Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

மண்பட்டினங்கள்

நிலாந்தன்

விடியல்

---------------------------------------------

நூல் தலைப்பு: மண் பட்டினங்கள்

நூலாசிரியர்: நிலாந்தன்

முதற்பதிப்பு: செப்டெம்பர் 2000

வெளியீடு: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் வடக்கு, சிங்காநல்லூர், கோயமுத்தூர் - 641 015, தொலைபேசி: 0422-576772

ஒளி அச்சுக்கோப்பு: விஜி கிராஃபிக்ஸ், 14, மேல் தளம், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 600 024.

அச்சாக்கம்: மணி ஆஃப்செட், சென்னை - 600 005

விலை: ரூ. 20

-----------------------------------------------------------------

பதிப்புரை

எழுதியதை அச்சிலேற்ற வாய்ப்பில்லாத ஈழப் படைப்பாளி ஏராளம். விலங்கு நிலைக்குரிய இருத்தலுக்கும்கூட எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டிய பல லட்சம் ஈழத் தமிழ் மக்களைப் போல பட்டினம் பட்டினமாய், ஊர் ஊராய்ப் புலம் பெயர்ந்து பெயர்ந்தே தம் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை. அப்படியும் தடைகள் பல கடந்து, கடல் தாண்டி சில கையெழுத்துப் பிரதிகள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுகின்றன. ஓராண்டுக்கு முன் இப்படி வந்து சேர்ந்த ஒரு அக்கம்தான் நிலாந்தனின் 'மண் பட்டினங்கள்'. கருத்தியல், அரசியல் தளத்தில் அவருடன் கூர்மையாக வேறுபடுபவர்களைக் கூடக் கவர்ந்திழுக்கும் ஒரு புதினம். நவீன தமிழ் இலக்கியத்திற்குப் புது வரவு. தமிழ்நாட்டிலுள வாசகர்களைக் கருத்தில் கொண்டு சில அடிக் குறிப்புகள் - ஈழக்கவிஞர் சு. வில்வரத்தினத்தின் துணையுடன் - நிலாந்தனின் அடிக்குறிப்புகளுடன் சேர்க்கப்படுள்ளன. சாய்வெழுத்துக்களில் உள்ளவை மட்டுமே அவர் எழுதிய அடிக் குறிப்புகள்.

எஸ். வி. ராஜதுரை

சென்னை

06-09-2000

-------------------------------------------------

1

நேற்று

கிளிநொச்சி வீழ்ச்சியுற்ற மறுநாள்

முல்லைத்தீவுக்குப் போனோம்

"யாப்ப பட்டுண"(1)வுக்குப் பதிலாக

முல்லைத்தீவு

முல்லைத்தீவுக்குப் பதிலாக

கிளிநொச்சி

ஒரு பட்டினத்துக்குப் பதிலாக

இன்னொரு பட்டினம்

பட்டினங்களின் மீது பட்டினங்கள்

தலைப்பட்டினங்கள் சிறுபட்டினங்கள்

எல்லாமே பாழடைந்த பட்டினங்கள்

வெல்லப்படவியலாத மக்களோ

ஒன்றில் கொல்லப்படுகிறார்கள் அல்லது

காடுகளிற்கு ஓடிப் போகிறார்கள்

சமயங்களில்

அவர்கள் வெற்றிவீரர்களாகத் திரும்புகிறார்கள்

அப்பொழுது

இடிக்கப்பட்ட பழைய பட்டினத்தின் இடத்தில்

மண்ணால்

ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்

முல்லைத்தீவில் எல்லாமே பாழடைந்து விட்டன

மனிதர்கள் கட்டியதை

மனிதர்களே இடித்து விட்டார்கள்

மனிதர்களை மனிதர்களே

கொன்றும் எரித்தும் விட்டார்கள் ஆனால்

மனிதர்களை விட மூத்ததும்

பெரியதுமான கடல்

எதனாலும் காயப்படாமல்

எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும்

ஏக நிச்சயமாக.

அது ஒரு தேவதையைப் போல

அழகிய கடல்

ஒரு முனிவரைப் போல

அமைதியானது

வானத்தின் நீலமெல்லாம் கரைந்து

கடலானது போல நிறம்

மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள்

நகரங்கள் கட்டப்படும் இடிக்கப்படும்

ஆனால் கடல்

வருவதில்லை போவதுமில்லை

யுத்தமோ சமாதானமோ

எதுவும் அதைத் தீண்டுவதில்லை

இதோ

மனிதர்கள் மறுபடியும் வருகிறார்கள்

இனி

மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்

ஓ....... கடலே

மூத்த கடலே

அன்பான பெருங்கடலே

நீ மண்பட்டினங்களின் உறவாயிரு

ஒரு பெருங்கடலை அவர்கள்

வென்றார்கள்

ஆனால் இன்னொரு தலைப்பட்டினத்தை

இழந்து விட்டார்கள்.

முந்தநாள் கிளிநொச்சியும் வீழ்ச்சியுற்றது

சனங்கள் நெரியும்

அதன் சிறிய தெருக்களைப்

பாழடையச் செய்து

பகைவர்

நகருக்குள் நுழைந்த போது

ஒரு நாய் மட்டும் மிஞ்சியிருந்தது.

வெல்லப்படவியலாத மக்களோ

பறவைகளையும் ஏனைய

நன்றியுள்ள மிருகங்களையும்

அழைத்துக் கொண்டு

காடுகளில் ஓடி ஒளித்தார்கள்

அங்கே அவர்கள்

மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்.

அந்த மண்பட்டினம்

அவர்களுடைய

பதுங்குகுழிகளைப் போலவே

இருண்டதாயும்

காலங்கடந்ததாயுமிருக்கும்

எதிர் காலத்தைப் பற்றிய அவர்களுடைய

நம்பிக்கைகளைப் போலவே அது

எளிதில் இடிந்து போய்விடும்

பீரங்கிகளின் தீராப்பசிக்கு அது

எதிர்ப்பின்றி இரையாகி விடும்.

ஓ...... காடே

மூத்த காடே

அன்பான பெருங்காடே

நீ மண் நகரங்களின்

ஆறுதலாயிரு

ஆட்காட்டிகள் கத்தும் வெளியெல்லாம்

அவர்கள்

ஆதரிக்கப்படாதே அலைகின்றார்கள்

மண் நகரங்கள்

மழையில் நனைகின்றன

மழை

ஒரு பேயைப் போல

துரத்துகிறது

சபிக்கப்பட்ட ஓரிரவில்

அவர்கள் தமது

தலைநகரை விட்டோடிய போதும்

இப்படித்தான்

மழை

ஒரு விரோதி போற் துரத்தியது.

காடே

நல்ல காடே

அவர்களைக் கைவிடாதே

மழை

நீச மழை

எனது மக்களை நெருக்குகிறதே

குற்றமற்ற எனது மக்கள்

அச்சத்தால்

சித்தப்பிரமை பிடித்தவர் போலாயினரே

வனப்பெலா மிழந்து

விதவைகள் போலே

மழையில் நனைந்து நனைந்து......

ஓ.... தலச்சிறப்புடைய

தலைப்பட்டினங்களே

வீரமும் மகிழ்ச்சியும் நிறையும்

சந்தை சதுக்கங்களே

புண்ணியம் செய்த

புகழுடைய தெருக்களே

அன்பான பனை மரங்களே

கேளீர்.......

அவர்கள் - தஸ்யுக்கள்*

வேதத்தைவிட மூத்த மக்கள்

யாரோ ஒரு முனிவரின்

யாகத்தீயினின்றும் பிறந்தார்கள்

அவர்களைத் தவிர

வேறு யாராலுமிதுவரை வாசிக்கப்படாத

அபூர்வ மொழியினால் எழுதினார்கள்

தமது முதலாவது தலைப்பட்டினத்தை

சிந்துச் சம வெளியில் கட்டினார்கள்

பூதங் காத்த

அந்த மண்பட்டினம்

மனிதர்கள் கட்டிய

எல்லாச் சிறு பட்டினங்களிலும்

வயதால் இளையது ஆனால்

அற்பாயுளில் முடிந்து போனது

குதிரைகளில் வந்த இந்திரப்படை

அந்தத் தாய்ப் பட்டினத்தை

எரித்தும் இடித்தும் விட்டுப் போனது

மீண்டெழாத அந்தத் தாய் நகரின்

மிச்சங்களை

நதி கொண்டு போனது.

