பட்டது ஊசியிலை மரத்தை (fir). பார்க்க 8:172.
14:162 பார்க்க 2:21.
14:167 பார்க்க 2:22.
14:168 பார்க்க 2:21.
14254 பசும் புற்புதர்களில் வாழும் அழகானவனே.
14:331 இந்த அடியும் அடுத்த அடியும்: பொன் வளையத்தினுள்ளே வெள்ளி
மணிகளின் நடுவே தலையைத் திணிப்பாய். இப்படியே அடிகள் 347,
348க்கும் பொருள் கொள்க.
14:377 அன்னம்: நீண்ட கழுத்துடைய ஒரு நீர்ப்பறவை. இதன் பின்னிஷ் சொல்
joutsen (swan, Cygnus).
14:399 இந்த அடியிலும் அடிகள் 402, 403லும் குருடன் எனக் கூறப்பட்ட நனைந்த
தொப்பியன் 'கண்டான்' 'பார்த்தான்' என்று மூலப் பாடத்தில் வருவது
கவனிக்கத்தக்கது.
14:408 நீர்க்குழல்: குழல் போன்ற தோற்றத்தில் நீரில் வாழும் பாம்பு.
14:434 அரத்தம்: இரத்தம் (blood)
15:104 Jalopeura என்னும் பின்னிஷ் சொல் வலிய விலங்கு, சிங்கம் என்று
பொருள் தரும்; இந்த அடியில் வலிய விலங்கான (சிங்கம் போன்ற)
கலை மான்.
15:119 பார்க்க 13:75.
15:120 நிலத்தில் வளை தோண்டி வாழும் கரடியினம். இதன் பின்னிஷ் சொல்
mauriainen (pismire, badger, Lasius niger); இதைக் கீரியினம் (weasel)
என்றும் சில நூல்களில் காணலாம்.
15:121 குளவி; இதன் பின்னிஷ் சொல் neuliainen, ampiainen (wasp).
15:203 முட்களின் நீளம் 100 x 6 அடிகள் (hundred fathoms). பார்க்க 10:429.
15:204 கைப்பிடியின் நீளம் 500 x 6 அடிகள் (five hundred fathoms).
15:285 இது ஒரு காக்கையினம். நீர்க்காகம் என்றும் சொல்வதுண்டு. இதன்
பின்னிஷ் சொல் korppi (raven, Corvus corax).
15:291 மனிதனைக் கடலுக்குள் போக விடுவாய்.
15:293 இந்த அடியில் வரும் பின்னிஷ் சொல் turska; இச்சொல்லுக்கு தற்கால
வழக்கில் ஆங்கிலத்தில் 'கொட்' (cod, Gadus morhua) என்று அழைக்கப்படும்
மீனும் ஒரு பொருள். அதனால் சிலர் இந்த அடியில் மட்டும் ஒரு வகை மீன்
என்று மொழிபெயர்த்துள்ளனர். பார்க்க 2:67.
15:531 மிருகங்களின் கொம்புகள் (horn).
15:532 அடர்த்தியான கட்டுகள் (bundle).
15:580 நீண்ட நகங்களையும் சிறகுகளையும் கொண்ட நெருப்பைக் கக்கக்கூடிய
ஒரு கற்பனைப் பிராணி. இதைத் தமிழில் பறக்கும் நாகம், குக்குட சர்ப்பம்
என்று சில தமிழ் அகராதிகள் கூறுகின்றன. பறக்கும் முதலை என்றும்
சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் சொல் lapokyy (dragon).
15:581 பாக்கியமற்ற என் மேல் அவன் ஏவினான்.
15:593 இது நீண்ட வாலுள்ள வாத்தினம். இதன் பின்னிஷ் சொல் alli (squaw,
long tailed duck, Clangula hyemalis).
15:594 இது ஒரு வகைக் கடற் பறவை; இதன் பின்னிஷ் சொல் meripa*a*sky
(sea swallow); pa*a*sky[nen] (swallow, Hirundinidae).
15:595 இதன் பின்னிஷ் சொல் Syo*ja*ta*r. இந்த சொல்லில் syo*ja* என்றால்
உண்பது, உண்ணும் சக்தியுடையது என்று பொருள். -ta*r என்பது
பெண்பால் விகுதி. (i) புராணங்களில் வரும் நரமாமிசம் உண்ணும் கொடிய
பயங்கரமான பூதம் அல்லது அரக்கி அல்லது பயங்கரமான உருவம் கொண்ட
பிராணி என்று இதற்குப் பொருள். இதனை ஆங்கிலத்தில் ogress (இதன்
ஆண்பால் ogre) என்று மொழிபெயர்த்துள்ளனர். (ii) புராணக் கதைகளில்
வரும் நரமாமிசம் புசிப்பவளான ஓர் அரக்கி. (iii) ஒரு பெண்ணின் தலை,
உடலுடன் இறக்கைகளும் நகமும் கொண்ட ஒரு கொடிய பிராணி (harpy).
16:6 'ஆறு வங்கக் கால்களையுடைய தோணி என்னிடமிருந்து வராது' என்று
இந்த அடிக்குப் பொருள். தோணியின் பக்கவளை வரிக்கட்டை; இதை
வங்கக்கால், வங்கக்கட்டை என்றும் சொல்வதுண்டு.
16:136 அவன் ஒரு சொல்லையும் பெறவில்லை; பாதிச் சொல்லையும் பெறவில்லை.
16:155 பார்க்க 2:27.
17:20 பெண்களின் ஊசி நுனியில் ஓடிச் செல்லுதல் வேண்டும்.
17:22 ஆண்களின் வாள்களின் முனையில் நடந்து செல்லுதல் வேண்டும்.
17:33 காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).
17:75 அணில்கள் சேர்ந்த தாருவைப் புருவத்திலிருந்து வீழ்த்தினான்.
17:121 வைனாமொயினனின் இடுப்புப் பட்டியில் ஒரு கத்தி இருந்தது.
17:236 கவிநிலை: காலநிலை.
17:278 பார்க்க 13:106.
17:301 சுவர்க்கத்தின் துருவத்தில் இருக்கும் முதியவனே!
17:406 பார்க்க 3:161.
17:407 அங்கே உனக்கு ஓர் இடம் கிடைக்காவிடில் -
17:495 முன்னர் படைக்கப்பட்ட பேய்க்கு முடிவு வந்தது.
18:114 பார்க்க 5:64.
18:225 நெசவு செய்யும் கைத்தறியில் நூல் சுற்றும் கருவி.
18:295 பார்க்க 4:4.
18:359 அதன் பின்னர் வீட்டிலே தைக்கப்பட்ட நீண்ட மேலங்கி.
18:363 ஆயிரம் தெறிகளோடு (buttons) தைக்கப்பட்ட புதிய கம்பளியாடை.
18:370 பார்க்க 3:553.
18:388 எம்மிடத்தில் ஆறு குதிரைகள் இருக்கின்றன.
18:389 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.
18:395 குயில்போல் ஒலிக்கும் ஆறு மணிகளைச் சறுக்கு வண்டியில் கட்டு!
18:396 நீலப் பறவைகள் போல் ஒலிக்கும் ஏழு மணிகளைக் கட்டு!
18:403 பார்க்க 2:67, 15:293.
18:523 குவியல்கள் பெரியவை; விறகுச் சுள்ளிகள் நல்லவை.
18:532 கதம்: கோபம்.
18:545 நாட்டின் சிறந்தது ஏன் உறுமிற்று என்று.
18:548 காதலர் சந்திக்கும் கடற்கரையிலுள்ள குடா நாடு எனக் கற்பனையாகக்
கருதப்பட்ட இடம்.
18:565 பார்க்க 2:29.
19:12 எனக்கு மனைவியாகி எனது சொந்தமாக வரப்போகும் பெண்ணை.
19:76 சலசலத்திரையும் மண்டையோடுகளைக் கண்டான்.
19:155 பார்க்க 3:159.
19:172 மரண உலகின் மாய்வில்லாத/ அழிவில்லாத அருவியில்.
19:209 ஒரு சிறகு கடலைக் கலக்கிற்று.
19:217 நீரில் இருந்தொரு நீர்ச்சக்தி எழுந்தது.
19:227 இரண்டு கோடரிகளின் கைப்பிடி நீளத்தில் அதன் நாக்கு இருந்தது.
இரண்டு கோடரிகளின் அலகளவு நாக்கு என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள்
விளங்கியுள்ளனர்.
19:287 வீசிய காற்றில் காற்றின் மணம் இல்லை; ஏனென்றால் அடுத்த அடியைப்
பார்க்க: 'பறந்து கொண்டிருந்த கழுகின் பெரிய இறகுகளினால்'.
19:369 செழிப்பான தோட்டங்களில் நாடோ டித் தொழிலாளர்களில் ஆண்களுக்கு
வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் வதிவிடங்கள் இருந்தன. இரும்புத்
தொப்பி அணிந்த ஆண்களிலும் பார்க்க, செப்பில் தலையணி அணிந்த
பெண்களிலும் பார்க்க, சணற் துணியில் கைத்துண்டையுடைய கன்னியரே
முன்வந்து விருந்தாளிகளை வரவேற்றனர்.
19:381 சணற்றுணிக் கூரையில் கன்னியர் கோட்டை.
19:457 கைத்தறியில் நூல் சுற்றும் கருவி.
19:458 பார்க்க 2:292.
19:461 கைத்தறியில் நூலைப் பரப்பி இழையோடும் சட்டம். இப்படி இழை
யோடுதலைப் பாவோடுதல் என்றும் சொல்வதுண்டு.
19:480 நான்கு ஊடிழை நூலின் கீச்சொலியோடு.
19:484 இரு வார வயதுடைய குழந்தை இவ்வாறுரைத்தது.
19:507 அடிகள் 507, 508, 509, 510 மூல நூலில் உள்ளபடி சரியாகவே தமிழில்
இப்படி மொழிபெயர்க்கபட்டுள்ளன:
"தன்கரு மம்மெலாம் தனியே வருந்துவான்
இளமையில் திருமணம் செய்து கொள்பவன்
பிள்ளைப் பருவம் பிள்ளை பெறுபவன்
சிறுபிரா யத்தில் பெறுபவன் குடும்பம்."
இந்த அடிகளைப் படிக்கும்போது கிடைக்கும் பொதுவான விளக்கம் வருமாறு:
"இளமையில் திருமணம் செய்பவனும் பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப்
பெறுபவனும் சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைபவனும் தனது கருமங்கள்
எல்லாவற்றிற்கும் வருந்துவான்." ஆனால் இந்த மூன்றும் செய்யத் தகாதன அல்ல;
அதற்காக வருந்த வேண்டியதும் இல்லை. எனவே அந்த அடிகளுக்கு வேறு
உட்பொருள் இருக்க வேண்டும் என்பது அறிஞரின் கருத்து. இந்த நான்கு
அடிகளையும் விளங்கிக் கொள்வதில் மொழிபெயர்ப்பாளரிடையே கருத்து
வேறுபாடும் உண்டு. சிலர் இப்படியும் விளங்கியுள்ளனர்: "இளமையில் திருமணம்
செய்தல், பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப் பெறுதல், சிறு பிராயத்தில்
குடும்பத்தை அடைதல் ஆகியவற்றிற்கு எவன் வருந்துகிறானோ அவன் தன்
கருமம் அனைத்துக்கும் வருந்துவான்." பலர் ஏற்றுக் கொண்ட பொருள் இதுவாகும்:
"இளமையில் திருமணம் செய்பவனும், பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளைப்
பெறுபவனும், சிறு பிராயத்தில் குடும்பத்தை அடைபவனும், இவை தவிர்த்த மற்ற
எல்லாக் கருமங்களுக்கும் வருந்துவான்." இந்தக் கட்டத்தில் வைனாமொயினன்
தான் இளமையில் விவாகம் செய்யாததையிட்டு வருந்தியே அவ்வடிகளைக்
கூறுகிறான் என்பது கவனிக்கத் தக்கது.
