Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ஒரு தம்பதியின் சிக்கல்கள் - இடாலோ கால்வினோ

தொழிலாளி ஆர்த்துரோ மஸொலோரி ஒரு தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு முடிவுறும் ஷிப்டில் வேலை செய்தான். வீட்டைச் சென்றடைய அவன் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. நல்ல சீதோஷ்ணத்தில் அவன் இத்தூரத்தை சைக்கிளிலும் மழை மற்றும் குளிர் காலத்தில் ட்ராம் வண்டியிலும் கடந்து சென்றான். ஆறே முக்காலிலிருந்து ஏழு மணிக்குள் ஏதோ ஒரு நேரத்தில் அவன் வீட்டை அடைந்தான். பொதுவாக அவன் மனைவி எலைட்டை எழுப்ப கடியாரத்தின் அலாரம் ஒலிப்பதற்கு சில சமயங்களில் முன்பாகவும் சில வேளைகளில் பின்பும் வீட்டிற்குள் நுழைவான்.

பல சமயங்களில் இரண்டு சப்தங்கள் - அலாரம் மற்றும் உள்ளே நுழையும் அவனுடைய காலடிச் சத்தம் எலைட்டின் மூளையில் ஒன்றின் மேல் ஒன்றாகப் பதியும். தலையணையில் முகம் புதைந்து மேலும் ஒரு சில விநாடிகளுக்குக் கச்சிதமான காலை நேர உறக்கத்தைப் பிழிந்தெடுக்க முயலும் அவளுடைய உறக்கத்தின் ஆழத்தை அத்தகைய சப்தம் சென்றடைந்தது. அவள் சடக்கென்று படுக்கையிலிருந்து எழுந்து, தன்னிச்சையாகத் தனது கைகளை உடையினுள் நுழைத்துக்கொண்டு கண்ணை மறைத்து விழுந்திருந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்திருந்த ஆர்த்துரோவின் எதிரில் அவள் அந்தத் தோற்றத்திலேயே காட்சியளித்தாள். அவன் தான் வேலைக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து காலி பாத்திரங்களான சாப்பாடு டப்பி, பிளாஸ்கை வெளியே எடுத்து கழுவுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியினுள் வைத்தான். அதற்குள்ளாகவே அவன் ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி தயாரிக்க ஆரம்பித்திருந்தான். அவன் அவளைப் பார்த்ததும் அவள் இயல்பாக ஒரு கையால் தலைமுடியைக் கோதிக் கொண்டு கண்களை அகலத் திறந்தாள்.

தன் கணவன் வீட்டிற்கு வந்ததும் காணும் முதல் காட்சியாக, எப்போழுதுமே தாறுமாறான பாதி உறக்கத்தைத் தேக்கியவாறு தன் முகம் அமைந்ததற்காக அவள் ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவதைப்போலத் தோன்றியது. இருவர் இணைந்து உறங்கியிருந்தால் அது வேறு மாதிரி } காலையில் இருவரும் அதே தூக்கத்திலிருந்து விழிப்பின் மேல் தளத்தைத் தொடும்போது ஒரே சமனின் இருப்பார்கள். சில சமயங்களில் அவன் அலாரம் ஒலியெழுப்புவதற்குச் சற்று முன்பாகவே அவளை எழுப்ப, ஒரு சிறிய கோப்பை காப்பியுடன் படுக்கையறைக்குள் வருவான். பிறகு எல்லாமே மிக இயல்பாகப்படும். தூக்கத்திலிருந்து வெளிப்படும் போதிருக்கும் முகச்சுளிப்பு ஒருவிதமான சோம்பலான இனிமையாக மாறிப்போகும். சோம்பல் முறிக்க நீளும் நிர்வாணமான கைகள் அவன் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்ளும்.

எலைட் அவனைத் தழுவிக் கொண்டாள். ஆர்த்துரோ மழை புகாத மேல் கோட் ஒன்றை அணிந்திருந்தான். அவனை அவ்வளவு நெருக்கமாக உணரும்போது வானிலை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எந்த அளவிற்கு நனைந்தும் ஜில்லிட்டுப் போயும் இருக்கிறான் என்பதைப் பொறுத்து, வெளியே மழையா அல்லது பனிமூட்டமா அல்லது பனி விழுகிறதா என்பதை அவள் புரிந்துகொள்வாள். ஆனாலும் அவள் அவனைக் கேட்டாள்: "சீதோஷ்ண நிலை எப்படியிருக்கிறது?''