தப்பிய தஸ்யுக்கள் பின்னாளில்

கந்த ரோடையில்**

வழுக்கியாற்றின் உறுதியற்ற தீரங்களில்

மற்றொரு முதல் பட்டினத்தைக் கட்டினார்கள்

மண்ணாலான

அந்தக் கதிரமலை அரசு

ஒரு பெரும் படை யெடுப்போடு

இடிந்து மண்ணாகிப் போனது

குருட்டு வெளவால்

வழிதவறியேனும் போகாத பாழிடமாய்

கதிரமலையரசு

இளவயதில் முடிந்து போனது.

ஆனால் நகரிழந்த தஸ்யுக்கள்

அழிந்து விடவில்லை

ஒரு படையெடுப்பிலேயே

வற்றிப் போன

வழுக்கியாற்றைப் போலன்றி

வீரமான மக்களவர்கள்

பபிலோன் ஆற்றின் கரையில்

அழுது பாட மறுத்த

யூதர்களைப் போல

கந்தரோடை தொடக்கம்

கல்லுண்டாய் வெளி வரையிலும் அவர்கள்

கதிரமலையின் ஒளி பொருந்திய ஞாபகங்களை

மண்ணாலெங்கும் கட்டினார்கள்.

குதிரைகளில் வரும் இந்திரப் படை

அவற்றை

ஒரு மூச்சிலேயே இடித்து விடும்.

பூதங்காத்த எல்லா

மூத்த நகரங்களையும் போல இவையும்

எரிந்து பாழடைந்து விடும். ஆனால்

கதிரமலை தொடக்கம்

சிந்து வெளி வரையிலும்

அதற்கப்பாலும்

ஆழச் செல்லும்

மாய வேர்களையுடைய

மக்களவர்கள். தஸ்யுக்கள்

வேர்களையறுக்க

இந்திரவாளில் கூர் இல்லை

வேறெந்த வாளிற்கும் அது இல்லை

அசிரியர், ரோமர் ஆரிய ஜேர்மனியர்

யாரெல்லாமோ முயன்றார் ஆனால்

முடிந்ததா யூதர்களின் வேர்களை யறுக்க?

இந்திரனே கேள்

இனியுனக்கு அவிர்பாகம் இல்லை

அறுவடையில் முதற் பங்கும் இல்லை

இடிக்கப்பட்ட எல்லா நகரங்களிலிருந்தும்

தஸ்யுக்கள் தப்பிச் சென்று விடுவர்

சிந்துச் சமவெளியின்

முதல் அகதித் தஸ்யு

தனது வெட்டுக் காயத்துடன்

தப்பிச் சென்றது போல.

ஆறாத அந்த ஆதிக் காயங்களிலிருந்து

ஆயிரமாய்

புதிய தஸ்யுக்கள் எழுவர்.

எரிக்கப்பட்ட தாய் நகரிலே

இந்திரனே

உனது வாளால் வெட்டுண்டு வீழந்த

எல்லா மூத்த தஸ்யுக்களும் எழுவர்

உடனெழுவர்.

கல்லுண்டாய் வெளியிலே

கடற் காற்றிலே

புல் முளையாத பழைய மேடுகளில்

உறங்கும்

எல்லா மூத்த தஸ்யுக்களும் எழுவர்

உடனெழுவர்

இடிக்கப்பட்டு

இருந்த இடந்தெரியாமல் அழிக்கப்பட்ட

துயிலுமில்லங்களில்

துயில் கலைந்தலையும்

எல்லா இளந் தஸ்யுக்களும் எழுவர்

உடனெழுவர்.

அன்பான பெருங்கடலும்

ஆதரித்த பெருங்காடும்

இறுமாந்திருக்கும் ஒரு நாளிலே

சில தீர்க்கதரிசிகள் மட்டும்

தெரிந்து வைத்திருக்கும்

ஒரு நாளிலே

யாழ்ப்பாணமே..... ஓ...... யாழ்ப்பாணமே

நீ உனது

தலை நகரிற்குத் திரும்பிச் செல்வாய்

கிளிநொச்சியே...... ஓ....... மணலாறே

நீ உனது

தலைநகரிற்குத் திரும்பிச் செல்வாய்.

இதோ

இந்திரன் படை கொண்டு வருகிறான்

இடியோடு மழையோடு பீரங்கிகளோடு

இதோ

தஸ்யுக்கள் எழுகிறார்

குடையோடு மலைக்குடையோடு மாயக்குடையோடு

முன் பொருநாள் யாதவர்கள்

இந்திரக் கோபத்தை எதிர்த்துப் பிடித்த

அதே கோவர்த்தனக் குடையோடு

இந்திரனே ஓடு

இனியும் உனக்கு

அவிர்பாகம் இல்லை

அறுவடையில் பங்கும் இல்லை

தஸ்யுக்களின் கோபம்

உனது தலை நகரை எரிக்கும்

உனது அந்தப்புரம் சிதறும்.

பட்டினத்தின் மீது பட்டினம் எழும்

பட்டினத்தை எதிர்த்துப்

பட்டினம் எழும்

பட்டினத்தை பட்டினம் வெல்லும்

பட்டினங்கள்

போர்ப்பட்டினங்கள்

வீரப்பட்டினங்கள்

வெற்றிப் பட்டினங்கள்

18-10-1996

கொந்தக்காரன்குளம்

ஓமந்தை

(1) சிங்களவரின் ஆதிவலாற்றின் மூலநூலாகக் கருதப்படும் 'மகாவம்ச'த்தில் யாழ்ப்பாணம் 'யாப்பபடுண' என்று குறிக்கப்படுகிறது. சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பிறகு 'யாப்பபட்டுண' என்ற பெயரை மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவர சில சிங்களப் பத்திரிகைகள் முயன்றன.

*விபரங்களிற்குப் பகுதி (2) ஐப் பார்க்கவும்

-----------------------------------------------------------------------------------

2.

தஸ்யு மாண்மியம்

'மண்பட்டினங்க'ளை மேடையில் நிகழ்த்திக்காட்டத் தேவையான உதவிக் குறிப்புகள்:

(அ) சிந்துச் சமவெளி : கி. மு. 2250 - 1500 வரை

இமயத்தின் பேரப் பிள்ளைகளே தஸ்யுக்கள். இமயத்திற்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் சிந்து. இளையவன் பிரம்மபுத்ரா. சிந்துவின் பிள்ளைகளே தஸ்யுக்கள். அவர்கள் வேதத்தைவிட மூத்த மக்கள்; ஆனால், ரிக்வேதம் அவர்களை தஸ்யுக்கள் (அல்லது தாஸர்கள்) என்று அழைப்பதிலிருந்தே இங்கு அவர்களையவ்வாறு கூறப்படுகிறது. அதோடு இந்தியாவின் மிக மூத்த இலக்கியமான கி.மு.800 ஐச் சேர்ந்த ரிக் வேதத்தை விடவும் மூத்த மக்களவர்கள் என்பதை நினைவூட்டவும் இது உதவும்.

ரிக்வேதம் தஸ்யுக்களை ஆரியர்கள் தாக்கி வென்றதுபற்றிக் கூறுகிறது. ஆரியர் இந்திரன் எனப்படும் அவர்களின் கடவுள் அல்லது தலைவனின் தலைமையில் வந்ததாகவும் ரிக்வேதம் கூறுகிறது.

இந்த விபரங்கள் யாவும் கி.மு.2250 அளவில் சிந்துச் சமவெளியில் காணப்பட்ட இந்தியாவின் முதல் மூத்த நாகரிகத்தை சுமாராக கி.மு.1500 இல் குதிரைகளில் வந்த இந்தோ-ஆரியர்கள் தாக்கிய நிகழ்ச்சியைப் பற்றியவையேயென்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

இந்திரனும் அவனது படையாட்களும் நன்கு பயிற்றப்பட்ட குதிரைகளிலே வந்தார்கள். குதிரைகளின் முரட்டுக் குளம்போசையிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இசையே மேடையில் ஆதார இசையாயிருக்க வேண்டும்.

முதலிலிருந்து முடிவுவரை அகதிகளைத் துரத்திக் கொண்டு வரும் இக் குளம்போசை அகதிகளின் பதட்டமான இதயத் துடிப்போசையின் பிரிக்கப்படவியலாத பகுதியாகவிருந்து குறிப்பாக முடிவில் ஒரு பேரெழுச்சிக்குரிய வெற்றிப் பறையோசையாக மாறியொலிக்க வேண்டும்.

காட்சி 1

முதலில் உடுக்கும் பறையும் இதமாய் ஒலித்துக் கொண்டிருக்கும். அது மிக ஆதியான காலமொன்றின் இடமொன்றின் மங்கலான நினைவுகளை அசைபோடுமாப் போலிருக்க வேண்டும். பிறகு உடுக்கும் பறையும் மெல்ல அடங்கும். ஒரு ஆட்காட்டி பதட்டமான குரலில் கத்தி அவசர அவசரமாக மேடையைக் கடந்து போகிறது. தொலைவில் மிகத் தொலைவில் குதிரைகளின் குளம்போசை மெல்லக் கேட்கிறது. உடுக்கும் பறையும் தணிந்து செல்ல குளம் போசை வர வர அதிகரித்துக் கொண்டு வந்து கலவரமானதொரு யுத்தக் கூச்சலாக மாறுகிறது.