20:27 பார்க்க 6:53.
20:31 ஒரு மாத காலம் ஓடித் திரிந்த ஒரு கோடையணில் -
20:115 பதன் செய்யப்பட்ட இறைச்சி; இதன் பின்னிஷ் பெயர் makkara (sausage).
20:140 இது கொத்துக் கொத்தாய்ப் பூக்கும் ஒரு தழுவிப் படரும் செடி. இதன் காய்ந்த
பூக்கள் (அல்லது காய்கள்) 'பீர்' பானத்திற்குக் கசப்புச் சுவையுட்டப்
பயன்படுத்தபடும். முசுக்கட்டை இனத்தைச் சேர்ந்தது. இதன் பின்னிஷ் சொல்
humala (hop, Humulus lupulus)
20:143 remu என்ற பெயர் அடியிலிருந்து வந்த remunen என்ற பின்னிஷ் சொல்லுக்கு
ஆரவாரமான சத்தம், மகிழ்ச்சிக் கூக்குரல், இரைச்சல் என்று பொருள். இந்தச்
செடி கலந்த புளித்த மதுபானத்தை வடிக்கும் பொழுது ஏற்படும் இரைச்சலை
இவ்விதம் கூறியிருக்கலாம். இந்தச் சொல்லை ஆங்கிலத்தில் revel, hubbub
என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிலர் மொழிபெயர்ப்புச் சிரமத்தினால்
remunen என்ற பின்னிஷ் சொல்லை அப்படியே ஆங்கிலத்திலும் பயன்
படுத்தியிருக்கிறார்கள்.
20:146 இது பூனைக்காஞ்சொறிச் செடி வகை; இந்தச் செடி காஞ்சோன்றி என்றும்
அழைக்கப்படும். இதன் பின்னிஷ் சொல் viholainen, nokkonen (nettle, Urtica).
20:197 மரத்திலிருந்து அல்லது ஏதாவது உலோகத்திலிருந்து சீவிக் கழிக்கப்பட்ட
அல்லது கிழிந்து கழிபட்ட சிராய்/சீவல் துண்டு.
20:223 இந்த அடியும் அடுத்த அடியும்: தேவதாரு இனமான ஊசியிலை மரங்களின்,
பசுமை மரங்களின் (fir, pine, cedar) காய். வட்டமான அடிப்புறத்திலிருந்து
குறுகி வந்து நுனியில் கூராக முடியும் வடிவமுள்ளவை; அதன் மேற்புறத்தில்
செதிள் போன்று பட்டை பட்டையாக மரத்தோல் இருக்கும். இதன் பின்னிஷ்
சொல் ka*py (cone).
20:228 சடை வாலையுடைய அணில்.
20:231 இந்த அடியும் அடுத்த அடியும்: அந்த அணில் ஒரு சோலையை முடித்தது:
அடுத்த சோலையைக் கடந்தது; மூன்றாம் சோலையையும் குறுக்கே கடந்தது.
20:265 பார்க்க 20:197.
20:289 புளித்த மாவினுறை, புரையுட்டும் பொருள், மாவைப் புளிக்க வைக்கும் பொருள்,
மதுபானங்களைப் புளித்துப் பொங்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரை,
நொதி, காடிச்சத்து (yeast, leaven).
20:308 பாதத்திலும் பின்னர் படிபுரை சேர்த்தது.
20:329 இளம் பயற்றங் கன்று (pea pod).
20:467 அவனே அஹ்தி, அந்தத் தீவின் அரிய மகன்.
20:509 குமிழ்கள் எழும்பக் கொதிக்க வைத்து -
20:510 சலசலவென ஓசை எழும்பச் சட்டிகளைக் கையாண்டனள்.
21:43 இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம், நீர்க்காகம்
என்றும் சொல்வதுண்டு. இதன் பின்னிஷ் பெயர் kaarne (raven, crow).
21:44 சிங்கத்தின் உடலில் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பெளராணிக
விலங்கு; இதன் பின்னிஷ் பெயர் lieve (griffin, griffon, gryphon).
21:72 வார்: பட்டி(belt).
21:93 கோடைக்கோதுமையில் சமைத்த உணவை; அடு - தல் சமை - த்தல்.
21:94 ஒரு வகைத் தானியம் (rye). பார்க்க 1:93.
21:104(i) Kappa 'கப்பா' என்னும் பின்னிஷ் சொல் அந்த நாட்களில் தானியங்களை
அளக்கப் பயன்படுத்திய ஒரு முகத்தலளவையைக் குறிக்கும். இது சுமார்
ஒரு 'கலன்' அல்லது அரை 'பெக்' அல்லது நாலரை லிற்றருக்குச் சமமான
அளவை (gallon, half a peck).
21:104(ii) இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.
21:150 வாங்கு = வாங்குப் பலகை, பலகையாசனம் (bench, wooden seat)
21:161 Osma, ahma 'ஒஸ்மா' 'அஹ்ம' என்பன பின்னிஷ் மொழிச் சொற்கள்.
பெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை; கீரியினத்துப் பிராணி
என்றும் சொல்வர் (gluton, wolverine, Gulo gulo).
21:166 இந்த அடியில் கூறப்பட்ட மீனின் பின்னிஷ் பெயர் lahna (bream, Abramis
brama). நன்னீரில் வாழும் மஞ்சள் நிறமுடைய மீன்வகை. கெண்டை
மீனினத்தைச் சேர்ந்தது.
21:174 அடுப்பின் வாய்ப்புறத்தில் அல்லது புகைபோக்கி மூலயின் அருகில் அமைந்த
ஆசனம்.
21:190 கீல் என்பது நிலக்கரியிலிருந்து பெறப்பட்டு வீதிகள் அமைக்கப் பயன்படும்
பொருள்; தார் (tar). இந்த இடத்தில் வெளிச்சத்திற்காக விளக்குகள்
போலப் பயன்படுத்தப்பட்ட கீல் பூசப்பட்ட மரப்பலகைகள் / கம்புகள் என்று
பொருள்.
21:218 கடலில் அல்லது சேற்றில் வளரும் ஒரு வகை நாணல், இதன் பின்னிஷ்
சொல் kaisla (bulrush, club rush, Scirpus).
21:258 அழிவற்ற பாடலுக்கு ஆதாரமாக விளங்கும் தூண் அவன்.
21:280 அயர்வு = நிகழ்ச்சி, செய்கை < அயர்-தல்.
21:281 பார்க்க 21:150.
21:349 இந்த அடியில் முளை நிலம் எனப்படுவது மரங்கள் தறிக்கப்பட்ட பின்னர்
அடிக்கட்டைகளுடன் காணப்படும் காட்டுநிலம்; அறுவடையின் பின்னர்
முளைகளுடன் காணப்படும் வயல் நிலம் போன்றது. வயலில் மண்கட்டிகளை
உடைத்துப் பரவுவதற்குப் பயன்படும் கருவி பரம்பு; இதைப் பலுகுக் கட்டை,
பலகொழுத்தட்டு என்றும் அழைப்பர்.
21:394 கடற்கூழாங்கற்களைப் பயற்றம் மணிகளாகவும்; பார்க்க 4:513.
21:395 i. மதுவகை செய்வதற்காக நீரில் ஊறப்போட்டு முளைகட்டி உலர்த்திய
வாற்கோதுமை முதலிய தானிய வகை, மாவூறல் (malt, wort).
[ii. ஊறிய தானியமும் பாலும் சேர்த்துச் செய்யப்படும் ஊறற் பானம்
(malted milk)].
21:405 தலையில் கொம்புகளையுடைய கால்நடைகள்.
21:411 இது புள்ளியுள்ள உரோமமும் குறுகிய வாலும் கூர்மையான பார்வையும்
கொண்ட பூனையினக் காட்டு விலங்கு; இதன் பின்னிஷ் சொல் ilves
(lynx, Lynx lynx).
21:412 தலைவியருக்கு அகலத் துணிகளில் மேலாடை.
22:78 பார்க்க 2:79.
22:93 அன்னையின் மண்ணில் விளைந்த ஒரு சிறுபழம் போல்.
22:94 இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.
22:106 கதவு வழியால் கன வாயில் வழியால்.
22:224 பார்க்க 4:215.
22:259 இவ்வடியில் கூறப்பட்டது 'ஸ்புறூஸ்' அல்லது 'பைன்' என்னும் மரத்தின்
கிளையை / சுள்ளியை (spruce, pine).
22:260 லாப்புலாந்தில் கலைமான் இழுக்கும் சறுக்கு வண்டி.
22:261 'களஞ்சிய கூடத்தின் வாயிற்படி' என்றும் மொழி பெயர்ப்பு உண்டு.
22:293 இந்த அடியும் அடுத்த அடியும்: 'பெண்ணே, நீயொரு வளர்ந்த கோழி
போன்ற பருவத்தில் இருப்பதால், உண்மையிலேயே எண்ணிப்
பார்த்ததுண்டா?'
22:331(i) வஞ்சிர மீன் (salmon); பார்க்க 1:272.
22:331(ii) இது ஒருவகை நன்னீர் மீன் (ruff). பார்க்க 3:194.
22:332 பார்க்க 3:161.
22:333(i) இது ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும்.
இதன் பின்னிஷ் சொல் sa*rki(i. roach, Rutilus rutilus; ii. cyprinid
[fish], Cyprinidae).
22:333(ii) இது ஒருவகைச் சிறுமீன்; ஒருவகை வெண்ணிற ஆற்று மீன்;
இதன் பின்னிஷ் சொல் salakka (bleak, Alburnus alburnus).
22:334 இது கடல் வாத்துவகை; இதன் பின்னிஷ் சொல் meriteeri
(Glangula glaucion); பின்னிஷ் மொழியில் telkka* என்னும் கடல்
வாத்து இனத்தைச் சேர்ந்தது (golden-eye, Bucephala clangula).
22:340 'கடிப்பவர்' 'தேய வைப்பர்' 'அரித்தெடுப்பவர்' என்றும் பொருள்
கொள்ளலாம். அடிகள் 335ல் இருந்து 340 வரை பொருள் வருமாறு:
"தாயார் பெற்ற பெண்களில், பெற்றோர் பேணி வளர்த்த பெண்களில்
ஒருவரும் அறியமாட்டார், ஒன்பது பேரும் அறியமாட்டார் தம்மை(க்
கணவராக வந்து ) உண்பவர் எங்கே பிறப்பார் என்பதை; தம்மை(க்
கணவராக வந்து) கடிப்பவர் எங்கே வளர்வார் என்பதை".