அவன் வழக்கமான பாணியில் முணுமுணுப்போடு எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, பாதி கேலியுடன் கடைசியிலிருந்து துவங்கி சொல்ல ஆரம்பித்தான்: சைக்கிளில் செய்த பயணம், தொழிற்சாலையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட வானிலை, இதற்கு முந்தைய மாலையிலிருந்த சீதோஷ்ணத்திற்கும் இதற்குமிருந்த வேறுபாடு, வேலையின் கஷ்டங்கள்,வேலைப் பிரிவில் உலவும் வதந்திகள் இப்படியாக.

அந்நேரத்தில் வீடு சிறிதளவே சூடாக்கப்பட்டிருந்தது. ஆனால் எலைட் முழுவதுமாக ஆடைகளைக் களைந்து சிறிய குளியலறையில் குளிக்கத் துவங்கியிருந்தாள். பிறகு அவன் சந்தடியின்றி உள்ளே நுழைந்து ஆடைகளைக் களைந்து தொழிற்சாலையின் தூசு மற்றும் கிரீஸ் பிசுக்கினை மெதுவாகத் தேய்த்து அகற்றியபடி குளிக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாய், சிறிது மரத்துப் போய், ஒருவரையொருவர் சமயங்களில் இடித்துக்கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் சோப்பு, பற்பசையை வாங்கியபடி நின்றுகொண்டிருந்தனர். பரிமாறிக் கொள்ளப்பட வேண்டிய செய்திகளைக் கூறும்போது நெருக்கத்தின் க்ஷணம் உருவானது. ஒருவர் முதுகை ஒருவர், ஒருவர் மாற்றி ஒருவர் உதவிகரமாகத் தேய்த்து விடும்போது ஒரு சிறு தழுவல் இடைப்புகுந்து பிறகு அணைப்பில் முடிந்தது.

ஆனால் திடீரென எலைட் உரத்த குரலில் கத்தினாள். "கடவுளே! நேரம் என்னவாயிற்று பாருங்கள்.'' அவள் தனது காலுறை கட்டும் பெல்ட்டையும் பிரஷ்ஷால் நீவி சீராக்கிக்கொண்டு, கொண்டை ஊசிகளை உதடுகளுக்கிடையில் பிடித்தபடி முகம் பார்க்கும் கண்ணாடிக்குத் தன் முகத்தைக் காட்டினாள். ஆர்த்துரோ அவன் பின்னால் வந்தான். ஒரு சிகரெட் அவன் வாயில் புகைந்து கொண்டிருந்தது. நின்றபடி அவன் புகைத்துக் கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் ஒரு உதவியும் செய்ய முடியாத நிலையிலிருப்பதை நினைத்து சில சமயங்களில் சங்கடமாக உணர்ந்தான். எலைட் தயாராகி, நடைவழியில் மேல் கோட் ஒன்றை அணிந்தவுடன் இருவரும் ஒரு முத்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். அப்புறம் அவள் கதவைத் திறந்து படிகளில் இறங்கி ஓடிச்செல்வது கேட்டது.

ஆர்த்துரோ தனியனாக இருந்தான். படியிறங்கிச் செல்லும் அவளது காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தான். அவளது காலடிச் சத்தத்தை இனியும் கேட்க முடியாதுபோது, அவளை அவன் எண்ணங்களில் பின் தொடர்ந்தான். அவளது அந்த விரைவான சிற்றடிகளை முற்றத்தின் வழியாகக் கட்டிடத்தின் வெளிக் கதவின் வழியாக, நடைபாதை மீது, ட்ராம் நிறுத்தம் வரை தொடர்ந்தான். இதற்கு மாறாக, ட்ராமின் சப்தத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ட்ராம் க்ரீச்சொலியிட்டபடி நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பயணியும் படியை மிதித்து ஏறும் சப்தத்தைக் கேட்டான். அதோ அவள் ட்ராமைப் பிடித்து விட்டாள் என நினைத்தான். அவளைத் தினந்தோறும் தொழிற்சாலைக்கு இட்டுச்செல்லும் பதினொன்றாம் நெம்பர் ட்ராமில் ஆண்கள், பெண்கள், தொழிலாளர் கும்பல்களுக்கு மத்தியில் தன் மனைவி, ட்ராம் கைப்பிடியைத் தொற்றிக்கொண்டு நிற்பதை அவனால் காட்சிப்படுத்த முடிந்தது. அவன் சிகரெட் துண்டை அணைத்த பின் ஜன்னல் ஷட்டர்களை இழுத்து மூடி, அறையை இருட்டாக்கி, படுக்கையில் விழுந்தான்.