பின்னணியில் ரிக்வேத சுலோகங்கள் உச்சரிக்கப்படுகின்றன.

அதில் தஸ்யுக்களை இந்திரன் வென்றது பற்றியும் தஸ்யுக்களின் நகரத்தை எரித்தது பற்றியும் தஸ்யுக்களின் பாசன மதகுகளை உடைத்து நதிகளை விடுவித்தது பற்றியுமான விவரங்கள் வருகின்றன.

ரிக்வேதம் தஸ்யுக்களை கறுப்பர்கள், சப்பை மூக்கர்கள், ஆண்குறி வழிபாட்டுக்காரர் என்றெல்லாம் கூறுகிறது. அது இந்திரனின் புஜபலத்தைப் புகழ்ந்துரைக்கின்றது.

வேத சுலோகங்களும் குதிரைகளின் குளம்போசையும் மாறி மாறியொலித்து பிறகு கலந்தொலித்து முடிவில் ஒரு பெரும் யுத்த கூச்சலாகிக் கேட்கின்றன.

இந்திரப்படைகளிடம் குதிரையிருக்கிறது. கூரான உலோக வாள்களிருக்கின்றன. இவற்றுடன் செழிப்பான வாய்மொழி இலக்கியங்களுமிருக்கின்றன.

தஸ்யுக்களிடம் அழகிய நகரங்களிருக்கின்றன. அமைதியான சுகாதாரமானதொரு வாழ்விருக்கிறது. அவர்களைத்தவிர வேறுயாருமிதுவரை வாசித்தறியாத மாய மொழியிருக்கிறது. ஆனால், யுத்தமொன்றை எதிர் கொள்வதற்கு கூரற்ற, கனமான, எனவே இயலாத கற்கோடரிகளே யிருக்கின்றன. எனவே ரிக்வேத சுலோகங்கள் ஓங்கியொலிக்க இந்திரன் வாளை வேகவேகமாகச் சுழற்றுகிறான்.

சிந்துவின் மக்கள் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள். சிந்துவின் மாடங்கள் எரிகின்றன. அங்கங்கள் அறுந்து தொங்க வெட்டுக் காயங்களுடன் மிஞ்சியவர்கள் தப்பிச் செல்கிறார்கள்.

விந்திய சற்புத்திர மலைகளைத் தாண்டி தென்னிந்தியாவுக்கும் நீரிணையைத் தாண்டி இலங்கைத் தீவுக்கும் அவர்களின் வழித்தோன்றல்கள் சிதறிப் பரவிச் சென்று குடியேறியிருக்கலாம் என்று கலாநிதி.பொ.ரகுபதி, மு.திருநாவுக்கரசு போன்ற ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முகங்களில் வெட்டுக்காயத்தோடு விழிகளில் வன்மத்தோடு கைகளில் மண்ணாலான லிங்கங்களையும் ஏந்திக்கொண்டு தஸ்யுக்கள் தப்பிச் செல்கிறார்கள்.

சோகப்பறையொலிக்கிறது. குதிரைகளின் முரட்டுக்குளம்போசை துரத்திக்கொண்டு வருகிறது.

(ஆ) கதிரமலையரசு

சற்றேறக்குறைய கிறிஸ்து சகாப்தமளவிற் தொடங்கி சுமாராக கி.பி.9 ஆம் நூற்றாண்டுவரை கந்தரோடையில் காணப்பட்டதாகக் கருதப்படும் முதலாவது யாழ்ப்பாணத்தரசு இது.

இன்று வற்றிப்போய்விட்ட வழுக்கியாற்றின் தீரங்களில் தொடங்கி ஒருபுறம் வல்லிபுரக்கடல் வரைக்கும் இன்னொரு புறம் கல்லுண்டாய் வெளிவரைக்கும் பரவி நிலவியதாகக் கருதப்படும் இம்முதலரசின் மீதான கவனத்தை அதிகம் ஈர்த்தவர் ரகுபதிதான்.

காட்சி - 2

ஆதித் திராவிட வாத்தியம் என்று ரகுபதி கருதும் பறை பின்னணியில் மிடுக்காயொலிக்க தென்னாடுடைய சிவனாரின் கையிலிருக்கும் உடுக்கும் சேர்ந்தொலிக்கிறது

மறுபடியும் குதிரைகளின் குளம்போசை. இம்முறை வருவது சோழர்கள். தென்னிந்தியாவிற் தொடங்கிய சோழப் பேரரசின் ஆட்சிப் பரப்பு அகட்டப்பட்டபோது ஒரு நாள் சிறிய கதிரமலையரசும் அதற்குள் கரைந்து போய்விட்டது என்று ரகுபதி கூறுகிறார்.

முன்னாளில் சிந்துச்சமவெளியில் கேட்ட இந்திரக் குதிரைகளின் குளம்போசைக்கும் பின்னாளில் கந்தரோடையில் கேட்ட சோழக் குதிரைகளின் குளம்போசைக்கும் அதிகம் வித்தியாசமிருக்கவில்லை.

கதிரமலையரசு மண்ணாகிவிட கந்தரோடைத் தமிழர்கள் நிராசையோடு கலைந்து போகிறார்கள். முரட்டுக் குளம்போசைகள் துரத்திக் கொண்டு வருகின்றன.

(இ) கல்லுண்டாய் வெளி - 1982

முன்னாளில் வழுக்கியாறு கடலேரியில் வந்து கலந்த கழிமுகப் பிரதேசம். இந்த முன்னாள் கழிமுகத்தின் அயலில் பரந்து கிடக்கும் வயல்வெளிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பழைய மண்மேடுகளை யாரும் காணலாம். அந்த நிலக் காட்சி அமைப்புக்குள் பொருந்திவராத மேற்படி பழைய மண்மேடுகளை ரகுபதி தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்குரிய இடங்களென அடையாளம் கண்டு கூறியுள்ளார்.

இப்படியொரு மண்மேட்டின் அயலில்தான் “ஆனைக்கோட்டை மனிதன்” எனப்படும் மூத்ததமிழன் ஒருவனின் எலும்புரு 1982 இல் அகழ்ந்தெடுக்கப்பட்டது. இப்படி இன்னுமெத்தனையோ கல்லுண்டாய் மனிதர்கள் -மூத்த தமிழர்கள்- அந்த மேடுகளினடியில் உறங்கக் கூடும். அவர்களையெல்லாம் முறையாகத் தட்டியெழுப்பிப் பேசவைத்தால் சிலசமயம் சிந்துவின் “றொசெற்றாக் கல்வெட்டு” கல்லுண்டாய் வெளியிலெங்காவது கிடைத்தல் கூடும், இன்னும் வாசிக்கப்படாத சிந்துவின் எழுத்துக்களை நாம் வாசித்தல் கூடும். இன்னும் வெளிவராத கதிரமலை ரகசியங்களையும் நாம் அறிதல்கூடும். இன்றுவரை சிந்துவையும் கந்தரோடையையும் சூழ்ந்துள்ள புதிர்களையும் மர்மங்களையும் விடுவிக்கவல்ல மந்திரத்திறப்பு அந்தக் கல்லுண்டாய் மனிதர்களிடம் இருக்கவும் கூடும்.

(ஈ) யாழ்ப்பாணம் 1995 ஒக்ரோபர் 30

காட்சி - 3

குதிரைகளின் குளம்போசை

முதலில் அணிநடைபோலத் தொடங்கிப் பிறகு

திகிலூட்டும் யுத்தப் பேரிரைச்சலாக மாறுகிறது.

இந்திரக் குதிரைகள்

சோழக் குதிரைகள்

போத்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலக் குதிரைகள்

இந்தியக் குதிரைகள்

கடைசியில் சிங்களக் குதிரைகள்,

றிவிரசக் குதிரைகள்.(1)

பாலகெமுனு(2) துயிலாத சினந்த விழிகளுடன் வருகிறான்.

சப்புமால் குமாரையா(3)

பேராசையால் விழிகள் பளபளக்க வருகிறான்.

தலைப்பிள்ளை போலிருந்த நகரமொன்று மழை யிரவில்

தெருவில் நின்று புலம்புகிறது.

அன்று பகைவனின் நாள்.

நகரத்தின் இதயம் நொறுங்கி கைதடி வெளி கொள்ளாத்துயர்

நாவற்குழி வெளி கொள்ளாத்துயர்

வெட்டுக்காயத்துடன் தஸ்யுக்கள் தப்பிச் செல்கிறார்கள்.