22:382 துணிகளை அடித்துத் தோய்க்கும் தடியொன்று கையினில் இருக்கும்.
22:393 இவ்வடியில் கூறப்பட்டது sirkku 'சிர்க்கு' என பின்னிஷ் மொழியில்
அழைக்கப்படும் ஒரு சிறு இசைக்குருவி (bunting, Emberiza).
ஆங்கிலத்தில் 'பிஞ்' (finch) என்னும் பறவை இனத்தைச் சேர்ந்தது.
22:477 இவ்வடியில் கூறப்பட்டது மேல் நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை;
பெரும்பாலும் பழுப்பு நிற முதுகும் புள்ளிகள் உள்ள நெஞ்சும் உடையது;
இதன் பின்னிஷ் சொல் rastas (thrush, Turdus).
22:484 எதற்குமே வேண்டாம் இனிய தாயின் மகளே.
22:521 இந்த அடியும் அடுத்த அடியும்: கூழாங் கற்களைப்போல பண
நாணயங்களும் சிறு கற்களைப்போல சில்லறை நாணயங்களும்
குவிந்திருக்கும்.
23:20 பார்க்க 2:79.
23:22 வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம் பட்டுத் துணி வகை (velvet).
23:28 மற்றவர் மத்தியில் மறு ஆளாய் வருகிறாய்.
23:47 சிறுபெண்ணின் இயல்புகள் தூரிகைப் பிடியில் தங்கட்டும்.
23:104 விளம்பும் சொற்களையும் செய்யும் செயல்களையும் விளங்கிக் கொள்ளும் ஆற்றல்.
23:121 பார்க்க 1:304.
23:148 ஒவ்வொரு தண்டிலும் மும் மூன்று இலைகளைக் கொண்ட சிறிய செடி;
அரிதாக ஒரு தண்டில் நான்கு இலைகள் உண்டாகும்; இந்த நான்கிலைத்
தண்டைக் காண்பவருக்கு அதிர்ஷ்டம் வரும் நம்பிக்கையும் உண்டு.
இதன் பூக்கள் ஊதா அல்லது வெண்சிவப்பு அல்லது வெள்ளை நிறமாக
இருக்கும். கால்நடை உணவுக்காக இதைப் பயிரிடுவார்கள். மணப்புல்
என்றொரு பெயரும் உண்டு. இதன் பின்னிஷ் பெயர் 'அபிலா' apila
(clover,Trifolium).
23:178 பார்க்க 4:4.
23:217 கைத்துண்டு, கைக்குட்டை, லேஞ்சி (kerchief).
23:222 பார்க்க 2:29.
23:235 பார்க்க 2:31.
23:306 காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).
23:320 பார்க்க 4:310.
23:352 பார்க்க 4:4.
23:360 கும்மலி - த்தல் குதித்து விளையாடுகை.
23:374 சுற்றியுள்ள பாதுகாப்பு அகழி.
23:376 நெய்தற்குரிய பாவு நூல்.
23:386 தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.
23:446 குளிர் காலத்திலிருந்து அது இரண்டு மடங்காகவே கிடைக்கும்.
23:487 மூல பாடத்தில் உள்ள பின்னிஷ் சொல் vaahtokuu; வழக்கிலுள்ள
பின்னிஷ் சொல் maaliskuu; இது ஆங்கில 'மார்ச்' (March) மாதத்தைக்
குறிக்கும்.
23:499 இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல்
kiuru 'கியுறு' (skylark, lark, Alauda arvenis). இந்த அடியின் பொருள்:
'கணவனின் எண்ணம் வானம்பாடியின் நாக்கைப் போன்றது'.
23:505 இவ்வடியில் கூறப்பட்டது mesimarja என பின்னிஷ் மொழியில்
அழைக்கப்படும் ஒருவகைச் சிறு பழம் (arctic bramble, Rubus arcticus).
23:510 இவ்வடியில் கூறப்பட்டது sirkku என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும்
ஒரு குருவி (bunting). பார்க்க 22:393.
23:529 இது ஒருவகைப் புதர்ச் செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்;
இதன் பின்னிஷ் சொல் puola (cranberry, cowberry). பார்க்க 10:450.
23:530 பார்க்க 2:79.
23:532 இது 'அல்டர்' (alder) என்னும் மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது;
பார்க்க 2:26.
23:534 இது அரச மரவினம்; இதனைக் காட்டரசு என்றும் சொல்வதுண்டு (aspen).
பார்க்க 4:310.
23:544 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம்(oats);
பார்க்க 2:253.
23:547 "காசுகள்" என்பதற்கு "நல்ல சொற்கள்" , "புகழ்ந்து கூறும் வார்த்தைகள்"
என்ற விளக்கமும் உண்டு. அடிகள் 559, 560ஐப் பார்க்கும்போது இந்த
விளக்கமும் பொருத்தமாகவே அமைகிறது. அதாவது: அவள் எதிர்பார்த்துச்
சென்றது புகழ்ச்சியான சொற்களை; ஆனால் பெற்றதோ இகழ்ச்சியான
சொற்களை.
23:606 உணவுக்கான ஒருவகைச் சிறிய மீன்; இதன் பின்னிஷ் சொல் kuore
(smelt, Osmerus eperlanus).
23:614 குதிரை இலாயத்திலுள்ள எருவை வாருவதற்குப் பயன் படுத்தப்படும்
கவர்க்கோல்; வைக்கோல்வாரி.
23:690 இவ்வடியில் கூறப்பட்டது ஒருவகைச் சிறிய மரம்; இம்மரத்தின்
கவர்த்தடியினால் கால்களும் அமைத்து என்று மொருள் (sallow,
goat willow). பார்க்க 2:28.
23:758 இது கறுப்பு - வெள்ளை இறகுகளையும் நீண்டொடுங்கிய வாலையும்
உடைய இசைபாடும் ஓர் ஐரோப்பியப் பறவை வகை; இது பிரகாசமான
சிறிய பொருட்களைக் கண்டால் கொத்திக் கொண்டு பறந்து விடும்.
இது புறா இனத்தைச் சேர்ந்தது என்றும் சொல்வர்; இதன் பின்னிஷ் சொல்
harakka (magpie, Pica pica).
23:809 இவ்வடியில் கூறப்பட்டது முட்டைக்கோசுவில் / முட்டைக் கோவாவில்
செய்யப்பட்ட ரசத்தை (cabbage soup).
24:11 பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பழுப்பு நிறமான இசைபாடும்
சிறு பறவை; மூல நூலில் உள்ள பின்னிஷ் சொல் linnanlintu; பேச்சு
மொழியில் hemppo (linnet, hemp-bird, Carduelis cannabina).
24:40 பார்க்க 20:223.
24:56 இது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்புச் சுவையுள்ள இலைகளையுடைய
ஒருவகைப் பூண்டு; இதன் பின்னிஷ் சொல் suolaheina* (sorrel, Rumex).
இதைத் தமிழில் புளியாரை என்றும் சொல்வர் (yellow wood-sorrel,
Oxalis corniculata).
24:83 பார்க்க 1:304
24:91 பார்க்க 6:54.
24:92 பார்க்க 24:11.
24:119 இது சேம்பையினத்தைச் சேர்ந்த ஒரு செடி; இதன் பின்னிஷ் சொல் vehka
(arum, Calla palustris, Araceae).
24:121 பின்லாந்தில் குறிப்பாக வட பகுதியில் கடும் குளிராகையால் வருடத்தில்
சில மாதங்களே பயிர் செய்யக் கூடியதாக இருந்தது. அதனால்
முற்காலத்தில் பஞ்ச நாட்களில் வைக்கோல், மரப்பட்டை, சேம்பை
இனத்தைச் சேர்ந்த சில கிழங்கு வகைகள் ஆகியவற்றை அரைத்து ரொட்டி
சுட்டுச் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது. (அடுத்து வரும் அடிகளில்
இத்தகைய வேலைகள் மணப் பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லை
என்று சொல்வதால் அது ஒரு வசதியான வீடு என்று அர்த்தமாகிறது.)
24:148 பார்க்க 24:11.
24:176 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.
24:178 பார்க்க 24:11.
24:183(i) ஒரு முகத்தலளவை; பார்க்க 21:104.
24:183(ii) இது ஒரு அவரையினம்; இதன் பின்னிஷ் பெயர் pappu (bean, Phaseolus).
பயற்றம் இன விதை என்ற மொழிபெயர்ப்பும் உண்டு.
24:184 இந்த அடியும் அடுத்த அடியும்: ஒரு படி அவரை (/ பயறு) விதைத்து அதன்
விளைச்சலைப் பங்கிட்டால் ஒருவருக்கு ஒரு மணிதான் கிடைக்கும்;
ஏனெனில் அப்பெண்ணுக்கு அவ்வளவு இனசனம். அடிகள் 24:286, 187க்கும்
இப்படியே பொருள் கொள்க.
24:212 அப்பிள் (ஆப்பிள்) பழம்; இதன் பின்னிஷ் பெயர் omena (apple).
24:221 இது நீர்க்கரையில் வளரும் ஒரு புல்லினம்; நாணற் புல் வகை; கோரைப்
புல்வகை; இதன் பின்னிஷ் சொல் ruoko (reed, Phragmites communis).
24:222 (i)இது குதிரைவால் போன்ற குறிமறையினச்செடி; இதன் பின்னிஷ் சொல்
korte (horse-tail, Equsetum). (ii) குதிரை வாலிப்புல்: ஒரு புல்வகை
(A species of grass, Panicum brizoides).
24:242 வீடு கட்டப் பயன்படுத்தப் பட்ட பலகைகளின் பொருத்துகளில் பாசியை
வைத்து அடைத்து நீர் புகாதவாறு செய்தல். இந்த அடியில் 'சப்தம்
வெளியேறாதவாறு பாசியால் மூடப்பட்ட அறையில்' என்று பொருள்.
24:271 இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல்
kiuru, leivo[nen] (skylark, Alauda arvenis). இந்த அடியின் பொருள்:
'பெண்களின் எண்ணம் வானம்பாடியின் நாக்கைப் போன்றது'.
23:499யும் பார்க்க.
24:375 இது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க 2:26.
24:384 பார்க்க 21:411.
24:414 இளமைப் பருவத்தில் அதற்கு நீர் அருந்த வைத்தேன்.
24:471 பார்க்க 2:27.
24:492 காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).
24:495 இது ஒரு வகைப் பாத்திரம் (cup, wide-mouthed vessel).
25:36 பார்க்க 13:219.
25:43 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு வகைச் சிறுபழம்; பார்க்க 2:79.
25:85 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம்(oats);
பார்க்க 2:253
25:108 இந்த அடியில் கூறப்பட்டது பின்னிஷ் மொழியில் lehmus என்னும் ஒருவகை
மரத்தை / மரத்தின் பலகையை (linden, Tilia).
25:122 சணல் போன்ற பிடர் மயிரை உடைய பொலிக்குதிரை.
25:125 கோழிக் குஞ்சை இங்கு அழைத்து வந்ததனால்.