எலைட் எழுந்தபோது, எப்படி விட்டுச்சென்றாளோ அப்படியே இருந்தது படுக்கை. ஆனால் அவனுடைய படுக்கைப் பகுதி மட்டும் இப்போதுதான் விரிக்கப்பட்டது போல கசங்கலில்லாமல் இருந்தது. அவன் படுக்கையின் தனது பகுதியில் சரியாகப் படுத்துக் கொண்டான். ஆனால் சிறிது நேரத்தில் படுக்கையில் தன் மனைவி விட்டுச் சென்ற, வெதுவெதுப்பு நிலைத்திருந்த பகுதிக்கு ஒரு காலை அவன் நீட்டினான். பிறகு இன்னொரு காலையும் அங்கே நீட்டினான். எனவே, சிறிது சிறிதாக அவன் எலைட் படுத்திருந்த பகுதிக்கு, இன்னமும் அவளுடைய உடலின் வடிவத்தைத் தக்க வைத்துக்கொண்டிக்கிற அந்தக் கதகதப்பின் குழிவிற்குள் முழுவதுமாக நகர்ந்தான். எலைட்டின் தலையணைக்குள் அவளுடைய வாசத்திற்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.

எலைட் மாலையில் வீடு திரும்புகிற நேரத்தில் ஆர்த்துரோ சுறுசுறுப்பாக வீட்டில் வளைய வந்துகொண்டிருந்தான். ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு எதையோ சமைத்துக்கொண்டிருந்தான். படுக்கையை ஒழுங்குபடுத்துவது, வீட்டைப் பெருக்குவது, அழுக்குத் துணிகளை ஊற வைப்பது போன்ற சில வேலைகளை இரவு உணவிற்கு முன்பாக அவன் செய்து முடிப்பான். இவை எல்லாவற்றையும் எலைட் விமரிசிப்பாள். ஆனால் ஆர்த்துரோ, உண்மையில் இந்த வேலைகளைச் செய்ய மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. மாறாக அவன் அவளுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் செய்யும் ஒருவிதச் சம்பிரதாயங்கள் அவை, வீட்டின் சுவர்களுக்குள் இருந்தபடியே அவளை அவன் பாதி வழியில் எதிர்கொண்டு சந்திப்பதைப் போன்று. மாலையில் கடைகளுக்குச் செல்ல முடிகிற பெண்கள் வசிக்கும் அந்தச் சுற்று வட்டாரத்தின் தெருவிளக்குகள் எரியத் தொடங்கும்போது, தாமதமாகத் துவங்கிய பரபரப்பான சூழலினூடே, எலைட் கடைகளைக் கடந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஆரத்துரோ இவ்வேலைகளைச் செய்வான்.

இறுதியில் மாடிப்படிகளில் ஏறும் அவளுடைய காலடிச் சத்தத்தை அவன் கேட்டான். இச்சத்தம் காலையில் இருந்ததைவிட முற்றிலும் வேறாக கனமாகக் கேட்டது. ஏனெனில், எலைட் ஒரு நாளைய உழைப்பிற்குப் பின் களைத்துப் போயும் கடைகளில் வாங்கிய பொருட்களின் கனத்தைச் சுமந்தபடியும் மாடிப்படியேறி வந்தாள். ஆர்த்துரோ மாடிப்படிகளின் மட்டப் பகுதிக்குச் சென்று பொருட்கள் நிறைந்த பையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு பேசியவாறே அவளுடன் வீட்டினுள் நுழைந்தான். எலைட் தன் கோட்டைக் கூட கழற்றாமல் சமையலறையின் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். அவன் பையிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். பிறகு எலைட் ""சரி, நாமிருவரும் சற்று சுதாரித்துக்கொள்வோம்'' என்றாள். அவன் எழுந்து நின்று மேல் கோட்டைக் கழற்றி வீட்டினுள் அணியும் அங்கியைப் போட்டுக்கொண்டாள். அவர்கள் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிருவருக்குமான இரவு உணவு, தொழிற்சாலையில் இரவு ஒரு மணி இடைவேளையில் அவன் சாப்பிட எடுத்துச் செல்லும் உணவு மற்றும் அவன் தூங்கி எழும்போது தயாராக இருக்கப்போகும் காலை பலகாரம் ஆகியவற்றைத் தயாரித்தனர்.