ஒரு சவ ஊர்வலம் போல சோகப் பறையொலிக்கிறது,

சோர்ந்த உடுக்கொலிக்கிறது.

ஆளில்லா நகரத்தை வென்று தங்கத் தட்டில் வைத்து

அரசிக்குப் பரிசாக தருகிறான் மந்திரி.

அகஸ்தியரும் புலஸ்தியரும் செய்த

யாகத் தீயினின்றும்(4)

வன்னியன் பிறந்தான்

பிறந்ததிலிருந்து யாகத் தீ

அவனுடைய விழிமணிகளில்

விடாமலெரிந்து கொண்டிருந்தது.

ஆட்காட்டிகள் அவனிடம்

சொந்தம் பாராட்டின

வண்ணத்துப் பூச்சிகள் (5)

கதிர்காமம் போகும் வழியில்

அவனையும் துணைக்கழைத்துப் போயின.

உடுக்கும் பறையும் அவனை

உருவேற்றின

அவற்றில்

அவனுடைய நினைவுக்கெட்டாத காலத்து

முன்னோர்களின்

காலடியோசைகள் கேட்டன.

ஊமத்தங்கூவை கத்தும் இரவுகளில்

வன்னியன் கனவில்

முரட்டுக் குளம்போசைகளைக் கேட்டு

திடுக்குற்று விழிப்பான்

கனவுகளில்

வெட்டுக் காயத்துடன் தடுமாறி ஓடும்

கறுத்த சப்பை மூக்கர்களின்பால்

அவனிதயம் உருகியது

அவர்கள் அவனிடம் வந்து

கனமான கற்கோடரிகளைத் தந்துவிட்டுப் போனார்கள்

மேலும்

அவன் அவர்களின் அம்சமாயுமிருந்தான்

காட்சி - 4

ஒருநாள்

கதிர்காமம் போன வண்ணத்துப் பூச்சிகள்

கலவரத்தோடு திரும்பி வந்தன

ஆட்காட்டிகள் வழமைக்கு மாறாக

பதட்டமாகக் கத்திப் பறந்தன

குதிரைகள் வருகின்றன.

முரட்டுக் குளம்போசைகள் நெருங்கி நெருங்கி வருகின்றன

இந்திரக் குதிரைகள்

சோழக் குதிரைகள்

போத்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலக் குதிரைகள்

“அமைதிகாக்கும்’ குதிரைகள்(6)

சத்ஜெய குதிரைகள்(7)

ஜெயசிக்குறுய் குதிரைகள்(8)

முரட்டுக் குளம்போசை காட்டை நிறைக்கிறது

காடு நிம்மதி கெட்டுத் தவிக்கிறது.

கற்சிலை மடுவில்

வன்னியன்

காயங்களோடு தப்பிச் செல்கிறான்

சிந்துச் சமவெளியில் தப்பியது போல.

காடு அவனை ஒளித்து வைத்தது

கடல் அவனது காயங்களை ஆற்றியது

சிந்துச்சமவெளியின் முதல் அகதித் தஸ்யுவும்

வன்னிப் பெரு நிலத்தின் கடைசி அகதித் தஸ்யுவும்

அவர்களின் வெல்லப்படவியலாத

இயல்பைப் பொறுத்தவரை ஒரேயாட்களே.

உடுக்கும் பறையும் சேர்ந்து முழங்கி

உருவேற்றுகின்றன

நித்திகைக் குளத்தில், வங்கக் கடலில், நந்திக் கடலில்

குதிரைகள் கோரமாய் மடிகின்றன

குளம்போசை தேய்ந்தழிகின்றது

ஆட்காட்டி உல்லாசமாகக் கத்திப் பறக்கிறது.

வன்னியன் கனவில்

பண்டார வன்னியன்(9) வந்தான்

நட்டாங்கண்டல் காட்டில் சிதைந்த தனது

அரண்மனைக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்

தனது போர்வாளின் மறைவிடத்தைச் சொன்னான்.

வன்னியன் கனவில்

பனங்காமத்து கைலை வன்னியன்(10) வந்தான்

காட்டின் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தான்

வன்னியன் போருக்கெழுந்தான்.

தென்திசையிலிருந்து குளம்போசைகள்

புதிதாகப் பெருகி வருகின்றன.

ஜெயசிக்குறுய் குதிரைகள்,

கனகராயன் ஆற்றின் இருபுறங்களிலும்

சேனைகள்

அணிவகுத்து நிற்கின்றன.

ஆறு அச்சத்தால் மெலிந்து

நிலைகுலைந்து ஓடியது

ஆற்றின் தீரமெல்லாம் குருதி

யுத்தம் தலைப்பேறானவற்றைக் கேட்கிறது

கனகராயன் ஆற்றைக்

குளம்போசைகள் நெரிக்கின்றன.

ஒரு கரையில் இந்திரன்

உருவிய வாள்

விழிகளில் பழி வாங்கும் உறுதி

வெட்டுக் காயத்துடன் தப்பிச் சென்ற மூத்த தஸ்யுவின்

அம்சமாயல்ல

முன்பொருகாலம் இந்திரனை எதிர்த்து வென்ற

யாதவரின் அம்சமாயான புதிய தஸ்யுக்கள்

இளந் தஸ்யுக்கள்.

கையாலாகாத கற்கோடரிகளையல்ல.

வாள்களையும் குதிரைகளையும் வைத்திருக்கிறார்கள்.

விளைச்சலையும் பசுக்களையும் வணக்கத்தையும் கேட்ட

இந்திரனைப் புறக்கணித்து

தஸ்யுக்களின் அதே மழை முகில் நிறததவனாகிய

கிருஷ்ணனின்

அபயக் குடையின் கீழ்

அணி திரண்ட

யாதவரின் அம்சமாயான தஸ்யுக்கள்,

புதிய தஸ்யுக்கள்,

இளந் தஸ்யுக்கள்.

இனி, சோகப் பறையும்

சோர்ந்த உடுக்கும் இல்லை,

வீரப் பறையும் உருவேற்றும் உடுக்கும் தான்

விடாது முழங்கும்.

பறைமுழக்கம் குளம்போசைகளை

மீறியெழுகிறது

உடுக்கு வேகமாயடித்து உருவேற்றுகிறது

யுத்தக் கூச்சலடங்கி பறையும் உடுக்கும் மட்டும்

உருவேற்றுமாப் போல ஒலிக்கின்றன.

வேதத்தை விட மூத்த நாடொன்றின்

அழிவுகளிலிருந்தும்

அவர்கள் எழுந்து வருகிறார்கள்

வற்றிய வழுக்கியாற்றின்

தூர்ந்த தீரங்களிலிருந்தும்

அவர்கள் எழுந்து வருகிறார்கள்

முகங்களில் வெட்டுக் காயங்கள்

விழிகளில் வேள்வித் தீ

உடுக்கும் பறையும் அவர்களை

உருவேற்றுகின்றன

வங்கக் கடல் அவர்களை ஆசிர்வதிக்கின்றது.

வண்ணத்துப் பூச்சிகள்

கதிர்காமம் போகும் வழிகளையெல்லாம்

அவர்கள் விடுவிப்பார்கள்

பாலியாற்றின் மெலிந்த தீரங்களில்

பழி கிடக்கும் மக்களை

அவர்கள் விடுவிப்பார்கள்

பறையும் உடுக்கும் சேர்ந்தொலிக்கின்றன

குளம்போசைகள் தொலைவில் பின்வாங்கிச செல்கின்றன.

பறை மேலும் மேலும்

மூச்சாயொலிக்கிறது

அது போர்ப்பறை

வீரப் பறை

வெற்றிப் பறை

27-11-1997

யோகபுரம்

மல்லாவி

(1) 1995 - இல் சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்தின் மீது நடத்திய இராணுவ நடவடிக்கையின் பெயர் 'றிவிரச' (சூரியக் கதிர்)

(2) அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை வென்ற சிங்கள அரசன் துட்டகெமுனு இங்கு 'பாலகெமுனு' எனக் குறிப்பிடப்படக் காரணம், அவன் எல்லாளன் மீது கொண்டிருந்த சினத்தைக் குறிக்கத்தான்.

(3) சப்புமால் குமாரையா, 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்த சிங்கள மன்னன் உவனேகபாகுவின் படைத்தளபதி.

(4) வன்னியரின் தோற்றம் பற்றிப் பரவலாக உள்ள ஒரு ஐதீகத்தின்படி அகஸ்திய புலஸ்திய முனிவர்கள் செய்த யாகத்தீயிலிருந்தே வன்னியர் தோன்றினர் என்று

(5) கோடையில் வன்னிப் பெருநிலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அலையலையாக ஊர்வலம் போகக் காணலாம். இதைப் பெருநிலவாசிகள் வண்ணத்துப் பூச்சிகள் கதிர்காமம் போகின்றன என்று கூறுவர்.