25:168 சிறந்த மேலங்கியணிந்த அழகான ஒருவருக்கு.
25:228 இது கீரி இனத்தைச் சேர்ந்த ஒரு பிராணி (marten); பார்க்க 2:245.
இந்த அடியில் மணமகளைக் குறிக்கிறது.
25:241 இந்த அடியில் கூறப்பட்டது பின்னிஷ் மொழியில் tuomi என்ற சிறு
பழச்செடியை (bird cherry, Prunus padus).
25:242 பார்க்க 25:241.
25:255 இது சேற்று நிலங்களில் வாழும் ஒரு காக்கையினம்; இதன் பின்னிஷ்
சொல் varis (crow, Corvus, hooded crow, Corvus corone cornix).
25:256 பார்க்க 23:758.
25:264 இற்கு: இல்லுக்கு.
25:266 பெரிய / நீண்ட செவிகளையுடைய சுண்டெலி.
25:282 மிகச் சிறந்த நாட்டினால் கொண்டு வரப்பட்டவள்.
25:283 இது ஒருவகைச் சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola; பார்க்க 10:450.
25:284 இது ஒருவகைச் சிறிய பழம்; பார்க்க 2:79.
25:286 இது ஒருவகைச் சிறிய பழம்; பார்க்க 2:79.
25:341 பார்க்க 1:44.
25:372 இது ஒருவகைத் தானியம் (rye). பார்க்க 1:93.
25:400 Markka 'மர்க்கா' என்னும் பின்னிஷ் நாணயம் செலுத்திக் கொள்வனவு
செய்யபடாத தேன்.
25:417 "வாய்க்கு வாய்" என்பதே சரியான மொழிபெயர்ப்பு; இதனை "உதட்டுக்கு
உதடு" என்றும் "நேர்க்கு நேர்" என்ற கருத்தில் "முகத்துக்கு முகம்" என்றும்
சிலர் மொழி பெயர்த்துள்ளனர்.
25:420 தாய் பெற்ற மக்கள் தோளொடு தோளாய் நிற்பதும் அரிது. இந்த அடியில்
"தோளொடு தோளாய்" என்பதற்கு அருகருகாய், அக்கம் பக்கமாய்
என்று பொருள்.
25:427 'Sineta*r' என்னும் பின்னிஷ் சொல்லில் 'sini' நீல வர்ணத்தைக் குறிக்கும்.
'-ta*r' என்பது பெண்பால் விகுதி. அதனால்தான் 'நீலமகளார்' என்று
தமிழில் மொழி பெயர்க்கபட்டுள்ளது. இதனைச் 'சாயத் தொழிலின்
தேவதை' என்றும் துணிகளுக்குச் சாயம் போடும் பெண்கள் என்ற பொருளில்
'சாய மகளார்' என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.
25:428 இதிலும் பின்னிஷ் மொழியில் துணி என்னும் பொருளுள்ள 'kangas' என்ற
சொல்லும் -ta*r' என்ற பெண்பால் விகுதியும் இணைந்ததால் 'தறிமகளார்',
'துணி மகளார்', 'நெய்தற் தொழிலின் தேவதை' என்று மொழிபெயர்ப்புகள் உண்டு.
25:440 பார்க்க 24:121.
25:485 பார்க்க 2:27.
25:550 காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).
25:606 Markka 'மர்க்கா' என்னும் பின்னிஷ் நாணயம்.
25:623 ஒருவகைச் சிறுபழம்; பார்க்க 2:79.
25:624 இந்த அடியில் கூறப்பட்ட சிறு பழத்தின் பின்னிஷ் பெயர் punapuola;
பார்க்க 10:450.
25:630 கைத்தறியில் நூல் சுற்றும் கருவி.
25:732 முனையில் மணிகள் கட்டிய சவுக்கால் அடியாமலே குதிரை விரைந்தது.
26:45 இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை.
இதன் பின்னிஷ் சொல் peiponen (chaffinch, finch, Fringilla coelebs).
26:46 இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஒரு சிறிய பறவை.
இதன் பின்னிஷ் சொல் pulmonen (snow bunting, Plectrophenax nivalis).
பார்க்க 11:385.
26:60 பார்க்க 21:411.
26:139 பார்க்க 2:26.
26:146 இது சிங்கத்தின் உடலில் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட
பழங்கதைக் கற்பனை விலங்கு. கழுகரி என்றும் சொல்லப்படும்.
இதன் பின்னிஷ் சொல் vaakalintu (giant bird, [eagle], griffin).
26:232 இது பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு பிராணி; இதன் பின்னிஷ் சொல்
sisilisko (lizard, Lacertidae). 'பல்லி இனப் பிராணிகளின் கூட்டத்தால்
கட்டப்பட்ட வேலி' என்பது இந்த அடியின் பொருள்.
26:281 வார்: இடுப்புப்பட்டி.
26:308 இது ஒரு வகை முட்செடி; மயிரிழை போன்ற புற வளர்ச்சியுள்ள
இலைகளும் நீல மலர்களும் கொண்ட செடிவகை; இதன் பின்னிஷ்
பெயர் koirankieli (dogstongue, Cynoglossum officinale).
26:347 பார்க்க 2:31.
26:555 அந்த நாட்களில் வழக்கிலிருந்த ஒரு நீட்டல் அளவை; பின்லாந்தில்
1069 மீற்றரும் ரஷ்ஷியாவில் 1067 மீற்றரும் கொண்ட நீட்டல்
அளவையாகக் கருதப்பட்டது; இதன் பின்னிஷ் சொல் virsta (verst).
26:693 பார்க்க 15:595.
26:744 வார்: இடுப்புப்பட்டி.
26:761 இது ஒருவகைப் பூடு பார்க்க 223.
27:19 பார்க்க 25:108.
27:40 முளைகள்: முள்ளுகள், கொளுவிகள்; அடிகள் 56, 57ன் படி கையுறைகள்
முள்ளுகளிலும் கொளுவிகளிலும் தொங்கவிடப்பட்டதாகத் தெரிகிறது.
கலயங்கள் தொங்கவிடப்படும் கொளுவிகள் என்றும் ஒரு மொழிபெயர்ப்பு
உண்டு.
27:111 இது தானியங்களை அளக்கும் ஒரு முகத்தலளவை; பதினெட்டுக் 'கப்பா'
கொண்டது. இதன் பின்னிஷ் சொல் ma*a*ra*, 21:104யும் பார்க்க.
27:112 மூடைக் கணக்கில், 'தொன்' (ton) கணக்கில், அரையரை மூடையாய்,
அரையரைத் தொன்னாய் என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
27:120 பின்னிஷ் நூலில் leiviska* என்று சொல்லப் படுகிறது; இது பழைய காலத்தில்
பயன்படுத்தப்பட்ட ஒரு நிறுத்தல் அளவை. சுமார் பத்துக் கிலோவுக்குச்
சமமானது என்று கருதப்படுகிறது. இதனைக் காற்பங்கு என்றும், ஒரு
இறாத்தல் என்றும், இருபது இறாத்தல் என்றும் வெவ்வேறு விதமாக
மொழிபெயர்த்துள்ளனர்.
27:135 இந்த அடியில் கூறப்பட்டது வெள்ளை அல்லது வெள்ளை ஊதா நிறங்கள்
சேர்ந்த வட்டமான ஒரு வகைக் கிழங்கு. இதன் பின்னிஷ் பெயர் nauris
'நெளறிஸ்' (turnip, Brassica rapa).
27:215 'பெண்கள் வளர்த்த' என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.
27:226 வாயினால் மந்திரப் பாடல்களைப் பாடி ஓநாயைத் தோன்றச் செய்தான்.
27:248 அழகான உரோமத்தையுடைய கீரி.
27:250 வாயினால் மந்திரப் பாடல்களைப் பாடிக் கோழியைத் தோன்றச் செய்தனன்.
27:255 நகப்புள்: நகங்களையுடைய பறவை.
27:300 இது அந்த காலத்தில் இருந்த ஒரு போர்முறை. சண்டை செய்பவர்கள்
சண்டையைத் தொடங்குவதற்கு முன்னர் தங்கள் வாள்களை அளந்து
பார்ப்பர். எவருடைய வாள் நீளமாக இருக்கிறதோ அவரே முதலில்
வாளை வீச வேண்டும்.
27:326 'வயதான பெண்களிடம் வாதாடும் செயலும்' என்றும் ஒரு மொழிபெயர்ப்பு உண்டு.
27:382 பார்க்க 27:135.
28:140 லெம்மின்கைனன் தனது பயணத்துக்கு உணவையும் உணவுப் பொருட்களையும்
உப்பையும் கட்டும்படி தாயிடம் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. யாராவது
வீடு குடிபுகு விழாவுக்கு அழைத்தால், அழைப்பை ஏற்றுச் செல்பவர்கள் பரிசுப்
பொருட்களாக உப்பும் ரொட்டியும் கொண்டு செல்வது இன்றைக்கும்
இந்நாட்டில் வழக்கத்தில் உள்ளது.
28:212 இவ்வடியில் கூறப்பட்டது ஒருவகைப் புதர்ச் செடியின் சிறுபழம். இதன்
பின்னிஷ் பெயர் puolukka (cowberry, lingonberry, mountain cranberry,
Vaccinium vitis-idaea). பார்க்க 10:450.
28:213 பார்க்க 2:79.
28:214 இது ஒரு கருநீல நிறமுள்ள சிறுபழம். இதன் பின்னிஷ் சொல் mustikka
(bilberry, blueberry, whortleberry, Vaccinium myrtillus).
28:218 ஈய நெஞ்சத்து ஒண்டொடி ஒடித்து எடுப்பர்.
29:14 பார்க்க 21:411.
29:41 "சொற்கள் இல்லாத தீவு" என்பதே சரியான மொழிபெயர்ப்பு. சொற்கள்
இல்லாத தீவு என்பதால் குடிமக்கள் இல்லாத தீவு என்றும் பெயரில்லாத தீவு
என்றும் சில பொழிபெயர்ப்பாளர் விளங்கியுள்ளனர்.
29:128 அந்த நாட்களில் இருந்த ஓர் அளவை; இதன் பின்னிஷ் சொல் karpio;
பத்துக் 'கப்பா' அளவு கொண்டது; இந்த அடியில் நிலத்தின் அளவையாக
வரும் 'கப்பா' என்பது தானியங்களை அளக்கும் முகத்தலளவையாக முன்னர்
கூறப்பட்டது. ஆங்கிலத்தில் 'bushel' என்றும் 'five-peck' என்றும் மொழி
பெயர்த்துள்ளனர். ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் இந்த அடியை
"ஒரு 'புஷல்' பெறுமதியான நிலமும் இல்லை" என்கிறார்.
மேலே 21:104யும் பார்க்க.
29:153 பார்க்க 2:29.
29:266 குக்கடக் குஞ்சு: கோழிக் குஞ்சு; பின்னிஷ் மூல நூலில் 'கோழியின்
பிள்ளை' என்று சொல்லப் பட்டது.
29:268 'சிரிக்க வைத்தனன்' 'நகைக்க வைத்தனன்' 'புன்னகையூட்டினன்' என்பதே
நேரடி மொழிபெயர்ப்பு. சிலர் அப்படியே மொழிபெயர்த்துள்ளனர்.