அவன் விட்டுவிட்டுச் சிறுசிறு வேலைகளைச் செய்தபின் சற்று நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அவன் என்ன வேலை செய்ய வேண்டும் எனக் கூறினாள். இதற்கு மாறாக அவனைப் பொறுத்தவரை அவன் ஓய்வாக உணர்ந்தான். தீர்மானத்தோடு காரியங்களைச் செய்தான். ஆனால் எப்போதுமே சிறிய மறதியாய், அவன் மனது பிற விஷயங்களில் ஈடுபட்டவாறிருந்தது. இத்தகைய சமயங்களில் ஒருவர் மற்றவரை எரிச்சலடையச் செய்து, கடுமையான வசைகளைப் பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில் அவன் செய்யும் காரியங்களில் மேலும் அதிக கவனம் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள். அல்லது அவன் தன்னிடம் மேலும் பிணைப்பாகவும், நெருக்கமாகவும் இருந்து தன்னை அதிகப்படியாக ஆறுதல்படுத்த வேண்டுமென்று அவள் விரும்பினாள். ஆனால் எலைட் வீட்டிற்குள் நுழைந்த போதிருந்த முதல் உத்வேகத்திற்குப்பிறகு, அவனுடைய மனம் அதற்குள்ளாகவே வீட்டிற்கு வெளியே அலை பாய்ந்தது. அவன் சிறிது நேரத்தில் வேலைக்குச் சென்றாக வேண்டியிருப்பதால் தன்னைத் துரிதப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.

உணவருந்துவதற்கான மேசையைத் தயார் செய்து, பின்னர் அவர்கள் மேசையிலிருந்து எழவேண்டியில்லாதபடிக்கு, சமைக்கப்பட்ட உணவுகளைக் கைக்கெட்டும் தூரத்தில் மூழ்கடித்த கணம். இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் மிகக்குறைவானது என்ற சிந்தனையினாலும் அவ்விடத்திலேயே இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்பினாலும் உணவு நிரம்பிய ஸ்பூனை வாயருகே கொண்டு செல்வது கூடச் சிரமமாக இருந்தது.

ஆனால் பாத்திரத்தில் காபி பொங்கி வழிவதற்கு முன்பாகவே அவன் தன் சைக்கிளினருகே சென்று எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு இருவரும் இறுகத் தழுவிக் கொண்டனர். அப்போதுதான், தன் மனைவி எவ்வளவு மிருதுவாகவும் கதகதப்பாகவும் இருக்கிறாளென்பதை ஆர்த்துரோ உணர்ந்த மாதிரி தோன்றியது. ஆனால் உடனே அவன் சைக்கிளைத் தோளில் சுமந்து எச்சரிக்கையுடன் படியிறங்கிப் போனான்.

எலைட் பாத்திரங்களைக் கழுவினாள். வீடு முழுவதையும் மேற்பார்வையிட்டாள். மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்து ஆர்த்துரோ செய்துவிட்டுச் சென்ற வேலைகளை மறுபடியும் சீர்படுத்தினாள். இப்பொழுது அவன் விளக்குகள் குறைவான தெருக்களின் வழியே விரைந்து சென்று கொண்டிருந்தான். ஒருவேளை அவன் அதற்குள்ளாக காஸ் டாங்கைக் கடந்து சென்றிருக்கக் கூடும்.

எலைட் படுக்கையில் படுத்து விளக்கையணைத்தாள். தனது பகுதியில் படுத்திருந்த அவள் கணவனுடைய கதகதப்பைத் தேடி, ஒரு காலை அவன் படுக்கும் பகுதிக்கு நகர்த்தினாள். ஆனால் ஒவ்வொரு முறையும் தான் உறங்கும் இடம்தான் அதிக கதகதப்பாக இருப்பதை உணர்ந்தாள். ஆர்த்துரோவும் அங்கே உறங்கியதற்கான அடையாளத்தினால் அவள் பெரும் மன நெகிழ்ச்சியை உணர்ந்தாள்.

*******