(6) இந்திய அமைதி காக்கும் படை (IPKF)

(7) யாழ்ப்பாணத்தின் மீது சிங்கள அரசு மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை. 'சத்ஜெய' என்றால் 'உண்மையின் வெற்றி' எனப் பொருள்.

(8) சந்திரிகா அரசு வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான 'பாதைத் திறப்பு'க்காக 1996- இல் தொடங்கிய இராணுவ நடவடிக்கையின் பெயர் ஜெயசிகுறுய் (விரைவான வெற்றி). இது ஆசியாவில் தொடர்ந்து நீண்ட நாள் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

(9) வன்னியை ஆண்ட தமிழ் மன்னன். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவன்.

(10) பண்டார வன்னியன் பாரம்பரியத்தில் வந்த வன்னி மன்னன்.

------------------------------------------------------

'மண் பட்டினங்கள்' - பன்முக உருவங்களின் கலப்பும் உடைப்பும்

நிலாந்தம் எழுதிய 'மண் பட்டினங்கள்' என்ற இச்சிறு படைப்பைப் படித்தபோது எனக்குள் எழுந்த எண்ணச் சிதறல்களும் கேள்விகளும் பல.

'மண் பட்டினங்கள்' என்ன வகை இலக்கியத்தைச் சார்ந்தது? இது வரலாற்று நூலா? அல்லது நாடக நூலா? அல்லது இன்று நாம் கவிதை என எண்ணுகிற வகையைச் சார்ந்ததா?

'மண் பட்டினங்கள்' இக்கால கட்டத்தில் நமக்குத் தரும் செய்தி என்ன?

'மண் பட்டினங்கள்' என்ற இப்படைப்பைப் படிக்கும் ஆழமான எந்த ஓர் வாசகனிடமும் இக்கேள்விகள் மையம் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

நான் ஏற்கனவே வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளதை இங்கு மீண்டும் ஞாபகமூட்டுவது பொருத்தமானது.

ஜேர்மன் தத்துவ ஞானியான நீட்சேயின் தத்துவ விசாரங்களைப் படிக்கோம்போது அவை கவிதைகளாக வழிவதைக் காணலாம். இவ்வாறே ஜேர்மன் வரலாற்றாசிரியரான ஒஸ்வோல்ட் ஸ்பெங்லரின் 'மேற்கின் சரிவு' என்ற வரலாற்று நூலைப் படிக்கும்போது அது தத்துவமாகவும் கவிதையாகவும் பெருக்கெடுப்பதைக் காணலாம். இன்னும் ஆர்னல்ட் ரொயின்பீயின் வரலாற்று ஆய்வுகளும் இவ்வகைச் சுவையை ஏற்படுத்தியதை நான் உணர்ந்திருக்கிறேன்.

ஆனால், இப்போது நிலாந்தன் எழுதியுள்ள 'மண் பட்டினங்கள்' என்ற இவ்வாக்கம் இவ்வகைப் போக்கில் இன்னொரு வகையானது. அதாவது முதல் நோக்கில் கவிதையாகவும் அரங்க அளிக்கையாகவும் உருவ அமைதி பெறும் இப்படைப்பு, தொன்மை மிக்க தமிழரின் வரலாற்று நூலாகவும் விரிகிறது. இதுவே இதன் தனித் தன்மையாகும்.

நேற்று

கிளிநொச்சி வீழ்ச்சியுற்ற மறுநாள்

முல்லைத்தீவுக்குப் போனோம்

"யாப்ப பட்டுண"வுக்குப் பதிலாக

முல்லைத்தீவு

முல்லைத்தீவுக்குப் பதிலாக

கிளிநொச்சி

ஒரு பட்டினத்துக்குப் பதிலாக

இன்னொரு பட்டினம்

எல்லாமே பாழடைந்த பட்டினங்கள் -

என்று 'மண்பட்டினங்களை' அறிமுகப்படுத்தியவாறு ஆரம்பிக்கும் இப்படைப்பு இம் மண் பட்டினங்களின் பூர்வீகத்தையும் அதைக் கட்டியவர்களைப் பற்றியும் அறிமுகப்படுத்தும்போது ஓர் இனந் தெரியாத சோகம் எம்முள் எழுந்து புகைவதை உணர்கிறோம்.

அவர்கள் தஸ்யுக்கள்

வேதத்தைவிட மூத்த மக்கள்

யாரோ ஒரு முனிவரின்

யாகத்தீயினின்றும் பிறந்தார்கள்

அவர்களைத் தவிர

வேறு யாராலுமிதுவரை வாசிக்கப்படாத

அபூர்வ மொழியினால் எழுதினார்கள்

தமது முதலாவது தலைப்பட்டினத்தை

சிந்துச் சம வெளியில் கட்டினார்கள்....

குதிரைகளில் வந்த இந்திரப்படை

அந்தத் தாய்ப் பட்டினத்தை

எரித்தும் இடித்தும் விட்டுப் போனது

தப்பிய தஸ்யுக்கள் பின்னாளில்

கந்தரோடையில்

வழுக்கியாற்றின் உறுதியற்ற தீரங்களில்

மற்றொரு முதல் பட்டினத்தைக் கட்டினார்கள்

மண்ணாலான

அந்தக் கதிரமலை அரசு

ஒரு பெரும் படை யெடுப்போடு

இடிந்து மண்ணாகிப் போனது

ஆனால் நகரிழந்த தஸ்யுக்கள்

அழிந்து விடவில்லை........

இதைப் படிக்கும்போது இந்தியாவின் மூத்த நாகரிகமான சிந்துவெளி நாகரிகமும், அதன் காரண கர்த்தாக்களென வரலாறு செப்பும் தஸ்யுக்கள் - 'கறுத்த மேனியர், சப்பை மூக்கர்கள், ஆண்குறி வழிபாட்டாளர்கள்' - என்று ரிக் வேதத்தில் பேசப்படும் பூர்வீகத் தமிழினமும் தோற்றமும் அழிந்துபோன மேன்மையும் நம் கண்முன் எழுகிறது. அது பின்னர் யாழ்ப்பாணக் கதிரைமலை வரை நீடித்து அழிந்ததும் இன்றுவரை அது தன்னைத் தக்க வைக்க நடாத்தும் போராட்டமும் நமக்குக் காட்டப்படுகிறது.

இவ்விஷயங்களை இலக்கியப்படுத்திக் காட்டும் முறையில்தான் நிலாந்தன் என்னும் இப்படைப்பாளி இன்றைய இளந்தலைமுறை இலக்கிய கர்த்தாக்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார். அதாவது வரலாறு, நாடகம் என்னும் இரண்டு ஊடகங்களிடையே கவிதையெனும் சிற்றருவியை சுரக்க விடுகிறார் நிலாந்தன். ஓடு தரையில் ஓடிவரும் விமானம் வேகம் அதிகரிக்க இயல்பாகவே மேலெழுதல்போல் வரலாற்று நெடுஞ்சாலையில் ஓடிவரும் இப்படைப்பு, ஓர் எல்லைக்கப்பால் கவிதையாக மேலெழுகிறது. அல்லது கவிதை வெளியில் மிதந்து வரும் இப்படைப்பு, ஈழத்தமிழ் மக்கள் வாழ்க்கையாக, வரலாறாக தரையிறங்கி விரிகிறது. இதோ கீழ்க்காணும் சில வரிகளைப் பாருங்கள்.

முல்லைத்தீவில் எல்லாமே பாழடைந்து விட்டது

மனிதர்கள் கட்டியதை

மனிதர்களே இடித்து விட்டார்கள்

மனிதர்களை மனிதர்களே

கொன்றும் எரித்தும் விட்டார்கள் ஆனால்

மனிதர்களைவிட மூத்ததும்

பெரியதுமான கடல்

வங்கக் கடல்

எதனாலும் காயப்படாமல்

எல்லா நிச்சயமின்மைகளின் பின்னாலும்

ஏக நிச்சயமாக.....

இதோ மனிதர்கள் மறுபடியும் வருகிறார்கள்

இனி

மண்ணால் ஒரு பட்டினத்தைக் கட்டுவார்கள்

ஓ....... கடலே

அன்பான பெருங்கடலே

நீ மண்பட்டினங்களின் உறவாயிரு

ஒரு பெருங்கடலை அவர்கள் வென்றார்கள்

ஆனால் இன்னொரு தலைப்பட்டினத்தை

இழந்து விட்டார்கள்....