ஆனால் 'தன்வசப்படுத்தினன்', 'இன்பமூட்டினன்' 'கற்பழித்தனன்',
'அவமதித்தனன்' என்றும் சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.
29:344 இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம்; நீர்காகம்
என்றும் சொல்வதுண்டு. பார்க்க 21:43.
29:373 ஒருவகைச் சிறுபழம் (strawberry); பார்க்க 2:79.
29:374 ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.
29:459 பார்க்க 2:21.
29:460 பார்க்க 2:22.
29:464 இவ்வடியில் கூறப்பட்டது ஒரு வகைச் சிறிய பழச்செடி; பார்க்க 2:27.
29:494 இது காக்கையினத்தில் ஒரு பெரிய பறவை. அண்டங்காகம்; நீர்காகம்
என்றும் சொல்வதுண்டு. பார்க்க 21:43.
29:523 பார்க்க 26:555.
29:574 பார்க்க 29:41.
29:582 பார்க்க 2:23.
29:585 பார்க்க 2:22.
29:586 இவ்வடியில் கூறப்பட்டது 'பைன்' என்னும் மரத்தை; தேவதாரு இன மரவினம்.
இதன் பின்னிஷ் சொல் peta*ja* (pine, Pinus silvestris).
29:595 பானை வயிறுடைய எளிய பிறவிகள்.
30:103 இந்த அடியிலிருந்து அடி 106 வரை ஈட்டியின் அலங்கார வர்ணணை:
ஈட்டியின் முனையில் ஒரு குதிரை நின்றது; அலகின் அருகில் ஒரு முயல்
குதிக்கும் பாவனையில் நின்றது; பொருத்தில் ஓநாய் ஊளையிட்டது;
ஈட்டியின் குமிழில் கரடி உறுமிக் கொண்டிருந்தது.
30:156 கடலின் கரையோரத்து நீரைப் பனிக்கட்டிகளாக்கிக் கடினமாக்கினான்.
30:159 இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப்பறவை.
(chaffinch); பார்க்க 26:45.
30:160 வாலாட்டிக் குருவியின் பின்னிஷ் பெயர் va*sta*ra*kki (wagtail, Motacilla).
30:165 நாண்: நாணம்.
30:167 விசை: சக்தி.
30:252 பார்க்க 2:23.
30:327 கடலினுள் சென்றுள்ள நிலப்பகுதியே கடல்முனை எனப்படும்; இங்கே
'பசிக்கடல்முனை' என வர்ணிக்கப்பட்ட இடம் உணவுப் பஞ்சமுள்ள
பிரதேசம் எனச் சில ஆய்வாளர் கூறுகின்றனர்.
30:339 நெருப்பே, இந்த மூடக் கோட்டையை எரிப்பாய்!
31:4 அந்தத் தாய் அன்னங்களை ஆற்றுக்குக் கொண்டு வந்தாள். மேலே
14:377ஐயும் பார்க்க.
31:35 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் (oats);
பார்க்க 2:253.
31:95 பார்க்க 25:108.
31:148 தமக்குத் தெரிந்த தார் வடியும் மரங்களை.
31:156 இந்த அடியில் வரும் பின்னிஷ் சொல் saarrnipuu (ashwood). இதை
'ஸார்னி மரம்' என்று அல்லது 'ஸார்னிப் பலகை' என்று சொல்லலாம்.
எனவே இந்த அடிக்கு "saarni 'ஸார்னி' (ash, Fraxinus) மரங்கள்/
பலகைகள் நூறு கையளவு" என்று பொருள்.
31:282 எனது சீழ்க்கை ஒலி இங்கிருந்து உருண்டு போய்ச் சேரும் தொலை வரை.
31:311 பார்க்க 8:172.
31:313 முழுத் தாருவை அப்படியே கொண்டு வந்து. பார்க்க 2:22.
31:316 பார்க்க 2:29.
31:321 ஒரு பறவைக்குச் சமமான உயிரினம் அல்லாமல்.
31:343 பார்க்க 1:93.
31:349 எசமானரும் அந்த வழியாக வந்தாரப்பா.
32:23 இந்த அடியும் அடுத்த அடியும்: ரொட்டியைச் சுடும்பொழுது மேற்படையில்
ஒரு வகைப் புல்லரிசித் தானியத்தையும் (oats) கீழ்ப்படையில்
கோதுமையையும் (wheat) வைத்து இரண்டுக்கும் நடுவில் கல்லை வைத்தாள்.
2:253யும் பார்க்க.
32:57 வெளிக்கணும் = வெளியிடத்திலும்.
32:65 பார்க்க 2:30.
32:66 பார்க்க 2:26.
32:67 பார்க்க 2:29.
32:68 பார்க்க 2:27.
32:83 கோடையின் சக்தியே, தேர்ந்தெடுத்த பெண்ணே!
32:87 பேரிச் செடி மகளே! பார்க்க 2:29.
32:88 சிறுபழச் செடிச் சேய்! பார்க்க 2:27.
32:117 கொம்பு, குழல் (horn, trump).
32:134 வெள்ளி போன்ற புல்லின் தாள்களால் மிகுந்த உணவை ஊட்டுங்கள்.
32:157 பசுவின் மடியில் பால் வற்றியவுடன், வெறுப்புடைய நெஞ்சங்கள் அல்லது
தீய நினைவுடைய விரல்கள் செய்த சாபத்தினாலோ சூனியத்தினாலோ
மடியில் இருந்த பால் 'மனா' எனப்படும் மரண உலகம் போய்விட்டதாகக்
கருதப்பட்டது.
32:165 பார்க்க 1:44.
32:171 பார்க்க 1:44.
32:206 மரத்தின் வாளி என இவ்வடியில் கூறப்பட்டது 'ஜுனிப்பர்' என்னும்
மரத்தினால் செய்யப்பட்ட கொள்கலம்; மேலே 2:31ஐயும் பார்க்க.
32:207 கோடையின் சக்தியே, தேர்ந்தெடுத்த பெண்ணே!
32:209 பசுவின் பெயர்; இவ்வடியில் வரும் syo*tikki என்னும் பின்னிஷ் சொல்லுக்கு
'உண்ணும் செயலைச் செய்பவர்' என்னும் பொருளில் உண்பது, உண்பவன்,
உண்பவள், உண்பவர் என்று மொழிபெயர்க்கலாம். இது உண்ணு - தல்
என்னும் பொருளுடைய syo*/da* என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்த
வினையாலணையும் பெயர் (participal noun).
32:210 பசுவின் பெயர்; இவ்வடியில் வரும் juotikki என்னும் பின்னிஷ் சொல்லுக்கு
'பருகும்/குடிக்கும் செயலைச் செய்பவர்' என்னும் பொருளில் பருகுவது/
குடிப்பது, பருகுபவன்/குடிப்பவன், பருகுபவள்/குடிப்பவள், பருகுபவர்/குடிப்பவர்
என்று மொழிபெயர்க்கலாம். இது பருகு-தல்/ குடி-த்தல் என்னும் பொருளுடைய
juo/da என்னும் வினைச்சொல்லில் இருந்து வந்த வினையாலணையும் பெயர்
(participal noun).
32:211 இந்த அடியிலிருந்து அடி 214 வரை; நரம்புளாள், புதியவள், இனியவள்,
அப்பிளாள் (=அப்பிள் பழம் போன்றவள்) என்பனவும் பசுக்களின் பெயர்கள்.
Hermikki, Tourikki, Mairikki, Omena என்ற பின்னிஷ் சொற்களின்
தமிழ் மொழிபெயர்ப்பு.
32:214 பார்க்க 1:44.
32:223 முகிலில் உறையும் பாலாடைப் பெண்களில் இருந்து. 'முகிலில் உறையும்
தயிர்ப்பெண்களிலிருந்து' என்றும் மொழிபெயர்க்கலாம் (புகார்: முகில்).
32:289 பார்க்க 2:22.
32:290 பார்க்க 29:586.
32:303 பார்க்க 2:29.
32:304 பார்க்க 2:31.
32:310 பார்க்க 2:27.
32:315 அப்பிள் [ஆப்பிள்] எல்லோராலும் விரும்பப்படும் ஓர் இனிய பழம். இதன்
பின்னிஷ் பெயர் omena (apple). இந்த அடியில் 'காட்டுப் அப்பிள்' என்பது
காட்டில் வாழும் கரடிக்கு ஒரு செல்லப் பெயர்.
32:316 முன் வளைந்த முதுகையுடைய கரடியே, தேன் போன்ற பாதங்களையுடைய கரடியே.
32:317 இப்பொழுது நாங்கள் ஓர் உடன்படிக்கை செய்வோம்.
32:321 விரிந்த குளம்புகளையுடைய கால்நடை.
32:326 எக்காளம் என்பது ஒருவகை ஊதுகுழல்.
32:372 பார்க்க 32:321.
32:406 எனது கால்நடைகளுக்காக நான் தங்கியிருக்கும் (நம்பியிருக்கும்)
வைக்கோலைத் தவிர்த்து.
32:425 கோடை காலம் வரும்பொழுது, சதுப்பு நிலத்தில் உறைந்திருந்த நீர்
உருகும் பொழுது.
32:450 தேன் போன்ற பாதங்களையுடைய கரடி.
32:454 கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் அடைப்புகள் வேறு உண்டே.
32:481 கிரியாவும் கரியாவும் பசுக்களின் பெயர்கள்.
32:490 பார்க்க 32:321.
32:525 பேரியில் செய்த கழுத்து வளையம்; பார்க்க 2:29.
32:533 காவடி, காவுதடி, காத்தண்டு (cowl-staff).
33:20 ஆண்டவன் கைச் சக்கரமே, அதிகனன்று ஒளிர்வாய்!
33:31 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு புல்லரிசி வகைத் தானியம் இதன்
பின்னிஷ் பெயர் kaura; பார்க்க 2:253.
33:33 வைக்கோலை அரைத்து அந்த மாவினால் சுட்ட ரொட்டியை.
33:34 தேவதாரு மரப்பட்டையில் சுட்ட ரொட்டி; மேலே 24:121ஐயும் பார்க்க.
33:35 இந்த அடியும் அடுத்த அடியும்: மிலாறுவின் கூம்பு வடிவமான காய்களில்
செதிள் போன்ற தோல் இதழ்கள் உண்டு. இத்தகைய சிறிய அகப்பையில்
ஈரமான புல்மேட்டின் உச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட நீர்.
33:54 இந்த அடியில் கூறப்பட்ட கீரை முட்டைக்கோசு. இதைக் கோசுக்கீரை,
கோவிக்கீரை, முட்டைக்கோவா என்றும் அழைப்பர்.(cabbage, Brassica)
33:56 பின்னிஷ் மொழியில் musta என்றால் கறுப்பு நிறம். இந்த அடியில் வரும்
நாய்க்கு Musti என்று பெயர். இதனைச் சிலர் ஆங்கிலத்தில் Blackie என்று
மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் இதனைக் கறுப்பன், கறுப்பி, கறுப்பு
என்று சொல்லலாம்.
33:57 புள்ளிகளையுடைய நாய்க்குப் புள்ளி என்ற பெயர் வந்தது. இதன் பின்னிஷ்
சொல் merkki.
33:58 பழுப்புநிற நாய்க்குப் பழுப்பு என்ற பெயர் வந்தது. இதை நரை நிற நாய்
என்றும் விளங்கியுள்ளனர். இதன் பின்னிஷ் பெயர் Halli.
33:105 இடுப்புப்பட்டியில் அல்லது காலணியில் இருக்கும் வளையத்தைக்
(buckle) குறிக்கிறது.
33:111 சாணம் பட்ட தொடைகளையுடைய பசுக்கள்.
33:117 சின்னவள்: பசுவின் பெயர்.
33:118 வெண்முதுகாள்: பசுவின் பெயர்.
33:142 பால் கறக்கும் நேரம் வந்தது; பால் கறக்கும் நேரம் வரக் கூடியதாகக்
கதிரவன் விரைந்து சென்றனன்.
33:155 துவோமிக்கி: பின்னிஷ் மொழியில் tuomi என்னும் சிறு பழத்தின்
பெயரிலிருந்து வந்தது. இந்த அடியில் இச்சொல் ஒரு பசுவின் பெயர்;
பார்க்க 2:27.
33:156 பன்னிறத்தாள்: பசுவின் பெயர்.
33:283 அவள் தன் இடத்தை மாற்றி அமையாது அதே இடத்தில் வீழட்டும்.
33:288 கலயத்திலிருந்து கீழே விழும் கரிக்கறை போல அவள் வீழ்ந்தாள்.
33:296 ஓர் இனிமையான மணமகளாக 22ம் பாடலில் வர்ணிக்கப்பட்ட ஒரு பெண்
பெரிய கொடுமைக்காரியாக இப்பாடலில் கூறப்படுவதற்கான விளக்கம்
எங்கேனும் தரப்படவில்லை. விவாகத்தின் முன்னர் அல்லது விவாகத்தின்
போது அப்படி இருந்த ஒரு பெண் பின்னர் இப்படி மாறுவது ஒரு மனித
இயல்பு என்பதை இது உணர்த்துவதாக இருக்கலாம் என்று ஓர்
உரையாசிரியர் கருதுகிறார்.
34:35 பார்க்க 4:215.
34:63 இது கடல் பறவைகளில் பெரிய நீண்ட சிறகுகளையுடைய ஓர் இனம்.
பெரும்பாலும் வெள்ளையும் கறுப்பும் அல்லது வெள்ளையும் சாம்பர்
நிறமும் கொண்ட இறகுகளை உடையன. இதன் பின்னிஷ் சொல்
kajava, lokki (gull, seagull, sea-mew, Laridae).
34:64 இது ஒரு வகைக் கடற் பறவை; பார்க்க 34:63.
34:65 பார்க்க 6:53.
34:66 பார்க்க 6:54.
34:73 இது பின்னிஷ் மொழியில் telkka* என்னும் இனத்தைச் சேர்ந்த ஒரு வாத்து.
பார்க்க 22:334.
34:74 இது நிலத்தில் உணவுண்ணும் தாரா வகை; இதன் பின்னிஷ் சொல் sorsa
([wild] duck, mallard, Anatinae).
34:75 இது ஒருவகைக் கடல்வாத்து; இதன் பின்னிஷ் சொல் tavi ([common] teal,
Anas crecca).
34:76 இது ஒருவகை நீர்வாத்து; இதன் பின்னிஷ் சொல் koskelo (merganser, Mercus).
34:192 பின்னிஷ் மொழியில் solki எனப்படும் இந்த ஆபரணம் தொப்பி, காலணி,
இடுப்புப் பட்டி ஆகியவற்றில் இருக்கும் பதக்கம் போன்றது. பெண்கள்
அணியும் `புறூச்` எனப்படும் பதக்கம் போன்ற மார்புசியையும் குறிக்கும்.
34:214 இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.
35:26 பார்க்க 10:346.
35:61 என்றுமே நீ மீன் அடிப்பவன் ஆகமாட்டாய்.
35:220 இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.
35:221 இது ஒருவகைச் சிறுபழம் (strawberry); பார்க்க 2:79.
35:222 இது ஒருவகைச் சிறுபழம் (raspberry); பார்க்க 4:186.
35:254 பார்க்க 10:450.
35:296 இந்த அடியிலிருந்து 307ம் அடிவரை:
"அன்னையே, அன்றைக்கு என்னை நீ ஈன்ற பொழுது, அந்த நாள் என்னை
நீ அரிதீன்ற பொழுது, சவுனா அறையில் புகையை நிரப்பிக் கதவைப் பூட்டி
அந்தப் புகையில் என்னை மூச்சடைக்க வைத்து ஈர்இரா வயதில் என்னை
அழித்திருந்தால் -
முரட்டு படுக்கைத் துணியில் என்னைச் சுற்றிக் கொண்டு வந்து நீருக்குள்
ஆழ்த்தியிருந்தால்-
எனது தொட்டிலைக் கொழுத்தி அடுப்பில் இட்டிருந்தால் -
(அப்பொழுதே இறந்து போயிருப்பேன்; இந்த கொடுமை நிகழ்ந்திருக்காது)"
35:311 இந்த அடியிலிருந்து அடி 314 வரை: `நான் சவுனாவில் தானிய முளைகளில்
இருந்து சுவையான பானம் வடித்துக் கொண்டு இருந்த நேரத்தில் தொட்டில்
நெருப்பில் எரிந்து போய் விட்டது` என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள்
இந்த நான்கு அடிகளையும் விளங்கியுள்ளனர்.
35:372 முன்னொரு நாள் குல்லர்வோ உந்தமோவிடம் அனுபவித்த கொடிய
செயல்களையே இங்கு இகழ்ச்சியாக `நற்செயல்கள்` என்று கூறுகிறான்.
உந்தமோ தனக்குச் செய்தவற்றை அவன் இப்போது எண்ணிப் பார்க்கவில்லை.
ஆனால் தன் தந்தை தாய்க்குச் செய்த கொடுமைக்கே பழி வாங்க
நினைக்கிறான். 34ம் பாடலில் அடிகள் 98, 99, 100ஐயும் பார்க்க.
36:77 இது ஒருவகைப் புதர்ச் செடியில் காய்க்கும் சிவப்பு நிறமான சிறிய பழம்;
இதன் பின்னிஷ் சொல் karpalo (cranberry, Oxycoccus quadripetalus).
36:79 இது `வில்லோ` (willow) என்னும் சிறிய மரம். அலரி இனத்தைச் சேர்ந்தது.
பார்க்க 2:28.
36:99 பார்க்க 36:77.
36:101 பார்க்க 36:79.
36:121 பார்க்க 36:77.
36:123 இம்மலரின் பின்னிஷ் பெயர் lumme; பார்க்க 3:322.
36:124 பார்க்க 13:219.
36:225 அதன்பின் பட்டுத் துணியினால் நன்கு சுற்றட்டும்.
36:287 பார்க்க 33:56.
37:23 இந்த அடியும் அடுத்த இரண்டு அடிகளும்: "நான் மாலைப் பொழுதுக்காக
ஏக்கம் கொள்ளவில்லை; காலை வேளைக்காக மனத்துயர் கொள்ளவில்லை;
மற்றைய வேளைகளுக்காக மனத்துயர் கொள்ளவில்லை. (ஆனால்-)
37:172 சிறிய பறவையைப் போன்ற பொற்பாவையைக் குளிப்பாட்டினான்.
இவ்வடியில் மேல்நாடுகளில் வாழும் ஒரு சிறிய இசைப்பறவையை ஒப்பிட்டுக்
கூறப்பட்டது (chaffinch, finch). பார்க்க 26:45.
37:173 இவ்வடியில் கூறப்பட்டது ஒரு இசைப்பறவையை. அந்த இசைப் பறவை
போன்ற பொற்பாவை என்று பொருள் (snow bunting, Plectrophenax nivalis).
பார்க்க 11:385.
37:216 மாயாரூபம், பிசாசுத்தோற்றம், வெருளி என்றும் மொழிபெயர்க்கலாம்.
38:63 இவ்வடியில் கூறப்பட்ட மீன், விலாங்கு போன்று தட்டையான தலையும்
கீழ்த் தாடையில் மெல்லிய நீண்ட தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர்
மீன்வகை. பெரும்பாலும் வட ஐரோப்பிய நாடுகளில் வாழ்வது. இதன் பின்னிஷ்
சொல் matikka, made (burbot, Lota lota).
38:127 பார்க்க 36:77.
38:128 பார்க்க 24:119.
38:144 செம்பினாலான பட்டியை அணிந்த அவள் முறையிட்டாள்.
38:162 பார்க்க 2:292.
38:166 பார்க்க 13:75.
38:196 வளைந்த காலையுடைய முயல்.
38:233 ஓரி: நரி.
38:244 நீண்ட முகத்தையுடைய ஓநாய்.
38:255 பார்க்க 29:268.
38:282 இது ஒரு கடற்பறவை. 34:63.
39:19 9 x 6 = 54 அடி ஆழம். பார்க்க 10:429
39:40 வலிக்கும் தண்டுகளை உள்ளங் கைகள் பற்றியிருக்கும்.
39:47 பரந்த நீர்ப்பரப்பை மின்னச் செய்வது.
39:87 அதனை உலையிலிருந்து எடுத்துப் பட்டடைக் கல்லுக்குக் கொண்டு வந்தான்.
39:88 (தொடர்ந்து) சம்மட்டிகளுக்கும் சுத்தியல்களுக்கும்.
39:103 இந்த அடியிலிருந்து அடி 108 வரை வாளின் அலங்கார வர்ணனை:
வாளின் முனையில் சந்திரன் திகழ்ந்தது; வாளின் பக்கத்தில் சூரியன்
பிரகாசித்தது; வாளின் கைப்பிடியில் நட்சத்திரங்கள் மின்னின; வாளின்
அலகில் ஒரு குதிரை கனைக்கும் பாவனையில் நின்றது; வாளின் குமிழில்
ஒரு பூனை 'மியாவ்' என்று கத்தும் பாவனையில் நின்றது; வாளின்
உறையில் ஒரு நாய் குரைக்கும் பாவனையில் நின்றது.
39:132 சணல் போன்ற பிடர் மயிரையுடைய குதிரை.
39:140 பார்க்க 2:22.
39:164 பார்க்க 10:346.
39:170 பார்க்க 4:215.
39:193 என்னை ஒருவரும் பயன்படுத்தாதபடியால், என்னைச் செதுக்கிய
பின் மிஞ்சிய கழிவுத் துண்டுகளில் கிடந்து நான் உழுத்துப் போகிறேன்.
39:247 நிற்கு: நினக்கு, உனக்கு.
39:283 வார்: பட்டி, இடுப்புப்பட்டி (belt).
39:319 பார்க்க 2:29.
39:329 கடலினுள் சென்றுள்ள நிலப்பகுதி கடல்முனை எனப்பட்டது.
39:338 கப்பலின் அடிப்புறம், அடித்தளம். ஏராக்கட்டை என்றும் சொல்லப்படும் (keel).