இங்கே 'முல்லைத் தீவில் எல்லாமே பாழடைந்து விட்டன' என்று சமகால வரலாற்றை ஆரம்பித்து, பின்னர் ;மனிதர்களை விட மூத்ததும் பெரியதுமான கடல் - நீ மண் பட்டினங்களின் உறவாய் இரு' என்னும்போது கவிதை இயல்பாகவே முகிழ்த்து சுழியிட்டுச் செல்கிறது. அதன் பின்னர் 'ஒரு பெருங்கடலை அவர்கள் வென்றார்கள். ஆனால் இன்னொரு தலைப்பட்டினத்தை இழந்து விட்டார்கள்' என்னும்போது மீண்டும் நம் முன் வரலாறு இரத்தமும் சதையுமாக விரிகிறது. இவ்வாறு வரலாற்றை நம்மோடு, நம்முணர்வுகளோடு உரசிக் கொண்டு விரியும் ஓர் தனியான அனுபவம் சித்திக்கிறது. வன்னி பற்றி நிலாந்தன் கூறுவது அவரது படைப்பின் மையக் கருவாக, கவிதையால் இழைக்கப்பட்ட வரலாற்று நாடகமாக ஓடி வருகிறது.

அகஸ்தியரும் புலஸ்தியரும் செய்த

யாகத் தீயினின்றும்

வன்னியன் பிறந்தான்

பிறந்ததிலிருந்து யாகத் தீ

அவனுடைய விழிமணிகளில்

விடாமலெரிந்து கொண்டிருந்தது.

ஆட்காட்டிகள் அவனிடம்

சொந்தம் பாராட்டின

வண்ணத்துப் பூச்சிகள் (5)

கதிர்காமம் போகும் வழியில்

அவனையும் துணைக்கழைத்துப் போயின

- என்று ஓடிவரும் கவிதை,

'ஊமத்தங்கூவை கத்தும் இரவுகளில்

வன்னியன் கனவில்

முரட்டுக் குளம்போசைகளைக் கேட்டு

திடுக்குற்று விழிப்பான்

கனவுகளில்

வெட்டுக் காயத்துடன் தடுமாறி ஓடும்

கறுத்த சப்பை மூக்கர்களின்பால்

அவனிதயம் உருகியது

முரட்டுக் குளம்போசைகள் நெருங்கி நெருங்கி வருகின்றன

இந்திரக் குதிரைகள்

சோழக் குதிரைகள்

போத்துக்கீச ஒல்லாந்த ஆங்கிலக் குதிரைகள்

"அமைதிகாக்கும்" குதிரைகள்

சத்ஜெய குதிரைகள்

ஜெயசிக்குறுய் குதிரைகள்...

- என்று வரலாறாக யதார்த்த முகம் கொள்கிறது. சோழக் குதிரைகள் கூட ஈழத் தமிழர்களின் பண்பாட்டுச் சீர்குலைவுக்கு காரணமாய் இருந்துள்ளனர் என்னும்போது வழமையான சிங்கள வரலாற்று ஆசிரியர்களின் பார்வையிலிருந்து இங்கு வேறான அவதானிப்பு முன்வைக்கப்படுகிறது என்பது முக்கியமானது.

நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்' அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புகளில் மிகவும் தனித்துவமானது என்பதில் சந்தேகமில்லை. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் நிலாந்தன் 'மண்பட்டினங்களை'த் தந்திருப்பது அவரது பரந்த கலைத்துவ உணர்வுக்குச் சான்று. இத்தகைய படைப்புகளையே மு. தளையசிங்கம், இனிவரப்போகும் 'மெய்யுள்' வகை இலக்கியம் எனக் கூறினார். அதாவது 15- ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் காலத்தோடு மேற்கில் எழுச்சி பெற்ற அறிவு யுகத்தின் இலக்கிய உருவங்களாகத் தோன்றிய கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நவீன கவிதை என்பவை எல்லாம் இன்றைய மனிதனின் பல்வகைப்பட்ட "அகண்ட பிரக்ஞையை" வெளிக் கொணரப் போதாதவையாக இருக்கும்போது புதிய இலக்கிய உருவங்கள் ஏற்கன்வே இருந்தவற்றின் உடைப்பாகவும் கலப்பாகவும் தோன்றும் என்று அவர் கூறியதற்கொப்ப இங்கே நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்' நிற்கின்றது என்றே நான் கூறுவேன்.

இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை வெறும் கவிதையாக வடித்துத் தருவது போதுமென நிலாந்தன் நினைக்கவில்லை. அவரது அகண்ட பார்வைத் தேவை, எமது நோக்கையும் அகலப்படுத்த விழையும் வேட்கையில் தனது 'மண்பட்டினங்களை' வெறும் கவிதை வார்ப்பாக மட்டும் நிறுத்தி விடாது, தமிழ் மக்களுக்கு அவர் தம் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும் அதன் வழிவரும் எழுச்சியை பிரயோகப் படுத்தலுக்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் ஆக்கித் தந்துள்ளார். இதனால் அவரது இச்சிறு படைப்பு பெருந்தள விரிவுகளைக் கொண்டதாக இருப்பது கூர்ந்த கவனிப்பில் புலப்படும்.

நிலாந்தன் பன்முக ஆற்றல் கொண்ட கலைஞர்.

"மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பில் 'கடலம்மா' என்ற கவிதை மூலம் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர். 90- களில் ஜெயசங்கர், வில்வரத்தினம் ஆகியோரோடு சேர்ந்து 'அகதி' என்ற அரங்க அளிக்கையின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்தவர். இன்னும் வரலாறு, அது பற்றிய ஆய்வு போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடுடைய இளைஞர். ஆயினும் இவர் தனது தேர்வுக்குரிய கலை ஊடகமாக ஓவியத்தையே கைக் கொள்பவர். இவர் வரைந்த ஓவியங்கள் பல. இவற்றுள் மிகுந்த வித்தியாசத்தையும், தேடல் தன்மையையும் கொண்டவையாக இருப்பவை. இவர் வரைந்த பிள்ளையார் ஓவியங்கள். எம்மிடமுள்ள ஆதியான, மிக ஆதியான செர்ரியலிஸ், நெகிழ்ச்சிக்குரிய சுதந்திர வடிவமாகவும் எமது புராண வரலாற்றுப்படி அறிவின் குறியீடாகவும் உள்ள பிள்ளையார் இன்றைய அறிவு யுகத்திக்கு ஏற்ற பொருள் என இவர் பிள்ளையார் வடிவங்களில் சோதனை செய்துள்ளார். இவர் இவ் ஓவியங்களை காட்சிப் படுத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த வேளையிலேயே யாழ் நகர் ராணுவத்தினரிடம் வீழ்ச்சியுற்றது. இவரது பிள்ளையார் ஓவியங்களில் ஜெயசிக்குறுய் பிள்ளையாரும் அடங்கும்!

எதிர்காலத்தில் இன்னும் பல தற்புதுமையுடைய படைப்புகளை நிலாந்தனிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.

மு. பொன்னம்பலம்

02-04-1999

------------------------------------------------------------

ஒரு தேசிய இன வரலாற்றின்

கலாபூர்வ வடிவம்

நிலாந்தனுடன் நான் மிகவும் நெருங்கிப் பழகுபவன். அவர் கறாரானவர்; கருத்துக்களில் அழுத்தமானவர்; சுயாதீனமுள்ளவர்; தனித்துவமானவர்; சுதந்திர விரும்பி; அளந்து நடப்பவர்; புதுமை விரும்பி; ஆனால் பழமைக்கும் புதுமைக்கும் இடையில் அமைதி காண்பவர்; பாரம்பரியப் பண்பாட்டு வேரிலிருந்து நவீன தளிர்வரை நீண்டும் விரிந்தும் பார்க்கும் இயல்புள்ளவர்; தோற்றத்தில் செட்டுள்ளவர்; இத்தனையின் கலவைதான் நிலாந்தனின் "மண் பட்டினங்கள்" எனும் இலக்கியம். அவரது குணாம்சம் அப்படியே இங்கு இலக்கியமாய் பிறப்பெடுத்துள்ளது.

சொல்லக் கூச்சமாய் உண்டே ஆயினும் நான் இலக்கியத்திற் பரீட்சியம் இல்லாதவன். அரசியல் - வரலாறு சார்ந்த எனது துறைக்கூடாக இவ் இலக்கியத்தைப் பார்க்கிறேன்.