39:416 கவனிப்பு, அதாவது படகின் பாதுகாப்புப் பற்றிய கவனம் படகைக் கவிழ்க்க மாட்டாது.
39:417 வைக்கோல் போருக்கு ஆதாரமாக நிற்கும் மரமே வைக்கோலைச் சிந்தும்
வேலையைச் செய்யாது.
40:16 தார்பூசப்பட்ட படகு போகின்ற வழியில்.
40:;48 சிலைவலு மகனே: கற்சக்தி மகனே: நீர்வீழ்ச்சியின் அடியில் கப்பல்கள்
செல்லும் பாதையில் இருக்கும் பயங்கரமான பாறைகளுக்குத் தலைவன் என்றும்,
இத்தலைவன் கற்களின் சக்தியின் அல்லது பாறைகளின் ஆவியின் மகன்
என்றும் கூறப்படுகிறது.
40:58 'சலப்பை' 'சுவாசப்பை' என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு.
40:132 எலும்பை அழிக்கும் சக்தியுடைய வாளைப் பக்கத்திலிருந்து (உருவினான்).
40:139 வேலை: கடல் (sea, ocean).
40:240 பிசாசு போன்ற வீரமடக்கிய குதிரையின் சடைமயிரினால் நரம்புகள்
கட்டப்பட்டன.
40:308 தந்திகளாகக் கட்டப்பட்ட குதிரையின் சடைமயிர் பின்னி முறினின.
41:19 கோலாச்சி மீனின் எலும்புகளால் செய்யப்பட்ட யாழ்க் கருவியை.
41:39 பார்க்க 2:292.
41:41 காட்டெருது, காட்டுப்பசு; கடம்பை என்றும் அழைக்கப்படும் (elk). பார்க்க 3:170.
41:42 பார்க்க 21:411.
41:45 பார்க்க 29:586.
41:46 பார்க்க 2:22.
41:53 பார்க்க 2:22.
41:54 பார்க்க 29:586.
41:68 இவ்வடியில் கூறப்பட்டது `அல்டர்` (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க
2:26.
41:85 பார்க்க 15:593.
41:87 பார்க்க 26:45.
41:89 பார்க்க 22:393.
41:90 இது வான்மபாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன் பின்னிஷ் சொல் kiuru,
leivo[nen] (skylark, lark, Alauda arvenis).
41:106 தறியில் ஊடிழை நுழைந்து செல்லும் புழையுடைய கயிறு அல்லது கம்பி.
41:119 இந்த அடியில் கூறப்பட்டது மீன் சிறகுகளை. இதன் பின்னிஷ் சொல் eva* (fin).
41:127(i) பார்க்க 3:194.
41:127(ii) பார்க்க 22:333.
41:128 இது muje, muikku என பின்னிஷ் மொழியில் அழைக்கப்படும் ஒருவகைச் சிறுமீன்
(vendace, Coregonus albula).
41:143 இது வாத்து என்னும் பறவையின் சக்தி. பாடல் 1:179ல் எங்கிருந்தோ ஒரு வாத்துப் பறந்து
வந்து நீரன்னையின் முழங்காலில் முட்டைகள் இட்டதிலிருந்து பூமி உண்டானது என்ற கூற்று இங்கு நினைவு
கூரத்தக்கது.
41:189 பார்க்க 36:77.
41:190 ஒரு பயறுவகை (pea). பார்க்க 4:513.
41:239 பார்க்க 15:285.
42:74 பையன்கள் தரையில் முழங்கால்களில் இருந்தனர்.
42:144 பார்க்க 10:429.
42:258 பார்க்க 6:62.
42:348(i) மூலபாடத்தில் A*ijo* என்று வரும் சொல்லை முதுமகன், முதியவன் என்று
மொழிபெயர்க்கலாம். சிலர் இதனை " 'அய்யோ'வின் மகனே" என்றே மொழிபெயர்த்துள்ளனர்.
42:348(ii) மூலபாடத்தில் வரும் Iku-Turso என்ற பின்னிஷ் சொல்லை கடலரக்கன், கடற்பூதம்,
கடலின் மாபெரும் சக்தி (sea-monster) என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். சில
மொழிபெயர்ப்பாளர்கள் அப்படியே 'இக்கு துர்ஸோ' என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கின்றனர்.
42:532 வெல்லமோ, நீரின் இனத்தோரை அமைதிப்படுத்து! சொற்றொகுதியில் 'வெல்லமோ'
பார்க்க.
42:533 கப்பல் பக்கத்தின் மேல் பாகம்; கப்பலின் முன்னணியத்தின் விளிம்பு (gunwale).
42:534 கப்பலின் ஒரு பகுதி; சட்டம், சட்டக்கட்டு என்றும் மொழிபெயர்க்கலாம் (frame, rib).
43:14 கப்பல்களின் பாய் தூக்கும் மரம்; இதை வியாழ்மரம் என்றும் கூறுவர் (yard arm).
43:31 கவிநிலை: காலநிலை. இந்த பாடலின் 45, 337, 356, 422ம் அடிகளில் வரும் இந்தச்
சொல்லுக்கும்
இதே பொருள்.
43:59 பார்க்க 4:310.
43:118 நூறு துடுப்பு வளையங்கள் கொண்ட படகு பிளக்கட்டும்.
43:180 பார்க்க 26:146.
43:249 மற்ற வலிய நகங்கள் நொருங்கி விழுந்தன.
43:366 ஊசியிலை மரத்தடியில் இருக்கும் பற்களின் இடைவெளி அகன்று நீக்கல் விழுந்துள்ள மிருகத்தை.
43:378 முழுச் சம்போவிலும் முயன்று இல்லம் கொணர்ந்தவை.
43:398 இது ஒருவகைத் தானியம் (rye). பார்க்க 1:93.
44:33 முட்களின் நீளம் 100 x 6 அடிகள் (hundred fathoms). பார்க்க 10:429.
44:34 கைப்பிடியின் நீளம் 500 x 6 அடிகள் ( five hundred fathoms).
44:86 வெள்ளை நிறத்தில் இடுப்புப் பட்டியை அணிந்த மரமே!
44:117 ஐந்து கத்திகளால் கீறிக் கிழிப்பர்.
44:128 பார்க்க 4:4.
44:186 சிந்தூர மரத்தின் பழம், விதை (acorn).
44:216 கால்களில் காலணி அணியாது நகர்ந்தனன்.
44:217 காலுறைக்குப் பதிலாகப் பாதத்தை/விரல்களைத் துணியால் சுற்றும் வழக்கம் இருந்ததாகத்
தெரிகிறது.
44:238 தனது முழங்காலில் யாழின் தோளை அழுத்தி வைத்தனன்.
44:323 பார்க்க 2:22.
44:324 பார்க்க 29:586.
44:327 'ஸ்புறூஸ்' (spruce) மரத்தின் காய்; 20:223ஐயும் பார்க்க.
44:328 சுள்ளிகள், கிளைகள், ஊசி போன்ற இலைகள் என்றும் சிலர் மொழி பெயர்துள்ளனர்.
45:36 கவிநிலை: காலநிலை.
45:112 வீட்டில் தயாரித்த `பீர்'ப் பானத்தால் பிணையல்களை நனைத்தனள். (அகத்து `பீரை`ப்
பெய்து பிணையல்களை நனைத்தனள்.)
45:123 பார்க்க 3:161.
45:124 பார்க்க 38:63.
45:182 வழக்கத்தில் இல்லாத புதிய நோய்கள்.
45:203 இலைக் கட்டுத் தூரிகை வெப்பமாக்கினான்; பார்க்க 4:4.
45:204 நூறு இலைகள் கொண்ட தூரிகையை மென்மையாக்கினன்.
45:215 புனிதமான தீப்பொறிகளைத் துடைத்து நீக்குக.
45:221 நீரெறிதல் பற்றி சொற்றொகுதியில் 'சவுனா'வைப் பார்க்க.
45:229 காரணம் எதுவும் இல்லாமல் நாம் உண்ணப்பட்டு அழிக்கப்படமாட்டோ ம்.
45:282 Kivutar என்னும் பின்னிஷ் சொல்லில் kipu (gen. kivun) நோவைக் குறிக்கும்.
'-tar' என்பது பெண்பால் விகுதி. அதனால் தான் 'நோவின் மகள்' என்று தமிழில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. இதனை 'நோவின் பெண், நோவின் சக்தி, நோவின் தேவதை' என்றும் சிலர்
மொழி பெயர்த்துள்ளனர்.
45:283(i) இதிலும் பின்னிஷ் மொழியில் ஊனம், காயம், சேதம் என்னும் பொருள்களுள்ள vamma
என்ற சொல்லும் '-tar' என்ற பெண்பால் விகுதியும் இணைந்ததால் 'ஊனத்தின் சக்தி, ஊனத்தின்
தேவதை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
45:283(ii) ஓர்ந்து தேர்ந்தவளே: தேர்ந்தெடுத்த பெண்ணே, தெரிவான பெண்ணே; சிறந்த பெண்ணே,
நல்ல பெண்ணே என்றும் மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.
46:6 வழக்கத்தில் இல்லாத புதிய நோய்கள்.
46:36 இதிலிருந்து அடி 40 வரை ஈட்டியின் வர்ணனை: ஈட்டியின் நுனியில் ஓநாய் நின்றது;
ஈட்டியின் உருக்கினாலான அலகில் கரடி நின்றது; ஈட்டியின் பொருத்தில் காட்டெருது சறுக்கிச் செல்வது
போல நின்றது; கைப்பிடி வழியாக ஒரு குதிரைக்குட்டி செல்லும் பாவனையில் நின்றது; கைப்பிடி
முனையில் ஒரு காட்டுக் கலைமான் நின்றது.
46:56 இந்த அடியில் "அழகு" என்பது கரடியைக் குறிக்கும்.
46:61 இந்த அடியில் கூறப்பட்டது நறுமணமுள்ள மஞ்சள் மலர்களையுடைய ஒரு கொடியை; இதன் பின்னிஷ்
பெயர் kuusama ( honeysuckle, woodbine, Lonicera).
46:63 இந்த அடியில் "கானகத்து அப்பிள்" என்பதும் கரடியைக் குறிக்கும்.
46:64 இந்த அடியில் "தேன் தோய்ந்த பாதம்" என்பதும் கரடியைக் குறிக்கும்.
46:71 இந்த அடியில் "இணையில்லாத அன்பு" என்பதும் கரடியைக் குறிக்கும்.
46:75 பார்க்க 2:21.
46:76 பார்க்க 8:172.
46:105 இந்த அடியில் "பொன்" என்பதும் கரடியைக் குறிக்கும்.
46:177 இந்த அடியில் "பொற்குயில்" என்றும், அடி 118ல் "சடைத்த உரோமப் பிராணி" என்றும்,
அடிகள் 123, 124, 125, 126ல் முறையே "புகழ் நிறைந்தது", "அடவியின்சிறப்பு", "கனமில்லாக்
காலணி", "நீலக் காலுறை" என்றும் வருபவை கரடியையே குறிக்கும்.
46:157 இந்த அடியில் கூறப்பட்டது காடுகளில் வாழும் ஒருவகைச் சிறிய குருவியை. இதன் பின்னிஷ்
பெயர் ka*pylintu (crossbill, Loxia).
46:173 பார்க்க 13:75.
46:245 இந்த அடியில் "இனிய பறவை" என்றும், அடிகள் 246, 251, 252ல் முறையே "பொதி"
என்றும், "கறுப்புக் காலுறை" என்றும், "துணிக் காற்சட்டை" என்றும் வருபவை கரடியையே குறிக்கும்.
46:246 ka*a*ro* 'கேரோ' என்னும் பின்னிஷ் சொல்லை கட்டு, சுமைக்கட்டு, சிப்பம் என்றும்
மொழிபெயர்க்கலாம் (bundle, pack, roll).
46:253 இந்த அடியில் கூறப்பட்டது ஒரு சிறு பறவையினம், பார்க்க 3:91.
46:254 பார்க்க 6:54.
46:262 உரோமம் நிறைந்த வாயையுடைய கரடி.
46:265 இந்த அடியில் "நாயகன்" என்றும், அடிகள் 266, 268, 275, 276ல் முறையே "ஆடவன்"
என்றும் "திரட்சியானவர்" என்றும், "மனிதன்" என்றும் "பெரிய பையன்" என்றும் வருபவை கரடியையே
குறிக்கும்.
46:272 சுருங்கிய காலுறை அணிந்தோர்க்கு அழிகலீர்! (அழிகலீர்:வருந்தாதீர்).
46:287 வாங்கு = வாங்குப்பலகை, பலகையாசனம் ( bench, wooden seat)
46:317 இவ்வடியில் "கொள்ளைச் செல்வம்" என்பதுவும் கரடியைக் குறிக்கும்.
46:318 பார்க்க 46:157. இவ்வடியில் "சிறுகுருவி" என்பதுவும் கரடியைக் குறிக்கும்.
46:385 பார்க்க 13:219.
46:423 பார்க்க 2:29.
46:424 பார்க்க 2:31.
46:426 பார்க்க 6:50.
46:429 இந்த அடியில் கூறப்பட்ட மரத்தின் பின்னிஷ் பெயர் honka (fir); 8:172ஐயும் பார்க்க.
46:430 இந்த அடியில் கூறப்பட்ட மரத்தின் பின்னிஷ் பெயர் kuusi (spruce); 2:22ஐயும்
பார்க்க.
46:436 அடி 434ல் `நகங்களை ஆக்கினள்` என்று வருவதால், அடிகள் 435, 436ன்படி 'நகங்களை
எப்படி தாடை எலும்பிலும் பல் முரசிலும் இணைக்கலாம்?' என்ற கேள்வி எழுகிறது. எனவே அடி 434க்கு
'நகங்களையும் பற்களையும் ஆக்கினள்' என்று பொருள் கொள்ள வேண்டும்.
46:635 தப்பியோவின் எக்காளம் எக்காளமிட்டிட.
47:99 மூடப் பெண்ணின் கையிலிருந்து நெருப்பு வீழ்ந்தது.
47:213 இது பனிக்கட்டியை உடைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கூர்மையான கருவி; இதன் பின்னிஷ் சொல்
tuura, ja*a*tuura ( ice pick, [chisel]).
47:238 இந்த அடியிலும் அடிகள் 240, 242லும் கூறப்பட்டது ஒரே இன மீனை; பார்க்க 3:161.
47:244 பார்க்க 3:194.
47:245 இந்த அடியிலும் அடி 247லும் கூறப்பட்டது ஒரே இன மீனை; பார்க்க 3:161.
47:248 இந்த மீனுடைய பெயர் வெண்மீன்; பின்னிஷ் பெயர் siika 'சீக்கா' (powan,
white-fish, Coregonus lavaretus); அதன் நிறம் நீலம்.
47:349 இந்த அடியில் கூறப்பட்டது கெண்டை இனத்தைச் சேர்ந்த ஒரு வகை மீனை.
இதன் பின்னிஷ் பெயர் sa*yne (ide, ide-fish, Leuciscus idus).
48:67 பார்க்க 10:429.
48:68 பார்க்க 10:429.
48:80 பார்க்க 3:194.
48:81 பார்க்க 3:161.
48:82 ஒரு நன்னீர் மீன்வகை; வெள்ளி மீன் என்றும் சொல்லப்படும். இதன் பின்னிஷ் பெயர்
sa*rki; பார்க்க 22:333(i).
48:91 சிறை: மீன்பிடி வலையின் ஒரு பக்கக்கூறு.
48:100 பார்க்க 3:161.
48:101 இந்த அடியில் கூறப்பட்ட மீனின் பின்னிஷ் பெயர் taimen (trout, Salmo trutta).
48:102 பார்க்க 21:166.
48:110 பார்க்க 10:429.
48:111 பார்க்க 10:429.
48:124 நீரில் வளரும் கோரைப்புல்.
48:138 42 அடி நீளமுள்ள கம்பம்.
49:13 (அதே போல) கப்பலின் ஒரு நாள் பயணத்தைக் காற்றும் அறியும்.
49:52 இந்த அடியில் "ஆறு" என்பது எண்ணைக் குறிக்கும். அதாவது "பிரகாசிக்கின்ற ஆறு மூடிகளின்
மேல்" என்று பொருள். "ஒளிரும் சுவர்க்கத்தின் மூடிகளின் மேல்" என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள்
விளங்கியுள்ளனர்.
49:83 இவ்வடியில் கூறப்பட்டது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க
2:26.
49:130 பார்க்க 2:22.
49:213 இதிலிருந்து அடி 216 வரை வாளின் அலங்கார வர்ணனை: வாளின் கூரான முனையில் சந்திரன்
திகழ்ந்தது; கைப்பிடியில் சூரியன் ஒளிர்ந்தது; அதன் மேற்புறத்தில் ஒரு குதிரை நின்றது; வாள்களைத்
தொங்க விடுவதற்காக ஒரு முளை இருக்கும்; அந்த முளையின் வழியில் `மியா மியா` என்று கத்தும்
பாவனையில் ஒரு பூனை நின்றது.
49:217 இது அந்தக் காலத்தில் இருந்த ஒரு போர்முறை. பார்க்க 27:300.
49:228 பார்க்க 27:135.
49:246 ஒரு செங்குத்தான பாறையில் ஒரு செயற்கையான கோடு இருந்தது. இரகசியமான கோடு என்றும்
மொழிபெயர்ப்பு உண்டு.
49:256 பார்க்க 21:395.
49:275 இந்த அடியும் அடுத்த அடியும்: "அவன் கை முட்டியால் கதவைத் திறக்க முயன்றான்; சொல்
வலிமையால் பூட்டைத் திறக்க முயன்றான்."
49:282 இந்த அடியில் சொல்லப்பட்ட ஆயுதத்தின் பின்னிஷ் பெயர் kuokka. இதனை மண்வெட்டி,
மண்கொத்தி, உழவாரப் படை என்று தான் மொழிபெயர்க்கலாம் (hoe). 49:304ல் 'மும் முனையுள்ள'
என்றுவருவதால் திரிசூலம் (trident) என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
49:304 பார்க்க 49:282.
49:305 பார்க்க 47:213.
50:9 அவள் ஒளி வீசிய பாவாடைகளை அணிந்து திரிந்ததால், அவ்வொளி பட்டு வாயிற்படிகளில்
பாதி மங்கிப் போய்விட்டன. வாயிற்படி என்றும் களஞ்சியக்கூடம் என்றும் மொழிபெயர்ப்புகள் உண்டு.
50:52 இவ்வடியில் கூறப்பட்டது 'அல்டர்' (alder) மரம்; பூர்ச்ச மரவினத்தைச் சேர்ந்தது; பார்க்க
2:26.
50:64 ஜேர்மன் நாட்டு 'ஸ்ரோபரி'ப் பழமே! பார்க்க 2:79.
50:82 ஒரு வகைச் சிறிய பழம். இதன் பின்னிஷ் சொல் puolukka. பார்க்க 10:450.
50:87 இவ்வடியில் கூறப்பட்டது ஒரு வகை நத்தையை. இதன் பின்னிஷ் பெயர் etana (slug,
snail).
50:104 ஒரு வகைச் சிறிய பழம்; இதன் பின்னிஷ் சொல் puola; பார்க்க 10:450.
50:105 இந்த அடியும் அடுத்த அடியும்: "அந்தப் பழம் நிலத்திலிருந்து பறித்து உண்ண முடியாத அளவு
உயரத்தில் இருந்தது; (ஆனால்) ஏறிப் பறிக்க முடியாத அளவு மரம் தாழ்வாக இருந்தது."
50:172 இந்த அடியில் கூறப்பட்ட சிறு பழத்தின் பின்னிஷ் பெயர் punapuola; பார்க்க 10:450.
50:179 இந்த அடிகளில் 'குளியல்' என்று வருவது சவுனா நீராவிக் குளியலையே குறிக்கும்;
சொற்றொகுதியில் 'சவுனா' பார்க்க.
50:208 பின்னிஷ் மொழியில் saraoja என்ற சொல்லே 'புல்வளர் அருவி' என்று இந்த அடியில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதே சொல் saraja என்றும் சில இடங்களில் வருகிறது. தற்காலத்தில்
வழக்கில் இல்லாத தற்கால அகராதிகளில் இடம் பெறாத சொற்களில் இதுவும் ஒன்று. இந்தச்
சொல்லுக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. உதாரணமாக
18:116ல் இச்சொல் 'மரண ஆறு' என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறதைக் காணலாம். 'இருண்ட
வடநாடு' என்ற பொருளில் வரும் sariola என்ற சொல்லின் திரிபே இது என்றும் சிலர்
கூறியுள்ளனர். இதற்குமேல் தெளிவான விளக்கத்தைப் பெற முடியவில்லை.
50:220 பார்க்க 50:208.
50:239 மேசை ஒன்றின் தலைப்பக்கம் அமர்ந்திருந்தனன்.
50:301 அடி வைத்துக் கடிதாய் அவளும் விரைந்தனள்.
50:304 இங்குள்ள குதிரை லாயத்தில் மர்யத்தா குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். இதைத் தப்பியோ
மலை, தப்பியோ குன்றம் என்றும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
50:338 சாணைச் சீலை: கைக்குழந்தைகளை மூடிப் பொதியும் சீலை (swaddling clothes;
perh. ஏணை).
50:466 வாய்மொழிப் பாடல்களாகவே பலகாலம் இருந்து, பின்னர் சேகரிக்கப்பட்ட தொகுப்புகளில்
சில முரண்பாடுகள் குழப்பங்கள் வருவது இயல்பு. மூன்றாம் பாடலில் தன் தாய் பெற்ற, தன் சொந்தச்
சகோதரியான ஐனோவைக் கொடுப்பதாக வாக்களித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முன்வந்தவன்
யொவுகாஹைனன்; வைனாமொயினன் அல்ல.
50:563 இது வானம்பாடி, மேகப்புள் என்னும் பறவை; இதன்பின்னிஷ் சொல் kiuru 'கியுறு'
(skylark, lark, Alauda arvenis).
50:564 இவ்வடியில் கூறப்பட்டது மேல்நாடுகளில் வாழும் ஓர் இசைப் பறவை; (thrush); பார்க்க
22:477.