'வோல்காவிலிருந்து கங்கைவரை' என்ற றாகுல சாங்கிரித்தியானின் படைப்பை பல வருடங்களுக்கு முன் மிகவும் விரும்பிப் படித்துள்ளேன். எனது வரலாற்று அறிவின்படி எனக்கு அதன்மீது கணிசமான விமர்சனங்கள் உண்டே ஆயினும் அது தொடர்ந்தும் எனது விருப்பத்திற்குரிய நூல். பூமியின் ஒரு பகுதியினுடைய நீண்ட நெடுங்கால வரலாற்றை துண்டு துண்டுக் கதைகளுக்கூடாக ஆசிரியர் புனைந்து சித்தரித்துள்ளார்.

சிந்து முதல் பாலியாறு வரை தமிழர் சுமக்கும் வரலாற்றுத் துயரையும், துயரின் மத்தியிலும் வேர் அறா அவர்களின் நீண்ட மிடுக்கையும் நிலாந்தன் ஒரு படைப்பாக்கியுள்ளார். சிந்துவின் நீட்சியையும் அதன் எச்சத்தையும் ஈழத்தில் தேடுவோம், இலங்கையிற் காண்போம் எனும் அழைப்பு இந்தப் படைப்பிற் தொனிக்கிறது. இது ஒரு சரியான நோக்கு நிலை.

வளர்ந்து, செழித்து, நிமிர்ந்து நின்ற சிந்துவின் கொப்பாட்டன்கள் இன்று ஈழத்திற் துயருறுகின்றார்கள். இதுதான் நிலாந்தனது படைப்பின் குருதி.

சிந்துவின் கொப்பாட்டன்கள் ஈழ மண்ணில் சிதறடிக்கப்படுகிறார்கள். உறக்கமின்றியும், மன ஓய்வின்றியும், குழந்தை முதல் கிழவிவரை அலைகின்றார்கள். இந்த அலக்கழியும் வாழ்வை நிலாந்தன் பெரும் சுமையெனத் தூக்கி எங்கள் நெஞ்சங்களில் தொப்பென வீசுகிறார். நாளாந்தம் நாம் சுமக்கும் எமது சிதறலான எமது சுமைகளை நிலாந்தன் திரட்டித் தூக்கி தனது மனவேகத்துடன் திரும்பவும் எம்மீது வீசும்போது அந்தச் சுமையின் அழுத்தம் எங்களைத் திகைக்க வைக்கின்றது. விழிக்கவும் நிமிரவும் வைக்கின்றது. அவர் தரும் துயரம் எம்மை பின்நோக்கி ஓடச் செய்யவில்லை; முன்நோக்கித் தள்ளிச் செல்கின்றது. வணங்காமுடிகளே உங்கள் துயரங்களை அறுங்கள்; உங்கள் திமிர் எத்துணை வலிமையானது; உங்கள் துயரத்தை வெல்லும் ஆற்றல் உங்கள் திமிருக்கு உண்டு என்ற உணர்வை இந்தப் படைப்பு எமக்குத் தருவதாக உணர்கிறேன்.

மிடுக்கும், திமிரும், வணங்காமுடியும், அன்பும் அறிவும், செழித்த பண்பும் மனிதனுக்கு வேண்டும். ஈழத்தமிழ் தேசிய இனத்திடம் இதற்கான விழுமியத்தை நிலாந்தன் காண விளைகிறார். அவரது படைப்பில் இவை கோலோச்சி நிற்கின்றன. ஆழ வேர் பதித்த மிடுக்குள்ள ஓர் தேசிய இனம் தனது மிடுக்கை கையில் எடுக்கும்படி செய்கிறார் நிலாந்தன்.

ஒருவரைப் புரிந்து கொள்ளுவதிலும், அவரை மதிப்பதிலும், கௌரவிப்பதிலும் தான் இன்னொருவரின் பண்பாடு வெளிப்படுகின்றது. இது ஓர் இனத்திற்கும் பொருந்தும். தனது இனத்தின் மிடுக்கை வரவேற்கும் அதே வேளை பிற இனங்களின் மிடுக்கையும் வரவேற்கின்ற சிந்தனைப் போகு நிலாந்தனின் படைப்பில் நீண்டு மருவி நிற்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

தனது மிடுக்கை ஒரு பண்பாடாய்க் கருதுபவன் பிறரின் மிடுக்கையும் மதிப்பான். தனது வணங்காமுடித்தனத்தை கௌரவமாய்க் கருதும் ஒருவன் பிறரின் வணங்காமுடித்தனத்தையும் கௌரவிப்பான். ஒருவரின் கௌரவம் இன்னொருவனை மிதிப்பதிலல்ல மதிப்பதிற்தான் உண்டு. இது இன மத மொழி பந்தங்களைக் கடந்து நிற்கும் முழு மனிதத்துவத்திற்குமான ஆத்மீகக் கோரிக்கை.

இந்த முழு மனிதத்துவத்தை யாராவது ஒரு மனிதன் அல்லது ஏதாவது ஓர் இனம் அல்லது ஓர் அரசு மதிக்கவில்லையென்றால் அது தனது பண்பாட்டிலிருந்தும் இழிந்து விடுகின்றது. எனவே ஒடுக்கப்படும் ஓர் இனம் தனது பண்பாட்டைப் பேணுவதற்காகப் போராடும்போது ஒடுக்குமினத்தின் இழிவை தோற்கடித்தல் என்பதும் அவர்களினது போராட்டத்திற்குள் அடங்கியிருக்கின்றது. அதாவது ஒடுக்கப்படும் இனம் தனது விடிவிற்காகப் போராடுவது என்பதில் ஒடுக்கும் இனத்தின் இழிவு களையப்படுதல் எனும் பண்பாட்டு வளர்ச்சியும் உள்ளடங்கியுள்ளது. இதன் மூலம் ஒடுக்கப்படும் இனம் தனது விடிவிற்காக மட்டுமின்றி ஒடுக்கும் இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் போராடுகிறது என்பதே உண்மை.

மகாகவி பாரதியாரின் வாழ்வில் உள்ள திமிரும், அவரது கவிதையிலுள்ள மிடுக்கும் விசையும் எனக்கு நன்றாகப் பிடிக்கும்; வள்ளுவரின் குறளிலுள்ள சுருக்கமும், சொற்செட்டும் அவ்வாறே பிடிக்கும். தமிழ் மிகவும் வளர்ச்சியடைந்த செழிப்பான மொழி. ஆங்கிலத்தை விடவும் அதன் செழிப்பதிகம். ஆனால் அதன் செழிப்பு, சுருக்கம், சொற்செட்டு என்பவற்றிற்குப் பதிலாக தமிழைப் பாராயணப் பாணியில் நீட்டி, அலட்டிப் பயன்படுத்தும் பலருண்டு. ஆனால், நிலாந்தனின் கட்டுரைகளிலும், பத்திகளிலும், இந்தப் படைப்பிலும் சொற்செட்டு, சுருக்கம், தெளிவு என்பன நிலைபெற்றுள்ளன.

இவரது இப்படைப்பில் ஒரு பம்பரத்தனமுண்டு. மொழி உண்மையில் இங்கு பம்பரமாடும் அழகு இதமானது. மிக வேகமாகச் சுழலும் பம்பரத்தில் அதிஉயர் விறுவிறுப்பும், அதே வேளை தளம்பாத் தோற்றமும் இருக்கும். அதேபோல, இந்தப் படைப்பிலும் தளம்பமற்ற தெளிவும் விசையும் உண்டு.

இயற்கை, சூழல், நம்பிக்கை, ஐதீகம், வரலாறு, அரசியல் என அனைத்தையும் இங்கு நிலாந்தன் ஒன்று திரட்டி ஒரு படைப்பாக்கியுள்ளார்.

வண்ணத்துப் பூச்சிகள் கோடைகாலங்களில் கதிர்காமம் யாத்திரை செய்வதாக வன்னி மக்களிடம் ஒரு நம்பிக்கையுண்டு. அந்தப் பருவ காலத்தில் வண்ணத்துப் ஊச்சிகள் மிகப் பெரும் திரளாய் தெற்கு நோக்கித் தொடர்ந்து பறந்து செல்லும் காட்சி ஒரு தனி அழகு. இந்த வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய நம்பிக்கையையும், அதன் சுதந்திரத்தையும் தமிழ் மக்களின் சுதந்திரத்தோடு இணைத்துள்ளமை எனக்கு மிகவும் சுவையாக உளது.

வன்னிக்கென்றொரு அழகு உண்டு. அதற்கென்றொரு சுவையுண்டு. அதற்கென்றொரு இயல்புண்டு. வன்னிக்குரிய இவ்வாறான சில சிறப்பம்சங்களை நிலாந்தன் ஆங்காங்கே உருவரை தீட்ட முற்பட்டுள்ளார். இதற்குரிய அழகியல் வெற்றி தோல்வி பற்றிய மதிப்பீட்டை நான் செய்வதற்கில்லை.

தொன்மையான சிந்து வெளி நாகரிகத்தின் நீட்சியும் தொடர்ச்சியும் இலங்கைத் தீவில், ஈழத்தில் உண்டு என்பதற்கான வரலாற்று அறிகுறிகள் தெளிவாகத் தென்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆனைக்கோட்டை மனிதனின் முத்திரை இந்த வகையில் ஒரு மைல்கல். அகழ்வாராய்வு, மற்றும் மானிடவியல் பண்பாய்வு என்பவற்றிற்கூடாக இதற்கான உண்மைகளைத் துருவித் தேட வேண்டும். புதைந்து கிடக்கும் பண்டங்களில் மட்டுமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்விலும் சிந்துவெளி எச்சங்கள், தொடர்ச்சிகள் செறிந்திருக்கும்.

இதனை மானிடவியல் - சமூகவியல் ஆய்வுகளுக்கூடாக கண்டறிதல் சாத்தியம். சிந்துவெளியின் புதிர்களை விடுவிக்க சிலவேளை ஈழம்தான் ஒரு திறவுகோலாய் அமையுமா?

சிந்து இன்று பாகிஸ்தானின் ஆட்சியில். அவர்களது தேச, மத வாழ்விற்கு அது பற்றிய ஆய்வு அவசியமில்லை. ஆதலால் அவர்கள் அதனைப் புறக்கணித்து விட்டனர். சிந்து, திராவிட நாகரிகம் என்பதால் இந்திய அரசிடமும் அது பற்றிய அக்கறையில்லை. ஈழம் சிங்களப் பிடியிலுள்ளது. ஆதலால் இங்கும் சிந்து பற்றிய எச்சங்களைத் தேட முடியாது. இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளோ சிங்களப் பகுதிகள். ஆதலால் அவர்களும் அதனைக் கண்டறிய விரும்பார். அவ்வாறாயின் சிந்துவின் திறவுகோல் ஈழவிடுதலைக்காய் காத்திருக்கின்றதோ? நிலாந்தனின் படைப்பில் இதற்கான ஆதங்கம் தெளிவாய்த் தொனிக்கிறது. இந்த ஆதங்கம் ஓர் இலக்கியப் படைப்பாய் வெளிக் கிளம்பிய போது அது உணர்வுகளை இலேசாக உலுக்கி விடுகின்றது. இந்தப் படைப்பில் இலக்கியமும் வரலாறும் வேரூன்றி இணைந்துள்ளன.

இந்தப் படைப்பு ஈழத்தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றை கலாபூர்வ வடிவில் தூக்கி நிறுத்தும் ஓர் ஆன்மா. கடந்தகால வரலாற்றை மட்டுமின்றி ஈழத்தமிழரின் எதிர்கால விழுமியத்தையும் இது சுமந்து நிற்கின்றது.

ஈழத்தமிழர் தேசிய இனம் தனித்துவமான, தனக்கேயுரிய சிறப்பான இயல்புகளைக் கொண்டுள்ளது. அதன் வரலாற்றுச் சூழலிலிருந்து அதற்குரிய சிறப்பியல்புகள் பிறந்தன. தனித்துவமும் சிறப்பம்சமும் இருக்கின்ற அதே வேளை கடக்க வேண்டிய குறைகளும் இருக்கின்றன. அது தன்னைத் தொடர்ச்சியுடன் புதுப்பித்தும் நவீனமயப்படுத்தியும் முன்னேற வேண்டியுள்ளது.

தொன்மையும் தனித்துவமும் செழுமையும் மிக்க தமிழீழ தேசிய இனம் மிடுக்குடன் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. கடந்த மூன்று தசாப்தங்களாக பொலிஸ் - இராணுவ ஒடுக்கு முறைகளுக்கு எதிராக, உள்நாட்டு, வெளிநாட்டு கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக முகம் கொடுத்து வருகின்றது.

முதலிற் சிங்கள பொலிஸ் - இராணுவ ஒடுக்கு முறைகள், பின்பு அமெரிக்க மொஸாட் படைகளின் உதவியுடனான ஒடுக்குமுறை, ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியப் படை, மற்றும் சிங்களப் படை ஆகிய இரு படைகளினதும் கூட்டு இராணுவ ஒடுக்கு முறைகளுக்கெதிராக தமிழ் இனம் நின்று பிடித்தது. இப்போது சந்திரிகாவின் 'சமாதான' கவசத்தின் வெடிமருந்துக் கிடங்கிற்குள் உயிர் வாழவல்ல திராணியை தமிழ் இனம் சளையாது வெளிக்காட்டி வருகிறது.

அடிமைக்கும் எஜமானுக்கும் இடையிலான அடங்கி ஒடுங்குதலையே சந்திரிகா 'அமைதி', 'சமாதானம்' என்று விளக்குகிறார். எனவே தமிழரை, அவர்களின் தேசிய அடையாளங்களை அடக்கி ஒடுக்குவதற்கான யுத்தத்தைத்தான் அவர் 'சமாதானத்திற்கான' யுத்தம் என்று கூறுகிறார். அவரின் சமாதான வேஷத்தை, அந்தச் 'சமாதான தேவதையின்' பொய்ப் பிம்பத்தை இந்தப் படைப்பில் நிலாந்தன் இரத்தமும் சதையுமாய்ப் பிய்த்துக் காட்டுகிறார்.

பீனிக்ஸ் (Peoenix) பறவையென எரிந்த தனது சாம்பலிலிருந்து மீண்டும், மீண்டும் யௌவனத்துடன் ஈழத்தமிழர் எழுந்து வருகின்றனர். அளவுரீதியில் விகிதாசாரப்படுத்தி பார்க்கும்போது வீரம் செறிந்த வியட்நாமியரின் இழப்பையும் வீரத்தையும் விட ஈழத்தமிழரின் இழப்பும் தியாகமும் அளவால் பெரியது. அத்தகைய அருந்தியாகங்களைப் புரிந்துள்ள ஒரு சிறப்பான தேசிய இனத்தின் திரண்ட மிடுக்காய் இப்படைப்புள்ளது.

இப்படைப்பை நிலாந்தன் எழுதிய காலத்தில் நான் அவருடன் கூடவே இருந்துள்ளேன். புலம்பெயர்வைப் பற்றிய இப்படைப்பும் பலமுறை புலம்பெயர்ந்து, பெயர்ந்தே எழுதப்பட்டது. கிளிநொச்சி நகரம் மீண்டும் மீட்கப்பட முன்பே எழுதப்பட்ட இப்படைப்பில் தமிழர் தமது தலைநகரங்களுக்கு மீண்டும் செல்வர் என்ற கவித்துவத் தீர்க்கதரிசனம் இப்போது நனவாகியுள்ளது. இது ஒரு கட்டியம். அதேபோல இப்படைப்பின் அனைத்து எதிர்பார்க்கைகளும் நனவாக வேண்டும்.

மு. திருநாவுக்கரசு

வன்னி

-----------------------------------------------------------

நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்' அண்மைக் காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புகளில் மிகவும் தனித்துவமானது என்பதில் சந்தேகமில்லை. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் அவற்றின் உடைப்பாகவும் நிலாந்தன் 'மண்பட்டினங்களை'த் தந்திருப்பது அவரது பரந்த கலைத்துவ உணர்வுக்குச் சான்று..... 15- ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் காலத்தோடு மேற்கில் எழுச்சி பெற்ற அறிவு யுகத்தின் இலக்கிய உருவங்களாகத் தோன்றிய கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நவீன கவிதை என்பவை எல்லாம் இன்றைய மனிதனின் பல்வகைப்பட்ட "அகண்ட பிரக்ஞையை" வெளிக் கொணரப் போதாதவையாக இருக்கும்போது புதிய இலக்கிய உருவங்கள் ஏற்கன்வே இருந்தவற்றின் உடைப்பாகவும் கலப்பாகவும் தோன்றும்.....

இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை வெறும் கவிதையாக வடித்துத் தருவது போதுமென நிலாந்தன் நினைக்கவில்லை. அவரது அகண்ட பார்வைத் தேவை, எமது நோக்கையும் அகலப்படுத்த விழையும் வேட்கையில் தனது 'மண்பட்டினங்களை' வெறும் கவிதை வார்ப்பாக மட்டும் நிறுத்தி விடாது, தமிழ் மக்களுக்கு அவர் தம் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும் அதன் வழிவரும் எழுச்சியை பிரயோகப் படுத்தலுக்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் ஆக்கித் தந்துள்ளார். இதனால் அவரது இச்சிறு படைப்பு பெருந்தள விரிவுகளைக் கொண்டதாக இருப்பது கூர்ந்த கவனிப்பில் புலப்படும்.

விடியல்

----------------------------------------